pakirthal

பகிர்தல்

ராணிக்கும் மாலாவிற்கும் பசித்தது. ஆனால், அவர்கள் வீட்டில் செய்து தந்த உணவு பிடிக்கவில்லை. பின்பு என்ன செய்தார்கள் என்று பார்ப்போமா?

- Anitha Selvanathan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பள்ளியில் இருந்து வந்தவுடன் ராணிக்கு பசி எடுத்தது.

"அம்மா, எனக்குப் பசிக்கிறது. சாப்பிட ஏதாவது கொடுங்கள், " என்றாள்.

பக்கத்து வீட்டில், மாலாவுக்குப் பசி எடுத்தது.

"அத்தை. எனக்குப் பசிக்கிறது. சாப்பிட ஏதாவது கொடுங்கள், " என்றாள்.

அம்மா ராணிக்கு அரிசி மற்றும் பருப்பு சேர்த்து கிச்சடி செய்துக் கொடுத்தார்கள்.

"எனக்கு கிச்சடி பிடிக்காது," என்று பெரு மூச்சு விட்டாள் ராணி.

"கிச்சடி உன் உடம்புக்கு நல்லது. சாப்பிடு," என்றார் அம்மா.

ராணி தன் வீட்டு வாசலுக்கு கிச்சடியை எடுத்துச் சென்றாள். அவளுக்கு பசித்தது.

அடுத்த வீட்டில் அத்தை மாலாவிற்கு நூடுல்ஸ் செய்து கொடுத்தார்கள்.

"எனக்கு நூடுல்ஸ் பிடிக்காது," என்று பெரு மூச்சு விட்டாள் மாலா.

"நூடுல்ஸ் உன் உடம்புக்கு நல்லது. சாப்பிடு," என்றார் அத்தை.

மாலா தன் வீட்டு வாசலுக்கு நூடுல்ஸ் எடுத்துச் சென்றாள். அவளுக்கு பசித்தது.

ராணி, மாலாவின் கிண்ணத்தில் நூடுல்ஸ் இருப்பதைப் பார்த்தாள்.

ராணி மாலாவை பார்த்து, "எனக்கு நூடுல்ஸ் ரொம்பப் பிடிக்கும்," என்றாள்.

மாலா உடனே, "எனக்கு கிச்சடி ரொம்பப் பிடிக்கும்," என்றாள்.

ராணி சந்தோஷமாக மாலாவிற்கு தன் கிச்சடியை கொடுத்தாள்.

மாலா சந்தோஷமாக ராணிக்கு நூடுல்ஸ் கொடுத்தாள்.

"ஆஹா. இந்த நூடுல்ஸ் ருசியாக உள்ளது," என்றாள் ராணி.

"ஆஹா. இந்த கிச்சடி மிக ருசியாக உள்ளது," என்றாள் மாலா.

அம்மா வெளியே வந்து ராணி நூடுல்ஸ் சாப்பிடுவதைப் பார்த்தார்கள்.

அத்தை வெளியே வந்து மாலா கிச்சடி சாப்பிடுவதைப் பார்த்தார்கள்.

அம்மாவும் அத்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அத்தை, "குழந்தைகள் தங்கள் உணவை சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார்கள்," என்றார்.