pazhangaala uyirinangal

பழங்கால உயிரினங்கள்

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்தது என்பது பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? என்ன வகையான உயிரினங்கள் பூமியில் உலாவிக் கொண்டிருந்தன? வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த காடுகளில் என்ன வகையான மரங்கள் வளர்ந்தன? இவற்றையெல்லாம் கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது-அதுதான் தொல்லுயிரியல். இது முற்காலத்தில் இருந்த, இதுவரை அறியப்படாத உயிரினப் படிமங்களைத் தோண்டி எடுத்து, அவற்றின் காலத்தைத் துல்லியமாக அறிவது பற்றிய ஒரு தனித்துவமான அறிவியல்.

- Gayathri. V

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சூரியன் அப்போதுதான் மறைந்தது. காடு இருட்டாக ஆனது. பெரிய பல்லி போன்ற ஒரு உயிரினம் புதர்களில் மறைந்திருந்தது. அதன் முகவாய் நுனியிலிருந்து வளைந்த வால் வரை, அசையாமல் சிலைபோல அமர்ந்திருந்தது. அதன் கூர்மையான கண்கள் மட்டும் இடமும் வலமுமாக அசைந்து கொண்டிருந்தன. உணவுக்கான வாசனையை உணர்ந்ததும் மூக்கு புடைத்துக்கொண்டது. இரவுக்கு சாப்பிட ஒரு சுவையான சிறு பூச்சி!

அந்தப் பெரிய பல்லி பாய்வதற்கு தயாரானபோது...

திடீரென்று, பூமி தடதடவென்று நடுங்கியது. விலங்குகள் எல்லாத் திசைகளிலும் ஓட்டம் பிடித்தன. பாவம், அந்த பல்லிப் பிராணி! ஏறக்குறைய மிதிபட்டுவிட்டது. யாரால் இத்தனைக் குழப்பங்களும் ஏற்படுகின்றன என்று கோபமாக திரும்பிப் பார்த்தது அது. அங்கே...

ஒரு திகிலூட்டும் மிருகம் காட்டுப்பாதையை மறித்துக்கொண்டு வந்தது. அது மிக உயரமான மரங்களை விட உயரமாகவும் அதன் தோல் பாறை போல இறுகியும் இருந்தது.

அய்யோ! வேட்டைக்காரரே இப்போது இரையாகப் போகிறாரா?

இது கதை அல்ல.

நீண்ட காலத்துக்கு முன் இதைப்போன்ற உயிரினங்கள் பூமியில் உண்மையிலேயே வாழ்ந்து வந்தன. அப்போது மனிதர்களோ, நாய்களோ, பறவைகளோ எதுவுமே இருக்கவில்லை.

ஆனால், மாமோத்துகள், டைனோசார்கள், மிகப்பெரிய பூச்சிகள் மற்றும் கடல்களில் மீன்களைப் போல் தோற்றமளிக்கும் மூர்க்கமான உயிரினங்கள் இருந்தன. அத்துடன், இப்போது நாம் பார்ப்பவை போலில்லாமல் விசித்திரமாகத் தோற்றமளிக்கும் தாவரங்களும் இருந்தன!

இதெல்லாம் நமக்கு எப்படித் தெரியும்?

அறிவியலின் வாயிலாகத்தான்! பூமியின் வரலாற்றோடு தொடர்புடைய ஒரு சிறப்பு அறிவியல் பிரிவு, தொல்லுயிரியல்(Palaeontology - பேலியன்ட்டாலஜி) என்பதாகும். இது பலப்பல ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த தாவரங்களையும் விலங்குகளையும் பற்றி ஆய்வு செய்வதாகும். இந்த ஆய்வை செய்யும் விஞ்ஞானிகள் தொல்லுயிரியலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ஒரு மிகப்பழைய அரண்மனையின் இடிபாடுகள் கடந்த காலத்திலிருந்த ஒரு அரசரைப் பற்றி நமக்கு எப்படி தெரிவிக்க முடிகின்றதோ (அவருடைய சிம்மாசனம் எவ்வளவு மகத்தானது, அல்லது அவருடைய விருப்பமான ஆயுதம் என்ன என்பதைப் போன்றவை), அதே போன்று பண்டைய விலங்குகள் பற்றிய பல விவரங்களையும் பூமியின் ஆழத்தில் இருக்கும் பல்வேறு தடயங்கள் தெரிவிக்கும்.

அவை பலவாறாக இருக்கலாம் - எலும்புகள், கால்தடங்கள், முட்டைகள், மற்றும் சில சமயங்களில் கல்லுக்குள் புதையுண்டு இருக்கும் முழு விலங்கின் உடலாகக்கூட இருக்கலாம்.

மனிதக்குரங்குகள்(apes) அல்லது மனிதர்கள் பூமியில் தோன்றுவதற்கு பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த விலங்குகள் வாழ்ந்தன. எப்படி அவை அழுகி, சிதைந்து போகாமல் இருந்தன? அவை எவ்வாறு இன்னமும் பாதுகாக்கப்படுகின்றன?

இந்த உயிரினங்கள் இறந்து, அழுகியபோது, அவை பல மண் அடுக்குகளின் கீழே புதையுண்டன. அவற்றின் தோலும் சதையும் மக்கி மறைந்தன. ஆனால் கடினமான எலும்புகள் மற்றும் பற்கள் இறுகிய மண்ணில் புதையுண்டிருந்தன.

இந்த மண் அடுக்குகள் அனைத்தும் எலும்புகளோடு சேர்ந்து கடினமாகி, பாறைகளாக மாறின! இத்தகைய பாறைகள் புதைபடிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன

பூமியின் மேற்பரப்பில் புதையுண்டிருந்த பெரிய எலும்புகளை முதன்முதலாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தபோது, ​​அவை என்னவென்றே அவர்களுக்கு தெரியவில்லை. இதுவரையில் அவர்கள் அறிந்திருந்த விலங்குகளின் எலும்புகளைக்காட்டிலும் அவை மிகப்பெரியதாக இருந்தன.

எலும்புகள் மரங்களைவிட நீளமாகவும், மண்டையோடுகள் ஆட்டோ ரிக்சாக்களின் அளவுடனும், பற்கள் ஐஸ்க்ரீம் கோன்களைப் போலவும், நகங்கள் பெரிய கத்திகளைப் போலவும் இருந்தன! எலும்புகளை பல விதங்களில் அடுக்கிப்பார்த்து அவர்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு விலங்காக அவற்றை அடையாளம் காண முடியுமா என முயற்சி செய்து பார்த்தனர். இறுதியாக, அவை ஒரு புதிர் விளையாட்டுச் சில்லுகளைப் போல் எல்லாம் சரியாகப் பொருந்தின.

தொல்லுயிரியலாளர்களால் ஒரு விலங்கின் எலும்புக்கூட்டை வைத்து அவ்விலங்கைப் பற்றிய விவரங்களைச் சொல்லமுடியும். உதாரணமாக, கால் எலும்புகள் கை எலும்புகளை விட பெரியதாக இருந்தால், இந்த விலங்கு இரண்டு கால்களால் நடந்திருக்கலாம் எனலாம். இதைப் போன்ற ஒரு பிரமாண்டமான உயிரினத்தைத்தான் முன்பு சந்தித்தோம்! அந்த பயமுறுத்தும் உயிரினத்தை ’ட்ரைனோசரஸ் ரெக்ஸ்’(Tyrannosaurus Rex) என்று அழைக்கிறார்கள் (சுருக்கமாக டி-ரெக்ஸ்).

நான்கு கால்களின் எலும்புகளும் ஒரே அளவில் இருந்தால் அது நான்கு கால்களால் நடந்திருக்கக்கூடும்; நான்கு கால்களும் மிகநீளமான கழுத்தும் கொண்டிருந்த ’டைப்லோடோகஸ்’(Diplodocus) போல.

பற்களின் புதைபடிமங்கள், பழங்கால உயிரினங்கள் என்ன சாப்பிட்டன என்பதை அறிய ந்ல்ல குறிப்புகளைத் தருகின்றன.  பல எலும்புக்கூடுகளில் இறைச்சியைச் சாப்பிடுவதற்கு ஏற்ற, நீளமான, கூர்மையான பற்கள் இருந்தன. சில எலும்புக்கூடுகளில் தட்டையான, அகன்ற, மென்மையான பற்களே இருந்தன. அவை இலைகள் மற்றும் மரங்களின் பட்டைகளை மெல்லுவதற்கானவை.  அதனால் சில சைவ டைனோசார்களும் வாழ்ந்தன என்று நமக்குத் தெரிய வருகிறது! ஆனால் ஆராய்ச்சியாளர்களால் எல்லா நேரங்களிலும் முழு எலும்புக்கூட்டையும் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஒரு விரல், விலா எலும்பு அல்லது முதுகெலும்பின் சில பாகங்கள் என ஒரு சில எலும்புகள்தான் அவர்களுக்குக் கிடைக்கும்.

எல்லா புதைபடிமங்களும் எலும்புகள் மட்டுமே அல்ல. சேற்றில் நடக்கும்போது படியும் நம் கால் தடங்களை போன்ற அடையாளங்களும் இதில் அடங்கும். டைனோசார்களும் கால்தடங்களை விட்டுள்ளன. இவற்றின் கால்தடங்கள் அழிவதற்கு முன்னரே அந்த மண்ணின் மேல் மணலும் கல்லுமான பல அடுக்குகள் படிந்திருக்கலாம். எனவே அவை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேல் அழியாமல் அப்படியே இருக்கின்றன!

உண்மையில், தொல்லுயிரியலாளர்களால் கால்தடங்களுக்கு இடையே உள்ள தூரத்தை அளவிட்டு, விலங்குகளின் உயரத்தை ஊகிக்க முடியும். அது எப்படி நின்றது, எப்படி நடந்தது என்றும் சொல்ல முடியும்.

தாவரங்களும் சில விசித்திரமான புதைபடிமங்களை விட்டுள்ளன. இன்று, நம்மால் எங்குமே காண முடியாத சுவாரசியமான வடிவிலான இலைகள் மற்றும் பூக்களின் படிமங்களையும் தொல்லுயிரியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், இவற்றை விட மிகவும் வேடிக்கையான ஒரு செய்தி இங்கே!

படத்திலுள்ளது என்ன என்று சொல்ல முடிகிறதா? கால்பந்தா? பீரங்கி குண்டா? முட்டையா?

நீங்கள் நினைத்தது சரிதான்! ஆம், இது ஒரு முட்டைதான்! புதைபடிமமாகிய ஒரு மிகப்பெரிய  முட்டை.

இன்னமும் பொறிக்காத நிலையில், உள்ளே குட்டி டைனோசார்களின் வடிவம் தெரியுமாறு உள்ள முழு முட்டைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்! அவை குஞ்சு பொறிப்பதற்கு முன்பாகவே மண்சரிவு அல்லது எரிமலைக்குழம்பு போன்றவற்றில் புதையுண்டிருக்கலாம்.

மங்கோலியாவில், முட்டைகளுடன் தாக்குவது போன்ற நிலையில் இருந்த ஒரு பெரிய டைனோசாரின் எலும்புக்கூட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் அந்த பெரிய டைனோசார், காலை உணவுக்கு முட்டைகளை சாப்பிட வந்ததாக நினைத்தார்கள். எனவே அதற்கு 'முட்டை வேட்டையாடி' என்று பொருள்பட ஓவிராப்டர்(Oviraptor) என்று பெயரிட்டனர்.

விரைவில், முட்டைகளுடன் பல்வேறு நிலைகளில் தோற்றமளித்த ஓவிராப்டர் எலும்புக்கூடுகளின் புதைபடிமங்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர். பின்னர்தான் அவை தாய் டைனோசார்கள் என்றும் அவை தமது சொந்த முட்டைகளை பாதுகாத்துக்கொண்டு இருந்திருக்கின்றன என்றும், சாப்பிட முயற்சிசெய்யவில்லை என்றும் உணர்ந்தார்கள்!ஆனால், அதற்கு மாறாக ஓவிராப்டர் என்ற பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.

நீங்கள் ஊகிப்பது போல, நமக்கு இன்னும் இந்த உயிரினங்களைப் பற்றி முழுமையாகத் தெரியாது. உண்மையில், பொருந்தாத தடயங்கள் நிறையவே உள்ளன, சில தடயங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன! விஞ்ஞானிகள் இன்னும் அவற்றை விளங்கிக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் தோண்டியெடுக்கப்பட வேண்டியவை நிறைய இருக்கின்றன! நீங்கள் தொல்லுயிரியலாளர் ஆகவும் இன்னும் சில புதிர்களை தீர்ப்பதில் உதவி செய்யவும் விரும்புகிறீர்களா?

இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்? மண்ணைத் தோண்டலாம் வாருங்கள்!

பழங்காலத்தில் காணப்பட்ட வேறு சில சுவாரசியமான உயிரினங்களை சந்திப்போமா?

கம்பளி மாமோத்(Woolly Mammoth)

யானைகளோடு தொடர்புடைய இந்த விலங்குகளின் தந்தங்கள் 15 அடி நீளமுடையவை!

இக்தியோசாரஸ்(Ichthyosaurs)

இந்த உயிரினங்கள் மீன்களைப் போல் தோன்றினாலும், அவை உண்மையில் கடலில் வாழ்ந்த ஊர்வனவாக இருந்தன. இக்தியோசாரஸ் என்றால் கிரேக்க மொழியில் 'மீன் பல்லி' என்று பொருள்.

கரடி நாய்கள்(Bear dogs)

இந்த உயிரினங்கள் நாய்களோ கரடிகளோ அல்ல, இரண்டோடும் தொடர்புடைய ஒரு விலங்காகும்.