Reka

ரேகா

வழக்கம் போல் மாலை நேரத்துக் கூட்டம், ஏறும் படிகளிலும் நெருங்கப் பிதுங்குகிறது. ரேகாவுக்கு இந்த ஆறேழு மாதத்தில் மெல்லிழையாய் உள்ளே வளைந்து நெளிந்து புகுவதற்குப் பழக்கமாகி விட்டது.

- ராஜம் கிருஷ்ணன்

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

அத்தியாயம் - 1

வழக்கம் போல் மாலை நேரத்துக் கூட்டம், ஏறும் படிகளிலும் நெருங்கப் பிதுங்குகிறது. ரேகாவுக்கு இந்த ஆறேழு மாதத்தில் மெல்லிழையாய் உள்ளே வளைந்து நெளிந்து புகுவதற்குப் பழக்கமாகி விட்டது.

“மேலே போங்கம்மா! முன்னால் போங்க... போங்க சார்!” என்று ‘நடத்துநர்’ என்று அழைக்கப் பெறுபவரின் குரலுடன், மூச்சுத் திணற நிற்பவர்களின் நெருக்கமும் விரட்டினாலும் ரேகாவினால் முன்னேற முடியவில்லை. பெண்களுக்குரிய இருக்கைகளின் பக்கம் நகரவும் இயலாமல் பிடரி முடிகளும், காதோரங்களில் இறங்கிய கருமைகளும், சட்டைகளும், சிகரெட்டு வாசனைகளுமாக நெருக்கும் ஓர் வளையத்துள் சிறைப்பட்ட தளிரிலை போல் ஒண்டிக் கொண்டிருந்த அவளைப் பார்த்து இரங்கிய ஒரு நீலச்சட்டை இளைஞன், “கொஞ்சம் முன்னே லேடீஸ் சீட்டில் இடம் இருக்கு பாருங்க. கண்டக்டர்! லேடீஸ் சீட்டைக் காலி பண்ணச் சொல்லுங்க! யாரோ உக்காந்திருக்கிறார், பாரு!” என்றான்.

அவன் சற்றே இடம் கொடுத்து உதவ, ரேகா ஓரத்து இருக்கைக்கு முன்னேறினாள். நெருங்கியதும் சட்டென்று ஏதோ அதிர்ச்சிக்கு உள்ளானாற்போல் அங்கேயே நின்றாள்.

அந்த இருக்கையில் அமர்ந்திருந்த ‘கனமான’ ஆள் அசையவில்லை. இருவர் அமரக்கூடிய அந்த இருக்கையில் அவன் ஒருவனே அமர்ந்திருந்தான். அதற்குக் காரணம் யாரும் கூறாமலே புலனாயிற்று. சாராய நெடி அவன் பக்கம் இருந்து பிறந்து காற்றில் கலந்து கொண்டிருந்தது. ரேகாவுக்கு அது சாராய நெடி என்று தெளிந்து கொள்ளும் அறிவு இல்லையெனினும், எந்த விதமான பாதிப்புமின்றி வெளியே பார்த்துக் கொண்டு வந்த அவனுடைய தோற்றம் ஒருவகையான அச்சத்தை ஊட்டக் கூடியதாக இருந்தது.

நேராகப் பார்க்கவில்லை என்றாலும், அவனுடைய முகம் இடைவிடாத வெயிலோ, உட்துயரத்தின் வெம்மையோ ஏற்று ஏற்றுக் காய்த்துத் தடித்து விட்டாற் போலிருந்தது. முன் நெற்றியின் இரு புறங்களிலும் ஓடைகளாய் ஒதுங்கிப் பின்புறம் எண்ணெயின்றிப் பரந்து விழுந்த முடியில் நரைகள் தெரிந்தன. ஒரு அழுக்கு நிறச்சட்டை அணிந்திருந்தான்.

நீலச்சட்டை இளைஞன் உள்ளே புழுங்கிய கசகசப்புக்கும் குரல்களுக்கும் அப்பால் உரக்க, “லேடீஸ் சீட்டைக் காலி பண்ணய்யா! லேடீஸ் நிக்கிறாங்க, தெரியல?...” என்று கத்தியும், அவன் கேட்காமல் அமர்ந்திருந்த போது பல குரல்கள் அவனை எழுப்பக் கூச்சல் போட்டன. நீலச்சட்டை இளைஞன் விடவில்லை. முன்னே நசுங்கி வந்து அவன் முதுகில் தட்டினான்.

“யோவ்! எழுந்திரய்யா!”

அவன் திரும்பி உள்ளே பார்க்கையில் ரேகாவுக்கு நெஞ்சு திடுக்கிட்டாற் போலிருந்தது. ஒரு மாதம் கத்தி காணாத கருமைப் பசைப்புடன் கூடிய முகத்தை அவள் அச்சமும், கிளர்ச்சியும் உந்தப் பார்க்கிறாள். கண்களுக்குக் கீழ் திட்டான கருமைகள். பித்தான் போடாத சட்டையினுள் தெரிந்த மார்பு ரோமக் காடாக இருந்தது. அவனுடைய கையில், குருதி கசியும் நிணம் என்று அறிவிக்கும் வகையில் நன்றாகக் கட்டப் பெறாததொரு இலைப் பொட்டலம் இருந்தது.

எல்லோருமாகச் சொல்லால் விரட்டியும், கையால் உசுப்பியும் அவன் எழுந்திருக்கவில்லை. ரேகாவை பார்த்தான். நீலச்சட்டைக்காரனையும், இன்னும் பஸ்சில் உள்ள கும்பலையும் நிதானமாகக் கண்ணோட்டம் விட்ட பிறகு கைப் பொட்டலத்தை மாற்றிக் கொண்டான். எழுந்திருக்காமலே, ரேகாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறான். அருகில் உட்காரட்டும் என்ற பொருள் விளங்க சைகை செய்கிறான்.

“கேட்டியாய்யா? என்ன திமிரு? லேடீஸ் சீட்டில் உக்காந்து வம்பு செய்யிறான். கண்டக்டர்! அந்த ஆளை இழுத்து வெளியே தள்ளு முதல்ல!” என்று ஒரு குரல் கும்பலிலிருந்து சீறி வந்தது.

ஆனால், அந்த நடத்துநருடைய வடிவைப் பார்த்த ரேகா, அவர் இவனுடைய தோற்றத்தைக் கண்டே அஞ்சி நழுவிக் கொண்டிருந்தார் என்று நினைத்தாள்.

“பட்டப்பகல்ல குடிச்சிட்டு ஏறிடறாங்க. கேட்பவங்க கேள்வியே இல்ல. அன்னிக்கொரு நாள் வெறும் காலி டின், ஒரு நாலு லிட்டர் டின் கிரசின் ஆயிலுக்காக கொண்டு போனேன், இதே கண்டக்டர் இறக்கி விட்டான். இப்ப இதுமாதிரி ஆளுங்களை ஏத்திட்டு பேசாமப் போறான். கண்டக்டர்! இறக்கய்யா அந்த ஆளை!” என்று நான்கு புறங்களில் இருந்தும் கூச்சம் வலுத்தது.

‘கண்டக்டர்’ இன்னொரு கோடியில் அப்போதுதான் ஏறிய ஐந்தாறு சீக்கிய இளைஞர்களுக்குச் சீட்டுக் கொடுக்க மொழிக் குழப்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

“ஏம்மா, உட்காரமாட்டியா? நீ எனக்கு மக போல. சும்மா உக்காரு...” என்று அவன் ஆங்கிலத்தில் கூறி மெல்லப் புன்னகை செய்கிறான். ரேகாவுக்குத் தூக்கிவாரிப் போட்டாற் போலிருந்தது. அவனையும் அவன் கைப் பொட்டலத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“என்னய்யா வம்பு பண்றே? பின்னே எத்தனை லேடீஸ் நிக்கறாங்க? எந்திரய்யா? பெரிய இங்கிலீஷ் பேசறே, இங்கிலீஷ்?”

“தெரியிது. எத்தனையோ தடவை எத்தனையோ ஆண் பிள்ளை நிற்கும் போது அவங்க சீட்டில் பெண்கள் உக்காரல? எனக்கு இன்னிக்கு எழுந்து நிற்க முடியாது. நான் எழுந்திருக்கப் போவதில்லை” என்று அவன் உறுதியாகக் கூறிவிட்டு, வெளியே நோக்குகிறான்.

“என்ன அக்கிரமம்? கண்டக்டர்! அவனைக் கிளப்பு பஸ் இல்லாட்டி ஓடாது!”

“ஏன் கலாட்டா பண்ணுறீங்க? யார் சொன்னாலும் என்னால் இப்ப எழுந்து நிற்க முடியாது. நான் நின்னு யாருமேன்னாலும் விழுவதற்கு இதுதான் மேல். நான் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிப் போயிடுவேன். பிறகு உக்காந்துக்கம்மா” என்றான்.

இப்போதும் அவனுடைய பேச்சு கண்ணியக் குறைவாக இல்லை. பஸ் வளைந்து சாய்கிறது. ரேகா அந்த ஓரத்தில் ஒண்டிக் கொண்டு அவன் அருகில் உட்காருகிறாள்.

இந்த விவகாரம் இப்படியே ஓய்ந்துவிடுவதைப் பொறுக்காத யாரோ ஒருவர் மறுபடியும், “குடிச்சிட்டு, கையில் இறைச்சிப் பொட்டலத்தோடு ஏறினான். இவங்களை பஸ்சில் எப்படி ஏத்தலாம்?” என்று தொடங்கினார். உடனே அவன் குரல் சீறியது.

“ஆமாம்யா! நான் குடிச்சிருக்கிறேன். ஐ அக்ரி. ஐ ஹாவ் ட்ரங்க். என்னால் நிற்க முடியாது. ஆனால் நான் ஏன் குடிக்கிறேன் தெரியுமா? ப்ளஷர் இல்ல. என்ஜாய்மென்ட் இல்ல. என் தொழிலுக்காக நான் குடிக்கிறேன். குடிக்க வேண்டி இருக்கு. என் தொழில்...” என்று அவன் சிரித்துவிட்டு, கையிலுள்ள இறைச்சிப் பொட்டலத்தை ரேகாவுக்கு மட்டும் சைகையாகக் காட்டுவது போல் தூக்குகிறான்.

அவளுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டுவிட்டாற் போலிருக்கிறது.

இரத்தக் கறைகள், அவனுடைய மக்குநிறக் கால் சட்டையிலெல்லாம் பரவிக் காய்ந்தாற்போல் அவளுக்குப் பிரமை தட்டியது.

அவனுடைய சொல்லில் கண்ணிமைக்க மறந்து போகக் கூடிய வியப்பும் அதிர்ச்சியும் தோன்றுகின்றன.

எதிர்க் குரலே எழவில்லை.

ஏதோ ஒரு சுவையான கட்டத்தை அரங்கில் பார்ப்பது போன்று அங்கே சற்றுமுன் குரல் எழுப்பியவர்கள் அவனையே பார்க்கின்றனர்.

“ஆம். என்னுடைய தொழில் கொலைத் தொழில். ஐ ஆம் எ கில்லர். ஒரு நாளைக்கு முந்நூறுக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொல்லுகிறேன். இன்று நான் நாற்பது ரூபாய்கள் மேல் கூலி வாங்கி இருக்கிறேன். ஒரு கிலோ இறைச்சியும் கூலிதான்...”

அவனுடைய தோற்றத்துக்கும் தொழிலுக்கும் பொருந்தாத ஆங்கிலப் பேச்சுத்தான் கூட்டத்தைக் கவர்ந்ததா, அல்லது சாதாரணம் அல்லாததொரு உண்மையை அவன் விண்டதுதான் அவர்களைக் கவர்ந்ததா என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.

நீலச்சட்டை இளைஞன் மறு பேச்செழாமல் அவனையே பார்க்கிறான். அவனிடம் சற்று நேரத்துக்கு முன்பு வரையிலும் தான் உயர் கல்வி கற்றவன் என்ற பெருமிதம் இருந்தது.

“கொல்வது பாவம் என்று கொன்றதைத் தின்பவர்களும் சொல்லலாம். இரத்தத்தை நான் பார்க்கமாட்டேன் என்று ஒதுங்கலாம். நான் உயிர்களைக் கொல்லக் கூடிய தொழிலுக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்காமல் வந்தேன்...” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சிரிக்கிறான். பிறகு நீலச்சட்டையைப் பார்த்து, “ஏன் தம்பி, படிக்கிறீங்களா?” என்று கேட்கிறான்.

“ஆமாம்... நான் எம்.டெக். முடித்து பி.எச்டி. பண்ணுகிறேன்...” என்று தனக்குரிய கர்வத்துடனும், அதேசமயம் எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்குமோ என்ற மரியாதையுடனும், மறுமொழி கொடுக்கிறான்.

“ரொம்ப சந்தோஷம், பண்ணினப்புறம் என்ன செய்வீங்க? அமெரிக்கா, அங்கே இங்கே போவீங்க; பணம் சம்பாதிப்பீங்க. எல்லாம் பணம்தான் கடைசியில். நானும் உயிர்க் கொலை பண்றேன். மாசம் இதிலும் ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்க முடியும். ஆக, உங்க படிப்பும் இதுவும் ஒரே மதிப்புத்தான்...”

ரேகாவுக்கு நெஞ்சு கட்டிப் போகிறது. அவனையே வியப்புடன் பார்க்கிறாள்.

“ஏங்க, உங்களைப் பார்த்தால் படிச்சவராத் தெரியுது. கனவு கூடக் கண்டிருக்கலேன்னு ஏன் ஒரு தொழிலுக்குப் போனீங்க?”

“போனேனா?...”

அவன் மீண்டும் சிரிக்கிறான். அந்தச் சிரிப்பு அங்கு இல்லாத யாரையோ பார்த்துச் சிரிப்பது போல் இருக்கிறது.

“நான் பி.ஏ. படிச்சுத் தேறாமல் போனவன். பணம் சம்பாதிக்கத் தான் வேலைன்னு ஒரு வேலையைச் செய்யக்கூடாதுன்னு கொள்கை வச்சிருந்தேன். கடைசியில் பணம் சம்பாதிக்கவே இந்த வேலைக்குப் போனாப்பல ஆச்சு. ஆண்டவன் விதிச்சது இன்னிக்கு இது. எத்தனை உயிரைக் கொல்லுவேனோ அத்தனை பத்துக் காசு. இதுக்கு இன்னிக்கு ஆறு ரூபா தண்ணிச் செலவு... இல்லாட்டி இந்த வேலை செய்ய முடியாது...”

அந்த ஊர்தியினுள் இருந்தவர் பலரை இந்த விவரங்கள் இதற்குள் கவர்ந்துவிட்டன. சுவாரசியமாகச் செய்திகளைத் தரும் ஏட்டைப் படிப்பதுபோல் அவனை நோக்குகின்றனர்.

“ஒரு நாளைக்கு எத்தனை ஆடு வெட்டுவீங்க?” என்று ஒருவன் விவரம் கேட்கிறான்.

“ஏன்? நான் எவ்வளவு பாவம் செய்றேன்னு அளந்து பாக்குறியா? நானூறுக்கும் மேல. அது படை வீரருக்கு ‘சப்ளை’ செய்யும் தொட்டி. போன புதிசில நாலஞ்சு உருப்படி கூட முடியல. பழக ரொம்ப சிரமமாச்சு...”

“ஏங்க, அவ்வளவு பலம் இல்லையா?” என்று நீலச்சட்டை கேட்கிறான்.

“உடம்பு பலம் இருந்தது. ஆனால் மன பலம் இல்ல. முண்டமும் தலையும் துடிக்கிறாப்பல, இரத்தம் பீறிடறாப்பல எப்பவும் மனசு துடிக்கும். மறக்கவே முடியாது. கைநடுங்கி வெலவெலத்து வேர்த்துக் கொட்டும். இந்த வேலை நான் எதுக்குச் செய்யணும்னு விடவும் மனசில்ல. ஒரு சவால் மாதிரி வீம்பு. பிறகு...”

“பிறகு எப்படிப் பழகினீங்க?”

ரேகா அவனை நிமிர்ந்து பார்க்கிறாள். நெஞ்சில் உணர்ச்சி பந்தாக அடைக்கிறது. அவனுடைய கண்களில் திரை படர்ந்தாற்போல் இருக்கிறது. ஆனால் மிகத் தெளிவாகப் பேசுகிறான்.

“குடிச்சாத்தான் இதெல்லாம் மறந்து வேலையில் ஈடுபடலாம்னு சொன்னாங்க. அதுக்கு முன்ன நான் மாதிரி கூடப் பார்த்தது கிடையாது. பாருங்க தம்பி, நம்ப மதத்தில் மட்டும்தான் குடிக்கிறது பாவம்னு சொல்லியிருக்குன்னில. இஸ்லாத்தில சொல்லியிருக்குது. பர்சியன் பாஷையில் சாராயத்துக்குப் பேரே ‘காமெரெய்ன்’னு சொல்லுவாங்களாம். காமராங்கறது கூட அதிலேருந்துதான் வந்தாப்பல. ஏன்னா, காமரான்னா மூடி மறைக்கிறதுன்னு அர்த்தம். அதாவது திரைப் போட்டு, உண்மை தெரியாம பண்ணுவதுன்னு. இந்த மதுப் புத்தியைத் திரையிட்டு மறைக்கிறதால அப்படிப் பேராம்...”

‘பி.எச்டி.’ வியப்புடன் “அப்படீங்களா?” என்று விழிகள் அகலக் கேட்டு மலைக்கிறான்.

“ஆமாம். புத்தியை அறிவை மறைச்ச பிறகு பாப புண்ணிய, சந்தப்பு உணர்வு இல்ல பாரு? அப்ப கொலையும் கனமில்லாத வேலையாகுது. ஆனா... திரும்பத் திரும்ப நினைவே வராம இருக்கிறதுதான் கஷ்டம்... உம்... நீ சவுரியமா உக்காரம்மா, நான் வரேன்...”

அவன் சட்டென்று எழுந்து கூட்டத்துக்குள் புகுந்து சென்று இறங்குகிறான். ரேகா ஓரத்தில் நகர்ந்து அவனையே பார்க்கிறாள். குருவிக் கூட்டில் கொண்டு வைக்கும் சவுரிப் பஞ்சுபோல் மென்மையாகத் தெரியும் எண்ணெய் காணாமுடி. நல்ல உயரம், சட்டை அரைக் கையில் தையல் ஓரம் பிரிந்து தொங்குகிறது.

பஸ் சாலையின் தொலைவை விழுங்கிச் செல்லும் உணர்வே அவளுக்கு இல்லை.

அத்தியாயம் - 2

நகரின் எல்லையைவிட்டுப் புதிது புதிதாக முளைத்த பல குடியிருப்புக்களையும் தொழிற்பேட்டைகளையும் கடந்து, முள் செடிகளும் குற்றிச் செடிகளுமான வெட்ட வெளிகளையும் தாண்டி, அந்தப் பழைய சிற்றூரில் புகுந்து செல்லுகிறது பஸ். சொக்கநாதர் கோயிலின் பழைய கோபுரத்தின் உச்சி விளக்கு ஒளிருகிறது. சந்நிதித் தெருவோடு சென்று வளைந்து திரும்பிக் கடை வீதி முனையில் நின்றுவிடும். வெகு நாட்களாகவே இந்த மூலைக்குப் பஸ் வருகிறது என்றாலும், அரசு போக்குவரத்துக்குரிய வசதியான வண்டிகள் சில மாதங்களாகத்தான் அடிக்கடி வந்து போகத் தொடங்கியிருக்கின்றன. பஸ் வசதிதான் அவளை அடையாறு தொழிற் பேட்டைக்கு அப்பால் மூலையில் உள்ள ராஜ்மோகன் மலர் வனங்களின் அலுவலக அறையில் ஒருநாளின் பெரும் பகுதியைக் கழிக்க அனுப்புவதற்கு துணிவைக் கொடுத்திருக்கிறது. இல்லாவிட்டால் பாட்டியும் தாயும் அவளை அந்த ஊரின் எல்லைக்கு அப்பால் செல்ல விடமாட்டார்கள். அவர்களுடைய குடும்பம் என்பது பெரிய கோட்டை. அந்தக் குடும்பத்து ஆண்களே கோட்டை அரனைத் தாண்டமாட்டார்கள். பெண்களுக்கு ஏது அந்த உரிமை? ஆனால், காலப் போக்கின் புரட்சிகரமான மாறுதல்கள் குடும்பங்களின் வேரான பொருளாதார நிலைமையை அரிக்கத் தொடங்கி விட்டது.

ரேகா பத்தாவது படித்து முடித்து இரண்டாண்டுகள் வீட்டோடு முடங்கி இருந்தாள். உள்ளூர் மகளிர் மன்றத்தில் தையல் கற்றுக் கொள்ளக்கூட பாட்டி இலகுவில் அனுமதிக்கவில்லை. அத்தையும் சின்னம்மாவும் மாற்றி மாற்றி மக்கள் பெருக்கத்துக்குப் பணி செய்யும் வீட்டில், பொழுது போகவில்லை என்ற பிரச்சினைக்கே இடமில்லை. நல்ல வேளையாக பம்பாயிலிருந்து அம்மாவுக்கு எட்டிய உறவில் சகோதரன் முறையாகக் கூடிய துரைவேல் மாமன், வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் தெற்கே வரும் சாக்கில், அவர்களுடைய வீட்டில் வந்து தங்கினார். அவளை ஒத்த அவருடைய பெண் டாக்டருக்குப் படிக்கிறாளாம்.

அந்தத் தேங்கிய குட்டைக்கு அப்பால் இருந்து புதிய கருத்துக்களைத் துணிவாக அவர் எடுத்து விளாசினார். “உள்ளூர் ஹைஸ்கூலில் மெட்ரிக் முடிச்சாச்சுன்னா ஏன் சும்மா இருக்கே? மேலே படிக்கப்போறது. இல்லாட்டி ஏதானும் வேலைக்குப் போகக்கூடாது?”

“பொண்ணுகளை வேலைக்கனுப்பறது எப்படீடா தொரை? நாளைக்கு எதும் பேச்சு வராதுன்னு எப்படிச் சொல்ல? அத்தை அனுப்பிச்சிட்டு வயித்தில நெருப்பைக் கட்டிட்டு இருக்கணும். அவப்பன்காரன் ஒழுங்கா இருந்தான்னா அப்பவே கட்டிக் கொடுத்திருப்போம். பொன்னேரி அக்காளுக்குத்தான் ரெண்டு பையன்கள் இருக்கு. சிதம்பரத்துக்கோ சம்முகத்துக்கோ கட்டிக்கணும்னு சரசுவதிக்கு ஆசை, அதுக்கும் ஒரு பத்து சவரனானும் போடவாணாமா?...” என்று முதியவள் கூறியபோது, அந்த மாமன் எதிர்த்தார். ரேகாவுக்குக் கடவுளே பார்த்து அவர் வாயிலாக விடுதலையைக் கொணர்ந்தாற் போலிருந்தது.

“என்ன அத்தை நீங்க ஒரே பத்தாம் பசலியாயிருக்கிறீங்க? இந்த வீட்டைச் சுத்தி எவ்வளவு இடம் வீணாப் போகுது? ரெண்டு வீடு கட்டி வாடகைக்கு விடலாம். அந்தக் காலத்தில்தான் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வழியில்ல. இப்பக்கூடவா? நான் தப்பாச் சொல்றேன்னு நினைக்காதீங்க பெரியம்மா, காலம் எவ்வளவோ மாறிட்டது. ரேகாவுக்குப் பணம் சேர்த்து சவரன் வாங்கிக் கல்யாணம் கட்டணும்னு வெறுமே சொல்லிட்டிருந்தா போதுமா? எப்படிப் பணம் வரும்? அவ அப்பாவைப் பத்தி ஏதானும் தெரியுமா?”

பாட்டி உடனே பிரலாபத்தைத் தொடங்கிவிட்டாள். அந்த வீட்டின் வறுமைக்கும் சிறுமைகளுக்கும் அவர்தான் மூலகாரணம் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத கருத்துமட்டுமல்ல; ஓரளவு உண்மை யும் கூட.

“ஷார்ட் ஹாண்ட், டைப்ரைட்டிங் எதானும் படிச்சிருந்தா நானே கூட்டிப் போயிடுவேன் பம்பாய்க்கு. நல்ல வேலை கிடைக்கும். இருந்தாலும் நான் ஏதோ சிபாரிசு பண்ணிப் பார்க்கிறேன். வேலைக்கு அனுப்பினால் என்ன குறைவு? லட்சோபலட்சம் பெண்ணுங்க வேலைக்குப் போறாங்க. எல்லாரும் கெட்டா போயிட்டாங்க? என் பொண்ணு சுமதி எக்சைஸ் டிபார்ட்மெண்டில் வேலை செய்யிது. வேலைக்குப் போற பொண்ணுதான் வேணும்னு இந்தக் காலத்து மாப்பிள்ளைகளே கேக்கறாங்க.”

“பிள்ளையை என்ன பண்ணுறது அப்புறம், இவ ஆபீசுக்குப் போயிட்டா?”

“அதுக்குத்தான் அளவான குடும்பம். ஒரே பிளாக்லதான் இருக்கிறோம். ராஜாம்மாதான் குழந்தைகளைப் பார்த்துக்கறா. அவ ஆபீசுக்குப் போறச்சே விட்டுட்டுப் போயிடுவ...”

“உம். நாளைக்கு உன் மருமகளும் வேலைக்குப் போறதுன்னா சரிம்பியா?”

“பின்னே? பையன் டாக்டருக்குப் படிக்கிறான். ரெண்டாவது பொண்ணு கீதாவும் டாக்டருக்குப் படிக்கிது. அவங்க மாமன் ஹைதராபாத் மெடிகல் காலேஜ் புரொபசரல்ல? அந்த ஆர்வம். ரெண்டு பேரும் டாக்டருக்குப் படிக்கிறேனாங்க...”

அவர் அங்கு வந்த நேரத்திலெல்லாம் பாட்டிக்கு உருவேற்றினார். திருவள்ளூருக்கு அருகே அவருக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை விற்றுப் பணம் ஆக்குவதற்காகவே அவர் வந்திருந்தார். அந்நாட்களில் அவர் தாம் வேலை பார்த்து ஓய்வு பெற்ற பெரிய தொழில் நிறுவனத்தின் சென்னைக் கிளைக்கு உரியவரைப் பார்த்து ரேகாவுக்கு வேலை தேடினார்.

பெரிய பெரிய ஊர்திகளும், பளுதூக்கும் பொறிகளும் இயங்குவதற்கான பலபல சாதனங்களை விற்பனை செய்யும் அந்தப் பெரிய தொழில் நிறுவனத்தின் அண்ணாசாலை அலுவலகத்தில் எந்த அனுபவமும் இல்லாத அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, மாமனின் பரிந்துரைகள், அந்தத் தொழில் அதிபரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ‘ராஜ்மோகன்’ மலர் வனங்களின் சிறு அலுவலகத்தில் பட்டியல் போடவும் சிறு கணக்கெழுதவும் ஒரு உதவியாளராக, அவளுக்கு வேலை வாங்கித் தந்தன.

அவர்களுடைய ஊரிலிருந்து செல்லும், ‘ஏழுபத்தெட்டு பி’ பஸ் அலுவலகத்துக்குச் செல்லும் நேரான வண்டியாக இருந்தது. சில மாதங்களாக ரேகா அந்தக் கோட்டைக் குடியிருப்பைவிட்டு புரட்சிப் பெண்ணாக வேலைக்குப் போய் வருகிறாள்.

பகல் பொழுது குறுகிய கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது. அவர்களுடைய இல்லம் பரந்தாமனார் வீதியில் இருக்கிறது. நாலைந்து தலைமுறைகளுக்கு முன்னர் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் துறவு பூண்டிருந்தாராம். அவருடைய சமாதிக் கோயில் அவர்களுடைய வீட்டுச் சுற்றிலேயே இருக்கிறது. சுவாமி பரந்தாமனார் என்ற பெயரை ஒட்டியே தெருவின் பெயரும் அமைந்திருக்கிறது. எதிர்ச்சாரியில் வீடுகள் ஏதுமில்லை. ஒரு காலத்தில் குளமாகவோ ஏறியாகவோ இருந்ததாம். அவளுடைய பாட்டி திருமணமாகி வந்த நாட்களில் நீரிருந்து பார்த்திருக்கிறாளாம். அவளுக்குத் தெரிந்து கட்டாந்தரையாகவே இருக்கிறது. ஆங்காங்கு வீடுகள் கட்டிக்கொள்ள மனைக்கான எல்லைக்கற்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடைவீதி முனையிலுள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியும் கூட இந்தப் பக்கம் வருவதாக இருக்கிறது. தெருத் திருப்பத்தில்தான் ஒரு குழல் விளக்கு ஒளி காட்டுகிறது.

அந்தத் தெருவில், விசாலமான ஏழு கிரவுண்டு பரப்பில் அமைந்த அவர்களுடைய வீடு ஒன்றுதான் இன்னமும் நாற்பது ஆண்டுப் பழமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.

சமாதிக் கோயிலில் முணுக்முணுக்கென்று விளக்கு எரிவது தெரிகிறது. மனைக்கட்டில் உருப்படியாக இருந்த நான்கு தென்னமரங்களும் கூட இப்போது காய்க்காமல் சூம்பிவிட்டன. ஒரு மாமரம் வேனிலில் நல்ல கனிகள் கொடுக்கும்.

இரண்டு கறவை வற்றிய மாடுகள்; அவற்றின் கன்றுகள். செப்பனிடாமலே விழுந்துவிட்ட கொட்டகைக் கூளம்; தப்பி விழுந்த விதைகளாகக் கொடி வீசி எப்போதேனும் பரங்கியோ, பூசணியோ காய்ப்பதுண்டு.

அவள் உள்ளே நுழைகையில் அங்கே அண்டி வாழும் நாய், ‘திண்டி’ குலைக்கிறது.

வாசலிலுள்ள முக்கோணப் புரையில் கார்த்திகை மாச விளக்கு அவளை வரவேற்கிறது. முன்கூடத்தில் அத்தை கணவர் நோட்டுப் புத்தகம் திருத்துகிறார். உள்ளூர் உயர்நிலைப்பள்ளியில் அவர் தமிழாசிரியர். அவருக்கு ஆறு குழந்தைகள். அத்தையின் கணவரான இந்த மாமன் நடராசன் அவர்களுக்கு அந்நியரல்ல. அத்தை நாகம்மாளைச் சொந்த மாமன் மகனுக்குத் தான் மணம் செய்து கொடுத்திருக்கின்றனர். இந்த மாமனின் ஒன்றுவிட்ட சகோதரிதான் ரேகாவின் தாய். சுற்றிச் சுற்றிக் கழல முடியாத உறவு வளையங்கள் கொண்ட குடும்பம்.

கயிற்றுக் கட்டிலில் அத்தை கம்பளிச் சட்டையால் உடலைப் போர்த்து மூடிக்கொண்டு மடியில் குழந்தையுடன் அமர்ந்திருக்கிறாள். தண்மதியும் சுந்தரமும் அந்தக் கட்டிலிலேயே துவைக்கின்றனர். பெரிய பையன் சோமுவுக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. அவனுக்கு அடிக்கடி கோபம் வந்துவிடும். மூலையில் முண முணத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். இன்னொரு புறத்தில் சிற்றப்பனும், சின்னம்மாவும் குழைந்தைகளும் புழங்கும் அறை இருக்கிறது. சின்னம்மாவும் வெளியிலிருந்து வந்த பெண்ணல்ல. ஒன்றுவிட்ட அத்தையின் மகளாகும் முறை. அவர்களுக்கு நான்கு குழந்தைகள். சிற்றப்பாவுக்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் எழுத்து வேலை. சிற்றப்பனின் மகள் ரமணியும், அத்தை மகள் சுகுணாவும் புளியங்கொட்டை ஆடுவதில் மும்முரமாக இருக்கின்றனர்.

பாட்டியம்மா ஒரு கட்டு முருங்கைக்கீரையைக் கொண்டு வந்து அந்த முன்னறையில் போட்டுக் கொண்டு உட்காருகிறாள். “விளக்கு வச்சி, என்ன ஆட்டம்டி? கை கால் கழுவிட்டு புத்தகம் படிக்கிறதில்ல?” என்று அதட்டுகிறாள். “இந்த கோங்குப் பயலுக்கு என்ன கோபம்?...” என்று கேட்ட குரலோடு, “சொர்ணமா வருது? மணி ஏழேகாலாயிட்டது. ஆபீசு முடிஞ்சு அஞ்சரைக்கு வரும் முன்னல்லாம்...?” என்று தன் அதிருப்தியை வெளியிடுகிறாள்.

“அஞ்சரைக்கு எப்படி வரமுடியும் பாட்டி? பஸ்சுக்கு நடந்து வரவே அஞ்சரையாயிடும். பிறகு ஒரு மணியாகுது. இன்னிக்கு பஸ் வரவே நேரமாச்சு. ஒரே கூட்டம் வேற...”

ரேகா படி கடந்து உள்ளே செல்கிறாள். சின்னம்மா சாம்பிராணி போட்டுப் புகை பிடித்துக் கொண்டிருக்கிறாள். வீட்டுச் சுவர்கள் வெண்மை கண்டு எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன.

சமையல் அறையிலிருந்து வரும் புகை போதாதென்று சின்னம்மா தினமும் சாம்பிராணியை வேறு போட்டுப் புகைக்கிறாள். நல்ல வெயிலிலேயே வெந்நீரில் குளித்து, சாம்பிராணிப் புகை போட்டுக் கொள்ளும் மெல்லியள் அவள். ஊரெல்லாம் கிரசின் எண்ணெய் அடுப்பும் எரிவாயு அடுப்பும் வந்தாலும் அந்த மூலை வீட்டில் விறகுதான். மஞ்சளாய் அழுதுவடியும் பல்ப் ஒளி. கரியேறிய பித்தளைத் தவளைகள்; கிணற்று நீர் உள்ளே வரவேண்டும். ரேகா பின்பக்கம் முகம் கழுவ வருகையில் அவளுடைய தாய் உரலில் மாவாட்டிக் கொண்டிருக்கிறாள்.

“ஏங்கண்ணு, இத்தனை நேரம்?”

ரேகா சட்டென்று மறுமொழி புகலாமல் அவளையே பார்க்கிறாள். வற்றித் தேய்ந்த உருவம். நெற்றியில் குங்குமமும் கழுத்தில் புரளும் பருமனான தாலிச் சரடும் அவள் அந்த வீட்டின் தலைமகனை மணந்தவள் என்று அறிவுறுத்துகின்றன.

“ஏங்கண்ணு பஸ் வர நேரமாச்சா?”

“ஆமாம்மா, இன்னிக்குப் பஸ்சில...”

சொல்லாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டு அவள் நிற்கிறாள்.

“பஸ்சில என்னம்மா?”

“ஒண்ணில்ல. ஒருத்தன், லேடீஸ் சீட்ல உக்காந்திட்டு எந்திரிக்க மாட்டேன்னிட்டான்...”

“இன்னிக்கா?”

“ஆமாம். அவன்... குடிச்சிருந்தான்...”

“ஐயோ!... அப்புறம்?”

“என்னால் எந்திரிக்க முடியாதுன்னுட்டான்.”

“ஐயோ! கள்ளுக்கடைய மூடியாச்சின்னாங்களே? பின்ன எப்படி?...”

“அவன் போதையா இல்லேம்மா! நல்லாப் பேசுறான். அவன் கசாப்புக் கடையில ஆடு வெட்டுறவனாம். ஒரு நாளைக்கு முந்நூறுக்கு மேல் ஆடு வெட்டுவானாம்...”

“ஐய...ய்ய, கண்ணு, நீ அந்த பஸ்சிலா வந்தே?”

“ஏம்மா? பஸ் பொது. இதெல்லாம் பாத்து ஏற முடியுமா, இறங்க முடியுமா?”

“ரொம்ப நல்லாயிருக்குதே? சின்னஞ் சிறிசெல்லாம் ஏறி ஆபிஸ் ஸ்கூல்னு போற வண்டில குடிச்சிட்டு வர கசாப்புக்காரனையுமா ஏத்திப்பாங்க?”

“அவரு எப்படிப் பேசினாருங்கறே? பி. ஏ. வரை படிச்சாராம். ஒரு பார்ட் போயிட்டதாம். பணம் சம்பாதிக்கத்தான் ஒரு வேலைன்னு போகக் கூடாதுன்னு கொள்கை வச்சிருந்தாராம். கடைசியில் பணம் சம்பா திக்கவே இந்த வேலைன்னு ஆச்சுன்னாரு. எனக்கு அவர் பேச்சு ஆச்சரியமா இருந்தது. அப்பா நினைப்பு வந்திச்சம்மா எனக்கு!”

கடைசிச் சொற்களை மெதுவான குரலில் கூறி விட்டுத் தாயின் முகத்தைப் பார்க்கிறாள். கொல்லைத் தாழ்வரையின் விளக்கு ஒளி அழுது வடியும் மங்கல். அவள் குனிந்து உரலை நீர்விட்டு கழுவுகிறாள்.

“‘ஐ ஆம் எ கில்லர்; ஐ ட்ரிங்க் டு கில்...’ன்னாரு. அப்படியே அப்பா நினைப்பு வந்திச்சி எனக்கு...”

“சீ, ஏம்மா கண்டவங்ககூட அவரைப் பத்திப் பேசறே? அவரு குடும்பத்துக்கு உதவாம போயிட்டாரு. அந்த நாளில் எனக்கும் கண்டிப்பா பேசத் தெரியல. என் தலைவிதி, கொடுப்பினை அவ்வளவுதான்...” என்று பெருமூச்செறிகிறாள் அவள்.

“இல்லேம்மா, அப்பாவா இருந்தால், அப்பவே அவனைப் பத்தி ஒரு கவிதை எழுதுவாராக இருக்கும். இல்லியா?”

“கண்ணு, நீ வேற சேலை உடுத்திட்டு வா. பாட்டி பார்த்தால் கோபிச்சுக்கும். காபி போட்டுத் தரேன். வள்ளிக்கிழங்கு வேக வச்சிருக்கிறேன்... வா...”

அப்பாவைப் பற்றிய பேச்சை எடுத்தாலே அம்மா சுருதியை மாற்றி விடுகிறாள்...

அப்பா...

அது அவராக இருந்தால்?

தலைக்கு நேராக வாள் நுனி தொங்குவது போல் ரேகா அமைதி குலைந்திருக்கிறாள்.

அப்பா வீட்டுப் பக்கம் வந்து நான்கு ஆண்டுகளாகி விட்டன. அவள் வயதுக்கு வந்த மகளாக பேதைமை கடந்த பருவத்தினளாய் வாயிற்படி கடந்து அப்பா என்று கூவி வராமலே நின்றாள். பாட்டி சொல்லும், உடன் பிறந்தவர்கள் வாய் திறவாமலும் அவரை ஏசினார்கள். ரேகா அன்று பாடத்தைப் படிக்க முடியாமல் அறைச் சுவரில் கலர் பென்சிலால் எப்படி எப்படியோ கிறுக்கினாள். இன்றும் அந்தச் சித்திரம் அழிய வில்லை. அதைப் பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு நினைவுக்கு வருகிறது.

“நேரமாச்சின்னா, பாட்டி இப்படி வேலைக்கனுப்பிச் சோறு தின்னணுமா என்னன்னு புலம்புது போம்மா!”

இதற்கு மறுமொழி கூறிப் பயனில்லை. முகத்தைக் கழுவிக் கொண்டு அடுப்படியில் அவித்து வைத்திருந்த வள்ளிக்கிழங்கை எடுத்துக் கொண்டு வருகிறாள். சமையலறையோடு ஒட்டிய பூஜை அறைதான் தாயும் மகளும் படுத்துப் புழங்கும் இடம். உயரக் கொடியில் புடவைகள். அடுக்காகத் தகரப் பெட்டிகள், தட்டு முட்டுச் சாமான்கள். பரணில் அவளுடைய தந்தை அந்நாட்களில் சேர்த்து வைத்த பத்திரிகைகள் கட்டுகள்; புத்தகங்கள். என்றோ அபூர்வமாய் வெளியான அவருடைய நான்கு வரிக் கவிதைத் துணுக்குகள் இடம் பெற்ற ஆங்கில நாளேட்டின் வார மலரும், கல்லூரி இதழ்களும் அந்தக் குவியலில் இருக்கின்றன. ‘குருவிக் கூடு’ என்று ஒரு கவிதைத் துணுக்கு அவளுக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. ‘என்னுடைய கூடு; என்னுடைய குஞ்சு. நான் சிறு அலகால் பஞ்சும் சவுரியும் நாரும் கொண்டு வந்து கூட்டை அமைக்கிறேன். மாயப் பணமே! நீ அதை நாசம் செய்கிறாய்...’ என்று மாதிரியில் அமைந்த கவிதை.

மாயப் பணமே, நீ ஏன் கூட்டைக் குலைக்கிறாய்!
என் மனையாளின் ஆசைக்கனலை மூட்டி நீ என்
கூட்டைச் சிதைக்கிறாய்...

பணத்துக்காக ஒரு வேலைன்னு போகக் கூடாதுன்னும் கொள்கை...

அவளுடைய செவிகளில் ஒலிக்கும் குரலுக்கும் அந்தக் கவிதையின் உருப்புரியாத ஒலிக்கும் ஒற்றுமை நெஞ்சில் தீட்டிய வாள் நுனிபோல் பளிச்சிடுகிறது.

முன் அறையில் சிற்றப்பாவின் குரல் பரபரப்பாகக் கேட்கிறது.

“அந்தப் பொண்ணு டிரஸ் பண்ணிட்டுப் போறப்பவே சந்தேகமாயிருந்தது. அந்தாளு யாரோ போட்டோ ஸ்டூடியோக்காரனாம். காலம் எப்படிப் போவுது பாரு? ஐயிரு அப்படியே இடிஞ்சுபோயி உக்காந்திட்டாரு...”

“அட கலிகாலமே?” என்று பாட்டி காலத்தின் மீது பழியைப் போடுகிறாள்.

“யாரு அத்தை? மேனகாவா?”

“ஆமாம்ங்கறேன். காலேஜுக்குப் போறேன்னு போச்சாம். மூணு நாளா காணோமாம். பிறகு லெட்டர் எழுதி வச்சிருக்குதாம். சாதி சனமில்ல, யாரோ போட்டோக்காரனாம்.”

சிற்றப்பா கோயிலிருந்து, கொண்டு வந்த செய்தி இதுதான் போலிருக்கிறது.

“எனக்கு இந்தச் சொர்ணத்தைப் பஸ்சில் அனுப்ப மனசே இல்ல. என்னமோ அவன் வந்து வேலைன்னு ஆசை காட்டிட்டுப் போயிட்டான். மாசம் நூத்தம்பது ரூபா வருதுன்னாலும் நிம்மதியில்ல. அதது வயசுக்கு வந்தாசுன்னா ஒரு கலியாணம் காழ்ச்சின்னு செய்யணுமே ஒழிய நாலு ஆம்பிளங்களும் பாக்கறாப்பல, பேசறாப்பல வுடறதாவது? அதும் அது வேலை செய்யிற இடத்தில் வேற பொம்பிளயே இல்லேன்னு வேறு சொல்லுறாங்க. நாம போயி கண்ணு முன்னாடியா பார்க்கிறோம்? ஆளான பொண்ணை வெளியே வுடாம பாதுகாத்த வீடு அது. உலகம் எப்பிடியேம் போகட்டும். நம்ம வூட்டுக்கு எதுக்கு? இந்த வருஷம் எப்படின்னாலும் அது கழுத்திலே மஞ்சக்கயிறு ஏறிட்டாத்தான் நிம்மதி.”

“பொண்ணுக்கு மாப்பிள்ளையைத் தேடுமுன்ன, உங்க புள்ளையத் தேடிக் கண்டுபிடிக்கணுமே?” என்று மாமன் தலைநிமிராமல் சொல்லை உதிர்க்கிறார்.

“அவன் வந்து பவுன் பவுனாக் கொட்டப் போறானா? வருசம் நாலாகப் போகுது. அதன் தலைவிதி. நான்தான் கட்டிவச்சேன். என் காலுங் கீழ நிக்கிதுங்க. என் கண் மூடுமுன்ன இத்தையும் ஒருத்தனிடம் ஒப்படச்சிட்டா கவலை விட்டிடும்...”

”சிவகாமி! சிவகாமி! அரியாமணையைக் கொண்டா!” என்று கூவுகிறாள் பாட்டி.

“குருக்களையா வீட்டு மேனகவாப்பா ஓடிப் போயிட்டா?” என்று ரமணி சுவாரசியமாகக் கேட்கிறாள். ரமணிக்கு வயசு ஒன்பதுதானாகிறது.

“ஆமாண்டி கழுதை, பேச்சுக் கேக்கவரா! போயி பாடத்தை படி!” என்று சின்னம்மா அதட்டுகிறாள்.

ரேகா பூஜையறை விளக்கின் முன் கிழங்கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அந்த அலுவலகமாகிய உலகின் வேற்றுமைகள் பயங்கரப் பள்ளமாக அவளுடைய நெஞ்சில் கிலியைத் தோற்றுவிக்கின்றன. பிரமை பிடித்தாற்போல் செயலற்று அமர்ந்திருக்கிறாள்.

அத்தியாயம் - 3

பஸ்சில் ஏறி அமர்ந்தபின் கணக்காக நான்காவது நிறுத்தத்தில் இறங்கும் நிதானத்தில்தான் அவன் இறங்கினான். ஆனால் அப்போதுதான் அவனுக்குத்தான் தவறான இலக்கமுள்ள வண்டியில் ஏறி நகருக்கு வெளியே தொலைவில் வந்துவிட்ட உண்மை புலனாயிற்று. சாதாரணமாக அவன் கையில் கறிப்பொட்டலத்துடன் நடந்தே தன் இருக்கைக்குச் செல்வதுண்டு. மீண்டும் அவன் பஸ்சைப் பிடித்து ஏறிய இடத்தில் இறங்கி இருப்பிடத்துக்கு நடக்கிறான். தெருவில் நடந்தும் செல்ல முடியும். குறுக்கே புகுந்தும் செல்லலாம்.

வெட்ட வெளியையும் விரிந்த பசும் பரப்புக்களையும் நீரின் குளிர்ச்சியையும் நல்ல காற்றையும் துறந்து, வேலையும் பிழைப்பும் இருக்கிறது என்று பட்டணத்துச் சந்தியை நம்பி வந்து அங்கே வேர் பிடிக்காமலே தலைமுறைகள் காணும் குடும்பங்கள் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருந்தன. கூரை என்ற பெயரில் மழையையும் வெயிலையும் தாங்கச் சக்தியற்றாலும் அங்கே வாழும் பெண்களின் மஞ்சட் கயிறாம் காப்பைப்போல் அந்த வீடுகளைக் காத்த கூரைகள். உயிர் இருக்கிறதோ இல்லையோ என்று ஐயக்கோட்டில் கிடக்கும் எருமைக் கன்றுகள்; விளக்கை வைத்துக் கொண்டு மாவாட்டும் பெண்; கோலியாடும் பிள்ளைகள்; ஊர் நிலவரம் கட்சி நிலவரம் பேசிக் கொண்டு நிற்கும் ஆண் கும்பல்; டிரான்சிஸ்டர் கேட்டுக்கொண்டு இளம் பெண்களை ஏசும் இளவட்டங்கள்; கொஞ்சு மொழிகள்; அல் அயல் பெண்களின் சண்டைகளில் உதிரும் வசைமாரிகள் என்று ஒரு விசுவரூபக் காட்சியை அடக்கிக் கொண்ட சந்தைக் கடந்து அவன் செல்கிறான். ஒரு காடா விளக்கை வைத்துக் கொண்டு கிழிந்த பிளாஸ்டிக் துண்டுகளில் சாணி உருண்டைகளைத் தட்டிச் சுவரோரம் நிரப்பிக் கொண்டிருக்கிறாள் முத்தம்மா.

அவனைக் கண்டதும் எழுந்து கையைக் கழுவிக் கொண்டு வருகிறாள். “என்ன இன்னிக்கு இந்நேரம் ஆயிடிச்சு?” என்று கேட்டுக் கொண்டு பணிவுடன் அவனிடம் இருந்து பொட்டலத்தை வாங்கிக் கொள்கிறாள். அந்தக் குடிசைகளை ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு பழைய மாடி வீடு இருக்கிறது. வீட்டின் முன்புறம் அந்தப் பேட்டை வாசிகள் சாமான்கள் வாங்கும் கடை. கடை வாயிலில் கூட்டத்துக்குக் குறைவில்லை. சந்து வழியாகச் சென்று வீட்டின் பின்புறத்துக் கதவைத் திறக்கிறான். அந்தப் பகுதிதான் அவனுடைய இருப்பிடம். முத்தாயியின் மகள் வள்ளி வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து வாளியில் நீர் கொண்டு வைத்திருக்கிறாள்.

முத்தம்மாவுக்கு மூன்று பெண்கள்; இரண்டு ஆண்கள். அவளுடைய புருஷன் ஒரு அடிதடி சண்டையில் இறந்து போய் நான்கு ஆண்டுகள் ஆகின்றனவாம். மூன்று பெண்களில் இரண்டு பேரைக் கட்டிக்கொடுத்து, ஒருத்தி பல்லாவரத்திலும் இன்னொருத்தி பெரம்பூரிலும் வாழ்கின்றனர். பெரிய பையனும் ரெம்பூர் ஆலையில் வேலை செய்கிறான். வள்ளியும் கல்யாணமான பெண்தான். புருஷன் நோய் கண்டு இறந்து போனான். ஒரு குழந்தையுடன் தாய் வீட்டில் தங்கியிருக்கிறாள். இரண்டாவது பையன் எல்லப்பன் பலபட்டறை. அந்த வீட்டை மொத்தமாக வாடகைக்கு எடுத்திருக்கிறான். மாடியில் ‘கிளப்’ நடத்துகிறான். முத்தம்மா இப்படித்தான் சொல்லிக் கொள்வாள். முன்புறத்துக் கடையை ஒட்டிய டீக்கடையும் அவனுக்கு உட்பட்டதுதான். இந்தப் பேட்டைக்குப் பின்னால் விரிந்து கிடக்கும் நிலவெளி எல்லைக் கற்களின் அணியுடன் ஓர் ‘ரியல் எஸ்டேட்ஸ்’ நகரின் சிறப்பையும் பெற்றிருப்பதில் எல்லப்பனுக்கும் தொடர்பு உண்டு.

அந்த வட்டகையில் அவன் ஒரு சிறப்பான புள்ளி. விளக்குப் பித்தானை அமுக்குகிறான். அவனுடைய அந்தத் தாழ்வரை இருக்கையில் ஒரு பழைய நாளைய இரும்புக் கட்டிலில் கித்தான் சுற்றிய படுக்கையொன்று இருக்கிறது. அவனுடைய சட்டை நிஜார் தொங்கும் கொடி; ஒரு தகரப்பெட்டி. சுவரில் மாட்டிய சிறு கண்ணாடி; எண்ணெய்க் குப்பி, சீப்பு கொண்ட புரை, நீர் வைக்கும் மண் கூசா; உணவு கொள்ளும் பீங்கான் தட்டு; கண்ணாடி தம்ளர்கள் இவையே அவனுடைய உடமைகள்.

அவன் முகத்தைக் கழுவிச் சுத்தம் செய்து கொண்டு அந்தக் கட்டிலில் அமருகிறான்.

பீடியைக் கொளுத்திக் கொள்கிறான்.

கதவு மெல்லத் திறக்கிறது. எல்லப்பன் அவனுக்குப் பழக்கமான மதுக் குப்பியையும் தம்ளரையும் கொண்டு வருகிறான். அவன் பேசாமலே ஆணியில் தொங்கிய சட்டைப் பையில் கைவிட்டு ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுக்கிறான்.

ஒன்பது மணி சுமாருக்கு வள்ளி சோறும் கறிக் குழம்புமாக வருவாள்.

நிகழும் நடப்புகள். ‘உண்மை’ என்ற ஒரு நிலையை நேருக்கு நேர் சந்திக்க அஞ்சியே மயக்கங்களின் துணை நாடும் வாழ்வு. இன்று அவனுக்குத் திரை கிழிந்து ‘பிரத்தியட்சம்’ தோன்றினாற்போல் இருக்கிறது. ஒருநாள் கூடத் தவறான பஸ்சில் இத்தனை நாட்களில் அவன் ஏறவில்லை.

இன்று அந்த உண்மைத் தரிசனம் மயக்கத்தின் திரையை சுட்டு ஒரு நிரந்தர வாயிலைத் தோற்றுவித்தாற் போலிருக்கிறது. இந்த வாழ்வை அவன் எதற்காக, யாருக்காக வாழுகிறான்? எல்லப்பனும் முத்தாயியும் வள்ளியும் சில ரூபாய்களைப் பெறுவதற்காகவா? அம்மம்மா! வாழ்க்கையின் சில கணங்கள் எத்தனை இன்பம் வாய்ந்ததாக இருந்திருக்கின்றன!

குண்டு முகத்தில் நெற்றியில் துளித்திருந்து தெரிய நின்ற அந்தப் பெண்...

நெஞ்சுக்குள்ளிருந்து ஆவேசமாய் ஓர் எழுச்சி உந்தி உதடுகளின் சிறைக்குள் தாளாமல் துடிக்கிறது.

அவள் புரிந்து கொண்டிருப்பாளோ?

இயந்திரத்தின் உருளைகள் இயங்கும்போது அதில் போடும் பொருள் மாவாகிறது. பிறகு அதற்குப் பழைய உருக் கிடையாது. முழுமையான காத்திரமும் கூட்டுவதற்கு இல்லை. அவனுடைய வாழ்க்கையின் நாட்கள் அப்படி முழுமையின்றிக் கரைந்து போகின்றன.

கனவுகள் அழிந்தவை; நினைவுகள் குரூரமாக அழிக்கப்படுகின்றன; நடப்பு... நடப்பு அதுவும் இயந்திரச் செயலாக உயிரற்று மாய்கிறது.

அவன் இன்று அருவியாய் பொறுமைகளைக் குளிர்விக்கும் பழைய நினைவுகளை அழித்துக் கொள்ள விரும்பவில்லை. கையில் அகப்பட்டதையெல்லாம் படிக்கும் ஆர்வம் அவனுக்கு ஒரு காலத்தில் இருந்தது. பரீட்சையில் தேறப் படிக்க வேண்டும்; பட்டத்தைக் கொண்டு ஒரு வேலையில் தொற்றிக் கொள்ள வேண்டும். அது வற்றாத கறவைப் பசுவாக அவனுக்குப் பொருள் வளத்தைக் கொடுக்க வேண்டும் என்ற இலட் சியங்களை அவனுடைய தந்தையும், முகமறியா வயதில் அன்னையை இழந்தாலும், அந்த அன்னையின் தங்கையே வாய்த்த அன்னையாக அவனுக்கு அறிவுறுத்தியும் அவனுடைய உள்ளம் அந்த இலட்சியங்களைப் பற்றிக் கொள்ளவில்லை. கணக்குப் பாடத்தில் தோற்றான். ஆனால் படிக்க உட்கார்ந்தால் நேரம் போவது தெரியாது. நாள் கணக்கில் நூலகத்தில் இருந்து கொண்டு வரும் புத்தகங்களோடு மாடியில் அடைந்திருப்பான்.

“பரீட்சை எழுதும் எண்ணம் இருக்கிறதாமா உன் மகனுக்கு? உபயோகமத்த படிப்புப் படிச்சிட்டுப் பொழுதைப் போக்கினா இவனுக்கு எவன் வேலை கொடுப்பான்?” என்று தந்தை உறுமுவார்.

கல்லூரி இடைநிலை இரண்டாம் ஆண்டிலேயே சிவகாமியைத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அவள் அடுப்படியிலேயே கிடப்பாள்.

நட்சத்திரங்கள் வாரி இரைத்தாற்போலிருந்த வானின் கீழ் மொட்டை மாடியில் அவள் கனவுக் கன்னிபோல் வர வேண்டும் என்று ஆசை. சத்திரம் போலிருந்த வீடு, தந்தையின் சோதரர், அவர் மக்கள், ஒன்றுவிட்ட சோதரியர், மாமன் மக்கள் என்று குழுமும் வீட்டில், அவளிடம் தனியாகப் பேசிவிட முடியுமா? இரவு ஓசை அடங்கியபின், இவன், எதோ ஓர் இரை விலங்குபோல் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் காத்திருக்க வேண்டும். இதை அவன் வெறுத்தான். மனைவி குற்றேவலும், அடுக்களைப் பணியும் செய்து ஓய்ந்தபின் இரவில் உடற்பசியைத் தீர்க்கும் கருவியாக மதிக்கப்பெறுவதை உடைக்க வேண்டும் என்று கொதித்தான். ஒருநாள், பின்கட்டில், உண்டு கை கழுவச் செம்பில் நீர் மொண்டுத் தந்தவளின் செவியோடு, “மாடிக்கு வா, தெற்கோரம் மொட்டை மாடியில்...” என்று பட்டாளத்துக்காரன் அடையாளம் கூறுவதுபோல் கூறினான்.

“என்னத்தான்? இங்கே ஓரமா வந்து படுத்திட்டீங்க? நானும் இங்கேயே படுக்கட்டுமா?...” இங்கிதம் தெரியாத மாமன் மக்கள்; பெரியப்பன் சிற்றப்பன் வாரிசுகள்... எல்லாம் மொட்டைக் கனவுகள்.

எத்தனையோ நாட்களில் அவனுடைய கனவுகளில் வானிலிருந்து நட்சத்திரம் சிவகாமியாக வருவதுண்டு. காலம் என்ற ஒன்று மூப்பு, வறுமை என்ற துன்பங்களாகிய போர்வைகளை உரித்தெறிந்துவிட்டு அவனிடம் சரணடைந்ததுண்டு. ஒருநாள் இருளில் அவள் கையைப்பற்றி மாடிக்கு இழுத்து வந்திருக்கிறான்.

“சிவகாமி, உன்னை இந்த வீட்டைவிட்டு நான் ஒரு லட்சிய உலகுக்குக் கொண்டு போகப் போறேன். துன்பமேயில்லாத உலகம். அங்கு மூப்பு, பிணி ஒன்றுமே கிடையாது.”

“சீ, என்னங்க இது? யாரானும் பார்த்தால் என்ன நினைப்பாங்க? அத்தையும் மாமாவும் பார்த்தா என்ன நினைப்பாங்க? கனகு முழிச்சிட்டிருந்தா, எனக்கு வெக்கமாயிருக்குது...”

“நான் விடமாட்டேன். நீ என்னுடையவள்தானே?”

“நல்ல பயித்தியம் புடிச்சிது. மானக்கேடு! உங்க தம்பி கூட வேலைக்குப் போகத் தொடங்கிட்டார். எனக்குன்னு ஒரு சேலை வாங்கிட்டுவர உங்களால் ஆகாது. விடுங்க என்னை!” அவனுடைய பிடியிலிருந்து விடுபட அவள் போராடினாள். கனவுகள் பூச்சழிந்து பல்லிளித்தன. நிலையாமையையும் துன்பத்தையும் வென்றதாகக் கருதிய காலம் கூடப் பொய். சினிமாப் படப்பிடிப்பின் அட்டைச் சந்திரன்.

அவள் அவனுக்குக் காலத்தை வெல்லும் இலட்சிய அணங்காக ஒரு கணம் கூடத் தோற்றவில்லை. இரத்தமும் நிணமும், பாரம்பரியமான வழக்கங்களும் பேதைமைகளும் அஞ்ஞானங்களும் மவுடீகமும் வேரூன்றிய பெண். கல்வியென்பது அடுக்களை ஞானமும், மலர்ச்சி என்பது தாய்மைக் கொடியில் முகிழ்க்கும் அரும்புகளும் என்ற சித்தாந்தத்தில் விளைந்தவள். அவனுடைய மென்மையான உணர்வுகளை அவள் உணரவில்லை. கன்றுக்குட்டி பாலும் புல்லும் அருந்தியே பசுவாகும். பருப்பும் சோறும் இட்டாலும் அதற்குத் தனியான சுவை தெரியாது. இவனுடைய கிளர்ச்சிகள், ஆசைகள் அவளுக்குத் தொடக்கத்தில் பருப்பும் சோறுமாகத் தோற்றியிருக்க வேண்டும். தந்தை யிடம் ரூபாய் வாங்கிக் கொண்டு சென்று, அவளுக்குப் பூக்கள் அச்சிட்டதொரு வாயில் சேலையும், ரவிக்கையும் வாங்கி வந்தான். வீட்டில் பூகம்பம் உண்டாயிற்று, வெறும் சுவையில் கரைந்துபோகும் தீனி வயிற்றை நிரப்பப் போதுமா? அவள் அவனுக்குப் புல்லுக்கட்டானதோர் சுமையை வற்புறுத்தி அவனைப் பற்றித் தள்ளினாள். வெருட்டினாள். அவன் புல்லுக்கட்டைத் தேடித் தேடி அலைந்தான்; திரிந்தான். அது கிடைக்கவில்லை. அலைந்து ஓய்ந்த நிராசையில் பருப்பும் சோறும் தந்த உணர்வும் சுவையும் மறந்து போயிற்று. கிடைத்ததைப் பற்றிக்கொள்ள வேண்டிய நிலை வந்தது.

“கை வளையல் எங்கேன்னு அத்தை கேட்டாங்க. கிணத்துக் கயித்தில மாட்டி இழுத்து ஒடிஞ்சிபோச்சி. கழட்டிருக்கேன்னு பொய் சொன்னேன். ஒரு ஆண் பிள்ளை, ரோசமில்ல உங்களுக்கு? மூட்டை தூக்கின்னாலும் நாலு காசு சம்பாதிக்கணும்னு சொல்லுவாங்க. என் தலைவிதியா நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கிறீங்க? ஒரு பொண்ணு குழந்தை பிறந்தப்புறமும் பழைய கணக்கிலியே பொறுப்பில்லாம இருக்கிறீங் களே?”

அந்த வேலை தேடி அலைந்த விவரங்கள் கசப்பானவை. ஒரு வீட்டில் நான்காம் வகுப்புப் பையனுக்கும் ஆறாம் வகுப்புப் பெண்ணுக்கும் இருபது ரூபாய்ச் சம்பளத்துக்கு பாடம் கற்பிக்கச் சென்றான். “பிள்ளைங்க எந்திரிக்குமுன்ன கொஞ்சம் மார்க்கெட்டுக்குப் போய் வந்திடுங்க...” என்று பையையும் ஒரு ரூபாய் நோட்டையும் கொண்டு வந்து போட்டாள் வீட்டு அம்மாள். அவன் பிறகு அந்தப்படி ஏறவில்லை. “மார்க்கெட்டுக்குப் போனா என்ன தப்பு? வீட்டில யாரும் இருந்திருக்க மாட்டாங்க. பெரிய வீட்டுப் பொண்ணு அது...” என்று தாயே தன் சிபாரிசில் பிடித்த வேலையை விட்டுவிட்டானே என்று ஏசினாள். வேலைக்கான விண்ணப்பத்தைக் கண்முன்பே குப்பைக் கூடையில் போட்டார் ஒரு பெரிய மனிதர். பத்து நாட்கள் அலுவலகத்தில் வேலை செய்யச் சொல்லிவிட்டு, “எங்களுக்கு உன் திறமை அதிகம். நீ ஏற்ற இடத்தில் வேலை தேடிக் கொள்ளலாம்” என்று பாதிச் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பினார்கள் ஓரிடத்தில். மருந்துக்கடைச் சேவகன், வக்கீல் எழுத்தன், டியூஷன் வாத்தியார்... அவனுக்குச் சொந்தமாக எந்த வேலையும் பொருந்தவில்லை. ஊரிலிருந்த சிலரைச் சேர்த்துக் கொண்டு கலாரங்கம் என்று ஓர் அமைப்பு ஏற்படுத்தினான். ஒரு மாதம் வீணைக் கச்சேரி; ஒரு மாதம் நாடகம்; ஒரு மாதம் கலை - இலக்கிய விவாதம்; பழைய பத்திரிகை புத்தகங்களைச் சேர்த்து நூலகம் நடத்தினான். அது ஒருநாள் தீ விபத்துக்கு ஆளாயிற்று. வீடு போர்க்களமாயிற்று. மனமொடிந்து எங்கெங்கோ அலைந்தான், ஏதேனும் ஓர் வேலையில் ஐந்தாறு மாதங்கள் இருப்பான்: வீட்டுக்கு வருவான். பணமில்லை என்ற காரணத்தைக் காட்டி இரகசியமாக இடிக்கும் மனைவி; தாய்...

தந்தையின் மரணம் கூட அவனைப் பொறுத்த மட்டில் பாதிக்காத சடங்காகத்தானாயிற்று. அப்போது மூன்று நாளைய முழுச் சாப்பாடு இல்லாப் பட்டினியில் சோர்ந்து இருந்தான். அவன் அப்போது கடைசியாக ஒரு கட்டிட கண்டிராக்ட்காரரிடம் கூலிக் கணக்கு எழுதி சம்பளப் பட்டியல் போடும் வேலையை ஒரு நாளைக்கு இரண்டரை ரூபாய் கூலிக்குச் செய்தான். தொழிலாளர் வேலை நிறுத்தம், அடிதடி காரணமாக யார் செய்த தவறோ அவன்மீதில் விழ, அவனுக்கு வேலை போயிற்று. இவனால் அறிவுபூர்வமாக இவனுக்குச் சமமில்லாதவர்களுக்குத் தலைவனாகவும் இயலவில்லை. அறிவுபூர்வமாக இவனுக்குச் சமமானவர்களுடன் தோழமை கொள்ளும் பொருள் நிலை அந்தஸ்தும் இல்லை. தானாகத் தாழ்ந்து, கூலிக்காக எதையும் செய்யும் மனக்கோட்டமும் இல்லை. ஓர் இலட்சியத்தை எண்ணி அதற்காக உழைக்கும் உறுதி இருந்திருந்தாலும் அவன் தன்னை மிகப் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்க மாட்டான். எல்லாமே காலங் கடந்துவிட்ட நிலை.

தேநீர்க்கடை நாயரிடம் இனி கடன் கேட்க முடி யாது. அடுத்த வேலை எங்கே போய்த் தேடுவது?

அடையாற்றை ஒட்டிய பூங்கா மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்திருந்தான். மனச்சோர்வு; உடல் சோர்வு; பசிச்சோர்வு.

கனவு கண்டாற்போல் பேச்சொலி கேட்டது. “உருப்படிக்குப் பத்து பைசாக்கு மேலேயே தரேன்றேன். வேலைக்கு ஆள் கிடைக்கலப்பா. தேடிட்டிருக்கிறேன்...”

“கேட்டுச் சொல்றேன்...”

“ஒரு நாளைக்கு முந்நூறு, முன்னூத்தம்பது, நானூறு கூட வரும், ஆள்தான் கிடைக்கல. ஜட்கா வேலைன்னாக் கூடப் பரவாயில்லை...”

அவனுடைய செவிகள் சிலிர்த்துக் கொண்டன. தேனை ஏந்தும் கிண்ணங்களாயின.

“வாரவன் பத்து எட்டு உருப்படியோட போயிடறான். நாலு பேர் வந்து தாக்குப்புடிக்காம போயிட்டான். என்னாலயே பார்க்க சிரமமாயிருக்கு. மாமூது போன பிறகு நிலையா ஆளில்ல...”

இவன் விசுக்கென்று தலைநிமிர்ந்தான்.

அந்த வெயிலில் பீடி குடித்துக்கொண்டு முட் செடியின் அருகில் ஒரு தொப்பி வைத்த சாய்பு நின்றார். அருகில் மேனியில் சட்டை இல்லாததொரு கூலிக்காரன் இருந்தான்.

“என்ன வேலைங்க? நான் வரேன்...”

அவன் அவர் முன் நின்றபோது அவர் சற்றே திடுக்கிட்டாற்போல் பார்த்தார்.

“...யாரு...யாரப்பா நீ?”

“வேலை ஒண்ணும் இல்லாம இருக்கேன். என்ன வேலைன்னாலும் செய்வேன்...”

அவர் பார்ப்பதற்கு கண்ணியமானவராக இருந்தார். அவனை ஏற இறங்க நோக்கினார்.

“உன்னைப் பார்த்தால் படிச்சவன் போல இருக்கு? படிச்சவங்க செய்யும் எழுத்து வேலையில்ல இது...”

அவன் மனதை உறுதியாக்கிக் கொண்டான். வேலை கைவரையிலும் வந்து நழுவிவிடக் கூடாது. எட்டாமல்.

ஒரு உருப்படி தோய்க்க, துவைக்க, சலவை செய்யப் பத்துப் பைசாவா? துவைக்கலாமே? உடலுழைத்து எந்த வேலை செய்தால் என்ன? பிறகு ஜட்கா வண்டியில் ஏற்றிப் போக வேண்டுமா? அல்லது கழுதையின் மேலேற்றிக் கொண்டு போக வேண்டுமா? அதைத் தான் ஜட்கா என்று இடக்காகச் சொல்கிறார்களோ! கழுதையின் மேல் துணியைப் போட்டுக் கொண்டு போனால்தானென்ன?

மனதோடு சுவையூறும் நகை மின்னல் நெளிய அவன், “படிச்சவன் இல்லைய்ய நான். படிச்சாக்கூட எல்லாருக்கும் எழுத்து வேலைதான் செய்யணும்னா கட்டுபடியாகுமா? எந்த உடலுழைப்பு வேலைனாலும் நான் செய்வேன். எனக்கு வயிறு இருக்கு; பசி இருக்கு; அதுக்குமேல குடும்பம்னு வேற ஒண்ணு இருக்கு. எந்த வேலையானாலும் செய்வேன், பாய்!”

“எந்த வேலைனாலும் செய்வே?” என்றார் அவர் மறுபடியும்.

“பொய் புரட்டு, பித்தலாட்டம் இல்லாத வேலை எதையும் செய்வேன். எந்த வேலையைச் செய்தாலும் நேர்மை மாறாததுன்னா அதில் குறைச்சலுக்கு ஒண்ணுமில்ல. நான் வேலை செய்யாம யாரிடமும் கூலி கேட்கமாட்டேன். கூலிக்குன்னு நேர்மை இல்லாததைச் செய்யமாட்டேன்...”

“பொய் புரட்டெல்லாமில்ல. ஆனா நீ ரெண்டு உருப்படி கூடச் செய்ய முடியுமான்னு தெரியல. செய்யிறதானா நாளைக் காலமே இங்கியே வா. இந்த ஆளே உன்னை இட்டாருவான்...”

அன்றிரவு அவன் வழக்கமாகப் படுத்துறங்கிய தேநீர்க் கடைச் சந்தில் உறக்கம் பிடிக்கவில்லை.

ஊரார் மாசு கழுவும் பணி, துணி துவைத்தல்.

எந்தத் தொழில் செய்தாலென்ன? தொழில் மேன்மையானது. அதுவும் ஊரார் அழுக்கைக் கரைத்து உன் மன அழுக்கைக் கரைக்கிறாய்; உன் மன அழுக்கு; உன் மன அழுக்கு.

ஆற்றில் அலசி அலசிக் கரைத்தபின் வெளுத்த சுமையைக் கழுதை மீது போட்டுக் கொண்டு செல்வான். பாவ அழுக்கு ஒட்டாத பேதைமை, கழுதை...

சிவகாமி! உன் புருஷன் உச் உச்... உச்சென்று அறைந்து அறைந்து தன் அகங்காரத்தைத் தொலைப்பான். ஒரு உருப்படிக்குப் பத்து காசு. முந்நூறு - முப்பது ரூபாய்... ஒரு நாளைக்கு முப்பது ரூபாய்! ஒரு நாளைக்கு நானூறு ஐநாறு துணி துவைத்தால் ஐம்பது ரூபாயா? ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாயானால் ஒரு மாசம் ஆயிரத்து ஐநாறு ரூபாய்...! உடலுழைப்பின் மகத்துவத்தை இந்நாள் உணரவில்லையே அவன்! துணி துவைக்கும் தொழிலில் இப்படி ஒரு நிதியம் கொட்டிக் கிடக்கிறதா?

உலக அனுபவத்தின் கசப்பான துளிகளைச் சுவைத்திருந்தும் அவனுடைய சிந்தனையில், இப்படிச் கொட்டிக் கிடக்கும் ஓர் தொழிலுக்கு தொழிலாளன் பஞ்சம் வந்திருக்குமா என்ற முடிச்சு தட்டுப்படவில்லை.

“எனக்கு வேலை கிடைச்சிட்டது நாயரே, உங்க கடனை சீக்கிரமே கொடுத்திடுவேன்” என்று கூறித் தேநீர் அருந்திவிட்டுக் காலையில் கிளம்பினாள்.

அந்தக் காலை நேரம் மிக இனிமையாக இருந்தது. அப்போது, மண்காய்ந்தபின் வானிலிருந்து விழும் அமுதத் துளிகளை உள் வாங்கிக் கொண்டு பச்சை பூரிக்கும் பொற்காலம். அவன் பாலம் கடந்து வருகையில் சலவையாளர் துறையைப் பார்க்கையில் என்னவெல்லாம் நினைத்தான்!

நீர் இனிமை; மக்களின் மாசெல்லாம்கூட இனிமை.

ஒரு பெண் வளைக்கையை ஓங்கி ‘உச் உச்’ சென்ற ஒலியுடன் துணியைக் கல்லில் அறைத்தாள்.

மின்னல் வீச்சைப் போன்ற அவளுடைய அசைவும், பிறகு ஓசையும், ஓர் இன்னிசை நாட்டியக் கச்சேரியின் தாளக் கட்டில் பிறக்கும் இனிய உணர்வுகளைக் கிளர்த்தின.

வேலை கிடைத்ததும் சிவகாமிக்கு வளையலை வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். எத்தனை நாளாகச் சொல்லிக் காட்டுகிறாள்?

ரேகா... சுவர்ண ரேகா என்று அவன்தான் தன் செல்வக் குழந்தைக்குப் பெயரிட்டான். அவள் சிறுமிப் பருவம் கடந்து பொற்கொடியாகத் திகழ்கிறாள். அவனுக்குப் பொறுப்பு அதிகம்.

துருவெடுத்தால் குபுகுபென்று பொங்கி வரும் நீரைப்போல் அன்று அவனுடைய உள்ளத்தில் பாசம் பொங்கி வந்தது. தன்னுடைய சின்னஞ் சிறு உலகைப் பேணி இன்பம் காணத் தெரியாதவனால் உலகை எப்படி ஒப்புரவோடு காண முடியும்? என்ன பேதைமை? அவன் படித்த படிப்பு அவனைப் பிழைக்கத் தெரியாதவன் ஆக்கிவிட்டதா, அல்லது அவன்தான் தான் பெரிய கல்வியும் கலையுணர்வும் கொண்டவன் என்று ஆணவக் கூட்டில் ஒதுங்கிப் பிழைக்கத் தெரியாதவன் ஆகிவிட்டானா?

இந்த உடலைச் செருப்பாக்கி உழைத்துப் பொருள் தேடி மனைவியையும் மகளையும் மகிழ வைப்பேன்; தாயின் முகம் மலரச் செய்வேன்... என்றெல்லாம் அன்று தன்னைப் பணியிடத்துக்கு அழைத்துச் செல்பவனை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

அவன் வந்தான்.

பணியிடத்தைக் காட்ட அழைத்துச் சென்றான்.

கொட்டகை வாயில்.

ஆடுகள்...ஆடுகள்... ஆடுகள்.

முத்திரைச் சின்னங்களுடன் கொத்துக் கொத்தாய், கறுப்பும் வெளுப்பும், பழுப்புமாக ஆடுகள்.

மலையான நம்பிக்கை உறுதிகள் சரிந்து நொறுங்கினாற்போன்ற அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமலே நின்றான்.

“என்னப்பா? சம்மதமா?...” என்று கேட்ட ‘பாய்’ வேலை மும்முரத்தில் இருந்தார்.

வெண்மையான அடிப்புறங்கள் வானை நோக்க, கழுத்தில் குரல்வளை நாளத்தில் செங்குருதி பீச்சிட...

சடங்குக்குக் காக்கி உடுப்புக் கால்நடை மருத்துவ அதிகாரி சாட்சியமாகி நிற்கிறார்.

இரத்தம் பீறிடவிட்டு, தலைவேறு முண்டம் வேறானபின் உயர மேடையில் கொக்கியில் மாட்டி. நிணத்தை வேறாக்கி மீண்டும் அவர் பார்வையிடக் காட்டுகின்றனர்.

அவன் அடித்து வைத்த சிலைபோல் குவிந்த தலைகளை, உடல்களைப் பார்த்தான். நெஞ்சு சில்லிட்டுப் போயிற்று.

ஒரு உருப்படிக்குப் பத்து பைசா... ஒரு உருப்படி, ஒரு உருப்படி, ஒரு ஆடு...

அவன் நிற்கையில், பாய் அவனைத் தலையை ஆட்டி அழைத்தார். “வரியா? புடிச்சிக்க...”

“ஐயோ, வேண்டாங்க... நான்... உசந்த குலத்தில் பிறந்தவன்” என்று உள்ளம் ஒதுங்கியது. ஆனால்...

அவன் தன்னையறியாமல் சென்று முன்னங்கால்கள், பின்னங்கால்களை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவர் “பிஸ்மில்லா...” என்று ஏதோ முணமுணத்துவிட்டு கைக் கத்தியை இழுத்தார்...

இந்தக் கார்த்திகைப் பொழுதிலும் அவனுக்கு இறுக்கமாக இருக்கிறது!

தாழ்வரையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறான்.

நினைவுகளை வெருட்ட முடியவில்லை.

கதவுத் தாழை அசைத்து ஒலியெழுப்பிக்கொண்டு வள்ளி வருகிறாள்.

சிலும்பல் தெரியாமல் வாரி கூந்தலை வட்டக் கொண்டையாக முடித்திருக்கிறாள். நெற்றியில் குங்குமமில்லை. ஆனால் காதுகளில் லட்டுத் தோடும், மூக்கில் அன்ன மூக்குத்தியும் அணிந்திருக்கிறாள். நல்ல சிவப்பு ரவிக்கை; வெங்காயச்சருகு போன்ற ரோஸ் நைலான் சேலை.

கையில் தட்டில் சோறும், கிண்ணத்தில் குழம்பும் இறைச்சி வறுகலும் கொண்டு வருகிறாள்.

கீழே தட்டை வைத்துப் பரிமாறும் போது சொல்லி வைத்தாற்போல் அம்புலிப் பயல் வருகிறான். வள்ளியின் ஐந்து வயசு மகன்.

“ஏண்டா வந்தே? சோமாறி! வூட்டுக்குப்போடா!”

“நீ ஏன் அவனை எப்பவும் விரட்டிட்டே இருக்கே?”

அவன் குழம்பைப் பிசைந்து சோற்றில் ஒரு உருண்டையையும் கறித்துண்டையையும் கொடுக்கிறான் பையனிடம்.

“நீங்க என்னங்க, அந்தப் பயலுக்குத் துன்றது தவிர ஒண்ணில்ல. அங்கியும் துண்ணுவான். தம்பி வந்தாலும் இதே கதிதான். போடா போ.... ஆயா வந்திச்சா போயிப்பாரு!”

“பின்ன ஏன் சோனியாயிருக்கிறான்? நான் சொல்றேன் கேளு. அவனை இஸ்கோலுக்கு இப்ப அனுப்பாதே. ஒரு வருசம் போகட்டும்!”

“வயிசாயிட்டுதுங்க அதுக்கு! அதும் அப்பன் சாவறச்சே ஒரு வயசுப் பய. அதும் அப்பன் அப்பிடித் தானிருக்கும். முக்காப்படி அரிசிச் சோறு துண்ணாலும் போன எடம் தெரியாது! போடாலேய்!”

பையனை விரட்டிவிட்டு அவன் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

“ஏங்க, அப்பிடியே வச்சிட்டீங்க? நல்லால்லியா? ஆயாதான் ஆக்கிச்சி...”

“போதும் போ...”

கையைக் கழுவிக் கொள்கிறான்.

அவன் வெளியே சந்துப் பக்கம் சென்று புகை குடித்துக் கொண்டு நிற்கிறான். கடைவாயிலில் கூட்டமில்லை. வாயிலில் ஒரு ஸ்கூட்டர் வந்து நிற்கிறது. அதில் ஒரு இளம்பெண்ணும் ஆணும் இருக்கின்றனர். இளைஞன் வண்டியைத் தள்ளிக் கடையோரமாக நிறுத்துகிறான். இருவருமாகச் சந்துக்குள் வருகின்றனர். பெண் முக்காடிட்டுக் கொண்டிருக்கிறாள். அவர்கள் மாடிக்குச் செல்கின்றனர்.

யாரோ? யார் யாரோ வருகின்றனர்; செல்கின்றனர். வள்ளி, முத்தாயி, எல்லப்பன், யாருமே பந்தமில்லை. இரத்த பந்தங்களாக இருந்த பாசங்கள், பிறப்பின் பாரம்பரியங்களுடனும், சூழலுடனும் பழக்க வழக் கங்களினின்றும் அறிவில் மலர்ந்த சிந்தனைகளுடனும் தொடர்பான இயல்புகள் எல்லாமே குரூரமாக அழிக்கப்பெற அவன் வாழ்கிறான். இந்த நாட்களில், அவனுக்கு நாட்டு நடப்பு தெரியாது; அரசியல் தெரி யாது. விலைவாசி தெரியாது; அவனுடைய மென்மையான உணர்வுகளெல்லாம் ஒரு சில விலங்குத் தேவைகளிடம் விடை பெற்றுக் கொண்டு அவனை விட்டு அகன்றுவிட்டன. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்கு ஆதாரமான ‘யாருக்கு’ என்ற மூலமே அழிந்துவிட அவன் உயிர் வாழுகிறான்.

‘அவன்’ அவனா உயிர் வாழுகிறான்? ‘அவன்’ அந்த அவன் இறந்து போய்விட்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய மென்மைகளை, உயிர்ப்புக்களுக்கு மூலாதாரமான ஊற்றுக்களை அழித்துத் தன்னையே கொன்று கொண்டான். இன்று அந்த இழப்பின் சோகம் குபீலென்று அவனுள் குழி பறிக்கிறது. புருவங்களின் நடுவே துளி திருநீறும் ஒரு பொட்டு குங்குமமுமாகத் தோன்றிய அந்த இளம்முகம் அவனுடைய கண்களை விட்டகல மறுக்கிறது. உடல் அழிந்தாலும் ஆன்மா அழியாததென்ற உணர்வை அக்குடும்பத்தில் பிறக்கும் போதே அறிவுறுத்த அவர்களுடைய வீட்டுச் சுற்றிலே சமாதி இருக்கிறது. சிவராத்திரிக்கு முன்பாகப் பசுவின் கருக்காய்களைப் புடம்போட்டுத் திருநீறு எடுத்து வைப்பார்கள். அந்தத் திருநீறு அவளும் புருவத்தில் வைத்திருந்தாள். அந்தக் குழந்தை அவளைப் புரிந்து கொண்டிருப்பாளோ? இந்நேரம் அவள்... சிவகாமி...?

அத்தியாயம் - 4

பஸ் கிண்டிக்கு வருமுன்பே நடத்துனர் குரல் கொடுக்கிறார்.

“‘காம்ப்ளெக்சு’க்குள் பஸ் போகாது. உள்ள போகணுங்கறவங்க மெயின் ரோடில் இறங்கிக்குங்க...”

“ஏன்? என்ன ஆச்சு?” என்ற கேள்விக்குறியைத் தொங்கவிட்டுக் கொண்டு ரேகா சுற்றுமுற்றும் திகிலுடன் பார்க்கிறாள். இதை முன்பே ஊரில் புறப்படும் போதே சொல்லித் தொலைத்திருக்க மாட்டானா? “ஏங்க? போகாதா?”

“டெக்னாலஜி ஸ்டூடன்சுக்கும் யாரோ பஸ் கண்டக்டருக்கும் தகராறு போல இருக்கு. பேப்பரில் பார்த்தேன்...” என்று அந்த ஊர்தியில் வந்து கிண்டி ஆராய்ச்சி நிலைய நிறுத்தத்தில் இறங்கும் பெண்மணி விவரம் கூறுகிறாள்.

ரேகா காலையில் செய்தித்தாள் பார்க்கவில்லை.

தொழிற்பேட்டையின் இறுதி நிறுத்தத்தில் இறங்கினாலே அவளுடைய மூலை அலுவலகத்துக்குச் சிறு நூறு மீட்டர் நடக்க வேண்டும். சாலையிலேயே இறங்கினால் இரண்டு, மைலுக்குக் குறையாத தொலைவு நடக்க வேண்டுமே? ரிக்‌ஷா எதுவும் இருக்காது. இருந்தாலும் இரண்டு, மூன்று கூலி கேட்பான். அவளுடைய பர்சில் பஸ் கூலிக்குமேல் ஒரு ரூபாய்தான் இருக்கும்.

சாதாரணமாக அலுவலகத்தில் நம்பிதான் அவளுக்கு ‘பாஸ்’ என்று கொள்ள நடப்பவன். ஜானிராஜ் தோட்டத்துறை அனுபவம் உள்ளவர். அவர் அநேகமாக அலுவலகத்திலேயே இருப்பதில்லை. அவர்களுடைய பொறுப்பில் நகரத்தின் பல பகுதிகளிலும் பூங்கா, தோட்டங்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்காணிக்கப் போய்விடுவார். எனினும் அன்றாடம் ஒருமுறை அலுவலகத்துக்கு வந்து போவார். உண்மையான அதிகாரி கோகுல்தான் மன்மோகனின் இளைய மகன். அவன் உல்லாச புருஷன் என்றும், நம்பிக்குத் தோழன், வேண்டியவன் என்றும் அவள் அங்கு அடியெடுத்து வைத்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டிருக்கிறாள். தொழிற்பேட்டைக்கு அப்பால் விரிந்துகிடந்த இருபது ஏக்கர் பரப்பில், அந்தச் செய்வனத்தின் முன் ஓட்டுக் கரை போட்ட அலுவலகத்தை முதன்முதலில் பார்த்த போது அவளுக்குப் பரவசமாக இருந்தது. வண்ணங்கள் குலுங்கும் மலர்கள் இளங்காற்றில் அசைந்தாடின. குளிர்ச்சியான இயற்கையின் சூழலில் அது சுவர்க்க வாயிலைப் போன்று தோன்றியது. ‘மானேஜர்’ என்று அறிவித்த அறையில் அன்று பெரியவர் மன்மோகன் அமர்ந்திருந்தார். அவர் என்றோ ஒருநாள்தான் வருவார் என்றும், கோகுல்தான் அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பவன் என்ற விவரம் அவளுக்குப் பிறகுதான் புரிந்தது. நம்பிக்கும் ஜானிராஜுக்குமாக ஒரே அறையை அட்டைத் தட்டிகொண்டு மறைத்து இரண்டு பிரிவுகள் ஆக்கியிருந்தனர்.

தங்களுடைய கிராமியச் சூழல் வீட்டிலிருந்து முற்றிலும் செயற்கையான, வணிக வீதியிலுள்ள நிறுவனத்தில் அவளுக்கு வேலை கிடைத்திருந்ததால் அவள் திண்டாடிப் போயிருப்பாள். முதல் சில நாட்களுக்கு அவன் அலுவலக வேலை பழகுமுன் இதுவே கடினமாக இருந்தது. அவளுக்குச் சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியவில்லை. எனவே முதல் நாளே கோகுல் ஏதோ கேட்டதற்கு நடுங்கிக் கொண்டு தவறான மறுமொழியைக் கொடுத்தாள். கோகுல் கோபமாக “உனக்கு நூற்றைம்பது ரூபாய் சம்பளமா? ஒண்ணும் தெரியலியே!” என்றான். ஆனால் நம்பிதான் வேலை கற்றுக் கொடுத்தான்.

“சே, சே, இதுக்குப் போய் அழுவுறியே? கோகுல் நல்லவன். முதலாளிங்க அப்படித்தான் இருப்பாங்க. போ போ. முகத்தைக் கழுவிட்டுப் பவுடர் போட்டுட்டுச் சிரிச்சிட்டு உக்காரு!” என்று சொல்லிக் கொடுத்தான்.

மாமா ஒருநாள் அவளைக் கூட்டிக்கொண்டு அலுவலகத்தைப் பார்க்க வந்தார், “வாங்க சார். மானேஜர் இன்னிக்கு வரலே. நான் தான் அந்த சீட்ல இருக்கறவன்... நீங்க கவலையே படாதீங்க சார்! நான் அஞ்சு சிஸ்டர்ஸ் கூடப் பிறந்தவன். ஒண்ணைக் கட்டிக் கொடுத்தோம். அதும் வீட்டுக்கு வந்திட்டது. எல்லாம் வேலைக்குத்தான் போறாங்க. அதனாலேயே நான் வேற கலியாணம் பண்ணிக்க வேண்டாம்னு இருக்கேன். ரேகாவை நான் கவனிச்சிக்கறேன். என் சிஸ்டர் மாதிரி...” என்று அவரைக் குளிர வைத்தான். சம்பங்கியைத் தொழிற்பேட்டைக்குள் சென்று காபி வாங்கி வரச் செய்து கொடுத்தான். அவருக்கு வாயெல்லாம் பல். “தொரை சொன்னது மெய்தாம்மா. ஆபீசு மாதிரியேயில்ல. அந்தப் புள்ளாண்டான் நல்ல மாதிரியாயிருக்கிறான். கவலையே படவேணாம். என் தங்கச்சிங்க அஞ்சு பேரும் ஆபீசுக்குப் போறாங்கன்னான்...” என்று பாட்டியிடம், அவளை வேலைக்கு அனுப்பும் உறுத்தல் மறைந்து கரையத் தேங்காய்ப் பாலாய்ச் சொற்களை வழியவிட்டார். முதல் சம்பளத்தை அவள் பெற்றுக் கொண்டு பாட்டியிடம் கொடுத்ததும் பாட்டியின் முகத்தில் மலர்ச்சி கூடியது.

ஜானிராஜுக்கு நாற்பத்தைந்து வயசுக்கு மேலிருக்கும். “சேல்ஸ் பார்த்துக்க வேணும்னு நான்தான் கேட்டுக்கிட்டே இருந்தேன். உன்னைப்போல எனக்கு டாட்டர்ஸ் இருக்காங்க” என்று பரிவுடன் அவளுடைய அச்சத்தைப் போக்கினார். அந்தப் பிரிவில்தான் அவளுக்கு இடம் போட்டுக் கொடுத்திருந்தார்கள்.

ஆனால், நம்பி... நம்பி.. நம்பவும் முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. சரளமாகப் பேசும்போது, அவன் தனக்கு மேலான பதவியில் உள்ளவன் என்ற அச்சம் மறந்து தோழமை இணைந்த பாவம் தோன்றுகிறது. மெள்ள மெள்ள அவன் எப்படி உரிமை எடுத்துக் கொண்டான் என்று புரியாமலே நெருங்கியிருக்கிறான். “நீ விவரம் தெரியாத சுத்தக் கண்ட்ரியா, வெள்ளையா இருக்கே. அந்த ஆள் நல்லவன்தான். ஆனா, நல்லா தண்ணி போட்டுடுவான். அவங்க ஆசாரம் அது. உனக்குத் தெரிஞ்சிருக்கட்டும்னு சொல்லி வச்சேன்” என்றான் ஒரு மாதிரியாக.

“ஆபிசுக்கு மேல நமக்கு ஏன் வீணான கவலை? பார்த்தால் நல்லவராகப் பழகுகிறார்...” என்றாள் அவள்.

“பார்த்தால் எல்லாரும் நல்லவர்தான். நானும் தப்பு சொல்லலே. ஒருதரம் மானேஜர் இங்கே வந்து ஆர்ச்சர்ட் பங்களாவில் தங்கிட்டுப் போறப்ப, யாரோ கெஸ்ட்டுக்குன்னு வாங்கி வச்சதை அலமாரியில் வச்சிட்டுப் போயிட்டார். காலையில் ஆபீசுக்கு வந்ததும் ஐயா அதை மறைச்சு வச்சுட்டு ‘பாம்க்ரோவ்’ பக்கம் ரெஸ்ட் எடுத்துக்கறேன் நம்பின்னு போய்க் குடிச்சிட்டான். அப்ப பாஸ் யாரையோ சினிமாகாரங்களைப் பெரிய ஆர்டருக்கு அழைச்சிட்டு வந்தார். பெரியவருக்கு இந்த முறைகெட்டதனம் பிடிக்கலே. வேலை நேரத்தில் குடிக்கலாமா?”

அவளுக்குக் கரும்புகையாய்த் திகில் பரவியது.

அவன் அவள் முகத்தையே பார்த்துவிட்டு, “அப்புறம் நான்தான் பெரியவரிடம் போனாப்போவுது தெரியாம செஞ்சிட்டான்னு சொல்லிக் கோபத்தைத் தணிச்சேன். இந்த ஜானிராஜ் கவர்மென்ட் கார்டன்ல இருந்தவன். ஊழல் திருட்டிலே மாட்டிக்கிட்டு வேலை போயிட்டது. இப்ப இங்கே வந்து மூணு வருஷமாகுது. சம்சாரி. ‘நம்பி, பாஸ் என்ன சொன்னாரு? கோபிச்சிட்டாரு?’ன்னு என்னிடம் கெஞ்சினான். அன்னிக்கு அவனுக்கு வேலை போயிருக்கணும். அதான் உன்னிடம் ஜாக்கிரதையா இருன்னு சொல்லி வச்சேன்!” என்றான்.

ஆனால்... ஆனால்.... நம்பி... எத்தகையவன்?

சாலையில் பஸ்சுக்குத்தான் கூட்டம் காத்திருக்கிறது. பேட்டையின் குறுக்காகச் செல்லும் பாதையில் கார்களும், ஸ்கூட்டர்களும் சைக்கிள்களும் செல்கின்றன. வெயில் சுள்ளென்று விழுகிறது. அவள் நடப்பதைத் தவிர வேறு வழியில்லை.

முதுகும் முன்வயிறும் தெரிய உடை உடுத்துக் கொண்டு அலுவலகப் பெண்கள் கைப்பையுடன் நடக்கின்றனர். வெயிலுக்கு ஒரு கருப்புக் கண்ணாடி வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவளுக்கு. ஆனால் பாட்டி கண்டால் குதறிவிடுவாள். செவிகளில் வளையம் போட்டுக் கொள்ளவே சம்மதிக்கவில்லை. சிறு பொன்னணி போட்டுக் கொண்டிருக்கிறாள். கூந்தலை அழுந்தவாரி நுனி வரையிலும் பின்னி நாடா முடிச்சிட்டிருக்க வேண்டும். இடை தெரியாமல் சோளி அணிந்தாலும் பின்தலைப்பு முதுகை மூட வேண்டும் என்பது விதி. ரேகா என்று கூடப் பாட்டி அழைக்கமாட்டாள். சொர்ணம்மா என்றுதான் அவள் அழைப்பாள்.

கைப்பையில் சிறு சம்புடம் குலுங்க, அவள் நீண்டு சென்ற பசுமையற்ற சிமந்துக்கூரைக் கொட்டகைகளையும் தார் சாலையையும் கடந்து அவளுக்குப் பரிசயமான பசுமையான சூழலுக்குள் நுழைகிறாள்.

வாயிலில் ஜானிராஜின் ஸ்கூட்டர் இல்லை. வழக்கம்போல் அவர் நேரம் சென்று வருவார். கண்ணாடி ஜன்னல் கதவுகள் திறந்திருக்கவில்லை. ரேகாவிடம் இன்னமும் கைக்கடியாரமில்லை. மணி பத்தரையாகியிருக்குமோ? ஒருகால் கோகுல் வந்திருந்து சத்தம் போடுவாரோ? ஆனால் கார் எதையும் காணவில்லை. அவள் திறந்த அலுவலகத்துக்குள் செல்கிறாள். அவள் இருக்கையைத் தட்டிவிட்டு உட்காருகையில் நம்பி அங்கே வந்து விசிறிக்கான விசையைத் திருப்புகிறான்.

“ரொம்ப தாங்க்ஸ்... மணி என்ன ஆகுது? பஸ் இல்ல இங்க. நான் வர அதனாலதான் லேட்டாயிட் டது...” என்று பணிவுடன் கூறுகிறாள்.

“இன்னிக்கு ஆபீசுக்கு யாரும் வரமாட்டாங்க...”

அவளையே அவன் பார்க்கிறான். சற்று பொறுத்து, “அவங்க வீட்டிலே, கிழம், ஒண்ணு மண் டையப் போட்டுடிச்சி. லீவு...” என்று தெரிவிக்கிறான்.

“நிசமாவா?”

“பின்ன பொய்யா சொல்றேன்? பதினோரு மணிக்கு நாம் கதவை அடிச்சிட்டுப் போக வேண்டியதுதான்...”

அவனுடைய தாழ்ந்த நோக்கில் ஏதோ ஒரு கபடம் ஊடுருவுவது போல் அவளுக்குத் தோன்றுகிறது.

“இது உண்மைதானா!" என்று மருளும் விழிகளுடன் அவள் கைகளை உதறிக்கொண்டு நிற்கிறாள். தன்னந்தனியே அவனோடு விடப்பட்டிருப்பது புதியதோர் வகையில் அச்சத்தைத் தோற்றுவிக்கிறது. அவள் ஜன்னலைப் பார்க்கிறாள். தொழிற்கூடங்கள் நீண்டு நீண்டு செல்லச் சாலை தொலைவில் இருக்கிறது.

“இன்னிக்கு பஸ் இங்கே உள்ளே வரலியே? நீ எப்படி வந்தே?”

“கஷ்டமாத்தான் போச்சு. பஸ்சில ஏறும்போதே தெரிஞ்சிருந்தால வந்திருக்க மாட்டேன். பேப்பரில் வந்ததுன்னுகூடச் சொல்லிட்டாங்க.”

“நீ பேப்பர் பார்க்கிற வழக்கமில்லியா?”

“காலையிலே பேப்பர் பார்க்க நேரமிருக்காது. மாமன் சித்தப்பா, ரெண்டு பேரும் பார்த்திட்டிருப்பாங்க...” என்று கூறி நிறுத்துகிறாள். அவன் அவளை உட்காரச் சொல்லவில்லை; தானும் உட்காரவில்லை. அருகில் வந்து நின்று கொண்டே இருக்கிறான்.

“ஜானிராஜ் கொஞ்சம் முன்ன, நான் வந்ததும் டெலிபோன் பண்ணினான். ஆளுங்களெல்லாம் காலையிலேயே அழைச்சிட்டுப் போயிட்டிருக்கிறான். காலையிலே பேப்பர் பார்க்கவேணாம்?”

காலையில் எழுந்து தாய்க்கு உதவியாக நான்கு குடம் நீர் இறைத்து விட்டு, பொடிசுகளுக்குத் தலைசீவி விடுவாள். “சொர்ணம்மா, அந்தக் கன்னுக்குட்டிச் சனியன் அவுத்துக்கிச்சு பாரு. உனக்குத்தான் அது வரும்...” என்று பாட்டி இடையில் குளிர்வித்து வேலை வாங்கிக் கொள்வாள். பிறகு குளித்துத் தன்னைச் சீராக்கிக் கொண்டு பஸ்சுக்கு வரத்தான் பொழுதிருக்கும்.

அவள் அவனிடம் எதுவும் பேசாமல் முதல் நாள் பகுதி வைத்த பட்டியலை எடுத்து விலை பார்த்து எழுதப் பேரேட்டுப் புத்தகத்தை எடுக்கிறாள்.

அவன் அவளுக்கு எதிராக நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமருகிறான்.

அவள் உள் நடுக்கமும் ஒடுக்கமுமாக அமர்ந்து பேரேட்டைப் புரட்டுகிறாள்.

“என்ன எழுதியிருக்கே?” என்று பார்ப்பவன் போல் தலை சாய்க்கையில் மேசைக்கடியில் கால் அவ ளுடைய பாதத்தை அழுத்துகிறது.

அவள் தேள் கொட்டினாற்போல் துள்ளி எழுந்திருக்கிறாள். அவனுடைய விழிகளில் ஒரு “அந்தரங்க பாவம்” இறைஞ்சுவதுபோல் தோன்றுகிறது. நா அதற்குத் தொடர்பே இல்லாமல் சொற்களைக் கூட்டுகிறது.

“இன்னிக்கு நீ மட்டும் எதற்கு வேலை செய்யனும்? நான் வேலை செய்யப் போறதில்ல. நான் இங்கே எதுக்குக் காத்திட்டிருந்தேன்?... நீ என் சிஸ்டர் மாதிரி. எனக்கு எப்பவும் அப்பிடியே தோணுது. “ரேக்” குனு கூப்பிட்டு உன்னை ஒரு குட்டு குட்டி உக்காத்தி வைக்கலான்னு தோணுது. நீ வெறும் வெள்ளையாயிருக்கே. அது கூட இல்ல. பச்சையா இருக்கே...”

“சார்... அப்படீன்னு மொத்தமா நினைக்க வேண்டாம்" என்று துணிகரமாக அவனைக் கண்டிக்க வாயெடுத்தாலும் படபடப்பாகப் பேசத் துணிவு வரவில்லை.

அவன் சிரிக்கிறான்.

“உனக்காகத்தான் ‘ரேக்’ நான் இங்கே முன்னமே புடிச்சி வந்து காத்திட்டிருக்கிறேன். இந்த அசட்டுப் பொண்ணு தனியாக வந்து நிக்கப் போறதே, யார்னாலும் குடிச்சிட்டு வந்து இழுத்திட்டுச் சோலைக்குள்ள பூந்தா கத்தக்கூடத் தெரியாதே, அப்படிக் கத்தினாலும் யாருக்கும் கேட்கப் போறதில்லையேன்னு நினைச்சேன். நான் நினைச்சாப்போல, நீ மங்கு மங்குன்னு நடந்து வந்திருக்கே; ஆபீசில் யாருமில்ல. வேலையாளுங்க யாருமில்ல... அசடு...!”

இந்த அபாயங்களெல்லாம் இப்போது இருக்கின்றன என்று அவன் அறிவுறுத்துகிறானா? அல்லது... உண்மையிலேயே இங்கே ஆட்கள் எவரும் நடமாட்டமில்லை என்று துணையாக நிற்கிறானா? மேசையின் கீழ் காலை அமுக்கும் இவன்.. இவன்...

செவிகள் அடைக்கும் போலிருக்கிறது. நெஞ்சில் எரியுணர்வு பரவுகிறது.

“இன்னிக்குப் போறப்ப எப்படி போவே?”

“தெரியாம வந்திட்டேன். நடந்துதான் போகணும்...”

“ஜானிராஜ் ஸ்கூட்டர் கொண்டாந்து ஏத்திட்டுப் போவான்!” என்று கண்களைச் சிமிட்டுகிறான்.

அவள் எதுவுமே பேசாமல் ஜன்னலை வெறித்துப் பார்க்கிறாள். அவனுடைய நோக்கு அவளுடைய கைப்பையில் மேலாகத் தெரியும் ‘டிபன் சம்புடத்தில்’ விழுகிறது.

“இன்னிக்கு என்ன டிபன் கொண்டு வந்திருக்கே. கர்ட் பாத் வித் மாங்கோ பிக்கில்சா?”

அவள் எழுந்து வெளியே வருகிறாள். சாலையில் சைகிளில் தபால்காரன் வருவதைப் பார்த்துவிட்டாள்.

அவனும் வெளியே வருகிறான்.

“ஏய்யா, இன்னிக்குச் சீக்கிரமா தபால் கொண்டு வந்திட்டியே?” என்று கேட்டுக் கொண்டே நம்பி தபால்களை வாங்குகிறான். ஒரு வி.பி.பி. மணியார்டர் முப்பத்தேழு ரூபாய் வந்திருக்கிறது. பணத்தை எண்ணி வாங்கிக் கொள்கிறான்.

“பூ, ஒரு நூறு இரு நூறு இருந்தாலேனும் எடுத்திட்டுப் போகலாம். முப்பத்தேழு ரூபாய் பிசாத்து யாருக்கு வேணும்! இந்தா, நீயே வச்சுக்க!” என்று அவள் கையில் கொடுக்கிறான்.

அவள் எதுவும் பேசாமல் பணத்தை வாங்கி மேசை இழுப்பறையில் வைத்துப் பூட்டிவிட்டுப் பதிவு செய்கிறாள்.

அவன் அலுவலகக் கடிதங்களைப் பிரித்துப் பார்த்துவிட்டுப் போடுகிறான்.

மணி ஒன்று என்பதை அறிவுறுத்தும்படி தொழிற்சாலை சங்கு ஒலிக்கிறது.

“உனக்குப் பசி எடுக்கலே ரேக்?” என்று அவன் சோம்பல் முறிக்கிறான்.

“வீட்டுக்குத் திரும்பிப் போகும் கவலையில் பசியே தெரியல.” அவள் முணமுணக்கிறாள்.

“வீட்டுக்குப் போறியா? என்ன ரேக், முணமுணக்கிறே?”

“என்னை ரேகான்னே யாரும் வீட்டில் கூப்பிட மாட்டாங்க சார் சொர்ணான்னுதான் கூப்பிடுவாங்க.”

தன்னுடைய அதிருப்தியை அவனிடம் எப்படி வெளியிடுவதென்று புரியவில்லை, அவளுக்கு.

“சொர்ணான்னு சொன்னா எனக்குப் பிடிக்கல. சொர்ணா சொரணை இல்லாதன்னுதான் தோணுது...” என்று சம்பந்தம் இல்லாமல் சிரிக்கிறான். நல்ல சிவப்பு; மீசையில்லை. எனினும் கற்றையான அடர்ந்த முடி. பெண்மை கலந்த சாயலுடைய கவர்ச்சியான முகம். சிரிக்கும் போது அது இன்னமும் கூடுகிறது.

அவன் அவனுடைய கைப்பையிலிருந்து சம்புடத்தை எடுத்துத் திறக்கிறான். “ஆகா! மாகாளிக் கிழங்கு பிக்கில்ஸ். மாகாளிக் கிழங்குக்கு என்ன இங்கிலீஷ் ரேக்?”

எரிச்சலை அடக்கிக் கொண்டு, “நான் பாடனி படிக்கலே சார்” என்று மறுமொழி கொடுக்கிறாள்.

“எனக்கு மோர் சாதமே பிடிக்காது...” என்று கூறிக்கொண்டே, அம்மா அதில் அவள் கை ஒட்டாமல் உண்ணப் பாங்காக வைத்திருக்கும் சிறு தேக்கரண்டியால் அவன் நான்கு வாய் போட்டுக் கொள்கிறான்.

ஜானிராஜின் ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்கிறது.

அவள் திடுக்கிட்டுத் திரும்புமுன் ஜானிராஜே ‘ஹெல்மெட்’டைக் கையில் எடுத்துக் கொண்டு வருகிறார்.

குட்டை மீசை விரியச் சிரித்துக் கொண்டு, “சாப்பாட்டு நேரமா? நான் வேண்டாம வந்திட்டேன் போல இருக்குது!” என்று கண்களைச் சிமிட்டுகிறார். அவளுக்குக் கிடுக்கியில் மாட்டிக்கொண்டாற் போலிருக்கிறது.

“எக்ஸ்க்யூஸ்மி!” என்று ரேகாவிடம் கூறிவிட்டு உள்ளே வந்து அலமாரியில் ஏதோ காட்லாகைத் தேடுகிறார்.

“நாலு மாசம் முன்ன வந்த கேட்லாக் எங்கம்மா?”

“இங்கதான் சார் இருக்கும்!” என்று அவளும் தேடும் சாக்கில் எழுந்திருக்கிறாள்.

அவர் நாவைத் தொட்டு ஒவ்வொரு பக்கமாக புரட்டுகிறார்.

“இந்தாம்மா ரேகா, ஒரு பில் போடு. லேடிலைஸ் ஒரு நாலு தொட்டி, பிரின்ஸ் அப் வேல்ஸ் தொட்டி, தென்னை யாழ்ப்பாணம் பத்து, ஒட்டுக் கொய்யா பங்களூர் ரகம் பத்து... சம்பங்கி எல்லாம் கொண்டு வருவான். பாத்து பில் போடு. நான் வரேன் அரைமணியில்...”

“சரி சார்!...”

அவர் விருவிரென்று ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டு செல்கிறார்.

ரேகா நம்பியைத் துணிவுடன் விழித்துப் பார்க்கிறாள்.

“அலுவலகம் இல்லை என்று பொய்யா சொன்னீர்கள்?” என்று கேட்கும் பார்வை.

அவன் அவளுடைய சாப்பாட்டில் நான்கு வாய் சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக ஸ்பூனை பானையிலிருந்து நிரெடுத்துக் கழுவிக் கொண்டு வந்து வைக்கிறான்.

பட்டியல் எழுதும்போது ஆத்திரமாக வருகிறது. கயவன் அவளிடம் பொய் கூறுகிறான்; நையாண்டி செய்கிறான். என்ன பொருள்?

அரைமணியில் வந்து விடுவதாகக் கூறிச் சென்ற ஜானிராஜும் வரவில்லை. சம்பங்கியும் செடி வகையறாக்களுடன் வரவில்லை. நம்பி புகைபிடித்துக் கொண்டு வெளியே ஜன்னல் அடியில் நின்று அவளையே பார்க்கிறான்.

ஒரு சுண்டைக்காய்க் கொசு கையில் சுருக்கென்று கடிக்கிறது. அப்போதுதான் மின்விசிறி கழலவில்லை, விசை நின்றுவிட்டது என்று புரிகிறது. அவள் அந்தக் கொசுவைச் சுற்றிச் சுற்றி இரு கைகளுக்குள், அடித்து நசுக்க முயற்சி செய்கிறாள்.

நம்பி ஜன்னலுக்கு அப்பால் சிரிக்கிறான்.

“அதை அப்படி நசுக்க முடியாது!” என்று கூறும் அவனே அந்தக் கொசுவைப் போல சுற்றி வருவதாகத் தோன்றுகிறது. ஒரு மணிக்கு வயிற்றுக்குப் போட்டுப் பழகியிருப்பதால், பசியுணர்வு குழி பறிக்கிறது. ஆனால், அவன் உண்டு மிச்சம் வைத்திருக்கிறான். இப்படி அடுத்து அடுத்து உரிமைகள் எடுத்துக்கொள்ளும் இவனை எப்படி விலக்குவது?

சந்தனசாமி நல்லவேளையாக குரோட்டன்ஸ், பூச்செடிகளைக் கொண்டு வந்து வைக்கிறான்.

ஜானிராஜ் முன்னே வர, ஒரு நில வண்ணக் கார் வருகிறது.

அவர்கள் சென்ற பின்னரும் நம்பி அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கிறான். இப்படி அவன் இத்தனை நாட்களில் அச்சம் ஊட்டும்படி நடக்கவில்லை. அவளுக்கு இயற்கைக் கடன் கழிக்கச் செல்லவும் அச்சமாக இருக்கிறது.

வேறு வழியில்லாமல் அவன் உண்ட மிச்சத்தையே எடுத்து விழுங்குகிறாள். பசி உணர்ச்சிக்கு இதமாக இருக்கிறது.

அவன் இன்று அலுவலகம் லீவு என்று சொன்னதெல்லாம் பொய்.

இந்த வேலையை விட்டுவிட்டு வேறு எங்கே வேலை தேடிக் கொள்ள முடியும்? வீட்டில் இவனைப் பற்றி யாரிடம் சொல்லி என்ன வழி கேட்க முடியும்? இவன் முதலாளி கோகுலின் இருக்கையில் சமமாக அமருகிறான்; வண்டியில் போகிறான்; வருகிறான். ஜானிராஜ்கூட இவனிடம் எதுவும் பேசுவதில்லை. இவன்...

கண்ணீர் மல்குகிறது.

வீட்டுச் சிறையை விட்டு வெளியே வந்தவளுக்கு, இதுவும் ஒரு சிறையாகுமா? தோழமைக்கு ஒரு பெண் இல்லை. அவன் கூறினாற் போல் இங்கே முறைகேடு நடந்தால் கத்தினால்கூட வெளியே கேட்காது.

நான்கு மணிக்கு கோகுலும் நம்பியும் பேசிக் கொண்டு வருகின்றனர். கோகுல் கால்மணி நேரம் இருக்கையில் அமர்ந்து தபாலைப் பார்த்து விட்டு ஜானிராஜிடம் சில உத்தரவுகளை இடுகிறான். பிறகு இருவருமாகச் செல்கின்றனர்.

ஐந்து அடித்ததும் அவள் அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறாள். தொழிற்பேட்டைச் சாலையில் ஸ்கூட்டர்களும் சைக்கிள்களும் நெருங்குகின்றன. பெண்கள்... வண்ண வண்ணங்களாய்ச் செல்கின்றனர். மனசோடு ஒரு விடுதலை உணர்வு. இரண்டு மைல் நடக்க வேண்டுமென்று கூடத் தோன்றவில்லை.

சர்ரென்று ஒரு கார் அவளை இடித்துவிடுவது போல வந்து நிற்கிறது.

ஒருகணம் தூக்கிவாரிப் போடுகிறது.

கோகுலும், நம்பியும் முன் பக்கம் அமர்ந்திருக்கின்றனர். நம்பி பின்பக்கக் கதவைத் திறக்கிறான்.

“உட்கார் ரேக்...”

“இல்... வேண்டாங்க... நான் நடந்து போயிடுவேன்” நாக்குளறுகிறது.

“பரவாயில்லை. பஸ் வராதே இங்கே இன்னிக்கு?”

“நான்.... நடந்தே போயிடுவேங்க... தாங்க்ஸ்...”

“உன்னைக் கடத்திட்டுப் போயிடமாட்டோம். சும்மா உக்காரு, பஸ் ஸ்டாப்பில விட்டுடுவோம்...”

அவள் அஞ்சிய எலிக்குஞ்சு போல் பின்புறத்து இருக்கையில் ஒட்டிக் கொள்கிறாள்.

“அவங்க வீடு எங்கே இருக்கு?” கோகுலின் கேள்வி.

“சொல்லேன் ரேக்? உன்னைத்தான்!”

“யாரு? என்... என்னையா சார்? எங்க வீடு... ஸெவண்டி எய்ட் பி. பஸ் சார்...”

அவன் சிரித்துக் கொள்கிறான்.

பஸ் நிறுத்தத்தில் வண்டி நிற்கிறது. நம்பி இறங்கி கதவைத் திறக்கிறான். ரேகாவும் இறங்குகிறாள்.

அவளுடைய அச்சம் இன்னமும் விலகவில்லை. பஸ் நிறுத்தத்தில் ஒரே கூட்டம்.

“நீ என்ன, அவரே காரை நிறுத்தி ஏத்திக்கிறதா வந்தும், மரியாதையில்லாம ‘நடந்தே போயிடுவேன்’னு சொல்றே? சுத்த கன்ட்ரியா நடக்கிறியே? உன்னை என்ன, கொத்திட்டுப் போயிடுவாரா? நல்லாவேயில்ல நீ நடந்த விதம்...”

“எனக்குத் தெரியாது, ஏறிக்கணும்னு...”

“நிசமா அக்கரையோடு கவனிக்கிறவங்களை நம்பமாட்டே. திடீர்னு எம்மேல சந்தேகம் வந்திருக்கு. நான் அஞ்சு பேருடன் பிறந்தவன். நீ எங்கிட்ட ப்ரீயா பழகாம ஒதுங்கறே. நம்பி சார், இதெப்படின்னு எங்கிட்ட கேட்க மட்டும் வராதே...”

“ஐ ஆம் ஸாரி சார்...”

“சரி, பின்ன வா, எதானும் சாப்பிடலாம்.”

“வேண்டாம் சார். பஸ் வந்திடும்...”

“பஸ் இப்ப வராது. உண்மையைச் சொல்லு, உனக்குப் பசிக்கல? மத்தியானம் அந்த இவ்வளுவூண்டு சோறு இன்னுமா பசிக்காம இருக்கும்? வா, சீனிவாசா லஞ்ச் ஹோம்ல எதானும் சாப்பிடலாம்...”

வேறு வழியில்லை.

பஸ்சுக்கு வருபவர்கள், தொழிற்பேட்டைக்கு செல்பவர்கள் குழுமும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் மாமனுக்கோ, சிற்றப்பாவுக்கோ தெரிந்தவர்கள் இருப்பார்களோ என்ற திகில் ஒருபுறம் தோன்றி மறைகிறது. உள்ளூற ஓர் சமாதானம் புனைந்து கொள்கிறாள். தலைவலி அதிகமாக இருந்தது. ஒரு காபி குடிக்க வந்தாள்.

“பாமிலி” அறையில் இடமில்லை.

“ஏன் நிக்கிறே? இங்கே உட்காரு ரேக்!” என்று அவன் மெதுவான குரலில் மொழிகிறான்.

“பாமிலி ரூமானா ஒதுக்குப்புறமா இருக்குமேன்னு பார்த்தேன்!”

“அதான் இல்லையே? பரவாயில்ல... பாமிலி ரூமே பிராட். பாமிலி இல்லாதவங்கதான் அப்படி ஒரு மறைப்புப் போட்டுக்கிடுவாங்க!” அவனுடைய கண்களில் கேலி இழைகிறது.

ஒரு பணியாளன் வந்து வழக்கமான கேள்வியைக் கேட்கிறான்.

“என்ன வேணும்?”

“இன்னிக்கு ஸ்பெஷல் கோதுமை அல்வாவா?”

“ஆமாம் சார். ரெண்டு பிளேட் கொண்டு வரவா?”

“ஆமாம். போண்டா சட்டினி - ஆளுக்கு ஒரு நெய் ரோஸ்ட், காபி...”

“ஐயோ? என்னங்க?” என்று அவள் கண்கள் அகலுகின்றன.

அவனுடைய கால்விரல் மெல்ல அவள் விரல்களைத் தீண்டுகின்றன.

அவள் அனல்பட்டாற்போல் இழுத்துக் கொண்டு அவனைப் பார்க்கிறாள். கொக்கியாக அவன் சிரிப்பு வளைக்கிறது.

“முதமுதல்ல உனக்கு ஒரு இனிப்பு வாங்கிக் கொடுக்கக் கூடாதா நான்? இந்த ஓட்டல் அல்வா நல்லாயிருக்கும். சம்பளம் முதல்ல வாங்கினதும் உங்கிட்டே சுவீட் வாங்கித்தான்னு கேட்டேன் நீ கொடுக்கல. நான் கொடுக்கக் கூடாதா?...”

இந்தப் பேச்சில் எப்படிக் குற்றம் கண்டுபிடிக்கலாம்? ஒவ்வொரு சம்பளமும் கொண்டு போய் கொடுக்கிறாளே? கோயிலில் தேங்காய் உடைத்தார்கள். அவ்வளவே.

“என் மகள் வேலை செய்து சம்பளம் கொண்டு வந்து கொடுத்தாள்” என்று தாய் என்ன சிறப்புச் செய்தாள்? ஒரு இனிப்பு, பாயசம் கிடையாது. ஒரு ரவிக்கைத் துணி அவளுக்கு எடுத்துக்கொள்ள உரிமையில்லை. சம்பளப் பணம் முழுதும் செலவாயிற்று. வீட்டில் உள்ளவர் அனைவருக்கும் அவரவருக்குப் பிடித்த ரவிக்கைத் துணி வாங்குவதற்கு!

அந்தக் கணத்தில் அவனிடம் தன் வீட்டைப் பற் றிய ஆற்றாமைகளை அவனிடம் கொட்டிவிட வேண் டும் என்று தோன்றுகிறது.

பொன்னிறமாய் அல்வா முந்திரி பாதாம்கீறுகளுடன் நெய் வடிய தட்டில் வருகிறது. காணும்போதே நாவில் நீர் சுரக்கிறது. பிறகு முறு முறுவென்று போண்டா. சட்டினியில் முழுக வைக்கலாம்.

அவனுக்கு முன் ஆவலைக் காட்டிக்கொண்டு சாப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக அவள் கொஞ்சம் கொஞ்சமாய் விண்டு சுவைக்கிறாள்.

“நீ இதுக்குமுன்ன இந்த ஓட்டலுக்கு வந்திருக்கிறியா ரேக்?”

இல்லை என்று கூற நாணமாக இருக்கிறது. தலையை அசைக்கிறாள், அமைதியாக.

“இந்த ஓட்டல் வெகுநாளாக எனக்குப் பழக்கம்.”

“எங்க வீட்டில ஓட்டல்னாலே நல்லாயிருக்காதும்பாங்க...”

“உங்க வீட்டில் ஒருநாக்கூட உன்னை ஓட்ட லுக்குக் கூட்டிட்டுப் போனதில்லையா?”

“எதோ எப்பன்னாலும் வெளியூர் போனா சாப்பிடறதுதான். ஊரில் இருக்கறப்பவே ஓட்டலில் வாங்கித் தின்னுவது பிடிக்காது...”

“பல பேருக்கு இப்படி அபிப்பிராயம் இருக்கு. ஆனா, நீ வீட்டிலேந்து கட்டிவரும் துளி சோறு பத்துமா? எனக்குப் பத்தாதப்பா!”

“என்னங்க செய்வது? பணச் செலவு அதிகம் இல்லையா?”

“இருந்தா என்ன? நீ ஒரே பொண்ணுதான்னியே?”

“இருந்தா என்னங்க? சித்தப்பாவுக்கு நாலு குழந்தைகள். அத்தைக்கு ஆறு. சின்னம்மாவுக்குப் பாதி நாளும் சீக்கு. ஆஸ்துமா, அத்தைக்கு...”

“அதுசரி, உங்க குடும்பத்தில் இவங்கல்லாம் எதுக்கு வராங்க?”

“அவங்கதானே எங்க குடும்பம்? எங்கப்பா இல்லே, அம்மா” அவளையும் மீறிச் சொல் தெறித்து விட்டது. தவறு செய்விட்டாற் போல் கீழே தாழ்ந்து கொள்கிறாள்.

“ஓ, உங்கப்பா யாரோ நாட்டியக்காரியைப் பிடிச்சிட்டு ஓடிட்டதாக உங்க மாமா சொன்னார் போலிருக்கு... ஓ, அப்படியா?”

“அப்படியா சொன்னார்?... அதெல்லாம் இல்லே...” விருட்டென்று மறுக்கிறாள்.

“பின்ன?”

“எங்கப்பா... நான் இப்பத்தான் அவரை நல்லாப் புரிஞ்சிக்கிறேன். அவர் வெந்த சோத்தைத் தின்னிட்டு வருஷம் ஒரு பிள்ளைக்கு அப்பாவாகிறதுதான் மனுஷன்னு நினைக்காத பிரகிருதி...”

அவன் களுக்கென்று சிரித்துத் தலையைத் தட்டிக் கொள்கிறான்.

வீட்டில் குமையும் கசகசப்புத் தாங்காமல் மனதுள் பொருமிப் பொருமிப் பட்டென்று வெடித்துவிட அவள் சில கணங்கள் தன்னை இழந்திருக்கிறாள். மென்மையான நாண உணர்வுகள் கழன்று விடவில்லை என்றாலும் இந்த விஷயத்தைச் சாதாரணமாகக் கூறியிருக்கிறாள். அவன் சிரித்ததும் அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்கையில் முகம் சிவந்துவிடுகிறது.

“நீ பலே ஆள் ரேகா, உன்னைப் போய் வெள்ளை, பச்சைன்னேனே!” என்று அவன் குறுநகை செய்கிறான்.

“பின்னென்னங்க. வருவாய் ரொம்பப் பற்றாத நிலைக்கு இதுபோல மாத்தி மாத்தி மாத்திப் பிள்ளை அழுகுரல் கேட்பதுதான் காரணம்...”

“ஐஸி... உன் வ்யூஸ் இப்பவே புரிஞ்சி போச்சி. அப்ப உனக்கு ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்திக்கு...”

“சே, நான் கல்யாணமே செய்து கொள்ள மாட் டேன்.”

“அது சரி, மேலே சொல்லு. உங்கப்பா நாட்டியக்காரி இல்லைன்னா பின்ன எப்படி...”

“அவர் ஒரு பொயட். அவரை எங்க வீட்ல ஒருத்தரும் புரிஞ்சுக்கல. பணம் சம்பாதிக்கலேன்னு எல்லாரும் சாடையாச் சொல்லி மனசை நோக அடிச்சிருக்காங்க. அவருக்கும் ரொம்ப வீம்பு. மனசு வெறுத்துப் போயிட்டார்னு நினைக்கிறேன்...”

“ஐஸி... அப்ப நாட்டியக்காரி இல்லே?”

“அதெல்லாம் இல்ல சார். இவங்களால ஒரே திசையில்தான் எண்ண முடியும்.”

அவள் விடுக்கென்று எழுந்து சென்று கைகழுவிக் கொள்கிறாள். எதிரே கண்ணாடியில் யார் யாரோ அவளைப் பார்ப்பதாகத் தோன்றுகிறது.

விரைந்து நாற்காலிப் பக்கம் வந்து கைப்பையை எடுத்துக் கொள்கிறாள்.

நம்பி பில்லை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறான்.

“ரொம்ப தாங்க்ஸ் சார். எங்க வீட்டில் இதை ஒப்பவே மாட்டாங்க...”

“அப்பா, உன் முகத்தில் சிரிப்புக் காண சந்தேகத்தைப் போக்க எவ்வளவு கஷ்டமாயிருக்கு?”

“எங்க வீடு... ரொம்ப கனசர்வேடிவ் சார். சந்தேகமாத் தோணினா நான் வீட்டைவிட்டு வெளியே வராதபடி செய்துடுவாங்க...”

“எதுக்கு சந்தேகம் தோணணும்?...”

பஸ் நிறுத்தத்துக்கு வருகையில் அவள் அந்தக் கூட்டத்தில் ஒரு பழைய பெல்ட் தொப்பியை முகத்தில் சரியவைத்துக் கொண்டு வாயில் பீடியுடன் நிற்கும் ஆளைக் காண்கிறாள்.

அவன் !... ஐ ஆம் எ கில்லர்...

விழிகள் நிலைக்கின்றன. அதேசமயம் அவனும் தன்னைப் பார்க்கிறான் என்று தோன்றுகிறது. அவன் சிரிக்கிறான். அவளுக்கு நம்பியுடன் தன்னை அவன் கண்டுவிட்டதாக உறுத்த அந்த உறுத்தலில் குப்பென்று சூடு பரவுகிறது.

“யாரது, ரேக்? உன்னைப் பார்த்துச் சிரிக்கிறான்?”

நம்பி காதடியில் கிசுகிசுக்கிறான்.

“...அவரைப் பார்த்தா நீங்க என்ன நினைக்கிறீங்க சார்?...”

“புல்லா தண்ணி போடுறவன்னு தோணுது...”

“ஓ...?”

நல்ல வேளையாக பஸ் வந்துவிடுகிறது.

அவள் முன்பாக ஏறிவிடுகிறாள்.

“ஓ கே!” என்று விடை கொடுக்கிறான்.

அத்தியாயம் - 5

ரேகா செய்யத்தகாத தவறைச் செய்துவிட்ட பரபரப்பில், நேரமாகிவிட்டது என்ற குற்ற உணர்வில் விரைந்து நடக்கிறாள். இருள் அடர்ந்து பரவியிருக்கிறது. தெருவில் அரவமே கேட்கவில்லை. ஆனால் அவளுடைய அடியோசை, செருப்பொலிதான் அவளை அச்சுறுத்தப் பெரிதாகக் கேட்கிறதா? அவளுக்குச் சற்றே நின்று பின்னால் தன்னை தொடர்ந்து வருகிறாரா என்று சோதனை செய்யவும் அச்சமாக இருக்கிறது. நேரமாகி விட்டது என்று மாமன் அவளைத் தேடிப் பஸ் நிறுத்தத்தில் நின்றுவிட்டு அவளைக் கோபிக்க விரைந்து வருகிறாரா?

“திண்டி” வழக்கம் போல் வள்வள்ளென்று குலைக்கிறது. அவளாகவே வாயில் கதவைத் திறந்து கொண்டு போகிறாள். வராந்தாவில் விளக்கு இல்லை. குழந்தைகள் அரவமே கேட்கவில்லை. பாட்டி நடுக்கூடத்தில் குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு அதன் மலச்சிக்கலுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

“சொர்ணமா? ஏன் தங்கச்சி பொழுதோடு வீடு வரதில்லன்னு ஆயிப்போச்சே? அன்னிக்கு ஏழடிச்சி வந்தே. இன்னிக்கு எட்டடிக்கப் போவுது?”

“நேரமாயிட்டது பாட்டி, பஸ்... பஸ் இன்னிக்கு ஸ்ட்ரைக்கு. உள்ளறா காலையிலும் நடந்து போனேன், வரப்பவும் நடந்து வந்தேன்...”

“அதென்னமோ, பொண்ணுங்களைக் கட்டிக் குடுக்காம வேலைக்கனுப்புறது! சரசுவதி வேலைக்குப் போற மருமக வேண்டாம்னு சொன்னாளாம். மீஞ்சூருக்குப் போயிருந்தப்ப ராமசாமி பார்த்தானாம். ஆனா அந்தப் பய சிதம்பரம் இத்தைத்தான் கட்டுவேன்னு இருக்காப்பலன்னான். கட்டிக் கொடுத்து காலாகாலத்தில் செய்யறதை விட்டுட்டு என்ன வேலை இது?”

ரேகா விருட்டென்று உள்ளே செல்கிறாள். “ஏங்கண்ணு, இந்நேரமாச்சே? எனக்குத் துடிச்சுப் போச்சு. பாட்டி வேற அலட்டிட்டே இருக்காங்க...”

“மாமா, சித்தப்பா, எல்லாரும் எங்கே? சுகுணா ரமணி, சோமு, தண்மதி யாரையும் காணோம்?”

“எல்லாம் கோயிலுக்குப் போயிருக்காங்க. இன்னிக்கு அங்கே அருளானந்தசுவாமி வந்து பிரசங்கம்ல...?”

“காபி வச்சிருக்கேன். குடி. கால் கை கழுவிட்டு வந்து..”

“இல்லேம்மா, சாப்பாடு சாப்பிட்டுடறேன்” என்று கூறும் அவளுக்கு போண்டாவின் மணம் இன்னமும் அடித்தொண்டையில் தங்கியிருக்கிறது.

“அம்மா, பாட்டி இப்படிக் கல்யாணம் பத்தியே பேசிட்டிருந்தா நான் இந்த வீட்டை விட்டு ஆபீசுக்குப் பக்கமா வீடு பார்த்து உன்னையும் அழைச்சிட்டுப் போயிடலாம்னு நினைப்பேன்... கல்யாணம்னு சொல்லுவதே பிடிக்கலே. நானும் இந்தக் குடும்பச்சேத்திலியே கட்டிட்டு வருசம் ஒண்ணு பெருக்கணுமா?”

சிவகாமி மவுனமாக இருக்கிறாள்.

ரேகாவுக்கு யார் மீதேனும் எதற்கேனும் எரிந்துவிழ வேண்டும் போலிருக்கிறது. அப்போது வாயிலில் பேச்சரவம் கேட்கிறது.

“யாரது?...” என்று பாட்டி யாரையோ வாயிலில் கேட்கிறாள்.

“நான்தான்...” என்ற குரல் மெல்ல இழைந்தாற் போல் வந்து ரேகாவின் இதயத்தைத் தொடுகிறது.

ஆனால் பாட்டி குழந்தையின் வயிற்று நோயைத் தீர்த்துவிட்டு, பின்கட்டுக்குப் போகிறாள்.

“நாகு? வாச விளக்கைப் போடு, வாசல்ல யாரும் வந்தாலும் தெரியாது. காலம் கெட்டுக் கிடக்கு. நாய் குலைக்கிது...”

அத்தை விசையை அமுக்கிவிட்டு, “இதென்ன கருமம், பீஸ் போயிடிச்சிபோல இருக்கு” என்று கூறியவள் அதட்டலாக. “யாரையா?” என்று கேட்கிறாள்.

“சவுந்தரம்மா... அவங்க இல்ல?”

“இருக்காங்க. யாரு நீ?”

“நான் வந்து... வந்து, அவங்க மகன்...” ரேகா வாயிலுக்குப் பாய்ந்து வருகிறாள்.

“அம்மா! அம்மா! நீ இங்கே வந்து பாரு? யாரோ ஒருத்தன் வந்து உங்க மகன்கிறான்!” என்று நாகம்மா கூவ, சின்னம்மாவும் வாயிலுக்கு வருகிறான். பாட்டியும் வருகிறாள்.

“இதென்னடி அதிசயம்? வரவன் கிடுகிடுன்னு சமையல் ரூம்புக்குப் போவான், பெஞ்சில் உக்காருவான். இவன் வாசலில் நிக்கிறதாவது?”

“யாரப்பா நீ? எங்கேருந்து வரே?”

ரேகா பஸ் நிறுத்தத்தில் பார்த்த கோலத்தில் பெல்ட் தொப்பியைக் கையில் வைத்திருக்கிறான்.

“என்னத் தெரியலியாம்மா? உங்க மகன்... மகன் அரசு... அவனுக்கே குரல் தடுமாறிக் கரைகிறது. தடாலென்று வாயிற் படியைத் தொட அவளுடைய காலடியில் விழுந்து பணிகிறான்.

“சிவகாமி? சட்டுனு விளக்கேத்திட்டுவா! சிம்னி விளக்கேத்திட்டுவா!”

ஆண்டவனே...!

அலையக்குலைய அம்மா, சாமி அலமாரியிலிருந்து கை விளக்கைத் தூக்கிக்கொண்டு வருகிறாள். அது வாயிலுக்கு வருமுன் அனைந்து போகிறது. ஊசி விழுந்தால் எழும் நிசப்தம்.

“சிம்னி விளக்கை ஏத்திட்டு வாயேன்?”

அத்தை கொண்டுவந்த விளக்கை வாயிற்படியில் கொண்டுவந்து அவர் முகத்துக்குமுன் நீட்டிப் பார்க்கிறாள் பாட்டி,

மீசை தாடியை நனைக்கும் கண்ணீர்.

ஆனால், அவள் மகனா? அவனா இப்படி? நெற்றி மென்மையாக இருக்கும். செவிகள்கூடத் தடித்துப் போனாற் போலிருக்கிறது. கட்டம் போட்ட அழுக்கு அரைச் சட்டைக்குக் கீழ் அவனுடைய கை முண்டும் முடிச்சுமாக நரம்புகள் தெரிய காய்த்துப் போயிருக்கிறது. முடி நீண்டிருந்தாலும் அடர்த்தி தேய்ந்திருப்பது நன்றாகத் தெரிகிறது.

“நான்... நான் மாறித்தான் போயிருப்பேனம்மா... உங்க மகன் இடைவெளியில் செத்துப் போயிருந்து மீண்டு வரான். சிவகாமி, என்னத் தெரியல?”

“குரல்கூட இப்படிக் கட்டையா மாறிப் போகுமா?” பாட்டி பேசாமல் நிற்கிறாள்.

“குழந்தே... சுவர்ணரேகான்னு பேர்வச்ச அப்பா நான்னு நேத்தே சொல்லத் துடிச்சேன். நான் எப்படியோ கண்ணைத் திறந்திட்டே பாவக் குழியில் விழுந்திட்டேன். ஆனா, ஏறி வரணும்னு வந்திருக்கிறேன். என்னை ஏன் எல்லாம் அப்படிப் பாக்கிறீங்க? நாகு. உன் குழந்தைகளைத் தூக்கிச் சுமந்த அண்ணன் நான்...”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.

எட்டு வருஷம் பத்து வருஷம் பிரிந்து போனாலும் கூட ஒரு தடயம் இருக்கும். குரலும் கூட மாறிப் போகுமா?

“அம்மா, அன்னைக்குப் பஸ்சில் பார்த்தேன்னு சொல்லல?... இவரு... இவர்தாம்மா...”

“ஐயோ!” என்று செவிகளைப் பொத்திக் கொள்கிறாள். சிவகாமி.

“என்ன சொல்லிச்சு சொர்ணா?...”

“ஓ, நான் கேட்டேனே? குடிச்சிட்டு யாரோ கசாப்பு வேலைக்காரன் உக்காந்திருந்தான்னு சொல்லிச்சு...”

தான் தாயுடன் பேசியதை அவள் எப்போது ஒட்டுக்கேட்டாள்? சின்னம்மாவுக்கு எப்போதும் இதில் தனிச்சுவை.

ரேகாவுக்கு அவர் கையைப் பற்றி அழைத்து வர வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் உயிர்த்துடிப்பே அற்றாற் போன்று பாட்டியும் அம்மாவும் எப்படி அசைவற்று நிற்கின்றனர்?

ஐ ஆம் எ கில்லர். பாரசிக மொழியில் மதுவுக்குத் திரை என்று பெயர்...

பேச்சொலிகள், கோவையாக இல்லாத சல்லாத்துகில் மூடியதொரு குழப்பத்துக்குள் முணுக் முணுக்கென்று மினுக்கும் உயிர்த் துடிப்பை ரேகாவினால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால்...

“இதபாரப்பா, உன்னை எங்களால் புரிஞ்சிக்க முடியல. நீ பகல்ல வராம இருட்டில வந்திருக்கிறே. எங்க மாப்பிள்ளை பையன் எல்லாம் கோயிலுக்குப் போயிருக்கிறாங்க. அவங்க வந்து பார்த்துக்கட்டும். ஆம் பிள்ளைங்க இல்லாம நாங்க எதுவும் தீர்மானம் செய்யிறதுக்கில்லே. நீ போயி அப்பால இரு!” என்று கூறும் முதியவளுக்குக் குரல் நடுங்குகிறது.

“அம்மா!”

அடிவயிற்றுச் சுவாலையின் கொழுந்துபோல் அக்குரல் ஒலிக்கிறது. அவள் பெற்ற அன்னை இல்லை தான். எனினும்... ”தா? நான் மாறிப் போயிட்டேன், ஒத்துக்கறேன். இந்த ரெண்டு வருஷ காலமாக ஒரு கொலைத் தொழிலில் ஈடுபட்டு நான் என்னையே கொன்னுட்டேன். யாருக்காக, எதுக்காக நான் வேலை செஞ்சு பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சேனோ அந்த மூலகாரணத்தையே நான் செஞ்ச வேலை இரையாக்கிடும்னு தெரியாம குழியில் விழுந்திட்டேன். இப்ப அதிலேருந்து மீளனும்னு வந்திருக்கேம்மா. என் தூக்கம் மயக்கம், பயங்கர சொப்பனம் கலைஞ்சு போய் வந்திருக்கிறேன். சிவகாமி, என்னைப் புரிஞ்சுக்கல நீ?...”

சிவகாமி சிலையாக நிற்கிறாள். மாமியைப் பார்க்கிறாள். முகத்தை மூடிக்கொண்டு சமையல் அறைக்குள் சென்று விம்முகிறாள்.

ரேகாவினால் தாயின் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் தந்தைதான் என்று முழுதாக அவள் நம்புகிறாள்.

“ஏம்மா, என் புருஷன் வரணும் வரணும்னு நோம்பிருந்து வத்தி மெலிஞ்சியே? ராவெல்லாம் கண்ணீர் விட்டியே? இப்ப அவர் வந்து வாசல்ல நிக்கிறப்ப, உள்ள வாங்கன்னு சொல்லாம ஏன் அழறே?”

“உங்கப்பாவா? இல்லேடி கண்ணு, அவர்... அவரு எங்கோ ருஷ்கேசத்தில் இருப்பார்; காசியில் இருப்பார்; இவர் யாரோ...” என்று விம்முகிறாள். பாட்டியிடம் அச்சமா?

“பன்னண்டு வருசம் கழிச்சி முன்ன பாடியில மேக்கால வீட்டு சீதாராமன் வந்தான். அடையாளம் அப்பிடித் தெரியாம போயிடுமா? நாலு வருசம் கூட ஆகல. இப்படி உடம்பு குரல் எல்லாம் மாறிடுமா?”

இதற்குள் குழந்தைகள் வந்துவிட்டார்கள். பூந்த மல்லியிலிருந்து சின்னம்மாளின் தம்பி ஞானசுந்தரம் வந்திருக்கிறான். பாட்டிக்கு முன் நாகம்மா அவனைக் காட்டி நடந்ததைக் கூறுகிறாள்.

“அடி செருப்பால? இவன் இந்த வீட்டு மகனா?” என்று மாமா டார்ச்சை அடித்துப் பார்க்கிறார்.

“இவன் எவனோ ‘வான்டட்’ பேர்வழி போல எவ்வளவு தயிரியமா வேசம் கட்டியிருக்கிறான்? இல்லே தம்பி?”

“ஆமாம். அண்ணனைப் போலவே இல்லையே! அவரு இன்னும் செவப்பல்ல?”

“பேசாம் போலீசில ‘ஹான்ட் ஓவர்’ பண்ணிட லாம் மாமா!” என்று ஞானம் யோசனை கூறுகிறான்.

“போலீசென்னடா போலீசு? இவனை இப்ப இங்கியே உண்மையைக் கதற அடிக்கிறேன். திருட்டுப்பயல் அப்பவே கோயிலுக்குப் போறப்பவே பார்த்தேன். ‘கல் வாட்’ பக்கம் ஒண்டிக்கிட்டிருந்தான். அகப்பட்டதைச் சுருட்டிட்டுப் போற வழி...”

உள்ளே சென்று சித்தப்பாவின் இடுப்புப்பட்டை, தோல்பட்டையை அவர் எடுத்து வருகிறார்.

“மாமா? இது உங்களுக்கே நல்லாயிருக்கா?...” என்று ரேகா கத்துகிறாள்.

“நீ போ அப்பால!”

அவளை ஒதுக்கிவிட்டு அசையாமல் நிற்கும் அவனைத் தோல் வாரினால் மாமன் அடிக்க ஓங்குகிறார்.

“கல் ஒளி மங்கன்போல நிக்கிறான் பாரு! பாத்தீங்களாம்மா?”

“அதானே? அண்ணன் ஒரு ஊசி குத்தினா துடிச்சிப் போகும். இவன் எத்தினி கெட்ட எண்ணத் தோட படி ஏறி?”

“அம்மாடி! ஊரு எப்படிக் கெட்டுப் போச்சி? முழிச்சிட்டிருக்கப்பவே முளகாயரைக்கிறாங்க! திருட்டுப்பயலே? எங்களையா ஏமாத்துறே?”

“இப்பல்லாம் இப்படித்தான் எதானும் தெரிஞ்சி வச்சிட்டு உள்ளாற பூத்திடறாங்க. போடா! போ. வெளியே? திருடனாக இருந்தால் இப்படி அடிபட்டுக் கொண்டு நிற்பானா?” அவர் அவனை விரட்டிக் கொண்டு செல்கிறார். அவன் அவர்களைப் பார்த்துக் கொண்டே பின்னே பின்னே நகர்ந்து செல்கிறான்.

அவளுக்கு ஏதோ சினிமாக் காட்சி காண்பது போலிருக்கிறது. வெளிக்கதவுக்குப்பின் இருட்குகையில். அவனைத் தள்ளிக் கதவைச் சாத்தித் தாழ்போட்டு விட்டு மாமா வருகிறார்.

தோள் துண்டை உதறிப் போட்டுக்கொண்டு வெற்றி வீரனுக்குரிய பெருமிதத்துடன் வருகிறார்.

“என்னமாப் பொய் சொல்றான்?”

அத்தை அப்பாவைப் பற்றிய செய்திகளை நினைவூட்டி, இவர் அவர் இல்லை என்று நிரூபிப்பதிலேயே கண்ணாக இருக்கிறாள்.

“அண்ணன் பொங்கலப்ப வந்திட்டுப் போச்சே, அப்ப கூட பையைத் தூக்கினு நேர உள்ளாற வரலியா? என்ன ஆயிரம் சண்டை போட்டாலும், ஒரு பழம் பூவில்லாம வாசல்ல வந்து நிக்கவே மாட்டாரு. அதுக்கு முன்ன ஒரு தபாகொடி முந்திரிப் பழத்தை வாங்கிட்டு வந்து உள்ளற வச்சிட்டு... இந்த பெஞ்சில் உக்காந்து பல நாளா இருந்தாப் போல படிச்சிட்டிருந்தாரு, ஏதோ புத்தகத்தை வச்சிட்டு. இவனுக்குப் பொய்யைச் சொல்லிட்டு வந்தாலும் உள்ளார வரத் துணிச்சலில்ல. மகன் உன் மகன்னு சொல்லிட்டு வாசல்ல நிப்பானா?”

“இன்னும் என்ன கண்ணராவியெல்லாம் பார்க்கணுமா தெரியல. அத்தினி அடியையும் வாங்கிட்டுச் சும்மா இருந்தானே? அவனா இருந்தா அந்த வார்ப் பட்டையைப் பிடுங்கிட்டு ‘ஏண்டா, உனக்கு பயித்தியமா’ன்னு கேக்க மாட்டான்?” என்று பாட்டி புலம்புகிறாள்.

“ஒருத்தன் தினமும் நூத்துக்கு மேற்பட்ட ஆடுங்களை வெட்டினால் முகம் பயங்கரமாயிடாது” என்று ரேகா நியாயம் கற்பிக்க முயலுகிறாள்.

“சிவ... சிவ சிவா! வாயைக் கழுவிக்கினுவா! இந்த வீட்டில் பிறந்தவன். அதோ ஈஸ்வரனார் இருக்காரு. வேலை கிடைக்கலேன்னா என்ன செய்தாலும் இதுக்குப் போவானா?” என்று பாட்டி மடக்குகிறாள்.

“அதெப்படிச் சொல்ல முடியும்? அவரை முகமெல்லாம் தாடி மீசையைக் களையச் சொல்லி விடிஞ்சு தீர விசாரிச்சு இருக்கலாம். பொய்யானால் போலீசில் ஒப்படைக்கலாமில்ல?”

“இந்தப் பொட்டைப் பசங்க படிச்சி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா என்ன துணிச்சல் வருது பாத்தியா? என்னமாப் பேசுது பாரு?” என்று சிற்றப்பா பாடுகிறார்.

“அண்ணன் ஒரு பூவைக் கிள்ளப் பொறுக்காது. ஒருவாட்டி எலிப்பொறில விழுந்த எலியைச் சாக அடிக்காம திறந்து விட்டுட்டாறு, இல்லையா அண்ணி?”

“இவன் எவனோ பொறம்போக்குப் பய. விசாரிச்சிருப்பான். இந்த வீட்டில் இப்படின்னு விசயம் தெரிஞ்சிட்டு வந்திருக்கிறான்...”

தொடர்ந்து இம்மாதிரி ஆள்மாறாட்டம் செய்து அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு சென்றவர்களைப் பற்றிய கதைகளாக அளக்கிறார்கள்.

எல்லோரும் சாப்பிடுகிறார்கள். படுக்கை போடுகிறார்கள். அவளுடைய தாயும் கூட வழக்கம்போல் இயங்குகிறாள். ரேகாவுக்குச் சோறு பிடிக்கவில்லை. அன்றைய பகலின் நினைப்புக்களே மறந்து போகின்றன.

சமையல் அறையை அடுத்து, சுவாமி அலமாரியுள்ள அறையில்தான் அவளும் தாயும் படுத்துக் கொள்வார்கள். வெளிச்சமும் வெண்மையும் காணாத அறை. படுத்துக் கொண்டிருக்கையில் கால்களை நன்றாக மூடிக் கொள்ளவில்லை எனில் பெரிய பெரிய கரப்பான் பூச்சிகள் காலைச் சுரண்ட வந்துவிடும். இந்த அறையில் அவளுடைய தந்தை சொந்தமாக இருந்ததுண்டு. இன்று அவரை எல்லோருமாக வெளியே தள்ளி விட்டார்கள்; அடித்து விரட்டிவிட்டார்கள்.

“அம்மா, நீ கூட இவ்வளவு கல்நெஞ்சாயிருப்பேன்னு நான் நினைக்கல...”

“கண்ணு, நான் என்னடி செய்வேன்? உன் அப்பா இப்படியும் என் தலையில் கல்லைப் போட்டுக் கழுத்தை நெரிப்பார்னு நான் நினைக்கலியே?”

“அம்மா, நீ அவர்தான்னு நம்புறேயில்ல அப்ப?”

“நான் என்னம்மா சொல்லுவேன்! ரிசிகேசத்தில் இருக்காரு, காவி கட்டிட்டி இருப்பாருன்னு பெருமையில் இருந்தேன். என் மூஞ்சியிலே கரியைத் தீத்திட்டு இந்தக் கோலத்தில் பாவத்தைக் கொட்டிப்பாரா? பில்ட்டை வச்சி அவரை அடிக்கையிலே நெஞ்சு வெடிச்சி வந்தது...”

ரேகா பழமாய்ப் பிழியும் அவள் கண்களைத் துடைக்கிறாள்.

“அழாதேம்மா, அவர் முகம் மாறியிருக்கு; குரல் மாறியிருக்கு. ஆனால் ஏதோ ஒண்ணுமாறல. அவர் நடந்து வரப்ப, என்னைப் பார்த்து நேத்து சிரிச்சப்ப, இன்னிக்குக்கூட பஸ் ஸ்டாப்பில சிரிச்சாரு. நான் வந்த அதே பஸ்சில்தான் இவரும் வந்திருக்கணும்...”

“நான் என்ன கண்ணு பண்ணுவேன்? இந்த ஊரு உலகம் முழுக்க அவருக்குத் தொழிலே அம்புடலியா? எத்தினி பேரு எத்தினி வேலை செய்யறாங்க? என் பாவமா இது? பையனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போன இடத்தில் அந்தம்மா மார்க்கெட்டுக்குப் போகச் சொன்னாங்கன்னு வேலைய விட்டுட்டு வந்தார். அவரா இப்படி...?”

“நீதான் நகைநட்டு சேலை வாங்கித் தரலேன்னு பிடுங்கியிருப்பே...”

சிவகாமியின் இதழ்கள் அசையவில்லை.

பிடுங்கலா? அது ஒரு உரிமை. கட்டியவன் எல்லாச் சிறப்பையும் கொண்டு வந்து போற்றுவதைத் தான் பெண் எதிர்பார்ப்பாள். “ஒரு பொண்ணும் பிறந்து ஆளாகி நிக்கிது. இப்படி எத்தனை நாள் சிறுமை தின்னணும்? நீங்க நல்ல நிரந்தர வேலைன்னு இல்லாம படி மிதிக்க வேணாம்...” என்று கடிந்து கொண்டது மெய்தான். அதற்கு...

“ஏம்மா? கசாப்பு வேலை செய்யிறதாவா சொன்னாரு?”

“அதைப்பத்தி இப்ப என்ன? நீதான் அவரு உன் புருஷர் இல்லேன்னிட்டியே?”

“எனக்கு ஒண்ணுமே தெரியல கண்ணு?”

“அழாதேம்மா. சும்மா அழுது என்ன பிரயோசனம்? சந்தர்ப்பம் வரப்ப உனக்கு ஒண்ணுமே சொல்லத் தோணல.”

“கண்ணு, அவரு உங்கப்பாவா இருந்தாலுந்தான் எப்படீம்மா இந்த வீட்டில் கொண்டாந்து வச்சிக்க உங்க பாட்டி சம்மதிக்கும்?”

“குடிமுழுகிடுமா? அவரு தெரிஞ்சிதானே கடைத்தேறணும்னு பிச்சை கேட்பதுபோல பரிதாபமாக வந்தார்?”

“குடிச்சிட்டிருந்தார்னு சொன்னே. இங்கே வந்து, இன்னும் என்னென்ன பழக்கமோ?”

“அப்படின்னாலும் அவரை வீட்டைவிட்டுத் துரத்துவது சரின்னு நினைக்கலாமா?”

“என்னம்மா பண்ணுவேன் நான்?”

“இப்ப இதுவே அவரு ஜம்முனு ஒரு காரில் வந்து இறங்கி பணக்காரராக, பட்டு பொன்னு கொண்டாந்தா, அவர் ஆள் மாறியிருந்தாக் கூட நீங்க சந்தேகப் படுவீங்களா? அடிச்சு விரட்டுவீர்களா?”

“அதெப்படிம்மா?”

“நான் நாலு வருஷ அக்கரைச் சீமைக்குப் போய்ச் சம்பாதிச்சு வாழ்ந்த வாழ்க்கையில் இப்படி மாறிப் போனேன்னு சொல்லுறவரையிலானும் தயங்குவீங்களா? மாட்டீங்க. அம்மா, உன்னுடைய பக்தி, விரதம், அன்பு எல்லாம் பொய். பொய்யினு நிரூபிச்சிட்டே...”

“கண்ணு, என்னைக் கொத்தாதேம்மா, நான் இடுக்கியில் அகப்பட்டாப்பல இருக்கிறேன். உன் பாட்டி எல்லாம் அவரை மகன்னு ஒத்துக்காத ஆளை நான் போயி எப்படிம்மா புருஷன்னு சொந்தம் கொண்டாட?”

“நான் இப்ப பாட்டியப் பத்திக் கேக்கல. உன்னைக் கேட்கிறேன். உன் நெஞ்சில் கைவச்சுச் சொல்லு. உன் புருஷர், உன் குழந்தைக்குத் தந்தை. அவர் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்கும் இலட்சியம் பெரிசுன்னு நினைக்காதவர்; உலகின் கவடு சூதுகள் தெரியாதவர். அவர் எப்படிக் கொலைத் தொழிலுக்குப் போனாரென்று நமக்கு ஆதியந்தம் தெரியாது. ஒரு குஞ்சுக்குத் தீம்பு பொறுக்காத மென்மையான மனசுடைய அவர் அதர்மில்லாத கொலைத் தொழிலை மேற்கொண்டு தன்னையே அழிச்சுக்கிட்டார்னா அதில ஒரு வரலாறு இருக்கு. நினைவை மறக்க அவர் குடிச்சியிருக்கிறார். அது தெளிவு. இப்ப அந்த வாழ்க்கையைவிட்டு இங்கே நிழல் தேடி ஒதுங்க வந்திருக்கிறார். நீ ஏத்துக்கொள்கிறாயா? அதான் கேள்வி.”

“வீட்டில் யாரும் ஏற்காமல் நான் எப்படியம்மா அவரை ஏற்று சமாளிக்க முடியும்?”

ரேகாவின் புருவங்கள் கூடுகின்றன.

இந்த அம்மா... கணவனின் நல்வாழ்வுக்காகத் தவமிருக்க இல்லையா? பணத்துக்காகத்தான் தவம் இருந்தாளா? பணம் கொடுக்கும் வளமான வாழ்வுக்கு நகைக்கு, ஊரார் மதிப்புக்கு...

“அம்மா இந்த வீட்டை நீ நாளையே உதறிவிடலாம். எனக்குத் துணிச்சலிருக்கு. இந்த வீட்டில் காலையிலிருந்து இரவு வரை அடுப்படியில் உழலுகிறாய். கிணற்று நீரிறைத்துத் தேய்கிறாய். இந்த உழைப்பை நீ எங்கு வேண்டுமானாலும் செய்து பிழைக்கலாம்...”

“ஐயோ,பாட்டி கேட்டா என்ன நினைப்பாங்க? எதை நினைச்சு கண்ணியமாக இருக்கும் குடும்ப நிழலைவிட்டு ஓட முடியும்?”

ரேகாவுக்கு உறக்கமே வரவில்லை.

குழப்பங்கள் உறக்கம் கூடாமலே கலைகின்றன. எப்படிப் பார்த்தாலும் அவரை அடித்து விரட்டியது நியாயமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. சிவகாமி யும் தூங்கவில்லை; முதியவளும் உறங்கவில்லை.

அத்தியாயம் - 6

ஒரு பெருந்தூக்கத்தின் இடையே வானவில்லின் வண்ண ஒளிகளோடு கூடியதொரு அற்புதக் கனவைக் கண்டு விழித்து நல்ல வெளிச்சத்தை நோக்கி நம்பிக்கையும் ஆவலுமாகச் சென்றவனுக்கு, வண்ணங்கள் வெறும் இரத்தமும் நிணமும் இருட்குவையும் தான் என்ற உண்மை புலனாகிறது. ஆசைகளும் நம்பிக்கைகளும் பட்டென்று அறுந்து குழம்புகின்றன. மண்டை குப்பென்று வியர்த்து வெடித்து விடும் போலிருக்கிறது. தலைத் தொப்பியைக் கழற்றித் துடைத்துக் கொள்கிறான். கண்ணீர் விட்டு அழுதால் கரையக் கூடும் என்றதொரு மெழுகுப் பந்து நெஞ்சில் அடைந்து கொண்டு உருகுகிறது. ஆனால் உருக்கத்தில் அனலின் வெம்மை மிகுதியாகிறதே ஒழிய கண்ணீர் வரவில்லை.

நாய் ஒன்று அவனைத் தெருவில் துரத்துகிறது.

தனக்கு என்ன நேர்ந்தது என்பதையே அவனால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியவில்லை.

முன்பு அவனுக்குக் கண்கள் திறந்திருந்தாலும் அறியாத குழந்தையாய் வழிமாறி யாருடைய தோளிலோ சென்று தன் பெற்றோரையும் சுற்றத்தையும் மறந்திருந்தான். வழி மாறாட்டத்தை அவன் எப்படியோ உணர்ந்து இன்று திரும்பி வந்தான். சிவகாமி, அவனை ஏற்கவில்லை. அவன் சொந்தமாக மதித்திருந்த சூழலுக்கே அவன் அந்நியமாகி விட்டான். உடம்பில் சட்டையை மீறிக்கொண்டு விழுந்த அடிகள், உள்ளத்தில் வீழ்ந்த அடிக்குமேல் கொடுமையா என்ன? புறத் தோலில், அந்த அடிகள் இரத்தம் கசியும் எரிச்சலைத் தோற்றுவித்ததையே அவன் வெகுநேரம் சென்றபின் தான் உணருகிறான்.

இந்த நாட்களில் அவன் தனக்குத் தானே மாறி விட்டானா? பார்க்கப் போனால் அவன் யார்?

அவன் என்பது... யார் ? அவன் செய்த கருமத்தினால் எப்படி மாறுபட்டான்?

அவனுடைய குழந்தை அவன் பார்த்த மாத்திரத்தில் அறிந்து கொண்டாள். அறிந்து கொண்டு ஓடி வந்தாள். ஆனால், அந்த வீட்டின் இரும்புச் சட்டங்கள் அவளைத் தடுத்துவிட்டன.

சிவகாமி எத்தனை உருமாறினாலும் அவனால் கண்டுபிடிக்க முடியும். அவன் தாயை, அந்த வீட்டை, ஊரை, உடன் பிறந்தோரை, மக்களை, ஏன் அந்தப் பாதையின் மண்தறிகள் கூட அவனுக்கு மாறாதவை. எனவே அவன் மட்டும் எப்படி அந்நியமானான்?

கால்வாய் பாலத்தில் நின்று கண்ணீர் வடிய மவுனமாக அவன் அழுகிறான். பிறகு பஸ் நிற்கும் இடத்துக்கு வருகிறான். குழல் விளக்குசந்தி இப்போது வெளிச்சத்தைப் பொழிகிறது. முன்பு கூரை கட்டிடமான கிருஷ்ண விலாஸ் ஓட்டலாக இருந்தது. அதே நாணு ஐயர் இப்போது பளபளக்கும் சட்டையும், கைக்கடியாரமுமாக கல்லாவில் உட்கார்ந்திருக்கிறார். குழல் விளக்கும் ஆடம்பரமும் கசகசப்புமாக அது “ராஜேசுவரி லாட்ஜ்” என்ற பெயருடன் விளங்குகிறது. ஒரு பக்கம் தேநீர்க் கடை; வெற்றிலைப்பாக்குக் கடை சைக்கிள் கடை.

ஒன்றுமே மாறிவிடவில்லை. அதிகமான பத்திரிகை போஸ்டர்கள் ஆடுகின்றன. இந்த வழியாக அவன் பள்ளிச் சென்றிருக்கிறான். இது வரையிலும் சைக்கிளில் ஏறி வந்து, பின்னே வரும் தம்பியிடம் சைக்கிளைக் கொடுத்துவிட்டு அவன் பஸ்சில் ஏறிக் கல்லூரிக்குச் சென்றிருக்கிறான். பின்னே தெரியும் மைதானத்தில் அவன் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடியிருக்கிறான். பிள்ளையார் கோயிலுக்குப் பின்னே உள்ள ஆலமரத்தில் ஒரு ஆலம்பழத்தைக் கொத்திய கிளியின் மூக்கை வியந்து வியந்து நின்று தப்பும் தவறுமாக ஒரு கவிதை இயற்றி அதைச் சிவகாமியிடம் படித்துக்காட்ட முயன்று அவள் ரசனையில் தோல்வியுற்று அதைக் கிழித்து எறிந்தது நினைவுக்கு வருகிறது. அந்நாளில் அந்த ஊர் லோகல் பன்ட் ஆஸ்பத்திரியில் டாக்டராகப் பணியாற்ற வந்த டாக்டர் பூவராகன், வக்கீல் சிவானந்தம் முதலியவர்களை இழுத்துப் போட்டு நண்பர் கலையரங்கம் நிறுவினான். அதற்காக இடம் கேட்டு டூரிங் கொட்டகை நாயுடுவின் வீட்டுக்குச் சென்றபோது தான் முதன் முதலாக அவனுடைய உள்ளத்தில் பெண்ணைப் பற்றிய மென்மையான உணர்வுகள் அரும்பின. அப்போது அவன் அந்நாளைய இன்டர்மீடியட் படிக்கச் சேர்ந்திருந்தான். அவன் வாயிலில் சிங்காரத்தைத் தேடி வந்து அழைத்தபோது, வாயிலை மறைத்த குரோஷே பூலேசுத் திரைக்கு அப்பால் இருந்து, யாரோ வந்தார்கள். இரண்டு பாதங்கள் கீழே தெரிந்தன. இரண்டு புறாக்கள் நடந்து சென்றாற் போலிருந்தது. அந்த அழகை அதற்குமுன் அவன் உணர்ந்ததில்லை. அந்தப் பாதங்களைக் கைகளில் எடுத்து அதன் மென்மையை வருட வேண்டும் போன்றதோர் வேட்கை அப்போது தோன்றியது. அந்தப் பாதங்களுக்கு உரியவளைப் பற்றி அவன் சிந்தனை செய்கையில் திரையைத் தூக்கிக் கொண்டு சிங்காரம்தான் வந்தான். பிறகுதான் அவள் சிங்காரத்தின் சின்னம்மா என்று புரியவந்தது. சிவகாமி பெற்றோரை இழந்து அந்த வீட்டுச் சமயலறைக்கு அப்போதே வந்திருந்தாள். அவளைத் தனக்குக் கட்டப் போகிறார்கள் என்பதும் தெரிந்த செய்திதான். அன்று தான் அவன் சிவகாமியின் பாதங்களைப் பார்த்தான். சிவகாமி சிறு கூடான வடிவினள். குறுகுறுவென்று அந் நாட்களில் தேனீயைப் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பாள். அவனைக் கண்டாலே நாணி உள்ளே புகுந்து கொள்வாள். அவளுடைய சிற்றடிகளை மலரைப் போல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவனுக்கு ஆசை.

“காலில் ஏன் இப்படி அழுக்கை வச்சிட்டிருக்கே. தேச்சுக் குளிக்கறதில்ல? மொழு மொழுன்னு இருக்க வேணாம்!” என்று கடிந்திருக்கிறான்.

“காலில் அழுக்கு ஒட்டாம இருக்குமாக்கும் ! நீங்க ஒண்ணு!” என்று அவள் தன் கால்களை அவன் பார்க்கக்கூடச் சம்மதியாமல் மூடிக் கொள்வாள்.

வாழ்வின் சில கணங்களில் சில அற்பங்களும் மாபெரும் முக்யத்துவத்தை உருவாக்குகின்றன. அது அந்தப் பருவம். அந்த முக்யத்துவங்களை அவன் விழைத்தாலும் சமைத்துக் கொள்ள முடியவில்லை. அவனுடைய எண்ணங்களும் ஆசைகளும் வரையற்ற பெரு வெளில கட்டவிழ்த்த மகரந்தமாய் விரியத் துடித்தன. ஆனால் அந்த வீடு, அவனுக்கென்ற திட்டவட்டங்களை ஏற்கெனவே வரையறுத்து அவனை அதற்குள் சிறை வைத்தது.

விடுதலை வாழ்வு தடம்புரளாமல் இருக்க ஒரு முடிச்சு; பிறகு அது அவிழாமல் இருக்க இன்னொரு முடிச்சு.

மேலும் மேலும் சிக்கல்.

யாரோ தன்னைத் தொட்டு அழைக்கிறார்கள்.

மின்னல் எண்ணமாய் வீட்டிலிருந்து யாரோ வந்திருக்கிறார் என்றுடல் சிலிர்க்கத் திரும்புகிறான்.

சைக்கிள் கடை ராதா.

“என்னங்க, கடைசி பஸ் இதான். பஸ்சுக்குத் தானே நிக்கிறீங்க? எங்கிட்டீங்களோன்று பார்த்தேன்..."

“ஓ, பஸ்சா? ஆமாம்... ஆமாம். நல்லவேளை, சொன்னே...” என்று வாரிச் சுருட்டிக்கொண்டு பஸ்சில் ஏறப்போகிறான்.

மறுநாள் அவன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றாலும் அறிவைக் கூரையிடும் மதுவைத் தொடாமல் போகிறான்.

வெண்மையான உட்புறப் பகுதியைப்பற்றி கழுத்தின் இரத்த நாளத்தை அறுக்கையில் உடல் முழுதும் குப்பென்று வியர்க்கக் கை துவள்கிறது. “இன்னா பாய், கைநடுங்குது? பீமாரா?” என்று விலங்கை மறுபுறம் பற்றியிருந்தவன் கேட்டான். வரிசையாக இரத்தம் பெருக்கு வீச்சுக்களும், தோலை உரித்து நிணத்தை மருத்துவரிடம் காட்டும் சடங்குகளும், நிணத்தின் வாடைகளும் அவனுக்குத் திடீரென்று மறுபடியும் அந்நியமாய் விட்டன. அவன் அந்நேரத்தில் உடல் நலமின்றி வீடு திரும்பியதே இல்லை. மாலை நேரங்களில் இலேசான தலை நோவும் உடல் சூடும் கண்டு படுத்த நாட்கள் உண்டு. வள்ளி மருந்தும் மாத்திரையும் வாங்கி வந்து கால் பிடித்துப் பணிபுரிந்திருக்கிறாள்.

தன்னுடைய பாசத்தையும் பரிவையும் ஏற்காமல் வெருட்டித் தள்ளியவர்களிடம் குத்துப்பட்ட உணர்வு ஆத்திரமாகக் கிளர்ந்தெழுகிறது. வள்ளியைக் கோயில் முன் சென்று ஒரு மஞ்சள் கயிற்றைக் கட்டி, அவளுடன் அதே வீட்டின் மூன் காரில் சென்று இறங்கினால், சிவகாமி வருந்துவாளா? வள்ளி... நெற்றியில் குங்குமம் கிடையாது.

அவளுடைய மென்மையான அழகுகளையோ, இயல்புகளையோ அவன் சிந்தித்ததே கிடையாது. மூர்க்கமான, அசுரத்தனமான வெறி அவளுடைய பெண்மையின் அந்தரங்கங்களை அழித்திருக்கிறது. ஒரு அசுரத்தனமான வன்செயல் புரிய மதுவின் பழக்கத்துக்கு அடியானான். அந்த மயக்கம் உடலின் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள உதவியாக இருந்திருக்கிறது.

அவள் நெற்றியில் குங்குமம் தொட்டு, கூந்தலில் பூச்சூட்டி அவளுடைய உடலை மென்மையான பட்டுக்களால் போர்த்தி அவளை போற்றுவான். அம்புலியையும் அவன் சேர்த்துக் கொண்டு அவளை இன்னொரு மகவுக்குத் தாயாக்கி மகிழ்வான்.

இந்தக் கொலைத் தொழிலை விட்டுவிட்டு, வேறு தொழிலுக்கு போய்விட முடியும். எல்லப்பனுக்கு எத்தனையோ செல்வாக்கு. முதலில் இவன் படிப்புத் தெரிந்தாலே போதும்...

கற்பனைகள் இதமாக இருக்கிறது.

அவனை நேரமில்லாத நேரத்தில் கண்டதும் முத்தம்மா விரைந்து வருகிறாள்.

“இன்னா தம்பி, உடம்புக்கு சுகமில்லையா? ராத்திரி பயாஸ் கோப் போயி நேரம் கழிச்சி வந்தேன்னு எல்லப்பன் சொன்னான். ஏன் எப்படியோ பாக்குறே? தலை நோவா?”

“ஆயா, நீ உள்ளாற வா, உங்கிட்ட ஒரு முக்கிய சமாசாரம் பேசணும். வள்ளி எங்கே?”

“வள்ளிதான் கோட்டர்சில வேலை செய்யப் போவுதே? இனி தான் வரும். இன்னா சங்கதி?”

அவன் கதவைத் திறந்து கொண்டு செல்கிறான்.

“இங்க வா...”

“இதென்னடி...” என்று முத்தம்மா தோளைப் போர்த்திக்கொண்டு சுருங்கிய கீறல் முகத்தில் கூர்மையான விழிகளுடன் அவனை நோக்கி நிற்கிறாள். ஒரு கிலோ இறைச்சியும், மாசம் இருநூறு ரூபாய்க்குக் குறையாத வருமானமும் போய்விடுமோ என்ற இழப்பின் அச்சம் இலேசாகப் படர்ந்தது.

“நீங்க என்னை ரொம்பப் பிரியமாப் பாத்திட்டீங்க. என்னை வளர்த்த தாய் கூட எம்மேல இப்படிப் பரிவு காட்டிருக்காங்களான்னு நினைச்சிக்கிறேம்மா...”

“அது கெடக்குது போங்க. அப்படி என்ன பெரமாதம் செஞ்சிட்டோம்? எதோ மக்கமனிசங்க இல்லாம வந்து கெடந்தா அதுக்குனு சொம்மா விட்டுடு வாங்களா?”

“இல்லேயா, எனக்குக் கலியாணமாகி ஒரு பொண்ணு இருக்கு. பொண்ணுக்குக் கலியாணம் கட்டும் வயசு. நான் பி. ஏ. வரை படிச்சவன் ஆயா!”

இந்தப் பிடிப்பு கை நழுவிப் போவதைத் தவிர்க்க இயலாது என்று நம்பிக்கை இழந்தாற்போல் அவள் முகத்தில் கை வைத்துக் கொண்டு, “அப்பிடியா?” என்று நிற்கிறாள்.

“நாலு நா முன்ன மகளைப் பார்த்தேன்...”

“அது வூட்டுக்குவான்னு கூட்டிச்சா? அதான் நேத்து போனியா?”

“இல்ல, அதுக்கு என்ன அடையாளம் தெரியாது. நான் நல்ல குலக் குடும்பத்தில் பிறந்தவன். எதோ ஒரு காலக்கோளாறு. பி. ஏ. வரை படிச்சிருந்தும் பொண்சாதி கிட்ட சண்டை போட்டிட்டு இப்படி ஒரு தொழில்ல வந்து மாட்டிக்கிட்டேன். ஒரு கெட்ட கனா மாதிரி எல்லாம் கிட்டேன்...”

“ஆங்...!”

“நான் வள்ளிப் பொண்ணுகிட்டக் கூடச் சொல்லுவேன். நல்ல விசராயிருக்காரு, ஒரு வம்பு தும்பு போறதில்ல. என்னிக்கின்னாலும் கண்ணாலங்கட்டிட்டு நெல்லாயிருக்கனம். இந்தப் பயலையும் வச்சிட்டுக்கறே. எதோ ஞாபகமா பாங்கில எழுதிவச்சிடக் கேளுன்னு சொல்தான். பின்னென்ன தம்பி? அதுக்கு ஒரு நாதி வேணாம்? செத்தவன் செத்துட்டான். உங்களப் போல ஒத்தவங்க எதானும் செஞ்சாத்தானே; அதுக்கு நாமதானே வாய்வுட்டுக் கேக்கணும்? தட்டிலதானே சோறும் கறியும் வந்துவுழுமா? அதும் ஆக்கி கூட்டி வைக்கனுமில்ல!”

“அதான் ஆயா, சொல்ல வந்தேன். எனக்கே இப்ப நினைச்சிப் பாத்தா திக்குங்குது. எங்கையா, தாய், எல்லாம் இன்னிக்கும் சுத்த சைவம். பிராமணாளுக்கு மேல சுத்தமா ஆசாரமாயிருப்பவங்க. என்னை நேத்து வீட்டிலே சேத்துக்க மாட்டேன்னுட்டாங்க...”

“ஆங்...! நீங்கன்ன திருடினீங்களா, மோசம் செஞ்சீங்களா? இதுக்குப் போயி ஏன் வருத்தப்படுறீங்க தம்பி?” முத்தம்மாளின் ஆறுதல் அவனுக்கு ஆறுதலாக இருக்கிறது.

“அதான் ஆயா, வள்ளியை நானே கலியாணம் செஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன். இந்த வேலையை வுட்டுட்டு, ரோட்டோரமா ஒரு கடை எதினாலும் வச்சு பிழைக்கலான்னு தோணுது. ஆயா என்னைத் துரத்தினவங்க முன்ன நான் அவங்களைச் சட்டை செய்யலேன்னு காட்ட வாழனும். நான் வாழனும் ஆயா!”

“இதென்னாடி இது!” என்று முத்தம்மா மறுபடியும் கன்னத்தில் கையை வைத்துக் கொள்கிறாள்.

“தம்பீ, உங்களைப் போல ஒசந்த குணம் யாருக்கு வரும்? ஆனா, வள்ளிக்கு மச்சான், மூத்தாரு அல்லாம் நாட்டுப்புறத்திலே இருக்காங்க. காடு கயணி எல்லாம் இருக்கு. போன வருசம் கூட, “இங்கே ஏண்டி எச்சிக் கழுவும் வேலை செய்யப் போகணும். படியரிசி அஞ்ச ரூபாகிறது. அரைவயிறு கஞ்சி குடிக்க முடியல. ஊரு நாட்டோடு வந்திடு”ன்னு கூப்பிட்டாங்க. இதான் நாட்டுப்புறம் போமாட்டேன்னுது. கலியாணம்னு நீங்க நல்ல மனசோடு சொன்னாலும். ஊரு நாட்டில ஒத்துக் குவாங்களா? நாக்கு மேல பல்லு போட்டு நாலும் பேசுவாங்க. புள்ளைக்கு அப்பன் சொத்தில் ஒண்ணும் கொடுக்க மாட்டாங்க. உங்களையும் எதோ நூறு இரு நூறு குடுங்க. நீரடிச்சி நீர் விலகுங்களா? புரிஞ்சிட்டதுன்னு சொன்னீங்க. அதுக்குக் கண்ணாலம் காச் சின்னு வந்தாளே கூடிப்பாங்க தம்பி, வருத்தப் படாதீங்க..."

முத்தம்மாவின் பட்டுக்கொள்ளாத ஆனால் கத்தரித்துக் கொள்ளுமுன் அவனிடம் நினைவுறுத்துவதை நினைவூட்டும் சாதுரியத்தைப் புரிந்து கொள்ளும் தெளிவு அவனிடம் இல்லை. எனினும், வள்ளியைக் கல்யாணம் செய்து கொள்வது சாத்தியமில்லை என்ற உண்மை ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது.

அவள் அவன் தெளிவு கெட்ட நிலையில் இருக்கையில், உட் வேட்கையின் இரையாகத் தானே வரும் போது, குடும்ப பந்தமும் தாரமும் சொத்தும் குறுக்கே நிற்கவில்லை. ஆனால், கண்ணியமானவனாக இதை வளுவாக்க அவன் முற்படும் போது கவுரவங்கள் குறுக்கிடுகின்றன!

அவனுக்கு விசித்திரமாக இருக்கிறது.

அத்தியாயம் - 7

ஞாயிற்றுக் கிழமைகளில் ரேகா சேலைகளைத் துவைத்துப் போட்டு எண்ணெய் முழுக்காட மணி பத்தடித்துவிடும். மாதக் கடைசியாதலால் அன்று எண்ணெயில்லை. எனவே நீராடிவிட்டு மொட்டை மாடியில் கஞ்சி போட்ட சேலைகளைச் சுருக்கமில்லாமல் காயவைத்துவிட்டு, பனிகால வெயிலில் இதமாகக் கூந்தலைக் கோதிக் கொண்டிருக்கிறாள். கீழே பேச்சுக் குரல் கேட்கிறது.

சரசுவதி அத்தையா என்ன?

அத்தைமட்டும் வரவில்லை. சிதம்பரம் வந்திருக்கிறான். குச்சிக் காலும் குச்சிக்கையுமாக வயல்வெளியில் நிறுத்தி வைக்கும் பொம்மை போல் உருவம். மச்சுப் படி வாயிலில் குறுக்காக இரு கைகளையும் நீட்டிக் கொண்டு அவளையே பார்க்கிறான். அவன் பள்ளி இறுதி வகுப்பையே எட்டவில்லை. நான்கு முறை முயன்று தோல்வியுற்று, அந்தப் பள்ளிக் கூடத்துக்கே முழுக்குப் போட்டுவிட்டான். அண்ணன் சண்முகம் பள்ளி இறுதி வகுப்பில் முட்டி, அதைக் கடக்காமல் பள்ளியைவிட்டு, கிண்டியில் ஏதோ தொழிற் பயிற்சி பெறுகிறான். அத்தை அவனை ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் இஞ்ஜினீயர் என்றுதான் சொல்லிக் கொள்கிறாள். ரேகாவுக்கு நிறைய வண்மை வரிசைகள் செய்யத் தந்தை சீராக இல்லை என்ற காரணத்தை மனதில் கொண்டு, சிதம்பரத்தைத்தான் அவளோடு இணைத்து அத்தை பேசுகிறாள்; பாட்டியின் ஆவலும், அதுவே. பஞ்சாயத்து அலுவலகத்திலோ, வேறு இடத்திலோ அவனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து வீட்டுடன் வைத்துக் கொள்ளலாம் என்பது பாட்டியின் எண்ணம். அவன் இப்போது ‘பிரைவேட்டாக’ பணம் கட்டிப் பரீட்சை எழுதப் போகிறானாம். ரேகாவை விழுங்கி விடுவதுபோல் பார்ப்பது அவனுடைய வழக்கம். முன் வந்து பேசவோ, சீண்டவோ துணிவு இல்லாதவன்.

வாயிற்படியை அவன் மறித்துக் கொண்டு நிற்பது அவளுக்குச் சங்கடமாக இருக்கிறது. “வழி விடுங்க. நான் கீழே போகணும்...”

“உன்னோடு நான் பேசணும்னு வந்தேன் ரேகா...”

அவனுடைய துணியும் நிலையும் அவளுக்கு எதிர்பாராததாக இருந்தாலும் நகைப்பூட்டுவதாக இருக்கிறது. ஆனால் அவள் சிரிக்கவில்லை.

“நீ ஏன் என்னுடன் பேசமாட்டேங்கிறே?”

“என்ன பேசுவது?”

“நீ எந்த ஆபீசில் வேலை செய்யிறேன்னு சொல்லக் கூடாதா?”

“எதுக்கு?”

“எதுக்குன்னா, நாம் பிரண்ட்சா இருக்கக் கூடாதா?”

“எதுக்கு?”

அவளுக்குச் சிரிப்பு வருகிறது.

“சிரிக்காதே ரேகா, நான்... நான் உன்னை ரொம்பக் காதலிக்கிறேன். உன்னோட ஆபீசுக்குப் போன் பண்ணணும்னு ஆசைப்பட்டு மூணுவாட்டி கூப்பிட்டேன். யாரோ எடுத்து வச்சிட்டாங்க...”

அவள் முகம் தீவிரமாகிறது.

“அப்படியெல்லாம் பண்ணுவது தப்பு, இனிமேல் பண்ணாதீங்க.”

“ஏன் உன்னைத்தானே நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்? பண்ணினால் என்ன தப்பு?”

அவளுக்கு ஆத்திரமும் வெறுப்பும் ஒருங்கே கூடுகின்றன.

“நீங்களாத்தானே தீர்மானம் செஞ்சிருக்கிறீங்க? நான் செய்யலியே?”

“நாங்க, இந்த வீட்டில் எல்லாரும் செய்த பிறகு உன்னை யாரு கேட்கப் போறாங்க!...?”

“சீ! வழியை விடுங்க இப்ப!”

கீழே யாரோ வரும் அடிச்சத்தம் கேட்கிறது. சிதம்பரம் நகர்ந்து கொள்கிறான். அவள் உர்ரென்று படியிறங்கிச் செல்கையில் மாமன் மீது மோதிக்கொள்ள இருந்து விலகிச் செல்கிறாள்.

அத்தை சரசுவதி முன்னறையில் வெங்காயம் உரித்துக் கொண்டது யார் வீட்டிலோ நிகழ்ந்த சாவுச் சடங்குக்கு யாரோ வந்ததைப் பத்திப் பேசிக் கொண்டு இருக்கிறாள். "கையிலே கழுத்தில ஒண்ணில்ல. எல்லா பாங்கில கெடக்குதாம். வளமைக்காரங்க பொண்ணெடுத்த இடம். அதுவும் பிடியா ஒருத்திவருவ? அந்தச் சின்னப்பொண்ணு இஸ்கூல்ல படிச்சியிருந்திச்சே. பாட்டெல்லாம் கூடப் பாடுதுன்னாளே? அது யாரோ தபலா தட்டுறவனைக் கட்டிட்டுப் போயிட்டுது, இவ சொல்லிக்கிட கலியாணல்ல, ஒண்ணில்ல சம்முகந்தான் சொன்னானே?...”

ரேகாவைக் கண்டதும் அத்தை புன்னகை செய்கிறாள்.

“என்னன்ன நகை செய்திருக்கு? நானூறு சம்பளம் வரும்னானே தொரை?”

“இனிதான் செய்யணும். இன்னாமோ சவரன் இறங்கி வருங்கறாங்களே. மெய்யாலுமா?” என்று பாட்டி பேச்சை மாற்றுகிறாள்.

“எங்கே எறங்குது? இனி ஏறும்னுதான் சம்முகம் சொல்லி போய் மாசம் ரெண்டாயிரத்து முந்நூறுக்கு சேட்டு முழுகுதுன்னு வந்து சொன்னான். முத்தும் பச்சையும் கட்டி ஒரு நெக்லேசும், ஜோடியா கம்மளுமா வாங்கி வச்சிருக்கு. எப்படியும் இரண்டொரு இடம் பார்த்து ஒண்ணு முடிச்சிடம்ணு இருக்கிறோம்.”

“ஆமாம், ஞானம் வந்து சொன்னாள் அன்னிக்கு. யாரோ ஒருத்தரு வந்து, அண்ணன் போல ஆள் மாறாட்டம் பண்ணிட்டு ராத்திரி இங்கே வந்தானாமே? மெய்யாலுமா?”

“காலம் கெட்டுக்கிடக்கு சரசு. நான் அதனால் தான் வீட்டைவிட்டு அசையாம இருக்கேன். அவன் என்ன அந்தசா, சவுந்தரம்மான்னு கேட்டாங்கறே?”

“அதானே! கசாப்பு வேலை செய்யறேன், கெட்டுப் போயிட்டேள். இப்ப வரேன்னு வந்தானாமே?”

“அதோடவாக்கா? சிவகாமி, சிவகாமின்னான்! என்ன துணிச்சல் பாரு?”

“அதானே கேக்கிறேன்?”

“ஞானம் இப்பிடிச் சொன்னான். என்னால நம்ப முடியல. விசாரிச்சிட்டுப் போகலான்னுதான் வந்தேன். அண்ணன் எங்கே இருக்கிறார்னு ஒண்ணுந்தெரியல?”

“போன தபா குரு பூசையின் போது நம்ம பெரியப்பா திருப்போரூர்லேந்து வந்தாரு. ‘என்னங்க, இப்படி ஒண்ணுமே தெரியாம இருக்கே. இந்தப் பொண்ணுக்கு ஒரு கலியாணம், காட்சி பண்ண வேணாமா. அவன் இப்படிக் குடும்பத்துக்கு உதவாம போயிட்டானே. எந்தப் பக்கம் இருக்கான்னு எதாச்சும் தெரியுமா. பார்த்துச் சொல்லனும்’னு கேட்டேன். அவரு குறி பார்த்துச் சொன்னா தப்பறதில்ல. உசிருக்கொண்ணும் ஆபத்தில்ல. ஆனா, இவன் குடும்பத்துக்கு ஒட்டட்டானே தவிர, மேலான பிறவி. வடக்கதான் இருக்கான்னு நிச்சயந் தெரியிது. இந்தக் குடும்பத்திலே முன்னே தோன்றின பெரியவர்களால, இவனும் காசாயம் வாங்கிட்டாலும் ஆச்சரியமில்லன்னு சொன்னாரு. அந்தக் காலத்திலே நான்தான் கால்கட்டுப் போட்டா ஒரு பொறுப்பா இருப்பான்னு கட்டிவச்சேன்...” என்று பாட்டி எவ்வளவு அருமையாகப் புனைகிறாள் ஒரு கற்பனையே!

குருபூசை புரட்டாசி மாதத்தில் வரும். அந்த சமாதிக்கு முன்னுள்ள லிங்கத்துக்கு அபிடேகம் பூசை எல் லாம் செய்வார்கள். அப்போது உள்ளூரிலிருந்து வரும் இரண்டொரு வயதானவர்களைத் தவிர வேறு யாரும் வந்ததாக அவளுக்கு நினைவில்லை.

ஒரு கண்கூசும் உண்மையை மறைக்க மனதறிந்து ஜோடனைகள் செய்து கொள்கிறார்களே, ஏன்?

‘நான்கு பேர்’ மதிக்க வேண்டும் என்ற இலட்சியம் அவ்வளவு உயர்வானதா? சண்முகத்துக்குப் பெண்ணெடுக்க நகை வாங்கியிருப்பதாகச் சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்குமோ? இந்த அத்தையின் கணவர் ராணுவத் தொடர்பான அலுவலகத்தில் இருந்து, இரண்டாம் உலகப் போரில் வெளிநாடுகளில் சென்று வந்தவர். முதல் தாரத்துக்கு மூன்று பெண்கள். அத்தை இரண்டாந்தாரம். அவளுக்கு உடல் நலிவு கண்டதால் அவள் இருக்கும் போதே இவளை மணந்தார். அவள் இறந்து சில ஆண்டுகளே ஆகின்றன. இந்த அத்தையின் கெட்டிக்காரத் தனத்தைக் குறித்து அவளுடைய தந்தையே அந்நாட்களில் கேலியாகக் கூறிய மொழிகள் ரேகாவுக்கு நெஞ்சில் பதிந்திருக்கின்றன. பக்கத்து வீட்டுக்காரியிடம் “இத இப்ப கொண்டு வந்து தந்து விடுகிறேன்” என்று மாதிரி பார்ப்பதுபோல் தங்க நகையை நைச்சியமாக வாங்கி வந்து, இன்னொரு இடத்தில் அதை வைத்துப் பணம் புரட்டி விடுவாளாம்! முடையாக இருக்கு ஒரு அம்பது ரூபாய் கொடுங்கள், என்று கைமாற்று வாங்கி, இன்னொரு இடத்தில் முழு வட்டிக்கு விட்டுவிடுவாளாம்! போலியான வண்மைக்கான தேவைகளுக்காக எதையும் செய்ய முடியுமா?

அத்தையும் சிதம்பரமும் மாலை ஐந்து மணி பஸ்சில் புறப்பட்டுச் செல்கின்றனர். மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சின்னம்மா, அத்தை, மாமன் எல்லோரும் சினிமாவுக்குச் செல்வதுண்டு. அன்று மாதக் கடைசி. மாமனும் சிற்றப்பனும் மட்டும் போய்விட்டு வருமுன் குழந்தைகளும் தாய்மாரும் உண்டு படுக்கைக்குச் சென்றாயிற்று. பாட்டி கூடத்தில் தண்மதி, ரமணி, சுகுணா, சோமு எல்லோரையும் போட்டுக் கொண்டு படுத்திருக்கிறாள்.

அம்மாவுக்கு அடுக்களை வேலை ஓயவில்லை.

பகல் நேரத்திலும்கூட, அடுப்புக்குச் சுள்ளி ஓடித்தோ, எரிமுட்டை தட்டியோ, கந்தல் துணி தைத்தோ, அவள் பொழுதைக் கழிக்கிறாள். ஒருநாள் கூட, அத்தை சின்னம்மாவைப் போல சிரித்து மகிழ்ந்து அனுபவிப்பதில்லை. கை நிறைய கொடி முந்திரிப்பழமும், லாலா கடை அல்வாவுமாக அவளுடைய தந்தை அவளைத் தேடிவந்த நாட்களில் கூட அவள் சமையல் அடுப்பைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த சித்திரம் தான் ரேகாவுக்கு மனதில் நிற்கிறது. அவளும் தாயும் தந்தையுமா வெளியே சென்ற மகிழ்ச்சிச் சித்திரமே உருவானதில்லை. அவளை மட்டும் ஒருமுறை பரத நாட்டியக் கச்சேரிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவள் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கையில் ஒருமுறை ‘ராஜ ராஜ சோழன்’ நாடகம் பார்க்க அழைத்துச் சென்றார். அவள் பஸ்சில் திரும்பி வரும் போது தூங்கிவிட்டாள்.

சிற்றப்பாவுக்கும் மாமனுக்கும் சாப்பாடு போட்ட பிறகு, சமையலறையைக் கழுவித் துடைக்கிறாள். கால்களைத் தேய்த்துக் கழுவிக் கொண்டு வெற்றிலை போட்டுக் கொள்கிறாள். பிறகு ஓயாத ஈரத்தினால் விரல்களுக்கு இடையே புண்ணான பகுதிகளில் மருந்து தடவிக் கொண்டு படுக்கைக்கு வருகிறாள்.

வெகு நாட்கள் வரையிலும் தாயின் மீது காலைப் போட்டுக் கொண்டுதான் ரேகா தூங்குவாள். இப்போது அவளைத் தொடுவதற்குக் கூச்சமாக இருக்கிறது. இந்தச் சில நாட்களில், தந்தை வந்து போன பிறகு, தாய்க்கும் மகளுக்கும் இடையே இருந்த ஒட்டுதலே விட்டுவிட்டாற் போலிருக்கிறது.

விளக்கை அணைத்துவிட்டு, சிக்கேறிய தலையணையில் தலையைச் சாய்க்குமுன் பாட்டியின் குரல் கேட்கிறது.

“சிவகாமி, படுத்திட்டியா?”

“இல்லேத்தே. என்ன வேணும்?”

“ஒண்ணில்ல. வெளக்கெண்ணெயிருந்தா கொஞ்சம் கொண்டாந்து கால்ல தேய்க்கிறியா கடுக்குது...”

அம்மா விளக்கெண்ணெய் தேடி எடுத்துச் சென்று பாட்டிக்கு மருத்துவம் செய்கையில் சோமு எழுந்து “எனக்குத் தண்ணீ!” என்று முனகுகிறான்.

அம்மா அவனுக்குத் தண்ணீர் கொடுக்கிறாள்.

அதற்குள் தண்மதியின் புகார். “என் தலைகாணியப் புடுங்குகிறான் அத்தே!”

“ஏண்டா கழுதை. நீ ஏண்டா இங்கே வரே? உன் படுக்கைக்குப் போ?”

“அவளுக்கு மட்டும் முழுத் தலைகாணியோ?”

தண்மதி ஒப்பாரி தொடங்கினால் ஓயமாட்டாள்.

சித்தப்பாவுக்குக் கோபம் வரும்.

“அது வாய மூடு சிவகாமி. தூங்கிப் போச்சின்னா ஒருத்தரு தலையிலும் தலையாணி இருக்காது!”

அம்மா அவளுக்குத் தன் சிக்குத் தலையணையைக் கொண்டு கொடுத்து அமைதியை நிலை நாட்டுகிறாள்.

பிறகு ஒரு பலகையின்மேல் சேலைத் துண்டைச் சுருட்டி வைத்துப் படுக்கிறாள்.

“இதென்னம்மா நியாயம்?” என்று பொருமுகிறாள் ரேகா.

“நீ வேற குடையாதே. படுத்துத் தூங்கு. காலையில் ஆபீசு இருக்கில்ல?”

“நான் நாளைக்கு அப்பாவைப் பார்க்கப் போறேன்.”

அவளிடம் இருந்து மறுமொழியே வரவில்லை.

“நான் அவர் இருக்கும் இடம் விசாரிச்சிட்டுப் போகப் போறேன்.”

“நீ போனாலும் போவே, ஆக்கிப் போடுவே. எங்கே வேனாலும் போய்க்க. மறுக்க இங்கே ரகளையைக் கொண்டு வந்து என்னைக் கொத்தாதே!”

“நீ ஏம்மா இப்படி இருக்கே? அப்பா, உன்னால் தான் இப்படி மனசு வெறுத்துப் போனார். நீ அவரைப் புரிஞ்சிட்டு ஒருநாள் கூட நடக்கல...”

“நீ புரிஞ்சிட்டு நட, என்னைப் பிடுங்காதே.”

“பாட்டி காலமாயிட்டா இந்த வீட்டில் ஒரு மனிசர் உன்னை ஏறெடுத்துப் பார்க்க மாட்டாங்க. தெரிஞ்சிக்க!”

“எப்படியும் போறேன். என்னைக் கட்டியவர் சுகமில்ல. வயித்துப் பிறந்ததும் சுகமில்ல. வெளியாருங்ககிட்ட எதை எதிர்பார்க்க முடியும்?”

“ஏம்மா உண்மையை ஒப்புக்காம ஒரு போலிக் கனவை நம்பணும்? அப்பாவிடம் உனக்கு இரக்கம்கூட இல்லையா?”

“இரக்கப்பட்டு இரக்கப்பட்டுத்தான் இவ்வளவுக்கு வந்திச்சி. குழந்தைக்குன்னு பண்ணிப் போட்ட சங்கிலியையும் வளையலையும் கூடக் கழற்றிக் கொடுத்திட்டு அங்கே போச்சு. இங்கே போச்சுன்னு பொய் சொன்னேன். என் தலையெழுத்து. இப்ப நீ போயி விழறேன்னியே? நீ வயசுப் பொண்ணு, போயிக் குடும்பம் நடத்துற கண்ணியமாவா இருக்காரு? நாலு பேருக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்? இந்த அத்தை கேட்டப்ப எனக்கு எப்படி முள்ளில விழுந்தாப்பல இருந்தது?”

“யாரம்மா அந்த நாலு பேர்?”

அவளுடைய ஆத்திரம் இரவின் அமைதியை உறுத்திக் கொண்டு மீறும் குரலாகக் கேட்கிறது.

“கத்தாதே கண்ணு. உனக்கு இந்த வயசில நல்லது கெட்டது தெரியாதம்மா...”

“என்ன தெரியாது? பளிச்சினு தெரியும் உண்மையை எதிர்த்து ஏத்துக்கத் துணிவில்லாம, நீங்கதான் கண்ணை மூடிக்கிறீங்க! வெளி உலகம் என்னன்னு உங்களுக்கு என்ன தெரியும்? சாவு வீட்டுக்கு வந்தவ கழுத்தில சங்கிலி இருக்குதாங்கறது முக்கியமானது. ஒருத்தரிடமும் தங்கம் தங்கல. போலியைப் போட்டுக்கிட்டு நீங்க வீண் பேச்சுப் பேசுறீங்க!”

“பாட்டி முழிச்சுக்கப் போவுது. நீ ஏன் எங்கிட்டப் பிடுங்குறே?”

“நான் சிதம்பரத்தையோ, யாரையோ கட்டிக்கப் போறதில்ல. இனிமே இப்படி யாரானும் பேசினா எனக்கு ரொம்பக் கோபம் வரும்.”

“பின்ன உனக்குக் கன்னியமா மடம் கட்டிக் காக்க முடியுமா கண்ணு? இதெல்லாம் என்ன வீம்பு? அப்பா இப்படின்னு தெரிஞ்சா எந்த மரியாதைப்பட்டவங்க பொண்ணெடுக்க இங்கே வருவாங்க?”

“அம்மா... அப்பாவை நீங்க வேணுன்னே தெரிஞ்சிக்காம நடிச்சிங்களா? எப்படிம்மா இப்படி மனசு வந்தது?”

“நீ தெரிஞ்சிட்டே என்னைக் கொத்தாதே. இப்ப போயி அவரைத் தெரிஞ்சிட்டு, இந்த வீட்டின் கண்ணியத்தைக் குறைச்சிட்டா, மத்த பேரு மதிப்பா வாழ் வேணாமா?”

ரேகா இந்த உண்மையை ஏற்க இயலாமல் கொதிக்கிறாள்.

அவளுக்குக் கல்யாணமாக வேண்டும் என்ற காரணத்துக்காகவா கணவனை இன்னொருவர் சாட்டையால் அடிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தாள்?

அந்த வீட்டிலேயே அவளும் மக்கள் பெருக்கக் கருவியாக அத்தை சின்னம்மாவுடன் சேர வேண்டுமா?

அத்தையைத் தண்மதி பிறக்கு முன்பே திட்டக் குடும்ப சிகிச்சையைச் செய்து கொள்ள நர்சம்மா யோசனை சொன்னாள். அப்போது மாமனுக்கு உடல் நிலை சரியில்லை. சுவாச கோசங்களில் நீர் சேர்ந்திருந்தது ஊரிலிருந்து வந்த அவருடைய தம்பி திட்டிவிட்டுப் போனார். தண்மதி பிறந்த பிறகு அத்தைக்கும் உருக்கி நோய்க்கான அறிகுறிகள் தோன்றின. “எக்ஸ்ரே" எடுத்தார்கள். இனிமேல் பிரசவம் கூடாது என்று டாக்டரம்மாள் சொன்னாள். ஆனால் தண்மதிக்கும் சுந்தரத்துக்கும் மூன்றாண்டு இடைவெளி நீண்டதுதான் சாதனை. சுந்தரத்துக்குப் பிறகு ஒரு செல்வியும், செல்வியைத் தொடர்ந்து ஒரு கண்ணனும் பிறந்து விட்டார்கள். மருத்துவமனைக்குச் சென்றால் தடை செய்வார்கள் என்று வீட்டிலேயே பேறு காலத்துக்குத் தங்கிவிடுகிறாள்; சுவர் எழுத்துக்களும், பிரசார வாசகங்களும் சிரிப்பூட்டும் தொடர்கள் என்பது தான் இவர்கள் கருத்து.

“ஆம்பிளைங்க மனசு வேறெங்கனாலும் போயிட்டா? அவங்க சொல்லுவாங்க!” என்று அத்தை கூறுவாள்.

‘சிறிசு’களைப் பாட்டியிடம் தள்ளிவிட்டு இன்னமும் பெரியவர்கள் தம் தம் அறைகளில் புகுந்து கதவைச் சாத்திக் கொள்கின்றனர்.

சீ... சீ!

அத்தியாயம் - 8

கிழக்கு இந்தியக் கம்பெனிக்காரர் காலத்தில் கட்டினாற்போன்று தோன்றும் பங்களா அது. உருண்டையான சுதைத் தூண்களும் வளைவு வாயில்களும் ‘வெனிஷியன் ஷட்டர்’ எனப்பெறும் மரத்தடுப்புக் கதவுகளுமாக ஒரு காலத்தில், அந்த வெட்ட வெளிப் பிராந்தியத்தில் பொட்டல் நடுவே முளைத்த கனவு மாளிகையாக இருந்திருக்கக் கூடும். மின் தொடர் வண்டிப் பாதையும் பஸ் செல்லும் சாலையும் முன்னும் பின்னுமாக அமைந்திருந்த வசதி இருந்ததால், இடிந்து சிதைந்திருந்தாலும் அந்த மாளிகை காலியாயிருக்கவில்லை. அருகே சாலைக்கு அப்பால் அடுக்கு மாடிகளாக ஒரு ‘காலனி’ எழுப்பினாலும், இடிந்து சிதைந்த பழைய மரபுகளைப் போல் அந்தக் கட்டிடம் உயிர்த்திருக்கிறது. சுற்றியிருந்த வராந்தாக்களை மறைக்கும் சாக்கு - தகர மறைப்புக்களும், கயிறு அறுந்து குழிந்து தொங்கும் கட்டில்களும், நெறிகளும் வரமுறைகளும் தகர்ந்த ஆவேசங்களால் மோதிக் கொள்ளும் கூச்சல்களும் அந்த மாளிகைக்கு உரியவை.

அந்தக் கட்டிடத்தின் உண்மையான அதிபர் யாரென்று பலருக்கும் தெரியாது. சுற்றுப்புரத்தில் தோன்றிய குடிசைகள், தேநீர்க்கடைகள் எல்லாவற்றிலும் இட வாடகை வசூலிக்க வரும் ஒரு நாயுடுதான் பங்களாவுக்கும் வாடகை வசூலிக்க வரும் ‘ஏஜண்டு’. ஐந்துக்கும் பத்துக்கும் வாடகைக்கு இடம் பிடித்துக் கொண்டவர்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாசம் செய்கின்றனர். நடுவே எவரேனும் மாற வேண்டி வந்தாலும் காலியான செய்தியே வெளியே தெரியாமலே ஆள் வந்துவிடுவார்கள். வெகுநாட்களாக மாறாதவர்கள் ஐந்து குடும்பத்தினர் தாம்.

நடுவிலுள்ள பெரிய கூடத்தை மூன்று அறைகளாக தடுத்துக் கொண்டு குடியிருக்கும் கோபிநாதனுக்குக் கிண்டியில் ஒரு தொழில் நிறுவனத்தில் வேலை. முதல் மனைவிக்கு இரண்டு பெண்கள். இருவரும் ‘பத்தாவது’ என்ற எல்லையைக் கடக்காமல் கல்யாணத்துக்கு நிற்கின்றனர். இளையவளுக்கு இரண்டு பெண்களும் ஒரு பையனும் இருக்கின்றனர். அடுத்த பகுதியில் கோபிநாதனின் தங்கை மூன்று குழந்தைகளுடன் குடும்பம் நடத்துகிறாள். பின்புறத்தாழ்வரையைத் தடுத்த பகுதியில் ராமசுப்பு சாஸ்திரிகளின் குடும்பம் இருக்கிறது. சாஸ்திரிகளுக்கும் மூத்த, இளைய சம்சாரங்கள் வாயிலாக ஏழு குழந்தைகள் இருக்கின்றனர். ஒரு மகளைத் திருமணம் செய்து கொடுத்து, அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமண வயதில் மூன்று பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஒருத்தி பத்தாவது படித்துவிட்டு ஆசுபத்திரிப் பயிற்சி எடுத்து, விழுப்புரத்திலோ, எங்கோ வேலையாக இருக்கிறாள். ஒரு பையன் படிப்பு ஏறாமல் தகப்பனும் வாரிசாகவும் போகாமல் சமையல் எடுபிடியாகப் போகத் தொடங்கி இருக்கிறான். மற்ற இரு பையன்களும் இளையவர்கள்.

வலப்புறத்துத் தாழ்வாரமும் தடுப்பு அறையும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜம்புநாதன் குடும்பத்துக்கு உரியவை. கோமளத்துக்கு இரண்டே செல்வங்கள். வாயிற்புறத்திலுள்ள பெரிய வரவேற்பு அறைப்பகுதிதான் நம்பியும் தமக்கையும் குடியிருக்கும் இடம். உயர்ந்த வாயில்களும் சன்னல்களுமான இருபதுக்குப் பதிநான்கு அறை. காரை பொடிந்து உதிர்ந்தாலும் உயர்ந்த வளைவில் வண்ணக் கண்ணாடிகள் உடைந்தாலும் பழைய பெருமைகள் பார்த்த மாத்திரத்தில் தெரியும் அறை. ஒரு பழைய பீரோ அறையைத் தடுத்து மறைக்கும் சுவராக நிற்கிறது. சுவர் முழுதும் பென்சில் கிறுக்கல்கள், பால் கணக்குப் புள்ளிகள், மைதீட்டிக் கொண்டும் வெற்றிலைப் போட்டுக் கொண்டும் விரல் துடைத்த அடையாளங்கள் என்று வரலாற்றுப் படிவமாயிருக்கிறது. சன்னலை ஒட்டி ஒரு நாடாக்கட்டிலில் ஜமக்காளப்படுக்கைச் சுருட்டுகள். புதிய தையல் இயந்திரமும், அலமாரியில் அடுக்கிய காகித வெட்டுக்களும் நம்பியின் தமக்கை சவுந்தரம் அந்த அறையில் தையல் பள்ளி நடத்துவதைக் கூறுகின்றன. அந்த ஒரே அறையில் அக்காவும் இரு குழந்தைகளும் நம்பியும் வாழ்கின்றனர். நம்பியின் தந்தையும் ஜம்புநாதனைப் போல் துவக்கப் பள்ளி ஆசிரியராகத்தான் இருந்தார். சவுந்தரம் மூத்தப் பெண். அடுத்தவள் மதுரம். அவளைத் தஞ்சைக்கருகே ஒரு கிராமத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். சவுந்திரத்தின் கல்யாணத்துக்கே கடன்பட்டிருந்த அவர், மதுரத்தையும் வாழ்க்கை படுத்திய பிறகு நோயிலும் வீழ்ந்தார். நம்பியின் தாய் ஏற்கெனவே நோயாளி. இருவரும் ஒரே ஆண்டில் கண் மூடிய பின்னரே சவுந்தரம் இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்துக் கொண்டு குங்குமத்தை இழந்து வந்தாள். அவளைக் கொண்டவன் குணநலமில்லாதவள். வாழ்ந்த நாளெல்லாம் வண்மை வரிசையில்லை என்று புகுந்த வீட்டில் இடிபட்டபின், கணவன் இறந்ததே விடுதலை என்ற நிலையில் பத்தாயிரம் ரூபாயுடன் நம்பியை அண்டி வந்திருக்கிறாள்.

புலன் இன்பங்கள் என்ற அடிப்படையில் கிளர்ந்து வரும் எல்லா ஆசைகளுக்கும் அடக்கத்தைப் பூணவேண்டும் என்பதையே வாழ்க்கை பின் குறிக்கோளாக வலியுறுத்தும் வகுப்பில் பிறந்தவர்களே அந்த மாளிகையில் வாழ்ந்தார்கள். ஆனால், நம்பியைப் போன்ற இளைஞனுக்கும், பெண்களுக்கும் இயல்பான ஆசைகளுக்கு, உளுத்துப்போன நெறிமுறைகளும் வறுமையும் விலங்கிட்டாலும், விலங்குத்தடத்தைக் கொடுமை என்று உணர்த்தும் வகையில் அவ்வப்போது கவர்ச்சியான வெளியுலக ஆசைகள் இனம் காட்டி இழுக்காமல் இல்லை. ஒரு சமுதாயம் முழுதும் கால ஓட்டத்தில் உயிரான இலட்சியங்களை மீறிப் பாசி பிடித்துப்போன பழக்க வழக்கங்களை மட்டுமே பற்றிக் கொண்டும், மேல் பூச்சுப் பூசிப் புதுப்பித்தும் இலட்சியங்கள் இருந்த இடங்களில் மாறான சுயநலங்களைப் பேணியும் ஒரு போலியான இரட்டை வாழ்வு வாழப் பழகிவிட்டது.

நாச் சபலத்துக்கு அடுத்த தோட்டத்துக் கனியை எடுப்பதில் தவறில்லை. அக்காலத்தில் நம்பி வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டு வருவான் என்று பெற்றோர் பெருமையடித்துக் கொண்டனர். அவனுடைய தோற்றமும் சிரித்துப் பேசும் இயல்பும் பலபல நண்பர்களை அவனுக்குத் தேடித் தந்திருக்கின்றன.

“பரீட்சை சமயம், சினிமாவுக்கா போனான்?” என்று தந்தை கடிந்தால், “நீங்களா காசு கொடுத்திய? சிநேகிதா கொடுத்து அழைச்சிண்டு போறா!” என்று தாய் பெருமையாகச் சொல்லிக் கொண்டாள். “எங்க நம்பிக்குச் சித்த நேரம் ஒழியறதில்ல. வாசலில் யார் யாரோ சைகிளில் வந்து கூப்பிடறா...” என்று பெருமை தாங்காமல் பூரித்தாள். கல்லூரி மாணவர் தேர்தல், விளையாட்டு அரங்கம், எல்லா முனைகளிலும் நம்பிக்குச் செல்வாக்கு உண்டு. பணக்காரர்களான பல தோழர்களில் கோகுலும் ஒருவன். நம்பி முதன் முதலில் புகை குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டான் என்று அறிந்த தாய் அவனை கண்டிக்கவும் இயலாமல் விழுங்கவும் இயலாமல் சங்கடப்பட்டதை சவுந்திரம் அறிவாள். ஆனால், அவன் ஊராரையும் அறிந்தவர் தெரிந்தவரையும் ஏமாற்றுவதில் வல்லவனாக இருந்தான். உபந்நியாசம், கதாகாலட்சேபம் ஏற்பாடு செய்யக் கூட்டம் கூட்டவோ, வசூல் செய்யவோ, தட்டெடுக்கவோ தயங்க மாட்டான்... சாயி பஜனை, ஐயப்ப கோஷ்டி எங்கும் நம்பியைக் காணலாம். திருமண் இட்டுக் கொண்டு, மார்பில் குறுக்கே முப்புரிநூல் துலங்க, மேல் வேட்டியைப் பணிவுடன் இடுப்பில் வரிந்து கொண்டு அவன் சுருதி போடும் போதோ தட்டெடுக்கும் போதோ, கூட்டத்தைச் சமாளித்துக் கொண்டு தெரிந்தவர் கைகளில் இருந்து தேங்காய் பழத்தட்டை வாங்கிச் செல்லும் போதோ யார் தாம் பாராட்ட மாட்டார்!

“மாமி! உங்க நம்பி ஸ்டேஷன் பக்கம் சிகரெட் குடிச்சிண்டு வர போற பெண்ணை எல்லாம் சீண்டுறான். ஒருநாள் உதைபடுவான்!” என்று ஒரு நாள் அங்கு குடியிருந்த வெங்கிடாசலம் கூறியபோது நம்பியின் தாய் அவனைச் சொல்லாலே கிழித்து மாட்டினாள். “அவன் தறிதலையாகத்தான் திரியிறான். நீ இடம் கொடுத்துக் குட்டிச் சுவராக்கிட்டே! வீட்டில ஒரு பைசா வச்சா தங்கறதில்ல” என்று தந்தை கடிந்து கொண்டால், தாய் மவுனம் சாதிக்கத் தொடங்கினாள். அவன் குடிக்கவும் கற்றுக் கொண்டான் என்று அவள் புரிந்து கொண்டதே அவளைப் படுக்கையில் தள்ளப் போதுமான காரணமாயிற்று. பெற்றோர் என்ற ஒரு சிறு காப்பும் அழிந்த பிறகு அவனைத் தட்டிக் கேட்பவர் எவருமில்லை. இன்னொரு குடும்பம் அந்த பங்களாவின் ஒருகாலச் சமையற்கட்டாக இருந்த பகுதியில் வாழ்கிறது. வாகீசக் குருக்கள் அந்த வட்டத்திலுள்ள பழைய திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் ஒரு காலத்தில் பூசனை செய்தவர். அப்போது கோயிலில் இருந்த சிலைகள் மாயமாகப் போகாத காலம். கோயில்களையே யாரும் அவ்வளவாகக் கவனித்துப் பொருட்படுத்தியிராத அந்நாட்களில், அவர் கைக்கும் வாய்க்கும் எட்டாத குடும்பம்தான் செய்ய முடிந்தது. தம்பியைப் படிக்க வைத்தார். அவன் பிலாயில் ஒரு தட்டெழுத்துக்காரனாக வேலைக்குச் சேர்ந்தான். அவன்தான் அவருடைய மூத்த பிள்ளைக்கும் அங்கேயே வேலை வாங்கிக் கொடுத்தான். மூத்த பெண்ணுக்கும் அவர்களுடைய உதவியில்தான் கல்யாணம் செய்தார்கள். அடுத்த பையன் நன்றாகப் படித்தான். அவன் எடுத்த எடுப்பில் ஆயிரம் சம்பளம் வாங்கப் படிக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள். அவன் பத்தாவது படிக்கும் போதே அவருக்குக் கால் விளங்காமல் போக ‘பாரிச வாத’ நோய் பிடித்தது. பெரிய பையனுக்கும் தம்பிக்கும் அவரவர் குடும்பங்கள் தடையாயின. ஒரு மருந்துக் கம்பெனியில் வேலைக்குச் சென்ற இளையவன் சம்பாத்தியமே போதாதபடி செலவு செய்யக் கற்றுக் கொண்டான். குடிப்பழக்கத்துக்கும் சீட்டாடும் பழக்கத்துக்கும் அவன் அடிமையானான்.

கடைசிப் பெண் மங்களா, பத்து முடித்துத் தேறினாள். ஆனால் வேலை எங்கே கிடைக்கிறது? தானும் வேலைக்குச் செல்ல வேண்டும், ஹான்ட் பேக், ரிஸ்ட் வாட்ச், க்யூடெக்ஸ், குதிவைத்த மிதியடிகள், வெளிநாட்டு நைலக்ஸ் ரகங்கள், கறுப்புக் கண்ணாடி என்று விசாலமாகக் கனவு காண்கிறாள். அழகில்லை என்று சொல்ல முடியாத பருவம். அன்றாடப் பிழைப்புக்கே வருமானம் இல்லாமல் ஓய்ந்து போனபின் மங்களா, புதிதாக எதிரே எழும்பியிருக்கும், அடுக்குமாடி வீடு ஒன்றில் ‘ஆபீஸ் இல்லாத பணி’ புரியச் செல்கிறாள்.

அந்த வீட்டுக்காரர் நகரில் ஏதோ ஒரு கல்லூரியில் ஆராய்ச்சி செய்கிறார். மனைவி நகரத்து மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர். ஒரே பையன், குழந்தை.

வீட்டில் காலைச் சிற்றுண்டி செய்து வைக்க வேண்டும். பகலில் அருகிலுள்ள நர்சரிக்குச் செல்லும் குழந்தைக்கு மட்டும்தான் உணவு. ஒரு காய்க்கலவை - இரசம் - பருப்பு - தயிர்சோறு செய்து கொண்டு குழந்தைக்கு கொடுக்க வேண்டும். மாலையில் டாக்டரம்மா வீடு திரும்பிய பின்னர் அவளே சமையல் செய்வாள். மங்களா உதவுவதுடன் சரி.

அந்த நவ தம்பதி பழகும் நெருக்கங்களையும், வகைவகையான ஆடை அலங்காரங்களையும் வளமான உணவுப் பொருள்களையும் நெருங்கி இருந்து பார்க்கும் மங்களாவுக்குத் தன்னையறியாமலே தடைகளைத் தகர்த்துக் கொண்டு கிளர்ச்சிகளும் கற்பனைகளும் எழும்பும் வீட்டுக்குத் திரும்புகையில் இருட்டு அறையும், கோலின் உதவியின்றி எழுந்திருக்கவே இயலாத தந்தையும், பாதிப் பொழுதும் பிறரைப் பற்றி அவதூறுகள் பேசியே காலம் தள்ளும் தாயும் அவளுடைய ஆற்றாமையைக் கிளறி விடுவார்கள்.

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால், காலை நேரத்துக்குப் பிறகு மங்களாவுக்கு வேலை கிடையாது. அவர்கள் ஓய்வாக உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பார்கள். இரவு வெளியே உணவு கொள்வார்கள். மங்களாவுக்குக் கோபிநாதன் வீட்டாருடனும் சாஸ்திரியார் வீட்டுடனும் இணக்கம் கிடையாது.

சவுந்தரத்துடன் மாலையில் ஏதேனும் சினிமாவுக்குப் போகும் ஆசையுடன் வருகிறாள். அப்போது பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஏழுமலை சவுந்தரத்திடம் ஒரு காகிதப் பாக்கெட்டைக் கொடுத்து விட்டுப் போனான்.

அதைப் பிரித்துப் பார்க்குமுன் மங்களா வந்து விட்டாள். எனவே, சவுந்தரம் அதைப் பீரோவுக்குப் பின் கொண்டு வைத்துவிட்டு வந்தாள்.

“கம்முனு சந்தன சோப் வாசனை வருதே! சோப்பு வாங்கினாயா சவுந்த்ரம்? ஜலீஸ் ஸ்டோரில் சந்தன சோப் குடுக்கிறான்னு சாவித்திரி சொன்னாளே, அதுவா?”

“என்னென்ன யோசனைடிம்மா, அதுக்குள்ள? இது எதோ சிகாமணி புத்தகமோ என்னமோ குடுத்தனுப்பியிருக்கிறான், நம்பிக்கிட்டக் கொடுக்கச் சொல்லி. இல்லாட்டா அவன் எதுக்கானும் விதை உரம்னு வாங்கிட்டு சரியில்லைன்னு திருப்பியிருப்பான்!”

சவுந்தரம் இவ்விதமாக சேற்றைப் பூசி மறைக்க முயன்றது வீணாயிற்று. பீரோ மறைவுக்கு அப்பாலிருந்து, “ஐயோடி, அம்மா!” என்ற வியப்பொலியுடன் அவளுடைய அருமைச் செல்வி பேபியும், செல்வன் சீமாச்சுவும் கைக்கொரு சந்தன சோப்பை முகர்ந்து பார்த்துக் குதித்துக் கொண்டு ஓடி வந்தார்கள்.

“அம்மா, மணக்கறதும்மா! ஒண்ணு, ரெண்டு, மூணு அஞ்சு சோப்பு! எனக்கு உனக்கு நம்பி மாமாக்கு” சவுந்தரம் பளார் பளாரென்று ஆளுக்கு இரண்டு அறைகள் கொடுத்து அந்த உற்சாகத்தைக் கெல்லி எறிந்தாள்.

“சனியனே! நீங்கல்லாம் பிறக்கலேன்னு யார் அழுதது? காலம்பரக் கால் கடுக்க நான் நின்னு அவனை நிக்கச் சொல்லிக் கெஞ்சி சோப்பு வாங்கி வச்சா, உடனே தூளி பண்றீங்களே?”

இரண்டு பேரும் தொண்டை கிழியக் குரல் கொடுக்கலானார்கள்.

“ஜலீஸ் ஸ்டோரிலா வாங்கித்து? சாவித்திரி ஒண்ணுகூடக் கிடைக்கலேன்னாளே?”

“கிடைக்காதா பின்ன? நம்பி அவன் சிநேகிதன் மூணுபேரை நிக்கவச்சேன்னான். அதைக் கொண்டு வந்து ஒளிச்சு வச்சேன். பீடைக் கண்ணில் பட்டிருக்கு, பீடைகள்...”

கடைசி வரி தனக்குத்தான் ஏவிய கணை என்பதை மங்களா புரிந்து கொள்ளமாட்டாளா?

வெறுப்பும் நிராசையும் மண்டுகிறது. வீடு திரும்புகையில் ஒரு சந்தன சோப்பு, ஒண்ணு தொண்ணூறுக்குக் கொடுத்தான். அதை வாங்கிக் கொடுக்க வழியில்லாத பெற்றோர்! அவள் சம்பாதிக்கும் முப்பத்தைந்து ரூபாயைக் கூட ஆசைப்பட்ட பொருளை வாங்கச் செலவழிக்க முடியவில்லை.

வெடுவெடு என்று படியேறியவளைத் தாய் கடிந்தாள்.

“விளக்கு வைக்கிற நேரத்தில் அங்கே என்ன வேலை?”

“ஆமாம். இந்த ஜன்மத்துக்கு ஒண்ணு கிடையாது. ஊரில் எல்லாம் நாலு அஞ்சுன்னு கியூவில் நின்று சந்தன சோப்பு வாங்கி அக்கா தங்கைக்குக் குடுக்கிறான். எனக்கு ஒரு சந்தன சோப்பு, கேவலம் ஒரு சோப்பு வாங்கிக் கொடுக்க உனக்கு யோக்கியதை உண்டா?”

“சந்தன சோப்போ? வெறும் சுண்ணாம்பைக் கொடுத்து ஆளை ஏமாத்தறான், அந்தக் கடையில்!”

“கையாலாகாத பேச்சுப் பேசாதே! என் தலை விதி!” என்று கத்தினாள் மங்களா.

“யாரு, சவுந்தரம் வாங்கியிருக்காளா? அங்கே எதுக்குப் போனே நீ? அந்தத் தடியன் நம்பிக்கு கண்ட சிநேகிதமும் இருக்கு. இவ இளிச்சு இளிச்சுப் பேசறா. புருஷனோ போயாச்சு. சந்தன சோப்பு என்ன கேடு? முந்தாநாள் பார்த்தேன். அந்தத் தடியன் சிகாமணி சிகரெட்டும் குடிச்சிண்டு உக்காந்திருந்தான். பஞ்சாயத்து மெம்பர்னா இப்படி உபசாரமா?”

“உங்களால் முடியாதபோது நீங்க அவ மண்டையை ஏன் உருட்டறேள். உன் பிள்ளை பரம யோக்கியம்! அவன் சிகரெட் குடிச்சானாம், நீ இப்படிப் பேசிண்டே இரு. நானும் ஒருநாள் யாரோடானும் ஓடிப் போயிடப் போறேன். இப்படி எங்கேயோ சமையல் பண்ணியேனும் சம்பாதிச்சுக் கொடுப்பேன்னு நினைக்காதே!”

“பார்த்துக்குங்கோ இவ பேச்சை? பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு கூச்சநாச்சம் அடக்கம் இருக்கான்னு பாருங்கோ நீங்களே!”

படுக்கையில் இருக்கும் குருக்கள், “சிவராஜா, சிவராஜா...” என்று பெருமூச்செறிந்து எங்கோ கைலையங்கிரியில் இருப்பவனைக் கூப்பிடுகிறார்.

“எனக்குக் கூச்ச நாச்சம் இல்லை. அதற்கு என்ன செய்யப் போறீங்க இப்ப?”

“நாளையிலேருந்து நீ போக வேண்டாம். நீ அப்பாவைப் பார்த்துக்கோ, நான் போய் அங்கே காப்பி போட்டு தோசை வார்த்து சமைச்சு வைக்கிறேன். சுலோசனா என்னை வேண்டான்னு சொல்லமாட்டா!”

“உன் மூஞ்சியைப் பார்த்து அவ கூப்பிடுவ? நாயை அவிழ்த்து விடுவா! ஒரு நாள் குளிக்காம, மூஞ்சி பிரஷ்ஷா இல்லாம போனா சமையல் ரூமுக்குள்ளேயே விடமாட்டாள். டேபிளில் பிரக்பாஸ்ட் எடுத்து வச்சிட்டு ஒதுங்கிடனும். போனதும் ஏப்ரனை மாட்டிக்கலேன்னா அதட்டுவ!”

“என்னை அதொண்ணும் சொல்லமாட்டா!”

“நினைச்சிண்டிரு! நக இடுக்கில் அழுக்கிருக்கா, கழுத்துப் பட்டியில் வேர்வை இருக்கான்னெல்லாம் கவனிச்சிடுவ. முப்பத்தஞ்சு ரூபாக்காசு, என்னிக்கானும் அவன் முன்ன வந்துட்டா ஆயிரம் கேள்வி கேட்டுத் துளைப்ப. அத்தனை சந்தேகம். அந்தப் பிள்ளை, பிள்ளையா அது, எல்லாத்தையும் உடச்சுப்பறத்திட்டு “மங்களாதான் உடச்சா!”ன்னு பழியைப் போடும். எனக்கு என்னிக்கு ஒரு வீடு, வாசல்னு விடிவு காலம் வரப்போறது?” மங்களா பொருமிக் கொட்டுகையில் குருக்கள் மேலும் மேலும் பரமேசுவரனைச் சரணடைகிறார்.

“எத்தனை பேருக்கோ ஆபீசில் வேலை கிடைக்கலியா? சாஸ்திரிகள் பொண்ணுக்குக் கூடக் கிடைச்சிருக்கு...”

“ஆமாம். பெரிய பெரிய எம்.ஏ., பி.எச்.டி. படிக்கவச்சுக் கிழிச்சிட்டே. வேலை கிடைக்கல. சாஸ்திரி எங்கெல்லாம் சிபாரிசு பிடிக்கிறது தெரியுமா? சிபாரிசா மண்ணா?”

“சுண்டைக்காய் எஸ்.எஸ்.எல்.சி. அதுவும் தமிழ் மீடியம் ஸ்மார்டா கட்டிக்க ஒரு சாரி கிடையாது. ஒரு நல்ல சோப்பு, பவுடர், ஒரு செருப்பு கூட நல்லதாகக் கிடையாது. காதறுந்த செருப்பை நானே ஒட்டுப் போட்டுப் போட்டுக்கறேன். தலையெழுத்து, நீங்க பார்த்திண்டே இருங்க, நான் ஒரு நாள் ஓடிப்போகத்தான் போறேன்!”

வாசலில் சுற்றுப்புறச் சுவர் இடிந்து பெரிய அழிக் கதவு மட்டும் தொத்திக் கொண்டிருக்கிறது. ஒரு கதவு எப்போதும் திறந்து கிடக்கிறது. அதை மூட முடியாது. சுவரை ஒட்டி வெளிப்புறத்தில் குறுந்திண்ணை போன்ற கட்டிடமும் இடிந்திருந்தாலும், அதில் உட்கார்ந்து சாலையைப் பார்க்கலாம். மங்களா வெறுப்புடன் அங்கே வந்து அமருகிறாள்.

எல்லோரும் உறங்கிய பிறகு கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன என்று தோன்றுகிறது.

சவுந்தரத்துக்குக் கூட தம்பி அருமையாக இருக்கிறான். அவளுக்கு உடன்பிறப்புக்கள், பெற்றவர்கள் இருந்தும் பயனில்லை. நம்பி இருந்தால் அங்கே போகக்கூடாதாம். பேசக்கூடாதாம், கட்டுப்பாடு!

இருள் பரவி வருகிறது. சாஸ்திரியார் வீட்டிலிருந்து பெண்கள் சஹஸ்ரநாமம் பாடும் ஒலி கேட்கிறது.

இதில் ஒரு குறைச்சலுமில்லை! உடனே போட்டியாக கோபியின் பெண்கள் மூலைக்கொருவராக அபிராமி அந்தாதியோ, கந்தன் பாடல்களோ பாட ஆரம்பிப்பார்கள்!

ஜம்புநாதன் தம்பதி வெளியே செல்கின்றனர். காலனியின் புதிய கோவிலில் யாரோ இராமாயணம் பிரவசனம் செய்கிறாராம். ஒருவேளை நம்பி அங்கே இருப்பானோ? ஞாயிற்றுக்கிழமை...

குபீலென்று புளித்த பழவாடையை வீசிக் கொண்டு இருட்டில் நம்பி வருவது தெரிகிறது.

“ஏண்டி இந்த ராங்கி உனக்கு...”

சொர்ண ரேகா, குங்கும ரேகா, மங்கள பஞ்சம லோகா...

அவள் துணுக்குற்று எழுந்து நிற்கிறாள்.

இந்த ஆண்களுக்கு, “டென்ஷன்” ஆற்றாமை எல்லாம் கரைய எத்தனை சாதனங்கள்!

பெண்ணுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளும்!

“ஏ...ண்டி!...” என்று அவள் அருகில் வந்து நம்பி இழுக்கிறான்.

குரல் குழைகிறது; கால்கள் தடுமாறுகின்றன.

நம்பி குடித்துவிட்டு வருவது புதிய காட்சி அல்ல. ஆனால், மங்களா அவ்விதம் உட்கார்ந்திருக்க மாட்டாள். “கடன்காரா!” என்ற கூவலுடன் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொள்வாள். இன்று அவள் அசையவில்லை. ஆனால் அவளுடைய தாய்தான், அவளைத் தேடி வந்தவள், இதைப் பார்த்துக் கூக்குரலிடுகிறாள்.

“இந்தத் தடியனை வீட்டைவிட்டு ஒழிக்கக் காலம் வரலியே? இப்படி வயசுப் பொண்க இருக்கிற இடத்தில் தண்ணியப் போட்டுட்டு வந்து கூத்தடிக்கிறானே?... அடி, நம்பி குடிச்சிட்டு வரான்! எல்லாரும் கதவைச் சாத்திட்டு உள்ளே போங்கோ; ஒழிச்சாச்சு அது இதுன்னா, இங்கே ஒழியலியே?...”

மங்களா அசையவில்லை.

“ஐயையோ, கதவைச் சாத்திக் கொள்ளணுமாம். நிசமா என்னைக் கண்டு பயப்படாதேடி, நான் ஒண்ணும் செய்ய மாட்டேண்டி...”

அவனுடைய உள்ளங்கை அவளுடைய மோவாயைத் தாங்க வருகிறது. மங்களா மெள்ளத் தள்ளுகையில் அவளுடைய அம்மா இன்னும் பெரிதாகக் கத்துகிறாள்.

“கடங்காரா என்ன அழுத்தம்டா உனக்கு? அடி பாவி மங்களா! உள்ளே வாயேண்டி!”

அப்போது சவுந்தரம் அங்கே விரைந்து வருகிறாள். “எதுக்கு எல்லாமாச் சேந்து கூப்பாடு போடணும்? அவாவா வீட்டில் ஒழுங்கு போல!” என்று எல்லாக் குடும்பங்களையும் மங்களாவையும் ஒன்று சேரத் தாக்கிக் கொண்டு, நம்பியின் கையைப் பற்றித் தரதரவென்று இழுத்துக் கொண்டு செல்கிறாள்.

“அது என்ன ஆபீசோ, இழவு பார்ட்டியோ, இப்படிக் குடித்துத் தொலைச்சிடறா!” என்று அவனுடைய அலுவலகத்தின் மீது பழியைப் போட்டு அவனை உள்ளே தள்ளிக் கொண்டு கதவைச் சாத்திக் கொள்கிறாள்.

இரவு ஓசைகள் அடங்க, மின்வண்டி போகும் ஒலியும் நின்று போகிறது. மங்களா விழித்துக் கொண்டிருக்கிறாள்.

நம்பி அவளுடைய கன்னத்தைத் தீண்டியபோது அவளுடைய வெறுப்பை மீறிக் கொண்டு உடல் சிலிர்த்தது. ஓர் ஆடவன் அதுவரையில் அவளை அவ்விதம் தீண்டியதில்லை. முதன்முதலாக அவன் அவளைக் கொஞ்சும் பாவனையில் தீண்டினான். அவளை அந்தவகையில் உரிமையுடன் தீண்ட என்று ஒருவன் வரப்போகிறான்? சோற்றுக்கும் துணிக்குமே பற்றாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இவர்கள் எங்கிருந்து மாப்பிள்ளை தேடப் போகிறார்கள்? இவர்கள் பெற்ற பிள்ளைகள் இருவரும் இவர்களைப் பற்றிக் கவலைப்படாதபோது, இவள் மட்டும் எதற்காக, யாருக்காகப் புனிதம் காத்துக் கொண்டு சம்பாதித்துப் போட வேண்டும்? கடமையாம் கடமை!

அவளுக்குப் பிறப்பு அளித்தவர்கள் அவளுடைய அற்ப ஆசையைக் கூட நிறைவேற்றத் தவறிவிட்டார்கள். நம்பி வைஷ்ணவன் என்ற பெயர். இந்நாளில் இந்தப் பிரிவுகளெல்லாம் பெயரளவுக்குத்தான் ஒட்டிக் கொள்கின்றன.

அவள் நம்பியைக் கல்யாணம் செய்து கொண்டால் குடி முழுகி விடாது. அவன் தன்னை மறந்த அறிவு தடுமாறிய நிலையில் அவளை அணுகியதே அவள் மீதான ஆசையை ஒளித்து வைத்திருக்கிறான் என்று புலனாகிறது.

இந்த உண்மையின் வெளிச்சம் இதமாக, கதகதப்பாக, இனிமை கூட்டும் இரகசியமாக இருக்கிறது.

நம்பி அரைச்சராய் அணிந்துகொண்டு தெருப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொண்டு பம்பரம் ஆடியது அவளுக்கு இப்போதும் நினைவு இருக்கிறது. நம்பியின் மீது அந்தக் கட்டிடம் முழுவதும் உயிராக இருந்த காலம் அது. “மாமி போஸ்டாபீசுக்குப் போகணுமா? சர்க்கரை வாங்கிண்டு வரணுமா?” என்று கேட்டுக் கொண்டு சைகிளில் சென்று வாங்கி வருவான். பெரும்பாலும் பெண்களாகவே இருந்த அந்த வீட்டுச் சூழலில், எப்போதும் சிரித்த முகத்துடன் தோன்றிய அவன் மீது அவர்கள் எல்லோரும் பிரியம். கொலு வைத்து ஜோடனை செய்ய கோபிநாதன் வீட்டில் நம்பிதான் உதவி செய்வான். அவளுடைய அப்பா கீழே முதன் முதலில் ‘ஸ்ட்ரோக்’ வந்து விழுந்தபோது நம்பிதான் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தான். எங்கோ ஓடி டெலிபோன் பேசி, அநாயாசமாக ‘ஆம்புலன்ஸ்’ வரவழைத்து விட்டான். இரவில் அவன் தான் துணை படுத்துக் கொண்டான். “போன ஜன்மத்தில் நீதான்டா பிள்ளை எங்களுக்கு” என்று அம்மாவே சொல்லி இருக்கிறாள். “என் அம்மாவும் அப்பாவும் சீக்கில் விழுந்து என்னைப் பயப்படாதபடி பழக்கியிருக்கா மாமி!” என்று சிரித்தான். அவ்வளவு நல்ல பிள்ளை, ஊரெல்லாம் சிநேகிதர்களாகவே இருக்கப் பழகியவன், பொறுப்பற்றவனாக எப்படி மாறிப் போனான்? சொல்லப் போனால் நம்பிக்குக் குடிக்கவும் மற்றவற்றுக்கும் பழக்கி வைத்தவனே அவளுடைய அண்ணன் தானோ? அவன் பறங்கிமலையில் இருந்து பாட்டிலை மறைத்துக் கொண்டு வருவான்.

நம்பியைக் கல்யாணம் செய்து கொண்டால் திருத்திவிடலாம் என்று தோன்றுகிறது.

சவுந்தரம் முதலில் கத்துவாளாக இருக்கும். கொஞ்ச நாட்களுக்குப் பின் சரியாகப் போய்விடும்.

ஒரு கால் சந்தன சோப்பு அவளுக்கும் சேர்த்துத் தான் வாங்கியிருப்பானோ?

அந்த பங்களாவுக்குள் சொல்லப் போனால் அவள் தான் மாநிறமானாலும் நல்ல களையுள்ள தோற்றமுடையவள்.

கோபியின் வீட்டுப் பெண்கள் முழுக் கறுப்பு. சாஸ்திரி வீட்டில் எல்லாம் உள்ளாங்கண் கும்பல்.

ஒருநாள் காலையில் டாக்டரைத் தேடி யாரோ வந்தபோது மங்களா வாயிலுக்கு வந்து கதவைத் திறந்தாள். “குட்மார்னிங் டாக்டர்” என்று அவள் பேசத் தொடங்கிய போது மங்களாவுக்கு உள்ளூரக் கர்வம் ஓங்கியது.

டாக்டர் உள்ளே இருப்பதாகக் கூறி உட்கார வைத்துவிட்டு வந்தாள். அவள் சுலோசனாவிடமே “அந்த ஸ்மார்ட்கர்ள்” என்று குறிப்பிட்டது மங்களாவின் செவிகளில் விழுந்தது. உள்ளே வந்து “ஏப்ரனைப் போட்டுக்கொள்” என்று சுலோசனா அதட்டினாள்.

அந்த அணி அவளுடைய வீட்டில் மங்களா வெறும் பழையப் பெண் என்று அறிவிக்கும் அடையாளம். அதை உதறி எறிந்துவிட்டு நம்பியின் கையைப் பற்றிக்கொண்டு மேக மண்டலத்தில் உலாவ வேண்டும்.

சந்தனசோப்பு, ஸ்நோ, காம்பேக்ட் பவுடர், விதவிதமான சாந்துகள், வாசனைகள், கூந்தல் தைலங்கள், நைலக்ஸ் ரகங்கள், மிதியடிகள், கைப்பைகள்...

அத்தியாயம் - 9

“என்னம்மா இது! நீ அவனை... ‘லவ்’ பண்றதால்ல நான் நினைச்சேன்?”

ஜானிராஜ் சிரித்தவண்ணம் கேட்கையில் ரேகா கடுகிலும் கடுகாகக் குன்றிப் போகிறாள். உள்ளம் தளிரிலை போல் நடுங்குகிறது.

“...இல்ல சார், அப்படி நினைக்கக்கூடத் துணிய மாட்டேன். எனக்கு...”

குபுக்கென்று கண்ணீர் துளிர்த்துவிடுகிறது. ஒத்திக் கொள்கிறாள்.

“ஐ ஸீ... நான் தப்பா நினைச்சிட்டேனா? ரெண்டு பேரும் ஹின்டூஸ், சேந்து சாப்பிட்டீங்க, பேசுறீங்கன்னுதான் சாதாரணமா நினைச்சேன்...”

அவளுக்கு ஆயிரமாயிரம் ஊசிகள் குத்தினாற் போலிருக்கிறது.

“எங்க வீட்டில்... என் பிரச்சினைகளைப் புரிஞ்சுக்கிறவர் கூட யாருமில்ல. நல்ல விதமாகப் படிச்சு முன்னுக்கு வந்து நல்ல பதவிகளில் இருக்கும் எட்டிய உறவினரெல்லாம் எங்களுக்கு இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டனார் காலத்துக்குப் பிறகு அத்தகையவர் யாருமே எங்களுடன் தொடர்பாக இருக்கவில்லை. புரட்சிகரமாக இருக்க வேண்டிய அம்சங்களில் மாற மறுத்து, காலத்துக்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத பழைய கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கும் குடும்பம் சார், எங்களுடையது. என்னை மேலே படிக்க வைக்க யாரும் முயற்சி செய்யவில்லை. எதோ தெய்வதீனமாக பம்பாயிலிருந்து வந்த மாமன் இந்த வேலைக்கு வழி செய்துவிட்டுப் போனார். இதுவே புரட்சியாக இருக்கு... ஆனால்... நம்பி... நான் எப்படி சார் சொல்லட்டும்? அநாவசிய ‘லிபர்ட்டீசெ’ல்லாம் எடுத்துக்கறாரு. அவராக டிபன் பாத்திரத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைக்கிறார் சார், நான் மறுக்கிறேன்; ஆனாலும் பயமாயிருக்கு சார். உங்களை என் தகப்பனார் மாதிரி நினைச்சுப் பேசுறேன் சார்...” கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். மனப்பளு சற்றே கரைகிறது.

“ஐ ஸீ...!” என்று குனிந்து நிமிரும் ஜானிராஜின் கண்ணாடிக்குள் இணக்கமான அன்பின் கனிவு தெரிகிறது.

“நீ பயப்படாதேம்மா. எனக்கு அஞ்சு டாட்டர்ஸ் இருக்காங்க. உன்னை மூத்த மகளா நினைச்சிக்கிறேன். நல்ல வேளையா நீ சொல்லிட்டே. நீ என்னை யோசனைன்னு கேட்டா, இந்த வேலையை விட்டுவிடுவது தான் சரின்னு சொல்வேன்...”

“ஐயோ, வேற வேலை எங்கே சார் கிடைக்கும்? அதைச் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் சார். சொல்லப் போனா, நான் வேலை எதுவும் செய்து சம்பாதிக்காம இருந்த நாளில் எல்லாம் ஒரு மாதிரி வறுமையைச் சமாளிச்சோம். மேலுக்குக் கவுரவமாக வாழுகிறோமே ஒழிய, பாதி நாட்களில் அன்றாடச் சமையலே பிரச்சினையாகிவிடுகிறது. இப்ப இந்தச் சம்பளம் வந்த பிறகு நானாக வேலையை விடுவதைக் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டாக சார்! நீங்க எப்படின்னாலும் பெரிய முதலாளியிடம் சொல்லி, என்னை அவுங்க மவுன்டு ரோட் ஆபீசில் எடுத்துக்கச் சொல்ல முடியாதா? அங்கே என்னைப்போல் இரண்டு பெண்ணிருந்தா, அதுவே ஒரு தெம்பாக இருக்கும்...”

“உனக்கு குவாலிபிகேஷனும் இல்லியேம்மா? ஸ்டெனோ, டெலிபோன் ஆபரேடர் பஞ்ச் அபரேடர்னு எந்த வகையிலும் போடுறதுக்கில்லையே?”

பற்றிக்கொள்ள எண்ணி முயன்றவளுக்கு ஒரு தும்பும் கிடைக்கவில்லை.

“எனக்கு என்ன செய்வதுன்னு புரியல சார், நால் நாள் முன்ன பாருங்க சார், நீங்க அன்னிக்கு வேறெங்கோ வேலைன்னு போயிட்டீங்களா? இவர் பகல்ல குடிச்சிட்டு வந்திருக்கிறார். சொல்றாரு, ‘ஆர்ச்சர்டில’ நான் படுத்துத் தூங்கப்போறேன். எனக்கு உடம்பு சரியில்ல. நீ வந்து ரூம் கதவைப் பூட்டி வெளியே சாவி வச்சுக்க. அஞ்சு மணிக்குத் திறந்துவிடு’ன்னாரு. எனக்கு ரொம்ப பயமாப் போச்சு. உண்மையில ‘ஆர்ச்சர்டு’ன்னு உள்ள செஸ்ட் ஹவுஸ் எதோ இருக்குன்னு தெரியுமே ஒழிய, இந்த கிணத்துக்கப்பால நான் போனதில்ல. உள்ள நடுங்கினாலும், தைரியமா, ‘சார் இந்த வேலயெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதிங்’கன்னேன். நல்ல வேலையா அப்ப ராமசாமியும் சம்பங்கியும் வந்தாங்க. போயிட்டாரு. எனக்குப் பயமா இருக்கு சார், ஒருநாள் போவது ஒரு கண்டமாயிருக்கு சார்...”

“சே, சே... அவன் மகா மட்டமான ஆளு. உசந்த ஜாதின்னு சொல்லிக்கிறாங்க, இந்த கோகுல் பெரிய இடம். நமக்குச் சம்பளம் போடுகிறாங்கதான். ரொம்ப மோசம். இவனுக்கு அவன் வேண்டியவன், நமக்கென்ன வேணும்னு நான் பாக்காம போயிடுறேன். இந்த ஆர்ச்சர்டு பங்களா தோட்டம் வாங்கும் போதே இருந்தது. அதுக்கு ஐம்பதாயிரம் செலவு பண்ணி ஜோடிச்சான். எல்லாம் கண் மறைவு நாடகத்துக்கு. பெரியவருக்கு இதெல்லாம் கவனிக்க நேரம் கிடையாது. எப்பிடியோ போவுது!... ஏம்மா, உங்கப்பாவுக்கு... எதானும் சீக்கா? ஆஸ்பத்திரில எங்கானும் இருக்காரா?”

புருவம் நெருங்க ஜானிராஜ் குனிந்து கேட்கும் போது அவளுடைய கால் விரல்கள் நிலத்தைச் சீந்துகின்றன. கண்ணீர் மளமளவென்று பெருகுகிறது.

“...சே... வேணாம்மா, அழுவாதே, உனக்குச் சொல்லக் கஷ்டமாயிருந்தால் சொல்ல வேண்டாம்...”

“இல்ல சார், உங்ககிட்ட சொல்லத்தான் போகிறேன். சீக்கான்னு கேட்டீங்களே, அப்படி எங்கேயானும் தீராத நோய்னு ஆஸ்பத்திரியில் இருந்தாக்கூட தேவலேன்னு நினைக்கிறேன். அவர் ஒரு பிரச்சினை. என்னுடைய இன்றைய இந்தக் குழப்ப நிலைக்கே அவர்தான் காரணம்னு சொல்லலாம். நான் எப்போதும் தனியே இருந்து இருந்து அவரைப் பத்தியும் எங்க வீட்டைப் பத்தியும் நினைச்சு நினைச்சு பார்ப்பேன். அவர் எங்க தாத்தா நாளிலேயே ஒரு புரட்சிக்காரர்னு சொல்லணும். எனக்குத் தெரிஞ்சு சண்டை போட்டிருக்கிறார், படிப்பை முடிச்சு எல்லோரையும் போல் ஒரு வேலையில் அமர்ந்து குடும்பத்துக்கு சம்பாதிக்கல. எனக்கு நினைவு தெரிஞ்சு திடீர்னு புயல்போல் வருவார். ஒரே சந்தோஷமாயிருக்கும் எனக்கு. ஒரு மாசம் தங்குவார். அதற்குள் சண்டை வந்திடும். அம்மா அழும். பழையபடி ஒரு நாள் போயிடுவார். வந்து தங்கும் நாளில் எப்பவும் அம்மா அழுவதும் கெஞ்சுவதும் தான் எனக்கு நினைவிருக்கு. அவர் போன பிறகு கல்லுமாதிரியாவிடும் எங்கம்மா முகம். ஒரு தடவை, நான் நைன்த் படிக்கிறப்ப... பொங்கலுக்கு முன்னன்னு நினைப்பு, வந்தார்...”

சட்டென்று இதெல்லாம் இவரிடம் சொல்லலாமா என்ற நினைவு குறுக்கிட்டாற்போல் அவள் நிற்கிறாள். அந்தத் தடவை அவள் ஓடி வந்து அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு தொங்கவில்லை. ஏனெனில் அந்த இடைவெளியில் அவள் பிள்ளைப் பருவத்தைக் கடந்து நாணம் குலவையிட மாற்றம் பெற்றிருந்தாள். அவர் அந்தப் புதுமையை பார்வையிலேயே உணர்ந்து வியந்தவராக நின்றார். “ஓ!” என்ற வியப்பு புன்னகையாய் அவிழ்ந்தது.

ஜானிராஜ் “அப்புறம்?” என்று அவளை நிகழ்கால வரைக்குள் கொண்டு வருகிறார்.

“அதான் ஒரே சண்டை. பெண்ணு வளந்து நிக்கிது. நீ என்னடா, மானம் ரோசம் உள்ளவனா நடக்கிறயா? என்ன மனசில நினைச்சிட்டிருக்கேன்னு திட்டினாங்க?”

“எப்போதும் அவர் வந்தால் உரிமையுடன் என்னை வெளியே பாட்டுக் கச்சேரி, நாடகம்னு கூட்டிப் போவார். ஓட்டலுக்குக் கூட்டிப் போவார். பூ வாங்கித் தருவார். இப்ப நானும் போகக்கூடாதென்று தடைபோட்டார்கள். அவர் மனசு ரொம்ப நோகும்படி பேசிக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன். அந்தத் தடவை அவர் சொல்லிக்காமலே போயிட்டார். எனக்கு அவர் பொங்கல் வாழ்த்து அனுப்பாமலே இருக்கமாட்டார். அதுக்கப்புறம் அவர் எந்தத் தொடர்பும் வச்சுக்கல...”

“உன் மம்மி கவலையே படலியா?”

“அதான் சார் புத்தி. எங்கம்மா கல் யந்திரன்னு வச்சுக்கலாம். அவளிடம் சலனமே கிடையாது. உணர்ச்சி பூத்து நான் பார்த்ததில்ல. புருஷன் எப்படி இருக்கிறாரோன்னு கவலைப்படாத போனாலும் கட்டுக் கழுத்தியாக இருக்கணும்னு விரதம் இருப்பாள்!”

“ஆனா, இப்ப உன் பாதர் எங்க இருக்கிறார்னு தெரியாது?”

“அதான் சார் சொல்ல வந்தேன். அவர் இந்த பஸ்சில் ஒரு நாள் பிரயாணம் செய்தார். அவர்தான்னு எனக்குப் பார்த்த உடனே எதோ ஒண்ணு மனசில சொல்லிச்சு. சார், ஒரு ஈக்குக்கூடக் கேடு நினைக்கத் துணியாத மனிதர். வருஷக்கணக்கில் கொலைத் தொழில் செய்தா எப்படியிருப்பார்?” என்று கேட்டுவிட்டு ரேகா அவரை நிமிர்ந்து பார்க்கிறாள்.

“கொலைத் தொழிலா?”

“ஆமாம் சார். அவர் ஒரு ஸ்லாட்டர் ஹவுசில் வேலை செய்கிறார்னு புரிந்தது. எப்படிப் போனார்னு தெரியாது. அதுக்காக குடிக்கப் பழகியிருக்கிறார். ஆள் ஹெப்டியா - கனமா அடையாளம் தெரியாம மாறிப் போயிட்டார். முகமெல்லாம் ஒரு கருமை. அழுத்தமாப் பதிய திட்டுத் திட்டாயிருந்தது. எனக்குத் திடுக்கிட்டுப் போச்சு. அவரை நான் புரிஞ்சிட்டாப்பல, அவரும் என்னைப் புரிஞ்சிட்டிருக்கிறார். அவர் அதற்குப் பிறகு அஞ்சாறு நாள் கழிச்சி எங்க வீட்டுக்கு வந்தார். அதாவது நான் போன அதே பஸ்சில்தான் வந்திருக்கிறார்.”

“ஈவினிங்கா?”

“ஆமாம். ஏழு மணிக்கு மேல இருக்கும். இருட்டு, வீட்டு வாசல் வராந்தாவில் நின்னு கூப்பிட்டார். பாட்டி, அம்மா, அத்தை எல்லாரையும் கூப்பிட்டார். ஆதரவில்லாத குழந்தைபோல் மன்னிக்கச் சொல்லி அழுதார் சார்...” இதைக் கூறும்போது அவள் குரல் நெகிழ்கிறது.

“‘சிவகாமி, என்னை மன்னிச்சிடு. நான் எப்படியோ, விதி வசத்தால் குழியில் விழுந்திட்டேன்’னு சொல்லி அழுதார். அப்ப அவர் குடிச்சிருந்தார்னு நான் சொல்லமாட்டேன். அப்ப... அப்ப... சார், எங்க மாமனும் சித்தப்பாவும் அவரை யாரோ திருடன்னு அடிச்சித் தூக்கிட்டாங்க, சார்!” ஜானிராஜ் திடுக்குற்றாற்போல் பார்க்கிறார்.

“ரியலி? இதென்னம்மா, கதைபோல இருக்கு?”

“ஆமாம் சார், எங்கம்மாவும் பாட்டியும் அப்ப கல்லுப்போல நின்னாங்க. அந்த சமயத்தில் அம்மா, ‘அவரை எப்படி அவர்தான்னு நம்பட்டும்’னு சந்தேகமாகப் பேசினாங்க. பிறகு நான் கேட்டப்ப, அப்படிக் குடிச்சிட்டு கசாப்பு வேலை செஞ்சவர்னு தெரிஞ்சா, உன்னை யார் வந்து இந்த வீட்டில் கல்யாணம் கட்டுவாங்கன்னு கேட்டாங்க சார். நான் துடிச்சுப் போறேன். கல்யாணம், குடும்பம், வாழ்வு எல்லாம் எனக்கு வெறுத்துப் போச்சு சார்...”

கடைசியாக வரும் சொற்கள் வெறுப்பில் கிளர்ந்தெழுபவை.

“இப்படிக்கூடவா இருப்பாங்க? எல்லாருந்தான் குடிக்கறாங்க. இத, நம்பி என்னென்னமோ செய்கிறான். ஆனா அவனும் சிஸ்டர் கூட இருக்கிறான். இதுக்காக, வீட்டைவிட்டு அடிச்சித் துரத்துவதா?”

“அப்படிச் சொல்லிட முடியாது சார். நெறிமுறைகளை உடைக்கத் துணிவு இருப்பவர், நெறிகள் வெறும் விலங்காயிருந்ததுன்னு நிரூபிக்கணும். வாழ்க்கையை அதை உடைச்சதால் நான் மேன்மையாக்கிட்டேன்னு நிரூபிக்கணும். அவர் அந்தக் காலத்தில் பொருந்தி வேலை செய்யலே. ஆனா, அவர் ஒரு பெரிய கவிஞராவார்; இல்லாட்டி கலைஞராவார்னு நான் மனசிலே உள்ளூற ஒரு நம்பிக்கை வச்சிட்டிருந்தேன். என்னாலேயே இதை அவ்வளவு இலகுவா செமிக்க முடியலே சார். அவங்க... அந்த வீட்டுக்கப்பால உலகம் ஒண்ணு இருக்குன்ற உண்மையைப் பத்திக் கவலையே படாம காலத்தை ஓட்டிட்டவங்க. பாசம, பரிவு இணக்கம் எல்லாத்தையும் சாப்பிட்டுட்ட வெறும் வழக்கம்தான் சார் இருக்கு...”

“வாட் எ பிடி!”

ஜானிராஜ் அவளை மிகவும் அனுதாபத்துடன் நோக்குகிறார்.

“நீ கவலைப்படாதேம்மா. நான் சம்பங்கி, ராமசாமி, இன்னும் எல்லா ஆளிடமும் இந்தப் பக்கம் உன்னைப் பார்த்துக்கணும்னு சொல்லி வைக்கிறேன். நானும் உன்னை அவசியமா ஒவ்வொரு நாளும் வந்து பார்த்துக்கிறேன். நீ தைரியமாயிரு.”

“ரொம்ப ஆறுதலாயிருக்கு சார். நீங்க வித்தியாசமா நினைக்க மாட்டீங்கன்னு எல்லாம் கொட்டிட்டேன். எனக்கு அந்தரங்கமா நினைச்சு சொல்ல ஒரு தோழி அக்கா தங்கச்சின்னு கூட யாரும் இல்ல...”

“இதெல்லாம் என்னம்மா, நீ ஒண்ணு...”

“சார், எனக்கென்னமோ, அந்த ராத்திரில அவங்க எல்லாம் அப்பாவை துரத்தினதிலேந்து அப்பா நினைப்பாகவே இருக்கு. அவரைப் போயிப் பார்க்கணும். அவரை நான் புரிஞ்சிட்டேன்னு சொல்லி அவர் பிச்சை கேட்ட அன்பை மறுக்கலேன்னு சொல்லணும்னு துடிப்பா இருக்கு. ஆனா, முன்பின் தெரியாத நான் எந்த இடத்தில் எப்படிப் போயி அவரைத் தேடுவேன்?...”

“எங்கே இருக்கு அந்த ஸ்லாட்டர் ஹவுஸ்ன்னு தெரியுமா உனக்கு? நான் விசாரிச்சிட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்.”

“இந்தப் பக்கம் எங்கேயோதான் இருக்கணும். ஒருநாள் முந்நூறு நானூறு ஆடுங்கன்னா...”

“இங்கே பழைய கன்டோன்மென்ட் பக்கம் ஒரு ஆட்டுத் தொட்டி இருக்கு. ஆர்மி கன்ட்ராக்ட். மியான் சாயபுடையது. அதுவா?”

“தெரியாதே சார் எனக்கு?”

“நான் விசாரிக்கிறேன். நீ கவலையே படாம தைரியமா இரு. போம்மா...”

இடைவேளை நேரத்தில் பல நாட்களாகத் துடித்த விவரங்களை ஜானிராஜிடம் இறக்கிய பிறகு சற்றே நிம்மதியாக இருக்கிறது. நம்பி அன்று அலுவலகத்துக்கு வந்து, உடனே கோகுலுடன் வெளியே போய்விட்டான். அதுதான் வாய்ப்பு.

அத்தியாயம் - 10

மங்களா ஐந்தரை மணிக்கு எழுந்து பல் துலக்கி நீராடி விட்டுத்தான் வரவேண்டும் என்பது டாக்டர் சுலோசனாவின் நிபந்தனை. ஆனால், குளிர் நாட்களில் காலை நேரத்தில் அப்படிக் குளிக்க முடிகிறதா? வெந்நீர் சுட வைக்க அடுப்பு ஒழுங்கில்லை. எனவே பல் துலக்கி முகம் திருத்திப் பொட்டு வைத்துப் புதிய சேலை உடுத்தி அவள் பணியிடம் புறப்பட்டு விடுவாள். டாக்டரும், கல்லூரிப் பேராசிரியரும் புறப்பட்டுச் சென்ற பிறகு அவள் குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு வந்து குளியலறையில் மின்விசையைத் தட்டி சுடுநீர் தயாராக்கி சாவகாசமாகக் குளிப்பாள்.

கிணற்றடியில் அதிகாலையிலேயே சாஸ்திரியார் மனைவி வாலாம்பாள் துணி துவைக்கத் தொடங்கி விடுவாள். கோபிநாதன் குளிக்க வருவார். பொதுவான மறைவிடத்துக்கு அப்போதிருந்தே வரிசை நிற்கும். நெருக்கடி தோன்றிவிடும். மங்களா காலையில் எழுந்து பல் துலக்கக் கிணற்றடிக்கு வரும்போது சில நாட்களில் சாஸ்திரியார் வீட்டுக்கும் கோபிநாதன் வீட்டுக்கும் இடையே நிலவும் கோபதாபங்கள் படீரென்று வெடித்து, சொற்போர் நடந்து கொண்டிருக்கும். அன்று வாலாம்பாள் புடவை தோய்க்கும்போது யாரையும் காணவில்லை. ஆனால், “வரவர எல்லாம் கெட்டுக் குட்டிச் சுவராப்பூத்து. சாதி ஆசாரம் அனுஷ்டானம் ஒரு எழவுமில்லை. கண்டவனும் வரான்! போறான்...” என்று பொல பொலத்துக் கொண்டிருந்தாள்.

“ஊருக்கு ஒழுங்கு சொல்ற சாஸ்திரிகள் இரா முழுக்கக் கண் முழிச்சி சீட்டாடலாமோ? ரெண்டு ரூபா கிடச்சா கிண்டிக்கு ஓடலாமோ?”

“யாரு? மங்களாவா! பேஷ்!”

நம்பியின் குரல் பின்னிருந்து கேட்கையில் அவளுக்கு உடல் புல்லரிக்கிறது.

இருள் நன்றாகப் புலராத அந்த நேரத்தில் அவளுடைய இதழ்களில் ஒரு மின்வெட்டுச் சிரிப்பு நம்பியை வசமாக்கப் பளீரிடுகிறது.

“கலிமுத்திப் போச்சு!” என்று மறைவிடத்தில் இருந்து வெளிப்படும் சாஸ்திரிகள், ஈசுவரனை மட்டும் மெல்லக் கூப்பிட்ட வண்ணம் தம் தாழ்வரைக்குப் பின்வாங்குகிறார்.

“ஏன் இன்னிக்குச் சீக்கிரமா எழுந்திட்டாப்பல?”

“யாரு? என்னையா கேட்கிறே?” என்று திரும்பக் கேட்கிறான் நம்பி.

“இல்லை. இந்தக் கிணற்றைக் கேட்டேன்...”

“உனக்கு ரொம்பத் தைரியம் மங்கி!”

“ரொம்ப நன்றி!”

“எதுக்கு?”

“தைரியம்னு சொன்னியே, அதுக்கு எனக்குத் தைரியமே இல்லேன்னு நான் நினைச்சிண்டிருந்தேன்...”

“அதுசரி, உன் டாக்டர் பிசினஸ் எப்படி இருக்கு?”

“பிசினசைப் பத்தி எனக்கென்ன தெரியும்? நான் வெறும் ‘கிச்சன் மெய்ட்’ ‘ஆயா’, நம்பி, உனக்குத்தான் செல்வாக்கா நிறைய பிரன்ட்ஸ் இருக்காலே, பஞ்சாயத்து போர்டு மெம்பர் சிகாமணி சிநேகம். ஏன் உன் கம்பெனி முதலாளிகிட்டியே உனக்கு ரொம்ப செல்வாக்காம். எனக்கு ஒரு வேலை - அதாவது சமையல் வேலை இல்லாத வேலை வாங்கித் தரமாட்டியா?”

“ஏன், உன் டாக்டர் எக்கச்சக்கமா பணம் பண்றாளாமே? அவ நர்சிங் ஹோமில உனக்கு ஒரு அசிஸ்டென்ட் வேலை குடுக்கக் கூடாது?”

“என்ன பணம் பண்றாளோ? பாக்கறதுக்குத்தான் சக்கரை. எனக்குக் காப்பிக்குக் கூடச் சக்கரை வைக்காமல் பீரோவைப் பூட்டிட்டுப் போறா!”

“அப்படியா?... இது சுத்த மோசம். அவளுக்கு அமோக பிசினஸ் எப்படித் தெரியுமோ?”

“எப்படியாம்?”

அவன் அருகில் வந்து கண்களைச் சிமிட்டுகிறான்.

“பெரிய பெரிய வாடிக்கை. ஒரு இரண்டு மாசச் சிக்களுக்கு ஐந்நூறு ரூபாய்!”

அவள் முகத்தில் குபீரென்று வெம்மை பரவுகிறது.

“சீ! எப்படிப் பணம் சேர்த்தால் நமக்கென்ன? எனக்குப் பிடிக்கல. நீ எனக்கு ஒரு வேலை சிபாரிசு பண்ணிக்கொடு நம்பி... உங்க ஆபீசில கிடைக்காதா? இந்த மட்ருசில் எத்தனையோ பேருக்கு வேலை கிடைக்கிறது. எனக்கு மட்டும் சிபாரிசு செய்யறவா இருந்தா... நான் எவ்வளவு உற்சாகமாக இருப்பேன்?”

நம்பி வாளியில் நீர் எடுத்துப் பல் துலக்கத் தொடங்குகிறான். மங்களா பற்றிய தும்பை விடக்கூடாது என்று மீண்டும் தொடங்குகிறாள். “உன் ஆபீசில் லேடி கிளார்க் டைபிஸ்ட் இல்லை?...”

“ஒரு பச்சைப் பாப்பா இருக்கு. பெரியவர் சிபாரிசில் வந்திருக்கு. ஆனா, ஒண்ணும் தெரியாது. நாலு வார்த்தை இங்கிலீஷ் சேர்ந்தாப் போல் எழுதத் தெரியாது. சொன்னா அழுதுடும்...”

“ஐயோ!... நம்பி நான் இங்கிலீஷில் செவன்டி பர்சென்ட் தெரியுமா? நான் அழவும் மாட்டேன். ஒரு சான்ஸ் கொடுத்துப் பாரு, நான் மளமளன்னு கத்துண்டுடறேனா இல்லையான்னு...”

“நீ இவ்வளவு பார்வர்டா இருப்பேன்னு நான் கனவில் கூட நினைக்கலே மங்கு!”

“நான் பார்வர்டா இல்லேன்னா கதியே இல்ல நம்பி, எனக்கு எதிர்கால நம்பிக்கையே இல்ல...”

“சரி, சரி சினிமா வசனம் ஆரம்பிச்சிடாதே, பார்க்கிறேன்...”

“நம்பி... நீ மட்டும் எனக்கு வழிகாட்டிட்டே, நான் மறக்கவே மாட்டேன்...”

நம்பி வாய் கொப்புளிக்குமுன் வாளி குடம் கயிறு முதலியவைகளுடன் சவுந்தரம் வந்து விடுகிறாள்.

“நம்பி எவ்வளவு நல்லவன்? சே! அவனைப் போய் எல்லாரும் கெடுதலாகப் பேசுகிறார்களே!” என்று எண்ணியவாறு நம்பிக்கையுடன் அவள் அன்றையப் பொழுதைத் தொடங்கச் செல்கிறாள்.

அவள் அன்று மணியடிக்குமுன் வேலைக்காரி காத்தம்மா பால் வாங்கி வந்துவிட்டாள். சுலோசனா காபி கலந்து கொண்டிருந்தாள். “மணி என்ன ஆச்சு பாரு? நேத்து நீ குழந்தைக்கு வெறும் தக்காளி ரசமும் சோறும்தான் கொண்டு போனாயாமே? வரவர நீ ரொம்பச் சோம்பல் படறே! போ போ, ஏப்ரனைப் போட்டுக் கொண்டு சட்னியை அரை...”

சுடச்சுட நான்கு சொற்கள் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. “மனமே, பொறு” என்று அடக்கிக் கொள்கிறாள்.

நம்பியின் அலுவலகத்தில் வேலை, பிறகு அவனுடன் கல்யாணம், திருப்பதியிலோ, திருத்தணியிலோ - இரண்டு பேரும் ஒன்றாக மேசையில் உணவு அருந்திவிட்டு அவர்களும் அலுவலகத்துக்குப் போவார்கள்...

இந்த ஏப்ரனை உதறிவிட்டு ஸ்மார்ட்டாக... ஸ்கூட்டரில் பின் தலைப்பு பறக்க, அவன் இடையோடு கைகோத்துக் கொண்டு...

“அலோ டாக்டர்! எப்படியிருக்கீங்க...?” என்று அவள் கறுப்புக் கண்ணாடியை உள்ளங்கையில் தட்டிக் கொண்டு கேட்கையில்... கற்பனைகள் பொன்விளிம்பில் மிதக்கும் இனிமையாக இருக்கிறது. முதலில் அந்த தரித்தரம் பிடித்த காம்பவுன்டை விட்டு மாற வேண்டும். சவுந்தரமும் குழந்தைகளும் தனியாக இருப்பார்கள். அவளுக்கென்ன? டாக்டரும், கல்லூரி ஆசிரியரும் தத்தம் இடங்களுக்குச் சென்ற பின் குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு வருகிறாள். பிறகு குளியறையில் அவள் சாவகாசமாகக் குளிக்கும் நேரத்தில் வாயில்மணி ஒலிக்கிறது.

‘யாராக இருக்கும்?’ இதமான சுடுநீர் தொலைபேசி வடிவில் உள்ள குழாய்வழி கைமழையாகப் பூச்சொரிய, அவள் துணுக்குற்று நிற்கிறாள். ‘எதையேனும் மறந்து வைத்துவிட்டு டாக்டர் வந்தாளா?’ வரமாட்டாளே? பின்னே... ‘அவள் புருஷனா? பின் யார் வருவார்கள்?’ பரபரவென்று உடலைத் துடைத்துக் கொண்டு, “வருகிறேன்” என்று குரலைக் கொடுக்கிறாள். குளித்த சோடு தெரியாமல் இருப்பதற்கு இல்லை. நல்ல வேளையாகக் கூந்தலை நனைய அன்று நீராடவில்லை. அவசரமாக ஒரு பொட்டையும் நெற்றியில் வைத்துக் கொண்டு கதவைத் திறக்கிறாள்.

பூஞ்சாரலாய் உடல் சிலிர்க்கிறது.

கருப்புக் கண்ணாடியும் சென்ட் மணமுமாக நம்பி...

நம்பி...!

“என்ன, இப்பதான் குளிச்சிண்டிருந்தாயா?”

“உள்ளே வா, நான் யாரோ என்னமோன்னு பயந்து போனேன். இந்த பிளாட் உனக்கு எப்படித் தெரிஞ்சிது?”

“பெரிய வித்தையா? டாக்டர் சுலோசனான்னேன், மூணாம் மாடி ஏறி வந்தேன்...” என்று அவளை மேலும் கீழுமாக ஒருமுறை பார்த்துவிட்டு, அறையைச் சுற்றிப் பார்க்கிறான்.

டாக்டர் வீடு என்று அலங்காரம் எதுவுமில்லை. நான்கு கூடை நாற்காலிகள். ஒரு நடுமேசை. கலைப்பொருள் அலமாரியில், மலிவாக நடைபாதையில் வாங்கிய பிளாஸ்டிக் பொம்மைகள், குழந்தையின் விளையாட்டுக் கருவிகள், சுவரில் ஒரு மருந்துக் கம்பெனி விளம்பரத்துடன் நாள்காட்டி.

“ஸோ, இங்கேதான் நீ வேலையாக இருக்கிறாயாக்கும்!”

“ஆமாம், இரு... ஒரு ட்ரிங்க் கொண்டு வறேன்...” மிக உற்சாகமாக இருக்கிறது. குளிர் அலமாரியைத் திறந்து பாலை எடுத்து, காபி கலந்து கொண்டு வருகிறாள்.

அவன் சராய்ப்பையில், கையைவிட்டுக் கொண்டு அவளைப் பார்க்கிறான். “எடுத்துக்கோ நம்பி!”

“உனக்கு?”

“எனக்கு இருக்கு.”

“பொய் சொல்லாதே. நான் உள்ளே வந்து பார்ப்பேன்!” அவள் சிரித்துக் கொண்டு அரைக் கிண்ணமாக இருந்த காபியைக் காட்டுகிறாள்.

காபியருந்திய பிறகுதான் அவளுக்கு நினைவு வருகிறது. “இன்னிக்கு உனக்கு ஆபீஸ் இல்லியா?”

“ஆமாம். போன் பண்ணிவர நேரமாகும்னேன்.”

“எனக்கு வேலைக்குச் சொல்றேன்னியே?”

“அதான் வந்தேன். ஒரு இடத்துக்கு உன்னைக் கூட்டிண்டு வரேன்னேன்.”

சிரிப்பில் பூக்கள் மலர்ந்து கொட்டுகின்றன.

“நிஜமாகவா நம்பி; இப்பவா கூட்டிண்டு போறே!”

“பின்ன, ஆபீசுக்கு லீவு சொல்லிட்டு உன்னோடு விளையாட வந்தேன்னு நினைச்சியா?”

“ரொம்ப தாங்க்ஸ் நம்பி. போன் பண்ணி டாக்டரிடம் சொல்லிட்டு, குழந்தைக்குச் சாப்பாடு கொடுத்திட்டு வரட்டுமா?”

“எத்தனை மணிக்குக் கிளம்புவே?”

“இன்னும் அரைமணியாகும்...”

“என்னை அரைமணி வெயிட் பண்ணச் சொல்றியாக்கும்!”

“வேறென்ன செய்வது, நீ சொல்லி. குழந்தைக்குச் சாப்பாடு கொடுத்திட்டு காத்தம்மாவை அழைச்சிட்டு வரச் சொல்றேன். சாப்பாடு கொடுக்காம போகலாமா?”

“ஓ.கே. நான் அப்ப, பஸ் ஸ்டாண்ட் பக்கம் கபேயில் காத்திட்டிருப்பேன். வா...”

“மேனகா கபேயிலா?”

“ஆமாம். நிச்சயமா வருவியா?”

“வரேன்...”

முதல் நாளே வெறும் இரசமும் சோறும் கொடுத்ததற்காக சுலோசனா கடிந்து கொண்டாளே? பட்டாணியும் காலிபிளவரும் போட்டு ஒரு கூட்டு தயாரித்து, இரசமும் தயிரும் வைத்து பள்ளிக்கு கொண்டு செல்லுமுன் அவள் தன்னுடைய சேலையையும் அலங்காரத்தையும் பார்த்துக் கொள்கிறாள். ‘யார்ட்லி’ முகப்பவுடர் அலமாரியில் இருக்கிறது. காலையில் நம்பியிடம் ஒழுக்கம் இல்லாதவன் என்ற அச்சத்தடையைத் தகர்த்துக் கொண்டு பேசியிருக்கிறாள். பணிபுரியும் வீட்டில் அவனை உபசரித்திருக்கிறாள். டாக்டரின் அலங்கார மேசையைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன? அன்று அவள் உடுத்திருக்கும் சேலை கூட சுலோசனா கொடுத்த பழைய நைலக்ஸ். பூப்போடாத மொட்டை இரகம். செருப்புத்தான் நன்றாக இல்லை.

எனினும் வேறு வழியில்லை.

“மிஸ்சிடம் சொல்லிட்டுப் போறேன். காத்தம்மா வீட்டிலேருந்து வந்து கூட்டிப்போவா சமர்த்தா போறியா!” என்று குழந்தையைச் சமாளிக்கிறாள். பிரச்சினையாக இல்லை. சாப்பாட்டுப் பாத்திரங்களை மீண்டும் வீட்டில் கொண்டு போட்டு, சாவியை அடுத்த மாடிக்காரர்களிடம் கொடுத்துவிட்டு, மங்களா வெளியேறுகிறாள்.

நம்பி கறுப்புக் கண்ணாடியும் கையில் புகையும் சிகரெட்டுமாகக் காத்திருக்கிறான்.

அத்தியாயம் - 11

அந்த ஆண்டு பொங்கலுக்குள் வாயிலை மட்டுமேனும் இடிந்த பகுதிகளைச் சீராக்கி சுண்ணாம்படிக்க வேண்டும் என்று பாட்டி சொல்லிக் கொண்டிருந்தாள். திடீரென்று வீட்டு நடவடிக்கைகளிலேயே பரபரப்பும் உற்சாகமும் இறங்கி, ஒரு இயந்திர ஓட்டமாக ஓடத் தொடங்கியது. ஏற்கெனவே அதிகம் பேசாத சிவகாமி இப்போது பேசுவதேயில்லை. எல்லாவற்றையும் விட்டாலும் வெற்றிலை போடாமல் இருக்க அவளால் முடியாது. இரவு எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு கைவிளக்கை வைத்துக் கொண்டு வெற்றிலை போட்டுக் கொண்டுதான் படுப்பாள். “கண்ணு, வெத்தில இல்ல பொட்டி கடையில போயி பத்து காசுக்கு வாங்கிட்டுவாயேன்!” என்று இரவு ஏழு மணிக்கேனும் அனுப்பி வாங்கி வரச் சொன்னது உண்டு.

இப்போது அம்மா வெற்றிலை போடுவதில்லை. அன்றாட தேவைப் பொருள்கள் ஆகாயத்துக்குச் சென்றுவிட்டது மட்டும்தான் காரணமா? பாட்டி இரவு உண்பதை விட்டுவிட்டாள். சின்னம்மாவும் அத்தையும் கூட முன்போல் பேசுவதில்லை. மாமா பையைத் தூக்கிக் கொண்டு அன்றாடம் அரிசி வாங்கப் போகிறார். “அவளுக்கு மட்டும் ரெண்டு இட்டிலியா? எனக்கு?” என்று கடைக்குட்டிபயல் கேட்பதும், “நீ எத்தினி தரம் கேட்பே! அப்பப்பா! தின்னு உருட்டுதுங்க!” என்று பாட்டி அதட்டி அலுத்துக் கொள்வதும் எப்படி இயல்புபோல் வந்துவிட்டது என்பதை ரேகா அன்றிரவு ஒரு திடுக்கிடும் உணர்வுடன் நினைத்துக் கொள்கிறாள். மாடு ஓட்டிக் கொண்டு செல்லும் சின்னையன்! எப்போதோ இரண்டு மாசங்களுக்கு ஒரு முறை வரும் சலவைக்காரன், பஞ்சாயத்து அலுவலகக்காரர்கள் என்று ஒரு காலத்தில் பெரிய மனிதராக இருந்த கூட்டுக் குடும்பத்தை அண்டிப் பிழைத்துக் கொண்டிருந்ததை நினைவூட்டும் வண்ணம் பொங்கலைச் சாக்கிட்டு வருகின்றனர். கறவை வற்றிய மாடு ஒன்றும் கால் படி கறக்கும் பசு ஒன்றும் அந்த வீட்டின் பால் வளத்துக்கான வரவு செலவுக் கணக்கை ஈடு செய்யவில்லை. மாமனுக்கும் சிற்றப்பனுக்கும் தான் சர்க்கரைக் காப்பி!” என்று கடைக்குட்டி தம்ளரை எடுத்துக் கொண்டு ஓடுகிறது, தந்தையிடம் ஒருவாய் வாங்கிக் கொள்ள.

அந்த வீட்டுக்கு அவளும் பொருள்தேடி வருகிறாள். தனக்குச் சர்க்கரைக் காப்பி கொடுக்கக் கூடாதா? ஒத்த வயசுடைய குழந்தைகளாக இருந்தாலும் ஆணுக்கு ஒரு வகை; பெண்ணுக்கு ஒரு வகை. சுகுணாவும் ரமணியும் தண்ணீர் இரைக்கின்றனர். பாத்திரம் கழுவி, துணி மடித்து உதவி செய்கின்றனர். சோமுவுக்கும் சுந்தரத்துக்கும் ஒரு வேலை கிடையாது. அத்தையும் சின்னம்மாவும் உடல் நலமின்றிப் படுத்தாலும் ஆண்கள் மாட்டைக் கூட இழுத்துக் கட்ட மாட்டார்கள். அவர்களுடைய உடுதுணிகளைக் கூட யாரேனும் துவைத்து வைக்க வேண்டும். இம்மாதிரியான கூட்டுக் குடும்பங்களில் ஆணுக்குச் சலுகை மிகவும் அதிகமாகக் கிடைப்பதாக ரேகாவுக்குத் தோன்றுகிறது. இதுவே அவரவர் தனியாக இருந்தால், மனைவி உடல் நலமின்றிப் படுத்தால் கணவன் தானே பொறுப்பேற்க வேண்டும்?

அலுவலகத்துக்காக பஸ்சுக்குக் காத்திருக்கும் ரேகாவுக்கு மனம் எங்கெங்கோ அலைகிறது. இரண்டு கடைக்கப்பால் கிரசின் எண்ணெய்க்காகக் கூட்டம் நிற்கிறது. கல்லூரி மாணவர்கள் நாலைந்து பேர் பெரிய கருப்புக் கண்ணாடிகளும் பெண்பிள்ளைச் சட்டைகளுமாக வருகின்றனர். ரேகா பஸ்சுக்குக் காத்திருக்கும்படி நேர்ந்ததே இல்லை. நவீனமான கால்சட்டை மேல்சட்டை உடையில் இரண்டு பெண்கள் வந்து ஒரு புறம் நிற்கின்றனர். பரந்தாமனார் வீதியிலேயே அவர்களைப் பார்த்தாற்போல் நினைவு. அந்தத் தெருவிலே யார் யார் வசிக்கின்றனர் என்பது கூடத் தெரியாத அளவுக்கு ஒடுங்கிவிட்டார்கள். ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி உடுத்து கல்வி பயில வருகின்றனரே, ஒரே மாதிரியான நிலையைப் பெறுகின்றனரா, சமுதாயத்தில்?

“அலோ?...” என்று அந்தப் பெண் ரேகாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு வருகிறாள்.

ரேகாவுக்குப் புதுமையாக இருக்கிறது.

“நாங்கள் இளம் பெண்கள், முற்போக்குக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்” தொங்கும் பையிலிருந்து ஒரு அச்சடித்த சிறு தாளை அவளிடம் எடுத்துக் கொடுக்கிறாள் ஒருத்தி.

இளம்பெண்கள் முற்போக்குக் கழகத்தில் சேருவதற்கான அச்சிட்ட தாள் அது.

சில மாசங்களுக்கு முன்பாக இருந்தால் ரேகா அதைப் பார்க்காமலே “வேண்டாம்” என்று திருப்பியிருப்பாள்.

முழுப் பெயர் - வயசு - தொழில் - படிப்பு - பெற்றோர் இருக்கின்றனரா, பெயர் - மற்ற விவரங்கள்.

ரேகா திருப்பித் திருப்பிப் பார்க்கிறாள்.

“இதில் என்ன செய்கிறார்கள்?”

“அறிவுப்பூர்வமாக நாம் மதிக்கப்படப் போராடுகிறோம். ஆண்களுக்குச் சமமாகத் தொழில் துறை, ஊதியம், சலுகைகள் பெறுவதற்கு - விளம்பரம், கலை என்ற பெயர்களில் நம் இனம் இழிவு செய்யப்படுவதைத் தடுக்கப் போராடுகிறோம். பலபல திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆண்டுச் சந்தா ஐந்து ரூபாய்தான். நமக்கு நிறைய உறுப்பினர் வேண்டும்.”

ரேகாவுக்கு அவர்கள் கடைசியில் கூறிய விவரம் உவப்பாக இருக்கிறது.

“‘விளம்பரம் கலை என்ற பெயர்களில்... நம் இனம் இழிவு செய்யப்படுவதைத் தடுக்கப் போராடுகிறோம்’ என்றால் என்னனு புரியலியே?”

மளமளவென்று பைக்குள்ளிருந்து ஒரு பத்திரிகைத் தாளை எடுத்து அவள் அங்கேயே விரிக்கிறாள். அதில் ஒரு பெண்ணின் இடைப் பகுதி, அடிவயிற்றுப் பகுதி ஆடையின்றி பெரிய அளவில் அச்சிடப் பெற்றிருக்கிறது. சில வடிவங்கள் - இலக்கங்கள் - என்று இரண்டுக்கு பொதுவான ஆங்கிலச் சொல்லைக் கையாண்டு, மறக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். கீழே, அது மின்னணுச்சாதனம் ஒன்றுக்கான விளம்பரம் என்று புலனாகிறது.

விருவிரென்று முகம் சிவக்கிறது அந்தப் பெண்ணுக்கு.

“இதை நாம் தடுக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும், நாம் ஒவ்வொருவரும் வெறும் பால்வேறுபாட்டை உணர்த்தும் சின்னமல்லவென்று நிரூபிப்போம்...”

“உங்கள் பேரென்ன?”

“நான் கீதா; இவள் உஷா, நாங்கள் ஆந்திரத்திலிருந்து வந்திருக்கிறோம். இங்கேயும் இயக்கத்தை வலுவாக்க வேண்டும்.”

ரேகாவிடம் அன்று ஐந்து ரூபாயில்லை.

“நான் நாளைக்குத்தான் பணம் கொண்டு வந்து கொடுப்பேன் போதுமா?”

“ஓ, இங்கே நாங்கள் பள்ளித் தலைவியைச் சந்திக்க வந்தோம். நீங்கள் அலுவலக முகவரியைச் சொன்னால் வந்து வாங்கிக் கொண்டு திட்டங்களைச் சொல்கிறோம். இங்கே ஒரு ஐநூறு உறுப்பினர்களேனும் சேர்த்து நாங்கள் பொதுக்கூட்டமும், ஊர்வலமும் நடத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறோம்...”

“நான் நிச்சயம் சேருகிறேன். உங்க விலாசம் சொல்லுங்கள்...” அவர்கள் எழுதிக் கொடுக்கின்றனர்.

பஸ் வந்திருக்கிறது.

ரேகா கிளர்ச்சியுற்றவளாக வர்களுடைய திட்டங்களைச் செவியுறுகிறாள். பொதுவாழ்வில் பெண்களை கீழான வகையில் பயன்படுத்தும் இழிவுகள், வரதட்சணைக் கொடுமைகள் எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும். ஆம், பெண்களே அறியாமையில் மூழ்கி இந்த அவலங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் விழிப்பெய்த வேண்டும். சுதந்திரம் என்ற பெயரில் ஏதோ மாயத்தில் மயங்கிக் கட்டுப்படுகின்றனர்... உஷாவும் கீதாவும் அவள் கையைப் பற்றி அன்புடன் அழுத்தி மறுபடி சந்திப்பதாகக் கூறி விடைபெறுகின்றனர். தொழிற்பேட்டையில் வழக்கமாக இறங்கும் பெண்களில் சிலரைப் பார்க்கும்போது, அந்த விளம்பரம் நினைவில் உறுத்துகிறது. மேசைக்கடியில் காலை அழுத்துவதும், தோளைத் தொட்டுவிட்டு “சாரி” என்று சிரிப்பதுமான சொல்ல இயலாத கொடுமைகளுக்கு விடிவு காலம்.

அவன் நடையிலே ஒரு புத்துணர்ச்சி; கண்களிலே ஒரு புதிய நம்பிக்கை.

அவள் அலுவலகத்தில் சென்றமர்ந்து, வழக்கமான செயல்களில் ஈடுபடுகிறாள். மறுநாள் ஐந்து ரூபாய் அம்மாவைக் கேட்டு வாங்க வேண்டும். ஐந்து ரூபாய்க்கு என்ன செலவு என்று பாட்டி உடனே கேட்பாள். முன்னேற்றக் கழகம், கூட்டம் என்று உண்மையைக் கூறினால் பைசா கூடக் கிடைக்காது. பொய்யை எப்படிக் கூறலாம்?

அவள் மீது ஒரு காகிதத்துண்டு வந்து விழுகிறது.

நம்பிதான்.

அவள் ஆத்திரத்துடன் திரும்பாமலே உட்கார்ந்திருக்கிறாள்.

“ரேக்...! ரே...க்! நாலு மாசம் முன்ன, மைசூர் கார்டன்சுக்கு எவ்வளவு கொய்யாக்கன்னு மால்டா எலுமிச்சையும் அனுப்பிச்சோம்னு பார்த்துச் சொல்லு?”

ரேகா அலமாரியின் பக்கம் சென்று ஒரு தடிப்புத்தகத்தை எடுத்து வந்து புரட்டுகிறாள். “ஜூனிலா?...” அவள் மீது இடிப்பதுபோல் அவனும் குனிந்து கொண்டு பார்க்கிறான்.

“சார்...? நம்பி சார்! நம்பி சார்?”

சம்பங்கி எதோ தீப்பற்றி எரிவதுபோல் கத்துகிறான். ரேகாவுக்கு தூக்கிவாரிப் போடுகிறது.

“நாய் பூந்திச்சு சார், உங்க சீட் பக்கம்...”

ரேகாவுக்கு நெஞ்சம் விம்மித் தணிகிறது.

“நாய் இந்த ஆபீசில எல்லா இடத்திலும் வருது. மனுஷங்க இருக்கிறாங்கன்னே நினைக்கிறதுக்கில்ல...” என்று முணமுணக்கிறாள்.

நம்பி உதட்டைக் கடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் சராய்ப் பைகளில் மறைத்தவண்ணம் நிற்கிறான்.

“அப்படியா சமாசாரம்” மனுஷங்களைவிட, நாய்க்கு நன்றியறிவு இருக்கும். இல்லையா ரேக்?”

“இந்தாங்க சார். ஐம்பத்தைந்து, முப்பத்து நான்கு ஜூன் இருபத்துமூணு, அனுப்பினோம்.”

அவன் அவள் கூறியதைக் கேட்கவில்லை. முகத்தைப் பார்த்துக் கொண்டு, “அப்படியா?” என்று கேட்பது போலிருக்கிறது.

“ரேக், நீ ‘பத்மனாபா’வில் ஓடும் படம் பார்த்தாயா?”

“படம் பார்க்கப் பொழுது கிடையாது; வளமும் கிடையாது; விருப்பமும் கிடையாது சார். ஆபீஸ் நேரத்தில ஏன் சார் இதை எல்லாம் பேசணும்.”

“ஓ... கோ? ஐ ஸீ! நான் எதுக்குச் சொன்னேன்னா, உங்கப்பாவைப் பத்தி அன்னிக்குச் சொன்னேயில்ல? அப்படியே ஒரு ஆள் வராரு...”

அப்பா என்ற சொல்லைக் கேட்டதும் தன்னையறியாமலே அவள் திடுக்கிட்டாற்போல் நிமிருகிறாள்.

அவன் சிரித்துக் கொள்கிறான். “ஓடிப்போயிருந்த குடும்பத் தலைவன் ஒரு நாளைக்கு வருகிறான். அவனை அந்த வீட்டு நாய் அடையாளம் தெரிஞ்சிக்கிது. மனுஷர்கள் புரிஞ்சிக்கல. இவன் செத்துப் போயிட்டான்னு கர்மம் செஞ்சிட்டாங்க. அதனால், ஏத்துக்கறதுக்கு இல்லன்னு அந்த ‘ஆர்தடாக்ஸ்’ குடும்பம் சொல்லுது. ரியலிட்டிக் படம். நீ என்ன இன்னும் போய்ப் பார்க்கலேன்னு சொல்றே?”

“செத்துப் போயிட்டான்னு யாரு கர்மம் செஞ்சது?”

“பெண்சாதி, அவன் தம்பி. ஆனால் உண்மையிலே என்ன காரணம் தெரியுமா ரேக்?”

கண்களில் ஒரு விரசமான மின்னல் பளிச்சிடுகிறது.

அவளுடைய மறுமொழிக்கே காத்திராமல் அவன் சொல்லும் மறுமொழியில் அவளுடையே உடலே பற்றி எரிவது போலிருக்கிறது. சில வினாடிகள் அவள் சிந்தனையே செய்யத் தரமின்றிச் சிலையாக நிற்கிறாள். குப்பையிலிருந்து வாடிய பூச்சருகு காற்றில் எழும்பி வந்து விழுந்து தீய நாற்றத்தைக் கிளப்பிவிட்டாற் போலிருக்கிறது.

“ஏன் பேசல ரேக்? படம் பார்க்கப் போகலாமா? இன்னிக்குத் தான் கடைசி நாள். நானே வீட்டில் கொண்டு வந்து விட்டுடுவேன்...”

“நான் பார்க்கணும்னா எங்க வீட்டிலே கூட்டிட்டுப் போவாங்க சார், ரொம்ப தாங்க்ஸ்...”

அவள் காலையில் சந்தித்தவர்களை மறந்து போகிறாள். குடும்பத்தின் வறுமை நிலையை மறந்து போகிறாள். சிவகாமியின் - தாயின் மெலிந்த உருவம் தோன்றுகிறது. சிற்றப்பன் மாமன்...

சீ! அப்படியும் இருக்குமா?

அவளுடைய வீடு கற்கோட்டை. ஆனால் அம்மா அப்பாவை எப்படி மறுத்தாள்? மாமன் தோற்பட்டை கொண்டு ஏன் அடித்தார்? உண்மையையும் பொய்யையும் வரையறுக்கும் கோடு கத்தி முனையாக இருக்கிறது. அந்த முனைமீது நிற்கத் தெம்பில்லாத வெண்ணெய்ப் பதத்தினை போல அவள் எண்ணாததெல்லாம் எண்ணுகிறாள்.

அன்றிரவு அவளுக்குக் கண்களைக் கொட்ட உறக்கம் வரவில்லை. தாயின் ஒவ்வொரு செயலையும் இரவின் அமைதித் திரையில் நினைவுகள் காட்சியாக்கிப் பார்க்கின்றன.

மாமனுக்கும் சிற்றப்பனுக்கும் காபி கொடுத்து, சோறு போட்டு, சுடு நீர் வைத்து, வேற்றுமையில்லாமல் அவளுடைய அன்னை நடக்கிறாள். இப்படி ஒரு... செய்தி விகல்பமாக அவளுடைய மறுப்புக்கு காரணமாக இருக்க முடியுமோ?

ஆண்டவனே!

மண்டை நரம்புகள் வெடித்துவிடும் போலிருக்கிறது.

குடும்பம் என்ற அமைப்பில் முன்னிரவில் உணவு கொண்டதும் அறைகளைத் தாழிட்டுக் கொண்டு அவரவர் படுக்கைக்குச் செல்லும் ஒரு ஏற்பாடு கூட விவரம் புரிந்த பின்னரே வித்தியாசமாகத் தோன்றியிருக்கிறது. சினிமாவுக்குக் கூட குழந்தைகளை அழைத்துச் செல்ல மாட்டார்கள். மிகவும் அபூர்வமாக சுவாமி படம் வந்தால்தான் அழைத்துச் செல்வார்கள்.

பத்மனாபாவில் சென்று அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

ஜானிராஜிடம் அவள் தந்தையைப் பற்றி விசாரிக்கச் சொல்லி ஒரு மாசமாகி விட்டது. ஜானிராஜை அவள் இன்னமும் அன்றுபோல் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரையே அழைத்துக் கொண்டு அந்தப் படத்தைப் பார்க்கப் போனால்?

மறுநாள் ஐந்து ரூபாய் கேட்கும் விஷயத்தையே மறந்து போய் சமையலறையில் அமர்ந்திருக்கிறாள்.

“என்ன அக்கா? அரிசி எப்படி இருக்கு?” என்று மாமன் சமையலறையில் வந்து நின்று கேட்கிறார்.

திறந்த மேனியுடன் ஒற்றை வேட்டியுடன் அவர் வந்து உள்ளே அம்மா சாதம் வடிப்பதைப் பார்க்கிறார்.

அப்பா இந்தச் சமையலறைக்குள் வந்திருப்பாரோ?...

சீ, இந்த மாமன் அம்மாவுக்கு சோதரன், எனக்கு ஏன் புத்தி பேதலித்துப் போகிறது?

“ஏம்மா ரேகா? கண்ணெல்லாம் செவந்து கிடக்கு? தூங்கல ராத்திரி?” மாமனின் கேள்விக்கு மறுமொழி கூறாமல் அவள் நிமிர்ந்து பார்க்கிறாள்.

“ஆமாம். குடைஞ்சிக்கினிருந்தா. மூணு தரம் எந்திரிச்சுத் தண்ணி குடிச்சிது. பாட்டிகிட்ட திருநீறு வாங்கி இட்டுக்கக் கண்ணு! ஒரு நாளைப் பார்த்தாப்பல ஆபீசிலேயிருந்து வரச்ச இருட்டிப் போயிடுது!”

அம்மா! அம்மா! அம்மா! என்று உள்ளம் விம்முகிறது.

அத்தியாயம் - 12

ஸ்கூட்டர் அன்று மூன்றாவது தடவையாகச் சந்துக்குள் நுழைகிறது. வேலை முடிந்து வரும் சிறு பணியாளரும், பெண்களும் குழந்தைகளுமாகக் கலகலவென்றிருக்கிறது. கடையில் வழக்கம்போல் அன்றாட உப்புப் புளி வாங்குபவர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். எல்லப்பன் தான் ஜானிராஜிடம் வந்து “யார் சார் வேணும்?” என்று கேட்கிறான்.

அவனுக்கு புதிய ஸ்கூட்டர் - அறிமுகமாகாத ஆள் என்றால் ஒரு கலவரம் நெஞ்சுள் தோன்றி விடும். “...அரசு - திருநாவுக்கரசுன்னு யாரானும் இந்தப் பக்கம் இருக்காங்களா?”

ஒரு நிமிஷம் எல்லப்பனுக்குப் புரியவில்லை. “ஓ... ஆட்டுத் தொட்டிலே வேலைக்கிருந்தானே அவனா? இங்கேதான் சார் பின்னே சந்துக்குள்ளாற இருந்தான். நீங்க யார் சார்?”

“இப்ப இல்லியா?”

“காலி பண்ணிட்டு பங்களூர் போறேன்னு நேத்து சொன்னான். ஆனா போகல. நீங்க யார் சார்? அவரு தம்பியா?”

“நண்பர். ரொம்ப வேண்டியவரு. இப்ப ஆட்டுத் தொட்டில வேலையில்லியா?”

“ஒரு மாசமா விட்டுட்டாரு சார். ஒரு மாதிரி ஆளு. பழைய பேப்பர் வாங்கி வியாபாரம் செய்யிறதா எங்கம்மா சொல்லிச்சி. சார் எங்கே இருக்காப்பல?”

“எனக்கு நந்தனத்தில வீடு. அவரு எப்ப வருவார்னு எதானும் தெரியுமா?...”

“முன்னெல்லாம் எங்கம்மாதான் சோறு சமைச்சிக் கொடுத்திட்டிருந்துச்சி. இப்ப அவனே சமையல் செய்துக்கிறான்னு சொன்னாங்க. தெரியாதே சார். நீங்க எதனாலும் விஷயம் இருந்தா சொல்லிட்டுப் போங்க...”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலே அவன் சாக்கைத் தோளில் வைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டே வருகிறான்.

“இத வந்திட்டாரே, உன்னைத்தாம்பா, தேடி வந்திருக்காரு?”

ஒரு கிலோ இறைச்சிக்கு மேல் நூறு ரூபாய் நோட்டாகக் கொடுத்த நாட்களில் எல்லப்பன் ‘ஏக வசன’த்தில் பேசியதில்லை. இப்போது அவனைக் காலி செய்யச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவன் நின்று ஜானிராஜை ஒன்றும் புரியாதவனாகப் பார்க்கிறான்.

“குடீவினிங் சார்...”

“யாரு நீங்க?”

“...ரேகா... ரேகா... அப்பாவைப் பாத்திட்டு வரணும்னு சொல்லிச்சு சார்... அது எங்க ஆபீசில்தான் வேலை செய்யிது. நான் ராஜ்மோகன் நர்சரியில்தான் கார்டன் சூபரின்டென்ட்...”

அவன் அமைதியாக இருக்க முயன்று சில விநாடிகளுக்குப் பிறகு கேட்கிறான். “யார் ரேகா?”

ஜானிராஜ் சிலையாகிறார். ஒரு வேளை தவறான ஆளோ?

“நீங்க... மிஸ்டர் அரசுதானே?”

“ஆமாம். ஸ்லாட்டர் அவுஸ்ல வேலையாயிருந்தேன். இப்ப அதை விட்டுட்டு பழைய பேப்பர் வியாபாரம் பண்றேன். நீங்க யாரைத் தேடி வந்திருக்கிறீங்க?”

“உங்களைத்தான் சார். நீங்க வீட்டுக்கு வந்தன்னிக்கு ரேகா உங்களைப் புரிஞ்சிட்டுப் பேச முடியாததுக்காக ரொம்ப வருத்தப்படுது. உங்களைப் பார்த்துப் பேசணும்னு ரொம்ப ஆவலாயிருக்கு. எனக்கு அஞ்சு பொண்ணு. நான் கதோலிக்கன். அதையும் ஒரு டாடரா நினைச்சிட்டுப் பேசுவேன். அப்ப சொல்லி வருத்தப்பட்டுது எல்லாம்.”

“நீங்க உள்ள வாங்க...”

ஜானிராஜுக்கு இப்போது ஐயம் இல்லை.

சந்துக்குள் முன் சென்று அந்த வீட்டின் பின்புறப் பகுதியான தாழ்வரைக் கதவை அவன் திறக்கிறான்.

அங்கு முன்பிருந்த கட்டிலுக்குப் பதிலாக பழைய புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு மூலையில் ஒரு திரி ஸ்டவும் சோறு பொங்கும் அலுமினியம் வட்டையும் இருக்கின்றன.

“உக்காருங்க சார்... இங்கே நாற்காலி கட்டில் எதுவுமில்ல...” என்று கூறிவிட்டு சாக்கைக் கீழே வைக்கிறான். சாக்கில் நாலைந்து பழைய புத்தகங்களைத் தவிர வேறு பளு இல்லை.

“நீங்க யாரைத் தேடிட்டு வந்திருக்கிறீங்க சார்?”

ஜானிராஜ் திகைக்கிறார்.

“உங்களைத்தான்?”

“இல்லே, ஏன்னா எனக்கு மக்க மகன்னு யாருமே கிடையாதே?”

“நிசமாகவா?”

ரேகா கூறிய அடையாளங்கள் சரியாகத்தானிருக்கின்றன. ஆனால் முடியை ஒட்ட வெட்டிக் கொண்டு, தாடியையும் மழித்துக் கொண்டிருக்கிறான். கண்களுக்குக் கீழ் கன்னங்களில் கருமை திட்டாகப் பாய்ந்திருக்கிறது. புருவங்கள் தொங்குகின்றன. கண்களில்... சலனமில்லாத உறுதி.

“ஆமாம்.”

“உங்களுக்குச் சொந்த ஊரெல்லாம்...”

“பூர்வீகம் திருவண்ணாமலையோ என்னமோ! எனக்குத் தாய் தகப்பனே தெரியாது. சின்னப்பவே வேலைக்கு வந்து பட்டணத்துச் சந்தியிலே பிழைப்பவன்...”

“உள்ளே கூப்பிட்ட போது வேற விவரம் சொல்வதாக நினைச்சேன்... நீங்க... இப்ப வியாபாரம் செய்யிறீங்களா?”

“இப்பன்ன, முன்னமேயும் இந்த வியாபாரம் செய்ததுண்டு...”

“இந்த வியாபாரம் செய்திட்டிருந்தவங்க, ஸ்லாட்டர் அவுசில...”

அவன் தலையைக் காட்டுகிறான். “என் பேப்பர் கடை ஒரு சமயம் நெருப்புப் பட்டு எரிஞ்சி போச்சு. அது சரியில்லேன்னு விட்டுட்டு வேறு தொழிலுக்குப் போனேன். முன்பின் தெரியாம வெட்டுகத்தியை எடுக்கப் போனேன். ஒண்ணரை வருஷம்... என் ஆத்மாவையே குடிச்சு குடிச்சு, குரூர வேலை செய்து கொன்னிட்டேன்னு ஒருநாள் திடீர்னு புரிஞ்சிது. தினந்தோறும் ஒரு கிலோ இறைச்சியும் இருபத்தஞ்சி முப்பது ரூபாய்க்குக் குறையாத சம்பாத்தியமும் கிடைச்சிது. ஆனா... என்னையே ஒரு நாள் நான் கண்ணாடியிலே பார்த்துக்கிட்டப்பா, நான் எப்படி மாறிட்டேன்னு கண்டிட்டேன். திடுக்கிட்டுப் போனேன்.

நாள் வெளித் தோற்றத்துக்கே குரூரமாயிருந்தேன். ஏன்னா... அதுக்கு முன்ன என்னை நான் ரொம்ப உயர்வா எண்ணிட்டிருந்தேன். அஞ்சாம் படிலேருந்து நாலாம் படிக்காரங்களைக் கேவலமா நினைச்ச நான், கைபிடி எதுக்குன்னு கீழே சரிஞ்சது தெரியாமலே சரிஞ்சிட்டேன். புரியல?...”

ஜானிராஜ் பேசவேயில்லை.

“மலக்குழிலே இறங்கித் தண்ணி இரைக்கிறான். ஆனா வெளியே வந்து கழுவிட்டு வேற உடுப்புப் போட்டுட்டு ஒட்டாம உலாவுறவன் அறிவை இழக்கிறதில்ல. அசுத்தத்தைப் பொறுத்து கருமம் செய்யிறது வேறு. அசுத்தம் தெரியாம இருக்கணும்னு அறிவை மழுக்கிட்டு அழுந்திப் போறப்பவும் அசுத்தம் தெரியிறதில்ல. இந்தப் பழைய புஸ்தக, பேப்பர் தொழிலில் பணம் ரொம்பப் புரட்ட முடியாது. ஆனா... அறிவை மறைக்க வேண்டாம் பாருங்க...”

“...என்னால நம்ப முடியலியே?”

“எதை?”

“நான் மனசு திறந்து பேசுகிறேன், மிஸ்டர் அரசு. ரேகாவுக்காக, அந்தப் பொண்ணு மனசுக்காக நீங்க அத்தை ஒரு நாள் கூட்டிட்டு வர அனுமதிக்கணும். உங்க மனம் எப்படிக் கசந்து போயிருக்கும்னு என்னால் புரிஞ்சிக்க முடியிது.”

“இல்லீங்க எனக்கு ஒரு கசப்பும் இல்லே. எனக்கு நீங்க சொல்வது போல் குடும்பம் கிடையாது. நீங்க என்னைத் தப்பாக நினைக்கக்கூடாது. நீங்க வேறு யாரையோ தேடி வந்திருக்கிறீங்க...”

“ஆனா, அந்தப் பொண்ணு ஓடிப்போன தகப்பனார் நீங்கதான்னு ஒரேயடியாக நம்பிட்டிருக்கு. அழைச்சிட்டு வரட்டுமா?”

“மன்னிச்சிக்குங்க சார். எனக்குக் குடும்பம் உறவுன்னு கிடையாதுன்னு சொன்ன பிறகு இங்கே போயி எதுக்கு ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணை அழைச்சிட்டு வரணும்? இந்த இடம்... அவ்வளவு நல்ல இடமில்ல. அதனால... இங்கெல்லாம் அழைச்சிட்டு வரவேண்டாம்...”

ஐயமின்றி அவரேதான் ரேகாவின் தந்தை. ஆனால் சொந்தக் குடும்பத்தினரால் வெறுத்து ஒதுக்கப் பெற்றதனால் ஏற்பட்ட மனப்புண் ஆழமாக இருக்கிறது.

ஜானிராஜ் வற்புறுத்துவதில் பயனில்லை என்று உணர்ந்து கொள்கிறார். விடைபெற்றுக் கொண்டு திரும்புகிறார்.

அவர் சென்ற பிறகு அவன் கதவைத் தாழிட்டு விட்டு காலையில் கொண்டு வைத்த நீரில் முகம் கழுவிக் கொள்கிறான். வள்ளியோ முத்தம்மாளோ வருவதில்லை. எல்லப்பனும் வீட்டைக் காலி செய்யச் சொல்லிவிட்டான். அவன் வீட்டைக் காலி செய்வதாக இல்லை. ஊரையே விட்டுப் பெயரத் தீர்மானம் செய்து கொள்கிறான். ரேகா தன்னைப் புரிந்து கொண்டு ஒரு நண்பரை அனுப்பியிருக்கிறாள் என்பதை, உணரும் போதே மனம் கட்டுக்கடங்காமல் துடிக்கிறது. குழந்தை கூட என்னை வெறுக்கிறாளா என்று, வெதும்பியிருந்தான். இப்போது அந்த ஆற்றாமை குறைய, துடிப்பும் ஆவலும் மீறுகின்றன. ஆனால்...

அவன் நிச்சயம் செய்துகொள்கிறான்.

அவள் அன்று ஒரு இளைஞனுடன் ஓட்டலில் இருந்து இறங்கி வந்ததை அவன் பார்த்திருக்கிறான். அவன் உயர் வகுப்பினனாகத் தோன்றினான். ஒருகால் அவளை மணம் புரியக்கூடிய இளைஞனாக அவன் இருப்பான். ஏனெனில் அவனுடைய மகள், ஒழுங்கு மீறும் வகையில் நிச்சயமாக நடக்க மாட்டாள். அந்தக் காரணத்தை மனசில் கொண்டே அவள் வெளிப்படையாக அவனை ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு கிறிஸ்தவ நண்பரைத் தூதனுப்பி இருக்கிறாள்.

குழந்தை! உனக்கு அவன் இப்போதைக்குக் கொடுக்கக்கூடிய சீதனம் இது ஒன்றுதான். அவனுடைய வாழ்வின் கருநிழல் உன் மீது - உன் வாழ்க்கையின் குறையான பகுதியில் விழுந்து மேலும் பிரச்சினையாக்காது... கண்களை ஒத்திக் கொள்கிறான்.

அத்தியாயம் - 13

மாமரம் குபீரென்று பூத்துக் குலுங்குகிறது. அந்தப் பூச்சிழந்த பழமை பற்றிய கவர்ச்சியில்லாத வீட்டின் வறுமையை விளக்கும் சூழலில் மாமரம் மட்டும் விழாக் கொண்டாடுகிறது. மாட்டைக் கட்ட வந்த பாட்டி மாமரத்தைப் பார்த்துக் கொண்டு பெருமூச்செறிகிறாள். பெரியவர் காலமான வருஷம் இப்படித்தான் பூத்ததோ? பங்கனபள்ளி ரகம் ஒரு காய் அந்தக் காலத்தில் ஒரு இளநீர் கனம் இருக்கும். சென்ற ஆண்டு எண்ணிப் பதினெட்டுப் பழம் தானிருந்தது. உடற் சோர்வும், மனச்சோர்வும், கவலையும் அவளைத் தன் முடிவு காலத்தைப் பற்றி எண்ணச் செய்கிறது. அந்தக் காலத்தில் ரூபாய் அருமையாக இருந்தது. ஆனால் சோற்றுக்குத் திண்டாடினார்களா? வருஷத்துக்கு நெல் வாங்கி மூட்டைகளாக அடுக்கியிருப்பார்கள். கொட்டிலில் மாடும் சுரந்து கொண்டிருந்தது. எத்தனை குழந்தைகள்! எத்தனை கல்யாணங்கள்! சடங்குகள்! பெரியவருக்கு இரண்டு தம்பிகள்! ஐந்து சகோதரிகள், அவளே உறவுகாரி, அவள் வழி மக்களும் வந்து உறவாடுவார்கள். அந்த வீட்டில் இப்போது திருமணம் நடந்து பன்னிரண்டாண்டுகளாகி விட்டன. பெரியவர் காலமான பிறகு மணச்சடங்கே நடக்கவில்லை. சொர்ணம் வயசுக்கு வந்ததை ஒதுக்கிவைத்து வண்மைகள் செய்து மங்கல நீராட்டிக் கொண்டாடவில்லை. ஒரு பொன்மணி செய்து போட முடியவில்லை. காலையில் ஒரு சுடுசோற்றை விழுங்கிவிட்டு டப்பியில் கொஞ்சம் அடைத்துக் கொண்டு பஸ் ஏறி சம்பாதிக்கப் போகிறாள். ஜடமான மரம் பூக்கிறது; காய்க்கிறது. வறுமையும் சிறுமையும் இருந்தாலும் ஆண்டவன் மனசு வைத்தால் ஆகாததில்லை என்றிருந்தாள். மனசே வைக்கப் போவதில்லையா? அன்று வந்தவன் பொய்க் கோலமென்று ஒரு உண்மையான காட்சியைக் காட்டமாட்டானா?

பனி வெயில் இதமாக இருக்கிறது. சிவராத்திரி வரவில்லையே? வாயிலில் தோல் கிடங்குச் சுண்ணாம்பை அள்ளி வந்து ‘மொக்குமாவு’ என்று விற்கிறாள். அரிசி மாவரைத்துத்தான் கோலம் போட வேண்டும் என்ற முறை போய், அந்தச் சுண்ணாம்பை நாகம்மா காசு கொடுத்து வாங்குகிறாள்.

சொர்ணம் ஏன் திரும்பி வருகிறாள்? எதையேனும் வைத்து மறந்தாளா?

வாசலில் சொர்ணம் மட்டும் வரவில்லை. பம்பாயிலிருந்து துரை வருகிறான். கையில் சிறு தோல் பெட்டியை எடுத்துக் கொண்டு, “வா தம்பி! ராஜாம்பா, குழந்தைகளெல்லாம் சவுக்கியமா?” என்று பாட்டி வரவேற்கையில் அவன் படியேறி வருகிறான்.

“அட? என்ன திடீர்னு சொல்லாம கொள்ளாம?” என்று மருமகன் வருகிறான். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் வந்துவிட்டார்கள்.

“திடீர்னு வரவேண்டியதாச்சு. நானே நினைக்கல, இவ்வளவுக்குப் போயிடும்னு...”

கயிற்றுக் கட்டிலில் அவன் தலைகுனிய, நெற்றிச் சுருக்கங்களுடன் அமருகிறான்.

“எல்லாம் உடம்புக்கு நல்லாயிருக்கல்ல? மருமகப் பிள்ளை, குழந்தை சுகந்தானே?”

“எல்லாம் சுகந்தான். அவங்களைப் பத்தி ஒண்ணுமில்ல இப்ப.”

“பையன் படிக்கிறதல்ல?”

“அதுவுமில்ல. இப்ப கவலையெல்லாம் இந்தச் சின்னதைப் பத்தி. எதோ படிக்கிறா. பேசுது? அங்கே இங்கே போறான்னிருந்தேன். இவ்வளவுக்காகும்னு நினைக்கல.”

“சின்னது யாரு, உமாவா?”

“உமா எங்கிட்டத்தானே இருக்கு? கீதாதான் ஹைதராபாத்தில் டாக்டருக்குப் படிச்சிட்டிருந்தா. திடீர்னு படிப்பை விட்டுட்டு...”

“விட்டுட்டு?”

“யாரோடானும் முறைதவறிப் போயிட்டாளா?” என்று பாட்டி கேட்காமல் நிறுத்துகிறாள்.

“அப்படியெல்லாம் இல்லை. காலேஜில் யாரோ முறை தவறி நடந்தானாம். இவ செருப்பெடுத்து அடிச்சாளாம். அமர்க்களம் ஆர்ப்பாட்டமாம். ஒரு பையன் இவளை அடிக்க வந்து இன்னொருவன் அதைத் தடுக்க, அவனை மற்றவர்கள் அடிச்சி ஆஸ்பத்திரிக்கே அனுப்பிச்சாங்களாம். இவ காலேஜை விட்டுட்டு பெரிய மூவ்மெண்ட் நடத்தறாளாம். மீட்டிங்காம். ஊர்வலமாம். எனக்கு போன வாரம் வரையிலும் விஷயம் தெரியாது. போய் நேத்துப் பேசறேன், பெண்கள் சுயமரியாதை இயக்கமாம், கல்யாணமில்லைன்னு வாக்குறுதியாம். எனக்கு எதுவும் ஓடல. நேத்து முந்தா நாள் வீதியை அடைச்சிட்டு நூறு நூறு பொண்ணுக, ஊர்வலம் பொகுதுங்க. ரெண்டு பக்கமும் போலீசு. மாமன்காரன் இருக்கிறான், பாத்துக்கிறான்னு நம்பினேன்.”

“ஆமாம், அவன் டாக்டரில்லை?”

“காலேஜில புரொபசர். கையைப் பிசையிறான். ஸ்டூடன்ட்சாவா இருக்கிறானுவ? புரொபசர்லாம் நடுங்கறாங்க. கத்தி வச்சிட்டுருக்கிறான் ஒவ்வொருத்தனும். இந்த அறியாததுங்க இப்படிக் கிளம்பும்னு நினைக்கவேயில்ல...”

“அட கலிகாலமே? பேசாம பத்தாவது படிச்சதும் கலியாணம் கட்டிக் கொடுத்திருந்தா...” என்று புலம்புகிறாள் பாட்டி.

“ஆமா, ஒண்ணொண்ணு ஆம்பிளைங்க போல சராயையும் கண்ணாடியையும் போட்டுட்டு அசிங்கமா திரியிதுங்க. இங்க கூடத்தான்!” என்று அத்தை ஒத்துப் பாடுகிறாள்.

“இங்கெல்லாம் கூட அவளும் இன்னும் யாருமோ போன மாசம் வந்தாங்களாம். எனக்கு என்ன பண்ணுவதுன்னே புரியல சின்னம்மா. இங்க நம்ம வடிவேல் முதலியார் வீட்டில ஒரு பையன் டாக்டர் படிச்சிட்டு கோலாலும்பூர் பரீட்சை எழுதிருக்கானாம். ஸ்டேட்ஸ் போரான்னு சொன்னாங்க. வாணா பாத்து முடிக்கலாமான்னு, வந்தேன்.”

“நம்ம குடும்பத்தில், பொண்ணைப் பெத்தவன் மாப்பிள்ளையைத் தேடிட்டுப் போறதா?” என்ன காலம் இது!”

“என்ன பண்ணுறது? அவுங்க ஸ்டேட்ஸ் போக சார்ச்சு குடுக்கணும்னு சொன்னாலும் குடுத்தாகணும். என்ன பண்ணுறதுன்னே தெரியல. என் மச்சுனன் சம்சாரம் சொல்லுறா, எல்லா அம்மாமாரும் பொண்ணுங்களை இப்படி விட்டுட்டு நெருப்பைக் கட்டிட்டுருக்காங்க. அதுங்க கிட்டப் பேசவே முடியலன்னு.”

“இதென்னடீ காலம்? எதுக்கு ஊர்வலம் போயி கத்தறாங்க?”

“எல்லாம் அரசியல் கட்சிங்க பண்ணும் விஷமம். கம்யூனிஸ்டுங்க தான் இப்படித் தூண்டுறாங்க” என்று சித்தப்பா விளக்குகிறார்.

“அதெல்லாமில்ல. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்கிறாங்க. நகை, புடவைன்னு காட்டி அவங்க சுதந்தரத்தைப் பறிப்பதை எதிர்க்கிறாங்க. சந்திக்குச் சந்தி படத்திலும் கதையிலும் இழிவு செய்வதை எதிர்க்கிறாங்க. சமுதாயத்தில் பெண்ணை சமமாக மதிக்கலேன்னு கொதிச்சு எதிர்க்கிறாங்க. எதுக்காக அரசியல் கலர் கொடுக்கணும்?”

ரேகா பட்டென்று சீன வெடிச்சரம் போல் வெடித்துவிட்டு, அலுவலகத்துக்கு நேரமாகிவிட்ட உணர்வுடன் விரைந்து நடக்கிறாள்.

தன்னைச் சந்தித்தவள் மாமனின் மகள் என்று புரிந்து கொண்டதும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவசரமாகக் கைப் பையைத் துழாவி அந்த முகவரிச் சீட்டை எடுக்கிறாள். ஆந்திரத் தலைநகரில்தான் அந்த முகவரி இருக்கிறது.

“ஏய் சொர்ணா? சொர்ணம்? இங்கே வந்திட்டு போ?” பாட்டி கத்துகிறாள். அவள் செவிகளில் போட்டுக் கொள்ளவில்லை. சம்பளம் பெற்றதும் ஐந்து ரூபாயை அனுப்பிப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாபெரும் இயக்கம் வலுவடையும்போது, நம்பியைப் போன்றவர்கள் நிற்க முடியாது! கோகுலைப் போன்றவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏறுவார்கள். எத்தனை எத்தனை பெண்களோ அலுவலகங்களில் வெளிக்குத் தெரியாத வகையில் அவமானங்களுக்காளாவதை நிறுத்தப் போகிறார்கள்.

அந்தப் பெண்கள் இருவரும் அவளைத் தேடி அலுவலகத்துக்கு வந்து மற்ற விவரங்களைத் தெரிவித்து உறுப்பினராக்குவதாகக் கூறினார்கள். ஆனால் வரவில்லை. ஒருகால் சென்னை நகரில் அவர்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் திரும்பிவிட்டார்களோ? அவளைத் தேடி அவள் வீட்டுக்கே வந்தாற்போல் அல்லவோ சந்தித்தார்கள்? பள்ளித் தலைமை ஆசிரியையைச் சந்திக்க வந்ததாகக் கூறினார்கள். ஒருகால் அவளுடைய முகவரிக்கு ஏதேனும் அவர்கள் கடிதம் எழுதித்தான் நம்பியின் விஷமத்தினால் கிடைக்கவில்லையோ?

பெண் மெல்லியல்; வீடே அவளுக்குரிய பாதுகாப்பான இடம் என்ற காப்பை, கண்ணுக்குத் தெரியாத விலங்கைப் போல் பூட்டி விடுகிறார்கள். அந்த விலங்கை உடைத்தெறியத் துணிவின்றி, வெளியே செல்லும்போதும் அதன் சுமையில் அஞ்சிச் சாகிறாள் அவள். அதை உடைத்துக் கொண்டு வெளியே வண்ண வண்ணமாகப் படை திரண்டாற்போல் வருபவர்களோ, பல மாயக் கவர்ச்சிகளுக்கு அடிமையாகிறார்கள்.

ஒருமுறை தவறி நடந்த ஆடவனை ஒருத்தியாக எதிர்த்ததுடன் பெண்ணினம் தரம் குலைந்து சீரழியும் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுக்க, கல்வியை, சுயவாழ்வை நோக்கி இந்த இலட்சியத்தைத் துறந்து சக்தியைத் திரட்ட வந்த அவள் அல்லவோ வீரமுடையவள்?

“ஆண்பிள்ளை முறை தவறினால் என்ன செய்வது?” என்று ஆண்டுக்காண்டு தன்னைப் பிள்ளை பெறும் கருவியாகவே எண்ணிக் கொள்ளும் அத்தை, சின்னம்மா போன்றோருக்கும், கவர்ச்சியாக அலங்கரித்துக் கொண்டு வாழ்வைத் தடையின்றி அனுபவிப்பதே முன்னேற்றம் என்று கருதி உணர்ச்சிகளுக்கு இரையாகும் பெண்களுக்கும் உண்மையில் வேற்றுமை அதிகமில்லை என்று ரேகா நினைக்கிறாள். அந்த வகையில் அவளுடைய தாய், தன்னுடைய கடமையை நிராகரித்துவிட்டு, வாழ்வுக்கு இடறி வீழ்ந்தபின் மீண்டும் சுமைபோல் குடும்பத்தை நாடி வந்த கணவனை நிராகரித்ததே முறை என்று கூட அவளுக்கு இன்று தோன்றுகிறது. ‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’ என்று மருமகளை அந்தக் கணவனுக்குச் சேவை செய்ய வற்புறுத்தாத பாட்டியும் உண்மையில் அவ்வகையில் பரந்த மனம் கொண்டவள்தான். ஆனால், அந்தத் தந்தை, கடமையை பொறுப்பை ஏற்காமல் ஒரு போலித் துறவியாக வந்திருந்தால் தாயும் பாட்டியும் நிராகரித்திருப்பார்களா? மாட்டார்கள்.

பரம்பரையான தங்கள் குடும்பத்தின் கவுரவுமும், மேன்மையும் குலைந்து போயிற்றென்றுதான் நிராகரித்தார்கள்.

அதே கவுரவத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டுதான் யாரோ ஒரு பையனைத் தேடி வந்து கீதாவின் சுதந்திரச் சிறகுகளைப் பிணித்து, எழுச்சியை அடக்கப் போகிறார்கள். இவ்வகையில் பணக்காரப் பெற்றோர் தம்தம் புதல்வியருக்கு வாழ்க்கையை வாங்கிக் கொடுத்துவிடலாம் எங்கோ ஒன்று என்று தோன்றும் வெளிச்சமும் அவிந்து போகும்.

வழக்கமாக அவள் பத்தடிக்குமுன் அலுவலகத்துக்கு வந்து சேரும் வகையில் பஸ்சைப் பிடித்திருப்பாள். அன்று அரைமணி தாமதமாகி விட்டது. வாயிலில் நீலக் கார் நிற்கிறது. ஸ்கூட்டரும் இருக்கிறது. கோகுல், நம்பி, ஜானிராஜ் எல்லோரும் வந்து விட்டார்கள் போலும்!

நம்பி கோகுலின் அறையிலிருக்கிறான் என்பது புலனாகிறது. அவனுடைய இருக்கை காலியாக இருக்கிறது.

“ஏம்மா, நேரம்? தினம் அந்தப் பொண்ணு பத்து மணிக்குமேல் தான் வருதான்னு கேட்டாரு!” என்று ஜானிராஜ் தெரிவிக்கிறார்.

“மானேஜர் சார்?”

“ஆமாம்...”

அவள் அச்ச உணர்வுடன் இருக்கையில் அமர்ந்து மேசையில் அவர், வைத்திருக்கும் காகிதங்களைப் பார்க்கத் தொடங்குகிறாள்.

மணி ஒலிக்கிறது.

சம்பங்கி தலைநீட்டி, “உங்களைத்தாம்மா!” என்று அறிவிக்கிறான்.

நம்பி நின்றவாறு ஏதோ ஒரு தடித்த நோட்டைப் புரட்டிக் கொண்டிருக்கிறான்.

கோகுல் அவளை நோக்கிப் புன்னகையுடன், “குட்மார்னிங், இப்பதான் வந்திங்களா, மேடம்?” என்று கொச்சைத் தமிழில் கிண்டலாகக் கேட்கிறான்.

அவளுக்கு என்ன மறுமொழி கூறுவதென்று புரியவில்லை. “பஸ் வர நேரமாகிவிட்டது. மன்னிச்சிக்குங்க சார்!” அதை ஆங்கிலத்தில் மொழியும் திறனும் அவளைக் கைவிட்டு விட்டது.

“மன்னிச்சிக்கிங்க...” என்று திருப்பிக் கூறி அவன் இன்னும் கேலியாகச் சிரிக்கிறான்.

“சரி, நீ தினமும் நாலு மணிக்கே ஆபீசை விட்டுப் போய் விடுகிறாயாமே?”

“இல்லை சார், ஐந்துமணி வரையிலும் இருக்கிறேன்.”

“நேற்று?...”

“நேற்று?...”

அவள் திகைக்கிறாள். ஆம், ஒரு வேலையுமில்லை. அலுவலகத்தில் வேறு யாருமில்லை. தனியாக இருக்கையில் அமர்ந்திருக்க அஞ்சி வெளியே தோட்டத்துக் கிணற்றடியில் ராமசாமியும் சமங்கியும் தொட்டிகளில் மண் போடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். தொலைவில் தொழிற்பேட்டையில் எழுபத்தெட்டு ‘பி’ வந்து நிற்பது தெரிந்தது.

மணி ஐந்தடிக்க ஐந்து நிமிடம் என்று ராமசாமி தன் கடியாரத்தைப் பார்த்து மணி சொன்னான். அவள் கிளம்பினாள்.

“என்ன பேசாம நிக்கிறே? உண்மைதானா?”

“அரைமணி இல்ல சார். அஞ்சு நிமிஷம் முன்ன போனேன்.”

“பொய் சொல்லாதே. நான் இங்கே நாலே முக்காலுக்கு வந்தேன். நீ இல்லை...”

“நாலே முக்காலா?...”

அவள் திகைத்து மருண்டு நிற்கிறாள்.

அவன் நம்பியிடம் ஏதோ ஜாடை காட்டுகிறான்.

நம்பி அலமாரியைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்து அவளிடம் கொடுக்கிறான். நீண்ட பிளாஸ்டிக் மூடியுள்ள அந்தப் பெட்டியினுள்ளே ஒரு அழகிய கைக்கடிகாரம் இருக்கிறது.

“இந்தா, இனி நேரத்துக்கு வந்து நேரத்துக்குப் போக வேண்டும்.”

அவள் வெறித்து அதைப் பார்க்கிறாள்.

சிறுமுகப்பும் பளிச்சிடும் துளிமுள்ளுமாக அழகாக இருக்கிறது. தன்னுடைய உருண்டையான மணிக்கட்டில் அப்படி ஒரு கடியாரம் கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆறு மாசங்களுக்கு முன்னர்கூட அவள் ஆசைப்பட்டதுண்டு.

இப்போது அதையும் அதைக் கொடுப்பவனையும், அருகில் இருப்பவனையும் அவள் மருண்ட விழிகளுடன் நோக்குகிறாள்.

“எ... எனக்கு... வேண்டாம் சார்!”

“ஹே... என்ன சும்மா கொடுக்கறச்சே வாங்கிக்க ரேக், இதுக்கு நீ பணம் கொடுக்க வேண்டியதில்ல. சம்பளத்தில் பிடிக்க மாட்டாங்க” என்று அதைத் தன் கையில் வாங்கி நீட்டுகிறான் நம்பி.

“நான் நேரத்துக்கு தவறாம வந்துவிடுகிறேன். எ... எனக்கு இனாமா எதுவும் வேண்டாம் சார்!”

“என்ன பிகு பண்ணிக்கிறே, சும்மா வாங்கிக்க ரேக்” என்று அவள் கையைத் தீண்டி அதை வைக்க முற்படுகிறான் நம்பி.

அவள் விறுக்கென்று கையை இழுத்துக் கொள்ள, பெட்டி மேசையில் பட்டுக் கீழே விழுகிறது.

“ரேகா? உனக்கு எத்தனை திமிர்? எத்தனை திமிரிருந்தால் இப்படித் தூக்கி எறிவே?”

“மன்னிக்கணும் சார். நான் தூக்கி எறியல. வேண்டாம்னு சொன்னேன்.”

“நீ இங்கே வேலையிலிருக்கிறே. சம்பளம் வாங்குறே. அதனால் நீ இங்கே உன் இஷ்டப்படி நடக்க முடியாது தெரியுமா?”

அவளுக்கு அழுகை வெடித்து வருகிறது. அடக்கிக் கொள்கிறாள்.

“அப்படி முறைதவறி நான் நடக்கல சார். இனிமேல் அஞ்சு நிமிஷம் கூடத் தவறாமல் பார்த்துக்கறேன் சார்.”

“சரி, போ...”

கண்ணிமைகள் சிவக்க, மூக்கு நுனியும் இதழ்களும் துடிக்க அவள் திரும்பி வரும்போது ஜானிராஜ் ஒரு தோட்டப் பிளானில் ஊன்றியிருக்கிறார்.

கைக்குட்டையை எடுத்துக் கண்களை ஒத்திக் கொள்கிறாள். இனியும் இந்த அலுவலகத்தில் வேலை செய்வது நல்லதல்ல என்று படுகிறது.

ஆனால்... வேலையுமில்லை வருவாயுமில்லாமல் என்ன செய்ய முடியும்?

“...ஆ? என்னம்மா? என்னாச்சி? எதுக்கு அழுவுறே?”

“...ஒ... ஒண்ணில்ல சார்...”

“ஒண்ணில்லாம ஏம்மா அழுவுறே? சீ! நேரம் ஏன் ஆச்சின்னு கோகுல் கோச்சிட்டாரா?”

“இல்ல சார். வாச் குடுத்தாரு. நான் வேணான்னேன். நம்பி கோச்சிட்டாரு. எனக்கு எதுக்கு சார் இவங்க வாங்கிக் கொடுக்கணும்?”

“சீச்சீ... இதுக்குப் போயி அழுவறே? வாச்சை வாங்கிக் கட்டிட்டு ஜம்முனு வருவியா? நீ இன்னாம்மா!”

“எனக்கு எதுக்கு சார் வாச் கொடுக்கணும்?”

“அட, உன்னிடம் இல்லே, கொடுத்தாரு. டயம் பார்த்திட்டு வேலைக்கு வருவே. என்னாம்மா மட்டிப் பொண்ணா இருக்கயே? ஆறு மாசமா வேலைக்கு வரே. போனசுனு நினைச்சுக்கிறது...”

“இது தப்பில்லையே?”

“எனக்குத் தெரியாது. இப்ப நம்பி வந்து ஒரு கடிதாசை டைப் அடிச்சுக் குடுத்தா வாங்கிட்டு வீட்டுக்குப் போ. என்னை வந்து கேட்காதே?”

காற்றுக்கு அலையும் இளம் புல்லைப்போல் மனம் அலைகிறது. யாரேனும் அவளுக்குச் சாதகமாக யோசனை சொல்ல மாட்டார்களா? நம்பி அறைக்கு வந்து டைப்ரைட்டரில் ஏதோ அடிக்கத் தொடங்குகிறான். சாதாரணமாக அவன் பேசிக் கொண்டே இருப்பான். நா ஊர் அக்கப்போரைப் பற்றியோ, சினிமாவைப் பற்றியோ, நடிக நடிகையரைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கும்; அது அட்டைத் தடுப்பை மீறிக் கேட்கும். இன்று ஜானிராஜ் பேசத் தொடங்குகிறார்.

“என்னப்பா, நம்பி, விமலாதேவி ஆர்டர் வரும்னே வரலியே?”

“வரும் வரும். இன்னும் ரெண்டு அழுமூஞ்சிங்களே இங்கே வேலைக்கு வச்சிட்டா, விமலாதேவி என்ன, ஊரிலிருக்கிற தேவிங்க எல்லாம் வரும்!”

“ஏம்ப்பா அத்தைப்போயி பயமுறுத்துறே?”

“அது ஒண்ணும் பாப்பா இல்லை. இந்தா, ஆர்டர் டைப்படிச்சாச்சி என்னுடைய பாவம்...”

ரேகா விறைத்த அச்ச உணர்வுடன் அட்டைக் கதவு வாயிலைப் பார்க்கிறாள்.

“வேலை நீக்க உத்தரவா அடிக்கிறார்?” கேள்வி நாவிலேயே எழும்பவில்லை.

“நான் சொன்னேனே கேட்டியா?” என்று ஜானிராஜ் பார்க்கிறார்.

“நான் ஒரு தப்பும் செய்யலியே சார்?”

பதைபதைத்து மேசை விளிம்பைப் பற்றிக் கொண்டு ‘டைப்’ அச்சுக்களைத் தட்டும் நம்பியையே பார்க்கிறாள் அவள். மலை உச்சி விளிம்பில் நிற்பது போலிருக்கிறது.

‘சார், நான் பண்ணினது தப்பு, இப்ப கடியாரத்தைக் கொடுங்கள். கையில் கட்டிக் கொண்டு ஒழுங்காக வேலைக்கு வருகிறே’னென்று சொல்வாளா அவள்?

அவள் தந்தையைப் போல் நினைத்த ஞானிராஜ் அவளுக்காகப் பரிந்து ஒரு சொல் கூறக் கூடாதா?

“சார், தயவு செஞ்சி சொல்லுங்க சார், மானேஜரிடம் நான் ஒரு நாள் கூட முறையில்லாம தப்பே செய்யல சார்? என்னை வேலையை விட்டு நீக்கிட்டா வழியேயில்ல சார்?”

“என்னம்மா நீ, விவரமில்லாத பச்சைப் பிள்ளையாப் பேசுறியே? நிலைமை இப்படி இருக்கறப்ப, அவங்க மகிழ்ச்சியை இழக்கும்படி நடக்கலாமா? சிரிச்சிட்டே சாதிக்கிறதை எல்லாம் அழுது கெடுத்துக்கிறே, போம்மா.”

அவளுக்கு நம்பிய ஆதாரமும் கைகொடுக்கவில்லை.

‘காரில் ஏறு’ என்று பணிப்பதும், ஓட்டலுக்கு அழைத்துச் செல்வதும், கடிகாரம் வாங்கித் தருவதும் சாதாரணமாகவும் தோன்றலாம். அவையே அவளுடைய உணர்ச்சிகளைக் கிளர்த்த வசமாக்கும் சாதனங்களாகவும் பயன்படலாம். நம்பியிடம் அத்தகைய சில நிமிடங்களில் தானே வீட்டைப் பற்றியெல்லாம் பேசி விட்டாள்? ஜானிராஜிடமும் தான் கூறினாள். ஆனால் அவர் அப்பாவைப் பற்றி விசாரித்ததாகவும், கொலைத் தொழிலை விட்டுவிட்டதாகத் தெரிந்ததாகவும், இன்னொரு நாள் கூட்டிச் செல்வதாகவும் கூறினார். இப்போது அவரை நம்பியது கூடத் தவறோ என்று தோன்றுகிறது. உயர்கல்வியோ, மேன்மக்களின் தொடர்போ, உலக அனுபவமோ, வயசு முதிர்ச்சியோ தனக்கு இல்லை என்ற உணர்வே அவளை மேலும் அழுத்துகிறது. பொருளைச் சார்ந்த தன்னம்பிக்கையும், வயசுக்கு உகந்த கிளர்ச்சிகளைப் பாதுகாத்துக் கொள்ளும் நிறையும் இல்லாத நிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று புலப்படாமல் குழம்புகிறாள்.

நம்பி தட்டிக் கொண்டு கோகுலின் அறைக்குள் சென்றதும் சற்றைக்கெல்லாம் மணி ஒலித்ததும், அவள் கோகுலின் முன் நின்றதும் கனவு போலிருக்கிறது.

கோகுல் சிகரெட் புகையை ஊதிக்கொண்டு ஒரு பக்கமாகச் சாய்ந்து அவளை இகழ்ச்சியாகப் பார்க்கிறான். பிறகு இடது கையால் அந்தத் தாளை நீட்டுகிறான்.

அவள் அதைப் பார்க்காமலே, “சார்... ப்ளீஸ்... ஐ... ஆம்... சாரி... எக்ஸ்க்யூஸ் மி...” என்ற சொற்களைப் போட்டுக் குழப்புகிறாள்.

“விளக்கம் தேவையில்லை” என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அவன் முற்றுப்புள்ளி வைக்கிறான்.

அந்தக் காகிதத்தைப் பார்க்கக்கூட அவளுக்குத் தெம்பில்லை. பூங்கொடிகள், பசிய தோரணங்கள் போன்ற இலைகள்! செம்மண் சரளையிட்ட பாதை, எல்லாமே உண்மையாகத் தோன்றவில்லை. நம்பி இன்னும் ஏதோ திட்டிக் கொண்டிருக்கிறான். அவனைக் காண்கையில் வெறுப்பு பந்தாகத் திரண்டு வருகிறது. ஜானிராஜ் எதுவுமே நடக்காதது போல் ‘பிளா’னில் கவனமாக இருக்கிறார்.

“சார்...”

“என்னம்மா?”

“ஆர்டர் குடுத்திட்டாங்க சார். உங்க டாட்டர் போலன்னீங்க, நீங்க... ஒண்ணுமே செய்ய முடியாதா சார்?”

“...என்னம்மா பண்ணட்டும்? நெளிவு சுளிவே தெரியாம இருக்கியே நீ?... உம்? நம்பி சாரைக் கேளு. செய்வாரு...”

“அவனையா?...” நம்பி செவிகளில் விழுந்தும் அசையவில்லை.

“இந்தக் காலத்திலே பொண்ணுக எப்பிடி எப்பிடியோ லஞ்சம் கொடுக்கத் தயாராயிருக்குங்க. ம்... நீ இல்லேன்னா, இன்னொண்ணு, இங்கென்ன உனக்கு யூனியன் இருக்கா? சர்வீஸ் கணக்கு, அது இதுன்னு எதுனாலும் உண்டா? இப்ப எனக்குக் கூடத்தான், எதோ வேலை இருக்கும் வரையிலும் அவங்களைத் திருப்தி பண்ணிட்டு காலத்தைக் கடத்தணும். போ, போ, உங்க மாமான் முன்ன பெரியவருக்கு வேண்டியவர் வந்தாரே? அவர் மூலமா எதானும் பேசிப் பாரு...”

சிறு திரியின் வெளிச்சம் தோன்றுகிறது.

நல்ல வேளையாக துரைமாமன் ஊருக்கு வந்திருக்கிறார். அவரிடம் தனியே இவர்களுடைய முறைகெட்ட செயல்களை வெளியிட்டு, பெரியவரிடம் அறிவிக்க வேண்டும். கோகுலுக்குத் திருமணம் நிச்சயிக்கப் பெற்றிருப்பதாக முன்னொரு நாள் சம்பங்கி தெரிவித்தான். நீலவேணிக் க்ரூப் தியேட்டர் உரிமையாளரின் மகளாம் பெண். அந்தப் பெண் ஒரு நாள் பெரிய காரில் வந்து, ரோஜாத் தொட்டிகள் வாங்கிச் சென்றாள். அப்போதுதான் அந்த விவரத்தை அவன் கூறினான்.

தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பும் ஒரே ஆதாரம் தான் அவளுக்கு இப்போது இருக்கிறது.

நின்ற இடத்திலேயே நின்று வெறிக்கப் பார்த்துக் கொண்டிருப்பவளின் முன் நம்பி ஒரு கவருடன் வருகிறான்.

“இந்தா, உன் சம்பளம். இதில் கையெழுத்துப் போட்டுவிட்டுப் பெற்றுக்கொள்...”

தேதி இருபத்தாறு. நூற்று முப்பது ரூபாய்...

ஏதோ முன் கூட்டியே திட்டமிட்டாற் போலிருக்கிறது.

கையெழுத்துப் போட்டு உரையை வாங்கிக் கொள்கிறாள்.

“பணத்தை எண்ணிப் பார்த்துக் கொள்...”

“நான்... வரேன் சார்?”

குரல் கம்முகிறது. அவள் கைப்பையுடன் வெளியே வருகிறாள்!

இடை உணவு நேரம். தொழிற்பேட்டை அலுவலகங்களிலிருந்து கொத்துக் கொத்தாய் வெண்மைகளும் வண்ணங்களும் வெளிப்பட்டு உணவு விடுதிகளில் குழுமுகின்றனர். பஸ் நிறுத்தத்தில் வெயில் சுள்ளென்று உறைக்கிறது.

கையில் உள்ள சோற்றைக் கடைசியாக அங்கே உண்டிருந்தால் இவ்வளவு வயிற்றெரிச்சல் கனலாகாதாக இருக்கும். பெரிய சாலையில் நின்று, ஓட்டலுக்குச் சென்று அந்தச் சோற்றுடன் இன்னும் ஏதேனும் வாங்கி உண்ணலாம். தனியாக ஓட்டலுக்குச் செல்லக் கூடவா துணிவு இல்லை அவளுக்கு? கசப்பான வீட்டு நினைவை ஒதுக்கிவிட்டு, விடுதலையை எண்ணுகிறாள். கைப்பையில் துழாவி கீதா கொடுத்த முகவரிச் சீட்டைப் பார்க்கிறாள். ‘ப்ரொகிரசிவ் யங் வுமன்ஸ் அசோசியேஷன்’, 37, லட்சுமண் நகர் ஐந்தாம் தெரு, சிகந்தரபாத்... அவளுக்கு இன்று நேர்ந்ததே இயக்கத்தின் தேவையை உறுதியாக்கும் ஒரு அநியாயமல்லவா?

கையில் நூற்று முப்பது ரூபாயிருக்கிறது. அப்படியே அவள் விலாசத்தைத் தேடிச் சென்று இயக்கத்துக்காகவே தன்னை உரிமையாக்கி விடக் கூடாதா?

கீதாவுக்கு மாமன் ஓடோடி வந்து ஆயிரமாயிரமாய்ச் செலவழித்து மாப்பிள்ளையைப் பிடித்துப் போவார். அவளை அப்படித் திருப்புவதற்கு யாருமில்லை. ஜானிராஜிடம் அப்பாவைச் சந்திப்பது குறித்துக் கேட்கவேயில்லை. அங்கே தனியாகச் செல்லவே துணிவில்லை. ஆனால் முன்பின் தெரியாத இடத்துக்கு அவள் எப்படிச் செல்வாள்? அறிந்து தெரிந்த அலுவலகத்திலேயே இதுதான் நடக்கிறது என்று ஒரு மறைமுக வழக்காகப் போய்விட, பெண்மையைத் தரங்கெட்ட முறைகளில் சூழ்ச்சி வலைகளில் சிக்க வைக்கிறார்கள். அதுவும், துருக்கர் தலைநகராக ஒரு காலத்தில் இருந்த அந்த ஊரோடு சம்பந்தப்பட்ட இவ்வகைக் கதைகள் அதிகம். ‘இங்கிருந்து பெண்களைக் கடத்திச் சென்று விற்று விடுவார்கள்’ என்று அடுக்களைப் பெண்களின் வம்புப் பேச்சிலேயே அடிபட்டிருக்கும் செய்திகள் அவளுடைய துணிவைத் துண்டிக்கின்றன.

பஸ்சைக் கண்டதும் ஏறிவிடுகிறாள். பெரிய சாலை நிறுத்தத்தில் இறங்கத் தோன்றவில்லை; ஓட்டலுக்குள் நுழையத் தோன்றவில்லை. வேலி தாண்ட முடியாமல் மனசோடு ஊறி வளர்ந்திருக்கும் கடிவாளம் அத்துணை உறுதி வாய்ந்தது.

அத்தியாயம் - 14

மூன்று மணியடித்துவிட்டது. என்றாலும் தெருக்களில் நடமாட்டமில்லை. பரந்தாமனார் வீதியில் ஒரு ஈ காக்கையைக் காணவில்லை. திண்டி கூட எங்கோ மரத்தடியில் படுத்துறங்குகிறது போலும்!

ரேகா அந்நேரத்தில் வீடு திரும்பியதே இல்லை.

பாட்டி வேலியோரம் வளர்ந்து வெடித்த ஆமணக்கு விதைகளை வெயிலில் காயவைத்துவிட்டு, வாசல் வராந்தாவிலேயே படுத்திருக்கிறாள்.

சின்னம்மா பஞ்சாயத்து நூலகத்திலிருந்து கொண்டு வந்த அட்டையில்லாத நாவலொன்றைப் படித்துக் கொண்டிருக்கையில் நிழலரவம் கண்டு வெளியே வருகிறார்.

ரேகாவா?

அவள் மறுமொழியே கூறாமல் விருட்டென்று போகிறாள்.

“ஏன்? உடம்பு சரியில்லியா சொர்ணம்? ஆபீசிலேயிருந்து இந்நேரத்துக்கு வரமாட்டியே?”

கைப் பையை அறையில் வைக்கிறாள். சாப்பாட்டு பொட்டலத்தைத் தாயிடம் நீட்டுகிறாள்.

“ஏம்மா? என்னமோ போல இருக்கே? சாப்பிடல?”

தாய் நெற்றியில் கைவைத்துப் பார்க்கிறாள். பாட்டி இதற்குள் அலையக்குலைய வருகிறாள்.

“ஏம்மா? போகையிலே சொர்ணம் சொர்ணம்னு கத்தினேனே, இந்தக் கிழம் கத்தட்டும்னுதானே போனே? திரும்பிக் கூடப் பார்க்கல. அப்பவே நெனச்சேன். காச்சலிருக்குதா? தலை நோவுதா?”

“ஒண்ணுமில்ல...!”

“மூஞ்சியப் பாத்தா பேயடிச்சாப்பல இருக்கு? காலையில திருநீறு வச்சிக்காம போகுதேன்னு நினைச்சேன். நிதம் காலையில சொல்லுவேன். இன்னிக்குச் சொல்லலே. போனவ திரும்பி வந்தே. சொர்ணம் சொர்ணம்னு கூப்பிட்டா திரும்பிப் பாக்கிறதில்ல?”

“படுக்கையப் போட்டுட்டுப் படுத்துக்க கண்ணு. சுக்குக் காப்பி வச்சித்தாரேன். நெத்திப் பொட்டு காயுறாப் போல இருக்கு பாருங்கத்தே!”

பாட்டி திருநீற்றைக் கொண்டு வந்து நெற்றியில் இடுகிறாள்.

“ஒண்ணும் செய்யாது. முருகாண்ணு நினைச்சிட்டுப் படுத்துக்க.”

ரேகாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

அம்மா அடுப்பைப் பற்ற வைத்து சுக்கு காப்பி காய்ச்ச முற்படுகிறாள்.

அதுவும் வேறு எரிச்சலைக் கிளப்பும்!

“எனக்கு சுக்குக் காப்பி வேணாம்மா, ஏற்கெனவே, எரிச்சலாயிருக்கு. சில்லுனு எதினாலும் குடு. பசிக்கிது...”

“வாயு திரேகம். அப்பனைப் போல பொண்ணு. அவனுக்கு இப்படித்தான் வந்திரும். லேசா சுக்கத் தட்டிப் போட்டு, வெந்தயம் சீரகம் வெடிக்கவிட்டு, ஒரு கசாயம் கொடு நல்லாப் போகும். சோமுவோ ரமணியோ வரட்டும். ஸ்கூல்லேயிருந்து. மலையாளத்தான் கடையிலேருந்து ஒரு ரொட்டி வாங்கிட்டு வரச் சொல்றேன்...”

பாட்டி “இந்த வேலைக்குப் போவதனால்தான் கெட்டுப் போச்சு” என்ற சொல்லைத் துவங்குவாளோ என்று எதிர்பார்க்கிறாள். அவள் சொல்லவேயில்லை.

கசாயத்தைக் கொண்டு வரும் தாயிடம், “ஏம்மா? தொரை மாமன் எங்கே போயிருக்காரு?” என்று வினவுகிறாள்.

“அவுரு உங்க சித்தப்பாரைக் கூட்டிட்டு பட்டணம் போயிருக்காரு. ஏம்மா?”

“அம்மா, கீதாவை நான் பார்த்தேன். இங்கே வந்திருந்தா. அப்ப எனக்கு தொரை மாமன் மகன்னு தெரியாது.”

“இந்த வீட்டுக்கா?”

“இல்ல. இந்த பஸ் ஸ்டாண்டில பார்த்தேன்.”

“அப்ப? வீட்டுக்கு வான்னு கூப்பிடலியா நீ?”

“எனக்கு யாருன்னே தெரியாதே? ஆனா, அவ சொன்னதெல்லாம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அம்மா? இந்த வீட்டுக்குள்ள இருக்கிற உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. வெளி உலகம் ரொம்ப மோசம். உன் பொண்ணு வேலைக்குப் போயிட்டு வாரான்னு நினச்சிருப்பே. ஒவ்வொரு நாளும் ஒரு கண்டம். இன்னிக்கு என்ன நடந்திச்சி தெரியுமா?”

சிவகாமி விக்கித்துப் போனாற்போல் பார்க்கிறாள்.

“நான் வேலை செய்யிற இடத்து முதலாளி ரொம்ப மோசம். அப்புறம் இன்னொருத்தனும் மோசம். எனக்கு இன்னிக்கு வாட்ச் வாங்கிக் குடுத்து கட்டிக்கன்னான். நான் மாட்டேன்னேன். வேலையை விட்டு நீக்கிட்டான்...”

தாயின் உள்ளத்துக்கு பெரும் அதிர்ச்சியாகத் தானிருக்க வேண்டும். ஆனாலும் பேசவில்லை. ரேகா சட்டென்று தலையணையில் படுத்துப் போர்த்துக் கொள்கிறாள்.

“என்னாது? வேலை போயிடிச்சா? ஏண்டி? என்ன நடந்திச்சி? நேரங்கழிச்சிப் போனதாலா?”

பாட்டி, சின்னம்மா, அத்தை எல்லோருமே அவளைச் சூழ்ந்து கொள்ள வருகின்றனர்.

“போனாப் போவுதுன்னாலும் படியரிசி ஆறரை பா விக்கிதேன்னு பாத்தேன். நம்ம கையில என்ன இருக்கு? அந்தப் பாவி வீட்டுக்காகாம போயிட்டான். சரசுவதி அன்னிக்கே சொல்லிச்சி. சிதம்பரம் வேலைக்கு போயிடட்டும்னு இருக்கிறேன். எனக்கும் கட்டி வச்சிடணும்னு இருக்கு. அது வேலைக்குப் போறதை வாணாங்காதீங்க. அது பாட்டில வேலைக்குப் போகட்டும். ஆசைப்பட்ட பொடவையோ ஜாக்கெட்டோ வாங்கிக்கும் என்று சொல்லிச்சி. சரேல்னு நூத்து நாப்பது ரூபா குறைஞ்சா கஷ்டம்தான்...”

பாட்டி முண முணத்துக் கொண்டு போகிறாள். கனத்த படுதா விழுந்தாற் போன்ற மவுனம் தொடருகிறது. பள்ளிக்கூடம் விட்டு குழந்தைகள் கூச்சலும் ஓட்டமுமாக வருகின்றனர். மாமாவின் குரலும் கேட்கிறது.

காலையில் துரை மாமன் வாங்கி வந்திருப்பார் போலிருக்கிறது. பிஸ்கோத்து பாக்கெட்டைப் பிரித்து பாட்டி கவனமாகப் பங்கு வைக்கிறாள். “ஏய், அது சொர்ணத்துக்கு! தொட்டே, கைய ஒடிச்சிருவேன்!” என்று சுந்தரத்துக்கு ஒரு குரூரமான தண்டனையைக் கூறி அச்சுறுத்துகிறாள்.

“எனக்கொரு பிஸ்கோத்து வாங்கிட்டு வாடா. போயும் போயும் பிஸ்கோத்தை வாங்கிட்டு வாரான். நாளு படி வேர்க்கடலை வாங்கியாந்தாலும் புண்ணியமுண்டு...” என்று கேட்கும் மாமனின் குரல் கேட்கிறது.

“எப்ப வரேன்னு சொல்லிட்டுப் போனாங்க?”

“எப்ப வரானோ? இல்லே அவனை விட்டுட்டு இவன் மட்டும் வரானோ?”

“தொரை ராவுக்கு வரதில்ல?”

“அவன் சம்பந்திக்காரங்க வீடு நுங்கம்பாக்கத்தில இருக்கு. மருமகனுக்கு மாமன் ஆவடி கோட்டர்சில இருக்கான். இங்கே வருவானா? என்னமோ இவனுடைய மாமனார் வீட்டு சம்பந்த உறவாச்சே, அந்தப் பையனைப் போயி விசாரிக்கலான்னு வந்திருக்கிறான். பொண்ணுங்களைக் கண்ணு மண்ணு தெரியாம எடம் கொடுத்து வுட்டுட்டு இப்ப கெடந்து முழிச்சிக்கினு தவிக்கிறான். அவ்வளவுக்கு மீட்டிங்கு பேசி, தெருவிலே பத்து பேருக்கு முன்ன ஊர்கோலம் போற பொண்ணை யாரு கட்டுவாங்க? பப்ளிக்கா வந்த பெறகு மூடி வக்கிறதெப்படி? தெருவில பொண்ணு போகுதுன்னா அல்லாம் வாயப் பிளந்துகினு பார்ப்பான், பேசுவான். ஆனா நம்ம வூட்டுக்கு மருவன்னு வரது அப்படி இருக்குதுன்னா வாணாம்பான். அது ஒலக நாயம்...”

“நான் நம்ம தங்கச்சி சொர்ணாவுக்கு அந்த சேட்டைப் பார்த்து கூட அம்பது ரூபா சம்பளம் கூட்டிக் கேக்கச் சொல்லணும்னு பாக்கிறேன்...”

ரேகாவுக்குப் படுக்கையில் பொருந்தவில்லை. நெஞ்சம் துடிக்கிறது.

“அதான் வேலையத் தொலச்சிகினு வந்திடிச்சே!”

பாட்டி மிக மெதுவான குரலில்தான் பேசுகிறாள். ஆனாலும் ரேகாவுக்கு அது செவிகளில் துல்லியமாக விழுகிறது. தொலச்சிகினு... “வேலைக்கு அனுப்புவது முறைகேடு” என்று பலரையும் குற்றமாகப் பேசிவிட்டு, அதற்காக வருந்துவதுபோல் தன் இயலாமையை எதிர்மறையாகப் பேசுவதன் வாயிலாக ஈடு செய்து கொள்ளும் பாட்டிக்காக மனம் இரங்குகிறாள்.

உண்மையில் பொருள் இழப்பைப் பொருட்படுத்தாமலிருக்க முடியவில்லை. வேலையைத் தொலைத்துக் கொண்டு அவள் வந்திருப்பதாகப் பேசுகிறாள்.

பிறகு மாமியும் மருமகனும் பேசிய விஷயங்களை அவளுடைய செவிகள் கேட்கவில்லை. ஏனெனில் அந்த வீட்டில் அவளுடைய தந்தையின் மீதுள்ள கோபத்தை அவருடைய வாரிசென்று அவளிடம் காட்டுபவர் அவர்தாம்.

“என்னது? வேலையைத் தொலைச்சிட்டாளா? என்னாம்மா? என்ன சமாசாரம்?”

அவள் எழுந்து கைப்பையைத் திறந்து அந்தக் காகித உத்தரவை அவரிடம் நீட்டுகிறாள்.

“நான் தொலைச்சிக்க எனக்குப் பைத்தியமில்ல. அந்த ஆபீசில ஒரு நாள் ஒரு கண்டம். முறைகேடு நடக்க, கத்தினா வெளியே கேட்கக்கூட ஆள் கிடையாது. நான் சொல்லப் பயந்து, வேலை இருக்கணும்னு அஞ்சிருந்தேன். உங்கள் எல்லாரையும் விட, எனக்கு வேலை போகக்கூடாதுன்னு கவலை மாமா!”

மாமன் அந்தக் கடிதத்தைப் பார்க்கிறார். புருவங்கள் சுருங்குகின்றன. அவர் தமிழாசிரியர் என்றாலும் சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது அவளுக்குப் பிறகுதான் புரிகிறது.

“ஏம்மா? இத்தை அவங்க நீட்டினா நீ வாங்கிக்கினு வரலாமா? ‘டிஸ்மிஸ்’னு எழுதியிருக்குதே? வேலை வேணான்னா டெர்மினேடட் என்றுதானே எழுதியிருக்கணும்! பைத்தியம் போல இதை வாங்கிக்கினு வந்தியே? வேற எங்கேயும் வேலை கிடைக்க இந்த ‘எக்ஸ்பீரியன்ஸ்’ அனுபவம் உதவாதே? என்னம்மா இத்தினி மக்காயிருக்கிறே? எதுக்காக உன்னை டிஸ்மிஸ் செய்யணும்?”

மலை உச்சியிலிருந்து சரிந்துவிட்ட அதிர்ச்சி இப்போதுதான் அவளை ஊமையாக்குகிறது.

“சாதாரணமா வேலை வேண்டாம்னா, சர்வீசஸ் டெர்மினேடட்னு தான் எழுதுவாங்க. நஷ்டம் வரலாம்; ஆள் குறைப்பு செய்யலாம்; வேற வேலைக்குப் போறப்ப முன் அனுபவம்னு இத்தைக் காட்டலாம். இப்ப இது பிளாக்மார்க்கல்ல? என்ன ஆச்சு?” அவள் தலை குனிந்துகொண்டு நிலத்தைக் கால் விரலால் தேய்க்கிறாள். கண்கள் குளமாகின்றன.

“ஏன்? எதுக்காக டிஸ்மிஸ் பண்ணான்? அந்த நம்பிங்கற புள்ளாண்டான் நல்ல மாதிரிதானே இருந்தான்?”

“ஒண்ணுமில்ல. அவன் ரொம்ப லிபர்டீ கொடுத்திட்டான். குடிச்சிட்டே ஆபீசுக்கு வருவான். இன்னிக்குக் காலையிலே ஒரு வாட்சை வாங்கிட்டு வந்து முதலாளி கட்டிக்கன்னாரு. நான் வேணான்னேன். அதுக்காக இது...”

அவளுடைய பிரச்சினையை, சங்கடமான உண்மையை அவர்களுக்குத் தெரிய வைக்க இதற்கு மேல் சொல்லாற்றலில்லை அவளுக்கு.

“என்னது? வாட்ச் வாங்கிட்டு வந்து முதலாளி கட்டிக்கன்னா கட்ட வேண்டியதுதானே? இதில் என்ன தப்பு? ஆறு மாசமா வேலைக்குப் போறே. என்னம்மா பயித்தியக்காரப் பொண்ணா இருக்கியே?”

இதை அவள் எதிர்பார்க்காமல் இல்லை.

“பிறகு இன்று ஏழு மணி வரை இங்கு இரு என்பார். இருக்கலாமா, மாமா? ‘சினிமாவுக்குப் போகலாம்’ என்று கார் கதவை திறந்து விட்டு, ‘ஏ’ படத்துக்கு அழைப்பார், போகலாமா மாமா?”

“ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாப் பேசுறே நீ. வாட்ச் வாங்கித் தந்து கட்டிக்கன்னுதானே சொன்னாரு? நீயாகவே ஏன் மேலமேல கற்பனை பண்ணுறே?”

“உங்களுக்கு தெரியாது. உங்களால் ஊகிக்கக் கூட முடியாது மாமா. என் போன்ற பெண் அங்கே பத்திரமாக வேலை செய்ய முடியாது.”

“அப்பாவைப் போல்தான் மகளும் இருக்கு. சரி, எப்படியும் போங்க. ஆனா ஒண்ணு. நாளைக்கே போயி, இந்த ஆர்டரின் வாசகத்தை மாத்திட்டு வந்து சேரு. தொரை வந்தாக்கூட இதைத்தான் சொல்வாறு. ஒரு வேலை கிடைக்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு? என்ன?”

பொறியிலிருந்து மீண்ட பின் மீண்டும் இன்னொரு பொறிக்குள் அகப்பட்டிருக்கிறாள்.

இரவெல்லாம் ஏதேதோ நினைப்புகள். காலை அழுத்துவதைப் போலும் நம்பி கையை அழுத்துவதைப் போலும் உணர்வுகள் தோன்ற தூக்கத்தில் திடுக்கிட்டுத் திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறாள்.

துரைமாமன் இரவு வரவில்லை.

அத்தியாயம் - 15

காலையில் வழக்கம் போல் நீராடி முடி சீவிப் பின்னலிட்டுக் கொண்டு அலுவலகத்துக்கு ரேகா ஆயத்தமாகிறாள். அந்த உத்தரவின் வாசகத்தை மாற்றிக் கொண்டு வரப்போகிறாள்.

சிற்றப்பனும் அந்த உத்தரவை மாற்ற வேண்டியது குறித்து வலியுறுத்தி விட்டார். கைப்பையில் டிபன் சம்புடமில்லை.

“எப்படி எப்படிக் கேட்கணுமோ அப்படிக் கேட்டுக்ககண்ணு. நிதானமாயிரு. பயப்படாதே, பதட்டப்படாதே!” என்று தாய் அறிவுரை நல்குகிறாள்.

“தொரை எப்படியும் வராம போக மாட்டான். நல்லபடியா வாசகத்தை எழுதிக்கினு வா. வேற நல்ல இடமா வேலை எதுனாலும் கிடைக்காம போகாது. நமக்கு ஆண்டவன் துணையிருக்கு. எல்லாம் நல்லா நடக்கட்டும். சாமிக்கு அபிசேகம் பூசை எல்லாம் வைக்கிறோம்...” என்று பாட்டி அவள் நெற்றியில் திருநீறு வைக்கிறாள்.

ரேகா பஸ் ஏறி அலுவலகத்துக்கு வருகிறாள். முதல் நாள் அவ்வழியில் வரும்போது மீண்டும் அங்கே வருவதாக அவளுக்கு எண்ணம் கூட இல்லை. இன்று வருகிறாள்.

ஒருகால் எல்லாம் நன்மைக்குத்தானோ? இன்று மன்மோசன் அங்கு வந்திருக்கலாம். அவள் இதே உத்தரவை அவரிடம் காட்டி, உண்மையை விள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கலாம். அவர் பையனுக்கும் நம்பிக்கும் தண்டனை கொடுக்கக்கூடும். அவளுக்கு நிறையப் பெண்கள் வேலை செய்யும் அண்ணாசாலை அலுவலகத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லவா? நம்பிக்கையின் ஒளிதான் எவ்வளவு இதமாக இருக்கிறது? யாரும் வருவதற்கு முன் அலுவலகத்துக்கு அவள் செல்வதனால் பயன் இல்லை. எனவே, தொழிற்பேட்டைக்கு வெளியே சாலையிலேயே அவள் பஸ்சை விட்டு இறங்கி விடுகிறாள். பிறகு மெதுவாக நடந்து செல்கிறாள். தொழிற்பேட்டைக் கல்லூரி மாணவர் கிளர்ச்சியினால் இரண்டு மாதங்களாக மூடிக் கிடக்கிறது. அலுவலகப் பெண்கள் பலர் சாலையில் விரைகின்றனர். முதுகு தெரிய, இடை தெரிய, கிழிந்துவிடும் நிலையில் அச்சுறுத்த, சேலைகள், இரவிக்கைகள் அணிந்த பெண்கள், அலுவலகங்களின் மேலாளர் எல்லோரும் அநேகமாக அழகிய பெண்களையே அந்தரங்கச் செயலாளராக வைத்துக் கொள்கின்றனர். இந்தப் பெண்களின் இயல்பான உணர்வுகளுக்கு என்னவிதமான பத்திரம் இருக்கக்கூடும்? கரைகளே வேண்டாம் என்று வரையறுத்த பின்னர் அச்சம் நாணம் இரண்டும் கிடையாதோ? ஒருகால் இவர்களுடைய வீடுகளிலும் கரைகளைப் பற்றி வற்புறுத்த மாட்டார்களாக இருக்கும். அதனால் அவளைப் போன்று அஞ்சி நடுங்கினாலும் தன்மானம் என்ற ஒரு உணர்வுடன் போராட வேண்டிய அவசியம் இருக்காது.

அவளைக் கடந்து கோகுலின் கார் செல்கிறது. நம்பி காரில் இருப்பதாகத் தெரியவில்லை.

நம்பிதான் மிகவும் துணிந்த மோசக்காரன். கோகுல் மட்டும் இருந்தால் உத்தரவை மாற்றுவது கடினமல்ல என்று நினைத்துக் கொள்கிறாள்.

அலுவலகத்து வாயிலில் ஜானிராஜின் ஸ்கூட்டர் இல்லை.

அவள் பதற்றத்தைத் தவிர்த்துக் கொண்டு உள்ளே அடி வைக்கிறாள். ஜானிராஜின் அறைக்கதவு பூட்டியிருக்கிறது.

நம்பி வந்திருக்கிறான். உள்ளே டைப் அடிக்கும் ஓசை கேட்கிறது.

வேறு வழியில்லை. அவள் விரல் முட்டியால் கதவைத் தட்டுகிறாள்.

கதவைத் திறப்பவள் ஒரு பெண்.

கண்கள் அகல, குரல் எழாமல் அவள் பார்க்கிறாள்.

“நான் மிஸ் மங்களா, புது லேடி அசிஸ்டென்ட். நீங்கள் யாரைப் பார்க்கணும்?”

ரேகா உணர்ச்சியை விழுங்கிக் கொள்கிறாள்.

அதற்குள் ஒரு பெண் தன்னுடைய இடத்துக்கு வந்து இருப்பாள் என்பதை அவளால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.

“நான்... ரேகா, மிஸ்டர் நம்பி இருக்கிறாரா?”

“என்ன விஷயம், கேள், மங்கள்...” நம்பி இவளுக்கு வேலை உத்தரவுதான் தட்டுகிறானோ? “குட்மார்னிங் சார்... நான்தான் ரேகா.”

“வா, வா, என்ன விஷயம்? எங்கே வந்தே இப்படி?”

அவன் நிமிர்ந்து பார்க்கிறான்.

அவள் கைப்பையிலிருந்து அந்த உத்தரவை எடுத்துக் காட்டுகிறாள்.

“இந்த வார்த்தையை மாத்தி, டெர்மினேட்டட்னு அடிச்சிக் கொடுங்க சார்! எங்க வீட்ல திட்டறாங்க...”

அவன் அதை வாங்கிப் பார்க்கிறான்.

“அதை மட்டும் மாத்தி எப்படி அடிக்க முடியும்? வேறதான் அடிக்கணும். இரு கேட்டிட்டு வரேன். அப்புறம் நீயே வந்து சொல்லு!”

அவன் கோகுலின் அறைக்குச் செல்கிறான்.

அவள் மங்களாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

முடியை அழகாக வாரிப் பெரிய கொண்டை போட்டுக் கொண்டு அடியில் ஓர் ரோஜாவைச் செருகிக் கொண்டு இருக்கிறாள். பெரிய பெரிய பூக்கள் அச்சிட்ட ரோஸ் நைலக்ஸ். இசைவான இரண்டுக்கு இரண்டு ரவிக்கையின் கழுத்து இரு புறங்களிலும் ஆழ்ந்து குழிந்து செல்கிறது.

ஒருகால் இவள் பட்டதாரியாக இருக்கக் கூடுமோ!

நம்பியைப் பற்றி இவளிடம் எச்சரித்து வைக்கலாம் என்று தோன்றுகிறது. முதல் நாளே “மங்கள்!” என்று கூப்பிட்டு உறவு கொண்டாடுகிறான்.

“நம்பி சாரை முன்பே தெரியுமா உங்களுக்கு?” அவள் உடனே ஒரு கிண்கிணிச் சிரிப்புச் சிரிக்கிறாள்.

“அவர் அரைச் சராய் போட்ட நாளிலிருந்து தெரியும். நாங்கள் ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம்” என்று அவள் ஆங்கிலத்தில் கூறிய வாசகம், “நாங்கள் ஒன்றாய் வாழ்கிறோம்” என்ற பொருளையும் கொடுப்பதாக இருக்கிறது.

“மங்கள்! மானேஜர் கூப்பிடுகிறார், போ!”

அவள் எழுந்து அந்த அறைக்குள் செல்கையில் நம்பி மாற்று வாசகங்களை அடிக்கிறான்.

“வீட்டில கோச்சிட்டாங்களா, ரேக்?”

அவள் பேசவில்லை.

“அநாவசியமா நீ உன் தலையில் மண்ணை வாரிப் போட்டிட்டே. இந்த மங்கள் பாத்தியா? வெறும் ஒரு புடவை, பவுடர், கூலிங்கிளாஸ் இதுக்கெல்லாம் ஆசைப்பட்டு எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்கப் பொண்ணுங்க இன்னிக்குத் தயாராயிருக்காங்க. ப்ரீடம் வேணுன்னு துணிஞ்சவங்க எல்லா எக்ஸ்ட்ரீமுக்கும் போறாங்க. நீ இப்படி பத்தாம் பசலியாயிருந்து கெடுத்துகிட்டே. இனிமே என்ன செய்யப் போறே?...”

அவள் பேசவில்லை.

“கோபம் போலிருக்கு. அப்படியா? ரேக், எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு...”

அவன் கை அவள் முகத்தைத் தொட வருகிறது.

“ஹம்...!” என்ற உறுமலுடன் அவள் பின்னே நகருகிறாள்.

“சரிதானா பாரு!”

திருத்தத்துக்குக் கோகுலிடம் நம்பியே கையொப்பம் வாங்கி வந்து அவளிடம் கொடுக்கிறான். ரேகா மீண்டும் கோகுலைப் பார்க்க வேண்டாம். சரேலென்று அவளுடைய இதழ்களில் இகழ்ச்சி தோன்றும் நகை மின்னி மறைகிறது. இந்த மனிதர்களை ரேகா புல்லுக்கும் மதிக்கவில்லை. அவர்களுடைய அந்தத் தாளை, மாமனும் சிற்றப்பனும் பெரிதாக மதித்தார்கள். ‘டெர்மினேடட்’ என்றாலும் ‘டிஸ்மிஸ்ட்’ என்றாலும் அவளைப் பொறுத்தவரையில் ஒன்றுதான். அவளுக்குப் பெரிதாக வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றுகிறது. எனவே நம்பியின் கண் முன்பே அந்தத் தாளைப் பர்ரென்று கிழிக்கிறாள். பிறகு சுக்குநூறாகக் கிழித்துப் பறக்க விட்டு விட்டு, அவன் திகைத்து நிற்கையில் விருவிரென்று நடந்து வருகிறாள். அப்போது ஸ்கூட்டரில் வரும் ஜானிராஜ் அவளைக் கண்டதும் சட்டென்று நிறுத்திவிட்டு இறங்குகிறார்.

“என்னம்மா ரேகா?”

“வீட்டில் கோபிச்சிட்டாங்க, ‘டிஸ்மிஸ்ட்’னு வாங்கிட்டியே, ‘டெர்மினேடட்’னு வாங்கிட்டு வான்னாங்க.”

“கொடுத்தாரா?”

“ம், கொடுத்தார். அங்கேயே வாங்கிக் கிழிச்சி எறிஞ்சிட்டேன்.” ஜானிராஜ் திடுக்கிட்டுப் பார்க்கிறார்.

“சார்! எங்கப்பா... அட்ரஸ் தரிங்களா? சொல்றீங்களா? நானே போய்ப் பார்க்கிறனே...”

ஜானிராஜ் சங்கடத்துடன் ‘ஹெல்மெட்’டைக் கையில் எடுத்துக் கொண்டு நெற்றியைத் துடைத்துக் கொள்கிறார்.

“இப்ப அங்கேருந்துதான் வரேன்மா. அவரு பெங்களூர் பக்கம் போயிட்டாராம். மூணு நாளாச்சாம். யாரிட்டியும் விலாசம் ஏதும் சொல்லலியாம். எனக்கு வருத்தமாயிருக்கு ரேகா...”

சில கணங்கள் அவள் ஊமையாக நிற்கிறாள்.

“அன்னிக்கு அவர் கண்டிப்பா அழைச்சிட்டு வர வேண்டாம்னு சொன்னதால நான் தயங்கிட்டேன். இப்ப வருத்தமாயிருக்கு. ஆனா, டோன்ட் லூஸ் ஹார்ட், காட் இஸ் கிரேட். உனக்கு எப்ப என்ன உதவி வேணுமோ எங்கிட்டச் சொல்லும்மா...” கட்டுக்கடங்காமல் பெருகும் நீரை அவள் துடைத்துக் கொள்கிறாள்.

“ஓ... நோ, நோ சைல்ட்... அழுவாதே. உனக்கு வேலை கிடைக்கும். இடையிலே டைப்ரைட்டிங் எதினாலும் படி. ஐவில் ஹெல்ப் யூ. நிச்சயமா...”

“இல்லை சார். உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்... நான் வரேன்...”

ஜானிராஜ் வண்டியிலேறிக் கொள்கிறார். அவள் நடக்கிறாள். பஸ் நிறுத்தத்தில் யாருமேயில்லை.

தன்னுடைய வாழ்வே ஒரு திருப்பு முனையில் நிற்பது போலிருக்கிறது.

கரைகளை மீறினால் புதுமையைச் சமைக்க வேண்டும். அல்லது எதிர்காலம் இல்லாத இருளில் தேயும் அச்சாகச் சுழல வேண்டும். கிளர்ச்சியும் வீழ்ச்சியும் நொடியில் நிகழ்பவை. ஏற்றமோ? அவளுடைய கைப்பையில் அந்த முகவரி இருக்கிறது. ஒவ்வொரு துளியாகக் கூடு சக்திக்கான ஒரு தோற்றுவாய். அவளைப் போல் ஆயிரமாயிரமாய்ப் பெண்கள் விழிப்புணர்வைப் பெற்று, கால ஓட்டம் தோற்றுவிக்கும் இந்த நெருக்கடிச் சந்திகளில் இரையாகாமல் மீள முன்வர வேண்டும்.

ரேகா ஓர் உறுதியான தன்னம்பிக்கையுடன் பஸ் வரும் திசையை நோக்குகிறாள்.