sarukki vazhukki

சறுக்கி... வழுக்கி…

மலைகளெல்லாம் பனியால் மூடப்பட்டிருக்கின்றன. சகோதரிகள் ஏழு பேரும் வெளியே சென்று விளையாட ஆர்வமாக இருந்தனர். அவர்களுடைய சாகசத்தில் நாமும் பங்கேற்போமா?

- Thilagavathi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நேற்றிரவு பனி பெய்திருக்கிறது, பார்! சூரியன் உதித்ததும், சகோதரிகள் ஏழு பேரும் தங்கள் வீட்டில் விழித்தெழுந்தனர்.

“வாங்க, எல்லோரும் விளையாடப் போகலாம்!” என்றாள் பார்வதி.

“நாம் அந்தச் சரிவில் சறுக்கி விளையாடப் போகிறோமா?” என்று சியா கேட்டாள்.

“ஆமாம்..!” என்று கத்தினாள் ரேசம்.

பார்வதி முதலில் செல்ல ஆயத்தமானாள்.

அவள் தன்னுடைய  பனிச்சறுக்குப் பலகையில் அமர்ந்து கொண்டாள்.

“1...2...3…சறுக்கு!”

பார்வதி தன் கைகளால் உந்தித் தள்ளிக் கொண்டு சரிவில் இலகுவாக சறுக்கிச் சென்றாள். “ஹே..!” என்று வாயெல்லாம் பல்லாக, கத்திக்கொண்டே சென்றாள்.

அடுத்ததாக,ரேசம் மற்றும் சியா இருவரும் ஆயத்தமானார்கள். சியா பதட்டமாக இருந்தாள்.

“என்னுடன் வா” என்று ரேசம் அழைத்தாள்.

அவர்கள் தங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு சரிவில் இறங்கினார்கள். தாங்கள் வைக்கும் அடிகளை எண்ணிக்கொண்டே நடந்தனர். அவர்களின் காலணித் தடங்கள் பனியில் பதிந்தன.

நான்காவதாக, உத்தரா இறங்க ஆயத்தமானாள்.

கீழேயிருக்கும் தனது சகோதரிகளைப் பார்த்தாள். அவளுக்கு பயமேதுமில்லை!

அவள் கவனமாக, சரிவில் மண்டியிட்டு கைகளால் தவழ்ந்து சென்றாள்.

“மிகவும் நன்று! ஒருநாள் நீ உயரமான மலைகளிலும் ஏறுவாய், உத்தரா!” என்று பார்வதி பாராட்டினாள்.

ஐந்தாவதாக, பூர்வா இறங்க ஆயத்தமானாள்.

அவள் குட்டிக்கரணம் போட்டு பனிப்பந்து போல சரிவில் உருண்டு சென்றாள்.

அதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. சகோதரிகள் எல்லோரும் சிரித்தனர்.

ஆறாவதாக வர்ஷா,இறங்க ஆயத்தமானாள்.

அவள் குப்புறப் படுத்துக்கொண்டு மெல்ல சரிவில் வழுக்கிச் சென்றாள்.

திடீரென வானம் கறுத்தது. காற்று வீசத் தொடங்கியது. பனிப்புயல் வரப் போகிறது!

“சிறுமிகளே! எல்லோரும் உள்ளே திரும்பி வாருங்கள்!” என்று அம்மா கூவி அழைத்தார்.

உத்தரா பயப்பட்டாள். அவள் சரிவில் தவழ்ந்து ஏற முயன்றாள். ஆனால் மீண்டும் மீண்டும் வழுக்கி கீழே சென்றாள்.

“நான் அம்மாவிடம் போக வேண்டும்!” என்று அழத் தொடங்கினாள்.

பூர்வா மலை மேலே ஓடி ஏறினாள். அவளது பாதங்கள் உறைபனியில் புதைந்து கொண்டன.

அவளால் அதற்குமேல் ஏற முடியவில்லை. அங்கேயே மாட்டிக் கொண்டாள்!

ரேசமும் சியாவும் சரிவில் ஏற முயன்றனர். ஆனால் அவர்கள் இருவரும் வழுக்கிக்கொண்டு கீழே சென்றனர்.

அய்யோ! இப்போது அவர்கள் என்ன செய்வார்கள்?

நிருத்யா சரிவின் உச்சியில் இருந்தாள்.

அவள்தான் எல்லோருக்கும் மூத்தவள்.

“சற்றுப் பொறுங்கள்!” என்று கத்திக் கொண்டே வீட்டுக்குள் ஓடிச்சென்று ஒரு நீளமான கயிற்றை எடுத்து வந்தாள். கயிற்றின் ஒரு முனையை மரத்தில் கட்டிவிட்டு மறுமுனையை தன்னுடைய சகோதரிகளிடம் வீசினாள்.

“உத்தரா! பயப்படாதே! இந்தக் கயிற்றை கெட்டியாகப் பற்றிக்கொள். நான் உன்னை மேலே இழுக்கிறேன்” என்று கத்தினாள்.

உத்தரா கயிற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

பின்னர், நிருத்யா அவளை சரிவின் உச்சிக்கு இழுத்தாள். ஒவ்வொருவராக மற்ற சகோதரிகளும் மேலே வந்து சேர்ந்தனர்.

“அப்பாடி! நாம் எல்லோரும் வந்து சேர்ந்துவிட்டோம்!” என்றாள் பார்வதி.

ஏழு சகோதரிகளும் வீட்டுக்குள் ஓடினர்.

மீண்டும் பனி பொழியத் தொடங்கியது.

அம்மா, அனைவருக்கும் கெண்டியிலிருந்துசூடான தேநீரை ஊற்றிக் கொடுத்தார்.

என்ன ஒரு சாகச அனுபவம் இன்று அவர்கள் அனைவருக்கும்!

நாம் ஏன் வழுக்குகிறோம்?

இந்தக் கதையில் வரும் ஏழு சகோதரிகளும் ஒரு பனிச்சரிவில் வழுக்கிக்கொண்டு கீழே செல்கின்றனர்; பின் மேலே ஏறுகின்றனர். அவர்கள் நடந்தும், சறுக்கியும், தவழ்ந்தும் மற்றும் உருண்டும் சென்றனர்.

ஏதோ ஒன்று உங்களுடைய உடலுக்கும் தரைக்கும் இடையே செயல்பட்டு உங்களுக்கு நடக்கும் திறனை அளிக்கிறது. அதனை உராய்வு என்று அழைக்கிறோம்.

உராய்வு இல்லை என்றால் உங்களால் நீண்ட நேரம் நிற்கவோ அல்லது நடக்கவோ இயலாது. நமது உடலுக்கும், தரைக்கும் இடையே உராய்வு குறைவாகவோ அல்லது உராய்வு இல்லாமலோ ஆகும்போது நாம் வழுக்கவும் சறுக்கவும் செய்கிறோம்.

பற்றுதல், வழுக்குதல், சறுக்குதல் ஆகிய இந்த வார்த்தைகள் உராய்வோடு தொடர்புடையவை என்று உங்களுக்குத் தெரியுமா?

கீழ்க்காணும் வார்த்தைகளை, படத்தில் உள்ள சிறுமிகள் செய்யும் செயல்களோடு பொருத்துங்கள்.

பற்றுதல்

வழுக்குதல்

சறுக்குதல்