சரக்! சரக்!
அம்மா வாசல் பெருக்கும் சத்தம்!
இதோ, வாசலில் என் குட்டிக் கோலம்!
அம்மா, பா.........ல்!
வாசலில் அலமேலு அக்காவின் குரல்!
“அட, பாப்பா கோலம் வரைந்தாளா? என்று அக்கா கேட்டார்.
தொப்!
பாஸ்கர் அண்ணா நாளிதழை வாசலில் தொப்பென்று வீசினார்!
டக்கென்று மிதி வண்டியில் வேகமாக கிளம்பிவிட்டார்.
பாம்! பாம்!
அண்ணாவின் பள்ளி பேருந்து வந்துவிட்டது!
"பாப்பா சாப்பிட்டாச்சா?" என்று மூர்த்தி அங்கிள் கேட்டார்.
"பாப்பா, டாட்டா!”
அப்பா கிளம்பியாச்சு!
"சாயங்காலம் வரும்பொழுது பாப்பாவுக்கு என்ன வேணும்?" என்று அப்பா கேட்டார்.
"பலூன் வேணும் அப்பா," என்றேன்.
"தக்காளி! வெங்காயம்! கேரட்!"
கோகிலா ஆண்ட்டியின் காய்கறி வண்டி வந்திருக்கிறது.
"பாப்பா எல்லா காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவாளாமே," என்றார் ஆண்ட்டி.
ட்டிரிங்! ட்டிரிங்!
மணி தாத்தா தபால் கொண்டு வந்துள்ளார். யார் அனுப்பி இருப்பார்?
அமெரிக்காவில் இருந்து பெரியம்மா தீபாவளி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்," என்றார் அம்மா.
ட்டப்! ட்டப்! ட்டப்!
வாசக்கதவைத் தட்டும் சத்தம்! யார் வந்திருக்கிறார்?
பக்கத்து வீட்டு பொற்கொடி பாட்டி வந்திருக்கிறார்.
"பாப்பா துணி எங்க வீட்டில விழுந்திருச்சு, எடுத்துட்டு வந்தேன்,” என்றார் பாட்டி.
க்க்ளிங்! க்க்ளிங்!
கண்ணாடி வளையல் சத்தம்! யாரது?
ஆஹா, அத்தை!
"செல்ல பாப்பாவுக்கு பாயாசம் கொண்டு வந்திருக்கிறேன்," என்றார் அத்தை.
கடகட... கடகட...
வாசலில் பைக் சத்தம்!
அப்பா வந்தாச்சு!
ஹையா! அப்பா பெரிய பலூன் கொத்தை வாங்கி வந்துள்ளார்.
வ்வொவ்! வ்வொவ்!
வாசலில், தினத்தின் கடைசி விருந்தாளி.
பைரவ்!
அம்மா வைத்த தயிர் சாதத்தை சாப்பிட்டு விட்டு வாசலில் படுத்துத் தூங்கியது.
உங்கள் வீட்டு வாசலில் தினமும் யார் வந்து போகிறார்
என்று உங்களுக்குத் தெரியுமா?
பால் கொண்டு வருபவரையும் நாளிதழ் கொண்டு வருபவரையும்
நீங்கள் சந்தித்தது உண்டா?
உங்கள் பக்கத்து வீட்டிலும் எதிர் வீட்டிலும் வசிப்பவர்களை
நீங்கள் அறீவீர்களா?
இல்லை என்றால் அம்மா அப்பாவிடம் கேட்டுத்
தெரிந்துக் கொள்ளுங்கள்!