peyar paadum paravaigal

பெயர் பாடும் பறவைகள்

பறவைகளுக்கு எப்படி பெயர் வைக்கிறாங்க தெரியுமா? பறவைகளோட நிறம், உருவம், அவை சாப்பிடும் இரை இதையெல்லாம் வைத்து பெயர் குடுப்பாங்க. சில பறவைகளுக்கு அதோட குரலையும் பாடுற விதத்தையும் வைத்தும் பெயர் குடுப்பாங்க. வாங்க அந்த மாதிரி தன்னோட பெயரையே சொல்லிப் பாடுகிற சில பறவைகளை சந்திக்கலாம்.

- Panchapakesan Jeganathan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நம்ம முடியோட நீளம், உடம்பின் நிறம், பேசுற விதம் இதையெல்லாம் வச்சு நமக்கு பெயர் குடுத்தா எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே ரொம்ப வேடிக்கையா இருக்குமில்லையா?

ஆனா பறவைகளை ஆராய்ச்சி பண்றவங்க என்ன பண்ணினாங்க தெரியுமா? பறவைகளுக்கு எல்லாம் அதனோட அலகு நிறம், கால் நீளம், இறக்கையின் நிறம், நீளம் இதையெல்லாம் பார்த்து பெயர் வச்சாங்க!

ஒரு வகை உள்ளான் பறவைக்கு கால் பவள நிறத்தில் அதாவது சிவப்பு நிறத்தில் இருக்கும். அதன் பெயர் பவளக்கால் உள்ளான். ஒரு வகை புறாவிற்கு உடலில் புள்ளிகள் இருக்கும். இந்தப் புள்ளிகள் மணியைப் போல தோன்றுவதால் இதற்கு மணிப்புறா எனப் பெயர். பஞ்சுருட்டான் என்று தமிழில் நாம் சொல்லும் பறவையின் ஆங்கிலப் பெயர் Green Bee-eater. இந்தப் பறவையின் உடல் பச்சையாகவும், அது பூச்சிகளையும், தேனீக்களையும் பிடித்து சாப்பிடுவதால் இப்பெயர்.

பாடும் விதத்தை வைத்தும் சில பறவைகளுக்கு பெயர் கொடுப்பாங்க.

குயில் இனிமையாக கூ...கூ...எனக் கூவும் இல்லையா? கொஞ்சம் கவனித்து கேட்டால் அதே பறவை கோ…யேல்……கோ…யேல்……கோ…யேல் எனக் கத்துவதையும் கேட்கலாம். இதனால் தான் இந்த பறவையின் ஆங்கிலப் பெயர் Koelனு வைத்துவிட்டார்கள்

இந்தப் பறவைகள் தம் பெயரையே பாட்டாகப் பாடும்!

இது போலவே பெயர் உள்ள இன்னும் சில வகைப் பறவைகளையும் நாம் பார்க்கலாம்.

இமயமலைப் பகுதிகளில் தென்படும் குயில் வகைப் பறவை எப்படி கத்தும் தெரியுமா? கக்...கூ... கக்...கூ... கக்...கூ... அப்போ இதன் ஆங்கிலப் பெயர் என்ன? Cuckoo கக்கூ தான்.

தலையில் உள்ள சிறகுகளை சிலுப்பிக் கொண்டு தரையில் மண்ணைக் குத்திக் குத்தி பூச்சியையும், புழுவையும் சாப்பிடுமே கொண்டலாத்தி அதன் குரலை கேட்டதுண்டா? ஊப்... ஊப்... ஊப்...... ஊப்... ஊப்... ஊப்...... ஊப்...... எனக் கத்தும். தூரத்தில் இருந்து கத்தினால் கூட இவற்றின் குரலை நாம் தெளிவாகக் கேட்கலாம். இப்படி கத்துவதாலேயே இதன் அறிவியல் பெயரை Upupa epops என்று வைத்து விட்டார்கள்.

நம் எல்லாருக்கும் தெரிந்த ஒரு பறவை காகம். இதை நாம் காக்கா என்றுதான் சொல்லுவோம். ஏன்? அது கா...கா...கா என்று கத்துவதால்தானே?

நம் காக்காவிற்கு பல இந்திய மொழிகளிலும் அவை கத்தும் விதத்தை வைத்தே பெயரிட்டுள்ளார்கள்.

தெலுங்கில் காக்கி

ஹிந்தியில் கவ்வா

அஸ்ஸாம் மொழியில் காவ்ரி

வங்காள மொழியில் காக்

கவுதாரியின் ஹிந்தி பெயர் என்ன தெரியுமா? தீத்தர். ஏன் அப்படி? அது கத்துவதைக் கேட்டால் இப்படித்தான் இருக்கும்...கத்-தீத்-தர்... கத்-தீத்-தர்... கத்-தீத்-தர். நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும் ஆள்காட்டி பறவைக்கு தெலுங்கில் உத்துத்தி....ஏன்னா அவை கத்துவது உத்..உத்...துத்தி...... உத்..உத்...துத்தி...... என கேட்கும்.  நம்ம ஊரில் உள்ள ஒரு வகையான குயில் இரவும் பகலும் கூவிகிட்டே இருக்கும். அது கூவுவது அக்கா...அக்கா...அக்கா என்பது போல கேட்கும். அதனாலேயே அதுக்கு அக்கா குயிலுன்னு பெயர் வைச்சாங்க.

நமக்கெல்லாம் செல்லப் பெயர்கள் இருப்பது போல பறவைகளுக்கும் உண்டு.

செம்மூக்கு ஆள்காட்டி Red-wattled Lapwing கத்துவதை தெலுங்கில் உத்துத்தி என்று சொல்வது போல, ஆங்கிலத்தில் Did-he-do-it? Did-he-do-it? Pity-to-do-it என்று சொல்வார்கள்.

அதுபோலவே அக்கா குயிலை Brain Fever bird என்பார்கள். அதாவது அது கத்துவது Brain Fever...Brain Fever... என்று உச்சரிப்பது போல இருப்பதால் அந்தப் பெயர்.

இன்னுமொரு குயில் வகையான இந்திய குயில் Indian Cuckoo கூவுவது ஆங்கிலத்தில் one more bottle… one more bottle… என்பது போல இருப்பதாகச் சொல்வாங்க.

மரங்கள் அடர்ந்த வனப்பகுதிகளில், பொதுவாக தரையில் தென்படும் தவிட்டுக்குருவி வகைப் பறவையான Puff-throated babblerன் சீழ்க்கை ஒலி ஆங்கிலத்தில் I’ll beat you…I’ll beat you… என்று சொல்வது போல இருக்கும்!

அதுபோலவே Brown-cheeked fulvetta எனும் வனப்பகுதிகளில் தென்படும் சிறிய பறவையின் குரலொலியை ஆங்கிலத்தில்

Daddy... chocolate..

Daddy...chocolate...

Daddy give me chocolate...

என்று எழுதுவார்கள். வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

சரி, இப்போ உங்கள் வீட்டுக்கு, பள்ளிக்கு அருகே இருக்கிற பறவைகளின் குரலை கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள்.

அந்தப் பறவைகளோட குரலைக் கேட்கும் போது உங்களுக்கு என்ன வார்த்தைகள் தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்களோட நண்பர்களிடமும் அதை சொல்லுங்கள். பின்னாளில் ஒரு வேளை நீங்கள் அந்தப் பறவை பாடும் போது நேரில் பார்த்தால் அந்தப் பறவையை சரியாக அடையாளம் காணலாம். அதற்குப் பிறகு உங்களுக்கு அந்தப் பறவையின் பெயர் மறக்கவே மறக்காது!