நீங்கள் எப்பொழுதாவது பறக்கும் ட்ரோனைப் பார்த்தது உண்டா?
அதற்கு பல இறகுகள் இருக்கலாம்.
ஆனால், ட்ரோன் ஒரு தும்பி அல்ல.
அது ஒரு கூரையில் இருந்து இன்னொரு கூரைக்குப் பறந்து செல்லும்.
ஆனால், ட்ரோன் ஒரு பறவை அல்ல.
பொருட்களை எடுத்துச்செல்ல
அதனிடம் ஒரு பை உண்டு.
ஆனால், ட்ரோன் ஒரு கங்காரு அல்ல.
கடலோரத்தில் இருக்கும் சீமாவின் வீட்டையும்
நகரின் நடுவில் இருக்கும் இக்பாலின் வீட்டையும் அதனால் கண்டுபிடிக்க முடியும்.
ஆனால், ட்ரோன் ஒரு துப்பறிவாளர் அல்ல.
தன்னிடம் தரப்பட்டவற்றை முப்பது நிமிடங்களில் உரியவர்களிடம் சேர்த்துவிடும்.
ஆனால், ட்ரோன் ஒரு தபால்காரர் அல்ல.
அப்படியென்றால் ட்ரோன் என்பது என்ன?
ட்ரோன் ஒரு கெட்டிக்கார இயந்திரம்.
ட்ரோன் பறக்கும். முகவரிகளைக் கண்டுபிடிக்கும்.
உயரத்திலிருந்து புகைப்படங்கள் எடுக்கும்.
தன்னிடம் தரப்பட்டவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும்.
இப்போதைக்கு, ட்ரோன்கள் தம்முடைய பணிகளைக் கற்றுக்கொள்வதில் மும்முரமாய் இருக்கின்றன.
சில நேரங்களில் அவை தவறு செய்யும். கட்டிடங்களின் மீது தவறுதலாக மோதிக்கொள்ளும். வானிலிருந்து கீழே விழுந்துவிடும்.
அதனால், அவை எங்கெங்கு பறக்கலாம் என்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன.
என்றாவது ஒருநாள், நிறைய ட்ரோன்கள் ஆகாயத்தில் குறுக்கும் நெடுக்குமாய் பறந்து கொண்டிருக்கும்.
அவை மலையுச்சியில் உள்ள கிராமங்களுக்கு மருந்துகளை விரைவாகக் கொண்டு சேர்க்கும்.
காட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, அவற்றைக் காப்பாற்ற உதவும்.
பூமியில் இன்னும் நமக்குத் தெரியாத இடங்களை எல்லாம் புகைப்படம் எடுக்கும்.
ஒருநாள் ட்ரோன்கள், உணவகத்தில் இருந்து சீமாவின் வீட்டிற்கு பிரியாணி கொண்டு செல்லும்.
புத்தகங்களை நூலகத்தில் இருந்து இக்பாலின் வீட்டிற்கு எடுத்துச் செல்லும். உங்கள் வீட்டு ஜன்னல் வழியே பார்த்தால், ட்ரோன்கள் பறவைகளுடன் சேர்ந்து பறந்து கொண்டிருக்கும். கூடிய விரைவிலேயே, நீங்களும் ஒரு ட்ரோனை பார்க்கத்தான் போகிறீர்கள்!