மழை நின்றுவிட்டது. ஆனால் இன்னும் குளிர்காலம் தொடங்கவில்லை. இந்தப் பருவத்துக்குப் பெயர் இலையுதிர்காலம், சமஸ்கிருதத்தில் ‘ஷரத் ரிது’.
ஹச்சூ... எனக்குச் சளி பிடித்துவிட்டது. காலநிலை மாறுவதால் பலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. எல்லாக் குழந்தைகளும் தசராவுக்கு முன் குணமாகிவிடுவார்கள் என்கிறார் பாட்டி.
இந்தப் பருவத்தில் பல விழாக்கள் வருகின்றன. மனு என்னுடைய மாங்காய் மரத்திலிருந்து இலைகளைப் பறித்து ஓர் அழகான தோரணம் கட்டி வாசலில் தொங்கவிடுகிறான். இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த தோரணம் அதுதான்!
வானத்தில் நீல நிறம். அதில் ஆங்காங்கே வெள்ளை மேகங்கள் பஞ்சுப் பொதிகளைப்போல் மின்னுகின்றன. எங்கும் ஒரே அமைதி. இன்றைக்கு நாங்கள் ஷரத் பூர்ணிமாவைக் கொண்டாடப்போகிறோம். இந்த விழாவுக்குக் ‘கோஜகிரி’ என்றும் ஒரு பெயர் உண்டு.
பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் சுற்றியுள்ள அனைத்தும் வெள்ளிபோல் பளபளக்கின்றன. நாங்கள் இன்று இரவுமுழுக்க விழித்திருப்போம். தேங்காய், அரிசி, பால் போன்ற வெள்ளைப் பொருள்களைக் கொண்டு செய்த சூடான பாயசத்தைக் குடிப்போம்.
மீரா இன்றைக்கு ஓணம் கொண்டாடுகிறாள். அது ஒரு மகிழ்ச்சித் திருவிழா. அவளுடைய வீட்டில் எல்லாரும் சேர்ந்து அழகிய பூக்கோலம் போடுகிறார்கள்.
இந்த நேரத்தில் எல்லாப் பயிர்களும் அறுவடை செய்யப்பட்டிருக்குமாம். ஆகவே, எல்லாரிடமும் போதுமான அளவு தானியம் இருக்குமாம், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்களாம். கேரளாவின் புகழ் பெற்ற படகுப் பந்தயங்கள் இந்த நேரத்தில்தான் நடைபெறும். ஆஹா! நானும் அதைக் கொண்டாட விரும்புகிறேன்!
இதோ, தசரா விடுமுறைகள் வந்துவிட்டன. இதற்காகத் தமிழக மக்கள் நவராத்திரி கொலு வைப்பார்கள். ஒன்பது படிகளில் பொம்மைகளை அமைத்து அழகுபடுத்துவார்கள்.
இந்தப் பண்டிகையின்போது மனுவும் நானும் இந்தியப் பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ளப்போகிறோம்.
நான் மிருதங்கம்வாசிக்க விரும்புகிறேன்... தொம்! தொம்!தொம்! மனு புல்லாங்குழல் கற்றுக்கொள்ள விரும்புகிறான்.
அம்மா ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்!
தீபாவளியும் விரைவில் வந்துவிடும். நிலா வெளிச்சம் இல்லாத இருட்டில் எல்லா வீடுகளிலும் தீபங்கள், மெழுகுவர்த்திகள் ஏற்றிவைக்கப்பட்டிருப்பது மிக அழகாக இருக்கும்.
சில வீடுகளில் எரிந்து அணைந்து மீண்டும் எரியும் மின்சார விளக்குகளையும் தொங்கவிடுவார்கள். எனக்குப் பட்டாசு வெடிக்கப் பிடிக்கும். ஆனால், பட்டாசு வெடிப்பதனால் காற்றுக்குக் கெடுதல் என்று எங்கள் ஆசிரியர் சொல்கிறார்.
நாம் தண்ணீர், காற்று, நிலத்தைக் கவனித்துக்கொள்ளாவிட்டால் சில ஆண்டுகளில் எல்லாப் பருவங்களும் மாறிவிடும் என்கிறார் என் ஆசிரியர். அது எப்படி சாத்தியம்? எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
குளிர் அதிகரித்துவிட்டது. ஷரத் ரிதுவுக்கு அடுத்து வரும் பருவம் சமஸ்கிருதத்தில் ‘ஹேமந்த் ரிது’ என்று அழைக்கப்படுமாம், பாட்டி சொல்கிறார். இந்தியாவில் அது ஒரு மிகச் சிறிய பருவம்தான். குளிர்காலம் விரைவில் வந்துவிடும்!