puchkuvukku oru puthagam

புச்குவுக்கு ஒரு புத்தகம்

புச்கு எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டாள். பின்னர், நூலக அலமாரியின் மேல் அடுக்கில் இன்னும் பல புத்தகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தாள். ஆனால் புச்குவின் உயரம் குறைவு. அலமாரியோ மிக உயரமானது. அவளுக்குப் பிடித்த புத்தகங்களை அவள் எப்படி அடையப் போகிறாள்?

- S Krishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“புச்கு! குளி!”

“புச்கு! சாப்பிடு!”

“ புச்கு! வகுப்புக்குப் போ!”

“புச்கு! பேருந்தில்  ஏறு!”

“புச்கு! வீட்டுப்பாடம் செய்!”

“புச்கு எங்கே?”

புச்கு வேலையாக இருக்கிறாள்.

அவளுக்குப் படிக்க ஒரு புத்தகம் கிடைத்துள்ளது.

புச்கு எப்போதுமே படித்துக் கொண்டிருப்பாள் - வீட்டில், பள்ளியில், பூங்காவில், படுக்கையில்.

பக்கம் பக்கமாக, புத்தகம் புத்தகமாக, ஒன்றன் பின் ஒன்றாக, அவள் எல்லாவற்றையும் படித்து விட்டாள்.

“நீ ஏன் எப்போதும் படித்துக் கொண்டேஇருக்கிறாய் புச்கு?” என்கிறான் போல்ட்டு.

“வா, அதற்கு பதிலாக ஒரு ‘கார்ட்டூன்’

பார்க்கலாம்!” என்கிறான் டோட்லா.

“புத்தகங்கள் நிறைய மகிழ்ச்சியைத் தருகின்றன!” என்கிறாள் புச்கு.

“பார் ! ஒரு வட்டம் இருக்கிறதா? இங்கே ஒரு கோடு? அதை அப்படித் தள்ளு, இதை இப்படி இழு. இங்கே ஒரு எழுத்து உருவாகிவிட்டது.

எழுத்துகளை வரிசையாகக் கோர்த்தால் ஒரு வார்த்தை கிடைக்கிறது.வார்த்தைகள் அறிவூட்டுபவையாக, வேடிக்கையானவையாக, சோகமானவையாக, சுறுசுறுப்பு அளிப்பவையாக என்று பலவிதமாக இருக்கலாம்.

வார்த்தைகளை ஒன்றாகச் சேர்த்தால், அவை வாக்கியமாக மாறுகின்றன. வாக்கியங்கள் கதைகளாக

உருவெடுக்கின்றன. படித்துப் பார். ஆஹா!

நீ வேறு ஒரு உலகத்தில் இருப்பதைப் போல உணர்வாய்!”

ஆனால் இன்று, புச்கு குழப்பத்தில் இருக்கிறாள்.

அவள் எல்லாப் புத்தகங்களையும் படித்துத் தீர்த்து விட்டாள்!

நூலகத்தில், அவளுக்கு எட்டும் இடங்களில் உள்ள புத்தகங்களை எல்லாம் முதல் அத்தியாயத்திலிருந்து ’முடிந்தது’ வரை படித்து விட்டாள்.

“நான் என்ன செய்வேன்?

இனிமேல் படிக்கப் புத்தகங்களே இல்லையே!”

என்று புலம்பினாள் புச்கு.

கொஞ்சம் இருங்கள்!

அங்கே என்னவோ இருக்கிறதே!

புச்கு மேலே பார்த்தாள்.

அங்கே ஒன்றல்ல, இரண்டல்ல!

இன்னும் மூன்று அலமாரிகள் நிறைய

புத்தகங்கள் இருந்தன!

“ஆ...! எவ்வளவு புத்தகங்கள்!” புச்கு ஆச்சரியத்தோடு முணுமுணுத்தாள்.

ஆனால், இன்னமும் ஒரு பிரச்சனை இருக்கிறது.

புச்குவின் உயரம் மிகவும் குறைவு; ஆனால் அலமாரியோ மிக மிக உயரம்! புச்கு எப்படி அங்கே  போவாள்?

துணி காயப்போடும் கொடியை வைத்து ஏறலாமா?

அம்மாவின் புடவையை உபயோகித்து ஏறலாமா?

அல்லது இந்த அறையில் உள்ள மேசை, நாற்காலிகளைப் பயன்படுத்தினால் என்ன?

‘இங்கே ஓர் ஒட்டகச்சிவிங்கி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று நினைத்தாள் புச்கு.

‘ஒரு குரங்கு இருந்தால் கூட நன்றாக இருக்கும்.

புச்கு ஒரு திட்டம் போட்டாள். போல்ட்டுவையும் டோட்லாவையும் உதவிக்குக் கூப்பிட்டாள். சத்தம் போடாமல், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஏறினார்கள்.

“போல்ட்டு, நீ கனமாக இருக்கிறாய்!” என்று புகார் கூறினான் டோட்லா.

“அந்தக் கடைசி ரசகுல்லாவைச் சாப்பிடாதே என்று சொன்னேனே, கேட்டாயா?”

“நான் கனமாக இல்லை,  புச்குதான்” என்று கிசுகிசுத்தாள் போல்ட்டு.

“உஷ்! கிட்டத்தட்ட எட்டியாச்சு” என்றாள் புச்கு.

அந்த நொடியில் எல்லாம் பிசகியது.

ஆஆஆஆஆஆ!

“என்ன நடக்கிறது இங்கே?”என்றவாறே வந்தார் ஒரு மிக உயரமான நூலகர்!

அவர் புச்குவைக் கீழே இறக்கினார்.

போல்ட்டுவும் டோட்லாவும் ஓடிவிட்டனர்.

தன் கைக்குக் கிடைக்காமல் போய்விட்ட அந்தப் புத்தகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள் புச்கு.

“நான் உதவட்டுமா?” என்று கேட்டார் அந்த உயரமான நூலகர்.

“நான் அந்த அலமாரியில் ஏற

முயன்றேன். எனக்குப் படிக்க

புத்தகங்கள் இல்லை” என்று வருத்தத்துடன் சொன்னாள் புச்கு.

“அதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?”

என்றார் அந்த  நூலகர்.

“நான் இங்கே இருக்கும் வரை,நீ புத்தகத்தை எடுக்க மேலே ஏற வேண்டியதில்லை.

நான் உன்னைத் தூக்கட்டுமா?”

புச்கு தலையசைத்தாள்.

“நான் இதை எடுத்துக் கொள்கிறேன், இதையும், இதையும் கூட!”

என்று மகிழ்ச்சியோடு சொன்னாள் புச்கு.

“நன்றி!”

“இதையும் எடுத்துக்கொள்” என்றார் நூலகர்.

“நீங்கள் சின்னவராக இருந்தீர்களா?!”

என்று கேட்டாள் புச்கு.

“ஆமாம், உன்னை விடக் குட்டியாக”

என்றார் அந்த உயரமான நூலகர்.

“ஆனால் அப்புறம் வளர்ந்து

விட்டேன். நீயும் கூட வளர்வாய்.

அதுவரை, உனக்கு வேண்டிய

புத்தகத்தை என்னிடம் கேள்.

அதை உனக்கு எடுத்துத் தர

நான் இருக்கிறேன்.’’

ஆனால், புச்கு இதையெல்லாம்   கேட்டுக்  கொண்டிருந்தாளா,   என்ன?

இல்லவே இல்லை!

அவள் புத்தகத்தில் மூழ்கி விட்டாள்.

வட்டத்திலும், கோட்டிலும், ஒவ்வோர் எழுத்தாக,

வார்த்தை வார்த்தையாக. அடுத்தடுத்த வாக்கியங்களாக,

இப்போது ஒரு கதையில்.

ஏனென்றால் புச்குவுக்கு ஒரு புதுப் புத்தகம் கிடைத்திருக்கிறது.