இளவரசி நிலா கவலையோடிருந்தாள்.
அவர்கள் நாட்டின் புகழ்பெற்ற சூர்யா பளு தூக்கும் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. விதிமுறைகளின் படி அவள் 55 கிலோ எடை இருக்க வேண்டும்.
ஆனால், அவள் எடையோ 53 கிலோதான்! அவள் இன்னும் இரண்டு கிலோ எடை கூடவேண்டி இருந்தது!
சூர்யா பளு தூக்கும் போட்டி கிழக்கு நாடுகள் ஏழிலும் மிகவும் புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயரில் நிறுவப்பட்ட ஒன்று.
இதில் பங்கேற்பதற்காகவே நிலா தன் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தாள்.
பளு தூக்குவது நிலாவுக்கு பிடித்தமானது. குழந்தையாக இருக்கும்பொழுதே, அவள்
நாற்காலிகள்
அலமாரிகள்...
மேசைகள்
நாய்கள்
...அவ்வப்போது
ராஜாவையும் கூட தூக்குவாள்!
“பயிற்சி எப்படிப் போகிறது?” என்று கேட்டார் ராணி. “நன்றாகப் போகிறது. ஆனால் நான் இன்னும் இரண்டு கிலோ எடை கூடவேண்டும்!” என்றாள் நிலா.
ராணி அவளுக்கு அவித்த முட்டையைக் கொடுத்தார். “நன்றாகச் சாப்பிடு. உன்னால் முடியும்!” என்றார் ராணி.
நிலா, சாப்பிட்டுக்கொண்டே சென்ற முறை நடந்த பளு தூக்கும் போட்டியை நினைத்துப் பார்த்தாள். அது நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்பொழுது அவளுக்கு 12 வயது.
அதில் நெத்தில் நாட்டு இளவரசன் விக்ரம்தான் வெற்றி பெற்றான். மற்ற எல்லோரையும்விட பலமடங்கு முன்னிருந்தான்.
வளர்ந்ததும், ராஜா தன்னை இளவரசன் விக்ரமுக்கு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்று நிலாவுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் நிலாவுக்கு வேறு திட்டங்கள் இருந்தன. அவளுக்கு பனி நகரமான தைபாருக்கு போக விருப்பம். அங்குதான் நாட்டின் மிகச்சிறந்த விளையாட்டுப் பள்ளி இருக்கிறது.
“எனக்கு இன்னும் ஒரு அவித்த முட்டை தருவாயா?” என்று ராணியிடம் கேட்டாள் நிலா.
ராணி சிரித்தார். பல ஆண்டுகளுக்கு முன் அவரும் நிலாவைப் போலத்தான் - ஓட, நீந்த, குதிரை சவாரி செய்ய, போட்டியில் வெற்றிபெற எல்லாம் ஆசையுடன் இருந்தார். அதெல்லாம் இப்போது பழங்கதை.
நாட்கள் கடந்தன. இளவரசி நிலா கடுமையாகப் பயிற்சி செய்தாள்.
மலையின் மேலும் கீழும் ஓடினாள். ஆற்றில் நீந்தினாள். காய்கள், பழங்கள், கறி அனைத்தும் சாப்பிட்டாள்.
அவள் தோல் மாலை நேர சூரியன்போல தங்க பழுப்பாக மின்னியது.
நிலா, போட்டிக்கு முந்தைய வாரம் எடைகாட்டும் இயந்திரத்தில் ஏறி நின்றாள்.
55 கிலோ ஆகிவிட்டாள்! அவள் உற்சாகமானாள். கண்ணாடி முன் நின்றாள். தன் தசைகளை முறுக்கிப் பார்த்தாள்.
”நான் சாதித்துவிட்டேன்.” அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
போட்டி நாள் வந்தது. நிலா தயாராக இருந்தாள். இந்த ஆண்டு மிகக் கடுமையான போட்டி. பலம்வாய்ந்த பளு தூக்கும் போட்டியாளர்களைக் கூர்ந்து நோக்கினாள் நிலா.
மஞ்சள் தலைப்பாகையுடன் நிற்கும் பையன். இறுக்கமான சடை போட்டிருக்கும் பெண். அப்புறம், இளவரசன் விக்ரம்.
அவர்கள் பாறைகளைத் தூக்கினர். மரக்கட்டைகளைத் தூக்கினர். பொக்கிஷப் பெட்டிகளைத் தூக்கினர். அலமாரிகளைத் தூக்கினர். நடுவர்கள் கண் கொட்டாமல் கவனித்தனர். அவர்கள் தோள் அசைகிறதா? கால்கள் நிலைத்திருக்கின்றனவா? அவர்கள் நிற்கும் நிலை சரியா? நிலா பல்லைக் கடித்தாள். தன் உடலில் உள்ள ஒவ்வொரு தசையையும் அவளால் உணர முடிந்தது.
ஒவ்வொரு துளி வியர்வையையும் கூடத்தான்!
விக்ரம் முன்னணியில் இருந்தான். ஆனால் நிலா அவனுக்கு அடுத்ததாக இருந்தாள். இறுதிச் சுற்று துவங்கியது. அவர்கள் பழங்கால இரும்பு அரியணையைத் தூக்க வேண்டும்.
மற்றவர்கள் நன்றாகவே தூக்கினர். ஆனால் நிலா இன்னும் சிறப்பாகத் தூக்கினாள்.அவள் தன் பலத்தின் கடைசித் துளியையும் செலவழித்தாள். பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டாள். அவளால் முடியவே முடியாதென தோன்றியபோது சூர்யாவையும் தைபாரையும் நினைத்துக் கொண்டாள்.
இரும்பு அரியணை மேலே உயர்ந்தது.
இறுதி மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டன. இளவரசி நிலா வென்றுவிட்டாள்! “இப்போது நீ ஒரு சாம்பியனின் மனைவியாகும் தகுதியை பெற்றுவிட்டாய்” என்று ராஜா பெருமையாகச் சொன்னார். இளவரசி நிலா புன்னகைத்தாள். “இல்லை! இப்போது நான்தான் சாம்பியன்.”