ஒரு பேன் ஒரு சிறுமியின் தலைமுடியில் ஆனந்தமாக வசித்து வந்தது. தினமும், அது அவளின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து வந்தது.
பாவம் அந்தச் சிறுமி! அவள் தனது தலையைச் சொறிந்துகொண்டே இருந்தாள்! வயிறு நிறைந்த அந்தப் பேன் மிக சந்தோஷமாய் இருந்தது.
ஒரு நாள், அந்தப் பேன், மூட்டைப்பூச்சியைப்பற்றிக் கேள்விப்பட்டது. அந்த மூட்டைப்பூச்சி ஒரு மகாராஜாவின் மெத்தையில் வசித்து வந்தது. ‘ஆஹா! அரண்மனையில் வாழ்ந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்!’ என்று நினைத்தது அந்தப் பேன்.
இரவும் பகலும் மகாராஜாவின் தலையில் வாழ்வதைப் பற்றிக் கனவு கண்டவாறே இருந்தது.
‘அவருடைய தலைமுடி மிருதுவாகவும், அடர்த்தியாகவும் இருக்கும் என நினைக்கிறேன். இந்தச் சிறுமியின் தலைமுடியைப் போன்று வேர்வையோடும், துர்நாற்றத்தோடும் இருக்காது!’
அடுத்த நாள், ‘நான் புது வீட்டிற்கு போகப்போகிறேன்!’ என்று முடிவெடுத்தது அந்தப் பேன். அதனால், அந்தச் சிறுமி பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கும் போது, அது அவள் தலையிலிருந்து குதித்து...
...ஒரு சிறுவனின் தலையில் விழுந்தது! அந்தச் சிறுவனின் அம்மாதான் மகாராஜாவின் தேரோட்டி. இரவு தூங்குவதற்கு முன் அந்தச் சிறுவன் தன் அம்மாவை முத்தமிட்டப் போது, அந்த புத்திசாலிப்பேன் அவர் தலைமுடிக்குள் புகுந்தது.
மறுநாள், தேரோட்டுனர் அரண்மனைக்குக் கிளம்பும்வரை அவர் தலையிலேயே அமைதியாகக் காத்திருந்தது. அது அவருக்கு நமைச்சல் கொடுக்காமல் பார்த்துக்கொண்டது. அவர் சொறிந்தால் பேன் கீழே விழுந்து விடுமே! அப்படி நடக்கக்கூடாதல்லவா? அதுவும் மகாராஜாவின் தலைமுடி இவ்வளவு அருகில் இருக்கும் போது!
அரண்மனை வாசலில், காலை நகர்வலத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார் மகாராஜா. அவர் அமர்ந்தவுடன், பேன் தேரோட்டுனரின் மண்டையைக் கடித்தது. “ஆ!” என்று தலையை சொறிந்துகொண்டார் அந்தப் பெண். பேன் அவர் தலையிலிருந்து எம்பிச் சென்று...
... அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்திருந்த மகாராஜாவின் தோளின் மேலே விழுந்தது. ம்ம்ம்...! அவர் மீது நல்ல வாசனை வீசியது! காற்றோட்டமான தேர்ப்பயணத்திற்குப் பின், மகாராஜா அரண்மனைக்குத் திரும்பினார். அவர் ஓய்வெடுக்க அமர்ந்த போது, பேன் அவரின் அறையைச் சுற்றிலும் பார்த்தது. குதூகலித்தது. அழுக்கு இல்லை! புழுக்கமாக இல்லை! அதுமட்டுமல்லாமல், அங்கு நல்ல மணம் கமழ்ந்தது!
விரைவில், பேனுக்குப் பசிக்கத் தொடங்கியது. மகாராஜா தூங்கிக்கொண்டிருந்தார். விருந்திற்கு இதுதான் சரியான நேரம்! பேன், தூங்கிக்கொண்டிருக்கும் மகாராஜாவின் கழுத்தின் மேல் ஏறியது!
பசி வயிற்றைக் கிள்ள மேலே மேலே மெதுவாக நகர்ந்தது.
இறுதியாக, மகாராஜாவின் உச்சந்தலையை சென்றடைந்தது. உடனே, மிக்க அதிர்ச்சியடைந்தது!
அந்த வயதான மகாராஜாவின் தலையில் முடியே இல்லை!
அடடா! எவ்வளவு பெரிய தவறு!