அம்மாவுக்கு நாய்களைப் பிடிக்கும்.
பாட்டிக்கு பூனைகளைப் பிடிக்கும்.
பியாவுக்கு நாய்களையும் பூனைகளையும் பிடிக்கும்.
பாபா சின்ன வயதில் 13 பூனைகள் வைத்திருந்தாராம்!
ஆனால் பொம்மிக்கு பூனைகள், நாய்களிடம் பயம்.
எல்லா உயிரினங்களிடமும் பயம்.
அப்போது, பொம்மியும் அவளது குடும்பமும் கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாதுக்கு இடம் மாற வேண்டியிருந்தது.
பாட்டி, தாத்தா, அன்பான எல்லோரிடமிருந்தும் தூரமாக வந்திருந்தாள் பொம்மி. அவளுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. பொம்மி, தினமும் மாலை முழுதும் அவள் இருந்த குடியிருப்பைச் சுற்றி தனியாக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பாள்.
ஒருநாள், “பொம்மி, இங்கே வா!” என்று அழைத்தார் பாபா. “இந்த நாயைப் பாரேன். பசியாக இருப்பது போலத் தெரிகிறது. நீ அதுக்கு சாப்பாடு கொடுக்கிறாயா?’’ என்று கேட்டார்.
பொம்மி வேண்டா வெறுப்பாக மாடி முகப்பிற்கு வந்து பார்த்தாள். ஆனால்...
இதைப்போல எந்த நாயும் ஒருபோதும் பொம்மியைக் கவர்ந்ததில்லை. இந்த நாய்க்கு பெரிய பழுப்பு நிறக்கண்கள் இருந்தன. மிருதுவான பழுப்பும், வெள்ளையும் கலந்த உடலும் முடி அடர்ந்த வாலும் இருந்தன. இருவரின் கண்களும் சந்தித்தன. நேரம் உறைந்தது.
“வாவ்வ்வ்!”
“பொம்மிக்கு டாமிய லவ் பண்றா” என்று பியா கேலி செய்தாள். ஆனால், பொம்மி அதைக் கண்டுகொள்ளவே இல்லை. டாமியின் கவனமும் எப்போதும் பொம்மி மீதுதான்.
பாபாவும் பொம்மியும் அந்த நாயுடன் நண்பர்களாகி விட்டனர். அக்கம்பக்கத்தில் அந்த நாயை டாமி என்று அழைத்தனர். டாமிக்கு பிஸ்கட்டுகள், சப்பாத்தி மற்றும் பருப்பு சாதம் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஒருநாள், டாமி அதற்குப் பிடித்த மரத்தடியில் இருந்தது. திடீரென்று வானம் கறுத்தது.
ஒரு மின்னல் வெட்டியது. இடி இடித்தது. சோவென மழை அடித்தது.
பொம்மியும் பியாவும் கத்திக்கொண்டே மழைக்கு நனையாமல் வீட்டுக்குள் ஓடினர்.
டாமி வேறு எங்கோ ஓடியது. அதைப் பார்த்த பொம்மி, “ஏ, டாமி, எங்க போற? மழையில நனைஞ்சிடுவ, இங்க வா!” என்று கத்தினாள்.
ஆனால், டாமி சீக்கிரமே திரும்பி வந்தது. “ நல்ல டாமி! நான் கவலைப் பட்டேன். ஓய்! என்னை எதுக்கு இப்போ இழுக்கறே, டாமி? என்ன பிரச்சனை?” என்றாள் பொம்மி.
பொம்மி, பியாவை டாமி தெருக் கடைசிக்கு கூட்டிச் சென்றது. அங்கே மின்னும் இரண்டு கண்களைக் காட்டியது.
“அடடா! பூனைக்குட்டிகள் வடிகால்ல மாட்டிட்டு இருக்கே” என்றாள் பொம்மி.
பயத்தை உதறிவிட்டு, டாமியின் வீரத்தை அன்போடு மெச்சிய பொம்மி விரைவாக பூனைக்குட்டிகளை வெளியே எடுத்தாள். பியா அவற்றைத் தன் பாவாடையில் மூடி வைத்துக் கொண்டாள்.
“அம்மா, இங்க வாங்க, இந்த டாமி யாரைக் காப்பாத்திருக்கு பாருங்க” என்று சொல்லியபடி பொம்மி பியாவின் பாவாடையை சுட்டிக் காட்டினாள்.
அம்மா வந்து அந்தப் பூனைக்குட்டிகளைக் கைகளில் ஏந்திக் கொண்டார். குனிந்து அவற்றைக் கொஞ்சினார். பொம்மியும் பியாவும் இருப்பது கூட அவருக்கு மறந்துவிட்டது.
திடீரென்று, “இதுங்க அம்மா எங்க? குட்டிகளத் தேடிட்டு இருக்கப் போகுது” என்றார்.
மழை நின்றதுமே, அம்மா, பொம்மி, பியா அனைவரும் கைக்கு ஒரு பூனைக்குட்டியைத் தூக்கிக் கொண்டு டாமியும் உடன் ஓடிவர அம்மா பூனையைத் தேடினர்.
ஆனால் அந்த அம்மா பூனையை எங்கேயும் காணவில்லை.
அதனால், அம்மா எல்லாப் பூனைகளையும் கவனமாக எடுத்துக் கொண்டு பியா, பொம்மியுடன் ஆட்டோவில் ஏறினார். அவர்கள் அருகிலிருந்த விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவரிடம் விரைந்தனர்.
விலங்குகள் காப்பகத்திற்கு பொம்மி இப்போதுதான் முதல் முறையாக வந்திருக்கிறாள்.
அங்கே, எங்கே பார்த்தாலும் நாய்கள், நாய்க்குட்டிகள், பூனைகள் நிறைந்து இருந்தன. காப்பாற்றப்பட்ட சில ஆடுகளும் பன்றிகளும் கூட இருந்தன.
மருத்துவர் அகில் பந்து, பூனைக்குட்டிகளைப் பரிசோதித்துவிட்டு புன்னகைத்தார். “இவை நலமாக இருக்கின்றன. உடல் சூடும் சரியாகவே இருக்கிறது. கவலை வேண்டாம். ஆனால், இவை தங்கள் அம்மா இல்லாமல் காப்பகத்தில் இருக்க சிரமப்படும். நீங்கள் சில நாட்கள் பராமரிக்க இயலுமா? பின்னர், தத்துக் கொடுத்துவிடலாம், சரியா?” என்றார்.
“நாம வெச்சுப் பாத்துக்கலாம், நாங்க பாத்துக்கறோம், அம்மா” என்று பியாவும் பொம்மியும் கெஞ்சினர். அம்மா பாபாவுக்கு போன் செய்தார்.
பாபாவுக்கு தான் வைத்திருந்த 13 பூனைகளின் ஞாபகம் வந்தது. உடனே சம்மதித்தார். “செல்லங்களா, நீங்கதானே பூனைக்குட்டிகளக் காப்பாத்தினீங்க. இப்போ, இதுகளுக்கு புது வீடுகளைக் கண்டுபிடிச்சுத் தரவேண்டியது உங்க கடமை” என்று சொன்னார்.
“ப்ளீஸ் அம்மா, ப்ளீஸ்!”
பொம்மியின் பக்கத்துவீட்டு ஸ்ரேயா அக்கா இரண்டு குட்டிகளை வைத்துக் கொள்ள இசைந்தார்.
பாபாவும் அம்மாவும் மீதமிருந்த குட்டிகளை வைத்துக் கொள்ள சம்மதித்தனர். பொம்மி மிக்க மகிழ்ந்தாள்.
ஒரு புது உலகைக் கண்டாள், பொம்மி. நிறைய விலங்குகளுக்கு அன்பும், தோழமையும் தேவையாக இருந்தது. தன் கோடை விடுமுறையை எங்கே, எப்படிக் கழிக்க வேண்டும் என்று இப்போது பொம்மிக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது - ஆம், விலங்குகள் காப்பகத்தில்தான்.
பொம்மிக்கு ஆச்சரியம் என்னவென்றால், விலங்குகள் தோழமையோடு இருந்ததுதான். “இவை எப்போதுமே இவ்வளவு தோழமையோடும் அழகோடும்தான் இருந்தனவா? என்று வியந்தாள்.
சுற்றுவட்டாரத்தில், டாமிதான் ஹீரோ.
ஸ்ரேயா அக்கா, பூனைக்குட்டிகளுக்கு ஜேசன், மியாவ்கி என்று பெயரிட்டார். பொம்மியும் தன் பூனைக்குட்டிக்கு பெயரிட விரும்பினாள். “நான் இந்தக்குட்டிக்கு புஸ்கின் என்று பெயரிட விரும்புகிறேன்” என்றார் அம்மா.
புஸ்கின் பொம்மியிடம் ஓடி வந்தது. அதன் கண்கள் இருட்டில் ஜொலித்தன.. பொம்மி அதன் நெற்றியில் ஒரு குட்டி முத்தமிட்டாள். இப்போதெல்லாம் எந்த உயிரினமும் பொம்மியைப் பயமுறுத்துவதில்லை.
பொம்மி மனம் முழுக்க நேசம், மீண்டும்.