parandu senra auto

பறந்து சென்ற ஆட்டோ

இந்தக் கதை உங்களை ரம்மியமான டெல்லியின் சாலைகளில் சிந்தனை மிக்க, வியப்பு மிக்க உலாவில் அழைத்துச் செல்லும்! ஆட்டோவில் போகலாம், வாருங்கள்!

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அர்ஜூனுக்கு மூன்று சக்கரங்கள், ஒரு முகப்பு விளக்கு மற்றும் பச்சை, மஞ்சள் வண்ணம் கொண்ட மேல் சட்டை ஆகியவை இருந்தன. அவன் டெல்லியில் மிகப்பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவனாய் இருந்தான். அவன் சென்ற இடமெல்லாம் சகோதர சகோதரிகள், அத்தை மாமாக்கள், பெரியப்பா சித்தப்பாமார்கள், பங்காளிகள் என்று நிறைய பேர் இருந்தனர். அவர்கள், ‘‘கவனமாகப் போடா!’’ என்று ‘பீப்’ ஒலி எழுப்புவார்கள். ‘‘சரி! சரி!’’ என்று பதிலுக்கு இவனும் ‘பீப்’ ஒலி எழுப்புவான்.

அர்ஜூன் இரவு பகல் பாராது கடினமாக உழைத்தான். “புட்–புட்–டுகா–டுகா–டுக்” என்றவாறு செல்வான். புட்–புட்–டுகா–டுகா–டுக்! ஆட்டோக்காரர் சிரீஷும் கடுமையாக உழைத்ததால் அவன் ஒரு போதும் குறை கூறியதில்லை. சிரீஷின் வயதான எலும்புகள் அவருக்கு வலியைக் கொடுத்தன. சிரீஷ்ஜி அர்ஜுனின் முகப்புப் பெட்டியை பிளாஸ்டிக் பூக்களாலும், பின்புறத்தை சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்களாலும் அலங்கரித்தார். நீளமான வரிசை இருந்தாலும் கூட, அவர் பொறுமையாகக் காத்திருந்து அர்ஜூனின் எரிபொருளுக்கான தாகத்தைத் தணிப்பார். அர்ஜூனின் மேல்சட்டை கிழிந்த மாத்திரத்தில் அவர் உடனே கொண்டு போய் தைத்து சரிசெய்து விடுவார்.

லஜ்பத் நகர் சந்தைகளுக்கு மொத்தக் குடும்பங்களை கூட்டிச் செல்வது அர்ஜூனுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாப் பயணிகள் நான்கு சக்கர வாகனங்களைத் தவிர்த்து அர்ஜூனை நாடி வரும்போது அர்ஜூனின் மனம் பாடி மகிழும்.

சிரீஷ்ஜியோடு குதுப்மினாருக்கு வெளியே இருந்த மர நிழலில் ஓய்வெடுப்பது அர்ஜூனுக்கு மிகமிகப் பிடிக்கும். இரவில் கனாட் ப்ளேஸின் வசீகரம் அர்ஜூனுக்கு சலிக்கவே சலிக்காது. ரயில் நிலையத்தின் வெளியே நிலவும் இரைச்சலும், ஃபெரோஸ் ஷா கோட்லாவில் கிரிக்கெட் போட்டி முடிந்து வெளியேறும் கூட்டமும் அவனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன. வாழ்க்கை நன்றாக இருந்தது. இதற்கு மேல் எதற்கும் ஆசைப்படக் கூடாதென்று அர்ஜூனுக்குத் தெரிந்திருந்தது.

ஆனாலும், அர்ஜூனுக்கு ஒரு ரகசிய ஆசை இருந்தது. அவன் பறக்க ஆசைப்பட்டான். அதுவும் ஹெலிகாப்டர் விசிறிகளோடு! அவை அர்ஜூனின் கூரை மேல் காற்றை வெட்டிக் கொண்டு செல்லும். சிரீஷ்ஜி தலையை கழுத்துத்துண்டால் மூடிக் கொள்வார். அத்துண்டின் முனைகள் உல்லாசத்தோடுக் காற்றில் படபடக்கும். புட்–புட்–டுகா–டுகா–டுக் என்றவாறு இருவரும் வானத்தில் பறப்பார்கள்!

ஆனால், இது வெறும் கனவுதான் என்று அர்ஜூனுக்குத் தெரிந்திருந்தது. ஹெலிகாப்டர் விசிறிகளோடு ஓர் ஆட்டோ இருப்பது என்பது யானைக்கு இறக்கைகள் இருப்பது போல! அல்லது ஒரு இரயில் வண்டி, அதனது பெட்டிகள் எல்லாம் அந்தரத்தில் ஒன்றின் பின் ஒன்றாய்த் தொடர, வானத்தில் ராக்கெட்டைப் போல் ஏறிப் பறப்பதைப் போன்றது.

ஒரு வெயில் நாளில், குழப்பம் மிகுந்த வாகன நெரிசலில் சாலைச் சந்திப்பில் அர்ஜூன் காத்திருந்தான். சிரீஷ்ஜியின் பின்னால் நரைத்த தலையோடு, மங்கலான புடவையை நேர்த்தியாக உடுத்தியபடி ஒரு பெண் உட்கார்ந்திருந்தார். புட்–புட்–புட்–புட்...

அப்போது, ஒரு அழுக்கான சிறுவன், கார்களுக்கும் ஆட்டோக்களுக்கும் நடுவில் நுழைந்து தண்ணீர் விற்றுக் கொண்டிருந்தான். அவன் கண்கள் தீட்டிய வைரத்தைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன.

அருகில் வந்து, ‘‘குளிர்ச்சியோ குளிர்ச்சி! ஜில்! ஜில்! மாயாஜாலம்!’’ என்றபடி பனி படர்ந்த தண்ணீர்க் குப்பி ஒன்றை நீட்டினான். அந்தப் பெண்மணி கலகலவென்று சிரித்தார். ‘‘மாயாஜாலமா?’’ அந்தப் சிறுவன் தலையைப் பலமாக ஆட்டினான். அவன் தலை தனியாகக் கழன்று விழுந்துவிடுமோ என்று அர்ஜூன் நினைத்தான்.

‘‘எல்லோருக்கும் சிறிதளவு மாயாஜாலம் வேண்டும்’’ என்றார் அந்தப் பெண்மணி. சில ரூபாய்களைக் கொடுத்து அந்தப் பையனிடம் இரண்டு தண்ணீர்க் குப்பிகளை வாங்கினார். உடனே ஒன்றை சிரீஷ்ஜியிடம் நீட்டினார்.

சிரீஷ்ஜி, தன் வெற்றிலைக்கறைப் படிந்த பற்கள் தெரிய சிரித்தார். உடனே வேகமாய்க் குடித்தார். வண்டிகள் நகர ஆரம்பித்தன.

‘‘மாயாஜாலம் இப்போதே வேலை செய்ய ஆரம்பித்து விட்டது’’ என்றார் சிரீஷ்ஜி கேலியாக. அந்தப் பெண்ணும் குடித்தார். அர்ஜூனின் மேல் கொஞ்சம் சிந்தி விட்டது. அர்ஜூன் முன்னே செல்ல ஆரம்பித்திருந்தான். புட்–புட்–டுகா–டுகா–டுக் என்று அவன் சகோதரன் ஒருவனுக்கு ‘பீப்’ ஒலி எழுப்பி வணக்கம் சொல்லிக் கொண்டு குஷியோடு சென்றான்.

நகர ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சக்கரங்கள் லேசாவதை அர்ஜூன் உணர்ந்தான். அவனுக்குக் கீழே போக்குவரத்து தனியாக பிரிந்து செல்வதைப் பார்த்தான். ஆம்! அர்ஜூன் பறக்க ஆரம்பித்திருந்தான்.

‘‘பரவாயில்லை போ, போ அர்ஜூன்!’’ என்று அர்ஜூனைப் பார்த்த மாமா ஒருவர் ‘பீப்’ ஒலி எழுப்பினார்.

முன்னால் இருந்த திறந்த வெளியைக் கண்டு பிரமித்துப் போயிருந்த சிரீஷ்ஜி, பின்புறம் காண்பிக்கும் கண்ணாடியில் அந்தப் பெண்மணியின் முழிக்கும் விழிகளைப் பார்த்து.‘‘ஆமாம்! சரியான மாயாஜாலம் தான் இது, அம்மணி!’’ என்றார். இப்போது அந்தப் பெண்மணியின் சேலை தங்க நூலில் நெய்ததைப் போல் மின்னிக் கொண்டிருந்தது.அவரும், “மாயாஜாலம்...’’ என்றபடி நகைத்தார்.

அர்ஜூனின் சக்கரங்கள் சாலையிலிருந்து மேலெழும்பி, உயர, உயர, போய்க் கொண்டிருந்தன. புட்–புட்–டுகா–டுகா–டுக்... மேலே, மேலே, மேலே! அவனுக்கு உதவ ஹெலிகாப்டர் விசிறிகள் எதுவும் இருக்கவில்லை. மாயாஜாலம் என்று அர்ஜூன் நினைத்தான். இது ஆட்டோ மாயாஜாலம்!

திரளாகச் சென்ற பறவைக் கூட்டம் சிதறிப் போனது. அர்ஜூனின் முகப்பு விளக்கு மகிழ்ச்சியில் பளிச்சென்று எரிந்தது.

அர்ஜூன் ஜவஹர்லால் நேரு அரங்கம் மற்றும் இந்தியா கேட் மேல் பறந்தான். ஹுமாயூன் சமாதி, யமுனை ஆறு, அழகான கோவிலான அக்ஷர்தாம் இவை எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்தான். பெரிய சிலந்தி வலையைப் போல் தோற்றமளித்த சாலைகளைப் பார்த்தான்.

இவை எல்லாவற்றையும் விரிந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த சிரீஷ்ஜி குஷியாகக் கூச்சலிடத் தொடங்கியிருந்தார். அவர் இப்போது எந்தக் காரையும் அனுசரித்துப் போக வேண்டியதில்லை. கைப்பிடியைப் பிடித்துக் கொள்ளவும் இல்லை.

அப்பெண்மணி தனது அழகான புடவையைத் தடவிப் பார்த்து மகிழ்ந்தார். ‘‘அண்ணே!’’ என்று அழைத்தார். பின்புறம் காண்பிக்கும் கண்ணாடியில் பார்த்து ‘‘உங்கள் முகம்!’’ என்றார். சிரீஷ்ஜி தன்னைத் தானேப் பார்த்துக் கொண்டார். அவர் முகம், சினிமா கதாநாயகனின் முகத்தைப் போல் இருந்தது. அவரது பற்கள் வெள்ளை வெளேர் எனப் பளிச்சிட்டன. அவரது சருமம் பிரகாசித்தது. ‘‘இன்னும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்’’ என்று அவர் கத்தினார்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? அர்ஜூன் வியந்தான். நாம் எங்கே போக முடியும்? என்னை யாரும் ஓட்டாவிட்டால், நான் என்ன ஆவேன்? ஒருபோதும் அர்ஜூன் இத்தனை சுதந்திரமாக இருந்ததில்லை. அதே சமயம், இது போல் எங்கேயோ தொலைந்து போனதைப் போல உணர்ந்ததும் இல்லை. அவனுக்குத் தெரிந்த உலகத்தில் ஒவ்வொரு பயணத்திற்கும் ஒரு உத்தேசம் இருந்தது. ஒவ்வொரு சேருமிடமும் நிரந்தரமில்லாதது. தற்காலிகமானது.

ஒலியெழுப்பும் கார்களுக்கு மேலே, உயரத்தில், முடிவில்லாத அமைதிக்குள் அர்ஜூன் அவன் வாழ்வின் முக்கிய அம்சமான கார்கள், பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் நிறைந்த சாலைகளை இழந்தான். வேலையில் ஈடுபட்டிருந்த தன் குடும்பத்தினர் அனைவரும் மின்னும் மஞ்சள் வண்ணப் புள்ளிகளாகத் தெரிவதைப் பார்த்தான்.

ஏதோ ஒரு இடத்திற்கு ஆர்வத்தோடு செல்ல விரையும் கூச்சலும் நெரிசலும் மிக்க மனிதர்களை இழந்தான். இன்னும் போக வேண்டிய இடங்கள் எவ்வளவோ, எவ்வளவோ, உள்ளன... புட்–புட்–டுகா–டுகா–டுக்...

அந்தப் பெண்மணி கீழே பார்த்தார். அங்கே இருக்கும் சந்தோஷங்களை நினைத்தார். இப்போது சேலையின் பளபளப்பை மறப்பது சுலபமாக இருந்தது. நான் என் மகளையும் பேரக் குழந்தைகளையும் பார்க்க அல்லவா வந்தேன்? அவர்கள் காத்திருப்பார்கள். அவர்கள்தான் என் வாழ்வின் உண்மையான மாயாஜாலம் என்று எண்ணினார்.

சிரீஷ்ஜிக்கு தன் கதாநாயக முகம் அப்பொழுதே அலுத்துப் போயிருந்தது. இதனால் என்ன பயன்? என வியந்தார். ஒரு காலத்தில் அதற்காகத்தான் ஆசைப்பட்டார். ஆனால், இப்போது சிரிஷ்ஜிக்கு தனது சொந்த சருமத்தின் சுகமே வேண்டியிருந்தது.

அர்ஜூனின் முகப்பு விளக்கு மங்கலாகி விட்டிருந்தது. இலக்கில்லாமல் போனதை உணர்ந்தான். சிரிஷ்ஜியின் எண்ண ஓட்டத்தை அறிந்தான். அப்பெண்மணியின் மனநிலையையும் உணர்ந்தான். இப்போது கீழ்நோக்கிப் பறந்தான். நகரம் ஒளி வீசியது. அர்ஜூன் அதன் அருகே நெருங்க நெருங்க அது அவனுக்கு நிறைய சக்தியை அளித்தது.

நகரத்தின் பரிச்சயமான மாயாஜாலத்தை அனுபவித்தபடி, சிரீஷ்ஜி மீண்டும் வேலையில் மும்முரமாகி விட்டார். ஒவ்வொரு அடையாளக் குறியும், ஒவ்வொரு திருப்பமும் அவரோடு பேசின. மிக விரைவில் அவர் தன்னை உணர்ந்தார். தான் எங்கே போகிறோம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அப்போதே அங்கே வந்து சேர்ந்திருந்தார். அந்தப் பெண்மணியின் சேலை மங்கலாகி விட்டிருந்தது. ஆனால் அவரது முகம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் பூமிக்கு இறங்கி வந்தனர். அர்ஜூனின் சக்கரங்கள் வெதுவெதுப்பான தார்ச் சாலையைத் தொட்டன. அவனது இயந்திரம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. புட்–புட்–டுகா–டுகா–டுக்... தெரு முனையிலிருந்த ஒரு சகோதரன் ‘‘கவனமாகச் செல்லடா!’’ என்று ‘பீப்’ ஒலி எழுப்பினான்.

அந்தப் பெண்மணியின் பேரக்குழந்தைகள் மேலிருந்த ஜன்னலிலிருந்து கை அசைத்தனர். அவர் கீழே இறங்கி, சிரீஷ்ஜியிடம் கட்டணத்தைக் கொடுத்தார். அர்ஜூன், யாரோ அறிமுகமில்லா நபர் “ஆட்டோ! ஆட்டோ! ஆட்டோ!” என்று அருமையாகக் கூவி அழைப்பதைக் கேட்டான்.ஒவ்வொரு சவாரியும் புதியது. அவை ஒவ்வொன்றும் அவனுடைய முடிவில்லா பயணத்தின் பாகமாகும். ஒவ்வொரு சவாரியும் வியப்பானது. ஆச்சர்யங்கள் நிறைந்தது.