romba periyaval romba siriyaval

ரொம்பப் பெரியவள் ரொம்பச் சிறியவள்

அம்மா தூக்கிச் செல்ல முடியாத அளவு ஷானு ரொம்பப் பெரியவள். பள்ளிக்குத் தனியாகச் செல்ல அவள் ரொம்பச் சிறியவள். இந்தக் கதையை சுயமாகப் படிப்பதற்கு நீங்கள் ரொம்பச் சிறியவரா? அல்லது, யாராவது உங்களுக்குப் படித்துக் காட்டுவதற்கு நீங்கள் ரொம்பப் பெரியவரா? இந்தக் கதையைப் படித்துப் பார்த்து நீங்களே கண்டுபிடியுங்கள்!

- Praba Ram,Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“என்னால் உன்னை தூக்க முடியாது, ஷானு!” என்கிறார் அம்மா.

“நீ ரொம்பப் பெரியவள்!”

“உன்னால் பள்ளிக்குத் தனியாக நடந்து போக முடியாது, ஷானு!” என்கிறார் அப்பா.

“நீ ரொம்பச்  சிறியவள்!”

“உன்னால் பாப்பாவின் கட்டிலில் தூங்க முடியாது, ஷானு!” என்கிறார் தாத்தா.

“நீ ரொம்பப் பெரியவள்!”

“உன்னால் பாப்பாவைப் பூங்காவிற்கு தூக்கிச் செல்ல முடியாது, ஷானு!” என்கிறார் பாட்டி.

“நீ ரொம்பச்  சிறியவள்!”

ஷானுவுக்கு ஒரே குழப்பம். ”நான் ரொம்பப் பெரியவளா?ரொம்பச் சிறியவளா?”அவள் எப்படி ஒரே சமயத்தில் ரொம்பப் பெரியவளாகவும்

ரொம்பச் சிறியவளாகவும்

இருக்க முடியும்?

ஷானு, தனது பழைய இளஞ்சிவப்பு கவுனை அணிவதற்கு ரொம்பப் பெரியவள்.

அடுப்பில் தோசை சுடுவதற்கோ ரொம்பச் சிறியவள்.

தாத்தாவின் முதுகில் சவாரி செய்ய ரொம்பப் பெரியவள்.

பாப்பாவைத் தூக்கிச் செல்ல ரொம்பச் சிறியவள்.

“எதற்குத்தான் நான் சரியான அளவாக இருப்பேன்?” என்று ஷானு வியக்கிறாள்.

அம்மா சிரித்துக் கொண்டே, “பெரிய பள்ளிக்குச் செல்வதற்கு நீ பெரியவள்தான்!” என்றார்.

“நான் தோளில் தூக்கிச் செல்வதற்கு நீ சிறியவள்தான்!” என்றார் அப்பா.

“காலை என்னோடு நடைப்பயிற்சி வரநீ பெரியவள்தான்” என்றார் தாத்தா.

“நான் கதைகள் சொல்வதற்கு நீ சிறியவள்தான்,”என்றார் பாட்டி.

“ஆனால், நீ எப்பொழுதுமே சரியான அளவுதான்... இதற்கு!” என்று கூறி, அவர்கள் எல்லோரும் அவளை அன்புடன் கட்டி அணைத்துக் கொண்டார்கள்.