periya malaiyil vaalzum siriya paravai

பெரிய மலையில் வாழும் சிறிய பறவை

மீரா புதிய காலணிகளை வாங்குவதற்காகச் சந்தைக்குப் போய்க்கொண்டிருந்தாள். அவள் தன் அம்மா மற்றும் தம்பி ராஜேஷுடன் போகும் வழியில், ஒரு காயம்பட்ட பறவையைக் கண்டு அதைக் காப்பாற்றுகிறாள். கதையின் போக்கு உயிருள்ள காட்சிகளாலும், மலைநாட்டு வாழ்க்கையின் மெல்லிசையாலும் நிறைந்துள்ளது.

- Thilagavathi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மீரா ஒரு சிறிய கிராமத்தில் வாழ்கிறாள். அது இமாச்சல பிரதேசத்தில் மலையின் உச்சியில் உள்ளது. அவளது சமையலறைச் சன்னல் வழியே பனிபோர்த்திய மலைகளைப் பார்க்கலாம். தங்க நிற இறக்கைகளைக் கொண்ட மிகப் பெரிய பருந்துகள் அவர்களது வீட்டுக்கு மேல் அடிக்கடி பறந்து செல்லும்.

“நான் வளர்ந்து பெரியவளாகி, உயரமான பிறகு ஒரு நாள், அந்த மிக உயர்ந்த சிகரத்தின் மீது ஏறி, மலையின் மறுபக்கத்தைப் பார்க்க வேண்டும்” என்று மீரா ஆசைப்பட்டாள்.

ஆனால் இன்று, மீராவும் அவளது தம்பி ராஜேஷும், அம்மாவுடன் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் புதிய காலணிகளை வாங்குவதற்காகச் சந்தைக்குப் போய்க்கொண்டிருந்தனர். நகரம் தொலைவிலிருந்தாலும், மீரா அதைப் பொருட்படுத்தவில்லை. அவள் தினமும் பள்ளி செல்வதற்காக ஒரு மணி நேரம் நடப்பவள் தான்! விடியற்பொழுதிலேயே அவர்கள் கிளம்பி விட்டனர். பிரதான சாலையை அடைய அவர்கள் இரண்டு மணி நேரம் நடக்க வேண்டும். அதன் பிறகு பேருந்தில் செல்ல வேண்டும்.

சில நேரங்களில், செல்லும் வழியில் வழித்தடங்கள் காணாமல் போயிருக்கும். அதனால், பாறைகளில் சறுக்கிக்கொண்டே செல்வார்கள். மீராவும் ராஜேஷும், “ஹே!” என்று கத்தி கொண்டே பாறைகளின் மீது குதித்தோடினர்.

வழியில் அவர்களது பாதங்களின் கீழே, காய்ந்த இலைச்சருகுகளும், சிறு மரத்துண்டுகளும், “சரக்... சரக்…” என ஒலி எழுப்பின.“கிரீ... கிர்... கிரே!” என ஒரு சிறிய பச்சை நிற கூக்குருவான் பறவை புதருக்குள்ளிருந்து அழைத்தது. ஊசியிலை மரங்களிலிருந்து மந்திகளின் கூட்டம் அமைதியாக அவர்களைக் கவனித்தன.

அவர்கள் செல்லும் வழியில் பெரணிச் செடிகளுக்கும்  பாறைகளுக்கும் இடையே மறைவாக இருந்த ஒரு நீரூற்றிலிருந்து நீர் பருக மீரா நின்றாள். திடீரென்று, அவள் அங்கே ஒரு சிறிய பறவையைக் கண்டாள். அது பெரணிச் செடிகளின் மீது படுத்துக்கொண்டிருந்தது.

“பாவம்! அதற்கு இறக்கையில் காயம் பட்டிருக்கிறது” என்றார் அம்மா. அதை மிருதுவாகத் தன் கையில் எடுத்துக்கொண்டார்.

“அம்மா! இவனை நம்முடன் எடுத்துச் செல்லலாமா?” என மீரா கேட்டாள். அது புள்ளிகள் கொண்ட ஒரு இரட்டைவால் பறவை.

அந்தப்பறவை அவர்களை தன் சிறு கண்களால் பயத்துடன் பார்த்தது. மீரா அதனிடம், “கவலைப்படாதே” என்று மென்மையாகச் சொன்னாள்.

‘முதலில் அதன் இறக்கையைச் சரி செய்கிறேன்’ என்றார் அம்மா. அவர்கள் ஈரமண்ணை இறக்கையின் மீது வைத்து, ஒரு பெரிய இலையால் பறவையைச் சுற்றினார்கள்பின்னர், மீரா அப்பறவையை தன்னுடைய துணிப்பைக்குள் வைத்துக்கொண்டாள்.

அவர்கள் பிரதான சாலையை அடைவதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. பேருந்தில் போய்க்கொண்டிருக்கும் போது மீரா, பறவை பைக்குள் அசைவதை உணர்ந்தாள்.

“ஒருவேளை அதற்குப் பசியாக இருக்கும்” என்றார் அம்மா. உடனே, ராஜேஷ், “எனக்கும் தான்” என்றான்.

அவர்கள் வறுத்த கடலையை சாப்பிட்டார்கள். மீரா, அவைகளில் கொஞ்சம் எடுத்துப் பொடித்து பறவைக்கும் கொடுத்தாள். அந்தப் பழைய பேருந்து, வளைந்து செல்லும் மலைப்பாதையில் உருண்டோடியது.

நகரம் இரைச்சலாகவும், சந்தடி மிகுந்தும் இருந்தது.

“மீரா, ராஜேஷ்! என்னருகிலேயே இருங்கள்!” என்றார் அம்மா. அவர்கள் ஒருவரது கையை ஒருவர் இறுக்கமாக பிடித்துக்கொண்டு சென்றனர்.

கடைத்தெருவில், மீராவுக்கு ஒரு ஜோடி புதிய ஷூக்களை வாங்கினார்கள். அம்மா அவர்களுக்காக இனிப்புக்கடையில்  சில சூடான ஜிலேபிகளையும் வாங்கினார்.

மீரா அந்தப் பறவைக்கு ஒரு சிறு துண்டு ஜிலேபியைக் கொடுத்தாள். ஆனால் அதற்கு அது பிடிக்கவில்லை. பதிலாக அது துணிப்பையைக் கொத்தியது.

விரைவில் அவர்கள் வீடு திரும்ப பேருந்தில் ஏறும் நேரமும் வந்தது. பேருந்து மலைகளின் வளைவிற்கேற்ப ஊசலாடிக் கொண்டே சென்றது. மீரா அவளது பையிலிருந்து வந்த பறவையின் 'கிரீச்' ஒலியைக் கேட்டாள்.

“நாம் விரைவிலேயே நீரூற்றை அடையலாம்” என அவள் மிக மெதுவான குரலில் பறவையிடம் கூறினாள். நீரூற்றிற்கு அருகே வந்தவுடன் பறவையை வெளியே விட்டாள். அது சிறிதே நொண்டிச் சென்று தண்ணீர் குடித்தது.

அதன் பிறகு மீராவின் காலருகே வந்தமர்ந்தது. அந்தப் பறவைக்கும் அவளது புதிய காலணிகளைப் பிடித்திருந்தது போலும்!

அவர்கள் வீட்டை அடையும்போது மிகவும்  இருட்டத் தொடங்கியிருந்தது. மீரா, சிறிது வைக்கோலினால் பறவைக்கு மிருதுவான படுக்கையை தயார் செய்தாள். பறவை அதன் புதிய படுக்கையில் உறங்கச் சென்றது.

மீராவும் அந்தப் பறவையும் நல்ல நண்பர்களாயினர். மீரா அதற்கு அரிசிக்குருணையும், சுண்டல் கடலையும் சாப்பிடக் கொடுத்தாள்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, அந்தப் பறவை திடீரென்று பறந்து சென்று விட்டது.

ஒவ்வொரு முறையும் மீரா மலையிலிருந்து கீழே இறங்கும் போதெல்லாம் கருப்பு வெள்ளைப் புள்ளிகளோடு நீண்ட வாலுடைய ஒரு பறவையைப் பார்க்கிறாள்.

அது அவளைப் பார்த்ததும் தன் தலையை அசைத்து ‘கீரிச்’சிடும். இது அதே பறவையாய் இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்களா?