pallikku vanda kaaigarigal

பள்ளிக்கு வந்த காய்கறிகள்

ராஜுவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. பள்ளிக்குச் செல்லும் வழியில் விதவிதமான வடிவங்களில் காய்கறிகள், பள்ளிக்கூடப் பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுடன் பள்ளி நோக்கிச் செல்வதைக் காண்கிறான். அதுமட்டுமா! அவன் ஆசிரியை உட்பட யாருக்குமே இதை பார்த்து ஆச்சரியமாக இல்லை. என்னதான் நடக்கிறது இங்கே?

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சில நாட்களுக்கு முன், ஒரு நாள் காலை, வழக்கம்போல் ராஜு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான். பள்ளிக்கூடம் செல்வது அவனுக்குப் பிடிக்கும். எனவே, சந்தோஷமான பள்ளிக்கூட நாளை எதிர்பார்த்து நடந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது ஒரு விந்தையான வினோதத்தைக் கண்டான். அதாவது, விதவிதமான வடிவங்கள் சில, அவைகளின் தோள்களில் பள்ளிப்பைகள் இருக்க, பள்ளியை நோக்கி, அவனுக்கு முன்னால் நடந்து சென்றன.

ராஜு விரைவாக அந்த வடிவங்களின் அருகில் வர, அவை சந்தைகளில் பார்த்திருந்த காய்கறிகளாக இருக்குமோ என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. நம்ப முடியாமல், கண்களை கசக்கி விட்டுப் பார்த்தான். அந்த காய்கறிகள் புதியதாகவும், நல்ல ஊட்டமாகவும் இருந்தன.  அவை எல்லாம் குட்டி படை வீரர்கள் போல ஒன்றன்பின் ஒன்றாகப் பள்ளிக்கூடம் நோக்கி நடந்தன.

ராஜு தனது நடையை இன்னும் வேகப்படுத்தினான். தன்னுடைய புதிய தோழர்களைப் பார்க்க ஆவல். அவர்களை மிக அருகாமையில் பார்க்க விரும்பினான்.

கடைசியில் ஒரு வழியாக, அவன் முன்னே சென்று கொண்டிருந்த வடிவங்களை எட்டிப் பிடித்தான். அவைகளின் முகங்களைப் பார்த்ததும், ராஜு வியப்புடன் வாயைப் பிளந்தான்.

அவன் நினைத்தபடியே, அந்த வடிவங்கள் எல்லாம் காய்கறிகள்தான்! உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு மற்றும் அவன் சந்தையில் பார்த்திருந்த, வேரில் விளையும், பல காய்கறிகள்தான் அவை!

“என்ன? உண்மையாக நீங்கள்தானா?” என ராஜு நினைப்பதற்குள், வார்த்தைகள் தானாக வெளிவந்தன.

காய்கறிகள் பதில் பேசவில்லை. ஒன்றையொன்று பார்த்து புன்னகைத்துக் கொண்டன. ராஜுவின் ஆச்சரியம் அவர்களுக்குக் குதூகலத்தைத் தந்தது.ராஜு வியப்புடன்,“எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டான். “வேறு எங்கே? நாங்கள் எல்லோரும் பள்ளிக்குத்தான் சென்று கொண்டிருக்கிறோம்” என்று காய்கறிகள் இணைந்து ஒரே குரலில் பதில் சொல்லின.

ராஜு தலையை ஆட்டினான். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் பள்ளிக்குச் செல்லத் தொடர்ந்து நடந்தான். சிறிது நேரம் கழித்து, காய்கறிகள் இன்னும் பின்னால் வருகின்றனவா எனப் பார்க்கத் திரும்பினான். அவனுக்கு, அந்தக் காலை நேரத்தின், இரண்டாவது ஆச்சரியம் காத்திருந்தது.

அதாவது, பச்சை இலை காய்கறிகளின் அணிவகுப்பு ஒன்று, வேரில் விளையும் காய்கறிகளுடன் சேர்ந்து கொண்டிருந்தது. அவைகளின் தோள்களிலும் புத்தகப்பைகள்! இப்பொழுது ராஜுவும் இந்த அணிவகுப்புடன் சேர்ந்து கொண்டதால், அவனது சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. அவனுக்குத் தெரிந்து யாரும் இப்படிக் காய்கறிகள் அணிவகுப்புடன் பள்ளிக்கூடம் சென்றதில்லை.

நடந்து நடந்து, அணிவகுப்பு பள்ளிக்கூடத்தை அடைந்தது. எல்லா குழந்தைகளும் பள்ளியின் வாசலில் நின்று கொண்டு இந்த வினோதமான ஊர்வலத்தைப் பார்த்தனர். பார்த்தவர்களின் வாய்கள் வியப்பால் பிளந்தன, கண்கள் ஆச்சரியத்தால் பெரிதாகின.

ராஜுவின் ஆசிரியை எல்லோரையும் முன்வந்து வரவேற்றார். ராஜுவின் முதுகில் தட்டிக் கொடுத்து, “நல்ல பையன்” என்றார். ராஜுவுக்கோ மிகுந்த ஆனந்தம். “ரொம்ப நன்றி டீச்சர்!” என்றான் சந்தோஷத்துடன். மற்ற குழந்தைகள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

தட்டிக்கொடுத்த ஆசிரியை சென்ற பின்னும், யாரோ முதுகில் பலமாகத் தட்ட, ராஜு விழித்துக் கொண்டான். அவனுடைய தாய் அவனை உலுக்கி எழுப்பிக் கொண்டிருந்தார். “எழுந்திரு ராஜு சீக்கிரம்! பள்ளிக்கு தாமதமாகத்தான் செல்லப் போகிறாய் நீ!” என்று சொன்னார்.

ராஜு இப்பொழுது முழுவதுமாக விழித்துக் கொண்டான். ‘கனவா அது?’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். ‘என்ன வினோதமான கனவு எனக்கு’ என தனக்குள் சிரித்துக் கொண்டே, படுக்கையை விட்டு எழுந்தான். பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டுமென்று, அவன் விரைவாகச் செயல்பட்டான்.

உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.

உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.