sarkasukku pona veeru

சர்க்கஸுக்குப் போன வீரு

ஜம்போ-மம்போ சர்க்கஸுக்கு போய்வந்ததும் வீருவுக்கு பல பயங்கரமான யோசனைகள். என்னவென்று படிக்கலாம் வாருங்கள்!

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தாத்தாவும் பாட்டியும், வீருவை ஜம்போ-பம்போ சர்க்கஸுக்கு அழைத்துச் சென்றார்கள். “ஜாலியாக இருக்கும்” என்றனர் இருவரும். வீருவுக்கு, கயிற்றில் நடப்பவர்கள், வித்தைக்காரர்கள், வேடிக்கையான சிகப்பு மூக்கு கோமாளி எல்லாரையும் பார்த்ததில் மகிழ்ச்சி.

“ஹைய்யா” என்று மறுபடி மறுபடி சொல்கிறான்.

அன்றிரவு வீரு சொந்தமாக ஒரு சர்க்கஸ் வைத்திருப்பதாக கனவு காண்கிறான். மறுநாள் காலை தாத்தா பாட்டி, அம்மா அப்பா எல்லாரையும் ‘வீரு சர்க்கஸ்’ பார்க்க அழைக்கிறான். கயிற்றில் நடக்கும் வீரு, உயரமான கயிறில் நடக்கப் போகிறான்.

”விழுந்துவிடுவாய் வீரு. ரொம்ப ஆபத்து” என்று அம்மா எச்சரிக்கிறார்.

அதனால் வீரு கயிற்றை தரையில் வைத்து அதன்மீது நடக்கிறான். எல்லாரும் கைத்தட்டுகிறார்கள்.

“நன்றி! நன்றி!” என்கிறான்.

சாகசக்கார வீரு, நெருப்பு வளையத்துக்குள் குதிக்கத் திட்டமிடுகிறான்.

“மேலே நெருப்பு பட்டுவிடும். காயமாகிவிடும் வீரு” என்று அப்பா எச்சரிக்கிறார்.

எனவே சாகசக்கார வீரு ஒரு சாதாரண வளையத்துக்குள் குதிக்கிறான். எல்லாரும் கைத்தட்டுகிறார்கள்.

“நன்றி, நன்றி!” என்கிறான்.

அடுத்து வீரு ஐந்து பந்துகளை ஒரேநேரத்தில் தூக்கிப்போட்டுப் பிடிக்கத் திட்டமிடுகிறான். “பந்து தலையில் விழுந்துவிடும். அடிபட்டுவிடும் வீரு” என்று எச்சரிக்கிறார் தாத்தா.

எனவே வீரு ஒரு பெரிய லட்டைத் தூக்கிப் போடுகிறான். அது நேராக அவன் வாயில் வந்து விழுகிறது. எல்லாரும் கைத்தட்டுகிறார்கள்.

“தன்ன்ன்றி! தன்ன்ன்றி!” என்று லட்டை முழுங்கியபடியே சொல்கிறான்.

அடுத்து வீரு சிங்கத்தை வைத்து வித்தைக்காட்ட முடிவெடுக்கிறான். புத்தகங்களில் கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தைப் பார்த்திருக்கிறான். “நம் வேடிக்கைக்காக விலங்குகளை கூண்டில் அடைக்கக் கூடாது. சிங்கத்துக்கு கோவம் வரும்” என்று எச்சரிக்கிறார் பாட்டி. எனவே வீரு தன் செல்ல நாய் போசோவுடன் கைகுலுக்குகிறான். “நன்றி போசோ” என்கிறான்.

சிவப்பு மூக்குக் கோமாளி வீரு பின்பக்கத்தை ஆட்டிக் காண்பிக்கிறான்.

ஆனால் ‘சரக்’ என அவன் கால்சராய் நழுவி விழுந்துவிடுகிறது. எல்லாரும் சிரிக்கிறார்கள்.

”நல்லா எல்லாரையும் சிரிக்க வைச்ச” என்று பாட்டி பாராட்டுகிறார்.

“என்ன ஒரு சூப்பரான சர்க்கஸ்!” என்று அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா எல்லாரும் சொல்கிறார்கள்.