padagil ullaasa payanam

படகில் உல்லாசப் பயணம்

தாத்தா, பாட்டி வசிக்கும் கிராமத்திற்கு செல்வது என்றால் ராஜுவுக்கு எப்பொழுதுமே உற்சாகம்தான். அதிலும் இந்த முறை அவனது தாத்தாவும், பாட்டியும் அவனுக்கு ஒரு விசேஷமான ஆச்சரியம் வைத்திருக்கிறார்கள். ஒருநாள் மாலை, அவர்கள் வழக்கம் போல் ஆற்றங்கரையோரம் நடக்கும் பொழுது, படகு சவாரி செய்யலாமே என தாத்தா சொல்கிறார். நீங்களும் அவர்களோடு ஏன் செல்லக்கூடாது?

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ராஜு நகரத்தில் வசித்து வந்தான். ஆனால் கோடைக்காலத்தில், பள்ளி விடுமுறையின் போது, அவனுடைய தாத்தா வசிக்கும் கிராமத்திற்குப் போய்விடுவான். தாத்தா, பாட்டியுடன் அங்குள்ள ஆற்றின் கரையோரமாக நடந்து செல்வது அவனுக்கு கிராமத்தில் பிடித்த பல விஷயங்களில் ஒன்று. தாத்தாவின் கிராமத்தில் உள்ள ஆற்றில், தண்ணீர் எப்பொழுதும் தெளிவாகவும், குளுமையாகவும் இருக்கும்.

ஆற்றின் கரையோரம் வெளிர் மஞ்சள் மற்றும் பழுப்பு நிற மணலும், செறிவான பசுமை நிற மரங்களும், அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில பாறைகளும் இருக்கும். சில இடங்களில் ந்ருக்குள் செல்லும் வகையில் படிகள் இருக்கும்.

பருவ காலத்தில் மரங்கள் பூத்துக்குலுங்கும்போது, மனதைக் கவரும் வண்ணம், எங்கு பார்த்தாலும் மிகவும் அழகாக இருக்கும்.

"ஏன் இன்று மாலை நாமெல்லாம் ஆற்றுப் பக்கம் போகக்கூடாது?" என்று பாட்டி கேட்டார். ராஜு உற்சாகத்துடன், நிஜமாகப் போகலாமா பாட்டி?" என்று கேட்டான்.

"நிச்சயமாக! அதற்கென்ன?" என்றார் தாத்தா.

"ராஜுவுக்குப் பிடிச்சிருந்தா, படகுச் சவாரியும் போகலாம். உனக்கு படகுச் சவாரி பிடிக்குமா?" தாத்தா கேட்டார்.

"ஓ! கேட்கறதுக்கே ரொம்ப அற்புதமாயிருக்கு" என்றான் ராஜு.

அன்று மாலை, ராஜு அவனுடைய தாத்தா பாட்டியுடன் ஆற்றுப்பக்கம் சென்றான். பாட்டி, ஒரு கூடை நிறைய ராஜுவுக்குப் பிடித்த பலகாரங்களைக் கொண்டு வந்திருந்தார். ஆற்றங்கரையோரம் குளுமையான, மாமரத்தோப்பின் நிழலில் மூவரும் அமர்ந்து, சுற்றிலும் விளையாடும் குழந்தைகளைப் பார்த்தபடி, தேநீர் அருந்தினர்.

அவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே, ஆற்றில் பலர் ஆனந்தமாக நீச்சல் அடிப்பதைப் பார்க்க முடிந்தது. சிலர் தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

எல்லா குழந்தைகளும், நீச்சல் கற்றுக்கொள்ளும்போது, முதுகில், நீளமாக, வெள்ளையாக ஏதோ ஒன்றை கட்டிக்கொண்டிருந்தனர்.

"அவர்கள் முதுகில் கட்டியிருப்பது என்ன தாத்தா?" என்று குழப்பத்துடன் கேட்டான்.

"அது ஒரு காய்கறி. சுரைக்காய் என்று அதன் பெயர்" எனச் சொல்லிய தாத்தா, அந்தக் காயின் உள்ளே முழுவதும் சுரண்டி எடுத்து விட்டு, சூரிய ஒளியில் அதைக் காய வைப்பார்கள்.

முழுவதும் உலர்ந்தபின், அது லேசாகி நீரில் மிதக்கும். அதை உன் முதுகில் கட்டிக் கொண்டால், நீயும் அதோடு நீரில் மிதக்கலாம். இப்படிச் செய்தால், நீச்சல் கற்றுக்கொள்ளும்போது மூழ்கும் அபாயம் இல்லை" என விவரித்தார்.

"கேட்கவே குஷியாக இருக்கு" என்ற ராஜு,

"தாத்தா! நானும் சுரைக்காயைக் கட்டிக்கொண்டால் நீச்சல் கத்துக்க முடியுமல்லவா? நானும் நீச்சல் கத்துக்கறேன்" என்று சொன்னான். "கண்டிப்பாக ராஜு! நாளைக்கே தொடங்கலாம்" என்றார் தாத்தா.

"உண்மையாகவா? எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருக்கு" என்றான் ராஜு, குதூகலத்துடன். யாருக்கு தெரியும், கோடை விடுமுறை முடிவதற்குள் அவன் நீச்சலில் ஒரு சாதனை வீரனாகவும் உருவாகலாம்!

இந்தச் சிறிய சுற்றுலா முடிந்ததும், தாத்தா, பாட்டி, ராஜு மூவரும் ஆற்றின் கரையோரம் நடந்து, படகுத்துறைக்குச் சென்றனர்.

அங்கே துடுப்பு போட்டு செலுத்தும் படகுகள் வரிசையாக நின்றிருந்தன. தாத்தா ஒரு படகோட்டியை ராஜுவுக்கு சுட்டிக்காட்டி, "இந்த மாதிரி படகோட்டிகள்தான், படகில் மனிதர்களை ஏற்றிக்கொண்டு, அக்கரைக்குச் செல்பவர்கள்" என்றார்.

தாத்தா ஒரு படகோட்டியிடம் பேசினார். அவன் இவர்களை படகில் கூட்டிச்செல்லச் சம்மதித்தான். படகு நீரில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. ஆகவே ராஜு அதனுள் கால் வைத்து ஏறக் கொஞ்சம் பயந்தான். தாத்தா அவன் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு படகில் ஏற உதவி செய்தார். படகு நகர ஆரம்பித்ததும், ராஜுவுக்கு பயமெல்லாம் பறந்துவிட்டது. படகு சவாரியை ரசிக்க ஆரம்பித்தான்.

ஆறு அமைதியாக, நிதானமாக ஓடிக்கொண்டிருந்தது.

ஆற்று நீர், படகின் இரு பக்கங்களிலும் மாறி மாறி மோதியது. படகோட்டி, தாளத்துடன் பாடிக்கொண்டே, இரண்டு கைகளாலும் வலிமையுடன் துடுப்புகளை வலித்தான்.

சின்ன மீன் நீரிலிருந்து வெளியே எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே போனது.

மென்மையான மாலைத் தென்றல், நீரிலும், புல்வெளியிலும் அசைவுகளை உண்டாக்கியது. ராஜு தன் கைகளைக் குளுமையான நீரினுள் அளைந்து கொண்டே வந்தான். படகுச் சவாரி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தாத்தாவின் கேள்வி அவனுடைய எண்ணங்களைத்

தடுத்து நிறுத்தியது. அவர், "படகுச் சவாரி பிடிச்சிருக்கா"

எனக் கேட்டார்.

ராஜு சிரித்துக் கொண்டே, "ரொம்ப, ரொம்ப" என்றான்.

"ஊருக்குத் திரும்பி போனதும், உன் நண்பர்கள்கிட்டே படகுச் சவாரி பத்தி சொல்ல மறந்திடாதே!" பாட்டி சொன்னார்.

"மறப்பேனா பாட்டி! அவங்க எல்லாரும் சொல்வாங்க, நான்தான் ரொம்ப அதிர்ஷ்டக்காரப் பையன்னு!" என்றான் ராஜு.

உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.

உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.