ஒரு நாள், எலிக்கு மிகப் பெரிய லட்டு கிடைத்தது.
லட்டுவை வீட்டுக்குக் கொண்டு சென்று தான் மட்டும் அதைத் திண்ண வேண்டும் என நினைத்தது.
எலி லட்டுவை பின்னால் இருந்து தள்ளியது.
லட்டு நகரவே இல்லை.
எலி லட்டுவை முன்னால் இருந்து தள்ளியது.
லட்டு நகரவே இல்லை.
எலி லட்டுவை வலது பக்கம் வந்து தள்ளியது.
லட்டு நகரவே இல்லை.
எலி குடுகுடு என ஓடி இடது பக்கம் வந்தது.
இடது பக்கம் இருந்தும் லட்டுவை தள்ள முடியவில்லை.
என்னடா இது? எந்த பக்கமும் தள்ள முடியவில்லையே!
எலி யோசித்தது...
ஒரு கயறு கட்டி இழுக்கலாம் என்று அதற்கு ஒரு யோசனை
தோன்றியது.
எலி அதன் வீட்டிற்கு ஓடிச் சென்று ஒரு கயறு கொண்டு வந்தது, ஆனால் அது சிறியதாக இருந்தது.
திரும்பவும் ஓடிச் சென்று ஒரு பெரிய கயறு கொண்டு வந்தது.
லட்டுவை அந்த பெரிய கயற்றில்கட்டி இழுத்தது.
ஆனாலும் அது நகரவில்லை.
எலி அங்கேயே உட்கார்ந்து லட்டுவை திண்ண ஆரம்பித்தது.
லட்டுவை சாப்பிட்டு சாப்பிட்டு எலி குண்டானது. லட்டு சின்னதாகிப் போனது.
இப்போது லட்டுவை தள்ளிப் பார்த்தது. லட்டு உருண்டு அதன் வீட்டுக்குள் சென்றது.
எலி மகிழ்ச்சியானது.
எலி பெரிதானதால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை.
எலி எத்தனை முயற்சி செய்தாலும் அதனால் உள்ளே நுழைய முடியவில்லை.
எலி வீட்டுக்கு வெளியே உட்கார்ந்தது. அதற்கு பயங்கர வயற்று வலி எடுத்தது.
"நானே அத்தனை லட்டுவையும் சாப்பிட்டிருக்கக் கூடாது. நண்பர்களோடு பகிர்ந்து உண்டிருக்க வேண்டும்" என நினைத்து வருந்தியது.