பயில்வான் தினமும் உடற்பயிற்சி செய்வார்.
ஒருநாள் அவர் ஒரு பெரிய விளையாட்டுவீரராகவேண்டும் என்று முடிவு செய்தார். எனவே நேராக மைதானத்திற்கு சென்று அங்கிருந்த குழந்தைகளிடம், “நானும் உங்களுடன் கால்பந்து விளையாடுகிறேன்” என்றார்.
குழந்தைகளுக்கு அவரைக் கண்டால் பயம். எனவே அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
ஆனால் இதனால் பல பிரச்னைகள்.
ஒன்று, பயில்வான் உதைத்ததும் அந்தப் பந்து கிழிந்துவிடும், அல்லது கோல்கீப்பர் பறந்துவிடுவான்.
குழந்தைகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒருநாள் கப்பு பயில்வானிடம், “பயில்வான், நாம் கிரிக்கெட் விளையாடலாம்” என்றான்.
பயில்வான் உடனே, “சரி, நான் முதலில் பேட் செய்வேன்” என்றார்.
கப்பு ஓடி வந்து, உயரே குதித்தபடி பந்தை வீசினான்.
பயில்வான் பந்தை அடிக்கப்போய் சமநிலை தவறிவிட்டார். பந்து அவரது தலையைச் சத்தத்தோடு தாக்கியது !
உடனே பயில்வான் “நான் பந்து வீசுகிறேன்” என்றார்.
“சரி” என்றான் கப்பு. “ஆனால், உயரே குதித்தபடி பந்து வீசாதே. எனக்கு பயமாக இருக்கும்.”
பயில்வான் அவன் சொன்னதைக் கேட்கவில்லை. உயரே குதித்தார்.
மறுகணம் மீண்டும் சமநிலை தவறி ’தொப்’ என்று கீழே விழுந்தார் பயில்வான்.
திரும்ப மேலே எழுந்து, “நான் ஃபீல்ட் செய்கிறேன்” என்று சொன்னார் பயில்வான். கப்பு அதற்கு சம்மதித்தான்.
கப்பு பேட்டை இப்படியும் அப்படியும் திருப்பி அடித்ததில் பந்து எங்கெங்கோ ஓடியது.
பயில்வானுக்குப் பந்தின் பின்னால் ஓடியதில் மூச்சு திணறியது.
பயில்வானுக்கு மூச்சு முட்டியது. அவர் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு, “நான் விக்கெட் கீப்பராக இருக்கிறேன்” என்றார். கப்பு ஒப்புக்கொண்டான்.
கப்பு பந்தை உயரமாக வீசினான். பேட் செய்தவன் கீழே குனிந்துகொண்டான். அந்தப் பந்து பறந்து பயில்வான் வாய்க்குள் நேராக ’கப்ப்’ என்று சென்றபோது பயில்வானால் ஒன்றும் செய்யமுடியவில்லை!
“சரி விடு. எனக்கு விளையாட்டே வேண்டாம்” பயில்வான் சோர்ந்து விட்டார். அவருக்கு மனநிலை சரியாக இல்லை. ஆகவே அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
கப்பு இன்னொரு புதுப்பந்தை வெளியே எடுத்தான். அனைவரும் அவர்களுடைய ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள்.