sari vazhi palli

சரி வழிப் பள்ளி

சரி வழிப் பள்ளியில் எதைச் செய்வதானாலும் அதற்கு ஒரு சரியான வழி இருக்கிறது. திருமதி கம்பீரம் கூட அப்படித்தான் பாடம் நடத்துவார். இந்நிலையில் பரட்டைத் தலையும் எல்லையற்ற ஆர்வமும் கொண்ட சிறுமியொருத்தி அப்பள்ளியில் வந்து சேர்கிறாள். தன் கேள்விகளாலும் தன் மகிழ்ச்சியான குரலாலும் தன் நடத்தையாலும் எல்லோரையும் அவள் திகைப்படையச் செய்கிறாள். அடுத்து என்ன நடக்கும்?

- Vishal Raja

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சரி வழிப் பள்ளி சாம்பல் வண்ண மதிற்சுவருக்குள் இருக்கும் ஒரு பழுப்பு வண்ணக் கட்டிடம். சில நேரங்களில், அந்த சாம்பல் வண்ண மதிற்சுவருக்குள் நீல வண்ணச் சீருடையணிந்த மாணவர்கள் வரிசையாக நின்று கொண்டிருப்பார்கள்.

எல்லாவற்றுக்கும் ஒரு சரியான வழி இருப்பதாக சரி வழிப் பள்ளி நம்பியது. பாடம் படிக்க ஒரு சரியான வழி. உடை அணிய ஒரு சரியான முறை. வரிசையில் நிற்பதற்கு ஒரு சரியான முறை. இதையே தன் மாணவர்களுக்கும் அது கற்றுக் கொடுத்தது.

பள்ளிக்கூடத்தில் வேறு யாரைக் காட்டிலும், சரியான வழியில் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதில் திருமதி கம்பீரம் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்.

திருமதி கம்பீரம் மூன்றாம் வகுப்பின் ஆசிரியர். கம்பீரம் என்பது அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தும் பெயர்தான்.

ஒவ்வொரு நாளும் கரும்பலைகையில் வெள்ளை சாக்பீசால் திருமதி கம்பீரம் எழுதுவார்.

ஒரு வியாழக்கிழமை மதியம், அவர் எழுதினார்:

செடியின் வேர் மண்ணுக்கடியில் புதைந்திருக்கிறது. அது நீரையும் பிற சத்துக்களையும் உறிஞ்சிக் கொள்கிறது.

“இப்போது இதை எழுதிக் கொண்டு படியுங்கள்” என்றார் அவர்.

“ஆனால் மிஸ்”, ரோகித் கேட்டான், “சத்துக்கள் என்றால் என்ன?”

திருமதி கம்பீரம் அவனைப் பொருட்படுத்தவில்லை. கேள்விகளும் குறுக்கீடுகளும் சரியான வழி அல்லவே!

திருமதி கம்பீரம் கேட்டார், “மீரா, செடியின் வேர் என்றால் என்ன?” மீராவின் கைகள் வேர்த்தன. அவள் மூளை வேலை செய்யவில்லை. “உச்ச் உச்ச்” என்றார் திருமதி கம்பீரம். மீரா அழத் துவங்கினாள்.

திருமதி கம்பீரம் ரோகித்திடம் கேட்டார், “வேர் என்றால் என்ன?” “மண்ணுக்கடியில் உள்ள பகுதி. அது நீரையும்...” திருமதி கம்பீரம் “உச்ச் உச்ச்” என்றார். அவனுடைய சாக்லேட் பிஸ்கட்டுகளைப் பிடுங்கி வைத்துக் கொண்டார்.

திருமதி கம்பீரம் கோபமாக இருக்கும்போது “உச்ச் உச்ச்” என்று கூறினார். ஆத்திரம் கூடினால். “உச்ச் உச்ச் உச்ச்” என்று உறுமினார். அவர் “உச்ச் உச்ச் உச்ச் உச்ச்” என்று கூறும் நாள் வந்தால் என்ன நடக்குமோ என அனைவரும் பயந்தார்கள்.

வரலாற்றுப் பாடத்தின்போது திருமதி கம்பீரம் வகுப்பு மாணவர்களுக்கு தேதிகளைக் கற்றுக் கொடுத்தார். ஓவிய வகுப்பின்போது தன் மாணவர்களை நீல நிற நதி, பச்சை வண்ண மலைகள் மற்றும் மஞ்சள் வண்ண சூரியனை வரையச் செய்தார். யாராவது அதனுடன் ஆப்பிள் மரத்தையோ அல்லது குடிலையோ சேர்த்து வரைந்தால் திருமதி கம்பீரம் “உச்ச் உச்ச் உச்ச்” என்று காகிதத்தைக் கிழித்து வீசிவிடுவார்.

எனவே மூன்றாம் வகுப்பு இயல்பாகவே எல்லாக் காரியங்களையும் சரியான வழியில் மட்டுமே செய்ய முயன்றது.

ஒரு திங்கட்கிழமை காலை வரை இது மாற்றமில்லாமல் தொடர்ந்தது. ஒரு நாள், வகுப்பறையின் கதவு திறந்தது…

...புதிதாக யாரோ உள்ளே நுழைந்தார்கள்.

அது ஒரு குட்டிப் பெண். அவளுக்குப் பெரிய கண்கள் இருந்தன. அவள் தலைமுடி புயலில் சிக்கிய பனைமரம் போலிருந்தது. அழகான மடிப்புகள் கொண்ட சிவப்பு நிற உடை அணிந்திருந்தாள். அவள் தோற்றம் சீராக இல்லை. அதைப் பற்றி அவளுக்குக் கவலையும் இல்லை. அவள், சரி வழிப் பள்ளியைச் சேர்ந்தவள் போல் தெரியவில்லை. அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்.

“யார் நீ?” திருமதி கம்பீரம் கடுகடுப்பான குரலில் கேட்டார். “நான் லைலா. புதிதாக வந்திருக்கிறேன்.” பேருந்தின் ஹாரன் போல இரைச்சலும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் அந்த குட்டிப் பெண் பதில் சொன்னாள்.

மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கண் சிமிட்டினார்கள். மீராவும் ரோகித்தும் புன்னகைத்தனர். திருமதி கம்பீரம் புன்னகைக்கவில்லை. முகத்தைச் சுளித்தார். “மூன்றாம் வகுப்புக்கு உன்னை வரவேற்கிறேன், லைலா” என்று ஒருவழியாக சொன்னார். “இந்தப் பள்ளியில் மாணவர்கள் எல்லா செயல்களையும் சரியான வழியில் மட்டுமே செய்வார்கள். அவர்கள் மெல்ல பேசுவார்கள். பள்ளிக்கு சீருடை அணிந்து வருவார்கள். தலைமுடியை ஒழுங்காக வாரியிருப்பார்கள். ஆசிரியர்களுக்குக் கீழ்படிவார்கள்.”

மதிய உணவின்போது, மூன்றாம் வகுப்பு மாணவர்கள் லைலாவைச் சூழந்து கொண்டனர். ரோகித் கேள்விகள் கேட்டான். லாவண்யா அறிவுரை வழங்கினாள். மீரா லைலாவின் கையைப் பற்றிக் கொண்டாள். “கவனமாக இரு. திருமதி கம்பீரத்துக்கு கோபம் வந்தால் நமக்கு ஆபத்துதான்.” என்று தன் புதுத் தோழியிடம் கிசுகிசுத்தாள்.

திருமதி கம்பீரை கோபமூட்டாமல் இருக்க லைலா முயற்சி செய்தாள். தினமும் தன் புதிய நீலச் சீருடையை அணிந்து வந்தாள். தன் தலைமுடியை எட்டு கிளிப்புகளாலும் நான்கு ரப்பர் பேண்டுகளாலும் கட்டிக் கொண்டாள். கவனமாக இருக்கும்படி மீனா தினமும் எச்சரிக்கை செய்தாள்.

எனினும் லைலா அதை மறந்துவிட்டாள். அவளால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மற்றவர்களைப் போலவே அவளும் பூனை வரைந்தாள். ஒரேயொரு வித்தியாசம். அவளுடைய பூனை இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. லாலிபாப்பை சுவைத்துக் கொண்டிருந்தது. திருமதி கம்பீரம் சீறினார். “உச்ச் உச்ச்”. அவள் ஓவியத்தைக் கிழித்தார்.

மற்றவர்களைப் போலவே அவளும் இந்திய வரைபடத்தில் வண்ணம் பூசினாள். கூடவே அதில் யானைகள், படகுகள், மா மரங்களையும் வரைந்து நிரப்பினாள்.

“உச்ச் உச்ச் உச்ச்”. திருமதி கம்பீரம் பொறிந்தார். உணவு இடைவேளையை லைலா வகுப்பிலேயே கழிக்கும்படி செய்தார்.

எவ்வளவுதான் லைலா இருக்குமிடம் தெரியாமல் இருக்க முயற்சி செய்தாலும் அவளையும் மீறி கேள்விகள் வெளிவந்தன. “ஒரு பெரிய மரம் எப்படி சிறிய விதைக்குள் ஒளிந்திருக்கிறது?” “மீன்கள் ஏன் சத்தம் எழுப்புவதில்லை?” “தீவுகள் ஏன் மிதந்து செல்வதில்லை?”

திருமதி கம்பீரத்துக்குப் பிடிக்கவில்லை.. ரோகித்தும் கேள்விகள் கேட்க ஆரம்பித்தபோது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ரோகித் மட்டுமல்ல. லாவண்யாவும் அமோத்தும்கூட கேள்வி கேட்டார்கள்.

“என் வகுப்பில் குறுக்கே பேசுபவர்கள் ஒரு மாதத்திற்கு வகுப்பறைக்கு வெளியே இருக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கத்தினார். ஒரு திங்கட்கிழமை காலைவேளை, தன் வகுப்பில் வானிலை பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் திருமதி கம்பீரம். வகுப்பு மாணவர்கள் சரியான வழியில் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். லைலாவின் மூளைக்குள் ஒரு கேள்வி உருண்டு கொண்டிருந்தது. அது வாயின் வழியே வெளி வந்தபோது ரொம்ப சத்தமாகக் கேட்டது. “மிஸ், மேகங்கள் காற்றைப் போன்றவையா? அல்லது நீரைப் போன்றவையா? அல்லது பஞ்சைப் போன்றவையா?” “உச்ச் உச்ச் உச்ச்…

…உச்ச்!" திருமதி கம்பீரம் ஆத்திரத்தில் வெடித்தார். பிறகு கதவை நோக்கி கை காட்டினார்.

லைலா சோகமாக வகுப்பைவிட்டு மெதுவாக வெளியேறினாள்.

சமாதானம் அடைந்த திருமதி கம்பீரம் கரும்பலகையில் எழுதினார்: “மழை என்பது ஆவி வடிவிலிருக்கும் தண்ணீர், துளிகளாக மாறி விழுவதே—

ஆசிரியரின் பேச்சை ஒரு குரல் குறுக்கிட்டு நிறுத்தியது. வழக்கமாக வகுப்பில் பேசவே அச்சப்படும் குரல் அது.

“மிஸ்”, மீரா தைரியமாகப் பேசினாள். “மேகங்கள் பஞ்சு போல இருக்குமா?” வகுப்பு ஆச்சரியத்தில் வாய் பிளந்தது. திருமதி கம்பீரம் அதிர்ச்சியுற்று கதவை நோக்கி கை காட்டினார்.

மீரா வகுப்பைவிட்டு வெளியேறினாள்.

பிறகு ரோகித் கை தூக்கினான். அடுத்து லாவண்யா.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, திருமதி கம்பீரம் காலி வகுப்பறைக்கு மழையைப் பற்றி பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

முற்றிலும் காலி என்று சொல்ல முடியாது. மேஜைகளும் நாற்காலிகளும் அங்கே இருந்தன. அவை குறுக்கிட்டு பேசவில்லை. எனவே ஆசிரியர் மகிழ்ச்சியாக இருந்தார்.

இருபது நிமிடங்களுக்குப் பிறகு, சரி வழிப் பள்ளியின் முதல்வர் அந்தப் பக்கம் வந்தார். மூன்றாம் வகுப்பைக் கடக்கும் போது. திகைத்துப் போய் நின்றார்.

சரி வழிப் பள்ளியில் மாணவர்கள் தாழ்வாரத்தில் குழுமி, கூச்சல் போடுபவர்கள் அல்ல. அவர்கள் எப்போதும் அமைதியாக வகுப்பில் அமர்ந்திருப்பார்கள்.

அதட்டுவதற்காக வாயை திறந்த அவர், உடனே மூடிக் கொண்டார்.

மாறாக, காதுகளைத் திறந்து கவனிக்க ஆரம்பித்தார்.

லைலா, அமோத், மீரா, லாவண்யா மற்றும் பலரும் மேகங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.“...பஞ்சு போல் இருக்கின்றன…” “…பிறகு எப்படி அவற்றில் இருந்து மழை வருகிறது...” “…மேகங்கள் எப்படி கீழே விழாமல் மிதக்கின்றன...”

முதல்வர் தொண்டையைச் செறுமிக் கொண்டார். பிறகு எல்லோரும் அமைதியாவதற்காக இருமுறை கைத்தட்டினார். “உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்” என்றார்.

அந்த நாள் முதல் சரி வழிப் பள்ளி தன்னுடைய பல விதிகளில் ஒன்றை முதன் முதலாக மாற்றிக்கொண்டது. கேள்விகள் கேட்பதே சரியான வழி என்று முடிவெடுத்தது. பரட்டைத் தலையும் பேருந்தின் ஹாரன் போன்ற குரலும் எல்லையற்ற ஆர்வமும் கொண்ட அந்தச் குட்டிப் பெண்ணுக்குதான் நன்றி சொல்லவேண்டும்.