நமது கதாநாயகர் பிரிதிபந்தபுரம் மகாராஜா அவர்களை, ஹிஸ் ஹைனஸ் ஜமேதார் - ஜெனரல், கிலேதார் - மேஜர், சத வியாக்ர ஸ்ம்ஹாரி, மகா ராஜாதி ராஜ விசுவபுவன ஸம்ராட், ஸர் ஜிலானிஜங்ஜங் பகதூர் எம்.ஏ. - டி.ஏ.ஸி.டி.சி., ஸி.ஆர்.ஸி.கே என்றும் சொல்வதுண்டு; 'புலி ராஜா' என்று சுருக்கமாகச் சொல்வதும் உண்டு. அவருக்குப் 'புலி ராஜா' என்ற பெயர் ஏன் வந்தது என்பதைத்தான் இங்கே சொல்ல முன் வந்திருக்கிறேன்; ஆனால் முன் வருவது போல் வந்துவிட்டுப் பின் வாங்கும் உத்தேசம் எனக்குக் கொஞ்சம் கூடக் கிடையாது. "ஸ்டூகா' பாம்பர் விமானம் வந்தாலும் நான் பயப்படப் போவதில்லை, 'ஸ்டூகா'தான் என் கதைக்குப் பயந்து ஓடும் படியிருக்கும்.
புலி ராஜாவைப் பற்றி மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை முதலிலேயே சொல்லிவிடுவது அவசியமாகிறது. ஏனெனில், அவரைப் பற்றிப் படிக்கும் போது, அப்பேர்ப்பட்ட அஸகாய சூரனைக் கண்ணால் பார்க்கவேண்டுமென்ற ஆசை எல்லாருக்கும் அளவில்லாமல் உண்டாகி விடும். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதற்கு வழி கிடையாது. பரதன் ராமனிடம் தசரதரைக் குறித்துச் சொன்ன பிரகாரம் உலகிலே பிறக்கும் ஜீவர்களெல்லாம் கடைசியாக எந்த இடத்துக்குப் போய்ச் சேருகிறார்களோ, அங்கே நமது புலி ராஜாவும் விஜயமாகிவிட்டார். சுருங்கச் சொன்னால், புலி ராஜா இறந்து போனார்!
அவர் எப்படி இறந்து போனார் என்பது ஒரு அதிசயமான விஷயம். அதைக் கதையின் கடைசியிலேதான் சொல்ல வேண்டும். ஆனால், அவருடைய மரணத்தில் ஒரு பெரிய விசேஷம் என்னவென்றால், அவர் பிறந்த காலத்திலேயே, அவர் ஒருநாள் இறந்தும் போவார் என்று ஜோசியர்கள் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார்கள்!
"குழந்தை வீராதி வீரனாகவும் சூராதி சூரனாகவும் தீராதி தீரனாகவும் விளங்குவான். ஆனால்..." என்று மென்று விழுங்கினார்கள். "என்ன சமாசாரம்" என்று அழுத்திக் கேட்டதன் பேரில், "சொல்லக்கூடாது; ஆனாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த ஜாதகனுக்கு ஒரு காலத்தில் மரணம் நேரிடும்" என்றார்கள்.
அந்தச் சமயத்தில் ஒரு பெரிய அதிசயம் நடந்தது. பிறந்த பத்து தினங்கள்தான் ஆன ஜிலானி ஜங்ஜங் பகதூர் வாயிலிருந்து ஒரு ஆச்சரியமான வார்த்தை கிளம்பிற்று. "பிரகஸ்பதிகளே!" என்பதுதான் அந்த வார்த்தை.
எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் நின்று விட்டார்கள் ஒருவரையொருவர் பார்த்து விழித்தார்கள்.
"நான் தான் பேசினேன், பிரகஸ்பதிகளே!"
இந்தத் தடவை சந்தேகத்துக்கே இடமில்லை. பிறந்து பத்தே நாளான குழந்தைதான் அவ்வளவு திவ்வியமாகப் பேசியிருக்கிறது!
தலைமை ஜோசியர் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி விட்டு குழந்தையை உற்றுப் பார்த்தார்.
"பிறந்தவர் யாவரும் இறந்துதானே தீர வேண்டும்? அதற்கு நீங்கள் என்ன ஜோசியம் சொல்வது? மரணம் எந்த விதத்தில் நேரும் என்று சொன்னாலும் அர்த்தம் உண்டு" என்று சின்னஞ்சிறு கீச்சுக் குரலில் யுவராஜா திருவாய் மலர்ந்தார்.
ஜோசியர் தலைவர், மூக்கிலே விரலை வைத்து அதிசயித்தார். பத்து நாள் குழந்தை பேசுகிறது. அதோடு இல்லை - இவ்வளவு புத்திசாலித்தனமான கேள்வி கேட்கிறது என்றால் இதென்ன, யுத்த இலாகா அறிக்கைகளைப் போல் தோன்றுகிறதே தவிர, நம்பக் கூடியதாயிருக்கிறதா.
தலைமை ஜோசியர், மூக்கிலிருந்து விரலை எடுத்துவிட்டு யுவராஜாவை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார்:-
"ரிஷப லக்கினத்தில் யுவராஜா ஜனனம். ரிஷபத்துக்கும் புலிக்கும் பகை. ஆகையால், புலியினால் மரணம்."
புலி என்ற வார்த்தையைக் கேட்டதும் யுவராஜா ஜங்ஜங் பகதூர் பயந்து நடுங்கியிருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை. புலி என்று கேட்டதும் யுவராஜா ஒரு உறுமல் உறுமினார். பிறகு இரண்டு பயங்கரமான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வெளி வந்தன:-
"புலிகள் ஜாக்கிரதை!"
மேலே கூறிய சம்பவம் பிரதிபந்தபுரத்தில் வழங்கி வந்த வதந்தியேதான். ஆனால், பின்னால் நடந்தவைகளைக் கொண்டு பார்க்கும்போது அது உண்மையாயிருக்கலாமென்றே தோன்றுகிறது.
யுவராஜா ஜங்ஜங் பகதூர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தார். மேற்கூறிய சம்பவத்தை தவிர அவருடைய குழந்தைப் பருவத்தில் வேறு அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. மற்றச் சுதேச சமஸ்தானங்களின் யுவராஜாக்களைப் போல்தான் அவரும் இங்கிலீஷ் பசுவின் பாலைக் குடித்து, இங்கிலீஷ் நர்ஸினால் போஷிக்கப்பட்டு, இங்கிலீஷ் உபாத்தியாயரால் இங்கிலீஷ் கற்பிக்கப்பட்டு, இங்கிலீஷ் சினிமாக்கள் பார்த்து - இப்படியாக வளர்ந்து வந்தார். வயது இருபது ஆனதும், அது வரைக்கும் 'கோர்ட் ஆப் வார்ட்'ஸில் இருந்த ராஜ்யமும் கைக்கு வந்தது.
ஆனால், ராஜ்யத்தில் மட்டும் மேற்சொன்ன ஜோசியக் கூற்று எல்லாருக்கும் நினைவிருந்தது. அநேகர் அதைப் பற்றிப் பேசியும் வந்தார்கள். மெதுவாக மகாராஜாவின் காதிலும் இந்தப் பேச்சு விழுந்தது.
பிரதிபந்தபுரம் சமஸ்தானத்தில் காடுகள் ஏராளமாக உண்டு. அவற்றில் புலிகளும் உண்டு. "தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம்" என்ற பழமொழி மகாராஜாவுக்குத் தெரிந்திருந்தது. தன்னைக் கொல்லவரும் புலியைக் கொல்லுவதைப் பற்றி என்ன ஆட்சேபனை? - மகாராஜா புலி வேட்டையாடக் கிளம்பினார்.
முதல் புலியைக் கொன்றதும் மகாராஜாவுக்கு ஏற்பட்ட குதூகலத்துக்கு அளவில்லை. சமஸ்தானத்தின் ஜோசியர் தலைவரைக் கூப்பிட்டு அனுப்பினார். செத்த புலியைக் காட்டி, "இப்போது என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்.
"மகாராஜா இந்த மாதிரியே 99 புலிகளைக் கொன்று விடலாம்; ஆனால்..." என்று ஜோசியர் இழுத்தார்.
"ஆனால் என்ன? தைரியமாகச் சொல்லும்!"
"ஆனால் நூறாவது புலி விஷயத்தில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்."
"சரி, நூறாவது புலியையும் கொன்று விட்டால் அப்புறம்?"
"அப்புறம் என்னுடைய ஜோசியப் புத்தகங்களையெல்லாம் கிழித்து நெருப்பு வைத்துவிட்டு..."
"வைத்துவிட்டு..."
"தலையில் கிராப்பு வைத்துக் கொண்டு இன்ஷுரன்ஸ் கம்பெனி ஏஜண்டாகப் போய்விடுகிறேன்?" என்று ஜோசியர் சம்பந்தமில்லாமல் முடித்தார்.
பிரதிபந்தபுரம் சமஸ்தானத்தின் காடுகளிலிருந்த புலிகளுக்கெல்லாம் அன்று முதல் கொண்டாட்டந்தான்.
மகாராஜாவைத் தவிர வேறு யாரும் புலி வேட்டை ஆடக்கூடாது என்று உத்தரவு பிறந்தது.
தப்பித் தவறி யாராவது ஒரு புலியின் மேல் கல்லை விட்டெறிந்தால் கூட, அப்படிப்பட்ட ராஜத் துரோகத்தைச் செய்தவனுடைய சொத்துக்களெல்லாம் பறிமுதல் செய்யப்படுமென்று தண்டோரா போடப்பட்டது.
மகாராஜா நூறு புலிகளை முழுசாகக் கொன்ற பிறகுதான் மற்ற காரியங்களில் கவனம் செலுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டார். அவருடைய உத்தேசம் நன்கு நிறைவேறியும் வந்தது.
அபாயங்கள் அவருக்கு நேரிடாமல் இல்லை. சில தடவை துப்பாக்கிக் குறி தவறிப் புலி அவர் மேல் பாயவும், அதனுடன் கைகலந்து சண்டை போடவும் நேரிட்டது. ஒவ்வொரு தடவையிலும், அவர் தான் கடைசியில் வெற்றி பெற்றார்.
இன்னொரு சமயம் அவருடைய சிம்மாசனத்துக்கே ஆபத்து வருவதாயிருந்தது. ஒரு பெரிய பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர் பிரதிபந்தபுரத்துக்கு விஜயம் செய்தார். அவருக்குப் புலி வேட்டையில் ரொம்பப் பிரியம். அதைக் காட்டிலும், தாம் கொன்ற புலிக்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அதிகப் பிரியம். வழக்கம் போல் அவர் பிரதிபந்தபுரம் சமஸ்தானத்திலும், புலி வேட்டையாட விரும்பினார். ஆனால் மகாராஜா கண்டிப்பாக மறுத்துவிட்டார். "வேறு என்ன வேட்டைக்கு வேணுமானாலும் ஏற்பாடு செய்கிறேன். பன்றி வேட்டையா? ஆடுங்கள். எலி வேட்டையா? நடத்துங்கள். கொசு வேட்டையா? இதோ தயார். ஆனால் புலி வேட்டை மட்டும் இங்கே முடியாது" என்றார் மகாராஜா.
"துரைதான் புலியைக் கொன்று ஆகவேண்டுமென்று அவசியமில்லை, மகாராஜாவே கொல்லலாம். செத்த புலிக்குப் பக்கத்தில், கையில் துப்பாக்கியுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதுதான் துரைக்கு முக்கியம்" என்று மேற்படி பிரிட்டிஷ் உத்தியோகஸ்தரின் காரியதரிசி சமஸ்தான திவான் மூலமாகச் சொல்லியனுப்பினார். இதற்கும் மகாராஜா சம்மதிக்கவில்லை. இப்போது கொஞ்சம் இடங்கொடுத்து விட்டால், அப்புறம் இன்னும் சில பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்களும் புலி வேட்டைக்கு வந்து சேரலாமல்லவா?
இப்படி ஒரு பெரிய ஆங்கில உத்தியோகஸ்தரின் விருப்பத்துக்குக் குறுக்கே நின்றதன் பயனாக மகாராஜாவின் கையைவிட்டு ராஜ்யமே போய்விடுமோ என்று பயம் உண்டாயிற்று.
இதைக் குறித்து மகாராஜாவும் திவானும் கலந்தாலோசித்தார்கள். உடனே கல்கத்தாவிலுள்ள ஒரு பெரிய இங்கிலீஷ் நகைக் கம்பெனிக்குத் தந்தி போயிற்று:- "வைர மோதிரங்களில் சில உயர்ந்த மாதிரிகள் அனுப்பி வைக்கவும்" என்று.
அவ்விதமே வைர மோதிரங்கள் சுமார் ஐம்பது தினுசுகள் வந்தன. அவற்றை அப்படியே மகாராஜா மேற்படி பிரிட்டிஷ் உத்தியோகஸ்தரின் தர்ம பத்தினிக்கு அனுப்பி வைத்தார். துரைசானி அம்மாள் ஏதாவது ஒன்றிரண்டு பொறுக்கிக்கொண்டு பாக்கியைத் திருப்பி அனுப்பி விடுவாளென்று மகாராஜாவும் திவானும் எதிர் பார்த்தார்கள்.
ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் துரைசானியிடமிருந்து பதில் வந்துவிட்டது:- "நீங்கள் அனுப்பிய பரிசு மோதிரங்களுக்காக மிகவும் வந்தனம்."
இரண்டு நாளைக்கெல்லாம் நகைக் கம்பெனியாரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய்க்குப் 'பில்' வந்தது. மூன்று லட்ச ரூபாய் போனாலும், சிம்மாசனத்துக்கு ஆபத்தில்லாமல் தப்பியது பற்றி மகாராஜாவுக்குச் சந்தோஷந்தான்.
மகாராஜாவின் புலிவேட்டை விரதம் நன்கு நிறைவேறி வந்தது. பத்து வருஷ காலத்தில் எழுபது புலிகள் வரையில் வேட்டையாடிக் கொன்றுவிட்டார். அதற்குப் பிறகு ஒரு பெரிய இடையூறு எதிர்ப்பட்டது. பிரதிபந்தபுரம் காடுகளில் புலிகளே அற்றுப்போய் விட்டனபோல் தோன்றியது. புலிகள் ஒருவேளை கருத்தடை முறைகளைக் கையாண்டனவோ, அல்லது 'ஹரிகரி' செய்து கொண்டனவோ, அல்லது வெள்ளைக்காரர்களின் கையினால்தான் சாக வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டு நாட்டைவிட்டு ஓடிப் போயினவோ, தெரியவில்லை.
மகாராஜா ஒரு நாள் திவானைக் கூப்பிட்டார். "திவான் சாகிப், இன்னும் முப்பது புலி இந்தத் துப்பாக்கிக்கு இரையாகித் தீரவேண்டுமென்று உமக்குத் தெரியுமா இல்லையா?" என்று கேட்டார்.
திவான் துப்பாக்கியைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டே, "மகாராஜா! நான் புலியில்லை..." என்றார்.
"நீர் புலி என்று எந்த முட்டாள் சொன்னது?"
"இல்லை, நான் துப்பாக்கி இல்லை" என்றார் திவான்.
"நீர் புலியுமில்லை, துப்பாக்கியுமில்லை திவான் சாகிப்! உம்மைக் கூப்பிட்ட காரணம் வேறு. நான் கல்யாணம் செய்து கொள்வதென்று தீர்மானித்து விட்டேன்" என்றார் மகாராஜா.
திவானுக்கு உளறல் இன்னும் அதிகமாகிவிட்டது. "மகாராஜா! ஏற்கனவே எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்; உங்களையும் கல்யாணம் செய்துகொண்டு."
"சட், என்னங்காணும் உளறுகிறீர்? உம்மை எதற்காக நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்? எனக்கு வேண்டியது புலி..."
"மகாராஜா! வேண்டாம், யோசனை செய்யுங்கள் உங்கள் குலத்து முன்னோர்கள் கத்தியைக் கல்யாணம் செய்து கொண்டார்கள். நீங்கள் வேணுமானால் துப்பாக்கியைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். இந்த சமஸ்தானத்துக்குப் புலி ராஜா இருப்பது போதும்; புலி ராணி வேறு வேண்டாம்!"
இதைக் கேட்ட மகாராஜா குபீரென்று சிரித்து விட்டு "புலியுமில்லை, துப்பாக்கியுமில்லை. மனுஷப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன். தற்சமயம் எந்தெந்த சமஸ்தானத்தில் புலி இருக்கிறதென்று முதலில் கணக்குத் தயார் செய்யும். பிறகு, புலி இருக்கிற சமஸ்தானத்தில் ராஜ்வம்சத்தில் கல்யாணத்துக்குப் பெண் இருக்கிறதா என்று பாரும்" என்றார்.
திவான் அப்படியே பார்த்தார். கடைசியில் மகாராஜாவின் விருப்பத்தின்படியே புலிகள் நிறைய உள்ள சமஸ்தானத்தில் பெண் பார்த்துக் கல்யாணமும் செய்து வைத்தார்.
மகாராஜா ஜங்ஜங் பகதூர் ஒவ்வொரு தடவை மாமனார் வீடு சென்றபோதும், ஐந்தாறு புலிகளைக் கொன்று எல்லாப் புலிகளின் தோலும் - சரியாக 99 தோல் - அரண்மனை ஆஸ்தான மண்டபத்தின் சுவர்களை அலங்கரித்தன.
கடைசியில் நூற்றுக்கு இன்னும் ஒரு புலிதான் பாக்கி என்ற நிலைமை ஏற்பட்டதும் மகாராஜாவின் பரபரப்பு மிகவும் அதிகமாயிற்று. பகலில் அதே நினைவு; இரவில் அதே கனவு. இதற்குள்ளே மாமனார் சமஸ்தானத்திலும் புலிப் பண்ணை வறண்டு போய் விட்டபடியால் புலிகள் அகப்படுவது மிகவும் பிரயாசையாய்ப் போயிருந்தது. ஆனாலும், இன்னும் ஒன்றே ஒன்றுதானே? இன்னும் ஒரு புலியை மட்டும் கொன்றுவிட்டால், அப்புறம் பயமே இல்லை. புலி வேட்டையையே விட்டுவிடலாம்.
ஆனால், இந்தக் கடைசிப் புலி விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். காலஞ் சென்ற தலைமை ஜோசியர் என்ன சொன்னார்? 99 புலிகளை மகாராஜா கொன்றபோதிலும் நூறாவது புலி விஷயத்தில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்! "உண்மைதான் புலி பொல்லாத மிருகம்; ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த நூறாவது புலிக்கு எங்கே போகிறது? புலி கிடைப்பது புலிப்பால் கிடைப்பதைவிடக் கஷ்டமாகிவிட்டதே?"
மகாராஜா இப்படிப்பட்ட கவலையில் ஆழ்ந்திருந்த போது, அந்தக் கவலையைப் போக்கக்கூடிய ஒரு அருமையான சந்தோஷச் செய்தி வந்தது. அந்த சமஸ்தானத்திலேயே மலைக்கிராமம் ஒன்றில் திடீர் திடீரென்று சில ஆடுகள் காணாமல் போய்வந்தன. 'முழு ஆடு விழுங்கின' என்று பெயர் பெற்ற காதர் மியான் சாகிபுவையும், வீராசாமி நாயக்கரையும் விசாரித்து அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல என்று தெரிய வந்தது. புலிதான் வந்திருக்க வேண்டுமென்று நிச்சயமாயிற்று. கிராமவாசிகள் ஓடிப் போய் மகாராஜாவிடம் தெரிவித்தார்கள். அந்தக் கிராமத்துக்கு மூன்று வருஷம் வரி, வாய்தா குவிட்ரெண்ட், ஜமாபந்தி, புறம்போக்குப் பட்டி ஒன்றுமே கிடையாது என்று மகாராஜா தெரிவித்துவிட்டு, உடனே வேட்டைக்குக் கிளம்பினார்.
புலி இலேசில் அகப்படவில்லை. வேண்டுமென்று மகாராஜா கையில் அகப்படக் கூடாதென்றே, அது ஒளிந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. மகாராஜாவோ, புலி அகப் பட்டாலொழியக் காட்டை விட்டு வரமாட்டேனென்று பிடிவாதம் பிடித்தார். அதோடு நாளாக ஆக மகாராஜாவின் கோபமும் பிடிவாதமும் அதிகமாகி வந்தன. அதன் பயனாய் அனேக உத்தியோகஸ்தர்களுக்கு வேலை போய் விட்டது.
ஒருநாள் ரொம்பக் கோபம் வந்தபோது, மகாராஜா திவானைக் கூப்பிட்டு, "சமஸ்தானத்தில் நிலவரியை உடனே இரண்டு பங்கு செய்யுங்கள்" என்றார். திவான், "பிரஜைகளுக்கு அதிருப்தி உண்டாகும், மகாராஜா! அப்புறம் நம் சமஸ்தானத்திலும் ஸ்டேட் காங்கிரஸ் ஏற்பட்டுவிடும்" என்றார். "அப்படியானால், உம்முடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டுப் போம்!" என்றார் மகாராஜா.
இதற்குமேல் மகாராஜாவுக்குப் புலி அகப்படாதிருந்தால் விபரீதந்தான் என்று தீர்மானித்துக் கொண்டு வீட்டுக்குப் போனார் திவான். அங்கே சென்னை பீப்பிள்ஸ் பார்க்கிலிருந்து வாங்கிக் கொண்டுபோய் இரகசியமாய் வைத்திருந்த புலியைப் பார்த்ததுந்தான் அவருக்கு உயிர் வந்தது.
அன்று இரவு நடு நிசியில் ஊரெல்லாம் அடங்கிய பிறகு, திவானும் அவருடைய வயது முதிர்ந்த மனைவியும் மேற்படி புலியை இழுத்துக் கொண்டு வந்து மோட்டாரில் ஏற்றினார்கள். 'திவான்' தாமே மோட்டாரை ஓட்டிக் கொண்டு போய், மகாராஜா வேட்டையாடிக் கொண்டிருந்த காட்டுக்குப் பக்கத்தில் புலியை இறக்கினார். மோட்டாரிலிருந்து இறங்க மாட்டேனென்று சத்தியாகிரகம் செய்த அந்த புலியைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளுவதற்குள் திவானுக்கு மேல் மூச்சு வாங்கிவிட்டது. மறுநாள் மகாராஜாவின் முன்னால் மேற்படி கிழப்புலியானது வந்து, "எஜமானே! என்ன ஆக்ஞை?" என்று கேட்பது போல் நின்றது. மகாராஜா அளவிறந்த உற்சாகத்துடன் துப்பாக்கியை எடுத்துக் குறி வைத்து சுட்டார் உடனே புலி சுருண்டு விழுந்தது.
"நூறாவது புலியைக் கொன்று விட்டோ ம்; விரதம் நிறைவேறிவிட்டது!" என்ற மகத்தான குதூகலம் மகாராஜாவின் மனதில் தோன்றிற்று. அந்த நூறாவது புலியை தமது தலைநகரில் ஊர்வலமாகக் கொண்டு வரும்படி கட்டளையிட்டுவிட்டு, மகாராஜா மோட்டாரில் ஏறிவிரைந்து முன்னால் சென்றார்.
அவர் போன பிறகு, மற்ற வேட்டைக்காரர்கள் புலியின் அருகில் சென்று பார்த்தார்கள். புலியும் கண்களைப் பேந்தப் பேந்த விழித்து அவர்களைப் பார்த்தது! புலி சாகவில்லையென்றும், அதன்மேல் குண்டே பாயவில்லை யென்றும், அவர்கள் கண்டார்கள். குண்டு சமீபத்தில் போன அதிர்ச்சியினாலேயே அது அப்படி மூர்ச்சையாகி விழுந்திருந்தது! வேட்டைக்காரர்கள் யோசனை செய்தார்கள். குண்டு தவறிப்போன செய்தி மகாராஜாவுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் தங்களுடைய உத்தியோகத்துக்கு ஆபத்து என்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்களில் ஒருவன் புலிக்கு ஓர் அடி தூரத்திலிருந்து குறி தவறாமல் அதைக் கொன்று தீர்த்தான்.
பிறகு, மகாராஜாவின் கட்டளையின்படி, அந்தச் செத்தப் புலியை நகரில் ஊர்வலம் விட்டுக் கொண்டு போய்க் கடைசியில் அதைப் புதைத்து, சமாதியும் எழுப்பினார்கள்.
மேற்கூறிய விசேஷ சம்பவம் நடந்து சில தினங்களுக்குப் பிறகு மகாராஜாவின் குமாரனுக்கு மூன்றாவது பிறந்த தினக் கொண்டாட்டம் நடந்தது. இது வரையில் புலிவேட்டையிலேயே கவனமாயிருந்த மகாராஜா பட்டத்து இளவரசனைப் பற்றிக் கொஞ்சமும் கவனிக்கவில்லை. இப்போது அவருடைய கவனம் குழந்தையின் மீது சென்றது. பிறந்த தினத்தற்கு குழந்தைக்கு ஏதாவது பரிசு கொடுக்கவேண்டுமென்று ஆசைப்பட்டார். பிரதிபந்தபுரம் கடைத்தெருவுக்குப் போனார். கடை கடையாகத் தேடியும் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு பொம்மைக் கடையில் ஒரு சின்ன மரப் புலியைப் பார்த்தார். "இதுதான் சரியான பரிசு" என்று உடனே தீர்மானித்து விட்டார்.
அந்த மரப் புலியின் விலை இரண்டே காலணாதான். ஆனால், மகாராஜா கேட்கும்போது அவ்வளவு குறைந்த விலை சொன்னால் நிச்சயம் அவசரச் சட்டத்தின் கீழ்த் தண்டனை கிடைக்குமென்று தெரிந்த கடைக்காரன் "மகாராஜா! இது ரொம்பக் கலைத்திறமை பொருந்திய பொம்மை; விலை முந்நூறு ரூபாய்தான்!" என்றான்.
"ரொம்ப சந்தோஷம்! யுவராஜாவின் பிறந்த தினக் கொண்டாட்டத்துக்கு இது உன்னுடைய காணிக்கையாயிருக்கட்டும்" என்று சொல்லிவிட்டு, மகாராஜா அதை எடுத்துச் சென்றார்.
யுவராஜாவின் பிறந்த தினத்தன்று, தகப்பனாரும் குழந்தையும் அந்தச் சின்னஞ் சிறு மரப்புலியை வைத்துக் கொண்டு விளையாடினார்கள். யாரோ பட்டிக்காட்டுத் தச்சன் செய்த பொம்மை அது ஆகையால் அதன் மேலெல்லாம் சிலாம்பு சிலாம்பாய் நின்றது. மகாராஜா அதைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடிய போது வலது கையில் ஒரு சிலாம்பு குத்தியது. இடது கையால் சிலாம்பைத் தட்டி எறிந்துவிட்டு மகாராஜா மேலும் விளையாடிக் கொண்டிருந்தார்.
சிலாம்பு குத்திய இடத்தில் மறுநாள் சின்னக் கொப்புளம் புறப்பட்டது.
இரண்டு நாளில் அது பெரிய சிரங்காயிற்று. நாலு நாளைக்கெல்லாம் கை முழுவதும் புரையேறிவிட்டது.
சென்னைப் பட்டணத்திலிருந்து பெரிய ஸர்ஜன்கள் மூன்று பேர் வரவழைக்கப்பட்டார்கள்.
அவர்கள் கூடி ஆலோசித்து, "ஆபரேஷன் செய்ய வேண்டியதுதான்" என்று தீர்மானித்தார்கள்.
ஆபரேஷன் நடந்தது.
மூன்று ஸர்ஜன்களும் ஆபரேஷன் செய்துவிட்டு வெளியில் வந்து பின்வரும் செய்தியைத் தெரிவித்தார்கள்.
"ஆபரேஷன் வெற்றிகரமாய் நடந்தது; மகாராஜா காலமாகிவிட்டார்."
இவ்விதமாக நூறாவது புலியானது கடைசியில் புலிராஜாவின் மேல் வஞ்சம் தீர்த்துக் கொண்டது.