ஒரு நாள், புத்தர்
மடத்தைச் சுற்றி
நடந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு துறவி அவரை அணுகினார், "பெருமானே, எனக்கு
ஒரு புதிய சால்வை வேண்டும்!" என்றார்.
புத்தர் அவரிடம் கேட்டார்,
"ஏன்? உங்களுடைய பழைய
சால்வை என்னவாயிற்று?"
"அது மிகவும் பழையதாகிவிட்டது.
எனவே நான் அதைப் படுக்கை விரிப்பாகப் பயன்படுத்தி வருகிறேன்,” என்று பதிலளித்தார்
அந்தத் துறவி.
புத்தர் மீண்டும் கேட்டார், “அப்படியானால், உங்கள் பழைய படுக்கை விரிப்பு என்னவாயிற்று?”
“குருவே, அந்தப்
படுக்கை விரிப்பு மிகவும்
பழையதாகி விட்டது.
அது நலிந்து மெலிந்து கிழிந்து விட்டது.
எனவே நான் அதை
வெட்டி ஒரு தலையணை உறை செய்துவிட்டேன்,”
என்று அந்தத் துறவி பதிலளித்தார்.
“ஆனால், அதற்கு முன்னால் உங்களிடம்
ஒரு தலையணை உறை இருந்திருக்குமே. அதை என்ன செய்தீர்கள்?” என்று
புத்தர் கேட்டார்.
“அந்தத் தலையணை உறையில் என்
தலை உரசி உரசி அதில் ஒரு பெரிய
ஓட்டை விழுந்து விட்டது. எனவே அதை நுழைவாயில் பாயாக அமைத்து
விட்டேன்,” என்று அக்கறையுடன் பதிலளித்தார் அந்தத் துறவி.
கவுதம புத்தருக்கு இந்தப் பதிலில்
திருப்தியில்லை. அவர் எப்போதும்
ஒவ்வொரு பிரச்னையிலும் ஆழமான
உண்மையை நாடி ஆய்வு செய்வார்.
ஆகவே, அவர் அந்தத் துறவியைக்
கேட்டார், "நீங்கள் உங்களுடைய பழைய
நுழைவாயில் பாயை என்ன செய்தீர்கள்?"
அந்தத் துறவி கைகட்டிப் பதில் அளித்தார், “குருவே, அந்தப் பழைய நுழைவாயில்
பாய் நீண்ட காலமாகப் பயன்படுத்தப் பட்டதால், முற்றிலும் நைந்து போய்விட்டது.
நூல் நூலாகப் பிரிந்துவிட்டது. எனவே
நான் அந்தப் பருத்தி இழைகளை எடுத்து
ஒரு திரி பின்னினேன், அதில் எண்ணெய் விளக்கு ஏற்றினேன்.”
துறவியின் விளக்கத்தைக் கேட்ட புத்தர் புன்முறுவல் செய்தார். அவருக்கு ஒரு
புதிய சால்வையை அளித்தார்!
நீங்களே செய்யலாம்: துணிப் பந்து
1. உங்கள் வீட்டிலுள்ள பழைய துணிகள் சிலவற்றை
எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றிலிருந்து இரண்டு
ஐங்கோண (Pentagon) வடிவங்கள் மற்றும் ஐந்து இதழ்
வடிவங்களை வெட்டி எடுங்கள்.
2. ஊசி, நூலெடுத்து அந்தத் துண்டுகளை இணைத்துத்
தையல் போடுங்கள். அல்லது, பெரியவர்களின் உதவியுடன்
தையல் இயந்திரத்தைப் பயன்படுத்தி அவற்றைத் தைக்கலாம்.
ஓர் ஐங்கோணத்தில் மட்டும் ஒரு சிறிய துளையை விடவும்.
3. இப்போது அந்தப் பந்தை
வெளிப்புறமாகத் திருப்பவும்.
4. உள்ளே ஒரு வலுவான பலூனை
நுழைத்து ஊதவும்.
5. பலூனின் வாயை முறுக்கி ஒரு முடிச்சுப்
போடவும், சிறு துளைக்குள் அதைத் தள்ளி விடவும்.
6. சபாஷ்! உங்களுடைய வண்ணமயமான
துணிப் பந்து தயார்.
நூலிழை மந்திரம்!
கம்பளி அல்லது பருத்தி நூலிழைகளை
வைத்து மணிக்கணக்காக விளையாடலாம்.
இதோ, இப்படிதான்:
1. ஒரு வெற்றுத் தீப்பெட்டியை எடுத்துக் கொள்ளவும்.
2. 70 சென்டிமீட்டர் நீளமான ஒரு கம்பளி நூலைத்
தீப்பெட்டியின் குறுக்கே கோத்து விடவும்.
3. வேறொரு வண்ணத்தில் அதேபோன்ற
கம்பளி நூலை எடுத்துக் கொண்டு,
தீப்பெட்டியின் குறுக்கே இன்னொரு
பக்கமாகக் கோத்துவிடவும். இரு பக்கங்களிலும்
உள்ள இந்த இரண்டு நூல்களின் முனைகளையும் கட்டி விடவும்.
4. நூல்களின் இரு முனைகளையும் உங்களது
நண்பர் ஒருவரிடம் கொடுத்து பிடிக்கச் சொல்லவும்.
பிறகு நீங்கள் மெதுவாகத் தீப்பெட்டியை இழுக்கவும்.
5. அடடா! ஆச்சர்யம்! கம்பளி நூல்கள்
வெளியே வரும் பொழுது அவற்றின்
நிறங்கள் மாறித் தெரிகின்றனவே!
இதுபோல் இன்னும் பல இலவச விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்ய www.arvindguptatoys.com க்கு வாருங்கள்.
மறுசுழற்சி செய்யுங்கள்! மீண்டும் பயன்படுத்துங்கள்! பயன்பாட்டைக் குறையுங்கள்!
நாம் சிந்திக்காமல் பல பொருட்களை வாங்கி, உபயோகித்து, பின்னர் தூக்கி எறிந்து விடுகிறோம். தேவைக்கு மேலாகவே நாம் வாங்கி விடுகிறோம்.
“மேலும் மேலும் வாங்குவோம்! மேலும் மேலும்எறிவோம்!” என்பது நமது மந்திரமாகிவிட்டது. நாம் பூமியின் வளங்களான நீர், மரங்கள், மணல் மற்றும் மண்ணைத் தகாத வழியில் பயன்படுத்துகிறோம், அதன் மூலம் உற்பத்தி செய்து மலையாகக் குவிக்கிறோம்.
ஆனால் நாம் எப்போதும் இப்படிதான் நடந்து கொ
ண்டோமா? இந்தியர்கள் எப்போதும் இப்படிதான் பொருள்களை விரயம் செய்தோமா? இல்லவே இல்லை! முற்காலத்தில் நாம் போதுமான அளவு உபயோகித்து விவேகமான முறையில் வாழ்ந்தோம் என்று வரலாறு சொல்கிறது. ஒவ்வொரு பொருளுக்கும் பல பயன்கள் உள்ளன என்று நாம் நம்பினோம் - ஒன்றல்ல, பல பிறப்புக்கள், பல வடிவங்கள்.
இந்தியக் கலாசாரத்தில் ஒவ்வொரு பொருளையும் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்து மிகவும் ஆழமாக உள்ளது. இந்தக் கதை 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது, பெரும் முனிவர் மற்றும் ஆசிரியரான கவுதம புத்தர் காலத்தில் நிகழ்ந்தது.
நாம் வாழும் உலகின் மேல் ஆழ்ந்த மரியாதையையும் நுண்ணுணர்வையும் இந்தக் கதையில் காணலாம்.இதில் நமக்குப் பல பாடங்கள் உள்ளன.