அப்பா அலுவலகத்துக்குக் கிளம்பிய உடனே, வள்ளி தேநீர் தயாரிக்கத் தொடங்கினாள். ரமேஷ் உடைந்த கண்ணாடிச் சில்லுகளைப் பெருக்கி எடுத்தான்.
வள்ளிக்கு எட்டு வயதுதான் என்றாலும், அவர்களது அம்மாவுக்குப் பிடித்தமாதிரி திடமான, இனிப்பான தேநீர் தயாரிக்கக் கற்றுக் கொண்டிருந்தாள். தேநீரைக் குடிப்பதற்கு நடுநடுவே அம்மா சூடான கோப்பையால் தலைவலிக்காக நெற்றியிலும், வீங்கிய கன்னத்திலும் அழுத்தி ஒத்தடம் கொடுத்தார்.
விழுந்துவிட்டேன். இடறி விட்டது. கைதவறிக் கீழே விழுந்து கண்ணாடிக் கோப்பை உடைந்துவிட்டது.
இவையெல்லாம் அம்மா வழக்கமாகச் சொல்லும் சாக்குகள். அவற்றை ஆராய யாரும் முயலவில்லை. அதே பொய்களைக் குழந்தைகளும் சொல்லிய போதும் யாரும் எதுவும் செய்யவில்லை.
“என்ன மூன்று நாட்களாக தினமும் பிரெட் வாங்குகிறீர்கள்?” என்று வீட்டருகிலிருந்த கடைக்காரர் முருகன் கேட்டார்.
அந்தக் காலை வேளையில் கடையில் வாடிக்கையாளர்கள் அதிகம் இல்லாததால், வள்ளி வாங்கிய பொருட்களைத் தனது கணக்குப் புத்தகத்தில் எழுதிக்கொண்டே, வள்ளியிடம் பேச்சுக்கொடுத்தார். “உங்க அம்மாவுக்கு சமைக்க முடியாத அளவு உடல்நிலை சரியில்லைன்னா, அவரை மருத்துவரிடம் அழைத்துப்போக வேண்டாமா?” என்று கேட்டார் முருகன்.
“இது அந்தமாதிரி வியாதி இல்லை, முருகன் அண்ணா” என்று வள்ளி பெருமூச்சுவிட்டாள்.
“பின் எந்த மாதிரி வியாதி?” என்று முருகன் விடாமல் கேட்டார்.
“சாலையில் கால் இடறி, தோள் தரையில படுகிறமாதிரி விழுந்துட்டாங்க. அதனால தோள் வலிதான் மோசமா இருக்கு” என்று அம்மா கூறிய பொய்யையே வள்ளி திருப்பிச் சொன்னாள். ஆனால், அவளது கண்களோ வேறு கதையைக் கூறின. அவள் முருகனின் கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்தாள். அவருக்கு சங்கடமாக இருந்தது. என்னவோ சரியில்லை!
அன்று மாலையில், அவர் தனது மனைவி சரசாவுடன் இது பற்றிப் பேசினார். வள்ளியின் அம்மா மீனாட்சி பற்றிய உண்மையை சரசா சொன்னதும் அவர் அதிர்ச்சியடைந்தார்.
“இடறவுமில்லை, விழவுமில்லை. அவளுடைய கணவன் ஒரு அரக்கன். பார்க்க ஒரு ஈயைக் கூட அடிக்காத ஆள்போல் இருப்பான்! ஆனால் அதெல்லாம் வெறும் வேஷம்தான். பாவம் மீனாட்சி – குழந்தைகளைக் காப்பாற்றவேண்டி இந்த அடியையும் உதையையும் தாங்கிக்கொண்டு இருக்கிறாள்” என்றார் சரசா.
முருகனுக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. “எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை? நாம் ஏதாவது செய்திருக்கலாம்” என்றார்.
இத்தனைக்கும், இரண்டு குடும்பங்களும் பல ஆண்டுகளாக அதே தெருவில் வசித்து வருகிறார்கள். மீனாட்சியும், அவரது குழந்தைகளும் இவ்வாறு துன்பப்படுவது சரியல்ல.
“அப்போ, இத்தனை நாட்களாக நீங்கள் இதை கவனித்ததே இல்லையா?” என்று சரசா வியப்புடன் வினவினார். ”மீனாட்சியின் காயங்களை? சில வாரங்கள் முன்னே அவள் உதடு கிழிந்திருந்ததை? அதை இப்போது நினைத்தால்கூட என் இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது” என்று பெருமூச்சு விட்டார். “ஆனால் நாம் என்ன செய்யமுடியும்? நாம் தலையிடுவது நிலைமையை இன்னும் மோசமாகத்தான் ஆக்கும்” என்றார்.
மீனாட்சிக்கும் அவரது குழந்தைகளுக்கும் மேலும் பாதகம் ஏற்படுத்திவிடாமல் தன்னால் எப்படி உதவ இயலும் என்று முருகன் யோசித்தார். தீர யோசித்து ஒரு திட்டமும் தீட்டினார்.
முருகன் ஏற்பாடு செய்த உதவி சில நாட்கள் கழித்து வள்ளி வீட்டு வாசலைத் தேடிவந்தது. அது விரிந்த புன்னகையுடன் காக்கிச் சீருடை அணிந்த ஒரு காவல் அதிகாரி வடிவில் வந்தது.
“நான் துணை ஆய்வாளர்(Sub-Inspector) ஜெயா. முருகன் மாமாதான் உங்களைப் பார்க்கச் சொன்னார்.இன்று வேலையிலிருந்து சீக்கிரமாக கிளம்பிவிட்டேன். போகும் வழியில் இங்கே வந்தேன்” என்று அந்த இளம் காவல்துறை அதிகாரி தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
வள்ளி மற்றும் அவள் குடும்பத்தினரின் நல்வாய்ப்பாக, அன்று அவள் அப்பா வேலை விஷயமாக பயணத்திலிருந்தார். அவர் வீட்டிலிருக்கும்போது, அவரது வன்முறைக் குணத்தைத் தூண்டிவிடும்படி எதையேனும் செய்துவிடக்கூடாது என்ற அச்சத்திலேயே மூவரும் இருப்பார்கள்.
“அப்பாவைக் கோபப் படுத்தாதீர்கள்“ என்று மீனாட்சி தன் குழந்தைகளிடம் தினமும் கெஞ்சுவார்.
“பாடக்கூடாது ரமேஷ். வள்ளி தயவுசெய்து பந்தைச் சுவத்துல அடிக்காதே” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
குழந்தைகள் இதையெல்லாம் சொல்லச் சொல்ல எஸ்.ஐ. ஜெயா பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். பிறகு குழந்தைகள் வீட்டுப் பாடங்களைச் செய்துகொண்டிருக்க, அவரும் அம்மாவும் நீண்டநேரம் கிசுகிசுப்பான குரல்களில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர் கிளம்பும் நேரத்தில் தன்னுடைய கைபேசி எண்ணைக் குறித்துக் கொள்ளும்படி கண்டிப்புடன் கூறினார். “எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அழையுங்கள். என்னால் வரமுடியாவிட்டாலும், அப்போது ரோந்திலிருக்கும் போலீஸ்காரரை நிமிடங்களில் உங்கள் வீட்டுக்கு வரச் செய்யமுடியும்” என்று உறுதி கூறினார் ஜெயா.
“ஆனால் என்னிடம் தொலைபேசி இல்லை. என் கணவர் என்னை தொலைபேசி வைத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை” என்றார் அம்மா.
எனினும், அம்மாவைத் தனது எண்ணை எழுதிக்கொள்ள வைத்தார் ஜெயா.
“இந்த மோசமான சூழல் உங்கள் தவறு கிடையாது” என்றவாறே விடை பெற்றுக்கொண்டு தனது பைக்கை எடுத்தார். “இந்த வன்முறை சரி கிடையாது. இது இயல்பானது என்று எண்ணிக்கொண்டு நீங்கள் மூவரும் அமைதியாகத் துன்பப்படத் தேவையில்லை. மீனாட்சி! நீங்கள் நாம் பேசியதைப் பற்றி யோசித்து, நான் சொன்னதில் சிலவற்றையாவது செய்யவேண்டும்” என்றும் சொன்னார்.
ஜெயா கிளம்பிச் சென்றபிறகு, அவர் கூறியதன் அர்த்தம் என்னவென்று வள்ளி அம்மாவிடம் கேட்டாள்.
“நம் நிலைமையைப் பற்றி குடும்பத்திலிருக்கும் வேறு யாருக்காவது எழுதச் சொல்கிறார் அவர். நம் பிரச்சனையை மறைத்துக்கொண்டே இருக்கக்கூடாது; நம்மீது அக்கறை உள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிறார். வேண்டுமென்றால் காவல்நிலையத்தில் நான் புகார் கொடுக்கலாம் என்றும் சொல்கிறார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதெல்லாம் உண்மையிலேயே நமக்கு உதவுமா?” என்றார் அம்மா.
ரமேஷ் நம்பிக்கையில்லாமல் தலையாட்டினான். அவன் பெரும்பாலான நேரம் எரிச்சலான மனநிலையில் இருப்பதோடு, எல்லோரையும் சந்தேகப்படத் தொடங்கிவிட்டான். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு முறையும் அம்மாவுக்கு உதவ முன்வரும்போது, அவன் அப்பாவின் கோபத்திற்கும் ஆளாகிறான்.
“எப்படியும் அந்த எஸ்ஐ தன் சொந்த தொலைபேசி எண்ணைக் கொடுத்திருக்கமாட்டார். வேண்டுமென்றால் அந்த எண்ணை அழைத்துப் பாருங்கள். ஏதாவது பதிவு செய்யப்பட்ட குரல்தான் கேட்கும். இல்லையென்றால் யாருமே அழைப்பை எடுக்கமாட்டார்கள். ஒரு முழு சாக்லேட் பந்தயம்” என்று கசப்புடன் தாய்க்கும் தங்கைக்கும் சவால்விட்டான் ரமேஷ்.
“அப்படியென்றால் முதலில் நாம் யாருக்காவது கடிதம் எழுதலாம். ஏன் நம் பாட்டிக்கு எழுதக்கூடாது? ” என்றாள் வள்ளி. அப்பாவுக்கு அவரது அம்மா என்றால் கொஞ்சம் பயமென வள்ளிக்குத் தெரியும்.
சில நாட்கள் ஆனாலும், அம்மா ஒருவழியாக பாட்டிக்குக் கடிதம் எழுதினார். அனைவரும் பதிலுக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். பாட்டி ஒரு தடவை இங்கே வந்தால் நன்றாக இருக்கும். அவர் குழந்தைகளிடம் சிறிது கண்டிப்புடனே நடந்துகொள்வார். எனினும், பாட்டி வந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவர் வீட்டிலேயே செய்த தின்பண்டங்களையும் டின்களில் எடுத்து வருவார்.
பாட்டி வள்ளிக்கு தினமும் விதவிதமாய்ப் பின்னல்கள் போட்டுவிடுவார். அந்த முடுக்குச் சந்தில் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவார். சில சமயம் அம்மாவும் அவர்களுடன் சேர்ந்துகொள்வார். பாட்டியும் ரமேஷும் வீட்டில் பாடுவார்கள். அப்பாவுக்கு எரிச்சல் வந்தாலும், பாட்டி இருப்பதால்தன் கோபத்தை அடக்கிக்கொள்வார். ஆம், இந்த வன்முறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று பாட்டி அப்பாவிடம் சொல்லிவிடுவார்.
ஆனால், இரண்டு வாரங்களாகியும் பாட்டியிடமிருந்து எந்த பதிலும் வராததால், மூவரையும் கவலை பிடித்துக்கொண்டது. அடுத்து என்ன செய்வதென்ற வருத்தத்தில் மூழ்கினர். பயணத்தில் இருந்து திரும்பிய அப்பா, அவர்களுக்காக ஒரு செய்தியைக் கூறினார்.
“சில நாட்களுக்கு முன்னர் என் அம்மா அழைத்திருந்தார். நாளை அவர் இங்கே வருகிறார். சில மாதங்கள் இங்கேதான் இருக்கப்போகிறாரம். மாதங்கள்! இங்கே…” வெறுப்பான குரலில் சொல்லிக்கொண்டே சிறிது பணத்தை அடுப்பறை மேடையில் எறிந்தார்.
“கடையில் பழைய பாக்கியைக் கொடுத்துவிட்டு, மாத சாமான்களோடு என் அம்மாவுக்குப் பிடித்த ஸ்பெஷல் காஃபித்தூள் மறக்காமல் வாங்கிவிடு” என்று சொல்லிமுடித்தார். கோபத்துடன் கதவை அறைந்து சாத்திக்கொண்டு அவர் வெளியில் சென்றவுடன், குழந்தைகள் மகிழ்ச்சியில் குதித்தனர்.
“அம்மா, அந்த பணத்தில் கொஞ்சத்தை இனிப்பு வாங்கத் தாங்களேன்!” என்று ரமேஷ் கெஞ்சினான். அம்மா சம்மதித்தார்.
பணத்தைவிடவும் அவரது அந்த அரைகுறைப் புன்னகையே குழந்தைகளுக்கு அரிதாகக் கிடைப்பதாக இருந்தது.
பள்ளிக்குச் செல்லும் வழியில், ரமேஷும் வள்ளியும், முருகனின் கடையில் நின்றனர். அவர்கள் வீட்டுக்கு எஸ்.ஐ. ஜெயா வந்துபோன பிறகு, சமயம் கிடைத்தபோதெல்லாம் முருகன் குழந்தைகளிடம் பேசினார். இப்போது அவர்கள் கடையில் நுழைந்த போது அவர் வியாபார சுறுசுறுப்பில் இருந்ததால், ரமேஷைக் கடையில் இனிப்புகள் இருக்கும் பக்கமாகத் தள்ளிக்கொண்டு போனாள் வள்ளி.
“வேறெதுவும் வாங்கும் முன்னால் எனக்கு அந்த சாக்லேட்டை வாங்கிக் கொடு. ஏனென்றால் நிச்சயம் நான்தான் பந்தயத்தில் வெல்லப் போகிறேன்” என்று கேட்டாள் வள்ளி. எஸ்.ஐ. ஜெயா வீட்டுக்கு வந்த அன்று போட்ட பந்தயத்தை நினைவுகூற ரமேஷுக்கு ஒரு நிமிடம் ஆயிற்று.
அவன் சிரித்துவிட்டு தன் தங்கையை வேகமாகத் தேர்ந்தெடுக்கச் சொன்னான். வள்ளி வேண்டிய சாக்லேட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு, முருகனிடம் சென்று அவரது தொலைபேசியைப் பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்டாள். பின் அவள் ஜெயாவின் எண்ணை அழைத்தாள்.
“சொல்லுங்க முருகன் மாமா,” என்று ஒரு பழக்கப்பட்ட குரல் எதிர்முனையிலிருந்து கேட்டது.
வள்ளி ரமேஷிடம் கட்டை விரலை உயர்த்தி வெற்றிச் சின்னம் காட்டினாள். அந்தக் காவல்துறை அதிகாரி தொலைபேசியில் அழைத்தால் பதில் பேசமாட்டாரென்றுதானே அவன் நினைத்திருந்தான்.
“ஜெயா அக்கா, நான்தான் வள்ளி.”
“எல்லாம் நலமா வள்ளி? ஏதாவது உதவி வேண்டுமா? ” என்று ஜெயா அக்கறையுடன் விசாரித்தார்.
“நாங்கள் நன்றாக இருக்கிறோம் அக்கா. அம்மா, எங்கள் நிலைமை எவ்வளவு மோசமென்றும் அப்பாவைப் பற்றியும் எழுதியதால், பாட்டி ஊரிலிருந்து எங்களோடு சில மாதங்கள் தங்குவதற்காக வரப்போகிறார் என்று சொல்லத்தான் அழைத்தேன்.”
“ரொம்ப நல்ல செய்தி! மேலும், என்னை எப்படித் தொடர்புகொள்வதென தெரிந்துகொண்டாய்தானே? எப்போது வேண்டுமானாலும் என்னை உதவிக்கு அழைக்கலாம்” என்றார்.
தொலைபேசி அழைப்பு முடிந்தது; முருகன் கேட்ட பல கேள்விகளுக்கு விடையும் கிடைத்தது. கடையை விட்டு வெளியேறும்போது குழந்தைகள் தங்கள் சாக்லேட் உறைகளைப் பிரிக்கத் தொடங்கினர்.
வள்ளிக்கு மனம் லேசாக இருந்தது. அவர்கள் பகிர்ந்துண்ணும் சாக்லேட் மட்டுமே அதற்குக் காரணமல்ல. அவள் அண்ணனிடமிருந்து பந்தயத்தில் வென்ற முழு அதிகப்படி சாக்லேட்டும் கூட அதற்குக் காரணமல்ல.
பள்ளிக்குப் போகும்போது, பல மாதங்கள் கழித்து முதன்முதலாக ரமேஷ் சன்னமான குரலில் தனக்குத் தானே பாடிக்கொண்டு வந்ததுதான் காரணம்.
வீட்டில் நடக்கும் வன்கொடுமையைக் குழந்தைகள் சமாளிக்கும் வழிகள் கொடுமைப்படுத்தும் அல்லது வன்முறையான பெற்றோரோடு வாழும் குழந்தைகள் பெரும்பாலும் அச்சமுற்றோ, கோபமாகவோ அல்லது அவமானவாகவோ உணர்கிறார்கள். இது இயல்பானதே.
இவ்வாறான சூழலில் வாழும் யாரையும் உங்களுக்குத் தெரியுமானால், அவர்களிடம் பின்வருவனவற்றைச் சொல்லுங்கள்: யாரும் வன்முறையை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அனைத்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பாதுகாப்புடன், அதுவும் தங்கள் வீட்டுக்குள்ளே பாதுகாப்பாக, வாழ்வதற்கான உரிமையுள்ளது.வன்கொடுமை எப்போதுமே அதை அனுபவிக்கும் குழந்தையின் தவறல்ல. அந்தக் குழந்தைகளின் செயல்களோ நடத்தையோ வன்கொடுமைக்குக் காரணமல்ல. வன்கொடுமை என்பது வீட்டில் அரங்கேறும் குற்றம். இந்தியாவில், இக்குற்றம் பற்றிப் புகார் கொடுக்கப்பட்டால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சட்டப்படி பாதுகாப்புக் கிடைக்கும். குற்றம் புரிந்தவர்கள் கண்டிப்பாகத் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
வன்கொடுமையைப் பற்றி குழந்தைகள் தாங்களாக புகாரளிக்க முடியாதபோது, அவர்களது நண்பர்களும் வகுப்பினரும் பின்வரும் வழிகளில் உதவலாம்:
அவர்களது பிரச்சனையை நம்பிக்கைக்கு உரியவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு ஆலோசனை சொல்லி, அவர்கள் அப்படிச் சொல்வதை உறுதி செய்யலாம். நம்பிக்கைக்குரிய பெரியவர்கள் தாத்தா பாட்டியாகவோ, நெருங்கிய உறவினர்களாகவோ, பக்கத்து வீட்டுக்காரர்களாகவோ, பள்ளித்தலைமை ஆசிரியராகவோ இருக்கலாம்.
அவர்களது பெற்றோரிடம் பிரச்சனையைக் குறித்துப் பேசி பெற்றோரின் உதவியை நாடலாம்.
தேவைப்பட்டால் அவர்கள் சார்பாக 1098ஐ அழைக்கலாம். இது ஒரு குழந்தைகள் உதவி எண்(சைல்டுலைன்), இந்தியாவின் எப்பகுதியிலிருந்து குழந்தைகளோ பெரியவர்களோ 24 மணிநேரமும் அழைக்கலாம். குழந்தைகள் மீதான வன்கொடுமை, அவர்கள் பெற்றோர் மீதான வன்முறை, அல்லது குழந்தைகள் மீதான எந்தக் குற்றத்திலும் பாதுகாப்பு கோரும் குழந்தைகளுக்கு உடனடி உதவியை இம்மையம் ஏற்பாடு செய்யும்.