அது ஒரு நல்ல காலைப்பொழுது. அந்தச் சின்னஞ்சிறிய சக்கரங்கள் உற்சாகமாக இருந்தன. அவை தம்முடைய முதல் ஓட்டத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தன. இன்றுதான் அந்த நாள்!நேற்று இரவுதான் அவை ஷாஜியாவுக்காகக் கடையிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தன. அவை பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருந்தன, ஒவ்வொன்றின் நடுவிலும் ஒரு சிறிய மணி இருந்தது. ஷாஜியாவின் சகோதரி நேற்றிரவு அவற்றை அங்கே வைத்திருந்தார்.
ஷாஜியா நடனத்தை வெறுத்தாலும், அதாவது, அவளுடைய ஆசிரியை நடனம் என்று எதைக் கற்பித்தாரோ - அதை வெறுத்தாலும், சலங்கை மணிகளின் ஒலியை நேசித்தாள்.
அவளுக்கு இன்றோடு ஆறு வயது ஆகிறது. ஆகவே, அவளுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுப்பதற்காக அந்தப் புதிய மிதிவண்டி(சைக்கிள்) வாங்கப்பட்டிருந்தது. அந்த மிதிவண்டியில் இரண்டு சிறிய பயிற்சிச் சக்கரங்கள் இருந்தன. அந்தச் சிறிய சக்கரங்கள் சாலையில் செல்வதற்காக மிகவும் ஆவலோடு இருந்தன. அவை இன்னும் ஒரு சாலையைக்கூடப் பார்த்ததில்லை!
ஆனால், அந்தச் சக்கரங்கள் சாலையைப் பற்றி நிறைய விஷயங்களைக் கேள்விப்பட்டிருந்தன. கடையில் இருந்த பழைய சைக்கிள்கள் அவற்றைப் பற்றி நிறையப் பேசியிருக்கின்றன. சாலையில் ஓடுவது, போக்குவரத்து, தூசு, இரைச்சல், சரளைக்கற்கள், அவற்றில் ஏறி இறங்கும்போது வருகிற அந்த வலி, மற்ற வாகனங்களின் ‘பாம் பாம்’ சத்தம், குண்டுகுழிகள், சாலைகளைப் ஓடுவது எவ்வளவு கடினமானது, எவ்வளவு சோர்வானது ஆகியவற்றை எல்லாம் அவை மணிக்கணக்காகப் பேசிவந்தன.
அந்தச் சின்னஞ்சிறிய சக்கரங்கள் இவையனைத்தையும் கேட்டும் மனம் சோர்ந்து போகவில்லை. அவற்றைப் பொறுத்தவரை, சாலைகள் முழுவதிலும் சாகசங்கள் நிரம்பியிருந்தன: ஷாஜியா சந்துகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பந்தயக் குதிரையைப் போல சைக்கிளை ஓட்ட, அவளோடு சேர்ந்து அந்தச் சக்கரங்களும் உருண்டு உருண்டு செல்லும். அப்படிச் செல்லும்போது அவை மணிகளால் கிணிகிணி என்று ஒலி எழுப்பிக்கொண்டே செல்லும். அவள் கீழே விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும்.
அதனால், அவை சாலைகளைச் சந்திப்பதற்காகக் காத்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தன. அப்போது, அவை பாடின:
"நாங்கள்தான் சக்கரங்கள், சின்னஞ்சிறிய சக்கரங்கள்
பரந்து விரிந்த உலகின் இணையில்லா சக்கரங்கள்."
மிதிவண்டியின் மற்ற பாகங்கள் அவற்றை அமைதியாக இருக்குமாறு சொல்லின. ஆனாலும், அவை பாடுவதை நிறுத்தவில்லை. இப்படி ஐம்பத்து ஒன்பது முறை சொன்னபிறகு, மிதிவண்டியின் பெரிய சக்கரங்கள் உட்பட அனைத்து பாகங்களும் பொறுமையிழந்துவிட்டன. அவை எல்லாம் சேர்ந்து ஒரே குரலில் “போதும்!” என்றன.
“ஹூம்ம்” என்றபடி ஆச்சரியத்துடன் அவை சுற்றுமுற்றும் பார்த்தன.
“எங்கள் அனைவருக்குள்ளும் சில சக்கரங்கள் வேலை செய்துகொண்டுதான் இருக்கின்றன” என்றது அந்த அறையிலிருந்த மின் விசிறி. “எனவே, நீங்கள்தான் இணையில்லாதவர்கள் என்று பிதற்றுவதை நிறுத்துங்கள்.”
“அதுமட்டுமா? நீங்கள் மோசமான சுதியில் பாடுகிறீர்கள்!” என்றது மணி. சைக்கிளில் தான் மட்டுமே ஒலியெழுப்பவேண்டும் என்று அதற்கு எண்ணம். வேறெந்த ஒலியும் அதற்குப் பிடிக்காது.
“உங்களுக்குச் சக்கரங்கள் இல்லை” என்று மின்விசிறியிடம் சொல்லின அந்தச் சிறிய சக்கரங்கள். பிறகு மணியிடம், “உங்களுக்கும்தான்” என்றன. “நீங்கள் நினைப்பது தவறு!” என்றது அந்த மின்விசிறி. “என்னுடைய மோட்டாரில் சக்கரங்கள் உள்ளன. பல, பெரிய பெரிய, மிகப்பெரிய சக்கரங்களின் உதவியால் தயாரிக்கப்படும் மின்சாரத்தால்தான் என்னுடைய இறக்கைகள் சுற்றுகின்றன.”
“எனக்குள்ளும் சக்கரங்கள் இருக்கின்றன” என்றது மிதிவண்டியின் மணி. “நான் ‘ட்ரிங் ட்ரிங்’ என்று ஒலியெழுப்புவதுகூட எனக்குள் இருக்கும் சிறிய சக்கரங்களால்தான்.”
“ஏகப்பட்ட சக்கரங்களைக்கொண்ட இயந்திரங்களால்தான் நாங்கள் உருவாக்கப்பட்டோம்” என்றது சுவரிலிருந்த குழல்விளக்கு.
“அரவை இயந்திரத்தின் சக்கரங்கள் கோதுமையை அரைக்கவில்லை என்றால் நாங்கள் ஏது?” என்றன மேஜைமேல் டப்பாவிலிருந்த சப்பாத்திகள்.
“தண்ணீர் இறைக்கும் சக்கரங்கள் இல்லாவிட்டால், யாருக்குத்தான் தண்ணீர் கிடைத்திருக்கும்?” என்று கேட்டது எலுமிச்சை ஊறுகாய். “நம் எவருக்கும் இல்லை!” என்றது மாங்காய் சட்டினி.
மிதிவண்டியின் பெரிய சக்கரங்கள்,
“ஆமாம், சக்கரங்கள் இல்லாமல்
இந்த மிதிவண்டியைச் செய்திருக்கவே முடியாது” என்றன.
“சக்கரங்கள் இல்லையென்றால் நான் ஒரு அழகான பெட்டியாக மட்டுமே இருந்திருப்பேன்” என்றது மூலையிலிருந்த தையல் இயந்திரம்.
சிறிய சக்கரங்கள் அமைதியாக இருந்தன. ஒரு சில நிமிடங்கள் கழித்து, அவை மற்றொரு பாடலைப் பாடத் தொடங்கின.
"நாம்தான் சக்கரங்கள், சக்க-சக்க சக்கரங்கள்
பரந்து விரிந்த உலகை நடத்தும் அற்புதமானச் சக்கரங்கள்."
மெதுவாக, அனைவரும் அந்தப் பாடலில் சேர்ந்துகொண்டார்கள்.
தூக்கக் கலக்கத்திலிருந்த சிறுமி ஷாஜியாவுக்கு, யாரோ பாடுவதைக் கேட்டது போலத் தோன்றியது. அவள் துள்ளி எழுந்தாள். மற்ற அனைவரையும் எழுப்பிவிட்டாள். அன்று அவளுடைய பிறந்தநாள். ஆகவே, அவள் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம்.
உடனே, அந்தச் சின்னஞ்சிறிய சக்கரங்கள், பெரிய சக்கரங்கள், அந்த முழு மிதிவண்டி... அனைத்தும் வெளியே வந்தன. அந்த மிதிவண்டியில் ஷாஜியாவும், அவளுக்கு பின்னால் ஓடியபடி அவளுடைய சகோதரியும் வந்தார்கள். தெருவில் சரளைக் கற்களின்மீது அனைவரும் ஓடத்தொடங்கினார்கள்.
அந்தச் சிறிய சக்கரங்கள் சாலையில் ஓடத் தொடங்கின.
சக்கரங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன!
உங்களைச் சுற்றிப் பாருங்கள், எங்கு பார்த்தாலும் சக்கரங்கள் உங்களுக்குத் தென்படும். உங்கள் வீட்டில், பள்ளியில், தெருக்களில் நீங்கள் பார்க்கும் சக்கரங்களைப் பட்டியலிடுங்கள். எடுத்துக்காட்டாக, நாங்கள் சில சக்கரங்களைத் தந்திருக்கிறோம். உங்கள் பெற்றோர் அல்லது ஆசிரியரின் உதவியுடன் இந்தப் பட்டியலில் இன்னும் பல சக்கரங்களைச் சேருங்கள்.