அது மாலை நேரம். பறவைகள் ‘கீச் கீச்’ என்றபடி அவரவர் கூடு நோக்கிப் பறந்தன.
புட்டியும் அக்காவும் பூங்காவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.
‘‘அக்கா! அங்கே பார்! புதரின் மேல் ஒரு பட்டாம்பூச்சி!’’ என்றாள் புட்டி.
‘‘பட்டாம்பூச்சியா? பார், பார்! நன்றாகப் பார்!’’ என்றாள் அக்கா.
‘‘அட?’’ என்றாள் புட்டி.
அவர்கள் பார்வதியின் வீட்டைத் தாண்டிச் சென்றனர்.
‘அக்கா! அங்கே பார்! பார்வதியின் நாய், குதிரை வால் சடை போட்டிருக்கிறது!’’ என்றாள் புட்டி.
‘‘நீ ஒரு வேடிக்கையான பெண்! பார், பார்! நன்றாகப் பார்!’’ என்றாள் அக்கா. ‘‘அட?’’ என்றாள் புட்டி.
அவர்கள் ஒரு பெரிய வயதான செம்மயிற்கொன்றை மரத்தைக் கடந்து சென்றனர்.
”அக்கா! பாம்பு!” என்று அலறி, அக்காவை தாவிப் பிடித்துக் கொண்டாள் புட்டி.
‘‘ஓ! புட்டி! பார், பார்! நன்றாகப் பார்!’’ என்றாள் அக்கா.
‘‘ஹா!’’ என்று புட்டி நிம்மதியடைந்தாள்.
அவர்கள் ராகவனின் வீட்டைத் தாண்டிச் சென்றனர்.
‘‘அக்கா! ராகவனின் அம்மாவுக்கு எப்படி இவ்வளவு விரைவாக தலைமுடி நீளமாக வளர்ந்து விட்டது? நேற்றுதானே நான் அவரை குட்டை முடியோடு பார்த்தேன்!’’ என்றாள் புட்டி.
‘‘புட்டி, புட்டி! பார், பார்! நன்றாகப் பார்!’’ என்று அக்கா சிரித்தாள்.
‘‘ஆஹா!’’ என்றாள் புட்டி.
அவர்கள் பழைய நூலகத்தைக் கடந்து சென்றனர்.
‘‘ஓ! அக்கா! நீ இப்படி சிறிய செடியில் மிகப்பெரிய பழத்தை எப்போதாவது பார்த்திருக்கிறாயா?’’ என்று கேட்டாள் புட்டி.
‘‘இன்றைக்கு நீதான் நிறையப் பார்க்கிறாயே! பார், பார்! நன்றாகப் பார்!’’ சிரித்தபடி புட்டியின் தலைமுடியைக் கலைத்துவிட்டாள் அக்கா.
‘‘ஆ!’’ என்றாள் புட்டி.
”விரைவாக நட, புட்டி! இருட்டாகிக்கொண்டு வருகிறது. பார்! தெரு விளக்குகள் எல்லாம் எரிய ஆரம்பித்து விட்டன!’’ என்றாள் அக்கா.
‘‘அய்யோ! பூதம்!’’ என்று கத்தினாள் புட்டி. ‘‘அட! பார், பார்! நன்றாகப் பார்! புட்டி’’ என்றாள் அக்கா.
”ப்ச்ச்ச்ச்!” என்று ஆறுதலாக பெருமூச்செறிந்தாள் புட்டி.
புட்டியும் அக்காவும் வீட்டை அடைந்தனர்.
‘‘ஏ! புட்டி! இங்கே பார்! இவை பாட்டியின் செருப்புகள்தானே?’’ என்று கேட்டாள் அக்கா.
அவர்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தனர்.
‘‘ஆமாம், புட்டி! பாட்டிதான் வந்திருக்கிறார். முறுக்கு கொண்டு வருவதாய் சொல்லியிருந்தார்களே! வா, பார்க்கலாம்!’’ என்றாள் அக்கா.
‘‘அக்கா! இருந்தாலும் பார், பார்! நன்றாகப் பார்!’’ என்றாள் புட்டி. ‘‘ஒருவேளை அது பாட்டி இல்லை என்றால்? பாட்டியின் புடவையை கட்டிய வேறு யாராவதாக இருக்கலாம் இல்லையா? இல்லை, நாற்காலியின் மேல் பாட்டியின் புடவையைப் போர்த்தியிருக்கலாம்! இல்லை, வெறும் துணிக்குவியலாக இருக்குமோ? இல்லை…”
‘‘ஏ! புட்டி! பார், பார்! நன்றாகப் பார்! பாட்டியேதான் வந்திருக்கிறார். நிறைய முறுக்குகளும் கொண்டு வந்திருக்கிறார்!’’ என்றாள் அக்கா.