கண்ணாமூச்சி ஆட்டத்தின் கடைசிச் சுற்று அது. குழந்தைகள் மிக்க ஈடுபாட்டோடு விளையாடிக் கொண்டிருந்ததால், அவர்கள் தங்களுடைய வழக்கமான பாதையை விட்டு விலகி வந்ததை உணரவில்லை. இப்போது அவர்கள் ராஜாப் பூங்காவினுள் இருந்தனர்.
இந்தப் பூங்கா பெயரில் மட்டும் தான் ராஜா. பூங்காவினுள் அதற்கான அடையாளமோ, பசுமையோ இல்லை. அங்கிருந்த ஒரே தாவரம், மழைக்காலத்திற்குப் பிறகு பராமரிக்கப்படாமல் முழங்கால் உயரம் வளர்ந்திருந்த புல் மட்டுமே!
ஒரு காலத்தில் அங்கே பூச்செடிகள் இருந்திருக்க வேண்டும். தண்ணீர்க் குழாய்கள் உடைந்த பின் தண்ணீருக்காகக் காத்திருந்து அவை வாடிப் போயிருக்கலாம். ஊஞ்சல்கள் தளர்ந்து போனதால், அவைகள் கம்பத்தில் சுற்றி வைக்கப் பட்டிருந்தன. சறுக்கு மரத்தின் ஏணியில் இரண்டு படிகளே எஞ்சியிருந்தன. சறுக்கும் பலகையில் நிறைய ஓட்டைகள் இருந்தன. அதில் சறுக்கும் போது சட்டை ஏதும் சிக்கிக் கொண்டாலோ, இரத்தக் காயங்களோடு தான் வர வேண்டும். அங்கிருந்த ராட்டினம் வெகுவாகத் துருப்பிடித்துப் போய் சுற்றுவதே சிரமமாய் இருந்தது. ஒரு வேளை சுற்றினாலும், அது எழுப்பும் சத்தத்தில் குழந்தைகள் மிரண்டு போய்க் குதித்து ஓடி விடுவார்கள்!
மொத்தத்தில் ராஜாப் பூங்கா குழந்தைகளுக்குக் குதூகலத்தைக் கொடுக்கவில்லை. அவர்களை பயமுறுத்த மட்டுமே பயன்பட்டது. அப்பாவுடன் வெளியே செல்ல நச்சரிக்கும் குழந்தைகளை ‘சரி, வா! ராஜாப் பூங்காவுக்குப் போகலாம்!’ என்றால் போதும், அமைதியாகி விடுவார்கள். ராஜாப் பூங்காவின் ஒரே சிறப்பான அம்சம் அதன் நடுவில் இருந்த ஒரு சமாதி தான். அதன் சுவர்கள் எல்லாம் இடிந்து பாழடைந்து போயிருந்தன.
இருந்த போதிலும், சுற்று வட்டாரக் குழந்தைகள் மாலை நேரத்தில் அங்கே விளையாட வருவார்கள். அவர்களைத் தடுக்கவோ, திட்டவோ அங்கே யாரும் இருக்கவில்லை.
அதன் கூரை, தாழ்வாரம், படிக்கட்டுகள் எல்லாம் புறாக்களின் எச்சத்தால் நிரம்பியிருந்தன. புறாக்களுக்கு சமாதி மாடத்தின் நிறம் பிடிக்காமல், வேறு வண்ணம் பூச நினைத்து விட்டன போலும்!
சமாதியின் உள்ளே இருந்த நீளமான கல்லறை காலப்போக்கில் பழுதடைந்து, குனிந்து வளைந்த முதுகு போல் காட்சியளித்தது.
கல்லறைக்குள் இருந்த ராஜா பெரும் கொடுமைக்காரர் என்று சொல்வார்கள். அவருடைய ராஜ்ஜியத்தில் படிப்பதும், எழுதுவதும் தடை செய்யப்பட்டிருந்தாம். தன் மக்கள் தன்னைக் காட்டிலும் படிப்பறிவில் மிஞ்சியவராய் இருந்தால் தன்னைக் கவிழ்த்து விடுவார்கள் என அவர் நினைத்தாராம்.
அதனால் தான் அவரது ராஜ்ஜியத்தில் பள்ளிகளோ, நூலகங்களோ இருக்கவில்லை. எந்த வீட்டிலாவது புத்தகம் இருந்தால், அந்த வீடு எரிக்கப்பட்டு விடுமாம்.
அந்த ராஜ்ஜியத்தில், உலகப்புகழ் பெற்ற ஓர் அறிஞர் இருந்தார். அவர் பேசுவதைக் கேட்க பல திசைகளிலிருந்தும் மக்கள் வந்தனர்.
இழிவான அரசனால் இந்த அறிஞரைச் சகித்துக் கொள்ள இயலவில்லை. அவருக்கு இடையூறு செய்யவும் முடியவில்லை. அவரை நேசித்தவர் அநேகர்
என்பதால் அவருக்கு தீங்கு விளைவிப்பது எளிதல்லவே! ராஜா ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக் காத்திருந்தார்.
ஒரு நாள், திருடியதாக அவர் மேல் பொய்க் குற்றம் சுமத்தி, அவரைத் தூக்கிலிட்டு விட்டார் ராஜா.
அறிஞரைத் தூக்கிலிட்ட அன்று நிறைந்த பௌர்ணமி நாள்! அவரைக் கொன்ற பிறகும் ராஜா அமைதி அடையவில்லை. அவருக்குக் கழுத்தில் கற்பனையான வலிகள் வர ஆரம்பித்தன. காரணமின்றிக் கழுத்தை அடிக்கடி இறுக்கிப் பிடித்துக் கொள்வார்.
ராஜாவைக் கண்காணித்து, அவருடைய உயிரைக் காப்பது காவல்காரர்களுக்குப் பெரும்பாடாக இருந்தது. ஒரு நாள், அவர்கள் இல்லாத சமயம், ராஜா உயிரை மாய்த்துக் கொண்டார். அன்று பௌர்ணமி!
இறந்த பிறகும் கூட, ராஜா அமைதி அடையவில்லை என்று ஜனங்கள் சொல்வார்கள். ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் அந்த ராஜா,
கல்லறையிலிருந்து எழுந்து, சமாதியைச் சுற்றிக் கொண்டிருப்பாராம். அப்போது யாராவது அந்தப் பக்கம் போனால், ‘எனக்குக் கயிறு வேண்டும், எனக்குக் கயிறு
வேண்டும்!’ என்று கத்துவாராம். இதைப் பற்றியெல்லாம் தெரியாத வழிப்போக்கர்கள், மயக்கம் போட்டு விழுவார்களாம். இதனால் தான் பெரும்பாலோர் ராஜாப் பூங்காவிற்கு வருவதில்லை.
ஒரு நாள் மாலை நேரம். குழந்தைகள் உற்சாகத்தோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.இப்போது, ராகவனுடைய முறை. கண்களிரண்டையும் தன் கைகளால் பொத்திக் கொண்டு, அவன் உரக்க எண்ணினான்.
...ஒன்று... இரண்டு...மூன்று..
அவனுக்குப் பின்னால் மற்ற சிறுவர்கள் ஒளிந்து கொள்ள இடம் தேடி ஓடினார்கள்....ஆறு...ஏழு...எட்டு...
எல்லாரும் வெவ்வேறு இடங்களில் ஒளிந்து கொண்டாயிற்று. கோபிக்கு மட்டும் இன்னும் சரியான மறைவிடம் கிடைக்கவில்லை.
..ஒன்பது..
இனி, ஒரே ஒரு இடம் மட்டுமே இருந்தது... அது.. சமாதி!
..பத்து..!
ராகவன் எண்ணி முடிக்கவும், கோபி சமாதிக்குள் பாய்ந்து சென்றான்.
ஆனால், அவன் குதிப்பதை ராகவன் பார்த்து விட்டான். உடனே, தான் இருந்த இடத்திலிருந்தே கூவினான், ‘ஏய்! கோபி, அங்கே போகாதே!’
ராகவனின் குரலில் இருந்த பயத்தை உணர்ந்த கோபியால் அங்கே இருக்க முடியவில்லை. உடனே வெளியே வந்த கோபி, ராகவனை ஆச்சர்யமாகப் பார்த்தான்.
"என்ன ஆச்சு? எதற்குக் கத்தினாய்?"
"நீ சமாதிக்குள் ஒளியக் கூடாது"
"ஏன்? அங்கே என்ன இருக்கு?"
"ஏய்! அது கல்லறை! ஒரு ராஜாவின் கல்லறை!"
"அதனால் என்ன?"
"டேய், பௌர்ணமிகளில் அங்கே நிகழ்வது ஏதும் உனக்குத் தெரியாதா?"
அதைக் கேட்டு கோபி சிரிக்க ஆரம்பித்தான். இதில் சிரிக்க என்ன இருக்கிறது என ராகவனுக்குப் புரியவில்லை. அவன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான். அதைப் பார்த்து கோபி இன்னும் அதிகமாகச் சிரித்தான். மற்ற அனைவரையும் அழைத்தான்.
"ஏய், ராதா... காசி...சுமா...தர்மா..ஜில்லூ...எல்லாரும் வெளியே வாங்க! இந்தப் பயந்தாங்குள்ளியோடு யார் விளையாடுவார்கள்? உடனே எல்லாரும் இங்கே வாங்க!"
அவர்கள் யாருக்கும் என்ன விஷயம் என்று புரியவில்லை. எல்லாரும் ஓடி வந்தனர்.
"எதற்கு இருவரும் சண்டை போடுகிறீர்கள்?" என அனைவரும் கேட்டனர்.
"இவனோடு யார் விளையாடுவார்கள்?" என்று ராகவனைச் சுட்டிக்காட்டினான் கோபி. திரும்பவும் சிரிக்க ஆரம்பித்தான்.
"ஏன்? என்ன ஆயிற்று?" எனக் கேட்டான் காசி.
"என்னைச் சமாதிக்குள் போக வேண்டாம் என்கிறான் இவன். அங்கே போனால் என்னை யாராவது பிடித்துக் கொண்டு போய் விடுவார்களாம்!"
"ஆமாம். ராகவன் சொல்வது சரி தான்!" என்றான் காசி. அவன் வார்த்தைகள் ராகவனுக்குச் சற்றே தெம்பைத் தந்தன.
" அங்கே என்ன இருக்கிறது என்று உனக்குத் தெரியாதா?" என ராகவனுக்கு ஆதரவாகக் கேட்டாள் சுமா. "சரி, சரி! கோபிக்கு அங்கே ஒளிய வேண்டுமென்றால், ஒளிந்து கொள்ளட்டுமே!
அதனால் உங்களுக்கு என்ன?" "அவன் அங்கே ஒளிந்து கொண்டால், வேறு ஒருவர் தானே அவனைக் கண்டுபிடிக்கப் போக வேண்டும். யார் அந்தக் கல்லறை அருகே செல்வது?" என்றாள் ஜில்லு.
ஜில்லுவுக்கு யாரும் பதில் சொல்லும் முன்பே, " நீங்கள் எல்லாரும் பூனை முன் எலியைப் போல் பயந்தாங்குள்ளிகள்! உங்களோடு நான் விளையாட விரும்பவில்லை!" என கோபி வெடிப்பாகப் பேசினான்.
இது போல் யாரும் கத்துவதைக் குழந்தைகள் விரும்புவதில்லை. பெரும்பாலான குழந்தைகள் தன் பக்கம் இருப்பதை உணர்ந்த ராகவன் தைரியமானான்.
அவன் கோபியைக் கண்ணுக்குள் பார்த்து,
" நீ ரொம்பத் தைரியசாலி என்று நினைப்போ?" என்றான்.
" வெறும் நினைப்பில்லை, நிஜமாகவே நான் தைரியசாலி தான்!" சுருக்கெனப் பதில் சொன்னான் கோபி.
" உன்னால் இரவு நேரத்தில் சமாதிக்குள் செல்ல முடியுமா?"
" ஓ! என்னால் முடியும்!"
" பௌர்ணமி இரவில் கூட?"
" ஆமாம். பௌர்ணமி இரவில் கூட நான் சமாதிக்குள் செல்வேன். எனக்கு ஒன்றும் பயமில்லை."
"கல்லறையின் தலைக்கல் வரை செல்வாயா?"
"ஆம்! கல்லறையின் தலைக்கல் வரை செல்வேன்."
"அப்படியானால், அடுத்த பௌர்ணமி இரவில் நீ சமாதிக்குள் சென்று, கல்லறையின் தலைக்கல்லில் ஓர் ஆணியை அறைந்து விட்டு வரவேண்டும்!"
"சரி, அப்படியே ஆகட்டும்! மேலே சொல்!"
"இந்தச் சவாலில் நீ வென்றால், நாங்கள் உனக்கு ஒரு புதுப் பந்தும், கிரிக்கெட் மட்டையும் தருவோம். தோற்றால்....?"
"அது ஒரு போதும் நடக்காது. ஆதலால், அதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை" எனப் பெருமை பீற்றிக் கொண்டான் கோபி.
அவன் பீற்றல் பேர்வழி எனத் தெரியுமாதலால், அனைவரும் அமைதியாக இருந்தனர்.
இப்போதையப் பிரச்னை, என்றைக்குப் பௌர்ணமி என்று தெரிந்து கொள்வதே.
காசி வானத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான். எல்லாரும் மேலே நோக்கினர். அங்கே முழு வட்ட நிலா சிரித்துக் கொண்டிருந்தது.
ஆம்! இன்றைக்குத் தான் பௌர்ணமி!
"சரி! பந்தயத்தை இன்று இரவே வைத்துக் கொள்ளலாம்!"
கோபி உறுதியோடு சொன்னான். "ஆனால், யார் சுத்தியலும், ஆணியும் கொண்டு வருவார்கள்?"
"நான் கொண்டு வருகிறேன்" என்றான் ராகவன். இந்த நல்ல சந்தர்ப்பத்தை இழக்க அவன் விரும்பவில்லை.
"சரி! இரவில் சந்திக்கலாம்...இதே இடத்தில்.. சரியாக 10 மணிக்கு!"என்ற கோபி புற்களை மிதித்துக் கொண்டு தன் வீட்டை நோக்கிப் போனான். மற்றவர்களும் வீடு திரும்பினர்.
அன்று இரவு, நீல வானத்தின் முன்நெற்றியில் யாரோ வெள்ளிப்பொட்டு ஒட்டினாற்போல் நிலா பிரகாசித்துக்
கொண்டிருந்தது. கோபி கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் இருந்தான். அவன் பொறுமையை இழக்க ஆரம்பித்தான். அப்போது கடிகாரம் பத்து அடித்தது.
கோபி தன் வீட்டின் வரவேற்பறையை நோட்டமிட்டான். எல்லாரும் அவரவர் அறைக்குப் போயிருந்தனர். அவனுடைய அண்ணன் மட்டும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் இருந்தான்.
அவன் பின்புறம் நடப்பது எதுவும் தெரியாத அளவு ஏதோ நகைச்சுவைக் காட்சியில் மூழ்கியிருந்தான். கோபி தன் அறைக்கதவைச் சாத்திவிட்டுச் சத்தமின்றி வெளியே வந்தான். வீட்டின் வெளிக்கதவைத் தாண்டியதும் ராஜாப் பூங்காவை நோக்கி வேகமாக நடந்தான் கோபி. பூங்காவின் உடைந்த நுழைவாயில் அருகே ராகவன் காத்திருந்தான். மூச்சை இழுத்த வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்தான் கோபி. பூங்காவிலும், வெளியிலும் ஒருவர் கூட இல்லை.
"ஆணியைக் கொண்டு வந்தாயா?" மூச்சிரைத்தபடி
கேட்டான் கோபி. "ம்ம்" என்ற படி ஆணியைக் கொடுத்தான் ராகவன். "சுத்தியல்?" செய்தித்தாளில் சுற்றப்பட்டிருந்த சுத்தியலை அவன் முன்னால் நீட்டினான் ராகவன். "நீ இங்கேயே காத்திரு. கண் மூடித் திறப்பதற்குள் வருகிறேன்!" என்றவன், செய்தித்தாளை தரையில் வீசிவிட்டு நடந்தான்.
ஒரு கையில் ஆணியும் மறு கையில் சுத்தியலுமாகக் கோபி பூங்காவினுள் நுழைந்தான். உயரமான புற்கள் நிலவொளியில் மின்னிக்கொண்டிருந்தன.
ஊஞ்சல்கள், ராட்டினம், சறுக்குப்பலகை எல்லாம் நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்தன. இப்போது அவை ஏதோ ஒரு தேவலோகத்திலிருந்து வந்தவை போல் புதிதாகத் தெரிந்தன.
கோபி சமாதியைப் பார்த்ததும் திடுக்கிட்டான். அங்கே வெறும் கூரை மட்டுமே தெரிந்தது; அடிப்பகுதியைக் காணவில்லை. காற்றில் கூரை மட்டும் மிதப்பதைப் போல் இருந்தது. ஒரு நிமிடம் கோபி உறைந்து போனான்.
சில முறைக் கண்களைச் சிமிட்டிய பிறகு, திரும்பவும் கூரையைப் பார்த்தான் கோபி. பிறகு, தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். நிலவொளி செய்த மாயம் அது என தெரிந்து கொண்டான். கட்டிடத்தின் வெவ்வேறு மூலைகளை நிலா ஒளியூட்டிக் கொண்டிருந்தது. கோபி முன்னோக்கிச் சென்றான்.
இப்போது சமாதியின் அருகே வந்திருந்தான். நிலவொளி ஜன்னல்கள் வழியாக கல்லறையின் மீது வரிவரியாக விழுந்திருந்தது. சமாதியே வெள்ளியாக மின்னியது.
கோபி தாழ்வாரத்தில் அடியெடுத்து வைத்தான். அப்போது, கல்லறையே திரும்பினாற்போலிருந்தது.
கோபிக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை உதறலெடுத்தது. தன் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு இன்னோர் அடி எடுத்து வைக்கப் பார்த்தான்.
ஆனால், என்ன இது... அவன் கால் அங்கேயே தரையில் உறைந்து விட்டிருந்தது. கால் நிலத்தோடு ஒட்டிக் கொண்டாற்போலிருந்தது. காலைப் பிடுங்கி எடுக்கப் பார்த்தான்...த்வாக்!
அவன் செருப்பு பிய்ந்து விட்டது.உண்மையாகவே, துரதிருஷ்டம் தனக்கு வரப்போகிறது என உணர்ந்தான் கோபி. இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாதோ...
ஒரே ஒரு விநாடி தோன்றிய இந்தச் சிந்தனையை உடனே ஒதுக்கி விட்டு, பிய்ந்து போன செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டான். அதில் பிசுபிசுப்பான எச்சங்கள் படிந்திருந்தன. இரண்டு செருப்புகளையும் எரிச்சலோடு தூக்கி எறிந்தான். தாழ்வாரத்துக்குள் நடந்தான். உள்ளே உற்று நோக்கிய போது, மீண்டும் கல்லறை திரும்பினாற்போலிருந்தது. அடிவயிற்றில் நிஜமான பயத்தை உணர்ந்தான் கோபி. கண்களைக் கசக்கிக் கொண்டு...துர்ர்ர்....என சத்தமெழுப்பினான்.
பிறகு, தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, கண்களைத் திறந்து பார்த்தான். உள்ளே கல்லறை எப்போதும் போல், அங்கேயே இருந்தது. அது இடமோ, வலமோ திரும்பியிருக்கவில்லை.
அவன் இதயம் சத்தமாக அடித்துக் கொண்டது. அன்று மாலையில் இருந்த கோபியாய் இப்போது அவன் இல்லை.
"இந்த மண்ணாங்கட்டிச் சவால்..." திரும்பவும் அதே எண்ணம் வந்தது. ஒரு முறை தன் கையில் இருந்த சுத்தியலையும், ஆணியையும் பார்த்து விட்டு விரைவாக முன்னே நடந்தான். சமாதியை நெருங்கியதும் அதன் மூலைமுடுக்கெல்லாம் நோட்டமிட்டான் கோபி. திட்டுத்திட்டாக நிலா வெளிச்சம் எல்லா இடங்களிலும் சிதறியிருந்தது. கூரையைப் பார்த்தான். அச்சோ, என்ன இது?
ஒரு பெரிய கருமேகம் கூரையில் தொங்கிக் கொண்டிருந்தது. கோபியின் பார்வை பட்டவுடனே, அது ஏவுகணையைப் போல் வெகுவேகமாக அவனை நோக்கி வந்தது. ஒன்று..இரண்டு... மூன்று...அம்மேகம் பெரிய பெரிய பந்துகளாக காற்றில் பிரிந்தது.
கோபி சுதாரிப்பதற்குள், வௌவால்கள் மேலிருந்து வந்து அவன் தலையைப் பலமுறை அறைந்து விட்டிருந்தன. அவன் கல்லறையின் தலைமாட்டில் போய் விழுந்தான். இப்போது வௌவால்கள் கூரையின் மறுபக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. கோபி மிகவும் அரண்டு விட்டான்.
"இனி நான் ஒரு வினாடியையும் வீணாக்கக் கூடாது.."
என்று நினைத்த கோபி, ஆணியைக் கல்லறையின் தலை மாட்டில் வைத்துச் சுத்தியலால் அடித்தான். அவனது கை நடுங்கிக் கொண்டிருந்ததால் சுத்தியல் சரியாக ஆணியின் மேல் அடிக்கவில்லை. இன்னொரு முறை முயன்றான்... தக்க்க்!.
சத்தம் பலமாக இருந்ததால் அவன் திடுக்கிட்டான். ஆனால், ஆணி தரையில் இறங்கியிருந்தது.
அப்பாடா! கோபியின் கலக்கம் தீர்ந்தது. குதித்து எழுந்தான். ஆனால் அவனால் எழுந்திருக்க இயலவில்லை. பொத்தென்று தரையில் விழுந்தான்.
அவனுடைய சட்டையை யாரோ பிடித்து இழுப்பது போலிருந்தது. கோபி மீண்டும் எழ முயற்சி செய்தான்; இம்முறை அவன் இன்னும் பலமாகக் கீழே இழுக்கப்பட்டுத் தலையைத் தரையில் மோதிக் கொண்டான்.
தன் பலமனைத்தையும் திரட்டி மீண்டும் எழப்பார்த்தான் கோபி. ஆனால் அவன் மீண்டும் தரைக்கு இழுக்கப் பட்டான். ‘சமாதி தான் என்னை இழுக்கிறதோ.." என்று நினைத்த மாத்திரத்தில் அவனுடைய கை, கால்கள் சில்லிட்டு விட்டன. சமாதி சுழன்று கொண்டிருந்தது. சுவர்கள் எல்லாம் கோபியை வேகமாக நெருங்கி வந்து சூழ்ந்தன. கோபி மயக்கமாகும் சமயம், ‘கயிறு! எனக்குக் கயிறு வேண்டும்!’ என்று யாரோ கிசுகிசுப்பதைக் கேட்டான். அதற்கப்புறம், அவனுக்கு ஏதும் நினைவில் இல்லை.
கோபி கண் விழித்த போது, அவன் தனது வீட்டில் இருந்தான். வீடு முழுக்க நிறையப்பேர் இருந்தனர். எல்லாரும் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவனுடைய விழி அசைவைப் பார்த்த ராகவன் அவனுடைய நெற்றியைத் தொட்டு, "உனக்கு ஒன்றும் ஆகவில்லை கோபி! நீ உன் சட்டையோடு சேர்த்து ஆணியை அடித்து விட்டாய்! அவ்வளவு தான்!" என்று விளக்கினான். பிறகு, "ரொம்பப் பயந்து விட்டாய் போலும்!"என்றான். எல்லாரும் உரக்கச் சிரித்தனர். சங்கடமான கோபி கண்களை மீண்டும் மூடிக்கொண்டான்.
" டேய்! இங்கே பார்! இது உனக்கு!" என்றான் ராகவன்.
கோபி கண்களைத் திறந்து பார்த்த போது, ராகவனின் கைகளில் புத்தம்புது மட்டை இருக்கக் கண்டான்.
கோபி அவனை ஆச்சர்யத்தோடு பார்த்தான். "நீ கட்டாயம் அங்கு வருவாய்; சவாலிலும் ஜெயிப்பாய் என்று எங்களுக்குத் தெரியும்."என்றான் ராகவன்.
"நடுவே ஏதோ சின்னச் சின்னப் பிரச்சினைகள். அவ்வளவு தானே! இந்தா, இந்த மட்டையை வாங்கிக்கொள்."
கோபி கண்களை மீண்டும் மூடிக்கொண்டான். ஆனால் இம்முறை தன் நண்பர்களுக்கு நன்றி சொல்வதற்காக!