அது 1870ஆவது வருடம். நியூ லண்டன், கனெக்டிகட், யுனைடெட் ஸ்டேட்ஸ். காலை 7 மணி.
குழந்தைகள் படுக்கையில் உருண்டு கொண்டிருக்க, அவர்களின் அம்மாக்கள் பற்குச்சிகளையும் பற்பசை ஜாடிகளையும் கொடுத்து பல் விளக்க அவசரப்படுத்திக் கொண்டிருந்தனர்.
என்னது? "பற்குச்சி" என்றா சொன்னேன்?ஆமாம்! 1870களில் பற்களைச் சுத்தம் செய்ய பற்குச்சிகளைப் பயன்படுத்தினர். பற்குச்சி என்பது, வெறுமனே ஒரு முனையில் நசுக்கப்பட்ட குச்சிதான். சில அதிர்ஷ்டக்கார குழந்தைகள், கீழ்முனையில் காட்டுப்பன்றியின் முடிகள் கட்டிய பற்குச்சிகளை உபயோகித்தனர். அது, அவர்கள் பற்களை மேலும் பளிச்சிட வைக்க உதவியது.
நான் சொன்ன இன்னொரு விஷயம் என்ன? ”பற்பசை ஜாடிகள்”? ஆமாம். அப்போது பற்பசைக் குழல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களிடம் ஜாடிகள் மட்டுமே இருந்தன. தூக்கம் கலையாத கண்களோடு எழும் குழந்தைகள், பற்பசை இருந்த பீங்கான் ஜாடிக்குள் பற்குச்சியை முக்கி எடுத்துத்தான் தங்கள் நாளைத் துவங்கினார்கள்.
உண்மையில், குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவரும் அதே பீங்கான் ஜாடிக்குள்தான் தங்கள் பற்குச்சியை முக்கினார்கள்; தனது பற்குச்சியைப் போலவே கருப்பும், மஞ்சளுமாய் இருக்கும் பற்களோடு அவ்வப்போது விருந்தாளியாய் வரும் அத்தைப்பாட்டி உட்பட.
ஒரு நாள் காலை ஒரு பல் மருத்துவரின் வீட்டிலிருந்து சகிக்க முடியாத அழுகை ஒலி கிளம்பியது. ”அய்யேஏஏஏ!”அது, மருத்துவர் ஷெஃபீல்ட் அவர்களின் மகன் லூசியஸ் எழுப்பியதாகும். லூசியஸ் இனி ஒருபோதும் ஜாடிக்குள் பற்குச்சியை முக்குவதில்லை என்றான். இனிமேல் பல்பொடியைத்தான் உபயோகிப்பது என்றும் முடிவு செய்தான்.ஆனால், பற்பசையை உபயோகிக்க வேறொரு சிறந்த வழி இருந்தாக வேண்டும் என்னும் சிந்தனையும் அவன் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.
சில வருடங்களுக்குப் பிறகு லூயிஸ், பாரிஸ் நகரத்திற்கு பல் மருத்துவ விஞ்ஞானம் பயிலச் சென்றான். அங்கே ஓவியக் கலைஞர்கள் உலோகக் குழல்களிலிருந்து வண்ணக்குழம்பைப் பிதுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.
'ஆகா! பற்பசையை வைக்க ஏன் இதே போன்ற ஒரு குழலை உபயோகிக்கக் கூடாது?' உடனடியாக, வீட்டிற்குத் திரும்பிச் சென்று இந்த யோசனையை தன் தந்தையிடம் பகிர்ந்து கொண்டான். அவரும் அதை அற்புதமான யோசனை என்று ஆமோதித்தார்.
அந்த சிறிய வாயினுள்ளே பற்பசையை எப்படித் திணிப்பது என்ற ஒரே ஒரு சிறிய விஷயம் மட்டும் தெரிய வேண்டும். லூசியஸ் எப்படி காலி குழலுக்குள் பற்பசையை நிரப்பியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? எப்பொழுதாவது அரைகுறைத் தூக்கத்தில் எழுந்து வந்து, அளவுக்கு அதிகமான பற்பசையைப் பிதுக்கிய மோசமான காலைநேர அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?'பள்ளிப் பேருந்து இன்னும் இருபது நிமிடங்களில் வாசலுக்கு வந்து விடும்' அம்மாவின் உரத்த சப்தம் கேட்கிறது. கழுவுதொட்டி முழுவதும் அலங்கோலமாக அப்பியிருக்கும் பற்பசையை அம்மா பார்த்துவிட்டால் ஒரே அமர்க்களம்தான்! உடனே தூக்கிவாரிப் போட்டு உங்கள் உறக்கம் முழுவதுமாக கலைந்து விடுகிறது!
காது குடையும் குச்சியால் திணிக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அல்லது ஒரு சின்ன கரண்டியாலோ, பல் குத்தும் குச்சியாலோ?
நீங்கள் எதிர்பார்த்தது போல் அது அவ்வளவு ஒன்றும் சிரமமான வேலையாய் இருக்கவில்லை. மருத்துவர் ஷெஃபீல்டு அவர்களின் குழு மூடியைத் திறக்காமலேயே பற்பசையை குழலுக்குள் அடைத்துவிட்டனர்.
ஆமாம்! அவர்கள் குழலின் மூடியை உறுதியாக அடைத்துவிட்டு, மறு பக்கத்தை திறந்து வைத்தார்கள். பற்பசையை உள்ளே தள்ள பீச்சாங்குழல் போன்ற ஒன்று இருந்து விட்டால், குழலின் பெரிய வாய்ப்பகுதியிலிருந்து நிரப்புவது எளிது. அதன் பிறகு, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பசை ஒழுகாதபடி குழலின் மறுமுனையை உறுதியாக அடைத்து விடுவது மட்டுமே.
தற்போது பற்பசைக் குழல்கள் இயந்திரங்களின் உதவியோடு நிரப்பப்படுகின்றன. எல்லா காலி குழல்களையும், மூடி இருக்கும் பக்கம் கீழ்நோக்கியும் மூடப்படாத மறுபக்கம் மேல் நோக்கியும் இருக்குமாறு வரிசையாக நிறுத்தி கடத்துப்பட்டையில்(கன்வேயர் பெல்ட்) அடுக்கப்படும். ஒரு பெரிய கொள்கலனில் பற்பசை நிரப்பப்பட்டு கடத்துப்பட்டைக்கு சற்றே மேலாக பொருத்தப்பட்டிருக்கும்.
கொள்கலனின் அடிப்பாகத்தில் உள்ள புனல் போன்ற குழாயிலிருந்து, நகரும் கடத்துப்பட்டையில் வைக்கப்பட்டுள்ள பற்பசைக்குழல்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் பற்பசை நிரப்பப்படும். ஆனால், அவை குழல் விளிம்பு வரை நிரப்பப்படுவதில்லை. குழலின் அடிப்பாகத்தை மடித்து அடைப்பதற்காக அரை அங்குல இடம் விடப்படும்.இப்போது பற்பசைக் குழல் பிதுக்குவதற்குத் தயார்!
ஆரோக்கியமான பற்களுக்கு பண்டைய இந்தியரின் அனுபவ அறிவுஇந்தியாவில் பெரும்பான்மையோர் தொழிற்சாலைகளில் செய்யப்படும் பிரஷ்ஷுக்கு பதிலாக வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இவை பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைக்கின்றன. ஆனால், உலகிலேயே மிகச்சிறந்த பற்குச்சி எது என்று உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் விரல்களே! பற்களுக்கும் ஈறுகளுக்கும் உன்னதமான பற்குச்சி இவையே என்று பல்மருத்துவர்கள் சொல்கின்றனர்.
நீங்கள் எப்போதாவது பல்பொடி உபயோகித்தது உண்டா? அதில் என்னென்ன வாசனைகளை கண்டுபிடித்தீர்கள்?
மூலிகைகளும் நறுமணப் பொருட்களுமான புதினா, கிராம்பு, இலவங்கப்பட்டை, மிளகு, துளசி ஆகியவையும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நலம் தருபவை.
ஆப்பிள், கேரட் போன்ற நார்ச்சத்துள்ள பழங்களையும் காய்களையும் சாப்பிடுவது பற்களைச் சுத்தம் செய்ய உதவும்.
பற்பசைக்குழலின் மூடிகளோடு
சில வேடிக்கைகள்