டிங்கூ புலிக்குத் தன்னுடைய தோல் பிடிக்கவில்லை. “என் தோல் அடர்ந்த முடியோடும் கருப்புப் பட்டைகளோடும் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கிறது. எனக்கு தடிமனான சாம்பல்நிறத் தோல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று நினைத்தது டிங்கூ.
டிங்கூ புலிக்கு, ரங்கா காண்டாமிருகத்தின் தோல் மிகவும் பிடித்திருந்தது. “ரங்கா, நீ என் தோலை வைத்துக்கொண்டு உன் தோலை எனக்குத் தருகிறாயா?” என்று டிங்கூ கேட்டது. ரங்காவும், “அருமையான யோசனை! வா, மாற்றிக்கொள்வோம்!” என்றது.
டிங்கூ தன் முடியடர்ந்த தோலை ரங்காவிடம் கொடுத்தது. ரங்கா தனது தடிமனான தோலை டிங்கூவுக்கு கொடுத்தது.
“நன்றி ரங்கா காண்டாமிருகமே! இந்தப் புதிய தோல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றது டிங்கூ. “இல்லை, இல்லை! இப்போது நான் ரங்கா காண்டாபுலி. நீயும் இனிமேல் புலி கிடையாது” என்றது ரங்கா. “அதுவும் சரிதான்! நான் இனிமேல் புலிடாமிருகம்” என்றது டிங்கூ.
புதிய தடித்த தோலைப் பெற்ற டிங்கூ புலிடாமிருகம் குதித்தது, நடனம் ஆடியது, நீச்சல் அடித்தது, இங்குமங்கும் ஓடியது. மகிழ்ச்சியில் அட்டகாசம் செய்தது.
சிறிது நேரம் கழிந்ததும் புதிய தோல் நமநமத்து அரிப்பெடுக்கத் தொடங்கியது. அத்துடன் டிங்கூவுக்கு புதிய தோல் அலுத்தும் போனது.
“என்னுடைய பழைய தோலையே திரும்ப வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதுவே மென்மையாக வழுவழுப்பாக நன்றாக இருந்தது” என்று யோசித்தது டிங்கூ. “ரங்கா காண்டாபுலியே! நீ எங்கே இருக்கிறாய்,” என்று தேடியது.
“அட, இங்கேதான் இருக்கிறாயா, ரங்கா காண்டாபுலியே! ” என்றது டிங்கூ. “இல்லை, இல்லை! இப்பொழுது நான் ரங்கா காண்டாபுலி இல்லை. நான் பப்லூ கரடியுடன் தோலை மாற்றிக்கொண்டேன். அதனால், நான் இனிமேல் ரங்கா காண்டாகரடி,” என்றது ரங்கா.
“எனக்கு என் மென்மையான தோல் வேண்டுமே!” என்று பெருமூச்சு விட்டபடி, “பப்லூ கரடி எங்கே?” என்று கேட்டது டிங்கூ. “அங்கே குளத்தங்கரையில் இருக்கிறது! ஆனால் பப்லூ கரடி இப்பொழுது பப்லூ கரலி ஆகிவிட்டது,” என்றது ரங்கா.
பப்லூ கரலியோ டிங்கூவிடம், “முடியாது! என்னால் தடிமனான சாம்பல்நிறத் தோலணிந்து கரடாமிருகம் ஆக முடியவே முடியாது!” என்று கோபமாக மறுத்துவிட்டது.
“ஆனால் எனக்கும் புலிடாமிருகமாக இருக்கவேண்டாம்!” என்று பரிதாபமாக புலம்பியது டிங்கூ.
பப்லூ கரலிக்கு ஒரு யோசனை தோன்றியது. “ராணி சிம்மியிடம் சென்று என்ன செய்வதென கேட்கலாம்” என்றது.
ராணி சிம்மியோ இதைக்கேட்டு மிகுந்த கோபத்துடன் உறுமியது. “என்ன குழப்பம் இது, புத்திகெட்ட விலங்குகளே! உடனடியாக அவரவர் தோல்களுக்கு மாறுங்கள்!” என்று கர்ஜித்தது.
“ரங்கா உன்னிடமிருக்கும் தோலை பப்லூவிடம் கொடு. பப்லூ நீ அணிந்திருக்கும் தோலை டிங்கூவிடம் கொடு. டிங்கூ உன்னிடமிருக்கும் தோலை ரங்காவிடம் கொடு,” என்றது ராணி சிம்மி. காண்டாகரடி, கரலி, புலிடாமிருகம் அனைவரும் ராணி சொன்னபடியே செய்தனர். பழையபடியே அவர்கள் காண்டாமிருகம், புலி மற்றும் கரடியாக மாறினர்.
டிங்கூ, ரங்கா, பப்லூ அனைவரும் சென்ற பிறகு ராணி சிம்மி தனக்குத்தானே சிரித்துக்கொண்டது. பின்னர், “ஆஹா! இதுவும் நல்ல வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஏ முதலையே! நான் சிதலையாகவும் நீ முங்கமாகவும் மாறிவிடலாம், வா!” என்றது.