ப்ரேம் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள நகராட்சிப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படித்து வந்தான்.
அவனுடைய ஆசிரியர் எப்பொழுதும் புதிய யுக்திகளை யோசித்துக் கொண்டிருப்பார்.
ஒரு நாள் அவர், மாணவர்களிடம் ஒரு காலி தீப்பெட்டியைக் கண்டுபிடித்து நிரப்பிக் கொண்டு வரச்சொன்னார்.
“ஒரு வாரத்தில் எவ்வளவு விதவிதமானப் பொருட்களை நிரப்ப முடிகிறதோ, அவ்வளவு நிரப்பி வாங்க. அடுத்த வாரம் யார் மிக அதிக அளவில் விதவிதமான பொருட்களை நிரப்பி வருகிறார்களோ, அவர்களுக்கு ஒரு பரிசு கிடைக்கும்.“
ப்ரேமிற்கு அந்த யோசனை பிடித்திருந்தது.
அவன் வீட்டில், அழிப்பானையும், பென்சில் கூர் கருவியையும் தீப்பெட்டியில் வைக்க முயற்சி செய்தான். இரண்டில் ஒன்றை மட்டுமே வைக்கமுடிந்தது. அவை பெரிதாக இருந்தன.
அவன் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவனுடைய பென்சில் ஊக்கு உடைந்து விழுந்தது. அதை அவன் தீப்பெட்டியில் போட்டான்.
பென்சிலை சீவும் பொழுது கிடைத்த மரத்துகள்களையும் தீப்பெட்டியில் போட்டான்.
அதிலிருந்து ப்ரேம் மிகச் சிறிய பொருட்களை கவனமாகப் பார்க்க ஆரம்பித்தான்.
ப்ரேமினுடைய அம்மா அவல் சமைக்கும் வாசனை வந்ததால் அடுப்படிக்குச் சென்றான். அங்கு அவன் கடுகு, சீரகம், மிளகாய் விதை முதலியவற்றைப் பார்த்தான். இவற்றோடு சர்க்கரைத் துகள், அரிசி, கோதுமையை தீப்பெட்டியில் சேர்த்துக்கொண்டான்.
மேலும் சோள விதை, சிறுதானியங்கள், பாசிப்பயறு, மற்றும் பருப்பு வகைகளையும் சேர்த்துக்கொண்டான்.
அடுத்த நாள், அவன் ஒரு ரப்பர் பேண்டு, சிறிய கம்பளி நூல், ஒரு முடி, சிறிய நூல் ஆகியவற்றைப் போட்டான்.
ப்ரேம் இப்பொழுது மிக நுணுக்கமான பொருட்களைப் பார்க்க ஆரம்பித்தான்.
பின்னர், அவன் ஒரு ரோஜா முள், சூரியகாந்தி இதழ், சிறு குச்சி, தேயிலை, புளிய மர இலை, மற்றும், ஒரு சிறு கல்லை தீப்பெட்டியில் எடுத்துக்கொண்டான்.
தீப்பெட்டியில் இன்னும் இடம் இருந்தது. அதனால் ப்ரேம், ஒரு சிறு காகிதம், குண்டூசி, ஊசி, பாசி, ஆனி மற்றும் சிறு பட்டனையும் போட்டான்.
இன்னும் தீப்பெட்டி நிறையவில்லை. கடைசி நாளில் ப்ரேம், எலுமிச்சை விதை, ஆரஞ்சு விதை, மற்றும் பூசனி விதையை சேர்த்துக்கொண்டான். இப்பொழுது தீப்பெட்டி நிறைந்துவிட்டது. இதற்கு மேல் ஒன்றும் போட முடியாது.
பள்ளியில், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் தீப்பெட்டியில் உள்ள பொருட்களை எண்ணினார்கள்.
சிலர் ஐம்பது பொருட்களைச் சேர்த்து இருந்தார்கள். ஒரு குழந்தை நூறுக்கும் மேலான பொருட்களைச் சேர்த்திருந்தது.
ப்ரேமின் முறை வந்தது. அவன் தீப்பெட்டியைக் குலுக்கி காண்பித்தான். அதிலிருந்து ஒரு சத்தமும் வரவில்லை. ஏனென்றால் அதில் பொருட்கள் அடைத்துக் கொண்டிருந்தன.
அவன் தீப்பெட்டியிலிருந்த பொருட்களைக் காண்பித்த பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
அவன் தீப்பெட்டியில் 150 சிறு பொருட்களைச் சேர்த்திருந்தான். யாருமே அவன் எண்ணிக்கைக்கு பக்கத்தில் இல்லை.
அதனால் ப்ரேம் ஒரு புதிய க்ரேயான் பெட்டியை பரிசாகப் பெற்றான்.