சம்பந்தம் பிள்ளை, ஹைஸ்கூலிலும் காலேஜிலும் மாணாக்கராயிருந்தபோது அவருக்கும் மற்ற மாணாக்கர்களுக்கும் வித்தியாசம் ஏதேனுமிருப்பதாக எவருக்கும் தோன்றவில்லை. பின்னர், அவர் கிண்டி என்ஜினியரிங் கலாச்சாலையில் பயிற்சி பெற்ற காலத்திலும் முதல் இரண்டு, மூன்று வருஷங்கள் சாதாரணமாய் மற்ற மாணாக்கர்களைப் போலவே வாழ்க்கை நடத்திவந்தார். பாடம் படித்தல், பரீட்சையில் தேறுதல், உத்தியோகம் பார்த்தல், பணந்தேடுதல் - இவையே அவர் வாழ்க்கை இலட்சியங்கள். சீட்டாட்டம், சினிமா, சிகரெட், சிறுகதை, சில் விஷமம்-இவைதாம் அவர் சந்தோஷானுபவங்கள். ஆனால், என்ஜினியரிங் கலாசாலையில் அவர் படித்த கடைசி வருஷத்தில் அவரிடம் சிற்சில மாறுதல்களை அவருடைய தோழர்கள் கண்டார்கள். காந்தி, டால்ஸ்டாய், ரஸ்கின் முதலியோருடைய புத்தகங்களை அவர் அதிகமாகப் படிக்க ஆரம்பித்தார். அக்கலாசாலைக் கோட்டைக்குள் முதல் முதல் தைரியமாகக் கதர்க்கொடியை நாட்டியவர் அவர்தான். சீட்டாட்டம் முதலியவற்றில் அவருக்குச் சுவைகுறையத் தொடங்கிற்று. அடிக்கடி தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்துவிடும் பழக்கத்தைக் கைக்கொண்டார்.
பரீட்சை முடிந்ததும் சம்பந்தம் பிள்ளை தமது மாமாவும், மாமனாருமான அம்பலவாணம் பிள்ளையிடம் யோசனை கேட்கச் சென்றார். ஸ்ரீமான் அம்பலவாணம் பிள்ளை மயிலாப்பூரில் மத்தியதரமான வருவாயுள்ள வக்கீல்களில் ஒருவர். அவரிடம் சம்பந்தம் கூறியதாவது:- "மாமா! உத்தியோக வாழ்க்கை என் இயல்புக்கு ஒத்து வராதென்று தோன்றுகிறது. டால்ஸ்டாய் முதலியவர்களின் நூல்களைப் படித்ததினால் எனக்குச் சில வாழ்க்கை இலட்சியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பகவானருளால் எனக்குக் கொஞ்சம் பூமி காணி இருக்கிறது. ஆதலின் என் சொந்த கிராமத்துக்கே சென்று நிலத்தைப் புதிய சாஸ்திரீய முறையில் சாகுபடி செய்து அமைதியான வாழ்க்கை நடத்தலாமென்று எண்ணுகிறேன். எனக்கிருக்கும் என்ஜினியரிங் அறிவைக் கொண்டு மற்றக் கிராமவாசிகளுக்கும் பல வழிகளில் நன்மை செய்வதற்குச் சில திட்டங்கள் போட்டிருக்கிறேன். இதைப்பற்றித் தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?"
அம்பலவாணர் புன்னகை புரிந்தார். "இதென்ன பைத்தியம்" என்றார். அவர் மருமகனுக்குச் சிறிது கோபம் வந்துவிட்டது. ஆனால், வக்கீல் மகா புத்திசாலி; அத்துடன் உலகானுபவம் நிரம்ப உள்ளவர். இல்லாவிடில் மயிலாப்பூரிலிருந்து வக்கீல் தொழிலில் பேர் சொல்ல முடியுமா? வெறுமே பரிகாசம் பண்ணினால் மருமகனுக்குப் பிடிவாதமே அதிகமாகுமென்று அவருக்குத் தெரியும். ஆதலின், "கோபித்துக் கொள்ளாதே தம்பி! என்னைப் போன்ற கர்நாடகப் பேர்வழிகளுக்கு இதெல்லாம் பைத்தியக்காரக் கொள்கைகளாகத் தோன்றுகின்றன" என்று சொல்லிப் பின்னர் பின்வருமாறு ஹிதோபதேசம் செய்தார்.
"நீ புத்திசாலி, சிறிது சிந்தித்துப் பார்ப்பாயானால், இதெல்லாம் நடவாத காரியம் என்று, நீயே சொல்வாய். டால்ஸ்டாய் நூற்றுக்கணக்காகப் புத்தகங்கள் எழுதினாரே! அவருடைய கொள்கைகளை அவரே அனுஷ்டிக்க முடியவில்லையென்பது உனக்குத் தெரியாதா? காந்தியுங்கூட அல்லவா தமது இலட்சியங்கள் எல்லாவற்றையும் வாழ்க்கையில் நிறைவேற்றக்கூடவில்லையென்று சொல்கிறார். அவர்களாலெல்லாம் முடியாதது உன்னால் முடியுமென்று நினைக்கிறாயா?"
"மேலும், அவசரம் என்ன? இப்போதுதான் நீ வாழ்க்கை தொடங்கப் போகிறாய். புதிய துறையில் இறங்கிக் கொஞ்ச காலத்திற்கெல்லாம் அதிருப்தி கொள்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். அதற்குள் 25 வயது கடந்துவிட்டால் அப்புறம் உத்தியோகம் 'வா' என்றால் வருமா? உத்தியோக வாழ்க்கையில் அதிருப்தி கொண்டால் அப்புறம் நீ உன் புதிய கொள்கைகளை நடத்திப் பார்ப்பதற்கு எதுவும் குறுக்கே நில்லாது."
"இருக்கட்டும், உன்னுடைய குடும்ப நிலைமை என்ன? வீட்டிலே உட்கார்ந்து சாப்பிட்டால் உன்னுடைய இரண்டு வேலி நிலம் எத்தனை நாளைக்குக் காணும் என நினைக்கிறாய்? பத்து வேலி, இருபது வேலி மிராசுதாரர்கள் எத்தனையோ பேர் ஆண்டியாய்ப் போகிறார்களென்பது எனக்குத் தெரியும். வேறு வருவாய்க்கு வழியில்லாத மிராசுதாரர் இக்காலத்தில் உருப்படவே முடியாது. இந்தக் காலத்தில் விவசாயம் செய்து முன்னுக்கு வந்தவன் உண்டா? உன் தம்பிமார்கள் இருவரையும் படிக்க வைத்தாகவேண்டும். தங்கைக்கும் கலியாணம் செய்து கொடுக்கவேண்டும். உனக்கும் இனிமேல் இரண்டு குஞ்சு குழந்தைகள் உண்டாகிவிடும். இவர்களுடைய கதியெல்லாம் என்ன?"
"இத்தனை காலம் ஏதோ அவ்வப்போது உனக்குப் பண உதவி செய்து வந்தேன். எனக்கும் இப்போது கை சளைத்துவிட்டது. வக்கீல் தொழிலில் போட்டி சொல்ல முடியாது. 300 ரூபா ஆடம்பரத்தில் செலவழித்தால்தான் 500 ரூபா வருமானம் வருகிறது. மயிலாப்பூரில் எத்தனையோ பெரிய பெரிய வக்கீல்கள் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் வாதிகளாகட்டும், மிதவாதிகளாகட்டும், ஜஸ்டிஸ் வாதிகளாகட்டும், எந்த வாதிகளாகட்டும் தங்கள் பிள்ளைகளுக்கும், பேரன்களுக்கும், மருமகன்களுக்கும், மாப்பிள்ளைகளுக்கும், மற்ற இஷ்டமித்ரபந்துக்களுக்கும் அரசாங்க உத்தியோகம் தேடிக் கொடாதவர்கள் உண்டா? அரசாங்க உத்தியோகத்துக்குச் சமானம் வேறெதுவுமில்லை. நாற்பது ரூபா சம்பளத்துக்குப் போனாலும் பிறகு வருஷம் ஆறு ஆறு ரூபாய் நிச்சயமாய் ஏறிக்கொண்டு போகிறது. சாகும்வரையில் பென்ஷன். அதிர்ஷ்டமும் சிபாரிசும் இருந்து நல்ல உத்தியோகம் கிடைத்துவிட்டாலோ சொல்ல வேண்டியதில்லை. உதாரணமாக, அக்கவுண்டண்ட் ஜெனரல் ஆபீஸில் உத்தியோகம் கிடைக்கிறதென்று வைத்துக்கொள். செட்டிமார் கடையில் கணக்கெழுதும் குமாஸ்தாக்களுக்குக் கொஞ்சம் பயிற்சியளித்துவிட்டால் அந்த வேலையைச் செய்து விடுவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் அவ்வேலைக்கு ஆரம்பத்தில் ரூ.300 சம்பளம். பின்னர் வருஷந்தோறும் 50, 50 ரூபா உயர்வு 1500 வரையிலும், அதிர்ஷ்டமிருந்தால் அதற்கு மேலும் போகலாம்.
"ஆனால், எல்லா உத்தியோகங்களும் உத்தியோகமாகா. மேல் வருமானம் உள்ள உத்தியோகந்தான் உத்தியோகம். சம்பளம் உயர உயர, வாழ்க்கை அந்தஸ்தும் உயர்ந்து கொண்டே போவதால் மாதச் சம்பளம் எவ்வளவு வந்தாலும் செலவழிந்து போகும். மேல் வருமானமிருந்தால் தான் மீதி செய்ய முடியும். இக்காலத்தில் பொதுவாக எல்லா உத்தியோகங்களிலுமே மேல்வருவாய்க்கு இடமிருக்கிறதாயினும், முக்கியமாகச் சில இலாக்காக்கள் இருக்கின்றன. உன்னுடைய இலாக்கா அவற்றில் ஒன்று. புத்திசாலித்தனமாயும் சாமர்த்தியமாயும் நடந்துகொண்டால் கொஞ்ச நாளில் குடும்பக் கவலையே இல்லாமல் பண்ணிவிட்டு அப்புறம் நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..."
இத்தனை நேரம் பொறுமையாகவும் மரியாதையுடனும் கேட்டுக் கொண்டிருந்த சம்பந்தப்பிள்ளைக்கு இப்போது பொறுக்க முடியாமலே போய் விட்டது. அவர் இடைமறித்துச் சொன்னதாவது:-
"ஒருகால் நான் உத்தியோகத்துக்கே போனாலும் நீங்கள் சொல்லும் வழிக்குப் போகவே மாட்டேன். மகா பாவமான காரியத்தை நீங்கள் சொல்கிறீர்கள். உத்தியோகம் பார்ப்பது போதாதென்று லஞ்சம் வாங்கியும் பிழைக்கவேண்டுமா?"
வக்கீல் பிள்ளையின் மனம் மகிழ்ந்தது. தன் ஹிதோபதேசம், முக்கால்வாசி பலிதமாகி விட்டதென்றும், பையனுக்குப் பைத்தியம் நீங்கிற்று என்றும் கருதினார்.
"நல்லது தம்பி, வாழ்க்கை தொடங்கும் போது எல்லாரும் இத்தகைய நல்ல தீர்மானங்களுடனேதான் தொடங்குகிறார்கள். ஆனால், வாழ்க்கையில் அநுபவம் ஏற்பட ஏற்பட அத்தீர்மானங்கள் எல்லாம் பறந்துபோகின்றன. ஏதேனும் சாக்குப் போக்கினால் அவர்கள் ஆன்ம திருப்தி செய்து கொள்கிறார்கள். உதாரணமாக, என்னுடைய கலாசாலைத் தோழர் ஒருவர் தற்போது டெபுடி கலெக்டராயிருக்கிறார். அவர் நெறி தவறாதவரென்று பிரசித்தி பெற்றவர். ஆயினும், அவர் 'வள்ளல்' எனக்குத் தெரியும்; கிராமக் கணக்குப்பிள்ளை, மணியக்காரர்களுக்கும் தெரியும். ஒரு கிராமத்தில் போய் அவர் மூன்று நாள் முகாம் போட்டாரானால், முகாம் முடிந்ததும் மணியக்காரரைச் செலவுப் பட்டியல் கேட்கிறார். மணியக்காரர் 31/2 ரூபாய்க்குப் பட்டியல் போட்டுக் கொடுக்கிறார். டெபுடி கலெக்டர் 3 நாளில் முட்டை மட்டும் 31/2 ரூபாய்க்குத் தின்றிருக்கிறார். ஆயினும் அவர் பட்டியல்படி 31/2 ரூபாயை எண்ணிக் கொடுத்து விட்டு ரசீது வாங்கிக்கொண்டு தம் மனச் சான்றைத் திருப்தி செய்துகொள்கிறார். ஆரஞ்சுப் பழம் பட்டணத்தில் டஜன் 11/2 ரூபாய். அது அங்கிருந்து டெபுடி கலெக்டருக்கென்று கிராமத்துக்கு வாங்கிக் கொண்டு போகப்படுகிறது. அவருக்கு அளிக்கப்படும் பட்டியலில் அதன் விலை டஜன் 4 அணா ஆகிவிடுகிறது."
"ஆயிரக்கணக்கான தொகைகள் சம்பந்தமான அரசாங்கக் கணக்குகளைப் பரிசீலனை செய்து தப்புக் கண்டுபிடிக்கும் டெபுடி கலெக்டருக்குத் தமது பட்டியலில் காணப்படும் இச்சிறு தவறு புலனாவதேயில்லை? தம்பி! அவரும் உன்னைப்போல் எவ்வளவோ நல்ல தீர்மானங்கள் எல்லாம் செய்து கொண்டவர்தான். இவ்வுலகம் அப்படிப்பட்டது" என்றார் வக்கீல்.
"மாமா, தங்கள் புத்திமதிக்காக வந்தனம். என்ன செய்வதென்று நான் தீர்மானித்துவிட்டேன். என்னுடைய உயரிய வாழ்க்கை லட்சியங்களையெல்லாம் இப்போதைக்கு ஒரு மூலையில் கட்டி வைக்க வேண்டியதுதான். ஆனால், இது என்னுடைய சுயநலத்தை முன்னிட்டோ என் இலட்சியங்களில் எனக்கு நம்பிக்கைக் குறைவினாலோ அன்று. என் தம்பிமார்களையும், தங்கையையும் உத்தேசித்தே இம்முடிவுக்கு வந்தேன். எனக்காகிறது அவர்களுக்குமாகட்டும் என்னும் தைரியம் எனக்கு வரவில்லை. ஆனால், ஒன்று கூறுகிறேன், தாங்கள் சற்றுமுன் கூறியது போல் பணம் சேர்ப்பதற்கு நான் குறுக்கு வழி கடைப்பிடிக்கப் போவது மட்டும் இல்லவே இல்லை, அதை உங்களுக்குச் சத்தியமாகச் சொல்கிறேன். யோக்கியன் எங்கும், எந்த நிலைமையிலும் யோக்கியனாயிருக்க முடியுமென உங்களுக்கு நிரூபித்துக் காட்டுகிறேன்" என்றார் சம்பந்தம் பிள்ளை.
காரிய சித்தியினால் மகிழ்ச்சியடைந்த அம்பலவாணம் பிள்ளை சொல்கிறார்:- "நான் விரும்புவதும் அதுதான், சம்பந்தம். நான் கூறியதைத் தப்பர்த்தம் செய்துகொள்ளாதே. நான் உலகத்துக்குச் சொன்னேனேயொழிய உனக்குச் சொல்லவில்லை. எப்போதும் கண்யமாயிருந்தால் அபாயம் இல்லை. அயோக்கியன் தான் பயப்பட வேண்டும். நாளடைவில் கண்யமே லாபம் தரும். நீ உத்தியோகத்தில் நெறி தவறாதவனாய் நின்று, மேன்மேலும் முன்னுக்கு வர வேண்டுமென்பது தான் என் பிரார்த்தனை."
கோவிந்தராஜ உடையாரின் தந்தை அவருக்குப் பத்து வேலி நன்செய் நிலமும், மற்றும் வீடு, வாசல், தோட்டம்-துறவு, மாடு கன்றுகளும் வைத்து விட்டுக் காலஞ்சென்றார். அப்போது உடையார் பாலிய வயதினர். தந்தை இறந்த இரண்டு வருஷத்தில், மைனர் விளையாட்டுக்களில் பதினையாயிரம் வரையில் கடன்பட்ட பின்னர் திடீரென்று விழித்துக் கொண்டார். சொத்தில் பற்று அவர் தந்தையிடமிருந்து அடைந்த பிதிரார்ஜிதங்களில் ஒன்று. தந்தை வைத்துப் போன நிலத்தில் ஒரு குழியேனும் விற்கக் கூடாதென்று அவர் தீர்மானஞ் செய்துகொண்டார். மகசூல் வருமானத்தைக் கொண்டு வீட்டுச் செலவு செய்து நிலவரியும் வட்டியும் கொடுத்துக் கடனையும் அடைப்பது இயலாத காரியமென்று தோன்றிற்று. உத்தியோகத்துக்குப் போவதற்கு வேண்டிய ஆங்கிலப் படிப்பு கிடையாது. என்னவெல்லாமோ யோசனை செய்துவிட்டுக் கடைசியில் 'கண்டிராக்ட்' தொழிலை மேற்கொண்டார். நல்ல வாசாலகர்; ஆட்களை வைத்து நடத்துவதில் சமர்த்தர். எனவே அந்தத் தொழிலில் அவர் வெற்றி பெற்றார். அந்தப் பக்கத்திலேயே சாலை, 'லயன்கரை', மதகு வேலை எதுவாயிருந்தாலும் அவரைத் தப்பிப் போகாது. சில "கண்டிராக்டு"களைத் தம் பெயருக்கே எடுத்துக்கொள்வார். சிலவற்றைத் தமக்கு வேண்டியவர்கள் பெயரால் எடுத்துக் கொள்வார். ஆயிரம் ரூபாய் கண்டிராக்டுக்கு ஒரு வேலை ஒப்புக் கொண்டால் இருநூறு ரூபாய் வேலைக்குச் செலவு செய்வார். 500 ரூபாய் தாம் எடுத்துக் கொள்வார். 300 ரூபாய் கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துச் சரிப்படுத்திவிடுவது வழக்கம். ஆதலின், தற்போது, அதாவது தமது நாற்பதாவது வயதில் அவர் அறுபது வேலி நிலத்துக்கும், 50,000 ரூபாய் ரொக்கத்துக்கும் எஜமானனாயிருந்ததில் ஆச்சரியமில்லையல்லவா?
இன்றைய தினம் உடையார் தமது சவுக்கண்டியில் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு சிந்தனை தேங்கிய முகத்தினராயிருந்தார். அவரை இரண்டு கவலைகள் பிடுங்கித் தின்றன. ஒன்று மேட்டூர் மைனரின் 40 வேலி நிலத்தை வாங்கித் தம் நிலத்தை முழுசாக 100 வேலியாக்கி விட வேண்டுமென்பது. அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும். ரூ.50,000 கையில் இருந்தது. இன்னும் 11/2 லட்சத்துக்கு என்ன செய்வது? கடன் வாங்குவதில்லையென்பது உடையார் பாலியத்தில் செய்து கொண்ட உறுதி. அதிலும் இருபதாயிரம், ஐம்பதாயிரம் என்றாலும் யோசிக்கலாம். ஒன்றரை லட்சம் கடனா! பின்னர் என்ன உபாயம்?
மற்றொரு கவலை, கீழண்டைக் கிராமத்துப் பெரிய மிராசுதாரை எப்படிப் பழி வாங்குவதென்பது. அவர்களுக்குள் மனஸ்தாபம் தாலூகா போர்டு தேர்தல் சம்பந்தமாக எழுந்தது. உடையார் தேர்தலுக்கு நின்றாரென நினைக்கிறீர்களோ? அத்தகைய அசட்டுக் காரியம் எதுவும் அவர் செய்வதில்லை. ஆனால் அந்தப் பக்கத்தைச் சேர்ந்த தாலூகா போர்டு, ஜில்லாபோர்டு அங்கத்தினர்கள் எல்லாரும் 'கண்டிராக்ட்' உடையார் கைக்குள் அடக்கம் என்பது பிரசித்தம். கண்டிராக்டருக்கு அவர்களுடைய உதவி தேவை என்று சொல்லவேண்டுவதில்லை. அந்தப் பக்கத்தில் எந்தத் தேர்தல் நடந்தாலும் உடையாரின் ஆதரவு பெற்றோருக்குத்தான் வெற்றி. சென்ற வருஷம் வரை இந்தத் திருப்திகரமான பரஸ்பர ஒத்துழைப்பு நிலைமை இருந்து வந்தது. இவ்வருஷத்துத் தேர்தலில் கீழண்டைக் கிராமத்து மிராசுதார் தமது உறவினரான போட்டி அபேட்சகரை ஆதரித்தார். அந்த அபேட்சகருக்குச் சில அதிக வாக்குகளால் வெற்றி கிடைத்து விட்டது. இதை உடையார் எப்படிச் சகித்துக் கொண்டு இருப்பார்? அது முதல் அவரைப் பழி வாங்குவது எப்படி என்பதே உடையாரின் ஓயாக் கவலையாயிற்று. மனஸ்தாபம் முற்றுவதற்குப் புதிய புதிய காரணங்களும் ஏற்பட்டு வந்தன.
இன்றைய தினம் மேற்சொன்ன இரு விஷயங்களையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று உடையார் முகம் விளக்கமுற்றது. ஓர் அற்புதமான யோசனை அவர் உள்ளத்தில் உதயமாயிற்று. நதியிலே புது வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதைக் காலையில் போய்ப் பார்த்து வந்திருந்தார். 'லயன் கரை' மீது ஜலம் வழிந்தோட இன்னும் ஒரு முழமே பாக்கியிருந்தது. கையெழுத்து மறையும் நேரத்தில் அய்யனார் மூலைக்குச் சென்று மண் வெட்டியினால் ஒரு கோடுமட்டும் கிழித்து விட்டு வந்தால்? பகைவனுடைய நிலங்கள் அம்மூலைக்கு நேரே இருக்கின்றன. முப்பது வேலியும் ஓர் ஆள் உயரத்திற்குக் குறையாமல் மணலடித்து விடும். அத்துடன் அவன் அழிந்தான். நமக்கோ ஒரு நஷ்டமுமில்லை. ஜலம் மேற்கே முட்டிக் கொண்டு வந்தாலும் வண்டல் படிந்து நிலம் இரு மடங்கு விளையுமேயன்றி வேறில்லை. பின்னர், உடைப்பு அடைத்தல் சம்பந்தமாக ஏராளமான 'கண்டிராக்ட்' வேலைகள் இருபதினாயிரம் முப்பதினாயிரம் கிடைத்தாலும் கிடைக்கலாம். அப்போது மேட்டூர் மைனர் நிலம் வாங்குவதும் சாத்தியமாகிவிடும். தர்மம், அதர்மம் என்னும் எண்ணங்கள் உடையாருக்குத் தோன்றவே இல்லை. அவற்றையெல்லாம் அவர் மறந்து நீண்ட நாளாயிற்று.
சூரியன் அஸ்தமிக்கும் சமயத்துக்கு உடையார் கேசவனை ஒரு மண்வெட்டி எடுத்துக்கொண்டு வரச் சொல்லிவிட்டுக் கொல்லைப்புறத்தால் கிளம்பிச் சென்றார். அவர்கள் சில நிமிஷங்களுக்கெல்லாம் நதிக்கரையை அடைந்து, அதிவேகமாகக் கிழக்கு நோக்கிச் சென்றார்கள். நதியில் பூரணப்பிரவாகம் ஓடிக்கொண்டிருந்தது. நீர் ஓட்டத்தின் 'ஹோ' என்ற இரைச்சலும், படுகையிலிருந்த மூங்கில் மரங்கள் உராயும் சத்தமும், மேலக் காற்றின் கோஷமும், தூரத்தில் நரியின் ஊளையும், நாயின் குலைப்பும் கலந்து பயங்கரமாகத் தொனித்தன. கண்ணுக்கெட்டியதூரம் தண்ணீர் மயமாய் இருந்த பிரவாகத்தின் காட்சியும், மேன்மேலும் வந்து கலந்த இருளும், மேற்குத் திக்கில் ஓடி ஒளிந்து கொண்டிருந்த மங்கிய ஒளியும், மரங்களின் நிழலும் பயங்கரத்தை மிகைப்படுத்தின. உடையாரும், கேசவனும் நதி வளைந்து செல்லும் ஒரு முடுக்குக்கு வந்து சேர்ந்தார்கள். உடையார், அங்கு வந்து நின்று "சரி வெட்டு" என்றார். இருபது வருஷ காலமாய் எதிர்த்துப் பதில் சொல்லியறியாத கேசவன் இன்று தயங்கி நின்றான். "சீ, மடையா, இங்கே கொடு" என்று கூறி, உடையார் மண்வெட்டியை வாங்கி, மளமளவென்று கரையை வெட்டினார். சுமார் பதினைந்து நிமிஷம் மூச்சு வாங்கும்படி வெட்டிய பின்னர், ஜலம் ஒரு சிறு மடையளவாக நகர்ந்து வந்து லயன் கரையின் மறுபுறத்தில் விழுந்தது. "இன்னும் ஒரு மணி நேரத்தில் பாதி ஆறு இம்மடை வழியாகப் பாயும்" என்று உடையார் எண்ணிக் கொண்டே தலை நிமிர்ந்தார். தமக்கு இரண்டு கஜதூரத்தில் இரண்டு மனிதர்கள் சைக்கிள் வண்டிகளில் வந்திறங்குவதைக் கண்டார். "யார் அது?" என்று சத்தம் வந்தது. உடையாருக்குப் "பகீர்" என்றது. மின்னொளி போல் ஓர் எண்ணம் தோன்றிற்று. மண் 'வெட்டியை' வீசி ஆற்றில் எறிந்தார். கொடக் என்ற சத்தத்துடன் பிரவாகமானது உடையார் குற்றத்தின் சாட்சியத்தை விழுங்கி ஏப்பம் விட்டது.
சைக்கிளில் வந்து இறங்கிய இருவரில் ஒருவர் புது ஓவர்சியர் ஸ்ரீமான் சம்பந்தம் பிள்ளை என்று நேயர்கள் ஊகித்திருக்கலாம். மற்றொருவர் லயன் கரை மேஸ்திரி. நதியில் பிரவாகம் அதிகமாயிருப்பதை முன்னிட்டு, அவர்கள் லயன்கரையில் பந்தோபஸ்துக்காகப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். சம்பந்தம் பிள்ளைக்கு முதலில் ஒரு நிமிஷம் தெளிவாக விளங்கவில்லை. உடையார் மண் வெட்டியை ஆற்றில் எறிந்ததுமே விஷயம் வெட்ட வெளிச்சமாய்ப் புலப்பட்டது. அப்போது சம்பந்தம் பிள்ளைக்கு உண்டான ஆத்திரம் அவ்வாற்றின் பிரவாகத்தைப்போல் அளவிட முடியாததாயிற்று. அவர் ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து வந்து, உடையாரின் கழுத்துத் துணியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு "அடே பாதகா! துரோகி! என்ன கொலை பாதகம் செய்தாய்!" என்றார். அவர் உடல் நடுங்கிற்று. தலையைக் கையினால் பிடித்துக் கொண்டு ஒரு கண நேரம் யோசித்தார். பின்னர், உடனே திரும்பி மேஸ்திரியைப் பார்த்து "ஓடும் ஓடும்! கிராமத்துக்கு ஓடிப்போய் வைக்கோல், மண்வெட்டிச் சாமான்களுடன் ஆள் திரட்டிக் கொண்டு வாரும்" என்றார். மேஸ்திரி சைக்கிளில் ஏறிக் குறுக்கு வழியில் அதி வேகமாகச் சென்றார்.
உடையார் சிந்தித்தார். அவர் உள்ளத்தில் ஒரு கொடும் யோசனை உதித்தது. 'செய்வன திருந்தச் செய்' என்றபடி, இந்த அதிகப்பிரசங்கியை வெட்டி ஆற்றில் விட்டு விட்டாலென்ன? அவன் ஒருவன்; நாம் இருவர். ஆனால், அடுத்த கணத்தில் இது உசிதமானதெனத் தோன்றவில்லை. ஆள் திரட்டச் சென்ற மேஸ்திரி சிறிது நேரத்தில் திரும்பி விடுவான். அவனும் ஊராரும் சாட்சி சொல்வார்கள். ஆயுதமும் இல்லை, மேலும் நதி மண்வெட்டியை விழுங்கேமேயல்லாமல் பிணத்தை விழுங்காது, எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு தடை குறுக்கிட்டது. பக்கத்திலிருந்த கேசவனைக் காணோம். ஏதோ பெருந்தொல்லை இருக்கிறதென்றறிந்த அவன் சவாரி விட்டுவிட்டான்.
எனவே, அந்த யோசனையை உடையார் தள்ளி வழக்கமான உபாயத்தையே கைக்கொள்ளத் தீர்மானித்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "ஏன் ஸார், புது ஓவர்ஸியர் வந்திருப்பதகாச் சொன்னார்களே, தாங்கள்தானோ?" என்று வினாவினார்.
சம்பந்தம் பிள்ளை, உடையாரின் கழுத்தில் மாலையாகப் போட்டிருந்த அங்க வஸ்திரத்தின் இரு முனைகளையும் சேர்த்து இறுகப் பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் கண் உடைப்பின் மீதே பதிந்து கிடந்தது. ஒவ்வொரு கணமும் கரை இடிந்து விழுந்து உடைப்புப் பெரிதாகிக் கொண்டிருந்தது. நீரின் வேகம் கீழ்மண்ணையும் அறுத்துக் கொண்டு வந்ததென்று கரைக்கு மறு புறத்தில் விழும் தண்ணீரின் அளவினால் நன்கு தெரிந்தது. சம்பந்தம் பிள்ளையின் உள்ளம் பதைத்தது. உடைப்புப் பெரிதாகமல் தடுக்க எதுவும் செய்ய முடியாதிருந்த காரணத்தினால், அவர் துன்பம் அதிகமாயிற்று. பாதகன் மண்வெட்டியைக்கூட அல்லவா ஆற்றில் எறிந்துவிட்டான்.
இத்தருணத்தில் உடையார் மேற்கண்டவாறு கேட்கவே, சம்பந்தம் பிள்ளையின் கண் அவர்மீது சென்றது. பார்வைக்கு மட்டும் மனிதனை எரிக்கும் சக்தியிருந்தால் சம்பந்தம் பிள்ளை அப்பார்வையினாலேயே உடையாரை எரித்திருப்பார். அது சாத்தியமில்லாமல் போகவே அவர் பதிலும் சொல்லவில்லை.
"தங்களைப் பார்க்க நேர்ந்தது குறித்து நிரம்ப சந்தோஷம். தங்களுக்கு முன்னாலிருந்த ஓவர்ஸியர் எனக்கு நிரம்பப் பழக்கமானவர். இந்தப் பக்கம் வந்தால் நம்முடைய பங்களாவில்தான் தங்குவார். ஏன், ஸப் டிவிஷனல் ஆபீஸர், அஸிஸ்டெண்ட் என்ஜினீயர் முதலியோர்கூட நமக்கு அதிகப் பழக்கமானவர்கள்தான். என் பெயரைக் கூடத் தாங்கள் கேள்விப்பட்டிருக்கலாமே! நான் தான் கோவிந்தராஜ உடையார் என்பது" என்று கூறி, உடையார் குறுநகை புரிந்தார்.
இந்த மனிதருடைய துணிவும், அகம்பாவமும் சம்பந்தம் பிள்ளைக்கு அளவிலா ஆச்சரியமளித்தன. இந்த நிலையில் இப்படிப் பேசக்கூடிய ஒருவர் இருப்பாரென அவர் கனவிலும் கருதியிருக்க முடியாது. எனவே, அவர் ஸ்தம்பித்துப் போனார்.
உடையார் தன் கை விரலில் அணிந்திருந்த வைரக்கல் மோதிரத்தைக் கழற்றி, அதை நட்சத்திர ஒளியில் சிறிது காட்டி ஓவர்ஸியர் கண்முன் 'டால்' வீசச் செய்து, பின்னர்ப் புன்னகையுடன் "என்னுடைய ஞாபகார்த்தமாக இருக்கட்டும்" என்று சொல்லிக்கொண்டே அதை அவர் விரலில் மாட்டப் போனார்.
இப்போது சம்பந்தம் பிள்ளையின் ஆத்திரம் கரை கடந்தாயிற்று. அந்த மோதிரத்தை அவர் உடையார் கையிலிருந்து பிடுங்கி வீசி எறிந்தார்? மோதிரம் ஆற்று மத்திக்குச்சென்று, விழுந்த இடந்தெரியாமல் மறைந்தது.
"நல்லது, ஸார்! இவ்வளவு கோபம் எதற்காக? நாமெல்லாரும் பரஸ்பரம் உதவி செய்து கொள்ள வேண்டியவர்கள். ஆனாலும், இது கொஞ்சம் பெரிய விஷயந்தான். நம்முடைய வீட்டுக்கு வாருங்கள். ஒரு நோட்டு தந்துவிடுகிறேன்" என்றார் உடையார்.
"உம்முடைய நோட்டைக் கிழித்து இந்த உடைப்பில் கொண்டு வந்து போடும்! உமக்கு இவ்வுலகத்துக் கோர்ட்டுக்களில் அளிக்கப்படும் தண்டனை போதவே போதாது. கடவுளே உம்மைத் தண்டிக்க வேண்டும்" என்றார் சம்பந்தம் பிள்ளை. அவர் கண்ணில் தீப்பொறி பறந்தது. உடையார் சிந்தித்தார். தண்டனை என்றதும் அவருக்குத் தம் செயலினால் விளையக் கூடியவையெல்லாம் சட்டென்று மனதில் தோன்றின. பணச்செலவு, அவமானம், போலிஸ், கோர்ட், சிறை-எல்லாம் நினைவுக்கு வந்தன. முடிவில் ஆயுள் பரியந்தம் சிட்சை விதித்தாலும் விதிக்கலாம். உடையார் சிறிது அச்சமடைந்தார்.
"சரிதான் ஐயா! உமக்கு என்னதான் வேண்டும்? சொல்லிவிடும்" என்றார்.
"உமது தலையில் இடி விழ வேண்டும்; இந்த வெள்ளம் உம்மை விழுங்க வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும்."
"ஐயாயிரம் ரூபாய் தந்துவிடுகிறேன், உமக்கு நம்பிக்கையில்லாவிடில் காகிதம் பேனா கொடும். இங்கேயே கைசீட்டு எழுதித் தருகிறேன்."
"இப்போது நீர் எழுத வேண்டுவது வாக்கு மூலந்தான். ஆனால் இங்கே வேண்டாம். மாஜிஸ்டிரேட் முன்பு எழுதலாம்."
"இதற்கு முன் நான் எவருக்கும் பதினாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்ததில்லை. ஒரே ஒரு முறை ஒரு முக்கியமான வாய்க்கால் தகராறில் மட்டுமே பதினாயிரம் கொடுத்திருக்கிறேன். இப்போது அந்தப் பதினாயிரம் உமக்குத் தருகிறேன். இதைத் தவிர, உடைப்பு சம்பந்தமான கண்டிராக்டுகளில் உமக்குரிய விகிதம் கொடுத்துவிடுகிறேன்."
"சும்மா வாயை மூடிக்கொண்டிரும், சர்க்கார் உத்தியோகஸ்தருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றம் வேறு உம்மீது சாரும். ஜாக்கிரதை!"
"புது ஓவர்சியர் கலியுக அரிச்சந்திரன் என்று சொன்னார்கள். இருந்தாலும், நீர் இவ்வளவு மோசமாயிருப்பீர் என்று நினைக்கவில்லை. நன்றாக சிந்தித்துப் பாரும். பதினாயிரம் ரூபாய் உம்முடைய பத்து வருஷச் சம்பளம். வட்டிக்குப் போட்டால் வட்டியே சம்பளத்துக்கீடாகும். வலிய வரும் லக்ஷ்மியை யாரேனும் உதைப்பார்களா? உமக்கு முன்னிருந்த ஓவர்சியர் பத்து ரூபா, ஐந்து ரூபாய்கூட வாங்குவார். நீர் பதினாயிரம் ரூபா வேண்டாமென்கிறீர். என்ன அநியாயம்!"
"அநியாயம்" என்ற வார்த்தையைக் கேட்டதும் சம்பந்தம் பிள்ளைக்குத் தம்மையறியாமல் சிறிது சிரிப்பு வந்தது. ஆனால், திரும்பி உடைப்பைப் பார்த்ததும் சிரிப்பெல்லாம் பறந்து போயிற்று. உடைப்பு இதற்குள் சுமார் பத்து கஜ அகலமுள்ளதாகிவிட்டது. 'ஹோ' என்ற இரைச்சலுடன் ஜலம் மோதிக்கொண்டு பாய்ந்தது. ஆயினும் என்ன பயன்? இனி வெள்ளம் வடிந்தாலொழிய உடைப்பு அடைபடுவது சந்தேகந்தான்!
ஆட்கள் தூரத்தில் வருவதை உடையாரும் பார்த்தார். இப்போதுதான் அவருக்கும் பதைப்பு உண்டாயிற்று. அவர், "ஐயா, இங்கே பாரும். கடைசியாக ஒரு வார்த்தை. உம்முடைய ஆயுளில் இத்தகைய அதிர்ஷ்டம் உமக்கு வரப்போவதில்லை. எனக்குச் சொந்தமான பூஸ்திதி முதலியவற்றைத் தவிர இன்றைய தினம் ரொக்கமாக என்னிடமுள்ள ஐம்பதினாயிரம் ரூபாய். அந்த ஐம்பதினாயிரத்தையும் உமக்குக் கொடுத்து விடுகிறேன். கொஞ்ச நஞ்சமன்று; அரை லட்சம். இதற்காக நீர் செய்ய வேண்டுவதோ ஒன்றுமில்லை. என்னையும் உடைப்படைக்க வந்தவனாகப் பாவித்துக்கொள்ளும். அல்லது நான் இங்கிருந்ததாகவே தெரிய வேண்டாம். மேஸ்திரியையும் நான் கவனித்துக் கொள்கிறேன். என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்.
"முடியாது, முடியாது" என்று அழுத்தமாகக் கூறினார் சம்பந்தம் பிள்ளை. அவர் இதயத்தில் இன்ப வெள்ளம் பாய்ந்தது. அம்பலவாணம் பிள்ளையிடம் தாம் கூறிய சபதத்தை நினைவு கூர்ந்தார். அதை நிறைவேற்றி வைப்பதற்கு மன உறுதி அளித்ததன் பொருட்டு ஆண்டவனுக்கு நன்றி செலுத்தினார். நூறா? ஆயிரமா? அரை லட்சம் ஒரு பெரிய ஆஸ்தி! தம் சபதத்தை இவ்வளவு விரைவில் நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி அவர் அகமகிழ்ந்தார்.
தெய்வாதீனமாக மறுநாளே வெள்ளம் வடிய ஆரம்பித்தது. ஒரு வாரத்திற்குள் உடைப்பு அடைபட்டது. வழக்கத்துக்கு மாறாக உடைப்பு இவ்வளவு விரைவில் அடைபட்டதற்குப் புது ஓவர்ஸியரின் ஊக்கமும் முயற்சியுமே காரணங்கள் என்று ஜனங்கள் பிரசித்தியாகப் பேசிக் கொண்டார்கள். எனினும், ஐந்தாறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. முக்கியமாக, உடையாரின் பகைவரான மிராசுதாரின் நிலத்தில் ஏறக்குறையப் பாதி மணலடித்துச் சாகுபடிக்கே லாயக்கில்லாமல் போயிற்று.
கோவிந்தராஜ உடையார் கைது செய்யப்பட்டுப் பின்னர் பெருந்தொகை ஜாமீன்களின் மீது விடப்பட்டார். வழக்கு ஏழெட்டுமாத காலம் நடந்தது. உடையாரின் சார்பாகச் சென்னை வக்கீல்கள் ஏழு பேரையல்லாமல் கல்கத்தாவிலிருந்து குற்ற வழக்குகளில் பெயர்போன பாரிஸ்டர் ஒருவரும் வந்து பேசினார். வழக்கின் நடைமுறை விவரங்களைத் தெரிவித்து, இச்சிறுகதையைப் பெருங்கதையாக்க நாம் விரும்பவில்லை. முடிவை மட்டும் கூறிவிடுகிறோம். சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் மூவர் அமர்ந்து, விசாரணை செய்து, கோவிந்த ராஜ உடையார் நிரபராதி என்று விடுதலை செய்தனர்.
உடையாருக்கு விரோதமாக ஓவர்ஸியரின் சாட்சியம் ஒன்றுதானிருந்தது. மேஸ்திரி, விசாரணையில் இருட்டிவிட்டபடியால் அங்கிருந்து உடையார்தானாவென்று நிச்சயமாகச் சொல்ல முடியாதென்றும், அங்கிருந்தவர் யாராயினும் தான் பார்த்தபோது அவர் மண்வெட்டியால் வெட்டிக் கொண்டிருக்கவில்லையென்றும், மண்வெட்டியை எறிந்ததையும் தான் பார்க்கவில்லையென்றும், "ஐயோ! உடைப்பெடுத்துவிட்டதே" என்பது போன்ற கூக்குரல்தான் காதில் விழுந்ததென்றும், தான் உடனே கிராமத்துக்குச் சென்றதாகவும், வேறு விபரம் ஒன்றும் தெரியாதென்றும் சாட்சி சொன்னான். கேசவன் கோர்ட்டுக்கு வரவேயில்லை. உடையாரின் எதிரி மிராசுதார், உடையார் தம் பகைவர் என்று சாட்சி சொன்னாராயினும் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு அது உதவி செய்யவில்லை. ஆகவே, போதிய சாட்சியம் இல்லையென்று வழக்குத் தள்ளப்பட்டது.
இதற்குச் சில தினங்களுக்கெல்லாம், ஓவர்ஸியர் சம்பந்தம் பிள்ளைக்கு மேலதிகாரிகளிடமிருந்து ஓர் உத்தரவு வந்தது. அதில் ஸ்ரீமான் சம்பந்தம் பிள்ளை உடைப்பெடுத்த காலத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யவில்லையென்றும், உடைப்பை அடைக்கத் தீவிர முயற்சி செய்திருக்க வேண்டிய சமயத்தில், ஒரு கண்யமுள்ள கனவான் மீது, அவருடைய எதிரியின் தூண்டுதலால் அபாண்டமான குற்றத்தைச் சாட்டித் தொந்தரவு கொடுப்பதில் ஈடுபட்டிருந்ததாகவும், அதனால் இலாகாவுக்கே அபகீர்த்தி ஏற்படுத்தியிருப்பதாகவும், இக்காரணங்களினால் அவர் வேலையினின்று தள்ளப்பட்டிருப்பதாகவும் எழுதியிருந்தது.
சம்பந்தம் பிள்ளை தம் சொந்தக் கிராமத்துக்குத் திரும்புவதற்கு முன்னால், தமது வாழ்க்கையின் பெருஞ்சோதனையில் தாம் வெற்றி பெற்ற இடத்துக்கு ஒரு முறை செல்ல வேண்டுமென விரும்பினார். அவ்வாறே, வேலையைத் தமக்குப் பதிலாக வந்தவரிடம் ஒப்புவித்த அன்று காலை, நதிக்கரைக்குச் சென்று, உடைப்பெடுத்த இடத்தில் வந்து அமர்ந்தார். சென்ற ஆண்டில், ஏறக்குறைய இதே காலத்தில்தான் அச்சோதனை நிகழ்ந்தது. இவ்வருஷம் நதியில் சென்ற வருஷத்தைப் போன்ற வெள்ளம் வரவில்லையாயினும் சுமாரான பிரவாகம் ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தம் பிள்ளை அன்றைய தினம் மாலை நிகழ்ந்ததெல்லாவற்றையும் ஒரு முறை நினைத்தார். நதியின் வெள்ளத்தில் மேலக் காற்றின் வேகத்தினால் எழுந்த அலைகளே போல், அவர் உள்ளத்தில் எத்தனையெத்தனையோ எண்ணங்கள் எழுந்து மறைந்தன. அம்பலவாணம் பிள்ளையின் ஹிதோபதேசமும் அவர் ஞாபகத்துக்கு வந்தது. "ஆம், மாமாவின் புத்திமதியை ஏற்றுக் கொண்டது நல்லதேயாயிற்று. 'பின்னால் உத்தியோகம் வா' என்றால் வருமா? உத்தியோக வாழ்வில் அதிருப்தி ஏற்பட்டால் அதைவிட்டு வேறு துறையில் இறங்குவதற்கு எதுவும் குறுக்கே நில்லாது' என்று அவர் கூறினாரன்றோ? இப்போது உத்தியோக வாழ்வைப் பார்த்தாய்விட்டது. இனி அதைப்பற்றி சபலம் சிறிதும் இன்றி, தமது வாழ்க்கை இலட்சியங்களைப் பின்பற்றலாம்" என்று சம்பந்தம்பிள்ளை எண்ணமிட்டார்.
கதிரவன், மேல் வான வட்டத்தின் அடிவாரத்தில், சுழலும் தங்கத் தகடெனத் திகழ்ந்தான். அவனுடைய பொன்னிறச் செங்கதிர்கள் நதியின் நீரில் படிந்தபோது, அலைகள் மெருகுகொடுத்தாற் போல் தகதகவென்று பிரகாசித்தன. ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து நிமிஷம் சென்றது. கதிரவன் இருந்த இடத்தில் அவனது பொற்கிரணங்களைப் போர்வையாகப் போர்த்த சில முகில் திட்டுக்களே காணப்பட்டன. இந்தக் காட்சியில் உள்ளத்தைப் பறிகொடுத்திருந்த சம்பந்தம் பிள்ளை, தமக்கருகில் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். கோவிந்தராஜ உடையாரைக் கண்டு திடுக்கிட்டார். உடனே எழுந்து சைக்கிள் பிடியில் கைவைத்து ஏறப் போனார். "தம்பி, உன்னைத் தேடிக் கொண்டு தான் வந்தேன். சற்று உட்கார், போகலாம். உன் ஜாகைக்குப் போய் விசாரித்தேன். நதிக்கரைக்குப் போனதாகச் சொன்னார்கள். இங்கே தான் வந்திருப்பாய் என்று ஊகித்தேன்" என்று உடையார் கூறினார்.
சம்பந்தம் பிள்ளை தம் காதுகளையும் கண்களையும் நம்பவில்லை. பிரமித்துப் போய் நின்றார்.
"ஆம், அப்பா! நான் உன்னைத் தேடிவந்தது உனக்கு அதிசயமாயிருக்கலாம். ஒரு காரியத்தைப் பற்றிப் பேசவந்தேன். தயவு செய்து உட்கார மாட்டாயா?" என்று கூறிக்கொண்டே உடையார் கீழே மல் துணியை விரித்துப் போட்டு உட்கார்ந்தார்.
அவருடைய பரிதாபகரமான குரல் சம்பந்தம் பிள்ளையின் மனத்தை உருக்கிற்று. இந்த அதிசயத்தையும் பார்த்துவிட வேண்டுமென எண்ணி, அருகில் கிடந்தகட்டையின்மீது சம்பந்தம் பிள்ளை அமர்ந்தார்.
"என்ன சொல்லப்போகிறீர்கள்? தங்களுடைய வெற்றியைப் பற்றிச் சொல்லிக்காட்டப் போகிறீர்களா? அப்படியானால் வேண்டாம். ஏனெனில், நான் தான் வெற்றியடைந்ததாக என்னுடைய எண்ணம். அல்லது, என்னுடைய நிலைக்காக இரக்கம் காட்டப்போகிறீர்களா? அதுவும் தேவையில்லை. பகவான் எனக்குக் கொஞ்சம் பூமியையும் அதை உழுத பயிரிட உடம்பில் வலிவையும் அளித்திருக்கிறார்" என்று சம்பந்தம் கூறினார்.
அப்போது உடையார், "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தம்பி! வேறு காரியம். நான் உங்களையெல்லாம் போல் படித்தவனல்லன். ஆகையால், சாமர்த்தியமாகப் பேசத் தெரியாது. இருந்தாலும் மனத்திலுள்ளதை விட்டுச் சொல்கிறேன். போன வருஷத்தில், இதே இடத்தில் நீ சந்தித்தாயே, அந்த கோவிந்தராஜ உடையார் இப்போதில்லை. இந்த வழக்கினால் நான் முற்றும் புதிய மனிதனாகிவிட்டேன். என் உடம்பும் உள்ளமும் நிரம்பத் தளர்ந்து போய்விட்டன. என்னால் இனி குடும்ப விவகாரங்களைப் பார்க்கவும் முடியாது. எனக்கு 60 வேலி நிலமும் மற்றும் வரவு செலவுகளும் உண்டு. இவற்றையெல்லாம் கவனிக்க நம்பிக்கையான காரியஸ்தன் ஒருவன் வேண்டும். உன்னைவிட உண்மையான மனிதன் எனக்கு எங்கே கிடைப்பான்? அதற்காகத் தான் உன்னைத் தேடி வந்தேன்" என்றார்.
சம்பந்தம் பிள்ளைக்குத் தூக்கி வாரிப் போட்டது. அசாத்தியமான கோபம் வந்தது. 'இந்தப் பொல்லாத மனிதனின் தைரியத்தைப் பார்த்தாயா? எனினும், அவர் முகத்தோற்றமும் குரலும் நம் மனத்தை இளக்குவதன் இரகசியம் என்ன? ஒரு வேளை, உண்மையிலேயே வேறு மனிதராகிவிட்டாரோ!' என எண்ணினான். உடையார் பின்னர் கூறிய மொழிகள் சந்தேகத்தை நிவர்த்தி செய்தன.
"தம்பி! உனக்கு ஆச்சரியமாயிருக்கலாம். என் துணிவைக் கண்டு நீ வியப்புறலாம். ஆயினும் உண்மை அதுதான். என் விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள உண்மையான மனிதன் தேவை. இது மட்டுமன்று, இவ்வளவு காலமும் நான் செய்த பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடவேண்டும். இதற்கு எனக்கு வழிகாட்ட ஓர் உத்தமத்தோழன் தேவை. அத்தகைய உத்தமன் உன்னையல்லாமல் எனக்கு வேறு யார் கிடைக்கப் போகிறார்கள்? என் வாழ்நாளிலே நான் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்களிலே யோக்கியர்களும் அயோக்கியர்களும் என்னைப் போன்ற பாதகர்களும் உண்டு..."
இச்சமயத்தில் சம்பந்தரின் கண்களில் நீர் ததும்பிற்று. உடையாரின் தொண்டை கம்மலுற்றது. அவர் மெதுவாக எழுந்து வந்து சம்பந்தம் பிள்ளையின் அருகில் நின்று, அவர் தலையைத் தம் கையினால் தொட்டுக் கொண்டு, "....அத்தனை பேரிலும் உன்னைப்போன்ற உத்தமன் ஒருவனைச் சந்தித்ததில்லை. மற்றும் இன்னொரு செய்தி உனக்குத் தெரியுமா? எனக்குப் பிள்ளை குட்டிகள் ஒருவரும் இல்லை. நான் இன்று இறந்தால் ஒரு துளிக் கண்ணீர் விடுவோர் கிடையாது. அப்போது, நான் எத்தனையோ அக்கிரமங்கள் செய்து சேர்த்த இந்தச் சொத்து முழுதும் என்னவாகும்? நேற்றைய தினம் இதையெல்லாம் பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். உன்னைப் போன்ற ஒரு சத்புத்ரன் மட்டும் இருந்தால் நான் எவ்வளவு பெருமையடைவேன்? அப்போது, இந்த அக்கிரமச் சொத்து முழுவதையும் நல்வழியில் பயன்படுத்தி, என் பாவங்களுக்குக் கழுவாய் தேடிவிடுவாயல்லவா!.... போகட்டும், அதைப்பற்றி நினைத்து என்ன பயன்? தம்பி, என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்குவாயா? மாதம் ரூ.100 சம்பளத்தில் என் காரியஸ்தனாக வேலை பார்ப்பாயா?" என்று கேட்டார்.
இவ்வாறு கூறி உடையார் கண்ணீர் உகுத்தார். அக் கண்ணீர் சம்பந்தம் பிள்ளையின் முகத்திலும் மார்பிலும் விழுந்து அவருடைய கண்ணீருடன் கலந்தது. பின்னர், அவ்விரு கண்ணீர் அருவிகளும் சேர்ந்து ஓடி, நதி ஜலத்தில் விழுந்தன. இவ்வாறு அன்றைய தினத்திலே அந்தப் புண்ணிய நதி, கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் மூன்று நதிகள் கூடும் பிரயாகையைக் காட்டிலும் விசேஷ மகிமையுடையதாயிற்று.