raja urvalam

ராஜ ஊர்வலம்

பார்வதியும் அவளுடைய சகோதரன் இலக்குமனனும் பாடலிபுத்திர நகரில் வசிக்கிறார்கள் அவர்கள் அருகாமையிலுள்ள புத்த விஹாரத்திற்குக் குடம், சட்டி போன்ற மட்பாண்டங்களைக் கொடுக்கச் சென்றபோது, அங்கு ஒரு சுவாரசியமான மனிதரைக் கண்டு நல்ல நட்பு கொண்டனர். அந்நபர் அவர்களிடம் தான் ஓர் ஓய்வுபெற்ற போர்வீரர் என்றும் பேரரசர் அசோகரின் அரண்மனையில் வேலை செய்வதாகவும், மாமன்னரைப் பார்க்க அவ்விருவர் கொண்டிருந்த அவா சீக்கிரத்தில் நிறைவேறும் என்றும் கூறினார். பிறகு ஒருநாள், ராஜ ஊர்வலம் அவர்கள் வீட்டைத் தாண்டிச் சென்றபோது, அக்குழந்தைகளுக்கு ஒரு வியப்புமிக்க நிகழ்ச்சி காத்திருந்தது. அந்த வியப்புமிக்க சம்பவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள, மௌரிய காலத்தில் பின்னப்பட்டுள்ள இந்த அருமையான கதையைப் படியுங்கள்!

- Mahalakshmi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

விடியற்காலை நேரத்தில் பார்வதியும் அவளுடைய சகோதரன் இலக்குமனனும் மடத்தின் உயரமான வாசல் வழியே உள்ளே சென்றனர். அவர்கள் தந்தை ஒரு குயவர். அவர்கள் மண் சட்டிகளும் தட்டுகளும், கிண்ணங்களும் கோப்பைகளும் கொடுத்துச்செல்ல வந்திருந்தனர்.

கூடையை கீழே வைத்துவிட்டு முற்றத்தைச் சுற்றிக் நோட்டம் விட்டாள் பார்வதி. சுற்றிலும் சிறிய அறைகள் பல வரிசையாக இருந்தன. “இங்குதான் புத்த பிக்குகள் தங்கியிருக்கிறார்களா?” என்று கேட்டாள்.

“ஆமாம்” என்றான் இலக்குமனன். “இந்த அறைகளில் தங்கியிருந்து பகவான் புத்தரை அங்கிருக்கும் கோயிலில் வழிபடுவார்கள். இந்த இடத்தை விஹாரம் என்பார்கள்.”

இருவரும் அவரவர் கூடைகளை எடுத்துக்கொண்டு மடத்தின் சமையலறைக்குச் சென்றனர்.

அங்கு காவி ஆடை அணிந்த இரு பிக்குகள் சுறுசுறுப்பாகச் சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

“ஆ! நீங்கள் குயவரின் குழந்தைகளாகதான் இருக்கவேண்டும்” என்று ஒருவர் சிரித்துக்கொண்டே கூறினார். “இங்கு விஹாரத்துக்கு வருவது இதுதான் முதல்முறையா?”

“ஆமாம்” என்று பதிலளித்தான் இலக்குமனன். “இந்த இடம் அழகாக இருக்கிறது... இங்கு தோட்டங்களும் குளங்களும்...”

“மாந்தோட்டம்கூட இருக்கிறது!” என்று சேர்ந்துகொண்டாள் பார்வதி. “எங்கள் கோயிலை நீங்கள் பார்க்கவேண்டும்” என்று சொன்னார் பிக்கு.

பின், அவர்கள் எடுத்துவந்த பாண்டங்களின் மதிப்புக்கு கைநிறைய பித்தளைக் காசுகளாய் கொடுத்தார். மர்மப் புன்னகையுடன் அவர் மேலும் சொன்னார், ”கோவிலில் சுவாரசியமான நபர் ஒருவரைச் சந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது.”

பார்வதியும் இலக்குமனனும் கோயிலுக்குள் நுழைந்ததும் அவர்களது கண்கள் வியப்பால் விரிந்தன. அவ்வளவு அழகான இடம் அது!

அங்கிருந்த மரத்தூண்களில் நுண்ணிய விவரங்கள் நிறைந்த வடிவங்கள் செதுக்கபட்டு இருந்தன, சுவர்களில் வரைந்திருந்த ஓவியங்கள் அற்புதமாக இருந்தன. நெசவு செய்யப்பட்ட மென்மையான பாய்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்தன. முன்னால் சன்னிதி இருந்தது. அதில் பகவான் புத்தருடைய கால்களின் சின்னம் வட்டமான கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. அது மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருகில் அகலவாயுடைய ஒரு கிண்ணத்திலிருந்து வாசனைப்புகை வெளியே வந்துகொண்டிருந்தது.

அங்கு ஒருவர் சன்னிதியின் முன் அமர்ந்து துதித்துக் கொண்டிருந்தார். அவரது விரல்கள் சபமாலையின் மணிகளை உருட்டிக்கொண்டிருந்தன. அவர் கீழாடையாகப் பருத்தியாலான அந்தரியம் எனப்படும் கச்சை அணிந்திருந்தார். மேலாடையாய் ‘மசிலின்’ துணியைச் சால்வையைப் போல் அணிந்திருந்தார். அதை உத்தரியம் என்பார்கள். அவருடைய கழுத்து, காதுகள் மற்றும் கைகளிலிருந்து தங்க நகைகள் ஜொலித்துக் கொண்டிருந்தன.

சிறுவர்கள் நெருங்கும் ஓசை கேட்டு, அவர் கண்களைத் திறந்தார்.

“ஓ! மன்னிக்கவும், தங்களின் தியானத்தைக் கலைத்துவிட்டோமா?” என்றாள் பார்வதி அவசரமாய்.

அந்த நபர் சிரித்தார் “இல்லை! நீங்கள் இருவரும் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?”

“நாங்கள் சமையலைறையில் மடத்திற்குத் தேவையான மண்பாண்டங்கள் கொடுக்க வந்திருக்கிறோம்” என்று விளக்கினான் இலக்குமனன். “எங்கள் தந்தை ஒரு குயவர்.”“ஆஹா!” என்றார் அவர், முன்னே சாய்ந்தபடி.“உங்களுக்கு குயவரின் சக்கரத்தில் வேலை செய்ய வருமா?”“நாங்கள் முயற்சி செய்து பார்த்தோம்” என்று பார்வதி தலையை ஆட்டினாள். “ஆனால்...”“நாங்கள் செய்யும் பானைகள் கோணலாகவே வருகின்றன!” என்று இளித்தான் இலக்குமனன்.“எனக்குப் பானைகளை வண்ணங்களால் அலங்கரிப்பதுதான் மிகவும் பிடித்தது” என்று பார்வதி சேர்ந்துகொண்டாள். “சுண்ணாம்பிலிருந்து வெள்ளை நிறமும், எண்ணை விளக்கின் கரியிலிருந்து கருப்பு நிறமும் உபயோகிப்பேன்.”

“என்னென்ன வடிவங்கள் வரைவாய்?” என்று அந்த நபர் உற்சாகத்துடன் கேட்டார்.

“பூக்களும் மேகங்களும் இலைகளும் பறவைகளும்...” என்றாள் பார்வதி, மனக்கனவில் இதையெல்லாம் காண்பதைப்போல்.“ஆ! உன்னைப்போலவே வரைவதற்கு எனக்கும் ஆசைதான்!” என்றார் பெருமூச்சுடன்.“ஆனால் எனக்குத் தெரிந்ததெல்லாம் போரும் வாளும்தான்.” “அப்படியானால், நீங்கள் புத்தபிக்கு இல்லையா?”அவர் இல்லை என்று தலையாட்டினார். “நான் போர்வீரனாக இருந்தேன். ஆனால், பகவான் புத்தரின் அறிவுரைகளுக்குக் கட்டுப்பட்டு போர் புரிவதை நிறுத்திவிட்டேன்.” “சமையலறையிலிருந்த பிக்கு தங்களைத்தான் சொன்னாரா? சுவாரசியமானவர் ஒருவர் விஹாரத்தில் இருக்கிறாரென்று? நீங்கள் முக்கியமான மனிதரா?”அம்மனிதர் சிரித்தார், “நான் அப்படி நினைக்கவில்லை! நான் வெறும் ஓய்வுபெற்ற ஒரு போர்வீரன். அரசரின் அரண்மனையில் வேலை செய்பவன்.”

“ராஜகம்பீர அசோக மாமன்னரின் அரண்மனையிலா?" என்ற இலக்குமனனின் கண்கள் களிப்பில் மின்னின. எவ்வளவு அதிர்ஷ்டசாலி நீங்கள்!”“ஏன்?” என்றார் அவர் விவரம் புரியாமல்.“ஏனெனில் நீங்கள் மாமன்னரை தினந்தோறும் காணமுடியும் அல்லவா! உங்களுக்குத் தெரியுமா, நாங்கள் பிறப்பிலிருந்து இங்கே பாடலிபுத்திராவிலேயே வசித்தபோதும், மாமன்னரை ஒருமுறைகூட பார்த்ததில்லை.”அந்நபர் தலையைப் பின்சாய்த்துக் குலுங்கிச் சிரித்தார். “அப்படியா! என்னைக் கேட்டால், அரசர் அப்படியொன்றும் காண்பதற்கு ஏற்றவர் அல்ல! கொஞ்சம்கூட அழகே இல்லை!”“அவர் அழகுதான்!” என்றாள் பார்வதி உறுதியாக. “என்ன இருந்தாலும் அவர் உலகிலேயே மிகச் சக்திவாய்ந்த மன்னர் இல்லையா.”

“நீ சொன்னால் சரி” என்றார் அவர், போவதற்கு எழுந்தபடி. குழந்தைகளின் தலைமேல் கைவைத்து ஆசிர்வதித்து “கண்டிப்பாக நீங்கள் அரசரைச் சந்திப்பீர்கள்... யாருக்குத் தெரியும் அவரே உங்களை ஒருநாள் ஆச்சர்யப்பட வைப்பாரோ என்னவோ!” என்று சிரித்துக்கொண்டே நடந்து சென்றார்.சில நாட்கள் சென்றன. குழந்தைகள் அவர்களின் தந்தைக்கு வேலையில் உதவி செய்துகொண்டிருந்தனர். இலக்குமனன் களிமண்ணைப் பிசைந்துகொண்டிருந்தான். அவர்களின் தந்தை சக்கரத்தில் மண்விளக்குகள் செய்துகொண்டிருந்தார். பார்வதி, செய்து முடித்த விளக்குகளை வெய்யிலில் காய்வதற்கு வைத்துக்கொண்டிருந்தாள்.திடீரென, அவர்களது நண்பன் கேசவன் கூச்சலிட்டபடி ஓடி வந்தான். “சீக்கிரம் வாருங்கள்! ராஜ ஊர்வலம் இவ்வழியே வந்துகொண்டிருக்கிறது.”ஒரு நொடியில் மூவரும் மடத்தை நோக்கிச் செல்லும் வீதிக்கு ஓடிச் சென்றனர்.

அசோகரும், பேரரசியும் தொழுவதற்காக மடத்துக்குச் செல்கிறார்களென்று கேசவன் கூறினான். இராஜ ஊர்வலம் அவர்களை நோக்கி மெதுவாக வருவதை, மூவரும் வீதியோரம் நின்றபடி கண்சிமிட்டாமல் பார்த்தனர்.முதலில் வந்தவர்கள் வீரநடை போட்டுக்கொண்டு கையில் ஈட்டிகளைச் சுமந்துகொண்டு இருந்த கால்படை வீரர்கள். அவர்களைப் பின்தொடர்ந்து பாய்ந்துசெல்லும் குதிரைகள் பூட்டிய ரதங்கள் வந்தன. அதற்குப் பின்னால், அவர்களை வியக்கச் செய்த பெண் வீரர்களின் அணிவரிசை. அவர்கள் கால்சராய், காலணிகள் அணிந்து வீரநடை போட்டு அணிவகுத்து வந்தனர். அவர்களின் தொப்பிகள் கூர்முனையுடன் இருந்தன, நீண்ட பெரிய வாட்களைச் சுமந்து வந்தனர்.“பெண் வீரர்களா?” என்று வியந்தாள் பார்வதி.“உனக்குத் தெரியாதா?” என்று சிரித்தான் கேசவன்.“மாமன்னரை எப்போதும் பெண் வீரர்கள்தான் காப்பர். அவர்கள் மலைப்பகுதிகளிருந்து வரும் வீரமிக்க போராளிகள்.”

பின்னால், முரசுகொட்டுவோர் வீரநடைக்குத் தாளம் போட்டபடி வந்தனர்.பெரிய யானை ஒன்று அவர்களைத் தொடர்ந்து அசைந்தாடி வந்தது. யானையின் காதுகளிலும் துதிக்கையிலும் வண்ணச் சித்திரங்கள் வரையபட்டிருந்தன. யானையின் முதுகின் மீதிருந்த ‘ஹௌதா’வில் அரசர் அசோகரும் அரசியும் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்குப் பின்னால் காவலன் ஒருவன் அமர்ந்து குடை பிடித்துக்கொண்டிருந்தான். மொத்தத்தில் ராஜ ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது!யானை நெருங்கி வர, இலக்குமனன் மாமன்னரின் முகத்தைப் பார்க்க எண்ணி மேலே நோக்கினான். அவன் வாய் வியப்பில் திறந்தபடி நின்றது. அங்கு மேலே விலையுயர்ந்த ஆடைகளும் நகைகளும் சரிகை தலைப்பாகையும் அணிந்துகொண்டிருந்தவர் வேறு யாருமில்லை. அவர்கள் புத்த விஹாரத்தில் சந்தித்த அதே நபர்தான்!“பார்வதி, அங்கு பார்!” என்று கூவினான், “நாம் விஹாரத்தில் சந்தித்த அதே நண்பர்தான்!”

இருவரும் மகிழ்ச்சியால் கூச்சலிட்டு உற்சாகமாய்க் குதித்தனர். அசோகப் பேரரசரும் கூச்சல் வரும் இடத்தை நோக்கித் திரும்பினார். சிறுவர்கள் இருவரும் நினைவுக்கு வந்தார்கள். கையை ஆட்டி, புன்னகைத்தார். குழந்தைகள் பெருமகிழ்ச்சியுற்றனர்.கேசவன் அவர்களைக் கண்விரித்து நோக்கினான், “ஓ! மன்னர் உங்களையா பார்த்து இப்போது கையை ஆட்டினார்? நீங்கள் அவரை சந்தித்திருக்கிறீர்களா?”“ஆமாம்! விஹாரத்தில்... எங்களை அவர் ஆசிர்வதித்தார்! கனவு நிஜமானதைப்போல் அல்லவா இருக்கிறது!” பார்வதியும் இலக்குமனனும் ஆனந்தத்தில் மிதந்தனர்.“அதிர்ஷ்டசாலிகள்!" என்று சற்றே பொறாமையுடன் கூறினான் கேசவன்.

விநோதமான வரலாற்றுக் குறிப்புக்கள்

1. பார்வதியும் இலக்குமனனும் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பேரரசர் அசோகவர்தனர் என்ற மௌரிய மன்னரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தார்கள். அவர்கள் வசித்திருந்த ஊரின் பெயர் பாடலிபுத்திரம்; இன்று அதைப் ‘பாட்னா’ என்ற பெயரால் அறிவோம்.2. பௌத்தர் ஆனபின்பு அசோக மாமன்னர் போர் செய்வதை நிறுத்திவிட்டார். கலிங்கப் போரில் நடந்த பயங்கரக் கொலைகளையும் குருதி வெள்ளத்தையும் பார்த்தபிறகு அவர் பௌத்தரானார். அசோக ஸ்தம்பம் என்ற தூண் இந்தியக் குடியரசின் சின்னமாகும். அது இவரின் ஆட்சிக் காலத்தில்தான் செதுக்கபட்டது.

விநோதமான வரலாற்றுக் குறிப்புக்கள்3. தூணில் எழுதியிருக்கும்படி அசோகவர்தனரின் முழுப்பெயர்- அசோகா தேவானாம் பியதாசி என்றாகும். ”தேவர்களுக்குப் பிரியமானனும் அழகு பொருந்தியவனுமான அசோகா" என்று அதற்குப் பொருளாகும்.4. அசோக மன்னர்தான் அரைக்கோள வடிவம் கொண்ட ஸ்தூபியை முதலில் கட்டினார். பௌத்தர்களால் ஸ்தூபா புனிதமாகக் கருதப்படுகிறது. மிகப் பழமையான ஸ்தூபியாக விளங்கும் ஜான்சி ஸ்தூபியை, மத்தியப் பிரதேசத்தில் இன்றைக்கும் காணலாம்.

விநோதமான வரலாற்றுக் குறிப்புக்கள்

5. மௌரிய காலத்தில் மக்கள் என்ன சாப்பிட்டனர்? இன்றைக்கு நாம் சாப்பிடும் பல உணவு வகைகளை. தித்திப்பான சாதம், பாயசம் என்பதைப்போல் பால் பண்டாரம், ரொட்டி, பூரி, நெய், தயிர், மற்றும் மாங்காய் ஊறுகாய் கூட அவர்களும் சாப்பிட்டார்கள்.6. மக்கள் மூன்று துண்டுகளை உடையாக அணிந்திருந்தார்கள் - லுங்கி அல்லது வேட்டி போல கட்டும் ‘அந்தரியா’;  ‘உத்தரியா’ என்ற நீளமான துண்டு,  அது சால்வையைப் போல் மேலே போர்த்திக்கொள்ள; அதோடு காயபந்த என்ற அந்தரியாவை இடுப்பில் நிற்கவைக்கும் பட்டை.