puthiya corona virus paathukaappaaga irukkalaam

புதிய கரோனா வைரஸ்: பாதுகாப்பாக இருக்கலாம்

புதிய கரோனா வைரஸ் காலத்தில் விழிப்புடனும் பாதுகாப்பாகவும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

- Adhi Valliappan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

புதிய கரோனா வைரஸும் கோவிட்-19ம்

“கரோனா வைரஸ்கள் மனிதர்களிடமும் விலங்குகளிடமும் நோயை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் குடும்பம். பல கரோனா வைரஸ் வகைகள் மனிதர்களிடம் சுவாசத் தொற்று சார்ந்த சாதாரண சளிப்பிடித்தல் தொடங்கி தீவிரமான நோய்கள்வரை ஏற்படுத்துகின்றன. கோவிட்-19, சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒரு கரோனா வைரஸால் உருவாகும் நோய்.” - உலக சுகாதார நிறுவனம் (WHO)

பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க

கோவிட்-19 நோய் பலருடைய வாழ்க்கையை பாதித்துவருகிறது. அதேநேரம் நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்களும் உதவுகிறார்கள். இது இக்கட்டான நேரம். ஆனால், இதை நாம் அனைவரும் ஒன்றாக எதிர்கொள்வோம். நம் உடல்நலத்தை எப்படி கவனித்துக்கொள்வது என்றும், மற்றவர்களுக்கு உதவுவது தொடர்பாகவும் சிறந்த நடைமுறைகளை நம்முடைய நெருக்கமான நண்பர்கள் சிலர் எடுத்துச்சொல்கிறார்கள்.

விழிப்புடன் இருப்போம், பாதுகாப்பாக இருப்போம், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்போம்.

சந்தேகங்களை உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) கேட்கலாம் கூடுதல் தகவல்களுக்கு: https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019 நன்றி: அனிர்பான் மகாபத்ரா, மரு. என்.எஸ். பிரசாந்த், சாம்பவி, மரு. தான்யா சேஷாத்ரி.

அம்மச்சியின் அறிவுரை

எழுத்து மற்றும் படங்கள்: ராஜீவ் ஐப்

நானும் சூரஜும் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கிறோம். நீங்களும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதிலும் உங்களுக்கு உடல்நலமில்லை என்றால் கவனமாக இருக்க வேண்டும்.

எங்கள் இருவரில் யாருக்காவது காய்ச்சலோ, இருமலோ அல்லது மூச்சுவிடுவதில் சிரமமோ இருக்கிறது என்றால், உடனே மருத்துவரையோ அரசு உதவி எண்ணையோ அழைக்க வேண்டும். அவர்கள் வழங்கும் அறிவுரைப்படி நடந்துகொள்ள வேண்டும். நம்மை பாதித்திருப்பது கோவிட்-19 நோய்தானா என்பதை மருத்துவரே முடிவுசெய்வார்.

எனக்கு நேற்று சிறிது உடல்நிலை சரியில்லை. ஆனால், அது உண்ணியப்பங்களை அதிகம் தின்றதால் ஏற்பட்ட பிரச்சினைதான்!

நீமா ஏன் இன்று ‘ஹேப்பி பர்த்டே’ பாடுகிறாள்?

எழுதியவர்: பிஜல் வச்ராஜானி

படங்கள்: ப்ரியா குரியன்

கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக எல்லோரும் பயந்தும் குழம்பிப்போயும் இருக்கிறார்கள். சரி, கிருமிகளிடம் இருந்து நீமா எப்படித் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறாள்?

ஓ! ‘ஹேப்பி பர்த்டே’ பாடலை இரண்டு முறை பாடிக்கொண்டே, 20 விநாடிகளுக்கு சோப்பு போட்டு கைகளைக் கழுவிக் கொண்டிருக்கிறாள்.

“ஹேப்பி பர்த்டே டு மீ, ஹேப்பி பர்த்டே டு மீ, ஹேப்பி பர்த்டே டியர் நீமா, ஹேப்பி பர்த்டே டு மீ.”

“ஹேப்பி பர்த்டே டு மீ, ஹேப்பி பர்த்டே டு மீ, ஹேப்பி பர்த்டே டியர் நீமா, ஹேப்பி பர்த்டே டு மீ.”

உமாவும் வைரஸும்

எழுதியவர்: மீரா கணபதி

படங்கள்: ரேணுகா ராஜீவ்

உங்களுக்கு இருமலோ தும்மலோ வந்தால், மறக்காமல், மறக்காமல்… அச்சூ! தயவுசெய்து, ஒரு காகிதக் கைக்குட்டையால் மூடிக்கொண்டு தும்முங்கள். காகிதக் கைக்குட்டை கிடைக்கவில்லை என்றால், தும்மல் வரும்போது, சட்டென்று கையை மடக்குங்கள். வாயை மூடிக்கொள்ளுங்கள், மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள். எப்படி புருவங்களாலேயே புன்னகைக்கிறேன், பார்த்தீர்களா?

ஃபரிதா இனி முகத்தைத் தொட மாட்டாள்

எழுதியவர்: மேகன் டாப்சன் சிப்பி

படங்கள்: ஜெயேஷ் சிவன்

காலை, மதியம், இரவு என நாள் முழுவதும் ஃபரிதாவின் கைகள் வேலை பார்த்துக்கொண்டே இருக்கின்றன. காலையில் தன் வீட்டு ஜன்னல் அருகே வரும் சிட்டுக்குருவிகள், கிளிகளுக்கு தானியங்களைப் போடுகிறாள். சிர்ப், சிர்ப், சிர்ப்! “நாம் நம்முடைய முகத்தைத் தொடவில்லை என்றால், நமது கைகளில் இருந்து உடலுக்குள் வைரஸ் நுழைந்து பாதிக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று அம்மாவிடம் கூறுகிறாள்.

அண்ணனின் சிரிப்பைத் திருப்பிக் கொடுத்தது யார்?

எழுதியவர்: சஞ்சனா கபூர்

படங்கள்: சுனைனா கொய்லோ

அண்ணன் தனிமையாக உணர்கிறான். உலகம் மிகவும் ஆபத்தானதாக மாறிவிட்டதாக எல்லோரும் அவனிடம் சொல்கிறார்கள். அவன் கூடவே இருக்கும் பூதமான 'டுக்டுக்' இன்னும் இன்னும் பெரிதாக வளர்ந்துகொண்டே போகிறது. அவனுடைய சிரிப்பை அது விழுங்கிவிட்டது.

அண்ணன், அம்மா அப்பாவுடன் நிறைய பேசுகிறான். சிருவுடன் விளையாடுகிறான்.இப்போது அவன் தனிமையாக உணர்வதில்லை. தான் அடைபட்டிருப்பதாக நினைக்க வேண்டியது இல்லை என்பதையும் அவன் உணர்ந்தான்.

மீராவும் அமீராவும் பாதுகாப்பாக விலகியிருக்கிறார்கள்

எழுதியவர்: நிம்மி சாக்கோ

படங்கள்: லாவண்யா நாயுடு

“அமீரா இதைக் கேள்விப்பட்டாயா? ஊரெங்கும் ஒரு வைரஸ் பரவுகிறதாம், அது மக்களின் உடல்நலத்தைக் கடுமையாக பாதிக்கிறதாம்” என்று தன் கற்பனைத் தோழியிடம் மீரா கூறினாள்.

அச்சூ! லொக் லொக்!

“அய்யய்யோ, அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதுபோல் தெரிகிறதே, மீரா” என்றாள் அமீரா. “ஆமாம். இருமலோ தும்மலோ இருப்பவர்கள் அருகில் இருந்தால் அவர்களிடமிருந்து நமக்கும், நம்மிடமிருந்து இன்னொருவருக்கும் வைரஸ் தொற்றுவதற்கு சாத்தியமிருக்கிறது!” “அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும்?” “ஆறு அடியாவது விலகியிருக்க வேண்டும்!” “நல்ல வேளை! நம் காகிதக் கப்பல் புறப்படத் தயாராக இருக்கிறது.”

வீட்டிலேயே இருங்கள்

எழுத்து மற்றும் படங்கள்: தீபா பல்சவர்

ஊர் சுற்றுவதற்கான நேரமில்லை இது. வீட்டில் இருப்பதுதான் நல்லது! பூங்கா எங்கும் போய்விடாது, இப்போதைக்கு வீட்டிலேயே இருப்போம்!

நண்பர்களிடம் நானி சொல்கிறார்: “எது சரியோ, அதையே செய்யுங்கள், பகலோ இரவோ, வீட்டிலேயே இருங்கள்! முடிந்தால் பிறருக்கு உதவுங்கள். பலருக்கும் இப்போது உதவி தேவை!”