paambugaludan natpu konjam thoorathilirunthu

பாம்புகளுடன் நட்பு (கொஞ்சம் தூரத்திலிருந்து)

நாகினும் தாமனும் உங்களுடன் நண்பர்கள் ஆவதற்காக வந்திருக்கிறார்கள். ஆனால், கொஞ்சம் தூரத்தில் இருந்துதான். ஏனென்றால், அவர்கள் பாம்புகள்! இந்த அழகிய, ஊர்ந்து செல்லும் உயிரினங்களைப் பற்றி வேண்டிய அளவு தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். நாம் பாதுகாப்பாக இருப்பதோடு பாம்புகளையும் பாதுகாப்பாக ஊர்ந்துபோக விடுவது எப்படி என்றும் தெரிந்துகொள்ளலாம்.

- Sneha

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வா அண்ணா... அவளை அவுட்டாக்கு!

இதோ வருது பார், புவனேஷ்வரின் யார்க்கர்!

இதுதாண்டா மிதாலியோட ஸ்ட்ரெயிட் ட்ரைவ்!

நான் போய் எடுக்கிறேன்...

ஐயோ... பாம்பு!

தங்கச்சி,

உன் பேட்ட எடுத்துட்டு வா!

எங்க அது?

நம்ம பந்து பக்கத்துலயே இருக்குது பார்!

அண்ணா, நில்லுங்க!

எங்களை அடிக்கிறதுக்கு முன்னாடி, கொஞ்சம் எங்க கதையக் கேளுங்க.

நான் நாகின், விஷமுள்ள கருநாகம்...

நான் தாமன், விஷம் இல்லாத சாரைப்பாம்பு...

நாங்க ரெண்டு பேரும் உங்களோட ஃப்ரெண்ட்ஸ் ஆகறதுக்காக வந்திருக்கோம்.

ஆனா, கொஞ்சம் தள்ளி இருந்துதான்.

பாம்புகளும் மனுஷங்கள மாதிரிதான், தெரியுமா?

ஆமா. நெறைய விதத்துல அப்படித்தான்.

நாங்க அழகாயிருப்போம்

கலர் கலரா இருப்போம்

விதவிதமா ட்ரெஸ் பண்ணிப்போம்

(மலைப்பாம்பு)

(மலபார் குழி விரியன்)

(பறக்கும் பாம்பு)

சில ஆட்கள் தனியா உட்கார்ந்து புத்தகம் படிக்கிற மாதிரி, எங்களையும் யாரும் தொந்தரவு பண்ணாம இருந்தா எங்களுக்குப் பிடிக்கும்.

சொல்லப்போனா எனக்கும் தாமனுக்கும் ஒத்தே வராது. இந்த புத்தகத்துக்காகதான் ஒண்ணா வந்திருக்கோம்.

உங்களுக்காக என்னவெல்லாம் செய்யுறோம், பாருங்க!

ஆனா, உங்களுக்கும் எங்களுக்கும் கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்குது. அதுதான் எங்கள பாம்புகள் ஆக்குது.

நிறைய மனுஷங்களப் போல எங்களால சத்தத்தைக் கேட்க முடியாது.

எங்களால பத்து இட்லி எல்லாம் ஜீரணிக்க முடியாது.

பாலும் குடிக்க முடியாது. ப்ச்!

ஆனா.. எங்களுக்குன்னு பிடிச்ச சாப்பாடு உண்டு.

ஆனா, எங்களோட கூர்மையான நாக்கும் வாய்ப்பகுதியின் மேலுள்ள ஜேக்கப்சன் உறுப்பும் தெளிவான வாசனை உணர்வைக் கொடுக்கின்றன.

கண்டங்கண்டை நீர்க்கோலிக்கு மீன்களும் தவளையும் பிடிக்கும்.

கவச வால் பாம்புக்கு மண்புழுக்கள்பிடிக்கும்.

கண்கொத்திப் பாம்பும் ராஜநாகமும் மற்ற பாம்புகளைச் சாப்பிடும்.

சர்ர்ர்ர்ர்ர்!

நிறைய பாம்புகளுக்கு எலிகளும் சுண்டெலிகளும் பிடிக்கும். உங்களோட பயிர்கள அழிக்கிற எல்லாப் பூச்சிகளையும் நாங்க சாப்பிடுவோம்.

ஆனா, ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கோங்க. தரையில் இருந்து நாங்க, மனுஷங்களை, ஏன் குழந்தைகளைக் கூட, அவ்வளவு பெருசா நிக்கிறதப் பார்க்கும்போது பயமா இருக்கும். எங்களைப் பாதுகாத்துக்கதான் நாங்க கடிக்கிறோம்.

இந்தியாவுல இருக்கிற பாம்புகள்ல நிறைய பாம்புகள் விஷம் இல்லாதவை, மனுஷங்கள எதுவுமே பண்ணாது. என்னை மாதிரி.

ஆமா... ஆனா திடீர்னு தாமன் மேல கெட்ட நாத்தம் அடிக்கும்.

ஏய்! அது ஒரு தற்காப்புத் தந்திரம்.

ஆனா, நாலு வகை விஷப்பாம்புகள் இருக்கு.

உன்னையும் சேர்த்து!

ஆமா. இந்தியாவில் ஒவ்வொரு வருஷமும் 50,000 பேர் இறப்பதற்கு விஷப்பாம்புகள் காரணமா இருக்கு.

அதுல நிறைய பாம்புக்கடிகள் எதிர்பாராத விபத்துதான். எங்களப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டாலே அதை எல்லாம் நடக்காமப் பார்த்துக்கலாம்.

வாங்க, அந்த நாலு விஷப்பாம்பு வகைகளைப் பார்க்கலாம். சாரி, எனக்கு விரல் இல்ல பாருங்க, அதான் நாலு புல்லைப் புடுங்கி வச்சிருக்கேன்.

பெரிய நான்கு

1. கருநாகம்

நான் படமெடுக்கும்போது தெரியும் வித்தியாசமான வடிவத்த வச்சு என்னை சுலபமா அடையாளம் கண்டுபிடிக்கலாம்.

நான் ரொம்ப நல்லா நீந்துவேன், எனக்கு தண்ணிக்குள்ள இருக்கிறது ரொம்பப் பிடிக்கும்.

எனக்கு எலி ரொம்பப் பிடிக்கும். அதனால, எலி இருக்கும் வயல்களுக்கும் வீடுகளுக்கும் தட்டுமுட்டுச் சாமான்கள் இருக்கும் அடுப்படிக்கும் ஸ்டோர் ரூமுக்கும் வருவேன்.

நான் பயந்துட்டா, என்னோட முதல் எதிர்ச்செயலே கடிக்கக் கூடாதுன்னுதான் இருக்கும். தள்ளிப் போங்கன்னு உங்களுக்குச் சொல்ல எச்சரிக்கை கொடுத்துட்டே இருப்பேன்: படம் எடுப்பேன், புஸ்-னு சத்தம் போடுவேன், வாயை மூடி வெச்சுட்டு சும்மாவாச்சும் கொத்துவேன்.

இது எதுவும் வேல செய்யலேன்னாலோ, இல்ல, யாராவது என் மேல கால வெச்சுட்டாங்க, என்னை பிடிச்சுத் தூக்கினாங்க, அடிக்க வந்தா மட்டும்தான் நிஜமாவே கடிப்பேன். என்னோட விஷத்துக்கு உயிர் போக்கும் சக்தி இருக்கு.

படமெடுப்பு: தள்ளிப் போங்க.

போலி கடி (வாயை மூடி வைத்துக்கொண்டு): உடனடியா , நீங்க இந்த இடத்த விட்டு நகரணும்.

உண்மையான கடி: ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ணுங்க.

2.  சுருட்டை விரியன்

நான் குட்டியா இருக்கறதால என்னால ஒரு கேடும் வராதுன்னு எல்லாரும் நினைப்பாங்க.

ஆமா,

நான் ரொம்ப குட்டி.

ஆனா, என்னோட விஷம் ரொம்ப வலிமையானது, அப்புறம் என்னால மின்னல் வேகத்துல தாக்க முடியும்.

வறண்ட, திறந்த வெளிகள்லதான் நான் இருப்பேன். என்னோட உருமாறும் தன்மை காரணமா, என்னை சுலபமா அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அதனால, இந்த மாதிரி இடங்களில் விளையாடும்போது, நீங்க கவனமா இருக்கணும்.

கவலப்படாதீங்க, என்னை அடையாளம் கண்டு பிடிக்கிறது ஒண்ணும் அவ்ளோ கஷ்டம் இல்ல.

என் முதுகுல இருக்க ஸிக்-ஸாக்(ரம்ப) வடிவத்த வச்சு என்னை சுருட்டை விரியன்னு கண்டுபிடிச்சிடலாம்.

நான் கடிக்கிறதுக்கு முன்னாடி எச்சரிக்கை கொடுப்பேன். ஜிலேபி மாதிரி சுருண்டு ‘புஸ்’னு சத்தம் கொடுப்பேன், என்னோட செதில்கள் ஒண்ணோட ஒண்ணு உரசி ரம்பம் மாதிரி சத்தம் வரும். (அதனால்தான் ஆங்கிலத்துல என்னை sawscale viper –னு சொல்வாங்க!)

‘புஸ்ஸ்’ சத்தம்: இது நீங்க எடுத்து சாப்பிடற ஜிலேபி கிடையாது

கடி: முன்னாடியே சொன்னேன்ல

3.  கட்டுவிரியன்

வணக்கம்! நான் சாந்தமான பாம்பு வகைகள்ல ஒண்ணா இருந்தாலும், என்னோட விஷம் உயிர்போக்கிதான்.

ஏன்னா, இந்தியப் பாம்பு வகைகளிலேயே என்னோட விஷம்தான் சக்தி வாய்ந்தது.

என்னோட கருப்புத் தோலில் இருக்கும் வெள்ளை வரிகளை வச்சு என்னை அடையாளம் கண்டுபிடிக்கலாம்.

சாதாரண வெள்ளிக்கோல் வரையன் மாதிரி சில விஷமில்லாத பாம்புகள் பார்க்க என்னை மாதிரியே இருக்கும். எங்க எல்லார்கிட்ட இருந்தும் தள்ளி இருப்பதுதான் நல்லது.

அதுசரி. நீதான் இருக்கதுலேயே ரொம்ப மோசமான அலார கடிகாரம், விரியன்!

நான் மற்ற பாம்புகளையும் கொறித்துண்ணிகளையும் பல்லிகளையும் சாப்பிட தேடிப்போவேன். கொசுவலை எதுவும் இல்லாம வீட்டுக்கு வெளியே தரையில படுத்திருக்கும் ஆட்கள் பக்கத்துல போயிடுவேன். அவங்க தூக்கத்துல புரண்டு படுக்கும்போது, என்னைக் காப்பாத்திக்க அவங்களக் கடிக்க வேண்டியிருக்கும்.

4. கண்ணாடி விரியன்

‘பெரிய நான்கு’ பாம்புகளிலேயே நான்தான் ரொம்ப கோபக்காரன். எனக்குன்னு தனியா ஒரு இடத்தில் இருப்பது பிடிக்கும். ரொம்பப் பிடிக்கும்.

என்னைத் தொந்தரவு பண்ணா, செமையா கோபம் வரும்!

அடிக்கடி என்னை விஷமில்லாத மலைப்பாம்புன்னோ, மண்ணுளிப் பாம்புன்னோ நினைச்சுருவாங்க. அது ரொம்ப தப்பான முடிவு. நல்லா ஞாபகம் வெச்சுக்கோங்க, எதாவது ஒரு பாம்பு முதுகுல சங்கிலி மாதிரி வடிவம் இருந்தா, அது நான்தான்.

இது ஒரு இந்திய மலைப்பாம்பு. கிட்ட போகாதீங்க.

இது ஒரு மண்ணுளிப் பாம்பு. கிட்ட போகாதீங்க.

இது நான். அப்படியே திரும்பி வீட்டுக்குப் போங்க

நான் புதர்களுக்கு இடையே இலையோடு இலையாக ஒளிந்திருப்பேன், என்னோட இரை தேடி வரும்னு காத்துட்டு இருப்பேன்.

இருட்டில டார்ச் இல்லாம நடக்குற ஆட்களுக்கு இது ஆபத்தானது.

இந்தப் பாம்பை தவிர்க்கிறது உங்களுக்கு ஈஸியா இருக்கும். எப்படியும், சிடுமூஞ்சி மாமாக்கள் பக்கத்துல இருக்கிறது உங்களுக்குப் பிடிக்காதுதானே?

நாங்க நெனச்ச அளவு பாம்புகள் எல்லாம் மோசம் இல்ல! கொஞ்சம் தள்ளி இருந்து பார்க்கும் போது, நீங்க ரொம்ப ஜாலியான கும்பல்தான்!

ஆனா, எப்படி நாங்க உங்ககிட்டேர்ந்து பாதுகாப்பா தள்ளி நிக்கிறது?

அது ரொம்ப சுலபமான விஷயம். நீங்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும்.

1. திறந்தவெளிகள்ல வேலை செய்யும் போதோ, விளையாடும் போதோ, கையையும் காலையும் எங்க வைக்கிறீங்கன்னு பார்த்து வைங்க. ஒரு பெரிய குச்சி வச்சு தேடினாலே, நாங்க இருக்கோமா இல்லையான்னு தெரிஞ்சிடும்.

2. இருட்டுல வெளிய போகும்போது, எப்பவுமே டார்ச் எடுத்துட்டே போகணும். வீட்டுப் பக்கத்துல போறதா இருந்தாலும் கூட.

3. உங்களோட வழக்கமான பாதையில இலைகள் சேர்ந்து, நிறைய குப்பைகள் கிடந்தால் சுத்தம் பண்ணுங்க.

4. உங்க வீடுகளையும் சமையலறைகளையும் ஸ்டோர் ரூம்களையும் அடிக்கடி சுத்தம் பண்ணி எலி இல்லாம பார்த்துக்கோங்க.

5. திறந்த வெளியில் தூங்கும் போது, ஒரு கொசுவலைய சுத்தி கட்டி, ஒரு தடைய உருவாக்கணும். இதனால் உங்களுக்கு நான்கு பலன்கள்: கொசு கடிக்காது, தேள் கொட்டாது, விரியன் பாம்புகள் கடிக்காது அப்புறம் நீங்க விடியுற வரை ஜாலியா குறட்டை விட்டுத் தூங்கலாம்.

என்னதான் முன்னேற்பாடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், பாம்புக்கடி விபத்துகள் நடக்கும். அப்போ இந்த விதிகளை நினைவில் வச்சுக்கோங்க.

பாம்பு கடித்தவரை பாம்பாட்டியிடமோ மந்திரவாதியிடமோ அழைத்துச் செல்லக் கூடாது

கடிபட்ட இடத்தை உறிஞ்சக் கூடாது

காயத்தை வெட்டக் கூடாது

ரத்தம் வடிவதைத் தடுக்க காயத்தைச் சுற்றி இறுக்கிக் கட்டக் கூடாது

காயத்தில் தீ வைக்கக் கூடாது

காயத்தின் மீது மூலிகை மருந்துகளைத் தடவக் கூடாது

தாக்கப்பட்ட இடத்தை அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

பாம்பு கடித்தவரை விஷ முறிவு மருந்து உள்ள மருத்துவமனைக்கு உடனே அழைத்துப் போக வேண்டும்

அந்தளவுக்கு மோசமா எதுவும் நடக்காதுன்னு நம்புவோம். ஏன்னா, நீங்க எல்லாம் ரொம்ப அழகான படைப்புகள். இயற்கையிலும் எங்க வாழ்க்கையிலும் உங்களுக்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கு.

ஆஹா… நன்றி

சாப்பிட்டு முடிச்சதும் சமையலறையை சுத்தம் பண்ண அம்மாவுக்கு உதவியா இருப்பேன். அப்போதான் மிச்சம் மீதி தேடி வீட்டுக்குள்ளே எலியெல்லாம் வராது.

அம்மாவையும் அப்பாவையும் ஒரு டார்ச் லைட் வாங்கணும்னு சொல்வேன். அப்போதான் இருட்டின பின்னாடி வீட்டுக்கு வரும்போது எந்தப் பிரச்சினையும் இருக்காது.

நானும் என் மாமாகிட்ட கொசுவலை வாங்கச் சொல்லணும். அவருக்கு வெளியே படுத்துத் தூங்குறதும் குறட்டை விட்டு ஊரையே எழுப்பறதும் பிடித்தமான விஷயம்.

அட! நல்ல தொடக்கம், குழந்தைகளே!

அப்படியே, ஒவ்வொரு தடவையும் தயிர் சாதம் சாப்பிட்டு ஏப்பம் விடறப்போ, நெல்லை காலி செய்யும் எலிகளைத் துரத்தி சாப்பிடும் எங்களுக்கு நன்றி சொல்ல மறந்துடாதீங்க.

ஹாஹாஹா!

சென்னை முதலைகள் காப்பகம்

சென்னை முதலைகள் காப்பகத்திற்கு சென்றதுண்டா? ஊர்வன இனத்தை அழியாமல் பாதுகாப்பதற்காக சென்னையில் இயங்கும் ஒரு ஊர்வனக் காப்பகம் இது. இவர்களின் ’பாம்புகள் பாதுகாப்பு மற்றும் பாம்புக்கடி மட்டுப்படுத்துதல்’ எனும் திட்டம் எந்தெந்த பாம்புகள் விஷம் வாய்ந்தவை, அவற்றைத் தவிர்ப்பது எப்படி, விஷமுறிவு மருந்தைப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த கற்பித்தலின் முக்கியத்தைச் சொல்கிறது.

பாம்புக்கடி பற்றியும், முதலைகள் காப்பகத்தைக் குறித்தும் அதிக தகவல்களை www.madrascrocodilebank.org என்னும் இணையதளத்தில் பெறலாம்.