ரீத்தியின் விடுமுறைகள் தொடங்கிவிட்டன. ஆனால், ரீத்தி மகிழ்ச்சியாக இல்லை. அவளுக்கு விடுமுறை என்றாலே பிடிக்காது. அவளுக்கு பள்ளிக்குச் செல்லத்தான் விருப்பம்.பள்ளியில் அவளுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். வீட்டில் அவளோடு விளையாட யாருமே இல்லை.
அவளுக்கு பொம்மைகளும் புத்தகங்களும் கொண்டுவந்து, கதைகளைச் சொல்ல அப்பா இருந்தார். ரீத்திக்கு அது மிகவும் பிடிக்கும். அவள் அப்பா தினமும் காலைவேளையில் யோகா செய்வார். ரீத்திக்கு அதுவும் பிடிக்கும். தானும் அதுபோலச் செய்ய முயல்வாள்.
அவளுக்கு கவிதை எழுதக்கூடிய, கம்ப்யூட்டரில் வேலை செய்யும் அம்மா இருந்தார். ரீத்திக்கு அவள் அம்மாவுடன் சேர்ந்து கம்ப்யூட்டரைப் பார்ப்பது பிடிக்கும். அதோடு அவள் அம்மாவின் வயிற்றைப் பார்க்கவும் அவளுக்குப் பிடிக்கும்! அம்மாவின் வயிறு பெரியதாகவும் வட்டமாகவும் ஆகிக்கொண்டு வந்தது. ஏனென்றால், அதற்குள் ஒரு பாப்பா இருந்தது.
“சீக்கிரமே உன்னோடு விளையாட ஒரு சின்னத் தம்பியோ தங்கையோ வரப்போகிறார்கள்” என்று அவள் அம்மா சொன்னார். ரீத்திக்கு அது பிடித்திருந்தது. ஆனால், இப்போது அவளோடு விளையாட யாருமில்லை. அவள் வீட்டின் அருகே அவளுடைய நெருங்கிய நண்பர்கள் ஒருவர் கூட இல்லை.
பிறகு ஒரு சாயங்கால வேளையில் அழைப்பு மணி ஒலித்தது. அவர்களுடைய பக்கத்து வீட்டுக்காரரான தாஸ் மாமா, பச்சைநிறக் கிளி ஒன்று இருந்த கறுப்புக் கூண்டை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
“நாங்கள் ஊரை விட்டுப் போகிறோம்” என்றார் தாஸ் மாமா. “உனக்கு செல்லப்பிராணியாக எங்களுடைய மித்து வேண்டுமா? அவனால் பேச முடியும்!”
அப்பாவும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பறவைகளைக் கூண்டில் அடைப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால், ரீத்திக்கு சந்தோஷம் தாங்கவில்லை. “ஆமாம் மாமா!” என்று ஒரு பெரும் புன்சிரிப்புடன் அவள் சொன்னாள். இப்படியாக மித்து, ரீத்தியின் புது நண்பனாக ஆனான்.
“ஹலோ மித்து!” என்றாள் ரீத்தி.
மித்து அவளைப் பார்த்து, “ஹலோ! ஹலோ!” என்றான். ரீத்தி ஆச்சரியமடைந்தாள். “உன் பெயர் என்ன? “ என்று கேட்டாள்.
“ஹலோ” என்றான் மித்து.“இல்லை” என்றாள் ரீத்தி. “உன் பெயர் மித்து. சொல்லு மித்து.”“ஹலோ” என்றான் மித்து.
“இல்லை! இல்லை!” என்றாள் ரீத்தி, தலையை ஆட்டியபடி. “மீண்டும் முயற்சி செய்வோம். என் பெயர் ரீத்தி. மித்து, கவனமாகக் கேள். என் பெயர் ரீத்தி. என் பெயர் என்ன?”
“ஹலோ” என்றான் மித்து.
“இல்லை!” ரீத்தி சிரித்தாள். “மித்து, நீ ரொம்ப குறும்புக்காரன்!”
தினமும் ரீத்தி மித்துவிற்கு புது வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்வாள். “சொல்லு அப்-பா, சொல்லு அம்-மா, சொல்லு ரீ-த்தி.”
ஆனால் மித்து “ஹல்-லோ” என்பதை மட்டுமே சொல்வான்.
ஒருநாள் அம்மா ரீத்தியை நகரத்தின் இன்னொரு பகுதிக்கு அவள் நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்துச் சென்றார். ரீத்தி தன் நண்பர்களை எல்லாம் சந்தித்து மகிழ்ந்தாள். மித்துவுக்கு பிறந்தநாள் கேக்கின் ஒரு துண்டை எடுத்துவந்தாள்.
ஆனால் அவன் எங்கே?
“அம்மா, மித்து எங்கே?” அழுதபடியே ரீத்தி கேட்டாள். ஒவ்வொரு அறையாக ஓடினாள் அவள்.
“எனக்குத் தெரியாது” என்றார் அம்மா. “ஆனால் கவலைப்படாதே. அவனைக் கண்டுபிடிக்கலாம்!”
அப்போது அப்பா வீட்டுக்கு வந்தார். அவர் கையில் மித்து தன்னுடைய கூண்டில் இருந்தான்.
“ஹலோ!” என்றான் மித்து.
“நான் உன்னுடைய நண்பனை கொஞ்சம் வெளிக்காற்றை சுவாசிப்பதற்காக பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன்” என்றார் அப்பா.
ரீத்திக்கு நிம்மதியாக இருந்தது! அவள் மித்துவுக்கு பிறந்தநாள் கேக்கைக் கொடுத்தாள். ஆனால், அவனுக்கு அது பிடிக்கவில்லை.
ரீத்தியின் விடுமுறை நாட்கள் முடிவுக்கு வந்த சமயம், பச்சைக்கிளிக் கூட்டம் ஒன்று அவள் ஜன்னலின் வெளிப்புறம் இருந்த பெரிய மரத்தில் வந்து உட்கார்ந்தது. அவை தங்களுக்குள் கூச்சலிட்டுக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தன.
மித்து அவனுடைய கூண்டிற்குள் பரபரப்பாக அங்குமிங்கும் உலவிக்கொண்டு இருந்தான். ரீத்தி, கூண்டை ஜன்னலுக்கு அருகில் கொண்டுபோய் வைத்தாள். அவன் கூச்சலிட்டான். மேலும் கீழும் குதித்து இறக்கைகளை படபடவென்று அடித்துக்கொண்டான்.
ரீத்தி அதைப் பார்த்து “அவர்கள் உன்னுடைய நண்பர்களா, மித்து? “ என்று கேட்டாள். மித்து பதில் ஏதும் சொல்லவில்லை.
அவன் மரத்தில் இருந்த கிளிகளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
வந்தது போலவே கிளிகள் வேகமாகப் பறந்தும் விட்டன.
“அவர்கள் சொன்னது என்ன, மித்து?” ரீத்தி கேட்டாள்.
“ஹலோ! ஹலோ!” என்று வருத்தத்துடன் சொன்னான் மித்து.
ரீத்தியின் விடுமுறைகள் நிறைவடைந்தன. அன்று பள்ளியின் முதல் நாள். ரீத்தி அவள் நண்பர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்தாள்.உணவு இடைவேளையின்போது அவள் நண்பர்களுடன் சந்தோஷமாக விளையாடினாள். பள்ளியின் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி இருந்த பெரிய மரங்களில் கீச்சிடும் பறவைகள் நிறைந்திருந்தன.
ரீத்தி பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றவுடன், மித்து கூண்டில் அமைதியாக உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தாள்.
“ஹலோ மித்து!” என்று மெல்லச் சொன்னாள். அவன் அவளைப் பார்த்தான் ஆனால் ஏதும் சொல்லவில்லை.
ரீத்தி அவள் பள்ளிப் பையைக் கீழே வைத்தாள். ஜன்னலைத் திறந்தாள். பிறகு கூண்டின் கதவை திறந்தாள்.
“போ, மித்து!” என்றாள் அவள். “போய் உன் நண்பர்களோடு சேர்ந்துகொள்.”அவன் அவளைப் பார்த்தான்.
“போ, மித்து!” அவள் மீண்டும் சொன்னாள். “பறந்து போ!”
மித்து கூண்டைவிட்டு வெளியே வந்தான். கடைசியாக ஒருமுறை ரீத்தியை பார்த்து, “ஹலோ” என்றான். பின், இறக்கைகளை விரித்து தன் நண்பர்களை நோக்கிப் பறந்து சென்றான்.
யாருக்கு செல்லப்பிராணி தேவை?
தன்மீது அன்பு செலுத்தக் கூடிய, விசுவாசமான நண்பர்களை விரும்பும் எவருக்கும் ஒரு செல்லப்பிராணி தேவைப்படுகிறது. நீங்கள் தனிமையாகவோ, தொலைந்துபோனது போன்றோ அல்லது பித்துப் பிடித்தாற் போலவோ உணருகிறீர்கள் என்றால் ஒரு செல்லப்பிராணி கட்டாயம் எதையாவது செய்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். ஒரு செல்லப்பிராணி உங்களுடன் விளையாடும். உங்களை நல்லவிதமாக உணரச்செய்யும். பல முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும். உங்கள் வாழ்வில் முடிவில்லாத சந்தோஷத்தை அளிக்கும். யார்தான் இவற்றை விரும்பமாட்டார்கள்?
நீங்கள் செல்லப்பிராணி வைத்திருக்க வேண்டுமா, வேண்டாமா?
செல்லப்பிராணிகள் மகிழ்ச்சியைத் தரும்போதிலும், உடனடியாக அவற்றைப் பெற முயற்சி செய்யவேண்டாம்! நிதானமாக யோசியுங்கள்.• உங்கள் பெற்றோர்கள், நீங்கள் செல்லப்பிராணி வளர்ப்பதை விரும்புவார்களா?• உங்களுக்கு நிஜமாகவே செல்லப்பிராணி வேண்டுமா? செல்லப்பிராணி என்பது வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டிய ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள். சலிப்படைந்ததும் தூக்கி எறியும் விளையாட்டுப் பொருள் அல்ல அது.• செல்லப்பிராணிகளுக்கு உணவு, சுத்தமான தண்ணீர், உடற்பயிற்சி, மற்றும் அன்பு தேவை. அவைகளுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். அவற்றை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். குளிப்பாட்டிவிட வேண்டும். ஒவ்வொரு நாளும் இவை அதிகமான வேலை வாங்கும் விஷயங்கள். உங்களுக்கு அதற்கான நேரம் இருக்கிறதா?• உங்கள் செல்லப்பிராணி சேறு படிந்த தன் கால்களால் இருப்பிடத்தை அசுத்தப்படுத்தும் போதும், உங்களுடைய விருப்பமான ஷூக்களை மென்று தின்னும்போதும் உங்களால் அவற்றை மன்னிக்க இயலுமா?
நான் செல்லப்பிராணி வளர்ப்பதற்குத் தயாராக இருக்கிறேனா?
உங்களுடைய நெருங்கிய நண்பர் செல்லப்பிராணி வைத்திருக்கிறார். உங்களுக்கு அதைப்போன்ற ஒன்று உங்களிடமும் இருக்கவேண்டும் என்று விருப்பம்! எனவே நீங்கள் ஒரு நாயையோ, பூனையையோ, ஏன் ஒரு எலியையோ செல்லப்பிராணியாக வைத்திருக்கலாமா என்று யோசிக்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள். ஒரு செல்லப்பிராணியைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
எனக்கு ஒரு செல்லப்பிராணியை வளர்க்க நேரம் இருக்கிறதா?செல்லப்பிராணி வளர்ப்பு என்பது ஒரு பெரிய பொறுப்பு. பயிற்சி அளிப்பதற்கும், உணவு கொடுப்பதற்கும் அல்லது அதன் மேல் அன்பு செலுத்துவதற்கும் நீங்கள் செல்லப்பிராணியுடன் நேரம்-அதிக நேரம்- செலவிடவேண்டும்.
ஒரு செல்லப்பிராணிக்கு என் வீட்டில் இடம் இருக்கிறதா?பூனைகள், மீன்கள் மற்றும் பறவைகள் போன்ற சிறிய செல்லப்பிராணிகள் எந்த அளவு வீடாக இருந்தாலும் அதற்கு ஏற்றபடி தன்னுடைய வாழும் முறையை மாற்றிக்கொள்ளும். ஆனால் நாய்களுக்கு ஓடுவதற்கும் உடற்பயிற்சி செய்வதற்கும் அதிக இடம் தேவைப்படும்.
எந்த மாதிரியான செல்லப்பிராணி எனக்குத் தேவை?
உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகைச் செல்லப்பிராணி வேண்டுமென்றால், ஒரு கால்நடை மருத்துவரிடமோ அல்லது அதுபோன்ற செல்லப்பிராணி வளர்ப்பவரிடமோ பேசிப்பாருங்கள். அவை என்ன சாப்பிடும், அவற்றின் பழக்கவழக்கங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதன்பின் அவை உங்களுக்கு ஒத்துவருமா என்பதை நன்கு யோசியுங்கள்.
செல்லப்பிராணி வளர்ப்பதற்குத் தகுந்த வசதி என்னிடம் இருக்கிறதா? எல்லா செல்லப்பிராணிகளுக்கும் உணவும் இருப்பிடமும் தேவை. அதன்பின், பரிசோதனைக்காகவும், தடுப்பூசிகளுக்காகவும், செல்லப்பிராணிகளுக்கு உடல் நிலை சரியில்லாத போதும் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.
உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகளுக்கு வரவேற்பு இருக்குமா? உங்களுக்கு விலங்குகளைப் பிடித்திருக்கலாம். ஆனால் உங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அதேபோன்ற உணர்ச்சிகள் இருக்குமா? செல்லப்பிராணியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் குடும்பத்தாரோடு இதுபற்றி நான்கு கலந்து பேசி முடிவெடுங்கள்.