பொழுது புலர இன்னும் அரை ஜாமப் பொழுது இருக்கும். கீழ்வானத்தில் காலைப் பிறையும் விடிவெள்ளியும் அருகருகே ஒளிர்ந்து கொண்டிருந்தன. உச்சிவானத்தில் வைரங்களை வாரி இறைத்தது போல் நட்சத்திரங்கள் பிரகாசித்தன. வடக்கே ஸப்த ரிஷி மண்டலம் அலங்காரக் கோலம் போட்டதுபோல் காட்சியளித்தது. தெற்கு மூலையில் சுவாமி நட்சத்திரம் விசேஷ சோபையுடன் தனி அரசு புரிந்தது.
அந்த மனோகரமான அதிகாலை நேரத்தில், காவேரி பிரவாகத்தின் 'ஹோ' என்ற சத்தத்தைத் தவிர வேறு சத்தம் ஒன்றுமேயில்லை. திடீரென்று அத்தகைய அமைதியைக் கலைத்துக் கொண்டு 'டக் டக் டக்' என்று குதிரையின் காலடிச் சத்தம் கேட்கலாயிற்று. ஆமாம்; இதோ ஒரு கம்பீரமான உயர்ந்த ஜாதிக் குதிரை காவேரி நதிக் கரைச் சாலை வழியாகக் கிழக்கேயிருந்து மேற்கு நோக்கி வருகிறது.
அது விரைந்து ஓடி வரவில்லை; சாதாரண நடையில் தான் வருகிறது. அந்தக் குதிரைமீது ஆஜானுபாகுவான ஒரு வீரன் அமர்ந்திருக்கிறான். போதிய வெளிச்சமில்லாமையால், அவன் யார், எப்படிப்பட்டவன் என்று அறிந்து கொள்ளும்படி அங்க அடையாளங்கள் ஒன்றும் தெரியவில்லை. நெடுந்தூரம் விரைந்து ஓடிவந்த அக்குதிரையை இனிமேலும் விரட்ட வேண்டாமென்று அவ்வீரன் அதை மெதுவாக நடத்தி வந்ததாகத் தோன்றியது. அவன் தான் சேரவேண்டிய இடத்துக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டதாகவும் காணப்பட்டது.
அவனுக்கு வலதுகைப் புறத்தில் காவேரி நதியில் பிரவாகம். இடது புறத்திலோ அடர்ந்த மரங்களும் புதர்களும் நிறைந்த காடாகத் தோன்றியது. வீரன், இடது புறத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தான். ஓரிடத்துக்கு வந்ததும் குதிரையை இடதுபுறமாகத் திருப்பினான். குதிரையும் அந்த இடத்தில் திரும்பிப் பார்க்கப் பழக்கப்பட்டது போல் அநாயாசமாகச் செடி கொடிகள் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து சென்றது. கவனித்துப் பார்த்தால் அந்த இடத்தில் ஒரு குறுகிய ஒற்றையடிப் பாதை போவது தெரியவரும்.
அந்தப் பாதை வழியாகக் குதிரை மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு தான் சென்றது. இரண்டு பக்கங்களிலும் நெருங்கி வளர்ந்திருந்த புதர்களும், கொடிகளும், மேலே கவிந்திருந்த மரக் கிளைகளும் குதிரை எளிதில் போக முடியாதபடி செய்தன. குதிரை மீதிருந்த வீரனோ அடிக்கடி குனிந்தும், வளைந்து கொடுத்தும், சில சமயம் குதிரையின் முதுகோடு முதுகாய்ப் படுத்துக் கொண்டும் மரக்கிளைகளினால் கீழே தள்ளப்படாமல் தப்பிக்க வேண்டியிருந்தது. இத்தகைய பாதை வழியாகக் கொஞ்சதூரம் சென்ற பிறகு திடீரென்று சிறிது இடைவெளியும் ஒரு சிறு கோயிலும் தென்பட்டன.
கோயிலுக்கெதிரே பிரம்மாண்டமான யானை, குதிரை முதலிய வாகனங்கள் நின்றதைப் பார்த்தால், அது ஐயனார் கோயிலாயிருக்க வேண்டுமென்று ஊகிக்கலாம். வேண்டுதலுக்காக பக்தர்கள் செய்துவைத்த அந்த மண் யானை - குதிரைகளில் சில வெகு பழமையானவை; சில புத்தம் புதியவை. அவற்றின் மீது பூசிய வர்ணம் இன்னும் புதுமை அழியாமலிருந்தது. பலிபீடம், துவஜ்தம்பம் முதலியவையும் அங்குக் காணப்பட்டன.
கீழ்வானம் வெளுத்துப் பலபலவென்று பொழுது விடியும் சமயத்தில் மேற்சொன்ன வீரன் குதிரையின்மீது அங்கே வந்து சேர்ந்தான். வீரன் குதிரையிலிருந்து கீழே குதித்து அவசர அவசரமாகச் சில அதிசயமான காரியங்களைச் செய்யத் தொடங்கினான். மண் யானைகளுக்கும் மண் குதிரைகளுக்கும் மத்தியில் தான் ஏறிவந்த குதிரையை நிறுத்தினான். குதிரைமீது கட்டியிருந்த ஒரு மூட்டையை எடுத்து அவிழ்த்தான்.
அதற்குள் இருந்த புலித்தோல், ருத்திராட்சம், பொய் ஜடாமுடி முதலியவைகளை எடுத்துத் தரித்துக் கொள்ளத் தொடங்கினான். சற்று நேரத்தில் பழைய போர் வீரன் உருவம் அடியோடு மாறி, திவ்ய தேஜஸுடன் கூடிய சிவயோகியாகத் தோற்றம் கொண்டான்.
ஆம்; வெண்ணாற்றங் கரையில் ரணகளத்தில் பார்த்திபனுக்கு வரமளித்த சிவனடியார்தான் இவர்.
தம்முடைய பழைய உடைகளையும், ஆபரணங்களையும், ஆயுதங்களையும் மூட்டையாகக் கட்டி, உடைந்து விழுந்திருந்த மண் யானை ஒன்றின் பின்னால் வைத்தார் அந்தச் சிவயோகி. குதிரையை ஒரு தடவை அன்புடன் தடவிக் கொடுத்தார். குதிரையும் அந்தச் சமிக்ஞையைத் தெரிந்து கொண்டது போல் மெதுவான குரலில் கனைத்தது.
பிறகு அங்கிருந்து அச்சிவனடியார் கிளம்பி ஒற்றையடிப்பாதை வழியாகத் திரும்பிச் சென்று காவேரிக் கரையை அடைந்தார். மறுபடியும் மேற்கு நோக்கித் நடக்க ஆரம்பித்தார்.
ஒரு நாழிகை வழி நடந்த பிறகு சூரியன் உதயமாகும் தருணத்தில் இந்தச் சரித்திரத்தின் ஆரம்ப அத்தியாயத்தில் நாம் பார்த்திருக்கும் தோணித் துறைக்கு வந்து சேர்ந்தார். அங்கே படகோட்டி பொன்னனுடைய குடிசைக்கு அருகில் வந்து நின்று, "பொன்னா!" என்று கூப்பிட்டார்.
உள்ளிருந்து "சாமியார் வந்திருக்கிறார் வள்ளி" என்று குரல் கேட்டது. அடுத்த விநாடி பொன்னன் குடிசைக்கு வெளியே வந்து சிவனடியார் காலில் விழுந்தான். அவன் பின்னோடு வள்ளியும் வந்து வணங்கினாள். பிறகு மூவரும் உள்ளே போனார்கள். வள்ளி பயபக்தியுடன் எடுத்துப் போட்ட மணையில் சிவனடியார் அமர்ந்தார். "பொன்னா! மகாராணியும் இளவரசரும் வஸந்தமாளிகையில்தானே இருக்கிறார்கள்?" என்று அவர் கேட்டார்.
"ஆம் சுவாமி! இன்னும் கொஞ்ச நாளில் நமது இளவரசரையும் 'மகாராஜா' என்று எல்லோரும் அழைப்பார்களல்லவா?"
"ஆமாம்; எல்லாம் சரியாக நடந்தால், நீ உடனே போய் அவர்களை அழைத்துக் கொண்டுவா!" என்றார் சிவனடியார்.
"இதோ போகிறேன், வள்ளி சுவாமியாரைக் கவனித்துக் கொள்!" என்று சொல்லிவிட்டுப் பொன்னன் வெளியேறினான். சிறிது நேரத்திற்கெல்லாம் படகு தண்ணீரில் போகும் சலசலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது.
பொன்னன் போனதும், வள்ளி சிவனடியாருக்கு மிகுந்த சிரத்தையுடன் பணிவிடைகள் செய்யத் தொடங்கினாள். அவருடைய காலை அனுஷ்டானங்கள் முடிவடைந்ததும், அடுப்பில் சுட்டுக் கொண்டிருந்த கம்பு அடையைச் சுடச்சுடக் கொண்டுவந்து சிவனடியார் முன்பு வைத்தாள். அவர்மிக்க ருசியுடன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே வள்ளியுடன் பேச்சுக் கொடுத்தார்.
"வள்ளி! ராணி எப்படி இருக்கிறாள், தெரியுமா?" என்று கேட்டார் சிவனடியார்.
"இளவரசர் பக்கத்தில் இருக்கும்போதெல்லாம் தேவி தைரியமாகத்தான் இருக்கிறார். அவர் அப்பால் போனால் கண்ணீர் விடத் தொடங்கி விடுகிறார்" என்றாள் வள்ளி.
பிறகு, "சுவாமி! இதெல்லாம் எப்படித்தான் முடியும்? இளவரசர் நிஜமாக மகாராஜா ஆகிவிடுவாரா? அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ராணி பொறுக்க மாட்டாள்; உயிரையே விட்டுவிடுவார்" என்றாள்.
"எனக்கென்ன தெரியும் அம்மா! கடவுளுடைய சித்தம் எப்படியோ அப்படித் தான் நடக்கும். உனக்குத் தெரிந்த வரை ஜனங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?"
"ஜனங்கள் எல்லோரும் இளவரசர் பக்கந்தான் இருக்கிறார்கள். பல்லவ அதிகாரம் ஒழிய வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறார்கள். பார்த்திப மகாராஜாவின் வீர மரணத்தைப் பற்றித் தெரியாத பிஞ்சு குழந்தைகூடக் கிடையாது. சுவாமி! அந்தச் செய்தியைத் தாங்கள் தானே ஆறு வருஷத்துக்கு முன்னால் எங்களுக்கு வந்து சொன்னீர்கள்? அதை நானும் ஓடக்காரரும் இதுவரையில் லட்சம் ஜனங்களுக்காவது சொல்லியிருப்போம்" என்றாள்.
"நானும் இன்னும் எத்தனையோ பேரிடம் சொல்லியிருக்கிறேன். இருக்கட்டும்; மாரப்ப பூபதி எப்படியிருக்கிறான்? இப்போது உன் பாட்டனிடம் ஜோஸியம் கேட்க அவன் வருவதுண்டா?" என்று கேட்டார் சிவனடியார்.
"ஆகா! அடிக்கடி வந்துகொண்டுதானிருக்கிறான்" என்றாள் வள்ளி. உடனே எதையோ நினைத்துக் கொண்டவள் போல் இடி இடி என்று சிரித்தாள்.
சிவனடியார் "என்னத்தைக் கண்டு அம்மா இப்படிச் சிரிக்கிறாய்? என்னுடைய மூஞ்சியைப் பார்த்தா?" என்றார். "இல்லை சுவாமி! மாரப்ப பூபதியின் ஆசை இன்னதென்று உங்களுக்குத் தெரியாதா? காஞ்சி சக்கரவர்த்தியின் மகளை இவன் கட்டிக் கொள்ளப் போகிறானாம்! கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைக்க வேண்டியது தான் பாக்கி" என்றாள்.
சிவனடியார் முகத்தில் ஒரு விநாடி நேரம் இருண்ட மேகம் படர்ந்தது போல் தோன்றியது. உடனே அவர் புன்னகையை வருவித்துக் கொண்டு "ஆமாம்; உனக்கென்ன அதில் அவ்வளவு சிரிப்பு?" என்று கேட்டார்.
"சக்கரவர்த்தியின் மகள் எங்கே? இந்தப் பேதை மாரப்பன் எங்கே? உலகத்தில் அப்படி ஆண் பிள்ளைகளே அற்றுப் போய்விடவில்லையே. நரசிம்ம பல்லவரின் மகளை இந்தக் கோழைப் பங்காளிக்குக் கொடுப்பதற்கு?" என்றாள் வள்ளி.
"ஆனால், உன் பாட்டன்தானே மாரப்பனை இப்படிப் பைத்தியமாய் அடித்தது வள்ளி, இல்லாத பொல்லாத பொய் ஜோசியங்களையெல்லாம் சொல்லி?" என்றார் சிவனடியார்.
"அப்படிச் சொல்லியிராவிட்டால், அந்தப் பாவி என் பிராணனை வாங்கியிருப்பான்; சுவாமி! போகட்டும்; சக்கரவர்த்தியின் குமாரி ரொம்ப அழகாமே, நிஜந்தானா! நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று வள்ளி ஆவலுடன் கேட்டாள்.
சிவனடியார் புன்னகையுடன் "பார்த்திருக்கிறேன் அம்மா, பார்த்திருக்கிறேன். ஆனால் அழகைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? நான் துறவி!" என்றார்.
"எங்கள் ராணியை விட அழகாயிருப்பாளா? சொல்லுங்கள்."
"உங்கள் ராணி அவ்வளவு அழகா என்ன?"
"எங்கள் ராணியா? இல்லை! இல்லை! எங்கள் ராணி அழகேயில்லை. சுத்த அவலட்சணம், உங்கள் சக்கரவர்த்தி மகள்தான் ரதி..."
"என்ன வள்ளி, இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்?"
"பின்னே என்ன? எங்கள் ராணியை நீங்கள் எத்தனையோ தடவை பார்த்திருந்தும் இப்படிக் கேட்கிறீர்களே? அருள்மொழித் தேவியைப் போல் அழகானவர் இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது...."
"நான்தான் சொன்னேனே, அம்மா! ஆண்டியாகிய எனக்கு அழகு என்ன தெரியும். அவலட்சணந்தான் என்ன தெரியும்?"
"உங்களுக்குத் தெரியாது என்றுதான் தெரிகிறதே! ஆனால் காஞ்சி சக்கரவர்த்தியை எப்போதாவது பார்த்தால் கேளுங்கள்; அவர் சொல்லுவார். அருள்மொழித் தேவிக்கும் பார்த்திப மகாராஜாவுக்கும் கலியாணம் ஆவதற்கு முன்னால் நடந்த செய்தி உங்களுக்குத் தெரியுமா? அருள்மொழித் தேவியின் அழகைப் பற்றி நரசிம்மவர்மர் கேள்விப்பட்டு "அருள்மொழியைக் கல்யாணம் செய்து கொண்டால் செய்து கொள்வேன்; இல்லாவிட்டால் தலையை மொட்டையடித்துக் கொண்டு புத்த சந்நியாசியாகப் போய் விடுவேன்" என்று பிடிவாதம் செய்தார்.
ஆனால் அருள்மொழித் தேவிக்கு அதற்கு முன்பே பார்த்திப மகாராஜாவுடன் கலியாணம் நிச்சயமாகி விட்டது. இன்னொரு புருஷனை மனதினால்கூட நினைக்கமாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லி, கடைசியில் பார்த்திப மகாராஜாவையே கலியாணம் செய்து கொண்டார்."
சிவனடியார் முகத்தில் மந்தகாசம் தவழ, "ஆமாம் அம்மா! நரசிம்மவர்மர் அப்புறம் என்ன செய்தார்? தலையை மொட்டை அடித்துக்கொண்டு பௌத்த பிக்ஷு ஆகிவிட்டாரா?" என்று கேட்டார்.
"ஆண் பிள்ளைகள் சமாசாரம் கேட்க வேண்டுமா? சுவாமி! அதிலும் ராஜாக்கள், சக்கரவர்த்திகள் என்றால் மனது ஒரே நிலையில் நிற்குமா? அப்புறம் அவர் பாண்டிய ராஜகுமாரியைக் கல்யாணம் செய்து கொண்டார். இன்னும் எத்தனை பேரோ, யார் கண்டது? நான் மட்டும் ராஜகுமாரியாய்ப் பிறந்திருந்தால் எந்த ராஜாவையும் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன். அரண்மனையில் பத்துச் சக்களத்திகளோடு இருப்பதைக் காட்டிலும், கூரைக் குடிசையில் ஒருத்தியாயிருப்பது மேலில்லையா?"
சிவனடியார் கலகலவென்று சிரித்தார். "நீ சொல்வது நிஜந்தான், அம்மா! ஆனால் நரசிம்மவர்மன் நீ நினைப்பது போல் அவ்வளவு பொல்லாதவனல்ல..." என்றார்.
"இருக்கட்டும் சுவாமி! அவர் நல்லவராகவே இருக்கட்டும். அவர்தான் உங்களுக்கு ரொம்ப வேண்டியவர் போலிருக்கிறதே! ஒரு காரியம் செய்யுங்களேன்? சக்கரவர்த்தியின் மகளை எங்கள் இளவரசருக்குக் கலியாணம் செய்து வைத்து விடுங்களேன்! சண்டை, சச்சரவு எல்லாம் தீர்ந்து சமாதானம் ஆகிவிடட்டுமே."
"நல்ல யோசனைதான் வள்ளி! ஆனால் என்னால் நடக்கக்கூடிய காரியம் அல்ல. நீ வேண்டுமானால் சக்கரவர்த்தியைப் பார்த்துச் சொல்லேன்...."
"நான் சக்கரவர்த்தியை எப்போதாவது பார்த்தால் நிச்சயமாய்ச் சொல்லத்தான் போகிறேன் எனக்கு என்ன பயம்?" என்றாள்.
அச்சமயத்தில் படகு கரைக்கு வந்து சேர்ந்த சத்தம் கேட்டது.
வள்ளி, "படகு வந்துவிட்டது" என்று சொல்லிக் கொண்டு குடிசைக்கு வெளியே வந்தாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் அருள்மொழித் தேவியும் இளவரசர் விக்கிரமனும் குடிசைக்குள் வந்து "சுவாமி!" என்று சொல்லி சிவனடியாரின் பாதத்தில் வணங்கினார்கள். சிவனடியார் விக்கிரமனைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு ஆசீர்வதித்தார். ஆறு வருஷத்துக்கு முன் அறியாப் பாலகனாயிருந்த விக்கிரமன் இப்போது, இளங்காளைப் பருவத்தை அடைந்து ஆஜானுபாகுவாக விளங்கினான்.
அவன் முகத்தில் வீரக் களை திகழ்ந்தது. உள்ளத்தில் பொங்கிய ஆர்வத்தின் வேகம் கண்களில் அலையெறிந்தது. படபடவென்று பேசத் தொடங்கினான்:- "சுவாமி! நேற்றிரவு கனவில் என் தந்தை வந்தார். என்னை அழைத்துக் கொண்டு சிராப்பள்ளி மலைக்குப் போனார். அங்கே உச்சியில் பறந்து கொண்டிருந்த பல்லவர்களின் சிங்கக் கொடியைக் காட்டினார்.... சுவாமி! இனிமேல் என்னால் பொறுத்திருக்க முடியாது. நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என்றான்.
"என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கிறது. விக்கிரமா! சரியான காலம் வரையில் காத்திருக்கும்படி தானே சொன்னேன்? இப்போது காலம் வந்துவிட்டது. நீ என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய் சொல்லு. வெறும் பதற்றத்தினால் மட்டும் காரியம் ஒன்றும் ஆகிவிடாது. தீர யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். உன் தந்தை உனக்குக் கொடுத்து விட்டுப்போன குறள் நூலில் தெய்வப் புலவர் என்ன சொல்லியிருக்கிறார்?
"எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்ப(து) இழுக்கு"
இதை நீ எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்."
"ஆம், சுவாமி! எண்ணித்தான் துணிந்திருக்கிறேன். வரப்போகும் புரட்டாசிப் பௌர்ணமியன்று சிராப்பள்ளி மலைமீது பறக்கும் பல்லவர் கொடியை எடுத்தெறிந்து விட்டு அங்கே புலிக்கொடியைப் பறக்க விடப் போகிறேன். யார் என்ன சொன்ன போதிலும் இந்தத் தீர்மானத்தை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை."
"மிக்க சந்தோஷம் விக்கிரமா! உன் தீர்மானத்தை மாற்றிக் கொள்ளும்படி நானும் சொல்லப் போவதில்லை. இந்த நாள் எப்போது வரப்போகிறதென்றுதான் நான் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உன் தீர்மானத்தைக் காரியத்தில் நிறைவேற்ற என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்? அதைத் தெரிந்து கொள்ள மட்டும் விரும்புகிறேன். புலிக்கொடியைப் பறக்க விட்டுவிட்டால் போதுமா? அதைக் காத்து நிற்கப் படைகள் வேண்டாமா? பல்லவ தளபதி அச்சுதவர்மன் சும்மா பார்த்துக் கொண்டிருப்பானா?"
"சுவாமி! அந்தக் கவலை தங்களுக்கு வேண்டவே வேண்டாம். சோழநாட்டு மக்கள் எல்லோரும் சித்தமாயிருக்கிறார்கள். பொன்னனைக் கேளுங்கள், சொல்லுவான். புரட்டாசிப் பௌர்ணமியில் வீரர்கள் பலர் உறையூரில் வந்து கூடுவார்கள்; புலிக்கொடி உயர்ந்ததும் அவர்கள் என்னுடைய படையில் பகிரங்கமாய்ச் சேர்ந்து விடுவார்கள். உறையூரிலுள்ள பல்லவ சைன்யத்தைச் சின்னாபின்னம் செய்து அச்சுதவர்மனையும் சிறைப்படுத்தி விடுவோம்...!"
"இந்த அபாயகரமான முயற்சியில் உனக்கு யார் ஒத்தாசை செய்கிறார்கள்? யார் உனக்காகப் படை திரட்டுகிறார்கள்? நீயோ வசந்த மாளிகையை விட்டு வெளியே போனது கிடையாதே...."
"என் சித்தப்பா மாரப்ப பூபதிதான் எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார். அவர் இரகசியமாக ஒரு பெரிய படை திரட்டி வந்திருக்கிறார்...."
மாரப்ப பூபதி என்றதுமே சிவனடியாரின் முகம் கறுத்தது. அவர் விக்கிரமனை நடுவில் நிறுத்தி "யார்? மாரப்ப பூபதியா இதெல்லாம் செய்கிறான்; அவனிடம் உன் உத்தேசத்தை எப்போது சொன்னாய்?" என்று கேட்டார்.
"சித்தப்பா முன்மாதிரி இல்லை! நீங்கள் கவலைப்பட வேண்டாம். அடியோடு புது மனிதர் ஆகிவிட்டார். என் தகப்பனார் விஷயத்தில் நடந்து கொண்டதற்காக மிகவும் பச்சாதாபப்படுகிறார். அதற்குப் பரிகாரமாக இப்போது சோழநாட்டின் விடுதலைக்கு உயிரையும் கொடுக்கச் சித்தமாயிருக்கிறார்" என்றான் விக்கிரமன்.
சிவனடியார் அருள்மொழியைப் பார்த்து, "தேவி! இது நிஜந்தானா?" என்று கேட்டார்.
"ஆம், சுவாமி! மாரப்ப பூபதி மனந்திருந்தியவராகத் தான் காணப்படுகிறார்" என்றாள் அருள்மொழி.
மிக்க சந்தோஷம். விக்கிரமா! உன்னுடைய முயற்சி நிறைவேறட்டும். சேனாதிபதியான கார்த்திகேயர் உன்னைக் காத்து நிற்கட்டும். உன் தோளுக்கும் வாளுக்கும் பராசக்தி பலம் அளிக்கட்டும். அவசியமான சமயத்தில் மறுபடியும் வருவேன். இப்போது போய் வருகிறேன்" என்று எழுந்தார் சிவனடியார்.
"சுவாமி! என் சித்தப்பா இப்போது வருவதாகச் சொல்லியிருக்கிறாரே; அவர் தங்களைப் பார்க்க மிகவும் ஆவலாயிருக்கிறார்; தாங்கள் கொஞ்சம் இருந்து போக வேண்டும்" என்றான் விக்கிரமன்.
"இல்லை, விக்கிரமா எனக்கு இருக்க நேரமில்லை. எது எப்படியானாலும் நீ உன் உறுதியைக் கைவிடாதே. உன் தந்தை வாக்கை மறந்து விடாதே" என்றார்.
அருள்மொழித் தேவி அப்போது பொன்னனைப் பார்த்து, "பொன்னா! இளவரசரை அழைத்துக் கொண்டு நீ படகுக்குப் போ; இதோ நான் வந்துவிடுகிறேன்" என்று சொல்ல, பொன்னனும் விக்கிரமனும் உடனே வெளியேறினார்கள்.
அருள்மொழித் தேவி அப்போது சிவனடியார் பாதத்தில் நமஸ்கரித்து, அந்தப் பாதங்களைப் பிடித்துக் கொண்ட வண்ணம் சொன்னாள்:- "சுவாமி தாங்கள் யாரோ எனக்கு தெரியாது. என்னவெல்லாமோ தங்களைப்பற்றி நான் சந்தேகித்தது உண்டு. ஆனால் தாங்கள் எங்கள் நன்மையை நாடுகிறவர் என்பதில் சந்தேகப்பட்டதே இல்லை; அதனால் தங்களை யாரென்று தெரிந்து கொள்ளவும் நான் ஆசைப்படவில்லை. தாங்கள் யாராயிருந்தாலும் சரி, அடியாளுக்கு ஒரு வரந்தர வேண்டும். எனக்குத் தங்களைத் தவிர வேறு கதி கிடையாது."
சிவனடியாரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
"என்னால் முடிகிற காரியமாயிருந்தால் கட்டாயம் செய்கிறேன், அம்மா! கேள்" என்றார்.
"தாங்கள் மகான், தங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்க முடியாது. வேறென்ன நான் கேட்கப் போகிறேன்? என் பிள்ளையின் உயிரைத் தாங்கள் காப்பாற்றித் தரவேண்டும் சுவாமி! இவன் இப்போது செய்யப் போகிற காரியம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. மகா சக்தி வாய்ந்த பல்லவ சக்கரவர்த்தியை எதிர்த்து இளம் பிள்ளையால் என்ன செய்ய முடியும்? எல்லாம் தெரிந்த தாங்களும் இந்தக் காரியத்தில் இவனை ஏவி விட்டிருக்கிறீர்கள். தங்களுடைய நோக்கம் என்னவோ தெரியாது. சுவாமி! என்னவாயிருந்தாலும், அவனுடைய உயிரைக் காப்பாற்றிக் கொடுக்கும் பொறுப்பு தங்களுடையது" என்று ராணி தழுதழுத்த குரலில் கூறினாள்.
"உயிரைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்தவர் கடவுள் ஒருவர்தான் அம்மா! ஆனாலும் உனக்கு ஒரு உறுதி சொல்லுகிறேன். விக்கிரமனுடைய வீரத் தந்தையின் ஆத்மா அவன் பக்கத்திலிருந்து அவனைக் காப்பாற்றும். நீ கவலைப்படாதே. எழுத்திரு!" என்றார்.
அச்சமயம் மேற்குத் திசையில் தூரத்தில் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்கவே, சிவனடியார் விரைவாக விடை பெற்றுக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிச் சென்றார்.
சிவனடியார் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் மாரப்ப பூபதி குதிரை மீது வந்து இறங்கினான். உடனே, "விக்கிரமா! சிவனடியார் வரப் போகிறாரென்று சொன்னாயே? வந்துவிட்டாரா?" என்று கேட்டான்.
"இப்போதுதான் போனார்! சித்தப்பா! போய்ச் சில விநாடி நேரங்கூட ஆகவில்லை. சற்று முன்னால் வந்திருக்கப்படாதா!" என்று விக்கிரமன் சொல்லிச் சிவனடியார் போன திசையை நோக்கினான்.
அதைப் பார்த்த மாரப்பன். "இந்தச் சாலை வழியாகத் தானே போனார்? இதோ அவர் முகத்தைப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்" என்று கூறி, மறுபடியும் குதிரை மேலேறி விரைந்து சென்றான்.
ஆனால், அவன் அந்த நதிக்கரைச் சாலையோடு வெகுதூரம் குதிரையை விரட்டிக் கொண்டு போயும் சிவனடியார் தென்படவில்லை. அவர் மாயமாய் மறைந்து விட்டார்.
கடற்கரைப் பட்டினமாகிய மாமல்லபுரத்தில் அன்று அல்லோல கல்லோலமாயிருந்தது. வீடுகள் எல்லாம் மாவிலைகளினாலும், தென்னங் குருத்துக்களினாலும் சிங்க உருவந் தாங்கிய கொடிகளினாலும், பல வர்ணத் தோரணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. தெரு வீதிகளில் சித்திர விசித்திரமான கோலங்கள் போடப்பட்டிருந்தன. தேர்கள், யானைகள், குதிரைகள், கோபுரங்கள், பலவித விருட்சங்கள், பூஞ்செடிகள் - இவை போலெல்லாம் போட்ட கோலங்கள் கண்ணுக்கு விருந்தாயிருந்தன. அதிகாலையிலிருந்து ஸ்திரீகளும், புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் பட்டுப் பட்டாடைகளினாலும், பசும் பொன் ஆபரணங்களினாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டு தெருவீதிகளிலும் திண்ணைகளிலும் கூட்டங் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
எங்கே பார்த்தாலும் பேரிகை முழக்கம், மற்றும் மங்கள வாத்தியங்களின் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன. இந்த ஒலிகளுக்கிடையில் " சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து கிளம்பி விட்டாராம்!" "பாதி வழி வந்தாகி விட்டதாம்!" "சக்கரவர்த்தியின் கோமகள் குந்தவி தேவியும் வருகிறாராம்!" என்றெல்லாம் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் கலகல சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.
மாமல்லபுரம் வாசிகள் அத்தனை அதிக உற்சாகத்துடனும் ஆனந்தத்துடனும் அன்று உற்சவம் கொண்டாடியதின் காரணம் என்னவென்றால், அந்நகருக்கு அன்று மாமல்ல நரசிம்மவர்ம சக்கரவர்த்தி விஜயம் செய்வதாக இருந்தது தான். சக்கரவர்த்தி விஜயம் செய்து, ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னால் நின்றுபோன சிற்பப் பணியை மறுபடியும் ஆரம்பித்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சக்கரவர்த்தியுடன் கூட அவருடைய செல்வக் குமாரி குந்தவி தேவியும் வரப்போவதாகத் தெரிந்திருந்தபடியால் மாமல்லபுர வாசிகள் எல்லையற்ற குதூகலத்துடன் அந்த நாளைத் திருநாளாகக் கொண்டாடினார்கள்.
அந்தக் காலத்தில், காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் புகழ் எண்டிசையிலும் பரவியிருந்தது. பாரத நாடெங்கும் அவருடைய கீர்த்தி வியாபித்திருந்ததோடு, கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தது. தெற்கே காவேரியாற்றங்கரையிலிருந்து வடக்கே கிருஷ்ணா நதிக்கரை வரையில் பல்லவர்களின் சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்தது. அந்தப் பிரதேசத்திலுள்ள ஜனங்கள் எல்லாரும் நரசிம்மவர்மரிடம் அளவிலாத பக்தி கொண்டிருந்தார்கள். அறிவிலும் வீரத்திலும் தயாள குணத்திலும் நடுக் கண்ட நீதி வழங்குவதிலும், குடிகளின் நலங்களைக் கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாப்பதிலும், சிற்பம், சித்திரம், சங்கீதம் முதலிய கலைகளை வளர்ப்பதிலும் நரசிம்மவர்மர் மிகச் சிறந்து விளங்கியது பற்றி அவருடைய பிரஜைகள் மிக்க பெருமை கொண்டிருந்தார்கள்.
வடக்கே நர்மதை நதி வரையில் படையெடுத்துச் சென்று பொல்லாத புலிகேசியைப் போரில் கொன்று, வாதாபி நகரையும் தீக்கிரையாக்கி விட்டு வந்ததன் பின்னர், மாமல்ல சக்கரவர்த்தியைப் பற்றி அவருடைய குடிகள் கொண்டிருந்த பெருமை பன்மடங்கு பெருகியிருந்தன. "தட்சிண தேசத்தில் நரசிம்மவர்மரைப் போல் ஒரு சக்கரவர்த்தி இதுவரையில் தோன்றியதுமில்லை; இனிமேல் தோன்றப் போவதுமில்லை! என்று அந்தக் காலத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜனங்கள் நம்பினார்கள். முன்னூறு வருஷத்துக்குப் பிறகு தஞ்சையில் இராஜராஜன், இராஜேந்திர சோழன் என்னும் மகாசக்கரவர்த்திகள் தோன்றப் போகிறார்கள் என்பதை அந்தக் காலத்து மக்கள் அறிந்திருக்க முடியாதல்லவா?
இவ்விதம் பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் எல்லாருமே நரசிம்மவர்ம சக்கரவர்த்தியிடம் பக்தி விசுவாசம் கொண்டிருந்தவர்களாயினும், மாமல்லபுரம் வாசிகளுக்குச் சக்கரவர்த்தியிடம் ஒரு தனித்த உறவு ஏற்பட்டிருந்தது. அந்தப் பட்டினத்துக்குப் பெயரும் புகழும் அளித்தவர் அவரேயல்லவா?
மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்தில், நரசிம்மவர்மர் இளம் பருவத்தினராயிருந்தபோது, ஒரு தடவை மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்ற மல்லர்களையெல்லாம் தோற்கடித்து வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு 'மகாமல்லன்' என்ற பட்டம் அவருடைய தந்தை மகேந்திரவர்மரால் அளிக்கப்பட்டது. சில காலத்திற்குப் பிறகு இந்தப் பட்டப் பெயரை வைத்தே அந்தக் கடற்கரைப் பட்டினத்துக்குப் பெயர் வழங்கலாயிற்று.
"அப்பா! இந்தப் பட்டினத்துக்கு உங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள்?" என்று கோமகள் குந்தவி தேவி, தந்தை நரசிம்மவர்மரைப் பார்த்துக் கேட்டாள்.
இருவரும் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை மீது அம்பாரியில் வீற்றிருந்தார்கள்.
அந்தப் பட்டத்து யானைக்கு முன்னாலும் பின்னாலும் வேலும் வாளும் தாங்கிய போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். இன்னும் பலவகைப்பட்ட விருதுகளும் சென்றன.
எல்லாருக்கும் முன்னால் பெரிய ரிஷபங்கள் முதுகில் முரசுகளைச் சுமந்து கொண்டு சென்றன. சற்று நேரத்துக்கொரு தடவை அந்த முரசுகள் அடிக்கப்பட்டபோது உண்டான சத்தம் அலைமோதிக்கொண்டு நாலாபுறமும் பரவியது.
அம்பாரியின் மீது வீற்றிருந்த நரசிம்மவர்ம சக்கரவர்த்தியையும் அவர் அருமைப் புதல்வியையும் ஏக காலத்தில் பார்த்தவர்கள், உதய சூரியனையும் பூரணச் சந்திரனையும் அருகருகே பார்த்தவர்களைப் போல் திணறித் திண்டாடிப் போவார்கள்.
இருவருடைய திருமுகத்திலும் அத்தகைய திவ்ய தேஜஸ் ஜொலித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அணிந்திருந்த கிரீடங்களிலும், மற்ற ஆபரணங்களிலும் பதிந்த நவரத்தினங்களின் காந்தி பார்ப்பவர்களின் கண்களைக் கூசச் செய்தன.
பல்லவ சக்கரவர்த்தி ஆஜானுபாகுவாய், கம்பீரமான தோற்றமுடையவராகயிருந்தார். வலிமையும் திறமையுங் கொண்ட அவருடைய திருமேனியில் மென்மையும் சௌந்தரியமும் கலந்து உறவாடின. இராஜ களை ததும்பிய அவருடைய முகத்தில் காணப்பட்ட காயங்களின் வடுக்கள், அவர் எத்தனையோ கோர யுத்தங்களில் கைகலந்து போரிட்டு ஜயபேரிகை முழக்கத்துடன் திரும்பி வந்தவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன.
கோமகள் குந்தவி தேவியோ பெண் குலத்தின் அழகெல்லாம் திரண்டு உருக்கொண்டவள் போலிருந்தாள். பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்த மகா சிற்பிகளும் ஓவியக்காரர்களும் குந்தவி தேவியிடம் தங்கள் கலைத்திறன் தோற்றுவிட்டதென்பதை ஒப்புக் கொண்டார்கள். "கோமகளின் கருவிழிகளில்தான் என்ன மாய சக்தி இருக்கிறதோ தெரியவில்லை. தேவி தமது அஞ்சனந் தீட்டிய கண்களை அகல விரித்து எங்களைப் பார்த்தவுடனேயே நாங்கள் உணர்விழந்து மெய்ம்மறந்து போய் விடுகிறோம். அப்புறம் சிற்பம் அமைப்பதெங்கே? சித்திரம் வரைவதெங்கே?" என்றார்கள். "எங்களையெல்லாம் கர்வ பங்கம் செய்வதற்கென்றே பிரம்மன் குந்தவி தேவியைப் படைத்திருக்க வேண்டும்!" என்று அவர்கள் சொன்னார்கள்.
"அப்பா! இந்த நகருக்குத் தங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள்? சொல்லுகிறேன், சொல்லுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டு வருகிறீர்களே, இன்றைக்குக் கட்டாயம் சொல்லியாக வேண்டும்" என்று மறுபடியும் கேட்டாள் குந்தவி.
"அப்படியானால் இப்போது இந்த யானைமேலிருந்து நாம் இறங்கியாக வேண்டும்" என்றார் சக்கரவர்த்தி.
"இப்படியே நான் தரையில் குதித்து விடட்டுமா" என்றாள் குந்தவி.
"நீ சாதாரண மனுஷியாகயிருந்தால் குதிக்கலாம் அம்மா! குதித்துக் காலையும் ஒடித்துக் கொள்ளலாம்! சக்கரவர்த்தியின் மகளாயிருப்பதால் அப்படியெல்லாம் செய்யக்கூடாது!" என்றார் சக்கரவர்த்தி.
"எதற்காக அப்பா, அப்படி. சக்கரவர்த்தின் மகளாயிருப்பதால், யானை மேலிருந்து குதித்துக் காலை ஒடித்துக் கொள்ளக்கூடவா பாத்தியதை இல்லை?" என்று சிரித்துக் கொண்டே குந்தவி கேட்டாள்.
"ஆமாம், ஆமாம்! அப்படி நீ இருந்தால் 'காஞ்சி சக்கரவர்த்தியின் மகள் குந்தவி யானை மேலிருந்து குதித்தாளாம்" என்ற செய்தி உலகமெல்லாம் பரவிவிடும். அப்புறம் அங்க, வங்க, கலிங்கம் முதலான ஐம்பத்தாறு தேசத்து இராஜ குமாரர்களில் யாரும் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள முன் வரமாட்டார்கள்! அப்புறம் உன் கலியாணத்துக்குச் சீதை விஷயத்தில் ஜனகர் செய்ததுபோல் நானும் ஏதாவது தந்திரம் செய்தாக வேண்டும்."
"ஜனகர் தந்திரம் செய்தாரா? என்ன தந்திரம் அப்பா?" என்று குந்தவி கேட்டாள்.
"அது தெரியாதா உனக்கு? சீதை சிறு பெண்ணாயிருந்த போது ஒரு நாள் வில்லைத் தெரியாத்தனமாய்த் தூக்கி நிறுத்திவிட்டாள். இதற்காக அவளை ஐம்பத்தாறு தேசத்து இராஜகுமாரர்களும் கலியாணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்கள். கடைசியில் சீதையின் தகப்பனார் என்ன செய்தார் தெரியுமா? விசுவாமித்திர ரிஷியை அனுப்பி இராமன் என்ற அசட்டு இராஜகுமாரனைத் தந்திரமாய் அழைத்துவரப் பண்ணினார். ஒரு பெரிய வில்லை நடுவில் முறித்து, முறிந்தது தெரியாதபடி தந்திரமாய்ப் பெட்டிக்குள் வைத்திருந்தார்! இராமன் அந்த வில்லை விளையாட்டாக எடுத்ததும், வில் முறிந்து இரண்டு துண்டாக விழுந்து விட்டது! உடனே ஜனகர், "ஐயையோ! எங்கள் குல சம்பத்தாகிய வில்லை ஒடித்து விட்டாயே! ஒன்று ஒடிந்த வில்லைச் சேர்த்துக் கொடு; இல்லாவிட்டால் என் மகள் சீதையைக் கலியாணம் பண்ணிக் கொள்" என்றார். இராமன் வேறு வழியில்லாமல் சீதையைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று!"
குந்தவி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே, "அப்பா! நானும் இராமாயணக் கதையைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லுவது புதிய இராமாயணமாயிருக்கிறதே!" என்றாள்.
சற்று சிரிப்பு அடங்கிய பிறகு அவள், "ஆனால் உங்களுக்கு அதைப் பற்றிக் கவலை வேண்டாம் அப்பா! நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை" என்று சொன்னாள்.
சக்கரவர்த்தி மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டு, "அது என்ன சமாசாரம்? கலியாணம் உன்னை என்ன பண்ணிற்று? அதன்மேல் ஏன் அவ்வளவு கோபம்?" என்று கேட்டார்.
அப்போது குந்தவி "கலியாணம் செய்து கொண்டால் நான் உங்களை விட்டுப் பிரியத்தானே வேண்டும்? உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு இஷ்டமில்லை. உங்களுடனேயே நான் எப்போதும் இருப்பேன்" என்றாள்.
"அப்படியா சமாசாரம் குந்தவி? இன்னொரு தடவை சொல்லு" என்றார் சக்கரவர்த்தி.
"அதெல்லாம் ஒரு தடவைக்குமேல் சொல்ல மாட்டேன் அப்பா! நீங்கள் ஏக சந்தக்கிராகி என்பது உலகமெல்லாம் பிரசித்தியாயிருக்கிறதே! ஒரு தடவைக்கு மேல் ஏன் கேட்கிறீர்கள்?"
"ஓ ஆபத்பாந்தவா! அநாதரட்சகா! இந்த வாயாடிப் பெண்ணைக் கட்டிக் கொண்டு எந்த இராஜகுமாரன் திண்டாடப் போகிறானோ? யார் தலையில் அவ்விதமிருக்கிறதோ? அவனை நீதான் காப்பாற்றியருள வேண்டும்" என்று சொல்லியபடி சக்கரவர்த்தி தலைமேல் கைகூப்பி வானத்தை அண்ணாந்து நோக்கினார்.
"உங்களுடைய பரிகாசம் இருக்கட்டும். இப்போது யானையை நிறுத்துகிறீர்களா, இல்லையா? இல்லாவிடில் நான் கீழே குதித்து விட்டேனானால், அப்புறம் என்னை ஒரு இராஜகுமாரனும் கலியாணம் செய்து கொள்ள மாட்டான். எப்போதும் உங்கள் பிராணனைத்தான் வாங்கிக் கொண்டிருப்பேன்" என்று குந்தவி சொல்லி எழுந்து நின்று அம்பாரியிலிருந்து கீழே குதிப்பது போல் பாசாங்கு செய்தாள்.
"வேண்டாம், வேண்டாம் அப்படிப்பட்ட விபரீதம் பண்ணி வைக்காதே!" என்று கூறி பல்லவ சக்கரவர்த்தி யானைப்பாகனைக் கூப்பிட்டு யானையை நிறுத்தச் சொன்னார்.
யானை நின்றதும், தந்தையும் மகளும் கீழே இறங்கினார்கள். சக்கரவர்த்தி குதிரையும் பல்லக்கும் கொண்டு வரும்படி சமிக்ஞை காட்டினார். அவை அருகில் வந்ததும், பரிவாரத் தலைவனை அழைத்து, "நீங்கள் நேரே போய் நகர் வாசலருகில் நில்லுங்கள். நாங்கள் அங்கே வந்து சேர்ந்து கொள்கிறோம்" என்றார். பிறகு, குதிரைமீது ஆரோகணித்து இராஜ மார்க்கத்திலிருந்து பிரிந்து குறுக்கு வழியாகப் போகத் தொடங்கினார். இளவரசி ஏறியிருந்த பல்லக்கும் அவரைத் தொடர்ந்து சென்றது.
சக்கரவர்த்தி இம்மாதிரியெல்லாம் எதிர்பாராத காரியங்களைச் செய்வது சர்வ சகஜமாய்ப் போயிருந்தபடியால், அவரைத் தொடர்ந்து வந்த பரிவாரங்கள் சிறிதும் வியப்பு அடையாமல் இராஜ மார்க்கத்தோடு மேலே சென்றன.
இயற்கையாகப் பூமியிலெழுந்த சிறு குன்றுகளை அழகிய இரதங்களாகவும் விமானங்களாகவும் அமைத்திருந்த ஓர் இடத்திற்குச் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து சேர்ந்தார்கள். அந்த விமானக் கோயில்களையொட்டி, ஒரு கல்யானையும் கற்சிங்கமும் காணப்பட்டன. இவையும் இயற்கையாகப் பூமியில் எழுந்த பாறைகளைச் செதுக்கிச் செய்த வடிவங்கள்தாம்.
அவற்றுள் யானையின் சமீபமாகச் சக்கரவர்த்தி வந்தார்.
"குந்தவி! இந்த யானையைப் பார்த்தாயா? தத்ரூபமாய் உயிருள்ள யானை நிற்பது போலவே தோன்றுகிறதல்லவா? முப்பது வருஷத்துக்கு முன்னால் இங்கே இந்த யானை இல்லை; ஒரு மொட்டைக் கற்பாறைதான் நின்றது!"
"இந்தக் கோயில்கள் எல்லாமும் அப்படித்தானே மொட்டை மலைகளாயிருந்தன?" என்று குந்தவி கேட்டாள்.
"ஆமாம் குழந்தாய்! இன்று நீயும் நானும் வந்திருப்பது போல் முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தகப்பனாருடன் நான் இங்கு வந்தேன். உன் தாத்தாவைப் பற்றித் தான் உனக்கு எல்லாம் தெரியுமே. சிற்பம் சித்திரம் என்றால் அவருக்கு ஒரே பைத்தியம்!"
"உங்களுக்குப் பைத்தியம் ஒன்றும் குறைவாயில்லையே?" என்று குந்தவி குறுக்கிட்டாள்.
சக்கரவர்த்தி புன்னகையுடன் "என்னைவிட அவருக்குத்தான் பைத்தியம் அதிகம். செங்கல்லினாலும் மரத்தினாலும் அவர் ஆயிரம் கோயில்கள் கட்டினார். அப்படியும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. என்றும் அழியாத பரம்பொருளுக்கு என்றும் அழியாக் கோயில்களைக் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டார். மலையைக் குடைந்து கோயில்கள் அமைக்க விரும்பினார். அந்தக் காலத்திலே தான் ஒரு நாள் அவரும் நானும் இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டு வந்தோம். அப்போது எனக்கு உன் வயது தானிருக்கும்.
தற்செயலாக ஆகாசத்தைப் பார்த்தேன். வெண்ணிறமான சிறு சிறு மேகங்கள் வானத்தில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. அந்த மேகங்கள் அவ்வப்போது வெவ்வேறு ரூபங் கொண்டு தோன்றின. ஒரு சிறு மேகம் யானையைப் போல் காணப்பட்டது. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்தப் பாறையண்டை வந்தேன். கையில் கொண்டு வந்திருந்த காசிக் கட்டியினால் யானையின் உருவத்தை இதன்மேல் வரைந்தேன். அதை அப்பா பார்த்துக் கொண்டேயிருந்தார்.
யானை உருவத்தை நான் எழுதி முடித்ததும் என்னைக் கட்டி தூக்கிக் கொண்டு கூத்தாடத் தொடங்கினார். "நரசிம்மா! என்ன அற்புதமான யோசனை உன் யோசனை! இங்குள்ள பெரிய பாறைகளையெல்லாம் கோயில்களாக்கி விடுவோம். சின்னச்சின்னப் பாறைகளையெல்லாம் வாகனங்களாகச் செய்துவிடுவோம். இந்த உலகமுள்ள அளவும் அழியாதிருக்கும் அற்புதச் சிற்பங்களை எழுப்புவோம்! என்று வெறி பிடித்தவர்போல் கூறினார். அவ்விதமே சீக்கிரத்தில் இங்கே சிற்ப வேலைகளை ஆரம்பித்தார். அதுமுதல் இருபது வருஷகாலம் இந்தப் பிரதேசத்தில் இடைவிடாமல் ஆயிரக்கணக்கான கல்லுளிகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நான் வட தேசத்துக்குப் படையெடுத்துப் போன போதுதான் நின்றது..."
இவ்விதம் சொல்லிச் சக்கரவர்த்தி நிறுத்தி ஏதோ யோசனையில் ஆழ்ந்தவர் போல் இருந்தார்.
சற்றுப் பொறுத்துக் குந்தவி, "ஆமாம் அப்பா, இருபது வருஷமாய் நடந்து வந்த சிற்பப் பணியை நிறுத்தி விட்டீர்களே என்ற சந்தோஷத்தினால்தான் உங்கள் பெயரை இந்தப் பட்டினத்துக்கு வைத்தார்கள் போலிருக்கிறது!" என்று சொல்லிவிட்டுக் குறும்பாக புன்னகை செய்தாள். அதைக் கேட்ட சக்கரவர்த்தி உரக்கச் சிரித்துவிட்டு "இல்லை அம்மா! இந்தச் சிற்பப்புரி தோன்றுவதற்கு நான் காரணமாயிருந்த படியினால் என் தகப்பனார் இப்பட்டினத்துக்கு என் பெயரை அளித்தார். 'நரசிம்மன்' என்ற பெயருடன் எத்தனையோ இராஜாக்கள் வரக்கூடும். 'மாமல்லன்' என்ற பட்டப் பெயர் வேறொருவரும் வைத்துக் கொள்ளமாட்டார்கள் என்று யோசித்து, அப்பா இந்தப் பட்டினத்துக்கு 'மாமல்லபுரம்' என்று பெயர் சூட்டினார். அப்பாவுக்கு என்மேலே தான் எவ்வளவு ஆசை!" என்று கூறி மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தார்.
"ஆமாம்; தாத்தாவுக்கு உங்கள் பேரில் இருந்த ஆசையில் நூறில் ஒரு பங்குகூட உங்களுக்கு என் அண்ணா மேல் கிடையாது. இருந்தால் அண்ணாவைக் கப்பல் ஏற்றிச் சிங்களத்துக்கு அனுப்புவீர்களா?" என்று கேட்டாள் குந்தவி.
"குழந்தாய், கேள்! என்னுடைய இளம் வயதில் எனக்கு எத்தனையோ மனோரதங்கள் இருந்தன. அவற்றில் பல நிறைவேறின, ஆனால் ஒரே ஒரு மனோரதம் மட்டும் நிறைவேறவில்லை. கப்பல் ஏறிக் கடல் கடந்து தூர தூர தேசங்களுக்கெல்லாம் போய்வர வேண்டுமென்று நான் அளவில்லாத ஆசை கொண்டிருந்தேன். அதற்கு என் தந்தை அனுமதிக்கவில்லை. நான் இந்தப் பல்லவ சிம்மாசனத்தில் ஏறிய பிறகு கடற்பிரயாணம் செய்வதென்பது முடியாத காரியமாகி விட்டது. எனக்குக் கிடைக்காத பாக்கியம் என் பிள்ளைக்காவது கிடைக்கட்டுமே- என்றுதான் உன் தமையனைச் சிங்கள தீவுக்கு அனுப்பினேன். இன்னும் எனக்கு எந்தச் சிறுபிள்ளையினிடமாவது அதிகமான பிரியம் இருந்தால், அவனையும் கடற் பிரயாணம் செய்து வரும்படி அனுப்புவேன்" என்றார் சக்கரவர்த்தி.
"அப்படியானால் உங்களுக்கு என்னிடம் மட்டும் பிரியம் இல்லை போலிருக்கிறது" என்று குந்தவி சொல்வதற்குள்ளே, "உன்னைக் கப்பல் ஏற்றி அனுப்ப எனக்குப் பூர்ண சம்மதம்! ஆனால் நீ பெண்ணாய்ப் பிறந்து விட்டாயே, என்ன செய்கிறது? ஒவ்வொரு சமயம் நீ பிள்ளையாய்ப் பிறந்திருந்து, உன் தமையன் பெண்ணாய்ப் பிறந்திருக்கக் கூடாதா? - என்று எனக்குத் தோன்றுவதுண்டு" என்றார் சக்கரவர்த்தி.
"நான் மட்டும் ஆண் பிள்ளையாய்ப் பிறந்திருந்தால், உங்களை இத்தனைக் காலமும் இந்தச் சிம்மாசனத்தில் வைத்திருப்பேனா? கம்ஸன் செய்ததைப் போல் உங்களைச் சிறையில் போட்டுவிட்டு நான் பட்டத்துக்கு வந்திருக்க மாட்டேனா? அண்ணாவுக்கு ஒன்றுமே தெரியாது, சாது! அதனால் நீங்கள் சொன்னதும் கப்பலேறிப் போய்விட்டான்" என்று குந்தவி சொல்லிவிட்டு அந்த மலைக் கோயில்களைச் சுற்றி ஓடியாடிப் பார்க்கத் தொடங்கினாள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் சக்கரவர்த்தி "வா! குழந்தாய்! இன்னொரு தடவை சாவகாசமாய்ப் பார்க்கலாம், ஊரில் ஜனங்கள் எல்லோரும் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்" என்றதும் குந்தவி வரண்டை வந்து "அப்பா! இந்தக் கோயில்கள் இன்னும் அரைகுறையாகத்தானே இருக்கின்றன? மீண்டும் நீங்கள் ஆரம்பிக்க போகும் திருப்பணி வேலை இங்கேயும் நடக்குமல்லவா? இந்தக் கோயில்களுக்குள்ளே எல்லாம் என்னென்ன சுவாமியைப் பிரதிஷ்டை செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டாள்.
சற்று தூரத்தில் பல்லக்கும் குதிரையும் ஒரு மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த மரத்தை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். குந்தவியின் கேள்விக்குப் பதிலாகச் சக்கரவர்த்தி பின்வருமாறு சொன்னார்:-
"இல்லை, குழந்தாய்! இந்தக் கோயில்கள் இப்படியே தான் பூர்த்தி பெறாமல் இருக்கும். இந்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் வேலை நடக்கும். குந்தவி! ஆயனர் என்ற மகாசிற்பி இந்த ஊரில் இருந்தார். அவருடைய தலைமையில்தான் இந்தக் கோயில்களின் வேலை ஆரம்பமாயிற்று. அவர்தான் இவ்வளவு வரை செய்து முடித்தவர். பிறகு அவர் சில துரதிர்ஷ்டங்களுக்கு ஆளானார்; கொஞ்ச நாளைக்கு முன் சொர்க்கம் சென்றார். அவர் தொடங்கிய வேலையைச் செய்து முடிக்கக்கூடிய சக்தியுள்ளவர்கள் இப்போது யாரும் இல்லை, இனிமேல் வரப்போவதும் இல்லை!"
"ஆயனரைப் பற்றிக் கேட்டிருக்கிறேன் அப்பா! அவருடைய மகள்....?" என்று குந்தவி சொல்வதற்குள் "அதோ யாரோ குதிரைமேல் வருகிறானே யாராயிருக்கும்?" என்றார் மகாமல்லர்.
பேச்சை மாற்றுவதற்காகவே அவர் சொன்ன போதிலும் உண்மையில் கொஞ்ச தூரத்தில் ஒரு குதிரை வந்து கொண்டுதானிருந்தது. சக்கரவர்த்தியும் குந்தவியும் மரத்தடிக்குப் போய் நின்றதும், அங்கே குதிரை வந்து நின்றதும் சரியாயிருந்தன.
குதிரைமேலிருந்தவன் விரைவாக இறங்கிப் பயபக்தியுடன் சக்கரவர்த்தியின் அருகில் வந்து ஓர் ஓலையை நீட்டினான்.
"அடியேன் தண்டம்! உறையூரிலிருந்து வந்தேன்! அச்சுத பல்லவராயர் இந்த ஓலையை ஒரு கணமும் தாமதியாமல் சக்கரவர்த்தியின் திருச் சமூகத்தில் சேர்ப்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டார்!" என்றான்.
சக்கரவர்த்தி ஓலையை வாங்கிக் கொண்டார். அதில் என்ன எழுதியிருக்கிறதென்று பார்க்காமலே தூதனை நோக்கி "நீ போகலாம்! இதில் அடங்கிய விஷயத்தைப் பற்றிய கட்டளை நேற்றே அனுப்பிவிட்டோ ம்" என்றார்.
தூதன் தண்டம் சமர்ப்பித்துவிட்டுத் திரும்பி விரைந்து சென்றான்.
"நன்றாயிருக்கிறது அப்பா, நீங்கள் ராஜ்ய பாரம் செய்கிற இலட்சணம்? ஓலை வந்தால் அதைப் படித்துக் கூடப் பார்க்கிறதில்லையா?" என்று கோமகள் கேட்டாள்.
"என்னுடைய ஞான திருஷ்டியில் உனக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது! இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்று சொல்லட்டுமா? சோழராஜ குமாரன் விக்கிரமன் இந்தப் புரட்டாசிப் பௌர்ணமியன்று சோழ நாட்டின் சுதந்திரக் கொடியை உயர்த்த உத்தேசித்திருக்கிறான். அவனை என்ன செய்வது என்று தளபதி அச்சுத பல்லவராயன் கேட்டிருக்கிறான். நீ வேணுமானால் படித்துப் பார்!" என்று ஓலையைக் குந்தவியிடம் கொடுத்தார்.
குந்தவி அதைப் படித்துவிட்டு வியப்புடன் சக்கரவர்த்தியை நோக்கினாள்.
"உங்களிடம் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது, அப்பா! அந்த மந்திரத்தை எனக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாதா?" என்றாள்.
சக்கரவர்த்தி குதிரையின் மேலும், குந்தவி பல்லக்கிலும் அமர்ந்தார்கள். வழியில் கோமகள், "அப்பா! அந்த இராஜகுமாரனுக்கு என்ன அவ்வளவு அகந்தை? மாமல்ல சக்கரவர்த்தியின் கீழ் கப்பம் கட்டிக் கொண்டு வாழக் கொடுத்துவைக்க வேண்டாமா? அவனை நீங்கள் சும்மா விடக்கூடாது; தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்" என்றாள்.
"ஆமாம், குழந்தாய்! ஆமாம்! அவனைச் சும்மாவிடப் போவதில்லை. காஞ்சிக்கு அழைத்து வரச் செய்து நானே தகுந்த தண்டனை விதிக்கப் போகிறேன்" என்றார் சக்கரவர்த்தி.
மாமல்லபுரத்தில் சக்கரவர்த்தி மூன்று தினங்கள் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களும் அந்நகரம் ஆனந்த கோலாகலத்தில் மூழ்கிக் கிடந்தது.
முதல் நாள் பட்டணப் பிரவேச ஊர்வலம் வந்தது. சக்கரவர்த்தியையும் அவருடைய திருமகளையும் மாமல்லபுர வாசிகள் அவரவர்களுடைய வீட்டு வாசலில் தரிசித்து உபசரித்து மகிழ்ந்தார்கள்.
மறுநாள் சரஸ்வதி பூஜையன்று காலையில் நகர வாசிகள் தத்தம் வீடுகளில் வாணி பூஜை நடத்தினார்கள். பிற்பகலிலும் சாயங் காலத்திலும் பொது இடங்களில் கலைமகளின் திருநாளைக் கொண்டாடினார்கள். கோயில்கள், மடாலயங்கள், கலா மண்டபங்கள், வித்யாசாலைகள் எல்லாம் அமோகமான அலங்காரங்களுடன் விளங்கின.
அன்று சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் சிவன் கோயில்களுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து, அர்ச்சகர்களுக்குக் சன்மானம் அளித்தார்கள். கலைக் கூடங்களுக்கும், வித்யாசாலைகளுக்கும் விஜயம் செய்து, ஆசாரியர்களுக்குப் பொன்னும் புதுவஸ்திரங்களும் பரிசளித்தார்கள். அவர்கள் நகரில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் போகும் போதெல்லாம் வீதியில் ஜனங்கள் கும்பல் கும்பலாக நின்று பலவித வாழ்த்தொலிகளினால் தங்களுடைய குதூகலத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
ஆனால், மாமல்லபுர வாசிகளுடைய குதூகலத்தின் முழு அளவையும் மறுநாள் விஜய தசமியன்றுதான் பார்க்கக் கூடியதாயிருந்தது. அன்று திருவிழா நகருக்கு வெளியே நடந்தது.
மாமல்லபுரத்துக்குத் தெற்கே நெடுந் தூரத்துக்கு நெடுந்தூரம் பரவி நின்ற சிறு குன்றுகளும், பாறைகளும் அன்று அற்புதமான தோற்றங்கொண்டு விளங்கின. பாறைகளின் சுவர்களிலெல்லாம் விதவிதமான வர்ண வேறுபாடுகளுடன் புராணக் கதைகள் சித்திரிக்கப்பட்டிருந்தன. ஒரு விசாலமான பாறையிலே, நந்த கோகுலத்தில் பாலகோபாலன் செய்த லீலைகள், பூதனை சம்ஹாரத்திலிருந்து காளிங்க நர்த்தனம் வரையில் வெகு அழகாகச் சித்திரிக்கப்பட்டிருந்தன. தயிர் கடைந்து கொண்டிருந்த யசோதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வெண்ணெய் வேண்டுமென்று கண்ணன் கெஞ்சிக் கொண்டிருந்த சித்திரத்தைப் பார்த்த வண்ணமே வாழ்நாளைக் கழித்துவிடலாமென்று தோன்றியது.
இரு பிளவாகப் பிளந்திருந்த இன்னொரு பாறையில் ஆகாச கங்கையைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காகப் பகீரதன் கடுந்தவம் செய்த காட்சி சித்திரிக்கப்பட்டிருந்தது. அவனுடைய தவ மகிமையினால் கவரப்பட்டுத் தேவர்கள் முனிவர்கள் எல்லாரும் வந்து இருபுறமும் நிற்கிறார்கள். அவர்களுடைய முகங்களில் வியப்பும் பக்தியும் காணப்படுகின்றன. இந்த ஒப்பற்ற சித்திரக் காட்சியை எழுதிய ஓவியக்காரன் நகைச்சுவை நிரம்ப உள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒரு மூலையில் கண்ணை மூடிக் கொண்டு தவஞ் செய்வதாகப் பாசாங்கு செய்த ஒரு பூனையின் உருவத்தையும் அவன் எழுதியிருந்தான்.
இந்த மாதிரி எத்தனையோ அற்புதச் சித்திரங்கள் காட்சிகள் ஒவ்வொரு பாறை முகப்பிலும் காணப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு ஸ்திரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் கும்பல் கும்பலாக அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பட்டுப் பட்டாடைகளை அணிந்து, திவ்ய ஆபரணங்களைப் பூண்டிருந்தார்கள். ஸ்திரீகள் கூந்தலில் மலர் சூடியிருந்தார்கள். புருஷர்கள் கழுத்தில் பூமாலைகளை அணிந்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே கோலாகலமாகவும் குதூகலமாகவும் இருந்தது.
ஜனங்களின் குதூகலத்தை அதிகப்படுத்துவதற்குச் சித்திரக் காட்சிகளைத் தவிர இன்னும் பல சாதனங்களும் அங்கேயிருந்தன. ஆங்காங்கு வாழை மரங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிறு சிறு பந்தல்கள் காணப்பட்டன. அந்தப் பந்தல்களில் இசை விருந்துகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பந்தலிலிருந்து வீணையின் ஒலி எழுந்தது. இன்னொரு பந்தலிலிருந்து குழலோசை வந்து கொண்டிருந்தது. வேறொரு பந்தலில் வேதியர்கள் ஸாமகானம் செய்து கொண்டிருந்தார்கள். மற்றொரு பந்தலில் ஓர் இசைப் புலவர் அப்பர் பெருமானின் தேவாரப் பதிகங்களைப் கல்லுங்கனியப் பாடிக் கொண்டிருந்தார்.
ஜனங்கள் அவரவர்களுக்கு இஷ்டமான இடத்திலே போய் நின்று சித்திரக் காட்சிகளையும், இசை விருந்துகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல்களிலும் கூட்டத்துக்குக் குறைவில்லை. அவல் பொரியும் சர்க்கரையும் பானகமும் நீர்மோரும் வந்தவர்களுக்கெல்லாம் உபசரிப்புடன் வழங்கப்பட்டன.
இவ்விதம் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே ஜன சமுத்திரமாய்த் தோன்றியதாயினும் அந்த ஜனத்திரளுக்கு மத்தியில் ஓரிடத்தில் மிகவும் நெருங்கிய ஜனக் கூட்டம் காணப்பட்டது. இக்கூட்டம் ஒரே இடத்தில் நிலைத்து நில்லாமல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் காட்சியானது சிறு சிறு அலைகள் எழுந்து விழுந்து கொண்டிருக்கும் சமுத்திரத்தில் ஒரே ஒரு பெரிய அலை மட்டும் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருப்பது போல் தோன்றியது. இந்தப் பெரிய அலைக்குக் காரணமாயிருந்தவர்கள் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப் புதல்வியுந்தான்.
நரசிம்மவர்மர் உயர்ந்த ஜாதிப் புரவி ஒன்றின் மேல் வீற்றிருந்தார். குந்தவி தேவியோ பக்கத்தில் இருந்தாள். இவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் கூட்டத்தை விலக்கி வழி செய்வதற்காக ஒரு சில வீரர்கள் மட்டுமே சென்றார்கள். அவர்களுக்குச் சற்று முன்னால், சக்கரவர்த்தியின் வருகையை அறிவிப்பதற்காக, ஒரு பெரிய ரிஷபத்தின் மேல் முரசு வைத்து அடித்துக் கொண்டு போனார்கள்.
ஜனத் திரளுக்கு இடையே சென்று கொண்டிருந்த இந்த ஊர்வலம் ஆங்காங்கு நின்று நின்று போகவேண்டியதாயிருந்தது. சித்திரக் காட்சியைப் பார்ப்பதற்காகச் சக்கரவர்த்தி நின்ற இடங்களில் எல்லாம் அவர் மேலும் குந்தவி தேவியின் மேலும் பூமாரி பொழிந்தார்கள். நறுமணம் பொருந்திய பனி நீரை இரைத்தார்கள். சந்தனக் குழம்பை அள்ளித் தெளித்தார்கள். "ஜய விஜயீ பவ!" என்றும், "தர்ம ராஜாதிராஜர் வாழ்க!" "திருபுவனச் சக்கரவர்த்தி வாழ்க!" "நரசிம்ம பல்லவரேந்திரர் வாழ்க!" "மாமல்ல மன்னர் வாழ்க" என்றும் கோஷித்தார்கள்.
சக்கரவர்த்தி ஒவ்வொரு சித்திரக் காட்சியையும் விசேஷ சிரத்தையுடன் பார்வையிட்டு, ஆங்காங்கு பயபக்தியுடன் நின்று கொண்டிருந்த ஓவியக்காரர்களிடமும், சிற்பக் கலைஞர்களிடமும் தமது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டு வந்தார்.
இவ்விதம் சுற்றிப் பார்த்துக்கொண்டு கடைசியாக ஊர்வலம் துர்க்கை ஆலயத்தண்டை வந்து சேர்ந்தது. இந்தத் துர்க்கை ஆலயம் மகேந்திரவர்மனின் காலத்திலே குன்றில் குடைந்து நிர்மாணித்தது. திருப்பணி வேலை இடையில் தடைப்பட்டுப் பூர்த்தியாகாமல் இருந்தது. அன்று நடந்த கோலாகலமான விழாக் கொண்டாட்டத்தில் இந்தத் துர்க்கை ஆலயந்தான் நடுநாயகமாயிருந்தது. அந்தப் பாறைக் கோயிலுக்கு எதிரே மிகவும் விஸ்தாரமான பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலுக்கு உள்ளேயிருந்து அண்ணாந்து பார்த்தால் அமாவாசையன்று நள்ளிரவில் துல்லியமான ஆகாயத்தைப் பார்க்கிறோமோ? என்ற பிரமை உண்டாகும். அவ்விதம் பிரகாசமான நட்சத்திரங்களைப் போல ஜொலித்த எண்கோணப் பொட்டுக்கள் அமைந்த நீலப் பட்டாடையினால் மேல் விதானம் கட்டியிருந்தார்கள்.
பந்தலின் தூண்களில் விதவிதமான வர்ணப் பட்டாடைகளைச் சுற்றியிருந்தார்கள். பந்தலுக்கு மேலே வரிசையாகச் சிங்கக் கொடிகள் மாலைக் கடற்காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. பந்தலின் விளிம்புகளில் இளந்தென்னங் குருத்துக்களினாலான தோரணங்கள் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன.
பந்தலின் மத்தியில், தேவியின் சன்னதிக்கு எதிரே, சக்கரவர்த்திக்கும் அவருடைய புதல்விக்கும் இரண்டு அழகிய சிம்மாசனங்களும், அவற்றைச் சுற்றிலும் வரிசை வரிசையாகிய இன்னும் பல ஆசனங்களும் அமைக்கப்பட்டிருந்தன. புலிகேசியின் படையெடுப்பினால் தடைப்பட்டுப் போன சிற்பத் திருப்பணியை இந்தத் துர்க்கா தேவியின் கோயிலில் விஜயதசமி தினத்தில் மீண்டும் தொடங்குவதற்காக ஏற்பாடாகி இருந்தது. சக்கரவர்த்தி வருவதற்கு நெடுநேரத்திற்கு முன்னமேயே பந்தலில் மந்திரி மண்டலத்தாரும், மற்ற அதிகாரிகளும் வந்து அவர்களுக்குரிய ஆசனங்களில் அமர்ந்து விட்டார்கள். சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் பந்தலுக்குள் வந்ததும் சபையினர் அனைவரும் எழுந்து நின்றதுடன், ஜய கோஷங்களும் வாழ்த்தொலிகளும் வாத்திய முழக்கங்களும் வானை அளாவி எழுந்தன.
சக்கரவர்த்தியும் குந்தவியும் முதலில் கோவிலுக்குள்ளே சென்று அம்பிகையைத் தரிசித்து விட்டு வந்தார்கள். பந்தலின் நடுவில் அமைந்திருந்த சிம்மாசனங்களில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து அமர்ந்ததும் மந்திரி மண்டலத்தாரும் மற்றவர்களும் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தனர். கோயில் குருக்கள்மார் தொடர்ந்து வந்து சக்கரவர்த்திக்கும் மற்றவர்களுக்கும் விபூதி குங்குமப் பிரசாதங்களை அளித்து, மலர் மாலைகள் சூட்டி முழக்கங்களுக்கிடையே சக்கரவர்த்தி தம் திருக்கரத்தினால் ஆசாரிய ஸ்தபதியின் தலையில் பட்டுப் பரிவட்டம் கட்டினார்.
பிறகு உயர்ந்த பட்டு வஸ்திரங்களும் நூறு பொன் கழஞ்சுகளும் வைத்திருந்த தாம்பூலத் தட்டையும் அவரிடம் கொடுத்தார். அவற்றை ஆசாரிய ஸ்தபதி வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். அவ்விதமே அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான சிற்பிகளுக்கும் மந்திரி மண்டலத்தாருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தலையில் பரிவட்டம் கட்டிப் பட்டு வஸ்திரங்களையும் பொன் கழஞ்சுகளையும் பரிசளித்தார்கள்.
பின்னர் மந்திரி மண்டலத்தின் தலைவரான விஷ்ணு சர்மர் எழுந்து சபையோரைப் பார்த்துப் பேசினார். பல்லவ ராஜ வம்சத்தில் தோன்றிய பெயர் பெற்ற மன்னர்களின் வீரதீர பராக்கிரமங்களை அவர் வர்ணித்தார். அவர்களில் கடைசி மன்னரான மகேந்திர வர்மரின் அற்புத குணாதிசயங்களைப் புகழ்ந்தார்.
அவருடைய அருந்தவப் புதல்வரான மாமல்ல சக்கரவர்த்தி பட்டத்துக்கு வந்த பிறகு பல்லவ சாம்ராஜ்யத்தின் புகழ் கடல்களுக்கு அப்பாலும் பரவியிருக்கிறதென்றும், அதற்கு உதாரணமாக இந்தச் சபையிலேயே ஒரு சம்பவம் நடக்கப்போகிறதென்றும், செண்பகத் தீவிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகள் தங்களுடைய தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக்கொண்டு பரிபாலிக்கும் படி சக்கரவர்த்தியை வேண்டிக்கொள்ளப் போகிறார் என்றும் விஷ்ணு சர்மர் தெரிவித்த போது, சபையோர் தங்களுடைய குதூகலத்தைப் பலவித கோஷங்களினால் வௌதயிட்டனர்.
மீண்டும் அமைச்சர் தலைவர் கூறியதாவது:- "மகாஜனங்களே! காஞ்சியும் மாமல்லபுரமும் பல்லவ சாம்ராஜ்யத்தின் இரு கண்களாகும். சாம்ராஜ்யத்துக்குத் தலை நகரமான காஞ்சி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு துறைமுகப்பட்டினமான மாமல்லபுரம் நெடுநாளாக முக்கியமாயிருந்து வந்தது. ஆனால் காலஞ்சென்ற மகேந்திர சக்கரவர்த்தி இங்கே சிற்பத் திருப்பணியை ஆரம்பித்த பிறகு, காஞ்சியின் பெருமை சிறிது தாழ்ந்து மாமல்லபுரத்தின் புகழ் ஓங்கிவிட்டது. எட்டு வருஷங்களுக்கு முன்பு நமது சக்கரவர்த்திப் பெருமான் வடதேசத்துக்குப் படையெடுத்துச் சென்ற போது, இங்கு நடந்துவந்த சிற்பத் திருப்பணியை நிறுத்த வேண்டியிருந்தது.
பாதகனான புலிகேசியைக் கொன்று வாதாபியைத் தீக்கிரையாக்கி விட்டுத் திரும்பிய பிறகு சில காலம் தேசத்திலிருந்து பஞ்சம் பிணிகளை நீக்கும் முக்கியமான பிரயத்தனங்களிலும், உள்நாட்டுச் சிறு பகைகளை அழிக்கும் முயற்சியிலும் சக்கரவர்த்தி ஈடுபட்டிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பராசக்தியின் அருளினாலும், பல்லவ குலத்தின் பரம்பரையான தர்ம பலத்தினாலும், சக்கரவர்த்தி ஈடுபட்டிருந்த அந்தக் காரியங்கள் எல்லாம் இனிது நிறைவேறிவிட்டன. சக்கரவர்த்தியின் திருப்பெயரைப் பூண்ட இந்தப் பட்டினத்திலே சிற்பத் திருப்பணிகள் இன்று மறுபடியும் ஆரம்பமாகின்றன. இனிமேல் சக்கரவர்த்தியும் இந்த நகருக்கு அடிக்கடி விஜயம் செய்து திருப்பணி வேலைகளை மேற்பார்வை செய்வதாகக் கிருபை கூர்ந்து வாக்களித்திருக்கிறார்."
இவ்விதம் அமைச்சர் தலைவர் கூறிச் சபையோரை ஆனந்தக் கடலில் ஆழ்த்திய பிறகு, செண்பகத் தீவின் தூதர்கள் சக்கரவர்த்தியின் சமூகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுடைய தலைவன் பேசியது தமிழ் மொழியேயானாலும் சற்று விசித்திரமான தமிழாயிருந்த படியால், சபையோர்களுக்குப் புன்னகை உண்டு பண்ணிற்று.
அந்தத் தூதர் தலைவன் கூறியதின் சாராம்சம் பின்வருமாறு:-
செண்பகத் தீவின் வாசிகள், சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கரிகால் சோழரின் காலத்தில் சோழ நாட்டிலிருந்து அங்கே போய்க் குடியேறிய தமிழர்களின் சந்ததிகள், அந்தத் தீவை ஆண்டு வந்த ராஜ வம்சம் சந்ததியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு நசிந்துப் போய்விட்டது. ஆகவே, செண்பகத் தீவு தற்சமயம் ராஜா இல்லாத ராஜ்யமாயிருந்து வருகிறது.
இதை அறிந்ததும் பக்கத்துத் தேசங்களிலுள்ள மக்கள் - முக்கியமாகத் தட்டை மூக்குச் சாதியினர் - அடிக்கடி செண்பகத் தீவில் வந்திறங்கிக் கொள்ளையிட்டும், இன்னும் பலவித உபத்திரங்களை விளைவித்தும் செல்லுகிறார்கள். இதையெல்லாம் உத்தேசித்துச் செண்பகத் தீவின் ஜனங்கள் மகாசபை கூட்டி ஏக மனதாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது தற்சமயம் தாய்நாட்டிலே பிரசித்த சக்கரவர்த்தியாய் விளங்கும் நரசிம்ம பல்லவேந்திரருக்குத் தூதனுப்பி, செண்பகத் தீவைப் பல்லவ சாம்ராஜ்யத்தில் சேர்த்துக் கொண்டு சக்கரவர்த்தியின் சார்பாகத் தீவை ஆட்சி புரிவதற்கு இராஜ வம்சத்தைச் சேர்ந்த வீர புருஷர் ஒருவரை அனுப்பும்படி பிரார்த்திக்க வேண்டியது.
சக்கரவர்த்தி தூதர்களின் பிரார்த்தனைக்கு உடனே மறுமொழி சொல்லவில்லை. சில நாள் யோசித்தே முடிவு செய்யவேண்டுமென்றும், அதுவரை அந்தத் தூதர்கள் பல்லவ சாம்ராஜ்யத்திலுள்ள காஞ்சி முதலிய நகரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாமென்றும், ஒருவாரத்துக்குள் அவர்களுக்கு மறுமொழி சொல்லக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இதன் பின்னர் நரசிம்மவர்மரும் குந்தவி தேவியும் மந்திரிகளும் ஸ்தபதிகளும் பின் தொடர்ந்துவர துர்க்கா தேவியின் கோயிலுக்கு மறுபடியும் வந்தனர். அந்தக் கோயிலின் வெளி மண்டபத்தில் இருபுறத்துச் சுவர்களும் வெறுமையாக இருந்தன. சக்கரவர்த்தி ஒரு பக்கத்துச் சுவரின் அருகில் வந்து, குந்தவிதேவியின் கையிலிருந்த காவிக் கட்டியை வாங்கி, அந்தச் சுவரில் சித்திரம் வரையத் தொடங்கினார். அருகில் இருந்தவர்கள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நிற்கும்போதே, வெகு சீக்கிரத்தில் சிம்மவாகனத்தின் மீது போர்க்கோலத்துடன் வீற்றிருக்கும் துர்க்கை தேவியின் திரு உருவம் அந்தச் சுவரில் சாக்ஷாத் காரமாய்த் தோன்றியது. குந்தவி தேவி பயம் தொனித்த குரலில், "அப்பா! தேவியின் உக்கிரம் தாங்க முடியவில்லை.
யாருடன் அம்பிகை சண்டையிடுகிறாளோ, அந்த அசுரனுடைய உருவத்தையும் எழுதிவிடுங்கள்" என்றாள். உடனே சக்கரவர்த்தி தேவிக்கு எதிரே கையில் கதாயுதம் தரித்த மகிஷாசுரனுடைய உருவத்தையும் எழுதினார். "இப்போது தான் பயமின்றிப் பார்க்க முடிகிறது!" என்றாள் குந்தவி. பிறகு, சக்கரவர்த்தி அங்கே அருகில் நின்ற ஆசாரிய ஸ்தபதியைப் பார்த்து, "ஸ்தபதியாரே, இந்த விஜயதசமி தினத்தில் தான் அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்தாள். நமது திருப்பணியை அந்தக் காட்சியுடனேயே ஆரம்பித்து வைக்கலாமல்லவா?" என்றார். ஆசாரிய ஸ்தபதியும் வணக்கத்துடன் ஆமோதித்துத் தம் கையிலிருந்த கல்லுளியைச் சக்கரவர்த்தியின் பால் நீட்ட, சக்கரவர்த்தி அதை வாங்கிக் கொண்டு தாம் எழுதிய சித்திரத்தின் மேல் கல்லுளியால் சில முறை பொளிந்தார். பிறகு கல்லுளியை ஸ்தபதியிடம் கொடுத்தார். ஸ்தபதியார் அதைப் பக்தியுடன் பெற்றுக் கொண்டு அம்பிகைக்கும் சக்கரவர்த்திக்கும் வணக்கம் செலுத்தி விட்டுச் சிற்ப வேலையை ஆரம்பித்தார்.
அன்று முதற்கொண்டு பல வருஷ காலம் மாமல்லபுரத்தில் ஆயிரக்கணக்கான கல்லுளிகள் சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.
"புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு; நாரீஷுரம்பா நகரேஷு காஞ்சி"
என்று வடமொழிப் புலவர்களால் போற்றப்பட்ட காஞ்சிமா நகரின் மாடவீதியிலே குந்தவிதேவி பல்லக்கில் சென்று கொண்டிருந்தாள். திருக்கோயில்களுக்குச் சென்று உச்சிகால பூஜை நடக்கும்போது சுவாமி தரிசனம் செய்து விட்டு வரும் நோக்கத்துடன் அவள் சென்றாள். ஆனால் அவளுடைய உள்ளம் மட்டும் ஒரு வாரத்துக்கு முன்பு மாமல்லபுரத்தில் விஜயதசமியன்று கண்ட கோலாகலக் காட்சியிலேயே ஈடுபட்டிருந்தது.
அன்று ஆரம்பித்த திருப்பணிகளில் உலகம் உள்ள வரையில் தன் தந்தையின் புகழ் குன்றாதிருக்குமல்லவா? என்று அவள் எண்ணமிட்டாள். இப்படிப்பட்ட தந்தைக்குப் புதல்வியாய்ப் பிறக்கத் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்று நினைத்தாள். இத்தகைய சக்கரவர்த்தியின் ஆட்சியில் வாழும் பிரஜைகள்தாம் எவ்வளவு பாக்கியம் பண்ணியவர்கள் என்ற எண்ணமும் தோன்றியது. இப்படிப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்தவளாய்ப் பல்லக்கிலே போய்க் கொண்டிருக்கையில், திடீரென்று வீதியில் ஒருமதில் சுவரின் திருப்பத்தில் அபூர்வமான காட்சி ஒன்றைக் கண்டாள்.
சகல இராஜ லட்சணங்களும் பொருந்திக் களைததும்பும் முகத்தினனான ஓர் இளங்குமரன் ஒரு குதிரைமீது வந்து கொண்டிருந்தான். அவனுடைய உடம்பையும் கைகளையும் குறுக்கும் நெடுக்குமாய் இரும்புச் சங்கிலியினால் பிணைத்திருந்தார்கள். குதிரையின் இரு பக்கத்திலும் முன்னாலும் பின்னாலும் அந்தச் சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு போர் வீரர்கள் சிலர் விரைந்து நடந்து வந்தார்கள்.
அந்த இளங்குமரன் மிகவும் களைத்துப்போன தோற்றமுடையவனாயிருந்தாலும், அவனுடைய முகத்தில் கொஞ்சமாவது அதைரியத்தின் அறிகுறி காணப்படவில்லை. அஞ்சா நெஞ்சங் கொண்ட தீர புருஷனாகவே தோன்றினான். "என் உடம்பைத்தானே சங்கிலிகளால் பிணைக்க முடியும்? என் உள்ளத்தை யாராலும் சிறைப்படுத்த முடியாதல்லவா?" என்று அலட்சியத்துடன் கேட்பதுபோல் இருந்தது அவனுடைய திருமுகத்தின் தோற்றம்.
இந்தக் காட்சியைக் கண்டதும் குந்தவி தேவியின் விசாலமான நயனங்கள் ஆச்சரியத்துடன் இன்னும் அதிகமாக விரிந்தன. அதே சமயத்தில் அந்த இளைஞனும் சக்கரவர்த்தியின் குமாரியைப் பார்த்தான். சொல்லுக் கெட்டாத அவளுடைய திவ்ய சௌந்தரியம் ஒரு கணநேரம் அவனைத் திகைப்படைந்து நிற்கும்படி செய்திருக்க வேண்டும். அடுத்த நிமிஷத்தில் பல்லக்கும் குதிரையும் ஒன்றையொன்று தாண்டிச் சென்று விட்டன.
குந்தவி பல்லக்கிலிருந்த வண்ணம் இரண்டொரு தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். குதிரைமீது சங்கிலியால் கட்டுண்டிருந்த அந்த இளங்குமரனும் தன்னைப் போலவே ஆவல் கொண்டவனாய்த் திரும்பிப் பார்ப்பான் என்று அவள் எதிர்பார்த்தாளோ என்னவோ, தெரியாது. ஆனால் அந்தக் குமரன் மட்டும் தலையை ஓர் அணுவளவு கூடப் பின்புறமாகத் திருப்பவில்லை. திருப்ப முடியாதபடி அவனைப் பிணித்திருந்த சங்கிலிகள்தான் தடுத்தனவோ, அல்லது அவனுடைய மனத்தின் திட சங்கற்பந்தான் அவ்விதம் திரும்பிப் பார்க்காத வண்ணம் தடை செய்ததோ அதுவும் நமக்குத் தெரியாது.
குந்தவி தேவியின் திவ்ய சௌந்தரியத்தைப் போலவே அந்தச் சக்கரவர்த்தி திருமகளின் தெய்வ பக்தியும் அந்நாளில் தேசப் பிரசித்தமாயிருந்தது. சாதாரணமாய் அவள் சிவன் கோயிலுக்குப் போனாலும், பெருமாள் கோயிலுக்குப் போனாலும் பராசக்தியின் சந்நிதிக்குச் சென்றாலும், அந்தந்தத் தெய்வங்களின் தியானத்திலே ஈடுபட்டுத் தன்னை மறந்துவிடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினம் குந்தவியின் மனம் அவ்விதம் சலனமற்ற தியானத்தில் ஈடுபடவில்லை. தெய்வ சந்நிதானத்தில் நின்றபோது கூட, கட்டுண்டு குதிரை மேல் வீற்றிருந்த இளங்குமரனுடைய முகம் வந்து நின்றது. அவள் எவ்வளவோ முயன்றும் அந்த முகத்தை மறக்க முடியவில்லை. இது வரையில் அவள் அனுபவித்தறியாத இந்தப் புதிய அனுபவமானது அவளுக்கு ஒருவித அபூர்வ இன்பக் கிளர்ச்சியையும் அதே சமயத்தில் பயத்தையும் உண்டு பண்ணிற்று!
ஒருவாறு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு குந்தவி தேவி அரண்மனைக்குத் திரும்பினாள். திரும்புங் காலையில் மனத்தை அந்த இளங்குமரன் மேல் செல்லாமல் வேறு நினைவில் செலுத்தும் முயற்சியையே அவள் விட்டு விட்டாள். "அவ்வளவு ராஜ லக்ஷணங்கள் பொருந்திய இளங்குமரன் யாராயிருக்கலாம்? அவனை எதற்காகச் சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள்? எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? அவன் அத்தகைய குற்றம் என்னதான் செய்திருப்பான்?" என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினாள். திடீரென்று ஒரு ஞாபகம் வந்தது.
"உறையூர் இளங்குமாரன் ஏதோ சக்கரவர்த்திக்கு விரோதமாகக் கலகம் செய்யப் போகிறான் என்று மாமல்லபுரத்துக்கு ஓலை வந்ததல்லவா? அது விஷயமாக முன்னமே ஏற்பாடு செய்தாகிவிட்டது என்று சக்கரவர்த்தி மறுமொழி தந்தாரல்லவா? அந்தச் சோழ இராஜ குமாரன்தானோ என்னவோ இவன்?" இந்த எண்ணம் தோன்றியதும் குந்தவிக்கு அக்குமரன் மேல் கோபம் உண்டாயிற்று.
'என்ன அகந்தை, என்ன இறுமாப்பு அவனுக்கு? எவ்வளவு பெரிய துரோகமான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு அலட்சியமாய்க் கொஞ்சங்கூடப் பயப்படாமலும் வெட்கப்படாமலும் இறுமாந்து உட்கார்ந்திருக்கிறான்! நரசிம்ம பல்லவேந்திரருக்கு எதிராகக் கலகம் செய்யும்படி அவ்வளவு வந்துவிட்டதா அவனுக்கு? எத்தனையோ தூர தூர தேசங்களில் உள்ள ஜனங்கள் எல்லாரும், நரசிம்ம சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடையின் நிழலில் வாழ்வதற்குத் தவஞ் செய்கிறார்களே! செண்பகத் தீவின் வாசிகள் இதற்காகத் தூது அனுப்பியிருக்கிறார்களே! இந்த அற்பச் சோழநாட்டு இளவரசனுக்கு என்ன வந்துவிட்டது? ஆமாம், இவன் மட்டும் கலகம் செய்த இளவரசனாயிருந்தால் தந்தையிடம் சொல்லிக் கடுமையான தண்டனை விதிக்கச் செய்ய வேண்டும்! அப்போது தான் புத்தி வரும்.'
இவ்வாறு எண்ணிய குந்தவியின் மனம் மறுபடியும் சஞ்சலம் அடைந்தது. "ஐயோ பாவம்! முகத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் கெட்டவனாகத் தோன்றவில்லையே! அவன் தானாக ஒன்றும் செய்திருக்க மாட்டான்.
ஒருவேளை யாராவது கெட்ட மனிதர்கள் பக்கத்தில் இருந்து தூண்டி விட்டிருப்பார்கள். அவர்களைப் பிடித்துத் தண்டிக்க வேண்டுமேயன்றி, இந்தச் சுகுமாரனைக் கடுமையாகத் தண்டிப்பதில் என்ன பயன்? அவனுடைய மார்பையும், தோள்களையும், கைகளையும் பிணித்திருக்கும் இரும்புச் சங்கிலிகள் அந்த மிருதுவான தேகத்தை எப்படித் துன்புறுத்துகின்றனவோ? நல்ல புத்தி சொல்லி, எச்சரிக்கை செய்து; அவனை விட்டுவிட்டால் என்ன? - அப்பாவிடம் இராத்திரி சொல்ல வேண்டும். ஆனால் அவருக்குத் தெரியாத விஷயமா? "தர்ம ராஜாதி ராஜன்" என்று புகழ் பெற்றவராயிற்றே? நியாயமும் தர்மமும் தவறி அவர் ஒன்றும் செய்யமாட்டார்.
இந்த இளங்குமரனை மன்னித்துத்தான் விடுவார்...." இப்படியெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளத்துடன் குந்தவி தேவி அரண்மனையை அடைந்தாள். சூரியன் எப்போது அஸ்தமிக்கும்? தகப்பனார் எப்போது ராஜசபையிலிருந்து அரண்மனைக்குத் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்த வண்ணம் ஒவ்வொரு வினாடியையும் ஒவ்வொரு யுகமாகக் கழித்துக் கொண்டிருந்தாள்.
குந்தவி தாயில்லாப் பெண். அவளுடைய அன்னையும் பாண்டிய ராஜகுமாரியும் நரசிம்மவர்மரின் பட்ட மகிஷியுமான வானமாதேவி, குந்தவி ஏழு வயதுக் குழந்தையாயிருந்தபோதே சுவர்க்கமடைந்தாள்.
இந்தத் துக்கத்தை அவள் அதிகமாக அறியாத வண்ணம் சில காலம் சிவகாமி அம்மை அவளைச் செல்லமாய் வளர்த்து வந்தாள். இந்தச் சிவகாமி பிரசித்தி பெற்ற ஆயனச் சிற்பியின் மகள். நரசிம்மவர்மரால் வாதாபியிலிருந்து சிறை மீட்டு வரப்பட்டவள், பட்ட மகிஷியின் மரணத்துக்குப் பிறகு நரசிம்மவர்மர் சிவகாமியை மணம் புரிந்து கொள்வாரென்று சில காலம் பேச்சாயிருந்தது. ஆனால் அவ்விதம் நடக்கவில்லை. சில வருஷகாலத்துக்கெல்லாம் சிவகாமி தேவியும் சொர்க்கம் புகுந்து விட்டாள்.
பிறகு, சக்கரவர்த்தியே குந்தவிக்குத் தாயும் தகப்பனுமாயிருந்து அவளை வளர்க்க வேண்டியதாயிற்று. அந்தப்புரத்தில் குந்தவிக்குப் பாட்டிமார்கள்- மகேந்திரவர்மருடைய பத்தினிகள் சிலர் இருந்தனர். ஆனால் அவர்களுக்கும் குந்தவிக்கும் அவ்வளவாக மனப் பொருத்தம் ஏற்படவில்லை. குந்தவி தாயாரைக் குறித்து "தெற்கத்தியாள்" என்று அவர்கள் குறை கூறியதையும் சிவகாமி தேவியைப் பலவிதமான நிந்தை செய்ததையும் குந்தவி குழந்தைப் பருவத்தில் கேட்டிருந்தாள். இதனாலேயே பாட்டிமார்களிடத்தில் அவளுக்குப் பற்றுதல் உண்டாகவில்லை. குந்தவியின் நடை உடை பாவனைகளும், அவள் எதேச்சையாகச் செய்த காரியங்களும் அந்தப் பாட்டிமார்களுக்குப் பிடிக்கவில்லை. நரசிம்மவர்மர் இந்தப் பெண்ணுக்கு ரொம்பவும் இடங்கொடுத்துக் கெடுத்து வருகிறார் என்ற குறையும் அவர்களுக்கு உண்டு.
இக்காரணங்களினால் குந்தவிக்குத் தன் தந்தையிடமுள்ள இயற்கையான பாசம் பன்மடங்கு வளர்ந்திருந்தது. அப்பாவுடன் இருக்கும்போதுதான் அவளுக்குக் குதூகலம்; அவருடன் வார்த்தையாடுவதில்தான் அவளுக்கு உற்சாகம். அவருடன் சண்டை பிடிப்பதில்தான் அவளுக்கு ஆனந்தம். அவர் தன்னை உடன் அழைத்துப் போகாமல் ராஜரீகக் காரியங்களுக்காக வெளியூர்களுக்குப் போயிருந்தால், அவளுக்கு ஒரு நாள் போவது ஒரு யுகம் போவது போலிருக்கும்.
சக்கரவர்த்திக்கோ அவருடைய பிராணனே குந்தவியாக உருக்கொண்டு வெளியில் நடமாடுகிறது என்று கருதும்படி இருந்தது. அவருடைய விசால இருதயமானது ஓரானொரு காரணத்தினால் பல ஆண்டுக் காலம் வறண்டு பசையற்றுப் பாலைவனமாயிருந்தது. அப்படிப்பட்ட இருதயத்தில் குந்தவியின் காரணமாக மீண்டும் அன்பு தளிர்த்து ஆனந்தம் பொங்கத் தொடங்கியது. குந்தவியின் ஒவ்வொரு சொல்லும், செயலும், நோக்கும், சமிக்ஞையும் சக்கரவர்த்திக்குப் புளகாகிதம் உண்டாக்கின.
தந்தையின் வரவை எதிர்நோக்கிக் குந்தவி தேவி அரண்மனை உப்பரிகையில் நிலா மாடத்தில் உட்கார்ந்திருந்தாள். பௌர்ணமிக்குப் பிறகு மூன்று நாள் ஆகியிருக்கலாம். கிழக்கு அடிவானத்தில் வரிசையாக உயர்ந்திருந்த பனை மரங்களுக்கு நடுவில், சிறிது குறைந்த சந்திரன், இரத்தச் சிவப்பு ஒளியுடன் உதயமாகிக் கொண்டிருந்தான். மற்ற நாட்களாயிருந்தால் அழகு மிகுந்த இந்த வானக் காட்சியின் வனப்பில் ஈடுபட்டு மெய் மறந்திருப்பாள். ஆனால், இன்று இரவு அவளுக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. வீதியில் குதிரைமீது வைத்துச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டு போகப்பட்ட இராஜகுமாரனுடைய ஞாபகமாகவே அவள் இருந்தாள். அவனைப் பற்றி விசாரிப்பதற்காகவே தந்தையின் வருகையை வழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைசியாக, நரசிம்மவர்மரும் வந்து சேர்ந்தார். குந்தவி அவரை ஓடி வரவேற்று, அவருடைய விசாலமான இரும்புத் தோள்களைத் தன் இளங் கரங்களினால் கட்டிக் கொண்டு தொங்கினாள். "ஏன் அப்பா, இன்றைக்கு இத்தனை நேரம்?" என்று கேட்டாள். என்றுமில்லாத அவளுடைய பரபரப்பையும் ஆர்வத்தையும் பார்த்து நரசிம்மவர்மர் ஆச்சரியப்பட்டுப் போனார். அப்படியொன்றும் நேரமாகிவிடவில்லை அம்மா! தினம் போலத் தானே வந்திருக்கிறேன். ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டார்.
குந்தவி ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக் கொண்டாள். "ஒரு விசேஷம் இருக்கிறது அப்பா! ஆனால் இப்போது சொல்லமாட்டேன். நீங்கள் முதலில் சொல்லுங்கள், சபையில் ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டாள்.
"ஆமாம்; உண்டு இலங்கையிலிருந்து இன்றைக்குச் செய்தி வந்தது; அங்கே நடந்த பெரும் போரில் நமது சைன்யங்கள் மகத்தான வெற்றியடைந்தனவாம். 'இலங்கை மன்னன் சமாதானத்தைக் கோருகிறான்; என்ன செய்யட்டும்?' என்று உன் தமையன் ஓலை அனுப்பியிருக்கிறான்."
"ரொம்ப சந்தோஷம், அப்பா! அப்படியானால் அண்ணா சீக்கிரம் திரும்பி வந்து விடுவானோ இல்லையோ?"
"கொஞ்ச காலம் கழித்துத்தான் வருவான். மதுரையில் உன் மாமாவுக்குக் கொஞ்ச நாளாகத் தேக அசௌகர்யமாயிருக்கிறதாம்; அங்கே போய்க் கொஞ்ச காலம் இருந்து விட்டு வரச் சொல்லியிருக்கிறேன். நீயும் வேணுமானால் மதுரைக்குப் போய் வருகிறாயா, குழந்தாய்! உன் மாமா உன்னைப் பார்க்க வேணுமென்று எவ்வளவோ ஆசைப்படுகிறாராம்."
"அதெல்லாம் முடியாது; நான் உங்களை விட்டுப் போகமாட்டேன். இருக்கட்டும். இன்னும் ஏதாவது விசேஷம் உண்டா, அப்பா!"
"உண்டு; சோழ நாட்டில்"
"சோழநாட்டில்" என்றதும் குந்தவியின் உடம்பில் படபடப்பு உண்டாயிற்று. இதைக் பார்த்த சக்கரவர்த்தி மிகவும் வியப்படைந்தவராய் "என்ன குந்தவி! உனக்கு என்ன உடம்பு?" என்று கேட்டார்.
"ஒன்றுமில்லை, அப்பா! சோழ நாட்டில் என்ன விசேஷம்! சொல்லுங்கள்" என்றாள் குந்தவி.
"சோழ நாட்டில் காழி என்னும் ஊரில் ஒரு இளம் பிள்ளை தெய்வ சாந்நித்யம் பெற்று மகா ஞானியாய் விளங்குகிறாராம். சிவபெருமான் பேரில் தீந்தமிழ்ப் பாடல்களைத் தேனிசையாய்ப் பொழிகிறாராம். தீராத வியாதிகள் எல்லாம் அவர் கையினால் திருநீறு வாங்கி இட்டுக் கொண்டால் தீர்ந்து விடுகிறதாம். ஞானசம்பந்தர் என்று பெயராம்!"
"நன்றாயிருக்கிறது போங்கள். யமனுக்கு அப்படி ஒரு விரோதி கிளம்பியிருக்கிறாரா? அந்தப் பிள்ளை திருநீறு கொடுத்து வியாதிகள் எல்லாவற்றையும் தீர்த்துக் கொண்டு போனால், யமலோகமல்லவா சூனியமாய்ப் போய்விடும்? நீங்களுந்தான் இப்போதெல்லாம் யுத்தம் செய்வதையே நிறுத்திவிட்டீர்கள்!" என்றாள் குந்தவி.
"எல்லாம் உன்னாலேதான்! நீ என் கழுத்தைக்கட்டிக் கொண்டு விடமாட்டேனென்றால், நான் யுத்தத்துக்குப் போவது எப்படி? உன்னை வேறொருவன் கழுத்தில் கட்டிவிட்டால், அப்புறம்...."
"அப்புறம் அவன் பாடு அதோ கதிதான்! அது கிடக்கட்டும், அப்பா! இன்றைக்கு வேறு விசேஷம் ஒன்றுமில்லையா!" என்றாள் குந்தவி.
"ஆமாம், இன்னும் ஒரே ஒரு விசேஷம் இருக்கிறது. கடல் மல்லைக்கு நாம் போயிருந்தபோது உறையூரிலிருந்து ஒரு தூதன் வந்தானே, ஞாபகம் இருக்கிறதா? நீ கூட விஷயத்தைக் கேட்டு விட்டு, 'அந்தச் சோழ ராஜகுமாரனை நன்றாய்த் தண்டிக்க வேண்டும்' என்று சொன்னாயே? அவனைச் சிறைப்பிடித்து இன்றைக்கே கொண்டு வந்துசேர்த்தார்கள்..."
"அப்பா! அவனைச் சங்கிலிகளால் கட்டிக் குதிரை மேல் வைத்துக் கொண்டு வந்தார்களா?" என்று குந்தவி கேட்டாள்.
"ஆமாம்; உனக்கு எப்படித் தெரிந்தது" என்றார் சக்கரவர்த்தி.
"மத்தியானம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது வீதியில் பார்த்தேன்."
குந்தவியிடம் வழக்கமில்லாத படபடப்பு அன்று ஏற்பட்டிருந்ததின் காரணத்தை நரசிம்மவர்மர் அப்போது அறிந்து கொண்டார்.
"ஒருவேளை அவனாய்த்தானிருக்கும். அது போகட்டும். குழந்தாய்! நமது அப்பர் பெருமானின் பதிகம் ஒன்றைப் பாடு பார்க்கலாம்!" என்றார் சக்கரவர்த்தி.
"அப்பா இந்த இராஜ குமாரனை இராத்திரி எங்கே வைத்திருப்பார்கள்?" என்று குந்தவி கேட்டாள்.
"வேறு எங்கே வைத்திருப்பார்கள்? காராக்கிரகத்தில் வைத்திருப்பார்கள்!"
"ஐயையோ!"
"என்ன குழந்தாய்! எதைக் கண்டு பயப்படுகிறாய்?" என்று நரசிம்மவர்மர் தூக்கி வாரிப் போட்டாற்போல் எழுந்து நாலாபுறமும் பார்த்தார்.
குந்தவி அவரைக் கீழே அமர்த்தி, "ஒன்றுமில்லை, அப்பா! காராக்கிரகத்திலிருந்து அந்த ராஜ குமாரன் தப்பித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்கிறது என்று பயந்தேன்!" என்றாள்.
"இவ்வளவுதானே!" என்று சக்கரவர்த்தி புன்னகை செய்து "அந்த மாதிரியெல்லாம் பயப்படாதே! பல்லவ ராஜ்யாதிகாரம் இன்னும் அவ்வளவு கேவலமாய்ப் போய்விடவில்லை. விக்கிரமன் தப்ப முயன்றானானால் அந்த க்ஷணமே பல்லவ வீரர்களின் பன்னிரண்டு ஈட்டி முனைகள் அவன் மீது ஏக காலத்தில் பாய்ந்து விடும்!" என்று சொன்னார்.
இந்தக் கடூரமான வார்த்தைகளைக் கேட்டு, குந்தவியின் உடம்பு இன்னும் அதிகமாகப் பதறிற்று.
"அப்பா! நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறீர்களா?" என்றாள் குந்தவி.
"நான் கேட்காவிட்டால் நீ என்னை விடத்தான் போகிறாயா?" என்றார் சக்கரவர்த்தி.
"அந்த இராஜ குமாரனுடைய முகத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் பொல்லாதவனாகத் தோன்றவில்லை. அப்பா! யாரோ துஷ்ட மனிதர்கள் அவனுக்குத் துர்ப்போதனை செய்து இப்படி அவனை உங்களுக்கு விரோதமாய்க் கிளப்பி விட்டிருக்க வேண்டும்."
"நீ சொல்லுவது ரொம்ப வாஸ்தவம். நான் கூட அவ்வாறு தான் கேள்விப்பட்டேன். யாரோ ஒரு சிவனடியார் அடிக்கடி இந்த விக்கிரமனையும் அவனுடைய தாயாரையும் போய்ப் பார்ப்பதுண்டாம். அந்த வேஷதாரி தான் விக்கிரமனை இப்படிக் கெடுத்திருக்க வேண்டுமென்று தகவல் கிடைத்திருக்கிறது."
"பார்த்தீர்களா? நான் எண்ணியது சரியாய்ப் போயிற்றே! உறையூரில் என்னதான் நடந்ததாம்? பெரிய சண்டை நடந்ததோ? ரொம்பப் பேர் செத்துப் போனார்களோ?"
"பெரிய சண்டையுமில்லை; சின்னச் சண்டையுமில்லை; இந்த அசட்டுப் பிள்ளை ஏமாந்து அகப்பட்டுக் கொண்டதுதான் லாபம். மாரப்ப பூபதி என்று இவனுக்கு ஒரு சித்தப்பன் இருக்கிறான். அவன் பெரிய படைகளைத் திரட்டிக்கொண்டு வருகிறேன் என்று இந்த பிள்ளையிடம் ஆசை காட்டியிருக்கிறான். அவன் அன்றைக்குக் கிட்டவே வரவில்லை. அதோடு நமது தளபதி அச்சுதவர்மரிடம் சமாசாரத்தையும் தெரியப்படுத்தி விட்டான். அன்று பல்லவ வீரர்கள் ஆயத்தமாய் இருந்தார்கள். வெளியூர்களிலிருந்து வந்த சில ஜனங்களை ஊருக்கு வெளியிலேயே வளைத்துக் கொண்டு விரட்டி விட்டார்கள். விக்கிரமனோடு கடைசியில் சேர்ந்தவர்கள் ஒரு கிழக் கொல்லனும், ஒரு படகோட்டியும் இன்னும் நாலைந்து பேருந்தான். கிழவன் அங்கேயே செத்து விழுந்து விட்டான். மற்றவர்களையெல்லாம் சிறைப்படுத்தி விக்கிரமனை மட்டும் என் கட்டளைப்படி இங்கே அனுப்பினார்கள்.
"ஐயோ பாவம்!" என்றாள் குந்தவி.
"எதற்காகப் பரிதாப்படுகிறாய், அம்மா! இராஜத் துரோகம் ஜயிக்கவில்லையே என்று பரிதாபப்படுகிறாயா?"
"இல்லை, இல்லை, இந்த இராஜ குமாரன் இப்படி ஏமாந்து போய்விட்டானே என்றுதான். ஆமாம் அப்பா! இந்த மாதிரி நடக்கப்போகிறதென்று உங்களுக்கு முன்னாலேயே தெரிந்திருக்கிறதே அது எப்படி?"
"என்னிடந்தான் மந்திர சக்தி இருக்கிறது என்று உனக்குத் தெரியுமே? ஆமாம், அப்பர் பெருமானின் பதிகம் பாடப் போகிறாயா, இல்லையா?" என்று மீண்டும் சக்கரவர்த்தி கேட்டுப் பேச்சை மாற்ற முயன்றார்.
"அப்பா எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்தத் தடவை மட்டும் அந்த இராஜகுமாரனை நீங்கள் மன்னித்து விட்டால்...."
"என்ன சொன்னாய் குந்தவி! பெண்புத்தி என்பது கடைசியில் சரியாய்ப் போய்விட்டதே! அன்றைக்கு அவனைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றாயே! அதனால்தான் பெண்களுக்கு இராஜ்ய உரிமை கிடையாதென்று பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள்..."
"சுத்தப் பிசகு! பெண்களுக்கு இராஜ்ய உரிமை இருந்தால் உலகத்தில் சண்டேயேயிராது. அந்த இராஜ குமாரனை மட்டும் நான் சந்தித்துப் பேசினேனானால் அவனுடைய மனத்தை மாற்றி விடுவேன். முடியுமா முடியாதா என்று பார்க்கலாமா, அப்பா?"
"முடியலாம்! குழந்தாய் முடியலாம். அவனுடைய மனத்தை மாற்றுவது உன்னால் முடியாத காரியம் என்று நான் சொல்லவில்லை. உனக்கு முன்னால் எத்தனையோ ஸ்திரீகள் புத்திசாலிகளை அசடுகளாக்கியிருக்கிறார்கள். வைராக்கிய சீலர்களைப் பைத்தியமாக்கியிருக்கிறார்கள். வீரர்களைக் கோழைகளாக்கியிருக்கிறார்கள். இதற்கு மாறாக சாதாரண மனுஷ்யர்களைப் புத்திசாலிகளாகவும், வைராக்கிய புருஷர்களாகவும், வீரர்களாகவும் செய்த ஸ்திரீகளும் இருந்திருக்கிறார்கள்.
பெண் குலத்துக்கு இந்தச் சக்தி உண்டு. உண்மைதான்; நீ நினைத்தாயானால், விக்கிரமனைச் சுதந்திரம் என்ற பேச்சையே மறந்துவிடும்படி செய்து விடலாம். ஆனால் உன்னுடைய சாமர்த்தியத்தை நீ கொஞ்சம் முன்னாலேயே காட்டியிருக்க வேண்டும். அவன் குற்றம் செய்வதற்கு முன் உன் பிரயத்தனத்தைச் செய்திருக்க வேண்டும். இனிமேல் பிரயோஜனமில்லை அம்மா! குற்றவாளியைத் தண்டித்தே தீரவேண்டும். இன்று விக்கிரமனைச் சும்மா விட்டு விட்டால் நாளைக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒருவன் கலகம் செய்யக் கிளம்புவான். அப்புறம் இராஜ்யம் போகிற வழி என்ன?"
இந்த வார்த்தைப் புயலில் அகப்பட்ட குந்தவி பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நின்றாள். சற்று நேரம் பொறுத்து, "அப்பா! அவனுக்கு என்ன தண்டனை விதிப்பீர்கள்?" என்று கேட்டாள்.
"இப்போது சொல்ல முடியாது குந்தவி! நாளைக்கு தர்மாசனத்தில் உட்கார்ந்து விசாரணை செய்யும் போது என்ன தண்டனை நியாயமென்று தோன்றுகிறதோ, அதைத் தான் அளிப்பேன். நியாயத்திலிருந்து ஒரு அணுவளவேனும் தவறினார்கள் என்ற அவச்சொல் இதுவரையில் பல்லவ வம்சத்துக்கு ஏற்பட்டதில்லை; இனிமேலும் ஏற்படாது" என்றார் சக்கரவர்த்தி.
அன்றிரவு குந்தவி சரியாகத் தூங்கவில்லை. சோழ ராஜகுமாரனுடைய சோகமும் கம்பீரமும் பொருந்திய முகம் அவள் மனக்கண்ணின் முன்னால் இடைவிடாமல் தோன்றி அவளுக்குத் தூக்கம் வராமல் செய்தது. நள்ளிரவுக்குப் பிறகு சற்றுக் கண்ணயர்ந்த போது, என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள் தோன்றியதால் அவள் திடுக்கிட்டு கண் விழிக்க வேண்டியதாயிற்று.
சோழ ராஜகுமாரனைக் கழுத்து வரையில் பூமியில் புதைந்திருக்கிறது. அவனை நோக்கி ஒரு மத யானை அதிவேகமாக ஓடி வருகிறது. அடுத்த நிமிஷம் ஐயோ! யானையின் கால்கள்- தூணையொத்த கால்கள், அந்தச் சுகுமாரனுடைய தலையை இடறிவிடப்போகின்றன! குந்தவி பதைபதைப்புடன் ஓடி வந்து யானை வரும் வழியில் நிற்கிறாள். யானை தன் துதிக்கையினால் அவளை லாவகமாகத் தூக்கித் தன் முதுகின்மேல் வைத்துக் கொண்டு மேலும் ஓடுகிறது. குந்தவி பயங்கரத்துடன் எதிரே பூமியில் புதைந்து நிற்கும் ராஜகுமாரனுடைய முகத்தைப் பார்க்கிறாள்! அந்தச் சமயத்திலும் அந்த முகத்தில் அலட்சியமும் அவமதிப்பும் கலந்து புன்னகை குடிகொண்டிருப்பதைக் காண்கிறாள். "ஐயோ!" என்று கதறிக் கொண்டு கண் விழிக்கிறாள். கண்டதெல்லாம் கனவென்று தெரிகிறது. ஆனாலும் அவள் உடம்பு வெகுநேரம் நடுங்கிக் கொண்டிருக்கிறது.
சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் கண்ணயர்ந்து வருகிறது. அரைத் தூக்கத்தில் மீண்டும் பயங்கரமான கனவு. கழு மரங்கள் வரிசையாக நட்டிருக்கின்றன. சோழ ராஜகுமாரனைக் கழுவேற்றுவதற்காகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். குந்தவி அவ்விடத்துக்கு ஓடோ டியும் வருகிறாள். துர்க்கை அம்மனை மனத்தில் தியானித்துக் கொண்டு அந்தக் கழு மரங்கள் பற்றி எரிய வேண்டுமென்று பிராத்திக்கிறாள். அவையெல்லாம் தீப்பற்றி எரிகின்றன. குந்தவி அளவில்லாத மகிழ்ச்சியுடன் ராஜகுமாரன் நின்ற இடத்தை நோக்குகிறாள். அந்தோ! அவனைச் சுற்றிலும் பன்னிரண்டு பல்லவ வீரர்கள் நின்று பன்னிரண்டு ஈட்டிகளை அவன் மீது செலுத்தச் சித்தமாயிருக்கிறார்கள். அடுத்த கணத்தில் ஈட்டிகள் அந்த அரசிளங் குமாரனுடைய மிருதுவான தேகத்தில் பாயப் போகின்றன. குந்தவி "ஐயோ!" என்று கதறிக் கொண்டு கீழே விழுகிறாள். கண் விழித்துப் பார்த்தால், மஞ்சத்திலிருந்து கீழே விழுந்திருப்பதாகத் தெரிகிறது.
இதன் பிறகு குந்தவி தூங்குவதற்குப் பிரயத்தனம் செய்யவில்லை. யானையின் காலில் வைத்து இடறுதல், கழுவேற்றுதல் முதலிய கொடூரமான தண்டனைகளெல்லாம் தன் தகப்பனாரின் தர்ம ராஜ்யத்தில் இல்லையென்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு தைரியமடைந்தாள்.
ஒருவாறு இரவு கழிந்து பொழுது விடிந்தது. சக்கரவர்த்தி சபைக்குப் புறப்படும் நேரமும் வந்தது. அவரிடம் மறுபடியும் சோழ ராஜகுமாரனைப் பற்றிப் பேச வேண்டும் என்று குந்தவி துடித்தாள். ஆனால் சக்கரவர்த்தியைப் பரிவாரங்கள் சூழ்ந்திருந்தபடியால் அது சாத்தியமாயில்லை. அவர் விடை பெற்றுக் கொண்டு கொஞ்சதூரம் சென்றுவிட்டார்.
ஏதாவது சொல்லாவிட்டால் குந்தவிக்கு நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. "அப்பா! நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என்றாள். நரசிம்மவர்மர் அவளைத் திரும்பிப் பார்த்து, "எதைச் சொல்லுகிறாய், குந்தவி! ஓகோ! சோழ ராஜகுமாரனைக் கடுமையாய்த் தண்டிக்க வேண்டுமென்று சொன்னாயே, அதுதானே! ஞாபகம் இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுப் பின்னர் திரும்பிப் பார்க்காமலேயே சென்று விட்டார்.
"குந்தவிக்குச் சொல்ல முடியாத ஆத்திரமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தன. விரைந்து பள்ளியறைக்குச் சென்று மஞ்சத்தில் குப்புறப் படுத்துக் கொண்டு கொஞ்ச நேரம் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். தன்னாலே தான் ராஜ குமாரன் கடுந்தண்டனை அடையப் போகிறான் என்ற எண்ணம் அவள் மனத்தில் வேரூன்றி விட்டது. இது அவனுக்குத் தெரியும் போது எவ்வளவு தூரம் தன்னை வெறுப்பானென்ற எண்ணம் அவளைப் பெருவேதனைக்கு உள்ளாக்கியது.
தான் ஏதாவது செய்துதான் ஆகவேண்டுமென்று அவள் பதைபதைத்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் அரண்மனை அதிகாரியை அழைத்து வரச் செய்து, "உதயவர்மரே! இன்று சக்கரவர்த்தியின் சபையில் சோழ ராஜகுமாரனுடைய விசாரணை முடிந்ததும் அதன் விவரத்தை உடனே எனக்கு வந்து தெரியப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு கண நேரங்கூட இதில் தாமதம் கூடாது" என்றாள். அரண்மனை அதிகாரி "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சபைக்கு ஆளையும் அனுப்பி வைத்தார்.
குந்தவி அன்று வழக்கமான காரியங்கள் ஒன்றும் செய்யவில்லை. நந்தவனம் சென்று மலர் எடுக்கவில்லை. ஆலயங்களுக்கும் போகவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு இராஜசபையிலிருந்து எப்போது ஆள் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக அந்த ஆளும் வந்து சேர்ந்தான். விசாரணையையும் முடிவையும் பற்றி விவரமாகக் கூறினான்.
சக்கரவர்த்தி ரொம்பவும் கருணை காட்டினாராம் 'இப்போதாவது பல்லவ சாம்ராஜ்யத்துக்குப் பணிந்து கப்பம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டாயானால் உன்னுடைய குற்றத்தை மன்னித்து சோழ ராஜ்யத்துக்கும் முடிசூட்டி வைக்கிறேன்' என்றாராம். அதைச் சோழ ராஜகுமாரன் ஒரே பிடிவாதமாக மறுத்து விட்டானாம். அதோடு நில்லாமல், சக்கரவர்த்தியைத் தன்னுடன் வாட்போர் செய்யும்படி அழைத்தானாம்! அதன்மேல் சக்கரவர்த்தி தீர்ப்பு கூறினாராம்! அவனுடைய இளம்பிராயத்தை முன்னிட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்காமல் தேசப் பிரஷ்டதண்டனை விதிப்பதாகவும் மறுபடியும் சோழ நாட்டிற்குள் அவன் பிரவேசித்தால் சிரசாக்கினைக்குள்ளாக வேண்டுமென்றும் சொல்லி உடனே அவனைக் கப்பலேற்றித் தீவாந்திரத்துக்கு அனுப்பிவிடும்படி கட்டளையிட்டாராம். அதன்படி அவனை உடனே மாமல்லபுரம் துறைமுகத்துக்குக் கொண்டுபோய் விட்டார்கள் என்பதையும் இராஜசபையிலிருந்து வந்த ஆள் தெரிவித்தான்.
விக்கிரமனுக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்ற செய்தி குந்தவிக்குச் சிறிது ஆறுதல் அளித்தது. ஆனால் அவனைக் கப்பல் ஏற்றி அனுப்பப் போகிறார்கள்; இனிமேல் என்றென்றைக்கும் அவனைத் தான் பார்க்க முடியாமற் போகலாம் என்ற எண்ணம் மிகுந்த துன்பத்தை உண்டாக்கியது. அந்த அரசிளங்குமரன் கப்பலேறிப் போவதற்கு முன் ஒரு தடவை அவனைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல் பொங்கி எழுந்தது. அவளுடைய உடம்பையும், மனத்தையும், ஆத்மாவையுமே இந்த ஆவல் கவர்ந்து கொண்டது. அந்த இராஜகுமாரனை உடனே பார்க்க வேண்டுமென்று அவளுடைய தேகத்தின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. அவனைத் தான் நேரில் பார்த்துப் பேசினால் அவனுடைய மனத்தை ஒரு வேளை மாற்றித் தன் தந்தையின் கீழ் சிற்றரசனாயிருக்கச் சம்மதிக்கும்படி செய்யலாம் என்ற ஆசை உள்ளத்தின் ஒரு மூலையில் கிடந்தது.
குந்தவி அக்கணமே தன் தந்தையைப் பார்க்க விரும்பினாள். விக்கிரமனுடைய விசாரணை முடிந்ததும் சக்கரவர்த்தி குதிரை மீதேறி எங்கேயோ போய்விட்டார் என்றும், போன இடந்தெரியாது என்றும் தெரிய வந்தபோது அவளுக்குப் பெரிதும் ஏமாற்றமுண்டாயிற்று. சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு அரண்மனை அதிகாரியை அழைத்து, "உதயவர்மரே, மல்லைத் துறைமுகத்துக்கு நான் உடனே போக வேண்டும்! என் தாயாரின் நவரத்தின மாலையைக் காணவில்லை. மாமல்லபுரத்து அரண்மனையில் போட்டுவிட்டு வந்து விட்டேன் போலிருக்கிறது. நானே போய்தான் தேடி எடுக்க வேண்டும்" என்றாள்.
உதயவர்மர் சற்றுத் தயங்கி "சக்கரவர்த்தி வந்தவுடன் போகலாமே!" என்றதும் குந்தவிக்கு வந்த கடுங் கோபத்தைக் கண்டு அவர் மிரண்டு விட்டார். குந்தவி தேவியின் கட்டளைக்கு மறுமொழி சொல்லும் வழக்கம் இதுவரை இல்லையாதலால், மாமல்லபுரத்துக்கு அவ்வளவு அவசரமாகவும் தனியாகவும் அவள் போகும் யோசனை ஆச்சரியம் அளித்தாலும் அரண்மனை அதிகாரி உடனே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.
சற்று நேரத்துக்கெல்லாம் குந்தவி பரிவாரங்களுடன் பல்லக்கில் மாமல்லபுரத்துக்குப் பிரயாணமானாள். இதுவரையும் இல்லாத வழக்கமாக விரைந்து செல்லுமாறு ஆக்ஞாபித்தாள். கடைசியாக மாமல்லபுரத்தை அடைந்ததும், விக்கிரமனை ஏற்றிக் கொண்ட கப்பலானது துறைமுகத்திலிருந்து அப்போதுதான் பாய் விரித்துக் கிளம்பிக் கொண்டிருந்தது என்று தெரிய வந்தது.
குந்தவியின் பல்லக்கு கடற்கரையை அடைந்த போது அவளுடைய கண் முன்னால் தோன்றிய காட்சி இருதயத்தைப் பிளப்பதாயிருந்தது. சிங்கக் கொடி பறந்த பாய் விரித்த கப்பல் கிளம்பிக் கடலோரமாகப் போய்க் கொண்டிருந்தது. அதில் நேற்று அவள் வீதியில் பார்த்த இராஜகுமாரன் கயிற்றினால் பிணிப்புண்ட கைகளைக் கூப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தான். அச்சமயம் அவனுடைய பார்வை கரைமீதுதான் இருந்தது.
அவ்வளவு பக்தி விசுவாசத்துடன் யாரைப் பார்க்கிறான் என்று குந்தவி தெரிந்து கொள்ள விரும்பி, கரையில் அவனுடைய பார்வை சென்ற திசையை நோக்கினாள். ஜடாமுடி தரித்த கம்பீரத் தோற்றமுடைய சிவனடியார் ஒருவர் அங்கே நின்று கொண்டிருந்தார். அவர் தமது வலது கரத்தைத் தூக்கி விக்கிரமனை ஆசீர்வதிக்கும் நிலையில் காணப்பட்டார்.
மறுபடியும் குந்தவி விக்கிரமனை நோக்கினாள். ஒரு கணநேரம் அவனுடைய பார்வை இவள் பக்கம் திரும்புவது போலிருந்தது. "இது நிஜந்தானா? அல்லது பிரமையா?" என்று நிச்சயமாய்த் தெரிவதற்குள்ளே, விக்கிரமன் முகத்தைத் திருப்பிக் கொண்டு மீண்டும் சிவனடியார் இருந்த திசையை நோக்கினான்.
குந்தவிக்கு அப்போது சட்டென்று ஒரு ஞாபகம் வந்தது. சோழ ராஜகுமாரனுக்கு துர்ப்போதனை செய்து அவன் புத்தியைக் கெடுப்பது ஒரு சிவனடியார் என்பதாக நேற்று அப்பா சொல்லவில்லையா? அந்த பொல்லாத சாமியார் இவராகத்தான் இருக்க வேண்டும்! சந்தேகமே இல்லை!
அந்தச் சாமியைக் கையும் மெய்யுமாய்ப் பிடித்து விட வேண்டுமென்னும் எண்ணத்துடன் குந்தவி பல்லக்கை அவரிருந்த திசையை நோக்கி விரைந்து போகும்படி கட்டளையிட்டாள். ஆனால் அடுத்த கணத்திலேயே சிவனடியார் துறைமுகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களுக்குப் பின்னால் மறைந்து மாயமாய்ப் போய்விட்டார்! குந்தவி எவ்வளவோ தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்குள்ளாக விக்கிரமன் இருந்த கப்பலும் கடலில் வெகுதூரம் போய்விட்டது.
பொன்னி ஆற்றின் வெள்ளத்தின் மீது மற்றொரு நாள் பாலசூரியனின் பொற் கிரணங்கள் படிய, நதிப் பிரவாகமானது தங்கம் உருகி வெள்ளமாய்ப் பெருகுவது போலக் காட்சி தந்தது. அந்த பிரவாகத்தைக் குறுக்கே கிழித்துக் கொண்டும், வைரம், வைடூரியம் முதலிய நவரத்தினங்களை வாரித் தெளித்துக் கொண்டும், பொன்னனுடைய படகு தோணித் துறையிலிருந்து கிளம்பி வசந்த மாளிகையை நோக்கிச் செல்லலாயிற்று. படகில் ஜடா மகுடதாரியான சிவனடியார் வீற்றிருந்தார். கரையில் பொன்னனுடைய மனைவி நின்று, படகு போகும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நதியில் படகு போய்க் கொண்டிருந்தபோது, பொன்னனுக்கும் சிவனடியாருக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது.
"பொன்னா! கடைசியில் இளவரசருடன் எவ்வளவு பேர்தான் ஓர்ந்தார்கள்?" என்று சிவனடியார் கேட்டார்.
"அந்த அவமானத்தை ஏன் கேட்கிறீர்கள், சுவாமி! ஆகா! அந்தக் கடைசி நேரத்தில் மகாராணிக்குச் செய்தி சொல்லும்படி மட்டும் இளவரசர் எனக்குக் கட்டளையிடாமற் போயிருந்தால்...."
"என்ன செய்து விட்டிருப்பாய், பொன்னா? பல்லவ சைன்யத்தை நீ ஒருவனாகவே துவம்சம் செய்திருப்பாயோ?"
"ஆமாம், ஆமாம் நீங்கள் என்னைப் பரிகாசம் செய்ய வேண்டியதுதான். நானும் கேட்டுக் கொள்ள வேண்டியது தான். இந்த உயிரை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறனேல்லவா? ஆனால், சுவாமி! என்னத்துக்காக நான் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? மகாராணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு உடம்பைச் சுமக்கிறேன்..."
"மகாராணியின் வார்த்தைக்காக மட்டுந்தானா பொன்னா? நன்றாக யோசித்துப் பார், வள்ளிக்காகக் கொஞ்சங்கூட இல்லையா?"
"வள்ளி அப்படிப்பட்டவள் இல்லை, சுவாமி! எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைக்கிறவள் அவள் இல்லை. வீரபத்திர ஆச்சாரியின் பேத்தி அல்லவா வள்ளி? ஆகா! அந்தக் கிழவனின் வீரத்தைத்தான் என்னவென்று சொல்வேன்?"
"வீரபத்திர ஆச்சாரி இதில் எப்படி வந்து சேர்ந்தான் பொன்னா?"
"கிழவனார் சண்டை போடும் உத்தேசத்துடனேயே வரவில்லை. என்ன நடக்கிறதென்று தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தச் சமயத்தில் இளவரசர் அநாதைபோல் நிற்பதைப் பார்த்ததும் அவருக்கு ஆவேசம் வந்துவிட்டது. இளவரசருடைய கட்சியில் நின்று போரிடுவதற்கு ஆயிரம் பதினாயிரம் வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். உண்மையில் வந்து சேர்ந்தவர்கள் என்னைத் தவிர ஐந்தே பேர்தான். அவர்கள் கிராமங்களிலிருந்து வந்த குடியானவர்கள் திடீரென்று நாலாபுறத்திலிருந்தும் வீரகோஷத்துடன் வந்த பல்லவ வீரர்களைப் பார்த்ததும், அந்தக் குடியானவர்கள் கையிலிருந்த கத்திகளைக் கீழே போட்டுவிட்டுத் திகைத்துப் போய் நின்றார்கள். இதையெல்லாம் பார்த்தார் வீரபத்திர ஆச்சாரி. ஒரு பெரிய கர்ஜனை செய்து கொண்டு கண்மூடித் திறக்கும் நேரத்தில் இளவரசர் நின்ற இடத்துக்கு வந்துவிட்டார். கீழே கிடந்த கத்திகளில் ஒன்றை எடுத்துச் சுழற்றத் தொடங்கினார். 'வீரவேல்! வெற்றி வேல்! விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!' என்று அவர் போட்ட சத்தம் நெடுந்தூரத்திற்கு எதிரொலி செய்தது. அடுத்த கணத்தில் பல்லவ வீரர்கள் வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆகா! அப்போது நடந்த ஆச்சரியத்தை நான் என்னவென்று சொல்வேன், சுவாமி? கிழவனாரின் கைகளில்தான் அவ்வளவு பலம் எப்படி வந்ததோ? தெரியவில்லை! கொல்லுப் பட்டறையில் சம்மட்டி அடித்த கையல்லவா? வாளை வீசிக் கொண்டு இடசாரி வலசாரியாகச் சுற்றிச் சுற்றி வந்தார். தொப்புத் தொப்பென்று பல்லவ வீரர்கள் மண்மேல் சாய்ந்தார்கள். ஏழெட்டு வீரர்களை யமலோகத்துக்கு அனுப்பி விட்டுக் கடைசியாக அவரும் விழுந்து விட்டார். இதையெல்லாம் தூரத்தில் நின்று தளபதி அச்சுதவர்மர் பார்த்துக் கொண்டிருந்தாராம். கிழவனாரின் வீரத்தைக் கண்டு அவர் பிரமித்துப் போய் விட்டாராம். அதனாலேதான் அந்தத் தீரக் கிழவருடைய உடலைச் சகல மரியாதைகளுடன் எடுத்துப் போய்த் தகனம் செய்யும்படியாகக் கட்டளையிட்டாராம்."
"அதில் ஆச்சரியம் என்ன பொன்னா! வள்ளியின் பாட்டனுடைய வீர மரணத்தைக் கேட்டு உலக வாழ்க்கையை வெறுத்த எனக்குக்கூட உடம்பு சிலிர்க்கிறது. ஒரு தேசமானது எவ்வளவுதான் எல்லா விதங்களிலும் தாழ்வு அடைந்திருக்கட்டும்; இப்படிப்பட்ட ஒரு வீரபுருஷனுக்குப் பிறப்பளித்திருக்கும்போது, அந்தத் தேசத்துக்கு இன்னும் ஜீவசக்தி இருக்கிறது என்று சொல்வதில் தடை என்ன? சோழநாடு நிச்சயம் மேன்மையடையப் போகிறது என்று நம்பிக்கை எனக்கு இப்போது உண்டாகிறது" என்றார் சிவனடியார்.
சற்றுப் பொறுத்து, "அப்புறம் என்ன நடந்தது?" என்று கேட்டார்.
"அப்புறம் என்ன? இளவரசரும் நானும் கிழவருடைய ஆச்சரியமான பராக்கிரமச் செயலைப் பார்த்துக் கொண்டே திகைத்து நின்றுவிட்டோ ம். அவர் விழுந்ததும் நாங்கள் இருவரும் ஏக காலத்தில் 'ஆகா' என்று கதறிக் கொண்டு அவர் விழுந்த திசையை நோக்கி ஓடினோம். உடனே, இளவரசரை அநேக பல்லவ வீரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். நான் வெறி கொண்டவனைப் போல் என் கையிலிருந்த வாளை வீசிப் போரிட ஆரம்பித்தேன். அப்போது, "நிறுத்து பொன்னா!" என்று இளவரசரின் குரல் கேட்டது. குரல் கேட்ட பக்கம் பார்த்தேன். இளவரசரைச் சங்கிலியால் பிணித்திருந்தார்கள். அவர் 'இனிமேல் சண்டையிடுவதில் பிரயோஜனமில்லை பொன்னா! எனக்காக நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். மகாராணியிடம் போய் நடந்ததைச் சொல்ல வேண்டும். மேற்கொண்டு என்ன நடந்தபோதிலும், என் தந்தையின் பெயருக்கு அவமானம் வரும்படியான காரியம் மட்டும் செய்யமாட்டேன் என்று நான் சபதம் செய்ததாய்த் தெரியப்படுத்த வேண்டும்" என்றார். எனக்குப் பிரமாதமான ஆத்திரம் வந்தது. 'மகாராஜா! உங்களைப் பகைவர்களிடம் விட்டுவிட்டு நான் போகவா?' என்று கத்திக் கொண்டு என் வாளை வீசினேன். பின்பிறமிருந்து என் மண்டையில் பலமான அடி விழுந்தது. உடனே நினைவு தவறிவிட்டது. அப்புறம் காராக்கிரகத்திலேதான் கண்ணை விழித்தேன்."
"ஓகோ! காராக்கிரகத்தில் வேறு இருந்தாயா? அப்புறம் எப்படி விடுதலை கிடைத்தது?"
"மறுநாளே விடுதலை செய்துவிட்டார்கள். இளவரசரைத் தவிர மற்றவர்களையெல்லாம் மன்னித்து விட்டுவிடும்படி மாமல்ல சக்கரவர்த்தியிடமிருந்து கட்டளை வந்ததாம்" என்றான் பொன்னன்.
"சக்கரவர்த்தி எவ்வளவு நல்லவர் பார்த்தாயா பொன்னா? உங்கள் இளவரசர் எதற்காக இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டும்? அதனால் தானே அவரைச் சக்கரவர்த்தி தேசப்பிரஷ்டம் செய்ய நேர்ந்தது" என்றார் சிவனடியார்.
"ஆமாம்; நரசிம்ம சக்கரவர்த்தி ரொம்ப நல்லவர்தான்; பார்த்திப மகாராஜாவும், விக்கிரம இளவரசரும் பொல்லாதவர்கள்!" என்றான் பொன்னன்.
பிறகு, "நான் சக்கரவர்த்தியைப் பார்த்ததேயில்லை. பார்க்க வேண்டுமென்று ரொம்ப ஆசையாயிருக்கிறது. உறையூர்க்கு எப்போதாவது வருவாரா, சுவாமி?" என்றான்.
"ஆமாம்; சீக்கிரத்திலேயே வரப்போகிறார் என்று தான் பிரஸ்தாபம். ஏது பொன்னா! சக்கரவர்த்தியிடம் திடீரென்று உனக்கு அபார பக்தி உண்டாகிவிட்டது போல் தெரிகிறதே! சண்டையில் செத்துப் போகவில்லையென்று கவலைப்பட்டாயே! இப்போது பார்த்தாயா? உயிரோடு இருந்ததனால் தானே உனக்குச் சக்கரவர்த்தியைப் பற்றிய உண்மை தெரிந்து அவரிடம் பக்தி உண்டாயிருக்கிறது!"
"ஆமாம்; சக்கரவர்த்தியிடம் எனக்கு ரொம்ப பக்தி உண்டாகியிருக்கிறது. எனக்கு மட்டுமில்லை; இதோ என்னுடைய வேலுக்கும் பக்தி உண்டாகியிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே பொன்னன் படகில் அடியில் கிடந்த வேலை ஒரு கையால் எடுத்தான்.
"இந்த வேலுக்குச் சக்கரவர்த்தியிடம் சொல்ல முடியாத பக்தி; அவருடைய மார்பை எப்போது தழுவப் போகிறோம் என்று தவம் கிடக்கிறது" என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரின் மார்புக்கு நேரே வேலை நீட்டினான்.
சிவனடியார் முகத்தில் அப்போது புன்சிரிப்புத் தவழ்ந்தது. "பொன்னா! நான்தான் சக்கரவர்த்தி என்று எண்ணிவிட்டாயா, என்ன?" என்றார்.
பொன்னன் வேலைக் கீழே போட்டான்.
"சுவாமி! சக்கரவர்த்தி எவ்வளவுதான் நல்லவராயிருக்கட்டும்; மகா வீரராயிருக்கட்டும்; தெய்வாம்சம் உடையவராகவே இருக்கட்டும் அவர் எனக்குப் பரம சத்துரு! ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவரை நான் நேருக்கு நேர் காண்பேன் அப்போது...." என்று பொன்னன் பல்லை நெற நெறவென்று கடித்தான்.
சிவனடியார் பேச்சை மாற்ற விரும்பியவராய்" ஏன் பொன்னா! அன்றைய தினம் மாரப்ப பூபதி உங்களுக்கு அருகில் வரவேயில்லையா?" என்று கேட்டார்.
"அந்தச் சண்டாளன் பேச்சை ஏன் எடுக்கிறீர்கள்? அவன் இளவரசரையும் தூண்டி விட்டுவிட்டு, அச்சுதவர்மரிடம் போய்ச் சகல விவரங்களையும் தெரிவித்து விட்டான். அப்படிப்பட்ட துரோகி அன்றைக்கு ஏன் கிட்ட வரப்போகிறான்? ஆனால் சுவாமி! அவனுடைய வஞ்சகப் பேச்சில் நாங்கள் எல்லாருமே ஏமாந்துவிட்டோ ம். வள்ளி ஒருத்தி மட்டும், "பூபதி பொல்லாத வஞ்சகன்; அவனை நம்பக் கூடாது" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொன்னதுதான் கடைசியில் சரியாப் போச்சு" என்றான் பொன்னன்.
"வள்ளி ரொம்பவும் புத்திசாலி. பொன்னா! சந்தேகமேயில்லை, அவள் ஒரு பெரிய தளதிபதியின் மனைவியாகயிருக்கத் தகுந்தவள்..."
"என்ன சொன்னீர்கள், சுவாமி!"
"வள்ளி ஒரு பெரிய சேனாதிபதியின் மனைவியாயிருக்கத் தகுந்தவள் என்றேன்."
"நீங்கள் சொன்ன இதே வார்த்தையை இதற்கு முன்னாலும் ஒருவன் சொன்னதுண்டு."
"யார் அது?"
"மாரப்ப பூபதிதான்; அவன் சோழ சேனாதிபதியாயிருந்த காலத்தில் அப்படிச் சொன்னான்."
"ஓகோ!"
"எனக்கு ஒவ்வொரு சமயம் என்ன தோன்றுகிறது தெரியுமா? தாங்கள் கோபித்துக் கொள்ளாமலிருந்தால் சொல்லுகிறேன்."
"தாராளமாய்ச் சொல்லு; பொன்னா! நான் சந்நியாசி; ஐம்புலன்களையும் அடக்கிக் காமக் குரோதங்களை வென்றவன்."
"நீங்கள் கூட மாரப்ப பூபதியின் ஆளோ, அவனுடைய தூண்டுதலினால் தான் இப்படி வேஷம் போட்டுக் கொண்டு வஞ்சகம் செய்கிறீர்களோ - என்று தோன்றுகிறது."
சிவனடியார் கலகலவென்று சிரித்துவிட்டு, "இதைப் பற்றி வள்ளியின் அபிப்ராயம் என்ன என்று அவளை எப்போதாவது கேட்டாயா?" என்றார்.
"வள்ளிக்கு உங்களிடம் ஒரே பக்தி. 'நயவஞ்சகனை நம்பி மோசம் போவாய், உத்தம புருஷரைச் சந்தேகிப்பாய்!' என்று என்னை ஏசுகிறாள். மாரப்ப பூபதி இப்படிப்பட்ட பாதகன் என்று தெரிந்த பிறகு அவளுடைய கை ஓங்கிவிட்டது. என்னைப் பரிகாசம் பண்ணிக் கொண்டேயிருக்கிறாள்."
"நான்தான் சொன்னேனே பொன்னா, வள்ளி புத்திசாலி என்று அவள் புத்திமதியை எப்போதும் கேளு. வள்ளி தளபதியின் மனைவியாயிருக்கத் தகுந்தவள் என்று நான் சொன்னது மாரப்ப பூபதி சொன்ன மாதிரி அல்ல; நீயும் தளபதியாகத் தகுந்தவன்தான்!"
"ஆமாம் யார் கண்டது? விக்கிரம மகாராஜா சோழ நாட்டின் சிம்மாசனம் ஏறும்போது, ஒரு வேளை நான் தளபதியானாலும் ஆவேன்."
"இரண்டும் நடக்கக் கூடியதுதான்."
"ஆகா! இந்தப் பெரிய பாரத பூமியில் எங்கள் இளவரசருக்கு இருக்க இடமில்லையென்று கப்பலில் ஏற்றி அனுப்பிவிட்டாரே, சக்கரவர்த்தி! அவருடைய நெஞ்சு எப்படிப்பட்ட கல் நெஞ்சு! அதைக் காட்டிலும் ஒரே அடியாக உயிரை வாங்கியிருந்தாலும் பாதகமில்லை...."
"நீ சொல்வது தவறு பொன்னா! உயிர் உள்ளவரையில் எப்படியும் நம்பிக்கைக்கும் இடமுண்டு. ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நம்முடைய மனோரதங்கள் நிறைவேறும். நீ வேணுமானால் மகாராணியைக் கேட்டுப் பார். மகன் இந்த மட்டும் உயிரோடு இருக்கிறானே என்று மகாராணிக்குச் சந்தோஷமாய்த்தானிருக்கும்....அதோ மகாராணி போலிருக்கிறதே!" என்று சிவனடியார் வியப்புடன் சொன்னார்.
அப்போது படகு வசந்த மாளிகைத் தீவின் கரைக்குச் சமீபமாக வந்து கொண்டிருந்தது. கரையில் அருள்மொழித் தேவியும் ஒரு தாதியும் வந்து தோணித் துறையின் அருகில் நின்றார்கள். அருள்மொழித் தேவி படகிலிருந்த சிவனடியாரை நோக்கிப் பயபக்தியுடன் கை கூப்பிக் கொண்டு நிற்பதைப் பொன்னன் பார்த்தான். உடனே சிவனடியாரை நோக்கி, "சுவாமி! ஏதோ நான் தெரியாத்தனமாக உளறிவிட்டேன்; அதையெல்லாம் மன்னிக்க வேண்டும்" என்று உண்மையான பச்சாதாபத்துடனும் பக்தியுடனும் கூறினான்.
சிவனடியார் படகிலிருந்து இறங்கியதும் அருள்மொழி அவரை நமஸ்கரித்து விட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் நீர் ததும்பிற்று.
"சுவாமி! விக்கிரமன் எங்கே?" என்று சோகம் நிறைந்த குரலில் அவள் கதறி விம்மியபோது, சிவனடியாருக்கு மெய்சிலிர்த்தது. பொன்னன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். மரங்களின் மீதிருந்த பறவை இனங்களும் அந்தச் சோகக் குரலைக் கேட்கச் சகிக்காதவை போல் சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்து சென்றன.
"அருள்மொழி! இது என்ன பைத்தியம்? உன்னுடைய பதி உனக்கு என்ன சொல்லிவிட்டுப் போனார்? நீ வீரத்தாயாக இருக்க வேண்டுமென்று அவர் சொன்ன கடைசி வார்த்தையை மறந்துவிட்டாயா? இப்படியும் தைரியத்தை இழக்கலாமா? வா, அரண்மனைக்குப் போய்ச் சாவகாசமாகப் பேசலாம்" என்றார் சிவனடியார்.
மாஞ்சோலைகளுக்கிடையே அமைந்திருந்த அழகிய பாறை வழியாக எல்லாரும் வசந்த மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். ஒரு காலத்தில் எவ்வளவு குதூகலமும் கொண்டாட்டமுமாகயிருந்த வசந்த மாளிகை இப்போது பொலிவிழந்து சூனியமாகக் காணப்பட்டது. அரண்மனை ஊழியர்களின் முகங்களும் கலையின்றிச் சோகம் நிறைந்து தோன்றின.
மாளிகை முன் மண்டபத்திலே புலித்தோல் விரித்திருந்த உயரமான பீடத்தில் சிவனடியார் அமர்ந்தார். அருள் மொழி கீழே வெறுந் தரையில் உட்கார்ந்தாள்.
"அம்மா! உன் மனத்தைக் கலங்க விடக் கூடாது" என்று சிவனடியார் ஆரம்பித்தபோது, அருள்மொழி அவரைத் தடுத்து துக்கம் பொங்கும் குரலில் கூறினாள்:
"ஐயோ! மனத்தைக் கலங்கவிடக் கூடாது என்கிறீர்களே? மனத்தைத்தான் நான் கல்லாகச் செய்து கொண்டு விட்டேனே? என் தேகமல்லவா கலங்குகிறது? குழந்தையை நினைத்தால் வயிறு பகீரென்கிறதே! குடல் எல்லாம் நோகிறதே! நெஞ்சை இறுக்கிப் பிழிவது போல் இருக்கிறதே! நான் என்ன செய்வேன்? - சுவாமி! விக்கிரமனைக் காப்பாற்றுகிறேன் என்று வாக்குக் கொடுத்தீர்களே, அந்த வாக்கை நிறைவேற்றினீர்களா?"
"ஏன் நிறைவேற்றவில்லை அருள்மொழி. நிறைவேற்றித்தான் இருக்கிறேன். விக்கிரமனுடைய உயிரைக் காப்பாற்றித் தருகிறேன் என்று உனக்கு வாக்குக் கொடுத்தேன். அவனுடைய உயிரைக் காப்பாற்றித்தான் இருக்கிறேன். விக்கிரமனை வீரமகனாகச் செய்வதாக அவனுடைய தந்தைக்கு வாக்களித்திருந்தேன். அதையும் நிறைவேற்றியே இருக்கிறேன். அம்மா! நீ மட்டும் அன்று காஞ்சியில் பல்லவ சக்கரவர்த்தியின் நீதி சபையில் இருந்திருந்தாயானால், உடல் பூரித்திருப்பாய்! பொய்யாமொழிப் பெருமான்,
"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"
என்று சொன்னது உன் விஷயத்தில் மட்டும் பொய்யாகப் போகுமா? சக்கரவர்த்தி எவ்வளவோ நல்ல வார்த்தை சொன்னார் விக்கிரமனுக்கு. 'பல்லவ சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிக் கப்பங்கட்டிக் கொண்டு வருவதாயிருந்தால் உன்னுடைய துரோகத்தை மன்னித்து சோழ நாட்டுக்கும் பட்டங் கட்டுகிறேன்!' என்றார். விக்கிரமன் அணுவளவாவது மனம் சலிக்க வேண்டுமே? மலையைப்போல் அசையாமல் நின்றான். அதுமட்டுமா? சக்கரவர்த்தியையே தன்னுடன் சண்டைக்கு அழைத்தான். 'நீர் வீரன் என்பது உண்மையானால் என்னுடன் வாட்போர் செய்ய வாரும்; என்னை ஜெயித்து விட்டுப் பிறகு கப்பம் கேளும்' என்றான். அவனுடைய கண்களிலேதான் அப்போது எப்படித் தீப்பொறி பறந்தது? அருள்மொழி! அதைப் பார்க்க நான் கொடுத்து வைத்திருந்தேன்; நீதான் அந்தப் பாக்கியத்தைச் செய்யவில்லை!"
ஆவலினால் விரிந்த கண்களில் கண்ணீர் ததும்ப மேற்கூறிய விவரத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழி கூறினாள்:- "நான் பாக்கியமற்றவள்தான் அதற்கும் சந்தேகமா? பதியைப் போர்க்களத்தில் பலி கொடுத்து விட்டு, இந்த உயிரை வைத்துக் கொண்டிருந்தேன். மகன் தேசப் பிரஷ்டனாகிக் கண் காணாத தேசத்துக்குப் போன பிறகும் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறேன், சுவாமி! பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வரப்போகிறார் என்று சொல்லுகிறார்களே, அது உண்மையா? அப்படி வந்தால் அவர் காலில் விழுந்து 'என்னையும் விக்கிரமனை அனுப்பிய இடத்துக்கே அனுப்பி விடுங்கள்!" என்று வேண்டிக் கொள்ளப் போகிறேன்...."
"என்ன சொன்னாய், அருள்மொழி! அழகுதான்! உன் புருஷனுடைய ஜன்ம சத்ருவின் காலில் விழுந்தா கெஞ்சுவாய்! வீர சொர்க்கத்தில் இருக்கும் பார்த்திப ராஜா இதை அறிந்தால் சந்தோஷப்படுவாரா! யோசித்துப் பார்!"
"ஆமாம், அவர் சந்தோஷப்படமாட்டார்; நானும் அவருடைய சத்ருவிடம் பிச்சைக் கேட்கப் போகமாட்டேன்! ஏதோ ஆத்திரப்பட்டுச் சொல்லி விட்டேன். ஆகா! அவர் தான் என்னவெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினார்? கன்னியாகுமரியிலிருந்து இமய பர்வதம் வரையில் புலிக்கொடி பறக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாரே! அவருடைய பிள்ளைக்கு இந்தப் பெரிய தேசத்தில் இருக்கவும் இடமில்லாமல் போய்விட்டதே...."
"பார்த்திப மகாராஜா வேறொரு மனக்கோட்டையும் கட்டவில்லையா அம்மா? சோழ ராஜ்யம் கடல்களுக்கு அப்பாலுள்ள தேசங்களிலும் பரவ வேண்டுமென்று அவர் ஆசைப்படவில்லையா? இரகசிய சித்திர மண்டபத்தில் அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்"
"ஐயோ! அவருடைய ஆசை இம்மாதிரியா நிறைவேற வேண்டும்? விக்கிரமன் இன்று கடல்களுக்கப்பாலுள்ள இராஜ்யங்களைப் பிடிப்பதற்காகப் படையெடுத்தா போயிருக்கிறான்? எந்த காட்டுமிராண்டித் தீவில் கொண்டு போய் அவனை விட்டிருக்கிறார்களோ? காட்டிலும் மலையிலும் எப்படி அலைந்து கஷ்டப்படுகிறானோ? ஏன் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், சுவாமி?"
"உன்னை நான் ஒரு நாளும் ஏமாற்ற மாட்டேன் அம்மா! உன்னை ஏமாற்றி எனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? உன் மகனுக்கு ஒரு குறையும் வராது என்பது என் நம்பிக்கை. விக்கிரமனுக்கு முன்னால் யாரும் தேசப் பிரஷ்டராகிக் காட்டுக்குப் போனதில்லையா? இராமன் போகவில்லையா? பஞ்சபாண்டவர்கள் போகவில்லையா? விக்கிரமன் கடல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளில் அனுபவிக்கும் கஷ்டங்கள் எல்லாம் அவனுடைய வீர பராக்கிரமங்களை இன்னும் அதிகமாக வளர்க்கும். திரும்பித் தாய் நாட்டுக்கு அவன் வரும்போது...."
"ஐயோ! அவன் வரவேண்டாம், சுவாமி. வரவேண்டாம். தாய்நாட்டில் காலடி வைத்தால் சிரசாக்கினை என்றுதான் சக்கரவர்த்தி விதித்திருக்கிறாரே? எங்கேயாவது கண்காணாத தேசத்திலாவது அவன் உயிரை வைத்துக் கொண்டிருக்கட்டும்; அதுவே போதும்!" என்றாள் அருள்மொழி.
"ஆனால் அப்படி அவன் வராமல் இருக்க முடியாது, அருள்மொழி! என்றைக்காவது ஒரு நாள் அவன் வந்து தான் தீருவான். தாயின் பாசமும் தாய் நாட்டின் பாசமும் அவனைக் கவர்ந்து இழுக்கும். இந்த இரண்டு பாசங்களைக் காட்டிலும் வலிமை பொருந்திய இன்னொரு பாசமும் சேர்ந்திருக்கிறது. உனக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை...." என்று சொல்லிச் சிவனடியார் நிறுத்தினார்.
"என்ன சொல்லுகிறீர்கள், சுவாமி!"
"ஆமாம்; தாயின் அன்பையும் தாய்நாட்டுப் பற்றையும் காட்டிலும் பெரியதொரு சக்தியும் அவனைத் திரும்பவும் இத்தேசத்துக்கு வரும்படி இழுக்கும். அது ஒரு இளம் பெண்ணின் கருவிழிகளிலுள்ள காந்த சக்தி தான். அம்மா! நான் இன்று பற்றை அறுத்த துறவியானாலும் பூர்வாசிரமத்தில் ஸ்திரீ பிரேமையினால் ஏற்படும் இன்ப துன்பங்களை அறிந்தவன்...."
"இது என்ன சுவாமி! நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே? விக்கிரமனுக்கும் ஸ்திரீ பிரேமைக்கும் என்ன சம்பந்தம்?" என்று வியப்புடன் கேட்டாள் அருள்மொழி.
சிவனடியார் புன்னகையுடன் கூறினார்:-
"ஒவ்வொரு தாயும் மகனைப் பற்றி இப்படித்தான் வெகுகாலம் எண்ணிக் கொண்டிருக்கிறாள். கடைசியில் நேருக்கு நேர் உண்மையைக் காணும் போது திடுக்கிடுகிறாள். நீயாவது முன்னாலேயே தெரிந்துகொள், அம்மா! உன் மகன் விக்கிரமன் காஞ்சி நகரின் வீதியில் ஒரு கன்னியைச் சந்தித்தான். அவனைக் குறுக்கும் நெடுக்குமாய்ச் சங்கிலியால் பிணித்துக் குதிரைமீது கூட்டிக்கொண்டு போன போதுதான் அந்தச் சந்திப்பு ஏற்பட்டது. அந்த நிலையிலேயே அந்தப் பெண்ணும் தன்னுடைய உள்ளத்தை அவனுக்குப் பறிகொடுத்து விட்டாள். இது நான் கேட்டும் ஊகித்தும் அறிந்த விஷயம். ஆனால் நேரில் நானே ஒரு அதிசயத்தைப் பார்த்தேன். மாமல்லபுரத்துக் கடற்கரையில் விக்கிரமனை ஏற்றிச் சென்ற கப்பல் கிளம்பக் கரையோரமாய்ச் செல்ல ஆரம்பித்த சமயத்தில், அந்தப் பெண் காஞ்சியிலிருந்து ஓடோ டியும் வந்து சேர்ந்தாள்; மறுபடியும் அவர்களுடைய கண்கள் சந்தித்தன; உள்ளங்கள் பேசிக் கொண்டன; காதலும் கனிவும் ததும்பிய அந்தப் பெண்ணின் விசால நயனங்களை விக்கிரமனால் ஒருநாளும் மறக்க முடியாது. இரவிலும் பகலிலும் விழித்திருக்கும் நிலையிலும் தூக்கத்திலே கனவிலும் அந்தப் பெண்ணின் மதிவதனம் அவன் முன்னால் தோன்றிக் கொண்டுதானிருக்கும். எங்கே இருந்து எந்தத் தொழில் செய்தாலும், எத்தகைய இன்ப துன்பங்களை அனுபவித்தாலும் விக்கிரமன் அந்தப் பெண்ணை மறக்க மாட்டான். என்றைக்காவது ஒருநாள் அவளைப் பார்க்கும் ஆசையுடன் அவன் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தே தீருவான்."
இத்தனை நேரமும் திகைத்து உட்கார்ந்து கொண்டிருந்த அருள்மொழி "ஐயோ! எனக்கு மிஞ்சியிருந்த செல்வமெல்லாம் என் பிள்ளையின் அன்பு ஒன்றுதான், அதற்கும் ஆபத்து வந்துவிட்டதா? அந்தப் பெண் யார் சுவாமி!" என்று தீனக்குரலில் கேட்டாள்.
"பல்லவச் சக்கரவர்த்தியின் மகள் குந்தவி"
"ஆகா! என் பதியினுடைய பரம சத்ருவின் மகளா? சுவாமி! என்னமோ செய்கிறதே! தலையைச் சுற்றுகிறதே!" என்றாள் அருள்மொழி. அடுத்த கணம் தரையில் மூர்ச்சித்து விழுந்தாள்.
ராணி மூர்ச்சித்து விழுந்ததும், சற்று தூரத்தில் நின்ற தாதிமார் அலறிக் கொண்டு ஓடி வந்து அவளைச் சூழ்ந்தனர். சிவனடியார் "நில்லுங்கள்" என்று அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, தமது கமண்டலத்திலிருந்து தண்ணீர் எடுத்து அவளுடைய முகத்தில் தெளித்தார். உடனே மந்திர சக்தியால் எழுந்தது போல், அருள்மொழி கண்விழித்துச் சிவனடியாரைப் பார்த்தாள்.
"சுவாமி! எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?" என்று மெலிவான குரலில் கேட்டாள்.
"உனக்கு ஒன்றுமே நேரவில்லை அம்மா! உன் மகனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவனுக்கு ஒரு குறைவும் நேராது என்றும், நிச்சயம் திரும்பி வருவான் என்றும் சொன்னேன்" என்றார் சிவனடியார்.
அருள்மொழி சற்று சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு, "இல்லை; ஏதோ ரொம்பவும் வேதனை தரும் செய்தி ஒன்றைச் சொன்னீர்கள்!" என்றாள்.
"சக்கரவர்த்தியின் மகளை உன் மகன் பார்க்க நேர்ந்தது என்று கூறினேன். அந்தச் செய்தி உனக்குச் சந்தோஷம் அளிக்குமென்று எண்ணினேன்..."
"ஆமாம் நினைவு வருகிறது, ஆனால் அது சந்தோஷச் செய்தியா? சோழநாட்டின் மிகப்பெரிய விரோதி யாரோ, என்னுடைய பதியின் மரணம் எந்தக் கொடிய சத்துருவினால் ஏற்பட்டதோ, இன்று நான் இவ்விதம் ஆதரவற்ற அநாதையாயிருப்பதற்கு யார் காரணமோ அப்பேர்ப்பட்ட பகைவனுடைய மகளைப் பார்த்தா என் மகன் மயங்கி விட்டான்? விக்கிரமன் உண்மையில் என் வயிற்றில் பிறந்த பிள்ளைதானா....?"
"கொஞ்சம் பொறு அருள்மொழி! அவசரப்பட்டுச் சாபங்கொடுக்காதே!" என்று சிவனடியார் சிறிது கலக்கத்துடன் கூறினார். அவர் மகா புத்திமானாயிருந்தும் அருள்மொழி இவ்வாறு பொங்குவாள் என்பதை எதிர்பார்க்கவில்லையென்று தோன்றியது.
"இதோபார் அம்மா! உன்னுடைய தீராத கோபத்துக்கு ஆளான நரசிம்மவர்மனுடைய மகள் அந்தப் பெண் என்பது உன் மகனுக்குத் தெரியாது. அவர்கள் ஒருவரையொருவர் அருகில் நெருங்கியதும் இல்லை; ஒரு வார்த்தை பேசியதும் இல்லை. தூரத்திலிருந்தே ஒருவரையொருவர் பார்த்ததுதான்! அவர்களுக்குக் கலியாணமே நிச்சயமாகி விட்டது போல் நீ கலக்கமடைய வேண்டாம்!" என்றார் பெரியவர்.
"நல்ல வேளை; என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள். எங்கே அதுவும் அந்தப் பல்லவ சக்கரவர்த்தியின் சூழ்ச்சியோ என்று நினைத்தேன். சுவாமி! விக்கிரமன் எங்கேயாவது கண்காணாத தேசத்தில் உயிர் வாழ்ந்திருக்கட்டும்; பசிக்கு உணவு இல்லாமலும் தாகத்துக்குத் தண்ணீர் இல்லாமலும், கஷ்டப்பட்டாலும் படட்டும்! ஆனால் அவன் திரும்பி வரவும் வேண்டாம்; எங்கள் பரம விரோதியினுடைய மகளின் மாய வலையில் விழவும் வேண்டாம்!"
"உன்னுடைய இருதய அந்தரங்கத்தை நன்றாகச் சோதித்துப் பார், அருள்மொழி! உன் மகன் சக்கரவர்த்தியின் மகளை மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்னும் விருப்பம் லவலேசமும் உனக்கு இல்லையா?"
"அதெல்லாம் அந்தக் காலத்தில் சுவாமி! தங்களிடம் சொல்லுவதற்கு என்ன? வெண்ணாற்றங்கரைப் போருக்கு முன்னால் அந்த மாதிரி ஒரு பைத்தியக்கார ஆசை என் மனத்தில் சில சமயம் தோன்றியதுண்டு. 'அவ்விதம் ஏற்பட்டால் சோழ வம்சத்துக்கும் பல்லவ குலத்துக்கும் உள்ள பகை தீர்ந்துவிடுமே!' என்று நினைத்ததுண்டு. ஆனால், எப்போது என் பிராணநாதர் போர்க்களத்தில் உயிரை இழந்தாரோ, அந்த க்ஷணத்திலேயே அந்த ஆசையை வேருடன் களைந்து எறிந்துவிட்டேன். இவ்வளவு நடந்து விட்ட பிறகு என் மகன் சக்கரவர்த்தியின் மகளைக் கல்யாணம் செய்து கொள்வதைவிட அவன் இறந்துவிட்டான் என்ற செய்தியே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்!"
"அருள்மொழி! நீ அந்தக் குழந்தை குந்தவியைப் பார்த்ததில்லை; அதனால் தான் இப்படியெல்லாம் வெறுப்பாகப் பேசுகிறாய்...."
"தாங்கள் பார்த்திருக்கிறீர்களா, சுவாமி?"
"பார்த்திருக்கிறேன்; நெருங்கிப் பழகியுமிருக்கிறேன். என்னிடம் குந்தவிக்கு ரொம்பவும் பக்தி விசுவாசமுண்டு. அம்மா! சிவஞான இன்பத்தின் சுவை கண்ட எனக்கு இந்தக் காலத்தில் வேறு எதன் மீதும் பற்றுக் கிடையாது. ஆனால் அந்தக் குழந்தையின் பாசம் மட்டும் போக மாட்டேன் என்கிறது. அவளோடு இரண்டு நாள் பழகிவிட்டால் நீயும் அவ்விதந்தான் அவளிடம் பாசம் வைப்பாய்..."
"வேண்டாம்! எனக்கு ஒருவரையும் இனிமேல் பார்க்க வேண்டாம்; பழகவும் வேண்டாம்; இந்த உலகை விட்டுச் சென்று என் பதியை மீண்டும் அடையும் நாளை நான் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன்...."
"அருள்மொழி! ஒரு காலத்தில் என்னை நீ ஒரு வரம் கேட்டு வாங்கிக்கொண்டாய். அதன்படியே உன் மகனுடைய உயிரைக் காப்பாற்றினேன். உன் பதியின் மரணத்தறுவாயில் நான் அளித்த வாக்கையும் காப்பாற்றினேன். இதெல்லாம் உண்மையா, இல்லையா?"
"ஆமாம் உண்மைதான்."
"அதற்கெல்லாம் பிரதியாக இப்போது நான் உன்னிடம் ஒரு வரம் கேட்கப் போகிறேன். அதை நீ தட்டாமல் கொடுக்க வேண்டும்."
"சிவசிவா!" என்று சொல்லிக்கொண்டு அருள்மொழி எழுந்து கைகூப்பி நின்றாள்.
"சுவாமி! இவ்விதம் என்னை அபசாரத்துக்கு உள்ளாக்கலாமா? அடியாளிடம் தாங்கள் வரம் கேட்பதா? எனக்குக் கட்டளையிட வேண்டியவர், தாங்கள்" என்றாள்.
"சரி கட்டளையிடுகிறேன், அதைத் தட்டாமல் நிறைவேற்ற வேண்டும்."
"தங்களுடைய வார்த்தையை நான் தட்டுவேனா? ஒருநாளும் இல்லை."
"அப்படியானால் சொல்லுகிறேன், கேள்! என்றைக்காவது ஒருநாள் சக்கரவர்த்தியின் மகள் குந்தவி உன்னிடம் வருவாள். அவள் தாயில்லாப் பெண், தாயின் அன்பு இன்றி அவளுடைய இருதயம் உலர்ந்து போயிருக்கிறது. அதனால் தான் அம்மா, எனக்குக்கூட அவள்மேல் அவ்வளவு பாசம். அந்தக் குழந்தை உன்னிடம் வரும்போது அவளை நீ நிராகரிக்காதே. அன்புடன் உன் மகளைப் போல் ஏற்றுக் கொள். உன் மனப்புண் ஆறுவதற்கும் அது அனுகூலமாயிருக்கும்!" என்றார் சிவனடியார். அவருடைய கனிவு ததும்பிய குரலும் வார்த்தைகளும் அருள்மொழியின் மனத்தை உருக்கிவிட்டன.
"தங்கள் ஆணைப்படி நடக்க முயற்சி செய்கிறேன். சுவாமி! ஆனாலும் எங்கள் குலத்துக்கே ஜன்ம சத்துருவான ஒருவருடைய மகளிடம் நான் எப்படி அன்பு செலுத்துவது எப்படி....?"
"தந்தை செய்த தீங்குக்காக மகளை வெறுப்பது என்ன நியாயம், அம்மா? மேலும் இன்னொரு விஷயம் சொல்லுகிறேன், கேள். உன் மகனுடைய உயிரைக் காப்பாற்றும் விஷயத்தில் குந்தவிதான் எனக்கு மிகவும் ஒத்தாசையாயிருந்தாள். விக்கிரமனுக்கு மரண தண்டனை நேராமல் தடுப்பதற்கு அவள் எவ்வளவு பிரயத்தனம் செய்தாள் தெரியுமா? இதுநாள் வரையில் தந்தையின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசி அறியாதவள், விக்கிரமனுக்காகச் சக்கரவர்த்தியிடம் எவ்வளவோ சண்டை பிடித்தாள்...."
"அப்படியா சுவாமி? அந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டுமென்று எனக்கும் ஆசை உண்டாகிறது. ஆனால் அவள் எதற்காக இந்த அபாக்கியசாலியைத் தேடிக் கொண்டு வரப்போகிறாள்?"
"இல்லை, அம்மா! இல்லை நீ அபாக்கியசாலி இல்லை. விக்கிரமனைப் போன்ற வீரப் புதல்வனைப் பெற்ற உன்னை அபாக்கியசாலி என்று சொல்ல முடியுமா? குந்தவியும் உன்னைத் தேடிக்கொண்டு வரத்தான் போகிறாள்; சீக்கிரத்திலேயே வருவாள்!" என்றார் சிவனடியார்.
அந்த நாளில் தமிழகத்தில் சைவ சமயமும் வைஷ்ணவ சமயமும் புத்துயிர் பெற்றுத் தளிர்க்கத் தொடங்கியிருந்தன. இவ்விரு சமயங்களிலும் பெரியார்கள் பலர் தோன்றி, திவ்ய ஸ்தல யாத்திரை என்ற விஜயத்தில் தமிழ் நாடெங்கும் யாத்திரை செய்து, பக்திச்சுடர் விளக்கு ஏற்றி, ஞான ஒளியைப் பரப்பி வந்தார்கள். அமுதொழுகும் தமிழில் கவிதா ரஸமும் இசை இன்பமும் ததும்பும் தெய்வீகப் பாடல்களை இயற்றி வந்தார்கள்.
அந்நாளில் தமிழகத்தில் வாழ்ந்து வந்த சைவப் பெரியார்களுக்குள்ளே திருநாவுக்கரசர் இணையற்ற மகிமையுடன் விளங்கினார். மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்திலேயே பிரசித்தி அடைந்து, தமிழகத்தின் போற்றுதலுக்கு உரியவராகிவிட்ட அப்பர் சுவாமிகள் விக்கிரமன் நாடு கடத்தப்பட்டபோது, முதிர்ந்த மூப்பின் காரணமாக அதிகமாய் நடமாடவும் இயலாத தள்ளாமையை அடைந்திருந்தார். அந்தத் தள்ளாத பிராயத்திலும் அவர் ஸ்தல யாத்திரை சென்றிருந்து சமீபத்தில் திரும்பி வந்திருக்கும் செய்தியைக் குந்தவிதேவி அறிந்தாள். அப்பெரியாரைத் தரிசிப்பதற்காகக் காஞ்சியில் பிரசித்தி பெற்று விளங்கிய சைவ மடாலயத்துக்கு ஒருநாள் அவள் சென்றாள்.
முதிர்ந்து கனிந்த சைவப் பழமாக விளங்கிய அப்பர் சுவாமிகள், சக்கரவர்த்தியின் திருமகளை அன்புடன் வரவேற்று ஆசி கூறினார்.
அவரைப் பார்த்துக் குந்தவி, "சுவாமி! இவ்வளவு தள்ளாத நிலைமையில் எதற்காகத் தாங்கள் பிரயாணம் செய்ய வேண்டும்? தாங்கள் தரிசிக்காத ஸ்தலமும் இருக்கிறதா? எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்டாள்.
அதற்கு அப்பர், "குழந்தாய்! தில்லைப்பதி வரையிலே தான் போயிருந்தேன். பொன்னம்பலத்தில் ஆடும் பெருமானை எத்தனை தடவை தரிசித்தால்தான் என்ன? இன்னுமொருமுறை கண்ணாரக் கண்டு இன்புற வேண்டுமென்ற ஆசை உண்டாகத்தான் செய்கிறது. ஆகா! அந்த ஆனந்த நடனத்தின் அற்புதத்தைதான் என்னவென்று வர்ணிப்பேன்! அந்தப் பேரானந்தத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் மீண்டும் மனிதப் பிறவி எடுக்கலாமே!" என்று கூறிவிட்டு, பாதி மூடிய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, பின்வரும் பாசுரத்தைப் பாடினார்:-
"குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!"
பாட்டு முடிந்த பின்னர் அப்பர் சுவாமிகள் சற்று நேரம் மெய்ம்மறந்து பரவச நிலையில் இருந்தார். முன்பெல்லாம் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் குந்தவி பக்தி பரவசமடைந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கியிருப்பாள். ஆனால் இன்றைக்கு அவள் மனம் அவ்வாறு பக்தியில் ஈடுபடவில்லை.
அப்பர் ஒருவாறு சுய உணர்வு அடைந்தபோது குந்தவி அவரை நோக்கி "சுவாமி, சோழ நாட்டில் யாரோ ஒரு சிவனடியார் புதிதாகத் தோன்றி ராஜரீகக் காரியங்களிலெல்லாம் தலையிடுகிறாராமே, தங்களுக்கு அவரைத் தெரியுமா?" என்று வினவினாள்.
அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகவே கேட்ட அப்பெரியார், "என்ன குழந்தாய்! சோழ நாட்டில் தோன்றியிருக்கும் சிவனடியாரைப் பற்றிக் கேட்கிறாயா? ஆகா அவரைப் பார்க்கத்தானே, அம்மா நான் முக்கியமாக யாத்திரை கிளம்பினேன்? நான் அவரைப் பார்க்க வருகிறேன் என்று தெரிந்ததும் அவரே என்னைத் தேடிக் கொண்டு புறப்பட்டார். தில்லைப் பதியிலே நாங்கள் சந்தித்தோம். ஆகா! அந்தப் பிள்ளைக்கு 'ஞானசம்பந்தன்' என்ற பெயர் எவ்வளவு பொருத்தம்! பால் மணம் மாறாத அந்தப் பாலகருக்கு, எப்படித்தான் இவ்வளவு சிவஞானச் செல்வம் சித்தியாயிற்று? என்ன அருள் வாக்கு! அவர் தாய்ப் பால் குடித்து வளர்ந்த பிள்ளை இல்லை, அம்மா! ஞானப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை! - இல்லாவிட்டால் முகத்தில் மீசை முளைப்பதற்குள்ளே இப்படிப்பட்ட தெய்வீகப் பாடல்களையெல்லாம் பொழிய முடியுமா?" என்றெல்லாம் அப்பர் பெருமான் வர்ணித்துக் கொண்டே போனார்.
குந்தவி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். கடைசியில் குறுக்கிட்டு, "சுவாமி! நான் ஒருவரைப் பற்றிக் கேட்கிறேன். தாங்கள் இன்னொருவரைப் பற்றிச் சொல்லுகிறீர்கள். நான் சொல்லும் சிவனடியார், முகத்தில் மீசை முளைக்காதவரல்ல; ஜடா மகுடதாரி; புலித்தோல் போர்த்தவர்" என்றாள்.
"குழந்தாய்! நீ யாரைப்பற்றிக் கேட்கிறாயோ எனக்குத் தெரியாது! ஜடாமகுடத்துடன் புலித்தோல் தரித்த சிவனடியார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்த மடாலயத்தில் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். வேறு ஏதாவது அடையாளம் உண்டானால் சொல்லு!" என்றார் நாவுக்கரசர்.
"நான் சொல்லுகிற சிவனடியார் ராஜரீக விஷயங்களில் எல்லாம் தலையிடுவாராம். என்னுடைய தந்தைக்கு விரோதமாகக் கலகங்களை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறாராம்..."
"என்ன சொன்னாய், அம்மா! அதிசயமாயிருக்கிறதே! அப்படிப்பட்ட சிவனடியார் யாரையும் எனக்குத் தெரியாது. சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இரு கண்களைப் போல் காத்து வளர்த்து வருகிறவராயிற்றே உன் தந்தை! நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் ஆட்சியில் சிவனடியார்கள் எதற்காக ராஜரீகக் காரியங்களில் ஈடுபட வேண்டும்? அதுவும் உன் தந்தைக்கு விரோதமாகக் கலகத்தைக் கிளப்புவதா? வேடிக்கைதான்! அப்படி யாராவது இருந்தால், அவன் சைவனாகவோ, வைஷ்ணவனாகவோ இருக்க மாட்டான். பாஷாண்ட சமயத்தான் யாராவது செய்தால்தான் செய்யலாம்."
"நான் போய் வருகிறேன் சுவாமி!" என்று குந்தவி அவருக்கு நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
பல்லக்கில் ஏறி அரண்மனைக்குப் போகும் போது அவள் பின்வருமாறு எண்ணமிட்டாள்:-
"முதுமை வந்து விட்டால் எவ்வளவு பெரியவர்களாயிருந்தாலும் இப்படி ஆகிவிடுவார்கள் போலிருக்கிறது. பேச ஆரம்பித்தால் நிறுத்தாமல் வளவளவென்று பேசிக் கொண்டே போகிறார்! கேட்டதற்கு மறுமொழி உண்டா என்றால், அதுதான் கிடையாது! எல்லாம் வயதான தோஷந்தான்!"
இளவரசன் விக்கிரமனை ஏற்றிக் கொண்டு கிளம்பிய கப்பல் சீக்கிரத்திலேயே வேகம் அடைந்து கிழக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் மாமல்லபுரக் காட்சிகளும், கோவில் கோபுரங்களும், மரங்களின் உச்சிகளும் மறைந்துவிட்டன. கரை ஓரத்தில் வெண்மையான நுரைகளுடனும் இரைச்சல்களுடனும் எழுந்து விழுந்து கொண்டிருந்த சிற்றலைகள் இப்போது காணப்படவில்லை. கடல் நீர் தூய நீல நிறமாயிருந்தது. அந்த நீல நிறப் பரப்பிலே பெரும் பள்ளங்களும் மேடுகளும் பெரு மூச்சு விட்டுக் கொண்டு மேலே எழும்பியும் கீழே விழுந்தும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தன. அதே சமயத்தில் துயரம் நிறைந்த 'ஹோ' என்ற இடைவிடாத புலம்பல் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது.
இவ்விதம் விக்கிரமன் வெளியே கண்ட காட்சியானது அவனுடைய உள்ளத்தின் நிலைமையைப் பிரதிபலிப்பதாயிருந்தது. கடலின் ஆழத்தில் குடிகொண்டிருக்கும் எல்லையற்ற மோன அமைதியைப் போல் அவனுடைய இருதயத்தின் அடிவாரத்திலும் விவரிக்கவொண்ணாத பரிபூர்ண சாந்தி நிலவிற்று. அதே சமயத்தில் அவனுடைய உள்ளத்தின் மேற்பரப்பில் என்னவெல்லாமோ எண்ணங்கள் அலை அலையாக எழுந்து கொந்தளிப்பை உண்டாக்கின.
பார்த்திப மகாராஜா சோழ நாட்டின் மேன்மையைக் குறித்துத் தாம் கண்ட கனவுகளைப் பற்றிச் சொன்னதெல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தன. கடற்பிரயாணம் செய்ய வேண்டுமென்று இளம்பிராயத்திலிருந்து அவனுடைய மனத்தில் குடி கொண்டிருந்த ஆசையும் நினைவுக்கு வந்தது. அந்த ஆசைதான், அடடா என்ன வினோதமான முறையில் இன்று நிறைவேறுகிறது? புலிக்கொடி கம்பீரமாகப் பறக்கும் பெரிய பெரிய கப்பல்களில் சோழநாட்டு வீரர் படைகளுடன் பிரயாணம் செய்து கடல்களுக்கப்பாலுள்ள தேசங்களிலெல்லாம் வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமென்ற மனோரதத்துக்கும், இன்று பல்லவர்களின் சிங்கக் கொடி பறக்கும் கப்பலில் கையும் காலும் சங்கிலியால் கட்டுண்டு தேசப் பிரஷ்டனாய்ப் பிரயாணம் செய்வதற்கும் எவ்வளவு தூரத்துக்கு எவ்வளவு தூரம்!
இப்படி விக்கிரமன் சிந்தித்துக் கொண்டிருந்த போதே கப்பலின் தலைவன் சில ஆட்களுடன் அங்கு வந்து விக்கிரமனைப் பிணித்திருந்த சங்கிலிகளை எடுக்கச் செய்தான். "இது ஏன்?" என்று விக்கிரமன் வினவ, "சக்கரவர்த்தியின் ஆணை?" என்றான் கப்பல் தலைவன். "என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?" என்று விக்கிரமன் கேட்டதற்கு, "இங்கிருந்து பன்னிரண்டு நாள் பிரயாணத்தில் நடுக்கடலிலே ஒரு தீவு இருக்கிறது. அதன் அருகே தங்களை இறக்கி விட்டுவிட வேண்டுமென்று கட்டளை!" என்று மறுமொழி வந்தது, "அங்கே வசிப்பவர்கள் யார்?" என்று விக்கிரமன் மேலும் கேட்டான். "அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தீவுக்குப் போய்ச் சேரும் வரையில், இந்தக் கப்பலுக்குள்ளே தாங்கள் சுயேச்சையாக எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால் தப்பிச் செல்வதற்கு மட்டும் பிரயத்தனம் செய்யக் கூடாது. செய்தால் மறுபடியும் தலையிடும்படி நேரும்" என்றான் கப்பல் தலைவன்.
விக்கிரமன் கப்பலுக்குள்ளே அங்குமிங்கும் சிறிது நேரம் அலைந்தான். மாலுமிகளுடன் பேச்சுக் கொடுக்கப் பார்த்ததில் ஒன்றும் பிரயோஜனம் ஏற்படவில்லை. அவர்கள் எல்லாரும் விக்கிரமன் சம்பந்தப்பட்டவரை ஊமைகளாகவேயிருந்தனர். பின்னர், கப்பல் மேல் தளத்தின் ஓரமாக அவன் வந்து, வானையும் கடலையும் நோக்கிய வண்ணம் முன்போலவே சிந்தனையில் ஆழ்ந்தான்.
அன்னை அருள்மொழியின் நினைவுதான் எல்லாவற்றிற்கும் முன்னால் நின்றது. அவர் இச்சமயம் என்ன செய்து கொண்டிருப்பார்? என்ன எண்ணிக் கொண்டிருப்பார்? தன்னுடைய முயற்சி நிஷ்பலனாய்ப் போனது பற்றி ஏமாற்றமடைந்திருப்பாரா? பல்லவ சக்கரவர்த்தியின் முன்னிலையிலே தான் சிறிதும் பணிந்து போகாமல் பேசிய வீர வார்த்தைகளைக் கேட்டுப் பெருமையடைந்திருப்பாரா? தன்னுடைய பிரிவைக் குறித்து வருத்தப்படுவாரா? எப்படியும் அவருக்கு ஆறுதல் கூறச் சிவனடியார் போயிருப்பாரல்லவா?
உடனே, சிவனடியாரின் ஞாபகம் வந்தது. கப்பல் கரையை விட்டுக் கிளம்பிய தருணத்தில் அந்தப் பெரியவர் எங்கிருந்தோ வந்து குதித்துத் தமது திருக்கரத்தை நீட்டி ஆசீர்வாதம் செய்தாரே? அவருக்குத்தான் நம்மிடத்தில் எவ்வளவு அன்பு!
சிவனடியாரைப் பற்றி நினைக்கும்போதே மற்றோர் உருவம் விக்கிரமனுடைய மனக்கண் முன் தோன்றியது. அது ஒரு பெண்ணின் உருவம். முதல் நாள் காஞ்சிபுரத்து வீதியில் பார்த்த அந்தப் பெண் மறுநாள் மாமல்லபுரத்துக் கடற்கரைக்கு எப்படி வந்தாள்? அவள் யாராயிருக்கும்? ஆகா அவளுடைய கண்கள்தான் எவ்வளவு நீண்டு படர்ந்திருந்தன? அந்தக் கண்களிலே கண்ணீர் துளித்து நின்ற காரணம் என்ன? தன்னிடத்தில் உள்ள இரக்கத்தினாலா? முன்பின் தெரியாத அந்தப் பெண்ணுக்குத் தன்மேல் இரக்கம் உண்டாவானேன்? இல்லாவிட்டால் தன்னை எதற்காக அவ்வளவு கனிவுடன் பார்க்க வேண்டும்?
இப்படி வெகு நேரம் அவளைப் பற்றியே எண்ணி கொண்டிருந்த விக்கிரமன், சூரியன் மறைந்து நாலுபுறமும் இருள் சூழ்ந்ததைக்கூடக் கவனிக்கவில்லை. தற்செயலாகக் கீழே கடலை நோக்கியபோது விண்மீன்கள் தண்ணீரில் பிரதிபலிப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அத்தனை நேரமும் முன்பின் தெரியாத அந்தப் பெண்ணைப் பற்றியே தான் சிந்தித்துக் கொண்டிருந்ததை நினைத்துச் சிறிது வெட்கமடைந்தான். பிறகு பொன்னனையும், வள்ளியையும் பற்றி எண்ணினான். அவர்களுக்குத் தன் பேரில் எவ்வளவு பிரியம்? இந்த நேரமெல்லாம் அவர்கள் தன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது ஒரு வேளை வள்ளியின் பாட்டனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம். அந்தக் கிழவனுக்குத்தான் என்ன தைரியம்? சோழநாட்டு ஆண் மக்களெல்லாம் அவனைப் போன்ற வீரர்களாயிருக்கக் கூடாதா?
இருட்டி ஒரு ஜாமம் ஆனபோது, நீலக் கடலைச் செம்பொற் கடலாகச் செய்து கொண்டு கீழ்வானத்தில் சந்திரன் உதயமானான். பூரண சந்திரனில்லை; முக்கால் சந்திரன் தான். பார்ப்பதற்கு ஒரு பெரிய பொற்கிண்ணம் கடலிலிருந்து வெளிக்கிளம்புவது போலிருந்தது. முன்னம் பாற்கடலைக் கடைந்தபோது இந்தச் சந்திரனாகிய பொற்கிண்ணத்திலேதான் அமுதம் வந்ததோ, என்னவோ? இன்றும் அப்பொற் கிண்ணத்திலிருந்த நிலவாகிய அமுதம் பொங்கிப் புவனமெல்லாம் பரவியதாகத் தோன்றியது.
இந்த மோகனக் காட்சியை விக்கிரமன் பார்த்தான். கடலிலிருந்து எழும்பிய சந்திர பிம்பத்துடனேகூட அவனுடைய மனக் கண்ணின் முன்னால் அந்தப் பெண்ணின் முகமும் மறுபடி எழுந்தது. இந்த உதயசந்திரனுடைய பொன்னிறந்தான் அவளுடைய முகத்தின் நிறமும்!
"ஆகா! அது என்ன அழகான முகம்!" என்ற எண்ணம் அப்போது விக்கிரமனுக்கு முதன் முதலாகத் தோன்றியது. அந்தப் பொன் முகத்தின் அழகை அதைக் கவிந்திருந்த கருங்கூந்தல் எவ்வளவு நன்றாய் எடுத்துக் காட்டிற்று! ஆம்; நிகரில்லாத சௌந்தரியம் வாய்ந்தவள் அந்தப் பெண். சித்திரத்திலும் சிலையிலும் கூட அத்தகைய திவ்ய சௌந்தரியத்தைக் காண்பது அரிதுதான். அவள் யாராயிருக்கும்?
பன்னிரண்டு தினங்கள் சென்றன. அடிக்கடி குந்தவியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த விக்கிரமனுக்கு இந்தப் பன்னிரண்டு தினங்கள் போனதே தெரியவில்லை. பதின்மூன்றாம் நாள் பொழுது விடிந்தபோது சூரியோதயமான திசையில் விக்கிரமன் கண்ட காட்சி அவனை ஆச்சரியக் கடலில் மூழ்கடித்தது. ஏனெனில் வழக்கம் போல் சூரியன் சமுத்திரத்திலிருந்து கிளம்பி ஜோதிப் பிழம்பாய் மேலே வருவதற்குப் பதிலாக, பச்சை மரங்களுக்குப் பின்னால் உதயமாகி மேலே ஒளிக்கிரணங்களைப் பரப்பினான். இந்த அபூர்வக் காட்சியைப் பார்த்துக் கொண்டு விக்கிரமன் நிற்கும்போதே கப்பல் தலைவன் அவனை நெருங்கி, 'இளவரசே! அதோ தெரிகிறதே, அந்தத் தீவின் அருகில்தான் தங்களை விட்டுவிடும்படி எங்களுக்குக் கட்டளை. தங்களுக்கு நீந்தத் தெரியுமல்லவா?" என்றான்.
"கரைக்கு எவ்வளவு தூரத்தில் விடுவீர்கள்?"
"ரொம்ப தூரத்தில் விடமாட்டோ ம். ஒத்தாசைக்கு ஒரு மரக்கட்டையும் போடுவோம்"
"நான் இறங்க மாட்டேன் என்றால் என்ன செய்வீர்கள்?"
"மரக்கட்டையில் கட்டி மிதக்க விட்டு விடும்படி கட்டளை, தங்களுடைய விருப்பம் என்ன?"
"நானே இறங்கி விடுகிறேன்" என்றான் விக்கிரமன்.
அவ்வாறே கப்பல் இன்னும் சிறிது கரையை நெருங்கியதும், விக்கிரமனைக் கடலில் இறக்கிவிட்டு ஒரு மரக்கட்டையையும் போட்டார்கள். விக்கிரமன் அதைப் பிடித்துக் கொண்டு அதிக நேரம் நீந்தியும், சிறிது நேரம் அதன் மேல் உட்கார்ந்து மிதந்தும், கரையை நோக்கிச் சென்றான். கரையை நெருங்க, நெருங்க தூரத்தில் கப்பலிலிருந்து பார்த்தபோது எறும்புக் கூட்டம் மாதிரி காணப்பட்டது உண்மையில் மனிதர்கள் கூட்டமே என்று தெரிய வந்தது.
அந்த மனிதர்கள் யார்? எதற்காகக் கடற்கரையில் வந்து கூடியிருக்கிறார்கள்? அவர்கள் என்ன பாஷை பேசுவார்கள்? சக்கரவர்த்தி தன்னை இந்தத் தீவில் விட்டு வரச் சொன்னதின் நோக்கம் என்ன? இப்படிப் பற்பல எண்ணங்கள் விக்கிரமனுடைய மனத்தில் அலை அலையாக எழுந்தன.
விக்கிரமன் கரையை நெருங்க நெருங்க, கடல் அலைகளின் ஓசையையும் அடக்கிக்கொண்டு பலவித வாத்தியங்களின் ஒலி முழங்குவதைக் கேட்டான். சங்கு, தாரை, எக்காளம், பேரிகை ஆகியவை ஏக காலத்தில் முழங்கி வான முகடு வரையில் பரவி எதிரொலி செய்தன. இவ்வளவு சத்தங்களுக்கிடையில் மாந்தர்களின் குரலில் கிளம்பிய கோஷம் ஒன்று விக்கிரமனுக்கு மயிர்க்கூச்சல் உண்டாக்கிற்று. "வீரவேல்! வெற்றிவேல்!" என்னும் கோஷம்தான் அது.
அந்தத் தீவில் வாழும் மனிதர்கள் என்ன ஜாதி, யாரோ, எப்படிப்பட்டவர்களோ என்ன பாஷை பேசுபவர்களோ, ஒருவேளை நரமாமிச பட்சணிகளாய்க்கூட இருக்கலாமல்லவா? - என்று இவ்விதமெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த விக்கிரமனுக்கு அங்கு எழுந்த "வீரவேல், வெற்றிவேல்!" என்னும் சோழ நாட்டின் வீரத் தமிழ் முழக்கமானது அளவிலாத வியப்பையும் மகிழ்ச்சியையும் ஊட்டிற்று.
"இது என்ன அதிசயத் தீவு? இங்கே சோழ நாட்டுத் தமிழரின் முழக்கம் கேட்கும் காரணம் என்ன? எதற்காக இவ்வளவு ஜனக்கூட்டம் இங்கே கூடியிருக்கிறது?" - இம்மாதிரி எண்ணங்கள் முன்னைக் காட்டிலும் அதி விரைவாக விக்கிரமனுடைய உள்ளத்தை அலைத்தன. அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. திடீரென்று உடம்பில் வெலவெலப்பு உண்டாயிற்று. மரக்கட்டை பிடியினின்று நழுவிற்று. தலை சுழலத் தொடங்கியது. கண் பார்வை குன்றியது. அதே சமயத்தில் ஒரு பிரம்மாண்டமான அலை வந்து விக்கிரமன்மீது பலமாக மோதியது.
விக்கிரமனுக்கு அந்த நிமிஷத்தில் கடலிலுள்ள நீர் அவ்வளவும் புரண்டு வந்து தன்மீது மோதுவதாகத் தோன்றிற்று. ஒரு கணம் மூச்சுத் திணறிற்று. "நமது வாழ்நாள் முடிந்து விட்டது" என்று நினைத்தான் விக்கிரமன். பார்த்திப மகாராஜாவுக்கு அவன் அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அன்னை அருள்மொழித் தேவியின் கருணை முகமும், சிவனடியாரின் கம்பீரத் தோற்றமும், கடைசியாக விரிந்து படர்ந்த கண்களுடன் கூடிய அந்தப் பெண்ணின் மதிவதனமும் ஒன்றன்பின் ஒன்றாகவும் மின்னலைக் காட்டிலும் விரைவாகவும் தோன்றி மறைந்தன. பிறகு அவனுடைய அறிவை ஒரு மகா அந்தகாரம் வந்து மூடிவிட்டது.
விக்கிரமனுக்கு மறுபடியும் பிரக்ஞை வந்தபோது தான் மணல் தரையில் கிடப்பதாக அவனுக்கு உணர்ச்சி உண்டாயிற்று. கண்கள் மூடியபடி இருந்தன. கடல் அலைகளின் 'ஓ' என்ற ஓசை காதில் கேட்டுக் கொண்டிருந்தது. நெற்றியில் யாரோ திருநீறு இடுவது போல் தோன்றியது. மெதுவாகக் கண்ணை விழித்துப் பார்த்தான். சுற்றிலும் ஜனக் கூட்டம் நெருங்கி நிற்பது தெரிந்தது. ஒரு நொடிப் போதில் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. அவன் கரையை நெருங்கியபோது அந்த ஜனக் கூட்டத்திலிருந்து கிளம்பிய வாத்திய முழக்கங்களும் வாழ்த்தொலிகளும் இப்போது கேட்கவில்லை. இதற்கு மாறாக அசாதாரணமான நிசப்தம் குடி கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். கொஞ்ச தூரத்தில் எங்கேயோ மாஞ்சோலையில் குயில் ஒன்று 'குக்கூ' 'குக்கூ' என்று கூவிற்று.
அந்தக் குயிலின் இனிய குரல் அங்கே குடிகொண்டிருந்த நிசப்தத்தை அதிகமாய் எடுத்துக் காட்டிற்று. கரையை நெருங்கியபோது தனக்கு நேர்ந்த விபத்தின் காரணமாகவே அங்கே கூடியிருந்த ஜனங்கள் அவ்வளவு கவலையுடன் நிசப்தமாயிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டான். ஒரு பெரும் பிரயத்தனம் செய்து உடம்பை உதறிக்கொண்டு ஒரு குதி குதித்து எழுந்து நின்றான். அவ்வளவுதான், அந்த ஜனக் கூட்டத்திலிருந்து ஒரு மகத்தான ஆனந்த கோஷம் கிளம்பிற்று. வாத்திய முழக்கங்களுடன்கூட, மனிதர்களின் கண்டங்களிலிருந்து எழுந்த வாழ்த்தொலிகள் போட்டியிட்டு ஆகாயத்தை அளாவின.
இவ்வளவு சத்தங்களுக்கும் மத்தியில் விக்கிரமனுக்கு அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் நின்ற ஒரு பெரிய மனிதர், "விலகுங்கள்! விலகுங்கள்! கஜராஜனுக்கு வழிவிடுங்கள்!" என்று கூவினார். கொஞ்சம் கூர்ந்து கவனித்தோமானால் இந்த மனிதரை நாம் முன்னமே பார்த்திருக்கிறோம் என்பது நினைவு வரும். ஆமாம்; மாமல்லபுரத்தில் நடந்த கலைத் திருநாளின்போது நரசிம்ம சக்கரவர்த்தியின் சமூகத்தில் செண்பகத் தீவு வாசிகளின் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த தூதர் தான் இவர்!
"விலகுங்கள்" என்ற அவருடைய குரலைக் கேட்டுச் சுற்றிலும் நின்ற ஜனங்கள் விரைவாக விலகிக் கொண்டார்கள். சற்றுத் தூரத்தில் பட்டத்து யானையைப்போல் அலங்கரித்த ஒரு யானை நின்றது. அதை யானைப்பாகன் நடத்திக் கொண்டு விக்கிரமன் நின்ற இடத்தை நோக்கி வந்தான். பட்டணப் பிரவேசத்துக்காக அலங்கரிக்கப்பட்டது போலக் காணப்பட்ட அந்த கஜராஜனுடைய தூக்கிய துதிக்கையில் ஓர் அழகான புஷ்பஹாரம் இருந்தது. விக்கிரமன் மந்திர சக்தியினால் கட்டுண்டவனைப் போல் யானையைப் பார்த்த படி கையைக் கட்டிக் கொண்டு அசையாமல் நின்றான். யானை மிகவும் சமீபத்தில் நெருங்கி வந்தபோது விக்கிரமனுடைய சிரம் அவனை அறியாமலே சிறிது வணங்கியது. யானை தன் துதிக்கையில் ஏந்தி வந்த மாலையை அவனுடைய கழுத்தில் சூட்டிற்று.
அப்போது அந்த ஜனக்கூட்டத்தில் ஏற்பட்ட ஆரவாரத்தையும் முழக்கத்தையும் வர்ணித்தல் அசாத்தியமான காரியம். "வீரவேல்!" "வெற்றிவேல்!" என்னும் கோஷங்களுடன், "விக்கிரம சோழ மகாராஜா வாழ்க!" "செண்பக நாட்டு மன்னர்பிரான் வாழ்க!" என்னும் கோஷங்களையும் கேட்டு, விக்கிரமனுடைய உள்ளம் பெருங்கிளர்ச்சியடைந்தது. மகா ஆச்சரியம் விளைவித்த இந்தச் சம்பவங்களைப் பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டுமென்று அவனுக்குத் துடிப்பாயிருந்தது. ஆனால் அருகில் நின்றவர்களிடம் பேசுவதற்குக் கூட அச்சமயம் அவனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை.
ஏக ஆரவாரங்களுக்கிடையில், விக்கிரமனை அந்த யானையின் மீது அமைந்திருந்த அம்பாரியில் ஏற்றினார்கள். யானை கடற்கரையிலிருந்து உள்நாட்டை நோக்கிக் கம்பீரமாக நடந்து செல்ல, ஜனக்கூட்டமும் ஆரவாரத்துடன் அதைப் பின் தொடர்ந்து சென்றது. அம்பாரியின் மீது வீற்றிருந்த விக்கிரமனோ, "இல்லை; இதெல்லாம் நிச்சயமாக உண்மை இல்லை; கனவுதான் காண்கிறோம்; அல்லது இந்திரஜாலம், மகேந்திரஜாலம் என்று சொல்லுகிறார்களே அப்படி ஏதாவது இருக்க வேண்டும்" என்று அடிக்கடி எண்ணிக் கொண்டான்.
சுற்று முற்றும் அவன் கண்ணில் பட்ட தென்னந் தோப்புகள், மாஞ்சோலைகள், கழனிகள், கால்வாய்கள் எல்லாம் அவனுக்குச் சோழ நாட்டுக் காட்சிகளாகவே புலப்பட்டன.
சிறிது நேரம் போன பிறகு ஒரு கிராமம் தென்பட்டதும் அதுவும் தமிழ்நாட்டுக் கிராமமாகவே தோன்றியது. ஊருக்குப் புறத்திலிருந்த கிராம தேவதையின் கோவிலும் அப்படியே தமிழர் கோவிலாகக் காட்சி தந்தது.
இன்னும் சிறிது தூரம் போனதும் ஒரு பட்டணம் காணப்பட்டது. அதன் வீடுகள், வீதிகள், சதுக்கங்கள் எல்லாம் உறையூரின் மாதிரியிலேயே அமைந்திருந்தன. ஆனால் அவ்வளவு பெரிய பட்டணமில்லை. அவ்வளவு ஜன நெருக்கமும் கிடையாது. அத்தனை மாட மாளிகைகள், கூட கோபுரங்களும் இல்லை. அப்பட்டணத்தின் வீதிகளில் அவரவர் வீட்டு வாசல்களில் நின்ற ஸ்திரீகள், புருஷர்கள், குழந்தைகள் எல்லாரும் சிறந்த ஆடை ஆபரணங்கள் அணிந்து மலர்ந்த முகத்துடன் நின்றார்கள். அவர்கள் எல்லாரும் தமிழ்நாட்டு மக்களாகவே காணப்பட்டார்கள். அளவிலாத ஆர்வம் பொங்கிய கண்களுடன் அவர்கள் விக்கிரமனைப் பார்த்துப் பலவித வாழ்த்துகளினால் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
விக்கிரமனுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் உதித்தது. ஒருவேளை இதெல்லாம் அந்தப் பல்லவ சக்கரவர்த்தியின் கபட நாடகமாயிருக்குமோ? தன்னைப் பற்றி வந்த கப்பல் பல நாள் பிரயாணம் செய்வதாகப் பாசாங்கு செய்து விட்டுக் கடைசியில் சோழநாட்டின் கடற்கரையிலேயே தன்னை இறக்கிவிட்டிருக்குமோ? இந்த ஆரவார ஊர்வலமெல்லாம் தன்னை ஏமாற்றிப் பல்லவ சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளும்படி செய்வதற்கு ஒரு சூழ்ச்சியோ! இவ்விதமாக எண்ணியபோது விக்கிரமனுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
இதற்குள் யானையானது அந்தப் பட்டணத்துக்குள்ளேயே பெரிய மாளிகையாகத் தோன்றிய ஒரு கட்டடத்துக்கு வெளியே வந்து நின்றது. விக்கிரமனை யானை மீதிருந்து கீழே இறக்கினார்கள். ஜனக் கூட்டமெல்லாம் வெளியில் நிற்க, முன்னமே நமது கவனத்துக்குள்ளான பெரியவர் மட்டும் விக்கிரமனை அழைத்துக் கொண்டு மாளிகைக்குள் சென்றார்.
"மகாராஜா! இதுதான் இந்தச் செண்பக நாட்டின் மன்னர்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்த அரண்மனை, தாங்களும் இந்த அரண்மனையில் வசிக்க வேண்டுமென்று இந்நாட்டுப் பிரஜைகளின் விண்ணப்பம்" என்றார் அப்பெரியவர்.
"இந்நாட்டின் பெயர் என்னவென்று நீங்கள் சொன்னீர்?"
"செண்பக நாடு மகாராஜா!"
"இந்தப் பட்டணத்தின் பெயர் என்னவோ?"
"செண்பக நாட்டின் தலைநகரம் இது. இதன் பெயர் குமாரபுரி."
"குமாரபுரிதானே? மாயாபுரி அல்லவே?"
"இல்லை, அரசே! குமாரபுரிதான்."
"நீர் யார் என்று கொஞ்சம் சொன்னால் நன்றாயிருக்கும்."
"அடியேன் பெயர் சித்தார்த்தன். காலஞ்சென்ற விஷ்ணுவர்த்தன மகாராஜாவுக்கு நான் முதல் மந்திரி. தங்களுக்கு விருப்பம் இருந்தால்..."
"என்ன சொன்னீர், மந்திரி என்றீரா? மந்திரவாதி என்றீரா?"
"மந்திரிதான், மகாராஜா!"
"ஒருவேளை மந்திரவாதியோ என்று நினைத்தேன். ஆமாம் நீர் மந்திரவாதியில்லாவிட்டால் நான் யார் என்பதும், என்னை இன்று காலை இந்தத் தீவுக்கருகில் கொண்டு வந்து இறக்கி விடுவார்களென்பதும் எப்படித் தெரிந்தது?"
"அது பெரிய கதை, மகாராஜா! சாவகாசமாக எல்லாம் சொல்கிறேன், இப்போதைக்கு..."
"இப்போதைக்கு இது உண்மையாகவே அரண்மனை தானா, அல்லது சிறைச்சாலையா என்று மட்டும் சொன்னால் போதும்."
"என்ன வார்த்தை சொன்னீர்கள்? சிறைச்சாலையா? இந்த நாட்டில் சிறைச்சாலை என்பதே கிடையாது! சிறைச்சாலை, இராஜத்துரோகம், மரணத் தண்டனை என்பதெல்லாம் பரத கண்டத்திலே தான், மகாராஜா!"
"அப்படியா? பரத கண்டத்துக்கும் இந்த நாட்டுக்கும் அவ்வளவு தூரமோ?"
"சாதாரணமாய்ப் பன்னிரண்டு நாள் கடல் பிரயாணம் புயல், மழை முதலியவை குறுக்கிட்டால் இன்னும் அதிக நாளாகும்."
"உண்மைதானே சொல்கிறீர்?"
"அடியேன் உண்மையைத் தவிர வேறு பேசுவதில்லை."
"அப்படியானால் தமிழகத்திலிருந்து பன்னிரண்டு நாள் பிரயாணத்திலுள்ள நீங்கள், தமிழ் மொழி பேசுகிறீர்களே, எப்படி?"
"மகாராஜா! இந்தச் செண்பகத் தீவிலே மட்டுமல்ல இன்னும் கிழக்கே தூரத்திலுள்ள தீவுகளிலும் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள், தமிழ்மொழி பேசுகிறார்கள். தங்களுடைய மூதாதை கரிகாலச் சோழரின் காலத்தில் சோழ நாட்டுத் தமிழர்கள் வளம் மிக்க இந்தத் தீவுகளில் வந்து குடியேறினார்கள். கரிகாலச் சோழரின் குமாரர் தான் இந்தப் பட்டணத்தை ஸ்தாபித்தார். அதனாலேயே குமாரபுரி என்று அதற்குப் பெயர் ஏற்பட்டது. அந்த நாளில் சோழ சேனாதிபதி ஒருவர் சக்கரவர்த்தியின் ஆக்ஞையின் பேரில் இந்நாட்டை ஆட்சி புரியலானார்.
அவருடைய சந்ததியார் பத்து வருஷத்துக்கு முன்பு வரையில் இந்நாட்டின் அரசர்களாயிருந்து செங்கோல் செலுத்தி வந்தார்கள். அந்த வம்சத்தின் கடைசி அரசரான விஷ்ணுவர்த்தனர் சந்ததியில்லாமல் காலமானார். பிறகு இந்த நாடு இன்று வரையில் அரசர் இல்லாத நாடாயிருந்து வந்தது. அடிக்கடி பக்கத்துத் தீவுகளில் உள்ளவர்கள் வந்து இந்நாட்டின் பட்டணங்களையும் கிராமங்களையும் சூறையாட ஆரம்பித்தார்கள்.... வெவ்வேறு பாஷை பேசுவோரும், அநாகரிகங்களும், தட்டை மூஞ்சிக்காரருமான பற்பல சாதியார் இந்தத் தீவை சுற்றியுள்ள தேசங்களில் வசிக்கிறார்கள். அவர்களை எதிர்த்து நின்று வெற்றி பெறுவதற்கு அரசர் இல்லாக் குடிகளாகிய எங்களால் முடியவில்லை. இப்படிப்பட்ட சமயத்தில் முருகக் கடவுளே அனுப்பி வைத்தது போல், சோழர் குலக்கொழுந்தான தாங்கள் எங்களைத் தேடி வந்திருக்கிறீர்கள். எங்களுடைய பாக்கியந்தான்."
கரிகாலச் சோழனைப் பற்றி அந்தப் பெரியவர் பிரஸ்தாபித்தவுடனே விக்கிரமன் மிகவும் சிரத்தையுடன் கேட்கத் தொடங்கினான். அவனுக்கிருந்த சந்தேகம், அவநம்பிக்கை எல்லாம் போய்விட்டது. சித்தார்த்தரின் குரல், முகத்தோற்றம் ஆகியவற்றிலிருந்து, அவர் சொல்லுவதெல்லாம் சத்தியம் என்னும் நம்பிக்கையும் விக்கிரமனுக்கு உண்டாயிற்று. 'நமது தந்தை பார்த்திப மகாராஜா எந்தக் கரிகால் வளவனைப் பற்றி அடிக்கடி பெருமையுடன் பேசி வந்தாரோ அந்த சோழர் குல முதல்வன் காலத்திலே தமிழர்கள் வந்து குடியேறிய நாடு இது. என்ன ஆச்சரியமான விதிவசத்தினாலோ அப்படிப்பட்ட நாட்டுக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்' என்பதை நினைத்தபோது விக்கிரமனுக்கு மயிர்க்கூச்செறிந்தது, கண்ணில் நீர் துளித்தது.
"ஐயா! உம்மை நான் பரிபூரணமாக நம்புகிறேன். எல்லா விஷயங்களையும் விவரமாக அப்புறம் கேட்டுக் கொள்கிறேன். இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லி விடுகிறேன். என்னை நீங்கள் உங்களுடைய அரசனாய்க் கொள்வதாயிருந்தால், இன்னொரு ராஜாவுக்கோ சக்கரவர்த்திக்கோ கப்பம் செலுத்த முடியாது. சுதந்திர நாட்டுக்குத்தான் நான் அரசனாயிருப்பேன். இல்லாவிட்டால் உயிரை விடுவேன். நீங்களும் இந்நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்காக உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருக்க வேண்டும். எதிரிகள் துஷ்டர்களாயிருந்தாலும், நல்லவர்களாக இருந்தாலும், யாராயிருந்தாலும் பணிந்து போகிறது என்ற பேச்சே உதவாது. இதற்குச் சம்மதமாயிருந்தால் சொல்லுங்கள்" என்றான் விக்கிரமன்.
"மகாராஜா, தங்களுடைய தந்தை பார்த்திப மகாராஜா போர்க்களத்தில் அடைந்த வீர மரணத்தின் புகழ் எங்கள் காதுக்கும் எட்டியிருக்கிறது. எங்களுடைய உடம்பில் ஓடுவதும் சோழ நாட்டின் வீர இரத்தந்தான். இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் உடல், பொருள், ஆவியைக் கொடுத்துத் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறார்கள். வீரத்தலைவன் ஒருவன் தான் எங்களுக்கு வேண்டியிருந்தது. தாங்கள் வந்துவிட்டீர்கள் இனி என்ன குறை?"
அச்சமயம் கோயில் சேமக்கலசத்தின் ஓசை கேட்டது.
சித்தார்த்தர், "மகாராஜா! தாங்கள் ஸ்நான பானங்களை முடித்துக் கொண்டு சிறிது இளைப்பாறுங்கள். சாயங்காலம் முருகவேள் ஆலயத்துக்குப் போய்த் தரிசனம் செய்ய வேண்டும். கூடிய சீக்கிரத்தில் முடிசூட்டு விழா நடத்துவது பற்றியும் யோசனை செய்யவேண்டும்" என்றார்.
காஞ்சி நகர் அரண்மனையின் உப்பரிகை நிலா மாடத்தில் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் அமர்ந்திருந்தார்கள். கிருஷ்ணபட்சத்து முன்னிரவு. வானத்தில் விண்மீன்கள் சுடர்விட்டு ஒளிர்ந்தன. கிழக்கே வெகு தூரத்தில் மாமல்லபுரத்துக் கலங்கரை விளக்கம் நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
காஞ்சி நகரின் பற்பல சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்களிலிருந்து பேரிகைச் சப்தம், ஆலாட்ச மணி ஓசை, யாழின் இன்னிசையுடன் கலந்து பாடும் பக்தர்களின் குரலொலி - எல்லாம் கலந்து வந்து கொண்டிருந்தன. அரண்மனைப் பூந்தோட்டத்திலிருந்து செண்பகம், பன்னீர், பாரிஜாதம் ஆகிய மலர்களின் சுகந்தம் குளிர்காற்றுடன் கலந்து இலேசாக வந்து கொண்டிருந்தது.
"குழந்தாய்! ஏன் இப்படி ஒரு மாதிரியிருக்கிறாய்? உடம்பு நன்றாகயில்லையா?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.
"எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை அப்பா, மனந்தான் நன்றாயில்லை!"
"மனம் இருக்கிறதே அம்மா! ரொம்பப் பொல்லாதது 'மத்தகஜத்தைப் போன்றது' என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் புத்தி என்கிற அங்குசத்தால் அடக்கி ஆளவேண்டும்...."
"அப்பா!"
"ஏன் குழந்தாய்!"
"நான் சமண முனிவரைப் பார்த்துவிட்டு வந்தது தங்களுக்கு எப்படித் தெரிந்தது?"
"என் மகள் என்ன செய்கிறாள் என்பது எனக்குத் தெரியாமல் போனால் இந்தப் பெரிய பல்லவ சாம்ராஜ்யத்தை நான் எப்படி அம்மா, கட்டி ஆள முடியும்?"
"அப்பா! நான் சமண சமயத்தையோ, பௌத்த சமயத்தையோ சார்ந்துவிடப் போகிறேன்."
"ஏன் அம்மா, அப்படி? நமது சைவ வைஷ்ணவ சமயங்கள் என்ன அவ்வளவு துர்ப்பாக்கியத்தைச் செய்து விட்டன?"
"வாழ்க்கையில் எனக்கு வெறுப்பு உண்டாகிவிட்டது. இந்த உலகத்தில் ஏன் பிறந்தோமென்று இருக்கிறது!"
"அடடா! அவ்வளவுக்கு வந்து விட்டதா? அப்பர் பெருமானைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தாயே? அவர் மனிதப் பிறவியின் மகிமையைப்பற்றி உனக்கு ஒன்றும் சொல்லவில்லையா? தில்லை அம்பலத்தில் ஆனந்த நடனமிடும் பெருமானைத் தரிசிப்பதற்காகவே...."
"நிறுத்துங்கள் அப்பா! வயதாக ஆக ஆக அந்தப் பெரியவர் ஒரே பக்திப் பைத்தியமாகி விட்டார். ஆனந்தமாம்! நடனமாம்! இந்த அழகான உலகத்தைப் படைத்த கடவுளுக்கு ஆனந்தம் வேறு, நடனம் வேறு வேண்டிக் கிடந்ததாக்கும்?"
இதைக் கேட்ட சக்கரவர்த்தி கலகலவென்று சிரித்தார். குந்தவி வெறுப்புடன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
"நான் ஏன் சிரித்தேன் என்று தெரியுமா, குந்தவி?"
"அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கு ஒரு வேளை பைத்தியம், கியித்தியம்...."
"இல்லை குழந்தாய்! இல்லை; பைத்தியம் எனக்குப் பிடிக்கவில்லை! நான் சிரித்த காரணம் வேறு; உன் மாதிரியே எனக்கும் ஒரு காலத்தில் இந்த உலகம் பிடிக்காமலிருந்தது. வாழ்க்கை வேப்பங்காயாகி விட்டது! அதன் காரணம் என்ன தெரியுமா?"
"நான் உங்களுக்குப் பெண்ணாய்ப் பிறந்தது தானோ என்னவோ?"
சக்கரவர்த்தி புன்சிரிப்புடன், "இல்லை அம்மா, இல்லை! நீ பிறந்த பிறகு எனக்கு மறுபடியும் உலகம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதற்கு முன்னாலேதான் சில காலம் எனக்கு உலக வாழ்க்கையின்மேல் ரொம்பவும் வெறுப்பாயிருந்தது. அதற்குக் காரணம்.... என் தந்தையின் மீது எனக்கு ரொம்பக் கோபமாயிருந்ததுதான்!" என்றார்.
குந்தவியின் முகத்தில் அவளை அறியாமலே புன்னகை தோன்றியது. இதைப் பார்த்த நரசிம்மவர்மர், "உனக்கு இப்போது வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகியிருப்பதற்கு அதுதானே காரணம்? என்மேல் உனக்கு இப்போது சொல்லமுடியாத கோபம் இல்லையா?" என்றார்.
குந்தவி கண்களில் துளிர்த்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொண்டாள். தலை குனிந்தபடி, "அப்பா! உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம்? உங்களுடைய தர்ம ராஜ்யத்தில் இப்படிப்பட்ட அநீதி நடந்துவிட்டதே என்றுதான் வருத்தமாயிருக்கிறது" என்றாள்.
"இதுதானா பிரமாதம், குந்தவி? இதற்கு ஏன் இவ்வளவு கவலை? அநியாயத்தைச் செய்வதற்கு எனக்குச் சக்தி உண்டு என்றால் அதை நிவர்த்திப்பதற்கும் சக்தி உண்டல்லவா? உண்மையில் அநீதி நடந்து விட்டதாக எனக்குத் தெரிந்தால் உடனே அதற்குப் பரிகாரம் செய்து விட்டு மறுகாரியம் பார்க்கிறேன்" என்றார் சக்கரவர்த்தி.
"நிஜந்தானே, அப்பா! சோழ ராஜகுமாரனுடைய செயலுக்கு அவன் பொறுப்பாளி இல்லையென்று தெரிந்தால் தண்டனையை மாற்றிவிடுவீர்கள் அல்லவா?"
"நிச்சயமாய் அம்மா!"
அப்போது குந்தவி தன் மனத்திற்குள் "அந்த வேஷதாரிச் சிவனடியாரை எப்படியாவது கண்டுபிடித்து, அவருடைய தாடியைப்பற்றி இழுத்துக் கொண்டு வந்து சக்கரவர்த்தியின் முன்னிலையில் நிறுத்தாவிட்டால் என் பெயர் குந்தவி அல்ல!" என்று சபதம் செய்து கொண்டாள்.
"குந்தவி! என்ன யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? இன்னும் இரண்டு நாளில் நான் உறையூருக்குப் போகப் போகிறேன். நீயும் வருவாயல்லவா?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.
"வருகிறேன் அப்பா! அங்கே எனக்கும் ஒரு காரியம் இருக்கிறது; அதற்கு நீங்கள் குறுக்கே ஒன்றும் சொல்லக் கூடாது."
"என்ன காரியம் என்று எனக்குச் சொல்லலாமோ, அதுவும் இரகசியமோ?"
"இரகசியம் ஒன்றுமில்லை, அப்பா! அருள்மொழி ராணியை நான் பார்க்கப் போகிறேன்."
"சரிதான்; ஆனால் அருள்மொழி ராணி உன்னைப் பார்க்கச் சம்மதிக்க வேண்டுமே!"
"அவர் என்னைப் பார்ப்பதற்கு என்ன தடை? எதற்காக மறுக்கிறார்?"
"அவளுடைய பிள்ளையைத் தேசப் பிரஷ்டம் செய்தவன் மகள் ஆயிற்றே நீ? உன்மேல் கோபம் இல்லாமல் இருக்குமா?"
"என்மேல் எதற்காகக் கோபித்துக் கொள்ள வேண்டும்? ரொம்ப அழகு தான்! நானா இவருடைய பிள்ளைக்குத் துர்ப்போதனை செய்து சக்கரவர்த்திக்கு விரோதமாய்க் கலகம் செய்யும்படி தூண்டினேன்? என் மேல் கோபித்துக் கொண்டு என்ன பிரயோஜனம்?" என்றாள் குந்தவி.
இதைக் கேட்ட சக்கரவர்த்தி தம் மனத்திற்குள், "பெண்ணாய்ப் பிறந்தவர்களிடம் தர்க்க ரீதியை எதிர்பார்ப்பதிலேயேயும் பிரயோஜனமில்லைதான்!" என்று எண்ணிக் கொண்டார்.
சென்ற மூன்று தினங்களாகப் பொன்னன் குடிசைக்குள்ளே இடியும் மழையும் புயலும் பூகம்பமுமாக இருந்தது.
"நான் செய்தது தப்பு என்று தான் ஆயிரந் தடவை சொல்லி விட்டேனே! மறுபடியும் மறுபடியும் என் மானத்தை வாங்குகிறாயே!" என்றான் பொன்னன்.
"தப்பு, தப்பு, தப்பு என்று இப்போது அடித்துக் கொள்கிறாயே, என்ன பிரயோஜனம்? இந்தப் புத்தி அப்போது எங்கே போச்சு?" என்று வள்ளி கேட்டாள்.
"இப்போது என்ன குடி முழுகிப் போய்விட்டதென்று ஓட ஓட விரட்டுகிறாய், வள்ளி! அந்தச் சக்கரவர்த்தி எங்கே போய்விட்டார்! என் வேல் தான் எங்கே போச்சு?"
"வேல் வேறயா, வேல்? கெட்ட கேட்டுக்குப் பட்டுக் குஞ்சந்தான், ஓடம் தள்ளுவதற்கும் கும்பிடுவதற்குந்தான் கடவுள் உனக்குக் கையைக் கொடுத்திருக்கிறார்! கும்பிடுகிற கையினால் எங்கேயாவது வேலைப் பிடிக்க முடியுமா?"
இரண்டு உடலும் ஓர் உயிருமாயிருந்த தம்பதிகளுக்குள் இப்படிப்பட்ட ஓயாத வாய்ச் சண்டை நடப்பதற்குக் காரணமாயிருந்த சம்பவம் இதுதான்:-
இரண்டு நாளைக்கு முன் இந்தக் காவேரிக்கரைச் சாலை வழியாக நரசிம்ம சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் அவர்களுடைய பரிவாரங்களும் உறையூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது, தோணித் துறைக்கு அருகில் சக்கரவர்த்தி சிறிது நின்றார். தோணித் துறையையும், காவேரியின் மத்தியிலிருந்த தீவையும், அந்தத் தீவில் பச்சை மரங்களுக்கிடையே காணப்பட்ட வசந்த மாளிகையின் பொற் கலசத்தையும் குந்தவிக்குச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
அச்சமயம் குடிசையின் வாசலில் நின்று கொண்டிருந்த பொன்னன், வள்ளி இவர்கள் மேல் சக்கரவர்த்தியின் பார்வை விழுந்தது. பொன்னனை அருகில் வரும்படி அவர் சமிக்ஞை செய்யவும், பொன்னன் ஓடோ டியும் சென்று, கைகூப்பித் தண்டம் சமர்ப்பித்து, பயபக்தியுடன் கையைக் கட்டிக் கொண்டு அவர் முன்னால் நின்றான். சக்கரவர்த்தியைப் பழிக்குப்பழி வாங்கப் போவதாகவும், அவருடைய மார்பில் தன் வேலைச் செலுத்தப் போவதாகவும் அவன் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் அச்சமயம் அடியோடு மறந்து போய் விட்டது. சக்கரவர்த்தியின் கம்பீரத் தோற்றமும் அவருடைய முகத்தில் குடி கொண்டிருந்த தேஜசும் அவனை அவ்விதம் வசீகரித்துப் பணியச் செய்தன.
"இந்தத் தோணித் துறையில் படகு ஓட்டுகின்றவன் நீதானே, அப்பா!" என்று சக்கரவர்த்தி கேட்கவும், பொன்னனுக்குத் தலைகால் தெரியாமற் போய் விட்டது. "ஆமாம், மகா....சக்ர...பிரபு!" என்று குழறினான்.
"அதோ தெரிகிறதே, அந்த வசந்த மாளிகையில் தானே அருள்மொழி ராணி இருக்கிறார்!"
"ஆமாம்"
"இதோ பார்! நமது குழந்தை குந்தவி தேவி, ராணியைப் பார்ப்பதற்காகச் சீக்கிரத்தில் இங்கே வரக்கூடும். ஜாக்கிரதையாக ஓடம் செலுத்திக் கொண்டு போய் அந்தக் கரையில் விட வேண்டும், தெரியுமா?"
"புத்தி, சுவாமி!" என்றான் பொன்னன்.
பிறகு சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களும் உறையூரை நோக்கிச் சென்றார்கள்.
இதையெல்லாம் வள்ளி குடிசை வாசலில் நின்றபடி அரை குறையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். பொன்னன் திரும்பி வந்தபோது, வள்ளியின் முகத்தில் 'எள்ளும் கொள்ளும்' வெடித்தது. முழு விவரமும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னர் வள்ளி பலமாய்ச் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள். சக்கரவர்த்திக்குப் பணிந்து மறுமொழி சொன்ன காரணத்தினால் விக்கிரம மகாராஜாவுக்குப் பொன்னன் துரோகம் செய்துவிட்டதாக வள்ளி குற்றம் சாட்டினாள். "உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் துரோகி!" என்று நிந்தித்தாள். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரம் மூன்று தினங்களாக இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது.
வள்ளியின் சொல்லம்புகளைப் பொறுக்க முடியாதவனாய், அன்று மத்தியானம் உச்சிவேளையில் பொன்னன் நதிக்கரையோரம் சென்றான். அங்கே நீரோட்டத்தின் மீது தழைத்து கவிந்திருந்த ஒரு புங்க மரத்தினடியில் அதன் வேரின் மேல் உட்கார்ந்து, தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்படித் துடைத்துக் கொள்வது, வள்ளியிடம் மறுபடியும் எப்படி நல்ல பெயர் வாங்குவது? - என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது கார்த்திகை மாதக் கடைசி, ஒரு மாதம் சேர்ந்தாற்போல் அடைமழை பெய்து விட்டிருந்தது. கழனிகளில் நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது. பச்சை மரங்களின் இலைகள், புழுதி தூசியெல்லாம் கழுவப்பட்டு நல்ல மரகத வர்ணத்துடன் பிரகாசித்தன. குளுகுளுவென்று குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது.
இப்படி வெளி உலகமெல்லாம் குளிர்ந்திருந்ததாயினும், பொன்னனுடைய உள்ளம் மட்டும் கொதித்துக் கொண்டிருந்தது. பத்து வருஷத்துக்கு முன்னால் இந்தக் கார்த்திகை மாதம் எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்! பார்த்திப மகாராஜாவும் ராணியும் இளவரசரும் இங்கே அடிக்கடி வருவதும் போவதுமாயிருப்பார்கள்.
அரண்மனைப் படகுக்கு அடிக்கடி வேலை ஏற்படும். தோணித்துறை அப்போது எவ்வளவு கலகலப்பாயிருந்தது! குதிரைகளும், யானைகளும், தந்தப் பல்லக்குகளும் இந்த மாந்தோப்பில், வந்து காத்துக் கொண்டு கிடக்குமே! அந்தக் காலம் போய்விட்டது. இப்போது ஈ, காக்கை இங்கே வருவது கிடையாது. இந்தத் தோணித்துறைக்கு வந்த கேடுதான் என்ன? பார்த்திப மகாராஜா போர்க்களத்தில் இறந்து போனார். இளவரசர் எங்கேயோ கண் காணாத தீவில் தவித்துக் கொண்டிருக்கிறார். அருள்மொழி ராணியோ ஓயாமல் கண்ணீரும் கம்பலையுமாயிருக்கிறார். வசந்த மாளிகைக்குப் போவார் இல்லை; ஓடத்துக்கும் அதிகம் வேலை இல்லை.
அந்தச் சண்டாளன் மாரப்ப பூபதி மட்டும் துரோகம் செய்யாமலிருந்தால்... இப்போது விக்கிரம மகாராஜா சோழ நாட்டின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பார் அல்லவா? பல்லவ சக்கரவர்த்தி இங்கே ஏன் வரப்போகிறார்? வள்ளியிடம் தான் ஏச்சுக் கேட்கும்படியாக ஏன் நேரிட்டிருக்கப் போகிறது?
இப்படிப் பொன்னன் யோசித்துக் கொண்டிருக்கும் போது, குதிரை வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சாலை ஓரத்தில் பொன்னனுடைய குடிசைக்கருகில் மாரப்ப பூபதி குதிரை மேலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான்.
மாரப்ப பூபதி பொன்னனின் குடிசைக் கதவைத் திறந்தபோது, வள்ளி பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தாள்:-
"மானம் போன பிறகு உயிரை வைத்துக் கொண்டு இருந்து என்ன பிரயோஜனம்? நம்ம தேசத்துக்கும் நம்ம மகாராஜாவுக்கும் துரோகம் செய்து விட்டு அப்புறம் பிராணனை வைத்துக் கொண்டு இருக்கிறதாயிருந்தால், உனக்கும் அந்தக் கேடுகெட்ட மாரப்பனுக்கும் என்ன வித்தியாசம்?"
இதைக் கேட்டதும் அவனுடைய முகம் கோபத்தினால் சிவந்தது. வாசற்படியிலேயே சிறிது நேரம் அசையாமல் நின்றான். பிறகு என்ன தோன்றிற்றோ என்னவோ, அவனுடைய முகத்தில் ஒருவிதமான மலர்ச்சி உண்டாயிற்று. புன்னகையுடன் "என்ன வள்ளி! என் தலையையும் சேர்த்து உருட்டுகிறாய்? என்ன சமாசாரம்? என்னோடு பொன்னனையும் சேர்க்கும் படியாக அவன் அப்படி என்ன பாதகம் செய்துவிட்டான்?" என்றான்.
அடுப்பு வேலையைப் பார்த்தபடி பொன்னன்தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டு தலை நிமிராமல் முதலில் பேசிய வள்ளி வேற்றுக் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டுப் பார்த்தாள். மாரப்பன் என்று அறிந்ததும், அவளுக்குக் கொஞ்சம் திகைப்பாய்த்தானிருந்தது. ஆனாலும் சீக்கிரத்தில் சமாளித்துக் கொண்டு "உங்கள் தலையை உருட்டுவதற்கு என்னால் முடியுமா, ஐயா? அதற்கு எந்த உண்மையான வீரம் படைத்த ஆண் பிள்ளை பிறந்திருக்கிறானோ?" என்றாள்.
இதில் பிற்பகுதியை மெல்லிய குரலில் சொன்னபடியால் மாரப்பன் காதில் நன்றாக விழவில்லை.
"என்ன சொன்னாய் வள்ளி?" என்றான்.
இதற்குள் பொன்னன் வெளியிலிருந்து வரவே, மாரப்பன் அவனைப் பார்த்து, "பொன்னா! உன்னோடு ஒரு சமாச்சாரம் பேச வேண்டும், வா" என்று கூறி அவனை வெளியில் அழைத்துப் போனான்.
இருவரும் நதிக் கரைக்குச் சென்று மரத்தடியில் உட்கார்ந்தார்கள்.
"பொன்னா! நீ எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய். அதற்காக என்றைக்காவது ஒரு நாள் நான் உனக்கு நன்றி செலுத்தியாக வேண்டும்" என்றான் மாரப்பன்.
"நானா ஐயா? உங்களுக்கு அப்படியொன்றும் செய்ததாகத் தெரியவில்லையே?"
"உனக்குத் தெரியாமலே செய்திருக்கிறாய், பொன்னா!"
"ஐயையோ! அப்படியானால், அதை வள்ளியிடம் மட்டும் சொல்லி விடாதீர்கள். அவள் என்னை இலேசில் விட மாட்டாள்!" என்றான் பொன்னன்.
மாரப்பன் சிரித்துக் கொண்டே, "அதுதான் பொன்னா! அதுதான்! வள்ளியை நீ கல்யாணம் செய்து கொண்டாயே, அதுதான் நீ எனக்குச் செய்த பெரிய உபகாரம். ஒரு காலத்தில் அவளை நான் கல்யாணம் செய்து கொள்ளலாமென்ற சபலம் இருந்தது. அப்படி நடந்திருந்தால், என்னை என்ன பாடு படுத்தியிருப்பாளோ?"
"ஆமாம் எஜமான் ஆமாம்! தங்களுடைய சாதுக் குணத்துக்கும் வள்ளியின் சண்டைக் குணத்துக்கும் ஒத்துக் கொள்ளாதுதான். சண்டை என்று கேட்டாலே தங்களுக்குச் சுரம் வந்துவிடும் என்பதுதான் உலகமெல்லாம் அறிந்த விஷயமாயிற்றே!" என்றான் பொன்னன்.
"என்ன சொன்னாய்?" என்று மாரப்பன் கத்தியை உருவினான்.
"ஓகோ! கத்தியைக் கூட கொண்டு வந்திருக்கிறீர்களா? நிஜக் கத்திதானே? கொஞ்சம் இருங்கள் வள்ளியைக் கூப்பிடுகிறேன். உங்கள் உறையில் உள்ள கத்தி நிஜக் கத்தியல்ல - மரக் கத்தி என்று அவள் ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்!" என்று கூறிவிட்டுப் பொன்னன் எழுந்திருந்தான்.
மாரப்பன் கத்தியைப் பக்கத்தில் தரையில் வைத்து விட்டு, "வேண்டாம், பொன்னா! உட்கார், புருஷர்களின் காரியத்தில் பெண் பிள்ளைகளைக் கூப்பிடக்கூடாது. அவர்கள் வந்தால் விபரீதந்தான். பார்! விக்கிரமனை சோழ தேசத்துக்கு ராஜாவாக்க நாம் பெருமுயற்சி செய்தோமே? அது பலித்ததா? நமது ஆலோசனைகளில் அருள்மொழி ராணியைச் சேர்த்துக் கொண்டதால் தானே, காரியம் கெட்டுப் போயிற்று?" என்றான்.
"அப்படியா? மகாராணி என்ன செய்தார்கள் காரியத்தைக் கெடுப்பதற்கு? அவர் தான் இங்கே இளவரசரையும் கிளப்பி விட்டுவிட்டு, அங்கே அச்சுதவர்மரிடமும் போய்ச் சொல்லிக் கொடுத்தாரா? பிள்ளைமேல் அவருக்கு என்ன அவ்வளவு விரோதம்?"
"இல்லை, பொன்னா! ராணி யாரோ ஒரு சிவனடியாரை நம்பி, அவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். அந்த வேஷதாரியை நம்ப வேண்டாமென்று நான் எவ்வளவோ சொன்னேன். கேட்டால்தானே! உண்மையில் அந்தக் கபட சந்நியாசி பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றன்! எல்லாவற்றையும் போய்ச் சொல்லிவிட்டான்!"
இதைக் கேட்டதும் பொன்னனுக்கு ஏற்கெனவே அந்தச் சிவனடியார் மேல் ஏற்பட்டிருந்த சந்தேகம் கொஞ்சம் பலப்பட்டது. ஒருவேளை அவருடைய வேலையாகவே இருந்தாலும் இருக்கலாம். நாம் அனாவசியமாய் மாரப்ப பூபதியைச் சந்தேகித்தோமே? என்று சிறிது வெட்கமடைந்தான்.
"சிவனடியாராயிருந்தாலும் சரி, என்றைக்காவது ஒரு நாள் உண்மை தெரியப் போகிறது, அப்போது துரோகம் செய்தவனை...." என்று பொன்னன் பல்லை நரநரவென்று கடித்த வண்ணம், மாரப்பனுக்குப் பக்கத்தில் தரையில் கிடந்த கத்தியைச் சட்டென்று எடுத்து ஒரு சுழற்றுச் சுழற்றி அருகேயிருந்த ஒரு புங்கமரத்தில் ஒரு போடு போட்டான். வைரம் பாய்ந்த அந்த அடி மரத்தில் கத்தி மிக ஆழமாய்ப் பதிந்தது!
மாரப்பனுடைய உடம்பு பாதாதி கேசம் ஒரு கணநேரம் வெடவெடவென்று நடுங்கிற்று. எனினும் பொன்னன் தன்னைத் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒருவாறு சமாளித்துக் கொண்டான்.
"பழைய கதையை இனிமேல் மறந்துவிடு, பொன்னா! இளவரசர் என்னவோ இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. நம்முடைய காரியத்தை நாம் பார்க்க வேண்டியது தான்."
"நம்முடைய காரியம் என்ன இருக்கிறது இனிமேல் எல்லாந்தான் போய்விட்டதே!"
"எல்லாம் போய்விடவில்லை. நானும் நீயும் இருக்கிற வரையில் எல்லாம் போய்விடாது. ஆனால் யுக்தியை மாற்றிக் கொள்ள வேண்டும். சண்டையினால் முடியாத காரியத்தைச் சமாதானத்தினால் முடித்துக் கொள்ள வேண்டும். நீ கெட்டிக்காரன் பொன்னா! நான் எல்லாம் கேள்விப்பட்டேன். சக்கரவர்த்தி இந்த வழியாகப் போன போது உன்னை அழைத்துப் பேசினாராம். நீயும் அவருக்குப் பணிந்தாயாம் இதுதான் சரியான யுக்தி. பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே. வள்ளி ஏதாவது உளறிக் கொண்டுதானிருப்பாள். நீ மாத்திரம் எனக்குக் கொஞ்சம் ஒத்தாசை செய்தாயானால், சோழ நாட்டை காப்பாற்றலாம். விக்கிரமன் ஒருவேளை திரும்பிவந்தால், இராஜ்யத்தை அவனிடம் ஒப்படைக்கலாம். இராஜ்யம் அடியோடு கையை விட்டுப் போய்விட்டால், அப்புறம் திரும்பி வராதல்லவா?"
ஆரம்பத்தில் மாரப்பனின் பேச்சு பொன்னனுக்கு வேப்பங்காயாக இருந்தது. விக்கிரமனுக்கு இராஜ்யத்தை திருப்பிக் கொடுப்பது பற்றி பிரஸ்தாபித்ததும், பழைய சேனாதிபதி, சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமோ? என்று பொன்னனுக்கு யோசனை உண்டாயிற்று.
"நான் என்ன ஒத்தாசை செய்ய முடியும்?" என்று அவன் கேட்டான்.
"பிரமாதமாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. சக்கரவர்த்தியின் மகள் குந்தவிதேவி, அருள்மொழி ராணியைப் பார்க்க வரப்போவதாகப் பிரஸ்தாபம். நீ தானே படகு விடுவாய்? சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் என்னைப் பற்றிப் பேசு, உனக்குதான் தெரியுமே. பொன்னா! வள்ளியின் பாட்டன் ஜோசியம் சொல்லியிருக்கிறான் அல்லவா? எல்லாம் அந்த ஜோசியம் பலிப்பதற்கு ஏற்றபடியே நடந்து வருகிறது. இல்லாவிட்டால், குந்தவிதேவி இப்போது இங்கே வர வேண்டிய காரணமேயில்லை. பார்!" என்றான்.
குந்தவிதேவியை விக்கிரமன் மணந்துகொள்ள வேண்டுமென்னும் அருள்மொழி ராணியின் பழைய விருப்பம் பொன்னனுக்கு ஞாபகம் இருந்தது. எனவே, மாரப்பன் மேற்கண்டவாறு பேசியதும், பொன்னனுக்கு அவனிடமிருந்த வெறுப்பெல்லாம் திரும்பி வந்துவிட்டது; உள்ளுக்குள் கோபம் பொங்கிற்று. ஆயினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "அதற்கென்ன? சமயம் நேர்ந்தால் கட்டாயம் உங்களைப் பற்றிக் குந்தவிதேவியிடம் பேசுகிறேன்" என்றான்.
"நீ செய்யும் உதவியை மறக்கமாட்டேன். பொன்னா! சக்கரவர்த்தி என்னைக் கூப்பிட்டிருக்கிறார். நாளைக்குப் பார்க்கப் போகிறேன். சேனாதிபதி வேலையை இப்போது எனக்குக் கொடுக்கப் போகிறார். பிறகு சோழ இராஜ்யமே என் கைக்குள் வருவதற்கு அதிக நாளாகாது. அப்போது உன்னைக் கவனித்துக் கொள்வேன்" என்று சொல்லிக் கொண்டே மாரப்பன் குதிரை மீதேறி அதைத் தட்டி விட்டான்.
மாரப்ப பூபதி போனவுடனே பொன்னன் குதித்துக் கொண்டு குடிசைக்குள் சென்றான். வள்ளியின் கோபத்தை மாற்றுவதற்கு ஒரு வழி கிடைத்தது என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலம் உண்டாக்கிற்று.
மாரப்பன் சொன்னதையெல்லாம் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்த்து அவன் வள்ளியிடம் தெரிவித்த போது உண்மையாகவே அவன் எதிர்பார்த்த பலன் கிட்டிற்று. அதாவது வள்ளியின் கோபமெல்லாம் மாரப்பன்மேல் திரும்பிற்று.
"ஓகோ! சக்கரவர்த்தியின் மகளை இவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்; அதற்கு நீ தூது போகவேண்டுமோ? என்னிடம் மட்டும் அந்த மாதிரி அவன் சொல்லியிருந்தால், தலையிலே ஒரு சட்டி நெருப்பைக் கொட்டியிருப்பேன்; நீ கேட்டுக்கொண்டு சும்மா வந்தாய்!" என்றாள்.
"சும்மாவா வந்தேன்? உனக்கு என்ன தெரியும்? எப்பேர்ப்பட்ட கோபம் அப்போது எனக்கு வந்தது தெரியுமா வள்ளி! அவன் வாளைக் கொண்டே அவன் தலையை வெட்டிப் போடப் பார்த்தேன்; புங்கமரம் நடுவிலே நின்று தடுத்து விட்டது!" என்றான்.
"ஆமாம், நீ வாய்வெட்டுத்தான் வெட்டுவாய்! வாள் வெட்டுக்கு உன் கையிலே சக்தி இருக்கிறதா!" என்றாள் வள்ளி.
பொன்னன் "இங்கே வா! நான் சொல்லுகிறது நிஜமா, இல்லையா? என்று காட்டுகிறேன்" என்று சொல்லி அவள் கையைப் பிடித்து கரகரவென்று இழுத்துக் கொண்டு போனான். புங்க மரத்தில் கத்தி வெட்டு ஆழமாய்ப் பதிந்திருந்ததைக் காட்டினான்.
அதைப் பார்த்ததும் வள்ளி முகம் மலர்ந்தது. "இந்த வெட்டை மரத்தில் ஏன் போட்டாய்? பாவம் பச்சை மரம்! அவன் மேலேயே போடுகிறதுதானே" என்றாள்.
"இருக்கட்டும்; ஒரு காலம் வரும். அப்போது போடாமலா போகிறேன்!" என்றான் பொன்னன்.
பிறகு, இருவரும் மேலே என்ன செய்வதென்று வெகு நேரம் யோசித்தார்கள்.
மாரப்ப பூபதி எவ்வளவு துர்நடத்தையுள்ளவன் என்பதைச் சக்கரவர்த்திக்கு எப்படியாவது தெரிவித்துவிட வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் எவ்விதம் தெரிவிப்பது?
"நீதான் அன்றைக்குச் சக்கரவர்த்திக்குக் கும்பிடு போட்டுக் காலில் விழுந்தாயே! அவரை உறையூரில் போய்ப் பார்த்து எல்லாவற்றையும் சொல்லிவிடேன்" என்றாள் வள்ளி.
"நான் கலகத்தில் சம்பந்தப்பட்டவன் என்று உறையூரில் எல்லாருக்கும் தெரியுமே! உறையூருக்குள் என்னைப் போகவிடவே மாட்டார்கள். அதிலும் சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டுமென்று சொன்னால் சந்தேகப்பட்டுக் காராக்கிரகத்தில் பிடித்துப் போட்டு விடுவார்கள்" என்று பொன்னன் சொன்னான்.
"அப்படியானால் நான் போய்விட்டு வரட்டுமா?" என்றாள் வள்ளி.
"நீ எப்படிச் சக்கரவர்த்தியைப் பார்ப்பாய்? உன்னை யார் விடுவார்கள்?"
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குடிசையின் வாசலில் குதிரைகள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
"யார் இப்போது குதிரைமேல் வந்திருக்க முடியும்?" என யோசித்துக் கொண்டே வள்ளியும் பொன்னனும் வெளியில் வந்தார்கள். பல்லவ வீரர்கள் ஐந்தாறு பேர் வந்திருப்பதைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திடுக்கிட்டது.
வந்த வீரர்களின் தலைவன், "ஓடக்காரா! உன்னைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வரும்படி சக்கரவர்த்தியின் கட்டளை, மரியாதையாய் உடனே புறப்பட்டு வருகிறாயா? விலங்கு பூட்டச் சொல்லட்டுமா?" என்றான்.
பொன்னன் கலவரமடைந்த முகத்துடன் வள்ளியைப் பார்த்தான். வள்ளி துணிச்சலுடன் வீரர் தலைவனை நோக்கி,"சோழ நாட்டில் மரியாதைக்கு எப்போதும் குறைச்சல் இல்லை ஐயா! நீங்கள் பிறந்த ஊரில் தான் மரியாதைக்குப் பஞ்சம் போலிருக்கிறது!" என்றாள்.
"ஓகோ! நீதான் வாயாடி வள்ளியா? உன்னையுந்தான் கொண்டுவரச் சொன்னார், சக்கரவர்த்தி!"
"ஆகா! வருகிறேன். உங்கள் சக்கரவர்த்தியை எனக்குந் தான் பார்க்க வேண்டும். பார்த்து "உறையூரிலிருந்து காஞ்சிக்குப் போகும்போது கொஞ்சம் மரியாதை வாங்கிக் கொண்டு போங்கள்!" என்றும் சொல்ல வேண்டும் என்றாள்.
சக்கரவர்த்தியின் விஜயத்தை முன்னிட்டு உறையூர் வீதிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த போது பொன்னனுக்கும் வள்ளிக்கும் ஆத்திரமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தன. முன் தடவை உறையூர் இவ்வளவு அலங்காரத்துடன் காட்சியளித்தது, பார்த்திப மகாராஜா போருக்குக் கிளம்பிய சமயத்தில்தான்.
ஆகா அதையெல்லாம் சோழநாட்டு ஜனங்கள் அடியோடு மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது! பார்த்திப மகாராஜாவின் மரணத்துக்குக் காரணமான நரசிம்ம சக்கரவர்த்தியின் விஜயத்துக்காக இப்படியெல்லாம் நகரலங்காரம் செய்திருக்கிறார்களே! இது என்ன அவமானம்? சோழ நாட்டுக்கு என்ன கதி நேர்ந்துவிட்டது? அருள்மொழி ராணி இப்போது உறையூருக்கு வந்து இந்தக் கோலாகலங்களையெல்லாம் பார்த்தால் மனம் சகிப்பாரா? இவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் வள்ளியும் சக்கரவர்த்திக்கென்று புதிதாக அமைக்கப்பட்டிருந்த அரண்மனையை அடைந்தார்கள்.
அந்த அரண்மனையின் பெருமிதமும், அதில் காணப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளும் அவர்களைப் பிரமிக்கச் செய்தன; அவர்களின் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தின. சோழ மன்னன் அமர்ந்து ஆட்சி செலுத்த வேண்டிய இடத்தில் வெளியூரான் வந்தல்லவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறான்?
அரண்மனைக்குள் அவர்கள் ஒரு அறையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள். அதற்கு அடுத்த அறையில் பேச்சுக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. கம்பீரமான ஒரு ஆண் குரல் அதிகமாகக் கேட்டது. ஒரு இளம் பெண்ணின் இனிய குரலும், சிரிப்பின் ஒலியும் இடையிடையே கேட்டன. ஈனஸ்வரத்தில் இன்னொரு ஆடவன் குரலும் கேட்டது. அது மாரப்ப பூபதியின் குரல் மாதிரி இருக்கவே பொன்னன் திடுக்கிட்டான்.
சக்கரவர்த்திக்கு விரோதமான சதியாலோசனையில் கலந்து கொண்டதன் பொருட்டு விசாரிப்பதற்காகத்தான் சக்கரவர்த்தி தங்களை அழைத்து வரச் செய்திருக்க வேண்டும் என்று, பொன்னனும் வள்ளியும் கிளம்பும்போது ஊகித்தார்கள். விசாரணையின்போது தைரியமாக மறுமொழி சொல்லி, சக்கரவர்த்திக்குப் பொன்னன் கும்பிட்ட அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். மாரப்ப பூபதியின் ஈனக் குரலிலிருந்து தாங்கள் ஊகித்தது சரிதான் என்று அவர்களுக்குப்பட்டது. அப்போது வள்ளி பொன்னன் காதோடு ஏதோ சொன்னாள்.
அவள் சொல்லி முடிப்பதற்குள், உள்ளேயிருந்து கம்பீரமான குரல் "எங்கே? அந்த ஓடக்காரனைக் கொண்டு வா" என்று கட்டளையிட்டது. பொன்னனையும் வள்ளியையும் அடுத்த அறைக்குள் கொண்டு போனார்கள். அங்கே நவரத்தினகச்சிதமான சிங்காதனத்தில் சக்கரவர்த்தி கம்பீரத் தோற்றத்துடன் வீற்றிருப்பதையும் அவருக்கு அருகில் குந்தவி தேவி சாய்ந்து கொண்டு நிற்பதையும், எதிரே மாரப்பன் குனிந்த தலையுடனும் நடுங்கிய உடம்புடனும் எண்சாணுடம்பும் ஒரு சாணாய்க்குறுகி நிற்பதையும், வள்ளியும் பொன்னனும் போகும் போதே பார்த்துக் கொண்டார்கள். சக்கரவர்த்தியின் எதிரில் போய் நின்ற பிறகு அவர்களால் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. சக்கரவர்த்தியின் முகத்தில் பொங்கிய தேஜஸானது அப்படிக் கண்களைக் கூசச் செய்து அவர்களுக்கு அடக்க ஒடுக்கத்தை அளித்தது.
மாமல்ல சக்கரவர்த்தி இடி முழக்கம் போன்ற குரலில் சொன்னார்:
"ஓகோ! இவன்தானா? தோணித் துறையில் அன்றைக்குப் பார்த்தோமே? வெகு சாதுவைப்போல் வேஷம் போட்டு நடித்தான்! நல்லது, நல்லது! படகு தள்ளுகிறவன் கூடப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகச் சதி செய்வதென்று ஏற்பட்டுவிட்டால், அப்புறம் கேட்பானேன்? அழகுதான்!"
இவ்விதம் சக்கரவர்த்தி சொன்னபோது, பொன்னனும் வள்ளியும் அடியோடு தைரியத்தை இழந்துவிட்டார்கள். அவர்களுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. தோணித்துறையில் இனிய வார்த்தை பேசிய சக்கரவர்த்திக்கும், இங்கே நெருப்புப் பொறி பறக்கும்படி பேசும் சக்கரவர்த்திக்கும் காணப்பட்ட வித்தியாசம் அவர்களைத் திகைக்கச் செய்தது.
சக்கரவர்த்தி மேலும் சொன்னார்: "இருக்கட்டும், உங்களைப் பின்னால் விசாரித்துக் கொள்ளுகிறேன். ஓடக்காரா! நான் இப்போது கேட்பதற்கு மறுமொழி சொல்லு. ஏன் தலையைக் குனிந்து கொள்கிறாய்? நிமிர்ந்து என்னைப் பார்த்து, உண்மையைச் சொல்லு. நமது சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகக் கலகம் செய்யும்படி விக்கிரம இளவரசரை முக்கியமாகத் தூண்டிவிட்டது யார்....?"
பொன்னன் பளிச்சென்று நிமிர்ந்து பார்த்து "பிரபோ! இதோ உங்கள் முன்னால் நிற்கிறாரே, இந்த மாரப்ப பூபதிதான்!" என்றான்.
பொன்னனுடைய குற்றச்சாட்டைக் கேட்டபோது மாரப்பன் திடீரென்று ஆயிரம் தேள் கொட்டியவனைப்போல் துடிதுடித்தான். பொன்னனைப் பார்வையாலேயே எரித்து விடுகிறவனைப்போல் ஒருகண நேரம் கடூரமாய்ப் பார்த்தான். பின்னர் திரும்பித் தலையைக் குனிந்து கொண்டான்.
"பூபதி! இதற்கு என்னச் சொல்கிறாய்?" என்று சக்கரவர்த்தி இடிக் குரலில் கேட்கவும், மாரப்பனுக்கு மறுபடியும் தூக்கிவாரிப்போட்டது. ஆத்திரத்தினாலும், கோபத்தினாலும் அவனுக்கு அழுகை வந்துவிட்டது.
"பிரபோ! இவன் சொல்வது பொய், பொய், பொய்! இளவரசனை நான் தூண்டிவிடவில்லை. இவர்களுடைய சதியாலோசனையைப் பற்றி நன்றாய்த் தெரிந்து கொள்வதற்காகச் சிறிது காலம் இவர்களுக்கு உதவியாயிருப்பது போல் நடித்தேன்; அவ்வளவுதான். உடனுக்குடனே, தங்களுடைய தளபதி அச்சுதவர்ம பல்லவரிடம் எல்லா விவரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தேன்...."
அப்போது, "பாவி! துரோகி!" என்ற மெல்லிய பெண் குரல் கேட்டது.
சக்கரவர்த்தி "யார் அது?" என்று அதட்டிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தார். அந்தக் குரல் வள்ளி நின்ற திசையிலிருந்துதான் வந்தது. ஆனாலும் வள்ளி சக்கரவர்த்தி அந்தப் பக்கம் பார்த்தபோது பரம சாதுவைப் போல் நின்றாள்.
மாரப்பன் சிறிது தைரியமடைந்து, "பிரபோ! விக்கிரமனை இந்த அடிமைத் தூண்டிவிடவில்லை; இது சத்தியம். அவனைத் தூண்டிவிட்டது யார் என்றும் எனக்குத் தெரியும்! சத்தியமாய்த் தெரியும்! சமூகத்தில் கட்டளை பிறந்தால் சொல்லுகிறேன்" என்றான்.
"சொல்லு; தைரியமாய்ச் சொல்லு!" என்றார் சக்கரவர்த்தி.
"ஜடாமகுடதாரியான ஒரு சிவனடியார் அருள்மொழி ராணியையும் விக்கிரமனையும் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உண்மையில் சிவனடியார் இல்லை; கபட சந்நியாசி. அவர் தான் விக்கிரமனை இந்தப் பயங்கரமான காரியத்தில் தூண்டிவிட்டார்."
இதுவரை மௌனமாய் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவி இப்போது குறுக்கிட்டு "உமக்கு எப்படித் தெரியும்? அந்த கபட சந்நியாசியை நீர் பார்த்திருக்கிறீரா?" என்று கேட்டாள்.
"ஆமாம், தேவி! இந்தக் கண்களாலேயே பார்த்திருக்கிறேன். இதோ சாதுபோல் நிற்கிறானே, இந்தக் ஓடக்காரனுடைய குடிசையில்தான் அவர்கள் அடிக்கடி சந்தித்துச் சதியாலோசனை செய்து வந்தார்கள். அந்தக் கபட சந்நியாசியின் சடையைப் பிடித்துக் குலுக்கி அவனை இன்னாரென்று வெளிப்படுத்த நான் பிரயத்தனம் செய்தேன். இந்தப் பொன்னனும் வள்ளியும் தான் அதைக் கெடுத்தார்கள்."
"என் பேச்சை எடுத்தால் நாக்கை அறுத்துவிடுவேன்" என்று வள்ளி மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
சக்கரவர்த்தி அவளைப் பார்த்துப் புன்னகையுடன், "பெண்ணே! அடிக்கடி உன் உதடுகள் அசைகின்றன. ஆனால் வார்த்தை எதுவும் வெளியில் வரக் காணோம்! உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமானால் பயப்படாமல் சொல்லு!" என்றார்.
உடனே வள்ளி சக்கரவர்த்தியைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு, "பிரபோ! இவர் சொல்வதெல்லாம் பொய். சிவனடியார் இளவரசரைத் தூண்டிவிட்டார் என்பது பெரும் பொய். சாமியார் பெரிய மகான், அவர் அடிக்கடி வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தபடியால் தான் எங்கள் மகாராணி இன்னும் உயிரோடிருக்கிறார். அவர் இளவரசரை "இந்தக் காரியம் வேண்டாம், வேண்டாம்" என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார். இளவரசருடைய மனத்தை மாற்ற முடியவில்லை. சாமியார் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்துகிறவர்கள் பாவிகள், சண்டாளிகள், அவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள்...." என்றாள்.
"நிறுத்து பெண்ணே! போதும் சாபம் கொடுத்தது!" என்று சக்கரவர்த்தி சொல்லி, குந்தவியை நோக்கிப் புன்னகையுடன் "பார்த்தாயா அம்மா!" என்றார்.
"பார்த்தேன்; அந்தச் சாமியாரின் மந்திரத்தில் இந்தப் பெண்ணும் நன்றாய் மயங்கிப் போயிருக்கிறாள்! இவர்களில் ஒருவராவது முழுதும் உண்மை சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை அப்பா! ஒவ்வொருவரும் மனதில் ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு பேசுகிறார்கள்" என்றாள் குந்தவி.
அப்போது சக்கரவர்த்தி மாரப்ப பூபதியைப் பார்த்து, "பூபதி! உன்மேல் ஏற்பட்ட சந்தேகம் தீரவில்லை. போனால் போகிறதென்று இந்தத் தடவை மன்னித்து விடுகிறேன். சேனாதிபதி பதவிக்கு நீ இப்போது ஆசைப்படுவது வீண். அந்தப் பதவிக்கு உன்னுடைய தகுதியை இனிமேல் தான் நீ நிரூபிக்க வேண்டும். அதுவரையில் உன் பேரில் வேறு குற்றம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் தெரிந்ததா, இப்போது நீ போகலாம்!" என்று மிகக் கடுமையான குரலில் கூறினார். மாரப்ப பூபதி சப்த நாடியும் ஒடுங்கியவனாய் வெளியேறினான்.
அந்தச் சமயத்தில் ஒரு சேவகன் உள்ளே வந்து சக்கரவர்த்திக்கு அடிபணிந்து ஒரு ஓலையை நீட்டினான். சக்கரவர்த்தி அதை வாங்கிப் படித்ததும் "ஓடக்காரா! நீயும் உன் மனைவியும் இப்போது போகலாம், பிறகு உங்களைக் கவனிக்கிறேன். உன் மனைவியை அந்தச் சிவனடியார் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாயிருக்கச் சொல்லு! அவருடைய மந்திரத்தில் அவள் ரொம்பவும் மயங்கியிருக்கிறாள்போல் தோன்றுகிறது" என்றார்.
அப்போது வள்ளியின் முகத்திலே நாணத்தின் அறிகுறி தோன்றியது. திடீரென்று அது புன்னகையாக மாறியது.
தலை குனிந்த வண்ணம் சக்கரவர்த்தியைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவள் பொன்னனைத் தொடர்ந்து வெளியே சென்றாள்.
சக்கரவர்த்தி அவர்கள் வெளியேறிய திசையைப் பார்த்த வண்ணம் "நானும் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன் இந்த வள்ளியைப்போல்..." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.
"அது இருக்கட்டும், அப்பா! ஏதோ ஓலை வந்ததே? அது என்ன!" என்று குந்தவி கேட்டாள்.
"போலிச் சிவனடியாரைப்பற்றி இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தோமல்லவா? உண்மையான சிவனடியார் இப்போது வருகிறார். நகருக்கு வெளியே சென்று அவரை நாம் எதிர்கொண்டழைத்து வரவேணும்" என்றார் சக்கரவர்த்தி.
"அவர் யார், அப்படிப்பட்ட உண்மையான சிவனடியார்? அப்பா! ஒருவேளை நமது அப்பர் பெருமானோ? அவரைப் பற்றி அன்று கொஞ்சம் அபசாரமாக நினைத்தேன். அடிகளை மறுபடியும் தரிசித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றாள் குந்தவி.
"குழந்தையாகிய நீ அபசாரமாக நினைத்ததனால் அவருக்கு என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது? எப்போதும் சிவானந்தத்திலே திளைத்திருக்கும் மகான் அவர். கொஞ்சங்கூட அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம். குழந்தாய்! இப்போது வரப்போகிறவர் அப்பர் பெருமான் அல்ல; பரஞ்சோதி அடிகள்."
"யார்? உங்களுடைய பழைய சேனாதிபதியா? உங்களுடன் வாதாபிக்கு வந்து புலிகேசியை வெல்ல உதவி புரிந்தவரா?"
"அவர் உதவி புரியவில்லை, குந்தவி! அவர்தான் புலிகேசியை வென்றவர்; புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்பிய சளுக்கர் படைகளைத் துவம்சம் செய்தவர். அந்த மகாவீரர்தான் இப்போது அரையில் உடுத்திய துணியுடன், விபூதி ருத்திராட்சதாரியாய் ஸ்தலயாத்திரை செய்து கொண்டு வருகிறார். தமது பெயரைக் கூட அவர் மாற்றிக் கொண்டு விட்டார். "சிறுத் தொண்டர்" என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறார்."
"அவர் ஏன் சேனாதிபதி பதவியை விட்டார்? அவருக்கு ரொம்ப வயதாகிவிட்டதா?" என்று குந்தவி கேட்டாள்.
"இல்லை; அவருக்கு அப்படி ஒன்றும் வயசாகவில்லை. அவர் சேனாதிபதி பதவியை விட்ட காரணத்தை இன்னொரு சமயம் சொல்கிறேன். இப்போது அவர் வரும் நேரம் ஆகிவிட்டது" என்றார் சக்கரவர்த்தி.
பிறகு, "குந்தவி! பரஞ்சோதியுடன் கூட அவருடைய தர்மபத்தினியும் யாத்திரை செய்து வருகிறார். அவர்களை எதிர்கொண்டழைத்து வரலாம்; நீயும் வருகிறாயா?" என்று கேட்டார்.
"அவசியம் வருகிறேன், அப்பா! அவர்களைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு எத்தனையோ நாளாக ஆசை!" என்றாள் குந்தவி.
உறையூருக்கு மேற்கே காவேரி நதியிலிருந்து சற்றுத் தூரத்தில் ஒரு அழகான தாமரைக்குளம் இருந்தது. அந்தி நேரமானபடியால், அத்தடாகத்தை அழகு செய்த தாமரை மலர்கள் எல்லாம் அச்சமயம் இதழ் கூம்பியிருந்தன. மேல் வானத்தைப் பொன்மயமாகச் செய்து கொண்டிருந்த சூரியன் சுழலுகின்ற தங்கத் தகட்டைப்போல் அதிவிரைவாய்க் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.
தாமரைக் குளத்தைச் சேர்ந்த படித்துறை மண்டபத்தில் சக்கரவர்த்தியும் அவருடைய செல்வப் புதல்வியும் வந்து தங்கியிருந்தார்கள். மண்டபத்துக்குச் சற்றுப் பின்னால் வேல்பிடித்த வீரர்கள் ஒதுங்கி நின்றார்கள். பட்டத்து யானையும், புரவிகளும் சிறிது தூரத்தில் காணப்பட்டன.
மேற்குத் திக்கிலிருந்து காவேரி ஆற்றின் ஓரமாக வந்த சாலையைச் சக்கரவர்த்தி ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தார்.
குந்தவி தடாகத்தின் படிக்கட்டில் இறங்கிக் கீழ்ப்படியில் வந்து நின்றாள். தளதளவென்று விளங்கிய தாமரை இலைகளின் வனப்பையும், கூம்பிய தாமரை மலர்கள், மொட்டுகள் இவற்றின் அழகையும் அவள் சிறிது நேரம் பார்த்து மகிழ்ந்தாள். தாமரை இலைகளின் மேலே முத்து முத்தாகத் தண்ணீர்த் துளிகள் நின்றதையும், இளங்காற்றில் தாமரை இலைகள் அசைந்தபோது அந்த முத்துக்கள் அங்குமிங்கும் ஓடிச் சில சமயம் பிரிந்தும் விளையாடியதையும் பார்த்துக் களித்தாள். அப்போது தடாகத்தின் தெளிந்த நீரில் பிரதிபலித்த அவளுடைய உருவமானது தற்செயலாக அவள் பார்வையைக் கவர்ந்தது.
சந்தன நிறத் தந்தத்தினால் செய்தவை போல் விளங்கிய குந்தவியின் அழகிய நீண்ட புஜங்களும் பங்கஜ மலர்ப் பாதங்களும் பளிங்கு போல் தெளிந்த தண்ணீரிலே பிரதிபலித்தபோது பன்மடங்கு வனப்பும் சோபையும் பெற்று விளங்கின.
குந்தவி தன்னுடைய பிரதி பிம்பத்தைத் தானே பார்த்த வண்ணமாகச் சற்றுநேரம் ஸ்தம்பித்து நின்றாள்.
அந்தக் காட்சி, கைதேர்ந்த சிற்பி ஒருவன் செய்த அற்புத அழகு வாய்ந்த தந்தப்பதுமை ஒன்றை உயர்ந்த ஆடை ஆபரணங்களினால் அலங்கரித்து அக்குளக்கரையில் நிறுத்தி வைத்திருப்பது போல் தோன்றியது.
திடீரென்று தந்தப் பதுமைக்கு உயிர் வந்ததுபோல் குந்தவி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அவளுடைய மேனி அழகைப்பற்றி அவளிடம் ஏற்கெனவே பலர் பிரஸ்தாபித்ததுண்டு. தாய்மார்கள் சொல்லியிருக்கிறார்கள்; தோழிகள் அடிக்கடி கூறியிருக்கிறார்கள்; சித்திரக்காரர்களும் சிற்பிகளும் வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் குந்தவி மேற்படி பாராட்டுதல்களைப் பொருட்படுத்தியதேயில்லை. ஆனால், இப்போது அவள் தன் மேனி அழகைப் பற்றித் தானே சிந்திக்கத் தொடங்கினாள். தோழிகள் அழகைப் பற்றிச் சொல்வதெல்லாம் வெறும் புகழ்ச்சியல்ல, விளையாட்டுமல்ல; உண்மைதான். ஆனால், ஆனால்...? "இந்த அழகினாலே என்ன பிரயோஜனம்?" என்று அவளுடைய உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. அடுத்தாற்போல் "ஆகா! அந்த இராஜகுமாரனுக்கு இந்த உறையூர்தானே? அவன் மட்டும் இப்போது என் அருகில் நின்று கொண்டிருந்தால்....?" என்னும் எண்ணம் உண்டாயிற்று. இதை அடுத்து இன்னதென்று விவரிக்க முடியாத மனக்கிலேசம் ஏற்பட்டது.
"இந்த அலங்காரமெல்லாம் என்னத்திற்காக? நாளை முதல் ஆபரணம் ஒன்றும் அணிந்து கொள்ளக்கூடாது. இவற்றினால் என்ன பிரயோஜனம்? அழகு அதிகமாகி விடுகிறதா! இருக்கிற அழகு போதுமே?" என்றெல்லாம் சிந்தனைகள் தோன்றின. "இப்போதே இதையெல்லாம் எடுத்து எறிந்துவிடுகிறேனே! என்று தலையில் சூடியிருந்த ஆபரணங்களை முதலில் எடுக்கப் போனாள்.
அப்போது திடீரென்று அவளுடைய தந்தையின் குரல், "குந்தவி! இங்கே ஓடி வா!" என்று விரைந்து அழைத்தது காதில் விழுந்தது. தன்னை மறந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த குந்தவி, திடுக்கிட்டுத் தந்தை இருந்த பக்கம் நோக்கினாள். "அதோ பார் குந்தவி, சிவிகை வருகிறது! என் அருமைச் சிநேகிதர் வருகிறார்! பல்லவ சேனாதிபதி வருகிறார்! சளுக்கரை முறியடித்துப் புலிகேசியைக் கொன்ற மகா வீரர் வருகிறார்! உறையூருக்கு நாம் இந்தச் சமயம் வந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று!..."
இவ்விதம், ஊரிலிருந்து உறவினர் வரக்காணும், சின்னஞ்சிறு குழந்தையைப்போல் சக்கரவர்த்தி அளவற்ற உற்சாகத்துடன், சொல்லிக்கொண்டே போனார். அவர் அவ்வளவு குதூகலம் கொண்டதைக் குந்தவி அதற்கு முன்னால் கண்டதேயில்லை.
சிறிது நேரத்துக்கெல்லாம் சிவிகை தாமரைத் தடாகத்தின் அருகில் வந்துவிட்டது. மண்டபத்தில் சக்கரவர்த்தி நிற்பதைக் கண்டதும் ஏவலாளர் சிவிகையை விரைந்து கீழே இறக்கினார்கள். அந்தச் சிவிகையிலிருந்து, தலையையும் முகத்தையும் நன்கு முண்டனம் செய்தவரும், விபூதி ருத்திராட்ச தாரியுமான பெரியவர் ஒருவர் இறங்கினார். அவருடன் ஒரு மூதாட்டியும் இறங்கினார்.
அந்தப் பெரியவர் "அரசே! என்று சொல்லிக் கொண்டு மண்டபத்தை நோக்கி விரைந்து வந்தார். சக்கரவர்த்தியும் "சேனாதிபதி!" என்று சொல்லிக் கொண்டு மண்டபத்திலிருந்து விரைவாகக் கீழே இறங்கி வந்தார்.
சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்த வண்ணமாகக் கூப்பிய கரத்துடன் நின்றார்கள். இருவருடைய கண்களிலும் நீர் ததும்பியது. பிறகு, ஏக காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் நெருங்கி வந்து ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அப்போது இருவருடைய கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகி வழிந்து அருவியாக ஓடத் தொடங்கியது.
இதற்கிடையில் சிவிகையிலிருந்து இறங்கிய மூதாட்டியை நோக்கிக் குந்தவி வந்தாள். அவருக்குக் குந்தவி நமஸ்காரம் செய்ய யத்தனிக்க, அந்த அம்மையார் அதற்கு இடங்கொடாமல் அவளைத் தம்முடன் சேர்த்து அணைத்துக் கொண்டு, "குழந்தாய்! பிறைசூடும் பெருமானுடைய அருளால் உனக்கு எல்லா மங்களமும் உண்டாகட்டும். உன் மனதிற்கிசைந்த மணவாளனை அடைந்து தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்!" என்று ஆசீர்வதித்தார். அவர் இவ்விதம் ஆசிகூறியபோது குந்தவியின் தேகத்தில் புளகாங்கிதம் உண்டாயிற்று.
பரஸ்பரம் ஆலிங்கனம் செய்து கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்த சக்கரவர்த்தியும், அவருடைய பழைய சேனாதிபதியும் சிறிது நேரத்துக்கெல்லாம் சற்று விலகி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
"உறையூருக்கு நான் இச்சமயம் வந்தது எவ்வளவு அதிர்ஷ்டம்! இல்லாவிட்டால் உங்களைப் பார்த்திருக்க முடியாதல்லவா? நீங்கள்தான் என்னை அடியோடு மறந்து விட்டீர்கள்; காஞ்சிக்கு வருவதேயில்லை!" என்றார் சக்கரவர்த்தி.
"அரசே! தங்களை நான் மறந்து விடுவதா? தென்னாட்டில் நான் தரிசித்த ஒவ்வொரு ஸ்தலத்திலும் தங்களுடைய நினைவு எனக்கு உண்டாயிற்று. இந்தத் திவ்வியக்ஷேத்திர யாத்திரையில் தாங்களும் என்கூட இல்லையே என்று எவ்வளவோ வருந்தினேன். கடைசியாகப் பழனிமலையில் எழுந்தருளியிருக்கும் ஆண்டவனைத் தரிசித்தபோதும் தங்களுடைய நினைவுதான் எனக்கு. அவருடைய சந்நிதியில் நான் விரும்பியது உடனே நிறைவேறி விட்டது. இங்கே வந்ததும் தங்களைப் பார்த்தேன்..."
"சேனாதிபதி!"
"பிரபோ! என்னை அவ்விதம் அழைக்க வேண்டாம்!"
"பரஞ்சோதி!"
"அது என் பூர்வ ஜன்மப் பெயர்! அதை இப்போது கேட்கப் பிடிக்கவில்லை."
"கேளும், சிவபக்தரே!"
"அவ்வளவு பெருமைக்கு நான் உரியவன் அல்ல பிரபு! இன்று இந்நாட்டில் மகான்களான சிவபக்தர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொண்டு புரியும் சிறுத்தொண்டன் நான்!"
"கேளும் சிறுத்தொண்டரே! நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால்..."
"சொல்லுங்கள் அரசே!"
"இந்த உலகத்தில் நான் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் இன்னும் இரண்டு பாக்கியிருக்கின்றன. அவற்றை முடித்துவிட்டால், நானும் உங்களைப்போல் துறவு பூண்டு ஸ்தல யாத்திரை தொடங்கி விடுவேன். ஆனால் உங்களைப் போல் தலையை முண்டனம் செய்து கொள்ளமாட்டேன். பார்த்தவர்கள் வசிஷ்டரோ, விசுவாமித்திரரோ அல்லது அகஸ்திய முனிவர்தானோ - என்று பிரமிக்கும்படியான ஜடாமகுடம் தரிப்பேன்!" என்று சொல்லிச் சக்கரவர்த்தி நகைக்க சிறுத்தொண்டரும் கூட நகைத்தார்.
அவ்விருவருடைய சிரிப்பின் ஒலியும், அந்தி நேரத்தில் கூட்டை நோக்கிப் பறந்த பறவைகளின் குரல்களுடன் கலந்து நாற்றிசையும் பரவி எதிரொலி செய்தன.
அன்றிரவு ஏறக்குறைய ஒன்றரை ஜாமம் ஆனபோது உறையூர் நகரில் நிசப்தம் குடிகொண்டது. வீதிமுனைகளில் கல் தூண்களின்மேல் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகள் ஒவ்வொன்றாக மங்கி அணையத் தொடங்கின.
உறையூருக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையில் சென்ற காவேரி நதியின்மேல் காரிருள் படர்ந்திருந்தது. அன்று சுக்கிலபட்சத்துச் சதுர்த்தி. போதாதற்கு வானத்தைக் கருமேகங்கள் மூடியிருந்தன. இரண்டொரு மழைத்தூறலும் விழுந்தது.
அத்தகைய காரிருளில் காவேரி நதியின் ஓரமாக ஜலத்தைக் கிழித்துக் கொண்டு படகு செல்லும் சலசலப்புச் சத்தம் கேட்டது. கொஞ்சம் உற்றுப் பார்த்தோமானால், ஒரு சிறு படகு கிழக்கேயிருந்து மேற்கே கரையோரமாகப் போவதைக் காணலாம். படகில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பதும் மங்கலாகத் தெரிகிறது. கரையில் நின்ற வண்ணம் ஒருவர், படகைக் கயிற்றினால் இழுத்துக் கொண்டு போவதும் புலப்படுகிறது.
இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்த்தோமானால், அவர்கள் இருவரும் நமக்குத் தெரிந்த புள்ளிகள்தான் என்பதைக் காண்கிறோம். வேறு யாருமில்லை; கரையிலிருந்து படகை இழுத்துக் கொண்டு போகிறவன் படகோட்டி பொன்னன். படகில் உட்கார்ந்திருப்பது வள்ளிதான். வள்ளியின் கையில் ஒரு சிறு கூடை இருக்கிறது. அதற்குள்ளே அகல் விளக்கு ஒன்று மினுக் மினுக்கென்று எரிகிறது. அது அணைந்துவிடாமல் வள்ளி தன்னுடைய சேலைத் தலைப்பால் மறைத்துக் கொண்டு ஜாக்கிரதையாக எடுத்து வருகிறாள்.
அந்தக் கும்மிருட்டில் பிரவாகத்துக்கு எதிராகப் படகை மேற்கு நோக்கி இழுத்துக் கொண்டு போவது இலேசான காரியமில்லை. வழியில் படித் துறைகளும் நதிக்கரை மண்டபங்களும், ஓங்கி வளர்ந்து ஆற்றில் கவிந்திருந்த விருட்சங்களும் குறுக்கிட்டன. ஆனாலும் பொன்னன் சிறிதும் தளர்ச்சியடையாமல் மேற்படி தடங்கல்களையெல்லாம் தாண்டிப் படகை இழுத்துக்கொண்டு போனான்.
படகுக்குப் பின்னால் சுமார் முந்நூறு அடி தூரத்தில் ஒரு நெடிய உருவம் வந்து கொண்டிருந்தது. படகு நின்ற போதெல்லாம் அதுவும் நின்றது. படகு மேலே சென்றால் அதுவும் தொடர்ந்து வந்தது. கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் இந்த உருவமும் நமக்குத் தெரிந்த மனிதனின் உருவந்தான் என்பதைக் காண்கிறோம். ஆமாம்; மாரப்ப பூபதிதான் அப்படிப் பொன்னனுடைய படகை நள்ளிரவில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.
அவனுக்குப் பின்னால் இன்னும் கொஞ்ச தூரத்தில் அதே நதிக்கரை ஓரமாக இன்னொரு உருவம் சத்தம் செய்யாமல் வந்து கொண்டிருந்தது. ஜடா மகுடம் தரித்த சந்நியாசியின் உருவம் அது. ஆம், போர்க்களத்தில் பார்த்திபனுக்கு வரமளித்தவரும், பொன்னன் குடிசையில் நாம் சந்தித்தவருமான அதே சிவனடியார்தான்!
ஏறக்குறைய நள்ளிரவு ஆன சமயத்தில், பொன்னன் படகை நிறுத்தி மிகவும் மெல்லிய குரலில், "வள்ளி! இறங்கு! வந்து விட்டோம்" என்றான்.
அதே சமயத்தில் ஸ்ரீரங்கநாதரின் ஆலயத்தில் அர்த்த ஜாம பூஜைக்குரிய மணிச் சத்தம் 'ஓம் ஓம்' என்று கிளம்பி, நள்ளிரவின் நிசப்தத்தை மீறிக்கொண்டு, வானவெளியெங்கும் வியாபித்து எதிரொலி செய்தது.
பொன்னனுக்கும் வள்ளிக்கும் உடம்பு நடுங்கிற்று, "நல்ல சகுனம், வள்ளி! காரியம் ஜெயந்தான்! சீக்கிரம் இறங்கு!" என்றான் பொன்னன்.
வள்ளி விளக்குக் கூடையை ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு படகிலிருந்து இறங்கினாள்.
பொன்னன் படகை அங்கிருந்த மரத்தின் வேரில் கட்டினான்.
பிறகு இருவரும் கரைமேல் ஏறினார்கள். அங்கே ஒரு நீண்ட மதிற்சுவர் இருந்தது. அந்தச் சுவரில் ஒரு வாசற்படி காணப்பட்டது. அதன் கதவு பூட்டியிருந்தது. பொன்னன் தன் மடியிலிருந்து ஒரு கொத்துச் சாவியை எடுத்து ஒரு சாவியினால் பூட்டைத் திறந்தான்.
இருவரும் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள்.
'கம்'மென்று செண்பகப் பூவின் நறுமணம் வந்தது.
"பார்த்தாயா, வள்ளி! செண்பகப்பூவின் வாசனையை? இந்த அரண்மனைத் தோட்டத்துக்குள் இதற்கு முன் நீ வந்தது கிடையாதே?" என்றான்.
"இரையாதே!" என்றாள் வள்ளி.
பொன்னன் மறுபடியும் கதவைச் சாத்தி உட்புறம் தாளிட்டான். "பயப்படாதே! என் பின்னோடு வா!"
"நீ சத்தம் போடுவதில்தான் எனக்குப் பயம்."
இருவரும் அந்தச் செண்பகத் தோட்டத்துக்குள் புகுந்து சென்றார்கள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் அதே மதில் வாசற்படியண்டை மாரப்ப பூபதி வந்தான். கதவின் வெளிப்புற நாதாங்கியை இழுத்து மாட்டினான்.
பிறகு அவன் நதியில் இறங்கிப் பொன்னன் மரத்தின் வேரில் கட்டியிருந்த படகை அவிழ்த்து ஆற்றோடு மிதந்து போகும்படி இழுத்துவிட்டான்.
பின்னர் மதிற்சுவர் ஓரமாக மிக விரைவாய் நடந்து சென்றான்.
படகு கரையோரமாக மிதந்து கொண்டு சிறிதுதூரம் போயிற்று. அங்கே வந்து கொண்டிருந்த சிவனடியார் அதைப் பிடித்து நிறுத்தினார். நிறுத்திய இடத்துக்கு அருகிலிருந்து ஒரு பெரிய விருட்சத்தின் வேரில் அதை இழுத்துக் கட்டினார்.
மறுபடியும் மேல்நோக்கிச் சென்று அதே மதிற்சுவரின் வாசற்படிக்கு வந்தார். மாரப்ப பூபதி இழுத்துப் போட்ட நாதாங்கியைக் கழற்றிவிட்டார்.
மீண்டும் திரும்பிச் சென்று படகு கட்டியிருந்த மரத்துக்குப் பின்னால் அமர்ந்தார்.
அச்சமயம் நதியின் அக்கரையில் அநேக தீவர்த்திகளுடன் ஒரு கும்பல் காணப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தத் தீவர்த்திகள் நதியின் நடு மத்திக்கு வந்துவிட்டன. பல படகுகள் நதியைக் கடந்து வந்து கொண்டிருந்தன என்று தெரிந்தது.
சிவனடியார் மறைந்திருந்த மரத்துக்குச் சிறிது கிழக்கே படகுகள் கரைக்கு வந்து சேர்ந்தன. படகுகளிலிருந்து பலர் இறங்குகிறது தீவர்த்திகளின் ஜோதியில் தெரிந்தது. அவர்களில் சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், குந்தவி தேவியும் காணப்பட்டனர். சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக உறையூரை ஆண்டு வந்த தளபதி அச்சுதவர்மர், அவர்கள் எல்லாருக்கும் முன்னால் சென்றார். மற்றப் பரிவாரங்களும் ஏவலாளர்களும் பின்னால் வந்தார்கள்.
ஸ்ரீரங்கநாதரின் அர்த்த ஜாம ஆராதனையைத் தரிசித்து விட்டுத் திரும்பிய அந்தப் பக்தர் குழாத்தில் சக்கரவர்த்தி நரசிம்மவர்மரை மட்டும் காணவில்லை. காவேரிக் கரையை ஒளிமயமாக்கிய தீவர்த்திகளுடன் அந்தக் கும்பல் படகிலிருந்து கரையில் இறங்கியபோது சிவனடியார் தாம் இருந்த மரத்தின் மறைவில் இன்னும் நன்றாய் மறைந்து கொண்டு அசையாமல் நின்றார். அவர் மூச்சுவிடும் சத்தம்கூட அப்போது கேட்கவில்லை.
தீவர்த்திகளுடனே அந்தக் கும்பல் நகருக்குள் புகுந்து மறைந்த பிறகு காவேரி நதிதீரத்தில் முன்னால் இருந்ததை விட அதிகமான கனாந்தகாரம் குடிகொண்டது.
சிவனடியார் மரத்தின் மறைவிலிருந்து மறுபடியும் வெளிவந்து நதிக்கரையில் படகின் அருகில் அமர்ந்தார். அந்தக் காரிருளிலுங்கூட மேற்கூறிய மதில் வாசலின் பக்கம் அவருடைய கண்கள் கூர்மையாகப் பார்த்தன. அவருடைய செவிகளும் கதவு திறக்கப்படும் சத்தத்தை எதிர்நோக்கிக் கூர்மையாய்க் கேட்கலாயின.
பொன்னனையும் வள்ளியையும் நள்ளிரவில் மாரப்பபூபதி தொடர்ந்துபோன காரணம் என்ன? இதை அறிந்து கொள்வதற்கு நாம் மறுபடியும் அன்று சாயங்கால நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும்.
சக்கரவர்த்தியின் சந்நிதியிலிருந்து வெளியேறியபோது மாரப்பன் அளவில்லாத மனச்சோர்வு கொண்டிருந்தான். சாம்ராஜ்யத்திற்காகத் தான் செய்த சேவையெல்லாம் இவ்விதம் பிரதிபலன் இல்லாமற் போகும் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. பார்த்திபன் போர்க்களத்தில் மாண்டு ஏறக்குறைய ஏழு வருஷமாயிற்று. அந்தப் போரில் தான் கலந்து கொள்ள மறுத்ததற்காகவே உறையூர்ச் சிம்மாசனம் தனக்குக் கிடைக்குமென்று மாரப்பன் எதிர்பார்த்தான்.
அந்த ஆசை நிறைவேறவில்லை. அதனால் அதிருப்தியோ, வெறுப்போ கொண்டதாக அவன் காட்டிக் கொள்ளவில்லை. பல்லவ சாம்ராஜ்யத்தில் அவனுடைய பக்தி குன்றியதாகவும் தெரியப்படுத்தவில்லை. தன்னுடைய உண்மையான சாம்ராஜ்ய சேவைக்கு ஒரு நாள் நிச்சயம் பலன் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் அவன் வருஷக்கணக்காகக் காத்திருந்தான். கடைசியாக, விக்கிரமனுடைய சதியாலோசனையைப்பற்றி அவனுக்குச் செய்தி தெரிந்தபோது, தளபதி அச்சுதவர்மரிடம் உடனே சென்று தெரியப்படுத்தினான்.
அதன் பலனாக அச்சதியாலோசனையை முளையிலேயே கிள்ளி எறிவது சாத்தியமாயிற்று. இதன் பிறகாவது, தன்னுடைய சேவைக்குத் தகுந்த சன்மானம் கிடைக்குமென்று அவன் நிச்சயமாக நம்பியிருந்தான். அவன் ஆசைப்பட்டது பல்லவ சக்கரவர்த்திக்குக் கப்பம் செலுத்திக் கொண்டு உறையூரை ஆளும் பதவிதான். இது உடனே கிடைக்காவிட்டாலும், தான் முன்னர் வகித்து வந்த சேனாதிபதி பதவியாவது கிடைக்குமென்று நினைத்தான். ஆனால், நடந்தது என்ன? சக்கரவர்த்தி தன் பேரிலேயே சந்தேகம் கொள்ளலாயிற்று. கேவலம் ஒரு ஓடக்காரன் - அவன் பெண்டாட்டி - இவர்கள் முன்னிலையில் சோழ நாட்டுப் பட்டத்துக்கு உரியவனான தான் அவமானப்பட நேர்ந்தது.
இதை நினைத்தபோது மாரப்பனுடைய நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. "இது என்ன உலகம்? இது என்ன வாழ்வு?" என்று உலகத்தையே வெறுக்கும் வழியில் மனம் திரும்பிற்று. எங்கே போகிறோமென்ற சிந்தனையே இல்லாதவனாய்க் குதிரைபோன வழியே போக விட்டுக் கொண்டிருந்தான். அறிவுமிக்கப் பிராணியான குதிரை நம் எஜமானனுடைய மனநிலையை உணர்ந்து மந்த நடையுடன் யதேச்சையாகப் போய்க் கொண்டிருந்தது. உறையூரின் வீதிகளில் அங்குமிங்குமாக அது சிறிது நேரம் சுற்றிவிட்டுக் கடைசியில் காவேரிக் கரையை அடைந்தது. பிறகு காவேரிக்கரைச் சாலையோடு கிழக்குத் திக்கை நோக்கிச் செல்லலாயிற்று.
சூரியன் அஸ்தமித்தது. அன்று சுக்கிலபட்சத்துச் சதுர்த்தியாதலால் மேற்குத் திசையில் நாலாம் பிறை தோன்றிற்று. வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய்த் தோன்றி மினுக்கத் தொடங்கின. சற்று நேரத்துக்கெல்லாம் வானவெளி முழுவதிலும் கோடிக்கணக்கான வைரங்களை வாரி இறைத்ததுபோல் நட்சத்திரங்கள் பொறிந்து கிடந்தன. மாரப்பன் இந்த வான விசித்திரம் ஒன்றையும் கவனியாமல் ஏதேதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அரைக்காத வழி இவ்விதம் போனபிறகு அவன் திடுக்கிட்டுச் சுயநினைவு வந்தவனாய் எங்கே போகிறோமென்று ஆராய்ந்தான். இதற்குள் நாலாம்பிறைச் சந்திரன் மேற்கு வானத்தின் அடிப்பாகத்துக்கு வந்துவிட்டது. குதிரையைத் திருப்பி உறையூர்ப் பக்கம் செலுத்தினான்.
உறையூர்க் கோட்டை வாசலைத் தாண்டி உள்ளே சிறிது தூரம் அவன் சென்றபோது, எதிரே அநேக தீவர்த்திகளுடனும், சங்கம் முதலிய வாத்திய முழக்கங்களுடனும் ஒரு கூட்டம் வருவதைக் கண்டான். கூட்டத்தின் மத்தியில் சிங்கக்கொடி பறந்ததைப் பார்த்தபோது, ஒருவேளை சக்கரவர்த்தி தன் பரிவாரங்களுடன் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்துக்குப் போகிறாரோ என்று நினைத்துச் சட்டென்று குதிரையிலிருந்து இறங்கிச் சாலை ஓரமாக அடக்க ஒடுக்கத்துடன் நின்றான்.
கூட்டம் அருகில் வந்தபோது அதில் சக்கரவர்த்தி இல்லையென்பது தெரிந்தது. தளபதி அச்சுதவர்மரும், அவருக்குப் பக்கத்தில் தலை மொட்டையடித்த ஒரு சாமியாரும் வந்து கொண்டிருந்தார்கள். அந்தச் சாமியார் திடகாத்திர தேகமுடையவராயும் முகத்தில் நல்ல தேஜஸ் உடையவராயுமிருந்தார். மாரப்பனுடைய மனத்தில் மின்னலைப் போல் ஒரு எண்ணம் உதித்தது. "ஒரு வேளை இவர் தான் அந்த ஜடா மகுடதாரியான கபட சந்நியாசியோ?" என்று நினைத்தான். அதே சமயத்தில் தளபதி அச்சுதவர்மரின் பார்வை மாரப்ப பூபதியின் மீது விழுந்தது. அவர் பூபதியைச் சமிக்ஞையினால் அருகில் அழைத்து, பக்கத்திலிருந்த சிறுத்தொண்டரை நோக்கி, "அடிகளே! இவன் யார் தெரிகிறதா? பார்த்திப மகாராஜாவின் சகோதரன் மாரப்ப பூபதி!" என்றார்.
சிறுத்தொண்டர் மாரப்பனை ஏற இறங்கப் பார்த்த வண்ணம், "அப்படியா? வெகு காலத்துக்கு முன்னால், மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் இவனைப் பார்த்திருக்கிறேன். இப்போது அடையாளம் தெரியவில்லை" என்றார்.
"விக்கிரமனுடைய சதியாலோசனையைக் கண்டுபிடித்துச் சொன்னது பூபதிதான். ஆனாலும் சக்கரவர்த்திக்கு ஏனோ இவன் பேரில் தயவு பிறக்கவில்லை!" என்றார் அச்சுதவர்மர்.
சிறுத்தொண்டர் இதற்கு ஒன்றும் சொல்லாமல் மறுபடியும் ஒரு தடவை மாரப்பனை ஏற இறங்கப் பார்த்து விட்டு மேலே போகத் தொடங்கினார்.
அவர்கள் இருவரும் அப்பால் சென்றதும், சேடிகள் சூழ்ந்த பல்லக்கு பின்னால் வருவதைப் பார்த்து, சக்கரவர்த்தியின் திருமகளாயிருக்கலாம் என்று மாரப்பன் ஊகித்துக் கொண்டு அவசரமாய் விலகிச் செல்லத் தொடங்கினான். ஆனால் என்ன ஆச்சரியம்! அதே இடத்தில் பல்லக்கு நின்றது. "பூபதி!" என்று மதுரமான பெண் குரலில் அழைப்பது கேட்டது.
மாரப்பன் திரும்பிப் பார்த்தபோது, பல்லக்கில் பூரண சந்திரனை ஒத்த முககாந்தியுடைய குந்தவி தேவியும், அவளருகே சிவபக்தியே உருவங்கொண்டது போன்ற மூதாட்டி ஒருவரும் இருக்கக் கண்டான். குந்தவி தேவிதான் தன்னை அழைக்கிறாள் என்று அறிந்ததும், மாரப்பனுடைய உள்ளத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் சேர்ந்தாற்போல் பொங்கின. ஒரு பக்கம் சங்கோசம் பிடுங்கித் தின்றது. பல்லக்கின் அருகில் சென்று, குந்தவியைப் பார்க்க விரும்பினானாயினும் கூச்சத்தினால் நிமிர்ந்து பார்க்க முடியாதவனாய்த் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
"பூபதி! இன்று என் தந்தை உன்னிடம் ரொம்பக் கடுமையாயிருந்துவிட்டார். அதற்காக நீ வருத்தப்பட வேண்டாம். உன் பேச்சில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எப்படியாவது அந்தப் போலி வேஷதாரிச் சிவனடியாரை மட்டும் நீ கண்டுபிடித்துவிடு. அப்புறம் உன்னுடைய கட்சியில் நான் இருப்பேன்!" என்று குந்தவிதேவி அனுதாபம் நிறைந்த குரலில் கூறியபோது, மாரப்பனுக்கு ஏற்பட்ட மனக் கிளர்ச்சியை வர்ணிக்கத் தரமன்று, அதல பாதாளத்திலிருந்து ஒரே அடியாகச் சொர்க்கத்துக்கு வந்துவிட்டதாகவே அவனுக்குத் தோன்றியது. சிறிது தலைநிமிர்ந்து, "அம்மணி! தங்களுடைய சித்தம் என்னுடைய பாக்கியம். அந்தப் போலிச் சிவனடியாரைக் கண்டுபிடிக்காமல் இனி மேல் நான் ஊணுறக்கம் கொள்ள மாட்டேன்" என்றான்.
"சந்தோஷம், கண்டுபிடித்ததும் எனக்கு உடனே தெரியப்படுத்து" என்று சொல்லிவிட்டு, குந்தவி தேவி பல்லக்கை மேலே செல்லும்படி கட்டளையிட்டாள்.
பல்லக்கும் பரிவாரங்களும் போன பிறகு மாரப்பன் சிறிது நேரம் ஸ்தம்பித்து நின்றான். தான் இப்போது கண்டதும் கேட்டதும் கனவல்ல என்று நிச்சயம் செய்து கொண்டபின், பக்கத்தில் வந்து நின்ற புரவியின் மீது மறுபடியும் ஏறிக்கொண்டான். அச்சுதவர்மருடன் சென்ற மொட்டைச் சாமியாரின் நினைவு வந்தது. வாதாபிப் போரில் வென்ற தளபதி பரஞ்சோதியைப் பற்றியும் மாரப்பன் கேள்விப்பட்டதுண்டு.
அந்நாளில் அவர் பார்த்திப மகாராஜாவுக்கு மிகவும் வேண்டியவர் என்றும் கேட்டிருந்தான். எனவே, அவர் தான் அவ்வப்போது ஜடாமகுட வேஷம் பூண்ட சிவனடியாராய்த் தோன்றி நடித்து வந்தாரோ, என்னவோ? ஏன் இருக்கக்கூடாது? - இதன் உண்மையை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால், எப்படி? பொன்னனையும் வள்ளியையும் சிநேகம் செய்து கொண்டு அவர்கள் மூலமாகத்தான் இதை நிறைவேற்ற வேண்டும். உடனே மாரப்ப பூபதிக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.
தான் அன்று தோணித் துறைக்குப் போகும் காவேரிக் கரைச் சாலையில் வெகு தூரம் போய் விட்டுத் திரும்பியிருந்தும், போகும்போதோ, வரும் போதோ பொன்னனையும் வள்ளியையும் சந்திக்கவில்லை. ஆகவே, அவர்கள் இன்றிரவு உறையூரில் தான் இருப்பார்கள். எங்கே தங்கியிருப்பார்கள்? வள்ளியின் பாட்டன் வீட்டில் ஒரு வேளை இருக்கலாமல்லவா!...
உடனே மாரப்பன் விரைவாகக் குதிரையை விட்டுக் கொண்டு சென்று தன் மாளிகையை அடைந்தான். வாசலில் நின்ற ஏவலாளர்களிடம் குதிரையைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து கால்நடையாகக் கிளம்பினான். இரவு சாப்பாட்டைப் பற்றிய நினைவே அவனுக்கில்லை. பசிதாகமெல்லாம் மறந்து போய்விட்டது. பொன்னனையும் வள்ளியையும் இன்றிரவு சந்திக்க வேண்டுமென்னும் ஆவலினால் உறையூர்க் கம்மாளத்தெருவை நோக்கி நடக்கலுற்றான்.
அப்போது அஸ்தமித்து ஒரு ஜாமத்துக்கு மேலிருக்கும். உறையூரின் வீதிகளில் ஜனங்களின் நடமாட்டம் பெரிதும் குறைந்திருந்தது. சந்தடி அநேகமாக அடங்கிவிட்டது. ஆலயங்களுக்குப் போய்விட்டுத் திரும்புவோர், தெருக்கூத்துப் பார்க்கச் செல்வோர், இராப் பிச்சைக்காரர் ஆகியவர்கள் அங்கொருவரும் இங்கொருவருமாய்க் காணப்பட்டனர். எங்கேயோ வெகுதூரத்தில், "அகோ வாரும் பிள்ளாய்! அரிச்சந்திர மகாராஜனே!" என்று விசுவாமித்திர முனிவர் அலறிக் கொண்டிருந்தார்!
மாரப்பன் வீதிகளின் ஓரமாகத் தன்னை யாரும் கவனிக்காதபடி நடந்து விரைந்து போய்க் கொண்டிருந்தான். அவன் கம்மாளத் தெருவை நெருங்கிய போது திடீரென்று பேய் பிசாசைக் கண்டவன் போல் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டான். ஏனென்றால் கம்மாளத்தெரு திரும்பும் முனையில் அப்போதுதான் அணைந்து கொண்டிருந்த அகல்விளக்கின் வெளிச்சத்தில் அவன் ஒரு உருவத்தைக் கண்டான். அது, அவனுடைய உள்ளத்தில் நிலை பெற்றிருந்த சிவனடியாரின் உருவந்தான். அந்த உருவத்தை அவன் பார்த்த அதே சமயத்தில் விளக்கு அணைந்து போய்விட்டது. திகைத்து நின்ற மாரப்ப பூபதி மறுகணம் அந்த உருவம் நின்ற இடத்தை நோக்கி விரைந்து ஓடினான். ஆகா! அந்தப் பொல்லாத வஞ்சக வேஷதாரியை அன்றிரவு கையும் மெய்யுமாய்ப் பிடித்துக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தித் திருமகளின் முன்னால் நிறுத்தினால் எவ்வளவு நன்றாயிருக்கும்? அந்த ஆவலுடனே அவன் ஓடினான். ஆனால், விளக்குத் தூணின் அருகில் சென்று பார்த்தபோது அங்கு ஒருவரையும் காணவில்லை. அந்த இடத்திலிருந்த நான்கு திசையிலும் நாலு வீதிகள் போய்க் கொண்டிருந்தன. அவற்றுள் எந்த வீதி வழியாகச் சிவனடியார் போயிருக்கக்கூடுமென்று தீர்மானிக்க முடியவில்லை.
மாரப்ப பூபதியின் உள்ளத்தில் சட்டென்று ஒரு யோசனை உதித்தது. ஆம்; தான் பார்த்த உருவம் அந்தச் சிவனடியாராயிருக்கும் பட்சத்தில், அவர் பொன்னனையும் வள்ளியையும் பார்ப்பதற்குத்தான் அங்கு வந்திருக்க வேண்டும். வீரபத்திர ஆச்சாரியின் வீட்டுக்குத்தான் போயிருப்பார். இன்னும் என்ன சதியாலோசனைக்காக அவர்கள் அங்கே கூடுகிறார்களோ, என்னவோ தெரியவில்லை. நரசிம்மவர்ம சக்கரவர்த்தி உறையூருக்கு வந்திருக்கும் சமயத்தில் இந்தச் சதியாலோசனை நடக்கிறது! ஆகா! குற்றம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் போதே மூன்று பேரையும் கையும் மெய்யுமாய்ப் பிடித்துவிட முடியுமானால்? சக்கரவர்த்திக்குத் தன் பேரில் அகாரணமாக ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து விடலாமல்லவா? பிறகு....
இப்படி சிந்தித்துக் கொண்டே மரப்பன் வீரபத்திர ஆச்சாரியின் வீட்டை நெருங்கியபோது, இன்னொரு அதிசயம் அவனுக்கு அங்கே காத்திருந்தது. அந்த வீட்டின் கதவைத் திறந்து கொண்டு இருவர் வெளியில் வந்தார்கள். மாரப்பன் ஒரு வீட்டுத் திண்ணை ஓரத்தில் தூண் மறைவில் நின்றபடி உற்றுக் கவனித்தான். வெளியே வந்தவர்கள் பொன்னனும் வள்ளியுந்தான். வள்ளி இடையில் வைத்திருந்த விளக்கைச் சேலைத் தலைப்பினால் மறைத்து எடுத்துக் கொண்டு வந்ததும் தெரிந்தது. அவர்கள் இருவரும் வீரபத்திர ஆச்சாரி வீட்டுக்குப் பக்கத்திலிருந்த சந்தின் வழியாக வடக்கு நோக்கிச் சென்றார்கள்.
"இதில் ஏதோ மர்மம் இருக்கிறது; இவர்கள் ஏதோ பெரிய சதித்தொழில் இன்று செய்யப்போகிறார்கள். இதில் அந்தச் சிவனடியாரும் சேர்ந்திருக்கிறார். அவர் முன்னால் போயிருக்கும் இடத்துக்கு இவர்கள் பின்தொடர்ந்து போகிறார்கள்" என்று மாரப்பன் தீர்மானித்துக் கொண்டான். சொல்ல முடியாத பரபரப்பும் உற்சாகமும் அவனை ஒரு புது மனிதனாகச் செய்துவிட்டன. பொன்னனும் வள்ளியும் போன வழியே, அவர்கள் கண்ணுக்கு மறையாத தூரத்தில் மாரப்பன் சிறிதும் ஓசை கேட்காதபடி நடந்து போனான்.
அந்தச் சந்து வழியே பொன்னனும் வள்ளியும் சென்று காவேரிக் கரையை அடைந்தார்கள். அங்கே ஒரு மரத்தின் வேரில் கட்டிப் போட்டிருந்த படகில் வள்ளி ஏறி உட்கார்ந்து கொண்டாள். கூடையைப் படகின் அடியில் வைத்துப் பத்திரமாய் மூடிக்கொண்டாள். சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்தபடியே பொன்னன் படகை இழுத்துக்கொண்டு போய் அரண்மனைத் தோட்டத்தின் மதிலை அடைந்ததும் படகை அங்கேயே கட்டிப் போட்டுவிட்டு, வள்ளியையும் அழைத்துக் கொண்டு தோட்டத்துக்குள்ளே பிரவேசித்தான்.
அந்த தோட்டம், பார்த்திப மகாராஜா வாழ்ந்த பழைய சோழ வம்சத்து அரண்மனைத் தோட்டம் என்பதை மாரப்பன் அறிந்திருந்தான். அந்த அரண்மனையில் அச்சமயம் யாருமில்லை. அது சக்கரவர்த்தியின் கட்டளையினால் பூட்டிக் கிடந்தது - என்பதும் அவனுக்குத் தெரிந்ததுதான். ஆகவே, பொன்னனும் வள்ளியும் அந்த அரண்மனைக்குள் கொல்லைப்புரத்தின் வழியாக நுழைவது ஏதோ கெட்ட காரியத்திற்காகத்தான் என்றும், அநேகமாக அந்த அரண்மனைக்குள் அச்சமயம் சிவனடியார் இருக்கலாமென்றும் மாரப்பபூபதி ஊகித்தான். இன்னும் ஒரு பயங்கரமான - விபரீதமான சந்தேகம் அச்சமயம் அவனுடைய உள்ளத்தில் உதித்தது.
பார்த்திப மகாராஜா போர்க்களத்தில் இறந்த செய்தியே ஒருசமயம் பொய்யாயிருக்குமோ? அவர் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடி, பிறகு இப்படிச் சிவனடியாரின் வேஷத்தில் வந்து விபரீதமான காரியங்களையெல்லாம் செய்து வருகிறாரோ? - என்று நினைத்தான். எப்படியிருந்தாலும் இன்று இரவு எல்லா மர்மங்களும் வெளியாகி விடப் போகின்றன! இந்த நம்பிக்கையுடன் அவன் மதிற்கதவின் வெளிப்புற நாதாங்கியைப் போட்டுவிட்டு, பொன்னன் திரும்பி வருவதற்குள் தன்னுடைய ஆட்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு அங்கே வந்து விடுவது என்ற தீர்மானத்துடன் விரைந்து சென்றான்.
தன்னைப் பின்தொடர்ந்து இரண்டு பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாத பொன்னன், அரண்மனை தோட்டத்திற்குள் உற்சாகத்துடன் போய்க் கொண்டிருந்தான். இடையிடையே அவன், "வள்ளி! அதோ அந்த மாமரத்தடியில் தான் மகாராஜாவும் மகாராணியும் சாயங்கால வேளையிலே உட்காருவது வழக்கம். அதோ பார்த்தாயா? அந்த மூலையில் ஒரு தாமரைக்குளம் இருக்கிறது. அதில்தான் முதன் முதலில் இளவரசர் நீந்தக் கற்றுக் கொண்டார்!" என்று இவ்விதம் சொல்லிக் கொண்டே போனான். வள்ளி ஒவ்வொரு தடவையும், "கொஞ்சம் மெதுவாகப் பேசு!" என்று எச்சரித்துக் கொண்டு வந்தாள்.
இவர்களுடைய பேச்சுக் குரலைக் கேட்டு மரங்களின் மீது உறங்கிக் கொண்டிருந்த பட்சிகள் சில விழித்துச் சிறகுகளை அடித்துக் கொண்டன. அப்போது பொன்னன் கையைத் தட்டி ஓசைப்படுத்தியதுடன், "உஷ்!" என்று சத்தமிட்டான்.
"ஆமாம்! உன்னுடைய தைரியமெல்லாம் பாதி ராத்திரியில் தூங்குகிற பட்சிகளிடம்தான். எதிரியின் கையில் கத்தியைக் கண்டால் உடனே விழுந்தடித்து ஓடிவந்து விடுவாய்!" என்று வள்ளி சொன்ன பிறகு பொன்னன் சற்று வாயை மூடினான்.
அரண்மனையின் பின்புறத்தை அவர்கள் அடைந்ததும் பொன்னன், "வள்ளி! உள்ளே போய் எல்லாம் பார்க்கலாமா அல்லது வந்த காரியத்தைப் பார்த்துக் கொண்டு திரும்புவோமா?" என்று கேட்டான்.
"விளக்கில் எண்ணெய் கூட ஆகிவிட்டது, சீக்கிரம் வந்த காரியத்தைப் பார்க்கலாம்! கோயில் எந்தப் பக்கம் இருக்கிறது?" என்று வள்ளி கேட்டாள்.
"அப்படியானால் இங்கே வா!" என்று பொன்னன் கிழக்குப் பக்கமாக அவளை அழைத்துச் சென்றான்.
பார்த்திப மகாராஜாவின் காலத்தில் ஒரு முறை நாம் அரண்மனைக் கோயிலைப் பார்த்திருக்கிறோம். அந்த அழகிய சிறு கோயிலானது அரண்மனையைச் சேர்ந்தாற் போல கீழ்ப் பாகத்தில் அமைந்திருந்தது. அதற்குள் பிரவேசிப்பதற்கு மூன்று வழிகள் இருந்தன. அரண்மனைக்குள்ளேயிருந்து நேராகக் கோயிலுக்குள் வரலாம். இதுதான் பிரதான வாசல். பின்புறத்துத் தோட்டத்திலிருந்து பிரவேசிப்பதற்கு ஒரு வாசல் இருந்தது. அபிஷேகத்திற்குக் காவேரி நீரும், அலங்காரத்திற்குப் புஷ்பமும் கொண்டு வருவதற்காக இந்த வாசல் ஏற்பட்டது.
இவற்றைத் தவிர அர்ச்சகர் வெளியில் இருந்து நேரே வருவதற்காகக் கிழக்கு மதிலில் சிறு வாசல் இருந்தது. இவற்றுள் தோட்டத்திலிருந்து பிரவேசிப்பதற்குரிய வாசலைப் பொன்னன் அடைந்து, கதவின் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். அவனுடன் வள்ளியும் போனாள். மங்கிய அகல் விளக்கின் வெளிச்சத்தில் அங்கிருந்த விக்கிரகங்களின் காட்சியைக் கண்டு இருவரும் சிறிதுநேரம் பிரமித்து நின்றார்கள். நெடுங்காலமாகப் பூசை முதலியவை ஒன்றுமில்லாமலிருந்தும், அந்த தெய்வீகச் சிலைகளின் ஜீவகளை சிறிதும் குறையவில்லை.
முதலில் திகைப்பு நீங்கியவனான பொன்னன், "வள்ளி! நிற்க நேரமில்லை" என்று சொல்லி, மகாவிஷ்ணு விக்கிரகத்தின் சமீபம் சென்று, விஷ்ணு பாதத்தின் அடியிலிருந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நீளவாட்டான மரப்பெட்டியை எடுத்துக் கொண்டான்.
"சோழ குலத்தின் விலையில்லாப் பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள் இருக்கிறது. வள்ளி! நல்ல வேளை, இது அந்த நரசிம்ம சக்கரவர்த்தியின் கண்ணில் படவில்லை; பட்டிருந்தால், இதற்குள் காஞ்சிக்குக் கட்டாயம் போயிருக்கும்!" என்று சொல்லிக் கொண்டே கோயிலிலிருந்து வெளியேறினான்.
அவனைப் பின்தொடர்ந்து வெளியே வந்த வள்ளி, "ஐயையோ! விளக்கு அணைந்துவிட்டதே!" என்றாள். "நல்ல வேளை! காரியம் ஆனபிறகு அணைந்தது! போனால் போகட்டும். இப்போது எப்படிப் போகலாம், தோட்டத்தின் வழியாக இருட்டில் போவது கஷ்டம்? கிழக்கு மதில் வாசல் வழியாக வேணுமானால் போய் விடலாமா? வா! கதவு திறக்கிறதா, பார்ப்போம்" என்று சொல்லிப் பொன்னன் தோட்டத்தின் கிழக்கு மதிலை நோக்கி விரைந்து சென்றான். அங்கிருந்து வாசற்படியருகில் இருவரும் போனதும், மதிலுக்கு வெளியில் பேச்சுக் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். பின்வரும் சம்பாஷனை அவர்கள் காதில் லேசாக விழுந்தது.
"மாரப்ப பூபதியின் பேச்சை நம்பியா இந்தக் கத்தியை உருவிக் கொண்டு நிற்கிறாய்? அரண்மனையிலாவது, திருடன் நுழையவாவது?"
"திருடன் நுழைகிறதைக் கண்ணாலே பார்த்தேன் என்று மாரப்பபூபதி சொல்லும்போது எப்படி அதை நம்பாமலிருப்பது?"
"தப்பிப் போவதற்கு இதுதான் வழியா? வேறு வழியில்லையா?"
"திருடன் அரண்மனை வாசல் வழியாகத் துணிந்து கிளம்பமாட்டான். இந்த வாசலுக்கு வராவிட்டால், தோட்டத்தின் வழியாகக் காவேரியில் போய் இறங்க வேண்டியது தான். அதற்குள்ளாக... அதோ பார்."
"என்ன அங்கே? ஏக தீவர்த்தி வெளிச்சமாகத் தெரிகிறதே!"
"மாரப்ப பூபதி ஆட்களைத் திரட்டிக் கொண்டு வருகிறார்."
இந்தப் பேச்சைக் கேட்டதும் பொன்னனுக்கு உடம்பு வெலவெலத்துப் போய்விட்டது. ஒரு கண நேரத்தில் அவனுடைய உள்ளம் என்னவெல்லாமோ கற்பனை செய்துவிட்டது. தன்னைப் பெட்டியுடன் மாரப்ப பூபதி கைப்பிடியாகப் பிடித்து சக்கரவர்த்தியின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துவது போலவும், சக்கரவர்த்தி தன்னைப் பார்த்து, "வெகு யோக்கியன் போல் நடித்தாயே? திருடனா நீ?" என்று கேட்பது போலவும் அவனுடைய மனக்கண் முன் தோன்றியது. உடனே, வள்ளியையும் ஒரு கையினால் பற்றி இழுத்துக் கொண்டு தோட்டத்தில் புகுந்து வட திசையை நோக்கி ஓடினான்.
மரங்களில் முட்டிக் கொண்டும் செடி, கொடிகளின் மேல் விழுந்தும் அவர்கள் விரைந்து சென்று கடைசியில் தோட்டத்தின் கொல்லைப்புற மதிற்சுவரை அடைந்தார்கள். கதவருகில் சிறிது நின்று ஏதாவது வெளியில் சத்தம் கேட்கிறதா என்று உற்றுக் கேட்டார்கள்; சத்தம் ஒன்றும் இல்லை. மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்கள். அவசரமாகக் காவேரியில் இறங்கிப் பார்க்கும்போது, அங்கே அவர்கள் கட்டிவிட்டுப் போயிருந்த படகைக் காணோம்!
பொன்னனுக்கும் வள்ளிக்கும் ஒரு கணம் மூச்சே நின்று விட்டது! தூரத்தில் தீவர்த்திகளின் வெளிச்சம் தெரிந்தது. ஆட்கள் ஓடிவரும் ஆரவாரமும் கேட்டது. இன்னது செய்வதென்று தெரியாமல் சிறிது திகைத்து நின்ற பிறகு, "வள்ளி படகு ஒருவேளை ஆற்றோடு மிதந்து போய்க் கிழக்கே எங்கேயாவது தங்கியிருக்கும், வா, பார்க்கலாம்" என்றாள். இருவரும் நதிக்கரையோடு கிழக்கு நோக்கி ஓடினார்கள். அரண்மனை மதிலுக்குப் பக்கத்தில் தெற்கே இருந்து வந்த சாலை வழியாகத் தீவர்த்திகளுடன் ஒரு கும்பல் வருவது தெரிந்தது. "அதோ ஓடுகிறார்கள்!" என்ற சத்தமும் கேட்டது.
பொன்னனும் வள்ளியும் இன்னும் விரைவாக ஓடினார்கள். கொஞ்சதூரம் போனதும் ஒரு மரத்தின் வேரில் தங்களுடைய படகு இழுத்துக் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அவர்களுக்கு பரம ஆச்சரியமாய்ப் போய்விட்டது. ஆனால் ஆச்சரியப்பட்டுக்கொண்டு நிற்பதற்கு அதுவா தருணம்? அதற்குள், தீவர்த்திகளுடன் வந்த கும்பலும் காவேரிக் கரையை நெருங்கி விட்டது. "ஐயோ! அவர்களிடம் பெட்டியுடன் சிக்கிக் கொள்ளப் போகிறோமே!" என்று பொன்னன் பதைபதைத்தான். அதே சமயத்தில் படகு கட்டியிருந்த மரத்துக்குப் பின்னாலிருந்து ஒரு உருவம் வெளிவந்தது! அது சிவனடியாருடைய உருவம் என்பதை அறிந்ததும் வள்ளி, "சுவாமி! நீங்களா!" என்று ஆச்சரியமும், மகிழ்ச்சியும் பொங்கக் கூச்சலிட்டாள்.
"உஷ்" என்று அடக்கினார் சிவனடியார், "பொன்னா! இது பேசிக் கொண்டிருக்கும் சமயமில்லை. பெட்டியை இப்படிக் கொடு! நான் காப்பாற்றி உன்னிடம் ஒப்புவிக்கிறேன். இல்லாவிட்டால், அகப்பட்டுக் கொள்வாய்!" என்றார்.
"கொடு! கொடு!" என்று வள்ளி பொன்னனைத் தூண்டினாள்.
பொன்னன் சிவனடியாரிடம் பெட்டியைத் தயக்கத்துடன் தூக்கிக் கொடுத்தான்.
சிவனடியார், "வள்ளி! நீ ஒரு சமயம் மாரப்பனிடமிருந்து என்னைத் தப்புவித்தாய். அதற்குப் பிரதியாக இன்று உங்களை அதே மாரப்பனிடமிருந்து தப்புவிக்கிறேன்!" என்றார்.
அடுத்த நிமிஷம் சிவனடியாரைக் காணோம். மர நிழலில் மறைந்து மாயமாய்ப் போய்விட்டார்.
பொன்னன் படகை அவசரமாக அவிழ்த்துவிட்டு, வள்ளியை அதில் ஏற்றித் தானும் ஏறிக் கொண்டான்.
அதே சமயத்தில் மாரப்பனும் அவனுடைய ஆட்களும் காவேரிக் கரையை அடைந்து படகு இருந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடிவரத் தொடங்கினார்கள்.
மறுநாள் பொன்னனும் வள்ளியும் பேசிப் பேசிச் சிரிப்பதற்கும் ஆச்சரியப்படுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருந்தன.
படகு கிளம்புகிற சமயத்தில் தீவர்த்திகளுடனும் ஆட்களுடனும் வந்து சேர்ந்த மாரப்ப பூபதிதான் என்ன ஆர்ப்பாட்டம் செய்தான்? என்ன அதிகார தோரணையில் பேசினான்?
"நிறுத்து படகை!", "பிடித்துக்கட்டு இரண்டு பேரையும்!" "விடாதே!","படகைச் சோதனை போடு!" என்று என்ன தடபுடல் செய்துவிட்டான்.
இவ்வளவு தடபுடலுக்கும் பொன்னனும் வள்ளியும் அமைதியாயிருந்தார்கள். படகைச் சோதனை போடும் போது, அவர்கள் கரையிலேயே இறங்கி நின்று விட்டார்கள்.
படகில் ஒன்றுமில்லையென்று கண்டதும், மாரப்பனுடைய முகத்தில் ஏமாற்றமும் கோபமும் கொந்தளித்தன.
"பொன்னா! எங்கே அது!" என்றான்.
"எது எங்கே, சேனாதிபதி?" என்று கேட்டான் பொன்னன்.
"கையிலே என்னவோ கொண்டு வந்தாயே, அதுதான்!"
"என்னவோ கொண்டு வந்திருந்தால், அது என்னமாய் இல்லாமலிருக்கும்?" என்றான் பொன்னன்.
மாரப்பன் மிரட்டி உருட்டிப் பார்த்ததெல்லாம், பலிக்கவில்லை. மாரப்பன் தன்னுடைய ஆட்களை விட்டு மரத்தடியிலும், தண்ணீரிலுங்கூடத் தேடிப் பார்க்கச் சொன்னான். ஒன்றும் கிடைக்கவில்லை.
நடு நடுவே வள்ளி பொன்னன் காதோடு என்னவோ சொல்லிக் கலீரென்று சிரித்தபடியால் மாரப்பனுடைய கோபம் அதிகமாயிற்று.
"இந்த அர்த்த ராத்திரியில் என்னத்துக்காக இங்கிருந்து திருட்டுத்தனமாகக் கிளம்புகிறீர்கள்? படகு ஏது?" என்று கேட்டான்.
"காலையில் தோணித்துறைக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று இப்போதே கிளம்புகிறோம். எங்கள் பாட்டன் படகு; அதைத் தோணித்துறைக்குக் கொண்டு போகிறோம்" என்று வள்ளி மறுமொழி சொன்னாள்.
"அரண்மனையில் புகுந்து நீங்கள் எதையோ திருடிக் கொண்டு வந்தீர்கள்; கொண்டு வந்ததை எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறீர்கள். உண்மையை ஒத்துக் கொள்ளாவிட்டால், உங்களை இப்படியே கொண்டு போய்க் காராகிரகத்தில் அடைத்துவிடுவேன்" என்றான் மாரப்பன்.
"எந்தக் காராகிரகத்தில் அடைப்பீர்கள்?" என்றான் பொன்னன்.
"நீ என்னத்துக்காக அவரோடு பேசறே? நாளைக்குச் சக்கரவர்த்தியின் சமூகத்தில் வழக்கைத் தீர்த்துக் கொண்டால் போகிறது!" என்றாள் வள்ளி.
இதைக் கேட்டதும் மாரப்பனுடைய முகம் தொங்கிப் போய்விட்டது. சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு தன்னுடன் வந்திருந்த ஆட்களைப் போகச் சொல்லி விட்டுப் பொன்னனைப் பார்த்துச் சாவதானமாய்ச் சொன்னான்!
"இதோ பார், பொன்னா! உனக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது இப்போது அப்போதல்ல, சில சமயம் நமக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கிறதென்றால், அதற்கு உன் பெண்டாட்டியின் வாய்த்துடுக்குத்தான் காரணம்..."
"இவருடைய கையிலே துடுப்பு, என்னுடைய வாயிலே துடுக்கு..." என்றாள் வள்ளி.
"நீ சற்றுப் பேசாமலிரு, வள்ளி! ஆண் பிள்ளைகள் பேசிக் கொண்டிருக்கும்போது நீ ஏன் குறுக்கிடுகிறாய்?" என்றான் பொன்னன்.
"ஓகோ? நீங்கள் ஆண் பிள்ளைகளா? இருட்டிலே தெரியவில்லை. வெளிச்சம் போட்டுப் பார்த்தால் ஒரு வேளை தெரியும்" என்று வள்ளி முணுமுணுத்தாள்.
மாரப்பன், "பொன்னா! அவ்விதம் வள்ளியை நீ தள்ளிவிட வேண்டாம். நான் சொல்லுகிறது அவளுக்கும் தெரிய வேண்டியதுதான். உங்களால் எனக்கும் ஒரு முக்கிய காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதை மட்டும் நீங்கள் செய்து கொடுத்தீர்களானால் உங்கள் உதவியை நான் மறக்கமாட்டேன். என்னாலும் உங்களுக்கு ஏதாவது ஒத்தாசை வேண்டியதாயிருக்கும். சிறு துரும்பும் பல் குத்த உதவும்..." என்றான்.
"உங்களைச் சிறு துரும்பு என்று யாராவது சொல்வார்களா, சேனாதிபதி?" என்றான் பொன்னன்.
"சரிதான்; இந்தத் துரும்பினால் பல்லைக் குத்தினால், பல்லு உடைந்து போய்விடும்" என்று வள்ளி முணுமுணுத்தாள்.
"என்னால் தங்களுக்கு ஆகக்கூடிய ஒத்தாசை என்ன இருக்கிறது? சேனாதிபதி! இந்த ஏழைப் படகோட்டி..."
மறுபடியும் வள்ளி குறுக்கிட்டு, "நீ ஏழை என்றால் யாராவது நம்புவார்களா? உன்னை உருக்கினால் ஒரு ராஜ்யத்தை வாங்கலாமே..." என்றாள்.
மாரப்பன் கூடச் சிரித்துவிட்டான். "ஆமாம் பொன்னா! உன் பெயரே உனக்கு விரோதமாயிருக்கிறது. போகட்டும், நான் சொல்ல வந்தது என்னவென்றால், அந்தக் கபடச் சாமியார் இருக்கிறார் அல்லவா? அவர் இருக்கிற இடத்தை மட்டும் சொல்லிவிடு. அவரைப் பிடித்துக் கொடுப்பதாகச் சக்கரவர்த்தி குமாரிக்கு வாக்களித்திருக்கிறேன். உன் பேரிலும் வள்ளி பேரிலும் குந்தவி தேவிக்கு ரொம்பக் கோபம். நீங்கள் எனக்கு ஒத்தாசை செய்தால் குந்தவி தேவியிடம் உங்களைப் பற்றிச் சொல்லிக் கோபம் தீரும்படி செய்வேன்...."
"சேனாதிபதி! நாங்கள் படகோட்டிப் பிழைப்பவர்கள்; யார் கோபம் எங்களை என்ன செய்யும்?" என்றான் பொன்னன்.
"சிவனடியார் எங்கே இருக்கிறார் என்று சொல்லமாட்டாயா?"
"தெரிந்தால்தானே சொல்லுவேன்!"
"அந்த வேஷதாரிச் சாமியார் இன்றைக்குக்கூட இந்த உறையூரிலேதான் இருக்கிறார். 'இல்லை' என்று சத்தியமாய்ச் சொல்வாயா?"
"அதெப்படிச் சொல்கிறது? சாமியார் மந்திர சக்தியுள்ளவராச்சே! எந்த நேரத்தில் எங்கே இருக்கிறாரோ, யாருக்குத் தெரியும்?" என்றாள் வள்ளி.
"இந்தச் சமயம் அவர் எங்கே இருக்கிறார் என்று உனக்குச் சத்தியமாய்த் தெரியாதா?"
"சத்தியமாய்த் தெரியாது" என்று பொன்னனும் வள்ளியும் ஏககாலத்தில் உண்மையைச் சொன்னார்கள். நிஜமாகவே அவர்களுக்குத் தெரியாதுதானே?
"இருக்கட்டும், பொன்னா! நான் மட்டும் மீசை முளைத்த ஆண் பிள்ளையானால் ஒரு நாளைக்கு அந்தச் சடைச் சாமியாரைக் கையும் மெய்யுமாகப் பிடித்து அவர் சடையைப் பிய்த்தெறிந்து, அவருடைய உண்மைச் சொரூபத்தை வெளிப்படுத்துவேன்! அப்போது உங்களையும் லேசில் விடமாட்டேன்" என்று கருவிக்கொண்டே மாரப்பன் போய்ச் சேர்ந்தான்.
அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாய் இப்போது நினைத்துக் கொண்டு சிரித்த வள்ளி, "ஆகா; சாமியாருடைய சடையை மட்டும் நிஜமாகவே பிய்த்துவிட்டுப் பார்த்தால்... மனுஷன் உடனே மூர்ச்சை போட்டு விழுந்து விடமாட்டானா!" என்றாள்.
"ஆமாம், வள்ளி! அந்தச் சாமியார் யார்? சொல்கிறேன், சொல்கிறேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறாயே?" என்று பொன்னன் கேட்டான்.
"பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று நீ சொல்லு; பிறகு சாமியார் யார் என்று நான் சொல்லுகிறேன்."
"அதை நினைத்தால்தான் எனக்கு வேதனையாயிருக்கிறது! பெட்டி மட்டும் கிடைக்காமற் போனால்.... ஐயோ! மகாராணியின் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்?"
"அப்படி என்னதான் அந்த அதிசயப் பெட்டிக்குள் இருக்கிறது? சொல்லேன்!"
"அது அதிசயப் பெட்டிதான் வள்ளி! அதற்குள் சோழ வம்சத்தின் பரம்பரைப் பொக்கிஷம் இருந்தது. கரிகாலச் சக்கரவர்த்தியின் உடைவாளும், வள்ளுவர் பெருமான் தம் கையால் எழுதிய தமிழ் வேதச் சுவடியும் இருந்தன. பார்த்திப மகாராஜா, போர்க்களத்துக்குக் கிளம்பியபோது, அந்தப் பெட்டியை மகாராணியிடம் ஒப்புவித்தார். இளவரசருக்கு வயது வந்து சுதந்திர மன்னராகும்போது அவரிடம் ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டுப் போனார்."
"இத்தனை நாளும் அரண்மனையில் இருந்ததை இப்போது என்னத்திற்காக மகாராணி எடுத்துவரச் சொன்னார்? இளவரசருக்கு அனுப்பி வைக்கலாம் என்றா?"
"இளவரசருக்கு எப்படி அனுப்புகிறது? அவர் இருக்குமிடந்தான் யாருக்குத் தெரியும்? பாவம்! எந்தக் கண்ணில்லாத் தீவிலே என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ?... அதற்காக இல்லை, வள்ளி! பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடனே மகாராணி எனக்கு இந்தக் கட்டளையை இட்டார். பல்லவ குலத்தாரின் வழக்கம் தெரியுமோ, இல்லையோ? நல்ல வேலைப்பாடான பொருள் எதைக் கண்டாலும் கொண்டு போய் விடுவார்கள். சிற்பிகள், சித்திரக்காரர்கள் இருந்தால், அழைத்துப் போய்விடுவார்கள். சுவரில் எழுதியிருக்கும் சித்திரங்களை மட்டுந்தான் அவர்களால் கொண்டு போக முடியாது. அதற்காகத்தான் நமது பார்த்திப மகாராஜா உறையூரில் சித்திரக் காட்சி மண்டபம் மட்டும் ஏற்படுத்தியிருந்தார்!"
"ஐயையோ! அப்படியா சமாசாரம்? எனக்குத் தெரியாமல் போச்சே!"
"அதனால்தான் நான் சிவனடியாரிடம் பெட்டியைக் கொடுக்கத் தயங்கினேன். நீ 'கொடு கொடு' என்று அவசரப்படுத்தினாய்!"
"நான் என்ன செய்வேன்? அந்த அவசரத்தில், வேறு என்னதான் பண்ணியிருக்க முடியும்? இருந்தாலும், என் மனத்திற்குள் ஏதோ சொல்கிறது. பெட்டி பத்திரமாய் வந்துவிடும் என்று."
"வந்தால் நல்லதுதான். இல்லாவிட்டால் மகாராணியின் முகத்திலேயே நாம் விழிக்க முடியாது! ஆமாம்; அந்தச் சிவனடியார் யார் வள்ளி? அவரைப் பற்றி உனக்கு என்ன சந்தேகம்?"
அப்போது வள்ளி பொன்னன் காதோடு ஏதோ சொன்னாள். அதைக் கேட்டதும், அவனுக்கு உண்டான ஆச்சரியம் முகத்தில் தெரிந்தது. அதே சமயத்தில் வெளியில் குதிரைகளின் குளம்புச் சத்தம், பல்லக்குச் சுமப்பவர்களின் குரலொலி முதலியவை கேட்கவே, பொன்னன் வள்ளி இரண்டு பேருமே வியப்படைந்து குடிசை வாசலுக்கு வந்து பார்த்தார்கள்.
வள்ளியும் பொன்னனும் குடிசைக்கு வெளியில் வந்த போது பார்த்திப மகாராஜாவின் காலத்திற்குப் பிறகு அவர்கள் பார்த்திராத அதிசயமான காட்சியைக் கண்டார்கள். உறையூர்ப் பக்கத்திலிருந்து காவேரிக் கரைச் சாலை வழியாக அரச பரிவாரங்கள் வந்து கொண்டிருந்தன. குதிரை வீரர்களும், காலாட் படைகளும், கொடி, பரிவட்டம் அலங்கரித்த உயர்ஜாதிப் புரவிகளும், இராஜ ஸ்திரீகளுக்குரிய முத்து விதானம் கட்டிய தந்தப் பல்லக்குகளும் வந்து கொண்டிருந்தன.
இந்த இராஜ பரிவாரமெல்லாம் தோணித் துறைத்தோப்பில் வந்து இறங்கத் தொடங்கியபோது, ஓடக்காரப் பொன்னனும், அவன் மனைவியும் ஆச்சரியக் கடலில் மூழ்கினார்கள்.
இதோடு ஆச்சரியம் முடிந்தபாடில்லை. காவேரி நதியில் அதே சமயத்தில் ஒரு விந்தைக் காட்சி காணப்பட்டது.
உறையூர்ப் பக்கத்திலிருந்து அலங்கரித்த பல படகுகள் அன்னப் பட்சிகளைப் போல் மிதந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தன.
அவற்றின் நடுவில் சிங்கக்கொடி பறந்த அழகிய படகைப் பார்த்ததும், சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களுந்தான் வருகிறார்கள் என்பது பொன்னனுக்குத் தெரிந்து போயிற்று.
ஒரு வேளை அந்தப் படகுகள் எல்லாம் இந்தத் தோணித் துறைக்குத்தான் வருமோ என்று பொன்னன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிலேயே, படகுகளின் திசைப்போக்கு மாறியது! காவேரியைக் குறுக்கே கடந்து, வசந்தத் தீவை நோக்கி அவை செல்லத் தொடங்கின. "ஓகோ! சக்கரவர்த்தி வசந்தத் தீவுக்கு ஏன் போகிறார்? ஒருவேளை மகாராணியைப் பார்க்கப் போகிறாரோ?" என்று பொன்னன் நினைத்தான். உடனே, தோப்பில் வந்து இறங்கிய வீரர்களிடம் நெருங்கிப்போய் விசாரித்தான். அவன் எண்ணியது உண்மையென்று தெரிந்தது. சக்கரவர்த்தியுடன், குந்தவி தேவி, சிறுத்தொண்டர், அவருடைய பத்தினி முதலியோர் அருள்மொழி ராணியைப் பார்க்க வசந்தத் தீவுக்குப் போகிறார்களென்று அறிந்தான்.
மேலும், விசாரித்து அவர்கள் அங்கிருந்து திரும்பி இந்தத் தோணித் துறைக்கு வருவார்களென்றும் இங்கிருந்து சிறுத்தொண்டர் கீழச் சோழநாட்டுக்கு யாத்திரை போகிறார் என்றும் சக்கரவர்த்தியும் குந்தவிதேவியும் உறையூருக்குத் திரும்புகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டான்.
அந்தச் சமயம் வசந்தத் தீவில் தானும் இருக்கவேண்டும் என்றும், என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பொன்னனுக்கு உள்ளம் துடித்தது. ஆனால், அந்த ஆவலை வள்ளியிடம் தெரிவித்தபோது அவள் "நன்றாயிருக்கிறது! சக்கரவர்த்தி அங்கே போயிருக்கும் போது, அவருடைய கட்டளையில்லாமல் நீ ஏன் அங்கே போக வேண்டும்? என்ன நடக்கிறதென்று தானே தெரிகிறது. அவசரம் என்ன?" என்றாள்.
எனவே, பொன்னன் துடிதுடித்துக் கொண்டு இக்கரையிலேயே இருந்தான். ஒரு முகூர்த்த காலம் ஆயிற்று. வசந்தத்தீவின் தோணித் துறையில் கலகலப்பு ஏற்பட்டது. பலர் அங்கே கும்பலாக வந்தார்கள். படகுகளிலும் ஏறினார்கள் படகுகள் இக்கரையை நோக்கி வரத்தொடங்கின.
வருகிற படகுகளை மிகவும் ஆவலுடன் வள்ளியும் பொன்னனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் நெருங்க நெருங்கப் படகுகளில் இருந்தவர்கள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தார்கள். சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்த படகிலே சக்கரவர்த்தியும், ஒரு மொட்டைச் சாமியாரும் இருந்தார்கள்.
இதற்குள் அவர்களுடைய பார்வை இன்னொரு படகின் மேல் சென்றது. அதில் மூன்று பெண்மணிகள் இருந்தார்கள்? அருள்மொழித் தேவி போல் அல்லவா இருக்கிறது?
ஆமாம். அருள்மொழித் தேவிதான். படகு கரையை அடைந்து எல்லாரும் இறங்கியபோது, பொன்னனும் வள்ளியும் வேறு யாரையும் பார்க்கவுமில்லை; கவனிக்கவுமில்லை. அருள்மொழித் தேவியின் காலில் விழுந்து எழுந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள்.
அருள்மொழித்தேவி அவர்களை நோக்கித் தழுதழுத்த குரலில் கூறினாள்:- "பொன்னா! வள்ளி! என்னால் இங்கே தனியாகக் காலங் கழிக்க முடியவில்லை. நான் திவ்ய ஸ்தல யாத்திரை போகிறேன். நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இந்தத் தோணித் துறையிலேயே இருந்து கொண்டிருங்கள். ஒருவேளை எப்போதாவது மறுபடியும் திரும்பி வந்தால்..."
இச்சமயம் பொன்னன் - வள்ளி இவர்கள் கண்களில் கண்ணீர் பெருகுவதை அருள்மொழித்தேவி கண்டதும், அவளுக்கும் கண்களில் நீர் துளித்தது. பேச முடியாமல் தொண்டையை அடைத்தது. பக்கத்திலிருந்த சிவவிரதையின் கரத்தைப் பிடித்துக் கொண்டு மேலே நடக்கத் தொடங்கினாள்.
அன்றைய தினம் அந்தக் காவேரிக்கரைத் தோணித்துறையிலே கண்ணீர்ப் பிரவாகம் ஏராளமாய்ப் பெருகித் தண்ணீர்ப் பிரவாகத்துடன் போட்டியிட்டது.
சக்கரவர்த்தியும் சிறுத்தொண்டரும் பிரிந்தபோது, அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று.
சிறுத்தொண்டரின் பத்தினியிடமும், அருள்மொழித் தேவியிடமும் குந்தவி விடை பெற்றுக் கொண்ட சமயம், அவர்கள் எல்லாருடைய கண்களிலிருந்தும் கண்ணீர் ஆறாய்ப் பெருகிற்று.
கிழக்குத்திசை போகிறவர்கள் முதலில் கிளம்பினார்கள். சிறுத்தொண்டர் தனியாக ஒரு பல்லக்கில் ஏறி அமர்ந்தார். அவர் பத்தினியும் அருள்மொழித் தேவியும் இன்னொரு பல்லக்கில் அமர்ந்தார்கள். சேடிகளும் பரிவாரங்களும் தொடர்ந்துவர, குதிரை வீரர்கள் முன்னும் பின்னும் காவல் புரிந்துவர, சிவிகைகள் புறப்பட்டன.
சிவிகைகள் சற்றுத் தூரம் போனபிறகு, பொன்னனுக்குத் திடீரென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அவன் ஓட்டமாய் ஓடி அருள்மொழி இருந்த பல்லக்கை நெருங்கினான், தேவியும் சிவிகையை நிறுத்தச் சொல்லி, "பொன்னா! என்ன? இவ்வளவு படபடப்பு ஏன்?" என்றாள்.
"தேவி!" என்று பொன்னன் மேலே பேச நாவெழாமல் திகைத்தான்.
"ஏதோ சொல்ல விரும்புகிறாய் போலிருக்கிறது. பயப்படாமல் சொல்லு. இந்த அம்மையார் இருப்பதினால் பாதகமில்லை" என்றாள் ராணி.
"தேவி! பெட்டியைப் பற்றிச் சொன்னீர்களல்லவா?"
"என்ன? கிடைத்து விட்டதா?" என்று ராணி ஆவலுடன் கேட்டாள்.
"ஆமாம்; இல்லை. சீக்கிரம் கிடைத்துவிடும். அதை...." என்று தடுமாறினான் பொன்னன்.
அருள்மொழி சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, "பொன்னா! பெட்டியை நீதான் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். முன்னமே, உன்னிடம் ஒப்புவிப்பதாகத்தான் இருந்தேன். ஒரு வேளை, ஒரு வேளை.... நான் இல்லாத சமயத்தில்... அவன் வந்தால்..." ராணி மேலே பேசமுடியாமல், விம்மத் தொடங்கினாள்.
பொன்னன், "ஆகட்டும், அம்மா! இளவரசரிடம் பத்திரமாய் ஒப்புவித்து விடுகிறேன்" என்று அழுது கொண்டே சொன்னான்.
சிவிகை மேலே சென்றது.
பொன்னன் திரும்பி வந்தபோது, சாலையில் பல்லக்கின் அருகில் நின்று குந்தவி தேவி கண்ணீர் விடுவதையும், சக்கரவர்த்தி அவளைத் தேற்றுவதையும் கண்டான்.
"எனக்குத் தாயார் கிடைத்ததாக எண்ணி மனமகிழ்ந்தேன். அப்பா! அதற்குக் கொடுத்து வைக்கவில்லை!" என்று குந்தவி சொன்னது பொன்னன் காதில் விழுந்தது.
குந்தவி சிவிகையில் ஏறினாள். சக்கரவர்த்தி குதிரை மீது ஆரோகணித்தார். உறையூரை நோக்கி அவர்கள் கிளம்பினார்கள்.
பொன்னன் குடிசைக்குள் நுழைந்ததும் வள்ளி கண்ணீர் பெருக்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.
"ஐயோ! எனக்கு முன்னமே தெரியாமல் போச்சே! தெரிந்திருந்தால் மகாராணியுடன் நானும் வருவதாகச் சொல்லியிருப்பேனே! எனக்கு மட்டும் இங்கே என்ன வேலை!" என்று வள்ளி புலம்பினாள்.
பொன்னன் சிறிது தைரியப்படுத்திக் கொண்டு, "கடைசியில் பெண் பிள்ளை என்பதைக் காட்டி விட்டாயல்லவா?" பிரமாத வீரமெல்லாம் பேசினாயே!" என்றான்.
அச்சமயத்தில் மறுபடியும் வெளியில் குதிரையின் காலடிச் சத்தம் கேட்கவே, இருவரும் ஓடி வந்து பார்த்தார்கள். சக்கரவர்த்தி மட்டும் குதிரைமேல் தனியாகத் திரும்பி வந்தார்.
"பொன்னா! நீ இந்தத் தோணித் துறையில்தானே இருக்கப் போகிறாய்? எங்கேயும் போய்விடமாட்டாயே?" என்று கேட்டார்.
"இங்கேதான் இருப்பேன், பிரபோ! எங்கும் போகமாட்டேன்" என்றான் பொன்னன்.
"அதோபார்! அரண்மனைப் படகை இங்கேயே விட்டுவைக்கச் சொல்லியிருக்கிறேன். குந்தவி தேவி ஒரு வேளை வசந்த மாளிகையில் வந்து இருக்க ஆசைப்படலாம். அப்போது நீதான் படகு ஓட்ட வேண்டும்...."
"காத்திருக்கிறேன், பிரபோ!"
"இன்னொரு சமாசாரம்; சிவனடியார் ஒருவர் - என் சிநேகிதர் உன்னிடம் ஒப்புவிக்கும்படி ஒரு பெட்டியைக் கொடுத்தார். அது அந்தப் படகின் அடியில் இருக்கிறது. பார்த்து எடுத்துக்கொள்."
இவ்விதம் சொல்லிவிட்டு, சக்கரவர்த்தி வள்ளியை நோக்கினார். அதுவரையில் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த வள்ளி சட்டென்று தலையைக் குனிந்தாள். அவளுடைய முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகை உண்டாயிற்று.
அடுத்த கணத்தில், சக்கரவர்த்தியின் குதிரை காற்றாய்ப் பறந்து சென்றது.