paatiyin mookku kannadi

பாட்டியின் மூக்கு கண்ணாடி

பாட்டிக்கு கண்ணாடியை தொலைப்பது வாடிக்கை. .அதை கண்டுபிடித்து கொடுப்பதற்கு சில சமயம் ஒரு புத்திசாலி துப்பறிவாளர் தேவைப்படும்.

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மூக்கு கண்ணாடியைத் தொலைப்பது பாட்டிக்கு வழக்கம்.

“எங்கே வைத்துவிட்டேன்?” இது எப்பொழுதும் அவர் கேட்கும் கேள்வி. மூக்கு கண்ணாடியில்லாமல் அவரால் கண்ணாடியைக் கண்டுபிடிக்க முடியாது.

எனவே நான் அவருக்குத் தேவை.

கண்ணாடியைக் கண்டுபிடிக்க நான்தான் அவரது கண்.

சிலசமயம் கண்ணாடி பாத்ரூமில் இருக்கும். சிலசமயம் படுக்கையில். ஏன், தலைக்கு மேலேகூட இருக்கும்!

“பாட்டி, கண்ணாடி உன் தலையில்!” என்பேன்.

“ஆமாம்! சரியான முட்டாள் நான். தேங்க்ஸ் கண்ணு” சிரித்துக் கொண்டே சொல்வாள் அவள்.

ஆனால் இந்த தடவை இன்னும் என்னால் பாட்டியின் கண்ணாடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

வழக்கமாக வைக்கும் எல்லா இடத்திலும் பார்த்துவிட்டேன்.

அவர் தலையில், பாத்ரூமில், அவர் அலமாரியில், பூஜை அறையில். அவருக்கு பிடித்த நாற்காலி அடியில் மற்றும் சாப்பாட்டு மேஜையின்மீது.

ஒரு நல்ல துப்பறிபவளாக மாற முடிவு செய்தேன். பாட்டி நாள் முழுவதும் என்ன செய்தார் என்று தெரிந்துகொள்ள முடிவு செய்தேன்.

“பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. வீணாவின் மாமியார் வந்திருந்தார். உனக்கே தெரியுமே, எத்தனை வம்பு பேசுவாரென்று. நிறைய தேனீர் குடித்தோம். உன் அம்மா செய்திருந்த லட்டுகளை அவள் காலி செய்தாள்” என்றாள் பாட்டி.

“பாட்டி இன்று ரொம்ப பிஸி. அவருடைய பென்ஷனுக்காக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்” என்றான் ராஜூ.

அம்மா சொன்னாள் “உன் சித்தியுடன் ரொம்ப நேரம் பேசினாள். ராஜூவின் ஸ்வெட்டரை பின்னி முடித்தாள். அப்புறம் கொஞ்சம் வாக்கிங் போய்விட்டு வந்தாள்.”

எனக்கு நிறைய தடயங்கள் கிடைத்துவிட்டன. வீட்டில் புதிய இடங்களில் தேடிப்பார்த்தேன்.

ஆஹா! தொலைந்த கண்ணாடியைக் கண்டுபிடித்துவிட்டேன்.

மூக்கு கண்ணாடி மேஜைமேல், போனுக்கு கீழே, பாட்டியின் பேனாவுக்கு பக்கத்தில், ஸ்வெட்டர் பின்னும் நூலுக்குள், இருந்தது. பாதி சாப்பிட்ட லட்டுகூட அதில் இருந்தது.

பாட்டியின் அடுத்த பிறந்த நாளுக்கு நான் பணம் சேர்த்து இன்னொரு மூக்கு கண்ணாடி வாங்கித் தரப் போகிறேன்.