Pen Kural

பெண் குரல்

ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள் அனைத்திலும் சமூக அக்கறையும், பெண்நிலை பார்வையும் இழையோட்டமாக இருக்கும். அவரது முதல் நாவலான 'பெண் குரல்', கூட்டுக் குடும்ப வாழ்வில் ஒரு பெண் அனுபவிக்கும் மன அழுத்தத்தைப் பதிவு செய்தது. 'மண்ணகத்துப் பூந்துளிகள்' நாவல் பெண் சிசுக் கொலைக்கான காரணங்களை ஆராய்கிறது.

- ராஜம் கிருஷ்ணன்

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முன்னுரை

நாவல் போட்டி நடத்துவதில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது. மற்றொரு விதத்தில் கவலை உண்டாகிறது. எழுதும் ஆற்றலுடையவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்து அவர்களுடைய படைப்புத் திறமையைத் தூண்டி விடுகிறோம் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி உண்டாகிறது. ஆனால் போட்டியில் கலந்து கொள்ள, முன்பே பல கதைகளையும் நாவல்களையும் எழுதிய எழுத்தாளர்கள் முன் வருவதில்லை. புதிய எழுத்தாளர்களே தங்கள் நாவல்களை அனுப்புகிறார்கள். அப்போது ‘இத்தனை நாவல்களிலும் பரிசுக்குத் தகுதியானதாக ஒன்று கிடைக்க வேண்டுமே!’ என்ற கவலை உண்டாகி விடுகிறது. இதுவரை குறையின்றி நாராயணசாமி ஐயர் பரிசைத் தமிழ் அன்பர்கள் பாராட்டும் வகையில் வழங்கி வரும்படி நேர்ந்திருக்கிறது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

‘பெண் குரல்’ என்ற இந்த நாவல் 1953-ஆம் வருஷப் போட்டியில் பரிசு பெற்றது. கலைமகளில் தொடர்ச்சியாக வந்தது.

‘பெண் குரல்’ இடைத்தரக் குடும்பத்திலே பிறந்து தன் குடும்பத்தினும் உயர்தரமான குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டு, அங்குள்ளவர்களோடு மனத்தால் நெடுந்தூரம் விலகி நின்று, பலவகையான சங்கடங்களை அநுபவித்த பெண் ஒருத்தியின் குரல். சுமாரான குடும்பத்தில் பிறந்த சுசீலா சற்றுப் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ராமநாதனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவளுடைய கல்யாணத்தின் போதே அவளது பிற்கால வாழ்க்கையின் ரீதியைப் புலப்படுத்தும் நிமித்தம் உண்டாயிற்று.

அன்பில்லாத மாமியார், அதிகாரம் செலுத்தும் ஓரகத்தி, கடமையில் உழலும் கணவன். இவர்களுக்கு மத்தியில் அவள் தறியிலே ஓடும் குழல் போல ஓடி ஓடி உழைக்க வேண்டியிருந்தது. நாளுக்கு நாள் அவள் மனம் பசையற்றுப் போயிற்று. லீலா என்ற ஒருத்திதான் அவளுக்குப் பாலைவனத்தில் நிழல் மரம் போல இருந்து உதவுகிறாள். ஆனால் சுசீலாவுக்கு ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றந்தான் உண்டாகிறது. மீண்டும் பிறந்தகம் போகிறாள். அங்கும் அமைதி உண்டாகவில்லை.

எல்லோரும் மைசூருக்குப் போய் ஊட்டிக்குச் செல்கிறார்கள். வரதன் அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான். சங்கீதம் சுசீலாவையும் வரதனையும் நெருங்க வைக்கிறது. வரதன் தன் உள்ளத்தை வெளிபப்டுத்துகிறான். அதைக் கண்டு சுசீலா சீறுகிறாள். இவற்றையெல்லாம் மறைவிலிருந்து அறிந்த ராமநாதன் உண்மையை உணர்கிறான். அதற்கு முன் சுசீலாவின் போக்குக்கு வேறு காரணங்களைக் கற்பித்துக் கொண்டு அவன் விலகி நிற்கிறான். இதைக் கடைசியில் சுசீலா உணர்கிறாள். அன்புள்ளங்கள் இணைகின்றன. கதையும் பூரணம் அடைகிறது.

வாழ்க்கையின் அநுபவங்களை மிகவும் நுட்பமாகக் கவனித்து இந்தக் கதையில் புலப்படுத்தியிருக்கிறார் இதன் ஆசிரியை. பெண்ணின் உள்ளத்திலே தோன்றும் ஆசாபாசங்களையும் குமுறல்களையும் பொறாமையையும் நன்றாகக் காட்டுகிறார். இதில் தான் எத்தனைவிதமான பெண்கள் வருகிறார்கள்! இல்லற விளக்காகிய சுசியின் தாய், அகம்பாவம் பிடித்த அத்தை, தன் வயிற்றில் பிறந்த பெண்ணிடம் குளிர்ச்சியாகவும் பிள்ளையிடம் சூடாகவும் பேசும் பாட்டி. நவநாகரிகத்தில் தவழும் ஹேமா, பிறர் நலத்தைச் சிறிதும் எண்ணாத சுயநலப் புலி பட்டு, மலரைப் போன்ற மலர்ச்சியும் மனமும் உள்ள லீலா - இப்படிப் பலவிதமான பெண்களைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் இவர்களில் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இதே மாதிரி பேச்சு, இதே மாதிரி குணம் உடைய உருவங்களை உயிருடன் சந்தித்திருக்கிறோம். அதனால் தான் இந்தக் கதை ஜீவனுடையதாக இருக்கிறது.

கதையில் நிகழ்ச்சிகளும் மனத் தத்துவமும் இழைந்து செல்கின்றன. பாத்திரங்களும் பூரண உருவம் பெற்று நடமாடுகிறார்கள். சிறிய சிறிய இழைகளெல்லாம் சேர்ந்து பெரிய கயிறாக மாறிச் சோர்ந்து போன பெண் உள்ளத்தைப் பிணைத்து வீழ்த்துவதைப் பார்க்கிறோம். கதை மேலும் மேலும் விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் உள்ள நடை இயற்கையாக இருக்கிறது. பேச்சும் செயல்களும் இயற்கையாகவே உள்ளன. அங்கங்கே வரும் உபமானங்கள் அனுபவ சாரமாக இருக்கின்றன.

இந்தக் கதையை எழுதிய ஸ்ரீமதி ராஜம் கிருஷ்ணனை நான் பாராட்டுகிறேன். இப்படியே இன்னும் பல நாவல்களை எழுதிப் புகழ் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

கி.வா. ஜகந்நாதன்

1-1

நாதசுரக்காரன் எழுப்பிக் கொண்டிருந்த தோடி ராகத்தின் இன்னிசையை அமுக்கிக் கொண்டு பாண்டு வாத்தியக்காரர்களின் சப்த ஜாலங்கள் செவிகளில் வந்து பாய்ந்தன. ஊர்வலத்திற்குத் தயாராகக் கார் வந்தாகி விட்டதென்பது தெரியும்படி மூலை முடுக்கில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், ‘நான் ஏறிக் கொள்ளப் போகிறேன்; நானும் நானும்’ என்று குதித்துக் கொண்டு வாயிற்புறம் ஓடினார்கள். முகூர்த்தத்தின் போது மடிதாறு வைத்து உடுத்திய கூறைப் புடவையின் கசங்கிய பாகங்களைப் பல்லைக் கடித்துக் கொண்டு பெரிய அக்கா இன்னமும் பிரித்துக் கொண்டிருந்தாள். பக்கத்திலே அவளுடைய மூத்த பெண் சாமளி கீழே சாமான் அறையின் குப்பையும் தூசும் புடவையிலே படாதபடி அவள் பிரித்த பாகத்தை முகத்தைச் சிணுக்கி முணுமுணுத்தபடியே தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். எல்லோருக்கும் முன்பாகக் காரில் போய் உட்கார முடியவில்லையே என்ற துக்கம் அவளுக்கு. பங்குனி மாதத்திய வெப்பமும் புழுக்கமும் நிரம்பிய அறையும், பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சமும், முடமுடவென்று புது ஆடைகளும் எனக்கு வேர்த்துக் கொட்டியது. கசங்கிய மஞ்சள் பட்டிருந்த கைக்குட்டையால் முகப் ‘பவுடரும்’ குங்குமமும் கலந்து வழிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டு பொம்மை போல் நின்ற நான், “போதுமே அக்கா! அப்படியே உடுத்தி விடேன்!” என்றேன் அலுப்புடன்.

“நன்றாகத்தான் இருக்கு! ஒரு நாள் கல்யாணத்திற்கு இந்தப் பாடு படுத்தறயே? நாங்களெல்லாம் அஞ்சு நாள் எப்படி இருந்திருப்போம்? ஊர்வலத்துக்கு இப்படி வெறும் பின்னலோடா இருப்போம்? தலையிலே இரண்டு ‘டன்’ கனம் அழுத்தும். கழுத்திலே காசுமாலை முள்ளுப்போல குத்தும். இருக்கிற நகை அவ்வளவையும் சுமந்து கொண்டு வாயைத் திறக்க மாட்டோமே! நலங்கின் போதே புடவை ஒரே சுருக்கமாக இருந்தது; நன்றாக இல்லை. இதோ ஆச்சு. சற்று இரு” என்று ஒரே போடாகப் போட்டு விட்டாள் அவள்.

பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் போல் இருக்கிறது. மாமா அறை வாயிற்படியில் நின்று கத்தினார். “இன்னுமா ஆகவில்லை? மாப்பிள்ளை தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் ஆரம்பித்தால் தான் தாமதமில்லாமல் முடியும்!”

ஒரு வழியாகப் பதினெட்டு முழப் புடவையைக் கொசுவிக் கொசுவி என் பாவாடைக்குள் வைத்துத் திணித்தாள் அக்கா. கெட்டிச் சரிகைத் தலைப்புத் தோளில் ‘டங்’கென்று நின்று நகைகளுக்கு மேல் அழுத்தியது. பரக்கப் பரக்க ஒட்டியானத்தை மாட்டிவிட்டு மாலையைப் போட்டவள் என் முகத்தைக் கவனித்துவிட்டு, “நெற்றிக் குங்குமத்தை அழிச்சுண்டுட்டியேடி சுசீ. போய் முகத்தையே சட்டுனு அலம்பிண்டு வா. புடவையிலே தண்ணீர்படாமல்” என்று உத்தரவிட்டாள்.

“வேண்டாம், அக்கா. இப்படியே துடைத்துப் பொட்டு வைத்துக் கொண்டால் போதும். இப்பத்தான் சற்று முன்பு முகம் அலம்பினேன். கண்ணாடியை மட்டும் கொடு” என்றேன் நான்.

“கண்ணாடி எங்கே? அடியே சாமளி! சனியன் அதுக்குள்ளே ஓடிப் போயிடுத்து பார். அவதானே வச்சு அழகு பாத்துண்டிருந்தா? சாமளி, சாமளி!” என்று அந்த இரைச்சலில் கத்திக் கொண்டே இடுப்பில் இருந்த கொத்துச் சாவி கிலுங் கிலுங்கென்று சப்திக்க அவள் வெளியே போனாள்.

அந்தக் கண்ணாடியை எத்தனை தரம் தேடியாகி விட்டது அம்மாடி! வீடு விட்டு வீடு வந்து கல்யாணம் என்றால் எத்தனை சிரமம்! வைத்த சாமான் வைத்த இடத்திலே இல்லை. மூலைக்கு ஒரு துணியும் மணியுமாக இறைந்தாலும் சமயத்திற்கு வேண்டிய பொருளைத் தேட வேண்டியதாக அவ்வளவு அமளி துமளியாக இருந்தது.

அக்கா கண்ணாடி கொண்டு வரவில்லை. மாமா மறுபடியும் வந்து விட்டார்.

“இன்னும் என்ன? அதற்குள்ளேயே மாப்பிள்ளையை இப்படியாக் காக்க வைப்பது, சுசீ?” என்று பேச்சோடு கேலியையும் கலந்து துரிதப்படுத்தினார்.

“இல்லையே! நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி. கண்ணாடியைக் காணோம்” என்றேன்.

“சரி தான் போ. இப்போதுதான் கண்ணாடியைக் காணோம், மூக்காடியைக் காணோம் என்று தேடுகிறீர்களா? தங்கம் எங்கே? அடியே தங்கம்!” என்று கத்திக் கொண்டு அவரும் போனார்.

நல்ல ஊர்வலம் வேண்டியிருக்கிறது! சரியான ஆகாரம் இல்லை; தூக்கம் இல்லை. ‘அம்மாடி’ என்று காலை நீட்டிக் கொண்டு எனக்குப் படுத்துத் தூங்கலாம் போல உடம்பு கெஞ்சியது. அப்போது, “இன்னம் புறப்படவில்லையா?” என்று கேட்டுக் கொண்டே காந்த விளக்கின் ஒளியில் வைர அணிகள் டாலடிக்க அசக்கி அசக்கி நடந்து வந்த என் ஓரகத்தி புன்னகை பூத்தாள்.

“இதோ ஆச்சு” என்று அதற்குள் ஓட்டமும் நடையுமாக வந்த அக்கா, “கண்ணாடி எங்க போச்சோ? நான் இட்டு விடுகிறேன்” என்று என் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்தாள். பரபரப்பில் அவள் முறுக்கிய கொண்டையிலிருந்து ஊசி நழுவியது. புடைவைக் கொசுவம் இழித்து கிழே புரண்டது. எனக்கு அவள் நிலை சிரிப்பை ஊட்டியது. “ஆகட்டும், ஆகட்டும்!” என்று மாமா பராக் சொல்ல என்னைக் கிளப்பி வரும் பெருமைத் தோற்றத்துடன் ஓரகத்தி என் தோளைப் பிடித்துக் கொண்டு நடக்க, நான் ‘தஸ் புஸ்’ என்று புடவை செய்த சத்தத்துடன், வாயிற்புறம் வந்தேன்.

தயாராகப் பன்னீர்ச் செம்பு வைத்துக் கொண்டு நின்ற வெங்கிட்டு அத்தான் “தூங்கி விழுந்து விடாதே அவர் மேல்!” என்று சிரித்தபடியே என் மேல் பன்னீரைத் தெளித்தான். அத்தனை புருஷர்களுக்கு நடுவே அவன் செய்த கேலிக்குத் தலை குனிந்த நான் வாசல் கம்பத்திலே லேசாகச் சாய்ந்து நின்றேன்.

“இன்னும் நிற்பானேன்? வா, வா” என்று பெரிய அத்திம்பேர் அவசரப்படுத்தியதற்கு வெங்கிட்டு, “அட மக்கு அத்திம்பேரே! அவர் வந்து கையைப் பிடித்து அழைத்துப் போக வேண்டாமா?” என்று கூறி இடி இடியென்று நகைத்தான்.

உடனே என் ஓரகத்தி, “என்ன ராமு, அங்கேயே நிற்கிறாயே; வந்து கையைப் பிடித்து அழைத்துப் போ!” என்றாள்.

காஸ் விளக்கின் அடியில் ‘ட்வீட்’ நிஜாரும் ‘கோட்டு’மாக மாலைக் கழுத்துடன் நின்ற என் கணவர் ஜோட்டுக் கால்கள் சத்தம் செய்ய என் அருகில் வந்த போது முகத்திலே புன்னகை அரும்பியது. என் கண்களுக்குப் புதுமையாக இருந்த அவருடைய அந்தக் கோலம் எனக்கு மனத்தில் பிடித்திருந்த அலுப்பை அகற்றிப் புத்துணர்ச்சி ஊட்டியது. சில்லென நான் உணர்ந்த அவரது வலிமை பொருந்திய கரத்துள் பஞ்சு போன்ற என் கை அடங்கி விட்ட போது, ‘ஆணுக்குப் பெண் அடங்கியவள் தான்’ என்று அறிவித்தது போல் இருந்தது. மாப்பிள்ளை பெண்ணுக்கு மட்டும் கணக்காக இடம் ஒதுக்கிவிட்டு, காரின் மற்ற உட்காரும் பாகங்களில் நிரம்பியிருந்த குஞ்சு குழந்தைகளை மேற்பார்வை பார்க்கும் தோரணையில் நின்றான் அம்மாஞ்சி சுப்பிரமணியன்.

என் புடவையின் தலைப்பு அவர் மேல் லேசாக உராய, நான் அவர் அருகிலே அமர்ந்தேன். மேல் மூடி அகற்றி மடக்கி விடப்பட்டிருந்த அந்தப் பழைய கார் ‘கர்... புர்ர்...’ என்று உறுமிக் கொண்டு புங்கனூர் வீதிகளை வலம் வரத் தொடங்கியது.

அப்பாடா! கடைசியில் ஊர்வலம் ஆரம்பமாகி விட்டது! இதற்குத் தான் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன! என் கல்யாணப் பிரச்னை கூட அப்பாவுக்குப் பெரிதாக இருக்கவில்லை. இந்த ஊர்வலப் பிரச்னை எங்கள் வீட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அப்பாவின் கோப தாபம், அம்மாவின் பட்டினி, கண்ணீர் எல்லாவற்றையும் கிளப்பி வைத்த தனிப் பெருமை இந்த ஊர்வலத்துக்கு உண்டு. விவாகம் நிச்சயமானவுடனேயே அம்மா, “கார் ஏற்பாடு செய்து விட்டீர்களா, மாப்பிள்ளை அழைப்புக்கும் ஊர்வலத்துக்கும்?” என்று கேட்டாள்.

அப்பா அழுத்தம் திருத்தமாக, “சுசி கல்யாணத்திற்கு ஊர்வலம் கிடையாது. ஆமாம், நிச்சயம் பண்ணி விட்டேன். மடப்பயல்! மாப்பிள்ளை அழைப்புக்கும் மறுநாளைய ஊர்வலத்துக்குமாக இருபத்தைந்து ரூபாய் கேட்கிறான். ஓர் ஓட்டைக் காரை வைத்துக் கொண்டு” என்றது அம்மாவைத் தூக்கிவாரிப் போட்டு விட்டது.

“நீங்க சொல்வது நன்றாக இருக்கே! ஆனால் மாப்பிள்ளை அழைக்க வேண்டாமா? பணம் அதிகமாகக் கேட்குறான்னு செய்ய வேண்டிய காரியத்தை நிறுத்தினால் நாலு பேர் என்ன சொல்ல மாட்டார்கள்? கேட்கிறவர்கள் சிரிக்கப் போகிறார்கள், நீங்கள் சொல்வதைக் கேட்டு” என்றாள் அவள்.

“மாப்பிள்ளை வேண்டுமானால் பன்னிரண்டு ரூபாய் தொலைகிறது என்று அழைத்து விட்டுப் போகிறேன். ஊர்வலம் வைக்க வேணும் என்று சாஸ்திரம் கண்டிப்பாகக் கிடையாது. அயோக்கியப் பயல்! இதுதான் சமயம் என்று வாய் கூசாமல் கேட்கிறான்!” என்று அவர் இரைந்தார்.

இரண்டாயிரத்தைந்நூறு ரூபாய் சுளையாக வரதட்சிணை கொடுத்து விட்டு, மேலே கல்யாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும் போது ஏற்கனவே இரு பெண்களுக்கு விவாகம் செய்வித்து வற்றி வறண்ட எலுமிச்சம் பழத்தோல் போன்ற ஏழை குமஸ்தாவாகிய அவருக்கு ஊர்வலத்துக்கு இருபத்தைந்து ரூபாயாகும் என்றதும் கோபம் வராமல் என்ன செய்யும்? ஆகவே அவர் சல்லிக்குச் சல்லி கணக்குப் போட்டு இதில் சிக்கனம் செய்யலாமா, அதில் மீதம் பிடிக்கலாமா என்று ஆராய்ந்தார். அம்மாவுக்கோ கூடிய வரை எதிலும் மூளி வைக்கக் கூடாது என்று அவா. “ஒரு பெரிய விசேஷமானால் கூட நூறு இருநூறு செலவழியத்தான் செய்யும்? அதற்கு இப்படியா கணக்குப் பார்ப்பா? நம்ம தரித்திரம் இருக்கவே இருக்கு. ஊர்வலம் இல்லாமல் என்ன கல்யாணம்? உங்களிடம் கொண்டு வந்து ஈசுவரன் இப்படி என்னைப் பிணைத்து வைத்தானே? ஏறு என்றால் மாறு என்று கொண்டு!” என்று அவள் தன் வழக்கமான அஸ்திரங்களைப் பிரயோகம் செய்து அப்பாவை ஊர்வலம் விடச் சம்மதிக்க வைத்ததை எழுதினாலே தனிப்பெரும் புராணமாக ஆகிவிடும்.

குழந்தை குஞ்சுகளுடன் எங்களையும் சுமக்க மாட்டாமல் மூச்சுத் திணறுவது போல் சப்தம் செய்து கொண்டு கார் மெதுவாக ஊர்ந்தது. பின்னே பெண்கள் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டு வந்தது எங்கள் காதிலே விழாதபடி மாமா ஏற்பாடு செய்திருந்த அந்தப் பாண்டு வாத்திய கோஷ்டி சினிமா கீதங்களை அள்ளி அள்ளி வீசியது. தூங்கி விழுந்த குழந்தை ஒன்று என் காலிலே சாய்ந்தது. இரவிலே வானத்து நட்சத்திரங்களைப் பார்ப்பதில் எனக்கு அளவற்ற ஆசை உண்டு. என் வாழ்க்கை ஆறு, முக்கியமான கட்டம் ஒன்றில் வந்திருக்கும் இன்று, வான வீதியைப் பார்க்கத் திடீரென ஆசை தோன்றியது. அதனுடனே வானவீதி ஒளி பெற்றிருந்தால் நம் வாழ்வும் அது போல ஒளிவிடும் என்ற அர்த்தமற்ற அசட்டு நம்பிக்கை கூட என்னுள்ளே முன்பின் நான் அறியாமலே எழுந்து விட்டது. இந்த எண்ணம் திடீரென எப்படித் தோன்றியது. ஏன் தோன்றியது என்று காரணம் கூற முடியாது. மனக்குதிரை கடிவாளமின்றி ஓடும் போது தனக்குத்தானே இத்தகைய எண்ணங்களில் சபலமுற்று நின்று முரண் செய்வதுண்டு. வானத்து ஒளிக்கும் வாழ்க்கையின் ஒளிர்வுக்கும் என்ன சம்பந்தம். இது என்ன முட்டள் நினைப்பு என்று எனக்கு அப்போது சிறிதேனும் மனத்திலே உறைக்கவில்லை. எப்படி உறைக்கும்? வாயிற் படியில் தலையை அவிழ்த்துக் கொண்டு நிற்கலாகாது. தும்மும் போது எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கலாகாது என்பன போன்ற கொள்கைகளூடே பக்குவம் பெற்ற கிராம மங்கைதானே நான்?

ஆனால் மனப்பெண்ணின் மீதே எல்லார் கவனமும் இருக்கும் போது, கழுத்தை நிமிர்த்தி அண்ணாந்து பார்க்கலாமா நான்? ஏற்கனவே அம்மாவும் அத்தையும், “குனிஞ்சு உட்கார், சுசி. கல்யாணப் பெண்ணா லட்சணமா இல்லாமல் அங்கும் இங்கும் இப்படியா திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள்?” என்று கோபித்துக் கொள்கிறார்கள். கழுத்து வலி பொறுக்காமல் என்னையும் அறியாமல் மாலை சற்று நிமிர்ந்து விட்டேன் போல் இருக்கிறது. தங்கம் என்னையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள். மளுக்கென்று என் தலையைப் பிடித்து குனிய வைத்த போது எனக்குக் கழுத்துச் சுளுக்கிக் கொள்ளாமல் இருந்தது நல்ல காலந்தான். அதைப் பார்த்து என் பெரிய ஓரகத்தி வேறு சிரித்தாள். ‘பாவம்’ என்று என் நிலையை நினைத்து நகைத்தாளா, அல்லது எனக்கு மணப்பெண்ணாக இருக்கத் தெரியவில்லை என்று நகைத்தாளா என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை.

புங்கனூர் வீதியின் பள்ளம் ஒன்றில் அறியாமல் வண்டி விழுந்து விட்டது போலும். திடீரென ஏற்பட்ட குலுக்கல் என்னை அவர் மேல் சாய வைத்தது. பக்கத்திலே பன்னீர்ச் செம்பு சகிதம் நெருங்கி வந்து கொண்டிருந்த வெங்கிட்டு ஒரேயடியாகச் சத்தம் போட்டு நகைத்தான்.

எனக்கு முகமெல்லாம் ரத்தம் ஏறிவிட்டது போல் இருந்தது. சமாளித்துக் கொண்டு சரியாக உட்கார்ந்தேன்.

“மாப்பிள்ளை ஸார், எங்கள் சுசி பஞ்சுக் கனங்கூட இல்லாதவள், பார்த்தீர்களா? வண்டியின் குலுக்கலில் அசைந்து விழுந்து விடாதபடி அவளை நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றான் அந்தக் குறும்புக்காரன்.

அவரும் புன்னகை செய்த வண்ணம் என் பக்கம் திரும்பிப் பார்த்தார். நானோ குனிந்த தலை நிமிராமல் என் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதற்குள் பின்னே திரும்பிய மாமா, “டேய் வெங்கிட்டு, சுத்த முட்டாளாக ஏண்டா காரைச் சுத்திச் சுத்தி வரே? இப்படி வா. அவர்கள் ஏதாவது பேசுவதாக இருந்தாலும் இடைஞ்சல் செய்து கொண்டு?” என்று கத்தினார்.

அவன் தலை தெறிக்க ஓடினான்.

விவரம் புரியாத ஓர் உணர்ச்சி என் நெஞ்சைப் படபடக்க வைத்தது. அது சந்தோஷமா, பயமா, கோபமா என்று என்னாலேயே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கை எப்படி என் மடிமீதிருந்த கையை எடுத்துக் கொண்டதென்று நான் அறியவில்லை. என் உள்ளங்கையை ஓர் அழுத்து அழுத்தி, “சுசீ!” என்று அவர் என் காதுகளில் மட்டும் படும்படியாகக் கூப்பிட்ட போது திறந்திருந்த என் மனத்திரை காற்றிலே அடித்துக் கொள்ளும் ஜன்னல் திரை போல வேகமாகச் சத்தம் செய்தது. பக்கத்து வீட்டு ஜானி என்னிடம் கூறியவை எல்லாம் திறந்துவிட்ட குழாயிலிருந்து கொட்டுவது போல என் நினைவில் வந்து நிரம்பின. ஜானி என்னை விட இரண்டு வயசு பெரியவள். அவளுக்குச் சென்ற வருஷந்தான் மணம் நிகழ்ந்தது. மனத்திலே குமிழியிடும் மகிழ்ச்சியுடனும் ஆசையுடனும் அவளுடைய ‘அவர்’ முதல் முதலிலே எப்படி அவளிடம் பேசிப் பழகினார் என்ற இன்ப நிகழ்ச்சிகளை என்னிடம் அவள் கூறிய போது எனக்கு அவ்வளவாக ரஸிக்கவில்லைதான்.

இப்போது...? அவர் கூப்பிட்ட குரலுக்கு எப்படிப் பதில் கூறுவது? என்ன கூறுவது? ஆனாலும் ஜானி சொல்வது போல, இந்தப் புருஷர்களுக்கே அசாத்திய துணிச்சல் தான். எனக்கு நாக்கு எழும்பவில்லை. கைக்குட்டையால் நெற்றியைத் துடைத்துக் கொண்டேன்.

“மிகவும் புழுக்கமாயிருக்கிறதில்லை?” என்றார் அவர், அடுத்த படியாக. தலையை அசைக்காமலேயே நான் “ஊம்” என்றேன்.

“கூப்பிட்டால் பதில் சொல்ல மாட்டாயோ என்று பயந்தேன். ஆமாம், இன்று முழுவதும் நீ ஒன்றுமே சாப்பிடவில்லையே; களைப்பாக இருக்காதா? அசடு போல் இப்படியா கூச்சப்படுவது?” என்றார் உரிமையுடன். இந்த அரை நாளில் அவர் என்னிடம் எத்தனை சுதந்திரம் கொண்டாட ஆரம்பித்து விட்டார்.

விருந்தும் உபசாரமும் திருமண வைபவத்தில் ஏகமாக நடக்கின்றன. ஆனால் மணப்பெண்ணைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்டப் பட்டினி தான். முன்னே அறிமுகம் இல்லாத புது மனிதனுடன் உட்கார வைத்து கும்பல் கும்பலாக ஆண்களும் பெண்களும் கூச்சலும் கேலியுமாக ரகளை பண்ண, விருந்து செய்கிறார்களாம் விருந்து! நான் அன்று இலையையே தொடவில்லை. காபி காபி என்று அதைக் குடித்தே வயிற்றை நிரப்பி இருந்தேன். அதைத்தான் அவர் அப்படிக் குறிப்பிட்டார்.

“உள்ளே போய் ஏதாவது சாப்பிட்டாயா இல்லையா?” என்றார் பின்னும்; விடமாட்டார் போல் இருக்கிறதே!

‘இல்லை’ என்ற உண்மையைச் சொல்லாமல் அதற்கும் “ஊம்” என்றேன்.

“ரொம்பவும் வெட்கப்படுகிறாயே, சுசீ; எங்கள் வீட்டில் மன்னி எல்லோரும் எப்படி சகஜமாகப் பழகுகிறார்கள், பார்த்தாயா? அப்படி நீயும் இருக்க வேண்டும். ஆண்பிள்ளையைக் கண்டுவிட்டாலே வாரிச் சுருட்டிக் கொண்டு சமையலறைக்குள் ஓடும் பெண்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது” என்று முதலிலேயே அவர் தம் அபிப்பிராயத்தைத் தெரிவித்த போது நான் பூரித்துப் போனேன்.

அப்பா முதல் நாளே வந்து சொன்னார். “சுசியகத்தில் எல்லோரும் மிகவும் நாகரிகமாகப் பழகுகிறார்கள். மைத்துனருடன் பேசக்கூடாது, மாமனாரைக் கண்டால் எழுந்து ஓட வேண்டும் என்ற தொந்தரவெல்லாம் அவளுக்கு இருக்காது. இன்று மத்தியான்னம் அவளுடைய ஓர்ப்படிகள் சரிக்குச் சமமாக உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். நாளை நம் சுசீலாவும் அப்படித்தான் இருப்பாள்” என்றார் என்னை நோக்கிச் சிரித்துக் கொண்டே. அப்போது எனக்கு எத்தனை பெருமையாக இருந்தது! பாவம் என் சின்னக்கா ஜகதுவுக்குப் பொறாமையாகக் கூட இருந்திருக்கும். படு கர்நாடகமான பட்டிக்காட்டில் அவள் வாழ்க்கைப்பட்டிருந்தாள்.

மூன்றாம் தடவையாக அவர் கோரிக்கைக்கு நான் ‘ஊம்’ கொட்டினேன். என் கையைக் கொஞ்சம் பலமாக அழுத்தி அவர் “சுசீலா நீ எவ்வளவு இனிமையாகப் பாடுகிறாய் தெரியுமா? அன்றைக்கு நீ பாடினாயே அதை என் ஆயுள் முழுவதும் மறக்க முடியாது. பெண் பார்க்க என்று நான் என் வாழ்க்கையிலே ஒரே ஒரு தரந்தான் வந்தேன். அப்போதே நீதான் எனக்காகப் பிறந்திருப்பவளென்று தீர்மானித்து விட்டேன்” என்றார்.

இந்த வார்த்தைகள் என் செவிகளில் விழுந்த போது இருதயந்தான் எப்படி விம்மியது? நான் இனிமையாகப் பாடுகிறேன் என்று எத்தனையோ பேர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் இன்று அவர் சொல்லும் போது என் மனக்கிண்ணம் அட்சய பாத்திரம் போலப் பொங்கிப் பொங்கிப் பெருகுவானேன்?

அவர் என்னைப் பார்க்க வந்த போது பாடுவதற்குப் பாட்டு அம்மாமி தான் பொறுக்கித் தந்தாள். ‘மனமுவந்தருள் செய்யத் தாமதமேனோ’ என்று துவங்கும் அந்தப் பாட்டை நான் பாடமாட்டேன் என்று தான் மறுத்தேன். “சொன்னால் கேட்க வேண்டும்” என்று அம்மாவும் சேர்ந்து கடிந்து கொண்ட போது விளையாட்டுப் போல அதைப் பாடி விட்டேன். அதைக் குறித்து வைத்துக் கொண்டு இப்போது கேட்கிறாரே, பொல்லாத மனிதர்! பாட்டையும் பாடச் சொல்லிவிட்டுக் கல்யாணம் நிச்சயமான தினத்திலிருந்து அம்மாமி என்னைத் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

நானே வேண்டுமென்று அந்தப் பாட்டைப் பாடியதாக அவர் நினைத்திருப்பதை அறிந்து அளவற்ற மகிழ்வெய்தினேன். “என்னையும் முதல் முறையாகப் பார்க்க வந்தவர் நீங்கள் தாம்” என்று கூற மனம் துடித்தது. ஆனால் கூச்சம் தடுத்தது.

“என்ன ராமு? ஒரு நாழிகையாகப் பேச்சு வெளுத்து வாங்குகிறாயா! ஊம், ஊம் என்று அவள் எத்தனை ஊம் கொட்டுகிறாள்?” என்று சிரித்துக் கொண்டே என் பெரிய ஓரகத்தி காரின் பக்கமாக வந்து குரல் கொடுத்தாள்.

நான் இந்த உலக சிந்தனைக்கு வந்தேன். அவருக்குத்தான் எத்தனை துணிச்சல்!

“ஒன்றும் பிரயோசனம் இல்லை, மன்னி. ஊம் ஊம் என்பதைத் தவிர வேறு வார்த்தையே வெளியே வரமாட்டேன் என்கிறது!” என்றார் என்னைத் திரும்பிப் பார்த்து நகைத்துக் கொண்டே.

நான் ஊம் கொட்டினதை அவர் மூலமே அவள் தெரிந்து கொண்டு விட்டதை அறிந்ததும் வெட்கம் என் முகத்தில் சூடேற்றியது. சுமாராக நிமிர்ந்து உட்கார்ந்திருந்தவள், தலையை மறுபடியும் கவிழ்த்துக் கொண்டேன்.

அவர் இப்போது முன்னே சென்ற என் மைத்துனரையும், அருகே வந்த ஓரகத்தியையும் பார்த்தேன். அப்போது ‘உங்களுக்கு எல்லோரும் எப்படி எப்படி உறவோ அப்படித்தான் இனி எனக்கும் உங்களுக்கு மரியாதைக்கு உரியவர்கள் எனக்கும் அளவில்லாத மரியாதைக்கு உரியவர்கள்!’ என்று என் மனம் கற்பித்துக் கொண்டபடியே சொல்ல வார்த்தைகள் மேலுக்கு வந்தன. ஆனால் அந்தப் பாழும் சங்கோசம் உள்ளுக்கு இழுத்துக் கொண்டது. ஆம், அவர் குரலில் அவர் விருப்பம் அப்படி இருப்பதாக எனக்குத் தொனித்தது.

என்னையே கவனித்துக் கொண்டிருந்த மன்னி, “நம் வீட்டுக்கு வந்து நாலு நாள் ஆகிவிட்டால் நீ போதும் போதும் என்று முறையிடும்படி பேசிவாள். ஏன் அம்மா சுசிலா? அவன் முதலிலேயே புகார் பண்ணும்படியா நடப்பது?” என்று முறுவலித்தாள். என்னை அறியாமலேயே என் இதழ்கள் அவளைப் பார்த்து மலர்ந்தன. அந்தக் கணத்தில் நான் வண்ண மலர் வாசம் சூழும் உலகம் எதிலோ கவலையற்றுச் சஞ்சரிப்பதாக உணர்ந்தேன். என்னை விட பாக்கியசாலி யாருமே உலகத்தில் இருக்க முடியாது என்று எண்ணினேன். சிறு வயசிலேயே தந்தையை இழந்திருந்த என் கணவர், பெரிய தமையன் மதனி இவர்களுடைய அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவர் என்றும் தற்போதும் அவர்களுடனேதான் இருக்கிறார் என்றும் எனக்குத் தெரியும். எனவே அவர்களைத் தாய் தந்தையர் போலப் பாவிப்பது இயல்புதானே? அவர் மூலமாக இந்தச் சொற்கள் வந்த பிறகு மதனி என் கண்ணுக்கு அன்புருவாகத் தென்பட்டாள். அவர் மலர் முகமும் அகலக் குங்குமப் பொட்டும் என் மனத்தில் உயிர் பெற்று நான் அவளுடன் அன்பால் பிணைந்து வாழ்க்கை நடத்தப் போகிறேன் என்ற நினைப்பை எழுப்பி என்னைக் குளிர வைத்தன. இப்படி எந்தப் பெண்ணுக்காவது புக்ககம் வாய்க்குமா? சின்ன அக்கா ஜகது இருக்கிறாளே, அவள் மாமனார் மாமியார் எதிரில் இன்னமும் அத்திம்பேருடன் பேசமாட்டாள். முழுசாக ஒரு நாள் கூட ஆகவில்லை. இவ்வளவு சகஜமாக மதனியை வைத்துக் கொண்டு என்னைப் பேச்சுக்கு இழுக்கிறாரே! சந்தேகமில்லாமல் நான் கொடுத்து வைத்தவள் தான். கிடைத்தற்கரிய கணவனுடன் நல்ல புக்கமும் எனக்குக் கிடைத்திருக்கிறது. என் வாழ்வு ஒளி பெற்று விட்டது. இனிமேல் மலர்ந்து மணம் வீசும்.

‘டுடும் டுடும் டுடு’ என்று பாண்டு கோஷ்டி ஓய்ந்து தவில் முழங்கியது. நான் பக்கவாட்டில் முகத்தைத் திருப்பிக் கவனித்தேன். என்ன ஆச்சரியம்! தெருக்கள் கடந்து நாங்கள் திரும்பவும் கல்யாணப் பந்தலைச் சமீபித்து விட்டோம்!

அதற்குள்ளா முடிந்து விட்டது? இவ்வளவு சீக்கிரமா? அடடா! இது போலச் சந்தோஷம் இனி வருமா? ‘ஊர்வலம் நிச்சயம் விட வேண்டும்’ என்று அம்மா சொன்னாளே, என்று பல எண்ணங்கள் என் மனத்தைச் சங்கிலி போல் தொடர்ந்தன.

காரிலே ஏறுமுன் அவருக்கும் எனக்கும் இடையே இருந்த தூரம் இப்போது வெகுவாகக் குறுகி நான் அவருடன் மிகவும் நெருங்கி விட்டது போலவும், பந்தப் பிணைப்பு என்னை அவருடன் நன்றாக இறுக்கி விட்டது போலவும் எனக்குத் தோன்றியது. திறந்து கிடந்த என் சிந்தனைக் கதவு அவரை உள்ளே குடியேற்றிவிட்டு வேறு ஏதும் உள்ளே புகாதபடி தாழிட்டுக் கொண்டு விட்டது. ஐந்தாறு வார்த்தைகள் தாம். ஆனாலும் முதன்முதலாக அவரிடமிருந்து வந்த அவை என் நெஞ்சைக் கவர்ந்து விட்டன. கார் நின்றது. தூங்கி விழுந்த குழந்தைகளைச் சொந்தக்காரர்கள் எடுத்துக் கொண்ட பின் தான் எங்களுக்கு இறங்க வழி கிடைத்தது. இறங்கும் போது சட்டென்று ஞாபகத்தில் தூண்டப் பெற்றவளாக நான் வானவெளியை அண்ணாந்து பார்த்தேன். என் நெஞ்சம் துணுக்குற்றது. கண்கள் இருண்டு வரும் போல இருந்தன.

ஒரு நட்சத்திரத்தைக் கூடக் காணவில்லை. இரண்டு தினங்கள் சென்றால் பௌர்ணமி. இருந்தும் சந்திரனின் சுவடே தெரியாதபடி நாற்புறமும் கருமேகங்கள் குமுறிக் கொண்டிருந்தன.

“உம், கையைக் கோத்துக் கொண்டு பந்தலுக்குள் வாருங்கள்” என்ற அம்மாவின் உத்தரவும் என் கணவர் என் கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டு பந்தலுக்குள் நுழைந்ததும் எனக்குக் கனவிலே நடப்பது போல் இருந்தன.

“கிடு கிடு கிடா டமா...” என்று இடி முழங்கியது.

“நல்லவேளை! மழைக்கு முன் வந்து விட்டோம். பெரிய மழை வரும் போல் இருக்கிறது” என்றார் என் மைத்துனர்.

ஜோடனை செய்யப்பட்டிருந்த ஊஞ்சலில் நாங்கள் உட்கார்ந்தோம்.

“நம் வீட்டுப் பெண்கள் கல்யாணம் என்றாலே மழை வராமல் இருக்காதே” என்று அம்மா முணுமுணுத்தது என் காதில் விழுந்தது.

இடி, மின்னல் ஏன் இன்று எல்லாம் வர வேண்டும்? நான் முன்பு நினைத்தபடி இவை என் வருங்காலத்தின் சூசகமா. சே! அதெல்லாம் ஒன்றும் வராது.

சற்று முன் நடந்த நிகழ்ச்சி, இன்னும் சற்று நேரம் நீடிக்காதா என்று எனக்கு ஆசையூட்டிய நிகழ்ச்சி, கொஞ்சமும் மங்காத புத்தம் புதிய அந்த இன்ப நிகழ்ச்சி, என் கலக்கத்தினூடே மழையிடையே வெயில் போலப் பிரகாசித்தது. மழை வராதா? அது ஒரு தப்பா? ஜகது கல்யாணத்தில் மழை பெய்தது ஏன்? ஜானி கல்யாணத்தின் போது கூடத்தான் சாயங்காலம் கொட்டுக் கொட்டென்று கொட்டியது. அதனாலேயே மறுநாள் ஊர்வலம் விட்டார்கள். இதற்கும் என் வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்?

யாரோ தூங்கி விழுந்த குரலில் பாடினார்கள். நான் என் மனத்தை இழுத்து அந்தப் பாட்டில் செலுத்தினேன்.

படீர் படீர் என்று என் நெஞ்சில் யாரோ குத்துவது போல் வேதனை ஊட்டும்படி, “கண் குளிரக் காண்பதெல்லாம் கனவாகி” என்று வார்த்தைகள் சுழன்று சுழன்று ஒலித்தது.

நான் கண்பதெல்லாம் பொய்யா? நிஜமாக என் வருங்காலம் இன்றைய பொலிவோடு நிகழாதா?

மீண்டும் பயங்கரமாக இடி முழங்கியது. தொடர்ந்து மின்னல் ஒன்று வெட்டியது. “பொய்! பொய்! பொய்!” என்று ஏக காலத்தில் பல குரல்கள் என்னுள் கூச்சலிட்டன. கண்கள் நிலை நிற்காமல் சுழலுவன போல் இருந்தன. என் தலையே தரித்து நிற்க முடியாமல் இருப்பதை உணர்ந்தேன். நெஞ்சில் ஏதோ தடை கட்டியது. என்னையும் அறியாமல் ஊஞ்சற் சங்கிலியில் சாயப்போன எனக்கு அந்த நிலையிலும் கடபுடவென்று மழை விழுந்த சப்தம் கேட்டது. அவ்வளவு தான். வேறு ஏதும் எனக்கு நினைவு இருக்கவில்லை.

1-2

நான் மூர்ச்சித்து விழுந்து விட்டேன் போல் இருக்கிறது. கண்களை விழித்துப் பார்த்த போது, வாசல் அறையில் படுத்திருப்பது புலப்பட்டது. என் தலையில் இருந்த பூவெல்லாவற்றையும் எடுத்திருந்தார்கள். தஸ்புஸ் என்று எனக்கு வேதனை தந்த அந்தப் பதினெட்டு முழப் புடவையைக் கூடக் காணவில்லை. நான் மிகவும் லேசாக இருந்தேன். மெல்ல மெல்ல எனக்கு எல்லாம் நினைவுக்கு வந்தன. என் அருகில் ஜகது அக்காவும் அம்மாவும் இருந்தார்கள்.

“அம்மா மழை கொட்டுகிறதா இன்னமும்?” என்று நான் கேட்டது மிக ஈன சுரத்தில் ஒலித்தது.

“ஏன் அம்மா சுசீ, மழை கொட்டி அப்போதே ஓய்சு போச்சே? கோடை மழை. படபடன்னு ஒரு நாழிகை அடிச்சுது” என்று அம்மாவின் குரல் அறைக்கு வெளியேயும் கேட்டிருக்கிறது.

என் சிறிய மைத்துனர் உள்ளே வந்தார். அவர் டாக்டர் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அம்மாவும் அக்காவும் எழுந்து நின்றார்கள்.

“விழித்துக் கொண்டு விட்டாள் போல் இருக்கிறதே?” என்றார் அவர்.

எனக்கு ஏதோ குற்றம் செய்து விட்டவளைப் போல எல்லோர் முகத்திலும் விழிக்கவே வெட்கமாக இருக்கிறது. அயல் மனிதரைக் கண்டால் தன் சிறு கைகளால் முகத்தை மறைத்துக் கொள்ள முயலும் சிறு குழந்தையைப் போல் நானும் தலையணைக்கு அடியில் என் முகத்தைக் கவிழ்த்துக் கொள்ள முயன்றேன்.

“ஒன்றும் இல்லை, வெயில், உஷ்ணம், சந்தடி. ஏற்கனவே நல்ல திடகாத்திரமில்லாதவள் போல் இருக்கிறது. ஆகாரம் வேறு சரியாக இருக்கவில்லை” என்று அவர் அபிப்பிராயம் சொன்னார்.

“ஆமாம். நான் அப்போதே அதுதான் சொன்னேன். இன்று முழுவதும் அவள் ஒன்றுமே சாப்பிடவில்லை. உள்ளே அழைத்தாவது அவளைக் கவனித்திருக்க வேண்டும் நீங்கள்” என்று என் கணவருடைய குரலும் என் காதில் விழுந்தது. ஆம், அவர் இன்னமும் இங்கே தான் அறை வாசற்படியில் நிற்கிறார். அடடா! எத்தனை கரிசனம் அவருக்கு என் மேல்! அம்மா, அக்காமார்கள், அத்தை, அம்மாமி என்று எத்தனை பேர்கள் இருந்தார்கள். எல்லோரும் என் அலங்காரத்தில் சிரத்தை கொண்டார்களே ஒழிய, “இப்படிப் பட்டினி இருக்கிறாயே அம்மா” என்று அக்கறையாக ஒருவராவது கேட்கவில்லை. வந்தவர்களைக் கவனித்தார்கள். தங்களைக் கவனித்துக் கொண்டார்கள்! என்னை அடியோடு மறந்து விட்டார்கள். ஆனால் அவர் பகலில் தான் என்னைக் கைப்பிடித்து உரிமையாக்கிக் கொண்டவர். நான் உணவு கொள்ளாமலிருந்ததைப் பற்றியே இந்நேரமாகக் கவலைப்பட்டிருக்கிறார்! என்னிடம் முதல் முதலாக அதைப் பற்றித்தானே விசாரித்தார்? எனக்குக் கூட என்மேல் அத்தனை கவலை இருந்திருக்கவில்லையே? “இவா எல்லாம் இருக்காளே, கவனிச்சுக்குவாள்னு அசிரத்தையாக இருந்துட்டேன். எனக்குத்தான் போது எங்கே இருந்தது? அவளே பச்சை குழந்தை. நல்ல நாளிலேயே சரியான வேளைக்குச் சாப்பிட வேணும். இப்போது கேட்க வேணுமா?” என்று கசமுச என்ற குரலில் அம்மா முணுமுணுத்தாள்.

“பந்தியில் உட்கார்ந்து இப்படி ஒரேயடியாக அட்டகாசம் செய்தால்? நான் ‘போதும் பரிகாசம்’ என்று அப்போதே சொன்னேன். யாரும் கேட்கவில்லை” என்று அவர் நேரடியாகவே அம்மாவுக்குப் பதில் கொடுத்தார். இந்த மாப்பிள்ளையிடம் அம்மா அந்த வழக்கத்தைக் கைவிட்டு விட வேண்டியதுதான்.

மேலும் மேலும் அவர் எனக்குப் பரிவதைக் கண்ட என் இதயம் குறுகுறுத்தது. பரிவது மட்டுமா? இன்னும் இருபத்துநாலு மணி நேரம் முடிவதற்குள், நீங்கள் அவளைக் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்! பதினாறு வருஷங்கள் அரும்பாடுபட்டு வளர்த்திருக்கிறார்களே அவர்கள். அதற்குள் நாம் இம்மாதிரி பேசுவது அழகா என்று அவருக்குப் படவில்லையே! என் மைத்துனர் தாம் ஆகட்டும், “அதற்குள் நீ போடு போடு என்ன போடுகிறாயே? கல்யாணாம் என்றால் அப்படித்தான் இருக்கும்” என்று சொன்னாரா? அவர் பக்கமே குழைவாக, “ஆமாம் அம்மா! ராமு சொல்வது போல நீங்கள் அவனைக் கவனியாமல் இருந்து விட்டீர்கள்” என்று ஒத்துப் பாடினார். அம்மாவுக்கு முகம் ஒரு விநாடி கறுத்து விட்டது. ஜகது அக்காவுக்கோ விண்டு வெடித்து விடும் போல் இருந்தது முகம். “சரி, மணி நாலரை தான் ஆகிறது. ஏழு மணிக்கு மேல் ஆசீர்வாதம் வைத்துக் கொண்டால் போதும். போய் எல்லாரும் சற்றுத் தூங்கலாம். பழ ரசம் ஏதாவது அவளுக்குக் கொஞ்சம் கொடுங்கள்” என்று கூறிவிட்டு என் மைத்துனர் வெளியே சென்றார்.

“ஆமாம், அவளுக்கும் அலுப்பாயிருக்கும். தூங்கட்டும்” என்று கூறிக்கொண்டே என் கணவரும் அவரைத் தொடர்ந்து சென்றார்.

அவர்கள் சென்ற பிறகு அருகில் உட்கார்ந்த ஜகது என் கன்னத்தை நிமிண்டி, “அடியம்மா! அவர் எப்படித் துடிதுடித்து விட்டார் பாரேன்! பெரிய ஆர்ப்பாட்டமும் அமர்க்களமும் பண்ணி விட்டாயே. அதுக்குள்ளே நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்கிறாரே!” என்று தன் முகத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயப்பட்டாள்.

ஆரஞ்சு ரசம் தயாரித்துக் கொண்டிருந்த அம்மா, “ஆமாம், அவர் சொத்தில்லையா இனிமேல்? இருந்தாலும் இந்த நாளைப் பிள்ளைகளே இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கு!” என்றாள்.

“இன்னும் சற்றுப் போனா விடியப் போகிறதே. இப்ப என்னத்துக்கம்மா?” என்று நான் சிணுங்கினேன். அத்தனை பேருடைய பரிவும் நான் அறியாமலே என்னைக் குழந்தையாக்கியிருந்தது அப்போது.

“அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நீ மாட்டேன்னு சிணுங்கு. அப்புறம் அவர் கொடுத்தேளான்னு கேட்டுக் கொண்டு வந்துவிடப் போகிறார். நன்றாகத்தான் இருக்கு. பதினாறு வயசுப் பெண் பச்சைக் குழந்தையாட்டமா இருப்பது!” என்று ஓர் அதட்டல் போட்டாள். நான் பெட்டிப் பாம்பு போல ‘மடக் மடக்’ கென்று வாங்கிக் குடித்தேன்.

“தூங்கு, இன்னும் சற்று நாழிகை. நாளைப் போதுக்குக் கொஞ்சம் மணையிலே உட்கார வேணும்” என்று உத்தரவிட்டவளாக அம்மா என் மேல் போர்வையை இழுத்து விட்டு வெளியே சென்றாள்.

“ஆமாமடி சுசீலா; அப்புறம் நீ தூங்காததற்கு அவர் வந்து எங்கள் பேரில் குற்றம் சொல்லப் போகிறார்” என்று குத்திக் காட்டுவது போல் கூறிக் குறும்புச் சிரிப்புச் சிரித்தாள் ஜகது.

என் நெஞ்சில் குடியேறிவிட்ட அவரைப் பற்றிக் குத்தலாகச் சொன்னால் எனக்கு மட்டும் ரோசமாக இருக்காதா? தங்கள் வீட்டில் இப்படி இருக்கவில்லை என்று இந்த அக்காவுக்கே கொஞ்சம் பொறாமைதான். இல்லாவிட்டால் அவர் இத்தனை பரிவு காட்டுவதற்குச் சந்தோஷம் அல்லவா பட வேண்டும்? “என்னவோ ஒரு வார்த்தை சொல்லி விட்டார் என்று வாய்க்கு வாய் சொல்லிக் காட்டுகிறாயே; அவர் கேட்டதும் வாஸ்தவம் தானே? என்னை நீங்கள் யாராவது கவனிச்சேளா?” என்று சிரித்துக் கொண்டே நானும் கேட்டுவிட்டேன்.

“அடேயப்பா! முழுசாக ஒரு நாள் ஆகலே? அவர்கள் வீட்டுத் தண்ணீர் கூட இன்னும் ஒரு வாய் உள்ளே போகலே. இவளுக்கு வரும் ரோசத்தைப் பாரேன்! லேசுப்பட்டவ இல்லேடி சுசி நீ! உம்! புருஷன் மனைவி என்றால் இப்படி அல்லவா இருக்க வேணும்?” என்று நீட்டி முழக்கிக் கொண்டு அவள் அதிசயப்பட்ட போது ‘நாமும் இருக்கிறோமே’ என்ற ஆற்றாமையும் தொனித்தது. அவளை விட ஒரு படி நான் உயர்ந்து விட்டேன் என்ற எக்களிப்பில் மிதந்தேன். அறையின் விளக்கை அணைத்துவிட்டுக் கீழே ஜமுக்காளத்தை விரித்துக் கொண்டு அவள் படுத்து விட்டாள். படுத்த சிறிது நேரத்திலேயே தூங்கியும் விட்டாள் அலுப்பு, அலைச்சல் அல்லவா?

எனக்குத் தூக்கம் வருமா? வெளியே திண்ணையிலிருந்து ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்கின் ‘ஹூய்’ என்ற சப்தமும், இரண்டொருவர் விடும் குறட்டையொலியும் நிசப்தத்தைப் பிளந்து கொண்டு வந்தன. தான் சிருட்டி செய்ததைத் திருப்பித் திருப்பி ரஸித்து இன்புறும் கலைஞனைப் போல என் உள்ளமும் அன்றைய நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்துத் திருப்பித் திருப்பி அவைகளிலேயே லயிப்பதில் இன்புற்றது.

வாழ்விலே ஒரு நாள். அந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது கூட அவற்றின் உண்மைகளை நான் சிந்திக்கவில்லை. இப்போதோ, அவை யாவும் என்னை அவருடன் நெருக்கிப் பிணைக்கும் புனித காரியங்களாக எனக்குப் பட்டன. அப்போது இல்லாதபடி இப்போது எனக்கு ஏதேனும் ஞானோதயம் வந்துவிட்டதோ?

இல்லையா பின்? அவருடைய அன்பு கனிந்த சொல், உறங்கிக் கொண்டு இருந்த என் மனத்தை மந்திரக்கோல் போலத் தட்டி எழுப்பி விட்டதே! அன்பின் ஒளியை நன்கு கிரகிக்கக் கூடிய சக்தியை இப்போது என் மனம் பெற்று விட்டது. பெரியவர்கள் விதித்த புனித காரியங்களினால் ஏற்படும் பந்தத்துடன் கூடவே பரஸ்பரம் அன்பு கனியவும் இடம் இருந்து விட்டால், தேனும் பாலும் சேர்ந்தது போல் ஏற்படும் பாசப் பிணைப்பில் எத்தனை ஆனந்தம் உண்டாகிறது! இந்தப் புது மகிழ்ச்சியில் என் உடல் நலிந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஏதோ புத்துணர்ச்சி பெற்றவளாகவே தோன்றியது. படுத்திருக்கப் பிடிக்கவில்லை. போர்வையைத் தள்ளிவிட்டு எழுந்து உட்கார்ந்தேன்.

முதல் முதலாக என் கண்களிலே எதிரே சுவரில் மாட்டியிருந்த ரோஜாப் பூமாலை, மங்கலான ஒளியில் ஜிகினா மின்னக் காட்சியளித்தது. திறந்திருந்த அலமாரியில் ஒட்டியாணம், அராக் கொடி இரண்டும் சுழற்றி வைத்திருந்தன. என் பழைய அலங்காரத்தின் இன்னொரு சின்னமாக கூறைப் புடவை அறையின் மூலை ஒன்றில் கிடந்தது.

பழையபடி அவைகளை அணிந்து கொண்டு நான் அவர் பக்கலில் அமர வேண்டும்! அந்த நினைவு எனக்கு எப்படி இன்ப மூட்டியது!

பெஞ்சியை விட்டுத் துள்ளிக் குதித்தேன். ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். வீட்டின் வலப்புறம் இருந்த வாய்க்கால் வளைந்து நெளிந்து காலைப் பொழுதில் மங்கிய ஒளியில் தன் மேனியைப் பளபளப்பாகக் காட்டியவாறு பெரியதொரு கரு நாகம் போல் ஓடியது. இரு மருங்கிலும் அடர்ந்து வளர்ந்திருந்த தாழையும் செவ்வரளியும் காலைக் காற்றிலே தங்கள் சுகந்தத்தைக் கலந்து வைத்திருந்தன. அந்தக் கலவையில் இரவு அடித்த மழை காரணமாக லேசான மண் வாசனையும் இருந்தது. கதிரவன் இன்னும் தன் ஒளி முகத்தைக் காட்டவில்லை. ஆனால் இருளும் பிரிந்திருந்தது. காலைப் பொழுதின் அமைதி என்று நான் கதைகளில் படித்திருக்கிறேன். அது இத்தகைய கவர்ச்சி வாய்ந்தது. மனத்திற்கு ஒரு புதுமையையும் உற்சாகத்தையும் ஊட்ட வல்லது என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன்.

எத்தனை நேரமாக இப்படி நின்றேனோ?

ஜகது எழுந்து தோளின் மேல் கையை வைத்து, “ஏண்டி சுசீ, தூங்கலே நீ? என்ன பார்க்கிறாய் அங்கே?” என்று கேட்டாள்.

“ஒண்ணும் இல்லே அக்கா. நேற்று இரவு ரொம்பவும் இடி இடிச்சுதோ?” என்று வினவினேன் நான். என் மகிழ்ச்சியினூடே லேசாக அது உறுத்தியது.

“அழகாயிருக்கே கேள்வி? கோடை மழை. இடி இடிச்சுது. மின்னியது. அதிலே பயந்துதான் மயங்கி விட்டதாக்கும் குழந்தை!” என்று செல்லமாக என்னை இடித்தாள் அவள்.

“இல்லே அப்புறம் ராத்திரி யாரோ பாடினாளே, அது யார் அக்கா?” என்று அடுத்தாற் போல நான் விசாரித்தேன்.

“ஆமாம். இந்த சமயத்தில் இன்ன பாட்டுத்தான் பாட வேணும்னு சில பேருக்குத் தெரியறதேயில்லை.” எனக்குச் ‘சுருக்’ கென்றது. “உன் சின்ன ஓர்ப்பாட்டிதான் பாடினாள். நாலு பேர் சந்தோஷமாயிருக்கும் சமயத்திலே அந்தப் பாட்டையா பாடுவார்கள்? அசட்டுத்தனம்!” என்று பட்டிக்காட்டில் வாழ்க்கைப்பட்டிருந்த நாகரிகம் தெரியாத ஜகது அக்கா, அந்தப் பட்டிணத்தாளுக்குச் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தாள்.

இவளே இப்படிக் கூறும் போது கோணல் வகிடும், கைக் கடிகாரமுமாகத் துலங்கும் டாக்டர் மனைவியான என் சின்ன மன்னிக்கு அந்தச் சமயத்திலே அந்தப் பாட்டு பாடக் கூடாது என்று தெரியாதா? பின் ஏன் பாடினாள்? வேண்டும் என்றே பாடினாளா? நாகரிகம் இதற்கெல்லாம் பிரயோசனம் இல்லையா? இந்த உலகம் சதமில்லை என்பது நிசந்தானே? ஒரேயடியாய்ச் சந்தோஷத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு உறைக்க வேண்டும் என்றே அந்தப் பாட்டு எழுந்ததோ? ஆனால், தற்போதைய என் மகிழ்ச்சி சதம் அல்லவா?

எள்ளுக்குள் எண்ணெய் போல் சுற்றி வளைத்து என் மனத்தின் உள்ளே கரும் குரும் என்று உறுத்திக் கொண்டிருந்த விஷயத்திற்கே வந்துவிட்டேன். அம்மாவும் பெரிய அக்காவும் பரபரப்பாக உள்ளே வந்தார்கள். “என்னவோ பெண் கண்ணைத் திறக்கலே. துவண்டு கிடக்கிறான்னியே? ரெண்டு பேரும் கதை பேசுகிறார்களே? ஏண்டி சுசீ? இரவு அப்படிப் பயமுறுத்தி விட்டாயே அவரை?” என்றாள் தங்கம்.

அம்மா அதையே மறந்து, “கேட்டாயடி ஜகது? அப்பா சொல்கிறார்: மாப்பிள்ளை கையுடனே சுசியை அழைத்துப் போக வேணும்னு அபிப்பிராயப்படுவதாக” என்றாள். அவள் குரலிலே கவலை, பரபரப்பு, மகிழ்ச்சி எல்லாம் பின்னியிருந்தன. அவர்களுடைய பரிவிலும், குழைவான நடப்பில்ம் அளவற்ற மகிழ்வெய்தியிருந்த என் பெற்றோர், அவர்கள் ஒரு படியில் இருந்தால் இவர்களாகவே இரண்டு படி ஏறி விடுவது போல யாரோ ஏதோ கூறியதை வைத்துக் கொண்டு என்னை உடனே அழைத்துப் போய் விடுவார்கள் என்று நிச்சயம் செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது எப்படித் தெரியும்? எனவே ஆச்சரியம் தாளாத மனம், ‘நிஜமாகவா? அப்படி அவர் எண்ணம் இருந்தால் நேற்றுச் சொல்லியிருக்க மாட்டாரோ?’ என்று எண்ணமிட்டது.

“நான் அப்பவே நினைத்தேன். இவ்வளவு தூரம் கவலைப்படுபவர், எப்படி அவளை இங்கே இனி விட்டுட்டு இருப்பார்?” என்று ஜகது என்னை ‘நறுக்’கென்று கிள்ளினாள்.

“இல்லை. தெரிந்தால் தானே அவளுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கித் தயார் செய்ய ஏற்பாடு பண்ணலாம்? இப்படி அபிப்பிராயம் இருக்கும் என்று அப்பா இப்போது தான் கூப்பிட்டுச் சொல்கிறார்” என்றாள் தாய் கவலையுடன். அவள் விசாரம் அவளுக்கு.

என் பாட்டி சொல்லுவாள். “இந்தப் பெண்களே நன்றியற்றதுகள். ஆயிரம்பாடு அரும்பாடுபட்டு ஆளாக்கினவர்களிடம் ஒட்டாதுகள். வயிற்றுச் சோறு இல்லாவிட்டால் கூட அங்கே தான் ஒட்டும், அதுகளுக்கு” என்று.

எத்தனை அநுபவபூர்வமான வார்த்தை? இத்தனை நாட்கள் அருமையுடன் வளர்ந்த இடத்தை விட்டுப் போக வேண்டுமே என்ற வருத்தமோ கவலையோ எனக்கு ஏற்படவில்லை. ‘அவருடன் போகப் போகிறோம்’ என்ற குதூகலம் பொங்கியது.

‘நேற்றுச் சொல்லாவிட்டால் என்ன? என்னிடம் பிரஸ்தாபித்தால் தாய் தந்தையரை விட்டு உடனே வரப் பயப்பட்டுப் பிடிவாதம் செய்வேனோ என்று கூடத் தோன்றி இருக்கலாம். என்னைப் பார்த்தால் அப்படி நினைக்கும்படி இருக்கிறேனோ என்னவோ! பட்டணம் தெரியாமல் வளர்ந்த நான் படித்திருந்துங் கூட என் மீது கிராமாந்தரத்து ரேகைகள் தென்படாமலா இருக்கும்? இனிமேல் அவர் வீட்டவர்களைப் போல நானும் இருக்க முயல வேண்டும். எனக்கு அப்போதுதான் அங்கே மதிப்பு இருக்கும்’ என்றெல்லாம் கற்பனையுலகில் சஞ்சரித்தேன்.

சடங்குகள் யாவும் முடிந்த பிறகு அவர்கள் இறங்கியிருந்த இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். சில மணி நேரமே நான் அங்கு இருந்தேன். அந்த வீட்டில் என் மாமியார் எதையும் ம்ன்னின்று செய்பவளாகத் தோன்றவில்லை. அவளுக்குச் சொந்த உடன் பிறந்தவன் மகள் தானாம் பெரிய மதனி. அந்த சலுகையிலேதான் அவ்வளவு உரிமை பெற்றுவிட்டாளோ என்று கூட நான் நினைத்தேன். குடும்பத்தையே அவள் தான் நிர்வகிப்பவள் போல் காட்டிக் கொண்டு, எல்லோரையும் அதிகாரம் செலுத்தும் முறையில் அங்கும் இங்கும் போய் வந்தாள். புறப்படுவதற்கு முன்பு விடைபெற்றுக் கொள்ள எங்கள் விடுதிக்கு எல்லோரும் வந்தார்கள்.

பெரியவளாக லட்சணமாகப் பெரிய மதனி, “கல்யாணம் நன்றாக நடத்தி விட்டீர்கள். எங்களுக்கெல்லாம் சந்தோஷம்” என்று உபசாரமாகக் கூறினாள்.

அக்காவும் அம்மாவும் ஓடி ஓடித் தாம்பூலம் வழங்கினார்கள். பின் அவள், “இனிமேல் ஆடி கீடின்னு அவன் வரமாட்டான். சீர் செனத்தியின்னு பாத்திரமாகவும் பண்டமாகவும் வாங்க வேண்டாம். அவனுக்கு வேஷ்டி அது இதுன்னு நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் பெண்ணுக்கு நகையாகச் செய்து போட்டாலும் ஒரு காரியமாக இருக்கும்” என்றாள் மெதுவாக.

பாத்திரம் பண்டத்திலிருந்து நகை என்ற பெரிய வஸ்துவுக்கு அடி போடுகிறாள் என்ற எண்ணம் எனக்கு உறுத்தவில்லை. அதற்குப் பதிலாக ‘எத்தனை பெருந்தன்மை! அண்டாவைக் கொண்டா, குண்டாவைக் கொண்டா என்று அதட்டி வாங்காமல், வேண்டாம் என்று எந்தப் பிள்ளை வீட்டார் சொல்வார்கள்?’ என்று அவளைப் பார்த்துக் கொண்டே நான் வியந்து நின்றேன். என் தோளைத் தொட்டு அசக்கி, “ஊருக்குப் போறோம். கடுதாசி எழுது. அங்கு வரும் போது உடம்பு நன்றாக தேறி இருக்க வேண்டும். ரொம்ப பூஞ்சையாக இருக்கிறாய்” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.

அவர்களுடன் அதே வண்டிக்குப் போகிற பேர்கள் எங்கள் வீட்டில் இருந்தனர். கூடம் முழுவதும், தாம்பூலம் வாங்கிக் கொள்வோரும், மூட்டை கட்டுவோருமாகப் பெண்கள் நிரம்பியிருந்தனர்.

‘படக் படக்’ கென்ற வேஷ்டிச் சத்தம் என் கவனத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. அத்தனை பெண்களுக்கும் மத்தியில் அவர் தாம் என்னை நோக்கிப் புன்னகை செய்து கொண்டு வந்தார். கூடத்துத் தூணின் மேல் சாய்ந்து கொண்டு நின்ற என் கையிலே சிறியதொரு நீளமான அட்டைப் பெட்டியைத் திணித்தார். சின்னக் குழந்தையிடம் சொல்வது போல என் கன்னத்தை லேசாகத் தட்டி, “போய் வரட்டுமா, சுசீ?” என்றார்.

குழுமியிருந்த அத்தனை பேர்களும் தங்கள் தங்கள் செயலை மறந்து பேசாமல் நின்றார்கள். அவர் அப்பால் சென்றாரோ இல்லையோ, வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு சிரித்தார்கள். என்னால் தலையே தூக்க முடியாதபடி அக்காவும் அம்மாமியும் கன்னத்தில் வந்து இடித்துக் கேலி செய்தார்கள்.

“என்னதுடி அது. அவ்வளவு அருமையாக அவர் கொடுத்த பொருள்? பார்த்துவிட்டுத் தரட்டுமாடி நான்?” என்று என் கையில் இருந்ததை ‘வெடுக்’கென்று பிடுங்கினாள் ஜகது.

மதனி சிரித்துக் கொண்டே, “அவள் அண்ணா அவனுக்குப் ‘பிரஸன்ட்’ பண்ணினார் அதை. அவன் அவளுக்குக் கொடுத்து விட்டான்” என்றாள்.

“கடிதம் எழுதப் பேனா கொடுத்திருக்கிறார்” என்று ஜகது திறந்து பார்த்து முடிப்பதற்குள், “எங்கே! எங்கே?” என்று எல்லோரும் ஏதோ அதிசயத்தைக் கண்டது போல் முட்டி மோதிக் கொண்டார்கள்.

‘பட்டிக்காட்டுத் தனத்தை இப்படிக் காண்பித்துக் கொள்கிறார்களே. ஊருக்குப் போய் இந்த ஜனங்களைப் பற்றிச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்களோ என்னவோ’ என்று அங்கலாய்ப்பாக இருந்தது எனக்கு.

ஆகா! வாழ்விலே இந்த ஒரு நாள் என் போக்கிலேதான் என்ன மகத்தான மாறுதலைச் செய்து விட்டது! பதினாறு வருஷங்கள் இருந்து வளர்ந்த வீட்டிலிருந்தும் அன்புக்குரிய உறவினர்களிடமிருந்தும், தனியாளாகிவிட்ட நான், மலர்ச்சி எய்திவிட்ட புத்தம் புது மலரைப் போல ஒய்யாரத்துடனும் கர்வத்துடனும் தலை தூக்கி நின்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா?

1-3

“சுசி கல்யாணம் ஆகிவிட்டதனால் என் தலை மேலிருக்கும் மலை இறங்கி விடும்” என்று அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் இப்போது காரியம் முடிந்த பிறகு அம்மா, அப்பாவைப் பொறுத்தவரை மலை இன்னும் கொஞ்சம் பளுவுடன் உறைந்திருக்கும் என்று தோன்றியதே ஒழிய இறங்கியதாகக் காணவில்லை. அவளுக்குத் தொண்டை பாறாங்கல்லாக இருந்தது. அவரோ பத்து வருஷம் கூடி விட்டவர் போலப் பரிதாபமாகக் காட்சி அளித்தார். சாமானும் சட்டுமாக நிரந்தரமான வீட்டிலே காலை வைத்த போது எல்லோருக்குமே, ‘அம்மாடி’ என்று இருந்தது. சந்தை கலைந்து தத்தம் வீடுகளுக்குத் திரும்புவதைப் போல ஒவ்வொருவராகப் பயணம் கட்டினார்கள். கடைசியாகக் கிளம்பியவர்கள், அத்தை பாட்டி இவர்கள்தாம். அத்தை என் தந்தைக்கு ஒரே சகோதரி. அத்தை புருஷர் மைசூரிலே பெரிய வக்கீலாக இருந்தார். ஆசைக்கு ஒரு பெண் ஹேமாவும், அருமைக்கு ஒரு பிள்ளை வெங்கிட்டுவுந்தான் அத்தைக்குக் குழந்தைகள். வைரமாகவே உடம்பில் இழைத்துக் கொண்டு கெட்டிக்கரைப் பட்டுப் புடவையுடன் வெள்ளிக் கூஜாவைக் கையில் எடுத்துக் கொண்டு அத்தை வண்டியை விட்டு இறங்கி வருவதே ஓர் அலாதி பெருமையையும் கர்வத்தையும் விளக்கும்.

“மாப்பிள்ளை பணமாகக் கொண்டு வந்து கொட்டுகிறான். நச்சுப் பிச்சென்று நாலைந்து பிடுங்கலில்லை” என்று பெண்ணைப் பற்றிய ஒரு தனியான கர்வம் பாட்டிக்கு மிகவும் உண்டு. பெண்ணிடமே அவள் வாசம் செய்ததற்கு இதுதான் காரணம். என் தந்தை அவளுக்கு ஒரே பிள்ளை. அந்த அருமைக் குமாரர் வழி மக்கள் நாங்கள். எங்கள் மீது பாசம் இருந்ததோ என்னவோ. “ஏண்டா வைத்தி, பெண்ணாய்ப் பிறந்தவளை மாசம் மாசம் ஆறும் ஏழும் சம்பளம் கொடுத்துப் படிக்க வைக்கிறாயே, ஏதோ கேட்டுப் பாடுகிறாளே அது போதாதா? பாட்டு வாத்தியார் வைத்து அது வேறு செலவு செய்கிறாய். இந்தப் பணத்தைக் கொண்டு கையிலே இரண்டு வளையாவது அடித்துப் போடலாமே? வயது வந்த கோர்க்காலி ஏணி போல உயர்ந்துவிட்டாள்? இப்படிக் குன்றிமணித் தங்கம் இல்லாமல் நிறுத்தி வைத்திருக்கிறாயே?” என்று என்னைக் குறித்துச் சொல்லும் போது எங்களிடம் உள்ள அலாதி வெறுப்பு தொனிக்காமலிருக்காது. அம்மாவுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வரும். ஆனால் என்ன பயன்? பல்லைக் கடித்துக் கொண்டு அடக்கிக் கொள்வாள். எப்போதாவது இம்மாதிரி கல்யாணம், கார்த்திகை என்றால் தான் அவர் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். ஒரு தடவை சமீபமாகப் பாட்டி மட்டும் எங்கள் வீட்டுக்கே விஜயம் செய்தது எனக்கு நினைவை விட்டே அகலவில்லை. அண்டை அயலில் சிநேகம் பிடித்துக் கொண்டு நாள் முழுவதும் உட்கார்ந்து கிடந்தாள்.

“காபிக்கு முதற் கொண்டு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேணும்! போடி சுசீலா, பாட்டியை அழைத்துக் கொண்டு வா!” என்று என் தாய் கோபத்துடன் எனக்கு ஒரு நாள் உத்தரவிட்டாள். நான் சென்ற போது ஜானியின் தாயிடம் அவள், “பாரு கண்டும் காணாமலும் கொள்ளையாகத்தான் இவளுக்குச் செய்கிறாள். துணியாகவும் மணியாகவும் கொஞ்சமாவா கொடுத்திருக்கா? ஜகது வளைகாப்புக்கு வந்திருந்தாளே, குழந்தைகள் கையிலே சுளைபோலப் பத்துப் பத்து ரூபாய் குடுத்துட்டுப் போனா. நாளைக்கு சுசீலாவுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணப் போறான்? அவள் தான் ஒத்தாசை செய்யணும். என்ன செய்து என்ன நிறக்கிறதடி மீனு? அவளுக்குக் கொஞ்சமும் நன்றி விசுவாசம் கிடையாது. மஞ்சளும் குங்குமமுமா இருக்காளே, ஒரு கார்த்திகை, சங்கராந்தின்னு அஞ்சு ரூபா கொடுக்கணும்னு தோணுமா? மரியாதையே தெரியாது. வைத்தி தேமேனு அப்பாவித்தான். அவன் காலிலே இத்தனை சம்சாரத்தைக் கட்டி வச்சிருக்கு!” என்று பெண் பெருமையையும் நாட்டுப் பெண் சிறுமையையும் பிரலாபித்துக் கொண்டிருந்தாள். விளையாட்டுச் சிறுமியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த நான் அதுவரையில் எங்கள் குடும்பத்தையும் உள்ளேயுள்ள சச்சரவையும் கவனித்தவள் அல்ல. என் தாயைப் பற்றிப் பாட்டி இகழ்ச்சியாகக் கூறியது என் முற்றாத உள்ளத்தில் நன்கு பதிந்து விட்டது. ‘அத்தை இல்லாமல் நாம் இப்படி இருக்க முடியாதா? ஏன் இந்த அம்மாவுக்கு இதெல்லாம் தெரியவில்லை? பணக்கார அத்தையை விரோதித்துக் கொள்ளலாமா? பாட்டியின் மனத்தில் உள்ளதை அம்மாவிடம் தெரிவித்து விட வேண்டும்’ என்று அப்போது கவலைப்பட்டேன்.

இருந்தாற் போலிருந்து மறுநாளே பாட்டி, “இன்னிக்கு வண்டியிலே என்னை ஏற்றி விட்டுடு வைத்தி. எனக்கு என்னமோ இருப்புக் கொள்ளலே. அற்பசி மாதம் தலைக் காவேரிக்குப் போகணும்” என்றாள்.

பாட்டி சென்ற மறுகணமே அம்மா என் தந்தையைப் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள். “பார்த்தேளோ இல்லையோ உங்கள் அம்மா சொன்னதை? ஆமாம், நான் ஏழை, இங்கு மாட்டின் வயிற்றில் குடியிருக்க வேண்டுமென்றால் முடியுமோ? பஞ்சமோ, பட்டினியோ, உன் காலடியில் வந்து நிற்க மாட்டோம்” என்று என்ன என்னவோ சொல்லிக் கொண்டு போனாள்.

பாவம், அப்பாவி அப்பா. தெய்வமே என்று முகத்தில் கையை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்! அந்த நிமிஷத்தில் எனக்கும் அம்மாவைப் போல ரோசமாகத்தான் இருந்தது. தன் சொந்தக் குழந்தைகளிடமேயா தாய் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டுவாள்? அப்படி அவள் பாராட்டிச் சொல்லிச் சொல்லிக் காட்டும் போது, ‘அவர்களிடமிருந்து கை நீட்டி எதையும் வாங்கக் கூடாது’ என்ற சுரணை மேலிட முந்திரிக் கொட்டை போல நான், “அப்படியானால், நாளைக்கு எனக்குக் கல்யாணம் என்று அத்தையிடம் ஒத்தாசை கேட்கக் கூடாது அம்மா” என்றேன்.

உள்ளூற என் மனதில் அந்தப் பேச்சு, கோவையாகவே இருந்தது. ஆனால் வெளிக்குக் குடும்ப விவகாரம் அறியாத குழந்தையாக நடமாடி வந்த நான் சட்டென்று அந்த மாதிரி கூறியது, ஒரு சம்பந்தமுமின்றி அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தது. அம்மாவும் அப்பாவும் ஒரு கணம் அயர்ந்துதான் போய் விட்டார்கள். மறுவிநாடியே அம்மா என் தலையில் ‘நறுக்’கென்று ஒரு குட்டு வைத்தாள்.

“சிறிசா லட்சணமா இராமல் பெரியவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறாயா நீ? இப்படி இருந்தால் நாளைக்குப் புக்ககத்தில் போய்க் குடித்தனம் பண்ணி எப்படிக் குப்பைக் கொட்டுவாய்?” என்று கோபித்தாள். குட்டுப்பட்ட தலையைத் தடவிக் கொண்டு நான் அப்பால் வந்துவிட்டேன். என்றாலும் மனத்தில், ‘அவர்கள் பணக்காரர்கள். ஹேமாவும் வெங்கிட்டுவும் எனக்குச் சமதையாக ஒரு நாளும் ஆக முடியாது’ என்ற வேற்றுமை வேரூன்றி விட்டது. அம்மா அப்போது வைராக்கியமாகப் பேசினாலும், என் விவாகத்திற்கு அத்தை தான் ஏதோ கடன் கொடுத்து உதவியிருக்கிறாள் என்பது எனக்கு உள்ளங் கை நெல்லிக்கனி போல் விளங்கியது. பிடிக்கவில்லைதான். எனினும் பெரியவர்கள் யோசிக்காமலா செய்வார்கள்? தவிர, அவர்களுக்கு இல்லாத பெருமையும் சிறுமையும் எனக்கு என்ன வந்தன? ‘குடும்பம் என்றால் இப்படிச் சிக்கல்கள் இருக்கத்தான் இருக்கும். இவற்றையெல்லாம் பாராட்டாமல் விட்டுவிடுவதுதான் உகந்தது’ என்று என் மனத்தில் படிந்திருந்த பழைய பாசியை அகற்றிக் கொண்டு புதுமைக் கண்களுடன் அவர்களைப் பார்த்தேன். அதுவும் இப்போது என்னுள்ளே ஒளிவிட ஆரம்பித்திருந்த புது அன்பு அந்தப் பழைய தாழ்வு மனப்பான்மையை என்னிடமிருந்து அடியுடன் கல்லி எரிந்து விட்டது.

ஹேமா என்னோடொத்தவள் தான். “அம்மாமி, சுசீ எங்களுடன் ஊருக்கு வரட்டுமே? அப்புறந்தான் புக்ககம் போய் விடுவாள்” என்று அம்மாவிடம் அவள் கேட்டாள். நானும் சந்தோஷத்துடன் குதி போட்டுக் கொண்டு, “ஆமாம் அம்மா, நான் அவர்கள் ஊருக்குப் போனதே இல்லை” என்று கெஞ்சும் பாவனையில் சம்மதி கேட்டேன்.

பேசாமலே நின்ற அம்மாவிடம் அத்தையும், “ஆமாம் மன்னி, குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். அங்கே வந்து பத்து நாள் இருக்கட்டுமே” என்று ஆசைக்கு உரமூட்டினாள்.

தாய்க்கு அரைச் சம்மதம் என்று தெரிந்தும் பொங்கிய மகிழ்ச்சியில் அவ்வளவாக நான் பொருட்படுத்தவில்லை.

பின்னாடி நினைத்துப் பார்த்துப் பார்த்து நான் ஆற்றாமையால் மனம் நொந்து போனேன். எவ்வளவு நன்றியற்றவள் நான்! பிறந்து வளர்ந்த இடத்தின் அந்தஸ்தையும் நிலைமையையும் உயரக் கொம்பில் இருந்து பார்ப்பதைப் போல அவ்வளவு துச்சமாகக் கருதும் அத்தை நமக்கு இனிச் சமமானவள் தான். அவளுடைய நிலைக்கு உயர்ந்து விட்டோம் என்று நினைத்தேனே!

உல்லாசமாக ஒத்த சகியுடன் காலம் கழிக்கப் போகிறோம் என்று துள்ளிக் கொண்டிருந்த என் ஆசை அடியுடன் அணைந்து போகும்படி ஊர் வந்து சேர்ந்த அன்றே ஹேமா தலைவலி என்று படுத்தவள் தான். அவளும் நானும் சரிசமமாகத் தோள் மேல் தோள் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் கண்டு களிக்கவில்லை. சிரித்துச் சிரித்து விளையாட்டுக் கதைகள் புகன்று உண்டு மகிழவில்லை. தெருவையும் வீட்டு வாசலையும் தவிர ஒன்றையுமே அறியாமல் அலுத்துச் சோஒர்ந்து ஏனடா வந்தோம் என்று கிலேசமுறும்படி ஹேமாவின் தலைவலி டைபாயிடு சுரமாக வளர்ந்து வீட்டையே களையிழக்கும்படி செய்துவிட்டது. என்னுடன் பேசுவார் யாரும் இல்லை. சிரிப்பார் யாரும் இல்லை. என்னைக் கேலி செய்து அக மகிழ்விப்பாரும் எவரும் இல்லை.

ஹேமா கண்ணையே விழிக்காமல் இருந்ததாகத் தெரிந்தது. டாக்டர் மணிக்கொரு முறை வந்து போனார். நர்ஸ் ஒருத்தி நோயாளிக்காக வீட்டுடனேயே அமர்த்தப்பட்டாள். அத்தைக்கு முகத்தில் ஈயாடவில்லை. பாட்டியோ கண்ட கண்ட தெய்வங்களுக்கு எல்லாம் நேர்ந்து முடிச்சிட்டு வைத்தாள்.

வந்து பதினைந்து தினங்களுக்கு மேல் ஆகிவிட்டன. மாடி வராந்தாவில் நின்று கீழே தோட்டத்தையும், காம்பவுண்டில் கட்டியிருந்த மாடு கன்றையும் பார்த்துப் பார்த்து எனக்குச் சப்பிட்டுவிட்டது. ‘அரைச் சம்மதம் கொடுத்த அம்மாவைத் தட்டிக் கொண்டு வந்தேனே! இப்போது ஊரில் இருந்தால்? எனக்கு அவர் பேனாப் பரிசு கொடுத்ததை ஊர்க்காரர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு என்னைக் கண்ட இடத்தில் எல்லாம் கேலி செய்வார்கள். கோவிலிலும் குளத்திலும் இன்னும் ஒரு மாதத்திற்காவது என் விவாகத்தைப் பற்றியும் மாப்பிள்ளையைப் பற்றியுமே பேச்சு நடக்கும். ஆமாம் நான் வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டனவே! கடிதம் எதும் எனக்கு வந்திருந்தால்? மதனி கூடத்தான் கடுதாசி எழுதி என்றாள். இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேனே!’

ஜகது இன்னும் ஊருக்குப் போகவில்லை. இரண்டு மூன்று மாசம் இருக்கப் போகிறாள் என்று எனக்குத் தெரியும்.

‘அவளுக்கு வேணுமானால் எழுதலாமா? எனக்கு ஏதும் கடிதம் வந்தால்...’ நினைக்கவே எனக்கு வெட்கமாக இருந்தது. தவிரவும் பாட்டி அத்தைக்குத் தெரியாமல் கார்டு கவர் வாங்கி நான் எப்படி எழுதுவது? செய்வது நன்றாக இருக்குமா?

புறப்படும் போது அவர்களிடம் இருந்த சகஜ மனப்பான்மை ஹேமாவுக்கும் எனக்குமிடையே நிலவியிருந்த நேசத்தால் தோன்றியது என்று நான் நினைக்கும்படி அத்தையாவது பாட்டியாவது என்னிடம் ஒரு வார்த்தை கூடத் தாராளமாகப் பேசவில்லை. ஹேமா திடீரென்று படுத்துக் கொண்டு விட்டதனால் இப்படி இருக்கிறார்களா அல்லது நான் வந்திருப்பதில் விருப்பம் கொள்ளவில்லையா என்று எனக்குப் புரியவில்லை. ஊரில் இருக்கும் போது பாட்டு மறந்து போகாமலிருக்கத் தினமும் பாடுவேன். இங்கு அவர்கள் கவனியாமல் இருக்கும் போது நானாகப் பாடுவதா? வீட்டிலே ரேடியோ, புத்தகங்கள், பொழுது போக்கு விளையாட்டிற்கான கேரம் பலகை போன்ற சாதனங்கள் எல்லாம் இருந்தன. இருந்தாலும் ஹேமா இல்லாமல் அவைகளைச் சுதந்தரமாக உபயோகிக்க எனக்குத் தைரியம் வரவில்லை. பிடித்து விட்டாற் போல் எப்படி நாட்களைத் தள்ளுவது என்று கவலை கொள்ளலானேன். அன்று வெங்கிட்டு வழக்கம் போல் ரேடியோவில் செய்திகள் கேட்டுக் கொண்டு இருந்தான். நானும் அருகிலேயே இருந்தேன். செய்திகள் முடிந்ததும், “இருக்கட்டுமா? நிகழ்ச்சி முடிந்ததும் இந்த ஸ்விச்சைத் திருகி அணைத்து விடுகிறாயா?” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். யாரோ ஒரு பெண்மணி பாடிக் கொண்டிருந்தாள். அவள் பாடிக் கொண்டிருந்த பாட்டு எனக்கும் பாடம். எனவே என்னையும் அறியாமல் அதிலிருந்து வரும் குரலுடன் நானும் மெதுவாக இழைந்து பாட ஆரம்பித்து விட்டேன். பாட்டி அங்கே வந்ததை நான் கவனிக்கவே இல்லை.

“ஏன்டி சுசீலா, குழந்தை கண்ணைத் திறக்காம கிடக்கிறா; வேதனை பிடுங்கித் தின்கிறது. இப்போ என்ன வேண்டியிருக்கு பாட்டும் கூத்தும்? வெங்கிட்டு எங்கே? அதை அணைக்கச் சொல்லு” என்று அவள் குரல் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது எனக்கு. “இல்லை பாட்டி, வெங்கிட்டு வெளியே போய்விட்டான். நானே அணைத்து விடுகிறேன்” என்றேன் ரேடியோப் பெட்டியினருகில் சென்றவளாய். “எத்தையானும் திருகி ஒடிச்சுத் தொலைச்சுடாதே. பணம் பெற்ற சாமான்!” என்று அவள் சொன்ன வார்த்தைகள், எனக்கு எப்படி சுரீர் என்று உரைத்தன. கண்டபடி திருகி ஒடித்து விடும்படி அத்தனை பச்சைக் குழந்தையா நான்? எழுத்து வாசனையற்ற மூட ஜடமா நான்? அடேயப்பா! பணப்பெருமை, தன் வழிக் குழந்தை தானே என்பதையும் மறந்து எத்தனை நீசமாகப் பேசச் சொல்கிறது? ஹேமாவுக்குச் சமமாக நான் உயர்ந்து விட்டதாக மனப்பால் குடித்தது எத்தனை பேதமை!

அந்தக் கணமே எனக்கு அங்கு விட்டு இறக்கை கட்டிக் கொண்டாவது பறந்து ஊரில் குதித்து விட வேண்டும் போலிருந்தது. பாலும் பழமுமின்றிப் பழையமுது சாப்பிட்டாலும் அந்த வீடு, அந்தச் சுதந்திரம் நினைக்கவே இன்பமாக இருந்தது. ரேடியோவும் புத்தகங்களும் இல்லா விட்டால் என்ன? ஜகது அக்கா வேறு இருக்கிறாள். தமாஷாக இரண்டு பேரும் சாயங்காலம் காற்றாடக் குளத்தங் கரைக்குப் போவதில் உள்ள ஆனந்தத்திற்கு ஏது ஈடு? பாவம், ஜகது! அவளோடு சேர்ந்து நான்கு நாட்கள் இல்லாமல் ஓடி வந்தேனே; வேண்டும் நன்றாக எனக்கு!

ஹேமாவுக்குச் சிறிது ஜுரம் இறங்கியது. கண்ணை விழித்துக் கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்கிறாள் என்று சொல்லிக் கொண்டார்கள். நாமும் பயணம் கட்ட வேண்டியதுதான். அத்தையிடம் மெதுவாகத் தெரிவிக்கலாம் என்று கீழே வந்தேன். பாட்டியும் அவளும் சாப்பிட உட்கார்ந்தனர் போலிருக்கிறது. உள்ளே நுழையுமுன்பே எனக்குப் பேச்சுக் குரல் கேட்டது.

“அவளா? அடேயப்பா, பலே கெட்டிக்காரி. பேச்சும் வார்த்தையுந்தான் சர்க்கரையாக இருக்கு. இந்தப் பெண்ணை ஆட்டி அம்பலத்தில் வச்சுடுவாள். பிள்ளையாண்டானுக்கு வயசு கிட்டத்தட்ட முப்பதாகப் போகிறதாம். இளையாளைப் போலப் பதினாலு வயசா வித்தியாசம்? ஆயிரம் நட்டாங்க் சொல்லுவாளே மன்னி? தானாகப் பார்த்து இதை எப்பிடிப் பொறுக்கினாள்?” என்றாள் அத்தை.

“இதுக்கேதான் ரூவாய் இரண்டாயிரத்தைந்நூறு கழற்றி இருக்காளே? பிள்ளையாண்டான் எங்கேயோ மாசம் அம்பது ரூபாய் சம்பாதிப்பதற்கு” - இது பாட்டி.

“வேலை கூடக் காயமில்லை. பி.டபிள்யூ.டி.யில் டெம்ப்ரரியாகத்தான் இன்னும் இருக்கானாம்” என்றாள் அத்தை மறுபடியும்.

என்னைப் பற்றித்தான் இவை என்று கூடப் புரியாத முட்டாளா நான்?

“சுசீலா அதிருஷ்டக்காரி. நல்ல வரனாகக் கிடைத்து விட்டது. அவர்கள் எல்லோரும் பெண்ணைத் தலைமேல் வைத்துத் தாங்கக் கூடியவர்கள்” என்று அம்மாவிடம் அபிப்பிராயம் கொடுத்த அதே அத்தையா இப்போது பேசுவது? எதற்காக இப்படி உள்ளொன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுகிறாள்.

நிஜமாக என் ஓரகத்தி அவ்வளவு பொல்லாதவளா? அவருக்கு நான் இளையாள் போல என்கிறாளே? அப்படியானால்... அவர் சீக்கிரமாக... நான்... சட்! எப்படி இருந்தால் என்ன? அவர் என் மீது அளவற்ற பிரியம் கொண்டிருக்கிறார். அது ஒன்றே எனக்குப் போதாதா? எப்பேர்ப்பட்ட குறைவும் மன நிறைவில் மறைந்து விடுமே!

சந்தர்ப்பம் சரியில்லை என்று வந்த சுவடு தெரியாமலே நான் திரும்பி விட்டேன். ஆனால் களங்கமற்றிருந்த என் இருதய வானிலே ஒரு சிறு புள்ளி விழுந்து விட்டது. அத்தையின் அபிப்பிராயம் ஏற்கனவே அமிழ்ந்து கிடந்த அந்த அர்த்தமற்ற நம்பிக்கையைக் கிளப்பிவிட்டு என்னை உறுத்த ஆரம்பித்தது.

குற்றங்கள் நம்மை அறியாமல் உள்ளே புதைந்து உணர முடியாமலே போவதற்குக் காரணம் அவைகளை அமுக்கி விடக் கூடியதாகச் சந்தோஷம் எழுப்பி விடுவதால் தான். என் புக்ககத்தாரின் மேற்படி குறைகள் நிஜமானவை தாமோ? ஏதோ உணர்ச்சி வசப்பட்ட புது ஆசையில் நான் அவைகளை நிறைவாகக் கருதலாம். நாள்பட்ட மெருகு அழிந்து போவதால் பல்லைக் காட்டும் முலாம் பூசப்பெற்ற பாண்டம்போல என் புது ஆசை மெருகும் அழியுமானால் குறை பெரிய மடுவாகக் காட்சியளிக்குமோ எனக்கு?

தொடர்ந்து அன்றைய நிகழ்ச்சிகள், இடி, மின்னல், பாட்டு எல்லாம் சங்கிலித் தொடர் போல என் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டன. நினைக்கவே பயம் கொடுத்த இவ்வேதனை கட்டி வைத்தாற் போன்ற அந்தச் சுழ்நிலையில் வளர்ந்து வளர்ந்து என்னை வருத்தியது.

இரவு தூங்காமல் புரண்டு கொண்டிருந்த என்னை பக்கத்துப் பெஞ்சியில் வந்து படுத்துக் கொண்ட பாட்டி கூப்பிட்டாள்.

“ஏன் பாட்டி?” என்று கேட்ட நான் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

“உன் அப்பா கடுதாசி போட்டிருக்கானாம்!” என்றாள் மெதுவாக. இதைச் சொல்லவா இந்த யோசனை? ஏன், வந்தவுடனேயே எனக்குச் சொல்லக் கூடாதா? “என்ன பாட்டி?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“உங்களாத்தில் உன்னைக் கொண்டு விடச் சொல்லி எழுதியிருக்கிறார்களாம்!”

“என்னது?” என் நெஞ்சு ‘டப்டப்’பென்று அடித்துக் கொண்டது.

“ஆமாண்டியம்மா, ஆமாம்! ஐந்நூறு ரூபாய்க்கு அடி போட்டிருக்கிறான் உன் அப்பா!” என்றாள் பாட்டி வேப்பங் காயைத் தின்று விட்டுத் துப்புவதுபோல்.

அப்பா இங்கே பணம் கேட்டு எழுதியிருக்கிறாரா?

நான் புரியாமல் விழித்தேன்.

அவள், “புடவை, வேட்டி, பெட்டி, படுக்கைன்னு ரூபாய் அஞ்சு நூறுக்கு இங்கே எழுதியிருக்கானாம். கல்யாணத்துக்கேதான் வேண்டியது செய்தாளே. ஒருத்தரையே உருவி உருவிக் கேட்கணும்னு ஏன் புத்தி போகிறது? அப்படித்தான் ‘நறுக்’குனு நூறு ரூவாயிலே ஒரு புடவையை வாங்கி மங்கிலியப் பெண்டுகள் இட்டு, சபை நிற்கப் பாருவுக்குக் கொடுத்தாளா? எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. உன் அம்மாதான் எழுதச் சொன்னாள் என்றால் உன் அப்பாவுக்கு ஏன் இப்படி எழுதத் தோன்றுகிறது? இத்தனை வரதட்சிணை கொடுத்து, பி.ஏ. படிச்ச மாப்பிள்ளை பார்க்க வேண்டாமே? தன் விரலுக்குத் தக்கபடி வீங்கினால் போதுமே. குழந்தை மலை போலப் படுத்துக் கொண்டு விட்டாளே என்று அவாளுக்கு முகத்திலே ஈயாடலே. இப்பத்தான் பணத்துக்கு எழுதுவாளா?” என்று சரமாரியாகப் பொரிந்து தள்ளினாள்.

ஏற்கனவே அத்தையகத்து அந்தஸ்திற்கும் அகம்பாவத்திற்கும் முன் முதுமையின் தோலைப் போல் சுருங்கிப் போயிருந்த என் மனம். இப்போது அப்பா வேற எனக்குத் தேடித் தந்துவிட்ட அவமானத்தினால் கடுகிலும் கடுகாகப் போய்விட்டது போலிருந்தது.

இவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று தெரியாதோ? ஏன் இங்கு எழுதினார்? ஏதோ கல்யாண காலத்தில் நாலுபேருக்கு முன் சகஜமாக அளவளாவுவது போல காண்பித்துக் கொண்டால் அதையும் நிசம் என்ற நம்பி விடுகிறாரே இந்த அப்பாவி அப்பா! அம்மாவா எழுதச் சொல்லுவாள்? ஏற்கனவே தான் சமயம் வாய்த்த போது எல்லாம் பணக்காரத் தங்கை என்று குத்திக் காட்டுவாளே! இந்த ஐந்நூறு ரூபாய் எங்கும் கிடைக்காதா? இங்கு வந்து ஏன் முட்டிக் கொள்ள வேண்டும்? ஆனால் அப்பாவுந்தாம் என்ன செய்வார்? அவர் மீதில் என்ன தப்பு? ஐந்நூறு ரூபாய் இவர்களுக்குப் பெரிதா? இதோ ஹேமாவுக்குப் பணிவிடை செய்கிறாளே, அந்த நர்ஸுக்கு மட்டும் நாளைக்கு இருபது ரூபாய் என்று பேசிக் கொள்கிறார்களே! இன்னும் டாக்டர், மருந்து, என்று எத்தனையோ? ஆயிரம் ஆயிரமாக செலவழிக்கிறார்கள். அத்திம்பேருக்குத்தான் மாதம் ரண்டாயிர ரூபாய் போல் வரும் என்று கூறுகிறார்களே! ஐந்நூறு ரூபாய் கொடுக்க அப்பா என்ன அல்லா, அசலா? கூடப் பிறந்தவர்தாமே அத்தைக்கு? அப்படியாவது திராக்கிரகச் செலவுக்குக் கேட்கிறாரா? எனக்காக இந்த அற்பக் காசைக் கொடுப்பது இவர்களுக்குப் பிரமாதமில்லையே? அவர்களுக்கும் இந்தக் கடின சித்தம் வேண்டாம்; பாட்டிக்கும் இந்த ஏளனம் வேண்டாம். எப்படியாவது ஊருக்குப் போய் இவர்களுடைய மனப்பான்மையைத் தெளிவாக உடைத்து விட வேண்டும் போல் மனம் துடித்தது எனக்கு.

அப்படித்தான் இருக்கும். பாட்டி இதெல்லாமா என்னிடமா பேசுவது? பெரியவர்கள் பாடு ஆயிரம் இருக்கும். இந்த நிஷ்டூரங்களை அம்மாவின் ஸ்தானத்தில் என்னை மதித்துக் கூறுவது அழகாகுமா? ‘ஐயோ பாவம்! சின்னச் சம்பளம். இரண்டு பெண்களுக்கு முதலிலேயே கல்யாணம் செய்து சளைத்து விட்டான். அவனுக்கு உதவி செய்யத்தான் வேண்டும்’ என்று இரக்க புத்தியும் அநுதாபமும் இந்தப் பாட்டிக்கு ஏன் தோன்றவில்லை? பெண் என்றாலே தாய்மார்களுக்கு அலாதி வாஞ்சை உண்டு என்று நான் கண்டிருக்கிறேன். அதிலும் அத்தை சாமானியப் பெண் இல்லையே! பாரபட்சம் அதனால் தான் மலையும் மடுவுமாக உருவெடுத்திருக்கிறது போலும்!

இத்தகைய என் மனக்கிலேசங்களில் என்னைப் புக்ககத்தில் கொண்டு விடப் போகிறார்கள் என்ற நினைவு அமுங்கியே போய்விட்டது. ஐந்நூறு ரூபாய்ப் பிரச்னை இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வராமல் மலைபோல் என் முன் தோன்றிப் பயங்கரமாகக் காட்சி அளித்தது.

ஈசுவரன் ஏன் இப்படிக் கடின புத்தியுடன் செல்வத்தையும் ஏழ்மையுடன் மக்களையும் படைக்க வேண்டும் என்று அநாதி காலம் தொட்டு மக்கள் ஆராய்ந்தும் விடை கண்டறியாத புதிருக்குள் தலையை விட்டுக் கொண்டு நான் குழம்பிப் போனேன்.

1-4

இரவில் சரியாகத் தூங்காததனாலோ என்னவோ, பொழுது விடிந்ததும் தலை ஒரே கனமாகக் கனத்தது. உள்ளத்தில் குடைந்த வேதனையின் பிரதிபலிப்புப் போல உடம்பெல்லாம் குடைச்சலாக இருந்தது. வெகுநேரம் எழுந்திருக்காமல் படுத்துக் கொண்டு இருந்தேன். குளித்து விட்டுப் பாட்டி ஈரப்புடவையை உலர்த்துவதற்காகக் கொடிக்கோல் சகிதம் வந்தாள். “ஏண்டி சுசீலா, இன்னும் எழுந்திருக்க வேளையாகவில்லையா? புக்ககம் போகும் பெண் விடிந்து ஏழு மணி வரையுமா படுத்துக் கொண்டிருப்பாள்?” என்று கடிந்து கொண்டாள்.

அவள் கடுமையினால் கண்களிலே நீர் நிறைந்து விட்டது. பழக்கமுள்ள அம்மா எத்தனை கடிந்தாலும் எனக்கு உறைக்காது. பாட்டிதான் என்றாலும் என் மனத்தை விட்டுக் காத தூரத்துக்கு அப்பால் இருக்கிறவளாயிற்றே! பழக்கம் இல்லாத இடத்தில், அன்பு செய்ய யாரும் இல்லாத இடத்தில் வந்து முள்வேலிக்குள் அகப்பட்டுக் கொள்வது போல அகப்பட்டுக் கொண்டோமோ என்று வேதனை நெஞ்சை வந்து மறித்தது.

“இல்லை பாட்டி, தலையைப் பாறாங்கல்லாகக் கனக்கிறது. உடம்பெல்லாம் வலிக்கிறது” என்றேன் மெதுவாக.

“அது வாயை விட்டுச் சொன்னால் தானே தெரியும்? எழுந்து வா. குளிக்க வேண்டாம். சுக்குக் கஷாயம் போட்டுத் தருகிறேன்” என்றாள் அருமந்தப் பாட்டி.

ஹேமா அன்று தலைவலி என்று படுத்துக் கொண்டது, என் ஞாபகத்தில் வராதே என்று நெட்டித் தள்ளியும் கேட்காமல் வந்தது. சே சே! அவள் யார், நான் யார்? ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கும் செல்வச் சீமானின் அருமைப் புதல்வியாகிய அவள் எங்கே? கேவலம் ஐநூறு ரூவாய்க்குத் தாளம் போடும் ஏழை குமாஸ்தாவுக்கு வேண்டாம் என்று சொல்லும்படியாக மூன்றாம் பெண்ணாகப் பிறந்த நான் எங்கே? இந்தச் சுக்குக் கஷாயமே பெரிதாயிற்றே!

ஊருக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை என்னை உந்தித் தள்ளியது. கைகளையும் காலையும் நீட்டி முறித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்த நான், “என்னை ஊரிலே யார் கொண்டு போய் விடுவா?” என்று கேட்டேன்.

“ஏன்? இங்கே முள்ளின் மேல் இருப்பது போல் இருக்கா? ஊரிலே என்ன வச்சிருக்கு? மெதுவாகப் போனால் போச்சு” என்று அவள் முடித்து விட்டாள்.

‘போல் என்ன? முள்ளின் மேல் தான் இருக்கிறேன்’ என்று கூறிவிட வாய் துடித்தது. ஆனால் பேசாமல் படுக்கையைச் சுற்றி வைத்துவிட்டுக் கீழே இறங்கிச் சென்றேன். உடம்பு கணகணவென்று இருப்பது போல் வேறு உணர்ந்தேன்.

“ஹேமாவைப் போல நான் இங்கே படுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வேன்?”

என்னைப் பயம் பற்றியது. ஊடே இந்த நினைவு மனத்திலே வந்தது.

அன்று ஒரு கணம் மயங்கி விழுந்ததற்கு அவர் அந்தப் பாடு பட்டாரே; இப்போது நான் இருக்கும் நிலை தெரிந்தால்...? இந்த அத்தையகத்தை இனிமேல் ஆயுளிலும் எட்டிப் பார்க்கக் கூடாது என்று உத்தரவு போட்டாலும் போடுவார்!

அச்சமும் கவலையும் சூழ நான் பாட்டி கொடுத்த சுக்குக் கஷாயத்தைக் குடித்து விட்டு மாடிக்கு வந்த சமயம், அத்தை ஓர் இளைஞனுடன் வராந்தாவில் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

“இனிமேல் பயம் இல்லை என்று டாக்டர் சொல்கிறார். இனிமேல் ஜாக்கிரதையாக அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நானும் ஊரிலிருந்து வந்த நாட்களாக அங்கே வந்து எட்டிப் பார்க்க வேணும், பார்க்க வேணும் என்று குட்டிக்கரணம் போட்டுப் பார்க்கிறேன். எங்கே முடிகிறது? நாளைக்கு நீதான் மஞ்சுவைப் போய் அழைத்து வரப் போகிறாயாக்கும்? அப்பா உடம்பு எப்படி இருக்கிறது? அம்மாவுக்குச் சாதாரண ஜுரந்தானே?” என்று அத்தை விசாரித்தாள்.

“அப்படித்தான் டாக்டர் சொல்கிறார். அப்பா உடம்புக்குப் புதிதாக என்ன வந்திருக்கிறது. அதே நிலைதான். ஊரிலிருந்து மாமா பெண் வந்தாளே, அவளுக்கு இருமல். அவள் கைக்குழந்தைக்கு மாந்தம். அதை ஏன் கேட்கிறீர்கள், மாமி? வீடே ஆஸ்பத்திரியாக இருக்கிறது இப்போது. சிவனேயென்று நான் டாக்டருக்காவது படித்திருந்தால் லாபமாக இருந்திருக்கும். இன்னும் மஞ்சு வேறு வந்துவிட்டால் கேட்க வேண்டாம். ஏற்கனவே துர்ப்பலம். அதிலும் இப்போது கர்ப்பிணி” என்று சிரித்துக் கொண்டே கூறிய அவன் பார்வை என் மீது பட்டு விட்டது.

“இது யார் மாமி?” என்று நான் சென்ற பிறகு விசாரிக்காமல் நேரிடையாகவே அவன் கேட்டது வெகுளியான உள்ளத்தை எனக்கு அறிவித்தது.

“இவள் தான் சுசீலா. இவளுக்குத்தான் கல்யாணம் நடந்தது” என்றாள் அத்தை.

“ஓகோ! இவள் தான் கல்யாணப் பெண்ணா? பார்க்க ஹேமாவை விடச் சின்னவளாக இருக்கிறாளே; அதற்குள்ளாகவா கல்யாணம்? மாப்பிள்ளை என்ன பண்ணுகிறார்?” என்று அவன் விசாரித்த போது எனக்கு வெட்கமாக இருந்தது. நேருக்கு நேர் ஓர் இளைஞன் என்னைப் பற்றிக் கேட்பது இதுதான் முதல் தடவை.

“சின்னவள் என்ன? வயசு பதினாறு ஆகிறது. ஹேமா பார்க்கச் சற்றுத் தாட்டியாக இருக்கிறாளே ஒழிய, அவளை விட இவள் தான் பெரியவள். மாப்பிள்ளை பட்டணத்தில் தான் வேலையாக இருக்கிறான்” என்று பதிலளித்தாள் அத்தை.

அவன் பின்னும், “இவள் உங்களுடன் வந்தாளாக்கும்! பாவம் ஹேமா படுத்துக் கொண்டு விட்டாளே; இவளுக்கு எப்படி போது போகிறது? ஊரெல்லாம் சுற்றிப் பார்த்தாளோ?” என்று தூண்டித் துளைத்து விசாரித்தது, எனக்கு அவன் யாரென்று அறியும் ஆவலை மூட்டியது. அங்கு வந்து நான் ஒரு மாதத்திற்கு மேலாகியும் யாருமே என்னைப் பற்றி நினைக்காததை, அப்போதுதான் என்னைக் கவனித்தவன், ஒரு நொடிக்குள் இவளுக்கு எப்படிப் போது போகிறதென்று சரியாகக் கேட்டானே! இங்கு யாருக்கும் தோன்றாததை அறிந்து விட்ட இவன் யாராக இருக்கும்? என்று நான் வியந்தேன்.

“அவள் வந்த வேளையேதான் சரியாக இல்லையே! இத்தனை களேபரமாக இருக்கிறதே! ஓரிடத்துக்கும் இவளை அழைத்துப் போகவில்லை. நாளைக்கு மஞ்சுவை அழைத்துக் கொண்டு வந்து விட்ட பிறகு தான் நீ பட்டணம் போகிறாயாக்கும்” என்று அத்தை சமத்காரமாகப் பேச்சை மாற்றி விட்டாள்.

“ஆமாம், நாளையே கிளம்பிப் போய் அவளை அழைத்துக் கொண்டு இங்கே விட்டுவிட்டு மறுபடியும் நான் புறப்பட வேண்டும். காலேஜ் திறந்து விடுகிறது. வெங்கிட்டு இல்லையாக்கும்! நான் வரட்டுமா மாமி?” என்று அவன் கிளம்பலானான்.

“போகிறாயா? மஞ்சு வந்த பிறகு முடிந்தால் வந்து விட்டுப் போ. இரேன், சாப்பிட்டுவிட்டுப் போயேன்” என்று அத்தை உபசாரம் செய்தாள்.

“இல்லை, இல்லை. எனக்குக் கொள்ளை வேலை கிடக்கிறத். இவ்வளவு சீக்கிரம் சாப்பிடுவதற்கும் இல்லை. நான் வருகிறேன்” என்று கைபிடிச்சுவர் ஓரமாக நின்ற என்னைப் பார்த்துக் கூட அவன் விடை பெற்றுக் கொண்டான். அவனைத் தொடர்ந்து அத்தையும் கீழே சென்றாள். நான் வராந்தாவிலிருந்து அவன் வாயிலில் வந்து சைக்கிளில் ஏறிச் சென்றதைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அவன் யார் என்று அத்தையிடம் கேட்க எனக்குத் துணிவு வரவில்லை. அத்தையை ‘அம்மாமி’ என்று அழைத்தானே; ஹேமாவினுடைய அப்பா வழியில் சொந்தமாக இருக்கலாம்.

மெள்ள மெள்ள எனக்கு நினைவு வந்தது. ஹேமாவுக்கு அத்தை பிள்ளை இவனாகத்தான் இருக்க வேண்டும். மகாராஜா காலேஜில் புரொபஸராக இருப்பவர் இவன் தந்தையாகத்தான் இருக்க வேண்டும். அம்மா ஒருமுறை பேச்சுவாக்கில் அப்பாவிடம் கூறியது கூட என் ஞாபகத்திற்கு வந்தது. “உங்கள் தங்கை யகத்துக்காரருக்கு உடன் பிறந்தவள் உண்டே, அவளுக்குப் பிள்ளை இருக்கிறான். அவா மனசு வச்சா நம் சுசீலாவைப் பண்ணிக் கொள்ளக் கூடாதா? அவளுக்கு என்ன, அழகு படிப்பு எதில் குறைவு? எல்லாம் பணத்தில் மறைந்து கிடக்கு. அப்படி ஒன்றும் அது எட்ட முடியாத சம்பந்தம் இல்லை. சொத்து, சுதந்திரம் ஒன்றும் கிடையாது. அவர் வேலையுடன் சரி. அவர்கள் பண்ணிக் கொள்கிறேன் என்றாலும் உங்கள் தங்கையும் அம்மாவும் முட்டுக்கட்டை போடுவார்கள்” என்று அவள் குறிப்பிட்டது இவனாகத்தான் இருக்க வேண்டும். “சின்னவளாக இருக்கிறாளே? அதற்குள்ளா கல்யாணம்?” என்று அவன் கேட்டதை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வந்தது. பார்ப்பதற்கு நான் அப்படியா இருக்கிறேன்?

தொடர்ந்து அத்தை முதல் நாள், “இத்தனை வயசா வித்தியாசம்? மாப்பிள்ளைக்கு முப்பது வயது இருக்கும் கிட்டத்தட்ட” என்று கொடுத்த அபிப்பிராயம் ஏனோ என் நெஞ்சில் வந்து குறுக்கிட்டது.

ஹாலின் ஒரு புறமாக இருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் என் உருவம் தெரிந்தது. அவன் கூறியது உண்மைதானா என்று ஆராயும் பொருட்டோ என்னவோ அதையே பார்த்துக் கொண்டு நின்றேன். உண்மையில் நான் அப்போது பூரணப் பொலிவுடன் விளங்கினேன் என்று சொல்ல வேண்டும். நானே என்னைப் பெருமையாகக் கூறிக் கொள்ளவில்லை. கதைகளிலே வரும் கதாநாயகி போல நீண்ட கூந்தல், பளபளத்த சிவந்த மேனி, அகன்ற கருவிழிகள் எல்லாவற்றிலும் என் முற்றாத இளமை நன்றாகத் தெரிந்தது. நிலைக்கண்ணாடியில் என் உருவத்தில் ஆழ்ந்திருந்த நான், மனக் கண்ணாடியிலுள்ள என் கணவரிடம் எப்படிப் போனேனோ?

முதல் முதலாக அவர் என்னைப் பார்க்க வந்த போது நான் கண்ட அவர் உருவத்துக்கும், பின் கண்ட காசி யாத்திரைக் கோலத்திற்கும் எத்தனையோ வித்தியாசங்கள் இருந்தன போல் எனக்குத் தோன்றியது. உண்மையைக் கூறப் போனால் அந்த இரு தோற்றங்களிலும் அவர் உருவம் என் மனத்தில் பதியவே இல்லை. ஆனால் ஊர்வலத்தின் போது நான் கண்ட அவர் கோலம் என்னுள் அழியாமல் உறைந்து விட்டது. அந்த மேற்கத்திய உடையில் அவர் எனக்கு அதிக உயரமுள்ளவராகக் காட்சி அளித்தார். முன் நெற்றியை மட்டும் மறைத்துக் கொண்டு இருமருங்கிலும் சற்று உள்ளே தள்ளிய கிராப்பு, அடர்ந்த புருவங்களுக்குக் கீழே கருமை பாயாத பெரிய விழிகள், அளந்து பிடித்தாற் போன்ற கூரான நாசி, சற்றே தடித்த உதடுகள், வளைவாக இரட்டை மோவாயில் வந்து முடியும் முகவாட்டம் என்றெல்லாம் என் உள்ளம் ஒவ்வொன்றாக ஆராய்ச்சி செய்தது. எப்படியும் அவரைப் பார்த்தால் எனக்குப் பொருத்தம் இல்லாதவராக மதிக்க முடியாது. நாலு பேர் நாலு விதமாகத் தான் அபிப்பிராயம் கொடுப்பார்கள். யார் என்ன சொன்னால் என்ன? அவருக்கு என்னைப் பிடித்து விட்டது. எனக்கு... எனக்கு மட்டும் என்ன? இப்போது நாங்கள் இருவரும் வாழ்வு முழுவதும் எக்காரணம் கொண்டும் பிரிய முடியாதபடி புனித ஒப்பந்தமாகிய மணமுடிப்பில் பிணைக்கப்பட்டு விட்டோம். இனிமேல் அம்மாதிரி நினைப்பது தவறு; நினைப்பது பாவமுங்கூட!

எத்தனை நேரம் இவ்விதச் சிந்தனைகளில் ஒன்றிப் போயிருந்தேனோ? ஒரு நாளும் இல்லாத திருநாளாக அத்தை என்னை அழைத்துக் கொண்டே வந்தவள், “ஊருக்குப் போக வேண்டும் என்று சொன்னாயாமே? பாட்டி சொல்லுகிறாளே” என்று கேட்டாள்.

“ஆமாம், நானும் வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகவில்லையா?” என்றேன். அவள் குரலில் தோன்றிய பாவம் என்னை ஊருக்கு அனுப்புவதில் இஷ்டம் இருப்பதாக எனக்குத் தொனித்தது. எனக்கு அது சுதந்திர உணர்ச்சியின் மகிழ்ச்சியை அளித்தது.

“இல்லை, போகிறதானால், யார் கொண்டு விட இருக்கிறார்கள் என்று பார்த்தேன். பாட்டியை இப்போது அனுப்புவதானால் சிரமமாகிவிடும். நாளைக்கு மூர்த்தி அந்தப் பக்கந்தான் போகிறான். உன்னை ஊரிலே கொண்டு விடச் சொன்னால் தங்கமாக விட்டுவிடுவான். நாகப்பட்டினம் நாலைஞ்சு ஸ்டேஷன் தானே அப்புறம்? அண்ணாவுக்குக் கடிதம் போட்டால் வந்து அழைத்துப் போகிறான்” என்று இழுத்தாள் அத்தை.

இறக்கை கட்டிக் கொண்டாவது ஊரில் போய்க் குதித்து விட வேண்டும் என்று ஆவலுற்றுத் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்த நான் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுவேனா? ஏற்கனவே துணைக்கு வர யாரும் இல்லை என்ற பீடிகையை வேறு அத்தை போட்டு விட்டாள். அப்புறம் எப்போது நேருமோ? அதுவரை சிறைக் கைதி போல இங்கேயே எப்படி இருப்பது?

“அப்படியானால் நான் நாளைக்கே போகின்றேன் அத்தை. ஊருக்கு இன்றைக்கு ஒரு கடிதம் போட்டு விட்டால் நாளைக்குப் போய்ச் சேர்ந்து விடும். அப்பா ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போய்விடுவார்” என்றேன் ஆவல் ததும்ப.

“நிஜந்தானா? மூர்த்தியைப் பார்த்துத் தெரிவிக்க வேண்டும். அப்புறம் கடைக்குப் போய் உனக்கு... ஏதானும்” என்று இழுத்துக் கொண்டே அத்தை குண்டு குண்டென்று கீழே ஓடினாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம், அத்தை” என்று அவள் வாக்கியத்தை முடிக்கு முன்னரே ஊகித்துக் கொண்ட நான் கத்தினேன்.

சற்றைக்கெல்லாம் வெங்கிட்டு என்னைப் பார்த்தவன், “நாளைக்கு ஊருக்குப் போகிறாயாமே சுசீலா? அதற்குள் என்ன அவசரம்?... உம்... அவர் ஞாபகம் வந்து விட்டதாக்கும்?” என்று குறுநகை செய்தான்.

பெரியவர்களைப் போல இவர்களுக்கு இன்னும் அந்தஸ்துக்கு வேண்டிய கபடம் உரமேறவில்லை. அதனாலேயே என்னைச் சமமாகப் பாவித்தார்கள். ஆனால் நான் அடுத்த தடவை வரும் போது இவர்களும் பெரியவர்களாகி விடுவார்கள். நிலைமைக்குத் தகுந்த கௌரவம் சமத்துவ மனப்பான்மையை ஒழித்துவிடும்!

அசடு போல் எண்ணுகிறேனே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம் பார்க்க வேண்டும்? ஒரு முறை வந்து விட்டுத்தான் எப்போது திரும்பப் போகிறோம் என்ற நிலையை அனுபவித்தேனே. “ஏதோ உடன் பிறந்தவன் பெண் வந்திருந்தாள் ஒரு மாதம்; நல்ல பெண்” என்ற மட்டிலும் வந்தேன். போகப் போகிறேன். முன்னும் இல்லை உறவு; பின்னும் இருக்கப் போவதில்லை.

அத்தை, பாட்டி பின் தொடரக் கையில் இரண்டு புடவைகளுடன் ஓடி வந்தாள். “அங்கே போய் மூர்த்தியிடம் சொல்லிவிட்டுக் கடைக்குப் போய் விட்டு அவசர அவசரமாக ஓடி வருகிறேன்... அப்பா! மூச்சுத் திணறுகிறது” என்று காரில் போய்விட்டு வந்த அத்தை சாவகாசமாகக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டாள். பாட்டிக்குப் பொறுக்கவில்லை.

“எதுக்கடி பாரு, இப்போது அவளுக்குப் புடவையும் கிடவையும்? அவசரமாகக் கிளம்பி வந்துட்டான்னா உன்னை யார் என்ன சொல்லப் போகிறார்கள்? நீ செய்து கொண்டே இருந்தால் ஒரு காலணாவுக்கு உனக்கு அங்கே திருப்பிக் கொடுக்கிறவர்கள் இல்லை!” என்று பெண்ணின் சொத்துப் பறி போகிறதே என்ற முறையில் எச்சரித்தாள்.

எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது. என்னுடைய அத்தை வீட்டு வாழ்வின் இறுதிச் சோதனைக் கட்டம் வந்து விட்டதென நினைத்தேன்.

“நீ சும்மா இருடி அம்மா. எனக்கு எல்லாம் தெரியும். கல்யாணம் ஆகி முதல் முதலாக வந்திருக்கிறாள். வெறுங்கையோடு அனுப்பினால் நாளைக்கு, அத்தை அழைத்துப் போனாளே சீராட, என்ன வாங்கிக் கொடுத்தாள்? என்று ஊர்க்காரர்களே கேட்பார்கள். இந்த கலர்கள் இரண்டும் நன்றாக இல்லை, சுசீலா?” என்று வினவினாள் அத்தை.

“ஊர்க்காரர்களுக்கென்ன? வாய்க்கு வந்ததைக் கேட்பார்கள்” என்று சுவை குன்றியவளாக முகத்தைக் கோணிக் கொண்டாள் பாட்டி.

இந்தப் புடவைகளை வாங்கிக் கொள்ளலாமா, வேண்டாமா என்ற பிரச்னை என்னுள்ளே பெரிய திண்டாட்டத்தைக் கிளப்பி விட்டுவிட்டது. அத்தை அன்பாய் மருமகளைச் சீராட்டிவிட்டு அன்பின் அடையாளமான பரிசாக உள்ளன்புடன் இவைகளை எனக்கு வாங்கி அளிக்கவில்லை. தான் பணக்காரி என்ற கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அவளுடைய அகம்பாவத்தின் சின்னமாக, எங்களுடைய எளிய நிலையைக் குத்திக் காட்டும் வார்த்தைகளுடன், ஊர்க்காரர்கள் வாய்க்குப் பயப்படுவது போல் நடித்துக் கொண்டு இவைகளை வாங்கி அளிக்கிறாள். இப்படிப்பட்ட பொருளை, என் மனத்துக்குச் சிறிதும் ஒவ்வாத வகையில் நான் எப்படிப் பெற்றுக் கொள்வேன்! எவ்வளவுதான் இல்லாமையால் பீடிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் கண்ணியமுள்ள எவரும் தம் சுயமரியாதைக்குப் பங்கம் வரும் முறையில் தம்மை ஏளனப்படுத்திக் கொண்டு வரும் பொருளில் கொஞ்சமும் நாட்டம் கொள்ள மாட்டார்கள். கேவலம் அந்த நூல் புடவைகள் மிகச் சாதாரண ரகந்தான். இரண்டும் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்தும் பத்தும் இருபது ரூபாய்க்கு மேல் பெறாது.

நான் போராட்டத்தில் ஆழ்ந்திருந்த போதே அத்தை தன் பரிசுப் பொருளைப் பற்றி மிகவும் சிலாக்கியமான வர்ணனைகளில் மூழ்கி விட்டாள். “நல்ல நைஸ் புடவை. ஸில்க் மாதிரி வழுவழுப்பாகவும் இருக்கிறது. துவைத்துக் கட்டவும் உதவும். இந்தக் கலர்கள் இரண்டே இரண்டு தான் இருந்தன. எனக்கு ஒன்று கொடுத்தான் கடைக்காரன். இப்போதே ஒன்றைப் பிரித்துக் கட்டிக் கொள்” என்று எனக்கு உத்தரவிட்டாள். என்ன பதில் கூறுவது என்றே எனக்குப் புரியவில்லை.

‘எனக்கு வேண்டாம்’ என்று நறுக்குத் தெறித்தாற் போல் முகத்துக்கு நேரே கூறுவதா, இல்லையென்றால் கொஞ்சமும் பிடிக்காமல் அந்தப் புடவைகளை வாங்கிக் கொண்டு வியாதியஸ்தர் துணிபோல் கூசிக் கூசி அணிவதா?

என் மனம் இரண்டுக்கும் இடம் கொடுக்கவில்லை. அந்த மட்டும் பாட்டி சமய சஞ்சீவி போல் எனக்கு உதவியாக, “செவ்வாய்க்கிழமையும் தானுமாக இன்று பிரித்துக் கட்டிக் கொள்ள வேண்டாம். புக்ககம் போகும் பெண்ணுக்கு இரண்டு சித்தாடை வாங்கும் குறை தீர்ந்தாச்சு. மாற்றி மாற்றி உடுபுடவையாக இருக்கும்” என்றாள். ‘அப்பாடா!’ என்று பெருமூச்சு விட்டவளாக நான் அவைகளை வாங்கிப் பெட்டியில் வைத்தேன். ஏதோ வாங்கி வைத்தேன் என்றாலும் முழு மனத்துடன் நான் அவைகளை அங்கீகரிக்கவில்லை.

“நாளைக்கு மூர்த்தி இங்கேயே வந்து அழைத்துப் போகிறேன் என்றான். வேண்டாம் அப்பா, உனக்கு எதுக்குச் சிரமம். நானே ஸ்டேஷனுக்குக் கூட்டி வருகிறேன் என்றேன். எப்படியும் இந்த வழியாகத்தான் போக வேண்டும். வருகிறேன் என்றான். ஆனால் சாப்பாட்டிற்கே வந்துவிடு என்று சொன்னேன். காலை பத்து மணிக்கு வண்டி. ஊருக்கும் போகிறாள்; ஒரு பாயசம் பச்சடியுடன் காலையிலே சமையல் செய்து விடும்படி அந்த அஸமஞ்சத்தினிடம் சொல்லு, அம்மா. ஹேமாவை இன்று பூரா நான் பார்க்கவில்லை. எப்படி இருக்கோ?” என்று அவசரமாக மொழிந்த அத்தை விரைந்தாள்.

பட்டணத்தின் நடுவே வந்து வழி தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட பட்டிக்காட்டானைப் போன்று புடவையை எப்படிக் கழிக்கலாம் என்று வழி தெரியாமல் நான் விழித்தேன்.

1-5

மைசூரின் அழகிய விசாலமான வீதிகளுக்குக் குளிர்ச்சியையும் மனத்துக்கு ரம்மியத்தையும் தரும் வண்ணம் நின்று நிழல் தரும் மரங்களும், ஊருக்கே ஒரு கம்பீரத் தோற்றத்தை அளித்த மாட மாளிகைகளின் கூட கோபுரங்களும் என் நினைவிலிருந்தும் பார்வையிலிருந்தும் ஒவ்வொன்றாகப் போய்க் கொண்டிருந்தன. ‘வாழ்க்கையின் ஒவ்வொரு பாகமுங் கூட இப்படித்தான் கழிந்து விடுகிறது!’ என்று நெடு மூச்செறிந்த நான் வண்டிக்குள் திரும்பினேன். அதுவரை நான் எட்டிக் கூடப் பார்த்திராத இரண்டாம் வகுப்புப் பெட்டியின் மெத்தை என் மனதில் அதிகமான கூச்சத்தை உண்டு பண்ணியது. அத்தனை நாட்களில் நான் அதுபோலத் தனிமையில், இல்லை - ஓர் அன்னிய வாலிபனுடன் பிரயாணம் செய்ததில்லை என்பதை நினைவுறுத்திக் கொண்ட போது என் கூச்சம் பின்னும் அதிகமாகி என்னை என்னவோ செய்தது. அவ்வளவு பணம் படைத்திருந்த அத்தை கூட, என்னை அழைத்து வந்ததாலோ, அன்றி அத்திம்பேரும் வெங்கிட்டுவும் முன்னமேயே ஊர் திரும்பி விட்டதாலோ, வரும்போது மூன்றாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்தாள். பழக்கமில்லாத என் நிலை அவனுக்குத் தெரிந்து விடக் கூடாதே என்று நான் அலட்சியமாக இருப்பவளைப் போலத்தான் பாவனை செய்து கொள்ள முயன்றேன். சாதாரணமாக இருக்கும் போது அழகாகத் தோன்றுபவர்கள் புகைப்படம் எடுப்பவரின் ‘இயற்கையாக இருங்கள்’ என்ற வார்த்தையில் மூன்று நாட்கள் சோகத்தில் திளைத்தது போல் ஆகிவிடுவதில்லையா? நானும் எந்தப் பாவனையும் செய்து கொள்ளாமல் இயற்கையாக இருந்திருந்தேனானால் அவன் கவனத்தைக் கவராமலிருந்திருப்பேன். இப்போது என் பாவனை பொருந்தாமலிருக்கும் முகத் தோற்றம் அவனைச் சீக்கிரம் கவனிக்கச் செய்து விட்டது!

“ஏன்? என்னவோ போல் இருக்கிறாயே? இடம் சௌகரியமாக இல்லையா? ஆமாம், அங்கிருந்து வெளியே பார்த்தால் முகத்தில் கரித்தூள் அடிக்கும். இப்படி வந்து உட்கார்ந்து கொள்” என்று அவனுக்கு எதிர்ப்புற ஆசனத்தில் மூலையில் உட்கார்ந்திருந்த எனக்கு, தனக்குப் பக்கத்திலேயே ஓரத்து இடத்தைக் காட்டினான் மூர்த்தி.

பெட்டியில் நான் ஒருத்திதான் என் இனத்தைச் சேர்ந்தவள். இன்னும் இரண்டே வயதானவர்கள் தாம் எங்களைத் தவிர அங்கு இருந்தனர். ஒருவர் புத்தகம் ஒன்றில் ஆழ்ந்திருக்க மற்றவர் தினசரிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

“இல்லை, இங்கேயே சௌகரியமாக இருக்கிறது” என்று சிரமத்துடன் அவனுக்குப் பதிலளித்துவிட்டு நான் மறுபடியும் முகத்தை வெளியில் நீட்டிக் கொண்டேன்.

“இல்லை, அங்கே கரித்தூள் அடிக்கும் கண்களில். இப்படி வா! சொல்வதைக் கேள்!” என்று அவன் மிகவும் சகஜமாக எச்சரித்தது என் சங்கட நிலையை உச்ச நிலைக்குக் கொண்டு போய் விட்டது.

‘இன்னும் எத்தனையோ தூரம் போக வேண்டுமே? எப்படிப் போகப் போகிறாய்?’ என்ற பயம் என் மனத்தில் குடியேறியது. அந்தப் பயம் ஏன் இப்படிப் புறப்பட்டு வந்தோம் என்று என்னை நினைக்கச் செய்து, முன்பின் பழக்கமில்லாத வாலிபன் அவன், அவனுடன் தனியே வழிப்பிரயாணம் செய்வதாவது? என் புத்தி ஏன் அசட்டுத்தனமாகச் சென்றது? ‘நீங்களே கொண்டு விடுங்கள், பாட்டி’ என்று பிடிவாதமாகச் சொல்லியிருக்கக் கூடாதா? இவனுடன் வர நேர்ந்த இந்தச் சந்தர்ப்பம் ஒரு சங்கடத்தை மட்டுமா தேடித் தந்திருக்கிறது? அத்தை என்னுடைய தாழ்ந்த அந்தஸ்தை விளக்கிக் காட்டுவது போல வேறு பேசிவிட்டாள். “டிக்கெட் வாங்க வேண்டாமா?” என்று கேட்டுக் கொண்டே அத்தை தனது பெரிய கைப்பையைத் திறப்பதற்குள் அவனாகவே கையில் இருந்த டிக்கெட்டுகளைக் காட்டி, “அவளுக்கும் சேர்த்தே வாங்கி விட்டேன்” என்றது அத்தைக்கு சற்றுச் சப்பிட்டுவிட்டதை முகம் காண்பித்து விட்டது.

“அவளுக்கும் சேர்த்தா இரண்டாம் வகுப்பு வாங்கினாய்? அவளை அழைத்துப் போக வேண்டும் என்றால் கூடவே இருக்க வேண்டும் என்று அர்த்தமா? பெண்கள் வண்டியிலேயோ, அடுத்த வண்டியிலேயோ உட்கார்த்தி விட்டுச் சற்றைக்கு ஒரு தரம் நீ கவனித்துக் கொண்டால் போதாதா? வீணாக ரெயில்காரனுக்குக் கொடுப்பானேன்? அந்தக் காசைக் குழந்தை கையில் கொடுத்தால் இரண்டு ரவிக்கைத் துணியாவது வாங்கிக் கொள்வாளே?” என்று அத்தை ஒரு குட்டிப் பிரசங்கமே அல்லவா செய்து விட்டாள்?

நான் இந்தச் சௌகரியங்களுக்கு எல்லாம் கொஞ்சமும் அருகதை இல்லை என்று அறிவித்துங்கூட அவன், “பரவாயில்லை மாமி. என்னையே அப்பாதான், இந்த முறை ‘ஸெகண்டு கிளாஸில் போ. திரும்பி உடனே நீ கிளம்ப வேண்டும். தவிர மஞ்சுவும் ஒன்பது மாதக்காரி’ என்று சொன்னார். அவரே சௌகரியமாகப் போ என்று கூறும் போது, நானாகக் குறைத்துக் கொள்வானேன் என்று தான் வாங்கினேன்” என்று சிரித்து மழுப்பி விட்டான். ஏற்கனவே நான் அவமானத்தால் கூனிக் குறுகிப் போயிருக்கிறேன் என்று கொஞ்சமும் அவள் அறியவில்லை? பணச் செருக்கும் அகம்பாவ அழுத்தமும் வேரோடி இருக்கும் நெஞ்சுக்கு எதிராளியின் தாங்காத மனசை ஏளனம் செய்வது போல் பேசுவது தவறு என்று படவே படாதோ? அத்தையாம் அத்தை! உயிரே போவதாக இருந்தால் கூட இவள் காலடிக்கு வரக் கூடாது!

“சொல்லச் சொல்ல அங்கேயே உட்கார்ந்திருந்தாய் அல்லவா?” என்று அவன் கேட்கும்படி பாழாய்ப்போன புகை என் முகத்திலே வந்து தாக்கிக் கண்களில் கரித்தூளை விசிறி விட்டது. தோல்வியை ஒப்புக் கொள்வது போல் குனிந்து கண்களைத் துடைத்துக் கொண்டேன். விழிக்கவே முடியாதபடி எரிச்சல் கொளுத்தியது. முன்பு அவன் காட்டிய இடத்தில் போய்ச் சாய்ந்து கொண்டேன்.

என்னையே கவனித்துக் கொண்டிருந்த அவன், “தண்ணீரை விட்டுக் கண்களை நன்றாக அலம்பிவிடு. சுமாராக இருக்கும்” என்று கூஜாவைத் திறந்து தம்ளரில் தண்ணீர் விட்டுக் கொடுத்தான். கண்களைக் கழுவித் துடைத்துக் கொண்டு நான் உட்கார்ந்து கொண்டேன்.

அவன் காட்டிய அந்தப் பரிவு எல்லோரிடமும் சரளமாகப் பழகும் இவன் சுபாவ குணமா அல்லது வேண்டுமென்றே காட்டுகிறானா என்று எனக்கு விளங்கத்தான் இல்லை. ‘ஊர் போய்ச் சேருவதற்கு இன்னும் எத்தனை நேரம் இருக்கிறதோ? இடையில் காபி, சாப்பாடு என்று வேறு இருக்கின்றன. முழு முட்டாளாக இப்படியா வேண்டுமென்று சங்கடத்தில் சிக்கிக் கொள்வேன்?’ என்று உள்ளூறத் தவித்துப் போனேன். அவன் ஒன்றும் பேசாமல் இருக்க வேண்டுமே என்று நான் வேண்டிக் கொள்ளப் போக, அவன் என்னைக் கேள்வியாகவே கேட்டுத் துளைத்து விடுவான் போல் இருந்தது.

“உங்கள் வீட்டிலே நீ ஒரு பெண்தானா?” என்று முதலில் கேட்டான்.

“இல்லை. எனக்கு அக்கா இருவர் இருக்கிறார்கள்” என்று நான் முணுமுணுத்தேன்.

“ஏதோ தனியாகப் போவதற்குப் பேச்சுத் துணையாகத் தமாஷாக இருக்கும் என்று உன்னைக் கொண்டு விடுகிறேன் என்று ஒப்புக் கொண்டேனே? நீ பேசா மடந்தையாக இருக்கிறாயே? இந்தக் காலத்தில் எந்தப் பெண் இப்படிப் பட்டிக்காட்டு அம்மாமியாக இருக்கிறாள்? ‘ஸ்கூல் பைனலில் அந்த ஜில்லாவுக்கே முதலாக மார்க்குகள் வாங்கித் தேறியிருக்கிறாள் சுசீலா. மாமா காலேஜில் சேர்க்காமல் இருக்கிறார்’ என்று உன்னைப் பற்றி ஹேமா கூட முன்பே சொல்லியிருக்கிறாளே? அப்படிப் படித்த பெண்ணாகவே நீ இருக்கவில்லையே?” என்று அவன் என்னைப் பார்த்து நகைத்தான்.

‘பட்டிக்காட்டு அம்மாமி’ என்று அவன் கூறியது என் உள்ளத்தில் உறைத்தது. என் கணவர் கூட இப்படி இருக்கும் பெண்களைக் கண்டால் பிடிக்காது என்றாரே! அந்தக் கணக்கில் நான் எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழக வேண்டும் என்றெல்லாம் சங்கல்பம் செய்து கொண்டேனே ஒழிய, அசடு, இப்போது சமயம் வாய்த்திருக்கும் போது பயந்து பயந்து சங்கோசப்பட்டுச் சாகிறேனே? அவரைப் போலப் பண்படைந்த மனமுள்ளவன் போல் இருக்கிறது இவன். இவன் வாயிலிருந்து பட்டிக்காட்டு அம்மாமி என்ற பட்டப் பெயர் கேட்கும்படியாக பித்துக்குளியாக நடந்து கொண்டு விட்டேனே?

என் அசட்டுக் கூச்சத்தைத் தூசியை உதறுவது போல உதறித் தள்ளி விட்டுப் பதில் கொடுக்க நான் முடிவு செய்த போது அவன் என்ன கேள்வி கேட்டான் என்று மறந்துவிட்டேன். ஆனால் மூர்த்தி அவ்வளவு தூரம் நான் சங்கடப்படும் வரை வைத்துக் கொள்ளவில்லை. அதற்குள் இன்னொரு கேள்வி விடுத்து விட்டான்.

“சென்னையில் உங்கள் வீட்டார் எங்கே இருக்கிறார்கள்?” என்று வினவினான்.

நான் பதில் கூற வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்ட பின் அவன் கேட்ட கேள்வி எனக்கு விடை தெரியாததாக இருந்தது! சென்னையை நான் முன்பின் பார்த்தவள் அல்ல. விலாசங்கூட எனக்கு இன்னும் சரியாகத் தெரியாது.

ஆனாலும் விட்டுக் கொடுக்காமல், “நான் இதுவரை அந்தப் பக்கம் சென்றதில்லை. ‘ராதாராம் எலக்ட்ரிகல்ஸ்’ என்று இருக்கிறதாமே? அந்தக் கம்பெனி சொந்தக்காரர் அவருடைய தமையன் தான்” என்றேன்.

அவன் சட்டென்று நிமிர்ந்து கொண்டு, “என்னது? ராதாராம் எலக்ட்ரிகல்ஸ் என்றா சொன்னாய்? அப்படியானால் கேசவமூர்த்தியின் தம்பியா?” என்று கேட்டது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“தெரிந்திருக்கிறதே உங்களுக்கு?” என்று மலர்ந்த முகத்துடன் நான் திருப்பிக் கேட்டேன்.

“அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை. கேசவமூர்த்தியின் மைத்துனியை எனக்கு நன்றாகத் தெரியும். கல்லூரி இளைஞர்கள் சங்கத்தின் ஆதரவிலே நடக்கும் விவாதங்களுக்கு ராஜதானிக் கல்லூரியிலிருந்து அவள் அடிக்கடி வருவது வழக்கம். அந்த முறையிலே எனக்குப் பரிச்சயம் உண்டு. அவள் பிரஸ்தாபித்துக் கேட்டிருக்கிறேன். ஒரு முறை கேசவமூர்த்தியின் சகோதரர் என்று பொருட்காட்சி ஒன்றில் அவள் எனக்கு அறிமுகம் செய்வித்ததாகக் கூட ஞாபகம் இருக்கிறதே?” என்று அவன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசனை செய்தான்.

மதனியின் தங்கை ஒருத்தி அவர்களுடனேயே இருக்கிறாள். காலேஜில் படிக்கிறாள் என்று அப்பா சொல்லியிருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அவளாகத்தான் இருக்க்ம் என்று நான் ஊகித்துக் கொண்டேன்.

யோசனை பலனளித்து விட்ட மகிழ்ச்சியுடன் தலையைச் சாய்த்துக் கொண்டு அவன், “ம்... நினைவுக்கு வருகிறது. உன்னுடைய ‘அவர்’ பெயர் ராமநாதன் தானே?” என்று புன்னகை செய்துவிட்டு, “அவர் என்ன பண்ணுகிறார்?” என்று கேட்டான்.

இதுவரையில் நான் உதறித் தள்ளியிருந்த பாழும் சங்கோசம் என்னை மீண்டும் முகமூடியிட்டு விட்டது. காலில் கௌவும் அட்டையை உதறித் தள்ளுவது போல் அத்தனை சிரமப்பட்டு அதை உதறித் தள்ளியிருந்தேன். ஆனால் அவருடைய பேச்சை யார் எடுத்தாலும் உள்ளத்திலே பொங்கி வரும் உணர்ச்சி என் சரளமான போக்கில் நெளிவையும், குழைவையும் கொண்டு வந்து விடும் போது, குறும்புச் சிரிப்புடனும், குறுகுறுத்த விழிகளுடனும் எனக்கு அதிகம் பழக்கமில்லாத இளைஞன் ஒருவன் கேட்கும் போது நான் என்ன செய்வேன்? அதுவும் வேற்று ஆடவர் எவருடனும் தனிமையில் பழகும் அனுபவம் எனக்கு முற்றும் புதிதாக இருக்கும் போது? அவன் கேட்டுவிட்டு என்னையே வேறு புன்னகை மாறாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.

பட்டுத் துணியால் மூடியது போல் மனம் கதகதக்க எப்படியோ கூட்டிக் குழப்பி அவர் எங்கு வேலையாக இருக்கிறார் என்று நான் ஒரு வழியாகக் கூறினேன். “அப்பா...டா! இதற்கு இத்தனை யோசனையா?” என்று கேட்டுவிட்டு அவன் கலகலவென்று நகைத்தான்.

இந்தப் புதிய அனுபவம் ஒரு சமயம் தேவலை போலும் இருந்தது. ஒரு விதத்தில் பயமாகவும் இருந்தது.

சற்றும் எதிர்பாராத விதமாக மூர்த்தியிடத்தில் என்னுடைய புரியாத சந்தேகங்களைத் தெளிவிப்பது போலும், அவன் மனநிலை எனக்கு நன்கு விளங்குவது போலும் தொடர்ந்து நாங்கள் பெங்களூர் வந்து வண்டி மாறிய பின் ஓடும் ரெயிலில் ஒரு சம்பவம் நேரிட்டது.

நாங்கள் அந்தப் பெட்டியில் வந்து ஏறும் போது ஏற்கனவே ஒரு ஆடவனும் இளநங்கை ஒருத்தியும் அதில் இருந்தார்கள். அவள் கன்னட நாட்டைச் சேர்ந்தவள் என்பதை அவள் முகமும் அணிந்திருந்த ஆபரணங்களும் விளக்கின. சோகம் சூழ்ந்த அவள் முகத்தோற்றம் கல்வியோ நாகரிகமோ சிறிதும் இல்லாதவளாகவும், அறியாமை மெத்த நிரம்பினவளாகவும் தோன்றியது. அந்த மனிதன் நாகரிகமாக உடையுடுத்து நல்ல தேகக்கட்டு வாய்ந்தவன் போல மீசையும் கிருதாவுமாகத் தென்பட்டான். நானும் மூர்த்தியும், ஆமாம், உம் என்று பேசிக் கொண்ட மாதிரியில் கூட அவர்கள் பேசவில்லை. ‘வெவ்வேறு ஆசாமிகள் போல் இருக்கிறது’ என்று நான் முடிவு செய்தேன்.

“கீழே அப்படியே படுத்துக் கொண்டு விடு. இன்னும் ஆட்கள் வந்தால் படுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு மூர்த்தி மேல் தளத்தில் ஏறிப் படுத்துக் கொண்டு குறட்டை விட்டுத் தூங்கினான். ஆனால் எனக்குப் படுக்கப் பிடிக்கவில்லை. தூக்கமும் வரவில்லை. என்னை அப்படிக் கொட்டுக் கொட்டென்று விழித்திருக்கச் செய்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது. அவர்கள் இருவரும் அதே நிலையில் இருந்தது தான் அது.

அது என்னவோ சந்தேகம் தட்டியது. அந்தப் பெண்ணைப் பார்த்து நான், “எங்கே போகிறாய்?” என்று கேட்டேன். அவள் பதிலுக்கு அழுது வழிந்த குரலில் கன்னடத்தில் ஏதோ சொன்னாள். என்ன சொன்னாள் என்பது எனக்குப் புரியவில்லை. “தனியாகவா போகிறாய்?” என்று அர்த்தமில்லாமல் கேட்டு வைத்தேன். அதற்கும் அவள் ஏதோ உளறிக் கொட்டினாள். அவனைப் பார்த்தால் தமிழன் போலவே எனக்குப் பட்டது. ஆனாலும் எங்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தவன், ஏனோ வாயே திறக்கவில்லை.

என்னதான் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும் நள்ளிரவு சமயத்தில் அறியாமலே என்னை ஓர் அசத்தல் அசத்தி விட்டது. ஆசனத்தில் சாய்ந்தவாறே நான் கண்களை மூடியிருக்கிறேன். ‘டடக், டடக், டடக், டடக்’ என்று சக்கரங்கள் தண்டவாளத்தில் உருளும் சப்தம் மட்டும் கொஞ்சம் நேரம் வரை என் செவிகளில் விழுந்து கொண்டிருந்தது. பின்னர் அதுவும் மெல்ல மறைந்து விட்டது. எத்தனை நேரம் நான் தூங்கி விட்டேனோ தெரியவில்லை. சப்தம் போட்ட பேச்சுக்குரல், அழுகையொலி எல்லாமாக என்னைத் திடுக்கிட்டு எழ வைத்தன. வண்டி ஓடிக் கொண்டிருக்க, அந்தப் பெண்மணி கன்னடத்தில் ஏதேதோ கடல்மடை திறந்து விட்டது போல் சொல்லிப் பிரலாபித்து அழுது கொண்டிருந்தாள். மூர்த்தி கீழே ஓரத்தில் தூங்கி விழுந்த கண்களுடன் அவள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கு எல்லாம் விசித்திரமாகவும் குழப்பமாகவும் இருந்தன. ஆவலும் சந்தேகமும் பின்ன, “என்ன விசேஷம்” என்று நான் வினவினேன்.

“வண்டியில் ஏறி உட்கார்ந்த உடனேயே சொல்ல மாட்டாளோ...? அயோக்கியன்!” என்று அவள் பிரலாபித்து முடித்ததும் மூர்த்தி தானாகவே கூறிக் கொண்டான். பிறகு என்னிடம் அவன் தெரிவித்த விவரம் இதுதான்:

அந்தப் பெண் எழுதப் படிக்கத் தெரியாத கிராமவாசி. அவள் புருஷனுக்கு மைசூரை அடுத்த கிராமம் ஒன்றில் பட்டு நெசவு போடும் தறிகள் சொந்தத்தில் இருக்கின்றனவாம். மூன்று மாதம் முன்பு அங்கிருந்து ஐம்பது அறுபது மைல் தூரத்தில் உள்ள பிறந்த ஊருக்குப் பிரசவத்துக்காக வந்தாளாம். குழந்தை பிறந்து இறந்து விட்டதாம். திடீரென்று இரண்டு தினங்களுக்கு முன்னர், அவள் புருஷன் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் தந்தி கிடைத்ததாம். வந்த சமயம் அவள் தந்தை ஊர் விவகாரத்தில் சிக்கி விரோதக்காரர்களின் தாக்குதலால் பக்கத்து நகர ஆஸ்பத்திரியில் படுத்திருந்தானாம். அவள் என்ன செய்வாள்? எப்படியோ தன்னந்தனியே பக்கத்து ஊர் வந்து ரெயிலேறி இருக்கிறாள். தவறுதலாக அறியாமல் மைசூர் செல்லும் வண்டிக்குப் பதில் பெங்களூர் வண்டியில் ஏறி விட்டாள். கிராமத்தை விட்டு வெளி உலகம் தெரியாத பெண் தானே? அத்துடன் கஷ்டநிலை வேறு. ஊர் வந்து சேரும்வரை அவளுக்குத் தவறுதல் புலப்படவில்லை. இரவு நேரத்தில் அந்தப் பெரிய நகரத்தில் வந்ததும் அவளுக்குத் திக்குத் திசை புரியவில்லை. அந்த சமயத்தில் அவன் குறுக்கிட்டிருக்கிறான். பாவம், அவள் அவனை நம்பித் தன் கஷ்டங்களைத் தெரிவித்துச் சரியான வண்டிக்கு ஏற்றித் தன்னைச் சேர்த்துவிடக் கோரியிருக்கிறாள். அவள் அணிந்திருந்த ஆபரணங்கள், தோற்றம் எல்லாம் அவனை ஆசை வலைக்குள் வீழ்த்தி விடக் கூடியவனவாக இருந்திருக்கின்றன. திக்கற்ற அவள் நிலை, அறியாமை எல்லாம் அவனுக்குச் சாதகமாக இருக்கவே, தானும் மைசூர் போகப் போவதாகக் கூறித் தேற்றி அனுதாபப்படுபவன் போல நடித்து, கடத்திப் போக எண்ணியவனாகக் கன்னட நாட்டை விட்டுச் செல்லும் வேறு வண்டியில் தன்னுடன் ஏற்றிக் கொண்டு விட்டான். கொஞ்ச தூரம் வந்த பிறகு அவளுக்கு ஏதோ சந்தேகமாக இருந்ததாம். என்னிடம் தன்னுடைய ஊருக்கு வண்டி எப்போது போகும் என்று கேட்டாளாம்! நானும் தூங்கி விடவே அவன் கூறிய பதில் அவளுக்குச் சமாதானமாகத் தொனிக்கவில்லையாம். அவனும் என்ன நினைத்தானோ என்னவோ, சற்று முன் அவள் ஸ்நான அறைக்குள் சென்றிருந்த போது அவன் அவள் பெட்டி சகிதம், வண்டி நிற்கும் சமயம் சரியாக இருந்திருக்கவே, இறங்கி விட்டான். திரும்பி அவள் வந்து பார்த்த போது அவன் இருக்கவில்லை. அவள் குழப்பம் தீர்ந்து, பெட்டியைக் காணவில்லை என்று அறிவதற்குள் வண்டி ஓட ஆரம்பித்துவிட்டது. அப்புறந்தான் சத்தம் போட்டு மூர்த்தியை எழுப்பியிருக்கிறாள்.

அடுத்த தடவை வண்டி நின்றதும் மூர்த்தி அவளுடன் இறங்கிப் போய் விவரங்களைத் தெரிவித்து அவளை போலீஸாரிடம் ஒப்பித்து விட்டு வந்தான். என் மனம் எல்லாவற்றையும் மறந்து அவள் பால் இளகிவிட்டது. சுய தைரியமும், வெளி உலகில் பழகிய அனுபவம் இல்லாத பெண்கள் திக்கற்ற நிலையில் சிக்கிவிட்டால் நயவஞ்சக வலையைக் கொண்டு வீழ்த்தி விடக் கயவர்கள் காத்திருக்கிறார்களே?

“பாஷை தெரியவில்லை. போயும் போயும் ஒரு போக்கிரியிடமா அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? நிர்க்கதியான அவளுடைய கஷ்டத்தைக் கேட்டாலே யாருக்கும் மனம் இளகுமே? எப்படித்தான் மோசடி செய்ய அவன் துணிந்தானோ? கண்டவர்களையும் நம்பக் கூடாது என்று சொல்வதும் சரியாக இருக்கிறது. எனக்கு அப்போதே சந்தேகம் தட்டியது” என்று என்னை அறியாமலேயே மனம்விட்டுச் சொல்லிக் கொண்டு போனேன் நான்.

இத்தனை நீளமாக முணுமுணுக்காமல் என் இயற்கையான போக்கிலே அவன் முன்னிலையில் நான் பேசியது அதுதான் முதல் தடவை.

“அவன் போயே போய்விட்டான். இனிமேல் எங்கே அகப்படப் போகிறான்? பெட்டியில் நூறு ருபாய் போலப் பணம் வைத்திருக்கிறாளாம். மூன்றாம் வகுப்பானால் கூடக் கூட்டம் அதிகம். யாரேனும் எப்படியேனும் அந்தப் பெண்ணை விசாரிக்க நேர்ந்து உளவு தெரிந்துவிடும் என்று முன் யோசனையுடன் தான் இங்கு யாருமில்லாத வண்டியில் எறியிருக்கிறான், திருடன். கவிழ்க்கும் எண்ணமும் மோசடியுமே எங்கும் மலிந்து விட்டன. முதலிலேயே சந்தேகம் தோன்றியவுடனேயே ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று கேட்கிறேன், பார்த்தவுடனேயே யாரையும் எப்படி நம்புவது என்ற ஞானோதயம் திடீரென அப்போது குறுக்கிட்டதாம். ஏன் அப்படிச் சொன்னாள் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை என்னையும் அவன் கோஷ்டியில் சேர்த்து விட்டாளோ என்னவோ?” என்று கூறிய மூர்த்தி கலகலவென ஒலிக்க நகைத்தான்.

அவனுக்கு என்ன புரிந்ததோ புரியவில்லையோ. எனக்கு அவன் கூறியது எதுவும் அப்போது மண்டையில் பிடிபடவில்லை. இன்னொரு விஷயம் என் நினைவில் அப்போது உறுத்திக் கொண்டிருந்தது. நாங்கள் இருவர் மட்டுந்தான் அப்போது அந்தப் பெட்டியில் இருந்தோம்! நானும் கிட்டத்தட்ட அவள் போன்ற நிலையில் தான் இருக்கிறேன். அநுபவமில்லாதவள். பழக்கமில்லாத பிராந்தியத்தில் பிரயாணம் செய்கிறேன். மூர்த்தியை எனக்கு நன்றாகத் தெரியாது. அவளைப் போல இவன் என்னை ஏமாற்றி மோசடி ஏதும் செய்ய முடியாது. ஆனால்... ஆனால்... நினைக்கும் போதே மனம் பயத்தால் துடித்தது. அவனோ இளைஞன். நானோ பருவ மங்கை... இதோ அருகில் தான் உட்கார்ந்திருக்கிறான். அப்படியே நெருங்கி என் கையைப் பிடித்தானானால்?... நான் என்ன செய்வேன்? பொறி ஒன்றில் நானே வலிய வந்து அகப்பட்டுக் கொண்டதைப் போல உணர்ந்தேன். என்னுடைய சிந்தனைக்குள் புகுந்து என்னை இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கிக் கொண்டிருந்த ‘அவர்’ நினைவு, அத்தையகத்து ஏளனம், அப்பாவின் கஷ்ட நிலை எல்லாம் என்னை விட்டு ஓடிவிட்டன. எப்படி அங்கே விட்டு நாசுக்காகத் தப்புவது என்பதிலேயே சிந்தனை லயித்தது. ‘என்னை வேறு பெட்டியில் கொண்டு விட்டு விடுங்கள்’ என்று திடீரென்று நான் கூறினால் அவன் என்ன நினைப்பான்?

என்ன நினைப்பான் என்ன? உண்மையில் குற்றமுள்ள நெஞ்சானால் ‘ஏன் எதற்கு?’ என்று ஆட்சேபிப்பான். இல்லாவிட்டால்...

இல்லாவிட்டால் மட்டும் என்ன செய்வான்?

‘சீ அசட்டுத்தனம். அப்படிக் கேட்கக் கூடாது. உண்மையில் நான் பயந்த மாதிரியாகக் காண்பித்துக் கொள்வதே ஆபத்துத்தான். அத்தகைய துடுக்குத்தனம் காண்பித்தானானால் அபாய அறிவிப்புச் சங்கிலி இருக்கவே இருக்கிறது’ என்று சற்றுத் தைரியம் கொண்டு என்னை நானே பலப்படுத்திக் கொண்டேன். “என்ன சுசீலா? அவளைப் பற்றிய சிந்தனையில் ஒரேயடியாய் ஆழ்ந்து விட்டாற் போல் இருக்கிறது?” என்ற மூர்த்தியின் சிரிப்பொலி என்னைச் சிந்தனை உலகிலிருந்து மீட்டது.

நான் எதுவும் பேசும் முன் அவனாகவே பேசலானான்.

“இம்மாதிரி சில பேர்கள் இருப்பதனால் ஆண் சமூகத்தையே எல்லோரும் சந்தேகிக்கும்படி இருக்கிறது. அவனுடைய கௌரவமான நடையும் பாவனையும் மோசடி செய்பவனாகவா காட்டின? ஏற்கனவே நம் ஹிந்து சமூகத்தில் முன்னுக்கு வரும் பெண்கள் குறைவு. அதிலும் ஆண்கள் அவர்களைச் சகோதரிகள் என்று சமமாக எண்ணி மரியாதை கொடுக்காமல் கீழ்த்தரமாக நினைப்பதால் அவர்களுக்குக் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் தைரியமும் ஓடிப் போய் விடுகிறது. நான் எவ்வளவோ முறைகள் கவனித்திருக்கிறேன்? பஸ்ஸிலோ, மற்றும் பொது இடங்களிலே சற்று நன்றாக ஆடையணிந்து கவர்ச்சிகரமாகப் பெண்கள் யாரேனும் தென்பட்டுவிட்டால், பெண்கள் முன்னேற வேண்டும், முன்னேற வேண்டும் என்று மேடைப் பிரசங்கம் செய்பவர்கள் கூட, ஏதோ காணாது கண்ட அதிசயம் போல் வெறித்துப் பார்ப்பார்கள். சகஜமாக நினைப்பதில்லை. இத்தனை நாகரிகம் வந்துங்கூட, கூட்டங்களிலோ, க்யூ வரிசையிலோ பெண்மணி ஒருத்தி நிற்க வேண்டி வந்தால் மரியாதையில்லாமல் இடித்துக் கொண்டு போகும் ஆண்களை நான்பார்த்திருக்கிறேன். உண்மையில் பெண்கள் முன்னேற வேண்டுமானால், எல்லாத் துறைகளில்ம் தங்கள் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், ஆண்கள் தங்களைத் தாங்களே சீர்திருத்திக் கொள்ள வேண்டும். கெட்ட எண்ணமும், மரியாதை தவறி நடப்பதும் அகல வேண்டும்” என்றெல்லாம் மேடை பிரசங்கி தோற்று விடுவான் போல ஆவேசமாகக் கூறிக் கொண்டு போனான்.

என் சந்தேகத் திரை படீரெனக் கிழிந்தது. மூர்த்தியின் தூய இருதயத்தை நான் தெளிவாகக் கண்டேன். அடாடா, மனித உள்ளங்கள் தாம் எத்தனை விசித்திரமானவை! நான் அவன் சொல்லிலும் செயலிலும் சகஜ மனப்பான்மையைக் காட்டுவதைச் சந்தேகித்து இந்தக் குறுகிய நேரத்துக்குள் என்னவெல்லாம் எண்ணிவிட்டேன்! அத்தை எனக்கு உயர் வகுப்புச் சௌகரியம் தேவையில்லை என்று சொல்லியும் அவன் கேட்காமலே இருந்ததன் காரணத்தைக் கூட இப்போது வேறு வழியிலே கண்டுபிடித்தேனே; அவன் அந்தத் துர்பாக்கியவதியை எக்காரணம் கொண்டு இந்த வண்டியில் ஏற்றினானோ அது போல இவனும் நினைத்து விட்டானோ என்றல்லவா கலங்கியது பாழாய்ப் போன மனசு? அதுவும் அந்தக் காரணத்தைத் தானாகவே அவன் எனக்கு கண்டுபிடித்துச் சொன்ன போது என் சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிட்டது போல் பீதி கொண்டேனே!

ஆனால் அதே சமயம் அவன் என் மனத்திலுள்ளபடியே சற்றும் சிந்திக்கவில்லை என்றும், நிர்மலமாக நடந்து கொள்ளாத ஆண் சமூகத்தினிடம் அவன் சிந்தனை லயித்திருக்கிறது என்றும் இப்போதல்லவா தெரிகிறது? இருவர் மனப்பான்மைக்கும் எத்தனை வித்தியாசம், மலைக்கும் மடுவுக்கும் போல, சீர்படாத குறுகிய என் நோக்கு எங்கே? எல்லாவற்றையும் பரந்த நோக்குடன் பார்க்க்ம் அவன் சீரிய மனப்பான்மை எங்கே?

உள்ளூறக் குன்றிவிட்ட எனக்கு அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பேசவே முதலில் அவமானமாக இருந்தது. தெளிவு கொண்டு பின், “ஆமாம், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை” என்று ஆமோதித்தேன்.

என் மனோவேகம் எப்படித்தான் சென்றது என்று நானே அறியவில்லை. என் கணவர், கிராமத்துப் பெண்ணின் அர்த்தமற்ற சங்கோஜத்தையும் அளவுக்கு மீறிய அடக்கத்தையும் வெறுப்பவர். இத்தகைய மனோபாவந்தான் கொண்டிருப்பாரோ என்று மகிழ்வுடன் ஆராய ஆரம்பித்து விட்டேன்.

இந்நேரத்தில் நான் இப்படி மூர்த்தியுடன் பிரயாணம் செய்கிறேன். இந்த விஷயம் பற்றிப் பேசுகிறோம் என்று அறிந்தால் அவர் பெருமை கொள்வாரா?

மறுநாள் புங்கனூருக்கு எங்கள் வண்டி வந்த போது அப்பா என்னை அழைத்துப் போக ரெயில் நிலையத்திற்கு வந்திருக்கவில்லை. அத்திம்பேரின் கடிதம் அவருக்கு நாங்கள் போய்ச் சேர்ந்த அன்ற் கிடைக்கும் போது, நான் வருகிறேன் என்று முன்கூட்டியே அவர் எப்படி அறிந்திருக்க முடியும்?

1-6

அப்பாவை ஸ்டேஷனில் காணாமற் போகவே நான் ஒரு விநாடி வெலவெலத்துப் போய்விட்டேன். கடிதம் போய்ச் சேர்ந்திருக்காது என்ற நினைப்பே எழவில்லை. ‘உடம்பு மிகவும் அசௌகரியமாக இருக்குமோ ஒருவேளை? அப்படியானால் சுந்துவாவது வந்து நிற்பானே; ஏன் அவனையும் காணோம்?’ என்று ஒரு கணத்துக்குள் மனம் எண்ணாதவெல்லாம் எண்ணிவிட்டது.

வண்டி புங்கனூரில் இரண்டு நிமிஷத்திற்கு மேல் நிற்காது. நீண்ட பிரயாணக் களைப்புடன் எற்பட்டிருக்கும் இப்போதைய கவலையும் என்னைக் கலக்க “ஒருவரும் வரவில்லையே!” என்று கையைப் பிசைந்தேன். தலையை ஜன்னலுக்கு வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி, “நன்றாகப் பார்த்தாயா? பயப்படாமல் நிதானமாகப் பார். யாரும் வரவில்லையானால், நானும் இறங்கி விடுகிறேன். அடுத்த வண்டிக்குப் போனால் போகிறது” என்றான்.

‘அவனுக்கு எதற்கு என்னால் வீண் சிரமம்? ஊர் வரை வந்தாயிற்று. எனக்குத் தெரியாத இடமில்லையே!’ என்று எண்ணிய நான், “வேண்டாம், நானே ஒரு வண்டியை வைத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுவேன்” என்றேன்.

“அப்படியானால் உங்கள் ஊருக்குள் நான் வரவேண்டாம் என்கிறாயாக்கும்?” என்று முறுவலித்தான் அவன்.

நான் அவனுக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்துச் சொன்னதை அவன் அப்படி வித்தியாசமாக நினைத்துப் பேசியது எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது.

“ஓ! அப்படி நான் நினைக்கவில்லை. எங்கள் ஊருக்குள்ளும் வீட்டுக்கும் நீங்கள் விஜயம் செய்வதில் எனக்கு மிகவும் சந்தோஷம்” என்று பதிலுக்கு நானும் நகைத்தேன். அவசர அவசரமாகச் சாமான்களைக் கீழே தள்ளினோம். அந்தப் பாழாய்ப் போன ஊரில் சாமான்களைக் கொண்டு செல்ல ஒரு கூலி கூடக் கிடையாது. ஸ்டேஷன் கட்டிடத்திற்கு வெளியே நாலைந்து குதிரை வண்டிகள் மட்டும் நிற்கும். “இருங்கள்” என்று மூர்த்தியிடம் கூறிவிட்டு நான் வெளியே நின்ற வண்டிக்காரனை அழைத்து வரப்போன போது ஸ்டேஷன் மாஸ்டர் என்னைப் பார்த்து விட்டுப் புன்னகை செய்தார்.

பிறகு, “ஏம்மா அப்பா வரவில்லை? முதன் முதலில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஊரிலிருந்து வரும்போது இப்படியா அலட்சியமாக இருப்பது?” என்று கேட்டார் அந்த மனிதர்! மூர்த்தி மாப்பிள்ளையாகத்தான் இருக்க வேண்டுமென்று எவ்வளவு சுளுவாக அவர் ஊகித்து விட்டார்!

‘அவர் மாப்பிள்ளை அல்ல!’ என்று கூறிவிட என் வாய் துடித்தது. ஆனால் பின் அவன் யார் என்பார்; வெறித்துப் பார்ப்பார். இந்த அநாவசிய வளர்த்தலுக்கு இடம் வைத்துக் கொள்வதைக் காட்டிலும் பேசாமல் போவது உத்தமம் என்று மௌனமாக நான் வண்டிக்காரனை அழைத்து வந்தேன். அவனுக்குச் சாமான்களைக் காட்டிவிட்டு நான் மூர்த்தியுடன் ஸ்டேஷன் கட்டிடத்தை விட்டு வெளியேறினேன். அவன் கொடுத்த நாகை டிக்கெட்டுக்கு விவரம் கேட்ட ஸ்டேஷன் மாஸ்டர், நாங்கள் சற்று அப்பால் வந்ததும், புக்கிங் கிளார்க் சுந்தரேசனிடம், “வைத்தியநாதையர் மாப்பிள்ளை கல்யாணத்தின் போது மாநிறமாக இருந்தாற் போல் இருந்ததே; இப்போது சிவப்பாக இருப்பது போலத் தோன்றுகிறதே! ஏனையா, என் கண் தான் கோளாறா! அல்லது கல்யாணம் ஆன பிறகு பிள்ளையாண்டான் சிவந்துவிட்டானா?” என்று தம் ஹாஸ்யத்திற்குத் தாமே நகைத்துக் கொண்டு அபிப்பிராயம் கேட்டது எனக்கு மட்டுமின்றி, மூர்த்திக்கும் காதில் விழுந்து விட்டது. ‘களுக்’ என்று அவனுக்குச் சிர்ப்புக் கூட வந்துவிட்டது. எனக்கோ வெட்கம், கோபம், அவமானம் எல்லாம் மேலிட்டன. ‘உங்கள் ஊர் ஜனங்கள் என்ன இப்படி இருக்கிறார்கள்?’ என்று அவன் கேட்டு நகைப்பது போல இருந்தது. ஏதோ குற்றம் செய்துவிட்டவளைப் போல நான் வண்டியில் முதலில் ஏறிக் கொண்டேன்.

‘ஜல், ஜல்’ என்று அக்கிரகார வீதியில் குதிரை வண்டிச் சத்தம் கேட்டு விட்டால் போதும், யார் வீட்டிற்கு யார் வருகிறார்கள் என்ற சங்கதிகளை ஆவலாக அறியும் பொருட்டு அக்கிரகார மகாஜனங்கள் அவ்வளவு பேரும் தெரு வாசற்படியில் ஏதோ ஊர்வலம் காணுவதைப் போல வந்து நிற்பதும், பின் வண்டி சென்றதும் ஒவ்வொருவரும் தத்தம் அண்டை அயலாருடன் கூடி எதற்காக, யார், எப்படி வந்திருக்கிறார்கள் என்பன போன்ற விவரங்களைக் குறித்து விவாதம் செய்துவிட்டுத்தான் உள்ளே செல்வார்கள் என்பதும் என்னை இன்னும் கலக்கும்படி நினைவுக்கு வந்து தொலைத்தன.

மூர்த்தி வேறு, வண்டி தெருவுக்குள் நுழைந்ததுமே, “இவ்வளவு பேர்கள் நம் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்பார்கள் என்று நான் எண்ணவில்லை, சுசீலா! இரட்டைச் சாரி வீடுகளிலும் ஜனங்கள் அமோகமாக வரவேற்புக் கொடுக்கிறார்கள்” என்று எனக்குத் தகவல் கொடுத்தான். நானே பின்புறம் உட்கார்ந்திருந்தால் அவ்வளவு தெரிந்த முகங்களையும் பார்க்க நேர்ந்து வழியிலேயே அவர்களிடையே குசல ப்ரச்னங்களுக்குப் பதில் கொடுக்கவும் வேண்டி வரும்! அதற்கு இது தேவலைதான்.

வீட்டு வாசலில் வண்டி நின்றது. அப்பாவுக்கு அன்று ஏதோ காரணம் கொண்டு காரியாலய விடுமுறை என்று எண்ணுகிறேன். திண்ணையில் உள்ள பழைய சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு சுந்துவுக்குக் கணக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தவர், வண்டி நின்றதைப் பார்த்து ஆச்சரியத்துடன் வந்தார். பின்னால் ஜகது, அம்மா எல்லோருமே வண்டிச் சத்தம் கேட்டு வந்து விட்டார்கள். பக்கத்து வீட்டில் ஜானி வந்திருக்கிறாள் போல் இருக்கிறது. அவள் வேறு என் கண்களில் முதல் முதலாகத் தட்டுப்பட்டு விட்டாள். அவள் இதழ்களில் இலங்கிய கேலியும் குறும்பும் கலந்த அர்த்த புஷ்டியான நகை, நான் ‘அவருடன்’ வந்திருப்பதாக அவள் எண்ணியிருப்பதை எனக்கு அறிவித்தது!

“வருகிறோம் என்று கடிதம் போடவில்லையே! திடீரென்று புறப்பட்டீர்களா?” என்று அப்பா கேட்டார்.

அம்மாவும் ஜகதுவும், “இந்தப் பிள்ளையாண்டான் யார்?” என்று என்னைக் கேட்காமல் கேட்டார்கள். “உள்ளே வாருங்கள், விவரமாகக் கூறுகிறேன்” என்று ஜாடையாக நான் விடுவிடென்று உள்ளே நுழைந்தேன். மூர்த்தியை அப்பா திண்ணையிலேயே ஐக்கியமாக்கிக் கொண்டு சங்கதிகளை விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

“ஹேமாவுக்கு அத்தை பிள்ளையம்மா இவன். நாகப்பட்டினத்திலிருந்து தங்கையைப் பிரசவத்துக்கு அழைத்து வரப்போவதாக முந்தாநாள் வந்து சொன்னான். தற்சமயம் என்னைக் கொண்டு விட வருவதற்கு யாரும் இல்லை என்று இவனுடன் அனுப்பினார்கள். கடிதம் போட்டிருக்கிறதென்று அத்தை சொன்னாளே? அப்பா ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போவார் என்று நான் நினைத்திருந்தேன். யாருமே வராதது எனக்கு எத்தனை கவலையாகிவிட்டது தெரியுமா அம்மா? அப்பாவுக்குத்தான் உடம்பு சுகமில்லையோ என்று பயந்துவிட்டேன்” என்று நான் மடமடவென்று ஒரே மூச்சில் கூறி முடித்தேன்.

“ஏன், உன் பாட்டிக்கு என்னவாம், உன்னை அழைத்து வர முடியாமல்? இந்த மாதிரி அறிந்த பேர் பின்னும் அறியாத பேர் பின்னும் அனுப்ப வேண்டுமா?” என்றாள் அம்மா. எனக்கு அவள் அபிப்பிராயம் வேதனையைக் கொடுத்தது.

“இவன் ரொம்பத் தங்கமானவன் அம்மா. இவனை விட வேறு நல்ல துணை கிடைக்கவே கிடைக்காது. மிகவும் சரளமாகப் பழகும் வெகுளியான சுபாவம்” என்று அழுத்தம் திருத்தமாக நான் தெரிவித்ததைக் கண்டு ஒரு கணம் ஜகதுவும் அம்மாவும் அசந்து போய்விட்டார்கள்.

அம்மா வெறுப்பை மாற்றிக் கொள்ளாமலேயே, “போதும்! உன் அத்தையின் காரியம் உனக்குத்தான் பிடிக்கும். என்ன செய்தாலும் மெச்சிக்கொள்ள! ஏதோ மதிப்புக்கு ஒரு வார்த்தை சொன்னதை வைத்துக் கொண்டு குதி போட்டுக் கொண்டு ஓடினாயே?” என்று இடித்தது மல்லாமல் அத்தையின் பேரிலுள்ள வெறுப்பால் மூர்த்தியையும் மட்டமாக எடை போட்டது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. “நான் ஒன்றும் மெச்சிக் கொள்ளவில்லை. உங்களுக்குப் பிடிக்காமல் நான் போனது தப்பு தப்பு என்று ஆயிரம் தடவை சொன்னால் கூடப் போதாது. அத்தையாம் அத்தை! ஆனால் இந்தப் பிள்ளையுடன் அனுப்பியது தவறு என்று மாத்திரம் நினைக்காதேயுங்கள். இவன் மிகவும் நல்லவன்” என்றேன் நான். மூர்த்தியின் கபடமற்ற தனத்தை அதற்கு மேல் அவர்களிடம் எப்படிச் சொல்வது என்று அப்போது எனக்குப் புரியவில்லை.

அப்பாவுடன் சாப்பிட உட்கார்ந்த மூர்த்தி, “உங்கள் பெண் என்ன சொன்னாள் தெரியுமா? நீங்கள் வரவேண்டாம், நானே வண்டி வைத்துக் கொண்டு போய் விடுகிறேன் என்றாள். நான் அப்படியே போயிருந்தால் தேவலை என்று அவள் உள்ளூர நினைத்துத்தான் கூறியிருக்கிறாள் என்பது எனக்கு அப்புறந்தான் தெரிந்தது! ஏனென்றால் நான் யாரென்று தெரிந்தால் இந்த ஊர்க்காரர்கள் என்னை விரட்டி அடித்திருப்பார்கள் போல் இருக்கிறது” என்று நகைத்தான். அப்பா அவன் பேச்சை சட்டென்று புரிந்து கொள்ளாமல் விழித்துவிட்டு, “என்ன சொல்லுகிறாய்?” என்றார்.

மூர்த்தி என்னை நோக்கிவிட்டுப் பின்னும் சிரித்தான்.

உதடுகள் துடிக்க நான், “ஆமாம் அப்பா! வண்டியை விட்டு இறங்கினதுமே ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து வண்டிக்கார முனியன் வரை பெண்ணும் மாப்பிள்ளையும் முதல் முதலில் வரும் போது நீங்கள் ஸ்டேஷனுக்கு ஏன் வரவில்லை என்று கேட்டால்... இந்த ஊர்க்காரர்களுக்கு கொஞ்சமும் விவஸ்தையே கிடையாது!” என்றேன்.

சூதுவாது ஏதும் தோன்றாத வெள்ளை உள்ளம் படைத்த என் தந்தைக்கு இது பெரிய ஹாஸ்யமாக இருந்தது. “அப்படியா கேட்டார்கள்” என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

உள்ளே வந்த என்னிடம் ஜகது, “இப்படி ஓர் அந்நிய புருஷனுடன் நான் சிரித்துப் பேசினாலோ அல்லது தனி வழிப் பிரயாணம் வந்ததாகத் தெரிந்தாலோ என்னை வீட்டு வாயிற்படி ஏற்ற மாட்டார்கள். என்னதான் நாகரிகம், நாகரிகம் என்றாலும் ஒரு வரையறை வேண்டியிருக்கிறது. ஊர்க்காரர்கள் கேட்பது எப்படித் தப்பாகும்? கல்யாணம் சமீபத்தில் ஆகியிருக்கிறது. பெண்ணும் மாப்பிள்ளையும் வருகிறார்கள் என்று தான் எண்ணிக் கொள்வார்கள்” என்றாள்.

கிராமத்தைத் தவிர நாலு படித்த மனிதர்களுடன் பழகி அறியாதவள் தானே அவள்? கிராமத்தோடு கிராமமாக வயல்வெளியைக் கட்டிக் கொண்டு கிடக்கும் அத்திம்பேருடைய குறுகிய மனப்பண்பு அவளுக்கு ஒத்து வருகிறது. நான் அப்படியா?

ஆறு வயசுக் குழந்தையும் எட்டு வயசுக் குழந்தையும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடும் போது தாங்கள் குழந்தைகள் என்பதையே முற்றும் மறந்து விடுவார்கள். அப்பா அம்மாவை ‘ஆபீஸுக்கு நேரமாச்சு’ என்று விரட்டுவது போலவே அவன் விரட்டுவான். அம்மா நிஜமாக அப்பாவைக் கோபித்துக் கொள்வது தோற்று விடும்படி அவ்வளவு அபாரமாக அம்மாவாக இருக்கும் குழந்தை கோபித்துக் கொள்வாள். பெரியவர்களாகும் ஆசை, அவர்களுக்கு குழந்தை நினைப்பையே மறைத்து விடும்.

இந்தக் குழந்தைகள் நிலையில் தான் வாழ்க்கையில் இன்னும் முதற்படி கூட எடுத்து வைத்திராத நான் இருந்தேன். அக்கா, அம்மா இவர்களை விட மிகவும் பதம்பட்ட மனமும் நாகரிகப் பண்பாடும் அடைந்து விட்டதாக எண்ணி இறுமாப்பு கொண்டிருந்தேன் என்றால் மிகையாகாது. அதுவும் மூர்த்தியுடன் ஒரு நாளைப் பழக்கத்திற்குப் பிறகு என் அறிவு பின்னும் அதிகமாகி விட்டது போலும். புதுமனிதர்கள் சங்கத்தில் பழகும் மெருகு பெற்று விட்டேன் போலும் பெருமை கொண்டிருந்தேன். எனவே, ஜகதுவின் அபிப்பிராயம் தவறு, பெண்கள் முன்னேற்றம் என்ற ஆசையால் அவள் மனம் விரிவடைய வேண்டும் என்று அவளுக்கு உறைக்கும்படி, அவளை மடக்கி நான் வாயாடினேன்.

“உன்னைப் போல் இப்படி நாமே நம் அறிவையும் ஆற்றலையும் பயந்து பயந்து குறுக்கிக் கொண்டால் எப்படியடி பெண்கள் முன்னேற முடியும்? நாலு பேருடன் மனம் விட்டுப் பழகி, நாலு புது விஷயங்களை அறிந்து கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது? அந்நிய புருஷனுடன் பேசுவதே ஆபத்து என்ற கெடுதலான முறையில் ஏன் நினைக்க வேண்டும்? உங்களுக்கெல்லாம் இந்தக் குதர்க்க புத்திதான் முன்னுக்கு வரும் போல் இருக்கிறது! எங்கள் வீட்டில் எல்லாம் இப்படி இல்லையம்மா. எல்லோருடனும் சகஜமாகப் பழகுவதை வித்தியாசமாக நினைக்க மாட்டார்கள். அதுவும் அவருக்கு எடுத்ததற்கெல்லாம் அடுப்பாங்கரையில் போய் ஒளிந்து கொண்டால் பிடிக்கவே பிடிக்காதாம்!” என்று விடுவிடென்று உணர்ச்சி வேகத்தில் அவர் சொன்னதை எல்லாம் உளறிவிட்டேன்.

அவள் ஒரேயடியாக மலைத்து விட்டாள்.

“அடியம்மா! இப்போதே என்னவெல்லாம் பேசுகிறாள் இவள்? அவருக்கு அப்படி இருந்தால் பிடிக்காது, இப்படி இருந்தால் பிடிக்காது என்று அதற்குள் என்னவெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாள்?” என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயித்தாள்.

அத்துடன் நான் விட்டேனா? அம்மாவிடம் அத்தை வீட்டு சம்பிரமங்களையும் பாட்டி கூறிய கசப்பு மொழிகளையும் ஓர் அட்சரம் விடாமல் தெரிவித்து விட்டு, “ஏனம்மா, போயும் போயும் பணத்திற்கு அவர்களிடமா எழுத வேண்டும்? எங்கள் வீட்டில் தான் அது வேண்டாம், இது வேண்டாம் என்று கூறியிருக்கிறார்களே. நீங்கள் அத்தையிடமிருந்து எதையும் பெற்றுக் கொண்டு என்னைக் கொண்டு விட வேண்டாம். அதை விட நான் ஒன்றும் இல்லாமலே போய்க் கொள்வேன். அவர்கள் எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டார்கள்!” என்று எல்லாம் தெரிந்த அநுபவசாலியைப் போலப் பேசினேன்.

இவைகளுக்குப் பலன் கை மேலேயே உள்ளது என்பதை அப்போது நான் அறியவில்லையே!

“அவர்களிடத்தில் யார் தானம் கேட்டார்கள்? சமயத்தில் கொடுத்தால் நாளைக்கு அப்பா ரிடையர் ஆனவுடனே ‘பிராவிடண்ட் பண்டு’ பணம் வரும்; வட்டியும் முதலுமாக ஒரு சல்லிக்காசு மிச்சம் வைக்காமல் விட்டெறிந்து விடப் போகிறோம். உறவு மனுஷர் செல்வாக்காக இருந்தால் ஒரு சமயம், போது என்று ஒத்தாசை கேட்பது உலகத்தில் இல்லையா? நான் புடவை வாங்கிக் கொடுத்தால் அகலமில்லை, சரிகையில்லை என்று பாத்திரக்காரிக்குப் போட்டேன், கூட்டுகிறவளுக்குக் கொடுத்தேன் என்று முகத்திலடித்தாற் போல உன் அத்தை சொல்லுவாள். தங்கத்தின் கல்யாணத்தின் போது அப்படித்தான் நேருக்கு நேர் மட்டம் தட்டினாள். இப்போதுதான் ஆகட்டும், சுமங்கிலிப் பிரார்த்தனைக்கு வரச் சொல்லி ஆயிரம் தடவை வரிந்து வரிந்து எழுதச் சொன்னேனே! மதிப்பு வைத்து வந்தாளா உன் அத்தை? உன் பாட்டிக்கு என்னைச் சொல்லாவிட்டால் சாப்பிடுவது ஜெரிக்காது. அவர்களுக்கு அதே வழக்கம். அதே தொழில்” என்று அம்மா காரசாரமாகப் பேசியதுமன்றி, உன் அத்தை, உன் பாட்டி என்று அழுத்திக் கூறினாள். அங்கேயானால் பாட்டி, உன் அம்மா, உன் அப்பா என்றாள். இவர்களுக்கு நடுவே நான் இப்படியா அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? அநாதி காலம் தொட்டே இருக்கும் இந்த விரோத மனப்பான்மை காரணமில்லாமலே வளர்ந்து வரும் சக்தி வாய்ந்தது. இந்தச் சிக்கலைப் பிரிக்க பிரிக்க இன்னொருபுறம் தாறுமாறாக நமக்குத் தெரியாமலே பின்னிக் கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதை அறிய எனக்கு இன்னும் அநுபவம் கிட்டவில்லையே!

“அத்தையிடமிருந்து இத்தனை நிஷ்டூரங்களைக் கட்டிக் கொண்டு வந்தாயாக்கும்?” என்றாள் ஜகது.

எனக்கு அந்தப் புடவைகளின் ஞாபகம் வந்தது. அவற்றை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்றிருந்த என் தயக்கம், அத்தை இரண்டாம் வகுப்புச் சீட்டுக்கு மட்டம் தட்டிய போது, ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தது. ‘அவள் அகங்காரத்துடன் அம்மா அளித்த விலையுயர்ந்த புடவையையே அலட்சியம் செய்யலாமானால், நான் நிராகரிக்கக் கூடாதா? சொன்னதெல்லாம் உறைந்திருக்கிறது. நானும் மழுங்குண்ணி மண் பொம்மையல்ல என்று தெரிந்து கொள்ளட்டுமே! இப்போது அவைகளை மூர்த்தியிடம் கொடுத்து விட்டால் என்ன? ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லித் தந்திரமாக அவைகளைத் தட்டிக் கழித்து விட வேண்டும். ஆனால் அதற்குள் இவர்களிடம் சமாசாரத்தைக் கூறிவிடக் கூடாது. முடித்து விட்டுச் சொல்லிக் கொள்ளலாம்’ என்று முடிவு செய்து கொண்டவளாக, மூர்த்தி திண்ணையில் இருக்கிறானா, அப்பாவும் கூட இருக்கிறாரா என்று அறிந்து கொள்ளும் பொருட்டு வாசற் பக்கம் வந்தேன்!

அவ்வமயம் தபால்காரன் வந்துவிட்டுப் போயிருக்கிறான் போல் இருக்கிறது.

புன்னகையுடன் ரேழியிலே எதிர்ப்பட்ட மூர்த்தி, “ஸ்ரீமதி சுசிலா ராமநாதனுக்குக் கடிதம் இருக்கிறது” என்றான் என்னைப் பார்த்து.

அவனிடமிருந்து சாய்ந்த கையெழுத்திலே அச்சுப் போலிருந்த மேல் விலாசத்தைத் தாங்கிய கடிதத்தைப் பெற்றுக் கொண்ட போது, ஆனந்த மிகுதியால் என் உள்ளத்துடன் உடலின் ஒவ்வோர் அணுவும் துடித்தது. நடுங்கிய கரங்களுடனும், ஒளி மிகுதியால் அசைவற்ற விழிகளுடனும் நான் கடிதத்தை வாங்கிக் கொண்டவள், அத்துடன் இன்னொரு கார்டும் வந்திருக்கிறது என்பதைக் கவனிக்கவில்லை. அவனாகவே, “இது, நீ வருவதைக் குறித்து மாமா எழுதியிருந்த கடிதம் போலிருக்கிறது” என்று கூறிவிட்டுக் கொடுத்தான். அவனிடம் கூற வந்த விஷயத்தை நான் அடியுடன் மறந்து விட்டேன்.

நான் சற்றும் எதிர்பாராத விதமாக கடிதம் ஆங்கிலத்தில் ‘டைப்’ செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு வரியிலும் கரை புரண்ட அவரது அன்புப் பிரவாகத்திலேயே ஊறியவளாக நின்று விட்ட எனக்கு, ஜகது வந்து எட்டிப் பார்த்து, “ஆபீஸ் கடுதாசி போலிருக்கிறதே! ஏதடி? எங்கிருந்து வந்திருக்கிறது?” என்று கேட்டதோ, நடையிலிருந்து மூர்த்தி, “ஐந்து மணி வண்டியில் கிளம்பலாம் என்றிருக்கிறேன். வண்டி ஒன்று வேண்டுமே” என்று கேட்டதோ கனவு உலகத்திலேயிருந்து கேட்பது போல் இருந்ததில் அதிசயம் இல்லையே! அத்தையைச் சொல்லப் போனேனே? இன்னும் கொஞ்சம் கூடிவிட்ட பெருமையில் கர்வம் தலைதூக்க, ஜகதுவின் அறியாமையை ஏளனம் பண்ணும் முறையிலே, “அடி மக்கு! டைப் அடித்திருந்தால் ஆபீஸ் கடிதமாக்கும்!” என்று புங்கனூர் எலிமெண்டரி பாடசாலையில் மூன்றாம் வகுப்புக்கு மேல் எட்டிப் பார்த்திராத அவளுக்கு துணைப் பாடங்கள் யாவையும் ஆங்கிலத்திலேயே படித்து வெற்றிகரமாக உயர்தரப் பள்ளிப் படிப்பை முடித்திருந்த நான் பட்டம் சூட்டினேன்.

பெட்டியைத் திறந்து விலை மதிப்பற்ற பொக்கிஷமாகிய அந்தக் கடிதத்தைப் பத்திரம் செய்யப் போன போது தான் புடவைகள் கண்களைக் கவர்ந்து கவனத்தில் நுழைந்தன. எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அப்பா வெளியில் எங்காவது போயிருந்தாரோ என்னவோ, காணவில்லை. ஜகதுவும் முகத்தைச் சுளுக்கிக் கொண்டு பின்கட்டுக்குப் போய்விட்டாள். “அத்தை எனக்கு இரண்டு புடவைகளும், ஹேமாவுக்கு இரண்டும் வாங்கி வந்தாள். பேச்சு வாக்கில் என்னிடம் கொடுத்த போது நான் நாலையும் கவனியாமல் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு விட்டேன் போல் இருக்கிறது. இப்போதுதான் கவனித்தேன். நீங்கள் திரும்பிப் போவீர்கள் இல்லையா அங்கு? இதை தயவு செய்து கொண்டு கொடுத்து விடுகிறீர்களா?” என்று புடவைப் பொட்டலத்தை அவனிடம் நீட்டினேன்.

அவன் வாங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்தான். “நாலும் உனக்கே தான் வாங்கினாளோ என்னவோ” என்றான்.

“இல்லை, இல்லை. ஹேமாவுக்கு என்று சொன்னாளே” என்றேன் நான். அழுத்தம் திருத்தமாக.

“இம்மாதிரி புடவைகள் கூட அவள் உடுத்துகிறாளா என்ன! ஸில்க்கும் ஜார்ஜெட்டும் தவிர அவள் நூல் புடவைகள் உடுத்தியே நான் பார்த்ததில்லையே?” என்று அவன் முறுவல் செய்தான்.

என் முகத்தில் அசடு தட்டியிருக்க வேண்டும் என்று நான் ஊகித்துக் கொண்டாலும், வேண்டாத சுமை ஒன்று கழிந்தது என்று திரும்ப எத்தனித்தேன். அப்பா வெளியிலிருந்து வந்தார்.

“என்னது? புடவையா?” என்று கேட்டு அவர் அதைக் கைகளில் வாங்கு முன்னரே என் நெஞ்சம் குற்றமுள்ளதைப் போலக் குறுகுறுத்தது. தூண்டித் தூண்டி அவர் ஏதாவது கேட்டு, மூர்த்தி வாயை விட்டு விட்டால் குட்டு உடைந்து விடுமே என்ற பயத்துடன் நான் முந்திரிக் கொட்டை போல் முந்திக் கொண்டு, “ஒன்றுமில்லை அப்பா. அவர் தங்கைக்கு வாங்கிப் போகிறாராம்!” என்று துணிந்து ஒரு பொய்யை, எப்படித்தான் என் நாவில் வந்தது என்று அறியவில்லை, சொல்லிவிட்டேன்.

அதிகம் எனக்குப் பழக்கமும் சொந்தமும் உரிமையும் கொண்ட அப்பாவின் கேள்விகளுக்குப் பயந்து ஒரு நாள் பழக்கமுள்ள மூர்த்தியிடம் அதிக சுவாதீனம் கொண்டாடும் முறையில் ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் புகன்றது எனக்கே பிறகு எண்ணிப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.

அப்பா புடவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவன் என்னை விழிகள் அகலப் பார்த்தான். நான் என்ன காரணம் கொண்டு அவ்விதம் பொய் கூறினேன் என்று அவன் எப்படி ஊகித்துக் கொண்டிருக்க முடியும்? எப்படியோ பளுவை அவன் மீது சுமத்திவிட்டு நான் ஒன்றும் அறியாதவள் போல் உள்ளே வந்து விட்டேன்.

அவனும் குட்டை குழப்பவில்லை. சற்று நேரத்தில் கிளம்பிப் போய் விட்டான். அசட்டுத் துணிச்சலுடன் காரியம் செய்து விட்டேனே ஒழிய அந்த நிமிஷத்திலேயே மனம் நிம்மதியை இழந்து விட்டது.

பெரியவர்களிடம் மறைந்து அவசரப்பட்டு விட்டேனே! நான் கூறிய பிரகாரம் மூர்த்தி அவைகளை அத்தையிடம் கொண்டு கொடுத்தால் வேண்டுமென்று நான் செய்திருக்கும் காரியத்திற்கு என்னவெல்லாம் சொல்லுவாளோ? அவளுக்கு வேறு இந்தச் சங்கதியெல்லாம் தெரிந்து விடுமே!

சே... சே... என்ன பிசகு செய்தேன்? ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்பதற்குச் சரியாக ஒரு நாழிகை வேகத்தில், இந்தக் காரியம் என்ன பலனைக் கொடுக்கும் என்பதைச் சிந்திக்காமல் ஒன்றும் அறியாத அவனை மாட்டி வைத்தேனே? நான் சொன்ன பொய்யைக் கேட்டு அவன் என்ன நினைத்தானோ? பார்க்கப் போனால் அற்ப விஷயந்தான்.

‘ஏன் கொடுக்கக் கூடாது? அவள் குத்திக் காட்டுவது போல் எங்கள் எளிய நிலையை இடித்து விட்டு அளித்திருக்கும் பரிசை நான் நிராகரித்தது தான் சரி’ என்று ஒருபுறம் மனம் விவாதித்தது.

அப்பா அம்மாவிடம் பிறகு தெரிவிக்கலாம் என்றிருந்தவள் கடைசியில் யாரிடமுமே தெரிவிக்கவில்லை.

2-1

தாயின் புனிதமான அன்பை ஆண்டவன் அடியிணையில் ஏற்படும் ஆனந்தத்துக்குச் சமமாக, அறிந்தோரால் தான் உணர முடியும். தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் சண்டமாருதமும் தென்றலும் கலந்து வீசும். மென்மையுடனும் தூய்மையுடனும் ஆழமும் சுழிகளும் இட்டு ஓட்ம். பனிக்கட்டியை ஒத்த ஜிலு ஜிலுப்புடன் கூடக் கொதி நீரில் பொங்கும் ஆவியும் தாயன்பில் பிணைந்து நிற்கும். கற்கண்டின் இனிமையுடன் கடலுப்பின் உவர்ப்பும் போட்டி போடும். முற்றும் அறியாத அஞ்ஞானிக்கும் நீரின் ஓட்டத்துக்கும் கம்பீரம் கொடுக்க ஆழமும் சுழலும் அவசியம் என்றும், சண்டமாருதம் இன்றித் தென்றலின் சுகம் அனுபவிக்க முடியாது என்றும் தெரியாது. கற்கண்டைச் சுவைத்து உப்பைத் தூவென்று துப்பும் இயல்பு வாய்ந்த குழந்தையால் எல்லையில்லாத, ஒப்புவமை கூற இயலாத உயர்தரமான தாயுள்ளத்தை உண்மையாக அறிய முடியாதுதான். என் நலனுக்காகவும் மேன்மைக்காகவுமே என்னைக் கண்டிக்கவும் கோபிக்கவும் அம்மா முன் வருகிறாள் என்ற உண்மை எனக்கு ஒரு போதும் உறைத்ததில்லை.

“உனக்கு ஜகதுவும் தங்கமுந்தான் உயர்த்தி! அவர்கள் தாம் சாதிக்கப் போகிறார்கள்! என்னை இப்படிக் குட்டுவதைப் போல் அவர்களை நீ விரலாலாவது தொட்டிருக்கிறாயா? இப்படி வேண்டாப் பெண்ணாக நடத்துவதை விடக் குளத்தில் கிணற்றில் அப்போதே தள்ளியிருப்பதற்கு என்ன?" என்று பிஞ்சில் பழுத்த பழமாகப் பேசும் போது அவள் இருதயம் நோகும் என்று நான் உணர்ந்ததில்லை. என் முற்றாத இருதயம் இப்படி ஆத்திரத்தில் நொந்து வார்த்தைகளைக் கொட்டியதற்குக் காரணம், அவளுடைய அன்பில் என் சகோதரிகளுக்கும் எனக்கும் ஆனைக்கும் பூனைக்கும் உள்ள வித்தியாசம் இருந்ததுபோலத் தோன்றிய தோற்றந்தான். அவள் காட்டிய அன்பிலே வித்தியாசம் கண்ட நான், அவர்கள் வளர்ந்த விதத்திற்கும், நான் வளர்ந்த விதத்திற்கும் இடையே இருந்த வேற்றுமையைக் காணும் சக்தி படைத்திருக்கவில்லை.

பள்ளிப் படிப்பு முடியும் வரையில், வீட்டு வேலை என்றால் என்ன என்பதையே நான் அறிந்திருக்க மாட்டேன். பொழுது விடிந்தால் பள்ளிப் பாடம் தயாரித்துக் கொள்ளவும், பாட்டு வாத்தியாரிடம் உட்காரவுமே எனக்கு நேரம் சரியாக இருக்கும். என் துணிமணிகளைப் பிறர் கவனிக்க வேண்டும். நான் சாப்பிட உட்காரும் போதே அம்மா தலைவாரிப் பின்னி விட வேண்டும். பள்ளிக்குக் கிளம்பு முன் தயாராக இடைவேளை உணவு கட்டி வைத்திருக்க வேண்டும். தள்ளாமையால் அம்மா சில சமயங்களில் முணுமுணுப்பாள். அப்பாவின் சலுகை எனக்கு அதிகம் என்று குற்றமும் சாட்டுவாள். அந்தச் சமயங்களில் அவள் உள்ளத்தை அறியாத நான், ஏதோ கடனே என்று எனக்கு எல்லாம் செய்ததாகப் பிரமை கொள்ளுவேன்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் அம்மாவின் குணம் ராட்சச குணமாகத் தோன்ற எனக்குச் சந்தர்ப்பங்கள் உதவின. அத்தனை நாட்களுக்குப் பின் என்னைப் பழி வாங்குவது போல, காலை வேளையில் குளித்துவிட்டு, வீட்டு வேலைகளை நானே செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டாள். சரியாகச் செய்யாவிட்டால் கோபிப்பாள். நான் வாயாடி அடித்தால் அடிக்கவும் அடித்து என்னை அடக்கினாள். அறியாமை அகலாத நான் எனக்கு அவள் மீது பாசமே இல்லை என்று மட்டுமல்ல, இந்த வீட்டை விட்டுப் போய்விட்டால் வருந்தி வருந்தி அவள் அழைத்தால்ம் வரக் கூடாது என்று முடிவு கட்டியிருந்தேன்.

அந்த வேளை எனக்கு வந்து விட்டது. என்றென்றைக்கும் நான் வேறொரு புது வீட்டிற்கு, புது மனிதர்களின் நடுவே புது அன்புப் பிணைப்பில் குடிபுகப் போகிறேன்.

உறுதியும் வைராக்கியமும், உண்மையை அஸ்திவாரமாகக் கொண்டு வளம் பெற்ற மனத்திலே எழுந்தால் தான் நிலைநிற்கும். அப்படி இருக்க, என் உள்ளமோ முற்றாதது. என்னுடைய முடிவில் பிரமையில் எழுந்தது, எப்படி நிலைநிற்கும்? நான் புக்ககம் செல்லும் வேளை நெருங்க நெருங்க என்னை மூடியிருந்த அஞ்ஞானமும் பிரமையும் விலக ஆரம்பித்தன. அவள் எதுவும் கோபித்தால் இனி நெஞ்சு புண்ணாகும்படி, சுடச்சுட ஏதும் பேசக் கூடாது என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் அம்மா என்னைக் கோபிக்கும் சந்தர்ப்பமே வரவில்லை. “இன்னும் கொஞ்ச நாள் தானே? அந்தப் பாட்டைப் பாடு; இந்தப் பாட்டைப் பாடு; அடுப்புப் பக்கம் நீ வர வேண்டாம்" என்று என்னை உள்ளூற வெட்கமுறச் செய்தாள்.

ஏற்கனவே கல்யாணத்தின் அபாரச் செலவினால் அப்பா ஒரேயடியாகக் கூனிக் குறுகியிருந்தார். அதனுடன் அத்தையின் உதவியும் இன்றி அவர் மேலும் நெருக்கிய செலவுகளைச் சமாளிக்க அம்மாவின் ஒத்துழைப்பும் பரிபூரணமாகத் தேவையாக இருந்தன. அவளுடைய உடமைகள் முழுமையும் என்னைக் கணவன் வீடு கொண்டு விட வேண்டிய புதிய செலவுகள் கபளீகரம் செய்து விட்டன. வெறும் மஞ்சள் சரட்டுடனும் கம்பி வளையலுடனும் அவள் வளைய வரும் போது, என் குற்றமுள்ள நெஞ்சம் “அம்மா" என்று கட்டிக் கொண்டு கதற விழைந்தது. இதெல்லாம் என்ன கொள்கைகள்? தாயும் தந்தையும் ஆசையுடன் தங்கள் சக்திக்கு உகந்தபடி பெண்ணுக்குப் பரிசுகள் வழங்க வேண்டியிருக்க, இப்போது இப்படி நிர்பந்தமாகவும் கஷ்டப்பட்டுக் கொண்டும், கடன் பட்டுக் கொண்டும் செய்தே தீர வேண்டும் என்ற கடும் சம்பிரதாயமாக ஆகிவிட்டதே! இந்தப் பாசி படிந்த கொடிய சம்பிரதாயங்களை ஒழிக்க ஏன் யாரும் முன் வரவில்லை? பெண்ணிடம் உள்ள ஆசையும், அன்பும் குன்றும்படி இந்தச் சீர்ப் பிரச்சனைகள் மலை போல் அல்லவோ நிற்கின்றன?

நானாகவே, “கெட்டிச் சரிகைப் புடவை வேண்டாம், அம்மா. இது போதும். பாத்திரம் பண்டங்கள் தாம் வேண்டாம் என்றார்களே. வேணுமானால் நான் எழுதுகிறேன். பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றெல்லாம் மிகமிகக் குறைந்த செலவிலேயே என் தேவைகளை நிரப்பிக் கொண்டேன்.

‘அவரிடம் இந்த அசட்டுக் கொள்கைகளையும் அப்பாவின் நிலைமையையும் விளக்க வேண்டும். இதுவரை யாருமே கண்டிராதபடி புதுமையாக, எனக்காகச் செலவழித்து விட்டுக் கடனடைக்க வகையறியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அப்பாவுக்கு வரதட்சிணைப் பணத்தையாவது திருப்பி விடும்படி என் கணவரிடம் வேண்டிக் கொள்வேன். சுசீலா - ராமநாதன் என்றாலே அப்பா, அம்மா, ஏன் ஊர்க்காரர்களுக்குக் கூடப் பெருமை பொங்கும்படி என்னால் செய்து விட முடியும்’ என்றெல்லாம் மனக்கோட்டை என் அந்தரங்கத்தில் உயிர் பெற்றது.

ஆயிற்று. வாசலில் வண்டி கூட வந்துவிட்டது. என்னைக் கொண்டு விட்ட பின் அப்பாவால் ஒரு நாள் கூடத் தங்க முடியாது. அன்று மாலையே திரும்பி விட வேண்டும். அவர் கஷ்டத்தைக் கண்ணுற்ற போது, என் இன்ப துன்பம், அபிலாஷைகள் எல்லாமே கரைந்து விட்டன. “பெண்களுக்காக உடலை ஓடாக உழைத்து உழைத்து அவர் என்ன பயன் காணப் போகிறார்? நாம அவர் கஷ்டத்துக்குப் பிரதியாக என்ன செய்யப் போகிறோம்? ஒரு நாளைக்கு அன்பாகக் கூப்பிட்டு மனம் குளிர உபசரிக்கக் கூடப் பிறர் முகத்தைக் கவனிக்க வேண்டி இருக்கிறது" என்று ஜகது சொல்வது வழக்கம். புறப்படும் சமயம், ‘நான் அப்படி இருக்க மாட்டேன். என்னுடைய வீட்டார் முன்னேற்றம் அடைந்தவர்கள். எனக்குச் சகல சுதந்திரங்களும் இருக்கும். ஏன் ‘ரிடையரா’கி விட்டால் அப்பாவை என்னிடமே கூட வைத்துக் கொள்வேன்!’ என்று பெருமிதத்துடன் எண்ணிக் கொண்டேன்.

“போய் வருகிறாயா அம்மா சுசீ? சமர்த்தாக இரு. கடிதாசி போடு அடிக்கடி" என்று அம்மா கூறி என் நெற்றியில் சுவாமி விபூதியை இட்ட போது என் கண்கள் கலங்கி விட்டன. வெற்றிலை பாக்குப் பெற்றுக் கொண்டு, எல்லோரையும் வணங்கினேன். கடைசியாக அதுவரையில் ஆடி ஓடி வளர்ந்த வீட்டிலிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

அப்பா வண்டியருகில் நின்றார். நான் ஓர் எம்பு எம்பி வண்டியில் ஏறப் போனேன். புடவையின் ஓரம் பாதம் வைக்கும் விளிம்பில் மாட்டித் தாறாகக் கிழிந்தது.

“மெதுவாக ஏறக் கூடாது?" என்று அப்பா கடிந்து கொண்டார்.

“என்ன? புடவையைக் கிழித்துக் கொண்டாளா. புறப்படும் சமயம் பார்த்து? கொஞ்சங் கூட நிதானம் கிடையாது! இறங்கி வா, ஒரு தம்ளர் தீர்த்தம் சாப்பிட்டு விட்டுப் போகலாம்" என்றாள் அம்மா, கோபமும் பதைபதைப்பும் கலந்த குரலில்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. வண்டிக்கு நேரமாகி விட்டது. விடப்பா வண்டியை!" என்று அப்பா வண்டியில் ஏறிவிட்டார். சதங்கை ஒலிக்க வண்டி கிளம்பி விட்டது. பக்கத்து வீட்டில் நின்றிருந்த ஜானி உட்பட எல்லோருக்கும் “போய் வருகிறேன்!" என்று கத்தினேன். தெரு மறையும் வரை அம்மா, ஜகது, சுந்து, ஜானி எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என் பார்வையிலிருந்து மறைந்த பின் தான் கிழிந்த புடவையின் ஓரம் என் கண்களில் உறுத்தியது.

புறப்படும் சமயத்திலே இது ஏன் கிழிய வேண்டும்?

என் உள்ளத்து ஒலியிலே கீறல் விழுந்து விட்டது.

ஊர்வலத்தின் இறுதியில் குமுறிய வானம், அந்தப் பாட்டு, இதோ புடவைக் கிழிசல்! இதெல்லாம் என்ன? வருங்காலத்தில் நிகழக் கூடிய சம்பவங்களை அறிவுறுத்தும் சூசகமோ?

வண்டியின் ஓட்டத்தில் ஒரு குலுக்கல் உள்ளத்துடன் உடலும் குலுங்கியது. மண்டை ‘நங்’கென்று பிரம்புச் சட்டத்தில் இடித்தது. நான் கையில் பிடித்திருந்த கூஜா நழுவிச் சாய்ந்தது.

“சற்று மெதுவாக ஓட்டப்பா" என்றார் அப்பா. வண்டிக்காரனைப் பார்த்து. தெளிவாகச் சிந்திக்கவே முடியாதபடி புகையைப் போல் என் மனதை நினைவுகள் கப்பிக் கொண்டன.

அவள் ஏன் அந்தப் பாட்டைப் பாட வேண்டும்? வேறு நல்ல பாடல்கள் எத்தனையோ இல்லையா? அப்போதுதான் கட்டும் புடவை சற்று மாட்டிக் கொண்டதை வியாஜமாகக் கொண்டு கிழிய வேண்டுமா? இத்தனைக்கும் புடவை நைந்ததன்று. பழசு இல்லை; இரண்டு நனைப்புகளே ஆகியிருக்கும் புதுப் புடவை.

முன் காலத்துக் கதைகளில் எல்லாம் வருமே, போர் வீரனைப் போருக்கு அனுப்பு முன் மனைவிக்கு ஹாரத்தி தாம்பாளம் கீழே விழுந்தது, மலர் மாலை வாடியது என்று; அவள் துணுக்குறுவாள். அவன் ‘சகுனமாவது மண்ணாவது! பீதியிலே கை நடுங்கித் தாம்பாளத்தைக் கீழே போட்டிருப்பாய்’ என்று சமாதானம் சொல்லிவிட்டுப் போவான். கடைசியில் முக்காலும் சகுனமே பலிக்கும். அவன் திரும்பியே வரமாட்டான். எப்படியாவது இதெல்லாம் மூட நம்பிக்கை என்று ருசுப்படுத்தும்படி பலியாமல், நல்லது நடந்திருக்குமோ? ஊஹூம், அல்லவே இல்லை!

அப்படியானால் இவை எதைக் குறிக்கின்றன?

“அவள் இந்தப் பெண்ணை ஆட்டி அம்பலத்தில் வைத்து விடுவாள்!"

அத்தையின் வார்த்தைகள் என் காதுகளில் ரீங்காரம் செய்தன. ‘என்னை என்ன ஆட்டி வைப்பது அவள்? கிராமாந்தரமாக இருந்தால் அந்தக் காலத்தில் சொல்லுவார்கள்; புது மாட்டுப் பெண் பேசக் கூடாது, வாயிலில் வரக் கூடாது, வீட்டுப்பாடு என்று உழைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்கெல்லாம் இங்கு இடம் இல்லையே! மேலும் அன்று ஒரு நாழிகை உடல் நலம் கெட்டதற்கு அம்மாவைக் குற்றம் சொன்ன அவர், அவள் ஆட்டி வைக்கப் பார்த்துக் கொண்டு கல்லுப் பிள்ளையாராக இருப்பாரா?’

‘இதெல்லாம் சுத்த மனப்பிரந்தி காக்கை உட்காருவதும் பனம்பழம் விழுவதும் போல சில சமயங்களில் சில நிகழ்ச்சிகள் மனக் குரங்குகள் இணைந்தாற் போல அமைந்து விடுகின்றன. இதை வைத்துக் கொண்டு மனத்தில் அசட்டு எண்ணத்தை வளரவிட்டுச் சந்தோஷத்தைக் குறைத்துக் கொள்வார்களா? இப்படி நான் முட்டாள்தனமாக எண்ணினேன் என்பதைக் கேட்டால் கூட அவர் நகைப்பார்!’

மழையுடன் சில சமயங்களில் வெயிலும் கலந்து அடிப்பது உண்டு. எந்த நிகழ்ச்சியையும் ஆழத்திலே அமுக்கி ஜீரணித்துக் கொள்ளச் சக்தியில்லாத பொறுமையற்ற இயல்பு படைத்த மனம் மாறி மாறி எண்ணமிட்டது. புங்கனூரிலிருந்து தஞ்சாவூர் ஜங்ஷன் வந்து தான் நாங்கள் சென்னை வண்டி ஏற வேண்டும். நல்லவேளை மாலையிலேயே இருட்டுகிறதென்று புறப்பட்டு விட்டோமே ஒழிய ஜங்ஷனில் அடைத்துக் கொண்டிருந்த ஜனக் கும்பலில் நாங்களும் இருவராக அமர்ந்து கொண்டோம். அப்போது எனக்கு மூர்த்தியுடன் சுகமாக மேல் வகுப்பில் பிரயாணம் செய்ததும், பெங்களூரில் சகல வசதிகளுடன் கூடிய ‘வெயிட்டிங் ரூமி’ல் இளைப்பாறியதும் தென்றலின் குளுமை போல நினைவில் பரவின. ஒருவேளை அடுத்த தடவை சென்னையிலிருந்து அவருடன் வரும்போது அப்படி வருவேனோ என்னவோ?

அப்பா தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “சுசீ!" என்று அழைத்தார்.

ஊரிலிருந்து கிளம்பியதிலிருந்து எதுவுமே பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த அவர் திடீரெனக் கூப்பிட்டதும் நான் நிமிர்ந்து, “என்னப்பா?" என்றேன்.

“நாளைக்கு நான் உடனே திரும்பி விடுவதால் உன்னுடன் பேச முடியுமோ முடியாதோ? நீ சில சமயங்களில் மிகவும் துடுக்காக நடந்து கொள்கிறாய். அன்றைக்கு அந்தப் பிள்ளையாண்டானிடம் புடவையைக் கொடுத்து விட்டு நீ என்னிடம் பொய் தானே சொன்னாய்?" என்றார். போகாமல் போன விருந்தைப் புளியிட்டு அழைத்த மாதிரியில் அவர் என்னிடம் அந்தப் பழைய சங்கதியை, தீர்ந்து போயிற்று என்று அதனுடன் நான் அறவே மறந்திருந்த விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்குவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. பதில் எனக்குச் சட்டென்று எப்படி வரும்?

“அத்திம்பேர் நீ இந்த மாதிரி மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதைக் குறித்து வருத்தப்பட்டுக் கொண்டு எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவர்கள் பணம் பெருத்தவர்கள். நமக்கோ அது தேவையாக இருக்கிறது. எப்போது சுழலும் சக்கரத்தில் அகப்பட்டுக் கொண்டு விட்டோமோ, கஷ்டமோ நஷ்டமோ அதன் போக்குப்படித்தான் சுழல வேண்டும் அம்மா! நீ சிறு பெண். அவர்கள் ஏதேனும் கடுஞ்சொல் மூலம் உன் மனத்தை நோவ வைத்திருக்கலாம். என்றாலும் நீ செய்தது தவறு. இப்போதே இத்தனை ரோசம் வைத்துக் கொண்டிருப்பது பின்னாடி உனக்கே கஷ்டமாக ஆகிவிடக் கூடாதே என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. நாளை நீ பெரிய குடும்பம் ஒன்றில் காலெடுத்து வைக்கப் போகிறாய். உன் ஓரகத்தி, அவள் தாய், தங்கை, உன் மாமியார், மைத்துனர் என்று மூன்று குடும்பத்து மக்கள் அங்கு ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது இருக்கும் நிலையுடன் நீயும் ஒட்டி இருக்க வேண்டும். ஒவ்வொருவர் அபிப்பிராயங்களும் குணமும் வெவ்வேறாக இருக்கலாம். நீயும் அவர்களுக்குத் தகுந்தாற் போல் இணைந்து போனால்தான் நலமாக இருக்கும். ஆயிரம் பேராக இருந்தாலும் புருஷர்கள் ஒத்துப் போய் விடுவார்கள். பெண் மக்கள் அப்படி அல்ல. அத்தியந்த சிநேகிதர்களாக இருந்தால் கூடச் சகஜமாகப் பழக மாட்டார்கள். குற்றம் கண்டுபிடிக்கும் நுண்ணிய சக்தி அவர்களுக்கு அபாரம். அதனாலேயேதான் அபிப்பிராய பேதம், மனத்தாங்கல் ஏற்படுவது பெண்களிடையே சுலபமாகி விடுகிறது. இந்த வழியில் நீ உன் அறிவை ஒரு போதும் செலுத்தி விடக் கூடாது. எந்த அபிப்பிராயத்தையும் மேலெழுந்த வாரியாகவே எடுத்துக் கொள். அடுத்தபடியாக உழைப்பைத் துச்சமாகக் கருதி நீ சோம்பேறியாகி விடக் கூடாது, சுசீலா. சந்தனக்கட்டை தேயத் தேயத்தான் மணம் பெறும். இன்னும் உன்னுடைய சௌகரியங்களை நீ எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொண்டு பழகுகிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு உனக்கு நல்லது. ‘அது இல்லாவிட்டால் எனக்குச் சரிவராது’ என்று அபரிமிதமான சுகங்களுக்கும் சௌகரியங்களுக்கும் ஒரு போதும் நீ இரையாகி விடக் கூடாது. தியாக புத்தி கொஞ்சமும் இன்றி உண்மையான பெருமையும் இல்லை. இன்பமும் இல்லை. பெண்கள் குடும்பத்துக்குத் தூண் போன்றவர்கள். அதன் வாழ்வையும் தாழ்வையும் அவர்கள் தாம் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘நாட்டுப் பெண் வந்தாள்; மறுநாளே சட்டியைத் தூக்கி வேறு வை என்று சொல்லிவிட்டாளே’ என்று நாலு பேர் அபிப்பிராயம் கொடுக்கும் நிலையில் நீ நடந்து கொள்ளக் கூடாது. உன் புருஷன் அண்ணனிடமும் மதனியிடமும் அலாதியான மதிப்பு வைத்திருக்கிறான். அந்த மதிப்புக் குறைந்து, ஒட்டுதல் விட்டுப் போகும்படியான நிலைமை இனிமேல் எப்போது வந்தாலும் அது உன்னால் வந்ததாகத்தான் கருதும்படி இருக்கும். இத்தனை சிரமப்பட்டு உனக்கு உரிய இடத்தைத் தேடி மணம் செய்வித்தது கூட எனக்குப் பெரிதல்ல. நாளைக்கு உன்னால் ஒரு வார்த்தைக்கு இடம் இருக்கக் கூடாது. தெரிகிறதா அம்மா?" என்று முடித்தார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பார்த்தால் பசுப்போல் இருக்கும் அப்பா என்னவெல்லாம் தெரிந்து கொண்டு சொல்லுகிறார்!

“நீங்கள் இப்போது கூறியது அத்தனையும் எனக்கு எப்போதும் நினைவிருக்கும் அப்பா. அப்படியே நடந்து கொண்டு நல்ல பெயர் வாங்குவேன்" என்று உறுதியுடன் மொழியும் போது ஏனோ எனக்கு நாத் தழுதழுத்தது.

“தங்கமும் புக்ககம் போனாள்; ஜகதுவும் புக்ககம் போனாள். அப்போதெல்லாம் நான் இவ்வளவு சிரத்தை கொள்ளவில்லை. சிரமமும் கொள்ளவில்லை. கவலையும் இருக்கவில்லை. உன் விஷயம் அப்படி எனக்கு எளிதாகத் தோன்றவில்லை. எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உனக்குக் கல்வி புகட்டினேன்; சங்கீதம் பயிற்றினேன். ‘சுசீலா ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டியவள். அவளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டாம் ஸார்! காலேஜில் சேர்த்து விடுங்கள்! மேலே படித்து உத்தியோகம் பண்ணி முன்னுக்கு வரட்டும்’ என்று கூட நீ படிப்பில் காட்டிய ஊக்கத்தைக் கண்டு என்னிடம் தலைமையாசிரியர் உட்பட எல்லோரும் உரையாற்றினார்கள். ஆனால் நான் ஜீவனத்துக்காகவும் விவாகச் செலவு குறைவதற்குமாகவா உனக்குக் கல்வி புகட்டினேன்? குடும்பப் படகை வலித்துப்போக ஓரளவாவது பெண்களுக்கு அறிவு கூர்மையாக வேண்டும் என்றே உனக்குக் கல்வி வசதி அளித்தேன். ஆனால் கல்வியறிவைப் பெண்கள் சீரிய முறையிலும், ஒழுக்கமான வழியிலும் பயன்படுத்த வேண்டும். ‘என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். நான் அதற்காக அடிமையாக இருக்க மாட்டேன்’ என்று கணவனை எதிர்த்து வாயாடுவதற்காக அந்த அறிவை உபயோகிப்பது முறை அல்ல. ஒருவருக்கொருவர் பலவந்தமான அதிகாரத்துக்குட்பட்ட அடிமைகளாக இருப்பதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அன்பின் பின்னலுக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் கட்டுப்பட்ட வாழ்க்கையைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சதிபதிகளே இன்பம் பெறுவார்கள் என்பது என் கருத்து. இந்தக் கணவனும் மனைவியும் தேர்ந்த அறிவுடன் தெள்ளிய மனமும் படைத்திருப்பதாக நடுநடுவே வாழ்க்கைக் கடலில் ஏற்படும் சிறு பூசல்களைக் குழப்பமோ கலக்கமோ இன்றி, ஆழ்ந்த சிந்தனையின் மூலம் தாங்களாகவே தெரிவித்துக் கொள்வார்கள். இத்தகைய மனமொத்த குழந்தைகளாக நீங்கள் வாழ வேண்டும் என்பது என் அவா, சுசீலா!" என்று கூறிவிட்டு என் முகத்தை அவர் உற்று நோக்கினார்.

எங்கள் ஊரில் ஒரு குளம் உண்டு. அதன் வடக்கு மூலையில் ஒரு வடிகாலும் உண்டு. மழை அதிகம் பெய்து தண்ணீர் நிறைய வந்துவிட்டால் வடிகாலைத் திறந்து விடுவார்கள்.

நான் பள்ளிக்கூடம் போகும் காலத்தில் குளத்திலிருந்து தண்ணீர் வடிகாலில் ‘கோ’ என்ற சத்தத்துடன் பீறி எழும் ஆவேசத்துடன் ஓடி உருண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டே ஆச்சரியப்பட்டவள் போல் நிற்பேன். ‘குளத்திலே சலனமில்லாமல் சப்தமில்லாமல் தேங்கியிருக்கும் நீர் சிறிது வழி கிடைத்தவுடன் எப்படி ஆவேசமாக வருகிறது! அத்தனை தண்ணீரையும் திறந்து விட்டால் எப்படிப் போகும்?’ என்று சிந்திப்பேன். எனக்கு அது நினைவுக்கு வந்தது. அப்பாவின் மன ஆழத்திலே நிரம்பியிருக்கும் அன்புக்கும் அநுபவத்துக்கும் இப்போது சற்றுப் போக்குக் கிடைத்திருக்கிறது போலும்! ஜகதுவினிடமும் தங்கத்தினிடமும் அவருக்கு இல்லாத பாசம் என்னிடம் இருக்கிறது என்று அவர் வாயிலிருந்தே வந்ததே! குளத்து நீரைப் போல் அவர் உள்ளத்திலிருந்து பெருக்கெடுத்து வந்த அன்புணர்ச்சி என் மனத்தைக் கிளர்த்தி விட்டது. முழுதும் வழுக்கையாகிப் பளபளவென்று பிரகாசித்த தலையும், ஒட்டி உலர்ந்த முகமும், எப்போதோ வேலைக்கு வந்த போது தைத்துக் கொண்ட ஓரங்களில் விரிசல் விழுந்த கோட்டும் அவருடைய தன்னலமற்ற தியாகத்தை எனக்கு எடுத்துப் பறைசாற்றின. தம் உயிரின் அணுக்களால் ஆக்கப்பெற்ற எனக்காக அவர் தம் சொந்தச் சௌகரியங்களைக் கொஞ்சமாகவா தியாகம் செய்திருக்கிறார்? இதற்கெல்லாம் நான் பிரதி செய்யக் கூடிய காலம் வருமா?

தூரத்தில் வண்டி வருவதன் அறிகுறியாகச் சத்தம் கேட்டது.

“வண்டி வந்துவிட்டது போலிருக்கிறதே, அம்மா!" என்று எழுந்தார் என் தந்தை.

என் வாழ்வின் நீண்ட யாத்திரையிலே என்னை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு முக்கியமான கட்டத்திற்குக் கடத்திப் போகும் அந்த வண்டி நள்ளிரவிலே தென்படும் கரும் பூதம் போல் அலறிக் கொண்டு வந்தது.

2-2

கரிய கங்குலைப் பிளந்து கொண்டு தன் பொன்மேனியுடன் மலர்ந்து உதய கன்னி என்னை வரவேற்க, நான் என் புது வாழ்வின் உதயத்தில் இணைய அடி எடுத்து வைத்தேன். வண்டியிலிருந்து என் கண்களில் முதல் முதலாக மைத்துனர் தென்பட்டார். அவருக்குப் பின்னால், மூன்று நாலு வயசிருக்க்ம் பெண் குழந்தை ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு வெள்ளை நிஜாருடனும் ஷர்ட்டுடனும் என் கணவர், லேசான நகையுடனும் கனிவு கொண்ட விழிகளுடனும் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றார். காலை வேளையின் புத்துணர்ச்சி அவர்களிடம் நிரம்பி இருந்தது. எனக்கோ சரியாகக் கூட உட்கார இடமில்லாமையால், உடம்பெல்லாம் வலித்தது. தூக்கம் இல்லாததால் கண்கள் ஜிவு ஜிவுவென்று எரிந்தன. மரத்துப் போயிருந்த கால்களைக் கூட வண்டியில் அடைந்திருந்த கூட்டம் இறங்கிய பின்னரே நீட்ட முடிந்தது. ரெயில் சூட்டில் கருகித் தலையிலிருந்து தொங்கிய மல்லிகைச் சரத்தை எடுத்துக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினேன். பிரிந்த குழல் பறந்து பறந்து கண்முன் வந்து விழுந்தது. அப்பா சாமான்களை எடுத்துக் கொடுக்க, அவர் ஒரு கை பிடிப்பதைக் கண்ட என் மைத்துனர், “போர்ட்டர் போர்ட்டர்!" என்று கூலி ஒருவனைப் பார்த்துக் கூவினார்.

“நல்ல கூட்டம் போலிருக்கிறது. சௌகரியமாக உட்காரக் கூட முடியவில்லையோ?" என்று கேட்ட என் கணவர் என்னை நோக்கிச் சிரித்தார். கூட்டம் என்பதைத் தெரிவிக்கும் அத்தாட்சியாக நான் இருக்கிறேனோ என்ற வெட்கத்துடன் தலை மயிரைக் கோதிக் கொண்டேன். பிறகு அவர்களுடன் ஸ்டேஷன் கட்டிடத்தைத் தாண்டி வெளியே வந்தேன். அவர்கள் காட்டிய நீல வர்ணக் கார் ஒன்றில் கூலி சாமான்களை எல்லாம் வைத்தான். முன்புறம் வண்டி ஓட்டியின் ஆசனத்திலே என் கணவர் அமர்ந்ததைக் கண்ட என் மனம், ‘ஓகோ! சொந்தக் கார் போலிருக்கிறது!’ என்ற உவகையால் விரிந்தது.

அவருக்குப் பக்கத்தில் என் மைத்துனர் மடியில் குழந்தையுடன் அமர்ந்து கொள்ள அப்பாவையும் என்னையும் பின்புற ஆசனத்தில் தாங்கிக் கொண்டு பட்டணத்தின் வழு வழுப்பான தார் ரோட்டில் கார் சென்ற போது எனக்கு வான ஊர்தியில் சஞ்சரிப்பது போல் இருந்தது. கண் மூடிக் கண் திறப்பதற்குள் வீடு வந்துவிட்டது போல் எனக்குத் தோன்றியது. முன் வாசல் முகப்பில் பிரம்பு நாற்காலி ஒன்றில் சாய்ந்து கொண்டிருந்த என் ஓரகத்தி எங்களைக் கண்டதும் எழுந்து நின்றாள். நாங்கள் எல்லோரும் வீட்டுக்குள் புகும் போது, அப்பாவின் எளிய தோற்றமும் உடை எல்லாவற்றையும் அந்தச் செல்வச் சூழ்நிலை மிகைப்படுத்திக் காண்பித்தது. சுகமாக உண்டு உறங்கிச் செல்வத்தில் புரளுபவர்கள் மத்தியில் வறுமையின் சின்னமாகவும், உழைப்பின் பிரதிநிதியாகவும் அவர் தென்பட்டது போல் எனக்குத் தோன்றியது. சிரமத்துடன் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றிருந்த என் ஓரகத்தி, “வா" என்று புன்னகை மலர்ந்த வதனத்துடன் என்னை வரவேற்றாள். அவள் தோற்றம், அவள் அப்போது கர்ப்பிணி என்பதைச் சுலபமாக எனக்கு அறிவித்தது.

அதற்குள் எதிரே அவசர அவசரமாக வந்த என் மாமியார், “ஏன் பட்டு! ஆரத்தி எடுக்க வேண்டாமோ? அதற்குள் உள்ளே வந்துவிட்டாளே!" என்றாள். “எடுக்க வேண்டுமா? இதெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கிறது?" என்று கூறிய அவள் என்னை நோக்கி மறுபடியும் புன்னகை செய்தாள்.

திரும்பவும் வாசலில் போ என்பார்களாக்கும் என்று நான் தயங்கி நிற்பதைக் கண்ணுற்ற என் கணவர், “பரவாயில்லை, உள்ளே போகலாம்" என்று நகைத்தார். முன் சென்ற மாமியாரைத் தொடர்ந்து நான் சென்றேன். சமையலறையில் ஓர் அம்மாள் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். “இது தான் பட்டுவின் அம்மா; நமஸ்காரம் பண்ணு" என்றாள் என் மாமியார்.

கீழே குனிந்து பணிந்த என்னைப் பார்த்து, பர்வதம் போல் உட்கார்ந்திருந்த அந்த அம்மாள், “பாவம், கண்ணெல்லாம் சிவந்திருக்கிறது. ரெயிலிலே கூட்டம் போலிருக்கிறது" என்று மெல்ல நகைத்தாள். அவள் காதிலே இருந்த வயிர ஓலையும், கையிலே மின்னிய மோதிரங்களும், இடுப்பிலே தகதகத்த காவி நிறப் பட்டும் அவள் ஒன்றுக்குமில்லாமல் மகள் வீட்டில் வந்து இருக்கவில்லை என்பதை அறிவித்தன. அடுப்பைக் கவனிக்கப் போன என் மாமியாரிடம், “முதலில் காபியைக் கலந்து கொடுங்கள்" என்றாள்.

“இல்லை, நான் இன்னும் பல்லே தேய்க்கவில்லை" என்று கூறிய நான் சமயலறையைச் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டே நின்றேன். புது மனிதர்களும் புது இடமும் எனக்கு அங்கே எப்படிப் பழகுவது, சகஜமாக எப்படி வளைய வருவது என்பதே புரியாதபடி இருந்தன. அத்தையகத்து வாழ்க்கையின் வாசனை என் மனத்தில் லேசாகப் பரவியது.

“இதோ இருக்கிறாளே, இது யார் தெரியுமா?" என்று குழந்தைகளின் சிரிப்பொலிக்கும் அழுகையொலிக்கும் மத்தியிலே தம் குரல் கேட்க, என் கணவர் சமையலறை வாசற்படியிலே வந்து நின்றார்.

பட்டுப் பாவாடையின் இழையைத் தொட்டுக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்திருந்த பெண் குழந்தை, “இது தான் சித்தி! எனக்குத் தெரியுமே!" என்று தன் மழலை மொழியில் கூறி நகைத்தது.

“ஏண்டா குமார், இந்தச் சித்திக்கும் ரொம்ப நன்றாகக் கணக்குச் சொல்லிக் கொடுக்கத் தெரியுமாம். அந்தச் சித்தி போல இரண்டைத் தொண்டையால் கத்திக் கத்தி அடிக்கவே மாட்டாளாம்!" என்று அழுத கண்களை ஷர்ட்டுத் துணியால் துடைத்துக் கொண்டு நின்ற எட்டு வயசுச் சிறுவனுக்கு என்னை பழக்கம் செய்வித்தார் அவர்.

‘குழந்தைகள் இருக்கிறார்கள் இங்கு. அன்புடன் இருக்க வேண்டும்’ என்று நினைத்த வண்ணம் நான் அவர்களை நோக்கி முறுவலித்தேன்.

“ஓகோ! ஆசாமியை எங்கே காணோம் என்று பார்த்தேனே! அதற்குள் இங்கே மிஸஸ்ஸுடன் பேச வந்துவிட்டாரோ?" என்று இரட்டைத் தொண்டையில் கட்டைக் குரல் ஒன்று கேட்டதும் நான் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெண், அழகே உருவெடுத்தாற் போன்றவள், காலைப் பொழுதின் மனோகரத்தில் முழுகி எழுந்ததைப் போன்ற கவர்ச்சியுடன் நின்றாள்.

“இவர்களுக்கெல்லாம் ‘இன்ட்ரட்யூஸ்’ பண்ணிக் கொண்டிருந்தேன். வா, உனக்கும் சொல்லுகிறேன். இவள் தான் என் மிஸஸ் சுசீலா, எப்படி?" என்று எடுத்த எடுப்பிலேயே அவளை அபிப்பிராயம் கேட்டார் என் கணவர். தன் முல்லைப் பற்களை வெளியே காட்டிச் சிரித்துக் கொண்டு, அவள் கனிவு ததும்பிய பெண்மை விழிகளுடன் என்னைப் பார்த்தாள்.

“எப்படி என்றா சொல்ல வேண்டும்? இதோ சொல்லுகிறேன். கேட்டுக் கொள். கார்மேகக் கூந்தல், கருவண்டை யொத்த கொஞ்சும் விழிகள். குமிழ் போன்ற அழகிய மூக்கு!" என்று அவள் வர்ணித்ததைக் கண்டு நடுவே குறுக்கிட்ட என் கணவர், “ஏது ஏது? எனக்கு மூச்சுத் திணறுகிறது! பெரிய நாவலாசிரியர் தோற்று விடுவார் போல் அளக்கிறாயே!” என்று நகைத்தார். ஆண்களும் பெண்களும் சகஜமாகப் பேசுவது, வித்தியாசமின்றிப் பழகுவது என்பதை அறிந்திருந்தாலும் இப்படி எல்லாம் பேசி நான் கேட்டவளே அல்ல.

“பார், பார். உண்மையைச் சொன்னால் நான் அளக்கிறேனாம்? நான் சொல்கிறேனே என்று நீ வேண்டுமானால் பார்; கருவண்டையும் கார் மேகத்தையும் கவனிக்கும் போது, சுசீலாவின் கூந்தல் இன்னும் கருப்பாக இருக்கும். அவள் கண்களின் கவர்ச்சி இந்தக் கருவண்டுக்கு வராது என்று தோன்றுகிறதா இல்லையா?”

“இதெல்லாமா நான் உன்னிடம் கேட்டேன்? அழகு தான்” என்றார் அவர்.

“ஓகோ! என்னடாப்பா என்று பார்த்தேனே? ஏற்கனவே எனக்கு மதி மயக்கம் தலைக்கேறி இருக்கிறதே என்பதை ஒப்புக் கொள்கிறாயா? என் அபிப்பிராயத்தைச் சொல்லட்டுமா?” என்று என் அருகில் வந்து தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டு என் முகத்தைப் பார்த்து அவள் முறுவலித்தாள்.

‘இவள் அபிப்பிராயம் என்னவாக இருக்குமோ? பீடிகை போடுகிறாளே!’ என்று எனக்கு உள்ளூறச் சிரிப்பு வந்தது. சட்டென்று கையை எடுத்த அவள், “கிடக்கட்டும். நான் யாரென்று அவளுக்கு நீ சொல்லவே இல்லையே?” என்று கேட்டாள்.

“நான் சொல்லுவானேன்? உன் தொண்டையே லீலா என்று அவளுக்கு அறிவித்திருக்குமே! இந்தக் குமார் அதற்குள் வந்து, சித்தி இரட்டைத் தொண்டையில் கத்திக் கத்திச் சொல்லிக் கொடுப்பது பிடிக்க வில்லை என்று புதுச் சித்தியிடம் புகார் சொல்ல ஆரம்பித்து விட்டான்” என்றார் அவர்.

“அடடே! இவ்வளவுக்கு வந்துவிட்டீர்களா நீங்கள்? இருக்கட்டும் இருக்கட்டும்” என்று பொய்க் கோபம் கொண்டு குழந்தைகளைப் பார்த்து அவள் கறுவினாள்.

அவளுடைய ஒவ்வொரு பேச்சையும் உண்டாகும் முக அசைவையும் எனக்கு அன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கலாம் போல இருந்தது.

“அவள் வந்து இறங்கி இன்னும் காபி கூடச் சாப்பிடவில்லை. அதற்குள் உங்கள் அரட்டையைத் துவக்கி விட்டீர்களே; முகமெல்லாம் சோர்ந்து கிடக்கிறது” என்றாள் அவளுடைய தாய்.

“நீ மகா மோசம் ராமு. ஏதடா ரெயிலில் அவஸ்தைப்பட்டு வந்து இறங்கி இருக்கிறாளே, ஒரு ‘கப்’ காபி கொடுத்து உபசாரம் பண்ணுவோம் என்று தோன்றுகிறதா, பார்! அவளை உட்காரக் கூடச் சொல்லாமல் கால் கடுக்க நிற்க வைத்து இப்படியா அவமானம் பண்ணுவது? புது மனைவி வந்திருக்கிறாள் என்றால், எந்த நிமிஷம் கோபித்துக் கொள்வாளோ என்ற பயம் வேண்டாமோ?” என்று அவள் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கும் போதே, என் ஓரகத்தி, அவளுடைய சகோதரிதான், “ஏண்டி லீலா அவருக்குக் காபி கொண்டு வா என்று உன்னை அனுப்பினேனா? இல்லை இங்கு வந்து வாயாடச் சொன்னேனா? ஏய் நளினி! இந்தப் பட்டுப் பாவாடையை நாசமாக்காமல் அவிழ்த்து வை. இரவெல்லாம் ஜுரம் கண்ணைத் திறக்கவில்லை. வா, டாக்டர் வீட்டுக்குப் போக வேண்டும்” என்று கடிந்த குரலிலே கூறிக் கொண்டே வந்தாள்.

சலுகையுடன் சிற்றப்பாவின் கால்களைக் கட்டிக் கொண்ட நளினி, “நான் மாட்டேன்” என்று பிடிவாதமாக அழுகைக்கு ஆயத்தம் செய்தாள்.

பலவந்தமாகக் குழந்தையைத் தரதரவென்று அவள் இழுத்துச் செல்கையில் குமாருக்கும் மைதிலிக்கும் கூட ஒரு சூடு விழுந்தது. “ஏண்டா தடியா, பள்ளிக்கூடத்துக்கு நேரமாகவில்லை? புத்தகத்தை எல்லாம் கடை பரத்தி வைத்திருக்கிறீர்களே. அடி மைதிலி, குளித்து விட்டு வாயேன். பின்னிக் கொள்ள வேண்டாம்?” என்று இரைந்து விட்டுச் சென்றாள்.

லீலா அப்பாவுக்குக் காபி கொண்டு போகிறாள் என்பதை அறிந்த நான், “வேண்டாம், அப்பா காப்பி சாப்பிடும் வழக்கம் கிடையாது. காலை வேளையில் அவர் ஒன்றும் சாப்பிடவே மாட்டார். அதுவும் ஸ்நானம் செய்யாமல்...” என்றேன்.

“என்னது? ஒன்றும் குடிக்க மாட்டாரா?” என்று அதிசயத்துடன் கேட்ட அவள், “பின் இந்தக் காபி இப்போது யாருக்கு வேண்டும்?” என்று கையில் தம்ளருடன் விளையாட்டுக் குழந்தை போல ஏலம் கூறினாள்.

“இங்கே கொண்டா” என்று அவளிடமிருந்த தம்ளரை வாங்கிக் கொண்ட என் கணவர், “எனக்கு அதிகாலையில் சாப்பிட்டது மறந்து போய் விட்டது” என்ரு தாம் அருந்தலானார்.

“அட ராமா! வாங்கி அவளுக்குத்தான் கொடுக்கப் போகிறானாக்கும் என்றல்லவா நினைத்தேன்? மடக் மடக்கென்று தான் குடிக்கிறானே!” என்று லீலா கூறிக் கொண்டிருக்கும் போதே புன்னகையுடன் அவர் அங்கிருந்து அகன்றார்.

அவர் பேச்சிலும் நடவடிக்கையிலும் புதுமை கண்ட நான் மனக் களிப்பிலே மிதந்தேன். குளித்துவிட்டு எல்லோருடனும் உணவருந்த வந்து உட்கார்ந்த என் மைத்துனர், “இன்று தான் நான் குளிக்கச் சென்ற போது அறை சுத்தமாக இருந்தது. வெந்நீரடுப்புப் புகையவில்லை. வெந்நீர் சரி சூடாக இருந்தது. புது மாட்டுப் பெண் வந்துவிட்டாள் என்பதைக் காட்டி விட்டது’ என்று கூறிய போது எனக்குச் சந்தோஷம் கரைபுரண்டது. ‘இந்த அற்ப விஷயத்திற்கே இத்தனை திருப்தி கொண்டாடுகிறாரே? வெகு சீக்கிரத்தில் இங்கு எல்லோரையும் கவர்ந்து விட முடியும்’ என்று உள்ளூற எண்ணிக் கொண்டேன். அப்பா பரிமாற வந்த என்னைப் பெருமையுடன் நோக்கினார்.

எல்லோரும் இலைகளை விட்டு எழுந்திருக்கவில்லை. என் ஓரகத்தி டாக்டர் வீட்டுக்குக் குழந்தையை அழைத்துப் போயிருந்தவள், உள்ளே வந்தாள்.

தட்டிலே கையைக் கழுவிக் கொண்டிருந்த என் மைத்துனர், “என்ன? குழந்தைக்கு உடம்பு ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டாரோ டாக்டர்?” என்று ஏளனம் தொனிக்கும் குரலில் அவளைக் கேட்டார்.

“ஆமாம்! உங்களுக்குக் கேலியாக இருக்கிறது. இந்த நெஞ்சுக் கட்டுச் சாதாரணமாக இல்லை என்று நான் அப்போதே சொல்லவில்லையா? அத்துடன் காலையிலே ராமு திரட்டுப் பாலை வேறு கொடுத்து வைத்திருக்கிறான். குழந்தை நோவுக்குக் கள்ளமில்லை என்று எழுந்து நடமாடியிருக்கிறது. ஜுரம் நூற்றுநாலு இருக்கிறது. இப்போது டாக்டர் நியுமோனியா என்று சந்தேகப்பட்டு ‘நர்ஸிங் ஹோமி’லேயே விட்டு விட்டுப் போங்கள் என்றார். கத்து கத்து என்று கத்துகிறது. விட்டு விட்டுக் குளித்துச் சாப்பிட்டுப் போகலாம் என்று வந்தேன். நான் சொன்னால் யார் கேட்கிறார்கள்? ராமுவினுடைய செல்லம் அதற்குத் தலைக்கு மேலே ஏறிப் போயிருக்கிறது!” என்று படபடப்பாக அவள் என் கணவர் மீது குற்றம் சாடினாள்.

“வெகு அழகுதான்! நானா திரட்டுப் பால் கொடுத்தேன். எல்லாம் உங்கள் அருமைத் தங்கையின் வேலை! கார் வந்த சப்தம் கேட்டவுடனேயே ஆளைக் கூட அவள் கவனிக்கவில்லை. பட்சணங்களை ஆராய ஆரம்பித்து விட்டாள். எல்லாம் காலியாவதற்குள் நான் நல்ல வேளை பார்த்தேன். குழந்தைகளுக்கெல்லாம் அவள் தான் விநியோகம் செய்தாள்” என்று அவர் லீலாவைச் சாடினார்.

“அதனாலேயே ஜுரம் இப்போது நூற்று நாலு வந்து விட்டதாக்கும்? நான் கண்டேனா ஜுரம் என்று? காலையில் பட்டுப் பாவாடை எல்லாம் கட்டிக் கொண்டு தடபுடலாக ஸ்டேஷனுக்கு வேறு போய் விட்டு வந்தது. எனக்கு எப்படித் தெரியும்? எல்லோரும் தின்னும் போது குழந்தை கேட்டது, கொடுத்தேன். உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடனேயே படுக்கையில் விடாமல் கண்டபடி அலையவிட்டால்? உங்களுக்குக் குழந்தையை வளர்க்கத் தெரிந்தால்தானே?” என்று முடிவாக ஒரு போடு போட்ட லீலா கலத்தை விட்டு எழுந்து போனாள்.

“ராமுவுக்குத் தெரியாதா ஜுரம் என்று? சிற்றப்பாவிடம் போகிறேன். சிற்றப்பாவிடம் போகிறேன் என்று ராத்திரி என் பிராணனை வாங்ன்கி அவனிடம் போய்ப் படுத்துக் கொண்டதே. ஸ்டேஷனுக்கு நான் கூட்டிப் போக வேண்டாம் என்று சொன்னதை யார் கேட்டார்கள். நீங்கள் தலைக்கு ஒரு விதமாகச் செல்லம் கொடுங்கள். அப்புறம் எனக்குக் குழந்தை வளர்க்கத் தெரியவில்லை என்று குற்றம் கூறுங்கள்” என்று பட்டு கடுகடுத்தாள்.

இந்தச் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாடிக் கொண்டு சிறு குழந்தைகள் போல் பேசிக் கொண்டது எனக்கு வியப்பைத் தந்தது. ஓடியாடும் குழந்தை உடம்புக்கு வந்திருக்கிறது. அதற்கு இத்தனை பிரமாதப்படுத்துகிறார்களே? எங்கள் வீட்டில் எங்களில் யாருக்காவது ஜுரம் வந்தால் அநேகமாக அது அப்பாவுக்குக் கூடத் தெரியாது. இரண்டு வேளை கஞ்சி கொடுப்பாள் அம்மா. அதற்கும் தணியாவிட்டால் லோகல் கண்டு ஆஸ்பத்திரியில் தருமத் தண்ணீர் இரண்டு வேளை வாங்கிக் கொடுப்பாள். அத்துடன் சரி. எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் இப்படித்தான் இருக்கும் போலும்! அத்தை வீட்டில் ஹேமாவுக்கு வந்ததையும் நடந்ததையும் விட இது பெரிது அல்லவே?

பதினொரு மணிக்குள் வீடு நிசப்தமாகி விட்டது. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விட்டனர். லீலா கல்லூரிக்குப் போய்விட்டாள். என் மைத்துனரும் கணவரும் காரியாலயம் சென்று விட்டார்கள். பட்டுவுங்கூடச் சிகிச்சை இல்லம் போய் விட்டாள். கிழவிகள் இருவரும் கீழே முன் கட்டில் கட்டை மணை சகிதம் படுத்து விட்டார்கள். நான் ஸ்நானம் செய்த கூந்தலை ஆற்றிக் கொண்டு மெள்ள மாடிப் பக்கம் சென்றேன். வராந்தாவை அடுத்த கூடத்தில் அப்பா கீழே சிமென்ட் தரையில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். மேலே மின்சார விசிறி சுழன்று கொண்டிருந்தது. அவருக்கு எத்தனை உடல் சிரமம்.

ரேடியோ, கண்ணாடி, அலமாரி, சோபாக்கள், எல்லாமாக அந்தக் கூடத்தை அலங்கரித்தன. ஒரு புற வாயில் வராந்தாவுக்கு வழி காட்டியது. இன்னொரு புற வாயில் வழியாக ஒரு குறுகிய தாழ்வரை சென்றது. அதை ஒட்டி அடுத்தடுத்து மூன்று அறைகள் இருந்தன. முதல் அறையின் கதவு திறந்திருந்தது. எதிரே பெரிய நிலைக் கண்ணாடி பொருத்திய மேஜையில் இருந்த அலங்காரப் பொருள்கள், புத்தக அலமாரி, கொடியில் மடித்துப் போட்டிருந்த புடவைகள் எல்லாம் அது லீலாவின் அரை என்று யாரும் சொல்லாமலே விளங்கின. கதவு சாத்திப் பூட்டப் பெற்றிருந்தது. கடைசி அறையும் திறந்தே கிடந்தது. மூலையில் ஒரு பிரம்பு மேஜை, நாற்காலி, ஓர் அகலப் பெஞ்சி, ஒரு கோட் ஸ்டாண்டு, துணிமணிகள் வைக்கும் அலமாரி ஒன்று எல்லாம் அந்த அறையில் இருந்தன. கோட் ஸ்டாண்டில் தொங்கிய ஷர்ட்டையும், பெஞ்சின் மேல் கிடந்த வேஷ்டியையும் கண்ணுற்ற நான் அது என் கணவருடைய அறை என்று ஊகித்துக் கொண்டேன். உள்ளே ஒரு தூசு தும்பு கூட இல்லாமல் எல்லாம் துப்புரவாக இருந்தது. கீழிருக்கும் என் பெட்டியைக் கூட இங்கே கொண்டு வைக்க வேண்டும் என்று எண்ணியவாறு அங்கிருந்து அடுத்த வீடு தெரியும் ஜன்னலில் கண்களை ஓட்டினேன். அடுத்த வீட்டு முற்றத்தில் அந்த ஜன்னல் இருந்தது. முற்றத்தை ஒட்டிய வராந்தாவின் கைப்பிடிச் சுவரில் அழகழகான பூந்தொட்டிகள் அலங்காரமாக வைத்திருந்தன. உட்புறச் சுவரிலே பெரிய பெரிய படங்கள் தெரிந்தன. ஆனால் ஜன நடமாட்டமே இல்லாதது போல் நிசப்தம் நிலவியது. என்ன இருந்தாலும் பட்டணத்துத் தினுசே அலாதிதான். புங்கனூராக இருந்தால் புது மாட்டுப் பெண் வந்த அன்று வீட்டுக்கு எத்தனை பேர்கள் வருவார்கள், போவார்கள்! சேர்ந்தாற் போல் வீடுகள் இருந்தும் இங்கு அவரவர்கள் ஜோலியைக் கவனித்துக் கொண்டு பேசாமல் இருந்து விடுவார்கள் போலும்!

இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அடுத்த வீட்டு மாடிக்கு ஒரு பெண் வந்தாள். அவள் தான் வீட்டுக்கு உரியவளாக இருக்க வேண்டும். நான் அவளைப் பார்த்த போது அவளும் என்னைப் பார்த்தாள். ஆனால் சிரிக்கக் கூட இல்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய் விட்டாள். உள்ளே ரேடியோவைத் திருப்பி விட்டிருக்கிறாள் போலிருக்கிறது. ‘ஜம்’மென்று என் செவிகளில் இசை பாய்ந்தது.

‘இங்கும் இருக்கிறதே, அத்தை வீட்டைப் போல். கூசாமல் நானும் போட்டுப் பார்க்கலாமே! எனக்கும் உரிமை உள்ள வீடுதானே இது?’ என்று நினைத்துக் கொண்டு எழுந்து வந்தேன்.

கீழிருந்து, “சுசீலா! சுசீலா!” என்று மாமியாரின் குரல் ஒலித்தது.

“இதோ வந்துவிட்டேன்” என்று குரல் கொடுத்தவாறு அப்படியே பின்புறம் சென்ற படிக்கட்டுகள் வழியாகக் கீழிறங்கி வந்தேன்.

“சற்றுக் கும்மட்டியைப் பற்ற வை. லீலா வந்துவிடுவாள். மணி ஒன்றாகப் போகிறது” என்றாள்.

‘இப்போது இடைவேளைக்கு வருவாளாக்கும்! அவர் கூட வருவாரோ?’ என்று என்னுள்ளேயே கேட்டுக் கொண்டவளாக நான் வேலையில் முனைந்தேன்.

“ஒரு பில்டரில் காபிப் பொடி போட்டால் போதும். புருஷர்களுக்குச் சாயங்காலம் புதிதாகப் போடலாம்” என்றாள் மாமியார்.

“சாயங்காலந்தான் அவர்கள் வருவார்களோ?” என்று நான் மெதுவாகக் கேட்டேன்.

“ஆமாம், ஆறு மணியாகும். இந்தச் சேப்பாக்கம் ஆபீஸில் இருக்கும் வரை ராமுவும் வருவான், லீலாவுடன். இப்போது இதை விட்டுவிட்ட பிறகு வருவதில்லை” என்றாள் அவள்.

‘இதை விட்டு விட்ட பிறகா? ஆனால் பழைய இடத்தில் இப்போது வேலை செய்யவில்லையா? அப்பா கூடச் சொல்லவில்லையே, இதைப் பற்றி?’ சிந்தையை இந்தக் கேள்விகள் கிளர்த்தின. ஆனால் கேட்கத் துணிச்சல் வரவில்லை. தானாகத் தெரிந்து போகிறது. அப்புறம் எனக்கு வேலை சரியாக இருந்தது. அப்பா ஊருக்குக் கிளம்புவது கூட உள்ளே எட்டிப் பார்த்து, “போய் வரட்டுமா அம்மா சுசீலா?” என்று கூப்பிட்ட பிறகுதான் நினைவுக்கே வந்தது. தூக்கிச் செருகியிருந்த புடவையை அவிழ்த்து விட்டுக் கொண்டே, “கிளம்பி வீட்டீர்களா அப்பா?” என்று வெளியே வந்தேன். அருகில் வந்து நின்ற என் மாமியாரிடம் அவர் “குழந்தையை உங்கள் பொறுப்பில் விட்டாச்சு அம்மா! இதுவரை அவள் வீட்டை விட்டு எங்கும் போய் இருந்ததில்லை. அதனால் ஏறவோ தாழவோ இருந்தாலும் மனசில் வைத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் பெண் அவள் இனிமேல்” என்று கூறும் போது தொண்டை கரகரத்தது.

“கவலையே படாதேயுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று சம்பிரதாயமாக அவள் விடை கொடுத்தாள்.

கூடவே வாயில் வரை போய் நின்ற நான், “அவர் வருகிறாரா அப்பா ஸ்டேஷனுக்கு?” என்று மெதுவாகக் கேட்டேன். யாருமே அப்பாவைக் கவனிக்கவில்லை போல எனக்குத் தோன்றியது.

“மாப்பிள்ளைதானேயம்மா காரை ஓட்டிக் கொண்டு வரப்போகிறார்?” என்றார் அப்பா. அவர் கதவைத் திறந்து ஏறிக் கொண்அதைப் பார்த்துக் கொண்டே பேச்சற்று நான் வாயிற்படியிலேயே நின்றேன். மாடிப் படியிலே வேகமாக இறங்கி வந்த என் கணவர் நான் நின்றதைப் பார்த்தார். மங்கலான வாயில் விளக்கின் நீல ஒளியில் என்னை அறியாமலேயே என் கண்களில் துளித்திருந்த கண்ணீர் முத்துக்கள் அவருக்குத் தெரிந்து விட்டன போலும்! என் மோவாயைப் பற்றி மெல்லிய குரலில், “அப்பா ஊருக்குப் போவதற்காகவா அழுகிறாய்? அசடு!” என்றார். யாரோ என்னை எங்கோ அலேக்காகத் தூக்கிச் செல்வது போல் இருந்தது.

வீட்டு வேளைகள் முடிந்து விட்டன. ஸ்டேஷனுக்குச் சென்றிருந்த அவர் இன்னமும் வரவில்லை.

எங்கள் அறையில் வந்து ஜன்னலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த என் மனத்தில் அப்போது லீலாவைப் பற்றிய எண்ணங்களே நிரம்பியிருந்தன. ஆம், சற்று முன் தான் அவள் கேலியும் குறும்பும் கலந்த பேச்சுடனும் நகைப்புடனும் என் கூந்தலை வாசம் வீசும் மல்லிகைச்சரம் கொண்டு அழகு செய்துவிட்டுப் போயிருந்தாள். எத்தனை அன்பும் அநுசரணையும் வாய்ந்த வெகுளியான பெண் இவள்! படித்திருக்கிறாள்; அழகு இருக்கிறது; செல்வம் இருக்கிறது; துளி கர்வம் இல்லையே!

அவள் வீட்டில் இருக்கிறாள் என்றாலே எனக்கு ஏதோ சொல்ல முடியாத சந்தோஷம் உண்டாயிற்று. ஒரு நாளிலேயே குறுகுறுக்கும் அவள் முகமும் கபடமற்ற இருதயத்திலிருந்து வந்த அவள் பேச்சும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டன. அவளுடைய தோழமை எனக்குக் கிடைத்தற்கரிய பாக்கியம் எனக் கருதி மகிழ்ந்தேன்.

ஜன்னல் வழியாக நிலவின் கதிர்கள் என் மீது விழுந்தன. அதன் குளுமையை ரஸிக்க நான் எழுந்து விளக்கை அணைத்தேன். அடுத்த வீட்டு மாடியில் நான் பகலில் கண்ட பெண் பால் செம்பு சகிதம் வந்தாள். அதை உள்ளே கொண்டு வைத்துவிட்டு, அவள் பூந்தொட்டியின் அருகே வந்து நின்று கொண்டு வானைப் பார்த்தாள். சற்றைக்கெல்லாம் ஓர் ஆடவன் அங்கு வந்தான். வந்தவன் சப்தம் செய்யாமலேயே பின்னால் சென்று அவள் கண்களைத் தன் கரங்களால் மூடினான்.

அவ்வளவுதான் தண்ணென்ற வலிய கைகள் என் பார்வையை மறைத்தன. உடல் சிலிர்த்தது எனக்கு.

“நாளைக்கு இந்த ஜன்னலுக்கு ஒரு திரை போட்டு விட வேண்டும்” என்று புன்னகை செய்தார் என் கணவர்.

ஊமைப் பெண்ணைப் போல நான் அந்தச் சமயத்தில் சங்கடப் பட்டேன். மனத்திலே கரை புரண்ட உணர்ச்சிப் பெருக்கு என் தொண்டையைத் தடை செய்தது.

“வாயைத் திறந்து பேச மாட்டேன் என்கிறாயே சுசீ? இதோ இந்த நிலவு உன் பொன் முகத்தில் விழும் போது எப்படி இருக்கிறது தெரியுமா?” என்று என் முகத்தைப் பிடித்து நிமிர்த்தினார் அவர்.

வானத்துக் கருமேகங்களின் மீது தண்ணிய காற்றுப் படும்போது மழை பொழிகிறதே, அது போல என் நெஞ்சத்தைப் பிடித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகள் யாவும் அவருடைய ஸ்பரிசத்தால் கண்களை வந்து திரையிட்டன.

“அழுகிறாயா என்ன? என்ன சுசீ?” என்று அவர் அதற்குள் பதறி விட்டார்.

கண்ணீரின் நடுவே நான் மெல்ல சிரித்தேன்.

“இல்லை, அழவில்லை” என்று திணறினேன்.

“நான் பயந்து போய்விட்டேன்! இன்னமும் அப்பா ஊருக்குப் போனதை நினைத்துத்தான் அழுகிறாயோ என்று. சுசீ, உன் கண்களில் நீர் வந்தால் என் நெஞ்சை யாரோ அமுக்கிப் பிழிவது போலல்லவா இருக்கிறது? இன்று காலையில் லீலா கூறினாளே, அது போல் உன் செவ்விதழ்களைத் திறந்து நீ நகை புரியும் போது என் ஆவி என் வசம் இருப்பதில்லை. காரியாலயத்தில் எனக்கு ஏதாவது வேலை ஓடினால்தானே?” என்று என் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்ட அவர் முகம் என் முகத்துக்கு வெகு சமீபமாக நேராக வந்தது. அவர் இதழ்கள் என் இதழ்களில் பொருந்தி இருக்கும். ஆனால்...?

திடீரென்று அறைக்கு வெளியே, “ராமு! ராமு!” என்று என் மைத்துனர் கூப்பிடும் குரல் கேட்டது. இவ்வுலகையே மறந்திருந்த அவர் திடுக்கிட்டுப் பின் வாங்கினார். என் உள்ளம் துணுக்குற்றது.

கதவைத் திறந்து கொண்டு, “என்ன அண்ணா?” என்ற அவருடையை கேள்வி எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதாக எனக்குத் தோன்றியது.

“குழந்தைக்கு உடம்பு மிகவும் நன்றாக இல்லை. ராமு, சிற்றப்பா சிற்றப்பா என்று சாயங்காலம் நான் பார்த்த போதே அரற்றிக் கொண்டிருந்தாள். இப்போதும் அதே ஸ்மரணைதான். நெஞ்சு பாறையாகி மூச்சுத் திணறுகிறது. இந்த நிலையிலும் அவள் உன் நினைவாகப் பிதற்றுவது பார்க்கச் சகிக்கவில்லை. மன்னியைக் கொண்டு விடப் போயிருந்தேன் அல்லவா? டாக்டரே சொல்லுகிறார். உன்னைக் கூப்பிடவே எனக்கு...” என்று தயங்கினார் மைத்துனர்.

“அடாடா! அப்போதே சொல்லக் கூடாது? இதோ வந்துவிட்டேன்” என்று அவருடைய மறுமொழி எனக்குக் கனவிலே கூறுவது மாதிரி இருந்தது. அடுத்த கணம் அவருடைய செருப்பு, தாழ்வரையில் சிமிட்டித் தளத்தில் ‘சடக் சடக்’ கென்று உரசியது என் நெஞ்சில் உரசியது போலிருந்தது. வானத்திலிருந்து கல் மாரியோ, மண் மாரியோ பொழிந்து என்னை நெருக்குவது போல் உணர்ந்தேன். அவற்றின் நடுவே அந்தப் பழைய சம்பவங்கள். ஊர்வலத்தின் இறுதிக் கட்டம். புறப்படுமுன் கிழிந்த புடைவை. எல்லாம் ‘டங் டங்’கென்று இரும்புக் குண்டுகள் போன்று என் நினைவில் வந்து மோதின. செயலற்றுத் துவண்டு படுக்கையில் வீழ்ந்த என்னை நோக்கி ஜன்னல் வழியாக வந்த நிலவு, தலையிலே தொங்கிய மல்லிகையின் மனம் எல்லாம் பரிகசித்தன.

2-3

இரவின் தனிமையூடே நான் எத்தனை நேரம் விழித்திருந்தேனோ? நித்திராதேவிக்கு என் மீது எப்போதுமே கருணை உண்டு. அவள் என்னை அறியாமலேயே என்னைத் தன் வசம் ஆட்கொண்டு விட்டாள்.

“அவர் எப்போது வருவாரோ?” என்று நினைவில் படிந்த எண்ணத்தினூடனே உறங்கிவிட்ட என்னை, “சுசீலா, சுசீலா!” என்று மெதுவாக அழைக்கும் குரலும், குப்புறப்படுத்துக் கொண்டிருந்த என் முதுகில் யாரோ தட்டிய உணர்வும் என் நித்திரையைக் கலைத்தன. ‘அவர் வந்து விட்டார்’ என்ற புல்லரிப்புடன் நான் திரும்பிக் கொண்டு கண்களை விழித்தேன். எத்தகைய ஏமாற்றம் எனக்குக் காத்திருந்தது? காவிப் புடவையும் தானுமாக விடியற் காலையின் மங்கிய வெளிச்சத்தில் என் மாமியார் முன் நின்றாள்!

“சற்று எழுந்து வந்து காபி கொட்டையை அரைத்து வை, சுசீலா. பால்காரன் வந்துவிட்டான். நான் போய்ப் பார்த்து வாங்க வேண்டும்” என்று உதய கீதத்துடன் என்னை எழுப்பி விட்டு அவசர அவசரமாகச் சென்றாள் அவள்.

குறிக்கோள் ஒன்றைக் கொண்டு செல்லும் மனத்துக்கு நடுவே வரும் தடங்கல்கள் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டு பிரமாண்டமாகத் தோன்றினாலும், அதை விட இது சிறியது. கடந்துவிடலாம் என்ற தைரியம் கொண்டால் முன்னேறிச் செல்வது எளிதாகுமாம். என் வாழ்விலே குறிப்பிட்ட லட்சியம் ஏதும் இருப்பதாக எனக்கு அதுவரை தோன்றியதே இல்லை. அந்த மாதிரியான லட்சியத்தைச் சிருஷ்டித்துக் கொண்டு அதை அடையும் ஆர்வம் கொள்ளும் சூழ்நிலையில் நான் பண்படையவில்லை. ‘பெண்கள் மணமாகி கணவன் வீட்டுக்குப் போவார்கள். அங்கே சுகமாகவும் சந்தோஷமாகவும் அன்பின் பிணைப்பில் வாழ்க்கை நடத்துவார்கள். அப்படி இல்லாதவள் துரதிருஷ்டசாலி, என்ற எண்ணங்களிலே தான் நான் ஊறியிருந்தேன். இரவின் ஏமாற்றமும், காலை உதயத்தில் அதைத் தூக்கியடித்த இன்னோர் ஏமாற்றமும் எனக்கு ஏதோ என் வாழ்விலே தெளிவில்லாத லட்சியம் ஒன்று உண்டென்றும், அதை அடைய நான் இது சிறியது, இதைவிட முன்னது பெரியது என்று எனக்கு ஏற்படும் தடங்கள்களை மனத்துணிவு கொண்டு கடக்க வேண்டுமென்றும் தோன்றச் செய்தன.

அவருடைய மேனிபடாத அந்தப் புத்தம் புதுப் படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு வாடிச் சோர்ந்த இருதயத்துடன் நான் அன்றையப் பொழுதின் அலுவல்களை அணைய வந்தேன். அடுத்த அறையின் ஒருக்களித்த கதவிடுக்கின் வழியாக என் மைத்துனர் நிச்சிந்தையாகத் தூங்குகிறார் என்று அறிவிக்கும் குறட்டைச் சத்தம் வெளி வந்தது. லீலாவின் அறையில் விளக்கு எரிந்தது. மேஜையின் மீது சாய்ந்து கொண்டு அவள் ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். முன் கூடத்தில் குழந்தைகள் உறங்கினார்கள். கடிகார முள் மணி ஐந்தேகால் என்று அறிவித்தது. ‘அதற்குள்ளாகவா காபி?’ என்று எண்ணியவளாகக் கீழே வந்த நான் பல்லைத் தேய்த்துவிட்டுக் காபி கொட்டையை அரைக்கலானேன்.

முதல் நாள் ரெயிலில் கண் விழித்திருந்தேன். ஆனாலும் புது மலர்ச்சியிலே உள்ளம் கொண்ட ஆவலால் உடல் சோர்வு சிறிதும் தெரியவில்லை. அவயங்கள் வேலை செய்யத் துறுதுறுப்பாகப் புத்துணர்ச்சி பெற்றிருந்தன. இன்றே மலருவதற்கான ஆவலுடன் சூரியோதயத்தை எதிர்பார்த்து நிற்கும் மடலவிழும் மலரின் மேல் திடீரெனக் கார் மேகங்கள் மழை பொழிந்தால் கூம்பி விடுவது போல என் இருதயத் தாமரை சோர்ந்து கிடந்தது. உடலில் சுறுசுறுப்பு உயிர் அணுக்களை விட்டு அப்பால் உறங்கிக் கிடந்தது. செய்யும் வேலை எனக்கு மகிழ்வை ஊட்டுவதற்குப் பதிலாகப் பாரமாய் இருந்தது.

வாழ்நாள் முழுவதும் இப்படிப் பாரமாகி விடுமோ என்னவோ?

‘என்ன பேதமை! குடும்பம் என்றால் அதில் கடமை, அன்பு, ஆட்சி, அலுவல் எல்லாமே பின்னிக் கிடக்கும். ஒன்றுக்கு அவசியம் நேரிடும் போது இன்னொன்றின் வரையறையை விட்டுச் சற்று விலக வேண்டியே வரும். இதை எல்லாம் பொருட்படுத்தித் தைரியத்தை இழந்து தன்னைத் தானே கோழையாக்கிக் கொள்ளலாமா? குன்றி விடும்படி இப்போது என்ன விதத்தில் தாழ்ந்து விட்டேன்?

கோபம் வரும் சமயத்தில் ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணினால் போதும். கோபம் தணிந்து விடும் என்று சொல்வது வழக்கம். சில சமயங்களில் மனத்தில் ஏற்படும் சஞ்சலங்களும் அப்படித்தான். சிந்தித்துப் பார்த்ததில் பிரமாதமாக எதுவும் நடந்து விடவில்லை என்றே தோன்றுகிறது.

கொஞ்சம் ஆறுதல் பெற்றவளாக அடுப்பில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த போது லீலா வந்தாள். “என்ன அத்தை, புது மாட்டுப் பெண்ணை அதற்குள் அடுப்படியில் உட்கார்த்தி வைத்து விட்டீர்களே?” என்று என் மாமியாரைக் கேட்டுக் கொண்டே அவள் என் அருகில் வந்து உட்கார்ந்தாள்.

“ராத்திரி என்னவோ, நளினிக்கு உடம்பு அதிகமாக இருக்கிறது, சிற்றப்பா என்று அலறுகிறாள் என்று அத்திம்பேர் ராமுவைக் கூப்பிட்டார். இப்போது எப்படி இருக்கிறதாம்?” என்று கேட்டாள் அவள்.

எனக்கு எதுவுமே தெரியாது போல் நான் தலையைக் குனிந்து கொண்டு மௌனம் சாதித்தேன்.

“ஒன்றும் தெரியவில்லையே. பட்டுவையும் காணோம். இன்னும் அவனும் வரவில்லையே!” என்று என் மாமியார் கவலை தொனிக்க பதிலிறுத்தாள்.

“ஆனால் இரவு முழுவதும் ராமு அங்கே தான் இருக்கிறானா?” என்று வினவிய லீலா ஆச்சரியத்துடன் குனிந்து என் முகத்தை நோக்கினாள்.

மனத்திலே இருக்கும் துயரம் தானாக அமுங்கிக் கிடக்கும். யாராவது அநுதாபமாக இருப்பது தெரிந்து விட்டாலோ, குபுக்கென்று வெளிக் கிளம்பிவிடும். லீலாவின் அநுதாபம் தோய்ந்திருந்த அந்தக் கேள்வி சாம்பல் பூத்திருந்த என் உள்ளக் கனலை ஊதிவிட்டு விட்டது. எனக்கு மட்டும் கேட்கும்படியான மெல்லிய குரலிலே “பாவம்!” என்று அவள் பகர்ந்த போது உண்மையில் எனக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது. ஒரு வேலையை நான் செய்து முடிப்பதற்குள் நாசுக்காக இன்னொரு வேலைக்குத் தயாராகக் கட்டளை இடுவதில் என் மாமியாருக்கு ஈடு அவளேதான். ஒரு நாளைய அனுபவத்திலேயே இதை நான் தெரிந்து கொண்டேன்.

லீலா கவனித்து விடப்போகிறாளே என்ற அச்சத்துடன் சாம்பல் கண்களில் பறந்து விட்டது போல் பாவனை செய்து கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டேன். பிறகு கரண்டியில் நெருப்பை எடுத்துக் கொண்டு வெந்நீரடுப்புப் பற்ற வைப்பதற்காகக் குளிக்கும் அறைப் பக்கம் போனேன். பல்விளக்கும் ப்ரஷ்ஷில் பசையை விட்டுக் கொண்டு அவர் வாயிற்படியில் நின்றார். அப்போதுதான் வந்திருக்கிறார் போல் இருக்கிறது.

சற்று முன்னே என்ன என்னவோ சமாதானம் செய்து கொண்டேன்? அவரைக் கண்டவுடன் அவை அனைத்தும் போன இடம் தெரியவில்லை. போனது தான் போனாரே, இரண்டு மணியோ, மூன்று மணியோ இருந்து விட்ட பிறகு வந்தாரா? குழந்தைக்குத் தந்தை இங்கே சுகமாகக் குறட்டை விடுகிறார்! என்ற கோபம் என் நெஞ்சுக்குழியிலே திரளாக வந்து நின்றது. அவரைப் பார்த்தது போலவே காட்டிக் கொள்ளாமல் கை வேலையில் கவனம் செலுத்தலானேன். அவர் என்னையேதான் நோக்கிக் கொண்டு நின்றார் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. உட்கார்ந்து அடுப்பு மூட்டிக் கொண்டிருந்த என்னைப் புஜத்தைப் பற்றி எழுப்பினார். அப்போதும் நான் என் பார்வையை உயர்த்தவில்லை. “கோபமா சுசீ” என்று என் முகத்தைப் பிடித்து அவர் நிமிர்த்தினார். அவர் குரலிலும் விழிகளிலும் குலவிய கனிவு தான் என்னை எப்படி அவர் வசம் இழுத்தது! யாரேனும் கவனித்து விடப் போகிறார்களே என்ற அச்சமும் நாணமும் கௌவிக் கொள்ள நான், “இல்லை” என்று தலையை ஆட்டியவாறு அவர் பிடியிலிருந்து திமிறினேன். “நல்ல வேளை, இதோ ராமு வந்து விட்டானே?” என்று கூறிக் கொண்டே லீலா சோப்புப் பெட்டி சகிதம் வந்தாள். “குழந்தைக்கு எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள்.

“நியுமோனியாதான். அவ்வளவு சீக்கிரம் ஜுரம் குறைந்து விடுமா? இப்போது கூடக் கண்ணை விழித்துக் கொண்டு, ‘போகாதே’ என்று அழுதாள். இரவெல்லாம் நான் எங்கே போய்விடுவேனோ என்ற பயம். என் கையைப் பிடித்துக் கொண்டே இருந்தாள். அப்படி இப்படிச் சற்று நகர்ந்து விட்டால் கூடப் போதும், அழ ஆரம்பித்து விட்டாள். நெஞ்சிலிருந்து குரல் எழும்பினால் தானே? ‘காபி குடித்து விட்டு ஓடி வருகிறேன்’ என்று சமாதானப்படுத்தி வந்தேன்” என்றார் அவர்.

“நல்ல வேளை! தத்துப் பெண் சொன்னாள் என்று அங்கேயே இருந்து விடாமல் இருந்தாயே. கல் நெஞ்சக்காரன் நீ ராமு!” என்று லீலா சற்றும் யாருக்கும் அச்சமின்றிப் பட்டம் சூட்டினாள் அவருக்கு.

மனத்திலே பட்டதைச் சற்றும் தயங்காமல் வெளியிட்டுவிடும் அவளது தீரத்தை உள்ளூறப் பாராட்டினேன் நான்.

அவர் பதிலுக்கு என்னை நோக்கி முறுவலித்தார்.

அதனுடன் அந்தப் பேச்சு முடிந்து விட்டது. முன்னால் போல அண்ணனும் தம்பியும் காரில் ஏறிக் கொண்டு சென்றார்கள். ‘அவர் எந்த இடத்தில் வேலை செய்கிறார்? என்ன வேலை? என்ன வருவாய்? வீடு, கார், ரேடியோ என்று தடபுடலாக நடக்கிறதே, இவை யாவும் என் மைத்துனரால் தான் நடைபெறுகின்றனவா?’ என்பன போன்ற குடும்பச் சங்கதிகளைத் தெரிந்து கொள்ளும் அரிப்பு என் மனத்தைத் தின்றது. ஆனால் யாரிடம் கேட்பது?

மாமியார் வேலை சொன்னாள்; செய்தேனே ஒழிய நெருங்கிக் கேட்கும் அளவுக்கு சகஜ பாவம் வரவில்லை. பட்டுவுடன் நான் இன்னும் சேர்ந்தாற் போல நாலைந்து வார்த்தைகள் கூடப் பேசியிருக்கவில்லை. அவள் தான் வீட்டுக்கும் சிகிச்சை இல்லத்துக்குமாக அலைந்து கொண்டிருந்தாளே? மேலும் அவள் எப்போதும் என் முன் சிரித்த முகத்துடனேயே தென்பட்டாலும் மனம் விட்டுப் பேச முடியாதென்ற அர்த்தமற்ற அச்சம் என்னுள் எழும்பியது. லீலாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றாலும் அதிலும் எனக்குச் சங்கடம் தென்பட்டது.

நான் அவரை மணந்து கொண்ட மனைவி. அந்த வீட்டிலே அடியெடுத்து வைத்திருக்கும் மருமகள். என் கணவர் என்ன உத்தியோகம் செய்கிறார். குடும்பம் எப்படி நடக்கிறது என்பன போன்ற விஷயங்கள் எனக்கு இன்னமும் தெரியவில்லை என்ற என் அறியாமையை நான் அவளிடம் காட்டிக் கொள்ளுவதா? வான வீதியிலே பறக்கும் உல்லாசப் பறவையைப் போலச் சுயேச்சமாக நடமாடும் அந்த நாகரிக ராணியிடம் நான் இத்தகைய சமாசாரங்களைக் கேட்பதனால் எனக்கு மட்டுமல்ல, என்னிடம் இதெல்லாம் தெரிவிக்காத அவரிடமும் அவள் வைத்திருக்கும் மதிப்புக் குறைந்து போகாதா? எனவே, அந்த யோசனையையும் கை விட்டேன்.

அன்று பகல் கல்லூரியிலிருந்து வந்த பின் லீலா, “சுசீலா, நீ இதற்கு முன் இவ்வூருக்கு வந்ததில்லையே?” என்று கேட்டாள்.

நான் உதட்டைப் பிதுக்கினேன்.

என் காதோடு நெருங்கிய அவள், “நல்ல படம் ஒன்று ஓடுகிறது. இன்று ‘மாட்னி ஷோ’வுக்குப் போகலாமா? எனக்கு இனிமேல் முக்கியமான வேலை ஒன்றும் இல்லை. வருகிறாயா?” என்று அழைத்தாள்.

எனக்கு ஒரு புறம் சந்தோஷமாகவும், ஒரு புறம் கஷ்டமாகவும் இருந்தது. மாமியாரிடம் சொன்னால் என்ன சொல்லுவாளோ? வந்து முழுசாக இரண்டு தினங்கள் ஆவதற்குள், “நான் லீலாவுடன் சினிமாவுக்குப் போகிறேன்” என்றால் நன்றாக இருக்குமோ? சிற்றுண்டிக்கு ஆரம்பிக்க வேண்டும்! அரிசி உளுந்து ஊறுகிறது, வேலைக்காரி வருவாள். இத்தனை வேலைகளையும் விட்டு விட்டு எப்படிக் கேட்பது? ஆனால் லீலா, அவ்வளவு குறுகிய காலத்தில் என் உள்ளத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு அன்புடன் அழைக்கும் போது தட்டுவதா?

என் மௌனத்தைக் கண்ணுற்ற அவள், “என்ன யோசனை செய்கிறாய்? ‘போனால் அவருடன் அல்லவோ போக வேண்டும்? இவளுடன் போவானேன்’ என்று இருக்கிறதா, கள்ளி!” என்று என் கன்னத்தைச் செல்லமாக இழைத்துக் குறுநகை செய்தாள்.

“இல்லை, அத்தையிடம் நீங்கள் சொல்லுகிறீர்களா? வேலை நிறைய இருக்கிறதே!” என்று நான் இழுத்தேன்.

“பூ! இவ்வளவு தானா? சமையலறை இருக்கவே இருக்கிறது. மாடிக்குப் போய்த் தலைவாரி ‘டிரஸ்’ பண்ணிக் கொள். நான் சொல்லிச் சரிப்படுத்தி விடுகிறேன்” என்று என் முதுகில் தட்டிக் கொடுத்து அவள் உற்சாகப்படுத்தினாள்.

வீட்டில் அடக்கமாக வளைய வர வேண்டிய மருமகள் நான் என்பதையும் மறந்து சந்தோஷத்துடன் துள்ளிக் கொண்டு மாடிக்கு ஓடினேன். அத்தையிடமும் தாயிடமும் லீலா என்ன கூறினாளோ? சற்றைக்கெல்லாம் தன்னை அலங்கரித்துக் கொள்ள அவளும் மாடிக்கு வந்து விட்டாள். இருவருமாகத் தோள்மேல் தோள் போட்டுக் கொண்டு உல்லாசமாக மாடியை விட்டுக் கீழே வந்த போது, வாயிலில் கூடைக்காரியிடம் என் மாமியார் கத்தரிக்காய் வாங்கிக் கொண்டிருந்தாள். எங்களை அகன்ற விழிகளுடன் நிமிர்ந்து பார்த்த அவளுக்கு லீலா, “அத்தை நான் மாம்பலத்துக்கு ஒரு சிநேகிதி வீட்டுக்குப் போக வேண்டியிருக்கிறது. இவளுந்தான் ஓரிடமும் பார்த்ததில்லையே. எனக்கும் துணையாக இருக்கும் என்று அழைத்துப் போகிறேன்” என்று கூறிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமலேயே செருப்புச் சத்தம் ஒலிக்க என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

“நீங்கள் இப்போதுதான் சொல்லுகிறீர்களா? ஏதாவது நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?” என்று நான் கலவரத்துடன் வினவினேன்.

“நினைத்துக் கொள்வது என்ன? அவர்களாகப் பார்த்து உன்னை அனுப்ப வேண்டும் என்று எண்ணிப் பயந்தால் நீ பயந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். ஏதடா, நேற்று வந்த பெந்தானே என்று கூட இல்லாமல் உடனே சமையலறைக்குள் உட்கார்த்தி விட்டார்களே! இத்தனை நாட்களாக எப்படிச் சமாளித்தார்களாம்?” என்று ஆத்திரத்துடன் மொழிந்தாள் லீலா.

“அதனால் என்ன? வேலை ஏதும் இல்லாவிட்டால் எனக்கும் எப்படிப் போது போகும்? ‘தேய்ந்த கட்டை தான் மணம் பெறும்’ என்று அப்பா சொல்லுவார். சோம்பேறி வாழ்க்கையில் என்ன சுகம் இருக்கிறது?” என்றேன் நான் பதிலுக்கு.

“அது சரிதான். ‘புதுப் பெண். புதிதான சூழ்நிலையில் நம்மிடம் பழக வந்திருக்கிறாள். நான்கு நாளைக்கு நாம் அன்புடன் அரவணைத்துக் கொண்டு போக வேண்டும்’ என்று இங்கு யார் நினைக்கிறார்கள்? அம்மாவும் அத்தையும் அடுப்பங்கரை உதவிக்கு ஆச்சு என்று நினைப்பது கிடக்கட்டும். அக்கா, ஏதோ ஓடியாடும் குழந்தைக்கு உடம்புக்கு வந்திருக்கிறதென்று இல்லாமல் ஒரேயடியாகப் பிரமாதப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு யாரும் வேண்டாதவர்கள் வந்திருப்பதைப் போன்று இதுதான் சமயமென்று நர்ஸிங்ஹோமி’லேயே உறைந்து கிடப்பது நன்றாகவே இல்லை. நேற்றிரவு சாப்பிடும்போது அத்திம்பேர் ‘மாட்டுப்பெண் சமையல் தானே?’ என்று கேட்கிறார். எனக்கு எரிச்சல் வந்தது. இரவுதான் ஆகட்டும் குழந்தை சற்றுத் தூங்கினதும் அவன் சங்கடப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால் கூட ‘நீ போ ராமு. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அக்கா சொல்ல வேண்டாமா? மரியாதை கொடுத்து அல்லவோ மரியாதை வாங்க வேண்டும்? எனக்குப் பொறுக்கத்தான் இல்லை!” என்று விடுவிடென்று சொல்லிக் கொண்டு போனாள் அவள்.

எனக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது. நான் கூட இவ்வளவு ஆழ்ந்து கவனிக்கவில்லையே! உரியவளான எனக்கே இப்படி எல்லாம் குற்றமாக எடுத்துக் கொள்ளத் தோன்றாத போது, படிப்பிலும் களிப்பிலும் மனதைச் செலுத்தி வரும் கல்லூரி மாணவியான அவள் வீட்டிலும் குடும்பத்திலும் இன்னும் தொடர்பு கொள்ளாதவள். வெகு நுட்பமாகக் கவனித்திருக்கிறாளே! மண வாழ்க்கையை இன்னும் மேற்கொள்ளாத அவளுக்குப் புது மனைவியின் உள்ளத் துடிப்பு எப்படித் தெரிகிறது! அந்த வாழ்விற்கும் உரிய பருவம் வந்துவிட்டால் தானாகவே உணர்ந்து கொள்ள முடியும் போலும்? லீலா என்னை விட வயதில் மூத்தவள் அல்லவா? ‘ஒவ்வொருவருடைய குணமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எதையும் நுட்பமாக ஆராயமல் சகஜமாக எடுத்துக் கொள்வதுதான் நலம்’ என்று அப்பா உபதேசித்தது என் நினைவுக்கு வந்தது. இப்படி எல்லாம் இருக்கும் என்று முன்பே அறிந்து சொன்னது போல் அல்லவோ நடக்கிறது.

லீலாவின் அபிப்பிராயங்களை அப்படியே மடக்கி நான் பதில் கொடுத்தேன். “இது போன்ற விஷயங்களை ஊன்றி ஊன்றிக் கவனிக்காமல் விட்டுவிடுவதுதான் நல்லது. வீணாக ஆராய்ச்சி செய்து மனத்தைச் சஞ்சலத்திற்குள்ளாக்கிக் கொள்வதில் என்ன லாபம்?”

ஒரு கணம் நடைபாதையிலேயே நின்ற லீலா என்னைப் பிரமிக்கும் விழிகளுடன் பார்த்து, “ராமு அதிருஷ்டசாலிதான்” என்று முணுமுணுத்தாள்.

பஜார் ரோடு ஒன்றுக்கு நாங்கள் வந்தோம். லீலா என் கையைப் பிடித்து அழுத்தி, “இங்கேயே நிற்கலாம். பஸ் இங்கே தான் வரும்” என்றாள். பிற்பகல் வேளையாதலால் துணிக் கடைகளிலும், வளையல் கடைகளிலும் ஏறி இறங்கும் பெண் மக்கள் தாம் அதிகம் காணப்பட்டனர். நான் வைத்த கண் வாங்காமல் எதிர் வரிசையில் உள்ள கடைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பொழுது, அந்தப்புறம் ஒரு பஸ் வந்து நின்றது. ஆட்கள் இறங்கிய பின் மறுபடியும் அது நகர்ந்தது.

“ஹலோ!” என்று யாரோ பழகிய குரலில் விளித்தது என் கவனத்தை இழுத்தது. எதிர் வெயிலில் முகத்தைச் சரித்துக் கொண்டு பார்த்தேன். பஸ்ஸிலிருந்து இறங்கியவர்களில் ஒருவனான மூர்த்திதான் அப்படிக் கூப்பிட்டிருக்கிறான்.

ரஸ்தாவின் குறுக்கே கடந்து எங்கள் அருகில் வந்த அவன், “நான் காண்பது மெய்தானா? கண்கள் பொய் சொல்லவில்லையே?” என்று முறுவலித்தான்.

“கண்களைத் துடைத்துக் கொண்டு நன்றாகப் பாருங்கள். இந்த உலகத்தில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் பின்னும் குறுக்கிட்டால் கிள்ளி விட்டுக் கொண்டு பாருங்கள்” என்று பதிலுக்குப் புன்னகை செய்தாள் லீலா.

“மிஸஸ் ராமநாதனுக்கு அருகிலே இருக்க வேண்டியவர் மிஸ்டர் ராமநாதனாயிற்றே என்ற சந்தேகம் ஒரு புறம் இருக்க, என் கண்களிலேயே தட்டுப்படாமல் இந்தப் பரந்த பட்டினத்தில் எங்கோ ஒளிந்து கொண்டிருந்த லீலாவை இன்று கும்பிடப் போன தெய்வம் குறுக்கே நின்று மரித்தாற்போல் காண நேரிட்ட செயல் ஒரு புறமாக, என்னை என் கண்களே நம்பிக்கை இழக்கச் செய்து விட்டது” என்றான் அவன்.

“எங்கே... இத்தனை தூரம்?” என்று லீலா கேட்டாள்.

“மௌண்ட் ரோடு வரை ஒரு வேலையாக வந்தேன். அப்படியே மிஸஸ் ராமநாதனைப் பார்க்க, உங்கள் வீட்டைத் தேடிப் பார்க்கலாம் என்று தான் கிளம்பினேன். அவள் எனக்குத் தெரிந்தவளாக்கும்.”

“அட! அப்படியா சங்கதி? என்னிடம் நீ சொல்லவேயில்லையே சுசீ. உங்களுக்கு உறவா அவள்?” என்று லீலா மலர் முகத்துடன் கேள்விகளை அடுக்கினாள். அவனைக் கண்டதுமே எனக்கு அவன் புடைவைகளைக் கொண்டு அத்தையிடம் கொடுத்திருப்பானோ, அத்தை என்ன சொல்லியிருப்பாளோ அவனிடத்தில், அவன் என்ன நினைத்துக் கொண்டிருப்பானோ என்ற எண்ணங்களெல்லாம் மனத்தின் அடித்தளத்திலிருந்து கிளம்பி என்னை உறுத்தத் தொடங்கி விட்டன. அதைப் பற்றி அவன் இப்போது லீலாவுக்கு முன் கேட்டு விடாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தேன்.

எங்கள் பரிச்சயத்தை அவனே விளக்கிய பின் லீலா, “ஆனால் சுசீலாவைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தீர்கள் என்று சொல்லுங்கள்!” என்றாள் சந்தோஷத்துடன்.

என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ‘அந்த விஷயத்தை அவன் சமய சந்தர்ப்பம் அறியாமல் கேட்டு விட்டால்? இவனிடம் புடவையைத் திருப்பிக் கொடுத்தது என்ன முட்டாள்தனம்?’

“நாங்கள் படம் ஒன்று பார்க்கத் தியேட்டருக்குக் கிளம்பினோம். ஆட்சேபம் ஏதும் இல்லை, வருகிறீர்களா? ஒரு விஷயம் இல்லை, பல விஷயங்கள் வேண்டுமானாலும் கேட்க அவகாசம் இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே லீலா அவனையும் அழைத்தாள்.

அவன் தட்டிக் கழிக்க வேண்டுமே என்று நான் விரும்பினேன். ஆனால் அவனோ, “ஓ! வருகிறேன். ஆனால், அந்தச் சமாசாரம் இப்போது கேட்பதற்கில்லை. அவளிடம் தனியாகத்தான் கேட்க வேண்டும்!” என்று என்னை நோக்கி நகைத்த போது, லீலாவின் முகத்தில் கேள்விக் குறியிட்டு விட்டது. “அப்படியானால் எனக்குத் தெரியாமல் நீங்கள் அவளைப் பார்த்துப் பேச வீட்டுக்கு வந்தது தடைப்பட்டு விட்டதாக்கும்!” என்ற அவள் கேள்வியில் தொனித்த வேதனையின் கீறல் என் உற்சாகத்தை விழுங்கி விட்டது.

எனக்குத் தர்ம சங்கடமாகவும் கஷ்டமாகவும் இருந்தது.

“அப்படி முழுக்கவும் சொல்வதற்கில்லை. லீலா அவர்களையும் பார்க்க முடியுமானால் ஒரு விஷயம் பேசலாம் என்ற ஆசையும் இருந்தது” என்றான் அவன் அடுத்தபடியாக. எனக்கு உயிர் வந்தது. உற்சாகமாக, “ஓகோ!” என்று லீலாவை நோக்கிப் புன்னகை செய்தேன்.

“ஆனால் அதுவும் சொந்த விஷயம். இப்போது பேசுவதற்கில்லை” என்றான் மூர்த்தி. லீலாவின் முகம் பட்டுப்போல் சிவந்தது. மூர்த்தியுடன் அவள் வார்த்தையாடிய விதத்தில் எனக்கு ஏனோ அவளிடத்தில் நான் காணாததொரு புதுமை இருந்ததாகப் பட்டது. ஆரம்பம் முதலே அவளைக் கூர்மையாகக் கவனித்து வந்த என் கணவருடன் தங்குதடையின்றி அரட்டையடிக்கும் அவளுடைய இயல்பான மாதிரியில் இப்போது அவனுடன் பேசவில்லை என்று எண்ணினேன்.

இதற்குள் நாங்கள் எதிர்நோக்கியிருந்த பஸ் வந்து விட்டது.

மூவரும் உட்கார்ந்தானதும் லீலா, “நீங்கள் நினைத்தது முற்றும் தவறு. எங்கள் இருவரையும் வீட்டிலே தனித்தனியே சந்தித்துப் பேசுவது என்பது முடியாத காரியம். கிடக்கட்டும். நீங்கள் தனியாகப் பேசும் விஷயங்களை நாங்கள் உடனேயே பரிமாறிக் கொண்டு விடுவோம்! அதற்கு என்ன சொல்கிறீர்களாம்?” என்றாள்.

“அது உங்கள் சொந்த விஷயம், அதைப்பற்றி எனக்கு என்ன? நீ முடியாது என்கிறாய் அல்லவா? நான் உங்கள் வீட்டிலேயே நான் கூறியபடி சந்தித்துக் கேட்க வேண்டியவற்றைக் கேட்கிறேனா இல்லையா பாருங்களேன்?” என்று அவன் புதிர் போட்டான்.

என்னையும் மறைத்து லீலாவிடம் அவனுக்குச் சொந்தச் சமாசாரம் என்ன இருக்கும் என்பதை நான் ஊகித்துக் கொள்ளப் பல தடைகள் தெரிந்தன. அவளைக் கண்டதும் அவன் முகம் அப்படி மலர்வானேன்? அவளுடன் பேசும் போது, குரலில் அத்தனை மகிழ்ச்சி தாண்டவமாடுவானேன்? என்னிடம் தனியாக ஒரு சங்கதி கேட்க வேண்டும் என்று அவன் தெரிவித்த போது, லீலாவின் இருதயம் சுருங்குவதை முகமண்டலம் உடனே எடுத்துக் காட்டுவானேன்? என் பங்குக்கு நான் நகைத்ததும் அவன் ‘சொந்த விஷயம் அதுவும்’ என்று கூறியதும் அவள் முகத்தைக் குங்குமமாக ஆக்குவானேன்? இன்னும் அன்றையப் பொழுதில் நான் நினைத்தபடி அவள் வெற்று உள்ளத்துடன் இருக்கவில்லை என்பது நன்கு புலப்படும்படி பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இரண்டும் இரண்டும் நாலு என்று அறியப் பெரிய பெரிய கணக்குப் போட வேண்டுமா?

களிப்புடன் நாங்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து பின்னும் மூர்த்திக்குப் போக வேண்டுமே என்று இருந்தாலும், “நேரமாகவில்லை இன்னும். கடற்கரைக்கு வருவதானால் நானும் உங்களுடன் வருவேன்” என்றான் அவன்.

எனக்கு அடிமனத்தில் அச்சம் துடித்தது. எங்கே லீலா சரி என்று கூறிவிடப் போகிறாளோ என்று நான், “வேண்டாம் இப்போது” என்று அவள் காதைக் கடித்தேன்.

“இவள் இருக்கிறாளே, நான் கூப்பிடும் போதே அவர் இல்லாமல் வர மாட்டேன் என்றாள். இப்போது வீட்டில் அவர் வந்து விடுவாராம்! துடியாய்த் துடிக்கிறாள்!” என்று லீலா என் கையைப் பிடித்து ‘நறுக்’கென்று கிள்ளினாள்.

“ஓ! நான் மறந்து விட்டேனே! ரொம்பவும் உண்மை. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பாள். அப்படியானால் நான் வரட்டுமா? நாளைக்கு வருகிறேன்” என்று எங்களிடம் அவன் விடைபெற்றுக் கொண்டான். நாங்கள் திரும்பும் போது லீலா என்னுடன் விசேஷமாக எதுவும் பேசவில்லை. ஏதோ ஆழம் காணாத சிந்தனையில் லயித்து விட்டாள் என்பதையும், அவள் மனம் எங்கோ வானத்தில் பறக்கும் பட்டாம் பூச்சி போல் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அவள் மௌனமும் என் கேள்விகளுக்குச் சம்பந்தமில்லாத பதில்களும் புலப்படுத்தின.

வீட்டில் நாங்கள் திரும்பி அடி எடுத்து வைத்ததுமே பொலிவுள்ள சந்திரனைப் பிடிக்க வரும் ராகுபோல் எங்கள் மகிழ்வு மறையும்படி பட்டு லீலாவை நோக்கி, “ஏண்டி லீலா? அவளையும் அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற இதுதானா சமயம்? நானும் வீட்டில் இல்லை. அத்தை ஒண்டிக்காரியாக ஊர்ப்பட்ட வேலைகளுடன் சிரமப்படுகிறாள். குழந்தைகள், புருஷர்கள் காப்பிக்கு வருகிறார்கள். மயிலாப்பூரிலிருந்து ஜயமும் மச்சினரும் வேறு அவளைப் பார்க்க வந்துவிட்டுப் போகிறார்கள். வீடு திமிலோகப்படுகிறது. இன்னும் நாலு நாட்கள் கழித்துப் போகக் கூடாதா? வீட்டிலே சமய சந்தர்ப்பம் தெரிய வேண்டாமா?” என்று சிள்ளென்று விழுந்தாள்.

இந்தச் சூடு லீலாவுக்கு மட்டும் அல்ல, எனக்குந்தான் முக்கால்வாசியும் என்று என் உள்ளத்தில் சுரீரென உறைத்தது. குற்றவாளியைப் போல நின்றேன்.

“சமயம் என்ன சமயம்? இந்த வீடு எப்போதுந்தான் திமிலோகப்படும்! அத்தை ஒண்டிக்காரியாகச் சிரமப்படுவது இன்று ஓரகத்தி வந்த பிறகு தான் கண்களில் உறுத்துகிறதாக்கும்! அடாடா!” என்று ஏளனும் கேலியும் கலந்த குரலில் கூறிய அவள் விடுவிடென்று யாரையும் லட்சியம் செய்யாதவளாக மச்சுப் படியில் ஏறினாள்.

2-4

மறுநாள் சனிக்கிழமையாதலால் லீலா வீட்டிலேதான் இருந்தாள். எனக்கு வெளியில் எட்டிப் பார்க்கக் கூட அவகாசம் இல்லாதபடி சமையலறை அலுவல்கள் அத்தனையும் வெகு சுவாதீனமாக அதற்குள் என்னைப் பற்றிக் கொண்டு விட்டன. முன்னாள், அவர் வீட்டிலேயே தங்கவில்லை. சிகிச்சை இல்லமும், குழந்தையும் அவரைப் பிடித்துப் பசை போட்டு ஒட்டிக்கொண்டு விட்டன. கர்ப்பிணியாக இருந்த பட்டுவை டாக்டர், ‘இரவு கண் விழிப்பது கூடாது’ என்று கூறி விட்டதனால் அவள் முழுப் பொறுப்பையும் அவர் தலையிலேயே கட்டிவிட்டு வீடு வந்து விட்டாள். “ஏற்கனவே உன் உடம்பு பூஞ்சை. இராக் கண் பகல் கண் முழித்தால் உனக்கு ஆகாது. ராமுதான் இருக்கிறான். குழந்தைக்கு உடம்பு சரியாகும் வரை பார்த்துக் கொள்கிறான். குழந்தையும் அவனிடமே தானே ஒட்டிக் கொண்டு இருக்கிறாள்?” என்று என் மாமியார் வேறு செல்ல மருமகளுக்கு இதமாகப் பரிவு காட்டினாள்.

‘குழந்தையின் அருகில் இருக்கத் தாய்க்குப் பதில் வீட்டிலே வேறு பெண் மக்களே அஸ்தமித்து விட்டார்களா? அவர் நர்ஸ் வேலை செய்ய வேண்டுமா? ஏதோ வீட்டில் அன்பு காட்டுபவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகள் உண்டுதான். அதற்காக அவரே அதைத் தொட்டிலிட்டுத் தாலாட்டும் நிலைமையில் முழுக்க முழுக்க ஐக்கியமாகி விட வேண்டுமா?’ முதல் நாள் அமுங்கிக் கிடந்த என் குரோத உணர்ச்சி கொதிக்கலாயிற்று.

முழுசாக மூன்று நாட்கள் ஆவதற்குள், பாம்புக்கு விஷம் இல்லாமல் போகாது என்றபடி தன் குணத்தை இப்போது காண்பித்து விட்டாள். எங்கோ வெளியே அழைத்துப் போனாளாக்கும் என்றில்லாமல் லீலாவை என்னைச் சொல்லாதவள் போலத் தேள் கொட்டுவது போல் சுள்ளென்று கடிந்து கொண்டாளே! கொட்டினது அவளைத் தான் என்றாலும் நெறி எனக்குத் தான் ஏறியது. ஏண்டி அழைத்துப் போனாய் லீலா என்றாலும் நீ ஏண்டி போனாய் சுசீலா என்று தான் அர்த்தம்.

என்னைப் பார்ப்பதற்கு என்று மயிலாப்பூரில் தனியாக இருக்கும் என் டாக்டர் மைத்துனரும், அவர் மனைவி விஜயமும் வந்திருந்தார்களாம். எனக்காகக் காத்துப் பார்த்து விட்டு இன்னொரு நாள் வருவதாகக் கூறிப் போய் விட்டார்களாம். இடித்துக் காட்டுவதைப் போல இதை என் காதுகள் கேட்கவே மும்முறை சொன்னாள். நான் லீலாவுடன் வெளியே சென்றிருக்கும் செய்தியை அவர் வீடு வந்தவுடனேயே அறிவித்திருக்க மாட்டாளா?

இரவு சமையலறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன் நான். சிகிச்சை இல்லம் செல்லுமுன் ‘பிளாஸ்க்’ அலம்ப வந்த என் கணவர், “லீலாவுடன் எங்கெல்லாம் போயிருந்தாய்?” என்று கேட்டார்.

“எங்கும் இல்லை, ஒரு சினிமாவுக்குப் போயிருந்தோம்” என்று மெதுவான குரலில் பதில் அளித்தேன்.

“தேவலையே! எந்தப் படத்திற்குப் போனீர்கள்? அதற்குள் நீயும் லீலாவும் இத்தனை சிநேகம் பூண்டு விட்டீர்களே!” என்று மனத்தில் ஏதும் மாசின்றிச் சந்தோஷமாக எங்கள் நட்பை உற்சாகப்படுத்தும் பாவனையில் கூறினார் அவர்.

தாம் இன்றி, தமக்குத் தெரிவிக்காமல் வெளியே சென்றதற்காக அவர் என்னைக் கண்டிக்கட்டும் என்று பட்டு எண்ணியிருந்தாளோ என்னவோ? கோபத்தின் ரேகை கூட அவரிடம் காணவில்லை. மதனியிடம் அவர் அளவு கடந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கலாம். ஆனால் லீலா கூறியது போல மரியாதை கொடுத்திருந்தான். மரியாதை வாங்க வேண்டும் என்று என் அவளுக்குத் தெரியவில்லை. அவருடைய அத்தனை மதிப்பையும் குலைத்துக் கொள்ளும் வகையில் அவள் நடந்து கொண்டு அவருக்குக் கோபமூட்டி விட்டுப் பிறகு என் மீதே குற்றம் சாட்டுவாளோ என்னவோ? ஊர்வலத்தின் போது நான் அவளைப் பற்றி அவ்வளவு உயர்வாக எண்ணிப் பெருமைப்பட்டேன்! அந்த அறியாமையை நினைத்துக் கொண்டால் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. மனத்தில் எது நல்லது என்று படுகிறதோ அதற்குத் தோற்றப் பொலிவும் இருந்தால் அதற்கு அதிக மதிப்பு உண்டாகிவிடும். சர்க்கரைப் பண்டத்துக்கு வலம் ஊட்டுவது போல ஆகிவிடும். அப்படி அவள் அகன்ற குங்குமப் பொட்டும், கம்பீரமான முகமும், நகை தவழும் இதழ்களும் நான் அவள் அன்பின் அவதாரம் என்று எண்ணியதற்கு இன்னும் அநுசரணையாக இருந்தனவே! ஒரு தரம் சிறு வயசில் எனக்கு மலேரியாக் காய்ச்சல் வந்திருந்தது. அப்போது வைத்தியரிடமிருந்து அப்பா இரண்டு மாத்திரைகள் வாங்கி வந்து எனக்குக் கொடுத்தார். வெண்மையாக, உருண்டையாக, பார்ப்பதற்குச் சர்க்கரை மிட்டாயைப் போல் இருந்த அம்மாத்திரையை நான் முரணேதும் செய்யாமல் வாயில் போட்டுக் கொண்டேன். நாவில் பட்டதும் அசல் மிட்டாயைப் போலத் தித்தித்தது. அந்த உற்சாகத்தில் நான் அதைக் கடைவாய்ப் பற்களால் கடித்ததுதான் தாமதம், விஷமாகக் கசந்தது! தொண்டை மூக்கெல்லாங் கூட நெடியேறியது!

பட்டு என்னைக் கண்டு செய்யும் புன்னகையும் இப்படித்தான் போலும்! உண்மை அன்பு செயல்களினாலன்றோ வெளிப்பட வேண்டும்? உள்ளத்தில் கசப்பை வைத்துக் கொண்டு மேலுக்குக் காட்டும் இனிப்பு உண்மையானதல்ல என்று வெளிப்பட எத்தனை நேரமாகும்?

ஒரு கொடியில் காய்த்திருக்கும் லீலாவுக்கும் பட்டுவுக்கும் எத்தனை வித்தியாசம்! ஒருத்தி இரண்டு நாட்களுக்குள் எனக்குக் கசப்பை உண்டாக்கும்படி நடந்து கொள்வானேன்? இன்னொருத்தி இரண்டு நாட்களுக்குள் என் இருதயத்தையே கவர்ந்து விடுவானேன்?

வைரமும் கரியும் ஒரே மூலப் பொருளிலிருந்து உண்டாகவில்லையா? சேற்றில் செந்தாமரையும் முளைக்கிறது! பாசியுந்தான் படருகிறது!

‘மூர்த்தி வேறு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறான். அவன் இன்னும் என்ன பூகம்பத்தைக் கிளப்பி விடுவானோ? ஒரு விஷயம், ஒரு விஷயம் என்று புடவைச் சங்கதியை அப்படி மழுப்பினானே! இங்கே தனியாகக் கண்டு என்ன சொல்லப் போகிறானோ?’ என்ற கவலை வேறு என் மனச் சஞ்சலத்திற்குச் சூடேற்றியது.

பகலில் கல்லூரியில் அரிசி அரைத்துக் கொண்டிருந்தேன். லீலா வந்து, “மூர்த்தி வந்திருக்கிறார், சுசீ” என்று எனக்கு செய்தி தெரிவித்தாள்.

கலவரத்துடன் நான், “எங்கே? கீழேயா மாடியிலா?” என்று கேட்டேன்.

“கீழேதான் நிற்கிறார். அவர் வருவதைப் பார்த்துவிட்டு உன்னிடம் கூறத்தான் வந்தேன். நீ போ. நான் அரைக்கிறேன்” என்று லீலா என்னை எழுப்பினாள்.

அவள் என் ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டாள். கையை அலம்பித் துடைத்துக் கொண்டு புடவையைச் சரி செய்து கொண்டு உமிழ்நீரை விழுங்கி மனத்தைத் திடம் செய்து கொண்டவளாக நான் சமையலறையைத் தாண்டி வந்த போது, அவன் பக்கத்தில் உள்ள சாப்பிடும் அறையிலேயே வந்து நின்று புன்முறுவல் பூத்தான். அவன் கையிலிருந்த அந்தப் புடவைப் பொட்டலத்தைக் கண்டதும் எனக்குத் ‘திக்’கென்றது. அத்தை திருப்பி அனுப்பி விட்டாளா என்ன? நன்றாகத்தான் இருக்கிறது. அந்தப் புடவைகள் அவனுடன் போவதும் வருவதும்!

“மாமி இவைகளை உனக்காகவே வாங்கினாளாம். நீயே அவளிடம் திருப்பிக் கொண்டு கொடுத்து விடு என்று சொல்லி விட்டாள்” என்றான் அவன்.

என் அசட்டுத்தனத்தையும் அத்தை யகத்து அவமரியாதையையும் அவன் அறிந்து கொண்டிருப்பானா, அல்லது அவனுக்கு அறிவிக்காமலே அத்தை உள்ளூற விஷயத்தைக் கிரகித்துக் கொண்டு நாசுக்காகத் திருப்பியிருப்பாளோ என்ற நடுக்கத்துடன் நான் புடவைகளைப் பெற்றுக் கொண்டேன்.

பின்னாலேயே வந்து நின்ற என் மாமியார், “என்ன அது? யார் இந்தப் பிள்ளை?” என்றாள். அவள் படபடத்த கேள்வியிலே இரும்பின் கடினமும் வேம்பின் கைப்பும் எனக்குப் புலனாயின.

“அத்தை இரண்டு புடவைகள் வாங்கி அனுப்பியிருக்கிறார். அத்திம்பேருக்குத் தமக்கை பிள்ளை இவர்” என்றேன் நான் சுருக்கமாக.

உடனேயே அவள் அவனிடம் மலர் முகத்துடன் குலம், கோத்திரம் முதற்கொண்டு விசாரிக்க ஆரம்பித்து விட்டாள். தன்னைப் பற்றிய விஷயங்களை மூர்த்தி கூறும் போது, தன்னுடைய கண்கள் நாலு புறமும் சுற்றி அலைந்ததை நான் கவனிக்காமல் இல்லை. அவனை அங்கேயே நிற்க வைத்துப் பேசியது எனக்கு ஏதோ போல் இருந்தது என்றாலும் பெரியவளான மாமியார் பேசாமல் இருக்கும் போது நான் உட்காருங்கள் என்று உபசரிக்கலாமா? ஒரு தம்ளர் காபி கொண்டு கொடுக்கலாமா?

சங்கடத்துடன் கையைப் பிசைந்த வண்ணம் சிறிது நேரம் நின்றேன். அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த சமயம் எனக்கு எத்தனையோ சுதந்திரம் இருக்கும் என்று மனப்பால் குடித்திருந்தேன். இப்போது என்னுடைய சுதந்திரத்தைப் பரிசோதிக்கக் கூடிய சந்தர்ப்பம் வந்திருப்பதாகத்தான் எனக்குப்பட்டது. நிஜமாக எனக்கு அவ்வளவு சலுகை இருப்பதாக நான் நினைக்கும்படியான சூழ்நிலை இருக்கவில்லை.

எனினும் தைரியத்துடன் உள்ளே வந்து அவனுக்குக் காபி தயாரித்தேன். அரைக்கும் வேலையை முடித்து விட்டு லீலா கையை அலம்பிக் கொண்டிருந்தாள்.

“அவருடைய கண்கள் உங்களைத் தேடுகின்றன” என்று அவள் காதோடு கூறிவிட்டு நான் செல்லுவதற்குள், உட்காராமலேயே பேசிவிட்டு மூர்த்தி, “நான் வரட்டுமா சுசீலா?” என்று அங்கு இருந்தபடியே கூவினான்.

“இல்லை இருங்கள். இதோ காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்று நான் தம்ளரும் கையுமாக விரைந்தேன். அவன் கவனம் என் மாமியாரின் கையிலே லயித்திருந்தது. நான் அப்படியே கீழே வைத்துப் போயிருந்த புடவைப் பொட்டலம் அவள் கையில் இருந்தது. மேலே இருந்த காகிதத்தை நீக்கி அவள் புடவைகளை எடுத்தாள். நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதிலிருந்து ஒரு கடித உறை கீழே விழுந்தது.

“கடிதாசு ஏதோ எழுதி வைத்திருக்கிறாள் போலிருக்கிறதே? அதை எடு, சுசீலா” என்று என் மாமியார் கூறு முன் நான் குனிந்து அதை எடுத்தேன்.

கொட்டை கொட்டையாக ‘லீலா’ என்று விலாசமிடப்பட்டிருந்தது அதில்! விஷமச் சிரிப்புடன் நான் அதைத் திருப்பி வைத்துக் கொண்டு மூர்த்தியைப் பார்த்தேன். நீரில் முழுகி எழுந்தவனைப் போல அவன் முகபாவம். ‘நல்லவேளை! தப்பினேனே!’ என்று சொல்வது போல் தென்பட்டது. கவனித்திருந்தால் கூட என் மாமியாருக்கு ஆங்கிலம் புரிந்திருக்காதுதான். என்றாலும் ஆபத்து ஆபத்துதானே?

“நான் வரட்டுமா மாமி” என்று விடைபெற்றுக் கொண்ட அவனைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன். அறையின் வாயிற்படியிலே ‘பிளாஸ்’கும் கையுமாகப் பட்டு, ‘சிகிச்சை இல்லத்’திலிருந்து வருபவள் எதிர்ப்பட்டாள். மூர்த்தியைக் கண்டு “யார் இவன்?” என்ற கேள்வி அவள் முகத்தைச் சிணுக்கியது. நானாக அவன் யாரென்பதையும், வந்த காரியத்தையும் அவளுக்கு அறிவித்தேன்.

வாசல் வரை அவனைத் தொடர்ந்து சென்ற என்னிடம் அவன் மெதுவான குரலில், “லீலாவிடம் அதைக் கொடுத்து விடுகிறாயா?” என்றான் கெஞ்சும் பாவனையில்.

“இல்லை கொடுக்க மாட்டேன்” என்று சிரித்த வண்ணம் மொழிந்துவிட்டு, குதூகலம் பொங்கக் குதித்துக் கொண்டே இரண்டு படியை ஒரு படியாகத் தாண்டி மச்சுப் படியில் ஏறினேன். ஒன்றுபட்ட இரண்டு உள்ளங்களின் தவிப்பு எனக்கு அவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்தது. பின்கட்டு வழியாகவே அவள் மாடிக்குச் சென்றுவிட்டாள் என்று எனக்குத் தெரியும். அறையின் வாசற்புறம் முதுகைக் காட்டிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள்.

கடிதத்தைப் பின்னால் மறைத்துக் கொண்டு நான், “அவர் உங்களைத் தேடு தேடு என்று தேடினார். நீங்கள் இங்கு வந்து கோபித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே! பாவம்! அவரை வரச்சொல்லிவிட்டு இப்படி ஒரு வார்த்தைக் கூட அவரிடம் பேசாமல் இங்கு வந்து உர்ரென்று நீங்கள் உட்கார்ந்திருப்பது எனக்கு நியாயமாகவே படவில்லை. நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்களாக்கும்! அதுவும் சாமானியமான நண்பர்கள் கூட இல்லை...!” என்று இழுத்தேன்.

“என்ன உளறுகிறாய், சுசீலா? சாமானிய நண்பர்கள் இல்லாமல் பின் என்னவாம்! சங்கக் கூடங்களில் சந்திக்க நேரிட்டிருக்கிறதே ஒழிய சேர்ந்தாற் போல் அவருடன் பத்து வார்த்தைகள் பேசியதே நேற்றுத்தான்” என்று மூடி மறைத்து லீலா என்னிடம் மெழுகினாள்.

“ஓகோ! ஆனால் வாய்ப் பேச்சை விடக் கண்களின் உறவுக்கு அதிகச் சக்தி உண்டு என்று தெரியாதா எனக்கு? சொந்த விஷயம் என்று அவர் பேச வந்திருக்கிறாரே. இங்காவது வரச் சொல்லி இருக்கக் கூடாதா? அவர் ஏமாற்றத்தை எனக்குப் பார்க்கவே சகிக்கவில்லை!”

“நீ மிகவும் அதிகப்பிரசங்கி, சுசீலா! கண்கள் பேசுவது, காதுகள் உறவாடுவது எல்லாம் உனக்குத்தான் தெரியும். சொந்த விஷயம் ஒன்றும் இருக்காது. அடுத்த கூட்டத்தில் யார் எதைப் பற்றித் தலை வேதனைப் பிரசங்கம் செய்யப் போகிறார்கள் என்று சொல்வார். மூடி மூடிப் பேசுவதே அவர் வழக்கம். உன் அத்தை கொடுத்து அனுப்பி இருக்கும் புடவைகளையும், ஊரில் எல்லோரும் சௌக்கியம் என்று நெல்லுக்குள் அரிசி சமாசாரத்தையும் வைத்துக் கொண்டு உன்னிடம் அப்படி கூறினாரே” என்று முகத்தை நான் பார்க்க முடியாதபடி லீலா திருப்பிக் கொண்டாள்.

“அது போன்ற சங்கதிகளுக்குக் கடிதங்கூட எழுதுவாராக்கும்?” என்றேன். சூடுண்ட உடம்பில் உஷ்ணமானியை வைத்த உடனே பாதரசம் விறுவிறு என்று ஏறுவதில்லையா? என் கேள்வி அவள் அமுக்கி வைத்திருந்த ஆவலையும் துடிப்பையும், அவளுடைய பாசாங்கை மீறிக் கொண்டு எழுப்பி விட்டது. “ஏன் சுசீலா, ஏதாவது கடிதம் கொடுத்தாரா?” என்று பரபரப்போடு கேட்ட அவள் என் கையில் இருந்த கடிதத்தைப் பார்த்து விட்டாள்.

“அப்படி வாருங்கள் வழிக்கு!” என்று நகைத்த நான், “நல்ல வேளையாகத் தப்பினீர்கள்! அத்தை அனுப்பிய புடவைப் பொட்டலத்தில் அதைப் பத்திரப்படுத்தி இருக்கிறார் என்று நான் கண்டேனா? அலட்சியமாகக் கீழே வைத்து விட்டு வந்தேன். அம்மா எடுத்துப் பார்த்து விட்டார். நல்லவேளை! விலாசம் புரியவில்லை. அத்தை எனக்குக் கடிதம் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். மூர்த்தியின் முகத்தை நீங்கள் பார்க்கவில்லையே அப்போது!” என்று அவளிடம் கடிதத்தைக் கொடுத்தேன்.

“சுசீலா!” என்று கீழிருந்து வந்த குரல் என்னை உலுக்கியது. கீழே ஓடி வந்த என்னை மாமியார், “ஓடி ஓடிப் பச்சைக் குழந்தையைப் போல நாலும் கிடக்க நடுவில் போய் விடுகிறாயே? இந்தா! புடவையை வாங்கிக் கொண்டு வைத்துவிட்டு, அடுப்பில் தோசைக் கல்லைப் போடு” என்று கடிந்து கொண்டாள்.

இரவு, வேலைக்காரி கவனியாமல் போய்விட்டிருந்த எங்கள் அறையைப் பெருக்கிக் கொண்டிருந்தேன் நான். ‘சிகிச்சை இல்ல’த்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என் கணவர் உள்ளே வந்தார். அன்று மாலை காரியாலயத்திலிருந்து வந்த பின் அவருக்கு என்னுடன் எதுவுமே பேசச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. “உன் அத்தை உனக்குப் புடவைகளை வாங்கி அனுப்பி இருக்கிறாளாமே, சுசீ? என்னிடம் நீ காட்டவே இல்லையே?” என்று கேட்டார்.

நான் தலையைத் தூக்காமலேயே சுருதி கலைந்த வீணையைப் போல் “ஆமாம்” என்றேன். அவர் மட்டும் சக்தியுடையவராக இருந்தால் அந்த ஓர் ஆமாமிலேயே என் ஆற்றாமை அவ்வளவையும் தெரிந்து கொண்டிருக்கலாம்.

“அப்புறம், மூர்த்தி உனக்கு உறவினனாமே? நீ என்னிடம் இதுவரை சொல்லவே இல்லையே! அவன் இன்று வந்திருந்ததாக மன்னி சொல்லுகிறாளே?” என்று கேள்விகளை என்னை உற்சாகப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அவர் அடுக்கினார்.

மன்னிதான் எல்லாவற்றையும் சொல்லுகிறாளே; நான் வேறு சொல்ல வேண்டுமா? பெட்டியைத் திறந்து, மௌனமாகவே புடவைகளை எடுத்துக் கொடுத்தேன். தடவிப் பார்த்துவிட்டு அவர், “நன்றாக இருக்கிறது. நிறங்கூட உனக்குப் பொருத்தமாக இருக்கும். அத்தைக்கு உன்னிடத்தில் பிரியம் அதிகமோ? நாளை ஞாயிற்றுக்கிழமைதானே. மூர்த்தியை வரச் சொல்லுவது தானே? மன்னி யாரோ என்றாள். அப்புறந்தான் லீலா, மூர்த்திதான் வந்தவர் என்று சொன்னாள்” என்று கூறி என் மனத்தைக் குலைத்த மாயப் புன்னகை ஒன்று புரிந்தார்.

“உங்களுக்கு அவனைத் தெரியுமா?” என்று நான் கேட்டேன்.

“லீலா தான் எனக்கு ஒருதரம் அவனை அறிமுகம் செய்வித்தாள். அதிலிருந்து எப்போதாவது சந்தித்தால் புன்னகை செய்வான். நானும் நின்று இரண்டொரு வார்த்தைகள் பேசுவேன். இனிமேல் நெருங்கிப் பழக்கம் செய்து கொண்டால் போகிறது” என்றார் அவர்.

நான் பதில் ஏதும் கூறவில்லை.

இந்த ஆண்களுக்கே பெண்களின் பேதை உள்ளத்தின் பலவீனம் நன்கு தெரிந்திருக்கிறது. கெஞ்சலிலும் கொஞ்சலிலும் முகஸ்துதியிலும் பெண்கள் மயங்கி விடுவார்கள் என்பதை நன்கு அறிந்திருப்பதால் தான் சமயத்திற்கு அவர்களை ஆட்டி வைக்கும் ஆயுதங்களாக அவைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

சுவரோரமாகச் சாய்ந்து நின்ற என் தோள் மீது கையை வைத்து அவர் என் காதில், “குழந்தைக்கு இன்னும் நாலைந்து நாட்களில் உடம்பு சரியாகி விடும். மன்னிக்கு உடல்நிலை சரியாக இல்லை. பார்! இந்தச் சமயத்தில் விட்டுக் கொடுக்கலாமா? கோபமா சுசி, உனக்கு? எனக்கும் எவ்வளவு சங்கடமாக இருக்கிறது தெரியுமா? நாளை ஞாயிற்றுக்கிழமை. உன்னிடம் சாவகாசமாக நாலு வார்த்தைகளாவது பேச முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்” என்றார்.

அழும் பிள்ளைக்கு மிட்டாய் கொடுப்பதைப் போல இது என்ன, எனக்குக் கண் துடைப்பா? பேசாமலே அவர் போயிருந்தால் தேவலையே! இந்தக் குழைவும் கொஞ்சலும் என் மனத்தை இன்னமுமல்லவோ நெளிய வைக்கின்றன?

நான் வாயைத் திறந்து சொல்ல என்ன இருக்கிறது?

“பார்த்தாயா? உனக்குக் கோபந்தான் போல் இருக்கிறது!”

“கோபமும் இல்லை, ஒன்றும் இல்லை. கோபப்படுவானேன்?” என்று நான் முணுமுணுத்தேன்.

“நீ இப்படிச் சொல்லும் போதே கோபம் தொனிக்கிறதே! கோபம் இல்லை என்றால் என் மனத்தை இழுக்கும் உன் புன்னகை எங்கே போயிற்று, சுசி?”

இந்த நாடக மேடைப் பேச்சு, ‘பக்’கென்று என்னைச் சிரிக்க வைத்தது.

“கொஞ்ச நாளைக்குப் புன்னகை புரிந்து உங்கள் உள்ளத்தைக் கவர்ந்து சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று தான் இருந்தேன்.”

“பொல்லாதவள் சுசி, நீ!” என்று சிரித்துக் கொண்டே போய்விட்டார். அவர் சென்ற திக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நான் நின்றேன்.

வந்து இரண்டு தினங்களிலேயே அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்றெல்லாம் ஆனந்த வானத்திலே சஞ்சரித்த நான் கனவுகள் கலைந்து உண்மையை நிதரிசனமாகக் கண்டுவிட்டேன். அன்பில்லாத மாமியார், அதிகாரம் செலுத்தும் ஓரகத்தி, கடமையில் உழலும் கணவன், இவர்களுக்கு மத்தியில் நான் தறியிலே ஓடும் குழல் போல ஓடி ஓடி உழைக்க வேண்டும்!

ஏமாற்றமும் வெறுப்பும் மேலிட்டவளாக நான் சாளரத்தண்டை திரும்பி நின்றேன்.

அடுத்த வீட்டில் காதல் நாடகம் நடந்து கொண்டிருந்தது. அன்று எனக்குப் பார்க்கப் பிடித்த காட்சி இன்று காணத் தகாத காட்சியைப் போல அருவருப்பைத் தந்தது. விளக்கை அணைத்து விட்டுப் படுக்கையில் வந்து உட்கார்ந்தேன். குழந்தைகள் உறங்கிச் சந்தடி ஓய்ந்து விட்டதே ஒழிய மைத்துனரும் பட்டுவும் கூடத்திலேதான் இருந்தார்கள். ரேடியோ ஏதோ புரியாத ஹிந்துஸ்தானி இசையைப் பரப்பிக் கொண்டிருந்தது.

சங்கீதம், கூத்து, கொம்மாளம், கேளிக்கை எல்லாம் அவர்களுக்குத் தான். எனக்கு அவற்றை எல்லாம் அனுபவிக்க ஓர் உரிமையும் கிடையாது. அத்தை வீட்டில் அன்று பாட்டி என்னை நேரிலேயே சுட்டு விடும்படி சொன்னாள். அதாவது ஒரு விதத்தில் தேவலை போலிருந்தது. இங்கே என்னை எல்லோரும் சொல்லாமலேயே நான் ஒன்றுக்கும் தகுதியற்றவள் என்று எப்படியோ அறியச் செய்தார்கள். இந்த வீட்டில்... இதே சூழ்நிலையில் இப்படியே என்றால் வாழ்நாள் முழுவதும்... அம்மாடி! நினைத்தாலே எனக்கு ஏதோ என் தலையில் மலையை ஏற்றுவது போலப் பளுவாக இருந்தது.

இருட்டிலே ஏதோ உருவம் நிழலாடியது. குலுங்கிய வளையல் ஒலி லீலா என்று கட்டியம் கூறியது. வாயிற்படியில் காலை வைத்த அவள், “விளக்கை அணைத்து விட்டு இருட்டிலே உட்கார்ந்திருக்கிறாயே, நீ தூங்கி விட்டாயாக்கும் என்றல்லவா எண்ணினேன்?” என்றாள்.

“ஆமாம், கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருப்பேன். தூக்கம் வந்தவுடன் அப்படியே படுத்து விடலாம். அப்புறம் எழுந்து விளக்கை அணைக்கச் சோம்பலாக இருக்காதா?” என்று மெல்ல நகைத்த நான் விளக்கை ஏற்றி விட்டு அவளை வரவேற்றேன். அப்போதைய என் நிலையில் அவள் வருகை சூடுபட்டுக் கன்றிப்போன தோலின் எரிச்சலில் தேங்காயெண்ணெய் பட்டது போன்ற இதத்தைக் கொடுத்தது. மேஜையடியில் கிடந்த நாற்காலியில் அமர்ந்த அவளை நான் மூர்த்தியின் கடிதத்தைக் கொடுத்த பிறகு அப்போதுதான் கவனித்தேன். மனத்திலே கரைபுரளும் அவள் மகிழ்ச்சி அவள் முகவழகை மிகைப்படுத்திக் காண்பித்தது. நிதானம் இல்லாமல் துள்ளித் திரியும் அவளுடைய படபடப்புச் சுபாவம் அடங்கி நிறைகுடத்தின் பொலிவை நினைப்பூட்டியது. நான் அவளை ஆராய்ந்து கொண்டிருக்க, அவள் என்னை ஆராய்ந்திருக்கிறாள்.

“ராமு இத்தனை முட்டாளாக இருப்பான் என்று நான் எண்ணவில்லை சுசி” என்றாள் மெதுவாக.

நான் பேச்சை மாற்றி, “மூர்த்தி உங்கள் இளைஞர் மன்றத்து விஷயமாகத்தான் எழுதியிருந்தாராக்கும்” என்றேன்.

அவள் நான் கேட்டதை விடுத்து, “நீ மிக நன்றாகப் பாடுவாயாமே சுசீ? ராமு சொல்லியிருக்கிறானே!” என்றாள்.

“அப்படிப் பெருமையடித்துக் கொண்டாராக்கும். நான் கேட்டதை விட்டுவிட்டீர்களே! மூர்த்தி இத்தனை சாமர்த்தியக்காரராக இருப்பார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உல்லாசமான வானம்பாடி போல் பறந்து திரிந்து கொண்டு இருப்பதாக நான் நினைத்த லீலாவைத் தந்திரமாக மனச்சிறைக்குள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறாரே!”

பொய்க் கோபம் கொண்டவளாக என் கையைப் பிடித்து அழுத்திய லீலாவின் சூடேறிய முகம் பார்க்க இன்னும் அழகாகத்தான் இருந்தது.

“ஆமாம்... இல்லை. நான் தப்பாகச் சொல்லி விட்டேன். கோபப்படாதீர்கள். அவர் தந்திரம் ஏதும் செய்யவில்லை. தானாகவே பறவை கூண்டுக்குள்...”

நான் முடிப்பதற்குள் அவள் குறுக்கிட்டாள். “சுசி, நீ இந்த மாதிரி எல்லாம் பேசக் கூடாது. பழக்க தோஷத்தால் அப்புறம் நீ பாட்டில் அம்மா, அத்தை, அக்கா எல்லோரும் இருக்கும் சமயத்தில் ஏதாவது உளறி வைத்து விடப் போகிறாய்!” என்று என்னை எச்சரித்தாள்.

“தெரிந்தால் என்னவாம்? ஒரு நாளைக்குத் தெரிய வேண்டியதுதானே. தலைவியின் களவொழுக்கத்தைக் குறிப்பாகப் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டியது தோழியின் கடமை இல்லையாக்கும்?”

“வெகு அழகுதான்! அப்புறம் சங்ககாலத்துப் பெற்றோர்களைப் போல உடனே அழைத்து மணம் நடத்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறாயாக்கும்! எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வரதன் என்ன ஆவது? அவர் மூன்று வருஷங்களாகப் பார்த்துப் பார்த்து எனக்காக ஊட்டியில் கட்டும் பங்களா என்ன ஆவது? இந்தச் சமாசாரம் ஏதும் என் பெரியோர்களுக்குத் தெரிந்தால், மூர்த்தியை அப்புறம் இந்த வீட்டுக்குள்ளேயே ஏற்ற மாட்டார்கள்!” என்ற அவள் குரலிலே பேச்சுக்கு உரிய பாணி தொனிக்கவில்லை. நகை இருக்க வேண்டிய இடத்தில் சோகம் ஒளிந்திருந்தது. பாகவதர் சுகமாக ஆலாபனம் செய்யும் போதும் அபஸ்வரம் விழுந்து விட்டது போல் நான் உணர்ந்தேன்.

“அது யார் அந்த வரதன்? அவர் கட்டும் பங்களாவிற்காக மூர்த்தியைப் பற்றி பிரஸ்தாபிக்கக் கூடாது என்று வாய்ப்பூட்டும் போடுகிறீர்களே!”

“நீ விளையாடுகிறாய் சுசி. ராமுவிடங்கூடப் பேச்சு வாக்கில் பிரஸ்தாபித்து விடாதே. ஏனெனில் அவன் சும்மா இருக்க மாட்டான். விஷயத்தை ஆலோசியாமல் அக்காவிடமும் அத்திம்பேரிடமும் பரப்பி விடுவான். தவிரவும், அவராக முனைந்து வரவேண்டுமே ஒழிய, ஊருக்கு முன் எல்லோருக்கும் தெரிய வைப்பது, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். முதல் முதலாக அக்கா காலேஜுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவாள். எனக்கு அதுதான் பயமாக இருக்கிறது. வரதன் அம்மாவுக்குச் சிறிய தகப்பனார் பிள்ளை. தலைமுறை தலைமுறைக்கு உட்கார்ந்து சுகம் அனுபவிக்கக் கூடிய அளவுக்குச் சொத்து இருக்கின்றது. சின்ன வயசிலே தூர உறவிலே ஒரு குழந்தையைப் பிடித்துப் பொம்மைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். அது கொடுத்து வைக்கவில்லை. திரண்ட ஐசுவரியங்கள் இப்போது ஓர் எஜமானிக்கு ஏங்கி நிற்கின்றன. வரதனுடைய தகப்பனார் ஒரு காலத்தில் என் தந்தைக்கு உதவி செய்தார். ஏற்கனவே தாம் செய்த பொம்மை விவாகத்தால் மனம் விட்டுப் போயிருந்த அவர் இறக்கும் தறுவாயில் வரதனுக்கு என்னை மனைவியாக்கும்படி என் தந்தையிடம் வாக்கு வாங்கிக் கொண்டார். இப்போது அவரும் போய் விட்டார் என்றாலும் வரதனுக்குத்தான் நான் என்று எல்லோரும் உறுதியாக முடிந்து வைத்திருக்கிறார்கள். படிக்க ஆசைப்படுகிறாள் என்று விவாகத்தைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். அத்திம்பேர் முதல் முதலாக வியாபாரம் ஆரம்பித்த போது கூடப் பண உதவி அந்தக் குடும்பத்திலிருந்து தான் கிடைத்தது. எனவே அவர்களுக்கும் அங்கே மிகுந்த மதிப்பு இருக்கிறது. நான் எல்லாம் தெரிந்தும் இப்போது மூர்த்தியைப் பற்றிப் பிரஸ்தாபித்தால் எத்தகைய பூகம்பம் எழும் என்று நீயே யோசித்துப் பார்!” என்றாள் லீலா.

மெதுவாக நான், “மூர்த்திக்கு இதெல்லாம் தெரியுமா?” என்று வினவினேன்.

“ஊஹூம்! நீ நினைக்கும் மாதிரியில் நாங்கள் மனதில் உள்ளதை இதுவரை பேசியதில்லை. நீ கொடுத்தது அவர் உள்ளத்தை அறிவிக்கும் முதல் கடிதம், சுசி.”

நான் அசைவற்று அவளையே வைத்த கண் இமைக்காமல் நோக்கினேன்.

“எனக்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை. நீ என்ன சொல்லுகிறாய்?” என்று என் தோளிலே கைகளை வைத்துக் கொண்டு என்னை உற்றுப் பார்த்தாள்.

என்னை விட வயசிலும் கல்வி கேள்வியிலும் வெளி உலக அனுபவத்திலும் மூத்தவள். என் கண்களுக்கு நான் சரிசமமாக நினைக்க முடியாதபடி மரியாதைக்கு உகந்த பாத்திரம் அன்பு ஒன்றினால் தான் அவளிடம் நெருங்கிப் பழக முடிகிறது என்று என்னை விட ஒருபடி மேலாக நான் கருதியிருக்கும் அவள், கிராமத்து மக்களிடம் குருட்டு நம்பிக்கைகளிடையே பக்குவம் அடைந்திருந்த என்னிடம் யோசனை கேட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. வெகு சுலபமாக, “அதனால் என்ன? வரதனை என்னால் மணம் புரிந்து கொள்ள முடியாது என்று பயப்படாமல் சொல்லி விடுங்களேன். என்னைப் பயங்கொள்ளி என்று கூறிவிட்டு நீங்களே பயங்கொள்ளியாக இருக்கிறீர்களே?” என்றேன் நான்.

“போ சுசீலா. உனக்கு விளையாட்டாக இருக்கிறது. நாகரிகம், நாகரிகம் என்பதெல்லாம் நடை உடை பாவனையில் தான் இருக்கிறது. மனத்திலே வரவில்லை. ராமுவுடன் நான் வித்தியாசமின்றி விளையாட்டாகப் பேசுவதையே அக்கா நொடிக்கு நூறு தரம் கண்டிப்பாள். வரதனை நான் மறுத்தால் நிச்சயமாக எல்லோருடைய விரோதத்தையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வகுத்த வழியிலே வாழ் நாள் முழுதும் துயரக் கடலில் உழல வேண்டும்” என்று தன் மனத்தைத் திறந்து அவள் கொட்டினாள். கதைகளில் மட்டுமே அதுவரையில் காதலைப் பற்றிப் படித்திருந்த எனக்குக் கண் முன் அதில் சிக்குண்டு வாடும் லீலாவைக் காண மனத்திலே மகிழ்ச்சி கிளம்பியது.

காதல் காதல் என்று கதாசிரியர்களும், காவிய கர்த்தாக்களும் புகழும் அந்த அனுபவம் நமக்குக் கிட்டவில்லையே என்று தோன்றியதோ இல்லையோ, உடனே உள்ளிருந்து இன்னொரு குரல், ‘ஏன் கிட்டவில்லை? அவருடைய பேச்சும் பார்வையும் ஏன் இப்படிச் சிந்திக்கச் சிந்திக்க இனிக்கின்றனவாம் பின்? காதல் என்று தேவலோகத்திலிருந்து தனியாக வந்து குதிக்குமோ? பெரியவர்கள் சுட்டிக்காட்டிய திசையில் அன்பு எனக்கு உதித்திருக்கிறது. வாழ்வில் தடுமாறாமல் ஒரே நிலையில் இன்பமாகப் பிரயாணம் செய்ய அவள் அப்படி இல்லை. தன் மனம் போலச் செல்லும் திசையில் அன்பு கண்டு விட்டது. அதுதானே வித்தியாசம்? என்றது. இந்த எண்ணம் வந்ததும், என் உள்ளத்திலே அலாதியான ஒளி பிறந்தது. லீலாவை மறந்து என் வாழ்வின் விமரிசனத்தில் ஈடுபடும்படி சிந்தனைக் குதிரை வேறு திசையில் திரும்பி விட்டது. என் வீட்டிலும் சாதாரணமாக ஜகது, தங்கம் இருவரும் விவாகமாகிக் கணவன் வீடு சென்றிருந்தனர். தங்கத்தைப் பற்றி என்னால் அவ்வளவாக அறிய முடியவில்லை. ஆனால் ஜகது என்னைப் போலில்லை என்பது நிச்சயம். “இந்த மாப்பிள்ளைக்காகத் தந்தியடித்து, தபாலனுப்பி ஆயிரம் பாடுபட்டீர்களே, எதற்கெடுத்தாலும் அம்மாவிடம் உம் கொண்டிருக்க!” என்று எத்தனையோ முறைகள் அவள் அம்மாவிடம் புகார் கூறியிருக்கிறாள் என்றால் அந்த மாதிரி சொல்ல முடியாதே! அவள் ஆயிரமாயிரம் குற்றங்கள் செய்தால் கூட அவரை நான் மணந்திருப்பது மகத்தான பேறு என்றல்லவா களிப்புறுகிறேன்? என் வாயாலேயே அவரை இழிவு செய்வேனா? இத்தகைய அழுத்தமான பிடிப்பு இந்தக் கொஞ்ச நாட்களிலேயே என்னை அறியாமல் என் உள்ளத்தில் வளர்ந்திருப்பதன் காரணம் என்ன? லீலா அவள் அறைக்குச் சென்ற பின் புதிதாகத் தோற்றமிட்டிருந்த மன ஒளியிலே என்னை மறந்து நான் சொக்கி விட்டேன். என்னுடைய அந்தப் புதிய உலகிலே கற்பனை விமானமேறி மனம் போனபடி சஞ்சரித்தவளை எப்படி நித்திரை அரசி ஆட்கொண்டாள் என்பதே தெரியவில்லை.

2-5

மனித வாழ்வுக்குச் சுவை கூட்டும் அதிமுக்கியமான வியஞ்சனங்களாகிய நம்பிக்கையும் ஏமாற்றமும், புடவை ஒன்றில் பின்னிப் போகும் சரிகையும் நூலையும் போல் வாழ்க்கையிலே பின்னிக் கொண்டிருக்கின்றன. சரிகையின் ஒளிக்கு நூல் ஆதாரம். நூலின் மேன்மையைக் காட்டவும் சரிகை உதவுகிறது. ஒரு பொருளையோ, எதிர்காலத்தையோ குறித்துத் துடிக்கும் ஆவலுடன் தொங்கும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கை வைத்திருப்பதுதான் எத்தனை இன்பமூட்டுகிறது! அடுத்து வரும் ஏமாற்றம் வாழ்க்கையின் ஏடுகளிலே இல்லாமலே அழிந்து விட்டால் துடிப்பு ஏது? ஆவல் ஏது? எனவே ஏமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டேதான் இன்பம் எழுகிறது. அன்று எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இன்று எத்தகைய இன்பத்தில் கொண்டு வந்து விட்டது.

“குழந்தைக்கு உடம்பு குணமாகிவிட்டது. இன்று வீட்டுக்கு அழைத்து வரலாம்” என்று மைத்துனர் சொல்லிக் கொண்டிருந்தது என் செவிகளில் தேன்மாரியைப் பொழிந்தது. ‘சங்கடமூட்டும் முகத்துடனே கொஞ்சும் விழிகளுடன் அவர் என்னைப் பார்த்து விடை பெற்றுக் கொள்ளும் பாவனையில் அன்றிரவு போய்விட மாட்டார். தயங்கித் தயங்கி நாலு வார்த்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் மனம் விட்டு நான் கேட்க வேண்டிய சமாசாரங்களை எல்லாம் கேட்க முடியும்’ என்றெல்லாம் களிப்பிலே மிதந்தேன்.

அடுப்படியில் ஒரு காலும், குழாயடியில் ஒரு காலுமாகப் பல வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில் சுகுமார், “சித்தி, இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுங்களேன்?” என்று அடுப்பங்கரையில் நோட்டைப் பிரித்து வைத்துக் கொண்டான். ‘எனக்கு வெள்ளைப் பாவாடை வேணும் சித்தி. டீச்சர் வெள்ளை டிரஸ் போட்டுக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறாள்” என்று மழலை மாறாத குரலில் மைதிலி தன் கோரிக்கையைச் சமர்ப்பித்தாள்.

“அம்மா, சுசீலா, அடுப்பில் இந்தச் சுக்குக் கஷாயத்தைப் பொங்க வைத்துக் கொடேன். காலையிலிருந்து வயிற்றைப் புரட்டுகிறது” என்று கெஞ்சும் முறையில் வேண்டுகோள் விடுத்தாள் லீலாவின் தாய்.

“வெந்நீரடுப்புப் புகைகிறது. கொஞ்சம் விசிறி கொடு. சுசீலா” என்று மைத்துனர் சமையலறை வாசற்படியில் வந்து நின்றார்.

“ராமு குளித்து விட்டு வேஷ்டியை எறிந்து விட்டுப் போயிருக்கிறான். மைதிலியின் சிவப்புப் பாவாடைச் சாயம் முழுவதும் அதில் ஏறிக் கிடக்கிறது. இதை எல்லாம் கவனிக்க வேண்டாமா, சுசீலா?” என்று கண்டிக்கும் தோரணையில் என் காதில் போட்டு வைத்தாள் மாமியார்.

‘இன்னும் யார் பாக்கி, சுசீலாவைக் கூப்பிட?’ என்று நான் எண்ணி முடிப்பதற்குள் பின்புறத்தின் வழியாக மாடியிலிருந்து வந்த என் கணவர், “மன்னி ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் கரைத்துக் கொண்டு வரச் சொன்னாள் சுசீ!” என்று சமாசாரம் கொண்டு வந்தார்.

லீலாதான் பாக்கி என்று நான் நினைத்து விடும் படி அவள் தன் பங்குக்குச் சோடையாகி விடவில்லை. “சுசீலா எங்கே? மயிலாப்பூரிலிருந்து ஜயம் மாமி வந்திருக்கிறாள். இங்கு யாரோ சிநேகிதி வீட்டு ஆண்டு நினைவுக்கு வந்தாளாம். ‘குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். அன்றைக்கே பார்க்கவில்லை. சுசீலாவை வரச் சொல். பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று மாடிக்குப் போகிறாள் இப்போதுதான்” என்று தகவல் கொடுத்தாள்.

நான் மூச்சு விடக் கூடச் சாவகாசம் இல்லாமல் பறப்பதைப் பார்த்து என் கணவருக்குப் பெருமை பிடிபடவில்லை. “ஏதேது? இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இந்த வீட்டில் சுசீலாவுக்கு இத்தனை கிராக்கி வந்து விட்டதே!” என்று என்னை நோக்கி இளநகை செய்தார்.

லீலாவின் சமாசாரத்துக்குத்தான் நான் முதலில் பணிந்தேன். மாடிக்கு ஓடினேன். விறகின் ஈரப்புகை என்னை அசல் செந்தாமரைக் கண்ணாளாக்கியிருந்தது. கசங்கிய புடவை கீழே புரளாதபடி தூக்கிச் செருகியிருந்தேன். தலைவாரிக் கொள்ள நேரம் இல்லாமையால் கையால் கோதிவிட்டுக் கொண்டிருந்தேன். இப்படி மாடியில் அலமாரியில் இருந்து பெரிய கண்ணாடி என் தோற்றத்தை எனக்கு விளக்கியது.

சோபா ஒன்றில் பட்டு சாய்ந்து கொண்டிருந்தாள். மஞ்சள் பட்டுப் புடைவைக்கு மேலே கழுத்தில் நட்சத்திரமாலை டாலடிக்க, மல்லிகைப் பூவும் சந்தப் பூச்சும் அவள் விசேஷ வீட்டிலிருந்து வந்திருக்கிறாள் என்பதை எடுத்துக்காட்ட பருமனான தன் தேகத்தை நாற்காலி ஒன்றில் அடக்கிக் கொண்டு என்னைப் புன்னகை வதனத்துடன் வரவேற்கிறாள் சின்ன மதனி ஜயம்.

“உன்னைப் பார்க்க அன்று வந்திருந்தேன். ம்! அடுப்பில் ரொம்ப வேலை போல இருக்கிறது!” என்றாள்.

நான் பேசாமலே சிரித்து வைத்தேன். ஆனாலும் உள்ளுக்குள்ளே, அவர்கள் இருவரும் சரிக்குச் சமானமானவர்கள். நானோ? என் காதுகளில் வைரம் பளபளக்கவில்லை. இடுப்பிலே பட்டு மின்னவில்லை. என் கணவர் காரிலே காரியாலயம் போய்விட்டு வந்தாலும், அவர்களுக்கு வண்டி ஓட்டியின் ஸ்தானத்தில் தான் இருக்கிறார் என்ற உண்மை அழுத்தியது.

“மன்னி வந்திருக்கிறாள் என்று தெரிந்து தானே வந்தாய்? காப்பி கொண்டு வரக்கூடாது? இது தெரிய வேண்டாமா?” என்று பட்டுவின் சொற்கள் வேறு என்னுடைய தாழ்வை எனக்கு உணர்த்தின.

“வேண்டாம் மன்னி இப்போதுதான் அவர்கள் வீட்டில் வலுக்கட்டாயமாகச் சாப்பிட்டேன். நான் வெறுமே பார்க்கலாம் என்று வந்தேன்” என்று ஜயம் சம்பிரதாயமாக மறுத்தாள். என்றாலும் அவள் ‘ஹார்லிக்ஸ்’ கேட்டாளே!

நான் பின்புறம் படிக்கட்டுகள் வழியாகக் கீழே விரைந்தேன். அவர் அறையில் - நிஜாருக்குப் பொத்தான் போயிருக்கிறது போலிருக்கிறது - தாமாகத் தைத்துக் கொண்டிருந்தார். யார் யாருக்கெல்லாமோ ஏவலாளாக இருக்கிறோமே, நீ தைத்து வை என்று கூடச் சொல்லாமல் தாமே செய்து கொள்கிறாரே! என்று அவரது பணிவான சுபாவத்தை வியந்தேன்.

இரு தம்ளர்களைக் கையில் ஏந்திய வண்ணம் முன்புறப் படிகளின் வழியாக நான் ஏறிய போது பட்டுவின் குரல் என் காதில் பட்டது. என்னையும் அறியாமல் நான் அசைவற்றுப் படியிலேயே நின்று விட்டேன். “என்னவோ பிச்சைக்காரப் பிராமணனைப் போலப் படுக்கையைத் தைத்துப் பெண்ணைக் கொண்டு விட்டுப் போய்விட்டான்! ஒரு பாத்திரம் நகை என்று ஒன்றைக் காணோம்! கையிலே புல்லுப்போல் ஒத்தை வளையைப் போட்டு எப்படித்தான் அனுப்பினாளோ? அதையாவது அழித்து நல்லதாக இரண்டு பண்ணிப் போடட்டும் என்று தானே ஜாடையாக நான் அநாவசியமாகப் பாத்திரம், வேஷ்டி என்று வாங்க வேண்டாம் என்று சொன்னேன்?”

அடுத்தாற் போல் ஜயம், “அத்தை அவ்வளவு பணக்காரியாக இருக்கிறாளே, ஆசையாக இருக்கிறாள், பெண்ணுக்குச் செய்வாள் என்று அம்மா சொல்லிக் கொண்டு இருந்தாரே?” என்று கேட்டாள்.

“என்ன ஆசையோ! மைசூர்ப் பட்டுப் பேர் போனது. நறுக்கென்று நல்லதாக ஒரு புடவை வாங்கி அனுப்பக் காணோம். இல்லாவிட்டால் பேசாமலாவது இருக்க வேண்டும். மெனக்கெட்டு வெள்ளைக் கோடு போட்ட நூல் புடவை. நம்ம வீட்டு முனியம்மா உடுத்துவது போல வாங்கி அனுப்பியிருக்கிறாள்” என்றாள் பட்டு ஏளனமாக.

மின்சார அதிர்ச்சி ஏற்பட்டது போல் நெஞ்சம் சுருங்கியது. உடல் நடுங்கியதைத் தம்ளர்களைத் தாங்கியிருந்த கைகள் உணர்த்தின.

‘பிச்சைக்காரப் பிராமணன்! அப்பா! நீங்கள் என்னை வளர்த்து அறிவூட்டி இந்த வீட்டில் கொண்டு விட்டதற்கு இது பட்டப் பெயரா?’

அன்பில்லாத உள்ளம் என்பதை நான் ஒருவாறு எதிர்பார்த்திருந்தாலும் நேராகப் பேச்சில் உண்மை தெளிந்து விட்ட பின்னர் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்னால் பொறுக்க முடியாததாகவே இருந்தது. பழுதையோ பாம்போ என்று சந்தேகப்படும் போது உண்டாகும் அச்சத்திற்கும், உண்மையாகவே அது நெளியும் போது ஏற்படும் உடல் நடுங்கும் அச்சத்திற்கும் வித்தியாசம் இல்லையா?

சற்று ‘நக்’கென்று வைப்பது போலவே தம்ளர்களை மேஜையில் வைத்தேன். அவர்கள் பேசியதை நான் கேட்டு விட்டதாக என் முகபாவம் உணர்த்தியதோ என்னவோ? கபட நெஞ்சைப் போர்வையிட்ட புன்னகை நெளிய பட்டு, “அதற்குள் கொண்டு வந்து விட்டாயா?” என்று அன்புடன் கேட்பது போல் வினவினாள்.

“எனக்கு எதற்கு இப்போது காப்பி? நான் தான் வேண்டாமென்று சொன்னேனே! ராமு எங்கே?” என்று ஜயம் கேடுக் கொண்டிருந்த போதே அவர், “என்ன மன்னி, காலங் கார்த்தாலே திடீர் விஜயமாக இருக்கிறதே. அண்ணா வந்திருக்கிறானா?” என்று விசாரித்த வண்ணம் அங்கு வந்தார்.

“இல்லை, நான் மட்டுந்தான் வந்தேன். உங்களை எங்கே கண்ணிலேயே காணாம்? அண்ணா கம்பெனியில் சேர்ந்தாலும் சேர்ந்தீர்கள், ஆளைக் காண்பதே அபூர்வமாக இருக்கிறதே? அன்று வந்தேன். சுசீலாவை லீலா அழைத்துப் போய்விட்டாள். ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் அவளை அங்கு அழைத்து வரக்கூடாதோ? ‘ஏன் அம்மா, சிற்றப்பாவைக் காணவே காணோம்? வரவே இல்லையா?’ என்று நேற்று சரோஜ் கூடக் கேட்டாள். ‘சித்தி வந்துட்டாளோ இல்லையோ, இனிமேல் எங்கே வரப்போகிறார்?’ என்றேன் நான்” என்று மடமடவென்று கூறி நகைத்தாள் அவள்.

அவர் எங்கே உத்தியோகம் செய்கிறாரோ? அண்ணாவின் காரியாலயத்துக்குப் பக்கத்தில் இருக்கிறதாக்கும் என்றெல்லாம் ஏதேதோ குருட்டு யோசனைகள் செய்தேனே. எனக்குத் தெரியாத சமாசாரம் யாருக்கெல்லாம் தெரிந்திருக்கிறது! பட்டு என்னை ஏன் தாழ்மையாக நடத்த மாட்டாள்? அவர்கள் கீழ் வேலை செய்யும் கையாள்தாமே அவர்? ஏற்கனவே என் அந்தஸ்த்தைத் தூக்கவே முடியாதபடி நகை நட்டும் துணிமணிகளும் இல்லாத பிறந்தகத்து வறுமை வேறு இருக்கிறது. அன்பு, ஆசை, சீர்திருத்த மனப்பான்மை, நாகரிகம் என்றெல்லாம் என்ன என்னவோ பைத்தியம் போல் எண்ணினேனே! அந்த வீட்டை விட்டாவது உடனே வர முடிந்தது. இந்தச் சுதந்திரமற்ற சூழ்நிலையில் எனக்குத் துளியும் ரத்தப்பந்தம் இல்லாத ஒருத்தியின் அலட்சியத்தையும் அகம்பாவத்தையும், ஏளன சொற்களையும் சகித்துக் கொண்டா நாட்களைத் தள்ள வேண்டும்? அத்தை வீட்டிலே அத்தை கூட என்னை நேருக்கு நேர் எதுவும் கூறவில்லை. பாட்டி, என் தந்தையைப் பெற்றவள். என்னை அடிக்கவும் அணைக்கவும் உரிமை கொண்டவள் சொன்ன சொற்களுக்கே அத்தனை ரோசம் கொண்டேனே! இங்கோ?

இந்த வீடுதான் எனக்குப் புகலிடம். இதை விட்டு எங்கும் போகவும் முடியாது. வாழ்நாள் முழுவதும்... சுழன்று சுழன்று இருதயத்தைத் தாக்கிய கிலேசத்தால், ஜயம் விடைபெற்றுப் போகும் வரை நான் எப்படித்தான் சமாளித்துக் கொண்டு நின்றேனோ? பின்புறமாக நடந்தவள் எங்கள் அறைக்கு வந்தேன். அடுத்த வீட்டில் காரியாலயத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவனிடம் அவள் குழைந்து கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தது என் கண்ணில் பட்டது. இனம் தெரியாத துயரம் உந்திக் கொண்டு வர, சுற்றி வைத்திருந்த படுக்கையில் சாய்ந்தேன். இருதயத்தில் இருந்த பளுவை அழுது அழுது கரைத்தால் தான் இதமாக இருக்கும் போல இருந்தது. அடுப்படி அலுவல்கள், மாமியார் எல்லாவற்றையும் மறந்தவளாக விம்மல்களுடன் கண்ணீர் பெருக்கினேன்.

“சுசீலா? சுசீ! சுசீ!” என்று பதறும் குரலுடன் அவருடைய அன்புக் கரங்கள் என் மேல் பட்டன.

உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாத என் பலவீனம் எனக்கு அப்போதுதான் புலனாயிற்று. அசட்டுத்தனமாக அழுதுவிட்டேனே? அவர் இப்போது கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வேன்? என்னுடைய செய்கை அடுத்த நிமிஷத்தில் எப்பேர்ப்பட்ட பலனைக் கொடுக்கும் என்று சற்றும் சிந்தியாமல் அல்லவோ பலவீனத்திற்கு ஆளாகிவிட்டேன்.

தலையைத் தூக்கி என் அமுத முகத்தை அவருக்குக் காட்டவே எனக்கு லஜ்ஜையாக இருந்தது.

“சரி, என்னம்மா இது? என்ன சமாசாரம்?” என்று துடிதுடிக்கும் கண்களுடன் அவர் என் முகத்தைத் திருப்பினார். “என்ன வருத்தம் உனக்கு சுசீலா? சொல்லி விட்டு அழேன். என்ன நேர்ந்தது?” என்றெல்லாம் அடுக்கியவாறு அவர் என் கண்களைத் துடைத்த போது எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

“ஒன்றுமில்லை...”

“ஒன்றுமில்லையா? குலுங்கக் குலுங்க விம்மினாயே, சுசீ! என்னிடம் சொல்லக் கூடாதா? இன்னுமும் உன் விம்மல் ஒலி என் நெஞ்சைத் தாக்குகிறது. நீ ஒன்றுமில்லை என்கிறாயே?”

ஆனாலும் நான் எத்தனை அசடு? அவரிடம் என்ன சொல்லுவது? உங்கள் மதனி என் தந்தையைப் பிச்சைக்கார பிராமணன், நகை செய்து போடவில்லை என்று சொன்னாள் என்று சொல்வதா? சீ, சின்னக் குழந்தைகள் சண்டையா இது? அவள் என்ன சொன்னால் எனக்கு என்ன? விலைமதிப்பற்ற அன்புச் சுரங்கமாகிய அவர் எனக்குச் சொந்தமாக இருக்கும் போது, வேறு என்ன குறை எனக்கு, இந்த அற்பச் சங்கதிகளை எல்லாம் அவர் காதில் போடுவது தப்பு.

என் கிலேசப் புகையினூடே அப்பாவின் உபதேசம் பளிச்சிட்டது.

‘ஒவ்வொருவர் குணம் ஒவ்வொரு விதமாக இருக்கும். அவரவர்கள் இயல்புக்கு ஒத்தபடி இணைந்து போக வேண்டும்’ என்றாரே!

கொடுக்கக் கூடாத பொருளை விரும்பிக் குழந்தை அழுதால் தாய் எத்திப் பேச்சு வாக்கில் ஒளித்து விடுவாள். ஆனால் சற்றே சமாதானம் அடைந்தது போல் தூங்கும் குழந்தை, நித்திரையில் அந்த நினைவு வந்தால் கூடக் கேட்டு அலற ஆரம்பிக்கும். அப்படித்தான் அப்பாவின் நினைவு மறுபடியும் என் நெஞ்சில் வேதனையைக் கிளர்த்தியது. பட்டுவின் இழிவுச் சொல், அவரது பரிதாபமான எலும்பெடுத்த உருவம் - எல்லாம் என்னைத் திரும்பவும் உணர்ச்சிக்கு அடிமையாக்கின. மீண்டும் விசும்பல் எழும்பியது.

அவர் என் நெஞ்சை அமுக்கிக் கொண்டார். “ஒன்றும் இல்லை என்று திரும்பவும் தேம்புகிறாயே, சுசீ? உனக்கு மனக் கஷ்டம் என்ன என்று சொல்ல மாட்டாயா?” என்று கெஞ்சினார்.

இந்த அயனான கட்டத்தில், “ஏண்டி சுசீலா?” என்று கூப்பிட்டுக் கொண்டே மாமியார் வந்து விட்டாள்.

எக்கச்சக்கமாக எங்காவது நரம்பு பிசகிக் கொண்டிருந்தால் மளுக், மளுக் என்று வலிக்கும். சில சமயங்களில் அது எவ்வித மருந்தும் இன்றிச் சட்டென்று திரும்பும் போதோ சோம்பல் முறிக்கும் போதோ பிசகிய விதம் போல விட்டுவிடுவது உண்டு. மாமியாரின் குரல் சாட்டையடி போல என் துயரத்தைக் களைந்து மேலே வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்ற என் பழைய நிலைக்குக் கொணர்ந்தது என்றாலும், கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட திருடனைப் போல் அல்லவா அழுத கண்களுடனும், ஆதரவு காட்டும் அவருடனும் தென்பட்டு விட்டேன்? ஏதோ சொல்ல வந்தவள் திக்பிரமை அடைந்து விட்டவள் போல் எங்களை வெறித்துப் பார்த்த வண்ணம் அவள் நின்றாள்.

நிமிர்ந்து பார்க்காமலேயே புடவைத் தலைப்பால் கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டு “எனக்கு ரொம்பத் தலை வலிக்கிறது” என்று சமயோசிதமாகப் புளுகினேன்.

“நன்றாக இருக்கிறது! தலைவலிக்கா இப்படி முகம் சிவக்க அழுதிருக்கிறாய்? என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேனே! ஆயிரம் மருந்துகள் இருக்குமே இங்கு? எதையாவது கொஞ்சம் கேட்டு வாங்கிப் போட்டுக் கொள்வதற்கென்ன? என்னவோ அம்மா! எங்கள் நாட்களில் இந்த வயசில் மங்கு மங்கென்று காரியம் செய்வோம். இங்கு என்ன இடுப்பில் ஒரு குடமும் கையில் ஒரு குடமும் தூக்க வேண்டுமா? வீடு மெழுக வேண்டுமா? மாடு கறக்க வேண்டுமா, என்ன இருக்கிறது? இந்த அடுப்பில் ஏற்றி இறக்குவது ஆகாமல் பூஞ்சையாக இருக்கிறதுகள்” என்று பொழிந்து தள்ளிக் கொண்டு போனாள் அவள்.

என் கணவர் அப்போது ஒன்றும் கேட்கவில்லை. மாமியார் சென்ற பின், “நிஜமாக உனக்கு என்ன வருத்தம் சுசீலா? தலைவலி என்று பொய் தானே சொன்னாய்?” என்று கேட்டார். அவர் கூரிய பார்வை என் மனதைப் பிளந்து கொண்டு போகும் போல் இருந்தது.

“ஒன்றும் இல்லை. நிஜமாகவே தலைவலிதான். ஏதோ நினைத்துக் கொண்டேன். ஊரின் ஞாபகம் வந்துவிட்டது” என்று என் பொய்க்குக் குஞ்சலம் பொருத்தி விட்டேன் நான். கஷ்டப்பட்டுச் சிரிப்பை வரவழைத்துக் கொள்ளக் கூட முயன்றேன். மேகங்களிலிருந்து வெளிப்படும் சந்திரனைப் போல் அவர் நகைத்தார். “அட அசடு! அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டா குழந்தை அப்படி அழுது விட்டது. இந்தச் சில நிமிஷங்களில் நான் எப்படித் துடித்து விட்டேன். தெரியுமா சுசீ? நான் இருக்கும் போது நீ இப்படி அழலாமா? இனிமேல் இம்மாதிரி உன் முகம் கன்றக் கூடாது. தெரியுமா சுசீ?” என்றார். சிறு குழந்தையைச் சமாதானப்படுத்துவது போல. இந்நிலையில் மாமியார் அமிர்தாஞ்சன் டப்பி ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். “இந்தா! இதைத் தடவிக் கொண்டு சற்று படுத்திரு. தானாகப் போய்விடும். நன்றாக அழுதாய்? பச்சைக் குழந்தையைப் போல், தலையை வலிக்கிறதென்று!” என்று கூறி, அதைக் கொடுத்துச் சென்றாள்.

படுக்கையை விரித்து அவர், “நீ படுத்துக் கொள். நான் மருந்து தடவி விடுகிறேன்” என்று உபசாரம் செய்தார். “எல்லோரும் சாப்பிடக் காத்திருப்பார்களே, நான் போகிறேன்” என்று நழுவ முயன்ற என்னைப் பலவந்தமாகப் படுக்கையில் தள்ளி, அமிர்தாஞ்சனத்தைத் தடவி விட்டு அவர் சாப்பிடப் போய்விட்டார்.

என் அசட்டுத்தனத்துக்காக என்னையே நொந்து கொண்டேன். அருங்குணக் குன்றாக அவர் இருக்கும் போது அவசரக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்தேனே என்று குன்றிப் போனேன். சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து அவர் கூறிய வார்த்தைகள் அன்று முழுவதும் அவர் அன்பையே எண்ணி வியக்க வைத்தன!

“சுசீலா, உன்னால் எனக்கு எத்தனை பெருமையாக இருக்கிறது தெரியுமா? இந்த வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் வரையில் எல்லோரையும் அதற்குள் நீ எப்படி கவர்ந்து விட்டாய்! வந்த மறுகணமே புக்ககத்து மனிதர்களிடம் வெறுப்புக் காட்டும் பெண்களே மலிந்து இருக்கும் போது, நீ எனக்கு மனைவியாகக் கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம் என்றெண்ணி மகிழ்ந்திருக்கிறேன். உன் கண் கலங்க நான் எப்படிச் சகிக்க முடியும்?” என்று புகழ் வார்த்தைகளால் போர்வை இட்டு விட்டார். ‘கணவன் வீட்டாரிடம் நான் காட்டும் பணிவுக்கு எனக்கு இவ்வளவு தூரம் நன்றி காட்டும் அவரன்றோ உண்மையில் ஆதர்ச புருஷர்? அவருடைய மனம் கோணாமல், அவர் என்னிடம் வைத்திருக்கும் பெருமையையும் மதிப்பையும் நான் நிலைநாட்டிக் கொள்ள வேண்டாமா? அது ஒன்று தான் என் வாழ்வின் குறிக்கோள். வைரத்திலும் புள்ளியுண்டு. முத்திலும் சொத்தையுண்டு எனக் கேட்டதில்லையா நான்? அவர் எனக்கு இங்கு இருக்கும் போது, இந்த அற்பமான தோஷங்களைப் பொருட்படுத்தக் கூடாது’ என்று சங்கற்பம் செய்து கொண்டேன்.

அன்றிரவு பட்டு சாப்பிடுவதற்காகக் கீழே வரவில்லை. அதற்குப் பதில் தன் பர்வத உடம்பைத் தூக்கிக் கொண்டு அவள் தாய் மேலும் கீழும் போய் வந்தாள். என் கணவர் காரியாலயத்திலிருந்து வந்ததிலிருந்து டாக்டர் வீட்டுக்கும், மருந்துக் கடைக்கும் அலைந்த வண்ணமாக இருந்தார். இரவு பத்து மணிக்குப் பிறகே சந்தடி குறைந்திருந்தது. ‘பிரசவத்திற்கு இன்னும் போதிருக்கிறது’ என்று சொல்லி டாக்டர் போய்விட்டதாக மாமியார் சொல்லிக் கொண்டாள்.

வேலைகளை முடித்துக் கொண்டு நான்மாடிக்கு வந்த போது தான் எனக்கு எத்தகைய அதிர்ச்சி காத்திருக்கிறது என்று புரிந்தது. எங்களுடைய அறை தான் பிரசவத்திற்கு ‘ஆகி’ வந்ததாம்! அங்குள்ள சில சாமான்கள் கூடத்துக்கு வந்திருந்தன. குழந்தைகள் கூடத்தில் உறங்கிக் கொண்டிருக்க என் கணவர் முன்புற வராந்தாவில் படுக்கை மீது சாய்ந்தவாறு ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார். வழக்கம் போல் மைத்துனர் தம் அறைக்குள் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். லீலா மேஜை விளக்கு எரிய ஏதோ எழுதிய வண்ணம் இருந்தாள். அவள் அறைக்குள் வைத்திருந்த என் பொருள்கள், நான் அன்றிரவும் அதற்கு மேலும் எத்தனை நாட்களோ அவளுடன் கழிக்க வேண்டும் என்று யாரும் சொல்லாமல் விளக்கின. அர்த்தமற்ற, யாரிடமென்று சொல்ல முடியாததொரு கோபம், படபடப்பு, கவலை, ஏமாற்றம், துயரம் முதலிய எல்லா உணர்ச்சிகளும் என்னை வென்று அடிமையாக்கி விடும் போல் இருந்தன. போர்வையால் முகத்தை மூடிக் கொண்டு வெளிக்குத் தெரியாமல் மௌனமாகக் கண்ணீர் பெருக்கினேன்.

2-6

அன்று வீடு திமிலோகப்பட்டது. கார்களின் சப்தமும் டாக்டர், நர்ஸ்களின் பாதரட்சை ஓசையும், காபி, வென்னீர் என்று சமையலறையில் எனக்கு வந்து குவிந்த உத்தரவுகளும், என் மாமியார் அடிக்கொரு தடவை மாடிக்கு ஏறிச் சென்றதும் அவசரத் தேவைக்கு வெளியே செல்வதற்காக என் கணவர் அன்று காரியாலயத்துக்குச் செல்லாமல் இருந்ததும், அந்த வீட்டுக்கே பட்டு முடிசூடா மன்னிதான் என்று விளக்கின. என்னதான் நல்லெண்ணங்கள் மூலம் நான் நிச்சலனமாக இருக்க முயன்றாலும், பலத்த மழைக்கும் புயலுக்கும் அறிகுறியாக அகலாமல் வந்து குவியும் கார் மேகங்களைப் போல் என் இருதயத்தே வந்து எல்லா உணர்ச்சிகளும் சூழ்ந்து கொண்டன. இளம் தம்பதிகள், துடிக்கும் ஆவலுடன் தனிமைக்கு ஏங்கி நிற்பார்கள் என்று ஏன் இந்த வீட்டில் யாருமே தங்கள் கவனத்தைச் செலுத்தவில்லை? என் மாமியார் தான் ஆகட்டும், வாழ்ந்து சுக துக்கங்கள் அனுபவித்தவள் அல்லவா? என் மைத்துனருக்குத்தான் எங்கள் விஷயத்தில் கண் குருடாகி விட வேண்டுமா?

நான் ஏழையாக இருக்கலாம். ஆபரணங்களும், பட்டாடைகளும் என்னை அலங்கரிக்காமல் இருக்கலாம். காரிலே உல்லாசச் சவாரி போகவும், இசை விருந்துகளை அனுபவிக்கவும், மின்சார விசிறியின் அடியில் உட்கார்ந்து அதிகாரம் செலுத்தவும் உரிமை அற்றவளாக இருக்கலாம். ஆனால் அன்பே உருக்கொண்ட கணவனைக் கைப்பிடித்திருக்கும் பெண் அல்லவா நான்? என்னிடம் உயிரையே வைத்திருப்பதாகத் தோன்றும் அவருடன் தோழமை பெற உரிமை உள்ளவன் அல்லவா நான்.

விதை இல்லாவிட்டால் பூ ஏது, கனி ஏது? முதல் முதலாக இந்த வீட்டில் சகலமான பேர்களும் என்னை அளவற்ற சுவாதீனத்துடன் சுசீலா, சுசீலா என்று அழைத்துச் சர்வ சுவாதீனமாகக் கட்டளை இடுவது எதனால் வந்தது? அவரை நான் மணந்திருப்பதால் தானே? கணவனுடைய வீட்டிலே போய் அமைதியாக உழைப்பதுடன் திருப்தி அடைந்து விட வேண்டும் என்று பரம ஏழையாக இருக்கும் பெண்ணாக இருந்தால் கூட, ஏன் அங்கஹினம் அவலட்சணம் என்ற குறைபாடுகள் உள்ள பெண்ணாக இருந்தால் கூட எண்ண மாட்டாளோ! வெளியே செல்லக் கூடாது, எவருடனும் அளவளாவக் கூடாது, பிறந்த வீட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்பன போன்ற சுதந்தரங்களில் வேண்டுமானாலும் தடை விதித்து உரிமைகளைப் பறித்துக் கொள்ளட்டும். மணவாழ்வின் ஜீவநாடியான உரிமைக்குக் கூட இடம் இல்லாத வீட்டிலே நான் என்றென்றும் சலனம் இல்லாமல் எப்படி வாழ முடியும்?

என் பேதமை எனக்கு நன்றாக விளங்குகிறது. எனக்கு இங்கே சகல சுதந்திரங்களும் இருக்கும், ஜகதுவைப் போல எவ்வித இன்னலுக்கும் ஆளாக வேண்டாம் என்று எண்ணினேனே, அது எத்தனை அறியாமை!

உள்ளே வலுக்கும் புயலோடு நான் போராடிக் கொண்டிருந்தேன்.

அவரோ, எப்போதும் போன்ற சாந்த முகத்துடன், இதழ்களிலே வழக்கம் போன்ற நகையுடன் குழந்தைகளுடன் சரளமாகப் பேசிக் கொண்டு நிச்சலனமாக வளைய வந்தார். இதைக் கண்ணுற்ற போது என்னுள்ளே புயலுக்கான எதிர்ப்புக் குறைந்து விடும் போல இருந்தது.

அவரும் இது போன்ற மனநிலையில் இருக்க வேண்டியவர் தாமே? இப்போது என்னைப் பாதித்திருக்கும் சங்கடங்கள் அவரையும் பாதித்திருக்க வேண்டுமல்லவா? பின் அவற்றின் ரேகைகள் கூட அவரிடம் தென்படவில்லையே! என்னைப் பார்க்கும் போது கூடச் சஞ்சலமற்றுப் புன்னகை செய்கிறாரே!

பொன்னொளியைப் பூசிக் கொண்டு விரிந்து பரந்திருக்கும் வானத்தில் இருள் தேவன் ஆட்சி புரிய வந்து விட்டானானால் சற்று முன்னால் ஜகஜ் ஜோதியாக மனத்தை மயக்கும்படி ரம்மியமாகத் தோன்றிய வானந்தானா என்று சம்சயிக்கும்படி பொன்னால் பூசப்பெற்ற ரேகை கூட இல்லாமல் அந்தகாரம் கப்பிக் கொண்டு விடும். அவர் அன்பின் அவதாரம். காவியங்கள் போற்றும் காதல் தெய்வம். அருங்குணக் குன்று என்றெல்லாம் போற்றியிருந்தேனே; கிடைத்தற்கரிய ஆதர்ச புருஷர் என்று உள்ளே பூரித்திருந்தேனே. அவை யாவும் உண்மைதானா, அல்லது புக்ககத்து வாழ்வைப்பற்றி நான் மனப்பால் குடித்திருந்ததைப் போல பேதமைக் கண்ணாடி பூண்டிருக்கும் என் கண்களின் தோற்றந்தானா? இந்தச் சந்தேகம் அவரிடம் நான் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கை என்ற கற்கோட்டையிலே சிறு நெகிழ்ச்சிக்கு இடமளித்து விட்டது போலப்பட்டது. எனக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதைப் போல. பிரமையோ என்னவோ, நான் எத்தனை முயன்றும் அவருடைய முதல் நாளைய அரவணைப்பு, நெஞ்சைத் தொட்ட கனிவுச் சொற்கள், எல்லாம் என் மனத்திரையில் தெளிவாக விழாமல் திறக்கப்பட்ட கதவுக்கு முன் காணும் ‘மாட்டினி’க் காட்சியைப் போல ஒளியிழந்து வெளிறித்தான் தோன்றின.

உண்மையைச் சொல்லப் போனால் பெண் நாணத் திரைக்குள் இருப்பவள். ஊர்வலத்தின் போது என் கையை அழுத்தித் துணிச்சலுடன் என்னைப் பேச்சுக்கு இழுத்தவருக்கு இப்போது தாமாக முயன்றால் என்னுடன் தனிமையை ஏற்படுத்திக் கொள்ள முடியாதா? பெரியவர்கள் மனதிற்கு ஏற்ப இணைந்து தான் போக வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு வரையறை வேண்டாமா? இவ்வளவு தூரம் அடிபணிந்து போகும் பயங்கொள்ளியா அவர்? மரியாதை என்றே வைத்துக் கொண்டாலும் விட்டுக் கொடுப்பதற்கு ஓர் எல்லையே இல்லையா? அப்படி என்றால் என்னிடம் அவருக்குக் கரை காணாத அன்பு இருக்கிறதென்பதற்கு அத்தாட்சியே காணவில்லையே? அவர் மனம் முழுவதும் அவர் சொல்லுவது போல என் மீதுள்ள பிரேமை வியாபித்திருக்குமானால் இத்தகைய அர்த்தமற்ற மரியாதைக்கு இடம் விட்டிருக்குமா?

கணவன் வீடு இந்திரலோகமாக இருக்கும் என்ற என் மனக்கோட்டை மண்ணோடு மண்ணாகப் போனதில் எனக்கு ஏற்பட்ட சங்கடம் என்றால் பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. வற்றாத ஜீவநதி போல என்னிடம் பெருக்கெடுத்து வரக்கூடியது அவர் பிரேமை என்று நான் எண்ணியிருப்பது கானல் நீராக... இருந்துவிட்டால்... இருந்துவிட்டால்...?

அம்மம்மா? என் மனம் தாளாது. ஆமாம், அதன் ஜீவநாடி அறுந்து விட்டது போல விண்டு விரிந்தாடும். மண்டை உடைந்தாலும் பொறுக்கலாம், மனம் உடைந்தால் பொறுக்க முடியாது.

அன்று பகல் பட்டுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மழை ஓய்ந்த பூமியைப் போல வீட்டின் அமளி எல்லாம் மாலை அடங்கியிருந்தது. கல்லூரியிலிருந்து வந்து விட்ட லீலா, என்னிடம் அந்தரங்கமாகப் பேசும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்ததைப் போலச் சமையலறை மேடை மீது வந்து உட்கார்ந்தாள். யாருமே அப்போது அங்கு இருக்கவில்லை. நான் என் கை வேலையிலிருந்து கவனத்தை அவள் மீது திருப்பினேன். எத்தனை தான் எனக்குச் சங்கடம் இருக்கட்டும். வேதனை இருக்கட்டும். அவள் முகத்தைக் கண்டவுடன் அவ்வளவும் பஞ்சாய்ப் பறந்துவிடும். உள்ளங்கள் இணைந்து தோழமை பூண்டிருப்பதன் இன்பம் இதுதான் போலும்.

“என்ன, மூர்த்தியை அப்புறம் பார்த்தீர்களா? என்ன பதில் கொடுத்தீர்கள்? எனக்கு ஒன்றுமே தெரிவிக்கவில்லையே! இன்னொரு தரம் அவர் இம்மாதிரி கடிதம் எழுதி அசட்டுத்தனம் செய்து வைக்கப் போகிறார்! அன்றே தப்பியது தம்பிரான் புண்ணியம். மன்னியாக இருந்திருந்தால், எனக்கு அப்பா எழுதும் கடிதத்தையே படித்து விட்டுக் கொடுப்பவர். உங்களுக்கு வரும் கடிதத்தை அவ்வளவு லகுவில் பார்க்காமல் கொடுத்திருக்க மாட்டார்?” என்று நான் மெதுவாக, பட்டுவின் தகாத செய்கையை அவளுக்குத் தெரிய வைத்தேன்.

“சிலர் தெரிந்து வேண்டுமென்றே தகாத காரியம் செய்கிறார்கள். இதிலெல்லாம் நீ பொறுத்துப் போவது சரியல்ல, சுசீ! இன்னொரு முறை அப்படிச் செய்தால் முகத்தில் அடித்தாற் போல், ‘என்ன விசேசம், மன்னீ? நீங்களே சொல்லி விடுங்கள்’ என்று கேள். அக்காவின் சர்வாதிகார மனப்பான்மை எனக்கு ஒவ்வொரு சமயத்தில் எரிச்சலை மூட்டுகிறது. பயப்பட வேண்டும் என்றால் அதற்கு வரம்பு இல்லையா? இதிலெல்லாம் உனக்குத் துணிச்சலே போதவில்லை” என்று என்னைக் கோபித்து விட்டு அவள், “போன வாரம் ராமு, மூர்த்தியைப் பார்த்தானாமே, சொன்னானா?” என்று கேட்டாள்.

“ஊஹூம்!” என்று நான் தலையை ஆட்டினேன்.

“ஹோட்டல் ஒன்றில் பார்த்தானாம். ‘சுசீலாவுக்கு நீ உறவு என்றே தெரியாதே! அடிக்கடி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிரு’ என்று அழைத்தானாம்” என்றாள்.

“நீங்கள் அழைக்கத் தேவையில்லை. என்னை அங்கே இழுக்கக் கூடிய காந்தம் இருக்கிறது என்றாராக்கும்!”

“ஏய்! சுசீ?” என்று கோபக் குரலில் அடக்குவது போல் விளித்து அவள், “அவர் இங்கு வருகிறார் என்றாலே ஏனோ எனக்குப் பயமாக இருக்கிறது. நாலைந்து நாட்களுக்கு முன்பு நான் காலேஜ் முடிந்து வருகையில் கடற்கரையில் என்னைச் சந்தித்தார். இன்று கூட அங்கே பார்ப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் நான் காத்துப் பார்த்தேன். அவரைக் காணவில்லை. என்ன அசௌகரியமோ என்பது ஒரு புறம் இருக்க, இங்கு எல்லோருக்கும் தெரிந்து விட்டால் என்ன நேருமோ என்று வேறு திக்திக்கென்று அடித்துக் கொள்கிறது” என்றாள்.

“ஓகோ! அதுதான் இப்போதெல்லாம் நீங்கள் வீடு வர இருட்டும் சமயம் ஆகி விடுகிறதாக்கும்! அன்று, ‘இப்போதுதான் காலேஜிலிருந்து வருகிறாயா, லீலா!’ என்று மைத்துனர் கேட்டதற்கு, ‘ஆமாம், காலேஜிலே ஏதோ மீட்டிங்’ என்று புளுகினீர்களே, நிஜமாகவே அலுத்துக் கொள்வது போல் அப்படி நடித்தீர்களே!” என்று நான் வியப்பும் குறும்பும் கலந்த பார்வையில் அவளை நோக்கினேன்.

“உஷ்! வாயை மூடிக் கொள், சுசீ! ராமு வருகிறான்” என்று என்னை அவள் எச்சரித்தாள்.

“என்ன, இங்கே அந்தரங்க மந்திராலோசனை. பூவுடன் சேர்ந்து நாரும் மணம் பெற்ற கதையாக! லீலாவை முன்பெல்லாம் இந்தச் சமையலறைக்குள் பார்க்கவே முடியாது. இப்போது என்னடா என்றால் அடுப்பங்கறையிலேயே ஐக்கியமாகிக் கிடக்கிறாளே? பேசு பேசு என்று பேச உங்களுக்கு அப்படி என்னதான் சமாசாரம் இருக்கிறதோ, தெரியவில்லையே!” என்று அவர் நகைத்தார்.

“பார்த்துக் கொள், சுசீ! நீ பூவாம், நான் நாராம், நீதான் புது மனைவியாயிற்றே என்று சற்றைக்கொருதரம் வந்து கவனிக்காமல் இருக்கிறாயே நானாவது வந்து பார்த்து உற்சாகப்படுத்தலாம் என்று வந்தேன். நல்லதுக்குக் காலமில்லை!” என்று பதிலுக்கு நகைத்தாள் லீலா.

“சுசீலா, சொல்ல மறந்துவிட்டேனே. இப்போதுதான் ஸென்ட்ரல் அருகில் மூர்த்தியைப் பார்த்தேன். அவன் தங்கை இறந்து விட்டாளாம். ஊருக்குப் போகிறான். பாவம்! பெண் பிள்ளை மாதிரி அழுகிறான். ஒரே தங்கையாம்!” என்று பரபரப்புடன் சமாசாரத்தை அவிழ்த்தார் அவர் எனக்குத் துணுக்குற்றது.

அவளைத்தானே அப்போது பிரசவத்துக்கு அழைத்துச் சென்றான்? “அடபாவமே! பிரசவித்தா இறந்து போனாள்?”

“அப்படித்தான் போல் இருக்கிறது. ஐந்து மணிக்குத்தான் தந்தி கிடைத்ததாம். உடனேயே மெயிலில் கிளம்புகிறான். அவனைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. அவன் தகப்பனார் வேறு நாலைந்து மாதங்களாகப் பாரிச வாயுவால் படுக்கையில் இருக்கிறாராமே; அதையும் சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டான்.”

லீலா கல்லாகச் சமைந்து போயிருந்தாள்.

எனக்கோ செய்தி கேட்டதிலிருந்து எதுவுமே ஓடவில்லை. அந்தப் பெண்ணை நான் பார்த்தது கூட இல்லை. எந்த விதத்திலும் எனக்கு ஒட்டு உறவு என்று பந்தமும் இல்லை. ஆனால் மூர்த்தி அவளைக் காணாமல் இருக்கும் போதே நொடிக்கு நூறு முறை, ‘மஞ்சு, மஞ்சு’ என்று அன்று சினிமாப் பார்க்கும் போது பேசியபோது அண்ணன் தங்கை என்ற பாசத்தின் மென்மை வெளிப்பட்டது. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது எனக்கு. என்ன இருந்தாலும் சகோதர பாசம் அலாதியான மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதுதான். ‘ஓர் அண்ணா எனக்கும் இப்படி இருந்தால்?’ என்று கூட நான் எண்ணிக் கொண்டேன். அந்த மஞ்சு இறந்து விட்டாள் என்ற செய்தி அவனுக்கு அதிர்ச்சியூட்டியதில் வியப்பு ஏதுமில்லையே? அதனால் தான் அவன் லீலாவிடம் கூறியிருந்தபடி அவளைச் சந்திக்கவில்லை.

அன்றிரவு லீலாவின் செய்கை என் வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைக்கக் கூடிய விதமாக இருந்து விட்டது. முன்னாள் போல அவள் எழுதிக் கொண்டிருக்கையில் வேலை முடிந்து வந்த நான் அலுப்புத் தாங்காமல் படுத்து விட்டேன். சற்றுத்தான் அசந்திருப்பேன். நான் விழித்துக் கொண்ட போது விளக்கு அணைந்திருந்தது. அறையிலே லீலா படுத்திருக்கவில்லை. அவள் கீழே படுக்கையைத் தூக்கிக் கொண்டு போகப் போகிறாள் என்பது எனக்கு முன்னே தெரிந்திருக்கவில்லை. எனக்கு ஏதோ அருவருக்கத்தக்க செய்கை செய்து விட்டவள் போல மனத்தில் வெறுப்பு, கசப்பைப் பரப்பியது. மணி என்ன ஆயிற்று என்று பார்த்தேன். பத்தரைதான் ஆகியிருந்தது. விளக்கை அணைத்து விட்டு அவள் சற்று முன் தான் போயிருக்க வேண்டும். சே! என்ன வெட்கக் கேடு? இத்தனையும் அவருடைய அர்த்தமற்ற மரியாதையால் வந்ததுதானே? அவரே அப்படிச் சலனமற்று இருக்கையில் என் மாமியார் என் ஏற்பாடு என்று என்னைக் கேவலமாக நினைக்கமாட்டாளா? கோபமும் வெறுப்பும் அளவுக்கு மேலிட்டன. அந்தப் பழைய நிகழ்ச்சிகள், வருங்காலத்தில் நிகழக் கூடியவைகளை முன்கூட்டியே எனக்கு உணர்த்திய துர்ச்சகுனங்கள், என் மனத்தின் மேல் பரப்பில் மிதந்தன. கசப்பை விழுங்குவது போல எல்லாவற்றையும் விழுங்கியவாறு நான் தூங்க முயன்றேன்.

வசந்தத்தின் தென்றல் எங்கும் வாசம் வீசியது. சுற்று முற்றும் என் கண்களுக்குத் தென்பட்ட இடமெல்லாம் வண்ண வண்ண மலர்களைத் தாங்கி நின்ர செடிகளும் கொடிகளும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. பச்சை இலைகளுடன் மிளிர்ந்த மரங்கள் ஆயிரமாயிரம் உயிர்த் துளிகள் பச்சை உருவத்தில் பூமிதேவியின் மடியிலிருந்து எழுந்து விட்டன போல் தோன்றின. புறாக்கள் தகதகவென்று வெளுப்பும் கறுப்புமாகப் பிரகாசிக்கும்படி இப்படியும் அப்படியும் வெண் சிறகுகளை வீசிக் கொண்டு வான வீதியிலே பறந்து சென்றன. பசும்புல் தரை - என்னைப் போதை வெறி கொள்ளும்படி செய்த புல்தரை - நான் என்றுமே பார்த்திராத காட்சியாகத் தோன்றியது. இயற்கை அன்னையின் எழிலிலே ஒன்றிப் போன நான் இன்னும் அதற்கு உறு துணையாகி இன்பம் பெற மனம் போனபடி பாட ஆரம்பித்தேன். ஆனால், ஏனோ மனத்தின் களிப்பிலிருந்து எழும்பிய கீதம் எனக்குச் சோக ரஸமாக ஒலிக்கிறது? என் தீங்குரலிலிருந்து மகிழ்ச்சி பொங்கும் நாதமே எழும்பவில்லையே!

பாடிவிட்டு நான் குலுங்க குலுங்க அழுதேன். எனக்கு அழ வேண்டும் போல் இருந்தது.

“சுசீலா...!” கண்ணீரிடையே நான் நிமிர்ந்து பார்த்தேன்.

ஆகா! குரலில் தான் எத்தனை அன்பு, எத்தனை இதம்!

“இங்கே வா அம்மா சுசீலா!” என்று அன்பே உருவெடுத்த இரு கரங்கள் என்னை அழைத்தன.

குழைந்து போல நான், நீட்டிய கரங்கள் முன்பு என்னை மறந்து ஓடி விடப் போனேன்.

‘சே! என்ன பிரமை? யாரையும் காணவில்லைஎயெ? அந்தக் கைகள் எங்கே?’ நான் கண்களைத் துடைத்துக் கொண்டு நெஞ்சம் துடிக்கப் பார்த்தேன்.

ஆ! இது என்ன? மின்னல் ஒன்று கண்களை வெட்டியது. கார் மேகங்கள் காது செவிபடும்படி கர்ஜித்தன. பார்க்க அதிபயங்கரமாக நெருப்புக் கண்களும் கோரப்பற்களுமாக ஓர் உருவம் எங்களூர்க் குளத்தங்கரைப் பிடாரி கோயிலுக்கருகில் நிற்கும் கறுப்பண்ணனின் சிலையைப் போன்ற நிஜ உருவம் ‘ஹஹ்ஹஹஹா!’ என்று இடி முழக்கக் குரலில் நகைத்தது. கண்களை இறுக மூடிக் கொண்டு நான், “நீ யார்? என்னை அன்புடன் அழைத்தவர் எங்கே? அந்தக் கைகள் எங்கே?” என்று கத்தினேன்.

“நான் தான்... நான் தான்...” என்ரு மீண்டும் பேய்ச் சிரிப்பு என் செவிகளில் பாய்ந்தது. நான் கிரீச்சிட்டேன்.

உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரையில் வேர்த்துக் கொட்டியது. என் இதழ்களில் ஏதோ சில்லென்று பட்டது. உடல் கிடுகிடென்று நடுங்கியது.

திடுக்கிட்டவளாக நான் விழித்துக் கொண்டேன்.

“பயந்து போனாயா சுசீலா?” என்று என் கன்னத்தை ஆதரவுடன் வருடினார் என் கணவர்.

‘இது இரவு. நான் சற்று முன் கண்டது கனவு. கதவைத் திறந்து கொண்டு அவர் வந்திருக்கிறார்’ என்று நான் அறியச் சில விநாடிகள் சென்றன.

அந்தக் கனவுதான்... அம்மம்மா! எத்தனை பயங்கரம்! அந்த அன்புக் கரங்கள் உண்மையில் அன்புக் கரங்கள் அல்ல.

என்னுடைய பலம் அவ்வளவையும் பிரயோகிப்பது போல அவர் கையை என் கன்னத்திலிருந்து அகற்றித் தூரத் தள்ளினேன்.

“சுசீ! நான் தான் சுசீ... இதோ பார்” என்று அவர் தம் முகத்தை எனக்குச் சமீபமாகக் கொணர்ந்தார்.

என் வெறுப்பு, கோபமாக உருவெடுத்தது. நாகப் பாம்பு போல் சீறியவளாக அவர் தோளைப் பிடித்துத் தள்ளினேன்.

“என்னம்மா சுசீலா? தூக்கக் கலக்கமா?” என்று மேலே தொங்கிய மங்கலான விளக்கொளியில் புன்னகை செய்த அவர் என்னை மீண்டும் தொட வந்தார். “சீ! என்னைத் தொடாதீர்கள்! ஆமாம். இவ்வளவு கீழ்த்தரமான மனசு படைத்த நீங்கள் என்னைத் தொட அருகதை அற்றவர்! உங்கள் ஆசைக்குப் பலியாக மாட்டேன்! இப்போதே வெளியே போகிறார்களா... இல்லை நான்...” என்ற ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் படபடத்தேன்.

“சுசீலா...!” என்ற அவர் குரல் விழிகள் எல்லாம் அசைவற்றுக் கெஞ்சின போல் இருந்தன.

என்னுடைய அப்போதைய மனநிலைக்கு அவை பின்னும் ஆத்திரமூட்டின.

“போகிறீர்களா, இல்லையா?” என்று எழுந்து நான் வெறி கொண்டவளைப் போன்று அவர் கைகளைப் பிடித்து வெளியேற்றப் போனேன். அவராகவே தலையைக் குனிந்து கொண்டு வெளியே போய்விட்டார். நான் மடாரென்று கதவைச் சாத்திக் கொண்டேன். ‘ஒரு பெண்ணுக்குள்ள தைரியங்கூட இல்லாத பயங்கொள்ளி அவர்! காதலுக்கு மதிப்புக் கொடுப்பவர். பெண்மையைப் போற்றுபவர் என்று நான் மனப்பால் குடித்தது அத்தனையும் கனவுதான். பிறர் தயவில் அடிமையாக உலவும் கோழை அவர்!’ என் நெஞ்சம் துடித்தது. உதடுகள் படபடத்தன. கண்கள் பொங்கு மாங் கடலைப் போலக் கண்ணீரைப் பெருக்கின.

3-1

‘ஜல்ஜல்’ என்ற குதிரை வண்டிச் சத்தத்திற்கிணங்க என் இருதயம் தாளம் போட்டது. ஆமாம்! இதோ வீடு வந்து விட்டது! நான் சலுகையுடனும் உரிமையுடனும் அன்பு குலவும் அன்னையின் அரவணைப்பில் சரண் புகும் நேரம் வந்து விட்டது! ஆகா! இந்த ஆனந்தத்திற்கு ஈடு ஏதேனும் உண்டா? பழகிய தெருவிலே அத்தனை முகங்களும் என்னை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கும் காட்சி எனக்கு அத்தனை நாட்களாகக் கண்டிராத மகிழ்ச்சியை ஊட்டியது. வாயிலிலே பக்கத்து வீட்டு ஜானியின் தாயுடன் அம்மா சிரித்த முகத்தோடு நின்றிருந்ததை நான் தூரத்திலேயே கண்டு விட்டேன். வண்டி இன்னும் செல்ல வேண்டிய பத்தடி தூரத்தைக் கூட என்னால் தாங்க முடியாது போல் இருந்தது. வண்டி நிற்கு முன்னரே தடால் என்று குதித்த என்னை, “மெதுவாக இறங்கு சுசி! வண்டி நிற்கட்டும்” என்று தந்தை கடிந்து கொண்டார். எனக்குக் காதிலே விழவில்லை அது.

வாயிலிலே நின்ற என் தாயை, என் இருதய வேதனைக்குத் தஞ்சமாகப் புக எண்ணியிருக்கும் அன்னையை ஓடிப்போய்க் கரை காணாக் காதலுடன் தழுவிக் கொண்டேன்.

“சுசீலா இளைச்சுத்தான் போய் விட்டாள்! இந்த ஆறு மாசத்தில் கறுத்துப் போய் தலைமயிர் எல்லாங் கூடக் கொட்டி இருக்கிறது. பட்டணத்துக் காற்று உப்பங்காற்று. உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் என்று எண்ணியிருந்தேனே!” என்று ஜானியின் அம்மா என்னைப் பார்த்து அபிப்பிராயம் கொடுத்தாள்.

வண்டிக்காரனுக்குக் கூலி கொடுத்த அப்பா சிரித்துக் கொண்டே, “இப்போதுதான் நாலு நாளாய் உடம்பு ஜுரமாக இருந்ததாம். அத்துடன் ரெயிலில் வந்தது வேறு. மற்றபடி அவர்கள் வீட்டில் என்ன குறை?” என்றார்.

அம்மா அன்புடன் என் தலையைக் கோதி விட்டாள். “புக்கத்துக்குப் போயும் இன்னும் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறதே? அதே ஓட்டம், அதே குதிப்பு. அதே பரபரப்பு! அங்கே கூட இப்படித்தான் இருப்பாயா, சுசீ?” என்று முறுவலித்த வண்ணம் கேட்டாள்.

“அதை ஏன் கேட்கிறாய்? அவர்கள் வீட்டிலே எல்லோருமே குழந்தைகள் தாம். இவள் ஓர்ப்படியின் தங்கை ஒரு பெண் இருக்கிறாளே, சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். பரிகாசம், விளையாட்டு எல்லாவற்றுக்கும் அவள் ஒருத்தியே போதும். நேற்று ஸ்டேஷனுக்கு சுசீலாவை வழியனுப்பக் குழந்தைகள், ‘நான் வரேன், நீ வரேன்’ என்று எல்லோரும் வந்து விட்வார்கள். ‘சித்தி நான் எண்ணிக் கொண்டே இருப்பேன். அஞ்சு நாள் ஆனவுடனே வந்து விடுவாயல்லவா’ என்று சின்னக் குழந்தைகூட ஒட்டிக் கொண்டு இருப்பதை எனக்குப் பார்க்க எத்தனை அழகாக இருந்தது தெரியுமா? ஒன்றுமே தெரியாமல் இருக்கிறாளே, அத்தனைப் பெரிய குடும்பத்தில் எப்படி ஒத்துப் போவாளோ என்று நான் கவலைப்பட்டது உண்டு. இப்போது சுசீலாவைப் பற்றி நினைக்கவே எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவள் மைத்துனர், மாமியார், ஏன் மாப்பிள்ளைக்குங்கூடத் தான் அவளை அனுப்புவதில் இஷ்டமில்லை. ஒரு மாசந்தான் வைத்துக் கொள்ளலாம் என்று எல்லோரும் ஒரு வாக்காகத் தவணை கொடுத்திருக்கிறார்கள்” என்று அப்பா பெருமை முகத்தில் மலர்ச்சியைத் தர, என்னைப் பார்த்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டை அப்படிப் புகழ்ந்து தள்ளினார்!

நான் சிரிப்பேனா, அழுவேனா?

அவருக்கு எப்படித் தெரியும் என் வாழ்வு. அந்த மலேரியா மாத்திரை போன்றதுதான் என்று? கார், ரேடியோ, அன்பு செய்யும் கணவன் என்று அவருடைய கண்களுக்கு, ஏன் மேலாகப் பார்ப்பவர்கள் எல்லோருக்குமே என் வாழ்க்கை அழகிய பூங்கொத்துப் போலத்தான் தோன்றியது. ஆனால் நிலத்துடன் சரி; மணமில்லாத காகிதப் பூங்கொத்து என்று எனக்கன்றோ தெரியும்? சுகமாகப் பங்களாவின் மின்சார விசிறியினடியில் வாழ்பவன், சாலையிலுள்ள ஆலமரத்தைத் தேடி வருவானா? வெயிலில் களைத்து வழி நடப்பவனுக்குத் தானே ஆல மரத்தடி அருமையானது? அத்தகைய அருமையுடன் நான் அன்னையிடம் வந்திருக்கிறேன் என்பதை அப்பா அறிந்தால் இப்படிப் பேச மாட்டார். அவரிடம் நான் என் குறையை எப்படித் தெரிவிக்க முடியும்? சாதாரணமாக அவராவது ஆராய்ந்து நுட்பமாகக் கவனிப்பவராக இருந்தாலும் பாதகம் இல்லை. ‘மின்னுவதெல்லாம் பொன்’ என்று சூதுவாதில்லாத உள்ளம் படைத்த அவர், எங்கள் வீட்டு ஆடம்பரத்தைக் கண்டு பிரமித்துப் போயிருக்கும் போது, என் வாழ்வு சாரமற்றது என்று சட்டென்று எப்படி அறிவார்?

ஆனால் அம்மா, பெண் உள்ளத்தின் இயல்பை அறிந்த அன்னை, என்னைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். என் மனப் பெட்டியைத் திறந்து சுமையை அவளிடம் இறக்கி ஆறுதல் பெறுவேன். என் வாழ்க்கை இன்ன விதத்தில் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நிர்ணயம் செய்தபடி தீர்மானிப்பேன்.

“இன்னும் ஒரு மாசத்தில் திரும்ப வேண்டுமா?” என்று விவரமறியாத பாலகிபோல நான் உள்ளூறக் கறுவிக் கொண்டேன்.

புக்ககத்துக்குப் போய்விட்டுத் திரும்பி இருக்கும் புதுச் சுசீலா அல்லவா நான்? என்னைப் பார்க்க அதற்குள் எதிர்ப்புறம். கீழண்டை மேலண்டை வீடுகளிலிருந்து எல்லோரும் வந்து விட்டார்கள்.

“வெறுமேதான் வந்திருக்கிறாளா? கறுத்து இளைத்துப் போயிருப்பதைப் போர்த்தால் சந்தேகம் தென்படுகிறதே!” என்று என்னைப் பார்த்துக் கீழ்க்கோடி வீட்டுக் கோமளம் கண்ணைச் சிமிட்டினாள்.

“நான் அப்போதே சொல்லவில்லையா? வளைகாப்புச் சாப்பாட்டை நமக்குச் சீக்கிரமே கொண்டு வந்து விட்டாள் சுசீலா!” என்று அவள் சந்தேகத்தை அதற்குள்ளாகவே தெளிய வைத்தாள், எதிர்வீட்டு மரகதம்.

இந்தச் சந்தேகம் முதலிலேயே தோன்றாத ஜானியின் அம்மா, “ஏன் மாமி, விஷயம் அப்படியா? காரணத்துடன் தான் கறுத்துப் போயிருக்கிறாளா? என்னிடம் சொல்லக் கூடாது என்று மறைத்தீர்களா?” என்று அம்மாவிடம் சண்டைக்குப் போய்விட்டாள்.

‘நமக்குப் போகாத ஊகம் எல்லாம் எப்படிப் போகிறது இவர்களுக்கு? என்னிடத்தில் எத்தனை ஆசையும் ஆவலும் காட்டுகிறார்கள்?’ என்று அக்கம்பக்கம் அறியாத பட்டணத்து வீட்டிலே இருந்துவிட்டு வந்திருந்த எனக்குப் பழையபடி அந்த ஜனங்களின் சங்கம் அளவற்ற சந்தோஷத்தைக் கொடுத்தது.

அவர்கள் கேட்கும் கேள்விகள் அவ்வளவாக எனக்குப் பிடிக்காமல் இருந்தாலும் முகத்தைச் சுளித்து வெடுவெடுக்காமல் வெட்கம் மேலிட “அதெல்லாம் ஒன்றும் இல்லை... போங்கள் மாமி” என்றேன்.

“இல்லாவிட்டால் நீ சொல்வாயா? நீ மறைத்தால் இது மறைக்கும் காரியம் இல்லையாயம்மா, மறைக்க முடியாது!” என்று என் முகத்தில் வந்து இடித்து மரகதம் ஒரேயடியாக ஊர்ஜிதம் செய்துவிட்டாள்.

அவர்கள் எல்லோரும் சென்ற பிறகு, “என்ன மாமி, பெண் வந்திருக்கிறாளா? கூப்பிடக் கூப்பிடக் குரலே காணோமே” என்று மேற்பக்கத்து வீட்டு ஜன்னலிலிருந்து எனக்குப் பழக்கம் இல்லாததாக ஒரு குரல் வந்தது.

“இதோ இருக்கிறேனே; சுசி, இங்கு வாம்மா!” என்று ஜன்னலருகே நின்று அம்மா என்னைக் கூப்பிட்டாள். மறுபுறத்திலே ஒரு வயசான அம்மாளும், இருபத்தைந்து வயசு மதிக்கக்கூடிய ஒரு பெண்ணும் நின்று என்னைப் பார்த்தனர்.

“இவள் தான் சுசீலா. அஞ்சு வருஷம் சிட்சை சொல்லி வைத்திருக்கிறது. இப்போது எப்படிப் பாடுகிறாளோ? நம் வீட்டில் இருக்குமட்டும் நாமும் ஆசையாக எல்லாம் சொல்லி வைக்கிறோம்! அப்புறம் பெண் குழந்தைகள் நமக்குச் சதமா மாமி?” என்றாள் அம்மா.

அவர்கள் எனக்கு முற்றும் புதியவர்கள். கறுப்பாய் இளவலாய் இருந்த அந்தப் பெண் கைம்பெண்ணானவளாம். சென்னைச் சர்வகலாசாலையிலே சங்கீத டிப்ளோமா பெற்று, இப்போது புதிதாகத் திறந்திருந்த புங்கனூர்ப் பெண் பாடசாலையிலே சங்கீத ஆசிரியையாக இருக்கிறாளாம். இந்த விவரங்களை எனக்கு அம்மா பின்னாடி சொன்னாள்.

“பாட்டு, படிப்பு எல்லாம் கற்றுக் கொடுத்து எங்கள் சக்திக்கு மீறியே தான் இடமும் பார்த்துக் கொடுத்தோம். பெண் குழந்தைகள் என்றாலும் கண்ணைக் காக்காமல் நல்ல இடத்திற்குப் போனால்தானே மனத்துக்குத் திருப்தியாக இருக்கிறது? நாம் தான் ஒன்றும் தெரியாத ஜடமாக இருக்கிறோம். நம் வயிற்றில் பிறந்த அதுகளாவது ஒரு குறையுமில்லாமல் இருக்க வேண்டும் என்ற ஒரே பிடிதான் எனக்கு. மாப்பிள்ளையும் தங்கமான பையன், தேர்ந்த ஜனங்களும் ஆசையும் அன்புமாக வைத்துக் கொண்டு தாங்குகிறார்கள். அதுதானே நமக்கு வேண்டும்?” என்று அம்மா லோகாபிராமமாகப் பேசுவதுபோல் என் வீட்டைப் பற்றிய பெருமை அடித்துக் கொண்டாள். மனத்திலே புளியைக் கரைந்து விட்டது போல் இருந்தது எனக்கு.

இவ்வளவு பரிவான அபிப்பிராயம் அவள் மனத்திலும் தைத்திருக்கும் போது நான் எப்படி உண்மையை உடைத்து, உளுத்த மரம் என்று காண்பிப்பேன்?

“நீங்கள் சொல்வதும் சரிதான். நாம் எத்தனை அரும்பாடுபட்டு வளர்த்தாலும் அந்த அருமை தெரிந்த இடமாக இருக்க வேண்டாமா வாய்க்கும் இடமும்! நான் கேட்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லோரும் பேசியது காதில் விழுந்தது. சாதாரணமாக வரவில்லையே?” என்று அந்த அம்மாள் என்னைப் பார்த்துப் புன்னகை பூத்தாள்.

“அப்படி எதுவும் முன் கூட்டித் தெரிவிக்கவில்லை. போய் ஆறு மாசம் ஆச்சே. மறுதரம் அழைக்க வேண்டாமா என்று தான் அழைத்து வந்திருக்கிறது. இப்போது நீங்கள் கேட்பதையும் அவள் உடம்பையும் பார்த்தால் எனக்கே சந்தேகமாக இருக்கிறது” என்று அம்மாவும் நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

எனக்குக் கோபமாக வந்தது. முகம் ஜொலிக்க, “என்னம்மா இது? நீங்களும் ஆரம்பித்து விட்டீர்கள்? அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று அப்பால் வந்து விட்டேன்.

அப்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. என் மாமியாருக்கு சொந்தக்காரியான கிழவி ஒருத்தி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள் ஒரு நாள். புது நாட்டுப் பெண் அல்லவா நான்? என்னை நமஸ்கரிக்கச் சொன்னார்கள். நான் வணங்கிய போது அந்த பாட்டி, “சீக்கிரமே பிள்ளைக் குழந்தை பிறக்கட்டும்” என்று தன் பொக்கை வாயைக் காட்டி ஆசீர்வதித்தாள். எங்கே அவள் வாக்குப் பலித்து விடுமோ என்று பயப்படுவது போல் இருந்தது. பட்டு அடுத்தாற் போல் கூறிய வார்த்தை.

“மேலே மேலே அகமுடையானுக்குச் சம்பாதனை உயரட்டும் என்று ஆசீர்வாதம் பண்ணுங்கள் பாட்டி. முதலில் அதுதான் வேண்டும்” என்றாள்.

அவளுக்கு முத்தாய்ப்பு வைப்பது போல் என் மாமியார். “ஆமாம்! இது ஒன்றும் பிறக்காத குடும்பம் இல்லை. அங்கும் சரி, இங்கும் சரி இப்போதைக்கு என்ன? நாலைந்து வருஷங்கள் போகட்டுமே” என்றாள்.

இந்தக் கபடற்ற கிராம ஜனங்களுடன் அவர்கள் மனப்பான்மையை ஒப்பிட்டுப் பார்த்து நான் பெருமூச்செறிந்தேன்.

வெகு நாட்களுக்குப் பிறகு அப்பாவுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு அம்மாவின் கையால் பக்குவம் செய்த உணவைப் புசித்த போது எனக்கு அமுதம் உண்ணுவது போல் இருந்தது. வேலை ஏதும் இல்லாமல் அங்கே போவதும் இங்கே இரண்டு வார்த்தைகள் பேசுவதுமாகத் துள்ளித் திரிந்த போது, அதுவரை கண்டறியாத மகிழ்ச்சியைக் கண்டேன். சுசீலா, சுசீலா என்று அங்கேயுந்தான் அடிக்கு ஆயிரம் தடவை கூப்பிட்டார்கள். ஆனால் இந்த வீட்டிலே அதே சுசீலா என்ற வார்த்தைகள் இதுவரை ஒலித்திராதபடி அத்தனை இன்பமாக அல்லவோ ஒலித்தது.

அடுத்த வீட்டுச் சங்கீத வாத்தியாரம்மா சரளா சொன்னாள் ஒருநாள்: “உன் அப்பா ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு சுசீலாவாவது கூப்பிடாமல் இருக்க மாட்டார். ‘அம்மா, சுசீலா கொஞ்சம் தாகத்துக்குத் தண்ணீர் கொண்டு வருகிறாயா?’ என்பார். இல்லாவிட்டால், ‘ஆபீஸ் பையன் வருவான்; கட்டுகளை எடுத்துக் கொடுத்து விடுகிறாயா சுசீலா?’ என்பார். நான் வெகு நாட்கள் வரை உன் அம்மா பேர் தான் சுசீலாவாக்கும் என்று நினைத்திருந்தேன். அப்புறந்தான் மாமி ஒரு நாள் சொன்னாள்” என்று நகைத்தாள்.

இதைக் கேட்கும் போது என் நெஞ்சு நெகிழ்ந்து விட்டது. இப்படி என்னிடம் உவமை கூற முடியாதபடி அன்பு பூண்டிருக்கும் பெற்றோருக்கு, நான் கணவன் வீட்டில் லட்சிய வாழ்க்கையில் மிதந்து கொண்டிருக்கிறேன் என்று பெருமிதம் கொண்டு மகிழ்ந்து போயிருக்கும் பெற்றோருக்கு, என் அவல வாழ்வு தெரிந்தால் எத்தகைய அதிர்ச்சி உண்டாகும்? சுவர்க்க போகத்தில் திளைத்துக் கொண்டு இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பவர் முன்பு ஆயிரமாயிரம் குட்டிப் பிசாசுகளும், கரும்பூதங்களும் தோன்றி நெருக்கினால் எப்படி இருக்கும்? அவர்களுக்கு அளிக்கும் கைம்மாறு?

மனப்பெட்டியை உடைத்து அம்மாவிடம் கதற வேண்டும் என்ற தாபத்துடன் அங்கு அடி எடுத்து வைத்த எனக்கு தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளும், அவர்களுடைய மனப்போக்கும் நான் அவ்விதம் செய்வது சரியா என்ற யோசனையைக் கொடுத்து விட்டன.

அவளால் எப்படிப் பரிகாரம் தேட முடியும்? இன்னும் உண்மையை உள்ளபடி உரைத்தால், அம்மா என் மேலேயே குற்றம் சாட்டுவாளோ என்னவோ? எனக்குள்ளேயே இன்னும் எவ்வித நிர்ணயமும் இருக்கவில்லையே.

ஒருபுறம் சிந்தித்துப் பார்த்தால் தவறு என் மீதும் உண்டு எனவே பட்டது. யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு கெட்டது போல என் ஜீவனற்ற இன்றைய வாழ்வுக்கு என்னுடைய அன்றைய படபடப்பும் காரணமாகத்தானே இருக்கிறது? அன்றிரவு தான் எத்தனை ராட்சஸியாக நடந்து கொண்டேன்! அவருக்கு மட்டும் மனம் புண்படாதா? ரோசம் இருக்காதா? அன்புப் பிச்சை கேட்டு வந்தவரை வெருட்டித் துரத்தினேனே! ஆனால்... ‘பெண் புத்தியே பேதைமை நிறைந்தது’ என்பது என் விஷயத்தில் எத்தனை நிதரிசனமாகி விட்டது! தவறுக்காக உள்ளூற உருகிப் போகும் என்னைக் குற்றம் செய்து விட்ட குழந்தையைத் தண்டிப்பதைப் போல் உடனேயே ஏதாவது தண்டனை கொடுத்து விட்டு அவருடையவளாக அங்கீகரித்திருக்கக் கூடாதா? வெளியிலே யாரும் வித்தியாசமாக நினைக்காதபடி, ‘சுசீ, சுசீ!’ என்று அன்பொழுகத்தான் கூப்பிட்டார். அப்பாவுடன் ஊருக்கு வரும்போது பிறர் வியக்கும்படி பிரிவில் குறைவு காணும்படிதான் பேசினார். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அவர் ஒரேயடியாக அல்லவோ மாறிவிட்டார்? “தொட வேண்டாம் என்னை!” என்று திருநீலகண்டர் மனைவி போல நான் சொன்னதை வைத்துக் கொண்டு ஆணையாக நடக்கிறாரே!

மந்திரவாதியின் கைக்கோலைப் போல் என் போன்ற வெகுளிப் பெண்களை மனக்குறளி ஆட்டி வைக்கிறது. திசை விட்டுத் திசை பாய்ந்து ஓர் இடத்திலே ஸ்திரமின்றி அலைபாயும்படி செய்து விடுகிறது. என் மீது தவறு கண்டு ஒரு புறம் குத்தினால், இன்னொரு புறம் அவரது தப்பை எடுத்துச் சொல்லத் தயாராக வாதம் காத்திருக்கும்.

உண்மையிலே அவருக்கு என் மீது கரை காணாக் காதல் இருந்தால் ஏதோ ஆத்திரத்தில் இரண்டு வார்த்தைகள் கூறினேன் என்பதைக் கொண்டு தனிமையில் என்னிடம் முகம் கொடுத்துப் பேசாமலா இருப்பார்? தனிமையிலே என்னைக் கண்டு விட்டாலோ ஏதோ கர்ணனைக் காணும் குந்தி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது போலத் தம் அழுத்தமான உதடுகளை இறுகப் பொருத்திக் கொண்டு வைத்த கண் இப்புறம் அப்புறம் மாறாமல் அந்தப் பாழாய்ப் போன காரியாலயக் காகிதங்களில் ஒரேயடியாய் லயித்து விடுகிறாரே; என் மீதுள்ள அன்பால் பாகாய் உருகி நைந்த மனம் இப்போது ஒரேயடியாய் நெக்குவிடாப் பாறையாகி விடக் காரணம் என்ன? அவ்வளவு மாபெரும் குற்றமா நான் செய்தேன்? நான் வெகுண்டு விழுந்ததிலும் ஒரு விதத்தில் நியாயம் இருக்கவில்லையா? காதலுக்கு மதிப்புக் கொடுப்பவர், பெண்மையின் சுதந்திரத்தைப் போற்றுபவர் என்றெல்லாம் கனவு கண்டிருந்த என் முன் அவரே சுதந்திரமற்று நடத்தும் வாழ்க்கைக்கு நானும் ஒன்றிப் போக வேண்டும் என்று என்னை நிர்ப்பந்தப்படுத்துவது போல் நடந்து கொண்டால் எனக்கு ஏற்பட்ட அளவில்லாத ஏமாற்றத்தில் வெருட்சி தோன்றியது எவ்வாறு தவறாகும்? அண்ணன், மதனியிடம் அவருக்கு அவர்கள் என்ன செய்தாலும் சரியாகத் தோன்றட்டும். ஆனால் என்னை தன் இருதயத்தில் வைத்துப் போற்றுவதாக அலங்கார வார்த்தைகள் கூறியவருக்கு, என்னை அவர்கள் வேலைக்காரிக்குச் சமமான அந்தஸ்தில் நடத்துவது ஏனோ கண்களில் படவில்லை? காதலை விட நன்றியுணர்ச்சி தானே அதிகமாக அவர் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறது? சிந்தித்துப் பார்த்தால் நான் நடந்து கொண்ட விதம் சரியே ஒழியத் தவறே இல்லையே!

மாபெரும் இலக்கியக் கடலிலே முழுகி ஆராய்ச்சிகள் நடந்துபவனைப் போன்று முடிவு காணாத என் போராட்டங்கள் என் குறைகளைப் பெற்றவளிடம் உடைத்துக் கூறப் போதிய துணிவில்லாமல் ஆக்கிவிட்டன. தாயன்பின் தாளடியிலே மனப் புண்ணுக்கு மருந்து தேடலாம் என்று எண்ணிக் குதூகலத்துடன் புறப்பட்டு வந்த எனக்கு மனப்புண் அதிகமாக வீங்கி வேதனை கொடுத்ததே ஒழிய அதை உடைத்துவிட நடுக்கமாக இருந்தது. உள்ளே ஜுரத்தை வைத்துக் கொண்டு, வெளியே தெரிந்தால் தாய் படுக்கையில் கிடத்தி விடப் போகிறாளே என்று பயந்து வெளியே கள்ளமில்லாதது போல் நடமாடும் குழந்தை போல நானும் மேலுக்குச் சிரித்துப் பேசினேன்.

அடுத்த வீட்டுச் சரளாவையும் என்னையும் சங்கீத ஞானம் நட்புக் கயிற்றால் பிணைத்தது. அவளுக்கு அவ்வளவாகக் குரலினிமை இல்லை. ஆனால் தேர்ந்த சாதகத்தாலும் தெளிந்த ஞானத்தாலும் அந்தக் கலை அவளிடம் ஒளியுடன் விளங்கியது. என் குரலினிமையைக் கண்டு அவள் வியந்தாள். “இவ்வளவு அரிய கலையைக் கற்றுக் கொண்டு அலட்சியமாக இருக்கிறாயே. உன் சாரீரம் யாருக்கும் கிட்டாத பாக்கியமாக்கும்? தொடர்ந்து சாதகம் செய்தால் கலையுலகிலே நீ எப்படிப் பிரகாசிப்பாய், தெரியுமா?” என்று என்னுள்ளே ஆசையைத் தூண்டி விட்டாள். நான் அங்கிருக்கும் போதே அவள் ஒரு நாள் வானொலி நிலையத்துக்குச் சென்று பாடி விட்டு வந்தாள். அம்மா, நான், அவள் தாய் மூவரும் அதைத் தாசில்தார் வீட்டு ரேடியோவில் போய்க் கேட்டு வந்தோம். அப்போது எனக்கு, ‘நாமும் இம்மாதிரி ஒரு நாள் பாடுவோமா? பாடினால் திடீரென்று அவர் வியக்கத்தக்க விதமாக வானொலிப் புத்தகத்தில் “சுசீலா ராமநாதன்” என்ற பெயரைப் பார்த்தால் எப்படி இருக்கும்!’ என்ற புதுக் கற்பனைகள் மனத்தில் எழுந்தது. எனக்கு அநுசரணையாக இருந்த சரளாவின் உதவி கொண்டு நான் என் பழைய வெறுப்பையும் மனநோவையும் மறந்து புது முயற்சியில் ஈடுபடலானேன். நாளடைவில் என் நெஞ்சில் குடி கொண்டு வாதனை கொடுத்த அவரைப் பற்றிய, என் எதிர்காலப் பிணைப்பைப் பற்றிய, எல்லா நினைவுகளும் மெல்ல மெல்ல அமுங்கி, அந்த இடத்தில் என் புது லட்சியம் முன் வந்து நிற்கலாயிற்று.

இந்த நிலையில் தான் அப்பா ஒரு நாள் எனக்கு ஒரு கடிதம் கொணர்ந்து கொடுத்தார். ‘சுசீலா ராமநாதன்’ என்ற அந்த அச்சுப் போன்ற கையெழுத்தைத் தாங்கிய கடிதத்தை அதற்கு முன் அதே வீட்டில் நான் பெற்றுக் கொண்ட போது என் இருதயம் ஒளிமதியைக் காணும் கடல் போலப் பொங்கிப் பூரித்ததே; அப்போது எல்லையற்ற ஆனந்தத் துடிப்பினால் நடுங்கிய கைகள் இப்போது இனமறியாத அச்சத்தாலும் குழப்பத்தாலும் நடுங்கின. அந்த உறைக்குள் அப்பாவுக்கு ஒரு கடிதமும் எனக்கு நாலே வரிகள் கொண்ட ஒரு கடிதமும் அடங்கியிருந்தன. “பிரியமுள்ள சுசி! கோடைக்கு அண்ணா, மதனி முதலிய எல்லோரும் ஊட்டிக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருக்கிறோம். ஆதலால் இந்தக் கடிதம் கண்டவுடனே அப்பாவைக் கொண்டு வந்து விடச் சொல். தனியாக அவருக்கும் எழுதியிருக்கிறேன். சாக்குப் போக்கு எதுவும் கூறிக் கொண்டு வராமல் இருந்து விடாதே. ராமு.”

இதுதான் அந்த ஆங்கிலக் கடிதத்தின் சாராம்சம்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெருமை பிடிபடவில்லை. ஏதோ நான் ஒரு மகாராஜாவுக்கு வாழ்க்கைப்பட்டு மகாராணியாக ஆகிவிட்டது போல் அவர்கள் உச்சாணிக் கொம்பில் பறந்தார்கள். ஆனால் மலைவாசம் அநுபவிக்கப் போகும் மகாராஜாவுக்கும் மகாராணிக்கும் கையாளாக இருக்கத்தான் என்னை அழைக்கிறார்கள் என்ற உண்மை எனக்கல்லவோ தெரியும்?

மாப்பிள்ளையின் உத்தரவைச் சிரமேல் தாங்குவது போல் அவர்கள் என்னைக் கொண்டு விட உடனே யத்தனம் செய்தது எனக்குக் கவலையை ஊட்டியது. அன்றிரவு என் அன்னையிடம் அந்தரங்கமாகப் பேச்சைத் துவக்கினேன். “அம்மா, இப்போது என்னை ஒன்றும் கொண்டு விட வேண்டாம்; இன்னும் இரண்டு மாசம் இருக்கிறேனே” என்றேன்.

என் முகத்தை அவள் ஆச்சரியம் குலவும் விழிகளால் ஏறிட்டுப் பார்த்தாள். “அப்படிச் சொன்னால் நன்றாக இருக்குமா சுசீலா! அவர் ஆசையுடன் அழைத்திருக்கிறார். இன்னும் இரண்டு மாசம் வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வது முறையா?” என்றாள்.

“இல்லை அம்மா, எனக்கு அங்கே போகவே பிடிக்கவில்லை. ஏன் போக வேண்டும் என்றிருக்கிறது” என்றேன் நான், மெதுவாக மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு.

“அழகாய்த்தான் இருக்கிறது. பிறந்த வீட்டிலிருந்து புருஷன் வீடு போக வேண்டும் என்று நினைத்தால் முதலில் அப்படித்தான் இருக்கும். அசடு மாதிரி எதாவது பேசாதே. அவர் என்ன நினைத்துக் கொள்வார் அப்புறம்; நியாயம் தவறி நாமும் போகக்கூடாது பார்!” என்றாள் அவள்.

நான் இன்னமும், “வந்து... இல்லை அம்மா எனக்கு அங்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நானே எல்லா வேலைகளும் செய்ய வேண்டும். என் மாமியாருக்குப் பெரிய மாட்டுப் பெண் தான் அருமை. அவள் வைத்ததுதான் சட்டம். அதற்காகவே என்னை இப்போது அழைக்கிறார்கள்” என்று திருப்திப்படாத சிறுமி போல முணுமுணுத்தேன்.

“வெகு சமர்த்துதான் பெண்! வெளியே சொன்னால் வெட்கக்கேடு! என்னடி கஷ்டம் அங்கே? புக்ககம், பெரிய குடும்பம் என்றால் வேலையில்லாமல் பொறுப்பில்லாமல் திரிந்து கொண்டிருக்க முடியுமா? பெண்ணாய்ப் பிறந்தவள் புருஷன் வீட்டில் ஆடி ஓடி உழைக்கத்தான் வேண்டும். ஜகதுவைப் பார். மாடு, சாணி, சகதி என்று உழலும் போதே புக்ககம் போக மாட்டேன் என்று சொல்ல மாட்டாளே. வந்து பத்து நாட்கள் ஆவதற்குள் துடித்து விடுவாளே. மாப்பிள்ளை கொள்ளை ஆசைப்பட்டுக் கொண்டு எழுதியிருக்கிறார். நீ இங்கே குறளி பண்ணிக் கொள்! முரண்டு கிரண்டு பண்ணி இதற்கெல்லாம் பச்சைக் குழந்தை போல் பிடிவாதம் பிடிக்கலாம் என்று நினைத்துப் பேசாதே சுசீ. அண்ணன் தம்பி என்று இந்த நாளில் இப்படி வித்தியாசம் இல்லாமல் இருக்கிறார்களே என்று நாங்கள் எவ்வளவோ சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். நீ போன மறுநாளே எக்கச்சக்கமாக ஏதாவது சொல்லிக் கொண்டு எங்கள் பேரைக் கெடுத்து விடாதே, ஆமாம்!” என்று என் பேரில் கோபம் கொண்டு அவள் எச்சரித்தாள்.

மாப்பிள்ளை பேரில் உள்ள நல்ல அபிப்பிராயம் என்னைக் கூட நம்ப முடியாதபடி அவ்வளவு தூரம் பசுமரத்தாணி போல் அவர்கள் மனத்தில் உறைந்து போயிருக்கிறதே. அதை நான் எப்படி நெகிழச் செய்வேன்? அப்படி முயன்றும் எனக்கேயன்றோ சாட்டை அடி விழுகிறது? முதலிலேயே என் மீது அம்மா அநுதாபம் கொள்ளாத போது, என் கணவருக்கும் எனக்குமுள்ள உறவை நான் வெளியே சொன்னால் என்னை நம்புவாளா? இன்னும் அசட்டுப் பட்டந்தான் கிடைக்கும்.

அத்தனை நல்ல பிள்ளையாகத் தோன்றி அப்பாவிடம் நல்ல பெயர் சம்பாதித்து விட்ட அவர் மீது என் சீற்றம் அளவிட முடியாதபடி பெருகியது. மேலுக்கு மட்டும் அன்புள்ளவர் போல நடக்கும் அவர் மனத்திலே உண்மையாக என்னதான் இருக்கும்?

என்னவோ பெண்ணுள்ளம் புரியாதது, புரியாதது என்று கதாசிரியர்களும் மன ஆராய்ச்சியாளர்களும் கதைக்கிறார்களே, இந்த ஆணுள்லத்தைப் போலப் புரிந்து கொள்ள முடியாத பொருளே கிடையாது என்று எனக்கு அநுபவபூர்வமாகத் தெரிந்தது. நிலைக்கு நிலை மாறும் என் சஞ்சல உள்ளம் கொண்டு அவருடைய இருண்ட குகை மனத்தைக் கண்டு கொள்ளவே முடியவில்லை!

குழந்தைப் பிடிவாதம் செய்கிறேன் என்று அம்மா அலட்சியமாக எண்ணி அதட்டிவிட்ட போதிலும் என் தைரியம் குன்றவில்லை. தளர்ச்சி அடையாமலே, “அம்மா, நீ நினைக்கும்படி நான் குழந்தைப் பிடிவாதம் செய்யவில்லை. நீ அப்படி, இப்படி என்று புகழ்ந்து கொள்ளும் மாப்பிள்ளையைப் போல் இரும்பு நெஞ்சம் படைத்த மனிதர்கள் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டார்கள். அண்ணா, மதனி இட்டதுதான் அவருக்கு ஆணை. அன்பில்லாத அந்த வீட்டிலே என்னால் இனிச் சிறை வாசம் அனுபவிக்க முடியாது அம்மா!” என்றேன். கண்ணீர் துரத்திக் கொண்டு வந்தது.

“என்னடி சுசீலா இது? நீ எத்தனையோ சமர்த்தாக இருக்கிறாய் என்று மகிழ்ந்து போனேனே நான். அப்பாவானால் ஒரே மாட்டாய், நம் பெண்ணைப் போல உலகிலேயே யாரும் இருக்க மாட்டாள் என்று ஆகாசத்தில் பறந்து கொண்டிருக்கிறார். நீ தலையிலே கல்லைத் தூக்கிப் போடுவது போலல்லவோ சொல்கிறாய்? அன்பில்லாதவனா இப்படி ஒரு மாசம் ஆனதும் கடிதாசு போடுவான்? குடும்பத்தில் இருப்பதென்றால் ஏறவும் தாழவுந்தான் இருக்கும். இதைக் கூடச் சகித்துப் போகாமல் இங்கே இருப்பேன் என்று நீ சொல்வது அழகாயிருக்கிறதாடி சுசீ? அப்படியே கஷ்டப்படுத்தினால் கூட முதல் முதலில் தாழ்ந்து போவதுதான் பெண்களுக்கு அழகு. கொண்டு கொடுத்துச் சம்பந்தம் செய்து பேரன் பேத்தி எடுத்தாச்சு. இப்போது கூட உன் அத்தை பாட்டி என்ன அலட்சியம் பண்ணினாலும் நான் நேருக்கு நேர் என்ன சொல்ல முடிகிறது? போனதும் போகாததுமாக அண்ணா, மன்னி இட்டதுதான் ஆணை என்று நீ சொல்ல முடியுமோ? பொறுமை வேண்டாமோ? கெட்ட பெயர் சம்பாதிக்க நேரமாகாது. நல்ல பெயர் வாங்கத்தான் நாளாகும். வெளியே வாசலில் போய் வரும் புருஷன் சமயத்தில் கோபித்துக் கொள்வான். ஏன்? அடிக்கிறவன் கூட உண்டு. தணிந்துதான் போக வேண்டும். உனக்கே பதற்றம் எப்போதும் அதிகம். அதை நான் சொல்லும் போது உனக்குக் கோபமாக வரும். அத்தை இரண்டு புடவை வாங்கிக் கொடுத்தாளாம். நீ அதை முகத்தில் அடித்தாற் போல் அந்தப் பையனிடம் பொய்யும் புளுகும் சொல்லித் திருப்பி அனுப்பினாயாமே; பெரியவர்கள், பெருந்தலை என்று நாங்கள் இருக்கும் போது நீ செய்த அதிகப் பிரசங்கித்தனம் என் தலையில் அல்லவா வந்து விடிகிறது? இந்த மாதிரியில் தானே நீ அங்கேயும் நடந்து கொண்டிருப்பாய்?” என்று அம்மா பழைய குப்பைகளை எல்லாம் கிளறிவிட்டு எனக்கு இதோபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டாள். என்னிடமுள்ள குற்றங் குறைகளைச் சுட்டிக் காட்டி.

நான் என்ன செய்வேன்? என்றென்றும் சுயேச்சையாக, தாய் தந்தையாருக்குச் செல்லப் பெண்ணாக, அந்த வீட்டிலேயே நடமாடும் பெண்ணாக நான் இருந்திருக்கக் கூடாதா? மண வாழ்வு எனக்கு மனவேதனை நிறைந்த துன்பச் சிறையாகப் போய்விட்டதே. ஆகா! அந்த ஒளியில்லா வானம், ஜயத்தின் பாட்டு எல்லாம் என் வருங்காலத்தை எப்படி அறிவித்திருக்கின்றன! அந்தக் கனவு அன்புக் கரங்கள், பயங்கர உருவம், பேய்ச் சிரிப்பு - இவையெல்லாம் எவற்றின் அறிகுறியோ? உதட்டிலே அமுதமும் உள்ளத்திலே... என்ன இருக்குமோ?

வீட்டுக்கு வேலை செய்ய ஆள், அவசியம் நேரிட்ட போது இச்சையைத் தீர்த்துக் கொள்ளப் பெயருக்கு மனைவி என்று இருந்திருக்குமோ என்னவோ? ஒன்றன்பின் ஒன்றாக ஓயாது வரும் இந்த ஏமாற்றங்களில் நிலைகுலையவா நான் பெண் பிறந்தேன்?

அலைகடலின் நடுவே புயலில் சிக்குண்ட ஓட்டை மரக்கலம் போல ஆதரவின்றி வாழ்க்கைச் சுழலின் நடுவே அகப்பட்டுக் கொண்டு விட்டேனென்று எனக்குத் தோன்றியது. மூச்சு இருக்கும் மட்டும் போராடும் நோயுண்ட ஜீவன் போல நானும் போராடித்தானே ஆக வேண்டும்? வேறு என்ன வழி?

3-2

“அத்தை வீட்டுக்குள் இனி அடி எடுத்து வைக்கக் கூடாது” என்று சங்கற்பம் செய்து கொண்டேனே, அது தவிடு பொடியாகும் காலமும் வந்தது. புதுவாழ்வின் சுழற்சியிலே உல்லாசமாக மிதக்கப் போகிறோம் என்ற முறுக்கிலே விறைத்து நின்ற காலம் அது. எந்தச் சின்ன வார்த்தையும் பதம் படாத நெஞ்சைக் கடித்தது. பதமிலா மனத்துக்கு வாழ்வானது பாடம் கற்பிக்கும் தினுசே அலாதிதான். எந்த விஷயத்தில் விறைப்பாக நின்றதோ அதிலேயே பணிந்து போகும்படி சாட்டையடி கொடுத்தாற் போலச் சம்பவங்களைக் கொணர்ந்து விட்டு விடுகிறது. வலுவிலேயே அத்தை வீடு செல்லும் நிலைமை எனக்கு வந்தது.

“இங்கிருந்து காரிலே நேராக ஊட்டிக்குப் போவதை விட பெங்களூர் மைசூர் வழியாகப் போகலாமே? நேர் ரோடு அவ்வளவு சுகம் இல்லை” என்று ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தார் என் கணவர்.

எனக்கு அப்போதே பகீர் என்றது.

“மைசூரில் ஒரு வாரம் தங்கிப் பார்த்துவிட்டுப் போகலாம். சுசீலாவுக்கு அத்தை வீடு இருக்கிறது அங்கு. கல்யாணத்தின் போதே வருந்தி வருந்தி அழைத்திருக்கிறாள்” என்று பட்டு புன்னகையுடன் அதை ஆமோதித்தாள்.

வீட்டின் ராணியாயிற்றே அவள்! அவள் அபிப்பிராயத்துக்கு ஏதாவது வெட்டு வருமா என்ன?

லீலா எங்களுடன் வருவதாகத் தெரியவில்லை. ஏனோ என்று நான் சங்கடப்பட்ட போது என் கணவர், “ஏன் லீலா நீ தானே முக்கியமாக வர வேண்டியவள்! வரதனுக்கு ஏற்கனவே நீ வரமாட்டாயோ என்ற கவலை போலிருக்கிறது. ‘லீலாவுக்கும் பரீட்சை முடிந்திருக்கும் என எண்ணுகிறேன்’ என்று நாசுக்காகக் கோடி காட்டியிருக்கிறான். அவனுக்கு அவ்வளவு ஏமாற்றத்தையா கொடுப்பது?” என்று கேட்ட பின் தான் அவள் வர இஷ்டப்படாததன் விஷயம் புரிந்தது எனக்கு. “முதன் முதலாகப் பங்களாவுக்குள் மணப்பெண்ணாகக் காலெடுத்து வைக்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கலாம். அதை இப்போது கெடுப்பானேன்?” என்று அவளைக் கேலி வேறு செய்தார் மைத்துனர்.

எதிராளியின் மனத்தை அறியாமல் பரிகாசப் பேச்சுப் பேசும் போது பெரிய பரிசளித்து விட்டதாகச் சந்தோஷத்துடன் பெருமைப்படுகிறார்கள். ஊரிலே என்னை எல்லோரும், ‘வெறுமே வரவில்லை’ என்று வயிற்றெரிச்சலைக் கிளப்பி விட்டபோது நான் என்ன பாடுபட்டேனோ, அதே நிலையில் லீலா துடித்தாள் என்பது எனக்கு மட்டும் புரிந்தது.

எங்கள் வருகையை அத்தை, அத்திம்பேர், பாட்டி எல்லோருமே ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது.

“அந்த மேனாமினுக்கு ஆட்டி வைத்து விடுவாள்” என்று பட்டுவுக்குப் பட்டம் கொடுத்த அத்தை அவளுடன் குழைந்து குழைந்து பழகினதையும், பட்டு இழைந்து இழைந்து உறவாடியதையும் கண்டு நெஞ்சில் ஒன்றும் நாவில் ஒன்றும் வைத்துப் பேசுவதைக் கலையாகப் பயின்றிருக்கிறார்களோ அவர்கள் என்று கூட நான் பிரமித்துப் போனேன். ஹேமா அந்த ஏழெட்டு மாதங்களில் புது ஆளாக மாறி இருந்தாள். அவள் நடை, உடை, பேச்சு, சிரிப்பு எல்லாவற்றிலும் கல்லூரி மாணவி என்ற முத்திரை இருந்தது. கர்வமும் மிடுக்கும் ஏறியிருந்தன. முன்பு, ‘சுசி, சுசி!’ என்று குழைந்த அவள் இப்போது அவ்வளவாக லட்சியங்கூடப் பண்ணவில்லை. ஆமாம்! ஓரகத்தியின் கைக்குழந்தைக்குப் பால் புகட்டுவதும் தூங்க வைப்பதும் பணிவிடை செய்வதுமாக, என் புடவையிலும் தலையலங்காரத்திலுங்கூடக் கவனம் செலுத்தாதவளாகச் சுற்றிச் சுற்றி வந்த நான் அவள் கண்களுக்கு வேலைக்காரியைப் போல் தென்பட்டிருக்கலாம். பட்டுவின் கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நான் அலைவதைப் பார்த்த வெங்கிட்டு கூட, “என்ன சுசி, இப்போதே ஒரே அம்மாமியாக ஆகிவிட்டாயே!” என்றான்.

தனக்குச் சரிசமமான அந்தஸ்துடையவர்கள் என்று அத்தை பட்டுவிடம் புதுப்புது நகைகளையும் புடைவைகளையும் பற்றிப் பேசினாள். தன் வீட்டில் உள்ள சாமான்களையும் பணம் பெற்ற பண்டங்களையும் அவளிடம் காண்பித்து அபிப்பிராயம் கேட்டாள். நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்க, அவர்கள் வேடிக்கையாக ஊர் சுற்றினார்கள். உற்சாகம் மேலிட்ட அத்தை, “இன்னும் பத்து நாள் நீங்கள் இருந்து விட்டுப் போகலாம். அப்புறம் இந்தப் பக்கம் எப்போது வரப் போகிறீர்கள்?” என்று கூட உபசரித்தாள்.

அப்பப்பா! இந்தப் பணத்துக்கு இத்தனை மதிப்பா? ஆண்கள் சமூகத்தில் இத்தனை ஏற்றத் தாழ்வுகள் இருப்பதாக எனக்குப் படவில்லை. பெண்கள், முக்கால்வாசி நடுத்தரப் பெண்கள், நகையாலும் புடவையாலுமே மதிப்பை அளவிடுகிறார்கள். என்னுடைய அத்தைக்குப் பட்டுவிடம் உள்ள மதிப்பு அவளை விட நெருங்கிய சம்பந்தம் உள்ள அம்மாவிடம் இருக்குமா? டாலடிக்கும் வைரமும், சரிகை நெளியும் பட்டும் அவளிடம் ஏது? மஞ்சள் சரட்டுடன் நூல் புடவையுடனும் என் தாய் இந்த வீட்டுக்கு வந்தால் எத்தகைய மரியாதை கிடைக்குமோ? ஏன்? அத்தைதான் ஆகட்டும், ‘குழந்தை அப்போதே வந்தாள், ஓரிடமும் பார்க்கவில்லை’ என்று என்னை அழைக்கவில்லை. பட்டுவை ஒரு நிமிஷம் வீட்டிலே தங்க விடாமல் அழைத்துப் போவானேன்?

ஊமைக் காயமுற்றிருந்த இருதயத்தில் சுரீரென்று சாட்டையடி கொடுப்பது போல் அன்று கீழே குளித்து விட்டுப் புடவை தோய்த்துக் கொண்டிருந்த என்னிடம் அத்தை, “இந்தப் புடவையைக் கட்டிக் கொள்கிறாயா? எங்கே குப்பையில் போட்டு விட்டாயோ என்று எண்ணினேன்” என்றாள்.

‘குழந்தைப் பெண் தெரியாமல் செய்து விட்டாள், நாமும் பேசிய முறை தவறு தான். பாவம்! இன்னமும் ஓரகத்தியின் குழந்தையை வைத்துக் கொண்டு உழலுகிறாளே’ என்று என்னிடம் அநுதாபம் தோன்றக் கூடாதா?

பாட்டிக்கு என்னிடம் தோன்றிய அநுதாபமே விசித்திரமான முறையில் இருந்தது.

“ஏண்டி பெண்ணே இந்தக் கண்ணாடிக்கல் தோட்டைப் போட்டுக் கொண்டு அவர்களுடன் நடமாடுவது பார்க்க நன்றாக இல்லையே. உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏன் இதெல்லாம் தெரியவில்லை? இல்லை, அகமுடையானிடம் கேட்டுத்தான் நல்லதாகத் தோடு ஒன்று வாங்கி இட்டுக் கொள்ளக் கூடாது? என்னவோ? விடிய விடிய உன் அப்பாவும் சம்பாதிக்கிறான். அக்கா, தங்கை என்று பற்றிக் கொள்வதைத் தவிர காலணாக் கொடுக்கவில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி விட்டான். காது மூக்குக்கூட ஒக்கிடாமல்!” என்று என்னைப் பார்க்கச் சகிக்காமல் அலுத்துக் கொண்டாள்.

ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கும் செல்வருடைய அருமைப் பெண் அல்லவா ஹேமா? காதிலே மாட்டியிருந்த தேர்ச்சக்கரம் போன்ற கொப்பும், கொழுக்கட்டை போன்ற மொண்ணை மூக்கும், மொட்டைக் கைகளும் பாட்டிக்குப் பார்க்கப் பெருமையாக இருந்தன! பணக்காரர்கள் என்ற முத்திரையினால் தலைகீழாக நின்றாலும் அரை நிர்வாணமாக ஆடை அணிந்து கொண்டாலும் நாகரிகமாகப் பட்டு விடுகிறது. நான், இருப்பதைக் கொண்டு அடக்கமாக இருந்தது. இல்லாமையைப் பறையடிக்கும் தோற்றமாகப் பட்டது!

பெண்கள் என்னவோ முன்னேறுவதாகவே சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்தப் புடவை நகை மனப்பான்மை மட்டும் பதினெட்டாம் நூற்றாண்டுப் பெண்களிடத்திலும் இருபதாம் நூற்றாண்டுப் பெண்களிடத்திலும் பெரும்பாலும் ஒரே தன்மையாகவே தான் தோன்றுகிறது. காறையாகவும் காசு மாலையாகவும் இருந்தவை வேறு பல உருவங்களாக அவதாரம் எடுத்திருக்கின்றன. அவ்வளவுதான். இல்லாவிட்டால் அத்தைக்கும் எனக்கும் இடையே இத்தனை பெரிய பிளவு தோன்றுவானேன்? என்னிடம் அழகில்லையா? அறிவில்லையா? குணத்திலுந்தான் என்ன குறைந்து விட்டேன்? இந்த பட்டுதான் என்னை இப்படித் தாழ்வாக நடத்துவாளா? ஹேமா எனக்குப் பதிலாக இங்கே வாழ்க்கைப்பட்டிருந்தால், ‘குழந்தை அழுகிறதே, கொஞ்சம் எடுத்து ஹார்லிக்ஸ் கொடுக்கிறாயா?’ என்று பட்டு சொல்ல முடியுமா?

அன்று வெற்றிலையைச் சுவைத்துக் கொண்டு உல்லாசமாக உட்கார்ந்திருந்த அத்தை பட்டுவிடம், “இந்த வருஷம் அநேகமாக எங்கள் ஹேமாவுக்குக் கல்யாணம் நடந்தாலும் நடக்கும். ஊட்டியில் இருந்தால் கட்டாயம் நீங்கள் வரவேண்டும். இன்னும் இரண்டு மாசங்கூட இல்லாமலா போகப் போகிறீர்கள்?” என்றாள்.

“அப்படித்தான் நினைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். பள்ளிக்கூடம் திறந்து விட்டால் கூடக் குழந்தைகளை மட்டும் அனுப்பிவிட்டு நான் நாலு மாசம் உடம்பைத் தேற்றிக் கொண்டு போகலாம் என்று எண்ணியிருக்கிறேன். பெண் படிக்கிறாள் போல் இருக்கிறதே; கல்யாணமும் பண்ணி விடப் போகிறீர்களாக்கும்” என்று பட்டு கேட்டாள்.

“படித்தால் என்ன? உறவு தான் பையன். அவனுக்கு இந்த வருஷந்தான் படிப்பு முடிந்தது. கட்டிவிட்டால் கவலை விட்டது, பாருங்கள்!” என்றாள் அத்தை.

‘உறவிலேயா? யார் இருக்கிறார்கள்?’ என்று நான் எண்ணி முடிக்கு முன் பட்டு கேட்டு விட்டாள்.

“நாத்தனார் பிள்ளைதான். இந்த ஊரிலேதான் அவர் யூனிவர்ஸிடியில் புரொபஸராக இருந்தார். கொஞ்ச நாளாக உடம்பு சரியாக இல்லை. அதனாலேயே அவ்வளவு அவசரம். பையன் பட்டணத்திலேதான் எஞ்சினியரிங் வாசித்தான்” என்று அத்தை விளக்கும் வரை எனக்கு மூர்த்தியின் நினைவு வரவேயில்லை.

என்னையும் மீறியவளாக, “மூர்த்தியா அத்தை? தெரியவில்லையா மன்னி? அன்றொரு நாள் புடவை கொண்டு கொடுத்தாரே; அப்புறங்கூட அடிக்கடி வீட்டுக்கு வருவாரே” என்று நான் ஞாபகப்படுத்தினேன். என்றாலும் ஏனோ எனக்கு அப்படிப் படபடக்க வேண்டும்?

அங்கே லீலாவுக்கு வரதன், இங்கே மூர்த்திக்கு ஹேமாவா? லீலாவுக்கு இந்தச் செய்தி தெரிந்தால் எத்தனை வேதனையாக இருக்கும்! பெண் என்றாலும் அவளல்லவா பெண்? அவளுந்தான் படிப்பிலும் அழகிலும் மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் குணத்திலும் மேன்மை பெற்றவள். என்னுடன் பழகி இருந்தும் ஹேமா இப்போது முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறாளே. வெளித் தோற்றத்தை விட்டு, உண்மையான உள்ளத்தைக் கண்டு மதிப்புக் கொடுக்கும் அவளல்லவா உண்மையில் நாகரிகம் அடைந்தவள்? அவளைப் போல் மேக்-அப் ஆடம்பரமும் உடல் தெரியும் ஆடைகளும் இன்றி அடக்கமாக அவள் கல்லூரிக்குப் போய் வரும் அழகு ஒன்றே போதுமே! லீலாவுக்கு இந்தச் செய்தியை நான் தெரிவிக்க வேண்டாமா? அன்பு இல்லாத அந்த வீட்டில் என்னை மகிழ்விக்கும் ஒரே பிராணி அல்லவா அவள்?

ஏன்? என் தாய் கூட அப்போது அன்பிலிருந்து பிறழ்ந்து விட்டதாகத் தோன்றியது. அவள் அநுதாப வார்த்தைகளையும் ஆதரவையும் எதிர்பார்த்திருந்த என் மேல் குற்றத்தை அல்லவோ ஏற்றி வைத்து விட்டாள்? நிதானம் இழந்து விடுவேன் என்று, உள்விஷயத்தை அறியாமலேயே மடக்கி விட்டாளே? அதையும் அறிந்தால் நிச்சயமாக ஊர்ஜிதம் செய்து என்னை இன்னும் எப்படி எல்லாம் கோபித்திருப்பாளோ? புதிதாக ஏதாவது அலங்காரம் செய்து கொண்டால் கண்ணாடியில் கண்டு தனக்குத்தானே, அபிப்பிராயம் சொல்வதைக் காட்டிலும், பிறர் கண்களில் பட்டு அவர்கள் கொடுக்கும் அபிப்பிராயமே உகந்ததாகக் கருதுகிறோமல்லவா? அது போலத்தானோ உள்ளமும்? குழந்தையிலிருந்து வளர்த்து என்னைப் பெரியவளாக்கியிருக்கும் என் தாய்க்கு என் மன இயல்புகள் என்னை விட நன்கு தெரிந்திருக்குமோ? அப்படிப் பார்த்தால், நான் நிதானமின்றி அன்று நடந்து கொண்டு விட்டேன் என்று தானே ஆகிறது? ஒரு துளி விஷம் ஒரு குடம் அமுதத்தையும் விஷமாக்கி விடச் சக்தி வாய்ந்தது போல் என்னுடைய ராட்சசத் தன்மை அவருடைய அத்தனை அன்பையும் முறித்து விட்டிருக்குமோ?

லீலாவிடமிருந்து எப்படியோ சுற்றிச் சுற்றி இந்தச் சஞ்சலத்திற்கே வந்து விட்டேன். குட்டையைக் குழப்பிக் கையை விட்டுத் தேடினால் இன்னமும் கலங்கிப் போகுமே ஒழியத் தேடும் பொருள் அகப்படாது. என் மனத்தை நான் கிளறிக் கிளறி விட்டுக் கொண்டதன் பலன் இன்னும் அதிகான சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தனவே ஒழிய அவர் மனத்தை ஆழம் பார்க்கும் அளவு கோல் எனக்குக் கிடைக்கவில்லை.

லீலாவுக்கு என் சஞ்சலத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. அவள் எனக்கு ஏதாவது பரிகாரம் சொல்லக் கூடும் என்று ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது. என்றாலும் நானாக எப்படிப் பச்சையாக நிலவரங்களை உடைப்பேன்? என்னைப் பற்றி எதுவும் சொல்லிக் கொள்ள வாய் எழாதபடி ஏதோ தடுக்கிறதே!

எல்லோரும் அன்று கண்ணம்பாடி அணைக்கட்டுப் பார்க்கக் கிளம்பினார்கள். கொஞ்சம் தயங்கிய பட்டுவை வெகு சுவாதீனமாக அத்தை, “அணைக்கட்டுப் பக்கம் தண்ணீர்க் காற்று. குழந்தைக்கு ஒத்துக் கொள்ளாது. ஏற்கனவே அதற்கு ஜலதோஷம். மூச்சுத் திணறுகிறது. சுசீலா குழந்தையை வைத்துக் கொண்டு இருக்கட்டுமே. நீங்கள் இந்தச் சமயம் விட்டால் எப்போது வரப் போகிறீர்கள்?” என்று அவளுக்கு இன்னும் தைரியமூட்டும் வகையில் கூறினாள்.

எல்லோரும் போய் விட்டார்கள். வெங்கிட்டு ஊரிலேயே இருக்கவில்லை. ஏதோ விளையாட்டுக் கோஷ்டியுடன் பெங்களூர் சென்றிருந்தான். ஹேமா ‘டென்னிஸ் கிளப்’புக்குக் கிளம்பி விட்டாள். பாட்டி கீழே சமையற்கட்டில் சமையற்காரிக்கு உதவியாக இருந்தாள். நான் மட்டும் அழும் குழந்தையை மடியில் விட்டு ஆட்டியவாறு மாடியில் உட்கார்ந்தேன். மாடிப் படியில் அடியோசை கேட்டது.

“யாரும் இல்லையா?” என்று கேட்டவாறு மூர்த்தி வந்தான்.

“நீங்களா? வாருங்கள். எப்போது ஊரிலிருந்து வந்தீர்கள். அங்கு வீட்டுக்குப் போயிருந்தீர்களா? அவர்கள் எல்லோரும் சற்று முன் தான் அணைக்கட்டுப் பார்க்கச் சென்றார்கள்” என்று விசாரித்து நான் அவனை வரவேற்றேன்.

“நான் இன்று தான் வந்தேன். நீங்கள் எல்லோரும் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று லீலாதான் தெரிவித்தாள். எத்தனை நாட்கள் ஆகின்றன? நீ ஏன் பிருந்தாவனம் பார்க்கப் போகவில்லை? முன்பேயே தான் இந்த ஊருக்கு வந்து இந்த வீட்டையும் ஸ்டேஷனையும் தரிசனம் செய்து விட்டுப் போய்விட்டாய்!” என்று சிரித்த முகத்துடன் கேட்ட மூர்த்தி என்னை உற்று நோக்கினான்.

“அப்போது சௌகரியமில்லை. இப்போது குழந்தை இருக்கிறதே?” என்று பதிலளித்த எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. மீறிக் கொண்டு ஒரு வறட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தேன்.

ஆச்சரியம் விழிகளில் நடமிட அவன் என்னை இன்னும் கூர்ந்து கவனித்தான். நான் தலையைத் தொங்க விட்டுக் கொண்டேன்.

“ராமநாதன் வரவில்லை?” என்று கேட்ட அவன் தொனியிலே சந்தேகம், வியப்பு இரண்டும் கலந்திருந்தன.

“வந்திருக்கிறார்” என்று முணுமுணுத்த நான் தலையை ஆட்டினேன்.

“பின் ஏன் உன்னைத் தனியாக இங்கு விட்டுவிட்டுப் போனார்? ஓகோ! கூட்டத்துடன் இல்லாமல் தனியாகப் போக வேண்டும் என்று...” குறும்புச் சிரிப்புடன் வாக்கியத்தை முடிக்காமலேயே அரைகுறையாக நிறுத்தினான் அவன்.

என் துயரத்தை நெம்புகோல் போட்டு நெம்பி விட்டது போல் ஆயிற்று. விழிக்கடையில் நீர் உந்திக் கொண்டு வந்து விட்டது. குழந்தையைத் தூளியில் போட்டு விட்டு அவன் முகத்தைப் பாராமலே நான் வராந்த ஓரமாகப் போய் நின்று கொண்டேன். மழையில்லாது காய்ந்து கிடக்கும் பயிர் ஒரு சொட்டு நீர் வந்தாலும் விட்டு விடுமா? யாருமே எனக்கு அநுதாபமாக இருக்கவில்லை என்ற ஏக்கம் நெஞ்சை நிரப்பிக் கொண்டிருந்த போது அவனுடைய அநுதாபம் என்னை இளக்கிவிட்டது.

மீண்டும் அவன், “என்ன சுசீலா, முகம் ஏதோ மாதிரி இருக்கிறதே. உடம்பு சுகமில்லையா?” என்று வினவினான்.

“ஒன்றுமில்லை” என்ற என் குரல் எனக்கே தழுதழுத்திருந்தது. அவன் பாராதபடி, திரும்பிக் கண்களில் துளித்திருந்த நீரைத் துடைத்துக் கொண்டேன். பதற்றம் தெரிய, “என்ன விஷயம் சுசீலா? ஏதோ... மனஸ்தாபம் போல...” என்று முடிக்காமலேயே நாவைக் கடித்துக் கொண்டான் மூர்த்தி. நான் அந்த அரை நிமிஷ நெகிழ்ச்சியிலிருந்து சமாளித்துக் கொண்டு விட்டேன்.

“ஏதும் இல்லை. ஆமாம், நீங்கள் லீலாவை என்று பார்த்தீர்கள்? உங்களுக்குக் கல்யாணமாமே?” என்று சட்டென்று பேச்சை மாற்றினேன்.

இந்தச் சமயத்தில் பாட்டி வந்தாள். “மூர்த்தியா வந்திருக்கிறாய்? எப்போது ஊரிலிருந்து வந்தாய்? நீ வந்தது தெரியவே இல்லையே! வெகு நேரமாச்சா என்ன?” என்று விசாரித்தாள்.

“இல்லை, இப்போதுதான் வந்தேன். அவர்கள் யாருமில்லையா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்களும் வந்துவிட்டீர்கள்” என்று அவன் பதில் கொடுத்தான்.

“குழந்தை தூங்குகிறதாடி சுசீலா? கீழே போய்க் கொஞ்சம் பாலைப் பார்த்துக் காய்ச்சி வை” என்று எனக்கு உத்தரவிட்டு அவள் தன் பேத்திக்குக் கணவனாக வரப் போகும் மூர்த்தியிடம் பேச உட்கார்ந்தாள்.

‘சாதாரணமாகத்தான் சொன்னாளாக்கும்’ என்று அப்போது நினைத்தேன். அவள் எண்ணம் பிறகு தான் தெரிந்தது.

“ஏண்டி நீ சிறிசு. அவன் வந்தால் அவர்கள் இல்லை என்று பேசாமல் கீழிறங்கி வந்து என்னிடம் தெரிவிப்பாயா? அவனுடன் வராந்தாவில் நின்று கொண்டு என்ன பேச்சு வேண்டியிருந்தது? புக்ககத்துக்குப் போயும் இது தெரியவில்லையே இன்னும்! அவன் யார், என்ன? இதெல்லாம் நினைப்பில்லையே உனக்கு! என்னவோ உன் அம்மாவும் பெண் வளர்த்து விட்டாள். நியும் புக்ககம் என்று வந்து விட்டாய்!” என்று அன்றிரவு என்னைத் தனிமையில் சமையலறையில் கோபித்துக் கொண்டாள். பந்தடி மட்டையை ஒய்யாரமாக வீசிக் கொண்டு தன்னந்தனியே வெளியே போய்விட்டு வந்த ஹேமா சற்றும் கூச்சமோ நாணமோ இன்றி என் கணவரிடமும் மைத்துனரிடமும் கடகடவென்று சிரித்துக் கொண்டு பேசுவது பாட்டியின் கண்களுக்கு விகற்பமாகப் படவில்லை. வீட்டிற்குள் என் விதியை நொந்து கொண்டு கிடக்கும் நான் மூர்த்தியிடம் இரண்டு வார்த்தை பேசியது விகற்பமாகப் பட்டுவிட்டது! பணம் பண்ணும் வித்தைகளில் இதுவும் ஒன்று போலும்!

3-3

மறுநாள் காலை வாசல் தோட்டத்துக் காம்பவுண்டில் சரத் துணிகளைப் பிழிந்து நான் உலர்த்திக் கொண்டிருந்தேன். மூர்த்தி சைக்கிளைச் சார்த்தி விட்டு உள்ளே வந்தான். “அவர்கள் இதற்குள் எங்கும் போய்விட மாட்டார்கள் என்று வந்தேன். இருக்கிறார்கள் அல்லவா?” என்று கேட்டான். என்னிடம் பாட்டியின் சூடு இன்னும் என் உள்ளத்தில் பச்சையாகவே இருந்தது. எனவே இருக்கிறார்கள் என்ற பாவனையில் தலையை மட்டும் ஆட்டினேன். அவன் உள்ளே சென்றான். சற்றைக்கெல்லாம் அறையில் ஏதோ வேலையாக இருந்த என்னை மூர்த்தி, “சுசீலா!” என்று வந்து கூப்பிட்டான்.

‘இது ஏதடா சங்கடம்?’ என்று எண்ணிக் கொண்ட நான், “என்ன?” என்று கேட்டவாறு திரும்பினேன்.

என் கணவரும் அருகில் நின்றார்.

“நான் சொல்லவில்லையா நேற்று? இன்று என்ன திட்டம் போட்டிருக்கிறார், தெரியுமா?” என்று கேட்டு அவன் சிரித்தான்.

அவரும் நகைமுகத்துடன் தான் மௌனம் சாதித்துக் கொண்டு நின்றார். என்றாலும், முன்பு போல் அவர் விழிகள் என் உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கவில்லை. அவர் புன்னகையிலே இயற்கையான ஜீவன் இருந்ததாக்வே எனக்குப் படவில்லை. மூர்த்தியின் கேள்வியில் மகிழ்ச்சி தாங்காமல் அகம் மலர்ந்து விடவில்லை எனக்கு.

“என்ன திட்டமாம்?” என்றேன் பல்லைக் கடித்துக் கொண்டு.

எங்கள் இருவருக்கும் ஏதோ மனவேற்றுமை இருக்கிறது என்பதை எங்கள் பாவனை அவனுக்குப் புலப்படுத்தியே இருக்கும். நான் என்ன செய்வேன்! அகத்தின் நிலையை முற்றும் மறைத்துக் கொண்டு நடிக்க எனக்குத் தெரியவில்லையே! என்ன தான் நான் முயன்றாலும் அநுதாபம் கிடைக்கும் சமயங்களில் கட்டுக்கு மீறிச் சாயையைத் தெரிவித்து விடுகிறதே முக பாவம்.

“பார்த்தாயா மூர்த்தி? எனக்குத் தெரியும், நான் வந்து அழைத்தால் அவள் வரமாட்டாள் என்று. அதனாலேயே அவள் வழியில் குறுக்கிட வேண்டாமென்று நான் நேற்றுப் பேசாமல் போனேன்” என்றார் அவர்.

இந்த வார்த்தைகளில் எத்தனையோ அர்த்தம் பொதிந்து கிடக்கின்றது என்பது எனக்குத்தானே தெரியும்.

“நீங்கள் கூப்பிட்டீர்கள், நான் வரவில்லை. எப்படியும் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்க வேண்டும். மன்னிக்கு அப்புறம் எப்போது சமயம் வாய்க்குமோ? எனக்கு அப்படியா? நாளைக்கே ஹேமாவுக்குக் கல்யாணம் என்றால் வருவேன். பிரமேயம் இருக்கிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தான் விட்டுக் கொடுத்தேன்” என்று மனத்தாங்கள் எதுவுமே இல்லாதவள் போல நான் சாதாரணமாக பதில் அளித்தேன்.

என்றாலும் அவர் வார்த்தைகள் எனக்கு உள் அர்த்தத்தை அறிவுறுத்தியதைப் போல, அவருக்கு சுரீர் என்று அவருடைய மதனி என்னைப் பாவிக்கும் விதத்தை அறிவுறுத்தியிருக்க வேண்டும்.

நாங்கள் ஏதோ குட்டிச் சண்டை போட்டுக் கொண்டு முகத்தைத் தூக்கிக் கொண்டிருக்கிறோம் என்று மூர்த்தி நினைத்திருக்கிறான். எங்கள் மனத்தாங்கலைத் தீர்த்துச் சமாதானம் செய்து வைக்கும் பெருமை முகத்தில் கொப்பளிக்க அவன், “என்ன சுசீலா? அதற்குள்ளே நீ இப்படிப் பிரமாதமாகச் சண்டை போடுகிறாயே அவரிடம்?” என்று என்னை நோக்கிக் கேட்டுவிட்டு அவரிடம் “போனால் போகட்டும், இன்று பகல் கிளம்பி நீங்கள் மட்டும் சுசியை அழைத்துக் கொண்டு ஊரை ஒரு சுற்றுச் சுற்றிக் காட்டுங்கள். அப்புறம் அணைக்கட்டுக்கும் போக நேரம் இருக்கும்” என்றான்.

எதிலும் பட்டுக் கொள்ளாதவர் போல, “எனக்கு என்ன? நான் எப்போதும் ‘ரெடி’ தான்” என்று ஒப்புக் கொண்டார் அவர்.

மூர்த்தியிடம் நான், “நீங்களும் வருவீர்கள் அல்லவா?” என்றேன். ஏதோ யோசியாமல் கேட்டேன். அவ்வளவுதான்.

“வெகு அழகுதான்! காசிக்குப் போயும் கர்மம் விடவில்லை என்பது போல, அவர் குறைபட்டுக் கொள்ள வேண்டுமா? நேற்றே, தனியாகப் போக வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டு பேசாமல் இருந்திருக்கிறார். நான் எதற்கு!” என்று கபடமற்ற குழந்தை போல் அவன் நகைத்தான்.

“நீ வந்தால் தான் பொழுது போக்கு இன்னும் ரஸனையாக இருக்கும். நீயும் வா அப்பா. சுணங்கி விடாதே. ஹேமாவையும் கூப்பிட்டு விடுகிறேன்” என்று அர்த்தபுஷ்டியுடன் அவனைப் பார்த்து புன்னகை செய்தார். மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல் ஒரு விநாடியில் ஒளி குன்றிய அவனை நான் கவனித்துக் கொண்டிருக்கையிலேயே அங்கு ஹேமா வந்தாள்.

“என்ன, மூவரும் இங்கே தனியாக ரகசியக் கூட்டம் நடத்துகிறீர்கள்? நானும் பங்கு கொள்ளலாமா?” என்று கேட்டவாறு நின்றாள்.

“பங்கு கொள்ளலாமா என்றா கேட்கிறாய்? உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்” என்று என் கணவர் முடிக்குமுன் அவள் “ஓகோ! தனிமையில் என் மண்டையைப் போட்டு உருட்டிக் கொண்டிருந்தீர்களாக்கும்! இந்த மூர்த்திக்கு எல்லோரிடமும் என் மண்டையைப் போட்டு உருட்டாமல் போனால் பொழுதே போகாது. என்னைப் பற்றி என்ன சொல்கிறான்” என்று நாளைக்குக் கணவனாக வரப்போகும் அவனை அவள் வலுச்சண்டைக்கு இழுத்தாள்.

“பார்த்தீர்களா? நான் பாட்டுக்குத் தெய்வமே என்று கிடக்கிறேன். என்னைக் குற்றம் சொல்வதைத் தவிர வேறு எதுவுமே அவளுக்குப் பேசத் தெரியாது” என்றான் மூர்த்தி.

“அடடா! இப்போதே நீங்கள் உப்புக்கு உதவாததற்கெல்லாம் வலுச் சண்டை போடுகிறீர்களே!” என்று கடகடவென்று ஒலிக்க, நகைத்த என் கணவர், “என்ன ஹேமா, இன்று பிருந்தாவனம் போகலாமா? நீ இல்லாமல் மூர்த்தி வரமாட்டானாம்!” என்று அழைத்தார்.

“ஐயையோ! என்னால் இன்று பிருந்தாவனத்துக்கும் வர முடியாது, கோகுலத்துக்கும் வர முடியாது. ‘டென்னிஸ் மாட்ச்’ இன்று. ‘ஸெமி பைனல்ஸ்’ நான் ஆட வேண்டும்” என்று நாசுக்காகத் தோளை அசக்கிய ஹேமாவின் ஸாடின் சோலிக்கு மேல் பட்டும் படாமலும் நின்றிருந்த நைலான் புடவை தோள் பட்டையை விட்டு நழுவியது.

“போக வேண்டும் நான். பத்மினி காத்துக் கொண்டிருப்பாள்” என்று உடலை ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டுக் கொண்டு அவள் டக் டக்கென்று பாதரட்சை ஒலிக்க மச்சுப் படியில் இறங்கிச் சென்றாள்.

மூர்த்தி பேசவே இல்லை. முகம் கறுக்க ஏதோ யோசனையில் ஆழ்ந்தவனைப் போல் நின்றான். அவன் தோளைப் பிடித்து அவர் குலுக்கினார். “என்னப்பா? ஒரேயடியாய் இந்த உலகத்துச் சிந்தனையை விட்டே ஓடிப்போய் விட்டாயே! அவள் வராமல் எங்களுடன் வர மாட்டாயாக்கும்!” என்றார் சிரித்துக் கொண்டே.

அவன் சமாளித்துக் கொண்டவனாக, “உங்களுக்கு ஏதும் இடைஞ்சல் இல்லை என்றால் வருகிறேன்” என்றான்.

பட்டு, அத்தை, பாட்டி எல்லோரும் பிரமித்து நிற்கும்படி நான் அவருடன் காரில் ஏறிக் கொண்டேன். பின்புற ஆசனத்தில் மூர்த்தி அமர்ந்து கொண்டு, ஒவ்வொரு கட்டிடத்தையும், இது இன்னது, அது இன்னது என்று சொல்லிக் கொண்டே வந்தான். முதன் முதலாக அவரருகில் அமர்ந்து கொண்டு அழகு வாய்ந்த அவ்வூரின் விசாலமான வீதிகளில் உல்லாசப் பவனி வரும் எனக்கு ஏனோ மனம் விம்மவில்லை. வாழ்வின் முதற் படியில் காலை எடுத்து வைக்கும் போது ஒன்றன் பின் ஒன்றாக அந்த ஏமாற்றங்கள் நிகழ்ந்திராமற் போனால் அப்போது எனக்கு மேக மண்டலத்திலே சஞ்சரிப்பதைப் போலல்லவா இன்பம் கொடுக்கும்? இப்போதே அவர் உள்ளத்தை வலுவிலே சென்று இடித்துப் பார்க்க எனக்குப் பயமாக இருந்தது. கற்பாறை கொண்டு மூடப் பெற்றிருக்கும் இருட் குகையாக இருந்தால் நான் இடித்தும் என்ன பயன்? வீணாக இருதயம் வலிக்கும். இருளைக் கண்டு இன்னும் துயருண்டாகும். அதற்கு இந்த ஊசலாடும் நிலையே மேலானதல்லவா? அவர் என்னுடன் தனிமையை இன்னும் விழைந்து விரும்பவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறதே! அம்மாவின் அபிப்பிராயத்தை ஒட்டி, நானே ஆத்திரப்பட்டுத் தவறு செய்தேன் என்று அவர் நினைக்கிறாரா? என்னை “மன்னித்து விடுங்கள். அறியாமல் தவறு செய்து விட்டேன்!” என்று அவர் காலில் போய் நான் விழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?

இதற்கு என் பெண்மை இடம் கொடுக்க மறுத்தது. ஆண்மைக்கு அத்தனை அகம்பாவமும் அழுத்தமும் இருக்குமானால் நான் எவ்விதத்திலும் நடந்து கொண்டது சரியே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, வீணே ஏன் சரணாகதி அடைய வேண்டும்? என் சுதந்திரத்திலும் சுக சௌகரியங்களிலும் சற்றும் அக்கறை கொள்ளாத அவரிடம் நான் உணர்ச்சி வசப்பட்டுச் சரணாகதி அடைந்து விட்டேனானால் இன்னமும் அவர் ஆணவத்திற்கு உரம் கண்டு விடும் அன்றோ. அவர் கைப் பொம்மையாக ஆகும் அந்த நிலைக்கு நான் சற்றும் இடம் கொடுக்கக் கூடாது.

வெளியே என் பார்வையைச் செலுத்தினேன். அணைக்கட்டின் வாயிலில் கொணர்ந்து வண்டியை நிறுத்திய அவர், “உள்ளே நடந்து செல்லலாமா? அல்லது காரிலேயே போய் விடலாமா?” என்று கேட்டார்.

“நடக்கலாமே, என்ன சுசீலா? காரிலே போவது எனக்கு அவ்வளவு சுகமாகத் தோன்றவில்லை” என்றான் மூர்த்தி.

“ஓ நடக்கலாம்” என்று கூறியவாறே நான் இறங்கினேன்.

மூவரும் அணைக்கட்டின் மீது நடந்தோம்.

அளவு கடந்த ஆர்வத்துடன் தன் நாயகனைச் சேர விழைந்து ஓடிவரும் நங்கை காவேரியை மனித சக்தியும் மலையின் பலமும் சேர்ந்து குறுக்கே மறித்துத் தடுத்தன. ஆத்திரம் தாளாத அணங்கு ஒருபுறம் அகம் விம்ம, முகம் துடிக்க, வானத்தையும் வையத்தையும் ஒன்று சேர்த்து விடுபவள் போல் விரிந்து பரந்து நின்றாள். அப்படியே முழுக்கவும் மடங்கியிருப்பதால் கற்புக்கரசி கண்ணகியின் கோபத்தைப் போலக் காவேரியின் சீற்றமும் வையத்தையே அழித்து விடும் போல எனக்குத் தோன்றியது. இப்படி அறிந்துதான் கண்ணறைகள் விட்டிருந்தார்கள் போலும்! கொஞ்சமேனும் தப்ப வழி கிடைத்ததே என்று எத்தனை மகிழ்ச்சி அவளுக்கு! தன் முழு பலத்தையும் பிரயோகித்து ஆவேசம் கொண்டவளாக இன்னும் நீளநெடு வழியை மனத்திலே எண்ணி, ஆழி இறைவனைக் கலக்க விரைந்தாள். காதலின் கொந்தளிப்பையும் ஆவலின் துடிப்பையும் மகிழ்ச்சியின் ஆரவாரத்தையும் ஒருங்கே கண்ட நான் என்னை மறந்தவளாக நின்று விட்டேன். நடுவே கார்கள் போயின, மனிதர்கள் சென்றார்கள். மூர்த்தி அவரிடம் என்ன என்னவோ விளக்கிக் கொண்டு நடந்தான். எதுவும் என் கவனத்தில் நிற்கவில்லை. அந்தப் பக்கம் பார்க்கும் போது காவிரி மங்கையின் குமுறும் உள்ளத்தை இதமாக அணைத்து ஆறுதல் கூற வேண்டும் போல என் இருதயம் எழும்பியது. அவளுடைய துடிக்கும் அலைகளை என் கைகளால் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. இந்தப் பக்கம் நோக்கும் போதோ அவள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் நானும் பங்கு கொள்ள வேண்டும் போல் ஆவல் எழும்பியது. அவள் செல்லும் வழியிலே உற்ற தோழியாக ஓட வேண்டும் போல ஆசை கிளம்பியது.

என்னை விட்டுப் பேசிக் கொண்டே வெகு தூரம் சென்று விட்ட மூர்த்தியும் என் கணவரும் திரும்பிப் பார்த்திருக்கிறார்கள். “சுசீலா, சுசீலா!” என்று அவர்கள் கத்தியது எனக்குக் காதில் விழவில்லை. அவர் திரும்பி அருகில் வந்து, கல்லோடு கல்லாகச் சாய்ந்து நின்ற என்னை, “என்ன சுசீலா, இங்கேயே நின்றுவிட்டாய்? பிருந்தாவனம் பார்க்க வேண்டாமா?” என்று அழைத்த பிறகு தான் சுய உணர்வு பெற்றேன்.

படிக்கட்டுகளின் வழியாக அணைக்கும் கீழே இறங்கிய போது உண்மையாகவே எனக்குப் பூவுலகை விட்டு எங்கோ வந்து விட்டதாகத் தோன்றியது.

கண்களைப் பறிக்கும் வர்ண விளக்குகளின் ஒளியிலே காவேரி எப்படி எல்லாம் திகழ்ந்தாள்! ஒரு புறத்திலே தோகை மயிலைப் போலச் சிவப்பும் நீலமுமாக ஒளிவிட்டுக் கொண்டு ஆடினாள். இன்னொரு புறத்திலே அன்னமென நடந்து சென்றாள். மற்றொரு புறத்தில் பட்டாடைகளைப் பூண்டு கொலுவிருக்கும் அரசி எனத் திகழ்ந்தாள். பிறிதொரு பக்கம் சலசலவென இனிய சங்கீதம் பாடி மக்களை மகிழ்வித்தாள். பல வண்ணப் பூக்கள் நிறைந்த சோலையிலே ஒளிப் பிழம்புக்கு முன் தோழிமார்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு ஆடிக் களித்தார்கள்.

அவள் ஆடும் இடத்திலே எனக்கும் இவ்வுலகின் இன்னல்களை எல்லாம் மறந்து ஆட ஆசை உண்டாயிற்று. அவள் நடை பயிலும் இடத்திலே அந்த அழகையே பார்த்துக் கொண்டு ஆயுள் முழுவதும் கழித்து விடலாம் எனத் தோன்றியது. வண்ண மலர்ச் சோலையிலே அவள் தோழிகளுடன் கூடிக் களிப்பதைக் கண்டதும் நானும் ஒரு நீரூற்றாகி அவள் தோழிமார்களில் ஒருத்தியாகி விடமாட்டேனா என்று மனம் துடித்தது. அவள் கொலு வீற்றிருக்கும் போது சாமரம் வீசும் பணிப்பெண் போல் திகழும் நீரூற்றாக இருக்கும் பாக்கியமாவது எனக்குக் கிடைத்திருக்கலாகாதா என்ற ஏக்கம் உண்டாயிற்று.

நங்கையின் களிக்கூடத்தை அலங்கரித்த விளக்குகளுக்குத்தான் எத்தனை பெருமை, எத்தனை பூரிப்பு! வான மண்டலத்தை அழகு செய்த நட்சத்திரங்களைக் கண்டும் வெட்கமுறாமல் “எங்களுக்குச் சமமாவீர்களா நீங்கள்?” என்று பெருமிதத்துடன் கேட்பது போல் மின்னின. மக்களை மகிழ்விக்கும் மங்கைக்குக் களைப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டோ என்னவோ, வாயுதேவன் தன் குளுமையான கரங்களால் விசிறியபடி இருந்தான்.

வாய் ஓயாமல் எதை எதையோ அவரிடம் விளக்கிக் கொண்டு வந்த மூர்த்தியாகட்டும், அவராகட்டும், என்னைக் கவனிக்கவே இல்லை.

கொலு மண்டபம் போல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மண்டபத்தண்டை வந்த பின் தான் அவர்களும் என்னைக் கவனித்தார்கள். நானும் இரண்டாம் முறையாக என் நினைவுக்கு வந்தேன்.

“என்ன இது? நான் பாட்டுக்கு வளவள என்று பேசிக் கொண்டே வந்திருக்கிறேன் உங்களை மறந்து? என்ன சுசீலா? இவன் ஏதடா இது, சளசளவென்று குறுக்கிட்டு விட்டான் என்று சபித்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டான் மூர்த்தி.

“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இங்கு வந்ததுமே எனக்கு பூலோகத்திலிருந்து வேறு எங்கோ தவறி வந்து விட்டதைப் போல பிரமை தட்டிவிட்டது. பேச்சே எழாமல் சக்தியை நாக்கு இழந்து விட்டது” என்றேன் பரவசமாக.

“நல்ல வேளை ஊமையாகி விடவில்லையே? எங்கே இந்த மண்டபத்தில் கொஞ்சம் சிரித்துக் கொண்டு நில்லுங்கள்” என்று கூறிய மூர்த்தி தோளில் மாட்டியிருந்த ‘காமிரா’வை எடுத்தான்.

அவர் நின்றார், நானும் பக்கத்தில் போய் நின்றேன். “இன்னும் கொஞ்சம் நெருங்கி. நீங்கள் சரியாக இருக்கிறீர்கள். சுசீலா தலையை நிமிர்த்திக் கொள். உம், சாய்க்காதே! கொஞ்சம் புன்னகை!” என்றெல்லாம் அவன் சொன்ன போது, புது மணப் பெண்ணைப் போல எனக்கு வெட்கமாக இருந்தது.

அவர் அருகில் நெருங்கி நெருங்கி அவருடைய ‘கோட்’ என் புடவையுடன் உராய்ந்து விட்டது. நான் அணையிட்டுத் தடுத்திருந்த மன நெகிழ்ச்சி கட்டுக்காவலை உடைத்துக் கொண்டு மீறிவிடும் போலக் கொந்தளித்தது. வலிமை பொருந்திய அவருடைய கரங்களின் அணைப்பிலே அடங்கிச் சிறு குழந்தை போல அவருடைய நெஞ்சிலே தஞ்சம் புக என்னுள் தாபம் கிளம்பியது. இந்த வேளையில் மூர்த்தி, “சிரித்த முகம் கொஞ்சம்!” என்று உத்தரவிட்ட போது, நான் சிரித்தேனா அழுதேனா என்று கூட எனக்குப் புரியவில்லை.

ஒரு வழியாகப் படம் பிடித்தானதும் மூர்த்தி, “நீங்கள் இங்கேயே சற்று இருங்கள். நான் போய் ஹோட்டலில் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன். இங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாம்” என்றான்.

அதற்குள் அவர், “வேண்டாம், இங்கே நீ சுசீலாவுடன் பேசிக் கொண்டிரு. நான் போய் வாங்கிக் கொண்டு வெளியே போய் அப்படியே காரையும் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறி அவனுடைய பதிலை எதிர்பார்க்காமலே நடந்தார்.

அசந்து போனவன் போல மூர்த்தி எங்கள் இருவரையும் மாறி மாறி நோக்கினான். நானோ அவன் பார்வைக்கு அகப்படாமல் கீழே தரையை வருடிக் கொண்டிருந்தேன். ஆம், அவருக்கு என்னுடன் தனிமையில் இருக்கப் பிடிக்கவில்லை. அதற்காகவே பயந்து கொண்டு திரும்பிப் பாராமல் ஓடுகிறார்!

என் நெஞ்சம் வெடித்து விடும் போல் இருந்தது. உண்மையில் அவர் மட்டும் அன்று அந்தப் பொழுதிலே என்னுடன் தனிமையில் இருந்திருந்தாரானால் அவர் காலடியில் விழுந்து நான் கதறியிருப்பேன். என் ஆராய்ச்சிகளை எல்லாம் ஒரு புறமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு நான் செய்த பிழையை மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் பெருக்கியிருப்பேன். மூர்த்தி தான் போவதாகச் சொன்ன போது, அந்த நிமிஷத்துடன் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாத மௌன வாழ்வின் முடிவு சமீபித்து விட்டது என்றே எண்ணினேன். என் நெகிழ்ந்த நெஞ்சுக்கு அவர் மட்டும் அப்போது சற்று வழிவிட்டிருந்தாரானால் அது மெழுகென உருகி ஓடியிருக்கும். அவர் அவ்விதம் செய்யவில்லை. தனிமை தம்மை உணர்ச்சிகளுக்கு ஆளாக்கிவிடக் கூடும். கல் மனத்தைக் கரைத்து விடக் கூடும் என்று ஏகாந்தத்தின் இலக்குக்குள் அகப்படாமல் ஓடுகிறார்.

ஏன் இப்படி ஓட வேண்டும்? மனிதர்கள் குற்றம் செய்வதில்லையா? அவரை விட நான் எவ்வளவோ சிறியவள். அநுபவம் முதிராதவள். தவறு என்னிடம் இருந்தாலும் அவர் உள்ளத்தில் காதல் நிரம்பி இருக்குமானால் மன்னித்து விட மாட்டாரா? மூர்த்தியின் தூண்டுதலுக்காக என்னை அழைத்து வந்திருக்கிறார்.

“சுசீலா!” என்ற மூர்த்தியின் குரல் என்னை உலுக்கியது.

நிமிர்ந்தேன். எங்கே பார்த்தாலும் ஜகஜ் ஜோதியான ஒளிமயம், சோவென்று நீரின் சப்தம், எல்லாம், ‘இந்திரலோகம் போன்ற இடத்திலே இருக்கிறோம். எதிரே மூர்த்தி கூப்பிடுகிறான்’ என்று எனக்கு நினைப்பூட்டின.

“என்ன சுசீலா இது? ராமநாதனுக்கும் உனக்கும் ஏதோ விளையாட்டுச் சண்டைதானாக்கும் என்று நினைத்தேனே! எனக்கு இப்போது மிகுந்த கஷ்டமாக அல்லவோ இருக்கிறது? நீ பாட்டுக்குப் பேசாமல் உம்மென்று இருக்கிறாய். அவரோ நான் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளக் கூடாதே என்று மாதிரி ஏதோ அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு எனக்காக உன்னிடம் பேசுகிற தோரணையில் பாவனை செய்கிறார். என்ன விஷயம் சுசீலா? நேற்று உன்னை விட்டு அவர் இங்கு வந்திருக்கிறார் என்று அறிந்த போதே எனக்கு ஏதோ போல் இருந்தது. ஏதோ தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் என்று தமாஷ் செய்கிற மாதிரியில் நான் இன்று இங்கு வரத் தூண்டினேன். ஆனால் நான் நினைத்தது போல் படவில்லையே?” என்று அவன் கேள்வி மேல் கேள்வி கேட்டு விட்டான்.

அவனே வெகுளியான சுபாவம் படைத்தவனாயிற்றே. மனத்தில் பட்டதை அப்படியே ஒளிவு மறைவின்றி என்னிடம் கேட்டு விட்டான். ஆனாலும் எங்கள் விஷயத்தில் அவனுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? ‘பெரிய மனஸ்தாபமாக இருந்தால்தான் நமக்கு என்ன?’ என்று லேசாகக் கவனிக்காமல் இருந்து விடலாமே!

கண்கள் நீரைக் கக்கி விடாதபடி உணர்ச்சியை விழுங்கிக் கொண்டேன்.

என்ன பதில் சொல்வது அவனுக்கு? வயசு வந்த ஆண்பிள்ளை அவன். யாருமே எங்களைச் சிரத்தை கொண்டு கவனிக்காத சூழ்நிலை. ஏன் இப்படி அவர் எங்களை விட்டு விட்டுப் போக வேண்டும்? மனைவியிடம் சந்தேகம் கொள்ளும் குறுகிய மனப்பான்மை கொண்டவர் அல்ல என்று அவனுக்குப் பெருமையாகத் தெரிவிக்கவா?

என் மௌனத்தைக் கண்டு மூர்த்தி என் எண்ணங்களை அறிந்து கொண்டு விட்டான் போலும்!

மீண்டும் அவன், “நான் விஷமமாகக் கேட்கிறேன் என்ரு நினைக்கிறாயே? உன்னை நான் மஞ்சு போல் எண்ணிக் கொண்டிருக்கிறேன் சுசி. முதல் முதலாக உன்னைப் பார்த்த போதே எனக்கு என்னவோ தனியாக உன் மீது அப்படி ஓர் அபிமானம் தோன்றி விட்டது. அதுவும் மஞ்சு இறந்த பிறகு, நீதான் அவள் என்றே நான் எண்ணியிருக்கிறேன். உங்கள் விவகாரங்களில் நான் தலையிடுவது தவறு என்று உனக்குத் தோன்றலாம்” என்று கூறிய போது தொண்டை கரகரத்தது அவனுக்கு.

“நான் எப்போது உங்கள் வீட்டுக்கு வந்தாலும் வாடிய முகத்துடன் நீ சமையலறைக்குள்ளிருந்து வரும் காட்சியைத் தான் காண்பேன். மனத்துக்குள் நீ ஏதோ கஷ்டப்படுகிறாய் என்று நேற்று அறிந்த போது எனக்குத் திடுக்கென்றது. சுசி, உன்னை நான் முதன்முதலாக ஊருக்கு அழைத்துப் போன போது பார்த்ததற்கும் இப்போதைய தோற்றத்திற்கும் எத்தனையோ மாறுதல் காண்கிறேன். ராமநாதன் உன்னிடம் அன்பாகத் தானே இருக்கிறார்?” என்று நேரான கேள்வியில் வந்து அவன் முடித்தான்.

‘நமக்கும் இப்படி ஒரு மூத்த சகோதரன் இருந்தால்?’ என்று ஏங்கியிருந்த எனக்கு அப்போதே “அண்ணா” என்று கதற வேண்டும் போல் இருந்தது. ஆனால் ஏனோ சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

என்ன தான் அன்பு மனத்துடன் ஆதரவு காட்டினாலும், என் கணவருக்கும் எனக்கும் இடையே இருந்த மனஸ்தாபங்களை லீலாவிடம் தெரிவிக்கவே கூசிய நான், அவனிடம் தெரிவிக்க முடியுமா? ‘அவர் என்னிடம் அன்பாக இருக்கவில்லை’ என்று அவனிடம் நேரடியாகக் கூறக் கூட முடியாமல் என்னுள் ஏதோ ஒன்று தடுத்தது.

எப்படியே மனத்தைக் கல்லாக்கிக் கொண்டேன். எல்லாவற்றையும் மீறிக் கொண்டு சிரித்தேன். சமயங்களில் நடிப்புக் கலை மிகவும் தேவையாக இருக்கிறதே?

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. எதை எதையோ நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆமாம், உங்களுக்கு இந்த வருஷத்தில் கல்யாணமாமே? நேற்று நான் கேட்க வாயெடுத்தேன்; பாட்டி வந்து விட்டாள்” என்று பேச்சைச் சமத்காரமாக அவன் பக்கம் திருப்பினேன்.

“நிஜந்தானா சுசீலா?” என்று அவன் கேட்டான்.

நான் இன்னும் சத்தமாக ஒலிக்கும்படி நகைத்தேன். “என்ன நிஜந்தானா? அதை நான் அல்லவா கேட்க வேண்டும்? எனக்கு ஓர் அண்ணா இல்லையே என்று எப்போதும் ஒரு குறை உண்டு. அது தீர்ந்ததும் இப்போது எனக்குச் சந்தோஷம் கிட்டவில்லை. ஏன் தெரியுமா?”

அவன் வாய் திறக்கவில்லை. நான் மீண்டும், “எனக்கு உள்ள இன்னோர் ஆசை, காதல் மனம் பார்க்க வேண்டும் என்பது. அதுவும் எனக்குத் தெரிந்த காதலர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அந்த ஆசை வேறு பாழாகும் போல் இருப்பதால், எனக்கு இப்போது எதுவுமே பிடிக்கவில்லை” என்றேன்.

“ஐயோ, நீ மஞ்சுவைப் போலவே பேசுகிறாய், சுசி. அவள் இப்படித்தான் அடிக்கடி சொல்லுவாள்” என்று அவன் நெகிழ்ந்த குரலில் கூறிய போது எனக்கு ஏன் அவ்விதம் பேசினோம் என்று இருந்தது. பாவம்! பழைய நினைவுகளில் அவனுக்குக் கண்களில் நீர் கூடத் துளிர்த்து விட்டது. “கடைசி முறையாகக் கூட அவள் இப்படித்தான் என்னைக் கேலி செய்தாள். உன் புடவைகளை என் பெட்டியில் பார்த்துவிட்டு, ‘வரப்போகும் மன்னிக்கு வாங்கியிருக்கிறாயா அண்ணா? சிவப்பாக இருந்தால் ‘ஸெலக்‌ஷன்’ முதல் தரம். எனக்கு வெகு நாட்களாக ஆசை அண்ணா. ஏதாவது இடைஞ்சல் இருந்தால் நானும் உதவி செய்யட்டுமா? எனக்கு அவள் யார் என்று சொல்ல மாட்டாயா?’ என்றெல்லாம் கூறிய அவள் இப்போது இல்லையே! இருந்தால் தோண்டித் துளைத்து என்னிடமிருந்து விஷயத்தை அறிந்து கொண்டு அப்பா அம்மாவிடம் நானாச்சு என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டையிடக் கிளம்பி விடுவாளே!” என்று அவன் நெடு மூச்செறிந்தான்.

என் மனங்கூட இளகிவிட்டது. அவன் வருத்தத்தை இன்னும் ஏதாவது பேசிக் கிளப்ப வேண்டாம் என்று நான் கவனத்தை எதிரேயுள்ள நீரூற்றுகளில் செலுத்தினேன்.

அப்போது அங்கே ஒரு காட்சியைக் கண்டேன். இரண்டு பெண்களும் இரண்டு ஆடவர்களும் படியேறி மண்டபத்துக்குள் வந்தார்கள். அதில் ஒரு ஜோடி. காதலர்களோ தம்பதிகளோ தெரியவில்லை; சற்றும் நாணமோ கூச்சமோ இன்றி அவனும் அவளும் இடைகளில் கை கொடுத்துக் கொண்டு உல்லாசமாக நடந்து வந்தனர். பெண்கள் இருவரும் சாயலில் சகோதரிகள் என்று தெரிந்தது. சற்றும் லஜ்ஜையின்றி அவர்கள் இருவரும் அணிந்திருந்த ஆடைகள் உடம்பெல்லாம் தெரியும்படி இருந்தன. ‘அடக்கத்துக்கும் மரியாதைக்கும் அழகுக்கும் பேர் போன நம் பாரதப் பெண்கள் இப்படி உடைகள் அணியும் காலமும் வந்துவிட்டதே!’ என்று குன்றிப்போன எனக்கு அவர்களைப் பார்க்கக் கூட வெட்கமாக இருந்தது. தனியாகத் தென்பட்ட ஆடவன், அவர்களை விதம் விதமான கோணங்களில் நிறுத்தி வைத்துப் படம் பிடித்தான். என் கவனத்தை அவர்களிடமிருந்து நான் திருப்பிய போது, மூர்த்தியும் அவர்களைக் கவனித்திருக்கிறான் போல் இருக்கிறது. “ஹேமாவும் வரவர இந்தப் பாணியில் தான் உடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்” என்று அருவருப்புடன் முணுமுணுத்தான்.

“வெகு நேரமாகி விட்டதோ?” என்று கேட்டவாறே கையில் உணவுப் பொட்டலங்களுடன் என் கணவர் படியேறி வந்தார். பட்டப்பகல் போன்ற வெளிச்சத்தில் அவரைக் கண்டுவிட்ட, தனியான அந்த ஆடவன் “ஹல்லோ!” என்று விளித்துக் கொண்டே அவரை நோக்கி வந்தான்.

“ஓ! அடடா! சற்றும் எதிர்பாராத சந்திப்பாக இருக்கிறதே! எங்கே இப்படி?” என்று முகம் மலர, அவர் அவன் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

“இவர்கள் பம்பாயிலிருந்து நம் பக்கத்துப் பங்களாவுக்கு ஸீஸனுக்கு வந்திருந்தார்கள். நேற்றுத்தான் இங்கு வந்தோம். நீங்கள் நேராக அங்கே வருவீர்கள் என்று அல்லவோ எதிர்பார்த்தேன்? ஆட்களிடம் கூடச் சொல்லிவிட்டு வந்தேன். இங்கே எப்போது வந்தீர்கள்? உன் மனைவி வந்திருக்கிறாளா?” என்று அவன் விசாரித்தான்.

“நாங்கள் வந்து ஒரு வாரம் ஆகிறது. நாளைக்கே அங்கே புறப்படலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். இதோ என் சுசீலா!” என்று என்னைக் காட்டிப் புன்னகை செய்த அவர், சற்றுத் தயங்கி, “இவர் அவளுக்குக் கஸின், மிஸ்டர் மூர்த்தி” என்று அவனையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

சந்தேகத்துடன் நான் அவனைப் பார்க்கையிலேயே அவன் என்னை ஏற இறங்க நோக்கிவிட்டு, “ஓகோ! ரொம்ப அழகாக இருக்கிறாளே!” என்று புன்னகை செய்தான்.

உடனே நினைவு வந்தவர் போல் மூர்த்தியிடம் என் கணவர், “மூர்த்தி இவர் தாம் மிஸ்டர் வரதன். லீலாவைக் கைப்பிடிக்கக் காத்திருக்கும் வரதன்” என்று சற்று அழுத்தமாகவே கூறி நகைத்தார்.

3-4

கானகத்தினிடையே வளைந்து வளைந்து செல்லும் பாதையில் கார் வரும் போது நான் தலை சுற்றலால் கண்களையே திறக்கவில்லை. நாங்கள் உதகமண்டலத்தை வந்தடையும் சமயம் இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். அலுத்து ஓய்ந்து போயிருந்த நான் வந்து படுத்ததுதான் தாமதம் கண் அயர்ந்து விட்டேன். காலையிலே எழுந்து வெளியே நோக்கிய போதுதான் அழகும் சாந்தமும் பொலியும் தன் கருணை முகத்தைக் காட்டிப் புன்னகை புரியும் இயற்கை யன்னையின் மடியிலே நான் வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். கதிரவனின் ஒளியிலே வைரம் இழைத்தாற் போன்று பனித் திவளைகளால் மூடப்பட்டு மின்னிய பசும் புல் தரை, மனிதனுடைய கைகள் கொண்டு வெட்டி விடப்பட்டவை போல அழகாக வளர்ந்து நின்ற கோபுர விருட்சங்கள், பள்ளங்களிலும் மேடுகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாரி இறைத்தாற் போன்று காணப்பட்ட வீடுகள், மங்கையொருத்தி தன்னுடைய கூந்தலை மலர்ச் சரங்களுக்கிடையே வளைத்து வளைத்துச் சுற்றிக் கட்டி இருப்பதைப் போல மலைகளைச் சுற்றி வளைந்தும் நெளிந்தும் செல்லும் தார் ரஸ்தாக்கள் எல்லாம் நாங்கள் இறங்கியிருந்த வரதனுடைய பங்களாவிலிருந்து கண் கவரும் காட்சிகளாகத் தென்பட்டன. வாசலிலே தோட்டத்தில் வண்ண வண்ண மலர்களைத் தாங்கிய செடிகளும் கொடிகளும் மனத்திலே புத்தொளியைப் பரப்பின. தோற்றத்திலே அவ்வளவு பெரிதாக இல்லாது போனாலும், வீடு முழுவதும் சோபாக்களும் மேஜைகளும் நிலைக் கண்ணாடிகளுமாக மேல் நாட்டுப் பாணியிலே அலங்கரித்திருந்தது. கீழே கால் வைத்தால் ஓசைப்படாத மெத்தென்ற விரிப்புகள், அலங்கார ஜாடிகளில் அழகழகாகச் செருகி வைத்திருந்த பூங்கொத்து, மாசுமறுவற்றுப் பளபளக்கும் ஸ்நான அறைகள் எல்லாம் எனக்கு எங்கோ ஒவ்வாத இடத்தில், நான் நடக்கவே கூசும் இடத்தில் வந்திருப்பதாக அறிவுறுத்திக் கொண்டிருந்தன.

‘வரதன், எம்.ஏ.’ என்ற பலகையைத் தாங்கி நிற்கும் ராஜபோக மாளிகை, பளபளக்கும் புதுக் கார், ஆடம்பர வாழ்க்கை, எல்லாவற்றையும் லீலாவுக்குச் சொந்தமாக்கி விடப் பெரியவர்கள் நிச்சயித்திருப்பது பார்ப்பதற்குத் தவறாக இல்லை. ஏன், வரதனுக்கு மட்டுந்தான் என்ன குறைவு? சுக வாழ்வைக் காண்பிக்கும் சற்றே தடித்த உடற்கட்டு, சோபை பெற்ற சிவந்த மேனி, எப்போதும் கலகலவென்று சிரித்துக் கொண்டே இருக்கும் சுபாவம். எல்லாம் அவனை லீலாவுக்குத் தகுதியற்றவன் என்று கூற முடியாமல் செய்தன. ஆனால், புனிதமான காதல் உணர்ச்சியில் பண்பட்ட இதயத்துக்கு, எப்பேர்ப்பட்ட அமரலோக வாழ்வும் துச்சந்தானே? லீலாவைக் குற்றம் கூறுவதற்கு இடமே இல்லை.

“லீலாவைக் கைப்பிடிக்கக் காத்திருக்கும் வரதன்” என்று என் கணவர் கூறி நகைத்த போது மூர்த்தியின் உள்ளத்திலே ஏற்பட்ட அதிர்ச்சியை நான் எப்படி கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்? ஒரு விநாடி தூக்கி வாரிப் போட்டது போல அவன் திடுக்கிட்டுப் போய் விட்டான். அப்புறம் சமாளித்துக் கொண்டான் என்றாலும் வரும் போது அவனிடம் காணப்பட்ட உற்சாகம், கலகலப்பு எல்லாம் குன்றிப் போய்விட்டன.

மூர்த்தி உள்ளதை உள்ளபடி கள்ளமில்லாமல் கூறும் வெகுளி தான், என்றாலும் இந்த வரதன் என் முன்னேயே, “ரொம்ப அழகாக இருக்கிறாளே!” என்று கூறியது என் மனசுக்குப் பொருந்தவேயில்லை. அன்று லீலா அவர் முன் என்னை எப்படி எல்லாமோ வர்ணித்தாள். ஆனால் அவள் என்னைப் போல் ஒரு பெண். எனக்கு உவப்பாக இருந்தது. மூர்த்தி என்னுடன் சகஜமாக அளவளாவினான் என்றாலும் அந்தப் பாணி எனக்குக் குற்றமில்லாததாகவே தொனித்தது. அதுவும் அவன் சமய சந்தர்ப்பம் அறிந்து மரியாதையாகப் பழகுவான். என் மாமியார், பட்டு, எல்லோரும் இருக்கும் சமயம் அவன் வீட்டுக்கு வருவானே, “என்ன சுசீலா?” என்று கேட்டுக் கொண்டு தடதடவென்று வர மாட்டான். போகும் போது மட்டும், “நான் வரட்டுமா?” என்று வாசற்படியண்டை நின்று கேட்டு விட்டுப் போவான். இப்படிப் பழகியதில் அவன் எனக்கு அந்நியனென்ற கூச்சம் மனதில் ஏற்படவில்லை. அவன் கூறியது போல், சகோதரன் மாதிரி பாவித்த எனக்கு நாளடைவில் வேடிக்கையாகப் பேசவும், கேலி செய்யவுங் கூடச் சகஜ பாவம் வளர்ந்து விட்டது.

இப்போது வரதன், “என்ன சுசீலா? அதற்குள் எழுந்து விட்டாயே?” என்று எடுத்த எடுப்பில் கேட்டுக் கொண்டு வந்தது எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடிவிட்டேன். வீட்டிலே யாரும் என்னைப் பிரத்தியேகமாகக் கவனிக்கா விட்டால் கூட அவன் விடமாட்டான் போல் இருந்தது. என்னைப் பற்றி ஏதாவது கேட்டு அவர்கள் சம்பாஷணைக்குள் என்னை இழுத்து விட்டான். அடிக்கொரு தடவை அவர் முதுகில் இரண்டு ‘ஷொட்டு’க் கொடுத்து, “என்னப்பா ராமு? உன் ‘மிஸஸ்ஸை’ நீ கவனிக்கவே மாட்டாய் போல் இருக்கிறதே!” என்று வேறு கேட்டு என் வயிற்றெரிச்சலைக் கிளப்பினான்.

“நான் என்ன அவளைக் கவனிப்பது? அவள் அல்லவா என்னைக் கவனிக்க வேண்டும்?” என்று என்னைப் பாராமலேயே அவர் அசட்டுச் சிரிப்புச் சிரித்து வைத்தார். வந்த முதல் நாள் காலை எல்லோருமே ஊர் சுற்றக் கிளம்பினோம். எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, நகரின் உல்லாச நந்தவனத்திற்கு வந்தோம். வாயிலில் காரை விட்டு இறங்கி உள்ளே பத்தடி கூட நடந்திருக்க மாட்டோம். நளினி எதற்கோ பிடிவாதம் பிடித்துத் தொம் தொம் என்று குதித்து அழுதாள். கைக்குழந்தை வேறு பசியோ, தூக்கமோ, கையிலே பிடிபடாமல் கத்தியது. நளினியின் முதுகில் இரண்டு அறை வைத்த பட்டு “சுசீலா, இவை இரண்டையும் சற்று வீட்டுக்கு அழைத்துக் கொண்டு தொலையேன், முன்னாடி. இந்த லட்சணத்துக்குத்தான் நான் இவர்களை அழைத்துக் கொண்டு எங்கேயும் புறப்படுவதில்லை” என்றாள். முன்னால் வரதனுடன் பேசிச் சென்ற அவர் என்னைக் கவனித்தாரோ இல்லையோ? நான் திரும்பியே பார்க்காமல் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வரதனுடைய வண்டியில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

‘வெளியே கிளம்பி அவமானப்படுவதைக் காட்டிலும் இனிமேல் வீட்டுடனேயே இருந்து விடுவது மேல்’ என்றும் தீர்மானித்துக் கொண்டேன்.

வீடு வந்த பின் கைக் குழந்தைக்குப் பாலைக் கொடுத்துத் தூங்க வைத்தேன். நளினியும் சாப்பிட்டு விட்டு விளையாடினாள். அவர்கள் பகல் ஒரு மணிக்கு வீடு திரும்பினார்கள். சமையலுக்கு ஆள் இருந்தாலும் கூட, உதவியாக மேற்பார்வை செய்ய நான் வந்து விட்டதும் நல்லதாகவே இருந்தது. வந்ததும் வராததுமாக முணுமுணுத்த மைதிலுக்கும் சுகுமாருக்கும் முன்னாடியே சாப்பாடு போட்டேன். மற்றவர்கள் சாவகாசமாக வட்ட மேஜையைச் சுற்றி உணவருந்த அமர்ந்தார்கள். நான் பரிமாற வந்தேன். வரதன் என்னைக் கண்டதும், “என்ன, உட்காரவில்லையா சுசீலா? அந்தத் தடியன் எங்கே? பரிமாறுவதற்கென்ன?” என்றான் வெகு சகஜமாக.

நான் பதிலே பேசவில்லை. யாருமே வாய் திறக்கவில்லை. ஏதோ எல்லோருடனும் நான் வார்த்தையாடினாலும், மைத்துனர், கணவர், அவன் எல்லோருக்கும் சமமாகச் சாப்பிட உட்கார எனக்குப் பயமாக இருந்தது. அதுவும் என் ஆயுளில் நான் மேஜையில் உணவு உட்கொண்டதில்லை.

“வெகு அழகாக இருக்கிறதே, நீ பரிமாற வருவது! டேய் சுப்பு! மடையா! இன்னொரு தட்டு கொண்டாடா! நீயும் உட்கார் சுசீலா” என்று ஆடம்பரமாக இரைந்து விட்டு அவன் என்னை வற்புறுத்தினான்.

எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது. “வேண்டாம், பிறகு சாப்பிடுகிறேன்” என்றேன். கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போன்று.

பக்கத்திலே ஒன்றையும் கவனியாதவர் போல் அமர்ந்திருந்த என் கணவரின் முதுகிலே சுவாதீனமாக ஒரு குத்து விட்டான் வரதன். “டேய்! வாயிலே கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? ‘தேவி, நீயும் போஜனத்திற்கு அமரலாமே’ என்று உபசாரம் பண்ணடா. நீ அல்லவோ சொல்ல வேண்டும்? அதனால் தான் அவள் பேசாமள் நிற்கிறாள்?” என்று அவரைக் கடிந்து கொண்டான்.

“அப்...பா!” என்று அவர் முதுகைத் தடவிக் கொண்டார்.

“இந்த இரண்டு நாட்களில் நீ குத்திக் குத்தி என் முதுகு வலி கண்டு விட்டது. ஆள் ஒருவன் அகப்பட்டேன் என்று இப்படியா குத்துவது? ரொம்ப ரொம்பக் கெட்ட வழக்கமப்பா. நாளைக்கும் இதே கைதானே ஞாபக மறதியாக வரும்? மறதியாகப் பக்கத்தில் லீலா இருக்கும் போது இப்படி ஒரு குத்து விட்டாயானால் அவ்வளவுதான்! ஜாக்கிரதை வேண்டும்!” என்று நாசுக்காகப் பேச்சை வேறு திசையில் திருப்பினார் அவர்.

“டேய் பிருகஸ்பதி! போதும் உன் உபதேசம். உனக்கு இத்தனை குத்து விழுந்தும் எருமை மாடு போல உனக்கு உறைக்கவில்லையே! பெண்டாட்டியிடம் ஜாக்கிரதையாக இருப்பது பற்ரி எனக்கு உபதேசம் செய்ய வந்து விட்டான், உபதேசம்! எத்தனை நேரமாக அவள் தயங்கிக் கொண்டு நிற்கிறாள்! இன்னமும் தான் ஆகட்டும், வாயைத் திறக்கிறானா பாரேன்!” என்று வரதன் விடாப்பிடியாக அவருக்கு இன்னொரு குத்து விட்டான்.

இதற்குள் சுப்பு மேஜை ஓரத்தில் எனக்குத் தட்டுக் கொணர்ந்து வைத்தான். எனக்கு உள்ளூற நடுக்கம் கண்டு விட்டது.

நாற்காலியை விட்டு எழுந்து நின்ற அவர், “நீங்களும் சாப்பிட உட்காரலாமே!” என்று நாடக பாணியில் காலியாகக் கிடந்த மற்றொரு நாற்காலியைச் சுட்டிக் காட்டிக் கூறிய போது என் மைத்துனர் உட்பட எல்லோரும் என்னைப் பார்த்து ‘கொல்’லென்று சிரித்தார்கள். என் முகத்தில் குப்பென ரத்தம் ஏறியது. நம்மை நடுவில் வைத்துக் கொண்டு எல்லோரும் அவமானம் செய்கிறார்களே என்று கோபம் வந்தது.

நல்ல வேளையாக, பட்டு என்னை விடுவிக்க முன் வந்தாள்.

“நன்றாக இருக்கிறது, நீங்கள் அவளைப் படுத்தி வைப்பது! நீ போம்மா சுசீலா! நான் தான் அவளை முன்னேயே சாப்பிட்டு விடு. அப்புறம் நீங்கள் ஆளுக்கு ஒன்றாகக் கேட்பீர்கள். பரிமாறுகிறவனுக்கு ஒத்தாசை வேண்டும் என்றேன். தவிர, இப்படியெல்லாம் நீங்கள் கூத்தடித்தால் அவள் எப்படி உட்காருவாள்? அவளுக்கு வழக்கம் இல்லை” என்று ஒரு போடு போட்டாள்.

நான் என் வாழ்வில் ஒரே ஒரு தடவை அவளுக்கு மனமாற நன்றி செலுத்தினேன். தைரியம் கொண்டவளாக கொண்டு வந்ததைப் பரிமாறினேன்.

“ஏது ஏது பட்டு, அவள் உட்கார்ந்தால் கூட நீ வேண்டாம் என்பாய் போல் இருக்கிறதே! வழக்கம் எப்படி வரும்? நாலு நாள் பழகினால் தானே வருகிறது” என்றான் வரதன். ஆனால் அது அத்துடன் நின்று விட்டது. அலையடங்கிய சமுத்திரம் போல் கலகலப்பு ஓய்ந்தது. பாதிச் சாப்பாடின் போது என் கணவர், “வெந்நீர் இன்னும் கொஞ்சம் சூடாகக் கொண்டு வா சுசீ?” என்றார். நான் கொண்டு வந்து வைத்தேன்.

தம்ளரை உதட்டில் வைத்துக் கொண்ட அவர், ‘சுருக்’கிட்டுக் கீழே வைத்து விட்டு, “எவ்வளவு சூடு?” என்றார்.

“அதிகமா?” என்று கேட்ட நான் தம்ளர் வெந்நீரை எடுத்து ஆற்றப் போனேன்.

“வாய் கொப்புளித்து விடும்” என்றார் அவர்.

அத்துடன் அது நின்றுவிட்டால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.

“எனக்குத் தெரியும், அவள் கொண்டு வந்து வைக்கும் போதே ஆவி வருவதைக் கவனித்தேன். வைத்து விட்டுத் தன் கையை உதறிக் கொண்டாள். இப்படியா குடிக்க வெந்நீர் கொண்டு வைப்பது? இதெல்லாம் இன்னுமா ஒரு பெண்ணுக்குத் தெரியாது? அப்படியே தூக்கிக் குடிப்பவர்களாக இருந்து வாயில் விட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று கேட்ட பட்டு என்னை முறைத்துப் பார்த்தாள். இதை என்னால் பொறுக்க முடியவில்லை. அவர் கேட்டார், நான் பதில் கூறினேன். சூடு அதிகம் என்று அவர் என்னைக் கோபிக்கலாம். அடிக்கவும் அடித்திருக்கலாம். எனக்குச் ‘சுருக்’கென்று தைக்காது. இவள் ஏன் குறுக்கே வந்து விழ வேண்டும்? நான் வேண்டுமென்று செய்வேனா? அவருக்கு நாக்கு புண்ணானால் எனக்கு அந்தப் பொறுப்பு இல்லையா?

நான் எந்த வேலை செய்தாலும் குற்றம் கூறுவது அவள் வழக்கந்தான். ஒவ்வொரு நாளும் என் மாமியாருக்கும் அவளுக்கும் உணவு பரிமாறும் போது கலாசாலைப் பரீட்சை போல எனக்கு நெஞ்சம் அடித்துக் கொள்ளும். அத்தனை பயந்து பயந்து செய்தாலும் அவர்கள், ‘கடுகு வெடிக்கவில்லை, உளுத்தம் பருப்புத் தீயவில்லை, கஞ்சி வடியவில்லை’ என்று ஏதாவது சொல்லாமல் இலையை விட்டு எழுந்திருக்க மாட்டார்கள். ஆயிரம் புருஷர்களுக்கு அன்னம் படைத்து விடலாம், சர்வாதிகார மனப்பான்மை கொண்ட இரண்டு பெண்களைச் சமாளிப்பது கஷ்டம். இத்தகைய அவர்கள் வழக்கத்தால் என் மனம் காய்ந்துதான் போகிறது என்றாலும், இன்று வந்த இடத்தில் என்னை அவர்களுக்குச் சமமாக மதிக்கும் வரதனுக்கு முன்னிலையில் என் கணவரையும் வைத்துக் கொண்டு, அவர் கடுகடுக்காத போது வலிய அவள் குற்றம் கூறியதை என்னால் சகிக்க முடியவில்லை.

“நான் கொண்டு வைத்துவிட்டுக் கையை உதறிக் கொண்டேனோ? நாக்குப் பொத்துப் போகும்படியாகவா இருக்கிறது? இதோ, தொட்டுப் பாருங்கள். அவருக்கு வாய் வெந்து போக வேண்டும் என்று நான் காரியம் செய்ததைப் போலவே பேசுகிறீர்களே; உங்களுக்கு இருக்கும் பொறுப்பு எனக்கு இல்லையா? குற்றத்துக்கு எதுவும் இடமில்லாமல் போனாலும் இப்படி எதையாவது மிகைப்படுத்திப் பொய்யாவது சொல்ல வேண்டுமா?” என்று படபடத்த கேள்விகள் என் கொதிக்கும் உள்ளத்திலிருந்து எழுந்தன.

இத்தகைய வார்த்தைகளை நான் கேட்க அவள் பொறுப்பாளா? அவள் வேண்டுமானால் என்னை எதுவும் சொல்லலாம். எப்படியும் நடத்தலாம். என்னை ஏனென்று கேட்பார் இல்லை. உள்ளம், உணர்வு எல்லாம் எனக்குக் கல்லாகி விட வேண்டும். அவள் அப்படியா? அவள் சொற்படி கேட்கும் கணவர் உண்டு, அளவற்ற மரியாதை செலுத்தும் மைத்துனர் உண்டு, மருமகள் மீது அன்பு மழை பொழியும் மாமி உண்டு, இவற்றுக்கு மேல் அன்னை உண்டு, செல்வம் உண்டு, செழிப்பு உண்டு. வீட்டின் சர்வாதிகாரிணி கலத்திலே கையை உதறிவிட்டுக் கோபத்தால் ஜொலிக்கும் முகத்துடன் என் கணவரைப் பார்த்தாள். “பார்த்தாயா ராமு? இப்போது நான் இவளை என்ன சொன்னேன்? தப்புச் செய்தால் ‘இப்படிச் செய்தாயே அம்மா?’ என்று கேட்டது தவறா? விடு விடு என்று வாயில் வந்ததைக் கொட்டுகிறாளே! நான் பொய் சொல்லுகிறேன் என்று ஒரேயடியாக அடித்து விட்டாளே! எனக்கு என்ன மதிப்பு இருக்கிறது அப்புறம்?” என்று உதடுகள் படபடக்க முறையிட்டாள்.

இரு தரப்பிலும் உள்ளே குமைந்து கிடக்கும் புகைச்சல் வெளியே கிளம்பி விட்டது. ‘அப்புறம் போக முடியாமல் இருபுறமும் நகர முடியாமல் நடுநிலையிலே தவிக்கும் அவர் எந்தப் பக்கம் சாய்காலாக நிற்கிறார் என்று பார்க்க வேண்டும். உண்மையிலே அவர் காதல் உள்ளம் படைத்தவரா என்று அறியச் சந்தர்ப்பம் நேரிட்டிருக்கிறது’ என்று அவர் முகத்தை ஆதரவுடனும் ஆவலுடனும் நோக்கி நின்றேன்.

தராசின் தட்டு ஒரு புறமும் தாழவில்லை. மௌனமாகவே அவர் கலத்தை விட்டு எழுந்தார். வரதன் சும்மா இருக்கக் கூடாதா?

“ஏன் பட்டு, சமத்துவம், சமத்துவம் என்று பெண்கள் கோஷமிடும் போது நீ மட்டும் இப்படிப் பத்தாம் பசலியாக இருக்கிறாயே! வெந்நீர் கொண்டு வைத்தால் அது சூடா, இல்லையா என்று பார்த்து விட்டுக் குடிப்பதற்கு என்ன இந்தத் துரைக்கு? அதைக்கூட அவள் பார்த்து வைக்க வேண்டுமாக்கும்! மனைவி அன்பு மேலிட்டுச் சிசுருஷை செய்கிறாள் என்று நினைக்க வேண்டுமே ஒழிய, அவளை இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்று ஆணவத்துடன் நிர்ப்பந்தப்படுத்துவது சரியல்ல. என்னைக் கேட்டால், சமயம் நேரும் போது கணவனும் அதே போல் மனைவிக்கும் பணிகள் செய்ய வேண்டும் என்பேன்” என்று குட்டிப் பிரசங்கம் நிகழ்த்தி விட்டு எழுந்தான்.

கை கழுவி விட்டு வந்த என் கணவர் இம்முறை அவன் முதுகில் தட்டிக் கொடுத்து, “பரவாயில்லை, இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயே. பிழைத்துப் போவாய்” என்று நகைத்தார். அவன் உள்ளூற மகிழ்ந்து கொண்டதை முகம் காட்டியது. என் மைத்துனர் ஒன்றையுமே காதில் போட்டுக் கொள்ளாதவர் போன்று மௌனச் சாமியாராக வயிற்றைத் தடவியவாறு ஏப்பம் விட்டார். பட்டுவுக்கு முகம் நாலுபடி வெண்கலப் பானையைப் போல் உப்பியிருந்தது. அவளுடைய முறையீட்டை என் கணவர் எடுத்துக் கொண்டு என்னைத் தண்டிக்கவில்லை என்ற மனத்தாங்கல் உள்ளே இருப்பது வெளியே நன்றாகத் தெரிந்தது.

எனக்கோ, வரதன் முன்னிலையில் அவள் என்னை மட்டம் தட்டியதும், அவர் அதைக் கேட்டுக் கொண்டு எனக்குப் பரிந்து அரை வார்த்தைக் கூடப் பேசாமல் இருந்ததும், மனப்புண்ணிலே அதிகமாகத் தைத்தன. அவனுக்குக் கூடப் பொறுக்கவில்லை. அவர் பொறுத்து விட்டார்! உள்ளுக்காக இல்லாவிட்டாலும் ஊருக்காகவாவது பால் குடிக்க வேண்டாமா! அவருக்கே அவமானமாக இல்லையா? ஆனால் அவளுக்கு உரம் கொடுத்து, ‘ஏண்டி அதிகப்பிரசங்கி’ என்று கண்டிக்காமலிருந்தாரே என்னை? அந்த மட்டும் பெரிதுதான்.

அன்று ஏதேதோ கடிதங்கள் வந்தன. அவர்கள் பேச்சுக்களைக் கேட்டும், என் கணவர் தம் உடைகளைத் தனியே எடுத்து வைத்துக் கொள்வதைக் கண்டும் எனக்கு யாரோ நெஞ்சை அமுக்கிப் பிழிவது போல இருந்தது. காரியாலயத்திலே இருவரும் ஒரு வாரமாக இல்லாமல் இருந்ததே மிக மிக நெருக்கடியைக் கொணர்ந்து விட்டதாம். எனவே அவர் மறுநாளே போகிறார்!

அவர் என்னிடம் ஆதரவு காட்டிப் பரிந்து வரவில்லை. அன்பு மழை பொழிந்து ஆறுதல் காட்டவில்லை. என்றாலும் அவர் இருக்கும் வீட்டிலே நான் இருந்தேன். என் கண் முன் அவர் நடமாடிக் கொண்டிருந்தார். இனி அதுவும் இல்லை. சூரியன் இல்லாத வானம் போல, அச்சில்லாத தேர் போல என் வாழ்க்கை இந்த அழகிய ஊரிலே கழிய வேண்டும். குழந்தைகளுக்குத் தாதியாக, கூப்பிட்ட குரலுக்கு ஏவலாளியாக நான் உணர்ச்சியற்று உழைக்க வேண்டும்!

அவர் நெஞ்சம் கல்தானா? இருதயமே இல்லையா? என்னுடைய இந்த வாழ்க்கைக்கு முடிவே இல்லையா? நான் செய்து விட்ட தப்புக்கு, அதைத் தப்பு என்றே வைத்துக் கொண்டாலும், வாழ்வையே பலி கொடுக்க வேண்டுமா?

இருதயத்துள்ளே ஒரு பிரளயம் வந்து விட்டது போலக் குமுறியது. இரவு என்னுடன் தூங்கும் சுகுமாரும் மைதிலியும் வழக்கம் போல, “கதை சொல்லு, சித்தி” என்று கேட்ட போது, ஒன்றும் அறியாக் குழந்தைகளிடம், “கதையுமாச்சு கிதையுமாச்சு!” என்று ஒருநாளும் இல்லாமல் எரிந்து விழுந்தேன்.

வெளியே ஹாலிலே பட்டு, மைத்துனர், வரதன், அவர் நால்வரும் சீட்டாடிக் கொண்டிருந்தனர். சிரிப்பொலியும், சீட்டுக் கலைக்கும் சப்தமும் வரதனின் வெண்கலத் தொண்டையும் அவ்வீட்டையே கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருந்தன. கடிகாரத்தில் மணி பத்து அடித்து விட்டது. தூங்கி விட்ட குழந்தைகளைச் சரியாகக் கட்டிலில் நகர்த்தி விட்டேன். ஆயிற்று, இந்தச் சீட்டாட்டம் இன்னும் சற்றுப் பொழுதிலே ஓய்ந்து விடும். அப்புறம் அவர் பூனை போல் அடிமேல் அடி வைத்து ஓசைப்படாமல் கதவைத் திறந்து கொண்டு வருவார். என்னைப் பார்த்தாலே எங்கே நெஞ்சம் நிலைகுலைந்து விடுமோ என்று முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்வார். நான் விளக்கை அணைக்காமல் உட்கார்ந்திருப்பது தெரிந்தால், “இன்னும் படுத்துக் கொள்ளவில்லையா? விளக்கை அணைத்துவிட்டால் தேவலை” என்பார். அவரது மன உறுதி என்னைக் கல்லாக்கிவிடும். ஏதேனும் வாயைத் திறந்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தேனானால் அதைக் கூட மென்று விழுங்கி விடும்படி செய்து விடும் அவரது அசையா நெஞ்சம்.

பெண்கள் தங்கள் சாகசப் பேச்சிலும் மயக்கும் கண் வீச்சிலும் மோகனப் புன்னகையிலும் முற்றும் துறந்த முனிவர்களையும் நிலைகுலையச் செய்திருக்கிறார்கள் என்பதை நான் அறியாதவள் அல்ல. தூய்மையான அகக் காதல் இல்லாத இடத்தில் கீழ்த்தரமான மனப்பான்மைக்கு எழுச்சி கொடுக்கும் வண்ணம் எழும் முயற்சிகள் அவை. கணவன் - மனைவி என்ற புனித உறவுக்கு அஸ்திவாரம் இல்லாமல் எழும் உடற் கலப்பிலே வெறுப்புற்றுத் தானே என்றே நான் வெகுண்டு தள்ளினேன்? அவரிடம் நான் வேண்டி விழையும் அகக் காதலுக்கு என்ன என்ன சாதனைகள் செய்ய வேண்டும் என்பதை நான் அறிந்திலேனே!

ஜன்னல் திரையை அகற்றிவிட்டுக் கண்ணாடி கதவைத் திறந்தேன். மலைக்காற்றுச் சில்லென்று உள்ளே நுழைந்தது. என் உடல் சிலிர்த்தது.

புடவைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு நான் வெளியே நோக்கினேன். பின் நிலாக் காலம் போல் இருக்கிறது. மலை மங்கை அந்தகாரத்தில் மறைந்து கிடந்தாள். வெளியே எங்கும் நிசப்தம் நிலவியது.

எங்கும் சூனியம். ‘இப்படித்தான் வாழ்வும். இப்படித்தான் உன் வாழ்வும்!’ என்று என்னுள்ளே சோக்குரல் பரவி ஒலித்தது. இதயம் எழும்பியது. சாளரத்தண்டையில் அமர்ந்த நான் விம்மி விம்மி அழுதேன். என் சிந்தனையிலிருந்து அந்த வீடு, ஆடம்பரம் அவர்களுடைய ஆட்டக் கலகலப்பு எல்லாம் அகன்று விட்டன. என் சூனிய உலகின் சோகச் சிறையிலே ஒன்றி எத்தனை நேரம் கண்ணீர் பெருக்கி இருப்பேனோ!

அறைக் கதவைத் திறந்து கிரீச்சென்று சார்த்தும் சப்தம் எனக்கு ஆழ்கடலின் அடியிலிருந்து வந்தது போல் இருந்தது. கட்டிலில் போய் உட்கார்ந்த அவர் தலையிலே கையை வைத்துக் கொண்டு நெடு மூச்செறிந்தது, டிக் டிக் கென்று நின்றுவிடும் போல் கட்டுக் கடங்காமல் துடித்த என் இருதயத்தை சம்மட்டிக் கொண்டு அடிப்பது போல் இருந்தது. என் அருகிலே எழுந்து வந்த அவர் அடுத்த விநாடி கண்ணீர் கறை படிந்த என் முகத்தை உற்றுப் பார்த்தார். “சுசீலா!” என்ற அவர் குரல் நடுங்கியது.

கல் நெஞ்சமும் கலங்கி விட்டதா? ஏன் இபப்டி என் உடல் சிலிர்க்க வேண்டும்? ஏனென்று பதில் வரவில்லை. விம்மல் உந்தியது.

தழுதழுத்த குரலைச் சமாளித்துக் கொண்டு, அவர் “என் வாழ்விலே நான் மகத்தான தவறுதல் செய்து விட்டேன் சுசீலா!” என்றார்.

தேளின் விஷத்தினால் நெறி ஏறித் துடிதுடிப்பவன் ஆவலுடன் மருந்தின் இதத்தை எதிர்பார்க்கும் போது கால கூட விஷம் உடலில் ஏறி விட்டால் எப்படி இருக்கும்? அவர் முகத்தை நடுநடுங்க ஏறிட்டுப் பார்த்தேன்.

“உன்னைக் கைப்பிடித்து மணம் செய்து கொண்ட போது, ‘என்னைப் போலப் பாக்கியவான் யாரும் இல்லை!’ என்று பெருமிதம் கொண்டிருந்தேன். மண மயக்கத்திலே மாபெரும் தவறு செய்கிறேன் என்பதை நான் அப்போது அறியவில்லை சுசீலா! என்னை மன்னித்து விடு. தீர விசாரியாமல், ஆலோசியாமல் நான் உனக்கும் எனக்கும் தீங்கிழைத்துக் கொண்டு விட்டேன். மன்னித்து விடு. இதை விட உனக்குச் சந்தோஷம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ள முடியாது சுசீலா.”

நெடுமலை ஒன்றிலிருந்து கிடுகிடு பாதாளத்தில் தள்ளி விடப்பட்டது போல் இருந்தது எனக்கு. இந்த வீழ்ச்சியில் ஏற்பட்ட ஆத்திரம் என் நெகிழ்ச்சி யாவும் அவருடைய உருக்கத்தில் ஓடுவதற்குப் பதிலாகப் பாறையாகக் கெட்டிப்பட்டன. நான் அவருடைய வாழ்விலே புகுந்து விட்டது அவருடைய அண்ணா மதனி இணைப்பிலே பிளவு காண ஏதுவாகி விட்டது என்பதை எத்தனை உருக்கமாகச் சொல்லுகிறார்! என்னைக் கைப் பிடித்த போது என் ராட்சசத்தனம் தெரியவில்லையாம்! அவருக்கு என் மீது ஏற்படும் அன்பு, நான் அவருடைய மதிப்பைப் போற்றுவதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது! சே! எத்தனை சுயநலப் பிராணி இவர். கோழை. ஆம் கோழை தான். இல்லாவிட்டால் அண்ணாவை விட்டு என்னுடன் சுதந்திரமாக வாழ்க்கை நடத்த விழைய மாட்டாரா? காரும் பங்களாவும் சீரும் சிறப்பும் வேண்டாமே! அவர்களிடம் மனத்தாங்கல் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள மாட்டவே மாட்டார். ஆனால் இந்தப்புறம் நான் சீற்றம் கொண்டு வெகுளுவேன். அவர் மேல் பாய்ந்து விழுவேன் என்பதற்காக இந்த உருக்கம்! இந்தத் தியாகங் கூட அதனால்தான். என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால், அவர்கள் இட்ட கோட்டை மீறி வரமாட்டார். வெறுப்பு என் வைராக்கியத்தை எழுப்பியது. விருட்டென்று விளக்கை அணைத்தேன். ஜன்னல் கதவைச் சாத்தித் திரையைத் தள்ளிவிட்டு என்றும் இல்லாத உறுதியுடன் படுத்துக் கொண்டேன்.

3-5

மனோகரம் கமழும் மாலை வேளை. ஜோடியாக ஆடவரும் பெண்டிரும் மனத்தைக் கவரும் ஆடைகளை அணிந்து உல்லாசமாக மலைப்பாதையிலே கவலையற்றவர்களாகச் சென்றார்கள். செல்வர்களான சுகவாசிகளின் ஒய்யார வாழ்க்கையைப் பறையடித்துக் காட்டும் வண்ணம் ரஸ்தாவில் இப்படியும் அப்படியுமாகப் போகும் விதம் விதமான கார்கள் தங்கள் அழகை மாலை வெயிலில் மிகைப்படுத்திக் காண்பித்தன. ஆதவனின் அந்திப் பொன்னிறத்திலே ஒன்றிப் போயிருந்த மலையரசி ஜன்னலிலே அமர்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி நகைப்பது போல் இருந்தது. வரதன் பார்த்துப் பார்த்துக் கட்டியிருந்த வீட்டின் அந்த ஜன்னலிலே அதுவரை யாரும் சோகத்தைக் கக்கியிருக்க மாட்டார்கள். இனி மேலும் யாரும் வரப் போவதும் இல்லை. ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்த்தால் கடவுள் அருள் வள்ளல்தாம். கஷ்டத்தையும் கொடுக்கிறார், அப்படி ஒரு துயரம் நேரிட்டால் நாம் எப்படிச் சமாளிப்போம் என்று பீதி கொண்டிருக்கும் போது தாங்குவதற்குச் சக்தியையும் அளிக்கிறார். எப்படிச் சகித்துக் கொள்கிறோம் என்றே அந்த சமயத்தில் புரிவதில்லை. பின்னால் கூட, ‘நாமா அந்த மலையைத் தாங்கினோம்’ என்ற ஆச்சரியம் எழும்.

நான் பயந்தது இப்போது எனக்கு லபித்து விட்டது. அவர் மனத்திரைக்குள் என்ன இருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டாம். ஆராய்ச்சிகள் செய்து குட்டையைக் குழப்பி விட வேண்டாம். என் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார். காதலைத் தெய்வீகமாகப் போற்ற மாட்டார். ஏதோ அவர் இஷ்டப்படி, இழுக்கும் இடத்தில் எல்லாம் நீண்டு கொடுக்கும் ரப்பரைப் போல, நானும் இருப்பேன் என்று என்னைக் கேவலமாக நினைத்து விளையாட்டு போல் மணந்து கொண்டு விட்டார். இப்போது அவருக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம்! படுகுழியில் விழுவோமோ, விழுவோமோ என்ற திகிலிலிருந்து விழுந்து விட்டேன் என்று தீர்ந்து விட்டது. என் போன்ற அதிசய வாழ்வு எந்தப் பொண்ணுக்காவது கிட்டி இருக்குமா? “ஐயோ பாவம்! புக்ககம் படு கர்நாடகம், அவன் ஓர் அம்மா பிள்ளை, ரொம்பவும் கஷ்டப்படுகிறாள் பெண்” என்று ஜகதுவிடம் தோன்றும் அநுதாபங்கூட என்னைக் கண்டு யாருக்கும் தோன்றாது. நாகரிகப் போர்வையும், ஆடம்பர வாழ்வின் முகமூடியும் இவர்களது உண்மைத் தோற்றத்தை வெளியே காண்பிக்க மாட்டா. என் அவல நிலையும் வெளியே தெரியாது!

இதுதான் என் தலைவிதி என்று எத்தனை தீர்மானமாக உறுதி கொள்ள முயன்றாலும், என்னை அறியாமலே இருதயத்தின் ஒரு மூலையிலே வானம் குமுறுவது போலக் குமுறிக் கொண்டிருந்தது. எந்தத் திசையில் செலுத்தலாம் மனத்தை என்று யார் யாரையோ சிந்தித்துப் பார்த்தேன்.

ஊர் நினைவு வந்ததும் சரளா என்னுள் வந்தாள்.

அப்புறந்தான் எனக்கு ஞாபகம் வந்தது. புங்கனூரோடேயே என் சங்கீத அபிவிருத்தியை மூட்டை கட்டி விட்டேனே.

வீட்டிலே அப்போது யாருமே இல்லை. பெரிய குழந்தைகள், மைத்துனர், பட்டு எல்லோரும் கூனூர் ரோஜாத் தோட்டத்துக்குச் சென்றிருந்தனர். வரதனும் எங்கோ போயிருந்தான். விளக்கேற்றி விட்டு இரண்டு பாட்டுப் பாடலாம் என்ற எண்ணத்துடன் அறையை விட்டு வெளியே வந்தேன்.

அவ்வளவு ஆடம்பரமாக எல்லாவிதச் சுக சௌகரியங்களும் நிரம்பியிருந்த அந்த வீட்டிலே சுவாமியறைப் படமோ, குத்துவிளக்கோ ஒன்றையும் காணவில்லை. செல்வமும் சுகமும் இருந்து விட்டால் கடவுளின் நினைப்பு அநாவசியம் போலும்! நான் இருந்த அறை அலமாரியில் நான்கு மெழுகுவர்த்திகள் என் கண்களில் தென்பட்டன. எப்போதாவது மின்சார ஓட்டம் தடை பெற்று விளக்கு அணைந்து விட்டால் அவசரத் தேவைக்காக அவற்றை வாங்கியிருக்க வேண்டும். ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தேன். தீப ஒளியை ஒரு நிமிஷம் என்னை மறந்து உற்று கவனித்தேன். முழுவதும் பிழம்பாகத் தெரியவில்லை. அடியிலே நீலம். நடு மையத்திலே சந்திரனின் மையத்தைப் போன்ற கருமை. நுனியிலே கொழுந்துச் சிவப்பு. இத்தனையும் தாங்கிக் கொண்டு ஒளி சுடர் விட்டெரிந்தது. படாடோபமாகக் கண்ணைப் பறிக்காமல் அடக்கமாக மனத்துக்குச் சாந்தியையும் குளிர்ச்சியையும் இதனாலேயே தான் தீபச்சுடர் அளிக்கிறது என்று அறிந்து கொண்டேன்.

‘இன்னல், கவலை, சோர்வு ஆகியவை இருந்தாலும் இந்த ஒளியைப் போல அன்பின் சுடரால் தாங்கப்படும் வாழ்வைக் கொடு, தேவி!’ என்று என்னையும் அறியாமல் உள்ளம் பிரார்த்தித்துக் கொண்டது.

பிறகு நான் என் மனத்தை விட்டுத் துன்பங்களை எல்லாம் மறந்து பாடினேன். ஒரு பாட்டு, இரண்டு பாட்டு என்று என் மனம் முழுவதும் அதில் லயித்தது, சாந்தி கண்டது. யாருமே என்னைத் தடுப்பார் இருக்கவில்லை. தன்னிச்சையாகத் தோன்றிய கீதங்களை எல்லாம் நான் இசைத்துக் கொண்டிருக்கும் போதே, நான் பார்த்துக் கொண்டிருந்த மெழுகுவர்த்தி அணைந்தது. ஜன்னல் கதவு திறந்திருக்கிறது. ‘காற்று அணைத்து விட்டது போலிருக்கிறது’ என்று எண்ணியவளாகச் சார்த்துவதற்காக எழுந்தேன். திரும்பிய நான் திகைப்பூண்டை மிதித்தவள் போல மருண்டு நின்று விட்டேன். அறை வாயிற்படியிலே இரு கைகளையும் பக்கத்துக்கு ஒன்றாக வைத்த வண்ணம் புன்னகை மலர்ந்த வதனத்துடன் வரதன் நின்றான்! எத்தனை நேரமாக இருக்கிறானோ? “மிக நன்றாகப் பாடுகிறாயே சுசீலா! பக்க வாத்யம் இல்லாமல் ரேடியோவில் யார் பாடுகிறார்களோ என்று நான் எண்ணிக் கொண்டே வந்தவன், நீ பாடுகிறாய் என்று தெரிந்து கொண்டதும் அதிசயப்பட்டுப் பிரமித்து விட்டேன்! இவ்வளவு இனிமையான சாரீரமும் சங்கீதத் திறமையும் படைத்தவள் நீ என்று எனக்கு இதுவரை யாருமே சொல்லவில்லையே!” என்றான்.

வெட்கமும் பயமும் என்னைச் சூழ்ந்து கொண்டன. அசையவும் மறந்தவளாகத் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்றேன்.

“எத்தனை வருஷம் சிட்சை சொல்லிக் கொண்டிருக்கிறாய்? யாரிடம்?” என்று அவன் கேட்டான்.

நான் கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல முணுமுணுத்தேன்.

“இன்னும் இரண்டு பாட்டுக்கள் பாடுகிறாயா? அதற்குள் ஏன் எழுந்து விட்டாய்? நான் வந்து விட்டேன் என்றா? நானும் ஓரளவு சங்கீதம் பயின்றிருக்கிறேன். கொஞ்ச காலமாக வீணை கூடச் சாதனை செய்து வருகிறேன். நீ இவ்வளவு உயர்தரமாகப் பாடுவாய் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டதே இவ்வளவு நாளாக” என்றான் அவன். பலவந்தமாக ஒரு சிறைக்குள் அகப்பட்டுவிட்டது போல் இருந்தது எனக்கு. வீட்டிலே யாரும் இல்லை. ‘இவன் சொல்லுகிறபடி பாடலாமா? திடீரென்று பட்டுவும் மைத்துனரும் வந்து விட்டால் என்ன நினைத்துக் கொள்ள மாட்டார்கள்? ஆனால் ஏன் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டும்? அவனுக்கும் இந்தக் கலையிலே ஞானம் இருக்கிறது. என்னை மதித்து, விரும்பி இரண்டு பாட்டுக்கள் பாடச் சொல்லும் போது நான் மறுக்கலாமா?

நான் புக்ககம் வந்து அத்தனை நாட்களிலே என்னைப் பாடு என்று யாருமே அதுவரையில் சொன்னதில்லை. பெரும்பாலும் விவாகத்துக்குப் பெண் பார்க்க வருகிறவர் பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா? என்று கலை ஆர்வம் உள்ளவர்களைப் போல் காண்பித்துக் கொண்டு பெண்ணைப் பரீட்சை செய்து பார்ப்பதுடன் சரி, கணவன் வீடு வந்து விட்டால் அவள் பாட்டு, ஆட்டம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட வேண்டியதுதான். குழந்தையின் வளர்ச்சிக்குத் தாயின் அரவணைப்புத் தேவையாக இருப்பது போல, கலை வளர்ச்சிக்குப் பிறருடைய உற்சாகத் தூண்டுதல் தேவை. அது இல்லாவிட்டால் உள்ளே இருக்கும் கலை சோம்பு உறங்கி மங்கி விடும். மனைவி கற்றிருக்கும் அருங்கலையைப் போற்றி வளர்க்கும் கணவன்மார்கள் நம் சமூகத்தில் மிகக் குறைவு. அப்படியே அவன் ஆர்வம் உள்ளவனாக இருந்தாலும் சூழ்நிலை சரியாக இருப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை ரஸிகத் தன்மையைத் தொட்ட கையைக் கூடக் கழுவிக் கொண்டு பிரமன் அவரைப் படைத்திருக்க வேண்டும். அவரைச் சார்ந்தவர்களும் சங்கீதத்தை வீசையாக அளக்கும் ஞானந்தான் படைத்திருந்தார்கள்.

ரேடியோ வைத்திருக்கிறார்களே, அது பெருமைக்குத்தான். கடனே என்று அது ஏதாவது அழுது கொண்டிருக்க, அவர்கள் சுவாரசியமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். தூண்டுதல் இல்லாவிட்டால் பாடவே முதலில் மனம் எழும்புவதில்லை. இரண்டாவதாக எனக்கு அந்த வீட்டிலே எங்கே ஓய்வு இருந்தது?

இப்போது வரதன் என் கானத்தை ரஸித்துக் கேட்டிருக்கிறான். உற்சாகத்துடன் இன்னும் இரண்டொரு பாட்டுக்கள் இசைக்கத் தூண்டுகிறான். என் கலை தளிர்த்து வளர இதுதானே தேவை? நான் ஏன் பாடக் கூடாது?

மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு நான் என்ன பாட்டுப் பாடலாம் என்று யோசனை செய்தேன். அதற்குள் அவன், “இரு சுருதிப் பெட்டி கொண்டு வருகிறேன்” என்று போனான்.

நான் இதுதான் சமயமென்று கூடத்துக்குள் வந்து உட்கார்ந்து கொண்டேன். நடுவே அவன் சுருதிப் பெட்டியைக் கொண்டு வந்து வைத்தான். எனக்குக் குரல் நடுங்கியது. அவசர அவசரமாக ஒரு பாட்டைப் பாடி முடித்து விட்டு எழுந்தேன்.

“நான் சொல்லாமலே நீ பாடிக் கொண்டிருந்தாயே, அந்த இனிமை இப்போது குன்றி விட்டது. நான் முட்டாள்தனம் பண்ணினேன். தெரியாமல் வெளியிலேயே நின்றிருக்க வேண்டும்!” என்று அவன் நகைத்தான்.

சங்கோசத்தின் பிடியிலேயே சிக்கிக் கிடந்த நான் தலையைக் குனிந்து கொண்டு மௌனம் சாதித்தேன்.

“நீ இப்போது பாடினாயே, அந்தப் பாட்டை நான் வீணையில் அப்பியசித்து வருகிறேன். இதோ வாசிக்கிறேன். எப்படி இருக்கிறதென்று சொல், பார்க்கலாம்!” என்று என் பதிலை எதிர்பாராமலே அவன் வீணையைத் தூக்கிக் கொண்டு வந்தான்.

அடி மனத்தில் அச்சம் துடித்தது எனக்கு.

சுருதி கூட்டிக் கொண்டு அவன் நான் பாடிய கீதத்தை அதே மாதிரியில் வீணையில் இசைத்தான். அவ்வளவு உயர்தரமாக அவன் வாசிப்பான் என்பதைச் சிறிதும் எதிர்பார்த்திராத எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. “என்னைக் கேலி செய்வது போல வாசித்து விட்டீர்களே!” என்று மெல்ல திகைத்தேன்.

“இல்லை, சரணத்தின் அடியில் நீ நிரவல் செய்தாயே? அந்தக் கற்பனை, புது மாதிரியாக இருந்தது. எனக்கு அது வரவில்லை. எங்கே அந்த அடியை மட்டும் கொஞ்சம் இன்னொரு தரம் சொல்லிக் காட்டேன்” என்றான் வரதன்.

என் அச்சத்தினூடே இந்தப் புகழ்ச்சி சற்று உற்சாகத்தையும் ஊட்டியது.

“சும்மா வேடிக்கை செய்கிறீர்கள். நான் பாட மாட்டேன்” என்று கொஞ்சம் பிகுவாகவே உள்ளே ஓடி வந்து விட்டேன்.

நல்ல வேளையாக அப்போது பட்டுவும் மைத்துனரும் வந்து விட்டதை அறிவித்தபடியே சுகுமாரும் மைதிலியும் கட்டியம் கூறிக் கொண்டு குதித்தோடி வந்தனர்.

வீணையும் கையுமாக அமர்ந்திருந்த வரதனை மைத்துனர், “ஏதேது வரதா, வீணை கீணை எல்லாம் வாங்கி வாசிக்கிறாயா, என்ன?” என்று வியப்புடன் வினவினார்.

“ஏதோ பொழுது போக்காகக் கற்றுக் கொண்டேன். அடுத்த வாரம் வானொலியில் முதல் தடவையாக என் குரல் கூடக் கேட்கும்” என்று என்னிடம் கூறாத சங்கதியைக் கூறிவிட்டு அவன் வீணையைக் கீழே வைத்தான்.

“சுசீலா!” என்று என்னைக் கூப்பிட்டுக் கொண்டு நேராக உள்ளே வந்தான் பட்டு.

“வரதன் வந்து வெகு நேரம் ஆகிவிட்டதா? டென்னீஸ் மாட்சுக்குப் போவதாகச் சொல்லிப் போனானே?” என்று கேட்டாள்.

“எனக்கே எப்போது வந்தார் என்று தெரியாது. நான் வேலையை முடித்துக் குழந்தையைத் தூங்கப் பண்ணி விட்டு வரும்போது இங்கே பாடிக் கொண்டிருக்கிறார்” என்றேன். பின் என்ன சொல்லுவது?

“சரிதான். இனிமேல் சொல்லி வைக்கிறேன். அவன் சற்றுக் கபடமற்றுப் பழகுவான். இருந்தால் கூட பார்க்கிற பேருக்கு நன்றாக இருக்காது, பார். அதிகமாக அவனுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாதே” என்று இதமாக என்னைக் கண்டித்து வைத்தாள். “ஆகட்டும் மன்னி” என்று நான் தலையை ஆட்டினேன்.

அவளுக்கு அதற்குள் புத்தி எப்படிப் போய் விட்டது? இந்தச் சங்கடத்துக்காக அவளால் வீட்டிலே தங்குவதும் சாத்தியம் இல்லை. என்னை அழைத்துச் செல்லவும் முடியாது. வரதனைக் கட்டுப்படுத்துவதும் இயலாத காரியம்.

கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் அதிகமாக இருக்கும் இடத்திலே தான் எப்படியாவது சிறிய இடைவெளி ஏற்படுவது வழக்கம். வரதனுடன் நான் பேசுவதைப் பற்றி அவள் எச்சரிக்கை செய்தாள். ஆனால் சமயத்தில் அந்தக் கட்டுப்பாட்டின்படி நான் ஊமையாகி விடுவது சாத்தியமாக இருக்கிறதா? வேற்று ஆண்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும் கிராமத்துச் சூழ்நிலையாக இருந்தாலும் சரி. இந்த இரண்டுங் கெட்டான் நிலையில் நான் என்ன செய்வேன்! சாளரக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு முதல் நாளைப் போல இரவின் கரிய நிறத்தை வெறித்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். மணி பத்து பத்தரை இருக்கும். அறை விளக்கை அணைத்திருந்தேன். என் மனத்தின் மூலையில் புதையுண்டிருந்த பொருமல் மெள்ள மெள்ளத் தனிமையில் தலை தூக்கியது. முன்னாள் நான் அப்படி உட்கார்ந்திருந்ததும், அவர் வந்ததும், பேசிய சொற்களும் படலம் படலமாக என் முன் அவிந்து, ஆடும் நாகத்திற்கு ஊதும் இசை போல அந்தப் பொருமலுக்கு ஆவேசம் கொடுத்தன.

மனித வாழ்விலே எதிர்பாராத விதமாக விபத்துகள். நோவ் நொடிகள் முதலிய எத்தனையோ அதிர்ச்சிகள் நேரிடுகின்றன. அதெல்லாம் விதியின் செயல். தடுக்க முடியாதவை என்கிறார்கள். அப்படி என் நிலையும் விதியின் செயலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அற்ப நிகழ்ச்சியில் உண்டான அர்த்தமற்ற பயத்தில் ஆரம்பித்து, இன்று ஆதரவே இல்லாத அவல நிலையில் அல்லலுறும் வரை எப்படி வந்தேன் நான்? உலகத்திலேயே இல்லாத அதிசயமாக, என்றோ ஆதரவு காட்டிய அண்ணன் மதனியிடம் காட்டும் நன்றியுணர்ச்சிக்காக மனைவியின் உணர்ச்சிகளைத் துச்சமாகக் கருதுவாரா இவர்? யாரும் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள்.

நீர்த் திரையிட்ட விழிகளை நிலைநிறுத்தி அசையாமல் இருளை நோக்கினேன். கீழே இருந்த ரஸ்தாவில் வரிசை வரிசையாகத் தென்பட்ட முனிசிபாலிடி விளக்குகள் மலையரசிக்கு அழகாக மாலையிட்டது போல் காணப்பட்டன. வானத்திலே சந்திரன் இல்லை. நட்சத்திரங்கள் இல்லை. மரம் செடி கொடிகள் கூட அசையாமல் நின்றன. வீட்டைச் சுற்றிச் சென்ற நடைப்பாதையில் முன்புற வழியாக ஏதோ ஓர் உருவம் வருவதுபோல் தோன்றியது.

‘யார் இந்த வேளையில் இந்த வழியாக வருபவர்?’ என்ற அச்சத்துடன் நான் ஊன்றிக் கவனித்தேன். ஓவர் கோட்டும் தலையில் தொப்பியும் அணிந்த ஆண் உருவந்தான். ‘திருடன் இப்படியும் வருவானோ?’ என்று ஒரு கணத்துக்குள் என்ன என்னவோ எண்ணிவிட்ட எனக்கு சட்டென்று ஜன்னலைச் சாத்திவிட்டு உள்ளே வந்து விட வேண்டும் என்று தோன்றவில்லை. சற்றும் நான் எதிர்பாராத விதமாக ‘டார்ச்’ விளக்கின் ஒளி நடை பாதையில் விழுந்தது. மேகத்தின் நுனியிலே காணும் வெள்ளி விழும்பியது. ‘விளக்கைப் போட்டுக் கொண்டு வரும் இந்த ஆள் திருடனா இல்லையா என்று பார்த்து விடுவோமே? திருடனாகத் தோன்றினால் ஒரே கூச்சலில் வீட்டில் உள்ளவர்களை எழுப்பி விடலாமே’ என்று குழந்தை போல் எண்ணமிட்டேன். டார்ச் விளக்கின் ஒளி என் மீது விழுந்தது. கூடவே, “இன்னும் நீ தூங்காமலா ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறாய், சுசீலா? குளிர் காற்று உள்ளே வரவில்லை?” என்று வரதன் குரல் கேட்டது.

நான் ஒரு விநாடி வெலவெலத்துப் போனேன். “நீங்களா?” என்று குழறியிருக்கிறேன்.

“ஏன்? திருடன் எவனாவது உள்லே வருகிறான் என்று பயந்து விட்டாயாக்கும்!” என்று அவன் நகைத்தான். பின் “எனக்கு இரவின் அமைதியிலே அசைவற்று நிற்கும் இந்த மலைமோகினியின் வனப்பைக் காண்பதிலே ஒரு பைத்தியம். அதோ அந்த முனையிலிருந்து பார்த்தால் ஆகா!” என்றான் பரவசமாக.

நான் ஆறுதலாக மூச்சு விட்டேன். “நீங்கள் கேட்பது போலத் திருடன் என்று தான் எண்ணினேன். கத்துவதாகக் கூட எண்ணி விட்டேன்!” என்றேன்.

“நல்ல வேளை!” என்று அவன் நிறுத்தினான்.

நான் ஜன்னல் கதவைச் சார்த்துவதற்காக கொக்கியைத் தள்ளினேன்.

“இந்த மலையரசி தினம் தினம் இப்படி இருள் துகிலில் மறைந்து கொண்டு காதலன் வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் சிந்துவதைக் கண்ணுறுவதுடன் அன்றி, நிஜ மங்கை ஒருத்தியும் அதே நிலையில் இருப்பதை இப்போது பார்க்க நேரிட்டிருக்கிறது.”

என்னைத் தூக்கி வாரிப் போட்டது. பரந்த நோக்கு, பரந்து நோக்கு என்றால் அதற்கும் இன்னதுதான் பேசலாம், பேசக்கூடாது என்று எல்லை இல்லையா? நான் திகைத்து நிற்கையிலே அவன் தொடர்ந்தான்.

“ஆனால் இந்த மலை மங்கையின் தாபம் வீண் போகாது. செம்பொன்மயமான பிரகாசத்துடன் கதிரவன் தன் இருதயக் கதவைத் திறந்து அவளை ஏற்றுக் கொள்வான். சிந்திய கண்ணீர் அத்தனையும் புல் தரையிலே முத்துக்களென ஒளி விடும்படி அவள் உவகை கொள்வாள்.”

இந்தச் சித்திரச் சொற்கள் என் கருத்தைக் கவர்ந்தன. வர்ண விசித்திரங்களைக் கண்டு பிரமித்து மனத்தை மயக்க விடும் குழந்தை போல, அவனுடைய ரஸிக உள்ளம் என்னைப் பிரமிக்கச் செய்தது.

“உம், அப்புறம்?” என்று நான் கேட்பது போல என் நிலை அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

“நாயகனது ஒளியிலே ஒன்றிப் பகலெல்லாம் எனக்கு நிகர் யாரும் இல்லை என்று இறுமாந்து கிடப்பாள். மறுபடியும் அவன் அவளிடம் விடைபெற்றுக் கொள்ளும் காட்சி இருக்கிறதே, அதை நீ கவனித்திருக்கிறாயா?” என்று அவன் கேட்டான்.

“இல்லை, நான் கவனித்துத்தான் என்ன பிரயோசனம்? இம்மாதிரி எல்லாம் எனக்குப் பேச வராதே?” என்று பதில் அளித்த என்னை மனத்தின் உள்ளே குதிரையோட்டி கடிவாளத்தைப் பிடித்து இழுப்பது போல ஏதோ ஒன்று பின்னுக்கு இழுத்தது. “சுசீலா! ராமநாதனுக்கும் உனக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளை நான் நேற்று இப்படி வரும் போது கேட்க நேரிட்டுவிட்டது. பட்டு உன்னை இப்படி அடிமை போல் நடத்துவதை அவன் அநுமதித்திருப்பதே எனக்குச் சரியாகத் தொனிக்கவில்லை. அப்போதிலிருந்து எனக்கு உன்னைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. உண்மையில் நான் அநுதாபம் கொண்டு பொறுக்காமல் கேட்கிறேன். அவன் உன்னை எப்போதும் இப்படித்தான் நடத்துகிறானா?”

ஆயிரம் தேள்கள் ஒரே சமயம் என்னைக் கொட்டின. வானத்துக் கருமேகங்கள் என் மீது வந்து மோதின. உடலும் உள்ளமும் காந்தின.

பளாரென்று ஜன்னல் கதவைச் சார்த்தித் திரையை இழுத்து விட்டேன். படுக்கையில் வந்து வீழ்ந்தேன்.

உள்ளூறப் புண் இருக்கும் போது அவ்வளவாகத் தெரியாத வேதனை பிறர் கண்களில் பட்டு அவர்கள் கேட்கும் போது உயிர் போகும்படி நோகிறதே. அன்று மூர்த்தி கேட்டான். ஏதோ மழுப்பினேன். இந்த வரதன் - பாம்பைப் போன்றவனா, பழுதையைப் போல் அபாயமற்றவனா என்று எனக்குத் தெரியாத வரதன் - எங்கள் வாழ்க்கைச் சகடத்தின் அச்சு முறிவது போன்று நிகழ்ந்த பேச்சு வார்த்தைகளைக் கவனித்திருக்கிறான். அவர் என்னைச் சிறையிலே தள்ளி ஆயுட்காலம் முழுவதும் துன்புறுத்தட்டும். ஆனால் இந்தச் சித்திரவதை, வரதன் போறவர்களுக்குத் தெரியக் கூடாதே! அவன் அநுதாபம் எனக்கு ஆறுதலுக்குப் பதில் வெடிக்கும் வேதனையை அன்றோ கிளப்பி விடுகிறது? அத்துடன் இப்படிக் கூறக்கூட எனக்குக் கூச்சமாக இருக்கிறது. என்னை எப்படி வேண்டுமானாலும் அவர் கொடுமை செய்வதைப் பொறுத்துக் கொள்ள எனக்குச் சக்தி இருக்கிறது. ஆனால் அவர் என் முன்னேயே பிறரின் அவமதிப்புக்குள்ளாவதைப் பொறுக்காமல் உள்ளம் குமுறுகிறதே. பெண்ணுள்ளத்தை அளவிட இயலாத பலவீனத்தின் கோளாறா இது? அல்லது வாழையடி வாழையாகப் பத்தினிப் பெண்களின் பண்பாட்டில் ஒளியுறும் பாரத நாட்டிலே பிறந்ததற்கு உரித்தான மேன்மைக் குணத்தின் கோளாறா?

3-6

வரதன் கூறியது உண்மைதான். தன் காதலியைப் பிரிந்து அடி வானத்திலே மறையும் போது கதிரவன் என்ன என்ன ஜாலங்கள் செய்கிறான்! ஒரேயடியாக மறைந்து விட்டால் அவள் எங்கே சோர்ந்து விடுவாளோ என்ற எண்ணம் போலும் அவனுக்கு! ஒரு விநாடி தன் ஒளி முகத்தைக் காட்டுவான். பின்னர் கொஞ்சம் மேகத் திரைக்குள் மறைந்து பின்னே செல்வான். மறுபடியும் ‘இதோ இருக்கிறேன்’ என்று தன் பொற்கதிர்களால் அவளை அணைத்துக் கொள்வான். பெண்களை மயக்கும் இந்தக் கொஞ்சல் வித்தை அவனுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது! இந்த ஜால வித்தையை அறியாத மலையரசி, காதலன் தன்னுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தைக் கண்டு பரவசம் அடைந்தவளாக மெய் மறந்து விடுவாள். உள்ளே மறைந்தவன் வருவான் என்று அகம் துடிக்க அவள் நிற்கும் போதே அவன் போயே போய் விடுவான். ஏக்கமும் நிராசையும் சூழ்ந்தவனாக அவன் கரிய கங்குல் கொண்டு தன்னை மறைத்துக் கொள்வான்.

சில நாட்களில் மலை மோகினியை ஏளனம் புரிவது போல, வான வீதியிலே அவள் ஒளி நாயகன் இருந்த இடத்திலே சந்திரன் ஆயிரமாயிரம் நட்சத்திரக் கன்னிகையர் சூழப் பவனி வருவான். அப்போது எனக்குச் சட்டென்று வரதனின் அநுதாபம் நெஞ்சிலே ஈட்டி போல நினைவுக்கு வரும். நான் முகங் கொடாமல் அன்று படாரெனக் கதவைச் சார்த்தியும் கூட அவன் என்னிடம் எந்த மாறுதலையும் காட்டவில்லையே! எவ்விதச் சங்கடமும் இன்றி முன்போலவே அவன் நடந்து கொண்டானே ஒழிய அந்தச் சம்பவத்தைப் பற்றியோ, அம்மாதிரியான விஷயங்களைப் பற்றியோ அவன் பேசவே இல்லை. ‘உண்மையாக ஏதோ அநுதாபம் கொண்டும் கேட்டிருக்கிறானே ஒழிய, விகற்பமாக எண்ணுவது தவறு. ஆடவர் எவருடனும் இன்னமும் கலகலப்பாகப் பழகி இராததனாலே, கெட்டிப்படாத மனத்தில் ஏற்படும் சலனந்தான் இது’ என்று தைரியத்தைக் குவித்துக் கொண்டேன்.

அவன் குரலெடுத்துப் பாடும் போது, பெருந்தொண்டை கொண்டு நகைக்கும் வரதனா இது என்று எனக்குப் பிரமை தட்டி விட்டது. விரிசல் ஏதும் இல்லாத அவன் சன்னக்குரல் வெகு சுலபமாக மூன்று ஸ்தாயிகளிலும் மனத்திற்கு ரஞ்சகம் ஊட்டும்படி சஞ்சாரம் செய்தது. அநேகமாக மாலை ஆறு மணிக்கு மேல் அவன் வெளியே போவதே இல்லை. பட்டுவும் மைத்துனரும் வீட்டில் இருந்தால், தான் பாடுவதுடன் நின்று விடுவான். இல்லாவிட்டால் என்னிடம் ‘அது இப்படி, இது இப்படி’ என்று ராக விஸ்தாரங்களையும் லட்சணங்களையும் பற்றி ஏதாவது பேசுவான். என்னையும் இரண்டொரு பாட்டுக்கள் பாடச் சொல்லுவான். எனக்குத் தெரியாத விஷயங்களை நான் இந்தப் புதுக் கலை நட்பின் மூலம் அவனிடமிருந்து அறிந்து கொண்டேன். மனச் சஞ்சலம் மாறி ஏற்பட்ட உற்சாகத்தில் அவனிடமிருந்து இரண்டொரு பாடல்களைக் கூடக் கற்றுக் கொண்டேன். இந்த வரம்பை மீறி அவனும் என்னிடம் ஏதும் அநாவசியமாகப் பேசவில்லை. நானும் அவர்கள் சீட்டுக் கச்சேரி கலைந்து விட்டது என்று அறிந்தவுடனேயே விளக்கை அணைத்து ஜன்னல் கதவைச் சாத்தி விடுவேன்.

அன்று பட்டுவும் மைத்துனரும் மட்டும் ஏதோ படம் பார்க்கச் சென்றிருந்தனர். குழந்தைகள் வாசல் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். வரதன் வீணையில் புதிய பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டிருக்க, சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். என்ன தான் துணிச்சலை வருவித்துக் கொண்ட போதிலும், அவனுக்கு நேர் எதிரே சரிசமமாக உட்கார்ந்து வார்த்தையாட என் மனம் கூசியது.

மைதிலியும் சுகுமாரும் உள்ளே வந்து, “சித்தப்பா வந்துட்டா! வரப் போறார்னு நீ சொல்லவேல்லியே சித்தி? சித்தப்பா வந்துட்டா!” என்று சந்தோஷக் கூச்சலோடு என் கையைப் பிடித்து இழுத்தனர்.

“யார் ராமுவா வருகிறான்? இப்ப ஏதுடா வண்டி?” என்று கேட்ட வரதன் வீணையைக் கீழே வைத்தான்.

“நிஜம்மா கீழேயிருந்து தெருவிலே ஏறி வரா. நளினி அதுக்குள்ளே ஓடிப் போயிடுத்து” என்று கைகளை ஆட்டி அவர்கள் விளிக்கிறார்கள். அதற்குள் அவரே கூடத்துக்குள் நளினியைக் கையில் பிடித்துக் கொண்டு நுழைந்தார். கையில் இருந்த சிறிய தோல் பெட்டியைக் கீழே வைத்த அவர், “என்ன வரதா இது? வீணை கீணை எல்லாம் நீயா வாசிக்கிறாய்? தெரியவே தெரியாதே எனக்கு!” என்று வியப்புறும் விழிகளுடன் நோக்கினார்.

“இப்போது ஏதடா வண்டி? சொல்லாமல் கொள்ளாமல் ‘அவளை’ நினைத்து எப்படி வந்து குதித்தாய்?” என்று வினவினான் வரதன்.

“கோயம்புத்தூர் வரை வரவேண்டி இருந்தது. இவ்வளவு தூரம் வந்தோமே, இங்கும் வந்துவிட்டுப் போகலாம் என்று இரண்டு மணி பஸ்ஸில் நினைத்துக் கொண்டு கிளம்பினேன். உங்களைத் திகைக்க வைக்க வேண்டும் என்று தான் சொல்லாமல் கொள்ளாமல் வந்தேன்” என்று அவர் புன்னகை புரிந்தார்.

‘திகைக்க வைக்கவா? நிஜமாகவே திகைக்க வைக்கவா?’ என்று என் மனம் ஏனோ ஒரு விநாடியில் துள்ளிக் குதிக்க வேண்டும்!

சற்றைக்கெல்லாம் அவருக்காக நான் காபித் தம்ளரை மேஜை மேல் கொண்டு வைத்த போது வரதன் சிரித்துக் கொண்டே, “நீ மகா அதிர்ஷ்டசாலி அப்பா! இப்படிக் குறிப்பறிந்து பணி செய்யும் மனைவியை நான் எங்கெங்கும் கண்டதில்லை. பாரேன்! நீ வந்து இன்னும் அவளிடம் அரை வார்த்தைக் கூடப் பேசவில்லை. சிறிதும் நன்றியில்லாமல் என்னிடம் வளவளவென்று ஏதேதோ கதை அளந்து கொண்டிருக்கிறாய். அவள் உன் மீது எத்தனை கவனமாக இருந்திருக்கிறாள்! சுசீலா, நீ ஆனாலும் இந்த மடையனுக்கு இத்தனை இடம் கொடுக்கக் கூடாது. சற்றும் கண்டிக்க மாட்டேன் என்கிறாய்” என்றான்.

“ஏண்டா வளவளவென்று நீ அளந்தாயா! நான் கதை பேசினேனா? நீ என்ன சொன்னாலும் சுசீலா என்னைக் கண்டிக்க மாட்டாள்” என்று என்னைப் பார்த்து முறுவலித்த வண்ணம் அவர் காபித் தம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டார்.

“சுசீலா, நீ இவ்வளவு பட்சபாதம் செய்யக் கூடாது. நான் தடியன் போல் உட்கார்ந்திருக்கிறேன். அவனுக்கு மட்டும் காபி கொண்டு வந்தாயே. அவன் இதற்குள் எத்தனை கப் உள்ளே விட்டிருக்கிறானோ? பஸ் அடியிலேயே இந்திர பவனில் நுழையாமலா வந்திருப்பான்? அவனுக்கு நெஞ்சு உலர்ந்தா கிடக்கிறது? உண்மையில் எனக்குத்தான் இப்போது நெஞ்சு உலர்ந்திருக்கிறது. உம், என்ன இருந்தாலும் சொந்தக்காரி என்று ஒருத்தி இருந்தால் அந்த மாதிரியே வேறுதான்!” என்று அவன் குறைபட்டுக் கொண்ட போது, அவர் மட்டும் அல்ல, நானும் ‘பக்’கென்று சிரித்து விட்டேன்.

“என்னை மடையன் என்று அடிக்கொரு சஹஸ்ரார்ச்சனை செய்கிறாயே, உன்னைப் போல வடிகட்டின மடையன் யாருமே இருக்க மாட்டார்கள். ஏதோ வருஷம் ஒரு முறையாவது எதையாவது சாக்கு வைத்துக் கொண்டு லீலாவைப் பார்த்துவிட்டுப் போகிறாயா? நீ இங்கே, ‘நமக்கு என்று சொந்தக்காரி இல்லையே’ என்று நெடுமூச்சு விடுகிறாய். அவள் என்ன சொல்கிறாள் தெரியுமா?”

அவர் நிறுத்தும்போது எனக்கு ஏன் படபடக்க வேண்டும்? மூர்த்தியின் சமாசாரம் அவருக்குத் தெரிந்து விட்டதா? அதையா அவனிடம் சொல்லப் போகிறார்? வரதன் பதிலே கூறாமல் அவர் முகத்தைப் பார்த்தான்.

“இன்னும் எம்.ஏ.க்குப் படிக்கப் போகிறாளாம்! அப்புறந்தான் கல்யாணம் என்றும், ‘இன்னும் இரண்டு வருஷம் பேசக் கூடாது’ என்றும் அம்மாமியிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டாள். நீ என்னடா என்றால், இங்கே ‘சொந்தக்காரி வரவில்லையே’ என்று ஏங்குகிறாய்!” என்றார் என் கணவர்.

“அப்பாடா! படிக்கட்டுமே! இப்போது பரீட்சை முடிவு வந்து விட்டதா என்ன?” என்று பரந்த மனத்தினனாக வரதன் கேட்டான்.

“அழகாய்த்தான் இருக்கிறது! அது வந்து எத்தனை நாட்களாய் விட்டன? லீலா முதல் வகுப்பில் தேறியிருக்கிறாள். ஒரு சந்தோஷக் கடுதாசியாவது எழுதிப்போடு. ஆமாம் வீணை கீணை எல்லாம் தடபுடலாக இருக்கிறதே! எத்தனை நாட்களாக அப்பா இந்தத் துறையில் இறங்கியிருக்கிறாய்?”

“திடீரென்று வானொலியில் என் குரல் கேட்டதும், அப்போது நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்பட வேண்டும் என்று எத்தனை நாட்களாக நான் கோட்டை கட்டியிருந்தேன் தெரியுமா? அத்தனையும் சுசீலாவால் பாழாய்ப் போய்விட்டது. நான் ஏதாவது வாயைத் திறந்தாலே உள்ளே ஓடிவிடுபவள், வீணையையும் சுருதிப் பெட்டியையும் பார்த்துவிட்டு, யார் பாடுவார்கள் இங்கு என்று என்னிடம் வாயைத் திறந்து கேட்டு விட்டாள். அவளே கேட்கும் போது நான் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டி வந்து விட்டது.”

எனக்கு ஒரு விநாடி திக்பிரமையாக இருந்தது. குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுபவனா அவன்? அவள் பாடுவதை நானா கண்டுபிடித்துக் கேட்டேன்?

“ஆமாம், சுசீலா நன்றாகப் பாடுவாளே? நன்றாகக் கற்றுத் தேர்ந்தவள். அதனால் கேட்டிருக்கிறாள். ஓகோ! நீ ரேடியோவில் வேறு பாடுகிறாயா? ஆனால் சுசிலா உன் வித்தையை வெளியிட்டிருக்காமல் போனால் நாங்கள் நீ நினைத்தது போல் ஆச்சரியப்படவும் மாட்டோம். திடுக்கிடவும் மாட்டோம். எத்தனையோ தடியர்கள் எருமை மாட்டுத் தொண்டையை வைத்துக் கொண்டு பாடுகிறார்கள். வெளியிடங்களில் நடக்கும் கிரிக்கெட் வருணனையைத் தவிர நான் ரேடியோவில் செய்திகள் கூடக் கேட்பதில்லை. விடிந்தால் சமாசாரங்கள் பத்திரிகையில் வந்து விடுகின்றனவே. எனவே நீ பாடியிருந்தாலும் ஆடியிருந்தாலும் சொல்லாமற் போனால் யாருமே கவனிக்கப் போவதில்லை. எனக்கு என்னவோ பெண்கள் பாடினாலாவது கேட்கச் சற்று இனிமையாக இருக்கிறது. எருமைக் கடாவைப் போல இடிக்குரலை வைத்துக் கொண்டு நாமெல்லாம் பாட ஆரம்பிப்பது என்பது சகிக்க முடியாததாக இருக்கிறது” என்று தம்முடைய அபிப்பிராயத்தைச் சற்றும் ஒளிவு மறைவின்றிக் கூறி விட்டார் அவர்.

“சகிக்க முடியாததா? நீ ரஸிக்கும் லட்சணம் அவ்வளவுதான். நல்ல தேர்ந்த ஞானத்துடன் குரல் வசதியுடன் இருந்தால் ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன? யாருமே பாடலாம். உங்களுக்கெல்லாம் அனுபவிக்கத் தெரியவில்லையே என்று அநுதாபமாக இருக்கிறது எனக்கு. அதுவும் சுசீலா இந்தக் கலையை இத்தனை ஆர்வத்தோடு கற்றுத் தேர்ந்திருக்கும் போது, நீயே இப்படிப் பேசினால் அவளுக்கு எப்படி இருக்கும்? மனைவிக்காகவாவது நீ சங்கீதத்தை அநுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் அப்பா!” என்றான் வரதன்.

“ஓகே! எனக்கு நீ உபதேசம் செய்வதும் ஒரு விதத்திற்கு நல்லதாகத் தான் போயிற்று. லீலா இருக்கிறாளே, அவளுக்கு இது விஷயமாக அ, ஆ கூடத் தெரியாது. என்றாலும் அநுபவிப்பது என்றாயே, அதிலே எனக்கு அக்காவாகத்தான் இருப்பாள். எனவே இனிமேல், ‘அவன் எந்தத் தொண்டையில் கத்தினாலும் கேட்டுப் புகழ்வதற்கு முன் கூட்டியே கற்று வைத்துக் கொள்!’ என்று எச்சரிக்கை செய்து வைக்கிறேன்!” என்று நகைத்தார் என் கணவர்.

“கிடக்கட்டும். ‘மனைவியை அப்படி நடத்துவேன், இப்படி நடத்துவேன்’ என்று நீ தம்பட்டம் அடித்ததெல்லாம் கல்யாணம் ஆகும் வரை தான் போல் இருக்கிறது. நடைமுறையில் ஒன்றையும் காணவில்லை. முதலில் அவள் சங்கோச மனப்பான்மையைப் போக்கித் தாராளமாக எல்லோருடனும் பழகும்படி நீ அவளை ஆக்கவில்லையே? நான் ஏதாவது கேட்டால் நாலு மைல் ஓடுகிறாள்!” என்று என் நடத்தையை மிகைப்படுத்தி அவரைக் குற்றம் சாட்டினான். சில நாட்களுக்குள்ளேயே என்னைத் தூண்டித் துளைத்து அவன் அவ்வளவு சகஜமான முறையிலே பாடவும், அபிப்பிராயங்கள் கூறவும் வைத்திருக்கிறான்? இத்தனை மோசமாக அவன் பழகத் தெரியாத இயல்பை ஏன் மிகைப்படுத்த வேண்டும்?

என் கணவர் என்னை நோக்கி, “அப்படியோ சுசீலா? ‘கேட்ட கேள்விக்குக் கூடப் பதில் சொல்லாமல் ஓடும் வழக்கத்தை விட்டுவிடு’ என்று எத்தனை முறை கூறியிருக்கிறேன் உனக்கு?” என்று முகத்தைச் சுளிக்காமல் கடிந்து கொண்டார்.

குழந்தை போல் எனக்குக் கோபம் வந்தது. “ஒரேமுட்டாகப் புளுகுகிறீர்களே? கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் தான் இருந்தேனாக்கும்?” என்று கேட்டுவிட்டு உள்ளே வந்து விட்டேன்.

அவ்வளவு சீக்கிரம் உதகை வாசம் எனக்கு முடிந்து விடும் என்று நான் வரும் போது எண்ணியிருக்கவில்லை. அவரைக் கண்டதும் பட்டு, “நல்லவேளை! நீ கோயம்புத்தூர் வந்தாலும் வருவாய் என்று அண்ணா தெரிவித்த போதே, ‘இங்கு வரச் சொல்லி எழுதுங்கள்’ என்றேன். நீ போகும் போது, சுகுமார், மைதிலி, ஏன் சுசீலாவையுங் கூட அழைத்துப் போய்விடு. பள்ளிக்கூடம் திறந்து விடுகிறார்கள். நீ அங்கே இருக்கும் போது பாவம், அவள் இங்கே இருப்பானேன்? ஏதோ ஆசைக்குக் கொஞ்ச நாள் இருந்தாச்சு” என்று என்னை நோக்கிப் புன்னகை செய்தவாறு மொழிந்தாள்.

எத்தனை கருணை! எத்தனை அன்பு!

உண்மையில் அந்த நினைப்புடனா அவள் என்னை அனுப்புகிறாள்? இல்லவே இல்லை என்று கூறியது என் உள் மனம்.

வரதன் என்னிடம் சுதந்திரம் கொண்டு வேடிக்கையாகப் பேசுவதும், அவர்கள் இல்லாத சமயங்களில் அவன் விகற்பமாக நினைத்துக் கொள்ளாமல் வீட்டிலே தங்குவதும் அவளுக்கு சுருக்கென்று உறுத்தியிருக்கின்றன. எல்லாம் நன்மைக்குத்தான். எனக்கும் அவன் போக்கு அவ்வளவு உவப்பாக இருக்கவில்லையே?

அவனுடன் பேசிப் பழகியதன் பலனாக என் உள்ளக் குமுறலுக்கு மேலாக இப்போது புதிய தாபம் தளிர்த்திருந்தது.

அவர் மட்டும் ரஸிக உள்ளம் படைத்திருந்தால் வரதனைப் போலக் கலை ஆர்வமும் மனத்தில் உள்ளதை உடனே வெளியில் உரைக்கும் சுபாவமும் அவருக்கு இருந்தால் எப்படி இருக்கும்?

இப்படிக் கற்பனை செய்து பார்த்த போது என் உள்ளம் விம்மியது.

அவருக்கு என்னிடம் காதல் இல்லையே என்று நான் ஏன் ஏங்க வேண்டும்? என் கலை அவரைக் காந்தம் போல் இழுத்து விடாதா தானாகவே? அப்போது அவர் எனக்காக எது வேண்டுமானாலும் செய்யும் நிலையில் இருக்க மாட்டாரா? அவருடைய உள்ளத்தின் தன்மைக்கும் என் உள்ளத்தின் இயல்புக்கும் சிறிதும் பொருத்தம் இல்லை. ஒன்றை ஒன்று தெய்வீகமாகக் கவராவிட்டாலும் நடைமுறைப் பழக்கத்தில் கூட இணைப்புள்ளதாக ஆகாது. நான் என்ன முயன்றும் பயன் இல்லை. பாலுடன் தேன் சேருமே அல்லாது புளிநீர் இணைந்து போகுமா? அதற்கு உப்பும் காரமும் ஆகிய அதன் இயல்பை ஒத்த பண்டங்களே சேரும்.

அத்தனை நாட்கள் நான் அறியாத புது உண்மையை வரதன் எனக்கு அறிவுறுத்தி விட்டான்.

மேலும், ஆதரவு கிடைக்க வேண்டிய இடங்களிலிருந்து எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அநுதாபமும் ஆதரவும் வரும் திசைகளை நம்பி நான் செல்லுவது கூடாது. அவை சாவுக்குப் பயந்து சமுத்திரத்தில் ஓடுவதைப் போன்று அபாயகரமானவை என்று எனக்குள்ளே ஏதோ ஒன்று கூறியது. வாழ்வு ஒரு மாயச் சுழல் என்று வேதாந்திகளும், அப்பாவுங் கூடத்தான் ஒருநாள் கூறியிருப்பது எனக்கு நினைவு இருக்கிறது. அது எத்தகைய உண்மை! இந்த சுழலிலே நான் என் சுயமதிப்பையும் தன்னம்பிக்கையையும் இழந்து விடாமல் சுழன்று சுழன்று முன்னேற வேண்டும். பொன்னை நெருப்பிலிட்டு உருக்கித்தானே கண்கவரும் அணிகள் செய்கிறார்கள்? சாணையிலே உடலைக் கொடுத்துத் துன்புற்ற பின் தானே வைரம் ஜகஜ்ஜோதியாகப் பளபளக்கிறது. உலக நாடக அரங்கிலே முன்னேறிப் பிரகாசிக்கும் மேதைகளின் வாழ்க்கை முழுதுமே சோதனையாக இருக்கும் என்பது தெளிந்தறிந்த உண்மையாயிற்றே! கஷ்டங்களில் தலை குனியாமல் நிற்பவர்கள் தாமே சோதனைகளில் தேறிப் பிரகாசிக்கின்றனர்? சோதனையிலே நானும் தளராமல் தலை நிமிர்ந்து போராடினால் முடிவிலே எனக்குப் பலன் கிட்டுமோ, என்னமோ?

அழகிய அந்நகரை விட்டு நான் பிரியும் போது எனக்கு உயிர்த்தோழி ஒருத்தியை விட்டுப் பிரிவது போல் இருந்தது. என் கணவர் அறியாத என் உள்ளத்தை வனப்பு மிகுந்த கோபுர விருட்சங்கள் உணர்ந்து விட்டன போல் இருந்தது. அன்று கணவன் வீடு செல்லு முன் மரமே, செடியே, மானே, கண்ணே என்று விடை பெற்றுக் கொண்ட சகுந்தலையைப் போல நானும் வருத்தத்துடன், ‘இயற்கையன்னையின் பரிபூரண அருளைப் பெற்ற மலைத் தோழியே, நான் இன்னொரு முறை வரும் போது என் துயரமெல்லாம் ஓடிப் போயிருக்குமோ என்னவோ?’ என்ற நம்பிக்கையை நானே வரவழைத்துக் கொண்டு வண்டியில் ஏறிக் கொண்டேன்.

வரதன் தொணதொணவென்று பேசிக் கொண்டே எங்களுடன் மலையடிவாரம் வரையிலும் வந்தான். முதல் முதலாக என் கணவருடன் உயர் வகுப்புப் பெட்டியில் நான் ஏறிக் கொண்ட போது, அன்று நான் மூர்த்தியுடன் பிரயாணம் செய்ததும், அப்போது நான் கட்டியிருந்த மனக்கோட்டைகளும் சிறிதும் புதுக்கருக்கு அழியாமல் என் மனக் கண் முன் எழும்பின. எதுவுமே பேசாமல் சிந்தனையில் லயித்துப் போயிருந்த என்னை அருகிலே அமர்ந்திருந்த சுகுமாரும் மைதிலியும், “சித்தி, நேற்றே கதை சொல்லாமல் ஏமாற்றி விட்டீர்கள். இன்றைக்குச் சொல்லாமல் போனால் விடமாட்டோம்!” என்று விரலை ஆட்டிச் சுவாதீனமாகப் பயமுறுத்தினார்கள்.

என் பொட்டல் வாழ்க்கையிலே பசுமை ஊட்டிய அந்தக் குழந்தைகளின் கள்ளமற்ற அன்பு என்னைக் கட்டுப்படுத்தியது. தங்களுடைய தாயும் தந்தையும் என்னை அவமதிப்புக் கண் கொண்டு பார்ப்பதை இப்போது அறியாமல் இருக்கும் குழந்தை மனம் மாசும் மருவும் ஒட்டிக் கொள்ளாமல் அதே நிலையில் வளர்ச்சியடையக் கூடாதா?

என்னை அவர்கள் நெருக்கியது, அவர் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. “லீலா சித்தியை ஒரு நாள் கூட இப்படித் தொந்தரவு பண்ணியதில்லையே! அவளைக் கண்டால் பிடிக்காதோ உங்களுக்கு?” என்று சிரித்துக் கொண்டே குழந்தைகளைக் கேட்டார்.

ஆறு வயது நிரம்பியிருந்த மைதிலி மழலை மாறாத சொல்லில் என் கணவரைப் பார்த்துத் தன் சிறு கையை விரித்து இடித்துவிட்டு, “லீலா சித்திக்கு, ‘தொந்தரவு பண்ணாதே!’ன்னு எரிஞ்சு விழத்தான் தெரியும். உன்னைக் கண்டாலும் பிடிக்கலே எனக்கு! லீலா சித்தியைக் கண்டாலும் பிடிக்கலே! எங்க சுசீலா சித்திதான் நல்லது! எனக்கு இந்தச் சித்தியைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்று அபிப்பிராயம் கொடுத்துவிட்டு என்மேல் இடித்துக் கொண்டு சாய்ந்தாள். என்னை அறியாமல் நான் அவளைத் தழுவிக் கொண்டேன். அதைக் கண்ணுற்ற அவர் முகத்தில் இனந்தெரியாத சோகத்தின் சாமை பரவியது.

சட்டென்று ஞாபகம் வந்தவரைப் போல, “மூர்த்தி வந்திருந்தான் ஒரு வாரம் முன்பு! சொல்ல மறந்து விட்டேனே! அவன் மேல்நாட்டுத் தொழிற்சாலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் போகிறான். முதலில் பர்மிங்ஹாம் போவதாகச் சொன்னான்” என்றார்.

‘ஓகோ! அதனால் தான் லீலா எம்.ஏ.க்குப் படிக்கிறாள் போலும்!’

நான் வெகு ஆவலுடன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, “அப்படியா? என்னிடங் கூட அவன் அப்படிப் பிரஸ்தாபிக்கவில்லையே” என்றேன்.

“உன் அத்திம்பேருங் கூட வந்திருந்தார். எங்களிடம் எல்லாம் சந்தோஷத்துடன் தெரிவித்து விடைபெற்றுக் கொண்டான். அம்மா ஒருநாள் அவனுக்கு விருந்து கூட வைத்தாள். ‘பொழுது விடிந்தால் விமானம் விழுந்து நொறுங்குகிறது. ஜாக்கிரதையாகப் போய்த் திரும்பி வர ஆசீர்வாதம் பண்ணுங்கள் மாமி!’ என்று சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்தான். சிரிக்கப் பேசிப் பழகும் நல்ல பையன்!” என்று தெரிவித்தார் அவர்.

எனக்கு இந்தச் செய்தி மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. லீலாவும் அவனும் புறப்படும் முன்பு எப்படியும் சந்தித்து மனம் விட்டுத் தங்கள் தங்கள் யோசனைகளைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள்! என்னைக் கண்டதும் அவள் அகத்தில் பொங்கும் மகிழ்ச்சியை அடக்க முடியாத சிரமத்துடன் முகம் சிவக்க - அத்தனை சமாசாரங்களையும் எப்படிச் சொல்லுவாள். இந்த அசட்டு வரதன் அவளை நினைத்து நெடு மூச்செறிவதை நான் சொல்லி எப்படி நகைப்பேன் என்ற கற்பனையில் ஆழ்ந்து விட்டேன்.

மறுநாள் காலை நான் வீட்டுக்குள் காலெடுத்து வைத்த போது லீலா நான் எதிர்பார்த்தபடி மகிழ்ச்சி அலைமோத என்னை வந்து தழுவிக் கொள்ளவில்லை. நானாக அவளைத் தேடிக் கொண்டு சென்ற போதும் அவள் முகம் எனக்கு அளவற்ற ஏமாற்றத்தை ஊட்டியது. புத்தகம் ஒன்றை மார்பின் மீது வைத்துப் பார்த்துக் கொண்டு கட்டிலில் படுத்திருந்த அவள் வாடி வதங்கிய மலரைப் போல் காட்சி அளித்தாள்.

“என்ன அக்கா? உடம்பு சுகம் இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே நான் உள்ளே பிரவேசித்தேன்.

“சுசீலாவா? என்னது, இது? திடீர் வருகையாக இருக்கிறதே! ராமு உன்னை அழைத்து வரப் போவதாகச் சொல்லவே இல்லையே! என்ன மலை வாசம் எப்படி இருந்தது?” என்று கேள்விகளை அவள் அடுக்கினாள்.

“நன்றாகத்தான் இருந்தது உம். மூர்த்தி வந்து போனாராமே?” என்று அவள் காதோடு கேட்ட நான் குறுநகை செய்தேன்.

நான் இப்படிக் கேட்டதும் அவள் விழிகளில் அலாதி ஒளி தென்படும். பேச்சு நெகிழ்ந்து வரும் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தேன். அவள் மாறாத நிலை எனக்கு முற்றும் மாறுதலாகத் தோன்றியது.

“ஆமாம்” என்று அவள் தலையை ஆட்டிவிட்டு, “குழந்தைகள் வந்தாயிற்றாக்கும்! வீட்டு எஜமானிக்கும் எஜமானருக்கும் இன்னும் மலைவாசம் விடவில்லையோ?” என்றாள் குத்தலாக.

மூர்த்தியின் பேச்சை எடுத்தாலே பூரித்துப் போகும் அவள், திடீரென்று இப்படி ஒளியிழந்தவளாக அசுவாரஸ்யமாகப் பதிலளிப்பானேன்? இருவருக்கும் அதற்குள் மனத்தாங்கள் ஏற்படும் வழியில்...

“மூர்த்தி பர்மிங்ஹாம் போகிறார். நீங்கள் எம்.ஏ.க்குச் சேரப் போகிறீர்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டேன்? அவர் வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்? பாவம்! வரதன் உங்கள் பேச்சை எடுத்தாலே வாயெல்லாம் பல்லாக மகிழ்ந்து போகிறார்!” என்றேன்.

“மகிழ்ந்து கொண்டு இருக்கட்டும். பாவம் என்று நீ வக்காலத்து வாங்கிக் கொண்டு வருகிறாயாக்கும்! சுசீலா! இனிமேல் என்னிடம் இந்த விஷயங்களைப் பற்றியே பேசாதே. எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மணம் செய்து கொள்வதே இல்லை என்று தீர்மானித்து விட்டேன்!” என்று அவள் ஆத்திரத்துடன் மொழிந்தது என்னைத் திடுக்கிடச் செய்தது.

“என்ன லீலா இது? நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள்? காதல் பூஞ்சோலையில் உல்லாசமாக அடியெடுத்து வைத்த நீங்கள் மனம் வெதும்பிப் பேசும்படி மூர்த்தி என்ன செய்து விட்டார்?” என்று நகைத்த வண்ணம் கேட்டேன்.

“என்ன செய்து விட்டார் என்றா கேட்கிறாய் சுசீ? நீயும் எனக்கு இதைத் தெரிவிக்காமல் இருந்து விட்டாய். இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கு இல்லை. என்னிடம் பிரேமை, காதல் என்று கதைத்து விட்டு, அவருக்காகக் காத்திருக்கும் மாமா பெண்ணை மணக்கப் போகிறார்! இன்று நேற்றுப் பேச்சில்லையாம் இது. என்னிடம் இப்போதுங் கூட அவர் தெரிவிக்கவில்லையே! நினைக்க நினைக்க நான் ஏமாந்து போனேன் என்று நம்பவே முடியவில்லை சுசீ!” என்றாள் படபடப்புடன்.

“அடாடா! நீங்கள் மிகவும் பொறுமையில்லாதவர். உங்களுக்காகத் தவமிருக்கும் வரதனைப் பற்றி நீங்கள் மட்டும் அவரிடம் பிரஸ்தாபித்தீர்களா?” என்று திருப்பிக் கேட்டு அவள் கன்னத்தில் இடித்தேன்.

“நான் எதற்காகச் சொல்ல வேண்டும்? வரதனை மணந்து கொள்வதாக நான் ஒரு நாளும் எண்ணியிருக்கவில்லையே! அவருக்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்கத் தயாராக இருந்தேனே! வீணாகப் பிரஸ்தாபித்து ஏன் அவரைச் சஞ்சலத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்றல்லவா நான் மௌனமாக இருந்தேன்? தயங்கினால் தானே நான் அவரிடம் கூறி வருத்தப்பட வேண்டும்? அவர் அப்படியா?”

“ஏன்? அவரும் உங்களைப் போல எண்ணி இருக்கக் கூடாதா?”

“அப்படி எனக்காக எதையும் துறக்கத் தயாராக இருப்பவர்தாம். வருங்காலச் செல்வ மாமனார் ஆதரவில் இப்போது மேல் நாடு செல்கிறாராக்கும்! திரும்பி வந்த போது பெண்ணைக் கொடுக்கத்தானே ஆயிரக்கணக்கில் செலவு செய்து கூடவே வந்து விமான நிலையம் வரை அனுப்பிவிட்டுப் போகிறார் உன் அத்திம்பேர்? ‘உங்கள் மகளை நான் மணக்கவில்லை’ என்று மறுப்பவர், இப்போது அவர்கள் பண உதவியை வெறுமே பெற்றுக் கொண்டு செல்வாராக்கும்! இந்த வாக்குறுதியே எனக்கு அவர் நேர்மையற்றவர் என்று காண்பிக்கப் போதுமானதாக இருக்கிறதே! சுசீலா, நீ எப்படி நினைப்பாயோ? என் வரைக்கும் ஆண்கள் ஏமாற்று வித்தையில் கை தேர்ந்தவர்கள்!” என்று பொங்கும் சினத்துடன் லீலா முடித்தாள்.

“உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தன?” என்று திகைத்தவளாக நான் கேட்டேன்.

“தெரிந்தது என்ன? தாம் உதவி செய்வதைப் பற்றி உன் அத்திம்பேர் நொடிக்கு நூறு தடவை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாரே. அப்புறம் பேச்சு வாக்கில் ராமுவுந்தான் கூறினான். எனக்கு அப்போதே இடிவிழுந்தது போல் ஆயிற்று. இப்போதும் அவர் வாயிலாக உண்மையைத் தெரிவிக்கவில்லையே எனக்கு!”

எத்தகைய ஏமாற்றம் இது! மூர்த்தியும் உண்மையில் இந்தக் கும்பலில் சேர்ந்தவன் தானா? அன்று அவ்வளவு உருக்கமாகப் பேசினானே! நடிப்புத்தானா? படித்துப் பட்டம் பெற்ற லீலா, வெளி உலகம் தெரிந்து நாலு பேருடன் பழகவும் விவாதிக்கவும் அறிந்த, நாகரிகம் பெற்ற லீலா, மூர்த்தியின் நயவஞ்சகத் தன்மைக்கு இலக்காகி விட்டாள். அதுதான் அன்று அத்தை அவ்வளவு தீர்மானமாகக் கூறினாள்.

இப்படி ஒரு கும்பல் உலகத்தில் இருந்து வருவது என்னவோ உண்மை. சகுந்தலா துஷ்யந்தன் கதை ஒன்றே போதாதா, இதைத் தெளிவாக்க! உலகத்தில் இந்தக் காதல் தோன்றிய நாள் முதலாகவே இந்த ஏமாற்று வித்தையும் தோன்றியிருக்க வேண்டும்.

‘அதுவும் இந்த மக்களிடந்தான் இது அதிகமாகக் குடி கொண்டிருக்கிறது. வெளித் தோற்றத்துக்கு ஆண்மையும் உறுதியும் உடையவர்களாகத் தோன்றும் எல்லா ஆண்மக்களும் நெஞ்சில் பேடிகளாகவே இருக்கிறார்கள். உள்ளே உள்ள புரையை மறைக்கவே இந்த வெளி வேஷம், ஆடம்பரம் எல்லாம்.’

‘பெண்மை, அழகு, இளமை இந்த மூன்றும் எந்த ஆண்மகனையும் தமக்கு அடிமை ஆக்கி விடுகின்றன. இப்படி அடிமையான ஆண்மகன் தான் செய்வது என்ன என்று புரியாத நிலையிலேயே தன் மனங் கவர்ந்த மங்கையிடம் பழகுகிறான். சர்வ சுந்தரனாகவும் லட்சியவாதியாகவும் காட்சியளிக்கிறான்.’

‘பொறுப்பேற்கும் காலம் வரும்வரையில் தான் இந்தப் பகட்டெல்லாம். பெறுப்பேற்கும் காலம் வந்தாலோ அல்லது முடிவைத் தீர்மானிக்கும் அவசியம் நேர்ந்தாலோ அப்போது தான் அவன் உண்மைச் சொரூபம் வெளிப்படுகிறது.’

‘என்ன செய்யலாம், எல்லாமே அவன் படைப்பின் விளையாட்டுப் போலும்!’

இப்படியெல்லாம் ஓடிய எண்ண அலைகள் ஒருவாறு அடங்கிய பின் லீலாவுக்கு ஆதரவாக ஏதேனும் கூற வேண்டும் என்று நினைத்த போது என் நாத் தழுதழுத்தது.

“நீங்கள் சொல்வது முற்றும் உண்மை. பெண் சட்டென்று எதையும் நம்பி விடுவதனால் ஆண்கள் அவர்களைச் சுலபமாக ஏமாற்றி விட முடிகிறது” என்றேன்.

என் உள்ளத்திலிருந்து அநுபவபூர்வமாக வரும் வார்த்தைகள் இவை என்று லீலா அறிவாளோ என்னவோ?

4-1

சித்திரை மாதம். பகல் பன்னிரெண்டு மணி வேளை. சென்னையிலே வெயில் அனல் போல் எரிக்கக் கேட்பானேன்? தீவட்டி போல் கண்களை வெப்பம் கொளுத்தியது. மயிலாப்பூரின் தெருவொன்றில் இருந்த எங்கள் தனி வீட்டின் வாசற்புற அறையின் ஜன்னலிலே அமர்ந்து நான் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தெருவிலே வழக்கமாக நடமாடும் கறிகாய்க் கூடைக்காரிகளையும், பழைய துணிகள் வாங்கிக் கொண்டு பாத்திரம் கொடுக்கும் தெரு விற்பனையாளர்களையுங் கூட அன்றைய வெயில் பயமுறுத்தி இருக்கிறது போல் இருக்கிறது. அவர்களைக் கூடக் காணோம்.

வாயில் ஈ புகுந்தது தெரியாமல் வீட்டு வேலைகளும் குழந்தைகளின் கலகலப்பும் கிடைக்கும் இரண்டொரு நிமிஷ ஓய்வு நேரத்தையும் பறித்துக் கொள்ள, லீலாவும் இல்லாத இந்தத் தனிக் குடித்தனம் எனக்கு ஏதோ மனிதரே இல்லாத சூனியப் பிரதேசத்தில் வாழ்க்கை நடத்துவது போல் இருந்தது. அதிக வேலை செய்யும் கஷ்டம் இல்லை. அதிகாரம் செலுத்த மாமியார் இல்லை. அடிக்கு ஒரு தரம் அஞ்சி அஞ்சி மாடி ஏறும்படி செய்ய ஓரகத்தி இல்லை. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து இரண்டு அறைகள். சிறிய கூடம் சாமான் வைக்க. சமையல் செய்ய, பின்கட்டு. மின்சார வசதிகள் கொண்ட அழகிய சிற்றடக்கமான வீடு. கணவன் மனைவி இரண்டே பேர் கொண்ட குடும்பம். என் இஷ்டம் போல எதுவும் செய்யச் சுதந்திரம் எல்லாம் எனக்கு இப்போது இருந்தன.

‘அவளுக்கு என்ன? நச்சுப் பிச்சென்று குழந்தை குட்டிகள் இல்லை. கை நிறையக் காசு வாங்கும் கண் நிறைந்த கனவன்’ என்று என்னைப் பார்ப்பவர்கள் காது கேட்கப் புகழ்ந்தார்கள்.

ஆனால் வாழ்வைப் பூரணமாக்க எது தேவையோ, குடும்பத்தின் இன்ப வாழ்வுக்கு எது அஸ்திவாரமோ அது இல்லை என்று என் மனத்தைத் தவிர யார் அறிவார்கள்? இந்தத் தனிக் குடித்தனமா நான் விழைந்து விரும்பினது? இரவின் நிசப்தத்திலே குமுறும் அலைகடலைப் போல இந்தத் தனிமை செறிந்த வாழ்க்கை என் மனப் புண்ணைக் குடைந்து குடைந்து வேதனையன்றோ செய்கிறது? ‘குடும்பத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் வேர்ப்புழுவாக நீ இருக்கக் கூடாது அம்மா’ என்று அம்மாவும் அப்பாவும் எனக்கு எத்தனையோ எடுத்துக் கூறினார்கள். நினைத்துப் பார்க்கப் பார்க்க இந்தப் பெண் பிறவி நான் எதற்காக எடுத்தேன் என்று புரியவில்லை. பிறருக்குத் துன்பம் கொடுப்பதும், என்னை நானே வருத்திக் கொள்வதுமா என் வாழ்வின் லட்சியங்கள்? பெண் ஒருத்தியின் வாழ்வு எதனாலே ஒளி பெறக் கூடியது? கணவனைக் களிப்பூட்டுவதனால் தானே. அந்த வகையிலே நான் முழுத் தோல்வி அடைந்திருக்கிறேன். கணவனின் சுற்றத்தாருக்காவது நான் உகப்பாக இருக்கிறேனோ? அவர்களுக்காக ஓடி ஓடித்தான் உழைத்தேன். அவர் அவர்களிடம் கொண்ட நன்மதிப்பைக் காப்பாற்றுவதற்காக அவர் என் இதயத்தைக் கசக்கிப் பிழிவதைப் பொறுத்தேன். ‘உன் வாழ்வின் சௌகரியங்களை நீ குறைத்துக் கொள்ள வேண்டும் அம்மா!’ என்று அப்பா சொன்ன வார்த்தைகள் கணீர் கணீர் என்று இன்னமும் என் செவிகளைத் தாக்குகின்றன. எந்த வேளையில் எதை நினைத்துக் கூறினாரோ? வேளைக்கு நான் உணவருந்தினேனா என்று கூட யாரும் கவனியாத வீட்டிலே என் சௌகரியங்கள் என்றால் என்ன என்பதையே அறியாமல் என் வாழ்வைத் தியாகம் செய்தேன். கடைசியிலே நான் கண்டது என்ன? என் சோதனைக் காலத்தின் இறுதியிலே கிரீடம் கிடைக்கப் போகிறது என்ற தைரியத்திலே நான் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவதாகத் தீர்மானம் கொண்டேனே, அந்த வகையிலாவது என் லட்சியம் சித்தி பெற்றதா? விழலுக்கு இறைத்த நீர் போல, மணிக்கணக்காக உட்கார்ந்து சிரமப்பட்டு இட்ட கோலத்தை அரை நொடியில் மழை வந்து அழித்து விடுவது போல, என் உழைப்பும் தியாகமும் இருந்த சுவடே தெரியாமல் அவருடைய ஒருநாளைப் பொருமலில் பஸ்மீகரம் ஆகிவிட்டன.

இத்தனைக்கும், ‘இந்த வீட்டிலே என்னால் ஒரு கணம் இருக்க முடியாது!’ என்று காய்ந்து விழுந்தேனா? ‘என்னைத் தனிக் குடித்தனம் கொண்டு வைக்காவிட்டால் நான் இங்கே வர மாட்டேன். உங்களுக்கு நான் வேண்டுமானால் வீட்டை இரண்டு பண்ணுங்கள். அண்ணா மதனி முக்கியமானால் என்னை ரெயிலேற்றி விடுங்கள்’ என்று ராட்சசத்தனம் செய்தேனா?

அவ்வாறெல்லாம் நான் அடம் பிடித்து இந்த அழகான தனிக் குடித்தனத்திற்கு வந்திருந்தேனானால் இவ்வளவு தூரம் என் கொதிப்பு எழும்பியிருக்காது. என் பற்றுதலைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அதிகாரத்துக்கும் அடக்குதலுக்கும் உணர்ச்சியற்றுப் போய்வரும் நாளிலே அவரை இந்தக் காரியம் செய்யச் சொல்லி யார் வருந்தினார்கள்? ‘எந்த விதத்திலும் இவள் மனம் சமாதானம் பெறக் கூடாது’ என்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாரா என்பதையும் அறிகிலேனே!

அவருக்கு என் மீது உள்ளன்பு நிரம்பி இருக்கவில்லை என்ற உண்மையை வரதனுடைய வீட்டில் அன்று அவர் வாய் மூலமாகவே அறிந்து கொண்ட போது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைப் போல இடி விழுந்தால் கூட ஏற்பட்டிராது. சாந்தியளிக்கும் திசையில் மனத்தைத் திருப்ப முயன்றேன். என் சங்கீத வளர்ச்சிக்கு என் நாட்களிலே கொஞ்ச நேரம் ஒதுக்கி வைக்கலானேன். அதிகாலையிலே இன்னும் ஒரு மணி முன்னதாக எழுந்தேன். விடிவெள்ளி ஊட்டிய புத்துணர்ச்சியிலே சாதகம் செய்யலானேன்.

‘உனக்கு அவசியமானவற்றைக் கூடப் பிறர் கவனிப்பார்கள் என்று எதிர்பார்த்து எடுத்ததற்கெல்லாம் பயந்தால், பயந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என்று லீலா எனக்குச் சொல்லிக் கொடுத்த வகையில் நான் பயப்படாமல் நானாகவே ஏற்படுத்திக் கொண்ட சௌகரியம் யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்று தைரியமாகச் சங்கீத சபைகளுக்கும், இன்னும் நகரத்திலே நடக்கும் பெரிய வித்துவான்களின் இசைக் கச்சேரிக்கும் செல்ல ஆரம்பித்ததுதான். ‘இன்று மாலை இந்த இடத்திலே... இன்னார் கச்சேரி... சீக்கிரமா வந்து அழைத்துப் போகிறீர்களா?’ என்று நான் கேட்க வேண்டியதுதான் தாமதம், மனைவி சொல் தட்டாத கணவராக அவர் என்னை உள்ளே கொண்டு உட்கார வைத்து விட்டு முடியும் தறுவாயில் வந்து அழைத்துப் போவார். இந்த ஒரு விஷயத்திலே அவர் காட்டிய சலுகையைப் பட்டுவாலும் மாமியாராலும் பொறுக்கத்தான் முடியவில்லை. நான் இல்லாத சமயங்களிலே நிச்சயமாக அவர்கள் அவரிடம் என்னைப் பற்றிக் குற்றம் கூறி அவருடைய பொறுமையைக் குலைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு நாள் நடந்த சிறு சம்பவம் மட்டும் அவருடைய அத்தனை நாளைய அசைக்க முடியாத பிணைப்பில் இருந்து அவரை அறுத்துக் கொள்ளச் சொல்லுமா?

அதிகாலையில் நான் சாதகம் செய்வது பக்கத்து அறையிலே அவர்கள் தூக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று எத்தனையோ முறை பட்டு ஜாடைமாடையாகத் தெரிவித்தும் நான் செவி சாய்க்கவில்லை. ஆனால் நான் இதற்கென்று எங்கே போவேன்? இந்தச் சுதந்திரத்தை நான் இழக்கத் தயாராக இல்லை. தனியானதொரு சந்தோஷத்தையும், என்னை மறக்கும் ஒரு சாந்தியையும் கண்ட இந்த வழியை நான் விட்டுக் கொடுப்பேனா?

அன்று காலை நான் பாடிக் கொண்டிருக்கும் போது பட்டு எழுந்து வந்தாள். “இந்தாடி சுசீலா, ஒரு நாளைப் பார்த்தாற் போல் நானும் சொல்கிறேன்; நீ காதிலே போட்டுக் கொள்வதாகவோ லட்சியம் பண்ணுவதாகவோ காணோம். விடிகாலமேதான் சற்றுக் குழந்தை தூங்குகிறான். அவரும் அசந்து தூங்குகிறார். இப்படிக் காதிலே வந்து பாயும்படி கத்தினால் கோபித்துக் கொள்கிறார்” என்றாள் கடுமையான அதட்டும் குரலில்.

நான் தைரியமாகப் பதில் அளித்தேன்.

“அதற்காக, என்னைப் பாடக்கூடாது என்கிறீர்களா மன்னி? எது வேண்டுமானாலும் நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்கிறேன். தயவுசெய்து என்னுடைய இந்த ஒரே ஒரு சுதந்திரத்தில் மட்டும் குறுக்கிடாதீர்கள். நாளையிலிருந்து வேணுமானாலும் நான் கீழே போய் விடுகிறேன்” என்று நான் கெஞ்சும் முறையில் வேண்டிக் கொண்டது, அவள் கோபத்தை கிளப்பி விட்டு விட்டது.

“பேச்சைப் பாரேன்! உன் சுதந்திரம் இங்கே என்ன பறி போய்விட்டது! ஒரே ஒரு சுதந்திரம் என்று காய்ந்து விழுவானேன்? பெரியவர்கள், மட்டு மரியாதை என்று இருந்தால் இப்படி நீ பேசுவாயா?” என்றாள் அவள்.

என் கணவரும் தூங்கவில்லை. கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

எரிச்சல் மூண்ட தொனியில், “என்ன மன்னி இது, காலை நேரத்திலே?” என்றார்.

“பின் என்ன ராமு இது? தினமும் அண்ணா அசந்து தூங்கும் சமயத்தில் தொந்தரவாக இருக்கிறது என்றார். விடிந்து பாடேன் என்றால் சுதந்தரம், கிதந்தரம் என்று என்னவெல்லாமோ பேச்சு வருகிறது. நீங்கள் சுதந்தரமாக இருப்பதை நானா வேண்டாம் என்று கையைப் பிடிக்கிறேன்? இதோ பார் ராமு, நான் சொல்லி விட்டேன். வீணாக அவள் அவலை நினைத்து உரலை இடிப்பது போலப் பொரும வேண்டாம். நாளையே நீ தனிக்குடித்தனம் வைத்துக் கொள். அவளுக்குந்தான் ஏன் மனக் கஷ்டம்? மனசிலே ஒற்றுமை இல்லாமல் கசப்புடனே எத்தனை நாளைக்குத் தள்ளிக் கொண்டு போக முடியும்?” என்று பொழிந்து கொண்டே போனாள்.

உண்மையைக் கூறிக் கெஞ்சியதற்கு எனக்குக் கைமேல் பலனா இத்தனை குற்றச்சாட்டுகள்? அவர்களே சதமென்று அவருக்கும் மேலாக மதிப்பு வைத்து உதாசீனங்களைப் பொருட்படுத்தாமல் வஞ்சகமின்றி நான் பாடுபட்டதற்குப் பரிசா இத்தனை பேச்சுக்கள்?

என் உடைந்த மனத்திலிருந்து துயரம் கிளம்பியது. முகத்தை மூடிக் கொண்டு சிறு குழந்தைப் போல விம்மினேன்.

“இப்போது யார் என்ன சொன்னார்கள்? எது சொன்னாலும் அவ்வளவு சட்டென்று அழுகை எப்படித்தான் வருமோ? பார்க்கிற பேர்கள் என்ன எண்ணிக் கொள்ள மாட்டார்கள்?” என்று முடிவு கட்டிவிட்டு அவள் சென்று விட்டாள்.

முதல் முதலாக என் கனவர் மதனியின் செய்கை தமக்குப் பிடிக்கவில்லை என்று என்னிடம் காண்பித்துக் கொள்ளும் மாதிரியில், “அழாதே, சுசீலா! விடு, விட்டுத் தள்ளு?” என்றார்.

அவருடைய அந்த ஆதரவான வார்த்தைகளிலே தான் என் உள்ளம் எத்தனை ஆசையுடன் தலை தூக்கியது! ஆனால் அந்த ஆதரவு வார்த்தையுடன் அவர் நின்றிருக்கக் கூடாதா?

நிச்சயமாக நான் அவர் அப்படிச் சற்றும் எதிர்பாராத விதமாகத் திடுக்கிடும் காரியம் செய்வார் என்று எண்ணியிருக்கவே இல்லை. ஒரு வாரம் சென்றபின் ஒருநாள் நான் இரவு சாப்பாடெல்லாம் முடிந்து அறையைத் தண்ணீர் விட்டுக் கழுவிக் கொண்டிருந்தேன்.

பரபரப்பும் படபடப்புமாக மாமியார் என்னிடம் வந்தாள். “என்னடி சுசீலா, பரம சாது போல் இருந்து கொண்டு உள்ளூற அவனுக்கு வத்தி வைத்து விட்டாயே. பெரியவர்கள், பெருந்தலை என்று என்னிடம் மரியாதைக்காவது கேட்டானா?” என்றாள் ரௌத்திராகாரமாக.

எனக்கு அடியும் புரியவில்லை, நுனியும் புரியவில்லை.

“என்ன சொல்கிறீர்கள், அம்மா?” என்றேன் தலை நிமிர்ந்து.

“என்ன சொல்கிறீர்களா? ஒன்றும் தெரியாதவள் போல நடிப்பானேன்? அப்படி உசிருக்கு உசிரா, ‘அண்ணா, மன்னி’ என்று ஒட்டிக் கொண்டு இருந்தவனையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்திருக்கிறாயே அம்மா! ‘மயிலாப்பூரிலே வீடு பார்த்து விட்டேன். நாளைக்கே போய் விடலாம் என்று உத்தேசம் பண்ணிவிட்டேன் அண்ணா’ என்று அவனும் சொல்லும்படி ஆயிற்றே? கேசவன் அப்படியே கல்லாய்ச் சமைந்து விட்டான். இல்லை, நான் ஒருத்தி குத்துக்கல் போல இன்னும் உயிருடன் இருக்கிறேன். எனக்கு ஒரு மதிப்பு வைத்து ஒரு வார்த்தை கேட்டானா? கூடப் பிறந்த பிறப்பினும் மேலாக, “ராமு ராமு, என்று அவள் அத்தனை ஒட்டுதலாக இருந்தாள். அதற்கு நல்ல மரியாதை கிடைத்தது!” என்று அவர் செய்யும் காரியத்துக்கு நான் தான் பொறுப்பாளி என்று என் மீது பாய்ந்தாள் அவள்.

“அப்படியா? எனக்குத் தெரியாதே அம்மா. என்னிடம் அவர் அப்படி ஏதும் சொல்லவில்லையே!” என்றேன் பரிதாபமாக.

“தெரியும் என்று நீ ஒப்புக் கொள்வாயா? உம் யாரைச் சொல்லி என்ன இப்போது? கேசவன் மனசே முறிந்து போய்விட்டது. பணங் காசு வரும் போகும். இப்படி முகத்தை முறித்துக் கொண்டு போகிறீர்களே, நாளைக்கு ஓர் ஆபத்து, சம்பத்து என்றால் மனுஷர்கள் கிடைக்க மாட்டார்கள்” என்று அவள் என் அழிந்த உள்ளத்திலே சொல்லம்புகளைப் பாய்ச்சிக் கொண்டு போனாள். நான் ஒன்றும் அறியாதவள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பனைமரத்தின் கீழிருந்து பாலைக் குடித்தாலும் உலகம் நம்பாது. உலக நியதியை விட்டே என் வாழ்க்கை நழுவி அப்பால் இருக்கிறது என்று சொன்னால் கூட அவர்கள் நகைப்பார்கள். இப்போது பிரிந்து போய் என் தலை மீது பழியைச் சுமத்துவதற்கு அவர் காத்திருந்தாரா? இந்தப் புத்தி முதலிலேயே எங்கே போயிற்று? என்னிடம் ஒன்றுமே தெரிவிக்காமல் அவர் செய்யும் காரியத்துக்கு அர்த்தந்தான் என்ன? ‘நான் உன்னைக் கைப் பிடித்த போது அப்படி எண்ணியிருந்தேன். இப்போதுதான் செய்தது தவறு என்று தெரிகிறது’ என்று என் மீது அன்று குற்றத்தைச் சுமத்தினாரே, என்னுடைய கண்ணீரிலும் கம்பலையிலும் இளகாதவர், இப்போது எதனாலே உருகிப் பிடிப்பு விட்டுப் போகும் ஈயத்தைப் போல் அண்ணன் மதனியிடமிருந்து தம்மைக் கத்தரித்துக் கொள்கிறார்?

மாமியாரின் குத்தும் வார்த்தைகள், பட்டுவின் முதலைக் கண்ணீர் மைத்துனரின் பட்டுக் கொள்ளாத மௌன நிலை, குழந்தைகளின் உண்மையான பிரிவுத் துயரம், மனங் கவர்ந்த தோழி லீலாவைப் பிரியும் ஏக்கம், அவருடைய சலனமற்ற தனை, இவற்றின் நடுவே எங்கிருந்தோ வரும் சுதந்தரத்தை அநுபவிப்பவள் போன்று, என் தாய் எனக்கு என் விவாகத்தின் போது வழங்கியிருந்த சிறு வெண்கலப் பாத்திரத்தில் அரிசியையும் பருப்பையும் எடுத்துக் கொண்டு என் புதுமனையிலே புகுந்தேன்.

கவலையும் ஏக்கமும் சூழ்ந்திருக்கும் இரவுகளிலே மனம் உறங்காமற் போனாலும் உழைத்துச் சலித்த உடல் தன்னை மறந்து உறங்கிவிடும். ஆனால் அடி மனத்திலே, ‘பொழுது விடிந்து விட்டதோ, விடிந்து விட்டதோ?’ என்ற துடிப்பு உடல் உறக்கத்தைக் கலைத்துக் கொண்டே இருக்கும். சிறிய அரவமும் கண்களை விழித்துப் பார்க்கச் செய்யும். நிலவின் கதிர்கள் என் கண்களுக்கு, விடிந்து விட்டது போன்ற பிரமையை ஊட்டிவிடும். ‘நேரம் அதிகமாகி விட்டதே. தூங்கி விட்டோமே!’ என்று அலறிப் புடைத்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்து வருவேன். குழாயில் நீர் வந்திருக்காது. பின்னரே என் மயக்க நிலை தெளியும். ‘பொழுது இன்னும் புலரவில்லை. விடிந்தும் தூங்கி விடுவோமோ? என்று உள்ளே குடி கொண்டிருக்கும் அச்சத்தினால் ஏற்பட்ட பிரமைதான்’ என்று எனக்குள்ளேயே அச்சத்திற்கும் அறியாமைக்கும் வெட்கிப் போவேன்.

தங்க வளையலுக்கு ஆசைப்படும் ஏழை ஒருத்திக்குப் புதிதாக மெருகிட்டுக் கடையிலே விற்கும் பித்தளை வளையல் கையிலே கிடக்கும் கண்ணாடி வளையல்களை விடக் கவர்ச்சியாகத் தோன்றும். ஆசையின் உந்தலிலே அவற்றை வாங்கி அணிந்து விடுவாள். நாலு நாட்கள் சென்ற பிறகு தான் பித்தளையின் சுயரூபம் தெரியும். மங்கிப் பாசி பிடித்து அவலட்சணத்தின் சின்னமாக விளங்கும் அவற்றைக் காணுந்தோறும் அலட்சியத்துடன் தான் உடைத்தெறிந்த கண்ணாடி வளையல்கள் மேலானவையாக அவளுக்குத் தோன்றும். தனிமைக்கு அதிகம் இடமில்லாமல், குரங்கு மனத்துக்கு அலையவிடச் சந்தர்ப்பம் அதிகமில்லாமல் அலுவல்கள் நிறைந்த அவ்வீடே எனக்குத் தேவலை என்று தோன்றியது.

என்ன காரணம் கொண்டு தனிக் குடித்தனம் வைத்தார். மனைவியிடம் அன்பைப் பெருக்கிக் கொள்ள அவர் கொஞ்சமும் விழைந்து விரும்பாத போது? என் மீது கனிவு காட்டுபவராகவா? அல்லது என்னைச் சற்றும் நிம்மதி இல்லாதவளாகச் செய்யவா?

காலையிலே ஒன்பது மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், இரவு ஒன்பது மணிக்குத்தான் அவரைக் காணலாம். பகல் நேரச் சாப்பாட்டை ஆள் வசம் அனுப்பி விட்டு வாயில் புறத்து அறை ஜன்னலிலேயே உட்கார்ந்து, நான் தெருவிலே உல்லாசமாக மாலை வேளையைக் கழிக்கச் செல்லும் ஜோடிகளைக் கண்டு பெருமூச்செறிவதுடன் திருப்தி அடைந்து விட வேண்டும்.

‘மனம் விட்டுப் பாட அவகாசம் இல்லையே, சூழ்நிலை சுவையாக இல்லையே!’ என்று நான் குறைப்பட்டது போக, பொழுது எனக்கு வளர்ந்தது. நான் பாடினாலும் சிரித்தாலும் அழுதாலும் அதற்கு எதிரொலி எழும்பாது. மனத்திலே தளர்ச்சி அதிகரிக்க முளைவிட்டிருந்த என் சங்கீதத்தைப் பெருக்கிக் கொள்ளும் லட்சியமும் பாதிக்கப்படாமல் இல்லை.

சுடர் கருகி மங்கும் விளக்கைப் போலக் குன்றி வந்த என் உற்சாகத்தைத் தூண்டி விடுபவள் போன்று சரளா என் வாழ்விலே வந்து புகுந்தாள். எப்போதும் போலத் தெருவைப் பார்த்துக் கொண்டு நான் ஒரு நாள் நிற்கையில் சரளா செருப்புச் சத்தம் ஒலிக்க, பின்னால் தலைப்புப் பறக்க அந்த மூன்று மணி வேளையிலே அவசரமாகச் செல்லுவதை என் கண்கள் கவனித்து விட்டன. மனத்திலே எழும்பிய ஆவலிலே அங்கிருந்தே, “சரளா” என்று கத்தி விட்டு வாசலுக்கே ஓடி வந்தேன். அவளோ, எந்த வீட்டில் யார் நம்மைக் கவனிக்கிறார்கள் என்ற எண்ணம் சிறிதும் இன்றி நேரான நோக்குடன் தன் நடையின் வேகத்தைத் தளர்த்தாமலே சென்றால். வாசற்படியில் நின்று எட்டிப் பார்த்த நான் அளவில்லாத துடிப்புடன் அவள் தெருவிலே செல்கிறாள் என்பதையும் மறந்து, “சரளா, சரளா!” என்று கூவினேன். அவள் ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள். பிறகு அங்கிருந்தே முகத்தை அசைத்து விட்டுத் திரும்பிப் போய் விட்டாள். அவள் செய்கை எனக்குப் புரியவில்லை. அவளாக இருந்தால் அப்படியா என்னைக் கண்டுவிட்டுப் பேசாமல் போவாள்? தெருவில் போகும் பெண்ணொருத்தியை அப்படிக் கூப்பிட்டு விட்டேனே என்று வெட்கமாக இருந்தது.

திரும்பி வந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி மூன்றேகால் ஆகியிருந்தது. தனக்கென எதுவும் பிரத்தியேகமாகச் செய்து கொள்வது என்றாலே பிடிக்காத பான்மை என் மனத்திடையே ஊறியிருந்தது. ‘அவருக்குச் சாப்பாடு அனுப்ப வேண்டும். இரவு உணவருந்த வருவார்’ என்று இந்த இரண்டு வேளைகள் மட்டும் சிரத்தையுடனும் கவனிப்புடனும் உணவு தயாரித்தேனே ஒழிய, என்னைப் பொறுத்த மட்டில், ஒருநாள் பன்னிரண்டு மணி, ஒரு நாள் இரண்டு மணி என்று நினைத்த போது உணவு கொள்வேன். எனக்குத் தோன்றினால் காபி போடுவேன். இல்லாவிட்டால் சிந்தனையிலேயே காலம் போக்கி விடுவேன். என்ன வேண்டுமானாலும் செய்ய இடந்தரும் இந்தச் சுதந்திரத்தை மனம் போன வழியிலேயே செலவழித்தேன். அன்று ஏதோ ஞானோதயம் போலத் திடீரென்று அப்படிச் செய்யக் கூடாது என்று தோன்றியது. ‘வாழ்வை ஏன் சோம்பிச் சோம்பிச் சுவையற்றதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்? நல்ல உடைகள் அணிந்து சிங்காரித்துக் கொள்ளக் கூடாதா? வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பானேன்? அண்டை அயலிலே சிநேகம் பிடித்துக் கொண்டு வெளியில் வாசலில் போய் வரக் கூடாதா? ஏற்கனவே மூளியாயுள்ள வாழ்க்கையை இன்னும் நானாகவே ஏன் கல்லும் முள்ளுமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற புது எண்ணங்கள் எழும்பின. வாசலில் “யார் என்னைக் கூப்பிட்டது?” என்ற குரல் - சரளாவின் குரலே தான் - என்னை அழைத்தது. நான் அப்படியே ஓடினேன்.

“சுசீலாவா, அடையாளமே தெரியவில்லையே? நான் யாரோ கூப்பிடுகிறார்களே, யாராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே வந்தேன். தபால் ஒன்று அவசரமாக அனுப்ப வேண்டி இருந்தது. சற்று நின்றால் கூடக் கட்டு எடுத்து விடுவானே என்று அப்படி ஓடினேன். நான் போனது சரியாக இருந்தது. பெட்டியைக் காலி செய்து கொண்டிருந்தான். கையில் கொடுத்து விட்டு வந்தேன். நீ இங்கே தான் இருக்கிறாய்?” என்று ஆவலுடன் கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.

எத்தனையோ தினங்களுக்குப் பிறகு அன்று நான் என்னை மீறி மகிழ்வுற்றேன். “ஆமாம், உங்கள் மாதிரி இருந்தது. கூப்பிட்டு விட்டேன். அப்புறம் பேசாமல் போகவே, ‘யாரோ தெரியாமல் அழைத்தோமே’ என்று வெட்கப்பட்டுக் கொண்டேன். புங்கனூரை விட்டு எப்போது வந்தீர்கள்? நீங்கள் இந்த ஊரில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! எங்கே இருக்கிறீர்கள்?” என்று பதிலுக்கு விசாரித்தேன். பழைய நட்பு என்றாலே தனி இன்பம் அதில் இருக்கிறது. என்னுடன் அவள் அன்று இரண்டு மணி நேரம் இருந்தாள். பக்கத்துத் தெருவிலே இருந்த கலாமந்திரம் ஒன்றில் அவள் சங்கீதத்துக்குத் தலைமை ஆசிரியராக இருக்கிறாள் என்றும், புங்கனூரை விட்டு வந்து ஒரு வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றும் அறிந்து கொண்டேன். என்னைப் பாடச் சொல்லிக் கேட்ட அவள் ஆச்சரியத்துடன், “சுசீ! உன் சாதனையால் குரல் இன்னும் இனிமை பெற்றிருக்கிறது. நீ மேடை ஏறிக் கச்சேரி செய்தால் புகழும் பொருளும் உன்னை எப்படித் தேடி வரும், தெரியுமா?” என்று என் முதுகிலே தட்டினாள். எனக்கு சாயுஜ்ய பதவி கிட்டி விட்டது போல் இருந்தது.

சரளாவின் நட்பு அன்றிலிருந்து என் கசப்பைப் போக்கும் மருந்தாக வளர்ந்தது. என் வாழ்விலே புது ஏடுகள் பிரிந்தன. சிறகிழந்த பறவை போல் வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பதை விட்டு அவளுடைய கலா மந்திரத்திலே கலைஞர்களுக்கிடையே காலம் கழிக்கலானேன். அவளுடைய தோழமையினால் பல வித்துவான்களும் ரஸிகர்களும் எனக்குப் பழக்கமாயினர்.

ஒருநாள் அவள் ஒரு விண்ணப்பக் காகிதத்தைக் கொண்டு வந்து கொடுத்து, “பூர்த்தி செய், சுசீலா!” என்று சிரித்துக் கொண்டே உத்தரவிட்டாள். என் உள்ளத்தில் மகிழ்ச்சி அலை பாய்ந்தாலும், சந்திரனின் மையத்தைப் போல உள்ளே நிழல் கட்டியது. “இவரிடம் இதற்கெல்லாம் உத்தரவு கேட்க வேண்டாமா?” என்றேன்.

ஒரு விநாடி அவள் தயங்கிவிட்டு, “உனக்கு இத்தனை சுதந்தரம் கொடுத்திருக்கும் அவரைப் பதினெட்டாம் நூற்றாண்டுக் கணவராக நினைத்துப் பயப்படுகிறாயே? அவர் தடை சொல்லுவார் என்று எனக்குத் தோன்றவில்லை. கேட்க வேண்டுமானால் கேளேன்? நாளை வருகிறேன்” என்று கூறித் தாளைக் கொடுத்துப் போனாள்.

அன்று இரவு அவரிடம் அதைக் காண்பித்தேன். எவ்விதச் சலனமுமின்றி அவர் அதைக் கையில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் பார்த்தார்.

“நான் என்ன தடை சொல்லப் போகிறேன், சுசீலா? உன் வழியிலே எனக்கு இயற்கையாக ஆர்வம் இல்லாவிடினும் உன் ஆசையை நான் மறிப்பேன் என்று எண்ணினாயா?” என்றார்.

என் வித்தையை வெளி உலகிலே அறிமுகப்படுத்த ஏதும் தடை கூறாத அவரது பெருந்தன்மை என் மனச்சாட்சியைக் குத்தியது. ஆனால் அதே சமயத்தில் அவர் தம் அந்தரங்கத்திலே எனக்கு இடம் கொடாமல், மணந்து கொண்டு விட்ட கடனுக்காக என்னை மனைவியாக நடத்தும் கொடுமை என்னை வேதனைக்கு உள்ளாக்கியது.

நானும் என் பெண்மையின் உறுதி லகானைத் தளர்த்தாமலே, புது உலகிலே புகழுடன் பிரகாசிக்கப் போகும் புது மகிழ்ச்சியைக் கொண்டு அக நெகிழ்ச்சியை மறைத்துக் கொண்டேன்.

என் விண்ணப்பம் வெற்றியாக வேலை செய்தது. வானொலியிலே சுசீலா ராமநாதனின் குரல் அடிக்கடி கேட்கலாயிற்று.

இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடி விட்டன. ஆனால் பெண்ணொருத்தியை மலர வைக்கும் ஜீவ ஒளி என் அக நிறைவை இன்னமும் கிரகணமாகவே வைத்திருக்கிறதே?

வாயிலில் பேச்சுக் குரல் என் கவனத்தைத் தூண்டில் போட்டு இழுத்தது. லீலாவும் குழந்தைகளும் கம்பிக் கதவின் பின்புறம் நின்று பூட்டைப் பிடித்துக் குலுக்கினார்கள். நான் எழுந்து வந்தேன்.

4-2

“வெயில் வேளை, படுத்து உறங்குகிறாயோ என்று நினைத்தேன்” என்று கூறிக் கொண்டே லீலா உள்ளே வந்தாள். பஸ் நிற்கும் இடத்திலிருந்து வருவதற்குள் முகம் கன்றிப் போயிருந்த குழந்தைகளைக் கண்டதும் அவர்களின் தூய அன்புக்கு முன் நான் ஏதோ குற்றவாளியாக நிற்பது போல் இருந்தது.

“அப்பாடா! என்ன வெயில்! இவர்கள் இருவரும் என்னை இன்று சித்தியிடம் அழைத்துப் போனால் தான் ஆச்சு என்று தொந்தரவு செய்து சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெயில் கொஞ்சம் தாழட்டும் என்றால் கேட்டால்தானே? சரி என்று கிளம்பினேன்” என்று கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அவள் உட்கார்ந்தாள்.

“குழந்தைகளைப் பார்க்க வேண்டும், அங்கே அடிக்கடி வரவேண்டும் என்று ஆசை துடிக்கிறது. அவர் தாம் வீடு வரும் போதே மணி ஒன்பது அடித்து விடுகிறதே. அம்மாவும் மன்னியுந்தான் திரும்பிப் பார்ப்பதில்லை என்கிறார்கள். ஏதோ குழந்தைகளையாவது வர அனுமதித்திருக்கிறார்களே. நேற்று முதல் நாள் தான் அவர் வீடு வந்தவுடன், ‘இனிமேல் பள்ளிக்கூடம் லீவாயிற்றே? சுகுமார், மைதிலியையாவது அழைத்து வரக்கூடாதா? எல்லோரும் சௌக்கியந்தானே?’ என்று கேட்டேன். ‘நான் அண்ணாவைப் பார்த்தே பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன’ என்றார் அதற்கு. மைத்துனர் எங்காவது வெளியூர் போயிருக்கிறாரா, லீவா? காரியாலயம் வரவில்லையா?” என்று நான் வினவினேன்.

“இல்லையே! தினமும் போகிறாரே ஆபீஸுக்கு? ஆனால் ராமு எப்படிப் பார்க்க முடியும்? டவுனுக்கு அண்ணாவைப் பார்க்க என்று போக ஓய்வு கிடைத்திருக்காது” என்றாள் லீலா.

எனக்குப் புதிர் போடுவது போல் இருந்தது.

“காரியாலயத்தை இரண்டு பண்ணிக் கிளை ஏதாவது திறந்திருக்கிறார்களா என்ன?” என்று அறியாமல் நான் கேட்டேன்.

லீலா என்னை வியப்புறும் விழிகளால் ஏறிட்டுப் பார்த்தாள்.

“இல்லையே. நிஜந்தானா சுசீ? உனக்கு ஒன்னும் தெரியாதா?” என்று என்னைத் திருப்பிக் கேட்டாள்.

“எது?” என்றேன்.

அவளுடைய ஆச்சரியம் பின்னும் அதிகமாயிற்று.

“குடும்பத்திலிருந்து பிரிந்தது மன்றி இப்போது மூன்று மாதங்களாக அவன் உத்தியோகத்திலிருந்து கூட அவர்களிடமிருந்து விலகிக் கொண்டு விட்டானே! ‘அமார் அண்டு பிரதர்ஸி’ல் மானேஜராக இருப்பதாக அல்லவோ சொல்லிக் கொள்கிறார்கள்? அதற்குப் பிறகே அவன் வீட்டிற்குக் கூட இரண்டொரு தடவை தானே வந்தான்?”

நான் கற்சிலையாக நின்றேன்.

என்ன கணவர் இவர்? உத்தியோகம் செய்யும் இடத்தைக் கூட மனைவியிடம் கூறிக் கொள்ளாத இவரை எந்த விதத்தில் சேர்க்கலாம்?

அன்று கணவன் வீடு வந்த புதிதில் அவராகத் தெரிவியாத அந்த உத்தியோக விஷயத்தை லீலாவிடம் கேட்டு அறிந்து கொள்ள வெட்கினேன். இன்று, எங்கள் மூன்று வருஷ மணவாழ்வுக்குப் பிறகு ‘அவர் எங்கே போகிறார், என்ன வேலை செய்கிறார், எத்தனை சம்பளம் வாங்குகிறார் என்பன போன்ற விஷயங்களை அறியாமல் நிற்கும் என்னை அவள் காணும் நிலை வந்துவிட்டதே! சே! ‘அண்ணாவைப் பதினைந்து நாட்களாகப் பார்க்கவில்லை’ என்று அவர் கூறிய போது, இப்போது லீலாவிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்டிருக்கக் கூடாதோ?

கேட்காவிட்டால் தான் என்ன? இது போன்ற விஷயங்களை அவராகத் தெரிவிக்க வேண்டாமா? உலகத்துப் பெண்களைப் போலக் கணவனின் தொழிலிலும் வருவாயிலும் முன்னேற்றத்திலும் ஆசையும் அக்கறையும் கொண்டு நான் விசாரிக்கவில்லை என்றும், எனக்கு சுவாரசியம் இல்லாத சமாசாரங்களை எதற்காகக் கூறவேண்டும் என்றும் இருக்கிறாரா? அப்படியே இருக்கட்டும். என்னை இந்த வெறுக்கும் நிலைக்கு ஆளாக்கியது யார்? அவர் தாமே? மாதம் பிறந்தால் ஏதோ ஜீவனாம்சம் கொடுப்பது போல முதல் தேதி என் கைச் செலவுக்குத் தேவையான பணத்தை மேஜை மீது வைத்து விடுவார். வீட்டுக்குத் தேவையான பொருள்கள் அவ்வப்போது வந்து விழுந்துவிடும். தவிர, என் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் எனக்கு வரும் பொருள் வேறு செலவுக்குத் தலைக்கு மேல் வெள்ளமாகி விடும். நகையும் நாணயமும் வாங்கிக் குவித்துக் கொள்ளவோ மனத்துக்கு உற்சாகம் இல்லை. ‘அவருக்கு என்ன வருவாய், எப்படிப் போதும்?’ என்றெல்லாம் விசாரிக்க எனக்கு எப்படிச் சிரத்தை ஏற்படும்?

“என்ன சுசி, கல்லாகச் சமைந்து விட்டாய்? உண்மையில் ராமு உன்னிடம் இதெல்லாம் தெரிவிப்பதில்லையா? அக்காவும் அத்தையுமானால் பொழுது விடிந்தால் பொழுது போகும் வரை, ‘நீ உருவேற்றியதனால்தான் அவன் இப்படி ஒரேயடியாகக் கத்திரித்துக் கொண்டு விட்டான்’ என்று உன் மண்டையை உருட்டுகிறார்கள்? விசித்திரமாக அல்லவோ இருக்கிறது?” என்று லீலா மடமடவென்று வினவினாள்.

“நான் சிரத்தையுடன் கேட்கவில்லை. அவரும் நான் கேட்காததனால் சொல்லவில்லை போல் இருக்கிறது” என்று நான் சிரித்து மழுப்பினேன்.

“என்ன விந்தைப் பெண்ணடி நீ? இந்த நவயுகத்திலே கணவனின் உத்தியோகம் அறியாமல் இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? அன்றன்றைய விஷயங்களைக் குடைந்து தள்ளுவார்களே. நினைத்து நினைத்துப் பார்த்தால் கூட உன் பொறுமை எனக்கு அளவில்லாத வியப்பை ஊட்டுகிறது. தனிக்குடித்தனம் வந்ததற்கும் உன் மீது பழி சுமத்தினார்கள். நீயோ ஒன்றும் அறியாமல் சிரித்து மழுப்புகிறாய். ராமுவுந்தான் ஆகட்டும், மூன்று மாத காலமாக உன்னிடம் வீட்டில் நடமாடும் ஒரே ஜீவனிடம் எப்படி இந்தச் சங்கதியைக் கூறாமல் இருந்திருக்கிறான்? புது விஷயம் ஏதும் இருந்து அன்புக்குரியவரிடம் தெரிவிக்காமற் போனால் தலை வெடித்துவிடும் போல் இருக்காதோ?” என்றாள் லீலா.

“ஆம், அவரே விந்தைக் கணவர் தாம். எங்கள் வாழ்க்கையும் விந்தை வாழ்க்கைதான்” என்று கூறிய நான் இன்னும் பலமாக நகைத்தேன். கடையிலே அழகாகக் காணப்படும் பொம்மையை, வெளியிலிருந்து வாயைப் பிளந்து கொண்டு பார்க்கும் ஏழைச் சிறுமியைப் போல அவள் பேசாமலேயே என்னைப் பார்த்தாள்.

இந்த நிலைமை என்னைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி விடுமோ என்று நான் தவிக்கையிலேயே வாசற் கதவு தட்டும் ஓசையும், தொடர்ந்து ‘போஸ்ட்!’ என்ற குரலும் என்னை விடுவித்தன. நான் போவதற்குள் இரண்டு கடிதங்களை உள்ளே போட்டுவிட்டுத் தபால்காரன் போய்விட்டான்.

நான் அவற்றை எடுத்துக் கையெழுத்தைக் கவனித்துக் கொண்டே உள்ளே வந்தேன். ‘சுசீலா ராமநாதன்’ என்ற விலாசம் எனக்கு இப்போது எத்தனை பழக்கமாகவும் அசுவாரசியமாகவும் ஆகிவிட்டது? ஒவ்வொரு முறையும் நான் வானொலியில் பாடிவிட்டு வந்த பிறகு தொடர்ந்து ஒரு வாரத்துக்கு யாரேனும் கடிதம் எழுதுவார்கள். என் பாட்டுக்கு விமரிசனம் என்ற பெயரில் அவை பெரும்பாலும் புகழுரைகளாகவே இருக்கும். அந்த அசுவாரசியமும் திகைப்பாக மாறும்படி ஒரு கடிதத்தில் மைசூர் முத்திரை இருந்தது. கீழே ‘ஹேமா’விடமிருந்து என்றும் காணப்பட்டது. நான் உறையைக் கிழித்தேன். உள்ளே இரண்டு கடிதங்கள் இருந்தன. ஒன்று அத்திம்பேர் என் கணவருக்கு எழுதியிருந்தார்.

மூர்த்தி பயிற்சி முடிந்து வரும் வாரம் வரப்போகிறானாம். அவர் அவனை வரவேற்பதை வியாஜமாகக் கொண்டோ என்னவோ, சென்னை வர இருக்கிறாராம். கூடவே அத்தையும் ஹேமாவும் வருவதற்கு ஆசையாக இருக்கிறார்களாம். மூர்த்தி வந்தவுடன் வேலை ஒப்புக் கொள்ள வேண்டி இருப்பதால் ஹேமாவின் கல்யாணத்தை அடுத்த மாதத்திலேயே நடத்தி விட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதை மடித்து விட்டு ஹேமா எனக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பிரித்தேன்.

“இப்போதெல்லாம் நீ சாமானியமானவளா, சுசீலா! இசையுலகிலே வானொலி மூலம் வட்டமிடும் கந்தர்வ மங்கையாகி விட்டாய்! உன் புது விலாசங் கூட ஊரிலிருந்து மாமா எழுதியே எங்களுக்குத் தெரிந்தது. ஒரு கடிதம் எழுதவும் உனக்கு ஓய்வு கிடைக்கவில்லையா? பத்திரிகைகள் உன் சங்கீதத்தை மிகவும் சிலாகித்து எழுதியிருப்பதைக் கண்ணுற்ற பின் போன வாரந்தான் உன் நிகழ்ச்சியை நான் சிரத்தையுடன் உட்கார்ந்து கேட்டேன். உண்மையிலேயே உன் குரலில் அலாதி இனிமையும் கவர்ச்சியும் இருக்கின்றன சுசீ. வருங்கால இசையரசியான நீ என்னுடைய சகி என்று நினைக்கவே எனக்குப் பெருமையாக இருக்கிறது. அப்பா அங்கு வரப் போவதாகச் சொன்னவுடன் எனக்கும் உன்னைப் பார்க்க ஆசையாக இருப்பதால் நானும் வரத் தீர்மானித்து விட்டேன். உன்னுடன் ஒரு வாரம் சந்தோஷமாகக் காலம் கழிக்கக் கூடாதா?...” என்றெல்லாம் இரண்டு வருஷம் முன்பு என்னிடம் முகம் கொடுத்துப் பேசவும் கூசிய ஹேமா என்னையும் மதித்து இப்போது வரிந்து தள்ளியிருந்தாள்.

அன்று என்னை வேலைக்காரியிலும் கேவலமாக மதித்த அதே மனிதர்கள் இன்று என்னைத் தேடி என் வீட்டிலே என் தோழமையை மதித்து வர விரும்புவானேன்? நான் என்ன மாறிவிட்டேன்? ஆம், உண்மைத் தோற்றம் அவர்களுக்குப் புலப்படாது. செல்வமும், இறுமாப்பும் கொண்ட கும்பலுக்கே வெளித் தோற்றந்தான் குறி. அன்றை விட நான் வெளியார் கண்களுக்கு மேலானவள் ஆகிவிடவில்லையா? அஞ்சி அஞ்சி வீட்டின் அதிகாரிக்குப் பணிவிடை புரியும் பரிதாபகரமான ஏழைச் சுசீலாவா நான் இப்போது? எனக்கும் ஒரு வீடு, வாசல் என்று சொந்தமாக இருக்கின்றன. புகழ் ஏணியிலே வேறு காலை வைத்திருக்கிறேன்.

ஒரு கடிதத்திலேயே ஆழ்ந்து விட்ட என்னை லீலா, “என்ன சுசீ. ஒரே கடுதாசியில் அப்படி ஆழ்ந்து விட்டாயோ? யாராவது ‘கிரிட்டிக்’ உன் சங்கீதத்தைப் பற்றி எழுதியிருக்கிறாரா?” என்று என் கவனத்தைத் திருப்பினாள்.

“இல்லை, மூர்த்தி அடுத்த வாரம் இங்கே வரப் போகிறாராம். அத்திம்பேரும் ஹேமாவும் இங்கே வரப் போவதாக எழுதியிருக்கிறார்கள்” என்று நான் கூறிய போது அவள் முகம் சடாரென்று கறுத்து விட்டது.

அப்பா குதிருக்குள் இல்லை என்பதைப் போல, என்னைப் பார்க்கும் போதெல்லாம், ‘மூர்த்தியை நான் மறந்து விட்டேன்’ என்று முடிவு கூறியவளாயிற்றே?

“ஏன் லீலா? ஒரேயடியாக இருண்டு விட்டீர்களே. ‘மூர்த்தியை நான் நினைவிலிருந்து அகற்றிவிட்டேன்’ என்று பெருமையடித்துக் கொள்வீர்களே!” என்று நான் பரிகாசமாக மொழிந்தேன்.

என் கணவர் என் மீது எல்லையிலாப் பிரேமை வைத்திருக்கிறார் என்று நான் நம்பி, பிரேமை யுலகத்திலே மிதந்து கொண்டிருந்த நாட்களில் லீலா - மூர்த்தியின் காதலை எவ்வளவோ உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தேன். அப்புறமும் - என் வாழ்வில் இருள் புகுந்த பின் - காதலின் பேரில் எனக்கு மதிப்புக் குன்றிவிட்டது என்று கூறவில்லை. அவர்கள் இருவரையும் காணும் போதே எனக்கு அலாதி மகிழ்ச்சி உண்டாவது வழக்கம். மூர்த்தியைக் குணக்குன்று என்று நான் பழகிய மாதிரியிலிருந்து போற்றி வந்தேன். ஆனால் லீலாவிடம் நான் அறியக் காதல் மொழிகள் கூறி அவள் உள்ளத்தில் பிரேமையை வளர்த்துவிட்டு, ஹேமாவை மணந்து கொள்ள வாக்குறுதி கொடுத்திருப்பதாகத் தெரிந்த பிறகு நான் அவன் மேல் கொண்டிருந்த உயரிய மதிப்பிலே சற்று விரிசல் விழ ஏதுவாகி விட்டன. என்னுடைய அனுபவமும் கண் முன் அவன் லீலாவைப் புறக்கணித்திருப்பதும், ‘ஆண்களே நம்பத் தகாதவர்கள்’ என்ற அழுத்தமானதோர் எண்ணத்தை என் மனத்தில் ஊன்றி விட்டன. எனவே, லீலாவின் மன ஏக்கத்தைக் கண்டு, எனக்கு அத்தனை இரக்கம் ஏற்படவில்லை. ஒரு விதத்திற்குத் தப்பினாள் என்று கூட அபிப்பிராயப்பட்டேன். என்னைப் போல் இல்லையே அவள்?

திடீரென்று கவனம் வரவே இன்னொரு கடிதத்தைப் பார்த்தேன். கையெழுத்துப் பரிசயம் இல்லாததாக இருந்தது. முத்திரை தெளிவாகத் தெரியவில்லை. வேறு ஏதாவது அசுவாரசியக் கடிதமாக இருக்கும் என்று பிரிக்காமலே மேஜை மேல் போட்டுவிட்டு, “அடுத்த மாதம் கல்யாணம் நடப்பதாக இருக்கிறதாம்” என்றேன் மெதுவாக.

“என்னை இனிமேல் என்ன செய்யச் சொல்கிறாய் நீ, சுசி? அதைக் கேட்கவா நான் இந்த வேகாத வெயிலில் வந்தேன்” என்று எடுத்த எடுப்பிலேயே லீலா என்னிடம் கேட்டாள்.

நான் இப்போதும் சிரித்தேன். அவளுக்குக் கோபம் வந்தது.

“உனக்கு நகைப்பாக இருக்கிறது இல்லையா சுசீ? நீ கூட இப்படி என்னைக் கை விட்டுவிடுவாய் என்று நான் நினைக்கவில்லை” என்று சிணுங்கியபடியே அவள் எழுந்தாள்.

“வெகு அழகுதான்? கை விடாமல் வேண்டுமானால் பிடித்துக் கொள்கிறேன். நான் ஒரே யோசனை தான் சொல்வேன். கேட்பீர்களா?” என்று சற்று உரக்க நகைத்தேன்.

“உம் சொல்லு.”

“பேசாமல் நடந்ததையெல்லாம் கனவு போல் மறந்து விட்டு வரதனை மணந்து கொள்ளுங்கள். அவருடைய ஆசையைக் கருக்கி விடாமல் அவருடைய வீட்டிற்கு எஜமானியாக ஆகுங்கள். காதல் கீதம் எல்லாம் கதையுடனும் காவியத்துடனும் சினிமாவுடனும் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைக்கு அது ஒத்து வராது. மனக்கோட்டை எதுவும் கட்டிக் கனவு உலகத்திலே பறக்காமல் சாதாரணமாக மணம் செய்து கொண்டீர்களானால் வாழ்க்கையில் அமைதி நிலவும்” என்று எனக்குப் பட்டதைக் கூறினேன்.

“என்ன சுசீ? நிஜமாகவே இது உன் அந்தரங்க யோசனையா? தெரிந்தும் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளச் சொல்லுகிறாயா?”

“இந்திரலோகம் போன்ற பங்களாவில் காலெடுத்து வையுங்கள் என்றேனா, குட்டிச் சுவர் என்றேனா? மூர்த்தி இல்லாவிட்டால் நீங்கள் வாழ்வையே துறந்து விடலாம் என்று எண்ணினீர்களா? அது சாத்தியமாகுமா?” என்றேன்.

“சற்றும் பிடித்தம் இல்லாத ஒருவருடன் வாழ்க்கையில் பங்கு கொள்ள மனம் துணியாது போல் இருக்கிறதே சுசீ? வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் காணும் பொருட்டுத்தானே மணப் பந்தலில் இருவர் பிணைப்புறுவது? அது பூஜ்யம் எனத் தெரிந்ததும் ஒருவரோடு ஒருவர் மணவினையினால் பிணைப்புற்று என்ன பயன்? வேறு ஒருவரிடம் மனத்தைக் கொடுத்து விட்டு என்னால் தான் அவருடன் இன்பமாக வாழ முடியுமா? அல்லது நான் முழு மனத்துடன் அன்பு செலுத்தவில்லை என்று தெரிந்தால் அவருக்குத்தான் சந்தோஷம் உண்டாகுமா?” என்று பரிதாபமாக என்னை நோக்கி விழித்தாள் லீலா.

எனக்கு இந்த விஷயம் அலுத்து விட்டது. பாவம்! புதிதுதானே? அவளுக்கு அதிர்ச்சி இன்னும் பழகவில்லை.

“இருக்கட்டும், இருக்கட்டும். மூர்த்தி இங்கே வராமலா போகிறார்? மலரும் நகையுடன் எப்போதும் பிரகாசித்த லீலாவின் இருதயத்தை இருளச் செய்த அவரை நான் கண்டு சும்மா விடப் போவதில்லை. கவலையெல்லாம் மூட்டை கட்டித் தூர வையுங்கள். மனத்தை வீணே தளர விடுவதில் பலக் குறைவுதான் காணும் பலன். குழந்தைகள் எங்கே? நாலு மணிக்கு ‘டான்ஸ்’ நிகழ்ச்சி ஒன்று இருக்கிறது. கலாமந்திரத்திலே போகலாமா? என்ன டிபன் பண்ணலாம். சொல்லுங்கள்” என்று நான் பேச்சை மாற்றி அவள் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தேன்.

உள்ளே, தம்புராவின் தந்திகளை மீட்டிக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். என் குரல் கேட்டதும், “நான் இல்லை சித்தி, அவள் தான்!” என்று குழந்தைகள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு ஓடி வந்தனர். அன்று மாலை நேரத்தை அவர்களுடன் இன்பமாகக் கழித்த பின்னும், ‘போகிறார்களே’ என்று இருந்தது எனக்கு. குழந்தைகளை அணைத்து முத்தமிட்ட நான் பஸ் ஏறச் சென்ற லீலாவிடம், “குழந்தைகளையாவது விட்டுப் போகக் கூடாதா? இல்லாவிட்டால் நீங்களும் இரண்டு நாள் இங்கே இருக்கக் கூடாதா?” என்று கெஞ்சினேன்.

“சொல்லாமல் கொள்ளாமல் நான் தங்குவது சரியில்லை சுசி. இப்போதே மணி ஆறரை ஆகிவிட்டது” என்று அவள் சொன்னாள். ‘ஈசுவரா!’ என்று மன அலுப்பும், உற்சாகமும் குன்றிய உடலுமாக உள்ளே வந்த என் கண்களில் பிரிக்கப் படாமல் இருந்த மற்றொரு கடிதம் பட்டது.

அலட்சியமாகப் பிரித்தேன். உள்ளே கடிதத் தாளின் மேலே அச்சடிச்சிருந்த வரதன், எம்.ஏ., என்ற எழுத்துக்கள் என்னை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டன! சட்டென ஐயம் உந்த, கடித உறையைத் திருப்பிப் பார்த்தேன். சுசீலா ராமநாதனுக்குத்தான். என்னவாக இருக்கும் என்று படிக்கலானேன்.

“இந்தக் கடிதம் உனக்கு ஆச்சரியம் அளிக்கலாம், சுசீலா. ஆனால் இதை எழுத வேண்டியது என் கடமை. ரஸிகன் என்ற முறையிலும், அதே கலையில் ஓரளவு தேர்ச்சி பெற்றவன் என்ற முறையிலுந்தான் சொல்கிறேன். உன் வித்தையிலே நான் கொண்டிருந்த நம்பிக்கை நான் எதிர்பார்த்ததற்கு மேலாகச் சுடர்விட்டிருக்கிறது. வெறும் புகழ் வார்த்தைகள் என்று நினைக்காதே. இசைக்கென்றே பிரமன் உன் குரலைப் படைத்திருக்க வேண்டும். ஞானமும் இனிய குரலும் ஒன்று சேரும் இடத்தில் சங்கீதக் கலை தேனும் பாலும் சேர்ந்தது போல் பரிணமிக்கக் கேட்பானேன்? முக்கால் மணி நேரம் கந்தர்வ உலகத்தில் இருப்பது போல் இருந்தது எனக்கு. தோடி ராகத்தை விஸ்தாரம் செய்தாயே? அது இன்னும் என் செவிகளை விட்டு அகலவில்லை. ராகத்தின் ரஞ்சகத்தை மிகைப்படுத்திக் காண்பிக்கும்படி நீ கையாண்ட பிடிகைகளும், இழைந்து இழைந்து மனத்தைப் பரவசப்படுத்திய கமகங்களும், அநாயாசமாகப் பறவை போல் மூன்று ஸ்தாயிகளிலும் நீ வட்டமிட்டதும் உன்னைப் பெரிய வித்வாம்ஸினிகளின் வர்க்கத்தில் சேர்த்து விட வேண்டியதுதான் என்று உறுதிப்படுத்தி விட்டன. விருத்தம் என்று பாடினாயே? அது பிரமாதம். கல்யாணி ஜம்மென்று புதுவெள்ளத்தின் சுழிப்பைப் போல முழங்கினாள். பைரவி உன்னிடம் கெஞ்சிக் கொஞ்சினாள். காவேரி பாகாய் உருகினாள். மோகனமோ கேட்போர் மனங்களிலே மோகனக் கவர்ச்சியை நிரப்பினாள். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டது நீ கடைசியாய்ப் பாடிய பதம். ‘யாரிடம் சொல்வேனடி’ என்ற அந்தப் பாடல் உண்மையான உள்ளத்திலிருந்து உருகிக் கரைந்து காற்றிலே வந்தது என்றால் மிகையாகாது. அந்த வேலவன் ஆறுமுகம் மட்டும் உன் கீதத்துக்குச் சற்றுச் செவி சாய்த்திருப்பானானால் உன் உருக்கத்துக்கு வசப்பட்டுக் கட்டாயம் பிரத்தியட்சமாகி இருப்பான்” என்று அக்கு வேறு ஆணிவேறாக அலசி அலசி ஆராய்ந்து எழுதியிருந்தான்.

வரதனிடமிருந்து இத்தகைய கடிதம் ஒன்று வரும் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் என் கானத்தைக் கேட்பான் என்ற எண்ணங்கூடத் தற்செயலாக வேணும் எனக்கு எழுந்ததில்லை. இப்போது அவன் அனுபவித்துவிட்டுத் தெரிவித்திருக்கும் பாராட்டுதல் என் உள்ளத்திலே அதுகாறும் நான் கண்டிராத போதையை நிரப்பிவிட்டது. உண்மையை நான் மறைக்காமல் சொல்லி விட வேண்டியதுதானே?

நானோ மணமானவள். அவனோ அயல் ஆடவன். தெரிந்தும் அவன் இத்தனை நிர்ப்பயமாக, சுவாதீனமாக எழுதியிருப்பதைத் தவறுதலாக எடுத்துக் கொள்ளலாம் என்றே எண்ணம் உதிக்கவில்லை. வேறு ரஸிகர்கள் எனக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நேரிலும் அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள். அவைகளில் நிச்சயமாக இவ்வளவு சரளம் தொனித்ததில்லை. ‘பிரமன் உன் குரலை இசைக்கென்றே படைத்திருக்க வேண்டும்’ என்று யாருமே கையாண்டதில்லைதான். என்றாலும் வரதன் என்னுடன் பழகியவன் அல்லவா? எதையும் கொஞ்சம் மிகைப்படுத்தியே கூறுவது அவன் சுபாவம். இதில் என்ன தப்பு இருக்கிறது?

அம்மாவுக்குத் தெரியாமல் தின்பண்டத்தை எடுத்துத் தின்னும் குழந்தைக்கு ருசியின் சுவாரசியத்தில், ‘பின்னால் தாய் கோபிப்பாள்’ என்றே தோன்றாது. உண்மை ரஸிகன் ஒருவனுடைய புகழ் மொழிகளைக் கண்டுவிட்ட எனக்கு எத்தகைய குறுக்கு எண்ணமும் தோன்றவில்லை. எப்பேர்ப்பட்ட அறிவாளிகளையும் புகழ்மொழிகள் மயக்கிவிடும் அல்லவா? இன்னும் உலகிலே முற்றிய அநுபவம் வாய்ந்திராத நான், அலுப்புச் சலிப்பு இயற்கையாகவே வந்து அடையும் அளவுக்குப் பழுத்திராத நான், புகழுக்கு வசப்பட்டு ஆசைப்பட்டது இயல்புதானே?

4-3

அத்தை, ஹேமா முதலியோர் வரப்போகிறார்கள் என்று அறிந்ததும் நான் அவர்கள் மேல் கொண்டிருந்த வெறுப்பெல்லாம், அவர்களைக் குத்திக் காட்டுவது போல நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆத்திரமாக மாறியது. அன்று என்னை அவர்கள் மட்டந்தட்டிய சம்பவங்கள் என் மனத்தின் அடித்தளத்திலிருந்து எழும்பி, என் வீடு தேடி வரப்போகும் அவர்களுக்கு முன் அவர்கள் மதிப்பை நான் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருக்க வேண்டும் என்று எண்ணும்படி செய்தன. நான் தனிக்குடித்தனம் ஏதோ ‘கடனே’ என்ற மாதிரியில் ஆரம்பித்ததனால் வீட்டுக்குத் தேவையாக நல்ல நல்ல பாத்திரம் பண்டங்கள் கூட வாங்கிச் சேகரித்திருக்கவில்லை. என்னிடம் ஆடை அணிகளும் அவ்வளவு உயர்தரமானவையாக இல்லை. எனவே சமயத்தைப் பயன்படுத்திக் கொள்வது போல என்ன என்னவோ பொருள்கள் எல்லாம் வாங்கி நிரப்பினேன். புது மாதிரியான பட்டுப் புடவைகள் கூட இரண்டு எனக்கு என்று வாங்கிக் கொண்டேன். ஒரு நாளும் இல்லாத திருநாளாக நான் அலங்கார வேலைகளில் சிரத்தைக் கொள்வதைக் கண்ட என் கணவர் கூட “ஏது சுசீலா? அத்தை வருவதற்காக இத்தனை தடபுடலா, அல்லது மேல்நாட்டு நாகரிகத்தில் முழுகிவிட்டு வரப் போகும் மூர்த்தியின் கண்களுக்கு முன் பெருமையாகத் தென்படவா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

இந்தக் கேள்விகளை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்குப் புரியவில்லை. இத்தனை நாட்கள் நான் எதிலும் சிரத்தையில்லாமல் இருந்ததைக் குத்திக் காட்டுகிறாரா, அல்லது அத்தை வருவதை முன்னிட்டாவது நான் சிரத்தை கொண்டிருக்கிறேன் என்று திருப்தி கொண்டு மொழிகிறாரா என்று அவரை ஊன்றிக் கவனித்தேன். குமுறும் நீலக்கடலின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடித்து விடலாம். அவர் என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறார் என்பது எனக்குப் புரியவில்லையே! என்றாலும், “எப்படியும் இவை தேவையானவை. இந்தச் சமயத்தை உத்தேசித்து வாங்கி வைத்தேன்” என்றேன்.

மௌனமாகவே அவர் ஸ்டேஷனுக்குச் சென்று விட்டார்.

இரண்டு வருஷங்களுக்கு முன் இருந்ததை விட ஹேமா, ‘லிப்ஸ்டிக்’ பூசிக் கொள்வதிலிருந்து இடியோசை போல் சிரிப்பது வரை எல்லா அம்சங்களிலும் வளர்ச்சி அடைந்திருந்தால். என்னைக் கண்டதும் ஓடி வந்து தோளில் கையைப் போட்டுக் கொண்டாள். வாட்ட சாட்டமாக ‘ஆண் பிள்ளை’ போல் வளர்ந்திருந்த அவள் பேச்சு, செய்கை எதிலும் பெண்மைக்குரிய மென்மை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

“என்னடி சுசீலா?” என்று என்னை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே வெள்ளிக் கூஜாவை மறக்காமல் கையில் எடுத்துக் கொண்டே காரை விட்டு இறங்கினாள் அத்தை. நான் பதிலுக்கு அசட்டு சிரிப்பு ஒன்று சிரித்து வைத்தேன். என்னுடன் பேசியே இராத அத்திம்பேர் கூட “சுசீலா இன்னும் குழந்தை போல அப்படியேதான் இருக்கிறாள்” என்று சிரித்தவாறு அபிப்பிராயம் கொடுத்தார்.

வந்ததும் வராததுமாக அத்தை தன் பெருமையைக் காட்டிக் கொள்ளும் வகையில், “குழந்தை, உனக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது என்று சமையல் வேலைகளுக்கெல்லாம் ஆளை அழைத்து வந்திருக்கிறோம். எங்களுடன் நீ எல்லா இடங்களுக்கும் வந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். சற்றுப் போனால் வீட்டு வேலையைப் பார்த்துக் கொள்ள அவள் சாமான்களுடன் வண்டியில் வந்து விடுவாள்” என்றாள்.

பிறகு உள்ளே எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தாள். “சிற்றடக்கமாக அழகாக இருக்கிறது வீடு. இந்த ‘டீ ஸெட்’ எப்போது வாங்கினாய் சுசீ? புது மெருகே அழியவில்லையே! வீட்டை எவ்வளவு நன்றாகவும் துப்புறவாகவும் வைத்துக் கொண்டிருக்கிறாய்! அண்ணாவுடைய பெண்களிலே நீதான் சுசீலா, சமர்த்தாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் குடும்பம் பண்ணுகிறாய். வீட்டுக்கு என்ன வாடகை? முழு நேரமும் வேலைக்காரி இருக்கிறாளா என்ன?” என்றெல்லாம் பெருமை பொங்கக் கேள்வி கேட்டாள் அத்தை.

“அப்பா, நான் எத்தனை நாட்களாக அந்தப் பழைய ‘ஸெட்டை’க் கொடுத்துவிட்டு வேறு வாங்கச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? சுசீலாவைப் பார்! ‘ஸெவன் வால்வ்ஸ், லேடெஷ்ட் மாடல்!’ இது எவ்வளவு அழகாக இருக்கிறது? இது போன்ற ரேடியோ ஒன்று நீ இந்தத் தடவை கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும். இந்த டேபிள் கிளாத் நீயா போட்டாய் சுசீ? அப்படியே கடையில் வாங்கியது போல் இருக்கிறதே!” என்று கண்ணில் கண்ட பொருள்களையெல்லாம் புகழ்ந்து தள்ளினாள் ஹேமா.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே நான் இட்டிலியும் காபியும் கொண்டு வைத்தேன்.

“அட, என்ன சுசீலா இது? மாஜிக் மாதிரி இருக்கிறதே! பேசிக் கொண்டே அங்கும் இங்கும் பறந்தாய்? அதற்குள் இதெல்லாம் எப்படிக் கொண்டு வந்தாய்?” என்று அத்திம்பேர் அதிசயத்துடன் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டார். என் கணவருக்கு கூடப் பெருமை பொங்கி விட்டது போலும். “சுசீ எல்லாவிதத்திலும் கெட்டிக்காரி” என்றார்.

“பார்த்துக் கொள் ஹேமா, புருஷன் களைத்து வீடு வரும் போது நீ டென்னிஸ் மட்டையைச் சுழற்றிக் கொண்டு கிளம்பினால் அவனுக்கு ரஸிக்குமா, அல்லது இப்படி உபசாரம் செய்தால் ரஸிக்குமா என்று நீ தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அத்திம்பேர் நகைத்தார்.

“இல்லை, அண்ணா வந்து ஒரு நடை கூடப் பார்க்கவில்லையாம். வர வேண்டாமோ! எனக்கு என்னவோ மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அம்மாவைக் கூட அழைத்து வராமல் போனோமே என்று இப்போது தோன்றுகிறது. அவள் பார்த்தால் கொள்ளைச் சந்தோஷப்பட்டுக் கொள்வாள். சுசீலாவும் இத்தனை சமர்த்தாக, இத்தனை நன்றாகக் குடித்தனம் செய்வாள் என்று நான் எண்ணவில்லை!” என்று அத்தை பன்னிப் பன்னிப் பேசியது என் பழைய வெறுப்பைத் துடைத்துக் கர்வத்தை ஏற்றியது.

அன்று பகல் அத்தை என் மைத்துனர் வீட்டுக்குப் போக விரும்பினாள். நான் தனியாக வந்த பிறகு அந்த வீட்டிலே காலடி எடுத்து வைப்பது போல எனக்குத் தோன்றும்படி, நான் எப்போதாவது அங்கே சென்ற சமயங்களில் கூடப் பட்டு எனக்கு முகம் கொடுத்தே பேசவில்லை. என் மாமியாரோ, பேசும் இரண்டொரு வார்த்தைகளில் குற்றத்தைத் திணித்து வைத்துப் பேசுவாள். அவர் மாடியில் பத்து நிமிஷங்கள் இருந்தால் கூட எனக்கு முள்ளின் மேல் இருப்பது போல் இருக்கும். எப்படியோ சமாளித்துக் கொண்டு வீடு திரும்புவது வழக்கம். அத்தை முன்னிலையில் இப்போது பழைய சிநேக பாவத்துடன் பட்டு அளவளாவுவாளா? அல்லது விரோதம் காட்டுவாளா?

அத்திம்பேர் தம் காரியமாக வெளியே போய்விட்டார். என் கணவர் காரியாலயம் செல்லும் போது, நான் பகலில் என் மைத்துனர் வீட்டுக்கு அத்தையை அழைத்துக் கொண்டு செல்வதாகவும், அங்கே வருவதை அறிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நான் முன்கூட்டிச் சொல்லி அனுப்பி இருந்ததாலோ என்னவோ, பட்டு அந்தச் சமயம் பார்த்துக் குழந்தைகள் சகிதம் வெளியே போயிருந்தாள். நான், அத்தை, ஹேமா மூவரும் சென்ற போது என் மாமியாரும் லீலாவின் தாயாரும் சமையற்கட்டில் இடைவேளைச் சிற்றுண்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அத்தை கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டாள். ஹேமா சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு நின்றாள். நான் ஏதோ குற்றம் செய்து விட்டவளைப் போல் அடிமேல் அடி வைத்து உள்ளே சென்றேன். அப்போது நாங்கள் ஒன்றாக இருந்த காலத்தில் ஜயம் வருவது எனக்கு நினைவுக்கு வந்தது. வந்தவள் நேராக மாடிக்குப் போவாளே ஒழிய, என் மாமியாரை லட்சியம் பண்ணிக் கீழே வந்து பார்க்கவே மாட்டாள். அவள் கூட நல்லவளாக இருக்கிறாள். பயந்து பயந்து நடுங்கின நான் பொல்லாதவளாகத் தோன்றினேன் அவர்களுக்கு.

“அத்தை வந்திருக்கிறாள்” என்று நான் என் மாமியாரிடம் அறிவித்த போது பழக்க தோஷமோ அல்லது இயற்கையான என் பயங்கொள்ளித் தனமோ, நெஞ்சு படபடத்தது.

“அதுதான் ராமு வந்து சொன்னானே! எங்கே? இப்படி உள்ளே வரச் சொல்லேன்” என்றாள் அவள்.

“மன்னி, குழந்தைகள் எல்லோரையும் எங்கே காணோம்?” என்று விசாரித்தவாறே சாப்பிடும் அறையில் ஒரு பலகையைப் போட்டு உபசரித்த வண்ணம், இப்படி வாருங்கள், அத்தை” என்று உள்ளே கூப்பிட்டேன்.

கையிலிருந்த மாவை அலம்பித் துடைத்துக் கொண்ட என் மாமியார், “குழந்தைகள் பிய்த்துப் பிடுங்கினார்கள். எங்கேயோ சினிமாவுக்கு அழைத்துப் போனார்கள். ‘இன்று தானே ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள், அதற்குள் வரப் போகிறார்களா?’ என்று சொல்லிக் கொண்டே போனாள். பத்து நாள் இருப்பீர்களோ இல்லையோ?” என்று கேட்டாள்.

குதிகால் ஜோடும் தானுமாக வெளியே நின்ற ஹேமா, “சுசீ?” என்று சங்கடம் தொனிக்கக் கூப்பிட்டாள்.

“அங்கே யார் நிற்கிறார்கள்? உங்கள் பெண்ணா? இப்படி வாயேன் அம்மா உள்ளே” என்றார் என் மாமியார்.

ஜோட்டைக் கழற்றி வைத்துவிட்டு அத்தையின் பக்கலில் வந்து அவள் நின்றாள். பாட்டிகள் இருவர்களுக்கிடையே அம்மா பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டு அங்கே நிற்க அவளுக்குப் பிடிக்கவேயில்லை என்பதை முகம் நிதர்சனமாகக் காட்டியது.

“லீலாவும் போயிருக்கிறாளா?” என்று நான் அவள் தாயிடம் விசாரித்தேன்.

“இல்லையே? மாடியில் இருப்பாள்” என்று பதில் வந்தது.

“வா, ஹேமா” என்று அவளை அழைத்துக் கொண்டு நான் மாடிப் பக்கம் சென்றேன்.

முன் கூடத்திலே நான் கண்ட காட்சி என்னை அப்படியே சிலையாக்கி விட்டது. மேஜை மேல் ஒரு கட்டுக் காகிதங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு என் கணவர் ஏதோ கூட்டிக் கொண்டிருந்தார். கீழே மின்சார விசிறியின் அடியில் லீலா தையல் யந்திரத்தில் ஏதோ தைத்துக் கொண்டிருந்தாள்.

முதலில் ஆச்சரியம் தாளாமல் ஹேமாதான் பேசினால். “நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? ஆபீஸ் பேப்பர்களா?” என்று அவள் அவரருகில் மேஜையில் குனிந்து பார்த்தாள்.

லீலா திடுக்கிட்டவள் போலத் துணியை எறிந்து விட்டு எழுந்தாள். “ஓ! சுசியா?” என்று என்னைக் கேட்டு விட்டு அவள் ஹேமாவைப் பார்த்தாள்.

“நீங்கள் இங்கே வருவதாக சுசீ சொல்லச் சொன்னது எனக்கு ஒரு மணிக்கு மேல் தான் நினைவுக்கு வந்தது. வந்தேன். அண்ணா நேற்றே ஏதோ தவறுதல் பார்க்கும்படி கூறியிருந்தான். அதுதான் இங்கேயே இப்படியே பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். லீலா இது யார் தெரியுமா?” என்று புன்னகை செய்தவாறு அவர் லீலாவை நோக்கி ஹேமாவைக் காட்டினார்.

லீலா சிரமப்பட்டுப் புன்னகையை வரவழைத்துக் கொண்டு நிற்கையிலேயே அவர் பின்னும், “மிஸஸ் மூர்த்தியாகக் காத்துக் கொண்டிருக்கும் ஹேமா. ஹேமா, லீலாவும் மூர்த்தியும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தாம்” என்று அறிமுகப் படலத்தை நடத்தி வைத்தார்.

“ஓ! சந்தோஷம்” என்று லீலாவின் கையைப் பிடித்துக் குலுக்கின ஹேமா, “நீங்கள் ஏன் அப்போது இவர்களுடன் மைசூருக்கு வரவில்லை” என்று கேட்டாள்.

துர்ச்சொப்பனம் ஏதோ கண்டு விட்டவளைப் போலத் தவித்த லீலா, “வரவில்லை...” என்று சிரித்து மழுப்பினாள்.

மனநிலை லேசாக இருந்தால் சம்பாஷணை சரளமாக ஓடப் பேச்சுகள் தாராளமாக வெளிவரும். ஹேமா ஒருத்திதான் திருப்பித் திருப்பிப் பேசிக் கொண்டிருந்தாளே ஒழிய, லீலாவுக்குப் பேச வார்த்தைகளே அகப்படாமல் கஷ்டப்படுவது போல் தோன்றியது. எனக்கோ, அவரை அங்கே கண்டதிலிருந்து என்னை அறியாமலே ஏதோ ஒன்று நெஞ்சை உறுத்தியது.

‘அவர் ஹேமாவுக்குக் கூறிய காரணம் உண்மைதானா? காரியாலயக் காகிதங்கள் வீட்டுக்கு எப்படி வந்தன? இந்த வேளையில் அவருக்கு ஆபீஸில் வேலை இல்லையா? தினமும் இங்கே வருகிறாரோ என்னவோ? அண்ணாவின் பந்தத்திலிருந்து விடுபட்ட பிறகும் ஏன் இவர் இதையெல்லாம் பார்க்க வேண்டும்?’ என்று எண்ணற்ற கேள்விகள் என் மூளையைத் தாக்கின. அவரும் ஏதும் சொல்வதில்லை. நானும் அவர் விஷயத்தில் தலையிடுவதில்லை என்றாலும் நான் இன்னும் ஒன்றும் கேட்காமல் இருப்பது சரியாகுமா? மனத்துக்குச் சரியாக ஒப்ப மாட்டேன் என்கிறதே!

வீட்டுக்குக் கிளம்பும் சமயம் அவரருகில் நின்று நான், “நாங்கள் போகவா? நீங்கள் வர நேரமாகுமா?” என்று கேட்டேன்.

“உம், உம்” என்று அவர் கண்ணை எடுக்காமலே, உம் கொட்டினார். ‘வர நேரமாகும் போல் இருக்கிறது’ என்று நான் அவர் பதிலுக்குக் காத்திராமலே திரும்பினேன்.

வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஹேமாதான் லீலாவைப் பற்றி முதல் முதலாக அபிப்பிராயம் கொடுத்தாள். “ரொம்ப அகம்பாவம் உண்டு போல் இருக்கிறது அவளுக்கு! வாயைத் திறந்து இரண்டு வார்த்தை விட்டு விட்டால் மதிப்புக் குறைந்துவிடும் என்ற எண்ணம். ஆமாம் சுசீ, ராமநாதன் இங்கு வருவதாகச் சொல்லவில்லையே! தமையனுடைய கம்பெனிக் கணக்கை எல்லாம் இங்கே உட்கார்ந்து விழுந்து விழுந்து கூட்டிக் கொண்டிருக்கிறாரே, மண்டையை உடைத்துக் கொண்டு. ஆள் கொஞ்சம் அழுத்தல் போல் இருக்கிறது உள்ளுக்குள்!” என்று சிரித்துக் கொண்டு அவள் மொழிந்தாள்.

“ஏன் சுசீலா, நீங்கள் தனிக் குடித்தனம் வந்ததே சண்டை பூசலுடன் வந்தீர்களோ? உன் மாமியார் என்னிடம் அத்தனை குற்றம் அடுக்குறாளே! உன் ஓர்ப்படிதான் ஆகட்டும் இன்று நான் வருவேன் என்று தெரிந்துதானே வெளியே போயிருக்கிறாள்? இவர்கள் குணம் நல்லதில்லை என்று எனக்கு அப்போதே தெரியும். எப்படியோ, அவர் நல்ல மாதிரியாக இருக்கிறார். அதுதானே வேண்டும்?” என்றாள் அத்தை.

‘அன்றே சொன்னீர்களே, உங்கள் வாய்க்குச் சர்க்கரை வழங்கலாம்’ என்று நான் முணுமுணுத்துக் கொண்டேன்.

நாங்கள் வீடு திரும்பிய போது, ஜயம் என்னைப் பார்க்க அங்கே வந்திருந்தாள். என்னைக் கண்டதும் வேலைக்காரி, “அம்மா வந்திடுவாங்க இப்போன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன், வந்துட்டாங்க” என்றாள்.

“பார்த்தாயா? உள்ளூர் மதனி உயர்த்தி இல்லை என்று அத்தையை முதலில் அங்கே தானே கூட்டிப் போனாய்?” என்றாள் அவள்.

“ஓ! அதில்லை மன்னி உள்ளூராரை ஆற அமரப் பார்க்கலாம். அங்கே முதலில் போய் வந்துவிடலாம் என்று போனோம். மன்னி கூட வீட்டில் இல்லை. இங்கே நீங்கள் திரும்பி விடுவதற்குள் வந்தோமே” என்று சொல்லிப் பாயை விரித்துப் போட்டு, உட்காரச் சொன்னேன்.

“நான் அங்கே நேற்றுப் பகல் போயிருந்தேன். அப்போதும் மன்னி இல்லை” என்று உட்கார்ந்த ஜயம் அத்தையுடனும் ஹேமாவுடனும் சம்பிரதாயமாகப் பேசினாள். அவள் கிளம்பும் முன், ஹேமா உடை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றாள். அத்தையும் பின் கட்டுக்கு ஏதோ காரியமாகச் சென்றாள். ஜயம் என்னிடம் தனியாக, “சுசீலா, நான் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதே, நேற்று நான் அங்கே போயிருந்தேனா? ராமு அங்கே தான் மாடியில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். வேறு இடத்தில் மானேஜர் என்று சொன்னார்களே என்று கூட எண்ணிக் கொண்டேன். ஆபீஸ் காரியங்கள் வீட்டுக்குள் வருவானேன்? லீலா நான் போன போது மாடியிலே படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் பாட்டுக்கு மேஜையில் குனிந்து கொண்டிருக்கிறான். கிழவர்கள் இருவரும் காலை நீட்டிக் கொண்டு லோக க்ஷேமம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மைத்துனர் ஊரிலேயே இல்லையாம். எனக்கே இது பார்க்க நன்றாக இல்லை. ஆபீஸ் வேலையை இங்கே கொண்டு வந்து செய்யக் கூடாதா? நீ பரம சாது, சுசீலா. இல்லாவிட்டால் அந்த வங்கினியிடம் அத்தனை நாள் குடித்தனம் செய்ய முடியுமா? என்னவோ தனியா வந்தானே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். ராமுவுக்கு இதெல்லாம் நீ தெரிய வைக்க வேண்டும், சுசீலா. அத்தை வந்திருப்பது கூட எனக்குத் தெரியாது. உன்னிடம் சொல்லவே ஓடி வந்தேன். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி விடுகிறாய். புருஷ மனசுதானே? சந்தர்ப்பமும் வேளையும் பொல்லாதவையாக இருந்தால் எப்படிப் போகுமோ? கல்யாணம் ஆகுமுன்பு அவளுடன் சிரித்துப் பேசினால் அப்புறமும் அப்படி இருப்பது பார்க்க நன்றாக இல்லையே! அப்புறம் பார், டாக்டரிடம் நான் கேட்டேன், அவர் சொல்கிறார், மைத்துனர் கம்பெனி உள்ளே கிடுகிடுத்து விடும்போல இந்த இரண்டு மாதத்திலே நிர்வாகம் குட்டிச்சுவராக ஆகிவிட்டதாம். அதுதான் ராமு ஆபீஸிலே லீவு போட்டுவிட்டு விழுந்து விழுந்து அண்ணாவுக்காக உழைக்கிறானாம்! அது எத்தனை நிஜமோ? இருந்தாலும் இவன் எதுக்கு இதையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும்?” என்று கொண்டு வந்திருந்த மூட்டை முழுவதையும் வாயிற்படியில் நின்றவாறே அவிழ்த்து விட்டாள்.

என் தலைக்கு மேலே பத்து நூறு வெடி விமானங்கள் பறப்பது போலவும், ஜயத்தின் வார்த்தை ஒவ்வொன்றும் வெடிகுண்டென என் மீது விழுவது போலவும் இருந்தது. ஜயத்தைப் பட்டுவுடன் ஒப்பிடும் பட்சத்தில் எவ்வளவோ நல்ல மாதிரி என்றே அபிப்பிராயப்பட வேண்டும். தானும் பிறர் வழிக்கு அநாவசியமாகப் போக மாட்டாள். பிறர் அவள் விவகாரத்தில் தலையிட்டாலும் சும்மா விடமாட்டாள். என்னைப் பொறுத்தவரை அதிகமாக இழைந்து குழைவதும் இல்லை. கண்டபோது மதிக்காமலும் பேசாமலும் இருந்ததும் இல்லை. அவளே என் விஷயத்தில் இப்படித் தலையிட்டுக் கொண்டு வருவானேன்?

‘புருஷ மனசுதானே? சந்தர்ப்பமும் வேளையும் போதாதவையாக இருந்தால் என்ன நேருமோ? நீ தெரிய வைக்க வேண்டும்.’ என் மூளையைப் பிடித்து இவை உலுக்கின. கண்களிலே சுற்றிச் சுழன்று வந்தன. நெஞ்சிலே சம்மட்டி கொண்டு அறைந்தன. அந்த புருஷ மனசு எப்படி இருக்குமோ? வெறுமே ஜயம் இப்படிச் சொல்லும் போது எங்கள் வாழ்க்கையின் அலங்கோலம் வேறு தெரிந்தால்?

லீலா நெருப்பாக இருக்கலாம். ஆனால் அந்த புருஷ மனசு நெருப்பிற்கும் மேல் சக்தி வாய்ந்த தண்ணீராக இருந்தால்?

சீ! இது அசட்டுப் புத்தி. லீலாவையா நான் இப்படி நினைத்தேன்? என் மனத்துக்கு ஏதாவது கோளாறு வந்து விட்டதா என்ன? கள்ளமற்ற குழந்தை போலத் தூய மனம் படைத்த லீலாவைத் தெரியாதா எனக்கு? என்றாலும் விஷயங்கள் இவ்வளவு வளர்ந்திருக்கும் போது, அவர் ‘நான் அண்ணாவிடமிருந்து விலகி விட்டேன்’ என்று கூட என்னிடம் ஒரு வார்த்தை தெரிவிக்காதது எத்தனை பிசகு? தினம் தினம் அவர் காரியாலயம் செல்கிறார் என்று நான் நம்பிக் கொண்டிருக்க, அங்கே போய் உட்கார்ந்திருப்பது பார்க்க நன்றாக இருக்கிறதா? என் கண்களுக்கு மாசு ‘பளிச்’சென்று தென்படாவிட்டாலும் ஜயமும் இன்னொருத்தரும் பார்த்துச் சொல்வது கேவலமாக இருக்கிறதே!

அன்றிரவு தனிமையில் நான் அவரிடம் கேட்டு விட்டேன். “நீங்கள் அண்ணா கம்பெனியில் இல்லை என்று கேள்விப்பட்டேன்...” என்று மெதுவாக ஆரம்பித்தேன். திடீரென்று அவரிடம் வழக்கமில்லாமல் பேச்சு எடுக்க வேண்டும் என்றாலே ஏதோ பாம்பை நெருங்குவது போல மனம் நடுங்கியது.

பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவர் பார்வையைத் திருப்பிக் கண்களைத் தூக்காமலே, “ஆமாம், உனக்குத் தெரிந்திருக்கும் என்று தான் நான் சொல்லவில்லை” என்றார்.

சற்றுத் தைரியமாகவே “அப்படியானால் நீங்கள் இரண்டு நாட்களாக அங்கே போய் ஆபீஸ் பேப்பர்களுடன் உட்கார்ந்திருக்கிறீர்களே! மறந்து விட்டேன், சாயங்காலம் இங்கு ஜயம் மன்னி வந்திருந்தாள். நேற்றும் அங்கே உங்களைக் கண்டதாகச் சொன்னாள்” என்றேன்.

கண்களை உயர்த்தி அவர், “உம் வேறு என்ன சொன்னாள் ஜயம் மன்னி?” என்று கேட்டார்.

வேறு ஏதாவது என்னிடம் சொல்லியிருக்கப் போகிறாளோ என்ற பயமா? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதாக்கும்!

“வேறு ஒன்றும் இல்லை. சாதாரணமாக ஏதோ பேச்சு நேர்ந்தது. தெரிவித்தாள்” என்றேன்.

“உனக்கு ஒன்றும் இல்லை. நீ கவலைப்படவும் ஒன்றுமில்லை. உனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசிய சமாசாரமாக இருந்தால் நீ கேட்காமலே கூறி விடுவேன். அண்ணா ஏதோ கணக்கு பிசகுகிறது என்றார். நான் பார்த்தேன். அவ்வளவுதான்” என்று முடித்து விட்டு மீண்டும் அவர் பத்திரிகையில் கண்களை ஓட்டினார்.

இதற்கு மேல் அவரிடம் என்ன கேட்பேன்? ‘இதெல்லாம் நீ தெரிய வைக்க வேண்டும் சுசீலா. சந்தர்ப்பக் கோளாறும் வேளைப் பொல்லாப்பும் எப்படி இருக்குமோ? புருஷ மனசுதானே?’ எனக்குள்ளே இவை ஓலமிட்டன.

எப்படித் தெரிவிப்பது? எதைத் தெரிய வைப்பது? ஜயம் மன்னி இந்த மாதிரி கூறினாள் என்று சொல்லலாமா? அவருடன் சண்டை போட வேண்டும். கடும் நெஞ்சைக் கோபித்துக் கலைக்க வேண்டும் என்றெல்லாம் பல சமயங்களில் எண்ணிக் கொள்வேன். ஆனால் பொழுது விடிந்ததும் மாயமாக மறைந்துவிடும் பனியைப் போல, அவர் முன் நிற்கும் போது என் வாயடைத்து, மனசு ஒடுங்கிப் போய் விடுகிறதே! ஏற்கனவே ‘மன்னி இன்னும் என்ன கூறினாள்?’ என்று கேட்டார். ‘வேண்டாம். அசட்டுத்தனமாக எதுவும் இப்போது உளறக் கூடாது. வெளிக்கு அமைதியாகச் செல்லும் வாழ்க்கைப் படகு உள்ளே பொத்தலானது என்று தெரியும்படி அத்தை அத்திம்பேர் வந்திருக்கும் இந்தச் சமயத்திலே எதையும் கிளப்பி விடக் கூடாது’ என்று முடிவு செய்து கொண்டேன்.

ஆனாலும் பெண்ணொருத்தியின் பொறுமைக்கு அளவு இல்லையா? கிட்ட நெருங்கிப் பேச்சுக் கொடுக்கவே இடம் இல்லாதபடி அன்றோ வார்த்தைகளை எண்ணிப் பேசிவிட்டு நத்தை ஓட்டுக்குள் சுருங்கிக் கொள்வது போல மனத்தை இழுத்துக் கொண்டு விடுகிறார்? அருகே இன்னும் துணிச்சலாகச் சென்று துளைத்துப் பார்க்க எனக்குப் பலம் போதவில்லையே!

இத்தனை நாட்களாக என் மீது காதல் இல்லை. அன்பு அவருக்கு சுரக்கவில்லை. அண்ணன் மதனியிடம் நான் மனஸ்தாபத்தைச் சம்பாதிக்கும்படி செய்து விட்டேன் என்று நான் என்னைச் சுற்றி அவரை மறைத்து எழுப்பிய சுவர்களெல்லாம் வெறும் மண்சுவர்! ஒரு மழைக்குக் கூடத் தாங்காதவை. அவை இத்தனை பலமுள்ளவையாக குண்டுக்கும் அசையாதவையாக இருக்க முடியாது? பின் இந்தச் சுவர் எதனாலானது?

ஆரம்பத்தில் அவர் இப்படியா இருந்தார்? ஆகா! அவர் ஊர்வலத்தின் போது என்னுடன் பேசியது, பரிசு கொடுத்தது, அந்த முதல் இரவின் திரை திறக்கும் போது என் மனதிலே எழுந்த இன்பக் கிளர்ச்சி! அவ்வளவும் பொய்யா? எங்கள் இன்ப வாழ்வுக்குச் சந்தர்ப்பங்களேயா யமனாக இருக்க வேண்டும்? அந்த ஓரிரவில் கூட அவரிடம் மனம் விட்டுப் பழகவும், அவர் உள்ளத்தை அறிந்து கொள்ளவும் சமயம் வாய்க்காதபடி என் வாழ்வு பூராவும் மண்ணை அள்ளிப் போடும் பூகம்பமாக வேறு சந்தர்ப்பங்கள் தொடர்ந்து நேரிட்டு விட்டனவே?

குறுக்கே சுவர் மறைக்கிறது. சுற்றி வளைத்து உள்ளே என்ன இருக்குமோ என்று பார்க்க ஆவலாக இருக்கிறதே ஒழிய, கடப்பாரையை எடுத்துப் போடும் மனவலிமை எனக்கு என்ன முயன்றும் வரமாட்டேன் என்கிறதே! நான் முதலில் எண்ணிய பிரகாரம் அவர் உடலின்பத்திலே பற்றுக் கொண்டவராக இருந்திருந்தால் கூட இத்தனை வீம்பாக இருக்க மாட்டார். உண்மையான மனக்கலப்பு இருந்தாலோ இந்த வைராக்கியத்திற்கு இடம் இல்லை. என்ன தான் காரணமாக இருக்கும்? அவருடைய இந்த மன நோய் எதனால் வந்ததாக இருக்கும்?

என் மண்டையிலே பொறியொன்று சிதறி வந்து விழுந்தது. வேறு எந்த இடத்திலாவது பிடிப்பு இருக்கக் கூடாதா? அந்தப் பிடிப்பே அவர் உறுதி கொண்டிருக்க ஏதுவாயிற்றே.

‘கல்யாணத்துக்கு முன் சிரித்துப் பேசிப் பழகினால் அப்புறமும் அப்படி இருப்பது பார்க்க நன்றாக இல்லையே!’

ஆ! அப்படியும் இருக்குமோ?

ராவணன் கோட்டைக்குள் சுற்றிச் சுற்றி வந்தும் பின்னும் பின்னும் பின்னும் உள்ளேயே போகும் ஆட்டக்காய் போலப் பின்னும் பின்னும் பின்னும் இங்கேயே வருகிறதே எண்ணம். மூர்த்தியிடம் காதல் கொண்டு மனமுடைந்து தவிக்கும் லீலாவையா நான் சந்தேகக் கூட்டுக்குள் அடைக்கிறேன்? சே, நான் நன்றி கெட்டவள். என் உள்ளத்தினுள்ளே உண்மையாக நிறைந்திருக்கும் உயிர் தோழியாயிற்றே. அவளா எனக்குத் துரோகமிழைப்பாள்?

படக் காட்சிகளில் பின்னிருந்து வருவது போல உள்ளே இன்னொரு குரல், ‘அதெல்லாம் இப்போது சரி. நீ அவர் வாழ்வில் புகாததற்கு முன்பு? அழகிய இளமங்கை அவள். வீட்டிலே சகஜமாகப் பேசிப் பழகும் ஆண் அல்லவா அவர்? அவர் மனம் பளிங்காகவே இருந்திருக்கும் என்று எந்த அத்தாட்சியுடன் நம்புகிறாயோ அதே அத்தாட்சி அவர் மனம் நிர்மலமில்லாமலும் இருந்திருக்க முடியும் என்று எண்ணவும் இடம் இருக்கவில்லையா? அவர் அந்தக் காலத்தில் அவளைக் காதலித்திருக்கக் கூடாதா’ என்றது. நினைக்கவே என் நெஞ்சம் நடுங்கியது.

என்றாலும் உள்ளம் குரலுக்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டியதாயிற்று. அவள் முரண்பட்டதனால் முறிவு பட்டிருக்கலாமோ? மனத்தைத் திடம் செய்து கொண்டு என் மீது அவர் அன்பு செலுத்த முயன்றும் தோல்வி பின்னுக்கு இழுக்கிறதோ?

அப்படித்தான் இருக்கும். நான் இணைந்து போயிருந்தால் ஒரு வேளை அவரும் காவிய நாயகனைப் போல அன்புலகத்திலே குடும்பம் செய்யாது போனாலும் ஏதோ, உலக ரீதியில் குழந்தை குட்டிகள் என்று வாழ்க்கை சென்றிருக்கும். இப்போதோ?

‘உன்னை மணம் செய்து கொண்டது தவறு. மன மயக்கத்திலே தவறு செய்தேன்’ என்றாரே. அவைகளுக்கு உண்மையான அர்த்தம் இந்த விடை தெரிந்த பின் அல்லவோ துலாம்பரமாக விளங்குகிறது?

பள்ளிக்கூட நாட்களிலே ஏகவர்ண சாம்யங்கள், துவிவர்ண சாம்யங்கள் என்று நான் கணக்குப் போட்டது என் நினைவுக்கு வந்தது. அந்த நோட்டுப் புத்தகத்துக் கணக்குகளைப் போல என் மன ஏட்டிலே நான் அங்கும் இங்கும் தெரிந்த சங்கைகளைக் கொண்டு விடுபடாமல் இருந்த அவர் உள்ளத்தின் விடையைக் கண்டுபிடித்து விட்டேன். விடை சரிதானா என்று பார்க்கும் ரீதியிலே இந்த விடையைக் கொண்டும் ஆராய்ந்து விட்டேன். இதை விடப் பொருத்தமாக எதுவும் இருக்க முடியாது. ஒரே விடை தான். எங்கள் இருவருக்கும் இடையே இன்று வளர்ந்திருக்கும் வலிமை வாய்ந்த கற்சுவர், லீலாவின் எழில் உருவமாகிய அஸ்திவாரத்தைக் கொண்டு எழுப்பியது.

லீலாவா! எந்த உருவத்தை என் இன்னுயிர்த் தோழி என்று பூசனை செய்து வந்தேனோ, அந்த உருவமே என் இன்ப வாழ்வை எழுப்ப வொட்டாமல் செய்கிற முட்டுக்கட்டையாக இருக்கிறது! எவளுடைய பேச்சும் சிரிப்பும் என் மனத்தில் அமுதத்தை வளர்க்கின்றனவோ அவையே என் வாழ்விலே அமுதத்தை வளர்க்கத் தடை கட்டும் அணையாக இருக்கின்றன!

ஆனால் லீலாவா குற்றவாளி? அவள் அழகாக இருப்பது குற்றமா? மனங் கவரும் செயல்களும் சாயைகளும் கொண்டிருப்பது அவள் குற்றமா?

அவளை என் விரோதியாக, என் இன்ப வாழ்க்கையின் யமனாகக் கருதவே என் மனம் மறுத்தது.

குற்றம் அவர் மீதுதான். மாசு ஒரு தரப்பிலே தான் நிறைந்திருக்கிறது. அவர் அவளை மறந்து இருக்கலாம். ஆனால் தம் குற்றம் உணராதவராகவா அவர் இருப்பார்?

சுற்றிச் சுற்றிச் சுழன்று நான் அன்றிரவு கண்ணைக் கொட்டவில்லை. கண்ணை மூடினால் லீலா வந்தாள். அவர் வந்தார். இருவரும் என் இதயத்துள் சுற்றிச் சுற்றிக் கண்ணாமூச்சி ஆடினார்கள்.

‘பொழுது விடிந்ததும் அவசியம் லீலாவைப் பார்க்க வேண்டும். தனிமையில் அவளைக் கண்டு மனச் சுமையை அவளிடமே தான் இறக்கி ஆறுதல் பெற வேண்டும். அவருடைய தன்மையை அவளிடமே அறிய முயல வேண்டும் என்று முடிவு செய்தவாறு நித்திரையை வரவழைத்துக் கொள்ள முயன்றேன். ஆனால் எதுவும் நினைத்தபடியே நடக்காமல் இருக்கும் போதே இத்தனை இறுமாப்பும் அகம்பாவமும் படைத்து நிமிர்ந்து நிற்கும் மனித வர்க்கத்துக்கு நினைக்கும் வண்ணம் செயல்களைக் கடவுள் இசைவாக நடத்திக் கொடுத்து விட்டால் பூவுலகம் குடை கவிழ்ந்து விடும் போலும்!’

நான் நினைக்காததே நேர்ந்தது. ‘அப்பாவுக்கு உடல்நிலை சரியாக இல்லை. உடனே புறப்பட்டு வருக’ என்று ஊரிலிருந்து சுந்து தந்தி அடித்திருந்தான். உடல் ஆட, உள்ளம் கிடுகிடுக்க, அத்தையும் நானும் அன்றே புங்கனூரை நோக்கி வண்டி ஏறினோம்.

4-4

ராஜ வைத்தியத்தையே கபளீகரம் செய்துவிடக் கூடிய ‘டியூபர் குலோஸிஸ்’ வியாதி ஏழைக் குமாஸ்தாவான அப்பாவின் எளிய உடலிலே மட்டிலாத மோகம் கொண்டிருந்தது. கூடத்திலே கிடந்த பழைய விசி பலகையில் மெத்தென்று அம்மா தயாரித்த படுக்கையில் அவர் படுத்திருந்தார். டாக்டர் தருமத்துக்குக் கொடுத்திருந்த ‘பினைல்’ தண்ணியின் வாசனை உள்ளே நுழையும் போதே மூக்கில் நெடி ஏறியது. என்னையும் அத்தையையும் கண்டவுடனேயே அம்மா, “மாபாரதமாகப் படுத்துக் கொண்டு விட்டாரே! கணையும் காங்கையும் மனுஷர்களுக்கு வருவதில்லையா? நகை வேண்டாம், நாணயம் வேண்டாம், அந்த மனுஷர் உடம்பில் தெம்புடன் வளைய வருவதே பெரிய பாக்கியம் என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு எனக்குச் சமானமில்லை என்று இருந்தேனே! தெய்வம், ‘அப்படியா நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்கிறதே!” என்று மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தாள்.

“அப்புறம்? டாக்டர் வந்து பார்க்கிறாரா இல்லையோ? ஆறு மாசத்துக்கு முன் உடம்பு சரியில்லை, இருமுகிறது என்று எழுதியிருக்கிறான் என்று அவர் சொன்னார். சூடு, நாலு நாளைக்குப் போஷாக்காக வைத்துக் கொண்டால் சரியாகிவிடும் என்று எண்ணிக் கொண்டேன். இத்தனை பெரிசு என்று எப்படித் தெரியும்? டாக்டர் என்ன தான் சொல்கிறார்?” என்றாள் அத்தை.

“தினம் அவரும் வருகிறார். தேவலை ஆகிவிடும் என்கிறார். நேற்றைக்கெல்லாம் பார்க்கப் பயமாக இருந்தது. பயந்து தந்தி அடிக்கச் சொன்னேன். நீங்களும் அங்கே வந்திருப்பீர்கள் என்று ஆசையுங்கூட. ஒரு சமயம் தெம்பாகப் பேசுகிறார். இன்னொரு சமயம் மனசு திக்திக்கென்று அடித்துக் கொள்கிறது” என்று அம்மா புடவைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

கழுத்திலே மஞ்சள் பூச்சு ஏறாமல் அழுக்குப் படிந்திருந்த தாலிச் சரடு. இடுப்பில் பல இடங்களில் கரைந்து சாயம் போன புடைவை. கவலையும் எக்கமும் மண்டிக் கிடக்கும் உலர்ந்த முகம். ‘இதுவா என் அம்மா?’ அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதற வேண்டும் போல இருந்தது எனக்கு.

அப்பா, அப்பாவா அவர்? இல்லை, கொஞ்ச நஞ்சம் இருந்த இவருடைய சதையையும் சாப்பிட்டு விட்டு எலும்புருக்கி நோய்தான் படுத்திருந்தது. பொந்துக்குள் கிடந்த அவ்விரு கண்களும் என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு நீரில் மிதந்தன. அப்பா அவர் என்ற அந்தத் தடையம் நான் அவர் நோயாளி என்பதையே மறக்கும்படி செய்துவிட்டது.

“ஐயோ அப்பா!” என்று எலும்புக் குச்சியாக இருந்த அவர் தோளைப் பிடித்துக் கொண்டு என்னையும் மீறிய உணர்ச்சியிலே கதறி விட்டேன். என் தந்தையை எனக்கு நினைப்பூட்டக் கூடிய இன்னொரு தடையமாக அவரது மெல்லிய குரல், “சுசீ? அழாதேயம்மா. எனக்குச் சீக்கிரம் தேவலையாகிவிடும்” என்று தழுதழுத்தது. அவருடைய வறண்ட கைகள் என் முதுகைத் தடவின.

இந்த நிலையில் வைத்தியர் வந்திருக்கிறார்.

“இதென்னம்மா? நோயாளி அருகிலே இவ்வளவு நெருக்கமாக? நீயா அழுகிறாய்? எப்போதம்மா வந்தாய், சுசீலா? படித்த பெண்ணாகிய நீயே இப்படி மனம் தளர்ந்து போகலாமா? அம்மாவுக்குத் தேறுதலாக இருப்பதை விட்டு...? சே சே! எழுந்திரம்மா!” என்று அவர் கடிந்து கொண்டார். ஆஸ்பத்திரியில் முன்பு இருந்த வைத்தியர் தாம் அவர்.

உஷ்ணமானியை வைத்துப் பார்த்தார். அப்புறம் ஊசி மூலம் ஏதோ மருந்து போட்டார். அவர் திரும்பும் சமயம் கூடவே வாயில் வரை சென்ற நான், “அப்பாவுக்கு இப்போது எப்படி இருக்கிறது டாக்டர்? தேவலையாகி விடுமா?” என்று குழந்தை போல் கேட்டேன்.

“ம்...?” என்று அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார்.

தெய்வத்திடம் வரம் கேட்பவன் நோக்கும் நிலையில் நான் அவரைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

“உன்னிடம் உண்மையைச் சொல்லியே ஆகவேண்டும். உன் புருஷன் வந்திருக்கிறாரா அம்மா?” என்று அவர் கேட்டார்.

“இல்லையே டாக்டர். உண்மையைச் சொல்லுங்களேன். அப்பாவுக்கு இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று நான் பதறினேன்.

“இந்த வியாதி இப்படியெல்லாம் கவனித்தால் தீரக் கூடியது இல்லை அம்மா. முதலிலே இந்த இடத்தை விட்டு நல்ல ‘ஸானிடோரியம்’ ஒன்றில் சேர்த்திருக்க வேண்டும். வெறும் மருந்துகளால் குணமடையக் கூடிய வியாதி அல்ல இது. ஆரோக்கியமான உணவு, காற்று, சுற்றுப்புறம் இவை தேவை. இவை சரியாக இல்லாததனாலேயே வியாதி இத்தனைக்கு முற்றி விட்டிருக்கிறது. ஆனால் அம்மா என்ன பண்ணுவார்கள், சுசீலா? ஆயிரக்கணக்கில் பணம் செலவிட்டுப் பார்க்க வேண்டிய நோயாயிற்றே இது? எல்லாம் யோசித்துத்தான் உன் புருஷர் வந்திருக்கிறாரா என்று கேட்டேன். உம்...” என்றார் அவர் நிதானமாக.

என் பரபரப்பு, தந்தையின் உடல்நிலை அவர் கையில் இருக்கிறது என்று குழந்தை போல் நினைத்த என் அசட்டுத்தனம், எல்லாவற்றுக்கும் அவருடைய இந்தப் பதில் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

“ஆனால் அவரை வரவழைக்கட்டுமா டாக்டர்?” என்று நான் கேட்டேன்.

“அதுதானம்மா உசிதம்” என்று மொழிந்த அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தார்.

“டாக்டர் என்ன சொன்னார் சுசீ? தங்கமானவர். இந்த அஞ்சு மாசகாலமாக கோடி ரூபாயைக் கட்டி கொடுத்தால் கூட அப்படி வந்து பார்க்க மாட்டார். அப்படி வருகிறார். அவருந்தாம் மாற்றி மாற்றி ஊசி போடுகிறார். மருந்து கொடுக்கிறார். நம் போதாத வேளை எப்போது அகலும் என்று யாருக்குத் தெரியும்?” என்றாள் என் தாய்.

பாவம்! அவளுக்கு இந்த வியாதியைப் பற்றி என்ன தெரியும்? ஊசி போடுகிறார். பெரிய வைத்தியம் நடக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறாள். மலையை விழுங்கிவிட்டவனுக்குச் சுக்குக் கஷாயம் போல், இந்தச் சிகிச்சை எம்மாத்திரம்? பணம்! அவரிடம் எந்த உதவியையும் நாடக்கூடாது என்று இந்தச் சமயத்தில் என் வைராக்கியத்தை நிலை நாட்டிக் கொண்டு அப்பாவின் உயிரைப் பணயம் வைப்பதா? ஊராரின் மனத்திலே சுசீலா செயலாக இருக்கிறாள் என்று தோன்றும் எண்ணத்தின் பிரதிபலிப்புப் போல்தானே டாக்டர், “உன் புருஷர் வந்திருக்கிறாரா?” என்று என்னிடம் கேட்டார்? அப்போது எனக்குப் பெருமையாக இருந்ததே!

என் தந்தை இங்கே போஷாக்குக்கு மன்றாடுகையில் நான் எண்பது ரூபாயில் ‘டீ செட்’ என்ன, பட்டுப் புடவைகள் என்ன, இப்படி ஆடம்பரத்துக்குச் செலவிட்டேனே! கையில் வைத்திருந்த பொருளையெல்லாம் என் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வாரி இறைத்துவிட்டு, முழுக்க முப்பது ரூபாய் கூடக் கையில் இல்லாமல் நிற்கிறேனே!

அவருக்கு எழுதினால் உதவமாட்டாரா? இங்கே அவருக்கு இருக்கும் மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளப் புறப்பட்டு வரமாட்டாரா?

உடலில் சக்தி இருக்குமட்டும் அப்பாவும் ஓடி ஓடி உழைத்தார். இப்போது அவர் ஓய்ந்துவிட்ட பிறகு நான் என்று நாதனாக யாரும் இல்லையே! சுந்து அந்த வருஷந்தான் பள்ளிப் படிப்பை முடிக்கும் பரீட்சை எழுதியிருந்தான். பாவம் வண்ணான் வெளுத்த சட்டைக்குக் கூட அவன் கொடுத்து வைக்கவில்லை. இளமையில் எழும் இந்த அற்ப ஆசைகளைக் கூட உள்ளே அடக்கிக் கொண்டு அவன் கிணற்றடியில் சட்டை துவைப்பதைக் காண எனக்குச் சகிக்கவில்லை. உலகம் இன்னும் தெரியாத பதினைந்து வயசுப் பாலகனான அவனால் அப்பாவின் இந்த வியாதிக்கு எப்படிப் பரிகாரம் தேட முடியும்? அவனாலானது ஆஸ்பத்திரித் தண்ணீரை வாங்கி வந்து வைப்பதுதான். வீட்டுக்கு வாடகை பாக்கியாதலால் வீட்டுக்காரன் வீட்டைப் பழுதுபார்க்கவில்லை. கண்ட இடங்களிலெல்லாம் காரையும் மண்ணும் உதிர்ந்தன. லீவு இல்லாமல் அப்பா அரைச் சம்பள லீவில் இருந்ததால் குடும்பமே அரைப் பிராணனாக இருந்தது.

அத்தை வந்திருக்கிறாளே, கட்டாயம் அவள் சமயத்தில் உதவி புரிவாள் என்று நான் நிச்சயமாக நம்புவதற்கு இல்லாமல் அம்மா அவளிடம் குடும்ப நிலவரங்களை மூடி மூடியே வைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் தான் இந்த டாக்டரின் சிகிச்சைக்கு மேல் ஒன்றுமே இல்லை என்று எண்ணியிருக்கிறாளே. அத்தையாக உணர்ந்து உதவுவாளா?

அவள் அன்று என்னிடம் கிணற்றடியில் கேட்டது என் கொஞ்ச நம்பிக்கையையும் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டது.

“பார்த்தாயா சுசீலா? இவ்வளவு மோசமாகும் வரை எங்களுக்கு எழுதக் கூடாது என்று இருந்திருக்கிறாளே! பெற்றவள் இருக்கிறாள், அவளுக்கு கூடத் தெரிவிக்க வேண்டாம் என்று தானே இத்தனை பெரிய வியாது வந்து வைத்தியம் பண்ணுவதை எழுதாமல் இருந்திருக்கிறாள்? உடன் பிறப்பில்லையா? நாளைக்கு ஏதாவது நேர்ந்தால் என்னை நாலு பேர் கரிக்க மாட்டார்களா? இப்படி இவள் இருக்கும் போது நானாக அத்திம்பேரிடம் ஏதாவது சொன்னால் செருப்பைக் கழற்றி என் மூஞ்சியில் அடிப்பார்! ஆறு மாசம் முன்பு எழுதினேன் என்று மழுப்புகிறாளே! சாதாரணமாக இருமுகிறது என்று அவனே எழுதியிருந்தான். அதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லையா?” என்று என்னிடம் அம்மாவின் மேல் குற்றப் பத்திரிகை படித்தாள். எனக்குக் கூட இது சரியெனப் பட்டது.

அப்பாவின் உயிருக்கு மேலா இவர்களுடைய மரியாதை, கௌரவம் எல்லாம்? அம்மா முதலிலேயே அத்தைக்குத் தெரிவிக்க வேண்டாமா? நமக்குப் பெரிய உதவி தேவையாக இருக்கும் போது சில்லரை அவமதிப்புக்களைக் கவனிக்கலாமா? ஏதோ நாலு வார்த்தை பேசினாலும் அத்திம்பேர் கவனித்து ‘ஸானிடோரியம்’ ஒன்றில் சேர்த்திருக்க மாட்டாரா? புக்ககத்து மனிதர்களுடன் இணைந்து போக வேண்டும் என்று எனக்குப் புத்தி கற்பித்த அம்மாவுக்கு ஏன் தெரியவில்லை?

அத்தையின் உதவி இல்லாமலே, இந்த அழகான மாப்பிள்ளையான சாய்காலிலே உதவி பெற்று விடலாம் என்று அம்மாவின் அசட்டு வீம்பு எனக்கு அன்று தான் வெளியாயிற்று.

“மாப்பிள்ளை வருவார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் சுசீ. இங்கே சமயத்தில் உதவுவார் யாரும் இல்லையே! அந்த இரண்டு மாப்பிள்ளைகளும் சுகமில்லை. மாமாவோ சம்சாரி. இந்த ஆசையிலேதான் இத்தனை நாட்களாக உனக்குத் தெரிவித்தால் கவலைப்படுவாய் என்றே பேசாமலிருந்தவள், டாக்டர் முதற் கொண்டு எல்லோரும் சொன்ன பிறகு தந்தியடிக்கச் சொன்னேன். அப்பாவுடைய அரைச் சம்பளம் மருந்துக்கே காணவில்லை” என்று தனிமையில் என்னிடம் ரகசியமாக வெளியிட்டாள்.

நான் ஜாடையாக, “ஏனம்மா? அத்தைக்கு நீங்கள் கடிதமே போடவில்லையா?” என்று கேட்டேன்.

ஆத்திரம் பொங்கியது அவளுக்கு.

“போடவில்லையாவது? உடம்பு சரியில்லை. இங்கே நல்ல ஆஸ்பத்திரி இல்லை. அங்கே வந்து வைத்தியம் பார்க்கலாமா என்று வெட்கத்தை விட்டு அப்பா நாலு கடிதம் எழுதினார். என்று வந்துவிடப் போகிறார்களோ என்று அத்தனைக்கும் பிடிகொடுத்தே எழுதவில்லை. இப்போது இவளை யார் வரச் சொன்னார்கள்? இந்தக் கரைசல் யாருக்கு வேண்டும்? தெய்வம் கண் திறக்க வேண்டும். எனக்கும் மாங்கல்ய பலம் இருக்க வேண்டும்!” என்றாள். நான் எதை நம்புவேன்?

அம்மா என்னிடம் இதைக் கூறுமுன்பே நான் என் கணவருக்கு அவளுக்குத் தெரியாமலே இங்குள்ள நிலையைத் தெரிவித்து உதவி கோரி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். போட்டு விட்டு மறுநாள் இல்லை, மறுநாள் காலை வண்டியிலேயே அவர் வந்துவிடுவார் என்று வாயிலில் வந்து நின்று எதிர்பார்த்தேன். அது தவறியதும் பகல் தபாலை எதிர் நோக்கினேன்.

டாக்டர் கூட உரிமையுடன், “மாப்பிள்ளை எப்போது வருவாரம்மா?” என்று விசாரித்து விட்டார். அவரோ அனுதாபமாகக் கூட ஒரு கடிதம் போடவில்லை! என் நம்பிக்கை மழைக் காலத்து மண் சுவர் போலச் சரியலாயிற்று. வந்து பத்துத் தினங்கள் ஆகிவிட்டனவே. அத்தை, “நான் அப்படியே ஓடி வந்தேன். போய் அம்மாவை ஒரு நடை வரச் சொல்கிறேன். தைரியமாக இரு மன்னி. கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறிவிட்டுக் கிளம்பி விட்டாள். பெண்ணாக ஏன் பிறந்தேன் என்று நான் எத்தனையோ முறைகள் என்னைப் படைத்த ஈசனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போது இந்த நேரத்தில் உச்ச நிலைக்கு வந்தது.

நான் மட்டும் ஆண்பிள்ளையாக இருந்தால் அப்பாவை இந்தக் கதியில் காண்பேனா? என் வயசுக்குக் குடும்பத்தைத் தாங்கக் கூடிய ஜீவனாக இருக்க மாட்டேனா? முதலில் குடும்பம் இந்த நீரில்லாக் குளமாக வறண்டு போனதன் காரணமே நான் பெண்ணாக அவதரித்ததனால்தானே?

அடாடா! நான் விவாகம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் சுயமாக என் தந்தையை ஆதரிக்கும் நிலையில் இருக்க மாட்டேனா? ‘சுசியைக் காலேஜில் சேர்த்து விடுங்கள். அவளுக்குக் கல்யாணம் பண்ன வேண்டாம்’ என்று கூறியவர்களை எக்களிப்புடன் நோக்கிவிட்டு என்னை மணம் செய்வித்தேன் என்று பெருமைப்பட்டாரே. அந்த ஜீவனுக்கு இன்று பாராமுகமாக இருப்பதுதானா என்னாலான கைம்மாறு? எனக்குச் சுகமா? அவருக்குச் சுகமா?

சூரிய ஒளி சரியாக இல்லாததனால் வளைந்து வளைந்து செல்லும் செடியைப் போன்று என் எண்ணங்கள் எங்கெங்கோ நோக்கிச் சென்றன.

இனிமேல் தான் என்ன? அன்பு செய்யாத கணவன் வீட்டிலே போய் மனம் புழுங்கிக் காலம் தள்ளுவதை விட நான் விவாகத் தளையிலே அகப்படாதவள் போன்று காலத்தை ஓட்டிவிடக் கூடாதா? நாலு பெண்களுக்குச் சங்கீதம் பயிற்றுவித்தால் கூட எத்தனையோ உபயோகமாக இருக்கும். ஆனால் திடீரென்று நான் வழி மாறுவது அம்மாவுக்கும் - ஏன் படுக்கையில் இருக்கும் அப்பாவுக்கும் கூட அதிர்ச்சியாக இருக்குமே!

மாப்பிள்ளை வந்து தாங்குவதைப் பெருமையாகக் கருதும் மனம் படைத்தவர்கள், பெண் தன் உழைப்பைக் கொண்டு தாங்குவதை ஏன் கேவலமாக எண்ண வேண்டுமோ? மணம் புரிந்து கொண்டு, தன் உரிமைகள் அனைத்தையும் இழந்து விடுவதுதான் பெண்ணுக்குப் பெருமையா?

அவரிடமிருந்தோ உதவி ஏதும் வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல என் தந்தையின் நோய் வலுத்தது. குடும்பத்தின் சீர்கேடுகள் வலுத்தன. கணவன் வீட்டுக்குத் திரும்பக் கூடாதென்ற வைராக்கியமும் வலுத்தது. இரவின் தனிமையிலே ஏதேதோ யோசனையில் புழுங்கிய எனக்குச் சட்டென்று ஓர் எண்ணம் உதித்தது.

ஒன்றும் அதிகம் இல்லை என்றாலும், என் மீதுள்ள நகைகள் சில நூறு ரூபாய்களாவது பெறுமே!

காலையில் என் சங்கிலியைக் கழற்றி அம்மாவிடம் கொடுத்து, “இதை விற்று வரச் சொல் அம்மா. அப்பாவின் உடல் சரியானால் போதும்” என்றேன். என் செய்கை அவளுக்கு விசித்திரமாகப் பட்டது போலும்!

“என்னடி சுசீலா? வெகு அழகுதான்! மாப்பிள்ளைக்குக் கடிதம் எழுதினாலும் பயன் உண்டு. நகையை விற்பதாவது? அசடு போல் பேசாதே?” என்று நான் வாயைத் திறக்க வொட்டாமல் ஒரே போடாகப் போட்டுவிட்டாள். அவளுடைய அழகான மாப்பிள்ளை பதில் கூடப் போடாமல் இருக்கும் லட்சணத்தையும், நான் அவரிடம் வாழும் லட்சணத்தையும் அவிழ்க்க அதுவா சமயம்?

பாட்டி அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தாள். பெற்ற பாசம் செல்வத் திரையைக் கிழித்துக் கொண்டு அப்போதுதான் பீறி எழுந்தது போல் இருக்கிறது. “எப்படி இருந்த உடம்புடா? இப்படி எப்படி ஆயிற்றடா அது? நான் பெற்றவள் ஒருத்தி இருக்கிறேன் என்ற நினைவு அற்று விட்டீர்களேடா! ஒரு நாலு வரிக் கடிதம் எழுதக் கை வரவில்லையே?” என்றெல்லாம் என் தந்தையின் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு அதுதான் சமயம் என்பதைப் போல் அம்மாவிடம் அடக்கி வைத்திருந்த மனத்தாங்கலையெல்லாம் சொல்லிச் சொல்லிப் பிரலாபித்தாள்.

என் தந்தையிடம் இவளுக்கு இருக்கும் அக்கறை, மனைவிக்கு இல்லையா? ஏதோ தான் புரட்டிவிடுவது போலவும், அவள் கவனிக்கவில்லை என்ற மாதிரியிலும் ஏன் சொல்லிக் காட்ட வேண்டும்? மனைவிக்குத்தான் கணவனிடம் முதல் உரிமை என்பதை ஏன் இவர்கள் மறந்து விடுகிறார்கள்?

பெரும்பாலான நம் குடும்பங்களில் மனைவியின் அந்தஸ்து இன்னும் அதல பாதாளத்திலேயே இருக்கிறது. சிறு பெண்ணாக, அநுபவம் முற்றாமல் புதிதாகக் குடும்பத்தில் நுழைபவளாக இருந்தால் பெரியவர்கள் அவள் தவறான வழியில் செல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியந்தான். ஆனால் மருமகள் என்றும் பெரியவர்கள் என்றும் இருந்தால் அவளைக் கண்டிப்பதும் குறை கூறுவதுமே பெரியவர்களுக்கு அழகு என்று தங்களுக்குள்ளே அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தால் என்ன செய்ய?

அடங்காப் பிடாரிகளாக இருக்கும் பெண்களைப் பற்றி இங்கே கூற வரவில்லை நான். என் தாய் நேற்றுத்தான் கணவன் வீடு வந்தாளா? பாட்டியின் நடத்தை என் மனத்திலே கோபத்தை உண்டு பண்ணியது.

தபாலை எதிர்பாராமலே விரக்தியுடன் தூணிலே சாய்ந்து நின்ற என் பெயரைச் சொல்லித் தபால்காரன் கடிதம் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனான். ‘டைப்’ செய்யப் பெற்றிருந்த விலாசம் என் கணவரிடமிருந்து வந்திருக்கிறது என்பதை அறிவித்தது. ‘கனக்கிறது; நன்றாக முற்றியிருக்கும்’ என்று பறிக்கும் மட்டைத் தேங்காயை உரித்து உடைத்தவுடன் ஒன்றுமே இல்லாமல் ஏமாற்றம் கொடுப்பது உண்டு. என் ஆவலை அவருடைய கடிதத்தில் கண்ட ஏமாற்றம் அப்படித்தான் வளரச் செய்தது. கல்கத்தா தலைமைக் காரியாலயத்திலிருந்து அவர் எழுதியிருந்தார்.

“நான் இப்போது இங்கே இருக்கிறேன். அப்பா உடம்பு எப்படி இருக்கிறது? நீ வருவதற்கு இன்னமும் நாட்களாகுமா? எனக்கு வேலை மிகவும் அதிகம் இப்போது. கடிதம் போடு. ராமு” இதுதான் கடிதத்தில் காணப்பட்ட செய்தி. இந்தக் கடிதம் போடவில்லை என்று யார் அழுதார்கள்? தாம் அங்கே சென்று எத்தனை நாட்களாயின என்று அவர் தெரிவிக்கவில்லை. என் கடிதத்தைப் பார்த்தார் என்று வைத்துக் கொள்வதா, இல்லை என்று வைத்துக் கொள்வதா? பார்க்கவில்லை என்றால் ‘நீ போய் ஒரு மாதம் ஆகிறதே? ஏன் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை? என்ன உடம்பு’ என்று விவரம் விசாரித்திருக்கிறாரா? பார்த்துத்தான் பட்டுக் கொள்ளாமல் எழுதியிருக்கிறார்.

என்ன கல் நெஞ்சம்? என்னால் ஏதும் உதவுவதற்கில்லையே என்ற அநுதாப வார்த்தை கூட எனக்குக் கிடையாது! இப்பேர்ப்பட்ட மனிதரிடம் நான் எதற்காகப் பணிவிடை செய்து கொண்டு வாழ வேண்டும்? கணவன் என்ற பெயருக்கு அவர் என் மீது காட்டும் இந்த அழகான அன்புக்கும் சலுகைக்கும் நான் மட்டும் உண்மையான மனைவி என்று ஊரறிய எதற்காகக் குடித்தனம் நடத்த வேண்டும்? மாபெரும் கடலுக்கும் ஓர் எல்லையுண்டு. பொறுமையில் சிறந்த பூமிதேவி கூடத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உஷ்ணத்தை வரம்பு மீறினால் ஒவ்வொரு சமயம் வெளியிட்டு விடுகிறாள். நான் அவருக்குப் பந்தமுற்றவள், அவருடைய மனைவி என்று நினைக்கும் போதே என்னுள்ளே பொங்கி வரும் அளவுக்கு நானும் கொதிப்பு அடைந்து விட்டேன்.

கடிதத்தை அப்படியே சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறியும் வண்ணம் ஆத்திரம் துடிதுடித்தது. இரண்டாகக் கிழித்து எடுத்துக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றேன். அடுத்த தாழ்வரையில் அம்மா சுந்துவிடம் கூறிக் கொண்டிருந்த வார்த்தைகள் என் காதுகளில் விழுந்தன.

“அவர் தங்கந்தான். நமக்கு வாய்த்திருக்கும் பெண்ணே இப்படி இருக்கிறாளே சுந்து? அதற்கென்னமா, கடுதாசி போடுகிறேன் என்று சொல்ல மாட்டாளோ? ஆத்திரப்படுவது போலச் சங்கிலியைக் கழற்றிக் கொடுக்கிறாளே! பிக்கு இல்லை, பிடுங்கல் இல்லை. ஒரு வார்த்தை அதட்டிச் சொல்லும் புருஷன் கூட இல்லை. இன்னொரு பெண்ணாக இருந்தால் பிறந்த வீட்டைத் தாங்க மாட்டாளா? அவளுக்கே இஷ்டமில்லையே? உம். பெண்கள் சுரண்டுவதுடன் சரி!”

என் செவிகளை என்னால் நம்ப முடியவில்லை. தாயுள்ளம் படைத்த என் அன்னையா இப்படிப் பேசுகிறாள்? பணம் காசுதானா அவளுடைய தாயன்புக்கும் அஸ்திவாரம்?

அன்றே என் கணவன் வீடு சுகமில்லை என்று நான் காட்டிக் கொண்டதை அவள் ஏன் நம்பவில்லை? அவள் பெற்று வளர்த்துப் பெரியவளாக்கியிருக்கும் நான் பொய் புகழுவேனா என்று ஏன் சந்தேகிக்கவில்லை? ‘அப்போதே குழந்தை போக மாட்டேன் என்று ஜாடையாகச் சொன்னாளே, இப்போது எப்படி இருக்கிறாளோ, என்ன கஷ்டமோ?’ என்று தாயுள்ளத்திற்கே இயல்பானதாக நான் எண்ணியிருக்கும் தணதணப்பு ஏன் அவளுக்கு என் மீது இல்லை?

என்றோ நிலத்தில் விழுந்துவிட்ட முளைக்காத வித்து வேண்டுமானால் நாளடைவில் மட்கி மண்ணோடு மண்ணாகிவிடும். ஆனால் மனத்தில் என்றோ விழுந்து விட்ட வித்து அப்போது அமுங்கிவிட்டால் கூடச் சரியான உரம் போன்ற சம்பவங்களும் சூழ்நிலையும் கிடைத்துவிட்டால் வேர்விடத் தொடங்கிவிடும்.

என் தாய்க்கு என் மீது அன்பு இல்லை என்று என் குழந்தை உள்ளத்தில் பதிந்திருந்த எண்ணம் இச்சமயம் பலமாகவே வேரூன்றலாயிற்று.

மனம் ஓடி வரும் நீரைப் போன்றது. உவர் நிலத்திலே ஊறி வரும் நீர் உவப்பாக இருக்கும். வண்டல் மண்ணிலே ஓடி வரும் நீர் அதன் சாரங்களைக் கிரகித்துக் கொண்டு வரும். சுண்ணாம்புச் சத்தானால் அதையும் இழுத்து வரும். நிறமும் மணமும் குணமும் ஒட்டாத நன்நீரைப் போல் அப்பட்டமாக மனம் இருப்பது மிக மிக அரிது. எந்தச் சூழ்நிலையிலே அது முதிர்ச்சி அடைகிறதோ, எந்த எந்த மனப்பான்மையுடைய மக்களினூடே அது பண்படைகிறதோ, என்ன என்ன நிகழ்ச்சிகள் அதற்கு உரமாக இருக்கின்றனவோ அவை அத்தனையின் சாராம்சமும் அதைச் சுபாவிகமான தனித் தன்மையினின்றும் வெகுதூரம் கொண்டு வந்து விடுகிறது. ‘நான் அதிருஷ்ட மற்றவள், அன்பு செலுத்தக் கூடியவர் எவருமே என்னிடம் தவறி விட்டனர். என் வாழ்வு என்றுமே இருட்டுத்தான்’ என்று நம்பிக்கை ஒளியையே முற்றும் இழந்து விட்டிருந்த என் மனம், ‘அன்னையும் என் மீது அன்பைச் செலுத்தவில்லை. இவ்வுலகின் இயல்புக்கே அப்பாற்பட்ட மாதிரியில் என்னிடம் அவளும் தன் கடமையை மறந்து விட்டாள்’ என்றெல்லாம் என் கற்பனைகள் வளர்த்து இன்னும் இருளாக்கிக் கொண்டு குறுகிய நோக்கத்தில் இனமறியாத சமாதானம் அடைந்தது. இத்தகைய நிலையிலே, நானாக எதுவும் முயன்று என் தந்தைக்கோ குடும்பத்துக்கோ உதவு முன்பு, யாருடைய ஒத்தாசையும் எனக்குத் தேவையில்லை என்று என் தந்தை - வாழ்நாளிலே சுகமே அறிந்திராத என் தந்தை கண்ணை மூடிவிட்டார். அவர் ஒருவரே என் மீது உண்மையான பாசம் வைத்திருந்தார். என் நலனிலே சிரத்தை வைத்திருந்த ஒரே ஜீவன் - ‘தின்றால் பழம் புளிக்கும்’ என்று என் வாழ்க்கையை அறிந்தால் மனம் கசிந்துவிடக் கூடிய ஒரே ஜீவன் போய் விட்டது!

நான் தான் எத்தகைய அன்புக்கும் ஆகாதவனாயிற்றே! அதனாலேயே அவர் இந்த வியாதிக்கு ஆளானார்!

அம்மா, பாட்டி எல்லோரும் அழுது துடித்தார்கள். நான் மட்டும் கண்ணீர் பெருக்கவில்லை. ஏன்? எனக்குக் கண்ணீரே வரவில்லை. துக்கம், மகிழ்ச்சி இரண்டுக்கும் ஒரு வரம்பு உண்டு. எல்லை மீறிவிட்டால் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான். எனவே எனக்கு அழுவதற்கு இனி என்ன இருக்கிறது. வாழ்வின் போது மேடுபள்ளங்களால் வேறுபட்டிருந்தவர்கள் கூட துக்கத்துக்கும் அநுதாபத்துக்கும் ஒன்று கூடுவது இயல்பு.

வீட்டிலே என் தந்தையின் மறைவுக்காக யாரெல்லாமோ வருவதும் போவதுமாக இருந்தனர். இந்தக் கும்பலிலே என் கணவரும் ஒருநாள் வந்தார். நேரிலே அவரைக் கண்டதும், பொங்கிக் கொண்டிருந்த என் ஆத்திரமெல்லாம் குப்பியில் அடைபட்டிருந்த குமுறும் வாயுவெனச் சீறி எழுந்தது. ‘சமயத்தில் உதவி செய்ய இஷ்டப்படாதவரை, சாவு என்றவுடன் யார் வரச் சொன்னார்கள்?’ என்று பொருமிக் கொண்டு அவர் கேட்டதற்கெல்லாம் எரிந்து விழுந்தேன். பத்துத் தினங்களுக்குள் ஜகது, மாமியார் மாமனாருடன் வந்தாள். சம்பிரதாயமாகத் துக்கம் விசாரித்துவிட்டுப் போய்விட்டாள். அத்தை அத்திம்பேரில்லாமல் வந்தாள். பாட்டியுடன் கிளம்பி விட்டாள். பெரிய அக்கா தங்கமும் அம்மாவைத் தேற்றிவிட்டுப் புறப்பட்டு விட்டாள். மதுரையிலிருந்து வந்திருந்த மாமாதாம் சுந்துவுக்கு ஒரு வழிகாட்டி. அம்மாவையும் கூட அழைத்துப் போவதாகத் தீர்மானம் செய்தார்.

நான் - நான்?

புறப்படு முன் என் கணவர், “நீ தயாராக இல்லையா சுசீ?” என்று கேட்டார்? போவதா வேண்டாமா?

கேள்விக்குறி என் மண்டை முழுவதும் வளர்ந்து விசுவரூபம் எடுத்து விட்டது போல் கனகனத்தது. போகாமல் என்ன செய்வது? போய்த்தான் என்ன கிழிக்கப் போகிறேன்? தனி வாழ்க்கையில் கொஞ்சமாவது விச்ராந்தி இருக்காதா?

“நான் ஒன்றும் இப்போது உங்களுடன் வரப் போவதில்லை” என்றேன் வெடுக்கென்று.

“சுசீ! கோபித்துக் கொள்ளாதே! உன் கடிதம் வந்த சமயம் நான் கல்கத்தா போய்விட்டேன். நான் இங்கே வரும் போதுதான் வீட்டின் உள்ளே கிடந்தது, பார்த்தேன். அப்புறமாவது நீ எனக்கு இன்னொரு கடிதம் போட்டிருக்கக் கூடாதா சுசீ? சமயத்தில் என்னால் பிரயோஜனம் இல்லையே என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது. உனக்கு வர இப்போது இஷ்டமில்லை என்றால், நான் நிர்ப்பந்தம் செய்யவில்லை. நீ எப்போது வரப் பிரியப் படுகிறாயோ அப்போது வா. உன் மனம் சமாதானப்படும் வழியிலே நான் குறுக்கே நிற்கவில்லை சுசீலா!” என்று புகன்றுவிட்டு அவர் போய்விட்டார். இந்தக் குழைவிலே என் கண்ணை மறைக்கப் பார்த்திருக்கிறார்.

நான் வராவிட்டால் பாதகமில்லை என்பதை உருகுவது போல் நாசுக்காக எடுத்து உரைக்கும் அவர் தனிச் சாமர்த்தியத்துக்கு நான் வியப்பேனா? அல்லது ஏன் வரவில்லை என்று கூறினோம் என்று பெண் புத்தி பின் புத்தியானதற்கு வருந்துவேனா?

“ஏண்டி சுசீலா? நீ அவருடன் போகவில்லையா?” என்று பொருள்பட என்னை எல்லோரும் நோக்கினார்கள். அம்மா கேட்டே விட்டாள்.

‘நான் அவரிடம் போகப் போவதில்லை. என்னை எப்படியோ காப்பாற்றிக் கொள்வேன்’ என்று சொல்லும் தைரியம் அவள் முகத்தையும் கேள்வியையும் காணும் போதே அடைத்து விடுகிறதே!

சுந்துவின் ‘ரிஸல்ட்’ வந்து ‘சர்ட்டிபிகேட்’ வாங்கிப் போகவும், ஊரில் உள்ள கணக்குப் பாக்கிகளைத் தீர்த்துச் சாமான்களை ஒழித்துக் கட்டவும் ஒரு மாதம் போல் ஆயிற்று. அவனுடன் நானும் வேண்டா விருந்தாளியாகச் செல்லுவேனா?

ஆகா, பெற்ற மகள் தான் நான். சுந்துவைப் போல அதே தாய்க்கும் தகப்பனுக்கும் உதித்தவள் தான் நான். ஆனால் வேறொருவருக்கு உரிமைப் பொருளாக ஆன எனக்கு அந்த வீட்டில் யாதொரு சலுகையும் உண்மையில் இல்லையே? கணவன் வீட்டுப் பெருமைதான் பிறந்த இடத்தில் மதிப்பைக் கொடுக்கிறது. இல்லாவிட்டால் பிறந்த வீடென்று சொல்லிக் கொள்ளவும் நாக் குன்றி விடுகிறது.

‘வேறு புகலில்லை. வேண்டாதவளாக அவர்களுடன் செல்வதை விட அந்த அலுத்த வாழ்க்கை குன்றிவிடாது போக வேண்டியதுதான்’ என்று ஒரு வழியாக ஒரு மாதத்தில் முடிவு கட்டினேன்.

இந்தச் சமயத்தில் அங்கே என் பெயருக்கு வானொலி நிலையத்திலிருந்து வந்த கடிதம் ஒன்றை என் கணவர் திருப்பியிருந்தார். வருகிற மாதம் நிகழ்த்தப்பட இருக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்ள எனக்கு அழைப்பு வந்திருந்தது! என்னைச் சூழ்ந்திருந்த போராட்டங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு மறுநாளே நான் தன்னந்தனியாகப் பயணமானேன்.

4-5

பொட்டல் செல்லும் வெளியிலே சூனியப் பாதை வண்டி ஓட்டிக்கு உற்சாகமாக ஒத்துழையாத சகா. பாதை எப்போது முடியுமோ, கலகலப்பான காட்சிகள் கண்களில் படுமோ படாதோ என்று உறங்கிய வண்ணம் நம்பிக்கை இழந்தவனாக வண்டியோட்டி கடனே என்று செலுத்திக் கொண்டு போகையில் சற்றும் எதிர்பாராத வண்ணமாக் நீள நெடுக்க கலகலப்புக் கூடிய வேறொரு பாதைத் தென்படுகிறது. சிரித்த முகத்துடனே வேற்று ஆள் ஒருவன், ‘அவளை இறக்கிவிட்டு என்னை ஏற்றிக் கொள். உனக்குத் துணையாக வருகிறேன். இந்த வழியிலே வெகு சந்தோஷமாகச் செல்லலாம் என்று அழைக்கும் போது வண்டியோட்டிக்குப் பழைய வழியில் தளர்ச்சி தென்படாமல் இருக்குமா? ஆனால் ஒத்துழையாமற் போனாலும் அந்த ஆள் நம்பகம் உள்ளவன். சூனியமானாலும் நாலு பேர் நம்பிக் காட்டிக் கொடுத்த வழி அது. புதியவன் எப்படியோ? புதிய வழியில் அபாயம் இருக்காது என்று நம்பிவிட முடியுமா? எங்கே கொண்டு போகுமோ?

ஆதி அந்தமற்ற பரம்பொருளுடன் ஜீவன் ஐக்கியமானதைச் சிருங்கார ரசத்தில் விளக்கும் ஜயதேவ மகாகவியின் கீதகோவிந்த காவியத்தை இசை நிகழ்ச்சியாகத் தயாரித்திருந்தவன் வரதனேதான். பிரதம பாகமாக கண்ணன் பாத்திரத்தை ஏற்றுக் கீதங்களை அவன் இசைக்க, நான் ராதையாகப் பாட வேண்டும். வந்திருந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு விட்டேன். ஆம். சமய சந்தர்ப்பங்கள், முன்னேறியிருக்கும் என்னுடைய சரள மனப்பான்மை, கூட என் சகியாகப் பங்கு கொள்ள வந்திருக்கும் சரளா இருக்கும் தைரியம், எல்லாமாக என்னை ஒப்புக் கொள்ளச் செய்ய, ஓர் ஒத்திகைக்கும் போய் வந்துவிட்டேன்.

அவரோ? என்னைப் புகைவண்டி நிலையத்திலிருந்து அழைத்து வந்ததுடன் சரி. முன் போலக் காலை ஒன்பது மணிக்குக் காரியாலயம் சென்றால் இரவு ஒன்பது மணிக்கு வீடு, சாப்பாடு, பத்திரிகை, தூக்கம் என்ற வரையறையிலிருந்து இம்மி கூட இப்படியோ அப்படியோ அசையவில்லை. வானொலி நிலையத்திற்கு நான் எப்போதும் சரளாவுடன் கூடத்தான் செல்லுவது வழக்கம். இப்போதும் நான் வருவதை அவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தவள் நான் ஊருக்கு வந்த அன்றே என்னைச் சந்தித்து விட்டாள்.

“இசை நிகழ்ச்சியா? உனக்கு என்ன பங்கு? கூட யார் பாடுகிறார்கள்? இன்று ஒத்திகையா?” என்று அவர் என்னை ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லை. யார் யார் எல்லாமோ என் குயிலிசையைப் புகழ்கிறார்கள். ஆனால் என் கணவர் என் உடலுக்கும் உள்ளத்துக்கும் தலைவராய். அவர், என் கானத்தை ரசித்தோ ரசிக்காமலோ கூட ஒரு முறையேனும் விரும்பிக் கேட்கவில்லையே! என்னை எப்படி வேண்டுமானாலும் அவர் நிராகரிக்கட்டும். ஆனால் என் கலையில் கொஞ்சங் கூடத் தாரமாக அவர் ஆர்வங் கொள்ளாத குறை, எல்லாக் குறைகளையும் விட மாபெருங் குறையாக இருக்கிறதே! ஆனால் நான் வருந்தி என்ன பயன்?

‘நானாகப் போய் அவரிடம் என்னைப் பற்றியும், இசை நிகழ்ச்சியைப் பற்றியும், ஏன், வரதனைப் பற்றியும் கூடத்தான் எதற்காகக் கூறவேண்டும்? அவர் அவ்வளவு அலட்சியமாக இருக்கும் போது நானும் பொருட்படுத்தாமலே தான் இருக்க வேண்டும். அவர் மட்டும் தம் விஷயங்களை, முக்கியமாக எனக்குத் தெரிவிக்க வேண்டிய காரியாலய மாற்றம் போன்ற சங்கதிகளை, என்னிடம் கூறாமல் மறைத்து வைக்கவில்லையா! இப்போது இது என் சொந்தக் காரியம் என்று அவர் தலையிடாமல் இருக்கும் போது நானாக ஏன் தெரிவிக்க வேண்டும்’ என்று சிறுவர் சிறுமியர் வீம்பு கொண்டு குரோதம் பாராட்டுவது போலக் குரோதத்தை வளர்த்துக் கொண்டேன்.

என்றாலும் வரதன், நகரத்துக்கு வந்திருப்பவன் இங்கு வராமல் இருந்து விடுவானா? இல்லை, தமையன் வீட்டிலே அவர் அவனைச் சந்திக்காமல் இருந்திருப்பாரா? எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் வரதனுடன் பாடுகிறேன் என்று பட்டுவும் மாமியாரும் வேறு அவரிடம் என்ன என்ன எண்ணங்களைக் கற்பிக்கக் கூடுமோ!

என் உள்ளே வித்திட்டிருந்த அச்சம் மெல்லத் தலை தூக்கி என்னைக் கிடுகிடுக்க வைத்தது. ‘வரதனுடன் நீ ராதையாகப் பாட ஒப்புக் கொண்டது பிசகு!’ என்று ஒரு குரல் என்னை இடித்தது. அதற்கு உரமூட்டுவது போல முன்னாள் நடந்த ஒத்திகை என்னுள்ளே படம் எடுத்தது.

தன்னைச் சினம் கொண்டு வெருட்டிய ராதையிடம் தாபம் கொண்டு கெஞ்சும் கண்ணனாக அவன் என்னை நோக்கிப் பாடிய போது, அவன் குரலிலே இருந்த குழைவு, விழிகளிலே தோன்றிய கனிவு எல்லாம் பாடலுக்கு உணர்ச்சியூட்டுவதுடன் மட்டுமா நின்றன?

அந்தக் கீதத்துக்குரிய பாத்திரமாக அவன் அவ்வளவு பாவத்துடன் இசைத்தது, நானும் அவனுக்குச் சற்றும் குன்றா வகையில் பாட வேண்டும் என்ற ஆர்வத்தை அன்றோ தூண்டி விட்டது? அந்த நிமிஷத்தில் என் கண் முன் அவன் மாதவனாகவும் நான் ராதையாகவும் மனத்துக்குத் தோன்றவில்லை எனினும், நான் கேட்ட குரல் - உருக்கம் நிறைந்த, உணர்ச்சி செறிந்த குரல் - என்னை ராதையாகக் கிளர்த்தித்தான் விட்டது. ஒத்திகையிலே நான் என்னை மறந்து இசைத்தேன்.

‘இந்தக் கிளர்ச்சிக்கு நீ இடம் கொடுக்கலாமா?’ என்று என் அந்தராத்மா இப்போது நியாய ஸ்தலத்து வழக்கறிஞர் போடும் கேள்வியைப் போலக் குறுக்குக் கேள்வி விடுத்தது.

‘ஏன் ஒப்புக் கொண்டது பிசகு? பிசகா? பிசகாகுமா? இல்லை. கலை உலகு இந்த விபரீதங்களை அடிப்படையாகக் கொண்டதன்று. அதுவும் இந்த உயரிய காவியம், மிகவும் சிறந்த பொருளைக் கொண்டதாயிற்றே! இனிய இசையிலும் உருக்கம் கொண்ட கீதத்திலும் யார் மனமும் இளகிவிடுவது சகஜம். ரசிகத் தன்மையும் கலைப் பண்பும் பெற்ற என் உள்ளம் இளகியதில் தவறு இல்லையே! அவன் குரலுக்கு எதிர்க் குரலாக, பக்திப் பரவசத்திலே தன்னை மறந்த ராதையைப் போல என்னை நினைத்துக் கொண்டு நான் கானம் செய்ததில் கல்மிஷத்திற்கு எங்கே இடம் இருக்கிறது?’

‘இந்தக் கலைப் பிணைப்பையன்றி வரதனிடம் வேறு எனக்கு என்ன பேச்சு இருக்கிறது? பார்க்கப் போனால் அவன் சாதாரணமாக க்ஷேமம் விசாரிப்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. ‘ராமுவை வந்து பார்க்க வேண்டும். வருகிறேன் ஒருநாள். வேறு வேலைகள் இருக்கின்றன. இரண்டு மாதங்கள் நான் இங்கே தான் இருப்பேன்’ என்பதுடன் முடித்துக் கொண்டான் அவன். யோசித்துப் பார்த்ததில் முந்திய வளவளக்கும் வரதனாகவே தோன்றவில்லை. உண்மையில், “நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று மறுத்து இருந்தால் தான் என் பிற்போக்கான மனப்பான்மை நகைப்புக்கு இடமாக இருந்திருக்கும். கலைச் செல்வத்தை வைத்துக் கொண்டு முற்போக்குக்கு முட்டுக்கட்டை போடும் மனம் படைத்திருப்பது கண்டு வரதன் என்னைக் கேவலமாக எண்ணியிருப்பான்’ என்றெல்லாம் என் கூனிய மனத்தை நிமிர்த்திக் கொண்டேன். என்னதான் நான் நிமிர்ந்து நின்றாலும், என் குறைக்குச் சப்பைக் கட்டுக் கட்டியதாகவே எனக்குத் தோன்றியது.

அவர் மட்டும் வரதனைப் போல் இருந்தால்? ஆகா! அந்த வாழ்வு எனக்கு எப்படி இருக்கும்! வரதனுடைய குரல் கிளர்ச்சியை உண்டாக்கியது. என் மனசாட்சியை இடிக்கிறதே இப்போது! அந்தச் சக்தி அவர் குரலுக்கு இருந்து விட்டால்? அந்த ராதையைப் போலவே என்னை என் நாயகருடன் ஒன்றுபடுத்தி விடாதா? என்னிடம் அன்பு கொள்ளாமல் அவர் உள்ளம் இருந்தால் கூட இருவருக்கும் ஒன்றாக இருக்கும் கலை உணர்ச்சி இருவரையும் எந்த வகையிலேனும் ஒன்று சேர்க்க ஏதுவாக இருக்காதா? விழுந்து விழுந்து ஜாதகப் பொருத்தம் பார்க்கும் பெரியவர்களை நினைத்தால் எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

தம்பதிகள் இருவருக்கும் ஒருவிதத் தன்மையுடைய மனப்பான்மை இருக்க வேண்டும். கூடுமானவரை இருவருடைய விருப்பு வெறுப்புகளும் ஒற்றுமை உள்ளனவாகவே இருப்பது நல்லது. வாழ்க்கையை வெற்றிகரமாக்கும் முக்கியமான அடிப்படை அம்சங்கள் இவை.

எங்கள் இல்லற வாழ்வின் மத்தியிலே இருக்கும் மாபெரும் பிளவு இந்த வேறுபட்ட இயல்புகளாலேயே பெரியதாக அகன்று வருகிறது.

வானொலிப் பெட்டியின் அருகில் உட்கார்ந்து கொண்டு ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்த என்னை, படுக்கையில் சாய்ந்து கொண்டு பத்திரிகையை மடித்துவிட்டுக் கூப்பிட்டார். “ஏன்?” என்று நான் திரும்பிப் பார்த்தேன்.

“வரதன் இன்று காரியாலயத்தில் என்னைப் பார்த்தான். நீ என்னிடம் சொல்லவேயில்லையே! அவன் தயாரித்திருக்கும் இசை நிகழ்ச்சியிலே நீ பங்கு கொள்கிறாயாமே? ஏன் சுசி? என்ன பெயர் அதற்கு? ஏதோ சமஸ்கிருத காவியம் என்று கூறினான். அதற்குள் மறந்து விட்டேனே!” என்று அவர் தலையைத் தடவிக் கொண்டு யோசனை செய்தார்.

இந்த வகையிலே அவருடைய ஒன்றுமறியாத தன்மை என்னைப் பின்னும் கோல் கொண்டு குத்தியது. “கீதகோவிந்தம் என்று பெயர். நீங்களாக விசாரிக்கவில்லை. நானும் அசிரத்தையாகச் சொல்லவில்லை. இன்றுதானா அவரைப் பார்த்தீர்கள்? அண்ணா வீட்டில் பார்க்கவில்லை, இதற்கு முன்பு?” என்று நான் வினவினேன்.

“இல்லையே. அவன் அங்கே தங்கியிருக்கவில்லையே! எங்கோ ஹோட்டலில் இருப்பதாக அல்லவோ சொன்னான்? பாவம்! லீலா இப்படி நடந்து கொள்ளுவாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பெண்களுக்கு இத்தனை தான் தோன்றித்தனும் துடுக்குத்தனமும் இருக்கக் கூடாதுதான்” என்று எங்கோ ஆரம்பித்தவர் எங்கோ கொண்டு போய் முடித்தார்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. லீலாவைப் பற்றி நான் அது நாள் வரை சிந்திக்கவேயில்லையே? என் தந்தையின் முடிவின் போது வந்திருந்த போதே என் கணவர், “லீலா காசி சர்வகலாசாலையில் வேலையாகப் போய் விட்டாள், தெரியுமா” என்று கேட்டார். அப்போதைய மன நிலையில் அதையும் அலட்சியமாக நினைத்து நான், ‘உம்’ கொட்டினேன். நான் அவளைப் பற்றி நினைக்கவில்லை. ஆனால் அவர் அவளையே எண்ணிக் கொண்டு இருக்கிறாரே? மனத்திலே எது தாண்டவமாடுகிறதோ அதுதானே சொல்லிலும் வெளிப்படும்.

வரதனுடன் அவள் விவாகம் என்ன ஆயிற்று? மூர்த்தி இங்கு வந்திருக்க வேண்டும்! அத்தை கூட அங்குமிங்கும் அலைந்ததனால் ஹேமாவின் கல்யாணம் இன்னும் நிச்சயப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டாளே!

இந்தக் கேள்விகளெல்லாம் என்னுள் எழுந்தன.

“ஏன், சாதாரணமாகத்தானே லீலா வேலைக்குப் போய் விட்டாள் என்கிறீர்கள்? பின் எம்.ஏ. படித்து விட்டு ஒருத்தி அடுப்பங்கரையில் சரண் புகுவாளா? இது தான் தோன்றித்தனமாக்கும்!” என்றேன்.

“இல்லை, சுசி. நான் அதைச் சொல்லவில்லை. அவள் வரதனை மணம் செய்து கொள்ள மறுத்து விட்டாள். மறுநாளே கிளம்பியும் போய் விட்டாள். பெரியவர்களை முறித்துக் கொண்டு, ‘நான் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன்’ என்று அவள் போயிருக்கக் கூடாது. படித்து விட்டாலே சில பெண்களுக்கு இத்தகைய துணிச்சல் வந்து விடுகிறது” என்று இன்னும் ஏதோ கூற வந்தவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார்.

நான் ‘வெடுக்’கென்று பதில் கூறினேன்.

“ஏன்? அவளுக்கு அவரை மணந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். அதனாலேயே கல்யாணம் வேண்டாம் என்று கூறியிருக்கக் கூடாதா? அதைத் தான் தோன்றித்தனம் என்பதா? பெண்களுக்குச் சுதந்திரம், சமத்துவம் எல்லாம் படிக்கவும் வெளியே வாசலில் செல்லவும் கொடுத்தால் மட்டும் போதாது. இத்துடன் மண விஷயத்திலும் சுதந்திரம் கொடுக்க வேண்டும். பண்டைய நாளைப் போல ஐந்து வயசிலேயா விவாகம் செய்து கொள்கிறார்கள்? அவரவர்கள் வயசு வந்த பின், தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் சக்தி வந்த பின், ‘இவளைத்தான் மணந்து கொள்ள வேண்டும்’ என்ற நிர்பந்த முறை ஏற்படுத்துவது தவறு” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய என்னை அவருடைய விழிகள் உற்றுக் கவனித்தன.

பிறகு, “நீ கூறுவது சரிதான் சுசீலா” என்று எங்கோ பார்த்துக் கொண்டு நெடுமூச்செறிந்தார்.

உலைக்களத்து உஷ்ணத்தைப் போல அவருடைய நெடுமூச்சு என்னை வேதனைக்கு உள்ளாக்கியது. எதற்காக இப்படி ஏதோ பறிபோனது போல நெடுமூச்சு எறிய வேண்டும்? லீலா கை நழுவிவிட்டாளே என்றா? பேச்சை மறைத்து நான் “மூர்த்தி இங்கே என்று வந்தார்? எத்தனை தினங்கள் எல்லோரும் இருந்தார்கள்?” என்று கேட்டேன்.

“நீங்கள் சென்ற மறுதினமே வந்தான். அடுத்த இரண்டு நாட்களுக்குள் கிளம்பியும் விட்டார்கள். எனக்கும் அடுத்த தினமே தலைமைக் காரியாலயத்துக்குச் செல்ல வேண்டி வந்துவிட்டது. ஒரு நாளிலேயே நான் கவனித்தேன். ஹேமாவை மணந்து கொள்ள அவனுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்று எனக்குத் தோன்றியது. இரண்டு வருஷங்களுக்கு முன் எப்படி இருந்தானோ அப்படியேதான் சிரித்துப் பேசிக் கொண்டு இருக்கிறான். மேல்நாட்டு வாசம் அவனை ஒன்றும் மாற்றிவிடவில்லை. முதல் முதலாக ‘சுசீ பெரிய இசைக் குயிலாக ஆகிவிட்டாளாமே?’ என்று உன்னைப் பற்றிக் கடிதங்கூட எழுதியிருந்தான் போல் இருக்கிறதே?” என்றார் அவர்.

“ஆமாம்” என்ற நான் ஆவலுடன், “ஹேமாவை மணக்க விருப்பம் இல்லை என்று உங்களிடம் அவன் ஏதாவது பிரஸ்தாபித்தனா?” என்று விசாரித்தேன்.

“இல்லை, பார்த்தால் எனக்குத் தோன்றுகிறது” என்று முணுமுணுத்த மாதிரியில் பதிலளித்த அவர், பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார். “விளக்கை அணைத்து விடுகிறாயா?” என்று அவர் விடுத்த வேண்டுகோள் அதற்கு மேல் அவர் ஏதும் பேச விரும்பாததை அறிவித்தது.

ஜ்வாலை அணைந்தவுடன் புகை சூழ்வதைப் போல என் மனத்தில் பழைய சந்தேகப் புகைகள் சூழ்ந்து கொண்டன. லீலா மூர்த்தியைக் காதலிக்கிறாள் என்ற உண்மையை அவரிடம் அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே நான் அவளுக்கு வரதனை மணந்து கொள்ள இஷ்டமில்லாமல் இருக்கலாம் என்று கோடி காட்டினேன். லீலா என்னிடம் நெருங்கிப் பழகுபவள். அந்தரங்கமான நேசம் கொண்டவள் என்பது அவர் அறியாததல்லவே! நான் கோடி காட்டியதும் என்னிடம் மேற்கொண்டு தூண்டி விடப்பட்டவராக, “அப்படியா சுசீ! அவள் அபிப்பிராயம் உனக்குத் தெரியுமா?” என்று என்னிடம் ஏனோ கேட்கவில்லை. அப்படி எதிர்பார்த்துத் தானே நான் மெல்ல ஆரம்பித்தேன்? ஆனால் அவரோ ஆவலெல்லாம் வறண்டவராக, சப்பென்று, ‘நீ சொல்வது சரி’ என்று நெடுமூச்செறிகிறார்! ஒரு நாளில் மூர்த்திக்கு ஹேமாவிடம் பிடிப்பு இல்லை என்பதைக் கண்டுவிட்டவருக்கு லீலாவின் போக்கை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லையாம். அவர் மனம் தடுமாடுகிறது என்பதற்கு இதைவிட என்ன அத்தாட்சி வேண்டும்?

கதவிடுக்கு வழியாகச் சிறு வெளிச்சம் தென்பட்டாலே போதும், உள்ளிருக்கும் சாமான்கள் ஒவ்வொன்றாகத் தென்பட்டுவிடும். அவள் என் கணவரை எப்போதுமே அந்த நிலையில் நினைத்திருக்க மாட்டாள். ஆனால் அவர் விஷயம் அவளுக்கு முன்னமேயே தெரிந்திருப்பதால் தான் என்னிடம் அளவுக்கு மீறிய அனுதாபம் கொண்டு அன்பு காட்டியிருக்கிறாள். கடைசியாக அவள் என்னைச் சந்தித்துப் பேசிய போது கூட அவள் காட்டிய அக்கறையின் மர்மம் எனக்கு இப்போது தானே வெட்ட வெளிச்சமாக விளங்குகிறது.

லீலாவிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது. என் தந்தையின் மறைவுக்கு என்னிடம் அநுதாபம் விசாரித்து விட்டு, பழைய தோரணையிலேயே மூர்த்தி அவளை ஏமாற்றி விட்டதை வைத்துக் கொண்டு ஓர் அத்தியாயம் ஆண் வர்க்கத்தைக் கடிந்து கொட்டியிருந்தாள். அவன் அவளைக் கடைசித் தறுவாயிலும் தனியே சந்திப்பான் என்று நம்பி எதிர்பார்த்து இருந்தாளாம். ‘அவராக எனக்கு ஒரு கல்யாணப் பத்திரிகை அனுப்பாவிட்டாலும், நீயாவது ஒன்று கேட்டு வாங்கி அனுப்பு’ என்று என்னைக் கேட்டிருந்தாள். ஏனோ இத்தனை ஆதுரம்?

“நான் தைரியமாக வரதனை மறுத்து விட்டேன், சுசீ. பெண்ணான எனக்கு இருக்கும் உறுதி கூட இல்லாத கோழையான அவர் தம் காதலை அந்தரத்திலே பறக்க விட்டு விட்டு உன் அத்தை மகளை மணக்கப் போகிறார்? என்னுள் ஊறியிருக்கும் அன்பை விட அவர் அன்பு லேசானது என்று எனக்கு இப்போதானே தெரிகிறது. எனக்கு அவர் தகுதியானவர் அல்ல. அவரை நான் மணந்து கொண்டிருந்தால் கூடப் பின்னால் எங்களுக்குள் எத்தனையோ வேற்றுமைகள் மனஸ்தாபத்துக்கு அடிகோலுபவையாக இருக்கும்” என்று அவள் கூறுவதிலும் உண்மை இருக்கத்தானே இருக்கிறது?

மூர்த்தி ஏன் இப்படி இருக்கிறான்? அவன் மீது எனக்குச் சீற்றம் பெருகியது.

கையிலே கடிதத்துடன் நேரம் போனதே தெரியாமல் உட்கார்ந்திருந்த எனக்குக் கடிகாரத்தில் மணி இரண்டு அடித்த பின் தான் வீட்டு வேலை நினைவுக்கு வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. முன்னறையில் ஏதோ காகிதங்களைப் பார்த்துக் கொண்டிருந்த என் கனவர், மூன்று மணிக்குக் காபியருந்திவிட்டுக் காரியாலயம் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். எழுந்து சென்றேன். காபி தயாரித்து அவர் முன் கொண்டு வைத்துவிட்டு, பின் கட்டில் வேலைக்காரி வந்திருந்ததால் அங்கே போய்விட்டேன். சாதாரணமாக அவர் வெளியே செல்லும் போது சொல்லிக் கொண்டு போவது வழக்கமில்லை. நான் வேலையெல்லாம் முடித்து விட்டு, சரளாவைப் பார்க்கக் கலா மந்திரம் செல்லுவதாக இருந்தேன். ஒரு மணி கழித்து வந்து பார்த்த போது அவர் வெளியே போய்விட்டார் என்று சாத்தியிருந்த அறைக் கதவு அறிவித்தது. வெளியே இழுத்துத் தாழிட்டு விட்டுக் கிளம்பலாம் என்ற யோசனையுடன் வந்த நான் ஒரு விநாடிக்குள் யோசனையை ஏனோ மாற்றிக் கொண்டு விட்டேன். மனமே குரங்குதானே.

உள்ளறையிலே ஒத்திகையில் இசைத்த கீதங்களைப் பாடிப் பார்க்கும் நோக்கத்துடன் உட்கார்ந்தேன். விரல்கள் தம்புராத் தந்தியை ஜீவனற்று மீட்டினவே ஒழிய மனசு குறளி அந்தத் திசையிலும் செல்லாது போல் இருந்தது.

‘அவருக்கு இசை நிகழ்ச்சியில் நானும் வரதனும் எந்த எந்தப் பாகங்கள் கொள்கிறோம் என்று தெரிந்தால்?’

‘தெரிந்தால் என்ன? அவர் தாம் விசால நோக்குக் கொண்டவராயிற்றே. இருந்தாலும் நான் சொல்லாமல் இருப்பது ஏமாற்றுவது போல ஆகுமா?’ மனம் கொட்டிக் கொண்டிருந்தது.

டக்டக்கென்று ஜோட்டின் ஒலி என் விரல்களின் அசைவை நிறுத்தியது. கண்கள் பின்புறம் திரும்பிப் பார்த்தன. வெளியே செல்லும் போது அவர் வாசல் கம்பிக் கதவைப் பூட்டிப் போவது உண்டு. ஏனெனில் நான் உள்ளே வேலையாக இருந்திருப்பேன், கவனிக்க மாட்டேன். என்னிடம் ஒரு சாவியும் அவரிடம் ஒரு சாவியும் இருப்பது வழக்கம்.

‘இன்று மறந்து விட்டாரோ? ஒருக்கால் அவரே வருகிறாரோ என்னவோ! அவர் ஜோடு சத்தமே கேட்காதே.’

நான் எழுந்திருக்காமல் சிந்திக்கும் போதே, வரதன் என் முன் காட்சி அளித்தான்.

நிஜார்ப் பைகளில் கைகளை விட்டுக் கொண்டு புன்னகை செய்த அவன், “கதவு திறந்திருக்கிறது. நீ இங்கே உன்னை மறந்து உட்கார்ந்திருக்கிறாய்! யாராவது வந்து கொள்ளை கொண்டு போனால் கூடத் தெரியாது போல் இருக்கிறதே! ராமு இல்லையா?” என்று கேட்டான்.

“அவர் ஒரு மணி முன்புதான் ஆபீஸுக்குப் போக வேண்டும் என்று போனார். கதவைப் பூட்டிப் போவாரே? மறந்து விட்டார் போல் இருக்கிறது. உட்காருங்கள். நீங்கள் இன்று வருவதாகக் கூறியிருந்தால் இருந்திருப்பாரே!” எனக் கூறிக் கொண்டே நான் எழுந்தேன்.

நாற்காலியில் அமர்ந்து அவன், “நான் சொல்லியிருந்தால் தான் இருப்பானாக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை யாயிற்றே, வீட்டில் இப்போது வந்தால் தான் இருப்பான். இன்னும் சற்றுப் போனால் இருவருமாக எங்காவது கிளம்பி விடுவீர்களோ என நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால்... எப்போது வருவான்?” என்று வினவினான்.

என் உள்ளம் படபடத்தது.

‘தனிமையில் வந்திருக்கிறானே; இம்மாதிரி கேள்வியிலிருந்து இன்னும் என்ன என்ன வளர்த்துவானோ!’ என்று அச்சமாக இருந்தது. ஏனோ தெரியவில்லை, வரதனைக் காணும்போது எனக்கு அப்படி இனந்தெரியாத பயம் தோன்றியது.

“இல்லை, அவருக்குச் சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை இருக்கும். அதுவும் இன்று சபாவில் கூட எனக்குப் பிடிக்காத நடனக் கச்சேரி. மெதுவாகவே வழக்கம் போல் ஒன்பது மணிக்கு வந்தாலும் வருவார்” என்றேன்.

இப்படிக் கூறினால் அவன் நாசூக்காகப் போய்விடுவான் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.

“உம். இன்னும் அப்படியேதான் இருக்கிறான். எங்கே எழுந்து விட்டாய், சுசீலா! நான் வந்துவிட்டேன் என்றா? ஒத்திகையில் பாடிய கீதங்களைப் பாடிக் கொண்டிருந்தாயா?”

“இல்லை, தம்புராச் சுருதி கலைந்திருந்தது” என்று நான் முணுமுணுத்தேன்.

“பரவாயில்லை, நான் வந்தது சௌகரியமாகப் போய்விட்டது. அந்த கீதங்களை இன்னொரு முறை பாடு” என்றான் அவன்.

“அதுதான் சரியாக வந்துவிட்டதே; எதற்கு உங்களுக்கு வந்த இடத்தில் சிரமம்?” என்று நான் நழுவப் பார்த்தேன்.

“சிரமமா? எனக்கு என்ன சிரமம்? உன் குரலைக் கேட்டாலே சிரமம் பறந்து விடுமே!” என்று அவன் நகைத்தான்.

ஐயோ! இப்படிப் பிற புருஷன் புகழவா நான் இனிய சாரீரமும் கலையும் படைத்திருக்கிறேன்.

“நீங்கள் அளவுக்கு மீறிப் புகழுகிறீர்கள். எனக்கு இதுதான் பிடிப்பதில்லை” என்றேன் கோபம் தொனிக்க.

“உண்மைக் கலைஞர்களுக்குப் புகழ் பிடிக்காதுதான். ஆனால் என்ன செய்வது சுசீலா? அவர்களை நாடித்தானே அது வருகிறது. என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் உன் குரலை இசைத் தட்டிலே பதிய வைக்க வேண்டும் என்று நேற்று என்னிடம் வந்து மன்றாடினார். ‘நான் சொல்லுகிறேன். அவள் ஒப்புக் கொள்வாளோ, மாட்டாளோ?’ என்று கூறி அனுப்பி வைத்தேன். ஒன்றும் இல்லாதவர்கள் எல்லோரும் கந்தர்வ ரூபிணி, கோகில சரஸ்வதி என்று முன்னுக்கு வந்து தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். உயர்தரமான பொக்கிஷத்தை வைத்துக் கொண்டு இன்னும் இருட்டறையிலேயே உட்கார்ந்திருக்கிறேன் என்கிறாயே? எனக்கு இதுதான் பிடிக்கவில்லை” என்றான் அவன்.

வசிய மருந்து, மயக்கம் என்றெல்லாம் சொல்லுபவர்கள் மீது எனக்கு என்றுமே நம்பிக்கை இல்லை. ஆனால் இந்தப் புகழ் வார்த்தைகள் வசிய மருந்தாக இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம் தோன்றுகிறது. எவ்வளவு கெட்டியாக மனத்தை வைத்துக் கொண்டிருந்த போதிலும் இதன் சக்தியிலே பிடி தளர்ந்து விடுகிறது. கடுமையான பேச்சு ஏதும் எழாதபடி நான் நின்றேன்.

“சுசீலா, அன்று நீ நிலையத்திலே மாதவனை அழைத்து வரச் சொல்லத் தோழியிடம் கெஞ்சும் கீதத்தை இசைத்தாயே, அதில் நான் நிஜமாக என் மனத்தை முற்றும் பறிகொடுத்து விட்டேன். கவிதையின் பெருமை அதை இசைப்பதில் தான் முழுக்க இருக்கிறது என்பதை நிதரிசனமாக நீ காட்டிவிட்டாய். எப்போதுமே உருக்கமும் சோகமும் உன் குரலில் அலாதிச் சோபையுடன் மிளிர்கின்றன சுசீலா!” இப்படி அவன் கூறிய போது என் மனம் குருடாகி விட்டது. புகழ், நெருப்பின் ஜ்வாலையைப் போன்றது. அதன் அருகிலே அண்டாமல் இருக்கும் வரைக்கும் ஒளி மனத்துக்கு உவப்பாகத்தான் இருக்கும். ஆனால் அறியாமை நிறைந்த குழந்தை விட்டிற் பூச்சியைப் போல் அதைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறதில்லையா?

என்ன பேசுகிறோம் என்று அறியாமலே, “என்னைச் சொல்கிறீர்களே, நீங்களும் அன்று உணர்ச்சி வசப்பட்டுக் கவிதையிலே லயித்துத்தான் பாடினீர்கள். என்னை மட்டும் வறட்டு வறட்டென்று புகழாதீர்கள். இனி மேல் நானும் அத்தனையையும் உங்களுக்கே திருப்பி விடுவேன்” என்று மெல்ல நகைத்தேன்.

“அப்படியா சுசீலா! உன்னுடைய வாயிலிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையிலே நான் இப்போதெல்லாம் என்னை மறந்துதான் விடுகிறேன். என் கண்முன் பாதையாக நீ தோன்றும் போது என்னை எனக்கு அறியாமலே பாவம் வந்து விடுகிறதே” என்று கூறி அவன் என்னை ஊடுருவிப் பார்த்தான்.

ஜ்வாலையைத் தொட்டு விட்டேன். ‘சுசீ’ என்று என்னுள் நெருப்புப் பட்டு உறைத்து விட்டது. திடுக்கிட்டு நடுநடுங்கித் தடுமாறினேன்.

“ஏன் இப்படி நடுங்குகிறாய் சுசீலா! என் மனத்தை நீ வெகுவாகக் கவர்ந்து விட்டாய். என்னுடைய லட்சியப் பெண்ணுக்கு எந்த எந்த அம்சங்கள் இருக்க வேண்டும் என்று நான் கனவு கண்டிருந்தேனோ, அவை அத்தனையும் உருக்கொண்டவளாக நீ இருக்கிறாய். போற்றிக் கொண்டாடுபவரிடத்திலேதான் கலை வளரும். அதன் அருமையை, ஏன், உன் அருமையை உணராதவனிடத்திலே நீ வாடிக் கிடப்பதை நினைக்குங்கால் என் உள்ளம் நோகிறது, சுசீலா! கணவன், மனைவி, இருவருக்கும் விருப்பு வெறுப்புக்களும், குணங்களும் ஒரே தன்மையாக இல்லாவிட்டால் மன ஒற்றுமை எங்கிருந்து வரும்! ராமுவுக்கு ஏற்ற மனைவி நீ அல்ல. உனக்கு ஏற்றவன் அவன் அல்ல. கலாவல்லியான மனைவியின் அருமையை உணராத ஜடமாக அல்லவோ அவன் நேற்று, ‘அப்படியா, என்னது! இசை நிகழ்ச்சியா!’ என்கிறானே! இவ்வளவு சிரத்தை கூட இல்லாமலா இருப்பான் என்று நான் நம்பவில்லை.”

‘என்னுள்ளே தோன்றுவதெல்லாம் இவனுக்கும் தோன்றியிருக்கிறதே! நான் அவருக்கு ஏற்றவள் அல்லவா!’

யாரோ வெளியே நடமாடுவது போலத் தோன்றியது. பிரமையோ, என்னவோ! ஒருவேளை அவர் வந்துவிட்டாரோ! வரட்டுமே! தூணாக அசைவற்று நின்ற எனக்கு என்ன நினைக்க வேண்டும், ஏது செய்ய வேண்டும் என்று எதுவுமே புரியவில்லை.

“ஏன் சுற்றி வளைக்க வேண்டும். சுசீலா? என் உள்ளக் கோயிலிலே நீ இஷ்ட தெய்வமாக உறைந்து போயிருக்கிறாய். லீலா என்னை மணந்து கொள்ள மறுத்தாள். நானும் அவளை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அதுதான் முன்னமே கூறினேனே, கணவன் மனைவி இருவரும் ஒரே இயல்பினராக இருந்தால் தான் வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் விழ ஏது இருக்காது என்று.”

என்னால் பொறுக்க முடியவில்லை. எங்கிருந்தோ துணிச்சலும் தைரியமும் என் குரலை எழுப்பின.

“வரதன்! நீங்கள் ஏதேதோ பேசுகிறீர்கள். கலை நட்பின் வரம்பிலிருந்து நழுவி விட்டீர்கள்! உயர்ந்த நோக்குடன் பார்க்கிறீர்கள் என்றல்லவா நான் எண்ணியிருந்தேன்! நான் பிறன் மனைவி என்பதை மறந்து இந்த விதத்தில் என்னுடன் பழக வருவீர்கள், அதற்குச் சந்தர்ப்பங்களைக் கருவியாக உபயோகித்துக் கொள்வீர்கள் என்று நான் அறியாமற் போனேனே! உங்கள் கலை கிலை எல்லாம் வேஷந்தானா?” என்று கத்தினேன்.

அவன் மெதுவான குரலில் நகைத்தான்.

“கோபித்துக் கொள்ளாதே, சுசீலா. நான் கேவலமாக எண்ணிக் கொண்டு உன்னிடம் பேசவில்லை. விலை மதிப்பு அற்ற ரத்தினம் ஒன்றைப் பெற நான் கனவு கண்டேன். அதன் அருமையை அறியாமல் சாதாரணக் கல்லாக மதிக்கும் ஒருவனிடத்தில் அது ஒளியிழந்து இருக்கும் போது நான் அதைப் பெற ஆவல் கொள்வது இயற்கைதானே! நீயே உண்மையைச் சொல், சுசீலா! ராமு உன்னிடம் அளவிட முடியாத அன்பு கொண்டா நடத்துகிறான்! பெண்மையைப் போற்றி மதிக்கும் உயர் குணம் அவனுக்கு இருந்தால் உன்னை கேசவனுக்கும் பட்டுவுக்கும் அடிமை போல் உழைக்க விட்டிருப்பானா; அன்று நான் உன்னிடம் அவன் பேசிய தோரணையைக் கேட்கவில்லையா! நீ ஏதும் என்னிடம் ஒளித்துப் பயனில்லை சுசீலா!” என்றான்.

“நீங்கள் கூறுவது உண்மை. அவருக்கு என் மீது அன்பு இல்லை. நிம்மதியில்லாத வாழ்விலே நான் உழலுகிறேன்” என்ற வார்த்தைகள் என்னை அறியாமல் வெளி வந்திருக்கும். ஒரு நிமிஷ நெகிழ்ச்சியில் மாபெரும் பிழையை, மன்னிக்க முடியாத பிழையை நான் இழைத்திருப்பேன். ஆனால் மனக் குதிரையின் லகானைப் பிடித்துப் பின்னுக்கு இழுத்தேன்.

இந்தப் போராட்டத்தை என்னால் தாள முடியவில்லை. குழந்தை போல முகத்தைக் கண்களால் மூடிக் கொண்டு தேம்பினேன். என்னுடைய இந்த நிலையும் அவனுக்குச் சாதகமாகிவிட்டது. தான் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்தான்.

“என்ன சுசீலா இது! பாவம்! உன் நிலைமை எப்படி இருக்கிறதென்று எனக்கு இப்போதல்லவா தெரிகிறது? அழாதே. இதோ பார். உன்னை நான் மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன். என்றும் உனக்கு நன்மை புரிய நான் காத்திருப்பேன். மனம் முதிருமுன்பே சுவைக்கு உதவாத சாஸ்திரமும், யோசனை செய்யத் திறனில்லாத சுற்றமும், அதற்கேற்ற மெருகடையாத கிராமத்துச் சூழ்நிலையும் உன்னை விவாக பந்தத்திலே மாட்டித் தகுதியில்லாத கணவனுடன் சிறை வைத்தால் அதற்கு நீ பந்தப்பட்டவளா? நீயே யோசித்துப் பார் சுசீலா. ராமநாதனை நீ மணம் புரிந்து கொண்ட போது சுயமாக இது சரி, இது நல்லது, இது தவறு என்று நிர்ணயித்துக் கொள்ள உனக்குச் சக்தி இருந்ததா? இயற்கையாக இருவரும் அன்பு வசப்பட்டிருந்தீர்களானால், இத்தகைய நிலையிலா இருப்பாய்?”

ஆம், அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. ‘இவன் தான் உன் கணவன். இவனிடந்தான் நீ உன் வாழ்நாளைக் கழிக்க வேண்டும்’ என்று பெரியவர்கள் சுட்டிக் காட்டினார்கள். வழிவழியாக வந்த குலப் பண்பாடு, எங்களுக்குள் பிணைப்பை உண்டு பண்ணி வைக்கக் கூடிய புனித ஒப்பந்தம் எல்லாமாக எனக்கு, ‘அவரே தெய்வம், அவரைப் போற்ற வேண்டும்’ என்று மனத்தை ஒரு முகப்படுத்தின. ஆனால் காதல் - அன்பு - இயற்கையாக எனக்கு, அவர் மீது எழுந்ததா?

அவருடைய மனத்தை ஆராய்ந்து அலுத்துப் போன என்னையே நான் ஆராய இப்போது வழி வைத்து விட்டான் வரதன்.

“சுசீலா, யோசிக்கிறாயா?” என்று அவன் மீண்டும் நான் இருக்கிறேன் என்று குரல் கொடுத்தான்.

“யோசனை என்ன? நீங்கள் இம்மாதிரிப் பேசுவது தவறு. நடந்து கொள்வது தவறு. அவர் இப்போது வந்தால் என்ன நினைத்துக் கொள்ள மாட்டார்? இந்த வகையிலே நீங்கள் சிநேகம் பாராட்டுவதனால் இப்போதே வெளியே போங்கள், மரியாதையாக!” என்றேன் கடுமையாக.

“அநாவசியமாக நீ பயப்படுகிறாய். அவனுக்கு ஒரு நீதி, உனக்கு ஒரு நீதியா? உன்னை அங்கே உதகையில் தனியே விட்டு விட்டு, லீலா இங்கே தனிமையில் இருக்கிறாள் என்று தானே வந்தான்? அது சரியா? நான் உன்னை என் மனைவியாக்கிக் கொள்ள எந்த நிலையிலும் சித்தமாக இருக்கிறேன். உன் மனத்தைப் பொறுத்தது.”

பூமி பிளந்து என்னை அப்போது விழுங்கி இருக்கக் கூடாதா? அல்லது கூரை இடிந்து என் மீது விழுந்திருக்கக் கூடாதா?

“என்னைத் தனிமையில் விட்டுப் போக மாட்டீர்களா!” என்று ஆத்திரத்துடன் நான் கிறீச்சிட்டேன்.

“நான் போகிறேன், சுசீலா. போகிறேன். நான் கூறியவற்றில் தவறு இருக்கிறதா என்று ஆற அமர வேண்டுமானால் யோசியேன்” என்றான் அவன்.

“போக மாட்டீர்களா!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு நான் வெகுண்டேன். அடுத்த கணம் டக் டக் என்ற ஜோட்டொலி, வாயிற் கதவு திறக்கும் ஓசை எல்லாம் அவன் போய் விட்டான் என்று எனக்கு அறிவித்தன.

நிமிர்ந்து அறையை வெறித்து நோக்கினேன். மேஜை மீது கிடந்த லீலாவின் கடிதம் என்னைத் தாயற்ற குழந்தை போல் பரிதாபமாக நோக்கியது. தொப்பென்று மேஜை மீது கவிழ்ந்து கொண்ட நான் நெஞ்சு பிளக்க விம்மினேன்.

கண்ணீர் மேஜையை நனைத்தது.

இரண்டு மூன்று விநாடிகள் தாம் சென்றிருக்கும். மெதுவான காலடிச் சத்தம் என் கவனத்தைத் தாக்கியது.

‘அவர் தாம் வந்து விட்டாரோ?’ என்று துணுக்குற்று நான் நிமிர்ந்தேன்.

மூர்த்தி! மூர்த்தி எப்போது வந்தானோ தெரியாது.

அநுதாபம் தோய்ந்த விழிகளில் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

4-6

“சுசீலா!” என்று மெதுவான குரலில் அவன் அழைத்தான்.

என் விழிகளில் தேங்கியிருந்த கண்ணீர் கீழே சிந்தி விடாதபடி அடக்கிக் கொள்ள முயன்றவளாக நான் அவனுடைய இரக்கம் மேலிட்ட முகத்தை நோக்கினேன்.

“எப்போது வந்தீர்கள்?” என்று நான் கேட்க நினைத்த வார்த்தைகள் வெளியே வர மறுத்தன. அவனாகவே அதே தணிந்த குரலில், “நான் அப்போதே வந்துவிட்டேன், சுசீ! வரதன் இங்கு இருக்கும் போதே வந்துவிட்ட நான் திடுக்கிட்டு வெளியிலேயே நின்றிருந்தேன் இந்நேரம். நீ கிறீச்சிட்ட போது நான் உள்ளே நுழைந்திருப்பேன். ஆனால் அடுத்த விநாடியே அவன் வெளியே வந்ததைக் கண்ணுற்று விட்டேன். என்னைக் கவனியாமலே அவன் சென்றான். உம். ராமநாதன் எங்கே போயிருக்கிறார், சுசீலா?” என்று கேட்டான்.

நான் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனேன்.

அப்போதே யாரோ ஆள் அரவம் கேட்டது போல் இருந்ததே? உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ பேசிய வரதன் தான் கவனிக்கவில்லை என்றால், குழம்பிய நிலையில் இருந்த நானும் பிரமை என்று எண்ணினேனே?

அவன் கேள்விக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. வெறித்துப் பார்த்தேன். கன்னங்களிலே வழிந்த கண்ணீர் காய்ந்து தோலை இழுத்தது. பேச்சு, சிந்தனா சக்தி எல்லாம் எனக்குத் தடைப்பட்டு விட்டன போல் இருந்தது.

“சுசீலா!” என்று மறுபடியும் அவனுடைய வாஞ்சை ததும்பும் குரல் என் செவிகளில் விழுந்தது. நான் மீண்டும் அவன் முகத்தை நிமிர்ந்து நோக்கினேன்.

ஆம். அவனுடைய முக விலாசம் எனக்கு நடுக்கத்தை உண்டு பண்ணவில்லை. வரதனைப் போல் அல்ல அவன். என் நெஞ்சத்திலிருந்து உணர்ச்சி பீறிட்டுக் கொண்டு வந்தது. பொலபொலவென்று கண்கள் முத்துக்களைச் சிந்த முதல் தடவையாக அவனை நான் “அண்ணா!” என்று அழைத்துக் கதறி விட்டேன்.

அவனும் பதறித்தான் போய்விட்டான். பரபரப்பாகப் பேசினான். “என்னம்மா சுசீலா? எனக்கு எதுவுமே புரியவில்லையே? வரதனின் நடத்தையைக் குறித்து வருத்தப்படுகிறாயா? ஞாயிற்றுக்கிழமைகளில் கூடவா ராமநாதன் ஆபீசுக்குப் போகிறார்? அவர் உன்னிடம் அன்பாக இருக்கவில்லையா, சுசீலா? நான் அப்போதே கேட்ட போது மழுப்பினாயே? இப்போது நீ சந்தோஷமாக இருக்கிறாய் என்று நான் நினைத்ததற்கு மாறாக, ஒரே அதிர்ச்சி தரும் அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறதே? என்னிடம் சொல்லு, சுசீ!” என்று சொல்லி அவன் என் அருகிலே உட்கார்ந்தான்.

ஆதரவிழந்த அநாதைக் குழந்தை அன்பு தோய்ந்த முகத்தைக் கண்டால் ஒட்டிக் கொள்வதைப் போல நான் விம்மலுக்கு நடுவே, “எனக்கு தந்தை இல்லை. தாயும் மற்றவர்களும் என்னை அறியாதவர்கள் ஆகி விட்டார்கள். அன்றே நீங்கள் சொன்னீர்கள். எனக்கு மூத்த சகோதரன் நீங்கள் தாம். இந்தச் சமயம் எனக்கு ஆறுதல் கூற உங்களைத் தவிர யாருமே இல்லை” என்று நாத் தழுதழுக்க நான் கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

“சுசீ. நான் தான் உன்னை மஞ்சு என்று எண்ணியிருக்கிறேன் என்று அன்றே கூறினேனே? என்ன நடந்தது என்று விவரமாகச் சொல்லு, சுசீலா! ராமநாதன் உன்னை அன்பாக நடத்தவில்லை என்பதை அறியவே எனக்குத் தூக்கி வாரிப் போடுகிறது” என்று அவன் கேட்டான். மனத்திலே பொங்கி எழுந்த துயரத்தை, அத்தனை நாட்களுக்குப் பிறகு நான் தாளாமலே அவனிடம் கொட்டி விட்டேன்.

“கடந்த மூன்று வருஷ வாழ்க்கை வெளிப் பார்வைக்குத்தான் நன்றாக இருந்திருக்கிறது. என்னை மணந்து கொண்டுவிட்ட கடனுக்காக அவர் என்னை மனைவியாக நடத்துகிறாரே ஒழிய, உல்லாசமில்லை, சல்லாபமில்லை, சண்டையில்லை, சச்சரவில்லை, கோபமில்லை, தாபமில்லை. இந்தப் பாலைவன வாழ்க்கையில் வெம்பி நான் சாகவுங் கூடச் சில சமயங்களில் எண்ணம் கொண்டு விடுகிறேன். அவர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லையே? என் கண்ணீருக்கு முன் அவர் வாயிலிருந்தே ஒரு நாள், ‘உன்னை நான் மணந்து கொண்டு மாபெரும் தவறு இழைத்து விட்டேன்’ என்று வந்துவிட்டது. அதன் அர்த்தம் அப்போதைய சூழ்நிலையில் எனக்கு ஒரு விதமாகப் புரிந்தது. இப்போது ஒரு விதமாகப் புரிகிறது. என்றாலும், அவருக்கு என் மீது கடுகளவும் அன்பு இல்லை!”

மூர்த்தியின் கண்கள், உதடுகள் எல்லாம் அசைவற்றுப் போயின. என்னைப் பார்த்துக் கொண்டே மனத்திலே எழுந்த பிரமிப்பைச் சமாளிக்க வகையறியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான். நான் தொடர்ந்தேன். “என்னை நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள். வரதன் நடந்து கொண்ட முறையும் பேசிய முறையும் தவறு தான். ஆனாலும் அவன் கூறிய சில விஷயங்கள் முற்றும் உண்மை என்று எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய உணர்ச்சிகளையும் விருப்பு வெறுப்புகளையும் கொஞ்சமாவது அறியும் இயல்பினராக அவர் இருந்தால் என் வாழ்வு சீர்ப்பட நம்பிக்கை இருக்கும். நான் அவரை அந்தக் காலத்திலே என் இருதய பீடத்தில் அமர்த்திக் கிடைத்தற்கரிய கணவர் என்று போற்றினேன். அவர் என் மீது கரை காணாத காதல் கொண்டிருக்கிறார் என்று நம்பி அவருக்காக எந்த விதமான தியாகத்தையும் செய்யச் சித்தமாக இருந்தேன். என் நம்பிக்கையை ஒரே வெட்டாக வெட்டி வீழ்த்திய அவர், இந்த நாட்களில் என் மனத்தை உடைத்து விட்டார். சித்திரவதையையும் விடக் கொடிய தான இந்த மனநோவைச் சகிக்க முடியாமலே தான் நான் ஆறுதலை நாடி என் சங்கீத அறிவைக் கொண்டு வேறு பாதையிலே செல்லலானேன். அதிலே வரதன் வந்து இப்படிக் குறுக்கிடுவான் நான் எண்ணியிருக்கவில்லையே? அவன் பேசியவற்றை நீங்கள் கேட்டிருப்பீர்களே?” என்று கேட்டவாறு நான் படபடப்பைத் தணித்துக் கொள்ளும் வகையில் சற்று நிறுத்தினேன்.

“இதற்கு முன் இந்த வகையில் அவன் பேசியிருக்கிறானா சுசீ?” என்று மூர்த்தி சட்டென்று கேட்டான்.

அவன் கேள்வி ஏனோ எனக்குத் தணதணப்பைக் கொடுத்தது. என் மனம் ராமநாதனின் மனைவி என்ற வரையறையிலிருந்து நழுவும் வகையில் ஆட்டம் கண்டிருக்கும் என்பதை அவன் ஊகித்துக் கொண்டு விட்டானா என்ன? எத்தனை உறுதியான கற்கோட்டையாக இருந்தாலும் காவலாளிகள் சரியாக இல்லை என்றால் பகையாளி உள்ளே நுழைந்து விடச் சுலபமாகி விடுகிறதல்லவா? அவர் மனைவி தான் நான். வழி வழியாகக் கணவனைத் தெய்வமாகப் போற்றும் மங்கையர் மரபிலே நான் வந்தவள் தான். எனினும் இந்த உறுதிக் கோட்டையை ஏதும் பக்கபலமின்றிக் காக்கும் என் ஒடிந்த இருதயம் வரதனுடைய எதிர்ப்புக்கு முன் சமாளிக்க முடியாது போல் தளர்கிறதே? நினைக்கவே நெருப்பைத் தொட்டது போல் சுரீலிடுகிறது. என்றாலும் ஊடே ஒரு குறுக்குப் புத்தி, வரதன் கூறியவைகளிலே உண்மை இருக்கிறது, உண்மை இருக்கிறது என்று ஏன் தாளம் போட வேண்டும்.

“ஏன் சுசீலா? நான் கேட்டதற்குப் பதில் கூறவில்லையே?” என்று மூர்த்தி மறுபடியும் கேட்டான்.

“உம், உம்! இல்லை. வானொலி நிலையத்திலே நடக்கும் இசை நிகழ்ச்சி ஒன்றிலே அவனுடன் நானும் பங்கு கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆம், தலைவனுடன் தலைவி பாகமாக. என்னைப் போலக் கலை உள்ளம் கொண்டவன், ரசிக உணர்ச்சி படைத்தவன் என்று உயர்ந்த நோக்கிலே நான் அவனிடம் மதிப்பு வைத்து அதற்கு ஒப்புக் கொண்டேன். அந்த முறையிலே இருந்து அவன் இப்போது...” என்று மேற்கொண்டு முடிக்காமல் நான் நிறுத்தி விட்டேன்.

சில விநாடிகள் மூர்த்தி மௌனம் சாதித்தான். பிறகு நிறுத்தாமல் கடல் மடை திறந்தது போல் ஆரம்பித்தான்.

“ராமநாதன் ஒன்றுமே விசாரிப்பதில்லை. வரதன் உன்னுடன் பழகுவதைச் சரளமாக அனுமதிக்கிறார், இல்லையா சுசீ? நீ உன் மனத்தைத் தளர விட்டு விட்டாய் என்று எனக்குத் தோன்றுகிறது. அது தவறு. அவர் உன் மீது அன்பு பாராட்டவில்லை என்பது நிச்சயமாக உனக்குப் பட்டால், அதற்குரிய வழியை முயல வேண்டுமே ஒழிய, புனிதமான மணப் பிணைப்பிலிருந்து நழுவும் வழியிலே உன் மனத்தை விட்டு விடலாமா? ஒரு காலத்தில் அவரை இருதய பீடத்தில் வைத்துப் பூசித்தேன் என்றாயே, அத்தகைய அன்பும் காதலும் உண்மையாகக் கொண்டிருந்த நீ, தியாக புத்தி கொண்டவளாக இருந்தால் வழியில் ஏற்பட்ட முள்ளைக் கண்டுபிடித்துக் களைய அன்றோ முயல வேண்டும்? நீ நம் இந்தியப் பெண் குலத்தின் தர்ம வழுப்பாட்டிலிருந்து பிறழ்ந்து விடும் நிலைக்கு வருவாய் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.”

“சுசீலா, நீ உன் மனத்தையே புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் குழந்தையைப் போல வரதனின் அலங்காரச் சொல்லில் குழம்பிப் போகிறாய். அவன் சொற்களில் உண்மை இருக்கிறது என்றாயே? என்ன உண்மை இருக்கிறதாம்? கணவனும் மனைவியும் விருப்பு வெறுப்புகளில் மன ஒற்றுமை கொண்டு இருக்க வேண்டும் என்றானே? அதைப் போலத் தவறு வேறில்லை. அவனுக்கு ரசிகத்தன்மை இருக்கிறது. உனக்கு கலைப்பற்று இருக்கிறது. இதனாலே மன ஒற்றுமை என்று அவன் முடிவு கட்டுகிறான் இல்லையா? இன்னும் எத்தனையோ பேரிடம் அவன் இந்த ஒற்றுமையைக் காணலாம். இதிலிருந்து காதல் வந்து விட்டது என்று கூறுவது மடத்தனம். உன் கண்களைக் கட்ட அவன் கையாளும் தந்திரம், இது. வெளித் தோற்றங்களிலேயும் நாட்டங்களிலேயும் மலையும் மடுவும் போன்ற வேற்றுமை கொண்டவர்கள் மனமொத்து வாழ முடியாது என்பது முழுத் தவறு. உண்மையில் அவர்களுடைய வாழ்க்கை தான் ஒளிவிடும். அவனுக்குப் பரிச்சயமில்லாத விஷயத்திலே அவள் தேர்ச்சி பெற்றிருந்தால் அவனுக்கு ஆச்சரியம் கொடுக்கும். அதன் மூலம் அவனுக்கு அவளிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அவள் விஷயமும் அப்படியே. பரஸ்பரம் இந்த வேற்றுமை அவர்களிடையே பிரேமையை அதிகரிக்க உதவுமே ஒழிய குன்றிவிடச் செய்யாது. அவன் சொல்லும் மாதிரியிலே ஒற்றுமை இருந்தால் தான் ஆபத்து. விவாதங்களுக்கும், மனத்தில் போட்டி பொறாமைக்கும் இடம் ஏற்பட ஏதுவாகும். எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் தம்பதிகள் இருந்தார்கள். அவளுக்குக் கெட்டிக்காரி, கைராசிக்காரி என்ற புகழ் ஏற ஏற அவனுக்குப் பொறாமை ஏறியது. அதன் விளைவு, இப்போது இருவரும் மன வாழ்விலிருந்தே பிரிந்து ஜன்ம விரோதியாகி விட்டார்கள். இந்த ஒற்றுமைக்கு என்ன சொல்லுகிறாய், சுசீ? வாழ்க்கையில் ஒளியை ஊட்ட உறுதுணையாக உள்ளது ஒற்றுமையுமல்ல, வேற்றுமையுமல்ல. அன்புதான் ஆதாரம்” என்று ஆராய்ச்சி முடிவிலே வெளியிடும் நீண்ட அறிக்கையைப் போல் அவன் தன் அபிப்பிராயத்தை வெளியிட்டான்.

வரதனின் பேச்சில் உண்மை இருக்கிறதென்று ஆமோதித்த உள்ளம், இப்போது மூர்த்தியின் அபிப்பிராயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொண்டது.

“வரதன் விஷயத்தை விட்டுத் தள்ளுங்கள். ஆனால் நீங்கள் இப்போது கடைசியாகக் கூறியது போல ஆதி காரணமாகிய அன்பு இல்லையே அவருக்கு? இருக்கிறாயா? இரு. வெளியே போகிறாயா? போ. இது என்ன குடித்தனம்? என் மனம் தளர்ந்து போனதற்கு நீங்கள் என் மீதே குற்றம் சாட்டுகிறீர்களே? அவரால் தானே நான் மனமுடைந்து போனேன்? அவர் வேறு எந்த மங்கையிடமாவது மன நாட்டம் கொண்டிருந்தால் அதை வெளிப்படையாகக் கூறி என்னிடமிருந்து விடுதலை பெற்றுப் போகட்டும். என் கண் முன் நடமாடி என்னை நோகச் செய்வதை விட அது எனக்கு ஒரே துயரமாகிவிடும். அவருடைய இந்த வேற்று நடத்தை தானே வரதன் என்னிடம் இத்தனை துணிகரமாக வார்த்தையாடத் தைரியமளித்து விட்டது? நான் என்ன செய்வேன்? எனக்குத் தெரியவில்லை. ஆமாம், எது நன்மை, எது தீமை என்று எனக்குப் புரியவில்லை. வருஷக் கணக்கில் மனமும் அறிவும் போராடிப் போராடி நான் அலுத்து ஓய்ந்து விட்டேன்.”

“இப்போது சிந்தித்துப் பார்த்தால் ஒருவரை ஒருவர் அறிந்து பழகி, காதல் மணம் செய்து கொள்கிறார்களே, அதுவே சிலாக்கியம் என்று நான் நினைக்கிறேன். என் மணப் பருவத்தில் எனக்கு இத்தனை அறிவு பதப்பட்டிருக்கவில்லை. அவர் ‘அப்படி இருப்பார், இப்படி இருப்பார்’ என்று விளையாட்டுப் போலக் கோட்டை கட்டினேன். எல்லாம் பிரமையாக முடிந்து விட்டது. எனக்கு அவர் மீது ஏற்பட்ட அன்பு கூடப் பிரமையோ, இயற்கையாக எழுந்ததில்லையோ என்று எண்ணும் அளவுக்கு நான் வந்து விட்டேன். தர்ம வழி, அது இது எல்லாம் இந்த என் போன்ற அன்பில்லாத சூழ்நிலையிலே தரித்து நிற்க முடியாது. கணவனை விட்டு விலகுவதை மனத்தால் கருவதையே, பத்தினிப் பெண்டிரின் தர்மத்திலிருந்து பிறழ்ந்து விட்டதாக எண்ணும்படியான மகளிரிடையே வளர்ந்தவள் தான் நான். ஆனால் இந்த உறுதி நிலைத்து நிற்கக் காதல் வேண்டும். வாழ்விலே ஒருவரை ஒருவர் பிணையுமுன்பு இந்த அஸ்திவாரம் அவசியம். எங்களுக்குள் இது இல்லாததால் தான் இன்ப மாளிகை எழவில்லை. அவரையும் குற்றம் சாட்டுவதற்கில்லை. எனக்கும் அவருக்கும் இருந்தக் கணவன் - மனைவி மேல் பூச்சு நாடகம் தீராத வேதனையையும் நோயையும் தருகிறது. லீலாவுடன் அவரைச் சேர்த்து வரதன் மட்டுந்தானா கூறினான்? ஜயம் மன்னி கூட என்னிடம் ஜாடைமாடையாக வந்து எச்சரித்தாள். நான் அவளையே கேட்டிருப்பேன். ஆனால் அவள் இங்கு இருக்கும் போது எனக்கு இந்தச் சந்தேகம் மனத்தில் உறைக்கவில்லை. அவர் என்னை நடத்தும் விதத்துக்கு வேறு ஏதேதோ உப்புக்கு உதவாக் காரணங்களைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தேன். இப்போது அதுவும் உண்மையாக இருக்குமோ என்று கூட எனக்குக் கலங்குகிறது” என்று தோன்றியதை யெல்லாம் நான் அவனிடம் கூறிவிட்டேன்.

வார்த்தைகளை முடித்த பின் தான் சட்டென்று மனத்திலே அவனிடம் ஏன் இப்படியெல்லாம் கூறினோம் என்று வெட்கம் முட்டுக் கட்டை போட்டது. கண நேர நெகிழ்ச்சியிலே மனத்திலே பட்டதையெல்லாம் பொழிந்து விட்டேனே? அப்படித்தான் என்ன, அவன் அநுபவம் முற்றி வாழ்க்கையில் அடிபட்டவனா? எனக்குத் தெரிந்து லீலாவை ஏமாற்றி விட்டு செல்வத்திலும் அந்தஸ்திலும் மோகம் கொண்டு ஹேமாவை மணக்க முற்பட்டவன். பெண் புத்தி பின் புத்தி என்பது ஒவ்வொரு தடவையிலும் மெய்யாகும்படி நான் நடந்து விடுகிறேனே?

ஆனால் அவன் மீது லீலா விஷயமாக என்ன கோபம் எழுந்தாலும், கடுமையான வார்த்தைகள் கூற வேண்டும் என்று எண்ணியிருந்த போதிலும் சமயத்தில் மறந்து விட்டனவே? அவன் வாஞ்சை ததும்பும் முகத்துக்கு முன் என்னை அறியாமல் ஏனோ பாசம் இழுக்கிறது? அவனைச் சகோதரனாக அங்கீகரித்ததில் மனப் பளு குறைந்து விட்டது போல் ஏனோ நான் ஆறுதல் காண வேண்டும்? இந்தப் பிறப்பில் இல்லாத ரத்தப் பந்தம் முற்பிறப்பில் இருந்ததோ? மனச்சுமையை ஓர் உறுதியுடன் இறக்கி விட்டேன். உறுதியுடன் ஒரு செயல் புரிந்தால் பின்பு தடுமாறக் கூடாது. அடுப்பு எரியவில்லை என்று விறகை இழுத்து மாற்றிக் கொண்டே இருந்தால் நெருப்பு எப்படிப் பிடிக்கும்? எனக்குள்ளேயே அது சரியில்லை இது சரியில்லை என்று குழம்புவதில் என்ன பயன்?

இத்தனை நேரம் வாய் திறவாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த மூர்த்தி, “சுசீலா, நான் ஒரு தரம் அல்ல பத்து தரம் சொல்லுகிறேன். உன் மனத்தை நீ புரிந்து கொள்ளவில்லை. ஏமாற்றத்தாலும் நிராசையாலும் வாடிப் போயிருக்கிறாய். அதனால் தான், ‘அவரிடம் நான் அன்பு கொண்டது பிரமை’ என்கிறாய். முதன் முதலிலே நான் உன்னை ஊருக்கு அழைத்து வந்த போது, ராமநாதனின் பேச்சை எடுத்தாலே உன் மனம் விம்மியதை முகம் எப்படிக் காட்டியது என்பதை இன்னமும் என் நினைவில் வைத்திருக்கிறேன். ஆச்சரியமாகக் கூட இருந்தது. எனக்கு அப்படி இருந்த நீ இன்று எப்படி என்னிடம் விவாதிக்கும் நிலைக்கு வந்து விட்டாயே! உன்னை மணந்தது ஏன் தவறு என்று நீ கேட்டாயா சுசீ?” என்று என்னைக் கேட்டு மடக்கினான்.

நான் ஆத்திரத்துடன் பதிலளித்தேன். “கேட்க வேண்டுமாக்கும்! அன்று பகல் அவர் மதனி என்னைக் கடிந்து கொள்ள மனஸ்தாபம் நேரிட்டிருந்தது. என் கண்ணீரைக் கண்டதும் தமையனுக்கும் மதனிக்கும் கடமைப்பட்டிருந்த அவரைப் பிளவு ஏற்படும் வகையில் நான் குறுக்கிட்டு வந்திருக்கிறேன் என்று உணர்ந்து அப்படிச் சொன்னார் என்று நம்பினேன். இதெல்லாம் நான் ஏன் சுற்றி வளைக்க வேண்டும்? உண்மையாக அவர் காதல் உள்ளம் படைத்தவராக இருந்தால் நான் மாபெரும் குற்றம் செய்தாலும் மன்னித்து விடமாட்டாரா? நான் ஏமாந்தேன். வாழ்விலே பெருந் தோல்விதான் என் பாக்கியம். அவர் ஒரு நாளின் பெரும் பகுதியை வெளியிலே கழித்து விடுகிறார். எங்கே போகிறார், என்ன செய்கிறார், என்னைப் போல வேதனைப் படுகிறாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதே வகையில் நானும் இருக்க முடியாது என்பதை இதோ வரதனுடைய குறுக்கீடே காண்பித்து விட்டது. நான் அவரிடமிருந்து விலகி வாழ்வதை யாருமே ஆதரிக்க மாட்டார்கள். ஏன், என்னைப் பெற்ற தாயே ஒப்புக் கொள்ளாமல் இடிப்பாள். பெண்ணாய்ப் பிறந்தவள், புருஷனுடைய எத்தகைய கொடுமைக்கும் என்றென்றும் அடி பணிந்து தலை கொடுக்க வேண்டியது தான் என்ற மனப்பான்மையில் ஊறிய அவள், நானும் அப்படியே இணைந்து போக வேண்டும் என்றே விரும்புகிறாள். அது போல அவரிடம் சரணாகதி அடைந்து விட என்னால் முடிய வில்லையே? பூமிக்கு வெகு அடியிலே மறைந்து கிடக்கும் தண்ணீரைக் கூட பாறைகளைப் பிளக்கும் வெடிகளும் மனிதனுடைய இடைவிடாத் தோண்டுதலும் காண்பித்துக் கொடுப்பதில்லையா? அப்படி அறியாமையும், என்னை நானே தாழ்த்திக் கொள்ளும் வறுமை மனப்பான்மையும் என்னுடைய கொஞ்சம் சுயமதிப்பைக் கூட மூடி விட்டிருந்தன. ஆனால் வெடி மருந்துகள் போன்று என் நாட்களிலே எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளும் அவமதிப்புகளும், எனக்கும் சுயமதிப்பு உண்டு, அன்புக்கு அடி பணியலாமே ஒழிய ஆணவத்திற்கு அசையக் கூடாது என்ற விழிப்பை வெளிக் கொணர்ந்து விட்டனவே! அது வலியப் போய் அவரிடம் சரணடைய வொட்டாமல் தடுக்கிறதே!”

“புரியாத விஷயத்தை நேரிலேயே கேட்பது சரணாகதி அடைவது என்று அர்த்தமா, சுசீ? உன் மனம் திரிந்து விட்டதற்கு வருத்தப்படுகிறேனே ஒழிய, உன்னை நான் குற்றம் சாட்டவில்லை. நீ கேட்க வேண்டாம். எனக்குத் தெரிந்து விட்டது. நானே ராமநாதனிடம் நேராகக் கேட்டு விடுகிறேன். லீலாவைப் பற்றிய வம்புகளிலே எனக்குச் சிறிதும் நம்பிக்கை எழவில்லை என்றாலும் நீ கூறும் மாதிரி...”

அவன் தொண்டை கரகரத்தது.

என்னால் வாளா இருக்க முடியவில்லை. லீலாவின் கடிதம் நினைவில் வந்தது.

“எனக்கும் லீலாவை அப்படி நினைக்கவே மனம் கூசுகிறது. நீங்கள் கைவிட்டு விட்டீர்கள் என்று மனமுடைந்து விட்டாள். எனக்கு ஆறுதல் நாடுவது கிடக்கட்டும். முதலிலே நீங்கள் செய்த செய்கையின் பலனைப் பாருங்கள். பணக்கார மாமாவின் ஆதரவிலே மேல் நாடு சென்று திரும்பி விட்டீர்கள். செல்வத்திலே கொழிக்கும் ஹேமாவை மணக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இது நியாயமாக்கும்! உங்கள் மீதுள்ள காதலின் மிகுதியால் வரதனையும் செல்வத்தையும் சுற்றத்தையும் கூட வெறுத்துவிட்டு அவள் வெளியேறி விட்டாள்!” என்று முகம் கொதிக்கக் கூறிய நான் அவள் கடிதத்தை அவனிடம் வீசி எறிந்தேன்.

அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவன் லேசாக நகைத்தான்.

“சுசீ. பெண்ணே பொறுமையற்றவள். என் வாயால் நான் என்றாவது ஹேமாவை மணந்து கொள்ளப் போகிறேன் என்று கூறினேனா? அதற்குள் நெய்யில் விழுந்த ப்பம் போல ஆத்திரப்பட்டால் நான் என்ன செய்ய? ஏதும் வாயை விட்டுக் கேட்காமல் திடீரென்று கோபித்துக் கொண்டால் எனக்கு எப்படிப் புரியும்? ஊரை விட்டுப் போகும் போது லீலாவைச் சந்தித்து என் யோசனைகளைக் கூற வேண்டும் என்று ஆன மட்டும் முயன்றேன். அவள் பிடி கொடுக்கவே இல்லை. எனக்கும் வேறு சந்தேகம் தட்டியது. ராமநாதன் அவளை அடிக்கு ஒரு முறை மிஸஸ் வரதன் என்று பட்டம் கட்டி அழைத்தாரே? அவர்கள் விருப்பத்துக்கு வளைந்து போகக் கூடிய நிர்பந்தமாக்கும். அதனால் தான் அவள் எனக்கு முகம் கொடுக்கவில்லையாக்கும் என்று எனக்கு விரக்தி உண்டாயிற்று. நான் புறப்பட்டுச் செல்லும் போது மனம் என்ன பாடுபட்டுக் கொண்டு போனேன் என்பதை அறிவாளா அவள்? மாமா, மாமியிடம் உங்கள் வருங்கால மாப்பிள்ளையாக நான் இருக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டுப் பண உதவி பெற்றுக் கொள்ளவில்லையே? அவர்கள் அந்த நம்பிக்கையிலே வெளியே டமாரம் அடித்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளியா? கிட்டி முட்டிக் கல்யாணம் என்ற பிரஸ்தாபம் நான் இங்கு வந்த பிறகேதான் என் வரைக்கும் வந்தது. நான் முன்பே திட்டமிட்டிருந்தபடி, எங்களுக்கு இருந்த ஒரே வீட்டை விற்று, அவர்களிடம் நான் கடனாகப் பெற்றுக் கொண்டிருந்த தொகையைத் திருப்பி விட்டேன். ‘உங்கள் பெண்ணுக்கு நான் தகுதியானவன் அல்ல’ என்ற என் எண்ணத்தையும் உடைத்துக் கூறிவிட்டேன். என் தாய் தந்தையருக்குக் கூட நான் ஹேமாவை மறுத்ததில் கோபமில்லை. ஏனெனில் அவளுடைய அதீதமான நாகரிகம் அவர்களுக்குக் கூடப் பிடிக்கவில்லை. மேல்நாடு செல்லும் ஆசையிலே, அவசரத்துக்கு அவர்களிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டது தவறாகுமா? நேற்றுத்தான் ரெயில்வே தொழிற்சாலையில் வேலையை ஒப்புக் கொண்டேன். இவ்வளவு சுலபமாக லீலா என்னை நம்பிக்கையற்றவனாக ஆக்கிவிட்டதற்கு நீயும் ஒத்துப் பாடுகிறாயே, சுசீலா? பெண்ணே ஆத்திரப்பட்டவள். மனத்திலே உள்ளதை வெளிப்படையாகவும் கேட்க மாட்டாள். ராமநாதனை நான் கேட்டால் கூட இப்படித்தான் ஏதாவது சொல்லப் போகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று மூர்த்தி விவரித்தான்.

“ஆமாம்! உங்களைப் புரிந்து கொள்ளும்படியும் நடக்க மாட்டீர்கள். பிறரையும் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! பிறகு பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று குற்றம் சாட்டுவீர்கள்?” என்று நான் இன்னும் ஏதேதோ ஆத்திரத்துடன் கூற வாயெடுத்தேன். கதவு இடிபடும் சப்தம் என்னை உலுக்கியது.

திடுக்கிட்டுத் திரும்பிய நான் அறை முழுவதும் பார்த்தேன். நான் இழுத்துத் தாழிட்டிருந்த முன்னறைக் கதவு தான் உட்புறமிருந்து இடிபட்டது.

திகைப்பூண்டை மிதித்தவள் போல் நான் பேச்சு மூச்சற்று நிற்கையிலேயே மூர்த்தி, “என்ன சுசீ? ராமநாதன் ஆபீசுக்குப் போய்விட்டார் என்றாயே? உள்ளே யார்? அவரை வைத்தா தாழிட்டாய்” என்று கேட்ட வண்ணம் கதவைத் திறந்தான்.

கூர்மையான பார்வையை என் மீது பதித்த கனிந்த விழிகளுடன் என் கணவர் தாம் அறை வாயிற்படியிலே நின்றார்.

என்னுள்ளே ஒரு பிரளயம் வந்துவிட்டது போல் இருந்தது.

அவர் எல்லாவற்றையும் கேட்டிருப்பார்! கேட்டிருக்கட்டுமே? ஒரு நாள் இல்லாது போனால் ஒரு நாள் துயர் தாங்காமல் நான் உடைத்தெறிந்துவிடக் காத்திருந்தேனே, தானாகவே இன்று சந்தர்ப்பம் வந்து விட்டது!

நான் என்ன முயன்றாலும், அவர் மீது கனலை வளர்த்துக் கொள்ள அவருடைய அநீதிகளை எவ்வளவுதான் துணை தேடினாலும், அவரை நேருக்கு நேர் காணும் போது ஏனோ குற்றவாளி போல நான் தலை குனிகிறேன்? தைரியமாக நேருக்கு நேர் உதாசீனம் செய்ய என் உள்ளம் மறுப்பானேன்? பழக்க தோஷமா? அல்லது கணவன் என்று வேரூன்றிய எண்ணத்திலே எழும்பிய அர்த்தமற்ற மதிப்பா? அல்லது நான் அவர் மீது கொண்ட அன்பு பிரமை என்று எண்ணுவதும் பிரமை தானோ?

“தூங்கினீர்களா என்ன? நீங்கள் ஆபீசுக்குப் போய்விட்டீர்கள் என்று சுசீ கதவைச் சாத்தித் தாழ் இட்டுவிட்டாள்!” என்று மூர்த்தி கலகலவென ஒலிக்க நகைத்தான்.

புது நடுக்கம் ஒன்று என்னுள்ளே புகுந்து கொண்டு அவர் முன் என்னை அசல் குற்றவாளியாக ஆக்கியது. அவர் வீட்டில் இல்லாததை நான் வரவேற்பது போலும், வரதனை நான் எதிர்பார்த்திருப்பது போலும், என் செய்கை ஒருவேளை அவருக்குக் கற்பித்திருக்குமோ? சே! என்ன அசிரத்தை எனக்குத்தான்! கதவைத் திறந்து பார்த்துவிட்டுத் தாழிட மாட்டேனா?

ஏன் அவர் தாம் ஆகட்டும், வரதன் வந்து அத்தனை நேரம் முறை தவறிப் பேசியிருக்கிறான்! மூர்த்தி வந்து வேறு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. குரல் கேட்டவுடனேயே கதவை இடிக்க மாட்டாரா? என்னைச் சோதிக்கத் திட்டமிட்டது போல் பேசாமல் மூச்சுக் காட்டாமல் இருந்திருக்கிறாரே!

“எல்லாம் நன்மைக்கே என்ற அறிவுரை எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. நான் ஆபீசுக்குப் போய்விட்டேன் என்று சுசீ நினைத்ததும் நல்லதாகவே ஆகிவிட்டது. போவதாகவே இருந்தது. உள்ளே இருந்து துணி துவைக்கும் சத்தமும், மாவரைக்கும் சத்தமும் காதிலே விழுந்து தூங்க இடைஞ்சல் விளைவிக்கிறதென்று கதவைச் சாத்திக் கொண்டு படுத்தேன். அப்படியே தூங்கியிருக்கிறேன். சுசீலா தாழிடுவது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. வரதனின் பேச்சுக் குரலில் விழித்துக் கொண்டு விட்ட நான், ஜன்னல் வழியே, நீ உள்ளே செல்லுவதையும் கவனிக்க நேர்ந்து விட்டது” என்று நிறுத்திய அவர் என் அருகில் வந்து அமர்ந்து என்னை நோக்கிப் புன்னகை பூத்தார்.

பொங்கி வந்த அவமானத்தால் எழும்பிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு நான், “அதுதான் வேண்டுமென்று வெளியே என்ன பேசுகிறார்கள் என்று கேட்க உளவறியும் நாடகம் ஆடினீர்களாக்கும்! என் மனத்தை முறித்து இத்தனை கோலத்திற்குக் கொணர்ந்தது போதாது என்று இந்த விதத்திலும், ‘இவள் என்ன செய்கிறாள் பார்க்கலாம்’ என்று தானே நெஞ்சழுத்தத்துடன் உட்கார்ந்திருந்தீர்கள்?” என்று கேட்டதும் குபீரென அழுகை வெடித்துக் கொண்டு வந்தது எனக்கு. நான் சற்றும் எதிர்பாராத விதமாக அவருடைய கரம் என் முகத்தை மூடியிருந்த கைகளை அகற்றியது.

“நான் செய்த எத்தனையோ தவறுகளுடன் அறிந்து செய்த இந்தத் தப்பையும் மன்னித்துக் கொண்டு விடு சுசீ! நான் அப்படி உடனே கதவைத் திறந்து கொண்டு வந்திருந்தால் இவ்வளவு தெளிவாக எது வைரம், எது கண்ணாடிக் கல் என்று புரிந்திருக்காது. வரதன் குரல் மட்டும் கேட்டு மூர்த்தியின் குரல் கேட்காமலிருக்கவே, அவனும் என்னைப் போல வெளியே நிற்கிறான் என்று அறிந்து கொண்டு முதலில் பேசாமல் இருந்தேன். என் துடிக்கும் ஆவலைத் தடைக்கட்டிக் கொண்டு நான் மறைந்திருந்ததற்கு, உங்கள் தூய உள்ளம் எனக்கு வெளிப்பட ஏதுவாக இருந்த சம்பாஷணையை நான் முழுவதும் கேட்க விரும்பியதுதான் காரணம் சுசீலா. என்னைக் காணும் போதெல்லாம், ‘நீ ஒரு சுத்த மடையன்’ என்ற அடைமொழி இல்லாமல் வரதன் பேச மாட்டான். நான் மடையன் தான். சந்தர்ப்பக் கோளாறுகளால் நிகழ்ந்த சம்பவங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஆதாரம் இல்லாத பிரமை ஒன்றில் மூடிப் போய் என்னையும் வருத்திக் கொண்டு உன்னையும் குலைத்தேன்!” என்றார்.

என் உள்ளம் புல்லரித்தது.

‘நிஜந்தானா நடப்பது?’ என்ற பிரமிப்பிலே அசைவற்றுச் சிலையானேன்.

மறுபுறம் மூர்த்தியிடம் திரும்பினார்.

“என் பிரமைத் திரையை நீ அகற்றியவன் மட்டுமல்ல மூர்த்தி! எனக்குச் சரியான புத்தி புகட்டி விட்டாய். உள்ளன்பு பரிணமிக்கும் போது பிறருடைய வம்புகளில் மிதக்கும் செய்திகளில் நம்பிக்கைக் குறைவுக்கு இடம் கொடுக்காத உயர்ந்த மனம் படைத்த உன் முன் உண்மையைக் கூறவே எனக்குக் கூசுகிறது” என்று புதிர் போட்டார்.

“என்ன சுசீலா இது? அவர் மீது நீ அத்தனை குற்றம் சாட்டினாய்? அவரானால் ஏதேதோ பேசுகிறார்? அவர் உன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்றாய். நீயுந்தான் அவரைப் புரிந்து கொண்டிருக்கவில்லை! எல்லாம் கிடக்க, என்னை ஏதேதோ முகஸ்துதி செய்கிறார். எனக்கு ஒன்றுமே விளங்காமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கிறதே?” என்றான் மூர்த்தி.

“உம். நினைத்தால் எனக்கே ஒரு புறம் சிரிப்புத்தான் வருகிறது! உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டு, மாபெரும் தியாகம் செய்வதாக எண்ணிக் கொண்டு, ஒவ்வொரு விநாடியும் உள்ளப் போராட்டத்திலே சுழன்று வீணே கஷ்டப்பட்டேனே?” என்று கூறிய அவர் உள்ளே சென்றார்.

அலமாரியிலுள்ள டிராயரைத் திறந்து மூன்று குறிப்புப் புத்தகங்களைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். “இதிலே சிவப்புக் கோடிட்டிருக்கும் தேதிகளைப் படித்துப் பார், சுசீலா!” என்றார்.

“நீங்கள் மூவரும் சேர்ந்து என்னை முழு முட்டாளாக்கி விட்டீர்கள். லீலா இத்தனை அழுத்தல் ஆசாமியாக இருப்பாள் என்று நான் சிறிதும் எண்ணியிருக்கவில்லை. நேற்றிரவு கூட சுசீ, நான் மூர்த்திக்கு ஹேமாவை மணந்து கொள்ள இஷ்டமில்லை போல் இருக்கிறது என்று கூறிய போது, நீ மறைத்துதானே வைத்தாய்? நீயும் லீலாவும் கூடிக் கூடிப் பேசும் போது என்ன தான் ரகசியம் இருக்குமோ என்று ஆச்சரியப்படுவேன். எனக்கு மறைத்து வைத்துதான் இத்தனை விபரீதங்கள் நிகழ்ந்ததற்கே காரணம்!” என்று கூறிய அவரைக் குறுக்கிட்டு நான், “ஆமாம், நான் அதைச் சொல்லலாம் என்று தான், லீலாவுக்கு வரதனை விவாகம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமலிருக்கலாம் என்று கோடி காட்டினேன்! நீங்கள் சிரத்தை காட்டாததால் நான் வேறு விதமாக எடுத்துக் கொண்டேன்” என்றேன்.

நாங்கள் பேசிக் கொள்ளும் அழகைப் பார்த்தோ என்னவோ, மூர்த்தி அடக்க முடியாமல் சிரித்தான்.

“நீ சிரிப்பாய் அப்பா! உனக்கு நகைப்பாய்த்தான் இருக்கும் இப்போது. சுசீ நான் வருவதற்குள் நீ அந்தக் குறிப்புகளைப் படித்து விடு. நான் இவனை இழுத்துக் கொண்டு கொஞ்சம், தபாலாபீஸ் வரை போய் வருகிறேன்” என்று சட்டையை மாட்டிக் கொண்டு அவர் கிளம்பினார்.

மூர்த்திக்கு என்ன தெளிந்ததோ என்னவோ, மறுவார்த்தை கூறாமல் அவரைப் பின் தொடர்ந்தான்.

என் கைகள் நடுங்க, என்ன என்னவோ எண்ணங்கள் மனத்தைப் படபடக்க, நான் டயரியைப் பிரித்துப் புரட்டினேன்.

ஸெப்டம்பர் 4 : என்னால் நம்ப முடியவில்லை. என் சுசீலாவா இத்தனைக் கண்டிப்பாக என்னை நிராகரித்தாள்? என் இருதய அந்தரங்கத்திலே வீற்றிருக்கும் என் சுசீலாவா என்னை வெருட்சியுடன் பிடித்துத் தள்ளினாள்? உலகமே அந்த நிமிஷத்தில் என் கண்முன் பஸ்மீகரமாகப் போய்விட்டது போல் இருந்தது. ‘போங்கள்!’ என்று அவள் படாரென்று கதவைத் தாழிட்டது என்னைப் புகவிடாமல் அவள் மனக் கதவைத் தாழிட்டு நிராகரிப்பது போலல்லவா இருந்தது? ஏமாற்றமும் அதிர்ச்சியும் என்னால் தாளத்தான் முடியவில்லை.

‘என்னைத் தொடாதீர்கள்! போங்கள்!’ என்ற இரண்டு சொற்களும் என்னை ஒவ்வொரு கணமும் மனத்திலே நெருப்புப் பொறிகள் போல வேதனை செய்கின்றன. அவள் ஏன் அப்படிச் சொன்னாள்? அவள் நடத்தைக்குக் காரணந்தான் என்ன? சந்தர்ப்பங்கள் குறுக்கே புகுந்து தடையிட்டதனால் அதிகரித்துத் துடிக்கும் ஆவலுடன் முதல் முதலாக நெருங்கும் கணவனை - அன்பு கொண்டவனை - ஒரு மங்கை இத்தகைய அதிர்ச்சியுடன் வரவேற்க வேண்டுமானால்...? புரியவில்லை. மனம் குழம்பிக் கொந்தளிக்கிறது. ஆயினும் நான் எப்படியோ அடக்கிக் கொள்ள வேண்டும்.

ஸெப்டம்பர் 13 : அவள் நடத்தையின் காரணம் இன்று எனக்குப் புலனாகிவிட்டது. ஆம். அவள் என் சுசீலா அல்ல! என் வாழ்விலே நான் மகத்தான தவறுதல் செய்துவிட்டதை உணர்ந்து விட்டேன். என் மேஜையின் மேலே இருந்த அந்தப் புத்தகம் - உயிரோவியம் - வேண்டுமென்றே நான் படிக்க வேண்டும் என்று தான் - சுசீலா வைத்திருக்க வேண்டும். அலைபாயும் மனத்தைச் சமாதானம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் தான் நான் அதைப் படிக்க ஆரம்பித்தேனே ஒழிய, என் கண்ணைத் திறந்து, பெரியதோர் உண்மையைப் புலப்படுத்திவிடும் என்று நான் சிறிதும் எண்ணியிருக்கவில்லை. நான் அதைப் படிப்பதைப் பார்த்து விட்டு, சுசீலா மறுநாள் என்னிடம் அந்தப் புத்தகம் எங்கே என்று கேட்டாள். நான் அதை அவளிடம் கொடுத்து விட்டேன். ஆனால் ஜீவா என்ற ஆசிரியர் எழுதிய அதில் வந்த விஷயங்கள்? பாடம் கற்பிக்க வந்த ஆசிரியனை மாணவி காதலிக்கிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமலே அன்பு கொண்டு விட்டதை, அறிந்தோ அறியாமலோ, தந்தை மகளை வரவேற்றான். ஒருவனுக்கு மணம் செய்து கொடுக்கிறான். மணம் நிகழ்ந்த தினம் மன அதிர்ச்சியால் மங்கை மூர்ச்சித்து விழுகிறாள். (சுசீலாவும் அன்று மூர்ச்சித்து விழுந்தாளே?) ஆசிரியன் மனம் குமுறி மணம் நிகழ்ந்த காதலியைத் தனியே சந்தித்து மனம் தளர விடுகிறான். ஆனால் அவள் தன் செம்மை மொழிகள் மூலம் அவனை உறுதிப்படுத்தி, தான் வேறொருவனுக்குச் சொந்தம் என நினைப்பூட்டுகிறாள். அவளுடைய உயர்ந்த பண்பிலே ஒளி பெற்ற காதலன் உறுதி கொண்டு திரும்புகிறான். இவர்கள் சந்திப்பை அறியாமல் கவனித்த கணவன் அவர்களுடைய உயர்ந்த காதலுக்கு வியந்து, மகத்தான தியாகம் செய்கிறான். தான் மணந்து கொண்ட கன்னியைச் சகோதரி போல நடத்த உறுதி கொள்கிறான்.

காதலர்களை விட அந்தக் கணவனின் தியாகமே என் மனத்தில் வெகுவாகப் பதிந்து விட்டது. சுசீலா என்னுடையவள் அல்ல! அதனாலேயே குறிப்பாக இந்தப் புத்தகத்துக் கணவன் போல நான் நடக்க வேண்டும் என உணர்த்தியிருக்கிறாள். அன்று புடவைகள் கொண்டு கொடுத்த மூர்த்தியைப் பற்றி மன்னி ஒருவிதமாகப் பேசினாள். ‘வாசல் வரை கொண்டு விட்டு வந்தாள் சுசீலா. எனக்குப் பிடிக்கவில்லை. உள் வரை வந்து பேசி விட்டுப் போக அவன் என்ன அண்ணனா, தம்பியா?’ என்று அவள் அப்போது கூறிய போது எனக்குக் கோபந்தான் வந்தது. ஆனால் அவன் ஊரிலிருந்து நேற்று வந்தான். சுசீலா அவன் தங்கை இறந்ததற்கு துக்கம் விசாரித்து விட்டு போகிறீர்களா? என்று வாயிற்படியில் வந்து கேட்ட போது விழிகளில் ஏக்கமும் சோகமும் தென்படுவானேன்? மன்னி கூறுவது போல் அவன் கிட்டிய உறவில்லை. என்றாலும் ‘சுசீலா, சுசீலா!’ என்று அவ்வளவு பாசத்துடன் பேசுவானேன்? ஆகா! அந்த முதல் இரவில் அவள் கண்களில் நீர்த்திரை இட்டதன் அர்த்தம்? மூர்த்தி புடவையுடன் முதல் தடவை வந்த அன்று நான் அவனைப் பற்றி விசாரித்த போது அவள் சுரத்தே இல்லாமல் பதிலளித்ததன் காரணம் என்ன? அன்றொரு நாள் ஊரை நினைத்து அவள் குலுங்கக் குலுங்க அழுததன் அர்த்தம் என்ன? எல்லாம் பளிச்சென்று புலனாகிறதே? ஆய்ந்து விசாரியாமல் நான் அவர்களுக்குத் தீங்கு இழைத்து விட்டேன். கதையில் வரும் கணவனாக நான் தியாகம் செய்தே ஆக வேண்டும். ஆனால் எத்தனை அடக்கினாலும் மனம் கட்டுக்கு அடங்காமல் அவளை நோக்கிப் பாய்கிறதே? நினைத்தாலே நெஞ்சம் வெடித்து விடும் போல இருக்கிறதே?

அடுத்த குறிப்புப் புத்தகம்:

ஏப்ரல் 18 : நானும் சமனப்படுத்த முடியாமல் தவிக்கும் என் நெஞ்சத் துடிப்பைத் தவிர்க்க, சுசீலாவுடன் என் பழக்கத்தையே குறைத்துக் கொண்டும் பார்க்கிறேன். அவளைக் காணாமல் இருந்தால் அமைதி நிலவுமே என்று இருந்த எண்ணம் முற்றும் தவறு என்னும்படியாக அவள் ஊரில் இருந்த இரண்டு மாதங்களும் நான் பட்ட பாடு! அப்பா! ஆனால் கண்முன் அவள் நடமாடுவது இன்னும் வேதனையை அதிகரிப்பது போல் இருக்கிறது இப்போது. எல்லோரும் பிருந்தாவனம் செல்லும் போது நான் அவள் வராமலிருப்பதை விரும்பினேன். ஆம், என் மனம் நிச்சயமாக நெகிழ்ந்து போயிருக்கும். நாங்கள் இல்லாத சமயம் மூர்த்தி வந்திருக்கிறான். அவளும் அவனும் ஏற்கனவே காதலில் பிணைபட்டவர்கள் என்பதை எனக்கு நன்றாகத் தெரிவிக்கும் வகையில், இரவு நான் ஏதோ காரியமாகக் கீழே வந்த போது சுசீலாவின் பாட்டி, அவள் மூர்த்தியுடன் தனிமையில் வராந்தாவில் நின்று பேசியதற்குக் கடிந்து கொண்டாள். என் மனநிலையை என்னால் விவரிக்கவே இயலவில்லை.

ஏப்ரல் 19 : காலையிலே மூர்த்தி வந்தான். படபடப்பாக அவன் பேசியது, எங்கள் மனஸ்தாபத்தைத் தீர்த்து வைக்கும் முறையில் என்னை அவளை அழைத்துப் போகும்படி தூண்டியது, எல்லாம் நான் கொண்டிருந்த உறுதியைப் பலப்படுத்தும் வகையில் அமைந்து விட்டன. நீங்களும் வருகிறீர்களா?” என்று சுசீலா மூர்த்தியைக் களையிழந்தவளாகக் கேட்பானேன்? ஹேமாவையும் அவனையும் சேர்த்து நான் பரிகாசம் செய்த போது அவன் அப்படி வெறித்து நிற்பானேன்? அவன் நடத்தை எனக்கு, மனமுடைந்த அவளை உறுதிப்படுத்த முயலும் உத்தமக் காதலன் அவன் என்றே அறிவிக்கிறது. என்னையும் அவனையும் பிருந்தாவனத்தில் நிறுத்தி வைத்துப் படம் பிடித்தான் அவன். என் அருகில் குனிந்து நின்ற அவளை நான் ஒரே ஒரு முறை ஆவல் தாங்காதவனாகத் திரும்பிப் பார்த்தேன். மனவேதனை பிரதிபலித்த அவள் முகம் என்னைப் பிளந்து விடும் போல் இருந்தது. நான் தனிமையில் சென்று மனத்தை அமைதி செய்து கொள்ளாது போனால், என் இனமறியாத உணர்ச்சிகளுக்கு நிச்சயம் அடிமையாகியிருப்பேன். அவன் அவளிடம் மன வேதனையைக் கிளர்த்திக் கொண்டிருக்கிறான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. திரும்பி வரும் போது அவன் வலுவிலே காட்டிய உற்சாகம் குன்றிக் களையிழந்தவனாக ஆகிவிட்டான். வரதனுடைய வளவளப்பிலும் நான் அவனைக் கவனியாமல் இருக்க முடியவில்லையே? சுசீலாவுக்குத்தான் இன்னும் எந்த விதத்தில் நான் ஆறுதலளிப்பேன்? என்னுடைய மனத்தை எப்படிக் கட்டுப்படுத்திக் கொள்வேன்?

ஏப்ரல் 21 : நான் என் உறுதியை நிலைநாட்டிக் கொள்ள அவளிடமிருந்து அதிகப் பேச்சு வார்த்தைகளைக் கூடக் கத்தரித்துக் கொள்ளும் முயற்சிக்கு இந்த வரதன் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டே இருக்கிறான். அவன் என்ன கண்டான்? சுசீலாவிடம் வர வர அளவுக்கு மீறி மன்னி அதிகாரம் செலுத்துவதை என்னால் பொறுக்க முடியவில்லை. அவள் தான் எத்தனை பொறுமையும் சகிப்புத் தன்மையும் வாய்ந்தவள்? உள்ளத்தில் ஒருவனைக் கொண்டு, வேற்று ஒருவனுக்காக, வேற்று வீட்டில், வேற்று மக்களுக்காக ஓடி ஓடி வேலை செய்யும் அவள் பொறுமை இன்னும் என்னைப் பித்தனாக்குகிறது. மன்னி கடிந்து கொண்டவுடன் அவளுக்கு எத்தனையோ விதத்தில் ஆறுதல் கூற நான் துடிதுடித்தேன். ஆனால் அநுதாபம் என்று இளகிவிட்டால், ‘தொடாதே’ என்ற அவளுடைய ஆணையை மீறி இன்னும் நான் அவளுக்குத் தீங்கிழைத்து விட்டால்? இரவு அவள் கண்ணீருக்கு முன் நான் கரைந்து போய் விட்டேன். ‘அறியாமல் நான் தவறு இழைத்து விட்டேன். மன்னித்து விடு’ என்று மனம் விட்டுக் கேட்ட பின் அவள் சற்று ஆறுதலடைந்தவள் போல் எனக்குத் தோன்றியது.

ஜூன் 22: அவளைப் பார்த்துக் கொண்டு பாயும் மனத்தைச் சமாதானம் செய்து கொள்வது சிரமமாக இருக்கிறதென்று அப்போது தோன்றுகிறது. ஆனால் கண் முன் காணாத சமயங்களிலோ, கண்டாவது தேறுதல் கொள்ளலாம் போல மனம் துடிக்கிறது. அப்படி நினைத்துத்தான் பித்தனைப் போலக் கோவைக்கு வந்தவன் உதகை புறப்பட்டு வந்தேன். வரதன் வந்ததும் வராததுமாக அவளுடைய சங்கோச மனப்பான்மையைக் குறித்து நான் தெளிய வைக்காததற்காகக் குற்றம் கூறினான். ஒவ்வொரு சிறிய சம்பவமும் எனக்கு, மூர்த்தியும் அவளும் காதலர்கள் என்பதையும் நான் தவறிழைத்தேன் என்பதையும் அறிவுறுத்தும் மாதிரியிலா அமைய வேண்டும்? மூர்த்தியுடன் சங்கோசமின்றிப் பழகும் அவள், இயற்கையாகவே லீலாவைப் போல அந்தச் சுபாவம் படைத்திருந்தால் வரதன் ஏன் இந்தக் குற்றம் சாட்டுகிறான்? மூர்த்தி மேல்நாடு செல்லப் போகிறான் என்று நான் அறிவித்ததும் அவள் முக மலர்ச்சியை முகம் எப்படிக் காட்டியது!

அக்டோபர் 3 : பாவம்! மன நோயைத் தவிர்க்க அவள் தான் கற்றிருக்கும் கலையை விருத்தி செய்து கொள்வதில் ஈடுபட்டிருக்கிறாள். விடியற் காலையிலே என் அருகில் அமர்ந்து அவள் தன் இனிய குரலில் கானம் செய்யும் போது நான் ஒவ்வொரு நாள் மனவெழுச்சியை அடக்கிக் கொள்ள இயலாமல் எழுந்து எங்காவது போய்விடலாமா என்று கூட எண்ணி விடுகிறேன். ஏற்கனவே நொந்த அவள் இருதயத்தை மன்னி கோலிடும் பாவனையில் புண்படுத்தினாள். வீட்டிலே விவரிக்க இயலாத சகிப்புத் தன்மையுடன் நடமாடும் அவள் மீது மன்னிக்கு ஏனோ இத்தனை எரிச்சல்? நானும் அவர்களுடைய கோள்களுக்குச் செவி சாய்த்துப் பொறுமை இழந்து விட்டேன். இனி, தனியாகப் போக வேண்டியதுதான்.

கடைசிக் குறிப்புப் புத்தகம்.

ஏப்ரல் 30 : தனியாக வந்து நாட்கள் ஓடிவிட்டன. ஆயினும் பழக்கத்தில் சாந்தி அடையாமல் இன்னமும் அதிகரித்துக் கொண்டே அல்லவா போகிறது என் கொந்தளிப்பு? மூர்த்தி திரும்பி வரப் போகிறான் என்ற நினைப்பில் அவளுக்கு எத்தனை மகிழ்ச்சி? அவளும் சந்தோஷமடைய வெளி உலகிலே தன் கலையுதவி கொண்டு கலந்து பார்த்தாள். பத்திரிகைகளின் விமரிசனங்களிலிருந்து புகழுங்கூட அவளுக்குக் கிட்டியிருப்பதை நான் காண்கிறேன். இத்தனையிலும் இயற்கையாகச் சந்தோஷம் காணாத பேதையாக இருந்தவள், மூர்த்தி வருவான் என்று அறிந்ததும் மகிழ்வுடன் அலங்கார வேலைகளில் கூடச் சிரத்தை கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

மே 3 : அண்ணாவை விட்டு உத்தியோகத்தினின்றும் விலகி விட்டதைக் கூட சுசீலாவிடம் நான் தெரிவிக்காததைக் குறித்து இன்று லீலா என்னை வெகுவாகக் கடிந்தாள். குடும்பத்திலிருந்து பிரிந்த பின் உத்தியோகப் பிடிப்பினின்றும் சிக்கலறுத்துக் கொண்டால் நலம் என்று பட்டது. வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்ட பின் அதை இழக்காமல் உபயோகித்துக் கொண்டேன். அவளிடம் நெருங்கிப் பேசவே அச்சமுற்ற நான் அசிரத்தையாக இருந்து விட்டதை லீலாவிடம் தெரிவிக்க முடியுமா?

இதற்கு மேல் டயரியில் குறிப்பு எதுவுமே எழுதியிருக்கவில்லை. படிக்கப் படிக்க அனலிட்டுக் காய்ச்சப்படும் மெழுகைப் போல என் உள்ளம் கண்ணீராக உருகியது.

கடினமான ஓட்டை கொண்ட தேங்காயில் இனிய பருப்பும் நன்னீரும் உண்டு என்றறியாது வீசி எறியும் பேதையைப் போல் அவருடைய உவமை கூற இயலாத உள்ளத்தைக் கல் நெஞ்சம் என்று இகழ்ந்தேனே? நான் என் வெறுப்பை அவரிடம் எத்தனையோ முறை காட்டிக் கொண்டேன். எரிந்து விழுந்தேன். தாமாகவே நேர்ந்தவைகளை அவராக வேண்டுமென்று செய்தார் என்று அவரை புண்படுத்தும் முறையிலே அலட்சியம் செய்தேன். அப்பா இறந்து போனபோது வந்திருந்தாரே, அப்போதுதானே நான் அவரை வெகுண்டு, கடிந்து உதாசீனம் செய்தது? அவருடைய மாறுதல் எனக்குக் கற்பித்த பொய்யைப் போன்று, என்னுடைய கண நேரக் குழப்பமும், முட்டாள் நம்பிக்கையின் மூலம் வளர்ந்த ஆத்திரமும் அவர் மனத்திலே எத்தகைய பிரமையை நெய்ய இழையிட்டு விட்டன.

புத்தகம்? எனக்கு அது ஏது, எது என்றே நினைவுக்கு வரவில்லை! லீலா எப்போதாவது, “இது நன்றாக இருக்கிறது சுசீ, உனக்குப் படிக்க என்று கொண்டு வந்தேன்’ என்பாள். படிக்க எங்கே பொழுது இருந்தது? இரண்டு நாட்கள் வைத்திருந்து விட்டோ, பாதி படித்து விட்டோ கொடுத்து விடுவேன். அதுவும் அவர் பிரஸ்தாபித்து இருக்கும் புத்தகம் நான் எப்போதோ படித்ததாகக் கூட நினைவில்லை!

பெரிய பெரிய முத்தர்களாலும் சித்தர்களாலும் கூட மனத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அவர் காதலுக்கு மதிப்புக் கொடுக்கும் வகையிலே எத்தனை உறுதியைக் கைக் கொண்டும் சலனமற்றிருப்பது போலக் காட்டிக் கொண்டிருக்கிறார்? வரதனுடைய அலங்காரச் சொல்லிலே தளர்ச்சி கண்ட நான் அவருடைய மாசற்ற காதல் இருதயத்துக்கு உகந்தவள் தானா? அவர் காலடியில் வீழ்ந்து அவருடைய பாதங்களைக் கண்ணீரால் கழுவினால் கூட நான் மனத்தில் அவரைத் தவறாக நினைத்து இகழ்ந்ததற்குப் பிராயச் சித்தம் ஆகுமா?

செருப்பு ஒலி கேட்டது.

நான் எப்படி அவர் முகத்தில் விழிப்பேன்? குறிப்புப் புத்தகமும் கையுமாகச் சிலையாக அயர்ந்திருந்த நான் நிமிர்ந்து பார்க்கவே கூசிக் குறுகினேன்.

“சுசீ!” என்ற அந்த அன்புக் குரல். பழைய அன்புக் குரல், என் செவிகளில் அமுதத்தை வார்த்தது.

அவர் கரம் என் முகத்தை நிமிர்த்தியது.

“என்னை மன்...னி...ப்...பீர்களா...?”

வார்த்தைகள் தொண்டையில் நிரடின. என் வசமிழந்த நான் அவரது மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குழந்தை போல் தேம்பினேன்.

“சுசீ, தவறு என்னுடையது. நடந்ததைக் கனவென்று மறந்து விடுவோம். அழாதே. பெண்ணுள்ளத்தை நான் புரிந்து கொள்ள ஏதேதோ ரீதியில் சென்று பலத்த துணைகள் கொண்டு ஆராய்ந்ததன் பலன் இது. பட்டுப் புழுவின் கூட்டைப் பார்த்திருக்கிறாயா சுசீ? பட்டு நூல் அதிலே மிக நுண்ணியதாகச் சுற்றப்பட்டிருக்கும். நுனியை மட்டும் ஜாக்கிரதையாக எடுத்து கவனமாகப் பிரித்தால் சுலபமாகப் பிரிந்து விடும். பிரிப்பது மிகவும் கஷ்டம் என்று பார்வையிலேயே தளர்ந்து அளவுக்கு மீறிய சக்தியைப் பிரயோகித்தால் நூல் சிக்குண்டு அறுந்தும் போகும். இந்த வழியிலே நான் சென்று உன்னை எவ்வளவு கொடிய வேதனைக் குள்ளாக்கி விட்டேன் என்பது இப்போதுதான் புலப்படுகிறது. வரதனின் முறை தவறிய நடத்தைக்கும் நானே தான் காரணம். இனி நானும் உன் கலை வளர்ச்சியில் ஒத்துழைக்கிறேனா இல்லையா, பாரேன்?”

நான் சட்டென நிமிர்ந்தேன். “நான் இசை நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இயலாது என்று தெரிவித்து விடப் போகிறேன். மூர்த்தியைப் போலத் தூய மனம் படைத்தவர்களாகவே வெளி உலகிலே தலை நீட்டும் பெண்களை எல்லாரும் மதித்து விடுவதில்லையே? இந்த அபாயம் தெரிந்த பின்னும் நான் உணராமல் நடப்பது ஆபத்து!” என்று கூறிய நான் அவருடன் மூர்த்தி வரவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன்.

“மூர்த்தி எங்கே? அப்படியே போய்விட்டானா என்ன?”

“வழியில் யாரோ நண்பன் அகப்பட்டான். இருவருமாகப் பேச்சில் இறங்கினார்கள். நான் வந்து விட்டேன். நீ அப்படிப் பின் வாங்கி விடக் கூடாது சுசீலா! கலை வளர்ச்சி, ஆண், பெண் இருவரும் ஒத்துழைக்க வேண்டிய துறை. வரதன் இனியும் அம்மாதிரி நடக்க நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? நீ தான் அவனுக்கு வேண்டியபடி கடும் சொற்களால் வெருட்டி அடித்தாயே? இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்துவிட்டு, விட்டு விடுவது கோழைத்தனம்.”

விலை மதிப்பற்ற முத்துச் சிப்பியைக் கிளிஞ்சல் என எண்ணி அவமதித்தேனே? நான் எத்தனை தரம் நொந்து கொண்டாலும் சமாதானமாகுமா?

“லீலாவுக்குத் தந்தி கொடுக்கலாம் என்று எண்ணித்தான் அவனையும் அழைத்துப் போனேன். பேசிக் கொண்டே சென்றதில் விலாசம் கொண்டு போக மறந்தது தெரியவில்லை. உனக்குத்தானே கடிதம் எழுதியிருந்தாள்? எங்கே அது? மூர்த்தி ஆயிரத்தில் ஒருவன், சுசீ! வரதனை நான் எவ்வளவோ உயர்வாக மதித்திருந்தேன். ஆனால் கிட்ட நெருங்கிப் பார்த்தால் தான் வைரத்தின் ஜாஜ்வல்யமும் போலிக் கல்லின் தன்மையும் தெரியவரும்.”

அவர் கூறிக் கொண்டே இருக்கையிலே, “அதற்குள் வந்துவிட்டாரா என்ன? தெருவிலே என்னை நிற்க வைத்து விட்டுக் குடுகுடுவென்று வந்து விட்டார் சுசீலா! நான் என்ன சொன்னேன்?” என்று கேட்டவாறு மூர்த்தி வந்து விட்டான்.

“நீ பேசிக் கொண்டிருக்கையிலே நான் லீலாவின் விலாசத்தைக் கேட்டு வாங்கி வரலாம் என்று தான் ஓடி வந்தேன்!” என்று அவனைப் பார்த்து முறுவலித்தார் என் கணவர்.

“சுசீலா, பெண்மையை அவர் போற்றவில்லை, காதலுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்று நீ குற்றம் சாட்டினாய். அவர் எல்லாவற்றிலும் ஒரு படி மிஞ்சி விட்டார்! தபாலாபிஸுக்கு என்று எதற்காக அழைக்கிறாரோ என்று போனவனை எங்கெல்லாமோ சுற்ற வைத்து அவர் உன்னைப் புரிந்து கொண்ட லட்சணத்தைச் சொல்ல ஆரம்பித்ததிலிருந்து எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வருகிறது. லீலாவின் விலாசம் இதோ என்னிடம் இருக்கிறது! என்னிடம் கேட்காமல் அதற்காக சுசீயிடம் ஓடி வந்தீர்களாக்கும்?” என்று சட்டைப் பையிலிருந்து நான் கொடுத்த அவள் கடிதத்தை எடுத்துக் காட்டிய மூர்த்தி, “நீங்கள் ஞாயிற்றுக்கிழமையும் தானுமாக இன்று தந்தி கொடுக்கவா கூப்பிட்டீர்கள்? கோபித்துக் கொண்டு காசி யாத்திரை சென்றிருக்கும் பெண்ணைப் புது நாளைய மாப்பிள்ளையாக லட்சணமாக நானே அடுத்த வாரம் போய் அழைத்து வரப் போகிறேன்!”

நாங்கள் இருவரும் அவனுடன் சேர்ந்து மனம் விட்டு நகைத்தது, அறையிலே கலகலவென ஒலித்தது.

முடிவுரை

இசையுலகில் சுடர்விடும் நட்சத்திரமாக ஒளிரும் ஸ்ரீமதி சுசீலா ராமநாதன் ஏற்கனவே எனக்குப் பழக்கமானவள் என்பதை எப்படியோ அறிந்திருந்த பெண்கள் சங்கக் காரியதரிசி, அவள் கோடைக்காக உதகைக்கு வந்திருக்கிறாள் என்று அறிந்ததிலிருந்து சங்கத்தின் கட்டிட நிதிக்காக உதவும் ஓர் சங்கீதக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யக் கோரி என்னைத் தொந்தரவு செய்தாள். எனவே நான் சுசீலாவைத் தேடிப் போனேன். நான் எங்கள் சங்கத்தைப் பற்றி அவளிடம் பேச்சை ஆரம்பித்ததுதான் தாமதம் - கோபம் அவளுக்கு அசாத்தியமாக வந்து விட்டது. “ஓகோ! பெண்கள் முன்னேற்றத்துக்காகக் கைப்பையைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக ஏறி இறங்கி உதவிக் கச்சேரிக்கு டிக்கெட் விற்பனை செய்து உழைக்கும் பெண்கள் திலகங்களில் நீயும் ஒருத்தியா?” என்று எடுத்த எடுப்பில் அவள் கேட்டதும் நான் அயர்ந்து போய் விட்டேன்.

அவள் அத்துடன் விடவில்லை.

“ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்கள் ஏற்றத் தாழ்வு மனப்பான்மைகளைக் களைந்து ஒற்றுமையுடன் குடும்பப் படகை வலித்துச் செல்வது தான் பெண்கள் முன்னேற்றத்தில் முதல் முக்கியமான அம்சம் என்று தெரியுமா உங்களுக்கு? வெளி உலகில் வந்து ஆண்களுடன் சரிசமமாகப் போட்டியிடும் நீங்கள், அப்படிப் பழகும் போது ஏற்படும் சுழல் போன்ற அபாயங்களிலே அகப்படாமல், பெண்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் துறைகளிலே முன்னேற வழி சொல்வீர்களா?” என்றெல்லாம் ஆவேசமாக அடுக்கிக் கொண்டு போனவள், விடுவிடென்று உள்ளே சென்று, ஒரு காகிதக் கற்றையைக் கொண்டு வந்து என் முன் போட்டாள்.

“இதைப் படித்துப் பார்! பொய்யும் புனை சுருட்டுமாக நீயும் எழுதுகிறாயே? இந்தக் கதையைப் படித்துவிட்டு எப்படி இருக்கிறதென்று சொல்!” என்றாள்.

அந்தக் கதைதான் பெண் குரல்.

ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு நான் மறுநாளே சுசீலாவைத் தேடிப் போனேன். என்னைக் கண்டதுமே வேலைக்காரன் ஒரு கடித உறையை நீட்டி, “அம்மாவும் ஐயாவும் காலமே மைசூர் புறப்பட்டுப் போனாங்க. உங்களிடம் இந்தக் கடிதாசைக் கொடுக்கச் சொன்னாங்க” என்றான்.

நான் பரபரப்பாக உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுக்கப் போனேன். ஒரு திருமண அழைப்பிதழ் கீழே விழுந்தது. அழைப்பிதழின் முகப்பிலே, சௌ. ஹேமா - சிரஞ்சீவி வரதராஜன் என்ற ஆங்கில எழுத்துக்கள் மின்னின.

வியப்புடன் கடிதத்தைப் பிரித்தேன்.

“கல்யாணத்துக்குத்தான் புறப்பட்டுப் போகிறோம். நாளது ஜூன் 10ந் தேதி மணமக்கள் இங்கு வருகிறார்கள். வரவேற்பு வைபவத்துக்கு அவசியம் வந்து சேர். பெண் குரலில் நீ சந்தித்த, மூர்த்தி, லீலா மற்றும் எல்லோரையுமே அநேகமாக நீ நேர் அறிமுகம் செய்து கொள்ள முடிவதுமின்றி, பிரபல் டென்னிஸ் நட்சத்திரமான ஹேமாவும் வரதனும் காதல் மணம் புரிந்து கொள்வதற்குக் காரணமான விவரங்களையும் அறிய முடியும். அதற்குக் கண், காது, மூக்கு வைத்தாயானால் ஒரு கதையாகுமே உனக்கு” என்று சுசீலா எழுதியிருந்தாள். நான் உள்ளூற நகைப்பும் மகிழ்ச்சியுமாக வீடு திரும்பினேன்.