பவித்ராவின் விசித்திர கிராமம் !
பவித்ராவின் விசித்திர கிராமத்தில் எல்லா மிருகங்களும் மனிதர் பேசும் மொழியில் பேசி மகிழ்ந்திருந்தன.
அங்கே ஆடு மாடு பூனை நாய் பன்றி மான் மீன் வண்டு பூச்சிகள் போல் நாம் இன்று பார்க்க இயலாத ஒரு அறிய வகை பூதபல்லியும் வசித்து வந்தது.
அதன் பேய் உருவத்தைக் கண்டு மற்ற விலங்குகள் பயந்து ஓடின. ஆனால் பூதபல்லி மிகவும் சாதுவான விலங்கு.அந்த பூதபல்லி மற்ற விலங்கு போல் பேச வில்லை. எனவே அதன் உண்மை உள்ளம் மற்ற விலங்கிற்கும் மனிதருக்கும் புரிவது மிகவும் கடினமாக இருந்தது.
பவித்ரா அந்த கிராமத்தில் வசித்து வரும் சிறுமி. வயதில் சிறியவள் தான் ஆனால் மிகவும் அன்பானவள். பொறாமை , பேராசை , கோபம் அறவே இல்லாதவள் அதனால் அவளுக்கு யாரிடமும் பயமும் இல்லை. எல்லாரிடமும் பவித்ராவுக்கு செல்வாக்கு மற்றும் மரியாதை இருந்தது.
ஒரு நாள் அந்த கிராமத்து பஞ்சாயத்தில் பூதபல்லி நம் கிராமத்தில் உள்ள பண்ணை விலங்குகளை வேட்டை கொள்ளவதால் நம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நாம் அந்த பூதபல்லியை உடனே கிராமத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் தீர்மானம் செய்தனர்.
அதே போல் , பூதபல்லி சற்று தொலைவில் இருந்த காட்டிற்கு வெளியேற்றப்பட்டது.இதனால் பூதபல்லி மிகவும் வருந்தியது.அது மனிதர்கள் அருகில் இல்லை என வருந்தியது.மேலும் பயங்கர மிருகங்களுடன் காட்டில் வாழ விரும்பவில்லை. ஆனால் பூதபல்லி ஒன்றும் செய்ய முடியவில்லை. உண்மையில் பண்ணை விலங்குகளை பூதபல்லி வேட்டையாடி உண்ணவும் இல்லை.
ஒரு முறை பவித்ரா பூதபல்லியை நேரில் பார்த்தபோது நடந்ததை நினைத்து பார்த்தாள். அழகான அந்த கிராமத்தில் அப்போது எந்த விலங்கும் வேட்டையாட படவில்லை. இதில் எதோ மர்மம் இருக்கிறது என்று உணர்ந்தாள்.
தற்செயலாக பவித்ரா ஆற்றில் தவறி விழுந்த போது பூதபல்லி தான் அவளை காப்பாற்றியது. அப்போது பூதபல்லியை கண்டு பயந்து போனாள் பவித்ரா.ஆனால் பூதபல்லி மிகவும் அன்பாக ,சுவையான பழங்களை சாப்பிட தந்தது.அப்போது பவித்ரா அந்த பூதபல்லி கொடூரமற்றது என்று புரிந்து கொண்டாள்.
அப்போது , பவித்ரா பயம் நீங்கி பூதபல்லியுடன் நட்பானாள். மற்றும் அது காய் கனிகளை உண்ணும் விலங்கு என்று அறிந்து கொண்டாள். எனவே ,பூதபல்லியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தாள்.அன்று இரவே பண்ணை விலங்குகள் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.
அப்போது பண்ணையின் விவசாயி வெளியூர் சென்றதால் தன்னுடைய நண்பனின் வீட்டு நாயை காவலுக்கு வைத்து விட்டு இருந்தார்.இரவில் விழித்து வாழும் மிருகங்களுடன் நல்ல பழக்கம் இருந்ததால் அந்த நாய் நிம்மதியாக உறங்கியது.
திடீரென தூக்கம் களைந்து எழுந்த போது அருகில் இருந்த மாடு காணவில்லை.
கவலையுடன் இரவில் அந்த மாடு எங்கு சென்தென தேடி சென்றது நாய்.அப்போது ஒரு ஆந்தையை கண்டது அது சொன்னது காட்டில் இருந்து ஒரு நரி அங்கு வந்ததை பார்த்ததாக கூறியது அது மிகவும் தந்திரமானது அதனால் விரைவில் சென்று உன் நண்பனை காப்பாற்று என்றது.
விரைந்து சென்ற நாய் பசுவிற்காக காத்திருந்த நரியை பார்த்து அதிர்ச்சி அடைந்தது . அதே நேரம் பவித்ரா ஆந்தை நாயிடம் கூறியதை கேட்டு அறிந்தாள் உடனே தன் நண்பனான பூதபல்லியை உதவிக்கு அழைக்க காட்டிற்குள் ஓடினாள் .உடனே பூதபல்லி உதவிக்கு ஓடி வந்தது
அந்த நரி பசுவிடம் தந்திரமாக பேசி காட்டிற்குள் அழைத்து செல்ல பார்த்த போது சரியான நேரத்தில் நாயும் பவித்ராவும் , பூதபல்லி யும் அந்த பசுவை காப்பாற்றினர் .தனக்காக உதவிய நண்பனை கண்டு பசு நெகிழ்ந்து போனது.
பூதபல்லி யை கண்ட நரி பயந்து ஓடியது. பசுவை காப்பாற்றி நாயும் நிம்மதியாய் உறங்கியது .தக்க சமயத்தில் உதவிய நண்பனை மீண்டும் ஊருக்குள் அழைத்து வருவேன் என்று உறுதி கொண்டாள் பவித்ரா.
ஊர் திரும்பிய விவசாயியிடம் நாய் இரவில் நடந்ததை சொன்னது.அவரும் கிராம தலைவரிடம் இதை கூறினார். நம்ப முடியாமல் தலைவர் திகைத்தார். தவறாக பூதபல்லியை விரட்டி விட்டோம் என்று வருந்தினார்.
உண்மை இதுதான் என்று ஊர் மக்களிடம் பவித்ராவும் கூறினாள். இரவில் நீ மட்டும் ஏன் தனியாக சென்றாய் என்று எல்லோரும் பவித்ராவை சாடினர்.பவித்ரா சொன்னாள் நீங்கள் பூதபல்லி கொடூரமானது என்று நினைத்து அதை வெளியில் அனுப்ப முடிவு செய்தீர்கள் அது ஒரு பகல் தானே ? ஆனால் , பூதபல்லி எனக்கு உதவி செய்தது ஒரு இரவில்.நல்லதிற்கு காலமில்லை எப்போது வேண்டுமென்றாலும் நல்லது செய்யலாம் என்றாள்.
அது போல் , தீர விசாரிக்காமல் நீங்கள் அவசரமாய் முடிவு செய்தீர்கள்.உருவத்தில் பெரிய பூதபல்லி நல்ல மிருகம் , உருவத்தில் சிறிய நரி மிகவும் தந்திரமானது. வயதில் பெரிய நீங்கள் அதை கண்டு பயந்தீர்கள். ஆனால் வயதில் சிறிய நான் அதன் அன்பை உணர்ந்தேன். எனவே தோற்றத்தில் ஏமாறாமல் சிறந்த முடிவை தலைவர் எடுக்க வேண்டும் , மீண்டும் பூதபல்லியை கிராமத்திற்குள் அழைத்து வாருங்கள் என்று பணிவோடு கேட்டுகொண்டாள்.
தவறை உணர்ந்த கிராம மக்கள் மீண்டும் பூதபல்லி ஊருக்குள் வர அனுமதித்தனர். பூதபல்லி யும் தனக்கு பிடித்த பழங்கள் உண்டு ஆற்றங்கரையில் விளையாடி மகிழ்ந்தது. பவித்ரா நல்லது செய்ய நினைத்தால் அது தானாகவே வெற்றி அடையும் என்பதை உணர்ந்தாள்.