நம்முடைய வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியை நாம் பணத்தை ஏதாவதொரு வழியில் பயன்படுத்தியபடி கழிக்கிறோம். பணம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு, ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதரின் கைக்குப் போய்க்கொண்டேயிருக்கிறது. பெரியவர்களாகும்போது, நம்முடைய பணத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி என்று நாம் கற்றுக்கொள்கிறோம். நம்முடைய பணத்தை நல்ல முறையில் நிர்வகிப்பது எப்படி என்று எடுத்துச்சொல்லும் வல்லுநர்கள் இருக்கிறார்கள். நம்முடைய பணம் அதிகரிக்க உதவும் நிறைய நபர்களும், நிறுவனங்களும் இருக்கி இருக்கின்றனர், இந்த மனிதர்கள் அல்லது நிறுவனங்களை நாம் ‘பண நிர்வாகிகள்’ என்று அழைக்கலாம். பண நிர்வாகிகள் சிலர் பணத்தை சேமிக்க நமக்கு உதவுகிறார்கள். சிலர் நமக்குத் தேவையான சமயத்தில் கடன் தருகிறார்கள். வேறு சிலர் நம்முடைய பணம் பெருக உதவி செய்கிறார்கள்.
மகத்தான மூவர்!
மூன்றுவகையான பண நிர்வாகிகள் இருக்கிறார்கள். இந்த பண நிர்வாகிகளை குபேரன் குழு, தனாதன் குழு, சாணக்யன் குழு என்று மூன்று குழுக்களாகப் பிரித்துவைக்கலாம்.
குபேரன் குழு பணத்தைச் சேமித்தல்
சேமிப்பு உண்டியல் பணம் வசூலிப்பவர் சீட்டு நிதியம் வங்கி சுய உதவிக்குழுக்கள்
தனாதன் குழு கடனுதவி செய்தல்
வட்டிக்குக் கடன் தருபவர்
வங்கி
உறவினர்
அடகுக் கடைக்காரர்
சுய உதவிக்குழு
சாணக்யன் குழு பணம் பெருகச் செய்பவர்கள்வங்கி காப்பீட்டு நிறுவனம் நிதி நிர்வாகி
பண நிர்வாகிகளில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களில் இடம்பெற்றிருப்பதைக் கவனித்தீர்களா?
குபேரன் குழு
பணம் சேமிப்பவர்கள்
பண நிர்வாகிகளில் எளிய வகை நிர்வாகி பணம் சேமிப்பவராவார். பொம்மை உண்டியலைத்தான் பெரும்பாலான குழந்தைகள் பணம் சேமிக்கப் பயன்படுத்துகிறார்கள். பணம் வசூலிப்பவர்கள், சீட்டு நிதி நடத்துபவர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வங்கிகள் பணம் சேமிக்க நமக்கு உதவிசெய்கிறார்கள்.
எனக்கு ஒரு யோசனை! இதில் வாராவாரம் நாம் பணம் சேமிப்போம். இந்த உண்டியல் நிரம்பியதும், நமக்கே நமக்கென்று ஒரு ‘கிரிக்கெட் செட்’ வாங்கலாம்!
என்னுடைய கொழுகொழு உண்டியல்!
பணம் சேமிக்க மிகவும் எளிய வழி, பொம்மை உண்டியல். இது பன்றி அல்லது வேறு பல வடிவங்களில் இருக்கும். வீடுகளில் பணம் சேமிக்கப்படும் வழிகளுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த பொம்மை உண்டியல் கல், களிமண், பீங்கான், சுட்ட மண் அல்லது கண்ணாடியில் செய்யப்படுவது வழக்கம். நாணயங்கள் அல்லது மடித்த காகிதப் பணத்தை இந்த உண்டியலின் மேற்புறம் உள்ள உள்ள ஒரு குறுகலான பிளவின் வழியாகப் போடவேண்டும். அப்படிப் போட்ட பணத்தை எடுக்க ஒரே வழி அந்த பொம்மை உண்டியலை உடைத்துத் திறப்பதுதான். அதன்பிறகு இந்த பொம்மை உண்டியல்கள் திறப்போடு உருவாக்கப்பட்டன. வேண்டும்போது அந்தக் குட்டிக் கதவைத் திறந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். உண்டியலை உடைக்கவேண்டிய அவசியமில்லை.
‘பிக்மி’க்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் பழங்குடியின மக்கள். இவர்கள் மிகவும் குள்ளமாக, சிறிய உருவத்தில் இருப்பார்கள்.
எனவே, சின்னதாக உள்ள எதையும் பிக்மி என்பார்கள்.
“அவரை ஏன் பிக்மி பண வசூலிப்பாளர் என்று அழைக்கிறார்கள்?”
லாலா லால்சந்த் வாட்டசாட்டமான மனிதர். பிக்மிபோல் சிறிய உருவம் கொண்டவர் அல்லர். ஆனால், மக்களிடமிருந்து அவர் வசூலிக்கும் பணம் மிக மிகச் சிறிய தொகை. மக்கள் ஏன் அவருக்குப் பணம் தருகிறார்கள்?
உங்களுடைய சைக்கிளின் இருக்கைக்கு ஒரு வண்ணமயமான உறை போட விரும்புகிறீர்கள். ஆனால், உங்கள் பெற்றோர் பணம் தர மறுக்கிறார்கள். அது அவசியம் என்று அவர்கள் நினைக்கவில்லை. “உனக்கு வேண்டுமென்றால் நீ சேமித்துவைத்துள்ள பணத்திலிருந்து வாங்கிக்கொள்” என்று கூறுகிறார் உங்களுடைய அம்மா.
பொம்மை உண்டியலை உடைக்க உங்கள் மனம் துடிக்கிறது. ஆனால், அதை உடைத்தாலோ, பின்னால் அதற்காக வருந்த வேண்டியிருக்கும். ஏனெனில், கால்பந்து போன்று பெரிதாக வேறு எதையோ வாங்குவதற்காக நீங்கள் பணத்தைச் சேமிக்கத் தொடங்கியிருக்கலாம்.
பெரியவர்கள் மனமும் இதேபோல் பரபரக்கும். அவர்கள் சேமித்துவரும் பணம் அவர்களுடைய பொறுப்பில் இருக்கும்போது, அல்லது பொம்மை உண்டியல் போன்ற ஒன்று கையருகில் இருக்கும்போது அவர்கள் மனத்தில் அத்தகைய தூண்டுதல் ஏற்படுவது இயல்பு. இதைத் தவிர்க்க அவர்கள் பண வசூலிப்பாளர்களிடமோ, அல்லது லாலா லால்சந்த் போன்ற சின்ன பண வசூலிப்பாளர்களிடமோ பணத்தைச் சேமித்துவருகிறார்கள். அத்தகைய சின்ன பண வசூலிப்பாளர் தன்னிடம் பணத்தைக் கொடுத்துவைத்துச் சேமிக்கும் வாடிக்கையாளர்களையெல்லாம் தினமும் சந்திக்கிறார்! அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தினம் ஒரு குறிப்பிட்ட சின்ன தொகையை வசூலித்து அதைப் பத்திரமான ஓரிடத்தில் சேமிக்கிறார். தன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தரும் சேமிப்புப் பண விவரங்களைத் தன் சிறிய நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்கிறார். அதன் உதவியோடு மாத முடிவில் அவருடைய ஒவ்வொரு வாடிக்கையாளரும் எவ்வளவு பணம் சேமித்திருக்கிறார்கள் என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ள இயலுகிறது.
நம்முடைய பணத்தை நல்ல முறையில் சேமித்துவர ஒருவருடைய பொறுப்பில் ஒப்படைப்பதற்கு முன் அவர் நம்பத்தகுந்தவர்தானா என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். லாலா லால்சந்த் வயதில் மூத்தவர், எங்கள் பகுதியில் எல்லோராலும் மதிக்கப்படும் மனிதர்.
சீக்கிரம் இதை வாங்கிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நான் இந்தப் பணத்தைச் செலவழித்துவிடுவேன்.
பண வசூலிப்பாளர் ஏமாற்றி ஓடிவிட்டால் என்ன செய்வது?
நாம் ஒருங்கிணைந்து செயல்படலாமா?
மனிதர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்துகொண்டு, குழுவிலுள்ள எல்லாருமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க விரும்பினால், அவர்கள் அனைவரும் அந்த நிறுவனத்தின் சக உரிமையாளர்களாகிறார்கள். இந்த நிறுவனம் ’கூட்டுறவு நிறுவனம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டுறவு நிறுவனங்கள் வியாபாரத்தில் மக்களின் சேமிப்பைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு உதவி செய்கின்றன. முன்பு குஜராத் மாநில விவசாயிகளுக்குப் பாலைத் தங்களுடைய கிராமத்திற்கு வெளியே கொண்டுபோய் விற்பது கடினமாக இருந்தது. ஏனென்றால், அடுத்த ஊருக்குக் கொண்டுசெல்வதற்குள் பால் திரிந்துபோய்விடும்.
அதன் பிறகு, பெரிய, சிறிய பால் உற்பத்தியாளர்கள் நிறைய பேர் ஒருங்கிணைந்து கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கினார்கள். பல கிராமங்களைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்கங்கள்ஒருங்கிணைந்து ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனத்தை (AMUL: Anand Milk Union Limited) உருவாக்கின. ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் பால் ‘ஆனந்த்’ என்ற ஊரில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு வந்துசேர்கிறது.
இங்கே அந்தப் பால் பதப்படுத்தப்பட்டு வெண்ணெய், பாலாடைக்கட்டி, பனீர், தயிர், பால்கோவா, மற்றும் சாக்லெட்டுகளாகத் தயாரிக்கப்பட்டு உலகெங்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமுல் பால் தொழிற்சாலையைப்போல் குஜராத்திலுள்ள பல மாவட்டங்களில் அமைந்துள்ள பால் தொழிற்சாலைகள் ஒன்றிணைந்து குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (Gujarat Co-operative Milk Marketing Federation Ltd: GCMMF) நிறுவனத்தை உருவாக்கின. இன்று GCMMFஇல் சுமார் 29 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைந்த அளவில் உரிமையாளர்களாக விளங்குகிறார்கள்! இவர்கள் அனைவரும் அமுல் தயாரிப்புகளையே பயன்படுத்துகிறார்கள்!
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகள் எத்தனை உண்மை!
பாலுக்கான கூட்டுறவுக் கழகமாக அமுல் இருப்பதைப் போல் கூட்டுறவு நிதி நிறுவனங்களும் இருக்கின்றன. அகமதாபாதில் ஸேவா (SEWA: Self-Employed Women's Association) எனப்படும் பெண்கள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட நகர்ப்புறக் கூட்டுறவு வங்கி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பல மாநிலங்களில் சேமிப்பு மற்றும் கடனுதவிக் கூட்டுறவு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
உங்களுடைய பெற்றோரைக் கேட்டுப்பாருங்கள். அவர்களுடைய அலுவலகத்தில் ஊழியர் சேமிப்பு, கடனுதவிக் கழகம் போன்றவை இருக்கும்
குபேரன் குழுத் தலைவர்: வங்கிகள்!
இன்றைக்குப் பணத்தைச் சேமிக்கச் சிறந்த இடமாக விளங்குவது வங்கியே. ஏறத்தாழ எல்லாப் பெரியவர்களுமே வங்கியில் சேமிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வங்கியில் பணம் செலுத்துதல், எடுத்தல் என்று பரிவர்த்தனை மேற்கொள்கிறவர் அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவராகிறார். அதாவது, அவர் அந்த வங்கியின் வாடிக்கையாளராகிறார். அந்த வங்கியில் அவர் தன் பணத்தைச் சேமித்துவரலாம்.
வங்கி வாடிக்கையாளராவது எப்படி?
உங்களுக்கு இன்னும் பதினைந்து வயதாகவில்லை என்றால் நீங்கள் மைனர், அதாவது, இளையவர். எனவே, உங்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர்தான் உங்கள் பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க இயலும். இந்தியன் வங்கி 10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் தங்கள் வங்கியில் வாடிக்கையாளராகிச் சேமிக்க அனுமதிக்கிறது.
ஒரு வங்கியில் உங்கள் சேமிப்பைத் தொடங்க அந்தக் குறிப்பிட்ட வங்கிக்குத் தெரிந்த ஒருவரால் நீங்கள் அங்கே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். உங்களுடைய அடையாள அட்டை (பிறப்புச் சான்றிதழ் போன்றவை), உங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்சத் தொகை (சில வங்கிகள் வெறும் 5 ரூபாயுடன் உங்கள் சேமிப்புக் கணக்கைத் தொடங்க அனுமதிக்கின்றன. வேறு சில வங்கிகள் இன்னும் கூடுதலான தொகையைக் கேட்கின்றன) ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உங்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் நீங்கள் வங்கிக்குச் செல்லவேண்டும்.
வளர்ந்து பெரிதானதும் நமக்கும் சொந்தமாக வங்கிக் கணக்குகள் இருக்கும்!
உரிய விண்ணப்பப்படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து கொடுத்து அதை வங்கி ஏற்றுக்கொண்டபின், வங்கி ஊழியர் உங்களுக்கு ஒரு சிறிய சேமிப்புப் பதிவேடு (பாஸ் புக்) தருவார். அதில் உங்கள் பெயர், விலாசம் மற்றும் வங்கியின் முத்திரை குறிக்கப்பட்டிருக்கும். பின்னர் நீங்கள் உங்களுடைய வங்கிக் கணக்கில் அவ்வப்போது வரவு வைக்கும் தொகை, எடுக்கும் தொகை ஆகிய விவரங்கள் உரிய வங்கி ஊழியரால் அதில் பதிவு செய்யப்படும்.
வாழ்த்துகள்! இப்பொழுது உங்களுக்கும் சேமிப்பு வங்கிக் கணக்கு இருக்கிறது!
என்னிடம் சேமிப்பு வங்கிக் கணக்குப் பதிவேடு இல்லை. எந்தத் தகவலறிக்கையும் எனக்கு அனுப்பப்படுவதில்லை. ஆனால், என் வங்கிக் கணக்கு விவரங்களைக் கணிணியில் பார்த்துத் தெரிந்துகொள்வேன்
இதுதான் என் சேமிப்பு வங்கிக் கணக்குப் பதிவேடு. என் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் போடப்படுகிறது, எடுக்கப்படுகிறது என்ற விவரங்கள் இதில் குறித்துவைக்கப்படுகின்றன.
இவை என் சேமிப்பு வங்கிக் கணக்கு விவரங்கள். ஒவ்வொரு மாதமும் என் வங்கி இந்த அறிக்கையை எனக்கு அனுப்புகிறது.
வங்கியில் ஒருவர் என்னவெல்லாம் செய்யலாம்? நீங்கள் ஒரு வங்கியில் சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் அதில் நீங்கள் பணத்தை வரவு வைக்கலாம், அல்லது அதிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு புத்தகம் வாங்குவதற்காக நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு ரூ.100 கட்டணம் செலுத்தவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வங்கியில் ரூ.100க்கு வரைவோலை (ட்ராஃப்ட்) கேட்டு வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் உங்களிடமிருந்து ரூ.100 வாங்கிக்கொண்டு, அதற்கு பதிலாக நீங்கள் சொல்லும் நிறுவனத்தின் பெயரில் வரைவோலையைத் தருவார்கள். இந்த சேவைக்காக வங்கி உங்களிடம் ஒரு சிறிய கட்டணத் தொகையைப் பெற்றுக் கொள்ளும். அந்த ‘ட்ராஃப்ட்’ஐ நீங்கள் அந்த நிறுவனத்திற்குத் தபாலில் அனுப்பிவைக்கலாம். இது பாதுகாப்பானது. அதை யாராலும் திருட இயலாது!
‘செக்’ அல்லது காசோலை என்பது பணத்தைக் கையால் தொடாமலேயே உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை இன்னொருவருடைய வங்கிக் கணக்கிற்கு விரைவாக மாற்ற வழிசெய்கிறது. உதாரணமாக, ரூ200க்குத் தரப்படும் ஒரு காசோலை, வங்கியிடம் இப்படிச் சொல்கிறது: அருணுடைய கணக்கிலிருந்து ரூ 200ஐ மாயாவின் கணக்குக்கு மாற்றுக.
பணம் செலுத்துதல் பணம் எடுத்தல் ஒரு வரைவோலை அனுப்புதல் ஒரு காசோலையில் எழுதுதல்
பணத்தைத் தபால் நிலையங்களிலும் சேமித்துவைக்க முடியும். நம் நாட்டில் மொத்தம் 1,55,000 தபால் நிலையங்கள் இருக்கின்றன. உலகிலேயே இந்தியாவில்தான் இவ்வளவு நிறைய தபால் நிலையங்கள் உள்ளன!
உங்களுக்குத் தெரியுமா?
செக் அல்லது காசோலையை யார் வேண்டுமானாலும் யாருக்காக வேண்டுமானாலும் வங்கியில் செலுத்தலாமா?
போடலாம். ஆனால் ‘செக்’கில் எந்தப் பெயர் உள்ளதோ அந்தப் பெயரில் இருக்கும் வங்கிக் கணக்கில் மட்டுமே தொகையைச் செலுத்த இயலும்.
கிராமப்புற இந்தியாவில் சிறப்பு வங்கிகள்!
1969வரை, இந்தியாவில் பல வங்கிகள், பெரும்பாலும் வர்த்தகக் குடும்பங்களால் நடத்தப்பட்டு வந்தன. ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு விதிமுறைகளைப் பின்பற்றிவந்தது. 1969ஆம் ஆண்டு இந்திய அரசு, நாட்டிலிருந்த முக்கியமான பெரிய வங்கிகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கியது. அதாவது, அந்த வங்கிகள் யாவும் இந்திய அரசால் வகுத்துரைக்கப்பட்ட விதிமுறைகளை ஒரேயளவாகப் பின்பற்றுதல் என்று இதற்குப் பொருள். அப்போது இந்திய அரசு, பிராந்திய அளவிலான கிராமப்புற வங்கிகள் அல்லது ’கிராமின் விகாஸ்’ வங்கிகள் ஆகியவற்றையும், ஏழைகளுக்கு அதிக அளவில், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு உதவும் பொருட்டு நிறுவியது. ஆனால், கிராமப்புறங்களில் பல வங்கிக் கிளைகளைத் திறந்துவிட்டபோதும், குறைந்த-ஊதியப் பிரிவு மக்களில் பெரும்பாலானோருக்கு, குறிப்பாக ஏழைப் பெண்களுக்குச் சேமிப்புக் கணக்கு தொடங்குவது சிரமமாகவே இருந்தது.
இதன் விளைவாக சுய உதவிக் குழு வங்கி இணைப்பு அமைப்பு என்ற வழிமுறை உருவாக்கப்பட்டது. ஒரு சுய உதவிக் குழுவில் 15 அல்லது 20 பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்கள் சேமிக்க இவ்வமைப்பு உதவிசெய்கிறது.
பிலாஸ்பூர் வங்கி
நாங்கள் வங்கியில் ஒரு குழுக் கணக்கு தொடங்கியுள்ளோம்
திருப்பித் தரப்படும் பணமும் வட்டியும் மீண்டும் உங்கள் குழுவின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
நான் முன்னூறு ரூபாயைக் கடனாக எடுத்துக் கொள்கிறேன். அதை வட்டியோடு திருப்பித் தந்துவிடுவேன்.
உங்களுடைய உறுப்பினர்கள் இப்போது உங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கிலிருந்து சிறு தொகைகளைக் கடனாக எடுத்துக்கொள்ளலாம்!
ஒரு வருடம் கழித்து
இப்பொழுது உங்கள் குழு முன்பைவிடப் பெரிய கடன்களைப் பெறலாம்!
பெரிய கடனுதவியை வைத்து நாம் ஒரு வியாபாரம் தொடங்கிவிட்டோம். நாம் இந்தக் கடனை ஒரு குழுவாகத் திருப்பிச் செலுத்திவிடுவோம்!
இந்தியாவில் 60 லட்சத்திற்குமேல் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. அவற்றில் சுமார் 8 கோடி பெண்கள் உறுப்பினர்கள். இவர்கள் இதுவரை வங்கி மூலம் 30,000 கோடிக்குமேல் கடனுதவி பெற்றிருக்கிறார்கள்
இவ்வாறு திரட்டப்பட்ட தொகையும் கூட்டுறவினால் கிடைத்த தன்னம்பிக்கையுமாக இந்தச் சுய உதவிக் குழுக்கள் சிறிய தொழில்களைத் தொடங்குகின்றன. குழுவின் ஒவ்வோர் உறுப்பினரும் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்கிறார். இந்தத் தயாரிப்புப் பிரிவுகள் தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபம் குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட ஒரு சுய உதவிக் குழு தனிப்பட்ட வாடிக்கையாளரைப்போலவே எந்த வங்கியிலும் சேமிக்கலாம்; கடன் பெறலாம். இந்திய கிராமங்களில் ஆண்களைவிடப் பெண்களே அதிக அளவு சுய உதவிக் குழுக்களை உருவாக்கியிருக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் திறம்படப் பணத்தைக் கையாள்வதைக் கற்றுக்கொள்கிறார்கள். அதோடு, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள், தங்களுடைய வாழ்க்கை, தாம் சார்ந்த சமூகங்களை மேம்படுத்தப் புதிய தகவல்கள், திறமைகளைத் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியத்தையும் உணர்கிறார்கள்.
இந்த வளர்ச்சியையும் மீறிப் பல ஏழை மக்களுக்கு இன்னமும் கடனுதவிகள் கிடைக்கவில்லை, அல்லது, மிகச் சிறிய தொகையே கிடைத்தது. எனவே, இன்னொரு வகையான அமைப்புகள் உருவாயின. அவை நுண் கடனுதவி அமைப்புகள் என்று அழைக்கப்பட்டன. அவை வங்கியிலிருந்து மொத்தமாகக் கடன் வாங்கி அதை ஏழை மக்களுக்குக் கடனாக அளிக்கின்றன.
தனாதன் குழு
வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள்
அடகுக் கடைக்காரர்கள், கூட்டுறவுக் கழகங்கள், வங்கிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் பொதுவாகக் கடன் கொடுப்பவர்களாகக் கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே வங்கிகளைப் பற்றியும் சுய உதவி குழுக்களைப்பற்றியும் படித்திருக்கிறீர்கள். ஏனென்றால் அவர்கள் குபேரன் குழுவிலும் இடம்பெற்றிருந்தனர்.
ஒரு வீர நாயகனாக விளங்குங்கள்!
நீங்கள் வங்கியில் பணம் சேமித்தால், உண்மையில் நீங்கள் சமூகத்திற்கு உதவும் ஓர் ஆரவாரமற்ற வீர நாயகனாக விளங்குகிறீர்கள்! அது எப்படி? நாம் வங்கிகளில் சேமிக்கும் பணம் வங்கிகளில் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருப்பதில்லை. அப்படித் தங்களிடம் மக்களின் சேமிப்புகளை அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருந்தால் வங்கிகள் வீங்கிப்போய்விடும்; எனவே, அவற்றைக் கொண்டு வங்கிகள் தேவைப்படும் மக்களுக்குக் கடனுதவி செய்கின்றன.
எனவே, நம் பணத்தைப் பாய், படுக்கைக்கு அடியில் பதுக்கிவைப்பதைவிட, ஒரு பணப் பெட்டிக்குள் பூட்டி வைப்பதைவிட, நம் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பது மேல். நம் பணம் வங்கியிலோ அல்லது சுய உதவிக் குழுவின் கையிலோ பாதுகாப்பாக இருக்கும், நிறைய பேருக்கு உதவும்.
நான் என் படிப்புக்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளேன். சம்பாதிக்கத் தொடங்கியவுடன் கடனைத் திருப்பித் தந்துவிடுவேன்.
தொழில் தொடங்க எனக்குக் கடனுதவி தேவை. அதில் வருமானம் கிடைக்கத் தொடங்கியதும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கிவிடுவேன்.
ஸ்கூட்டர் வாங்குவதற்கு எனக்குக் கடன் தேவை. கடன் தொகையின் ஒரு பகுதியை நான் மாதாமாதம் திருப்பித் தருவேன்.
வட்டிக்குப் பணம் தருபவர்களும் அடகுக் கடைக்காரர்களும்
ரஸ்ஸல் மார்க்கெட்டில் வசூல் ராஜா மிகவும் மரியாதைக்குரிய மனிதராக விளங்குகிறார். தினமும் காலையில் அவர் மார்க்கெட்டில் உள்ள தம்பு போன்ற சிறிய காய்கறி வியாபாரிகளுக்கு ரூ. 1000 தருகிறார். அந்தப் பணத்தின் உதவியோடு தம்பு சந்தையிலிருந்து காய்கறிகளை வாங்கிக்கொண்டு வந்து, வேறெங்காவது அந்தக் காய்கறிகளை லாபத்திற்கு விற்கிறார். நாளின் முடிவில், அவர் வசூல் ராஜாவிடம் வாங்கிய 1000 ரூபாய் பணத்தை 1100 ரூபாயாகத் திருப்பித்தந்துவிட வேண்டும். அதாவது, ஆயிரம் ரூபாய்க்கு ரூ 100 வட்டி.
இப்பொழுது நாம் தனாதன் குழுவில் உள்ள மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
நான் தினம் காலையில் தம்புவுக்கு 1000 ரூ தருகிறேன். மாலையில் 1100 ரூபாயாக அவரிடமிருந்து பெற்றுக்கொண்டுவிடுகிறேன்.
தம்புவுக்குக் கடன் தருவதால் வருடம் ரூ.36,500 எனக்கு லாபம். நல்ல தொழில்தான், இல்லையா!
எனக்குப் போதுமான அளவு வியாபாரம் நடக்காதபோதும் நான் அவருக்குப் பணத்தை வட்டியோடு திருப்பித்தந்தாக வேண்டும்.
அடகுக் கடைக்காரர்களும் பொதுமக்களுக்குப் பணம் தேவைப்படும்போது அதைக் கடனாகக் கொடுத்து உதவிசெய்கிறார்கள். அப்படிக் கடன் கொடுக்கும்போது அதற்கு ஈடாக வீட்டுப் பொருள் எதையேனும் (பாத்திரங்கள், நகைகள், மண்வெட்டி, கோடரி போன்றவை) அவர்களிடம் அடமானமாகத் தந்துவைக்கவேண்டும்.
வாங்கிய பணத்தைத் திருப்பித் தருவதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட தேதியில் ஒரு கட்டணத்தோடு திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். குறித்த சமயத்தில் கடனை வட்டியோடு திருப்பித் தர இயலவில்லை என்றால் அடகுக் கடைக்காரர் அவரிடம் அடமானமாக வைக்கப்பட்ட பொருளை விற்று தனக்கு வரவேண்டிய தொகையைப் பெற்றுக் கொள்வார்.
எனக்குக் கடன் தாருங்கள். நான் இந்தப் பொருட்களைப் பணத்தைக் கொடுத்து மீட்டுக்கொள்கிறேன்.
3 மாதத்தில் நீங்கள் கடனைத் திருப்பித் தரவில்லையென்றால் நான் பாத்திரங்களை விற்றுவிடுவேன்.
சாணக்யா குழு, பணத்தைப் வளர்த்துப் பெருக்குபவர்கள்
சாணக்யா குழுவில் பணத்தைப் பெருக்க உதவுபவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பண நிர்வாகிகள் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்கள். இந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் நாம் எப்படிப் பணத்தை முதலீடு செய்யலாம், நம்முடைய தொழிலில் எப்படி லாபம் சம்பாதிக்கலாம், நம்முடைய எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிடலாம் என்று நமக்கு எடுத்துச்சொல்லி வழிகாட்டுகிறார்கள். சாணக்யா குழு நம் பணத்தைப் பக்குவமாக, புத்திசாலித்தனமாகக் கையாளுவது எப்படி என்று கற்றுத் தருகிறது! சாணக்யா குழுவினரைப்பற்றி இந்தத் தொடரின் அடுத்த புத்தகத்தில் (பணத்தைப் பக்குவமாகக் கையாளுங்கள்) இன்னும் நிறையத் தெரிந்துகொள்ளலாம்.
ஆட்ட நடுவர்
பண உலகம் பல வாக்குறுதிகளின் அடிப்படையில் இயங்கிவருகிறது. குபேரன் குழு பணத்தைச் சேமிக்க நமக்கு உதவுகிறது. தனாதன் குழு நமக்குக் கடனாகப் பணம் தந்து உதவுகிறது. சாணக்யன் குழு மக்கள் தங்களுடைய பணத்தைப் பெருக்கிக்கொள்வதற்கு உதவிசெய்கிறது. இதற்கு அவர்கள் பல வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். காகிதப் பணம் என்பதே ஒரு நாட்டின் அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்குத் தரும் உறுதிமொழிப் பத்திரம் ஆகும்.
அம்மாவிடம் ஒரு 100 ரூபாய்த் தாளை வாங்கி அதில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள்!
இதைக் கொண்டுவருபவருக்கு... பணம் தர உறுதியளிக்கிறேன்
அதேபோல், செக் அல்லது காசோலை என்பது ஒரு வங்கி இன்னொரு வங்கிக்குத் தரும் உறுதிமொழிப் பத்திரமாகும். ஷேர்கள் அதாவது பங்குகள் (அப்படியென்றால் என்ன என்று அறிந்துகொள்ள ’பணத்தை பக்குவமாகக் கையாளுங்கள்’ புத்தகத்தைப் பார்க்கவும்) நிறுவனங்களிடமிருந்து தரப்படும் உறுதிமொழிப் பத்திரங்கள்.
இத்தகைய பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோர் நேர்மையாக நடந்துகொள்கிறார்களா, உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்டறியவும், உறுதிப்படுத்தவும், அரசாங்கம் நிறைய ஒழுங்கமைவுக் கட்டமைப்புகளை வகுத்துள்ளது. உதாரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி பலவிதமான வழிகளில் பணம் சேமிக்கும், கடன் வாங்கும் மற்றும் பணம் செலுத்தும் பொதுமக்கள் அனைவரும் உரிய விதிமுறைகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்கிறது. பொதுமக்கள் தங்களுடைய பணத்தின் மூலம் நிறைய பயன் பெறுவதற்கு அவர்களுக்குப் பண நிர்வாகிகள் உதவி செய்கிறார்கள். மேலும், மக்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் ஈட்டிக்கொள்ளவும் உதவி செய்கிறார்கள். அதற்கென அவர்கள் ஒரு கட்டணம் பெற்றுக்கொள்கின்றனர். நல்ல விஷயம் அல்லது மோசமான விஷயம் ஒன்று நம் வாழ்வில் நடக்கிற சமயங்களில் பண நிர்வாகிகள் நமக்கு உதவுகிறார்கள். நீங்களேகூட உங்களுடைய பண நிர்வாகியாக நல்ல முறையில் செயல்பட முடியும். பக்குவமான பண நிர்வாகியாக இருப்பது எப்படி என்பதை இந்தத் தொடரின் நான்காம் புத்தகத்தை (பணத்தைப் பக்குவமாகக் கையாளுங்கள்) படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இதோ இன்னொன்று:
1. ப்ளாஸ்டிக் குடுவை ஒன்றை உங்களுடைய பொம்மை உண்டியலாகப் பயன்படுத்திக்கொள்ளவும்.
2. அதைச் சுற்றிப் பளிச்சென்ற வண்ணத்திலான ஒரு தாளை ஒட்டவும். இதோ உங்களுடைய பொம்மை உண்டியல் தயாராகிவிட்டது!
4. அந்தத் தகரப்பெட்டியைச் சுற்றி ஒரு வெற்றுத்தாளை ஒட்டவும். அதன்மீது பளிச்சென்று தெரியும் வண்ணங்களைத் தீட்டவும்.
1. ஒரு காலி தகரப் பெட்டியை எடுத்துக்கொள்ளவும்.
2. அதன் மூடியில் ஒரு மெலிதான பிளவைக் கீறித் தரும்படி பெரியவர் யாரிடமேனும் கேட்கவும்.
3. இதை நீங்களே செய்ய வேண்டாம், உங்கள் கையில் காயம் படலாம்.
உங்களுடைய பொம்மை உண்டியலை உருவாக்குங்கள்!