Puthiya Siragukal

புதிய சிறகுகள்

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றக்கூடிய இரத்த பந்த நெருக்கமான உறவைக் குறிப்பிட வேண்டுமானால் அது தாய்-மகன் உறவுதான். இந்த ஆதி உறவில் இருந்து தான் மானிட உறவுகளே பல பரிமானங்களுடன் விரிவடைகின்றன எனலாம்.

- ராஜம் கிருஷ்ணன்

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முன்னுரை

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றக்கூடிய இரத்த பந்த நெருக்கமான உறவைக் குறிப்பிட வேண்டுமானால் அது தாய்-மகன் உறவுதான். இந்த ஆதி உறவில் இருந்து தான் மானிட உறவுகளே பல பரிமானங்களுடன் விரிவடைகின்றன எனலாம்.

தாய்மைப் பேற்றுக்கு இன்றியமையாத காரணியாக ஆண் உறவை முதன்மைப் படுத்தலாமென்றாலும், அந்த உறவு, பெரும்பாலும் செயற்கையாகவும், வற்புறுத்தல், கட்டாயம் ஆகிய நிலைகளிலும் கூடப் பிணைப்பாகி விடலாம்.

மேலும், அத்தகைய உறவில் பிணைபவர்கள் இருவரும் உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி ஆகிய கூறுகளில் ஒருவருக்கு மற்றவர் சமமானவர்களாக இருக்கிறார்கள். உள்ளார்ந்த பிணைப்பு, பல தூலமான கூறுகளினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஓர் ஆணையும் பெண்ணையும் இவ்வாறு பிணைக்கும் திருமண பந்தங்களை, மறுபிறப்புக்களிலும் கொண்டு செல்லும் மரபுக் கொள்கைகளை வழி வழியாக்கியும், ஒருவர் மற்றவரைச் சார்ந்து நிற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியும் உறுதி செய்தார்கள். ஆனால் இந்த தூல நெறிகள் தளர்ந்த போது, உள்ளார்ந்த பிணைப்புக்களும் போலியாக, விரிசல் சாத்தியமாகிறது.

தாய்-மகன் என்ற பந்தத்தில், தூலமான சிதைவுகளும் கூட அத்தகைய விரிசல்களைக் கொண்டு வருவதில்லை.

இந்தப் பிணைப்பில் சமமான உடல்-மன வளர்ச்சி இல்லை.

பெண்ணின் பக்கம் உணர்ச்சிகளே முதன்மையிடம் வகிக்கின்றன. உணர்ச்சிகளின் உந்துதலாலேயே அவள் மகவுக்குப் பாலூட்டுகிறாள்; அதன் அசுத்தங்களை முகம் சுளிக்காமல் ஏந்துகிறாள்; சுத்தம் செய்கிறாள். 'வாத்ஸல்யம்' என்ற அமுதைப் பொழிகிறாள். ஆனால், மகவு இதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை. அது தனது எல்லாத் தேவைகளுக்கும் தாயைச் சார்ந்துதான் இருக்கிறது. அது தனது எல்லாச் சக்திகளையும் ஒன்றாகத் திரட்டி அவளைப் பற்றிக் கொள்கிறது. தனது தேவைகளைத் தானாகக் கேட்டு உரிமையுடன் பெற முடியும் என்ற வளர்ச்சி பெற்றதும், அதன் நீக்கும், போக்கும் வேறு பட்டுப் போகிறது.

ஆனால் தாய் அந்த ஆதி உணர்வு நிலையிலிருந்து மாறாதவளாகவே பழக்கப்பட்டுப் போகிறாள்.

பொதுவாகவே தாயின் இயல்பு தன் மக்கள் எல்லோரிடத்திலும் இவ்வாறு இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனெனில் இயற்கையாக எழும் உணர்வுக்கும் பாசத்துக்கும் மகன் வேறு, மகள் வேறு எனற பிரிவுகள் இருக்க முடியாது.

கூட்டுக்குஞ்சுகளுக்கு உணவூட்டிப் பாதுகாக்கும் பறவைத்தாய் ஆண் குஞ்சு, பெண் குஞ்சு என்று பார்ப்பதில்லை. அது இயல்பூக்கத்தினால் செயல்படுகிறது. ஆனால், மனிதரில் மட்டும், பகுத்தறிவு பிரித்துப் பார்க்க வழியமைக்கிறது. மகள் என்று வரும்போது, தாய் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. மகளின் சந்தோஷத்தை விட, அவளை சமூகம் ஒப்புக் கொள்ளும் இலக்கையே தாய் பெரிதாகக் கணிக்கிறால். ஆனால், மகன் என்ற நெகிழ்ந்த உணர்வில், கல்வி வசதியில்லாமல் தெருவோரத்தில் ஆப்பக்கடை போட்டிருக்கும் ஏழைத்தாயும், உலகு புகழ் நாடாளும் ஒரு பெண்மணியும் ஒரே கோட்டில் சந்திக்கிறார்கள்.

இது ஏன்?

இந்தத் தாய்மை நெகிழ்ச்சி நாடு, சமயம், மொழி, என்ற வரையறைகளுக்கு அப்பால் ஒரே மாதிரியாக இருக்கிறது.

அறிவும் அநுபவமும் பின்னுக்குச் சென்றுவிடும் வகையில், மகன் பாச உணர்வு, பல சமயங்களிலும் கண் மூடித்தனமான வகையில் ஒரு தாயை வழி நடத்துகிறது.

ஒரு பெண் தனக்கு மகன் பிறந்ததும், கணவனை இரண்டாம் பட்சமாகவே கருதுகிறாள் என்ற நியதியும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இது ஏன்?

துருவித் துருவிப் பார்த்தால், பெண் எப்போதும் சார்ந்திருக்க ஓர் ஆணையே நம்பி இருக்கிறாள் என்பது தெளிவாகிறது. அச்சார்பு நிலை, பெண்ணிடத்தில் ஆணுக்கு இல்லை. குடும்பமாகிய ஓர் அமைப்பில் ஆணும் பெண்ணும் கூட்டாகப் பொறுப்புக்களையும், உழைப்பையும் உரிமைகளையும் பகிர்ந்து கொள்ளும் பாங்கு இன்று நம்மிடையே இல்லை. எனவே, பெண்ணின் சார்பு மிக அதிகமாக நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அவள் கொண்டவன் என்று இணைபவனுடன் சார்ந்திருக்கும் சார்பை விட, தன்னுள் இடம் கொடுத்து, தன் அணுவாய்க் காப்பாற்றி வளர்க்கும் மகனை மிக அதிகமாகப் பற்றுகிறாள். பிரதிபலன் கிட்டுமா, கிட்டாதா என்ற ஐய இழைக்குக் கூட இடமின்றித் தன்னை ஒட்டவைத்துக் கொள்கிறாள். இந்தத் தன்மை, மகனின் சலுகைகளை, உரிமைகளை வரம்பில்லாமல் பெருக்கிவிடுகிறது. அவனைக் கட்டுப்பாடற்றவனாகவே கூட வளர்க்கிறது.

அறம் சார்ந்த நெறிகள் அவனால் மதிக்கப் பெறுவதில்லை. சொல்லப் போனால், அவற்றைக் காலின் கீழ் தள்ளி மிதிக்கக் கூட அவன் கூசுவதில்லை. தகப்பன் - மகன் உறவு, தாய் மகன் உறவு போல் குருட்டுத்தனமாக அமைவதில்லை. இதனாலேயே, மகனின் கட்டுப்பாடற்ற போக்குக்கு, தாய்-தகப்பன் இருவர் கண்காணிப்பில் இருக்கும் போது, ஒரு அழுத்தம் தடையாக உதவுகிறது. தகப்பன் மகனை விமரிசனக் கண்கொண்டு பார்க்கிறான். கண்டிப்பு, கடுமை என்றால் அப்பாவிடம் தான் முத்திரை பெற்றதாக மகன் நினைக்கிறான்.

முறைகேடாக மகன் செல்கையில் தகப்பன் கடுமை காட்டும் போது, தாய் பாசச் சிறகால் அவனை அணைக்கிறாள். தாயின் சலுகை இருக்கும் வரையிலும் எப்படியும் நடக்கலாம் என்று தவறான வழிகளில் செல்லும் மகன் துணிவு பெறுகிறான். இந்தத் துர்ப்பாக்கியம், ஒரு பெண் எப்போதும் ஆணைச் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற குறியுடன் பரம்பரை பரம்பரையாகப் பெண் பதப்படுத்தப்பட்டு வந்திருப்பதாலேயே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெண்ணின் மூடப்பாசத்துக்கு அறிவார்ந்த ரீதியில் விளக்கம் தேடக் கூட யாரும் முனைவதில்லை. மாறாக, அது நியாயப்படுத்தப்பட்டு, சமூக ஒப்புதலுக்கும் தடம் வகுக்கப்பட்டிருக்கிறது.

கணவனில்லாமல் ஒரு தாய் வளர்க்கும் மகன், நல்ல பிரஜையாக, வளரமாட்டான் என்பதும், உலக முழுவதும் வழக்கில் இருந்து வரும் ஒரு கருத்தாகவும் இருக்கிறது. ஓர் ஆணை ஏசிப் பேசுவதற்கும் கூட இத்தகைய தொடரைப் பயன்படுத்துகிறார்கள்... இந்தக் கருத்தில் சமூகப் பிரஜையாக, கௌரவப்பட்டவனாக ஒருவன் உருப்பெறாத வருத்தத்தை விட, இந்தத் தாயே குற்றவாளியாகக் குறிக்கப்படுவது முதன்மை பெறுகிறது.

அபரிமிதமான சலுகைகளைப் பெற்ற பின் பிள்ளைகள், தாயை மதிப்பதில்லை என்பது மட்டும் இல்லை; அவர்கள் தங்கள் கட்டுப்பாடற்ற ஒழுங்கீனங்களுக்குத் தாயைக் கருவியாக்குகின்றனர்.

ஓர் ஆணைச் சார்ந்து பற்றிக் கொள்ளும் இந்த மனப்பாங்கு, பெண்களிடையே எஞ்ஞான்றும் ஒற்றுமையே வர இயலாத வகையில் அவர்களைப் பிளவுபடுத்துகிறது. கணவனின் குற்றம், முதியவளான தாயின் நிலை இரண்டையும் படித்த மருமகளும் சீர் தூக்கிப் பார்க்க மாட்டாள். எது எப்படியானாலும் முதிய மாமியார், தனக்கு எதிரி என்ற கண்ணோடு, கணவனின் பக்கம் சேருவதோ, அல்லது, தாய் மருமகளை எதிரியாகக் கருதி மகன் பக்கம் நின்று கொள்வதோ மிகச் சாதாரணமாகக் குடும்பங்களில் நிகழும் பிளவுக்குக் காரணிகளாக அமைகின்றன.

ஆணாதிக்கம் நிலைத்து வலுப்பெற, இந்தப் பிளவு ஒரு வலுவான சாதனமாகவும் இருக்கிறது.

இந்தச் சார்பு நிலை உறவின் அடித்தளமில்லாமல், ஒரு பெண் இன்னொரு ஆணுடன், நட்புறவு கொண்டு பழகலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவள் தாயாக, மனைவியாக, சகோதரியாக இருக்கலாமே ஒழிய, ஓர் ஆணுக்கு இருக்கும் தனித்தன்மையுடன் கூடிய சமூக மதிப்பு அவளுக்கு இல்லை.

இத்தகைய தனி மதிப்பைப் பெற்று, குடும்ப உறவுகளில் சமமான பொறுப்பும், உரிமையும், பங்கும் உடையவர்களாய்ப் பெண்கள் ஏற்றம் காணும்போதுதான், அவர்கள் பெற்ற கல்வி, பொருளாதார சுதந்திரம் ஆகிய சலுகைகள், உண்மையிலேயே பயனுடைய உரிமைகளாக அவர்கள் சமுதாய மதிப்பை உயர்த்த முடியும்.

இந்நாள், மலிந்துள்ள பல்வேறு சமுதாயம் சார்ந்த பிரச்னைகள், குறிப்பாகப் பெண்ணைத் தொடர்பாக்கியே உருவாகின்றன. பெண் விடுதலை அல்லது பெண் உரிமை சமுதாயத்தில் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அது மொத்த சமுதாய அமைப்பிலும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. குடும்ப அமைப்புக்களை உடைத்து, தனித்தனி நபர்களாக ஒரு கட்டுக்கோப்பான சமத்துவ சமுதாயம் அமைக்க முடியும் என்பதும் சரியில்லாத, நடைமுறைக்கு வர இயலாத கருத்து.

இன்றையக் குடும்பங்களில் சக்திகள் ஆணிடமே குவிக்கப்பட்டு, அவனை ஆதிக்கம் மிகுந்தவனாக நெறிப்படுத்தியிருக்கிறது. பெண் கல்வியில்லாத அடிமை உழைப்பாளியாக அடுக்களையோடு இருந்த நாட்களை விட, இந்நாள் மறுமலர்ச்சி பெற்ற தன் ஆற்றல் திறமையனைத்தையும் ஓர் ஆணுக்கு உரிமையாக்கி, அவன் சக்தியைப் பெருக்கியிருக்கிறாள். இதன் காரணமாக இரட்டைச் சுமை சுமக்கிறாள். குவிந்து கிடக்கும், குவிக்கப் பெற்றிருக்கும் சக்திகளை, சமமாக்குவதுதான் இதற்கு மாற்றாக இருக்க முடியும். ஆண்-பெண் உறவுகளில் ஆதிக்கமற்ற, ஒருவரை மற்றவர் மதித்து அன்பு செலுத்தும் பாங்கு அப்போதுதான் காணமுடியும்.

ஆணும் பெண்ணும், குடும்பமாகிய அமைப்பில், சமமாக உழைத்து, சமமான உரிமை பாராட்டி, நடக்கும் போது, ஆதிக்கக் கோட்டைகள் தகர்க்கப்படும். இந்த மாற்றம், பெண்ணின் சார்பு நிலையை ஒழிப்பதனால் தான் சாத்தியமாகும். குடும்ப உற்பத்தி-பொருளாதாரம் சார்ந்தும், உழைப்பைச் சார்ந்தும், சக்தியாக ஆணிடம் குவிக்கப் பெறுவதைப் பெண், இன்னும் குருட்டுத்தனமாகப் பற்றியிராமல், தன்னுணர்வும், நம்பிக்கையும் பெறவேண்டும்.

இதற்கு, வழி வழியாக வரும் ஒருதலைப்பட்சமான கோட்பாடுகள், கலாசாரம் என்ற பெயரில் ஆணாதிக்கம் சார்ந்து நெறிப்படுத்தப்படும் சமயச் சடங்குகள், பழக்கங்கள் எல்லாமே பெண்களால் பரிசீலிக்கப்பட வேண்டும். இதனால் ஏற்கெனவே உருவாக்கப் பெற்றிருக்கும் பழைய கறைபிடித்த பிம்பங்கள் தகர்ந்து போகலாம். பெண்ணினம் பெண்ணினத்தோடு புரிய வேண்டிய, புரட்சிப் போராட்டமாக இது தொடர வேண்டி இருக்கிறது. இது, குடும்பத்துக்கு வெளியே நிகழக்கூடிய தொழிலாளர் - முதலாளி போராட்டம் போன்றதாக இருக்க முடியாது.

பெண் எத்துணை புற மாற்றங்களைச் சாதித்த போதிலும், ஆணின் சார்பு என்ற ஆதிக்கத் தளையில் இருந்து மீளாத வரையில், குடும்ப சக்திகள் ஆணிடமும் பெண்ணிடமும் சமமாக மையம் கொள்ளக்கூடிய கூறுகள் வருவதற்கில்லை. அவ்வாறு வராத நிலையில், சமுதாயப் பிரச்னைகள் பலவற்றையும் வெல்லக்கூடிய மாற்றங்கள் நிகழ்வதும் சாத்தியமில்லை.

இத்தகைய சிந்தனைகளின் விளைவே இந்தப் புதிய சிறகுகள். இந்நாளைய சமுதாயத்தில், சீனியையும், அபிராமியையும், போன்ற மாந்தர் நிறைய இருக்கிறார்கள். ஆனால், சுஜா... அவளைத் தீர்வு காணக்கூடிய புதிய சிறகுகளைப் பெற வழிகாட்டும் நம்பிக்கையுடன் படைத்துள்ளேன். ஆயிரம் யோசனைகளைக் கூறலாம். ஆனால், வாழ்க்கை அநுபவத்தில் தான் அந்த யோசனைகளை நடைமுறையாக்குவதன் சிரமங்கள் தெரிய வரும்.

மிகச்சாதாரணமான இந்த நாவலில், நான் புதுமையானவை என்று நினைக்கும் இழைகள் உங்களுக்கும் தட்டுப்பட்டால், எனது நோக்கம் பயனளித்திருக்கிறது என்று மகிழ்ச்சியடைவேன்.

எனது ஒவ்வொரு படைப்பையும், அன்புடன் ஏற்று தமிழ் கூறும் நல்லுலகெங்கும் படித்துணர அளிக்கும் பெரு மதிப்புக்குரிய பாரி புத்தகப் பண்ணையார் தாம் இந்நூலையும் வாசகர்களாகிய தங்களுக்கு அளிக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். இந்நூல் வருவதற்கு, அளவிரந்த ஊக்கமும், ஆர்வமும் காட்டிய இளைய சமுதாயத்தினர் திரு.கண்ணன் அவர்களுக்கும், சகோதரி மீனாவுக்கும், தனிப்பட்ட முறையில், எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜம் கிருஷ்ணன்

அத்தியாயம் - 1

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கியிவ் வையந் தழைக்குமாம்.

கவியரசர் பாரதியார்

நீராடிய ஈரக் கூந்தல் முடிச்சுக்களில் மலர்ச்சரங்களும், உதடுகள் முணமுணக்கும் தோத்திரங்களும், பட்டுச் சேலை - வியர்வைக் கசகசப்புக்களும் முன் மண்டபத்தில் வரிசை பிதுங்க நெருங்குகின்றன. ஆடவர் பெண்டிர் என்று தனித்தனி வரிசையில்லை. சட்டைக்கு மேல் ஒட்டியாணங்களாய்ப் பதிந்த உத்தரீயக் கோலங்கள் அதிகம். இந்த வரிசை தரும தரிசனம்.

தடுப்பின் இன்னொரு பக்கத்திலிருந்து, பணம் கட்டித் தரிசனம் செய்ய வந்த வரிசையும் இங்கே சங்கமமாகிறது. அருச்சனைத் தட்டுக்கள், பூமாலைகள், பால் செம்புகள் என்று முடிவேயில்லாமல் தொடர்கிறது.

அபிராமி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நகர்ந்து, நகர்ந்து, கருவறையில் நேராக தேவியின் திருக்கோலம் தெரியும் வாயிலுக்குள் வந்திருக்கிறாள். குருக்கள் தாம் மறைத்துக் கொண்டிருக்கிறார். திருக்கோலம் தெரியவில்லை.

நடுவே தடுப்புக்குள், அழுக்கு வேட்டியும், கையில் மின்னும் மோதிரமுமாக ஒரு குருக்கள் இயந்திரம் போல் அருச்சனைத் தட்டுக்களை வாங்கி, தேங்காயை உடைத்துக் கீழே உள்ள அண்டாவில் ஊற்றுவதும், அருச்சனைச் சீட்டுக்களைப் பார்த்துக் கம்பியில் குத்துவதும், 'என்ன பேர்', அருச்சனை யாருக்கு, கோத்திரம், நட்சத்திரம் என்று கேட்பதும், அந்த முகவரிகளைச் சொல்லி, பிரார்த்தனையை முணமுணப்பதுமாக இயங்குகிறார்.

இருண்ட கருவறையின் முன், வேண்டுவோர் தரும் காணிக்கைத் தட்டிலிருந்து, குங்குமம் பூவெடுத்து, அம்பாளை இனிய குரலில் கேட்பவர் மனம் ஒன்றி உருகத் தோத்திரம் செய்யும் ஒன்றைக் குருக்கள், இப்போது பலராகப் பங்கு போட்டுக் கொண்டு, குழுமும் பக்தர்களின் தேவைகளை நிரப்புகின்றனர். எனவே, முகவரியைச் சமர்ப்பித்துத் தேங்காய் உடைத்து, அருச்சனைச் சீட்டுக்களைப் பார்த்து, கண்காணித்து, கூட்டத்தை முன் நகர்த்துகிறார் ஒருவர்.

அம்மனைப் பார்க்கக் கிடைக்கும் இடத்தில், தட்டிலுள்ள பூவையும் குங்குமத்தையும் எலுமிச்சம் பழங்களையும் எடுத்து அதற்கென்ற கூடைகளில் போட்டுவிட்டு, அங்கு இருக்கும் சமர்ப்பித்த பிரசாதங்களைத் தட்டுக்களில் மாற்றம் செய்கிறார் ஒரு குருக்கள். தேவியின் பக்கம் நின்று இன்னொருவர் மலர்களை அருச்சனை செய்ய அவ்வப்போது நெய்த்திரி தீபாராதனை காட்டுகிறார் மற்றொருவர்.

"ஏம்மா? மாலைக்குச் சீட்டு வாங்கல...?"

"வாங்கியிருக்கிறேனே...?"

"இது அர்ச்சனைச் சீட்டில்ல? மாலைக்குத் தனியா சீட்டு வாங்கணும்?" வயதான் ஓர் அம்மாள்,

"தனிச் சீட்டு வாங்கணும்னு தெரியாதய்யா..."

இப்ப வரிசையில் இருந்து சீட்டு வாங்கப் போனால்...

"சரி... நாலணா சில்லறையாக் குடுத்திட்டுப் போங்க..."

அம்மாள் நாலணாச் சில்லறைக்குத் தேடுகிறாள்.

அபிராமி சட்டென்று தன் பர்சைத் திறந்து சில்லறையை எடுத்து வைக்கிறாள். "வெளில வந்ததும் தாரேம்மா! சீட்டு வாங்கணும்னு தெரியாது..."

"அதனால என்ன?..."

"ஏம்மா, இந்த மாலை யாருடையது...?"

அபிராமி சட்டென்று நிற்கிறாள். "ஏங்க, நாந்தான் கொண்டு வந்தேன்."

"சீனிவாசன், மூல நட்சத்திரம்..."

"இது உதவாது. இதில் ஏதேதோ பூவெல்லாம் வச்சுக் கட்டிருக்கு...?"

அபிராமி திடுக்கிட்டாற் போல் நிற்கிறாள். மாலை இங்கே கோயிலின் முன் வாங்கவில்லை. அவள் குடியிருக்கும் ஆழ்வார் நகர்ப் பக்கமிருந்த பஸ் நிறுத்தக் கடைவீதியில் பூக்கடையில் வாங்கி வந்தாள்.

மாலை நிராகரிக்கப்பட்டதும் துணுக்கென்றிருக்கிறது.

"துருக்கசாமந்தி வச்சிருக்காங்க இல்ல...? அதைச் சேர்க்கமாட்டாங்க?"

"இத பாருங்க, கொத்தரளி, மாசிப்பச்சை, இதெல்லாம் வச்சுக் கட்டினாத்தான் விசேஷம். ஜவ்வந்தி ரொம்ப சிலாக்கியம்..."

பல்வேறு கருத்துரைகளுடன் கூட்டம் நகருகிறது.

அபிராமியின் கையில் நிராகரிக்கப்பட்ட மாலையும், நெஞ்சில் கவியும் கவலையும் கனக்கின்றன.

"ம்... போங்க... போங்க? நின்னிட்டே இருந்தால் எப்படி...?"

வில்லை அணிந்த, அரசு அத்தாட்சிப் பணியாளர் இருவர் கருவரைக்கு முன் நிற்கின்றனர்.

அம்பாளின் கவசங்கள் - அலங்காரங்களை ஒரு குருக்கள் உள்ளே களைந்து கொண்டு இருக்கிறார்.

முன்னே நிற்பவர், யந்திரமாக எலுமிச்சம்பழம் குங்குமப் பிரசாதம், என்று இயங்குகிறார். அபிராமி பார்க்கையில் தேவியின் கைப்பகுதி, மார்புப் பகுதி, என்று வெள்ளிக் கவசம், பகுதி பகுதியாக ஒரு அகலப் போணியில் நிறைகிறது.

"எண்ணிக்கப்பா? இருபத்தொண்ணு? இருபத்திரண்டு..."

குருக்கள், விலை உயர்ந்த கவசப்பகுதிகளள எண்ணுவதுதான் அருச்சனையாகப் படுகிறது.

இடையே, "போங்க! போங்க! மணியாயிட்டுது! நிக்காதீங்க!" என்ற விரட்டல்கள் சாட்டையடி போல் உக்கிரமாகின்றன.

அபிராமி நகர்ந்து மறுபக்கம் நின்று, தேவியின் திருமுகத்தையே பார்க்கிறாள். பிரார்த்தனைகள் நெஞ்சுக்குள் அமுங்கி விடுகின்றன.

குருக்கள் கண் மலர்களை நீக்குகிறார்; கழுத்தில் தவழும் ஆபரணங்களைக் களைகிறார்; பவளம் கோத்த பொட்டுத் திருமாங்கல்யம்... அதையும் கழற்றித் தட்டில் போட்டு, "எண்ணிக்கப்பா?" என்று சொல்கிறார்.

அபிராமிக்குக் கால்கள் தடுமாறுகின்றன.

"போங்க... போங்கம்மா!..."

கோயிலுக்கு அமைதி நாடி வருவதென்பது பொய்யா?

மனம் குழம்பித் தவிக்கிறது.

திருமாங்கல்யம் என்ற மங்கல சூத்திரத்துக்கு, எத்துணை மகத்துவம் கற்பிக்கப்பட்டு இருக்கிறது? கருவறைக்குள் நிகழும் புனிதமான செயல்களுக்கு எத்துணை மகத்துவம் உண்டு? தேவியின் திருவாபரணங்களை, திருமாங்கலியத்தையும், இப்படி எண்ணி எண்ணி வில்லைச் சேவகரிடம் ஒப்புவிக்கும் செயலுக்கு என்ன மகத்துவம்?

இவர்கள் விரட்டப்படுகிறார்கள்.

வெளியே தேவியின் அபிடேகக் காட்சி பார்க்கத் தனியாகப் பணம் கட்டிச் சிறப்பு உரிமை பெற்ற கூட்டம் குழுமியிருக்கிறது. மண்டபத்துள், ஆற அமர அபிராமி அந்தாதி படிப்பவர்கள், சௌந்தரிய லஹரி பாடுபவர்கள், என்று உட்கார்ந்து பக்தி செய்யும் பெண்கள் - ஆண்கள்.

தம் நேர்ச்சைக் கடன் முடித்து, பால் நிவேதனம் செய்து, அதைச் சேவார்த்திகளுக்கு வழங்கி நிறைவேற்றும் மக்களும் ஆங்காங்கு பால் செம்புடன் நின்று, தமக்குத் தோன்றியவர்களை மட்டும் அழைத்துக் கொடுக்கின்றனர்.

சுமையான மாலையை, அபிராமி கம்பத்தடியில் வைக்கிறாள்.

"டீச்சர்...? அபிராமி டீச்சரில்ல?... வாங்க... பால் வாங்கிக்குங்க?" சிறு தம்ளரில் பாலை ஒரு கரண்டி ஊற்றி நீட்டும் அம்மாளைப் பார்த்ததாக நினைப்பே அவளுக்கு வரவில்லை. என்றாலும் அப்போதைய நேரத்துக்கு அந்தப் பால், குங்குமப்பூ ஏலக்காய் போட்டு சுண்டக் காய்ச்சிய பால், மிகச் சுவையாக, ஆறுதலாக இருக்கிறது.

இவள் அருகில் பரட்டைத் தலையுடன் ஓர் ஏழை நின்று "எனக்கம்மா?" என்று கேட்கிறது. ஒரு சொட்டு கரண்டியில் எடுத்து ஏழையின் உள்ளங்கையில் விடும் அந்த அம்மாள், "ஏன் டீச்சர்? சீனிக்குக் கல்யாண மாயிட்டுதுன்னு சொன்னாங்க, சௌக்கியமா?" என்று விசாரிக்கிறாள்.

"ஆயிட்டுதம்மா. ஒரு குழந்தை கூட இருக்கு... நீங்க..."

"நாம் சுமித்ராவோட அம்மா டீச்சர், தெரியலியா?"

"ஓ...! அடையாளமே தெரியாம தலை நரைச்சிப் போச்சே? இப்ப இங்கதா இருக்கீங்களா?"

"ஆமாம். இவுங்க ரிடயர் ஆகிட்டாங்களே? அண்ணா நகர்ல வீடு கட்டிட்டோம்..."

"சுமி மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிட்டாளா,... இல்ல..."

"அமெரிக்கா இல்ல? விசாவுக்காகக் காத்திட்டிருக்கா, அவளுக்காகத்தா ஆறு வாரம் கோயிலுக்கு வந்தேன். வாங்க டீச்சர் ஒரு நாளைக்கு?"

"நாங்கூட ரிடயர் ஆயிட்டம்மா, ஒரு வருஷம் மேல ஆச்சி..."

"அட...? டீச்சர், உங்களுக்கு ரிடயர் ஆக வயசாச்சு? தெரியவேயில்லை?..."

"வயசு ஓடிப்போவுது..."

"இப்ப... சும்மாதானே கோயிலுக்கு வந்தீங்க..."

"ஆமாம். செவ்வாக்கிழமையாயிருக்கே, ஆடி மாசம்னு வந்தேன். நேரம் கழிச்சு வந்தா... கவசத்தை எல்லாம் கழட்டிட்டாங்க..."

"நாங்களே எட்டு மணிக்கு வந்தோம். பால் கறந்து காய்ச்சி எடுத்திட்டுக் கிளம்ப அந்த நேரம் ஆயிட்டுது. அதற்குள்ள க்யூ. இந்நேரம் ஆச்சு..."

"சீனி எங்கே வேலையாயிருக்கிறான்?..."

"அதே, இன்ஜின் ஸ்பேர் பார்ட்ஸ்லதா ஸேல்ஸ் ரெப்ரஸன்டேடிவா இருக்கிறான். மருமக, கமர்ஷியல் டாக்ஸ் ஆபீஸ்ல, இருக்கா...?"

"ஓ, வொர்க்கிங் கர்ளா?"

"ஆமாம்... வரெம்மா?"

அபிராமி சிறு மூங்கில் தட்டைச் சுமந்து கொண்டு கோயிலை வலம் வருகிறாள்.

"சும்மாத்தான் வந்தீங்களா?"

இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும், சும்மா வராதவர்கள்...

"நேரம் பண்ணித் தொலைச்சுட்டான், பஸ்ஸில. கதவைப் போட்டுட்டா. இனிமே அபிடேகம் முடிந்துதான்!"

"இந்த அம்பாளின் சக்தி தனி. எனக்குக் கண் கண்ட தெய்வம். ஜக்குவுக்கு ஹாப்கின்ஸ்ல, இடம் கிடச்சி எல்லாம் ரெடியாயாச்சு. விஸா கிடைக்கல. ஆறு வாரம் கோயிலுக்கு வரேன்னு, அவனையும் கூட்டிண்டு வந்தேன். எலுமிச்சம்பழம் வாங்கிண்டு போனோம். நாலே வாரத்துல விஸா வந்துடுத்து. கடைசி வாரம் முடிக்கக் கூட அவன் இல்ல. நான் தான் முடிச்சு, பிரசாதம் அனுப்பினேன்?"

ஒரு வயிரத் தோட்டம்மாள், இன்னொரு பட்டுப்புடவையுடன் பேசிக் கொண்டு சுற்றுகிறாள்.

"கல்யாணம் நிச்சயமாயிட்டுது. ஆனா, பணம் எப்படிப் புரட்டுவதுன்னு புரியல. அம்பாள் பேரில் தான் பாரம். அவ எப்படியோ வழி காட்டுவா..."

வயசுக்கு வந்து வாழ்வுக்குக் காத்துக் காத்துத் தவம் இருக்கும் பெண்கள், வந்து கல்லின் மேல் போட்ட மஞ்சள் சரடுகள் அவள் கண்களை உறுத்துகிறது. இந்தக் கட்டுப்பாட்டு யுகத்திலும் மஞ்சட் கயிற்றில் சிறு தொட்டில்கள் ஆனந்தமாகத் தொங்குகின்றன...

"இந்தாங்கம்மா? உங்களை அங்கெல்லாம் தேடினேன்?"

கால் ரூபாய் சில்லறையை அந்த அம்மாள் நீட்டுகிறாள்.

"இருக்கட்டும்மா?... சாமிக்குக் குடுத்தது போயி..."

"நீங்க வேற மாலை வாங்கிப் போட்டீங்களா?"

"நேரமில்லையே? நடய அடச்சிட்டாங்கல்ல?..."

"இந்த மாதிரி முன்னல்லாம் ஒண்ணுமில்லீங்க. எங்க வீட்டுக்காரருக்குப் பூர்வீகம் இந்த ஊருதா. இங்க மாரியம்மன் கோயில் தீமிதி விசேசம். இந்தக் கோயிலுக்கு இப்படி ஒரு மகிமை கெடையாது. சின்ன உள் மண்டபந்தா. பஞ்சலோக விக்கிரகம் கூட வெளிலதா வச்சிருந்தா. எங்க மாமனாரு முன்ன சொல்வாரு, அது ரொம்ப நாளைய விக்கிரகம்னு... இப்பதா குடும்பம் கிராமத்த விட்டுப் போயிடிச்சி. வீடு வாசல்லாம் வித்துட்டா... மனுசங்களுக்கு வராப்பல சாமிக்கும் கோயிலுக்கும் கூட மகிமை, நேரம் காலம்னு ஆயிப்போச்சி..."

"மனுசந்தானே சாமிய உண்டு பண்ணி எல்லாம் செய்யிறான்னாலும், முன்னயும் நா வந்திருக்கே. ஜனங்கல்லாம், ஏதோ ஒரு நம்பிக்கயப் புடிச்சிட்டு வராங்க. அருச்சனை எல்லாம் கொஞ்சம் நல்லாச் செய்யக் கூடாதா?... அல்லாம் கழட்டிக் கழட்டி போகணில போட்டா. சுருக்குன்னுது...?"

"சினிமாக் காரங்க வந்துதா இங்க ரொம்பப் பிராபல்யம், பணம், எல்லாம். ஆத்மார்த்தம் போயிட்டுது. ஆனா அத்தினி பேரும் ஏதோ சக்தி, காரியம் நடக்குதுன்னதா வாராங்க. வேலையில்லாத இருக்கிற பிள்ளைங்க எத்தினி வருது பாருங்க. அவங்க, கலியாணமாகாத பொண்ணுங்க. இவங்கதா ஜாஸ்தி..."

"நீங்களும் அப்பிடித்தான் வந்தீங்களா?"

"...அப்பிடீனில்ல. எங்க பொண்ணுக்குத் திடீர்னு உடம்பு சுகமில்லாம, ரத்தம் கெடுதல்னு சொல்லிட்டா. கிலியாப் போயிடுச்சி. அவ வூட்டுக்காரருக்கு ரொம்ப நம்பிக்கை... டெஸ்ட்ல ஒண்ணில்லாம இருக்கட்டும்னு வேண்டிக்கிட்டுப் போய்வான்னா, வந்தேன்... நீங்க... மகன், மகள் இருக்காங்களா?"

"ஒரே மகன் தான்..."

சட்டென்று அபிராமி முடித்துக் கொள்கிறாள். "வரேம்மா? பஸ் போயிடறானோ என்னமோ?..."

கோயிலில் நின்று இவ்வாறு பேசித் தொடர்பு கொள்வதும் கூட இந்த நேரத்துக்கு உறுத்தலாக இருக்கிறது.

அம்மனின் திருமாங்கல்யம் பொட்டைக் கழற்றிப் போட்டார்.

எல்லாம் மனிதர்கள் தாம் செய்கிறார்கள். சாதாரண காரியங்களுக்கு அற்பங்களுக்கு மகத்துவம் ஏற்றுகிறார்கள். ஆனால் அதைச் சுமந்து பொறுப்பேற்றவர்கள், மிகவும் அற்பமாக அந்த செயல்களின் முக்கியத்துவத்தைக் கழற்றி விடுகிறார்கள்.

மஞ்சள் நூல் கற்பீடத்தில் எத்தனை விழுந்திருக்கின்றன.

இத்தனையும் நேர்ந்து கொண்டவர்களின் மன ஆதங்கத்தையும், எப்படியேனும் தாலி கழுத்தில் விழாதா என்ற தவிப்பையும் புலப்படுத்துகின்றன. உலகம், மூட நம்பிக்கைகளையும் பழைய அறிவுசாராக் கோட்பாடுகளையும் உதறிவிட்டு, முன்னேற வேண்டும் என்று ஒரு புறம் போராட்டம் கொண்டு வந்தாலும், மக்களின் மனங்கள் மீண்டும் மீண்டும் இந்த மாதிரியான நம்பிக்கைகளைக் கெட்டியாக ஏன் பிடித்துக் கொள்கின்றன?

அபிராமி மஞ்சள் நூல்களை வெறித்துப் பார்க்கிறாள்.

அவளும் அத்தகைய நம்பிக்கைக்குத் தன்னுள் இடம் கொடுத்திருக்கிறாள். இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் தான் சுஜியின் தாயார் மங்களாம்பிகையைச் சந்தித்தாள். சாதாரணமாக, நூலைச் சாத்த, வாராவாரம், அந்தக் கன்னிப் பெண்களே தாம் வருவார்களாம். இதைப் பற்றி அபிராமிக்குத் தெரியாது. அதிகமாகக் கோயில் குளம், என்று அவள் சென்றதே இல்லை...

பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியையான சுந்தரம்மா தான் சொன்னாள். "அபிராமி, இப்படித் திண்டாடுறியே? அவனுக்கும் முப்பது வயசாகுது. ஒரு கல்யாணம், கால்கட்டுன்னு விழுந்தா, பையன் திருந்திடுவான். நான் சொல்றேன் கேளு. ஒரு மண்டலம் மாங்காட்டு அம்மனைச் சேவித்து நேர்ந்து கொள். ரொம்ப சக்தி" என்ற பீடிகையுடன் எவர் எவர் கஷ்டங்கள் எல்லாம் மலையாய் வந்ததெல்லாம் பனியாய் விலகிப் போயின என்று பட்டியல் விரித்தாள். அப்போது அபிராமிக்கு அதைப் பற்றிக் கொள்வது சரி என்று தோன்றியது, வந்திருந்தாள். எலுமிச்சம் பழம் வாங்கி வந்து, அம்மனின் பிரதிநிதி போல் பெற்று, காலையும் மாலையும் குங்குமமிட்டு வணங்கி, வாராவாரம் சிரத்தையுடன் கோயிலுக்கு வந்தாள். மூன்றாம் வாரத்தில் தான், அந்தக் கற்பீடத்தின் அருகில் மங்களத்தைப் பார்த்தாள்.

கண்களில் ஓர் ஆச்சரியக் குறி.

பச்சென்று மஞ்சட் பூசிக் குளித்து, நெற்றியில் பெரிய குங்குமம் துலங்க, முக்காலும் நரைத்த கூந்தலில் பூ விளங்க இந்த அம்மாள் மஞ்சட் கயிறு போடுவது யாருக்காக? மகனின் திருமணமா, மகளின் திருமணமா?

"... இந்தப் பிரார்த்தனை..."

"எம் பொண்ணுக்குத்தா. இருபதெட்டு வயசாகுது. ஆபீஸ்ல வேலையா இருக்கா. பி.காம் படிச்சிட்டு ஏழு வருஷமாச்சு. ரெண்டு பொண்ணு. எல்லாம் கட்டிக்குடுத்துப் போயிட்டாங்க. பையன் பெரியவன், அவனும் குடும்பமா வெளிநாட்டில இருக்கிறான். அவருக்கு வயசாயிப் போச்சு. வெளி நடமாட்டம் கிடையாது... என்னமோ சொன்னாங்க. முதவாரமும் கடைசி வாரமும் மட்டும் அவ வந்தாப் போதும்னு சொன்னாங்க. அவகிட்ட சொன்னா, என்னம்மா இதெல்லாம் கேலிக் கூத்தும்பா. இந்தக் காலத்துப் பொண்ணுகளுக்கு, எல்லாம் கேலிதா. வரதட்சணை குடுக்கக் கூடாது; அவங்களா வந்து, எனக்குப் புடிச்சா கட்டிப்பேங்கறா. ராப்பகலா இவ கவலை தான்..."

ஒரு சில விநாடிகளில் மொத்தமான விவரங்களை அந்த அம்மாள் கொட்டி விட்டாள்.

"நீங்க..."

இப்படித்தான் அம்மனின் கிருபை கை கூடுமோ?

அபிராமி, தன்னைப் பற்றிச் சொன்னாள்.

பூர்வீகம் வேலூர்ப் பக்கம். பெரிய குடும்பத்தில் தான் பிறந்தாள். அண்ணன், தம்பி, அக்கா எல்லாரும் வடக்கே இருக்கிறார்கள். எல்லோரும் மூன்றாம் தலைமுறையைக் கண்டாயிற்று; தொடர்பில்லை. இவள்... இவள் புருஷனுடன் குடும்பம் நடத்திய பத்து மாசத்தில், இந்தப் பையனுக்குத் தாயாகும் ஒரே பலன் தான் கண்டாள். ஏனெனில், பங்களூரில் அவன் வேறொரு குடும்பமே வைத்திருந்தான். குழந்தைக்கு ஒன்றரை வயசு வரை சண்டையும் பூசலுமாக இருந்தது. பிறகு, இவள் வேறாகி விட்டாள். படித்துப் பட்டம் பெற்று ஆசிரியைப் பணி செய்து ஓய்வு பெறும் நிலைக்கு வர இருக்கிறாள். பையனுக்குக் கல்யாணம் செய்ய வேண்டும்...

ஒரு சிறு சிக்கல்...

மங்களம்மா, அந்தச் சிக்கலை முதலிலேயே சொல்லி விட்டாள்.

"அந்தக் காலத்தில, அவருக்கு நா ரெண்டாந்தாரம். ரெண்டு பேரும் சாதி வேற வேற. அப்ப, எனக்கு ஆரும் நாதியில்ல. அம்மா, ஏதோ தொழில் செய்துதா பிழைச்சாங்க. இவரு முதத்தாரம் இறந்து மூணு பிள்ளைகள வச்சிட்டு சிரமப்பட்டாரு. அப்ப கட்டிட்டாரு. பின்னால, சாதி சொல்லாம இருந்துட்டாங்கன்னு இருக்கப்படாது பாருங்க?..."

"நீங்க இப்படி வெளிப்படையாச் சொல்லுவதே ரொம்பப் பிடிச்சிப் போச்சி. சாதியாவது இன்னொண்ணாவது? இப்ப எனக்கு அண்ணன் தம்பி இருக்காங்கள்னுதாம் பேரு. ஊருல இருக்கிற வீடு எனக்குன்னு அப்பா சொல்லியிருந்தாரு. அவுரு போன பிறகு, அத வித்து, பிரிவினை செய்ய வந்த அண்ணன் இன்னும் நான் என்ன செய்றேன்னு கேக்கல. அவங்க அவங்க பக்கத்தில, சிநேகமா இருக்கிறவங்கதா மனுஷங்கன்னு ஆய்ப் போச்சு. எப்பவானும் இங்க வந்தா ஓட்டல்ல தங்கிட்டு வந்து எட்டிப் பாப்பாங்க. அவ்வளவுதான்...?..."

அதற்கடுத்த மறுவாரமே சுஜியைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்தாள்.

ஒடிய ஒடிய உயரமாக, மாநிறமாக, வட்ட முகத்துடன் பெண் இலட்சணமாக இருந்தாள். ஈரக் கூந்தலைத் தழையப் பின்னலிட்டுப், பூச்சூடி, நெற்றியில் குங்குமமும் கீற்றுத் திருநீறுமாகப் பாங்காகத் தெரிந்தாள்.

இது தெய்வத்தின் அருளால் கூடும் திருமணம் என்று பாரத்தை தெய்வத்தின் மீது போட்டாள்.

இப்போது அம்மனின் வெறுமைக் கோலம், நெஞ்சை உறுத்துகிறது. வெளியே பஸ் போய்விட்டதைக் கூடக் கவனியாமல் குழம்பி நிற்கிறாள்.

அத்தியாயம் - 2

வீடு திரும்பி என்ன ஆக வேண்டும், இப்படியே இந்தச் சந்தடியைப் பார்த்துக் கொண்டு நிற்கலாமே என்று தோன்றுகிறது.

சுஜி... கையில் குழந்தையை இடுக்கிக் கொண்டு, பை நிறைய அதற்கு வேண்டிய துணிமணி, பால் பாட்டில், பொம்மை என்று சுமந்து கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பும் போது, இவள் முகத்தில் அடிப்பது போல் இருக்கிறது.

"நீ உன் மகனை வளர்த்து ஆளாக்கியிருக்கும் விதம் போதும். என் குழந்தையை நீ குலவ வேண்டாம்..." என்பது போல், இவளை நிராகரித்து விட்டு, எங்கோ இருக்கும் குழந்தைக் காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகம் செல்கிறாள்.

"அபிராமி, உன் பிரார்த்தனை பலிச்சாச்சு. ரிடயராகிப் போனா, வீட்டில பேரனோ பேத்தியோ இருக்கும்...பேச. நீயும்... அந்தக் காலத்தில் சீனியக் கையில புடிச்சிட்டு, சந்து வீட்டில குடித்தனம் பண்ண வந்தது இன்னிக்குப் போல இருக்கு. இருபத்தேழு வருஷம் ஓடிப்போச்சு!" என்று சுந்தரம்மா இவளுக்கு விடைகொடுத்தாள்.

"ஏண்டி? குழந்தைய இடுக்கிட்டு ஆபீசுக்குப் போகணுமா? அந்தக் காப்பகத்தில், கூலி வேலை செய்யும் ஆயாவை விட நான் நம்பிக்கையில்லாதவளா? உனக்கே இது சரியாப்படுதா?" என்று நறுக்கென்று கேட்க, கடுமை பாராட்ட அபிராமிக்கு நா எழுவதில்லை. உள்ளூர வெம்பி நொந்து, கருகுகிறாள். நியாயம் இருக்கிறது...

புருஷன் துணையில்லாமல், ஓர் ஆண் பிள்ளையை ஒழுங்காக வளர்க்க முடியாது என்றல்லவோ முடிந்திருக்கிறது.

உச்சி வேளையின் கடுமையான வெயில். ஆடி மாதப் புழுக்கம். நுங்கு வெட்டிக் கொடுக்கிறான் ஒரு பக்கம். குஞ்சும் குழந்தைகளும் சூழக் கும்பல் விலை பேசி வாங்குகிறது. சீனிக்கு நுங்கென்றால் மிகவும் ஆசை. சந்து மூலை வீட்டில் இருந்த நாட்களில், தளதளவென்று சிவந்த மேனியும், சுருட்டை முடியுமாக, "அம்மா! நுங்கு வாங்கித்தாம்மா!" என்று அவள் பள்ளிவிட்டு வரும் போதே ஓடி வருவானே, அந்தக் காட்சி கண்களை மறைக்கிறது. சீனி... சீனி... நீ எப்படியடா ஆயிட்டே...?

வக்கீல் நோட்டீஸ்... கோர்ட்டு... ஆயிரங்காலத்துப் பயிர் முளை விட்டதும், வேரோடு பெயர்க்க... இல்லை கூடாது. தேவி. நீ கூட்டி வைத்த குடும்பம்... நீயே துணை...

பஸ்ஸில் பிரசாதப் பையுடன் கூட்டத்தில் நெறிபட ஏறுகிறாள். பழமும் பூவும் கசங்கும்படி நெருங்கி நிற்கிறாள். "முன்னபோ, அம்மா. பெரிம்மா! முன்னபோ!"

அபிராமி திடுக்கிட்டாற் போல் தன்னைத் தான் சொல்கிறான் நடத்துனன் என்று முன்னே இன்னும் நெருங்குகிறாள்.

வியர்வைக் கசகசப்புடன் பட்டப்பகலில் பஸ்ஸில் எவரிடமிருந்தோ சாராய நெடியும் மூக்கைப் பிணிக்கிறது.

கிராமத்துக் கும்பல்...

எல்லாம் மிகவும் சகஜமாகிப் போய்விட்டது. பஸ்ஸில், வழியில், ரயிலில், எங்கும் இந்த வாடை... எந்தப் பக்கம் பார்த்தாலும், சாராயக் கடை, கள்ளுக்கடை... யாரிடமேனும் வாய்விட்டுக் கத்த வேண்டும் போல் இருக்கிறது.

ஓய்வு பெற்றதும், மூவாயிரம் கொடுத்துத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி வைத்திருக்கிறாள். நாடகம், சினிமா, ஒலியும் ஒளியும், எல்லாவற்றிலும் அநாச்சாரச் செயல்கள், பிஞ்சு மனங்களில் கூட வெறியேற்படுத்தும் வண்ணம் விரிக்கப் படுகின்றன...

"முன்ன போம்மா! பெரியம்மா! பாட்டியம்மா! அங்கியே நிக்கறே..."

"எங்கய்யா முன்ன போக? கால் வைக்க இடமில்ல! சாராய நாத்தம் வேற குமட்டுது. கோயிலில்லை, மடமில்லை, பள்ளிக்கூடமில்லைன்னு, எல்லா ரோட்டிலும் திறந்து தொலைச்சிருக்கே?..."

பஸ்ஸை விட்டிறங்கிச் சிறிது தொலைவு அவளுடைய புதிய காலனி இல்லத்துக்கு நடக்க வேண்டும். பெரிய சாலையில் சினிமா கொட்டகை, பெட்ரோல் பங்க் கடந்து தெரு திரும்பும் முனையில் ஒரு பெண்கள் பள்ளி புதிதாக முளைத்திருக்கிறது. மதிய உணவு நேரம். ரோஜா வண்ணச் சட்டை சீருடை பச்சையில் சிறு கட்டம் போட்ட பாவாடை. ரோஜா வண்ணச் சட்டை தொங்கத் தொங்கப் பாவாடை சட்டைகளில், குழந்தைகள் ஒவ்வொருத்தியும் பூச்செண்டாகத் தெரிகிறாள். பள்ளிக்கூடச் சூழலே ரம்மியம். இந்த மணமே தனியான சுகம். வாழ்க்கை ஒன்றுமில்லை என்று ஒடிந்து போன பின், புதுச் சிறகுகளாய் அவளுக்கு ஒரு மேன்மையையும் மதிப்பையும் கவுரவத்தையும் அளித்த சூழல். "அபிராமி டீச்சர்" என்று யாரேனும் குரல் கொடுத்தாலே புல்லரிக்கும் தனிப் பூரிப்பு. இந்த வாழ்க்கைத் தடத்தில், சீனி சின்னஞ்சிறு பாலகனாய் அவள் ஒற்றை விரலைப் பற்றிக் கொண்டு தடம் மாறாமல் நடந்து வந்தான். அவனைத் தன்னுடனேயே தொடக்கப் பள்ளியில் சேர்த்துக் கொண்டாலும், மூன்றாம் வகுப்பிலேயே பையன்களுக்கான தனிப் பள்ளியில் மாற்றி விட்டாள். சிரமமே இல்லாமல் இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் இடம் கிடைத்தது.

சீரான அவன் வளர்ச்சி... எத்துணை மகிழ்ச்சிகரமான நாட்கள்! தாய் சொல்லை மீறிய பையனாக அவன் ஒரு போதும் இருந்ததில்லை. அவனிடம் கைச் செலவுக்கு பஸ்ஸுக்குக் காசு கொடுத்தால் அவளறியாமல் ஒரு பைசா செலவு பண்ண மாட்டான். "அம்மா, ஐஸ்கிரீம் வாங்கிக்கட்டுமா? இன்னிக்கி?" என்று கேட்காமல் அவன் வாங்கித் தின்றதில்லை.

இந்த அடித்தளம் அவளுள் பையனின் மீது எத்தகைய நம்பிக்கையை வளர்த்து விட்டது!

அவனுடைய மாற்றம் எவ்வாறு நேர்ந்ததென்பதையே அவளால் நிர்ணயிக்க இயலவில்லை. அன்றாடம் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறாள். பன்னிரண்டு வயசுப் பருவத்துக்கும் இப்போதைய தோற்றத்துக்கும் மாறுதலை அன்றாடமா கண்டு கொள்ள முடிகிறது? அப்படித்தான் மைந்தனின் வளர்ச்சியும் அவளுக்கு எந்தப் பிரிசலையும் கற்பிக்கவில்லை.

குளியலறையில் அவன் விசிறிவிட்ட லுங்கி, ஜட்டி, துண்டு, பனியன் மூலைக் கொன்றாகக் கிடக்கும். காலையில் பள்ளிக்குச் செல்லு முன், வாசலில் சைக்கிள் மணிகள் ஒலிக்கும். "சீனி... சீனி இருக்கிறானா டீச்சர்?" என்று வீச்சும் விறைப்புமாக மீசை அரும்பி வரும் பருவத்து உடையும் கட்டைக் குரல்களின் (ஆண்) மலர்ச்சிகள், தன் இல்லத்துக்கே ஒரு முக்கியத்துவத்தைக் கூட்டி விட்டதாக நெஞ்சின் ஓரங்களில் உவகையை மலர்வித்தன. பந்து மட்டைகள், சளசளவென்று கிரிக்கெட் அளப்பு, கிண்டல், கேலி, எல்லாம் அவளைப் புதிய ராச்சியத்தின் எல்லையில் மகிழ்வித்தன.

அவன் என்ன படிக்கிறான், வகுப்பில் எப்படி நடக்கிறான், என்று கணிக்கவே தேவையில்லை என்ற வகையில், அவனுடைய பேச்சு அரட்டல், நண்பர்கள் சூழ எப்போதும் நாயகனாக விளங்கும் தோற்றப் பொலிவு எல்லாம் அவனை விட உயர்ந்த வகையில் பிள்ளைகள் விளங்க முடியாது என்று நம்பிக்கை கொள்ளச் செய்து விட்டன... சீனி... அவளைப் போல் கறுப்பு அல்ல; குட்டை அல்ல. சிவந்த மேனியும் சுருள் முடியும், வாளிப்பாக வளர்ந்த வளர்ச்சியும், கனவாகி மறந்து போன அவன் தந்தையைத் தான் நினைவூட்டின.

"அம்மா, கிரிக்கெட் மாட்ச் டிக்கெட் வாங்கணும், பணம் வெட்டு" என்பான்.

பொங்கல் நாளாக இருக்கும். அதிகாலையில் எழுந்து இவனுக்கும் இவன் படைக்கும் பொங்கல் புளிச்சோறு வடை என்று கட்டிக் கொடுப்பாள். ஆரவாரமாகக் கலகலத்த பள்ளிப்பருவம், சுமாரான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முற்றுப் பெற்றது.

இவள் இடைநிலை ஆசிரியையாகச் சேர்ந்து, பட்டம் பெற்று இறுதிக் காலத்தில் தான் உயர்மட்டத்துக்கு ஊன்ற வந்தாள். இவள் பாடமும் புதிய கணக்கு, விஞ்ஞானம் என்ற பிரிவில் இல்லை. தமிழ், வரலாறு... என்று ஒட்டிக் கொள்ளும் ஆசிரியைதான். எனவே, சீனியாகத் தாயிடம் வந்து, பாடங்களுக்கு உதவி கேட்டதேயில்லை. அவனாக எந்த உதவியும் தள்ளளும் இல்லாமல் தான் தேர்ச்சி பெற்றிருந்தான்.

"எங்க சீனி புத்தகம் எடுத்துப் படிச்சே பார்த்ததில்ல. கொஞ்சம் படிச்சிருந்தான்னா, ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்திருப்பான். அததுவா மலரணும். சுகுணா சின்ன வயசிலியே அவனுக்கு ஒரு தரம் கேட்டாப் போதும் ஒப்பிச்சுடுவான். சீனியப்பத்தி எனக்குக் கவலை இல்லை. எனக்கு எந்த சிபாரிசும் நீ பண்ண வாணாம்மான்னுட்டான்..." என்று தன் சக ஆசிரியைகளிடம் பெருமைப்பட்டுக் கொண்டாள்.

அப்படியே தான் அவனாகக் கல்லூரியில் சேர்ந்தான். என்ன பாடம் படிக்க வேண்டும் என்பதற்கும் அவளிடம் யோசனை கேட்கவில்லை. கணக்கு பி.எஸ்.ஸி. என்று படித்தான்.

கல்லூரி என்றானதும், அவன் முற்றிலும் அவளால் ஊகிக்க முடியாத எல்லைக்குள் சென்றதை அவள் உணரவே இல்லை.

பள்ளி நாட்கள் வரையிலும் காலையில் அவள் சமைத்துத் தனக்கும் அவனுக்கும் மதிய உண்டியும் கட்டி வைப்பாள். அவன் சாப்பிட்டுப் பள்ளி சென்ற பின் அவள் தன் பள்ளிக்கு நடந்தே செல்வாள்.

கல்லூரி நியமத்தில், இரவு வீடு வரவே நேரமாகிறது. வந்த பின்னரும் வாயிலில் நின்று நண்பர்களுடன் பேச்சு.

பத்து மணியானால் இவளுக்கும் சோர்வாக உறக்கம் வந்து விடும். "மம்மி டியர்! அதுக்குள்ள தூங்கிட்ட?"

விளையாட்டுப் போல் முகத்தில் தண்ணீர் கூட அடிப்பான்.

"சீ, என்னடா சீனி..."

"ஏம்மா? உங்க ஸ்கூல்ல கிளாஸ்லயும் தூங்கற, இங்கயும் வந்து எட்டு மணிக்கே தூங்கற? அப்புறம் நீ இப்பக் கட்டும் வீட்டு நிலை உடைச்சு வைக்க வேண்டியிருக்கும். குள்ளமா, குண்டா, கால் தெரியாம யார் வரான்னு நானே புரிஞ்சுக்க முடியாது?"

கேலி, கிண்டல்.

காலை எழுந்திருக்க ஏழே கால் - ஏழரை ஆகும்.

அபிராமி ரேடியோவைச் சமையலறையில் வைத்துக் கொண்டு காலைப் பாடல் நிகழ்ச்சி கேட்டுக் கொண்டு சமைப்பாள். சீனி பெரியவனாக வளர்ந்த பிறகு, அவள் ட்யூஷன் பெண்கள் யாரையும் வீட்டுக்கு வரச் சொன்னதில்லை. ஒன்றிரண்டு, பள்ளியிலேயே வகுப்பு முடிந்ததும் சொல்லிக் கொடுத்து விடுவாள்.

"என்னம்மா, ரேடியோப் பெரிசா அலற விட்டிருக்கே?"

"மணி ஏழரை சீனி, எழுந்திருக்க வேண்டாமா? காலேஜ் உண்டில்லையா?" கஷ்டப்பட்டு எழுந்திருப்பான். ஒரு காபி. அவசரமாக ஒரு குளியல் இருந்தால் இருக்கும். இல்லையேல் மாலை தான். "என்னம்மா? எட்டு மணிக்கே சாப்பாடா? டிபன் குடும்மா... இனிமே காலம டிபன் தான். மதியம் நான் சாப்பிட்டுக்கறேன். உனக்குச் சிரமம் வேண்டாம்" என்று முதலிலேயே தீர்த்து விட்டான்.

காலையில் தினமும் இட்டிலி செய்வது எளிதாக இல்லை. அதற்கும் சட்டினி, சாம்பார் என்று இல்லையானால், "போம்மா, எனக்குப் பிடிக்கல..." என்று வைத்துவிட்டு வெளியே போய்விடுவான். எனினும் சிரமம் பாராட்டாமல், அவனுக்காக உழக்கரிசி அரைத்து இட்டிலி செய்தாள். நாவுக்குச் சுவையாக அவனை மகிழ்விக்கச் சமையலில் புதிய கவனம் செலுத்தினாள்.

ஆண் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும், அவன் புருஷனாக இருந்தாலும் சரி, மகனாக இருந்தாலும் சரி, அவன் நாச்சுவையறிந்து பெண்ணானவள் பணி செய்ய வேண்டும் என்பது, ஒரு பெருமைக்குரிய இயல்பாக அவளுள் படிந்திருக்கிறது. அவனுடைய பகல் சாப்பாட்டைக் காரியரில் போட்டு வேறு குடித்தனக்காரர் வீட்டில் வைத்திருப்பாள். அது ஆள் மூலம் கல்லூரிக்குச் சென்றது.

அவன் கல்லூரியில் சேர்ந்த ஆண்டில் மாசக் கணக்கில் மாணவர் - நிர்வாகம், மாணவர் - பஸ் போக்குவரத்து ஊழியர், மாணவர் - ஆளுங்கட்சி என்று எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பொதுவாக மாணவர் உலகமே பாதிக்கப்படுகிறது என்று அவள் எல்லோரையும் போல் பேசுவதுடன் விட்டு விட்டாள். ஆனால், இவன் கல்லூரி மூடியிருக்கிறதா, வகுப்புக்கள் நடக்கின்றனவா, இவன் எங்கே போகிறான், எங்கே வருகிறான் என்றெல்லாம் கவலைப்படவில்லை. "அம்மா! நூறு ரூபாய் குடு ஒரு புத்தகம் வாங்கணும், புதுசா ஷர்ட் பீஸ் ஒண்ணு சிங்கப்பூர் ஃபிரண்ட் கொண்டு வந்தான்..." என்றோ, "அம்மா, என் ஃபிரண்ட், அப்பா ஆஸ்ட்ரேலியாவில் இருக்கார். அவன் சைகிள்லேந்து விழுந்து அடிபட்டு, நான் தான் இப்ப ஆஸ்பத்திரிலே சேத்துவிட்டு வரேன். ஒரு டூ ஹன்ரட் தாயேன்!" என்றோ அவன் பணம் கேட்கும் போதெல்லாம் அவள் முகம் வாடியதே இல்லை. பையன் படிக்கிறான்; நான்கு பேரைப் பார்க்கிறான். நன்றாக உண்டு உடுத்து... அவனுக்கென்ன, என் மகன், என் சீனி ராஜகுமாரனைப் போல... என்று கேட்ட பொழுதெல்லாம் பணம் கொடுத்தாள்.

வாங்கும் சம்பளத்தில் ஓட்ட முடியாமல் சேமிப்பில் இருந்தும் எடுத்து மகன் படிப்புக்குப் பணம் கொடுத்தாள்...

"அட... அபிராமி டீச்சர்...?"

கூடையும் தானுமாக அம்சா எதிர்ப்படுகிறாள். இவளுடைய பழைய மாணவி. தாய் நான்கு வீடு கூட்டி, பத்துப்பாத்திரம் துலக்கி, வயிறு பிழைத்தவள். இந்தப் பெண் நன்றாகப் படிக்கிறாளே என்று, வலியத் தன்னிடம் வைத்துக் கொண்டு படிக்க வைத்தாள். சீனியை விட இரண்டு வயசு பெரியவளாக இருப்பாள். என்ன முயன்றும் ஆறாவதுடன் நின்று போனாள்.

"நீ இங்கயா இருக்கிற?"

"ஆமம்மா, அவுரு கொத்து வேல செய்றாரு. எங்கம்மா கட்டுப்படியாவுது! மூணு புள்ள. காய் வியாபாரம் பண்ற. போட்டுட்டுப் போற. சீனி எப்படீம்மாருக்கு? கண்ணாலமாயிடிச்சா?"

"இருக்கு, ஒரு குழந்தை..."

"தம்மாத்தூண்டு இருக்கும். கை புடிச்சிட்டு ரோடு தாண்டி விடுவ இஸ்கூலுக்கு" என்று பழைய நினைவுகளைச் சொல்லி புன்னகைக்கிறாள்.

"இப்பவும் அதே வூட்டலதா இருக்கிறீங்களா டீச்சர்..."

"இல்லம்மா கிருஷ்ணன் கோயிலுக்குப் பின்னால காலனில சின்னதா வீடு கட்டிட்ட. வாயேன்..."

"வாரம்மா. நெதம் உங்களச் சொல்லுவேன். டீச்சரம்ம்மாதா என்னப் படிபடின்னு சொல்லி இஸ்கூல்ல போட்டாங்க. நா முட்டாத்தனமா ஆறாவதோட நின்னிட்டேன்னு... வாரம்மா, பஸ் வந்திட்டது..."

காலனிப் பக்கமும் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி முளைத்திருக்கிறது. பிங்க்-வெண்மைச் சீருடைக் குழந்தைகள்.

"எங்க, அபிராமி டீச்சர், இந்த நேரத்தில...?"

புவனா புருஷோத்தமன் சௌந்தரிய லஹரி கிளாஸ் நடத்தும் மாதர் சங்க சேவகி.

வாயாடி; வம்பு என்றால் உயிர்.

"எங்க போயிட்டு வராப்பல?..."

"ஒண்ணுமில்ல... ஒரு காரியமா போயிட்டு வரேன்..."

"மாட்டுப் பெண் பிரசவிச்சு வந்தாச்சில்லையா? பொண்ணுதானே?"

"ஆமாம்..."

"குழந்தையை யார் பாத்துக்கறா? ஆபீஸ் போவாளே அவ?"

வெட்கமாக இருக்கிறது, காப்பகம் என்று சொல்ல.

"எனக்கும் வயசாச்சு, இத்தனைக்கு மேல் பழக்கமில்லாமல் சின்னக் குழந்தை பாத்துக்க. அவளுக்கு ஆபீஸ் பக்கத்தில் கிரீச் இருக்கு. நடுவில் வந்து தாய்ப்பால் குடுக்கறா..."

"அப்படியா? எந்த கிரீச்... ஐ டபிள்யூ ஏ நடத்தறதா? இவ ஆபீஸ் குறளகத்துக்குப் பக்கத்தில் இல்ல?..."

"இல்ல... அடையாறுக்குப் பக்கம். தனியார் நடத்தும் காப்பகம் தான். தாய்ப்பால் குடுக்கணும்னுதா இப்ப எல்லா டாக்டரும் சொல்றாங்களே? வரேன்!" கத்தரித்துக் கொண்டு வருகிறாள்.

ஏதேனும் செய்தி கொஞ்சம் தெரிந்தால் போதும் அதற்குக் குஞ்சம் கட்டி, மணி கட்டி, எங்கும் தமுக்கடித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள்.

இவள் தான் சீனியைப் பற்றிய முதல் பிசிறை மூட்டை கட்டிக் கொண்டு வந்து வீட்டில் சொன்னாள். பழைய வீட்டின் குடித்தனக்காரர்கள் அனைவருக்கும் டாம்டாம் அடித்தாள்.

"அபிராமி டீச்சர், உங்க சீனி சிகரெட் புடிக்கிறான். எங்க டிக்கு வந்து சொன்னா. வாராந்தரி பத்திரிகையில், என் கஸின் ஜம்பு எழுதறான் இல்லியா? அவன் நேத்து வந்தன். 'புவனி, ஒரு தாய் - முதமுதல்ல தம் பிள்ளை சிகரெட் குடிக்கிறான்னு தெரிஞ்சதும் என்ன நினைக்கிறாள்னு ஒரு பேட்டி வாங்கிப் போடணும். யாரானும் உனக்குத் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லேன்னா. எனக்கு யாரையும் தோணல. அப்படியே இருந்தாலுந்தா 'இதெல்லாமா பேட்டி குடுப்பா'ன்னேன். அப்ப டிக்கு சொன்னான், 'அபிராமி டீச்சர் வீட்டு சீனில்லம்மா, அவன் கல்வர்ட்ல உட்காந்து, நாலஞ்சு பேரோட சிகரெட் புடிக்கிறான், பாத்தேன்'னு. 'சீச்சி, நீ யாரையாணும் பாத்துட்டுச் சொல்லுவே'ன்னேன். 'இல்லம்மா நிசமா, அந்த ராம்ஜி, பாலு, அவங்க கூட இவனும் சிகரெட் புடிக்கிறான். புகையை ரிங் ரிங்கா விடறான்...'ன்னான். அவ பொய் சொல்லமாட்டா எப்பவும். எங்க மகேஷ்னாலும் பொய் சொல்லுவன். எனக்குக் கேட்டதும் திக்குன்னுது. டீச்சர் எவ்வளவு நல்ல மாதிரி. ஒரு ஆம்பிளைத் துணையில்லாம இந்தப் பிள்ளைய வளர்க்கறா. இது இப்படி சகவாச தோஷம்னு ஆயிடக் கூடாதேன்னு. அந்த ராம்ஜி, பாலு இதுகள்ளாம் மகா மோசம். சீனிய அவங்க கூட ஏன் சேர விடுறீங்க டீச்சர்!" என்று ஒரு மூச்சு பொரிந்தாள்.

உள்ளூறக் குலுங்கினாலும், காட்டிக் கொள்ளவில்லை. "அப்படியா? கண்டிக்கிறேன்" என்றாள்.

அத்துடன் புவனா ஓய்ந்தாளா?

"அத்தோட டீச்சர், ஜம்பு சொன்னான், 'அந்தக் காலேஜு முழுக்க ரவுடிக் கும்பலாப் போயிட்டுது. எல்லாம் தபதபன்னு ஓட்டல்ல பூந்து திண்ணிட்டு, பணங்குடுக்காம ரகள பண்ணும். தெருவில் ஓராள் போக முடியாது, இவங்க அட்டகாசம்'ன்னான். பாவம் நீங்க டீச்சர், பேசாம இங்க ஜெயின் காலேஜியிலோ வைஷ்ணவாவிலோ சேத்திருக்கலாம்..." என்றாள்.

அபிராமி அதுவரையிலும் தன் மகனை இவ்வாறு சந்தேகப் பார்வையில் துருவும் சமுதாயத்தைப் பற்றிக் கற்பனை கூடச் செய்ததில்லை. அவள் தன்னுடைய பெயரைக் காப்பாற்றிக் கொளவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறாள்.

புருஷனில்லாமல் இளம் வயசில் வேலை செய்து குழந்தையைக் காப்பாற்றுகிறாள் என்ற நற்பெயரில் எந்தச் சிறு துரும்பும் கீறல் விழ உராயக் கூடாது என்ற உணர்வு அவளை விட்டு அகன்றதேயில்லை.

பள்ளிக்குச் சிறுமிகளைச் சேர்க்க வரும் தந்தைமார் எத்தனை பேர்? எவரையும் நிமிர்ந்து பார்த்தறியாள். ஒண்டுக் குடித்தனத்தில் இருந்தாளே? விகற்பமாக எவருக்கும் இவள் காட்சியளித்ததில்லை; இவளுக்கும் எந்த ஆடவரும் தோன்றியதில்லை.

"அபிராமி டீச்சரா? ஒரு மாசு மறு ஒட்டாத டீச்சர். குனிந்த தலை நிமிர்ந்ததில்லை. எந்த வண்ண ரவிக்கை என்பது கவனித்தால் தான் தெரியும். குழந்தைகளை அவளைப் போல் பார்ப்பவர், சொல்லிக் கொடுப்பவர், யாருமே இருக்க மாட்டார்கள்..."

"எங்க உமாவுக்கு டீச்சரை நாலு நாள் பார்க்கலேன்னா சரிப்படாது. தலைக்குத் தண்ணி விட்டப்புறம் ஸ்கூலுக்குப் போகலாண்டின்னா கேக்கல..."

"டீச்சர், எங்க கல்யாணத்துக்கு நீங்க காலமேயே கண்டிப்பா வந்துடனும்... ஸ்கூல் லீவு போட்டுடுங்க...!"

இத்தகு சான்றுரைகள் ஒன்றா இரண்டா?

ஆனால்... சீனி... அவனுடைய தாய்க்கு எந்த நற்சான்றையும் தேடித் தரவில்லை.

மதிய உணவு நேரம் இன்னும் முடியவில்லை. சீருடைக் குழந்தைகள் பள்ளியில் நிற்கும் ஐஸ்கிரீம் வண்டிக்காரன், கடலைக் கிழவி ஆகியோரைச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். ஓரமாகப் பள்ளிச் சுவரை ஒட்டி உள்ளே வளர்ந்திருக்கும் வேப்ப மரத்து நிழலில், ஒருவன் அலையக் குலயப் படுத்திருக்கிறான். வாரிய தலையும், சட்டை டிரௌசரும், அவனை கௌரவப்பட்ட வர்க்கத்தினனாகக் காட்டுகின்றன. இளைஞன், நடுத்தர வயசில் கூட புகவில்லை. தன் நினைவில்லாமல் மண்ணில் விழுந்து கிடக்கிறான். சராயோடு, சிறு நீர் வழிந்து... ஓடி...

அடி வயிற்றைக் குபீர் என்று சங்கடம் கிளர்த்துகிறது.

இவள் மகனை ஒத்த வயசுடைய பிள்ளை ஏனிப்படிக் கிடக்கிறான்?

ஒருகால் வலிப்பு - ஃபிட்ஸ் வந்து விழுந்திருக்கிறானோ?

வியாபாரக்காரர் கவனிக்கவில்லை. ஃப்ராக் அணிந்தும், அரைக்கால் சட்டை அணிந்தும் அங்கே குழுமியிருக்கும் மாணவ மாணவியரும் கவனிக்கவில்லையே?

ஓ... இந்தப் பெரிய பெண்களுக்குக் கூட, ஈரம், அபிமானம் தோன்றவில்லையா? என்ன கல்வி பெறுகிறார்கள் இவர்கள்.

அபிராமி அவனையே பார்த்துக் கொண்டு நிற்பவள், சற்றே பெரியவளாக ஐஸ்கிரீம் சப்பிக் கொண்டு தென்படும் ஸல்வார் கமீஸ் பெண்ணின் முதுகைத் தட்டுகிறாள், "ஏம்மா, இப்படிப் பரிதாபமாக ஓராள் கிடக்கிறானே? எத்தனை நேரமாகக் கிடக்கிறானோ? வலிப்பா? யாரையேனும் கூப்பிட்டு வண்டியிலேற்றி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லலாமில்லையா?"

இளமை வீச்சாய்ப் பூரிக்கும் முகத்துக்குரிய அந்தப் பெண், இந்தத் தலை நரைத்த மௌட்டீகத்தை ஏளனமாகப் பார்ப்பது போல் உதடுகளில் ஓர் இகழ்ச்சியை நெளிய விடுகிறாள்.

"தட் ஃபெலோ இஸ் ட்ரங்க். நத்திங் எல்ஸ்!" என்று சொல்லிவிட்டு ஐஸ்கிரீமை ருசித்துக் கொண்டு போகிறாள்.

அபிராமிக்குத் தலையில் யாரோ பட்டென்று அடித்தாற் போல் இருக்கிறது.

விருவிரென்று வீட்டுக்கு நடக்கிறாள். சே...! என்ன புத்திக் குறைவு!

கதவைத் திறந்து பிரசாதப் பையை மேசையில் போடுகிறாள்.

குங்குமம், பூ, நசுங்கிய பழம், தேங்காய்... எலுமிச்சம் பழம்!... ஓ! இவள் எலுமிச்சம்பழம் கொண்டு போகவில்லையே? குருக்கள்... ஆபரணங்களைச் சேவர்த்திகள் முன் அலட்சியமாகக் கழற்றிப் போட்டு, எண்ணிக்கை சொல்லும் மனசில், கை எலுமிச்சம்பழத்தை இவள் தட்டில் வைத்ததா?

ஏதோ புதிய வேண்டாத கனம் வந்து உட்கார்ந்தாற் போல் ஓர் அச்சம் படிகிறது. என்ன அறிவீனம்? அந்தப் பதினைந்து வயசுப் பெண்ணுக்கு இருக்கும் உலகியல் அறிவு இவளுக்கு இல்லையே?

"தட் ஃபெலோ இஸ் ட்ரங்க்!" அவன் குடித்து விட்டு விழுந்திருக்கிறான். இதற்கு என்ன அபிமானம், கசிவு எல்லாம்? கொழுப்பெடுத்துப் போன உழைக்காத வருக்கத்தான் கண்களைத் திறந்து கொண்டு குழியில் விழுந்தால் அதற்கு மற்றவர் பரிவு காட்டுவது இன்னும் தவறு!

சீனி... சீனி அவனும் கூட இப்படி விழலாம், விழுந்திருக்கலாம். அவன் சம்பாதிப்பதில் ஒரு காசு குடும்பத்துக்கு வருவதில்லை. இரவு பண்ணிரண்டு மணிக்கும், ஒரு மணிக்கும் தட்டுத் தடுமாறி வீடு வருகிறான்...

தலையைப் பிடித்துக் கொண்டு பசி தெரியாமல் உட்கார்ந்திருக்கிறாள்.

அத்தியாயம் - 3

சுஜி வீடு வரும் போது மணி ஏழடிக்கும் தருவாயாகி விடுகிறது.

குழந்தை, குழந்தைப் பை, இரண்டையும் சுமந்து கொண்டு வருகிறாள். வாசல் கேட் தாழ் திறக்கும் 'கிளிக்' ஓசை கேட்டதும், உள்ளே இருந்து அபிராமி விரைந்து வந்து குழந்தையைக் கையில் வாங்கிக் கொள்வாளே?

இன்று அவள் நெஞ்சுள் குற்ற முள் உறுத்துகிறது.

வாயில் விளக்கைப் போட்டு விட்டு நிற்கிறாள்.

அக்கம் பக்கக் குழந்தைகள் சத்தம் கூடக் கேட்கவில்லை. தொலைக்காட்சி செய்திச் சுருக்கம் செவிகளில் விழுகிறது.

சுஜி அறைக்குள் சென்று, குழந்தையைத் தொட்டிலில் விடுகிறாள், அது சிணுங்குகிறது.

"இருடா கண்ணா, அம்மா, மூஞ்சியலம்பிட்டுப் பால் கொண்டு வருவேன். சமர்த்தில்ல?"

முத்தமிட்டு விட்டுக் குளியலறைக்குச் செல்கிறாள்.

பால் புட்டி டப்பா, கசங்கிய துணிகள் எல்லாவற்றையும் குழாயடியில் போட்டு விட்டு சொர்ரென்று கொட்டும் நீரில் முகம் கழுவிக் கொள்கிறாள். அபிராமி, உள்ளே சென்று காய்ச்சிய பாலை பதமான சூட்டில் ஆற்றிச் சர்க்கரை போட்டு, விட்டுச் சென்றிருக்கும் இன்னொரு புட்டியில் ஊற்றி ரப்பரைப் போடுகிறாள்.

"நீ என்னம்மா சாப்பிடறே? காபி கலக்கட்டுமா?..."

"குழந்தைக்கு உடம்பு சுடுவது போலிருந்தது. டாக்டர்ட்டப் போகலாம்னு நின்னேன். இந்தத் தாட்சாயணிக்கு எத்தனை கூட்டம்? சரின்னு பேசாமல் வந்தேன். ஞாயிற்றுக்கிழமை பிரேம் கிட்டக் கொண்டு போய்க் காட்டணும்... என்னமோ மனசே சரியில்ல. காப்பி தான் ஒருவாய் கலந்து குடுங்க போதும்..."

அபிராமி காபியைக் கலந்து கொடுக்கிறாள். சுஜி காபியுடன் அறைக்கு வந்து, குழந்தைக்குப் பால் கொடுத்து விட்டு, அவளைத் தட்டி உறங்கச் செய்கிறாள்.

பிறகு முன் அறைக்கு வந்து, டி.வி.யைப் போடுகிறாள். செவ்வாய்க்கிழமை நாடகம்...

மேசை மீதிருக்கும் குங்குமம் திருநீற்றுப் பூப் பிரசாதம், எலுமிச்சம்பழம் சட்டென்று அவள் கண்களில் பட்டு விடுகிறது.

சுஜாவின் முகம் இறுகிப் போகிறது.

அடுத்தகணம் அந்த எலுமிச்சம் பழத்தைத் தூக்கி எறிகிறாள்.

"ஆரம்பிச்சாச்சா இந்த பிஸினஸ்?"

அபிராமி நடுங்கிப் போகிறாள். எலுமிச்சம்பழம் அவள் காலடியில் உருண்டோடுகிறது.

"கோவிலுக்குப் போய்த்தான் இந்த கதிக்கு வந்திருக்கேன். நான் பாட்டில வேலை செஞ்சிட்டு ஏதோ சந்தோஷமாய் வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டு, உடுத்தி வாழ்ந்திருப்பேன். கல்யாணமாம், கல்யாணம். புடிச்சுக்கன்னு விலங்கைமாட்டி ஒரு பொறுப்பையும் கொடுத்திட்டு இன்னும் பத்தலியா?... இத பாருங்க? உங்கள் பிள்ளையோட நான் குடும்பம் பண்ண முடியும்னு எனக்குத் தோணல?"

அபிராமி அவளருகில் சென்று அவள் கையை ஆதரவோடு பற்றுகிறாள்.

"சுஜாம்மா, வருத்தப்படாதே. என்னமோ எனக்கு அஞ்ஞானம், கோயிலுக்குப் போகலாம், அவ கூட்டி வச்சது தானேன்னு தோணித்து போனேன். எலுமிச்சம் பழமெல்லாம் நான் வாங்கிட்டுப் போகல - அப்படியெல்லாம் ஒரு தீர்மானமும் இல்ல. ஏதோ மனசு ஆறுதல் - யாரிட்டயேனும் சொல்லி ஆறணும், எங்க போக?... சாந்தமடை சுஜா, உன் கஷ்டம் எனக்கும் தெரியிதம்மா. காபி ஆறிச் சில்னு போயிட்டுதே... ஓவல்டின் வாணா கரைச்சிட்டு வரேன். அலைஞ்சிட்டு வரே..."

"எனக்கு ஒண்ணும் வேணாம்... உங்களை யாரு இப்ப கோவிலுக்குப் போகச் சொன்னது?"

"தப்புத்தாம்மா..."

"எப்படியானும் கழுத்தில தாலி விழணும். எவளானும் ஏமாந்தவளப் புடிச்சிக் கட்டணும். அத்தோட உங்க பிறவி மோட்சம் வந்துடும். அப்படித்தானே நினைக்கிறீங்க?"

அபிராமிக்குத் துயரம் பொங்கி வருகிறது.

"இப்படி எல்லாம் பேசாதே சுஜா, என் மனசு எவ்வளவு வேதனைப் படுகிறதுன்னு உனக்குச் சொல்ல முடியல..."

"நீங்க தான் வேதனைப் படுறீங்க. எனக்கு குளுகுளுன்னு சந்தோஷமா இருக்கு, இல்ல?... ஆபீசில கூட தலைதூக்க முடியாதபடி அவமானமா இருக்கு. அங்க வந்து நாலு பேர் முன்னே வாடி போடின்னு பேசறான். என் கண் முன்ன, வேணுன்னு, எவ தோளிலோ கையப் போட்டுப் போறான்..."

"ஆ...? யாரம்மா?"

"யாரு? அவன் தான்? அவன் இவன் தான்னு சொல்லுவேன். தினமும் குடிச்சிட்டுக் கண்ட நேரத்துக்கு வந்தா நீங்க கதவத் திறந்து விடுறீங்க. நான் சொல்றேன் நீங்க குடுக்கிற இடம் தான் இவ்வளவுக்கு வந்தது. அப்படி என்ன பிள்ளை?..."

"சரி, இன்னிக்குக் கதவு திறக்கல..."

கண்ணீரை விழுங்கிக் கொள்கிறாள்.

அபிராமிக்குத் தாலி கட்டியவன், இந்தப் பையனைத் தவிர அவள் நினைவில் நிற்க எந்த ஒரு நலமும் இன்பமும் கொடுக்கவில்லை. என்றாலும் இன்று வரை அவனை ஏக வசனத்தில் அவன் இவன் என்று குறிப்பிட்டதில்லை.

இதுவேறு தலைமுறை; நியாயம் கேட்கிறாள். நியாயம்; நியாயம்.

"எங்கிட்டக் கேக்காம எதுக்குக் கோயிலுக்குப் போகணும்? ஆறு வாரத்துக்குள்ள தாலி ஏறிடும்... தாலி! பிள்ளைக்கு இன்னும் எவளானும் ஏமாந்த சோணகிரி மஞ்சக் கயிறுக்கு ஏங்கி நின்னிட்டிருப்பா, கட்டி வக்கலாம்னு நினைச்சிருப்பிங்க!... அப்படித்தானே! ஆறுவாரம் இப்ப நீங்க போயி வரத்துக்குள்ள ஏறின இது எறங்கிடும்னு நினைச்சிக்குங்க! இந்த மஞ்சக் கயிறு மகத்துவம், எல்லாம் கூடி இருந்தாத்தான். இல்லேன்னா வெறும், வெறும் கயிறு! இது கழுத்தை - இல்ல - வாழ்க்கையை அறுக்கிற கயிறு!"

கழுத்திலிருக்கும் அந்தக் கயிறை வெறுப்புடன் கையில் சுற்றி முறுக்குகிறாள். பிறகு கையில் கழற்றி வைத்துக் கொள்கிறாள்.

அபிராமி இடித்த புளிபோல் நிற்கிறாள்.

"நீங்க வாழ்க்கையில் பட்டவங்கதானே? நீங்களே சொல்லுங்கம்மா! உங்களுக்கு, புருசன்ங்கறவன் இந்தப் புள்ளயைக் குடுத்ததைத் தவிர ஒண்ணும் நல்லதச் செய்யல, அந்தப் பெண்சாதிக்கும் மூணுநாலு பந்தம். நாளெல்லாம் ரேசு, குடின்னு ஆடிட்டு ஒருநா கண்ணை மூடிட்டான். எம்புள்ளக்கி அப்பா முகம் கூட நினைப்பிருக்காதுன்னு சொன்னீங்க. அப்படி இருந்தும், புள்ள மேல கேட்ட போதெல்லாம் பணம் குடுக்கும் பாசம் எப்படிம்மா வந்தது உங்களுக்கு?"

நியாயம்... நியாயம்...

"ஹனிமூன்லயே இவன் சாயம் வெளுத்துப் போச்சி. 'தபாரு சுஜி, அதோ அந்தப் பொண்ணுகள்ளாம் என்னயே வச்சகண் வாங்காம பாக்குறாங்க. நா என்ன செய்ய, நா அவ்வளவு அழகா இருக்கிறேன்... இல்ல'ன்னு கண் சிமிட்டினான். எனக்கு எப்படி இருந்திருக்கும், நினைச்சிப்பாருங்க..."

"சுஜிம்மா, இப்ப அதெல்லாம் என்னத்துக்கு... நா தப்புதா பண்ணிட்டேன். நிமிர்த்த முடியாம ஒரு வளைசல்ல நெருக்க வச்சிட்டேன். என்ன மன்னிச்சிடும்மா..."

"அம்மாக்கு, சுஜி, பிரதர்ஸ்னா ஒரு வீக்னஸ். டெல்லில இருக்கிற மாமா ஸர்வோதய காலனில ஃப்ளாட் வாங்கினாரா - ஒரு ஃப்யூ தௌஸன்ட்ஸ் குறையிதுன்னு கேட்டாரு. நாங்க வேற இங்க வீடு கட்டிருக்கமா? அதனால ஹெவி ஸ்ட்ரெயின். என் சம்பளம் அப்படியே அம்மாவிடம் தான் கொடுத்திடுவேன். இப்ப அம்மாட்ட அன்னன்னிக்குச் செலவுக்கு வாங்க வேண்டி இருக்கு. இப்பப்பாரு, உனக்கு - இஷ்டப்பட்ட ஸாரி வாங்கிக் குடுக்கணும், ஸ்டார் ஓட்டலுக்குக் கூட்டிப் போகணும்னெல்லாம் ஆசையாக இருக்கு. இந்த இளம் வயசில அநுபவிக்காம எப்ப அநுபவிக்கிறது? ஆனா... அம்மா... அம்மாட்ட நீ கேக்காதே. அவங்க ரொம்ப கன்ஸர்வேடிவ் ஓல்ட் ஃபாஷன்ட் வியூஸ் உள்ளவங்க. இதெல்லாம் அநாவசியம்னு நினைப்பா. 'இப்ப எதுக்குடா அவளுக்குப் புடவை? அம்பது புடவை வச்சிட்டிருக்கா. ஹாங்கரில் அடுக்கடுக்காத் தொங்குது'ம்பா... என் பாலிஸி அது இல்ல. என் சுஜிக்கு எப்படியெல்லாமோ அலங்காரம் பண்ணிப் பார்க்கணும்னு ஆசை. ஸல்வார் கமிஜ் போட்டுட்டா உனக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்..."

அவன் நடிப்பை அவள் சொல்லிக் காட்டும் போது அபிராமியினால் குலுங்காமல் இருக்க முடியவில்லை.

இவளிடம் என்ன சொன்னான்?

"அம்மா, உன் மருமகள் என்னமோன்னு நினைச்சியே? சம்பளம் எல்லாம் ஒரு காசு மிச்சம் இல்லாம அம்மா வீட்டில குடுத்திட்டுத்தா வாரா. அவ கல்யாணத்துக்குக் கடன் வாங்கி இருக்கிறாளாம். நியாயம்தான."

"எல்லாமே குடுத்துடறாளா? ஆயிரத்துக்கு மேலே வருமானமாச்சே?"

"வெக்கக் கேடம்மா, பஸ் பாஸ், கான்டீன், எல்லாச் செலவுக்கும் நான் தான் கொடுக்கிறேன். வாந்தியா எடுத்திட்டு ஒண்ணும் சாப்பிடாம ஆபீஸில இருந்திருக்கா. நல்ல வேளை நான் போயி டாக்டரிடம் கூட்டிப் போனேன்... டாக்டர் செலவெல்லாம் நாந்தான் கொடுக்கிறேன்... ரிஎம்பர்ஸ்மண்ட் வரும்னு கூட அவ சொல்லல..."

"அப்படியா?..."

"ஆமாம். மாமியார் எதானும் சொல்லுவாங்கன்னு பயப்படுறா. நீ ஒண்ணும் கேட்டுக்காதே. நீ வரதட்சணை வாணாம், அது இதுன்னு சொல்ல, அவங்க ஒரேயடியா லெவலை எறக்கிட்டாங்க..."

இருவரிடமும் பெரிய பிளவைத் தோற்றுவிக்க அவன் மிகச் சாமர்த்தியமாகப் போட்ட நாடகம்...

எவ்வளவு எளிதாகப் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்?

கர்ப்பிணிப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய வண்மை வரிசைகள் செய்யக் கூட அவர்கள் வீட்டில் இடம் கொடுக்கவில்லை என்று உறுகினான்! அவள் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்திருக்கக் கூடாது.

ஒழுங்கில்லை என்று தெரிந்து...

தன் உலகமும் அவன் உலகமும் வெவ்வேறு துருவங்களில் போய்விட்டன என்று தெரிந்து...

அவளால் அவனைத் தட்டிக் கேட்க முடியவில்லை, ஏன்?

பி.எஸ்ஸியில் தேறவில்லை. பிறகு அவிழ்த்து விட்ட கழுதைதான்.

"சீனி, மேல அதைப்படிச்சு பாஸ் செய்ய வேண்டாமா? எதானும் ட்யூட்டோரியலில்..."

"அம்மா, இந்த டிகிரில ஒரு மண்ணும் கிடையாது. நான் முதல்லயே தப்புப் பண்ணிட்டேன். இப்ப கூட, எலக்ட்ரானிக்ஸ், டி.வி. மெக்கானிஸம் கோர்ஸ் இருக்கு, பண்ணலாம்னு இருக்கேன், ஒண்ணரை வருஷம்..."

அது பற்றியானும் அபிராமி விசாரித்தாளா?

பையன் சொன்னால் அதற்கு மேல் விசாரணையே இல்லை. சீனி கெட்டிக்காரன், பிழைக்கச் சாமர்த்தியம் உண்டு... என்று ஒரு உறுதியான நம்பிக்கை மலை போல் இருந்தது.

கேட்பவர்களிடமெல்லாம், "எலக்ட்ரானிக்ஸ், டி.வி. மெக்கானிஸம் படிக்கிறான்" என்று சொன்னாள்.

படித்து, ஆசிரியைத் தொழில் செய்தும் எத்தனை பெரிய முட்டாள் அவள்?

சில ஆயிரங்கள் இந்தச் சாக்கில் அவன் கறந்தான். ஒரு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளாமல், அம்பது பைசா காபி வாங்கிக் குடிக்காமல் உழைத்துச் சேமித்த பணம், கிடுகிடென்று எப்படிக் கரைந்தது!

கல்லூரி - அது மாலை நேரந்தான்.

இவன் பள்ளிக்குச் செல்கையில் அவன் எழுந்திருந்திருக்க மாட்டான்.

"சீனி? எழுந்திரப்பா! கதவைச் சாத்திக்கோ. நான் ஸ்கூலுக்குப் போறேன். ஃபிளாஸ்கில் காபி இருக்கு. சாப்பாடெல்லாம் எடுத்து வச்சிருக்கேன். அவல் டிஃபன் பண்ணி டப்பில வச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு இன்ஸ்டிட்யூட்டுக்குப் போ!"

அவன் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து கதவைப் பூட்டிக் கொள்வான். அவள் மாலையில் திரும்பி வரும் போது, வீடு அலங்கோலமாக இருக்கும். இளவட்டங்கள் கூடி அரட்டையோ சீட்டாட்டமோ நடத்தின தடயங்கள் இருக்கும். ரேடியோவைக் கூட மூடியிருக்க மாட்டான். விசிறி ஓடிக் கொண்டிருக்கும். ஆங்காங்கு சிகரெட் துண்டுகளுடன் கதவைத் திறந்ததுமே புகையிலைப் புகையின் நெடி நாசியில் ஏறும். இவன் சாப்பிட்ட தட்டும், பாத்திரங்களும் மிச்சம் மீதி கூட மூடப்படாமல் இரைந்து கிடக்கும். பால் பாக்கெட் அப்படியே இருக்கும். அழுக்குப் பனியன், ஈரத்துண்டு கண்ட இடத்தில் விசிறப் பட்டிருக்கும்...

இரவு வரும்போது பதினொன்றுக்கு மேலாகும்.

இலை மறை காய்மறையாக... அப்போதே குடிக்கப் பழகியிருக்கிறானோ என்ற சந்தேகம் தோன்றியிருந்தது. ஆனால், அம்மாவின் இயல்பை எவ்வளவு சாதுரியமாக இவன் பயன்படுத்திக் கொண்டான்!

குடிப்பவர்களைப் பற்றி கேவலமாகப் பேசுவான்.

"அம்மா, அந்த போஜு, சிவராம், பாலு எல்லாம் என்னமா குடிக்கறாங்கறே?..."

போஜு, அவளுக்கு தெரிந்து மிக நல்ல ஒழுக்கமான பையன். இவனுடன் அதே பேட்டையில், அரிச்சுவடியில் இருந்து படித்தவன். அண்ணாமலையில் கெமிகல் இன்ஜினியரிங் படித்து, நகரில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான்.

சிவராம், எம்.ஏ. பண்ணிவிட்டு, எங்கோ அலுவலகத்தில் வேலை செய்கிறான். பாலு... எல்.ஸி.இ. பண்ணிவிட்டு எங்கோ தாற்காலிகமாக வேலை செய்கிறான். "ஏ.எம்.ஐ.சி. பண்றேன் டீச்சர்" என்று சொன்னான். இந்தப் பிள்ளைகளைப் போல் எத்தனையோ பையன்கள் இவன் வயசுக்குப் பொறுப்பாக இல்லையா. இவன் மட்டும் காலம் கடத்துகிறானே என்று அவள் நினைத்து விடாமல் இருக்க, அவர்கள் எல்லாரையும் விடத் தான் உயர்வு என்று கண்ணை மூடி மண் பூசி விட்டான்.

"ஏண்டா போஜுவா?..."

"பின்னென்னம்மா? உனக்கு இன்னிக்கு உலகம் தெரியாது... தே... டிரிங்க் லைக் ஃபிஷ்..."

ஒன்றரை வருஷம் ஓடிற்று. ஆனால் இவனுடைய கொட்டம் அதிகமாயிற்று. "அந்த இன்ஸ்டிட்யூட்டே ஃப்ராடம்மா! தெரியாமயே போயிட்டுது. நான் ஸீரியஸ்ஸா பிஸினஸ் பண்றதைப் பத்தி யோசனை பண்றேம்மா!" என்று சொல்லிவிட்டு, இவன் போக்கிரி அரசகுமரானாக அவளை உரித்தெடுத்தான்.

வீட்டிலேயே சில நாட்களில் சிநேகிதர்கள் வந்து கொட்டம் அடிப்பார்கள். டிரான்ஸிஸ்டர் காட்டுக் கத்தலாக இரைச்சல் போட, இவர்களும் இரைச்சல் போட்டுக் கொண்டிருப்பார்கள். வாசலில் மோட்டார் பைக் செருப்புகள் இவள் வீட்டில் இல்லை என்று அறிவிக்கும்.

இவள் வீடு திரும்பியது, (இவர்கள் யாருமே அவளுக்குத் தெரிந்த, அவன் மாசு கற்பிக்கக் குறிப்பிட்ட பிள்ளைகளாக இருக்க மாட்டார்கள்) எல்லோரும் எழுந்து வெளிக் கிளம்பி விடுவார்கள். அவனும் வெளிக் கிளம்பு முன், பணம், பணம் என்று இறந்து, கெஞ்சி, அழுது, அடம்பிடித்து வாங்கிக் கொண்டு போவான்.

வெளியே அக்கம்பக்கங்களில் சீனியின் நடத்தை விமரிசனத்துக்குள்ளாகக் கூடாது என்று கௌரவம் கட்டிக்காப்பதில், இடைநிலை வருக்கத்துக்குரிய போலித்தனமான ஒரு கருவம் அவளுக்கு இருந்தது. சீனியுடன் உரத்துக் குரல் கொடுத்துச் சண்டை போடாமல் அவள் தவிர்த்ததற்கு அதுவும் ஒரு காரணம். அவளுக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதி, ஆலோசகர், ஆதரவாளர் என்று நம்பியவள் - சுந்தரம்மாதான். இன்று அவள் வேலை பார்த்த மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியப் பொறுப்பில் இல்லை எனினும் தாளாளராக இருக்கிறாள். அவள் தான் "எத்தனையோ மோசமான பிள்ளைகள் திருந்தியிருக்கிறார்கள். வேலை என்று ஒன்றையும் கூட்டி, கால்கட்டையும் போட்டுவிட்டால், திருந்திவிடுவான்" என்று யோசனை சொன்னாள். வேலை... அது எப்படி இவனுக்குக் கிடைக்கும்?

இவனுக்கென்று பட்டம், பயிற்சித் தகுதிகள் இல்லாமல் வெறும் வாயரட்டை அடிப்பவனுக்கு, இந்தப் போட்டா போட்டி யுகத்தில், வேலை எப்படிக் கிடைக்கும்?

மதிக்கவில்லை என்று ரோசத்துடன் கழித்து விட்ட உறவுத் தொடர்பாக, அபிராமியின் ஒன்று விட்ட அத்தை குடும்பம் - பெரிய தொழிலதிபர் வாரிசாக அத்தையின் பெண் வயிற்றுப் பேரன், இளைய மகன், இருவரும், தொழில்-வர்த்தக உலகில் பெரிய புள்ளிகள். அவர்களுக்குச் சொந்தமாகக் கிண்டியில் பல தொழிலகங்கள் இருக்கின்றன. பென்சிலில் இருந்து பிஸ்கோத்து வரையிலும் அவர்கள் தயாரிப்பதாக அறிந்திருக்கிறாள்.

வெட்கத்தைவிட்டு அபிராமி அங்கே சென்றாள். ஸாந்தோம் சாலையில் அவர்கள் பங்களாவில் நுழைவதற்கும் கூடக் கூச்சமாக இருந்தது. அவர்கள் வீட்டில் இருந்து நவராத்திரி மற்றும் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு இன்று வரை அழைப்பு வராமல் இல்லை. பேத்தி கல்யாணத்துக்கு காலை முகூர்த்தத்தில் தலைகாட்டிவிட்டு, அத்தை மகளைப் பார்த்து, உள்ளே படுத்திருக்கும் அத்தையைப் பற்றி விசாரித்து விட்டு வந்திருக்கிறாள். இதுவரையிலும் அவள் எந்த உதவி நாடியும் உறவு சொல்லிச் சென்றதில்லை.

அத்தை மகள் சிங்காரி, பறங்கிப் பழம் போல், நரைத்த தலையும், வெண்பட்டுச் சேலையுமாக உட்கார்ந்திருந்தாள், உள் அறையில்.

"அபிராமியா? என்ன அத்திபூத்தாப்பல...?"

"ஒண்ணுமில்ல அக்கா, சீனி விஷயமாத்தான்... அவனை ஒரு வேலையில் சேர்த்து விடணும். ரொம்ப கஷ்டமாயிருக்கு. நாதனில்லாம, சேர்வாரோடு சேர்ந்து கெட்டுப் போயிடுமோன்னு பயமா இருக்கு. அவனும் எங்கெல்லாமோ போடறான்; ஒண்ணும் கூடி வரல...

காலைப் பிடிக்காத குறைதான்.

"நீதான் வந்து போறதில்லன்னு வச்சிட்ட. யார் யாருக்கெல்லாமோ செய்யிறான். காலம ஏழரை மணிக்குள்ள அவனை வரச் சொல்லு. பரசுட்டச் சொல்றேன்..." என்றாள்.

இவனை, முதலில் நானூறு ரூபாய் சம்பளமும், அன்றாடம் வெளியூர்ப் படியும் கொடுத்து, விற்பனைப் பிரதிநிதியாகப் போட்டார்கள்.

இந்த ஊர் சுற்றல் தொழில் - அவனுடைய சவடாலுக்கும் கட்டற்ற வாழ்வுக்கும் சாதகமாக இருந்தனவே ஒழிய திருந்தவில்லை...

அடுத்த இலட்சியமான கல்யாணம்...

அவள் எதிர்பார்த்தபடி அவன், "அடபோம்மா, இப்ப எதுக்குக் கல்யாணம்" என்று கேட்கவில்லை. முரண்டவில்லை.

"கமர்ஷியல் டாக்ஸில வேலையா?... ஆயிரத்துக்கு மேல தேறும்..." என்றான் பச்சையாக.

"இத பாரு சீனி, நீ நல்லபடியாத் திருந்தணும்னு நம்பி நான் கல்யாணம்னு இறங்கறேன். சொற்பமா ஸ்கூல் மாஸ்டரா இருந்தவர். இந்தம்மா ரெண்டாந்தாரம். பொண்ணு லட்சணமா குடும்பப் பாங்கா இருக்கா. அவ காலில நிக்கறவ. அதப்போடு இதப்போடுன்னு நான் கேட்கப் போறதில்ல. வடபழனி கோவில்ல வச்சு சுருக்கமா கல்யாணத்த முடிச்சிடலாம்னு இருக்கேன். அவரால வெளில வாசல்ல வரமுடியாதாம். அந்தம்மா, கொழுந்தனார் மகனைக் கூட்டிட்டு வரேன்னா. நீ நாளைக்கு தானே டூர் போற?..."

"சரி வரட்டும்மா..."

"ஆமா... ஒழுங்கா... நல்லபடியா இரு..." என்றாள்.

வெற்றிலை பாக்கு பழம், லாலாகடை இனிப்பு, காரசேவு வாங்கி வைத்தாள். ஒரு பாக்கெட் பால் கூட வாங்கிக் காய்ச்சி, காபி டிகாஷனும் போட்டு வைத்தாள்.

சீனி, முகம் வழித்து குளித்து, நெற்றியில் துளி நீறு தரித்து, மிகவும் யோக்கியமான தோற்றத்துடன் வீட்டில் இருந்தான். எல்லாம் சொல்லி வைத்தாற் போல் கச்சிதமாக அமைந்து விட்டது.

அவர்களுக்கு இவனுடைய தோற்றம், பேச்சு, அடக்கம், எல்லாம் மிகவும் பிடித்து விட்டன. மறுநாள் வந்து பெண் பார்க்கவும் ஒப்புக் கொண்டான்.

"எனக்கு ரொம்ப நம்பிக்கைங்க. இது தெய்வ சித்தமாக ஏற்பட்டது இல்லையா? பையனுக்குப் பெண்ணைப் புடிச்சி பொண்ணும் சரின்னு சொல்லுவான்னு. எங்களுக்கு இவ ஒரே பொண்ணுதா, அதனால, அதது குறை வைக்க மாட்டோம்..." என்று மங்களம்மா, மனம் பூரித்துப் போனாள்.

ஆனாலும் அபிராமிக்கு உள்ளே முள் அவ்வப்போது உறுத்திக் கொண்டிருந்தது.

"அவங்கிட்ட எல்லாம் நல்லாப் பேசிக்கங்கம்மா. ஆயிரங்காலத்துப் பயிரு. வேலை, சம்பளம், மற்ற எல்லா சமாசாரமும் நான் சொல்லிட்டேன்னாலும், நீங்க தா குடும்பம் பண்ணப் போறீங்க. நல்லாப் பேசி முடிவு பண்ணிக்கங்கம்மா?" என்றாள் பெண்ணின் பக்கம் அமர்ந்தபடி.

கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. அவன் சுற்றுப் பயணம் கிளம்பிவிட்டான்.

அபிராமிக்கு உள் உறுத்தல் குடைச்சலாகி விட்டது.

என் பையன், யோக்கியமானவன் அல்ல - என்பதை எப்படிச் சொல்ல?

ஆனால் சொல்லாமல் எப்படி மறைக்க?

பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றுவிடவில்லை அப்போது. ஞாயிற்றுக்கிழமை காலையில், பத்தரை மணி சுமாருக்குக் கதவைப் பூட்டிக் கொண்டு பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனாள்.

புரட்டாசிப் புழுக்கம்; வெயில்.

வீட்டில் மங்களம் இல்லை. சுஜாவும் இல்லை.

பெரியவர்தாம், பழைய நாளைய அந்த வீட்டின் முற்றக் குறட்டில், ஏதோ பழைய கணக்கைப் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

"வாங்கோ... வாங்கோம்மா...! இப்பத்தான் ரெண்டு பேரும் டவுனுக்குப் போனா. வெள்ளி சாமான் ரெண்டு ரொம்பப் பழசா இருந்தது. தோது பண்ணிண்டு வரேன்னு போனா... உட்காருங்கோ..."

அபிராமி கீழே உட்கார்ந்தாள்.

"ம்மா, கீழே உட்காரறீங்க. இப்படி நாற்காலில..."

"பரவாயில்லை. வசதியாயிருக்கு..." என்று முகத்தைத் துடைத்துக் கொண்டாள். இறுக்கம்... எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

"இந்தப் பக்கம் வேற ஒரு காரியமா வந்தேன். அப்படியே பாத்துட்டுப் போகலாம்னு... எதுக்குச் சொல்றேன்னா. தெய்வசித்தம்னு வச்சாக் கூட, நாமும் பத்துத் தடவை யோசனை பண்ணிச் செய்வது நல்லதுன்னு தோணுது..."

"ஆமாம் வாஸ்தவம். நல்ல குடும்பம் குலம் எல்லாம் அதான் விசாரிக்கிறது. நீங்க ஸித்தா இண்டஸ்ட்ரீஸ் ஃபாமிலின்னு சொன்னதே வேற விசாரிக்கணும்னு அவசியமில்லாம போயிட்டுது. நம்ம வீட்டிலும் பயங்கள்ளாம் அங்கங்க இருக்கிறாங்க. கல்யாணம்னா முத நா வந்திட்டு மறுநா போவானுக. எல்லாருக்கும் ஐப்பசில முகூர்த்தம்னு எழுதிப் போட்டிருக்கே..."

"அதுக்குச் சொல்லல... இந்தக் காலத்தில என்ன நெருக்கம்னாலும் தாய் புள்ள கூட வேற வேற உலகமாப் போயிடுது. எங்க குடும்பம் சீனி அப்பா பத்தி..."

"அதெல்லாம் தெரியும். அப்படிப் பாத்தா எங்க குடும்பத்திலியும் ஒரு இசுக்கு இல்லாம இல்ல. இதெல்லாம் இப்ப யாரம்மா பாக்கிறாங்க? இதெல்லாம் தப்புன்னு இந்த காலத்தில யாரானும் சொல்லுவாங்களா?"

"அதில்ல... இந்தக் காலத்துப் பையன்கள், நடவடிக்கை நாம எதிர்பார்க்கிறாப்பல இருக்கிறதில்ல. சீனி வீட்டில எனக்கு முன்ன சிகரட் குடிச்சதில்ல. டிரிங்க் பண்ணதில்ல. ஆனா, நாலு இடம் போகிறவன். பார்ட்டி, கீர்ட்டின்னு போகாதவன் இல்ல. நாளைக்கு நீங்க, இந்தம்மா, சொல்லாம மறச்சிட்டாளேன்னு நினைக்கக் கூடாது. நல்லா நாலிடத்தில விசாரிச்சிக்குங்க..."

இதைச் சொல்வதற்குள் அவளுக்குக் குப்பென்று வியர்வை பூத்துவிட்டது.

"இதென்னம்மா, இதைப் போய் மூட்டை கட்டிண்டு சொல்ல வரேள்? சிகரெட் பிடிக்காத பையன் இந்தக் காலத்துல சலிச்சாக் கூடக் கிடைக்காது. என் மூத்த மாப்பிள்ளை, மூத்த பையன் எல்லாரும் சிகரெட் குடிக்கிறவா தான். பார்ட்டி கீர்ட்டி எல்லாம் இப்ப சர்வ சகஜமாய் போயிட்டுது. சுஜாவே சொல்றா, 'என்னப்பா, பொம்பிளங்கல்லாம் குடிக்கிறா'ன்னு. அரசு மட்டத்திலியே குடிக்கிற நாகரிகம் பரவிருக்கு. அதுவும் பிஸினஸ் லைன்னா நாலும் தானிருக்கும். இதெல்லாம் குடுத்துக் காரியத்தைச் சாதிக்கிறது தான் இன்னிக்குக் கெட்டிக்காரத்தனம்..."

"நா... உங்ககிட்டச் சொல்லிடனும்னு தான் வந்தேன். நாளைக்கு நான் மறைச்சிட்டேன்னு நினைக்கக் கூடாது..."

"இதென்னம்மா, நீங்கள் இவ்வளவு டெலிகேட்டா இருக்கீங்க? இது குத்தமேயில்ல, இந்தக்கால ஸ்டான்டர்டுக்கு. சுஜிக்குப் புடிச்சிருக்கு. அவ கெட்டிக்காரி. குடும்பம்னு ஆனதும் அவங்கவங்களுக்குப் பொறுப்பும் வந்திடும்..."

மனசிலிருந்து பாரம் அப்போதைக்கு இறங்கியிருந்தது.

திருமணநாள் வரையிலும் கூட, அவன் இலட்சியமான பிள்ளையாக நடந்தான். மனமகிழ்ந்த அபிராமி, தேன் நிலவுக்காக இரண்டாயிரம் வைத்திருந்து செலவு செய்யக் கொடுத்தாள்.

தேன் நிலவு முடிந்து வந்த புதிதில், இவள் எதிர்பார்த்தபடி, சுஜி, இவளிடம் அவன் பழக்கங்கள் குறித்து வெளிப்படையாகச் சாடவில்லை. ஆனால் இரகசியமாகக் கண்டிக்கிறாள் என்பதை ஊகிக்க முடிந்தது. ஊசிக்குத்து விழுந்து விட்டது. பலூன் எத்தனை நாட்கள் தாங்கும்?

அபிராமி அந்த முதல் சில மாதங்களில் மாலை நேரங்களில் சமைத்து வைத்து விட்டு, தொலைக்காட்சி பார்க்கும் சாக்கில், பக்கத்து வீட்டுக்குச் சென்று விடுவாள். திரும்ப, எட்டு மணிக்கு வருகையில், அவர்கள் கலகலப்பாகப் பேசிச் சிரிக்கும் ஒலி இருக்காது. அவள் மட்டும் ஏதேனும் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள்.

"ஏம்மா? சீனி இல்ல?..."

"இல்ல. வெளில போயிட்டு வரேன்னாரு..."

"உங்க மகன் குடிச்சிட்டு வரார்?" என்று அவள் வெடித்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் அவளுக்கும் தெரியாதோ?

அத்தியாயம் - 4

சுஜா கருவுற்று, மூன்றாம் மாதத்தில் தாய் வீடு சென்றிருந்த நாட்களில் தான் அபிராமி ஓய்வு பெற்றாள். தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்கி வைத்தாள்.

சுஜாவுக்கென்று, மூன்று சவரனில் அழகிய நெக்லேசும், இனிப்பு கார வகைகளும், பழங்களும் வாங்கிக் கொண்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை சென்றாள்.

வாயிலில் கார் ஒன்று நின்றது.

கூடத்து நாற்காலியில் சிறிது முன் வழுக்கை தெரிய கண்ணியமும் அறிவின் மலர்ச்சியும் பணிவும் ஒருங்கே தெரிய, உட்கார்ந்திருந்தான் ஒரு இளைஞன். சுஜா சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். கை நிறைய வளையல்களும் பட்டுச் சேலையும் அணிந்து பொலிவுடன் திகழ்ந்தாள்.

"வாங்க, வாங்கம்மா! இப்பத்தான் பேசிட்டிருந்தோம்..." என்று அப்பா வரவேற்றார்.

"டாக்டர் பிரேம் குமார், எம்.டி.,... நியூராலஜிஸ்ட்டா ஏழு வருஷம் அமெரிக்காவில இருந்திட்டு இப்ப இங்கேயே வந்திடனும்னு வந்திருக்காரு... இவங்கதா, சுஜா மாமியார். டீச்சரா இருக்காங்க..."

அபிராமி கைகுவிக்கு முன் அவனே எழுந்து மரியாதையாக 'வணக்கம்' என்றான்.

"சின்ன வயசில இங்கதா எதிர் வீட்டில இருந்தாங்க. எந்நேரமும் இங்க தான் கிடக்கும். எங்க வெங்கியும் இவனும் ஒரே வயது..." என்று மங்களம் தெரிவித்தாள்.

அபிராமி ஒரு தட்டுக் கொண்டு வரச் சொல்லி இனிப்பு பழங்கள் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். பிறகு அட்டைப் பெட்டியைத் திறந்து நகையைக் காட்டினாள்.

"பிடிச்சிருக்கம்மா?..."

"ஓ, நல்லாயிருக்கு... என்ன ஆச்சரியம்? பிரேம், உங்க பிரேஸ்லெட் மாதிரியே பாட்டான்... பாருங்க?..."

பிரேம்குமார், அவளுக்குத் திருமணப் பரிசாக வாங்கித் தந்திருக்கும் அந்தக் கையணியை அவள் ஒன்றாக வைத்துக் காட்டினாள்.

"லவ்லி..."

மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டு எல்லோரையும் வணங்கினாள்.

"சுஜா, உன் ஹஸ்ஸியிடம் கேட்டு, எப்ப சௌகரியப்படும்னு ஃபோன் பண்ணு. விருந்துக்கு...!" என்று எழுந்திருக்கிறான் பிரேம்.

"வரேம்மா?"

சுஜா வாசலில் நின்று கார் மறையும் வரை வழியனுப்பினாள்.

"கொஞ்சம் கூடக் கருவமில்லாத பிள்ளை. ஞாபகம் வச்சிட்டு வந்திருக்கு பாரு... இங்கதா கிடக்கும். அம்மா கிடையாது. ஒரே ஒரு தங்கச்சி இருந்திச்சி. அது நெருப்புப் பிடிச்சி எறந்து போயிட்டுது. பாவம். ரொம்ப கெட்டிக்காரன். ஏழு வருஷம் அமெரிக்காவுக்குப் போயி மாறவே இல்ல. அப்படியே இருக்கு?"

அவன் புகழையே அன்று மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அபிராமிக்குத் தான் நகை வாங்கிச் சென்றது கூட எடுபடாமல் போயிற்றே என்றிருந்தது.

அடுத்த நாள், வழக்கத்திற்கு மாறாக, சீனி மாலை ஐந்து மணிக்கே வீடு திரும்பி விட்டான். முகம் கலவரமடைந்திருப்பதைக் காட்டியது.

"அம்மா, நீ எனக்கொரு உதவி செய்யணும். மாட்டேன்னு சொல்லக் கூடாது."

அபிராமி அவன் முகத்தை உறுத்துப் பார்த்தாள்.

"ஒரு அவசரம்னு ஆபீஸ் பணம் அஞ்சாயிரம் எடுத்துட்டேம்மா. இன்னிக்குக் கணக்கு ஒப்பிக்கணும். குடு... திங்கக்கிழமை திருப்பிடறேன்..."

"ஆபீஸ் பணத்தை என்ன அவசரம்னு எடுத்தே?"

"ஃபிஷர்மென்கோவில் அவசரமா ஒரு பார்ட்டி அரேஞ்ஜ் பண்ண வேண்டி இருந்தது. பணம் பத்தல. மானேஜர் ஊரில இல்ல. எடுத்தேன். இன்னிக்குக் கணக்கு உதைக்கும்..."

"சீனி! நீ எங்கே கொண்டு போறேன்னு புரியலடா! நீ என்னை ஏமாத்தறே, அவளையும் ஏமாத்தறே!"

"இதென்னம்மா, உன்னோட ரோதனையாப் போச்சு? மூணு லட்சத்துக்கு ஒரே சமயம் ஆர்டர் புடிச்சிருக்கிறேன். அதுக்கு இது சின்ன மீன். பணம் மெள்ள சாங்ஷன் ஆகிவிடும். நான் முந்திக்கலன்னா, வேற ஒருத்தன் தட்டிட்டுப் போயிடுவான். போட்டிம்மா...!"

"சீனி, எங்கையில இப்ப ஒரு சல்லிக்காசு கிடையாது..."

"உன் பிள்ளையை போலீசில பிடிச்சிட்டுப் போணா பாத்திட்டிருப்பியா?"

அபிராமி அதிர்ந்து போனாள்.

"அடபாவி, கல்யாணம் பண்ணினா பொறுப்பு வரும்னு பார்த்தால், இப்படி பார்ட்டி பார்ட்டின்னு தண்ணி ஊத்துவதும் ஊத்திக்கிறதுமாச் சீரழியறியே...?" அவள் வாய்விட்டே அழுதாள் அன்று.

"இந்தத் தடவை நீ காப்பாத்திடும்மா. இனிமே சத்தியமா இல்ல."

"நீ எங்கிட்ட சத்தியம் பண்ணாதே. சத்தியம்ங்கற சொல்லை உச்சரிக்கக் கூட உனக்குத் தகுதியில்ல..."

"அப்படிப் பார்த்தா யாருக்குமே தகுதியில்ல. நீ சொல்ற நீதியெல்லாம் இன்னிக்குச் செல்லாக்காசு அம்மா!... இன்னிக்கு இந்த கம்பெனி இவ்வளவு பெரிசா வந்திருக்குன்னா நீதி நேர்மையின்னு இல்ல புரிஞ்சுக்க. கறுப்புப் பணம், லஞ்சம், தண்ணி, பொண்ணு எல்லாந்தான் பின்னால..."

"சீனி, நான் உனக்கு ஒரு பைசா குடுக்க மாட்டேன். போ இங்கேந்து?"

ஆனால் அவன் என்ன தந்திரம் பேசியோ, சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அன்று வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து வந்ததும், அபிராமி, "சுஜா, புதிதா வாங்கின ஸில்க் புடவைய உடுத்திட்டு, நெக்லசைப் போட்டுக்கோம்மா. பக்கத்து வீட்டு தனம்மா, பார்க்கணும் வரேன்னா" என்றாள். சுஜா ஒன்றும் புரியாமல் விழித்தாள். "ஏம்மா, உங்க பிள்ளை, அதில் இன்னொரு கண்ணி சேர்க்கணும், வாங்கி வரச் சொன்னீங்கன்னு அன்னைக்கே வந்து கேட்டாரே?..."

"அட... பாவி?"

அபிராமி இடிந்து போனாள்.

"ஓ... மறந்தே போயிட்டம்மா! எனக்குத்தா என்ன நினைப்பு?" என்று மூடி மறைத்து மெழுகி, அடுத்த நாளே ஃபிக்ஸட் டெபாஸிட் என்று போட்டிருந்த பணத்தை முறித்துக் கடைக்குச் சென்று, ஒரு நெக்லஸ் வாங்கி வந்தாள். "இதோ பார் சுஜாம்மா, அவன் கேட்டால் என்னைக் கேக்காம ஒண்ணும், குடுக்காதே?" என்று சொல்லி வைத்தாள்.

அவளுக்கு இதெல்லாம் புரிந்து கொள்ள வெகு நாட்களாகவில்லை!

பிரசவித்து வந்த பிறகு, அவள் பழைய சுஜாவாக இல்லை. முன்பு அவளிடம் காட்டிய பணிவு, மென்மை எதுவுமே இல்லை. அவளை 'அம்மா' என்று கூடக் கூப்பிடுவதில்லை. "மாமி! குழந்தை துணிய அவன் துணியோடு வைக்காதிங்க!..." "குழந்தை உள்ளே தூங்கறா இவன் மூஞ்சியை அந்த பூகிட்டக் கொண்டு வச்சிட்டுக் கொஞ்சறேன்னு பேர் பண்ண வாணாம். கொஞ்சம் பாத்துக்குங்க. நான் குளிச்சிட்டு வந்திடறேன்..."

என்ற மாதிரியான சொற்கள் அவள் நாவிலிருந்து தெறிக்கும் போது, இவள் துணுக்குற்றுப் போகிறாள்.

ஆனால் சில சமயங்களில் இதுவும் நன்மைக்கே என்று தோன்றுகிறது.

கடிகாரம் டிக்டிக்கென்று அடிப்பது நெஞ்சில் அடிப்பது போல் ஒலிக்கிறது.

"சுஜிம்மா? குழந்தை தூங்கறப்பவே சாப்பிட்டு விடலாமே வா..."

அவள் பேசாமல் எழுந்து வருகிறாள்.

மௌனமாக, ஒரு சிரிப்பு, பேச்சு, சகஜம் இல்லாமல் சாப்பாடு. குழந்தைக்குப் பாலை ஊற்றிக் கொண்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொள்கிறாள்.

அபிராமிக்கு மண்டையை முட்டிக் கொள்ளலாம் போல் இருக்கிறது.

ஊர் உலகத்தில் எத்தனையோ பிள்ளைகள்... அவளுக்கு தெரிந்து யாருமே இப்படி அன்பென்னும் ஈரம் கசிவு இல்லாத சுயநலப் பிண்டமாக வளர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. உயர்ந்த படிப்புப் படிக்காத கீழ் மட்டத்தில், குடித்துவிட்டுப் புரளுபவன் கூட எப்போதேனும் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஏனெனில் அந்த மட்டத்தில் அது இயல்பாகப் படுகிறது.

மணி பத்து நாற்பத்தைந்து.

தெருவில் ஓசை அடங்கியாயிற்று. எதிர் வீட்டுத் தொலைக்காட்சி அரவம் கூட ஓய்ந்து, விளக்கணைத்து விட்டார்கள்.

சுஜியின் அறையில் இருந்து விளக்கொளி வெளியில் விழுகிறது. அவள் புத்தகம் படிப்பாளோ?... உறுதியாக, மஞ்சட் கயிற்றைக் கழற்றிக் கையில் வைத்துச் சுருட்டினாள். இவள் செய்யத் துணியாத செயல்கள் - தகர்ப்புக்கள்.

வாயிற்கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே வருகிறாள். வயிற்றில் பசி எரிச்சலைத் தோற்றுவிக்கிறது. ஒரு நாள் போல், சோற்றை வைத்து மூடும் அவலம்...

அந்தக் காலத்திலும் இதே தான்.

சில நாட்களே சாப்பிடுவான். சில நாட்களில் சாப்பாடு வேண்டாம் என்று படுக்கையில் விழுவான்.

இவள் சோற்றுக்கு நீரூற்றி வைத்திருந்து காலையில் தான் சாப்பிட்டு, அவனுக்குச் சுடு சோறு வட்டிப்பாள்.

இது பாசமா, மூடத்தனமா?

ருசித்துச் சாப்பிட முடியாத நெஞ்சுச் சுமை...

அவள் தட்டிலிருந்து கடைசிப்பிடி எடுக்கும் போது வாசலில் ஆட்டோவின் இரைச்சல் கேட்கிறது. கேட் தள்ளப்படும் அரவம்...

செருப்போசை.

தட்டைப் போட்டு விட்டு ஓடி வருகிறாள்.

வாயிற்கதவைத் திறக்கிறாள். விளக்கைப் போடுகிறாள்.

எவனோ ஒரு தொப்பிக்காரன் - வயிறு தெரியும் சட்டையுடன், இவனைக் கைத்தாங்கலாக இழுத்து வருகிறான்.

முகம், பிரேதக் களையாக - பெரிய மூக்கும், உதடுகளும், குடித்துக் குடித்துத் தடித்துப் போய், உப்பிய வயிறும் கன்னங்களுமாக -

"அட... பாவி!... பாவி...!"

நாற்றம்.

கொண்டு வந்து விட்டவன் வண்டிச் சத்தம் கேட்கிறான். எட்டு ரூபாயாம். இவளிடம் சில்லறையில்லை. ஒரு ஐந்து ரூபாயும் இரண்டு இரண்டு ரூபாய் நோட்டுக்களுமாகக் கொடுத்து அவனை அனுப்புகிறாள்.

ஊரைக் கூட்ட முடியாதபடி இடை நிலை வருக்கக் கவுரவம் உள்ளே இழுக்கிறதே? எப்போதோ கேள்விப் பட்டதை நினைவில் கொண்டு ஒரு சொம்பு நீரைக் கொண்டு வந்து அவன் முகத்தில் வழிய, தலையில் கொட்டுகிறாள்.

ஓரமாக அவனை இழுத்துக் குலுக்குகிறாள்.

"டேய், சீனி? சீனி?..."

உலுக்க உலுக்க ஏதோ உளறல்.

"பாவிப்பிள்ளை? என்ன பாவம் செய்தோ உனக்குத் தாயானேன்! சோற்றைத் தின்று விட்டு வந்து விழுடா?"

சிவந்த கண்களைத் திறந்து கொட்டிக் கொட்டி... "நழ்ல அம்மா... கொண்டா... சா...தம்... கொண்டா..." என்று உளறுகிறான்.

சோற்றைப் பிசைந்து கொண்டு வருகிறாள். உருண்டை உருண்டையாக விழுங்கிவிட்டு, அங்கேயே சாய்கிறான்.

அபிராமிக்கு உறக்கம் எப்படிப் பிடிக்கும்?

இந்தக் கல்யாணம் செய்ய அவள் தானே முன்னின்றாள்...? தெய்வம் என்பதெல்லாமும் சினிமாப் பொய்யாகத் தானே பலித்திருக்கிறது!

இப்போதும் என்ன கெட்டுப் போயிற்று? அவள் பிரிந்து போகட்டும். வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் தப்பில்லை. இவனுக்கு அந்தத் தண்டனை வேண்டும்...

உளைச்சலுடன் புரண்டு புரண்டு படுத்தவள், விடியற் காலையில் அயர்ந்திருக்கிறாள். ஒரு கனவு.

சுஜி குழந்தையுடன் மணவிலக்குப் பெற்றுப் போய் விட்டாள்.

ஆனால் இவள் நினைத்தாற் போல் சீனி அவமானத்தில் குறுகித் திருந்தி விடவில்லை. இவனுடன் வேறு ஒருத்தி வருகிறாள். வீட்டில் இரண்டு பேரும், ஜமா சேர்த்துக் கொண்டு இரைச்சலும் சிரிப்புமாகச் சீட்டாடுவதும் குடிப்பதும்... சகிக்கவில்லை.

"ஏண்டி? இது குடும்பக்காரங்க இருக்கிற இடம். நீ ஒரு பொம்பிளயாடி?" இவள் கத்துகிறாள். "இந்தக் கிழத்த அடிச்சி விரட்டுங்க, டார்லிங்? எப்ப பார்த்தாலும் சண்ட போடுது" என்று அவள் சொல்ல, அவன் பெற்ற தாயைத் தோளைப் பிடித்து உலுக்கி, "என்ன? சும்மாயிருக்க மாட்டே? சமையலை பண்ணி வச்சிட்டு அங்கியே விழுந்து கிடக்கிறதுக்கு என்ன?" என்று அதட்டுகிறான்.

"டேய்..."

எப்படிக் கூச்சல் போட்டாள் என்று புரியவில்லை.

சுஜிதான் கையில் ஃபீடிங் பாட்டிலுடன் குனிந்து, "என்னம்மா?" என்று பரிவாகத் தொடுகிறாள்; "வேர்த்துக் கொட்டிருக்கு. இந்த நடையில ஏம்மா படுக்கணும்? கதவைத் தட்டி என்னைக் கூப்பிடக் கூடாதா? இது உங்க வீடு. நீங்க உழைச்சிக் கட்டின வீடு. உரிமையோட என்னைக் கூப்பிடாம, இந்தப் பிள்ளைக்காக இப்படி வீணாத் தேஞ்சு போறீங்களே?"

புரிந்து கொள்ளச் சிறிது நேரம் ஆகிறது. என்ன பயங்கர சொப்பனம்? நினைவு எதிர் மாறாக இருக்கிறது. ஆம் இது அவள் உழைத்து உண்டாக்கிய குடும்பம். வீடு.

ஆறுதல்.

சுஜி பால் வாங்கி வந்து, அடுப்பில் வைத்துக் காய்ச்சி இருக்கிறாள். காபி டிகாக்ஷனும் போட்டிருக்கிறாள். வாசலில் கீரைக்காரி குரல் கேட்கிறது.

தான் ஓய்வு பெற்ற பின், வாழ்க்கை வசதிகள் பலவற்றைச் செய்து கொள்ள முடியும் என்று அபிராமி ஒரு காலத்தில் கனவு கண்டதுண்டு. இன்றும் வீடு பெறுக்கித் துடைத்து, பாத்திரம் பண்டம் துலக்கக் கூட வேலைக்காரி வைத்துக் கொள்ளவில்லை.

கீரை வாங்கி வந்து விட்டு, குக்கரில் அரிசியும் பருப்பும் ஏற்றுகிறாள். பின்னர் குழாயடியில் பாத்திரம் பண்டம் துலக்குகையில் முன் அறையில் சுஜியின் குரல் உரத்துக் கேட்கிறது. அவள் வீடு பெருக்குகிறாளோ?

"...ஏய், எழுந்திரு? எழுந்திருடா?"

இது வேண்டுமென்று அவனைச் சண்டைக்கு இழுக்கும் குரல் தான். அபிராமிக்குக் கையும் காலும் வெல வெலத்து வருகிறது.

உள்ளே குழந்தை அழும் ஒலி கேட்கிறது. கையைக் கழுவிக் கொள்கிறாள்.

ஓசை செய்யும் குக்கரைக் கண்டு அடுப்பைத் தணித்து விட்டு உள்ளே சென்று தொட்டிலில் இருந்து குழந்தையை எடுத்துக் கொள்கிறாள்.

"டேய், எழுந்திருன்னேனே, காதில் விழல..."

துடைப்பத்துடன் தான் நிற்கிறாள். அதிகமாகப் போனால் துடைப்பத்தாலேயே போட்டு விடுவாள் போல் முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.

அவன் எழுந்திருக்கவில்லை; கனவா, நினைவா என்பது போல் இரண்டு கால்களுக்கிடையில் கையை வைத்துக் கொண்டு அவளைப் பார்க்கிறான்.

"என்னடா பாக்கற? நான் தான், உனக்குக் கழுத்தை நீட்டிட்டு வெக்கமில்லாம உங்கிட்ட ஒரு குழந்தையையும் பெத்து வச்சிட்டிருக்கேனே, சுஜி... எழுந்திரு. இன்னிக்கு உங்கிட்ட ரெண்டில ஒண்ணு, பேசணும்!"

படுக்கையைக் காலால் எத்துகிறாள்.

அவன் குபுக்கென்று எழுந்து உட்காருகிறான். "என்னடீ என் வீட்டில உட்கார்ந்து அடாபுடான்னு பேசற. காலால படுக்கையைத் தள்ளற?" எழுந்து கை நீட்டிக் கொண்டு அவள் மீது பாய்கிறான்.

அபிராமி குழந்தையுடன் அவள் மீது அவன் கைபடாதபடி குறுக்கே வந்து சமயத்தில் தடுக்கிறாள்.

"ஏண்டா? பேசினா என்ன? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு பூசை பண்ணணுமோ உன்ன? அந்தக் காலம் மலையேறிப் போச்சு?"

"தே...டியா...? நீ..."

அவன் மூர்க்கமாக வசைகளைப் பொழிந்து கொண்டு அபிராமியின் தடுப்பையும் மீறி அவளைப் பாய்ந்து அடிக்கிறான். ஆனால் அவள் அழவில்லை. திருப்பித் தாக்குகிறாள். பிடித்துச் சுவரில் மோதத் தள்ளுகிறாள்.

அவனுடைய குத்தப்பட்ட ரோசம்,... தோல்வி உணர்வு எல்லாம் மிகவும் கீழ்த்தர வசைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

"அம்மா இந்தக் கழுதைக்குப் பைத்தியம் புடிச்சிடுத்து. கண்டவங் கூடல்லாம் திரியற. பட்டவர்த்தனமா அந்த டாக்டர் கிட்டப் படுத்திட்டு வரே; எவ்வளவு திமிரு இருந்தா புருஷனைத் தொட்டடிப்ப? பாரம்மா?"

"அம்மா ஆட்டுக் குட்டின்னெல்லாம் கூப்பிடாத. மரியாதை குடுத்தாத் தான் மரியாதை கிடைக்கும். நீ என்னைப் புழுவா நினைச்சயானா, அதே பாடம் தான் திருப்பி வாங்கிப்பே. நீ என்னைப் பாய்ந்து அடிக்கலாமானால், தற்காப்புக்கு நானும் அடிக்கிறது சரிதான். ஆனா, உன்னை மனுஷன்னு நினைச்சேனே, அது தப்பு. மிருகத்திலும் கேடு கெட்ட மிருகம்... உன் அம்மா, உன் அப்பனைப் புருஷன்னு நினைச்சுப் பூஜை பண்ணிட்டிருந்தா. அது அந்தக் காலம். இது வேற. என்ன திமிர் இருந்தால், என் ஆபீசில் வந்து, என்னை விரட்டுவே? அம்மா வீட்டில இருந்தா, ரா பத்து மணிக்கும் பதினோரு மணிக்கும் குடிச்சுட்டு வந்து அங்க ரகளை பண்ணின. அங்க கீழ்மட்டத் தொழிலாளர் கும்பல் கூடத் தேவலைன்னு நினைக்கும்படி அக்கம் பக்கமெல்லாம் நாறப் பண்ணின. உங்கூத்துக்காகவே இங்க வந்தேன். நீ இப்படியே இருக்கலாம், எகிறலாம்னு கனவிலும் நினைக்காதே! இந்த யுகம் வேற..."

அவள் சரசரவென்று பெருக்கி முடித்து விட்டு வாசலில் வேடிக்கை பார்க்க நிற்கும் எதிர்வீட்டு வேலைக்காரப் பெண்ணைச் சாடுகிறாள்.

"என்னடி இங்க? என்ன பாக்கற!"

அது பயந்து ஓடுகிறது.

துடைப்பத்தைக் கொண்டு வைத்து விட்டு, அபிராமியிடம் எதுவும் நடவாதது போல் குழந்தையை வாங்கிக் கொண்டு போகிறாள்.

"அம்மா, நீ பாத்திட்டு நிக்கறியே? உனக்கு மானம் போகல...! மானம் போகலே?... இந்தத் தே...யாளை முதல்ல வீட்ட விட்டுத் துரத்து!"

மானம்... அது இன்னமும் இருக்கிறதா!

அபிராமி சிலையாக நிற்கிறாள்.

ஆனால் சுஜாதா, எதுவுமே நடக்காதது போல் குழந்தைக் காரியங்கள் கவனித்து, தான் குளித்து, துணிமணிகளை அலசிப் போட்டு, அலுவலகத்துக்குப் புறப்படத் தயாராகிறாள். சோறும் பருப்பும் மட்டுமே ஆகியிருந்தாலும், டப்பியில் தயிர் ஊற்றிப் பிசைந்து அடைத்துக் கொள்கிறாள். சிறிது பருப்புச் சோற்றை மட்டும் உண்டதாகப் பெயர் பண்ணிவிட்டு, எட்டரைக்கெல்லாம், குழந்தையுடன் படியிறங்கிச் செல்கிறாள்.

சீனி இன்னமும் எழுந்திருக்காமல் சோம்பலாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை விடுகிறான்.

"ஏண்டா, உனக்கே இது சரியாயிருக்கா?"

சாம்பலைக் கீழே தட்டுகிறான். பரிதாபம் தேக்கிய ஒரு பார்வை.

"அம்மா, எனக்கு முன்னமே தெரியாமப் போச்சு. ஏமாற்றப்பட்டேன். அந்த ஏமாற்றம், அவமானம் தாளவில்லை. அதனால் தான் குடிக்கிறேன். எல்லாத்துக்கும் மேல, குழந்தையை நான் தொடக்கூடாதுங்கறாளே... எனக்குப் பொறுக்கவேயில்லை, மா...! நா நேத்து மத்தியானம் அந்தக் கிரீச் ஆயாவுக்குத் திருட்டுத் தனமாப் பணம் குடுத்துக் குழந்தையைக் கொஞ்ச நேரம் ஆசை தீர வச்சிட்டிருந்தேம்மா..."

சிறு குழந்தை போல் அழுகிறான்.

அபிராமிக்குப் பெற்ற வயிறு சங்கடம் செய்கிறது.

கணவன் என்ற பிம்பத்தை எக்காரணம் கொண்டும் மாசு படுத்தாத, குறை கூறாத மரபில் நிற்பவள் அவள். அது மட்டுமல்ல, அந்த பிம்பத்தை எற்றிப் போற்றும் மூடக் கொள்கையையும் பற்றியிருந்தவள். தொழுநோய்க் கணவனை விலைமகளின் வீட்டுக்குச் சுமந்து செல்லும் கற்பரசி, அவன் விலை மகளின் முன் செல்கையில் மன்மத உருவம் பெற்றதையும் சகித்தவள். அந்தக் கணவன் முனிவன் என்ற வருக்கத்தில் பாராட்டப் பெறுவதை நியாயமா என்று கேட்கத் தெரியாத மரபுக்குள் அழுந்திய கூட்டுப் புழு அவள். அவள் படிப்பு, பொருளாதார சுதந்தரம், தொழில் எதுவுமே அந்த மரபாகிய அரணை மீறிய விழிப்புக்கு அவளை இட்டுச் செல்லவில்லை. தகப்பன் - புருஷன் பின் மகன் என்று ஆணைச் சார்ந்து நிற்பதே பெண் தருமம் என்பதை ஏற்று ஊறிப் போயிருக்கிறாள்.

இன்று, சுஜாவின் நடப்பு, அவளை உலுக்கிவிட்டிருக்கிறது. வேர் வரை ஆட்டம் காணும் அளவுக்கு உலுக்கி விட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் தன் உலகமே இந்த மைந்தன் என்று அருமை பெருமைகளைத் தேக்கி வைத்திருந்தாள். நம்பிக்கைகளை மலையாக வளர்த்திருந்த ஆசை மகன் - அந்த முப்பத்திரண்டு வயசு மகன் சிறுமி போல் அழுகிறான். உலகையே வென்று விடுவதாகச் சவால் அடிப்பவன், அழுகிறான். அவன் இப்படி அழுது அவள் பார்த்ததில்லை.

"சீனி! ஏண்டா இப்படி வெக்கமில்லாம அழற?"

இந்த அழுகை தாயின் மனசைக் கரைக்கும் மந்திரம் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

"அவ பக்கம் நியாயம் இருக்கு. நீ செய்யறதையும் செய்திட்டு அழற...?"

"அம்மா, நீயும் என்னைப் புரிஞ்சிக்காம பேசறியே? நீ... ன்னாலும் புரிஞ்சிப்பேன்னு தாம்மா நான் வீட்டுக்கு வரேன். சில சமயம் உயிரே வெறுத்துப் போகுதம்மா! சுஜி மேல எனக்கு எத்தனை ஆசை தெரியுமா? குழந்தையை நான் தொடக்கூடாது. அவ... அவகிட்ட நான் எந்த உரிமையும் எடுக்கக் கூடாது. என் வீட்டில என்னைத் தள்ளி வச்சிட்டு ஆட்டம் போடுறா. நீ பாத்திட்டிருக்கே. அத்தோட... என் ஃபிரண்ட்ஸுக்கெல்லாமும் தெரிஞ்சி கேவலமாப் போச்சும்மா!... குழந்தை பார்க்க வாங்கன்னு யாரையும் கூப்பிட முடியல..."

"அதற்குக் காரணம் நீ தான். நீ ஒரு கண்ணியமான புருஷன்கிற பொறுப்பைக் கால்ல போட்டு மிதிச்சே. என்னை, அவளை ரெண்டு பேரையும் பொய் சொல்லிப் பொய் சொல்லி ஏமாத்தின. வீட்டிலியே திருடறே. குடித்து, சூதாடி அழிஞ்சு போற. உறவுகள்ளாம் எப்படி நல்லபடியா இருக்கும்?"

"அம்மா, நீயே சொல்லு அவ எதுக்கு குழந்தையை இடுக்கிட்டு ஆபீசுக்குப் போகணும்? நான் தான், சரியா நடக்கல வச்சுக்க. நீ எத்தனை பாசமாய், பிரியமாய் இருக்கே? உன்னை எப்படி உதாசீனம் பண்றா? குழந்தையை நீ பார்த்துக்க மாட்டியா? எத்தனை குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுக்கும் தொழிலில் இருந்திருக்கே? எத்தனை பெண்கள் தாயா உன்னை நினைச்சிருக்கா?... இவ குழந்தையைத் தூக்கிட்டுப் போறதால அதுக்கு எத்தனை சிரமம்? அந்த ஆயா, பேய் போல இருக்கா. நிச்சயமா இவ பாலைக் கொடுக்க மாட்டா. தான் குடிச்சிட்டுக் கண்ட காபி தண்ணியையும் குழந்தைக்கு வாங்கி ஊத்துவா. நீ வாணா பாரு. அவ டிவோர்ஸ் வாங்கிட்டு, அந்த டாக்டரைக் கட்டிக்கப் போறா. அவன் பிளான் தான் இதெல்லாம்... நீ கட்டிக் காத்த மானம், குடும்ப கௌரவம் எல்லாம் தூள் தூளாப் போயிட்டிருக்கு!"

மறுபடியும் சிகரெட்டைக் கொளுத்திப் புகை வளையங்களை ஊதுகிறான்.

அபிராமியினால் சீரணிக்க முடியவில்லை தான்.

டாக்டர்... அந்த டாக்டர், இவர்களுக்கு ஒரு நாள் உயர்ந்த ஓட்டலில் விருந்து வைக்க அழைத்தான். ஆனால் சுஜி, இவனைக் கூட்டிக் கொண்டு போகவில்லை. அவன் பிரேஸ்லெட் பரிசளித்தது இவனுக்குத் தெரியாது.

அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அமெரிக்காவில் ஏதோ காதல் விவகாரம், அதனால் தான் ஊர் திரும்பி விட்டான் என்றும் சுஜா சொன்னாள்.

அவர்கள் பழக்கத்தில் இதுவரையிலும் அவளால் விகல்பம் கண்டு பிடிக்க முடியவில்லை.

என்ன ஆயிரம் இருந்தாலும்... படுக்கையைக் காலால் எகிறியதும், தொட்டு அடித்ததும்...

அறிவும், மூடப்பாசமும் முரண்டுகின்றன.

"அதுசரி, நீ இப்போது என்ன செய்யப் போகிறாய்? உனக்குன்னு கட்டுப்பாடு இல்லாத ஒரு வேலை. நினைத்த போது போகிறாய் - ஊர் சுற்றுகிறாய், வருகிறாய். நீ ஒழுங்காக ஒரு மாசம் பொழுதோடு வீடு வந்து, உலகத்துப் பிள்ளைகளைப் போல் வீட்டுக்கு நல்லவனாக நடந்து காட்டு. மாசச் சம்பளம் ஒரு காசு உன்னிடமிருந்து வரதில்ல. ஒரு பெண்ணைக் கல்யாணம் செஞ்சிட்டா, அவளை வைத்துக் காப்பாற்றும் பொறுப்பு உண்டு. நீ என்னடான்னா..."

"அம்மா, நீ வாயைத் திறந்தா பணம் பணம்னு உயிரை விடற. இந்த ஆபீசில நான் சேர்ந்து கோடிக் கணக்கில் பிஸினஸ் பண்ணியிருக்கிறேன். ஆனா, அங்கயும் எம்மேல பொறாமைதான் வளர்ந்திருக்கு. நிதம் ஆபீசுக்கு வந்து, அந்த வழுக்கத்தலையன் கிட்ட கொத்தடிமை மாதிரி நிக்கணுமாம். எனக்கு எம்.டி. உறவுக்காரர், அதனால் நான் எகிறறேன்னு பேசறது அந்தக் கிழம்... நான் சொந்தத் திறமையில் மேலே வரேன். எம்மேல இல்லாததும் பொல்லாததும் வத்தி வைக்கிறது... அம்மா, எனக்கு ஒரு ஒரு சமயம், இந்த இடத்தை விட்டு ஓடிடலாம்னு வெறுப்பா வரது..."

"நீ ஒண்ணிலும் ஒழுங்கா ஒட்டாம இப்படியே பேசிட்டிருந்தா எப்படிடா?"

"எப்படிடான்னா, எனக்கு அவ்வளவு டென்ஷனாயிடுது. இந்த உலகத்தில் யாருக்கும் ஏற்படாத அவமானம் எனக்கு நேர்ந்திருக்கு. சொல்லிட்டா வெட்கம், சொல்லாத போனா துக்கம்னு. நீதான் முதல்ல பரம்பரை பரம்பரையா இருந்த வழக்கத்த மீறி வலுவிலே, எதுவுமில்லாம என் பையனுக்குப் பண்ணிக்கிறேன்னு போய்ச் சொன்ன. அவளுடைய பழைய சரித்திரம் என்ன, ஏதுன்னு விசாரிச்சியா? வேலை செய்யிற பொண்ணு, இருபத்தெட்டு வயசு வரை ஏன் கல்யாணமாகலன்னு கேட்டியா? இந்தக் காலத்துப் பொண்ணுகளப்பத்தி உனக்கென்ன தெரியும்?... இத்தனை துணிச்சலுள்ள அவ, நாளைக்கு என் புருஷனும் மாமியாரும் என்னை வரதட்சனைக்காகக் கொடுமைப்படுத்தினாங்க, கொலை பண்ண முயற்சி செய்தாங்கன்னு ஏன் குற்றம் சாட்ட மாட்டா? அவளால சாட்சி அது இது எல்லாம் தயார் பண்ண முடியும். ஆயிரம் கேஸ் நடக்கிறது. ஆனா உண்மை உள்ளேருந்து வெளிவராது. நான் குடிக்கிறேன். அது பெரிய தப்பாப் படுது. ஏன் குடிக்கிறேன்? அதை நினைச்சுப் பாரு!"

அபிராமி அதிர்ந்து போகிறாள்.

கிணறு வெட்டப் பூதம் கிளம்பின கதையாக... அப்படியும் ஆகுமோ?

ஆறாம் வகுப்புச் சிறுமிகளுக்கு அப்பால் உலகம் தெரியாத பேதையாக அல்லவோ இருந்திருக்கிறாள்.

புருஷன் எப்படி இருந்தாலும் அவனால் பாதிக்கப்படும் பெண், கண்ணீர்க் குளத்தில் தடுமாறிக் கொண்டு நியதிகளால் ஒடுக்கப்பட்ட உலகுக் கொப்ப வாழ்ந்து தானாக வேண்டும் என்ற கோட்பாட்டை உடைக்கப் போனால், நியாயங்களையே குழப்புவதற்கு அஞ்சமாட்டார்கள் என்று அவள் புரிந்து கொள்ளவில்லை.

உண்மையில் சுஜி அவ்வாறு வழக்கை ஜோடிக்கத் துணியாதவள் அல்ல...

புருஷன் என்ற மேலான பிம்பத்தைத் தூக்கி எறிந்து விட்டாளே?

அவள் செய்வதறியாமல் கலங்கி நிற்கையில், சீனி அடுத்த இலக்குக்கு மெள்ளத் தாவுகிறான்.

"ஒரே வழி தான் இப்ப இருக்கு. நீ எனக்கு ஒரு பத்தாயிரம் தோது பண்ணிக்குடு. சவுதிலேந்து லச்சு வந்திருக்கிறான். பாஸ்போர்ட் எடுத்திட்டு வந்துடுடா, நல்ல சான்ஸ் இருக்குன்னான். பத்து முடியாதுன்ன, ஒரு அஞ்சு அட்லீஸ்ட் குடுத்தாக் கூட சமாளிச்சிடுவேன். இந்த வம்பெல்லாம் வாணாம். நான் அங்கே போயிட்டா, ஒரே வருஷத்தில் ஒன்னரை லட்சம் சம்பாதிச்சிக் காட்டுவேன். பிரிஞ்சு போயிட்டா அப்ப அவ என்ன செய்யறான்னு உனக்கும் வெட்ட வெளிச்சமாகும். எம்பேரில அப்ப உன்னாலும் தப்புக் கண்டுபிடிக்க முடியாது. நான் சொன்னது நிசம்னு அப்ப தெரியும்..."

அவன் அவள் முகத்தை உற்றுப் பார்க்கிறான்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து... கடைசியில் பணம்... பணம்! "என்னிடம் ஒத்தக்காசு கிடையாது. நீ என்ன விளையாடறியா? ஏண்டா? முந்நூறு ரூபா பென்ஷன் என் வயிற்றைக் கழுவ. அதைத் தவிர ஒண்ணில்லாம உனக்குத் துடச்சிக் குடுத்தாச்சி. நீ சவுதிக்குப் போவியோ, எங்கே போவியோ? எவ்வளவு பணம் இது வரை நீ அழிச்சிருக்கே?... ஒரு போர்ஷன் கட்டி வாடகைக்கு விடலாம்னு நினைச்சேன். என் உடம்பையே செருப்பாக்கி உழைச்சேன். இனிமேலும் என்னைத் தொந்தரவு பண்ணாதே... போ!" இவள் துப்பிவிட்டாலும் அவன் விட்டு விடுவானா?

"அப்ப எனக்கு வேற வழியே இல்லேன்னு சொல்ற. எங்கியானும் உன் பிள்ளை பாடி கிடக்கும். பின்னால் வருத்தப்பட்டு அழுது பிரயோசனமில்ல... எனக்கு உசிரை விட மானம் பெரிசம்மா... நான் எங்க போனாலும் ஒரு லீடர் போலத்தான் இருந்திருக்கிறேனே ஒழிய, சீன்னு ஒருத்தர் சொன்னதில்ல. நீ ஆபீசில வந்து கேட்டுப்பாரு. எங்க வாணாலும் வந்து கேளு... அப்படியான என்னக் கட்டிய பெண்சாதி, காலால இடறிட்டுப் போறா..."

கண் கலங்கிக் குரல் தழுதழுக்கிறது. அபிராமி தன்னையறியாமல் நெகிழ்ந்து போகிறாள்.

கடைசி அம்பு நன்றாகப் பற்றிக் கொள்கிறது.

அத்தியாயம் - 5

காலை பதினோரு மணி நேரம். அந்த ரயில்வே காலனி அமைதியாக இருக்கிறது. பாலாமணி வீட்டு வாசல் மூங்கில் படல் தடுப்பின் கீழே, ஏதோ பூச்செடியைப் பேணிக் கொண்டிருக்கிறாள். அடுத்த படலைக்கப்பால் கூந்தலை ஆற்றிக் கொண்டு ஓர் இளம் இல்லாள் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருக்கிறாள்.

"வெங்காயத்தோலும், டீத்தூளும் போட்டீங்கன்னா, நல்லா பூக்கும்..."

"அட... வாங்க வாங்க டீச்சர்! அபிராமி டீச்சர நினைக்காத நாள் இல்ல. எங்க இப்படி அபூர்வமா...?"

"சும்மா, பாத்திட்டுப் போலாம்னு வந்தேன் டீச்சர். எனக்கு முன்ன ரிடயர் ஆனவங்க, எப்படி இருக்கீங்கன்னு வந்து பாக்கக் கூடாதா?..."

"தாராளமா வாங்க. இந்த மட்டிலானும் என் நினைப்பு வந்திச்சே? சீனி கல்யாணத்துக்குக் கூட வர முடியாம போச்சு. பத்திரிகை வந்திச்சி... உள்ள வாங்க டீச்சர்!"

ஒரு சிறு வராந்தா, முன்னறை, படுக்கையறை, சமையலறை என்று கச்சிதமாக ஒரு சிறு குடும்பம் வாழப் போதுமான வீடு.

முன்னறையில் தொலைக்காட்சிப் பெட்டியின் மீது பாலாமணி அந்த நாளில் போட்ட குரோசா விரிப்பு அழகுற விளங்குகிறது.

சோபா செட்டு அறையின் பரப்பளவை மிகச் சிறிதாகக் காட்டுகிறது.

"உக்காருங்க டீச்சர், கையக் கழுவிட்டு வரேன்..."

அபிராமி சுவரில் மாட்டியிருக்கும் குடும்பப் போட்டோக்களைப் பார்க்கிறாள். சிறு ஷோகேஸில் பல்வேறு அலங்காரப் பொருள்கள் நிறைந்திருக்கின்றன. ஒன்றும் கருத்தில் பதியவில்லை.

இங்கே எதற்காகத் தாம்பரம் ஒரு கோடி தேடி வந்தோம் என்று புரியாத குழப்பம் ஆட்கொள்கிறது.

"மருமகள் இல்லையா, டீச்சர்?"

"ஆத்தா வூட்டுக்குப் போயிருக்கா, கைக்குழந்தையக் கூட்டிக்கிட்டு. மல்லிகாவும் ராதுவுந்தா ஸ்கூலுக்குப் போயிருக்கு..."

"இளங்கோ எங்கே இருக்கிறான்?...சம்சாரம்... குழந்தை எதானும் உண்டா?"

"தெரியாதா டீச்சர் உங்களுக்கு. இளங்கோதா சவுதிக்குப் போயிட்டானே? கல்யாணம் கட்டி ஆறே மாசந்தா இருந்தான். அவளுக்கு விசா கெடக்கல. இங்கதா அண்ணாமலை புரத்திலே அத்தா வீட்டில இருக்கா..."

"இளங்கோ மோட்டார் கம்பனில நல்ல வேலைல தான இருந்தான்?"

"ஆமாம். யாரு கேக்கறது? அங்க நெறய்யப் பணம்னு, ஆயிரத்து நூறு ரூபா வேலைய விட்டுப் போட்டுப் போயிட்டிருக்கிறான். அத்தப் பாத்துட்டு இவனும், நானும் போறன்னு குதிச்சிட்டிருக்கிறான். தம்பிகிட்ட எனக்கும் சான்ஸ் வந்தா சொல்லு, பாஸ்போர்ட் வாங்கி வச்சிக்கிறேன்னு சொல்லி அனுப்பிச்சிருக்கிறான்..."

"அப்படியா?..."

"என்னமோ போங்க, டீச்சர். ரெண்டு வருசமா அந்தப் பொண்ணு பொறந்த வீட்டோடு கிடக்கு. என்னா பணமோ? நாலு மாசம் முன்ன வந்திட்டுப் போனான். வாட்சுக்குள்ள டேப்ரிகார்டர், காமராவுடன் சேர்ந்த கடியாரம்னு கன்னாபின்னான்னு வாங்கிட்டு வந்து இங்க எல்லாத்துக்கும் ஆசை காட்டிட்டான். பொண்டாட்டிய அழச்சிட்டு பம்பாய் டில்லின்னு பிளேன்ல போயிட்டு வந்தா. ஒரு பத்துச் சீலை, சென்டு, வாட்சு, மோதரம் எல்லாம் வாங்கிக் குடுத்துட்டு, ஊருக்குப் போயிட்டா. ஒண்ணும் செரில்ல டீச்சர்!"

பாலாமணி அலுத்துக் கொள்கிறாள்.

தாட்டியான உடம்பு, தளர்ந்து கழுத்துச் சதை கை சதை தொங்குகிறது. முன் கூந்தல் முற்றிலும் நரைத்து, மூப்பை மிக அதிகமாகக் காட்டுகிறது. ஒரு வருஷம் தான் அவள் இவளை விட மூத்தவள்.

"சவூதில வேலை எளிசாக் கிடைக்கிறதுங்கறது நெசந்தானா டீச்சர்?"

"என்னாவோ? வேலை இல்லாதவன் போகட்டும். இருக்கிறவன் இத்தை விட்டுப் போட்டு எதுக்கு ஓடணும்? கலியாணம் கட்டிச் சின்னஞ்சிறிசு, இப்படிப் பிறந்த வீட்டில விட்டு விட்டுப் போறதா?"

"பணம் இல்லாம என்ன ஆகுது டீச்சர்? அதுவும் தானே வேண்டி இருக்கு?"

"பணம் வேணுந்தா. ஆனா அதுவே வாழ்க்கையா? நாங்க கல்யாணம் கட்டிட்ட காலத்துல, ரயில்ல அவருக்கு நாப்பது ரூபாதா சம்பளம். வீட்டில எட்டு ஜீவன். தங்கச்சிங்க ரெண்டு, தம்பி மூணு, எங்க மாமியா, நானு, அவரு. மூத்த பையன், அப்பா எறந்துட்டாரு, குடும்பப் பொறுப்பு அவரு தலைமேல. நானும் செகன்ட்ரிகிரேட் படிச்சி வேலை செஞ்சேனே, பிழைச்சது. காசு எண்ணி எண்ணித் தான் செலவு செய்யணும். நினச்சதுக்கெல்லாம் காசு கிடையாது. நினைச்சா சீல எடுத்திட்டு வாராகளே? உங்களுக்குத் தெரியாதா டீச்சர்? அப்பல்லாம் இப்பிடி நைலெக்ஸ் அது இதுன்னு என்ன உண்டு? சின்னாளப் பட்டுச் சேலை ரெண்டு, அதையே ஸ்கூலுக்கு மாத்தி மாத்தி உடுத்துவேன். ரயில்வேலைன்னு பாஸ் இருந்திச்சி, ஆனா எந்த ஊருக்குப் போனம், வந்தம்? விரலை மடக்குங்க? கெடயாது. மேக்கொண்டு காலணா செலவழிக்க முடியாதே? ரெண்டு தங்கச்சிகளைக் கட்டிக்குடுத்து, தம்பிகளைப் படிக்கவச்சி, வேலையில சேத்துவிட்டு, பின்னாலதா நம்ம குடும்பத்துக்கு வர முடிஞ்சது. நானுந்தா நாலு பெத்தேன். உங்களுக்குத் தெரியாதா?... இப்ப புள்ள பெத்துக்காத, பெத்துக்காதன்னு சொல்லிட்டே, பக்கம் பக்கம் ஆம்பிளயும் பொம்பிளயும், சீல துணியில்லாம, கூச்ச நாச்சம் விட்டு அங்கங்க இதுக்குத்தா இதுக்குத்தான்னு சினிமாலியும் படத்திலியும் கூத்தடிக்கிறாங்க... நீங்க சொல்லுங்க டீச்சர்!..."

குரலை இறக்குகிறாள். "தையக் காரங்கிட்ட ஒரு பாடின்னு சொல்லக் கூசுவோம். இப்ப மூணு வயிசுப் பிள்ளைங்களுக்குத் தெரியாதது ஒண்ணில்ல!"

"டீச்சர், அதெல்லாம் இப்ப சொல்லி என்ன பிரயோசனம்? நாம உலகம் தெரியாத கிழங்களாயிட்டமே?"

"உலகம் தெரியாத ஒண்ணுமில்ல. இவங்க போற போக்கு ஒண்ணும் சரியில்ல ஆமாம்..."

"மருமக... சும்மாதா அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாளா டீச்சர்?"

"அதென்னமோ, அவனுக்கு ஓராம்புளப் புள்ள வேணும், மூணும் பொம்பிளயாயிருக்கேன்னு. அவ வாணாம்னு நிக்கறாப்பல. இப்ப ரெண்டு மாசமா, தப்பிப் போயிருக்குன்னு சமுசயம். இந்தக் காலத்துல ஆருக்குத் தெரியிது? முன்னல்லாம் நாம வேலைன்னு வெளியே தான் போனம். ஸ்கூல் வுட்டு வந்தா, ஒலக்கையப் போட்டுட்டுத்தான் ஒதுங்கி இருப்பம். இப்ப ஒரே கட்டில்ல படுக்கை. எந்த காலத்திலும் அவ அடுப்பாண்ட வந்ததில்ல. காலம எட்டு மணிக்குள்ள நா பொங்கி வச்சிட்டு ஸ்கூலுக்கு வந்தே. இவ கண்ண முளிச்சிட்டு வரப்ப, அவன் டூட்டிக்குக் கிளம்பிடுவா. நமக்குப் பெத்த வயிறு, கடமை... இருட்டோட அஞ்சு மணிக்கு டூட்டிக்குப் போறான்னா மனசு கேக்குறதில்ல... நா செல்விக்கு ஆபரேசன்னு ஒரு மாசம் பங்களூர் போயிட்டேன். வந்து பாத்தா, அவனும் குச்சியாட்டம் போயிட்டான், புள்ளங்க பாக்க சகிக்கல."

"பாட்டி, அம்மா காலம டிபன் ஒண்ணும் பண்ணாது. ரொட்டி வாங்கி வச்சிடும்னுதுங்க. உங்கப்பா என்னடீ பண்ணினான்னா, அவரே எந்திரிச்சி ஆர்லிக்ஸ் கலக்கிக் குடிச்சிட்டுப் போவார்ங்குதுங்க. இவ ஒக்காந்த எடத்தவுட்டு எந்திரிச்சாத்தான? ஒடம்பு ஏகாண்டமா தடிச்சிப் போச்சி... பிரசர் வந்திருக்காம்... நமக்கு இத்தினி வயசாயி ஒண்ணு சொல்லுறதுக்கில்ல!..."

பாலாமணி பொரிந்து தள்ளுகிறாள்.

அபிராமிக்குச் செவியில் ஒன்றுமே நிற்கவில்லை.

தனது மகன் - மருமகள் - பிரச்னையே பூதாகாரமாக அவளைக் கவிந்து கொண்டு அழுத்துகிறது. அவன் சவுதிக்குப் போவது தான் தீர்வு...

கண்காணாமல் போனபின், நீளமான விதேசியக் கடித உரை - பணம்...

எல்லாவற்றுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்காமலா இருக்கும்?

"நாம்பாரு பேசிட்டே நிக்கிறேன்... டீச்சர், சாப்பிட்டீங்களா, என்ன பண்ணீங்கன்னே கேக்கல..."

"ஓ, அதெல்லாம் காலமயே ஆயிட்டது டீச்சர். இப்ப ஒண்ணும் வாணாம்!" இருந்தாலும் பாலாமணி உள்ளே சென்று ஒரு கண்ணாடித் தம்ளரில் கறுப்பாக திராட்சைச் சாறு கொண்டு வருகிறாள்.

"இதெல்லாம் என்னாத்துக்கு டீச்சர்...? நீங்க... இனிமேத்தான் சாப்பாடா?"

"நானும் சாப்பிட்டாச்சி. காலையில டிபன், சாப்பாடெல்லாம் ஒதுக்கிறதில்ல. இப்பதா சாப்பிட்டுட்டுக் கை கழுவிட்டு வந்தேன். ரோஜாப் பதியன் நேத்து வச்சிட்டுப் போனான். அத்தைப் பாத்துத் தண்ணி ஊத்திட்டிருந்தேன். நீங்க வந்தீங்க. இது வெறும் ஜூஸ்தா சாப்பிடுங்க!"

அபிராமி எடுத்துப் பருகுகிறாள்.

"வீட்டில் பண்ணினதா டீச்சர்?"

"ஆமா கிளாசுக்குப் போயி இதெல்லாம் படிச்சாள்ல்ல. இப்ப முந்தாநா கிரேப்ஸ் சாத்துக்குடி எல்லாம் வாங்கி, ஜூஸ் பண்ணி ஆத்தா வீட்டுக்கு அஞ்சு பாட்டில் கொண்டிட்டுப் போறா. இங்கயும் ரெண்டு பாட்டில் வச்சிருக்கா... நான் பேசிக்கிட்டே இருக்கிறேன். நீங்க கிரகப் பிரவேசம் பண்ணினப்ப, வூடு மேல் பூச்சு கூட முடியல்ல. இப்ப மேல கட்டிருக்கீங்களா டீச்சர்?... சீனி பொண்சாதி எங்க வேலையாயிருக்கு?"

அபிராமி சொல்கிறாள்.

"குழந்தை இருக்கில்ல?... ஆத்தா வீட்டில் விட்டிருக்கிறாளா?"

"இல்ல, இல்ல. இங்கதா இருக்கு. ஆபீசுக்குப் பக்கத்தில் கிரீச் இருக்குன்னு தூக்கிட்டுப் போறா. ஏம்மா, குழந்தை இங்க இருக்கட்டுமேன்னா, பக்கத்தில இருக்கு, லஞ்ச் பிரேக்ல ஒரு நடை பார்த்திட்டு வருவேன். மேலும் நீங்க கொஞ்சம் ரெஸ்டா இருப்பீங்க. நாளெல்லாம் குழந்தை பார்த்துக்கறதுன்னா அதுவும் லேசில்ல. இப்போதைக்கு வாணாம். கொஞ்சம் பெரிசாப் போனாப் பார்த்துக்கலாம்னு தூக்கிட்டுப் போறா. ஒரு குழந்தைத் துணி கசக்கற வேலை கூட இல்ல. எனக்குத் தான் அவளைக் கசந்துக்க முடியல..."

இவளுடைய ஆதங்கம் அடக்க முடியாமல் வருகிறது.

"பாரும்மா, படிச்ச பொண்ணு, வேலைக்குப் போனா தனிப்பண்பு வந்திடுது. கஷ்டம் தெரியிது பாருங்க!... நம்ம வீட்ல... சொல்லக் கூடாது டீச்சர். குந்தாணிதா. ஒரு துரும்ப அசைக்க எந்திரிக்க மாட்டா. அவ புருசன் சம்பாதிக்கிறான். பிறந்த வீடும் வளமை தான், திங்கட்டும். அதுக்குன்னு ஒரு வர முறை இல்ல? வேலைக்காரி என்னாத்துக்கு? இந்த நைலக்ஸு பிசுபிசுச்சீலை நாமெல்லாரும் வேலைக்குப் போறப்ப உடுத்தினோம், இல்லைன்னில்ல, ஆனா, சவம் வீட்டு வேலை செய்யிறப்ப உடுத்தவா முடியிது? எரியிது, நழுவி நழுவி விழுது, மாராப்புத்துணி போறது தெரியல. அடுப்படிக்குப் போவாணாம்மா, அவ நைலக்ஸ் சேலை உடுத்திட்டுன்னு, அவன் சொல்றான். ஆனா பருத்தித்துணி உடுத்த மாட்டாளே? பருத்தித் துணி போராம்! அவ செய்யிற வேலை, உருப்படியா ஒரு மாவாட்டி வைக்கிறதா, அதும் கிரைன்டர்ல. அதும் பாதி நா போட்டா, பாதில கரண்ட் நின்னுபூடும். அப்படிப் போச்சின்னா, அரைகுறையா வாரி ஆட்டாங்கல்ல போட்டு ஆட்ட அவளால ஆவாது. சிசேரியன் பண்ணிட்டிருக்கா... என்னமோங்க டீச்சர், வயசாயிட்டா, எத்தினிபுள்ள இருந்தா என்ன, பொண்ணு இருந்தா என்ன... புருசன் போயி நாம இருந்தா... கேவலந்தா..."

கண்கலங்கிக் குரல் கம்முகிறது.

அபிராமிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

"உங்களத்தா டீச்சர், நெனச்சிக்குவேன். புருசன்ற நாதி இல்லாம, பொறந்த வீட்டிலும் தாங்காம, தனிச்சு நின்னு ஒரு பையன வளர்த்து ஆளாக்கிக் கல்யாணமும் பண்ணிட்டீங்க. என்னப் போல நிலைமை வராது..."

அபிராமிக்கு நாநுனி வரையிலும் சொற்கள் மோதியடித்துக் கொண்டு வருகின்றன...

ஆனால்...

இந்த நினைப்பின் புகழ்ந்துரையே குளிர்ச்சியில் அவளை மகிழ்விக்கிறது. இது ஒரு சொப்பன சுகம் தான். ஆனால் இதைக் கலைப்பானேன்?

"நான் வரேன் டீச்சர், சீனி டூர் போகணும்னு சொன்னான். திடும்னு வந்தாலும் வந்து நிப்பான். வீட்டப் பூட்டிக்கிட்டு வந்தேன். அவன் டூர்னு சொன்ன நெனப்பு இப்பத்தான் வருது வரட்டுமா?"

எழுந்து விடுகிறாள்.

"ஒரு ஞாயிற்றுக்கிழமை மருமகளை, குழந்தையை அழைச்சிட்டு வாங்க டீச்சர், நானும் வாரேன். மாடிகீடி கட்டிருக்கீங்களா வீட்டுக்கு?"

"எங்க? இதுவே கையைக் கடிச்சிட்டுதே?"

"இருந்தாலும் எங்க இளங்கோ சொல்றாப்பல, டபிள் இன்ஜீன் குடும்பம்ல. சொல்லப் போனா மூணு இன்ஜீனாக் கூட வச்சுக்கலாம். அட, மாடில ஒரு ரூமைப் போட்டு வாடகைக்கு விட்டா கசக்குதா? போடுங்க டீச்சர். இது ஒண்ணும் சரிப்படலன்னா, அக்கடான்னு என் பென்சனாச்சி நானாச்சினு உங்க வீட்ல வந்து விழுந்து கிடப்பேன்..."

அபிராமி சோகையாகச் சிரிக்கிறாள்.

"வரேன்..."

மேம்பாலம் ஏறி மின் வண்டியைப் பிடிக்கிறாள்.

வேலையை விட்டு விட்டு சவுதி போயிருக்கிறான். இளங்கோவும் பெரிய படிப்பொன்றும் படிக்கவில்லை. ஐடிஐ டிப்ளமா எடுத்தான் என்று நினைவு.

ஆக, சீனி சவுதிக்குப் போகிறேன் என்று சொல்வது நிசமாகப் பலித்தால் தடுக்க வேண்டாம். ஆனால்... பணம், பணமல்லவோ ஐயாயிரம் கேட்கிறான்.

ஐயாயிரம் என்ன, ஓராயிரம் கூட இல்லை. வங்கியில் ஓர் அவசரத்துக்கு என்று துடைக்காமல் வைத்திருக்கும் சில நூறுகள் தானிருக்கும். இவளுடைய ஆறு பவுன் தாலிச் சங்கிலி மட்டும் அப்படியே இருக்கிறது. அது இருப்பதே சீனிக்குத் தெரியாது. முதலில் அந்த நகையை அழித்துத்தான் சுந்தராம்மாளிடம் அவள் மருமகளுக்குச் செய்தது போல் கருகமணி மாலையும், இரண்டு ஜோடி வளையலும் சுஜாவுக்குச் செய்து போட வேண்டும் என்று கொண்டுக் கொடுத்தாள். சுந்தராம்மாதான், "இருக்கும் தங்கத்தை ஏன் அழிக்கறே? நாளுக்கு நாள் உசருது. பணமா நீ பாங்கில போடறதில கொஞ்சம் எடுத்து நகையாப் பண்ணிப்போடு, கிடக்கட்டும்..." என்றாள்.

அப்போதைக்கு அதுவும் சரியாகத் தோன்றியது. அவளிடம் அவளுக்குத் தெரிந்த, வழக்கமாக வாங்கும் சேட் கடையில் நெக்லெசை வாங்கிக் கொடுத்தாள். அதைச் சீனி வாங்கிப் போன செய்தி கேட்ட பிறகு மீண்டும் ஒரு நெக்லெஸ் வாங்க வேண்டி வந்த போது, சுந்தராம்மாளிடம், பையன் கைவரிசை காட்டி விட்டதைச் சொல்லி அழுதாள். அப்போதும் சங்கிலியை அழிக்கவில்லை. மாறாக, சங்கிலியை அவளிடமே கொடுத்து வைத்திருக்கிறாள்.

இப்போது, சுந்தராம்மாளிடம் சென்று தான் யோசனையும், சரியென்றால் அவள் மூலமாகவே பணமும் பெற்று வர வேண்டும்..."

தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'அம்மா வீட்டுக்கு எப்ப வருவாங்க' என்று கேட்ட பின் தான் செல்ல வேண்டும்.

மாம்பலத்தில் இறங்கி அங்கேயே கேட்கிறாள்.

"...நீங்க யாரு பேசறது?..."

"அபிராமி டீச்சர். யாரும்மா, வசந்தா தானே?... அம்மா எப்ப வீட்டுக்கு வருவாங்க!..."

"இன்னிக்கு வீட்ல தா இருக்காங்க டீச்சர். ரெண்டு நாளாவே எங்கும் போகல, பி.பி. ஏறியிருக்குன்னு டாக்டர் ரெஸ்டல இருக்கச் சொன்னார். நீங்க வாங்க!"

முன் ஹாலில் ஆரஞ்சுச் சுளைகளை உதிர்த்துத் தின்று கொண்டு அயர்வுடன் அமர்ந்திருக்கிறாள்.

"வா, வா? என்ன விசேஷம்? சும்மா வரமாட்டாயே?"

"ஆமா மேடம் எனக்கு ஒரு வழியும் தெரியல..."

குபுக்கென்று நீர் தளும்ப சேலைத் தலைப்பின் நுனியால் துடைத்துக் கொள்கிறாள். "என்ன ஆச்சு? உன் பிள்ளை வேலைக்கு ஒழுங்காப் போகலியா? தகராறா?"

"அதெல்லாம் இல்ல..."

"சரி... நிதானமாச் சொல்லு. ஏனிப்படிக் கையெல்லாம் நடுங்கறது?"

"அபிராமி, காலுக்காகாத செருப்பைக் கழட்டி எறிஞ்சிடணும். பிள்ளையானா என்ன, பெண்ணானா என்ன? நீ ரொம்ப ஈஷிக்கற. போடா ராஸ்கல், படி ஏறாதன்னு கத்திரிச்சி விடு. கல்யாணம் பண்ணி வச்சாச்சு, அவளும் சம்பாதிக்கறா. குழந்தையும் ஆச்சு. இனி அவாவா தலையெழுத்து. நீ ஏன் மேல இழுத்துப் போட்டுண்டு சாகற? நான் சொல்றேன் கேளு. பேசாம கதவை இழுத்துப் பூட்டிண்டு, யாத்ரா ஸ்பெஷல் டிக்கட் வாங்கிண்டு காசி, நேபாளம்னு போயிட்டு வா. ஒரு சேஞ்ச் இருக்கும்..."

"இல்ல மேடம், எப்படி விட முடியும்? ஒரு பொண்ண இழுத்து அநாவசியமா பிணைச்சிட்டேனே? எனக்கு 'கில்ட்டி'யா இருக்கு. அந்தப் பொண்ணுக்கு இப்ப என்ன வழி? இவன் உருப்படற வழியே தெரியல. ஆபீஸ் பணத்தை ரெண்டு தரம் எடுத்து, நாங்க காப்பாத்தியாச்சு. எப்ப அவா முழிச்சிண்டு தெருவில துரத்துவாளோ? போகாத இடம், கேக்காத இடம், மதிக்காத இடம் போயிக் கெஞ்சி வேலை வாங்கிக் குடுத்தேன்..."

மருமகள் கட்டு மீறி நிற்பது, குழந்தையுடன் அலுவலகம் செல்வது, பேசுவது எல்லாம் கொட்டி விடுகிறாள்.

"பாழாப் போறவங்க, ஒரு தலைமுறைக்குக் குடின்னா என்னான்னு தெரியாம இருந்தது. அந்தக் காலத்தில் கள்ளுக்கடை மறியல், மதுவிலக்குன்னு இளைஞர்கள் புதிசா நாகரிகம் கண்டா. இன்னிக்கு, குடிக்கிற நாகரிகம், எல்லா மட்டத்திலும் வந்து சீரழிக்கிறது... ஆனா, நீ சொல்றதப்பாத்தா, அந்தப் பொண்ணு அதத் தெரிஞ்சிண்டு அவனைச் சீர்திருத்தும்படி இல்ல போல இருக்கே?"

"அதெப்படி அவமேல குறை சொல்லலாம் மேடம்? இவன், அவளைக் கேவலமாத் தலைகுனிஞ்சு போற அளவுக்கு அவ ஆபீசிலல்லாம் போய் கலாட்டா பண்ணலாமா? எப்பவுமே ஒரு பொண்ணை, இன்னமும் சமூகத்தில அவ புருஷனை வச்சுத்தான மதிக்கிறா? அதோட அவ கண்முன்னே இவன் வேற பொண்ணுகளோட சுத்தறான்னும் தெரியறது. அவ, போடான்னு தாலியக் கழட்டி எறிஞ்சிட்டுப் போயிடுவா போலதா இருக்கு. எனக்கு சாயங்காலம் வரதேன்னு இப்பவே பயம்மா இருக்கு. என்ன ரசாபாசம்?..."

"அபிராமி, நா ஒண்ணு சொல்றேன், உனக்கு என்னடா பத்தாம் பசலித் தனமாப் பேசறாளேன்னு இருக்கலாம். என்னோட அறுபத்தஞ்சு வயசுக்கு, எனக்குச் சம்சாரம் குடும்பம் இல்லேன்னாலும் தம்பி தங்கைன்னு எத்தனை பார்க்கிறேன்?... பொம்மனாட்டி வேலைக்கு போற குடும்பங்கள்ளதா இது போல நிறைய கான்ஃபிளிக்ட் வரது. அவ நான் ஏன் தணியணும்ங்கறா. இவன் ஆண்ங்கற ஈகோவ வச்சிட்டு அவளை அடக்கியாளத்தான் பாக்கறான். நீ வேலை செய்யாத பெண்ணாக் கட்டியிருந்தா, பிரியம் - பொறுப்பு ரெண்டும் பரஸ்பரம் வந்து இருக்கும். அவ மதிக்கல. என்னை விட அவ ஸ்டேட்டஸ் அதிகம்னு அவன் புழுங்கறான்; அதனால குடிக்கிறான்... என் கடைசித் தம்பி இருக்கானே அவன் பெண்சாதி, எம்.ஏ., பி.எச்டி., இன்ஸ்டிட்யூட் அஃப் ஸயின்ஸில ஏழு வருஷம் பண்ணினா. இப்ப ஒண்ணும் பண்னல. பஜன கோஷ்டில பாடிண்டு, வீட்டைக் கவனிச்சிண்டு, பிஸினஸ் பார்ட்டிகளுக்குப் போயிண்டு இருக்கா. எனக்குப் பாத்தா வயிற்றெரிச்சலா இருக்கும். 'ஏண்டி, இப்படிப் படிச்ச படிப்பு, ஆராய்ச்சியெல்லாம் அம்போன்னு ஏறக்கட்டிட்டு இந்த ஒண்ணரை அம்மாமிகளோட உன்னை இறக்கிண்டுட்டியே'ம்பேன். 'அக்கா, குடும்ப ஹார்மனி முக்கியம். அவருக்கு நான் அப்படி காரியர்ல போறது இஷ்டமில்ல. உனக்குத் தேவையானதெல்லாம் வாங்கிக் குடுக்கறேன், சுகமான வாழ்க்கை, உன் பேரில் ஃப்ளாட், ஒரு பெண், ஆண்... குடும்பம், இதை விட என்ன வேணும் என்கிறார். சரிதானே?' என்பாள். நினைச்சுப்பார்?"

அபிராமி வாயடைத்து நிற்கிறாள்.

"வேலை செய்யும் பெண் வேண்டும் என்று கேட்கும் பிள்ளைகள், குடும்பத்துப் பொறுப்பு என்ற உணர்வைக் காற்றில் விட்டு விடுகிறார்கள். 'அவ சம்பாதிக்கிறா, பார்த்துப்பா! கவலை இல்லப்பா!' என்று தான்தோன்றியா நடக்க அது வாய்ப்பா இருக்கு. புருஷன் தேடித் தருவான் என்ற மதிப்புத்தான் பெண்ணை அவன் மீது அன்பு பாராட்ட வைக்கிறது. அவனுக்கும் அவள் மதிப்புத்தான் அன்பைப் பெருக்குகிறது. நீ யோசனை பண்ணிப்பார்! நம்ம பெரியவா தெரியாம எல்லாம் செஞ்சிருக்கல!"

'ஓ, இதுவும் உண்மைதானோ?...'

அபிராமி சில நிமிடங்கள் தடுமாறிப் போகிறாள். ஆனால் இனிமேல், சுஜாவை வேலையை விடு என்று சொல்வதா? இது எத்தனை மடத்தனம்?

அவளுக்குப் பொருளாதார சுதந்தரமும் சுயமதிப்பும் - கல்வியும் இருக்கும்போதே இவன் ஏமாற்றுகிறான். ஒரு மதிப்பும் இல்லையெனில், அவனைத் தட்டிக்கேட்க முடியாமலாகிவிடும்... இது தவறான பிற்போக்கான வாதம் என்று அபிராமி தெளிகிறாள்.

"இப்ப அதைப் பத்திப் பேசிப் பிரயோசனமில்ல மேடம். நான் உங்ககிட்ட யோசனை கேக்க வந்தது இதுதான்... அவன் சொல்றான், சவுதி போவதாக. அங்க வேலைக்கு சான்ஸ் இருக்காம். பாஸ்போர்ட் வாங்கிட்டு, பாஸேஜுக்கு அய்யாயிரம் குடு, போயிடறேன்றான். இங்கே இருந்துகிட்டு கருங்குருங்குன்னு பொழுது போய்ப் பொழுது வந்தா சண்டை போட்டுக்கிட்டு ரசாபாசம் மிஞ்சிப் போறது. கொஞ்ச நாள் பிரிஞ்சு, வேலைன்னு போயிட்டா வேற சூழல்ல திருந்தலாம். சம்பாத்தியமும் வரும்... அவளுக்கும் அப்ப தப்புக் கண்டுபிடிக்க ஒண்ணும் இருக்காது... முஸ்லிம் நாட்டில் இவனுக்குக் கெட்டுப் போகக் கூட வழி இருக்காதுன்னு தோணுது..."

"அங்க வேலை இருக்காமா?"

"இல்லேன்னா சொல்லமாட்டான். இப்ப அவனாகச் சொல்றான். இது தவிர வேற வழி இல்லேனு தோணுது மேடம்..."

"அவன் உங்கிட்ட பணம் கறக்க இப்படி ஒரு ஐடியாவை எடுத்து விடலன்னு என்ன நிச்சயம்?"

"மேடம், நாம எதையும் நம்பலன்னா வழியே இல்ல. பாலாமணி டீச்சர் பிள்ளை இளங்கோ, வெறும் டென்த் பண்ணிட்டு ஐடிஐ லெதர் டிப்ளமா எடுத்திட்டுப் போயிருக்கிறான். நல்ல சம்பாத்தியம். இவன் தொழிலில் கெட்டிக்காரன். தலைச் சுழி, இப்படி ஆட்டுதே ஒழிய... நீங்க... முன்ன ஏதோ குறைச்ச வட்டில கடன் எடுக்க ஏதோ சொசைட்டில வச்சு ஹெல்ப் பண்றதாச் சொன்னீங்க. அத்த உருப்படிய வச்சு..."

"எம்பேரில வய்க்கச் சொல்றியா?"

"எப்படியோ, அஞ்சாயிரம் தரணும் மேடம்..."

அபிராமி வீடு திரும்பி வருகையில், சீனி பூட்டிய வாசலின் முன் நின்று கொண்டு இருக்கிறான். அவள் பேசாமல் வீட்டுக் கதவைத் திறக்கிறாள்.

அத்தியாயம் - 6

தன் மகன் கடல் தாண்டிப் போகப் போகிறான் என்று அபிராமி யாரிடமும் சொல்லவில்லை. ஒரே வாரத்தில் கைக்குப் பணம் கிடைத்து விடுகிறது.

"இது நான் உனக்குக் கடைசியாகக் கடன் வாங்கித் தந்திருக்கிறேன். நீ முன்னுக்கு வரணும்னு நம்பிக்கையோடு தந்திருக்கிறேன்..."

"அம்மா...! என் அம்மா" என்று கழுத்தைச் சுற்றிச் சிகரெட் வாயுடன் அவள் கன்னத்தில் முத்தம் வைக்கிறான்.

"சீ!"

அருவருப்புடன் கன்னத்தை அபிராமி துடைத்துக் கொள்கிறாள். கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு நாலரை மணி சுமாருக்கு அவன் எப்போதும் சுற்றுப்பயணம் கிளம்பிச் செல்வது போல் சென்றான். வாயிலில் நின்று அவள் அவன் தலை மறையும் வரையிலும் பார்த்துவிட்டு உள்ளே வருகிறாள்...

அவன் காபி டிபன் சாப்பிட்ட தட்டு, டம்ளர் அப்படியே இருக்கிறது. குளித்துவிட்டுப் போட்ட ஈரத்துண்டை வழக்கம் போல் விசிறியிருக்கிறான். முன் அறையில் அவன் படுக்கை, சுவரிலேயே பதிக்கப்பெற்ற அலமாரி, அதில் அவன் துணிகள்... அவளுடைய சில உயர்ந்த உடமைகள், எல்லாம் கல்யாணத்துக்கு முன் இருந்த நிலையிலேயே பிரிவாக்கப் பட்டிருக்கின்றன. சுஜா திருமணமாய் வந்ததும், அவள் வீட்டில் இருந்து ஏற்கெனவே அவள் தனக்கு வாங்கிக் கொண்டிருந்த சிறிய இரும்பு அலமாரியைக் கொண்டு வந்தாள். அதை மட்டும் அவள் தன் அறைக்குள் வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த அறையில் சுவரிலேயே அலமாரி கிடையாது. ஏற்கெனவே ஓர் ஒற்றைக் கட்டில் உண்டு. திருமணம் முடிந்து வந்த பின் வேறு ஒரு கட்டில் வாங்கவில்லை. அந்த ஒற்றைக் கட்டிலில் இப்போது யாரும் படுப்பதில்லை. அதில் பெட்டிகள், படுக்கை ஆகிய சாமான்களை ஏற்றி வைத்திருக்கிறாள். ஸ்டான்ட் தொட்டில் அறையை அடைக்கிறது.

ஏதோ ஒரு நிம்மதி பெற்றாற்போல் அபிராமி சாமான்களை ஒதுக்கி ஒழித்து வைத்துப் பெருக்குகிறாள். இரவுக்குச் சமையலை முடிக்கிறாள். அபூர்வமாகத் தொலைக்காட்சியைப் போட்டுக் கொண்டு உட்காருகிறாள். யாரோ ஒரு வயிரத் தோட்டுக் கிழவியை, ஒரு மூன்றாம் தலைமுறை பேட்டி காண்கிறது.

கிழவி சமூக சேவகி போல் இருக்கிறது.

"அந்தக் காலத்தில் சமூக சேவை செய்யணும்ங்கற எண்ணத்தை எனக்கு ஊட்டியவரே என் கணவர் தான். அவரோட உற்சாகத்தால்தான் மேலும் மேலும் நான் இதெல்லாம் செஞ்சிகிட்டு வரேன். 1956ல, நேரு கையால, பாராட்டு ஸம்மானம் கிடைச்சது..."

"அப்புறம் அம்மா, இந்திரா அம்மையார் கூடப் பாராட்டியிருக்காப்பல இருக்கே..."

"ஆமாம்... பத்மஸ்ரீ கிடைச்சது..."

அந்தப் பத்திரத்தைப் பெரிதாகக் காட்டுகிறார்கள்.

அபிராமி சமூக சேவை என்பது எப்படி, என்ன தொண்டு, என்று தெரிந்து கொள்வதற்காக முழு நேரமும் உன்னிப்பாகக் கவனிக்கிறாள். நரைத்த கூந்தலில் கொள்ளாத மல்லிகைப் பூ, பெரிய குங்குமப் பொட்டு, சுடர்தெறியும் மூக்குத்தி, தோடு வயிரங்கள், உள்ளங்கழுத்து அட்டிகை இவை எல்லாம் அந்தக் கிழட்டு உடலில் மின்னுவதைத்தான் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். திருப்பித்திருப்பி, அவள் மாமனார், கணவர் எல்லோரும் அவளை ஊக்கப்படுத்தியதையும், கூட்டங்களில் பேசச் செய்ததையும், தவிர ஒன்றும் வெளியாகவில்லை.

கடைசியாக, "இப்ப இளந்தலைமுறையினருக்கு நீங்க என்னம்மா அறிவுரை சொல்றீங்க?" என்ற கேள்வியை இளையவள் போடுகிறாள்.

"இளைய பெண்கள் எல்லாரும் இன்றைக்கு நம்ம கலாசாரம், பண்பாடுகளை விட்டுப் போயிட்டிருக்காங்க. அது ரொம்ப வேதனைக்குரியது. நம்ம நாட்டுக்குன்னு தனியா கலாசாரம், பண்பாடு இருக்கு. அதைப் பெண்கள் தான் காப்பாத்தனும். நாட்டைத் தாய்நாடுன்னும் ஆறுகளைப் பெண்கள் பெயராலும் அழைக்கிறோம். அதனால் ஒரு தேசம் தாழறதும் மேல ஏறறதும் பெண்களைச் சார்ந்து தான் இருக்கு. இதை அவங்க உறுதியாக் காக்கணும்..."

உடனே இளைய தலைமுறை திரும்பி உட்கார்ந்து, "பழம் பெரும் சமூக சேவகியாகிய நீங்க இவ்வளவு நேரம் மிக அரிய, பல பயனுடைய கருத்துக்களை விளக்கமாகத் தந்தீர்கள். தொலைக்காட்சியின் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று முடிக்கிறாள்.

அபிராமி விழிக்கிறாள். 'கலாச்சாரம் பண்பாடு என்றால் என்ன? அது பெண்களை மட்டும் எப்படிப் பொறுப்பாக்குகிறது!... என்ன கருத்தடீ, அது? சொல்லிவிட்டுப் போ!' என்று முந்தானையைப் பற்றி இழுத்து உலுக்க வேண்டும் போல் இருக்கிறது.

பட்டென்று அதை மூடிவிட்டு வாசற்புறம் வந்து நிற்கிறாள்.

தெருவில் செல்லும் மக்களை, வண்டிகளை, வேடிக்கை பார்த்துக் கொண்டு, சுஜாவை எதிர்பார்க்கிறாள்.

மணி ஆறடித்து, ஆறரை, ஏழும் ஆகிவிட்டது.

சுஜாவைக் காணவில்லை.

குழந்தையுடன் ஆறரைக்கே வந்து விடுவாளே?...

ஏழுக்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை. படலைக்கு வெளியே இருட்டில் கண்களைப் பதித்துக் கொண்டு நிற்கிறாள்.

அக்கம் பக்கம் எல்லாம் தொலைக்காட்சியோடு ஒன்றிக் கிடக்கிறது. தெருவில் வீடுகளில் வெளிச்சம் தரும் ஒளிதான் வருபவர்களை, வண்டிகளை இனம் காட்ட வேண்டும். ஏனெனில் இந்தத் தெருவில் உள்ள இரண்டு விளக்குகளும் எரியவில்லை.

ஏன் வரவில்லை? பஸ், ஸ்கூட்டர் விபத்தா?

அலை பாய்கிறது. இந்நேரம் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் கூடத் தொடர்பு கொள்ள யாருமே இருக்க மாட்டார்களே?

தவித்து உருகிய பிறகு எட்டரை மணிக்கு அவள் மட்டும் வருகிறாள். அதாவது குழந்தை இல்லை. கூட ஓர் இளம்பிள்ளை துணையாக வந்திருக்கிறான்.

"குழந்தைக்கு திடீர்னு ஜுரம், ஃபிட்ஸ் மாதிரி வந்துட்டுதம்மா, பிரேமுக்கு ஃபோன் பண்ணி அவர் வந்து, சில்ட்ரன் ட்ரஸ்ட் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கச் சொல்லிட்டார். உங்ககிட்ட வந்து சொல்லிட்டு வேணுங்கற சாமானை எடுத்திட்டுப் போகணும்னுதான் வந்தேன்..."

"உள்ள வாங்க வின்சென்ட் இப்படி உட்காருங்க. நான் வந்திடறேன்..." கல்லூரி மாணவன் போல் காட்சியளிக்கும் அந்தப் பையன் அவள் காட்டிய இருக்கையில் அமருகிறான்.

"எங்க ஆஃபிஸ் அகௌன்டன்ட் பையன். அவர் தான் ரொம்ப உதவியாகக் கூட வந்தார். குழந்தையை அட்மிட் பண்ண, அவர் பையனை நான் தனியாகப் போக வேண்டாம்னு துணைக்கு அனுப்பினார்..."

அபிராமிக்கு நா எழவில்லை. அவசரமாக அவளுக்குச் சாப்பாடு போடுகிறாள். பிறகு ஃபிளாஸ்க்கில் வெந்நீர், பால் மாவு என்று பையில் எடுத்து வைக்கிறாள். குழந்தைத் துணிகள், இவளுக்கு மாற்றுச்சேலை, எல்லாம் சிறு பெட்டியில் அடுக்கி மூடிக் கொள்கிறாள். "வரேம்மா..."

அபிராமி குரல் தழுதழுக்க வாயிற்படியில் நின்றவாறே, "அந்த ஆஸ்பத்திரி எங்க இருக்கம்மா? காலம நான் உனக்கு காபி, புதுப்பால் எல்லாம் கொண்டு வரேன்" என்று கேட்கிறாள்.

"வரீங்களா? உங்களுக்குக் கஷ்டமா யிருக்காதா? இவங்க வீடு பக்கத்தில இருக்கு... அதனாலதான் சொல்லல. லாயிட்ஸ்ரோட் தெரியுமில்ல...? அந்தப் பக்கம் வரணும்..."

"வரேம்மா, நிச்சயமா வரேன்... இங்க வீட்டில யாருமில்ல. சீனியும் டூர் போயிட்டான்..."

"அப்ப ஒரு ஒம்பது மணிக்கு சாப்பாட்டையே முடிஞ்சா எடுத்திட்டு பத்து மணிக்குள்ள வாங்கம்மா... வரேன்!"

பறந்து கொண்டு போகிறாள்.

குழந்தைக்கு வந்திருக்கும் நோய் சாதாரணக் காய்ச்சல் அல்ல மூளைக்காய்ச்சல். அன்று முழுவதும் குழந்தை மருத்துவர்கள் வந்து வந்து குழந்தையைக் கவனிக்கிறார்கள். தட்டு நிறைய ஊசிகளை வைத்துக் கொண்டு அந்தப்பூ உடலில் மருந்தைச் செலுத்துகிறார்கள்.

தலையைப் போட்டு உருட்டி முனகும் குழந்தையைக் காண அபிராமிக்குச் சங்கடம் தாளவில்லை. ஆனால், சுஜா, அலுவலகம் போகாமல் குழந்தைக்குத் தாயாக, அதன் துயரை, நோவைத் தான் ஏற்க முடியவில்லையே என்று துடிப்புடன் அமர்ந்து அதற்கு ஆறுதல் தர முனைகிறாள்.

இரவும் பகலுமாக ஆஸ்பத்திரியும் வீடுமாக ஒரு வாரம் சோதனையாக நீள்கிறது. ஒரு நாளிரவில் பிரேம் இரவு மூன்று மணி வரையிலும் இருந்து கண்காணிக்கிறான். கவலை கனக்கும் சுஜாவின் முகம். ஏதேதோ திகிலுணர்வுகளை அபிராமிக்குத் தோற்றுவிக்கின்றன. பெண் குழந்தை உறுப்புகள் ஊனமாகிவிடுமோ? கண், செவி... கை கால் அறிவு... உணர்வு...

நினைவில் வரும் தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்கிறாள். தன் பதற்றத்தை அவளால் அந்த இளந்தலைமுறைக்காரி போல் அடக்கிக் கொள்ள முடியவில்லை.

ஒரு வாரத்தில் குழந்தை கண் விழிக்கிறது. "கண்ணம்மா உஷாம்மா...! உஷா...!" என்று கூப்பிட்டால் தாயின் முகம் பார்க்கிறது.

பத்தாம் நாள் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். அடுத்த நாள் சுஜா அலுவலகம் செல்கிறாள்.

அபிராமி அன்று குழந்தையுடன் அதைப் பார்த்துக் கொள்ளும் அரிய பொறுப்பை ஏதோ சாம்ராச்சிய பதவி போல் ஏற்றுக்கொண்டிருக்கிறாள். இருட்டு அறையில் முகம் தெரியாமல் மகன், மருமகள் என்று தான் மோதிக் கொண்டிருந்தாள். இப்போது அந்த இருட்டை விரட்டி அடிக்க, எட்டு மாசக் குழந்தை... ஒளிப் பூவாக மலர்ந்திருக்கிறது.

நீள உடல், பெரிய கண்கள், தலையும் உடலும், புகைப்படத்தலையும், கார்ட்டூன் சித்திரக்காரர் வரைந்த உடலும் சேர்ந்தாற் போல் இருக்கின்றன. உடல் முழுதும், முகத் தெளிவுக்கும் மலர்ச்சிக்குமான வளமையும் தளதளப்பும் இணையவில்லை. சிறு பாதத்தில், ஊசி மருந்து ஏற்றி ஏற்றிக் குழியான காயம் இன்னும் முற்றிலும் ஆறவில்லை.

இவள் அருகில் வந்ததும் கைகளையும் கால்களையும் அசைத்துக் கொண்டு சிணுங்குகிறது.

பெண் குழந்தை. வாழ்வில் இன்னும் என்னென்ன போராட்டங்களுக்கோ தயாராக வேண்டிய இனம். இதை நினைக்கும் போதே கசிவு உள்ளத்தில் பாலாக நெகிழ்கிறது. குழந்தையைத் தூக்கி முகத்தோடு பதித்துக் கொள்கிறாள்.

"கண்ணம்மா...? என்னைப் பெத்தம்மா... ஓ பசிக்கிறதா?" சிணுங்கலும் அழுகையுமாகக் குழந்தை இவளுடன் பேசுகிறது.

கீழே விட்டு விட்டு மாக்கூழைக் கிளறி, ஆற்றி மடியில் வைத்துக் கொண்டு ஊட்டுகிறாள்.

பிள்ளைக் குழந்தை என்று கண் மூடியதொரு பெருமையிலும் கர்வத்திலும் மிதந்து கொண்டு, அவனுக்குப் பசியாற்றிய நாட்களின் நினைவு நெஞ்சில் முட்டுகிறது...

இந்தப் பத்து நாட்களும் அவன் வழக்கம் போல் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறான் என்ற செய்திக்குமேல் சுஜா ஒன்றும் கேட்கவில்லை. குழந்தைக்கு இப்படி வந்துவிட்டதே என்று பிரலாபிக்கவில்லை; அலுத்துக் கொள்ளவில்லை. அவள் தெளிவு, துணிவு, அதே சமயத்தில் பதறாத நிதானம் எல்லாம் இவளை வியக்க வைக்கிறது. அந்த மருத்துவமனைக்கு, ஒரு நாளைக்கு என்ன செலவாயிற்றோ, தெரியாது. பெரிய பெரிய மருத்துவ வல்லுனர்கள் வந்து குழந்தையைப் பார்த்தார்கள். மருந்துகள், சிகிச்சை... ஒரு மூச்சுப் பரியவில்லை அவள்.

அவனை வீட்டில் காணமலிருப்பதே அவளுக்கு ஆறுதலையும், நிம்மதியையும் அளிக்க வல்லதாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. சுஜாவின் முகம், வீட்டுக்குள் நுழைந்ததும் இறுகிப் போகவில்லை.

"அம்மா...!" என்று கூப்பிடும் ஒலியில் ஒரு இறுக்கம் விட்ட மலர்ச்சி அலைகள் விடுபடுகின்றன. "உஷா எப்படி இருக்கு? பால் குடிச்சிதா? அழுதாளா?" என்று கேட்டுக் கொண்டு ஓடி வந்து பார்க்கிறாள்.

ஆரஞ்சுப் பழங்கள், மற்றும் வீட்டுக்கு வேண்டிய கறிகாய் சாமான்கள் பையில் நிறைந்திருக்கின்றன.

"தேங்காய் வேணுமோ அம்மா? நான் வாங்காமல் வந்து விட்டேன்... பச்சைக் கொத்துமல்லி என்ன வாசனை பாருங்கள்?" என்று சகஜமாகப் பழகுகிறாள்.

நாட்கள் நழுவ நழுவ, அபிராமிக்குப் பிள்ளையைப் பற்றிய செய்தியை அவளிடம் மறைத்திருப்பது உறுத்துகிறது. அத்துடன், சுந்தராம்மாள் மூலமாக நகையை வைத்துக் கடன் எடுத்து பிள்ளைக்குக் கொடுத்திருப்பதும் சரிதானோ என்ற குடைச்சல் வலிமை பெறுகிறது.

அன்று சுஜா அலுவலகத்திலிருந்து மிகுந்த சோர்வுடன் வருகிறாள். வழக்கம் போல் உற்சாகம் காட்டவில்லை.

காபியைக் குடித்துவிட்டுத் துவண்ட நிலையில் படுக்கிறாள்.

"ஏம்மா? உடம்பு சரியில்லையா?"

"மனசும் சரியில்லையம்மா..."

புண்ணுள்ள இடத்தைத் தொட்டுவிடுகிறாள்.

"டூர் போயிருக்கிறான்னு சொன்னீங்களே? லீவுல போயிருக்கிறான். ஆபீசில ரிஸப்ஷனிஸ்டோ யாரோ, அந்தப் பொண்ணும் லீவாம். என்னை யதேச்சயாப் பாத்துட்டு, ராமாமிருதம் சொன்னார், 'என்னம்மா, கல்யாணம் ஆனப்புறம் திருந்துவான்னு பார்த்தா, ரொம்ப மோசமாயிருக்கு. ஆபிசுக்கே குடிச்சுட்டுத்தான் வரான்'னு அவர் சொல்றப்ப எனக்கு எண்சாண் ஒரு சாணாப் போயிட்டாப்பில இருக்கு. நான் சொந்தம் பாராட்டல. அவன் யாரோ, நான் யாரோன்னு சுத்தமா துடச்சிட்டேன். ஆனா இப்படி வெளில கேக்கறப்ப அவமானமா இருக்கு..."

அபிராமி குலுங்குகிறாள்.

"...சுஜா, என்னை மன்னிச்சிடும்மா. அப்படியும் நான் உங்கப்பா கிட்டப் போயி, இவனுக்கு இந்தப் பழக்கம் இருக்கு, நீங்க யோசிச்சிட்டுச் செய்யுங்கன்னு சொன்னேன். சகவாசதோஷம், வயசுக் கோளாறு, சுஜி கெட்டிக்காரின்னு உங்கப்பாவும் என் கண்ணை மறைச்சிட்டார். இப்ப, என்னையே முள்ளால பிடுங்கிக்கறேன். எங்கிட்ட சொன்னான், நான் இந்த வேலையை விட்டுடப் போறேன், சவுதில சான்ஸ் இருக்கு, பம்பாய் போய்ப் பார்க்கறேன்னு, அதுக்கு..."

சுஜி இவளைக் கூர்ந்து பார்க்கிறாள்.

"அம்மா நீங்க... பணம் எதானும் குடுத்தீங்களா?..."

"...அவம் பேச்சை விடு. அந்தப் பாவிக்கு நான் தலை முழுகிடறேன். நீ... உன்னை ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு இப்படிப் பண்ணிட்டமேன்னு..."

துயரம் வெடித்து வருகிறது.

"ஷ்... என்னம்மா இது? மூடத்தனமான பாசத்தில் இருந்து நீங்க வெளிப்படணும். வாழ்க்கை சோதனையாப் போயிட்டுது. அதற்காகக் கரைய முடியுமா? நானே தைரியமாக இருக்க, நீங்க எனக்குச் சஞ்சலப் படப் பண்ணலாமா? விட்டுத்தள்ளுங்க. விஷயம் என்னன்னு உங்களுக்குச் சொன்னேன்..."

அபிராமி சஞ்சலத்தை ஒதுக்கித் தள்ளிவிடத்தான் முனைகிறாள்.

குழந்தை தேறி வருகிறது. அம்மா செருப்புப் போட்டுக் கொண்டு வெளியே செல்கையில் தானும் வருவதாகக் கையை ஆட்டிக் கொண்டு தாவுகிறது.

"வாண்டாம் கண்ணா! பாட்டி... டாடா கூட்டிட்டுப் போவாளே?" என்று குழந்தைக்கு ஆசை காட்டும் போது மகிழ்ச்சி சொல்ல முடியாமல் பொங்குகிறது.

இடையில் ஒரு நாள் இருவருமாக குழந்தையைப் பிரேம்குமாரிடம் கொண்டு காட்டி விட்டு வருகிறார்கள்.

நவராத்திரிக் கோலாகலம். வீடுகளில், கோயில்களில் தெருக் கூட்டங்களில் வண்ணங்களைக் கூட்டுகின்றன. இடை இடையே மழை; நச நசப்பு.

அன்று ஞாயிற்றுக்கிழமை. சுஜி, அவள் தோழி பரிமளாவின் புதுமனை புகுவிழாவுக்காகக் காலையில் சென்றிருக்கிறாள்.

அபிராமி குழந்தையை முன்னறையில் விட்டுவிட்டு, உள்ளே ஏதோ வேலையாக இருக்கிறாள். குழந்தை இப்போது, எழுந்து உட்காரப் பிரயத்தனம் செய்கிறாள். முன்பல் ஒன்று வெளித் தெரிகிறது.

வாயிலில் வண்டி நின்ற ஓசை தெரியவில்லை. ஆனால் காலணி ஒலியும், பேச்சொலியும் கேட்கின்றன.

"ஹாய், பேபி...!..."

குழந்தை அழும் ஒலி அபிராமியைத் தள்ளி வருகிறது.

பிரேம்குமார் தான்... "அழறே?..."

"வாங்க டாக்டர்!... சுஜா... சொல்லவேயில்லையே?"

"நான் இந்தப் பக்கம் வந்தேன். குறிப்பாக நம்பரைப் பார்த்துக் கொண்டு, பேபியைப் பார்க்கலாம்னு வந்தேன். சுஜா இல்லையா?..."

"இல்லே. யாரோ ஃபிரண்ட் கிரகப் பிரவேசம்னு போனா..."

குழந்தையிடம் தான் கையைப் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அழுகை மாறுகிறது. ஒரு வளையமான விளையாட்டுச் சாமானைக் கொடுக்கிறார். அது வாயில் வைத்துச் சப்புகிறது.

"ஷி இஸ் பிக்கிங் அப்... அம்மா, உங்க பேத்தி அதிர்ஷ்டசாலி." அபிராமி நன்றியுணர்வு தளும்ப நிற்கிறாள்.

"வரேம்மா, சுஜா வந்தாச் சொல்லுங்க..."

திரும்ப முயல்கையில், அபிராமி... "கொஞ்சம் உக்காருங்க டாக்டர்!" என்று உள்ளே செல்கிறாள். காபி தயாரிக்கத்தான்.

"அதெல்லாம் ஒண்ணும் வாணாம்மா?... ஒரு டம்ளர் தண்ணீர் கொடுங்க..."

தண்ணீரைக் கொடுக்க மனம் வருமா?

எலுமிச்சம் பழம் பிழிந்து சர்க்கரை போட்டு, கண்ணாடித் தம்ளரில் விட்டுக் கொண்டு வரச் சில விநாடிகள் ஆகின்றன.

அவர் பருகிவிட்டுப் போகிறார்.

டாக்டர், காரில் வந்து சென்றதைக் கண்ணுற்ற எதிர்வீட்டு ரேவதி, திடுதிடுவென்று வருகிறாள். இவளுக்கு ஊரிலுள்ள ஸ்பெஷலிஸ்டுகளிடத்தில் தான் வைத்தியம் செய்து கொள்வதாக, கொண்டதாகச் சொல்லிக் கொள்வதில் தனிப் பெருமை.

"டாக்டர் பிரேம்குமாரா வந்தாரு?... குழந்தைக்கு என்னம்மா?"

"வாங்க... ஒண்ணுமில்ல விளையாடிட்டிருக்கா..."

"பின்ன... அவருக்கு எங்கேஜ்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டுல்ல போகணும்? ஒரு மாசத்துக்கு அவருக்கு எங்கேஜ்மெண்ட்டே கிடைக்காதுன்னு எங்கூட்ல சொன்னாரே? எனக்குத்தா, கால்முட்டி ரெண்டும் விட்டுப் போவுது. பிரேம்குமார்ட்ட வாணா காட்டுவம்னுதா எங்கேஜ்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணச் சொன்னா, கிடைக்கவேயில்லன்னிட்டாரு... எங்க ராஜா சொல்லிச்சி பிரேம்குமார்தான் வந்திட்டுப் போறார்னு..."

"இவளுக்கு அவர்தானே பார்த்தார்? இந்தப் பக்கம் வந்தேன், பார்த்திட்டுப் போகலான்னு வந்தேன்னு வந்தார்..."

"இப்படி எந்த டாக்டரம்மா, கூப்பிடாம பேஷண்டுகளை ஞாபகம் வச்சிட்டு இந்தக் காலத்துல வருவாங்க? ரங்காச்சாரியா? சுஜாவுக்குப் பழக்கம், அவ கூடப் படிச்சாருன்னு சொல்லிட்டாங்க, அதக் கேக்கலான்னுதா வந்தேன்..."

"அந்தக் காலத்துல, சின்னப்பிள்ளையா இருந்தப்ப, இவப்பா டீச்சர்தானே, படிச்சிருப்பார். மொத்தத்துல சிடு சிடுப்பு கிடையாது, நல்ல மாதிரி..."

"அப்ப... எனக்கு சுஜாவைவிட்டே ஒரு எங்கேஜ்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணித்தரச் சொல்லுங்கம்மா..."

இதற்குள் பக்கத்து விட்டுத் தணிகாசலம் வந்து விடுகிறார்.

"பிரேம்குமாரா வந்திட்டுப் போனாரு? குழந்தைக்கு என்னமோ ஏதோன்னு பயந்து போனேன். ஏம்மா..."

அபிராமிக்குச் சங்கடமாக இருக்கிறது.

"அந்தக் காலத்தில் ரங்காச்சாரி குடிசைக்குக் கூடப் போனாரும்பாங்க. இப்பவா! நேத்துப் பாஸ் பண்ணினதெல்லாம் திரையைப் போட்டுட்டு உக்கார்ந்து பிஸினஸ் பண்ணுதுங்க. எப்பேர்ப்பட்ட பேஷன்டானாலும் கூட்டிடடுத்தாம் போக வேண்டி இருக்கு..."

வம்பு என்றால் அல்வாத் துண்டாக அலைபவர்களுக்கு, சிறு மோப்பம் கண்டால் விடுவார்களா?...

குழந்தையின் உயரம் நிறம் எல்லாம், அப்பாவைப் போலா, அம்மாவைப் போலா என்று விமர்சிக்கிறார்கள்.

"எங்கம்மா, சீனி பத்து நாளைக்கு மேலாச்சி, காணல? ராத்திரி அவன் வந்து கதவை இடிப்பான், எனக்கு அதே வழக்கமா முழிப்பு வந்திடும்..."

"பம்பாய் போயிருக்கிறான்..."

"அவனுக்கு ஸதர்ன் ஏரியாதானே? இப்ப நார்த்தும் போறானா?"

"...தெரியல..."

"அவங்க கன்ஸர்ன்ல, ஏகமா ரிட்ரென்ச் பண்ணிட்டாங்க, போன மாசம். மிஸ்மானேஜ்மெண்ட்..."

"அபிராமி அம்மாக்கு, மருமக குழந்தையை ஆபீசுக்குத் தூக்கிட்டுப் போன நாளில முகத்திலியே சுரத்தில்லாம இருந்திச்சி. இப்பதா அவங்க முகத்தில ஒரு சந்தோஷமே இருக்கு..."

"இல்லையா பின்ன? நாங்கூட ஒருநா சுஜி கிட்ட சொன்னேன். வீட்டில அவங்க இருக்கிறப்ப குழந்தைய எதுக்கு பஸ்ஸில இடுச்சிட்டுத் தூக்கிட்டுப் போறன்னு..." இவர்கள் போக மாட்டார்களா என்றிருக்கிறது.

சுற்றி இருக்கும் சமூகத்தின் கண்களுக்கு நல்லவர்களாக வாழும் நிர்ப்பந்தமே இவர்களின் சுதந்தரங்களைப் பறிக்கிறது; போலித்தனம் வளர்க்கிறது. சலனமில்லாத குளப்பரப்பில் பொழுது போக்கற்ற பாலகர்கள் சில்லிகளை வீசி எறிவது போல் அவர்கள் பேசிவிட்டுப் போகிறார்கள்.

அத்தியாயம் - 7

பிரேம்குமார் அன்று வந்துவிட்டுப் போனதுடன் மறந்துவிடவில்லை.

சுஜா இல்லாத இன்னொரு நாள் மாலையில், பேபியைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய பொம்மை நாய்க்குட்டியைப் பரிசளித்துவிட்டுப் போகிறான்.

அக்கம் பக்கத்துக்கு மெல்ல அவலே கிடைத்து விடுகிறது.

"அபிராமி அம்மா? சீனிய ஆளயே காணம்?..."

"பம்பாய் பக்கம் மாத்திக்கிட்டான், வர்ர முடியுதா?"

"அடடா? அப்ப உங்க மருமக குழந்தையோட அங்க மாத்திக்கிட முடியாதே? இவ, ஆல் இந்தியா சர்வீஸ் இல்லையே?"

"....."

"டாக்டர் அடிக்கடி வந்து குழந்தயப் பாக்குறாரு! என்ன விஷயம்மா?..."

"அவருக்கு இவ கைவிட்ட கேசாயிருந்தது. பிழைச்சதில ஒரு பிரியம், வந்து பாக்குறாரு."

"ஏம்மா? இவுரு கலியாணமே கட்டலியாமே?"

"அதெல்லாம் பத்தி நமக்கெதுக்குங்க விசாரம்?..."

"இல்ல. சொல்லிட்டாங்க. கலியாணம் கட்டலண்ணும் சொல்றாங்க. கட்டி, அமெரிக்காவில் டைவர்ஸ் பண்ணிட்டுப் போயிட்டான்னும் சொல்லிட்டாங்க. சொந்தமா, குடும்பம் குழந்தைன்னு இருந்தா தொழில்ல 'டெடிகேஷன்' இருக்காதுங்க. இந்தக் குழந்தைய நினைப்பு வச்சிட்டு ஏன் பாக்க வராரு?..."

அபிராமிக்கு சங்கடமாக இருக்கிறது. எதையோ தூண்டில் போட்டு இழுப்பது போல் வார்த்தைகளைப் பார்த்து வீசுகிறார்கள்.

ஆனால், சுஜா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சீனி ஏன் வரவில்லை என்று கவலைப்படவும் இல்லை. தீபாவளிக்குக் குழந்தைக்கு ஒரு நல்ல ஃப்ராக், தனது தாய்க்கும் அபிராமிக்கும் இரு சேலைகள், தனக்கும் ஒரு பாலியஸ்டர் சேலை என்று துணி வாங்கி வருகிறாள்.

"எதுக்கம்மா, எனக்கு, இவ்வளவு விலையில் சேலை?"

"நீங்க எதுக்கு விலை பாக்குறீங்க? தீவாளி அட்வான்ஸ் வாங்கினேன். நாம எதுக்கு இப்ப சந்தோஷம் கொண்டாடாம முடங்கனும்? உஷா, எப்படி இருக்கம்மா, பாருங்க?... உங்க மகனைப் பத்தி நீங்க வருத்தப்படாதீங்க. அவுரு பங்களூர்ல ஜாலியா இருப்பதாகத் தெரியிது. அந்த சர்க்கிள்ளயும் பிஸினஸ் டூராம். சவுதி அது இதெல்லாம் சும்மா பணம் பறிக்க..."

ஆ...?

சுந்தராம்மாளிடம் நகையை வைத்துப் பணம் வாங்கிக் கொடுத்தாளே?

"...ஊரில, அக்கம் பக்கம், எங்கிட்ட கேள்வியாக் கேக்கறப்ப கஷ்டமா இருக்கம்மா..."

"அம்மா, இந்த அக்கம் பக்கங்களுக்கெல்லாம் இதுதான் வேலை. அவங்களுக்காக நாம வாழ முடியாது. ரொம்பக் கேட்டா, எம் மருமவ, அவனை ரத்துப் பண்ற யோசனையில இருக்கான்னு ஒரு போடு போடுங்க. அதுக்கு மேல பேச மாட்டாங்க! இந்தத் தணிகாசலம், ரேவதி இன்னும் யாரு...?"

அவள் உறுதியும் நிலையும் இவளை வியக்கச் செய்கிறது.

"அம்மா, கூட ஒரு பாக்கெட் பால் வாங்கி, 'ஸ்ரீகண்ட்' செய்யலாம். மஹாராஷ்டிரா ஸ்வீட். எனக்குப் பரிமளா எப்படிச் செய்யணும்னு சொன்னா. ரொம்ப ஈஸி. ராதா வீட்டில் சமையற்காரர் வந்து எல்லாம் செய்யிறாராம். நான் நமக்குப் பத்து ஜாங்கிரியும், மிக்ஸ்சரும் சொல்லியிருக்கிறேன். காலம அவங்க நம்ம வீட்டுக்கு வருவாங்க. பிறகு, அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு, அங்கேயே சாப்பிட்டுட்டு வரோம்... அம்மா, போன்ல கேட்டா, குழந்தை எப்படி இருக்கா, பார்க்கவே இல்லையேன்னு. நான் தீவாளியன்னிக்கு வரேன்னு சொல்லி இருக்கிறேன்... எப்படிம்மா?"

புருஷன் என்பவன் பந்தமாக, பாரமாக, விலங்காகப் பிணிக்கும் நிலையில் அதை உதறிவிட்டு, தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும், தன் காலால் ஊன்றி நிற்க முடியும், சமூகம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று நிரூபிப்பதாக அபிராமிக்குத் தோன்றுகிறது.

தீபாவளிக்கு முதல் நாள் மாலையிலேயே முன்னதாக வீடு திரும்பி சுத்தம் செய்து, கோலமிடுவதில் மிக உற்சாகமாகச் செயல்படுகிறாள். மாலையே பால் காய்ச்சித் திரித்து, ஸ்ரீகண்ட் செய்து வைக்கிறாள்.

அதிகாலையில் வானொலி மங்கள இசையுடன் எழுந்து, நீராடி, குழந்தைக்குப் பால் கொடுத்து, சுத்தம் செய்து, அலங்கரிக்கிறாள். புதிய ஃபிராக்கைப் போட்டதும், சுருட்டை முடியும், அகன்ற விழிகளுமாக பொம்மை போல், மிக அழகாக விளங்குகிறது.

"அம்மா! நீங்களும் புதிய சேலை உடுத்தணும் வாங்க?"

குழந்தை போல் மத்தாப்பு, வெடிகள் விடுகிறாள்.

"என்ன அபிராமி அம்மா? தீவாளிக்குக் கூட மகனுக்கு லீவு கிடைக்கலியா என்ன?"

"ஏன் மாமா? அதில உங்களுக்குத்தான் அதிக வருத்தம் போல இருக்கு? கங்காஸ்நானம் ஆச்சான்னு விசாரிக்காம, இப்படி விசாரிக்கிறீங்க!" என்று அதிரடியாக சுஜி பதில் கொடுக்கிறாள்.

"அதென்னம்மா, அப்படிச் சொல்லிட்ட? ஒரு நல்ல நாள் திருநாள், புருஷன் கூட இல்லையேன்னு உனக்கு இல்லையா என்ன? காட்டிக்க மாட்டே!"

"எனக்கு இல்ல மாமா."

"உனக்கு இல்லையா? ஆனா, உங்க மாமியார், பாவம், ராத்திரி எந்நேரம் ஆனாலும் கண் முழிச்சிக் கதவைத் திறப்பாங்க. சாப்பிடாம பட்டினி கிடப்பாங்க. எனக்கு இன்னி நேத்திப் பழக்கமா?"

"இருக்கலாம். அது அவங்க நேச்சர். நான் வர நேரமானாலும் பால் கூட காச்சாம வாசல்ல பாத்திட்டே நிப்பாங்க. இப்ப உங்க வீட்டுல ஆயிரம் விஷயம் இருக்கும், நாங்க கேக்கிறமா?... ஏன் தூண்டித் துளைக்கிறீங்க?"

தணிகாசலத்துக்கு முகம் சுண்டிப் போகிறது.

"நாடறிஞ்ச..." என்று ஒரு கீழ்த்தரச் சொல்லை முணமுணத்துக் கொண்டு போகிறார்.

இவர் அத்துடன் விடுவாரா? "இவ சங்கதி தெரியாதா? அந்த டாக்டர் கூடத் தொடிசு இருக்கு. அதான் அந்தப்பய, மானம் தாங்காம பிரிஞ்சு போயிட்டான்" என்று சொல்வது போல் அபிராமிக்குச் செவிகளில் ஒலிக்கின்றன.

அக்கம் பக்கம், ஒரு சுகத் துக்கங்களில் ஒதுங்கி விட முடியாத, ஒதுக்க முடியாத அக்கம் - பக்கம். மனிதர் தீவுகள் அல்லவே?

"ஏம்மா இப்படி வாயடி அடிச்சி அனுப்பிட்டியே? அக்கம் பக்கம் பகைச்சிட்டா எப்படி?"

சுஜா பொருட்படுத்தாமல் ஒரு சரம் பட்டாசைக் கொளுத்தித் தெருவில் போடுகிறாள்.

உஷா பயப்படவேயில்லை. கைகொட்டிச் சிரிக்கிறது.

"பயப்படவே இல்லை பாரம்மா இது?" என்று குழந்தையை முத்தமிட்டுக் கொள்கிறாள். அபிராமியின் முகம் மலரவில்லை.

"அம்மா, யாரோ ஏதோ கேட்கிறாங்கன்னு, நாம் நம்மையே வருத்திக்கறது முட்டாள்தனம்... நீங்க ஒரு பட்டாசு விடுங்க... பாருங்க, விடுவிடுங்கறா உஷா..."

"நீ இருந்தாலும் அப்படிச் சொல்லி அனுப்பிச்சியே, அவுரு வீணா இல்லாத கதை எல்லாம் கட்டினா..."

"கட்டட்டும். இந்தச் சமூகம் நன்மை செய்யப் போறதுன்னு நான் நம்பவில்லை. அதனால, அவங்களைத் திருப்திப்படுத்த, நம்மை நாம ஏமாற்றிக்க வேண்டாம். ப்ளீஸ், சந்தோஷமாக இருங்கம்மா?"

சொல்லி வைத்தாற் போல், டாக்டரின் வெள்ளை நிற வண்டி ஓசைப்படாமல் வந்து முன் வாசலில் நிற்கிறது. கையில் சில பரிசுப் பெட்டிகளுடன் இறங்கி வருகிறார். "ஹாய், பேபி...!" என்றவர் படியேறிக் குழந்தையைத் தூக்கிக் கொள்கிறார். மேலே பொம்மை ரயில் படம் போட்ட அட்டைப் பெட்டி. மற்றது, வழுக்கி விழும் அழகிய ஃப்ராக்.

"வாங்க... வாங்க, கங்கா ஸ்நானம் ஆச்சா?"

"கங்கா ஸ்நானம் ஆச்சாம்மா?..."

அவர் உள்ளே வருகிறார். அபிராமி ஃபிராக்கையும் பொம்மைப் பெட்டியையும் திறந்து பார்க்கையில், சுஜி விரைந்து உள்ளே செல்கிறாள். ஒரு தட்டில் ஜாங்கிரி, மிக்ஸ்சர், ஸ்ரீகண்ட் வைத்து எடுத்துக் கொண்டு வருகிறாள்.

"சுஜி, இவ்வளவும் காலையில் நான் சாப்பிடணுமா?..." என்று சிரித்தவாறு தட்டை வாங்குகிறார். பிறகு உடனே குரலை இறக்கித் தீவிரமானார்.

"...இங்கே இவ்வளவு காலையில் கங்காஸ்நானம் விசாரிக்க வரல சுஜி. உங்கப்பா... நிலைமை கிரிட்டிக்கலா இருக்கு. திடீர்னு விக்கல் கண்டு நேத்துலேந்து, சரியில்ல. உன் கஸின் எனக்கு ஃபோன் பண்ணினான். உன்னை காண்டாக்ட் பண்ண முடியலியாம். நான் போய்ப் பார்த்தேன். ஆஸ்பத்திரி, நர்ஸிங்ஹோமில அவரை அட்மிட் பண்ணலான்னா உங்கம்மா, வேணாங்கறா. அவங்களுக்கு என்ன பயம்? எதுக்கும் உன்னிடம் சொல்லிட்டுப் போகலாம், நீ தைரியம் சொல்லுவேன்னு வந்தேன். உங்கக்கா, அண்ணன் எல்லாருக்கும் தந்தி குடுத்திருக்காங்க..."

அபிராமிக்குக் கையில் பிடித்திருக்கும் சாமான் நழுவி விடுகிறது.

ஆனால் சுஜா கலங்கவில்லை.

"நீங்க வந்தப்பவே நான் ஏதோ அவசரம்னு நினைச்சேன். என்னன்னுதான் புரியல... இருங்க, வந்துடறேன்..."

அவள் உள்ளே செல்கிறாள். அவர் இனிப்பை ருசித்து விட்டு, தண்டவாளத்தைப் பொருத்தி, குழந்தைக்கு பொம்மை ரயிலை ஓட்டிக் காட்டுகிறார்.

குழந்தைக்கு ஒரே சந்தோஷம் "...த்தா...க்கா..." என்று புரியாத ஒலிகளை எழுப்பி ஆர்ப்பரிக்கிறது.

"குட்மார்னிங் டாக்டர், கங்காஸ்நானம் ஆச்சா?"

சற்றுமுன் சுஜியினால் விரட்டியடிக்கப்பட்ட தணிகாசலம்தான், புது வேட்டி, சட்டை, உத்தரீயம் புரள வருகிறார். கையை நீட்டுகிறார்.

"...ஐம்... தணிகாசலம், ரிடயர்ட் பர்சனல் ஆபீசர்" என்று அறிமுகம் வேறு.

"ஹலோ..."

"டாட்கருங்க, உங்களைப் போல் 'டிவோட்டடா' இருக்கிறது ரொம்ப அபூர்வம். அந்தக் காலத்தில், டாக்டர் ரங்காச்சாரி, காரிலேயே தான் இருப்பாராம், எப்பவும் ரெடியா!..."

பிரேம் எதுவும் கூறுமுன் சுஜா, காபி கொண்டு வருகிறாள்.

"அப்ப... நீ இப்போதே போகிறாயா சுஜா?..."

"கிளம்பிட்டே இருக்கிறேன் டாக்டர்!"

"ஒரு பதினோரு மணி சுமாருக்கு எனக்கு ஃபோன் செய்தால் நல்லது... நான் மாலை வந்து பார்க்கிறேன்..."

அவர் வண்டியிலேரும் வரை அவள் குழந்தையுடன் வாசலில் நின்று வழியனுப்புகிறாள். "டாடா சொல்லும்மா உஷா..."

குழந்தை இளங்கையை அசைக்கிறது...

தணிகாசலம் இன்னமும் உட்கார்ந்திருக்கிறார்.

சுஜாவின் முகத்தில் கேலி நகை மலருகிறது.

"என்ன மாமா? கட்டின புருஷனைக் காணல, யாரோ வந்து, தீபாவளி விசாரிச்சிட்டுக் குழந்தைக்குப் பிரசன்ட் குடுத்து விட்டுப் போறானேன்னு பார்க்கிறீங்களா? கட்டின புருஷன், ஆயிரங்காலப் பயிர்ங்கறது சித்தாந்தம் தான். ஆனால், என்னைப் பொறுத்து ரொம்பக் கொஞ்ச காலப் பழக்கம். இப்ப கனவாக் கூடப் போயிட்டுது. ஆனா, இவர் நினைவு தெரிஞ்ச நாளா, எங்க குடும்பத்தோடு ஒருத்தரா பழகிய சிநேகம். எங்கப்பாவிடம் படிக்க வந்தவர்ங்கறதுக்கு மேல, என் தாயாரைத் தாயாக நினைச்சவர். இப்ப எங்கப்பா, உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பதைச் சொல்லிவிட்டுப் போக வந்தார். போதுமா?"

"அடாடா... என்னம்மா, நீ? இவ்வளவு பெரிய சமாசாரத்தை சாவகாசமாப் பேசுறே?... கிளம்பிப்போம்மா! அடாடா...?"

"அம்மா, நான் மட்டும் போறேன். அம்மாவை எப்படியானும் சொல்லி, அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க ஏற்பாடு பண்ணிடறேன். குழந்தை இருக்கட்டும்..."

"ஏம்மா, அம்மாளையும் கூட்டிட்டுப் போ. வீட்டில என்ன யாரானும் வந்தா நா விவரம் சொல்லிடறேன்?"

தணிகாசலத்தின் சொற்களைப் புன்னகையுடன் வரவேற்கிறாள். "இதான் மாமா ரியல் ஸ்பிரிட். ஆனா, அம்மா இங்க இருக்கட்டும். பாப்பாவும் இருக்கட்டும். ஆஸ்பத்திரிக்கு அவர் போயிட்டா, நாங்க அந்த வீட்டைக் காக்க எதுக்குப் போகணும்?... அம்மா கொஞ்சம் போனா பிரமி, சுபத்ரா எல்லாம் வருவாங்க... நான் போய்ப் பார்த்து விவரம் சொல்றேன்..." அவசரமாகத் தன் மாற்றுச் சேலையை ஒரு பைக்குள் திணித்துக் கொண்டு, சுஜா கிளம்பிச் செல்கிறாள். உஷா கண்டால் தானும் வரத் தாவுமே என்று பக்கத்து வாயில் வழியே நழுவுகிறாள். அபிராமி திகைத்து நிற்கிறாள்.

பீன்ஸும் பட்டாணியும் வாங்கி வைத்திருக்கிறாள். விருந்து தாய் வீட்டில் என்று திட்டமிட்டதாகச் சொன்னாள். கடைசியில்...

தணிகாசலம் விடைபெற்றுப் போகிறார்.

தோழிகள் புத்தாடை தரித்து, அவரவர் வீட்டுப் பண்டங்களுடன் சுஜாவைப் பார்க்க மகிழ்ச்சியுடன் வருகின்றனர்.

அபிராமி அவர்களைக் குழந்தையுடன் விளையாட விட்டு விட்டு, காபி கொடுத்து உபசரிக்கிறாள்.

குழந்தைக்குப் பருப்பும் சோறும் கொடுக்க வேண்டுமென்று, சோறும் பருப்பும் வைத்து, பட்டாணியும் பீன்ஸும் சமைத்து வைக்கிறாள்.

பட்டாசு வெடிகள் ஓய்ந்து எல்லாரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றிப் போய் விட்டனர். தெரு அமைதியாக இருக்கிறது.

குழந்தையும் சற்றே அயர்ந்து தூங்குகிறது. அபிராமி தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து, சினிமா நட்சத்திரங்களின் கதம்ப நிகழ்ச்சியைப் பார்க்கிறாள்.

வாயிற் கதவு தாழ் திறக்கப்படுகிறது.

கையில் சிறு பெட்டியுடன், கலைந்த கேசமும் சோர்வுமாக...

சீனி... சீனிதான்.

உள்ளே வந்து ஷூவைக் கழற்றி எறிகிறான். பெட்டியை வீசுகிறான்.

"அம்மா, ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி... தலையை வலிக்கிறது" என்று சோபாவில் வீழ்கிறான். அபிராமிக்கு எரிச்சல் வருகிறது.

"ஏண்டா, இது என்ன சத்திரமா? மூதேவி. வீட்டுப்படி ஏற வெக்கமாயில்ல?"

"அட என்னம்மா இது? என் வீட்டில எனக்கு ஏற இடமில்லயா...?"

"உன் வீடு... உன் வீடில்ல. அப்படிச் சொல்லிக்க என்ன யோக்கியதை இருக்கு! எங்கிட்ட... எத்தனை பணமடா பறிச்சிருக்கே?"

"அம்மா... நான் உடம்பு சரியில்லாம வந்திருக்கேன். கெஞ்சிக் கேக்கறேன்... உன் பணத்தைப் பறிச்சிட்டு எங்கும் ஓடல. பாஸ்போர்ட், விசா கிடைக்காம எப்படியம்மா போக? அதுக்குத்தான் அரேன்ஜ் பண்ணிருக்கேன் அம்மா, ப்ளீஸ்... ரொம்பத் தலைவலிம்மா உன்னைக் கெஞ்சிக் கேக்கறேன்..."

அபிராமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உண்மையிலேயே அவன் முகமும், குரலும் நன்றாக இல்லை.

"குடிச்சுக் குடிச்சுச் சீரழிஞ்சிட்டு இங்க வரே. உன்னை ஒதுக்கித் தள்ளனும்னாலும் முடியாம வந்து வந்து தொல்லை குடுக்கற. இங்க நீ வராம இருக்கும் நாள்ள சந்தோஷமா இருக்கிறேன்..."

"அம்மா... அம்மா நீயா இப்படிச் சொல்ற? அம்மா... இனிமே... சத்தியமா பாரு, நீ மனசு கஷ்டப்படும்படி நான் நடக்க மாட்டேன். ப்ளீஸ், ஒரு கப் காபிம்மா!"

'சனியன் சனியன்' என்று நெஞ்சில் கடித்துத் துப்பிக் கொண்டு அவள் உள்ளே செல்கிறாள்.

வாசலில் யார் யாரோ வரும் அரவம் கேட்கிறது.

"கங்காஸ்நானம் ஆச்சா டீச்சர்...?..."

சமையலறை வாசலுக்கே வந்து விடுகிறாள், அதே காலனியில் வீடு கட்டியிருக்கும் மங்களத்தின் மகள் ஸ்ரீதேவி...

"அடாடா, வாம்மா!... எப்ப வந்தே? பம்பாய்க்கு மாத்திட்டதாச் சொன்னங்க?"

"நான் போகவேயில்ல டீச்சர். அவங்க தாம் போயிட்டு தீபாவளிக்கு வந்திருக்காங்க. இப்பதா வீடு பாத்து வச்சிருக்காங்க. குழந்தைகளை நடு வருஷத்தில் படிப்பை விட்டுக் கூட்டிட்டுப் போக முடியாது. அம்மாட்டதா இருக்கும். நா மட்டும் போறேன்... எங்க டீச்சர்? சுஜாவைக் காணல?..."

அபிராமி விவரம் கூறிக் கொண்டே இனிப்பு கார வகைகளும் காபியும் கொண்டு முன்னறைக்கு வருகிறாள்.

சீனி மிகவும் மதிப்புடனும் கவுரவத்துடனும், பெரிய பதவியில் இருக்கும் மங்களத்தின் மருமகனுடன் பேசுகிறான்.

"வீடுதான் குதிரை கொம்பாக இருக்கு. எல்லாம் ஒரு ரூம் ஃப்ளாட்டுக்கு, பத்தாயிரம் கேட்கிறான். நான் அந்தப் பக்கம் வேணான்னு இங்கேயே அதனால் தான் சுத்திட்டிருக்கேன். அவளுக்கும் ஸ்டேட் ஸர்வீஸ்தான். அம்மா பழகின இடம். வசதியா வீடு... அங்க போனா ஃபிளாட்டும் மூவாயிரம் சம்பளமும் தரேன்னு சொல்றாங்க. எனக்கு அது சரி வராதுன்னு தோணுது..."

என்ன பொய், என்ன பொய்!

பற்களைக் கடித்துக் கொள்கிறாள்.

அவர்கள் சென்ற பிறகு தணிகாசலம், அவன் இவன் என்று விசாரிக்க வருபவர்களிடம் பொய்யை அளக்கிறான். பிறகு அழுக்குத் துணிகளை உரிந்து எறிந்து விட்டுக் குளிக்கிறான். அபிராமி சாப்பாடு போடாமல் இருக்க முடியுமா?

இடையில் குழந்தை அழுகிறது.

அவன் சென்று தூக்குகிறான்.

"...ஹே... உஷா? இதபாரு..."

அது மருண்டு புதிய முகத்துக்கு வீறிட்டு அழுகிறது.

"ஏண்டி அழற? உங்கப்பன் இல்லையா நான்? யாரு உங்கப்பன்?..." அபிராமி விரைந்து வந்து குழந்தையை வாங்குகிறாள்.

"குழந்தையிடம் உன் அசிங்கப் பேச்செல்லாம் பேசாத! போ!"

"ஏன், இதுக்கு அப்பன் நானில்லைங்கறியா நீயும்? பின்ன இதை வச்சிட்டுக் கொஞ்ச உனக்கே வெட்கமாயில்ல"

"டேய், நான் போனாப் போவுதுன்னு பொறுக்கிறேன். பசின்னு வந்த ஒரு நாய்க்கும் கூடச் சோறு போடும் இரக்கம். சோறு போட்டேன். நட நட வெளியே!"

அவனுக்கு இதற்கெல்லாம் ரோசம் வந்துவிடாது என்பதை அவள் அறிந்திருக்கிறாள்.

அவன் சிரிக்கிறான். "அம்மா, நீ நல்லா சினிமா வசனம் பேசற!"

அவள் பேசவில்லை. குழந்தையை எடுத்துக் கொண்டு போய் முகம் துடைத்துச் சாதம் கொடுக்கிறாள்.

அவன் படுக்கையைத் தட்டிப் போட்டுக் கொண்டு, அறையில் கட்டிலில் சம்பிரமமாக விசிறியைப் போட்டுக் கொண்டு படுக்கிறான்.

மூன்று மணி இருக்கும். சுஜா, பதற்றமாக வந்து அறைப்பக்கம் நுழையுமுன், கட்டிலில் அவன் சாய்ந்த வண்ணம் சாவகாசமாகப் புகை ஊதிக் கொண்டு, கையில் ஏதோ ஒரு மட்டரக நாவலுடன் காட்சி தருவதைப் பார்த்து விடுகிறாள்.

"அம்மா...!"

அந்த ஒலியில் பின்பக்கம் இருந்த அபிராமி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து வருகிறாள். பெரிய நாய்ப் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடுக்கிட்டு அழுகிறது.

"இவனை யார் உள்ள விட்டது?..."

அபிராமி சுதாரித்துக் கொள்கிறாள். "அப்பா எப்படி இருக்காரம்மா?"

"அப்பா நான் போறப்பவே போயிட்டார். எல்லாரும் வந்து நாளைக்குத்தான் எடுக்கணும். அம்மா, இவனை ஏன் உள்ள விட்டீங்க?"

"நான் என்னம்மா செய்ய? நான் சென்னேன்; கேட்காமல் உள்ள போயிப் படுத்திருக்கிறான்..."

"சே!... நான் குளிச்சிட்டு வரேம்மா. பசிக்கிறது சாப்பாடு இருக்கா?"

"வச்சிருக்கிறேன் வா!"

"அம்மா, கல்யாணம்ங்கறது ஒரு பெண்ணைச் சகல வகையிலும் உறிஞ்சுவதற்கு ஓராணுக்கு உரிமை கொடுக்கறதுன்னு அர்த்தமில்ல. குடும்பமென்பது இவர்கள் கொடுங்கோலாட்சி பண்ணும் சாம்ராச்சியமில்லை. நான் ஒதுங்கிப் போகறதுன்னா இவனை இஷ்டப்படி விளையாட விடுவதுன்னாகிறது. இப்ப கட்டில்ல உக்காந்து புகைய விடுறான். கொஞ்சம் போனா குடிச்சிட்டு வந்து உருளுவான். எனக்கு என்ன பாங்க் பாலன்ஸ், நகை நட்டுங்கறதுதான் இப்ப இவனுக்குக் கண்... புரியிதாம்மா...?"

அபிராமி குன்றிப் போகிறாள்.

அவள் என்ன திட்டத்துடன் இங்கு வந்தாளோ? குடலை நனைத்ததாகப் பெயர் பண்ணிவிட்டு, தன் சாமான்கள் சிலவற்றைப் பெட்டியில் எடுத்துக் கொண்டு, குழந்தையுடன் ஆட்டோ பிடித்துக் கிளம்பிச் செல்கிறாள்.

அத்தியாயம் - 8

சுஜியின் இரண்டு தமக்கைகளும், அண்ணனும் மறுநாள் மாலையில் தான் வருகிறார்கள். பனிக்கட்டிகளை வைத்து உடலைக் கிடத்தியிருக்கிறார்கள். எறும்பு மொய்க்கிறது. வந்ததும் வராததுமாக அவர்கள் கூடிக் கூடி, அந்த வீட்டை விலையாக்குவது பற்றித்தான் பேசுகிறார்கள். அந்த வீடும் சேர்ந்தாற் போலிருந்த இன்னொரு வீடும், பிதுரார்ஜிதமாக வந்தவை. இன்னொரு வீடு சுஜியின் சிற்றப்பன் மகனுக்குப் பிரிவினையாகி, அவன் அதை இடித்து, முற்றிலும் பெரியதாக மாடி வைத்துக் கட்டிவிட்டான். அந்தப் பிரதேசத்தின் தொழில் வளர்ச்சி, பெருக்கம், பஸ் ஓடும் சாலையில் இருந்து பிரிந்து வரும் கிளைத்தெருவான இத்தெருவையும் சந்தடி மிகுந்ததாக ஆக்கிவிட்டிருக்கிறது. ஏறக்குறைய இதுவும் ஒரு கடை வீதியாகவே இருக்கிறது. சிற்றப்பன் மகன் தேங்காய் மண்டி வைத்துள்ளான். கீழ்ப்பகுதியை வாணிபத் தலமாகவும் மேலே குடியிருப்பாகவும் வைத்துக் கொண்டிருக்கிறான். இது தவிர, பெரிய சாலையில் 'ஹார்ட்வேர்' என்று சொல்லக் கூடிய அனைத்து சாதனங்களும் விற்பனை செய்யும் கடையும் வைத்திருக்கிறான்.

இப்போது அவனுக்கு இந்த வீட்டின் மீது ஒரு கண். ஒரு லட்சம் கொடுத்து வாங்கிக் கொண்டால், இடித்துப் புதுமாதிரியாகக் கட்டி வாடகைக்கு விடலாம் என்று எண்ணம். எனவே அவர்கள் எல்லோரிடமும் வீட்டை விற்பதனால் பெரும் லாபம் என்பதைச் சொல்லி முன்பிருந்தே ஆசைகாட்டுபவன் அவன். வீடு விற்கலாம் என்பது முன்பே முடிவாகியிருந்தால் சுஜாவின் திருமணம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கும். ஆனால், வீட்டை விற்று விட்டால், தன் பெற்றோரின் நிலை என்னவாகும் என்பதை சுஜா இளம் வயதிலேயே உணர்ந்திருந்தாள். எதிர்த்துப் பேசத் தெரியாத தாய், மூத்தாள் மக்களின் சுயநலங்களுக்கு விட்டுக் கொடுத்திருப்பாள். தந்தையின் மீது அரணாகச் சாய்ந்து கொண்டு, "எனக்குக் கல்யாணம் அப்படி வேண்டாம்" என்று ஒரே பிடியாக நின்றவள் அவள். பிறகு வீட்டை விற்காமலே திருமணம் நடந்தேறியது.

திருமணத்துக்கு இரண்டு தமக்கைகளும் தான் வந்திருந்தார்கள். அண்ணன் அப்போது வெளி நாட்டில் இருந்ததால் வரவில்லை. பிறிதொரு சமயம் வந்து பார்த்துவிட்டு, இவளுக்கு ஒரு ஜார்ஜெட் சேலையும், அவனுக்கு ஒரு பான்ட்பீஸும் கொடுத்து விட்டுப் போனான்.

அந்த அண்ணன், தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வந்திருக்கிறான்.

அபிராமி மூன்றாம் நாள் காலையில் உடலைத் தகனம் செய்ய எடுத்துச் செல்லுமுன் செல்கையில், சீனியும் உலகத்து மருமகன்களைப் போல் வேட்டியும் மல்ஜிப்பாவும் தரித்துக் கொண்டு தாயுடன் வருகிறான். அங்கே, சுஜா, தன் சகோதர சகோதரிகளைத் தவிர்த்துக் குழந்தையுடன் தனியே நிற்கையில், இவன் அவர்களிடம் மிகவும் நெருக்கமாக, மரியாதையாகப் பல நாட்கள் பழகிய மாதிரி பேசுகிறான்.

"அபிராமி அம்மா, இப்படி விட்டுட்டுப் போயிட்டாரே? முதல்ல என்னைக் கூப்பிட்டுட்டுப் போயிருக்கக் கூடாதா யமன்!" என்று ஆத்மார்த்தமான சோகத்தை விண்டு அரற்றுகிறாள் தாய் மங்களம்.

"துக்கந்தா. ஒரு பொம்பிளக்கு எந்தத் துக்கத்தையும் விடத் தாலித்துக்கம் பெரிசு. பாவம், பத்து வருஷம் அவுரு நடமாட்டம் ஓய்ந்த பிறகு, அப்படிக் கட்டிக் காத்தாங்க. கடிகாரம் தப்பும். இவங்க அவருக்கு அந்தந்த நேரத்துக்குச் செய்யிற தொண்ணும் தப்பாது..." என்று பங்காளி, தாயாதி வகைப் பெண்ணொருத்தி உரைக்கிறாள்.

"புருசன்னு ஒருத்தன் எப்படி இருந்தாலும் இருக்கிறாங்கறது தானம்மா ஒரு பொம்பிளக்கி தயிரியம். அதும் இவுங்களுக்குன்னு ஆம்புளப்புள்ளயும் இல்ல. ஆயிரம்னாலும் அவங்கவுங்களுக்கு வேணுமில்ல?" என்று இன்னொருத்தி கூறுகிறாள்.

அபிராமி உலகபரமான பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு, அதே மாதிரியில் துக்கம் விசாரிக்கத் தெரியாத ஜடமாக உட்கார்ந்திருக்கிறாள்.

ஆனால் 'புருஷ'ப் பெருமைகள் அவள் உள்ளச் சுவர்களில் வந்து மோதி எதிரொலி எழுப்பாமல் இல்லை.

அவள் உலகத்தார் போல் புருஷனுடன் வாழ்ந்திருந்தால் சீனி இப்படி உருவாகி இருக்க மாட்டானோ? அம்மா... மூடப்பாசம் வைப்பாள்; அப்பன் கண்டிப்பான். அதனால் தான் கைம்பெண் வளர்த்த பிள்ளை என்பது கேவலமாகச் சுட்டப்படுகிறதோ? அவன் சிகரெட் குடிக்கிறான் என்பது தெரிந்தவுடன் அதை மூடி மறைப்பதில் தான் சிரத்தை எடுத்துக் கொண்டாள். அவளுடைய உள்ளார்ந்த பலவீனம், மகனைக் கண்டித்து, அவனுக்குப் பணம் கொடுக்கும் செயலில் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தால், இவ்வளவுக்கு வருமா? அவன் எந்தக் கல்லூரியில் சேர வேண்டும், என்ன படிப்புப் படிக்க வேண்டும் என்று சிரத்தையை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை? முட்டாளான பாமரத் தாய்க்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்?

உடலை எடுத்துச் சென்றதும் கிணற்றடியில் நீராடுகிறார்கள்.

திரும்பும் போது அபிராமி சுஜியிடம் தயங்கி நிற்கிறாள்.

"நான் அங்கே வரப்போகிறதில்லை, இப்ப. நீங்க போகலாம்..." அவள் சீனியை அருகில் நெருங்கவோ பேசவோ வெளிப்படையாக விடாமல் வெறுப்பைக் காட்டிக் கொள்கிறாள்.

அவள் மரணச் சடங்குகள் முடிந்து, மங்கள நாள் நிறைவேறிய பின்னரும் வரவில்லை. சீனி வீட்டில் மிக நல்ல பிள்ளையாக இருக்கிறான். காலையில் 'அம்மா' என்று கூப்பிட்டுக் கொண்டு எழுந்து அவள் இட்ட உணவை உட்கொண்டு அலுவலகம் செல்கிறான். மாலையில் ஆறு, அல்லது ஏழு மணிக்குத் திரும்பி வருகிறான். தொலைக்காட்சி சிறிது நேரம் பார்க்கிறான்; அல்லது தணிகாசலத்துடன் அரட்டை பேசுகிறான். படுக்கிறான்.

ஞாயிற்றுக்கிழமையில் எங்கோ வெளியில் சென்றான். அவள் கேட்கவில்லை. பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. குடிக்காமலிருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அன்றிரவு அவன் வீடு வரும் போது ஒன்பதரை மணி. வாயிலில் வரும் போதே வாடை வீசுகிறது.

முகம் சுளித்துக் கொண்டு உள்ளே வருகிறாள். அவன் சட்டையைக் கழற்றிவிட்டு, லுங்கி அணிந்து கொண்டு, தட்டைப் போட்டுக் கொள்கிறான்.

தேங்காய்த் துவையல் அவனுக்குப் பிடிக்கும் என்று காரசாரமாக அரைத்து வைத்திருக்கிறாள்.

"ஏண்டா, இப்படிக் குடிச்சுப் பாழாப் போற? இத்தனை நாள் இல்லன்னு நினைச்சேனே?..."

அவன் பேசவில்லை. துவையல் சோற்றைப் பிடித்துப் போட்டுக் கொண்டு தண்ணீரைக் குடிக்கிறான்.

"நீ அங்க போனியாடா?"

அவன் கண்களில் நீர் வருகிறது.

"அம்மா, அவ என்னை எல்லாரையும் வச்சிட்டு அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசினா... புருஷங்கறவன், உன்னை விட்டுட்டு, வேற ஒருத்தியக் கல்யாணம் பண்ணிட்டே வாழ்ந்தான். உன் பிள்ளைக்கு ஒரு பைசா குடுக்கல. நீ கோர்ட்டுக்குப் போனியா, இல்ல. அவன் செத்த பிறகு தாலியைக் கழட்டின. குங்குமத்தை அழிச்சே. இப்பவும் அவன் இவன்னு சொல்றதில்ல. ஆனா இவ, உன் கண் முன்ன தாலியக் கழட்டிப் போட்டுட்டா. எல்லாத்துக்கும் மேல, என்ன... எல்லார் முன்னிலயிலும் அவமானம் செய்யறாப்பல, மூஞ்சியத் திருப்பிட்டுப் போனா..."

கண்ணீர் விட்டு அழும் போது, அபிராமிக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் இவனிடம் நியாயம் கிடையாது என்ற உணர்வு கூர்மை மழுங்கவில்லை. "தான் சம்பாதிக்கிற தைரியத்தில அவள் யாரையும் மதிக்கிறதில்ல. உன்னை நிச்சயமா மதிக்கிறதில்ல. அம்மா, அம்மான்னு ஒரு பாசாங்கு. குழந்தையை உன்னிடம் அவள் விடுவதில்லை. யாரையும் மதிக்கிறதில்ல. என்னைத் திட்டமிட்டு அவமானம் பண்றா. 'நீ என்னத்துக்கு இங்க சும்மா வர? நா உங்கூட வரப்போறதில்ல. பேசவும் ஒண்ணில்லன்னு' அவ அக்கா புருஷன் குழந்தைகள் எல்லாரையும் வச்சிட்டுச் சொன்னாம்மா...! எனக்குத் தற்கொலை செஞ்சுக்கலாம்னு கூடத் தோணிப்போச்சி..." பிழியப் ப்ழிய அழுகிறான், தட்டில் சோற்றை வைத்துக் கொண்டு.

'கைம்பெண் வளர்த்த பிள்ளை...' என்று அவள் மனத்தட்டில் சுறுக்சுறுக்கென்று ஊசி குத்துகிறது.

"எனக்கு நினைவு தெரிஞ்சு, முதமுதலா, இப்படி கட்டின பெண்டாட்டிதா அவமானம் செய்ய, துச்சமாப் பேசறா. படிக்கிறபோதும் சரி, அப்புறமும், இப்பவும் தா, 'சீனி'ன்னா லீடர்போல. இன்னிக்கும் எங்க சேர்மன் வந்தாக் கூட, என்னை மரியாதைக் குறைவா ஒரு பேச்சுச் சொன்னதில்ல. அதனாலதா நான் குடிக்கிறேன். நான் ஒப்புத்துக்கறேன். ஏம்மா, இந்த உலகத்தில தப்பு செய்யாதவன் யார் இருக்கிறான்?...இவ இப்படிப் பார்த்தால், நான் எத்தனை தப்பு இவ நடத்தையில் கண்டு பிடிக்கலாம்? இவள் இருபத்தெட்டு வயசு வரை, எப்படியெல்லாம் இருந்திருப்பான்னு துருவமாட்டேனா? டாக்டர் பிரேம் குமாருடன் இன்றைக்கும் பகிரங்கமாக நடக்கிறாள். ஒரு கன்ஸல்டிங்னா, எழுபது எண்பது வாங்கக் கூடிய பெரிய ந்யூரோ ஸ்பெஷலிஸ்ட் அதுவும் குழந்தை டாக்டர். இவ குழந்தையை வந்து வந்து பார்க்க என்ன அக்கறை? அவன் இவ குழந்தைக்கு பிரஸன்ட் தரான்! இவளுக்கு பிரஸன்ட் தரான். அவன் ஏன் கல்யாணம் பண்ணிக்கல?... எனக்குத் தெரியாதா, கல்யாணம் பண்ணிக்கட்டும், பண்ணிக்காமலும் ஆபீசில வேலை செய்யிற பத்தினிகளைப் பத்தி? உன் காலமா இப்ப...?"

அபிராமிக்கு உண்மை யில்லாமலில்லை என்று உள்ளம் ஒத்துப் பாடுகிறது.

"வீட்டை விற்கக் கூடாதென்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறாள். பெரியவர் பிதுரார்ஜித சொத்தாகையால், எதுவும் எழுதி வைத்திருக்கவில்லை. லட்சத்துக்கு மேல் கிரயம் வரும், அதை அவள் பேரில் வங்கியில் போட்டு விட்டு, அவளைக் கூட்டிப் போகிறோம் என்று அந்தப் பிள்ளையும் பெண்ணும் சொன்னார்கள். இவள் அதற்கும் விடவில்லை. இவள் அம்மாவைக் காவலாக வச்சிக்கிட்டு, அங்கே தனிக்குடித்தனம் நடத்துவாளாம். அவன் இவன் எல்லாரும் ஃப்ரீயாக வரலாம் இதுதான் பிளான். இதை நான் அனுமதிக்கப் போவதில்லை. அவளை இங்கே கூட்டி வர வேணும்..."

அபிராமியினால் இந்தக் குற்றச் சாட்டைச் சீரணிக்க முடியவில்லை.

"அவள் மனசை நீ எவ்வளவுக்குப் புண்படுத்தியிருக்கறன்னு உனக்கு எப்படித் தெரியும்? ஒரு படித்து, வேலை செய்யும் பொண்ணுன்னா, நீயும் மரியாதை கொடுத்து நடக்கணும். புழுக்கச்சிபோல் நினைக்கக் கூடாது. நீ எப்படின்னு உன்குறை எனக்குத் தெரியும். பொறுக்கிறேன். கேட்ட போதெல்லாம் பணம் குடுத்து, உன்னைக் குட்டிச் சுவராக்கினேன்..."

"என்னம்மா நீ பணம் பணம்னு! நான் எவ்வளவு பணம் உனக்குக் கொண்டு வரேன் பாரு!... நீ முதல்ல எப்படியானும் அவளை இங்க கூட்டி வரணும்மா!"

"அவ வந்தப்புறமும் நீ எப்படி நடக்கிறேங்கறதப் பொறுத்துத்தான் அவ மனசில உன்னப்பத்தி விழுந்திருக்கிற அபிப்பிராயம் மாறும்..."

"என்னம்மா நீ, ஸேம்ஸைட் கோலே போடற? நாலு பேர் பகிரங்கமா உன்னைக் கேக்கறப்ப அசிங்கமா இல்ல? கொலைகாரனுக்குக் கூடத் தாய்ன்னு இருக்கிறவ கருணை காட்டறா. நீ ரொம்ப மோசமானவ!..."

தட்டைத் தள்ளிவிட்டுப் போகிறான்.

அபிராமி யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறாள்.

ஏறக்குறைய ஒரு மாசம் ஆனதும், அன்று இரண்டாம் சனி நாளில், பிற்பகல் இரண்டு மணி சுமாருக்கு அவர்கள் வீட்டுக்குச் செல்கிறாள்.

சுஜி வீட்டில் இல்லை. எங்கோ வெளியில் சென்றிருக்கிறாளென்றும், வரும் நேரந்தான் என்றும் மங்களம் கூறுகிறாள்.

வீட்டின் பொக்கை பொள்ளை சிமன்ட் பூசி, வெள்ளையடித்துப் புதுப்பித்திருக்கிறார்கள். ஆக, வீட்டை விற்கவில்லை.

உஷா முன்பு பிரேம் வாங்கிக் கொடுத்த அந்தப் பெரிய நாய்ப் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒரு மாதத்தில் உயர்ந்து, பிடித்துக் கொண்டு நிற்கிறது.

"அடி கண்ணே! உன்னைப் பாக்காம கண்ணே பூத்து போச்சுடிம்மா!" என்று கெஞ்சிக் கொண்டு பையிலிருந்து ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொடுக்கிறாள் அபிராமி.

குழந்தை ஒற்றைப் பல்லைக் காட்டி, சொள்ளு வழியச் சிரித்து ஆப்பிளைக் கடிக்கிறது.

"சுஜிதா உங்களைப் பாத்துட்டு வரணும்னு சொல்லிட்டே இருந்தா. ஆனா பொழுதுதா இல்ல. இங்கயும் ஏகத் தகராறு. வீட்டை வாங்கிப் போட்டுடறதுன்னு எங்க கொழுந்தன் பையன் புடிவாதமா இருக்கிறான். அவங்க எல்லாரும் ஒண்ணா கையெழுத்துக் கூடப் போட்டாச்சி. பிதுரார்ச்சிதம், இவ ஒண்ணும் சொல்ல முடியாதுன்னு பலதும் பேசறாங்க. நானுந்தா ஏன்மா வீணாக் கூச்சல், ஏதோ உனக்கும் ஒரு பங்கு தரேன்னு சொல்றத வாங்கிட்டு இருன்னு சொல்லிட்டிருந்தேன்... எனக்கு என்னம்மா, ஜக்கு எங்கூட வந்திருன்னு கூப்பிடறான்... அவனுக்கும் அவளும் வேலைக்குப் போகிறதால, வீட்டக் கவனிச்சிக்க ஆளு வேணும்..."

அபிராமி எதுவும் பேசவில்லை.

மங்களம்மா, இந்த ஒரு மாசத்தில் எப்படி மாறி விட்டாள் என்பதை அதிர்ச்சியுடன் பார்க்கிறாள்.

முகத்தில் மஞ்சள் குங்குமம் துலங்க, அவள் கண்டிருந்த அந்த மங்களம், இன்று ஒரேயடியாகச் சதையின் இறுக்கங்கள் தளர, சாரமனைத்தும் தூலமாக வடிந்து விட்டாற்போல் காட்சியளிக்கிறாள். நெற்றியில் திருநீறு துளியாக. கூந்தலில் எண்ணெய்ப் பிசுக்கே இல்லை. நரை ஓடிய நாராகப் பிரிபிரியாகத் தோளில் விழுந்திருக்கிறது. கணவனின் இழப்பு ஒரு பெண்ணுக்கு வெளிப்படையாக இவ்வளவு மாற்றத்தைக் கொண்டு வருமா?

அபிராமி டீச்சருக்குப் புருஷன் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கைம்மை நிலை அவளை இவ்வளவு வெளிப்படையாகப் பாதித்ததில்லை.

"எனது தகப்பனார்...... நாளில் சிவலோக பதவியடைந்தார்" என்று முகமறியாத அந்த இன்னொருத்தியின் பிஞ்சு மகனின் பேரை வைத்து ஒரு அஞ்சலட்டை, அவளுடைய பள்ளி முகவரிக்கு வந்திருந்தது.

அன்று பள்ளியில் வேலை பார்த்த சொர்ணமணிக்குக் கல்யாணம். எல்லோரும் மாலை விருந்துக்குப் போக ஏற்பாடாகியிருந்தது.

சுந்தராம்மா இவளைக் கூப்பிட்டனுப்பினாள். கார்டைக் கிழித்து எறியாமல் வைத்துக் கொண்டிருந்தவளிடம், "அதை எதுக்கு வச்சிட்டிருக்கே! கிழிச்செறிஞ்சிட்டு வீட்டுக்குப் போய் முழுக்குப் போடு. சீனியையும் ஸ்கூல்லேர்ந்து கூட்டிப்போ. இன்னிக்கு நீ கல்யாணத்துக்கு வரவேண்டாம்!" என்றாள்.

சீனியிடம் "குழந்தே, உன் அப்பா செத்துப் போயிட்டாருடா!" என்று சொல்லித் தலையில் தண்ணீரை ஊற்றினாள்.

அவனுக்குப் பன்னிரண்டு வயசு. "இத்தனை நாள் இருந்தாராம்மா?" என்று கேட்டான்.

அவள் அவனுக்காகவே பொட்டழித்துப் பாழ்த்திருநீறு வைத்துக் கொள்ளவில்லை. பொட்டின் வண்ணத்தை மட்டும் கரு நிறத்ததாக மாற்றிக் கொண்டாள். என்றுமே அவள் 'டேஞ்சர்லைட்' பொட்டு வைத்துக் கொண்டதில்லை. இருக்கிறதோ இல்லையோ என்ற சந்தேகக் குறியாகவே இருக்கும். எனவே அவளுக்கு எந்த விதமான புற மாறுதலையும், அல்லது அக மாற்றத்தையும் அவள் கணவனின் சாவு கொண்டு வந்து விடவில்லை.

ஆனால் இந்தம்மா, உடலைச் சக்கையாக உழைத்து, அவருடன் தேய்ந்திருக்கிறாள். அவருக்குப் பின் எஞ்சி நிற்கும் தெம்பே கரைந்திருக்கிறது.

"விடிஞ்சி விடிஞ்சி முப்பது வயிசு தானாயிருக்கு, என்னால அவருடன் குடும்பம் நடத்த முடியாதுங்கறா. நா, நயமா எடுத்துச் சொல்லியாச்சு, கேக்கல. சட்டம், ரூல்னு ஏதேதோ பேசறா. என்னை இப்படி விட்டுட்டு அவுரு போயிட்டாரு. என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாதா?" என்று மங்களம் கண்ணீர் பெருக்குகிறாள்.

"...அடாடா... நீங்க ஏம்மா இவ்வளவு வருத்தப்படுறீங்க? நம்ம தலைமுறை வேறு; அவங்க தலைமுறை வேறு. நாம அநாவசியமா சகிச்சதை எல்லாம் அவங்க சகிக்கணுமா? சுஜி என்னை விட நிதானமா நடக்கிறவ, நீங்க வருத்தப் படாதீங்கம்மா...!..."

சுஜி திரும்பும்போது மூன்று மணியாகிறது.

வந்துதான் சாப்பிடுகிறாள்.

"நல்ல வேளை அம்மா, நீங்களே வந்தீங்க. எனக்கு உங்ககிட்ட என்னென்னமோ நல்ல விஷயங்கள்ளாம் தெரியல; நீங்க சொல்லல. உங்ககிட்ட பாமான்னு ஒரு பொண்ணு படிச்சாளாமே! நினைப்பிருக்காம்மா?"

அபிராமியின் விழிகள் வியப்பால் விரிகின்றன.

"யாரு...?... எத்தனையோ பாமா, எத்தனையோ ரமா, எத்தனையோ மீனா... குறிப்பா எதானும் சொன்னால்ல தெரியும்?"

"ஒரு குருக்கள் பையன் விடலையோடு ஒம்பதாவது படிக்கிறப்ப ஓடிப்போகத் தீர்மானிச்சு, பஸ்ஸில உட்கார்ந்துட்டாளாம். நீங்க கூட்டி வந்து வீட்டில வச்சிட்டு, ரெண்டு நாளக்கப்புறம் அவம்மாப்பாகிட்ட எடுத்துச் சொல்லி, வேற ஸ்கூல், ஹாஸ்டல்னு விடச் சொன்னீங்களாம்..."

"ஓ... அவளா?... ஏதோ தவறு நடந்துட்டது. அந்தப் பயலுக்கு இருபது வயசு. படிப்பில்ல. ஊர் சுத்திட்டிருந்தான். சினிமா கதையப் படிச்சு, அப்படி முடிவுக்கு வந்திட்டதுங்க. அவம்மா, இதை அந்தப் பயலுக்கே கட்டிவைக்கணும்னு ஒத்தக் காலால நின்னா. நாந்தான் பட்டிருக்கிறேனே? அவ படிக்கட்டும், ரெண்டு வருஷம் போகட்டும்னேன். ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் வந்து, டாக்டராகப் போறன்னா - எல்லாப் பேப்பரிலும் ஃபோட்டோ வந்தது. என்னைப் பத்திக் கூடச் சொல்லியிருந்தா..."

"அந்தப் பாமா, மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் பரிசு வாங்கியிருக்காம்மா. இப்ப டெல்லில இருக்கா. ஒரு டாக்டரையே கல்யாணம் கட்டிட்டிருக்கா. ரெண்டு குழந்தைகள்..."

"உனக்கெப்படிம்மா தெரியும்?"

"நா ஒரு காரியமா தமயந்தியப் பார்க்கப் போனேன். அவ மாமாதான் அந்தப் பாமாவை மணந்த டாக்டர் காங்கேஷ். என்னை அவ மாமிக்கு இன்ட்ரட்யூஸ் பண்ணினா. நான் உங்க பேரைச் சொன்னேன்... உடனே ரொம்பப் புகழ்ந்தாங்க. உங்களை ஒருதரம் பார்க்க வரணும்னு ஆசையாச் சொன்னாங்க. நான் சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தரேன்னேன்..."

குறும்பாகச் சிரிக்கிறாள்.

அபிராமிக்கு வழிமாறி எங்கோ வந்து விட்டாற் போலிருக்கிறது. ஆனால் சந்தோஷமாக இருக்கிறது.

"வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்கிறோம். ஆனால், குடும்பம், புருஷன், புள்ளைன்னு ஒரே கணிப்பில எல்லாப் பெண்களின் சக்தியும், தன்னம்பிக்கையும் ஒண்ணுமில்லாம போயிடுது... பொண்ணுன்னா சமையல் சாப்பாடு, புள்ளப் பேறு, புருஷனுக்கு எல்லாம் செஞ்சு அடங்கிப் போறதுதா குறிப்பாகிறது. இதுதான் பிரச்னை, இதுதான் வெற்றி. இதுதான் தோல்வி, எல்லாம்... சே!"

"நீதா புதுமாதிரியாப் பேசுற. என்னிக்கிருந்தாலும் பொண்ணு பொண்ணுதா" என்று மங்களம் பேசு முன் சுஜி வெடிக்கிறாள்.

"அம்மா, போதும், நிறுத்திக்க!... உங்க பிரலாபம், படிச்சு, சுய சம்பாத்தியம் உள்ள பெண்ணை, சுயமா சிந்திக்க வைக்காமலே குழப்பி விடுகிறது."

"டீச்சர், உங்களுக்கு தெரியுமா? 'ஐயோ, உன்னோட படிச்சவங்க எல்லாருக்கும் கலியாணம் ஆயிட்டுதே?... பாவம், இளையா பொண்ணு அம்பதும் அறுபதும் சேத்துக் கலியாணம் எப்படிப் பண்ணுவா?...'ன்னு பார்க்கிறவங்க கேட்கிறவங்க நான் ஏதோ பயங்கரமானவப் போல பிரலாபிப்பாங்க. இப்படி எல்லாம் கொட்டிக் கொட்டிக் குளவியாக்கறப்ப, கல்யாணம்னு வந்தாலே போதும்னு தோணும்படி ஒரு மனசு வந்துடுது. இந்த ஆளு எப்பேர்ப்பட்டவன், இவங்க கூட வாழ முடியுமான்னெல்லாம் யோசிக்கவே முடியாமப் போயிடுது...சீ!"

அபிராமிக்குப் பேச என்ன இருக்கிறது?

அவள் உருப்போட்ட வார்த்தைகள் எல்லாம் தொலைந்து போகின்றன.

"என்ன சமாசாரம் கொண்டு வந்திருக்கிறீங்கம்மா? அவன் ஊரிலியா இல்ல வெளிலியா?"

அவளாகத்தான் கேட்கிறாள்.

"இல்ல, ஊரிலதா இருக்கிறான்."

"நிதம் குடிச்சிட்டுப் பாதிராவுல வரானா!"

"இல்ல. பொழுதோட வரான். அவ்வளவா குடியும் இல்ல."

"சவூதிக்குப் போறது என்ன ஆச்சி?"

"நான் கேக்கலம்மா. எனக்கு நீயும் குழந்தையும் இல்லாம இருக்கிறது பித்துப் புடிச்சாப்பல இருக்கு. எப்ப வர்ரன்னு கேக்கத்தா வந்தேன்..."

"ஒரு ஆறு மாசமானும் ஆகட்டும். பார்க்கலாம்..."

"ஆறுமாசம்... அதென்னம்மா கணக்கு?"

"அம்மா, கலியாணம் ஆகலியே, ஆகலியேன்னு எல்லாரும் உருகவச்சி, கலியாணம்னு ஒண்ணைப் பண்ணிக்கிட்டப்புறம் வேணுன்னு குடும்பத்தை உதறணும்னு ஆசைப்படல நான். ஆனா, எல்லாத்துக்கும் ஒரு பொறுக்கிற எல்லை உண்டு. தனக்கும் குடும்பங்கற பொறுப்பு இருக்குன்னு அவன் உணருகிறானான்னு பாக்கத்தான் அந்த ஆறுமாசம்..."

இவளைச் சந்திக்கும் வரையிலும், இவளுடைய உயரமும் உறுதியும் மனசில் படவில்லை. எப்படியேனும் அழைத்து வந்து, அவன் வருந்துவதைச் சொல்லி, இருவரையும் முரண்படச் செய்யும் சிக்கல்களைப் பிரிக்க வேண்டும் என்று குழந்தைத் தனமாக நினைத்திருக்கிறாள். ஆனால், இவளைப் பார்த்த பின், அவனுடைய கயமைகள் சிறுமைகளாகத் தைத்து அவளைக் குறுக்கச் செய்து விடுகின்றனவே?

அபிராமி வீடு திரும்பும் போது மாலை குறுகி வரும் நேரம். வாயிற்படியில் கால் வைக்கும் போதே, தனம்மாள் இவளுக்காகவே காத்திருப்பதைச் சொல்லிக் கொண்டு வருகிறாள்.

"டீச்சரம்மா, சீனி ஆபீசில ரத்தமா வாந்தி எடுத்தாராம். பாவம், நர்சிங் ஹோமில சேர்த்திருக்காங்களாம். ஆள் வந்து சொல்லிச்சு. இவங்க உடனே போயிருக்காங்க. பூந்தமல்லி ஐரோடிலோ வேற எங்கியோ நிச்சயமாத் தெரியல விசாரிச்சிட்டுப் போறேன்னு போனாரு..."

வயிற்றைச் சுருட்டிப் பிசையும் சங்கடத்துடன் அபிராமி நிலைப்படியில் சாய்ந்து நிற்கிறாள்.

அத்தியாயம் - 9

"ஆண்! ஆண் குழந்தை! பிள்ளையாப் பிறந்திருக்குடீ..."

அபிராமிக்குப் பிரசவ அறையில் கேட்ட தாயின் ஆர்ப்பரிப்பு, நேற்றுக் கேட்டார் போல் பசுமையாக ஒலிக்கிறது. அவளுடைய சிறுமை வாழ்வில், இருட்டாகப் படுதா விழுந்து விட்ட மணவாழ்வின் பின்னணியில் ஒரு நட்சத்திரமாக மின்னியது அந்தச் சொல். "அடீ, செக்கச் சிவக்க, சுருட்டை முடி வழிய... கண்பட்டுடும்..." இது ஒரு கிழத்தின் குரல்.

கறுப்பு அபிராமிக்கு, எந்த வகையிலும் உயர்வு இல்லாத அபிராமிக்கு, அப்படி ஒரு மாப்பிள்ளை வாய்த்தான். திருஷ்டி பட்டுவிட்டது!

அது போல் இந்தப் பிள்ளை... இவளுக்கு ஒட்டுமோ என்று அப்போது யாரும் பிரலாபிக்கவில்லை. முழுக்க முழுக்க இவளுக்குப் பெருமை சேர்க்க, தாயின் குடல் விளக்கம் செய்து கொண்டு வந்த தெய்வப் பிள்ளை போல் புகழேற்றான்.

அப்போது அவள் வாழ்வின் உச்ச நிலையாகிய தாய்மைப் பேற்றின் சுவர்க்கத்தில், வேறு எந்தக் குறையும் தெரியாதவளாக அவளை அவன் ஏற்றி வைத்தான்.

அந்த நிமிடத்துக்கான சுவர்க்கானுபவத்துக்குக் கைம்மாறு போல், இப்போது தண்ணீர், பத்திய உணவு, பார்லி, ஆரஞ்சு என்று எடுத்துக் கொண்டு, பஸ்ஸை விட்டிறங்கி லொங்கு லொங்கென்று நடக்கிறாள்.

'இன்றோடு முப்பத்தெட்டு நாட்களாகி விட்டன, அவனை மருத்துவமனையில் சேர்த்து குடல் அரிப்பு, புண், நரம்புத் தளர்ச்சி எல்லாம் முத்திரண்டு வயசான அவனில் மேவியிருக்கின்றன.

பெரிய பெரிய டாக்டர்கள், நிபுணர்கள் என்று வந்து, பணம் பறிக்கும் பல வழிகளையும் நோயாளிகளிடம் கையாளும் மருத்துவமனை அது.

இவனுடைய கம்பெனி இந்தச் செலவுகளுக்குப் பணம் கொடுக்குமா என்று அவள் அறியாள். ஆனால் அலுவலகத்தில் வாந்தி எடுத்து விழுந்தவுடன் அலுவலகத்திலிருந்தவர்கள் சேர்த்திருக்கிறார்கள்.

தனி அறை இல்லை என்று அவன் குறைப்படுகிறான். இது பெரிய அறைக்குள் அட்டைத் தடுப்புப் போட்டு, கட்டில் கொள்ள இடம் விட்ட புறாக் கூண்டு என்றால் தப்பில்லை. இதற்கே ஒரு நளைக்கு ஐம்பது ரூபாய் வாடகை.

ஆயா, வார்ட் பாய், நர்ஸ், மருந்து என்று அவ்வப் போது நூறு நூறாகச் செலவாகிறது. அபிராமி அந்தச் சங்கிலியைச் சுந்தராம்மாளிடம் கிரயம் போட்டுக் கொடுத்துப் பெற்ற பணம் துப்புரவாகத் தீர்ந்துவிட்டது.

இன்னும் டாக்டர் பில். மருத்துவமனைக்கு அவ்வப்போது ஆயிரம் ஆயிரம் முன்பணம் கட்டியது போக வரவிருக்கும் பில் எவ்வளவோ?

பையனின் நோய்க் கவலையை விட, தங்கள் சக்திக்கு எட்டாத வைத்தியம், எத்தகைய பணச்செலவில் கொண்டு விடுமோ என்ற கவலை பெரிதாக இருக்கிறது.

அவன் மருத்துவமனையில் சேர்ந்த பிறகு இரண்டு வாரங்கள் பொறுத்து, சுஜிக்கு அவள் நேராகச் சென்றே விவரம் தெரிவித்தாள்.

நோயைப் பற்றிய விவரத்தை விரித்துச் சொல்லவில்லை.

அமிதமான குடியினால் ஏற்பட்ட கோளாறு என்பதுதான் வெளிச்சமாயிற்றே?

"ஆயிரம் ஆயிரமாச் செலவழியிது. அவன் கம்பெனியில குடுப்பாங்களோ, மாட்டாங்களோ தெரியல..."

சுஜா எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

"மாட்டாங்க..." என்றாள் வெடுக்கென்று.

"அவங்கதானே அங்க கொண்டு போய் சேர்த்தது?"

"அது பக்கத்தில எவனானும் அவசரத்துக்குச் சேர்த்திருப்பான். இவரு வெறும் ஸேல்ஸ் ஆளு. அதுவும் வருஷம் வருஷம் கான்ட்ராக்ட். கமிஷன் சம்பளம்னு தரான். இன்னும் பர்மனன்டாக் கூட ஆக்கல. இந்தப் பணம் புடுங்கி நர்ஸிங் ஹோம் செலவு அவங்க ஏத்துப்பாங்களா?"

"பத்தாயிரம் இழுத்திடும் போல இருக்கும்மா!" என்றாள் அபிராமி கலவரத்துடன்.

"நான் சொல்றதக் கேளுங்க. அந்த நர்ஸிங்ஹோமிலேந்து பேசாம கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு மாத்துங்க. இவங்க இல்லாத பொல்லாத டெஸ்ட்னும், ட்ரீட்மென்ட்டுன்னும் உரிச்சு எடுத்திடுவாங்க... நா வேணா, பிரேமைப் பார்த்து, ஹெல்ப் பண்ணச் சொல்றேன். கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில் யார் டாக்டரோ ஸ்பெஷலிஸ்டோ, கவனிக்கச் சொல்வாரு..."

"லிவர் கெட்டிருக்காம்..."

"கெடாம என்ன செய்யும்...?" என்று முணு முணுத்துக் கொண்டு போனாள் அவள்.

அபிராமி திகைத்தாள்.

மகனைச் சுற்றி, மாலையில் யாரெல்லாமோ சிநேகிதர்கள் அலுவலகத்து 'ரிசப்ஷனிஸ்ட்' என்று ஒரு பெண் சுவாதீனமாகப் படுக்கையில் வந்து உட்கார்ந்து தொட்டுத் தொட்டுப் பேசுகிறாள்.

சிரிப்பு, பேச்சு... இரவு ஒன்பது மணி வரையிலும்.

பத்தியச் சாப்பாட்டைக் கண்டால் வெறுக்கிறான்.

"என்னம்மா இது? வறுகலா, முறுகலா எதானும் கொண்டு வாயேன். அந்த டாக்டர் தான் சொல்றான்னா நீ வேற அறுக்கறே?"

"டேய், பத்தாயிரம் செலவழிஞ்சாச்சு. உன் ஆபீசில குடுப்பாங்களா என்னன்னு தெரியல... உனக்கு எதானும் கவலை இருக்கா? டாக்டரானால், முழு நீளம் மருந்து மாத்திரைன்னு எழுதறார். நீயானால் வறுகல் முறுகல்ங்கற... உடம்பு எழுந்திருக்க முடியாம தள்ளாடுறது..."

"நீ என்னம்மா, பணம் பணம்னு? இதிலியே பாதி என் உயிரை எடுத்துடறே. கொஞ்ச நேரம் சிரிச்சுக் கவலையில்லாம பேசறதில்ல, நீ வரவேணாம் போம்மா!"

டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொன்ன பொருளை வாங்கிச் சாப்பிட்டு விடுவானோ என்பதற்காக அபிராமி கண்ணுங்கருத்துமாக அவன் வெடுவெடுப்பை மீறித் தவம் கிடக்கிறாள்.

புழுங்கலரிசிக் கஞ்சி, இட்டிலி, காய்கள் வேகவைத்து தயாரித்த ரசம், என்று அவன் எளிதில் சீரணித்து, உடல் தேறி வருவதற்காக குருதி கசியும் முள்ளில் பயணம் செய்வது போல் நாட்களை நகர்த்துகிறாள்.

இடையில் சுஜா ஒரு நாள் எதிர்வீட்டுத் தொலைபேசியில் அவளுடன் பேசுகிறாள்.

"ஜி.எச்சுக்குப் போகவில்லையா? ஏன்...?"

இவளால் பதில் சொல்ல முடியவில்லை. அதை யாரிடம் சொல்வது, எப்படிச் சேர்ப்பது! தனபாக்கியத்திடம் சாடையாகத் தெரிவித்த போது, "ஜி.எச்சில் பார்ப்பாங்களா? அநாத மாதிரி இழுத்துப் போடுவான். பச்சத் தண்ணி கூடக் குடுக்க மாட்டான். உங்களுக்கு ஒரு புள்ள, என்னம்மா செலவு? பணம் இன்னி வரும், நாளைப் போகும்" என்று சொன்னாள். இதையெல்லாம் எப்படி அவளிடம் தெரிவிக்க?

அவளுக்கும் கெடுபிடியாம். அவர்கள் வீடு பத்திரம் எழுதி கிரயம் ஆகிவிட்டதாம். அங்கேயே ஹவுஸிங் போர்ட் வீடொன்று வாடகைக்கு எடுத்து முதல் தேதி அம்மாவுடன் போகிறாளாம்... செய்தி சொல்லத்தான் அந்தப் பேச்சு. அவள் வந்து இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை.

வீடு விற்ற பணத்தில் ஒரு பங்கு கையில் வந்திருக்கும். புருஷனின் மருத்துவச் செலவுக்கு...

கல்லானாலும் கணவன் மரபில் மலர்ந்த அவளுக்கு, மனசின் ஊடே இத்தகைய வரிகள் மின்னுகின்றன.

பட்டென்று அவளே வெட்டிக் கொள்கிறாள்.

"அம்மா, டாக்டர் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாம்னு சொல்லிட்டார்..."

"அப்பாடா..."

ஆனால் இன்னும் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்?

வீட்டுக்கு வந்த பின் மருந்து ஊட்டத்துக்கான சத்துகள்...

இன்னமும் நாலாயிரத்துச் சொச்சம் பில் கொடுக்கிறார்கள்...

அபிராமி அலையக்குலைய வீடு வருகிறாள்.

தணிகாசலம் வெளியே 'வாக்கிங்' கிளம்பிக் கொண்டிருக்கிறார்.

"வாங்க டீச்சர், சீனி எப்படி இருக்கிறான்? வீட்டுக்கு எப்ப அனுப்புறாங்க?"

"அதான்... உள்ள வாங்க சொல்றேன்... வீட்டுக்கு அழைச்சிட்டுப் போன்னு சொல்லிட்டாங்க..."

உள்ளே வந்து அவர் உட்காருகிறார். தனபாக்கியம் அருகில் நிற்கிறாள்.

"இன்னும் அஞ்சாயிரம் போல வேண்டியிருக்கு... அதான் அவசரமா வந்தேன்..."

"உக்காருங்க டீச்சர், நின்னிட்டே..."

தனபாக்கியம் மஞ்சள் குளித்து பசுமை மாறாத முகத்தில் குங்குமம் துலங்க, "அம்மாடி, நல்லபடியாச்சில்ல. உங்க மருமகள, அம்மன் கோயில்ல வெள்ளிக்கிழமை மாவிளக்கு போடச் சொல்லுங்கம்மா, ரெண்டு வீட்டில மடிப்பிச்சை வாங்கி!" என்று கூறுகிறாள்.

இவர்கள் சம்பிரதாயம் வழுவாமல் இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து, இரண்டு மருமகன்களும் கொண்டிருக்கிறார்கள்.

சம்பிரதாயம்-மரபு மீறாத குடும்பம்...

இவள் கோயில் பிரசாதத்தைத் தூக்கி எறிந்தாள்; மஞ்சட்கயிற்றைக் கழற்றி விட்டாள். கழுத்தில் தாலி இல்லை.

சுருக்சுருக்கென்று குத்துகிறது. ஒரு வேளை இந்தப் பையனுக்கு இவ்வளவு உடல் நலக்கேடு அதனால் வந்ததோ?

சுஜாவின் முன் நிற்கும் போது அவள் பக்கம் நியாயம் என்று சாய்ந்து விடும் மனசு இப்போது, இந்த மூடப்பிடியையும் பற்றிக் கொள்கிறதே?

"ஏம்மா, சுஜா அப்படியே நர்சிங் ஹோம் வந்து பாத்திட்டுப் போவுதோ?"

"...ஆமா, அவளுக்குப் பொழுதே இல்ல. குழந்தைய வீட்டில விட்டுவரா. அவங்க வீட்டில வேர தகராறு. அவ வீடு மாத்திட்டுத் தொலைவில போயிருக்கிறா..."

"...அதா... ரொம்ப முட்டாயிட்டது. இவன் ஆபீசில பணம் எப்ப வருமோ, அவசரத்துக்குக் கையில் பத்தாயிரம் வேண்டி இருக்கு. வீட்டை வங்கில வச்சு, ஒரு பத்து வாங்கி வச்சிக்கலாம்னு பாக்கறேன்..."

தணிகாசலம் உறுத்துப் பார்க்கிறார்.

"ஏம்மா வீட்டைப் போய் வைக்கறீங்க? உங்க மருமக நினைச்சா, அம்பதாயிரம் புரட்டலாமே?..."

"...அது இருக்கட்டுங்க. அவகிட்ட போய்ச் சொல்றது கேவலம்னு சீனியே நினைப்பான்... எனக்கு நாளையே வந்திட்டா திருப்பிடப் போறம்?"

"இல்லம்மா, ஓரஞ்சு பத்துக்காக..."

"அதுக்குத்தான் யாருகிட்ட போயி நிக்க? நாளைக்கு வங்கிலியே வச்சிடலாம்னு பாக்கறேன்... நீங்க வந்து...பாருங்க, எனக்கு இப்ப தனியா எது செய்யலாம்னாலும் நடுக்கமாயிருக்கு..."

"இதுக்கென்னம்மா, நாளைக்கு வெள்ளிக்கிழமை. ராவுகாலத்துக்கு முன்ன பத்திரமெல்லாம் எடுத்திட்டு வாங்க..."

மறுநாள், சொன்னபடி பணம் பெற்று பகுதிப் பணத்தை சேமிப்புக் கணக்கில் போடுகிறாள். ஆஸ்பத்திரிக்குச் செல்லும் போது மணி பன்னிரண்டாகி விடுகிறது.

"ஏம்மா இத்தனை நேரம்...? சுஜிக்குச் சொன்னியா?..."

நாலைந்து நாட்களாக அவன் சுஜிக்கு சொன்னாயா, வரச் சொன்னாயா என்று கேட்கிறான். உயிர் பிழைத்த பையன், வெளுத்து, நிறம் மாறி, தளர்ந்து, எப்படிப் போய் விட்டான்? ஆனால் அவள் சிறிதும் ஈரமில்லாத குரலில் முணமுணத்ததை எப்படித் தெரிவிப்பாள்?

"டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணிட்டாரா?"

"சாயங்காலந்தான் வருவார்?... சுஜிய எப்பம்மா பார்த்தே? அவள வரச் சொல்லலியா?"

"அவ... வீட்டை வித்திட்டாங்கப்பா. வேற எங்கோ வீடு பாத்திருக்கிறாளாம்..."

அவன் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றுகிறது.

"வீட்டை வித்தாச்சாமா? என்ன கிரயம்?"

"அதெல்லாம் நான் கேட்கல..."

"இவளுக்கு ஒரு ஷேர் வந்திருக்கும். அம்மா, வீடு ரெண்டு லட்சம்னு பேசிக்கிட்டாங்க. அவம்மா இங்கதான இருக்கா?"

"ஆமா."

அவன் படுக்கையில் உட்கார்ந்து, அபிராமி கிண்ணத்தில் விட்டுக் கொடுக்கும் ரசத்தைப் பருகுகிறான்.

"சப்புச் சப்புன்னு ருசியே இல்லம்மா. இதுல கொஞ்சம் மசாலாப் பொடி போடக் கூடாது?"

"கொஞ்சம் பொறுத்துக்கோ. டாக்டர் குடுக்கலாம்னு சொன்னாக் குடுப்பேன் நீ கேட்காம. வீட்டை பாங்கில வச்சு பத்தாயிரம் வாங்கினேன். உன் உடம்பு நல்லபடியா ஆகணும். நீயும் அதுக்கு ஒத்துழைக்கணும்டா சீனி?"

"...அம்மா... நான் இந்த வேலைய விட்டொழிச்சிடப் போறேன். எனக்கும் குடிக்கிற பழக்கம் இதுல இருந்தா போகாது..."

"சரி, நீ முதல்ல நல்லபடியா வீட்டுக்கு வந்துடு, பேசிக்கலாம்."

"இல்லம்மா, கல்பனா இருக்காளே, எங்க ஆபீஸ்ல... அவண்ணன் ராஜனும் இன்னொருத்தருமா, நல்ல ஸ்கீம் வச்சிருக்கா. சொந்தமா நாமே இந்த பிஸினஸ்ஸைச் செய்யலாம்னு. முதல்ல ஒரு இருபதாயிரம் போட்டு, ஆரம்பிச்சிடலாம். அவங்க லட்சம் முடக்கறாங்க. நான் வொர்க்கிங் பார்ட்னர். சுஜா மட்டும் இப்ப ஹெல்ப் பண்ணினா..."

துணுக்கென்று கடிக்கிறது நெஞ்சில்.

"இதபாரு சீனி? உனக்கு ரோசம் மானம் இருக்கா, இல்லையா? அவகிட்ட நீ ஒரு வார்த்தை பேசக் கூடாது. நீ முதலிலேயே அவகிட்டப் பண விவகாரம் வச்சிட்டதால தான் சீன்னு போயிட்டது. உனக்குப் பெண் சாதி குழந்தைய வச்சிட்டுக் காப்பத்தணும்ங்கற பொறுப்பு இல்ல. எந்தப் பெண்ணானாலும் அவ ஆயிரம் சம்பாதிச்சாலும், புருஷன் தங்கிட்டப் பணம் கேட்கிறான்னா கேவலாமாத்தான் மதிப்பா? அவ வந்து ஒரு வருஷம் ஆகுமுன்ன உன் புத்தியக் காட்டிட்டே. அவளாகக் கொடுப்பது வேற. ஆனா, உன்னால நான் அவமானப் படறேன்; நாணிச் சாகறேன்?"

அபிராமியின் கடுமை அவனை வாயடைக்கச் செய்கிறது.

மேலும் இரண்டு நாட்கள் பொறுத்து, அவன் சிகிச்சை இல்லத்தை விட்டு வருகிறான்.

அக்கமும் பக்கமும் தெரிந்தவர்களும் வந்து பார்க்காமல் இருப்பார்களா?

"பாவம், எப்படீ ஆயிட்டது?... டூர் டூர்னு போயி கண்ட நேரத்தில கண்ட ஓட்டல்ல சாப்பிட்டுதா வயிறு கெட்டு குடல் புண்ணாயிட்டுது" என்று தனபாக்கியம் அங்கலாய்க்கிறாள்.

"வி.ஜே. நர்சிங் ஹோமா? அங்கதா எல்லா ஸ்பெஷலிஸ்டும் வராங்களே?... பாவம், டீச்சர், இந்த ஒண்ணறை மாசமா அலைஞ்சு தேஞ்சு உருகிப் போயிட்டாங்க. இப்ப அவங்களுக்குத்தான் ஸ்பெஷலிஸ்ட் பார்க்கணும். எங்க நேத்ராவுக்கு ஜான்டிஸ் வந்தப்ப..." என்று தொடங்கி பொறுமையைச் சோதிக்கிறாள் எதிர்வீட்டுக்காரி.

"ஏம்மா சுஜி வரவேயில்லையா?" என்று யாரும் கேட்கத் தவறவில்லை.

எல்லோருக்கும் அபிராமி மூடி மழுப்புகிறாள்.

இவன் வீடு வந்தது தெரிந்ததும், மருத்துவமனைக்கு வரும் சிநேகிதர்கள் இங்கே வருகிறார்கள்.

கல்பனா, மாலா, ராஜன்...

எல்லோரும் சுற்றி உட்கார்ந்து சிரித்துப் பேசுகிறார்கள்! சீட்டாடுகிறார்கள்.

"அம்மா, டீ போட்டு வாயேன்!"

அபிராமியினால் தட்ட முடியவில்லை. அதிகப்படி பால் வாங்கி, தேநீர் தயாரித்தாள்.

"ஏம்மா? கொறிக்க ஒண்ணுமில்லையா? நீ வச்சிருப்பியே?" என்று எல்லோர் முன்பும் கேட்கும் கேள்வி அவளை இளக்குகிறது.

இருப்பது இல்லாதது தேடி, இட்டு நிறப்பி, மாவைக் கரைத்து எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து அவர்கள் கொறிக்கக் கொண்டு வைக்கிறாள்.

இடையே தொலைக்காட்சி ஓடுகிறது.

அபிராமியினால் சகிக்க முடியவில்லை. அவரவர் ஸ்கூட்டர், சைகிளில் ஏறிச் செல்ல இரவு ஒன்பதரை பத்து மணியாகிறது.

"சீனி, இது கொஞ்சம் கூட நன்றாக இல்லை?"

சிகரெட்டை உதட்டில் வைத்துப் புகையை விட்டுக் கொண்டு அவளை உறுத்துப் பார்க்கிறான்.

வாழ்க்கை என்பதை இவன் புரிந்து கொண்டிருப்பது இதற்குத்தானா?... இவனுக்கேற்ற சிநேகங்கள்... உதிரிகள். பொறுப்பற்ற, உதிரிகள். குடும்பம், அல்லது, ஒன்றிப் பணி செய்யும் கடமையுணர்வு, எந்த இலட்சியமேனும் அளிக்கும் தாகம்-ஒன்றுமே இல்லாத வாழ்வு. ஒழுக்கம், கண்ணியம், நேர்மை என்ற குறிக்கோள்கள் எதுவும் இல்லாத பாதையில் போகிறார்கள். இந்தப் போலி வாழ்வுக்கு, புகை, இரைச்சல், சூதாட்டம் - அது இது எல்லாம் சொர்க்கமாகத் தோன்றுகின்றன.

அபிராமி மனம் நைந்து செய்வதறியாமல் சோருகிறாள்.

"நீ இப்படியே போயிட்டிருந்தால், நாம நடுத்தெருவில் நிற்கும் நாள் தொலைவில் இல்லை சீனி!"

"என்னம்மா, நீ எப்ப பார்த்தாலும் மூக்கால அழுற... ஒரு சமயமானும் என்னை நீ தட்டிக் கொடுத்து மெச்சி, என் திறமையை வளர்த்திருக்கியா? நாம நடு வீதில நிப்போம் - ப்ளடி மிடில் கிளாஸ் மென்டாலிடி, பயம்... ஒரு காரியம், ஒரு வென்சர், செய்ய எப்பவானும் உட்டிருக்கியா நீ?... உன் மனசே எப்பவும் குத்துப்பட்ட உடஞ்ச கண்ணாடி போல, கோளாறையே பாக்கிறது. அவநம்பிக்கைப்படுது..."

"அது சரிதான் சீனி, இப்படி எத்தனை நாளைக்கு உக்காந்து வெளிச்சம் போடறது?"

"நான் ஆபீசுக்குப் போயி எல்லாம் தீத்துட்டு, வந்துடப் போறேன். ராஜன் எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. இங்கா ஹைதராபாதான்னு தீர்மானமாகல. நான் வொர்க்கிங் பாட்னர்..."

"நீ பாட்டில பணத்தை வாங்கிட்டு எங்கேனும் எவளோடயேனும் போய் வேட்டு விட்டுட்டு வருவே. இதுதான் வொர்க்கிங் பாட்னர்?"

"சீ... சீ! உன்னோடு பேசிப் புண்ணியமில்லை அம்மா!"

அபிராமி என்ன செய்வாள்?

பிள்ளையா காலைப் பிடித்த சனியனா?...

இவள் ஒதுங்குவதாகப் பேசாமல் போனாலும் அவன் விடவில்லை.

"மம்மி டியர்... இடிஞ்சி போயிட்டியே?... நீ பாரு, நான் சொல்றேன். ராஜன், இருக்கிறானே, அவன் சாமானியம் இல்ல. நல்ல புல் உள்ளவர். நாங்க இப்ப மார்க்கெட்ல இறக்கிற சரக்கு... ஒரு கலக்கே கலக்கப் போறது. புது விஷயம் - புது டெக்னிக்... புதுவித பப்ளிஸிடி... அது ஒவ்வொரு இடத்துக்கும் பரவுறது... ரீச் ஆறதுக்குப் புது ஐடியாஸ்... சட்டுனு அது கிளிக் ஆகுது... நான் இப்ப சொல்றது உனக்குப் புரியாது... நானும் பெரிய ஆளா ஆவேன். அப்ப பாரு..."

வேர்விடாத பாசி... அதற்கு நீர் வார்த்து வளர்த்துக் கொண்டு வருகிறாளே?

அவள் ஒரு வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளாமல் செட்டும் கட்டுமாக சேமித்து, வீடு கட்டியது, நகை செய்தது, அவனைப் படிக்க வைத்தது, எல்லாம் வெறும் அர்த்தமில்லாத கனவுதானா?

இந்த நிலையில் யாரிடம் சென்று உதவி அல்லது ஆலோசனை கேட்பாள்? தம்பி, அக்காள் எல்லோரும் அவரவர்க்கு மூன்றாம் தலைமுறை தலையெடுக்க ஒதுங்கி விட்டார்கள். இவளுக்கென்று ஆதரவாக ஆந்தரிகமாக...

அப்படி யாரிடமேனும் அண்ட வேண்டும் என்று தாபமாக இருக்கிறது.

யார் தோளிலேனும் சாய்ந்து, 'அம்மா...' என்று கூவ வேண்டும் போன்ற ஒரு பலவீனம் ஆட்கொள்ளுகிறது.

அதேசமயம் நாணமாகவும் இருக்கிறது.

இருபத்தைந்தாண்டுகளுக்கு மேல் ஆசிரியை என்ற பெருமித உணர்வோடு, ஆயிரமாயிரமாய் இளம் குழந்தைகளுக்கு அவள் தாய் போல் இருந்திருக்கிறாள். அவளுக்குப் பலவீனம் வந்ததில்லை. அவள் சாய்ந்து கொள்ள ஒரு பெருந்தூணாக அந்த உணர்வே இருந்தது...

அபிராமிக்கு இப்போது, இந்த வீடு, இந்தப் பிள்ளை, உறவு எல்லாவற்றையும் உதறி விட்டு, எங்கேனும் ஒதுக்குப் புறமாக ஒரு பள்ளியில், இளம் உள்ளங்களைப் பார்த்துக் கொண்டு வாழ்நாளைக் கழிக்க முடியாதா என்று தோன்றுகிறது.

நாட்கள் நகருகின்றன.

சீனி நன்றாகச் சாப்பிடுகிறான்; படுத்து உறங்குகிறான்; நான்கு மணிக்கு நன்றாக உடுத்திக் கொண்டு வெளியே சென்று ஆறு மணிக்கெல்லாம் திரும்பி வருவதும், நண்பர்கள் வருவதும் சிரிப்பும் கும்மாளமுமாக இரவு பதினோரு மணி வரையிலும் கழிவதுமாகப் போகிறது.

அக்கம் பக்கம் சும்மாயிருக்குமா?

"சீனிக்கு எத்தனை நாள் லீவு? உடம்பு நல்லாயிடுத்தா? இருக்கட்டும், உடம்பு நல்லாத் தேறட்டும்..." என்று கேள்விகளும், பதில்களும் எழுந்து விழுகின்றன.

அபிராமியினால் அன்று காலை எழுந்திருக்க முடியவில்லை.

எழுந்து நின்றால், நிலையில்லாமல் தலை சுற்றுகிறது.

"சீனி..., சீனி..., பால் வாங்கிட்டு வரியாடா? எந்திருந்து நிக்க முடியலப்பா?"

அவன் அருகே வந்து பார்க்கிறான்.

"என்னம்மா...?...அட... வாணாம், படுத்துக்கோ, நான் வாங்கிட்டு வரேன்?"

இளவரசனாக அல்லவா உட்கார்த்தி வைத்துப் பேணி இருக்கிறாள்?

அவனுக்கு இப்படி ஒரு 'ரோல்' அவள் கற்பித்தது கூட இல்லையே? எனவே இதைச் சொன்னதே பெரிதாக இருக்கிறது.

பால் வாங்கி வருகிறான். அவள் மெள்ள மெள்ள எழுந்து காபி போட வருமுன் தானாகவே அவளை உட்காரச் செய்து, பால் காய்ச்சுகிறான்.

"அம்மா - நீ கஷ்டப்பட வேண்டாம். படுத்துக் கொள். நான் போயி, ஒரு இட்டிலி பார்சல் வாங்கி வரேன். பிறகு உன்னை டாக்டரிடம் கூட்டிப் போறேன்..."

அபிராமிக்கு மனம் உருகிப் போகிறது.

"ஓட்டலெல்லாம் வேண்டாம் சீனி. உனக்கு உடம்பு சரியில்லாமல் தேறிய உடம்பு. எனக்கு இரண்டு எலுமிச்சம் பழம் வாங்கி வா. கரைச்சுக் குடிச்சால் தலை சுற்றல் நிற்கும். மெள்ள ஒரு சாதம் கூட்டு, ரசம் பண்ணிடறேன்..."

"நீ சொன்னால் கேட்க மாட்டியே? ஒரு நா அவசரத்துக்கு ஓட்டல்ல சாப்பிட்டா என்ன வந்திடும்...?"

"வேண்டாம். எலுமிச்சம் பழம் மட்டும் வாங்கிட்டு வா?"

எலுமிச்சம் பழம் வாங்கச் சென்றவன், ஆள் அரவமே தெரியவில்லை.

மணி ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு என்று ஓடிற்று.

அபிராமி விதியை நொந்து கொண்டு கிடந்தாள்.

இவ்வளவு பொறுப்பற்ற பிள்ளையை இனியும் நம்புவாளா?

இவனை சுஜி கண்மூடித்தனமாக மதிக்காமல் விலகுவது எத்துணை விவேகம்!

கண்களை மூடியும் மூடாமலும், எங்கோ மிதப்பது போலும் தவிப்பது போலும் உணர்வுகள் பந்தாட, அவள் கிடந்தாள்.

பெற்று எடுப்பதும் பேணுவதும், போஷிப்பதும், தேய்வதும் - தாய்மை - பெண்மை. மனித இனத்திலும் தாழ்ந்த விலங்கினங்களிலும், இன்னும் பரிணாமத்தின் கீழ்ப்படியிலும் இனப்பெருக்கம் மட்டுமே குறி. இந்தக் குறியில் இரண்டு இனங்களுமே சமமாகப் பொறுப்பு ஏற்கின்றன.

ஆனால் மனித இனத்திலோ, ஆணுக்காகப் பெண் உயிர் வாழ்கிறாள்; இயங்குகிறாள்; தேய்கிறாள். இந்த நியதி காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது. இவள் வேறுபட்டு வந்த பின்னரும், இந்த பிள்ளைக்காகத் தேய்ந்து ஓய்ந்து கிடக்கிறாள்!

இந்த அநீதியான அக்கிரமமான நியதியை உடைத்தெரியும் துணிவு, கடுமை ஏன் இன்னும் வரவில்லை?

அவன், அம்மா என்றால் இளகிப் போகிறாள்!

வெட்கம்!

ஒரு மணி சுமாருக்கு அவன் திரும்பி வருகிறான்.

வெய்யிலில் வந்ததால் தான் போலும், முகம் செவ செவ என்று தெறிக்கிறது.

"அம்மா? அக்கிரமத்தக் கேட்டியா?"

அவள் விருட்டென்று எழுந்து உட்காருகிறாள்.

"என்னடா பெரிய அக்கிரமம்? நீ எலுமிச்சம் பழம் வாங்கப் போனவனா?"

"இங்க எங்கும் நல்ல எலுமிச்சம் பழமே இல்ல. காஞ்சு கிடந்தது. மாம்பலம் ரயிலடிக்குப் போனேன். அங்கே யதேச்சையா சுஜியின் கசினைப் பார்த்தேன். அவளுக்கு ஹவுஸிங் போர்ட் லாட்ல ஃப்ளாட் விழுந்திருக்காம். எச்.ஐ.ஜி. ஃப்ளாட். என்ன அக்கிரமம் பாரம்மா? இவ ஒரு மரியாதைக்கு நம்ம கிட்டச் சொன்னாளா? இவ எல்லாப் பணத்தையும் அந்தப் பக்கம் சாச்சிட்டு, என்னையும் சுறண்டிட்டு, இன்னிக்கு எனக்கு உங்கிட்ட கெட்ட பேரும் வாங்கிக் குடுத்திட்டு எவ்வளவு அழுத்தமா உக்காந்திருக்கா, பாரும்மா? இவளுக்கு எடுத்ததும் சும்மா லாட்ல விழுமா? எனக்குத் தெரிஞ்சு எத்தனை பேர் பணம் கட்டிப் பணம் கட்டி ஒண்ணும் வராம போயிருக்கு? ஏன், உனக்குத் தெரியாம நான் கூட மூணு தரம் பணம் கட்டி வச்சேன். கே.கே. நகர்ல, பெரியார் நகர்ல ரெண்டு எடத்திலும் எம்.ஐ.ஜி. ஃப்ளாட்... இதெல்லாம் சொன்னா வெக்கம். அவளுக்கு எங்க தொடர்பு, எங்க கான்டாக்ட், எங்க பேரம்னு உனக்குத் தெரியாது. அவ புள்ளிகள்ளாம் கறுப்புப் பணம்."

"சீனி" அவள் குரல் சீறி வெடிக்கிறது.

"ஏண்டா இப்படி மானம் கெட்டுப் போற, அவளைப் பத்தி அவதூறு பேசிட்டு?"

"அம்மா, நீ பைத்தியம்! அவளுக்கெல்லாம் கல்யாணங்கறது ஒரு லைசன்ஸ் மாதிரி. பிரேம்குமார் உனக்குத் தெரிஞ்சு..."

அபிராமிக்குக் கண்களில் பொறி பறக்கிறது.

"அடேய்! மேலே எதனாலும் பேசினா உன்னைப் பல்லை உடைப்பேன்? முதல்ல உன்னைச் சீர்திருத்திக் கொள். அவள் முகத்தில் முழிக்க உனக்கு யோக்கியதை இல்லை. உன்னால் எனக்கும் இல்லாம போயிட்டது..."

அவன் ஒரு மட்டரகப் பாம்பு. வெட்டினாலும் வெட்டின துண்டுகளும் துள்ளுமாம்.

"நீ அவ பக்கமே பேசிட்டிரு. நாளக்கி அவ நோட்டீஸ் விடுவா. மாமியார் துன்பப்படுத்தினா, என்னைக் கிரசின் ஊத்தித் தாயும் பிள்ளையுமா எரிக்க முயற்சி பண்ணினான்னு வழக்கு போடுவா. பொய்ச் சாட்சி தயார் பண்ணுவா. எல்லாத்துக்கும் துணிஞ்சவ..."

அபிராமியின் செவிகளில் அந்தச் சொற்கள் விழவில்லை.

"ஆ, ஊன்னா பணம் குடு. எத்தனை பணம், எத்தனை பணம்? உடம்பு வணங்கி ஒரு நாள் வேலை செய்தாயா? மூட்டை சுமப்பவன், கை வண்டி இழுப்பவன், சாக்கடை குத்திச் சுத்தம் செய்கிறவன், எல்லாரும் ஆண்தான். ஆனால் இந்த உருப்படாத வருக்கத்தில் தான் உக்காந்து பெண்ணைச் சுறண்டுறது... உன்னைச் சொல்லிப் பலனில்லை. உன்னை ஆகாசத்திலேந்து இறங்கியதா நினைச்சி, எச்சில் தட்டுக் கூடக் கழுவி வச்சி, அரைத் துணி கசக்கிக் குடுத்து ஆடம்பரத்துக்கு உழைச்சுக் கொட்டுறனே? அதன் பலன் அநுபவிக்கிறேன்..."

அபிராமிக்கு நரம்புகள் படபடவென்று துடிக்கின்றன.

இவள் இப்போது இளகமாட்டாள் என்ற நிலையில் பேசாமல் வெளியிறங்கிச் செல்கிறாள் அவன்.

அத்தியாயம் - 10

தாலிச்சரட்டைக் கழற்றி எறிந்து, புருஷன் மனைவி பந்தத்தைத் துண்டித்தெறிவது எளிது என்று அபிராமி இப்போது நினைக்கிறாள்.

கழுத்துப் புருஷனையும் விடப் பந்தமுள்ளவன், இந்த வயிற்றுப் புருஷன். இவனை இரத்தத்தோடு சதையோடு ஊட்டி வளர்த்துத் தன்னுள் ஒரு பகுதியாக வைத்திருந்து பிய்த்து எறிவது போல் வேறாக்க இடம் கொடுக்கிறாள். அவன் முகம் வாடும் போது இங்கே உணர்வுகள் துடிக்கின்றன. அவன் சந்தோஷம் தான் தன் மலர்ச்சி என்று குருட்டுத்தனமான கோட்டில் அவள் உணர்வுகள் பழக்கப் பட்டிருக்கின்றன. எட்டரை மணிக்குப் பள்ளிக்குப் போவதற்கு முன் வயிற்றில் சூடாகப் போட்டுப் பழக்கப்படுத்தி விட்டால், எட்டரைமணிக்கு அமிலத்தைச் சுரப்பித்துப் பசியுணர்வை மிஞ்சிவிடும் பழக்கத்தைப் போல் இந்த உணர்வுகளுக்கும் அறிவார்ந்த தெளிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் போகின்றன.

இது மூடத்தனம், முட்டாள்தனம், தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் குருட்டுத்தனம். அவனைக் காணும் போது, கோடு கிழித்த வெட்டாக, துண்டித்து எறிய வேண்டும். தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு வேறு...

மனசை ஒரு திட நிலையில் நிறுத்திக்கொண்டு, இனி என்ன செய்யலாம் என்று யோசனை செய்கிறாள்.

"நீ வேலை செய்யப்போ, மூட்டை சும, அல்லது கூலி வேலை செய், சம்பாதித்து வா, இல்லையேல் ஒரு காசு இல்லை..."

இந்தக் கண்டிப்புச் சொற்களை மனசுக்குள் பேசி ஒத்திகை பார்த்துக் கொள்கிறாள். அன்றிரவு அவன் எட்டரை மணிக்கே திரும்பி விடுகிறான். என்றாலும் அபிராமி அவனுடம் மலர்முகத்துடனோ, சுளிப்புடனோ கூடப் பேசவில்லை; சோறு போடவில்லை. தான் முதலில் சாப்பாடு பண்ணிவிட்டு வந்து முன்னறையில், தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்.

"அம்மா...? அம்மா?... சாதம் போடம்மா, பசிக்கிறது...?" அவளிடமிருந்து எதிரொலியே எழும்பவில்லை.

"ஐ...ம் ஸாரி! மா! நடந்ததுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்கிறேன் மா...மா...?"

அவளைத் தொட்டு, நைச்சியம் பேச வருபவனிடம் இருந்து நகர்ந்து போகிறாள்.

"ஏம்மா, இவ்வளவு கோபம்...? அம்...மா? என்னம்மா நீ...!"

"எங்கிட்ட வராதே. சோறு வேணுன்னா வச்சிருக்கிறேன். போட்டுத்தின்னு!" வெறுப்புடன் சொற்களை உமிழ்ந்து விட்டுப் படுக்கையைப் போட்டுக் கொண்டு படுக்கிறாள்.

"நாளையிலிருந்து, நீ கூலி வேலை செய்தோ, மூட்டை சுமந்தோ, நாணயமா நாலு காசு சம்பாதித்து வராம உனக்கு இந்த வீட்டில் சோறு கிடையாது!" என்று படுத்த நிலையிலேயே அவனுக்குத் தீர்ப்பு விடுக்கிறாள். அவனும் கோபத்துடன் படுக்கையைப் போட்டுக் கொள்கிறான்.

கழுதை... வாசற் கதவைப் பூட்ட வேண்டும் என்ற பொறுப்புக் கூட இல்லை!...

மீண்டும் அவள் எழுந்துதான் சமையலறையைக் கூடச் சுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது.

ஜனவரி முதல் தேதியும் ஓடிவிடுகிறது.

அபிராமி அடுத்த நாள் பென்ஷன் வாங்கினால் தான் கையில் செலவுக்குப் பணம் என்ற நிலையில் நிற்கிறாள்.

காலையில் எழுந்திருக்கும் போது, முதுகுவலியும், தலை சுற்றலும் எழுந்திருக்க முடியாது என்று தடுக்கிறது.

படுக்கையில் இருந்து எழுந்து குளியலறைப் பக்கம் சென்று வருவதற்கும் பிரயாசமாக இருக்கிறது.

"அம்மா...! என்னம்மா இது...! நீ ரொம்ப உடம்ப வருத்திக்கறேம்மா. படுத்துக்கோ, நீ எழுந்திருக்க வேண்டாம்..."

அவனே பால் வாங்கி வந்து காபி போடுகிறான்.

தனபாக்கியத்திடம் போய்ச் சொல்லி விட்டான் போலிருக்கிறது.

"என்னங்க டீச்சர்? படுத்திட்டீங்களே?... உங்களுக்கு ரெஸ்டே இல்லாம போச்சு. என்ன மருமக...? ஒரு ஆபத்து சம்பத்துக்கு உதவாம! நீங்க ஆசுபத்திரிக்கு ஓடி ஓடி, வீட்டிலும் அத்துவானப் பட்டுட்டு இருந்தப்ப கூட எட்டிப் பாக்காம. ஆயிரந்தா மனஸ்தாபம் இருந்தாலும், புருஷன் பொஞ்சாதிக்குள்ள, ஒரு சமயம் போதுன்னு விட்டுக் குடுக்கலாமா? நேத்து ஒண்ணாந்தேதி, லீவுதா, வந்து பாக்கக்கூடாதா? நாங்க சொல்லிட்டே இருக்கிறம்..."

அபிராமிக்குக் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதை நினைவுக்கு வருகிறது. "எனக்கு ஒண்ணில்ல தனம்மா, சீனி சும்மா எதையோ சொல்லிட்டிருக்கிறான்."

"பாருங்கம்மா, எங்கம்மாக்கு மருமகள யாரும் எதுவும் சொன்னாப் பொறுக்காது. இது உலகத்தில் இல்லாத அதிசயம்" என்று அவன் பாடுகிறான்.

"ஆமா, அதிசயம்தான் தனம்மா, உங்களுக்குத் தெரியாது. மருமக உசத்திதான். நம்ம பெத்தபுள்ள, அம்மான்னு இரக்கம் காட்ட மாட்டேங்குறான். இவனுக்கு எல்லா வேலையும் செஞ்சு உடம்பைத் தேச்சிட்டு, அவளை வந்து லீவு போட்டுட்டு வேலை செய்யின்னு சொல்றது நியாயமா? புள்ள செய்யட்டுமே? இவனுக்கு கடமை இல்லையா?"

"என்ன டீச்சர், நீங்க புது நியாயம் பேசுறீங்க? ஆம்புள, செல்லமா வளர்ந்த பிறகு அடுப்படி வேலை செய்யத் தெரியுமா? அட உங்களுக்கு ஒரு வாய்க்கு வேணுங்கற ரசமோ, குழம்போ செஞ்சு போடணும்னா அது பொம்பிளயால தான முடியும்?... நீங்க படுத்திருங்க... நா ஒரு சீரகரசம் பத்தியமா வச்சுத் தாரேன். சாப்பிடுவீங்கல்ல?"

"உங்களுக்கென்னத்துக்கம்மா சிரமம்?"

"செரமம் ஒண்ணுமில்ல. பேசாம மருமகளக் கூட்டிட்டு வரச் சொல்லுங்க, பத்து நா லீவு போட்டுட்டு!" என்று சொல்லி விட்டுப் போகிறாள்.

அவள் சென்ற பிறகு அபிராமி அவனை இடிக்கிறாள்.

"உன்னை யாருடா அவகிட்ட இவகிட்டல்லாம் டாம்டாம் போடச் சொன்னது?"

"அம்மா, நீ வரவர சிடுசிடுன்னு விழற... எனக்கு இது பத்தாத காலம்..." எதிரே உட்கார்ந்து கண்களை கசக்குகிறான்.

"என்னைப் பெற்ற அன்னிக்கே நீ இப்படித் தூக்கி எறிஞ்சிருந்தா, நல்லாயிருந்திருக்கும். நானும் சேரிக்குழந்தைகளோடு வளர்ந்து ஒரு மூட்டை சுவப்பவனாகவோ, ரிக்‌ஷா இழுப்பவனாகவோ வளர்ந்திருப்பேன். நீதான் நான் ராஜகுமாரன்னு நிமிஷத்துக்கு நிமிஷம் கற்பிச்சிட்டிருந்தே. கோபுரத்தில தூக்கி வச்சிட்டு, இப்பக் காலால தள்ளிவிடாதே" மூசுமூசென்று அழுகிறான்.

"சீ! எதுக்குடா இப்ப அழுகை? இந்தக் காலத்தில் பொண்ணுகள் கூடக் கண்ணீர் காட்டுறதில்ல. எங்கள் முன்ன உக்காந்து அழுது தொலைக்காத போயிடு!"

"நீ இப்படி உதச்சா எங்கம்மா போவேன்...!"

அவள் காலைக் கெட்டியாகப் பற்றிக் கொள்கிறான்.

"போதும்டா, போதும். காலை விடு! யோக்கியனாக இருந்து காட்டு. காலைப் புடிச்சிட்டு அழுவானேன்? போய் எங்கேனும் வேலை தேடிட்டு வா!..."

"அம்மா, நானே வேலைய விட்டுட்டேன்னா நினைக்கிறீங்க?... எனக்கு உடம்பு சரியில்லாம விழுந்ததும், அந்த செக்‌ஷனையே குளோஸ் பண்ணிட்டாங்க. என்னமோ உங்க சொந்தக்காரங்கன்னு, சிபாரிசுல வேலை கிடைச்சதுன்னு நினைச்சிட்டிருப்பே... ரொம்ப மோசம்மா. முதலாளிங்க பழம் பெருச்சாளிகளாச் சில பேர் உட்காந்திட்டு, சுரண்டறான். நான் இதை எடுத்துக் காட்ட, தட்டிக் கேட்டதும் எம்பேரில இல்லாத பொல்லாத பழியெல்லாம் சொல்லி அவங்க தப்பிச்சிட்டிருக்காங்க..."

"எனக்கு ரொம்ப மோசமான காலம்... அம்மா... அம்மா, நீ ஒருத்தி என் பக்கம் இருக்கிறன்னு தெம்பு இருந்தது... அதுவும் இல்லேங்கற..."

எங்கோ நுண்ணிய இழைகளைத் தேடிச் சென்று அசைக்கும் வல்லமை, இவனுடைய குரலுக்கு இருக்கிறது.

"சரிதாண்டா, போயி, ஒரு ஆட்டோ கொண்டு வா. நான் பென்ஷன் வாங்கிட்டு வந்து தான் யாரேனும் டாக்டரைப் பார்க்கணும்..."

அவன் உடனே சென்று வண்டி அழைத்து வருகிறான்.

அவனும் அவளுடன் ஆதரவாகச் செல்கிறான்.

வங்கியில் சிறிது நேரம் ஆகிறது.

அறிந்தவர், தெரிந்தவர்...

"ஏன் டீச்சர்? உடம்பு சரியில்லையா? ரொம்பவும் இளைத்து உருமாறிப் போயிட்டீங்க?" என்று சண்பகம் விசாரிக்கிறாள். இன்னும் பலரும் விசாரிக்கின்றனர்.

முன்னூற்று எண்பத்து சொச்சம் - பென்ஷன்...

முன்னூற்றைம்பது வங்கியில் இருந்து பெற்றுக் கொள்கிறாள்.

"அம்மா, டாக்டரிடம் போய்விட்டு வீட்டுக்குப் போகலாம்..."

அவள் பணத்தை எண்ணிக் கைப்பையில் போட்டுக் கொள்ளும் போது அருகில் நின்று அவளைப் பார்க்கிறான்.

"போகலாம்..."

பலவீனமான அவளைக் கையைப் பற்றிக் கொண்டு வந்து ஆட்டோவில் உட்காரச் செய்கிறான்.

டாக்டர் தாட்சாயணியின் கிளினிக் அவர்கள் வீட்டிலிருந்து நடக்கும் தூரம் தான்! டாக்டர் வீட்டில் வண்டியை விட்டு இறங்கியதும் அவனே கைப்பையை அம்மாவிடம் இருந்து எடுத்து, மீட்டர் கூலி எட்டு ரூபாயைக் கொடுக்கிறான்.

பன்னிரண்டடிக்கும் நேரம். வெளியே கடையில் இருந்து அம்மாவுக்கு ஒரு ஆரஞ்சு ரசம் வாங்கி வந்து கொடுத்து ஆசுவாசப் படுத்துகிறான்.

எங்கும் அறிந்த தெரிந்த முகங்கள், விசாரணைகள்...

சுகுணா புருஷோத்தமன் ஊசி போட்டுக் கொள்ள வந்திருக்கிறாள்.

"ரொம்ப லொடுக்குனு போயிட்டீங்க டீச்சர்... என்னப்பா சீனி? உன்னைக் காணுறதே இல்லே?..."

"எங்க மாமி, பொழுதுக்கும் பாட்டுக்கும் சரியாப் போகுது... உங்களை அன்னிக்கு டி.வி.ல பாத்தேன்... எங்கியோ, சேவை இல்லத்துக்குக் கவர்னர் வரச்ச, நீங்க நின்னீங்க..."

அவள் முகம் மலருகிறது.

"ஓ... அதுவா?..."

தக்காருக்குத் தக்கபடி பேசி, வேஷம் போடுகிறான்.

அபிராமி எதிலும் நிலை கொள்ளாமல் காத்துக் கிடக்கிறாள்.

அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்த சிறுபெண் தாட்சாயணி, ஒரு காலத்தில் இவள் மாணவியாக இருந்தவள். குட்டையாகச் சிவப்பாக... பரபரப்பாக இருக்கும் தாட்சாயணி, இன்று ஒரு தேவதைக்குரிய மாட்சிமையுடன் இந்தச் சிறு மரத்தடுப்பு அறையில் உட்கார்ந்திருக்கிறாள். இள நீல ஜார்ஜட் சேலை, மெல்லிய தங்கச் சங்கிலி டாலர் முகப்பு... சிறு நட்சத்திர நீலப் பொட்டு...

சீனி அவளைப் பார்த்து முகமன் கூற, அவள் புன்னகையுடன் குளிர்ச்சியாகப் பார்க்கிறாள்.

"என்ன டீச்சர், நீங்க ப்ரிஸ்காகவே இருப்பீங்க?..."

"கேளுங்க. சொன்னாலே கேக்கறதில்ல டாக்டர். எப்பவும் எல்லா வேலையும் தானே செய்யணும், ஒரு சர்வென்ட் மெய்ட் கூட வச்சுக்கிறதில்ல."

"அதெல்லாம் இல்லம்மா, அநாவசியமா எதுக்கு...? நம்ம வேலை நாம் செஞ்சிக்கறோம். ரிடயர் ஆயாச்சு. தெரியுமில்ல?"

"ரிடயர் ஆயாச்சு, மருமகளும் வந்தாச்சி..."

மீண்டும் புன்னகை.

"தலை சுத்துது, நடக்கறப்ப ஸ்டெடியா இல்ல..."

"இப்படி சவுரியமா உட்காருங்க..." அருகில் சிறு முக்காலியில உட்காரச் சொல்லி, இரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய முனைகிறாள்.

காதுகளில் குழாயை மாட்டிக் கொண்டு பரிசோதனை செய்கிறாள்.

சில நிமிடங்களாகின்றன. எடுத்து வைக்கிறாள்.

பிறகு கண் இமைகளை நீக்கிப் பார்க்கிறாள்.

"என்ன டாக்டர்...!"

"...கொஞ்சம்...பிரஷர் இருக்கு. எதற்கும் பிளட், யூரின் டெஸ்ட் பார்த்துட்டு, நாளை ரிஸல்ட் எடுத்திட்டு வாங்க. இப்ப மாத்திரை எழுதித் தரேன். சாப்பாட்டுக்கு பிறகு ஒன்று, ஒன்று... ராத்திரி நல்லாத் தூங்குவீங்க..."

சீட்டில் மாத்திரைகள் எழுதிக் கொடுக்கிறாள். பரிசோதனைக்கு வேண்டிய சீட்டு...

"இங்க... சந்திரா லாப்ல குடுத்துப் பார்த்துக்குங்க..." என்ற பரிந்துரை.

"ஹௌமச்... டாக்டர்?"

"டென்..."

சீனி இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து வைக்கிறான்.

"தாங்யூ!"

ஒரு கீற்றுப் புன்னகை. தலையசைப்பு. மணியடிப்பு.

அபிராமிக்கு வெளியே வருகையில் குப்பென்று வேர்க்கிறது.

'டீச்சர்... டீச்சர்' என்று பரபரக்கும் அந்தத் தாட்சாயணியில்லை. டாக்டர் தாட்சாயணி, எம்.டி... என்ற பலகை இரண்டு மூன்று இடங்களில். முன்பு எம்.பி.பி.எஸ். என்று இருந்தது. ஐந்து ரூபாயிலிருந்து பத்தாக ஏற, எம்.டி. என்ற எழுத்துக்கள் வந்து விட்டன.

அந்த நாட்களில் டீச்சர் டீச்சர் என்று தன்னையே அவர்கள் சார்ந்திருந்தது போன்ற பலம் அவளுக்கு இருந்தது. இன்று... இவள் வெறும் நோயாளி. இளம் டாக்டருக்குப் ‘பிராக்டிஸை' ஊர்ச்சிதப் படுத்திப் பெயரும் புகழும் சேர்க்கக் குழுமும் நோயாளிக் கும்பலில் இவளும் ஒருத்தி.

"ஓ... உங்ககிட்ட... நான் ஒண்ணும் வாங்க மாட்டேன்... நோ... நோ... டீச்சர்?" என்று மறுப்பதை அபிராமி எதிர்பார்த்திருந்தாள். தாட்சாயணி எம்.டி... தொழில் என்று வந்த பின், அந்த மரியாதை, பாசத் தொடர்புகளுக்கும் மென்மைகளுக்கும் ஏது இடம்?... எம்.டி. டாக்டர் இப்படி ஆள் எண்ணிப் பணம் பண்ணிச் சேர்த்து எவனேனும் ஆண் பிள்ளைக்குக் கொட்டிக் கொடுத்து...

இவர்கள் சாதியில் டாக்டருக்கு லட்சம் ரூபாய் தட்சணை. அதற்குத் தான் இந்த இடத்திலும் வேறு இடத்திலும் தொழில் பண்ணுகிறாளோ? தாட்சாயணியைத் தொழில் முறை இல்லாமல் தனியாகப் பார்த்து, ‘ஏமாறாதே பெண்ணே' என்று சொல்ல வேண்டும்...

"என்னம்மா? இப்படியே லாப்ல நீர், இரத்த பரிசோதனைக்குக் கொடுத்து விட்டு வரலாம்...!"

"கிடக்குடா, இப்ப ஒண்ணும் வாணாம்! என்னமோ முழுநீளம் எழுதிக் குடுத்துட்டா டெஸ்ட் டெஸ்ட்னு!" யார் மீதென்று சொல்லத் தெரியாத எரிச்சல்...

"நீ உன் உடம்பையே பாழடிச்சிக்கற!"

"ஆமாம். அதில் உனக்கும் பங்கு உண்டு!..."

தனபாக்கியம் சொன்னபடி ரசம் கொண்டு வந்து தருகிறாள்.

குக்கரில் சோறு வைத்திருக்கிறாள். சீனியும் அந்த ரசம் சோற்றைத் தான் சாப்பிடுகிறான்.

அபிராமிக்கு உண்டதும், அந்த மாத்திரையின் வேகத்தில் உறக்கம் வந்து விடுகிறது.

கண்களை விழிக்கையில் மணி நாலரையாகியிருக்கிறது.

திடுக்கென்று எழுந்திருக்கிறாள். "ஓ, பால் வந்து போயிருக்குமே?..."

சீனி?...சீனி...?...

சீனி இல்லை. வாசற் கதவை வெறுமே சாத்திவிட்டுப் போயிருக்கிறான்.

அவனுடைய செருப்பு இல்லை.

சரேலென்று நினைவு வந்தவளாகத் தன் கைப்பையை எடுக்கிறாள். பணத்தை இப்போதெல்லாம் இரும்பலமாரியில் வைத்துப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொள்கிறாள். வெளியே புழங்க, அதிகமாகப் பணம் இல்லை. என்றாலும் மகனை நம்புவதில்லை. வந்ததும் வராததுமாகக் கைப்பையை அறையில், திறந்த அலமாரியில் வைத்திருக்கிறாள்...

அது அங்கேயே கிடக்கிறது.

எடுத்து உள் அறையைப் பார்க்கிறாள். வெறும் பத்து ரூபாயும், இரண்டு ரூபாயும் மட்டுமே இருக்கின்றன. மூன்று நூறு ரூபாய் நோட்டுக்கள்... அவள் உழைத்த பின் ஓய்வு காலத்துக்குப் பெறும் ஊதியம்...

"எங்கே?"

ஒருகால் முன்பே உள் அலமாரியில் வைத்து விட்டாளா?

ஐம்பது - ஏற்கெனவே ஏழெட்டு ரூபாய் சில்லறை இருந்தது... டாக்டருக்குப் பத்து ரூபாய், ஆட்டோ எட்டு ரூபாய் - லெமனேடோ ஏதோ வாங்கித் தந்தான். கணக்குப் போட்டுக் கொண்டு இரும்பு அலமாரியைத் திறந்து பார்க்கிறாள். அவள் அலமாரியைத் திறந்து பணத்தை எடுத்து வைத்திருக்கவில்லை. உச்சி மண்டையிலிருந்து இரத்தம் சுண்டி விட்டாற் போல் சுள்சுள்ளென்று ஊசிக்குத்துகளாக வேதனை...

"படுபாவி, நீ மகனா? மகனாடா? இப்படித் தாயை சுறண்டித் தின்ன... உனக்காடா பால் கொடுத்தேன்?"

மடேர் மடேரென்று அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது. அபிராமி... மூடப்பாசமுள்ள தாயான அபிராமி. அவளுடைய படிப்பு, தொழில், அதில் அவள் கண்ட வெற்றிகள் எல்லாமே இந்த மூடப்பாசப் பாசிக் குளத்தில் முழுகிப் போயின... அபிராமி...! நீ... உனக்கு உய்வு இல்லை. நீ மரித்துப் போ... போய்விடு...!