சமத்துக் குட்டி சிக்கு குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை உயரமும் இல்லை குள்ளமும் இல்லை
அளந்து அளந்து பேசுவாள் அமைதியாக இருப்பாள் கொஞ்சமாய்தான் விளையாடுவாள் அநியாயத்தை விடமாட்டாள்!
குளத்தில் நீந்த மாட்டாள் மரத்தில் ஏற மாட்டாள் கடலைத் தோலை வீச மாட்டாள் கடைவீதியிலும் சுற்ற மாட்டாள்!
ஒருநாள் புயல் அடித்தது மின்சாரம் பட்டென நின்றது
அரண்ட ஊரார் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேயாச்சு
ஆனால் சிக்கு முன்வந்தாள் அரிக்கன் விளக்கை ஏற்றினாள் கதைகள் பலவும் சொன்னாள் பாட்டுகள் பலவும் பாடினாள்
தைரியசாலி சிக்குவால் எல்லோர் மனதிலும் இப்போது மெல்லத் துளிர்த்தது உற்சாகம்!