சமீராவின் பிறந்தநாளுக்காக அம்மா அல்வா செய்யத் தொடங்கிய பொழுது, ரவை இல்லை என்பதை அறிந்தாள்.
"அந்த கடைக்கு ஓடிச் சென்று கொஞ்சம் ரவை வாங்கித் தர முடியுமா, செல்லம்?" என்று அம்மா தெருவின் முனையில் உள்ள கடையைச் சுட்டிக் காட்டி, காசைக் கொடுத்தார்.
"இதோ 12 ரூபாய். அவர்களிடம் அரை கிலோ ரவை கேளு. மோச்சக்கை உன்னுடன் அழைத்துச் செல், வழியில் முன் பின் தெரியாதவர்களிடம் பேசாதே", என்று கூறினார்.
"மரங்களில் ஏற வேண்டாம்", என்று கூறியபடி சமீரா மோச்சகுடன் அரை கிலோ ரவை வாங்கப் புறப்பட்டாள்.
பிப்ரவரி மாதத்தில் அன்று ஓர் அழகான நாள். சமீரா குதித்தபடி "லா லா லா லா" என்றுப் பாடிச் சென்றாள்.
"லொள் லொள்!" என்று மோச்சக் விறுவிறுப்பாகக் குரைத்தது.
இருவரும் தெருவின் மூலையை அடைந்த பொழுது, சமீரா ஒரு பட்டாம்பூச்சியைக் கண்டாள். "ஆகா! எவ்வளவு அழகாக இருக்கிறது! நாம் அதைப் பிடிக்க முயற்சி செய்வோம்", என்று கூறி, இருவரும் அந்த பட்டாம்பூச்சியைப் பின் தொடர்ந்து ஓடினர்.
அந்த பட்டாம்பூச்சி பறந்துச் சென்று ஒரு நித்தியகல்யாணி பூவின் மேல் இருந்தது. ஆனால் சமீரா அதைப் பிடிக்க அருகில் சென்றபோது, அது பறந்துவிட்டது. முதலில் "ஐயோ!" என்று வருந்தினாள். பிறகு பட்டாம்பூச்சிகளைப் பிடிப்பது சரி இல்லை என்பது அவளுக்கு ஞாபகம் வந்தது. அவை சுதந்திரமாக இருக்க வேண்டும்.
சாம்பல் நிறக் கொடுகளைக் கொண்ட ஒரு பழுப்பு நிறப் பூனை குறுக்கே ஓடியது. அதைக் கண்டதும் மோச்சக் "லொள் லொள் லொள்" என்று குறைத்தபடி துரத்தத் தொடங்கியது. மோச்சக்கின் பின் சமீரா மூச்சுத் திணற ஓடினாள். அந்த பூனை ஒரு சுவர் மீது ஏறி குதித்து மறைந்தது. மோச்சக்கும் சமீராவும் நின்று, ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.
பின் சமீரா ஒரு
நந்தியாவட்டைச் செடியைப் பார்த்தாள். "இப்பூக்கள் வானில் உள்ள நட்சத்திரங்களைப் போல் அல்லவா இருக்கின்றன? இவற்றை எடுத்துச் சென்றால் அம்மா எவ்வளவு மகிழ்ச்சிக் கொள்வாள்", என்று யோசித்தபடி, அவள் நிறைய நந்தியாவட்டைப் பூக்களைப் பறித்தாள்.
மோச்சக் அவற்றை மோப்பம் பிடித்து விட்டுத் திரும்பியது. அது மேலும் உற்சாகமான விஷயத்தைக் கண்டது.
"டேய், எங்கே செல்கிறாய்?" என்று சமீரா கேட்டாள். ஆனால் மோச்சக் "லொள் லொள் லொள்" என்று மகிழ்ச்சியாக குரைத்தபடி ஓடியது. அது ஒரு எலும்பைக் கண்டு, அதைக் கவ்விக் கொண்டு பெருமையோடு சமீராவைப் பார்த்தது.
இருவரும் ஒரு இலவ மரத்தை அடைந்தனர். அதில் கிளிகளும் கொண்டலாட்டிகளும் கீச்சிட்டன. மரத்தடியில் விழுந்துக்கிடந்த நூற்றுக்கணக்கான சிவப்பு பூக்கள், கம்பளம் விரித்தது போல் காட்சி அளித்தது. சந்தோஷத்தில் சமீரா அவளது ஆடையில் அந்த மெழுகு பூசிய மலர்களை நிரப்பினாள். அவள் கை நிறைய பூக்களை எடுத்துவிட்டு மேலே பார்த்தாள். அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் நின்றாள்.
அவள் இடது பக்கமும் வலது பக்கமும் பார்த்தாள்; முன்னும் பின்னும் பார்த்தாள். ஆனால் எல்லாம் புதிதாக இருந்தன. சமீரா தொலைந்து போய்விட்டாள். அவள் நடைபாதையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள், "நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். எனக்கு அம்மா வேண்டும்."
மோச்சக் ஓடி வந்து "கவலைப் படாதே" என்பதை "லொள் லொள்" என்று குரைத்தது. ஆனால் சமீராவுக்க்குப் புரியவில்லை, மேலும் அழுதாள்.
பிறகு மோச்சக் அவளது ஆடையை இழுத்து "வா வா" என்பதை "லொள் லொள்" என்று குரைத்தது; அவள் மேலே பார்த்து, தனது கண்களைத் துடைக்கும் வரைக் குரைத்தது. இருவரும் கிளம்பிச் சென்றபடி, சமீரா கொஞ்சம் முனகிக்கொண்டு, பாதி பூக்களைக் கீழே போட்டாள்.
அவள் மோச்சக்கைப் பின் தொடர்ந்து, இடது பக்கம் வலது பக்கம் திரும்பி, ஒரு தெரு மேலே சென்று, பின் வேறொரு தெரு கீழே சென்று, விரைந்து வீட்டை அடைந்தனர். அம்மா வாசலில் நின்றுக் கொண்டிருந்தார், மேலும் கீழும் ஆவலுடன் பார்த்தார். "எங்கே சென்று விட்டாய்?" என்று கண் கலங்கிய சமீராவைப் பார்த்துக் கேட்டார்.
சமீரா தன் அம்மாவிடம் அவள் எப்படி தொலைந்தாள் என்றும் மோச்சக் எப்படி அவளை வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தது என்பதை விளக்கினாள். "நல்ல நாய்", என்று கூறிய அம்மா, அதற்கு ஒரு பெரிய மாச்சில்லைக் (பிஸ்கட்) கொடுத்தார். மோச்சக் தான் கொண்டு வந்த எலும்பைத் தோட்டத்தில் புதைத்தது.
சமீராவுக்குத் தன் கைகளில் பிடித்துக் கொண்டிருந்த கொத்துக் கொத்தான பூக்கள் அவள் நினைவுக்கு வந்தது. "அம்மா, இவற்றை உங்களுக்காக பறித்து வந்தேன்", என்று நந்தியாவட்டை பூக்களை நீட்டினாள். ஒரு இலவம் பஞ்சு பூ அவளது சட்டைப்பையில் இருந்தது.
"இவை மிகவும் அழகாக இருக்கின்றன!" என்றார் அம்மா. "மிக்க நன்றி. ஆனால் ரவை எங்கே?"
அல்வா செய்வதற்கு ரவை இல்லை என்பதால் அம்மா இப்போது பாயசம் செய்ய போகிறார். சமீரவுக்கு பாயசமும் பிடிக்கும். மோச்சக் அதிர்ஷ்டசாலி அல்லவா? மாலையில் அது ஒரு கிண்ணம் நிறைய பாயசத்தையும், தான் கொண்டு வந்த சுவையான எலும்பையும் தின்னப் போகிறது.