இன்று நான் பள்ளிக்கு முதல் முறையாகச் செல்கிறேன். அம்மா என் கையைப் பிடித்து நடக்கிறார்.
'நான் பெரிய பெண்' என்றேன். 'கையை விடுங்க அம்மா' என்று சொன்னாலும் அம்மா என் கையை விடவில்லை.
பள்ளி அருகில் நிறைய குழந்தைகள் இருந்தனர்.
அவர்களில் சிலர் பேருந்தில் வந்தனர், சிலர் காரில், சிலர் ரிக்ஷாவில். சிலர் மிதிவண்டியில். மற்றும் சிலர் என்னைப் போல, நடந்து வந்தனர்.
பள்ளி அருகே போனோம். அம்மா என் கையை வி்ட்டு விட்டார்.
அவர் வாசல் அருகே நின்றார். நான் தனியாக உள்ளே போக வேண்டும்.
என்னருகே இருந்த அனைவரும் புதியவர்கள்.
ஒரு அடி எடுத்து வைத்தேன். இன்னொரு அடியும். திரும்பிப் பார்த்தேன். நான் நடக்க நடக்க, அம்மா சிறிதாகிப் போனார். காணாமலேயே போய் விடுவாரா?
அம்மாவிடம் ஓடினேன். பெரியவளாவது எனக்குப் பிடிக்கவில்லை. அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டேன்.
'என்னை விட்டுப் போகாதீர்கள்' என்றேன்.
எல்லோரும் உள்ளே போய் விட்டனர். நான் மட்டும் தான் வெளியே நிற்கிறேன்.
ஆசிரியை வெளியே வருகிறார். என்னைப் பார்த்து சிரிக்கிறார். நானும் சிரிக்கிறேன்.
'ராணி. நீ வரும் வரையில் நான் இங்கேதான் இருப்பேன்' என்றார் அம்மா.
நான் அம்மாவின் கையை விட்டு விட்டேன். எனக்கு அம்மா டாடா சொன்னார்.
நான் உள்ளே சென்றேன். அம்மாதான் நான் வரும் வரை இங்கேயே இருக்கப் போகிறாரே!