ராஜுவின் வீடு நகரத்தில் இருந்தது. ஆனால் கோடை விடுமுறையில் ராஜு கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு போய்விடுவான்.
ஒவ்வொரு விடுமுறையிலும் ராஜு பாட்டியிடம் ஏதாவது புதிதாக கற்றுக் கொள்வான். இந்த முறை ராஜு கற்றுக்கொண்டது - பால் என்பது வெறும் பிளாஸ்டிக் பையில் வரும் பொருள் அல்ல!
முதல் நாள் மாலை, பாட்டி தன் வீட்டின் பின்னால் இருக்கும் மாட்டு தொழுவத்திற்கு ராஜூவை அழைத்துச் சென்றாள்.
அங்கே நான்கு மாடுகள் வைக்கோல் மென்றுகொண்டு இருந்தன.
இரண்டு இளம் கன்றுகள் துள்ளிக் குதித்து விளையாடின. ராஜு கன்றுகளை ரசித்து பார்த்தான்.
"ராஜு, நீ இப்போது குடித்த பால் இந்த பசுவிடம் இருந்து தான் வந்தது" என்றாள் பாட்டி.
"இந்தப் பசுவிடம் இருந்து வந்ததா ?" என்று வியந்து கேட்டான் ராஜு.
"ஆமாம் ராஜு ! இங்கே வந்து பார்" என்று சிரித்துக்கொண்டே அழைத்துச் சென்றாள் பாட்டி.
"இந்தப் பசுவோட பெயர் காவேரி. இவள் தந்த பாலைத் தான் நீ குடித்தாய். அங்கே இருப்பவள் கபிலா. அதோ, அந்த ஓரத்தில் நிற்பவள் கௌரி".
ராஜு தயக்கத்தோடு நின்று பசுக்களை பார்த்தான்.
ராஜு பக்கத்தில் வந்தவுடன் கன்றுகள் தம் தாய்ப் பசுக்களுக்கு அருகில் சென்று நின்றன. ராஜு அவர்களுக்கு அந்நியன் அல்ல, நண்பன் தான் என்று தாய்ப் பசுக்கள் உடலால் செய்தி சொல்லின.
ராஜு மெதுவாக கௌரியின் கழுத்தை தொட்டான். பாட்டியின் கழுத்து போல, அதுவும் மென்மையாக இருந்தது. ராஜு தொட்டவுடன் கௌரிக்கு மகிழ்ச்சி. மா என்று சத்தம் இட்டாள்.
"பசும்பால் எப்படி கிடைக்கிறது தெரியுமா ராஜு ?" என்று கேட்டாள் பாட்டி.
"தெரியாது பாட்டி. எங்கள் நகரத்தில் பசும்பால் பிளாஸ்டிக் பாக்கெட்டில் வீட்டுக்கு வரும். அவ்வளவு தான் எனக்குத் தெரியும்" என்று வெட்கத்தோடு சொன்னான் ராஜு.
"வா பார்க்கலாம்" என்று சொல்லி, ராஜுவின் கையைப் பிடித்துக்கொண்டு கபிலாவிடம் அழைத்துச் சென்றாள் பாட்டி.
கபிலா தன் தாய் மடியிலிருந்து பால் குடித்தாள்.
பின்னர் பாட்டி கபிலாவின் காம்பை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தாள். கபிலாவின் இடுப்பில் உட்கார்ந்து, தன் விரல்களால் பால் கறந்தாள்.
கபிலாவின் காம்பிலிருந்து பால் வெளியே வந்து பாத்திரத்தில் விழுந்தது. பால் நிரம்பிய பாத்திரத்தில் நுரை வந்தது . நுரையை பார்த்ததும் ராஜுவுக்கு ஒரே மகிழ்ச்சி.
"பாலில் எவ்வளவு குமிழி இருக்கு பாருங்கள், பாட்டி" என்று வியப்போடு சொன்னான் ராஜு.
"ஆமாம் ராஜு! முதலில் பசுவின் காம்பிலிருந்து வரும் பால் பாத்திரத்தில் விழுந்தது. பிறகு பால் காற்றோடு கலந்து குமிழி உருவானது. அதனால் தான் பாக்கெட் பாலை விட பசும்பால் சுவையாக இருக்கிறது" என்றாள் பாட்டி.
"அடடே ! இதெல்லாம் எனக்கு தெரியாமல் போச்சே பாட்டி" என்றான் ராஜு.
புதிய பாலை காய்ச்சி ராஜுவுக்கு கொடுத்தாள் பாட்டி. ராஜு அதை கடகடவென குடித்தான்.
"நான் நகரத்துக்கு போன பிறகு, என் நண்பர்கள் கிட்ட சொல்லப் போறேன். பசுவிடம் இருந்து பால் எப்படி வருது, எங்க பாட்டி வீட்டுல பால் எவ்வளவு சுவையாக இருக்குன்னு சொல்லப் போறேன். " என்றான் ராஜு.
பாட்டி சத்தமாக சிரித்தாள். "கண்டிப்பா சொல்லு ராஜு. உங்க வகுப்பில் யார் புத்திசாலி பையன் என்று உன் நண்பர்களுக்கு புரியட்டும் " என்றாள்.
உங்கள் கற்பனையால் இந்த படத்தை வண்ணம் செய்யவும்.
உங்கள் கற்பனையால் இந்த படத்தை வண்ணம் செய்யவும்.