அழகியநம்பி மாடியின் உட்பகுதியிலிருந்து மொட்டை மாடிக்குச் செல்லும் மரப்படிகளில் வேகமாக ஏறினான். தடதடவென்று எழுந்த மரப்படிகளின் ஓசை மாடியெங்கும் அதிர்ந்தது.
அழகிய நம்பி மொட்டை மாடியின் திறந்த வெளியில் நின்று கொண்டு சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான். தண்ணீர், தண்ணீர்; ஒரே தண்ணீர் மயம்; நாலா பக்கங்களிலும் செந்நிறப் புதுநீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வயல்கள், வரப்புகள், சாலை, தோப்பு, துரவு, - ஒரு இடம் மீதமில்லை! எங்கும் வெள்ளம்.
நான்கு புறமும் மலைத் தொடர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கில் அமைந்த சிற்றூர் அது. தாமரை இதழ்களுக்கு நடுவே இருக்கும் பொகுட்டைப் போல் மலைச் சிகரங்கள் ஊரை அரவணைத்துக் கொண்டிருந்தன.
சுற்றுப்புறத்து மலைத் தொடர்களிலும் பள்ளத்தாக்கிலும் ஒரு வாரமாக இடைவிடாத மழை. வானத்து மேகங்களுக்குத் திடீரென்று கொடைவெறி பிடித்துவிட்டதோ என்று சொல்லத்தக்க விதத்தில் மழை அளவற்றுப் பெய்திருந்தது. அதன் விளைவுதான் ஊரையே திக்குமுக்காடச் செய்த இந்தப் புது வெள்ளம். சாதாரண நாட்களிலேயே குளிருக்குக் கேட்க வேண்டாம். ஒரு வாரமாகச் சூரியன் முகத்தையே காண முடியாத நிலையில் கூண்டில் அடைப்பட்ட புறாக்களைப் போல மனிதர்கள் வீடுகளில் அடைப்பட்டுக் கிடந்தார்கள். அவ்வளவு குளிர். பக்கத்து நகரங்களிலிருந்து அந்தப் பள்ளத்தாக்கிற்கு வரும் போக்குவரத்து சாதனங்கள் நின்றுபோய்ப் பத்து நாட்களுக்கு மேலாயிற்று. சாலைகளெல்லாம் உடைப்பிற்கும் அரிப்பிற்கும் இலக்காகியிருந்ததால் போக்கு வரவு எப்படி நடக்க முடியும்? சகல விதத்திலும் அந்தச் சின்னஞ்சிறிய கிராமம் உலகத்தின் பிற பகுதிகளோடு தொடர்பு பெற முடியாத தீவைப் போலத் துண்டிக்கப்பட்டிருந்தது. ஊருக்கு வரவேண்டிய தபால்கள் வரவில்லை. ஊரிலிருந்து வெளியிடங்களுக்குப் போகவேண்டிய தபால்கள் போகவில்லை.
மழை பெய்தவுடன் பருவகாலத்தில் வழக்கமாக நடைபெற வேண்டிய விவசாய வேலைகளும் தடைப்பட்டு நின்று போயிருந்தன. உள்ளங்காலைப் பதிப்பதற்குக்கூட இடமில்லாமல் எல்லா இடங்களிலும் இடுப்புத் தண்ணீர் நிரம்பியிருக்கும் போது என்ன தான் செய்ய முடியும்? நாற்றங்கால்களில் நடுகைக்காகப் பயிரிட்டு வளர்த்திருந்த நாற்று, தண்ணீர்ப் பெருக்கினுள் அழுகிக் கொண்டிருந்தது.
அவ்வளவு தண்ணீரும் வற்றித் தரை கண்ணுக்குத் தெரிந்தாலும், பத்து நாள் வெயிலில் காய்ந்தாலன்றி உழவுக்கு ஏர் பூட்ட முடியாது.
மண்ணில் புடைத்தெழுந்த கருநீலப் பசும்பந்துகளைப் போல ஊரைச் சுற்றிலும் தென்பட்ட மலைச் சிகரங்களையும் அவற்றில் பால் வழிவதுபோல் படர்ந்திருக்கும் மேகச் சிதறல்களையும் பார்த்த போது, அவன் இதயத்தில் ஏதோ ஒரு பெரும்பாரம் தோன்றி அழுத்துவது போல் தோன்றியது. விநாடிக்கு விநாடி அந்த உணர்வு பெரிதாக விசுவரூபமெடுத்தது. மனம் கனத்தது. உணர்வுகள் சுமையாயின.
கீழே ஈரமும் பச்சைப் பாசியும் படிந்திருப்பதைக்கூடக் கவனிக்காமல் அப்படியே மொட்டை மாடியின் தளத்தில் உட்கார்ந்து கொண்டான். காலமும், கோடையும், தவறாமல் நீரைப் பொழிந்து ஊரின் கழுத்தில் பக்கத்துக்கு இரட்டை வடமாக மல்லிகை மாலையிட்டதுபோல இரண்டு பெரிய ஜீவ நதிகளை அளிக்கும் அந்த மலை; வருடத்துக்கு மூன்று போகத்துக்குக் குறையாமல் போட்டதைப் பொன்னாக்கிக் கொடுக்கும் அந்தப் பூமி, எப்பொழுதும் கோடைக்கானல், உதக மண்டலம் போலக் குளிர்ச்சியாயிருக்கும் அந்த ஊர், மழைக்காக இருண்டு சூல் கொண்டிருக்கும் வானம், - இவையாவும் அப்போது அந்த விநாடியில் அவனைப் பார்த்துத் தங்களுக்குள் மர்மமாக - மௌனமாகக் கேலி செய்வதுபோல் அவனுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று.
அவனுடைய அப்பன், பாட்டன், முப்பாட்டன், - எல்லாரும் வாழ்ந்து குப்பை கொட்டிக் கடைசியில் எந்த மண்ணில் கலந்தார்களோ, - அந்த மண்ணிலிருந்து அவன் போகப் போகிறான். ஆம்! வெகு தூரத்திற்குப் போகிறான். கண்காணாத சீமைக்குப் போகிறான். மழை பெய்து ஊரை இப்படி வெள்ளக்காடு ஆக்கியிரா விட்டால் நான்கு நாட்களுக்கு முன்னேயே அவன் தூத்துக்குடிக்குப் போய்க் கப்பலேறியிருப்பான். மழையும், வெள்ளமும், ஊரைவிட்டு வெளியேற முடியாதபடி பிரயாணத்தைத் தடைசெய்து விட்டன.
"இன்னும் இரண்டு நாட்களிலேயேயாவது வெள்ளம் வடிந்தால்தானே ஊரைவிட்டுப் புறப்படலாம்! பிரமநாயகம் தூத்துக்குடியில் எனக்காகக் காத்துக்கொண்டிருப்பாரே. என்ன காரணத்தால் நான் வரவில்லை என்று தெரியாமல் என்னைத் திட்டிக் கொண்டிருக்கப் போகிறார். மனிதர் முன் கோபக்காரர் ஆயிற்றே. 'வெள்ளம் வடிந்ததும் புறப்பட்டு வந்துவிடுகிறேன் கோபித்துக் கொள்ளாதீர்கள்.' - என்று ஒரு தபால் எழுதக் கூட வழியில்லாமலிருக்கிறது. வெள்ளத்தால் தபால் போக்குவரவே நின்றுவிட்டதே! 'வெட்டிப்பயல்! இவன் எங்கே நம்மோடு அக்கரைச் சீமைக்கு வரப்போகிறான். சும்மா வார்த்தைக்குச் சரி என்று சொல்லியிருக்கிறான். வீட்டிலே அம்மாவும் தங்கையும் ஏதாவது சொல்லிப் பயமுறுத்தித் தடுத்திருப்பார்கள்.' - என்று நினைத்துப் பிரமநாயகம் கப்பலேறிப் போயிருந்தால் என்ன செய்வது?" - இந்தச் சந்தேகம் ஏற்பட்டதோ இல்லையோ, அழகியநம்பியின் சிந்தனை தடைப்பட்டது. 'பிரமநாயகம் கப்பலேறிப் போயிருந்தால்...?' என்று நினைக்கும் போதே தன் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி பயங்கரமாகப் பெரிதாக உருவெடுத்து நின்றது.
பிரமநாயகம் அவனுக்குத் தூரத்து உறவினர். பெரிய வியாபாரி. தூத்துக்குடியில் இரண்டு மளிகைக் கடைகள் இருந்தன. நாலைந்து வருடங்களுக்கு முன் வியாபாரம் நொடித்துக் கையைச் சுட்டுவிட்டது. இரண்டு கடைகளும் ஏலத்தில் போயின. அதன் பிறகும் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து விடாத அவர் அரையில் உடுத்த துணியும், மேல் வேட்டியுமாகக் கொழும்புக்குக் கப்பலேறினார். விடா முயற்சியும், திட நம்பிக்கையும் உள்ள பிரமநாயகம், நாலே வருடங்களில் கொழும்பில் ஒரு கடைக்கு முதலாளியாகிவிட்டார்.
திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் அழகியநம்பி முதல் வருடப் படிப்பைப் படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய தகப்பனார் காலமாகிவிட்டார். கலியாணமாகாத ஒரு தங்கையையும், தாயரையும், சொத்தின் மதிப்பிற்கு மேல் ஏராளமாகச் சுமந்திருந்த கடன் சுமையையும் இளைஞனான அழகியநம்பி தாங்க வேண்டியதாயிற்று. அவனுடைய கல்லூரிப் படிப்பிற்கும் அன்றோடு முற்றுப்புள்ளி விழுந்தது. வீடு ஒன்றைத் தவிர நிலங் கரைகள் எல்லாவற்றையும் விற்றும் தகப்பனார் வைத்துவிட்டுப் போயிருந்த எல்லாக் கடன்களையும் அடைக்க முடியவில்லை. கடன் பத்திரம் எழுதிக் கொடுத்தான். அவன் வயசுக்கு அவனால் தாங்க முடியாத வாழ்க்கைத் தொல்லைகள் குருவி தலையில் பனங்காயை வைத்த மாதிரி அவன் தலையில் சுமந்திருந்தன.
படிப்பை நிறுத்திவிட்டு ஊரோடு வந்தபின் விளையாட்டுப் போல ஒருமாதம் கழிந்துவிட்டது. நிலம் நீச்சு - ஏதாவது இருந்தால் அந்த வேலைகளையாவது கவனிக்கலாம். ஒரு வேலையுமில்லாமல் வீட்டுக்குள் அடைந்து கிடப்பது எவ்வளவு நாளைக்கு முடியும்? பத்திரிக்கைகளில் வருகிற தேவை விளம்பரங்களைப் பார்த்து விண்ணப்பங்கள் அனுப்பினான்.
கிராமம் என்பது பெரிய உலகத்தின் ஒரு சிறிய அணு. அங்கே மனித உணர்ச்சிகளைக் காட்டிலும் அவனைச் சுற்றியிருக்கும் இன்ப துன்பங்களைத்தான் அதிகமாகக் கவனிப்பார்கள். அவற்றைப் பற்றித்தான் விசாரிப்பதும் வழக்கம். அழகியநம்பி வீட்டை விட்டு வெளியே வருவதே குறைவு. எப்போதாவது மாலை நேரங்களில் காலார மலையடிவாரத்துப் பக்கம் உலாவிவிட்டு வரலாமென்று அத்திப்பூத்தாற்போலக் கிளம்புவான். "ஏண்டா அழகு! தங்கை கலியாணத்திற்கு என்ன ஏற்பாடு செய்யப்போகிறாய்?" - என்று விசாரிப்பார் ஒருவர்.
"படிப்பை நிறுத்திவிட்டாயாமே?" - என்று ஆதங்கப்பட்டுக் கொள்வார் இன்னொருவர்.
"உனக்கென்ன வயது கொஞ்சமா தம்பீ? தலைக்குமேல் கடன் இருக்கிறது. வீட்டிலே கட்டிக் கொடுக்கவேண்டிய பெண் வேறு இருக்கிறாள். சும்மா இருந்தால் நடக்குமா? ஏதாவது வேலை வெட்டிக்கு முயற்சி செய்யவேண்டும்" - என்று உரிமையோடு கடிந்துகொள்வார் ஒருவர்.
இந்த விசாரணைத் தொல்லைகளுக்குப் பயந்துதான் அழகியநம்பி வெளியில் வருவதையே குறைத்துக் கொண்டிருந்தான். உதவி செய்ய முடியுமோ, முடியாதோ, எதற்கும், யாரிடமும் அனுதாபம் செலுத்தத் தயங்காத, வார்த்தைகளைச் செலவிடுவதற்குக் கூசாத மனப்பண்பு கிராமங்களில் உண்டு. ஆனால், அந்த அனுதாபம் தான் அவனுக்கு வேண்டாததாக - வேதனை தருவதாக இருந்தது. 'அடுத்த வீட்டில் பிணம் விழுந்தாலும் கவலைப்படாமல் ரேடியோ சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருக்கும் 'உள்வீட்டு நாகரிக மனப்பான்மை' கிராமங்களிலும் வரவில்லையே!'
தன்னுடைய நிலை தான் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு, - எல்லாம் அவனுடைய உணர்வில் உறைக்காமலில்லை. ஆனால், அதை மற்றவர்கள் கூறக் கேட்கும்போது இனம் புரியாத பயமும் தாழ்வு மனப்பான்மையும் உண்டாயின. கிராமத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போலக் கழிந்து கொண்டிருந்தது.
இந்தச் சமயத்தில்தான் பிரமநாயகம் அவனுக்குக் கை கொடுத்து உதவ முன் வந்தார். கொழும்பிலிருந்து ஏதோ சொந்தக் காரியமாகத் தாய் நாட்டுக்குத் திரும்பி வந்திருந்த பிரமநாயகம் உறவு முறையை விட்டுக் கொடுக்காமல் அவனுடைய தகப்பனார் மரணத்திற்குத் துக்கம் கேட்பதற்காகக் கிராமத்திற்கு வந்தார். அப்போது பேச்சுப் போக்கில் அழகியநம்பி தன் நிலையை அவரிடம் கூற நேர்ந்தது. "உனக்குச் சம்மதமானால் என்னோடு கொழும்புக்குப் புறப்பட்டுவா. எனக்குக்கூட வியாபார சம்பந்தமான அலுவல்களைக் கவனிக்க உன்னைப் போல ஒரு படித்த பையன் வேண்டும். நாலைந்து வருஷம் கஷ்டப்பட்டு உழைத்தாயானால் அப்புறம் ஏதோ ஒரு பெருந் தொகையைச் சேர்த்துக்கொண்டு ஊர் திரும்பலாம். கடன்களும் அடைபடும். தங்கையின் கலியாணத்தையும் நடத்திவிடலாம்" - என்று அவர் கூறினார்.
அழகியநம்பி தன் தாயார் சம்மதிப்பாளோ, மாட்டாளோ என்று தயங்கினான். ஆனால், அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, "ஐயா சொல்றபடியே செய் அழகு. அவர்களைத் தவிர நமக்கு யோசனை சொல்ல நெருக்கமானவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? தூரம் தொலைவாயிற்றே என்று தயங்கினால் முடியாது. ஒரு நாலைந்து வருஷம் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிட்டுத்தான் வரவேண்டும்" - என்று அவனையும் முந்திக்கொண்டு தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் அவன் அன்னை.
அழகியநம்பி பிரமநாயகத்திடம் அவருடன் கொழும்புக்கு வர இணங்கினான். தாம் புறப்படுவதற்கு இன்னும் பதினைந்து இருபது நாட்களுக்கு மேலாகும் என்று கூறிய அவர், புறப்படுகிற தேதி, நேரம் முதலியவற்றை விபரமாகச் சொல்லித் தூத்துக்குடிக்கு வந்து தம்மோடு சேர்ந்து கொள்ளுமாறு அவனுக்குக் கூறிவிட்டுப் போயிருந்தார்.
குறிப்பிட்ட தினத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே பிரயாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டான் அழகியநம்பி. அவர்கள் கிராமம் எந்த மலைப்பகுதிகளின் நடுவே இருந்ததோ அங்கே அப்போது மழைப் பருவம். ஒரு வாரத்திற்கு முன் பிடித்த மழை நிற்காமல் பெய்த கோரத்தினால் ஊரே தீவு மாதிரியாகிவிட்டது. மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்த அழகியநம்பி பெருமூச்சு விட்டான். பிரமநாயகத்துக்குக் கொடுத்திருந்த வாக்கின்படி அன்று காலை 10 மணிக்கு அவன் தூத்துக்குடித் துறைமுகத்தில் போய் நின்றிருக்க வேண்டும்!
'நினைத்து என்ன பயன்? சொல்லியபடி போய்ச் சேர முடியவில்லை. அவர் இன்றைக்கே கப்பலேறியிருந்தாலும் ஏறியிருப்பார்.' - சிந்தனையைத் தேக்கிக்கொண்டு கீழே போவதற்காக அவன் எழுந்திருந்தான்.
மாடிக்கு வரும் மரப்படிகளில் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. திரும்பினான். "அண்ணா! அம்மா சாப்பிடக் கூட்டிக்கொண்டு வரச்சொன்னாள். இட்டிலி ஆறிப்போகிறதாம்" - என்று சொல்லிக் கொண்டே அவன் தங்கை வள்ளியம்மை வந்து நின்றாள்.
"இதோ வந்து விட்டேன். நீ போ!" - என்று பதில் சொல்லிக்கொண்டே அவளைப் பின்பற்றி மாடிப்படியில் இறங்கினான் அழகியநம்பி.
"என்னடா அழகு! இந்தப் பாழாய்ப்போன வெள்ளம் வந்து கெடுத்துவிட்டதே? இன்றைக்குப் பத்து மணிக்குத் தானே பிரமநாயகம் உன்னைத் தூத்துக்குடிக்குப் புறப்பட்டு வரச் சொல்லியிருந்தார்?" - இலையில் இட்லியைப் பரிமாறிக் கொண்டே கேட்டாள் அவனுடைய தாயார்.
"ஆமாம்! இன்றைக்கேதான். நான் என்னம்மா செய்கிறது? இப்படி மழை கொட்டி ஊரெல்லாம் சமுத்திரத்தில் மிதக்கும் தீவாந்திரமாகப் போகிறதென்று எனக்கு முன்னாலேயே தெரியுமா?"
"பிரமநாயகம் நீ ஏமாற்றிவிட்டதாக நினைத்துக் கொள்ளாமலிருக்க வேண்டும்?"
"ஒருவர் நினைத்துக் கொள்வதையும் நினைத்துக் கொள்ளாததையும் பற்றி நாம் கவலைப்பட்டு முடியுமா அம்மா? எதற்கும் வெள்ளம் வடிந்து வெளியூருக்குப் போகலாம் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் தூத்துக்குடிக்குப் போய்விட்டு வரலாம் என்றுதான் எண்ணியிருக்கிறேன்."
"எதுக்கும் போய்ப் பார்த்துவிட்டு வருவதுதான் நல்லது. இந்தப் பக்கத்து வெள்ள நிலவரம் தூத்துக்குடிவரை எட்டாமலா இருக்கும்? ஒருவேளை பிரமநாயகத்துக்கும் தெரிந்திருக்கலாம். நீ வாரததற்கு வெள்ளம்தான் காரணம் என்று எண்ணிக்கொண்டு உனக்காக இன்னும் சில நாள் தாமதித்தாலும் தாமதிப்பாரோ என்னவோ?"
"எதைப்பற்றி நினைத்தாலும் நாம் நினைக்கும்போது நமக்குச் சாதகமாகத்தான் நினைப்போம் அம்மா!" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் அழகியநம்பி. அந்தச் சிரிப்பில் நம்பிக்கையின் வறட்சிதான் இருந்தது.
"முன்கோபியானாலும் பிரமநாயகத்துக்கு ஈவு இரக்கம் உண்டு. எனக்கென்னவோ இன்றைக்கு நீ போகாவிட்டாலும் உனக்காக அவர் இரண்டொருநாள் தாமதிப்பாரென்றே தோன்றுகிறது."
"அதையும்தான் பார்க்கலாமே."
"வெள்ளம் நாளன்றைக்குள் நிச்சயமாக வடிந்துவிடும். நேற்றுக் களத்து மேடெல்லாம் மூடியிருந்தது. இன்றைக்குக் காலையில் களத்துமேடு தெரிந்துவிட்டதேடா" - என்றாள் அவன் தாய்.
இலையில் போட்ட இட்டிலிகளைச் சாப்பிட்டுவிட்டு அடுத்த ஏடு எடுப்பதற்காகக் காத்து உட்கார்ந்து கொண்டிருந்தான் அவன். காலியான வாழை இலையைப் பார்த்துக் கொண்டே அடுத்தடுத்துப் பல எண்ணங்களைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தது அவன் மனம். தாயாருக்குப் பதில் கூறவும் தோன்றவில்லை அவனுக்கு.
மூன்று நாள் கழிந்த பின்பு வெள்ளம் ஒருவாறு வடிந்திருந்தது. பஸ் போக்குவரவு ஒழுங்காக நடைபெறலாம் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. புறப்படுவதற்குத் தயாராக மூட்டை முடிச்சுகளைக் கட்டி வைத்துவிட்டு அண்டை அயலாரிடம் சொல்லிக் கொள்வதற்காகப் புறப்பட்டான் அழகிய நம்பி. வெள்ளம் வடிந்து சேறும் சகதியும், வழுக்கலுமாக இருந்த தெருவில் காலைவைப்பதற்கே அருவருப்பாக இருந்தது.
'வீட்டிலிருந்து தெருவில் இறங்குவதற்கே இவ்வளவு அசிங்கமாக இருக்கிறதே! பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எந்தெந்த உயர் நிலைகளிலிருந்து எந்தெந்தத் தாழ்வான நிலைகளில் எல்லாம் இறங்கி நடக்க வேண்டியிருக்குமோ?'
அவன் தெருவில் இறங்கிச் சேற்றில் கால்களைப் பதித்து வழுக்கி விடாமல் கவனமாக நடந்தான்.
தெருத்திருப்பத்தில் பெருமாள் கோவிலுக்கு முன்னால் இருந்த திருக்குளத்தில் படிக்கட்டுகளே தெரியாமல் வெள்ளத் தண்ணீர் நிரம்பிக் கிடந்தது. அழகிய நம்பி பெருமாள்கோவில் கோபுரத்தின் உச்சியைப் பராக்குப் பார்த்துக் கொண்டே குளக் கரையோரமாக நடந்து கொண்டிருந்தான். திரைகடல் கடந்து அந்நிய நாட்டுக்குக் கப்பலேறிப் போகப்போகிறவன் யாரிடம் சொல்லிக் கொண்டு போவது? யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் போவது? வேண்டியவர்கள் எல்லோரிடமும் தான் சொல்லிக் கொள்ள வேண்டும்!
பெருமாள் கோவில் குறட்டு மணியம் நாராயணப்பிள்ளை, மேலத்தெரு வாசகசாலைச் செயலாளர் கந்தப்பன், முன்சீப் புன்னைவனம் பிள்ளை, புலவர் ஆறுமுகம் - சொல்லி விடை பெற்றுக் கொள்ள வேண்டியவர்கள், ஒவ்வொருவராக அவன் நினைவுக்கு வந்தனர். நினைத்துக்கொண்டே குளக்கரையோரமாக நடந்து கொண்டிருந்தவன், திடீரென்று அங்கே கிளம்பிய அந்தக் கூப்பாட்டைக் கேட்டுத் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தான்.
பத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி, "ஐயோ, அப்பா" என்று அலறிப்புடைத்துக் கூச்சலிட்டுக் கொண்டே குளத்தின் பக்கம் கையைக் காட்டினாள். பயத்தினால் வெளிறிப் போயிருந்த சிறுமியின் முகத்தில் வாய் கோணியது. குளத்தின் உட்புறமாகக் கையைக் காட்டிக் கூச்சலிட்டாளே தவிரப் பயத்தினாலும் பதற்றத்தினாலும் நடந்தது என்ன என்று சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை.
அந்த நேரத்தில் பனி நீங்காத வைகறைப் போதில் அந்தக் குளக்கரைப் பகுதியில் அழகியநம்பி ஒருவனைத் தவிர ஏறக்குறைய ஆள் நடமாட்டமே இல்லை என்று சொல்லலாம்.
"என்ன தங்கச்சி? என்ன நடந்தது? ஏன் கூச்சல் போடுகிறாய்?" என்று கேட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாகச் சென்றான் அழகியநம்பி.
சிறுமிக்கு வாய் கேவியது. சொற்கள் திக்கித் திணறி வெளி வந்தன. "அக்கா... குடம்... தண்ணீரில்..." என்று ஏதோ சொல்லிவிட்டுக் குளத்தின் பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டினாள்.
அழகியநம்பி ஒன்றும் புரியாமல் குளத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனுக்குப் பகீரென்றது. முக்குளித்து மேலெழுந்து மறுபடியும் முக்குளிக்கும் பெண் தலை ஒன்று நீர்ப்பரப்பில் தெரிந்தது. அதற்குச் சிறிது தொலைவு தள்ளிப் 'பள பள' வென்று தேய்த்து விளக்கிய ஒரு பித்தளைக் குடம் குப்புற மிதந்து தண்ணீரில் அலைப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. சிறுமியின் கேவுதல் அழுகையாக மாறிவிட்டது. "ஐயோ அக்கா... அக்கா..." என்று அழத் தொடங்கி விட்டாள். அழகிய நம்பிக்கு விஷயம் விளங்கிவிட்டது. மின்னல் மின்னி மறையும் நேரம் அவனுக்கு ஒரு சிறு தயக்கம் ஏற்பட்டது.
பிரயாணத்துக்காக எடுத்து அணிந்து கொண்டிருந்த புதிய வெள்ளைச் சலவைச் சட்டை, பையில் செலவுக்கான பணத்தோடு கிடந்த மணிபர்ஸ் - இரத்தக் குழம்பு போலிருந்த குளத்தின் செந்நிறப் புதுவெள்ளம் - இவற்றை எண்ணி ஒரே ஒரு நொடி தயங்கினான். ஆனால், ஒரு நொடி தான் அந்தத் தயக்கம்! அடுத்த நொடியில் சிறுமியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு குளத்தின் நீர்ப்பரப்பில் பாய்ந்தான். ஆள் பாய்ந்த அதிர்ச்சியில் தண்ணீரில் அலைகள் எழும்பிக் குதித்துக் கரையைப் போய்ச் சாடின.
தண்ணீருக்குள் அவள் உடலை உடனே பற்றிக் கரைக்குக் கொண்டு வந்துவிட அவனால் முடியவில்லை. மூன்று நான்கு தடவைகள் முக்குளித்து, மூழ்கி, வெறுங்கையோடு எழுந்திருந்தான். ஐந்தாவது தடவையாக அவன் முக்குளித்தபோது அவளுடைய நீண்ட அளகபாரத்தின் ஒரு பகுதி அவனுடைய கையில் சிக்கியது. அப்படியே பிடித்து இழுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான்.
கரையில் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி இப்போது அழுவதையும், கூச்சலிடுவதையும் நிறுத்திவிட்டு, அவன் அவள் அக்காவின் உடலையும் இழுத்துக் கொண்டு தண்ணீரில் நீந்தி வருவதை வியப்புடன் பார்த்தாள்.
கொடிபோல் துவண்ட அந்தப் பூவுடலைக் கரையில் கிடத்திவிட்டு நிமிர்ந்தான். அழகியநம்பி. நிறையத் தண்ணீரைக் குடித்து மூர்ச்சையாகியிருந்தாள் அவள். "அக்கா! அக்கா!" - என்று அருகில் வந்து குனிந்து தோளைப் பிடித்து உலுக்கினாள் அந்தச் சிறுமி. நீந்தத் தெரியாமல் தண்ணீரில் அகப்பட்டுக் கொண்டு அவள் விழுங்கியிருந்த தண்ணீரை முழுவதும் வெளியேற்றினாலொழிய அவளுக்குப் பிரக்ஞை வராதென்று அழகிய நம்பி உணர்ந்தான். தண்ணீரை வெளியேற்ற வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் அவனுக்குத் தென்பட்டது. ஆனால் அதைச் செய்வதற்கு அவன் கூசினான்; தயங்கினான். அந்தப் பெண்ணின் உடலை இரண்டு கைகளாலும் தீண்டி மேலே தூக்கிக் கரகரவென்று தட்டா மாலை சுற்றுவது போலச் சுற்ற வேண்டும். அப்படிச் சுற்றினால் தான் குடித்திருக்கிற தண்ணீர் முழுதும் குமட்டி வாந்தியெடுத்து வெளியேறும்.
குளக்கரையோரம், பெருமாள் கோவில் வாசல், தெருத் திருப்பம் - சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான் அழகியநம்பி. அவன் கண் பார்வை சுழன்ற திசைகளில் - இடங்களில் எங்கும் யாரும் தென்படவில்லை.
சிறுமி முன்போலவே அக்காவின் உடலை அசைத்துப் புரட்டிக் கூச்சலிட்டு எழுப்புவதற்கு முயன்று கொண்டிருந்தாள். ஈரம் சொட்டச் சொட்ட நின்ற அழகியநம்பி ஒருகணம் கீழே கிடத்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தான். பட்டுச் சேலை உடுத்திய தங்கச்சிலை ஒன்று தண்ணீரில் நனைந்து கிடப்பது போல் தோன்றியது. பதினேழு, பதினெட்டு வயதுக்கு மேலிருக்காது. வெண்சங்கு போலிருந்த அழகிய கழுத்தின் வெறுமை இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லியது.
அவன் நிலை தர்மசங்கடமாயிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தச் சிறுமியை அவளுடைய வீட்டுக்கு அனுப்பி யாராவது பெரியவர்கள் இருந்தால் கூட்டிக் கொண்டு வரச் சொல்லலாமே என்று தோன்றியது. கீழே குனிந்து அந்தப் பெண்ணின் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தான். சூடான மூச்சுக் காற்றின் மெல்லிய வெப்பம் கையில் உறைத்தது. 'பயமில்லை' என்று ஒடுங்கிய குரலில் தனக்குள் சொல்லிக்கொண்டு "தங்கச்சி! ஓடு... ஓடிப்போய் வீட்டில் யாராவது பெரியவர்கள் இருந்தால் உடனே அவசரமாகக் கூட்டிக் கொண்டு வா" என்று அந்தச் சிறுமியைத் துரத்தினான். ஆனால், அவள் போகவில்லை; தயங்கி நின்றாள். "சொன்னால் போகமாட்டாயா?" என்று அதட்டினான் அழகியநம்பி.
"இல்லை மாமா... வந்து... வந்து..." என்று இழுத்துப் பேசினாள் சிறுமி.
"போகாவிட்டால் உன் அக்கா உனக்குக் கிடைக்க மாட்டாள்."
"வீட்டில் வயதான அம்மாதான் இருக்கிறாள். அவளாலே எழுந்திருந்து வரமுடியாது. முடக்குவாதம்."
"அப்பா, அண்ணா, வேறு யாரும் இல்லையா உங்களுக்கு?"
"எல்லாம் அம்மாதான்!" சிறுமி உதட்டைப் பிதுக்கினாள். பரிதாபகரமானதோர் ஏக்கம் அப்போது அந்தச் சிறுமியின் முகத்தில் படர்ந்தது.
"உங்கள் அம்மா யார்?"
"தெருக்கோடியிலே ஒரு இட்டிலிக்கடை இருக்கிறதே, அதுதான்!" அந்தச் சிறுமி இட்டிலிக்கடை அடையாளத்தைச் சொன்னவுடன் அழகியநம்பிக்கு அவர்கள் இன்னாரென்பது புரிந்துவிட்டது.
"அடேடே! இட்டிலிக்கடைக் காந்திமதி ஆச்சி பெண்களா நீங்கள்?"
"ஆமாம்! ஆச்சியைத் தெரியுமா உங்களுக்கு?" - சிறுமியின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் குபீரென்று கீழே குனிந்து கனமற்றிருந்த அந்தப் பெண்ணின் உடலைத் தூக்கிக் கிறுகிறுவென்று சுழற்றினான். இவ்வளவு நேரத்திற்குப் பின்பும், இவ்வளவு தெரிந்த பின்பும் தயங்கிக் கொண்டிருந்தால் அந்தப் பெண்ணின் உயிருக்கே ஆபத்தாகி விடுமோ என்று பயந்துதான் அவன் துணிந்து இப்படிச் செய்தான். குமட்டலும் ஓங்கரிப்புமாக அவள் வாயிலிருந்து கொட்டிய தண்ணீரெல்லாம் அவன் மேல் பட்டன. அந்தப் பெண் குடித்திருந்த தண்ணீர் முழுதும் துப்புரவாக அவள் வயிற்றிலிருந்து வெளியேறியிருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதும் மெதுவாக அவள் உடலைக் கீழே வைத்தான். அத்தனை நேரம் சுற்றிய கைகள் தோள் பட்டையில் வலியைச் சேர்த்து வைத்திருந்தன. தோள்கள் இலேசாக வலித்தன.
அவள் உடல் அசைந்து புரண்டது. பிரக்ஞை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. "உன் அக்காவின் பெயர் என்ன?" என்று அந்தச் சிறுமியைக் கேட்டான் அழகியநம்பி.
"அக்காவின் பெயர் பகவதி. என் பெயர் கோமு" என்று அவன் கேட்காத தன் பெயரையும் கூறினாள் சிறுமி.
அவள், "கோமதி என்று பேரு! அக்கா, அம்மா எல்லாரும் கோமு, கோமு என்றுதான் கூப்பிடுவார்கள்" என்று மறுபடியும் தானாக நினைத்துக் கொண்டு சொல்கிறவள் போல் சொன்னாள்.
அதைக் கேட்டு அழகியநம்பி மெல்லச் சிரித்துக் கொண்டான். "மாமா! மாமா! குடம். இன்னும் தண்ணீரிலேயே மிதந்துகொண்டு போகிறதே!" என்று தண்ணீரில் மிதந்து சென்று கொண்டிருந்த குடத்தைக் காட்டினாள் சிறுமி.
"ஓ! மறந்து விட்டேன்" என்று சொல்லிக்கொண்டே குடத்தை எடுப்பதற்காக மீண்டும் தண்ணீரில் இறங்கினான் அழகியநம்பி.
அதே சமயத்தில் அந்தப் பெண்ணுக்குப் பிரக்ஞை வந்தது. தூக்கம் விழித்துச் சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்திருக்கிறவளைப் போல் எழுந்திருந்தவள் தானிருக்கிற நிலையைப் பார்த்ததும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருந்தாள். "அக்கா! அக்கா! இந்த மாமா தான் குளத்தில் குதித்து நீந்தி உன்னைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தவர்" என்று அடக்கமுடியாத ஆவல் பொங்கக் கூறினாள் சிறுமி கோமு. குடத்தோடு கரையேறிய அழகியநம்பி கோமுவிடம் கொண்டு வந்து அதைக் கொடுத்தான்.
"ஊரே மூழ்கிப் போய்விடும்போல வெள்ளம் வந்து இப்போதுதான் ஒருமாதிரி வடிந்திருக்கிறது. குளம் நிமிர நிமிரத் தண்ணீர் இருக்கும் போது நீந்தத் தெரியாதவள் இப்படி வரலாமா?" - அழகியநம்பி அவளிடம் கண்டிப்பது போன்ற தொனியில் கேட்டான்.
"குடத்தில் தண்ணீர் முகப்பதற்காகப் படியில் கால் வைத்தேன். வழுக்கிவிட்டது" - அவனை நிமிர்ந்து பார்க்கும் திறனின்றிக் குனிந்து கொண்டே பதில் கூறினாள் அவள். நாணம் படர்ந்த அந்த மதிமுகத்தில் சிவந்த உதடுகள் இலேசாகத் துடித்தன. வனப்பே வடிவமாக இளமை கொழித்து நிற்கும் அந்தப் பெண்ணின் தோற்றத்தைக் கடைக்கண்களால் ஒருமுறை நன்றாகப் பார்த்தான். இப்போது அவள் குடத்தையும் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
கண்வருடைய ஆசிரமத்தில் செடிகொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காகச் சகுந்தலை குடமேந்தி நடப்பது போன்ற ஓவியம் ஒன்றை ஏதோ ஒரு கம்பெனியின் காலண்டரில் அவன் அடிக்கடி பார்த்திருந்தான். கொடிபோல் ஒசிந்து குடமேந்தி மருண்ட பார்வையோடு தன் முன் தலைகுனிந்து நிற்கும் காந்திமதி ஆச்சியின் பதினெட்டு வயதுப் பெண் பகவதியைப் பார்த்தபோது அந்தக் காலண்டரின் படம் நினைவில் புரண்டது.
படியில் இறங்கிக் காலியாக இருந்த குடத்தில் தண்ணீர் முகந்து கொண்டு வந்தாள். அவனருகே வந்ததும் தயங்கி நின்றாள். தன்னிடம் நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டு போக அவள் மனம் எண்ணுகிறது, அந்த நன்றியை எப்படிச் சொற்களால் வெளியிடுவதென்று தெரியாமல் கூசித் தயங்கி நிற்கிறாள் அவள் என்பதை அழகியநம்பி புரிந்து கொண்டான். இதயத்து உணர்ச்சிகளை ஒளிவு மறைவில்லாமல் வாரிக்கொண்டு வந்து வெளியே கொட்டும் அவளுடைய அந்த அழகிய கண்கள், அவற்றின் பார்வை - அவனுக்குப் புரியவைத்தன.
"தங்கச்சி! அக்காவை அழைத்துக்கொண்டு பத்திரமாக வீடு போய்ச் சேர். தண்ணீர் குறைகிறவரை இன்னும் நாலைந்து நாட்களுக்குத் தனியாக இந்த மாதிரி காலை வேளையில் குளத்துப்பக்கம் வரவேண்டாம். பெருமாள் கோவில் பக்கமாகப் போய்விட்டுத் திரும்பும் போது உங்கள் ஆச்சியைப் பார்க்க வருகிறேன்" என்று அவள் தங்கை கோமுவிடம் பேசுவதுபோல் பேசி விடைகொடுத்தான் அழகியநம்பி. அப்போது மேலும் கீழுமாகப் பொருந்திய பவழத் துண்டங்களைப் போன்ற அவள் இதழ்கள் ஏதோ சொல்வதற்காக அசைவது போல் தோன்றியது. அழகியநம்பி அதைக் கவனித்தான். துடிக்கும் இதழ்கள், துழாவும் விழிப்பார்வை இந்த இரண்டும் அவனை - அவன் இதயத்தை என்னவோ செய்தன.
"நாங்கள் வருகிறோம், மாமா". சிறுமி கோமு தன் அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். அழகியநம்பி பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்ற இடத்திலேயே நின்றான். அவள் இரண்டொரு முறை திரும்பிப் பார்த்தாள். அவன் தன்னையே பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் தலையைத் திருப்பிக் கொண்டாள். அழகியநம்பி உள்ளத்தில் மிக மெல்லிய பாகத்தின்மேல் கொத்து கொத்தாகப் பூக்களை வீசி எறிவது போல் ஓருணர்ச்சி உண்டாயிற்று. முறுக்கி எழுந்த அந்த உணர்ச்சியைத் தனக்குள்ளேயே, புதைத்துக் கொண்டு பார்க்கவேண்டியவர்களைப் பார்த்து, ஊருக்குப் போவதைச் சொல்லிக் கொள்வதற்காகப் பெருமாள் கோவில் புறமாகத் திரும்பினான்.
"ஆ! ஐயோ!" சுரீர் என்று காலில் ஒரு சிறிய கருவேலமுள் தைத்துவிட்டது. குளத்தங்கரைக் கருவேல மரத்திலிருந்து உதிர்ந்து ஈரத்தில் மறைந்திருந்த முள் அது. காலைத் தூக்கி முள்ளைப் பிடுங்கினா. பாதி முள் முறிந்து உள்ளேயே தங்கிவிட்டது. பாதம் சிவந்தது. குருதி கசிந்தது.
சொல்லிக்கொள்ள வேண்டியவர்களைப் பார்த்துச் சொல்லிக் கொண்டபின் பஸ் போக்குவரவு நிலவரங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்வதற்காக அழகியநம்பி பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்.
மணி எட்டரை - ஒன்பது இருக்கலாம். வெயில் சுள்ளென்று உறைத்தது. குளக்கரையிலிருந்து, ஈர ஆடைகளை மாற்றிக் கொள்வதற்காகத் திரும்பவும் வீட்டுக்கு ஒருமுறை போயிருந்தான் அழகிய நம்பி. வீட்டில் போய் ஆடைமாற்றிக் கொண்டு, சட்டைப் பையில் நனைந்து போயிருந்த மணிபர்ஸின் ரூபாய் நோட்டுகளை வெயிலில் காயவைத்து எடுக்கும் வேலையைத் தங்கை வள்ளியம்மையிடம் ஒப்படைத்துவிட்டு அதன் பின்பே மற்றவர்களிடம் விடைபெற்றுக் கொள்வதற்குக் கிளம்பியிருந்தான். இதனால் நேரம் அதிகமாகியிருந்தது.
முக்கியமானவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டு அவன் தெருக்கோடியை அடைந்த போது மணி ஏழேமுக்கால். வாசற்படியின் இரண்டு பக்கமும் வீடே தெரியாமல் அடர்ந்து வளர்ந்திருந்த பூவரச மரங்களுக்கிடையே தாழ்வான ஓட்டடுக்கு வீடு ஒன்று தெருக் கோடியில் இருந்தது. பூவரச மரத்தடியில் பளபளவென்று எண்ணெய்ப்பசை மின்னும் எச்சில் இலைகள் சிதறிக் கிடந்தன. சில காக்கைகள், சில நாய்கள் அந்த இலைகளில் முற்றுகை நடத்தின. வாயிற்படிகளின் மேல் உள்ளே நுழைய வழியின்றிச் சில ஆட்கள் உட்கார்ந்து ஊர்வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். உட்புறமிருந்து பெரிய ஆட்டு உரலில் சட்டினி அரைபடும் விகாரமான ஓசை வந்து கொண்டிருந்தது.
அதுதான் காந்திமதி ஆச்சியின் இட்டிலிக்கடை. அழகியநம்பி உள்ளே செல்வதற்காகப் படியேறினபோது,
"தம்பீ! கொழும்புக்கு எப்போது பயணம்?"
"அக்கரைச் சீமைக்கா?"
"நல்லபடியாகப் போய்விட்டுக் கையில் நாலு காசு மிச்சம் பிடித்துக் கொண்டு வரவேண்டும்" - என்று இப்படியாகப் படியில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களிடமிருந்து அன்பும், அனுதாபமும், ஆசியும், விசாரணையுமாக எழுந்த பல கேள்விகளுக்குச் சிரித்துக் கொண்டே பதில்களைச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான் அவன்.
சிறுமி கோமு திக்கித் திணறி ஆட்டுக்கல்லில் சட்டினி அரைத்துக் கொண்டிருந்தாள். பெரிய பெண் பகவதி அடுப்பிற்கருகில் இட்டிலித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துக் கொண்டிருந்தாள். எழுந்து நடமாட முடியாத காந்திமதி ஆட்சி நார்க்கட்டிலில் உட்கார்ந்தபடி, 'இதை இப்படிச் செய்! அதை அப்படிச் செய்!' என்று விபரம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அழகியநம்பி உள்ளே நுழைந்ததை முதலில் பார்த்தவள் தட்டில் மா ஊற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்தான். குழியில் மா ஊற்றுவதற்காக எழுந்த வளைக்கரம் அவனைக் கண்டதும் தயங்கியது. முகத்தில் ஆவலும் மலர்ச்சியும் போட்டி போட்டுக் கொண்டு பரவின.
"ஆச்சி! இதோ அவர் வந்திருக்கிறார்." அந்தப் பெண் இனிய குரலில் ஆச்சிக்கு அவன் வரவை அறிவித்தாள். சின்னப் பெண்ணுக்குச் சட்டினி அரைக்கும் விதத்தில் ஏதோ யோசனை கூறிக் கண்டித்துக் கொண்டிருந்த ஆச்சி திரும்பிப் பார்த்தாள்.
"என்ன ஆச்சி? சௌக்கியமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டுக் கொண்டே சிரித்த முகத்தோடு கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து நின்றான் அழகியநம்பி.
"அடேடே! வா அப்பா. இப்படி உட்கார். எல்லாம் கோமுவும் பகவதியும் வந்து சொன்னார்கள். தண்ணீரில் செத்து மிதந்திருக்க வேண்டியது. என்னவோ தெய்வக் கிருபையால் நீ அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்திருக்கிறாய்" - ஆச்சியின் குரல் தழுதழுத்தது.
"ஊர் இருக்கிற நிலையில் இந்த மாதிரி அதிகாலையில் ஒன்றுமறியாத சிறு பெண்களை ஒரு குடம் தண்ணீருக்காகப் பெருகிக் கிடக்கிற குளத்துக்கு யாராவது தனியே அனுப்புவார்களா?" என்று ஆச்சியைக் கடிந்து கொள்வது போன்ற குரலில் கேட்டான் அழகியநம்பி.
"எனக்குக் கையும் காலும் இருக்கிறபடி இருந்தால் இப்படிச் செய்வேனா தம்பி? உனக்குத் தெரியாததில்லை. என்ன பாவத்தைச் செய்தேனோ; என்னை இப்படி முடக்கிப் போட்டிருக்கிறானே?" - ஆச்சி அலுத்துக் கொண்டாள்.
"இன்றைக்கு நடந்ததைப் பற்றி மறந்து விடுங்கள். இனிமேலாவது கிணறு, குளம், என்று தண்ணீருக்குப் போகும் போது கவனமாக இருக்க வேண்டும்" - அழகிய நம்பி இதைக் கூறிவிட்டு காந்திமதி ஆச்சியிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்திருக்கத் தயாரானான்.
"இந்தா பகவதீ! தம்பிக்கு நாலு இட்டிலி கொண்டு வந்து வை."
"இல்லை ஆச்சி! நான் வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் வருகிறேன். நான் வந்த காரியத்தை மறந்து விட்டேனே? இன்றைக்குத் தூத்துக்குடிக்குப் புறப்பட்டுப் போய் நாளைக்கோ, நாளைக் கழித்து மறுநாளோ, கொழும்புக்குக் கப்பலேறுகிறேன். அம்மாவும், தங்கை வள்ளியம்மையும் இங்கே ஊரில்தான் இருக்கப் போகிறார்கள். இரண்டு வருஷமோ, ஏழு வருஷமோ எவ்வளவு காலத்துக்குப் பிறகு திரும்புவேனென்று எனக்கே தெரியாது. வீட்டையும், அம்மா, தங்கையையும் கவனித்துக் கொள்ளுங்கள்." அவன் இதைச் சொன்னதும் ஆட்டு உரல் ஓசை நின்றது. கரண்டியால் மாவூற்றும் ஓசை நின்றது. மூன்று திசைகளிலிருந்து ஆறு வேறு கண்கள் வியப்புடன் அவனை நோக்கின. பகவதி கோமு, ஆச்சி மூன்று பேரும் அவனை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுப்பு எரியும் ஒலி, உலைநீர் கொதிக்கும் ஓசை, வாசலில் அரட்டைக் குரல்கள், இவைதவிர ஒரு கணம் பேச்சரவமற்ற அமைதி அங்கே நிலவியது.
"இன்றைக்கே இங்கிருந்து புறப்படுகிறாயா தம்பி?" - அமைதியைக் கலைத்துக் கொண்டு ஆச்சி கேட்டாள். அதற்குப் பதில் சொல்வதற்காக அவன் வாய்திறந்த அதே சமயத்தில் ஒரு இலையில் சூடாக ஆவிபறக்கும் இட்டிலிகளை அவனுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தாள் பகவதி.
"கோமு! இந்த மாமாவுக்குக் கெட்டிச் சட்டினியாகக் கொஞ்சம் கொண்டு வந்து போடு." - ஆச்சி கோமுவை ஏவினாள். பகவதி தண்ணீரையும் செம்பையும் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தாள்.
"இதெல்லாம் எதற்கு ஆச்சி? வீணாகச் சிரமப்படுத்திக் கொள்கிறீர்களே?"
"பரவாயில்லை! உட்கார்ந்து சாப்பிடு! சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்."
அழகியநம்பி கட்டிலிலிருந்து இறங்கி இலைக்கு முன்னால் உட்கார்ந்தான். கோமு முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிச் சொருகிய பாவாடை நடையைத் தடுக்க, ஒரு கையில் எண்ணெய்க் கிண்ணமும், இன்னொரு கையில் சட்டினியுமாக அவனை நோக்கி வந்தாள். அவள் பாவாடையைத் தூக்கிச் சொருகிக் கொண்டிருந்த விதமும், தயங்கித் தயங்கி நடந்து வந்த நடையும் அழகியநம்பிக்குச் சிரிப்பு மூட்டின.
உடனே அவன், "ஆச்சி! ஒரு காலத்தில் நான் கொழும்பிலிருந்து நிறையச் சம்பாதித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினால் ஆண்டவன் புண்ணியத்தில் உங்கள் கோமுவைத்தான் கட்டிக் கொள்ளலாமென்றிருக்கிறேன்." - என்று கேலியாகச் சொன்னான். கோமுவுக்கு வந்த வெட்கத்தைப் பார்க்க வேண்டுமே! கெட்டிச் சட்டினியையும் எண்ணெய்க் கிண்ணத்தையும் அப்படியே அவனுடைய இலைக்கு முன்னால் வைத்துவிட்டு முகத்தை இரண்டு உள்ளங் கைகளாலும் பொத்திக் கொண்டு ஓடிவிட்டாள். இந்த வேடிக்கையான நிகழ்ச்சியைக் கண்டு காந்திமதி ஆச்சி, பகவதி, அழகியநம்பி, மூன்று பேரும் கிளப்பிய சிரிப்பின் ஒலி அலைகள் அடங்குவதற்குச் சில விநாடிகள் ஆயின.
அழகியநம்பி காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடையிலிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியேறியபோது நேரம் சற்று அதிகமாகவே ஆகிவிட்டது. கூடத்து நிலைக்கதவைக் கடந்து வெளிவாசலுக்கு வருவதற்குள் உட்புறமிருந்து இரண்டு ஜோடிக் கண்கள் தன்னையே பார்த்துக் கொண்டு செயல் மறந்து நிற்பதை அழகியநம்பி உணர்ந்தான். வெளிவாசலில் இறங்கு முன் மனத்தில் ஒரு சிறிய சபலம் எழுந்தது. பின்புறம் திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் பகவதியும் அவள் தங்கை கோமுவும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்களுடைய அந்தப் பார்வையில், அன்பா, ஏக்கமா, அல்லது அனுதாபமா, எது அதிகமிருந்தது என்பதைக் கண்டுபிடிப்பது அரிதாயிருந்தது. இருவர் பார்வைக்குள்ளும் வேறுபாடு இருந்தது. வளைக்குள்ளிருந்து மிரண்ட பார்வையோடு தலை நீட்டிப் பார்க்கும் முயல் குட்டி போற் பார்த்தாள் கோமு. பகவதியின் பார்வைக்கு என்ன பொருள் கற்பித்துக் கொள்ளலாமென்று ஆனமட்டும் முயன்று பார்த்தான் அழகியநம்பி. கெண்டை மீனைப்போலப் பிறழும் அந்த அழகிய நீள் விழிகளில் மிதக்கும் உணர்ச்சி என்னவென்று அவனால் புரிந்து கொள்ள முடியவே இல்லை.
காந்திமதி ஆச்சியின் கடையிலிருந்து வெளியேறிய பின்பு தான் அவன் ஆரம்பத்தில் கூறியவாறு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அவன் பஸ் ஸ்டாண்டு வாசலில் கால் வைத்த நேரத்தில் எதிரே கையில் பையோடும் தலையில் குளிருக்காகக் காது மறைய மப்ளரைக் கட்டிக் கொண்ட தோற்றத்தோடும் பிரமநாயகமே வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை எதிரே பார்த்ததும் மேலே நடக்கத் தோன்றாமல் அப்படியே நின்றுவிட்டான் அழகியநம்பி. திடீரென்று அவரை எதிரே பார்த்துவிட்ட அதிர்ச்சியில் என்ன பேசுவதென்றே அவனுக்குத் தோன்றவில்லை.
அவர் அருகில் வந்ததும் மரியாதைக்குக் கைகூப்பினான். பிரமநாயகம் அவனை ஏற இறங்கப் பார்த்தார். முகத்தைச் சுளித்தார். அவனுடைய வணக்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகப் பதில் வணக்கமோ, புன்முறுவலோ, அவர் செய்யவில்லை. அவர் மனத்தில் வெறுப்போ, கோபமோ, ஏற்பட்டிருக்கிறதென்று தீர்மானித்துக் கொள்ள அழகியநம்பிக்கு அதிக நேரமாகவில்லை.
"துரை மகனுக்குச் சொன்னால் சொன்ன தேதிக்கு ஒழுங்காகக் கப்பலேறுவதற்கு வந்து சேர முடியவில்லையோ?" - குத்தலாகக் கேட்டார் பிரமநாயகம்.
"இங்கே ஒரு வாரமாக ஊரெல்லாம் ஒரே வெள்ளக்காடு. ஊரிலிருந்து நகர முடியவில்லை" - அழகியநம்பி அவருடைய இடிக்குரலுக்கு முன்னால் இரைந்து பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான்.
அதற்கு மேல் பஸ் ஸ்டாண்டு போன்ற ஒரு பொது இடத்தில் நின்று கொண்டு அவனைத் திட்டவோ இரைந்து கொள்ளவோ முடியாதென்ற காரணத்தினால் பேசாமல் முன்னால் நடந்தார் அவர். ஏதோ பெரிய குற்றத்தைச் செய்துவிட்டுப் பின்னால் தலை குனிந்துகொண்டு போகிறவனைப் போலச் சென்றான் அழகியநம்பி.
வீட்டில் அம்மாவுக்கு முன்னால் வைத்துக்கொண்டு தன்னை எப்படிக் கோபித்துக் கொள்வார், எப்படித் திட்டுவார் - என்பதை நடந்து கொண்டே கற்பனை செய்ய முயன்றான் அவன். பிரமநாயகம் முன்கோப சுபாவமுடையவர் என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அவன் கற்பனை வீண் போகவில்லை. வீட்டிற்குள் நுழைந்ததும் தம்முடைய கோபத்தின் முழு உருவத்தையும் வெளிக்காட்டிச் சண்டையிடத் தொடங்கிவிட்டார். சண்டையென்றால் அடிபிடி சண்டையல்ல, வாய்ச் சண்டைதான்.
"ஏண்டா, மனிதனுக்குச் சொன்னபடி நடந்து காட்டத் தெரிய வேண்டாமா? வாக்கிலே நாணயமில்லா விட்டால் அவன் என்னடா மனிதன்?" - என்று அவனைப் பதில் சொல்ல விடாமல் பொரிந்து தள்ளினார்.
"நீங்கள் அவனைக் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. ஊரிலிருந்து பத்து நாட்களாக யாரும் வெளியேற முடியாமல் செய்துவிட்டது வெள்ளம். உங்களிடம் புறப்பட்டு வருவதாகச் சொல்லியிருந்த தேதியில் பிரயாணத்துக்குத் தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்துதான் வைத்திருந்தான் அவன்" - அழகியநம்பியின் தாயார் அவரைச் சமாதானப்படுத்துவதற்கு முயன்றாள்.
"எனக்கு வந்த ஆத்திரத்தில் நான் மட்டும் தனியாகக் கப்பலேறிப் போயிருப்பேன். கோபமும் கொதிப்பும் ஒருபுறம் இருந்தாலும் மனம் கேட்கவில்லை. வருகிறானா? இல்லையா? என்று நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொண்டு போய்விடலாமென்று தான் புறப்பட்டு வந்தேன்."
"நீங்கள் வராவிட்டாலும் நான் இன்றைக்குப் புறப்பட்டு வந்திருப்பேன். இதோ பாருங்கள்; பெட்டி, படுக்கை மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டி வைத்திருக்கிறேன். பஸ் போக்குவரவு பற்றிய விவரங்களை விசாரிப்பதற்காகத்தான் உங்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்தேன்" - என்று சிறிது துணிவை வரவழைத்துக் கொண்டு அவருக்குப் பதில் கூறினான் அழகியநம்பி.
"சரிதான்! உன்னைக் கோபித்துக் கொண்டு என்ன பயன்? ஊரில் வெள்ளம் வந்தால் அதற்கு நீ என்ன செய்வாய்? போனால் போகிறது. இன்றைக்குப் பகல் பன்னிரண்டு மணி பஸ்ஸிற்கு நாமிருவரும் புறப்பட வேண்டும். ஐந்தேகால் மணிக்குத் தூத்துக்குடியில் கப்பலேறி விடலாம்..."
திடீரென்று கோபம் மாறி அனுதாபத்தோடு அவர் பேசியதைக் கேட்ட போது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. இந்த ஒரு சிறிய நிகழ்ச்சியிலிருந்து அழகியநம்பி பிரமநாயகத்தைப் பற்றி ஒருவாறு புரிந்து கொண்டான். 'பிரமநாயகம்' குறுகிய காலத்தில் உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. கோபம், தாபம், அன்பு, ஆத்திரம், அனுதாபம் யாவும் வேகமாக உடனுக்குடன் மாறி மாறி இடம் பெறக்கூடிய மனம் அவருடையதென்று தெரிந்து கொண்டான். அத்தகைய மனிதரோடு ஒவ்வொரு விநாடியும் நெருங்கிப் பழக வேண்டிய வாழ்க்கையை நோக்கித் தான் சென்று கொண்டிருப்பதை நினைத்த போது அவனுக்குப் பயமாகத்தான் இருந்தது.
அம்மா பதினோரு மணிக்குள் அவசர அவசரமாகச் சமையல் செய்திருந்தாள். அழகியநம்பியும், பிரமநாயகமும் சாப்பிட்டு முடிக்கும் போது மணி பதினொன்றரை. சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு இருவரும் பஸ்ஸுக்குப் புறப்பட்டார்கள். விடைகொடுக்கும் போது அவன் தாய்க்கு அழுகையே வந்துவிட்டது. அவர்கள் இருவருடைய உருவமும் தெருக்கோடியில் திரும்புகின்றவரை அம்மாவும், வள்ளியம்மையும், கலங்கிய கண்களோடு வீட்டு வாயிலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிரமநாயகத்தோடு நடந்து கொண்டிருந்த அழகியநம்பி தெருக்கோடியில் காந்திமதி ஆச்சியின் இட்டிலிக்கடை வந்ததும் அதன் வாயிற் பக்கமாகத் திரும்பிப் பார்த்தான். யாரோ சொல்லிவைத்து ஏற்பாடு செய்தது போல அங்கே அந்தக் கண்கள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. பகவதி நின்று கொண்டிருந்தாள், கோமுவின் தலையும் தெரிந்தது. அந்த நான்கு விழிகளைச் சந்தித்த அவனுடைய இரண்டு விழிகள் அவற்றில் ஏக்கத்தைக் கண்டன.
அந்த நாட்களில் வியாபாரத்துக்காக அல்லது பணம் தேடுவதற்காக அக்கரைச்சீமை என்று செல்லமாக அழைக்கப்பட்ட இலங்கைக்குப் போவது எளிய செயலாக இருந்தது. பாஸ்போர்ட், விசா முதலிய தொல்லைகளெல்லாம் இல்லாத காலம் அது. தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு இரயிலேறுவது போலவே கொழும்புக்குக் கப்பலேறுவதும் சாதாரணமாக இருந்து வந்தது. ஆனாலும், 'கடலைக் கடந்து போதல்' என்ற எண்ணம் உணர்ச்சியளவில் ஒரு திகைப்பை உண்டாக்குவது வழக்கம்.
பிரமநாயகமும், அழகியநம்பியும் தூத்துக்குடிக்கு வந்து சேரும் போது மாலை நான்கு மணிக்கு மேல் ஆகியிருந்தது. பஸ்ஸில் பிரயாணம் செய்த சிலமணி நேரத்தில் அவர் பேசிய பேச்சுக்களும், பழகிய விதமும், அந்த மனிதரைப் பற்றி ஓரளவு நன்றாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை அவனுக்கு அளித்திருந்தன.
நீர்க்காவியேறிய நான்கு முழம் வேட்டியும் எப்போதோ தைத்த அரைக்கைச் சட்டையும், கையில் ஒரு ஒட்டுப்போட்ட குடையுமாக... அவர் விசுக்கு விசுக்கென்று நடப்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. துட்டைச் செலவழிப்பதில் சிக்கனமும், கட்டுப்பாடும் உள்ள இந்த மனிதரா சில லட்சங்களுக்குச் சொந்தக்காரர் என்று பிரமநாயகத்தைப் பற்றித் தெரியாதவர்கள் நிச்சயமாகச் சந்தேகப்படத்தான் செய்வார்கள்.
ஆள் குட்டையாக இருந்தாலும் மனிதர் முடுக்கிவிட்ட யந்திரம்போல வேகமாக நடந்தார். அவருடன் தொடர்ந்து நடக்க அவன் தன் இயல்பான நடையை வேகப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நடை ஒன்றில் மட்டுமல்ல; எல்லா வகையிலும் பிரமநாயகத்துக்குப் பக்கத்தில் தன்னைப் போன்ற ஒருவன் நடந்து செல்வது பொருத்தமற்றதாகத் தோன்றியது அழகியநம்பிக்கு. தூத்துக்குடி பஸ் நிலையத்தில் இறங்கி, பெட்டி படுக்கை மூட்டை முடிச்சுக்களை இரண்டு கூலிக்காரர்களிடம் பேசி ஏற்றிக்கொண்டு துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர் அவர்கள் இருவரும். அழகியநம்பிக்கு உடல் தளர்ந்திருந்தது. நடையில் உற்சாகமில்லை.
காலையில் பதினோரு மணிக்குப் புறப்படுவதற்கு முன் ஊரில் சாப்பிட்ட சாப்பாடுதான். பஸ் தூத்துக்குடி வந்து சேருகிற வரை பச்சைத் தண்ணீர் கூட வாயில் ஊற்றிக் கொள்ளவில்லை. பிரமநாயகம் படு அழுத்தமான பேர்வழியாக இருந்தார். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதில் இரண்டு வகை உண்டு. அநாவசியத்துக்காகச் செலவழிக்காமல் இருப்பது ஒருவகை! அநாவசியத்துக்காக மட்டும் அன்றி அவசியத்துக்காகவும் செலவழிக்காமல் இறுக்கிப் பிடிப்பது இன்னொரு வகை. பிரமநாயகம் என்ற பணக்கார மனிதர் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவராக இருப்பார் போல் தோன்றியது. பணத்தை ஏராளமாகச் சேர்க்க வேண்டுமென்ற ஆவலும், சேர்க்கும் ஆற்றலும் உள்ளவர்களுக்கு அதைச் செலவழிக்கும் ஆற்றல் மட்டும் குறைந்திருப்பதற்குக் காரணம் என்ன? என்று சிந்தித்துக் கொண்டே நடந்தான் அழகியநம்பி.
ஊரிலிருந்து புறப்படும் போது பிரமநாயகத்துக்கும் சேர்த்துப் பணம் கொடுத்து அவன் தான் டிக்கெட் வாங்கியிருந்தான். முறைப்படி அவர்தான் அவனை வேலைக்கு அழைத்துக் கொண்டு போகிறவர். டிக்கெட் அவனுக்கும் சேர்த்து அவர் வாங்கியிருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்யாதது அவனுக்கு வியப்பை அளித்தது. 'தம்பீ! நீயே டிக்கெட் வாங்கி விட்டாயா? அடேடே! என்னைக் கேட்டிருக்கலாமே?' என்று மரியாதைக்காகவாவது உபசாரமாக இரண்டு வார்த்தைகள் சொல்லுவார் என்று எதிர்பார்த்தான். அந்தப் பேச்சையே எடுக்கவில்லை அவர்.
பசி வயிற்றைக் கிள்ளியது. உடனே ஏதாவது ஓட்டலில் நுழைந்து சிற்றுண்டி சாப்பிட வேண்டும் போலிருந்தது. பிரமநாயகம் என்ன சொல்லுவாரோ என்ற தயக்கத்தினால் பேசாமல் நடந்து கொண்டிருந்தான். துறைமுகத்துக்குப் போவதற்குள் அவராகவே ஏதாவதொரு ஓட்டலுக்குச் சிற்றுண்டி சாப்பிட அழைத்துச் செல்லுவார் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. ஆனால், அது வீணாயிற்று. துறைமுக வாசலில் சுங்கச்சாவடியை அடைகிறவரை பிரமநாயகம் சிற்றுண்டிப் பிரச்சினையைக் கிளப்பவே இல்லை. கூலிக்காரர்கள் சாமான்களைக் கீழே வைத்ததும், "தம்பீ! அழகு; என்னிடம் சில்லறையாக இல்லை. இவர்களுக்கு ஆளுக்கு எட்டணா கூலி கொடுத்து அனுப்பு..." என்றார் பிரமநாயகம். அவன் ஒரு கணம் திகைத்தான். பதில் பேசாமல் சட்டைப் பைக்குள் கைவிட்டு இரண்டு அரை ரூபாய் நாணயங்களை எடுத்துக் கூலிக்காரர்களுக்குக் கொடுத்து அவர்களை அனுப்பினான். பஸ் கட்டணம், சுமைகூலி எல்லாம் கொடுத்த பின் தன்னிடம் மீதமிருக்கும் ஆஸ்தியை எண்ணிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.
பைக்குள் துழாவினான். சில்லறைக் காசுகளாக இருந்தவற்றை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் பன்னிரண்டே முக்காலணா தேறியது. பிரமநாயகத்திடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அப்படியே வெளிப்புறத்திலிருந்த ஓட்டலுக்குச் சென்று பசியைத் தணித்துக் கொண்டு வரலாமென்று தோன்றியது அவனுக்கு. அவரையும் உடன் அழைக்காமல் செல்வது நன்றாயிருக்குமோ என்று தயங்கினான்.
'வாருங்கள்; சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வரலாம்' - என்று தான் அவரை அழைத்தால் என்ன நினைத்துக் கொள்வாரோ என்று பயமாக இருந்தது. கோபித்துக் கொண்டு கூச்சல் போட்டால் என்ன செய்வது?
கேவலம் பன்னிரண்டே முக்காலணாச் சில்லறைக்குச் சொந்தக்காரன் பன்னிரண்டு இலட்சத்துக்கு அதிபதியை உரிமையோடு காப்பி சாப்பிட அழைக்கலாமா? உயர்வு, தாழ்வு, மட்டு மரியாதை இல்லாமல் போய்விட்டதென்று அவர் திட்டுவாரோ என்னவோ?
'கை வறண்டு கிடக்கும் ஏழைக்குத்தான் அடுத்த விநாடியைப்பற்றிக் கவலைப்படாமல் இந்த விநாடியில் இருப்பதைச் செலவழித்து விட வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. பன்னிரண்டே முக்காலணாவில் இரண்டு பேர் காப்பி சிற்றுண்டி சாப்பிட்டு விடலாமென்று நான் நினைக்கிறேன். பன்னிரண்டு இலட்சத்துக்கு உரியவர் வயிற்றையும், பசியையும், பக்கத்திலிருப்பவனையும் மறந்து காரியத்தில் கண்ணாகச் சுங்கச் சாவடியின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்.' - இதை நினைத்த போது அழகியநம்பிக்குச் சிரிப்புதான் வந்தது. உதடுகளுக்கு அப்பால் வெளிப்பட்டுவிடாமல் அந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டு விட்டான்.
துறைமுகத்தில் சுறுசுறுப்பான நேரம் அது. ஐந்தேகால் மணிக்குக் கொழும்புக்குப் புறப்பட வேண்டிய கப்பல் ஒரு புறமும், நாலரை மணிக்குக் கொழும்பிலிருந்து வந்த கப்பல் ஒரு புறமுமாக நின்று கொண்டிருந்தன. ஏற்றுமதி, இறக்குமதி காரணங்களுக்காகக் கூடியிருந்த வியாபாரிகள், முத்துச் சலாபத்தில் சிப்பிகளை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் முத்துக் குளிப்பவர்கள், கப்பலில் வந்து இறங்கிச் சுங்கச் சோதனையை முடித்துக் கொண்டு வெளிவரும் பிரயாணிகள், சுமை தூக்கும் கூலிகள், போலீஸ்காரர்கள், துறைமுக அதிகாரிகள், - என்று பல்வேறு நிலையைச் சேர்ந்த மக்கள் அங்கே கூடியிருந்தனர். பல்வேறு விதமான குரல்கள் அங்கே ஒலித்தன.
அந்த மாலை நேரத்தில் அந்தத் துறைமுகத்தில் ஒரு புதிய உலகமே தன் கண்களுக்கு முன்னே உருவாகித் தோன்றுவது போலிருந்தது அழகிய நம்பிக்கு. கடலின் நீல நெடும் பரப்பையும், அதற்கு இப்பால் வெண்மைக் கரையிட்டதுபோல விளங்கும் மணல் வெளியையும் ஒரு குழந்தை புதிய விளையாட்டுப் பொம்மைகளைப் பார்ப்பதுபோல் அவன் ஆர்வத்துடனே பார்த்தான். கடற்கரைப் பகுதிகளை அவன் இதற்குமுன் அதிகமாகப் பார்த்ததில்லை. எப்போதோ, அவனுக்கு இரண்டு வயதாகவோ, மூன்று வயதாகவோ இருக்கும்போது முடி இறக்குவதற்காக அவனைத் திருச்செந்தூருக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்களாம். அவன் தாயார் அடிக்கடி கூறுவாள்.
பிரமநாயகம் சுங்கச் சாவடிக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒரு அதிகாரியிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வெளியே திரும்பி வந்து, "தம்பீ! கப்பலில் வந்து இறங்கியவர்களை முதலில் சோதனை செய்து அனுப்பிய பின்புதான் உள்ளே போகிறவர்களைச் சோதனை செய்வார்களாம். அதுவரை சாமான்களைப் பார்த்துக் கொண்டு நீ இங்கேயே நின்று கொண்டிரு. நான் பக்கத்தில் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வருகிறேன்" - என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். "கொஞ்சம் பொறுங்கள். ஓட்டல்வரை போய்விட்டு வந்துவிடுகிறேன்," - என்று சொல்லிவிடத் துடித்தது அவன் நாக்கு. ஆனால், சொல்லவில்லை. அவனுடைய தலை அவனை அறியாமலே அவருக்குச் சாதகமாகச் சம்மதமென்று கூறுவது போல் அசைந்தது.
பீப்பாய் உருளுவதுபோல விசுக்கு விசுக்கென்று நடந்து சென்ற பிரமநாயகத்தின் குறுகிய உருவத்தை ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான் அழகியநம்பி. அவர் யார்? அவரிடம் அவன் எதற்காகப் பயப்பட வேண்டும்? - அவனுக்கே புரியவில்லை. 'சொல்லிவிட வேண்டும், துணிவோடு சொல்லியே ஆகவேண்டும்' - என்று நினைக்கிறான். அவர் முகத்தைப் பார்த்ததும் மறந்துவிடுகிறான். எங்கும், எப்போதும், உலகம் முழுவதும் அடிமைத்தனம் என்ற ஒரு இழிந்த பண்பே இப்படிக் காரண காரியமற்ற ஒருவகைப் பயத்தினால் தான் உண்டாகிறதோ; என்று சிந்தித்தான் அவன்.
ஆனால், அவரிடம் அவனுக்கு ஏற்பட்ட பயத்துக்குக் காரணம் இல்லையென்று எப்படிச் சொல்லிவிட முடியும்? அவருக்குக் கீழே வேலை பார்த்து ஆளாவதற்குத்தானே அவன் போய்க் கொண்டிருக்கிறான்? அவருடைய தயவு அவனுக்கு வேண்டாமென்று சொல்லிவிட முடியுமா? அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த அவன் அவர் நுழைந்த இடத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டான். துறைமுகத்து வாசலில் வலதுப் பக்கம் திரும்பி, அங்கிருந்த ஓட்டலுள் நுழைந்தார் பிரமநாயகம்.
பார்த்துக் கொண்டே நின்ற அழகியநம்பிக்கு யாரோ உச்சந்தலையில் ஓங்கி அடித்தாற்போல் இருந்தது. 'பக்கத்தில் யாரோ ஒருவரைப் பார்த்துவிட்டு வருகிறேன்' என்று தன்னிடத்தில் பிரமநாயகம் ஏன் பொய் சொல்லிவிட்டுப் போக வேண்டுமென்று திகைத்தான்! ஒரு விநாடி பிரமநாயகம் என்ற அந்தப் பெரிய பணக்கார மனிதர் மிகக் கேவலமானவராக - மிக இழிந்தவராகத் தோன்றினார். அவனுடைய இளம் மனம் கொதித்தது. 'சே! சே! இப்படியும் ஒரு மனிதன் கருமியாக இருக்க முடியுமா? கூட வந்தவனிடம் பொய் சொல்லிவிட்டுப் போய்த் தன் வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு அற்பத்தனமான மனிதனைப் பின்பற்றியா நான் செல்லுகிறேன்?' - என்று எண்ணிய போது அவனுடைய உணர்வு குமுறியது. தண்ணீரில் நீந்தத் தெரியாமல் தத்தளிக்கின்றவன் எது கையிற் சிக்கினாலும் அதையே ஆதாரமாக எண்ணிப் பற்றிக் கொள்வதுபோலப் பிரமநாயகத்தின் கருமித்தனத்தை எண்ணிக் கொதித்த அவன் மனம், தனக்குத் தானாகவே ஒரு ஆறுதலைத் தேடிக்கொண்டது. 'இரண்டு பேரும் ஒரே சமயத்தில் ஓட்டலுக்குப் போனால் சாமான்களைப் பார்த்துக் கொள்ள ஆளில்லையே என்றெண்ணித் தான் பிரமநாயகம் முதலில் போயிருப்பார். திரும்பி வந்து தன்னிடம் பணம் கொடுத்துச் சாப்பிட அனுப்புவார். என்ன இருந்தாலும் நன்றாக ஆராயாமல் ஒரு மனிதரைப் பற்றி நாமாகத் தவறுபட எண்ணிக் கொள்ளக் கூடாது' - என்று எண்ணித் தற்காலிகமான பொறுமையை ஏற்படுத்திக் கொண்டான் அழகியநம்பி.
மீன்வாடை, கடல் தண்ணீரின் முடை நாற்றம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அழகியநம்பி நின்றான். அவனுடைய கண்கள் ஓட்டலின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தன. அரைமணி நேரத்திற்குப் பிறகு ஏப்பம் விட்டுக் கொண்டே வாயில் வெற்றிலைச் சிவப்பு விளங்க ஓட்டலிலிருந்து வெளியேறி அவன் இருந்த இடத்தை நோக்கி வந்தார் பிரமநாயகம். அவருக்குத் தெரியும்படியாக நேருக்கு நேர் அவர் வருகிற திசையை எதிர்த்துப் பார்த்துக் கொண்டிருந்த அழகியநம்பி, அவர் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறாரே என்று பார்வையை வேறுபுறம் திருப்பினான். அந்தப் பயம், தயக்கம் இவைகளில் எதுவுமே தன்னிடம் இருக்கக் கூடாதென்றுதான் அவன் எண்ணினான். ஆனால் அவை அவனிடமே மறைந்திருந்து சமயா சமயங்களில் வெளிப்பட்டுத் தொலைத்தன.
பிரமநாயகம் வரும்போதே அவசரப் படுத்திக் கொண்டு வந்தார். "தம்பீ! நாழியாகிவிட்டது. கப்பல் புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரம் தான் இருக்கிறது. வா; சாமான்களை ஆளுக்குக் கொஞ்சமாகத் தூக்கிக் கொள்வோம். உள்ளே சுங்கச் சோதனை முடிவதற்குக் கால்மணி நேரம் ஆகிவிடும்" - என்று சொல்லிக் கொண்டே வேகமாக வந்தார். பிரமநாயகத்தின் உண்மை உருவம் அழகியநம்பிக்குப் புரிந்துவிட்டது. அவன் பெரிதும் ஏமாற்றமடைந்தான். அவன் பிடித்த கிளை?... அது பலக்குறைவான முருங்கைக்கிளை என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. கணநேரத்து ஆத்திரத்தில் அப்படியே, "சீ! நீயும் ஒரு மனிதனா?" - என்று கேட்டுவிட்டுப் பிரமநாயகத்தின் முகத்தில் காறித் துப்பவேண்டும் போல் தோன்றியது. துப்பிவிட்டு ஊருக்குத் திரும்பிப் போய் 'மூட்டை தூக்கியாவது பிழைக்கலாம்' - என்று எண்ணினான். தன்மானமும், மனக்கொதிப்பும், அப்படி எண்ணச் செய்தன அவனை. வெறும் எண்ணம்தான்! வெறும் கைத்துடிப்புத்தான். அடுத்த கணமே காரியவாதியாக, தன் எச்சரிக்கை மிக்க சராசரி மனிதனாக மாறினான் அழகியநம்பி.
'எந்த முன் கோபம் என்ற குணத்தை நான் வெறுக்கிறேனோ, அதே முன்கோபம் என்ற குணத்துக்கு நானே ஆளாகிவிடலாமா? பிரமநாயகம் செய்தது கேவலமான செயல்தான். ஆனால், நானும் என் எதிர்காலத்தில் ஒரு பகுதியும் எந்த மனிதரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறோமோ, அவரை இப்போதே பகைத்துக் கொள்வதில் பயன் இல்லை. பொறுமை எல்லோருக்கும் சாதாரணமாக வேண்டும். ஆனால், ஏழைக்கு அது கட்டாயமாக வேண்டும்.'
அழகியநம்பி பசியைப் பொறுத்துக் கொண்டான். பிரமநாயகம் அவனுக்குத் தெரியாதென்று நினைத்துக் கொண்டு செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொண்டான். எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மூட்டை முடிச்சுக்களைச் சுமந்து அவரைப் பின்பற்றிச் சுங்கச் சாவடிக்குள் நுழைந்தான்.
வயிற்றுப் பசி, மனம், மானம் எல்லாவற்றையும் விட வாழ்க்கை பெரிதாகத் தெரிந்தது அவனுக்கு. சுங்கச்சாவடிக்குள் அவர்களுடைய சாமான்களைப் பரிசோதிப்பதற்கு அதிக நேரம் ஆகவில்லை. கால் மணி நேரத்தில் 'பார்த்தோம்' என்று பெயர் செய்தாற்போல் பரிசோதித்துவிட்டுக் கப்பலுக்கு அனுமதித்தார்கள். சுங்க இலாகாவில் வேலை பார்க்கும் பலருக்குப் பிரமநாயகத்தை நன்றாகத் தெரிந்திருந்தது. சிலர் அவரைப் பார்த்ததும் புன்னகை புரிந்தனர். இன்னும் சிலர் வணக்கம் செலுத்தினர். வேறு சிலர் ஒரு தினுசாகத் தலையை அசைத்தனர். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அர்த்தமும் குறிப்பும் இருப்பது போல் பட்டது அழகியநம்பிக்கு. பிரமநாயகத்தையும், அவரோடு தொடர்புடையவர்களையும், தொடர்புடைய நிகழ்ச்சிகளையும் உற்றுக் கவனிப்பது அவனுக்கு அவசியமான, தேவையான நிகழ்ச்சியாக இருந்தது.
கப்பலுக்கு டிக்கெட்டுகள் அவரே வாங்கிவிட்டார். சாமான்கள் எல்லாம் ஏற்றப்பட்ட பின் பிரமநாயகமும் அழகியநம்பியும் ஏறிக்கொண்டனர். அன்றைக்குக் கொழும்புக் கப்பலில் அதிகக் கூட்டம் இல்லை. ஆண்களும் பெண்களுமாகத் தேயிலைத் தோட்டத்திற்கென்று கங்காணியாரால் அழைத்துக் கொண்டு போகப்படும் ஒரு சிறு கூலிக் கூட்டம், பட்டுக் கவுன் அசைந்தாடச் செவ்விதழ் திறந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்த இரண்டு ஆங்கிலோ - இந்திய யுவதிகள், இன்னும் சில பேர்கள். எல்லாம் சேர்த்துப் பார்த்தாலும் மொத்தம் இருபது, இருபத்திரண்டு பேருக்குமேல் இராது.
கப்பல் புறப்படுமுன் அதற்குள்ளேயே இருந்த சிற்றுண்டிச் சாலைக்குள் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தான் அழகியநம்பி. சட்டைப் பையிலிருந்த பன்னிரெண்டே முக்காலணா, இப்போது நாலே முக்கால் அணாவாகக் குறைந்திருந்தது. மணி ஐந்து அடித்துப் பத்து நிமிஷம் ஆயிற்று. கப்பல் புறப்படுவதற்கான முதல் மணியை அடித்தார்கள். கப்பலின் சங்கு ஒலித்தது. வழியனுப்புவதற்காக வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராகக் கீழே இறங்கினர். நங்கூரம் அவிழ்க்கப்பட்டுக் கப்பல் கடலில் நகர்ந்தது. அழகியநம்பி கரைப் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பிறந்த மண் சிறிது சிறிதாகப் பின்னுக்கு நகர்ந்தது.
அழகியநம்பி தூத்துக்குடியில் பிரமநாயகத்தோடு கப்பலேறிய அதேநாள் இரவில் அவனுடைய ஊரில் ஐந்து உள்ளங்கள் ஓயாமல் அவனைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருந்தன. ஐந்து பேருடைய சிந்தனைகளும், ஐந்து விதங்களில் ஐந்து வேறுபட்ட தனித்தனிக் கோணங்களிலே அமைந்திருந்தன.
அழகியநம்பியின் வீட்டில் அவனைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் கோரைப்பாயில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். அவளுடைய மனத்தில்தான் எத்தனை எத்தனை விதமான எண்ணங்கள்; கனவுகள் முந்துகின்றன.
குறிஞ்சியூர் - அதுதான் அந்த ஊரின் பெயர் - மண்ணில் காலை வைத்து அந்த அம்மாளின் வாழ்க்கை நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்களைக் கழித்துவிட்டது. பிறந்த வீடு திருநெல்வேலி. ஆனால், பிறந்தவீட்டு வகையில் உறவினர் என்று குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளும்படியாக அங்கே யாரும் இல்லை. கணவனுக்கு முந்திக்கொண்டு சுமங்கலியாகப் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று அவளுடைய மனத்தில் எண்ணியிருந்தாள். ஆனால், கணவன் அவளை முந்திக் கொண்டு போய்விட்டான். ஒரு வயது வந்த பெண், ஒரு வயது வந்த பிள்ளை - இருவரையும், குடும்பத்தின் சக்திக்கு மீறின கடனையும், அவள் பொறுப்பில் வைத்துவிட்டுப் போயிருந்தான் கணவன்.
'அழகியநம்பியின் படிப்பு அரைகுறையாக நின்றுவிட்டது. ஒரு வேளையும் இல்லாமல் ஊரோடு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் முடியுமா? கலியாணத்திற்கு ஒரு பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். அடைக்க வேண்டிய கடன்களுக்கும் குறைவில்லை. நல்ல வேளையாகப் பிரமநாயகம் வந்து சேர்ந்தார் அவரோடு அக்கரைச் சீமைக்கு அனுப்பியாயிற்று. இன்னும் சில வருஷங்களுக்கு அவன் முகத்தைக்கூடப் பார்க்க முடியாது. நானும், இந்தப் பெண்ணும் எப்படித்தான் தனியாகக் காலந்தள்ளப் போகிறோமோ? சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தாலும், ஆண் பிள்ளை வீட்டுக்கு ஒரு அழகுதான். அவன் போய் அரைநாள் கூட இன்னும் முழுதாகக் கழியவில்லை. அதற்குள்ளேயே இங்கே வெறிச்சென்று ஆகிவிட்டதே! வீடு முழுவதும் நிறைந்திருந்த கலகலப்பான பொருள் ஒன்று திடீரென்று இல்லாமலோ, காணாமலோ, போய்விட்டாற் போன்ற உணர்ச்சி ஏன் ஏற்படுகிறது? இன்றைக்கே இப்படி இருக்கிறதே? இன்னும் எத்தனை நாட்கள்; எத்தனை மாதங்கள்; எத்தனை வருடங்கள் - அவன் முகத்தில் விழிக்காமல் கழிக்க வேண்டுமோ? அவன் சம்பாதித்து உருப்பட வேண்டிய குடும்பம் இது?'
'இந்தப் பெண் வள்ளியம்மையை ஏதாவது நல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடுக்க வேண்டும். வயதாகிவிட்டது. கன்னி கழியாமல் எத்தனை நாட்கள் தான் வீட்டில் வைத்துக் கொண்டிருப்பது? அவனுக்கும்தான் என்ன! வயதாகவில்லையா? ஏதோ நாலைந்து வருஷம் அக்கரைச் சீமையில் ஓடியாடி நாலு காசு சேர்த்துக் கொண்டு திரும்பினானானால், கடன்களைத் தீர்த்துவிட்டு இந்தக் கல்யாணங்களையும் முடிக்கலாம். அதற்கப்புறம் தான் இந்தக் குடும்பம் ஒரு வழிக்கு வரும். எனக்கு நிம்மதி ஏற்படும். எல்லாவற்றுக்கும் அழகியநம்பியை நம்பித்தான் இருக்கிறேன். அவனால் ஆளாக வேண்டிய குடும்பம் இது.'
'பிரமநாயகம் முன்கோபக்காரர். செட்டு, சிக்கனம் என்று கண்டிப்பாக இருக்கிறவர். இவன் அந்த மனிதரிடம் எப்படிப் பழகப் போகிறானோ? ஏதாவது மனமுறிவு ஏற்பட்டுக் கோபித்துக் கொண்டு ஓடி வந்து விடாமல் இருக்க வேண்டும். விவரம் தெரிந்த பிள்ளைதான். அப்படியெல்லாம் வம்புக்குப் போய்க் காரியத்தைக் கெடுத்துக் கொள்கிறவன் இல்லை. குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளை. அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு சிந்தாமல் சிதறாமல் முன்னுக்கு வந்து விடுவான். பார்க்கலாம். எல்லாம் போகப் போகத்தானே தெரிகிறது!' உடலில் இலேசாக உறுத்தும் கோரைப்பாயில் புரண்டு கொண்டே பெருமூச்சு விட்டாள் அழகியநம்பியின் அன்னை. உறக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப மகனைப் பற்றிய நினைவுகள் அவள் மனத்தில் வட்டமிடலாயின. 'பாவம்! பதினொரு மணிக்குச் சாப்பிட்டு விட்டுப் போனது. இரண்டாம் வேளைக்கு எங்கே சாப்பிட்டானோ? கப்பலில் சாப்பாடு கிடைக்குமோ, கிடைக்காதோ? இந்தப் பிரமநாயகம் திடுதிப்பென்று வந்து குதிக்கப் போகிறாரென்று நான் கண்டேனா? இல்லையானால் ஆர அமர ஏதாவது பலகாரம் செய்து கட்டிக் கொடுத்திருக்கலாம். இத்தனை நாழிகைக்குக் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். புதிதாகப் போகிறவர்களுக்குக் கப்பலின் ஆட்டம் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைக் குமட்டி வாந்தி எடுத்துக் கஷ்டப்படுகிறானோ என்னவோ? 'சௌக்கியமாக வந்து சேர்ந்தேன்' - என்று இவன் கைப்படக் கடிதம் வந்து சேர்ந்தாலொழிய எனக்கு நிம்மதி இல்லை' - அந்தத் தாயின் சிந்தனையும் பெருமூச்சும், இரவும் வளர்ந்து கொண்டே இருந்தன. அவற்றுக்கு முடிவுதான் ஏது?
அழகானதொரு பூங்கொடி நெளிந்து கிடப்பது போலப் படுக்கையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அழகியநம்பியின் தங்கை வள்ளியம்மை. தூக்கத்தில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். செம்பவழத் துண்டங்கள் போன்ற அவள் உதடுகள் பூட்டு நெகிழ்ந்து புன்னகை செய்து கொண்டிருந்தன. அண்ணனின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
'அழகியநம்பி கொழும்பிலிருந்து பெரும் பணக்காரனாகத் திரும்பி வருகிறான். வள்ளியம்மைக்குப் பட்டுப் புடவைகளும் துணி மணி நகைகளும் வாங்கிக் குவிக்கிறான். தங்கையை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சாத குறையாகக் கொண்டாடுகிறான். ஊரெல்லாம் அவன் பெருமைதான் பேசப்படுகிறது. குடும்பக் கடன்களை எல்லாம் அடைத்துவிட்டான். பழைய கால மாதிரியில் சிறிதாக இருந்த மச்சு வீட்டைச் செப்பனிட்டு அழகிய பெரிய மாடி வீடாக ஆக்கி விட்டான். ஒத்தியிலும், ஈட்டின் பேரிலும் அடைபட்டிருந்த பூர்வீகமான நிலங்களை எல்லாம் பணம் கொடுத்து மீட்டுச் சொந்தமாக்கிக் கொண்டான். குறிஞ்சியூர் அவனுக்குத் தனிப்பட்ட செல்வாக்கும் மரியாதையும் அளிக்கின்றது. 'கொழும்பு ஐயா வீடு' - என்று பாமர மக்களிடையே அவன் வீடு பெயர் பெற்று விடுகிறது! தன் தங்கை வள்ளியம்மையின் திருமணத்திற்காக அந்த வட்டாரத்திலேயே மிகவும் பெரிய பணச் செழிப்புள்ள குடும்பத்தில் மாப்பிள்ளை பார்க்கிறான் அழகியநம்பி.' - இப்படி என்னென்னவோ இன்பமயமான கனவுகளில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் வள்ளியம்மை. உறக்கம் வராத தாய், உறங்கிக் கொண்டே கனவு காணும் மகள். இருவருக்கும், இருவருடைய நினைவுகளுக்கும் இடையே தான் எவ்வளவு வேற்றுமைகள்?
இரவின் அமைதியில் அதே குறிஞ்சியூரில், அதே தெருவின் கோடியில் வேறு மூன்று உள்ளங்களும் அழகியநம்பியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தன. காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடையின் தாழ்வாரத்தில் பூவரசமரத்துக் காற்று சுகமாக முன்புறமிருந்து வீசிக் கொண்டிருந்தது. மறுநாள் காலை வியாபாரத்துக்காக மாவு முதலியவற்றை அரைத்து மூடி வைத்துவிட்டுப் பற்றுப் பாத்திரங்களைக் கழுவிக் கடையைப் பெருக்கிச் சுத்தம் செய்த பிறகு தான் அவர்கள் படுக்கை விரித்துப் படுத்திருந்தனர். இன்னும் ஒருவரும் தூங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. "அம்மா! அழகியநம்பி மாமா இந்நேரத்திற்கு எங்கே போய்க் கொண்டிருப்பாரோ? தூத்துக்குடியிலிருந்து கப்பல் புறப்பட்டிருக்குமில்லையா?" - சிறுமி கோமு மெல்லக் கேள்வியைக் கிளப்பினாள்.
"தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்குப் போகும் கப்பல் சாயங்காலமாகப் புறப்படும் என்று சொல்லுவார்கள். அழகியநம்பி இந்த நேரத்துக்கு நடுக்கடலில் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். அந்தக் காலத்தில் எல்லாம் சமுத்திரத்தைத் தாண்டிக் கப்பலில் ஊர்போக விடமாட்டார்கள். இப்போதுதான் அதெல்லாம் நம்புவதே இல்லையே! வயிற்றுப்பாட்டுக்கு அப்புறம் அல்லவா பாவம் புண்ணியமெல்லாம்." - சிறுமியின் கேள்விக்குச் சம்பந்தத்தோடும், சம்பந்தமின்றியும், விடை கூறினாள் காந்திமதி ஆச்சி.
"மாமா எதற்காக அம்மா இந்த ஊரை விட்டுப் புறப்பட்டுக் கொழும்புக்குப் போகிறார்?" - சிறுமி கோமு இரண்டாவது கேள்வியைத் தொடுத்தாள். தாயும் தங்கையும் பேசுவதைக் கவனமாக விழித்திருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் பகவதி. கோமுவின் சிறுபிள்ளைத்தனமான கேள்வியைக் கேட்டுக் காந்திமதி ஆச்சிக்குச் சிரிப்பு வந்தது.
"எதற்காக இருக்கும்? எல்லாரும் எதற்காக வெளியூருக்குப் போவார்களோ அதற்காகத்தான் மாமாவும் போகிறார்! பணம் சேர்ப்பதற்கடி பெண்ணே! பணம் சேர்ப்பதற்கு!" - என்று சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொன்னாள் ஆச்சி.
"ஏன் அம்மா? அங்கெல்லாம் நம்மவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ இல்லையோ!" - என்று அதுவரை மௌனமாக இருந்த பகவதி கேட்டாள்.
"இல்லாமல் என்னடி? மஞ்சள் கடுதாசி கொடுத்து ஏழையாய்ப் போனவன் எல்லாம் நாலுகாசு சேர்க்க அக்கரைச் சீமைக்குத்தானே போகிறான்" - என்று ஆச்சி கூறினாள்.
"இல்லை! இங்கேயே இருந்தவர்களுக்கு அந்தத் தேசமும் சூழ்நிலையும் ஒத்துக் கொள்ளுமோ என்னவோ? நோய், நொடி, ஒன்றும் வராமலிருக்க வேண்டுமே!"
"பகவதி! நேரமாகிறதே... காலையில் எழுந்திருந்து காரியங்கள் செய்ய வேண்டாமா? சீக்கிரம் தூங்கு அம்மா," - என்று ஆச்சி பெண்ணிடம் வேண்டிக் கொண்டாள்.
"காலையில் அந்த மாமா மட்டும் வந்திருக்கவில்லையானால் அக்கா பாடு திண்டாட்டம்தான். எவ்வளவு துணிச்சலாகத் தண்ணீருக்குள் குதித்து அக்காவைக் கரைக்குக் கொண்டு வந்தார் தெரியுமா?" - கோமு, ஆச்சியிடம் 'மாமா'வின் பெருமையை அளக்கத் தொடங்கிவிட்டாள். "இன்றைக்கு நடந்தது சரி! கடவுள் புண்ணியத்தில் அழகியநம்பி வந்து காப்பாற்றி விட்டான். இனிமேல் நீங்கள் இம்மாதிரி விடிந்ததும் விடியாததுமாக எழுந்திருந்து தனியாகக் குளத்துக்குப் போகக் கூடாது. குளம் வெள்ளத்தால் கரை தெரியாமல் நிரம்பிக் கிடக்கிறது" - என்று இருவருக்கும் சேர்த்துக் கூறுவதுபோல் எச்சரித்தாள் ஆச்சி. ஆச்சி, பகவதி, கோமு மூன்று பேரும் தூங்குவதற்கு முயற்சி செய்யும் நோக்கத்துடன் கண்களை மூடினர். மூடிய விழிகள் ஆறுக்கும் முன்னால் அழகியநம்பியின் கவர்ச்சிகரமான முகத்தோற்றம், உருவெளியில் தெரிந்தது.
'இந்த வயதில் இந்த ஊரில் எத்தனையோ விடலைப் பிள்ளைகள் இருக்கின்றன. படித்து முட்டாளானவர்கள் சிலர், படிக்காமல் முட்டாள்களாக இருப்பவர்கள் சிலர். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வகையில் கெட்டுப் போய்த் திரிகின்றான். ஆனால், இந்தப் பிள்ளை அழகியநம்பி எவ்வளவு கண்ணியமாக எவ்வளவு நாணயமாக ஊரில் பழகினான்? தங்கமான பையன் இரைந்து பேசப் பயப்படுவான். பெரியவர்களிடம் மட்டு மரியாதை உண்டு. அவ்வளவில்லையானால், வழியோடு போய்க் கொண்டிருந்தவன் கோமுவின் கூச்சலைக் கேட்டுக் குளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றுவானா? அதுதான் போகட்டும். கொழும்புக்குப் போகிறவன் என்ன பணிவாக வீடு தேடி வந்து என்னிடம் சொல்லிக் கொண்டு போகிறான். விநயமான பிள்ளை. குணமுள்ள பிள்ளை. ஏழைக் குடும்பத்தின் பொறுப்பையும் கடன் சுமைகளையும், இந்த வயதிலேயே தாங்கிக் கொண்டு துன்பப்படும்படி நேர்ந்தது. எப்படியோ பிழைத்து முன்னுக்கு வரவேண்டும். நல்லவன் எங்கே போனாலும் பிழைத்துக் கொள்வான்' - இது அழகியநம்பியைப் பற்றிக் காந்திமதி ஆச்சியின் மனத்தில் தோன்றிய நினைவு.
கோமு நினைத்தாள்: - 'மாமா எவ்வளவு வேகமாகத் தண்ணீருக்குள் பாய்ந்தார்? எவ்வளவு அநாயாசமாக நீந்தி அக்காவைத் தூக்கிக் கரைக்குக் கொண்டு வந்தார்! அக்காவைத் தூக்கிக் கரகமாடுவதுபோல் கரகரவென்று சுழற்றிக் குடித்திருந்த தண்ணீரையெல்லாம் வெளியேற்றியது எவ்வளவு சாமர்த்தியமான காரியம்?' இட்டிலி சாப்பிடும்போது 'ஆச்சி! ஒரு காலத்தில் கொழும்பிலிருந்து நிறையச் சம்பாதித்துக் கொண்டு ஊர் திரும்பினால் உங்கள் பெண் கோமுவைத்தான் கட்டிக் கொள்ளப் போகிறேன்' என்று அழகியநம்பி வேடிக்கைக்குச் சொன்ன வார்த்தைகள் கோமுவின் பிஞ்சு மனத்தில் அழிய முடியாத அல்லது அழிக்க முடியாத ஒரு இடத்தில் ஆழப் பதிந்துவிட்டன. அந்தச் சொற்கள் விளையாட்டுப் போக்கில் பொருள் வலுவின்றிக் கேலிக்காகச் - சிரிப்பதற்காகக் கூறப்பட்டவை என்று அவள் நினைக்கவில்லை. உணர்ச்சி மலராத, காரண காரியங்களைத் தொடர்புபடுத்திச் சிந்திக்கத் தெரியாத - அந்த இளம் உள்ளம் அந்தச் சொற்களில் எதையோ தேடத் தொடங்கியிருந்தது.
நீரிலிருந்து கரையில் இழுத்துப் போட்ட மீன்போலத் துடித்தாள் பகவதி. அவளுக்குத் தூக்கம் வரவில்லை. தாயாரும் தங்கையும் அழகியநம்பியைப் பற்றிய பேச்சைக் கிளப்பியபோது அவனைப் பற்றித் தன் உள்ளத்தில் பொங்கிப் புலர்ந்து எழும் உணர்ச்சிகளைச் சொற்களாக்கிக் கொட்டித் தீர்த்துவிட வேண்டும்போல ஒரு ஆர்வம் எழுந்தது. ஆனால், அவளுடைய வயசுக்கு அவள் அப்படிப் பேசிவிட முடியுமா?
பெண்ணுக்கு வயது வந்துவிட்டால் அவளுடைய உடலின் தூய்மையையும், உள்ளத்தின் தூய்மையையும் மட்டுமே சுற்றி இருப்பவர்கள் கவனிப்பதில்லை. அவளுடைய ஒவ்வொரு வாயசைவையும், ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கிறது சுற்றுப்புறம். ஒரு சொல்லில் அல்லது சொல்லின் பொருளில் கோணல் இருந்துவிட்டால், அல்லது இருப்பதாகத் தெரிந்தால், பெண்ணின் உணர்ச்சியிலேயே அந்தக் கோணல் இருக்கவேண்டுமென்று சுற்றுப்புறம் அனுமானிக்க முடியும்? பக்கத்திலே இருப்பவர்கள் அந்நியர்களில்லை? தாயும் தங்கையும் தான் பக்கத்திலிருக்கிறார்கள். கலியாணமாகாத வயசுப்பெண், கலியாணமாகாத வயசுப் பையனைப்பற்றி எத்தனை எத்தனையோ நளினமான சுவையுள்ள நினைவுகளை நினைக்க முடியும்? அருகிலிருப்பது தாயும் தங்கையுமானாலும் நூறு வார்த்தை பேசினால் அதில் ஒரு வார்த்தையாவது அவளுடைய அந்தரங்கத்தைக் காட்டிக் கொடுக்காமல் போய்விடாது. பகவதி பேசவில்லை. பேச வேண்டியதையும் சேர்த்து நினைத்தாள்; கொள்ளை கொள்ளையாக நினைத்தாள். அத்தனை இன்ப நினைவுகளும் அவள் மனத்திலேயே மலர்ந்து அவள் மனத்திலேயே உதிர்ந்தன. அந்த நினைவு ஏற்பட்டபோது அழகியநம்பியின் கைபட்ட இடமெல்லாம் அவள் உடலில் புல்லரித்தது. அவனுடைய கம்பீரமான தோற்றம், சிரிப்பு, கொஞ்சும் கண்கள், அறிவொளி திகழும் நீண்ட - முகம் எல்லாம் பகவதியின் மனத்தில் சித்திரமாகப் பதிந்துவிட்டன. போயிருக்க வேண்டிய உயிரைக் காப்பாற்றி விட்டான். அவள் இப்போது இருக்கிறாள் என்றால் அவனால் இருக்கிறாள். அவனால் மட்டுமின்றி அவனுக்காகவும் இருக்க வேண்டுமென்று அவள் உள்ளம் சொல்லியது. களங்கமில்லாத அவள் கன்னி உள்ளத்தை அன்று காலை நிகழ்ந்த குளத்தங்கரைச் சம்பவத்திலிருந்து கவர்ந்து கொண்டவன் எவனோ அவன் கண்காணாத சீமைக்குக் கப்பலேறிப் போய்க் கொண்டிருக்கிறான். அதை நினைத்தபோது அந்தப் பேதைப் பெண்ணின் உள்ளம் குமைந்தது.
அழகியநம்பி திரும்புவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அதுவரை அவள் - அவளுடைய மனம் என்ன - செய்ய முடியும்? கடவுள் எவ்வளவு நல்லவர்! எவ்வளவு தொலைவிற்கு அப்பால் அவர் இருந்தாலும் மற்றொரு இடத்தில் இருந்து கொண்டு மற்றொருவர் அவரைப் பற்றி நினைப்பதற்கு மனம் என்ற ஒரு பொருளைக் கொடுத்திருக்கிறாரே! பகவதிக்கும் அந்த மனம் இருக்கிறது! அது பெண்ணின் மனம் ஆயிற்றே! அந்த நீண்ட இரவுப் போதில் மட்டும் தானா? அவனைப் பார்க்கின்றவரை அவனுடைய சிரித்த முகத்தைக் காண்கின்றவரை அவனையே நினைத்துக் கொண்டிருப்பாள் அவள். இட்டிலிக் கடைக் காந்திமதி ஆச்சியின் பெண்தான்! ஆனால், இட்டிலிக் கடை ஆச்சியின் பெண் என்பதற்காக உணர்ச்சி, உள்ளம், நம்பிக்கை - இவை அவளுக்கு இல்லாமல் போய்விடவில்லையே! பகவதிக்கும் தூக்கம் வரவில்லை.
தாயும் தங்கையும் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கியிருந்தார்கள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணும் மூடவில்லை. மனமும் மூடவில்லை, நினைவுகளும் மூடவில்லை. ஒரு பெரிய கப்பல், நீலக்கடலில் மிதக்கிறது! அதில் அழகியநம்பியின் உருவைக் கற்பனை செய்ய முயன்றாள் அவள்.
கருப்பு விரிப்பில் கைதவறிச் சிந்திய மல்லிகைப் பூக்களைப் போல் வானப்பரப்பு முழுதும் நட்சத்திரமணிகள் இறைபட்டுக் கிடந்தன. யானைத் தந்தத்தின் நுனிபோல் சிறிய பிறைச் சந்திரன் கருநீல வானத்தின் நெற்றிச் சுட்டிபோல் அழகாக இருந்தது. அழகியநம்பி கப்பலின் மேல் தளத்தில் நின்று கடலையும், வானத்தையும், அலைகளையும், நட்சத்திரங்களையும் சேர்த்து ஒரு புதிய அழகை உருவாக்க முயன்று கொண்டிருந்தான். அலைகளின் ஓசை, கப்பல் செல்லும் பொழுது ஏற்பட்ட ஒலி, இந்த இரண்டும் அவன் மனத்தில் ஒருவகைக் கிளர்ச்சியை உண்டாக்கின. எந்த வேகமாகச் செல்லும் வாகனத்தில் சென்றாலும் அந்த வேகத்தில் அடுக்கடுக்கான உயரிய சிந்தனைகள் சிலருக்கு ஏற்படும். கற்பனை வெளியில் எங்கோ, எதையோ நோக்கி உணர்வுக்கும் எட்டாததொரு பெரு வெளியில் பறப்பது போன்று உணர்ச்சி, பஸ்ஸில், இரயிலில், விமானத்தில் பிரயாணம் செய்யும்போது சிலருக்கு ஏற்படும். இப்போது கப்பலில் செல்லும்போது அழகியநம்பிக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டது.
அந்த ஆழ்கடலின் பேரலைகளைப் போல அவன் மனத்தில் எண்ணற்ற நினைவு அலைகள் மோதின. நடந்தவை, நடக்கின்றவை, நடக்கவேண்டுமென்று அவன் விரும்பியவை - எல்லாவற்றையும் வஞ்சகமின்றி நினைத்தது அவன் மனம். அந்தச் சிறிய கப்பல் சில பல பிரயாணிகளையும் ஏற்றுமதிச் சரக்குகளையும் மட்டும் கொண்டு செல்வதாக அவனுக்குத் தோன்றவில்லை. தனக்கே தெரியாத தன்னுடைய எதிர்காலத்தை நோக்கித் தன்னை இழுத்துக் கொண்டு போவது போல் தோன்றியது.
பிரமநாயகம் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தான். கப்பலின் ஆட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் சோர்ந்துபோய்ப் படுத்திருந்தார் அவர். மேல் தளத்திலிருந்த பிரயாணிகளில் பெரும்பான்மையானவர்கள் அதே நிலையில்தான் இருந்தனர். அதே கப்பலில் அவனோடு பிரயாணம் செய்த இரு ஆங்கிலோ இந்திய யுவதிகள் மட்டும் அவனைப் போலவே மேல் தளத்தில் கிராதி அருகே நின்று கடற் காட்சிகளை இரசித்துக் கொண்டிருந்தனர். மேல் தளத்தில் மின்சார விளக்கொளியில் கீச்சுக் குரலில் ஆங்கிலப் பேச்சும், கிண்கிணிச் சிரிப்புமாக அவர்கள் நின்று கொண்டிருந்த நிலை ஏதோ ஒரு நல்ல ஓவியம் போல் காட்சியளித்தது.
அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கும், அவன் நின்று கொண்டிருந்த இடத்திற்கும் நடுவே பத்துப் பன்னிரண்டு அடி இடைவெளி இருக்கலாம். பரங்கிப்பூ நிறம், சுருள் சுருளாக 'பாப்' செய்த கூந்தல், கையில் அலங்காரப் பை, முல்லை அரும்புகள் உதிர்வது போலச் சிரிப்பு. அழகிய நம்பியின் பார்வை இரண்டொரு விநாடிகள் அந்தப் பெண்களின் மேல் நிலைத்தது. அவர்களும் அவனைப் பார்த்தனர்.
கூச்சம், வேறுபாடறியாத அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே நடந்து அவனருகே வந்துவிட்டனர். கப்பல் செல்லும் போது நடந்தால் தள்ளாடுமே; அந்தப் பெண்கள் குதிகால் உயர்ந்த பாதரட்சையைத் தளத்தில் ஊன்றித் தடுமாறித் தடுமாறி நடந்தது வேடிக்கையாக இருந்தது. அழகியநம்பி அவர்களுடைய புன்னகையை ஏற்றுக் கொள்வதுபோல் பதிலுக்குப் புன்னகைத்தான். இடுப்புப்பட்டைகள் இறுகித் தைக்கப்பட்டிருந்த அந்த கவுன்களோடு அவர்களைப் பார்க்கும் போது, 'இல்லையோ உண்டோவெனச் சொல்லிய இடை' என்று எப்போதோ கேள்விப்பட்டிருந்த இலக்கிய வரிகள் அவன் நினைவில் எழுந்தன.
அந்த யுவதிகள் அவனருகே வந்து நின்றுகொண்டு சரமாரியாக ஆங்கிலத்தில் கேள்விகளைத் தொடுத்தனர். அழகியநம்பி சிரித்துக் கொண்டே அவர்களுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறலானான்.
"நீங்கள் இலங்கையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரப்போகிறீர்களா" - இது அவர்கள் அவனைக் கேட்ட முதல் கேள்வி.
அழகியநம்பி ஒருகணம் தயங்கினான். அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவதென்று சிந்தித்தான். சொற்களையும் முந்திக் கொண்டு சிரிப்புத்தான் அவனுக்கு வந்தது. அவர்கள் முகங்களை ஏறிட்டுப் பார்த்ததுமே அவனுடைய இதழ்கள் நெகிழ்ந்து சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றன.
"ஊர் சுற்றிப் பார்க்கப் போகவில்லை, பிழைப்புக்காக வேலை தேடிப் போகிறேன். சில ஆண்டுகள் தொடர்ந்து இலங்கையிலே இருக்க நேரிடும்," - என்று ஆங்கிலத்திலேயே அவர்களுக்கு மறுமொழி கூறினான். அதற்கு மேலும் அவர்களுடைய உரையாடல் தொடர்ந்தது. அவனைப்பற்றிய விவரங்களை அவர்கள் கேட்டார்கள். சிறுசிறு கேள்விகளுக்கு அழகியநம்பி கூறிய பதிலிலிருந்து அவனுடைய வாழ்க்கைச் சுருக்கத்தையே ஓரளவு தெரிந்து கொண்டார்கள் அவர்கள். அவனாவது அவர்கள் கேட்டுப் பதில் சொன்னான். அந்தப் பெண்களோ அவன் கேட்கவேண்டுமென்று காத்திராமல் தாங்களாகவே தங்களைப் பற்றிய விவரங்களைக் கூறத் தொடங்கி விட்டனர்.
யாரோ நெருங்கிய உறவுக்கார இளைஞனிடம் பேசிக் கொண்டு நிற்கிற மாதிரிக் கப்பலின் மேல் தளத்துக் கிராதியில் ஒய்யாரமாகச் சாய்ந்து அவனிடம் பேசிக்கொண்டு நின்றார்கள் அந்த அழகிகள். அவர்கள் கூறியவற்றிலிருந்து அவன் கீழ்க்கண்ட விவரங்களைத் தெரிந்து கொண்டான்.
'அவர்கள் இருவரில் சற்று உயரமாகவும், ஓரிரு வயது அதிகமாகவும் தோன்றியவள் பெயர் லில்லி. இளையவள் பெயர் மேரி. இருவரும் உடன் பிறந்த சகோதரிகள். அவர்களுடைய தகப்பனார் 'வோட்ஹவுஸ்' இலங்கை அரசாங்க இராணுவ இலாகாவில் பெரிய பதவி வகிப்பவர். லில்லி கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள். மேரி இன்னும் படிப்பை முடிக்கவில்லை. இராயல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் அப்போது ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை' - இவைதான் அவர்கள் கூறியவற்றிலிருந்து அவன் அறிந்து கொண்டவை. அவனுடைய பெயர் லில்லிக்குச் சரியாகச் சொல்லவரவில்லை. 'மிஸ்டர் அலக்நம்பீ!' -என்று சொல்லிச் சொல்லித் திணறிய அவள், "உங்களை நான் முழுப்பெயரும் சொல்லிக் கூப்பிட முடியாது. எனக்குச் சொல்ல வரவில்லை, மன்னியுங்கள் நம்பி என்று மட்டுமே சொல்லிக் கூப்பிடுகிறேன்,"-என்றாள். "உங்களுக்கு எப்படிச் சொல்ல வருகிறதோ, அப்படிச் சொல்லிக் கூப்பிடலாம்," - என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அழகியநம்பி.
இந்தச் சமயத்தில் சோர்ந்து படுத்துக் கொண்டிருந்த பிரமநாயகம் எழுந்து உட்கார்ந்தார். அவருடைய பார்வைக்கு முதன்முதலில் இலக்கானது கிராதியைப் பிடித்தவாறு நின்று பேசிக் கொண்டிருந்த அழகியநம்பியும், அந்தப் பெண்களும்தான்.
அழகியநம்பியோ, அல்லது அந்தப் பெண்களோ, பிரமநாயகம் விழித்துக் கொண்டதையும், தங்களைப் பார்ப்பதையும் கவனிக்கவில்லை. அவர்கள் பேச்சும் சிரிப்புமாகத் தங்களை மறந்திருந்தார்கள். இயல்பாகவே உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே நல்ல உச்சரிப்போடு இனிய குரலில் சரளமான ஆங்கிலம் பேசப் பழகியிருந்தான் அழகியநம்பி. கல்லூரி நாட்களில் அந்தப் பழக்கம் நன்றாகப் பண்பட்டிருந்தது. அழகியநம்பியின் உயர்ந்த வளமான கட்டுடலும், இனிய முகமும், கவர்ச்சிகரமான சிரிப்பும், சரளமான பேச்சும் அந்தப் பெண்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. எவற்றைப் பற்றிப் பேசுவது? எவ்வளவு நேரம் பேசுவது - என்று தோன்றலாம்! பேசவேண்டுமென்ற ஆசையும் பேசுவதற்குப் பிடித்தமான ஆளும் கிடைத்து விட்டால் விஷயமா இல்லாமற் போய்விடப் போகிறது?
கப்பலின் ஆட்டம், நட்சத்திரங்களின் அழகு, கடலும் வானமும், - எதை எதை யெல்லாமோ பேசிச் சிரித்துக்கொண்டு நின்றார்கள் அந்த மூவரும்.
பிரமநாயகம் பிரமித்தார். 'ஏதேது பையன் பெரிய ஆளாக இருப்பான் போலிருக்கிறதே? இங்கிலீஷில் சரமாரியாகப் பொழிகிறானே? பலசரக்குக் கடையில் கணக்குப் பிள்ளையாக உட்கார்ந்து அடங்கி ஒடுங்கிக் காலம் தள்ளுவானா? அல்லது நம்மை மீறிப்போய் விடுவானா?' - தமிழில் சரியாகக் கையெழுத்துப் போடும் அளவிற்குக்கூட அறிவில்லாத ஒரு பணக்காரர் தம்மிடம் வேலைக்கு வரும் பையனின் அறிவை எண்ணி வியந்ததில் ஆச்சரியமில்லை.
உணவு நேரம் வந்தது. "இன்றைக்கு இந்தக் கப்பலில் உங்களைச் சந்தித்ததை எங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம். நீங்கள் இப்போது எங்களுடன் சாப்பிடுவதற்கு வரவேண்டும்" - என்று லில்லியும் மேரியும் அவனிடம் மன்றாடினார்கள். திடீரென்று கிடைத்த உரிமையையும், அன்பையும் கண்டு அழகியநம்பி திக்குமுக்காடினான். பிரமநாயகம் ஏதாவது நினைத்துக் கொள்வாரே என்று தயங்கி அவர் பக்கமாகப் பார்த்தான். அவர் வெகுநேரமாகத் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுக்கு என்னவோபோல இருந்தது.
சரி என்பதா, மாட்டேன் என்பதா; - என்ற தயக்கத்தோடு மேரியையும், லில்லியையும் ஏறிட்டுப் பார்த்தான் அவன். அல்லி இதழ்களில் கருநாவற் கனிகளைப் பதித்தாற் போன்ற அந்த நான்கு கண்கள் ஏக்கத்தோடு அவன் கூறப்போகும் பதிலையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. இளமையும், எழிலும், ஒன்றோடொன்று போட்டியிடும் அந்தச் சுந்தர முகங்கள் வாடும்படியான பதிலைச் சொல்ல அவன் விரும்பவில்லை. அதே சமயத்தில் தன்னை ஊர்தேடி வந்து அழைத்துச் செல்லும் பிரமநாயகம் வித்தியாசமாக நினைத்துக் கொள்ள இடங்கொடுக்கவும் அவன் தயாராக இல்லை.
"நீங்கள் இருவரும் தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும். நான் அந்த மனிதரோடு புறப்பட்டு வந்திருக்கிறேன். அவரைத் தனியே விட்டுவிட்டு உங்களோடு சேர்ந்து சாப்பிட்டால் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளுவார்" - என்று ஆங்கிலத்தில் கூறினான் அழகியநம்பி.
அதைக் கேட்டு அவர்கள் இருவரும் வெண் பல் வரிசை செவ்விதழ்களுக்கிடையே தெரியக் கலகலவென்று சிரித்தனர். 'பிரமநாயகத்தைச் சுட்டிக் காட்டி, நான் பேசியவுடனே இவர்கள் இப்படிச் சிரிக்கிறார்களே, அந்த மனிதர் நாங்கள் மூவருமாகச் சேர்ந்து அவரைக் கேலி செய்வதாக நினைத்துக் கொள்ளப் போகிறாரே!' - என்று உள்ளூற வருந்தி அஞ்சினான் அழகியநம்பி.
"ஓ! இதற்குத்தானா இவ்வளவு நடுங்குகிறீர்கள்! அவரையும் நம்மோடு சாப்பிடுவதற்கு அழைத்துக் கொண்டுவிட்டால் போகிறது" - என்று சொல்லிக் கொண்டே மேரி பிரமநாயகத்தை அழைப்பதற்காக அவர் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி ஓடினாள். ஆடுகிற கப்பலில் சிவப்பு கவுன் அணிந்த அவள் தாவி ஓடும் காட்சி உள்ளத்தை அள்ளியது. பட்டுப் பூச்சி பறப்பதுபோல் என்பதா, அல்லது மான் குட்டி துள்ளுவதுபோல் என்பதா, - அதை எப்படிச் சொல்லுவதென்று அழகியநம்பின் கற்பனைக்கு எட்டவில்லை.
"உங்கள் தங்கை மான் குட்டியாகப் பிறந்திருக்க வேண்டியவள்" - என்று புன்னகையோடு லில்லியைப் பார்த்துச் சொன்னான் அவன். "அவளுக்கு எப்போதுமே துறுதுறுப்பான சுபாவம்" - என்று சொல்லி நகைத்தாள் லில்லி. திடீரென்று அந்த வெள்ளைக்காரப் பெண் சிரித்துக் கொண்டே தன் அருகில் வந்து நின்றுகொண்டு இங்கிலீஷில் ஏதோ சொல்லவே பிரமநாயகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. பரக்கப் பரக்க விழித்தார். அர்த்தமில்லாமல் சிரித்தார். சிரிப்பில் அசடு வழிந்தது. அவள் தன்னிடம் என்ன சொல்லுகிறாள் என்பது மட்டும் அவருக்கு விளங்கவில்லை.
தளத்தின் ஓரத்தில் லில்லியோடு நின்றுகொண்டிருந்த அழகியநம்பி அவருடைய நிலையை விளங்கிக்கொண்டு அருகில் வந்தான். 'மேரி என்ன சொல்லுகிறாள்?' என்பதை அவருக்குத் தமிழில் விளக்கினான். "உங்களையும் என்னையும் அவர்களோடு சேர்ந்து சாப்பிட வேண்டுமென்று சொல்லுகிறாள்" - என்றான். அவன் கூறியதைக் கேட்டுவிட்டு அவர் முகத்தை இலேசாகச் சுளித்தார். அழகியநம்பியின் பக்கமாக நிமிர்ந்து உற்றுப் பார்த்தார்.
நாகரிகத்தையும், அன்பையும் தெய்வமாக மதிக்கும் களங்கமற்ற குழந்தை உள்ளம் படைத்த மேரிக்கு முன்னால் பிரமநாயகம் தன்னை அவமானப்படும்படி செய்துவிடுவாரோ என்று பயந்தான் அழகியநம்பி. பிரமநாயகத்தைப் போன்ற ஒரு மனிதர் அந்த மாதிரி நிலையில் பண்பாக, நாகரிகமாக நடந்து கொள்வார் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை.
"தம்பீ! இந்த மாதிரிப் பழக்கவழக்கமெல்லாம் இப்போது வேண்டாம். வெள்ளைக்காரப் பெண் பிள்ளைகள் இப்படித்தான் சிரித்துச் சிரித்துப் பேசி ஆளை மயக்குவார்கள். கடைசியில் குடி கெட்டுப் போகும்" - நல்லவேளை! பிரமநாயகம் தமிழில் தான் இப்படிச் சொன்னார். மேரிக்கும் லில்லிக்கும் தான் தமிழ் தெரியாதே! "அதெல்லாம் ஒன்றுமில்லை. சும்மா, பொழுது போவதற்காக அவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு மரியாதைக்காக நம்மையும் சேர்த்துச் சாப்பிடக் கூப்பிடுகிறார்கள். நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக் கூடாது" - என்று பணிவான குரலில் பிரமநாயகத்துக்குப் பதில் சொன்னான் அழகியநம்பி.
"அவர்கள் வெள்ளைக்காரப் பெண்கள், மாமிச உணவு சாப்பிடுவார்கள். கூப்பிடுகிறார்களே, என்று மரியாதையைப் பார்த்தால் நாமும் மாமிசம் சாப்பிட முடியுமா?" - பிரமநாயகம் சிறிது கோபத்துடன் இரைந்த குரலில் கேட்டார்.
உடனே அழகியநம்பிக்கும் அவர்களுடைய உணவைப் பற்றிய அந்தச் சந்தேகம் உண்டாயிற்று. பக்கத்தில் நின்று கொண்டிருந்த மேரியை நோக்கி, "மேரி, எனக்கு ஒரு சிறு சந்தேகம். நாங்கள் மரக்கறி உணவு உண்பவர்கள். நாங்கள் உங்களோடு உண்ணுவதானால்...?" என்று சொல்ல வந்ததை அரைகுறையாகச் சொல்லிவிட்டுக் கேள்விக் குறிப்போடு அவள் முகத்தைப் பார்த்தான்.
"ஓ! அந்தச் சந்தேகமே உங்களுக்குத் தேவையில்லை. இப்போது நாங்கள் சாப்பிடப்போவதும் உங்களுக்கு அளிக்கப் போவதும் நீங்கள் உண்ண முடிந்த உணவே. ரொட்டி, பழங்கள், வெண்ணெய், தேநீர் இவற்றில் எதுவுமே நீங்கள் மறுக்ககூடியவை அல்லவே?" - என்றாள் மேரி. அவள் சிரித்த சிரிப்பு இதயத்தைக் கவ்வியது. கடுகடுப்பாக இருந்த பிரமநாயகமே அந்தச் சிரிப்பில் நெகிழ்ந்தார். அவள் உணவைப் பற்றிக் கூறியதை அழகியநம்பி தமிழில் மொழிபெயர்த்து அவருக்குச் சொன்னான்.
"பரவாயில்லை தம்பி! நீ வேண்டுமானால் போய்ச் சாப்பிடு! எனக்குச் சோறு சாப்பிட்டுப் பழக்கமாகிவிட்டது. இந்த நேரத்திற்கு ரொட்டி சாப்பிட்டு வயிறு நிறையாது. வற்புறுத்திக் கூப்பிடுகிறார்களே; மாட்டேனென்று சொல்ல வேண்டாம். நீ மட்டும் போய்விட்டு வா" என்றார் பிரமநாயகம்.
அதற்குமேல் அவரைக் கட்டாயப்படுத்திப் பயனில்லை என்று அழகியநம்பிக்குத் தெரியும். அவன் மேரியோடு தான் மட்டும் கிளம்பினான். 'அவர் வரவிரும்பவில்லை' என்று பிரமநாயகம் வராதது பற்றிச் சுருக்கமாக மேரிக்குச் சொன்னான்.
வலதுபுறம் லில்லி, இடதுபுறம் மேரி, நடுவில் அவன். இப்படி அவர்கள் உணவு அறைக்கு நடந்து சென்றபோது அந்தக் கப்பலில் விழித்துக் கொண்டிருந்த அத்தனை விழிகளும் அவர்களையே பார்த்தன.
அழகியநம்பியின் கப்பல் பயணம் இன்பகரமாக இருந்தது. எடுத்த எடுப்பில் பிரமநாயகம் என்ற மனிதர் அவனைப் பொறுத்தவரையில் முழு ஏமாற்றமாக இருந்தார். இருந்தும் அவரை நம்பிக் கப்பலிலும் ஏறியாயிற்று. கடலைக் கடக்கவும் ஆரம்பித்தாயிற்று. கப்பலில் கவலையும், சிந்தனையுமாகக் கழிந்த அவன் நேரத்தையும் நினைவுகளையும் மாற்றி மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தனர் லில்லியும் மேரியும்.
நிழலுக்காக மரத்தடியில் சோர்ந்து உட்கார்ந்தவனுக்கு அன்றலர்ந்த சண்பகப் பூக்கள் இரண்டும் மரத்திலிருந்து காலடியில் உதிர்ந்தது போல மேரியும், லில்லியும் அந்தக் கப்பற் பிரயாணத்தில் அவனுக்குப் பழக்கமாயினர்.
கப்பல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தபோது அழகியநம்பியிடம் அவர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். அவனை விட்டுப் பிரிந்து செல்வதற்கே அவர்களுக்கு மனதில்லை. லில்லி ஏக்கம் நிறைந்த விழிகளால் அவனைப் பார்த்துக் கொண்டே பையைத் திறந்து முகவரி அச்சிடப்பெற்ற அட்டை ஒன்றை அவனிடம் நீட்டினாள். 'ஜே.ஸி.வோட் ஹவுஸ், வெள்ளவத்தை, அலெக்சாண்ட்ரியா வீதி' - என்று அவர்களுடைய தந்தையின் பெயரும், முகவரியும் அதில் இருந்தன.
"மறந்துவிடாதீர்கள். கப்பல் பழக்கம் கப்பலோடு போயிற்று என்று நினைக்கக்கூடாது. நாம் அடிக்கடி சந்தித்துப் பழகவேண்டும். அளவளாவ வேண்டும்" - இந்தச் சொற்கள் லில்லியின் வாயிலிருந்து வெளிவந்த போது உணர்ச்சித்துடிப்பு - உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொற்கள் வெளிவரும் போது இருக்குமே; அந்தத் துடிப்பு இருந்தது. மேரி அன்போடு அவனருகே வந்து அவனுடைய இரண்டு கைகளையும் தன் பட்டுக் கரங்களால் பற்றிக் கொண்டாள். "மறந்து விட மாட்டீர்களே!" - அதற்குமேல் அவளுக்குச் சொற்களே வாயில் வரவில்லை. ரோஜா மொட்டுக்களைப் போன்ற அந்த யுவதியின் செவ்விதழ்கள் துடித்தன. நான்கு விழிகள் அவனுடைய இதய அந்தரங்கத்தையே துழாவுவது போல் அவன் முகத்தை ஊடுருவிப் பார்த்தன. "அதுசரி! உங்கள் விலாசத்தை எங்களுக்குத் தரவில்லையே; சொல்லுங்கள். எழுதிக்கொள்கிறேன்" - என்று பையைத் திறந்து டைரியையும் பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டாள் மேரி.
"இப்போது நான் போய் இறங்கப் போகும் விலாசத்தை நானே இனிமேல்தான் தெரிந்து கொள்ளவேண்டும். நான் மறுமுறை உங்களைச் சந்திக்கும்போது என் விலாசத்தை உங்களுக்குச் சொல்கிறேன்" - என்றான் அழகியநம்பி.
அவர்கள் இருவரும் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். அழகியநம்பி சிறிது நேரம் அவர்கள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றான்.
"நன்றாயிருக்கிறதே தம்பீ! யாரோ கப்பலில் வந்தவர்களோடு இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தால் உருப்பட்டாற்போலத்தான்" - குரலின் கடுமை தாங்கமுடியாமல் பின்னால் திரும்பிப் பார்த்தான். பிரமநாயகம் உலகத்திலுள்ள ஆத்திரம், கோபம், அத்தனையையும் தம் முகத்தில் தேக்கிக் கொண்டு நின்றார்.
"ஒன்றுமில்லை! என்றாவது ஓய்வு இருக்கிறபோது ஒருநாள் அவர்களுடைய வீட்டுக்கு வரவேண்டும் என்றார்கள். 'சரி' என்று சொல்லி அனுப்பினேன்."
"சரி! சரி! உனக்கும் வேறு வேலையில்லை. சாமான்களை எடுத்துக் கொண்டு கப்பலிலிருந்து இறங்குவோம்; வா! சுங்கச் சோதனையை முடித்துக் கொண்டு போவதற்குள் நேரமாகி விடும்" - என்று அதட்டினார் பிரமநாயகம்.
"இதோ... சாமான்களை எடுத்துக் கொள்கிறேன். சுங்கச் சோதனைக்குப் போவோம்" - என்று சாமான்களை எடுத்துக் கொண்டு அவரைப் பின்பற்றிக் கப்பலிலிருந்து கீழே இறங்கினான் அழகியநம்பி. புதிய வாழ்க்கை, புதிய அனுபவம், நம்பிக்கை நிறைந்த புதிய எதிர்காலம் எல்லாம் ஒன்றுபட்ட புதிய பூமியில் தான் இறங்கிவிட்டது போன்ற உணர்ச்சி அழகியநம்பிக்கு ஏற்பட்டது. சுமைகள் அவனுடைய இரண்டு கைகளிலும் தோள்களிலும் மாத்திரம் இருக்கவில்லை. நெஞ்சிலும் இருந்தன. தோள்சுமை, கைச்சுமை இவைகளோடும், இவைகளைவிடக் கனமான நெஞ்சச் சுமைகளோடும் அந்தப் புதிய மண்ணில் - கடல் கடந்த இலங்கை மண்ணில் காலை வைத்தான் அவன்.
"அப்பா தம்பீ; அழகு! காந்திமதி அம்மனையும் நெல்லையப்பரையும் மனத்திலே தியானித்துக் கொண்டு வலதுபாதத்தை முன்னால் கீழே வைத்து இறங்கு..." என்று முன்னால் போய்த் தொலைவில் நின்று கொண்டு கத்தினார் பிரமநாயகம்.
அழகியநம்பி அவர் கூறியதைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டான். மண்ணில் மிதித்து நடப்பதற்காகத்தான் இரண்டு கால்களையும் இரண்டு பாதங்களையும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான். வலது, இடது என்று மனிதர்கள் தாங்களாகக் கற்பித்துக் கொண்ட பேதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்!
சுங்கச் சாவடியில் சோதனை முடிந்தது. சாமான்களுடன் இருவரும் துறைமுகத்திற்கு வெளியே வந்தனர். துறைமுக வாசலில் நின்றுகொண்டு கண்களின் பார்வைக்கு எட்டிய வரை அந்தப் பெரிய நகரத்தின் தோற்றத்தைப் பார்த்தான் அழகியநம்பி. உயர்ந்த கட்டிடங்கள், பசுமையான மரங்கள், போக்குவரவு மிகுந்த பெரிய வீதிகள், வியாபாரச் செழிப்பும் கூட்டமும் நிறைந்து காணப்படும் கடைகள், மழைக்காலத்து நீர்போல மூலைக்கு மூலை பணம் புழங்கும் செல்வ வளப்பம்; அத்தனையும் அடங்கிய ஒரு பெரிய நகரம் அவன் கண்களுக்குத் தெரிந்தது. கார்களும், டிராம் வண்டியும், மக்கள் கூட்டமும் நிறைந்த ஒரு அகன்ற வீதியை எதிரே கண்டான்.
பிரமநாயகம் இரண்டு கூலிக்காரர்களைக் கூப்பிட்டுக் கூலி பேசிச் சாமான்களைத் தூக்கிவிட்டார். "தம்பீ! இங்கேயிருந்து நம்முடைய கடை இருக்கிற வீதி இரண்டு பர்லாங்குக்குள்ளே தான் இருக்கும். காலார நடந்தே போய்விடலாம்" என்றார்.
"சரி! நடந்தே போய்விடலாம்" - என்று தலையசைத்தான் அழகியநம்பி. அப்போது இடுப்பில் கைலியும் கலர்ச் சட்டையும் தலைப்பாகையும் அணிந்த ஒருவர் பிரமநாயகத்துக்கு முன்னால் வந்து வணங்கினார். அவன் அதுவரை கேட்டிராத மொழியில் பிரமநாயகத்திடம் சிரித்துக்கொண்டே ஏதோ கூறினார். உடனே பிரமநாயகமும் பதில் வணக்கம் செலுத்திவிட்டு அவர் விசாரித்த அதே மொழியில் அவருக்குப் பதில் சொன்னார்.
அந்தப் புதிய மனிதரிடம் விடைபெற்றுக் கொண்டு சிறிது தூரம் நடந்ததும், "இவர் நமது கடைக்குப் பக்கத்துக் கடைக்காரர். சிங்களவர், மிகவும் வேண்டியவர். நீ இன்னும் இரண்டொரு மாதங்களில் சரளமாகச் சிங்களம் பேசவும், புரிந்து கொள்ளவும் பழகிவிட வேண்டும். இங்கே வியாபாரத் துறையிலிருப்பவர்களுக்கு அது மிகவும் அவசியமானதாகும்" - என்று பிரமநாயகம் தாமாகவே கூறினார். அழகியநம்பி "ஆகட்டும்" - என்று தலையை ஆட்டினான்.
மக்கள் நடமாட்டமும், கார், சைகிள், மோட்டார் சைகிள், லாரி போக்குவரவுகளும் அதிகமான வீதிகளின் வழியே அவர்கள் நடந்து சென்றனர். ஆடம்பரமும் ஆரவாரமும் நிறைந்த அந்த வீதிகளில் அவன் பலரைச் சந்தித்தான். நீலமும், பச்சையுமாகக் குறுக்கே கட்டம் போட்ட கைலிகளை அணிந்த சிங்களவர்கள், நாலு முழம் வேட்டியும் அரைக்கைச் சட்டையும் அங்கவஸ்திரமும் அணிந்த தமிழர்கள், ஆங்கிலேயர்கள், சிங்கள யுவதிகள், ஆங்கில யுவதிகள், அத்தனை வகையினரையும், கலகலப்பும் கூட்டமும் நிறைந்த அந்த வீதிகளில் சந்தித்தான் அழகியநம்பி.
வியாபார நிலவரங்கள் பற்றியும், கடைவீதிகளைப் பற்றியும், தம்முடைய கடையைப் பற்றியும் அங்கே அவன் பழக வேண்டிய நடைமுறைகளைப் பற்றியும் சுவையற்ற விதத்தில் சளசளவென்று ஏதோ சொல்லிக்கொண்டே வந்தார் பிரமநாயகம். "ஊரையும், கடைவீதிகளையும் பார்த்துக் கொண்டே நடந்து செல்ல முடியாதபடி தொணதொணக்கிறாரே," - என்று நினைத்துக் கொண்டே அவர் கூறுவனவற்றைக் கேட்பதுபோல நடந்தான் அழகியநம்பி. வீதி முடிந்து வேறோர் திருப்பத்தில் திரும்பும் போது அவர்கள் இறங்கிவந்த துறைமுகத்தின் மேற்பகுதிக் காட்சி தூரத்து ஓவியம் போல் தொலைவில் தெரிந்தது. அப்பப்பா! எத்தனை பெரிய பெரிய கப்பல்கள் கரும்புகையைக் கக்கிக் கொண்டு நிற்கின்றன? கப்பல்களின் கூம்புகளில் அசைந்தாடிப் பறக்கும் கொடிகளில் தான் எத்தனை விதம்? எத்தனை நிறம்? சிறிதும் பெரிதுமாக வானத்தை நோக்கித் துருத்திக் கொண்டிருக்கும் ஏணிகளைப் போல் எத்தனை 'கிரேன்கள்' (கப்பலில் சாமான்களை ஏற்ற, இறக்க, உதவும் கருவிகள்) காட்சியளிக்கின்றன?
"பராக்குப் பார்த்துக் கொண்டே நடக்காதே; வேகமாக வா! நேரமிருக்கும் போது ஓய்வாக இன்னொருநாள் ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம்." - பிரமநாயகம் குரல் கொடுக்கவே தன்னுடைய ஆர்வம் நிறைந்த பார்வையைத் துறைமுகத்தின் பக்கமிருந்து மீட்டுக்கொண்டு அவர் பின்னால் நடந்தான் அழகியநம்பி.
உடன் வருபவர்களைத் துட்டுச் செலவில்லாமல் நடத்தியே கூட்டிக் கொண்டு போய்விடுவதற்காகப் போகுமிடத்தின் தொலைவைச் சரிபாதியாகக் குறைத்துச் சொல்லிவிடுகிற சாமர்த்தியமான வழக்கம் சிலரிடம் உண்டு. பிரமநாயகம் அதே வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார் என்று அழகியநம்பிக்கு விளங்கிவிட்டது. நாலு பர்லாங்குக்கு மேல் நடந்தும் அவருடைய கடை வந்தபாடில்லை.
அவர்களிருவரும் அப்போது நடந்து போய்க்கொண்டிருந்த வீதியின் கலகலப்பையும், நெடிக்கடியையும் பார்த்த போது அழகியநம்பிக்குத் தலை சுற்றியது. இருட்டறையிலேயே நெடுநாட்களாக அடைபட்டுக் கிடந்தவன் மின்சார விளக்கொளிக்கு வந்தால் கண்கள் கூசுமே அதுபோல, நீல நிற மலைச் சிகரங்களுக்கு நடுவே பள்ளத்தாக்கில் பசுமை ஓவியம் போல் விளங்கும் அமைதி நிறைந்த அவனுடைய குறிஞ்சியூர்க் கிராமத்தை நினைத்துப் பார்த்தான். பலநிற மனிதரும், பலவித மொழிக் குரல்களும், பலவிதக் கடைகளும், ஒன்று சேர்ந்து விளங்கும் அந்தப் புதிய நகரத்தையும் நினைத்துப் பார்த்தான். இரண்டு நினைவுகளும் ஒன்றோடொன்று ஒட்ட மறுப்பதுபோல் தோன்றின. பிறந்த மண்ணின் நினைவு ஒரு புறமும், புதிய மண்ணின் நினைவு ஒருபுறமும் தனித்தே நின்றன.
அப்பப்பா! வியாபாரம் என்றால் இப்படியுமா ஒரு வியாபாரம்? தெரு ஓரங்களிலும், நடைபாதைகளிலும் கூட விலையுயர்ந்த பொருள்களை விற்கும் கடைகள். விலையுயர்ந்த துணிமணிகளை எல்லாம் நடைபாதையில் குவித்துக் கொண்டு கூவிக் கூவி விற்றார்கள்.
அந்த நெடிக்கடியில் தெருவில் நடந்து செல்வது காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்துவது போல் கடினமாக இருந்தது. பழக்கப்பட்ட பிரமநாயகம் வேகமாக நடந்தார். அழகியநம்பியால் முடியவில்லை. சோர்வும் தயக்கமும் நிறைந்த குரலில் "இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும்?" - என்று முன்னால் நடந்து கொண்டிருந்த பிரமநாயகத்திடம் கேட்டான்.
"இதோ வந்துவிட்டதே; இந்த வீதியின் கோடியில் வலது புறமாகத் திரும்பினால் தென்சிறகில் முதல் கட்டிடம் நம்முடைய கடைதான்" - என்றார் அவர். அழகியநம்பி அவர் சுட்டிக் காட்டிய திசையில் கண்பார்வை செல்லுந் தொலைவு வரை பார்த்தான். அந்த வீதியின் திருப்பத்தை அடைவதற்கே குறைந்த பட்சம் இன்னும் அரைமைல் தொலைவு நடந்தாக வேண்டும் போலிருந்தது.
சிறிதைப் பெரிதாகவும், பெரிதைச் சிறிதாகவும், சமயத்துக்கு ஏற்றாற் போலச் சொல்லிச் சாதிக்கும் திறன் வியாபாரிக்கு வேண்டும். பிரமநாயகத்திடம் அந்த அம்சம் போதுமானவரை இருப்பதை அழகியநம்பி உணர்ந்தான். தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே எதிரே சந்தித்த ஒவ்வொரு மனிதரிடமும் விலைவாசிகள் வியாபார நிலவரம் ஆகியவற்றைப் பொறுமையாக நின்று விசாரித்துக் கொண்டு தான் மேலே நடந்தார் அவர். வழியில் அவரைச் சந்தித்த ஒவ்வொரு தெரிந்த மனிதரும் அவரைப் போலவே வியாபார மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பதை அவரவர்கள் பேச்சிலிருந்து அழகியநம்பி அனுமானித்தான்.
'உலகத்தில் எங்கும் ஒவ்வொரு மனிதனும், சொல், உணர்வு, சிந்தனை, செயல் ஆகிய யாவற்றாலும் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறான். வியாபார உலகிலிருப்பவர்களுக்கு வியாபாரம் தான் வாழ்க்கை. அரசியல் உலகிலிருப்பவர்களுக்கு அரசியல்தான் வாழ்க்கை. இலக்கிய உலகிலிருப்பவர்களுக்கு இலக்கியம்தான் வாழ்க்கை. வட்டக் கோட்டில் சுற்றி வருகிறவர்களுக்கு திருப்பமோ, மாறுதலோ ஏது?'
விலையுயர்ந்த ஸ்நோ, வாசனைத் தைலம் ஆகியவற்றின் மணம் நாசித்துளைகளில் புகுந்து கிறக்கியது. எங்கோ பார்த்துக் கொண்டே சிந்தனையோடு பிரமநாயகத்துக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தவன் போதையூட்டும் அந்த மணத்தால் கவரப்பட்டு பார்வையை நேர் எதிரே திருப்பினான். மெல்லிய நீலநிற வாயில் புடைவையும், பாப் செய்த கூந்தலும், தலைக்கு மேல் சிங்காரப் பட்டுக் குடையும், செம்மை நிறம் மினுக்கும் உதட்டுச் சாயம் பூசிய உதடுகளுமாக ஒரு சிங்களப்பெண் அவன் மேல் இடித்து விடாத குறையாக நடந்து வந்து கொண்டிருந்தாள். வாசனை ஆளை மயக்கியது. அழகியநம்பி தடுமாறினான். திடுக்கிட்டுப் பின்னுக்கு நகர்ந்து கொண்டான்.
தனக்கு வழிவிட்டு நகர்ந்து கொள்வதற்காக அவன் அடைந்த பரபரப்பையும், பதற்றத்தையும் பார்த்து அந்தப் பெண் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே மேலே நடந்து சென்றாள். அவனுக்கு வியப்பாக இருந்தது. அப்போது அவன் தெருக்கோடிக்கு வந்திருந்தான். "தம்பீ! இதுதான் நம்முடைய கடை. உள்ளே வா" - என்று கூறிக்கொண்டே ஒரு பெரிய கடைக்குள் நுழைந்தார் பிரமநாயகம்.
அழகியநம்பி வியப்படைந்தான். அத்தனை ஆட்களை வைத்து வேலை வாங்கும் அவ்வளவு பெரிய கடைக்குப் பிரமநாயகம் சொந்தக்காரர் என்றறிந்தபோது அவனுக்கு வியப்பாகத்தான் இருந்தது. வாழை இலையிலிருந்து வானொலிப்பெட்டி வரை எல்லாப் பொருள்களும் கிடைக்கும்படியான ‘புரொவிஷன்' ஸ்டோராக அதை நடத்தி வந்தார் பிரமநாயகம். ‘பிரமநாயகம் புரொவிஷன் ஸ்டோர்ஸ்' - என்று அவருடைய பெயரைத் தாங்கி நின்ற அந்தக் கடை ஒரு நாளைக்கு இருபத்தையாயிரம் ரூபாய்களுக்குக் குறையாமல் வியாபாரம் செய்தது. இளைஞர்களும், வயதானவர்களுமாக நாற்பது பேருக்குக் குறையாமல் அந்தக் கடையில் வேலை பார்த்தனர்.
பிரமநாயகத்தையும், அவர் பேச்சையும், பிரசித்தி பெற்ற அவருடைய கஞ்சத்தனத்தையும் பார்த்தவர்கள் அந்தப் பெரிய விற்பனை நிலையத்துக்கு அவர் தான் ஏகபோக உரிமையாளர் என்பதை நம்ப முடியாதுதான்.
அந்தக் கடைக்குள்ளே அழகியநம்பி பின் தொடர அவர் நுழைந்ததும் அங்கிருந்த அத்தனை வேலையாட்களும் அவரவர்கள் இருப்பிடத்திலிருந்து எழுந்து அடக்க ஒடுக்கமாக வணக்கம் செலுத்திய காட்சி மறக்க முடியாதது.
"ஐயா ஊரிலிருந்து வந்துவிட்டார்கள்" - என்று பயபக்தியோடு கூடிய ஒடுங்கிய குரல் அந்தப் பெரிய கட்டிடத்தில் மூலைக்கு மூலை எழுந்து பரவி அடங்கியதை அழகியநம்பி கவனித்தான். மரியாதை, பயம், அடக்க ஒடுக்கம், இவற்றை எல்லாம் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பவன் எவ்வளவு சுலபமாக அனுபவிக்க முடியும் என்று அவன் அங்கே கண்டான்.
பிரமநாயகம் ஒற்றைக்கட்டை. தூத்துக்குடியில் வியாபாரம் முறிந்த அதே வருடம் அவருடைய மனைவியும் ஒரு மாதம் நோயோடு போராடி விட்டுப் போய்ச் சேர்ந்தாள். கடைகள் ஏலத்தில் போய் வியாபாரம் முறிந்த ஏக்கத்தில், மனைவி இறந்த துக்கத்திலும் விரக்தியடைந்திருந்த போது தான் நாலைந்து வருடங்களுக்கு முன் அக்கரைச் சீமையும் அதன் வியாபாரமும் அவரை ஆசைகாட்டி அழைத்தன. குழந்தை குட்டிகள், வீடு, வாசல், என்று ஏதாவது பந்த பாசங்கள் இருந்தால் விடாப்பிடியாக உள்ளூரில் ஒட்டிக் கொண்டு கிடக்க வேண்டியதுதான். ஆனால், அவர் அன்று தனி ஆள். 'இலாபமோ, நஷ்டமோ, நம்முடைய அதிர்ஷ்டத்தை இன்னொரு தேசத்தில் போய்ப் பரிசோதித்துப் பார்க்கலாம்' - என்று துணிவாக நாலைந்து வருடங்களுக்கு முன் கப்பலேறியவர் இன்று இலட்சாதிபதியாக விளங்குகிறார்.
அவருக்குச் சொந்தமான கடைக்குள் நுழைந்தபோது பிரமநாயகத்துக்கு இந்தப் பழைய செய்திகளெல்லாம் நினைவுக்கு வந்தனவோ இல்லையோ; அழகியநம்பியின் நினைவுக்கு வந்தன. அவருடைய பழைய - புதிய நிலைகளை ஒப்பிட்டுப் பார்த்தான் அவன். ஒரே ஒரு சிறிய வேறுபாட்டைத் தவிர வேறு எதுவும் அவனுக்குத் தோன்றவில்லை.
பிரமநாயகம் என்ற மனிதர் பேச்சில், எண்ணத்தில், செய்கையில், மனப்பான்மையில், எதிலும் நாலைந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது மாறிவிடவில்லை. புதியது எதுவும் அவரிடம் சேர்ந்துவிடவில்லை. பழையது எதுவும் அவரிடமிருந்து போய்விடவில்லை. அவருக்காக அவருடைய இரும்புப் பெட்டியிலும் அவருடைய பெயரில் பாங்குகளிலும் சில இலட்சம் ரூபாய்கள் சேர்ந்து கிடந்தன. இந்த ஒரே ஒரு சிறிய மாறுதல் தான் பழைய தூத்துக்குடிப் பிரமநாயகத்திற்கும், புதிய கொழும்புப் பிரமநாயகத்துக்கும் நடுவில் இருந்தது. பணம் என்ற அந்த மூன்றெழுத்துப் பொருளுக்கு உலகம் செய்கிற மரியாதைதான், கைகட்டல், வாய் பொத்துதல், கும்பிடு, பயபக்தி - எல்லாம். அந்த மூன்றெழுத்துப் பொருள், குட்டிச் சுவருக்குப் பக்கத்திலே நிற்கும் வெட்டிக் கழுதையிடம் இருந்தால் கூட உலகம் இதையெல்லாம் செய்யும்.
இப்படி இன்னும் பலப்பல ஆத்திரம் மிக்க சிந்தனைகள் அழகியநம்பியின் மனத்தில் அந்தக் கடைக்குள் நுழைந்து சுற்றிலும் பார்த்தபோது உண்டாயின.
கடையின் பின்பகுதி விசாலமான வீடு போல அமைந்திருந்தது. பிரமநாயகம் அங்கேதான் குடியிருப்பு வைத்துக் கொண்டிருந்தார். சமையல்காரர், வேலையாள் - எல்லாம் நியமித்துக் கொண்டிருந்தார். குளிக்கக் குழாய், படுக்கை அறைகள், பூஜை செய்யவேண்டிய படங்களும் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்த பூஜை அறை, ஒரே சமயத்தில் நாற்பது பேருக்கு உட்கார்ந்து சாப்பிடப் போதுமான கூடமும் சமையலறையும் எல்லாம் கடையின் பின்பகுதியிலேயே இருந்தன.
கூலி ஆட்கள் சாமான்களை எல்லாம் அந்தப் பகுதிக்குள் கொண்டு வந்து வைத்தனர். அவர்களுக்குக் கூலி கொடுக்கக் கால் மணி நேரம் செலவழித்தார் பிரமநாயகம். சிங்களவர்களான அந்த முரட்டுக் கூலிகள் தங்கள் மொழியிலும், கொச்சைத் தமிழிலுமாகக் கூலி போதாதென்று கூச்சலிட்டனர். பிரமநாயகமும் பதிலுக்குக் கூச்சல் போட்டார். ஓரணா, இரண்டணா ஒட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக வீண் கூச்சலை வளர்த்தார். கூலிகளும் விடாக்கண்டர்களாக இருந்தனர். கடைசியில் கால்மணிநேரத் தகராறுக்குப் பின் அவர்கள் கேட்ட கூலியைக் கொடுத்தனுப்பினார்.
சமையல்காரன் இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து கொடுத்தான். அதைப் பருகிக்கொண்டே அந்தக் பகுதியை ஒரு கண்ணோட்டம் விட்டான் அழகியநம்பி. "கடைக்குப்பின்னால் இது நம் வீடு மாதிரி. இங்கே எல்லா வசதிகளும் இருக்கின்றன. உனக்கு ஒரு அறை ஒழித்துத்தரச் சொல்கிறேன்" - என்றார் பிரமநாயகம். அப்போது அவருடைய முகபாவத்தை ஊன்றிக் கவனித்தான் அவன். "வா! உனக்கு எல்லாவற்றையும் சுற்றிக் காட்டுகிறேன். நாளைமுதல் நீயும் இங்கு ஒரு முக்கியமான ஆளாகப் பழகவேண்டும் அல்லவா?" என்று அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினார் அவர்.
"ஏ அப்பா சோமு! வந்திருக்கிறது யார் தெரியுமா? இந்தப் பிள்ளையாண்டான் எனக்குத் தூரத்து உறவு முறை. நன்றாகப் படித்திருக்கிறான். 'நம் கடைக் கணக்கு வழக்குகளை எல்லாம் கவனித்துக் கொள்ளட்டும்' என்று கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். வயிற்றுப் பாட்டுக்குக் குறைவில்லாமல் தம்பியைக் கவனித்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு" என்று முதன் முதலில் சமையற்காரச் சோமுவுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தார். இதேவிதமான அறிமுகம் பிரமநாயகம் புரொவிஷன் ஸ்டோர்ஸில் உள்ள ஒவ்வொரு ஆளிடமும் தொடர்ந்தது. சலிப்போ, அலுப்போ இல்லாமல் கடையின் ஒவ்வொரு மூலையையும் அவனைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டினார். ஒவ்வொரு சிறிய விவரத்தையும் அவனுக்குக் கூறினார். விலகி நின்று பார்ப்பவர்கள், 'பிரமநாயகம் இந்தக் கடையை இந்தப் பையனிடம் ஒப்புவித்துவிட்டு எங்கேயாவது புறப்பட்டுப் போகப்போகிறாரோ?' என்று நினைத்துக் கொள்ளத்தக்க விதத்தில் அவனை நடத்தினார். அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டும் எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டும், அவசியம் நேர்ந்தபோது ஓரிரு வார்த்தைகள் பதில் சொல்லிக்கொண்டும் அவரைப் பின் தொடர்ந்து நடந்தான் அவன்.
கடைசியாகக் கடையின் முன்புறத்தில் இருந்த ஒரு சிறிய அறை வாசலுக்கு அவனை அழைத்துக் கொண்டு வந்தார் பிரமநாயகம். அறையின் முகப்பு ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மெல்லிய மஞ்சள்நிற வாயில் திரைச் சீலைகள் நிலையிலும், சன்னல்களிலும் தொங்கின. திரைச்சீலைக்கு முன்புறம் கையால் உட்புறம் தள்ளிக்கொண்டு நுழைவதற்கேற்ற இரண்டு சிறிய 'ஸ்பிரிங்' கதவுகள் இருந்தன. அது பகல் நேரமாயிருந்தும் உட்புறம் மின்சார டியூப் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் ஒளி தெரிந்தது. மின்சார விசிறி வேகமாகச் சுழலும் ஒளியும் வெளியே கேட்டது. அறைக்குள்ளே உயர்ந்த ரக ஊதுபத்திகளை நிறையக் கொளுத்தி வைத்திருந்தார்கள் போலிருக்கிறது. 'கமகம' வென்று நறுமணம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. பிரமநாயகம் அவனை அழைத்துக் கொண்டு அந்த அறையை நோக்கி நடந்த போது, கடைக்குள்ளிருந்த அத்தனை வேலையாட்களின் கண் பார்வையும் அந்தப் பக்கமாகத் திரும்பிச் சில விநாடிகள் நிலைத்ததை அழகியநம்பி கவனித்துக் கொண்டான். வெறும் தற்செயலான பார்வையாக மட்டும் அது அவனுக்குத் தோன்றவில்லை. அந்தப் பார்வைக்கு ஒரு பொருள் - மறை பொருள் இருக்க வேண்டும். அந்தப் பொருள் என்னவென்று அப்போதே அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. தன் சுற்றுப்புறத்தை, தன்னைச் சுற்றி இருப்பவர்களை, ஒவ்வோர் அசைவிலும் உற்றுக் கவனிக்கும் பழக்கம் அழகியநம்பிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உண்டு. அந்தப் பழக்கத்தால் எவ்வளவோ சிறிய பெரிய நன்மைகளை அவன் அடைந்திருக்கிறான்.
பிரமநாயகம் தன்னை அந்த முன்புறத்து அறைக்கு அழைத்துச் சென்றபோது அவருடைய நடையிலேயே ஒரு வகைத் தயக்கம் அல்லது பதற்றம் இருந்தது, அவனுடைய பார்வைக்குத் தப்பவில்லை. அது மட்டுமல்லாமல் ஓரிரு கணம் தயங்கி நின்றார் அந்த அறை வாசலில், அப்போது அவர் முகச் சாயலையும் அதில் விரவிய சலனத்தையும் கூட அழகியநம்பியால் கவனித்துக் கொள்ள முடிந்தது. அறையின் கதவருகே கடைகளின் செயலாளர் என்ற பொருளைத் தரும் ‘ஸ்டோர்ஸ் செகரெட்டரி' என்ற ஆங்கில எழுத்துக்கள் கண்ணாடியில் பிரேம் செய்து படம்போல மாட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழே சிறிய சிங்கள எழுத்துக்களில் ஒரு பெயரும் எழுதியிருந்தது. சிங்களம் தெரியாத அவனுக்கு அந்தப் பெயர் என்னவென்றும் விளங்கவில்லை. தயங்கி நின்ற பிரமநாயகம் கதவருகே இருந்த மின்சார மணிக்குரிய பொத்தானை அமுக்கினார். அறையின் உட்புறம் மின்சாரமணி ஒலிக்கும் ஓசை கேட்டது. மணி ஒலி அடங்குவதற்குள், அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மேலே சுவரில் தொங்கிய சிறிய சிவப்பு மின்சார பல்பு எரிந்து அணைந்தது. அதைப் பார்த்தவுடன், "சரி! வா உள்ளே போகலாம்" என்று ஸ்பிரிங் கதவை உட்புறமாகத் தள்ளிக்கொண்டு நுழைந்தார் பிரமநாயகம். உள்ளே இருப்பவர் வெளியே இருப்பவரை வரச் சொல்வதற்கு அனுமதி அந்தச் சிவப்பு விளக்கு எரிவது என்று அழகியநம்பி புரிந்துகொண்டான். அவற்றையெல்லாம் கண்டபோதும், அந்த அறைக்குள் நுழைந்தபோதும் மர்மம் நிறைந்த ஏதோ சில உண்மைகளைப் பார்ப்பதற்குப் போய்க் கொண்டிருப்பது போல் ஓருணர்வு அவனுக்கு ஏற்பட்டது. 'கேவலம், தனக்குக் கீழே தன்னிடம் மாதச்சம்பளம் வாங்கும் ஒரு 'ஸ்டோர்' செகரட்டரியிடம் பிரமநாயகம் இவ்வளவு தயக்கமும் பதற்றமும் அடைவானேன்?' என்று சிந்தித்தான் அழகியநம்பி.
உள்ளே நுழைந்து பார்த்ததுமே அந்தச் சிந்தனைக்கு விடைகிடைத்துவிட்டது. உள்ளே நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்.
மெர்க்குரி விளக்கொளி, டைப்புரைட்டர், பைல் கட்டுகள், ஒரு அலுவலகத்திற்கு வேண்டிய பொருள்கள் பரப்பிய பெரிய மேஜை. இவற்றிற்கு நடுநாயகமாகக் கந்தர்வலோகத்து மோகினி போல் ஒரு சிங்களப் பெண் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் மேஜைமேல் அன்றையத் தபாலில் வந்த கடிதங்கள், விரித்து வைத்திருந்த செக் புத்தகம், ஊதுபத்தி ஸ்டாண்டு எல்லாம் இருந்தன.
அழகியநம்பி அருகில் சென்றதும் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டான். அவள் வேறு யாருமில்லை தெருக்கோடியில் அவன் மேல் மோதிக்கொள்ளாத குறையாக இடித்துக்கொண்டு வந்தவள் தான். அப்போது கண்கள் மறையும்படியாகக் கருப்பு நிறக் குளிர்ச்சிக் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தாள். இப்போது அதைக் கழற்றி மேஜை மேல் வைத்திருந்ததால் அழகியநம்பிக்கு அவளை அடையாளம் கண்டுகொள்ள ஓரிரு விநாடிகள் பிடித்தன. கோடு கீறினாற் போன்ற கரும் புருவங்கள் உயர்ந்து நிமிர, விழிகளை மலர்த்தி அவனைப் பார்த்தாள். 'ஓ'... குயில் அகவுவதுபோல் இந்த ஓசையுடன் சாயம் பூசிய செவ்விதழ்கள் திறந்து மூடின. தற்செயலாகத் தெருக்கோடியில் நேர்ந்த அந்தச் சந்திப்பை அவள் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது.
பிரமநாயகம் அறைக்குள் நுழைந்ததும் அவள் மரியாதைக்காகவாவது எழுந்திருந்து நிற்பாள் என்று அழகியநம்பி நினைத்தது வீணாயிற்று. சிரித்துக்கொண்டே மேஜைக்கு முன்னால் இருந்த இரண்டு நாற்காலிகளைச் சுட்டிக் காட்டினாள். அதிகாரம் செய்யவேண்டியவர் ஏன் அப்படி அடங்கி ஒடுங்கி அவளிடம் நடந்து கொள்கிறார் என்று அழகியநம்பிக்குப் புரியவில்லை.
பிரமநாயகம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். அவனை இன்னொரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். அவனும் உட்கார்ந்து கொண்டான். கையில் பிரித்துப் படித்துக் கொண்டிருந்த கடிதத்தை மேஜை மேல் மடித்து வைத்துவிட்டு, நிமிர்ந்து உட்கார்ந்து, அவர்கள் இருவரையும் பார்த்தாள் அவள்.
அவளுடைய அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர் போல் பிரமநாயகம் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவனைச் சுட்டிக்காட்டிச் சிங்கள மொழியில் அவளிடம் ஏதோ கூறினார். சிரித்துக் கொண்டே சிங்களத்தில் பதிலுக்கு அவரிடம் ஏதோ கேட்டாள் அவள். அப்படிக் கேட்கும்போது தன் பக்கமாகக் கையைச் சுட்டிக்காட்டிக் கேட்டதனால் அந்தக் கேள்வி தன்னைப் பற்றியதாக இருக்கவேண்டும் என்று அழகியநம்பி நினைத்துக் கொண்டான்.
பிரமநாயகம் பதில் கூறினார். அதற்குப்பின் அவள் அவனிடமே நேரடியாக ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினாள்.
"உங்கள் வரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்கள் அன்பையும், ஒத்துழைப்பையும், நான் எப்போதும் விரும்புகிறேன். உங்கள் பெயர்?"
"அழகியநம்பி" என்று பதிலைச் சுருக்கமாகக் கூறினான் அவன்.
"நல்லது! நாம் பின்பு சந்திப்போம். இப்போது எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது" - பேசிக்கொண்டே கடிதங்களைப் புரட்டத் தொடங்கினாள் அவள். அழகியநம்பி திகைத்தான். பேசத் தொடங்கிய விதமும், பேச்சை உடனடியாகக் கத்தரித்து முடித்துக்கொண்ட விதமும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததுபோல் பட்டது.
அவன் நாற்காலியிலிருந்து எழுந்திருந்து விட்டான். பிரமநாயகமும் எழுந்துவிட்டார். எழுந்து நின்றுகொண்டு சிங்களத்தில் அவளிடம் ஏதோ கேட்டார் அவர். 'அவருடைய அந்தக் குரல் அறைக்குள் வந்ததிலிருந்து ஏன் அப்படி அடங்கி ஒடுங்கி ஒலிக்க வேண்டும்?' என்பதை நீண்ட நேரமாகச் சிந்தித்துக் குழம்பினான் அவன். ஒருவேளை தன்னைப் பற்றிய பேச்சைத் தான் தெரிந்து கொள்ளக் கூடாதென்று அவர்கள் தனக்குத் தெரியாத மொழியில் பேசிக் கொள்கிறார்களோ என்று அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
அழகியநம்பி நடப்பது ஒவ்வொன்றையும் உற்றுக் கவனித்துக் கொண்டே வந்தான். நாற்காலியிலிருந்து எழுந்திருந்து பிரமநாயகம் கேட்ட கேள்விகளுக்கு அவள் கூறிய பதில் அவனுக்குப் புரியவில்லையானாலும், அது ஒலித்த விதத்தில் கோபத்தின் சாயை, கடுமையின் குறிப்பு, - இருந்ததுபோல் தோன்றியது அவனுக்கு. அந்தப் பதிலைக் கேட்டு விட்டுப் பிரமநாயகம் சிறிது நேரம் விழித்துக் கொண்டு நின்றார்.
பின்பு அவனைப் பார்த்து, "வா, நாம் போகலாம்" - என்று கூறி அழைத்துக்கொண்டு அறைக்கு வெளியே வந்தார்.
அறைவாயிலுக்குத் திரும்பி வந்ததும் அந்தப்பெண்ணின் பெயரென்னவென்று அவரிடம் கேட்க நினைத்தான் அழகியநம்பி. ஆனால், அவருடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தபோது அப்போது, அவரிடம் எதையும் கேட்காமலிருப்பதே நல்லதென்று ஆவலை அடக்கிக் கொண்டான்.
"குளித்து, சாப்பாட்டை முடித்துக்கொண்டு மற்றக் காரியங்களை அப்புறம் கவனிக்கலாம்" - என்று கடையின் பின்புறத்தை நோக்கி நடந்தார் அவர். பதில் சொல்லாமல் பின்னால் சென்றான் அழகியநம்பி. அந்தச் சமயத்தில் அந்தப் புது இடத்தில், புது மனிதர்களுக்கு நடுவே அதிகம் பேசுவதை விட அதிகம் சிந்திப்பது அவசியமாயிருந்தது அவனுக்கு. மனிதர்களையும், அவர்களுடைய மனங்களையும், அறிந்து கொள்வதற்கு, சூழ்நிலைகளைச் சரியானபடி புரிந்து கொள்வதற்குச் சிந்தனை பயன்படுவதுபோலப் பேச்சுப் பயன்படுவதில்லை என்பது அவன் கருத்து.
குளித்துச் சாப்பிட்டதும் பிரயாண அலுப்புத்தீரப் படுத்துத் தூங்கச் சென்றுவிட்டார் பிரமநாயகம். அழகியநம்பி ஊருக்குக் கடிதம் எழுதித் தபாலில் சேர்த்துவிட நினைத்தான். 'யார் யாருக்குக் கடிதம் எழுதலாம்? யாருக்கு அவசரமாக எழுதியாக வேண்டும்?' - என்று தயங்கினான்.
'அம்மாவுக்கும் தங்கைக்கும் முதலில் ஒரு கடிதம் அவசரமாக எழுதிப் போட வேண்டும். வந்து சேர்ந்தேனோ, இல்லையோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். காந்திமதி ஆச்சிக்கு இப்போது அவசரமாக எழுதவேண்டிய சமாசாரம் ஒன்றுமில்லை. ஆனாலும் 'வந்து சேர்ந்தேன்' - என்று ஒரு வரி எழுதிப் போட்டு வைக்கலாம். நண்பர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இங்கே புறப்பட்டு வந்திருப்பது தெரியுமோ, தெரியாதோ? குறிஞ்சியூரிலிருந்தால் தெரியும். எல்லோரும் வெளியூர் நண்பர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நெருங்கிப் பழகியவர்கள். படிப்பை நிறுத்தியதும் சிலருடைய பழக்கமும் தொடர்பும் அடியோடு நின்று போயிற்று. முக்கியமான சில நண்பர்கள் மட்டும் பழக்கம் விட்டுப்போகாமல் அவ்வப்போது குறிஞ்சியூருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். 'அவர்கள் இனிமேலும் குறிஞ்சியூறுக்குக் கடிதம் எழுதி ஏமாற்றமடையாது தான் கொழும்புக்கு வந்திருப்பதை அவர்களுக்குத் தெரிவித்து எழுதிவிட வேண்டியதுதான்' - என்று எண்ணியது அவன் மனம்.
பிரமநாயகம் தனக்கு ஒழித்துவிட்டிருந்த அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டு, யார் யாருக்கு எந்த முறையில் எழுதலாம் என்று சிந்தனை செய்து கொண்டிருந்தான்.
கடிதம் எழுதவேண்டுமென்ற ஆசை, என்ன எழுதுவதென்ற மலைப்பு? - இப்படி ஒரு இரண்டுங்கெட்ட நிலையில் சிறிது நேரம் அவனுடைய மனம் தவித்தது. அடுத்த அறையில் பிரமநாயகத்தின் குறட்டை ஒலி ஏற்ற இறக்கமான சுருதிலயங்களோடு ஒலித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம்தான் மலைத்துப்போய் அப்படியே உட்கார்ந்திருப்பது? மனத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அம்மாவுக்குக் கடிதம் எழுதலானான்.
'அம்மாவுக்கு அழகியநம்பி அநேக வணக்கங்கள். இங்கு எல்லோரும் சுகம். அங்கு நீயும் வள்ளியம்மையும் சுகமாக இருக்கிறீர்களா; என்பதற்குப் பதில் எதிர்பார்க்கிறேன். நானும் பிரமநாயகம் அவர்களும் சுகமாக இங்கு வந்து சேர்ந்தோம். கடையில் இன்று முதல் வேலை பார்க்கப் போகிறேன். மற்றவர்கள் எப்படிப் பழகுகிறார்கள்? என்பதைப்பற்றி இன்னும் இரண்டொரு நாட்கள் இங்கே ஊடாடிப் பழகின பின்பு தான் தெரிந்துகொள்ள முடியும். இந்தக் கொழும்பு நகரத்தைப் பார்த்தால் உங்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். அப்பப்பா! எவ்வளவு பெரிய நகரம். எத்தனை கப்பல்கள் துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கின்றன! எவ்வளவு பெரிய கடைவீதிகள்! - சிறு வயதில் நாமெல்லோரும் சென்னையைப் பார்த்தது உங்களுக்கு நினைவிலிருக்குமென்று எண்ணுகிறேன். பணப் புழக்கத்தாலும் ஆரவார ஆடம்பரங்களாலும் சென்னையைவிட எவ்வளவோ பெரிய நகரமாகத் தோன்றுகிறது இது.
'அடிக்கடி இங்குள்ள நிலவரத்தைக் கடிதமூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். வந்தவுடன் பணம் கேட்பது நன்றாக இருக்காது. இந்த மாத முடிவில் பிரமநாயகத்திடம் கேட்டுக் கொஞ்சம் பணம் வாங்கி அனுப்புகிறேன். ஊரில் கைச் செலவுக்குக்கூட ஒன்றுமில்லாமல் உங்களை வெறும் வீட்டோடு வைத்துவிட்டு வந்திருப்பதை நினைத்தால் எனக்கு மன வருத்தம் உண்டாகிறது. நீங்களோ வள்ளியம்மையோ என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் கவலை கவலைதான்! கவனமாக வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
காந்திமதி ஆச்சியிடமும் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். ஏங்கல், தாங்கலில், என்னவென்று விசாரித்து உதவி செய்வதற்கு உங்களுக்கு ஆட்கள் இல்லாமல் போய்விடவில்லை. பெருமாள் கோவில் மணியம் நாராயணபிள்ளை, புலவர் ஆறுமுகம், எல்லோரிடமும் அடிக்கடி விசாரித்துக் கவனித்து கொள்ளச் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நீங்கள் - தாயும் மகளும் என்னைப்பற்றி இல்லாததை எல்லாம் நினைத்துச் சஞ்சலம் அடையக்கூடாது. நிம்மதியாக இருக்க வேண்டும். அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருங்கள். மற்றவை பின்பு. பதில் எதிர்பார்க்கிறேன்.
உங்களன்புள்ள, அழகியநம்பி.'
- இதை எழுதி முடித்ததும் காந்திமதி ஆச்சிக்கும் சுருக்கமாக ஒரு கடிதம் எழுதினான் அவன். தான் சௌக்கியமாக வந்து சேர்ந்ததைப் பற்றியும், கொழும்பு நகரத்தின் பெருமையைப் பற்றியும் குறிப்பிட்டுவிட்டுப் பகவதிக்கும், கோமுவுக்கும் தன் அன்பைக் கூறுமாறும், அவர்களுடைய சுகத்துக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்குமாறும், எழுதி அந்தக் கடிதத்தை முடித்திருந்தான். பெருமாள் கோவில் நாராயணப் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்திலேயே புலவர் ஆறுமுகம், மேலத்தெரு வாசகசாலைச் செயலாளர் கந்தப்பன், முன்சீப் புன்னைவனம் பிள்ளை - எல்லோருக்கும் தன் அன்பையும் வணக்கத்தையும் தெரிவிக்குமாறு மொத்தமாக வேண்டிக் கொண்டிருந்தான்.
நண்பர்களிலும் எல்லோருக்கும் அவன் தனித்தனியே கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கவில்லை. எல்லா நண்பர்களைக் காட்டிலும் அவனிடம் மனம்விட்டுப் பழகியவன் முருகேசன். அவனுக்கு ஊர் தென்காசி. தான் கொழும்புக்கு வந்திருப்பது பற்றி அவனுக்குத் தெரிவித்தால் அவனிடமிருந்தே மற்றவர்களுக்கும் அந்தச் செய்தி பரவிவிடும் என்பதை அழகியநம்பி அறிவான். முருகேசனுக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய புதிய இடத்தையும், தன் நிலைகளையும், எதிர்காலத்தையும் பற்றிச் சற்று விரிவாகவே எழுதியிருந்தான்.
கடிதங்களை எழுதி முடித்தபோது சமையற்காரச் சோமு அறைக்குள் நுழைந்தான்.
"என்ன வேண்டும் உனக்கு?" - என்று தான் எழுதி முடித்த கடிதங்களை அடுக்கிக்கொண்டே உள்ளே நுழைந்த சோமுவைக் கேட்டான் அழகியநம்பி. "எனக்கு எழுதத் தெரியாது தம்பீ! கடிதம் எழுத வேண்டும். என்ன எழுத வேண்டுமென்று சொல்கிறேன். இந்தக் கடிதத்தையும் சிரமம் பாராமல் எழுதிக் கொடுத்துவிடு. நானே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்த் தபாலில் சேர்த்து விடுகிறேன்," - என்று ஒரு காகிதத்தையும் கடித உறையையும் அவனிடம் நீட்டினான் சோமு.
அதை வாங்கிக் கொண்டு அவனை உட்காரச் சொன்னான் அழகியநம்பி. சோமு தமிழ்நாட்டிலிருக்கிற தன் மனைவி, மக்கள், தாய், சகோதரி எல்லோரும் அடங்கிய குடும்பத்துக்கு எழுதுகிற கடிதம் அது. கடிதம் எழுதிக் கொடுக்கிற சாக்கில் படிப்பறிவில்லாத அந்தச் சமையற்காரனிடமிருந்து சில விவரங்களை விசாரித்து அறிந்து கொண்டான். அவன் விசாரிக்கத் தயங்கிய அல்லது விசாரிக்க விரும்பாத சில விவரங்களைச் சோமு தானாகவே கூறினான்.
பிரமநாயகத்தின் கை செழிப்பு வியாபாரம் ஓங்கி நடக்கத் தொடங்கிய நாளிலிருந்து அவன் அவரிடம் சமையற்காரனாக இருக்கிறான். அந்த நாளிலிருந்து இன்றுவரை அவனுடைய மாதச் சம்பளம் இருபது ரூபாய்க்கு மேல் வளரவில்லை. சாப்பாடு தவிர இருபது ரூபாயும், வருடத்திற்கு இரண்டு கோடி வேஷ்டி துண்டுகளும் கொடுத்து வந்தார் பிரமநாயகம். சோமு சரியான பொறுமைசாலி. இல்லையானால் வளர்ச்சியடையாத குறைந்த சம்பளத் தொகையையும் பெற்றுக் கொண்டு பிரமநாயகத்தைப் போன்ற முன்கோபியிடம் தொடர்ந்து வேலை பார்த்து வர முடியுமா?
"என்னவோ வயிற்றுச் செலவு போக இருபது ரூபாயாவது கிடைக்கிறது பாருங்கள். நம்ம ஊரில் இருந்தால் அதற்கும் வழி இல்லையே; ஏதோ காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறேன்." - என்று சோமுவே அழகியநம்பியிடம் கூறினான். அவனைப் போன்ற நிலையிலுள்ள ஒரு சராசரி மனிதன் வாழ அந்தப் பொறுமை அவசியமென்றுதான் அழகியநம்பிக்குத் தோன்றியது. கடிதங்களை தபாலில் சேர்த்துவிட்டு வருவதாக அவனிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான் சோமு.
அழகியநம்பி அந்தக் கடையில் என்ன வேலைகளைச் செய்ய வேண்டுமென்பதை அன்று மாலையே பிரமநாயகம் விளக்கிக் கூறிவிட்டார். தன் வேலையையும், அதை யாருக்குக் கீழிருந்து தான் செய்ய வேண்டுமென்பதையும் அறிந்தபோது முதலில் அவன் சிறிது கூச்சமும், தயக்கமும் அடைந்தான்.
"காலையிலே உன்னை அழைத்துக் கொண்டு போய் அறிமுகப்படுத்தினேனே, அந்தப் பெண்ணோடு துணையாக இருந்து அலுவல்களைக் கவனித்துக் கொள்ளத்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன். அவள் பெயர் பூர்ணா. சிங்கள இனத்தைச் சேர்ந்தவள் அவள். ஒரு மாதிரிப் பண்புடையவள். இந்தக் கடையில் சலுகைகளும், மற்றவர்களை அதிகாரம் செய்யும் உரிமையும் - என்னைக் காட்டிலும் அவளுக்குத்தான் அதிகம். தம்பீ அந்தப் பெண்ணுக்கு இவ்வளவு ஆதரவும், உரிமையும் இருப்பதற்குக் காரணம் உண்டு. முதல் முதலாக நான் இங்கே வந்தபோது ஒரு உறுதியும் எழுதி வாங்கிக் கொள்ளாமல் எனக்கு ஆயிரக்கணக்கில் கடன் கொடுத்துக் கடையும் வைத்துக் கொடுத்தது இந்தப் பூர்ணாவின் தகப்பனார் தான். நான் கடையில் இலாபம் கண்டு வியாபாரத்தில் முன்னுக்கு வந்ததும் அவருடைய கடனை அடைத்துவிட்டேன். ஆனால், அதே சமயம் எனக்குக் கடன் கொடுத்து உதவிய அந்தப் புண்ணியவாளர் நொடித்துப் போனார். வியாபார சம்பந்தமாக நான் செய்த சில இரகசிய வேலைகள் எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். வியாபாரத்தில் முன்னுக்கு வரவேண்டுமானால் எவ்வளவோ சூழ்ச்சிகளைச் செய்து தானாக வேண்டியிருக்கிறது. ஆனால் பண்புள்ள அந்த மனிதர் என் சூழ்ச்சிகளைக் காட்டிக் கொடுப்பதாகப் பயமுறுத்தியோ, வேறு தந்திரத்தை மேற்கொண்டோ, என்னைக் கெடுக்க முன்வரவில்லை. தம்முடைய பெண் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று வீட்டில் சும்மா இருக்கிறாள் என்றும் அவளை நான் என் கடையில் கௌரவமான ஒரு வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டுமென்றும் என்னிடம் வந்து வேண்டிக்கொண்டார். அந்த மனிதரிடம் நான் பட்டிருந்த நன்றிக் கடனைத் தணித்துக் கொள்வதற்காக அவர் பெண்ணை இந்தக் கடை சம்பந்தமான எல்லா அலுவல்களையும் மேற்பார்க்கவும், வியாபார சம்பந்தமான தபால் போக்குவரவு, பாங்குக் கணக்கு முதலியவற்றைக் கவனித்துக் கொள்ளவும் நியமித்தேன். மறு வருஷமே அந்தப் பெண்ணின் தகப்பனார் எதிர்பாராதவிதமாகத் திடீரென்று காலமாகிவிட்டார். அவருக்கு அவள் ஒரே பெண்தான்.
"தகப்பனார் இருக்கிறவரை கடையின் முதலாளியாகிய எனக்கு அடங்கி ஒடுங்கி நடந்து கொண்டிருந்த அவள் அதன் பிறகு தனிக் கௌரவமும், மமதையும் கொண்டாடத் தொடங்கி விட்டாள். சாதாரணப் பதவியை 'ஸ்டோர் செகரெட்டரி' என்று தானாகவே மாற்றிக்கொண்டு தனி அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டாடத் தொடங்கி விட்டாள். நான் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன். வியாபார இரகசியங்களும், சூழ்ச்சிகளும் தெரிந்த ஒருத்தியை வெளியே அனுப்பிவிட்டால் இன்னொரு நாட்டிலிருந்து இங்கே வந்து வியாபாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிற எனக்கு எவ்வளவோ தொல்லைகள் ஏற்படும். அவள் என்ன செய்தாலும் சரி என்று பேசாமல் பொறுமையோடு நாட்களைக் கடத்திக் கொண்டு வருகிறேன். 'நரி, இடம் போனாலென்ன? வலம் போனாலென்ன? மேலே விழுந்து கடிக்காமல் போனால் சரி' என்று அவள் போக்கில் விட்டுவிட்டேன். ஆனால், இனியும் தொடர்ந்து அவளை அப்படி விட்டுவிட்டுப் பேசாமல் இருந்து கொண்டிருப்பதில் பயனில்லை. வரவர அவள் போக்கைக் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. அது மட்டுமில்லை; என் போக்கைக்கூடக் கட்டுப்படுத்துகிற அளவுக்கு அவள் வளர்ந்து விட்டாள். இந்தச் சில மாதங்களாகவே என் மனத்தில் அவளைப் பற்றிய குழப்பம் தான் தம்பீ! ஊருக்கு வந்ததும் உன்னைச் சந்தித்ததும், இங்கே என்னோடு அழைத்துக் கொண்டு வந்ததும் என்ன நோக்கத்திற்காக என்பது உனக்கு இப்போது ஒருவாறு புரிந்திருக்கும். திடீரென்று அவளை வெளியே போகச் சொல்லிவிட்டு உன்னை அந்த ஸ்தானத்தில் உட்கார்த்திவிடுவேன். ஆனால் அப்படிச் செய்வது சாமர்த்தியமான காரியமில்லை. உனக்கு, என்னுடைய வியாபாரத்துக்கு, எனக்கு, எல்லாவற்றுக்குமே விபரீதமான விளைவுகளைக் கண்மூடித் திறப்பதற்குள் அடுக்கடுக்காக உண்டாக்கி விடுவாள் அவள். அவ்வளவிற்கு அவள் சாமர்த்தியக்காரி.
"உன்னை அவளுக்கு அடங்கிய ஆள்போல வேலைக்கு அமர்த்தி வைப்பதே அவளைப் படிப்படியாகத் தேவையற்றவளாக்கி வெளியேற்றப்போவதன் பூர்வாங்க ஏற்பாடுதான் என்பதை நீ புரிந்துகொண்டு வேலை செய்ய வேண்டும். வியாபார சூட்சுமங்கள், கடையின் வரவு செலவு, இலாபக் கணக்குகளை வைத்திருக்கிற விதம், எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்தே அவளுக்கு அடங்கி ஒடுங்கி வேலை கற்றுக் கொள்கிறவனைப் போல நீ கற்றுக்கொண்டு விட வேண்டும். இதுவரை அந்த அறையில் அவளைத் தவிர வேறுயாரும் இருந்ததில்லை. ஆனால், இனிமேல் அதே அறையில் அவளுக்குப் பக்கத்தில் இருந்துதான் உன் வேலையைச் செய்யப்போகிறாய் நீ. உனக்காகவே ஒரு மேசை நாற்காலியை அந்த அறைக்குள் அவளுக்குப் பக்கத்தில் போட்டுவிடச் சொல்கிறேன். கூச்சம், வெட்கம், தயக்கம் எதுவுமே உன்னிடம் இருக்கக்கூடாது. முழுக்க முழுக்கக் காரியத்தில் கண்ணாக நடந்து கொள்ள வேண்டும். நீ எவ்வளவுக்கெவ்வளவு விரைவாகவும், சாதுரியமாகவும் நடந்து கொள்கின்றாயோ அவ்வளவு விரைவாக அவளை இங்கிருந்து கிளப்புவதற்கு ஏற்பாடு செய்துவிடுவேன் நான். பூர்ணாவைச் சாதாரணப் பெண்ணாக நினைத்துவிடாதே; ஒரு இராச தந்திரிக்குத் தேவையான சூதுவாது, சூழ்ச்சிகளுக்கு மேல் அதிகமாகவே அவளுக்குப் பொருந்தியிருக்கின்றன. நீ அவளுக்கு இடையூறாக இங்கே வந்திருக்கிறாய் என்று தெரிந்தால் எதையும் செய்து உன்னை மடக்கப் பார்ப்பாள். கவனமாக நடந்து கொள்."
ஒரு பெரிய கதையையே சொல்லி முடிக்கிறவர் போல அழகியநம்பிக்கு இவ்வளவையும் சொல்லி முடித்தார் பிரமநாயகம். கேட்டுக் கொண்டு பெருமூச்சு விட்டான் அவன். கடிதங்களை எழுதித் தபாலில் சேர்ப்பதற்காகச் சோமுவிடம் கொடுத்துவிட்டுத் 'தானும் சிறிது நேரம் உடலைக் கீழே சாய்க்கலாம்' என்று அவன் தன் அறையில் பாயை விரித்துப் படுத்திருந்தான். படுத்து இரண்டு மூன்று நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் விழித்துக் கொண்டுவிட்டார். குழாயடியில் போய் முகத்தைக் கழுவிக் கொண்டு நேரே அழகியநம்பியின் அறைக்கு வந்தார். அழகியநம்பிக்குப் பகலில் தூங்கும் பழக்கம் கிடையாது. சும்மா கண்களை மூடிக்கொண்டு உடல் அலுப்புத் தணிவதற்காகப் படுத்திருந்தான். காலடியோசை கேட்டதும் அறைக்குள் வருவது யார் என்று பார்ப்பதற்காகக் கண்களைத் திறந்தான். பிரமநாயகம் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் மரியாதைக்காக எழுந்திருந்து நின்றான். "தூங்குகிறாயா? உன்னிடம் சில முக்கியமான விஷயங்களை இப்போதே சொல்லிவிடலாம் என்று பார்த்தேன்" - என்றார் அவர்.
"நான் தூங்கவில்லை. சும்மாதான் படுத்துக் கொண்டிருந்தேன்" - என்றான் அழகியநம்பி. "அப்படியானால் இதோ ஒரு நிமிடம் பொறு! வந்துவிடுகிறேன்" - என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று அறையின் கதவுகளை அடைத்துத் தாழிட்டு விட்டு வந்தார் அவர். அறைக்குள்ளே மங்கிய இருட்டுப் படர்ந்தது. 'ஸ்விட்ச்' இருந்த இடத்தைத் தடவி மின்சார விளக்கைப் போட்டார். செய்கிற முன்னேற்பாடுகளையும், முன்னெச்சரிக்கையையும் பார்த்தபோது அவர் சொல்லப் போகிற செய்தி முக்கியமானதாகவும், பரம் இரகசியமாகவும் இருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டு வியந்தான் அழகியநம்பி.
பிரமநாயகம் உள்ளே வந்து அவனிடம் கூறிய விரிவான செய்திகள் தாம் மேலே கூறப்பட்டவை. இந்த இரகசியங்களைப் பேசி முடித்துக் கொண்டு அவர்கள் அறைக்கு வெளியே வந்த போது மாலை மூன்று மணி. அதற்குள் சமையற்காரச் சோமு தபாலாபீஸிலிருந்து திரும்பி வந்து காப்பி, சிற்றுண்டி தயாரித்திருந்தான். காபி சிற்றுண்டியை அருந்திவிட்டுச் சமையற்காரச் சோமுவுக்குக் கீழ்வரும் கட்டளையைப் பிறப்பித்தார் பிரமநாயகம்.
"சோமு! நீ ஒன்று செய்! தம்பியோடு போய் ஊரைச் சுற்றிக் காட்டிவிட்டுக் கடற்கரையில் சிறிதுநேரம் இருந்துவிட்டு வா. வந்தபிறகு இராத்திரிச் சமையலுக்கு அடுப்பு மூட்டினால் போதும். தம்பீ! ஊரெல்லாம் பார்க்கவேண்டும் அல்லவா."
"ஆகட்டும் ஐயா!" - என்றான் சோமு. "தம்பீ! அழகு! எனக்குக் கொஞ்சம் கடை வியாபார சம்பந்தமான வேலைகள் இருக்கின்றன. இவ்வளவு நாட்களாக ஊரில் இல்லாததால் அவற்றை இன்றே கவனிக்க வேண்டும். இல்லையானால் நானே உன்கூடச் சுற்றிக் காட்டுவதற்கு வரலாம்" - என்று அழகியநம்பியை நோக்கிக் கூறினார் அவர். "அதனாலென்ன? பரவாயில்லை. நான் சோமுவையே அழைத்துக் கொண்டு போகிறேன்" - என்று தன்னடக்கமாக அவருக்குப் பதில் கூறிவிட்டான் அவன். பிரமநாயகம் கடைக்குள் சென்றார். அழகியநம்பி வெளியில் புறப்படுவதற்கு தயாரானான். சமையற்காரச் சோமு சமையலறைக்குரியதாயிருந்த தன் தோற்றத்தை வெளியில் புறப்பட்டுச் செல்வதற்கு ஏற்றதாக மாற்றத் தொடங்கினான். படிய வாரிவிட்ட தலையும் பளபளவென்று மினுக்கும் சில்க் அரைக்கைச் சட்டையும் சரிகை அங்கவஸ்திரமுமாகப் பத்தே நிமிஷத்தில் பணக்காரத் தோற்றத்தோடு அழகியநம்பிக்கு முன்னால் வந்து நின்றான் சோமு.
"அடேடே! யார் இது? சோமுதானா?" - என்று கேலியாகக் கேட்டான் அழகியநம்பி. அதைக் கேட்டுச் சிறிது வெட்கமடைந்தது போல் சிரித்துக் கொண்டான் சோமு. அந்தச் சிரிப்பில் அசடு வழிந்தது.
"சரி! வா, போகலாம்" - என்று அவனைக் கூட்டிக் கொண்டு வெளியேறினான் அழகியநம்பி. அவர்கள் பின் பகுதியிலிருந்து கடைக்குள் நுழைந்தபோது கடையில் சரியான வியாபார நேரம். போக வழியே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு ஆண்களும் பெண்களுமாக ஏகக் கூட்டம். மாலை நேரத்து வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு ஓரமாக வழியை விலக்கிக் கொண்டு அழகியநம்பியும் சோமுவும் வெளியே வந்தனர். அப்படி வரும்போது பூர்ணாவின் அறைக்குள் பிரமநாயகமும், அவளும், ஏதோ இரைந்து சப்தம் போட்டு விவாதித்துக் கொண்டிருப்பது அவன் செவிகளில் விழுந்தது. அதற்காக அவன் அந்த அறை வாசலில் தயங்கி நிற்கவில்லை. நடந்து வருகிறபோதே தானாகக் காதில் விழுந்ததை மட்டும் கேட்டுக் கொண்டு சென்றான். தெருவில் இறங்கி நடந்தனர் இருவரும். டவுன்பஸ் நிறுத்துமிடத்தில் போய்ப் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டு நின்றனர். "தம்பீ! நாம் முதலில் மியூஸியத்தைப் போய்ப் பார்த்துவிட்டு அப்புறம் மிருகக் காட்சி சாலைக்குப் போகலாம். கடற்கரையைக் கடைசியாக வைத்துக் கொள்ளுவோம். அப்படி வைத்துக் கொண்டால்தான் கடற்கரையில் கால்மணி அரைமணிக்கூறு இருந்து காற்று வாங்கிவிட்டு வரலாம்," - என்று சுற்றிப் பார்க்கும் திட்டத்தை விவரித்தான் சோமு.
"நான் ஊருக்குப் புதிய ஆள். எந்த இடம் எங்கே இருக்கிறது? எப்படி எப்படிப் போய்வரவேண்டும்? ஒரு விவரமும் எனக்குத் தெரியாது. நீ எப்படிச் சொல்லுகிறாயோ அப்படி நான் கேட்கத் தயார்" - என்று மொத்தமாகத் தன் சம்மதத்தையும் தன்னையும் சேர்த்துச் சோமுவிடம் ஒப்படைத்தான் அழகியநம்பி.
பஸ் வந்தது. இருவரும் ஏறிக்கொண்டனர். ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் உட்கார்ந்துகொண்டு அந்த அழகிய பெரிய நகரத்தின் வீதிகளைப் பார்த்தான் அழகியநம்பி. ஒளி, ஒலி, ஆரவாரங்கள், கண்ணைப் பறிக்கும் காட்சிகள், தெருவோரத்துக் கடைவீதிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பஸ்கள், கார், டிராம் - ரேடியோ சங்கீதத்தின் ஒலி - எல்லாம் நிறைந்த ஒரு புதிய உலகத்தின் நடுவே நகர்ந்து கொண்டிருந்தான் அவன். சிங்களப் பேச்சொலி, ஆங்கிலப் பேச்சொலி - எல்லாம் தெரிந்தன; கேட்டன. பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த சோமு, இரு சிறகிலும் தெரிந்த பெரிய கட்டிடங்கள், கடைகள், காட்சிகள், பற்றிய விளக்கத்தை ஆவலோடு கூறிக்கொண்டு வந்தான்.
பத்துநிமிஷ ஓட்டத்திற்குப் பின் முன்புறத்தில் பசும்புல் வெளிக்கும் நீரூற்றுக்களுக்கும் அப்பால் ஒரு பெரிய வெண்ணிற மாளிகைக்கு அருகில் இருந்த நிறுத்தத்தில் பஸ் நின்றது. "தம்பீ! இறங்குவோம். இதுதான் மியூஸியம்" - என்று முன்னால் இறங்கினான் சோமு. அழகியநம்பியும் இறங்கினான். புல்வெளிக்கிடையே சென்ற சாலையில் இருவரும் நடந்தனர். இடுப்பில் பச்சைக் கட்டம் போட்ட கைலி வேஷ்டியும் முண்டா பனியனுமாக நான்கைந்து சிங்கள ஆட்கள் ஏதோ சினிமாப்பாட்டை முணுமுணுத்துக் கொண்டே எதிரே வந்தனர். அவர்களைக் கடந்து இருவரும் மேலே நடந்து சென்றனர்.
பொருட்காட்சிசாலை முழுவதையும் சோமு அழகியநம்பிக்குச் சுற்றிக் காட்டினான். சரித்திர சம்பந்தமான சிலைகள், மிருகங்களின் எலும்புக் கூடுகள், அரசர்கள் உபயோகப்படுத்திய ஆயுதங்கள், ஆடம்பரப் பொருட்கள், - எல்லாவற்றையும் வரிசையாக அங்கே கண்டான் அழகியநம்பி. அற்புதமும், வியப்பும், புதுமையும், நிறைந்த ஒரு உலகத்திற்குத் திடீரென்று வந்துவிட்டது போல் ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு. இறந்த பிராணிகளின் உடல்களைப் பாடம் செய்து கெட்டுப் போகாமல் தைலங்களில் இட்டு வைத்திருந்த ஒரு பகுதியைப் பார்த்துக் கொண்டே வந்த போதுமட்டும் அழகியநம்பியின் மனத்தில் அருவருப்பு நிறைந்த ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. செத்த உடல்களைச் சாகாத உடல்கள் பார்ப்பதில்கூட ஒரு இன்பமா? அது கூட ஒரு பொருட்காட்சியா? மனித உள்ளம் உயிரோடு வாழும் அழகைமட்டும் பார்க்க விரும்பவில்லை. உயிரிழந்து கிடப்பதையும் பார்த்து மகிழ வேண்டுமென்ற கண்நோக்கு மனிதனுக்கு அல்லது மனித இனத்துக்கு எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது. இருக்கத்தான் வேண்டும்.
பொருட்காட்சி சாலையைப் பார்த்து முடித்துவிட்டு இருவரும் வாசலுக்கு வந்தனர்.
"மிருகக் காட்சிசாலை தெகிவளை என்ற இடத்தில் இருக்கிறது. அதற்கும் இந்த வழியாகவே பஸ் போகிறது. பஸ் வரட்டும். அதுவரை இங்கேயே நிற்போம்" - என்று வாயிலில் வந்ததும் சொன்னான் சோமு.
"ஏனப்பா சோமு! இந்த ஊரில் அதிக நேரம் மனிதர்கள் வீட்டிலேயே தங்கமாட்டார்களோ! எந்த நேரமும், எந்த வீதியிலும் ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் அலை மோதுகிறதே?" - என்று தன் மனத்தில் அவ்வளவு நேரமாகக் கனத்துப் போயிருந்த ஒரு கேள்வியைக் கேட்டான் அழகியநம்பி. "இந்த ஊரில் எப்போதுமே அப்படித்தான். உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தாலும் தெருவில் கூட்டத்திற்குக் குறைவிருக்காது." - சோமு இப்படிப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பஸ் வந்துவிட்டது.
தெகிவளைக்கு போகிற சாலை வெள்ளவத்தையை அடைகிறவரை கடற்கரையோரமாகவே சென்றது. சாலையின் வலது கைப்புறம் நீலக் கடல் பரந்து கிடந்தது. மற்றொருபுறம் உயர்ந்த கட்டிடங்கள் தெரிந்தன. "போய்விட்டு நாம் இங்கேதான் திரும்பிவர வேண்டும். இதுதான் கடற்கரை. இந்த இடத்திற்குக் 'காலிமுகம்' என்று பெயர்." - என்று பஸ்ஸில் போகும்போதே கடற்கரையைச் சுட்டிக் காட்டினான் சோமு.
தெகிவளைக்குப் போய் மிருகக்காட்சி சாலையைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது மணி ஐந்தரைக்குமேல் ஆகிவிட்டது. அழகான பெரிய தோட்டத்துக்கு நடுவே ஏற்றமும் இறக்கமுமான பகுதிகளில் காட்சிசாலை அமைந்திருந்தது.
மனிதர்களின் திறமை, விலங்குகளின் திறமையைத் தன்னுடைய காட்சியின்பத்துக்காக அங்கே அடக்கி வைத்திருப்பதை அவன் கண்டான்.
மறுபடியும் அங்கிருந்து பஸ் பிடித்துக் காலிமுகக் கடற்கரையில் வந்து இறங்கியபோது பொழுது சாய்ந்துவிட்டது. அந்த நேரத்தில் அந்த கடற்கரை தனிப்பட்ட அழகுடன் விளங்கியது. திருச்செந்தூரிலும் தூத்துக்குடியிலும் கடற்கரையில் மணற்பரப்பைத் தான் அவன் கண்டிருக்கிறான். கொழும்பு - காலிமுகக் கடற்கரையிலோ, மரகதப் பாய் விரித்ததுபோல் புல் வெளியைக் கண்டான். கடற்கரைக்கு எதிரே பிரம்மாண்டமான அரசாங்கக் கட்டிடங்களும், அப்பால் நகரத்தில் உயரமும் தாழ்வுமான கட்டிடங்களின் உச்சிகளில் தெரியும் பல நிற மின்சார விளக்குகளும், வியாபாரங்களும் தூரத்து ஓவியம் போல் தெரிந்தன. மணி அடித்து ஓய்ந்ததும் அடங்கி மெதுவாக ஒலிக்கும் அதன் ஓசையைப் போல நகரத்தின் ஒலிகள் தொலைவில் சிறிதும் பெரிதுமாக ஒலித்தன. தங்கச் சிலைகளைப் போல் குழந்தைகள், வாளிப்பான உடற்கட்டோடு இளங் கணவரோடு கைகோர்த்துத் தழுவினாற்போல வரும் வெள்ளை யுவதிகள், அடக்க ஒடுக்கமாகக் குத்துவிளக்குப்போலக் கணவனுக்குப் பக்கத்தில் நடந்துவரும் தமிழ்ப் பெண்கள், - சிங்கள மங்கையர், - எல்லோரும் அந்தக் கடற்கரையின் புல் தரைக்கு அழகு கொடுத்தனர்.
அழகியநம்பியும் சோமுவும் கூட்டம் அதிகமில்லாத ஒரு பகுதியில் போய் உட்கார்ந்து கொண்டனர். முந்திரிப்பருப்பு விற்கும் சிங்களப் பையன் கடல் அலையின் சத்தத்தையும் மீறிக் கொண்டு தன் சத்தம் ஒலிக்க வேண்டுமென்ற எண்ணத்தினாலோ, என்னவோ, "கஜ்ஜிக்கொட்டை! கஜ்ஜிக் கொட்டை!' (கஜ்ஜிக்கொட்டை என்றால் சிங்களத்தில் முந்திரிப்பருப்பு என்று பொருள்) என்று தொண்டை கிழியக் கத்திக் கொண்டே அவர்கள் உட்கார்ந்திருந்த பக்கமாக வந்தான். சோமு அவனை அருகில் கூப்பிட்டுக் காசைக் கொடுத்து இரண்டு முந்திரிப்பருப்புப் பொட்டலங்கள் வாங்கினான். ஒன்றை அழகியநம்பியிடம் கொடுத்தான். அதை வாங்கி அவன் காகிதப் பொட்டலத்தைப் பிரித்து முந்திரிப்பருப்பை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
"ஹலோ..." - இனிமையோடு இழைந்த பெண் குரல்கள் இரட்டையாகச் சேர்ந்து ஒலித்தன. அழகியநம்பி தலை நிமிர்ந்து எதிரே பார்த்தான். தூய வெண்ணிறக் கவுன் அணிந்த தோற்றத்தோடு மேரியும், லில்லியும் சிரித்துக் கொண்டு நின்றனர். "வாருங்கள்! வாருங்கள்! நல்ல சமயத்தில் நல்ல இடத்தில்தான் உங்களைச் சந்திக்கிறேன்" - அழகியநம்பி எழுந்து நின்று அவர்களை வரவேற்றான். அவன் முகம் மலர்ச்சியடைந்தது.
"வள்ளியம்மை! உன்னைத்தானே? வாசலில் யாரோ வந்து கூப்பிடுகிறாற் போலிருக்கிறதே? போய் யாரென்று பார்த்துவிட்டு வா." - உள் வீட்டில் சமையற் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்த தாயார் மகளை வாசற்புறம் போய்ப் பார்த்துவிட்டு வரச்சொல்லி அனுப்பினாள்.
வாசலில் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்த வள்ளியம்மையின் முகத்தில் பதற்றமும், திகைப்பும் தெரிந்தன.
"என்னடி பெண்ணே? வந்திருப்பது யார்?"
"வட்டிக்கடைப் பன்னீர்ச்செல்வம் பிள்ளை வந்திருக்கிறார் அம்மா!"
பெண் சொல்லிய பெயரைக் கேட்டதும் அந்த அம்மாளுக்கு மனத்தில் திக்கென்றது. நெற்றி சுருங்கிக் கவலையைக் காட்டும் மடிப்புக்கள் விழுந்தன.
"அவரிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவது?" - தாயின் திகைப்பைப் புரிந்துகொள்ளாத பெண் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
"நீ என்ன பதிலைப் போய்ச் சொல்லப் போகிறாய்? போ உள்ளே! அடுப்பைப் பார்த்துக்கொள். நான் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பிவிட்டு வருகிறேன்."
பெண்ணை உள்ளே அனுப்பிவிட்டு வட்டிக்கடைக்காரருக்குப் பதில் சொல்லி அனுப்புவதற்காக வாசலுக்கு வந்தாள் அந்த அம்மாள்.
வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த மனிதர் பன்னீர்ச்செல்வத்திற்குத் தப்பித் தவறிக்கூட முகத்தில் சிரிப்போ, மலர்ச்சியோ, உண்டாகாது போலிருந்தது. முகத்தில் அசாதாரணமானதொரு கடுகடுப்பு, சாதாரணமாகவே எந்த நேரத்திலும் அமைந்திருந்தது. ஒருவேளை வட்டிக்கடைக்காரர்களெல்லாம் முகத்தை அப்படித்தான் வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று ஏதாவது இலக்கணம் இருக்கிறதோ, என்னவோ? இயற்கையாகவே, பிறவியிலேயே புலிமுகத்தைப் போலப் பயங்காட்டும் முகம் வாய்த்திருந்தது அவருக்கு. அதில் அரிவாள் நுனிபோல் வளைந்த மீசையும் சேர்ந்துகொண்டது. வட்டி வசூல் செய்யும் மிடுக்குடனே உள்ளேயிருந்து வந்த அந்த அம்மாளை நிமிர்ந்து பார்த்தார் பன்னீர்ச்செல்வம். தோள் புடவையை இழுத்துவிட்டுக் கொண்டே ஒடுங்கிப்போய்க் கதவோரமாக வந்துநின்ற அந்த அம்மாளுக்கு அவர் முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது.
"என்னம்மா? பிள்ளையைக் கொழும்புக்குக் கப்பலேற்றி அனுப்பியிருக்கிறீர்களாமே! போய்ப் பணம் ஏதாவது அனுப்பினானா? வட்டி தலைக்குமேல் ஏறிக்கொண்டே போகிறதே." - முகத்தின் கடுகடுப்புக்குச் சிறிதும் குறைவில்லாத குரல். பேசும்போதே யாரையோ அதட்டுவது போலிருந்தது.
"அவன் போய்ச் சேர்ந்தே இன்னும் முழுமையாக ஒரு வாரம் கூட ஆகவில்லையே? அதற்குள் எப்படிப் பணம் அனுப்புவான்? 'சௌக்கியமாகப் போய்ச்சேர்ந்தேன்' என்று அவனிடமிருந்து ஒரு வரி கடுதாசி கூட வரவில்லையே?"
பன்னீர்ச்செல்வத்தின் குரலில் எவ்வளவு மிடுக்கும், கடுமையும் இருந்தனவோ, அவ்வளவு தணிவும் பணிவும், அந்த அம்மாளுடைய குரலில் இருந்தன. எங்கும், எப்போதும் கையை உயர்த்தி ஒரு பொருளைக் கொடுத்தவர்கள் அதிகாரம் செய்யலாம்; அதட்டிப் பேசலாம், ஆட்சி செய்யலாம். எதையும் செய்ய முடியும் அவர்களுக்கு. ஆனால், கையேந்தி வாங்கினவர்களும் அப்படி இருக்க முடியுமா?
"நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாயிற்று. இரண்டாயிரம் ரூபாய்க்கு நாலுவருட வட்டி ஐநூறு ரூபாய்க்குமேல் ஆகிறது. இந்த நாலு வருடத்தில் ஒருதரமாவது வட்டித் தொகையையும் கொடுக்கவில்லை. இனிமேல் உங்களிடம் கொடுப்பதற்குத்தான் என்ன இருக்கிறது? இடிந்த சுவரும், செங்கல் பெயர்ந்த தரையுமாக இந்த வீடு ஒன்று மீதமிருக்கிறது. இன்றைக்கெல்லாம் கூவிக்கூவி விற்றாலும் எழுநூறு ரூபாய்க்கு மேல் போகாது. பிள்ளையையும் அக்கரைச் சீமைக்கு அனுப்பிவிட்டீர்கள். வட்டியும் முதலுமாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு நான் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு போக வேண்டும் போலிருக்கிறது."
வட்டிக் கடைக்காரரின் பேச்சில் படிப்படியாக அந்தத் தொழிலுக்கே உரிய அழுத்தம் ஏறிக்கொண்டிருந்தது. "அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ஐயா! இனிமேல் மாதா மாதம் அவன் ஏதாவது அனுப்புவான். மொத்தமாக அடைத்துத் தீர்க்க முடியாவிட்டாலும் உங்கள் கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுகிறோம்." - அந்த அம்மாள் அவரைச் சமாதானப் படுத்திக் கெஞ்சுகிற பாவனையில் பேசினாள்.
"இதோ பாருங்கள்; நான் வட்டிக்கடைக்காரன். தயவு தாட்சணியம் காட்டி நாலுபேரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை. ஆரம்ப முதல் இந்தத் தொழிலில் கெட்ட பெயர்தான் வாங்கியிருக்கிறேன். குடிகெடுப்பவன்; 'கருமி' என்று எத்தனையோ விதமாக ஊரில் பேசிக் கொள்கிறார்களாம். இனிமேல் நல்ல பெயரெடுத்து எனக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. எனக்கு யாரும் வள்ளல் பட்டம் கட்ட வேண்டாம்..." சம்பந்தத்தோடும், சம்பந்தமின்றியும் தெருவில் போவோர் வருவோருக்குக் கூடக் கேட்கும் குரலில் இரைந்து கூப்பாடுபோடத் தொடங்கி விட்டார், அவர்.
"கோபித்துக் கொள்ளாதீர்கள். பார்த்துக் கொடுத்து விடுகிறோம். எங்கள் குடும்பநிலை உங்களுக்குத் தெரியாததில்லை. நீங்களே இப்படிக் கோபித்துக் கொண்டு சத்தம் போட்டால் நாங்கள் என்ன செய்வது?"
ஒரு பெண் தன் சாமர்த்தியத்தாலும் வாழ்க்கை அனுபவங்களாலும் என்னென்ன பதில்களையும் சமாதானங்களையும் சொல்ல முடியுமோ, அவ்வளவையும் சொல்லிச் சமாளிக்க முயன்றாள் அந்த அம்மாள். குடும்ப வாழ்க்கையின் மேடு பள்ளங்களை நன்கு அறிந்து வாழ்க்கை அனுபவங்களில் தோய்ந்தவர்களால் மட்டுமே இந்த மாதிரி நிலைகளைச் சமாளிக்க முடியும்.
உடல் உழைப்பை அறியாத அந்த வளமான சரீரம், இரக்கம், பச்சாதாபம் போன்ற உணர்வுகளை எல்லாம் பணத்தைப் போலவே இரும்புப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிடுவதுண்டு. காலுக்குச் செருப்பு, தலைக்குக் குடை, கடன் தஸ்தாவேஜிகளும் பத்திரங்களும் அடங்கிய ஒரு துணிப்பை, மல்வேஷ்டி, மல் சட்டை, கையகலத்துக்குச் சரிகைக் கரைபோட்ட அங்கவஸ்திரம், பன்னீர்ச்செல்வம் தோற்றத்தில் கூடத் தாம் அசல் சீமான், பச்சைப் பணக்காரர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் காட்சியளித்தார்.
"உங்களுக்கு ஆயிரம் துன்பங்கள் இருக்கலாம். அதையெல்லாம் பற்றி நான் கவலைப்படமுடியாது. போனால் போகிறதென்று இன்னும் பதினைந்து நாள் தவணை கொடுக்கிறேன். அதற்குள் வட்டிப் பணம் ஐநூறு ரூபாயாவது கைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் நான் மிகவும் பொல்லாதவனாக இருப்பேன்." - கொடுத்த கடனை வசூலிப்பவர்களுக்கே உரிய விதத்தில் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேசினார் அவர்.
அந்தச் சமயத்தில் வள்ளியம்மை உள்ளேயிருந்து வந்து தாய்க்குப் பின்னால் நின்றாள். பன்னீர்ச்செல்வத்தின் பார்வை அந்தப் பக்கமாகத் திரும்பியது. "அது யாரு? உங்களுக்குப் பின்னாலே நிற்கிறது?"
"என் பெண் வள்ளியம்மை. அழகியநம்பிக்கு இளளயவள்."
பன்னீர்ச்செல்வம் 'பெரிய மனிதர்' அல்லவா? அதனால், யாரை இன்னார் என்று தெரிந்து கொண்டிருந்தாலும் தெரியாது போல் கேட்கிறவழக்கம் அவரிடம் உண்டு. "இந்தா, பெண்ணே! நாவரட்சியாய் இருக்கிறது, ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டுவா குடிக்கவேண்டும்." - என்று உரிமையோடு கட்டளையிட்டார் பன்னீர்ச்செல்வம்.
வள்ளியம்மை உள்ளே ஓடினாள். தலைப்பின்னல் கருநாகம் போல் அசைந்தாடத் தண்ணீர் கொண்டு வருவதற்காக அவள் ஓடிய காட்சியைப் பன்னீர்ச்செல்வம் ஆவலோடு நோக்கினார்.
"உங்களுக்கு இந்த வயதில் கல்யாணத்திற்கு ஒரு பெண் இருக்கிறதா? எனக்கு தெரியவே தெரியாதே; யாரோ பக்கத்து வீட்டுப் பெண் என்று அல்லவா நினைத்தேன்" - அவர் பேச்சில் வியப்பு நடித்தது.
"தெரியாமல் என்ன? நீங்கள் சிறு குழந்தையில் இவளைப் பார்த்திருப்பீர்கள். இப்போது வயதாகிவிட்டதனால் மதமதவென்று வளர்ந்திருக்கிறாள். அதனால் அடையாளம் தெரியவில்லை." - அந்த அம்மாள் வேண்டா வெறுப்பாகப் பதில் கூறினாள். மனத்தில் சிறிது ஆத்திரமும் வருத்தமும் ஏற்பட்டிருந்தது. 'கடன் கேட்க வந்தால் கடனைக் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? இந்த விசாரணை எல்லாம் இவனுக்கென்ன வேண்டிக்கிடக்கிறது?' - அந்த அம்மாள் மனத்துக்குள் அவரைப் பற்றி வெறுப்பாக நினைத்துக் கொண்டாள். கடன் பட்டுவிட்டால் கடன் கொடுத்தவனுடைய எல்லா அசட்டுத்தனங்களளயும் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது.
"நீ இப்படி கொடுத்துவிட்டுப் போ! நான் கொண்டு போய் அவரிடம் கொடுக்கிறேன்." - கதவுக்கு இந்தப்புறமே பெண்ணை வழிமறித்து நிறுத்திவிட்டுத் தண்ணீர்ச் செம்பையும், டம்ளரையும் தன் கையில் வாங்கிக் கொண்டாள் அந்த அம்மாள். வள்ளியம்மை தாயின் முகக் குறிப்பைப் புரிந்து கொண்டு உடனே வேகமாகச் சமையலறைப் பக்கம் திரும்பிச் சென்றுவிட்டாள். அந்த அம்மாள் கதவுக்கு அப்பால் கடந்து செல்லாமல் நிலைப்படிக்கும் உட்புறம் இருந்துகொண்டே கைகளை எட்டி நீட்டி வாசல் திண்ணைமேல் தண்ணீர்ச் செம்பையும் டம்ளரையும் வைத்தாள்.
"இதோ தண்ணீர் வைத்திருக்கிறேன், எடுத்துக் கொள்ளுங்கள்." - பன்னீர்ச்செல்வத்திற்கு அவளுடைய அந்தச் செய்கை முகத்தில் அடித்த மாதிரி என்னவோ போல் இருந்தது.
செம்பைக் கையிலெடுத்துத் தண்ணீர் குடித்தார் அவர். "தண்ணீர் போதுமா? இன்னும் கொண்டுவரச் சொல்லட்டுமா?" - நிலைப்படி கடவாமலே அந்த அம்மாளின் கேள்வி தொடர்ந்தது. "போதும்" - அவர் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். 'ஆயிரம் கடன்பட்டிருக்கலாம்! ஏழ்மையின் ஆழத்திலேயே புதைந்திருக்கலாம். ஆனால், பணத்துக்குத்தானே கடன் பட்டிருக்கிறோம்; மானம், மரியாதைக்காக அல்லவே?' - அந்த அன்னை துணிவான சிந்தனையில் இறங்கியிருந்தாள். தமிழ் நாட்டுக் குடும்பப் பெண்ணின் பண்பை அந்தச் சிறிய சந்தர்ப்பத்தில் 'பெரிய மனிதரான' பன்னீர்ச்செல்வத்திற்கு முன்னால் உறுதியாகக் கடைப்பிடித்துக் காட்டிவிட்டாள் அழகியநம்பியின் தாய்.
"பெண்ணுக்குக் கலியாணம் எப்போது செய்யப்போகிறீர்களோ? வயது ஆகிவிட்டாற்போலத் தெரிகின்றதே?" - பன்னீர்ச்செல்வம் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்புகிற வழியாகக் காணோம். திண்ணையில் பதிவாக உட்கார்ந்து, கையோடு கொண்டு வந்திருந்த வெற்றிலைப் பெட்டியைத் திறந்தவாறே அந்த அம்மாளிடம் பேச்சுக் கொடுத்தார்.
'இதேதடா சனியன்! சீக்கிரம் போய்த் தொலைய மாட்டார் போலிருக்கிறதே? இந்த மனிதர் இவற்றை எல்லாம் விசாரிக்கவில்லை யென்று யார் குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடன் பணத்தைக் கேட்க வந்தவர் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே?' - அவளுக்கு எரிச்சலாக வந்தது. அந்த மனிதர் அங்கிருந்து எப்போது எழுந்து செல்வார்? என்று சலிப்பு ஏற்பட்டது.
"கலியாணத்திற்கு என்ன அவசரம்? கடன் உடன்களை அடைத்துவிட்டு நிதானமாகப் பார்த்துச் செய்யவேண்டும்" - என்று சுவாரஸ்யமில்லாத குரலில் எங்கோ பார்த்துக் கொண்டு பதில் சொன்னாள்.
"பெண்ணுக்கு ஆவதற்கு முன்னால் உங்கள் பையன் அழகியநம்பிக்கு ஆகவேண்டாமா?"
"உம்... எல்லாம் நடக்க நடக்கப் பார்க்கலாம். நான் உள்ளே போகிறேன். எனக்குச் சமையல் வேலை பாக்கி இருக்கிறது." - அதற்கு மேலும் பன்னீர்ச்செல்வத்தின் தொண தொணப்புக்கு ஆளாக விரும்பாமல் உட்புறம் நகர்ந்தாள் அந்த அம்மாள்.
"சரி! நானும் இப்படிப் போய்விட்டு வருகிறேன். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் சொன்னால் சொன்னதுதான். பதினைந்து நாளில் வட்டிப்பணம் கைக்கு வந்து சேரவேண்டும். உங்கள் பிள்ளைக்கும் எழுதிவிடுங்கள். சொன்ன தேதியில் பணம் கைக்கு வரவில்லையானால் நான் மிகவும் கெட்டவனாயிருப்பேன்" - பன்னீர்ச்செல்வமும் கிளம்பி விட்டார். அத்தனை குழைந்து, இரக்கம் காட்டுபவர்போல் வம்புப் பேச்செல்லாம் பேசி முடிந்த பின்பும் தொழில் முறைக்குச் செய்ய வேண்டிய எச்சரிக்கையைக் கொடுமையாகச் செய்துவிட்டுத் தான் போனார்.
திண்ணையிலிருந்த செம்பையும் டம்ளரையும் எடுத்துச் செல்வதற்காகத் திரும்பி வந்த அந்த அம்மாள் தபால்காரன் வருவதைக் கண்டு தயங்கி நின்றாள்.
'அழகியநம்பி கடிதம் எழுதியிருந்தாலும் எழுதியிருப்பான். அவனைத் தவிர வேறு யாரிடமிருந்து இப்போது நமக்குக் கடிதம் வந்திருக்கப்போகிறது?' - நினைத்துக் கொண்டே ஆசையோடு நின்றாள். மனம் வேகமாக அடித்துக் கொண்டது. தபால்காரன் எதிர்ச் சிறகிலிருந்த வீட்டில் கடிதம் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தான். எதிர்பார்த்தது வீண்போகவில்லை. தபால்காரன் "முத்தம்மாள் அண்ணி" என்று பெயரை இரைந்து வாசித்தான். இரண்டு கடிதங்களைத் திண்ணையில் வீசி எறிந்துவிட்டுப் போனான். குடும்பப் பாங்கிலும் அடக்க ஒடுக்கப் பண்புகளிலும், பழமையான கட்டுப்பாடுகளிலும் தழும்பேறிப் போயிருந்த அந்த அம்மாளுக்குத் தபால்காரன் நட்ட நடுத்தெருவில் நின்றுகொண்டு தன் பெயரை அப்படி இரைந்து கூவிக் கடிதங்களை வீசி எறிந்தது என்னவோ போலிருந்தது. ஒரு கணம் சிறிய நுணுக்கமான கூச்சம் ஒன்று அந்த அம்மாளைப் பற்றிக் கொண்டது.
ஒரு கையில் செம்பையும், டம்ளரையும் எடுத்துக் கொண்டு இன்னொரு கையில் கடிதங்களோடு உள்ளே வந்தாள். "ஏ வள்ளியம்மை! இந்தா, கடுதாசி வந்திருக்கிறது பார்! யார் எழுதியிருக்கிறார்களென்று படித்துச் சொல்லேன்."
'கடிதாசி' என்ற பெயரைக் கேட்டவுடனே அடுப்படியில் உட்கார்ந்திருந்த வள்ளியம்மை மிட்டாய்ப் பொட்டலத்தைப் பார்த்து ஓடிவரும் சிறு குழந்தையைப் போலத் துள்ளிக் குதித்து ஓடிவந்தாள். தாயின் கையிலிருந்து கடிதங்களைவாங்கிப் பார்த்தாள்.
"அம்மா! ஒரு கடிதாசி அண்ணன் கொழும்பிலிருந்து போட்டிருக்கிறது. இன்னொன்று தென்காசியிலிருந்து அண்ணனுடைய சிநேகிதர் ஒருத்தர் எழுதியிருக்கிறார். முருகேசன் என்று பெயர். அண்ணன் புறப்பட்டுக் கொழும்புக்குப் போனது தெரியாது போலிருக்கிறது. இங்கே இருப்பதாக நினைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார்."
"இரண்டையுமே, படியேன், கேட்கலாம்." - தாயின் விருப்பப்படியே இரண்டு கடிதங்களையுமே படித்துக் காட்டத் தொடங்கினாள் மகள்.
"அம்மா! அம்மா இதோ பார் கடிதம். யார் எழுதியிருக்கிறார்கள் தெரியுமா?" - கைநிறையத் தங்கக் கட்டிகளை அள்ளிக் கொண்டு மகிழ்ச்சியால் கூவுகிறவள் போல் கூவிக் கொண்டே வாசலிலிருந்து ஓடிவந்தாள் கோமு.
கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த காந்திமதி ஆச்சியும் அடுப்பிலிருந்து இட்லி கொப்பரையை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பகவதியும் வியப்படைந்து திரும்பிப் பார்த்தனர். வாசல் பக்கமிருந்து கோமு கையில் ஒரு கடிதத்துடன் தரையில் கால் பாவாமல் துள்ளி ஓடிவந்து கொண்டிருந்தாள்.
"என்னடி இது; குதிப்பும், கும்மாளமும்? தடுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டாலொழிய உனக்குப் புத்தி வராது! கடிதம் வந்தால் தான் என்ன? இப்படியா குதிக்க வேண்டும்? இன்னும் குழந்தைப் புத்தி மாறவே இல்லையே?... அதுசரி! யார் போட்ட கடிதம் அது?" - காந்திமதி ஆச்சி தாய்க்கு உரிய பொறுப்போடு சிறுமி கோமுவைக் கடிந்து கேட்டாள்.
"இல்லை அம்மா! வந்து... இதுவந்து... இலங்கையிலே இருந்து அழகியநம்பி மாமா போட்டிருக்கிறார்." - என்று சொல்லிக்கொண்டே சிறுமி கோமு தாயின் கட்டிலருகில் வந்து நின்றாள்.
அடுப்படியில் நின்று கொண்டிருந்த பகவதியின் முகம் மலர்ந்தது. "எங்கே, கோமு! அதை இப்படிக் கொடு பார்க்கலாம்." - என்று ஓடி வந்து கோமுவின் கையிலிருந்து ஆவலோடு அந்தக் கடிதத்தைப் பறித்துக் கொண்டாள் பகவதி.
"இந்தப் பிள்ளைக்குத்தான் என்ன ஒட்டுதல் பாரேன்! ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், சேராததுமாக மறக்காமல் கடிதம் போட்டிருக்கிறானே!" என்று பெருமிதம் தொனிக்கச் சொல்லிக் கொண்டாள் ஆச்சி. அவளுடைய முகத்தில் தனிப்பட்டதோர் மகிழ்ச்சி அப்போது நிலவியது.
"அக்காவுக்கு எவ்வளவு ஆசை பார்த்தாயா அம்மா? மாமா கடிதத்தை நான் முழுக்க படிப்பதற்குள் பாதியிலேயே தட்டிப் பிடுங்கிக் கொண்டு விட்டாள்" - என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டே தாயிடம் புகார் செய்தாள் கோமு.
"நீங்கள் இரண்டு பேரும் - அக்காவும் தங்கையும் மட்டும் படித்தால் போதுமா? எனக்குப் படித்துக் காட்ட வேண்டாமா? சுகமாகப் போய்ச் சேர்ந்தேனென்று எழுதியிருக்கிறானோ; இல்லையோ?"
"கடிதமே உன் பெயருக்குத்தான் அம்மா போட்டிருக்கிறார்!" - கோமு ஆச்சியிடம் கூறினாள்.
முகத்தில் மலர்ச்சி, இதழ்களில் நளினமான மென்முறுவல், கண்களில் உணர்ச்சியின் மெய்மையானதொரு ஒளி, உடலில் பூரிப்பு - அழகியநம்பியின் கடிதத்தைப் படிக்கும் போது பகவதிக்கு இத்தனை மெய்ப்பாடுகளும் உண்டாயின. அத்தனைக்கும் அந்தக் கடிதத்தில் இருந்ததெல்லாம் நாலைந்து வாக்கியங்கள் தான். அவள் அவற்றை இரண்டு மூன்று தடவைகளாவது திரும்பத் திரும்பப் படித்திருப்பாள். அப்புறமும் அவளாகக் கொடுப்பதற்கு மனமின்றித்தான் கையில் வைத்துக்கொண்டிருந்தாள்.
ஆனால், சிறுமி கோமு சும்மாவிடவில்லை! "கொடு அக்கா! இன்னும் நீயே வைத்துக் கொண்டிருந்தால் நான் படிக்க வேண்டாமா? அம்மாவுக்குப் படித்துக் காட்ட வேண்டாமா?" - என்று அக்காவிடமிருந்து வலுவில் பறித்தாள். "பகவதியும், கோமுவும் சுகமாக இருக்கிறார்களா? அவர்கள் இருவருக்கும் என் அன்பை மறக்காமல் சொல்லவும்." - என்று எழுதியிருந்த வாக்கியங்களை மழலை மாறாத குரலில் இரண்டு முறை திரும்பத் திரும்பப் படித்தாள் அவள்.
"என்னடி கோமு? இதையே திரும்பத் திரும்பப் படிக்கிறாயே? இந்தக் கடிதாசியில் இதைத் தவிர வேறு ஒன்றுமே எழுதவில்லையா?" - என்று பொய்க் கோபத்துடன் சலித்துக் கொண்டாள் ஆச்சி. உடனே கோமு முழுவதையும் படித்துக் காட்டிவிட்டு, "அம்மா! 'உடனே பதில் போடு' என்று இதில் அழகியநம்பி மாமா எழுதியிருக்கிறாரே. நாம் அவருக்குப் பதில் எழுதிப் போட வேண்டாமா? இப்போதே தபாலாபீசுக்கு ஓடிப்போய்க் கார்டு வாங்கிக்கொண்டு வரட்டுமா?" - என்று கேட்டாள்.
"அவசரமென்ன இப்போது? நாளைக்குக் காலையில் எழுதிப் போடலாம்," - என்று சிறுமியின் ஆசைத் துடிப்புக்கு அணை போட்டாள் தாய்.
"என்ன ஆச்சி? உள்ளே ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருப்பதைப் பார்த்தால் கடைக்குச் சாப்பிட வருகிற வாடிக்கைக்காரர்கள் பேசாமல் வாசலோடு திரும்பிப் போய்விட வேண்டியதுதான் போலிருக்கிறது" - என்று கேட்டுக் கொண்டே பெருமாள் கோயில் குறட்டு மணியம் நாராயண பிள்ளை உள்ளே நுழைந்தார்.
"அடடே! மணியக்காரரா? வாருங்கள், வாருங்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை. இந்தா, கோமு! ஐயா உட்காருவதற்கு ஒரு பலகை எடுத்துப் போடு. இட்டிலி எடுத்துவை." - என்று ஆச்சி நாராயண பிள்ளையை வரவேற்றாள்.
நாராயண பிள்ளை உட்கார்ந்தார். அவர் ஆச்சிக்குத் தன்மையான மனிதர். வேண்டியவர். அந்தக் குறிஞ்சியூரில் கண்ணியமும், நாணயமும் பொருந்திய மனிதர்கள் என்று அவள் மனத்தளவில் மதித்துவந்த சிலருக்குள் முக்கியமான ஒருவர்.
"வேறொன்றுமில்லை. இந்த முத்தம்மாள் அண்ணி பிள்ளை அழகியநம்பி கொழும்புக்குப் போயிருக்கிறானோ இல்லையோ? 'சுகமாகப் போய்ச் சேர்ந்தேன், உங்கள் சுகத்துக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருக்கவும்' என்று கடுதாசி எழுதியிருக்கிறான். அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்ததனால், நீங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை." - என்று ஆச்சி கூறினாள்.
"ஆமாம்! ஆமாம்! அழகியநம்பிதானே? கப்பலேறப் போவதற்கு முன்னால் மறந்துவிடாமல் தேடிவந்து சொல்லிக் கொண்டு போனானே. நல்ல பிள்ளை." - என்று இலையில் ஆவிபறக்கும் இட்டிலிகளைப் பிட்டுக் கொண்டே பதில் சொன்னார் நாராயண பிள்ளை.
"பாவம்! முத்தம்மாள் அண்ணி இதுநாள் வரை பட்ட துன்பங்கள் இனிமேலாவது விடியும். பிள்ளை அக்கரைச் சீமைக்குச் சம்பாதிக்கப் போயிருக்கிறான். மாதாமாதம் ஏதாவது அனுப்பினானானால் கடன்களையும் அடைத்து விடுவாள். அதோடு போய்விடவில்லை. கலியாணத்திற்கு ஒரு பெண் வேறு வைத்துக் கொண்டிருக்கிறாள்."
"ஊம்...! முன் காலம் மாதிரியா ஆச்சி? சமஸ்தானம் போல நிலம் கரைகள் இருந்தது. பிள்ளைகள் கையை எதிர்பார்க்காமல், உத்தியோகச் சம்பாத்தியத்தில் ஆசை வைக்காமல் குடும்பக் காரியங்கள் அது அது அப்போதைக்கப்போது தாராளமாக நடந்து கொண்டிருக்குமே. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும், எந்தப் பெரிய காரியம் நடக்க வேண்டியிருந்தாலும் பிள்ளைகள் தலையெடுத்துத்தானே ஆகவேண்டியிருக்கிறது."
"உண்மைதான். என் நிலைமையையே பாருங்களேன் மணியக்காரரே! இந்தச் சனியன் பிடித்த நோக்காடு வந்த நாளிலிருந்து என்னால் ஒருத்தருக்கு ஒரு பயனும் இல்லை. பெற்றது இரண்டு பெண்கள். இந்த 'இட்டிலிக் கடை' என்று ஏதோ பேருக்கு ஒரு நம்பிக்கை இருக்கக் கொண்டு, காலம் தள்ள முடிகிறது. அதுவும் ஒரு துரும்பை இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் எடுத்துப் போடுகிற வேலைக்கூட என்னால் செய்ய முடிவது இல்லை. ஆண்டவன் புண்ணியத்தில் என் பெண்கள் இருவரும் குடும்பப் பாங்கு அறிந்து சொன்ன வார்த்தையை மீறாமல் நடந்து காரியம் பார்ப்பதனால் தான் நான் காலம் தள்ள முடிகிறது."
வாழ்க்கையை அணு அணுவாக அனுபவித்து உணர்ந்து தெரிந்து கொண்ட ஒரு முதிர்ந்த பெண்ணும் ஆணும் பேசிக் கொள்கிற இயற்கைப் பண்பு நிறைந்திருந்தது, காந்திமதி ஆச்சியும், நாராயணப் பிள்ளையும் பேசிக்கொண்ட பேச்சில். வாழ்க்கையின் தத்துவமே இப்படி அனுபவித்து அனுபவித்து உணர வேண்டிய ஒன்றுதான் போலிருக்கிறது. புத்தகத்தை மட்டுமே படித்துவிட்டு வாழ்க்கையின் அனுபவங்களில் தோய்ந்துவிட்ட மாதிரி எண்ணிக்கொண்டு புத்தகங்களை எழுதிக் குவிக்கிறார்களே. தெரிந்தவர்கள் தெரிந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும் ஒன்றும் தெரியாத விஷயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் அதிகம் தெரிந்ததுபோல் பேசுவது இந்த உலகத்தில் நாகரிகமான வழக்கங்களில் ஒன்றாகிவிட்டதே!
உலகத்தின் ஒரு மூலையில் எங்கோ மலைத் தொடர்களுக்கு நடுவிலுள்ள அந்தச் சின்னஞ் சிறு கிராமத்தில் ஒரு இட்டிலிக் கடையின் உள்ளே அவர்கள் சராசரியான - சாதாரணமான - வெறும் குடும்பப் பிரச்சினைகளைப் பொழுது போகாமல் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு தலைமுறையின் பரிபூரணமான வாழ்க்கையை அவர்கள் உரையாடல் அறிந்தோ, அறியாமலோ வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
வாழ்க்கையைப் பற்றிக் கனவு காண்பவர்கள், இனிமேல் வாழ இருப்பவர்கள் பேசிக்கொண்ட பேச்சு அல்ல அது! வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட்டவர்கள் பேசிக் கொண்ட பேச்சு.
"மாமா! இன்னும் இரண்டு இட்டிலி வைக்கட்டுமா? நன்றாகச் சாப்பிடுங்கள்." - என்று சிரித்துக் கொண்டே இட்டிலித் தட்டை எடுத்துத் தந்தாள் பகவதி.
"ஐயையோ! தாங்காது அம்மா; நீ பாட்டிற்கு அரைடசன், முக்கால் டசன் என்று ஒவ்வொரு நாளும் இப்படிச் சிரித்துப் பேசிக்கொண்டே இலையில் வைத்துவிடுகின்றாய். மாசக்கடையில் 'கணக்கென்ன' என்று பார்த்தால் பத்து ரூபாய், பன்னிரண்டு ரூபாய்வரை நீண்டுவிடுகிறது. பெருமாள் கோயிலில் மணியக்காரருக்கு இருபத்தைந்து ரூபாய்க்கு மேல் ஒரு சல்லிக் காசு அதிகமாகச் சம்பளம் கொடுக்க மாட்டேனென்கிறார்களே?" - என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே பதில் கூறினார் நாராயண பிள்ளை.
"நான் நிறைய இட்டிலி சாப்பிடுகிறவன். அதனால் எனக்கு நிறையச் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கக் கூடாதோ?" - பகவதி வேண்டுமென்றே மணியக்காரரோடு வாயைக் கிண்டி விளையாடினாள்.
இலையை எடுத்துக் கொண்டு போய்ப் போட்டுவிட்டு வந்து ஆச்சி கடையில் கிடைக்கும் பிரசித்திபெற்ற சுக்குமல்லிக் காப்பிக்காக மறுபடியும் பலகையில் சப்பணங்கூட்டி உட்கார்ந்தார் மணியக்காரர்.
"ஆச்சி! ஒன்று செய்துவிடுங்களேன்..." - என்று நமட்டுச் சிரிப்போடு ஓரக்கண்ணால் பகவதியையும் பார்த்துக் கொண்டு ஏதோ சொல்லத் தொடங்கியவர், முழுவதும் சொல்லி முடிக்காமல் சொற்களை இழுத்து நிறுத்தினார்.
"என்ன செய்யவேண்டும்! சும்மா சொல்லுங்கள்!" - என்று தானும் சிரித்துக் கொண்டே கேட்டாள் காந்திமதி ஆச்சி.
"ஒன்றுமில்லை. உங்கள் மூத்த பெண் - இந்தக் குட்டி பகவதியைப் பார்த்ததும் எனக்கு அந்தப் பையன் அழகியநம்பியின் நினைவுதான் வருகிறது. பேசாமல் இந்தப் பெண்ணை அந்தப் பையனுக்குக் கட்டி கொடுத்துவிடுங்கள். சரியான ஜோடி. இப்போதே முத்தம்மாள் அண்ணியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டுவிடுங்கள். பையன் எந்த வருடம் கொழும்பிலிருந்து திரும்பினாலும் உடனே கல்யாணத்தை முடித்துவிடலாம்."
மணியக்காரர் இந்தப் பேச்சைத் தொடங்கியபோது பகவதி தலையைக் குனிந்து கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.
காந்திமதி ஆச்சி உடனே பதில் சொல்லாமல் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். "என்ன ஆச்சி? எதை யோசிக்கிறீர்கள்?" - ஆச்சியின் தயக்கத்தைக் கண்டு மணியக்காரர் மீண்டும் தூண்டித் துளைத்துக் கேட்டார்.
"மணியக்காரரே! நல்ல காரியமாக நல்ல நேரம் பார்த்து உங்கள் வாயால் சொல்லியிருக்கிறீர்கள். விதியிருந்தால் நடக்கும். ஆனால் முத்தம்மாள் அண்ணி இந்தச் சம்பந்தத்திற்கு இணங்குவாளா? என்பதுதான் என்னுடைய சந்தேகம். ஆயிரமிருந்தாலும் நான் இட்டிலிக் கடைக்காரி. என் பெண் அழகாயிருக்கலாம்; சமர்த்தாயிருக்கலாம். அதெல்லாம் வேறு விஷயங்கள்..." - ஆச்சியின் பேச்சில் ஏக்கத்தோடு நம்பிக்கை வறட்சியின் சாயலும் ஒலித்தது.
"இல்லை ஆச்சி! இந்தச் சம்பந்தம் அவசியம் நடந்தே தீருமென்று என் மனத்தில் ஏதோ ஒன்று சொல்கிறது. பார்க்கப் போனால், கிரகரீதியான தொடர்பு கூட இதில் இருக்கும் போலிருக்கிறது. அன்றைக்கு உங்கள் பெண்ணுக்குச் சரியான நீர்க்கண்டம். தண்ணீரில் மிதந்தபோது தற்செயலாக அந்தப் பையன் வந்து காப்பாற்றியிருக்கிறான். எல்லாவற்றையும் மொத்தமாகச் சேர்த்து நினைத்துப் பார்க்கும் போது இந்தச் சம்பந்தம் நம் சக்திக்கும் அடங்காமல் தானே நடக்கத் தெய்வ சங்கல்பமே துணை செய்யலாமென நினைக்கிறேன்."
"என்னவோ, உங்கள் மனத்தில் படுகிறதை நீங்கள் சொல்கிறீர்கள். எல்லாம் நடக்க நடக்கப் பார்க்கலாம்! நம் கையில் என்ன இருக்கிறது?"
ஆச்சியும் மணியக்காரரும், இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, "அம்மா! வாசலிலிருந்து யாரோ எட்டிப் பார்க்கிற மாதிரித் தெரிகிறதே" - என்று சொல்லிக் கொண்டே யாரென்று பார்ப்பதற்காகச் சென்றாள் கோமு.
"சரி! நானும் இப்படிப் போய்விட்டு வருகிறேன். கோவிலில் நாலு வாரமாகப் படித்தனக்கணக்கு எழுதாமல் சுமந்து கிடக்கிறது. அந்தப் பிள்ளையாண்டான் அழகியநம்பிக்குப் பதில் கடிதாசி எழுதினால் நான் ரொம்ப விசாரித்ததாக ஒரு வரி சேர்த்து எழுதுங்கள்" - என்று சொல்லிவிட்டு எழுந்திருந்து புறப்பட்டார் பெருமாள் கோவில் மணியக்காரர். அந்தச் சமயத்தில் எட்டிப் பார்த்தது யாரென்று பார்ப்பதற்காக வாயிற்புறம் சென்றிருந்த கோமு அழகியநம்பியின் தாய் முத்தம்மாள் அண்ணியை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தாள். இட்டிலிக் கடைக்குள் ஆண் குரலைக் கேட்கவே உள்ளே நுழையலாமா; கூடாதா? - என்று வாசலில் தயங்கி நின்றிருக்கிறாள் அந்த அம்மாள். உள்ளேயிருந்து வாயிற்புறம் நிற்பது யாரென்று பார்ப்பதற்காக வந்த கோமு, "என்ன அத்தை! இங்கே நிற்கிறீர்கள்? உள்ளே வரக்கூடாதா? நன்றாயிருக்கிறது, நீங்கள் செய்கிற காரியம்!" - என்று அந்த அம்மாளைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள். எதிரே வந்த மணியக்காரரைப் பார்த்ததும் புடைவைத் தலைப்பை இழுத்துவிட்டுக் கொண்டு வழிவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள் அந்த அம்மாள். மணியக்காரர் நடையைக் கடந்து தெருவில் இறங்கிக் கோவிலை நோக்கிச் சென்றார்.
"வாருங்கள்! வாருங்கள்! ஏது அத்தி பூத்தாற் போலிருக்கிறது? இப்போது தான் சிறிது நேரத்திற்கு முன் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைக்குத் தபாலில் உங்கள் பிள்ளையிடமிருந்து கடிதம் வந்தது. உங்களுக்கும் வந்திருக்குமே?" - என்று வரவேற்றாள் காந்திமதி ஆச்சி.
"இந்தா பகவதி! அத்தை வந்திருக்கிறார்கள் பார்! வயதான பெரியவர்கள் வந்தால் சேவித்து ஆசீர்வாதம் பண்ணச் சொல்ல வேண்டாமா?"
உட்புறம் இருந்த பகவதி முகம் மலர ஓடிவந்து, "சேவிக்கிறேன் அத்தை!" - என்று கூறிக்கொண்டே குனிந்து அழகியநம்பியின் தாயை வணங்கினாள். குத்துவிளக்குப் போல் இலட்சணமாக வளந்திருந்த அந்தக் கன்னிப் பெண்ணைப் பார்த்த போது அந்த அம்மாளுக்கு இத்தகையதென்று விண்டுரைக்க முடியாத ஓர் மனப் பூரிப்பு ஏற்பட்டது. உள்ளூரிலேயே இருந்தாலும் முத்தம்மாள் அண்ணி அதிகம் வீட்டைவிட்டு வெளியே வருவதே இல்லை. கணவன் இறந்து வெள்ளைப் புடைவை உடுத்தபின் கொஞ்ச நஞ்சம் வந்து கொண்டிருந்ததும் முற்றிலும் நின்றுவிட்டது. குனிந்து சேவித்துவிட்டு எழுந்திருந்த பகவதியைப் பார்த்துக் கொண்டே, "உங்கள் பெண்ணா? அதற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்டாளே?" - என்று வியப்போடு ஆச்சியிடம் கூறினாள்.
"நீங்கள் எங்கே அதிகமாக வெளியில் வருகிறீர்கள்? நாம் சந்தித்தே இரண்டு வருடம் போல் ஆகுமே! ஒரே ஊரில் - சிறிய ஊரில் பக்கத்தில் இருக்கிறோமென்று பேர்தான். என் பெண் பெரியவளான பின் இப்போது தானே உங்கள் கண்களில் பட்டிருக்கிறாள்! அதனால் உங்களுக்குப் பிரமிப்பாக இருக்கிறது." - ஆச்சி பதில் கூறினாள்.
"எனக்கு எங்கே வர ஒழிகிறது? உங்கள் சிறிய பெண் கோமுவைத் தான் எப்போதாவது தெருவில், - இல்லாவிட்டால் கோவிலில் பார்ப்பேன். நீங்களும் வெளியில் நடமாட்டமில்லையா? அதனால் பழக்கமே விட்டுப் போயிற்று."
"என்னவோ, இன்றைக்காவது வர வழி தெரிந்ததே உங்களுக்கு. எங்கள் பாக்கியந்தான்..."
"அழகியநம்பி கடிதம் எழுதியிருக்கிறான். ஒரு அவசர காரியமாக உங்களிடம் தான் உதவியை எதிர்பார்த்து வந்திருக்கிறேன். இல்லையென்று சொல்லக்கூடாது" - என்று பீடிகையோடு பேச்சைத் தொடங்கினாள் முத்தம்மாள் அண்ணி.
அந்த அம்மாள் தன் வீட்டைத்தேடி வந்ததே கிடைத்தற்கரிய பாக்கியம், என்றெண்ணிக் கொண்டிருந்த காந்திமதி ஆச்சிக்கு இந்த வேண்டுகோள் இன்னும் வியப்பை அளித்தது. பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த பெண் பகவதியின் இளம் நெஞ்சமோ தானாகக் கற்பித்துக்கொண்ட சில இனிய நினைவுகளால் நிறைந்து கொண்டிருந்தது.
திடீரென்று இரண்டு வெள்ளைக்காரப் பெண்கள் வந்ததையும் அழகியநம்பி சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தில் பேசி அவர்களை வரவேற்றதையும் அந்தப் பெண்கள் மிகவும் உரிமையோடு அவனுக்குப் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டதையும் , பார்த்தபோது சமையற்காரச் சோமுவுக்கு என்னவோ போல் இருந்தது. நான்கு படித்த மனிதர்களுக்கு நடுவே படிக்காத ஒருவன் அகப்பட்டுக்கொண்டால்; அவனுக்கு ஏற்படுமே ஒரு வகைப் பயமும், கூச்சமும்; அவை சோமுவுக்கு ஏற்பட்டன. அதுவும், வந்து உட்கார்ந்தவர்கள் பெண்களாக வேறு இருக்கவே, அவனுடைய கூச்சம் இரண்டு மடங்காகிவிட்டது.
"தம்பி, நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். நான் இப்படி இந்தக் கரையோரமாகச் சிறிது தூரம் நடந்துவிட்டு வருகிறேன்." - என்று அழகியநம்பியிடம் சொல்லிக்கொண்டு கடற்கரை ஒரமாக நடந்தான். மேரியும், லில்லியும் சோமுவை ஏறிட்டுப் பார்த்தார்கள். அவன் சிறிது நடந்து சென்றதும் அழகியநம்பியிடம் அவன் யாரென்று கேட்டார்கள். சோமு யார் என்பதை அவர்களுக்கு விளக்கினான் அழகியநம்பி.
"அதுசரி! இப்போதுதாவது நீங்கள் உங்களுடைய முகவரியைச் சொல்லப்போகிறீர்களா, இல்லையா?" - என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டு கேட்பவளைப் போலக் கேட்டாள் மேரி.
மேரியின் கண்களைக் கூர்ந்து நோக்கினான் அழகியநம்பி சற்றே மலர்ந்த பெரிய கண்கள் அவை! அவள் எப்போது பேசினாலும், எதைப்பற்றிப் பேசினாலும் அந்தப் பெரிய கண்களில் ஒருவித ஒளி - ஒருவகை உணர்ச்சித் துடிப்பின் சாயை மின்னுவதை அவன் கவனித்தான்.
"என்ன? மேரியின் முகத்தை அப்படி விழுங்கி விடுகிறாற் போலப் பார்க்கிறீர்களே? - என்று சிரித்துக்கொண்டே அவனை வினவினாள் லில்லி. அழகியநம்பி புன்னகை செய்தான்.
"வேறொன்றுமில்லை! உங்கள் தங்ககையின் அழகிய பெரிய கண்கள் தாமரை இதழ்களைப்போல் இருக்கின்றன. அந்த அழகைப் பார்த்தேன்." -
"நல்லவேளை! நீங்கள், நான் முகவரி கேட்டதற்குப் பதிலே சொல்லாமல் என் கண்களைப் பார்க்கவும் எனக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது. ஒருவேளை உங்கள் முகவரி என்னுடைய கண்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறதோ, என்று நினைத்தேன்." - குழந்தையைப் போலக் குலுங்கக் குலுங்க ஒரு கிண்கிணிச் சிரிப்பு. குழந்தைத் தனமான பேச்சு. மேரியின் அந்தச் சிரிப்பிலும், பேச்சிலும், ஒரு கவர்ச்சியைக் கண்டான் அழகியநம்பி.
"இதோ என் முகவரி....." ஒரு துண்டுக் காகிதத்தைச் சட்டைப் பையிலிருந்து எடுத்து அதில் தன் முகவரியைக் குறித்து அவளிடம் நீட்டினான். அதை வாங்கிக்கொண்டு "நன்றி" - என்றாள் மேரி.
லில்லி பேச்சில் கலந்துகொள்ளாமல் கடலின் பக்கமாகப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென்று அவளிடம் ஒரு மென்மையான மாறுதல், நுணுக்கமான அயர்ச்சி - உண்டாகியிருப்பது போல் தோன்றியது அவனுக்கு. அது தானாக நினைத்துக்கொள்ளுகிற பிரமையோ,- என்று ஒரு கணம் தனக்குத்தானே ஐயமுற்றான் அவன். லில்லிக்குத் தெரியாமலே பின்னும் அவளை நன்றாக உற்றுப் பார்த்தான். அவனுக்குத் தோன்றியது பிரமையில்லை. உண்மைதான்! கண்ணாடி மண்டலத்தில் ஊதிய ஆவி படிந்திருப்பதுபோல் அந்த மெல்லிய சலனம் ல்லிலியின் முகத்தில் இருந்தது.
அழகியநம்பி சிந்தித்தான்! கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டே இருந்தவள் இருந்தாற்போலிருந்து இப்படி மாறுதலை அடையக் காரணமென்ன என்று மண்டையைக் குழப்பிக்கொண்டான். அவனுடைய உள்மனம் அவனுக்குச் சரியான சாட்டையடி கொடுக்கத் தொடங்கியது; "அடே! முட்டாள்; உனக்கு வயதாகி என்ன பயன்? இரண்டு பெண்களுக்கு நடுவில் எப்படிப் பேசிப் பழகவேண்டுமென்றுகூடத் தெரியவில்லையே. உடன் பிறந்தவர்களாகவே இருக்கட்டுமே! ஒருத்தியின் கணகள் அழகாக இருந்தால் அதைப் பேசாமல் உன் மனத்திற்குள் நினைத்துப் பாராட்டிக்கொண்டு போக வேண்டியதுதானே? அதை ஏன் இன்னொருத்தியிடம் கூறினாய்? பெண்ணின் இதயம் உனக்குத் தெரியாதா? மோந்து பார்த்த அளவில் வாடிப்போகும் அனிச்ச மலரைக் காட்டிலும் மென்மையான பெண்ணுள்ளம் ஒரு சொல்லில் வாடிவிடுமே."
அழகியநம்பிக்குத் தன் தவறு புலனாகியது. உணர்ச்சி வசப்பட்டு விளையாட்டுத்தனமாகப் பேசிவிட்டதை உணர்ந்தான். உலகம் முழுவதும், பெண்களின் மனம் ஒரே மாதிரி தான் இருக்கிறது. நிறம், உடை,மொழி, நாகரிகம், பழக்கவழக்கங்கள், - எத்தனை வேறுபாடுகள்தான் இருக்கட்டுமே. பெண்ணின் உள்ளமும், அடிப்படையான உணர்ச்சிகளும் மாறுவதே இல்லை.
லில்லியைப் பழையபடி கலகலப்பான நிலைக்குக்கொண்டு வருவதற்கான முயற்சிகளைச் சிரிப்பின் மூலமும் பேச்சின் மூலமும் செய்யத் தொடங்கினான் அவன்.
"மிஸ் லில்லி! அந்தக் கடலுக்குக் கிடைக்கும் பாக்கியம் எங்களுக்குக் கொஞ்சம் கிடைக்கக்கூடாதா? நீண்ட நேரமாகக் கடலையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே? எங்களையுந்தான் கொஞ்சம் பாருங்களேன்." -
லில்லி திரும்பினாள். அழகியநம்பி சிரித்துக்கொண்டே அவள் முகத்தைப் பார்த்தான்.பிறகு பதிலுக்கு அவளும் சிரித்தாள். அந்த சிரிப்பில் முழுமை இல்லை. எதையோ மறைத்துக் கொண்டு முகத்துதிக்காகச் சிரிப்பது போல இருந்தது. ஆனால், அழகியநம்பி அந்தக் குறையைத் தன் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு, "நீங்கள் நன்றாகச் சிரிக்கிறீர்கள். உங்கள் சிரிப்பு என் இதயத்தைக் கொள்ளைகொள்ளுகிறது." - என்று மேலுக்குப் புளுகினான். லில்லியின் முகம் மெல்ல மலர்ந்தது.
திடீரென்று மெளனம் திடீரென்று மகிழ்ச்சி. அந்த பெண் புதிராகத்தான் இருந்தாள். "அடாடா! இப்படிப் பேசியே பொழுதைக் கழிக்கிறோமே! மேரி, வா; இவரையும் கூட்டிக் கொண்டு போய்த் தேநீர் பருகிவிட்டு வருவோம்" - என்றாள் லில்லி.
"புறப்படுங்கள்! எதிர்ப்புறம் அரசாங்கக் கட்டிடங்களுக்குப் பக்கத்தில் ஹோட்டல் இருக்கிறது. போய்த் தேநீர் பருகிவிட்டு வருவோம்." - என்று எழுந்து நின்றுகொண்டு சிறு குழந்தையைப் போல் அவன் வலது கையைப் பிடித்து இழுத்தாள் மேரி.
"மரியாதையாக எழுந்திருக்கிறீர்களா? இல்லாவிட்டால் நான் உங்களுடைய இன்னொரு கையைப் பிடித்து இழுக்க நேரிடும்" - என்று இடது கைப்பக்கம் நின்றுகொண்டு குறும்புச் சிரிப்புச் சிரித்தாள் லில்லி. சிட்டுக்குருவிகள் போல் அவலக் கவலைகளற்றுத் திரியும் அந்த யுவதிகளின் அன்பிற்கு நடுவே சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் திணறினான் அழகியநம்பி.
"தேநீரா? இந்த நேரத்தில் எதற்கு? தவிர, அவ்வளவு தூரம் போய்விட்டு மறுபடியும் கடற்கரைக்குத் திரும்புவதற்குள் இங்கே நன்றாக இருட்டிவிடும். சுகமாகக் காற்று வாங்கிக் கொண்டு இங்கே உட்கார்ந்திருக்கலாமே? - என்று மறுத்தான் அழகியநம்பி.
"வரப்போகிறீர்களா? இல்லையா? நாங்கள் கூப்பிடுகிறோம் மறுக்கக்கூடாது." கோபப்படுவதுபோல் கண்களை உருட்டி விழித்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் மேரி.
"வேண்டாம் மேரி! அப்படிப் பார்க்காதே. எனக்குப் பயமாயிருக்கிறது. நான் இதோ வந்துவிடுகிறேன்." - சிரித்துக் கொண்டே எழுந்திருதந்தான் அழகியநம்பி. சோமு நின்று கொண்டிருக்கும் இடத்தைத் தேடிச் சுழன்றது அவன் விழிப்பார்வை இருபது முப்பது கெஜ தூரத்திற்கு அப்பால் கடலுக்கு மிகவும் பக்கத்தில் தனியாக கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
"ஏ சோமு! - என்று அவனை இரைந்து கைதட்டிக் கூப்பிட்டான் அழகியநம்பி. கடல் அலைகளின் ஓசையிலும், காற்றோசையிலும் சோமுவுக்கு அந்தக் குரல் கேட்கவே இல்லை " நான் கூப்பிட்டுக் கொண்டு வருகிறேனே!" - என்று துள்ளிக் குதித்து ஓடினாள் மேரி. வெள்ளைக் கவுன் அணிந்த அவள் புல் தரையில் துள்ளி ஓடுவது வெண் சிறகோடு கூடிய அன்னமொன்று வேகமாகப் பறந்து செல்வதுபோல் தோன்றியது அழகியநம்பிக்கு.
"மேரிக்கு எப்போதுமே சிறுகுழந்தைத்தனம் அதிகம். இன்னும் குழந்தைப் புத்திதான்." - லில்லி புன்னகையுடன் அவனை நோக்கிக் கூறினாள். அதைச் சொல்லும்போது அவள் முகத்தை வேண்டுமென்றே உற்றுப் பார்த்தான் அவன். லில்லி சாதாரண மனவுணர்வோடு மட்டும் அந்த வார்த்தைகளைச் சொன்னதாகத் தோன்றவில்லை அவனுக்கு. தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்றோ, தனக்குத் தெரிவிக்க வெண்டுமென்றோ, ஏதோ ஒன்றை அந்தச் சொற்களில் அவள் மறைத்துக் கூறுவது போல் உணர்ந்தான். வேண்டுமென்றே மேரியின் குழந்தைமையைச் சுட்டிக்காட்டி லில்லி தன் நிலையை அவன் உயர்வாக நினைக்கச் செய்வதற்கு முயல்வது போலிருந்தது.
பெண்களின் உள்ளத்தில் இயற்கையாக எழும் நுணுக்கமான பொறாமையைக் கண்டு மனத்திற்குள் சிரித்துக்கொண்டான் அவன். 'நீ எனக்கே உரிமை - எனக்கு மட்டும்தான் உரிமை' என்று வற்புறுத்திச் சொல்லாமல் சொல்லுவது போல் இருந்தது, அப்போது அவள் அவன் பக்கத்தில் நின்ற விதமும், கூறிய சொற்களும், உரிமை கொண்டாடிய முறையும்.
இரண்டே நிமிடத்தில் சோமுவைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாள் மேரி. அந்த வெள்ளைக்காரப் பெண் சிரித்துக் கொண்டே தன்னைத் தேடிவந்து கூப்பிட்டுச் சென்றபோது சோமுவுக்கு ஏற்பட்ட பெருமிதம் அவனை இலங்கைக்கு மன்னனாக முடிசூட்டியிருந்தால் கூட ஏற்பட்டிருக்காது.
புல்வெளியில் ஒரு ஓரமாக நிறுத்தியிருந்த தங்களுடைய காருக்கு அவர்களை அழைத்துக்கொண்டு போனார்கள் மேரியும் லில்லியும். அழகான நீலநிறக் கார் அது. மாலைநேரத்து மஞ்சள் வெயிலில் கண்ணாடிபோல் மின்னிக்கொண்டிருந்த்து அந்தக் கார்.
"ஏறிக்கொள்ளுங்கள்; போகலாம்." - மேரி பின் சீட்டின் கதவை அவனுக்காகத் திறந்துவிட்டாள். அழகியநம்பியும் சமையற்காரச் சோமுவும் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். வழுவழுவென்று மென்மையாக இருந்த ஸ்பிரிங் மெத்தை உடலைத் தூக்கிப் போட்டது. மேரியும் லில்லியும், முன் சீட்டில் ஏறி உட்கார்ந்தார்கள். மேரிதான் காரை ஓட்டினாள்.
காரில் போவது போலவா இருந்தது? ஏதோ புஷ்பகவிமானத்தில் சவாரி செய்வது மாதிரி இருந்தது அந்தச் சில விநாடிகள். நாலைந்து நிமிடங்களில் கார் ஹோட்டல் வாசலில் போய் நின்றது. மேல் நாட்டுமுறைப்படி நடத்தப்படுகிற ஹோட்டல் அது. கணவனும் மனைவியுமாக - காதலனும் காதலியுமாக- நண்பரும் நண்பருமாக - பலர் வந்தும் போய்க்கொண்டும் இருந்தனர். கேளிக்கை நடனங்களுக்குரிய மேல்நாட்டு வாத்திய இசைக்கருவிகள் முழங்கிக் கொண்டிருந்த்தன. இந்தியர்கள் - தமிழர்கள் அந்த ஹோட்டலில் அதிகம் காணப்படவில்லை. வெள்ளைக்கார ஆண் பெண்களின் கூட்டத்தையும், அங்கே ஒலித்த இசையொலியையும், பலவித சுருட்டுகளின் புகை மண்டலங்களிற் கிளம்பிய நெடியையும் கண்டு உள்ளே நுழைவதற்கே கூச்சமும், தயக்கமும் அடைந்தான் சமையற் கார சோமு. "பயப்படதே! வா. டீ குடித்துவிட்டு உடனே வெளியே வந்துவிடலாம்." - என்று அவனைக் கூட்டிக் கொண்டு போனான் அழகியநம்பி. தேவையோ தேவையில்லையோ, லில்லியும் மேரியுமாக அந்த ஹோட்டலில் தாங்கள் சந்தித்த தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அழகியநம்பியை ஆர்வத்தோடு அறிமுகப்படுத்தி வைத்தனர். அதன் பயனாகச் சுமார் பத்துப்பன்னிரண்டு ஆங்கிலப் பெண்களோடும் ஆண்களோடு கைகுலுக்கி அவனுக்கு அலுத்து விட்டது.
சாதரணமாக இந்தியர்களோ, தமிழர்களோ அதிகம் பழகாத அந்த ஹோட்டலுக்குள் இரு வெள்ளைக்கார யுவதிகள் இரு தமிழர்களோடு நுழைந்தால் மற்றவர்களுக்கு வியப்பாயிராதா? ஏதோ பொருட்காட்சியிலுள்ள அபூர்வ உருவங்களைப் பார்ப்பதுபோல் அழகியநம்பியையும் சோமுவையும் பார்த்தனர். படிப்பறிவும் துணிவும் உள்ள அழகியநம்பி புதிய பார்வையையும் சமாளித்துக்கொண்டான். சோமுதான் ஒன்றும் புரியாமல், "ஏனடா இதற்குள் வந்து மாட்டிக் கொண்டோம்?" என்று மிரண்டுபோய் விழித்தான்.
மேரி இதை புரிந்துகொண்டாள். ஹாலில் இருந்த போது மேஜைக்கு முன்னால் உட்காரப்போன லில்லியைத் தடுத்து "வேண்டாம் அக்கா! தனியாக ஒரு குடும்ப அறையைப் பார்த்து உட்காரலாம்." - என்றாள். 'ஃபேமலி ரூம்' என்று எழுதியிருந்த ஒரு அறைக்குள் போய் எல்லோரும் உட்கார்ந்து கொண்டார்கள்.
சிரிப்பும், பேச்சும் தேநீர் பருகுதலுமாக அரைமணி நேரம் அந்த அறைக்குள் கழிந்தது. மறுபடியும் அவர்கள் ஹோட்ட்ல் வாசலுக்கு வந்தபோது மெல்லிய இருள்திரை உலகத்தின் மேல் விழுந்து மூடத் தொடங்கியிருந்தது. "திரும்பவும் கடற்கரைக்குப் போய்ச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போகலாமே!" - என்றாள் மேரி.
"தம்பி இப்போதே திரும்பினால்தான் போய் உடனே என் சமையல் வேலையைத் தொடங்கலாம். நான் போய்த் தான் இராத்திரிச் சமையலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்" - என்று அழகியநம்பியின் காதருகே இரகசியம் பேசுவதுபோல் மெல்லக் கூறினான் சோமு.
அவன் சொல்லியதை அவர்களுக்குச் சொன்னான் அழகியநம்பி. "பரவாயில்லை! அப்படியானால் ஒரு காரியம் செய்யலாம். மேரி; நீ நம்முடைய காரில் இந்த ஆளை ஏற்றிக் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பி வா! அதுவரை நான் இவரோடு கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்." - என்றாள் லில்லி.
மேரி அதற்கு மறுமொழி கூறவில்லை. தயங்கி நின்றாள். அழகியநம்பியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அழகியநம்பி இருதலைக்கொள்ளி எறும்புபோல் தவித்தான். அவனுக்கு இருவர் மனநிலையும் நன்றாகத் தெரிந்தது. மேரியை அனுப்பிவிட்டு அவனோடு சிறிதுநேரம் தனிமையாகப் பேசவும் பழகவும் லில்லிக்கு உள்ளூர ஆசை. அழகியநம்பியை அக்காவுடன் விட்டுச் செல்ல விருப்பமில்லை மேரிக்கு.
"வீணாக நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள்; லில்லி! நாங்கள் இருவருமே புறப்பட்டுப் போகிறோம். இனிமேல் இவ்வளவு இருட்டியபின் கடற்கரையில் தனியாக உட்கார்ந்து என்ன பேசப் போகிறோம். இன்னொரு நாள் நாமெல்லோரும் கடற்கரையில் சந்தித்தால் போயிற்று. இப்போது நீங்களும் மேரியும் வீட்டிற்குச் செல்லுங்கள். நானும் சோமுவும், பஸ்ஸில் போகிறோம்.
"இல்லை! இல்லை! பஸ்ஸில் போகவேண்டாம். உங்கள் இருவரையும் எங்கல் காரிலேயே கடையில் கொண்டுபோய் விட்டு விட்டு அப்புறம் நாங்கள் வீட்டிற்குப் போகிறோம்" - என்றாள் மேரி.
அவனும் சோமுவும், ஏறிகொண்டனர். அவர்களும் ஏறிக்கொண்டார்கள். தூரத்தில் கடலின் அலைகள் கரையோரத்து மின்சார விளக்கொளியில் மின்னின. கார் சென்றது.
மறுநாள் காலை முதல் அழகியநம்பியின் உத்தியோக வாழ்க்கை அந்தக் கடைக்குள் ஆரம்பமாகியது. பிரமநாயகம் பஞ்சாங்கத்தைப் புரட்டி நல்ல வேளை பார்த்து அவனை அழைத்துக் கொண்டு போய்ப் பூர்ணாவின் அறைக்குள் உட்கார்த்தினார். அவனுக்கென்று தனி மேஜை, தனி நாற்காலி, எல்லாம் அங்கே தயாராகப் போட்டு வைக்கப்பட்டிருந்தன. அன்று வரை அந்தப் பெண்ணின் தனியுரிமையாக இருந்த அந்த அறையில் உரிமையின் முதல் தடையாக அழகியநம்பி நுழைந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.
வழக்கமாகப் பத்து மணிக்குள் கடைக்குள் வந்துவிடும் பூர்ணா அன்று மணி பத்தேகால் ஆகியும் வரவில்லை. புதிதாகக் கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டிருந்த அழகியநம்பி தனியாகக் கணக்கு வழக்குகளைப் புரட்டிக் கொண்டிருந்தான். அந்த இடத்தில் இருப்புக் கொள்ளாது போலிருந்தது அவனுக்கு. ஒவ்வொரு விநாடியும் அவள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அவன். வெளியே ஒரு சிறிய ஓசை கேட்டாலும் அவள் தான் வந்துவிட்டாளோ, என்று கணக்குப் புத்தகங்களை மூடி வைத்து விட்டு நிமிர்ந்து சரியாக உட்கார்ந்து கொள்வான்.
படிப்பு, சிந்தனையுணர்ச்சி, தைரியம், நேர்மைக்கு மாறான எந்தச் செயல்களுக்கும் அஞ்சாமை - இவ்வளவு பண்புகளும் அழகியநம்பி என்ற அந்த இளைஞனிடத்தில் அமைந்திருந்தன. ஆனால், இப்போது அவன் ஒரு இளம் பெண் தன் அறைக்குள் நுழைந்து வரப்போகிற நேரத்தை எதிர்பார்த்து நடுங்கிக் கூசி உட்கார்ந்திருந்தான்.
'அப்படித்தான் அந்தப் 'பூர்ணா' என்ன புலியா? சிங்கமா? அவளுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும்? அவள் என்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள்?' - அவன் தானாகவே தன்னை தைரியப்படுத்திக் கொள்வதற்கு முயன்றான். அறைக்குள் எல்லாப் பவிஷுகளும் இருந்தன. ஒன்றுக்கும் குறைவில்லை. மின்சார விசிறி சுழன்று கொண்டு தான் இருந்தது. விளக்கொளி பிரகாசித்துக் கொண்டுதான் இருந்தது. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஊதுவத்திப் புகையின் நறுமணம் பரவியதாலோ, என்னவோ, அந்த அறையில் எப்போதும் நாசிக்கினிய ஒருவகை மணம் நிறைந்திருந்தது.
மேஜை மேல் விரித்துக் கிடந்த பைல்களையும், தடிமன், தடிமனான பேரேட்டுக் கணக்குப் புத்தகங்களையும் அப்படியே போட்டு விட்டு அந்த நிமிடம் வரை தனக்கு ஏற்படாத ஒரு வகைத் துணிச்சலை வலுவில் வரவழைத்துக் கொண்டான் அவன். எழுந்திருந்து அந்த அறைமுழுவதும் ஒவ்வொரு மூலை முடுக்குக்களையும் ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தான்.
பிரமநாயகம் அவனை அந்த அறைக்குள் முதன் முதலாகக் கொண்டுவந்து விட்டுச் சென்றவுடனேயே அவன் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கலாம். அவன் அப்படிச் செய்யாமல் பிரமநாயகம் உட்கார்த்திவிட்டுப் போன நாற்காலியிலேயே உட்கார்ந்து வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிட்டான். பூர்ணா அப்போது அந்த அறையில் இல்லாவிட்டாலும் அவளுடைய, அல்லது அவளைச் சேர்ந்த ஏதோ ஒரு விசேட சக்தி அந்த அறையைக் கண்காணித்துக் கொண்டிருப்பது போன்ற மனப்பிரமையும், கலவரத்தோடு கூடிய பயமும், அவனுக்கு இருந்தன. அதனால்தான் அறையில் வேறுயாருமில்லா விட்டாலும் யாருக்கோ அடங்கி உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிற மாதிரி உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமல் - அந்த அறையில் சூழ்நிலை எப்படி அமைந்திருக்கிறது என்பதைக்கூடப் பார்த்துக் கொள்ளாமல் காரியத்தில் கண்ணாயிருந்தான்.
அவன் பார்த்தமட்டில், கேள்விப்பட்ட மட்டில் பூர்ணா என்ற பெண்ணின் குணசித்திரம் அவன் மனத்தில் எந்த அளவு உருவாகியிருந்ததோ, அதன் விளைவுதான் அவன் பயம்!
கல்லூரியில் படித்த தமிழ்ப் பாடப்பகுதிகளிலிருந்து ஒரு செய்யுள் வரி அவனுக்கு நினைவு வந்தது.
"உறங்குமாயினும் மன்னவன் தன்னொளி கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்."
'அரசன் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவனுடைய ஆற்றலின் ஒளி அவனால் ஆளப்படுகின்ற பிரதேசம் முழுவதும் தீங்கோ, தவறோ, நேர்ந்து விடாமல் காத்துக் கொண்டிருக்கும்' என்பது இதனுடைய கருத்து. இது போலவே பூர்ணாவின் சாகச ஒளியின் ஆற்றல் அந்த அறை முழுவதும் நிரம்பியிருப்பது போல் ஒரு மனப் பிராந்தி ஏற்பட்டிருந்தது அவனுக்கு.
அந்த மனப்பிராந்தி நீங்குவதற்கு அரைமணி நேரம் பிடித்தது. அதன் பின்பே எழுந்திருந்து அறையைச் சுற்றிப் பார்க்கும் துணிவு அவனுக்கு உண்டாயிற்று. பூர்ணா சுபாவத்தில் நல்லவளா, கெட்டவளா, சூழ்ச்சிக்காரியா, நேர்மையானவளா? இவற்றையெல்லாம் பற்றி அவன் தன்னைப் பொறுத்தவரையில் இனிமேல் தான் பழகித் தெரிந்து கொள்ள வேண்டும்! ஆனால், அவளுடைய அலுவலக அறையை அவள் நன்றாக வைத்துக் கொண்டிருந்தாள். சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தாள். காகிதங்கள், ரசீதுப் புத்தகங்கள், பைல்கட்டுக்கள், கடிதங்கள் - எதுவும், எவையும் தாறுமாறாக மூலைக்கு மூலை சிதறி வைக்கப்பட்டிருக்கவில்லை. அவையவை உரிய இடங்களில் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
தனியாக - ஒருத்தி இவ்வளவு வேலைகளையும் ஒழுங்காகச் செய்து கொண்டு, - அதே சமயத்தில் அங்குள்ள மற்றவர்களை ஆட்டிவைத்து அதிகாரம் செய்யவும் எப்படி முடிந்தது என்று அவன் வியந்தான்.
அவள் வழக்கமாக உட்காரும் நாற்காலிக்குப் பின்புறமிருந்த அலமாரி ஒன்று பூட்டியிருந்தது. அதற்குள் ஏதாவது முக்கியமான பொருள்கள் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் அவன். மேஜை டிராயர்களும் அதே போல் பூட்டப்பட்டிருந்தன. மேஜை மேல் டைப்ரைட்டர் அதற்குரிய தகரக் கூட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. சில கடிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் வேறு சில கடிதங்கள் அனுப்புவதற்காக டைப் செய்து மடித்து வைக்கப் பட்டிருந்தன. பத்தே நிமிஷங்களில் அந்த அறையின் ஒவ்வொரு பகுதியையும் தன் பார்வையால் அளந்து கொண்டு தனக்குரிய இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான் அழகியநம்பி.
அவன் உட்கார்ந்து சில விநாடிகளே கழிந்திருக்கும். ஸ்பிரிங் கதவு திறக்கும் ஓசை கேட்டது. குனிந்து 'பைலைப்' புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவன் யார் என்று பார்ப்பதற்காகத் தலைநிமிர்ந்தான். அந்த ஒரு கணத்திற்குள் அவன் நெஞ்சு அடித்துக் கொண்ட வேகம் சொல்லி முடியாது.
பூர்ணா தான் வந்தாள். ஒரு கையில் அலங்காரப் பை, இன்னொரு கையில் அழகிய சிறிய ஜப்பான் குடை. அவன் உட்கார்ந்து கொண்டிருப்பதை அவள் பார்த்து விட்டாள். ஆனால், அதற்குரிய வியப்போ, மாறுதலோ, சினமோ - ஏதாவது ஒரு உணர்ச்சி சிறிதாவது அவள் முகத்தில் உண்டாக வேண்டுமே! இல்லவே இல்லை.
அழகியநம்பி தான் தன்னையறியாமலே தான் என்ன செய்கிறோம் என்ற நினைவே இல்லாமல் எழுந்து நின்று கொண்டிருந்தான். அவள் உள்ளே நுழையும்போது தான் எதற்காக எழுந்து நின்றோம்; என்று பின்னால் நிதானமாக நினைத்துப் பார்த்த போது அவனுக்கே ஏனென்று விளங்கவில்லை!
ஒன்றும் புதிதாக நடக்காதது போல் அவன் அங்கே உட்கார்ந்திருப்பதையே கவனிக்காமல் தன் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள் அந்தப் பெண் புலி. அவள் வேண்டுமென்றே தன்னை அலட்சியம் செய்வதைப் போல் தோன்றியது அவனுக்கு. ஒரே கணம் அவனுடைய மனம் கொதித்தது. ஆண் பிள்ளையின் இயல்புகளான தன்மானமும் ரோஷமும் அவன் மனத்தை முறுக்கேற்றின. ஆனால், அவை நிலைக்கவில்லை. தன்னடக்கமாக உணர்வுகளை அமுக்கிக் கொண்டான். வாழ்க்கையில் அந்த இளம் வயதிற்குள்ளேயே துன்பங்களை ஏராளமாக அனுபவித்துப் பண்பட்டிருந்த அவன் மனம் அவனுடைய கண நேரத்து ஆத்திரத்தைத் தணித்து அவனைப் புத்திசாலியாக்கியது. சுளித்த முகம் மலர்ந்தது. இறுகிய உதடுகள் நெகிழ்ந்தன. "மிஸ் பூர்ணா! குட்மார்னிங்" - என்று அவளை வரவேற்றான் அவன். நாற்காலியில் உட்கார்ந்து டிராயரைத் திறந்து கொண்டிருந்தவள் அவனுடைய குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்து அப்போது தான் அவனைப் பார்க்கிறவளைப் போலப் பார்த்தாள். ஆழமான, தீர்க்கமான - சூடு நிறைந்த பார்வை அது! சிரித்துக் கொண்டே அந்தப் பார்வையைத் தாங்கி அதிலிருந்த வெப்பத்தை மாற்ற முயன்றான் அவன்.
பூர்ணாவின் பார்வை அவனுடைய சிரித்த முகத்தைக் கண்டு முற்றிலும் மாறிவிடவில்லை யென்றாலும் அதிலிருந்த கடுமை சிறிது குறைந்தது. வேண்டா வெறுப்பாக, "குட்மார்னிங்" - என்று பதிலுக்கு முணுமுணுத்தாள். 'விரட்டியோ, மிரட்டியோ அவளை வழிக்குக் கொண்டு வருவதென்பது இயலாத காரியம். விட்டுக் கொடுத்துப் பணிவது போல் நடந்து தான் அவளைப் பணிய வைக்க முடியுமென்பது' அவனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் அவளிடம் தன்னை மறைத்துக் கொண்டு நடிக்க முயன்றான். விநயமாக அடக்கவொடுக்கத்தோடு அவள் மேஜைக்கு முன்னால் போய் நின்று கொண்டான். குனிந்து கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தவள் மேஜை மேல் அவன் நிழல் விழுந்ததும் நிமிர்ந்து பார்த்தாள். பார்வை வெட்டுவது போலிருந்தது.
அவனுடைய குரலில் நளினமும் நைச்சியமும், ஒன்றுபட்டுக் குழைந்தன. "மிஸ் பூர்ணா! நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் உங்களுக்குப் போட்டியாகவோ, எதிரியாகவோ, இங்கே கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டிருக்கவில்லை. நீங்கள் சொல்வதைச் செய்வதற்காக, உங்களுக்கு உதவியாகவே நான் வந்திருக்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் எந்த விதத்திலும் சிறிது கூடத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. என்னிடம் நீங்கள் கலகலப்பாகவோ, அன்பாகவோ, பழகாமல் புறக்கணித்தால் எனக்குப் பெருந்துயரம் ஏற்படும். உங்கள் அன்பையும், நட்பையும், பெறமுடியாததை என் துர்பாக்கியமாகக் கருதுவேன். நான் உங்களைப் பற்றி எவ்வளவோ பெருமையாக நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள்! என்னைக் கைவிட்டு விடாதீர்கள்!" -
அழகியநம்பி அருமையாக, தத்ரூபமாக நடித்துவிட்டான். பூர்ணாவின் கண்கள் அகல விரிந்தன. அவன் முகத்தை இமைக்காமல் சில விநாடிகள் உற்றுப் பார்த்தாள் அவள். அவனுடைய பேச்சில் அவளுக்கு நம்பிக்கை உண்டாகவில்லையோ என்னவோ?
"நீங்கள் என்னை நம்பலாம். நான் உங்களுடையவன், உங்களுக்கு அந்தரங்க நண்பனாக இருக்க விரும்புகின்றவன். என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து உட்கார்த்தியிருப்பவர் யாரோ அவரை விட உங்களுக்குத்தான் நான் அதிகம் பயன்படுகிறவனாக இருப்பேன்."
மறுபடியும் கெஞ்சுகிற பாவனையில் மெல்லிய குரலில் தன் நடிப்பைத் தொடர்ந்தான் அவன். அக்கறையோடு மேற்கொள்ளப்பட்ட அவனுடைய நடிப்பும், பேச்சும் வீணாகி விடவில்லை.
பூர்ணாவின் முகம் மலர்ந்தது. அவள் மெல்லச் சிரித்தாள். அது தந்திரமான சிரிப்பாக இருந்தது. "மிஸ்டர் அழகியநம்பி நீங்கள் இடத்தில் போய் உட்கார்ந்து வேலையைக் கவனியுங்கள். நான் உங்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கு முன் நீங்களாகவே ஏன் பயப்படுகிறீர்கள்? என்னால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது. நீங்கள் என்னோடு ஒத்துழைக்கத் தயாராயிருக்கும்போது நான் மட்டும் உங்களுக்குத் துன்பம் செய்வேனா...? நாம் இன்று மாலை வெளியே ஓர் இடத்தில் தனியாகச் சந்தித்து நம் நிலைகள் பற்றிப் பேசிக் கொள்வோம். இங்கே வேண்டாம். நான் சொல்கிற வேலைகளை நீங்கள் மறுக்காமல் உடனுக்குடன் செய்து கொண்டு வாருங்கள்!" - என்றாள் பூர்ணா. அவன் தலையை ஆட்டினான். உள்ளூற அவன் மனம் கறுவிக் கொண்டது: 'இரு மகளே! இரு; உன்னை வழிக்குக் கொண்டு வருகிற விதமாகக் கொண்டு வருகிறேன்!' - என்று எண்ணிக் கொண்டான்.
அழகியநம்பியின் பணிவையும், அடக்கத்தையும் கொண்டு அவனைக் கையாலாகாதவன் என்றும் ஏழை என்றும் தவறாக அனுமானம் செய்து கொண்ட பூர்ணா அவனைத் தாராளமாக அதிகாரம் செய்தாள். அவளுடைய அனுமானமும் தவறல்லவே! பணத்தினால் அவன் ஏழைதான்! அறிவினால் கூடவா அவன் ஏழை?
மறுபேச்சுப் பேசாமல் - சொன்ன வார்த்தைக்கு எதிர் வார்த்தை சொல்லாமல் சிரித்துக் கொண்டே அவள் எதைச் சொன்னாலும், எதற்கு ஏவினாலும், - கீழ்ப்படிந்து அவற்றைச் செய்து விடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான் அவன்.
பூர்ணா அழகியநம்பியிடம் நேரில், "நான் உங்களுக்கு ஒரு துன்பமும் செய்ய மாட்டேன்" - என்று முகத்துதிக்காகச் சொல்லியிருக்க வேண்டும். அன்று முழுதும் அவள் அவனிடம் நடந்து கொண்ட விதமென்னவோ, அதிகார மிடுக்கையும், மமதையையும் காட்டுவதாகவே இருந்தது.
முதல் வேலையாக அவளுடைய மேசை நாற்காலிக்குப் பக்கத்தில் ஒட்டினால் போலச் சரிசமமாகப் போட்டிருந்த அவன் மேசை நாற்காலியை இடம் மாற்றிப் போடச் செய்தாள் அவள். அவள் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் அவனைக் கொண்டே அந்த வேலையைச் செய்வித்தாள்.
"உங்கள் மேசை நாற்காலியை அப்படிக் கதவோரமாக எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். அதுதான் நீங்கள் இருக்க வேண்டிய இடம். உங்கள் மேஜையிலிருக்கும் பைல்கள், லெட்ஜர்களை எல்லாம் இப்படி எடுத்துக் கொடுத்துவிடுங்கள். அவற்றை நீங்கள் இப்போது பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுக்குப் பழக்கமும் போதாது. இப்போதைக்கு, நான் சொல்லுகிற வேலைகளை மட்டும் நீங்கள் கேட்டால் போதும்."
அந்த அதிகாரக் குரலின் வேகம் அவனைப் 'பியூனாக' நினைத்துக் கொண்டு பேசுவதைப் போல் இருந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டே தன் மேசை நாற்காலியை அவள் சொன்ன இடத்தில் எடுத்துப் போட்டான். அவள் விருப்பப்படி, தான் பார்ப்பதற்காக எடுத்து வைத்திருந்த 'பைல்' முதலியவற்றைப் பார்க்காமலேயே அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டான்.
"இதோ இந்த ஊதுபத்திகளைப் பொருத்தி ஸ்டாண்டில் வையுங்கள்."
வாங்கிப் பொருத்தி வைத்தான்.
"இதோ இந்தக் கவர்களுக்கெல்லாம் 'ஸ்டாம்ப்' ஒட்டுங்கள்."
வாங்கி ஸ்டாம்ப் ஒட்டினான்.
"குப்பைக் கூடையில் ஒரேயடியாகக் காகிதங்கள் சேர்ந்து விட்டன. மேலே போடுவதற்கு இடமே இல்லை. கொண்டு போய் வெளியில் கொட்டிவிட்டு வந்துவிடுங்கள்."
எடுத்துக் கொண்டு போய்க் கொட்டிவிட்டு வந்தான்.
"அதோ அந்த அலமாரியில் 'கிளாஸ்' இருக்கிறது. எடுத்துக் குழாயடியில் போய்க் கழுவி விட்டு எதிர்த்த ஹோட்டலில் போய் ஒரு டீ வாங்கிக் கொண்டு வாருங்கள்."
அப்படியே செய்தான். பூர்ணாவுக்கே ஆச்சரியத்தை உண்டாக்கியது அந்தப் படித்த ஆண்பிள்ளையின் பொறுமை. அவள் சொன்னபடியெல்லாம் நாயாக ஓடி உழைத்தான் அவன்.
மூன்று மணிக்கு அவள் வெளியேறும்போது அவனிடம் தன்னுடைய முகவரி அச்சிட்ட அட்டை ஒன்றைக் கொடுத்து, "ஆறு, ஆறரை மணிக்கு என்னை வந்து சந்தியுங்கள். சில அந்தரங்கமான செய்திகளைப் பேசலாம்." - என்று கூறிவிட்டுப் போனாள். அவன், "வருகிறேன்," - என்று சம்மதித்தான்.
அவள் அறையை விட்டு வெளியேறிய மறுகணமே அழகியநம்பியின் வேலைகள் மாறின. பைல்களைப் புரட்டினான். கணக்கு வழக்குகளைச் சரி பார்த்தான். அன்றைக்குத் தபாலில் வந்த கடிதங்களில் - அவள் தன் கையோடு எடுத்துக் கொண்டு போனவற்றைத் தவிர, மற்றவைகளை எடுத்து ஒவ்வொன்றாகப் படித்தான். முக்கியமான - அவசியமான குறிப்புக்களைத் தன்னுடைய 'டைரியில்' நினைவாகக் குறித்து வைத்துக் கொண்டான்.
பூர்ணாவின் வேலைக்காரனாக மூன்று மணி வரை இருந்த அவன் அதற்கு மேல் ஒரு மணி நேரம் பிரமநாயகத்தின் உண்மை ஊழியனாக இருந்தான். நாடகத்தில் இரண்டு வேடம் போட்டுக் கொள்ளும் நடிகரின் நிலை அவனுடைய நிலையாயிருந்தது. அந்தச் சமயத்தில் பிரமநாயகம் உள்ளே வந்தார்.
அவன் எழுந்திருந்து அவரை வரவேற்றான். அறைக்குள் நுழைந்ததும் அவர் பார்வையில் முதன்முதலில் தென்பட்டது இடம் மாற்றிப் போட்டிருந்த மேசை, நாற்காலிதான்.
"இவற்றை நான் அந்த மேசைக்குப் பக்கத்தில் அல்லவா போட்டிருந்தேன். இங்கே யார் மாற்றிப் போட்டது? கேட்காமல் கொள்ளாமல், இதெல்லாம் என்ன காரியம்?" - என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டார் அவர்.
"பூர்ணா சொன்னாள்...! தவிர, எனக்கும் இந்த இடம் வாசலுக்குப் பக்கத்தில் கொஞ்சம் வசதியாக இருக்கும் போலிருக்கிறது..." - அவன் சொல்ல வந்ததை முடிக்கவில்லை.
பிரமநாயகத்துக்குக் கோபம் வந்துவிட்டது. "இதென்ன? சுத்த முட்டாள்தனமாக இருக்கிறதே! வேண்டுமென்றுதானே உன் மேசையையும் நாற்காலியையும், நான் அந்த இடத்தில் போட்டேன். என்னைக் கேட்காமல் நீ எப்படி அதை உன் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம்? பூர்ணா சொன்னாளாம்; பூர்ணா! நாளைக்கு அவளா உனக்குச் சம்பளத்தை மாதம் முடிந்ததும் எண்ணிக் கொடுக்கப் போகிறாள்? நான் கொண்டு வந்து வைத்த ஆள் நீ! எனக்கு ஆதரவாக நடந்து கொள்ளத் தெரிய வேண்டாமா உனக்கு?" - அவருக்கு அப்போது என்ன பதில் சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றான் அழகியநம்பி.
"சே! சே! நீ இவ்வளவு மோசமாக இருப்பாய் என்று நான் நினைக்கவே இல்லை. படித்த பையனுக்குக் குறிப்பறிந்து நடந்து கொள்ளத் தெரிய வேண்டாமோ? அழகுக்காகவா நான் அந்த இடத்தில் மேசை நாற்காலியைப் போட்டேன்? ஒரு காரணத்துக்காக வேண்டுமென்றுதானே அப்படிச் செய்திருந்தேன்?"
அவர் இவ்வளவு பேசியபின்பும் தான் பேசாமல் நின்று கொண்டிருந்தால் தவறாக எண்ணிக் கொள்வதற்கு இடம் கொடுத்ததாக முடியும் என்று அவன் உணர்ந்தான். ஆனால், நா எழவில்லை. 'நீங்கள் நினைப்பது போல் நான் பூர்ணாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அடங்கிவிடவில்லை. நான் எப்போதுமே உங்களுடைய ஆள் என்பதை மறந்துவிடமாட்டேன். அந்தப் பெண்ணிடம் ஒரு மாதிரி முரட்டுத்தனமான சூழ்ச்சி அமைந்திருக்கிறது. அவளை அடக்கி வழிக்குக் கொண்டு வர வேண்டுமானால் விட்டுக் கொடுத்துப் பணிந்துதான் போக வேண்டியிருக்கிறது,' - என்றெல்லாம் தன் மனத்தில் அடங்கிக் கிடக்கும் செய்திகளை அவரிடம் சொல்லிவிடுவதற்கு வார்த்தைகளைத் திரட்டிக் கொண்டான். அவற்றை அவரிடம் சொல்லிவிட வேண்டுமென்று அவன் நாக்குத் துடிதுடித்தது. ஆனால், சொல்லவில்லை. சொல்லும் துணிவு வரவில்லை. பேசாமல் தலை குனிந்து கொண்டு நின்றான்.
"என்ன தம்பீ! செய்வதையும் செய்துவிட்டுப் பதில் சொல்லாமல் விழித்துக் கொண்டு நிற்கிறாயே? உனக்கே நன்றாயிருக்கிறதா இது?" - குரலில் கடுமையைக் குறைத்து அருகே வந்து மெல்ல அவனை நயந்து கொண்டு வினாவுகிறவர் போல் வினாவினார் அவர். அழகியநம்பி தலை நிமிர்ந்தான். "இல்லை... இது... வந்து ஒரு காரணத்திற்காகத்தான் செய்தேன். நான் இங்கே மாற்றிப் போட்டுக் கொள்ளாவிட்டால் அவள் மாற்றிப் போட்டுக் கொண்டுவிடுவாள் போலிருந்தது. அவள் இடம் மாறி உட்கார்ந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டால் அப்புறம் நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றைக்கூட நான் செய்ய முடியாமல் போய்விடும். ஆரம்பத்தில் நானே அவளுக்குக் கீழ்ப்படிந்து போவது போல் நயந்து போவது சரியென்று எனக்குத் தோன்றியது. அதுதான் இப்படி மாற்றிக் கொள்வதுபோல மாற்றிக் கொண்டேன். இதனால் என்னுடைய கண்காணிப்பில் - அல்லது கவனிப்பில் ஏதாவது குறை நேருமோ? என்று நீங்கள் பயப்பட வேண்டாம்."
அழகியநம்பி எதை முதலிலேயே அவரிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்துச் சொல்லுவதற்குத் தயங்கினானோ அதைச் சொல்லிவிட்டான். பிரமநாயகம் பதில் சொல்லாமல் அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். என்ன நினைத்துக் கொண்டாரோ, தெரியவில்லை.
"சரி! சரி! நீ விவரம் தெரிந்த பையன். இதற்குமேல் உன்னை வற்புறுத்திக் கொண்டிருக்கப் போவதில்லை. காரியத்தில் கண்ணாயிருந்தால் போதும். எப்படி எப்படி மாறுவாயோ, எந்தெந்த விதமாக நடந்து கொள்வாயோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் சொல்லவும் மாட்டேன்" - என்று சுபாவமான நிலைக்கு வந்து பேசினார்.
அழகியநம்பிக்கு அவருடைய பேச்சு சிறிது தெம்பு கொடுத்தது. தன்னையும் - தன் மனப்போக்கையும் - தன்னுடைய வார்த்தைகளால், தானே அவருக்கு விளக்கிப் புரிய வவக்க முடிந்தது, அவன் துணிவை அதிகப்படுத்தியிருந்தது. நம்பிக்கையை உயர்த்தியிருந்தது.
"இப்போது நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? பூர்ணா எத்தனை மணிக்கு வெளியேறினாள்?" - அறையைவிட்டு வெளியே போகப் புறப்பட்டவர் தயங்கி நின்று கொண்டே மேலும் கேட்டார்.
"அவள் மூன்று மணிக்கே போய்விட்டாள். நான் வரவு செலவு கணக்குகளைச் சரிபார்க்கிறேன். என்னென்ன காரியங்களை அவளுக்குத் தெரிந்தும், தெரியாமலும் நான் கண்காணிக்க வேண்டுமென்று நீங்கள் சொல்லியிருந்தீர்களோ, அவற்றையெல்லாம் இப்போதிருந்தே ஒவ்வொன்றாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன். முக்கியமானவற்றை அவ்வப்போது குறித்தும் வைத்துக் கொண்டிருக்கிறேன்."
"நல்லது! அதை பொறுமையோடு தொடர்ந்து செய்து கொண்டு வா..." - என்று சொல்லிவிட்டுப் புறப்படக் கதவைத் திறந்தவர் மறுபடியும் நாலைந்தடி நடந்து வந்து அவனை அருகே அழைத்து; "இன்னொரு செய்தி; உன்னிடம் கூற மறந்துவிட்டேனே? நான் இப்போது ஐந்து மணிக்குக் கண்டிக்குப் போகிறேன். வியாபார சம்பந்தமான ஒரு முக்கிய காரியம். திரும்ப இரண்டு நாள் ஆகும். கவனமாகப் பார்த்துக் கொள்!" - என்று கூறினார். "ஆகட்டும்! பார்த்துக் கொள்கிறேன்" - என்றான் அவன்.
"இப்போது நீ எங்காவது வெளியில் போகப் போகிறாயா?"
'ஆமாம்! ஆறு மணிக்குப் பூர்ணா வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறாள். போக வேண்டும்' - இப்படிப் பதில் சொல்ல இருந்தான் அவன். சொற்கள் கூட நாவின் நுனி வரையில் வந்து விட்டன. நல்லவேளை, தன்னைச் சமாளித்துக் கொண்டு அதையே வேறொரு விதமாக மறைத்துச் சொன்னான். "நேற்றுச் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியவில்லை. இன்று ஆறு மணிக்குக் கிளம்பலாம் என்றிருக்கிறேன்."
"அதற்கென்ன; போய்விட்டு வாயேன்" - கூறிவிட்டு வெளியேறிச் சென்று விட்டார் அவர். சற்று முன் தான் அவருக்குச் சொல்வதற்கிருந்த பதிலை எண்ணிப் பார்த்தபோது 'தான் பிரமநாயகத்திடம் வசமாகச் சிக்கிக் கொள்வதற்கு இருந்தது' அவனுக்கு நினைவு வந்தது. வெறும் வாயை மென்று கொண்டிருப்பவருக்கு அவல் வேறு கிடைத்து விட்டால் கேட்க வேண்டுமா? 'ஏற்கனவே பூர்ணாவின் ஆளாக நான் மாறி அவள் வாயில் சிக்கிவிடுவேனோ?' - என்ற பயம் இவருக்கு இருக்கிறது. 'இன்று மாலை பூர்ணாவைச் சந்திக்க அவள் வீட்டுக்கு நான் தேடிப் போகப்போகிறேன் - என்பதை வேறு இவர் தெரிந்து கொண்டுவிட்டால் ஒரே அடியாக என் மேல் சந்தேகப்பட்டு என்னைப் பற்றி நம்பிக்கையிழந்து போய்விடுவார். நல்ல வேளை! என் வாயில் அந்தச் சொற்கள் வந்துவிடாமல் தப்பித்துக் கொண்டேன்' - என்று நினைத்து மன அமைதி அடைந்தான் அழகியநம்பி.
நாலே முக்கால் மணி சுமாருக்கு அலுவலக அறையைப் பூட்டிக்கொண்டு பின் கட்டிலிருந்த தன் அறைக்குச் சென்றான் அவன். சமையற்காரச் சோமு தயாராகச் சிற்றுண்டி - காபி - எடுத்து வைத்துக் காத்துக் கொண்டிருந்தான். முகம் கை கால் கழுவிக் கொண்டு சமையலறைக்குள் சென்றான்.
கால் மணி நேரம் கழித்து அழகியநம்பி தன் அறைக்குத் திரும்பிய போது அறை வாசலில் தன்னை எதிர்பார்த்துக் கொண்டு அதே கடையில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.
புன்முறுவலோடு கைகூப்பி அவனை வணங்கினார் அந்த இளைஞர். "வாருங்கள்! இப்படி உள்ளே வந்து உட்காருங்கள்" - என்று அவரை வரவேற்று அவருக்குப் பதில் வணக்கம் செலுத்தினான் அழகியநம்பி. பிரமநாயகம் தன்னைக் கூட்டிக் கொண்டு போய் அறிமுகப்படுத்தியபோதும், வேறு இரண்டொரு சந்தர்ப்பங்களிலும் அந்த இளைஞரை கடைக்குள் சந்தித்திருந்தான் அவன்.
அந்த இளைஞருக்கு நல்ல சிவப்பு நிறம். அழகிய முகம். அகன்ற நெற்றியின் தொடக்கத்தில் புருவங்கள் கூடும் இடத்தில் சிறிய வட்டவடிவமான சந்தனப் பொட்டு இலங்கியது. கள்ளங்கபடமில்லாத சிரிப்பு, களையுள்ள தோற்றம் - இரண்டும் அந்த இளைஞரைப் பார்த்தவுடன் அழகியநம்பியின் உள்ளத்தில் ஒருவகைக் கவர்ச்சியை உண்டாக்கின. அந்த இளைஞர் யாழ்ப்பாணத் தமிழர் என்றும், அந்தக் கடையில் மாதச் சம்பளத்தில் வேலை பார்க்கும் பல இளைஞர்களில் அவரும் ஒருவர் என்றும் பொதுவாக விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தான் அவன். இரண்டொரு முறை அவனைச் சந்தித்த போது அவர் புன்முறுவலும் வணக்கமும் செலுத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் கூட அந்த இளைஞரைப் பற்றி விரிவாக விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு உண்டானதில்லை.
அந்த இளைஞர் தன்னைத் தேடிவந்து தன் அறைக்குள் உட்கார்ந்தவுடன் இத்தனை நினைவுகளும் அழகியநம்பியின் மனத்தில் உண்டாயின.
"தயவு செய்து உங்கள் பெயரை எனக்குச் சொல்லுங்கள். அன்றைக்கு உங்களை அறிமுகம் செய்யும்போது கேட்டது, மறந்துவிடது." - அழகியநம்பி சிரித்த முகத்தோடு அந்த இளைஞரை விசாரித்தான்.
"என் பெயர் சபாரத்தினம்" - என்றார் அந்த இளைஞர். யாழ்ப்பாணத்தாருக்கே உரிய தமிழின் இனிமை, தமிழின் குழைவு, தமிழின் தூய்மை, - எல்லாம் அந்த இளைஞரின் பேச்சில் அமைந்திருந்தன. "எனக்குத் தமிழ்நாட்டு நண்பர் என்றால் மிகவும் பிடிக்கும். நான் உங்களோடு நெருங்கிப் பழக ஆசைப்படுகிறேன். முதல்முதலாக நேற்று உங்களைப் பார்த்த காலந்தொடக்கம், என் மனத்தில் உங்கள் மேல் ஒரு அன்பு ஏற்பட்டுவிட்டது."
சபாரத்தினம் சிறு குழந்தை போல் தன் மனத்தில் தோன்றியதை ஒளிவு மறைவின்றி வெளியிட்டார். சொற்களைச் சிதைக்காமல், விழுங்காமல் நிறுத்தி நிறுத்தி இனிய குரலில் அந்த இளைஞர் பேசிய விதம் அழகியநம்பியின் உள்ளத்தைத் தொட்டது. அவருடைய பேச்சில் இடையிடையே ஈழத்துத் தமிழ் நடையின் மரபுத் தொடர்கள் இயல்பாக வந்து கலந்தன. அதைச் சுமையோடு அனுபவித்துக் கேட்டான் அழகியநம்பி. அந்தத் தமிழ்ப் பேச்சின் புதுமைக்கு, அந்த இளைஞரின் உள்ளங் கபடமற்ற, சூதுவாதில்லாத அன்புக்கு, தன் மனத்தையும், அதிலிருந்த அன்பையும் மொத்தமாக விலைகொடுத்து விட்டான் அழகியநம்பி. அந்த இளைஞரின் அழகான, சிரிப்புக் கொஞ்சும் முகத்தையே அன்று முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருந்தது. ஒரு அரைமணி நேரம் தமிழ் இலக்கிய உலகம், வியாபார நிலவரம், சமய வளர்ச்சி - ஆகிய பலதிறப்பட்ட செய்திகளைப் பற்றிய உரையாடலில் சுற்றி வந்தனர் அவர்கள் இருவரும்.
திடீரென்று பூர்ணாவின் வீட்டிற்கு வருவதாக ஒப்புக் கொண்டிருந்தது அவனுக்கு நினைவு வந்தது. அதுவரை அந்த இளைஞரின் இனிய பழக்கத்தில் தன்னை மறந்து போயிருந்த அவன் அறைக்குள் மாட்டியிருந்த சுவர்க்கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தான். 'நேரத்தைக் கடக்க விட்டுவிட்டோமே!' - என்று உணர்ந்து கொண்டதற்கு உரிய பரபரப்பின் சாயல் அவன் முகத்தில் உண்டாயிற்று.
அழகியநம்பியின் முகத்தில் உண்டான அந்தக் குறிப்பின் மாறுதலைப் புரிந்து கொண்ட இளைஞர் சபாரத்தினம், "நீங்கள் எங்காவது வெளியே புறப்பட்டு போவதற்கு இருந்தீர்களோ? அடடா; நான் நேரந்தெரியாமல் வந்து உங்களுக்கு தொல்லை கொடுத்துவிட்டேன் போலிருக்கிறது!" - என்று வருந்திக் கூறினார்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை! உங்களைச் சந்தித்தது, உங்களோடு உரையாடியது - இவற்றைக் காட்டிலும் முக்கியமான எந்த காரியத்திற்காகவும் நான் புறப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. இன்னும் ஐந்து நிமிடங்களிள் கழித்து கூட நான் புறப்படலாம். ஆறு, ஆறரை மணி சுமாருக்கு ஒருவரைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருக்கிறேன்." - என்று சொல்லிக்கொண்டே இடத்தை விட்டு எழுந்திருந்தான் அழகியநம்பி. இளைஞர் சபாரத்தினமும் விடைபெற்றுக் கொள்வதற்காக எழுந்திருந்தார்.
"உங்களை நான் இன்று இங்கே கண்டு பேசியதுபோல் எங்கள் வீட்டிலும் எல்லோரும் கண்டு பேச ஆவலாயிருப்பார்கள். நீங்கள் ஒரு ஞாயிற்றுக்கிழமை எங்களுடைய வீட்டிற்குச் சமூகமளிக்க வேண்டும்."
"ஆகட்டும்! கட்டாயம் வருகிறேன்" - என்று சிரித்துக் கொண்டே தலையை அசைத்தான் அழகியநம்பி. அந்த இளைஞரின் சிரிப்பில் ஒரு விந்தை நிறைந்த பண்பு இருப்பதை அவன் கண்டான். அந்தச் சிரிப்பைக் காண்கின்றவர்கள் எத்தகைய கடுமையானவர்களாயிருந்தாலும், அவர்களையும் தம்மையறியாமலே பதிலுக்குச் சிரிக்க வைக்கும் ஒரு தன்மை சபாரத்தினத்தின் சிரிப்பிற்கு இருந்தது. சட்டைப் பையிலிருந்த பூர்ணாவின் 'விஸிட்டிங் கார்டை' எடுத்து அதில் குறிப்பிட்டிருந்த முகவரியைப் பார்த்தான். அதில் இருந்த தெருவின் பெயரையே அவன் அப்போதுதான் படித்தான். 'அந்தத் தெருவிற்குத் தான் மட்டும் தனியாக எப்படிப் போவது? எப்படி அவள் வீட்டைக் கண்டுபிடிப்பது?' - என்ற மலைப்பு அவனுக்கு ஏற்பட்டது. 'சோமுவைக் கூட்டிக் கொண்டு போனால் என்ன? அவனுக்குத் தெரியாத தெருவா இந்த ஊரில் இருக்கப் போகிறது?' - என்று நினைத்தான். 'சோமு பிரமநாயகத்திடம் சொல்லி விடுவானோ?' என்றும் பயந்தான். கூடியவரை தான் பூர்ணாவின் வீட்டுக்குப் போவது எவருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது. உடனே சோமுவைக் கூப்பிடும் எண்ணத்தைக் கைவிட்டான். அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டு நின்ற போது.
"நல்லது! நான் விடைபெற்று கொள்கிறேன். நாம் பின்பு சந்திப்போம்." - என்று சபாரத்தினம் விடைபெற்றுக் கொண்டார். 'இவரிடமே கேட்டால் என்ன?' என்று எண்ணிச் சிறிது தயங்கினான் அவன்.
"சபாரத்தினம்! கொஞ்சம் இப்படி வாருங்கள். உங்களிடம் ஒன்று விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்." - விடைபெற்றுக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றுவிட்ட அவரை மீண்டும் கூப்பிட்டான் அழகியநம்பி.
"ஓ! என்ன வேண்டும்? கேளுங்கள், நன்றாகச் சொல்கிறேன்" - சபாரத்தினம் திரும்பி வந்தார். அந்த 'ஓ' என்னும் வியப்பிடைச் சொல்லை அவர் சொல்லும் போது குயில் அகவுவது போன்ற ஒரு நளினம் - ஒரு மென்மை அதில் கலந்திருந்தது. அழகியநம்பி அந்தத் தெருவின் பெயரை அவரிடம் சொல்லி அதற்குப் போய்ச் சேரவேண்டிய வழி விவரங்களைச் சொல்லுமாறு கேட்டான்.
அழகியநம்பி கூறிய தெருவின் பெயரைக் கேட்டதும் சிரிப்பும், மலர்ச்சியும் கொஞ்சும் சபாரத்தினத்தின் முகத்தில், இவை இரண்டுமே மறைந்தன. அழகியநம்பியின் முகத்தை இரண்டொரு விநாடிகள் இமைக்காமல் பார்த்தார் அவர்.
"அந்தத் தெருவில் நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும்?" அழகிய நம்பிக்கு வழி கூறாமல் இப்படி ஒரு எதிர்க் கேள்வியைச் சபாரத்தினம் கேட்டார். அழகியநம்பி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவன் திகைத்தான். "பூர்ணாவைப் பார்ப்பதற்காகப் போகிறேன்" - என்று சொல்வதற்கு அவன் மனம் ஒப்பவில்லை. எப்படிச் சொல்வது? என்ன சொல்வது? - என்று தயங்கினான் அவன். அந்த உண்மையைச் சொல்லிவிடத் துணிந்திருந்தால் அவன் அப்போதே சோமுவைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுப் போயிருப்பானே?
"உங்களுக்குச் சொல்ல விருப்பமில்லையென்றால் வேண்டாம். தெரிந்து கொண்டு ஆக வேண்டுமென்று நான் கேட்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. அது சரியாக இருந்தால் உங்களுக்குப் பயன்படக் கூடிய சில முன்னெச்சரிக்கைகளை நான் அளிக்கலாமென்று நினைக்கிறேன்."
சபாரத்தினம் மனத்தில் என்ன எண்ணிக்கொண்டு அவர் இப்படிச் சொல்கிறார் என்று அழகியநம்பிக்குத் தெரியவில்லை. அவன் திகைத்தான். ஒன்றும் புரியாமல் தயங்கினான். 'சபாரத்தினம் தங்கமான பிள்ளைதான். வஞ்சகமோ, கபடமோ உள்ளவராகத் தெரியவில்லை. அவரிடம் சொல்வதனால் என்ன கேடு வந்துவிடப் போகிறது?' - என்று ஒரு கணம் துணிந்தது அவன் மனம். 'யார் எப்படிப் பட்டவர்களோ? இரண்டொரு மணி நேரப் பழக்கத்திற்குள் ஒருவரைப் பற்றி நாம் எப்படித் தீர்மானிக்க முடியும்? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? யார் கண்டார்கள்? இந்த இளைஞரை நம்பிச் சொல்லலாமா? கூடாதா?' - என்று மறுகணமே மறுத்தது அவன் மனம். சில விநாடி மனத்தோடு போராடினான் அவன். "வேண்டாம்! நீங்கள் சொல்லாவிட்டால் பரவாயில்லை. எனக்காக நீங்கள் வீண் மனத்துன்பம் அடையக் கூடாது" - என்று சபாரத்தினம் மறுபடியும் மன்னிப்புக் கேட்பது போன்ற குரலில் கூறினார். கூறிவிட்டு அவன் கேட்ட தெருவுக்கு வழி சொல்லத் தொடங்கி விட்டார்.
"சபாரத்தினம்! கொஞ்சம் இருங்கள். நாம் இருவரும் சேர்ந்தே வெளியில் போகலாம். பேசிக் கொண்டே போகலாம். போகும்போது எல்லா விவரங்களும் உங்களுக்கு நான் கூறுகிறேன். உங்களுடைய எச்சரிக்கைகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன்" - என்று கூறி அவரை இருக்கச் செய்தான் அழகியநம்பி.
கடைக்குள்ளேயே சபாரத்தினத்திடம் பூர்ணாவைப் பற்றிக் கூறி அவள் தன்னை வீட்டிற்கு அழைத்திருப்பதையும் சொல்லி அவளைப் பற்றி அவர் அபிப்பிராயத்தை அறிந்து கொண்டு விடலாமா, என்று எண்ணினான் அழகியநம்பி. சிந்தித்துப் பார்த்ததில் கடைக்குள் வைத்து அவளைப் பற்றிப் பேசுவது சரியில்லை என்று பட்டது.
சபாரத்தினத்தையும் உடன் அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தான் அழகியநம்பி. இருவரும் பஸ் நிற்குமிடம் வரை பேசிக்கொண்டே நடந்தனர். அங்கே போய் நின்றதும் சபாரத்தினத்திடம் பூர்ணாவின் 'விஸிட்டிங் கார்டை' எடுத்து நீட்டி, "இவள் தன்னுடைய வீட்டிற்கு ஆறு, ஆறரை மணி சுமாருக்கு இன்று வரச்சொல்லி என்னை அழைத்திருக்கிறாள் போகலாமா? வேண்டாமா? உங்கள் அபிப்பிராயம் எப்படியோ அப்படி நான் நடந்து கொள்வேன்" - என்று விசிட்டிங் கார்டில் இருந்த அவள் பெயரைச் சுட்டிக்காட்டி வினாவினான் அழகியநம்பி.
"எனக்குத் தெரியும்! நீங்கள் அந்தத் தெருவின் பெயரைச் சொல்லி வழி விசாரித்ததுமே நான் புரிந்து அனுமானம் செய்து கொண்டு விட்டேன். அதனால் தான் அவ்வளவு அக்கறையாகச் சந்தேகப்படுவது போல உங்களிடம் விசாரித்தேன். நல்ல வேளையாக இப்போதாவது என்னிடம் கூறினீர்களே. சரியான சமயத்தில் உங்களை நான் காப்பாற்ற முடிந்திருக்கிறது" - என்று அதைப் பார்த்தவாறே பதில் கூறினார் சபாரத்தினம். "நீங்கள் இப்போது என்ன சொல்லுகிறீர்கள்; சபாரத்தினம்? நான் பூர்ணாவின் வீட்டிற்குப் போகலாமா? கூடாதா?"
அழகியநம்பியின் கேள்வியைக் கேட்டுச் சபாரத்தினம் சிரித்தார். "நீங்கள் கெட்டுப் போக வேண்டும் என்று நான் விரும்பமாட்டேன். என்னுடைய அன்புக்குரிய நண்பராக மனத்தில் இடம் பெற்று விட்டீர்கள். இன்று நீங்கள் ஒரு தவறான இடத்தில் போய் மாட்டிக் கொள்ள நான் சம்மதிக்க மாட்டேன். என்னால் இவ்வளவு தான் கூற முடியும். இதற்கு மேல் உங்கள் விருப்பம் போல் நீங்கள் செய்து கொள்ளலாம்." - சபாரத்தினத்தின் குரலில் அழுத்தம் ஒலித்தது.
"ஏன் கூடாது என்கிறீர்கள்? ஒரு காரணமும் சொல்லாமல் இப்படி மொட்டையாகச் சொன்னால் நான் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?"
"காரணங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; பல. அவற்றையெல்லாம் இப்படிப் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டே சுலபமாகப் பேசித் தீர்த்துவிட முடியாது. ஓய்வாக ஒரு இடத்தில் உட்கார்ந்து உங்களிடம் தனிமையில் விவரித்துக் கூற வேண்டும்."
"அப்படியே செய்யலாம் சபாரத்தினம்! உங்கள் வார்த்தைகளை நான் நம்புகிறேன். இன்றைக்குப் பூர்ணாவின் வீட்டிற்கு நான் போகவில்லை. வேறு எங்காவது போய்த் தனிமையில் பேசிக் கொண்டிருக்கலாம்."
"சரி! புறப்படுங்கள். கடற்கரைக்குப் போகும் பஸ் இதோ வந்து கொண்டிருக்கிறது"
"இல்லை! கடற்கரை வேண்டாம். நேற்றே அங்கு போய்ச் சுற்றிப் பார்த்து வந்துவிட்டேன். வேறொரு புதிய இடத்திற்குப் போகலாமே?" என்றான் அழகியநம்பி. கடற்கரைக்குப் போனால் ஒரு வேளை லில்லியையும், மேரியையும், அங்கே சந்திக்க நேர்ந்தாலும் நேரலாம். அவர்களைச் சந்தித்து விட்டால் சபாரத்தினத்துடன் பேசுவதற்குத் தனிமையே வாய்க்காதோ, என்ற தயக்கம் அவன் மனத்தில் இருந்தது.
"நீங்கள் கழனியாவிலுள்ள பௌத்த ஆலயத்திற்குப் போயிருக்கிறீர்களோ?"
"இல்லை! இனிமேல்தான் போகவேண்டும்! அது இங்கிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது? இன்றைக்கு வேண்டுமானால் நாம் அங்கே போகலாமே!"
"தொலைவைப் பற்றி என்ன கவலை? நடந்தா போகப் போகிறோம்? பஸ்ஸில் ஏறினால் கால்மணித்தியாலத்தில் கொண்டுபோய் விட்டு விடுவான்!"
சிறிது நேரத்தில் பஸ் வந்தது. இருவரும் ஏறிக் கொண்டார்கள். 'நாமொன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறது. இந்த இளைஞர் சபாரத்தினம் நம்மைச் சந்தித்துப் பேச வரப் போகிறார் என்று கனவிலாவது நினைத்திருந்தோமா? இந்த இளைஞர் வந்திருக்காவிட்டால் பூர்ணாவைப் பற்றிப் பிரமாதமாக நினைத்துக் கொண்டு அவள் வீட்டுக்குப் போக நேர்ந்திருக்கும். நல்ல வேளையாக வந்து தடுத்தாட் கொண்டார்." - என்று பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் போதே தனக்குள் நினைத்துக் கொண்டான் அழகியநம்பி.
கழனியாவில் இறங்கியது புனிதமும், புகழும் வாய்ந்த பௌத்த ஆலயத்திற்கு அழகியநம்பியை அழைத்துக் கொண்டு போனார் சபாரத்தினம். கண்கொள்ளாக் கவின் மிகுந்த தெய்விகக் காட்சிகளை அங்கே கண்டான் அழகியநம்பி. புத்தர்பிரானைப் பற்றியும், அவருடைய பொன் மொழிகளைப் பற்றியும், கல்லூரி நாட்களில் படித்திருந்த புத்தகங்களெல்லாம் அவன் நினைவில் மலர்ந்தன. உள்ளத்தில் நிர்மலமான தூய எண்ணங்கள் அந்த இடத்திற்குள் நுழையும்போது தாமாகவே உண்டாயின. உடல் முழுதும் சாமானியமான உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பக்திச் சிலிர்ப்பு உண்டாயிற்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பெற்ற பௌத்த ஸ்தூபி, (டகோபா) ஆலத்துக்குள் பதிக்கப் பெற்றிருந்த அற்புதமான சந்திர காந்தக்கற்கள், புண்ணியம் நிறைந்த பழமையான போதி மரம் - எல்லாவற்றையும் சபாரத்தினம் சுற்றிக் காண்பித்தார்.
மழுங்க மொட்டையடித்துக் கொண்ட தலையும், கண்ணைப் பறிக்கும் பளீரென்ற மஞ்சள் நிற ஆடையும் தரித்த புத்த துறவிகளைக் காணும்போதும், இரண்டு உள்ளங்கைகளும் நிறையத் தாமரை, அல்லி, முதலிய பல நிற மலர்களை ஏந்திக் கொண்டு பயபக்தியோடு வழிபாட்டுக்கு வரும் சிங்கள யுவதிகளைப் பார்க்கும்போதும் அவன் நெஞ்சம் உணர்ச்சி மயமாக மாறியது. கழனியா ஆலயமும் அது அமைந்திருந்த இயற்கையழகு மிக்க சூழலும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.
சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு பெரிய அரச மரத்தின் கீழ்ப் பரந்த புல்வெளியில் ஒதுக்குப் புறமாக உட்கார்ந்தனர் சபாரத்தினமும், அழகியநம்பியும். சில கணநேரம் மௌனத்தில் கழிந்தது. இருவரும் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கீழே குனிந்து புல்தரையைக் கீறிக் கொண்டே சும்மா உட்கார்ந்திருந்தனர். இருந்தாற் போலிருந்து சபாரத்தினம் நிமிர்ந்து உட்கார்ந்து அழகியநம்பியை நோக்கி, அவனுக்கு மட்டுமே கேட்கும்படி மெதுவான குரலில் பேச்சைத் தொடங்கினார்.
"நான் ஏதோ பொழுது போகாமல் பூர்ணாவின் மேல் எனக்குள்ள சொந்த வெறுப்பின் காரணமாக இங்கே உங்களைக் கூட்டிக் கொண்டு வந்து ஏதேதோ 'கதைக்கிறேனென்று' நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. 'உங்கள் நன்மைக்காகவே இவற்றை உங்களிடம் சொல்லி எச்சரிக்கிறேன்' என்று நீங்கள் நம்பினால்தான் நல்லது." - சபாரத்தினம் பீடிகையோடு ஆரம்பித்தார்.
"சபாரத்தினம்! நீங்கள் இன்னும் என்னைச் சரியாக நம்பவில்லை போலிருக்கிறது. உங்களுடைய வாயிலிருந்து வரும் எந்தச் சொற்களும் எனக்கு நன்மை தருவனவாகவே இருக்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன்" - அழகியநம்பி உறுதிமொழி கூறினான். "நல்லது! அந்த நம்பிக்கை இருந்தால் போது" - என்று சொல்லிவிட்டுச் சபாரத்தினம் இலேசாகச் சிரித்துக் கொண்டார். அவ்வளவு நேரமாக அவருடைய முகத்தில் தோன்றாமல் மறைந்துவிட்டிருந்த பழைய சிரிப்பு அது.
"நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து நல்ல நம்பிக்கைகளோடும், ஆசையோடும் கடல் கடந்து வந்திருக்கிறீர்கள். பிரமநாயகம் உங்கள் உள்ளத்தில் எத்தனையோ பல ஆசைக் கனவுகளைத் தூண்டிவிட்டு உங்களைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். என்னுடைய வார்த்தைகள், நான் சொல்லப் போகின்ற செய்திகள், உங்களுக்கு அவநம்பிக்கையும், நிராசையும் உண்டாக்கினால் அதற்காக நீங்கள் வருத்தம் அடையக் கூடாது. பொறுமையாக, அச்சமோ, வியப்போ அடையாமல் கேளுங்கள். சொல்லுகிறேன்."
"இப்போது பிரமநாயகம் உங்களை எந்த இடத்தில், எந்தப் பதவியில், உட்கார்த்தியிருக்கிறாரோ, அதை நினைத்து நீங்கள் மதிப்போ, பெருமையோ, கொண்டாடுவதற்கில்லை. மற்றவர்கள் நினைத்து அனுதாபப்பட வேண்டிய ஒரு இடத்தில் பிரமநாயகம் உங்களைக் கொண்டு வந்து உட்கார்த்தி விட்டார்."
அழகியநம்பி பதில் சொல்லாமல் தலை குனிந்து கேட்டுக் கொண்டிருந்தான். 'கயிறுதான்' என்று நினைத்துத் துணிவுடனே காலால் மிதித்துவிட்ட பொருள் மிதித்தவுடன் நெளிந்து 'புஸ்ஸென்று' - சீறிப் படத்தை உயர்த்தினால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது அவன் நிலை.
சபாரத்தினம் மேலும் தொடர்ந்து கூறலானார்: - "அந்தப் பெண் பூர்ணாவின் பகட்டிலும், இளமையிலும், அருவிபோலக் கொட்டும் ஆங்கிலப் பேச்சின் வேகத்திலும் நீங்கள் மயங்கிவிடக் கூடாது. எதையும், எப்போதும் செய்வதற்குத் துணிவுள்ள வஞ்சகி அவள். இந்த வயதில் அவளுக்குத் தெரிந்திருக்கிற சூழ்ச்சிகள், எந்த வயதிலும் வேறு எவர்க்கும் தெரிந்திருக்க முடியாதவை. அவளை இங்கிருந்து எப்படியும் கிளப்பிவிட வேண்டுமென்று பிரமநாயகம் தலைகீழாக நின்று பார்க்கிறார். அவரால் முடியவிலலியே. அவள் இல்லாத போது தாறுமாறாக அவளைப் பற்றிப் பேசுவார் அவர். 'எனக்குக் கீழே என்னிடம் சம்பளம் வாங்கித் தின்கிற கழுதைக்கு இவ்வளவு திமிரா?' - என்று இரைவார். ஆனால், எல்லாம் அவள் இல்லாதபோது தான். அவள் தலையைப் பார்த்துவிட்டால் மனிதர் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார். பேச்சு, மூச்சு, இருக்காது. அவள் சொன்னபடி ஆடுவார். இன்று, நேற்றல்ல, - மூன்று வருஷங்களாக இப்படித் தான் நடந்து கொண்டு வருகிறது. பூர்ணாவை அடக்கி வசப்படுத்தி விடவேண்டுமென்று இப்போதுதான் உங்களை முதன் முதலாகக் கொண்டுவந்து உட்கார்த்தியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்."
"உங்களுக்கு முன்னாலும் ஐந்தாறு பேர் இதே வேலையில் இருந்திருக்கிறார்கள். உங்களுக்குச் செய்தது போலவே அவர்களையும் அதே அறைக்குள் மேஜை, நாற்காலி, போட்டு உட்கார்த்தியிருக்கிறார்..."
"அப்படியா? இருக்காதே? என்னைத் தான் முதல் முதலாக அந்த அறைக்குள் உட்கார்த்துவதாக அல்லவா அவர் என்னிடம் கூறினார்." - அழகிய நம்பி குறுக்கிட்டுப் பேசினான்.
"கூறுவதற்கென்ன? அந்த வேலைக்கென்று வந்த ஒவ்வொருவரிடமும் அப்படித்தான் கூறியிருப்பார் அவர். பிரமநாயகம் கூறுவதெல்லாம் உண்மையென்று நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய தவறல்லவா?"
அழகியநம்பி மறுபடியும் தலைகுனிந்து கொண்டான். "பூர்ணாவின் சூழ்ச்சிகளைத் தாங்க முடியாமல் ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதத்தில் போய்ச் சேர்ந்தான். அவைகளை எல்லாம் விவரித்துச் சொன்னால் ஒவ்வொன்றும் ஒரு கதைபோல் இருக்கும். எல்லோருடைய கதைக்கும் முதல் அத்தியாயம் ஒரே மாதிரித்தான் ஆரம்பமாகும். முடிவுகள் தான் வேறுவேறு விதமாக இருக்கும். இன்றைக்கு உங்களிடம் பூர்ணா நடந்து கொண்டாளே, இதே மாதிரிதான் அந்த இடத்தில் வேலைக்கு வந்து உட்காரும் ஒவ்வொரு இளைஞனிடமும் நடந்து கொள்வாள். அவளிடம் என்ன தான் மாயம், மந்திரம், வசியம், இருக்கிறதோ! இன்று வரை அவள் வலையில் சிக்காமல் போன ஆள் கிடையாது. இப்படித்தான் 'விஸிட்டிங்' கார்டைக் கொடுத்து வீட்டுக்கு வந்து சந்திக்குமாறு முதலில் அழைப்பாள். படுசூனியக்காரி அவள். 'மாந்திரிகம், பில்லிசூனியம்' - போன்றவைகள் கூட அவளுக்குத் தெரிந்திருக்குமோ, என்று எனக்கு அந்தரங்கமாக ஒரு சந்தேகம் உண்டு."
"முதல் நாள் அவள் வீட்டுக்குப் போனவன் மறுநாளும் போவான். அதற்கு மறுநாளும் போவான். தொடர்ந்து போய்க் கொண்டே இருப்பான். அதன் பின்னர் அவனை யாராலும் தடுக்க முடியாது. கடைசியில் அவனை முற்றிலும் தன் ஆளாக மாற்றிக் கொண்டு விடுவாள் அவள். பிரமநாயகத்தால் அவருடைய கையாளாக வேலைக்கு வந்தவன் பூர்ணாவின் விளையாட்டுப் பொம்மையாக மாறி அவருக்கே எதிரியாகத் தலையெடுப்பது வழக்கம். வேலைக்கு வந்த பத்துப் பன்னிரண்டு நாட்களில் வந்தவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனைத் தன்னுடைய நாய்க்குட்டி போல் தன் பின்னாலேயே சுற்றவைத்து விடுவாள் அவள்."
"ஆனால், அவளுடைய வலையில் சிக்கிய ஒவ்வொரு இளைஞனின் முடிவும் ஒரிரு மாதங்களில் பயங்கரமான விதத்தில் வெளியாகும். எனக்குத் தெரிந்து எத்தனை பேர் அப்படி முடிவுகளை அடைந்திருக்கிறார்கள் தெரியுமா?"
"உங்களை மாதிரியே ஒரு இளைஞர்; அவரையும் தமிழ் நாட்டிலிருந்துதான் பிரமநாயகம் கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்தார். திருநெல்வேலிப் பக்கம்தான் அவருக்கும். வேலைக்கு வந்தவர் முழுக்க முழுக்கப் பூர்ணாவின் வலையில் விழுந்துவிட்டார். இரண்டு மூன்று மாதம் அவளோடு திரிந்தார். கடைசியில் ஏதோ சித்தப்பிரமை மாதிரி வந்து வாய் பேசவராமல், மற்றவர்கள் பேசினாலும் புரிந்து கொள்ளச் சுய நினைவு இல்லாமல் ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாகக் கிடந்தார். அடிக்கடி குமட்டிக் குமட்டி வாந்தியெடுத்தார். என்னென்னவோ நம்ப முடியாததை எல்லாம் சொன்னார்கள். வாந்தியெடுத்ததில் சுருள் சுருளாக மயிர் வந்து விழுந்ததாம். கருப்பு நிறத்தில் உருண்டை, உருண்டையாக ஏதோ அகப்பட்டதாம். அவனை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துவிட்டு வந்தவர்கள் இன்னும் என்னவெல்லாமோ கதைகதையாகச் சொன்னார்கள். கடைசியில் பையன் பிழைக்கவில்லை. பிழைக்க வந்த இடத்தில் இப்படி அலங்கோலமான முறையில் கெட்ட பேருடன் இறந்து போனான். பிரமநாயகம் ஊருக்குப் போய்ப் பையனின் பெற்றோரிடம் நடந்தவற்றை அப்படியே சொல்லாமல், ஏதோ கடுமையான சுரத்தினால் பையன் இறந்து போய்விட்ட மாதிரி மாற்றிச் சொல்லி அவர்களைத் தேற்றிக் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டுத் திரும்பினார்.
"இன்னொரு இளைஞர். நன்றாகப் படித்தவர், திருச்சிப் பக்கமிருந்து வந்திருந்தார். அவர் முதலில் பூர்ணாவிடம் அளவு மீறிப் பழகிவிடாமல் 'வேலையுண்டு, தாம் உண்டு' என்று கட்டுப்பாடாக இருந்தார். அந்தக் கட்டுப்பாட்டையும், பிடிவாதத்தையும் இரண்டே இரண்டு வாரங்களுக்கு மேல் கொண்டு செலுத்த முடியவில்லை. அவரும் அவள் வலையில் விழுந்தார். ஈருடலும் ஓருயிரும் போல அவளைவிட்டுப் பிரியாமல் அவளோடு திரிந்தார். கடைசியில் ஒரு நாள் பிரமநாயகத்திடம் சண்டை போட்டுச் சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து வாங்கிக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் ஊருக்குக் கப்பலேறி விட்டார்.
"உங்கள் பக்கத்திலிருந்து வரும் இளைஞர்கள் தாம் இப்படி நிலைக்காமல் போய்ச் சேர்ந்தார்கள். துணிச்சலும், தன்னம்பிக்கையும், எதற்கும் அஞ்சாத இயல்பும் உடைய யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவரைக் கொண்டு வந்து பிரமநாயகம் அந்த வேலையில் நியமித்தாரே; அவராவது நிலைத்தாரா! இல்லையே! மூன்றே மாதங்களில் ஆயிரக்கணக்கில் கையாடல் செய்துவிட்டதாக அவர் மேல் பொய்க் கணக்குக் காட்டிப் பூர்ணாவே அவரைத் துறத்த வழி செய்துவிட்டாள். அந்த மனிதர் ஒரு பாவமும் அறியாதவர். அவரை எப்படியும் வெளியேற்றி விடவேண்டுமென்பதற்காகக் கணக்கில் மோசடி செய்து கையாடல் பழியை அவர் மீது சுமத்தி வெளியேற்றினாள் பூர்ணா. இப்படி இன்னும் இரண்டொருவர் வந்து நிலைக்காமல் போயிருக்கிறார்கள். அது தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்? ஒவ்வொருத்தர் கதையும் ஒவ்வொரு விதமாக முடிந்திருக்கிறது. முடித்துவைத்த சாகஸம் முற்றிலும் பூர்ணாவுக்குச் சொந்தமானது. அவள் கதையை முடித்து அவளை வெளியே அனுப்பிவைக்கத்தான் யாருக்கும் துணிவில்லை. இந்த நிலையில் ஏழாவது ஆளாக உங்களைத் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு வந்திருக்கிறார் பிரமநாயகம். எனக்கென்னவோ, நீங்கள் வந்த அன்றே - உங்களைப் பார்த்ததிலிருந்து உங்கள் மேல் நீக்கமுடியாத ஒரு அனுதாபமும் அன்பும் ஏற்பட்டுவிட்டன. இல்லையானால் வலுவில் உங்களைத் தேடி வந்து உங்கள் நட்பைக் கோரியிருக்கமாட்டேன்." - சபாரத்தினம் பயங்கரமும், எச்சரிக்கையும் கலந்த அந்த உண்மைகளைச் சொல்லி முடித்தார்.
அழகியநம்பி பெருமூச்சு விட்டான். நன்றாகக் கதை சொல்லத் தெரிந்த யாரிடமோ மர்மமான நிகழ்ச்சிகள் அடங்கிய ஒரு கதையைக் கேட்டு முடித்தது போலிருந்தது அவனுக்கு. "சபாரத்தினம்! உங்களுக்கு மட்டும் அந்த மாதிரி உணர்ச்சி ஏற்படவில்லை, எனக்கும் ஏற்பட்டது. உங்களை முதலில் சந்தித்தவுடன் யாரோ ஒரு புதிய மனிதரைத் தற்செயலாகச் சந்திக்கிறோம் என்று நான் நினைக்கவே இல்லை. வெகுநாள் பழகிய ஒரு உண்மை நண்பரைச் சந்திப்பது போன்றே இருந்தது." - என்று சொல்லி நிறுத்தினான் அழகியநம்பி.
"இருக்கலாம்! எப்போதோ - ஒரு பிறவியில் நீங்களும் நானும் சகோதரர்களாக இருந்திருக்கிறோம் போலிருக்கிறது" - உருக்கமான குரலில் சபாரத்தினம் இப்படிக் கூறிய போது அதைக் கேட்டுக் கொண்டிருந்த அழகியநம்பிக்குப் புல்லரித்தது. பவித்திர மயமானதொரு புதிய சிலிர்ப்பு உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை அவன் உடலில் பரவியது. ஆகா! 'சகோதரன்' - என்ற அந்தச் சொல்லின் ஒலிக்குத்தான் எவ்வளவு பெரிய சக்தி! என்று வியந்தான் அவன். அந்த வியப்பில், அந்தப் புனிதமான வார்த்தையைக் கேட்ட பூரிப்பில் - தெய்வீகச் சிலிர்ப்பில் அழகியநம்பி ஆழ்ந்து மூழ்கியிருந்த போது பின்னாலிருந்து ஒரு பெண் குரல் அவன் பெயர் சொல்லிக் கூப்பிட்டது. திடீரென்று யாரோ அதலபாதாளத்திற்குள் அவனைப் பிடித்து இழுப்பது போல் அவன் செவிப்புலனைத் தீண்டிப் பற்றியிழுத்தது அந்தக் குரல். அழகியநம்பியின் உடல் நடுங்கிக் குலுங்கியது. பலிக்களத்து ஆடுபோல் மிரண்டு தயங்கும் கண்களால் திரும்பிப் பார்த்தான்.
பூர்ணா இன்னும் யாரோ ஒரு பெண்ணோடு அவனும், சபாரத்தினமும், உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு, நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் வந்து கொண்டிருந்த இடத்துக்கும், அவன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கும் ஐந்தாறு கெஜதூரம் இருக்கும். 'சபாரத்தினத்தையும் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு அப்படியே எழுந்திருந்து ஓடிவிடலாமா?' - என்று நினைத்தான் அவன். 'இப்போது என்ன செய்வது?' - என்று கேட்கும் பாவனையில் பயக்குறிப்புடன் கூடிய பார்வையால் சபாரத்தினத்தின் முகத்தைப் பார்த்தான் அவன்.
"பயப்படாதீர்கள் - நான் இருக்கிறேன்" - என்று மெதுவாகச் சொல்லிக் கையமர்த்திக் காட்டினார் சபாரத்தினம். அதற்குள் அவள் பக்கத்தில் வந்து விட்டாள். திடமாக இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தவன் அவள் பக்கத்தில் வந்ததும் புல் தரையில் எழுந்து நின்றான். சபாரத்தினம் எழுந்திருக்கவில்லை. "வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தீர்களே! ஏன் வரவில்லை?" - அவள் குரல் அதட்டுவது போல் தான் இருந்தது. என்ன பதில் சொல்வதென்று விழித்தான் அவன். சிவப்புச்சாயம் பூசிய அவள் உதடுகளை அப்போது பார்த்தவுடன் கண்களில், - மனிதர்களை அடித்து இரத்தத்தைக் குடிக்கும் கோரமான பெண் அரக்கி ஒருத்தி இதழ்களில் பச்சை இரத்தம் புலராமல் தன் முன் நிற்பது போல் அவனுக்குத் தோன்றியது.
வட்டிக்கடைப் பன்னீர் செல்வத்திற்குக் குறிஞ்சியூரில் இன்னொரு பெயர் அவரிடம் கடன் வாங்கி அனுபவப் பட்டவர்களால் சூட்டப்பட்டிருந்தது. 'நட்சத்திரேயன்' என்ற திருப்பெயர் தான் அது. அசல் வசூலாவதற்குள் அரட்டியும் மிரட்டியும் அவர் வசூல் செய்யும் வட்டிப் பணத்தின் தொகை சில சமயங்களில் அசலைக் காட்டிலும் கூட அதிகமாகிவிடும். அசல் தொகையை மொத்தமாகக் கொடுத்து அடைப்பதற்கு முன் கடன் வாங்கியவர் தனித்தனியாக எவ்வளவு கொடுத்தாலும் அவையெல்லாவற்றையும் வட்டிக் கணக்கில் தான் வரவு வைப்பார் மனிதர். மொத்தமாக அசலைக் கொடுத்து அடைக்க முடியாத எவனாவதொரு அப்பாவி 'அசல் அடைபட்டுக் கொண்டு வருகிறது' - என்ற நம்பிக்கையோடு வட்டியோடு சிறிது சிறிதாக - தவணையில் கொடுத்துக் கொண்டு வருவான். இந்தக் கல்நெஞ்சுக்கார மனிதரோ அசல் கணக்கில் ஒன்றும் வரவு வைக்காமல் வட்டிப்பணம், தவணையாக வந்த பணம் - எல்லாவற்றையும் சேர்த்து வட்டிக் கணக்கிலேயே வரவு வைத்து வாயில் போட்டுக் கொள்வார். வருட முடிவில், "அசல் இன்னும் அப்படியே இருக்கிறது? எப்போது அடைக்கப்போகிறாய்?" - என்று அவர் அதட்டிக் கேட்கும் போது அவரிடம் கடன் வாங்கிய ஏழைக்கு வயிறு பற்றி எரியும்.
இப்படி ஏழைகளின் வயிற்றெரிச்சலை எல்லாம் கொட்டிக் கொண்டு காசு சேர்த்துப் பணக்காரர் ஆனவர் அவர். வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கும் தொழிலில் ஈவு, இரக்கம், நியாயம் - இவையெல்லாம் பார்த்தால் முன்னுக்கு வரமுடியாதென்பது அவர் கருத்து. அந்தக் கருத்தை வாய்க்கு வாய், பேச்சுக்கு பேச்சு, - சமயம் நேரும்போதெல்லாம் மற்றவர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார் அவர். மற்றவர்களால் பெருமைப்படுத்தப் படாதவர்கள் வேறு எப்படித்தான் பெருமையை அடைய முடியும்? தங்களைப் பற்றித் தாங்களே அப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு தானே பெருமை பெற வேண்டும்? சந்தர்ப்பம் நேரும்போது கடன் தொகைக்கு ஈடாக, வீடோ, நிலமோ - எதையும் ஜப்தி செய்து அபகரித்துக் கொள்ளத் தயங்கமாட்டார்.
இதனால் ஊரிலுள்ள நல்ல விளை நிலங்களில் பெரும்பாலானவை அவருக்குச் சொந்தமாயிருந்தன. வீடுகளிலும் இரண்டு மூன்று அவர் வசமாயிருந்தன. அப்படி வந்த வீடுகளையெல்லாம் குடியிருப்பவர்களுக்கு வாடகை பேசி விட்டிருந்தார். அந்தச் சிறிய ஊரில் மாதத்திற்கு இரண்டு ரூபாய் மூன்று ரூபாய்க்கு வசதியுள்ள வீடுகள் வாடகைக்கு கிடைத்து வந்தன. அந்த முறையை மாற்றி எட்டு ரூபாய், பத்து ரூபாய், என்று வீட்டு வாடகை உயரக் காரணமாயிருந்தவரே அவர் தாம்.
இவையெல்லாம் போதாதென்று இப்போது சில மாதங்களாக வட்டிக்கடைப் பன்னீர்ச்செல்வம் இன்னொரு புதிய தொழிலின் மூலமும் பணம் குவிக்கத் தொடங்கியிருந்தார். அந்த ஊரைச் சுற்றி நாற்புறமும் இருந்த மலைத்தொடர்களில் விறகுக்குப் பயன்படும் மரங்கள் கணக்கில்லாமல் இருந்தன. அவற்றை மலைப் பகுதிகளிலேயே வெட்டி கரிக்காக மூட்டம் போட்டு எரித்துக் கரிமூட்டைகளாக மாற்றினால் பக்கத்து நகரங்களில் மூட்டை நாலு ரூபாய் - ஐந்து ரூபாய்க்கு விலை போயிற்று.
சர்க்கார் - காட்டிலாகாவின் பாதுகாப்புக்குட்பட்ட மலைப் பகுதிகளில் பெயருக்குச் சிறிது பணம் கட்டிப் 'பட்டுப் போன - காய்ந்து வற்றிய மரங்களை மட்டும் வெட்டிக் கொள்ளலாம்' - என்று லைசென்ஸ் பெற்றுக் கொண்டு பச்சை மரங்கள், பலனுள்ள மரங்கள் - எல்லாவற்றிலுமே கைவைத்தார் அவர். 'இப்படிச் செய்கிறீர்களே' - என்று கேட்பதற்காகத் திறந்த வாய்களில் எல்லாம் பணத்தைப் போட்டு அடைத்து வைத்தார். பத்து லட்சம் ரூபாய் இலாபம் கிடைக்கிற போது பத்து ரூபாயை அந்தக் காரியத்துக்கு ஒத்துழைக்கிறவர்கள் பக்கம் வீசி ஏறிந்து விட்டால் குடியா முழுகிவிடும்? பச்சை மரங்களையும் பயனுள்ள மரங்களையும் வெட்டக்கூடாதென்று லைசென்ஸிலும் சட்டத்திலும் நிபந்தனைகள் இருக்கின்றன! இருந்தால் இருக்கட்டுமே! அவற்றை யாராவது கவனித்தால் தானே?
பன்னீர்ச்செல்வத்தின் கை இந்தப் புதிய தொழில் துறையில் மேலும் ஓங்கிக் கொண்டு வந்தது. இந்தத் தொழில் உபயோகத்துக்காக அவருக்கு இன்னொரு வீடு தேவையாக இருந்தது. விறகு, கரிமூட்டைகளை 'ஸ்டாக்' வைத்துக் கொள்வதற்குக் கிட்டங்கி போல் ஒரு இடம் வேண்டியிருந்தது. ஏற்கெனவே தமக்கு உரியனவாகியிருந்த வீடுகளில் மாதவாடகை பேசி ஆட்களைக் குடிவைத்து விட்டதனால், "வேறு எந்த வீடு தம் வலையில் சிக்கும்?" - என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.
அழகியநம்பி கொழும்புக்குக் கப்பலேறி விட்டான் என்றவுடன் அவருக்கு ஒரு நம்பிக்கை உண்டாயிற்று. கடனைத் தரச் சொல்லி மிரட்டினால் - பழைய காலத்து மாதிரியில் அரண்மனை போல் கட்டப்பட்ட அந்தப் பெரிய வீடு தன்னுடைய கைக்கு வந்துவிடும் என்ற சபலம் தட்டியது பன்னீர்ச்செல்வத்திற்கு. ஆண்பிள்ளையில்லாத வீடு. நாலுமுறை நேரில் போய் அதட்டிக் கேட்டால், "இப்போது எங்களால் ஒன்றும் கொடுக்க முடியாது! இருப்பது இந்த வீடு ஒன்றுதான். முடியுமானால் இதை எடுத்துக் கொள்ளுங்கள்" - என்று வல்வழக்குப் பேசுவார்கள். அதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு கோர்ட் மூலம் வீட்டைக் கைப்பற்றி விடலாம். அசலைக் கேட்டாலாவது 'இரண்டு வருஷம் தவணை பாக்கியிருக்கிறதே' - என்று மறுத்துச் சொல்லுவார்கள். அதுவும் நியாயந்தான். 'வட்டியே ஐந்நூறு ரூபாய்க்கு மேலாகிறது. தரப்போகிறீர்களா? இல்லையா?' - என்றால் அவர்களுக்குப் பதில் பேச வாயில்லை. 'இப்போதுள்ள நிலையில் அழகியநம்பியின் தாயும், தங்கையும் எனக்கு ஒரு சல்லிக் காசு தர முடியாது. கொழும்பில் போன புதிதில் அழகியநம்பியாலும் அவ்வளவு பணம் சேர்த்து அனுப்ப முடியாது. நான் மட்டும் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் முயற்சி செய்தால் அந்த வீடு நிச்சயம் என் வசத்திற்கு வந்துவிடும்.' என்று ஒரு மாதிரித் தமக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந்தார் பன்னீர்ச்செல்வம். அந்தக்காலத்தில் பெட்ரோல் கிடைப்பது கடினமாக இருந்ததால், சர்வீஸ் பஸ்கள், சாமான் லாரிகள் - எல்லாம் கரியில் தான் ஓடின. பன்னீர்ச்செல்வத்தின் கரி விறகு - தயாரிப்புத் தொழில் பெருகுவதற்கு அமோகமான சூழ்நிலை வாய்த்திருந்தது.
மனிதர் பணத்தை மலையாகக் குவித்தார். அவ்வளவு பணத்தை ஆள்கிறவருக்குக் கிட்டங்கி வைத்துக் கொள்ள ஒரு வீடு தானா கிடைக்காது? செண்டுக்குப் பத்து ரூபாய் வீதம் பணம் கொடுத்தால் ஊர்க்கோடியில் அருமையான காலிமனை விலைக்குக் கிடைக்கும். அந்தக் காலி மனையை விலைக்கு வாங்கி நூறு ரூபாய் செலவழித்தால் ஒரே சமயத்தில் நானூறு ஐநூறு கரி மூட்டைகளையும், நூறு டன் விறகையும் அடுக்கும்படியான ஒரு பெரிய கொட்டகை போட்டு விடலாம்.
ஏனோ, அந்தப் பணக்காரருக்கு அது தோன்றவே இல்லை. அழகியநம்பி என்ற ஒரு ஏழையின் வீட்டைத்தான் அவருடைய கண்கள் தேடின.
அன்று வீடுதேடிச் சென்று அழகியநம்பியின் தாயைப் பார்த்து 'பதினைந்து நாட்களில் வட்டிப் பணம் கைக்கு வந்து சேராவிட்டால் நான் மிகவும் கெட்டவனாக நடந்து கொள்வேன்' - என்று மிரட்டிய போது கூட அந்த வீட்டை வசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு தான் மிரட்டிவிட்டு வந்திருந்தார்.
அப்போதிருந்து பதினைந்து இருபது நாட்களில் அந்த வீடு தம் வசமாகிவிடும் என்று ஒவ்வொரு நாளும் கோழிக்கனாக் கண்டு கொண்டிருந்தார் அவர்.
பன்னீர்ச்செல்வம் இப்படி ஏதாவது செய்து விடுவார் என்பதை அவர் வந்து விசாரித்துவிட்டுச் சென்ற விதத்திலிருந்தே அனுமானித்துக் கொண்டிருந்தாள் அழகியநம்பியின் அன்னை. 'பிள்ளையும் ஊரில் இல்லாத சமயத்தில் இருக்கிற ஒரே ஆதரவான வீட்டை இழந்துவிடக் கூடாது. என்ன தந்திரம் செய்தாவது, வட்டிப் பணத்தை இந்த மனிதன் முகத்தில் விட்டெறிந்து விட்டால் இன்னும் ஒரு வருடத்திற்கு இவன் நம் வீட்டு வாசல் படியை மிதிக்க முடியாது. கடன் நோட்டு காலாவதியாவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே?" - என்று எண்ணிக் கொண்டு ஒரு தீர்மானத்தோடு காந்திமதி ஆச்சியின் இட்டிலிக்கடைக்கு வந்திருந்தாள் அந்தம்மாள். காந்திமதி ஆச்சியின் கையில் ரொக்கமாக கொஞ்சம் இருப்பு உண்டு என்பது முத்தம்மாள் அண்ணிக்குத் தெரியும். தான் வீடு தேடிப் போய்க் கேட்டாள் ஆச்சி மறுக்கமாட்டாள் என்ற நம்பிக்கை அந்த அம்மாளுக்கு இருந்தது.
காந்திமதி ஆச்சியைச் சந்தித்த முத்தம்மாள் அண்ணி சிறிது நேரம் பொதுவான செய்திகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின்பு தான் வந்த காரியத்தைப் பிரஸ்தாபித்தாள்.
"அழகியநம்பியிடமிருந்து இன்றைக்கு எனக்கும் ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில் கூடப் பொதுவாக ஏதோ எழுதியிருந்தான். 'அம்மாவும் தங்கையும் ஊரில் தனியாக இருக்கிறார்கள். நீங்கள் அடிக்கடி உதவிகள் செய்து பார்த்துக் கொள்ளவேண்டும்' - என்று போகும்போது சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். நமக்குள் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்துவிடவா போகிறோம்?" - என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஆச்சி.
"ஆச்சி உங்களுக்குத் தங்கமான மனசு! எனக்குத் தெரியாதா என்ன? அந்தக் காந்திமதி அம்மனை எல்லோரும் தெய்வமாகக் கும்பிடுவது போல் நான் உங்களையும் கும்பிடவேண்டும். இந்த இக்கட்டான சமயத்தில் என்னைக் கைவிட்டு விடாதீர்கள். அந்தப் படுபாவி பன்னீர்ச்செல்வம் வீட்டையும் பிடுங்கிக் கொண்டு என்னையும் என் பெண்ணையும் நடுத்தெருவில் நிறுத்திவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்." - முத்தம்மாளண்ணியின் சொற்கள் துக்கமும், கவலையும் தோய்ந்து வெளிவந்தன.
"நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் அம்மா? உங்கள் பிள்ளையின் தங்கமான மனத்திற்காகவே நான் எவ்வளவோ உதவி செய்யலாமே! அந்த மாதிரி உங்களுக்கு எதுவும் யாரும் கெடுதல் செய்வதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருந்துவிடுவோமா? அந்தப் பன்னீர்ச்செல்வத்திற்குக் கேடுகாலம் வந்துவிட்டது போலிருக்கிறது. இல்லையானால் இப்படிப் பேராசை பிடித்துப் போய்த் திரியமாட்டான். மலையிலிருக்கிற மரங்களை மொட்டையடித்துக் காசு சேர்க்கிறது போதாதென்று ஏழை, எளியவர்களையும் மொட்டையடித்து வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளப் பார்க்கிறான். ஊரில் இவனை ஏனென்று கேட்பார் இல்லையா?" -
காந்திமதி ஆச்சியின் வார்த்தைகள் அழகியநம்பியின் தாய்க்குச் சிறிது தைரியத்தை உண்டாக்கின.
"வட்டியை மட்டும் தானே இப்போது கொடுக்க வேண்டும்? அசலுக்கு இன்னும் நாள் இருக்கிறதோ; இல்லையோ?" ஆச்சி கேட்டாள்.
"ஆமாம்! வட்டிதான்; இரண்டு வருஷத்துப் பாக்கி நிற்கிறது. ஐநூறு ரூபாய் வரை சேர்ந்து விட்டது. அதைக் கொடுத்து ஒழித்து விட்டால் இன்னும் ஒரு வருஷத்துக்கு அசலைப் பற்றிப் பேச முடியாது."
"ஐநூறு ஆகுமா?..."
"ஏன் ஆச்சி? உங்கள் கைவசம் இப்போது அவ்வளவு இருக்காதா?"
"இல்லாமல் என்ன? இரண்டு நாளில் புரட்டிவிடலாம். எதற்கும் நாளை அல்லது நாளன்றைக்குக் கோமுவிடம் சொல்லி அனுப்புகிறேன். நீங்கள் இங்கே வாருங்கள். பன்னீர்ச்செல்வத்தையும் இங்கேயே வரச்சொல்லிக் கூப்பிட்டு அனுப்புகிறேன். மணியக்கார நாராயண பிள்ளையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பத்திரத்தில் வட்டியை வரவுவைத்து விட்டுப் பணத்தைக் கொடுத்துவிடுவோம். நாமாகவே பணத்தைக் கொடுத்து வரவு வைத்துவிடலாம். இருந்தாலும் ஒரு ஆண்பிள்ளை பக்கத்திலிருந்தால் நல்லதுதானே?" - என்று காந்திமதி ஆச்சி கூறியபோது கவலைப்பட்டுக் கொண்டிருந்த முத்தளம்மாளண்ணியின் மனம் குளிர்ந்தது.
"நல்ல சமயத்தில் கஷ்டமறிந்து உதவி செய்கிறீர்கள். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்." - தன் உள்ளத்தில் பெருகும் நன்றியுணர்ச்சியை இந்தச் சில சொற்களால் காந்திமதி ஆச்சிக்குத் தெரிவிக்க முயன்றாள் முத்தம்மாளண்ணி.
"எனக்குக் கூடவா நீங்கள் இந்த உபசார வார்த்தைகள் எல்லாம் சொல்ல வேண்டும்?" - என்று தன்னடக்கமாகப் பணிவோடு கூறிக் கொண்டாள் காந்திமதி ஆச்சி.
வந்த காரியம் சாதகமாக முடிந்த பெருமையில் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள் அழகியநம்பியின் தாய்.
இரண்டு நாள் கழித்து இப்படி தாம் முற்றிலும் எதிர்பாராத நிகழ்ச்சி நடைபெறுமென்று பன்னீர்ச்செல்வம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். காந்திமதி ஆச்சியின் பெண் கோமு அவருடைய வீடு தேடி வந்து அவரைக் கூப்பிட்டபோது அவரால் நம்பவே முடியவில்லை.
"என்ன காரியமாக ஆச்சி என்னைக் கூப்பிடுகிறார்?"
"எங்கள் இட்டிலிக் கடையில் அழகியநம்பியின் தாயாரும், மணியக்கார நாராயண பிள்ளையும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அம்மாள் உங்களுக்கு ஏதோ வட்டிப் பணம் தரவேண்டுமாம். இப்போது அதைக் கொடுத்துவிடலாம் என்று தான் உங்களைக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்கள். வரும்போது கடன்பத்திரத்தை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்கள்." - என்று சிறுமி கோமு மூச்சு விடாமல் சொல்லி முடித்த போது பன்னீர்ச்செல்வத்திற்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இவ்வளவு விரைவில் முத்தம்மாள் அண்ணிக்குப் பணம் எப்படிக் கிடைத்ததென்று வியந்தார் அவர்.
'சரிதான்! இந்தக் காந்திமதி ஆச்சியும், பெருமாள் கோவில் மணியக்காரப் பிள்ளையும் சேர்ந்து கொண்டு இவளுக்குப் பண உதவி செய்திருக்க வேண்டும். இல்லையானால் ஐநூறு ரூபாயை இரண்டே இரண்டு நாளில் இவளால் எப்படிச் சேர்க்க முடியும்? அடாடா! நல்ல சமயத்தில் கெடுத்து விட்டார்களே. இன்னும் இரண்டு வாரத்தில் அந்த வீட்டைக் கைப்பற்றியிருப்பேனே. இப்போது அது முடியாமல் செய்து விடுவார்கள் போலிருக்கிறதே' - என்றெண்ணி வருந்தியது திருவாளர் பன்னீர்ச்செல்வத்தின் உள்ளம்.
கடன் பத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடையை நோக்கி நடந்தார் அவர். சிறுமி கோமு அவருக்கு முன்னால் நடந்தாள்.
"வாருங்கள், உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். கடன் பத்திரம் கொண்டு வந்திருக்கிறீர்களோ?" - என்று பன்னீர்ச்செல்வத்தை வரவேற்று இட்டிலிக்கடைக்குள் அழைத்துக் கொண்டு போனார் மணியக்காரப் பிள்ளை.
கடைக்குள் காந்திமதி ஆச்சியும் முத்தம்மாளண்ணியும் பணத்தோடு தயாராகக் காத்துக் கொண்டு இருந்தனர். பத்தே நிமிஷங்களில் காரியம் முடிந்து விட்டது. வட்டிப் பணத்தை எண்ணிக் கொடுத்துக் கடன் பத்திரத்தில் வரவு வைத்தபின் பன்னீர்ச்செல்வத்தை அனுப்பிவிட்டனர். மணியக்கார நாராயண பிள்ளை அருகிலிருந்ததனால் காரியம் துரிதமாக முடிந்து விட்டது. 'பாவம்' பன்னீர்ச்செல்வம்! நன்றாக ஏமாந்து விட்டார்.
அன்று குறிஞ்சியூரிலிருந்து வெளியேறிய தபால் கட்டுக்கள் அடங்கிய பையில் இலங்கைக்கு இரண்டே இரண்டு கடிதங்கள் இருந்தன. அந்த இரண்டும் அழகியநம்பியின் பெயருக்குச் சென்றன என்பதை இங்கே தனியாகக் கூறவும் வேண்டுமோ?
கழனியா பௌத்த ஆலயத்தில் அன்று மாலை சபாரத்தினம் கூறிய இரகசியங்களை மனத்தில் ஏற்றுக்கொண்ட விநாடியிலிருந்து அழகியநம்பியின் மனத்தில் அமைதி இல்லை; நிம்மதி இல்லை, நம்பிக்கையுமில்லை. சபாரத்தினம் உடனிருந்தது நல்லதாகப் போயிற்று. இல்லையானால், அன்று மாலை கழனியாவிலிருந்து எப்படியும் வற்புறுத்தித் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டே போயிருப்பாள் பூர்ணா. அழகியநம்பியும் அவள் அழைப்பை மறுத்து மீற முடியாமல் போய் மாட்டிக் கொண்டிருப்பான். சபாரத்தினம் உடனிருந்ததால் சரியான சமயத்தில் பூர்ணா என்னும் தூண்டிலின் கூர்மையான கொக்கியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டான் அவன்.
"ஆறரை மணி வரை உங்களை எதிர்பார்த்தேன், நீங்கள் வரவில்லை. 'அதற்கப்புறம் எங்கே வரப்போகிறீர்கள்?' என்று நம்பிக்கையிழந்து இந்தச் சிநேகிதியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டேன். இங்கே நீங்கள் அகப்பட்டு விட்டீர்கள். புறப்படுங்கள் போகலாம்" - என்று அவள் மயக்கும் விழிகளைச் சுழற்றிச் சிரித்துக் கொண்டே கூறிய போது அழகியநம்பி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சபாரத்தினத்தின் முகத்தைப் பார்த்தான்.
"இல்லை! இன்று இவரை நீங்கள் கூப்பிடாதீர்கள். எங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகிறேன் நான். இன்னொரு நாள் உங்கள் வீட்டுக்கு வருவார்" - சபாரத்தினம் கீழே உட்கார்ந்து கொண்டிருந்தவர் எழுந்திருந்து பூர்ணாவிடம் பேசினார்.
"ஓ! உங்கள் வேலைதானா இதெல்லாம்?" - பூர்ணா சபாரத்தினத்தை நோக்கி வெடுக்கென்று இப்படிக் கேட்டாள். அந்தக் கேள்வியில் சிலேடையாக இரண்டு பொருள்கள் தொனித்ததைச் சபாரத்தினம் நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டார். அழகியநம்பி அதைக் கவனித்திருக்க நியாயமில்லை. கவனித்திருந்தாலும் அவனுக்கு அது புரிந்திருக்காது. "சரி! நீங்கள் என் வீட்டிற்கு வரவிரும்பவில்லை போலிருக்கிறது" - அழகியநம்பியைப் பார்த்துச் சொல்லிவிட்டு விறுட்டென்று திரும்பிச் சென்றுவிட்டாள் பூர்ணா. அவன் ஏதோ பதில் சொல்வதற்காக வாயைத் திறந்தான். ஆனால், அதைக் கேட்பதற்கு அவள் அங்கே நின்று கொண்டிருக்கவில்லை. அவளுடனே வந்திருந்த மற்றொரு பெண் மட்டும் போகிறபோக்கில் அவர்கள் இருவரையும் ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாள்.
"உங்களைப் புத்தர் பெருமான் தான் காப்பாற்றினார். நல்ல வேளை! வந்துதானாக வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்காமல் என்னோடு விட்டுவிட்டுப் போய்விட்டாள்" - பூர்ணாவின் தலை மறைந்ததும் சபாரத்தினம் சிரித்துக் கொண்டே அழகியநம்பியிடம் கூறினார்.
திடீரென்று பூர்ணாவை அங்கே சந்தித்த பதற்றமும், பரபரப்பும் அடங்குவதற்கு அழகியநம்பிக்குச் சில விநாடிகள் ஆயின. ஆழ்ந்த - நல்ல - சுகமான தூக்கத்தில் கெட்ட சொப்பனம் ஒன்று கண்டு விழித்துக் கொண்டது போன்றிருந்தது அவன் நிலை.
சபாரத்தினமும் அவனும் கழனியாவிலிருந்து புறப்படும் போது இருட்டத் தொடங்கிவிட்டது. நீலநிறக் கண்ணாடிக் குழாய்க்குள்ளே போட்ட வெண்ணிற இரசகுண்டுபோல் சுற்றிப்புறம் ஒளி மங்கி இருண்டு கொண்டு வந்தது. கழனியாவின் பௌத்த ஸ்தூபியிலும் ஆலயத்தின் பிற்பகுதிகளிலும் பெரிய பெரிய ஒளி அரும்புகள் குபீர் குபீரென்று வெடித்துப் பூத்தாற் போல மின்சார விளக்குகள் பலவண்ணங் காட்டி எரிந்தன. ஆண்களும், பெண்களுமாக ஆலயத்துக்குள் போவோர் - வருவோர் கூட்டம் அதிகரித்திருந்தது. அந்தச் சமயத்தில் ரோட்டுக்கு வந்து நகரத்துக்குள் செல்வதற்காகப் பஸ் ஏறினர் சபாரத்தினமும், அழகியநம்பியும்.
"நீங்கள் இன்றைக்கு இப்படியே என்னோடு எங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன? இரவுச் சாப்பாட்டை எங்கள் வீட்டில் வைத்துக் கொள்வோம். அங்கேயே படுத்திருந்துவிட்டுக் காலையில் இருவரும் சேர்ந்தே ஒன்றாகக் கடைக்குக் கிளம்பலாமே" - என்றார் சபாரத்தினம்.
"இல்லை! நான் இன்றிரவு கடைக்கே போய்விடுகிறேன். பிரமநாயகம் கூட ஊரில் இல்லை. ஏதோ வியாபார விஷயமாகக் கண்டிக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்" - என்று அவருக்குப் பதில் கூறினான் அழகியநம்பி.
"கழனியாவில் அவளைச் சந்தித்ததிலிருந்தே உங்கள் மனம் சரியாயில்லை போலிருக்கிறது. ஏன் இப்படிச் சோர்ந்து போயிருக்கிறீர்கள். உங்கள் குரல் கேட்பதற்கு என்னவோ போலிருக்கிறதே. நீங்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டிருப்பது நல்லதென்றுதான் சில விவரங்களை உங்களிடம் தெரிவித்தேன். அவைகளை நினைத்துச் சதா வீண் மனக்கலவரமடையாதீர்கள்."
சபாரத்தினம் இப்படிக் கூறியபோது, 'தன்னுடைய அப்போதைய மன நிலையை அவரால் அவ்வளவு விரைவில் எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது?' என்றெண்ணி வியந்தான் அழகியநம்பி.
"சபாரத்தினம்! நீங்கள் கெட்டிக்கார மனிதர்! ஒரே ஒரு விநாடிக்குள் என் மனத்தில் இருப்பதை அப்படியே கண்டு பிடித்துச் சொல்லி விட்டீர்களே? நீங்கள் அனுமானித்துச் சொன்னது சரிதான். இப்போது என் மனநிலை சரியில்லை. நிம்மதியற்றுக் குழப்பமடைந்திருக்கிறது. இன்று இரவு எனக்குச் சாப்பாடு கூட வேண்டியதில்லை. ஆனால், சில மணி நேரச் சிந்தனைக்கு அவகாசம் வேண்டும். தனிமை வேண்டும். இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும். அவ்வளவு குழப்பமடைந்திருக்கிறது என் மனம்."
இதைக் கேட்டுப் பதில் கூறாமல் சிரித்தார் சபாரத்தினம். சிரித்துக் கொண்டே தம்முடைய சட்டைப் பைக்குள் கையைவிட்டு டைரிபோல் ஒரு சிறிய கையடக்கமான புத்தகத்தை வெளியே எடுத்தார். அழகியநம்பி அதைப் பார்த்தான். அது ஒரு திருக்குறள் புத்தகம். சபாரத்தினம் அப்போது அந்தத் திருக்குறள் புத்தகத்தை எதற்காக வெளியில் எடுக்கிறார் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால், சபாரத்தினம் கூறிய சொற்கள் அடுத்த நிமிஷமே அதைப் புரியவைத்தன.
"நண்பரே! குழப்பமோ, கவலையோ ஏற்பட்டால் உங்களைப்போல் தனிமையையும், சிந்தனையையும் தேடி அவற்றை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டேன் நான். அவற்றுக்கு மருந்து இதோ இந்தப் புத்தகத்துக்குள் இருக்கிறது." - என்று சொல்லிக் கொண்டே அதைப் பிரித்து அதில் சிவப்பு மையால் அடியில் கோடிட்ட சில தலைப்புக்களை அழகியநம்பிக்குக் காட்டினார் சபாரத்தினம்.
அவர் காட்டிய தலைப்புகளில் சிலவற்றை மெல்லிய குரலில் வாய் விட்டுப் படித்தான் அவன். "ஊக்கமுடைமை - இடுக்கணழியாமை - ஆள்வினையுடைமை..."
"சபாரத்தினம்! இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் அறிவும், மனத்திட்பமும் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன." - என்று வியப்பு மேலிட்டுக் கூறினான் அழகியநம்பி.
கேட்டுவிட்டுச் சிரித்தார் சபாரத்தினம். "இதில் வியப்புக்கு என்ன இருக்கிறது? அனுபவங்களைப் புரிந்து கொண்டு அவற்றிற்கு ஏற்ற சிந்தனையை வளர்த்தால் மனத்திட்பம் தானே உண்டாகிறது?" - அவருடைய பதில் சுலபமாக இருந்தது.
அதன் பிறகு சிறிது நேரம் பேசிக் கொள்ளாமல் உட்கார்ந்திருந்தனர் இருவரும். பஸ் சென்று கொண்டிருந்தது.
"எங்கள் வீட்டிற்குப் போவதற்கு நான் அடுத்த 'ஸ்டாப்பில்' இறங்க வேண்டும். நீங்களும் என்னோடு வீட்டிற்கு வருவதாயிருந்தால் அங்கேயே இறங்கிவிடலாம். கடைக்குப் போவதாயிருந்தால் இதே பஸ்ஸில் முன்பு நாம் ஏறினோமே அந்த ஸ்டாப்பில் இறங்குங்கள்." - என்று சபாரத்தினம் கூறிக் கொண்டிருக்கும் போதே அவர் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. "நான் கடைக்கே போய்க்கொள்கிறேன். இன்னொரு நாள் கட்டாயம் உங்களுடைய வீட்டுக்கு வருவேன். இப்போது என்னை மன்னித்துவிடுங்கள்." - என்று கெஞ்சும் குரலில் சபாரத்தினத்திடம் வேண்டினான் அழகியநம்பி.
"பரவாயில்லை! உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள், நான் விடைபெற்றுக் கொள்கிறேன். நாம் மறுபடி நாளைக்குச் சந்திக்கலாம்." - என்று சொல்லிவிட்டுச் சபாரத்தினம் இறங்கினார்.
அவரை அங்கே இறக்கி விட்டுவிட்டுப் பஸ் மேலே நகர்ந்தது. வலிமையும், அன்பும் செறிந்த அசைக்க முடியாத துணை ஒன்று அந்த இடத்தில் தன்னை விட்டுப் பிரிந்து கீழே இறங்கி விட்டது போல் ஓருணர்ச்சி அவனுக்கு உண்டாயிற்று.
ஊருக்குப் புதியவனாகையினால் இருட்டில் தான் இறங்க வேண்டிய இடத்தைத் தவற விட்டுவிடக் கூடாதே, என்பதற்காகப் பஸ்ஸிற்கு வெளியே தெருவை அடையாளம் பார்த்துக் கொண்டே வந்தான் அவன். அந்தப் பஸ் ஸ்டாப்பிற்கு இரண்டொரு முறை கடையிலிருந்து வந்துபோய்ப் பழகியிருந்தாலும் இருளில் பல நிற மின்சார விளக்கொளியில் நகரமே ஒவ்வொரு மூலையிலும் - ஒவ்வொரு இடத்திலும் - முற்றிலும் புதிதாக மாறியிருப்பது போல் தோன்றியது. கண்கள் அளவுக்கு மீறின ஒளியாலும், செவிகள் அளவுக்கு மீறின ஒலியாலும், கூசின. இன்னும் சில நாட்கள் ஆனால் வழிகளும், இடங்களும் தெளிவாகப் பழக்கமாகிவிடும்!
அழகியநம்பி பஸ் ஸ்டாப்பை அடையாளம் கண்டுபிடித்து இறங்கி விட்டான். அங்கிருந்து கடைக்குப் போகச் சிறிது தூரம் நடக்க வேண்டும். ஆரவாரமும், வியாபார நெருக்கடியும், மக்கள் கூட்டமும், போக்குவரவுகளும் மிகுந்த பிரதான வீதி அது. முதல் முதலாக அப்போது தான் அந்தப் புதிய நகரத்தின் பெரிய வீதியில் தனியாக நடக்கிறான் அவன். பார்வையில் மிரட்சி, கால்களில் விரைவற்ற தடுமாற்றம், நெஞ்சில் குழப்பம் - இந்த நிலையில் கடையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் அவன். அங்கே - இங்கே சுற்றியலைந்துவிட்டு வீட்டுக்கு அல்லது தங்குமிடத்துக்குப் போகும்போது இருக்கவேண்டிய இயல்பான விரைவு அவனிடம் இல்லை.
கடைவாசலில் நுழைந்து பின்கட்டுக்குப் போகும் போதும் ஏதோ நடைப்பிணம் போவது போலத் தள்ளாடிக் கொண்டே சென்றான் அழகியநம்பி. தான் முன்பு பல நாட்கள் ஒரு பயமுமின்றி விளையாடிக் கொண்டிருந்த ஒரு மரத்தடியில் 'பேய் வாசம் செய்வதாக' யாராவது பெரியவர்கள் கூறக் கேட்டுப் பயமடைந்த பின் மறுமுறை அந்த மரத்ததடிக்குச் செல்லும் போது ஒரு சிறுவனின் மனத்திலிருக்கும் பீதியும் மிரட்சியும் அன்றிரவு அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது அழகியநம்பிக்கு இருந்தன.
பின் கட்டில் பிரமநாயகத்தின் பேச்சுக்குரல் கேட்டது. அவன் அதிர்ச்சியடைந்தான். அவனுடைய மனக்குழப்பம் இரண்டு மடங்காயிற்று. தயங்கித் தயங்கி உள்ளே போய்த் தன் அறைக்கதவை ஓசைப் படாமல் திறந்தான். கண்டிக்குப் போவதாகச் சொன்ன பிரமநாயகம் ஏன் போகவில்லை என்று வியப்படைந்தான். அவர் சமையலறைக்குள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் போலிருக்கிறது! சமையலறைக்குள்ளிருந்து சோமுவின் குரலும், அவர் குரலும் சேர்ந்து வந்த விதத்திலிருந்து இதை அனுமானித்தான்.
தன்னை அவர் பார்த்தால், 'எங்கே போனாய்? எதற்குப் போனாய்? யாரைக் கேட்டுக் கொண்டு போனாய்?...' - என்று கோபித்துக் கொள்வாரோ என அஞ்சினான். அப்போது அவன் மனம் இருந்த நிலையில் அறை விளக்கைக் கூட போட்டுக் கொள்ளத் தோன்றவில்லை அவனுக்கு. இருட்டிலேயே படுக்கையை விரித்துக் கொண்டு அதன்மேல் சாய்ந்தான். தலை ஒரேயடியாகக் கனத்தது. உள்ளே சமையலறையில் பிரமநாயகமும் சோமுவும் பேசிக் கொண்ட பேச்சு அறைக்குள் படுத்துக் கொண்டிருந்த அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
"ஏண்டா சோமு! இந்தப் பையன் அழகியநம்பியை எங்கே இன்னும் காணவில்லை?"
"எங்கே போனாரென்று எனக்குத் தெரியாது முதலாளி. நீங்கள் கண்டிக்குப் போவதாக வெளியில் கிளம்பிப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் இங்கே வந்தார். பலகாரம் - காபி - கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு இந்த யாழ்பாணத்துப் பிள்ளையாண்டான் சபாரத்தினம் இருக்கிறாரே, அவரோடு ஏதோ பேசிக் கொண்டு நின்றார். பிறகு இரண்டு பேருமாக எங்கோ வெளியே போனார்கள். போகும்போது என்னிடம் சொல்லிக் கொள்ளவில்லை."
"போகும்போது எத்தனை மணி இருக்கும்?"
"ஐந்தரை மணிக்குமேலே இருக்கலாம் முதலாளி!"
அறைக்குள்ளே இருட்டில் கண்களை மூடிக்கொண்டு உறங்காமல் படுத்துக் கிடந்த அழகியநம்பி இந்த உரையாடலை முழுதும் கேட்டான்.
பிரமநாயகம் சாப்பிட்டுக் கை கழுவினார். சமையற்காரச் சோமு முன்புறம் கடைக்குள்ளே போய் அவருக்கு வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு கடைக்குள் போவதற்காகத் திரும்பி நகர்ந்தவர் அழகியநம்பியின் அறைக் கதவு திறந்திருப்பதைப் பார்த்துவிட்டார்.
உடனே, "ஏண்டா! சோமு! அந்தப் பையன் வெளியிலே போகும் போது அறைக் கதவைப் பூட்டிக் கொள்ளாமலா போனான்? இப்படிக் கேள்வி முறையில்லாமல் திறந்து கிடக்கிறதே? நீயாவது பார்த்துப் பூட்டியிருக்கக் கூடாதோ?" என்று சோமுவைக் கூப்பிட்டு இரைந்தார்.
"இல்லையே முதலாளீ! அவர் போகும்போது நன்றாகப் பூட்டிக் கொண்டுதானே போனார். நான் பார்த்தேனே!" - என்று பதில் சொல்லிக்கொண்டே சமையலறைக்குள்ளேயிருந்து சோமு வந்தான். வெளியே இவ்வளவு கூத்தும் நடந்த போது அழகியநம்பி சும்மா கண்களை மூடிக் கொண்டு தான் படுத்திருந்தான்.
"பூட்டிவிட்டுப் போயிருந்தால் அவனைத் தவிர வேறு யார் வந்து திறந்திருக்க முடியும்? எங்கே? விளக்கைப் போட்டு உள்ளே போய்ப் பார்!" - என்று பிரமநாயகம் சோமுவுக்கு உத்தரவிட்டார். தானே எழுந்திருந்து விளக்கைப் போட்டுத் தான் வெளியில் போய்த் திரும்பி வந்த விவரத்தைப் பிரமநாயகத்திடம் சொல்லிவிட்டால் என்ன என்று அழகியநம்பிக்குத் தோன்றியது. ஒரு விநாடி அப்படியே செய்து விடலாமென்று எழுந்திருக்கக் கூட முற்பட்டுவிட்டான். 'பிரமநாயகத்தின் முகத்தில் விழிக்க வேண்டுமே! அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமே!' - என்று பயமும் மலைப்பும் எழுந்த போது தன் எண்ணத்தைக் கைவிட்டான். பேசாமல் தூங்குவது போல் கண்களை மூடிக் கொண்டு அப்படியே படுத்திருந்தான்.
சமையல்காரச் சோமு உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டான். பிரமநாயகம் அவனைத் தொடர்ந்து அறைக்குள் வந்தார். "அடேடே! எப்போது வந்து படுத்துக் கொண்டார்? எனக்குத் தெரியாதே?" - என்று உள்ளே படுத்துக் கொண்டிருந்த அழகியநம்பியைப் பார்த்து வியப்புடன் பிரமநாயகத்திடம் கூறினான் சோமு.
"சாப்பிட்டாயிற்றோ; இல்லையோ?"
"இங்கே சாப்பிடவில்லை, சாப்பிட வருவார் என்று இவருக்கும் சேர்த்துத்தான் சமைத்து வைத்திருக்கிறேன். வெளியே எங்காவது சாப்பிட்டுவிட்டு வந்தாரோ, என்னவோ?" -
"போர்வையை விலக்கி உடம்பைத் தொட்டுப் பார் அப்பா! படுத்திருக்கிற விதத்தைப் பார்த்தால் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. உடம்புக்கு ஏதாவது..." பிரமநாயகம் பரபரப்படைந்து கூறினார்.
சோமு அப்படியே செய்து பார்த்துவிட்டு, "அதெல்லாம் ஒன்றுமில்லை. சும்மாதான் படுத்திருக்கிறார். சுற்றித் திரிந்த அலுப்புப் போலிருக்கிறது. படுத்த உடனே நன்றாகத் தூங்கி விட்டார்." - என்றான். "ஏ அப்பா! அழகியநம்பி! எழுந்திரு..." - என்று எழுப்பினார் பிரமநாயகம். அழகியநம்பி அசையவே இல்லை. நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருப்பது போலச் சாதித்து விட்டான். "நல்ல தூக்கம் தன்னை மறந்து தூங்குகிறார்." - என்றான் சோமு. "சரி! நான் கடைக்குள்ளே போகிறேன். கொஞ்சம் வரவுக் கணக்குகளைச் சரிபார்க்க வேண்டியிருக்கிறது. பையனை எழுப்பிச் சாப்பாடு போடு. சாப்பிட்டதும் அங்கே என்னிடம் அனுப்பு." - என்று சொல்லிவிட்டுக் கடைக்குள் சென்றார் பிரமநாயகம்.
அவர் போனதும் சோமு அழகியநம்பியை எழுப்ப முயன்றான். பிரமநாயகம் தொட்டுத் தட்டி இரைந்து எழுப்ப முயற்சி செய்தும் அசைந்து கொடுக்காமல் படுத்திருந்த அழகியநம்பி, சோமு மெல்ல ஒரு குரல் கூப்பிட்டதுமே படுக்கையில் துள்ளி எழுந்து உட்கார்ந்தான்.
"நன்றாகத் தூங்கி விட்டீர்களோ? எப்போது வந்தீர்கள்? நீங்கள் வந்ததே எனக்குத் தெரியாது. ஐயா விசாரித்தார்கள். இப்போது சிறிது நேரத்திற்கு முன் கூட இங்கே வந்து உங்களை எழுப்பினார்கள். நீங்கள் எழுந்திருக்கவில்லை. எழுந்திருந்ததும் சாப்பாட்டைப் போட்டு அங்கே கடைக்குள் வரச் சொல்லி அனுப்புமாறு கூறிவிட்டுப் போயிருக்கிறார்கள்." - என்றான் சோமு.
"சோமு! எனக்குப் பசி இல்லை, நீ போய்ச் சாப்பிடு. எனக்கு உடம்பு ஒரு மாதிரி இருக்கிறது. நிம்மதியாகத் தூங்க வேண்டும்." - என்றான் அழகியநம்பி.
"என்ன செய்கிறதென்று சொன்னீர்களானால் கைப்பக்குவமாக ஏதாவது மருந்து செய்து கொடுப்பேன். அரத்தைக் கஷாயம், இஞ்சி மருந்து ஏதாவது..."
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். வெறும் அலுப்புத்தான். தூங்கினா தீர்ந்து போகும். நீ ஐயாவிடம் சொல்லி விடு!" - என்றான் அழகியநம்பி. நொடித்தவன் மேல் நொடித்தவன் தான் அனுதாபம் காட்டுகிறான். அந்த ஏழைச் சமையற்காரன் கைப்பக்குவமாக மருந்து செய்து கொடுக்கிறேன் என்று சொன்னபோது, அந்த உண்மை அனுதாபத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது அவனுக்கு. அதே சமயத்தில் பெருமையாகவும் இருந்தது. "நன்றாகத் தூங்குங்கள்! நான் ஐயாவிடம் சொல்லி விடுகிறேன்" - என்று கூறி விளக்கை அணைத்து விட்டுப் போனான் சோமு. நிம்மதியை நாடியது அவன் உடல். சிந்தனையை நாடியது உள்ளம். அவற்றின் முரண்பட்ட போராட்டம் தூக்கத்தை வரவிடவில்லை.
கடைக்குள்ளிருந்த சுவர்க்கடிகாரம் மூன்று மணி அடித்தது. இரவின் அமைதியில் அறைக்குள் கரையில் இழுத்துப் போட்ட மீனைப் போலத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த அழகியநம்பிக்கு அந்த ஓசை தெளிவாகக் கேட்டது. கண் இமைகள் கனத்தன. கை கால்களைச் சித்திரவதை செய்வது போல் வலித்தது.
எத்தனையோ சிந்தனைகள், எத்தனையோ குழப்பமான எண்ணங்கள், சபாரத்தினத்தைச் சந்தித்ததிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள் - ஒவ்வொன்றாக வரிசையாக அவன் மனத்தில் சினிமாப் படம் போல ஓடின. மூன்று மணி வரை அவனைத் தூங்க விடாமல் துன்புறுத்திய பொறுப்பு, மனத்தையும், எண்ணங்களையும் சேரும்.
மணி மூன்றடித்த பின் அவனுடைய கண்கள் அயர்ந்தன. அவனையறியாமலே தூக்கத்தின் இனிய கைகள் அவனைத் தழுவின. விடிகாலை நேரத்தின் குளிர்ந்த காற்று அறைக்குள் புகுந்து வீசியது. அழகியநம்பி போர்வையை இழுத்து விட்டுக் கொண்டான்.
அலுப்பிலும், சோர்விலும், துவண்டு போயிருந்த உடல் நல்ல - இனிய - தூக்கத்தில் சிக்கி நினைவிழந்தது.
நடுத்தெருவில் இரவு ஒரு மணிக்கு அவன் தலைதெறிக்க ஓடுகிறான்! இரண்டு முரட்டு சிங்கள ஆட்கள், கையில் பளபளவென்று மின்னும் பிச்சுவாக் கத்தியோடு அவனைத் துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்கள். அவர்களுடைய குரூரமான கண்களில் கொலைவெறி மின்னுகிறது.
"பூர்ணாவுக்கு எதிரியாகவா வந்து முளைத்திருக்கிறாய்? இரு! உன்னைத் தீர்த்துக் கட்டிவிடுகிறோம்," - என்று கூச்சலிட்டுக் கொண்டே கத்தியை ஓங்கிக் கொண்டு பாய்ந்து வருகிறார்கள் அந்த முரடர்கள்.
எதிரே ஒரு பெரிய மாடி வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு இந்தக் காட்சியைக் கண்டு இராட்சஸி போல் கை கொட்டிச் சிரிக்கிறாள் பூர்ணா. இரண்டு முரடர்களும் அழகியநம்பியை நெருங்கிவிட்டார்கள். அவனால் ஓட முடியவில்லை. மூச்சு இரைத்தது. அடிக்கால்களில் இரத்தம் கட்டிக் கொண்டு 'விண் விண்' - என்று வலித்தது. 'ஐயோ' என்று அலறிக் கொண்டே அறுந்து விழும் கொடிபோல் கீழே சாய்ந்தான் அவன். அந்த முரடர்கள் பக்கத்துக்கு ஒருவராக வந்து குனிந்து கத்தியை நீட்டுகிறார்கள்.
"சொல் இப்போதாவது சொல்; பூர்ணாவின் வழிக்கு வருகிறாயா? இல்லாவிட்டால் இப்படியே, இப்போதே, இந்த நடுத்தெருவில் நீ கொலை செய்யப்படுவாய்," - அவர்கள் அரட்டிக் கேட்கிறார்கள். அவன் மிரண்டு போய்ப் பரக்கப் பரக்க விழித்துக் கொண்டே நிமிர்ந்து பார்க்கிறான். பூர்ணா அகன்ற கரிய, பெரிய தன் கண்களைச் சுழற்றிக் கேலியாக அவனைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்துக் கொண்டு நிற்கிறாள். "என்ன? இப்போது தெரிகிறதா என் சக்தி? கொடுமைகளின் - சூழ்ச்சிகளின் உலகத்துக்கு நான் தான் சர்வாதிகாரி. என் வழிக்கு வந்தவர்களை, - எனக்குக் கீழ் என் விருப்பத்துக்கு அடங்கியவர்களை மட்டும் தான் நான் துன்புறுத்தாமல் விட்டு வைப்பேன்." - அந்தக் கொடுமைக்காரி இறுமாப்புடன் நிமிர்ந்து கொண்டு அலட்சியச் சிரிப்போடு அவனிடம் கூறினாள். அந்தச் சிரிப்பு! அவற்றைச் செய்யும் வரிசையான வெண்ணிறப் பற்கள் - அப்படியே தாவி எழுந்திருந்து அவளுடைய ஆட்கள் தன்னைக் கொல்லுமுன் அவற்றை உடைத்து விட வேண்டும் போல் துடித்தன அவன் கைகள்.
"சரி! இவன் நம் வழிக்கு வரமாட்டான். இவனை இப்போதே தீர்த்துக்கட்டி விடுங்கள்." - அவள் அவர்களுக்கு உத்தரவிடுகிறாள். கத்தி அவன் நெஞ்சுக்குழியை நெருங்குகிறது.
'வீல்...' என்று அலறிக்கொண்டே கண்களை இறுக்கி மூடிக்கொள்கிறான் அவன்.
"தம்பி! தம்பி! இதென்ன; சொப்பனமா?" - யாரோ தட்டி எழுப்பினார்கள். அறைக்குள் விளக்கு எரிந்தது. அழகியநம்பி வாரிச் சுருட்டிக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்திருந்தான். கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு பார்த்தான். சமையற்காரச் சோமு படுக்கைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அறை வாசலில் பிரமநாயகம் பிரஷ்ஷில் பல் தேய்ப்பதற்காகப் பசையை ஊற்றிக் கொண்டிருந்தார். விடிவதற்கு இன்னும் சிறிது நேரமே இருக்கும் என்று தோன்றியது. கடிகாரத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தான். மணி ஐந்தரை ஆகியிருந்தது.
"என்ன தம்பி! சொப்பனம் கண்டீர்களா? எவ்வளவு பெரிதாக அலறிவிட்டீர்கள்; என்னமோ, ஏதோ என்று பயந்து நடுங்கிப் போய் ஓடி வந்தேன்" - என்றான் சோமு. அழகியநம்பிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. "பச்சைக் குழந்தை பார்! அதனால் தான் சொப்பனத்தில் வாய் உளறுகிறது. இவன் போட்ட கூச்சலைக் கேட்டுவிட்டுத் தெருவில் போய்க் கொண்டிருந்த ரோந்து போலீஸ்காரன் எவனாவது கடைக்குள் கொலையோ, கொள்ளையோ - என்று ஓடிவராமலிருக்க வேண்டுமே! என்று எனக்குப் பயமாகப் போய்விட்டது." - பிரமநாயகம் கேலியாக இப்படிச் சொன்னார். தான் கண்ட கனவை அப்போது நினைத்தாலும் அழகியநம்பிக்கு மயிர்க்கால்கள் சிலிரித்து நின்றன. ஓட்டம் நின்று இரத்தம் உடலில் அங்கங்கே உறைந்து விடும் போலிருந்தது.
'அப்பப்பா! என்ன பயங்கரமான கனவு?' - அழகியநம்பி படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு எழுந்திருந்தான். பிரமநாயகம் பல் விளக்குவதற்காகக் குழாயடிக்குப் போனார்.
அழகியநம்பி சோமுவுக்குப் பக்கத்தில் சென்று, "முதலாளி கண்டிக்குப் போவதாக நேற்றுச் சாயங்காலம் என்னிடம் கூறினாரே; ஏன் போகவில்லை?" - என்று காதருகில் மெல்லக் கேட்டான்.
"ஐயா யாரைப் பார்ப்பதற்காகப் போகவேண்டுமென்று இருந்தார்களோ, அவர் நாளைக் காலையில் புறப்பட்டு இங்கேயே வருவதாகத் தந்தி கொடுத்து விட்டாராம்." - என்றான் சோமு.
"சோமு! தூக்கத்தில் இரைந்து உளறிவிட்டேனா?" அசடு வழியச் சிரித்துக் கொண்டே மெதுவான குரலில் அழகியநம்பி கேட்டான். "உளறலா? அதையேன் கேட்கிறீர்கள்? நாலரை மணியிலிருந்து ஐந்தரை மணிக்குள் இரண்டு முன்று தடவை அலறி விட்டீர்கள். நானும் முதலாளியும் இல்லாததெல்லாம் நினைத்துப் பயந்து போய் விட்டோம்." - என்றான் சோமு.
முதல் நாள் சாயங்காலம் தான் வெளியில் சென்று சபாரத்தினத்தோடு சுற்றிவிட்டுத் திரும்பியது பற்றிப் பிரமநாயகம் தன்னிடம் நேரில் ஏதாவது கேட்பார் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அதுபற்றி அவர் அவனிடம் ஒன்றுமே கேட்கவில்லை.
குளித்துச் சாப்பிட்டு அலுவலகச் சாவியை எடுத்துக் கொண்டு அவன் புறப்பட்ட போது மணி ஒன்பதரை. அதற்கிடையில் நான்கு மணி நேரத்தில் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவில்லை. அறைச் சாவியை எடுத்துக் கொண்டு கடைக்குள் அவன் புறப்பட்ட போது பிரமநாயகம் அவனைத் தனியாக ஒரு மூலைக்கு அழைத்துக் கொண்டு போய், "இதோ பார்! உன்னிடம் ஒரு செய்தி சொல்லவேண்டுமென்று நேற்றே நினைத்துக் கொண்டிருந்தேன். சொல்ல மறந்துவிட்டேன். பூர்ணா கூப்பிட்டாள் என்று அவள் வீட்டிற்கோ, வேறெங்காவதோ அவளோடு நீ போகவேண்டாம். சினிமாவுக்கு, கடற்கரைக்கு, விருந்துக்கு அங்கே - இங்கே என்று எதற்காவது கூப்பிட்டுக் கொண்டே இருப்பாள். நீ போகக்கூடாது. போனால் உனக்குத்தான் ஆபத்து. கத்தி நுனியில் நடப்பதைப் போல எண்ணிக்கொண்டு அவளிடம் மிகவும் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும் நீ." - என்று இரகசியமாக எச்சரித்தார்.
முதல் நாள் மாலை தான் வெளியே போய்ச் சுற்றிவிட்டு வந்ததைப் பற்றி அவர் மனத்தில் ஏதோ சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை தான் பூர்ணாவின் வீட்டிற்கே போயிருந்தாலும் போயிருக்கலாம், - என்று அவர் சந்தேகப்படுகிறார். அதனால் தான் தன்னை இரகசியமாகக் கூப்பிட்டு எச்சரித்திருக்கிறார் என்று அவனுக்குத் தோன்றியது. சபாரத்தினத்தின் எச்சரிக்கைக்கும், அவருடைய எச்சரிக்கைக்கும் ஒரு விதத்தில் ஒற்றுமை இருப்பதைக் கூட அவன் சிந்தித்தான். பூர்ணாவின் பிடியில் அயர்ந்து மறந்தும் அவன் சிக்கிவிடலாகாது என்பதை இருவருடைய எச்சரிக்கையும் வற்புறுத்தின. மற்றவர்கள் பயப்பட்டே தீரவேண்டிய ஏதோ சில அம்சங்கள் அந்தப் பெண் பூர்ணாவிடம் இருக்க வேண்டுமென்ற பயம் அழகியநம்பியின் மனத்தில் உறுதிப்பட்டது.
ஒன்பது அடித்து முப்பத்தைந்து நிமிடங்களுக்கெல்லாம் அலுவலக அறைக்குள் தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டு விட்டான் அழகியநம்பி. முதல் நாள் அந்த இடத்தில் உட்கார்ந்த போது இருந்த தெம்பும், நம்பிக்கையும் அப்போது அவன் மனத்தில் இல்லை. மாறாக குழப்பமும், அச்சமுமே வளர்ந்திருந்தன.
பத்தேகால் மணிக்குப் பூர்ணா வந்தாள். அவன் எழுந்திருந்து வணங்கினான். அவள் அதைக் கவனிக்காதது போல் தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவள் வீட்டுக்கு வராமல் ஏமாற்றிவிட்டுச் சபாரத்தினத்தோடு கழனியாவுக்குப் போனது பற்றித் தன்னைத் திட்டுவாள், அதட்டுவாள் என்று அழகியநம்பி எதிர்பார்த்தான்.
ஆனால், அவள் அவனோடு கலகலப்பாகவோ, சாதாரணமாகவோ பேசவே இல்லை. அதிகாரம் செய்ய வேண்டிய சமயங்களில் அதட்டிக் கூப்பிட்டு அதிகாரம் செய்தாள். ஹோட்டலுக்குப் போய் டீ வாங்கி வர ஏவினாள். தபாலாபீசுக்குப் போய் 'ஸ்டாம்ப்' வாங்கிவரச் சொன்னாள். 'மேசை மேல் ஒரே தூசியாயிருக்கிறதே, இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா?' - என்று கூப்பாடு போட்டு இரைந்து அவனைத் துடைக்கச் செய்தாள்.
வழக்கம் போல் மூன்று மணியானதும் போய்விட்டாள். இப்படியே ஒரு விசேஷமும் இல்லாமல் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கழிந்தன. அழகியநம்பி பத்தேகால் மணியிலிருந்து மூன்று மணி வரை பூர்ணா என்ற பயங்கரமான அதிகார சக்தியின் ஏவலாளாகவும், மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை பிரமநாயகத்தின் உண்மை ஊழியனாகவும் நாட்களைக் கடத்தினான். அந்தச் சில நாட்களில் பூர்ணாவின் மௌனமும், தன்னிடம் கடுகடுப்பாகப் பேசி அதட்டி அதிகாரம் செய்கின்ற பண்பும் பயத்தை உண்டாக்கியிருந்தன அவனுக்கு. தாக்குவதற்காகப் பின் வாங்கி ஒதுங்கும் ஆட்டுக்கிடாயின் நினைவுதான் பூர்ணாவைக் காணும் போதெல்லாம் அவனுக்கு உண்டாயிற்று.
நான்காவது நாள் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்தன. அன்று மாலை பூர்ணாவிடம் அவன் கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டுவிட்டான். அதே தினம் காலையில் அவன் மனம் பெரிதும் கலக்கமடைவதற்குக் காரணமான இன்னொரு நிகழ்ச்சியும் நடந்திருந்தது.
காலையில் தபால்காரன் கடைக்குள் வந்து கடிதங்களைக் கொடுக்கும் போது பூர்ணா வந்திருக்கவில்லை. பிரமநாயகம் பின் கட்டில் கண்டியிலிருந்து வந்திருந்த வியாபார நண்பரொருவரோடு பேசிக் கொண்டிருந்தார். எல்லாக் கடிதங்களையும் அழகியநம்பிதான் தபால்காரனிடமிருந்து வாங்கினான். பிரமநாயகத்தின் பெயருக்கு வந்திருந்த சொந்தக் கடிதங்களை ஒரு ஆள் மூலம் பின் கட்டில் அவரிடம் கொண்டு போய்க் கொடுக்கும்படி அனுப்பிவிட்டான். மற்றவற்றில் வியாபார சம்பந்தமாகக் கடைக்கு வந்திருந்த பொதுக் கடிதங்களைத் தவிர அழகியநம்பியின் பெயருக்கு நான்கு கடிதங்கள் வந்திருந்தன. அவற்றைத் தனியே பிரித்தெடுத்துத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு எஞ்சிய கடிதங்களைப் பூர்ணாவின் மேசை மேலே கொண்டு போய் வைத்தான்.
பின்பு தன் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு தனக்கு வந்த கடிதங்களை ஆவலோடு ஒவ்வொன்றாகப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான்.
முதல் கடிதம் அவன் தாய் ஊரிலிருந்து எழுதியிருந்தாள். தாய்க்கு எழுதத் தெரியாது. அவள் சொல்லக் கேட்டு வள்ளியம்மை எழுதியிருப்பாள் என்று அவன் புரிந்து கொண்டான்.
அவன் கொழும்பு போய்ச் சேர்ந்ததும் எழுதிய கடிதம் கிடைத்ததென்றும், தென்காசியிலிருந்து முருகேசன் கடிதம் எழுதியிருந்தானென்றும், தொடங்கிப் பன்னீர்ச்செல்வம் வட்டிப்பணம் தரச்சொல்லி மிரட்டியதையும், காந்திமதி ஆச்சியின் உதவியால் வட்டிப்பணம் கொடுத்து வரவு வைத்து விட்டதையும், விவரித்திருந்தாள். 'வீட்டு நிலைமை மிகவும் கஷ்டமாக இருக்கிறது. விரைவில் நீ ஏதாவது கொஞ்சம் பணம் அனுப்பினால் தான் நல்லது. இதெல்லாம் நான் எழுதித் தான் உனக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. நீ குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளை. உன் தந்தை ஆயிரக்கணக்கில் கடன் வைத்து விட்டுப் போயிருக்கிறார். அவ்வளவையும் நீ தலையெடுத்துத் தான் அடைக்க வேண்டும். கலியாணத்துக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்பதையும் மறந்துவிடாதே. மாதா மாதம் எங்களுக்கு வீட்டுச் செலவுக்கு அனுப்ப வேண்டியதை அனுப்பு. சிக்கனமாக இருந்து நாலுகாசு மீதம் பிடித்து கடன்களை அடைப்பதற்கும் ஏதாவது சேர்த்து வைத்தால் தான் நல்லது.
'உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள். புது இடம். புது தேசம். கடலைக் கடந்து போயிருக்கிறாய். எது ஒத்துக் கொள்ளுமோ? எது ஒத்துக் கொள்ளாதோ? கண்ட தண்ணீரில் குளித்துக் கண்டதைச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே! அடிக்கடி கடிதம் எழுது' - என்று கடிதத்தை முடித்திருந்தாள் அவன் அன்னை.
இரண்டாவது கடிதத்தைப் பிரித்தான். அது காந்திமதி ஆச்சியிடமிருந்து வந்திருந்தது. நாய்க்காலும், பூனைக்காலும் போலச் சிறிதும் பெரிதுமான எழுத்துக்களால் கோமு எழுதியிருந்தாள்.
அவன் தாய்க்குத் தான் பண உதவி செய்ததைக் குறிப்பிட்டுவிட்டுப் பொதுவாக எழுதியிருந்தாள் காந்திமதி ஆச்சி.
கடிதத்தின் ஒரு ஓரத்தில், 'அழகியநம்பி மாமாவுக்குக் கோமு எழுதிக்கொள்வது - அக்காவுக்கும், எனக்கும் சதா உங்கள் நினைவாகவே இருக்கிறது. மறுபடி உங்களை எப்போது பார்க்கப் போகிறோம்; என்று ஆசையாக இருக்கிறது,' என்று கிறுக்கியிருந்தாள்.
ஆச்சிக்குத் தெரியாமல் தபாலாபீஸில் கொண்டு போய்ப் பெட்டிக்குள் போடுவதற்கு முன்னால் கோமு தானாகவே அந்தச் சில வரிகளைக் கிறுக்கியிருக்க வேண்டுமென்று அழகியநம்பிக்குத் தோன்றியது. 'கோமுவாகவே எழுதினாளா? அல்லது பகவதி எழுதச் சொல்லித் தூண்டினாலா?' - இந்தச் சந்தேகம் உண்டான போது அழகியநம்பியின் உடலில் ஒரு இன்பகரமான புல்லரிப்பு மெல்லப் பரவியது. வயதுக்கு வயது அன்பும், அன்பைத் தெரிவிக்கும் முறையும் வித்தியாசப்படுவதை அவன் சிந்தித்து வியந்தான்.
மூன்றாவது கடிதத்தைப் படிப்பதற்காக அவன் பிரிக்கத் தொடங்கியபோது பூர்ணா உள்ளே நுழைந்தாள். அவளுக்கு யார் மேல் என்ன கோபமோ, 'ஸ்பிரிங்' கதவைப் படீரென்று இழுத்து விட்டுக் கொண்டு வந்தாள். அழகியநம்பி அவளுக்கு மரியாதை செய்யும் பாவனையில் ஒருவிநாடி எழுந்து நின்றுவிட்டு மறுபடியும் உட்கார்ந்து முருகேசனின் கடிதத்தில் மூழ்கினான்.
தென்காசி. .... 'அன்புமிக்க நண்பன் அழகியநம்பிக்கு முருகேசன் வணக்கம். நீ குறிஞ்சியூரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன் குறிஞ்சியூருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இன்று நீ கொழும்பிலிருந்து எனக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்த பின்பு தான் நீ எங்கேயிருக்கிறாய் என்பது தெரிந்தது. உன் விருப்பப்படியே இன்று நம்முடைய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் உன் விலாச மாறுதலையும் - நீ இலங்கைக்கு போயிருப்பததயும் விவரமாக எழுதி விட்டேன்.' 'பரீட்சை முடிந்ததும் விடுமுறைக்குப் பின் நம் பக்கத்து ஊர்களிலேயே ஏதாவது வேலைக்கு முயற்சி செய்யலா மென்றிருக்கிறேன். நீ பக்கத்தில் இல்லாமல் வெகு தொலைவிற்குப் போய்விட்டாய். எனக்கு என்னவோ போல இருக்கிறது. இந்த வருஷ கோடை நாட்களைக் கழிப்பதற்கு நம் நண்பர்கள் ஒரு அருமையான திட்டம் போட்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு மாதத்திற்கு மேல் எல்லோரும் ஒன்றாகக் குற்றாலத்தில் தங்கி இந்தப் பக்கத்து மலைத் தொடர்களில் ஒவ்வோரிடமும் சுற்றிப் பார்க்க போகிறோம். இப்போதிருந்தே நான் அதற்கான ஏற்பாடுகளை இங்கே செய்வதற்குத் தொடங்கி விட்டேன். குற்றாலத்தில் ஒரு மாத்திற்குத் தங்கும்படியாக ஒரு வீடு வாடகைக்குப் பார்த்திருக்கிறேன். இந்த நல்ல சமயத்தில் நீ இங்கு இல்லையே; என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. மேற்கு மலைத் தொடர்களில் எல்லையின்றிப் பரவிக் கிடக்கும் இயற்கையின் கோலாகலமான வாழ்க்கையைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நீ எத்தனை முறை கூறியிருக்கிறாய்? அழகியநம்பி! நீ நாற்புறமும் மலைகளால் சூழப்பெற்ற ஒரு ஊரில் பிறந்து வளர்ந்தவனானாலும் மலைகளில் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உனக்குக் குறையவில்லை. இதை நினைத்து நான் எத்தனையோமுறை வியப்படைந்திருக்கிறேன்.' 'ஆரியங்காவுக் கணவாய், அச்சன் கோவில்மலை, பச்சை மலை, பாலூற்று - ஒரு நாளைக்கு ஒரு இடமாக இப்படி எத்தனையோ இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டம் போட்டிருக்கிறோம். ஆனால், நீ இப்போது இங்கே இல்லை...'
-இன்னும் என்னென்னவோ சுற்றி வளைத்து ஒரு பெரிய தொடர் கதையையே கடிதமாக எழுதியிருந்தான் முருகேசன். அதை முழுதும் படித்து முடிச்சுவிடாது பூர்ணாவின் அதிகாரக் குரல் கடுமையாக ஒலித்து அவனை அழைத்தது.
"இதோ! இந்தக் கடிதத்தை டைப் செய்யுங்கள். ஐந்தே நிமிஷங்களில் கடிதம் என் கைக்கு வரவேண்டும்." - தனக்கு வந்த கடிதங்களை மடித்துச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு அவள் கொடுத்த கடிதத்தை டைப் செய்வதற்காக அதை வாங்கிக் கொண்டு டைப்ரைட்டருக்கு முன்னால் போய் உட்கார்ந்தான்.
அவ்வளவிற்கும் அவள் கொடுத்த அந்தக் கடிதம் கடை வியாபார சம்பந்தமானதோ, ஆபீஸ் தொடர்புடைய அவசரக் கடிதமோ அல்ல. அவள் தன்னுடைய சிநேகிதகளில் எவளோ ஒருத்திக்கு எழுதிய கடிதம். இரண்டு பக்கத்துக்கு மேல் வழவழவென்று எழுதியிருந்தாள். அதை டைப் செய்து அவளிடம் கொடுக்கக் கால் மணி நேரம் ஆயிற்று.
மீண்டும் தன் நாற்காலியில் உட்கார்ந்து கடிதங்களைப் பையிலிருந்து எடுத்தான். அதுவரை பிரிக்காமல் இருந்த நான்காவது கடிதத்தின் உரை மேலாக அவன் கைக்கு வந்தது. 'அது யாரிடமிருந்து வந்திருக்கும்?' - என்று அடக்க முடியாத ஆவலோடு பிரித்துப் பார்த்தான்.
அந்த உறையைப் பிரித்துக் கடிதத்தைப் படித்ததும் அவனுக்குத் தலை சுற்றியது. நெஞ்சில் திகில் புகுந்தது. ஒரு பெரிய வெள்ளைக் காகிதத்தில் நட்ட நடுவில் நல்ல சிவப்புமையால் 'பளிச்சென்று' - தெரியும் படியாக இரண்டு மூன்று வரிகள் எழுதப்பட்டிருந்தன.
"அற்பனே! வேறு நாட்டிலிருந்து பிழைப்பதற்காக வந்திருக்கும் நீ பூர்ணாவின் வழிகளை எதிர்த்து அநாவசியமாகக் குறுக்கிடாதே!... இந்த எச்சரிக்கையை மீறினால் உயிரோடு தாய்நாட்டுக்குத் திரும்பிப் போக மாட்டாய்." -
அதில் எழுதியிருந்தது இவ்வளவுதான். கடிதத்தின் மேலேயோ, கீழேயோ, எழுதியவரின் முகவரியோ, கையெழுத்தோ இல்லை. முன்னும், பின்னும், தொடங்குதலோ, முடிவோ இல்லாமல் மொட்டையாக ஒரு எச்சரிக்கை வாசகம் போலிருந்தது கடிதம். அழகியநம்பி கலக்கமடைந்தான். அதே சமயத்தில் அவனுக்கு ஆத்திரமும் உண்டாயிற்று. 'எங்கிருந்து யாரால் போஸ்ட் செய்யப் பட்டிருக்கிறது?' - என்பதற்குக் 'கடிதத்தின் உறைமேல் ஏதாவது அடையாள மிருக்கிறதா?' - என்று உறையைக் கையிலெடுத்துப் புரட்டினான்.
'முதல்நாள் மாலை கொழும்பு ஜெனரல் போஸ்டபீஸில் போஸ்ட் செய்யப்பட்ட கடிதம்' - என்பதைக் குறிக்கும் தபால் முத்திரையைத் தவிர வேறெந்த அடையாளமும் உறையின் மேல் இல்லை. திடீரென்று மனக்குழப்பத்தினாலும், அச்சத்தினாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவன் உள்ளம் உணர்ச்சி மயமாக மாறியது. கொதிப்பும், கோபமும் நெஞ்சில் குமுறின. ஆண்பிள்ளையின் தன்மானத்தைச் செயலில் காட்டிவிடத் துடித்தன அவன் கைகள். நேரே பூர்ணாவுக்கு முன்னால் போய் நின்று கொண்டு அந்தக் கடிதத்தை அவள் முகத்தில் வீசி எறிந்து, "இது யார் எழுதியது? யாரை விட்டு எழுதச் சொன்னாய்? சொல்லுகிறாயா? உன் கன்னத்தில் அறையட்டுமா?" - என்று கேட்க வேண்டும் போலிருந்தது. நிதானமும், தன்னைப் பயந்த சிந்தனையும் அவனுடைய உணர்ச்சித் துடிப்பைச் சிறிது சிறிதாக அடக்கி அமைதியடையச் செய்தன. எல்லோரையும் போல அவளும் ஒரு பெண்பிள்ளையாக - சாதாரண வெறும் பெண் பிள்ளையாக மட்டும் இருந்துவிட்டால் அழகியநம்பி தன் கோபத்தை வெளிக்காட்டி உண்மையை அவளிடமிருந்து வரவைத்து விடலாம். ஆனால், அவள் தான் சாதாரணமான பெண் இல்லையே!
அழகியநம்பி தன்னை - தன் உணர்ச்சிகளை நிதானமிழந்து விடாமல் காப்பாற்றிக் கொண்டுவிட்டான். 'சாயங்காலம் சபாரத்தினத்திடம் தனியே அந்தக் கடிதத்தைக் காட்டி அவனுடைய ஆலோசனையைக் கேட்டுக் கொண்டு மேலே என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம்' - என்று தீர்மானித்துக் கொண்டவனாய்க் கடிதத்தை மடித்துப் பைக்குள் போட்டான்.
பின்பு, ஒரு மாறுதலுக்கும் ஆளாகாமல் சுபாவமாகத் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான். வழக்கம் போல் பூர்ணா அவனை ஏவினாள். அதிகாரம் செய்தாள். அங்கே இங்கே போகச் சொல்லித் துரத்தினாள். பொறுமையுடனே சிரித்துக் கொண்டே அவைகளைச் செய்தான் அவன்.
வழக்கமாக மூன்று மணிக்கு அலுவலகத்தை விட்டுக் கிளம்பும் பூர்ணா, அன்று இரண்டரை மணிக்கே புறப்பட்டு விட்டாள். அவள் போவதைப் பார்த்து அவனாகத் தெரிந்து கொள்வானேயொழிய, போகும்போது அவனிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டோ, விடைபெற்றுக் கொண்டோ போகிற வழக்கம் அவளிடம் இல்லை. அன்று மாலை சபாரத்தினத்தைச் சந்தித்துத் தனியாகப் பேசவேண்டும் என்று அவன் எண்ணியிருந்ததால் சிக்கிரமே தன் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியேறக் கருதினான் அவன்.
பூர்ணாவின் நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டு அவள் செய்துவிட்டுச் சென்றிருந்த வேலைகளை ஒவ்வொன்றாகச் சரி பார்த்தான் அவன். கடிதங்கள், லெட்ஜர்கள், பைல்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும் போல இருந்தது. அவன் பொறுமையாகக் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். மூன்றே முக்கால் மணிக்கு 'ஸ்பிரிங்' கதவி ஓசைப்பட்டது. நாற்காலியில் உட்கார்ந்தபடியே யாரென்று நிமிர்ந்து பார்த்தான். பூர்ணா நுழைந்ததைக் கண்டதும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கையும் களவுமாக அவளுக்கு முன்னால் அகப்பட்டுக் கொண்டான் அவன்.
அழகியநம்பி ஒரேயடியாக அதிர்ச்சியடைந்து போனான். பூர்ணா திரும்ப வருவாள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் அவ்வளவு துணிவாக அவளுடைய நாற்காலியில் போய் உட்கார்ந்து பைல்களையும், கடிதங்களையும் புரட்டியிருக்க மாட்டான். ஆசிரியர் வராத சமயத்தில் அவர் உட்காரும் நாற்காலியில் ஒரு பையன் அவரைப் போலவே கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து அவர் மேசை மேல் வைத்துவிட்டுப் போயிருந்த மூக்குக் கண்ணாடியையும் தலைப்பாகையையும் எடுத்து அணிந்து கொண்டு அவருடைய பிரம்பைக் கையில் எடுத்து அவரைப் போலவே நடித்துக் கோணங்கி செய்யும் சமயத்தில் ஆசிரியர் திடீரென்று வகுப்புக்குள் நுழைந்து பார்த்து விட்டால் பையனுக்கு எப்படியிருக்கும்?
எதிர்பாராத விதமாகப் பூர்ணா திடீரென்று அறைக்குள் நுழைந்த போது அழகியநம்பி இதே நிலையை அடைந்தான். அந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்கவும் தோன்றாமல், உட்காரவும் தோன்றாமல் தத்தளித்தான் அவன்.
'பூர்ணா தன்னை அருகில் வந்து தாறுமாறாகத் திட்டப் போகிறாள். கூப்பாடு போட்டு இரைந்து பிரமநாயகம் உட்படக் கடையிலுள்ள அத்தனை பேரையும் அந்த அறைக்குள் கூட்டித் தன் மானத்தை வாங்கி விடப் போகிறாள்' என்றெண்ணிக் கலங்கிவிட்டது அழகியநம்பியின் மனம்.
ஆனால், பூர்ணா அவனருகே வரவும் இல்லை, அவனைத் திட்டவும் இல்லை, கூப்பாடு போடவுமில்லை. அவள் புதிராக நடந்து கொண்டாள்.
உள்ளே நுழைந்தவள் கதவிற்குப் பக்கத்திலேயே ஓரிரு விநாடிகள் அசையாமல் நின்றாள். அவன் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்து தான் முடித்து வைத்திருந்த பைல் கட்டுகளையும் கடிதங்களையும் உடைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை இமையாமல் உறுத்துப் பார்த்தாள். மறுகணம் வந்தது போலவே வெளியேறிச் சென்று விட்டாள். அவள் வந்த விதமும் போன விதமும் அவன் என்ன செய்கிறானென்று பார்த்து விட்டுப் போவதற்காகவே வந்தது போல் இருந்தது.
ஒருவேளை பிரமநாயகத்திடம் தன் செயலைப் பற்றி ஏதாவது சொல்லுவதற்குப் போயிருப்பாள் என்று அவனும் எழுந்திருந்து அறைக்கு வெளியே வந்து பார்த்தான். அவள் பிரமநாயகத்தைத் தேடிக் கொண்டு போகவில்லை என்பது வெளியில் வந்து பார்த்ததுமே அவனுக்குத் தெரிந்துவிட்டது.
பூர்ணா கடை வாசலிலிருந்து இறங்கித் தெருவில் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாள். திரும்பவும் அறைக்குள் வந்த அழகியநம்பிக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.
பைல்களையும், கடிதங்களையும் முன்பு எப்படி அடுக்கி அவள் வைத்திருந்தாளோ, அப்படியே வைத்தான். கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு பின்கட்டுக்குச் சென்றான். சமையற்காரச் சோமுவைக் கூப்பிட்டுச் சபாரத்தினத்தை அழைத்துவரச் சொல்லி அனுப்பினான். சோமு சென்றதும் தன் அறைக் கதவைத் திறந்து குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தான் அழகியநம்பி.
கவலைகளாலும், குழப்பங்களாலும் பயம் நிறைந்த எண்ணங்களாலும் தலையே வெடித்துச் சிதறிவிடும் போல இருந்தது அவனுக்கு. காலையில் பிரமநாயகம் தன்னைத் தனியே கூப்பிட்டு எச்சரித்தது, அதன் பின் தபாலில் வந்த பயமுறுத்தல் கடிதம், பூர்ணா அறைக்குள் வந்து பார்த்துவிட்டுப் பேசாமல் வேகமாக வெளியேறிச் சென்றது - எல்லாவற்றையும் சேர்த்து நினைத்த போது, 'பிழைப்பும் வேண்டாம். காசு சேர்க்கவும் வேண்டாம். ஊரில் போய்த் தெருப் பெருக்கியாவது பிழைக்கலாம். யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இப்படியே அடுத்த கப்பலில் ஏறி ஊர் திரும்பிவிட்டால் என்ன?' - என்று ஒருவகை வெறுப்பும் விரக்தியும் அவனுக்கு உண்டாயின.
வேலைவெட்டி ஒன்றும் இல்லாமல் குறிஞ்சியூரில் தகப்பனார் காலமான பின் சில காலம் சும்மா இருந்து குந்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கூட அவன் மனத்தில் இவ்வளவு கவலைகளோ, வேதனைகளோ, பயமோ இருந்ததில்லை. வேலை கிடைத்த பிறகு, புதிய இடத்துக்குப் புதிய நம்பிக்கைகளோடு வந்த பிறகு கவலைகள் குறையும் என்பார்கள். ஆனால், அவனுக்குக் கவலைகள் பெருகியிருந்தன.
"என்னைக் கூப்பிட்டு அனுப்பினீர்களாமே? என்ன செய்தி?" - என்று சிரித்துக் கொண்டே அறைக்குள் வந்தார் சபாரத்தினம்.
அந்த நிலவொளி வீசும் முறுவல் சரிபாதிக் கவலைகளைச் சுட்டுப் பொசுக்கிவிட்டது போல் அழகியநம்பிக்கு ஒரு நிம்மது உண்டாயிற்று. எல்லோருக்கும் தான் வாய் இருக்கிறது! எல்லோருக்கும் தான் உதடுகளும், பற்களும் இருக்கின்றன! எல்லோரும்தான் சிரிக்கிறார்கள்!
ஆனால், சபாரத்தினத்தின் இந்தச் சிரிப்பைச் சபாரத்தினம் மட்டும் தான் சிரிக்க முடியும்! நம்பிக்கை, அன்பு, கனிவு, கவர்ச்சி, ஒளி - எல்லாம் நிறைந்த சிரிப்பு அவருடையது.
"சபாரத்தினம்! உங்களிடம் தனியாக ஒரு விஷயம் பேச வேண்டும். அதற்காகத்தான் கூப்பிட்டனுப்பினேன். உங்களுக்குக் கவலை ஏற்பட்டால் நீங்கள் திருக்குறள் புத்தகத்தைத் தேடுகிறீர்கள். எனக்குக் கவலை ஏற்பட்டால் நான் உங்களைத் தேடுகிறேன். எனக்குத் திருக்குறள் நீங்கள் தான்" - என்றான் அழகியநம்பி மெல்லச் சிரித்துக் கொண்டே.
"நீங்கள் என்னிடம் தனியாகப் பேசவேண்டியதை இப்போதே சுருக்கமாகப் பேசிமுடித்து விடலாமானால் இங்கே பேசி விடுவோம். விரிவாகப் பேச வேண்டிய விஷயமானால் ஒரு மணி நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். கடைக்குள் என் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அன்று போல இருவரும் எங்காவது வெளியே போய் உட்கார்ந்து விரிவாகப் பேசுவோம்" - என்றார் சபாரத்தினம்.
"அப்படியே செய்யலாம்! நீங்கள் போய் வேலையை முடித்துக் கொண்டு வாருங்கள்" - என்றான் அழகியநம்பி.
"புறப்படத் தயாராக இருங்கள். நான் வந்துவிடுகிறேன்." - என்று சொல்லிவிட்டுக் கடைக்குள் சென்றார் சபாரத்தினம். சோமு காபி, சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தான். அழகியநம்பி அவற்றை வாங்கிக் கொண்டு, "சோமு! கடைக்குள் முதலாளி இருக்கிறாரா, பார்த்துவிட்டு வா. நான் கொஞ்சம் வெளியில் போய்விட்டு வரலாம் என்றிருக்கிறேன். அவர் இருந்தால் பார்த்து ஒரு வார்த்தை நேரில் சொல்லிக் கொண்டு போய்விடலாம்" - என்று சோமுவிடம் கூறினான். சோமு பார்த்துவரப் போனான். அவன் திரும்பி வருவதற்குள் சிற்றுண்டி - காபியை முடித்து விடலாமென்று அதில் கவனம் செலுத்தினான் அழகியநம்பி.
சோமு திரும்பி வருவதற்குப் பத்து நிமிஷங்கள் பிடித்தன. அவன் வேறொரு செய்தியும் கொண்டு வந்தான். "தம்பி! முதலாளி வெளியில் போயிருக்கிறார். வாசலில் உங்களைத் தேடிக் கொண்டு அந்தப் பெண்கள் இரண்டு பேரும் வந்திருக்கிறார்கள். பார்க்க வேண்டுமாம்"
"எந்தப் பெண்கள்?"
"என்ன தம்பி தெரியாதது போலக் கேட்கிறீர்கள்? அன்றைக்குக் கடற்கரையில் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கவில்லையா? அதற்குள் மறந்துவிட்டீர்களே!" - சோமு இதைச் சொல்லிவிட்டு ஒரு தினுசாகச் சிரித்தான்.
"ஓ! லில்லியும் மேரியும் வந்திருக்கிறார்களா? இதோ வந்து விட்டேன்... வாசலில் நின்று கொண்டா இருக்கிறார்கள்? அடேடே... கடைக்குள் கூப்பிட்டு உட்காரச் சொல்லேன்" - அழகியநம்பியின் பதிலில் ஆவலும் பரபரப்பும் ஒலித்தன.
"வாசலில் நின்று கொண்டிருக்கவில்லை. அவர்கள் காரில் வந்திருக்கிறார்கள். கடை ஓரத்தில் காரை நிறுத்தி அதற்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறார்கள்." - என்று சொல்லி மறுபடியும் சிரித்தான் சோமு.
"சோமு! சபாரத்தினம் வந்தால் இங்கே அறைக்குள் உட்கார்ந்திருக்கச் சொல்லு. நான் வாசலில் போய் அவர்களைச் சந்தித்து என்னவென்று கேட்டுவிட்டு வருகிறேன்."
அழகியநம்பி பின்கட்டிலிருந்து விரைந்தான். அவனைக் காரிலிருந்து கீழே இறங்கிப் புன்முறுவல் பூத்த முகத்தோடு கைகுலுக்கினர் மேரியும், லில்லியும். அன்று அவர்கள் இருவருமே நன்றாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தனர். அவர்களுடைய அன்றையத் தோற்றம் அழகியநம்பியின் உள்ளத்தைக் கவர்வதாக இருந்தது.
"என்ன காரியமோ? என்னைத் தேடிக் கொண்டு கடைக்கே வந்துவிட்டீர்களே!"
"நாங்கள் எத்தனை முறை உங்களைத் தேடி உங்கள் இருப்பிடத்திற்கு வந்தால் என்ன? நீங்கள் ஒரு நாளாவது எங்கள் வீட்டிற்கு எங்களைத் தேடி வந்திருக்கிறீர்களோ?" - மேரி குறும்புத்தனமாக எதிர்த்துக் கேட்டாள்.
"அதற்கென்ன? நீங்கள் வந்துதானாக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தால் இப்போதே வரத் தயாராயிருக்கிறேன்."
"சரி! சரி! - போய்க் கொண்டே பேசலாம். பின் ஸீட்டில் ஏறிக் கொள்ளுங்கள்" - லில்லி பின் ஸீட்டின் கதவைத் திறந்தாள்.
"எங்கே கூப்பிடுகிறீர்கள்; இப்பொழுது என்னை?"
"ஏன்; கடற்கரைக்குத்தான்."
"கடற்கரையைத்தான் அன்றைக்கே பார்த்துவிட்டேனே! தவிர இன்றைக்கு இன்னொரு நண்பரை மாலையில் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேனே!"
"அவரை நாளைக்குச் சந்தித்துக் கொள்ளலாம். போகலாம் வாருங்கள். காலிமுகக் கடற்கரைக்குப் போக வேண்டாம். இன்னொரு வேறொரு அழகான கடற்கரைக்கு உங்களை அழைத்துக் கொண்டு போகிறோம்..."
"வேறொரு கடற்கரையா, அது எங்கே இருக்கிறது?"
"மவுண்ட் லெவினியா பீச் - என்று, இங்கிருந்து ஏழு மைல் தெற்கே இருக்கிறது! இயற்கையழகு சொட்டும் அற்புதமான கடற்கரை. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்..." - மேரி வருணிக்கத் தொடங்கி விட்டாள்.
அழகியநம்பி யோசித்தான். தயங்கி நின்றான். 'சபாரத்தினத்தைச் சந்தித்துப் பேசுவதாகச் சொல்லிவிட்டோமே! இப்போது இவர்களோடு புறப்பட்டுப் போய்விட்டால் அந்த மனிதர் அநாகரிகமாக நினைத்துக் கொள்வார். அவரிடம் கலந்து பேச வேண்டிய விஷயமும் முக்கியமானது தானே? மனக் குழப்பமும், கவலைகளும் நிறைந்த இந்தச் சமயத்தில் எங்காவது வெளியில் போய்ச் சுற்றிவிட்டு வரவேண்டும் போலவுமிருக்கிறது.
'சபாரத்தினத்தையும் உடன் கூட்டிக்கொண்டு போய்விட்டால் என்ன? போகிற இடத்தில் ஒரு அரைமணி நேர அவகாசம் லில்லியையும் மேரியையும் விட்டு ஒதுங்கிச் சபாரத்தினத்தோடு தனியாகப் பேசவேண்டியதைப் பேசிவிட்டால் என்ன?" - இந்த யோசனை சரியாகத் தோன்றியது அவன் மனத்திற்கு.
"காரில் இன்னொருவருக்கும் இடம் இருக்குமோ?" அவன் அவர்களிடம் கேட்டான்.
"ஓ! தாராளமாக... இன்னும் இரண்டு பேருக்குக் கூட இடம் இருக்கும்." - அந்த 'ஓ'வைச் சொல்லும்போது மேரியின் கொவ்வைச் செவ்விதழ்கள் குவிந்து விரிந்த அழகு அவன் கண்களுக்கு விருந்தாயிருந்தது.
"ஒரு நிமிஷம் பொறுங்கள். இதோ வந்துவிடுகிறேன்." - சபாரத்தினத்தைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்காகக் கடைக்குள் சென்றான் அழகியநம்பி. உள்ளே சபாரத்தினம் அப்பொழுதுதான் தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு புறப்பட இருந்தார்.
"சபாரத்தினம்! எனக்குத் தெரிந்த இரண்டு ஆங்கிலப் பெண்மணிகள் காருடன் வந்திருக்கிறார்கள். மவுண்ட லெவினியா பீச்சுக்கு வரச்சொல்லி என்னைக் கூப்பிடுகிறார்கள் அவர்கள். நீங்களும் வாருங்கள். காரில் இடமிருக்கிறது. நாம் பேச வேண்டியதை அங்கேயே பேசிக் கொள்ளலாம்?" - என்று சபாரத்தினத்திடம் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்டதும் சபாரத்தினம் சிறிது தயங்கினார்.
"நான் உடன் வருவதை அவர்கள் விரும்புவார்களோ? என்னவோ?"
"அதெல்லாம் ஒன்றுமில்லை! நான் அவர்களைக் கேட்டுக் கொண்டுவிட்டேன். அவர்களும் விரும்புவதால்தான் உங்களை உடனழைக்கிறேன்."
"சரி! நானும் வருகிறேன். போகலாம்; வாருங்கள்." - சபாரத்தினமும் உடன் புறப்பட்டார். காருக்கு அருகில் வந்ததும் சபாரத்தினத்தை மேரிக்கும், லில்லிக்கும் அறிமுகப்படுத்தினான் அழகியநம்பி. சபாரத்தினம் மேரிக்கும், லில்லிக்கும், தன் வணக்கத்தைக் கூறினார்.
எல்லோரும் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. மேரியும் லில்லியும், முன் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டு விட்டதால் பின்ஸீட்டில் அழகியநம்பியும், சபாரத்தினமும் தனித்து விடப்பட்டனர். அழகியநம்பி தன் சட்டைப் பையிலிருந்து மெல்ல அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துச் சபாரத்தினத்திடம் கொடுத்துக் காட்டினான். சபாரத்தினத்தின் கண்கள் அந்தக் கடிதத்தை மேலும், கீழுமாக உற்றுப் பார்த்தன. அழகியநம்பியோ சபாரத்தினத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அதைப் படித்துவிட்டுக் கேலியாகச் சிரித்தார் சபாரத்தினம். இதுவரை அவர்களுக்கிடையே நடந்த இவ்வளவும், குறிப்பாலும் கைச்சாடைகளாலும், மௌனமாகவே நடைபெற்றன. கடிதத்தை மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்டே, "என்ன? சிரிக்கிறீர்கள்?" - என்று மிகவும் மெதுவான குரலில் கேட்டான் அழகியநம்பி. சபாரத்தினம் கூறினார்:-
"இது ஒன்றோடு நின்றுவிடாது. இப்படி எத்தனையோ வரும். என்னென்னவெல்லாமோ நடக்கும்! பயப்படக் கூடாது."
"நீங்கள் எனன் சொல்கிறீர்கள்? தெளிவாக எனக்கு விளங்கும்படி சொல்லுங்கள்?"
"ஒன்றுமில்லை!... இப்போது வேண்டாம். தனியாகப் பேசுவோம்." - என்று சொல்லி முன்ஸீட்டின் பக்கமாகக் கையைக் காட்டினார் சபாரத்தினம். அவருடைய அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டு பேச்சை நிறுத்தினான் அழகியநம்பி.
கார் லெவினியாவின் எழில் வளம் மிக்க கடற்கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. காலிமுகக் கடற்கரையைவிட லெவினியாக் கடற்கரை அதிகமான இயற்கை வனப்புடன் விளங்கியது. கரையோரமாக அணிவகுத்து நிற்கும் தென்னைமரக் கூட்டமும், சிறிதும் பெரிதுமான பாறைகளும், இன்னும் வருணணையிலடங்காத இயற்கைக் காட்சிகளும், அந்த மாலை நேரத்தில், அந்த இடத்தைத் தேவலோகமாக மாற்றிக் கொண்டிருந்தன. கடற்கரையில் வெள்ளைக்காரர்களின் கூட்டமே அதிகமாக இருந்தது. திறந்த உடம்போடு காற்று வாங்கிக் கொண்டிருந்தனர் சிலர். கடல் அலைகளில் பெரிதும் சிறிதுமாகப் பந்துகளை வீசி எறிந்து அவை கரைக்கு அடித்து வரப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர். வேறு சிலர் வீசி எறிந்த பந்துகளைப் பாய்ந்து சென்று எடுத்து வருவதற்காகத் தம்முடைய அழகான உயர்சாதி நாய்களை அலைகளிடையே துரத்தி வேடிக்கைப் பார்த்தனர். இன்னும் சிலர் அந்த மாலை நேரத்திலும் சோம்பலோ, சலிப்போ, இன்றிக் கடலில் நீராடிக் கொண்டிருந்தனர். வலைகளாலும் தூண்டிலாலும் மீன் பிடிப்பதிலும், கட்டு மரங்களில் ஏறி அலைமேல் மிதப்பதிலும் கூடச் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
காரை நிறுத்திவிட்டு அமைதியான இடமாகப் பார்த்துப் போய் உட்கார்ந்தார்கள் அவர்கள். சபாரத்தினமும் அழகியநம்பியும் ஒருபுறமும் லில்லியும் மேரியும் மற்றோர் புறமுமாக நேர் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். மேரி தன் கையிலிருந்த பையைத் திறந்து சாக்லேட் பொட்டலங்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தாள்.
லெவினியாக் கடற்கரையின் சூழ்நிலையைப் பார்த்துக் கொண்டே அந்தப் பெருமிதத்தில், "இலங்கை அழகாகத் தான் இருக்கிறது!" - என்று இருந்தாற் போலிருந்து நினைத்துப் பார்த்துக் கூறுவதுபோல் கூறினான் அழகியநம்பி. "இவைகளைப் பார்த்துவிட்டே இலங்கையின் அழகை இந்த மனிதர் இவ்வளவு வியக்கிறார். இயற்கைச் செல்வத்தின் பலவித நிலைகளும் செழித்துக் கொழித்துக் கிடக்கும் இலங்கையின் மலைப்பகுதிகளை இவருக்குச் சுற்றிக் காட்டிவிட்டால், மயங்கி விழுந்தே விடுவார்!" - என்று சிரித்தபடியே அழகியநம்பியைச் சுட்டிக் காட்டி மேரியிடம் கூறினார் சபாரத்தினம். அவருக்கு நன்றாக ஆங்கிலமும் பேசவரும் என்பதை அழகியநம்பி அப்போது கண்டு ஆச்சரியமுற்றான்.
"வருகிற ஞாயிற்றுக்கிழமை, நானும், அக்காவும் மலைப்பகுதிகளுக்கு உல்லாசப் பிரயாணமாகக் கிளம்பலாம் என்று திட்டம் போட்டிருக்கிறோம். அதை இவரிடம் சொல்லி இவரையும் கூப்பிட்டுக் கொண்டு போவதற்காகத்தானே இன்றைக்கு இவரைப் பார்க்கவே புறப்பட்டோம்" - என்று மேரி சபாரத்தினத்திடம் கூறினாள்.
"மிகவும் நல்ல காரியம்! இந்த மனிதரைக் கட்டாயமாக வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போயாவது மலைப்பகுதிகளைச் சுற்றிக் காட்டி விடுங்கள். இவர் அவசியம் அந்த இடங்களையெல்லாம் பார்க்க வேண்டும்!" - அழகியநம்பியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே குறும்புச் சிரிப்போடு அவர்களைப் பார்த்துச் சபாரத்தினம் கூறினார்.
"அவர் வரமாட்டேன் என்று தான் சொல்லிப் பார்க்கட்டுமே! நாங்கள் விடவா போகிறோம்?" - அதுவரை பேசாமல் இருந்த லில்லி பேச்சில் கலந்து கொண்டாள்.
"நீங்கள் என்னை வீணாகப் பிரமநாயகத்தின் கோபத்துக்கு ஆளாக்கப் பார்க்கிறீர்கள். நான் ஏழை! பிழைப்பதற்காக அவருடைய தயவை நாடி இங்கே வந்திருக்கிறேன். செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்யாமல் இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் நாளைக்கே சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து ஊருக்குக் கப்பலேறச் சொல்லிவிடுவார் அவர்." - அழகியநம்பி சபாரத்தினத்தை நோக்கி அவருக்கு மட்டும் தெரியும்படியாக வருத்தத்தோடு தமிழில் சொன்னான்.
"கோபித்துக் கொள்ளாதீர்கள், நான் ஒரு காரணத்துக்காகத்தான் இவர்களோடு போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வருமாறு சொல்கிறேன்." - என்று சபாரத்தினமும் தமிழிலேயே பதில் கூறினார்.
"நீங்கள் இருவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் அவரோடு தனியே ஒரு கால் மணி நேரம் முக்கிய விஷயம் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது, பேசிவிட்டு வந்து விடுகிறோம்" - என்று மேரியிடமும், லில்லியிடமும் கூறிக் கொண்டு சபாரத்தினத்தை அழைத்துச் சென்றான் அழகியநம்பி. சிறிது தூரம் கடற்கரையோரமாகவே நடந்து சென்று மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு பகுதியில் அவர்கள் இருவரும் அமர்ந்து கொண்டனர்.
"சபாரத்தினம்! எனக்கு இருக்கிற தொல்லைகள் போதாதென்று இந்த அன்புத் தொல்லையில் வேறு அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறேன். ஏதோ தற்செயலாக நடுக்கடலில் கப்பலில் பழக்கமானவர்கள், அதோடு போகாமல் இங்கு வந்த பின்பும் என்னை அட்டை போல் பற்றிக் கொண்டு விட்டார்கள். இந்த விளையாட்டுச் சுபாவமுள்ள பெண்களின் அன்பு வெள்ளத்திலிருந்து எப்படிக் கரையேறுவது? எப்போது கரையேறுவது? - என்று தெரியாமல் நான் திகைத்துத் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் என்னை அதன் ஆழத்திலேயே பிடித்துத் தள்ளப் பார்க்கிறீர்கள்."
சபாரத்தினம் பதில் சொல்லாமல் சிரித்தார். அழகியநம்பியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். சொல்லத் தொடங்கினார். "நான் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். விளையாட்டுக்காக எதையும் சொல்லவோ, செய்யவோ எனக்குத் தெரியாது. சற்று முன் காரில் வரும்போது என்னிடம் ஒரு கடிதம் காட்டினீர்களே; அதற்கும் உங்களை நான் சில நாட்கள் வெளியூரில் சுற்றச் சொல்வதற்கும் தொடர்பு உண்டு. தெரிந்து கொள்ளுங்கள்." - சபாரத்தினம் இப்படி கூறவும் அழகியநம்பி வியப்புடன் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தான். சபாரத்தினம் மேலும் அவனிடம் கூறினார்:-
"முதலில் இன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை வரிசையாக எனக்குச் சொல்லுங்கள். அதைக் கேட்டுவிட்டு அப்புறம் என்னுடைய திட்டமான யோசனைகளை உங்களுக்கு நான் சொல்கிறேன்."
அன்று காலையில் பிரமநாயகம் தன்னைத் தனியே கூப்பிட்டுப் பூர்ணாவைப் பற்றி எச்சரித்ததிலிருந்து மாலைவரை நடந்தவற்றை ஒன்றும் விட்டுவிடாமல் சபாரத்தினத்திற்கு விவரித்தான் அழகியநம்பி.
முழுவதையும் கேட்டு முடித்துவிட்டுப் பெருமூச்சுவிட்டார் சபாரத்தினம். "உண்மையில் நீங்கள் மிகவும் பரிதாபப்பட வேண்டிய நிலையில் தான் இருக்கிறீர்கள் அழகியநம்பி!" - சபாரத்தினத்தின் வாயிலிருந்தே இந்த மாதிரி அவநம்பிக்கையூட்டும் சொற்கள் வெளிவந்ததைக் கண்டு அழகியநம்பியின் பயம் மேலும் அதிகரித்தது. சபாரத்தினம் மேலும் தொடர்ந்தார். "இரண்டு விதத்திலும் உங்களுக்குப் பிடிப்பில்லை. பூர்ணாவின் ஆளாக அவளுக்கு வேண்டியவர் போல் நடிக்க முயன்றீர்கள். அதே சமயத்தில் அவளிடம் அதிகமாக நெருக்கம் வேண்டாம் என்று நானும் அன்று கழனியாவில் எச்சரித்திருந்தேன். இன்று நடந்திருக்கும் நிகழ்ச்சிகளோ நம்முடைய எல்லாத் திட்டங்களையுமே குட்டிச்சுவராக்கிவிட்டன. பூர்ணா உங்களுடைய உண்மை நிலையைப் புரிந்து கொண்டு விட்டாளென்று தெரிகிறது. நேற்று மாலையில் உங்களுக்கு எழுதப்பட்டு இன்று காலைத் தபாலில் கிடைத்த பயமுறுத்தல் கடிதமே அதற்குச் சரியான சான்று. அலுவலகத்திலிருந்து அவள் வெளியேறிச் சென்ற பின் பிரமநாயகத்தின் சார்பில் அவளுடைய வேலைகளை இரகசியமாக மேற்பார்வையிடுகிறீர்கள் என்பதையும் இன்று மாலை நேரடியாகவே வந்து பார்த்துத் தெரிந்து கொண்டு போயிருக்கிறாள். இதன் விளைவுகள் இனிமேல் சிறிது பயங்கரமாகவே இருக்கும். இரண்டு புறத்திலுமே உங்களை முழுமையாக நம்பவில்லை. 'நீங்கள் பூர்ணாவின் ஆளாக மாறித் தமக்குத் துரோகம் செய்ய முற்பட்டுவிடக்கூடாதே' - என்று பிரமநாயகம் பயப்படுகிறார். அவரைப் போல் பூர்ணா உங்களைக் கண்டு பயப்படவில்லை. நீங்கள் அவளுடைய வலைகளில் சிக்காமல் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, - அவளை மீறிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தால் அவளுடைய அனுபவம் நிறைந்த தீய சக்திகள் எல்லாவற்றையும் - பயன்படுத்தி உங்களைக் கவிழ்த்து விட முயல்வாள் - முயல்கிறாள். இந்த எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும், சமாளிக்கப் பிரமநாயகம் உங்களுக்கு உறுதியாக உதவுவார் என்று நான் நம்பவில்லை. முதுகெலும்பில்லாத மனிதர் அவர். பூர்ணாவை நேரில் கண்டுவிட்டால் பேசுவதற்கே பயப்படுவார். அவள் இல்லாத சமயத்தில் அந்த விநாடியிலேயே அவளை வேலையை விட்டு துரத்தி விடப்போவது போலத் திட்டுவார். நாளைக்கே ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் பூர்ணாவுக்காக உங்களை வேலையைவிட்டு நீக்குவாரே யொழிய, உங்களுக்காக பூர்ணாவை வேலையிலிருந்து நீக்க மாட்டார். சோளக் கொல்லைக்குள் காக்கை, குருவிகள் நுழைந்து, தானியக் கதிர்களை அழித்துவிடாமல் மூங்கில் குச்சியில் துணிப்பொம்மை கட்டி நட்டுவைப்பது போல், கடையின் சொத்துக்களில், இலாபத்தொகையில் பூர்ணா ஏராளமாகச் சூறையாடி விடாமல் உங்களை ஒரு அரட்டலுக்காக உட்கார்த்தி வைத்திருக்கிறார். அவ்வளவுதான்."
"நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டால் எனக்கு ஒரே பயமாக இருக்கிறது சபாரத்தினம்! நான் ஒன்று செய்து விடலாமென்று நினைக்கிறேன். பிரமநாயகத்திடம் சொன்னால் அவர் என்னை விடமாட்டார். எனக்கு இந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்டவர்களுக்கு நடுவே வேலை பார்க்கப் பிடிக்கவே இல்லை. நான் யாரிடமும் சொல்லாமல் ஊருக்குக் கப்பலேறிப் போய்விடுகிறேன். இதுதான் கடைசியாக எனக்குத் தோன்றுகிற வழி." - அழகியநம்பியின் பேச்சிலிருந்து அவன் ஏக்கமும், தாழ்வு மனப்பான்மையும் கொண்டிருக்கிறானென்று தெரிந்தது. சபாரத்தினத்தை நோக்கி அவன் கூறிய சொற்களில் அவநம்பிக்கையும், கையாலாகாத்தனமும் கலந்திருந்தன.
சபாரத்தினம் அவன் கூறியதைக் கேட்டு அவருக்கே உரிய கவர்ச்சி முத்திரையோடு சிரித்தார். "அழகியநம்பி! நீங்கள் இப்போது பேசுவது நல்லதாக எனக்குப் படவில்லை. நீங்கள் வந்திருக்கும் இதே வேலைக்கு வேறொரு இளைஞர் வந்திருந்தால் இதற்குள் இருவது தடவையாவது பூர்ணாவின் வீட்டுக்குப் போயிருப்பார். அவளுக்குப் பின்னால் நாய்க்குட்டியாகச் சுற்றத் தொடங்கியிருப்பார். ஆனால், நீங்கள் அந்த விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். அழகுக்கும் மோகத்துக்கும் அடிமையாகும் பலவீனம் உங்களிடமில்லை. இன்னும் சிறிது காலம் அஞ்சாமல் அவநம்பிக்கைப்படாமல் பொறுமையோடு இருந்தீர்களானால் 'பூர்ணா' - என்னும் கொடுமையை முற்றிலும் வென்றுவிடலாம்."
"நீங்கள் சொல்வது சரி; சபாரத்தினம்! அந்தப் பூர்ணாவை வெல்லுகிறவர நான் எப்படி இங்கே காலந்தள்ளுவது?"
"அதற்கெல்லாம் வழி இருக்கிறது! நான் சொல்லுவதை அவ்வப்போது கேட்டு அதன்படி நடந்து கொண்டு வாருங்கள்."
"என்ன வழி? இப்போது இந்தப் பயமுறுத்தல் கடிதம் வந்திருக்கிறதே; இதற்கு என்ன வழி சொல்கிறீர்கள்?"
"வருகிற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒரு நாலைந்து நாள் நீங்கள் எங்காவது வெளியூரில் தலைமறைவாகச் சுற்றிக் கொண்டிருப்பது நல்லது. அதற்குத்தான் இந்தப் பெண்களோடு மலைப் பகுதிகளுக்கு மகிழ்ச்சிப் பிரயாணம் போக வேண்டுமென்று உங்களை நான் கட்டாயப்படுத்துகிறேன். பிரயாணம் மனத்துக்கும் நல்லது. கவலைகள் மறைந்து புதிய ஊக்கம் பிறக்கும்."
"சரி! அப்படியே செய்கிறேன்." - என்று தலையசைத்தான் அழகியநம்பி. அதே சமயத்தில், "இருட்டிவிட்டதே? நாம் புறப்படலாமா?" - என்று அங்கே வந்தனர் மேரியும், லில்லியும். "ஞாயிற்றுக்கிழமை உங்களோடு இவரும் வருகிறார்." - என்று அவர்களிடம் புன்னகையோடு கூறினார் சபாரத்தினம்.
சனிக்கிழமை காலை, மேரி - லில்லி - இருவரும் ஒரு ஆள் மூலம் அழகியநம்பிக்குச் செய்தி அனுப்பியிருந்தனர். "ஞாயிற்றுக்கிழமை காலை - விடிவதற்கு முன்பே ஐந்து மணி சுமாருக்கு நாம் பிரயாணத்தைத் தொடங்கவேண்டும். நீங்கள் க்டை வேலையை முடித்துக் கொண்டு இன்றிரவே இங்கு வந்துவிடுங்கள். இரவு உணவு இங்கேயே வைத்துக் கொள்ளலாம். படுத்துக் கொண்டிருந்து விட்டுக் காலையில் இங்கிருந்தே புறப்பட்டு விடலாம். கட்டாயம் வந்துவிடுங்கள்" - என்று வந்த ஆள் கடிதம் கொண்டு வந்திருந்தான். கீழே லில்லியின் கையெழுத்து இருந்தது. அவள் தான் எழுதியிருப்பாள் போலிருக்கிறது. வந்த ஆளிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவது? இரவிலேயே அவர்கள் வீட்டிற்குப் போய்த் தங்குவதென்பது முடியுமா? பிரமநாயகத்திடம் என்ன சொல்லி விடைபெற்றுக் கொள்வது? எப்படிச் சொல்லி விடைபெற்றுக் கொள்வது? சம்மதிப்பாரோ? மாட்டாரோ? பலவிதமாக எண்ணித் தயங்கினான் அவன்.
வந்த ஆள் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அழகியநம்பி கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து. இன்னும் கால்மணி நேரத்திற்குள் பூர்ணா வந்துவிடுவாள். 'அவள் வந்து விடுவதற்குள் அவனைப் பதில் சொல்லி அங்கிருந்து அனுப்பி விட வேண்டும். தயங்கித் தயங்கி யோசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை' - என்று ஒரு திடமான முடிவுக்கு வந்தான் அவன்.
"நான் எப்படியும் இன்றிரவு அங்கு வருகிறேன் என்று சொல்லிவிடுங்கள்" - என்று சுருக்கமாகப் பதில் சொல்லி அந்த ஆளை அனுப்பினான். அவன் வெளியே போய் இரண்டு மூன்று நிமிஷங்கள் கூட ஆகியிருக்காது. அலுவலக அறைக்குள் பூர்ணா கதவைத் திறந்து கொண்டு வேகமாக நுழைந்தாள். தன் இடத்தில் போய் உட்கார்ந்து சிறிது நேரம் மேஜை மேல் வைத்திருந்த கடிதங்களையும், பைல்களையும் புரட்டி எதையோ தேடுகிறவளைப் போலத் தேடினாள். பின்பு திடீரென்று அவன் பக்கமாகத் திரும்பி, "மிஸ்டர் அழகியநம்பி! உங்களைத்தானே? கொஞ்சம் இப்படி வாருங்கள்." - என்று அதிகாரத்தின் முழு அழுத்தமும் நிறைந்த குரலில் அவனைக் கூப்பிட்டாள்.
அழகியநம்பி எழுந்திருந்து அவள் மேஜைக்கு முன்னால் போய் நின்றான். "இந்த மேஜையின் மேல் இரண்டாயிரம் ரூபாய்க்கு 'செக் - ஒன்று வைத்திருந்தேனே? 'செக்'கையும் காணவில்லை, அதோடு டைப் செய்து வைத்திருந்த கடிதத்தையும் காணவில்லை."
"அப்படி எதுவும் மேஜை மேல் நான் பார்க்கவில்லையே? நீங்கள் வேறெங்காவது கைத்தவறுதலாக வைத்திருப்பீர்கள். நன்றாகத் தேடிப் பாருங்கள்."
அழகியநம்பி பவ்வியமாகத்தான் பதில் சொன்னான். பூர்ணாவின் குரலில் சூடு ஏறியது. சாதாரணமாகக் கூப்பிட்டுக் கேட்டவள், குத்தலாகப் பேச்சைத் தொடங்கினாள். "உங்களுக்குத் தெரியாமல் வேறு எங்கே போகமுடியும்? நீங்கள் தானே இப்போது இந்த ஆபீஸில் என்னை விடப் பெரிய அதிகாரி? என்னுடைய பைல்கள், கடிதப் போக்குவரவுகளை யெல்லாம் கூடத் தினந்தோறும் நீங்கள் தானே மேற்பார்வை செய்கிறீர்களாம்?"
-அழகியநம்பி பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றான்.
"உங்களுக்கு யோசனைகள் சொல்லிக் கொடுப்பதற்கு - வழி காட்டுவதற்குப் புதிய நண்பர்களெல்லாம் ஏற்பட்டுருக்கிறார்கள். இனிமேல் பூர்ணாவையே இந்த ஆபீஸிலிருந்து வெளியேறச் செய்துவிடுவீர்கள் நீங்கள். அப்படித்தானே?"
அதற்கு மேலும் தான் சும்மா நின்று கொண்டிருந்தால் 'அவள் சொல்லுகிற குற்றங்களை ஒப்புக் கொண்டது போலாகும்' - என்று அழகியநம்பி வாய் திறந்தான். "நீங்கள் ஏதேதோ வீண் பேச்சுப் பேசுகிறீர்கள்! என்னைக் கூப்பிட்ட காரியம் ஏதாவது உண்டானால் சொல்லுங்கள்."
"மூடுங்கள் வாயை! நானா வீண் பேச்சுப் பேசுகிறேன்! இதோ 'செக்' புத்தகம் கையில் இருக்கிறது. இன்னொரு 'செக்' எழுதுவது எனக்குப் பெரிய காரியமில்லை. ஆனால், உங்களை நான் சும்மா விடமாட்டேன். இன்னும் பத்து நிமிஷத்தில் அந்தக் கடிதமும் செக்கும் என் கைக்கு வந்தாக வேண்டும்."
அப்பப்பா! ஒரு இளம் பெண்ணின் குரலா அது? பிசாசு கத்துவது போல இருந்தது. உண்மையிலேயே அந்த அரட்டலில் பயந்துவிட்டான் அவன்.
"எனக்கு ஒன்றும் தெரியாது. 'செக்' எதுவும் உங்கள் மேஜையில் நான் பார்க்கவில்லை" - அழகியநம்பியின் பேச்சு அழமாட்டாக் குறையாக வெளிவந்தது.
"நீங்கள் செய்திருப்பதெல்லாம் எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்லி ஒப்புக் கொள்ளாவிட்டால் நான் போலீசுக்குப் போன் செய்து விடுவேன்."
வேண்டுமென்றே தன்னை மாட்டிவைப்பதற்கு அவள் ஏதோ சூழ்ச்சி செய்கிறாளென்று அவனுக்குத் தோன்றியது. அவளிடம் எப்படிப் பேசி வெற்றி காண்பதென்று தெரியாமல் திகைத்தான் அவன்.
மேஜை மேலிருந்த மணியை அழுத்தித் தட்டினாள் பூர்ணா. கடையில் வேலை பார்க்கும் பியூன் ஒருவன் உள்ளே வந்து அவள் முன்னால் வணங்கி நின்றான்.
"முதலாளி உள்ளே - பின் கட்டில் இருப்பார். நீ போய் அவரை நான் கூப்பிட்டேனென்று இங்கே கூப்பிட்டுக் கொண்டு வா." - அவள் வந்தவனுக்குக் கட்டளையிட்டாள். வந்தவன் அவள் சொன்னதைச் செய்வதற்காக வெளியே போனான்.
அழகியநம்பி இன்னும் நின்ற இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தான். 'நடக்கிறதெல்லாம் நடக்கட்டும். பிழைப்புத் தேடி வந்த இடத்தில் எத்தனை சூழ்ச்சிகளுக்கும் தொல்லைகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டுமோ? பொறுத்திருந்து பார்ப்போம். நமக்கு வெற்றி கிடைக்க வேண்டாம். நம்முடைய பொறுமைக்காவது வெற்றி கிடைக்கிறதா? இல்லையா; என்று பார்த்துவிடுவோம்' - இப்படி நினைத்து விரக்தியடைந்து போய் நின்றான் அவன்.
கதவைத் திறந்து கொண்டு பிரமநாயகமும் அவரைக் கூட்டி வரச் சென்ற பியூனும் உள்ளே நுழைந்தனர். அழகியநம்பியின் மனத்தில் சிறிது ஆறுதல் பிறந்தது. பிரமநாயகம் தன் கட்சியில் ஆதரவாகப் பேசுவாரென்று அவன் நம்பினான்.
"இந்த மாதிரி நாணயக்குறைவான ஆட்களையெல்லாம் வைத்து என்னால் வேலை வாங்க முடியாது. வேலைக்கு வந்து முழுமையாக ஒரு வாரம் கூட முடியவில்லை. அதற்குள் இரண்டாயிரம், மூவாயிரம், என்று கையாடல் செய்ய முயன்றால் கடையும், வியாபாரமும் உருப்பட்டாற் போலத்தான்" - அவள் பிரமநாயகத்தை நோக்கிக் கூப்பாடு போட்டாள்.
அதைக் கேட்டுக் கொண்டு நின்ற அழகியநம்பிக்குப் பகீரென்றது. உதடுகள் துடிக்க, கண்கள் சிவக்க, நிமிர்ந்து பூர்ணாவை நெருப்பெழப் பார்த்தான்.
பிரமநாயகம் அவளுக்கு முன்னால் பெட்டிப் பாம்பாக நின்றார். "என்ன நடந்தது?" - அவளைப் பார்த்துக் கேட்டார் அவர்.
"இரண்டாயிரம் ரூபாய்க்குச் செக் எழுதி அதை மாற்றிக் கொண்டு வருவதற்காக இந்தப் பியூன் பெயருக்கு 'எண்டார்ஸ்' செய்து வைத்திருந்தேன். அதை எனக்குத் தெரியாமல் நேற்று சாயங்காலமே இவர் எடுத்து இந்தப் பியூனிடம் கொடுத்திருக்கிறார். 'யாருக்கும் தெரிய வேண்டாம். நீ நாளைக்காலையில் செக்கை மாற்றிக் கொண்டு வா. பணத்தை என்னிடம் கொடுத்துவிடு. உனக்கு இருநூறு ரூபாய் தருகிறேன்.' - என்று சொல்லி இவனை ஏமாற்றிப் பணத்தை மாற்றி வரச் செய்து ஊருக்குக் கப்பலேறி விடலாமென்று திட்டம் போட்டிருக்கிறார், நீங்கள் கூப்பிட்டுக் கொண்டு வந்த இந்த அருமையான மனிதர். நல்ல வேளை, 'பியூன்' இன்று காலையில் என்னிடம் வந்து உண்மையைச் சொல்லிவிட்டான். இல்லாவிட்டால் பணத்தைச் சுருட்டிக் கொண்டு இன்று மாலை கப்பலேறி இருப்பார்."
பூர்ணா மிகத் தெளிவாக - சர்வசாதாரணமாக நடந்த விஷயத்தைச் சொல்லுகிறவளைப் போல அந்த முழுப் பெரும் அபாண்டப் பழியை அழகியநம்பியின் தலையில் சுமத்தினாள். பொறி கலங்கிப் போகும்படியாக உச்சி மண்டையில் யாரோ ஓங்கி அடித்த மாதிரி இருந்தது அழகியநம்பிக்கு.
"உங்களுக்கு இவ்வளவு சூழ்ச்சிதான் செய்யத் தெரியுமா? இதற்கு மேலும் தெரியுமா?" - இரண்டு கைகளையும் சாபம் கொடுக்கிறவனைப் போல நீட்டிக் கொண்டே கண்களில் நெருப்புப் பொறி பறக்க அவளை நோக்கிக் கூச்சலிட்டான் அவன்.
"சும்மா இரு தம்பி! கத்தாதே" - பிரமநாயகம் அவனைக் கையமர்த்தித் தடுத்தார்.
"என்னப்பா? இவர் உன்னிடம் அப்படிச் சொல்லிச் செக்கைக் கொடுத்தது வாஸ்தவம் தானா?" - ஆண்மையில்லாத குரலில் அவளுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே பியூனைக் கேட்டார் அவர்.
"மெய்தான் முதலாளி! இதோ அந்தச் 'செக்' கூட என்னிடம் இருக்கிறது." - என்று சட்டைப் பைக்குள் கையை விட்டு எடுத்து அவரிடம் நீட்டினான் பியூன். அவர் அதை வாங்கிப் பார்த்தார்.
"ஏன் அப்பா? உனக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? இப்படி முழுப் பொய்யை உண்மை போல் சொல்கிறாயே?" - என்று அழகியநம்பி பரிதாபகரமான குரலில் அவனிடம் முறையிடுவது போலக் கேட்டான்.
"செய்வதையும் செய்துவிட்டு ஏன் ஐயா நடிக்கிறாய்?" - அந்தப் பியூன் எதிர்த்துக் கேட்டான். அதைக் கேட்டதும் அழகியநம்பிக்கு அடக்க முடியாத ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. "அயோக்கியப் பயலே! யாரைப் பார்த்தடா இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்? நடிப்பது நீயா? நானா?" - என்று இரைந்து கூப்பாடு போட்டுக் கொண்டே கீழே கிடந்த நாற்காலியை இரண்டு கைகளாலும் தூக்கித் தலைக்கு மேல் சுழற்றி ஓங்கி அவனை அடிக்கப் போனான் அழகியநம்பி. ஒரு கணம் பசி கொண்ட புலியாக - சினம் மிக்க புலியாக மாறிவிட்டான் அவன். பிரமநாயகம் மட்டும் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்கவில்லையானால் அந்தப் பியூனுக்குக் கையாவது, காலாவது முறிந்து போயிருக்கும்.
"சீ! சீ! இதென்ன கோபம் தம்பி, உனக்கு? நான் தான் நிதானமாக விசாரித்துக் கொண்டிருக்கிறேனே. அதற்குள் ஏன் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறாய்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேறா வேண்டும்? இதோ 'செக்கையே' எடுத்துக் காண்பித்துவிட்டானே அவன்? நீ என்ன சொல்ல இருக்கிறது இனிமேல்?"
திடீரென்று அவன் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாகப் பிரமநாயகமே அவனை மடக்கிக் கொண்டு இரையத் தொடங்கினார்.
அந்த இளம் பருவத்து உள்ளம் பொறுமையின் எல்லையை மீறிக் குமுறியது. 'பூர்ணாவும், பியூனும் தாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அனுசரணையாக ஒத்துழைத்து அவனுக்கெதிராகச் சூழ்ச்சி செய்கிறார்கள்! பிரமநாயகம் கூடவா அதை நம்புகிறார்?' - அழகியநம்பி திகைத்தான். அவரே தன்னைச் சந்தேகித்துக் கேட்டதும் அவனுக்கு மறுபடியும் ஆத்திரம் பொங்கியது.
"இவர்கள் பேசி வைத்துக் கொண்டு முன்னேற்பாட்டோடு செய்த இந்த சூழ்ச்சியை நீங்கள் கூடவா நம்புகிறீர்கள்? நேற்று இந்த மேஜையில் இப்படி ஒரு செக்கை நான் பார்க்கவுமில்லை; எடுக்கவுமில்லை. வேண்டுமென்றே இப்படி ஒரு செக்கை எழுதி இவனிடம் கொடுத்து இப்படிச் சொல்லச் செய்வதற்கு எவ்வளவு நாழியாகும்?" - அழகியநம்பி அவரிடம் தன் கட்சியை எடுத்துக் கூறினான்.
"சீ! அதிகப்பிரசங்கி! எதிர்த்துப் பேசாதே." - பூர்ணாவிடம் இரைந்து ஒரு வார்த்தை சொல்வதற்குப் பயப்பட்ட பிரமநாயகம் அவனிடம் பேசும்போது மட்டும் அதிகாரம், ஆணவம், மிரட்டல், அரட்டல் எல்லாவற்றையும் காட்டினார்.
இளம் இரத்தம் கொதித்தது. அவருக்கு சுடச் சுடப் பதில் சொல்ல வேண்டுமென்று துடித்தது நாக்கு. "உங்களை நம்பி கடலைக் கடந்து இவ்வளவு தூரம் வந்துவிட்டேன் பாருங்கள் அதற்காக நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்." - வெடுக்கென்று வாயில் வந்த சொற்களைக் கூசாமல் சொல்லிவிட்டான். அதைக் கேட்டுவிட்டுப் பிரமநாயகம் கோபத்தோடு அவனை எரித்துவிடுவது போலப் பார்த்தார். "நீ உள்ளே போய் இரு! நான் அப்புறம் வந்து உன்னிடம் பேசிக் கொள்கிறேன்."
அழகியநம்பி ஒன்றும் சொல்லவுமில்லை; நின்ற இடத்தை விட்டு நகரவுமில்லை. பேசாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்.
"உன்னைத்தான் சொல்கிறேன். உள்ளே போய் இரு."
"வெளியே போகத் துணிந்துவிட்டவனை உள்ளே இருக்கச் சொல்கிறீர்கள். மண்குதிரைகளை நம்பி இனி மேலும் நான் ஆற்றில் இறங்கத் தயாரில்லை."
"அசட்டுத் தனமாக உளறாதே. போ... சொல்வதைக் கேள். நீ உள்ளே உன்னுடைய அறையிலே போய் இரு." - நயத்திலும் பயத்திலுமாக அவனை மிரட்டினார் அவர்.
அழகியநம்பி ஸ்பிரிங் கதவைப் படீரென்று இழுத்து விட்டுக் கொண்டு வெளியேறினான். சபாரத்தினம் எங்கிருக்கிறாரென்று தேடித் துழாவின அவன் கண்கள். என்ன ஆச்சரியம்? சபாரத்தினம் அறை வாசலிலே அவனை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பவர் போல் நின்றார். அந்தச் சமயத்திலும் அவருடைய முகத்தில் நகையைக் கண்டான். "இனி ஒரு நிமிஷம் கூட என்னால் இந்தச் சதிகாரர்களிடம் வேலை பார்க்க முடியாது; என்னோடு அறைக்கு வாருங்கள். எல்லா விவரமும் சொல்லுகின்றேன்." என்று சபாரத்தினத்தின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு பின் கட்டுக்குச் சென்றான் அழகியநம்பி.
"சபாரத்தினம்! உங்கள் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும். பிரமநாயகம் முதுகெலும்பில்லாதவர் என்பதை இன்று நிரூபித்துக் காட்டிவிட்டார். அந்தச் சூழ்ச்சிக்காரி பூர்ணா என்னைக் குற்றவாளியாக்குவதற்காகப் பியூனைக் கைக்குள் போட்டுக் கொண்டு ஏதோ பொய் நாடகம் நடித்துக் காட்டினால் அதை இந்த மனிதர் உண்மையென்று நம்பி அவள் முன்னாலேயே என்னைக் கண்டிக்கிறாரே." - ஆத்திரத்தில் மடமடவென்று மூச்சுவிடாமல் பேசிக் கொண்டே போனான் அவன்.
"அழகியநம்பி! நீங்கள் உணர்ச்சியின் உலகத்தில் மட்டும் உலவுகிறீர்கள். உண்மை உலகத்தை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பிரமநாயகம் காரியவாதி. ஆடிக் கறக்கிற மாட்டினிடம் ஆடிக் கறக்கவும், பாடிக் கறக்கிற மாட்டினிடம் பாடிக் கறக்கவும், அடித்துக் கறக்கிற மாட்டினிடம் அடித்துக் கறக்கவும் - வகையாகத் தெரிந்தவர்."
"அதனால் தான் மனிதனையே மாடாக மதித்துப் பேசுகிறார் போலிருக்கிறது."
"என்ன நடந்தது? ஆத்திரப்படாமல் சொல்லுங்கள்."
காலையில் பூர்ணா ஆபீஸிற்கு வந்தது முதல் நடந்த விவரங்களை அழகியநம்பி சபாரத்தினத்திற்குக் கூறினான். கூறிவிட்டுச் சபாரத்தினத்தின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.
"இவ்வளவுதானே? இதற்காகவா இப்படிப் பொறுமையிழந்து ஆத்திரப்படுகிறீர்கள்? பூர்ணாவின் சாகஸமும், திறமையும், நூற்றில் ஒரு பங்கு கூட இந்தச் சூழ்ச்சியில் இடம் பெறவில்லையே? இதைவிடப் பெரிய பயங்கரமான சூழ்ச்சிகளையெல்லாம் தாங்க வேண்டியிருக்கும். அன்றைக்கே லெவினியா கடற்கரையில் நான் சொல்லவில்லை. நேர்மை, நியாயம், உண்மை - இவற்றிற்குப் பயந்த மனமுடையவர்கள் வியாபார உலகத்தின் பக்கத்தில் கூட வரக்கூடாது.
"சூழ்ச்சி, வஞ்சகம், சிலவற்றைத் தெரிந்து கொண்டும், தெரியாததைப் போல நடித்தல்; இன்னும் சிலவற்றைத் தெரிந்து கொள்ளாமலே தெரிந்து கொண்டது போல நடித்தல், - இதெல்லாம் பழகிப் பழகி மரத்துப் போனவர்கள் தாம் வியாபாரத் துறையில் வெற்றி பெற முடியும்."
"நான் வியாபாரி இல்லையே! வெற்றியையும், தோல்வியையும் தேடிக் கொண்டிருப்பதற்குச் சொந்த வியாபாரமா பாழ் போகிறது?" - அழகியநம்பி குறுக்கிட்டான்.
"வியாபாரிகளுக்கு மட்டுந்தானா! வியாபாரிகளை அண்டுகிறவர்களுக்கும் அவையெல்லாம் இருக்கத்தான் வேண்டும். இன்றைய நிலையில் பூர்ணாவும், பிரமநாயகமும், அந்தரங்கத்தில், எலியும், பூனையும் போல வாழ்கிறார்கள். ஆனால், வெளியே எப்படி விட்டுக் கொடுக்காமல் பழகுகிறார்கள் பார்த்தீர்களா? பூர்ணாவை ஒரு வார்த்தை பிரமநாயகம் எதிர்த்துப் பேசினால் நாளைக்கே இத்தனை ஆண்டுகளாக வருமான வரி, விற்பனை வரி - துறைகளில் ஏமாற்றியுள்ள அத்தனை பொய்க் கணக்குகளையும் அவள் அம்பலமாக்கி விடுவாள். நீங்கள் செக்கைத் திருடிவிட்டதாக அவளும், பியூனும், கூட்டுச் சேர்ந்து பொய் நாடகம் நடிக்கிறார்கள் என்பது பிரமநாயகத்திற்கு நன்றாகத் தெரியும். அதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு அவர் முட்டாளல்ல. அவருக்கு இருக்கும் அறிவைக்கொண்டு இந்த இலங்கையைப் போல ஒன்பது இலங்கையை ஆளலாம்."
"அதனால் தான் அந்தப் பெண்பிள்ளைக்கு முன்னால் இரைந்து பேசுவதற்கே பயப்படுகிறாரோ?"
"அல்ல. அது வியாபாரத் தந்திரம். சந்தர்ப்பம் வாய்த்தால் அவளை அவரோ, அவரை அவளோ, குத்திக் கொலை செய்யக் கூடத் தயங்க மாட்டார்கள். அப்படி நடந்தால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆனால், அந்தச் சந்தர்ப்பம் வருகிறவரை அவர்கள் இருவரும் பழகுகிற விதத்தை யாரும் வித்தியாசமாகப் புரிந்து கொள்ள முடியாது."
சில நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். "பிரமநாயகம் வருகிற நேரமாயிற்று. அவர் வரும்போது நான் இங்கே உங்களோடு இருந்தால் வித்தியாசமாக நினைக்க நேரிடும். நான் கடைக்குள் போகிறேன். ஆத்திரப்படாமல் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்." - என்று எச்சரித்து விட்டுச் சென்றார் சபாரத்தினம்.
பிரமநாயகம் சிரித்துக் கொண்டே அறைக்குள் வந்தார். அழகியநம்பிக்கு ஏற்பட்ட வியப்புக்கு ஒரு அளவே இல்லை. 'விக்கிரமாதித்தன் சிம்மாசனம் மாதிரி இந்த அறையில் ஆட்களின் சுபாவத்தை மாற்றும் மந்திர சக்தி ஏதாவது இருக்கிறதா? அலுவலக அறையில் பூர்ணாவிற்கு முன்னால் என்னைக் கண்டபடி பேசி அதட்டி முழித்துப் பார்த்தவர் இப்போது மலர்ந்த முகத்தோடு சிரித்துக் கொண்டே வருகிறாரே" - என்று திகைத்தான் அழகியநம்பி. அவன் இப்படித் திகைத்துக் கொண்டிருந்தபோது இன்னொரு ஆச்சரியமும் நடந்தது. "சோமு! இரண்டு கப் தேநீர் கொண்டுவா அப்பா" - என்று அறை வாசற்படியில் நின்று கொண்டே சமையற்காரச் சோமுவுக்குக் குரல் கொடுத்துவிட்டு நுழைந்தவர் செல்லமாகக் குழந்தையைக் கொஞ்சுகிறவர் போல அழகியநம்பியின் அருகே வந்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.
"பயந்து விட்டாயா தம்பீ! உண்மையில் நடந்ததெல்லாம் எனக்கு தெரியும். சும்மா அவளுக்காக எல்லாம் நம்பினது போல் நடித்தேன். உன்னைக் கண்டித்து, அதட்டினது - எல்லாம் கூட நடிப்புத்தான். நீ அதைப் புரிந்து கொள்ளாமல் அவளுக்கு முன்னால் என்னையே எதிர்த்துப் பேசத் தொடங்கிவிட்டாய்."
"ஒருவரை - ஒருவிதமாகப் புரிந்து கொள்ளத்தான் எனக்குத் தெரியும்; நாலுவிதமாகப் புரிந்து கொள்ளத் தெரியாது. இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும்." - அழகியநம்பி பிரமநாயகத்தின் கையைத் தன் தோள் பட்டையிலிருந்து ஒதுக்கித் தள்ளினான். அந்தச் சமயத்தில் சோமு தேநீர் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான்.
"அடேயப்பா! தம்பிக்கு என் மேல் எவ்வளவு கோபம்? சூடாகத் தேநீர் குடித்த பின்பாவது தணிகிறதா; இல்லையா? பார்ப்போம்!" - சோமுவின் கையிலிருந்து தேநீரை வாங்கி அவனிடம் நீட்டினார் பிரமநாயகம்.
"நீங்கள் குடியுங்கள். மீதமிருந்தால் பூர்ணாவுக்குக் கொடுத்தனுப்புங்கள். எனக்குத் தேவை இல்லை." - அழகியநம்பி முகத்தைத் திருப்பி எங்கோ பார்த்துக் கொண்டு அவர் கொடுத்த தேநீரை மறுத்தான். "அநாவசியமாகக் கோபப்படாதே தம்பீ! என் நிலையை விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டால் நீ என்மேல் கோபப்பட மாட்டாய். மறுக்காதே. தேநீரை வாங்கிக் கொள்." - அவர் கெஞ்சினார், குழைந்தார். வாங்கிக் கொள்ளாவிட்டால் மனிதர் அழுது விடுவார் போலிருந்தது.
அவர் நிலை பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஆத்திரமடைந்து முறுக்கிப் போயிருந்த அழகியநம்பியின் மனம் பிரமநாயகத்தின் முகத்தைப் பார்த்தபோது நெகிழ்ந்தது.
தேநீரைக் கையில் வாங்கிக் கொண்டான். சிறிது நேரம் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். பின்பு தேநீரைப் பருகினான்.
அவன் உடலும், உள்ளமும், புதிய சுறுசுறுப்பை அடைந்திருந்தன. பிரமநாயகம் நாற்காலியில் உட்கார்ந்தார். அவனையும் எதிரே இருந்த மற்றோர் நாற்காலியில் உட்காரச் செய்தார். ஏதோ விரிவாகச் சொல்லப்போகிறாரென்று அவருடைய முகக் குறிப்பிலிருந்து தெரிந்தது.
அவர் வாயைத் திறந்து சொல்லத் தொடங்குவதற்கு முன் அழகியநம்பி முந்திக் கொண்டான். தன் மனத்திலிருந்ததைத் தெளிவாக அவரிடம் சொல்லத் தொடங்கிவிட்டான். "இதோ பாருங்கள்! நான் ஏழையாயிருக்கலாம். என் குடும்பத்தில் தாயும், தங்கையும், சோறு துணியின்றி ஊரில் திண்டாடலாம். நான் கடன்பட்டிருப்பவர்கள் என்னைக் காறித்துப்பலாம். அதையெல்லாம் நான் சகித்துக் கொள்வேன். உங்களோடு பிழைப்பைத் தேடித்தான் இங்கே வந்தேனே ஒழிய உங்களுக்கு அடிமையாகி விடுவதற்கு நான் வரவில்லை. இன்றைக்கு கால் காசுக்கு வக்கில்லாத குடும்பமாக இருக்கலாம். ஆனால், மானம் மரியாதையுள்ள - நியாயத்துக்குப் பயப்படுகிற குடும்பத்தில் பிறந்தவன் நான். பிறந்த மண்ணைத்தான் கடந்து உங்களோடு வந்திருக்கிறேன்; பிறவிக் குணங்களையும் கடலுக்கு அப்பால் கழற்றி வைத்துவிட்டு வரவில்லை. நினைவு வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்காக நீங்கள் யார் யாருக்கோ பயப்பட வேண்டியிருக்கலாம்; எப்படியெப்படியோ நடிக்க வேண்டியிருக்கலாம்! அதற்கெல்லாம் என்னைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். நான் இருதலைக் கொள்ளி எறும்பாகத் திண்டாடுகிற நிலையை ஏற்படுத்தாதீர்கள். நான் உங்களிடம் திட்டுக் கேட்கத் தயார். உங்களுக்குக் கீழ்ப்படியத் தயார். நீங்கள் எனக்குச் சம்பளம் கொடுக்கிறவர்; தூரத்து உறவினர்; எனக்கு நம்பிக்கையூட்டி என்னை இங்கே அழைத்துக் கொண்டு வந்தவர். ஆனால், யார் யாரிடமோ நான் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது."
"எதிர்பார்த்தால் நான் அடுத்த கப்பலில் ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்!"
பிரமநாயகம் மூக்கில் விரலை வைத்தார். கண்கள் வியப்பால் விரிந்தன. அவன் பேசியவிதம், தீர்க்கமான குரல், உறுதி, எல்லாம் சேர்ந்து அவர் அவனுக்கு உபதேசம் செய்ய வேண்டுமென்று நினைத்து வைத்திருந்தவற்றை முற்றிலும் மறக்கச் செய்து விட்டன. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அயர்ந்து போய்க் கல்லாய்ச் சிலையாய் மலைத்த நிலையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் அவர்.
"தம்பீ! வந்து ஒரு வாரமாகவில்லை. அதற்குள் நீ ஏன் இப்படி வேறுபடுத்திப் பேசுகிறாய்? உனக்கு நான் என்ன கெடுதல் செய்து விட்டேன்? உன்னைப் போல ஒரு நல்ல பிள்ளை வேண்டுமென்பதற்காகத் தானே பிரியப்பட்டுக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்? இன்றைக்கு என்னிடம் நீ இப்படிப் பேசுவதைக் கேட்டால் யாரோ உன்னிடம் என்னைப் பற்றித் தவறாக ஏதோ சொல்லி உன் மனத்தைக் கலைத்திருக்கிறார்களோ - என்று சந்தேகப்படுகிறேன்." பிரமநாயகம் ஒவ்வொரு வார்த்தையாக இழுத்து நிறுத்திப் பேசினார்.
"நான் பச்சைக் குழந்தை இல்லை; இன்னொருவர் சொல்லிக் கலைப்பதற்கு. 'நான் என்ன கெடுதல் செய்தேன்?' - என்று என்னைப் பார்த்துக் கேட்கிறீர்களே! இன்றைக்கு நடந்த நிகழ்ச்சி போதாதா? இன்னும் வேறென்ன வேண்டும்? இதைவிடப் பெரிதாக நடந்தாலும் நான் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டுமென்பது உங்கள் எண்ணம் போலிருக்கிறது."
அழகியநம்பியின் ஒவ்வொரு கேள்வியும், ஒவ்வொரு சொல்லும், - பிரமநாயகத்தின் மனத்தில் கூர்மையாகப் பாய்ந்தன. ஊரில் புறப்பட்ட நேரத்திலிருந்து வாயில்லாப் பூச்சி போல் தன்னிடம் அதிகம் பேசாமல் உம்மணா மூஞ்சியாக இருந்த பையன் இப்படி நிறுத்து அளந்து 'பாயிண்டு' பாயிண்டாகப் பேசுகிறானே என்று திகைத்தார் அவர்.
"பொறுத்துக்கொள் தம்பீ! அவள் இப்படிச் செய்வது இது முதல் தரமில்லை. கூடிய விரைவில் அவளுடைய கொட்டத்தை அடக்கி விடுகிறேன். நீ புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு அதற்கு உதவி செய்வாய் என்று எதிர்பார்த்தேன். நேற்றுக் காலையில் உன்னைத் தனியே கூப்பிட்டு எச்சரித்தது கூட உன் நன்மைக்காகத்தான்."
"என் நன்மையைக் கருதுகிறவராக இருந்தால் நீங்கள் அவளுக்கு முன்னால் அந்தப் பியூனையும் வைத்துக் கொண்டு திருட்டுப் பட்டம் கட்டியிருக்க மாட்டீர்களே?"
"தம்பீ! நீ மறுபடியும் அதையே சொல்கிறாயே. நான் உன்னிடம் இரகசியத்தை உடைத்துச் சொன்னாலொழிய என்னை நீ சும்மா விடமாட்டாய் போலிருக்கிறது. அந்தப் பாவிப் பெண்ணை இப்போதுள்ள நிலையில் நான் வெளிப்படையாகப் பகைத்துக் கொண்டால் இந்தக் கடை, இந்த வியாபாரம், 'இந்தப் பிரமநாயகத்தின்' அந்தஸ்து எல்லாமே கவிழ்ந்து விடும்."
"எவ்வளவு நாள் தான் இப்படிப் பயந்து கொண்டிருக்க முடியும்? நீங்கள் பயப்பட வேண்டியது தான். ஆனால் நான் இப்படிச் சீரழிய முடியாது."
"அதிகநாள் தேவை இல்லை! அதுதான் சொன்னேனே; சீக்கிரமாக இந்த விஷயத்திற்குச் சரியான ஒரு முடிவு கட்டி விடுகிறேன் என்று."
"என்னமோ போங்கள், எனக்கு உங்களுடன் இங்கே புறப்பட்டு வரும்போது இருந்த நிம்மதி வந்த பின்பு இல்லை. சரியாக இராத் தூக்கம் கூடக் கிடையாது. இப்போது இரண்டொரு நாட்களாக எந்த விநாடியில் என் உயிருக்கு ஆபத்து வருமோ என்று கூடப் பயம் உண்டாகியிருக்கிறது."
"அசட்டுப்பிள்ளை! அந்தப் பயம் மட்டும் உனக்கு வேண்டவே வேண்டாம். எதற்கும் பயப்படாதே. தைரியமாக இரு. வீண் பயமுறுத்தல்களுக்கு மனத்தில் இடங்கொடுத்து உன்னை நீயே அதைரியப்படுத்திக் கொள்ளாதே."
"நீங்கள் சொல்கிறீர்கள்! என் மனம் கேட்க மாட்டேனென்கிறதே? 'காசைத் தேடிக் கொண்டு கடல் கடந்து வந்த இடத்தில் உயிரையும் கொடுத்துவிட்டுப் போய்விட நேருமோ?' - என்று சூழ்நிலை ஏற்பட்டால் பயமாகத் தானே இருக்கிறது."
"நீ வேண்டுமானால் நாளை முதல் ஆபீஸ் அறைக்குள் அவளோடு உட்கார்ந்திருக்க வேண்டாம். தனியாக வேறிடத்திலிருந்து கண்காணிக்க வேண்டியதை மட்டும் கண்காணித்துக் கொண்டால் போதுமே."
"நாளை முதல் ஒரு வாரத்திற்கு நான் இந்த நகர எல்லைக்குள்ளேயே இருக்கப் போவதில்லை."
"ஏன்? எங்கே போகப் போகிறாய்?" - பிரமநாயகம் அவன் கூறியதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போய் வினவினார்.
"இந்த நாட்டிலுள்ள அழகிய மலைப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன். எனக்கு மன நிம்மதி தேவை. ஓய்வு தேவை. துன்பங்களிலும், சூழ்ச்சிகளிலும், சதிகளிலும், இருந்து தற்காலிகமாக விடுதலை தேவை. இந்தக் கடைக்குள்ளேயே சேர்ந்தாற்போல இன்னும் இரண்டு மூன்று நாட்கள் அடைந்து கிடந்தேனானால் எனக்குப் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும்."
பிரமநாயகத்துக்கு அவனைத் தடுக்கவோ, மறுத்துச் சொல்லவோ தெம்பில்லை.
"அதற்கென்ன? போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வாயேன். உன்னை யார் வேண்டாமென்று தடுக்கிறார்கள்? நீ இந்தப் பக்கங்களுக்குப் புதியவனாயிற்றே! தனியாகப் போகப் போகிறாயே? யாராவது கூட வருகிறார்களோ?" - என்று அவனிடம் கேட்டார் அவர்.
"விவரம் தெரிந்தவர்களோடுதான் போகிறேன்."
"யார்? இந்த யாழ்ப்பாணத்துப் பிள்ளையாண்டான் கூட வருகிறானோ."
"இல்லை! வேறு தெரிந்த மனிதர்களோடு போகிறேன்."
அதற்கு மேல் 'யார்? என்ன? எதற்காக?' - என்று தூண்டித் துருவிக் கேட்பதற்குத் தயங்கினார் அவர். 'பையன் கண்டபடி இரைந்து பேசிவிடுவானோ?' - என்ற பயமும் உள்ளூற இருந்தது. ஆகவே பேசாமல் இருந்துவிட்டார்.
"கைச் செலவுக்குப் பணம் ஏதாவது வேண்டுமா?"
அழகியநம்பிக்குத் தன் செவிகளை நம்பவே முடியவில்லை. பிரமநாயகத்தின் வாயிலிருந்தா இந்தச் சொற்கள் வருகின்றன? தூத்துக்குடித் துறைமுகத்தில் உடன் வந்தவனை வயிறெரிய விட்டுச் சொல்லாமல் காப்பி சாப்பிடச் சென்றவர்; சாமான் தூக்கி வந்த கூலிகளுக்குச் சுமைக்கூலி கொடுப்பதில் கருமித்தனத்தைக் காட்டியவர்; - அவரா இப்போது இப்படித் தாராளமாகக் கேட்கிறார்? - அழகியநம்பி பதில் சொல்லாமல் அவர் முகத்தைப் பார்த்தான். உண்மையாகத் தான் சொல்கிறாரா; என்று அவருடைய முகத்திலிருந்து அனுமானிக்க முயன்றான்.
"என்ன தம்பீ; அப்படிப் பார்க்கிறாய் என்னை? உனக்கு எவ்வளவு வேண்டுமோ கூசாமல் கேளேன்."
"இல்லை! எனக்குப் பணம் எதுவும் தேவையில்லை." - அவனுடைய பதில் உறுதியாக வெளிவந்தது. அப்போதுள்ள சூழ்நிலையில் பிரமநாயகத்திடம் பணம் வாங்குவது அவரோடு தன்னை மேலும் இறுக்கிப் பிணித்துக் கொள்வதற்குக் காரணமாகும் என்று அவன் மனதில் பட்டது. 'எதுவாயிருந்தாலும் அப்போது அவரிடம் கைநீட்டி வாங்குவது முறையில்லை' - என்று அவன் உள் மனத்திலிருந்து கண்டிப்பான - கட்டாயமான ஒரு கட்டளை பிறந்தது. அவன் வேண்டாமென்று சொல்லிய பின் அவரும் அதிகமாக வற்புறுத்திக் கொண்டிருக்காமல் அந்தப் பேச்சையே விட்டுவிட்டார்.
"எப்போது புறப்படப் போகிறாய்? எப்போது திரும்புவாய்?"
"இன்று மாலை அவர்கள் வீட்டுக்குப் போய் அவர்களோடு இருந்துவிட்டு நாளைக் காலையில் அங்கிருந்தே புறப்படுகிறேன். சுற்றிப் பார்த்து முடிந்ததும் திரும்புவேன்."
"போய்விட்டுப் பத்திரமாகத் திரும்பி வந்து சேர்! அதற்குள் இங்கே உனக்கிருக்கும் தொல்லைகளைக் குறைத்து நீ நிம்மதியாக வேலை செய்வதற்கேற்ற சில வசதிகளை நான் செய்து வைக்கிறேன்."
"என்ன செய்வீர்களோ? செய்யமாட்டீர்களோ? உங்களிடம் நான் வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான்! நான் இங்கே வேலை பார்ப்பதற்காக நீங்கள் வசதிகளைச் செய்து கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. தொல்லைகளைப் பெருக்காதீர்கள். சூழ்ச்சிகளுக்கும், சோதனைகளுக்கும், என்னை ஆளாக்காதீர்கள். அதைத்தான் நான் விரும்புகிறேன்."
- அவர் பதில் சொல்லவில்லை. அழகியநம்பி புறப்படுவதற்குத் தயாரானான். பிரயாணத்துக்கு வேண்டிய துணிமணிகளையும் மற்றவற்றையும் சூட்கேஸில் எடுத்து வைத்துக் கொண்டான்.
"சாப்பிட்டுவிட்டுப் போகலாம் தம்பீ! மாலையில் தானே அவர்கள் வீட்டில் இருக்க வேண்டுமென்று கூறினாய்? இப்போது இரண்டு மணி தானே ஆகிறது! நானும் இதுவரை சாப்பிடவில்லை. வா! இரண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடுவோம்."
அழகியநம்பிக்கு அப்போது அவர் நடந்து கொள்கிற விதம் புதுமையாக - விந்தையாக - இருந்தது. திடீரென்று அவர் ஏன் அப்படி அன்பே உருவான மனிதராக மாறி நெகிழ்ந்து தணிந்து பேசுகிறாரென்று வியந்தான் அவன். 'சூதுவாதில்லாத ஒரு நல்லவனுக்கு அறிந்தோ, அறியாமலோ - துன்பம் செய்து விட்டவர்கள் - தாங்கள் செய்த துன்பத்தை அவனே எடுத்து உணர்த்தும் போது மனத்திலுள்ள சகலவிதமான ஆணவங்களும் அழிந்து நிற்கிறார்கள்' - என்று மனவியல் நூலில் எப்போதோ கல்லூரி நாட்களில் படித்திருந்த ஒரு சிறு உண்மை அழகியநம்பிக்கு நினைவு வந்தது.
பிரமநாயகம் அந்த நிலையை அடைந்து விட்டாரா? அவரைப் பார்க்கும் போது உண்மையில் அவனுக்கு அப்போது மிகவும் பரிதாபமாக இருந்தது. எதையோ நினைத்து நினைத்து ஏங்குவது போலிருந்தது அவருடைய முகச்சாயை.
அழகியநம்பியின் மனத்தில் அப்போது தோன்றியது இது: 'அடடா, பணத்தை இலட்சக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பவன் உல்லாசத்தில் மிதப்பதாக நானும் என்னைப் போன்ற பஞ்சைகளும் சில சமயங்களில் எண்ணுகிறோமே, இந்த பிரமநாயகம் இலட்சக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டும் நிம்மதியாக வாழ முடியவில்லையே. முப்பது வயதுக்குட்பட்ட ஒரு பெண்பிள்ளை இவரையும் இவருடைய வியாபாரத்தையும் இந்த ஆட்டு ஆட்டிவைக்கிறாளே!'
அவன் அவருடைய விருப்பத்தை மறுக்கவில்லை. அவரோடு சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தான். இருவருக்கும் பக்கத்தில் பக்கத்தில் இலை போட்டிருந்தான் சோமு. வழக்கமாக ஒவ்வொரு நாளும் சமையல் ஆனவுடன் முதலிலேயே இலை போட்டு அவருக்குத் தனியாகச் சாப்பாடு போட வேண்டும். இன்று முதலாளியே சேர்த்து இலைபோட்டுப் பரிமாறச் சொல்லியது சோமுவுக்கே ஆச்சரியமாக இருந்தது.
சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. பணச்செருக்குள்ளவர்களுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஒருவகைக் கம்பீரம், அலட்சிய சுபாவம், எடுத்தெறிந்து பேசுகிற தன்மை, இதெல்லாம் பிரமநாயகத்திடம் வழக்கத்திற்கு மாறாக அன்று இல்லாமலிருந்ததை அழகியநம்பி கூர்ந்து கவனித்தான்.
எதை நினைத்தோ - எதற்காகவோ உள்ளுக்குள்ளேயே அவர் ஏங்கிக் குமைகிறார் என்று அவன் நினைத்தான். தான் பிரிவது அப்போது அவருக்கு ஏன் அவ்வளவு அதிக வருத்தத்தைத் தருகிறதென்பதும் அவனுக்குப் புரியாததாகவே இருந்தது.
ஆறேழு தடவை - "பத்திரமாகப் போய்விட்டுத் திரும்பி வா." - என்று சொல்லிக் கொண்டே கடை வாயிற்படி வரை அவனைக் கொண்டு வந்து விட்டுப் போனார் பிரமநாயகம். சபாரத்தினம் அவனோடு கூடவே வெளியேறியிருந்தார். பிரமநாயகத்திடம் அவர் கொடுக்க வந்த பணத்தைத் தேவையில்லை என்று மறுத்துவிட்ட அழகியநம்பி, இப்போது சபாரத்தினத்திடம் வலுவில் கேட்டுச் செலவுக்குக் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டான்.
பிரமநாயகத்துக்கும், தனக்கும் அறைக்குள் நடந்த நீண்ட உரையாடலையும் அவருடைய திடீர் மாறுதலையும் அழகியநம்பி சபாரத்தினத்திடம் தெரிவித்தான்.
"நான் அப்போதே சொல்லவில்லையா?" - என்று சிரித்துக் கொண்டே கூறினார் சபாரத்தினம். இருவரும் பேசிக் கொண்டே பஸ் நிற்குமிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
"முதலில் எங்கள் வீட்டிற்குப் போவோம். அங்கே சிற்றுண்டி காப்பி அருந்திவிட்டு - வெள்ளவத்தையில் அந்த வெள்ளைக்காரப் பெண்களின் வீட்டில் நானே உங்களைக் கொண்டுபோய் விடுவதற்கு உடன் வருகிறேன்." - என்றார் சபாரத்தினம்.
"நான் மாலையில் அவர்கள் வீட்டிற்கு வந்துவிடுவதாக ஆள் மூலம் சொல்லி அனுப்பி விட்டேனே."
"பரவாயில்லை! எங்கள் வீட்டிற்குப் போய்விட்டுப் பின்பு போவோம். நான் உங்களை அதிகநேரம் தாமதப்படுத்த மாட்டேன்."
சபாரத்தினத்தின் அன்பான வேண்டுகோளை அவனால் மறுக்க முடியவில்லை. அவரோடு அவர் வீட்டிற்கு வர இணங்கினான் அவன். பம்பலப்பிட்டியா - பகுதியில் ஏதோ ஒரு சிறு சந்தில் குடியிருப்பதாகக் கூறினார் அவர்.
சபாரத்தினம் சொன்னபடி தம் வீட்டில் அழகியநம்பியை அதிக நேரம் தாமதிக்கச் செய்யாமல் ஆறேகால் மணிக்குள் வெள்ளவத்தையில் கொண்டு போய் விட்டுவிட்டார்.
மேரி, லில்லி, இருவரும் அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தந்தை வோட்ஹவுஸும், தாய் திருமதி வோட்ஹவுஸும் அவனை அன்புடன் கைகுலுக்கி வரவேற்றனர்.
அழகியநம்பிக்குத் தங்கள் தாய் தந்தையரை - முறைப்படி அறிமுகம் செய்து வைத்தனர் மேரியும், லில்லியும்.
"மேரியும் லில்லியும் உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார்கள். உங்களைப் பார்க்க வேண்டுமென்று எனக்கும் என் மனைவிக்கும் அவர்கள் சொல்லிய தினத்திலிருந்து ஆசை. கூட்டிக் கொண்டு வரச் சொல்லி அவர்களிடம் வற்புறுத்திக் கொண்டே இருந்தேன். இன்றைக்குத்தான் ஆசை நிறைவேறியது." - கம்பீரமான உயர்ந்த தோற்றத்தையுடைய வோட்ஹவுஸ் சிறு குழந்தையைப் போல் களங்கமில்லாமல் சிரித்துச் சிரித்துப் பேசினார்.
சபாரத்தினம் அவனைக் கொண்டு வந்து விட்டவுடன் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். "நீங்களும் இருந்து இரவு சாப்பிட்டுவிட்டுப் போகலாமே" - என்று கூறினாள் மேரி. "இல்லை! இன்றிரவு ஏழு மணிக்கு விவேகாநந்த சபையில் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கும் புலவர் ஒருவர் சொற்பொழிவு செய்கிறார். நான் கேட்கப் போக வேண்டும்." - என்று அவளிடமும் அழகியநம்பியிடமும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார் சபாரத்தினம். நிறத்தினாலும், பிறந்த நாட்டினாலும், பண்பினாலும் வேறுபட்டு அன்பினால் ஒன்றுபட்ட அந்த வெள்ளைக் குடும்பத்திற்கு இடையே அழகியநம்பி தனித்து விடப்பட்டான். இரண்டு பக்கத்திலும் பக்கத்திற்கு ஒருவராக நாற்காலையைப் போட்டுக் கொண்டு அவனருகே மேரியும் லில்லியும் உட்கார்ந்து விட்டார்கள். சிரிப்பும் வேடிக்கையுமாகக் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பொம்மை கிடைத்துவிட்டால் அவர்கள் அதை வைத்துக் கொண்டு விளையாடுகிற மாதிரி அவனை வைத்துக் கொண்டு விளையாடத் தொடங்கி விட்டார்கள்.
திருமதி வோட்ஹவுஸ் இரவு விருந்துக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தாள். வோட்ஹவுஸ் அவர்களோடு உட்கார்ந்து சிரிப்பிலும், பேச்சிலும் கலந்து கொண்டார். அவரைப் பார்த்தால் இராணுவ உத்தியோகஸ்தர் மாதிரியே தெரியவில்லை. முரட்டுச் சுபாவம், கடுகடுப்பான முகச்சாயல், - இப்படி இராணுவத் துறையில் இருப்பவர்களுக்கு உரியனவென்று அழகியநம்பி நினைத்து வைத்திருந்த குணங்களில் ஒன்று கூட அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
வயதானவராயினும், இளைஞர் போலக் காட்சியளித்தார். பேச்சு, சிரிப்பு, முகம், நடை, உடை - எல்லாவற்றிலுமே அவரிடம் இளமை இருந்ததை அவன் கவனித்தான். தம் பெண்களுக்கு முன்னால் தாம் தகப்பன் என்ற தனிக்கௌரவம் கொண்டாட முயலாமல் அவரும் ஒரு குழந்தையாக மாறிக் குறும்புகளிலும், விளையாட்டுப் பேச்சுக்களிலும் பங்கு கொண்டது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"என்ன? மிஸ்டர் அழகியநம்பி! பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களே! எனக்கு இது சுத்தமாகப் பிடிக்காது. மனிதன் என்றிருந்தால் நன்றாகச் சிரித்துப் பேசி எல்லோரோடும் கலகலப்பாகப் பழக வேண்டும். இதோ என்னைப் பாருங்கள். என்னுடைய பெண்களைப் பாருங்கள். நாங்கள் இப்படிப் பழகுவதையே ஒரு நல்ல குணமாக வழக்கத்தில் கொண்டு வந்து விட்டோம்."
அழகியநம்பி அவர் கூறியதைக் கேட்டுச் சிறிது நாணமடைந்தான்.
"அதில்லையப்பா காரணம்! இவர் அதிகம் பேசாதவரென்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. எங்களோடெல்லாம் தனிமையில் எவ்வளவு பேசுகிறார் தெரியுமா? நீங்கள் இராணுவத் துறையைச் சேர்ந்தவரில்லையா? அதனால் தான் உங்களிடம் பேசுவதற்குப் பயப்படுகிறார் போலும்."
மேரி தன் குறும்புப் பேச்சால் அவன் வாயைக் கிளறினாள். அழகியநம்பி வாயைத் திறந்தான்.
"மேரி தப்புக் கணக்குப் போடுகிறாள். உங்களை ஒரு இராணுவ அதிகாரியென்றே என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் மலர்ந்த முகமும், சிரிப்பும், பேச்சும் - இராணுவத்துக்கே பொருத்தமற்றவை." - சிரித்தவாறே அவரிடம் கூறினான்.
"நீங்கள் அந்த மாதிரி எண்ணுவது தவறு. உத்தியோகம் பார்க்கிற இடத்தில் உத்தியோக நேரத்தில் தான் அந்தப் பொறுப்புக்கள், கடமைகள், எல்லாவற்றுக்கும் நான் அதிகாரி. வீட்டுக்கு வந்து விட்டால் எல்லோரையும் போல் நான் சாதாரண மனிதன். மனிதனுக்குரிய எல்லா உணர்ச்சிகளையும் அனுபவிக்கத் துடிப்பவன்."
"உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடிக்கிறது."
இதன் பின் அவர்கள் மறுநாள் காலை பிரயாணம் தொடங்கப் போவது பற்றிப் பேச்சு எழுந்தது. இலங்கை மலைகளின் இயற்கை வனப்பைக் கவிதை பொழிவது போன்ற அழகான ஆங்கில நடையில் அவனுக்கு வர்ணித்தார் அவர்.
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இறுதியில் குறும்புத் தனமாக ஒரு போடு போட்டார் வோட்ஹவுஸ்.
"இதென்ன பிரமாதம்? என்னால் இவ்வளவு தான் முடியும். நாளைக்கு நீங்கள் பிரயாணம் செய்கிற போது ஒரு பக்கம் மேரியும், இன்னொரு பக்கம் லில்லியும் உட்கார்ந்து கொண்டு உங்களை என்ன பாடு படுத்தப் போகிறார்கள்; பாருங்கள்!" -
"மிஸ்டர் அழகியநம்பி! உண்மையென்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அப்பா எங்களைக் கேலி செய்கிறார். வேறொன்றுமில்லை." - என்றாள் லில்லி.
திருமதி வோட்ஹவுஸ் வந்து எல்லோரையும் உணவுக்கு அழைத்தாள். நீண்ட மேஜையில் அழகிய விரிப்பு விரித்துப் பழங்கள், ரொட்டி, வெண்ணெய், - பலவகைக் கரண்டிகள், பிளேட்டுகள் - யாவும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இரு புறமும் வரிசையாக நாற்காலிகள் போட்டிருந்தார். திருமதி வோட்ஹவுஸ் மெதுவாக அழகியநம்பியின் அருகே வந்து, "பயமோ, கூச்சமோ வேண்டாம். உங்கள் வரவை முன்னிட்டு இன்று இங்கே எல்லோருக்குமே மரக்கறி உணவுதான்." - என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். "பரவாயில்லை! உங்கள் அன்பு எப்படிச் செய்தாலும் ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டவன் நான்." - என்று உபசாரமாகப் பதில் சொன்னான் அவன்.
சாப்பிடும்போதும் வேடிக்கைதான்; சிரிப்புத்தான்; கேலிதான்! அழகியநம்பி நினைத்தான்:- 'ஆகா! இந்த வெள்ளைக்காரர்கள் வாழ்க்கையையே ஒரு இன்பப் பொழுது போக்காகப் பழகியிருக்கிறார்களே! கவலையும், மனத்துயரமும் இல்லாமல் எப்போதும் சிரித்துக் கொண்டே இவர்களால் எப்படி வாழ முடிகிறது.' திடீரென்று வோட்ஹவுஸ் கூறினார்:- "நீங்கள் மூன்று ஆப்பிள்களையாவது சாப்பிடவில்லையானால் உங்களை ஒரு ஆண்பிள்ளை - ஒரு இளைஞர் - என்று நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன்."
"இருங்கள் அப்பா! நீங்கள் குறைவாகச் சொல்லுகிறீர்கள். என் கையால் நான் நறுக்கிக் கொடுத்தால் இந்த மனிதர் ஆறு ஆப்பிள் கூடச் சாப்பிடுவார்." - என்று மேரி ஆப்பிள்களை நறுக்கி அவன் பிளேட்டில் குவிக்கத் தொடங்கினாள். இன்னொரு பக்கத்தில் லில்லி அவன் பிளேட் தாங்காமல் ரொட்டியை அடுக்கி வெண்ணையையும், சர்க்கரைப் பாகையும் (ஜாம்) தடவிக் கொண்டிருந்தாள்.
"ஏதேது? நீங்கள் இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு உபசரிக்கிற தடபுடலில் அவரை நிதானமாகச் சாப்பிட விடமாட்டீர்கள் போலிருக்கிறதே?" - என்று பெண்களைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள் திருமதி வோட்ஹவுஸ்.
"இன்னும் ஐந்தாறு நாட்கள் மலைநாட்டு ஊர்களில் சுற்றப் போகிறார்கள். போகிற இடங்களில் ஹோட்டல்களிலும் ரெஸ்ட் ஹவுஸ்களிலும் இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு உபசரிக்க முடியாதே! அதனால் தான் இங்கேயே செய்கிறார்கள்?" - வோட்ஹவுஸ் கூறினார்.
சாப்பிட்டு முடிந்த பின்பும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். காலையில் பிரயாணத்துக்காக விரைவில் விழிக்க வேண்டுமென்று திருமதி வோட்ஹவுஸ் எச்சரித்து அவரவர்களைப் படுத்து உறங்க அனுப்பினாள். மேல் மாடியில் தனித்தனியாக இருந்த விருந்தினர் அறையில் அழகியநம்பி படுத்தான். பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் கடல் இருந்தது. சுகமான கடற்காற்றின் தழுவலில் கட்டுண்டு நன்றாக உறங்கினான் அவன்.
காலையில் ஐந்து ஐந்தரை மணிக்குத் தேநீர்க் கோப்பையோடு வந்து அவனை எழுப்பினாள் லில்லி. ஐந்து முக்கால் மணிக்கு அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள். "வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த பிரயாணம் உங்களுக்கு வாய்க்கட்டும்." - என்று வோட்ஹவுஸும், திருமதி வோட்ஹவுஸும் மலர்ந்த முகத்தோடு வாழ்த்துக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்கள். காலை நேரத்துக் குளிர்ந்த காற்றுக் காரினுள் புகுந்து முகத்தில் மோதியது. வெள்ளவத்தையின் கலகலப்பான கடைவீதிகளில் எழுச்சியும் ஆரவாரமும் தொடங்காத நேரம் அது. அந்த அமைதியான நேரத்தில் ஆரவாரமும் ஒடுங்கியிருந்த வீதிகளைக் கடந்து சென்றது அவர்கள் கார். கதிரவன் ஒளி பரவவில்லை. அவனுடைய வரவுக்கு ஒளி மிகுந்த நடை பாவாடை விரிப்பது போல் கடல் நீர்ப்பரப்பு, கண்ணுக்கெட்டிய தூரம் பளபளத்துக் கொண்டிருந்தது. இலங்கை மலைக் காட்சிகளைப் பற்றிய வர்ணனைகளும், வர்ணப் படங்களும், வழி விவரங்களும் அடங்கிய ஒரு வழிகாட்டிப் புத்தகத்தை அழகியநம்பியின் கையில் கொடுத்தாள் மேரி.
"இந்தாருங்கள்! இதையும் வைத்துக் கொள்ளுங்கள். தொலைவிலுள்ள காட்சிகளைத் தெளிவாகப் பார்க்கலாம்." - என்று தோல் வாருடன் ஒரு தொலைநோக்கிக் கருவையை (பைனாகுலர்) அவன் கழுத்தில் மாலை போடுவது போல மாட்டிவிட்டாள் லில்லி. அப்படி மாட்டிவிடும்போது சண்பக மொட்டுப் போன்ற நீண்ட, மென்மையான, அவள் விரல்கள் அவன் கன்னத்தில் உரசின. அவனுக்குப் புல்லரித்தது. அவர்கள் மூன்று பேருமே பின் ஸீட்டில் தான் உட்கார்ந்து கொண்டிருந்தனர். வலது பக்கம் ஓரத்தில் அழகியநம்பியும், இடது பக்கம் ஓரமாக லில்லியும், நடுவில் மேரியுமாக அமர்ந்திருந்தனர். முன் ஸீட்டில் டிரைவர் மட்டுமே உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் மேல் அன்பு செலுத்துவதில் கூடப் போட்டி போட்டனர் அந்தப் பெண்கள்.
'தன்னோடு மட்டுமே அவன் பேச வேண்டும். தான் சொல்வனவற்றை மட்டுமே அவன் கேட்க வேண்டும். தனக்குத்தான் அவன் உரியவன்.' - என்று உரிமை கொண்டாடி ஆதிக்கம் செலுத்த முயன்றாள் மேரி. லில்லியும் அதே உரிமையையும், ஆதிக்கத்தையும், அவனிடம் கொண்டாடத் துடித்தாள். தன்னால் அந்தப் பெண்களுக்குள் மனமுறிவு ஏற்பட்டுவிடுமோ என்று கூடப் பயந்தான் அவன்.
கார் நகர் எல்லையைக் கடந்து இயற்கை வளம் பொலியும் பசுமைக் காட்சிகளுக்கு நடுவே குளிர்ந்த சாலையில் சென்று கொண்டிருந்தது. பச்சைப் பசுந்தோகைகள் மினுமினுக்க அசைந்தாடும் தென்னை மரங்கள், செடிகள், கொடிகள் வயல் வெளிகள், வானத்து மேகங்கள், தூரத்து மலைச் சிகரங்கள், - அப்போது அந்த அருங்காலை நேரத்தில் கார் செல்லும் போது இரு புறத்திலும் தெரிந்த எல்லாக் காட்சிகளும் கண்ணுக்குத் தெரியாததொரு பேராற்றலின் விரிந்த வனப்பைச் சிறிது சிறிதாக மறைத்து ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பின்னங்களாக அவன் கண்களில் தோன்றின. அவன் உள்ளம் துள்ளியது.
"இப்போது நாம் போய்க் கொண்டிருக்கும் பகுதிக்குக் கடுவிளை என்று பெயர். இதோ இந்த ஆற்றுக்குக் கழனி கங்கை என்று பெயர். புத்தகத்தை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் தெரியும்." - என்று மேரி கூறிய போது.
"புத்தகமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், எல்லா விவரமும் நான் சொல்லிக் கொண்டு வருகிறேன் உங்களுக்கு. கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்" - என்று லில்லி ஆத்திரத்தோடு குறுக்கிட்டுக் கூறினாள். மேரி தனது கவர்ச்சிகரமான வட்ட விழிகளை உருட்டிக் கோபத்தோடு லில்லியை உறுத்துப் பார்த்தாள். அழகியநம்பிக்கு இருபக்கமும் தர்மசங்கடமாக இருந்தது.
"நீங்கள் இரண்டு பேரும் இந்த மாதிரி சண்டை போட்டுக் கொண்டால் நான் எதையும் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு வரவேண்டியதுதான்." - என்று விளையாட்டாகச் சொன்னான் அவன்.
அதுவரை பேசாமல் வந்த டிரைவர் பின்புறம் திரும்பி அழகியநம்பியைப் பார்த்துச் சிரித்துவிட்டு, "நீங்கள் ஒரு சட்டம் போட்டு விடுங்கள் ஐயா! கார் போகிற சாலையின் வலது புறம் வருகிற முக்கியமான காட்சிகளைப் பற்றி மேரி அம்மா மட்டும் தான் கூறலாம். அதே மாதிரி இடது புறம் வருகிற காட்சிகளைப் பற்றி லில்லி அம்மா மட்டும் தான் சொல்லலாம். இப்படிப் பிரித்துக் கட்டுப்பாடு செய்து விட்டீர்களானால் அவர்களுக்குள் சண்டையே வராது! எப்படி நான் சொல்லுகிற யோசனை?" - என்றான். அந்த டிரைவர் உண்மையாகவே அப்படிச் சொல்கிறானா? அல்லது கேலி செய்கிறானா? என்று புரிந்து கொள்வதற்குச் சிறிது நேரமாயிற்று அழகியநம்பிக்கு.
விளையாட்டோ, கேலியோ, - அதே ஏற்பாட்டைச் சிரித்துக் கொண்டே அவர்களிடம் சொல்லி ஒப்புக் கொள்ள வைத்தான் அழகியநம்பி. கார் டிரைவரும் நகைச்சுவை இயல்பு வாயந்த இளைஞனாக இருந்தான். அவன் திருத்தமாக தமிழ் பேசியதைக் கேட்டு, "உனக்கு எந்தப் பக்கம்?" என்று விசாரித்தான் அழகியநம்பி. "மட்டக் களப்புப் பக்கம். நானும் தமிழன் தான். நீங்கள் தமிழ் நாட்டுத் தமிழர். நான் ஈழத்தமிழன்." - என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்த்துப் பதில் சொன்னான் டிரைவர்.
மலைநாட்டுக்குச் செல்லும் பல தனித் தனிச் சாலைகள் பிரியக்கூடிய இடமான அவிசாவெளையை அடைந்ததும் கார் நின்றது. காரின் இடதுகைப் புறம் ஒரு மரத்தடியில் சிமெண்டு மேடையில் சிறிய கோவிலும், காசு போடுகிற உண்டியலும் இருந்தன. டிரைவர் காரிலிருந்து இறங்கிப் போய் அருகிலுள்ள கடையில் கற்பூரம் வாங்கிக் கொண்டு வந்தான். அந்தச் சிமெண்டு மேடையில் கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்கி உண்டியலில் ஏதோ காசும் போட்டு விட்டுத் திரும்பினான். திரும்பினவன் என்ன நினைத்துக் கொண்டானோ, மறுபடியும் கடைகள் இருந்த பக்கமாகச் சென்று ஒரு தேநீர்க் கடையில் மூன்று கிளாஸ்களில் ஆவி பறக்கும் தேநீரைச் சூடாக வாங்கிக் கொண்டு வந்தான்.
அழகியநம்பி - மேரி - லில்லி - ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கிளாஸை நீட்டினான்.
"இதென்ன? திடீரென்று..." - அழகியநம்பி டிரைவரின் முகத்தைச் சிரித்துக் கொண்டே ஏறிட்டுப் பார்த்தான்.
"சும்மா... வாங்கிக் குடியுங்கள்... மலைப்பகுதியில் பிரயாணம் செய்யும்போது சுறுசுறுப்பாக இருக்கும்." -
"உனக்கு வேண்டாமா?"
"நான் அங்கே போய்ப் பருகிவிட்டு வருவேன்! நீங்கள் குடியுங்கள்." - அவர்கள் மூவரும் டிரைவரின் அன்பான உபசாரத்தை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டனர்.
அவிசாவெளையிலிருந்து கார் புறப்பட்ட போது, "அதென்ன கோவில்? அந்த மரத்தடியில் கற்பூரம் கொளுத்தி வைத்து உண்டியலில் காசு போட்டு வணங்கினாயே?" - என்று அழகியநம்பி டிரைவரைக் கேட்டான்.
"இதுவா? இங்கே இது ஒரு வழக்கம். மலைப்பகுதிகளில் ஏறுமுன் விபத்து முதலிய துன்பங்கள் எதுவும் ஏற்படாமல் சௌக்கியமாகத் திரும்பி வரவேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொள்வோம். எல்லோருமே அநேகமாக இந்த இடத்தில் இதைச் செய்யாமல் போக மாட்டார்கள்." -
டிரைவர் கூறியதைக் கேட்டு அழகியநம்பி குறும்புச் சிரிப்புச் சிரித்தான். "டிரைவர்! உன்னைவிட நான் தான் அதிக விபத்துக்களில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்." - என்று சொல்லிக் கொண்டே லில்லியையும், மேரியையும், ஓரக் கண்களால் விஷமப் பார்வை பார்த்தான் அவன்.
பெண்கள் இருவரும் முகம் மலரப் புன்னகை செய்தனர். "அடேடே! அப்படியானால் நீங்களும் இறங்கி உண்டியலில் காசு போட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கலாமே?" என்று வேடிக்கையாக மறுமொழி கூறினான் டிரைவர். கார் மலைப் பிரதேசத்தில் ஏறிக் கொண்டிருந்தது.
கண்களின் பார்வை சென்ற இடமெல்லாம் சுற்றிலும் மலைச்சிகரங்கள்; பசுமைக் காட்சிகள், முகில் தவழும் நீலவானம், - எல்லாம் கைகளால் எட்டிப் பிடிக்கிற தொலைவில் மிக அருகில் இருப்பது போல் தோன்றின. வளைவு, நெளிவுகளும், ஏற்ற இறக்கங்களும் உள்ள மலை ரோடுகளில் கார் சென்று கொண்டிருந்தது.
அழகியநம்பி ஜன்னலுக்கு வெளியே நீட்டிய தலையை உட்புறம் திருப்பவே இல்லை. மேரியும், லில்லியும், மாற்றி மாற்றி, இருபுறத்துக் காட்சிகளையும் விளக்கிச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். பத்து நிமிஷ நேரம் அவன் சேர்ந்தாற் போல் லில்லியின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தால் மேரிக்கு முகம் வாடிவிடும். மேரியின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தால் லில்லிக்குக் கோபமே வந்துவிடும்! ஒரே சமயத்தில் இரண்டு பெண் உள்ளங்களைத் திருப்தி செய்ய வேண்டியவனாக இருந்தான் அவன்.
சாலையின் இருபுறமும் வளம் நிறைந்த அந்த மலைப்பிரதேசத்து மண்ணில் அவன் யாரை கண்டான்? எதைக் கண்டான்? அவன் உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்கள், சிறந்த நம்பிக்கைகள், நல்ல உணர்ச்சிகள், - ஏன் அப்படி மேலே மேலே பொங்குகின்றன?
உழைக்கும் கைகள்! ஆம்! ஓய்வு ஒழிவில்லாமல் உழைத்து உழைத்து மண்ணைப் பொன்னாக்கும் கைகளை அவன் கண்டான். உயரமாக நெடிது வளர்ந்து வரிசை வரிசையாக ஒரே அளவில் நூல்பிடித்து நிறுத்தி வைத்தாற் போன்ற வெண்ணிறத்து இரப்பர் மரங்கள். கரும் பசுமை நிறத்துத் தளிர்கள் மின்ன மலைமேல் விரித்த மரகதப் பாய்களைப் போல் தேயிலைத் தோட்டங்கள். அங்கெல்லாம் பாடுபட்டு உழைக்கும் ஆயிரமாயிரம் ஏழைக் கைகளை அவன் பார்த்தான்.
அவனுடைய புறச்செவிகள் தான் மேரியும், லில்லியும், டிரைவரும் கூறிக் கொண்டு வந்தவற்றைக் கேட்டுக் கொண்டு வந்தன.
சிந்தனையுணர்ச்சி மிக்க அவனுடைய உள்மனம், கண்முன் தெரிவனவற்றை ஆழ்ந்து, கூர்ந்து பார்க்கும் அவனுடைய பார்வை - யாவும் எதில் எதை நோக்கி இலயித்திருந்தன?
அழகியநம்பி சிந்தித்தான். தான் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பூமியாகிய குறிஞ்சியூரிலுள்ள மலைகள் அவனுக்கு நினைவு வந்தன. அங்கும் மலைகளுக்குக் குறைவில்லை! இதே போல் உயர்ந்த மலைகள், வளமான மலைகள், அருவிகளும், சுனைகளும், அடர்ந்த மரக் கூட்டங்களும் உள்ள செழிப்பான மலைகள் தான்.
'இலங்கையின் இந்த மலைகளை இப்படிப் பொன் கொழிக்கச் செய்த உழைப்பு அங்கிருந்து - நான் பிறந்த தமிழ் மண்ணிலிருந்து வந்த கூலிகளின் உழைப்புத்தானே? இந்த உழைப்பும், இந்த வலிமையும், - அவர்களுடைய சொந்த மண்ணுக்குப் பயன் பட்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்?'
இடைவழியில் தங்களுக்குத் தெரிந்த வெள்ளைக்கார முதலாளி ஒருவருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டமொன்றிற்கு மேரியும், லில்லியும், அழகியநம்பியை அழைத்துக் கொண்டு போனார்கள்.
ஆண்களும், பெண்களுமாக நூற்றுக்கணக்கான தமிழ் நாட்டுக் கூலிகளின் துயரந்தோய்ந்த முகங்களை அழகியநம்பி அங்கே கண்டான். இடுப்பில் கைக்குழந்தையும், முதுகில் நீண்ட பெரிய தேயிலைக் கூடையும் சுமந்து மேடும் பள்ளமுமான தேயிலைக் காடுகளில் அவதியுறுகிற தமிழ்ப் பெண்மணிகளைப் பார்த்தபோது யாரோ தன் நெஞ்சை இறுக்கிப் பிழிவது போலிருந்தது அவனுக்கு. கோழிக் கூடுகள் போன்று சுகாதார வசதி இல்லாமல் கட்டிவிடப் பட்டிருந்த கூலிகளின் வீடுகளைக் கண்ட போது அவன் வருத்தம் பெருகியது. அவன் துயரப் பெருமூச்சு விட்டான். 'மண்ணைப் பொன்னாக்கிய கைகள் மறுபடியும், மறுபடியும் மண்ணில் தான் புரண்டு கொண்டிருக்கின்றன.' - என்று தன் மனத்திற்குள்ளேயே சொல்லிக் கொண்டான். லில்லி - மேரி - டிரைவர் - எல்லோரோடும் தான் அவன் இருந்தான். ஆனால், மனத்தின் உலகத்தில், சிந்தனையின் வழியில் அவன் மட்டும் தனிப்பட்ட எண்ணங்களோடு தனிப்பட்ட உணர்ச்சிகளைத் தாங்கிச் சென்று கொண்டிருந்தான்.
சாதாரணமான தேயிலைக் கொழுந்துகளை உலர்த்தி அரைத்து, வறுத்துத் தேயிலைப் பொடியாக மாற்றுகிறவரை உள்ள எல்லாத் தொழில்களும் நடைபெறுகிற தேயிலைத் தொழிற்சாலைக்குள் அழகியநம்பியை அழைத்துக் கொண்டு போய்ச் சுற்றிக் காண்பித்தார்கள். பெரிய இராணுவ அதிகாரியின் பெண்களோடு அல்லவா அவன் சென்றிருக்கிறான்? தோட்டத்தின் சொந்தக்காரரான முதலாளி அவர்களை மலையுச்சியில் ஒரு அருவிக்கரையில் இயற்கை சூழ்ந்த இடத்தில் அமைந்திருந்த தம் பங்களாவிற்குக் கூட்டிச் சென்று விருந்துபசாரம் செய்தார்.
"அருகில் ஏதாவது இரப்பர்த் தோட்டம் இருந்தால் அதையும் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்." - என்று அவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான் அவன். உடனே அவர்களை அழைத்துச் சென்று ஒரு இரப்பர்த் தோட்டத்தையும் தொழிற்சாலையையும் சுற்றிக் காண்பித்தார். மரங்களில் கோடு கீறிவிட்டு இரப்பர் பால் வடித்துக் கொண்டிருக்கும் கூலிப் பெண்களைப் பார்த்த போதும் அவன் மனத்தில் இரக்கம் தான் சுரந்தது.
மண்ணில் இரத்தம், வியர்வை, அனைத்தையும் சிந்தி உழைக்கும் உழைப்பையும், சூழ்ச்சியிலும், வஞ்சகத்திலுமே, உழைக்காமல் இருந்த இடத்திலிருந்து கொண்டு இலட்சக் கணக்கில் பணம் திரட்டிவிடும் வியாபாரத்தையும் நினைத்துத் தனக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான் அழகியநம்பி. பிரமநாயகம், ஒவ்வொரு நாளிலும் ஆயிரக்கணக்கில் வியாபாரம் நடக்கும் அவருடைய கடை, வருமான வரிக்கும் விற்பனை வரிக்கும், பொய்க்கணக்குக் காண்பிக்கும் சாமர்த்தியம் வாய்ந்த பூர்ணா - எல்லாவற்றையுமே சிந்தனையின் தொடர்பாக அப்போது நினைத்தான் அவன். இந்த உலகத்தில் உழைக்காமல், பாடுபடாமல் பணம் திரட்டும் சகலமானவர்கள் மேலும் திடீரென்று அடக்கவோ, தவிர்க்கவோ, இயலாததொரு அருவருப்பு - குமுறிக் கொந்தளித்து எழுந்தது அவனுடைய மனத்தில். தனக்கு ஏன் அப்படிப்பட்ட மனக் கொதிப்பு அப்போது உண்டாகிறதென்று அவனுக்கு விளங்கவில்லை. அதை அவனால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவர்களுடைய பிரயாணம் மேலும் தொடர்ந்தது.
உள்ளத்தை இன்பமயமான நினைவுகளில் ஆழச் செய்யும் இலங்கையின் அந்த மலைப்பகுதிகளில் அளவிட்டுரைக்க முடியாத பல அருவிகள் இருந்தன; மனித இலட்சியத்தின் உயர்வுக்கு நிதரிசனமான உதாரணம்போல் விண்ணைத் தொடும் சிகரங்கள் இருந்தன. பலநிறங்களில் பலவிதங்களில் அது வரை அவன் தன் வாழ்நாளில் பார்த்திராத பூஞ்செடிகள், கொடிகள், - இருந்தன. சிரிக்கச் சிரிக்கப் பேசி அவன் மேல் அன்பை அள்ளிச் சொரியும் இரண்டு யுவதிகள் அந்த இயற்கையழகை வானளாவப் புகழ்ந்து வருணித்துக் கொண்டு வருகிறார்கள்.
ஆனால், அவன் உள்ளம் அவற்றைப் பார்த்து மகிழாது அவற்றினிடையே உள்ள துன்பத்தைப் பார்த்துப் புழுங்கியது. ஏனோ குறிஞ்சியூரின் நினைவுதான் அடிக்கடி அவனுக்கு உண்டாயிற்று. அந்த வளமான வயல்கள், செழிப்பான ஆறுகள், செல்வங் கொழிக்கும் மலைகள், கோவில், குளம், தன் வீடு, தன் தாய், தன் தங்கை, தனக்கு வேண்டியவர்கள், - எல்லாரையும், எல்லாவற்றையும் எண்ணி ஏங்கினான் அவன். பிறநாட்டு மண்ணின் வளமான இடத்தில் உடலும் பிறந்த மண்ணில் நினைவுமாக நின்றான் அவன். அத்தனை நாட்களாக அவன் மனத்தில் தலை நீட்டாத ஒரு பயம், ஒரு தனிமையுணர்வு, ஒரு பெரிய ஏக்கம் - அப்போது அந்த இடத்தில் சிறிது சிறிதாக உண்டாயிற்று. பிரமநாயகத்தின் சிறுமைகளை உணர்ந்த போதும், பூர்ணாவின் சூழ்ச்சிகளை நினைத்துப் பயந்த போதும், அந்தச் சூழ்ச்சிகளில் ஒன்றிற்கு ஆளான போதும் கூட இந்த மாதிரி உணர்ச்சியோ, ஏக்கமோ, அவனுக்கு ஏற்பட்டதில்லை. அப்போதெல்லாம் 'ஊருக்கே திரும்பி விடலாம்?' - என்கிற மாதிரி ஒருவிதப் பயமும், வந்து புகுந்த இடத்தின் மேல் வெறுப்பும் உண்டாயினவே ஒழியப் பிறந்த மண்ணை நினைத்து ஏங்கவில்லை அவன்.
"என்ன? ஒருமாதிரிக் காணப்படுகிறீர்கள்? பிரயாணம் உங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? அல்லது இந்த மலைக்காற்றும், குளிர்ந்த சூழ்நிலையும், பிடிக்கவில்லையா?" - என்று அனுதாபத்தோடு கேட்டாள் மேரி.
"ஆமாம்! நானும் அப்போதிருந்து கவனித்துக் கொண்டு வருகிறேன். ஐயா ஒரு மாதிரித்தான் இருக்கிறார்."
-இவ்வாறு டிரைவரும் ஒத்துப் பாடினான்.
"ஏன்? உங்களுக்கு உடம்பிற்கு என்ன?" - என்று பதறிப் போய்க் கேட்டாள் லில்லி.
"ஒன்றுமில்லை! சும்மா இப்படி ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தேன்." - என்று மொத்தமாக அவர்களுக்குப் பதில் கூறி மழுப்பினான் அவன். ஆனால், இழக்கமுடியாத, இழக்கக் கூடாத - தனக்குச் சொந்தமான ஒன்றை வலுவில் இழந்து விட்டு வெகுதூரம் வந்து விட்டாற் போன்று அவன் மனத்தில் உண்டாகிய தாழ்மையுணர்வை அவனால் எவ்வளவு முயன்றாலும் அடக்க முடியவில்லை. தன்னைச் சுற்றிலும் பொன் கொழிக்கும் பிறநாட்டு மண்ணைக் கண்டு துள்ளிய அவன் மனத்தில் அப்படியே குறிஞ்சியூருக்கு ஓடிப் போய்த் தான் பிறந்த மண்ணை இப்படி மாற்றிவிட வேண்டும் போல ஒரு துடிப்பும், வேகமும் உண்டாயின.
அன்றுமட்டுமன்று; அந்தத் தேயிலைத் தோட்டத்தையும் இரப்பர் தோட்டத்தையும், அதில் உழைப்பவர்களையும் பார்த்த சில நாழிகைகளில் மட்டும் அல்ல; - அதன்பின் தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் அவர்கள் செய்த பிரயாணத்தின் போதும் அந்தத் துடிப்பும் வேகமும், அழகியநம்பியின் மனத்தில் அடங்கவே இல்லை.
இரத்தினபுரத்தின் சதுப்பு நிலங்களிலே மண்ணைக் குடைந்து விலையுயர்ந்த வைரம், இரத்தினம், ஆகிய கற்களைத் தேடி எடுப்பதை அவனுக்குக் காட்டினார்கள். இரத்தின வயல்களிலே முழங்காலளவு ஆடையுடன், மண்ணும், புழுதியும், சேறும் படிந்த கைகளால், விலைமதிப்பற்ற இரத்தினக் கற்களைத் தேடி எடுப்பதற்காக மண்ணைக் குடைந்து தோண்டும் உழைப்பாளிகளை அவன் பார்த்தான்.
'மண்! மண்! மண்! - அந்த மண்னை உழைத்து உழைத்துப் பொன்னாக மாற்றலாம். தைரியமும், தன்னம்பிக்கையும், பேராசையற்ற மனமும் மனிதனுக்கு இருந்தால் போதும் உலகத்திலேயே சூது, வாது, சூழ்ச்சி, வஞ்சனை, ஏமாற்று - இவைகளெல்லாம் இல்லாத ஒரே தொழில் மண்ணை நம்பி உழைக்கும் தொழில்தான்.'
தானாக ஊறும் ஊற்றுக் கண்களைப் போல் அவன் உள்ளத்தில் சிந்தனை ஊறிப் பெருகியது. புதிய எண்ணங்கள் புதிய இடங்களைப் பார்த்ததும் வளர்ந்து கொண்டே போயின.
வளம் நிறைந்த இலங்கையின் மலைகளில் ஒவ்வோர் அணுவிலும் உழைப்பின் ஆற்றலை, மண்ணைப் பொன்னாக்கும் கைகளை - அங்கும் இங்கும், எங்கும் கண்டான் அவன். அந்த ஆறு நாட்களில் ஒரு புதிய உலகத்தையே பார்த்து முடித்து விட்டது போலிருந்தது.
அசோகவனம் - நுவாராஎலியாவின் மலை வளம், பேராதனையிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற பூந்தோட்டம், கண்டியில் புத்தருடைய புனிதமான பல் வைக்கப்பட்டிருக்கும் கோயில் தம்புளை, சிகிரியா, குகை ஓவியங்கள், பொலந்நறுவையின் சரித்திரச் சின்னங்கள், - ஒவ்வோர் இடத்தையும், ஒவ்வோர் புதுமைகளையும் பார்க்கப் பார்க்கத் தாயை விட்டு வெகு தொலைவு வந்துவிட்ட சிறு குழந்தையின் மனத்தில் ஏற்படுவது போல் பிறந்த மண்ணைப்பற்றிய ஏக்கம் அவன் மனத்தில் உண்டாயிற்று.
"நீங்கள் வேண்டுமென்றே எங்களிடம் மறைக்கப் பார்க்கிறீர்கள். கொழும்பிலிருந்து புறப்பட்டபின் நீங்கள் ஏதோ போல் இருக்கிறீர்கள். கலகலப்பாகப் பேசக்காணோம், உங்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை. சிரிப்பு இல்லை. இவ்வளவு அழகான புதிய இடங்களைப் பார்க்க வேண்டியபோது இருக்கும் எழுச்சி இல்லை. நீங்கள் எதையோ நினைத்து ஏங்குகிறீர்கள்." - என்று மேரியும், லில்லியும் வெளிப்படையாகவே அவனைக் கடிந்து கொண்டார்கள்.
ஆனால், யார் எப்படிக் கடிந்துகொண்டுதான் என்ன பயன்? அதன்பின் அழகியநம்பி என்ற அந்த இளைஞன் சிரிக்கவே இல்லை. வேடிக்கைப் பேச்சுக்கள் அவன் வாயிலிருந்து வெளிவரவில்லை. அவன் பூரணமாக மாறிவிட்டவன் போல் அல்லது மாற்றப்பட்டு விட்டவன் போல் மனம் குமைந்து கொண்டிருந்தான். பிரமநாயகம் - பூர்ணா, கடையில் வேலை பார்த்துப் பணம் சேர்த்துக் கொண்டு பணக்காரனாகத் தாய் நாடு திரும்பும் நோக்கம், லில்லி - மேரி ஆகியோரின் அன்பு, சபாரத்தினத்தின் உண்மை நட்பு, இலங்கை மலைகளின் இயற்கை வளம் - இவர்களில் - இவைகளில் யாரையும் - எவற்றையும் பற்றி அவன் மனம் சிந்திக்கவே இல்லை.
நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தெற்குக் கோடியில் எங்கோ ஒரு மூலையில் மலைகளுக்குள் பள்ளத்தாக்கில் மறைந்து கிடக்கும் நாடறியாத தன் சின்னஞ்சிறு கிராமத்தைப் பற்றித்தான் அவன் சிந்தித்தான். 'அங்கே உழைக்க மண்ணில்லையா? அங்கே உள்ளவர்கள் உயிர் வாழவில்லையா? கடல் கடந்து வந்து எத்தனையாயிரம் கூலித் தமிழர்கள் தங்கள் இரத்தத்தைத் தங்களுக்குக் கொஞ்சமும் உரிமையில்லாத இந்த மண்ணில் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்? நான் மட்டும் என்னவாம்? இவர்கள் போலத்தானே ஒரு பஞ்சைப் பயலாக - பரதைப் பயலாக எவனோ ஒருவனைப் பின்பற்றிப் பிழைக்க வந்திருக்கிறேன். இப்படித் தமிழ்நாட்டு உழைப்பும், தமிழ்நாட்டு அறிவும் - தமிழ்நாட்டில் பிழைக்க வழியில்லாமல் கடலைக் கடந்து, வானைக் கடந்து இஷ்டப்படி வந்து கொண்டே இருந்தால் முடிவு எப்படி ஆகும்?' - என்னென்னவோ புரட்சிகரமான சிந்தனைகள் அழகியநம்பியின் மனத்தில் உண்டாயின.
பிரயாணத்தின் கடைசி நாள் அது. அவர்கள் அநுராதபுரத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பழம்பெருமை வாய்ந்த அந்தச் சரித்திர நகரத்தைப் பார்த்த போது தஞ்சாவூர், மதுரை போன்ற தமிழ்நாட்டின் தெய்வீக நகரங்கள் அவன் நினைவிற்கு வந்தன. இசுரமுனியாவின் கோயில், அபயகிரியின் சிதைந்த சரித்திரச் சின்னங்கள், - இவற்றையெல்லாம் பார்த்து விட்டுப் பொதுவாக நகரைச் சுற்றிப் பார்த்தார்கள். அனுராதபுரத்தில் தமிழர்களும் நிறைய வசிக்கிறார்கள் என்ற செய்தியை டிரைவர் அவனுக்குக் கூறினான்.
நகரின் கடைத்தெருவில் கார் சென்று கொண்டிருந்த போது தமிழ்ப் பத்திரிகைகள் விற்கும் கடை ஒன்றைப் பார்த்தான்.
காரை நிறுத்தச் சொல்லிப் பத்திரிகைகள் வாங்கிக் கொண்டு வருமாறு டிரைவரை அனுப்பினான் அழகியநம்பி. டிரைவர் இறங்கிப் போய்க் கொழும்பிலிருந்து பிரசுரமாகும் இரண்டு தமிழ்த் தினசரிகளை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். கார் புறப்பட்டது.
ஒரு பத்திரிகையை எடுத்துப் பிரித்தான். முதல் பக்கத்தில் பிரசுரமாயிருந்த செய்தியைப் படித்தவுடன் அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. காருக்குள் எல்லோருக்கும் கேட்கும் குரலில் 'ஐயோ' என்று அலறிவிட்டான் அவன். "என்ன? என்ன?" என்று மேரி, லில்லி, டிரைவர், - எல்லோரும் கலவரமடைந்து அவனையும், அவன் கையிலிருந்த பத்திரிகையையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அவன் அவர்களுக்குப் பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்த செய்தியைப் படிக்கத் தொடங்கினான். நிலைகுத்தி அகன்று மிரண்ட அழகியநம்பியின் கண்கள் அப்போது பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்தன. முகம் வெளிறியிருந்தது. உடல் மெல்ல நடுங்கியது. "பிரபல வியாபாரியின் மோசடிகள் அம்பலமாயின - கடையில் வேலை பார்த்து வந்த பெண் கொலை செய்யப்பட்டாள் - கொழும்பு நகரத்தில் சம்பவம்" - என்று தடித்த எழுத்துக்களில் கட்டம் கட்டிப் பிரசுரித்திருந்தனர்.
"பிரமநாயகம் வருமான வரி - விற்பனைவரி - மற்றும் வியாபாரத் துறைகளில் செய்திருந்த மோசடிகளைப் பூர்ணா காட்டிக் கொடுத்துவிட்டாள். ஆத்திரத்தில் வெறிகொண்டு அவளை அவர் குத்திக் கொலை செய்துவிட்டார்." - பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த விவரமான செய்தி முழுவதையும் படிக்கிற அளவுக்கு அழகியநம்பியின் கண்களுக்கோ, மனத்துக்கோ பொறுமை இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்து என்ன நடந்திருக்க வேண்டுமென்று மேலே கண்டவாறு சுருக்கமாக அனுமானித்துக் கொண்டான். மற்றவர்களுக்கும் தெரிவித்தான்.
கார் நகரெல்லையைக் கடந்து அனுராதபுரத்தின் அடர்ந்த பெருங் காடுகளுக்கிடையே போகும் சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அந்தக் காட்டுப் பிரதேசத்திற்குள் மிருகங்களின் பயம் அதிகமாகையினால், அதைக் கடந்து செல்கிறவரை எங்கும் நிறுத்தாமல் வேகமாகச் சென்றுவிட வேண்டுமென்று டிரைவர் சொல்லியிருந்தான்.
ஆனால், அழகியநம்பியின் மனமோ, காரின் சக்கரத்தைக் காட்டிலும் வேகமாகப் பறந்து செல்ல முடியுமானால் சென்று விடலாமே, என்று விரைந்து கொண்டிருந்தது. "வியாபாரத்துறையில் சூழ்ச்சியும், மோசங்களும் செய்து முன்னுக்கு வருகிறவர்கள் எல்லோரும் இப்படித்தான் எதையாவது செய்து, எதிலாவது அகப்பட்டுக் கொண்டு திடீரென்று கவிழ்ந்து போகிறார்கள்." - என்றாள் மேரி.
"அந்தத் தத்துவமெல்லாம் இருக்கட்டும். இப்போது இவர் என்ன செய்வார். அந்த மோசக்கார வியாபாரியை நம்பிக் கடல் கடந்து வந்து இவரல்லவா மோசம் போய் விட்டார்? இவருக்கு இங்கே வேறு ஏதாவது நல்ல வேலையாகப் பார்க்க வேண்டுமே?" - என்று லில்லி அனுதாபத்தோடு கூறினாள். அழகியநம்பி ஒன்றும் பேசத் தோன்றாமல் சிலையாகச் சமைந்து போய் உட்கார்ந்திருந்தான். அவனுடைய மனம் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தது.
இந்த முடிவு அவன் எதிர்பார்த்ததுதான். சபாரத்தினம் அன்று குறிப்பாக அவனிடம் சொல்லியிருந்த உண்மையிலிருந்து என்றாவது ஒருநாள் பிரமநாயகத்துக்கும், அவருடைய வியாபாரத்துக்கும் இந்தக் கதி ஏற்படுமென்று அவன் எண்ணியதுண்டு. ஆனால், இவ்வளவு விரைவில் அது ஏற்படுமென்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை.
மறுபடியும் சந்தேகத்தோடு பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தான். கொலை கடைக்குள்ளேயே நடந்திருப்பதனால் கடை எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களும் பூட்டிச் சீல் வைக்கப்பட்டுப் போலீசார் வசம் இருப்பதாகப் போட்டிருந்தது.
சிறைக் கதவுகளுக்கு உள்ளே விலங்கு பூட்டிய கைகளோடு நிற்கும் பிரமநாயகத்தை மானசீகமாகக் கற்பனை செய்து நினைத்துப் பார்த்துக் கொண்டான் அவன்.
"மிஸ்டர் அழகியநம்பீ! நீங்கள் எதை நினைத்தும் வருத்தப் பட வேண்டாம். அந்தக் கடையோடு உங்களுக்கிருந்த தொடர்பு இந்த விநாடியோடு விட்டுப் போய் விட்டதென்று நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். அப்பாவுக்கு எத்தனையோ பெரிய கம்பெனிகளில் செல்வாக்குள்ள நண்பர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு செய்து தரச் சொல்லுகிறேன்." - என்று லில்லி கூறியபோதும் அவன் அவளுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. அவளால் இவனுடைய முகபாவத்திலிருந்து அதை விரும்புகிறானா; இல்லையா, என்பதைக் கண்டு கொள்வதற்கு முடியவில்லை. அவன் நீண்ட நேரமாகப் பேசாமல் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தது அந்த இரு பெண்களின் மனத்திலும் சொல்லொணாத வேதனையை உண்டாக்கிற்று.
"இதோ பாருங்கள்! உங்களுக்கு எங்கள் மேல் கோபமா? நீங்கள் ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள்?" - அவன் தோளைத் தன் வலது கைவிரல்களால் செல்லமாகத் தடவிக் கொண்டே சிறு குழந்தைபோல் வினாவினாள் மேரி. அழகியநம்பி அவள் கூறியதைக் கேட்டுத் தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான். "நான் என்னுடைய துன்பங்களையும், துரதிர்ஷ்டங்களையும் எண்ணி எதை எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறேன். பிறந்த நாட்டில் பிழைக்க வழியில்லாமல் இங்கே வந்தால், இங்கே நான் வந்த வேளையில் பார்த்தா இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? உங்கள் மேல் எனக்கு ஒரு கோபமும் இல்லை." - என்று மேரியையும், லில்லியையும் பார்த்துச் சொன்னான் அவன்.
"வீண் வருத்தப்படாதீர்கள் ஐயா. நீங்கள் இந்தச் சமயத்தில் எங்களோடு இப்படிப் பிரயாணம் புறப்பட்டு வந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று. அங்கே இருந்தால் மோசடி, கொலை, இவற்றுக்காக நடைபெறும் வழக்குகளில் நீங்களும் சிக்கிக் கொள்ள நேர்ந்திருக்கும்" - என்று டிரைவரும் அவனைத் திரும்பிப் பார்த்து ஆறுதல் கூறினான்.
"இனிமேல் அந்த கடையையோ, அதன் முதலாளியையோ, அதிலுள்ளவர்களையோ, உங்களுக்குத் தெரிந்ததாகவே வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள்! பேசாமல் எங்கள் வீட்டில் வந்து தங்கிவிடுங்கள். இன்னும் ஒரு வாரத்தில் அப்பாவிடம் சொல்லி உங்களுக்கு ஒரு அருமையான வேலை பார்த்துவிடலாம்." - லில்லி முன்பு கூறியதையே மீண்டும் வற்புறுத்திக் கூறினாள். அழகியநம்பி மனம் உடைந்து போய்விடக் கூடாதே என்பதற்காகத்தான் அந்த நம்பிக்கையை மீண்டும் மீண்டும், நினைவூட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
"மேரி! லில்லீ! நீங்கள் இருவரும் என் மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பிற்கு நான் நன்றி செலுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்காக நீங்கள் உங்களுடைய தந்தையிடம் சொல்லி எந்த வேலையும் தேட முயற்சிக்கக் கூடாது. இனி நான் என்ன வேலையைச் செய்ய வேண்டுமென்பதை நானே தீர்மானித்துக் கொண்டு விட்டேன்."
"என்ன செய்யப் போகிறீர்களாம்?"
"தயவு செய்து நீங்கள் இருவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் இனிமேல் என்ன செய்யப் போகிறேன் என்ற செய்தி என் மனத்தில் மட்டுமே இருக்கட்டும். அது இப்போது உங்களுக்குத் தெரிய வேண்டாம்."
"நீங்கள் சொல்ல விரும்பாவிட்டால் நாங்கள் வற்புறுத்தவில்லை. உங்களுக்கு விருப்பம் இருக்குமானால் இதைவிட உயர்ந்த வேலையாக வசதியான வருவாய் உள்ளதாக அப்பாவிடம் சொல்லிப் பார்க்கச் சொல்லலாம் என்பதற்காகத்தான் சொன்னோம்."
"இல்லை! அது வேண்டாம்" - அவன் மறுத்தான். அப்போது அவன் குரலில் தவிர்க்க முடியாத உறுதி இருந்தது.
"அப்படியானால் நீங்கள் எங்கள் வீட்டிற்குக் கூட வர மாட்டீர்களா?" -
இந்தக் கேள்வியைக் கேட்டதும் தன்னுடைய சொந்த மனத் துன்பங்களை மறந்து கலகலவென்று சிரித்து விட்டான் அழகியநம்பி.
"ஏன் சிரிக்கிறீர்கள்?"
"ஒன்றுமில்லை! உங்களுடைய கள்ளமில்லா மனங்களை நினைத்துக் கொண்டேன், சிரிப்பு வந்தது. எங்கோ தற்செயலாகச் சந்தித்துப் பழகிய ஒரு தமிழ்நாட்டு இளைஞனுக்கு உங்களிடமிருந்து இவ்வளவு அனுதாபம் கிடைப்பதை எண்ணும் போது உண்மையாக எனக்குப் பெருமிதம் உண்டாகிறது." - அவன் கூறியதைக் கேட்டதும் அந்தப் பெண்கள் தலையைக் குனிந்து கொண்டனர்.
பிரயாணம் தொடங்கிய எட்டாவது நாள் மாலை இருட்டுகிற சமயத்துக்கு அவர்கள் கொழும்பை அடைந்தனர். பிரமநாயகத்தின் கடையிருந்த தெருவழியேதான் டிரைவர் காரை விட்டுக் கொண்டு போனான். கடை இருக்குமிடத்தைக் கார் நெருங்கும் போது அவன் இதயம் 'படபட' வென்று வேகமாக அடித்துக் கொண்டது.
ஒரு விநாடி காரை அந்த இடத்தில் வேகத்தைக் குறைத்து நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினான் அவன். கார் நின்றது. வெட்கத்தோடும், பயத்தோடும் தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான். அந்தத் தெருவில் அப்போது நின்று கொண்டிருந்த அத்தனை பேரும் தன்னையே பார்ப்பது போல் அவன் மனத்தில் ஒரு பிரமை உண்டாயிற்று.
சாதாரணமாக அந்த மாலை நேரத்திற்கு அந்தக் கடை வாசலில் திருவிழாக் கூட்டம் தென்படும். அன்று மயான பூமி போலக் கலகலப்பிழந்து இருண்டு காணப்பட்டது. கடை பூட்டியிருந்தது. கொலை நடந்த இடம் என்பதற்காகக் காவல் வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் அந்தக் கடை வாசல் வந்தவுடன் ஏதோ விந்தைப் பொருளைப் பார்ப்பது போல் ஓரிரு விநாடிகள் நின்று பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் இரகசியமாக ஏதோ பேசிக் கொண்டு செல்வதையும் அழகியநம்பி கண்டான்.
முதன் முதலாகக் கப்பலில் வந்து இறங்கிப் பிரமநாயகத்தோடு அவரைப் பின்பற்றி அந்தக் கடைக்குள் காலடி வைத்த போது எவ்வளவு நம்பிக்கைகளைத் தன் மனத்தில் உண்டாக்கிக் கொண்டான் அவன்? தன்னையும், தன் குடும்பத்தின் கடல் கடந்த ஏழ்மையையும், அந்தக் கடை போக்கி விடப் போகிறதென்று எவ்வளவு பெருமையாக நினைத்தான் அவன்? நான்கைந்து ஆண்டுகள் ஊரை மறந்து, பிறந்த மண்ணை மறந்து, பெற்றவள், உடன்பிறந்தவள், உற்றார், உறவினரை மறந்து ஊழியம் செய்தால் சில ஆயிரம் ரூபாய்களைத் திரட்டிக் கொண்டு தாயகம் திரும்பலாம் என்று கனவு கண்டானே அவன்?
ஆனால், இப்போது காரிலிருந்து தலையை வெளியே நீட்டி அந்தக் கடையின் இருண்ட முகப்பைப் பார்க்கும் போது அவன் உள்ளத்தில் என்ன உணர்ச்சி உண்டாயிற்றுத் தெரியுமா? உலகத்திலேயே மிக மட்டமான அருவருக்கத்தக்க ஒரு பொருளை, யாரோ தன்னைத் தன் கண்களினால் வற்புறுத்திப் பார்க்கச் செய்துவிட்டாற் போன்ற உணர்ச்சிதான் உண்டாயிற்று. தலையை உள்ளே இழுத்துக் கொண்டு டிரைவரிடம் காரைச் செலுத்துமாறு சொன்னான். கார் புறப்பட்டது.
"கடைக்குள் உங்கள் பெட்டி, படுக்கை வேறு பொருள்கள் எவையேனும் அகப்பட்டுக் கொண்டு விட்டனவோ?" - என்று மேரி அவனைக் கேட்டாள்.
"இல்லை! அப்படி ஒன்றும் அதிகமான பொருள்களை இந்த நாட்டிற்கு வரும் போது நான் கொண்டு வரவில்லை" - என்று சுருக்கமாக அவளுக்குப் பதில் சொன்னான் அவன்.
கார் வெள்ளவத்தையில் உள்ள அவர்கள் பங்களாவை நோக்கிச் சென்றது.
"எனக்கு இப்போது உடனே சபாரத்தினத்தைப் பார்க்க வேண்டும். என்னைப் பம்பலப்பிட்டியாவில் உள்ள சபாரத்தினத்தின் வீட்டில் கொண்டு போய் விட்டால் நல்லது." - என்றான் அழகியநம்பி.
"இப்படிச் செய்துவிட்டால் என்ன? நாம் எல்லோரும் இப்போது முதலில் நம்முடைய வீட்டிற்கே போகலாம். அங்கே போய் டிரைவரிடம் சபாரத்தினத்தின் முகவரியைச் சொல்லி அனுப்பிக் காரில் கூட்டிக் கொண்டு வரச் செய்யலாமே?" - என்றாள் லில்லி. அவனுக்கும் அந்த யோசனை சரியென்றே தோன்றியது.
'பாவம்! சபாரத்தினத்திற்கு வேலை போயிருக்கும். அவருக்கு மட்டுமா? கடையில் வேலை பார்த்து வந்த அத்தனை ஆட்களுக்கும் - சமையற்காரச் சோமு உட்பட வேலை போயிருக்கும். நிர்வாகத்தின் மோசடிகளால் ஒரு பெரிய வியாபார நிறுவனம் கவிழ்ந்து விட்டால் எத்தனை பேர் நடுத்தெருவில் நிற்க நேரிடுகிறது!' - அழகியநம்பி சிந்தித்தான். 'பிரமநாயகம் கொலை செய்கிற அளவுக்குப் பூர்ணாவின் மேல் எப்படி ஆத்திரமடைந்தார்? பூர்ணா அவரிடம் அப்படி மாட்டிக் கொள்கிற அளவுக்கு ஏமாளியாக இருந்தாளா? பிரமநாயகம் இனி என்ன ஆவார்? அவருடைய மோசடிக் குற்றங்களுக்கும், கொலைக் குற்றங்களுக்கும் என்ன தண்டனைகளை அடைவார்? கடை என்ன ஆகும்? வியாபாரம் என்ன ஆகும்?' - என்பதைப் பற்றி அழகியநம்பி அதிகம் சிந்தித்து மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கவில்லை. நடந்ததைப் பற்றி - இனி நடக்க இருப்பவற்றைப் பற்றித் தன்னுடைய சொந்தத் தீர்மானங்களைப் பற்றி - சபாரத்தினம் என்ற தன் உண்மை நண்பரிடம் சில மணி நேரம் அமைதியாகக் கலந்தாலோசித்துப் பேச ஆசைப்பட்டான் அவன்.
கார் பங்களா வாசலை அடைந்ததும் முன்புறத்தில் சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்த வோட்ஹவுஸும், திருமதி வோட்ஹவுஸும், சிறு குழந்தைகளைப் போல் துள்ளிக் குதித்து ஓடி வந்து வரவேற்றனர்.
"பிரயாணம் முழுவதும் சுகமான அனுபவங்கள் ஏற்பட்டனவா?" - என்று முகம் மலரச் சிரித்துக் கை குலுக்கினார் அவர். திருமதி வோட்ஹவுஸ் மகிழ்ச்சிப் பெருக்கினால் தன் பெண்களை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார்.
லில்லி தன் தாயையும், தந்தையையும் ஒரு ஓரமாக அழைத்துக் கொண்டு போய் ஏதோ கூறினாள். வோட்ஹவுஸுக்கும், திருமதி வோட்ஹவுஸுக்கும் முகத்தில் இருந்த மலர்ச்சி மறைந்தது. அவர்கள் அழகியநம்பியின் அருகே வந்தனர். "நீங்கள் வேலை பார்த்து வந்த இடத்தில் இப்படி விபரீதமாக நடந்து கடையை மூடிவிட்டார்களாமே? இப்போதுதான் லில்லி எல்லா விபரமும் சொன்னாள். இரண்டு மூன்று நாட்களாக எல்லாப் பத்திரிகைகளிலும் இந்தச் செய்திதான் பிரமாதப்படுகிறது. ஊர் முழுதும் இந்தப் பேச்சுத்தான். ஆனால், அதே கடையில்தான் நீங்கள் வேலை பார்க்கிறீர்களென்று எனக்குத் தெரியாது. லில்லி சொன்னபின் இப்போதுதான் அறிந்தேன். என் மனமார்ந்த அனுதாபங்கள்." - என்றார் வோட்ஹவுஸ்.
"பரவாயில்லை! அதைப்பற்றி நான் அதிக வருத்தம் அடையவில்லை." - என்று அழகியநம்பி அவருக்குப் பதில் கூறினான்.
"டிரைவரிடம் உங்கள் நண்பரின் முகவரியைச் சொல்லி அனுப்புங்கள். போய் அழைத்துக் கொண்டு வரட்டும்." - என்று நினைவூட்டினாள் மேரி.
அழகியநம்பி காரின் அருகே சென்று பம்பலப்பிட்டியாவில் சபாரத்தினம் குடியிருக்கும் தெருவின் பெயரைச் சொல்லி அடையாளமும் கூறினான்.
"இருபது நிமிடங்களில் கூட்டிக் கொண்டு வந்துவிடுகிறேன். நீங்கள் உள்ளே பேசிக் கொண்டிருங்கள்." - டிரைவர் புறப்பட்டுச் சென்றுவிட்டான். பிஸ்கட்டும், தேநீரும் கொடுத்து அவனை உபசரித்தார்கள். வோட்ஹவுஸ் தம்பதிகள் மாறிமாறி அவனுக்கு ஆறுதல் கூறினர். அவர்கள் தன்னிடம் ஆறுதலையும், அனுதாபத்தையும் கூறுவதைவிடக் கூறாமல் இருந்தால் தன் மனம் கலங்காமல் அமைதியாக இருக்குமென்று அப்போது அழகியநம்பிக்குத் தோன்றியது. சபாரத்தினம் வரும் நேரத்தை ஆவலுடன் எதிர் பார்த்தான் அவன்.
சபாரத்தினம் வந்துவிட்டார். சொல்லிவிட்டுப் போனபடி விரைவாகக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான் டிரைவர். வேலை போய்விட்டதே என்ற கவலையோ வருத்தமோ அந்த மனிதரிடம் இல்லை. வழக்கம் போல் அட்சர லட்சம் பெறும் அந்தச் சிரிப்போடு, "என்ன? பிரயாணமெல்லாம் சௌகரியமாக இருந்ததா?" - என்று கேட்டுக்கொண்டே அவன் முன் வந்து நின்றார் சபாரத்தினம்.
"சௌகரியந்தான்." - என்றான் அழகியநம்பி. மேரி சபாரத்தினத்தை உட்காரச் சொல்லித் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவர் அதைப் பருகியதும், "நான் உங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும். அதற்காகத்தான் இப்போது சந்திக்க விரும்பினேன்." - என்று அழகியநம்பி அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
"அதற்கென்ன? பேசுவோமே!" - என்று சொல்லிச் சிரித்தார் சபாரத்தினம். 'இனிமேல் பேச என்ன இருக்கிறது?' - என்று சிரிப்பது போல் இருந்தது அவர் சிரித்த விதம்.
"மாடிக்குப் போய்ப் பேசிவிட்டு வாருங்களேன். மேரீ! இவர்களுக்கு மாடியறைக் கதவைத் திறந்துவிடு" - என்றார் வோட்ஹவுஸ்.
"வாருங்கள் போகலாம்." - மேரி அழைத்தாள். அழகியநம்பி சபாரத்தினத்தைக் கூட்டிக் கொண்டு மாடிக்குச் சென்றான்.
கடற்காற்று வீசும் அந்த மாடியறையின் மனோரம்மியமான சூழ்நிலையில் ஒரு விநாடி என்ன பேசுவது? யார் முதலில் பேசுவது? - என்று திகைத்துப் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தனர் இருவரும்.
"என்ன நடந்தது? எனக்கு விவரமாகச் சொல்லுங்கள். அவளைக் கண்டாலே பயந்து சாகிற மனிதர் கொலை செய்கிற அளவுக்கு எப்படித் துணிந்தார்?" -
அழகியநம்பி பேச்சைத் தொடங்கினான்.
"அழகியநம்பீ! இதில் நீங்கள் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது! உங்களுக்கு நினைவிருக்குமே? நீங்கள் புறப்படுவதற்கு முதல்நாள் மத்தியானம் உங்கள் அறைக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது நான் என்ன சொன்னேன்?" -
"பூர்ணாவுக்கும் பிரமநாயகத்துக்கும் உள்ளூர விரோதம் இருக்கிறதென்று குறிப்பாகச் சொல்லியிருந்தீர்கள்."
"சொல்லியிருந்தேன் அல்லவா? அது திடீரென்று முற்றி விட்டது. அவர்கள் இருவருக்கும் உங்கள் விஷயமாகத்தான் தகராறும் விவாதமும் ஏற்பட்டிருக்கும் போலிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை கடை கிடையாதென்றாலும் பூர்ணாவை வரச்சொல்லியிருக்கிறார் பிரமநாயகம். அவள் வந்திருக்கிறாள். அலுவலக அறைக்குள் நீண்ட நேரம் இருவருக்கும் பலமான விவாதமும் சப்தமும் ஏற்பட்டிருக்கின்றன. அதுவரை என்றும் பேசாத முறையில் திட்டியும், வைதும் இரைந்து பேசிக் கொண்டார்களாம். அதற்குக் காரணம், உங்களைப் பற்றிய பிரச்னையில் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடுதானாம். இதைச் சமையற்காரச் சோமுவிடம் விசாரித்து அறிந்து கொண்டேன் நான்.
"மறுநாள் திங்கட்கிழமையாகையால் கடை உண்டு. அதனால், ஞாயிற்றுக்கிழமைக்குப் பின் தொடர்ந்து நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் நானும், கடையில் வழக்கமாக வேலை பார்த்து வரும் மற்ற நண்பர்களும் நன்கு அறிவோம். திங்கட்கிழமை காலையில் பத்தேகால் மணிக்குப் பூர்ணா எப்போதும் போல் வந்து அலுவலக அறைக்குள் தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
"வியாபார விஷயமாக வெளியில் அலைந்துவிட்டுப் பன்னிரண்டு மணி சுமாருக்குப் பிரமநாயகம் கடைக்கு வந்தார். பூர்ணாவிடம் போய் அறைக்குள் சிறிது நேரம் கோபத்தோடு இரைந்து கொண்டிருந்தார். அவளும் பதிலுக்கு இரைந்தாள். இருவரும் அறைக்குள் போட்டுக் கொண்ட சத்தம் கடை முழுதும் கேட்டது.
"சத்தம் போட்டுவிட்டுக் குளித்துச் சாப்பிடுவதற்காகப் பின் கட்டுக்குப் போயிருந்தார் பிரமநாயகம். அவர் உள்ளே போய்ப் பதினைந்து, இருபது நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. கடை வாசலில் ஒரு பெரிய கார் வந்து நின்றது. இரண்டு மூன்று பேர் இறங்கி வந்தார்கள். பார்த்தால் ஏதோ சர்க்கார் அதிகாரிகள் போல் தோன்றினர். கடையில் ஏதாவது வாங்கிக் கொண்டு போக வந்திருப்பார்கள் என்ற நினைப்புடன் நான் அவர்களை வரவேற்றேன்.
"நாங்கள் கடையில் சாமான்கள் வாங்க வரவில்லை. விற்பனை வரி, வருமான வரி செக்கிங் இன்ஸ்பெக்டர்கள். எங்கள் உத்தியோக வேலையாகக் கணக்கு வழக்குகளைப் பரிசோதனை செய்ய வந்திருக்கிறோம்." - என்று சொன்னார்கள் அவர்கள். உடனே நான் அவர்களைப் பூர்ணாவின் அறையில் கொண்டு போய் விட்டேன். அவர்களுடைய வரவைக் கடையின் 'ப்யூன்' மூலம் பின் கட்டில் குளித்துக் கொண்டிருந்த பிரமநாயகத்துக்குச் சொல்லி அனுப்பினேன். என் மனத்தில் சந்தேகமும், பயமும் ஏற்பட்டிருந்தன. அன்று அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் நல்ல காரியத்திற்காக வந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
"நான் நினைத்துச் சந்தேகப்பட்டது வீண் போகவில்லை. இத்தனை வருடங்களாகப் பிரமநாயகம் விற்பனை வரி - வருமானவரித் துறையில் செய்திருந்த அவ்வளவு மோசடிகளையும் நாற்பது நிமிஷங்களில் அம்பலமாக்கி விட்டார்கள். எல்லா விவரங்களையும் குறித்துக் கொண்டு போலீசுக்குப் போன் செய்தார்கள். போலீஸ் 'வான்' வந்தது. பிரமநாயகத்தைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். போய் இரண்டு மூன்று மணி நேரத்தில் ஜாமீனில் திரும்பி வந்தார் அவர். அவர் திரும்பி வந்த போது பூர்ணா இல்லை. அவள் மூன்று மணி சுமாருக்கு அலுவலக அறையைப் பூட்டிக் கொண்டு போய்விட்டாள். வரும்போது அடிப்பட்ட புலிபோல் சீறிக்கொண்டு வந்தார் பிரமநாயகம். பூர்ணாதான் காட்டிக் கொடுத்திருக்கிறாள், என்றே சந்தேகமறப் புரிந்து கொண்டார். ஜாமீனில் திரும்பி வந்தபின் அவரைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. அவர் எங்கும் வெளியே போகவில்லை. பின்கட்டில் அவருடைய அறைக்குள்ளேயே பித்துப் பிடித்தவர் போல் உட்கார்ந்து கொண்டிருந்தார். சோமுவை நெருப்புக் கொண்டுவரச் சொல்லி ஏதோ சில கடிதங்களையும் கணக்குப் பேரேடுகளையும் பைல்களையும் அறைக்குள்ளேயே கொளுத்தினாராம்.
"அலுவலகச் சாவியைப் பூர்ணா கொடுத்து விட்டுப் போயிருக்கிறாளா?" - என்று என்னைக் கூப்பிட்டுக் கேட்டார்.
"இல்லை! வழக்கமாகச் சமையற்காரச் சோமுவிடமாவது என்னிடமாவது கொடுத்துவிட்டுப் போவது உண்டு. இன்றைக்குக் கையோடு கொண்டு போய்விட்டாள் போலிருக்கிறது" - என்று சொன்னேன் நான். சாவியைப் பூர்ணா கொண்டு போய்விட்டாள் என்று தெரிந்தவுடன் அவர்பட்ட ஆத்திரத்துக்கும், வேதனைக்கும் ஒரு அளவே இல்லை. 'சாவியில்லாவிட்டால் என்ன? நீயும் சோமுவும் சேர்ந்து உடைக்க முடியுமா?" - என்றார். நாங்கள் பதில் சொல்லவில்லை. அவரும் அதற்கு மேல் அதை அதிகம் வற்புறுத்தவில்லை.
"பின்பு இரவு ஏழுமணிக்கு நான் கடைவேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். மறுநாள் காலை வழக்கம் போல் வேலைக்குப் போனபோதும் வேறு விசேடமாக எதுவும் நடைபெற்றிருக்கவில்லை. பிரமநாயகம் முதல் நாளிரவு போல் பித்துப் பிடித்தவர் போன்ற நிலையிலேயே அறைக்குள் அடைந்து கிடந்தார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஒன்பது மணியிலிருந்து பத்தேகால் மணிக்குள் பூர்ணா வந்து விட்டாளா, என்று இருபது முப்பது தடவையாவது முன் கட்டுக்குக் கேட்டனுப்பியிருப்பார். பத்து பன்னிரண்டு தடவையாவது அலுவலக அறை திறந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வரச் சொல்லிச் சமையற்காரச் சோமுவை விரட்டியிருப்பார். 'காலையிலிருந்து குளிக்கவில்லை. சாப்பிடவில்லை. வெறிபிடித்தவர் போல உட்கார்ந்திருக்கிறார்' - என்றான் சோமு.
"பத்தேகால் மணிக்குப் பூர்ணா வந்து கதவைத் திறந்து கொண்டு போய் அறைக்குள் உட்கார்ந்தாள். உடனே நான் பின் கட்டுக்குப் போய் 'அவள் வந்துவிட்டாள். அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.' - என்று அவரிடம் சொன்னேன். 'வந்துவிட்டாளா?...' - என்று கேட்டுக் கொண்டே வேகமாக எழுந்திருந்து வந்தார். அறைக்குள் நுழைந்தார்.
"நாங்களெல்லோரும் அவரவர்கள் இடத்தில் இருந்தவாறே என்ன நடக்கப்போகிறதோ; - என்று பயத்தோடு காதை தீட்டிக் கொண்டு கேட்பதற்குத் தயாராக இருந்தோம். நாங்கள் எதிர் பார்த்தபடி பிரமநாயகம் உள்ளே சென்றவுடன் உள்ளே பலத்த கூப்பாடோ, விவாதமோ உண்டாகவில்லை. அமைதியாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள் போலிருக்கிறது. அரைமணி நேரமானதும் சத்தம் பலத்தது. அறையே இடிந்து விழுந்துவிடும் போல ஒருவருக்கொருவர் கூப்பாடு போட்டுக் கொண்டார்கள்.
"திடீரென்று அந்தப் பெண் பூர்ணா குரூரமாக அலறும் ஒலி பயங்கரமாகக் கேட்டது. பிரமநாயகத்தின் குரல் கேட்கவில்லை. நானும் இன்னும் இரண்டொருவரும் அறைக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே போய்ப் பார்த்தோம். அப்பப்பா! என்ன கோரக் காட்சி? காகிதம் அறுப்பதற்காக மேஜை மேல் வைத்திருந்த நீளமான கத்தியை அவள் நெஞ்சில் நாலைந்து முறை குத்தி எடுத்துவிட்டார் பிரமநாயகம். வெறி பிடித்து விட்டதால் நிறுத்தாமல் கத்தியைக் குத்திக் குத்தி உருவிக் கொண்டிருந்தார். மேஜை, நாற்காலி, பைல்கள், கணக்குப் புத்தகங்கள், டைப்ரைட்டர்கள், - எங்கும் சிவப்பு ரத்தம் பீறிட்டுச் சிதறியிருந்தது. நானும் மற்றவர்களும் அப்போது அவர் அருகே நெருங்கவே பயந்து கொண்டு வெளியே ஓடி வந்து விட்டோம்.
"கூப்பாட்டையும், அலறலையும் கேட்டுக் கடை வாசலில் என்னவோ ஏதோ, என்று கூட்டம் கூடிவிட்டது. கால்மணி நேரங்கழித்துக் கைகளிலும், உடம்பின் பல பாகங்களிலும் இரத்தக்கறை படிந்த தோற்றத்தோடு தாமாகவே அறையிலிருந்து வெளியே வந்தார் பிரமநாயகம். கண்களில் கொலை வெறி அப்போது அடங்கவில்லை. எல்லோரும் அவரவர்கள் இடத்தில் என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தோம். அவர் நேராகப் போன் இருந்த இடத்தை நோக்கிப் போனார். போனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆள் பயந்து எழுந்து ஒதுங்கி நின்று கொண்டான். இரத்தக்கறை படிந்த கையால் அவராகவே தாம் கொலை செய்துவிட்டதாகப் போலீஸுக்குப் போன் செய்தார்.
பின்பு எங்களையெல்லாம் பார்த்து நிதானமாகச் சொன்னார்: - "நாளையிலிருந்து இந்தக் கடை நடக்காது. உங்களுக்கெல்லாம் இங்கே வேலை இல்லை."
ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் இருந்துவிட்டோம். பின்பு கடை வாசலில் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி, "ஏன் கூட்டம் போடுகிறீர்கள்? போய்விடுங்கள்?" - என்றார். போலீஸ் லாரி வந்தது. அவரைக் கைது செய்தார்கள். எங்களில் சிலரைச் கொலைக்குச் சாட்சிகளாகப் பதிவு செய்து கொண்டார்கள். கொலை செய்யப்பட்ட பூர்ணாவின் உடலை வைத்தியப் பரிசோதனைக்காக அப்புறப்படுத்தினார்கள். எங்களையெல்லாம் வெளியேற்றிவிட்டுக் கடையின் எல்லாப் பகுதிகளையும் பூட்டிச் சீல் வைத்துப் போலீஸ்காரர்களைக் காவல் வைத்தனர். பிரமநாயகத்தை லாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டனர். நடந்தது இதுதான். பிரமநாயகம் ரிமாண்டில் இருக்கிறார். அவரை நம்பி இருபதாயிரம், முப்பதாயிரம் என்று ஏராளமான தொகைகளுக்குச் சரக்குக் கொடுத்தவர்களெல்லாம் கையைச் சுட்டுக் கொண்டு தவிக்கிறார்கள். மனிதனுக்குக் கிடைப்பதென்னவோ தூக்குத் தண்டனைக்குக் குறைவாக வேறெதுவும் இருக்காதென்று பேசிக் கொள்கிறார்கள்."
-சபாரத்தினம் சொல்லி முடித்தார். அழகியநம்பி சிந்தனையில் மூழ்கியவனாக அதிர்ந்து போய் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
"நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் இனிமேல்?" - சபாரத்தினம் அவனைக் கேட்டார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தயங்கினான்.
"செய்வதென்ன? அதை, இந்த நிகழ்ச்சிகளெல்லாம் எனக்குத் தெரிவதற்கு முன்பே நான் தீர்மானித்து வைத்து விட்டேனே!"
"ஊருக்குத் திரும்பிப் போகும் திட்டம் தானே அது?" - சபாரத்தினம் சிரித்துக்கொண்டே கேட்டார்.
"ஆமாம்! கஷ்டமோ, நஷ்டமோ, அதைப் பிறந்த மண்ணிலேயே அனுபவிக்கத் தீர்மானித்து விட்டேன். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதை நான் அறிந்து கொள்ளலாமோ?"
"உங்களைப் போலவே எனக்கும் பிறந்த மண் இருக்கிறது. அருமையான வயல்கள் - தென்னந்தோப்பு - எல்லாம் இருக்கின்றன. பேசாமல் வீட்டோடு ஒழித்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிப் போகப் போகிறேன். ஊரோடு நிலங்கரைகளைப் பார்த்துக் கொண்டும் ஒழிந்த வேளைகளில் தமிழ் இலக்கியங்களைப் படித்துக் கொண்டும் நாட்களைக் கழிக்கப் போகிறேன். மனிதர்களை நம்பி வாழ்வது அலுத்துப் போய்விட்டது! மண்ணை நம்பி வாழ்வதற்குப் புறப்பட்டுவிட்டேன். ஆனால், என் உள்ளத்தில் ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் உறுதியாக இருக்கிறது. மனிதர்களை நம்பி வாழ்ந்த போது குறிக்கிடுகிற போட்டி, பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் - இவைகளெல்லாம் மண்ணை நம்பி வாழும் போது ஏற்படாது. அந்த வாழ்க்கையில் அமைதி இருக்கும், இன்பமிருக்கும், பண்பு இருக்கும், தன்னம்பிக்கை இருக்கும்."
இதைக் கேட்டபோது அழகியநம்பிக்கு உள்ளம் சிலிர்த்தது. 'ஆகா! இந்தச் சபாரத்தினத்திற்கும், எனக்கும் ஒரே மாதிரி உள்ளத்தை, ஒரே மாதிரிச் சிந்தனையை, படைத்தவன் வைத்துவிட்டானா; என்ன? இலங்கையின் மலைப்பகுதியில், தேயிலை, இரப்பர்த் தோட்டங்களில், உழைக்கும் மக்களைப் பார்த்தபோது என் உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் தோன்றினவோ, அதே எண்ணங்களை இப்போது இவரும் வெளியிடுகிறாரே?' - என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டான்.
"நீங்கள் என்றைக்கு யாழ்ப்பாணத்திற்குப் புறப்படுகிறீர்கள்?"
"ஏன்? இன்னும் ஒரு வாரம் போல ஆகும்!"
"இல்லை! சும்மாதான் கேட்டேன். நான் நாளைக்குக் காலையில் கப்பலேறலாம் என்றிருக்கிறேன்." - அழகியநம்பியின் குரல் தழுதழுத்தது.
"என்ன? அதற்குள்ளாகவா? சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று நீங்கள் விரும்பினால் பிரமநாயகத்தைச் சந்தித்துச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு போகலாமே?"
"வேண்டாம்! நான் அவரைச் சந்திக்கவும் விரும்பவில்லை. அவரிடம் சொல்லிக் கொள்ளவும் விரும்பவில்லை."
"அவ்வளவு வெறுப்பா?"
"வெறுப்பும் கிடையாது! இரக்கமும் கிடையாது! இனி மேல் நான் என்னைப் பற்றி மட்டும் தான் கவலைப்பட முடியும்."
"கடைக்குள் உங்கள் பொருள்கள் எவையேனும் இருக்கின்றனவோ?"
"எதுவும் இருப்பதாக நினைவில்லை. இருந்தாலும் அவற்றை நினைத்து நான் காத்துக் கொண்டிருக்கப் போவதில்லை!" - தீர்மானமாகக் கூறினான் அவன்.
வோட்ஹவுஸும், திருமதி வோட்ஹவுஸும் - அழகியநம்பியை ஆன மட்டிலும் கெஞ்சிப் பார்த்தார்கள். "வந்து முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் நீங்கள் இப்படி மனம் வெறுத்து ஊர் திரும்புவது எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் எந்த இடத்தை நம்பி எவரை அண்டிக் கொண்டு வந்தீர்களோ, அங்கே அவரிடத்தில் விபரீத விளைவுகளால் அவநம்பிக்கை அடைந்துவிட்டீர்கள். அவர் இல்லாவிட்டால், அவருடைய கடை இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய கொழும்பு நகரத்தில் உங்களுக்கு வேறு நல்ல வேலை கிடைக்காமலா போய்விடும்? நீங்கள் இருக்க மட்டும் சம்மதியுங்கள். நானாயிற்று; இன்னும் இரண்டே நாட்களில் உங்களுக்குச் சரியான இடத்தில் தகுதியான வேலை பார்த்துத் தருகிறேன். 'ஊருக்குப் போகவில்லை' - என்று மட்டும் ஒரு வார்த்தை சொல்லுங்கள்; போதும்" - என்று உள்ளம் உருக வேண்டினார் அந்த வெள்ளைக்கார இராணுவ அதிகாரி.
சாப்பிடாமல் ஒரு மூலையில் உட்கார்ந்து அவன் ஊருக்குத் திரும்பக் கூடாதென்று அடம்பிடித்தாள் மேரி. லில்லி கண்கள் கலங்கி அவனை ஏக்கத்தோடு பார்த்த ஒவ்வொரு பார்வையும் நெஞ்சைப் பிடித்து உலுக்கியது.
"இவ்வளவு பேர் சொல்லுகிறோமே! நீங்கள் கேட்டால் தான் என்ன? ஆனாலும் நீங்கள் இவ்வளவு முரண்டு பிடிக்கக் கூடாது." - என்று அவனைக் கண்டிப்பது போன்ற குரலில் கூறினாள் திருமதி வோட்ஹவுஸ்.
-இவ்வளவும், மாடியறையில் பேசி விட்டுச் சபாரத்தினமும், அழகியநம்பியும், கீழே இறங்கிவந்த பின்பு நடந்தது. சபாரத்தினமும் அப்போது அங்கே தான் அவர்களோடு இருந்தார். இருசாராருக்கும் நடுவில் ஒன்றும் குறுக்கிட்டுப் பேசாமல் சிரித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார். உலகமே தலைகீழாகக் கவிழ்ந்து நிலைகுலைந்து போனாலும் அந்த முகத்திலிருந்து அந்தச் சிரிப்பு மாறாது போலிருக்கிறது!
"இவ்வளவு பேர், இவ்வளவு நேரமாகக் கூறியும் கேட்க மாட்டேனென்கிறாரே? நீங்கள் இவருக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறீர்கள். கொஞ்சம் விவரமாக எடுத்துச் சொல்லி இங்கே தங்கச் செய்யுங்களேன்?" - என்று சபாரத்தினத்தை வேண்டிக் கொண்டார் வோட்ஹவுஸ்.
"நான், 'இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு ஊர் திரும்ப வேண்டாமென்று' இவருக்கு உங்களுக்கெல்லாம் முன்னாலேயே சொல்லிவிட்டேன். கேட்கமாட்டேனென்கிறார்! நாம் என்ன செய்யலாம்?"
"மிஸ்டர் சபாரத்தினம்; நீங்களே கூறுங்கள் இப்போது உடனே ஊருக்குத் திரும்பிப் போய் இவர் என்ன சாதித்து விடப் போகிறார்?"
"தயவு செய்து நீங்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். நாலைந்து நாட்களாகவே என் மனநிலை சரியில்லை. உங்களிடம் வார்த்தைகளால் கோவைப்படுத்திக் கூறமுடியாத ஒரு பேருணர்ச்சி என்னை நான் பிறந்த பூமிக்கு இழுக்கிறது. உடனே, ஓடோடிப் போய் எனது அழகான கிராமத்து வயல் வெளிகளின் மேடும், பள்ளமுமான வரப்புகளில் கால்தேய நடக்க வேண்டும்போல ஒரு துடிப்பு உண்டாகிறது. 'பதினைந்து, இருபது நாட்களுக்குள்ளாகப் பச்சைக் குழந்தையைப் போல் இப்படி இந்தப் பிரிவினை உணர்ந்து ஏங்குகிறேனே!' - என்று என்னை நீங்கள் கேலி செய்தாலும் செய்யலாம். அல்லது விநோதமான எனது இந்தப் பலவீனம் உங்களுக்குப் புரியாததாகவோ, புதுமையாகவோ இருக்கலாம். ஏதோ ஒரு தனிமை வேதனை, ஏதோ ஒரு ஏக்கம், உங்களுக்கெல்லாம் நடுவில் - உங்களுக்கு மிகவும் வேண்டியவனாக உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் என் மனத்தின் ஒரு கோடியில் கன வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கிறது. என்னை வற்புறுத்தாதீர்கள். எனக்காக எந்த உத்தியோகமும் நீங்கள் பார்க்க வேண்டாம். பிறந்த மண்ணில் போய் நான் பிச்சையெடுத்தாவது பிழைத்துக் கொள்வேன். என் பாதங்கள் இங்கிருந்து பெயர்ந்து செல்வதற்குத் துறுதுறுக்கின்றன. என்னைப் போகவிடுங்கள்."
சிறுகுழந்தை கதறுவது போல் அவர்கள் எல்லோருக்கும் முன்னால் உணர்ச்சிமயமாக மாறிக் கதறினான் அழகியநம்பி. இன்னும் கொஞ்சம் வற்புறுத்தினால் அவன் வாய்விட்டு அழுதுவிடுவான் போலிருந்தது. அவனுடைய உதடுகள் துடித்தன. கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. முகத்தில் முத்துமுத்தாக வேர்வை அரும்பியது. கண்களில் தனிப்பட்ட தொரு ஒளி மின்னியது. அவன் தெய்வ சந்நதம் வந்தவனைப் போல் காணப்பட்டான்.
அதற்குமேல் யாருக்குமே அவனிடம், அவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூடச் சொல்லத் தோன்றவில்லை. எப்போதும் சிரிப்பும், கலகலப்புமாக நடைபெறும் இரவுச் சாப்பாடு அன்று அங்கே மிக அமைதியாக நடந்து முடிந்தது. திருமதி வோட்ஹவுஸ் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள். மேரி சாப்பிட வர மறுத்துவிட்டாள். லில்லி கண்ணீருக்கிடையே குனிந்த தலை நிமிராமல் ஏதோ சாப்பிட்டேனென்று பேர் செய்தாள். யாருமே அன்று சுவையுணர்ந்து விருப்பத்தோடு சாப்பிடவில்லை.
சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டிருந்து விட்டுச் சபாரத்தினம் புறப்பட்டார். "வீட்டிற்குப் போய்ப் படுத்துக் கொண்டிருந்துவிட்டுக் காலையில் துறைமுகத்திற்கு வழியனுப்ப வந்து விடுகிறேன்," - என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்தார் அவர். ஆனால், வோட்ஹவுஸ் அவரைப் போக விடவில்லை.
"இல்லை மிஸ்டர் சபாரத்தினம். நீங்கள் இங்கேயே படுத்திருந்து காலையில் எங்களோடு வந்து துறைமுகத்தில் இவரை வழியனுப்பிவிட்டு அப்புறம் வீட்டுக்குப் போய்க் கொள்ளலாம்."
"சரி! உங்கள் விருப்பம் அப்படியானால் இருக்கிறேன்." - சபாரத்தினம் அங்கேயே தங்கிவிட்டார். அப்போது இரவு எட்டு மணிக்கு மேலாகியிருந்தது.
வோட்ஹவுஸ், திருமதி வோட்ஹவுஸ், சபாரத்தினம் மூவரும் சேர்ந்து அப்போது உடனே கடைவீதிக்குப் போய் அழகியநம்பிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பச் சில பொருள்கள், நல்ல பழவகைகள் - எல்லாம் வாங்கிக் கொண்டு வரத் தீர்மானித்தனர். மேரி, லில்லி, அழகியநம்பி, ஆகிய மூவரையும் தனிமையில் விட்டு விட்டு அவர்கள் காரில் கடைவீதிக்குப் புறப்பட்டுச் சென்றனர். கார் பங்களா வாசலைக் கடந்து சென்றதும் மேரியும், லில்லியும், அழகியநம்பியின் அருகே வந்து தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு தங்கள் இதயத்தில் குமுறும் உணர்ச்சிகளைக் கொட்டத் தொடங்கிவிட்டார்கள். அந்த இரண்டு பெண்களின் நான்கு விழிகள் அவனுடைய காலடியில் கண்ணீரைச் சிந்தின.
"நீங்கள் இருவருமே என்மேல் அளவுக்கு மீறிக் குழந்தைத் தனமாகப் போட்டி போட்டுக் கொண்டு அன்பைச் செலுத்தி விட்டீர்கள். இப்போது வேதனைபடுகிறீர்கள். உங்களுடைய வேதனையை உணர்வதைத் தவிர வேறெதுவும் கூற முடியாதவனாக இருக்கிறேன் நான்!" - என்று மனமுருகிக் கூறினான் அழகியநம்பி.
"இரயில் பிரயாணத்தின் போது தற்செயலாகச் சந்தித்துப் பின் உடனே மறந்து விடுகிற எத்தனையோ பேர்களைப் போல எங்களையும் நீங்கள் மறந்துவிட நினைக்கிறீர்கள் போலிருக்கிறது" - மேரியின் இந்தக் கேள்வி அவனுடைய நெஞ்சைச் சுட்டது. சூட்டைத் தாங்கிக் கொண்டான். விவரமாக என்ன பதில் சொல்லி அவர்களைச் சமாதானப் படுத்துவதென்று அவனுக்குத் தெரியவில்லை. தன் மனம் இரக்கமற்ற கல்மனமென்று அவர்கள் நினைத்துக் கொள்வார்களோ, என்ற அச்சம் ஏற்பட்டது.
"நான் தாய்நாட்டிற்குத் திரும்புகிற இந்த நேரத்தில் உங்கள் களங்கமில்லாத அன்பினால் என்னை வேதனைப்படுத்துகிறீர்களே ஒழிய எனக்கு நிம்மதியாக விடை கொடுக்க மாட்டேனென்கிறீர்கள்!" - அவன் ஏக்கத்தோடு அவர்களைக் கெஞ்சுவது போல் வேண்டிக் கொண்டு சமாதானப்படுத்த முயன்றான். அவன் முயற்சி பயனளிக்கவில்லை. அவன் காலடியில் அழுது கொண்டே வீற்றிருந்தனர் அவர்கள். அவனுக்கு அதற்குமேல் பேசத் தோன்றவில்லை. அவர்களுக்கும் பேசத் தோன்றவில்லை. அமைதியான நிலையில் மூன்று உள்ளங்கள் உணர்ச்சித் துடிப்பில் மூழ்கியிருந்தன.
கடைவீதிக்குப் போயிருந்தவர்கள், ஒன்பதரை, ஒன்பதே முக்கால் மணிக்குத் திரும்பி வந்தனர். சபாரத்தினமும், அழகியநம்பியும் மாடியறையில் போய்ப் படுத்துக் கொண்டனர். இருவருக்கும் படுத்தவுடன் உறக்கம் வரவில்லையானாலும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளவில்லை. விளக்கை அணைத்து விட்டுப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தனர். அன்று அந்தப் பங்களாவில் எல்லோருடைய நிலையும் ஏறக்குறைய இப்படியே தான் இருந்தது. உள்ளத்தில் இடம் பெற்று விட்ட அன்பான நண்பனைப் பிரியும் போது ஏற்படும் வேதனையின் அமைதி அது.
காலையில் எட்டுமணிக்குக் கப்பல் புறப்படுகிறது. ஏழு மணிக்கே எல்லோரும் துறைமுகத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். காரில் போய்க் கொண்டிருந்த போது மேரியும், லில்லியும், அழகியநம்பியின் வலதுகையில் விரலுக்கு ஒன்றாக இரண்டு மோதிரங்களைத் தங்கள் கைகளிலிருந்து சுழற்றி அணிவித்தனர். அந்த மோதிரங்களில் எனாமல் எழுத்துக்களில் முறையே மேரி, லில்லி என்ற பெயர்கள் பொறிக்கப் பெற்றிருந்தன. அவனுடைய கையை அன்பாகப் பற்றி அந்த மோதிரத்தை அவர்கள் அணியும்போது அவற்றை மட்டும் அவன் கை தாங்கிக் கொள்ளவில்லை. சூடு நிறைந்த இரண்டு கண்ணீர்த் துளிகளையும் அவன் புறங்கை தாங்கிக் கொண்டது.
"இது எங்கள் நினைவாக என்றும் உங்கள் கை விரல்களில் இலங்க வேண்டும்." - அந்தப் பெண்களின் உருக்கமான சொற்களுக்குப் பதில் சொல்ல நாவெழாமல் தலையை அசைத்தான் அழகியநம்பி. மனம் திறந்து உணர்ச்சியை வார்த்தைகளில் கொட்டிப் பேச முடியாமல் தொண்டையில் ஏதோ கெட்டியாக வந்து அடைத்துக் கொள்வது போல் இருந்தது அவனுக்கு. சபாரத்தினம் அன்பு ததும்ப அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "எங்கே? உங்களுடைய இடது கை மணிக்கடை இப்படிக்கொஞ்சம் நீட்டுங்கள்; பார்க்கலாம்." - என்றார். அவன் கையை நீட்டினான். அழகான புதிய கைக் கடிகாரம் ஒன்றை எடுத்து அவன் கையில் கட்டினார் அவர்.
"நேரத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவு வர வேண்டும்." - சொல்லிவிட்டுச் சிரித்தார் அவர். அவர்களுடைய அன்பளிப்புக்களை வேண்டாமென்று மறுக்கவும் துணிவில்லை. ஏற்றுக் கொண்டு எப்படித் தன் நன்றியைச் சொல்வதென்றும் தெரியவில்லை. அழகியநம்பி திகைத்தான். பலவகைப் பழங்கள் அடங்கிய இரண்டு மூன்று பழக்கூடைகளையும், இலங்கையில் மட்டுமே கிடைக்கும் நல்ல பட்டு, ஜப்பான் துணிகள், அடங்கிய அட்டைப் பெட்டிகளையும், அவனுக்கு வோட்ஹவுஸும், திருமதி வோட்ஹவுஸும் அன்பளிப்பாக அளித்தனர்.
சுங்கப் பரிசோதனை முடிந்து துறைமுகத்தின் உட்புறத்தை அடைந்தனர்.
"நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து என் சுமையை அதிகமாக்கி விட்டீர்கள்." - இந்தச் சொற்களைக் கூறும் போது அழகியநம்பிக்கு நாத் தழுதழுத்தது. கண்கள் கலங்கி ஓரங்களில் ஈரம் கசிந்தது.
"கைச்சுமையை மட்டுமா? இதயச் சுமையையும் அதிகமாக்கி அனுப்புகிறோம்." - சொல்லிவிட்டுப் புன்னகை செய்தார் சபாரத்தினம். வோட்ஹவுஸ், கப்பலில் அவன் வசதியாகப் பிரயாணம் செய்வதற்காக முதல் வகுப்பு டிக்கட் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். லில்லியும், மேரியும் பறிகொடுக்க முடியாத, இழக்கக்கூடாத ஒரு பொருளைச் சிறிது சிறிதாகப் பறிகொடுத்து இழந்து கொண்டிருப்பவர்களைப் போல் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
"எப்போதாவது மறுபடியும் இந்த நாட்டில் வந்து வேலை பார்க்கும் ஆவலோ, வாய்ப்போ ஏற்பட்டு, நீங்கள் இங்கே மீண்டும் வரநேர்ந்தால் எங்களையெல்லாம் சந்திக்கத் தவறி விடாதீர்கள்!" - என்றார் வோட்ஹவுஸ்.
"வருவேன்! வரலாம். ஆனால், அந்த வரவு உங்களையெல்லாம் பார்ப்பதற்காக இருக்குமேயொழிய, வேலைக்காகவோ, பிழைப்புக்காகவோ, இராதென்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்." - என்று உறுதியாகக் கூறினான் அழகியநம்பி.
"ஏன் அப்படி? வேலைக்காக வருவதில் ஒன்றும் தவறு இல்லையே?" - அவர் கேட்டார்.
"தவறோ? தவறில்லையோ? - எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான் நான் கூறமுடியும். பிழைப்புக்கென்றோ, வேலைகள் உத்தியோகங்கள் பார்ப்பதற்கென்றோ என்னுடைய வளமான கிராமத்தின் எல்லையைக் கடந்து ஒரு அடி பெயர்த்து வைக்க மாட்டேன் இனிமேல். பிரமநாயகம் என்ற போலி மனிதருக்காக ஒரு முறை - ஒரே ஒரு முறை அந்தத் தவறைச் செய்தேன். இனி மறந்தும் அப்படிச் செய்யமாட்டேன்." - அழகியநம்பி பேசும்போது அவன் கண்களில் அற்புதமானதொரு ஒளி மின்னியது.
"பின் என்னதான் செய்யப் போகிறீர்கள்? வாழ்க்கை நடப்பதற்கு ஏதாவது செய்து தானே ஆகவேண்டும்? ஒன்றும் செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு கிராமத்திலே போய் உட்கார்ந்து கொண்டுவிட்டால் போதுமா?"
"எதைச் செய்தாலும், எப்போது செய்தாலும், எப்படிச் செய்தாலும் அதை நான் பிறந்த மண்ணின் நான்கு எல்லைகளுக்குள்ளேயே செய்ய விரும்புகிறேன். நிழலுக்கு ஒதுங்கிக் கொள்ள ஒரு வீட்டைத் தவிர வேறு எந்த ஆஸ்தியும் எனக்கு என்னுடைய கிராமத்தில் இல்லை. என் தகப்பனார் வைத்து விட்டுப் போனதெல்லாம் கடன்கள் தான். ஆனாலும், எனக்கு ஒரு புதிய நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. என்னால் உழைக்க முடியும், எனக்கு வலிமை வாய்ந்த இரண்டு கைகளும், ஒரு உள்ளமும் இருக்கின்றன. அறிவையும், படிப்பையும் நம்பிப் பிழைக்க விரும்பிய விருப்பம் இன்றோடு என் மனத்தைவிட்டு நீங்கிவிட்டது. நான் கைகளால் உழைக்கப் போகிறேன். என்னைப் பெற்றெடுத்த பூமியின் மேல் இரத்தத்தையும், வியர்வையையும் சிந்திப் பாடுபடப் போகிறேன். அதில் எனக்கு வெற்றி கிடைத்தால் எனது நம்பிக்கை, எனது புதிய வழி எல்லாமே வெற்றிபெறும். நான் தோற்றால் என்னுடைய பரிசுத்தமான - புனிதமான நல்ல ஆத்மாவை நான் பிறந்த மண்ணுக்குச் சமர்ப்பிப்பேன்."
அழகியநம்பியின் பேச்சைக் கேட்டு அப்படியே மலைத்துப் போனார் வோட்ஹவுஸ்.
"இந்த எண்ணம் உங்களுக்கு முதன்முதலாக எப்போது ஏற்பட்டது என்பதை நான் அறிந்து கொள்ளலாமோ?"
"பிரமநாயகத்தைப் போன்ற வியாபாரிகள் பணம் சேர்ப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகளைப் பார்த்து என் உள்ளம் குமுறிற்று. நேர்மைக் குறைபாடும் வஞ்சக மனமும் உள்ள பூர்ணாவைப் போன்றவர்கள் தான் உத்தியோக வாழ்வில் வெற்றி பெற முடியும் என்று அறிந்தபோது என் அறிவையும் படிப்பையும் எண்ணி நானே வெட்கப்பட்டேன். உங்கள் அழகான இலங்கையின் அருமையான மலைகளில் தேயிலைத் தோட்டங்களிலே, இரப்பர்த் தோட்டங்களிலே உழைத்து வாழும் ஆயிரமாயிரம் தமிழ்க் கூலிகளைப் பார்த்தபோது, என் உள்ளம் கொதித்தது. அந்த மலைகளின் பொன் கொழிக்கும் செல்வங்களைப் பார்த்த போது நான் கவிபாட நினைக்கவில்லை. கற்பனைகளில் இலயிக்கவில்லை. கனவுகள் காணவில்லை. உழைத்த - உழைக்கிற - உழைக்க இருக்கும் கைகளின் சக்தியை எண்ணி வியந்தேன். அந்த விநாடியிலிருந்து, என் மனம் மட்டும் மாறவில்லை. எனக்காக நான் வகுத்துக் கொண்டிருந்த இலட்சியமே மாறிப்போய் விட்டது. பிரமநாயகத்தின் கடையில் இந்த முறிவுகளெல்லாம் ஏற்படாமல் ஒழுங்காக இருந்திருந்தால் கூட நான் இங்கே வேலை பார்க்க மாட்டேன். இன்று கப்பல் ஏறுவது போல் இன்னும் நாலு நாள் கழித்துக் கப்பலேறியிருப்பேன்."
சொற்பொழிவு போன்ற அவனுடைய நீண்ட பேச்சைக் கேட்டுப் பெருமூச்சுவிட்டார் வோட்ஹவுஸ். 'அழகியநம்பிதானா இப்படிப் பேசுகிறான்?' - என்று வியந்து போய் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் சபாரத்தினம்.
அப்போது கப்பல் புறப்படுவதற்கு அடையாளமான முதல் ஒலி முழக்கம் எழுந்தது. கூலிகள் சாமான்களைத் தூக்கிக் கொண்டுபோய் அவன் உட்காரவேண்டிய இடத்தின் பக்கத்தில் மேல் தட்டில் வைத்தார்கள்.
இரண்டாவது ஒலியும் முழங்கியது. அழகியநம்பி கப்பலில் ஏறி மேல் தட்டின் கிராதியைப் பிடித்துக் கொண்டு நின்றான். மூன்றாவது ஒலி முழங்கிக் கொண்டிருக்கும்போதே கப்பல் நகர்ந்தது. அவன் கீழே நின்று கொண்டிருந்தவர்களை நோக்கிக் கைகூப்பினான். "எப்போதாவது தமிழ்நாட்டிற்கு வந்தால் குறிஞ்சியூருக்கு வாருங்கள்." - அவன் சொல்லிய இந்தச் சொற்கள் கப்பல் புறப்படும்போது ஏற்பட்ட பலவகை ஒலிக்குழப்பத்தில் அவர்கள் செவிவரையில் எட்டினவோ, இல்லையோ?
துறைமுகம் கண்ணுக்கு மறைகிறவரை மேல் தட்டின் கிராதியைப் பிடித்துக் கொண்டு நின்றான் அழகியநம்பி. துறைமுகத்தில் சபாரத்தினம், மேரி, லில்லி, வோட்ஹவுஸ் தம்பதிகள் - ஆகியோர் விடை கொடுக்கும் பாவனையில் அவனை நோக்கிக் கைகளை ஆட்டிக் கொண்டிருந்தனர். அவனும் தன் வலது கையை உயர்த்தி ஆட்டினான். புதிதாக அவன் விரல்களில் ஏறியிருந்த மோதிரங்கள் மின்னின. எதிர் வெயிலில் கண்கள் கூசிப் பார்வையை மறைத்து மங்கச் செய்தது. கப்பலின் போக்கில் துரிதமான வேகம் ஏற்பட்டது. தூரத்துச் சுவரின் மேல் தெரியும் ஒளி மங்கிய ஓவியம் போலத் துறைமுகமும், கொழும்பு நகரமும் மெல்ல மெல்லப் பின் தங்கிவிட்டன. கிராதியருகே நின்று கொண்டிருந்த அவன் கண்களில் தேங்கியிருந்த இரண்டு சொட்டுக் கண்ணீர் கடலின் உப்பு நீரில் சிந்திக் கலந்தன. கண்களைத் துடைத்துக் கொண்டு தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.
தன்னைத் தானே ஏற இறங்கப் பார்த்துக் கொண்டபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. வலதுகை விரல்களில் மோதிரம், இடதுகை மணிக்கட்டில் 'பளபள'வென்று பொன் நிறம் மின்னும் புத்தம்புதுக் கைக்கடிகாரம். யாரோ பணக்கார மனிதர் ஊர் திரும்புகிற மாதிரிப் பழக்கூடைகள், துணிமணிகள் எல்லாம் தன்னைச் சுற்றி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அவன் எதை நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டானோ, அதையே கேள்வியாகக் கேட்டுவிட்டார் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு கிழவர்.
"தம்பிக்குக் கொழும்பிலே ஏதாவது பெரிய வியாபாரமோ?"
"இல்லை! தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். சும்மா ஊர் சுற்றிப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன். வந்து இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. இன்றைக்கு ஊர் திரும்புகிறேன்." - 'பிழைப்புக்காக வந்திருந்தேன்' - என்று சொல்ல விரும்பவில்லை இப்போது அவன். அதனால் வேன்றுமென்றே ஊர் சுற்றிப் பார்க்க வந்ததாகப் புளுகினான்.
"கடிகாரம் புதிதாகத் தெரிகிறதே! கொழும்பில் வாங்கினதோ?"
"ஆமாம்! இங்கே இருப்பவர்கள் பிரியப்பட்டு வாங்கிக் கொடுத்தார்கள்."
அந்தக் கிழவர் அதற்கப்புறமும் தொண தொணவென்று உப்புச் சப்பில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவனுக்கு எரிச்சலாயிருந்தது. எழுந்து மறுபடியும் கிராதியருகே போய் நின்றான். கப்பலின் அடிப்புறத்தில் வேகமாகக் கிழிபட்டு விலகும் நீரலைகளைக் குனிந்து பார்க்கத் தொடங்கினான். ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் யார் யாரிடமிருந்து எத்தகைய வரவேற்புக் கிடைக்குமென்ற சிந்தனை அவனுக்கு ஏற்பட்டது. அம்மாவுக்கு ஒரு முன் கடிதமாவது எழுதிப் போட்டிருக்கலாம். இப்போதைக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு என் முகத்தையே பார்க்க முடியாதென்று அவள் நினைத்துக் கொண்டிருப்பாள். நான் திடுதிப்பென்று போய் நிற்கப் போகிறேன். பாவம்! என்னவோ, ஏதோ, என்று பதறிப் போவாள். இங்கு நடந்ததொன்றும் அவளுக்குத் தெரிந்திருக்காது. நான் இப்படித் திரும்பி வந்துவிட்டது அம்மாவுக்கும், வள்ளியம்மைக்கும் பெருத்த ஏமாற்றமாகக் கூட இருக்கும். "அதிர்ஷ்டங் கெட்டபிள்ளை. உனக்கு ஒரு நல்ல காரியத்திலும் கைராசி கிடையாது. நீ போன வேளை - பிரமநாயகமும் இந்தக் கதிக்கு ஆளாக வேண்டுமா?" - என்று இப்படி ஏதாவது சொல்லி அம்மா தன்னைக் கோபித்துக் கொள்வாளென்று நினைத்தான்.
முதல் ஒரு வாரத்தில் கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்லி மீளமுடியாது. சிலர் உண்மையான அனுதாபத்தோடு, 'ஏன் தம்பி அதற்குள் திரும்பிவிட்டாய்?' - என்று கேட்பார்கள். 'என்ன தம்பீ? கொழும்புக்குப் போய் இரண்டு மூன்று வாரத்திற்குள்ளேயே பணக்காரனாகத் திரும்பி வந்து விட்டாய் போலிருக்கிறதே' - என்று கிண்டலும், குத்தலுமாகக் கேட்பார்கள் வேறு சிலர். நான் ஏதோ பணத்தை மூட்டை கட்டி வந்திருப்பதாக நினைத்துக் கொண்டு பன்னீர்ச்செல்வம் தம்முடைய கடன் பாக்கியை வசூலிப்பதற்கு வந்து விடுவார். தூத்துக்குடியில் போய் இறங்கியதும் முதல் காரியமாக முருகேசனுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிட வேண்டும். நான் கொழும்பிலிருப்பதாக நினைத்துக் கொண்டு அவன் தொடர்ந்து அங்கே கடிதம் எழுதிக் கொண்டிருக்கப் போகிறான். 'முடிந்தால் குறிஞ்சியூருக்கு வந்து ஒரு நடை சந்தித்து விட்டுப் போ! நான் இனிமேல் ஊரிலேயே தான் இருப்பேன். வேறெங்கும் போகப் போவதில்லை.' - என்று எழுதினால் அவன் கூட இங்கே வந்துவிட்டுப் போவான். அது தான் சரி! அப்படியே அவனுக்கு ஒரு கடிதம் எழுதி விடுவோம்.
'கப்பல் தூத்துக்குடிக்குப் போகும்போது சாயங்காலமாகி விடும். அத்தறுவாய்க்கு மேல் தூத்துக்குடியிலிருந்து குறிஞ்சியூருக்குப் பஸ் கிடைக்குமோ? கிடைக்காதோ? ஒரு சுமையும் இல்லாமலிருந்தால் டிரங்கைக் கையில் பிடித்துக் கொண்டு கால் நடையாகவே பஸ் ஸ்டாண்டிற்குப் போய் விடலாம். அப்பப்பா! இந்தச் சபாரத்தினமும், வோட்ஹவுஸ் தம்பதிகளும் சேர்ந்து கொண்டு இல்லாத கூத்தெல்லாம் செய்திருக்கிறார்களே. கடை வீதியிலுள்ள பழங்களையெல்லாம் வாங்கிக் கட்டிவிட்டிருக்கிறார்களே. இவ்வளவு பழக்கூடைகளையும், புதுத் துணிமணிகளையும் கொண்டு போய் நான் என்ன செய்யப் போகிறேன்?
காந்திமதி ஆச்சியின் குடும்பத்தைப் பற்றி நினைத்துக் கொண்டான். பகவதியின் அழகிய கண்கள் அவன் நினைவில் தோன்றின. அந்தப் பெண்ணைக் குளத்திலிருந்து காப்பாற்றிய நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொன்றாக அவன் நினைத்தான். தான் ஊரிலிருந்து புறப்படுகிற அன்றைக்குக் கடைவாசலில் நின்று பகவதியும், அவள் தங்கை கோமுவும் தன்னைப் பார்த்த ஏக்கம் நிறைந்த பார்வை இன்னும் அவன் கண்களுக்குள்ளேயே இருந்தது. பின்பு கொழும்பிலிருக்கும்போது ஆச்சியிடமிருந்து தனக்கு வந்த கடிதத்தில், 'அக்காவுக்கும் எனக்கும் சதா உங்கள் நினைவாகவே இருக்கிறது.' - என்று கடைசியில் ஒரு ஓரத்தில் கோமு கிறுக்கியிருந்த எழுத்துக்களை நினைத்தான் அவன். வோட்ஹவுஸ் வாங்கிக் கொடுத்திருக்கும் துணிமணிகளில் இரண்டொரு நல்ல வாயில் சிற்றாடைகளையும், பட்டு இரவிக்கைத் துணிகளையும் கோமுவுக்கும், பகவதிக்கும் கொடுக்க வேண்டும் என்று அழகியநம்பி தனக்குள் தீர்மானம் செய்து கொண்டான். 'பழக்கூடைகளைத் தெரிந்தவர்கள் எல்லாருக்கும் கொஞ்சம், கொஞ்சமாகப் பங்கு வைத்துக் கொடுத்துவிட வேண்டியதுதான். பெருமாள் கோவில் மணியம் நாராயணபிள்ளை, முன்சீப் புன்னைவனம், புலவர் ஆறுமுகம், வாசகசாலைக் கந்தப்பன், காந்திமதி ஆச்சி, - எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்தால் சரியாக இருக்கும். பன்னீர்ச்செல்வம், கரிவேட்டை, விறகு வேட்டைக்காக மலைப்பக்கம் போகாமல் ஊரில் இருந்தாரானால் அவரைக் கூடப் போய்ப் பார்த்துக் கொஞ்சம் பழங்களைக் கொடுத்துக் கடனுக்கு அவசரப்படுத்தி விரட்டாமல் சமாதானப்படுத்திவிட்டு வரலாம்!
'முருகேசனும், மற்ற நண்பர்களும் கோடை விடுமுறையின் போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுற்றிப் பார்க்கப் போவதாக அவன் எழுதியிருந்தானே? முடிந்தால் நாமும் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாமே!'
'அடடா! நான் என்ன முட்டாள்தனமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் குடும்ப நிலையென்ன? என் தலையில் சுமந்திருக்கும் கடன் சுமை எவ்வளவு? 'வேடிக்கையாக ஊர் சுற்றலாமா? உல்லாசப் பிரயாணம் போகலாமா?' - என்று விளையாட்டுப் புத்தியில் நினைத்துக் கொண்டிருக்கிறேனே! என் திட்டங்கள் நிறைவேறி, நான் உருப்படியாக வாழ்ந்து குடும்பத்தைக் கடன் தொல்லைகளிலிருந்து மீட்க வேண்டுமே! தங்கை வள்ளியம்மைக்கு நல்ல இடத்தில் நல்ல படியாகத் திருமணம் செய்து அனுப்பி வைக்க வேண்டுமே! நான் நாலைந்து வருஷங்கள் கொழும்பில் பிரமநாயகத்தின் கடையில் வேலை பார்த்து மிச்சம் பிடித்து ஆயிரக்கணக்கிலே சேர்த்துக் கொண்டு வந்து இதையெல்லாம் குறைவின்றிச் செய்து முடிக்கப் போகிறேன் என்று என் தாய் சொப்பனம் கண்டு கொண்டிருப்பாளே; நான், முருகேசனோடும், மற்றவர்களோடும் ஊர் சுற்ற வேண்டுமென்று நினைக்கலாமா?' - அவனுடைய சிந்தனைக்கு ஒரு முடிவே இல்லை.
கப்பல் கிராதியருகே வெயில் கடுமையாக உறைத்தது. சபாரத்தினத்தின் அன்பளிப்பான கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். மணி பதினொன்று ஆவதற்கு இருந்தது. வெயிலின் சூடு பொறுக்காமல் இடத்தில் வந்து உட்கார்ந்தான். கப்பலின் ஆட்டத்தில் சோர்வடைந்து சுருண்டு போய்ப் படுத்திருந்தார் கிழவர். அநேகமாக எல்லோரும் அதே நிலையில் தான் இருந்தனர். கப்பல் செல்லுகிற ஒலியைத் தவிர அதில் பிரயாணிகள் இருக்கிறார்கள் என்பதற்குரிய எந்த அடையாளமும் தெரியாதது போல் சந்தடியற்றிருந்தது.
அழகியநம்பிக்குப் பசியாக இருந்தது. கப்பலில் குழாய் இருந்த அறைக்குப் போய் முகம், கைகால் கழுவிக் கொண்டு கீழ்த்தட்டிலிருந்த உனவு விடுதிக்கு இறங்கிச் சென்றான் அவன். சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்ததும் அவனுக்கு அசதியாக இருந்தது. முதல் நாள் இரவும் அவனுக்கு நல்ல தூக்கமில்லை. கப்பலில் தான் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலேயே நீட்டி முடக்கிக் கொண்டு சாய்ந்தான். அந்த வசதிக் குறைவான சூழ்நிலையிலும் நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டான்.
மாலை ஐந்தேகால் மணி சுமாருக்குக் கப்பலின் சங்கொலி அவனை எழுப்பியது. எழுந்திருந்து கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு பார்த்தான். கப்பலைத் தூத்துக்குடித் துறைமுகத்தில் இழுத்து நங்கூரம் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். தூங்கியெழுந்திருந்த அசதி உடல் முழுதும் பூட்டுப் பூட்டாக வலித்தது. கைகளை உதறிச் சோம்பல் முறித்துக் கொண்டு இறங்குவதற்குத் தயாராகச் சாமான்களை வரிசையில் எடுத்து வைத்தான். அன்றொருநாள் இதே மாதிரிக் கலகலப்பான மாலை நேரம் ஒன்றில் இதே துறைமுகத்திலிருந்து பிரமநாயகத்தோடு கொழும்புக்குக் கப்பலேறிய நினைவு வந்தது அவனுக்கு. தான் அன்று புறப்பட்டது, இன்று திரும்பி வந்தது, இரண்டையும் இணைத்துப் பார்த்தபோது அவனுக்கே சிரிப்பு வந்தது. அன்றிருந்த ஆர்வமும், நம்பிக்கையும், இன்று திரும்பும் போதிருக்கும் வெறுப்பும், அவநம்பிக்கையும் - ஒன்றோடொன்று ஒட்டாத பண்புகளாக அவன் மனத்தில் தோன்றின.
அவன் கைகளில் புதுக்கடிகாரமும், மோதிரங்களும், மின்னியதால் அவனைப் பசையுள்ள பணக்காரப் பேர்வழியாக நினைத்துக் கொண்டு விட்டார்களோ, என்னவோ; மூட்டை தூக்கும் கூலிகள் ஈக்களை போல வந்து மொய்த்துக் கொண்டார்கள். ஒரு கூலியாளிடம் தன் சாமான்களை ஒப்படைத்தான்.
துறைமுகவாயிலுக்கு வந்ததும் அன்று தனிமையில் தன்னைப் பசியோடு தவிக்க விட்டுவிட்டுப் பிரமநாயகம் நுழைந்து சாப்பிட்டுவிட்டு வந்த அதே ஹோட்டலுக்குள் இன்று கூலிக்காரனையும் சேர்த்து அழைத்துக் கொண்டு சென்றான் அழகியநம்பி. தான் காப்பி அருந்தியதோடு கூலிக்காரனுக்கும் வாங்கிக் கொடுத்தான்.
பஸ் ஸ்டாண்டை அடையும் போது மணி ஐந்தேமுக்கால். குறிஞ்சியூருக்கு ஆறேகால் மணி சுமாருக்குக் கடைசியாக ஒரு பஸ் இருக்கிறதென்று கூலியாள் சொன்னான்.
"சரி! இனிமேல் நான் பஸ் ஏறிப் போய்க் கொள்கிறேன்" - என்று சொல்லி அவனுக்குப் பேசிய கூலியை எடுத்துக் கொடுத்தான்.
"இருக்கட்டும் ஐயா; கூலி எங்கே ஓடிப்போகிறது? பஸ் வந்ததும் உங்களை ஏற்றிவிட்டுப் பிறகு வாங்கிக் கொள்கிறேன்." - என்றான் அவன். 'படித்தவனாயிருந்தாலென்ன? படிக்காத பாமரனாயிருந்தால் என்ன? யார் தன் மேல் அன்பைச் செலுத்துகிறானோ? அவன் மேல் தானும் பதிலுக்கு அன்பு செலுத்த வேண்டுமென்று மனிதனுக்குத் தெரிந்திருக்கிறது' - ஒரு குவளைக் காப்பிக்காக அந்த மூட்டை தூக்கும் கூலிக்காரன் காட்டியை நன்றியைக் கண்டதும் அவனுக்குப் பெருமையான எண்ணங்கள் உண்டாயின. அப்போது, 'இறங்கியதும் முருகேசனுக்குக் கடிதம் போட வேண்டும்' - என்று தான் தீர்மானித்திருந்ததை அவன் நினைத்துக் கொண்டான்.
"தபாலாபீஸ் பக்கத்தில்தானே இருக்கிறது? பஸ் வருவதற்குள் நீ போய்விட்டு வந்துவிடலாமா?" - என்று கூலியாளைக் கேட்டான். "ஆகட்டும் ஐயா! போய்விட்டு வந்து விடலாம்." - என்று பதில் சொன்னான் கூலியாள். அழகியநம்பி காசை எடுத்து கொடுத்து அந்தக் கூலியாளை அனுப்பினான். தான் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டு கார்டில் நாலுவரி அவசர அவசரமாகக் கிறுக்கி முருகேசனுடைய விலாசத்தையும் எழுதி அதை அந்தக் கூலியாளிடமே சொல்லித் தபால் பெட்டியில் போடச் செய்து விடலாம். - என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் ஒரு ஆச்சரியம் நடந்தது. திடீரென்று அவன் எதிர்பாராத விதமாக முருகேசனே அவன் முன்னால் வந்து நின்றான்.
"என்னப்பா இது? நான் என் கண்களால் இங்கே பார்ப்பது அழகியநம்பியைத்தானா? நீ எப்போது திடீரென்று கொழும்பிலிருந்து இங்கே வந்து குதித்தாய்?" - என்று சிரித்துக் கொண்டே கேட்டான் முருகேசன். திடீரென்று அவனை அங்கே சந்தித்த வியப்பிலிருந்து தெளிவடைந்து பேசுவதற்கே சிறிது நேரம் பிடித்தது அழகியநம்பிக்கு.
"நீ எப்படித் தென்காசியிலிருந்து திடீரென்று தூத்துக்குடியில் வந்து குதித்தாயோ; அதே மாதிரித்தான்..." என்றான் அழகியநம்பி.
"விளையாட்டுப் பேச்சு அப்புறம் இருக்கட்டும்! நீ எப்போது கொழும்பிலிருந்து திரும்பினாய்? என்ன காரணம்? இவ்வளவு அவசரமாகத் திரும்பிவிட்டாயே! போய் இரண்டு மூன்று வாரம் கூட ஆகவில்லையே?" - என்று பரபரப்பாக முருகேசன் கேள்விகளைத் தொடுத்தான்.
"முருகேசா! எல்லாம் பின்பு விவரமாகச் சொல்லுகிறேன். நானே உனக்கு என் வரவு தெரிவித்துக் கடித மூலமாகக் குறிஞ்சியூரில் வந்து சந்திக்கச் சொல்லி எழுதலாமென்று இப்போதுதான் என்னோடிருந்த கூலியாளைத் தபாலாபீஸுக்கு அனுப்பினேன். உனக்கு ஆயுள் நூறுதான்! போனவன் கார்டு வங்கிக் கொண்டு வருவதற்குள் நீயே வந்து விட்டாய்." -
"இன்றைக்கு எங்கள் உறவு முறையைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த ஊரில் கல்யாணம். அதற்காக வந்தேன். முகூர்த்தம் காலையிலேயே முடிந்துவிட்டது. இதோ ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பஸ்ஸிற்கு டிக்கெட் கூட வாங்கியாகி விட்டது." - என்று முருகேசன் கூறிய போது "நீ இப்போது ஊருக்குப் போக வேண்டாம். என்னோடு குறிஞ்சியூருக்கு வந்து இரண்டு நாள் இருந்துவிட்டுப் போ. உன்னிடம் சில முக்கியமான விஷயங்கள் கலந்து பேச வேண்டும் எனக்கு" - என்று இடைமறித்துச் சொன்னான் அழகியநம்பி.
"டிக்கெட் வாங்கிவிட்டேனே?"
"வாங்கினால் என்ன குடி முழுகிப் போயிற்று? பணம் வேணுமானால் நான் தருகிறேன்."
"பணத்திற்குச் சொல்லவரவில்லை! வீட்டில் எதிர் பார்ப்பார்களே என்று தயங்கினேன். பரவாயில்லை! நான் வருகிறேன். குறிஞ்சியூருக்கே போவோம். எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து விடு." - என்று ஒப்புக் கொண்டான் முருகேசன்.
கூலியாள் கார்டு வாங்கிக் கொண்டு வந்தான். பஸ்ஸும் வந்தது. சாமான்கள் ஏற்றப்பட்டன. முருகேசனும் அழகியநம்பியும் ஏறிக்கொண்டனர். கூலியாள் சில்லறையை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தான். அழகியநம்பி இருவருக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கினான். சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டது.
பஸ்ஸில் பிரயாணம் செய்கிறபோது தான் தாய் நாட்டுக்குத் திரும்ப நேர்ந்த காரணங்களை முருகேசனுக்கு விவரித்துச் சொல்லிவிட்டான் அழகியநம்பி. தன்னுடைய எதிர்கால நோக்கங்களையும், இலட்சியங்களையும் கூட முடிந்தமட்டில் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் அவனிடம் தெரிவித்தான். முருகேசன் அவற்றைக் கேட்டுச் சிரித்தான்.
"அழகியநம்பீ! இதென்னப்பா குருட்டு நோக்கமாக இருக்கிறது? படித்தவன் கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு நிலங்களைக் குத்தகை பிடித்து, 'நான் கலப்பை கட்டி உழப் போகிறேன்' என்றால் யாரவது நம்புவார்களா? உனக்கு மூளை கோளாறாகி விட்டதென்று எல்லோரும் கேலி செய்வார்கள். முன் பின் விவசாயம் செய்து பழக்கப் படாதவன் நீ. உனக்கென்று சொந்த நிலமும் உன்னுடைய கிராமத்தில் கிடையாது. மற்றவர்களுடைய நிலத்தைச் சரி வாரத்துக்கோ, மொத்தக் குத்தகைக்கோ, கேட்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். உன்னை நம்பி யாராவது நிலங்களை விடுவார்களா? உனக்கு மிகவும் வேண்டியவர்களாகவே இருந்தாலும் உன் நோக்கத்தையும் இலட்சியங்களையும் புரிந்து கொண்டு உனக்கு உதவ முன் வரமாட்டார்களே. 'தம்பீ! நீ படித்த பையன், உனக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? பேசாமல் பட்டணத்துப் பக்கங்களில் ஏதாவது நல்ல உத்தியோகமாகப் போய்ப் பார். கைநிறையச் சம்பாதிக்கலாம்' - என்று உனக்கே புத்தி சொல்லத் தொடங்கிவிடுவார்கள். இலங்கையில் தேயிலைத் தோட்டங்களிலும், இரப்பர்த் தோட்டங்களிலும் நீ கண்ட உழைப்பு மண்ணைப் பொன்னாக்கியிருக்கலாம். அதே இலட்சியங்கள் தமிழ்நாட்டின் அறியாமை நிறைந்த கிராம மக்களுக்குச் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாதவை. இந்த மாதிரி உயர்ந்த விஷயங்களெல்லாம் புத்தகங்களில் எழுதவும், மேடைகளில் பேசவும், படிக்கவும் தான் உரியவை. நடைமுறை உலகத்துக்கும், இவைகளுக்கும் அதிக தூரம்."
முருகேசன் அழுத்தந்திருத்தமாகத் தன் கருத்தை அழகியநம்பிக்கு எடுத்துரைத்தான். ஆனால், இவனுடைய மறுப்புக்களைக் கேட்டு அழகியநம்பி தன் இலட்சியத்திலோ, நோக்கத்திலோ சிறிதும் சோர்ந்து போய்விடவில்லை.
"நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு முருகேசா! எனக்கென்று நான் கடைசியாகத் தீர்மானித்துக் கொண்ட இலட்சியம் ஒன்று தான். இதை நான் எப்படியும் நிறைவேற்றிக் கொண்டே தீருவேன். என் உயிரே போவதாக இருந்தாலும் கிராமத்தை விட்டுப் பிழைப்பதற்கென்று வேறெங்கும் வெளியேறிச் செல்ல மாட்டேன். இன்று இந்த நிமிஷத்தில் உன் கையிலடித்து சத்தியம் வேண்டுமானாலும் செய்து தருகிறேன்." - அழகியநம்பி உணர்ச்சி வசப்பட்டுச் சிறிது இரைந்தே பேசிவிட்டான். பஸ்ஸிலிருந்த சகபிரயாணிகளின் கவனத்தைக் கவர்ந்து அவன் பக்கமாகத் திரும்பிப் பார்க்கச் செய்துவிட்டது அந்தப் பேச்சு.
"போதும் அப்பா! வாயை மூடிக்கொள். உன் ஆவேசப் பேச்சைக் கேட்டுப் பஸ்ஸில் வருகிறவர்களெல்லோரும் நாமிருவரும் சண்டை போட்டுக் கொண்டு இரைவதாக நினைத்துக் கொள்ளப் போகிறார்கள். ஊருக்குப் போய் விவரமாகப் பேசி முடித்துக் கொள்வோம்!" - என்று கூறி அழகியநம்பியின் வாயைப் பொத்தினான் முருகேசன். அதன் பின் பஸ் குறிஞ்சியூரை அடைகிறவரை அவர்கள் இருவரும். பேச்சிலோ, விவாதத்திலோ அதிகம் ஈடுபடவில்லை.
பஸ் மலைப் பாதைகளைக் கடந்து குறிஞ்சியூருக்குப் போய்ச் சேர்ந்த போது மணி ஒன்பதேகால். இருந்த சாமான்களைத் தூக்கிக் கொண்டு வருவதற்கென்று தனியாக ஆள் தேடிக் கொண்டிருக்காமல் அழகியநம்பியும், முருகேசனுமே, ஆளுக்குக் கொஞ்சமாகத் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தனர். ஊர் அடங்கிப் போயிருந்தது. மலையடிவாரத்துக் குளிர் முகத்திலும் காதோரங்களிலும் உறைத்தது.
மங்கிய நிலவொளியில் ஓசையடங்கிப் போய் நீண்டு கிடக்கும் தெருக்கள், பெருமாள் கோவில் கோபுரம், தெப்பக் குளம், நாற்புறமும் நிலவொளியும் தமது இயற்கை நீல நிறமும் கலந்து தெரியும் மலைகள், மரக் கூட்டங்கள், ஆறுகள், - எல்லாவற்றையும் பார்த்தபோது இழந்து போன குபேர சம்பத்துத் திரும்பக் கிடைத்துவிட்டது போலிருந்தது அழகியநம்பிக்கு.
பஸ் ஸ்டாண்டிற்கும் கிராமத்திற்கும் ஒரு பர்லாங் தூரத்திற்குக் குறையாது. ஊரைவிட ஐம்பது அறுபது அடி மேடான இடத்தில் பஸ் ஸ்டாண்டு அமைந்திருந்ததனால் அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் நடந்து கொண்டே பள்ளத்தில் ஊரின் மொத்தமான தோற்றம் முழுவதையும் பார்க்க முடியும்.
ஊரில் எங்கோ குரைக்கும் தெரு நாயின் ஓசை, மாட்டுக் கொட்டகைகளில் வைக்கோல் தின்று கொண்டிருக்கும் மாடுகளின் கழுத்து மணிகள் ஆடும் ஒலி, தெருத் திண்ணைகளிலும், கட்டில்களிலும் படுத்து உறங்குவோரின் குறட்டை ஒலி, சிள்வண்டுகளின் சப்தம், வயலோரத்து வாய்க்கால் மதகுகளில் தண்ணீர் பாயும் 'கள கள' சப்தம், - ஜீவன் துடிக்கும் குறிஞ்சியூரின் அந்த ஒலிகள் அழகியநம்பிக்குக் காரணமில்லாமல் இறுமாப்பு அளித்தன. கர்வம் உண்டாக்கின. களிப்பு உண்டாக்கின.
மேற்கே மலைச்சிகரங்களில் குங்குமப் புள்ளிகள் போல் அங்கங்கே நெருப்பு எரிவது தெரிந்தது. "இதெல்லாம் காட்டிலாகாவில் ஒன்றும் கேள்வி முறை இல்லையோ? மலையின் அழகை இப்படித் தீ மூட்டம் போட்டுப் பாழாக்குகிறார்களே?" - என்று முருகேசன் அழகியநம்பியிடம் கேட்டான். "ஓ! மலையில் நெருப்பு எரிவதைக் கேட்கிறாயா? இந்த ஊரில் ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். பன்னீர்ச்செல்வம் என்று பெயர். சர்க்காருக்குப் பணம் கட்டி லைசென்ஸ் வாங்கி மரங்களை எரித்துக் கரி மூட்டை வியாபாரம் செய்கிறார். 'பட்ட மரங்களை மட்டும் எரித்துக் கொள்ளலாம்' என்று தான் அவருக்கு லைசென்ஸ். மனிதர், பட்டவை, பசுமையானவை, என்ற வேறுபாடி இல்லாமல் எல்லாவற்றையும் கரியாக்கிக் கரியைக் காசாக்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார். இது போதாதற்கு வட்டிக் கடை, லேவா தேவித் தொழில் வேறு."
"அவர் பிழைக்கத் தெரிந்தவர்! விவரந் தெரிந்து வகையாகப் பிழைக்கிறார். இல்லையானால் உன்னைப் போலவா 'நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்து உழப்போகிறேன்' - என்று பைத்தியக்காரத்தனமாகத் திட்டம் போட்டுக் கொண்டு திரிவார்கள்?" - என்று அவன் கூறியதை வைத்துக் கொண்டு அவனையே மடக்கிக் கேலி செய்தான் முருகேசன்.
"இப்போது இப்படித்தான் சொல்லுவாய்! போகப் போகத் தெரியும் என் திட்டங்களின் வெற்றி. நான் என்னுடைய இலட்சியத்தில் சித்தியடைந்து நிற்கிறதை நீயும் ஒரு நாள் பார்க்கத்தான் போகிறாய்!"
"அழகியநம்பீ! நீ சரத்சந்திரரின் 'கிராம சமாஜம்' - என்ற நாவல் படித்திருக்கிறாய் அல்லவா?"
"ஏன்? எப்போதோ கல்லூரி நூல் நிலையத்தில் எடுத்துப் படித்திருப்பதாக நினைவிருக்கிறது. அதற்கும் நான் இப்போது பேசிக் கொண்டிருக்கிற விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்?"
"சம்பந்தம் இருக்கிறது! இல்லாவிட்டால் வேலையற்றுப் போய்க் கூறுவேனா? படித்துப் பட்டம் பெற்ற ஒருவன் கிராமத்தில் வாழ்ந்து பரந்த நோக்கங்களையும், உண்மை உழைப்பின் சக்தியையும் கிராம சமூகத்துக்குக் காட்டி விளக்கி முன்னேற்றுவிப்பதற்கு பாடுபடுகிறான். அவனுடைய ஒவ்வொரு நல்ல தொண்டும், ஒவ்வொரு உழைப்பும், கிராமத்தினரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவனுக்கே துன்பங்கள் நேர்கின்றன. அவன் மனம் வெறுத்துக் கிராமத்தை விட்டே வெளியேறி விடலாமா? என்றெண்ணுகிற அளவுக்கு வளர்ந்து விடுகிறது வெறுப்பு."
"கதையில் நடந்திருக்கலாம் அப்படி! அதையே நீ எனக்கும் உதாரணமாக்குவது பொருந்தாது"
"பார்த்துக் கொண்டே இரேன். நடக்க நடக்கத் தெரிந்து கொள்கிறாய்! நான் இப்போது என்ன சொன்னாலும் உனக்கு நம்பத் தோன்றாது."
பேசிக்கொண்டே வீட்டு வாசலை அடைந்துவிட்டார்கள். சாமான்களை திண்ணையில் வைத்துவிட்டுத் தானும் உட்கார்ந்து கொண்டான் முருகேசன். அழகியநம்பி, "அம்மா! அம்மா! கதவைத் திற," என்று இரைந்து கூப்பிட்டுக் கொண்டே கதவைத் தட்டினான்.
உள்ளே சிம்னி விளக்கு பெரிதாக்கப்படுவது சாவித் துவாரத்தின் வழியே அவனுக்குத் தெரிந்தது. மறுபடியும் கதவைத் தட்டினான்.
"யார் அது?" - உள்ளிருந்து அம்மாவின் குரல் வினாவிற்று.
"நான் தான் அம்மா! அழகியநம்பி வந்திருக்கிறேன். கதவைத் திற!" - என்றான் அவன்.
அம்மா எழுந்திருந்து வந்து கதவைத் திறந்தாள்.
"ஏண்டா! இதென்னடாது? திடுதிப்பென்று; வரப்போகிறேன் என்று ஒரு கடிதம் கூட எழுதக் கூடாதா? போய் ஒரு மாதம் கூட முடியவில்லை" - அம்மாவிற்கு ஆச்சர்யமாயிருந்தது. "எல்லா விவரமும் அப்புறம் சொல்கிறேன் அம்மா? இந்தச் சாமான்களை எல்லாம் உள்ளே எடுத்து வை. மாடிக் கதவுச் சாவியைக் கொண்டு வந்து திறந்துவிடு. நானும், முருகேசனும் மாடியில் தான் போய்ப் படுத்துக் கொள்ளப் போகிறோம்."
"நீங்கள் இரண்டு பேரும் சாப்பிட வேண்டாமோ? அடுப்பை மூட்டி ஏதாவது செய்கிறேனே?"
"இல்லை அம்மா! ஒன்றும் வேண்டாம். பசி இல்லை. தூக்கம் தான் வருகிறது. தூங்கப் போகிறோம். வள்ளியம்மை எங்கே? உள்ளே தூங்குகிறாளோ?"
"ஆமாம்! எழுப்பட்டுமா?"
"வேண்டாம்! இப்போதென்ன அவசரம்? காலையில் பார்த்துக் கொள்ளலாம்."
அம்மா மாடியைத் திறந்து தூசிபோகப் பெருக்கிவிட்டாள். அவன் ஊருக்குப் போனபின் அதைத் திறக்க வேண்டிய அவசியமே அம்மாவுக்கோ, வள்ளியம்மைக்கோ ஏற்பட்டிருக்காது! அழகியநம்பியும் முருகேசனும் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டார்கள். பிரயாண அலுப்பினால் சிறிது நேரத்தில் இருவருமே நன்றாகத் தூங்கிவிட்டார்கள்.
விடியற்காலையில் அவர்கள் எழுந்திருக்கும் போது மணி ஏழுக்கு மேலிருக்கும். மாடி வராந்தாவில் சுள்ளென்று வெயில் பட்டு உறைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் போக்கில் தூங்கவிட்டிருந்தால் பத்துப் பதினோரு மணிவரை கூடத் தூங்கிக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. அம்மா வந்து எழுப்பிவிட்டாள்.
"நாலைந்து நாட்களுக்கு முன்னால் மேற்கே மலையில் நல்ல மழை. குறிஞ்சி அருவியில் தண்ணீர் நிறைய வருகிறது. போய்ப் பல் தேய்த்துக் குளித்து விட்டு வாருங்கள். அதற்குள் இங்கே காப்பி பலகாரம் தயாராகிவிடும்." என்றாள் அம்மா.
அழகியநம்பி முருகேசனை வாசலில் நிறுத்திவிட்டுப் பல் தேய்க்க 'உமிக்கரி' எடுத்துக் கொண்டு வருவதற்காகப் பின் கட்டுக்குப் போனான். கிணற்றடியில் பற்றுப் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த வள்ளியம்மையைப் பார்த்ததும், "என்ன வள்ளியம்மை! சௌக்கியம் தானா?" என்று சிரித்துக் கொண்டே விசாரித்தான். அவள் "சௌக்கியந்தான் அண்ணா!" என்று சொல்லிக் கொண்டே கையைக் கழுவிவிட்டு அவனருகில் வந்து பாதங்களைத் தொட்டு வணங்கினாள். "நன்றாயிருக்க வேண்டும்." - என்று கைகளை உயர்த்தி வாழ்த்துக் கூறினான்.
கும்பிட்டு எழுந்திருந்த வள்ளியம்மையின் கண்களில் அவனுடைய கையிலிருந்த மோதிரம், கடிகாரம், எல்லாம் தெரிந்தன.
"அடேடே! இது ஏதண்ணா மோதிரம், கடிகாரம் எல்லாம்?" - அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல், "நாங்கள் அருவிக்குக் குளிக்கப் போகிறோம். இவையெல்லாம் இங்கேயே இருக்கட்டும். இந்தா; உள்ளே வாங்கிவை!" - என்று மோதிரங்களையும், கடிகாரத்தையும் கழற்றிக் கொடுத்தான் அவன். பின் உமிக்கரியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்து முருகேசனையும் அழைத்துக் கொண்டு அருவிக்கரைக்குக் கிளம்பினான்.
போகிறவழியில் அவனைச் சந்தித்த ஒவ்வொருவரும் "தம்பி கொழும்பிலிருந்து எப்போது வந்தது?" என்று தொடங்கி ஒரு பத்து நிமிஷங்களாவது நிறுத்தி வைத்து விசாரிக்காமல் விடவில்லை. அந்த விசாரிப்பு, அந்தப் பரிவு, அந்த மரியாதை, எல்லாம் தனக்கா, தான் போய்விட்டு வந்த கொழும்புக்கா; - என்பதுதான் அழகியநம்பிக்குப் புரியவில்லை.
"நீ தொடர்ந்து கிராமத்திலேயே இருப்பதாயிருந்தால் இந்த மாதிரி விசாரிப்பும், மரியாதையும் உனக்குக் கிடைக்காது. தங்களுக்குள் ஒருவனாக, - சாதாரணமானவனாக இவர்கள் உன்னையும் கருதத் தொடங்கிவிடுவார்கள். இவர்களையும் போல நீயும் நிலத்தை ஏர்பூட்டி உழுது உழைத்துப் பாடுபட விரும்புகிறாய் என்று தெரிந்தால் அதைப் பரந்த நோக்குடன் எண்ணி வரவேற்கக்கூட இவர்களுக்குத் தெரியாது. தங்களுக்குப் போட்டியாக முளைத்து விட்டாயென்று உன் மேல் வெறுப்பும் அசூயையும் கொள்வார்கள்" என்று எச்சரிப்பது போல் கூறினான் முருகேசன்.
"யார் என்ன எண்ணிக் கொண்டால் என்ன? என் எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. என் உழைப்புக்கு மக்கள் மரியாதை செய்ய வேண்டாம். எந்த மண்ணில் உழைக்கிறோனோ; அந்த மண் மரியாதை செய்தால் போதும். அதை நான் நம்புகிறேன்." - என்றான் அழகியநம்பி. திடமான குரலில் பேசினான் அவன்.
அவர்கள் இருவரும் அப்போது குறிஞ்சியூர் மேற்கு மலைத் தொடரை ஒட்டினாற் போல ஓடும் ஆற்றின் கரையில் நடந்து கொண்டிருந்தனர். அந்த ஆறு மலையிலிருந்து சம தரைக்கு இறங்குகிற இடம்தான் குறிஞ்சி அருவி. அதை அடைவதற்கு இன்னும் இரண்டு பர்லாங் நடக்க வேண்டும்.
ஆற்றோரமாக மலையடிவாரத்தை ஒட்டி ஒரு கால் மைல் அரைமைல் சுற்றளவுக்கு வண்டல் நிலம் புறம்போக்காகக் கிடந்தது. ஆற்றைக் காட்டிலும் மேட்டுப் பாங்கிலும், மலைச்சாரலைக் காட்டிலும் பள்ளமான இடத்திலும், அந்த வண்டல் நிலம் அமைந்திருந்தது.
அந்த இடத்திற்கு வந்ததும் முருகேசன் தயங்கி நின்றான். சுற்றிலும் ஏறிட்டுப் பார்த்தான். "அழகியநம்பி எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது! இந்தப் படுகை யாருக்காவது சொந்தமா? அல்லது சர்க்காரின் புறம்போக்குத் தரிசு நிலமா?"
"ஏன்? இது ஆற்றுப்படுகை! யாருக்கும் சொந்தமில்லை. சர்க்கார் புறம்போக்குத் தரிசுதான்."
"நான் உனக்கு ஒரு அருமையான யோசனை சொல்கிறேன். ஊரார் நிலத்தைக் குத்தகைக்கும், வாரத்துக்கும் பேசினால் பேசினபடி, வாரமும், குத்தகையும் கொடுக்க உன்னால் முடியாது. உன்னை நம்பி நிலத்தை அடைக்க மாட்டார்கள். இதுதான் உன் இலட்சியம் என்று நீ உறுதியாகத் தீர்மானித்திருக்கும் பட்சத்தில் கிராம முன்சீப்பையும் கலந்து கொண்டு சர்க்காருக்கு ஒரு மனு எழுதிப் போடு; சொல்கிறேன்." - என்றான் முருகேசன்.
குறிஞ்சியருவியில் குளித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வருகிறபோது அவர்கள் அதே திட்டத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்தார்கள்.
"தீர்வை செலுத்தி ஒழுங்காகச் சாகுபடி செய்வதாக மனு அனுப்பினால் புறம்போக்கு நிலத்தை ஜாரி செய்து கொடுப்பதில் அதிகம் தகராறு இருக்காது. உன் விண்ணப்பத்தைக் கிராம முன்சீப் சிபாரிசு செய்து ரெவின்யூ இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி ஊரில் அவர் வந்து புறம்போக்குத் தரிசைப் பார்வையிடுவார். உன்னைக் கூப்பிட்டு விசாரிப்பார். பின்பு மேலதிகாரிக்குச் சிபாரிசு செய்து அனுப்புவார். ஒரு மாதத்திற்குள் நிலத்தை உன் பெயருக்கு ஜாரி செய்து உன்னிடமிருந்து மகசூல்படி தீர்வை வசூலிக்கச் சொல்லிக் கிராம முன்சீப்புக்கு உத்தரவு வந்துவிடும்."
"இதெல்லாம் இவ்வளவு விவரமாக உனக்கு எப்படித் தெரியும் முருகேசா?
"என் தந்தை ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் என்பதை முன்பே உனக்குச் சொல்லியிருக்கிறேனே. அதற்குள் மறந்துவிட்டாயா?" - என்று முருகேசன் கூறவும் அழகியநம்பிக்கு அவனுடைய வார்த்தைகளில் நம்பிக்கை உண்டாயிற்று.
"நிலம் கைக்கு வந்துவிட்டால் மட்டும் போதுமா? அதைப் பயன்படுத்தி ஒழுங்கு செய்வதற்கு ஏராளமாகச் செலவு ஆகுமே? நான் எங்கிருந்து பணம் புரட்டுவேன்? ஏற்கெனவே அப்பா வைத்துவிட்டுப் போயிருக்கிற கடன் வேறு இருக்கிறது." -
"பணச் செலவுக்கும், கடன் வாங்குவதற்கும் பயப்படுகிறவன் இந்த மாதிரி ஆசைகளையும், இலட்சியங்களையும் வைத்துக் கொண்டு தொல்லைப்படக் கூடாது. அதுதான் அப்போதே சொன்னேன். பட்டினத்துப் பக்கம் உத்தியோகம் பார்க்கப் போனால் தான் பிழைக்கலாம். நீயோ உறுதியாக ஏர் பிடிக்கத் தான் போகிறேன் என்கிறாய். இன்னொருவனுடைய நிலத்தைப் பிடித்து உழுது கொண்டிருந்தால் வயிற்றுப் பாட்டுக்கே உனக்குத் தேறாது. துணிந்து இரண்டாயிரம், மூவாயிரம், செலவழித்து இந்த மாதிரிப் புது முயற்சியில் இறங்கினால் இரண்டே வருஷத்தில் உன் கடன் அடைபட்டுப் போகும். இந்தக் கிராமத்திலேயே பெரியதொரு விவசாயப் பண்ணையை உருவாக்கி ஆளும் பெருமையை நீ அடைவாய். ஆரம்பத்தில் உன் உழைப்பைப் புரிந்து கொள்ளாமல் கேலி செய்தவர்கள் ஆச்சரியப் படும்படி செய்யலாம்!"
"அது சரி! அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. இன்னொருவர் நிலத்தைக் குத்தகை பிடித்தால் எனக்கு ஆரம்பத்தில் அதிகம் செலவு இல்லை. நானூறு, ஐநூறு, செலவழித்து ஒரு ஜோடி மாடு மட்டும் வாங்கிக் கொண்டால் போதும். உழவுக்கும், இறவைக்கும் பயன்படும். நிலத்துக்காரர் உரம், உழவுக்கு ஒத்துக் கொடுப்பார்."
"பணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். நீ முதலில் கிராம முன்சீப்பைச் சந்தித்து உன் மனுவைக் கொடுக்க ஏற்பாடு செய்."
"நீயும் கூட வா. வீட்டில் போய்ச் சாப்பிட்டுவிட்டு இரண்டு பேருமாகப் போய் அவரைச் சந்திப்போம். முடிந்தால் அப்படியே மனுவையும் எழுதிக் கொடுத்துவிடலாம். உன்னுடைய நம்பிக்கையின் பேரில் தான் நான் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்."
"கூடாது! எந்தக் காரியத்துக்கும் இன்னொருவருடைய நம்பிக்கையை விடத் தன்னம்பிக்கை தான் அவசியம்" - என்று சொல்லிச் சிரித்தான் முருகேசன். இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். காப்பி, பலகாரம், ஆயிற்று. முருகேசன் மாடிக்குப் போனான். அழகியநம்பி அம்மாவுக்கு கொழும்பில் நடந்த விவரங்களைச் சொன்னான். அம்மா எல்லாவற்றையும் கேட்டுப் பெருமூச்சு விட்டாள்.
"பிரமநாயகம் இனிமேல் என்ன ஆவார்?"
"ஆவதென்ன? இலட்சக் கணக்கில் சர்க்காருக்குச் சேர வேண்டிய பணத்தை மோசடி செய்திருக்கிறார். ஒரு கொலையும் செய்திருக்கிறார். ஆயுள் தண்டனை - அல்லது தூக்குத் தண்டனைக்குக் குறைவாக எதுவும் கிடைக்காதென்று பேசிக் கொள்கிறார்கள்."
"சொந்த ஊரில் பிழைக்க வழியில்லை. கடல் கடந்து போனால் அங்கும் உன் அதிர்ஷ்டம் இப்படி முடிந்து விட்டது. இனிமேல் என்ன செய்யப் போகிறாய்?"
"சொந்த ஊரிலேயே பிழைப்பதென்று தீர்மானித்துவிட்டேன் அம்மா!"
"என்னது? சொந்த ஊரிலா? என்ன செய்யப் போகிறாய்? பன்னீர்ச்செல்வம் மாதிரி பணம் வைத்துக் கொண்டிருக்கிறாயா; இருந்த இடத்திலிருந்தே கரியையும், விறகையும் அனுப்பி இலட்சம் இலட்சமாகக் குவிப்பதற்கு? இருக்கிற கடனையே அடைக்க வழியில்லை. தங்கை வேறு ஒருத்தி இருக்கிறாள் கலியாணத்துக்கு!"
"பதறாதே அம்மா! நான் சொல்கிற திட்டத்தைக் கேட்டு விட்டு அப்புறம் சொல்." - என்று தொடங்கி முருகேசனும் தானும் தீர்மானித்திருப்பதையெல்லாம் தன் தாய்க்கு விவரித்துச் சொன்னான் அழகியநம்பி.
"உனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது. இதெல்லாம் நடக்கிற காரியமா என்ன? பேசாமல் நாலு இடத்திற்கு எழுதிப் போட்டு நல்ல உத்தியோகமாகத் தேடிக் கொண்டு போய்ச் சேர்." - என்றாள் அவன் தாய்.
"நீ என்ன வேண்டுமானாலும் சொல் அம்மா! இத்தனை நாளாக இல்லாமல் உன் வார்த்தையைத் தட்டிப் பேசுவதற்கு என்னை மன்னித்துவிடு. நான் என் உழைப்பை இந்த மண்ணில் பயன்படுத்துவதற்கு உறுதி செய்துவிட்டேன். ஆரம்பத்தில் கஷ்ட நஷ்டங்கள் வரும். அவற்றை நான் பொருட்படுத்தப் போவதில்லை."
அது நாள் வரை எதிர்த்துப் பேசாதவன் எதிர்த்துப் பேசியதைக் கண்டதும் அவள் திகைத்துப் போனாள்.
"என்னவோ, நீ தலையெடுத்தாவது இந்தக் குடும்பத்துக்கு விடியும் என்றிருந்தேன். நீயும் இப்படிக் கிளம்பி விட்டாய். எக்கேடு கெட்டாவது போ." - என்று கோபத்துடன் இரைந்தாள் அந்த அம்மாள்.
அதற்கு மேல் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை அவன். நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் கொடுப்பதற்காக பழக்கூடையைப் பிரித்துப் பழங்களை எடுத்துக் கொண்டான். துணிப் பெட்டியைத் திறந்து காந்திமதி ஆச்சியின் பெண்களுக்குக் கொடுப்பதற்காக நல்ல துணிகளாகக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வள்ளியம்மையைக் கூப்பிட்டு எஞ்சியவற்றை அவளிடம் ஒப்படைத்தான்.
"இந்தாருங்கள் அண்ணா!" - என்று கடிகாரத்தையும் மோதிரங்களையும் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்படத் தயாராயிருந்தவன் அவற்றையும் வாங்கி அணிந்து கொண்டான்.
"நான் இப்படிக் கொஞ்சம் வெளியில் போய்விட்டு வருகிறேன் அம்மா!" -
தாய் பதில் சொல்லவில்லை. அவளுக்கு அவன் மேல் கோபம் போலிருக்கிறது. அவனும் அவள் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. பழங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு மாடியிலிருந்த முருகேசனுக்கு வாசல் படியில் நின்று குரல் கொடுத்தான். முருகேசன் இறங்கி வந்ததும் இருவரும் கிளம்பினர்.
வழியில் எதிர்ப்பட்டவர்கள், அவனாகவே வலுவில் போய்ச் சந்தித்தவர்கள், - எல்லோரிடமும் கிராமபோன் ரிகார்டு போல் திரும்பத் திரும்பத் தான் கொழும்பிலிருந்து வர நேர்ந்த காரணங்களை ஒப்பிக்க வேண்டியிருந்தது. சிலர் தாங்களாகவே அவனைத் தூண்டிக் கேட்டார்கள். சிலரிடம் அவனாகவே அதை ஒப்பித்தான். எல்லோருமே அவன் கூறியவற்றைக் கேட்டுவிட்டு முடிவில் தவறாமல் ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள்.
"இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள் தம்பீ?" என்ற கேள்விதான் அது! சாதாரணமாக இந்தக் கேள்வியைக் கேட்டவர்களுக்குப் பொதுவாகப் பதில் சொல்லி மழுப்பி விட்டான்.
புலவர் ஆறுமுகம், வாசகசாலைக் கந்தப்பன், மணியம் நாராயணப்பிள்ளை, ஆகிய ஒரு சில முக்கியமான மனிதர்களிடம் தன்னுடைய எதிர்காலத் திட்டங்களை விவரித்து அதுபற்றி அவர்கள் கருத்தைக் கேட்டான். ஒருவராவது அவன் கருத்தத ஆதரித்து, "அப்படியே செய் தம்பி! அது நல்ல திட்டம்தான்." - என்று சொல்ல முன்வரவில்லை.
"எதற்குத் தம்பி! உங்களுக்கு இந்த வம்பு எல்லாம்? பேசாமல் பட்டினக் கரைகளில் எங்காவது உத்தியோகம் பாருங்கள். நாலு காசு மிச்சம் பிடிக்கலாம். குடும்பமும் கடனிலிருந்து கரையேறும்." - என்று ஆள் தவறாமல் முன்பே ஒன்றாகக் கூடிப் பேசி வைத்துக் கொண்டவர்கள் போல் சொன்னார்கள். தன்னுடைய திட்டத்தைப் புரிந்து கொண்டு நம்பிக்கையாக இரண்டு வார்த்தை சொல்லுகிறவர்களை அந்தக் கிராமம் முழுதும் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தான் அவன். ஒரு ஆள் கூடக் கிடைக்கவில்லை. வரிசையாகத் தொடர்ந்து, அடுத்தடுத்து அவநம்பிக்கை யளிப்பவர்களையே அவன் சந்தித்துக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் அவன் தாய் கூறியதைத்தான் வெளியிலுள்ள மற்றவர்களும் கூறினார்கள்.
காந்திமதி ஆச்சி அவனை அன்போடு வரவேற்றாள். எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். 'மாமா!' - என்று துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி வந்தாள் கோமு. பகவதியின் நீண்ட அழகிய விழிகள் பருகிவிடுவது போல் அவனைப் பார்த்தன. உதடுகள் நெகிழ்ந்து நகை அரும்பியது. காந்திமதி ஆச்சி வாயைத் திறந்து பேசி வரவேற்றதைவிடப் பகவதியின் அந்தக் கண்கள் வரவேற்ற வரவேற்பு அவன் உள்ளமெலாம் நிறைந்து உவகை செய்தது. "கோமு! இந்தா; இதையெல்லாம் அக்காவிடம் கொண்டு போய்க் கொடு." - என்று கையோடு கொண்டு வந்திருந்த பழங்களையும், துணிகளையும் கொடுத்தான் அழகியநம்பி.
"இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம் தம்பி?" - கடைசியில் ஆச்சியும் அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டாள். அதுவரை மற்றவர்களிடம் சொல்லியடைந்திருந்த அவநம்பிக்கையை ஒரு கணம் மறக்க முயன்று கொண்டே ஆச்சியிடமும் தன் திட்டத்தை விவரித்தான் அவன். "இதோ பார் தம்பி! நான் சொல்லுகிறேனென்று கோபித்துக் கொள்ளாதே; நிலத்தைக் கொத்தி வேலை பார்க்கிறதெல்லாம் உனக்குச் சரிப்பட்டு வராது. பேசாமல் நான் சொல்வதைக் கேள். எனக்குச் சுற்றி வளைத்துப் பேசத் தெரியாது. நேரடியாகவே சொல்லிவிடுகிறேன். 'ஏதடா ஆச்சி இப்படிப் பேசுகிறாளே' - என்று நினைத்துக் கொள்ளாதே. என்னிடம் கையில் கொஞ்சம் ரொக்கமும் இந்தக் கடையும், பத்து மரக்கால் விதைப்பாட்டுக்கு நன்செயும் இருக்கின்றன. எனக்குப் பிள்ளை வாரிசு இல்லை. பகவதியையும் கட்டிக் கொடுத்து இவ்வளவையும் உன் கையில் ஒப்படைத்து விடுகிறேன். நானும் இருக்கிறவரை உன்னிடமே இருந்துவிடுகிறேன். பிற்காலத்தில் கோமுவைப் பெரியவளாக வளர்த்து வாழவைக்க வேண்டியதும் உன் பொறுப்பு. உன் தங்கை வள்ளியம்மைக்கும் நல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடு. ஊரோடு இருந்து கடையை நடத்திக் கொண்டு நிலத்தையும் மேற்பார்த்துக் கொள்ளலாம். இந்த யோசனையால் உன் குடும்பமும் உருப்படும், என் குடும்பமும் உருப்படும். இதை முன்பே ஜாடையாக உன் அம்மாவிடமும் சொல்லியிருக்கிறேன். இதைவிட்டு அந்த ஆற்று வண்டலில் மண்வெட்டியைப் பிடித்துக் கொண்டு கஷ்டப்படுவதில் என்ன சுகம் கிடைக்கப் போகிறதோ உனக்கு?" - ஆச்சியின் புதிய யோசனை அவனைத் திகைக்கச் செய்தது. ஒரு விநாடி அவன் மனம் சபலமடைந்தது. 'ஆகட்டும்! அப்படியே செய்து விடலாம்' - என்று அவனுக்குத் தோன்றியது. அவன் மனத்தின் அந்தரங்கத்தில் எந்தப் பெண் ஒளிந்து கொண்டிருக்கிறாளோ அவளையும் கொடுத்துக் கஷ்டமில்லாமல் வாழப் போதுமான சொத்துக்களையும் தருகிறபோது எப்படி மறுக்கத் தோன்றும்?
"உன் அம்மாவிடம் கலந்தாலோசித்துக் கொண்டு இன்னும் பத்துப் பன்னிரண்டு நாளில் எனக்கு ஒரு முடிவு சொல்."
"ஆகட்டும்! யோசித்துச் சொல்லுகிறேன்." - என்று பொதுவாகப் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான் அவன். அவனும் முருகேசனும் வாசற்பகுதி இறங்கித் தெருவில் நடந்த போது கோமு மூச்சு இரைக்க இரைக்க வேகமாக ஓடி வந்தாள்.
"என்ன கோமு?"
"மாமா! வந்து... நான் அம்மா உங்களுக்கு எழுதச் சொன்ன கடிதத்தில் கடைசியாக ஒருவரி எழுதியிருந்தேனே, அதைப் படித்தீர்களோ?" - அவனருகே வந்து நாணிக்கொணி நின்று கொண்டு ஒடுங்கிய குரலில் மெதுவாகக் கேட்டாள்.
அழகியநம்பி சிரித்தான். "கோமு! இதை நீயாக வந்து கேட்கிறாயா? கேட்டுக்கொண்டு வரச்சொல்லி உன் அக்கா அனுப்பினாளா?" - முருகேசனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவன் இப்படிக் கேட்டதும் கோமு வெட்கமடைந்து முகம் சிவக்கச் சிரித்துக் கொண்டே திரும்பி ஓடி விட்டாள்.
"என்ன கேட்டாள்?" - என்றான் முருகேசன். "ஒன்றுமில்லை! வேறு விஷயம்." - என்று மழுப்பினான் அழகியநம்பி.
"ஓ!... புரிகிறது எனக்கு." - என்று அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே குறும்புத்தனமாகச் சிரித்தான் முருகேசன். அர்த்தம் நிறைந்து கனிந்த சிரிப்பு அது.
"சரி! இப்போது நேரே முன்சீப் வீட்டிற்குப் போக வேண்டியது தான். விண்ணப்பம் எழுதுவதற்குக் காகிதம், பேனா, எல்லாம் கையோடு கொண்டு வந்திருக்கிறேன்" - என்று பேச்சை மாற்றினான் அழகியநம்பி. "என்னப்பா இது? 'வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது' - என்கிற கதையாக இருக்கிறதே. இத்தனை பேரிடம் இவ்வளவு அறிவுரை கேட்ட பின்புமா நிலத்தை உழுது வாழ வேண்டுமென்ற ஆசையை நீ விடவில்லை?" - முருகேசன் வியப்படைந்தவன் போல் அழகியநம்பியை வினாவினான்.
"வசதிகள் நெருங்கி வருகிறதென்று அறிந்தவுடன் இலட்சியங்களை நழுவவிடுவதில் அர்த்தமில்லை. உயிரே போனாலும் நான் நினைத்ததை நிறுத்தமாட்டேன். இத்தனன பேரிடமும், இவ்வளவு நாழிகைகளும் கேட்ட அவநம்பிக்கைப் பேச்சுக்களெல்லாம் என் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றன. என்னுடைய பிடிவாதத்துக்கு இராட்சஸ பலத்தை உண்டாக்கியிருக்கின்றன. எனக்கு ஒரு இரகசியம் நன்றாகத் தெரியும். சாமானிய மனிதர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு மொத்தமாக எதிர்க்கிற விஷயம் எதுவோ அதில் இலட்சியவாதிக்கு உறுதியாக வெற்றி கிட்டும்."
"சரி? உன் இஷ்டம். வா! போகலாம்."
கிராம முன்சீப் புன்னைவனம் திண்ணையில் உட்கார்ந்து தீர்வை - இருசால் கணக்கெழுதிக் கொண்டிருந்தார். அழகியநம்பியும் முருகேசனும் போனவுடன் எழுந்து வரவேற்றார். முறையான விசாரணை, பதில், எல்லாம் முடிந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போதே முருகேசன் மனுவை எழுதிவிட்டான். அழகியநம்பி அதைப் படித்துப் பார்த்துக் கையெழுத்திட்டு முன்சீப்பிடம் கொடுத்தான்.
அவர் அதை வாங்கி மூக்குக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டு படித்தார். இருவரும் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். முழுதும் படித்து முடித்துவிட்டுத் தலை நிமிர்ந்த முன்சீப், முகத்தைச் சுளித்தார். பின்பு இலேசாகச் சிரிக்க முயன்றார். சிரிப்பு வரவில்லை!
எல்லோரும் பாடிய அதே பல்லவியை முன்சீப் புன்னைவனமும் பாடியானர்.
"தம்பீ! நிலம் கிடைப்பதில் தகராறு ஒன்றும் இருக்காது. இன்றைக்குத் தபாலில் நான் இதைச் சிபாரிசு செய்து அனுப்பி விட்டால் இரண்டே நாளில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வந்து பார்வையிட்டுத் தீர்வை நிர்ணயம் செய்து விசாரித்துக் கொண்டு போய் நிலத்தை உனக்கு ஜாரி செய்யச் சொல்லி உத்தரவு அனுப்பச் செய்துவிடுவார். அந்தப்படுகை மேட்டுக்கு முழுதும் தீர்வையே வருஷத்துக்கு முந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வரும். வருஷம் தவறாமல் தீர்வையைக் கட்டிவிட்டு அந்த நிலத்தில் நீ என்ன பயனடைய முடியும். நிலத்தை ஒருமுறை ஜாரி செய்து வாங்கிக் கொண்டால் பிறகு நீ தலைகிழாக நின்றாலும் பட்டாவை மாற்ற முடியாது. உனக்கு விளைகிறதோ, விளையவில்லையே, தீர்வையைக் கட்டியாக வேண்டும்! இதையெல்லாம் நன்றாக யோசித்துப் பார்த்துக் கொண்டு அப்புறம் மனுவை என்னிடம் கொடு." - என்று அவன் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்த காகிதத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்தார் முன்சீப்.
"பரவாயில்லை! நான் நன்றாக யோசித்து முடிவு செய்து கொண்டுதான் வந்திருக்கிறேன். சிபாரிசு செய்து இன்றைக்குத் தபாலிலேயே அனுப்பிவிடுங்கள்." - என்று திரும்பவும் காகிதத்தை அவரிடமே நீட்டினான், அழகியநம்பி. அவர் வாங்கிக் கொண்டார். அழகியநம்பியும், முருகேசனும் அவர் பக்கத்திலேயே இருந்து அவர் அதை அன்றையத் தபாலில் அனுப்புகிற வரை பார்த்து விட்டுத்தான் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். போகிற வழியில் தபாலாபீசிற்குப் போய் இரண்டு ஏர்மெயில் கடிதங்கள் வாங்கிச் சபாரத்தினத்திற்கும், வோட்ஹவுஸ் தம்பதிகளுக்கும் தான் சௌக்கியமாக வந்து சேர்ந்ததாக எழுதிப் போட்டான். வோட்ஹவுஸ் தம்பதிகளுக்கு எழுதிய கடிதத்திலேயே மேரிக்கும், லில்லிக்கும் தன் அன்பைத் தெரிவிக்குமாறு எழுதியிருந்தான். 'தான் குறிஞ்சியூரில் நண்பனோடு இருப்பதாகவும் ஊர் திரும்ப ஏழெட்டு நாட்கள் ஆகுமென்றும்' முருகேசன் தன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினான்.
இருவரும் பகல் உணவு நேரத்திற்கு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். சாப்பிடும்போது வழக்கமாக அதிகம் பேசும் அவன் அன்னை, அன்று பேசவே இல்லை.
"நீங்கள் வெளியில் போன சிறிது நேரத்துக்கெல்லாம் பன்னீர்ச்செல்வம் வந்து தேடிவிட்டுப் போனார் அண்ணா!" - என்று வள்ளியம்மை அவனிடம் கூறினாள். அவர் எதற்காக வந்திருப்பாரென்று அவனால் அனுமானிக்க முடிந்தது.
சாப்பிட்டு விட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, "அந்த நிலத்தில் எடுத்த எடுப்பில் நெல்லோ, வேறு தானியமோ பயிரிட வேண்டாம். முரட்டு உழவாக இரண்டு உழவு உழுது தக்காளி, முட்டைக்கோஸ், சீமை வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், - என்று இப்படிக் காய்கறி வகைகளாகப் பயிர் செய்தால் பத்தே மாதங்களில் பணத்தைக் குவித்து விடலாம்" - என்று இருந்தாற் போலிருந்து சொன்னான் முருகேசன்.
"உன்னை நம்பிக் காரியத்தில் இறங்கிவிட்டேன். பணத்துக்கு வழி செய்ய வேண்டியது உன் பொறுப்பு. என்னைக் கைவிட்டுவிடாதே!" - என்றான் அழகியநம்பி.
அன்று மாலை மறுபடியும் அவர்கள் மலையடிவாரத்துக்குப் போய் அந்தப் படுகை மேட்டை நிதானமாகச் சுற்றிப் பார்த்தனர். நிலம் உரமுள்ளதாக - சத்து வாய்ந்ததாகவே தெரிந்தது. இடை இடையே இருந்த கற்களை அப்புறப்படுத்தி, மேடு பள்ளங்களைச் சரிசெய்து நிரவி உழுதுவிட்டால் தங்கமான நிலமாகிவிடும் என்று தோன்றியது.
"படுகை ஆற்றுமட்டத்தைவிட, மேடாக இருப்பதால் தண்ணீர் ஆற்றிலிருந்து பாயாது. அருவி விழுகிற இடத்திலிருந்து ஒரு வாய்க்கால் வெட்டிக் கொண்டால் நிலத்துக்கு வேண்டிய தண்ணீர் பாயும்." - என்று முருகேசன் யோசித்துப் பார்த்துச் சொன்னான். இருவரும் அங்கேயே மரத்தடியில் உட்கார்ந்து காகிதத்தில் புள்ளி விவரக் கணக்கோடு ஒரு திட்டம் போட்டுப் பார்த்தார்கள். அந்த நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்ய ஆகும் செலவு, அதில் கிடைக்கலாமென்று தோன்றிய விளைவின் பணமதிப்பு - இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். அவர்கள் மிகவும் ஆச்சரியப்படுகிற அளவிற்கு இலாபம் கிடைக்கும் போலத் தெரிந்தது.
அவர்கள் எதிர்பார்த்தபடி இரண்டே நாட்களில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார். அவர் நிலத்தைப் பார்வையிடும் போது அழகியநம்பி, முருகேசன், முன்சீப் புன்னைவனம் ஆகியோரும் உடன் இருந்தனர். ரெவின்யூ இன்ஸ்பெக்டர் நல்ல மனிதராக இருந்தார். பெருந்தன்மையோடு நடந்து கொண்டார். மற்றவர்களைப் போல் அவநம்பிக்கையூட்டுவாரோ என்று அழகியநம்பிக்கு ஒரு பயம் இருந்தது. "சபாஷ்! உன் திட்டத்தையும் முயற்சியையும் பாராட்டுகிறேன். நீ வெற்றி பெறுவாய்." - என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர். தன் நோக்கங்களை அவரிடம் விரிவாக எடுத்துக் கூறினான்.
"உன்னைப் போல் நம் நாட்டுப் படித்த இளைஞர்களில் நூற்றுக்குப் பத்துப் பேராவது முன் வந்திருந்தால் இந்த நாடு எப்போதோ உருப்பட்டு முன்னேறியிருக்குமே!" - என்று அவர் கூறியபோது அவனுக்குப் பெருமையாயிருந்தது.
"நான் போய் உத்தரவு அனுப்பிவிடுகிறேன்!" - என்று சொல்லிவிட்டுப் போனார் அவர். மறுநாளே பணம் தயார் செய்வதற்காக அழகியநம்பியைக் கூட்டிக் கொண்டு முருகேசன் தென்காசிக்குப் புறப்பட்டான். தென்காசியில் அழகியநம்பி மூன்று, நான்கு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. முருகேசனும், அவன் தந்தையுமாக, அவனைக் கூட்டிக் கொண்டு பணம் படைத்தவர்களிடமெல்லாம் அலைந்தனர். கடைசியில் முக்கால் வட்டிக்குப் புரோநோட்டு எழுதிக் கொடுத்து மூவாயிர ரூபாய் கடன் வாங்கினர். கடன் கொடுத்த பணக்காரர் முருகேசனின் தகப்பனாருக்கு மிகவும் வேண்டியவர். அழகியநம்பிக்காகவோ, அவன் எழுதிக் கொடுத்த புரோநோட்டை நம்பியோ அவர் கடன் கொடுக்கவில்லை. முருகேசனின் தந்தையை நம்பியே கொடுத்திருந்தார்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு அவன் தென்காசியிலிருந்து புறப்படும்போது, "அடுத்த மாதம் நானும் நண்பர்களும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உல்லாசப் பிரயாணம் செய்யத் திட்டமிட்டிருப்பது பற்றி முன்பே உனக்குக் கடிதத்தில் எழுதியிருந்தேனே! நீயும் வரமுடியுமா?" - என்று கேட்டான் முருகேசன்.
"தெரிந்திருந்தும் கேட்கிறாயே? என்னுடைய உல்லாசப் பிரயாணமெல்லாம் இனிமேல் அந்த மலையடிவாரத்துப் படுகை நிலத்தின் மேல் தான். ஏற்கனவே நான் கடனாளி. இப்போது இன்னும் பெரிய கடனாளியாக மாறி 'மண்ணில்' பணத்தைப் போடுகிறேன். என் நம்பிக்கையை அந்த மண் காப்பாற்றுமோ? ஏமாற்றிவிடுமோ? எல்லாம் இனிமேல் தான் தெரியவேண்டும்." - என்று அவனுக்குப் பதில் சொன்னான் அழகியநம்பி.
"கவலைப்படாமல் போய்க் காரியங்களைத் துணிவோடு செய். எல்லாம் வெற்றிகரமாக முடியும்." - என்று ஆறுதல் கூறினான் முருகேசன்.
"நீயும் உடன் வந்தால் நல்லது. எல்லா ஏற்பாடுகளையும் உன் யோசனைகளைக் கேட்டுக் கொண்டு செய்வேன். மறுபடியும் வந்து பத்து நாள் இருந்து விட்டுத் திரும்பலாமே?" - என்று அவனையும் உடனழைத்தான் அழகியநம்பி. "இப்போது எனக்குச் சௌகரியப்படாது! முடிந்தபோது பின்பொரு சமயம் வருகிறேன். அப்படி நான் வரும்போது உன்னுடைய ஆற்றுப் படுகையில் பசுமை குலுங்க வேண்டும்!" - என்று சிரித்துக் கொண்டே சொன்னான் முருகேசன். அழகியநம்பி விடை பெற்றுக் கொண்டு குறிஞ்சியூருக்குப் புறப்பட்டான். ஊரில் கிராம முன்சீப் அவன் வரவை எதிர்பார்த்துத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார். "தம்பீ! படுகை நிலத்தை உன் பெயருக்கு ஜாரி செய்து உத்தரவு வந்திருக்கிறது. தீர்வைப் பணத்தைக் கட்டிப் பட்டா வாங்கிக் கொள்." - என்று அவன் போய்ச் சேர்ந்ததும் அவனிடம் கூறினார் அவர். உடனே அவன் தீர்வையைக் கட்டித் தன் பெயருக்குப் பட்டா எழுதி வாங்கிக் கொண்டான்.
இடையே பன்னீர்ச்செல்வம் வந்து தம் கடனுக்கு வழி சொல்லுமாறு மிரட்டினார். "பொறுத்துக் கொள்ளுங்கள்! தவணை முடிவதற்குள் உங்கள் கடனை எப்படியும் தீர்த்து விடுகிறேன்." - என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பினான். காந்திமதி ஆச்சி கூப்பிட்டனுப்பினாள். போனான். "என்ன தம்பீ! நான் அன்றைக்குச் சொல்லிய விஷயத்தை அம்மாவோடு கலந்து ஆலோசனை செய்தாயா? உங்கள் முடிவு என்ன? தெரிந்து கொள்வதற்காகத்தான் உன்னைக் கூப்பிட்டனுப்பினேன் நான்..." என்று கேட்டாள் ஆச்சி.
ஆச்சிக்கு என்ன பதில் சொல்வதென்று தயங்கினான் அவன். திடீரென்று அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டைப் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து ஐந்து பச்சை நோட்டுக்களை எண்ணி வைத்தான். "ஆச்சி! ஐநூறு ரூபாய் இருக்கிறது. நான் கொழும்பிலிருக்கும் போது நீங்கள் என் தாய்க்குக் கொடுத்த கடனை அடைத்துவிட்டேன். எடுத்து எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்."
"அடே! அசட்டுப் பிள்ளை;... அதை யார் கொடுக்கச் சொல்லி அவசரப்படுத்தினார்கள் உன்னை இப்போது? நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் ஏதோ ரோஷப்பட்டுக் கொண்டு பணத்தை எண்ணி வைக்கிறாயே?"
காந்திமதி ஆச்சி அவன் எண்ணி வைத்த பணத்தை எடுக்காமல் அவனை வினாவினான். அழகியநம்பி ஆச்சியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னான்.
"இதோ பாருங்கள் ஆச்சி! உங்கள் பெண் பகவதியைத் தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. ஆனால், நீங்கள் இன்னும் ஒரு வருஷம் எனக்காகப் பொறுத்திருக்க வேண்டும். உங்களுக்குப் பொறுமை இருக்குமானால் அதுவரை காத்திருக்கலாம். இந்தப் பதிலைத் தான் இப்போது நான் உங்களுக்குச் சொல்ல முடியும்."
"ஏன்? ஒரு வருஷம் என்ன செய்யப் போகிறாயாம்?"
"அது உங்களுக்கே தெரியும்."
"அந்தப் படுகை மேட்டு நிலத்தில் உழைப்பையும் பணத்தையும், வீணாக்கப் போகிறாயாக்கும்."
"ஆச்சி! பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நான் வருகிறேன்." - அழகியநம்பி அவள் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் விடைபெற்றுக் கொண்டு கிளம்பி விட்டான். கதவிடுக்கிலிருந்து அவனை நோக்கும் அந்தக் கண்கள் அன்றும் அங்கிருந்து அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தன. ஆனால், அவன் அவற்றைப் பார்க்கவில்லை.
"மாமா! மாமா! உங்களை... உங்களை அம்மா கூப்பிடுகிறாள்" - என்று தெருவாசற்படி வரை அவனைத் துரத்திக் கொண்டு வந்தாள் கோமு. அவன் காதில் கேட்காதது போல் தெருவில் இறங்கி வேகமாக நடந்தான்.
"அம்மா! நான் கூப்பிட்டேன். அவர் பேசாமல் போய்விட்டார்." - என்று ஏமாற்றத்தோடு திரும்பி வந்து ஆச்சியிடம் கூறினாள் கோமு.
"போனால் போகட்டும் போ." - என்று கோமுவுக்குச் சொல்லிவிட்டு, "அசட்டுப் பிள்ளை! தான் பிடித்தால் முரண்டு தான்." - என்று தனக்குள் கூறிக்கொண்டாள் ஆச்சி.
"கோபித்துக் கொண்டு போகிறாரா அம்மா?" - தாயின் மனநிலை தெரியாமல் மறுபடியும் பேச்சுக் கொடுத்தாள் கோமு. "எப்படிப் போனால் உனக்கென்னடி! பேசாமல் போ உள்ளே." - என்று சிறுமியின் மேல் ஆச்சி எரிந்து விழுந்தாள். உள்ளே நின்று கொண்டிருந்த பகவதிக்கோ அழுகையே வந்துவிடும் போலிருந்தது.
அந்தப் படுகை நிலத்து முயற்சியில் இறங்கிய நாளிலிருந்து அழகியநம்பிக்கு ஒரு வகையில் அல்ல; பலவகையில் மன வேதனைகள் ஏற்பட்டன. காந்திமதி ஆச்சியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு இட்டிலிக் கடைப் பக்கம் போவதே நின்றுவிட்டது. வீட்டில் அம்மா அவனோடு பேசுவதையே நிறுத்திக் கொண்டு விட்டாள். இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்று இரண்டு வாரத்துக்கு மேலாகிவிட்டது. ஊரில் பெரியவர்கள், - வயது வந்தவர்கள் அவனைப் பைத்தியக்காரன் போல் ஒதுக்கி நடத்துவது போன்று ஒரு பிரமை - ஒரு தாழ்வு மனப்பான்மை அவனுக்கு ஏற்பட்டது. சிலர் நேரிலேயே அவனைக் கேலி செய்தார்கள். இன்னும் சிலர் அவன் இல்லாத இடத்தில் கேலியும் ஏளனமும் செய்தார்கள். தெருவில் அவன் நாலு பேர் கண்களில் படும்படி நடந்து சென்றாலே அவனை ஒரு விநோதப் பொருளாகச் சுட்டிக் காட்டிச் சிரித்துப் பேசுகிற வழக்கம் அந்த ஊரில் ஏற்பட்டுவிட்டது.
ஆனால், இவற்றாலெல்லாம் அவன் தளர்ந்து விடவில்லை. அவனுடைய நம்பிக்கை வெறியை - உழைப்பு வெறியை இவை வளர்த்து விட்டிருந்தன. அவன் மற்றவர்களிலிருந்து விலகித் தனியே ஒதுங்கினான். ஊரின் தோற்றத்தில் தனியே உயர்ந்து தெரியும் கோபுரம் போல் அவன் தனக்குத் தானே உயர்ந்து விளங்கினான். மறுநாளே அவனுடைய அசுர உழைப்பு அந்தப் படுகை நிலத்தில் ஆரம்பமாயிற்று. பக்கத்து ஊர் மாட்டுச் சந்தைக்குப் போய் எண்ணூறு ரூபாய்க்கு அருமையான காளைமாடுகளாகப் பார்த்து ஒரு ஜோடி பிடித்துக் கொண்டு வந்தான். ஏர், கலப்பை, மண்வெட்டி, கட்டைவண்டி, இந்த மாதிரி வகையில் ஒரு ஐநூறு ரூபாய் செலவாயிற்று. கிராமத்தில் அவனை நம்பி வந்து உழைக்க எந்தக் கூலியாளும் தயாராயில்லை. அதையெண்ணி அவனும் வருந்தவில்லை. 'பத்துக் கூலிகள் உடன் வந்து உழைத்தால் பத்து நாளில் பயிர் செய்து தண்ணீர் பாய்ச்சி விடலாம். தனியாகவே உழைத்தால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்; ஆகட்டுமே! நான் தனியாகவே உழைக்கிறேன். பத்தே மாதத்தில் இந்த மண்ணிலிருந்து பத்தாயிரம் ரூபாய் எடுக்கவில்லையானால் என் பெயர் அழகியநம்பியில்லை. இன்றைக்கு இந்தத் தொழிலில் பழக்கம் விட்டுப் போயிருக்கலாம்! என் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகப் - பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்த அதே வேளாண்மைத் தொழிலை நானும் ஏன் செய்யக் கூடாது? ஏன் செய்ய முடியாது? அதே வேளாளன் இரத்தம் தானே என் உடலிலும் ஓடுகிறது? அந்த இரத்தத்தின் சக்தியை இந்த நிலத்தில் உழைத்துக் காட்டுகிறேன்.' - நிலத்தில் இறங்கி வேலை செய்யும் முன் அவன் தனக்குத்தானே இப்படி ஒரு பிரதிக்ஞை செய்து கொண்டான்.
அந்த நிலத்திலிருந்த கற்களை அப்புறப் படுத்தவே முழுமையாக ஐந்து பகல்கள் அவன் தனியனாய் உழைத்தான். காலையில் ஒரு வாய் கஞ்சி குடித்துவிட்டு ஐந்து மணிக்குக் கருக்கிருட்டோடு வீட்டை விட்டுப் புறப்படுவான். பகல் சாப்பாட்டை வள்ளியம்மை வயலுக்குக் கொண்டு வந்து விடுவாள். கிராமத்துக்கு வந்த இருபத்தொன்றாவது நாள் காலையில் முதல் முதலாக அந்த நிலத்தில் ஏர் பூட்டினான் அவன்.
உழுது பழகாத கைகள் தொடக்கத்தில் வருந்தின. மலைப்பு அடைந்தன. அதைரியமோ, சோர்வோ அடைந்து விடாமல், பொறுமையாக வேலை செய்தான் அழகியநம்பி. ஆற்றுப் படுகையாதலால் தரை அதிகமாக இறுகியிருக்கவில்லை. கலப்பையின் கொழு நுனி சுலபமாகவே மண்ணில் நுழைந்து கீறிக்கொண்டு போயிற்று. நிலா நாட்களில் இரவிலும் ஏர் பூட்டி உழுதான். மேழியைப் பிடித்து அவன் கைகள் சிவந்து கன்றின. கால்கள் நடந்து அலுத்தன.
உழுத சாலுக்குள் மண்ணில் மறைந்திருந்த கற்கள் எற்றி எத்தனை தடவை அவன் கால் விரல்களின் இரத்தம் அந்த மண்ணை நனைத்திருக்கும்? மண்வெட்டியால் வாய்க்கால் வெட்டும் போது தவறிப் போய் காலில் போட்டுக் கொண்டு எத்தனை முறை இரத்தம் சிந்தியிருப்பான் அவன்? எத்தனை முட்கள் தைத்திருக்கும்? எத்தனை கற்கள் எற்றியிருக்கும்? ஓய்வு ஒழிவில்லாமல் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு உழைத்தான் அவன். அவனுடைய இரத்தம், அவனுடைய வியர்வை, அவனுடைய உழைப்பு, - எல்லாவற்றையும் எந்த இடத்தில் சிந்திக் கொண்டிருந்தானோ, அந்த இடம் சர்க்காருக்கு மனுப்போட்டுத் தீர்வைப் பணம் கட்டி வாங்கிய வெறும் மண் மட்டுமல்ல. அது அவன் பிறந்த மண்! ஒரு மாத உழைப்புக்குப் பின் அந்த நிலம் நிலமாயிற்று. வெறும் மண் விளையும் மண்ணாயிற்று. காடாகக் கிடந்த பூமி கற்பகம் விளையும் கழனிகளாயிற்று. மொத்தமாக உழுது போட்ட பின் நிலப்பரப்பைத் தனித் தனிப் பிரிவுகளாக வரப்புக் கட்டிப் பிரித்தான். அருவியிலிருந்து அவன் தோண்டிக் கொண்டு வந்திருந்த வாய்க்கால், வயலின் நடுவில் இறுதிவரை வந்து இருபுறமும் நீர் பாய்ந்தது. வீட்டுக் கொல்லையில் குவிந்திருந்த குப்பையை வண்டி வண்டியாக ஏற்றிக் கொண்டு வந்து உழவில் சிதறினான். எடுத்த எடுப்பில் நன்செய்ப் பயிர்களைப் பயிரிட வேண்டாம் என்று முருகேசன் கூறிச் சென்றது நினைவுக்கு வந்தது அவனுக்கு. காய்கறிகளையே பயிர் செய்ய நினைத்தான். அப்போது மார்க்கெட்டில் அதிக விலை போகும் உயர்ந்த ரகக் காய்கறிகளாகப் பயிர் செய்தான். உயர்ந்த வித்துக்களாகத் தேடி வாங்கி வந்தான். ஒரு பகுதியில் தக்காளி, இன்னொரு பகுதியில் முட்டைக்கோஸ், மற்றோர் பகுதியில் உருளைக்கிழங்கு, வேறோர் பகுதியில் கேரட், முக்கால் ஏக்கர் அளவில் சீமை வெங்காயம் - பயிரிட்டு முடிந்ததும் தன் உழைப்பின் முழுச்சக்தியையும், நம்பிக்கையையும், இலட்சியத்தையும் - ஏன் சகலத்தையுமே அந்த மண்ணில் விதைத்துவிட்டது போன்றதொரு திருப்தி அவனுக்கு ஏற்பட்டிருந்தது. மலையிலிருந்து காட்டுப் பன்றிகள், கரடிகள், இறங்கி வந்து நிலத்தைக் கிளறிப் பாழ்படுத்தி விடாமல் நடுவில் பரண் போட்டுக் கொண்டு இராப் பகலாகப் பார்த்துக் கொண்டிருந்தான். முள் வெட்டி வேலி அடைத்தான்.
ஊரை மறந்து, வீட்டை மறந்து, தன்னையே மறந்து அந்த நிலமே கதியென்று கிடந்தான். கண்ணை இமைகாப்பது போல் அந்த நிலத்தைக் காத்து வந்தான். இந்த ஒன்றரை மாதத்திற்குள் அவன் உடல் கறுத்து அழகிழந்து போயிருந்தது. தசைகள் இறுகி உழைப்புக்கே உரிய முரட்டுத் தன்மை ஏறியிருந்தன. சட்டை, பனியன், போட்டுக் கொண்டு சுற்றியது மறந்தே போய்விட்டது அவனுக்கு. அரையில் அழுக்கடைந்த நாலுமுழம் வேட்டியோடும், திறந்த மார்போடும், வெயிலென்றும், பனியென்றும் பாராமல் காத்துக் கொண்டு கிடந்தான் அவன். மாடு கட்டிக் கொள்வதற்கும், வண்டி நிறுத்திக் கொள்வதற்கும், விவசாயக் கருவிகளை வைத்துக் கொள்வதற்கும், - அந்த அருவிக் கரையில் ஒரு கீற்றுக் குடிசை வேய்ந்து கொண்டான். நாள் செல்லச் செல்ல அவன் ஊருக்குள் வருவதே குறைந்து விட்டது. தென்காசியில் வாங்கிய கடனில் எஞ்சியிருந்ததை அப்படியே வீட்டில் கொடுத்து விட்டான். வேளாவேளைக்குப் படுகை நிலத்தைத் தேடிக் கொண்டு உணவு வந்தது அவனுக்கு. வள்ளியம்மை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனாள்.
அழகியநம்பி உழைக்கவில்லை! அவனுடைய உழைப்பை வெறும் உழைப்பென்று மட்டும் சொல்லிவிட முடியாது. மரத்தடியில் தவம் செய்யும் முனிவன் போல், மண்ணில் - ஆற்றோரத்துப் புழுதியில் - உழைப்பு என்னும் யோகாசனத்தால் தவம் செய்து கொண்டிருந்தான் அவன். தண்டும், கமண்டலமும், ஏந்தும் முனிவர் போல் மண்வெட்டியும், கடப்பாரையும் ஏந்தினான் அவன். அவன் முகத்திலும் தாடி, மீசை, எல்லாம் காடு மண்டினாற்போல வளர்ந்து விட்டன. தலையில் எண்ணையும், சீப்பும் படிந்து எவ்வளவு நாட்கள் ஆகி விட்டனவோ? அவனுடைய சுருள்சுருளான அழகிய கிராப்பு முடி நெருப்பு நிறத்தில் சடை விழுந்து தோன்றிற்று. புலன்களை அடக்கி உழைத்து இலட்சியத்தை நோக்கித் தவம் செய்யும் முனிவனாகத்தான் அவனும் இருந்தான்.
கிழக்கு வெளுக்கும் நேரத்தில் நிலத்தின் நடுவிலிருக்கும் பரண் மேல் ஏறி நின்று கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் நான்கு புறமும் ஒரே பசுமைப் பரப்பாகத் தெரிந்த தனது படுகையைப் பார்க்கும் போதெல்லாம் அவன் உள்ளம் பூரிக்கும். நம்பிக்கை பொங்கும். உழைத்த தோள்கள் உயர்ந்து விம்மும். எத்தனையோ காலமாக ஆற்று வணடலைத் தேக்கிப் படியவைத்துக் கொண்டு மேடாகியிருந்த அந்தக் குறிஞ்சியாற்றுப் படுகை தன் நிலவளத்தையெல்லாம் அவன் உழைப்போடு சேர்த்து ஒத்துழைக்கச் செய்திருந்தது. பயிர்களின் எழுச்சியில், புடைத்து மேலெழும் பசுமையின் கொழிப்பில், அந்த ஒத்துழைப்பைக் காண முடிந்தது.
ஒருநாள் அருணோதயத்தில் அவன் அப்படிப் பரண் மேல் நின்று கொண்டிருந்த போது வட்டிக் கடைப் பன்னீர்ச்செல்வமும் அவருடைய ஆட்களும் அந்தப் பாதையில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். மலையில் விறகு வெட்டி கரி மூட்டைக்காகத் தீ மூட்டம் போடுவதற்கு அவர் போய்க் கொண்டிருக்கிறாரென்று அவன் நினைத்துக் கொண்டான்.
வழக்கமாக ஒன்றரை மாதம், இரண்டு மாதங்களுக்கொரு முறை அந்த வழியாக அவர் மலைக்குப் போவதுண்டு. இந்த முறை இதுவரை காணாத புதுமை அந்தப் படுகைப் பரப்பில் தெரிவதைக் கண்டு அவர் பிரமித்துப் போனார். அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கல்லும் முள்ளும் சிதறிக் கிடந்த மேடு பள்ளமான தரை வளமான காய்கறித் தோட்டமாக மாறியிருப்பதைப் பார்த்து வியந்தார்.
"அந்தக் கொழும்புப் பிள்ளையாண்டான் இராப்பகலாக உழைத்து மண்ணைப் பொன்னாக்கி விட்டாருங்க..." என்று அவரோடு வந்திருந்த கூலியாட்களில் ஒருவன் கூறினான்.
சாம்பல் நிறத்தில் 'கொழுகொழு'வென்று வளர்ந்த முட்டைக்கோஸ் செடிகள், பூவும், பலனுமாகத் தக்காளிச் செடிகள், வளமாக வளர்ந்த சீமை வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, - எல்லாப் பயிர்களையும் பார்த்த போது பன்னீர்ச்செல்வத்தின் மனத்தில் பேராசை எழுந்தது. மனத்தையும், கண்களையும் அடக்க முடியாமல் நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் தெரியும் அந்தப் பசுமையை மீண்டும் பார்த்துக் கொண்டே மேலே நடந்து செல்லத் தோன்றாது தயங்கி நின்றார் அவர். பரண்மேல் அழகியநம்பி நின்று கொண்டிருப்பதையும் அவர் கண்டார். மனத்திற்குள் ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக, நின்று கொண்டிருந்த வரப்பின் புல் தரையின் மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தார். "அதோ பரண்மேல் நிற்கிறான் அந்தப் பையன்; போய் நான் கூப்பிடுகிறேனென்று கூப்பிட்டுக் கொண்டு வா." - என்று தம் ஆட்களில் ஒருவனைத் துரத்தினார்.
அழகியநம்பி தக்காளிச் செடிகளுக்குக் கொத்தி விடுவதற்காக அப்போதுதான் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு பரணிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான்.
பன்னீர்ச்செல்வம் அனுப்பிய ஆள், "இந்தாங்க; தம்பீ! உங்களை ஐயா கூப்பிடுகிறார்." - என்று அவனருகே வந்து சொன்னான். "வருகிறேன் போ." - என்று சொல்லிவிட்டு மண்வெட்டியோடு அவனுக்குப் பின்னால் நடந்தான் அழகியநம்பி.
"வா தம்பீ! உன் திறமையைப் பார்த்தேன். எனக்கு கண் கூசுகிறது. இரண்டரை மாதத்துக்கு முன்னாலே வெட்ட வெளியாய்க் கிடந்த இடத்தை இப்படிப் பசுமை குலுங்கச் செய்துவிட்டாயே; நீ சாமர்த்தியக்காரன் தான் அப்பா. நான் கூட ஆரம்பத்திலே ஏதோ மட்டமாக நினைத்தேன். பைத்தியகாரத்தனமாக நீ வீணுக்கு உழைக்கிறாய் என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது உன் உழைப்பின் அருமை."
"முகஸ்துதி, புகழ்ச்சி, இவையெல்லாம் இப்போது எனக்குத் தேவை இல்லை. கூப்பிட்டனுப்பிய காரியத்தை முதலில் சொல்லுங்கள். எனக்கு உங்களோடு நின்று பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. வேலை இருக்கிறது." - என்று அவரை இடைமறித்தான் அழகியநம்பி. "ஆளே மாறிப் போய்விட்டாய்! உன்னைப் பார்த்தால் பழைய அழகியநம்பி மாதிரியே தெரியவில்லையே?" - அவன் இடைமறித்துக் கூறியதையும் அவனுடைய ஆத்திரத்தையும் அவசரத்தையும் பொருட்படுத்தாதவர் போலப் பேசிக் கொண்டே அவன் தோற்றத்தை ஏற இறங்கப் பார்த்து விட்டுச் சிரித்தார் அவர். அழகியநம்பி முகத்தைச் சுளித்தான்.
பன்னீர்ச்செல்வம் தம் பக்கத்தில் இருந்த ஆட்களுக்கு ஏதோ ஜாடை காட்டினார். உடனே அவர்கள் தூரத்தில் விலகிப் போய் நின்று கொண்டார்கள்.
"உட்கார் தம்பீ!" அவர் அவனிடம் ஏதோ அந்தரங்க விஷயம் பேசப் போகிறவரைப் போல் பக்கத்தில் உட்காரச் சொல்லி உபசரித்தார்.
"சும்மா சொல்லுங்கள். எனக்கு உட்கார நேரமில்லை" -
"சொன்னால் உனக்குக் கோபம் வராதே?"
"சுற்றி வளைக்காதீர்கள். எனக்கு நேரம் வீணாகிறது. நேரடியாகச் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்" - அவனுடைய குரலில் ஆத்திரம் ஏறியிருந்தது.
"இப்படியே இந்த மகசூலை எனக்கு விட்டுவிடு. உன் கடன் பத்திரத்தை இந்த நிமிஷமே கிழித்தெறிந்து விடுகிறேன். நீ கொடுக்க வேண்டிய இரண்டாயிர ரூபாய்க் கடனையும் இந்த ஒரே சாகுபடியில் எடுத்துக் கொண்டு அடுத்த சாகுபடிக்கு நிலத்தை உன்னிடம் திருப்பிவிட்டு விடுகிறேன்."
அவர் கூறியதைக் கேட்டதும் அழகியநம்பிக்கு இரத்தம் கொதித்தது.
"என்ன சொன்னீர்?" - என்று ஆத்திரத்தோடு கத்திக் கொண்டு மண்வெட்டியை ஓங்கிவிட்டான். பன்னீர்ச்செல்வம் அலறிப்புடைத்துக் கூச்சலிட்டுக் கொண்டே எழுந்து விலகி நின்றார்.
"புத்திகெட்ட மனிதரே! உம்மிடம் கடன் வாங்கிவிட்டால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமா? வாய் கூசாமல் எப்படி ஐயா கேட்டீர்?" - என்று கூச்சலிட்டான் அவன்.
"கடன்காரப் பயலுக்கு ரோஷத்தைப் பார்!" - என்று அடிபட்ட நாய் போல் முணுமுணுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தார் பன்னீர்ச்செல்வம்.
"அயோக்கியன்! விறகுக்கும், கரிக்குமாக மலையை மொட்டையடிப்பது போல் மனிதர்களையும் மொட்டையடிக்கப் பார்க்கிறான்." - என்று அவர் காதில் கேட்கும்படி இரைந்தே சொன்னான் அழகியநம்பி. அவர் போன மறுகணமே ஒரு திருஷ்டிப் பொம்மை கட்டி வயலுக்கு நடுவே நிறுத்தினான்.
இன்னொரு நாள் மணியக்கார நாராயணபிள்ளை, புலவர் ஆறுமுகம், முன்சீப் புன்னைவனம், கந்தப்பன், - எல்லோரும் அருவியில் குளிப்பதற்காக மலையடிவாரத்துக்கு வந்திருந்தார்கள். குளித்துவிட்டுத் திரும்பிப் போவதற்கு முன் அழகியநம்பியின் காய்கறித் தோட்டத்தைப் பார்க்க வந்தனர்.
"என்ன ஐயா புன்னைவனம்? ஏன் இப்படி மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படுகிறீர்? அன்றைக்கு உம்மிடமும், என்னிடமும் வந்து யோசனை கேட்டபோது கேலி செய்தோமே? இன்றைக்குப் பார்த்தீரா? புழுதி மண்ணாய்க் கிடந்த ஆற்றுப்படுகையைப் பொன் விளையும் பூமியாக்கி விட்டானே?" - என்று புன்னைவனத்தை நோக்கிக் கூறினார் நாராயணபிள்ளை.
"என்ன இருந்தாலும் படித்தவன் மூளையே தனி. எவ்வளவு அருமையாக யோசித்துத் திட்டமாக வேலை செய்திருக்கிறான் பார்த்தீர்களா. இத்தனை வருஷமாக இந்த ஆற்றுப் படுகையை நாம் பார்த்துக் கொண்டு தானே இருந்தோம்? நம்மில் ஒருத்தனுக்காவது இப்படிச் செய்ய வேண்டுமென்று புத்தியில் பட்டதா?" - என்றார் புலவர் ஆறுமுகம்.
"பையன் கூடிய சீக்கிரம் இதில் முன்னுக்கு வந்துவிடுவான் போலிருக்கிறதே!" - என்றார் புன்னைவனம். கந்தப்பன் அந்தப் பசுமை வளத்தைப் பார்த்துப் பேச வாயின்றி நடந்து வந்து கொண்டிருந்தார்.
தண்ணீர் பாய்கிற வாய்க்காலில் மண் சரியாமல் செப்பனிட்டுக் கொண்டிருந்த அழகியநம்பி வயலுக்குள் கூட்டமாகப் பேச்சுக்குரல் கேட்டுத் தலைநிமிர்ந்தான். அவர்கள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் எதிர்கொண்டு வரவேற்று, "வாருங்கள்." - என்று கூறிப் புன்னகை செய்தான்.
"என்னப்பா; அழகியநம்பீ! பெரிய பண்ணைக்கு முதலாளியாக மாறிவிட்டாற் போல் இருக்கிறதே?" - என்று புலவர் ஆறுமுகம் சிரித்துக் கொண்டே கேட்டார்.
"நீங்கள் சொல்வது தவறு! இன்றும், நாளையும், என்றுமே ஒரு சாதாரண உழைப்பாளிதான் நான். எனக்கென்று தனிப் பெருமை எதுவும் இல்லை. எல்லாம் இந்த மண்ணின் பெருமை!" என்று விநயமாக அவர்களுக்கு அவன் பதில் சொன்னான்.
"அப்படிச் சொல்லிவிட முடியுமா அப்பா? ஊரெல்லாம் உன்னைக் கிறுக்கனாக நினைத்துக் கேலி செய்தபோது அலுக்காமல் சலிக்காமல் இந்த மண்ணில் நீதானே உழைத்தாய்?"
"எனக்கு நம்பிக்கை இருந்தது. வைராக்கியம் இருந்தது. உழைத்தேன்." - என்று பெருமையாகச் சொன்னான் அவன். சிறிது நேரம் அவனோடு அளவளாவிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள்.
காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது? ஒரு மழைக்காலம், ஒரு கூதிர்காலம், ஒரு பின் பனிக்காலம், ஒரு முன் பனிக்காலம், ஒரு இளவேனிற் காலம், ஒரு முதுவேனிற் காலம் - ஆறு பெரும் பருவங்கள் ஓடும் சித்திரங்கள் போல் தோன்றி மறைந்துவிட்டன. அதற்கு மேலும் நான்கைந்து மாதங்கள் ஓடி விட்டன. இந்தச் சிறிய காலத்திற்குள் அழகியநம்பியின் வாழ்வில் தான் எத்தனை மாறுதல்கள்! பன்னீர்ச்செல்வத்தின் கடனை அடைத்துவிட்டு அவருக்கு முன்னால் நிமிர்ந்து நடக்கிறான் அவன். தென்காசியில் வாங்கியிருந்த கடனும் தீர்ந்துவிட்டது. அவனுடைய காய்கறிப் பண்ணையில் முழுமையாக இரண்டு சாகுபடிகள் முடிந்து விற்று முதலாகிவிட்டன. மூன்றாவது சாகுபடிப் பயிர்கள் பலனளிக்கும் பருவத்தை நெருங்கிக் கொண்டிருந்தன. அவன் வீட்டில் திருமகள் விலாசம் பொங்கியது. பையனுக்கும் அவன் அதிர்ஷ்டத்திற்கும் ஊரில் திருஷ்டிபட்டு விடக் கூடாதே என்று அவன் தாய் பயந்தாள்.
ஊரிலுள்ளவர்கள் அவனையும் ஒரு பெரிய மனிதனாக மதித்தார்கள். காந்திமதி ஆச்சி மனஸ்தாபத்தத மறந்து அவனைக் கூப்பிட்டனுப்பினாள். அவன் போனான். ஆச்சியோடு நாராயண பிள்ளையும் இருந்தார்.
"என்ன தம்பீ? ஆச்சிக்கு முன்னாலேயே ஏதோ வாக்குக் கொடுத்திருந்தீர்களாமே? உங்களுக்கும் வயசாகிறது? ஆண்டவன் புண்ணியத்தில் உழைத்து முன்னுக்கு வந்து நன்றாயிருக்கிறீர்கள். கலியாணம் செய்து கொள்கிற வயசு தானே இது? உங்களுக்கு முடிந்துவிட்டால் பின்பு உங்கள் தங்கை கலியாணமும் நல்ல படியாக நடக்கும்."
நாராயண பிள்ளை காந்திமதி ஆச்சியின் சார்பில் பேச்சை ஆரம்பித்தார்.
சிறிது நேரம் அவருக்குப் பதில் சொல்லாமல் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான் அழகியநம்பி. அவன் மௌனத்தைக் கண்டு ஆச்சியும் வாய் திறந்தாள்: "உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம் தம்பி! - நான் வற்புறுத்தமாட்டேன். நீங்கள் முன்போலவா இருக்கிறீர்கள்; இப்போது? பலவகையிலும் முன்னேற்றமடைந்து வசதியான விதத்தில் இருக்கிறீர்கள். எத்தனையோ பெரிய இடங்களிலிருந்து உங்களுக்குப் பெண் கொடுக்கத் தயாராயிருப்பார்கள்."
ஆச்சியின் சொற்கள் பொதுவாகக் கூறப்பட்டவை போலிருந்தாலும் அவனைக் குத்திக் காட்டுவதாகத் தோன்றின அவனுக்கு.
மேலும் சிறிது நேரம் யோசித்துக் கொண்டே பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான் அவன்.
"என்ன தம்பீ யோசனை? மனத்தில் படுவதைச் சொல்லுங்கள். தயங்க வேண்டாம்." - என்று துரிதப்படுத்தினார் நாராயண பிள்ளை.
தனக்குள் ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவனைப் போல் தலைநிமிர்ந்தான் அழகியநம்பி. அப்போது உட்புறத்தில் கதவோரமாக அந்த இரண்டு கண்கள் ஏக்கத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அவன் கண்டான். பதினேழு மாதங்களாக அவனைக் காணாமல் ஏமாந்து ஏங்கிய கண்கள் அவை. 'இனியும் என்னால் பொறுக்க முடியாது. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்!' என்று அவனைக் கெஞ்சியது அந்தப் பார்வை. "மணியக்காரரே! இந்த மாத முடிவிற்குள் ஏதாவது நல்ல முகூர்த்தம் இருக்கிறதா? - பார்த்து ஏற்பாடு செய்து விடுங்கள். எனக்குப் பூரணமான சம்மதம் தான். நான் தயார்," - என்று கதவுப் பக்கம் சென்ற தன் பார்வையைத் திருப்பி அவரை நோக்கிக் கூறிவிட்டு எழுந்திருந்தான் அவன்.
'சம்மதிக்க மாட்டான்' - என்று நினைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அவன் சம்மதம் ஆச்சரியத்தை அளித்தது.
"உட்காருங்கள் தம்பீ! கொஞ்சம் பொறுத்திருந்து போகலாம். கோமுவை அனுப்பி உங்கள் அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொல்லுகிறேன். நாலு பெரியவர்களையும் வைத்துக் கொண்டு இந்த நல்ல நேரத்திலேயே வெற்றிலைப் பாக்கு மாற்றி நிச்சயம் செய்து கொண்டு விடலாம்."
"தேவையானால் செய்து கொள்ளுங்கள்! நான் நிலத்துப் பக்கம் போகவேண்டும். எனக்கு வேலை இருக்கிறது." - என்று சொல்லிவிட்டு அவர்களுடைய பதிலுக்குக் காத்துக் கொண்டிருக்காமல் கிளம்பி விட்டான் அவன்.
மறுநாள் அழகியநம்பி எதிர்பாராத ஆச்சரியம் ஒன்று நடந்தது.
"சிரஞ்சீவி முருகேசனுக்கு உன் தங்கையைச் செய்து கொள்ளலாமென்று எங்களுக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கிறது! நீ சம்மதித்துப் பதில் எழுதினால் நாளையே எல்லோரும் பெண் பார்ப்பதற்குப் புறப்பட்டு வந்து சேர்கிறோம்" - என்று முருகேசனின் தந்தை அவனுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அழகியநம்பி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். கடிதத்தை அம்மாவிடம் படித்துக் கொண்டிருந்தான். "சம்மதம் - பெண் பார்க்க வாருங்கள் - என்று பதில் எழுதிவிடு." - என்று அவன் தாய் கூறினாள். அப்படியே முருகேசனின் தந்தைக்குப் பதிலும் எழுதிப் போட்டுவிட்டான்.
முருகேசன் ஏற்கனவே வந்திருந்த போது அழகியநம்பியின் தங்கையைப் பார்த்திருந்தான். அவன் பெற்றோர்களுக்கும் வள்ளியம்மையைப் பார்த்ததும் பிடித்துவிட்டது. அழகியநம்பியின் மேல் முருகேசனின் தந்தைக்கு ஒரு தனிப்பட்ட அபிமானம் இருந்தது. "நல்ல பிள்ளை. படித்திருக்கிறோம் என்று தலை கனத்துப் போய்த் திரியாமல் சொந்த ஊரிலேயே வழி தெரிந்து வகையாக முன்னேறிவிட்டான்." - என்று அவனைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தார் அவர். அதனால்தான் அழகியநம்பியின் குடும்பத்தோடு சம்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசையே அவருக்கு உண்டாயிருந்தது. சீர்சிறப்பு வகைகளிலும் 'அதைச் செய். இதைச் செய்' - என்று அழகியநம்பியிடம் அதிகமாக வற்புறுத்திக் கொண்டிருக்கவில்லை அவர். "உன்னால் முடிந்ததைச் செய்! போதும். நீ எது செய்தாலும் எனக்குச் சம்மதந்தான்." - என்று அவன் இஷ்டப்படி விட்டு விட்டார் அவர்.
"இரண்டு கல்யாணங்களையும் ஒரே முகூர்த்தத்தில் ஒன்றாகச் சேர்த்தே நடத்திவிடலாம்." - என்று காந்திமதி ஆச்சி கூறினாள். எல்லோருக்கும் அந்த யோசனை சரியென்றே தோன்றியது.
கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பமாயின. நாராயண பிள்ளையிலிருந்து புலவர் ஆறுமுகம் வரை குறிஞ்சியூரின் பிரமுகர்கள் எல்லோரும் தங்கள் வீட்டு கல்யாணத்திற்கு ஓடியாடி வேலை செய்வது போல் அலைந்து ஏற்பாடுகளைக் கவனித்தனர். இரண்டு குடும்பங்களுள் நடைபெறும் ஒரு சாதாரணக் கலியாணமாக அது தெரியவில்லை. குறிஞ்சியூர் என்ற பெரிய குடும்பமே அந்தக் கலியாணத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
குறிஞ்சியூரில் அப்போது மனோரம்மியமான பருவகாலம். ஊருக்குப் பன்னீர் தெளிப்பது போல் சாரல் பெய்து கொண்டிருந்தது. அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. சல்லாத் துணிக்குள்ளிருந்து வெட்கத்தோடு தலையை நீட்டிப் பார்க்கும் மணப் பெண்போல் வெண் மேகப் படலங்களுக்கிடையே மலைச் சிகரங்கள் தெரிந்தன. ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள் அத்தனையும் நீர் நிரம்பி நிமிர்ந்து கிடந்தன. எங்கும் பசுமை! எங்கும் குளிர்ச்சி! எங்கும் வளம்! உலகத்தின் மாபெரும் இன்பங்களெல்லாம் அந்த மலைத் தொடருக்கு நடுவே வந்து ஒரு சிறிய கிராமமாக உருப்பெற்றிருப்பது போல் தோன்றியது.
இரண்டு கல்யாணத்துக்காகவும் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், உற்றார், உறவினர், விருந்தினர் வந்து கூடிக் கொண்டிருந்தனர். முகூர்த்தத்திற்கு இன்னும் மூன்றே நாட்கள் இருந்தன. முருகேசன் குடும்பத்தார் மாப்பிள்ளை வீட்டாருக்குரிய மரியாதைகளோடு ஒரு தனி வீட்டில் வந்து தங்கியிருந்தனர். காந்திமதி ஆச்சியின் கடையில் இரண்டு கல்யாணங்களுக்கும் போதுமான பட்சணங்களைச் சமையர்காரர்கள் இரவு பகலாகச் செய்து கொண்டிருந்தனர். தெருவை அடைத்துப் பெரிய பந்தல் போட்டாயிற்று. இரட்டை நாதஸ்வரத்துக்கு நல்ல மேளக்காரராகப் பார்த்துப் பேசி முன் பணம் கொடுத்தாயிற்று. வாசகசாலைக் கந்தப்பனும், புலவர் ஆறுமுகமுமாகச் சேர்ந்து மணமக்களுக்கு வாசித்தளிப்பதற்காக வாழ்த்துமடல் அச்சடித்துக் கொண்டிருந்தார்கள்.
திருமணத்திற்கு முதல் நாள் காலை தன்னுடைய காய்கறிப் பண்ணையில் உருளைக்கிழங்குச் செடிகளுக்குத் தூரில் உரம் அணைத்துக் கொண்டிருந்தான் அழகியநம்பி. திடீரென்று கோமுவின் குரல் அங்கே கேட்டது. நிமிர்ந்து பார்த்தான். வயல் வரப்புகளின் மேல் கோமு ஓடிவந்து கொண்டிருந்தாள்.
"என்ன கோமு? என்ன சமாசாரம்? இவ்வளவு அவசரமாக ஓடி வந்தே?" - என்று கேட்டான் அவன்.
"மாமா, உங்களைத் தேடிக் கொண்டு யாரோ குடும்பத்தோடு வந்திருக்கிறார். அவர் பேசுவதைப் பார்த்தால் நம் பக்கத்து மனிதர் மாதிரியில்லை. நாராயண பிள்ளை என்னை அனுப்பினார். உங்களை உடனே கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்." - என்றாள் கோமு. அழகியநம்பிக்கு ஆச்சரியமாயிருந்தது. 'யாராயிருக்கலாம்?' - என்று யோசித்துப் பார்த்தான், தெரியவில்லை. 'போய்ப் பார்த்தால் தானே தெரிகிறது' - என்று கோமுவுடன் புறப்பட்டான். வீட்டை அடைகிறவரை ஓயாத சிந்தனையோடு தான் நடந்தான். வீட்டு வாசலில் வந்து தேடி வந்திருக்கிற மனிதரைப் பார்த்தவுடன் அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. சபாரத்தினம் தான் வந்திருந்தார். எவ்வளவு நாட்களுக்குப் பின் நினைவு வைத்துக் கொண்டு வந்திருக்கிறார். அப்படியே சிறுகுழந்தை போல் திண்ணைமேல் தாவி அவரைக் கட்டித் தழுவிக் கொண்டான் அவன்.
"உங்களுக்குக் கலியாணம் என்பது எனக்குத் தெரியாது. நானும் என் வீட்டிலுள்ளவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு ஒன்றரை மாதத்திற்கு மேலாயிற்று. தென்னாட்டில் ஒவ்வொரு கோவில்களாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வருகிறோம். கன்னியாகுமரிக்குப் போய்விட்டுத் திரும்புகிற வழியில் உங்கள் நினைவு வந்தது. 'குறிஞ்சியூர்' என்று நீங்கள் சொல்லிய ஞாபகமிருந்ததினால் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்." - என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார். அவருடைய அந்தச் சிரிப்பை அவ்வளவு நாளுக்குப் பின் மறுபடியும் காண நேர்ந்த வியப்பில் மூழ்கிக் கொண்டிருந்தான் அழகியநம்பி.
நாராயண பிள்ளை முதலியவர்களுக்குச் சபாரத்தினத்தை அறிமுகப்படுத்தி வைத்தான். அவனைப் பார்த்துவிட்டு உடனே திரும்பும் நோக்கத்தோடு வந்திருந்த அவர். திருமணத்திற்கும் இருந்துவிட்டுப் போக எண்ணினார். அழகியநம்பியும் அவரை வற்புறுத்தினான். அவர் மேலும் இரண்டு மூன்று நாள் அங்கே தங்க இணங்கினார்.
அன்று மாலை சபாரத்தினத்தையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய காய்கறிப் பண்ணையைச் சுற்றிக் காட்டுவதற்குப் புறப்பட்டான் அழகியநம்பி.
சுற்றிலும் தெரிந்த கருநீல மலைத் தொடர்களையும், வயல்வெளிகளையும், மற்ற இயற்கை வளங்களையும் பார்த்து மகிழ்ந்து கொண்டே, "அழகியநம்பீ! நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் கிராமத்துக்கு ஈடாக தெய்வலோகத்தைக் கூடச் சொல்ல முடியாது." - என்று பூரிப்போடு கூறினார். சபாரத்தினம். அழகியநம்பி பிரமநாயகத்தைப் பற்றி அவரிடம் விசாரித்தான்.
"அவரைத் தூக்குப் போட்டுவிட்டார்கள். அவருடைய கடை இருந்த இடத்தில் இப்போது ஒரு கசாப்புக் கடை இருக்கிறது." - என்றார் சபாரத்தினம்.
"கசாப்புக் கடை வைப்பதற்கு அது முற்றிலும் பொருத்தமான இடம் தான்." - அவன் சொல்லிவிட்டுச் சிரித்தான். லில்லி, மேரி, வோட்ஹவுஸ் தம்பதிகள் - ஆகியோரைப் பற்றி விசாரித்த போது, "அதற்குப் பின்பு தாம் அவர்களைச் சந்திக்கவே நேரவில்லை." - என்று அவர் தெரிவித்தார்.
ஊருக்கு வந்த பின் தன் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளை அவருக்குத் தொகுத்துச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "ஏதேது! நீங்கள் பெரிய அசுரசாதனை தான் செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. கேட்டால் பிரமிப்பாக இருக்கிறது எனக்கு." - என்றார் சபாரத்தினம்.
"நான் சாதிக்கவில்லை; சபாரத்தினம்! எனக்குள்ளே ஒரு வெறி, ஒரு முரண்டு, - சதா என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தது. நினைத்ததை நிறைவேற்றிவிட வேண்டுமென்று எங்கிருந்தோ ஒரு பிடிவாதம் என் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டு என் கைகளை உழைக்கச் செய்தது. இப்போது நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது; 'நான் தானா இவ்வளவு செய்தேன்?' என்று என் மேலேயே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது."
"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இப்படி ஒரு சிறு பொறி இருக்கத்தான் இருக்கிறது. எப்போதாவது அது ஒளி காட்டி வெற்றி பெறுகிறது." - என்றார் சபாரத்தினம்.
"என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய இந்தக் கிராமத்திற்குக் கொழும்பிலிருந்து திரும்பி வந்து இறங்கிய விநாடியிலேயே அந்த இலட்சியப் பொறி பற்றிக் கொண்டு விட்டது! அதோ பாருங்கள்! உங்கள் கண் பார்வைக்குத் தென்படுகிற அந்தப் பசுமை முழுதும் நான் இந்த இரண்டு கைகளினால் உழைத்து உருவாக்கிய பூமி." - என்று பெருமிதம் பொங்கும் குரலில் அவருக்குப் பண்ணையைக் காட்டினான் அழகியநம்பி.
இருவரும் ஆற்றுப் படுகையில் ஏறி வயலுக்குள் நுழைந்தார்கள். தக்காளிச் செடிகளின் பக்கமாக அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். செடி தாங்காமல் நெருப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாகத் தக்காளிப் பழங்கள் தெரிந்தன.
"இந்தப் பழங்களுக்குத்தான் எவ்வளவு சிவப்பு? இவ்வளவு சிவப்பான தக்காளிப் பழங்களை இலங்கையில் கூட நான் பார்த்ததில்லை!" - என்றார் சபாரத்தினம்.
"எப்படிப் பார்த்திருக்க முடியும்? இந்த மண்ணில் நான் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தமும் அல்லவா இப்படிப் பழுத்திருக்கின்றன! நான் சிந்திய இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் இப்போது என்னைப் பெற்றெடுத்த மண் இப்படி எனக்குத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது." - இந்த வார்த்தைகளைக் கூறும் போது அழகியநம்பிக்குக் கண்களில் நீர் துளிர்த்து விட்டது.