பல ஆண்டுகளுக்கு முன் மியான்மாரை ராஜா அனவரதா ஆண்டு வந்தார். அவர் புத்த பெருமானுக்கான கோவிலான பகோடா ஒன்றைக் கட்ட ஆசைப்பட்டார்.
தன்னுடைய மக்களிடம், “நான் என்னுடைய வெள்ளை யானையை உலாவ அனுப்புவேன். அது இளைப்பாற நிற்கும் இடத்தில் பகோடாவை கட்டுவோம்” என்று கூறினார்.
அந்த வெள்ளை யானை ஒரு குன்றின் மீது போய் நின்றது. ராஜா, “நாம் இந்த இடத்தில் புத்த பெருமானுக்கு ஒரு பகோடா கட்டுவோம்” என்று கூறினார்.
பகோடா விடுவிடுவென்று உயர்ந்து வானத்தை முட்டி நின்றது. புத்தருக்கு நன்றி சொல்வதற்காக, ராஜா மெதுவாகப் பகோடாவின் உச்சியைப் பார்க்க நிமிர்ந்தார்.
தொப்! அவருடைய கிரீடம் கீழே விழுந்து உருண்டு ஓடியது. அனைவருக்கும் பதட்டமாக இருந்தது. மக்கள் கிரீடத்தை எடுத்து ராஜாவிடம் கொடுத்தனர்.
ராஜா தினமும் பகோடாவிற்கு விஜயம் செய்தார். அவரால் பகோடாவின் வாசல் படி வரை மட்டும்தான் பார்க்க முடிந்தது. அதற்கு மேல் பார்க்க முயன்றால் தொப் என்று அவருடைய கிரீடம் விழுந்துவிடும்.
இதனால் அவருடைய தூக்கம் கெட்டது. இந்த உயரமான பகோடாவைப் பார்க்க பல கோடி மக்கள் வருவார்களே, அவர்களுடைய தொப்பிகளும் கீழே விழுந்தால் நன்றாகவா இருக்கும்? இந்தப் பிரச்சனையை எப்படியாவது தீர்த்தாக வேண்டும்.
மறுநாள் அவர் பகோடாவைக் கட்டிய கலைஞரை அழைத்தார். புன்னகைத்தபடியே அவரை பகோடாவின் முன்பு ஒரு சிறிய குளத்தை வெட்டச் சொன்னார்.
மறுநாள், ராஜா பகோடாவை பார்க்கச் சென்றபோது குனிந்து குளத்தைப் பார்த்தார்.
ஆகா! அந்த அழகிய, உயரமான பகோடா உச்சி வரை நீரில் பிரதிபலித்து நன்றாகத் தெரிந்தது.
ராஜாவுக்கு மகிழ்ச்சி. கிரீடம் கீழே விழாமல் பகோடாவை அவரால் முழுமையாகப் பார்க்க முடிந்தது.