Sathiya Vellam

சத்திய வெள்ளம்

தற்காலச் சூழ்நிலையைப் பிரதிபலிப்பவையும், நடைமுறையை அனுசரிக்கின்றவையும் ஆகிய எழுத்துக்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வருகின்றன என்ற பலருடைய மனத்தாங்கலை என்னுடைய இந்த நாவலின் மூலம் ஓரளவு போக்க முயன்றிருக்கின்றேன். சமகாலத்தின் சமூகப் பொருளாதார அரசியல் பாதிப்புகளால் தனி மனிதனும் மத்தியதர வர்க்கமும், மாணவர்களும் தொழிலாளர்களும் மத்தியதர வர்க்கத்துக்கும் கீழேயுள்ள ஏழைகளும், எப்படி எப்படி எல்லாம் அலைக்கழிக்கப் படுகிறார்கள் என்பதும், அதிகாரம், பதவி, அரசியல் செல்வாக்கு, நிர்வாக இயந்திரங்கள் எல்லாம் எவ்வாறு பயன்படுத்தப் பெறுகின்றன என்பதும் கதைகளிலோ, கற்பனைகளிலோ, இங்கு நம் நாட்டில் மிகவும் குறைவாகவே இடம் பெறுகின்றன. அரசியலாலும், அதிகார துஷ்பிரயோகத்தினாலும் பாதிக்கப்படாத முனைகளே இன்று தேசத்தில் இல்லை என்றாலும், தமிழ் எழுத்தாளர்களில் பலர் அவற்றோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு படும் கதைகளையும் நாவல்களையும் புனைந்து எழுதத் தயங்குகிறார்கள். அப்படி எழுதுகிறவர்களையும் எழுத முயல்கிறவர்களையும் கூடப் பயத்தோடும், பரிதாபத்தோடும் நோக்குகிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை. அரசியல் சமூக ப்ரக்ஞையுள்ள கேரள எழுத்தாளர்களோ, வங்க எழுத்தாளர்களோ, மராத்தி எழுத்தாளர்களோ இந்தப் பயமும், தயக்கமும் அற்றவர்களாக இருக்கிறார்கள். தமிழ் எழுத்துலகில் மட்டும் ஏன் இந்தத் தயக்க நிலை என்று தெரியவில்லை. கலையைப் படைப்பதற்கும், இரசிப்பதற்கும் நிர்ப்பயமான மனநிலை வேண்டும். அடிமை நாட்டில் கலை வளர்ச்சி இல்லாமற் போவதற்கு இதுதான் காரணமோ என்று தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் நிர்ப்பயமான கலை இலக்கிய வளர்ச்சி பெருக வேண்டும். எழுத்தாளனின் மனவுணர்கள் சுற்றுப்புறத்து அரசியல் பொருளாதார சமூக நிலைமைகளால் பாதிக்கப்பட வேண்டும். காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அப்போதுதான் உருவாகும். அப்படி உருவான ஒரு துணிவான தீவிரமான சமகாலத்து நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சமூக நாவல்தான் 'சத்திய வெள்ளம்'. 1972 ஜூலை முதல் 1973 ஏப்ரல் வரை கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த இந்த நாவல் இப்போது நூல் வடிவில் வெளிவருகிறது. இந்த நாவலை, தொடர்கதையாக வேண்டி வெளியிட்ட கல்கி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்களுக்கு, இப்போது என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முன்னுரை

தற்காலச் சூழ்நிலையைப் பிரதிபலிப்பவையும், நடைமுறையை அனுசரிக்கின்றவையும் ஆகிய எழுத்துக்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வருகின்றன என்ற பலருடைய மனத்தாங்கலை என்னுடைய இந்த நாவலின் மூலம் ஓரளவு போக்க முயன்றிருக்கின்றேன். சமகாலத்தின் சமூகப் பொருளாதார அரசியல் பாதிப்புகளால் தனி மனிதனும் மத்தியதர வர்க்கமும், மாணவர்களும் தொழிலாளர்களும் மத்தியதர வர்க்கத்துக்கும் கீழேயுள்ள ஏழைகளும், எப்படி எப்படி எல்லாம் அலைக்கழிக்கப் படுகிறார்கள் என்பதும், அதிகாரம், பதவி, அரசியல் செல்வாக்கு, நிர்வாக இயந்திரங்கள் எல்லாம் எவ்வாறு பயன்படுத்தப் பெறுகின்றன என்பதும் கதைகளிலோ, கற்பனைகளிலோ, இங்கு நம் நாட்டில் மிகவும் குறைவாகவே இடம் பெறுகின்றன. அரசியலாலும், அதிகார துஷ்பிரயோகத்தினாலும் பாதிக்கப்படாத முனைகளே இன்று தேசத்தில் இல்லை என்றாலும், தமிழ் எழுத்தாளர்களில் பலர் அவற்றோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு படும் கதைகளையும் நாவல்களையும் புனைந்து எழுதத் தயங்குகிறார்கள். அப்படி எழுதுகிறவர்களையும் எழுத முயல்கிறவர்களையும் கூடப் பயத்தோடும், பரிதாபத்தோடும் நோக்குகிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை. அரசியல் சமூக ப்ரக்ஞையுள்ள கேரள எழுத்தாளர்களோ, வங்க எழுத்தாளர்களோ, மராத்தி எழுத்தாளர்களோ இந்தப் பயமும், தயக்கமும் அற்றவர்களாக இருக்கிறார்கள். தமிழ் எழுத்துலகில் மட்டும் ஏன் இந்தத் தயக்க நிலை என்று தெரியவில்லை. கலையைப் படைப்பதற்கும், இரசிப்பதற்கும் நிர்ப்பயமான மனநிலை வேண்டும். அடிமை நாட்டில் கலை வளர்ச்சி இல்லாமற் போவதற்கு இதுதான் காரணமோ என்று தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் நிர்ப்பயமான கலை இலக்கிய வளர்ச்சி பெருக வேண்டும். எழுத்தாளனின் மனவுணர்கள் சுற்றுப்புறத்து அரசியல் பொருளாதார சமூக நிலைமைகளால் பாதிக்கப்பட வேண்டும். காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அப்போதுதான் உருவாகும். அப்படி உருவான ஒரு துணிவான தீவிரமான சமகாலத்து நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சமூக நாவல்தான் 'சத்திய வெள்ளம்'. 1972 ஜூலை முதல் 1973 ஏப்ரல் வரை கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த இந்த நாவல் இப்போது நூல் வடிவில் வெளிவருகிறது. இந்த நாவலை, தொடர்கதையாக வேண்டி வெளியிட்ட கல்கி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்களுக்கு, இப்போது என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நாவலின் வாசகர்கள் வேறெந்தப் பொழுது போக்கு நவீனத்தாலும் அடைய இயலாத புதுவிதமான உணர்வுகளையும், அனுபவங்களையும் சிந்தனைக் கிளர்ச்சிகளையும் இதன் மூலம் நிச்சயமாக அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு இம்முன்னுரையை முடிக்கின்றேன்.

வணக்கம்.

அன்புடன், நா. பார்த்தசாரதி

கதை முகம்

இன்னும் சில நாட்களில் நம்முடைய இந்திய சுதந்திரத்திற்கு இருபத்தைந்து வயது நிறையப் போகிறது. அந்நியர்களிடமிருந்து விடுதலைப் பெற்றுக் கால் நூற்றாண்டு முடியப் போகிறது என்றாலும் நமக்காக நம்மிடையில் நம்மவர்களிடம் இருந்தே நாம் பெற வேண்டிய விடுதலைகள் இன்னும் பல உள்ளன. மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் சந்திர போஸும் தொடங்கிய போராட்டங்கள் முடிந்து விட்டது போல் தோன்றுகின்றன. ஆனால், இன்னும் அவை முடியவில்லை. அதிகாரம், ஆணவம், பதவி வெறி, சுயநல நஞ்சு, வறுமைப் பிடி ஆகியவற்றிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இங்கே இன்னும் விடுதலை பெறத் துடித்துக் கொண்டிருப்பது உண்மை.

பணமே அதிகாரமாகவும் செல்வமாகவும் இருந்த காலம் மாறி அதிகாரமே பணமாகவும் செல்வமாகவும் இருக்கிற காலம் இப்போது கண்ணெதிரே மிகவும் பச்சையாகத் தெரிகிறது. இவற்றை எதிர்த்து, நேற்றும் இன்றும் போராட்டங்கள் நிகழ்ந்தன. நிகழ்கின்றன. நாளையும் நிகழலாம். அதிர்ஷ்ட வசமாக இன்றைய போராட்டங்கள் இளைஞர்களின் கரங்களில் வந்து விட்டன. தொழிலாளிகளின் கரங்களிலும் விவசாயிகளின் கரங்களிலும் அறிவாளிகளின் நினைவிலும் அவை வந்திருப்பதே ஒரு பெரிய மாறுதலாகும். 'மூத்த பொய்கள் யாவும் தகர்ப்போம்' - என்று மகாகவி பாரதி வேறோர் இடத்தில் கூறியபடி மூத்த பொய்களை எல்லாம் தகர்க்கும் தார்மீகக் கோபமும் ஆவேசமும் செயல் திறனுமுள்ள இளைஞர்களை இன்று நாம் மாணவ சமூகத்தில் தான் பார்க்கிறோம்.

இது இளைஞர்களின் காலம். இளைஞர்கள் எதையும் ஆற்றவும், மாற்றவும் முடிந்த காலம். இளைஞர்களும் மாணவர்களும் தான் இன்று தீமைகளை எதிர்த்து, உள்நோக்கம் இன்றி நியாயங்களுக்காகப் போராடுகிற அளவற்ற யுவசக்தியைப் பெற்றிருக்கிறார்கள். அதிகார ஆசை, பதவிப் பித்து, சுரண்டல், ஆதிக்க வெறி, ஆகியவை நான்கு புறமும், பூத கணங்களைப் போல சூழும் போதெல்லாம் அவற்றை எதிர்த்துப் பொங்கும் சத்தியப் பெருக்கின் முதல் ஊற்றுக் கண் இன்று மாணவர் உலகிலும், கல்லூரிப் பல்கலைக் கழகங்களின் எல்லையிலும் தான் இருக்கிறது. அப்படித் தற்காலப் பல்கலைக்கழக எல்லையில் நடைபெறும் மாணவ வாழ்வைப் பற்றிய சமூக நாவல் இது. இந்த மண்ணில் எப்போதோ யுகயுகாந்தரங்களுக்கு முன் குருட்சேத்திரப் போர்க்களத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுவே பாண்டவர்களுக்காகச் சத்திய வெள்ளம் பொங்கித் தணிந்தது. பின்பு நம் காலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்கும், மகாத்மா, நேரு போன்ற தேச பக்தர்களுக்கும் நடுவே மற்றொரு சத்திய வெள்ளம் பொங்கி வடிந்து சுதந்திரப் புதுமை பூத்தது. இதோ இன்னொரு சத்திய வெள்ளத்தைத் தான் துடிப்பும், துணிவும், நெஞ்சுரமும், நேர்மையும், மிக்க மாணவ சமூகம் இந்த நாவலில் பொங்கச் செய்கிறது.

இன்றைய இளைஞர்கள் எதையும் சுற்றி வளைத்து நினைப்பதில்லை. நேராக நினைக்கிறார்கள். நேராகப் புரிந்து கொள்கிறார்கள். நேராகப் பேசுகிறார்கள். 1940-க்கும் 52க்கும் இடையே இங்கு இருந்த இளைஞர்களின் மனநிலை வேறு. 52க்கும் 67க்கும் இடையே இருந்த இளைஞர்களின் மனநிலை வேறு. 67க்குப் பின்னர் வரும் இன்றைய இளைஞர்களின் மனநிலை வேறு. இன்றைய இந்திய இளைஞன் தன் நாட்டை விஞ்ஞான, சமூக, பொருளாதார வளர்ச்சி பெற்ற உலக நாடுகளோடு ஒப்பிட்டுச் சிந்திக்கும் வாய்ப்புக்களை அதிகமாகப் பெற்றிருக்கிறான். நேற்றைய மாணவன் ஒருவேளை தன் சொந்த எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய மாணவன் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டி இருக்கிறது. சிந்திக்க வேண்டியிருக்கிறது. தன் எதிர்காலம் நாட்டின் எதிர்காலத்தையும் அதன் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையும் பொறுத்ததாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் அளவு கூட அறிவும் சிந்தனையும் விசாலமடையாத எந்த அரசியல்வாதியும் இன்று அவனை ஏமாற்றி விட முடியாது. தங்கள் வசதிக்காக அவனைக் கிணற்றுத் தவளையாகவே இருக்கச் செய்ய இப்போது யார் முயன்றாலும் அது பலிக்காது. தலைமுறை இடைவெளி (ஜெனரேஷன் கேப்) கிணற்றுத் தவளை மனப்பான்மையை எதிர்க்கும் குணம், வேலையில்லாத் திண்டாட்டம், இவை இன்றைய இந்திய இளைஞனின் பிரச்சினைகள்.

இந்த மாணவருலகப் பிரச்சினைகளோடு வெகு நாட்களுக்கு முன் நீங்கள் எனது 'பொன் விலங்கு' நாவலில் கண்ட அதே மல்லிகைப் பந்தலைச் சில மாறுதல்களோடும், பல வளர்ச்சிகளோடும் இந்த நாவலில் மறுபடியும் காண்கிறீர்கள்.

இன்றைய மாணவர்கள் கற்கிறார்கள். பலவற்றை அவர்களே கற்பிக்கவும் செய்கிறார்கள். ஆசிரியர்களும், அரசாங்கங்களும், சமூகமும், பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும், இன்றைய இளைஞர்களுக்குத் தெரிவிப்பை தவிர இன்றைய இளைஞர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியவையே அதிகமாக இருக்கும் என்ற நினைவோடு இந்த நாவலைப் படிக்க வேண்டுகிறேன்.

நா. பார்த்தசாரதி

9, ஜூலை 1972

முதல் அத்தியாயம்

பாண்டியன் விடுதி அறைக்குத் திரும்பும் போது காலை மணி எட்டே முக்கால். சுதந்திர தின பரேடும் கொடியேற்றமும் எட்டரை மணிக்கே முடிந்து விட்டன. என்.சி.சி. உடைகளைக் கழற்றி மாட்டிவிட்டு உடுத்திக் கொண்டு வெளியே கிளம்புவதற்கு ஏதாவது கிடைக்குமா என்ற சந்தேகத்தோடு வேஷ்டி சட்டைகளைத் தேடிய போது கைப் பக்கத்தில் சற்றே கிழிந்திருந்த ஒரு கதர் அரைக்கைச் சட்டையும் வேஷ்டியும் தான் பெட்டியில் மீதமிருந்தன. பல்கலைக்கழகத்தின் கிழக்குப் பக்கத்து வாயிலின் அருகே காம்பவுண்டுச் சுவரை ஒட்டிச் சலவைக் கடை வைத்திருக்கும் 'ஹில்டாப் டிரை கிளீனர்ஸில்' கதர்த் துணிகளைக் கிழிப்பதில் மகிழ்ச்சியடைகிற சிலர் நிரந்தரமாக இருப்பதைப் பாண்டியன் அங்கே வந்த நாளிலிருந்து கவனித்திருக்கிறான். இதற்காகச் சென்ற ஆண்டில் அவனும் வேறு சில மாணவ நண்பர்களும் 'ஹில்டாப் டிரை கிளீனர்ஸ்' உரிமையாளர் தங்கப்பனிடம் சண்டை கூடப் போட்டிருந்தார்கள். அந்தச் சண்டை கூட இப்போது நினைவு வந்தது.

காலை ஒன்பதரை மணிக்குச் சைக்கிள் கடை அண்ணாச்சி அவனையும் வேறு சில மாணவர்களையும் வரச் சொல்லியிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி பல்கலைக்கழகமாக மாறிய காலத்திலிருந்து அண்ணாச்சி கடை என்பது ஓர் அடையாளமாக - ஓர் இயக்கமாக, ஒரு சார்புள்ள தேசிய மாணவர்களிடையே பெயர் பெற்றிருந்தது. மாணவர்களுடைய நிறைகுறைகள், இயக்கங்கள், போராட்டங்கள் எதுவாயிருந்தாலும் அண்ணாச்சிக்கும் அதில் பங்கு இருக்கும். அண்ணாச்சி ஒரு விநோதமான மனிதர். அவருடைய கடையில் முருகன் படத்துக்கு அருகிலேயே நேரு படமும், விநாயகர் படத்துக்கு அருகிலேயே காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் படங்களும் இருக்கும். வெள்ளிக்கிழமை வாராந்தர பூஜையின் போது கடவுளுக்குச் சூட தீபாராதனை செய்கையில் இந்தத் தலைவர்களின் படங்களுக்கும் சேர்த்தே தீபாராதனை செய்வார். அவர் வெட்டரிவாள் மீசையும், பயில்வான் உடம்புமாக அவரைப் பார்க்கும் போது ஏற்படுகிற பயம், அந்த மீசையின் நடுவே வெண்பற்கள் தெரியச் சிரித்தபடி, "வாங்க தம்பீ!" என்று அவர் வரவேற்கும் போது மகிழ்ச்சியாக மாறிவிடும். அண்ணாச்சி கடையின் பின்புறம் மூங்கில் கழிகளால் தென்னோலைத் தடுப்புச் செய்த ஒரு சிலம்புக் கூடமும் உண்டு. அதில் காலை மாலை வேளைகளில் சில மாணவர்களுக்கு அண்ணாச்சி சிலம்பமும் மல்யுத்தமும் சொல்லித் தருவது வழக்கம். அண்ணாச்சியின் முழுப் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவருடைய முழுப் பெயர் உக்கிர பாண்டியத் தேவர் என்று பாண்டியன் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தான். ஆனாலும் அவரை அந்த முழுப் பெயர் சொல்லிக் கூப்பிட்டவர் யாரையும் அவன் பார்த்ததில்லை.

பல்கலைக்கழகத்துக்கு வந்த பின் கடந்த இரண்டாண்டுகளில் அண்ணாச்சி கடைக்கு அவர் கூப்பிட்டனுப்பியும், கூப்பிட்டனுப்பாமலும் அவன் பலமுறை சென்றிருக்கிறான். அங்கே போவதில் மகிழாத மாணவர்களே அந்த வட்டத்தில் கிடையாது. பெயர்தான் சைக்கிள் கடையே தவிர நியூஸ் பேப்பர் வியாபாரம், மலைக் குளிருக்குக் கவசம் போன்ற முரட்டுக் கம்பளிகள் நாள் வாடகைக்குக் கொடுப்பது, வெற்றிலைப் பாக்கு, சிகரெட், சோடா கலர் போன்ற பெட்டிக் கடைப் பொருள்களின் விற்பனை எல்லாமே அங்கு உண்டு.

அண்ணாச்சி கடைக்குப் போனால் தனக்குப் பிடித்ததும் தன்னைப் பிடித்ததுமாகிய கருத்து ஒற்றுமை உள்ள பல மாணவர்களை அங்கே சந்திக்கலாம் என்று தெரிந்திருந்தும் இன்று மட்டும் அவன் சிறிது தயங்கினான். தயக்கத்துக்குக் காரணம் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலுக்கு முதற்படியான தமிழ் அசோஸியேஷன், எகனாமிக்ஸ் அசோஸியேஷன், பாட்டனி அசோஸியேஷன் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட அசோஸியேஷன்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். இனி அந்தப் பிரதிநிதிகள் கூடிப் பல்கலைக் கழக மாணவர்கள் பேரவைக்கு ஒரு தலைவனையும், துணைத் தலைவனையும், ஒரு செயலாளனையும், துணைச் செயலாளனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அண்ணாச்சியும் மாணவ நண்பர்களும் தன்னைச் செயலாளனாக நின்று போட்டியிடச் சொல்லி வற்புறுத்துவார்களோ என்ற பயம் தான் அன்று அவர் கடைக்குப் போவதிலிருந்து பாண்டியனைத் தயங்கச் செய்தது. ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஒரு 'ரெஸிடென்ஷியல் யுனிவர்ஸிடியில்' மாணவர் தலைவனாகவோ, செயலாளனாகவோ இருப்பதிலுள்ள சிரமங்களை அந்த இரண்டாண்டுகளில் பாண்டியன் மிக நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான். அண்ணாச்சிக்கும் பல்கலைக் கழகத்துக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் அந்தப் பல்கலைக்கழக எல்லையில தேசிய சக்தி வலுவிழந்து விடாமல் பாதுகாக்கும் முரட்டுப் பாதுகாவலராக அவர் விளங்கி வந்தார். பல மாணவர்களைப் பல சந்தர்ப்பங்களில் அண்ணாச்சி காப்பாற்றியிருக்கிறார்; உதவியிருக்கிறார்.

தயக்கத்தோடு தயக்கமாக அறையிலிருந்து புறப்படும் போது இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு ஜூலை மாதத்து முன்னிரவில் தான் அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நாளன்று, முதல் முதலாக அண்ணாச்சி கடையில் தஞ்சம் அடைந்து பாதுகாப்புப் பெற்ற பழைய நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டான் பாண்டியன்.

விடுமுறைக்குப் பின் பல்கலைக்கழகம் திறந்து சில நாட்களே ஆகியிருந்தன. புது அட்மிஷன்கள் இன்னும் முடியவில்லை. பாண்டியன் அன்றுதான் பி.யூ.சி. என்னும் புதுமுக வகுப்பில் இடம்பெற்று, 'நியூ ஹாஸ்டல்' பதினெட்டாவது எண்ணுள்ள அறையில் தங்கியிருந்தான். ஹாஸ்டல் ரிஜிஸ்டரில் பதிந்து கொண்டு அவனை அறைக்கு அனுப்புவதற்கு முன் அவனுடைய பேதைமை நிறைந்த முகத்தைப் பார்த்து அன்பும் அநுதாபமும் சுரந்ததாலோ என்னவோ எச்சரித்து அனுப்பினார் வார்டன்.

"தம்பீ! நான் சொல்வதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதே. உன் நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன். சீனியர் மாணவர்களிடம் சகஜமாகவும் நேச பாவத்துடனும் பழகத் தெரிந்து கொள். 'இந்தப் பல்கலைக்கழகத்திலுள்ள என்ஜினீயரிங், மெடிகல், விவசாயப் பிரிவுகள் உடபட எதிலும் 'ராகிங்' என்ற பெயரில் புதிய மாணவர்களிடம் பழைய மாணவர்களோ, பழகிய மாணவர்களோ எந்தக் குறும்பு செய்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்' என்று ரிஜிஸ்திரார் கையெழுத்துடன், நோட்டீஸ் போர்டில் அறிக்கை தொங்குகிறது. ஆனால், அந்த அறிக்கையை மதித்து, அதன்படியே சீனியர் மாணவர்கள் நடந்து கொள்வார்கள் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. மேலும் 'ஓரியண்டேஷன் டே' கொண்டாடுவதற்கு முன் யாரையும் யாரும் எதற்காகவும் கண்டிக்க முடியாது. இதெல்லாம் நீயாகப் பார்த்து அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இரண்டொரு நாளைக்கு வேதனையாகத்தான் இருக்கும். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும். முதலிலேயே ஆத்திரப்பட்டு நீ என்னிடமோ, ரிஜிஸ்திராரிடமோ 'கம்ப்ளெயிண்ட்' செய்தால் நாங்கள் சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர்களைக் கூப்பிட்டு விசாரிப்போம். ஆனால் அப்படி எங்களிடம் புகார் செய்வதும் உன்னோடு இருக்கும் சீனியர் மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதும் உன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அதன் மூலம் நீ அவர்களை உன் நிரந்தர எதிரிகளாக்கிக் கொண்டு விடுகிறாய். பார்த்துச் சமாளித்துக் கொள். சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்திக் கொண்டு பின்னால் சிரமப்படாதே. உன் அறையில் ஏற்கெனவே சி. அன்பரசன் என்கிற பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவன் இருக்கிறான்."

'ராகிங்' பற்றி ஏற்கனவே ஊரில் சக நண்பர்களிடம் நிறையக் கேள்விப் பட்டிருந்தான் அவன். அப்பாவியான புதிய மாணவர்களும், பயந்த சுபாவமுள்ளவர்களும் கூச்சமுள்ளவர்களுமே அதற்குப் பலியாவதுண்டு என்று தன் ஊரிலிருந்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் படிக்கப் போய் விடுமுறைக்கு வரும் மாணவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தான் பாண்டியன். இப்போது இந்த வார்டன் அநாவசியமாக அதை மிகைப்படுத்தித் தன்னை எச்சரிப்பதாகத் தோன்றியது அவனுக்கு.

அவனிடம் வார்டன் பதினெட்டாம் நம்பர் அறைக்கான இரண்டாவது சாவியைக் கொடுத்திருந்தார். 'நியூ ஹாஸ்டல்' என்ற அந்த விடுதி மலைச் சரிவில் இருந்தது. அறைக்குள் தன் பெட்டி படுக்கை - பொருள்களள வைத்துவிட்டு அவன் ஊர் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட போது மாலை மூன்று மணி.

ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போன்ற ஐரோப்பிய நாட்டு மலை நகரங்களை நினைவூட்டுவதாயிருந்தது மல்லிகைப் பந்தல். கண்ணாடி கண்ணாடியாக ஏரிகளும், பூத்துக் குலுங்கும் பூங்காக்களும், சுற்றிலும் மேகம் மூடிய நீலமலைகளும், குப்பை கூளங்கள் அடையாத அழகிய தார் ரோடுகளும், காற்றில் வெப்பமே இல்லாத குளிர்ச்சியும் அவனுக்குப் புதுமையாயிருந்தன. ஏரி, ஏரியைச் சுற்றிய சாலைகள், கடை வீதி, நகரம், இவை தவிர பல்கலைக் கழகக் கட்டிடங்களும், விடுதிகளும், பாட்டனி பிரிவைச் சேர்ந்த பொடானிகல் கார்டனும், பூங்காக்களும், நீச்சல் குளமுமாக யுனிவர்ஸிடி காம்பஸின் அறுநூறு ஏக்கர் நிலப்பரப்பிலும் மற்றொரு தனி நகரமே இருப்பது போல் தோன்றியது. குளிர் நடுக்கவே, இரவில் ஸ்வெட்டரும் கம்பளியும் இல்லாமல் தூங்க முடியாது போலிருந்தது. பிளவர்ஸ் கார்னரில் இருந்த 'உல்லன் ஷாப்' ஒன்றில் போய்க் கம்பளியும் ஸ்வெட்டரும் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினான் பாண்டியன். மலை நகரமாகையினால் சீக்கிரமே இருட்டிவிட்டது. அவன் திரும்பிய போது அறை திறந்திருந்தது. விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இரண்டு மூன்று மாணவர்களின் அரட்டைக் குரல்களும், வெடிச் சிரிப்புகளும், கும்மாளமும் அறையை அதிரச் செய்து கொண்டிருந்தன.

பாண்டியன் அமைதியாக உள்ளே நுழைந்து தன் கட்டிலில் கம்பளி ஸ்வெட்டர் அடங்கிய பொட்டலத்தை வைத்துவிட்டுத் திரும்பி இன்னும் தனக்கு அறிமுகமாகாத மற்ற மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தினான்.

மற்ற மூவரும் பாண்டியனுக்குப் பதில் வணக்கம் செலுத்தாததோடு ஒரு கொசுவைப் பார்ப்பது போல் அவனை அலட்சியமாகப் பார்த்தனர். அந்த மூவரில் ஒருவன் தான் சி. அன்பரசனாக இருக்க வேண்டும் என்றும் மற்ற இருவரும் வேறு அறையில் இருந்து வந்திருக்க வேண்டும் என்றும் சுலபமாக அநுமானம் செய்ய முடிந்தது. பாண்டியன் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. சுபாவமாகவே அவர்களிடம் பழக முயன்றான்.

"நான் பாண்டியன். புதுமுக வகுப்பில் புதிதாகச் சேர்ந்திருக்கிறேன்" - என்று தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்டு குலுக்குவதற்காக அவர்களை நோக்கி வலது கையை நீட்டினான் அவன். முதல் மாணவன் தன் பெயர் கலையழகன் என்று சொல்லிக் கைகுலுக்கிவிட்டு, இரண்டாமவனையும் மூன்றாமவனையும் பார்த்துக் குறும்புத்தனமாகக் கண்ணடித்து ஏதோ குறிப்புக் காட்டினான். இரண்டாமவன் தன் பெயர் மனோகரன் என்று சொல்லி கைகுலுக்கி விட்டு அடுத்தவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சைகை செய்தான். மூன்றாமவன் தன்னை அன்பரசன் என்று அறிமுகம் செய்து கொண்டு குலுக்குவதற்கு நீட்டப்பட்ட பாண்டியனின் கையை அப்படியே பிடித்து இழுத்து அவனை ஒரு பல்டி அடிக்க வைத்தான். நல்ல வேளையாகப் பாண்டியன் உயரமாகவும் பலமுள்ளவனாகவும் இருந்ததால் மோவாய்க் கட்டை தரையில் மோதிப் பல் உடைபடாமல் பிழைத்தது.

அவ்வளவில் பாண்டியன் விழித்துக் கொண்டான். அவர்கள் தன்னை வம்புக்கு இழுக்கப் போகிறார்கள் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது. வார்டன் செய்த எச்சரிக்கையும் நினைவு வந்தது. முடிந்த வரை பொறுத்துப் போவதென்று தனக்குள் முடிவு செய்து கொண்டான் அவன். ஆனால் அவர்களோ அவன் பொறுமையை அளவு கடந்து சோதித்தார்கள். அவனை வலிந்து துன்புறுத்தினார்கள்.

அன்பரசன் தன் சட்டைப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து உடனிருந்தவர்களுக்குக் கொடுத்து விட்டுத் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு தீப்பெட்டியை பாண்டியனிடம் நீட்டி ஒரே தீக்குச்சியில் மூன்று பேருக்கும் பற்ற வைத்து விடும்படி சொன்னான். பாண்டியன் சிரித்துக் கொண்டே அதைச் செய்து முடித்து விட்டான்.

அன்பரசன் தன்னுடைய சிகரெட்டைப் பாதி புகைத்ததும் பாண்டியனிடம் நீட்டி, "இந்தா... மீதியை நீ பிடி" என்று அதிகாரக் குரலில் சொன்னான். பாண்டியன் முகத்தில் சிரிப்பு மறைந்தது. புருவங்கள் கூடி நெற்றி மேடு சுருங்கியது.

"வழக்கமில்லை... நன்றி..."

"இதுவரை இல்லையானால் என்ன? இப்போது வழக்கப்படுத்திக் கொள்."

"அவசியமில்லை."

"உன்னிடம் இருக்கும் வழக்கங்கள் எல்லாம் புனிதமானவையும் அல்ல; இல்லாத வழக்கங்கள் எல்லாம் மோசமானவையும் அல்ல. நீ இந்தச் சாக்குத் துணி வேஷ்டியும் கோணிப்பைச் சட்டையும் போடுகிறாய் என்பதால் எங்களைக் காட்டிலும் சிறந்தவனாகிவிட மாட்டாய்" என்று பாண்டியன் அணிந்திருந்த கதரைக் கிண்டல் செய்தான் அன்பரசன்.

"நான் அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லையே?" என்று பாண்டியன் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே அன்பரசன் தன் விரலிடுக்கில் இருந்த பாதி சிகரெட்டைப் பலாத்காரமாகப் பாண்டியனின் வாயில் உதடுகளுக்கிடையே திணிக்க முற்பட்டான். பாண்டியன் அதைப் பறித்து ஜன்னல் வழியே வீசி எறிந்ததும் அன்பரசன் அடிபட்ட புலிபோல் சீறிக் கொண்டே அறைச் சுவரில் ஒட்டியிருந்த தனக்குப் பிடித்தமான தலைவர் ஒருவரின் படத்தைச் சுட்டிக் காட்டி, "நீல் டௌன்..." என்று கூப்பாடு போட்டு அந்தப் படத்துக்கு முன் பாண்டியனை மண்டியிடச் சொன்னான். படத்துக்குக் கீழே, மானம், மரியாதை, மதிப்பு என்று மூன்று வார்த்தைகள் பெரிதாக எழுதப் பட்டிருந்தன.

"மிஸ்டர் அன்பரசன்! மானமுள்ள எவனும் பிறரை அவமானப் படுத்த மாட்டான். மரியாதை தெரிந்த எவனும் பிறரை அவமரியாதைப் படுத்த மாட்டான். மதிப்பை விரும்புகிற எவனும் பிறரை அவமதிக்க மாட்டான்."

"நான் உன்னிடம் உபதேசம் கேட்கவில்லை, தம்பீ! மண்டியிடு என்றால் மண்டியிட வேண்டும்! அவ்வளவு தான்."

"முடியாது என்றால் முடியாது."

அவ்வளவில் ஹாஸ்டல் உணவு விடுதி மணி அடித்தது. சீனியர் மாணவர் யாவரும் பாண்டியனை விட்டு விடாமல் ஏதோ சிறைப்பட்ட கைதியை இழுத்துப் போவது போல் உணவு விடுதிக்கு உடன் கூட்டிக் கொண்டு போனார்கள். சாப்பிடும் போது ஒரே கலாட்டாவாக இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும் அன்பரசன் தன் கால் செருப்புக்களைக் கழற்றி, "இந்தா இதை ரெண்டையும் வலது கையில் எடுத்துக் கொண்டு, 'லேக் ரோடில்' மூன்று தரம் சுற்றி விட்டு வா. நீ சுற்றுகிறாயா இல்லையா என்று பார்க்க நாங்கள் மூன்று பேரும் உன் பின்னாலேயே வருவோம்," என்று பாண்டியனை அதட்டினான். பாண்டியின கையில் செருப்புக்களையும் திணித்து விட்டான். மூன்று முரட்டு உருவங்கள் அவனை நெருக்கிப் பிழிந்து விடுவது போல் தொடர்ந்தன. பல்கலைக்கழகக் காம்பவுண்டுக்கு அப்பால் வெளியே மெயின் ரோட்டுக்கு வந்ததும் அந்தச் செருப்புக்கள் இரண்டையும் அப்படியே அன்பரசன் மூஞ்சியில் வீசி எறிந்து விட்டு அருகிலிருந்த சைக்கிள் கடைக்குள் புகுந்து விட்டான் பாண்டியன். முரட்டு மீசையும் பயில்வான் போன்ற தோற்றமுமாகச் சைக்கிள் கடையில் உட்கார்ந்திருந்த அண்ணாச்சியை அடைக்கலம் நாடி நடந்ததைச் சொன்னான் பாண்டியன். சைக்கிள் கடையில் தென்பட்ட படங்களும் அண்ணாச்சியின் சுதேசிக் கோலமும், 'இந்த மனிதர் நமக்கு உதவுவார்' என்ற நம்பிக்கையைப் பாண்டியனுக்கு அளித்திருந்தன. 'விடுதி அறையில் சுவரிலிருந்த படத்தைக் காட்டி மண்டியிடச் சொன்னார்கள்' என்ற விவரத்தைக் கேட்டதும் அண்ணாச்சியின் கண்கள் சிவந்தன. அவரது மீசை துடித்தது.

"ஓகோ!... இது மேற்படி ஆட்கள் வேலைதான். ஒவ்வொரு வருசமும் நம்ம பையன்களிலேயே யாராவது ஒருத்தனை இப்படி வம்பு பண்றதே அவங்களுக்கு வழக்கமாப் போச்சு... நீங்கள் பேசாம இப்பிடி உட்காருங்கள் தம்பீ! இனிமே இதை நான் கவனிச்சுக்கிறேன்" என்று அவனுக்குப் பதில் கூறிய அண்ணாச்சி, கடைப்பையன் ஒருவனைக் கூப்பிட்டு ஏதோ சொல்லி, சைக்கிளில் துரத்தினார். அதற்குள் அன்பரசன் இருபது முப்பது மாணவர்களைக் கட்சி சேர்த்துக் கொண்டு அந்தக் கடையின் மேல் படையெடுப்பது போல் வந்துவிட்டான். ஆனால் என்ன ஆச்சரியம்! கடை வாசலில் அண்ணாச்சி நிற்பதைக் கண்டதும் அந்தக் கூட்டம் பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டதைப் பாண்டியன் பார்த்தான்.

ஆவேசமாக வந்த அன்பரசன், "அந்தப் பையனை வெளியிலே விட்டுடுங்க. வீணா நீங்க இதிலே சம்பந்தப்படாதீங்க..." என்று அண்ணாச்சிக்குக் கோரிக்கை விடுத்தான். அண்ணாச்சி மீசையை முறுக்கிவிட்டுச் சிரித்துக் கொண்டார்.

"அதுக்கில்லே தம்பீ! ஏதோ படத்தைக் காமிச்சு அதுக்கு முன்னாலே மண்டி போட்டுக் கும்புடணுமின்னிங்களாமே, அதை இந்தத் தம்பி மட்டும் தனியாவா செய்யிறது?... கூட வந்து மண்டி போடறதுக்கு இன்னும் கொஞ்சம் பேரை வரச் சொல்லியிருக்கேன். இருந்து அவங்களையும் கூட்டிக்கிட்டுப் போங்க..." என்று அண்ணாச்சி சொல்லி முடிப்பதற்குள்ளே திமுதிமு திமுவென்று நானூறு ஐநூறு பேரடங்கிய ஒரு பெரிய மாணவர் கூட்டம் அங்கே வந்து அன்பரசன் குழுவினரை வளைத்துக் கொண்டது. பாண்டியனைக் கொடுமைப்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பின்பே அன்பரசன் குழு அங்கிருந்து தப்ப முடிந்தது. அப்போது மணவாளன் என்ற என்ஜினீயரிங் மாணவரை அண்ணாச்சி பாண்டியனுக்கு அறிமுகப்படுத்தி, "இங்கே இவரைப் போல் நம்ம ஆளுங்க நிறைய இருக்காங்க தம்பீ! பயப்படாதீங்க... உங்களை யாரும் எதுவும் பண்ணிட முடியாது. ஆனா அந்தப் பய ரூம்லே இனிமே நீங்க இருக்க வேண்டாம். நம்ம வகை சீனியர் மாணவர் ஒருத்தரையே தன் ரூமுக்கு உங்களை அழைச்சிக்கிட ஏற்பாடு பண்ணறேன்" என்று சொல்லி உடனே வந்திருந்த மாணவர்கள் மூலம் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார் அவர்.

அன்று இரவே அவன் அறை மாறிவிட்டான். வார்டனிடம் நடந்ததைச் சொல்ல ஒரு பெரும் மாணவர் கூட்டமே சென்றதால் அவர் அந்த வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. மறுநாள் காலையிலேயே புது மாணவர்களிடையே அவனை ஹீரோ ஆக்கியிருந்தது இந்த நிகழ்ச்சி. இதற்காக அண்ணாச்சிக்கு அவன் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருந்தான்.

இப்போது இவ்வளவு காலத்துக்குப் பின் மீண்டும் நினைத்த போது கூட அந்தப் பழைய சம்பவம் நேற்று நடந்தது போல் நினைவிருந்தது. பி.யூ.சி. முடிந்து பி.ஏ. முதலாண்டும் முடிந்து பல்கலைக்கழகமும், ஊரும் நண்பர்களும் நன்றாகப் பழக்கமான நிலையிலும் அன்று அண்ணாச்சி செய்த அந்த உதவியைப் பசுமையாக நன்றியோடு நினைவு வைத்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.

அவன் அண்ணாச்சி கடைக்குப் போய்ச் சேர்ந்த போது கொடியேற்றி முடிந்து எல்லாருக்கும் சுதந்திர தின 'ஸ்வீட்' வழங்கிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி. சைக்கிள் கடையின் பின்பக்கத்து அறையில் மாணவர்கள், நாலைந்து மாணவிகள் உட்படக் கூட்டமாக அமர்ந்திருந்தனர். பாண்டியனும் உள்ளே போய் அமர்ந்தான். பாண்டியனைப் பார்த்ததுமே ஒருவன் ஆரம்பித்தான்.

"இந்த ஆண்டின் மாணவர் பேரவைச் செயலாளர் வந்தாச்சு!"

உடனே ஒரு பெரிய கைத்தட்டல் ஒலி எழுந்தது. அங்கிருந்த எல்லாரையும் அவனுக்குத் தெரியும். பெண்களில் மட்டும் ஒரே ஒரு புதுமுகம் - முகம் நிறைய மறைக்கும் கண்ணாடி அணிந்து அமர்ந்திருந்தாள். யாரென்று தெரியாத அவள் அத்தனை பேர் நடுவிலும் வண்ணங்கள் நிறைந்த தொரு பட்டுப் பூச்சிப் போல் தோன்றினாள். வந்து அமர்ந்ததுமே அவள் யார் என்று அறியும் ஆவல் இருந்தும் ஒரு பெண்ணைப் பற்றி முந்திக் கொண்டு அவசரப்பட்டு விசாரிப்பது மற்ற மாணவர்களிடையே தன்னைக் கேலிக்கு ஆளாக்கிவிடும் என்ற தயக்கத்தில் பேசாமல் இருந்தான் பாண்டியன்.

அண்ணாச்சி உள்ளே வந்து அவனிடம் ஒரு தாளைக் காட்டி, "எல்லா மாணவர்களும் நீங்க தான் வரணும்னு ஆசைப்படறாங்க தம்பீ! இதிலே முன்மொழிபவர், வழி மொழிபவர் எல்லோரும் கையெழுத்துப் போட்டாச்சு. நீங்க கையெழுத்துப் போட வேண்டியதுதான் பாக்கி" என்று அபேட்சை மனுவை நீட்டினார்.

"என்னாலே முடியாது அண்ணாச்சி. எனக்கு இது ஸெகண்ட் இயர். ஸெகண்ட் இயர், தேர்ட் இயர் பூரா படிப்பிலே கவனம் செலுத்தலாம்னு இருக்கேன்."

"படிப்பிலே நல்லா கவனம் செலுத்துங்க... ஆனா அதோட இதுவும் இருக்கட்டும்."

"நீதான் இருக்கணும் பிரதர்."

"உன்னை நம்பி இங்கே ஒரு பெரிய இயக்கமே காத்துக்கிட்டிருக்கு அப்பா! நீயே மாட்டேன்னா எப்படி?"

"இல்லை. தயவு செய்து என்னை விட்டுடுங்க. நான் எந்த வம்பும் வேண்டாம்னு பார்க்கிறேன்."

"பிளீஸ் அக்ஸெப்ட் இட் அண்ட் ஸைன்."

அண்ணாச்சி நாமினேஷன் தாளை அவன் முன் வைத்து, "நான் இவ்வளவுதான் சொல்லலாம். இனி உங்க பாடு, உங்க நண்பர்கள் பாடு" என்று சொல்லி விட்டு முன்புறம் கடையைக் கவனிக்கப் போய்விட்டார். தாளில் வழி மொழிபவர்களின் பெயர்களை வரிசையாகப் படித்துக் கொண்டு வந்தவன், 'கண்ணுக்கினியாள்' என்ற பெயரைப் படித்ததும் அது யாராக இருக்கும் என்ற வினா மனத்தில் எழப் பெண்கள் பக்கம் நிமிர்ந்து பார்த்தான். தனக்கு ஏற்கெனவே அறிமுகமான பெண்களின் பெயர்களைத் தவிர மீதமிருந்தவள் அந்தப் புதியவள் தான். அவள் பெயர் தான் கண்ணுக்கினியாளாக இருக்க வேண்டுமென்று பாண்டியன் புரிந்து கொண்டான். அந்தப் பெயருக்கும் அவள் தோற்றத்துக்கும் இருக்கிற பொருத்தத்தை அவன் வியந்து கொண்டிருக்கும் போதே அதற்குப் பொருத்தமில்லாத ஓர் அதிகப் பிரசங்கித்தனமான காரியத்தை அவள் செய்தாள்.

ஒரு தந்தப் பதுமை துள்ளி எழுந்திருப்பது போல தன் இடத்திலிருந்து எழுந்து தன்னுடைய முன் கைகளை அணி செய்த வளையல்களில் இரண்டைக் கழற்றி, "மிஸ்டர்! ஒண்ணு, இதில் கையெழுத்துப் போட்டுக்குடுங்க... அல்லது இந்த வளையல்களைக் கையிலே போட்டுக் கொண்டு வெளியில் புறப்படுங்கள்" என்று அவன் முன் அவள் வளையல்களை எறிந்த போது ஒரே கைதட்டலும், சிரிப்பொலியும், விசில்களும் எழுந்தன. பாண்டியனுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. அவள் செய்த காரியம் அவனை ஓரளவு அவமானப்படுத்தி விட்டாலும் அவளது அந்தத் துணிச்சல் வியப்புக் கொள்ளக் கூடியதாக இருந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு மறுபேச்சுப் பேசாமல் தலையைக் குனிந்த நிலையிலிருந்து நிமிராமலே அந்தத் தாளில் 'சுபாஷ் சந்திர பாண்டியன் என்னும் எஸ்.சி. பாண்டியன், இரண்டாவது ஆண்டு பி.ஏ. என்பதற்கு நேரே கையெழுத்திட்டு முன் மொழிந்து எழுதியிருந்த மாணவனிடம் அதைக் கொடுத்தான் பாண்டியன். அவன் இணங்கியதைப் பாராட்டும் வகையில் மீண்டும் கர ஒலி எழத் தொடங்கியது. அவளோ இப்போது ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு கைத் தட்டுவதை அவன் கவனித்தான். அண்ணாச்சியும் உள்ளே வந்து அவனைக் கட்டித் தழுவிப் பாராட்டுத் தெரிவித்தார். அந்தக் குழுவின் அப்போதைய மகிழ்ச்சி எல்லையற்றதாயிருந்தது.

சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்கள். மாணவிகளில் கூட இரண்டு மூன்று பேர் போய்விட்டார்கள். பாண்டியனுக்கு நெருக்கமான சில மாணவிகளும், அந்தக் கண்ணுக்கினியாளும், அவளுடைய சக மாணவி ஒருத்தியுமே அங்கே மீதமிருந்தனர். நண்பன் ஒருவன் பாண்டியனின் காதருகே மெதுவாகச் சொன்னான்.

"ஒரு காலத்திலே மதுரையில் டிராமா கம்பெனி நடத்திய பிரபல கந்தசாமி நாயுடுவின் மகள். மதுரையிலேயே பி.யு.சி. முடித்துவிட்டு நம்ம பல்கலைக் கழகத்தில் ஃபைன் ஆர்ட்ஸ் ஃபேகுல்டியில் 'டிப்ளமா இன் டிராமா' படிக்க வந்திருக்கிறாள். பெயர் கண்ணுக்கினியாள். நம் அண்ணாச்சி, நாயுடு குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர்."

"பெயரே நட்சத்திர அந்தஸ்தில்தான் இருக்கிறது" என்று நண்பனின் காதருகே முணுமுணுத்தான் பாண்டியன். அப்போது அவளே அவனருகில் வந்து, அவன் தேர்தலில் நிற்க இணங்கியதைப் பாராட்டும் வகையில், "நன்றி" என்றாள். அவனும் விடவில்லை.

"நீங்கள் கொடுத்திருக்கும் அன்பளிப்பும் என்னிடம் பத்திரமாக இருக்கும். அதை எப்போது திருப்பித் தரவேண்டுமோ, அப்போது திருப்பித் தருவேன்!"

"ஓ! வளையல்களைச் சொல்கிறீர்களா?" அவள் அவன் உள்ளத்தைச் சூறையாடுவது போல் சிரித்தாள். உரையாடலை வேறு பக்கத்தில் திருப்ப விரும்பினான் பாண்டியன். "இந்த ஊர் குளிர்ப் பிரதேசம். இவ்வளவு பெரிய 'ஸன் கிளாஸ்' இங்கே தேவைப்படாது."

"இது ஸன் கிளாஸ் இல்லை. கோ... கோ... கிளாஸ், அழகுக் கண்ணாடி. ஒரு ஃபேஷன்."

"தங்கச்சி ஒரு டிராமாவே ஆடினதாகக் கேள்விப் பட்டேனே?" என்றார் அண்ணாச்சி.

"டிராமாவாலே தான் அண்ணன் வழிக்கு வந்தாரு" என்றான் உடனிருந்த மாணவன்.

பாண்டியன் அவளைக் கேட்டான்.

"இது என்ன ஸப்ஜெக்ட்னு இதிலே வந்து சேர்ந்தீங்க?"

"ஏன்? ரொம்ப நல்ல ஸப்ஜெக்ட்னு ஆசைப்பட்டுத் தான் சேர்ந்திருக்கேன். கல்கத்தாவிலே ரவீந்திர பாரதி சர்வகலாசாலையில் இந்த சப்ஜெக்ட் ரொம்ப நாளா இருக்கு. அவ்வளவு தூரம் என்னை அனுப்ப அப்பாவுக்கு மனசு இல்லை. இங்கே சேர்த்திருக்காரு."

"உங்க நாயினாவுக்கு வாழ்க்கையே இதுதானே அம்மா?" என்று அண்ணாச்சி கந்தசாமி நாயுடுவைப் பற்றிக் குறிப்பிட்டார்.

"நானும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்" என்றான் பாண்டியன்.

அண்ணாச்சி ஒரே உற்சாகத்தில் இருந்தார். "தம்பீ! அந்தக் காலத்திலே இவங்க நாயினா கம்பெனியிலே சம்பூர்ண மகாபாரத நாடகத்திலே நானு பீமசேனன் வேஷம் கட்டியிருக்கேன். அப்ப இந்தக் கண்ணு சின்னப் பாப்பாவா இருந்திச்சு."

'கண்ணுக்கினியாள்' என்ற முழுப் பெயரை உரிமையோடு 'கண்ணு' என்று செல்லமாக அழைத்ததிலிருந்து அண்ணாச்சிக்கு அந்தக் குடும்பத்தின் மேலிருந்த பாசத்தைப் பாண்டியன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவள் அழகோ அவனை நேராகவும் ஓரக் கண்களாலும் திரும்பத் திரும்பப் பார்க்கச் செய்தது.

சிறிது நேரத்தில் அவளும் சக மாணவியும் விடை பெற்றுக் கொண்டு விடுதிக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். ஹாஸ்டலிலிருந்து வெளியே சென்று திரும்பும் விதிகள் பெண்கள் பிரிவில் மிகவும் கண்டிப்பானவை. அன்று சுதந்திர தினமாகையால் காலை பதினொரு மணி வரை அனுமதி இருக்கும். பத்தே முக்காலுக்கு கண்ணுக்கினியாளும் அவள் தோழியும் புறப்பட்டதற்கு அதுதான் காரணம் என்று பாண்டியன் புரிந்து கொண்டான். அவள் போனதும் அண்ணாச்சியை அவன் கேட்டான்:

"அண்ணாச்சி! இதென்ன உங்க நாயுடு 'கண்ணுக்கினியாள்'னு ரொம்பப் பழைய காலத்துப் பேரா வச்சிருக்காரே? ஏதோ சரித்திரக் கதையிலே வர்ற மாதிரியில்ல இருக்கு? இந்தப் பேர் நல்லாத் தெரியலியே...?"

"ஆமாங்க தம்பீ! அது நாயினாவோட கிராமத்துக் குலதெய்வமான அம்மன் பேரு! நாயினா செல்லமா 'கண்ணு'ன்னுதான் கூப்பிடுவாரு."

அவனுக்கும் மீதமிருந்த சில மாணவர்களுக்கும், அண்ணாச்சி பையனை அனுப்பி, எதிர் வரிசையிலிருந்த டீக்கடையிலிருந்து தேநீர் வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போதே ஓர் ஆள் வந்து, "சார், ஹேண்ட்பில்ஸ் பத்தாயிரமும் அடிச்சாச்சு" என்று ஒரு பெரிய பாக்கெட்டைக் கொண்டு வந்து அண்ணாச்சிக்கு முன்னால் வைத்தான். அண்ணாச்சி பாக்கெட்டைப் பிரித்து அவனுடைய தேர்வுக்கு வாக்குகளை வேண்டும் அந்த முதல் நோட்டீஸை அவனிடமே வழங்கினார். அவன் திகைப்பு அடங்குவதற்குள், "தம்பீ! மன்னிச்சுக்குங்க. நீங்க சம்மதிப்பீங்கன்னு நம்பி நானும் உங்க சிநேகிதன்மாருங்களுமாகச் சேர்ந்து, முந்தா நாளே நோட்டீஸ், போஸ்டர் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டோம்" என்று சொல்லிச் சிரித்தார் அண்ணாச்சி.

இரண்டாவது அத்தியாயம்

பல்கலைக் கழகம் வந்த பின் மல்லிகைப் பந்தல் நகரமே ஓரளவு பெரிதாகியிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் மறைந்த மல்லிகைப் பந்தல் கல்லூரி நிறுவனர் பூபதி அதை நிறுவிய போது அது என்றாவது ஒரு நாள் பல்கலைக் கழகமாக வேண்டும் என்ற இலட்சியத்தோடு தான் நிறுவியிருந்தார். அந்தக் கனவு இன்று நனவாகியிருந்தது. பூபதி மறைந்த பின் மஞ்சள்பட்டி ஜமீந்தார் அந்தக் கல்லூரி நிர்வாக போர்டின் தலைவராக வந்தார். ஜமீந்தார் ஒரு பெரிய கள்ளநோட்டு வழக்கில் சிக்கிச் சிறை செல்ல நேர்ந்த பின் அரசாங்கமே குறுக்கிட்டு நிர்வாக போர்டின் மீதுள்ள பல குற்றங்களை விசாரணை செய்து அதைக் கலைத்துவிட்டு மூவர் கொண்ட ஒரு குழ்வைக் கல்லூரி ஆட்சிப் பொறுப்புக்காக நியமித்தது. அந்த ஆண்டிலேயே மல்லிகைப் பந்தல் கல்லூரியைப் பார்வையிட வந்த 'யுனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன்' அந்த ஊரும் கல்லூரியும் ஒரு பெரிய ரெஸிடென்ஷியல் யுனிவர்ஸிடிக்கு மிக மிகப் பொருத்தமாக இருக்கும் என்று சிபாரிசு செய்யவே மாநில அரசாங்கம் தாமதம் செய்யாமல் சட்டசபையில், 'மல்லிகைப் பந்தல் யுனிவர்ஸிடி ஆக்ட்' என்று ஒரு பில் கொண்டு வந்து நிறைவேற்றியது. யுனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் வழங்கிய ஒரு பெருந்தொகையோடு மாநில அரசாங்கமும் ஒரு பெருந்தொகை வழங்கிக் கல்லூரிக் கட்டடங்களையும், விடுதிகளையும், பட்டமளிப்பு விழா மண்டபம், செனட் ஹால் ஆகியவற்றையும் மெடிகல், என்ஜீனியரிங், விவசாயம் ஆகிய பிரிவுகளையும் கட்டி முடித்தது. அதன் முதல் நிறுவனர் பூபதியின் நினைவாகப் பட்டமளிப்பு விழா மண்டபம், அட்மினிஸ்டிரேடிவ் பில்டிங் ஆகியவை அமைந்திருந்த பிரதான மாளிகைக்கு பூபதி ஹால் என்ற பெயரும் சூட்டப்பட்டது. பூபதியின் சொத்துக்களில் பெரும் பகுதி ஏற்கெனவே அந்தக் கல்லூரி டிரஸ்டைச் சேர்ந்தவையாக இருந்தது. அவருடைய ஒரே மகள் பாரதி போஸ்ட் - கிராஜுவேட் படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்காக அமெரிக்கா போனாள். நடுவே அவள் திரும்பியபோது வீடு உள்பட மீதமிருந்த சொத்துக்களையும் பல்கலைக் கழகத்துக்கே எழுதிக் கொடுத்துத் தந்தை பெயரில் ஒரு 'ஷேர்' ஏற்பாடு செய்து விட்டு மீண்டும் வெளிநாட்டுக்கே போய்விட்டாள். பூபதியின் அழகிய பங்களா பல்கலைக் கழக வைஸ்-சான்ஸலர் மாளிகை ஆகியது. மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் புதிய புதிய துறைகளை அமைப்பதில் அதன் முதல் வைஸ்-சான்ஸலரும், சிண்டிகேட்டும் பெரும் பணி புரிந்தார்கள். இரண்டு ஆண்டுகள் அந்தப் பல்கலைக் கழக வளர்ச்சியில் பொற்காலத்தைப் படைத்தனர்.

மொழிப் போராட்டம் வந்தது. அந்தப் பல்கலைக் கழகத்தையும் அது பாதித்தது. மொழிப் போராட்டத்தை அடுத்து வந்த பொதுத் தேர்தலில் அந்தப் போராட்டத்தை முன் நின்று நடத்திய கட்சிகள் வென்றன. ஆனால் மாறிய ஆட்சி மிகச் சில மாதங்களிலேயே மாணவர்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டது. பொருளாதாரத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் வெறும் உணர்ச்சியை மட்டும் பரவச் செய்து தங்களை ஏமாற்றி விட்டார்களோ என்ற சந்தேகம் இளைஞர்கள் உள்ளத்தில் வேரூன்றியது. அதன் விளைவாக மொழிப் போராட்டத்தை ஆதரித்த இளைஞர்களே அந்தப் போராட்டத்தின் தலைவர்கள் ஆளும் ஆட்சியை முழு மூச்சோடு எதிர்க்க நேரிட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் தான் பாண்டியன் மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் மாணவனாகச் சேர்ந்திருந்தான். அந்தப் பல்கலைக் கழகத்தில் சேரும் போது அவன் இவற்றையெல்லாம் அறியாத ஒரு நாட்டுப்புறத்து மாணவனாகத்தான் சேர்ந்திருந்தான். இரண்டாண்டுப் படிப்பும், தன்னை ஒரு தேசிய நல நோக்கம் கொண்ட மாணவர்கள் பலரைச் சந்திக்க நேர்ந்ததும், அண்ணாச்சியின் நட்பும் அவனைப் பெரிதும் வளர்ச்சி அடையச் செய்திருந்தன. அவனும் சக மாணவர்களும் அந்த இரண்டாண்டில் அவ்வப்போது நடத்திய உரிமைப் போர்கள் எல்லாம் வெற்றியடைந்திருந்தன. போராட்டங்களும், பிரச்னைகளும் ஒருபுறம் இருந்தாலும் படிப்பைக் கோட்டை விடாமல் கவனித்துக் கொண்டான் அவன்.

'முதல் ஆண்டு எப்படியிருந்தாலும் டிகிரி எக்ஸாமினேஷனுக்கு முந்திய ஆண்டிலிருந்தே பொதுக் காரியங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்' என்ற முடிவோடு தான் அந்த ஆண்டு ஊரிலிருந்து புறப்பட்டு வந்தான் பாண்டியன். ஆனால் அது பலிக்காமல் போயிற்று. அவனை மாணவர் பேரவைச் செயலாளன் ஆக்குவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பிறபகல் மூன்று மணிக்கு மேலாகியிருந்தது. அறையில் உடன் தங்கும் மாணவர் பொன்னையா, சுதந்திர தின விடுமுறையையும், அடுத்து வந்த சனி, ஞாயிறு விடுமுறைகளையும் கழிக்க முந்திய தினமே வார்டனிடம் அனுமதி பெற்று ஊருக்குப் போயிருந்தான். அறையிலே கட்டிலில் தனியாகப் படுத்திருந்த பாண்டியன் எதிரே ஜன்னல் வழியே பல்கலைக் கழக மணிக்கூண்டு டவரின் உச்சியில் பறக்கும் புத்தம் புதிய மூவர்ணக் கொடியைப் பார்த்தான். உயர்நிலைப் பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டுகளில் நடைபெற்ற மொழிப் போராட்டம் அவனுக்கு நினைவு வந்தது. சாலையில் போகிற கார்களை ஒன்று விடாமல் நிறுத்தி 'ஒழிக ஒழிக' என்று எழுதியதும், தபாலாபீஸ் போர்டில் இந்தி எழுத்துக்களின் மேல் தார் பூசியதும், இரயில்களை மறித்ததும் லாரிகளை நிறுத்திக் கூட்டம் கூட்டமாக ஏறிச் சென்று பக்கத்து ஊர்ப் பள்ளி மாணவர்களையும் மொழிப் போரில் குதிக்கச் செய்ததும், அந்தப் போரில் சிலர் மாண்டதும், சிலர் தீக்குளித்ததும், சில போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. கார்களை நிறுத்திப் பெட்ரோல் வாங்கியதும், உண்டியல் குலுக்கிப் பணம் வசூலித்ததும் இன்னும் மறந்துவிடவில்லை.

இன்று அறிவும் மனமும் விசாலமடைந்த பின் அவற்றை விடப் பெரிய காரியங்களைப் பற்றிச் சிந்திக்கப் பழகியிருந்தான் அவன். கோடிக்கணக்கான மக்களின் வறுமையைப் போக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபடவும், வேலையில்லாமலிருக்கும் பட்டதாரிகள் வேலை பெறவும், அகில இந்திய - அகில உலக மனப்பான்மைகள் வளரவும் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள், அவனைப் போன்ற மாணவர்கள். காலம் உணர்விலிருந்து அறிவுக்கு மாறியிருந்தது.

பள்ளிக்கூட நாட்களில் தான் இருந்த நிலையை இன்று திரும்ப நினைத்தபோது சிரிப்பு வந்தது அவனுக்கு. ஒவ்வொரு புத்தகத்திலும் முதல் இரண்டாம் பக்கங்களிலும், 'தமிழ் வாழ்க' என்று எழுதுவது அந்த நாட்களில் அவன் வழக்கம். இப்போது அப்படி எழுதும் வழக்கம் விட்டுப் போயிற்று. தமிழை வளர்க்க வேண்டும், வளர்ச்சியின் மூலமாகவே அதை வாழச் செய்ய முடியும் என்ற புதிய மனப்பான்மை இப்போது அவனுள் வந்திருந்தது. வளராத எதுவும் வாழாது என்றும், ஒன்றை வாழ வைப்பதற்கு 'அது வாழ்க' என்று எழுதிவிடுவது மட்டும் போதாது என்றும், கல்லூரி வாழ்வு அவனுக்குக் கற்பித்திருந்தது. வாழ்க, ஒழிக கோஷங்கள் பற்றிய பள்ளிக்கூட நாட்களின் மனப் போக்கும் இப்போது அவனிடம் இல்லை. இந்தச் சில ஆண்டுகளில் நிறைய நூல்களையும், உலக அனுபவத்தையும் அவன் கற்றிருந்தான். புதிய அறிவுகளின் உயரத்தில் நின்று கீழே திரும்பிப் பார்த்த போது பழைய அறியாமைகளின் இருண்ட பள்ளம் தெளிவாகத் தெரிந்தது. பள்ளி இறுதி நாட்களிலும், அதை ஒட்டிய காலத்திலும் எதுகை மோனையோடு பேசுவது, எழுதுவதில் அவனுக்கு ஒரு வெறியே இருந்தது. அப்படிப் பேசிய சில தலைவர்களை அவன் இமிடேட் செய்து அப்படியே பேசப் பழகியும் இருந்தான்.

"தகுதியும் மிகுதியும் வாய்ந்த தலைமையாசிரியர் அவர்களே! கூட்டத்தின் ஒரு பகுதியாக அமர்ந்திருக்கும் ஆன்று அமைந்து அடங்கிய ஆசிரியப் பெருமக்களே!" என்றெல்லாம் தான் அப்போது பேசத் தொடங்குவான் அவன். கருத்துக்களை வற்புறுத்தும் பதங்களை விடப் பதங்களை வற்புறுத்திக் கருத்துக்களை அவற்றில் கரையவிடும் பழக்கமே அப்போது அவனிடமும் மற்றவர்களிடமும் இருந்தது. 'த'வை அடுத்து 'த' வரவும், 'ஆ'வை அடுத்து 'ஆ' வரவும் ஏற்ற பதங்களைத் தேடியே பேசிப் பழக்கமாயிருந்தது. கல்லத்தி மரத்தில் இலைகளிலும், கிளைகளிலும் காய்கள் அப்பிக் கொண்டிருக்கிற மாதிரி வேண்டிய இடங்களில் விவேகத்தோடு அமையாத சொற்களை இட்டு நிரப்பும் அந்த வெறி இப்போது தான் தணிந்திருந்தது. அந்த மாறுதல் தனக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றி உள்ள பல மாணவர்களிடமும் நேர்ந்திருப்பதைப் பாண்டியன் கவனித்திருந்தான். இது ஒரு 'டிரான்ஸிஷன் பீரியட்' என்பது அவனுக்குப் புரிந்திருந்தது.

புதிய காலத்தில் மொழியின் மேல் இருந்த காமம் தணிந்து, அவர்கள் மொழியைக் காரண காரியங்களோடு நேசிக்கப் பழகி விட்டார்கள். சிலர் மட்டும் அன்று கண்ட மேனிக்கு மாறாமலே இன்னும் இருந்தார்கள். சி.அன்பரசனைப் போல எம்.ஏ. வகுப்புக்குப் போன பின்பும் அந்த எதுமை மோனைப் பேச்சு யுகத்திலேயே இன்னும் இருந்த சிலரையும் பாண்டியன் அங்கே கண்டான். விஞ்ஞானப் பொருளாதார வளர்ச்சியோடு மொழி வளர்ச்சியையும் சேர்த்து நினைத்த பலருக்கும், மொழிக்குத் தாலாட்டுப் பாடி, அதைத் தூங்கச் செய்வதே மொழி வளர்ச்சி என்று எண்ணும் சிலருக்கும் நடுவே ஓர் அமைதியான - சில சமயங்களில் ஆர்ப்பாட்டமான சிந்தனைப் போர் இருந்து வந்தது. பல்கலைக் கழக மாணவர்கள் பேரவைத் தேர்தலுக்கான துண்டுப் பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும் கூட இந்த இருவிதமான சிந்தனைப் போக்குகளைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் தென்பட்டன.

அவன் படுக்கையிலிருந்து எழுந்து முகம் கழுவிக் கொண்டு வரக் குளியலறைக்குச் சென்றான். விடுதியின் கோடியிலிருந்த குளியலறைக்குச் சென்றுவிட்டு மீண்டும் அறைக்குத் திரும்பிய போது அங்கே சில மாணவ நண்பர்கள் அவனுக்காகக் காத்திருந்தனர். எல்லோருமாக மெஸ்ஸுக்குச் சென்று காபி குடித்துவிட்டு மீண்டும் அறைக்கே திரும்பி வந்தார்கள்.

"பேரவைச் செயலாளர் பதவிக்கு உன்னை எதிர்த்து யார் யார் போட்டியிடுகிறார்கள் என்று தெரியுமா பாண்டியன்?"

"நான் இன்னும் விசாரிக்கவில்லை. நான் போட்டியிடுவதே இன்று காலையில் தானே உறுதியாயிற்று?"

"உன்னை எதிர்த்து ஓரியண்ட்ஸ் ஸ்டடீஸ் பிரிவில் முதுநிலை முதலாண்டு மாணவன் வெற்றிச் செல்வன் போட்டியிடுகிறான். பேரவைத் தலைவர் பதவிக்கு நம் ஆளாக மோகன்தாசும், அவர்கள் ஆளாக சி.அன்பரசனும் போட்டியிடுகிறார்கள். செயலாளர், கூட்டுச் செயலாளர் பதவிக்கு மேலும் சிலர் உதிரிகளாக நிற்பார்கள் போலிருக்கிறது."

"நிற்கட்டும்... அதனால் நமக்கு ஒன்றும் கவலை இல்லை... மோகன்தாசும், நானும் ஜெயிக்கப் போவது என்னவோ உறுதி..." என்றான் பாண்டியன்.

"வெற்றிச் செல்வனுக்கும், அன்பரசனுக்கும் அவர்கள் கட்சியின் கோட்டச் செயலாளர் மூலம் பண உதவி செய்யப்படுகிறது. மந்திரிகள் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார்கள். போலீஸ், ஆர்.டி.ஓ., வைஸ்-சான்ஸலர் எல்லாரும் பயப்படுகிறார்கள்..."

"நன்றாகப் பயப்படட்டும். எந்தக் கோட்டையைப் பிடித்தாலும் இனி இந்தக் கோட்டையை அவர்களால் பிடிக்கவே முடியாது."

"எங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறது பாண்டியன்! ஆனாலும் நாம் நிறைய வேலை செய்யவேண்டும். நியூ ஹாஸ்டல், ஈஸ்டர்ன் ஹாஸ்டல், மெடிக்கல், என்ஜீனியரிங் ஹாஸ்டல்கள், வேளாண்மைக் கல்லூரி விடுதி எல்லாவற்றுக்கும் போய் நாமே மாணவர்களைப் பார்க்க வேண்டும். பெண்கள் ஹாஸ்டலுக்குத்தான் போக முடியாது. அங்கே நமக்காகப் பிரச்சாரம் செய்யும் வேலையை அண்ணாச்சி, கண்ணுக்கினியாளிடமும் அவள் சிநேகிதிகளிடமும் விட்டுவிட்டார். பழைய வழக்கப்படி இருந்தால் நாம் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது. பாடப் பிரிவுகளின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே வாக்களித்துப் பேரவைத் தலைவனையும், செயலாளனையும் மற்றவர்களையும் தேர்ந்தெடுக்கிற முறையையே சென்ற ஆண்டு வரையில் கடைப்பிடித்தார்கள். இந்த ஆண்டு ஆறாயிரம் விடுதி மாணவர்களுக்கும், ஐந்நூறு மாணவிகளுக்கும், வெளியே நகரிலிருந்தும், சுற்றுப்புற ஊர்களிலிருந்தும் வந்து படிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் நேரடியாகவே 'பாலட் பேப்பர்' கொடுத்து தேர்தல் நடத்தப் போகிறார்களாம். அன்பரசன், வெற்றிச் செல்வன் வகையறா ஆட்கள் வி.சி.யைப் பார்த்துப் பிரஷர் கொடுத்து, வி.சி. ரிஜிஸ்டிராரைக் கூப்பிட்டுச் சொல்லி அதன் பின் இந்தப் புது ஏற்பாடு திடீரென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது."

"இந்த ஏற்பாட்டையே நாம் எதிர்த்துப் போராட முடியும். ஆனால் நாம் இதை எதிர்த்தால் இதை வைத்தே அன்பரசன் குழுவினர் நம்மைப் பற்றி துஷ்பிரச்சாரம் செய்வார்கள். எல்லா மாணவர்களுக்கும் வோட்டளிக்கும் வாய்ப்புக் கிடைப்பதை நாம் எதிர்க்கிறோம் என்று திரித்துப் பிரச்சாரம் செய்வார்கள். அதனால் இதை நாமோ, நம்மவர்களோ எதிர்க்கக் கூடாது."

"நீ எப்போதுமே இப்படித்தான் பாண்டியன்! எதையும் எதிர்க்கக் கூடாதென்கிறாய். இதோ பார்! அவர்கள் வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரத்தில் நம்மைப் பற்றி என்னவெல்லாம் எதிர்த்து எழுதியிருக்கிறார்கள்" என்று சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுப் பிரசுரத்தை எடுத்து நீட்டினான் அந்த மாணவ நண்பன்.

பாண்டியன் அதை வாங்கிப் பார்த்தான். நோட்டீசின் மேற்பகுதியில் 'தமிழ் வெல்க' என்றும் அடுத்து 'மானம் மரியாதை மதிப்பு வாழ்க' என்றும் அச்சிட்டிருந்தது. அதன் கீழே, 'தமிழ்த் துரோகிகளை ஒழித்துக் கட்டத் தங்கத் தமிழகத்தின் சிங்கச் சிறுத்தைகளே ஒன்றுபடுங்கள்! இந்தப் பல்கலைக் கழகம் நமது சொந்தப் பல்கலைக் கழகமாக வேண்டுமாயின் அன்பரசனுக்கும், வெற்றிச் செல்வனுக்கும் வாக்களியுங்கள்' - என்றும் அச்சிடடிருந்ததோடு பெயர் குறிப்பிடாமல் பாண்டியனைப் பற்றியும், மோகன்தாசைப் பற்றியும் பழித்துக் கூறும் வாக்கியங்கள் சிலவும் அச்சிடப்பட்டிருந்தன.

அதைப் படித்துவிட்டுப் பாண்டியன் சிரித்தான். பின்பு அந்தப் பிரசுரத்தைச் சுக்குநூறாகக் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிந்தான்.

"எனக்குத் தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு வருடமும் இதே வாக்கியம். இதே தங்கத் தமிழகம், இதே சிங்கச் சிறுத்தைகள்தான் அவர்கள் துண்டுப்பிரசுரங்களில் எழுதப்படுகின்றன. புதிதாக எதுவுமில்லை."

"தங்கத்தைத்தான் மொரார்ஜி தேசாய் பதினாலுகாரட் ஆக்கி விட்டாரே. இங்கே கூட மல்லிகைப் பந்தலில் நகைப் பட்டறை வைத்திருந்த பத்தர் ஒருத்தர் 'மொரார்ஜி சுண்டல்' என்று மாலை வேளைகளில் பார்க்கில் சுண்டல் வியாபாரம் செய்கிறார்!"

பாண்டியன் குறுக்கிட்டு இடைமறித்தான்.

"அவர்கள் தந்திரத்தைப் பார்த்தீர்களா? சோற்றுக்குத் திண்டாடுகிறவர்களுக்கு நடுவே அவர்கள் தங்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு நடுவே அவர்கள் மொழியின் பழம் பெருமைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்."

இப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பாண்டியனும் நண்பர்களுடன் ஈஸ்டர்ன் ஹாஸ்டலில் அறை அறையாக நேரில் சென்று மாணவர்களைச் சந்தித்து வோட்டுக் கேட்கும் திட்டத்துடன் புறப்பட்டனர். போகிற வழியில் பெண்கள் விடுதிக்கு முன்னாலிருந்த பூங்காவில் தற்செயலாக அவன் கண்ணுக்கினியாளை அவள் தோழிகளோடு சந்திக்க நேர்ந்தது. "அண்ணாச்சி எல்லாம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். பெண்கள் விடுதியில் பிரச்சாரம் முழுவதும் உங்கள் பொறுப்பு" என்றான் பாண்டியனோடு வந்த மாணவர்களில் ஒருவன். அவள் புன்னகையோடு சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையசைத்தாள்.

"நாங்கள் கிழக்கு விடுதியில் மணவர்களைப் பார்க்கப் போகிறோம்" என்று சொல்லிவிட்டுப் பாண்டியன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட இருந்தபோது,

"ஒரு நிமிஷம் இப்படி வாருங்கள்! உங்களிடம் தனியே கொஞ்சம் பேச வேண்டும்" என்றாள் அவள். பாண்டியனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. உடன் நிற்கும் மாணவர்களை விட்டு விட்டு அன்று காலையில் தான் புதிதாக அறிமுகமாகியிருந்த ஒரு மாணவியோடு தனியே பேசப் போவது அந்த மாணவர்களை எப்படி எப்படி உணர வைக்குமோ என்று ஒரு விநாடி கூசினான். அதற்குள் "ஐ திங் ஐயாம் நாட் டிஸ்டர்பிங் யூ" என்று மீண்டும் அவள் குரல் குழையவே, அவன் அவளைப் புறக்கணிக்க அஞ்சி அவளோடு சிறிது தொலைவு நடந்து சென்றான்.

இன்னும் அதிகம் பழகாத ஓர் இளம் பெண்ணோடு நடந்து செல்வதில் வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சி உள்ளே நிறைந்து கொண்டிருந்தது. 'புன்னகையும் நாணமும் இங்கிதப் பேச்சுக்களுமாக எங்கெல்லாம் ஓர் அந்நியமான இளம் பெண் உன்னோடு நடந்து வருகிறாளோ அங்கெல்லாம் உனது உடனடியான சுவர்க்கங்கள் படைக்கப்படுகின்றன' என்று அர்த்தமுள்ள ஓர் ஆங்கிலக் கவிதையை நினைத்துக் கொண்டான் பாண்டியன்.

"காலையில் அண்ணாச்சி கடையில் நடந்ததை நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டிருந்தால் அதற்காக என்னை மன்னித்துவிட வேண்டும்..."

"தவறாக எடுத்துக் கொண்டிருந்தால் தானே?"

"நான் செய்தது அதிகப்பிரசங்கித்தனம் என்று நீங்கள் நினைத்ததாக என் மனதில் பட்டது. அதனால் தான் மன்னிப்புக் கேட்கிறேன்."

"மன்னிப்புக் கேட்கவோ, மன்னிக்கவோ அவசியமில்லாத சின்ன விஷயம் இது..."

"அப்படியில்லை! உங்களுக்கு ரோஷம் ஊட்டி உங்களை எப்படியாவது மாணவர் பேரவைச் செயலாளராகப் போட்டியிடச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில்தான் அதைச் செய்ய நேர்ந்தது..."

"அதிலே தவறில்லை! ஒரு பெண் காரணமாக ஏற்பட்ட ரோஷத்தில்தான் இராமாயணம், பாரதம், சிலப்பதிகாரம் எல்லாமே நடந்திருக்கின்றன. நீங்கள் வளையலைக் கழற்றி எறிந்த அந்த விநாடியில் எனக்கும் கோபம் வந்திருக்கலாம். ஆனால், இப்போது எனக்கு உங்கள் மேல் எந்தக் கோபமும் இல்லை."

"அப்படியானால் நன்றி. அதோடு ஒரு சின்ன வேண்டுகோள்...?"

"என்ன வேண்டுகோள்?"

"இந்தப் பேரவைத் தேர்தல் முடிகிறவரை எங்கே போவதென்றாலும் நீங்கள் தனியே போகக்கூடாது. பத்துப் பன்னிரண்டு மாணவர்களோடு சேர்ந்துதான் போக வேண்டும்."

"ஏன் அப்படி...?"

"அப்படித்தான்! எங்கு பார்த்தாலும் நோட்டீஸ்களில், சுவர்களில், எல்லாம் ஒரே சிங்கமும் சிறுத்தையுமாக இருக்கிறதே?"

"தவறு அவர்களுடையதில்லை! மனிதர்களைப் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது."

அவள் இதைக் கேட்டு அடக்கமுடியாமல் வாய்விட்டுச் சிரித்தள். அப்போது அவள் முகம் மிக மிக இரசிக்கக் கூடியதாயிருந்தது.

மீண்டும் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடை கொடுத்தாள் அவள். பாண்டியன் அவளிடம் சொல்லிக் கொண்டு நண்பர்களோடு போய்ச் சேர்ந்தான். நண்பர்கள் மெல்ல அவனைக் கிண்டினார்கள்.

"காதல், தேர்தல் இரண்டையும் ஒரே சமயத்தில் சமாளிப்பது கஷ்டம் அப்பனே!"

"நீ சொல்வது தவறு! இந்தக் காதலே தேர்தலை ஒட்டித்தானே பிறந்திருக்கிறது!" என்றான் மற்றொரு நண்பன்.

"இந்தப் பெண்ணுக்கு இப்போதே 'டிப்ளோமா இன் டிராமா'வைக் கொடுத்துவிடலாம். மூன்று வருடப் படிப்பு அநாவசியம். சாதாரண விஷயங்களைக் கூட ஒரு 'டிரமடிக் எஃபெக்ட்' கொடுத்து நடத்தி விடுகிறாள் இவள். காலையில் அண்ணாச்சி கடையில் செய்ததும் சரி, இப்போது அண்ணனைத் தனியே கூப்பிட்டதும் சரி, எல்லாம் டிராமாவாகத்தான் இருக்குது."

ஈஸ்டர்ன் ஹாஸ்டல் போகிறவரை அவர்கள் வம்பு ஓயாமல் தொடர்ந்தது. பாண்டியனும் அதற்கு மறுமொழி எதுவும் கூறாமல் சிரித்துக் கொண்டே கூடப் போனான். மாணவர்களை இரவு உணவுக்காக மெஸ்ஸுக்கு அழைக்கும் விடுதி மணி ஒலிக்கிற வரை பாண்டியனும் நண்பர்களும் அறை அறையாக ஏறி இறங்கினர். வரவேற்பு உற்சாகமாக இருந்தது. ஓர் அறையில் மாணவ நண்பர்கள் சிலர் டொயின் நூலில் 'சாக்லேட்'களை முடிந்து ஆரம்போல ஆக்கி அவனுக்கு மாலையாகப் போட்டார்கள். வேறொரு அறையில் இவர்களுக்கு வேண்டிய குறும்புக்கார மாணவன் ஒருவன் பாண்டியனுக்கு திருஷ்டி கழித்தான்.

தன்னுடைய விடுதி உணவு அறைக்குத் திரும்ப இருந்த பாண்டியனையும் அவனுடன் இருந்த மாணவர்களையும் கிழக்கு விடுதி உணவறையிலேயே தங்கள் விருந்தாளியாக வந்து உணவருந்துமாறு அழைத்துச் சென்றார்கள் அவர்கள். ஏதோ படையெடுத்துப் பெரிய ஊர்வலம் போவது போல் அவர்கள் கூட்டமாக உணவறைக்குச் சென்றார்கள்.

மெஸ்ஸில் பரிமாறிய பீன்ஸ் கறி விறகுபோல முற்றியிருந்ததனால் கடிக்கும் போது நார் நாராக வந்தது.

"இந்த ஊரிலிருந்து கீழே உள்ள மூன்று ஜில்லாக்களுக்குத் தளதள என்று அருமையான பீன்ஸ், கேபேஜ், காலிஃப்ளவர் எல்லாம் லாரி லாரியாகப் போகிறது. ஆனால் இதே ஊரில் நம்முடைய ஹாஸ்டலுக்கு மட்டும் எப்படித்தான் இந்த விறகுக்கட்டை பீன்ஸ் கிடைக்கிறதோ, தெரியவில்லை."

குழுவில் ஒரு மாணவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த மெஸ் சூபர்வைஸர் காதில் விழும்படியே இதைச் சொன்னான். உடனே மற்றொரு மாணவன்,

"உனக்குத் தெரியாதா சமாசாரம்? நல்ல பீன்ஸ் கறி வேண்டுமானால் நீ சீஃப் வார்டன் வீட்டிலோ, வி.சி. வீட்டிலோ போய்ச் சாப்பிட வேண்டும். வெஜிடபிள்ஸ் வந்ததும் இளசாகப் பொறுக்கி வார்டனுக்கும் வி.சி.க்கும் அனுப்பி விட்டுத்தானே எல்லாம் நடக்கிறது?" என்றான்.

"ஆமாம் வி.சி.க்கு இளசாகப் பொறுக்கி அனுப்பினால்தான் பிடிக்கும்?" என்று ஒரு மாணவன் குறும்பாக ஆரபிக்கவே சிரிப்பலைகள் ஓயச் சில விநாடிகள் ஆயின.

மெஸ் சூபர்வைஸர் வாயைத் திறக்கவில்லை. அவர்கள் பேசிய எதையும் காதில் போட்டுக் கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவும் இல்லை. எப்படியாவது அவர்கள் சாப்பிட்டு முடித்து வெளியேறினால் போதும் என்று இருந்தது அவருக்கு. பல்கலைக் கழக நிர்வாகம், அவர்களுக்கு முன் அவரை நிமிர்ந்து பார்க்கும்படி வைத்திருக்கவில்லை. அவர்கள் பேசிய ஊழல்கள் அங்கே நடைபெறாமல் இருந்தாலல்லவா அவர் நிமிர்ந்து நின்று அவர்களுக்குப் பதில் கூற முடியும்? அப்படி எல்லாம் நடப்பது அவருக்கே தெரியும். அப்புறம் பதில் பேச என்ன இருக்கிறது? சமூக, தார்மீக, நிர்வாகத் துறைகளில் இளைஞர்களிடம் 'ஆண்டி - எஸ்டாபிளிஷ்மெண்ட்' மனப்பான்மை வளருவதற்குக் காரணமே 'எஸ்டாபிளிஷ்மெண்ட்'களில் மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் கூடத் தெரியும் ஊழல்கள் தான்.

மரக்கட்டையில் நெருப்புப் பற்றுவதை விடப் பஞ்சில் விரைந்து நெருப்புப் பற்றிவிடும். இளைய சமுதாயத்தினரும், மாணவர்களும் பஞ்சு போலிருக்கிறார்கள். வயதானவர்கள் எதிர்க்கத் தயங்கும் அநீதிகளை அவர்கள் உடனே எதிர்க்கிறார்கள். நியாய நெருப்பு உடனே அவர்களைப் பற்றிக் கொதிக்கச் செய்கிறது. வயதானவர்கள் 'நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்' என ஒத்திப் போடுவதை இளைஞர்கள் இன்றே செய்துவிடத் துடிக்கிறார்கள். மூத்தவர்கள் சகித்துக் கொள்ளப் பழகிவிட்ட ஊழல்களை இளைஞர்கள் முழு வேகத்தோடு எதிர்க்கும் காலம் இது என்பது மெஸ் சூபர்வைசருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. பல்கலைக் கழக எல்லையிலே அங்கங்கே நடக்கும் நிர்வாக ஊழல்களைச் சம்பந்தப்பட்ட பல முதியவர்கள் சகிப்புத் தன்மையோடு விட்டு விடுவதைப் பார்த்தபோது, 'சகிப்புத்தன்மை' என்பதே ஒரு பெரிய கோழைத்தனமாகி இருப்பதை அவர் கண்டிருந்தார். அந்த சூபர்வைஸரைப் பாண்டியனுக்கு நன்றாகத் தெரியும். உணவை முடித்துக் கொண்டு போகும் போது அவன் அவரை நோக்கிப் புன்னகை புரிந்தான். அவரும் அமைதியாகப் பதிலுக்கு முகம் மலர்ந்தார். இப்போது அவன் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் நண்பர்கள் அவனை அறை வரை கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள்.

"நமக்கு வேண்டாதவர்களில் விவேகம் உள்ளவர்கள் அதிகம் இல்லாவிட்டாலும் அடியாட்கள் நிறைய இருக்கிறார்கள். அதனால் நீ கவனமாக இருக்க வேண்டும்" என்று போகும்போது ஒரு நண்பன், பல்கலைக் கழகப் பூங்காவில் சந்தித்த சமயத்தில் அவள் எச்சரித்தது போலவே, இப்போது அவனை எச்சரித்துவிட்டுப் போனான். அந்த எச்சரிக்கை அவனுள் அவளை நினைவூட்டிவிட்டது.

அன்றென்னவோ மாலையிலிருந்தே குளிர் அதிகமாக இருந்தது. அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு பாண்டியன் ஸ்வெட்டரை எடுப்பதற்காகப் பெட்டியைத் திறந்தான். இரண்டாண்டுகளுக்கு முன் அந்த ஸ்வெட்டரை வாங்கிய மாலை வேளையும், அன்றைக்குத் திரும்பியதும் அன்பரசன் கோஷ்டியிடம் சிக்கி அவஸ்தைப்பட்டதும் ஞாபகம் வந்தன.

ஸ்வெட்டரைப் போட்டுக் கொண்டு ஜன்னல்களை அடைக்கப் போனபோது பின்புறம் தொலைவில் மலை உச்சியில் எங்கோ நெருப்பு எரிவது அழகாகத் தெரிந்தது. மலையின் கருநீல நெற்றியில் யாரோ தாறுமாறாகக் குங்குமம் வைத்துவிட்ட மாதிரி அந்தத் தீ எரிந்து கொண்டிருந்தது. மலையின் நெற்றியைப் பற்றிய கற்பனையை ஒட்டி அந்தப் பெண் கண்ணுக்கினியாளின் அழகிய நெற்றி ஞாபகம் வந்தது அவனுக்கு. பேரவைச் செயலாளர் பதவியை வெற்றி கொள்ளுமுன் ஓர் அழகிய பெண்ணின் இதயத்தைத் தான் வெற்றி கொண்டிருப்பது மெல்ல மெல்ல அவனுக்குப் புரிந்து கொண்டிருந்தது. தன்னைப் பற்றி நினைக்க, உருக, கவலைப்பட ஒரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம் அவனைப் பூரிக்கச் செய்தது. 'தேர்தல் முடிகிற வரை தனியே போகாதீர்கள்' என்று அவள் அக்கறையாக எச்சரித்ததை எண்ணியபோது அவளோடு பல ஆண்டுகள் பழகிவிட்டது போல் ஒரு கனிவை அவன் அடைந்தான். 'புன்னகையும் நாணமும் இங்கிதப் பேச்சுக்களுமாக எங்கெல்லாம் ஓர் அந்நியமான இளம் பெண் உன்னோடு நடந்து வருகிறாளோ அங்கெல்லாம் உனது சொர்க்கங்கள்...' என்ற நினைவோடு தான் அன்று அவன் தூங்கப் போனான்.

மூன்றாம் அத்தியாயம்

சுதந்திர தினத்தை அடுத்து வந்த இரண்டு விடுமுறை நாட்களும் பிரசாரத்திலும், ஒவ்வொரு விடுதியாகப் போய் மாணவர்களைச் சந்திப்பதிலும் அண்ணாச்சி கடைக்கு எதிரே பொதுக்கூட்டம் போட்டுப் பேசுவதிலும் கழிந்து விட்டன. தலைவனும், பேரவைச் செயலாளனும் ஒத்த நோக்கு உடையவர்களாக இருந்தால்தான் பல்கலைக் கழகத்தில் பல காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதால் பாண்டியன் வோட்டுக் கேட்கும் போது மோகன்தாஸுக்கும் மோகன்தாஸ் வோட்டுக் கேட்கும் போது பாண்டியனுக்கும் சேர்த்தே கேட்டார்கள். பல்கலைக் கழக எல்லைக்குள் மாணவர் பேரவைத் தலைவர், செயலாளர் தேர்தல் சம்பந்தமான எந்தக் கூட்டமும் நடத்தக்கூடாது என்று ரிஜிஸ்திரார் சுற்றறிக்கை அனுப்பிவிட்டதனால் இரு தரப்பு மாணவர்களுமே வெளியே தான் கூட்டம் போட்டுப் பேசியாக வேண்டியிருந்தது. இவர்கள் இந்த வாயிலில் அண்ணாச்சி கடையருகே கூட்டம் போட்டார்கள் என்றால் அவர்கள் அந்த வாயிலில் 'ஹில்டாப் டிரைகிளீனர்ஸ்' அருகே கூட்டம் போட்டார்கள். மாணவர்களின் ஆர்வத்தையும் கூட்டத்தையும் பார்த்தால் பாண்டியனும் மோகன்தாஸும் அமோகமாக வெற்றி அடைந்து விடுவார்கள் என்று தெரிந்தது.

'இந்தத் தேர்தலே நடக்கவிடாமல் பண்ணினாலும் பண்ணுவேனே ஒழிய அந்தப் பயல்களை ஜெயிக்க விட மாட்டேன்' என்று அன்பரசன் கறுவிக் கொண்டிருப்பதாகப் பாண்டியன் காதுக்குத் தகவல் எட்டியது. முதலில் இது சும்மா வேடிக்கைக்காகச் சொல்லப் படுகிறது என்று தான் பாண்டியனும் மோகன்தாஸும் நினைத்தார்கள். ஆனால் திங்கள்கிழமை மாலையில் அவர்கள் அண்ணாச்சி கடைக்குப் போனபோது அண்ணாச்சியே அதை உறுதிப் படுத்தினார்.

"தம்பீ! கோட்டச் செயலாளர் மினிஸ்டருக்கு ஃபோன் பண்ணி மினிஸ்டர் 'லெவலிலே' வி.சி.க்குப் பிரஷர் கொடுக்கிறாங்க. 'தேர்தல் நடந்தால் பல்கலைக் கழக எல்லையிலே அமைதியும் ஒழுங்கும் குலையும்'னு காரணம் சொல்லித் தேர்தலையே ஒத்திப் போட ஏற்பாடு நடக்குது."

"சும்மா இது ஒரு ரூமரா? அல்லது நம்பலாமா? இது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது அண்ணாச்சி?"

அண்ணாச்சி சுற்று முற்றும் பார்த்துவிட்டுத் தணிந்த குரலில் அவனுக்கு மறுமொழி சொன்னார்:

"மந்திரி வி.சி.கிட்டவும், ஆர்.டி.ஓ.கிட்டவும் பேசினதைக் கேட்ட ஒருத்தரே வந்து சொன்னாரு. டெலிபோன் எக்சேஞ்சிலே நம்ம ஆளுங்க நிறைய இருக்காங்க தம்பீ! ஆனா இதை நீங்க உங்களுக்கு தெரிஞ்சதா வெளியிலே காட்டிக்கிட வேண்டாம். அவங்க வாயாலேயே வரட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்."

"இந்த வி.சி. கோட்டச் செயலாளருக்கே நடுங்குவார்! மந்திரியே ஃபோன் பண்ணிவிட்டால் கேட்கணுமா?" என்று கொதிப்போடு சொன்னான் மோகன்தாஸ்.

"இன்னிக்குச் சாயங்காலம் 'கண்ணு' வரேன்னிச்சு. இன்னும் காணலியே?" என்று பாண்டியனைப் பார்த்துச் சொன்னார் அண்ணாச்சி.

"நான் கூடப் பார்த்து ரெண்டு நாளாச்சு அண்ணாச்சி. அவுங்க ஹாஸ்டல்லே அது நல்லா உழைச்சு நமக்காக ஒருத்தர் விடாமல் 'கான்வாஸ்' பண்ணிச் சொல்லியிருக்குன்னு கேள்விப்பட்டேன்."

"யாருதான் நல்லாக் கான்வாஸ் பண்ணலே? எட்டாயிரத்துச் சொச்சம் பேருலே ஏழாயிரம் பேர் நமக்கு ஆதரவா இருப்பாங்கங்கிறது உறுதி. யாருமே 'கான்வாஸ்' பண்ணாட்டியும் இது உறுதி. ஆனால் பாவிங்க எதுவுமே நடக்காமப் பண்ணிடுவாங்க போலே இருக்கே...? ஒரே அக்ரமமாவில்ல இருக்கு?" என்று அண்ணாச்சி சொல்லிக் கொண்டிருந்த போதே சைக்கிள் கடைக்கு எதிர்ப்புறத்து மருந்துக் கடையிலிருந்து,

"அண்ணாச்சி! ஃபோன் வந்திருக்கு, வாங்க" என்று குரல் கொடுத்தார்கள். அண்ணாச்சி எழுந்து விரைந்தார். "நீ கவலைப்படாதே பாண்டியன்! எது வந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம். மாணவர்களை ஏதோ கிள்ளுக் கீரை என்று நினைக்கிறார்கள். தேர்தலை நிறுத்தினால் கூட்டமாக வி.சி. வீட்டுக்கு ஊர்வலம் போகலாம். அப்புறம் தானே வழிக்கு வருவார்" என்றான் மோகன்தாஸ்.

"அமைதியாக நடந்து முடிய வேண்டிய விஷயத்தை அவர்களே பெரிதாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. பல்கலைக் கழகத்தின் அமைதியை நாமாகக் கெடுக்க விரும்பவில்லை. ஒரு 'சேலஞ்ச்' என்று வந்தால் நாமும் விடக் கூடாது" என்று பாண்டியன் மோகன்தாஸுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது அண்ணாச்சி திரும்பி வந்தார்.

"பார்த்தீர்களா தம்பீ! நான் சொன்னது சரியாய்ப் போச்சு. கண்ணு ஃபோன் பண்ணிச்சு. லேடீஸ் ஹாஸ்டல்லேருந்து ஒரு வாரத்துக்கு யாரும் வெளியே நடமாடக் கூடாதுன்னு நோட்டீஸ் ஒட்டியிருக்காங்களாம். 'வர முடியலே மன்னிச்சுக்குங்கன்னு' அந்தத் தங்கச்சி சொல்லுது தம்பீ. பாண்டியன்! உங்ககிட்டவும் சொல்லச் சொல்லிச்சு" - மோகன்தாஸ் உடனே சொன்னான்:

"நீங்க சொன்னது சரிதான் அண்ணாச்சி! ஏதாவது கோளாறுன்னா முதல்லே லேடீஸ் ஹாஸ்டல் நோட்டீஸ் போர்டுலேதான் ரிஜிஸ்ட்ராரோட சுற்றறிக்கையை ஒட்டு வாங்க."

அப்போது ஓர் ஆள் சைக்கிள் வாடகைக்கு எடுக்க வந்து சேர்ந்தான். குண்டாகவும் குள்ளமாகவும் அந்தக் குறைந்த உள்ளத்துக்கு ஒரு சிறிதும் பொருந்தாமல் வேஷ்டியளவுக்கு நீளமாகத் தோளில் தொங்கும் பெரிய துண்டோடும் பார்க்க விநோதமாகத் தோன்றினான் அந்த ஆள். அவன் நடந்து வருவதே உருண்டு வருவது போலிருந்தது. துண்டைப் பார்த்ததுமே அண்ணாச்சி, பாண்டியன், மோகன்தாஸ் மூவரும் ஒருவருக்கொருவர் குறிப்பாக நோக்கிச் சிரித்துக் கொண்டனர்.

"அண்ணாச்சி சைக்கிள் வேணுமே?"

"எங்கே போகணும்? சொல்லுங்க."

"அதை அவசியம் சொல்லணுமோ?"

"ஆமாம் சொல்லணும். முனிசிபல் எல்லைக்குள்ள தான் சைக்கிள் வாடகைக்குத் தரலாம். நீங்க பாட்டுக்குக் காடு மேடெல்லாம் சுத்தறதுன்னா இங்கே சைக்கிள் கிடைக்காது."

"நான் கோட்டச் செயலாளருக்குக் கார் வழங்குற நிதி வசூலுக்குப் பொருளாளன். உள்ளூர் முனிசிபல் கவுன்சில் காளிமுத்து."

"எனக்குத் தெரியும்."

"தெரிஞ்சுதான் சைக்கிள் தரமாட்டேங்கிறீங்களா?"

"சொந்தமா மோட்டார் சைக்கிளே வைச்சிருக்கீங்களே, ஏன் சைக்கிளுக்கு அலையறீங்க...?"

"சைக்கிள் கிடக்கட்டும். சைக்கிள் செயினாவது வாடகைக்குத் தருவீங்களா?"

"அதுக்கு வேறு இடம் பாருங்க."

"பார்க்கிறேன்! பார்க்கிறேன்!" என்று கத்திவிட்டுப் போகிற போக்கில் அண்ணாச்சி கடைவாசலில் இருந்த கொடிக்கம்பத்தின் மேல் காறித் துப்பிவிட்டுப் போனான் அந்தக் குண்டன்.

"தம்பீ! ஒரு பெரிய கலகத்துக்கு ஏற்பாடு நடக்குது. ஒற்றுமையாக இருந்து சமாளிக்க வேண்டும்."

பாண்டியனும், மோகன்தாஸும் அண்ணாச்சியின் முகதக்ச்ச்்தை ஏறிட்டுப் பார்த்தார்கள்.

"இவன் சைக்கிள் கேட்க வரலே, தம்பீ! நம்மை வேவு பார்க்க வந்துவிட்டுப் போறான்."

அண்ணாச்சியின் அனுமானம் சரி என்றே அவர்களுக்கும் தோன்றியது. வேறு பனியன் போடாத காரணத்தால் பனியனைப் போல் உடம்போடு ஒட்டியதும் சன்னமாயில்லாத முரட்டுக் கதரில் முக்கால் கை வைத்துத் தைத்ததுமாகிய சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டுத் தோளிலும் நெஞ்சிலும் திரண்ட செழுமையான சதைப் பிடிப்புக்கள் மின்ன அண்ணாச்சி பின்பக்கம் சிலம்பக் கூடத்துக்குள் நுழைந்தார்.

"தம்பீ! நீங்களும் வாங்க" என்று அவர்களையும் அழைத்தார். பாண்டியனும், மோகன்தாஸும், பின் பக்கத்து அறையில் சட்டை பனியன்களைக் கழற்றிவிட்டு அண்ணாச்சியோடு உள்ளே சென்றார்கள். ஓர் மணிக்கு மேல் கம்பு சுற்றி விளையாடினார்கள் அவர்கள். அப்போது இன்னும் சில மாணவர்களும் தனித் தனியாகவும் குழுக்களாகவும் வந்து இவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். மெல்ல மெல்ல இருட்டிக் கொண்டு வந்தது. சிறிது நேரத்தில் சிலம்பம் முடிந்தது.

மாலை மணி ஆறரை ஆனவுடன் கம்பு சுற்றுவதை விட்டுவிட்டு எல்லாரும் உள்ளே வந்தார்கள். தேர்தல் நிறுத்தப்பட்டு கலகங்கள் நடந்தாலும் நடக்கும் என்ற சந்தேகத்தையும் அது தொடர்பான எச்சரிக்கையையும் மீண்டும் எல்லா மாணவர்களிடமும் தெரிவித்தார் அண்ணாச்சி. சில மாணவர்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரமடைந்தார்கள். சிலர் தாங்கள் மேற்கொண்டு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்கள். செய்தியை எப்படியும் எல்லாப் பிரிவு மாணவர்களுக்கும், எல்லா விடுதிகளுக்கும் தெரிவித்து வைத்து முன்னெச்சரிக்கையாக இருப்பது என்று பேசி வைத்துக் கொண்டார்கள் அவர்கள். அவர்களில் ஒருவன் சிறிது சோர்வோடு,

"இந்த வம்பை எல்லாம் பார்த்தால் பேசாமல் படிப்பு உண்டு நாம் உண்டு என்று இருந்துவிடலாம் போல் தோன்றுகிறது. மாணவர் பேரவைக்கு யார் வந்தால் நமக்கு என்ன?" என்று அலுத்துக் கொள்ளத் தொடங்கினான். உடனே பாண்டியன் முந்திக் கொண்டு அவனுக்குச் சுடச்சுட பதில் சொன்னான்:

"நேற்றைய மாணவன் ஒருவேளை அப்படி இருந்திருக்கலாம். தன் சொந்த எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய மாணவன் அப்படி இருக்க முடியாது. அவன் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் கூடக் கவலைப்பட வேண்டியிருக்கிறது; சிந்திக்க வேண்டியிருக்கிறது. தன் எதிர்காலம் நாட்டின் எதிர்காலத்தையும் அதன் கோடிக் கணக்கான மக்களின் எதிர்காலத்தையும் பொறுத்ததாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது."

"புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் நாம் படிக்க வந்திருக்கிறோம். புத்தகங்களால் புரிந்து கொள்ள வேண்டியதை மல்யுத்தம் செய்தா புரிந்து கொள்ள முடியும்?"

"அவசியம் நேர்ந்தால் அப்படியும் தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். 'தோளை வலியுடையதாக்கி உடற்சோர்வும் பிணி பலவும் போக்கி அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டுமாறா உடலுறுதி வேண்டும்' என்று பாரதியார் நமக்காகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்."

"அரிவாளைக் கொண்டு பிளக்கும் காலம் போய்விட்டது தம்பீ! இது சைக்கிள் செயின் காலம்!" என்று குறுக்கிட்டுச் சொன்னார் அண்ணாச்சி. பாண்டியனும், மோகன்தாஸும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டார்கள்.

"ஆண்டு கொண்டிருப்பவர்கள் பஞ்சாயத்து போர்டிலிருந்து பல்கலைக் கழக யூனியன் வரை அதிலும் தங்கள் ஆட்களே ஜெயிக்க வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறார்கள். தாங்கள் ஜெயிக்க முடியாதது போல் இருந்தால் தேர்தல்களையே நடக்கவிடாமல் செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை. இந்தச் சூழ்நிலையிலிருந்து மீள்வது நாமும் நம் தரப்பைச் சேர்ந்த மாணவர்களும் எந்த அளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது" என்று அண்ணாச்சி கடையிலிருந்து புறப்படு முன் எல்லாருக்கும் பொதுவாக மோகன்தாஸ் ஓர் எச்சரிக்கை செய்தான்.

எந்த முக்கியமான அவசரத் தகவலைப் பல்கலைக் கழகத்திலிருந்து உடனே தமக்குத் தெரிவிக்க வேண்டியிருந்தாலும் எதிர்ப்பக்கத்து மருந்துக் கடைக்கு ஃபோன் செய்யும்படி பாண்டியனை வேண்டிக் கொண்டார் அண்ணாச்சி.

மோகன்தாஸும், பாண்டியனும் அண்ணாச்சி கடையிலிருந்து திரும்பும்போதே உணவு விடுதி மணி அடித்துவிட்டது. அந்த முன்னிரவு வேளையில் பல்கலைக் கழகக் கட்டிடங்களும் புல்வெளிகளும், விடுதிகளும், பூங்காக்களும் வழக்கத்தை மீறிய அமைதியோடிருந்தன. ஓர் அமைதியின்மைக்கு முன்னால் நிலவும் தற்காலிக அமைதியாகவோ அல்லது ஒரு கலவரத்தை எதிர்பார்த்து அவாவி நிற்கும் அமைதியாகவோ அது தோன்றியதே தவிர இயல்பான அமைதியாகத் தெரியவில்லை. வழக்கமாக அந்த வேளையில் பெண்கள் விடுதிக்கு முன்னிருந்த பூங்காவில் சிரிப்பொலியும், வளை ஒலியும், பேச்சுக்களுமாக நிறைய மாணவிகள் தென்படுவார்கள். சிலர் மாணவர்களோடு தனியே பேசிக் கொண்டிருப்பார்கள். புல்வெளிகளின் பிற பகுதிகளிலும், நீச்சல் குளத்தருகிலும் கூட மாணவர்கள் கூட்டம் கூட்டமாகவும், இருவர் மூவராகவும், தனியாகவும் காணப்படுவார்கள். அன்று அத்தனையிலும் ஒரு மாறுதல் தெரிந்தது. மரங்களும், பூங்காக்களும், புல்வெளியும், கட்டிடங்களும் மஞ்சு சூழ்ந்து மங்கித் தெரிந்தன. மஞ்சு படிந்து மங்கிய மலைச் சரிவில் மின் விளக்குகள் கூடத் தளர்ந்து உறங்குவனபோல் தோன்றின. சில பெரிய மரங்களின் கீழே விளக்குக் கம்பத்தடியில் அமர்ந்து கருமமே கண்ணாகப் படிக்கும் மாணவர்களைக் கூட இன்று காணவில்லை. 'போட் ஹவுஸ்' அருகே கூட வெறிச்சிட்டுக் கிடந்தது.

"அண்ணாச்சி சொன்னது சரிதான்! நிலைமை ஒரு தினுசாகவே இருக்கிறது" என்று பாண்டியன் மோகன்தாஸிடம் சொன்னான். இருவரும் அறைக்குப் போய்விட்டுத்தான் உணவு விடுதிக்குச் சென்றார்கள்.

அங்கே உணவு விடுதியிலும் அதே சூழ்நிலை நிலவியது. பல மாணவர்கள் தாங்கள் கேள்விப்பட்டதைத் தனியாகவும் கூட்டாகவும் சிறுசிறு குழுக்களாகவும் பாண்டியனிடம் வந்து தெரிவித்தனர். திரும்பும்போது மெஸ் வாயில் வரையிலும் பல மாணவர்கள் சுற்றிச் சுற்றி நின்று பேசிக் கொண்டு வந்தார்கள்.

மீண்டும் பாண்டியன் அறைக்குத் திரும்பும் போது இரவு மணி எட்டரைக்கு மேலாகியிருந்தது. முன்பே உணவு விடுதியிலிருந்து திரும்பியிருந்த அறை நண்பன் பொன்னையா, "உங்களுக்கு ரெண்டு மூன்று தடவை ஃபோன் வந்தது. லேடீஸ் ஹாஸ்டலிலிருந்து யாரோ கூப்பிட்டார்கள். மறுபடியும் கூப்பிடச் சொல்லியிருக்கிறேன்" என்று பாண்டியனிடம் தெரிவித்தான். 'வேறு அறை மாணவன் யாராவது ஃபோனை எடுத்துத் தன்னை வந்து கூப்பிடும்படி விடவேண்டாம்' என்று ஹாஸ்டல் மாடி வராந்தாவில் ஒரு கோடியிலிருந்த கண்ணாடி அடைப்புகளாலாகிய டெலிஃபோன் பூத் அருகேயே போய் நின்று கொண்டான் பாண்டியன். விடுதி அறைகளின் ஒவ்வொரு சிறகின் இறுதியிலும் இப்படி டெலிபோன் வசதி இருந்தது. ஆனால் இந்த ஃபோன்களிலிருந்து பல்கலைக் கழக எல்லைக்குள் மட்டும்தான் பேசவும் கேட்கவும் முடியும். வெளியே நகருக்குள் பேச வேண்டுமானால் வார்டன் அறைக்குப் போக வேண்டும். 'சென்ற ஆண்டு பெரிய தொல்லையாக இருக்கிறது' என்று இந்த ஃபோன் இணைப்புக்களையெல்லாம் எடுத்துவிட ரிஜிஸ்திரார் முனைந்தபோது மாணவர்கள் போராடி வெற்றி பெற்றதை நினைத்துக் கொண்டான் பாண்டியன். வரப் போகிற ஃபோனை எண்ணி ஆவலும், களிப்பும் நிறைந்த மனத்தோடு காத்திருந்தான் அவன். எதிர்பார்த்துக் காத்திருந்த அழைப்பு வருவதற்குத் தாமதம் ஆக ஆக அவன் ஆவலும் பரபரப்பும் அதிகமாயின. காத்திராத போது மிகவும் சாதாரணமான ஒன்று கூட, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது மிகப் பெரிதாகிவிடுகிறது. எதற்காகக் காத்திருக்கிறோமோ அதைப் பற்றிய ஆவல்களும், கவலைகளும் கற்பனைகளும் பெரிதாகி விடுகின்றன. கால் மணி நேரத்துக்கு மேல் அவன் மனத்தை அலைபாய விட்டபின் அந்த அழைப்பு வந்தது. டெலிபோன் கூண்டுக்குள் நுழைந்து கதவை உட்புறமாக அடைத்துக் கொண்டு ஃபோனை எடுத்தான் அவன். அவனுடைய பெயரையும் அறை எண்ணையும் குறிப்பிட்டுக் கண்ணுக்கினியாளின் குரல் விசாரித்தது.

"நான் பாண்டியன் தான் பேசுகிறேன்" என்று அவன் கூறிய பின்பே அவள் மேலே சொல்ல வேண்டியதைச் சொல்லத் தொடங்கினாள்.

"உங்களை நாலாவது தடவையாக இப்போது கூப்பிடுகிறேன். நல்ல வேளையாக இப்போதாவது கிடைத்தீர்கள். நான் கேள்விப்பட்டது உண்மைதானா? சாயங்காலம் நான் அண்ணாச்சி கடைக்கு ஃபோன் செய்து விசாரிக்கும் போது கூட அவர் சொல்லவில்லையே? சற்று நேரத்துக்கு முன் நானும் தோழிகளும் மெஸ்ஸுக்குச் சாப்பிடப் போனபோதுதான் அங்கே இதைக் கேள்விப்பட்டேன். நீங்கள் பேரவைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டு விட்டீர்களாமே... ஏன் அப்படிச் செய்தீர்கள்..."

"நான்சென்ஸ்... யார் சொன்னார்கள் அப்படி? யாரோ புரளி கிளப்பி ஏமாற்றுகிறார்கள். இந்தத் தேர்தல் நடந்து முடிகிற வரை இப்படி இன்னும் எத்தனையோ புரளிகளைக் கிளப்பி விடுவார்கள். விழிப்பாயிருந்து எது பொய், எது நிஜம் என்று கண்டு கொள்கிற திராணி இல்லாவிட்டால் நமக்குள்ளேயே ஒற்றுமைக் குலைவு ஏற்பட்டுவிடும்."

"இப்போது அப்படித்தான் ஆகிவிட்டது. மெஸ்ஸில் எவளோ ஒருத்தி இப்படிப் புரளி பண்ணியதும் நான் உங்களுக்காக ஓட்டுக்குச் சொல்லி வைத்திருந்த என் தோழிகள் ஒவ்வொருவராக என்னிடம் வந்து 'இப்படி உடனே 'வித்ட்ரா' பண்ணிட்டு ஓடுற ஆளுக்கா ஓட்டுக் கேட்டே?'ன்னு என்னோடு சண்டைக்கே வந்து விட்டார்கள்."

"அன்பரசனும், வெற்றிச் செல்வனும் தோல்விக்குப் பயந்து ஊரை விட்டே ஓடிப்போய் விட்டாங்கன்னு நீங்க பதிலுக்கு ஒரு புரளியைக் கிளப்பினால் எல்லாம் சரியாகி விடும்."

"தொடர்ந்து இதே மாதிரி வம்பு பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்றால் அதையும் செய்து விட வேண்டியதுதான்... எதற்கும் தேர்தல் முடிகிறவரையில் நீங்களும் விழிப்பாயிருப்பது நல்லது. இருட்டில் தனியே எங்கும் போகாதீர்கள். விடுதி அறைக் கதவை உள்ளே தாழிடாமல் திறந்து போடாதீர்கள். அன்பரசன் ஆட்கள் வெறிபிடித்துப் போய் அலைகிறார்கள்."

"நன்றி, நீங்கள் கவலைப்படுகிறீர்களே என்பதற்காகவாவது நான் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றபடி என்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது."

"இதுதான் அசட்டுத் தைரியம் என்பது..."

"தைரியத்தில் அப்படி ஒரு வகையே கிடையாது. அதைரியத்தை வேண்டுமானால் மிகவும் நாகரிகமாக இந்தப் பெயரால் இப்படி அழைத்துக் கொள்ளலாம்."

"உங்களை எச்சரிப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா?"

"தாராளமாக உண்டு! உனக்கு மட்டும் தான் உண்டு."

"எங்கே இன்னொரு முறை உங்கள் வாயால் 'உனக்கு' என்று சொல்லுங்கள்... கேட்க ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது."

"உன் குரலை டெலிபோனில் கேட்டபின் உனக்குச் செவிக்கினியாள் மனதுக்கினியாள் என்றெல்லாம் கூடப் பெயர் வைத்திருக்கலாம் போல் தோன்றுகிறது."

"என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டுங்கள். நீங்கள் சூட்டுகிற பெயர்களெல்லாம் எனக்குப் பிடித்தவைகளாகத்தான் இருக்கும்! ஒரு பொருளாதார மாணவராகிய நீங்கள் என்னால் அனாவசியமாகக் கவிஞராகி விடுவீர்கள் போலிருக்கிறது."

"நீயே ஒரு கவிதையாக இருக்கும் போது உனக்காக நான் வேறு கவிஞனாக வேண்டிய அவசியம் இல்லை. சில பேர் கவிதைக்குப் பொருளாகிறார்கள். வேறு சிலர் கவிதையாகவே இருக்கிறார்கள். நீ இரண்டாவது வகையைச் சேர்ந்தவள்."

"இது டெலிபொன்! ஒரு முழுப் பாராட்டுச் சொற்பொழிவையே டெலிபோனில் செய்து முடித்து விட வசதியில்லை. இங்கே வெளியே சிலர் பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்."

"அப்படியானால் மீதியை அப்புறம் நேரில் பேசுவோம். ஒருவேளை யுனிவர்சிட்டி நிர்வாகமே தேர்தலைத் தள்ளிப் போட முயலாம் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் நாம் அதை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். மற்ற விவரம் நாளைக்குப் பேசலாம்" என்று ஃபோனை வைத்தான் பாண்டியன். டெலிபோன் கூண்டிலிருந்து வெளியேறி அறைக்குத் திரும்பும் போது ஓர் இனிய பாடலின் முதல் வரியை அவன் இதழ்கள் சீட்டியடித்தன. கால்களுக்கோ தரையில் நடப்பதாகவே தோன்றவில்லை. நறுமணம் நிறைந்த மல்லிகை மலர்களை குவியல் குவியலாகக் குவித்து அந்தப் பூப்படுக்கையின் மேல் நடந்து போவது போல் உணர்ந்தான் அவன். அவளுடைய அன்பு அவனை மிகப் பெரிய கர்வமுடையவனாக்கியிருந்தது. அன்பு காரணமாக ஏற்படும் கர்வங்கள் தான் எத்தனை இனிமையாக இருக்கின்றன என்று எண்ணியபடியே அறைக்குச் சென்றான் பாண்டியன். அறையில் அவன் நுழைந்ததுமே, "ரெஜிஸ்ட்ரார் ஆபீசிலிருந்து ஒரு ஸ்பெஷல் மெஸஞ்சர் வந்து உனக்காக இந்தக் கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போனான்" என்று பொன்னையா ஒரு கவரை எடுத்து நீட்டினான். பல்கலைக் கழக முத்திரையோடு கூடிய அந்த உறையில் அதிக அவசரத்தைக் குறிக்கும் 'வெரி அர்ஜண்ட்' ரப்பர் ஸ்டாம்பு குத்தப்பட்டிருந்தது. உறையைக் கிழித்துக் கடிதத்தைப் படித்தான் பாண்டியன். பல்கலைக் கழக எல்லையிலும் மாணவர்களிடையேயும் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையை முன்னிட்டும் நடக்கவிருக்கும் மாணவர் பேரவை தேர்தலை முன்னிட்டும் உருவாகியிருக்கும் சூழ்நிலைகளைப் பற்றிப் பேசி முடிவு செய்வதற்காகத் துணை வேந்தர், பதிவாளர், துணைப் பதிவாளர், பேரவைத் தேர்தலுக்குப் பிரதம தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டிருந்த பொருளாதாரத் துறைத் தலைவர் பூதலிங்கம் ஆகியோர் அடங்கிய குழு மாணவர் பிரதிநிதிகளையும் தேர்தலுக்கு விண்ணப்பம் கொடுத்திருந்தவர்களையும், முன் மொழிந்திருந்தவர்களையும், வழிமொழிந்திருந்தவர்களையும் உடனே சந்தித்துப் பேசுவதற்காக இரவு பத்தரை மணிக்கு ஓர் அவசரக் கூட்டம் கூட்டி அழைத்திருந்தது. கூட்டம் பல்கலைக் கழக எல்லைக்குள்ளேயே இருந்த துணைவேந்தர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பேராசிரியர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும், பதிவாளர் முதலிய அலுவலக ஊழியர்களுக்கும் பல்கலைக் கழக எல்லைக்குள்ளேயே வீடுகள் இருந்ததால் இரவு பத்தரை மணிக்குக் கூட எல்லாரும் வர முடியும் என்று துணைவேந்தர் அதை 'எமர்ஜென்ஸி மீட்டிங்' ஆக ஏற்பாடு செய்திருந்தார். பாண்டியன் அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த போதே மோகன்தாஸும் அவர்களோடு பிரதிநிதிகளும் அங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். பாண்டியன் அவர்களைக் கேட்டான்.

"என்ன செய்யலாம்? இந்தக் கூட்டத்தைப் பொருட்படுத்திப் போகலாமா? அல்லது நம்முடைய ஆட்சேபணையைக் காட்டுவதற்கு அடையாளமாகப் போகாமலே இருந்து விடலாமா?"

"போவது போகாததைப் பற்றி அப்புறம் முடிவு செய்வோம். நம்முடைய பல்கலைக் கழக எல்லையில் இப்போது ஏதோ நெருக்கடி நிலைமை உருவாகியிருப்பதாக வி.சி. இந்த அவசரச் சுற்றறிக்கையில் சொல்லியிருக்கிறாரே, அது என்ன நெருக்கடி என்பதுதான் எனக்குப் புரியவில்லை. நெருக்கடி நிலைமை இருக்கிறதா அல்லது நெருக்கடி நிலைமையை உண்டாக்கப் பார்க்கிறார்களா என்பதுதான் முதலில் நமக்குத் தெரிய வேண்டும்" என்று மோகன்தாஸ் ஆத்திரத்தோடு கூறியதற்கு மறுமொழியாக,

"நெருக்கடி நமக்கல்ல. வி.சி.க்குத்தான் ஏதோ நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது" என்று கூறினான் உடனிருந்த மாணவர்களில் ஒருவன். ஆளும் கட்சிக்கு எதிரான தரப்பைச் சேர்ந்த தேசிய மாணவர்கள் பெருவாரியாக வெற்றி பெற்று விடுவார்கள் என்ற நிலைமை உறுதியானதும் துணைவேந்தரை நிர்பந்தப் படுத்திப் பணிய வைத்துப் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலையே நடக்கவிடாமல் செய்ய அரசாங்கம் முயல்வதாகத் தெரிந்தது. அப்போது துணை வேந்தராயிருந்த டாக்டர் தாயுமானவனார், அரசாங்கத்தின் தயவுக்குக் கடன்பட்டவர் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபணமாகியிருந்தது. மாணவர்கள் எல்லாருக்கும் அவரைப் பற்றி நன்றாகத் தெரியும்படி நடந்து கொண்டிருந்தார் அவர். பதிவாளர், துணைப் பதிவாளர், எல்லாரும் துணைவேந்தர் சொல்கிறபடி பயந்து நடக்கிறவர்கள். பிரதம தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டிருந்த பொருளாதாரத் துறைத் தலைமைப் பேராசிரியர் பூதலிங்கம் மட்டும் ஓரளவு சுதந்திரமான சிந்தனைப் போக்கு உள்ளவர். துணைவேந்தர் கூட்டியிருக்கும் அவசரக் கூட்டத்துக்குப் போவதாயிருந்தால் பூதலிங்கத்தை மதித்துத் தான் போக வேண்டும். வேறு யாரும் மாணவர் தரப்பில் ஆதரித்துப் பேசுகிற அளவு சுதந்திரமான மனப் போக்குள்ளவர்கள் அங்கே இல்லை.

இரவு பத்து மணி வரை அந்த அவசரக் கூட்டத்துக்குப் போவதா வேண்டாமா என்ற தயக்கமான சிந்தனையிலே கழிந்துவிட்டது. இதற்குள் டெபுடி ரிஜிஸ்டிரார் இரண்டுமுறை ஃபோனிலும் கூப்பிட்டு வரச் சொல்லி விட்டார். துணைவேந்தர், பதிவாளர், எல்லாருமே அவசரப்பட்டு எதற்கோ பறப்பது தெரிந்தது. காரசாரமான விவாதங்களுக்குப் பின் மோகன்தாஸும் பாண்டியனும் மற்ற இருபத்தைந்து பிரதிநிதிகளுமாகத் துணைவேந்தர் கூட்டியிருக்கும் அந்த நள்ளிரவுக் கூட்டத்துக்குப் போவதென்று முடிவாயிற்று.

வெளியே குளிர் அதிகமாயிருந்தும் பொருட்படுத்தாமல் அவர்கள் துணைவேந்தர் மாளிகைக்குப் புறப்பட்டுப் போனார்கள். மாளிகையின் முன் கூடத்தில் துணைவேந்தர், பதிவாளர், துணைப் பதிவாளர், பொருளாதாரப் பேராசிரியர் எல்லாரும் மாணவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பாண்டியனும் நண்பர்களும் அங்கு போவதற்கு முன்பே எதிர்த்தரப்பைச் சேர்ந்த அன்பரசனும், வெற்றிச் செலவனும், இன்னும் ஒரு நாலைந்து மாணவர்களும் வந்து காத்திருந்தனர். துணைவேந்தர் தாயுமானவனாருக்கு அருகில் ஆளும் கட்சியின் உள்ளூர்க் கோட்டச் செயலாளர் அவரது அந்த உருவத்துக்குச் சிறிதும் பொருத்தமின்றிக் கம்பளிக் கோட்டுடன் அதற்கு மேல் தரை வரை புரளும் மேல் துண்டு சகிதம் அமர்ந்திருப்பதை உள்ளே நுழைந்ததுமே பாண்டியனும், மோகன்தாஸும் கவனித்து விட்டார்கள்.

துணைவேந்தர் பேசத் தொடங்கினார்.

"எல்லோரும் வந்தாச்சு இல்லியா? யெஸ்... லெட் அஸ் ஸ்டார்ட்..." - மோகன்தாஸ் அவரை மேலே பேசவிடாமல் குறிக்கிட்டான்.

"நீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு சிறிய சந்தேகம் சார்..."

"எந்தச் சந்தேகமானாலும் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்த பின் கேட்கலாம்."

"அதற்கு முன் தீர்க்க வேண்டிய சந்தேகம் இது..."

"அப்படியானால் நீ உன் சந்தேகத்தைக் கேட்கலாம்."

"இந்த அவசரக் கூட்டம் மாணவர் பிரதிநிதிகளுக்கும், பல்கலைக் கழக நிர்வாகிகளுக்கும் இடையில் தான் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக உங்கள் அறிக்கைக் கூறியது?"

"ஆமாம் அதில் சந்தேகமென்ன?"

"சந்தேகமில்லையானால் மாணவர்களிலும் சேராமல் பல்கலைக் கழக நிர்வாகத் தரப்பிலும் சேராமல் அந்நியராக இங்கே யார் இருந்தாலும் அவரை உடனே வெளியேற்றி விட்டு அப்புறம் நீங்கள் கூட்டத்தை தொடங்கலாம். அதுவரை இந்தக் கூட்டத்தை நாங்கள் தொடங்க விடமாட்டோம்."

நான்காம் அத்தியாயம்

துணைவேந்தரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது. அங்கே வந்து உட்கார்ந்திருந்த கோட்டச் செயலாளரைத் தான் அவர்கள் அந்நியராகக் குறிப்பிடுகிறார்கள் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. அந்த ஆளிடம் தம் வாயால் அதை எப்படிச் சொல்வது என்று பயந்தார் அவர். தம்முடைய பயத்தை மறைக்க முயன்று கொண்டே அவர்கள் யாரை அங்கிருந்து வெளியேற்ற விரும்புகிறார்கள் என்பது புரிந்தும் புரியாதது போல,

"அப்படி அந்நியராக இங்கே யாரும் இல்லையே?" என்று ஒவ்வொரு வார்த்தையாக இழுத்து நிறுத்தியபடி மாணவர்களை ஏறிட்டுப் பார்த்தார் துணைவேந்தர்.

அவர் வேண்டும் என்றே ஒன்றும் தெரியாதது போல் நடிப்பது பாண்டியனுக்கு ஆத்திரமூட்டியது.

"நீங்கள் விரும்பினால் இங்கே உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் அந்த அந்நியர் யாரென்று நாங்களே சுட்டிக் காட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம் சார்!"

இந்த நிலையில் கோட்டச் செயலாளருக்கே ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

"உங்களை நான் அப்புறமா வந்து பார்க்கிறேங்க" என்று மேல்துண்டு தரையில் புரள நடந்து வெளியேறினார், அந்த ஆள். அவருக்கு ஆதரவாக 'வாக்-அவுட்' செய்வது போல் அன்பரசன் முதலியவர்களும் தொடர்ந்து வெளியேறி விட்டார்கள். துணைவேந்தர் பாண்டியன் மோகன்தாஸ் முதலிய மற்ற மாணவர்களிடம் பேச தொடங்கினார்.

"பல்கலைக் கழக எல்லையில் இப்போது நிலவும் நெருக்கடி நிலையை உத்தேசித்துத் தேர்தல்களையெல்லாம் தள்ளிப் போடலாம் என்று நினைக்கிறேன். நாளையே 'ஓரியண்டேஷன் டே' செலபரேட் செய்து விட்டுப் படிப்பிலும், வகுப்புகளிலும், பாடங்களிலும் கவனம் செலுத்தலாம் என்று தோன்றுகிறது. வழக்கமாக ஜூலை கடைசியிலேயே 'ஓரியண்டேஷன் டே'யை முடித்துவிடுவோம். இந்த வருடம் தான் எல்லாமே தாமதமாகிவிட்டது. இனி மேலாவது தாமதமில்லாமல் காரியங்களைச் செய்வதற்கு நீங்கள் எல்லாரும் என்னோடு ஒத்துழைக்க வேண்டும். அன்பரசன் தரப்பினரும் அவர்களைச் சேர்ந்த மற்ற மாணவர்களும் ஏற்கெனவே இதற்கு ஒப்புக் கொண்டு தங்கள் ஒத்துழைப்பைத் தர இணங்கியுள்ளனர்."

"அவர்கள் இவருக்கு ஒத்துழைப்பைத் தர இணங்கியிருக்கிறார்களென்பது பொய். இவர் அவர்களோடு ஒத்துழைக்க இணங்கியிருக்கிறார் என்பதுதான் மெய்" என்று பாண்டியன் மோகன்தாஸின் காதருகே மெல்லச் சொன்னான். "நீ பேசாமல் இரு. இவர் நம்மையெல்லாம் முட்டாளாக்கப் பார்க்கிறார். இவருக்குச் சரியான பாடம் கற்பிக்கலாம்" என்றான் மோகன்தாஸ். ஏறக்குறைய மோகன்தாஸைப் போன்ற அதே மனநிலையில் தான் மற்ற மாணவர்களும் இருந்தனர். துண்டுப் பிரசுரங்கள் வழங்கிச் சுவரொட்டிகள் ஒட்டி எல்லா ஏற்பாடுகளும் செய்து வெற்றிக்காகக் கடுமையாக உழைத்துவிட்ட பின் மாணவர் பேரவைத் தேர்தலே கிடையாது என்பதை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாமலிருந்தது. மேலும் தங்கள் முன்னிலையிலேயே அன்பரசன் முதலியவர்களிடமும் இதைப் பற்றிப் பேசாமல், 'ஏற்கனவே இது பற்றி அவர்களிடம் நான் தனியே பேசி இணங்கச் செய்துவிட்டேன்' என்று துணைவேந்தர் கூறியது அவர் மேல் சந்தேகம் கொள்ள வைப்பதாயிருந்தது.

"இனி நீங்கள் நினைப்பதைச் சொல்லலாம்" என்று அவர்களை நோக்கி வேண்டினார் துணைவேந்தர். மோகன்தாஸ் மாணவர்கள் சார்பில் மறுமொழி கூறினான்.

"பேரவைத் தேர்தலும் நடந்து முடிந்த பின்பு தான் ஓரியண்டேஷன் நாள் கொண்டாடப்படுவது வழக்கம் சார்! பழைய வி.சி. காலத்திலிருந்து அப்படித்தான் நடக்கிறது."

"வீணாகப் பழைய காலத்தை ஏன் இழுக்கிறீர்கள்? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்."

"மன்னிக்க வேண்டும் சார்! இப்போது நாம் எதைச் செய்ய வேண்டாமோ அதைப் பற்றித்தான் நீங்கள் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய பல்கலைக் கழக விதிகளில் - பக்கம் அறுபது - மாணவர் உரிமைகள் - முப்பத்தாறாவது பிரிவின்படி ஒவ்வொரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான உரிமைகளை நாங்கள் பெற்றிருக்கிறோம்."

"அதே அறுபதாவது பக்கத்தில் நாற்பத்தேழாவது விதியின்படி அசாதாரணமான நிலைகள் நிலவுகையில் துணைவேந்தரோ, பதிவாளரோ, மாணவர் பேரவைத் தேர்தலை நிறுத்தவோ, பேரவையைக் கலைக்கவோ உரிமை பெற்றிருக்கிறார்கள் என்றும் இருக்கிறது அல்லவா?"

"எந்த அசாதாரணமான நிலைமையும் இங்கு இப்போது இல்லை. எல்லாம் சாதாரணமாகவும் அமைதியாகவும்தான் இருக்கிறது. தேர்தல்களை நடத்திப் பேரவைத் தலைவர், செயலாளர்களைத் தேர்ந்தெடுத்த பின் மறுநாளே நீங்கள் ஓரியண்டேஷனை வைத்துக் கொள்வதில் எங்களுக்கு மறுப்பில்லை. தேர்தலுக்காக நாங்கள் எல்லா ஏற்பாடுகளையும் சிரமப்பட்டுச் செய்திருக்கிறோம். இந்த நிலைமையில் நீங்கள் எங்களை ஏமாறச் செய்யக் கூடாது."

இதைக் கேட்டுத் துணைவேந்தர் தாயுமானவனார் பிரதம தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கத்தைப் பார்த்தார்.

"மிஸ்டர் பூதலிங்கம்! இது சம்பந்தமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?"

"மன்னிக்க வேண்டும் சார்! தேர்தல்களை நிறுத்துவதற்கான எந்த அவசியமும் நேர்ந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இன்று மாலையிலும், முன்னிரவிலும் நம் சர்வகலாசாலை எல்லையில் தெரிந்த பதற்ற நிலைமை செயற்கையாக உண்டாக்கப்பட்டதாகும். அதை ஒரு நெருக்கடி நிலைமையாகக் கருதித் தேர்தல்களைத் தள்ளிப் போட வேண்டியதில்லை" என்று பேராசிரியர் பூதலிங்கம் துணைவேந்தருக்கு மறுமொழி கூறியபோது மாணவர்கள் அவரை நன்றியோடு பார்த்தார்கள். பதிவாளரும், துணைப் பதிவாளரும் வாயையே திறக்கவில்லை.

துணைவேந்தர் உடனே எந்த மறுமொழியும் கூறாமல் சிந்தனையில் ஆழ்ந்தவர் போல் காணப்பட்டார். மாணவர்களும் பேராசிரியர்களும் கூறியதை உடனே ஏற்கவோ இசையவோ அவர் தயங்குவதாகத் தெரிந்தது. இது தொடர்பாக அவர் தமக்குத் தாமே செய்து கொண்ட ஒரு முடிவிலிருந்து மாற விரும்பாதது போல் தோன்றினார். "ஹிஸ் மைண்ட் இஸ் மேட் அப். ஹி வோண்ட் சேஞ்ஜ் ஹிஸ் டிஸிஷன்" என்று மோகன்தாஸ் பாண்டியனின் காதருகே மெல்லச் சொன்னான். துணைவேந்தர், பதிவாளர், துணைப் பதிவாளர் - மூன்று பேரும் உட்புறம் இருந்த அறைக்குச் சென்று கலந்து பேசினார்கள். பேராசிரியர் பூதலிங்கத்தை அவர்கள் கூப்பிடவும் இல்லை. அவராக அவர்களோடு உள்ளே போகவும் இல்லை. துணை வேந்தர் முதலிய மூவரும் தனியே கலந்து பேச உட்புறம் சென்றிருந்த பத்துப் பதினைந்து நிமிஷங்களில் இங்கே வெளியே மாணவர்கள் தங்கள் பொருளாதாரப் பேராசிரியரோடு மனம் விட்டுப் பேச முடிந்தது. பாண்டியன் பேராசிரியரைக் கேட்டான்:

"பல்கலைக் கழக எல்லையில் பேரவைத் தேர்தல் நடத்தப் போதுமான டிஸிப்ளின் இருக்கும் போது இவர் ஏன் சார் அதைத் தடை செய்து விடத் துடிக்கிறார்?"

"'முதியவர்கள் எவற்றையெல்லாம் வெற்றிகரமாகச் செய்யமுடியவில்லையோ அவையெல்லாம் இளைஞர்களுக்குத் தடை செய்யப்படுகின்றன, அல்லது ஒழுக்கக் குறைவானவையாகப் பிரகடனம் செய்யப்படுகின்றன' - என்பதாக ஆண்டன் செகாவ் கூறியிருக்கிறான். இதைத் தவிர வேறு எந்தப் பொருத்தமான பதிலை இப்போது உங்களுக்கு நான் சொல்ல முடியும்?" என்று கூறிப் புன்னகை பூத்தார் பேராசிரியர்.

"இந்தக் கூட்டத்தில் நீங்கள் ஒருவராவது எங்கள் மனநிலையைப் புரிந்து கொண்டவராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது சார்!"

இதற்குள் துணைவேந்தரும் மற்ற இருவரும் உட்புறம் ஆலோசனை முடிந்து திரும்பி விட்டார்கள்.

"எங்கள் முடிவு நாளைக் காலையில் பத்துமணிக்கு ரிஜிஸ்திரார் ஆபீஸ் நோட்டீஸ் போர்டில் அறிவிக்கப்படும். இப்போது நீங்கள் போகலாம். இந்த அகாலத்தில் என் வேண்டுகோளை ஏற்று வந்ததற்கு நன்றி" என்ற துணைவேந்தர் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். கலந்து பேசி விவாதித்து முடிவு செய்வதற்குக் கூப்பிட்டுவிட்டுத் தாமே செய்து கொண்ட ஒரு முடிவை, மறுநாள் காலையில் அறிவிப்பதாகத் துணைவேந்தர் சொல்லியது அவர்களுக்கு அதிருப்தி அளித்ததோடு எரிச்சலூட்டியது. உட்புறம் சென்ற துணை வேந்தர் யாருடனாவது டெலிபோனில் பேசிவிட்டு வந்திருக்கக் கூடும் என்று மாணவர்களால் மிக எளிதாகவே அநுமானித்துக் கொள்ள முடிந்தது.

துணைவேந்தர் மாளிகையிலிருந்து அவர்கள் புறப்பட்டபோது இரவு மணி பன்னிரண்டாகிவிட்டது. அப்போது பனியும் மலைக் குளிரும் மிகக் கடுமையாக இருந்தது. மூச்சு விடாமல் வாயிலிருந்தும் நாசியிலிருந்தும் புகை வருவது போல் தோன்றியது. துணைவேந்தர் மாளிகையிலிருந்து சிறிது தொலைவில்தான் பொருளாதாரப் பேராசிரியரின் வீடு இருந்ததென்றாலும் அவரும் மாணவர்களோடு சேர்ந்தே அங்கிருந்து வெளியேறினார். துணைவேந்தர் மாளிகையிலிருந்து மாணவர் விடுதிகளுக்கும், பேராசிரியரின் வீடுகள் இருந்த ஸ்டாஃப் குவார்ட்டர்ஸுக்கும் ஒரே சாலையாகப் போய்ச் சிறிது தொலைவு சென்றதும் வழிகள் பிரியும். அந்தச் சாலையில் அவர்கள் பேசியபடி போய்க் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் தொடர்பாக இரண்டு மூன்று மின் விளக்குக் கம்பங்களில் பல்புகள் இல்லாததாலோ என்னவோ விளக்குகள் எரியவில்லை. இரு சிறகிலும் மரங்கள் அடர்ந்த அப்பகுதி மிகவும் இருண்டிருந்தது. தாங்கள் துணைவேந்தர் மாளிகைக்குப் புறப்பட்டு வரும்போது அப்பகுதி அவ்வாறு இருண்டிருக்கவில்லை என்பதும் இந்த ஒரு மணி நேரத்துக்குள்தான் யாரோ அங்கே பல்புகளை உடைத்திருக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கும் புரிந்தது.

நல்லவேளையாகப் பேராசிரியரிடம் 'டார்ச்' இருந்தது. 'டார்ச்' ஒளியில் அவர்கள் இணைந்து நடந்த சென்ற போது முதல் மின் விளக்குக் கம்பத்தைக் கடப்பதற்குள்ளேயே பக்கவாட்டிலிருந்து சரமாரியாகக் கற்கள் மேலே வந்து விழுந்தன. பாண்டியனையும் மோகன்தாஸையும் பெயரைச் சொல்லித் திட்டும் வசைக் குரல்களும் இருளிலிருந்து ஒலித்தன. கல்லெறி நிற்காமல் தொடரவே இவர்களும் கூப்பாடு போட்டு கத்தியபடி கைக்குக் கிடைத்தவற்றை எடுத்துக் கல்லெறி வந்த திசை நோக்கிப் பதிலுக்கு வீசத் தொடங்கினார்கள். பாண்டியன் பேராசிரியர் கையிலிருந்து டார்ச்சை வாங்கிக் கொண்டு பத்துப் பதினைந்து சக மாணவர்களோடு காலிகள் ஒலிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக இருளில் பாய முற்பட்டான். ஆனால் அதற்குள் அவர்கள் ஓடிவிட்டார்கள். டார்ச் ஒளியில் அன்பரசனையும் கோட்டச் செயலாளரையும் நன்றாக அடையாளம் தெரிந்த வேறு சில மாணவர்களையும் அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் நிலையிலும் பாண்டியனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

"அந்த ஆளைத் துணைவேந்தர் மாளிகையிலிருந்து நீங்கள் வெளியேற்றிய போதே இப்படி ஏதாவது நடக்கும் என்று நினைத்தேன்" என்றார் பேராசிரியர். விடுதிகளுக்கு விரைந்து ஆயிரக் கணக்கில் மாணவர்களை எழுப்பி வந்து அந்தக் காலிகளைத் துரத்திப் பிடித்து மரங்களிலே கட்டிப் போட்டுவிட்டு அப்புறம் வி.சி.யைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று துடித்தார்கள் மாணவர்கள். பாண்டியனுக்கு அந்தக் கல்லெறியால் நெற்றியில் ஒரு சிறு காயம் ஏற்பட்டிருந்தது. "இப்படி ஒரு கலகமும் மோதலும் ஏற்பட்டு அதைச் சாக்காக வைத்தாவது தேர்தல்களை நிறுத்தி விட வேண்டும் என்றுதான் அவர்கள் தவிக்கிறார்கள். தயவு செய்து இதை ஒரு பெரிய கலகமாக்கி விட்டால் அவர்களுக்கு ரொம்பவும் வசதியாகிவிடும். வேண்டாம் வாருங்கள். முதலில் கல்லெறியில் காயமுற்ற நண்பர்களைச் சர்வகலாசாலை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுவோம். மெடிகல் ஆபீஸரிடமே இந்தக் கல்லெறிக்கு ஒரு சாட்சியமும் பெற்ற மாதிரி ஆகும்" என்று உடன் வந்த பொருளாதாரப் பேராசிரியர் தான் அவர்கள் உணர்வை அப்போது கட்டுப்படுத்தினார். அவர் சொல்வதில் உள்ள நியாயம் அவர்களுக்கும் புரிந்தது. பல்கலைக் கழகத்தின் வடகோடிப் பகுதியிலிருந்த மருத்துவக் கல்லூரியின் அருகில் அவர்கள் போய்ச் சேரவே இரவு ஒரு மணியாகிவிட்டது. அதற்கு மேல் மெடிகல் ஆபீஸரை எழுப்பிக் கொண்டு வந்து விவரங்களைச் சொல்லிச் சிகிச்சை பெற்றுத் திரும்பும் போது இரவு இரண்டே கால் மணி ஆகியிருந்தது. பத்திரமாக ஒவ்வொரு மாணவரையும் விடுதி அறைக்குக் கொண்டு போய்ச் சேர்த்த பின்பே பேராசிரியர் பூதலிங்கம் வீடு திரும்பினார். பாண்டியனும், மோகன்தாஸும், "நீங்கள் தனியாகப் போகக் கூடாது ஸார்! நாங்கள் வீடுவரை உங்களுக்குத் துணையாக வந்துவிட்டுத் திரும்புகிறோம்" என்று அவரோடு புறப்பட்டார்கள். ஆனால் அதை அவர் மறுத்து விட்டார்.

"நான் தனியாகப் போவதை விட என்னோடு துணைக்கு வந்து விட்டு நீங்கள் தனியாகத் திரும்புவதுதான் அதிக அபாயம் நிறைந்தது. எனக்கு ஒரு கெடுதலும் வராது. நான் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்து விடுவேன்" என்று கூறி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். அவர் புறப்படு முன் 'உணர்ச்சி வசப்படாமல் இருக்கும்படி' மீண்டும் அவர்களை எச்சரித்துவிட்டுப் போனார்.

நேரம் அதிகமாகிவிட்டதால் தன் அறைக்குப் போகாமல் மோகன்தாஸும் பாண்டியன் அறையிலேயே படுத்து விட நினைத்தான். இருவருக்கும் அறைக் கதவைத் திறந்து விட்ட பொன்னையா நெற்றி மேட்டில் பிளாஸ்திரி ஒட்டுடன் பாண்டியனைப் பார்த்ததும் திடுக்கிட்டான். நடந்தவற்றைக் கேள்விப்பட்டதும் தூக்கம் கலைந்து அவர்களோடு அவனும் பேச உட்கார்ந்து விட்டான். பேச்சுக்குரல் கேட்டுப் பக்கத்து அறைகளிலிருந்தும் இரண்டொருவர் வந்து விட்டனர். பாண்டியன் மோகன்தாஸைக் கேட்டான்:

"பல்கலைக் கழக எல்லையில் நெருக்கடி நிலைமை இருப்பதாகத் துணைவேந்தர் சொல்லியபோது நீயும் நானும் அப்படி இல்லை என்று மறுத்தோம் அல்லவா? அதற்குப் பதிலாக நெருக்கடி நிலைமையைப் பிரத்யட்சமாக நமக்கு நிரூபிப்பதற்குத்தான் இந்தக் கல்லெறித் தாக்குதலே நடத்தப்பட்டிருக்கிறது. தம்முடைய ஆபீஸ் நோட்டீஸ் போர்ட்டில் அறிவிக்கப் போவதாக வி.சி. சொல்லிவிட்டார். ஒருவேளை அவர் திட்டப்படியே 'பல்கலைக் கழகத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாகத் தேர்தல்களைத் தள்ளிப் போடுவதாக' அறிவித்துவிட்டால் மாணவர்களாகிய நாம் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை இப்போதே முடிவு செய்து கொள்ள வேண்டுமே? நாம் என்ன செய்யலாம்?"

"பேரவைத் தேர்தல் நடைபெறுகிற வரையில் வகுப்புகளுக்குப் போவதில்லை என்று அறிவிப்போம். நாளை மாலை 'ஓரியண்டேஷன்' என்ற பேரில் எல்லா மாணவர்களையும் பூபதி ஹாலுக்கு எதிரே மைதானத்தில் கூட்டி வைத்துக் கொண்டு, 'மை டியர் ஸ்டூடண்ஸ் ஹியர் ஆஃப்டர் வீ மஸ்ட் பி ஸீரியஸ் எபௌட் அவர் ஸ்டடீஸ்' என்று லெக்சர் அடிக்கலாம் என்பதாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறார் வி.சி. அது நடக்காது. அவர் ஓரியண்டேஷன் தினத்துக்காக சொற்பொழிவைத் தொடங்கும்போது எதிரே மைதானம் காலியாக இருக்கும். அப்படியும் அவர் வழிக்கு வரவில்லை என்றால் எல்லாப் பிரிவு மாணவர்களும் சேர்ந்து ஊர்வலமாகச் சென்று அவரிடம் நம் கோரிக்கையை மீண்டும் வற்புறுத்துவோம்."

"இன்னொரு விஷயம் மோகன்தாஸ்! நாளன்றைக்கு மாலையில் பல்கலைக் கழகப் படிப்பு முடிந்து வெளியேறும் பழைய மாணவர் தலைவர் மணவாளனுக்கு நாம் லேக் வியூ ஹோட்டலில் ஒரு தேநீர் விருந்து கொடுக்கிறோம். அவர் இப்போது மதுரையில் இருக்கிறார். இந்த விருந்துக்காகவே வந்து போகச் சொல்லி அண்ணாச்சியும், நண்பர்களும் மணவாளனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். கான்வொகேஷனுக்கு அவர் வருவாரோ அல்லது தபாலிலேயே பட்டத்தை வரவழைத்துக் கொள்வாரோ, தெரியவில்லை. அதனால் தான் இப்போதே அவரை வரவழைத்துப் பாராட்டையும் பிரிவுபசாரத்தையும் நடத்திவிட முடிவு செய்தோம். அவரிடமும் இதைப் பற்றி யோசனை கேட்கலாம்."

"அருமையான ஐடியா பாண்டியன்! இந்தப் பல்கலைக் கழகத்திலேயே ஒரு குறிப்பிட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மாணவர் இயக்கத்தைப் பிரமாதமாகத் தலைமை ஏற்று நடத்திய அசகாய சூரன் மணவாளன் தான். இப்போது இங்கே மணவாளன் வர நேர்வது நம் பாக்கியம். வரட்டும், அவரிடமும் நாம் யோசனை கேட்கலாம்."

மறுநாள் காலையில் விடியும் போதே மலையின் எல்லாப் பகுதிகளிலும் பன்னீர் தெளிப்பது போல் பூஞ்சாரல் பெய்து கொண்டிருந்தது. விடிந்த பின்னும் மெல்லிய மங்கலான இருள் மூட்டம் மலையைச் சூழ்ந்திருந்தது. கவலையும் சிந்தனையும் கனத்த அந்த மனநிலையிலும் அன்று மல்லிகைப் பந்தல் இருந்த அழகை எண்ணிய போது,

"அருவிகள் வயிரத் தொங்கல்
அடர்கொடி பச்சைப் பட்டே
குருவிகள் தங்கக் கட்டி
குளிர்மலர் மணியின் குப்பை
இருந்த ஓர் கருந்திரைக்குள்
இட்ட பொற் குவியல் போலே
கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே
கருத்துக்கள் இருத்தல் போலே
இருள் மூடிற்றுக் குன்றத்தை"

என்ற பாரதிதாசனின் அழகின் சிரிப்புப் பாட்டு பாண்டியனுக்கு ஞாபகம் வந்தது. தூரத்து மலை முகடுகளில் வைரக் கற்கள் உருகி ஒழுகுவது போல் அருவிகள் தெரிந்தன. வானிலிருந்து மாவைக் கொட்டுவது போல் சாரல் மேகங்களிலிருந்து இறங்கும் அழகு கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. இந்த இருள் மூட்டத்தினால் மணி ஆனதே தெரியவில்லை. பாண்டியன் எழுந்திருக்கும் போதே காலை எட்டரை மணி ஆகியிருந்தது. மோகன்தாஸ் ஏழு மணிக்கே எழுந்து தன் அறைக்குப் போய் விட்டதாகவும் பத்தேகால் மணிக்கு ரிஜிஸ்திரார் அலுவலக நோட்டீஸ் போர்டு அருகே சந்திப்பதாகப் பாண்டியனிடம் தெரிவிக்கச் சொன்னதாகவும் பொன்னையா கூறினான். விடிந்ததுமே முதல் நாள் நள்ளிரவு துணைவேந்தர் வீட்டில் பேச்சு முடிந்து மாணவர்கள் திரும்பும் போது சாலையில் நடந்த கல்லெறிக் கலவரம் பற்றி எல்லா விடுதிகளிலும் செய்தி பரவிவிட்டது. ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையும் உருவாகிவிட்டது. அறை நண்பன் பொன்னையா பிளாஸ்கை எடுத்துப் போய்ப் பாண்டியனுக்காக அறைக்கே காப்பி சிற்றுண்டியை வாங்கி வந்துவிட்டான். மாணவர்கள் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் - குடையோடும் குடையின்றி நனைந்து கொண்டும் பாண்டியனைக் காணக் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கி விட்டார்கள். உடனே பார்க்க வருவதற்காகத் துடிப்பதாகவும் வார்டன் அம்மாள் பெண்கள் விடுதியிலிருந்து யாரையும் வெளியில் அனுப்புவதற்குக் கண்டிப்பாக மறுப்பதால் வர முடியாமல் இருக்கிறது என்றும் கண்ணுக்கினியாள் ஃபோன் செய்தாள். ஃபோனில் அவள் குரல் கவலை நிறைந்து ஒலித்தது. கண்கலங்கி அழுது கொண்டே பேசுகிறாற் போன்ற குரலில் பேசினாள் அவள்.

"கவலைப்படும்படி எனக்கு எதுவும் நேர்ந்து விடவில்லை. முடிந்தால் பத்தே கால் மணிக்கு ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் வாசலுக்கு வா. நேரில் பேசுவோம். இன்று காலை பத்து மணிக்குப் பேரவைத் தேர்தல் உண்டா இல்லையா என்பது பற்றி நோட்டீஸ் போர்டில் ஒரு முக்கியமான அறிவிப்பை ஒட்டுகிறார்கள். அதைப் பார்ப்பதற்காக நான், மோகன்தாஸ் எல்லாரும் அங்கே வருவோம்" என்று பாண்டியன் கூறியதும் எப்படியாவது முயன்று ரிஜிஸ்திரார் அலுவலக வாயிலில் அவனைச் சந்திப்பதாக அவள் மறுமொழி கூறினாள். மறுநாள் மாலையில் லேக் வியூ ஹோட்டலில் மணவாளனுக்கு நடைபெறும் பிரிவுபசார விருந்து பற்றிக் கூறி அதற்கும் அவள் முன்பாகவே வந்து கூட இருந்து முடிந்த உதவிகளைச் செய்யும்படி வேண்டினான் பாண்டியன். அதைப் பற்றி ஏற்கெனவே அண்ணாச்சி தன்னிடம் ஃபோனில் தெரிவித்திருப்பதாக அவள் சொன்னாள். அவன் ஃபோன் பேசிவிட்டுத் திரும்புவதற்குள் அறையிலும் வராந்தாவிலுமாகப் பெருங்கூட்டமாய் மாணவர்கள் கூடிவிட்டார்கள். மாணவர் பேரவைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டால் பல்கலைக் கழக நிர்வாகத்தைச் சும்மா விடக்கூடாது என்கிற அளவுக்கு எல்லாரும் கடுஞ்சினத்தோடு இருந்தார்கள்.

"பழைய வி.சி. உலக நாடுகளில் உள்ள பிற பல்கலைக் கழகங்களையெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு அந்தப் பல்கலைக் கழகங்களின் தரத்துக்கு இதை உயர்த்த வேண்டும் என்ற ஆசையில் ஓரியண்டேஷன் டே, ஃப்ரீக்ஸ் டே (Freaks Day) போன்றவற்றையெல்லாம் இங்கே ஒரு வழக்கமாக ஏற்படுத்தினார். இவர் என்னடா என்றால் அந்த நல்ல பழக்கங்களை வைத்தே மாணவர்களின் உரிமைகளை ஒடுக்கப் பார்க்கிறார்..." என்று கோபமாகச் சொன்னார் ஓரளவு வயது மூத்த ஒரு எம்.ஏ. மாணவர்.

"செய்கிற காரியங்களைப் பார்த்தால் இவருக்குத் தாயுமானவனார் என்ற அன்பு மயமான பெயர் சற்றுக் கூடப் பொருத்தமாயில்லை!" என்பதாக ஆத்திரத்தோடு கத்தினான் மற்றொரு மாணவன். நேரம் ஆக ஆக மாணவர் கூட்டம் அதிகமாகியது. ஒன்பதரை மணிக்கு அண்ணாச்சி அவனை வந்து பார்த்து ஆறுதல் கூறினார். காலை பத்து மணிக்கு மாணவர்கள் பெருங் கூட்டமாக ரிஜிஸ்திரார் அலுவலக முகப்பில் கூடிவிட்டார்கள். பாண்டியனும், மோகன்தாஸும், கண்ணுக்கினியாளும், இன்னும் இரண்டொரு மாணவிகளும் கூட்டத்தின் முன்னணியில் நோட்டீஸ் போர்டு அருகே நின்று கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு நடந்த கல்லெறிக்குப் பின் அன்பரசனையோ, வெற்றிச்செல்வனையோ எங்குமே காணவில்லை. அவர்கள் வகை மாணவர்களிலும் சிலரைக் காணவில்லை. தேர்தல்கள் தள்ளிப் போடப்படுவது பற்றி அவர்கள் தரப்பைச் சேர்ந்த மாணவர்களில் யாருமே கவலையோ, வருத்தமோ அடைந்ததாகத் தெரியவில்லை. தேர்தல்கள் நடக்காமல் நிறுத்தப்படுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி கூட இருக்கும் போல் தெரிந்தது.

பத்தே கால் பணிக்கு ரிஜிஸ்திரார் ஆபீஸ் பியூன் பல்கலைக் கழக முத்திரையோடு கூடிய நீளமான் தாளில் டைப் செய்யப்பட்டிருந்த அறிக்கை ஒன்றைக் கொண்டு வந்து பலகையில் ஒட்டினான். அறிக்கையின் கீழே ரிஜிஸ்திரார் கையெழுத்து இருந்தது.

முதல் நாள் இரவு இருவேறு தரப்பைச் சேர்ந்த மாணவர் குழுக்களிடையே நடந்த ஒரு மோதலை ஒட்டிப் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தல்கள் கால வரையறையின்றித் தள்ளிப் போடப்படுவதாகவும் - இன்னும் பதினைந்து நாட்களுக்குப் பல்கலைக் கழக எல்லைக்குள் பதிவாளரின் முன் அனுமதியின்றிக் கூட்டங்களோ, ஊர்வலங்களோ கூடாது என்ற உத்தரவை மேலும் இரண்டு வாரம் நீட்டிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது. கால்மணி நேரம் கழித்து ஒட்டப்பட்ட மற்றோர் அறிக்கையில் அன்று மாலையிலேயே நடைபெறும் ஓரியண்டேஷன் நாள் கூட்டத்தில் துணைவேந்தர் மாணவர்களுக்குச் சொற்பொழிவாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கைகளைப் பார்த்ததும் மாணவர்களிடையே உணர்ச்சி பெருக்கெடுத்து பொங்கியது.

'துணைவேந்தரே! மாணவர் உரிமைகளை ஒடுக்காதீர்' என்று கரியால் சுவரில் பெரிதாக எழுதினான் ஒரு மாணவன். அடுத்த கணம் அதே வாக்கியம் பல்லாயிரம் குரல்களாக மைதானத்தில் எதிரொலித்தது. மாணவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பாண்டியனுக்கும் மோகன்தாஸுக்கும் இருந்தது.

அங்கே நோட்டீஸ் போர்டு வைக்கப்பட்டிருந்த அந்த மேஜை மேல் அப்படியே தாவி ஏறினான் பாண்டியன். கைகளை உயர்த்தி மாணவத் தோழர்களிடம் அமைதியைக் கோரினான் அவன். நெற்றியில் காயத்தோடு மேலே நின்ற பாண்டியனைக் கண்டதும் மைதானத்தில் கூடியிருந்த மாணவர்களின் பெருங்கூட்டம் மெல்ல மெல்லக் கட்டுப்பட்டு அமைதியடைந்தது. மேலே பேசத் தொடங்கினான்.

"மாணவ நண்பர்களே, தோழியர்களே! இப்போது இங்கே ஒட்டப்பட்டிருக்கும் துணைவேந்தரின் அறிக்கை நம்முடைய நியாயமான உரிமைகளை ஒடுக்குகிறது. நேற்றிரவு நம் துணைவேந்தர் பேரவைத் தேர்தல் பற்றிப் பேசுவதற்காக எங்களைக் கூப்பிட்டனுப்பியதும், அவரோடு பேசிவிட்டு விடுதிகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது நாங்கள் காலிகளால் கல்லெறிப்பட்டதும் பற்றி நம் நண்பர்கள் உங்களிடம் சொல்லியிருப்பார்கள். இன்று அந்தக் கல்லெறியையே காரணமாகச் சொல்லி நம் பேரவைத் தேர்தல்கள் காலவரை இன்றித் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ரிஜிஸ்ட்ரார் அறிவித்திருக்கிறார். அந்தக் கல்லெறியை நடத்திவிட்டு இந்த அறிக்கையை ஒட்ட வேண்டும் என்று காத்திருந்து ஒட்டினாற் போல் இப்போது இங்கே இந்த அறிக்கை ஒட்டப்பட்டிருக்கிறது. அமைதியான சூழ்நிலையை வேண்டும் என்றே திட்டமிட்டுக் கெடுத்துவிட்டுச் செயற்கையாக ஒரு நெருக்கடியை உண்டாக்கித் தேர்தல்களைத் தட்டிக் கழித்துவிடப் பார்க்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இருந்து நம் உரிமைகளுக்காக நாம் போராட வேண்டும். அரசியல் செல்வாக்காலும், பதவி அதிகாரங்களாலும் யார் அடக்க முயன்றாலும் நாம் அடங்க மாட்டோம். அடங்கியிருக்க நமக்குத் தெரியும். ஆனால் பிறர் நம்மை அடக்கியிருக்க நாம் அடங்கிவிடப் போவதில்லை. நம்முடைய வேண்டுதலுக்குப் பல்கலைக் கழக நிர்வாகத்திடமிருந்து நியாயமான பதில் கிடைக்கிற வரை நாம் வகுப்புக்களைப் புறக்கணிக்கிறோம். இன்று மாலை இதே மைதானத்தில் வி.சி. நிகழ்த்த இருக்கும் பாடத் தொடக்க விழா சொற்பொழிவையும் நாம் பகிஷ்கரிக்க வேண்டும். யாருடைய நிர்பந்தத்துக்காகவோ பயந்து இந்தப் பல்கலைக் கழகத்தில் மாணவர் இயக்கத்தையே ஒடுக்கிவிடப் பார்க்கிறார்கள். இதை எதிர்த்து நாம் போராடியே ஆகவேண்டும். நமக்குச் சுதந்திரம் தருகிறவர்களுக்கு முன் நாம் அடங்கியிருக்கலாம். ஆனால் நம்மை அடக்க விரும்புகிறவர்களுக்கு முன் நாம் சுதந்திரமாக இருந்தேயாக வேண்டும்."

பாண்டியன் பேசி முடித்ததும் மைதானத்தில் திரண்டிருந்த மாணவர்களின் கைதட்டல் ஓய ஐந்து நிமிடம் ஆயிற்று. மைதானத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே வகுப்பு நேரத்துக்காக விடுதியிலிருந்து வந்த மாணவிகளும் அங்கே நிறையக் கூடிவிட்டார்கள். அதைக் கவனித்த பாண்டியன் உடனே "பெண்கள் சார்பில் யாராவது பேசினால் நல்லது. நீ பேசு!" என்று கண்ணுக்கினியாளைக் கைலாகு கொடுத்து மேஜை மேல் ஏற்றிவிட்டுத் தான் கீழே இறங்கிக் கொண்டான்.

"இது சுயநலமிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும்" என்றாள் அவள். கண்ணுக்கினியாளின் தோற்றத்துக்கும் இனிமையான குரலுக்கும் கூட்டத்தை அப்படியே வசீகரித்துவிடும் சக்தி இருப்பதைப் பாண்டியன் கண்டான். அடுத்து மோகன்தாஸ் பேச இருந்தான். அதுவரை மெல்லிய பூஞ்சாரலாக இருந்த தூரல் திடீரென்று பெருமழையாக வலுத்துவிடவே மாணவர்கள் கலைந்து போக மாட்டார்கள் என்ற நிலை இருந்தும் மோகன்தாஸே இரண்டு வாக்கியத்தில் சுருக்கமாகப் பேசி முடித்துவிட்டான். 'வகுப்புகளுக்குப் போக வேண்டாம்' என்ற கோரிக்கையோடு அவர்களே மாணவர்களை விடுதிகளுக்குக் கலைந்து போகச் சொல்லிவிட்டார்கள். ரிஜிஸ்திரார் ஆபீஸ் வராந்தாவில் பாண்டியனும், கண்ணுக்கினியாளும், மோகன்தாஸும் மற்றும் சில் மாணவர்களும் கூட்டமாகப் பேசிக் கொண்டு நின்றார்கள்.

"தியேட்டர் சயின்ஸ் சம்பந்தமாக ஒரு புதுப் புத்தகம் வந்திருக்கிறது... யுனிவர்சிடி லைப்ரரிக்குப் போக வேண்டும். நீங்களும் என்னோடு வருகிறீர்களா?" என்று கண்ணுக்கினியாள் பாண்டியனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். ரிஜிஸ்திரார் ஆபீஸிலிருந்து விடுதிக்குப் போக வேண்டுமானால் நடுவே ஒரு பர்லாங் தொலைவு மைதானத்தில் நனைய வேண்டியிருக்கும். நூல் நிலையக் கட்டிடத்துக்குப் போக வேண்டுமானால் அப்படியே வராந்தாவில் சிறிது தூரம் நடந்து நனையாமலே போய்விடலாம் என்ற எண்ணத்தில் பாண்டியனும் மோகன்தாஸிடம் சொல்லிக் கொண்டு அவளோடு புறப்பட இருந்தான். அப்போது மழை நீரைக் கிழித்துக் கொண்டு மைதானத்தில் ஒரு ஜீப் வந்தது. அருகே வந்ததும் அது போலீஸ் ஜீப் என்று தெரிந்தது. ரிஜிஸ்திரார் அலுவலக வராந்தாவை ஒட்டி ஜீப் வந்து நின்றதும் அதிலிருந்து ஒரு ஸப்-இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டேபிள்களும் இறங்கினர். பல்கலைக் கழக எல்லைக்குள் போலீஸைப் பார்த்ததும் பாண்டியன் தயங்கி நின்றான். அவர்கள் ரிஜிஸ்திரார் அலுவலகத்துக்கு அவர் கூப்பிட்டனுப்பி வந்திருக்கிறார்களா அல்லது வேறு எதற்காக வந்திருக்கிறார்கள் என்று அறியும் ஆவலில் பாண்டியனும், மோகன்தாஸும், கண்ணுக்கினியாளும், சில மாணவர்களும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

ஆனால் அந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள்களும் சொல்லி வைத்தது போல் தங்களை நோக்கி வரவே பாண்டியனும் மோகன்தாஸும் திகைத்தனர். இன்ஸ்பெக்டர் அருகே வந்து கூறினார்:

"நேற்றிரவு வி.சி. வீட்டருகே நடந்த கல்லெறி சம்பந்தமாக உங்கள் இருவரையும் கைது செய்ய வந்திருக்கிறோம்." பாண்டியன் ஆத்திரம் தாங்காமல் எரிச்சலோடு அந்த இன்ஸ்பெட்கருக்கு பதில் கூறினான்:

"கல்லெறிந்தவர்களை விட்டுவிட்டுக் கல்லெறி பட்டவர்களைத் தேடி வரும் போலீஸ் இன்ஸ்பெட்கரை நாங்கள் இன்று தான் முதன் முதலாகச் சந்திக்கிறோம் சார்."

"ஆன் வாட் அதாரிர்ட்டி ஹாவ் யூ எண்டர்டு இன் டு தி யுனிவர்சிடி காம்பஸ்?" என்று கண்ணுக்கினியாள் சீறியபோது, "யுவர் வி.சி. ஃபோன்டு மீ..." என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினார் இன்ஸ்பெக்டர்.

ஐந்தாவது அத்தியாயம்

துணைவேந்தர் தம்முடைய பதவியில் நீடிப்பதற்காக அரசாங்கத்திற்கும் அரசாங்கமாக இருந்து ஆளுகிற கட்சிக்கும் தொடர்ந்து நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறார் என்று தெரிந்தது. அதற்காகப் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் பகைத்துக் கொள்ளவும் அவர் தயாராக இருந்தார். தங்கள் இரண்டு பேரையும் குறிப்பிட்டுப் புகார் செய்து பல்கலைக் கழக எல்லைக்குள் போலீஸை வரவழைத்திருப்பதிலிருந்து அவர் எதற்கும் துணியக் கூடியவர் என்பதைப் பாண்டியனும், மோகன்தாஸும் புரிந்து கொண்டார்கள். எதிர்பார்த்ததுதான் என்றாலும் துணைவேந்தரின் மாணவர் விரோதப் போக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாயிருந்தது.

"எங்களைக் கைது செய்வதற்கு 'அரெஸ்ட் வாரண்ட்' இருந்தால் காண்பியுங்கள்" என்று பாண்டியன் அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வற்புறுத்திக் கேட்கத் தொடங்கினான்.

"நீங்கள் இருவரும் என்னோடு இப்போது ஸ்டேஷனுக்கு வந்தாக வேண்டும். இண்ட்டராகேஷனுக்காக ரிமாண்டில் வைப்பதற்கு வாரண்ட் ஒன்றும் அவசியமில்லை" என்றார் இன்ஸ்பெக்டர். அவர்கள் இருவரும் இன்ஸ்பெக்டரோடு ஸ்டேஷனுக்குப் புறப்படுவதற்கு முன் நடந்தவற்றை உடனே பொருளாதாரப் பேராசிரியரிடமும், மற்ற மாணவர்களிடமும், அண்ணாச்சியிடமும் தெரிவிக்கச் சொல்லி அருகிலிருந்த கண்ணுக்கினியாளிடம் கூறிவிட்டுச் சென்றார்கள். தன்னையும், மோகன்தாஸையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் அரட்டி மிரட்டினால் அதன் மூலம் பல்கலைக் கழகத்திலேயே மாணவர் இயக்கம் ஒடுங்கிவிடும் என்று துணைவேந்தர் நினைப்பதை எண்ணி உள்ளூறச் சிரித்துக் கொண்டான் பாண்டியன்.

மழை மிகவும் கடுமையாக இருந்ததனால் ஜீப்பிற்குள் அமர்ந்திருந்தும் அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேருவதற்குள்ளேயே முக்கால்வாசி நனைந்து போய்விட்டார்கள். மழை மூட்டத்தில் எதிரேயும், பக்கங்களிலும் எதுவுமே தெரியவில்லை. மேகக்குவியல்களின் நடுவில் ஜீப் மட்டும் முன் நோக்கி நகர்வது போலிருந்தது. இன்ஸ்பெக்டர் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு ஜீப்பிற்குள்ளேயே புகையை இழுத்து இழுத்து விட்டார். ஸ்டேஷனில் கான்ஸ்டேபிள்களோடு மாணவர்கள் இருவரையும் இறக்கி விட்டுவிட்டு இன்ஸ்பெக்டர் ஜீப்பிலிருந்து இறங்காமல் அப்படியே வேறெங்கோ புறப்பட்டுப் போய்விட்டார்.

அவர்களிடம் கான்ஸ்டேபிள்களோ, ஸ்டேஷன் ரைட்டரோ யாருமே கடுமையாக நடந்து கொள்ளவில்லை. அன்பாகவும், சுபாவமாகவுமே நடந்து கொண்டார்கள். ஸ்டேஷன் உள்ளறையிலிருந்த ஒரு நீள பெஞ்சைக் காண்பித்து, "இன்ஸ்பெக்டர் வர்றவரை இங்கே உட்கார்ந்திருங்க" என்று உட்கார வைத்துவிட்டார்கள். தங்களுக்காகத் தேநீர் வரவழைத்துக் குடித்தபோது பாண்டியனுக்கும், மோகன்தாஸுக்கும் கூடத் தேநீர் அளித்தார்கள் அவர்கள். ஆனாலும் பாண்டியனும், மோகன்தாஸும் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

'அந்த இன்ஸ்பெக்டர் எதற்காக அப்படி அங்கே தங்களைக் கொண்டு வந்து உட்கார்த்தி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்?' என்பது புரியாமல் சிந்தித்துக் குழம்பிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். வெளியே மழை நின்று போயிருந்தது. கலைந்தும் கலையாமலுமிருந்த மேகங்களிடையே நீலமலைகள் மெல்ல மெல்லத் தெரியத் தொடங்கியிருந்தன. பாண்டியன் சொன்னான்: "வி.சி. இவ்வளவு தந்திரமாகவும், கேவலமாகவும் நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை."

"நான் எதிர்பார்த்தேன். இந்த வி.சி.யைப் பொறுத்த வரை வி.சி. என்பதற்கே 'வெரிக் கிளவர்', 'வெரி கன்னிங்' என்பதுதான் அர்த்தம் என்று கடந்த சில ஆண்டு அனுபவங்களில் நான் தீர்மானமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் பாண்டியன்."

"நாளைக்கு மாலை பழைய மாணவர் தலைவன் மணவாளனுக்குப் பிரிவுபசார விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு நாம் இருவரும் போக முடியுமோ, முடியாதோ?"

"நாம் போக முடிந்தாலும் முடியாவிட்டாலும் நம் மாணவத் தோழர்கள் அதைப் பிரமாதமாக நடத்தி விடுவார்கள். அண்ணாச்சி பார்த்துக் கொள்வார். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் மணவாளனை நாம் சந்தித்துப் பேசுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்."

"அதனால் தான் நானும் அவரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் என்னடா என்றால் இங்கே கொண்டு வந்து உட்கார வைத்துக் கொண்டு கழுத்தறுக்கிறார்கள். அரெஸ்ட் வாரண்ட் கிடையாது. விசாரணை கிடையாது. கேள்வி முறை இல்லாமல் எதற்காக இங்கே கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை?"

"ஒன்றுமே இல்லாமல் சும்மா மிரட்ட வேண்டும் என்பதற்காகக் கூடக் கொண்டு வந்து உட்கார வைத்திருப்பார்கள். மணி ஒன்றாகிறது. நம்முடைய பகல் சாப்பாட்டிற்கு என்ன செய்யப் போகிறார்களோ?"

பாண்டியனும், மோகன்தாஸும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே அண்ணாச்சி ஒரு பெரிய டிபன் கேரியரோடு வந்து சேர்ந்தார். "ஒன்றும் கவலைப்பட வேண்டாம். முதலில் சாப்பிடுங்க. இங்கேயிருந்து சீக்கிரமாப் போயிடலாம். அதுக்கு ஏற்பாடு நடக்குது" என்றார் அண்ணாச்சி. கான்ஸ்டேபிள்களில் இரண்டொருவர் அண்ணாச்சிக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். ஸ்டேஷன் பெஞ்சிலேயே இலை போட்டுச் சாப்பிட்டு முடித்தார்கள். அவர்களுக்கு போலீஸ்காரர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் எடுத்துத் தருவது பரிமாறுவது போன்ற உதவிகளைக் கூடச் செய்தனர்.

அண்ணாச்சி எல்லாம் விவரமாகச் சொன்னார்: "பேராசிரியர் பூதலிங்கம் சாரிடத்தில் போய் நம்ம 'கண்ணு'வும் மற்ற மாணவர்களும் உங்க ரெண்டு பேரையும் போலீஸ் கூட்டிக்கிட்டு வந்ததைப் பற்றிச் சொல்லி வருத்தப்பட்டிருக்காங்க. பூதலிங்கம் சார் உடனே அவங்க கூடவே புறப்பட்டுப் போய் வி.சி.யைப் பார்த்திருக்காரு. வி.சி. 'யுனிவர்சிடி எல்லைக்குள்ளாற போலீஸை நான் கூப்பிடவே இல்லையே! எப்பிடி வந்தாங்க அவங்க'ன்னு நாடகம் ஆடினாராம். கடைசிலே, 'சரி! பையங்க ரெண்டு பேரையும் விடச் சொல்லிடறேன். சாயங்காலம் 'ஓரியண்டேஷன் லெக்சருக்கு எல்லாப் பையன்களும் அமைதியா மைதானத்திலே கூடுகிறதா உறுதியளிக்க முடியுமா?'ன்னு கேட்டாராம். உடனே பையங்க எல்லாருமாச் சேர்ந்து, 'அது முடியாது! நிபந்தனை இல்லாமலே நீங்க அவங்க ரெண்டு பேரையும் விடச் சொல்லணும்'னு வற்புறுத்தியிருக்காங்க. வி.சி. உடனே இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் ஃபோன் பேசினாராம். விசாரிச்சு முடிஞ்சதும் மூணு மூணரை மணிக்குள் உங்க ரெண்டு பேரையும் அனுப்பிடு வாங்கன்னு வி.சி. மாணவர்களுக்கு உறுதி கூறியிருக்கிறாராம்."

"வி.சி. ஃபோன் பண்ணி அதற்கப்புறம் வந்ததாகத் தானே அந்த இன்ஸ்பெக்டர் எங்களிடம் சொன்னார். அப்படியிருக்கும் போது போலீஸ் வந்தது தமக்குத் தெரியாதென்று அவரே ஏன் சொல்ல வேண்டும் அண்ணாச்சி?"

"ஏதோ அவர் இதுவரை பொய்யே சொல்லாதவர் போலவும் இப்போதுதான் முதல் முதலாக சொல்பவர் போல் ஆச்சரியப்படுகிறாயே, பாண்டியன்? எப்போது அவர் நிஜத்தைச் சொல்லியிருக்கிறார்?" என்றான் மோகன்தாஸ். சிறிது நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த பின் அண்ணாச்சி புறப்பட்டுப் போனார். போகும் போது மறுநாள் மாலை மணவாளனுக்குப் பிரிவுபசார விருந்து இருப்பதை அவரும் ஞாபகப்படுத்திவிட்டுப் போனார். "மணவாளன் மதுரையிலிருந்து எப்போது வரக்கூடும் என்பதைப் பற்றி ஏதாவது தகவல் தெரியுமா?" என்று பாண்டியன் அண்ணாச்சியிடம் வினவிய போது, "அநேகமா இன்னிக்கு ராத்திரி கடைசி பஸ் அல்லது நாளைக்குக் காலையிலேயே முதல் பஸ்ஸிலே வந்திடுவாரு" என்று அண்ணாச்சி புறப்படுமுன் அவர்களிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

ஒரு வேளை இன்ஸ்பெக்டர் விசாரணைக்குப் பின் தங்களை விடுதலை செய்துவிட்டாலும் துணைவேந்தரின் 'ஓரியண்டேஷன்' சொற்பொழிவைப் புறக்கணிப்பது என்ற முடிவை எக்காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்தார்கள் அவர்கள். துணைவேந்தர் இந்தத் தேர்தலையும் இதில் தொடர்புடைய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினரையும் ஒடுக்க முயல முயல இது மகத்தான வெற்றிகளை அடந்தே தீரும் என்று அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

பகல் இரண்டரை மணிக்கு இன்ஸ்பெக்டர் திரும்பி வந்தார். மோகன்தாஸையும், பாண்டியனையும் விசாரணை என்ற பேரில் ஏதோ கேள்விகள் கேட்டார். அவை அனைத்துமே ஏனோ தீவிரமாக இல்லை. அரை மணி நேரத்துக்குப் பின், "நீங்கள் இருவரும் போகலாம். படிப்புத்தான் முக்கியம். கலகத்தினால் படிப்பு வராது. யுனிவர்ஸிடியும், அதை ஒட்டிய இந்த நகரமும் லா அண்ட் ஆர்டரோடு - பீஸ்ஃபுல்லா இருக்க ஒத்துழையுங்க" என்று சிரித்துக் கொண்டே கூறியபடி இருவரோடு கை குலுக்கி விடை கொடுத்தார் இன்ஸ்பெக்டர். கைது செய்ய வந்த போது இருந்த வேகமும் மிடுக்கும் இப்போது அவரிடம் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். புறப்படு முன் மோகன்தாஸ் அவரைக் கொஞ்சம் வம்புக்கு இழுத்தான்.

"சார்! நீங்கள் இன்று காலையில் பல்கலைக் கழகத்துக்குள் எங்களைக் கைது செய்ய வந்த போது எங்கள் வி.சி. ஃபோன் செய்ததின் பேரில் வந்ததாகக் கூறினீர்கள். கேன் ஐ ஸீ தி எஃப்.ஐ.ஆர்.?"

"நீங்கள் ஒன்றையும் பார்க்க வேண்டாம். போய் நல்ல பிள்ளையாக லட்சணமாய்ப் படியுங்கள்" என்று அவர் மழுப்பிவிட்டார். அவர்களும் சிரித்துக் கொண்டே வெளியேறினார்கள். மழை பெய்து முடிந்த பின் சாலைகள் கழுவி விட்டது போல் பளிச்சென்றிருந்தன. மழை பெய்து முடிந்த பின்புதான் சில நகரங்களில் சாலைகள் சேறும் சகதியுமாய் அசிங்கமாகிவிடும். ஆனால் மல்லிகைப் பந்தல் நகரில் மேடும் பள்ளமுமான மலைச் சாலைகளாகையால் எவ்வளவு மழை கொட்டினாலும் மழை நின்ற அடுத்த கணமே சாலைகள் பளிச்சென்றிருக்கும். போலீஸ் ஸ்டேஷன் வாசலிலிருந்து கால் மணி நேரம் நடந்து கடை வீதிக்கும், பல்கலைக் கழகத்திற்கும் சாலைகள் பிரியும் இடத்தை அடைந்த போதுதான் இன்ஸ்பெக்டர் ஏன் அவ்வளவு அவசரப்பட்டுத் தங்கள் இருவரையும் வெளியே அனுப்பி வைத்தார் என்பது பாண்டியனுக்கும், மோகன்தாஸுக்கும் புரிந்தது.

பல்கலைக் கழகச் சாலையிலிருந்து 'மாணவர் தலைவர்களை விடுதலை செய்', 'அடக்குமுறை ஒழிக', 'துணைவேந்தரே! தீமைக்குத் துணை போகாதீர்' போன்ற கோஷங்களுடனும், அதே வாக்கியங்கள் எழுதிய அட்டைகளுடனும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்கள். இருபுறமும் மரங்கள் அடர்ந்த நேரான அந்தச் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவது போல் மாணவர்கள் வருவது கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.

ஊர்வலத்தின் முதல் வரிசையில் மாணவிகளின் அணி இருந்தது. அந்த அணிக்குத் தலைமை தாங்கி நடத்தி வந்த கண்ணுக்கினியாளின் வலது கரத்தில் மாணவர்களை விடுதலை செய்யக் கோரும் வாசகம் அடங்கிய அட்டை ஒன்றிருந்தது. தொடர்ந்து அலை அலையாக மாணவிகளும், மாணவர்களும் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். பாண்டியனையும், மோகன்தாஸையும் எதிரே பார்த்ததும் ஊர்வலத்தின் உற்சாகம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. ஓடி வந்து சூழ்ந்து கொண்ட மாணவர்கள் அவர்கள் இருவரையும் அப்படியே கட்டித் தூக்கிவிட்டார்கள். புறப்பட்ட ஊர்வலம் நோக்கமின்றி வீணாகிவிடக் கூடாது என்பதற்காக அதை அப்படியே துணைவேந்தர் மாளிகையை நோக்கி திருப்பிவிட்டுத் தங்கள் தலைமையில் அழைத்துச் சென்றார்கள் அவர்கள். விரைந்து சிந்தித்து உடனே அந்த முடிவுக்கு வரவேண்டியிருந்தது. மாலையில் நடத்தத் திட்டமிட்டிருந்த பாடத் தொடக்க நாள் சொற்பொழிவை நடத்தப் போகவிடாமல் துணைவேந்தரை அவர் மாளிகை வாசலிலேயே தடுத்து விட வேண்டும் என்பதும், முதலில் திட்டமிட்டபடி பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தல்களை உடனே நடத்தச் சொல்லி வற்புறுத்த வேண்டும் என்பதும் அப்போது அவர்கள் நோக்கமாயிருந்தது. காலையிலேயே அவர்கள் கைதானவுடன், பல மாணவர்கள் அந்தப் பல்கலைக் கழகத்தின் சான்ஸ்லராகிய மாநில கவர்னருக்குத் தந்தி கொடுத்திருந்தார்கள். அரசாங்கம், போலீஸ், துணைவேந்தர் எல்லாருமாகச் சேர்ந்து மாணவர்களை அநியாயமாக அடக்கி ஒடுக்க முயல்வதாகக் கவர்னருக்கு அனுப்பிய தந்திகளில் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். புரோ-சான்ஸ்லராகிய கல்வி அமைச்சரின் தூண்டுதலிலேயே துணைவேந்தர் இவ்வளவும் செய்வதாக அவர்கள் சந்தேகப்பட்டதனால் தான் தந்திகள் சான்ஸ்லராகிய மாநில கவர்னருக்குத் தரப்பட்டிருந்தன. இரண்டொருவர் தந்தி தகவல்களைக் கல்வி மந்திரிக்கும் அனுப்பியிருந்தார்கள். 'ஃபோன் மூலம் கவர்னரோ, கல்வி அமைச்சரோ நிலைமை கட்டுக்கு அடங்காமல் போய் மாணவர்களை கிளர்ந்து எழும்படி விட்டு விடாதீர்கள்' என்று துணைவேந்தரை எச்சரித்திருக்கலாம் என்று தெரிந்தது. பிற்பகலுக்கு மேல் துணைவேந்தரின் போக்கில் ஒரு தந்திரமான மாறுதல் தெரிந்தது. தமது போக்கை ஆதரிக்கும் மாணவர்கள் சில நூறு பேர் கூட இல்லை என்பதும், எதிர்க்கும் மாணவர்கள் பல ஆயிரம் பேர்கள் என்பதும் வீட்டு வாசலில் பிரத்தியட்சமாக வந்து நின்ற ஊர்வலத்திலிருந்து தெரிந்தது அவருக்கு. மாணவர்கள் ஊர்வலமாக அவர் மாளிகைக்குப் போன நேரத்தில் எல்லாப் பகுதிகளின் 'டீன்'களும் எல்லாப் பிரிவின் பேராசிரியர்களும் அங்கே கூடியிருந்தனர். நிலைமையைப் பற்றி அவர்களிடமும் கலந்து பேசியதில் அவர்களில் பலர் மாணவர் பேரவைத் தேர்தலைத் தள்ளிப் போட வேண்டிய அவசியமில்லை என்றே கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

மாலை நாலரை மணிக்குப் பொருளாதார பேராசிரியரையும் உடன் அழைத்துக் கொண்டு மாளிகை முகப்பில் ஊர்வலமாக வந்து வளைத்துக் கொண்டு நிற்கும் மாணவர்களை எதிர் கொண்டார் துணைவேந்தர். அவரைக் கண்டவுடன் மாணவிகளின் கூப்பாடுகளும், கோபக்குரல்களும் அதிகமாயின. பேராசிரியர் பூதலிங்கம் கைகளை உயர்த்தி அமைதியாயிருக்கும்படி மாணவர்களை வேண்டவே, அவர் வேண்டுதலை மதித்து அவர்கள் அமைதி அடைந்தார்கள்.

"மாணவர்களே! ஏற்கெனவே அறிவித்திருந்தபடி இன்று மாலை 'ஓரியண்டேஷன்' நாள் நடைபெறாது. முன்னமே திட்டமிட்டபடி உங்கள் பேரவைத் தேர்தல்கள் முடிந்த பின் 'ஓரியண்டேஷன் நாளை' வைத்துக் கொள்ளலாம். இந்த முடிவு உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் என்று நினைக்கிறேன். இப்போது நீங்கள் அமைதியாக கலைந்து செல்லலாம்" என்று கூட்டத்தை நோக்கி அறிவித்துவிட்டு அவர்கள் கரகோஷம் ஓய்ந்ததும் அவர்கள் முன்னிலையிலேயே, "மிஸ்டர் பூதலிங்கம்! யூ கேன் கண்டக்ட் தி ஸ்டூடண்ட் கவுன்சில் எலெக்ஷன்ஸ் அஸ் ஷெட்யூல்ட்..." என்றும் சொல்லிவிட்டு உள்ளே சென்றார் துணைவேந்தர்.

"மோகன்தாஸ்! ஆஸ் யூ ஸெய்ட் அவர் வி.சி. இஸ் வெரி கிளவர்..." என்று பாண்டியன் மோகன்தாஸின் காதருகே சொல்லிச் சிரித்தான்.

"இவர் வரையில் வி.சி. என்பதற்கு எக்ஸ்பான்ஷனே வெரி கிள்வர்தான் பிரதர்."

"ரொம்பக் கெட்டிக்காரர்தான்!"

"கெட்டிக்காரராயிருக்கட்டும். ஆனால் அடுத்தவர்களை முட்டாளாக்க முயல்கிற அளவு கெட்டிக்காரராயிருக்க வேண்டியதில்லை. படித்தவனுடைய கெட்டிக்காரத்தனம் அடுத்தவனைப் புத்திசாலியாக்கப் பயன்பட வேண்டுமேயன்றி அடுத்தவனை ஏமாற்றப் பயன்படுத்தப் படக்கூடாது. இண்டெலக்சுவல் டிஸ்-ஹானஸ்டி ஷுட் கோ.."

"அங்கங்கே பெரிய பொறுப்புக்களில் இருக்கும் பல அறிவாளிகள் தங்கள் நாணயமின்மையால் வேர்ப் புழுக்களைப் போல் சமூகத்தின் ஆணிவேரை மறைவாக அரித்துக் கொண்டிருக்கிறார்கள். இலைப் புழுக்களையும், கம்பளிப் பூச்சிகளையும் விட வேர்ப்புழுக்கள் அபாயகரமானவை."

"இன்றைய இந்திய சமூகத்தில் எல்லாத் துறையிலும், எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் அப்படிப்பட்ட வேர்ப்புழுக்களின் அபாயம் இருக்கிறது..."

பேசிக் கொண்டே குழுக்கள் குழுக்களாக மாணவர்கள் விடுதிகளுக்கும், கடை வீதிகளுக்கும், விளையாட்டு மைதானத்துக்கும், காப்பி சிற்றுண்டிக்கும் பிரிந்து சென்றார்கள். பாண்டியனும் கண்ணுக்கினியாளும், மோகன்தாஸும் வேறு சில மாணவர்களும் அண்ணாச்சி கடைக்குப் புறப்பட்டார்கள். பாண்டியன் கண்ணுக்கினியாளுக்கு நன்றி கூறினான்.

"உனக்கு நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். ஓர் இக்கட்டான சூழ்நிலையில் உன்னிடம் குறிப்பாகச் சொல்லிவிட்டுப் போலீஸ் ஜீப்பில் ஏறிப் போய்விட்டோம். சில மணி நேரத்திற்குள் கவர்னருக்குத் தந்திகளைப் பறக்கச் செய்து எல்லா விடுதி மாணவர்களையும் கட்டுப்பாடாக ஊர்வலத்துக்கு வரச் செய்து காரியங்களை வெற்றிகரமாக்கி உன் செயல்களால் நீ பெரிதும் உதவியிருக்கிறாய்."

"பிரமாதமாக அப்படி என்ன செய்துவிட்டேன்? உங்களில் ஒருத்தி என்ற முறையில் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தேன். அதற்கு உடனே மிகவும் அந்நியமானவர்கள் சொல்லிக் கொள்வது போல் இப்படி நன்றி கூடவா சொல்லிக் கணக்குத் தீர்த்து விட வேண்டும்?"

"உங்களைப் போல் ஜூனியராக, இந்த ஆண்டு தான் இங்கு வந்து சேர்ந்திருக்கும் ஒரு புதிய மாணவி, கூச்சமும், பயமும் இல்லாமல் இதை எல்லாம் சாதித்து முடித்திருப்பது பெரிய காரியம் தான்" என்று மோகன்தாஸும் அவளைப் புகழ்ந்தான்.

"நீங்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் இப்படி என்னைப் புகழ்ந்து கொண்டே இருந்தால் நான் உங்களோடு அண்ணாச்சிக் கடைக்கு வருவதைத் தவிர்த்து விட்டு விடுதிக்கே திரும்ப வேண்டியிருக்கும்..."

"நான் வேண்டுமானால் புகழ்வதை நிறுத்திவிடுகிறேன். ஆனால் பாண்டியன் உரிமைகளை நான் கட்டுப்படுத்த முடியாது. அவன் பாடு, உங்கள் பாடு. ரொம்பவும் அந்நியோந்நியமானவர்களின் உரிமைகளில் மூன்றாம் மனிதர்கள் தலையிட முடியாது". "இந்த வம்பு தானே வேண்டாம்னேன்" என்று பாண்டியன் அவசர அவசரமாகக் குறுக்கிட்டான். மோகன்தாஸைப் பேச விடாமல் முந்திக் கொண்டு தடுத்த அந்த அவசரத்திலும், அவள் விழிகளில் தெரிந்த ஆவலையும், கன்னங்கள் சிவந்து இதழ்களில் அரும்பும் இள நகையையும் பாண்டியன் காணத் தவறவில்லை. அந்த விநாடியில் அவள் தன்னருகே தோளோடு தோள் நடந்து வருகிறாள் என்பதே அவனுடைய அந்தரங்கத்தின் பெருமிதமாக இருந்தது. இன்பகரமானதோர் இறுமாப்பாகவும் இருந்தது.

அவர்கள் அண்ணாச்சிக் கடைக்குப் போய்ச் சேரும் போது மாலை ஆறு மணியாகிவிட்டது. மல்லிகைப் பந்தலின் அழகிய சாலைகளில் விளக்குகள் மின்னத் தொடங்கி விட்டன. மேடுகளிலும், உயரமாயிருந்த மலைப் பகுதிகளிலும் அங்கங்கே தெரிந்த விளக்கு ஒளிகள் அந்த மாலை நீலத்தின் சுகமான இருட் கனத்தினிடையே மிகவும் அழகாகத் தெரிந்தன. கடையில் சென்னையிலிருந்தும் மதுரையிலிருந்தும் வெளிவருகிற நாலைந்து தினசரிகளின் உள்ளூர் நிருபர்களை வரவழைத்து உட்காரச் செய்து இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அண்ணாச்சி.

"தம்பீ! வாங்க. இவங்கள்ளாம் உங்களை எதிர்பார்த்துத்தான் காத்திருக்காங்க. எல்லாம் விவரமாகச் சொல்லுங்க" என்று மாணவர்களை வரவேற்று நிருபர்களோடு கடையின் உட்புற அறைக்கு அனுப்பி வைத்தார் அவர். பாண்டியனும், மோகன்தாஸும் நிருபர்களுக்கு எல்லா நிலைமைகளையும் விவரமாகச் சொல்லத் தொடங்கினார்கள். எதிர்ப்புறம் மருந்துக் கடைக்குப் போய் ஃபோன் மூலம் பெண்கள் விடுதி வார்டனிடம் பேசிச் சிறிது நேரம் தாமதமாக விடுதிக்குத் திரும்ப அனுமதி பெற்று வந்தாள் கண்ணுக்கினியாள். மதுரையிலிருந்து அவள் தந்தை நாயுடு தமக்கு எழுதிய ஒரு கடிதத்தை அவளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார் அண்ணாச்சி.

"நயினாவுக்குச் சதா என்னைப் பற்றிக் கவலைதான். உங்களை எனக்குக் 'கார்டியனா' நியமிச்சிருக்கிற மாதிரியல்லே எழுதியிருக்காரு?" என்று கூறியபடி வாசித்து முடித்த கடிதத்தை அண்ணாச்சியிடம் திருப்பிக் கொடுத்தாள் அவள்.

மாணவர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு நிருபர்கள் புறப்பட்ட போது, "மற்றவங்க பேப்பரிலே எப்பிடி எப்பிடியோ நியூஸ் வரும். நம்ம பேப்பருங்களிலேயாவது நல்லப்டியா எழுதுங்க. நிஜத்தைப் போடுங்க" என்று அண்ணாச்சி அவர்களிடம் சொல்லி அனுப்பினார். சிறிது நேரம் மாணவர்களோடு முதல் நாளிரவு நிகழ்ந்த கல்லெறியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் அவர். பாண்டியன் வேடிக்கையாக அதைப் பற்றி விவரித்தான்:

"அன்பரசன் அடிக்கடி கூட்டத்திலே சொல்கிற ஒரு மேற்கோளுக்கு அவன் புரிந்து கொண்டிருக்கிற அர்த்தம் என்ன என்பதே நேற்று நள்ளிரவில் தான் எங்களுக்குத் தெரிந்தது அண்ணாச்சி! 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே நாம் முன் தோன்றி மூத்தவர்கள்' என்று வெளியிலே நடக்கிற அவங்க கட்சிப் பொதுக் கூட்டமானாலும் சரி, பல்கலைக் கழகத்தில் நடக்கும் பாடனி அஸோஸியேஷன் கூட்டமானாலும் சரி, எங்கும் எதிலும் அன்பரசன் இதைக் கூறுவான். அவன் பேச்சில் அடிக்கடி கல் தோன்றிக் கொண்டிருந்தது. நேற்றிரவு செயலிலும் கல் தோன்றிவிட்டது..." இதைக் கேட்டு மோகன்தாஸ் சொன்னான்:

"சே! சே! அவன் ஏதோ பொருத்தமில்லாமல் கிளிப் பிள்ளைப் போல் அந்த வரியை எல்லாக் கூட்டங்களிலும் 'கோட்' செய்கிறான் என்பதற்காக நீ அவனைக் கிண்டல் செய்! ஆனால் அந்த அழகான வீரப்பாடலைக் கிண்டல் செய்யாதே, பாண்டியன்! எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது!..."

"நான் பாடலைக் கிண்டல் செய்யவில்லை மோகன்தாஸ்! லகர ளகர ழகர உச்சரிப்புக்கள் சரியாக வராமல் அன்பரசன் அந்தப் புறப்பொருள் பாடல் அடியைக் 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த தமிழ்க்குடி' என்பதற்குப் பதிலாக 'கள் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலோடு முன் தோன்றி மூத்த தமில்க்குடி' என்று அழுத்தந் திருத்தமாய் தப்பாகச் சொல்லும் போது கேலிக் கூத்தாயிருக்கும். அவனுடைய பிரசங்கத்தில் இந்த ஸீரியஸ் கொட்டேஷனே நகைச்சுவையைப் போல்தான் வந்து போகும்..."

"என்ன செய்யலாம்? தமிழ்நாட்டில் இன்று வரை வெறும் தமிழ் உணர்ச்சி மட்டுமே போற்றப்படுகிறது. தமிழ் அறிவையோ, சிந்தனை வளர்ச்சியையோ போற்றுவதற்குத் தமிழ் மக்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. அறிவைப் பட்டினிப் போட்டுவிட்டு உணர்ச்சிக்கு விழா எடுக்கும் வரை நாம் உருப்பட மாட்டோம்."

கண்ணுக்கினியாள் விடுதிக்குத் திரும்பும் நேரம் ஆகிவிட்டது என்று கைக்கடிகாரத்தைப் பார்க்கவே அவளை மட்டும் தனியே அனுப்பக் கூடாதென்று அவர்கள் எல்லாருமே அண்ணாச்சியிடம் சொல்லிக் கொண்டு பல்கலைக் கழகத்துக்குப் புறப்பட்டார்கள்.

"போற வழியிலே இன்னிக்கும் ஏதாவது 'கல் தோன்றாமே, மண் தோன்றாமே' பார்த்துப் பத்திரமாய்ப் போய்ச்சேருங்க தம்பிகளா...!" என்று எச்சரிக்கையோடு விடை கொடுத்தார் அண்ணாச்சி. "இன்றைக்கு இராத்திரியோ, காலையிலோ மணவாளன் மதுரையிலிருந்து வந்ததும் எனக்கு ஒரு வார்த்தை சொல்லியனுப்புங்க அண்ணாச்சி..." என்று போகும் போது ஞாபகப்படுத்திவிட்டுப் போனான் பாண்டியன்.

மணவாளன் என்ற மாபெரும் சக்தியினால் கவரப்பட்டுத்தான் பாண்டியன் போன்றவர்களுக்கு அந்தப் பல்கலைக் கழக மாணவர் இயக்கத்திலேயே அக்கறை ஏற்பட்டது. பாண்டியன் அந்தப் பல்கலைக் கழகத்துக்கு வந்த முதல் நாளிலேயே அண்ணாச்சி மணவாளனை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மாணவர்களை விடலைகளாகவும், விட்டேற்றிகளாகவும், சினிமா லோலர்களாகவும், எதுகை, மோனைப் பித்தர்களாகவும் ஆக்கி ஆண்டு வந்த ஒரு முரட்டுப் பிடியிலிருந்து விடுவித்துத் தேசிய நோக்கமுள்ள மாணவர் இயக்கம் ஒன்றை அங்கே உருவாக்கிய பெருமையே மணவாளனின் பெருமை தான். மணவாளன் அஞ்சாநெஞ்சன். தன் வழியில் அவன் பாண்டியனைத் தயார் செய்து ஆளாக்கிவிட்டுப் போயிருந்தான். அந்த நன்றி விசுவாசமும் அன்பும் தான் பாண்டியனை மணவாளனின் வரவை ஆவலோடு எதிர்பார்க்க வைத்திருந்தன.

மறுநாள் காலை பாண்டியன் என்.சி.சி.க்குப் போய் விட்டு மைதானத்திலிருந்து திரும்பி வந்ததும் அண்ணாச்சி கடையிலிருந்து ஒரு பையன் வந்து மணவாளன் வந்து சேர்ந்த தகவலைத் தெரிவித்துவிட்டுச் சென்றான். குளித்து உடை மாற்றிக் கொண்டு வேறு சில மாணவர்களையும் உடனழைத்துக் கொண்ட பின் பாண்டியன் மணவாளனைப் பார்க்கச் சென்றான். மணவாளன் மாணவ சகோதரர்களை உற்சாகமாக வரவேற்றார்.

"அண்ணாச்சியிடம் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன் பாண்டியன்! நீங்கள் ஒற்றுமை குலையாமலிருக்கும் வரை உங்கள் இயக்கத்தை யாரும் அடக்கி விட முடியாது. இந்தப் பல்கலைக் கழகத்தில் அரும்பாடுபட்டு நான் ஏற்றிய ஒரு விளக்கை அவிந்துவிடாமல் காக்கும் பொறுப்பு இன்று உங்கள் அணியினரிடம் விடப்பட்டிருக்கிறது. இதை அப்படியே காத்து அடுத்த அணியினரிடம் தர நீங்கள் கடமைப் பட்டிருக்கிறீர்கள்" என்றார் அவர். அன்று பிற்பகல் வரை மாணவர்கள் மணவாளனுடனேயே இருந்தார்கள். அவரோடு அவர் சென்ற இடங்களுக்கு உடன் சென்றார்கள். சேர்ந்து உணவருந்தினார்கள். உரையாடி மகிழ்ந்தார்கள். ஆலோசனைகள் கேட்டார்கள்.

"சமூகப் பொருளாதார மாற்றங்களை உண்டாக்கி, ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி, எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பணியை இனி மாணவ சமூகம் தான் தொடங்கி நிறைவேற்ற முடியும்" என்பதை மணவாளன் உறுதியான நம்பிக்கையோடு அவர்களுக்குச் சொன்னார்.

"உலகின் மற்ற நாடுகளிலுள்ள ஏழைமைக்கும் நம் நாட்டு ஏழைமைக்கும் வித்தியாசம் உண்டு. அவ்வளவு ஏன்? ஆசியாவில் பின் தங்கிய நாடுகளின் ஏழைமை புது விதமானது. பணத்தினாலும் ஏழைகள், கல்வியின்மையினாலும் ஏழைகள், புரிந்துணர்வினாலும் ஏழைகள், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு இன்மையினாலும் ஏழைகள் என்ற பலவிதமான ஏழைகள் இங்கு இருக்கிறார்கள்" என்பதுபோல பல கருத்துக்களை இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் மணவாளன் அவர்களிடம் எடுத்துக் கூறினார்.

அன்று மாலையில் லேக் வியூ ஹோட்டல் புல்வெளியில் நடைபெறவிருந்த விருந்துக்குப் பாண்டியனும் மோகன்தாஸும் மணவாளனை அழைத்துச் சென்றார்கள். அண்ணாச்சி ஏற்பாடுகளைக் கவனிக்க முன்னாலேயே அங்கு போயிருந்தார்.

அங்கே ஹோட்டல் முகப்பில் கண்ணுக்கினியாளும் வேறு சில மாணவிகளும் வருகிறவர்களை வரவேற்று ரோஜாப்பூவும் கல்கண்டும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் கண்ணுக்கினியாளை மணவாளனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

கல்கண்டு ரோஜாப்பூ எடுத்துக் கொண்டதும் மோகன்தாஸோடு முன்னால் நடந்து போய்விட்டார் மணவாளன். பாண்டியனுடைய கோட்டில் அவளே ஒரு ரோஜாப்பூவை எடுத்துச் செருக வந்த போது, அந்தக் கையை அப்படியே தடுத்து, "இதில் எது கை? எது ரோஜாப்பூ? இரண்டும் ஒரே நிறத்தில் இருப்பதால் புரியவில்லை" என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் தணிவான குரலில் கேட்டுவிட்டுக் குறும்பாகச் சிரித்தான் பாண்டியன். அவனுடைய அந்த வாக்கியம் தன்னுள் ஏற்படுத்திய இன்பச் சிலிர்ப்பை தனக்குள்ளே ஓர் இரகசியம் ஆக்கிக் கொண்டு, "மறுபடியும் எச்சரிக்கிறேன். பொருளாதாரம் படிக்கிறீர்கள். அதைக் கோட்டை விட்டுவிட்டுக் கவிஞராகி விடாதீர்கள்..." என்று பதிலுக்கு அவனை வம்புக்கு இழுத்தாள் அவள்.

"எதிரே தெரிகிற தோற்றம் ஊமையையும் கவிஞனாக்க முடிந்ததாக இருக்கும் போது நான் மட்டும் என்ன செய்வது? ஐ யாம் ஹெல்ப்லெஸ் மேடம்."

"அப்புறம் வம்பளக்கலாம்! உள்ளே போய் விருந்து ஏற்பாடுகளைக் கவனியுங்கள்" என்று அவள் பாண்டியனை உள்ளே துரத்தினாள்.

ஆறாவது அத்தியாயம்

லேக்வியூ ஹோட்டல் முகப்பில் அந்தச் சுகமான குளிர்ந்த மருள் மாலை வேளையில் பாண்டியன் கூறிய இந்த ஒரு வாக்கியத்தினால் விளைந்த மகிழ்ச்சி மயக்கத்திலிருந்து விடுபட்டு மறக்க முடியாமல் அதை நினைத்தே ஏங்கினாள் கண்ணுக்கினியாள். பாண்டியன் உட்புறம் சென்ற பின் யார் யாரோ வந்தார்கள். ரோஜாப்பூவும், கல்கண்டும் எடுத்துக் கொண்டு போனார்கள். அவனோ தான் விளையாட்டாகப் புகழ்ந்து விட்டுப் போன ஒரு வாக்கியத்தினால் அவள் மனத்துக்குள் ரோஜாப்பூவின் மென்மையையும், கல்கண்டின் இனிமையையும் உணரச் செய்திருந்தான். முன்புறம் வரவேற்பு முடிந்து உள்ளே போய் விருந்தில் அமர்ந்த போதும், விருந்து முடிந்த பின்பும் கூட அதை அவளால் மறக்க முடியாமலிருந்தது. சக மாணவிகளிடம் பேசும் போது கூட அவள் இந்த ஞாபகத்திலேயே இருந்தாள். 'இதில் எது கை? எது ரோஜாப்பூ? இரண்டும் ஒரே நிறத்தில் இருப்பதால் புரியவில்லை.' - இந்தத் தொடர்கள் அவளுக்கு மனப்பாடமே ஆகிவிட்டன. பாண்டியன் புகழ்ந்த இந்தப் புகழ்ச்சி இதமான தென்றலைப் போல் அவளுக்குள்ளே புகுந்து வீசிக் கொண்டிருந்தது.

முதலில் தேநீர் விருந்து முடிந்ததும் தொடங்கிய பாராட்டுரைக் கூட்டத்திற்குப் பாண்டியன் வரவேற்புரை கூறினான். மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தின் எல்லாப் பிரிவு மாணவர்களின் சார்பிலும் ஒவ்வொரு பிரதிநிதிகள் வீதம் மணவாளனைப் பாராட்டிப் பேசினார்கள். நாட்டில் அப்போதிருந்த எல்லா முக்கிய அரசியல் இயக்கங்களின் சாயல்களும் மாணவர்களிடமும் இருந்தன. ஆனால் இதில் அன்பரசன் குழுவினர் மட்டுமே தனி. அவர்கள் அங்கே தென்படவேயில்லை. எல்லாருடைய பாராட்டுரைகளும் முடிந்த பின் மல்லிகைப் பந்தல் நகரத் தேசீய இயக்கத்தின் சார்பில் அண்ணாச்சி மணவாளனுக்கு மாலை சூட்டினார். முடிவில் மணவாளனின் பதிலுரை மிகவும் உருக்கமாக இருந்தது.

"இந்த அலாரம் கடிகாரம் உங்களை விழிப்பூட்டவோ நினைவூட்டவோ மணியடித்து ஒலிக்கும் போதெல்லாம் எங்கள் நினைவும் பல்கலைக் கழக நினைவும் உங்களுக்கு வர வேண்டும்" என்று மாணவர்கள் சார்பில் ஓர் அலாரம் கடிகாரத்தை மணவாளனுக்கு வழங்கினான் மோகன்தாஸ். விழா முடிந்ததும் மாணவிகள் அவசர அவசரமாக விடுதிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அவர்கள் வழக்கமாகத் திரும்பும் நேரமாகிவிட்டது. எல்லா மாணவர்களும் கூட்டமாக மணவாளனைச் சூழ்ந்து நின்று பேசிக் கொண்டிருந்ததனால் பாண்டியனைக் கண்டுபிடித்துச் சொல்லிக் கொள்ள முடியாமலே சக மாணவிகளோடு விடுதிக்குத் திரும்பினாள் கண்ணுக்கினியாள்.

பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு வழிகாட்டி உதவுவதற்காக மனவாளனை மேலும் ஓரிரு நாள் மல்லிகைப் பந்தலில் தங்கிவிட்டுப் போகுமாறு வற்புறுத்தினார்கள் மாணவர்கள். மணவாளனும் அதற்கு இணங்கினார். சில காரணங்களை முன்னிட்டுப் பல்கலைக் கழக எல்லைக்குள்ளேயோ விடுதியிலோ அவர் தங்க விரும்பவில்லை. மாணவர்களுக்குச் செலவு வைக்காமல் அண்ணாச்சி கடையிலேயே பின்புறத்து அறையில் தங்கிக் கொள்வதாக மணவாளன் கூறியும் கேட்காமல் அன்றே அப்போதே பிரிவுபசர விருந்து நடந்து முடிந்த லேக்வியூ ஹோட்டலில் மணவாளனுக்கு ஓர் அறை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் மாணவர்கள். விருந்து முடிந்ததும் அண்ணாச்சியின் கடைக்குத் திரும்பாமல் அப்படியே ஹோட்டல் அறையில் தங்கினார் மணவாளன். ஒரு மாணவனை அனுப்பித் தம் கடையிலிருந்த மணவாளனின் சூட்கேஸை ஹோட்டலுக்கு எடுத்துவரச் செய்தார் அண்ணாச்சி.

ஏற்கெனவே திட்டமிட்டபடி பேரவைத் தேர்தலை நடத்தத் துணைவேந்தர் இணங்கியிருந்ததனால் அதற்காக இன்னும் சில நாட்கள் அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

'வேட்பாளர்கள் நாளை மாலை ஏழு மணி வரை மனுக்களைத் திரும்பப் பெறலாம். அதற்கு அடுத்த நாள் வேட்பாளர்களின் முடிவான பெயர்ப் பட்டியல் அறிவிக்கப்படும். அதற்கு அடுத்த நாள் தேர்தல் நடந்து முடியும்.' இந்த நிலைமைகளை எல்லாம் மணவாளனிடம் கலந்து பேசினார்கள் அவர்கள். இரவு உணவையும் லேக்வியூ ஹோட்டலிலேயே முடித்துக் கொண்டு பாண்டியனும், மோகன்தாஸும் விடுதிக்குத் திரும்பும் போது பத்தரை மணிக்கு மேலாகியிருந்தது. நிறைய மாணவர்கள் உடனிருந்ததால் எல்லோருமாகச் சேர்ந்து திரும்பினார்கள்.

"பாண்டியன்! இந்தத் தேர்தல் முடிகிறவரை நீயும் மோகன்தாஸும், நண்பர்களும் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவோ ஆபத்துக்கள் வரும். கடந்த சில ஆண்டுகளில் நம் பல்கலைக் கழகத் தேர்தல்கள் பொதுத் தேர்தல்களை விட அபாயகரமானதாயிருக்கிறது" என்று மறுபடியும் அவர்கள் புறப்படும் போதும் எச்சரித்து அனுப்பினார் மணவாளன்.

"அண்ணனுக்கு என்ன உதவி தேவையானாலும் உடனே எனக்குச் சொல்லி அனுப்பணும்" என்று வேண்டுதலோடு மணவாளனிடம் விடைபெற்றான் பாண்டியன். பல்கலைக் கழக எல்லைக்குள் வந்ததும் மாணவர்கள் அவரவர்கள் விடுதிகளுக்குப் பிரிந்தார்கள்.

பொன்னையா முன்பே திரும்பி வந்து நன்றாகத் தூங்கி விட்டதால் பாண்டியன் அதிக நேரம் தட்டிய பின்பே அவன் எழுந்து வந்து கதவைத் திறந்தான். குளிர் அடங்க முழுக்கை உல்லன் அங்கியை அணிந்து கொண்டுப் படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டியனும் நன்றாகத் தூங்கிவிட்டான். காலையிலிருந்து நிறைய அலைந்ததாலும் வெடவெடக்கும் குளிரில் நடந்து வந்து அறையின் உள்ளே கம்பளிப் போர்வைக்குள் உடலை நுழைத்த வெதுவெதுப்பினாலும் உறக்கம் கெஞ்சிக் கொண்டு வந்து அயரச் செய்திருந்தது. அந்தத் தன்னை மறந்த தூக்கத்தில் அவன் ஒரு கனவு கண்டான். நளினமான அந்தக் கனவில் நேரம் வளர்ந்ததே தெரியவில்லை.

பேரவைத் தேர்தலில் அவன் வெற்றி பெற்றதைப் பாராட்டி மாணவர்கள் அளிக்கும் ஒரு பாராட்டுத் தேநீர் விருந்தில் மாணவிகள் சார்பில் அவனுக்கு அணிவிக்க ஒரு ரோஜாப்பூ மாலையோடு எதிரே வருகிறாள் கண்ணுக்கினியாள். அப்போது அவள் ஸ்லீவ்லெஸ் அணிந்திருந்ததால் செழுமையான பொன்னிறத் தோள்கள் பச்சை மூங்கிலாய்த் தளதளவென்று மின்னுகின்றன. அந்த வேளையில் அவன் அவளிடம், "கண்ணே! இதில் எது கை? எது ரோஜாப்பூ? இரண்டும் ஒரே நிறத்தில் இருப்பதால் புரியவில்லை!" என்று அதே பழைய வாக்கியத்தினால் வினவுகிறான். ரோஜாப்பூக் கைகள் என்று அவளே ஒரு ரோஜா மாலையாய், மற்றொரு ரோஜா மாலையை வீணே கையில் சுமந்து கொண்டு தன்னெதிரே நிற்பது போல் அவனுக்குத் தோன்றுகிறாள்.

"மணமும் நிறமும் கவர்ச்சியும் உள்ள ஒரு மாலை இப்படி மற்றொரு மாலையைச் சுமந்து கொண்டு வரலாமா?"

"போதும் நிறுத்துங்கள்! உங்களைப் போல கவிகள் அபாயமானவர்கள். வசீகரமான வார்த்தைகளால் எதிரே வருகிறவர்களை நிச்சயமாகத் தங்களுக்கு அடிமைப் படுத்திவிடுகிறார்கள்."

"இல்லை! நீ சொல்வது தவறு. ஒவ்வோர் அழகிய பெண்ணுமே ஒரு கவிதைதான். அவளை மீறிய மற்றொரு கவிதையை வெறும் வார்த்தைகளால் உண்டாக்கிவிடப் போவதில்லை."

வெளியே அறைக் கதவு பலமாகத் தட்டப்படவே தூக்கமும் கனவும் கலைந்து போயின. இந்த அகாலத்தில் கதவைத் தட்டுவது யாராக இருக்கும் என்ற சந்தேகத்தோடு சுவரில் கையால் துழாவிச் சுவிட்சைப் போட்டான் பாண்டியன். பொன்னையாவும் அப்போதுதான் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்தான். கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்ததில் மணி மூன்றரை ஆகியிருந்தது. பாண்டியன் உட்புறத் தாழ்ப்பாளை நீக்கி அறைக் கதவைத் திறந்ததும் சில்லென்று மலைக்காற்று ஈர வாடையோடு வந்து முகத்தில் மோதியது. ஹோட்டல் யூனிபாரத்தில் லேக்வியூ ஹோட்டலின் ரூம் பாய் ஒருவன் அறை வாசலில் நின்று கொண்டிருந்தான்.

"மணவாளன் சார், உங்களை உடனே கூட்டிக் கொண்டு வரச் சொன்னாரு. ஏதோ அவசரமா இன்னிக்குக் காலை அஞ்சு மணி பஸ்ஸுக்கே அவர் மதுரை போகணுமாம்."

மல்லிகைப் பந்தலில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி விட்டுப் போவதாகச் சொல்லிய மணவாளன் உடனே திரும்பும்படி என்ன அவசரம் வந்திருக்க முடியும் என்று பாண்டியன் மனத்தில் சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தேகத்தைத் தேடி வந்திருக்கும் ஹோட்டல் ஊழியனிடம் கேட்டுப் பயனில்லை என்பதால் மப்ளரை எடுத்துக் கழுத்தைச் சுற்றி அணிந்து கொண்டு காலில் செருப்பையும் மாட்டிக் கொண்டு பாண்டியன் புறப்பட்டான். "நானும் கூட வரட்டுமா?" என்று உடன் புறப்படத் தயாரான பொன்னையாவை, "வேண்டாம்! நீ தூங்கு பொன்னையா! நான் போய்ப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்" என்று பாண்டியனே தடுத்து விட்டான். பாண்டியனை அனுப்பிவிட்டு அறைக்கதவைத் தாழிட்டு விளக்கை அணைத்த பின் படுக்கையில் சாய்ந்த பொன்னையா விடிந்து ஏழு ஏழரை மணிக்குத்தான் மீண்டும் எழுந்திருந்தான்.

காலை எட்டு மணிக்குப் பல்கலைக் கழக எல்லையிலேயே வட பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் ஒரு நண்பனைப் பார்க்கப் போக வேண்டியிருந்தது பொன்னையாவுக்கு. காலை மூன்றரை மணிக்கு மணவாளன் கூப்பிட்டனுப்பிப் புறப்பட்டுச் சென்ற பாண்டியன் இன்னும் அறைக்குத் திரும்பி வந்து சேரவில்லை. போகும்போது பாண்டியன் அறைச் சாவியை எடுத்துச் செல்லவில்லை என்பதை அவனுடைய சாவி படுக்கை மேல் கிடந்ததிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. எதற்கும் அவன் திரும்பி வந்தால் பக்கத்து அறையில் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் ஒரு சாவியை அங்கே எடுத்துக் கொடுத்துவிட்டு, மற்றொரு சாவியால் அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டான் பொன்னையா.

அந்த அதிகாலை வேளையில் மரங்கள் அடர்ந்த பல்கலைக் கழகச் சாலை வழியே மருத்துவக் கல்லூரி விடுதிக்கு நடந்து செல்வது மிகவும் சுகமான அநுபவமாக இருந்தது. வழி நெடுக இருபுறமும் பூங்காக்கள், அளவாகக் கத்தரித்து விடப்பட்ட செடிகள், பூக்கள் என்று கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. அந்த வைகறை வேளையில் கட்டிடங்கள், விடுதிகள், மரங்கள், செடி கொடிகள், மலர்கள் எல்லாம் ஆடாமல் அசையாமல் யாரோ தயாராக எடுத்துக் காட்சிக்கு வைத்த வண்ணப் புகைப்படம் போலிருந்தன. ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவுக் கட்டிடங்களுக்கும், மருத்துவக் கல்லூரிக்கும் நடுவே இருந்த மிகப் பெரிய திறந்த வெளி அரங்கைக் கடந்து சென்ற போது அதே சாலையில் தனக்குச் சிறிது தொலைவு முன்னால் நாலைந்து மாணவர்களோடு மணவாளன் நடந்து போய்க் கொண்டிருப்பதையும் அந்த நாலைந்து பேரில் பாண்டியன் இல்லை என்பதையும் கவனித்தான் பொன்னையா. ஹோட்டல் ஊழியன் வந்து சொன்னது போல் மணவாளன் அவசரமாக மதுரைக்குப் புறப்பட்டுப் போகவில்லை என்று தெரிந்தது. ஒரு வேளை மணவாளனே தம் காரியமாகப் பாண்டியனை வேறெங்காவது அனுப்பியும் வைத்திருக்கக் கூடும் என்று எண்ணியபடி முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்த அவர்களை எட்டிப் பிடிக்க விரைந்து நடந்தான் பொன்னையா.

ஐந்தே நிமிடங்களில் பொன்னையா அவர்களோடு போய்ச் சேர்ந்து கொள்ள முடிந்தது. மணவாளனுக்கும், நண்பர்களுக்கும், வணக்கம் தெரிவித்து விட்டு, அவன் அவர்களோடு சிறிது தொலைவு நடந்தான். திறந்த வெளி அரங்கின் வட கோடியிலிருந்து காவல் கூர்க்காவின் பூத் அருகிலே 'ஆடியோ - விஷுவல்' ஏற்பாட்டின் கீழ் இரண்டு மூன்று தினங்களில் மாணவர்களுக்குக் காட்டப்பட இருந்த ஒரு திரைப்படத்தைப் பற்றிக் கரும் பலகையில் அறிவிப்பு எழுதி வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அதைப் படிக்க ஓரிரு கணம் தயங்கி நின்றார்கள். அப்போது பொன்னையா, "நீங்கள் அவசரமாக ஊருக்குப் புறப்படப் போவதாக லேக் வியூ ஹோட்டல் ஆள் வந்து பாண்டியன் அண்ணனை ராத்திரி மூன்றரை மணிக்கே கூப்பிட்டானே? அண்ணன் எங்கே?" என்று மணவாளனைக் கேட்டான். பொன்னையாவின் வார்த்தைகளைக் கேட்டு மணவாளனின் முகத்தில் திகைப்போடு சந்தேகமும் குழப்பமும் நிலவின.

"நீ என்ன சொல்கிறாய் பொன்னையா? நான் பாண்டியனை நேற்றிரவு விடைகொடுத்து அனுப்பியதற்கு அப்புறம் பார்க்கவேயில்லையே? நான் அனுப்பியதாக யாரோ வந்து அதிகாலை மூணரை மணிக்குக் கூப்பிட்டதாகச் சொல்கிறாயே, அது யார்?"

இதைக் கேட்டுப் பொன்னையா அப்படியே மலைத்துப் போய் நின்றுவிட்டான். உடனே மணவாளனும் மற்ற மாணவர்களும் பரபரப்படைந்து அவசரமாகப் பொன்னையாவிடம் நடந்ததையெல்லாம் விசாரித்தார்கள். அவனும் எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான்.

"நேற்றிரவு நான் எவ்வளவோ எச்சரித்து அனுப்பினேன். அவ்வளவும் பயனற்றுப் போயிற்று. பாண்டியன் ஏமாந்து விட்டான். மோசம் போய்விட்டான். விரோதிகள் அவனுக்காக விரித்த வலையில் சரியாகப் போய் விழுந்து விட்டான்" என்றார் மணவாளன். உடனே தாங்கள் போய்க் கொண்டிருந்த காரியங்களையெல்லாம் விட்டுவிட்டுப் பாண்டியனைத் தேடுவதற்காக விரைந்தார்கள் அவர்கள். மோகன்தாஸின் அறை, அண்ணாச்சி கடை, லேக்வியூ ஹோட்டல், எல்லா இடங்களிலும் தேடியும் விசாரித்தும் ஒரு பயனும் விளையவில்லை. பாண்டியன் எங்கெங்கே போவான், யார் யாரோடு பழகுவான் என்று யோசித்து ஒவ்வோர் இடமாக விசாரித்தும் அவனைப் பற்றி அவ்வப்போது எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. நண்பர்கள் துணுக்குற்றார்கள். மணவாளன் அதிர்ந்து போய் உட்கார்ந்து விட்டார்.

"பாண்டியன் எத்தனை பெரிய சாமர்த்தியசாலி என்று நான் நினைத்தேனோ, அத்தனை பெரிய ஏமாளியாக முன்யோசனையின்றிப் போய் மாட்டிக் கொண்டு விட்டான். இவ்வளவுக்கும் இந்தப் பல்கலைக் கழகத்தில், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக எப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் நடக்க முடியும் என்பது பாண்டியனுக்கு நன்றாகத் தெரியும். இரண்டு வருஷங்களுக்கு முன் முத்துராமலிங்கம் என்ற இருபது வயதுப் பையனை அவன் பேரவைக் கூட்டுச் செயலாளனாகப் போட்டியிட்டவனுக்காகத் தீவிரமாக வேலை செய்தான் என்பதற்காக இரவோடு இரவாக அவனுக்கு வேண்டிய யாரோ கூப்பிட்டு அனுப்புவது போல் அனுப்பி அடித்துக் கொன்று நீச்சல் குளத்தில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். அப்புறம் துணை வேந்தர், போலீஸ், ஆர்.டி.ஓ. எல்லாருமாகச் சேர்ந்து சதி செய்து, 'வயிற்று வலி பொறுக்க முடியாமல் தண்ணீரில் குதித்து மாணவன் தற்கொலை' என்று உண்மையை மறைத்துப் பத்திரிகைகளில் வேறு விதமாகச் செய்தி வரச் செய்திருந்தார்கள். அதற்கு முந்திய வருஷம் பேரவைத் தேர்தலில் தலைவனாகப் போட்டியிட்ட மாணவனையே கடத்திக் கொண்டு போய் எங்கோ வைத்து விட்டார்கள். அடர்ந்த காடுகளும், உயரமான மலைகளும் சூழ்ந்த மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் இப்படிக் குழப்பங்களைச் செய்கிறவர்களுக்கு இயற்கையான வசதிகளும் கூட இருக்கின்றன. எல்லாம் தெரிந்தும் பாண்டியன் அவசரப்பட்டு ஏமாந்து விட்டானே? இப்போது அவனை எங்கே என்று தேடுவது? எப்படிக் கண்டுபிடிப்பது?" என்று வருத்தப்பட்டார் மணவாளன்.

அண்ணாச்சி பொன்னையாவை உடன் அழைத்துக் கொண்டு லேக் வியூ ஹோட்டலுக்குப் போய், அறைப் பையன்கள், ஸர்வர்கள், கிளீனர்கள் எல்லாரையும் ஒவ்வொருவராகக் காட்டி முந்திய நாள் பின்னிரவில் பாண்டியனைக் கூப்பிட்டுக் கொண்டு போக விடுதி அறைக்குத் தேடி வந்த ஆளை அடையாளம் கண்டு பிடிக்க முடியுமா என்று பார்க்கச் சொன்னார். பயனில்லை. பாண்டியனைக் கூப்பிட்டுக் கொண்டு போக வந்த ஆள் மாதிரி அவர்களில் யாரையுமே காண முடியவில்லை. இந்தச் செய்தி அநாவசியமாக வெளியே பரவி விடாமல் காக்க முயன்றார்கள் அவர்கள்.

காலை பத்து மணி வரை பாண்டியனைப் பற்றி ஒரு தகவலும் தெரியாமலிருந்தது. பத்தரை மணிக்கு மோகன்தாஸும் இன்னும் இரண்டொரு மாணவர்களும் பொன்னையாவும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் புகார் கொடுத்துவிட்டு வந்தார்கள். பிரதம தேர்தல் அதிகாரியான பேராசிரியர் பூதலிங்கத்துக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டார். பாண்டியனை எண்ணி மனம் நெகிழ்ந்தார். கண்கலங்கினார்.

"வாக்குரிமை, ஜனநாயகம் இவை எல்லாம் மன வலிமையும், சகிப்புத்தன்மையும், நிதானமும் உள்ளவர்களின் உயரிய சாதனங்கள். அவை இங்கே வெறும் உடல் வலிமையும், முரட்டுத்தனமும் உள்ளவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் இந்த நாட்டில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தான் நடக்க முடியும் போலும்" என்று வேதனையோடு சொன்னார் பொருளாதாரப் பேராசிரியர்.

"போலீசாரை மட்டும் நம்பிச் சும்மா இருந்து விடாதீர்கள்! நீங்களும் ஓரளவு சிரமம் எடுத்துக் கொண்டாவது தேடவேண்டும்" என்று மாணவர்களிடம் சொல்லியனுப்பினார் அவர். "எங்களால் முடிந்த வரை முயன்று தேடிக் கொண்டு தான் இருக்கிறோம் சார்! விவரம் ஏதாவது தெரிந்தால் உடனே உங்களுக்கு தெரிவிக்கிறோம். உங்களுக்கு ஏதாவது தெரிந்தாலும் சொல்லியனுப்புங்கள்" என்று மோகன்தாஸும் மற்றவர்களும் அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது காலை பதினொன்றே கால் மணி. கடையைப் பார்த்துக் கொள்ளும்படி அண்ணாச்சி வேலைக்காரப் பையன்களிடம் சொல்லி விட்டுப் பொன்னையாவோடு வெளியே புறப்பட்டுப் போனார். லேக்வியூ ஹோட்டல் துணிகளையெல்லாம் மொத்தமாகச் சலவை செய்பவர்கள் ஹில்டாப் டிரை கிளீனர்ஸ் தான் என்று அறிய நேர்ந்தவுடன்,

"தம்பீ! ஹில்டாப் தங்கப்பன் அந்த அன்பரசன் வகையறா ஆளுங்களுக்கு ரொம்ப வேண்டியவன். வெளுக்கிறதுக்கு வந்த லேக்வியூ ஹோட்டல் யூனிஃபார்மிலே ஒண்ணை எடுத்து எவனோ ஒருத்தனுக்கு மாட்டிவிட்டுப் பாண்டியனைக் கூட்டிக்கிட்டு வர்றதுக்கு அதைப் பயன்படுத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன தோணுது?" என்று பொன்னையாவைக் கேட்டார் அண்ணாச்சி. அவரது அநுமானம் சாத்தியமாயிருக்கும் என்றே அவனுக்கும் தோன்றியது. எப்படியோ சாதுரியமாக நினைத்து அந்தச் சிக்கலின் ஒரு நுனியை அவர் கண்டுபிடித்து விட்டதை அவன் வியந்தான். மல்லிகைப் பந்தல் நகரிலிருந்து வெளியேறுகிற இரு பெரிய சாலைகளில் ஒன்று கிழக்கே மல்லிகைப் பந்தல் ரோடு ரயில் நிலையம், மதுரை முதலிய சம நிலத்து ஊர்களுக்காகக் கீழே இறங்குவது. மற்றொன்று மேலே ஏலக்காய், தேயிலை, கோக்கோ எஸ்டேட்டுகள் அடங்கிய மேற்குத் தொடர் மலைகளில் மேற்செல்வது. இந்த இரண்டு சாலைகளிலுமே நகர எல்லைகளில் இருந்த பெட்ரோல் பங்குகள், காட்டிலாகா எக்ஸைஸ் இலாகா செக் போஸ்டுகள் எல்லாவற்றுக்கும் பொன்னையாவோடு போய்ச் சோம்பல் படாமல் தூண்டித் தூண்டி சில விவரங்களை விசாரித்தார் அண்ணாச்சி. மேற்கு மலைச் சாலையில் அதிகாலை நான்கு மணிக்கு அசுர வேகத்தில் வந்த ஒரு லாரியைப் பற்றியும் அதில் பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் தென்பட்டதைப் பற்றியும் காட்டிலாகா செக்போஸ்ட் ஆள் அண்ணாச்சியிடம் விவரித்த போது அவர் முகம் மலர்ந்தது. 'தென்மணி லாரி செர்வீஸ்' என்ற அந்த லாரியின் பெயரையும் அண்ணாச்சி இரண்டாவது தடவையாகக் கேட்டுக் கொண்டார். அதன் பின்பு, "தம்பீ! வாங்க... இனிமேல் எங்கே தேடணும்னு தெரிஞ்சு போச்சு" என்று பொன்னையாவிடம் கூறிவிட்டு, அவனையும் அழைத்துக் கொண்டு லேக்வியூ ஹோட்டலுக்குத் திரும்பினார் அண்ணாச்சி. மணவாளனின் அறைக்குப் போய்ச் சேர்ந்ததும் அண்ணாச்சியும், பொன்னையாவும் வேறு ஒரு புதிய செய்தியை அங்கே அறிய நேரிட்டது. மணவாளனோடு அங்கே அறையில் இருந்த மோகன்தாஸ் அந்தப் புதிய செய்தியை இவர்களுக்குச் சொன்னான்.

"அண்ணாச்சி! காலையில் நானும் நண்பர்களும் பாண்டியன் காணாமல் போனதைப் பற்றிப் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து விட்டு எங்களுடைய பிரதம தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் பூதலிங்கத்திடமும் போய் இதைத் தெரிவித்தோம். நாங்கள் அவரிடம் பேசிவிட்டு இங்கே வரும் போது பதினொன்றரை மணி. வந்து ஓர் அறை மணி நேரத்துக்கெல்லாம் மறுபடியும் பகல் பன்னிரண்டு மணி சுமாருக்கு எங்களை அவசரமாகக் கூப்பிட்டனுப்பினார் பேராசிரியர். நானும் நண்பர்களும் உடனே போய் அவரைச் சந்தித்தோம். இங்கேயே உள்ளூரில் தபாலில் போடப்பட்ட பாண்டியனின் கையெழுத்தோடு கூடிய இன்றைய தேதியிட்ட ஒரு கடிதத்தை அவர் எங்களிடம் காட்டினார். அதில் இடம் விலாசம், ஒன்றுமில்லை. மாணவர் பேரவைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதிலிருந்து சொந்தக் காரணங்களால் தான் விலகிக் கொள்வதாக எழுதிக் கையெழுத்திட்டிருந்தான் பாண்டியன். யாரோ நிர்ப்பந்தித்துப் பலாத்காரமாக எழுதி வாங்கி அனுப்பிய கடிதம் போலிருந்தது அது. நாங்கள் சந்தேகப்பட்டது போலவே பேராசிரியரும் அந்தக் கடிதத்தைப் பற்றிச் சந்தேகப்படுகிறார். 'எதிரிகளின் அத்தனை மிரட்டலுக்கு நடுவிலும் தந்திரமாக ஒரு காரியம் செய்திருக்கிறான் பாண்டியன். அபேட்சை மனுவிலுள்ள கையெழுத்து எப்படி இருக்க்றதோ அப்படியே கையெழுத்திட்டிருந்தால் தான் விலகல் மனு செல்லுபடியாகும். அபேட்சை மனுவில் எஸ்.சி.பாண்டியன் என்று டி.ஒய்.எ.என். என்னும் ஸ்பெல்லிங்கோடு கையெழுத்துப் போட்டிருந்தவன், இந்த விலகல் மனுக்கடிதத்தில் சி.பாண்டியன் என்று டி.ஐ.எ.என். என்னும் ஸ்பெல்லிங்குடன் கையெழுத்துப் போட்டு எதிரிகளின் சதியைச் சிதற அடித்திருக்கிறான். இந்தச் சாதுரியத்தினால் இன்றிரவுக்குள் அவனை வாபஸ் வாங்கச் செய்து வெற்றிச் செல்வனைப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க நினைத்தவர்களது எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. ஆனாலும் நாளைக் காலை நோட்டீஸ் போர்டில் இறுதிப் பட்டியல் வெளி வருகிற வரை இது இரகசியமாவே இருக்கட்டும். அவர்கள் நிர்ப்பந்தமாக ஏற்பாடு செய்து அனுப்பிய விலகல் மனுவில் பாண்டியன் இப்படி ஒரு சாதுரியம் புரிந்து தப்பிய விவரம் அவர்களுக்குத் தெரிந்தால் அவனை மேலும் கொடுமைப் படுத்தக் கூடும். ஆகவே அபேட்சகர்கள் பட்டியல் வெளியாகிறவரை உங்களுக்குள்ள அவகாசத்தைப் பயன்படுத்தி எப்படியும் பாண்டியனைத் தேடி மீட்க முயலுங்கள். அவனை இப்படி நயவஞ்சமாகக் கடத்திக் கொண்டு போனவர்கள் இப்படிக் கடத்திக் கொண்டு போய் எதைச் சாதிக்க முயன்றார்களோ, அது பலிக்கவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் போது கோபம் இன்னும் அதிகமாகும். அப்படிக் கோபம் அதிகமாகி அவர்கள் பாண்டியனைத் துன்புறுத்த முற்படுவதற்குள் அவனை அவர்களிடமிருந்து நீங்கள் மீட்டுவிட வேண்டும். அதுவரை பாண்டியனின் விலகல் மனுவை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன் என்று பொய்யாக ஒரு செய்தி பரவினால் கூட அவனுக்கு அது பாதுகாப்பாயிருக்கும். தனிப்பட்ட முறையில் இதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். உடனே அவனை மீட்க முயலுங்கள்' என்று பேராசிரியர் எங்களிடம் சொல்லி அனுப்பினார். இப்போது இனிமேல் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் அண்ணாச்சி!" என்றான் மோகன்தாஸ்.

"நமக்குத் தெரிந்த விவரங்களை எல்லாமே போலீஸாரிடம் கூறி அவர்கள் உதவியோடு பாண்டியனைத் தேடி மீட்கலாம்" என்றான் ஒரு மாணவன். அது சாத்தியமில்லை என்பதை அண்ணாச்சி, மோகன்தாஸ், மணவாளன் மூவருமே உணர்ந்திருந்ததனால் அவர்கள் அதற்கு இணங்கவில்லை.

அவர்கள் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த போதே எப்படியோ தகவல் தெரிந்து கண்ணுக்கினியாளும், வேறு சில மாணவிகளும் அங்கே வந்துவிட்டார்கள். கண்ணுக்கினியாள் கூறினாள்:

"நான் வார்த்தைக்கு வார்த்தை படித்துப் படித்துச் சொல்லி எச்சரித்தேன் அண்ணாச்சி! அவர் கவனக் குறைவாக இருந்ததால் தான் எல்லாமே கெட்டுப் போய்விட்டது" இதைச் சொல்லும் போது அவள் கண்களில் நீர் நெகிழ்ந்து விட்டது.

"ஒன்றுமே கெடவில்லை தங்கச்சீ! மணவாளன் கூப்பிடுகிறார்னு பொய் சொல்லித் தூக்கக் கலக்கத்திலே தம்பியை ஏமாத்திட்டாங்க... மணவாளன் மேலிருந்த பிரியத்திலே தம்பி ஏமாந்திடுச்சு. கவலைப்படாமே நீயும் மற்றத் தங்கச்சிகளும் திரும்பிப் போங்க. நாளைப் பொழுது விடியறப்போ தம்பி நம்மோட காப்பி குடிக்க இங்கே இருக்கும். அதுக்கு நானாச்சு" என்று அண்ணாச்சி உறுதி கூறி அவளையும் மற்ற மாணவிகளையும் விடுதிக்குத் திரும்பி அனுப்பினார். அப்புறம் உள்ளூரில் பிரபல வியாபாரிகளில் தேசப்பற்று நிறைந்த ஒருவருக்கு ஃபோன் பண்ணி ஒரு லாரியை வரவழைத்தார். லாரியில் சிலம்பக் கழிகள் பத்துப் பன்னிரண்டு, டார்சு லைட்டுகள் நாலைந்து எல்லாம் வைக்கப்பட்டன.

அன்று மாலை ஆறு மணி சுமாருக்கு அண்ணாச்சியும், மோகன்தாஸ், மணவாளன், பொன்னையா முதலிய மாணவர்களும் அந்த லாரியில் மலைப்பகுதிக்குப் புறப்பட்டார்கள். நகர எல்லை கடந்ததும் லாரி டிரைவர் "எங்கே போக வேண்டும்?" என்று கேட்டான்.

"ப்ளூஹில் கார்டமம் எஸ்டேட்டுக்குப் போ! மெயின் ரோடிலிருந்து எஸ்டேட்டுக்குப் பிரிகிற மலை வழிக்குப் பக்கமாகப் போனதும் மறுபடியும் என்னைக் கேள்" என்று வழி சொன்னார் அண்ணாச்சி.

நகர எல்லைக்குப் போய்ச் சேருவதற்குள்ளேயே நன்றாக இருட்டி விட்டது. இப்போதோ இன்னும் சில விநாடிகளிலோ மழை வந்து விடும் போல் மேகங்கள் வானை மூடிக் கருமை குவித்திருந்தன. சாலையின் இரு புறமும் அடர்ந்த காட்டின் பசுமையும் ஈர மணமும் சுகமாயிருந்தன. சிறிது தொலைவு போவதற்குள்ளேயே மழை கொட்டத் தொடங்கிவிட்டது. லாரியின் டிரைவர் ஸீட் அருகே அமர்ந்திருந்த இருவரைத் தவிர மற்ற மாணவர்கள் நனைய நேரிட்டது. நடுவே சாலையில் ஓரிடத்தில் இவர்கள் போய்க் கொண்டிருந்த திசைக்கு எதிர் திசையிலிருந்து 'தென்மணி லாரி செர்வீஸ்' - லாரி ஒன்று விரைந்து வந்தது. மேலே ஏறும் வண்டிகளுக்கு முதலில் வழி விலகி இடம் விட வேண்டும் என்ற முறையையும் மீறி, நிற்காமல் விரைந்து இறங்கிச் சென்றது அந்தத் தென்மணி லாரி. அதில் யார் இருக்கிறார்கள் என்பதை அந்த மழையில் அண்ணாச்சியினால் கவனிக்க முடியவில்லை. மேலும் பதினைந்து நிமிஷங்களுக்குப் பின், "எஸ்டேட்டுக்குப் பிரிகிற வழி வந்தாச்சுங்க. இங்கேயே நிறுத்திக்கிடட்டுமா?" என்றான் லாரி டிரைவர். அண்ணாச்சி, லாரியை அங்கேயே நிறுத்தச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் ஒரு கிளுவைக் கம்பு, டார்ச் லைட் சகிதம் கீழே இறங்கினார்.

"தம்பிங்களா! முதல்லேயே எல்லாரும் திமுதிமுன்னு உள்ளே நுழைய வேணாம். நான் போய் நோட்டம் பார்க்கிறேன். இங்கே இந்த எஸ்டேட்லே நம்ப வகைப் பையன் ஒருத்தன் வாட்ச்மேனாக இருக்கான். அவனைக் கேட்டால் தெரிந்து விடும். என் ஊகப்படி இந்த ஏலக்காய் எஸ்டேட்டு எல்லைக்குள்ளேதான் எங்காவது பாண்டியன் இருக்கணும். உங்க உதவி தேவைப்பட்டால் அதோ அந்த மேட்டிலிருந்து டார்ச் லைட்டை மூன்று தடவை ஏற்றி அணைத்துக் காண்பிக்கிறேன். அப்புறம் நீங்கள் வரலாம். அதுவரை லாரியிலேயே இருந்தால் போதும்" என்று அவர்களிடம் கூறிவிட்டு அந்த மழையில் நனைந்து கொண்டே பசுமை மின்னும் ஏலக்காய்ச் செடிகளின் இடையே புகுந்து மறைந்தார் அண்ணாச்சி.

சிறிது நேரத்தில் மழை முன்னிலும் அதிகமாகியது. மலைச் சாலையின் இருபுறமும் தண்ணீர் வாய்க்காலாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. மின்னல்கள் வானைக் கிழித்துச் சொடுக்கின. மின்னல் மின்னி மறையும் போது ஏலக்காய்ச் செடி மடல்கள் மரகத வார்ப்புகளாக பளபளத்தன. லாரியில் மீதமிருந்த கிளுவைக் கம்புகளை ஆளுக்கொன்றாக எடுத்து வைத்துக் கோண்டு மேட்டிலிருந்து அண்ணாச்சியின் சமிக்ஞையை எதிர்பார்த்து லாரியில் காத்திருந்தார்கள் மாணவர்கள். அரை மணி நேரத்துக்குப் பின் அவர்கள் எதிர்பார்த்த சமிக்ஞை கிடைத்தது. மேட்டில் டார்ச் லைட் மும்முறை மின்னி மறைந்தது. உடனே அவர்களும் மேட்டை நோக்கி விரைந்தார்கள்.

ஏழாவது அத்தியாயம்

கைகலப்பையோ அடிதடி சண்டையையோ, எதிர்பார்த்துத்தான் பாண்டியனை மீட்கச் சென்ற போது லாரியில் சிலம்பக் கழிகள் சிலவற்றையும் தூக்கிப் போட்டிருந்தார் அண்ணாச்சி. அவர் தாமாக வலிய வம்புச் சண்டைக்குப் போக விரும்பாத சுபாவத்தை உடையவர் என்றாலும் பாண்டியனை மீட்க நேருகையில் தம்மை யார் எதிர்த்தாலும் விடத் தயாராயில்லை.

நீலமலை ஏலக்காய்த் தோட்டத்துக்குள் தான் பாண்டியனை அவர்கள் கொண்டு போய் வைத்திருக்க வேண்டும் என்பதை அவர் மிக எளிதாகவே அநுமானித்துக் கொள்ள முடிந்திருந்தது. மல்லிகைப் பந்தல் நகரையும், சுற்றுப்புறத்து மலை ஊர்களையும் மனிதர்களையும் பற்றி அண்ணாச்சி தம்முடைய பல ஆண்டுக்கால அநுபவத்தில் நன்றாகக் கணித்து வைத்திருந்தார். மனிதர்களையும் அவர்களுடைய சமூக அரசியல் சார்புகளையும் அண்ணாச்சிக்குத் தெளிவாக அடையாளம் தெரியும். அரசியல் திருப்பங்களால் இப்போது திடீரென்று பல வீடுகள், பல எஸ்டேட்டுகள், பல கார்கள், பஸ் ரூட்டுகள் என்று சேர்த்துப் புதிய திடீர் முதலாளிகள் ஆகியிருந்த சிலரைச் சமீபத்து ஆண்டுகளில் அவர் கண்டிருந்தார். மக்கள் சந்தேகமும், பிரமிப்பும் அடையத்தக்க விதத்தில் திடீரென்று பணக்காரரான ஒருவருடைய எஸ்டேட் தான் அது. அரசாங்க அதிகாரிகள், போலீஸ் ஆகிய எல்லோருமே தமக்குப் பயப்படும்படி ஆக்கி வைத்திருந்தார் இந்தத் திடீர்க் குபேரர். ஆளும் கட்சியைச் சேர்ந்த எல்லாக் காரியங்களுக்கும் இவருடைய பணம், பலம், அடியாட்கள் அனைவரும் பயன்படுத்தப் படுவது வழக்கம்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தைந்து அறுபத்தாறாம் ஆண்டுகளில் இதே மனிதர் மல்லிகைப் பந்தல் நகரசபைக்குச் சொந்தமான மீன் மார்க்கெட்டில் ஒரு கசாப்புக் கடை மட்டும் தான் வைத்திருந்தார். அப்போது இவர் பெயர் இராவணசாமி. பெற்றோர் சூட்டிய இராமசாமி என்ற பெயரை ஒரு பெரிய தலைவரின் ஆசியோடு இராவணசாமி என்று மாற்றி வைத்துக் கொண்டார் இவர். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தேழில் இந்த மனிதர் எம்.எல்.ஏ. ஆனார். அதன் விளைவாக இவர் கௌரவமும், உடம்பும் இரண்டு சுற்றுப் பருத்தன. பெயரும் சிறிது மாற்றம் அடைந்தது. 'மல்லிகைப் பந்தல்' என்ற அழகிய பெயரைத் தாமாகவே மல்லை என்று சுருக்கினார் இவர். மல்லை இராவணசாமி எம்.எல்.ஏ. (எக்ஸ் எம்.சி.) என்று இவர் வீட்டு முகப்பில் இரு வர்ணப் பலகை ஒன்று அலங்கரித்தது. இவருக்குத் தெரிந்த விஷய ஞானமுள்ள நண்பர் ஒருவர்,

"ராவூ! எம்.எல்.ஏ. ஆனப்புறம் முன்னாள் முனிஸிபல் கவுன்ஸிலருன்னு பிராக்கெட்டிலே போடறது அவ்வளவு நல்லா இல்லே. அதெ வுட்டுடு" என்று எடுத்துச் சொல்லிய பின்பே இவர் (எக்ஸ் எம்.சி.) என்ற அந்த எழுத்துக்களை அழித்தார்.

"புதுவை, உறந்தை என்பது போல் பழைய காலத்திலிருந்தே மருவி வழங்கும் பெயர்களைத் தவிர புதிதாக மல்லிகைப் பந்தலை 'மல்லை' என்று சுருக்குவது அறியாமை என்பதாக உள்ளூர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் இதுபற்றி ஒரு கூட்டத்தில் குறை சொல்லியபோது மறுநாளே பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் பொழில் வளவனார், இராவணசாமியை ஆதரித்தும் 'மல்லை' என்பது சரியே என்றும் ஓர் அறிக்கை விட்டார். அதற்கு அடுத்த வாரமே டாக்டர் பொழில் வளவனாரின் ஐம்பதாவது பிறந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்தார் இராவணசாமி. 'மல்லை இராவணசாமி நடத்தும்' என்கிற பூதாகரமான எழுத்துக்களும், 'பொழில் வளவனாரின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா' என்ற கடுகு போன்ற எழுத்துக்களுமாக ஒரு பெரிய சுவரொட்டி அடித்து மல்லிகைப் பந்தல் நகரெங்கும் ஒட்டப்பட்டது. பொழில் வளவனாருக்குப் பொன்னாடையும் போர்த்தப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினராகும் வரை தம்முடைய பிறந்த தினம் எந்த மாதத்தில் எந்த நாளில் வருகிறதென்று கூட ஞாபகம் இல்லாமலிருந்தார் இராவணசாமி. சட்டமன்ற உறுப்பினரானவுடன் வந்த அவருடைய முதல் பிறந்த நாளைக் கட்சிக்காரர்களும், தம்பிமார்களும் நினைவூட்டினார்கள். பிறந்த நாளன்று வட்ட வடிவமான மர மேஜையில் - அந்த மேஜை அகலத்துக்குப் பெரிய கேக் ஒன்றை வைத்து அவரை வெட்டச் சொன்னார்கள் தம்பிமார்கள். கேக் வெட்டும் போது பழைய கசாப்புக் கடை ஞாபகத்தில் ஓங்கி ஒரு வெட்டு வெட்டவே பல பேர் முன்னிலையில் இராவணசாமி மேஜையையே துண்டு துண்டாக்கி விடார். அதைக் கண்டு பலர் பயந்துவிட்டார்கள். சிலருக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது.

"அண்ணன் கோபத்திலே வெட்டிப்பிட்டாரு! பரவாயில்லே. இன்னொரு 'கேக்' கொண்டாந்து வை" என்று சொல்லி வேறொரு கேக் வரவழைத்து அதை முழுமையாக அண்ணனை நம்பி வெட்டச் சொல்லாமல் கத்தியை மட்டும் அண்ணன் கையால் தொட்டுக் கொள்ளச் சொல்லித் தாமே மெதுவாகக் கேக்கை அறுத்தார் ஊழியர்களில் ஒருவர். கேக் பிழைத்தது. மேஜையும் சேதம் ஆகாமல் தப்பியது. இராவணசாமியைப் பற்றி இந்தச் சுவாரசியமான விஷயங்களையெல்லாம் அண்ணாச்சி சொல்லிக் கேட்க வேண்டும். மிகவும் இரசமாகவும் உள்ளடங்கிய அர்த்தத்துடனும், நகைச்சுவையுடனும் இராவணசாமியின் லீலா விநோதங்களை விவரிப்பார் அண்ணாச்சி. 'தென்மணி லாரி சர்வீஸ்' என்ற கம்பெனியும், 'ப்ளூஹில் கார்டமம் எஸ்டேட்' என்ற ஏலக்காய்த் தோட்டமும் இந்த மல்லை இராவணசாமியின் புதிதாகச் சேர்ந்திருந்த உடைமைகள் தாம்.

பாண்டியன், பல்கலைக் கழக விடுதியிலிருந்து கடத்தப்பட்ட பின்னிரவில் பல்கலைக் கழக மேற்கு வாயிலருகே இந்தத் தென்மணி லாரியை அதிகாலை மூன்றே முக்கால் மணிக்குப் பார்த்ததாக ஒருவன் கூறியதையும், மலைக்குப் போகிற வழியிலிருக்கும் செக்போஸ்ட் ஆள் இதே லாரியை நான்கு மணிக்கு அன்பரசன் முதலிய சில பல்கலைக் கழக மாணவர்களோடு பார்த்ததாகக் கூறியதையும் இணைத்து நினைத்து ஊகித்த பின்புதான் அங்கே தேடிப் போயிருந்தார் அண்ணாச்சி. கோட்டச் செயலாளருக்கும், கட்சிச் சார்பு பெற்ற அன்பரசன் முதலிய மாணவர்களுக்கும் மல்லை இராவணசாமி இந்த உதவிகளைச் செய்ய முடியும் என்பதும் அண்ணாச்சிக்குத் தெரியும். அதனால் தான் அந்த மழைக்கோப்பான முன்னிரவில் குறிப்பாக அந்த ஏலக்காய்த் தோட்டத்தைத் தேடிச் சென்றிருந்தார் அவர். உள்ளூற ஒரு நம்பிக்கை இருந்தது அவருக்கு.

தாங்கள் சென்ற லாரியைப் பிரதான சாலையில் நிறுத்திவிட்டு முதலில் அவர் மட்டும் மழையோடு மழையாகத் தோட்டத்துக்குள் சென்றபோது அங்கே எந்த விவரமும் தெரியவில்லை. எஸ்டேட் அலுவலகக் கட்டிடங்கள் ஆளரவமின்றி இருந்தன. ஏலக்காய் உலர்த்திக் குவிக்கும் தகர ஷெட்டுகள் இருந்த பகுதிக்குப் போகும் முன் தற்காப்பைக் கருதிக் கீழே லாரியிலிருந்த மற்றவர்களையும் மேலே வரச்சொல்லி 'டார்ச்' மூலம் சமிக்ஞை காண்பித்திருந்தார் அவர். மற்றவர்களும் கூட்டமாக வந்து சேர்ந்த பின் அவர்கள் எல்லாருமாக அங்கே ஒவ்வொரு பகுதியாகச் சுற்றினார்கள். மலை உச்சியில் பின்புறம் பள்ளத்தாக்கில் பேரோசையுடன் ஒரு காட்டாறு ஓடும் இடத்தருகே மேட்டில் அமைந்திருந்த தகரக் கொட்டகை வாசலில் மட்டும் கம்பளிக் கோட் அணிந்து பீடி புகைத்தபடி ஒரு தடித்த ஆள் உட்கார்ந்திருந்தான். அண்ணாச்சி அவன் முகத்தில் டார்ச் ஒளியைப் பாய்ச்சிப் பார்த்துவிட்டு அவன் சந்தேகப்பட்டுக் கூப்பாடு போட்டோ, விஸில் ஊதியோ எஸ்டேட்டின் வேறு பகுதியிலிருந்து ஆட்களைக் கூப்பிட்டு விடாமல் இருக்கட்டும் என்று, "யாரது? மருதமுத்துத் தம்பிதானே?" என்று தமக்குத் தெரிந்த அவன் பெயரையும் சொல்லிக் கூப்பிட்டு வைத்தார். டார்ச் லைட்டுகளோடு கம்பும் கழியுமாக மழை இருளில் பலரைப் பார்த்து மிரளத் தொடங்கியிருந்த அவன் அண்ணாச்சியின் குரலைக் கேட்டதும் அடையாளம் புரிந்து தெம்படைந்தான்.

"அடடே! அண்ணாச்சீங்களா? ஏது இந்நேரத்துக்கு இந்தப் பக்கம்?" என்று விசாரித்தபடி எழுந்து வந்தான் அந்த எஸ்டேட் வாட்ச்மேன். அண்ணாச்சி மேலும் தொடர்ந்து அவனைக் கனிவாக விசாரித்தார்.

"எல்லாம் உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு தான் தம்பீ! வீட்டிலே சம்சாரம் நல்ல இருக்கா? வீடு எங்கே?... எஸ்டேட் 'லைன்'லே தானே?"

"ஆமாம். அங்ஙனேதான் ஒரு புறாக்கூடு விட்டிருக்காங்க... வாங்க வீட்டுக்குப் போயி ஒரு டீ குடிக்கலாம்."

"வேண்டாம் தம்பீ! உங்க புது முதலாளி அரசியல்லே நமக்கு ஆகாதவரு. 'லைன்'லே மத்தவங்க காணறாப்பலே நான் உன் வீட்டுக்கு வந்தா ஒரு வேளை அது உனக்குக் கெடுதலா முடியும்..."

"ஒரு கெடுதலுமில்லே... நீங்க சும்மா வாங்க அண்ணாச்சி! 'லைன்'லே இப்போ ஈ காக்கா இருக்காது. எல்லாம் குளுருக்கு அடக்கமாகக் கம்பளீலே பூந்துக்கிட்டு உள்ளே முடங்கியிருக்கும்."

அவன் வற்புறுத்தவே உடன் வந்திருந்த மணவாளன் முதலிய மாணவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு அவனோடு அண்ணாச்சி எஸ்டேட் லைனுக்குப் போனார். போகும்போதே அவனிடம் காதும் காதும் வைத்தாற்போல் தாம் வந்த காரியத்தைச் சொல்லி மெல்ல விசாரிக்கத் தொடங்கிவிட்டார் அவர்.

"உங்க கூட இருந்த ஸ்டூடன்ஸைப் பார்த்ததுமே நீங்க இதுக்காவத்தான் வந்திருக்கணும்னு புரிஞ்சுக்கிட்டேன். நீங்க தேடி வந்த ஆள் இங்கே தான் இருக்குது... ஆபத்து எதுவுமில்லே. இன்னிக்குக் காலையிலே மட்டும் கொஞ்சம் சித்திரவதை பண்றாப்பலே சிரமப்படுத்தி அந்தப் பையன் கிட்ட ஒரு லெட்டர் எழுதி வாங்கினாங்க. அப்புறம் ஒண்ணுமில்லே. இப்ப நீங்க என்னைப் பார்த்தீங்களே, அந்தத் தகரக் கொட்டகையிலேதான் அடைச்சுப் போட்டிருக்காங்க..." என்று விசுவாசம் காரணமாக எதையும் ஒளிக்காமல் உள்ளபடி அண்ணாச்சியிடம் சொல்லிவிட்டான் மருதமுத்து.

பேசிக் கொண்டே எஸ்டேட் லைனில் அவன் வீட்டருகே வந்திருந்தார்கள் அவர்கள். மருதமுத்து சொன்னது போலவே லைனில் பேச்சரவம், ஊரரவம் அடங்கி விட்டிருந்தன.

அரிக்கேன் லாந்தர் ஒளியில் கட்டான உடலமைப்புள்ள இளம் பெண் ஒருத்தி அமர்ந்து பச்சை பசும் கதிரில் இருந்து ஏலக்காய் உதிர்த்துக் கொண்டிருந்தாள்.

"அண்ணாச்சி வந்திருக்காங்க பாரு" என்று கணவன் குரல் கொடுத்ததும் மரியாதையாக எழுந்து, "வாங்கண்ணே!" என்று கைகூப்பினாள் அவள். அண்ணாச்சியும் அவளைக் கனிவாக நலம் விசாரித்தார். பத்து நிமிஷங்களில் சுடச்சுட தேநீர் வந்தது. தேநீரில் ஏலக்காய் வாசனையும் இருக்கவே, "இது என்ன புது மாதிரி டீ?" என்று விசாரித்தார் அண்ணாச்சி.

"இது ஒரு புதுப் பக்குவம்!... அதுதான் கண்டுபிடிச்சது... ரொம்ப நல்லா இருக்குமே!" என்றான் மருதமுத்து. "நல்லா இருக்கக் கொண்டுதானே விசாரிக்கிறேன். இல்லாட்டி விசாரிப்பேனா?" என்று அவன் மனைவியைப் பார்த்துப் புகழ் தொனிக்கக் கூறிவிட்டு, "தம்பீ! எனக்கு நேரமாகுது! நீ சீக்கிரமாக என்னை அனுப்பி வைக்கணும். உன்னை நம்பித்தான் தேடி வந்திருக்கேன்" என்று அண்ணாச்சி மருதமுத்துவிடம் காரியத்தைத் துரிதப்படுத்தினார். இருவருமாகப் புறப்பட்டார்கள். வாசல்வரை வந்த மருதமுத்து திரும்பவும் உள்ளே சென்று தன் மனைவியிடம் ஏதோ சொல்லிவிட்டு வந்தான்.

எஸ்டேட் லைனிலிருந்து திரும்பும் போது "பாண்டியனைத் தன்னோடு அனுப்பிவிட வேண்டும்" என்று அவனிடம் வெளிப்படையாகவே கூறி உதவியை நாடினார் அண்ணாச்சி.

"உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன் அண்ணாச்சி! ஆனா நீங்க ஒண்ணு செய்யணும். கதவைத் திறந்து பையனை உங்ககிட்டே ஒப்படைச்சப்புறம் என்னோட கையைக் காலெக் கட்டி என்னைத் தூக்கி அதே தகரக் கொட்டகைக்குள்ளாறப் போட்டுக் கதவை வெளிப்பக்கமா அடைச்சுட்டுப் போயிடுங்க... காலையிலே அவங்க ஆளுக தேடி வந்தா, 'இருட்டிலே யாரோ முகந் தெரியாத ஆளுங்க வந்து என்னை அடிச்சுக் கட்டுப் போட்டப்புறம் பையனைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க'ன்னு நானே ஒரு டிராமா ஆடிக் கொள்ளச் சுலபமாயிருக்கும்" என்றான் மருதமுத்து.

ஆனால் என்ன ஆச்சரியம்? இவர்கள் தகரக் கொட்டகை அருகே போவதற்குள்ளேயே மாணவர்கள் 'பாட்லாக்கை' உடைத்துக் கதவைத் திறந்து பாண்டியனை விடுவித்து அவனோடு அண்ணாச்சியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அண்ணாச்சி விரைந்து முன் சென்று பாண்டியனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

"பார்த்தியா தம்பீ! நம்ப புலிக் குட்டிங்க நீ வந்து கதவைத் திறக்கற வரை விடலே. அவங்களே திறந்து விடுவிச்சுட்டாங்க... இப்ப உன்னைக் கட்டிப் போட வேண்டியதுதான் பாக்கி... உள்ளே வா... அதைச் செய்யலாம்..." என்று அண்ணாச்சி மருதமுத்துவைக் கூப்பிட்டார்.

"இராவணசாமி மேலேயும் உங்க எதிரிங்க மேலேயும் இருக்கிற கோபத்திலே என்னைக் கட்டிப் போடறப்போ ரொம்பப் பலமாக் கட்டிப் போட்டுடாதீங்க அண்ணாச்சி..."

"பயப்படாமே வா, தம்பீ! குளிருக்கு அடக்கமாப் பார்த்துக் கட்டிப் போட்டு வைக்கிறேன்."

விஷயம் புரியாமல் விழித்த பாண்டியனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் அண்ணாச்சி செய்ய வேண்டியதை விளக்கினார்.

மருதமுத்துவை அவனே கொடுத்த கயிறுகளால் கட்டிப் போட்டுவிட்டு, "பெரிய அடிபிடி சண்டையெல்லாம் போட்டுத்தான் நம்ம பையனை விடுவிக்க முடியும்னு கிளுவைக் கம்பெல்லாம் கொண்டாந்தோம். நீ இருந்ததுனாலே காரியம் சுளுவா முடிஞ்சுட்டுது..." என்றார் அண்ணாச்சி.

"கிளுவைக் கம்பு கொண்டாந்ததுக்கு வீணாகாமே இருக்கணும்னு நினைச்சா நீங்க என்னையே ரெண்டு போடு போடறதைத் தவிர வேறு வழியில்லே, அண்ணாச்சி..."

"சே சே! உன்னையா...? கூடாது. நீ செய்திருக்கிற உபகாரம் பெரிசு தம்பி...!" என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு மற்ற மாணவர்களோடும் பாண்டியனோடும் புறப்பட்டார் அவர். திரும்பும் போது மழை இல்லை. இறக்கத்தில் லாரி ஓரளவு வேகமாகச் செல்ல முடிந்தது.

இரவு பத்தரை மணிக்கு லாரி லேக்வியூ ஹோட்டல் முகப்பை அடைந்ததும் எல்லோரும் இறங்கிக் கொண்டு லாரியைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மணவாளனும் அண்ணாச்சியும் பாண்டியனை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். மற்ற மாணவர்கள் அது அகாலமானாலும் பரவாயில்லை என்று பேராசிரியர் பூதலிங்கத்தைப் பார்த்து விவரங்களைக் கூறுவதற்குச் சென்றார்கள். லேக்வியூ ஹோட்டலில் ஒன்பதரை மணிக்கே எல்லாம் தீர்ந்து இருந்தது. அண்ணாச்சி எங்கோ வெளியே சென்று சுடச்சுட இட்டிலி வாங்கி வந்தார். சாப்பிட்டு முடிந்ததும் நடந்ததையெல்லாம் விவரமாக அவர்களுக்குச் சொன்னான் பாண்டியன்.

"நிர்ப்பந்தம் பொறுக்க முடியாமல் தான் என் அபேட்சை மனுவைத் திரும்பப் பெறுவது போல் நான் கடிதத்தை எழுதினேன். அபேட்சை மனுவில் கையெழுத்துப் போட்டிருந்தது போல் போடாமல் விலகல் மனுவில் ஓர் எழுத்து வித்தியாசமாகக் கையெழுத்துப் போட்டால் கூட விலகல் மனு செல்லாது என்பது எனக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் தான் துணிந்து விலகல் மனுவை அனுப்பி வைத்தேன். இல்லையானால் இராவணசாமியின் ஆட்கள் என் எலும்பை நொறுக்கியிருப்பார்கள்..."

"இதோடு எதுவும் முடிந்துவிடவில்லை பாண்டியன்! எலும்பை நொறுக்குவது இனியும் நேரலாம். அவர்கள் உன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். அவர்களோடு போய் அவர்களிடமே சிக்கியிருந்தும் தந்திரமாக அவர்களையே ஏமாற்றிவிட்டு வந்திருக்கிறாய். நாளைக் காலையில் முடிவான வேட்பாளர் பட்டியலிலே உன் பெயரையும் பார்த்துத் திருடனுக்குத் தேள் கொட்டியது போல் விழிக்கப் போகிறார்கள் அவர்கள். அப்புறம் தான் உன் மேல் அவர்கள் கோபம் இரண்டு மடங்காகும்" என்றார் மணவாளன்.

அண்ணாச்சியும் அவனை எச்சரித்து ஒரு யோசனை சொன்னார். "தம்பீ தேர்தல் நல்லபடி முடிஞ்சு ஜெயிக்கிறவரை நீங்க மணவாளன் அண்ணனோடு இங்கே இந்த ஹோட்டல் 'ரூமி'லேயே தங்கறதுதான் பாதுகாப்பு."

"பாதுகாப்பாக இருக்கலாம்! ஆனால் என் எதிரிகள் நான் பயத்தினால் யூனிவர்ஸிடி எல்லையிலிருந்து ஹாஸ்டலை விட்டே ஓடிப்போய் வெளியே ஒளிந்து கொண்டே ஜெயிக்கப் பார்க்கிறேன் என்று இதையே குதர்க்கமாக வியாக்கியானம் செய்வார்கள். நான் நாளைக்கு விடிந்ததும் ஹாஸ்டலுக்குப் போய்விடுவதுதான் நல்லது. ஹாஸ்டலில் இருப்பதுதான் பாதுகாப்பு கூட" என்றான் பாண்டியன். மணவாளனும் இதையே ஆதரித்தார்.

"இதில் அவன் சொல்வதுதான் சரி அண்ணாச்சி. அவன் ஹாஸ்டலிலேயே இருக்கட்டும்! பக்கத்து அறைகளிலும் மற்ற மாணவர்களிடமும் சொல்லி எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம்."

மறுநாள் காலை வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் நோட்டீஸ் போர்டில் ஒட்டப் பட்டபின் பாண்டியன் விடுதி அறைக்குப் போவது என்று முடிவாயிற்று. "நிர்ப்பந்தமாக விலகல் கடிதம் எழுதி வாங்கி உறையில் முகவரி முதற்கொண்டு என் கையாலேயே எழுதுவித்து அதைக் கொண்டு போய்க் காலை எட்டு மணிக்குள் மல்லிகைப்பந்தல் தபால் நிலையத்திலேயே சேர்த்தார்கள் என்று சொன்னேன் இல்லையா? அதற்கு முன்னால் வேறொரு முயற்சியும் செய்தார்கள். எனக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் தருவதாகவும், வெற்றி பெற்ற பின் நான் அவர்கள் கட்சியில் சேர்ந்துவிட்டதாக ஓர் அறிக்கை எழுதித் தந்தால் போதும் என்றும் கெஞ்சினார்கள். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அதை என்னிடம் கேட்கும் போது இராவணசாமி, கோட்டச் செயலாளர் எல்லாருமே இருந்தார்கள். சுற்றிலும் சைக்கிள் செயின், பழைய இரும்புக் குழாய், கடப்பாரை என்று கிடைத்ததைக் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் ஆட்களும் நின்று கொண்டிருந்தார்கள்.

"நீங்கள் பிறந்த நாள் விழாக் கொண்டாடிப் பொன்னாடை போர்த்திப் பொழில் வளவனாரை விலைக்கு வாங்கி விடலாம். அதற்கும் மேல், வி.சி.யைக் கூட வாங்கிவிடலாம். ஆனால் என் போன்ற தேசபக்த இளைஞர்களை விலைக்கு வாங்கவோ, விலை பேசவோ முடியாது. தேவைக்குத்தான் ஆசை, விலை எல்லாம் உண்டு. தேவையின்மைக்கு ஆசை, விலை எதுவுமே கிடையாது. கொன்றாலும் இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்றேன்" என்று அங்கு நடந்தவற்றையெல்லாம் சொன்னான் பாண்டியன்.

"நீ ஏன் அப்படிச் செய்தாய் பாண்டியன்? பணத்தை வாங்கிக் கொள்வது போல் அப்போதைக்கு நடித்துத் தப்பி வந்ததும் ஊரறிய அவர்கள் கூட்டை உடைத்திருக்கலாமே?" என்று கேட்டார் மணவாளன்.

"இது மாதிரி விஷயங்களில் எல்லாம் என்னால் நடிக்கக்கூட முடியாது. நல்லவேளையாக அந்த ஆட்களே, 'பணம் வாங்கிக் கொண்டு வென்றதும் எங்கள் பக்கம் வர உனக்குச் சம்மதம் இல்லை என்றால் இப்போதே உன் அபேட்சை மனுவைத் திரும்பப் பெற்று விலகிக் கொள்வதாக எழுதிக் கொடுத்துவிடு' என்று இன்னொரு வழியையும் சொல்லி மிரட்டினார்கள். அந்த வழியில் நானும் என் அபேட்சை மனுவும் சேர்ந்தே தப்புவதற்கு இடமிருந்ததனால் அதற்கு ஒப்புக் கொள்வதுபோல் ஒப்புக் கொண்டு அவர்களை ஏமாற்ற முடிந்தது."

அன்று அந்தப் பரபரப்பான இரவில் லேக்வியூ ஹோட்டலின் அறையில் அமர்ந்து அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது முற்றிலும் எதிர்பாராத விதமாக மோகன்தாஸ், பொன்னையா முதலிய மாணவர்கள் பின் தொடரப் பேராசிரியர் பூதலிங்கமே அங்கு வந்து சேர்ந்தார்.

"பிரதம தேர்தல் அதிகாரி என்ற முறையில் இப்போது நான் இங்கே வரவில்லை பாண்டியன்! உன் மேல் அன்பும் அநுதாபமும் கொண்ட ஆசிரியன் என்ற முறையில்தான் வந்திருக்கிறேன். பயப்படாதே! இவ்வாறான செயல்களின் மூலம் உன் புகழையும், பெருமையையும் அவர்கள் அதிகமாக்குகிறார்கள். எதிரிகள் உன்னை ஒடுக்க ஒடுக்க நீ மாணவர்களிடையே தலைவனாக்கப்படுகிறாய்."

"இந்த வேளையில் நீங்கள் எதற்கு இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டு இங்கே வந்தீர்கள்? சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேன்?" என்று எழுந்து நின்று அவரை வரவேற்றான் பாண்டியன். அருகே வந்து பாண்டியனின் முதுகில் அன்போடு தட்டிக் கொடுத்தார் பேராசிரியர். மணவாளனையும், அண்ணாச்சியையும் கூட அன்போடு விசாரித்தார் அவர்.

"நாட்டில் அரசியல் நிலைகளும், போக்குகளும் பல்கலைக் கழகத் தேர்தலிலும் மாணவர்களிடமும் பிரதிபலிக்கின்றன. அது தவறில்லை. ஆனால் எங்கும், எப்போதும் தாங்களே முன் நின்று அதிகாரம் செய்ய வேண்டும் என்று இராவணசாமியும் அவர் வகை ஆட்களும் ஏன் இப்படி அதிகார வெறி பிடித்து அலைகிறார்கள் என்பது தான் எனக்குப் புரியவில்லை. ஜனநாயகத்தில் மக்களுக்குத் தொண்டு செய்பவர்களுக்குத் தான் இடம் உண்டு. மக்களை அதிகாரம் செய்பவர்களுக்கு இடமில்லை. இவர்களுடைய அதிகார வெறியோ எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இவர்களிடம் சிலர் தாட்சண்யம் காரணமாகப் பயப்படுகிறார்கள். வேறு சிலர் பயம் காரணமாக தாட்சண்யப்படுகிறார்கள். இன்று மாலை பேராசிரியர் பொழில் வளவனாரும், மல்லை இராவணசாமியும், கோட்டச் செயலாளரும் என் வீட்டுக்குத் தேடி வந்தார்கள். அவர்கள் என் வீட்டுக்குத் தேடி வந்ததே எனக்குப் பிடிக்கவில்லை. தமிழ்த் துறை தலைவர் பொழில் வளவனார் வேறு அவர்களோடு சேர்ந்து வந்திருந்தார். அவர் வந்த விதமும் பேசிய விதமும் வெறுப்பூட்டுவதாயிருந்தது. சிரமப்பட்டுப் பொறுத்துக் கொண்டேன்.

'நம்ம பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தல் தொடர்பாக இவங்க உங்ககிட்டே ஏதோ பேசணுமாம். உங்களை அறிமுகப்படுத்தச் சொல்லி என்னைக் கூப்பிட்டாங்க. அதுதான் இப்படிப் பார்த்து அறிமுகப்படுத்தி விட்டுப் போகலாம் என்று வந்தேன்' என்று ஆரம்பித்தார் பொழில் வளவனார். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. மாணவர் பேரவைத் தேர்தல் பற்றி மாணவர்கள் அல்லாத இராவணசாமியும், கோட்டச் செயலாளரும் என்னிடம் வந்து பேச என்ன இருக்கும் என்பது எனக்குப் புரியவில்லை. இந்த மாதிரி விஷயங்களில் நான் எப்போதும் 'ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டு' என்பது தெரிந்தும் பொழில் வளவனார் என்னிடம் யார் யாரையோ கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தியது எனக்கு எரிச்சலூட்டியது. பத்து வருஷங்களுக்கு முன் பொழில் வளவனார் பி.எச்.டி.க்கு தீஸீஸ் ஸப்மிட் செய்த போது 'சங்க இலக்கியத்தில் காக்கை' என்ற தலைப்புக்குப் பதில், 'சங்க இலக்கியத்தில் காக்கைப் பிடித்தல்' என்ற தலைப்புத்தான் அவருடைய ஆராய்ச்சிக்குரியதாக இருந்திருக்குமோ என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது.

"மாணவர்களின் பேரவைத் தேர்தல் பற்றி உங்களிடம் பேச எதுவும் இல்லை. நீங்கள் போகலாம்" என்று உட்காரவும் சொல்லாமல் அவர்களைத் துரத்த முயன்றேன் நான். 'இல்லீங்க... வந்து அந்தத் தம்பி பாண்டியன் தன்னோட வேட்பு மனுவை வாபஸ் வாங்கிட்டதாகக் கேள்விப்பட்டோம். இனிமே நீங்க வெற்றிச்செல்வன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கிறதுக்கு என்ன தடை?' என்று கேட்டு அவர்களே விஷயத்துக்கு வந்தார்கள்.

'யாரிடம் எப்போது எப்படி அதைக் கேள்விப்பட்டீர்கள்?' என்று மெல்ல அவர்களை வளைத்து மடக்கினேன் நான்.

'இல்லே தகவல் தெரியவந்தது... அதான் வெற்றிச்செல்வன் முழுமனத்தோடு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாளைக்கு அறிவிப்பீர்களான்னு தெரிஞ்சுக்கிட்டுப் போக வந்தோம்' என்றார்கள் அவர்கள்.

'நம்ம சி.எம்., கல்வி மந்திரி, வி.சி. எல்லாருமே வெற்றிச்செல்வன் தான் வரணும்னு விரும்பறாங்க' என்று பொழில் வளவனார் நடுவில் குறுக்கிட்டார்.

'அப்படியா? அவங்கள்ளாம் உங்ககிட்டே வந்து சொன்னாங்களா அதை?' என்று நான் கேட்டதும் தான் அவர் வாயடைத்தது. 'எல்லாம் நடக்க வேண்டிய முறைப்படி, சட்டப்படி நடக்கும்! நீங்க போய் வாங்க'ன்னு சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன். அங்கே உன்னை மிரட்டி ஒரு கடிதத்தை வாங்கித் தபாலில் அனுப்பிவிட்டுப் பின்னாலேயே என்னைத் தேடி வந்து இங்கே நான் என்ன செய்யப் போகிறேன் என்று நோட்டம் பார்க்கிற அளவுக்கு இதே வேலையாக ஒரு கும்பலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்."

ஓர் அரை மணி நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டுச் சென்றார் பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கம். அன்றிரவு விடுதி அறைக்குப் போகாமல் மணவாளனோடு ஹோட்டலிலேயே தங்கினான் பாண்டியன். தூக்கம் வரும் வரையில் பொருளாதாரப் பேராசிரியரின் நேர்மையைப் பற்றியும், அஞ்சாமையைப் பற்றியும், அண்ணாச்சியைப் பற்றியும் வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

"அண்ணாச்சியும் தான் நமக்காக உதவுகிறார். பாடுபடுகிறார். ஆனால் ஒரு நாளாவது அவர் தம் எல்லையைக் கடந்து வந்ததே கிடையாது. வெளியே இருந்து உதவிகள் செய்வதைத் தவிர பல்கலைக் கழகத்துக்கு உள்ளே வந்து மாணவர்களை மிரட்டினார், ஆசிரியர்களை மிரட்டினார் என்ற பேச்சே கிடையாது. ஆனால், இராவணசாமி வகை ஆட்கள் எதைச் செய்யவும் கூசுவதில்லை பார்த்தாயா பாண்டியன்?" என்றார் மணவாளன்.

"இப்படி ஒப்பிடறது கூடத் தப்பு! அண்ணாச்சி பதினெட்டாவது வயதிலிருந்து இந்த நாட்டின் பெரிய பெரிய தேச பக்தர்களோடெல்லாம் ஜெயிலுக்குப் போனவர். ஓர் உயரிய இலட்சியத்துக்காகக் குடும்ப வாழ்வுக்கே முழுக்குப் போட்டுவிட்டுத் தேசசேவையில் இறங்கியவர். தேசப் போராட்டத்துக்காக வீடு வாசல்களை இழந்தவர். இன்றைக்கு வீடு வாசல்கள் சொத்துச் சுகங்களை அடைவதற்காகவே பொது வாழ்வுக்கு வருகிறவர்களையும் அண்ணாச்சியையும் ஒப்பிடுவதே எனக்குப் பிடிக்கவில்லை" என்றான் பாண்டியன். பேராசிரியர் பூதலிங்கம் புறப்பட்டுப் போகும் போதே அண்ணாச்சியும் கடைக்குப் போயிருந்தார்.

இவர்கள் இங்கே அவரை வியந்து பேசிக் கொள்ள முடிந்தது.

மறுநாள் விடிந்ததுமே அண்ணாச்சி செய்தித் தாள்களுடனும், கண்ணுக்கினியாளுடனும் ஹோட்டலுக்கு வந்தார். "இந்தா, தங்கச்சி! நல்லாப் பார்த்துக்க... நீயே ஹோட்டல் பையன் கிட்டச் சொல்லிக் காப்பி வரவழைச்சு உன் கையாலேயே கொடு. 'நாளைக் காலையிலே தம்பி நம்மோட காப்பி குடிக்க இங்கே இருக்கும்'னு நேற்றுச் சொன்னேன். சொன்னபடி தேடிக் கொண்டாந்தாச்சு..." என்றார் அண்ணாச்சி. பாண்டியனைப் பார்த்த மகிழ்ச்சி இருந்தாலும் அவள் உள்ளே வேறு ஏதோ ஒரு கவலை சுரந்திருப்பது அவளுடைய முகத்தில் தெரிந்தது. அந்த வசீகரமான முகத்தில் வழக்கமான ஒளி இல்லை.

"நீங்கள் எல்லாம் இருந்துமா இப்படி நடந்தது?" என்று மணவாளனைக் கேட்டாள் அவள்.

"நான் எவ்வளவோ எச்சரித்திருந்தும் பாண்டியன் ஏமாந்துவிட்டான். என்ன செய்வது? இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பான் என்று நினைக்கிறேன்" என்றார் மணவாளன். பேசிக் கொண்டே இருந்தவள் திடீரென்று நாலாக மடிக்கப்பட்ட ஒரு துண்டுத்தாளை எடுத்துப் பாண்டியனிடம் நீட்டி, "நான் நீங்கள் வெற்றி பெறப் பாடுபடுகிறேனாம். அதனால் என்னையும் உங்களையும் பற்றி எதிரிகள் இப்படியெல்லாம் தாறுமாறாக நோட்டீஸ் அடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறும் போதே அவள் குரல் கரகரத்துத் தொண்டை கம்மியது. கண்கள் கலங்கிவிட்டது.

சிறிதும் பதறாமல் பாண்டியன் அந்த நோட்டீஸை வாங்கிப் படித்தான். குறிப்பறிந்து அண்ணாச்சியிடம் ஏதோ தனியே பேச வெளியேறுவது போல் மணவாளன் அறையிலிருந்து வராந்தாவின் பக்கமாக வெளியேறிச் சென்றார். அந்த நோட்டீஸைப் பாண்டியன் பார்த்தால் தன் மேல் அவனுக்கு இருக்கும் பிரியமே போய்விடுமோ என்று தான் பயந்தாள் கண்ணுக்கினியாள். ஆனால், பாண்டியனோ அதைப் படித்துவிட்டுச் சிரித்தான். பின்பு சொன்னான்:

"இப்படி ஆயிரம் நோட்டீஸ் அடித்துக் கொடுத்தாலும் என் மனத்தில் உன் மேலுள்ள அன்பு போகாது! தெரிந்தோ தெரியாமலோ இதை எழுதியவன் உன்னையும் என்னையும் மிக நெருக்கமாகச் சம்பந்தப்படுத்தித்தான் இப்படி எல்லாம் எழுதியிருக்கிறான். நம்முடைய காதலின் அந்தரங்கத்தை நம்மைவிட அதிகமாகத் தெரிந்து ஒப்புக் கொண்டு அச்சடித்து அங்கீகரித்த ஒரு காரணத்துக்காக அவனுக்கு நன்றி கூறுவதை விட்டு விட்டு நீ ஏன் இதற்காக கண் கலங்குகிறாய்?" என்று பாண்டியன் கேட்ட பின்பு தான் அவள் முகத்தின் இருள் மாறிச் சுபாவமான தன்மையுடன் சிரிப்பு மலர்ந்தது.

எட்டாவது அத்தியாயம்

கண்ணுக்கினியாள் கொண்டு வந்து காட்டிய துண்டுப் பிரசுரத்தைக் கண்டு பாண்டியன் அதிர்ச்சி அடையவில்லை. அவனே அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டான். "இதை ஒரு பெரிய விஷயம் என்று நினைத்துப் பெரிதுபடுத்தி என்னிடம் காண்பிக்க வந்திருக்கிறாயே, இப்போது உன் மேல் தான் கோபம் வருகிறது எனக்கு."

"இதைப் பார்த்து உங்களுக்கு என்ன தோன்றுமோ, எப்படி நினைப்பீர்களோ என்று எனக்கே பயமாக இருந்தது... அதுதான்..."

"நல்ல பயம் தான்... போ..." என்று கேலி செய்து விட்டு வராந்தாவின் பக்கமாகப் போயிருந்த அண்ணாச்சியையும் மணவாளனையும் கூப்பிட்டுக் குரல் கொடுத்தான் பாண்டியன். அவர்கள் உள்ளே வந்ததும் அவர்களிடமும் அந்தத் துண்டுப் பிரசுரத்தைப் பற்றிச் சொல்லிச் சிரித்தான் அவன். கண்ணுக்கினியாளின் அநாவசியமான பயத்தைப் பற்றியும் சொல்லி நகைத்தான். அதைக் கேட்டு மணவாளன் சொன்னார்:

"நல்லவர்களின் நாணமும், அச்சமும் தான் இன்றைக்கு நம்மைச் சுற்றிலும் இருக்கும் தீயவர்களின் மிகப் பெரிய வாய்ப்பு அம்மா! நல்லவர்கள் நாணப்பட்டு ஒரு நேரிய காரியத்தைச் செய்யத் தயங்கி நிற்பதற்குள் நாணமே இல்லாத காரணத்தால் தீயவர்கள் அதற்கு எதிரான பத்து தீமைகளைச் செய்தே முடித்து விடுகிறார்கள். நல்லவர்கள் நாகரிகம் காரணமாக அஞ்சித் தயங்கி நின்றால் தீயவர்கள் அந்த நாகரிகத்தையே ஒரு கோழைத் தனமாகக் கருதி மேலும் மேலும் அச்சுறுத்துகிறார்கள். அதனால் தான் 'நாணமும் அச்சமும் மட நாய்களுக்கு அன்றோ வேண்டும்' என்று நம் தலைமுறைக் கவியாகிய பாரதியார் கூடப் பாடியிருக்கிறார். 'பிளாக் மெயில்' பண்ணுவது போல் இப்படிக் காரியங்களைச் செய்வதே அன்பரசன் குழுவினரின் வழக்கம். நாம் இதை ஒரு பொருட்டாக நினைத்துத் தயங்குவது கூட அநாவசியம்."

"இந்தத் துண்டுப் பிரசுரம் ஒரு புறம் இருக்க, இவர் தேர்தலிலிருந்து 'வித்ட்ரா!' பண்ணிக் கொண்டு விலகி விட்டதாக முதலிலேயே ஒரு வதந்தியைக் கிளப்பினார்கள். மறுபடியும் நேற்று இரவிலிருந்து மீண்டும் அப்படி ஒரு வதந்தி பேசப்படுகிறது. இவர் வேண்டாம் என்று கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டதால் வெற்றிச் செல்வனே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்து விடுவார்கள் என்று பேசிக் கொள்கிறார்களாமே?" என்பதாக வினவிய கண்ணுக்கினியாளுக்கு அண்ணாச்சி மறுமொழி கூறினார்.

"அதெல்லாம் எதுவும் நடக்கப் போறதில்லே தங்கச்சி! நாம் தான் ஜெயிக்கப் போறோம். தங்களுக்கு வரப்போற தோல்வியைக் கற்பனை கூடப் பண்ண முடியாம அதை மறக்கறதுக்காக இப்பிடி ஏதேதோ கதை கட்டி விடறாங்க. தம்பியைப் பார்த்த மகிழ்ச்சியோட நீ நிம்மதியா ஹாஸ்டலுக்குப் போய்ச் சேரு தங்கச்சி. இந்த மாதிரி நோட்டீஸை எல்லாம் கிழிச்சுக் குப்பைக் கூடையிலே எறிஞ்சு காறித் துப்பிட்டுப் போகணும். இதுக்கு மரியாதை அவ்வளவுதான்..."

காலைக் காப்பி சிற்றுண்டிக்குப் பின் மணவாளன், கண்ணுக்கினியாள், மோகன்தாஸ், பொன்னையா, முதலியவர்களும், பார்க்க வந்திருந்த வேறு பல மாணவர்களும் சூழ விடுதி அறைக்குப் புறப்பட்டான் பாண்டியன். ஒரு நாள் அவன் பல்கலைக் கழக எல்லையிலேயே காணப்படாமல் எங்கோ கடத்தப்பட்டிருந்தான் என்ற செய்தி அதற்குள் மெல்ல மெல்லப் பரவியிருந்ததால், அவன் திரும்ப வந்ததும் விடுதி அறையைச் சுற்றிலும் பெருங் கூட்டம் கூடி விட்டது. எல்லாரும் அவனை அன்போடும் அநுதாபத்தோடும் விசாரித்தார்கள். விலகல் மனுவில் கையெழுத்துச் சரி இல்லாததால் வேட்பு மனு செல்லும் என்பதோடு 'கடத்திச் செல்லப்பட்ட நேரத்தில் பாண்டியனிடம் நிர்ப்பந்தப்படுத்தி வாங்கிய எந்தக் கடிதமும் செல்லாது' என்று முன்மொழிந்தவர், வழி மொழிந்தவர்கள் கொடுத்த புகார்க் கடிதத்தையும் ஆதாரமாகக் கொண்டு இறுதிப் பட்டியல் வெளியானதும் அன்பரசனும் அவன் குழுவைச் சேர்ந்தவர்களுமாக ஓர் எழுபது எண்பது பேர் கடுமையான கோஷங்களோடு பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டை நோக்கி ஊர்வலமாகப் போனார்கள். கோஷங்களும், கூப்பாடுகளும் பேராசிரியரை எதிர்த்து ஒலித்தன. பேராசிரியரைப் பாண்டியனின் கைக்கூலியாக வர்ணித்தார்கள் அவர்கள். 'தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக எழுதிக் கொடுத்த பாண்டியனின் பெயர் எப்படிப் பட்டியலில் இருக்க முடியும்?' என்பது தான் அன்பரசன் குழு மாணவர்களின் கோபமாக இருந்தது.

அங்கே பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டு முன்புறத்தில் போய்க் கூட்டமாக நின்று கொண்டு குரல்களை முழக்கினார்கள் அவர்கள். பேராசிரியர் வெளியே வந்தார். அவருடைய கம்பீரமான தோற்றத்தை எதிரே கண்டதும் அவர்கள் தங்களையறியாமலே கட்டுப்பட்டார்கள். அன்பரசன் பேராசிரியரின் அருகே போய்க் கேட்டான்.

"போட்டியிலிருந்து பாண்டியன் விலகிக் கொள்வதாய் கடிதம் எழுதி அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டோம். அதன்படி பார்த்தால் பட்டியலில் பாண்டியனின் பெயரை நீக்கிவிட்டுப் பேரவைச் செயலாளர் பதவிக்கு வெற்றிச்செல்வன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக நீங்களே அறிவித்திருக்க வேண்டும். நீங்களோ இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்து ஒட்டியுள்ள சுற்றறிக்கையில் பாண்டியனும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறீர்கள்..."

"ஆமாம்! அப்படித்தான் அறிவித்திருக்கிறேன். அதற்கென்ன வந்தது இப்போது?"

"இரு சாராருக்கும் பொதுவில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்டிருக்கும் தாங்கள் ஒரு சாராருக்காகச் சார்பு காட்டிச் சாய்ந்து செயலபடுகிறீர்கள் என்று தெரிகிறது... அதை நானும் எங்கள் தரப்பு மாணவர்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம்..."

இதைக் கேட்டு பேராசிரியர் பூதலிங்கம் அன்பரசனையும் அவனோடு வந்திருந்தவர்களையும் அலட்சியமாக ஏறிட்டுப் பார்த்தார். சிரித்தார். அவர்கள் மேல் கோபப்படுவது கூட அவர்களை ஒரு பொருட்டாக மதித்ததாகி விடுமென்றுதான் அவர் நகைத்தார். அன்பரசன் ஆவேசமாகக் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்ட பின்பு அவர் நிதானமாக அவனுக்கு மறுமொழி கூறினார்.

"சட்டப்படி பட்டியலிலிருந்து எந்தப் பெயர்களையாவது நீக்க வேண்டியதிருக்குமானால் அது உன் பெயராகவும், வெற்றிச்செல்வன் பெயராகவும் தான் இருக்கும். மாணவர்கள் அல்லாத குண்டர்களையும் சேர்த்துக் கொண்டு அன்றிரவு வி.சி. வீட்டிலிருந்து அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்த மாணவர் கூட்டத்தின் மேல் கல்லெறி நடத்தினீர்கள். அரசியல் செல்வாக்குள்ள உள்ளூர்க்காரர்களின் உதவியோடு பாண்டியனை விடுதியிலிருந்து கடத்திக் கொண்டு போய்ப் பயமுறுத்தி விலகல் கடிதம் எழுதி வாங்கித் தபாலில் அனுப்பினீர்கள். இந்தக் காரியங்களையெல்லாம் நீங்கள் தான் செய்தீர்கள் என்பதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. நீங்களே எழுதி வாங்கி அனுப்பிய பாண்டியனின் விலகல் மனு செல்லாது."

அன்பரசனால் உடனே அவருக்கு மறுமொழி எதுவும் கூற முடியவில்லை. ஆடு திருடிய கள்ளன் போல் திரு திருவென்று விழித்தான் அவன். உடனிருந்த வெற்றிச்செல்வன் குமுறினான்.

"நீங்கள் தமிழ்ப் பகைவர்! தமிழ் மட்டுமே கற்கும் என்னைப் போன்றதொரு கீழ்த்திசைக் கலைப் பிரிவு மாணவன் பேரவைச் செயலாளனாக வருவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்."

"நான் விரும்புகிறேன், விரும்பவில்லை என்பதல்ல பிரச்னை! மாணவர்கள் உங்களை விரும்புகிறார்களா இல்லையா என்பதை அறிவதற்காகத்தான் இந்தத் தேர்தலே நடக்கப் போகிறது. உங்களுக்குப் பிடிக்காதவர்களை யெல்லாம் தமிழ்ப் பகைவர்கள் என்று பெயர் சூட்டி வசை பாடுவதை வெகு நாட்களாக நீங்கள் செய்து வருகிறீர்கள். தமிழ் மொழியை நான் நேசிக்கிறேனா, இல்லையா என்பதற்கு உங்களைப் போன்றவர்களின் 'சர்டிபிகேட்' எதுவும் எனக்குத் தேவையில்லை. போய் வாருங்கள்" என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார் பூதலிங்கம். மேலும், பத்து நிமிஷங்கள் கூக்குரல் போட்டுவிட்டு வி.சி. மாளிகையை நோக்கிச் சென்றது அந்தச் சிறு கூட்டம். ஜன்னலோரமாக நின்று வாசலில் வந்திருக்கும் மாணவர் கூட்டத்தையும் அவர்கள் குரல்களையும் கேட்டுக் கொண்டிருந்த பூதலிங்கத்தின் மனைவியும் மகளும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மகனும் அவர் உள்ளே திரும்புவதைக் கண்டு விரைந்து அந்த இடத்திலிருந்து கலைந்தனர். பேராசிரியரின் மனைவி அவரைக் கோபித்துக் கொண்டாள்.

"இந்த வம்பிலே நீங்கள் ஏன் தலையை கொடுத்தீர்கள்? இராத்திரீன்னும் பகல்னும் பாராமே ஒருத்தன் மாத்தி ஒருத்தன் தேடி வராங்க. எம்.எல்.ஏ., எம்.பீ.ன்னு கட்சிக்காரங்க கூட இந்தச் சுண்டைக்காய் எலெக்ஷனுக்காக இங்கே வந்து உங்க கழுத்தை அறுக்கறாங்களே? எல்லாம் போதாதுன்னு இப்ப ஊர்வலம் வேற வந்தாச்சு... இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ?"

"ஒண்ணும் நடக்காது! நீ ஏன் இதையெல்லாம் வந்து கவனிக்கிறே? உன் வேலையைப் பாரு?" என்று மனைவியை உள்ளே அனுப்பிவிட்டுப் பல்கலைக் கழகத்துக்குப் புறப்படுவதற்காக உடை மாற்றிக் கொள்ளத் தொடங்கினார் அவர். இசைக் கல்லூரியில் வாத்திய இசைப் பிரிவில் வீணை கற்றுக் கொண்டிருந்த பேராசிரியரின் மூத்த மகள் கோமதியும் அவரோடு பல்கலைக் கழகத்திற்குப் புறப்படத் தயாரானாள்.

"என்ன இருந்தாலும் இந்த அன்பரசன், வெற்றிச்செல்வன் ஆட்கள் ரொம்ப மோசம் அப்பா! எதிலேயும் எந்த அளவுக்கு தரக் குறைவா இறங்கிடறாங்க இவங்க... எங்க ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவிலே 'டிராமா' வகுப்பிலே கண்ணுக்கினியாள் என்று ஒரு பெண் இருக்கா. அவ இந்த ஸ்டூடன்ஸ் கவுன்ஸில் எலெக்ஷனிலே பாண்டியனுக்காகவும் மோகன்தாஸுக்காகவும் சிரமப்பட்டு அலைஞ்சு பாடுபடறா. அது பொறுக்காம இவங்க நேத்து பாண்டியனையும் இந்தப் பெண்ணையும் பற்றிக் கதை கட்டி ரொம்ப 'சீப்பா' ஒரு நோட்டிஸை அடிச்சிருக்காங்க. ஆனா அந்த நோட்டீஸை யாரும் நம்பல்லே. லேடீஸ் ஹாஸ்டலில் மாணவிகள் மத்தியிலும் இந்தப் பெண்ணுக்கு ரொம்ப நல்ல பேரு. அந்த நோட்டீஸ் ஒரு வேளை இந்தப் பெண்ணின் மனத்தைப் புண்படுத்தியிருக்கலாம். ஆனால் மாணவிகள் அத்தனை பேருடைய அநுதாபமும் இந்தப் பெண் மேல் தான். இவளையும் பாண்டியனையும் பற்றி இப்படி நோட்டீஸ் அடித்தவர்கள் அகப்பட்டால் அவர் கதி அதோ கதி தான்" என்றாள் பேராசிரியரின் பெண் கோமதி. வீட்டிலிருந்து வெளியேறிப் பேசிக் கொண்டே பல்கலைக் கழகத்துக்குச் சென்றார்கள் அவர்கள்.

"பாண்டியன் தங்கமான பையன்! அவனைப் பற்றி யார் என்ன கதை கட்டினாலும் அது இந்தப் பல்கலைக் கழக எல்லையில் எடுபடாது. நீ சொல்கிற அந்தப் பெண்ணும் நல்ல மாதிரி. அன்றைக்குப் பாண்டியனையும் மோகன்தாஸையும் போலீஸ் பிடித்துக் கொண்டு போன போது அவள் என்னைச் சந்தித்து விவரம் சொல்வதற்காக 'ஸவுத் பிளாக்'கில் டிபார்ட்மெண்ட் அறைக்கு வந்திருந்தாள். பணிவாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டாள். பாண்டியன் மேல் அவளுக்கு அளவற்ற பிரியம் இருப்பது தெரிந்தது."

"மாணவிகள் மத்தியில் கூடப் பழகும் விதத்தினாலும் கலகலவென்று சிரிக்கச் சிரிக்கப் பேசும் சுபாவத்தினாலும் அவள் சீக்கிரமே எல்லாரையும் விட நல்ல பெயர் வாங்கி விட்டாள் அப்பா."

பல்கலைக் கழகத்துக்குள் இசைக் கல்லூரிக்கு வழி பிரியும் இடத்தில் கோமதி தந்தையிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள். பேராசிரியர் தென் பகுதிக் கட்டிடத்திலிருந்த தம் அறைக்குப் போய்ச் சேர்ந்தார். கோட்டைக் கழற்றி மாட்டிவிட்டு, பியூனை மணி அடித்துக் கூப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார் அவர். தண்ணீரைப் பருகி விட்டு மேஜை மேல் இருந்த தபால்களையும் பொருளாதாரச் சம்பந்தமானப் பத்திரிகைகளையும் கவனிக்கத் தொடங்கினார்.

அப்போது ஃபோன் மணி அடித்தது. எடுத்தார். துணைவேந்தர் அவரை உடனே பார்க்க விரும்புவதாகத் துணைவேந்தரின் அறையிலிருந்தே பதிவாளர் பேசினார். கோட்டை எடுத்து மாட்டிக் கொண்ட பின் மாணவர் பேரவைத் தேர்தல் பற்றிய தாள்கள் அடங்கிய ஃபைலையும் எடுத்துக் கொண்டு துணைவேந்தரைச் சந்திக்கப் புறப்பட்டார் பேராசிரியர் பூதலிங்கம்.

பல்கலைக் கழகப் பிரதான கட்டிடத்தின் மாடியில் வலது கோடியிலிருந்த துணைவேந்தர் அறைக்குள் பூதலிங்கம் நுழைந்த போது பதிவாளர் ஏதேதோ கடிதங்களில் தாயுமானவனாரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து பார்த்துப் பூதலிங்கத்தை உட்காரச் சொல்லி விட்டுச் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தார் துணைவேந்தர். கையெழுத்து வாங்கி முடித்த தாள்களோடும் ஃபைல்களோடும் பதிவாளர் வெளியேறியதும் துணைவேந்தரின் கவனம் திரும்பியது.

"மிஸ்டர் பூதலிங்கம்! இன்று காலை நான் வீட்டை விட்டுப் புறப்படுமுன் மாணவர்கள் ஊர்வலமாக வந்து என்னிடம் ஒரு புகார்க் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டதாகக் கடிதம் எழுதிய ஒரு பையனின் பெயரையும் காலையில் வெளியிட்ட ஃபைனல் லிஸ்டில் நீங்கள் சேர்த்திருக்கிறீர்களாம். அப்புறம் எல்லா தரப்பு மாணவர்களுக்கும் பொதுவாக நடந்து கொள்ள வேண்டிய நீங்கள் பாரபட்சமாக நடந்து கொள்ளுகிறீர்களாம்."

துணைவேந்தர் கூறியதைக் கேட்டுப் பூதலிங்கத்துக்கு உள்ளூறக் கோபம் வந்தாலும் அதைப் புறத்தே காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டு, "இவற்றையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா சார்?" என்று கேட்டார்.

துணைவேந்தரிடமிருந்து இதற்கு நேரடியாக மறுமொழி எதுவும் கிடைக்கவில்லை.

"இந்தப் பையன்களில் சில பேர் உள்ளூர் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கட்சி ஆட்கள் மூலம் மந்திரி வரை போய் விடுகிறார்கள். அதுதான் பயப்பட வேண்டியிருக்கிறது" என்று சுற்றி வளைத்து மறுமொழி வந்தது துணை வேந்தரிடமிருந்து. அந்த மறுமொழியில் அவருடைய தயக்கமும் பயமும் என்னவென்பது தெரிந்தது.

உடனே மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வரை போக முடிந்த செல்வாக்கு உள்ள அந்தப் பையன்கள் செய்த கொடுமைகளை ஒவ்வொன்றாகத் துணைவேந்தரிடம் விவரித்தார் பேராசிரியர். கல்லெறிந்தது, பாண்டியனை நள்ளிரவில் விடுதியிலிருந்து கடத்திக் கொண்டு போய் எஸ்டேட் தகரக் கொட்டகையில் அடைத்துப் போட்டுப் பயமுறுத்தி விலகல் கடிதம் வாங்கியது, எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, "நியாயப்படி பார்த்தால் இப்படி முரட்டு வேலைகளையெல்லாம் செய்வதற்காக அந்த அன்பரசனின் பெயரையும், வெற்றிச்செல்வனின் பெயரையும் நானே பட்டியலிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். போனால் போகிறது என்று தான் அப்படிச் செய்யவில்லை" என்று கூறி முடித்தார்.

"என்ன செய்யலாம்? எங்கு பார்த்தாலும் 'பொலிடிகல் ப்ரஷர்' அதிகமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் உள்ளூர்க் கோட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.யும் சம்மதிக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள்... போன மாதம் மொழி ஆராய்ச்சித் துறைக்காகப் புதிதாய்க் கட்ட இருக்கும் 'லிங்விஸ்டிக் பிளாக்' கட்டிடத்துக்கு அஸ்திவாரக்கல் நாட்டுவதற்குக் கல்வி மந்திரியை அழைத்தேன். 'உங்களூரில் எங்கள் கட்சிக் கோட்டச் செயலாளரையும், எம்.எல்.ஏ.யையும் சந்தித்துக் கேளுங்கள், அவர்கள் சம்மதித்தால் தான் நான் அங்கே அஸ்திவாரக்கல் நாட்ட வர முடியும்'னு மந்திரியிடமிருந்து பதில் வந்தது. மந்திரிக்கு மட்டுமில்லாமல் அவருடைய கோட்டத்துக்கும், கூட்டத்துக்கும் கூடப் பயந்தாக வேண்டியிருக்கிறது. 'யாரையும் அளவுக்கு மீறிப் பகைத்துக் கொண்டுவிட்டுப் பின்னால் சிரமப்படாதீர்கள்' என்று உங்களை அன்புடன் எச்சரிக்கவே கூப்பிட்டனுப்பினேன் மிஸ்டர் பூதலிங்கம்!"

"உங்கள் அன்புக்கும் எச்சரிக்கைக்கும் ரொம்ப நன்றி சார்! சமூகத்தில் நாம் நல்லவர்களாக நிரூபிக்கப்பட வேண்டுமானால் சில தீயவர்களின் பகைமையை விலைக் கொடுத்தாவது வாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும். அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். இந்த மாணவர் பேரவைத் தேர்தல்களை என்னை விட வேறு யாராவது பொறுப்பேற்று நடத்துவது உங்களுக்கு விருப்பமென்றால் இப்போதே நீங்கள் என்னை அதிலிருந்து விடுவித்து விடலாம்!"

"நோ, நோ, நீங்கள் நான் கூறியதைத் தப்பாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள் மிஸ்டர் பூதலிங்கம்! நான் உங்களைப் பூரணமாக நம்புகிறேன். நாளைக்கு நடக்கவிருக்கும் பேரவைத் தேர்தலை நீங்கள் தான் நடத்திக் கொடுக்க வேண்டும். இதுவரை நான் கூறியதை எல்லாவற்றையும் எனக்கிருக்கும் சிரமங்கள் என்று மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் போதுமானது!" என்றார் துணைவேந்தர்.

உள்ளூர்க் கோட்டச் செயலாளருக்கும், மந்திரிக்கும் அவர்கள் சார்புள்ள மாணவர்களுக்கும் துணைவேந்தர் பயப்படுகிறார் என்பது பூதலிங்கத்துக்குத் தெளிவாகப் புரிந்தது. 'பயமே பாவங்களுக்கு எல்லாம் தந்தை' என்று மகாகவி பாரதி ஓரிடத்தில் கூறியிருப்பதை நினைத்துக் கொண்டார் பூதலிங்கம்.

பேராசிரியர் பூதலிங்கத்தைப் போல் எதற்கும் நைப்பாசைப் படாத, எதற்கும் வளைந்து கொடுக்காத ஒரு நியாயவாதியான சத்திய வெறியரைத் தம் போக்குக்கு இசைவாகத் திருப்ப முடியாதென்று புரிந்ததும் அவருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார் துணைவேந்தர். ஒரு கணம் தம்மையும் பூதலிங்கத்தையும் ஒப்பிட்டு மனத்துக்குள் நினைத்த போது பூதலிங்கத்திடம் தாம் பொறாமைப் படத்தக்க ஏதோ ஒன்று இருப்பதாகத் தோன்றியது அவருக்கு. அரசாங்கங்களுக்கும், அதிகாரங்களுக்கும் ஏற்ப அவ்வப்போது நியாயங்களை மாற்றிக் கொள்ளாமல் நியாயங்களுக்காகவும் உண்மைகளுக்காகவும் அரசாங்கங்களையும், கூடத் துச்சமாக நினைத்து எதிர்க்கும் ஒரு சாதாரண பேராசிரியரையும், ஒரு மிகப் பெரிய ரெஸிடென்ஷியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகிய தம்மையும் ஒப்பிட்டு நினைத்துக் கொள்வதை அப்போது அவரால் தவிர்க்க முடியவில்லை. மேஜை மேலிருந்த டெலிபோன் மணி சிந்தனையைக் கலைத்தது. ஏக்கப் பெருமூச்சோடு, போனை எடுத்தார் டாக்டர் தாயுமானவனார். ஒரு முரட்டுத் தொண்டையிலிருந்து பிறந்த கட்டைக் குரல் செவியில் எரிச்சலூட்டியது.

"என்னங்க? நான் தான் கோட்டச் செயலாளர் குருசாமி பேசறேன். நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குங்களா?... கவனிச்சீங்களா?"

பலதுறை அறிவின் ஆலயமாகிய ஒரு பெரிய பல்கலைக் கழகத் துணைவேந்தரிடம் சாதாரண முகமன் வார்த்தைகளோ, உபசாரமான மரியாதைகளோ, வணக்கமோ கூட இல்லாமல் ஏதோ தன் கட்சிக்குக் கொடி கட்டப் போகிறவனையோ, சுவரொட்டி ஒட்டப் போகிறவனையோ கூப்பிட்டுப் பேசுவது போல் தடித்தனமாக அவன் பேசிய விதம் அவருக்கு ஆத்திரம் ஊட்டினாலும் பொறுமையாகப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அவன் மேல் ஆத்திரப்பட்டு விடுவதால் தமக்கு அவர் என்னென்ன கெடுதல்களைச் செய்ய முடியும் என்ற முன்னெச்சரிக்கை அவரை அஞ்சி அடங்கச் செய்திருந்தது. ஒரு மேலதிகாரிக்குப் பதில்கள் சொல்லும் குமாஸ்தாவைப் போல் அந்தக் கோட்டச் செயலாளருக்குத் துணைவேந்தர் ஃபோனில் பதில்கள் சொல்ல வேண்டியிருந்தது. ஏற்கெனவே அந்த ஆள் செய்த நிர்ப்பந்தம் பொறுக்க முடியாமல் போலீசுக்கு ஃபோன் செய்து அதனால் மாணவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேர்ந்தது ஞாபகம் வந்தது அவருக்கு. பட்டும் படாமலும் பேசி முடித்து ஃபோனை வைத்தார் துணைவேந்தர். எதிரே சுவரில் மிகப் பெரிய சில்க் துணியில் வரையப் பெற்றுத் தொங்கவிடப் பெற்றிருந்தது பல்கலைக் கழகச் சின்னம். இருபுறமும் யாளிச் சிற்பமும் நடுவில் பசுந்தளிரும் கீழே குத்துவிளக்கும் அதன் அடியில் 'வித் ட்ரூத் அண்ட் விஸ்டம்' என்ற ஆங்கிலக் கொள்கை வாசகமும் அடங்கிய காட்சி தெரிந்தது. அதற்கும் கீழே பழைய துணைவேந்தர் காலத்தில் எழுதப்பட்ட 'தி யுனிவர்ஸிடி எஜுகேட்ஸ் தி இண்டலக்ட் ரீஸன் வெல் இன் ஆல் மேட்டர்ஸ், டு ரீச் அவுட் டுவார்ட்ஸ் ட்ரூத் அண்ட் டு க்ராஸ்ப் இட்' என்ற இலட்சிய வாக்கியமும் தெரிந்தது. 'சத்தியத்தை அடையவும் கிரகிக்கவும்' என்ற அந்த வாக்கியப் பகுதியைத் தம் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்த போது அவருக்கே அருவருப்பாக இருந்தது. அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அடிமைப்பட்டு விட நேரிடுவதை அவர் தம் சொந்த அனுபவத்திலேயே பலமுறைகள் உணர்ந்திருந்தார்.

ஒன்பதாவது அத்தியாயம்

தொடக்கத்தில் தம்மோடு போட்டியிட்ட அதிகத் தகுதியுள்ள சிலரை வீழ்த்திவிட்டு இந்தப் பதவியைத் தாமே அடைய ஓரளவு அரசியல் செல்வாக்குள்ளவர்களை நாடித் துணைவேந்தர் தாயுமானவனார் போயிருந்தார். அதுதான் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருந்தது. பதவிக்கு வந்த பின் அதே அரசியல் செல்வாக்கு விநாடிக்கு விநாடி அவரைத் தேடி வந்து மிரட்டவும், நிர்ப்பந்தப்படுத்தவும் செய்த போது அவரால் அதிலிருந்து தப்ப முடியவில்லை. எது எப்படி இருந்த போதிலும் அன்று நண்பகலில் பூதலிங்கத்தை வரவழைத்துப் பேசிய பின்னர் 'மாணவர் பேரவைத் தேர்தல்' சம்பந்தமாக இனி எதிலும் தலையிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தார் தாயுமானவனார். நாகரிகமே இல்லாத முரடர்களான கோட்டச் செயலாளர் குருசாமியும், இராவணசாமியும் சொல்வதைக் கேட்டுக் கொண்டு எதையாவது தாறுமாறாகச் செய்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தம்மை முழுமூச்சோடு எதிர்க்கும் சூழ்நிலையைத் தூண்டி விட அவர் தயாராயில்லை. குருசாமியும், இராவணசாமியும் மாற்றி மாற்றி ஃபோன் செய்தும் ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி மெல்ல நழுவிவிட்டார் துணைவேந்தர். அதே சமயம் அவர்களைப் பகைத்துக் கொள்ளவும் அவர் தயாராக இல்லை. தந்திரமாகப் பேராசிரியர் பூதலிங்கத்தின் தலையில் எல்லாப் பழிகளையும் சுமத்தி விட்டுத் தப்பித்துக் கொண்டார் தாயுமானவனார். பாண்டியன் கடத்தப்பட்டு மீண்டதை ஒட்டி மாணவர்கள் மத்தியில் ஒரு விதமான கொந்தளிப்பும், கோபமும் இருந்ததால், குருசாமியும், இராவணசாமியும் வெளிப்படையாகப் பல்கலைக் கழக எல்லைக்குள் வந்து வேலை செய்யப் பயப்பட்டார்கள். கல்லெறி முதல் பாண்டியன் கடத்தப்பட்டது வரை சகலமும் பத்திரிகையில் வேறு வெளி வந்துவிட்டது. மாணவர்களை ஆதரித்து எழுதியிருந்த பத்திரிகைகள் கட்சிக்காரர்களின் தலையீட்டையும் வன்முறைகளையும், துணைவேந்தர் பல்கலைக் கழக எல்லையில் போலீஸைக் கூப்பிட்டதையும் கண்டித்து எழுதியிருந்தன. பாண்டியனின் அறையிலும் வெளியேயும் வராந்தாவிலுமாகக் காவலுக்கு இருப்பது போல நூற்றுக் கணக்கான மாணவர்கள் திரண்டிருக்க ஏற்பாடு செய்திருந்தார் மணவாளன். ஒரு பாதுகாப்புக்காக மோகன்தாஸையும் அதே அறையில் தங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தார்.

மறுநாள் காலையில் விடிந்தால் மாணவர் பேரவைத் தேர்தல்கள் நடக்க இருந்தன. அந்த இரவும் அதையடுத்து விடிவதற்கிருந்த வைகறையும் மாணவர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டன. எங்கும் அமைதியாய் இருந்தாலும், எந்த விநாடியில் என்ன நடக்குமோ என்று எதிர்பார்க்கும் ஓர் ஊமைப் பரபரப்பும் பல்கலைக் கழக எல்லையில் உள்ளடங்கித் தெரிந்தது.

குழப்பங்களை விளைவிக்கவோ, ஏதாவது கலவரம் செய்து தேர்தல்களைத் தள்ளிப் போடச் செய்யவோ, இனி இயலாது என்று கையாலாகாத்தனமும், அதனால் உண்டாகிய ஆற்றாமைக் கோபமுமாகத் துடித்துக் கொண்டிருந்தனர் அன்பரசன் குழுவினர். ஆற்றாமை - கையாலாகாத்தனம், பொறாமை இவை எல்லாம் உள்ளவர்களால் இனி இது இயலாது என்று எதிலும் அடங்கி விடவும் முடியாது. கடைசி விநாடி வரை அவர்கள் எதையாவது செய்து கொண்டே தான் இருப்பார்கள் கடைசி விநாடிக்கு குழப்பமாக எதைச் செய்யலாம் என்று சிந்தித்துத் தவித்து முடிவில் ஒரு குழப்பத்துக்குத் திட்டமும் போட்டார்கள் அவர்கள்.

அங்கே பாண்டியனின் விடுதி அறையைக் காப்பதற்காக வராந்தாவிலும், அறைவாசலிலுமாகப் கம்பளிப் போர்வை, உல்லன் அங்கி, படுக்கை சகிதம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இரவிலும் தங்குவதற்கு நீடிக்கவே, அதே வரிசையைச் சேர்ந்த மற்ற அறைகளிலுள்ள மாணவர்கள் வெளியே வரவும், உள்ளே போகவும், நடமாடவும் அது இடையூறாக இருப்பதாகவும், பாண்டியனின் ஆதரவு மாணவர்கள் மற்ற அறை மாணவர்களை அடிப்பதாகவும், உதைப்பதாகவும், பயமுறுத்துவதாகவும் இரவு ஒன்பதரை மணிக்குமேல் ஹாஸ்டல் சீஃப் வார்டன் பேராசிரியர் பண்புச் செழியனிடம் போய்ப் பொய்யாக ஒரு புகார் செய்தார்கள் அன்பரசன் குழுவினர்.

பேராசிரியர் பண்புச் செழியன் அன்பரசன் குழுவினரிடம் அநுதாபம் உள்ளவர் தான். என்றாலும் அந்த நள்ளிரவில் பெரும்பான்மை மாணவர்களின் அன்புக்கும் பிரியத்துக்கும் பாத்திரர்களாயிருக்கும் பாண்டியனிடமும், மோகன்தாஸிடமும் போய் மோதிக் கொள்வதற்குத் தயங்கினார் அவர்.

அன்பரசன் குழுவினரின் வற்புறுத்தலை மீற முடியாமல்தான் அவர்களோடு பாண்டியன் தங்கியிருந்த விடுதிக்குப் புறப்பட்டார் அவர். புறப்படுவதற்கு முன் மனத்தில் ஏதோ தோன்றியதால், அன்பரசனையும் வெற்றிச்செல்வனையும் பார்த்து, "நீங்கள் இருவரும் என்னோடு அங்கே வரவேண்டாம் என்று நினைக்கிறேன். நானே போய் விசாரித்து அவர்களை எச்சரித்து விட்டு வருகிறேன்" என்றார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. "நாங்களும் வருகிறோம். எங்களுக்கு யாரிடமும் எதற்காகவும் பயம் கிடையாது" என்றார்கள்.

"உங்களையும் என்னோடு சேர்த்துப் பார்த்தால் அவர்கள் ஆத்திரம் அதிகமாகும்" என்றார் பண்புச் செழியன்.

"நம்மவரான நீங்களே இப்படி எங்களை ஒதுக்கினால் எப்படி ஐயா?" என்று உரிமையை நினைவூட்டிக் குழைந்தார்கள் அவர்கள். வேறு வழியின்றி அவர்களோடு பாண்டியனின் விடுதிக்குப் போனார் பிரதம விடுதிக் காப்பாளார் பண்புச் செழியன். அங்கே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விடுதி வராந்தா கலகலப்பாயிருந்தது. சில மாணவர்கள் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். குளிர் தாங்க முடியாமல் சிலர் புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். கேரம் போர்டில் கவனமாக இருந்தனர் சிலர். அரட்டையடித்துச் சிரிப்பலைகளைக் கிளப்பிக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

திடீரென்று எதிர்பாராத விதமாகப் பிரதம வார்டனையும், அவரோடு அன்பரசன் குழுவினரையும் கண்டதும் பாண்டியனின் விடுதி முகப்பில் இருந்த எல்லா மாணவர்களும் வந்து அவர்களை எதிர் கொண்டனர். வார்டனின் வரவால் மெல்ல மெல்ல ஓரளவு அமைதி வந்திருந்தது அங்கே. பண்புச் செழியனின் முதுகுக்குப் பின்னே மறைந்தாற் போல் நின்றார்கள் அன்பரசன் முதலியவர்கள்.

"டேய், அன்பைப் பார்த்தாயா, பண்பின் முதுகுக்குப் பின்னால் ஒளிகிறது" என்று ஒரு மாணவன் கேட்டதும், "ஆமாண்டா! பண்புக்குப் பின்னால் அன்பு ஒளியும், பண்பு மாண்புக்குப் பின்னால் போய் ஒளியும்... வேறே வேலை இல்லையா உங்களுக்கு" என்று மற்றொரு மாணவன் இதற்குப் பதில் கூறியது மெல்லிய குரலில் இருந்தாலும் சீஃப் வார்டனின் காதில் விழுந்து விட்டது. இதைக் கேட்டு அவர் ஓரளவு ஆத்திரமடைந்து விட்டார்.

"ஒரே இடத்தில் கூடிக் கொண்டு இப்படி மற்ற அறை மாணவர்களின் தூக்கத்துக்கு இடையூறு செய்வது நல்லதல்ல. உடனே அவரவர்கள் அறைக்குக் கலைந்து சென்று விட வேண்டும் நீங்கள்" என்று நிதானமாகத்தான் ஆரம்பித்தார் அவர். ஆனால் வாக்கிலே சனி என்பார்களே, அது வந்து சேர்ந்தது அவருடைய பேச்சின் இறுதிப் பகுதியில்.

"இந்த மாநிலத்திலேயே வேறெந்த விடுதியிலும் இல்லாத அளவு இங்கே முதல் தரமான சாப்பாடாகச் சாப்பிடுகிறீர்கள்! உடம்பிலே கொழுப்பு ஏறினால் வாயும் கொழுத்துப் போகிறது... இல்லையா?" என்று சீறி விட்டார். அதன் விளைவு உடனே பெரும் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிட்டது. சாப்பாட்டைச் சொல்லிக் காட்டி அவர் பேசிய அந்த வார்க்கியத்தை வாபஸ் வாங்கினால் ஒழிய அங்கிருந்து அவரைப் போக விட முடியாது என்று மாணவர்கள் வளைத்துக் கொண்டு விட்டார்கள். பேராசிரியர் பண்புச் செழியன் திக்குமுக்காடிப் போனார். இரவு நேரம் வளர்ந்து கொண்டேயிருந்தது.

மாணவர்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் பேசி விட்டதனால் விடுதிகளின் தலைமைக் காப்பாளர் பண்புச் செழியன் அந்த நள்ளிரவில் வகையாகச் சிக்கிக் கொண்டு விட்டார். அவர் அன்பரசன், வெற்றிச்செலவன் கோஷ்டியோடு வந்ததே அங்கிருந்த மாணவர்களுக்கு எரிச்சலூட்டியிருந்தது. ஏதோ கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு, 'நீங்கள் உண்ணுகிற உணவின் கொழுப்பல்லவா உங்களை இப்படிப் பேச வைக்கிறது?' என்று வேறு கேட்டவுன் பண்புச் செழியன் மேல் உள்ள கோபம் இரண்டு மடங்காகி முற்றியிருந்தது. மணவாளன் அப்போது அங்கில்லை. மாலையிலேயே மாணவர்கள் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு ஹோட்டல் அறைக்குப் போய்விட்டார். பேராசிரியர் பண்புச் செழியன் தான் கூறிய வார்த்தைகளுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்காவிட்டால் மாணவர்கள அவரை அங்கிருந்து விடுவதற்குத் தயாராயில்லை. பாண்டியனும், மோகன்தாஸும் கூடப் போனால் போகிறது, விட்டுவிடலாம் என்று கருதியும், மற்ற மாணவர்கள் பிடிவாதமாக இருந்தனர். ஒரு நிலைமைக்கு மேல் பொறுமையிழந்து வார்டன் சீறினார்: "இப்படிச் செய்வதற்காக நீங்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் விடுதியின் தலைமைக் காப்பாளரை நீங்கள் 'கேரோ' செய்கிறீர்கள். இந்த விஷயம் துணைவேந்தர் காது வரை போகும்! நான் உங்களைச் சும்மா விடமாட்டேன்."

"இந்த விஷயம் மட்டுமில்லை! ஏதோ வேலையில்லாத சோற்றுத் தடிராமன்களைப் பேசுவது போல் நீங்கள் எங்களைக் கேவலமாகப் பேசிய வாக்கியங்களும் சேர்த்தே துணைவேந்தர் காதுக்குப் போகும்" என்று மாணவர்கள் சுடச்சுட அவருக்குப் பதில்கள் கூறினார்கள்.

நேரம் இரவு பன்னிரண்டு மணி வரை ஆகிவிட்டது. பல நூறு மாணவர்கள் சூழ்ந்து வளைத்துக் கொண்டு விட்டதனால் தலைமை விடுதிக் காப்பாளர் பண்புச் செழியனோ அவரோடு வந்த அன்பரசன், வெற்றிச்செல்வன் முதலியவர்களோ இந்தப் பக்கம் அந்தப் பக்கம் அசையக் கூட முடியவில்லை. பன்னிரண்டே கால் மணிக்குப் பண்புச் செழியன் பணிந்து வழிக்கு வந்தார். "மாணவர்களே! நான் கூறியதில் தவறாக ஏதாவது இருந்தால் அதற்காக வருந்துகிறேன். உங்கள் அன்பான மன்னிப்பையும் கோருகிறேன்" என்று அவர் கூறிய பின்பே மாணவர்கள் அவரோடு வந்தவர்களையும் அவரையும் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.

இரவு ஒரு மணிக்கு விடுதிகளில் அரவம் அடங்கிவிட்டது. பாண்டியனுக்கும், மோகன்தாஸுக்கும் காவலாக அறைக்கு உள்ளேயும், வெளியேயும், வராந்தாவிலும் வரிசையாக மாணவர்கள் படுத்திருந்தனர். விடியற்காலை நாலு நாலரை மணிக்குப் பாண்டியன் முதலியவர்களுக்கு ஓரளவு வேண்டியவனும், அந்தப் பகுதி விடுதிகளுக்கு 'நைட் வாட்ச்மேனு'மாகிய காத்தபெருமாள் என்பவன் வந்து பல்கலைக் கழக வாயிலருகே சந்தேகத்துக்குரிய ஆட்களோடு இரண்டு மூன்று 'தென்மணி லாரி சர்வீஸ்' லாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வராந்தாவில் படுத்திருந்த மாணவர்களில் சிலரை எழுப்பித் தகவல் சொன்னான். அடுத்த பதினைந்து நிமிஷங்களில் இந்தச் செய்தியை அறிவிக்க மாணவர்கள் எல்லோரும் அவசரம் அவசரமாக எழுப்பப்பட்டனர். அறைக்குள்ளிருந்த பாண்டியன், மோகன்தாஸ் ஆகியோரும் கூட எழுந்துவிட்டனர். லாரிகளில் தென்பட்டவர்கள், சரளைக் கற்கள், சோடா பாட்டில்கள், பாலாக் கம்பு, வெட்டரிவாள்கள், கடப்பாரைகளோடு வந்திருக்கக் கூடும் என்று காவல்காரன் காத்தபெருமாள் குறிப்பாக எச்சரித்துவிட்டுப் போயிருந்தான்.

விடிந்தால் மாணவர் பேரவைத் தேர்தல் ஏதாவது கலகம் நடத்தி நிலைமையை நெருக்கடியாக்கிக் காட்டினால் துணைவேந்தரை நிர்ப்பந்தப்படுத்தி மறுபடியும் தேர்தலைத் தள்ளிப் போட வைக்கலாம் என்பதற்காக இது ஒரு சூழ்ச்சியாயிருக்கக் கூடும் என்று பாண்டியன் சந்தேகப்பட்டான். குளிரும் பனியும் தூக்கச் சோர்வுமாக இருந்தாலும் எப்பாடு பட்டாவது எதிரிகளின் சூழ்ச்சியைச் சிதற அடிப்பதென்று துணிந்தார்கள் அவர்கள். அந்த அகாலத்திலும் தங்களோடு புறப்படுவதற்காக விழித்திருப்பவர்கள் நானூறு ஐநூறு பேர் தேற முடியும் என்று தெரிந்தது பாண்டியனுக்கு. இவ்வளவு பேர்களும் மொத்தமாக மேற்கு வாயிலை நோக்கிப் படையெடுத்தால் லாரிக்காரர்கள் பயந்து அவற்றை ஓட்டிக் கொண்டு திரும்பி ஓடிவிடுவார்கள் என்று தோன்றவே, மாணவர் கூட்டம் தெற்கு வாயில் வழியே வெளியேறி இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து போய் லாரிகளை வளைத்துக் கொள்வது என்று முடிவாயிற்று.

தாங்கள் வெற்றி பெற முடியாத தேர்தல்களை நடக்கவே விடக்கூடாது என்ற வெறியுடன் எதிர்த் தரப்பினர் கடைசி விநாடி வரை முனைந்து நிற்பது தெரிந்தது. பிரதம விடுதிக் காப்பாளர் பேராசிரியர் பண்புச் செழியனும் மற்றவர்களும் வந்து வம்புக்கிழுத்து அதனால் மாணவர்களிடம் சிக்கித் துன்பம் அடைந்து விடுபட்டுப் போன பின் அவர்கள் மூலம் ஊருக்குள் செய்தி பரவி அதன் விளைவாக இந்த லாரிகளும் இந்த அடியாட்களும் வந்திருக்கலாம் என்றும் ஊகிக்க முடிந்தது. எதற்கும் முறைப்படி போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று பட்டமளிப்பு விழா மண்டபத்தை ஒட்டி இருந்த பொது டெலிபோன் 'பூத்'துக்குப்போய் ஃபோன் செய்தார்கள். போலீஸ் நிலையத்தில் யாரோ கான்ஸ்டபிள் ஃபோனை எடுத்துப் பேசினார். இன்ஸ்பெக்டருக்காவது, வட்டாரப் பெரிய போலீஸ் அதிகாரிக்காவது ஃபோன் செய்யச் சொல்லி யோசனை கூறினார் அவர். இன்ஸ்பெக்டருடைய வீட்டு நம்பருக்கு முயன்று தொடர்பு கொண்ட போது அவர் 'இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையே சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல், 'யுனிவர்ஸிடி விவகாரமானால் வி.சி. ஃபோன் செய்யாமல் நாங்கள் தலையிட முடியாது' என்று வைத்துவிட்டார். துணைவேந்தருக்கு ஃபோன் செய்தபோது அவர் வீட்டில் ஃபோனே எடுக்கப்படவில்லை. நாலைந்து மாணவர்கள் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸுக்கு விரைந்து பேராசிரியர் பூதலிங்கத்தை எழுப்பி இந்த விவரங்களை எல்லாம் சொன்னார்கள். அவர் அநுதாபத்தோடு பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பின்பு பதில் சொன்னார்.

"எதையாவது கலகம் செய்து பேரவைத் தேர்தல்களை நிறுத்தி விடுவதுதான் அவர்கள் திட்டமாயிருக்கும். எப்படியாவது முயன்று தேர்தல்கள் நடந்து முடியும்படியாகக் சுமுகமானச் சூழ்நிலையை நீடிக்கச் செய்யுங்கள். அது முக்கியம்" என்று அறிவுரை கூறியனுப்பினார் பூதலிங்கம்.

மாணவர்கள் ஏற்கெனவே முதலில் திட்டமிட்டபடி அந்த வெடவெடக்கும் குளிரில் தெற்கு வாசல் வழியாக வெளியேறி ஓரிடத்தில் தங்கிக் கொண்டு ஆளனுப்பி அண்ணாச்சியையும், மணவாளனையும் எழுப்பிக் கொண்டு வரச் செய்தனர். அவர்கள் எழுந்து வந்த பின் அவர்களையும் கலந்து பேசிக் கொண்டு அந்த லாரிகளை மடக்குவது என்ற முடிவுடன் புறப்பட்டனர். நூறு நூறு மாணவர்களாகப் பிரிந்து நான்கு பக்கமிருந்து வளைக்கவே மூன்று லாரிகளிலுமிருந்து அறுபதுக்கு மேற்பட்ட குண்டர்கள் மாணவர்களை நோக்கிச் சோடாபுட்டி வீச்சிலும் கல்லெறியிலும் இறங்கினர். சிறிது நேரத்தில் கல்லெறியையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் லாரிகளை நெருங்கி வளைக்கவே, குணடர்களில் பெரும்பாலோர் இறங்கி ஓடிவிட்டார்கள். மாணவர்கள் கூட்டம் வெள்ளமாகப் பெருகி நிற்கவே, குண்டர்களால் - அவர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருந்தும் கூட - மாணவர்களை எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதற்குள் நன்றாக டிரைவிங் தெரிந்த மாணவர்கள் அந்த மூன்று லாரிகளையும் ஓட்டிக் கொண்டு போய்ப் பல்கலைக் கழக எல்லைக்குள் விடுதிகளுக்கு அருகே நிறுத்திக் கொண்டு விட்டார்கள். போலீஸுக்கோ, வி.சி.க்கோ காட்டுவதற்குப் போதுமான கற்கள், அரிவாள், சோடா புட்டிகள், கடப்பாரை, இரும்புக் குழாய்கள், பழைய சைக்கிள் செயின்கள் எல்லாம் அந்த லாரியில் இருந்தன.

இதற்குள் பொழுது நன்றாக விடிந்து விட்டது. வேறு பல விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து கூடிவிட்டார்கள். விடுதி மாணவர்கள் காப்பி - சிற்றுண்டிக்குச் சென்ற போது கூடக் கலகக்காரர்களை ஏற்றி வந்த லாரிகளுக்குக் காவலாக மாற்று ஏற்பாடு செய்து விட்டுத்தான் போனார்கள்.

ஏற்கெனவே அறிவித்திருந்தபடி பேரவைத் தேர்தலுக்காக அன்று பல்கலைக் கழகம் விடுமுறை. காலை பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை மாணவர்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்த பின் நான்கு மணிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பேராசிரியர் பூதலிங்கமும், அவருடைய பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்த விரிவுரையாளர்களும் பல்கலைக் கழக நூல் நிலையக் கூடத்தில் வாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். நூல் நிலைய முகப்பு சுறுசுறுப்பாகத் தென்பட்டது. பத்து மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரத்துக்கு விடுதியில் உள்ள மாணவிகள், வெளியிலிருந்து வந்து படிக்கிற மாணவிகள் எல்லோருமாக வாக்குப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததனால் ஒன்பதரை மணிக்கே நூல் நிலைய வாசலில் பெண்களின் 'கியூ' நிற்கத் தொடங்கிவிட்டது. கண்ணுக்கினியாள் ஓடியாடி மாணவிகளை ஒன்று சேர்த்து நிறுத்திக் கொண்டிருந்தாள். அன்பரசன் வெற்றிச்செல்வன் தரப்பினருக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்த பொற்செல்வி என்ற மற்றொரு மாணவி தனக்கு அதிக ஆதரவில்லாத ஏமாற்றத்திலும், விரக்தியிலும் வழிமுறைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் கியூவிலேயே வெளிப்படையாக அன்பரசனுக்காகப் பிரச்சாரத்தைத் தொடங்கினாள். கண்ணுக்கினியாள் அதை மறுத்தாள்.

"இதோ பாருங்கள், மிஸ் பொற்செல்வி! நீங்கள் செய்வது முறையில்லை. உங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து வாருங்கள் கியூவில் நிறுத்துங்கள். அவர்கள் வோட்டுப் போடட்டும். அது தவறில்லை. ஆனால் இந்த இடத்தில் வந்ததும் நீங்கள் இப்படி வெளிப்படையாகக் 'கான்வாஸ்' பண்ணுவதை நான் ஆட்சேபிக்கிறேன்."

கண்ணுக்கினியாளின் ஆட்சேபணையைப் பொற்செல்வி பொருட்படுத்தவில்லை. பொற்செல்விக்குத் தேர்தல் பகைமைகளை விடக் கண்ணுக்கினியாளின் அழகிலும் தோற்றத்திலும் மயங்கி மலரைச் சுற்றி வட்டமிடும் வண்டுகள் போல் பல மாணவ மாணவிகள் அவளைச் சூழ நிற்பதிலும் அவளுக்குக் கட்டுப்படுவதிலும் பொறுத்துக் கொள்ள முடியாத காழ்ப்பு இருந்தது. ஆற்றாமையாலும், தாழ்வு மனப்பான்மையாலும் உள்ளேயே வெந்து கொண்டிருந்தாள் பொற்செல்வி. கண்ணுக்கினியாள் பற்றியும் பாண்டியன் பற்றியும் மட்டரகமான துண்டுப் பிரசுரம் வெளியிட்டது கூட இவள் தான் என்பது பின்னால் கண்ணுக்கினியாளுக்குத் தெரிய வந்திருந்தது.

"அதுக்கென்ன செய்யறது? எல்லாருமே உன்னைப் போல் மினுக்கி மயக்கிக் கவர முடியுமா? நாங்கள் சொல்றதை வாய் திறந்து தான் சொல்ல முடியும். எங்களுக்கு மினுக்கத் தெரியாது" என்று பொற்செல்வி சீறியதும் கியூவில் நின்ற கண்ணுக்கினியாளின் சிநேகிதிகள் ஆத்திரத்தில் அந்த மட்டரகப் பேச்சுக்காகப் பொற்செல்வியை அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்து விட்டார்கள். ஆனால் அப்போதும் கண்ணுக்கினியாள் தான் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்தாள்.

"ஏதோ ஆத்திரத்தில் கத்துகிறாள். போனால் போகட்டும். இப்போது இவளோடு தகராறு வேண்டாம்."

அப்போதும் கண்ணுக்கினியாளின் வார்த்தைகளுக்கு மாணவிகள் கட்டுப்பட்டனர். பொற்செல்வி கோபத்தோடு முணுமுணுத்தபடி கியூவில் பின்னால் போய் நின்று கொண்டாள். சரியாக ஒன்பது மணி ஐம்பத்தெட்டு நிமிஷங்களுக்குப் பேராசிரியர் பூதலிங்கம், வேறு ஒரு விரிவுரையாளரும், வெளியே வந்து நிலைமையைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றார்கள். பத்து மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. உள்ளே ஒரு சிறிதும் தாமதமின்றி எல்லாம் விரைந்து நடந்ததனால் கியூ வேகமாக நகரத் தொடங்கியது. எதிர்பார்த்ததற்கு முன்னதாகப் பத்தே முக்கால் மணிக்கே மாணவிகள் அனைவரும் வாக்களித்து முடித்து விட்டார்கள். நீராடி உடை மாற்றிக் கொண்டு விடுதிக் கட்டிடங்களின் நடுவே இருந்த பிள்ளையார் கோவிலுக்குப் போய்க் கும்பிட்டு விட்டு பாண்டியனும், போகன்தாஸும் கூடச் சென்று கியூவில் முன்னால் நின்று கொண்டார்கள். பின்னால் பெரிய கியூ விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தது.

பத்தாவது அத்தியாயம்

பாண்டியனையும் மோகன்தாஸையும் கண்டதும் மாணவர்களின் உற்சாகம் அதிகமாயிற்று. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தாலும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தாலும் 'கியூ'வில் நகர்ந்து கொண்டிருந்தார்கள் மாணவர்கள். அப்போது எதிர்த்தரப்பைச் சேர்ந்த அன்பரசன், வெற்றிச்செல்வன் முதலிய சிலர் தங்கள் சார்பை அடையாளம் காட்டும் நீண்ட மேல் துண்டுகளோடு வந்து கியூவின் முன்னால் நிற்க இடம் தேடினார்கள். உடனே பெருவாரியான மாணவர்கள், விசில், கூப்பாடு, எதிர்ப்புக் குரல்கள் மூலம் அவர்கள் பின்னால் தாமதமாக வந்து முன்னால் நிற்பதை எதிர்த்தனர். ஆனால் பாண்டியனும், மோகன்தாஸும் மிகவும் பெருந்தன்மையாக அன்பரசன், வெற்றிச்செல்வன் ஆட்களை வணங்கி வரவேற்று முன்னாலேயே தங்களோடு சேர்ந்து கியூவில் நிற்கச் செய்து கொண்டார்கள்.

பல்கலைக் கழக எல்லைக்குள் ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தப்பட்ட தென்மணி லாரிகளைச் சுற்றிச் சில நூறு மாணவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். முன்னால் வோட்டுப்போட்ட மாணவர்கள் போய் அவர்கள் செய்து கொண்டிருந்த காவலை ஒப்புக் கொண்டு அவர்களை வோட்டுப் போட அனுப்ப வேண்டியிருந்தது. காலையில் விடிந்ததுமே அந்த லாரிகளையும், அதில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், கற்குவியல்கள், மண்ணெண்ணெய் நிரப்பிய டின்கள் ஆகியவற்றோடு 'தென்மணி லாரி' என்ற பெயர் முகப்பையும் புகைப்படம் எடுத்திருந்தார்கள் மாணவர்கள்.

பிரதம தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய பூதலிங்கமும் அவரைச் சேர்ந்தவர்களும் கட்டுப்பாடாகச் செயலாற்றியதாலும், பெரும்பான்மையான மாணவர்கள் ஒற்றுமையாக இருந்ததாலும், கலவரம் நிகழ்த்த விரும்பியவர்களின் சதி எதுவும் பலிக்கவில்லை. தென்மணி லாரி உரிமையாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இராவணசாமி போலீசில் புகார் எழுதிக் கொடுத்திருந்தார். லாரிகளைச் சாலையோரம் நிறுத்தி வைத்துவிட்டுத் தம்முடைய டிரைவர்கள் டீக்கடைக்குப் போயிருந்த போது மாணவர்கள் அநியாயமாக அவற்றைக் கடத்திக் கொண்டதாக இராவணசாமியின் புகாரில் எழுதப்பட்டிருந்தது. அக்கடித நகல் துணைவேந்தருக்கும் கொடுத்தனுப்பப் பட்டிருந்தது. பாண்டியன் முதலிய மாணவர்கள் இன்னொரு பிரிவு மாணவர்களைத் தாக்கவும், அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு நெருப்பு வைக்கவும் தம்முடைய லாரிகளில் பயங்கர ஆயுதங்களையும் கெரோஸின் டின்களையும் நிரப்பிக் கொண்டு சென்றதாகக் கயிறு திரித்து அந்தப் பழியையும் மாணவர்கள் தலையிலேயே சுமத்தப் பார்த்திருந்தார் இராவணசாமி. தேர்தல் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியே அவருக்கும் கோட்டம் குருசாமிக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாயிருந்தது. பதினொன்றரை மணிக்குள் கலைப் பிரிவு, நுண்கலைப் பிரிவு, ஆசிரியர் பயிற்சி, கீழ்த்திசைப் பட்டப் பிரிவு ஆகிய துறைகளைச் சேர்ந்த எல்லா மாணவர்களும் வோட்டளித்து முடிந்து விட்டது. சிறிது தொலைவு விலகியிருந்த மருத்துவக் கல்லூரி, பொறியியற் பிரிவு, வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் தான் இன்னும் வோட்டளிக்க மீதம் இருந்தனர். கியூவில் அவர்கள் வரிசை தான் நீண்டிருந்தது. அதுவரை அலுவலகத்துக்கு வராமலிருந்த துணைவேந்தர் அப்போதுதான் அலுவலகத்துக்கு வந்தார். அவர் வீட்டிலிருந்து புறப்படும் முன் பண்புச் செழியன் வந்து முதல் நாளிரவு 'தம்மை மாணவர்கள் சிரமப்படுத்தியது பற்றிப் புகார் செய்திருந்தார். அது போதாதென்று காலை பத்தரை மணிக்கே துணைவேந்தரின் வீட்டுக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு மூன்று முறை 'தென்மணி லாரி' விஷயமாக ஃபோன் செய்து பல்கலைக் கழக எல்லைக்குள் வர அநுமதி கேட்டு விட்டார். ஆனாலும் துணைவேந்தர் எதற்கும் பிடி கொடுக்கவில்லை. பயந்தார்.

"ஸ்டூடண்ட் கவுன்ஸில் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பல்கலைக் கழக மைதானத்தில் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருக்கிறார்கள். இப்போது நீங்கள் உள்ளே நுழைந்தால் வீண் கலகம் வரும். அன்று கல்லெறி சம்பந்தமாகத் தேடிக் கொண்டு இங்கே மாணவர்களை அரஸ்ட் செய்ய உள்ளே வருவதற்கு உங்களை அநுமதித்தற்கே மாணவர்கள் என்மேல் கடுங் கோபத்தோடிருக்கிறார்கள். இன்றும் நீங்கள் உள்ளே வந்தீர்களானால் அதனால் கலகம் தான் மூளும். எதற்கும் நான் போய்ப் பார்க்கிறேன். அவசரப்படாதீர்கள். எம்.எல்.ஏ.யோ கட்சிச் செயலாளரோ கூட இங்கே வர வேண்டாம். மாணவர்கள் அவர்கள் மேல் ரொம்பக் கோபமாயிருக்கிறார்கள். லாரிகள் இருந்தால் நானே அவற்றை வெளியே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லிவிட்டுத்தான் துணைவேந்தரே அலுவலகத்துக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்திருந்தார். தம்முடைய அறைக்குள் சென்று ஜன்னல் வழியே கீழே மைதானத்தைப் பார்த்த போது, நூல் நிலைய வாயிலில் வோட்டுப் போட மாணவர்களின் கியூ நிற்பதையும் தொலைவில் விடுதிகளின் அருகே பெருங்கூட்டமாக மாணவர்கள் சூழ லாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதையும் துணைவேந்தர் பார்த்தார். அவர் நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பு போலிருந்தது. இராவணசாமி, போலீஸ், கட்சிச் செயலாளர் ஆகியவர்கள் சொல்கிறபடி கேட்காவிட்டால் இன்னும் சில ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிக்க முடியாது. அவர்கள் சொல்கிறபடி கேட்டுவிட்டாலோ, இளமையும், கோபமும், நியாய உணர்வும் உள்ள பல ஆயிரம் மாணவர்களை விரோதித்துக் கொள்ள நேரிடும். ஏற்கெனவே ஓரளவு மாணவர்களை விரோதித்துக் கொண்டும் ஆயிற்று. இராவணசாமியின் லாரிகளை ஒரு காரணமும் இன்றி மாணவர்கள் உள்ளே ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்கள் என்றோ, மாணவர்களே அதில் ஆயுதங்களையும் கற்களையும் நிரப்பியிருப்பார்கள் என்றோ அவர் நம்புவதற்குத் தயாராயில்லை. ஆனால் அதிகாரத்துக்கும் அரசியல் செல்வாக்கிற்கும் அவர் பயப்பட்டார்.

எப்படி ஒரு சூதாட்டத்தில் முதலில் வெல்ல வேண்டும் என்ற தவிப்பும், வெற்றியடைய ஆரம்பித்த பின் இனி மேல் தோற்கக் கூடாதே என்ற தவிப்பும் மாறி மாறி வருமோ அப்படியே அதிகாரத்திலும் பதவியிலும் கூடத் தவிப்புகள் இருந்தன. துணைவேந்தர் பதவியை அடைகிற வரை அதை அடையத் தவித்தவர் அவர். இப்போது தம்மை விட்டு அது போய்விடாமல் இருக்க வேண்டும் என்ற தவிப்பில் அதற்கு ஏற்ப அவர் செயல்பட வேண்டியிருந்தது. மேலே உள்ளவர்களின் நிர்ப்பந்தத்துக்குத் தாளம் போட வேண்டியிருந்தது.

பகலுணவு நேரமும் ஆகிவிட்டது. கியூவில் நின்றவர்கள் தவிர மற்ற மாணவர்கள் உணவு விடுதிக்குப் போவதும் வருவதுமாக இருந்தனர். துணைவேந்தர் தம் அறையிலிருந்தே நூல் நிலையத்திலிருந்த ஃபோனில் பேராசிரியர் பூதலிங்கத்தைக் கூப்பிட்டு இராவணசாமி கொடுத்திருக்கும் புகாரைப் பற்றிச் சொல்லி அவரிடம் விளக்கமும் விவரமும் கேட்டார். பூதலிங்கத்தின் நிலை தெளிவாக இருந்தது.

"அவர்கள் ஏதாவது வம்பு செய்திருந்தால் தான் நம் பையன்கள் லாரிகளை உள்ளே கொண்டு வந்திருப்பார்கள். இவர்களாகத் தவறு செய்திருக்க மாட்டார்கள். ஆயுதங்களையும், கற்களையும், மண்ணெண்ணெய் டின்களையும் மாணவர்கள் லாரிகளில் நிரப்பிக் கொண்டு வந்ததாகக் கூறுவது அபாண்டம். அப்படி நடந்திருக்காது. அதை நான் ஒரு போதும் நம்ப மாட்டேன். நீங்களும் நம்பக்கூடாது" என்றார் பூதலிங்கம்.

ஃபோனை வைத்துவிட்டுச் சிந்தித்த போது, இந்தப் பூதலிங்கத்தால் மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக மாணவர்களை நேசிக்கவும் மாணவர்களால் நேசிக்கப்படவும் முடிகிறதென்று வியப்பாயிருந்தது. துணைவேந்தருக்கு.

இலாபம் கருதாமல் பிறரை நேசிக்கவும், பிறரால் நேசிக்கப்படவும் முடிந்தவர்கள் யாரோ, அவர்கள் உலகத்தை மிகவும் அர்த்தம் உள்ளதாகச் செய்து விடுகிறார்கள். ஆனால் அதைச் செய்யத் தம்மால் முடியவில்லையே என்று ஏங்கிப் பெருமூச்சு விட்டார் தாயுமானவனார்.

அறையில் ஃபோன் மணி அடித்தது. வட்டாரப் பெரிய போலீஸ் அதிகாரி பேசினார். எம்.எல்.ஏ.யின் லாரிகளை மீட்பது சம்பந்தமாகப் போலீஸைப் பல்கலைக் கழக எல்லைக்குள் வரவிடுமாறு வேண்டினார் அந்த அதிகாரி. அவருக்கு உடனே தீர்மானமாக ஒரு பதிலும் சொல்ல முடியாமல் அவரைத் தவிர்த்து விடவும் முடியாமல் திணறினார் துணைவேந்தர். அப்போது பல்கலைக் கழக மணிக்கூண்டில் பகல் இரண்டு மணி அடித்தது. மாணவர்கள் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து நூல் நிலைய முகப்புக் கதவுகள் உட்புறமாகத் தாழிடப்பட்டன.

சொல்லப் போனால் ஒன்றே முக்கால் மணிக்கே பல்கலைக் கழக நூல் நிலையத்தின் முன் நின்ற 'கியூ' முடிந்து மைதானம் காலியாகிவிட்டது. குறிப்பிட்டுச் சொல்லியிருந்த நேரம் வரை திறந்திருக்க வேண்டும் என்ற முறைக்காகவே பகல் இரண்டு மணி வரை வாக்குப் பதிவுக்குத் திறந்து வைத்திருந்தார்கள். இருதரப்பு மாணவர்களுக்கும் பிரதிநிதிகளாக இரண்டிரண்டு மாணவர்களை உள்ளே அநுமதித்த பின் பகல் இரண்டரை மணிக்கே வாக்குகளை எண்ணிவிடவும் ஏற்பாடு செய்துவிட்டார் பூதலிங்கம். பாதுகாப்புக்காகவும், எதிர்பாராத அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடக்கூடாதே என்பதற்காகவும், வாக்குகளை எண்ணும் இடமான நூல் நிலையக் கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தும் கூட வெளியே அங்கங்கே விடுதிகளிலும், மெஸ்களிலும் முடிவைப் பற்றிய ஆவலும் தவிப்புமே நிலவின. நூல் நிலைய முகப்பும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் தான் வெறிச்சோடிக் கிடந்தனவே தவிர மற்ற இடங்களில் மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கூடி உட்கார்ந்து சிரிப்பொலி கிளறச் செய்து கொண்டிருந்தார்கள்.

அங்கே கலகம் விளைவிக்க வந்த தென்மணி லாரிகள் மூன்றையும் வளைத்துக் கொண்டு கூடியிருந்த மாணவர்களின் எண்ணிக்கை வாக்குப் பதிவு முடிந்த பின் மேலும் அதிகரித்திருந்தது. லாரிகளை மாணவர்கள் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தியிருந்த இடங்களிலிருந்து வெளியே எடுத்து ஓட்டிச் செல்ல வேண்டுமானால் எந்தச் சாலையில் ஓட்டிச் செல்ல முடியுமோ, அந்தச் சாலையின் குறுக்கே, கண்ணுக்கினியாளின் தலைமையில் இரண்டு வரிசையாக மாணவிகள் வேறு மறியலுக்கு உட்கார்ந்து விட்டார்கள். வாக்குப் பதிவு முடிந்து மெஸ்ஸில் போய்ப் பகலுணவை முடித்துக் கொண்டு திரும்பி வந்து தோழிகளோடு இந்த மறியலைத் தொடங்கியிருந்தாள் கண்ணுக்கினியாள். எவ்வளவு நேரமானாலும் புத்தகங்களைப் படித்துக் கொண்டே அங்கு அமர்ந்து மறியல் செய்வதென்ற திட்டத்துடன் கையில் ஆளுக்கொரு புத்தகத்தோடு வந்திருந்தார்கள் அவர்கள். கண்ணுக்கினியாளிடம் ஏ.ஜே. கிரானின் எழுதிய 'சிட்டாடல்' நாவல் இருந்தது.

துணைவேந்தர் தாயுமானவனார் இந்த எல்லா நிலைமைகளையும் மாடியிலிருந்தே, தம் அறை முகப்பில் நின்று காண முடிந்தது. காலை பத்து மணிக்கே பகலுணவை முடித்துக் கொண்டு அலுவலகத்துக்கு வரும் வழக்கமுடையவர் அவர். நடுப்பகலில் இரண்டு மணியிலிருந்து மூன்று மணிக்குள் சிற்றுண்டி வேளைக்காக ஒரு முறை வீடு சென்று திரும்புவது அவர் வழக்கம். இன்று அதற்காக வீடு செல்வதற்குப் பதில் வீட்டிலிருந்து சிற்றுண்டி காப்பி எடுத்து வருமாறு காரையும் டிரைவரையும் அனுப்பி வைத்திருந்தார். மாணவர்கள் பல்கலைக் கழக எல்லைக்குள்ளே ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்திவிட்ட லாரிகள் பற்றி அவருடைய கவலையும், பயமும், குழப்பமும் விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தன. அவரால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் இருந்தது. போலீஸைப் பல்கலைக் கழக எல்லைக்குள் வரச் சொல்லிவிட்டு மாணவர்களையும், நகரப் பொது மக்களையும், பத்திரிகைகளையும் பகைத்துக் கொள்ளவும் பயந்தார். போலீஸை வரச் சொல்லாமல் லாரிக்கு உரியவர்களை உள்ளே வந்து லாரிகளைத் திருப்பி ஓட்டிக் கொண்டு போகச் சொல்லவும் பயந்தார். இருவரில் யார் வந்தாலும் மாணவர்களோடு ஒரு மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அந்த நிலையில் அறையை விட்டு வெளியே செல்வதற்கே பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது அவருக்கு. போலீஸிலிருந்தும், இராவணசாமியிடமிருந்தும் மாற்றி மாற்றி ஃபோன்கள் வந்து கொண்டிருந்தன. எம்.எல்.ஏ. ஓரளவு மிரட்டுகிற தொனியிலேயே பேசிவிட்டார்.

"நீங்க இத்தினி மெத்தனமா இருந்தீங்கன்னா இந்தச் சமாசாரத்தை நான் மினிஸ்டர் காது வரை கொண்டு போக வேண்டியிருக்கும். அது உங்களுக்கே நல்லதில்லே. கோட்டச் செயலாளர் குருசாமியும் இதோ பக்கத்திலியே இருக்காரு. ஒண்ணு போலீஸை உள்ளே வரவிடுங்க. அல்லது எங்களையாச்சும் உள்ளாற வரவிடுங்க."

"தயவு செய்து கோபிச்சுக்காதீங்க, மிஸ்டர் இராவணசாமி! நான் எப்படியும் உங்க லாரிகளைப் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைக்கிறேன். இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் வரை எனக்காக பொறுத்துக்குங்க. அதுக்குள்ளே எப்படியாவது ஒரு வழி பண்ணிடலாம்."

இராவணசாமி பதில் சொல்லாமல் மறுமுனையில் ஃபோனை உடைப்பது போல் வைக்கும் ஓசை துணைவேந்தரின் செவிப்பறையில் ஓங்கி அடிப்பது போல் ஒலித்தது. பதிவாளரைக் கூப்பிட்டு, 'உடனே வெளியாருக்குச் சொந்தமான அந்த லாரிகளை ஓட்டிக் கொண்டு போய்ப் பல்கலைக் கழகக் காம்பவுண்டுக்கு வெளியே விட்டுவிட வேண்டும்' என்று மாணவர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பவோ, மைக் மூலம் அறிவிக்கவோ செய்யலாமா என்று நினைத்தார் துணைவேந்தர். அப்போதிருந்த மனநிலையில் மாணவர்கள் அதற்குச் செவி சாய்க்க மாட்டார்களோ என்ற சந்தேகம் ஏற்படவே அந்த யோசனையையும் கைவிட்டார் அவர்.

நண்பகல் மணி இரண்டே முக்கால். கார் டிரைவர், சிற்றுண்டிப் பொட்டலங்களையும், பிளாஸ்கில் காப்பியையும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனான். உடனே சிற்றுண்டி உண்ணவோ, காப்பி அருந்தவோ கூட அவர் மனம் ஈடுபாடு கொள்ளவில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டால் மாணவர்களிடையே உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடும். அந்த உற்சாகப் பெருக்கில் காம்பவுண்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கும் தென்மணி லாரிகளுக்கு என்ன நேரிடுமோ என்றும் அஞ்சினார் அவர்.

துணைவேந்தர் பதற்றத்தோடும், பயத்தோடும் நூல் நிலையத்துக்கு ஃபோன் செய்து மறுபடியும் தாம் சொல்லுகிற வரை பேரவைத் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்தார். முடிவை அறிவிக்கிற வரை இருதரப்பு மாணவர்களின் பிரதிநிதிகளாக இருந்து எண்ணிக்கையைக் கண்காணிக்கிறவர்களையும், மற்றவர்களையும், யாரையுமே நூல் நிலையக் கட்டடத்துக்குள்ளேயிருந்து வெளியே விடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். தேர்தலில் தலையிடுவதில்லை என முன்பு நாம் செய்திருந்த முடிவிலிருந்து இப்போது அவரே மாறவேண்டியிருந்தது.

இப்படிப் பேசி ஃபோனை வைத்த கையோடு பேராசிரியர் பூதலிங்கத்தினிடமே இன்னோர் உதவியையும் கூடக் கோரலாமோ என்று தோன்றியது அவருக்கு. உடனே மறுபடியும் ஃபோன் செய்து, "மிஸ்டர் பூதலிங்கம்! முடிவை அறிவிக்கு முன் தயவு செய்து நீங்கள் மட்டும் மைதானத்துக்குச் சென்று, மாணவர்கள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் லாரிகளை விட்டுவிடச் சொல்லுங்கள். மாணவர்கள் உங்கள் வார்த்தையைக் கேட்பார்கள். எனக்குத் தெரியும்" என்று குழைந்தார்.

துணைவேந்தரின் தவிப்பும் திண்டாட்டமும் பூதலிங்கத்துக்குப் புரிந்தன. மைதானத்துக்குப் போய் மாணவர்களின் மன நிலையை அறிந்து வந்து சொல்வதாக இசைந்தார் பேராசிரியர். அவர் அதற்கு இசைந்தது துணை வேந்தருக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது. பெரிய பாரத்தைத் தோளிலிருந்து இறக்கி வைத்தாற் போல் உணர்ந்தார் அவர். சிற்றுண்டி சாப்பிட்டார். காப்பி அருந்தினார். போலீசுக்கு ஃபோன் செய்து தாமே நிலைமையைச் சரி செய்து லாரிகளைத் திருப்பி அனுப்ப முடியும் என்றும் அவர்கள் பல்கலைக் கழகத்துக்குள்ளே வரவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்திருந்தார். லாரிகளின் உரிமையாளரான எம்.எல்.ஏ.க்கு ஃபோன் செய்தார். அவருடைய ஃபோன் 'என்கேஜ்ட்' ஆக இருக்கவே அவர் ஒருவேளை மந்திரியோடு 'டிரங்கால்' பேசிக் கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகமும் பயமும் ஏற்பட்டு விட்டது துணைவேந்தருக்கு. எது எப்படியிருந்த போதிலும் மாணவர்களைத் தாம் நேரே சந்திக்காமல் பூதலிங்கத்தினிடம் அந்த வேலையைத் தந்திரமாக ஒப்படைத்து விட்டது ஒரு சிக்கலிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டு விட்ட திருப்தியை அவருக்கு அளித்திருந்தது. தபாலில் வந்திருந்த 'யுனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன்' தலைவரின் ரிப்போர்ட் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார் அவர். படிப்பதை அரைகுறையாக விட்டு விட்டு மீண்டும் அவர் முயன்ற போது கூட எம்.எல்.ஏ.யின் தொலைபேசி எண் அவருக்குக் கிடைக்கவில்லை. 'என்கேஜ்ட்' ஆகவே இருந்தது.

வாக்குகளை எல்லாம் எண்ணி முடித்துப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்களையும், வாக்கு விவரங்களையும் எழுதி அதில் எண்ணியவர்கள், மாணவர் பிரதிநிதிகளின் கையெழுத்துக்களையும் வாங்கிய பின் தாமும் கையெழுத்துப் போட்டு வைத்துவிட்டு உதவிப் பேராசிரியர் ஒருவரை கவனித்துக் கொள்ளச் சொல்லியபின் மைதானத்துக்கு வந்தார் பேராசிரியர் பூதலிங்கம். அவர் வெளியே வந்த பின் நூல் நிலையப் பிரதான வாயில் மீண்டும் உட்புறமாகத் தாழிடப் பட்டுவிட்டது. லாரிகள் மறித்து நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை அவர் அடைந்த போது மணி நான்கு ஆவதற்கு இருந்தது. அங்கே பேராசிரியர் பூதலிங்கம் வருவதற்குச் சற்று நேரத்துக்கு முன்பு தான் கண்ணுக்கினியாள், பாண்டியனின் அறை நண்பன் பொன்னையாவைக் கூப்பிட்டுப் பணம் கொடுத்து ஒரு பெரிய டின் நிறைய இனிப்பு மிட்டாய் வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருந்தாள். பல்கலைக் கழக எல்லைக்குள்ளேயே இருந்த ஸ்டூடண்ட்ஸ் கன்ஸ்யூமர் கோவாபரேடிவ் ஸ்டோர்சுக்கு விரைந்திருந்தான் பொன்னையா. நான்கு மணிக்குத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பார். உடனே தன் கையாலேயே எல்லாருக்கும் இனிப்பு வழங்கலாம் என்று தான் அவள் இதைச் செய்திருந்தாள்.

எதிர்பாராமல் திடீரென்று பேராசிரியர் பூதலிங்கம் எதிர்ப்படவே, லாரி செல்ல வேண்டிய பாதையை மறித்துக் குறுக்கே உட்கார்ந்திருந்த கண்ணுக்கினியாளும் தோழிகளும் உடனே மரியாதையாக எழுந்து நின்று அவரை வணங்கினர். லாரிகளைச் சூழ்ந்து இருந்த மாணவர்களும் விரைந்து வந்து அவரை வணங்கியதோடு உடனே கூட அழைத்துச் சென்று லாரிகளில் குவிக்கப்பட்டிருந்த கற்கள், இரும்புத் தடிகள், சோடா பாட்டில்கள், கடப்பாறைகள், அரிவாள், சைக்கிள் செயின்கள் எல்லாவற்றையும் அவருக்குக் காட்டினர். அந்த லாரிகளைத் தாங்கள் கைப்பற்றி ஓட்டி வர நேர்ந்த சூழ்நிலையை மீண்டும் அவரிடம் விவரித்தனர். லாரிகளின் உரிமையாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மல்லை இராவணசாமியே நேரில் வந்து தம் செயல்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டால் தான் லாரிகளைத் திருப்பித் தர முடியும் என்று மாணவர்கள் சார்பில் பாண்டியன் பேராசிரியரிடம் தெரிவித்தான்.

"சார்! உங்கள் வார்த்தைகளுக்கு நாங்கள் எப்போதுமே கட்டுப்படுவோம். ஆனால் இது எங்கள் கௌரவப் பிரச்னை. எங்கள் ஒற்றுமைக்கு ஒரு சவாலாக வந்த லாரிகள் இவை. குறைந்த பட்சம் லாரிகளின் உரிமையாளர் வந்து மன்னிப்புக் கூடக் கேட்காவிட்டால் நாங்கள் பிடிவாதமாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை! இதற்காக நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும் சார்..."

பேராசிரியர் பூதலிங்கம் உடனே துணைவேந்தரிடம் சென்று மாணவர்களின் கோரிக்கையை விளக்கினார். துணைவேந்தர் உடனே இராவணசாமிக்கு ஃபோன் செய்தார். நல்ல வேளையாக இராவணசாமி அப்போது ஃபோனில் கிடைத்தார். துணைவேந்தர் கூறிய நிபந்தனை இராவணசாமிக்கு எரிச்சலூட்டியது. கோபத்தை வெளிக்காட்டாமல் 'தேர்தல் வெற்றிகள் யார் பக்கம்?' என்பதை மிகவும் தந்திரமாக ஃபோனிலேயே விசாரித்தார் இராவணசாமி. "இன்னும் எண்ணி முடியவில்லை! உங்கள் லாரிகள் பத்திரமாக வெளியேறிய பின்பு தான் முடிவுகளை அறிவிப்போம். முடிவுகள் எப்படி இருந்தாலும் அதன் உற்சாகமோ கோபமோ உள்ளே நிற்கும் உங்கள் லாரிகளைத் தான் முதலில் பாதிக்கும். அதனால் தான் உங்களை அன்போடு வேண்டுகிறேன். தயவு செய்து உடனே டிரைவர்களோடு இங்கே என் அறை முகப்புக்கு வாருங்கள். நான் உங்களைத் தகுந்த துணையோடு மாணவர்களிடம் அனுப்பி வைக்கிறேன். 'ஏதோ எனக்குத் தெரியாமல் எல்லாம் நடந்து விட்டது. அதற்காக வருந்துகிறேன். இனி இப்படி எதுவும் நடக்காது' என்று நாலு வார்த்தை இதமாகப் பேசி லாரிகளை மீட்டுக் கொண்டு போவதுதான் இப்போது உசிதமாக இருக்கும். கௌரவம் பெரிதா, சொத்துப் பெரிதா என்று யோசித்து நீங்கள் இனி ஒரு முடிவுக்கு வர வேண்டும்" என்பதாக இராவணசாமிக்கு மறுமொழி கூறினார் துணைவேந்தர்.

பதினொன்றாவது அத்தியாயம்

இராவணசாமியோடு ஃபோனில் பேசும்போது தம்முடைய அறிவுக்கும் பதவிக்கும் ஏற்ற கம்பீரமான குரலில் அதை அழுத்தமாகப் பேசாமல் ஏன் கெஞ்சுவது போலவும், கொஞ்சுவது போலவும் துணை வேந்தர் அப்படிக் குழைகிறார் என்பது அருகிலிருந்த பூதலிங்கத்துக்கு வியப்பாயிருந்தது. இராவணசாமியிடம் பேசி ஃபோனை வைத்ததும் தாமே தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளும் ஆவலுடன், "வாட் எபௌட் எலக்ஷன் ரிஸல்ட்ஸ்?" என்று பூதலிங்கத்தை விசாரித்தார் தாயுமானவனார். பூதலிங்கம் இதற்கு உடனே மறுமொழி கூறிவிடவில்லை. சில விநாடிகள் தயங்கினார். அப்புறம் சொன்னார்:

"முடிவைப் பற்றி இப்போது என்ன வந்தது? அதைத் தான் கொஞ்சம் தாமதமாக அறிவிக்கலாம் என்று நீங்களே சொன்னீர்களே...?"

"சொன்னேன். இப்போது முடிவுகளைப் பற்றியும் தான் கவலைப்பட வேண்டியிருக்கிறது. வென்றவர்களின் வெற்றிக் களிப்போ, தோற்றவர்களின் தோல்வி ஏமாற்றமோ காம்பவுண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.யின் லாரிகளுக்கு ஆபத்தாக முடிந்துவிடக் கூடாதே என்று பயமாயிருக்கிறது.

இதைக் கேட்டுப் பேராசிரியர் பூதலிங்கம் உள்ளூறச் சிரித்துக் கொண்டார். பல்கலைக் கழகத்தின் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை நினைத்து அவர்களுடைய அமைதிக்கும், நலனுக்கும் கவலைப்பட்டு பயப்படாமல் துணைவேந்தர் யாரோ ஒரு தனி மனிதருக்கும் அவருடைய உடைமைக்குமாகப் பயப்படுவது அருவருக்கத் தக்கதாக இருந்தது. நன்றாகவும் ஆழமாகவும் கற்ற கல்வியினால் பயங்கள் விலகி நியாய உணர்வும் தார்மீகக் கோபமும் பெருக வேண்டும். ஆனால் இன்று பல கல்விமான்கள் தான் அளவுக்கு மீறி அஞ்சுகிறவர்களாகவும், நியாய உணர்வு அற்றவர்களாகவும், தார்மீகக் கோபம் சிறிது கூட இல்லாதவர்களாகவும் போய்விட்டார்கள் என்பதை நினைத்தபோது பூதலிங்கம் நெட்டுயிர்த்தார். தம்மைப் போல் ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருப்பது கூட மற்றவர்களுக்கு ஒரு விநோதமாகவே தோன்றும் என்பது அவருக்கே புரிந்துதான் இருந்தது. மாணவர்கள் பக்கம் நியாயம் இருப்பதை மறுபடியும் தயக்கமின்றித் துணை வேந்தரிடம் கூறினார் அவர். "இதில் எம்.எல்.ஏ.யை நினைத்து நாம் பயப்பட ஒன்றுமில்லை சார்! கலகம் புரிந்து பல்கலைக் கழகத்தில் அமைதி குலையும்படி செய்து தேர்தலை நடக்கவிடாமல் பண்ணவேண்டும் என்றோ என்னவோ, லாரிகளையும் அடியாட்களையும் ஆயுதங்களையும் அவரே இங்கு அனுப்பியிருப்பார் போலிருக்கிறது. அவருடைய போதாத காலம் பையன்கள் லாரிகளைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டார்கள். லாரிகள் திரும்பக் கிடைக்க வேண்டுமானால் அவர் கொஞ்சம் பணிந்து போக வேண்டியதாகத்தான் இருக்கும். வேறு வழியே இல்லை..."

"நோ... நோ... அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிடாதீர்கள். நீங்கள் எப்போதுமே ஸ்டூடண்ட்ஸ் பக்கத்தில்தான் பேசுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் காலத்துப் பையன்களும் 'எமோஷனலாக' இருக்கிறார்கள். எதற்கும் உடனே 'எக்ஸைட்' ஆகிவிடுகிறார்கள்..."

"இந்தத் தலைமுறையில் நீங்கள் அதைத் தவிர்க்க முடியாது, சார்! சுற்றிலும் ஒழுங்கீனம், ஊழல், பணம், பதவி ஆசை மிகுந்த முதியவர்களைக் கொண்ட ஒரு சமூகத்தில் இளந் தலைமுறை கிளர்ச்சி மனப்பான்மையையும், எழுச்சியையும் கொண்டதாக இருக்கும், இருக்க வேண்டும்."

இதற்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் கொஞ்சம் கோபத்துடனேயே பூதலிங்கத்தை வெட்டி விடுவது போல் முறைத்துப் பார்த்தார் துணைவேந்தர். வாக்குவாதத்திலும் கோபத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பற்றி மீண்டும் கேட்க மறந்துவிட்டார் அவர். அதற்குள் இராவணசாமியே அங்கு வந்து சேர்ந்து விடவே துணைவேந்தரும், பூதலிங்கமும் தங்கள் வாக்குவாதத்தைத் தொடர முடியவில்லை. இராவணசாமியோடு கோட்டம் குருசாமியும் வந்திருந்தார். துணைவேந்தர் இருக்கையிலிருந்து எழுந்து நின்று எதிர்கொண்டு சென்று அவர்களை வரவேற்றார்.

அவர் அப்படிச் செய்தது பூதலிங்கத்துக்கு மிகவும் வேதனையாயிருந்தது. லாரியை ஓட்டிக் கொண்டு போக வந்த டிரைவர்கள் என்ற பேரில் குண்டோதரர்கள் போல் மூன்று தடித்த ஆட்களும் துணைவேந்தர் அலுவலக முகப்பில் வந்து நின்று கொண்டிருந்தார்கள். துணைவேந்தரின் மேஜைக்கு முன் எதிரே போடப்பட்டிருந்த பார்வையாளர்களுக்கான நாற்காலிகளில் ஒன்றில் பூதலிங்கம் அமர்ந்திருக்கவே இராவணசாமி, குருசாமி இருவரும் பக்கத்துக்கு ஒருவராகப் பேராசிரியரின் இருபுறமும் அமர்ந்து கொண்டார்கள். உள்ளே நுழையும் போதே துணைவேந்தருக்குப் பெரிய கும்பிடாகப் போட்டுவிட்ட அவர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்த பின்பு அப்போதுதான் பூதலிங்கம் அங்கிருப்பதையே கவனித்தவர்கள் போல், வேண்டாவெறுப்பாக, "வணக்கம்" என்றார்கள். நேர்மையும், துணிவும், ஒழுக்கமும் உள்ளவர்கள் எதிர்ப்பட்டால், அவை அறவே இல்லாதவர்களுக்கு ஏற்படும் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை, இருபுறமும் துணிந்து அமர்ந்துவிட்டாலும் அவர்கள் கூச்சத்தோடுதான் இருந்தார்கள். அவருடைய பார்வை நேர் எதிரே இருந்த துணைவேந்தரின் முகத்தில் இலயித்திருந்தது.

"என்னை தப்பாகப் புரிஞ்சுக்காதீங்க, மிஸ்டர் இராவணசாமி! இந்தக் காலத்துப் பையன்களே ரொம்ப உணர்ச்சிவசப்படறாங்க. 'சுருக்'குனு கோபமும் வருது... ஏதோ இதமாக ரெண்டு வார்த்தை சொல்லி லாரிகளைத் திருப்பிக் கொண்டு போவதுதான் உங்களுக்கு நல்லது..." என்று பேச்சைத் தொடங்கினார் துணைவேந்தர். இராவணசாமியோ, கோட்டம் குருசாமியோ இதற்குப் பதிலே சொல்லாமல் இருந்தனர். துணைவேந்தரின் பேச்சிலிருந்த குழைவான தொனி பூதலிங்கத்துக்குப் பிடிக்கவில்லை.

'நீங்கள் உங்களுடைய லாரிகளின் மூலம் மாணவர்களைத் தாக்க முயன்றது தவறு! அதனால்தான் இவ்வளவும் ஆயிற்று' என்பது போல் எதிரே இருப்பவர்களை எச்சரிக்கும் துணிவு சிறிது கூட இல்லாமல் ஏதோ தாமோ, தம் மாணவர்களோ செய்துவிட்ட ஒரு குற்றத்துக்காக இரங்குவது போன்ற தொனியில் துணை வேந்தர் பேசியது பூதலிங்கத்துக்கு ஆச்சரியமாக இருந்தது.

"நாங்கள் வேற்றான் வீட்டு விவேகத்தையும் மதிப்பவர்கள். தோற்றோர் பக்கத்து துணிவையும் வியப்பவர்கள். எங்களை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதுங்க..." என்று திடீரென்று சம்பந்தமோ, அர்த்தமோ இன்றிப் பூதலிங்கத்தின் பக்கம் திரும்பிக் குழைவாக ஆரம்பித்தார் இராவணசாமி. இந்த வஞ்சப் புகழ்ச்சியின் பொருளென்ன என்பது முதலில் பூதலிங்கத்துக்குப் புரியவில்லை. போகப் போகப் புரிந்தது. தாம் மைதானத்துக்கு வந்து மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்காமல், பூதலிங்கத்தையும் அவரோடு டிரைவர்களையும் அனுப்பியே லாரிகளைத் திருப்பிக் கொண்டு போக விரும்பினார் இராவணசாமி.

"பாவம்! ரொம்பச் சிரமப்படுகிறார் 'ஹெல்ப்' பண்ணுங்களேன் மிஸ்டர் பூதலிங்கம்!" என்று தாயுமானவனார் அதற்கு ஒத்துப் பாடினார். பூதலிங்கத்துக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் தமக்கு இருபுறமும் அமர்ந்திருந்தவர்களிடம் எதுவும் பேசாமல், துணை வேந்தரைப் பார்த்து மட்டுமே பதில் சொன்னார்:

"நீங்கள் கூப்பிட்டனுப்பியதற்காகத்தான் நான் வந்தேன் சார்! இதில் 'ஹெல்ப்' என்ற பேச்சுக்கே இடமில்லை. மாணவர்கள் சொல்லியதை உங்களிடம் வந்து சொல்லிவிட்டேன். நீங்கள் ஏதாவது சொன்னால் அதை மாணவர்களிடம் போய்ச் சொல்லுகிறேன். அவ்வளவுதான் நான் செய்யலாம். ஆனால் மாணவர்களிடம் அவர்கள் கோரிக்கையை விட்டுக் கொடுக்கச் சொல்லிச் சிபாரிசு செய்ய மட்டும் நான் ஆளில்லை."

"கொஞ்சம் தயவு பண்ணுங்க சார்" என்று மறுபடியும் இராவணசாமி பேசத் தொடங்கியதும், "இதோ பாருங்கள், மிஸ்டர் இராவணசாமி! தயவுசெய்து நீங்கள் எதைச் சொல்ல வேண்டுமானாலும் வி.சி.யிடம் சொல்லுங்கள். வி.சி.யின் கீழே தான் நாங்கள் எல்லாரும் வேலை பார்க்கிறோம். எங்களிடம் ஏதாவது சொல்ல வேண்டுமானால் அவர் சொல்வது தான் முறையாக இருக்கும்" என்று முகத்தில் அடித்தாற் போல் பதில் சொன்னார் பூதலிங்கம் இதைக் கேட்டு இராவணசாமிக்கு மூஞ்சியில் உணர்வு செத்துப் போயிற்று. பூதலிங்கத்தையும் கண்டிக்க முடியாமல் இராவணசாமியையும் கடிந்து கொள்ளத் துப்பில்லாமல் துணை வேந்தர் திணறினார். பூதலிங்கம் சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை. இராவணசாமியும், குருசாமியும் பலித்த மட்டும் இலாபம் என்பது போல் பேரம் பேசினார்கள்.

நீண்ட நேரச் சர்ச்சைக்குப் பின்னால் துணை வேந்தர், பூதலிங்கம் இருவரும் இராவணசாமியையும், குருசாமியையும் உடன் அழைத்துக் கொண்டு பல்கலைக் கழக விடுதி மைதானத்துக்குச் சென்றார்கள். இராவணசாமி மாணவர்களிடம் வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்க இசைந்திருந்தார். சிலர் மானத்தைக் காத்துக் கொள்வதற்காகப் பொருளை இழப்பார்கள். வேறு சிலர் பொருளைக் காத்துக் கொள்வதற்காக மானத்தையே இழந்து விடவும் தயாராயிருப்பார்கள். இராவணசாமி எப்போதுமே இரண்டாவது வகை. அவரிடம் முரட்டுப் பிடிவாதம் உண்டு. ஆனால் மானம் கிடையாது. பிடிவாதமும் மானமும் ஒன்றில்லை. மானம் விட்டுக் கொடுக்க முடியாதது. ஆனால் பிடிவாதம் அதை விடப் பெரிய பிடிவாதத்தின் முன் விட்டுக் கொடுக்கப்படுவது. இராவணசாமியின் பிடிவாதமும் இறுதியில் அப்படித்தான் ஆயிற்று.

விடுதி மைதானம் வரை கூட வந்த துணை வேந்தர், இராவணசாமி மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியைக் காணத் தாம் அருகே இருக்க வேண்டாம் என்று நினைத்தோ என்னவோ அங்கே பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு 'புது பிளாக்' கட்டிட வேலையை மேற்பார்க்கப் போவது போல் நடுவே மெல்ல நழுவிவிட்டார்.

பேராசிரியர் பூதலிங்கத்தின் மேல் இருந்த மதிப்பின் காரணமாக மாணவர்கள் இராவணசாமியையும், அவரோடு வந்தவர்களையும் பொறுத்துக் கொண்டனர். அப்படியிருந்தும் கூட எம்.எல்.ஏ.யை அவமானப்படுத்தும் குரல்களும், டௌன், டௌன் ஒலிகளும், 'ரௌடியிசம் ஒழிக', 'குண்டாயிசத்துக்கு முடிவு கட்டுவோம்' என்ற வாசகங்களும் எழுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இராவணசாமி ஓரளவு பயந்தே போனார். ஆனால் பேராசிரியர் கைகளை உயர்த்தி அமைதியாயிருக்குமாறு கோரியதும் கூப்பாடுகள் நின்றன. அமைதி நிலவியது. பாண்டியனையும் மோகன்தாஸையும் கூப்பிட்டு நிறுத்தி இராவணசாமியை மன்னிப்புக் கேட்கச் சொன்னதும் அவர் மன்னிப்புக் கேட்டு விட்டார். உடனே அவரையும் வைத்துக் கொண்டே பாண்டியன் உரத்த குரலில் கூடியிருந்த மாணவர்களுக்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்ட விவரத்தை அறிவித்தான். மாணவர்கள் லாரிகளை விட்டு விலகிக் கொண்டதும் இராவணசாமியின் டிரைவர்கள் லாரிகளை எடுத்துக் கொண்டு போனார்கள். வழி மறித்து அமர்ந்திருந்த மாணவிகள் எழுந்து வழியை விட்டுவிட்டுப் பாண்டியன் முதலியவர்கள் நின்றிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.

லாரிகள் வெளியேறிய சிறிது நேரத்துக்கெல்லாம் காரில் புறப்பட்ட இராவணசாமியும், குருசாமியும் போகும் போது ஒரு வாய்வார்த்தை மரியாதையாகக் கூடப் பூதலிங்கத்திடம் சொல்லிக் கொண்டு போகவில்லை. அவர்கள் அப்படி நடந்து கொண்டதிலிருந்து அவர்களுடைய மனத்துக்குள் எப்படி ஆத்திரம் முற்றிக் கனன்று கொண்டிருக்கும் என்பதைப் பூதலிங்கமும் மாணவர்களும் புரிந்து கொள்ள முடிந்தது. தீவிரவாதிகளான மாணவர்கள் சிலருக்கு இராவணசாமியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு லாரிகளைத் திருப்பி அனுப்பியதே பிடிக்கவில்லை. 'வீ ஷுட் நாட் காம்ப்ரமைஸ் லைக் திஸ் வித் ரௌடி எலிமெண்ட்ஸ்' என்று பாண்டியனிடம் வந்து இரைந்தான் ஒரு மாணவ நண்பன்.

"என்ன சார்? 'போலிங்' ரெண்டு மணிக்கே முடிந்தும் இன்னும் ரிஸல்ட் என்னன்னே சொல்லலியே நீங்க?" என்று பேராசிரியர் பூதலிங்கத்திடம் கேட்டாள் கண்ணுக்கினியாள். அவள் கையில் பெரிய சாக்லேட் டின் ஒன்று தயாராயிருந்தது. அவளோடு கூட இன்னும் சில மாணவிகளும் உடன் நின்று கொண்டிருந்தனர்.

"எல்லோரும் இப்படியே லைப்ரரி பில்டிங முகப்புக்கு வாருங்களேன்! இன்னும் பத்து நிமிஷத்துக்குள் தேர்தல் முடிவுகளைத் தெரிவித்து விடுகிறோம்" என்று சொல்லி விட்டு மாணவர்கள் குழாத்திலிருந்து வழி விலக்கிக் கொண்டு நூல் நிலையத்துக்கு விரைந்தார் பூதலிங்கம்.

அடுத்த சில கணங்களில் நூல் நிலைய முகப்பில் மாணவ மாணவிகளின் கூட்டம் சேர்ந்துவிட்டது. சிலர் கையில் மாலைகள், சிலர் கையில் புதிய கதர், கைத்தறித்துண்டுகள், மலர்க் கொத்துக்கள் என்று வெற்றியை வரவேற்கும் மகிழ்ச்சியைக் கொண்டாடி அளிப்பதற்கான பொருள்கள் தென்பட்டன. என்ன காரணத்தாலோ தாம் பக்கத்தில் வந்து சும்மா நின்று கொண்டு உதவிப் பேராசிரியரிடம் கொடுத்து முடிவுகளைப் படிக்கச் செய்தார் பூதலிங்கம்.

மாணவர் பேரவைத் தலைவனாக மோகன்தாஸும், செயலாளனாகப் பாண்டியனும், துணைத் தலைவர், துணைச் செயலாளர்களாக இவர்களுக்கு வேண்டிய தரப்பு மாணவர்களுமே பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்கள். அன்பரசன் வகை மாணவர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அவர்கள் பெற்றிருந்த வாக்குகளும் மிக அற்பமாகவே இருந்தன. எதிர்பார்த்ததுதான் என்றாலும், மாணவர்களிடையே மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. கண்ணுக்கினியாளின் கையிலிருந்த சாக்லேட் டின்னிலிருந்து இரண்டு உள்ளங்கையும் நிறைய சாக்லேட்களை வாங்கி அப்படியே மேலிருந்து சாக்லேட் மழையே பொழிவது போல் உயர்த்தித் தூவினான் பொன்னையா. பாண்டியனுக்கு முகம் மறைப்பது போல், மாலைகளும், ஆடைகளும் அணிவிக்கப்பட்டன. மோகன்தாஸை அப்படியே தோளில் தூக்கி விட்டான் ஒரு பலசாலி மாணவன். படிகளில் ஏறி நூல் நிலைய முகப்புக்குப் போய் அங்கே நின்ற பேரசிரியர்களுக்கும், பிறருக்கும் இனிப்பு வழங்கினாள் கண்ணுக்கினியாள்.

"எனக்கு வேண்டாம், அம்மா! தோற்ற வேட்பாளர்கள் நாளைக்கே உங்களிடம் நான் சாக்லேட் லஞ்சம் வாங்கியதாகக் கதை விடுவார்கள்" என்று சிரித்துக் கொண்டே மறுத்தார் பூதலிங்கம்.

"பரவாயில்லை! 'சாக்லேட்டாக லஞ்சம் தர வேண்டும் என்று தோற்றவர்களாகிய நீங்கள் தயாராயிருந்தால் நான் உங்களிடம் கூட அதை வாங்கிக் கொள்வேன்' என்று அவர்களிடம் பதில் சொல்லுங்களேன் சார்."

"இந்த காலத்தில் இப்படி வென்றவர் செலவில் சாக்லேட் சாப்பிடுவது கூட லஞ்சத்துக்குச் சமமானதுதான்" என்று சிரித்தபடி கூறினார் அறிவிப்புகளைச் செய்த உதவிப் பேராசிரியர்.

"இந்த நகைச்சுவைக்காகவே உங்களுக்கு இன்னும் இரண்டு சாக்லேட் பரிசு தரலாம் சார்" என்று கூறி, மறுத்தவர் கையிலும் சாக்லேட்டைத் திணித்து விட்டு வந்தாள் கண்ணுக்கினியாள். மாணவிகளில் ஒருத்தி பல்கலைக் கழகப் பூங்காவில் பறித்த பல நிறப் பூக்களாலேயே நூலில் மாலை போல கட்டிய ஓர் ஆரத்தைக் கொண்டு வந்து கண்ணுக்கினியாளிடம் கொடுத்து, "இதை உன் கையால் நம்முடைய புதிய பேரவைச் செயலாளருக்குச் சூட்டேன் பார்க்கலாம்..." என்று கண்களிலும் இதழ்களிலும் குறும்பு மலர வேண்டினாள். கண்ணுக்கினியாளும் அதை மறுக்கவில்லை. அந்த மாலையை வாங்கி அவள் பாண்டியனுக்குச் சூட்டுவதற்குச் சென்றபோது, "இந்த மாதிரி நீ எனக்கு ஒரு மாலையைச் சூட்ட வருவது போல் நான் சில நாட்களுக்கு முன்பே ஒரு கனவு கூடக் கண்டாயிற்று. நீயோ இவ்வளவு நாட்கள் கழித்து இத்தனை தாமதமாக வந்து அந்தக் காரியத்தைச் செய்கிறாய். தாமதமான அன்பளிப்புகளுக்கு 'லேட் ஃபீ' தர வேண்டும் தெரியுமா?" என்று சொல்லி நகைத்தான் அவன்.

"இதோ 'லேட் ஃபீ'யும் உண்டு! இந்தாருங்கள்" என்று அவன் வலது கை நிறைய மிட்டாய்களை அள்ளி வைத்தாள் அவள். அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது 'புது பிளாக்' கட்டிடங்களின் வேலையைச் சுற்றிப் பார்ப்பது போல் ஓர் அரை மணி நேரத்தைக் கழித்திருந்த துணை வேந்தர், லாரிகள் பத்திரமாக வெளியேறியதை அறிந்த மகிழ்ச்சியுடன் நடந்தே நூல் நிலைய முகப்புப் பக்கமாக வந்தார். தேர்தல் முடிவுகளை அறிந்ததும் தன் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளாமல் முகமே இன்றித் தனியே பல் ஸெட் மட்டும் சிரிப்பது போன்ற ஓர் இயல்பற்ற சிரிப்புடன் கங்ராஜுலேஷன்ஸ்' என்று பாண்டியனிடமும், வெற்றி பெற்ற மற்ற மாணவர்களிடமும் வந்து கைகுலுக்கினார் அவர். கண்ணுக்கினியாள் அதுதான் சமயமென்று அவரிடமும் ஒரு சாக்லேட்டைக் கொடுத்து விட்டு, "ஸார் கிவ் அஸ் பெர்மிஷன் டு அஸம்பிள் ஹியர் அண்ட் ஹேவ் ஏ மீட்டிங்" என்று வேண்டினாள். உடனே அவர் முகம் மாறியது. அதில் கடுமை தெரிந்தது.

"நோ... யூ காண்ட் ஹேவ் ஏ மீட்டிங் இன் தி யுனிவர்ஸிடி காம்பஸ். யூ கேன் ஹேவ் இட் இன் ஸம் அதர் ப்ளேஸ்..." என்று சொல்லிக் கொண்டே பின்புறம் கைகோர்த்தபடி அவர் விரைந்து திரும்பி நடந்துவிட்டார்.

இப்படி மறுமொழி கூறியதற்காக அவர் மேல் எல்லாருக்குமே கோபம் வந்தாலும் அந்த மகிழ்ச்சியான வேளையில் அவரோடு வாதாடிச் சண்டை போடுவதன் மூலம் தங்கள் உற்சாகத்தை வீணடிக்க விரும்பவில்லை அவர்கள்.

அங்கிருந்து வெளியேறிப் போய்ப் பல்கலைக் கழகத்து எல்லைக்கு அப்பால் அண்ணாச்சி கடை வாசலில் பொதுக் கூட்டமாகப் போட்டு வெற்றி விழாவை நடத்திக் கொள்ளலாம் என்று எல்லா மாணவர்களும் முடிவு செய்தார்கள்.

உடனே பொன்னையா எல்லா மாணவர்களும் ஆறரை மணிக்குள் அண்ணாச்சி கடை முன்புறத்தில் வந்து கூட வேண்டும் என்று நூல் நிலைய முகப்பில் ஏறி உரத்த குரலில் அறிவித்து விட்டான். கூட்டம் நடத்த அனுமதி வாங்க இரு மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்குப் புறப்பட்டார்கள். மாலைகள் வாங்கவும் மேடை போடவும் சிலர் ஓடினர்.

அப்போது மாலை ஐந்து மணி கூட ஆகவில்லை என்றாலும் அண்ணாச்சிக்கும், மணவாளனுக்கும் நேரிலேயே வெற்றிச் செய்தியைத் தெரிவித்து அவர்கள் ஆசியைப் பெற வேண்டும் என்று கருதியதால் பாண்டியன், மோகன்தாஸ், பொன்னையா, கண்ணுக்கினியாள் முதலிய சிலர் முன் கூட்டியே அண்ணாச்சி கடைக்கு விரைந்தார்கள்.

அவர்கள் அண்ணாச்சி கடையை நெருங்குவதற்கு முன்பு சிறிது தூரத்திலிருந்து பார்த்த போது அங்கு ஏதோ பெரிய கூட்டம் சூழ்ந்து நிற்பது தெரிந்தது. அங்கும் இங்குமாகச் சில போலீஸ்காரர்களும் தெரிந்தனர். அருகே நெருங்க நெருங்க ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதற்கான அடையாளங்கள் அங்கே புலப்பட்டன.

பன்னிரண்டாவது அத்தியாயம்

அண்ணாச்சி கடை வாசலில் நாலைந்து சைக்கிள்கள் நடுத்தெருவில் தூக்கி எறியப்பட்டு நொறுக்கப்பட்டிருந்தன. சோடா பாட்டில்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகள், எரிக்கப்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகளின் சாம்பற் குவியல் என்று கடை முகப்பு அலங்கோலமாயிருந்தது. கடை ஏறக்குறைய சூறையாடப்பட்டிருந்தது. வெற்றிப் பெருமிதத்தோடு அங்கே சென்றிருந்த பாண்டியன் முதலியவர்களுக்கு அங்கே என்ன நடந்திருக்க முடியும் என்பது புரியவும் புலப்படவுமே சிறிது நேரம் ஆயிற்று. கடையில் இருந்த சிறுவர்கள் இருவரையும் கூடச் சூறையாட வந்தவர்கள் அடித்துப் போட்டுவிட்டு போய்விட்டதாகவும், அவர்கள் ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப் பட்டிருப்பதாகவும் கூடியிருந்தவர்கள் சொன்னார்கள். சம்பவம் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. பக்கத்தில் விசாரித்ததிலிருந்து சில உண்மைகள் பாண்டியனுக்குத் தெரிந்தன. தெரிந்த உண்மைகளால் அவன் மனம் தளர்ந்து ஒடுங்கியது.

மாலையில் பல்கலைக் கழகத்திலிருந்து லாரிகளைத் திரும்பிக் கொண்டு போகிற போக்கில் இராவணசாமியின் ஆட்கள் மாணவர்கள் மேல் காட்ட முடியாத கோபத்தை அண்ணாச்சியுடைய கடையின் மேல் காட்டிவிட்டுப் போயிருந்தார்கள். லாரிகளோடு ஆட்கள் வந்த போது அண்ணாச்சி கடையில் இல்லை. கடையைக் கவனித்துக் கொண்டு அண்ணாச்சியிடம் வேலை பார்க்கும் பையன்கள் இருவர் மட்டுமே இருந்தனர். தாக்கவும், சூறையாடவும், வந்திருந்தவர்களுக்கு இது மிகவும் வசதியாகப் போயிற்று. எதிர்ப்புறத்து மருந்துக் கடைக்காரர்கள் போலீஸுக்கு ஃபோன் செய்து போலீஸ் வந்தும் கூடக் கடையைச் சூறையாடிய இராவணசாமியின் ஆட்களை எதுவும் செய்யவில்லை என்பதையும், கண்டுகொள்ளாதது போல் இருந்து சூறையாடியவர்களை ஓட விட்டுவிட்டார்கள் என்பதையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்தார்கள். பாண்டியனுக்கு நெஞ்சம் கொதித்தது.

"பாவிகள்! உருப்படவே மாட்டார்கள்" என்று கையைச் சொடுக்கி நெரித்தாள் கண்ணுக்கினியாள். அவளும் கோபம் அடைந்திருந்தாள்.

"இராவணசாமி நம்மிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு லாரிகளோடு வெளியேறியதும் நாமெல்லாம் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நூல் நிலைய முகப்பில் காத்திருந்த போது அண்ணாச்சியும் கடையில் இல்லாத வேளையில் இதைச் செய்திருக்கிறார்கள்" என்றான் மோகன்தாஸ்.

அப்போதுதான் அண்ணாச்சியும் மணவாளனும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். மணவாளனின் முகத்தில் பதற்றமும் கவலையும் தெரிந்தது. அண்ணாச்சியின் முகம் சுபாவமாகவே தோன்றியது.

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு முகத்தின் சுபாவமான நிலை மாறாமலே, வலது கையால் மீசையின் மேற்புறத்தை நீவியபடி, "சரிதான் எங்கிட்டவே, விளையாட ஆரம்பிச்சிருக்காங்க... அதையும் தான் பார்க்கலாம்" என்றார் அண்ணாச்சி. அவரிடம் நெருங்கி, "இன்னிக்குப் பார்த்து நீங்க எங்கே போனீங்க...? நடக்கக் கூடாதது நடந்திரிச்சே!" என்று பாண்டியன் துக்கம் பொங்கக் கூறியபோது,

"இதை மறந்திடு தம்பி! நீங்களெல்லாம் ஜெயிச்ச சமாச்சாரத்தையும் இதையும் ஒரே சமயத்திலேதான் வந்து சொன்னாங்க... இதனாலே ஏற்பட்ட கவலையை விட அதனாலே ஏற்பட்ட சந்தோசம் தான் எனக்கு அதிகம்" என்றார் அவர். மேலும் அவரே கூறினார்:

"பக்கத்து 'சந்தனச் சோலை' கிராமத்திலே அந்த நாளிலே எங்களோடு ஜெயிலிலே இருந்த தியாகி ஒருத்தரு சாகக் கிடக்கிறார்னு வந்து தகவல் சொன்னாங்க... உடனே ஒரு டாக்ஸி ஏற்பாடு பண்ணிக்கிட்டுத் தம்பி மணவாளனோடு நான் அங்கே போக வேண்டியதாயிடிச்சு. பகல் ஒரு மணியிலிருந்து அங்கேதான் இருந்தேன். இப்பத்தான் திரும்பி வந்து தம்பியும் நானும் லேக்வியூ ஓட்டல் வாசல்லே இறங்கினோம். உடனே இந்த ரெண்டு தகவல்களையுமே வந்து சொன்னாங்க... அதான் ஓடியாந்தோம்..."

"எங்களாலே அண்ணாச்சிக்கு இவ்வளவு பெரிய பொருள் சேதம் வந்திட்டதேன்னு நினைச்சாத் தாங்க முடியாத கவலையா இருக்கு..."

"கவலைப்படாதே பாண்டியன்! நான் ஒத்தைக் கட்டை. கடை வச்சு லாபம் சம்பாரிச்சு, சொத்துச் சேர்த்து நான் யாருக்கும் கொடுத்திட்டுப் போகப் போறதில்லை. ஏதோ இத்தினி வருசமா இந்த யூனிவர்ஸிடியிலே படிக்கிற பிள்ளைங்களையெல்லாம் என் சொந்த சகோதரர்மார்களாக எண்ணிப் பழகி உபகாரம் பண்ணியிருக்கேன். எனக்கு வர லாபம் நஷ்டம் எல்லாம் என்னோடது மட்டுமில்லை... இதனாலே நான் விழுந்து போயிட மாட்டேன். தம்பி இதை என்னாலே தாங்கிக்கிட முடியும்."

அண்ணாச்சி இவ்வாறு கூறிய போது அவருடைய குரல் கரத்துத் தொண்டை கம்மிப் போயிருந்தது.

"எல்லாப் போட்டிகளிலுமே நம்ம மாணவர்கள் அத்தனை பேரும் ஜெயிச்சாச்சு. உள்ளேயே விடுதி மைதானத்தில் வெற்றி விழா நடத்த அனுமதி கேட்டோம். வி.ஸி. மாட்டேன்னிட்டாரு. இங்கே நடத்தலாம்னு அபிப்பிராயப் பட்டு வந்தோம். இங்கே இப்படி ஆகியிருக்கு. வெற்றி விழாவே வேண்டாம். 'கான்ஸல்' பண்ணிடலாம்" என்று பாண்டியன் மனத் தளர்ச்சியோடு சொன்னான். ஆனால் அண்ணாச்சி அதற்கு இணங்கவில்லை.

"இதுக்காக அதை நிறுத்திடப்பிடாது தம்பீ! இதோ... பத்தே நிமிசத்திலே இந்த இடத்தை ஒழுங்கு பண்ணி மேடை போட்டுத் தரேன்... எவ்வளவோ தொல்லைங்களுக்கு நடுவில் ஜெயிச்சிருக்கோம்... அதைக் கொண்டாடியே ஆகணும்."

சொல்லிய வார்த்தைகளுக்குக் கொஞ்சமும் குறையாத உற்சாகத்தோடு உடன் வேலைகளைச் செய்தார் அண்ணாச்சி. நொறுக்கப்பட்ட சைக்கிள்களை ஒரு மூலையில் அள்ளிப் போட்டுவிட்டு மற்றவர்களின் உதவியோடு மேடை அமைத்துத் தோரணங்களும், கொடிகளும் கட்டி, 'மைக்' ஏற்பாடு செய்து 'மைக்' பையனிடம் 'சினிமாப் பாட்டுக் கீட்டுப் போட்டீன்னா கொன்னுப்புடுவேன்' என எச்சரித்து 'பாருக்குள்ளே நல்ல நாடு', 'காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை' என்று போட வேண்டிய ரிக்கார்டுகளையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார் அவர்.

கண் முன்னே தம்முடைய கடை சூறையாடப் பட்டுக் கிடக்கும் நிலையிலும் சிறிது கூடத் தளராமல் அண்ணாச்சி செய்த காரியங்களைப் பார்த்துப் பாண்டியனுக்கு மெய் சிலிர்த்தது. அவன் மோகன்தாஸிடம் கூறினான்:

"கர்ம யோகிகள் என்று தனியாக எங்கெங்கோ இருப்பதாகப் பேசிக் கொள்கிறோமே, இதோ இங்கே ஒரு கர்ம யோகியைப் பார் மோகன்தாஸ்! இப்படி உண்மையான தொண்டர்களைப் பெற்றுள்ள இயக்கங்கள் தான் நாட்டுக்குக் கர்மயோகிகளை அளிக்கும் தவக்கூடங்கள் போன்றவை. கடந்த விநாடிகளில் ஏற்பட்டு விட்ட இழப்புக்காக முகம் சுளிக்காமல் இந்த விநாடியின் செயல்களில் முகம் மலர ஈடுபடும் தொண்டர்கள் எங்கேயெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தான் இன்று தவம் இருக்கிறது. நேற்றைய தவங்களை முனிவர்கள் காடுகளிலும், மலைகளிலும் செய்ததாகச் சொல்லுகிறார்கள். இன்றைய தவங்களை நாம் காடுகளில் மலைகளில் செய்ய முடிவதில்லை. நாடுகளில், நகரங்களில், ஊர்களில், தெருக்களில் நாம் செய்ய வேண்டிய பல்லாயிரம் தவங்கள் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலம் இது. அப்படித் தவம் செய்யும் திராணியுள்ள ஓர் உண்மைத் தொண்டரை இதோ பார்!... இன்று நடைபெறும் இந்த வெற்றி விழாக் கூட்டத்திலேயே இவருடைய கடைக்கு ஏற்பட்டு விட்ட நஷ்டத்தை ஈடு செய்ய எந்தக் காரியத்தையாவது நாம் தொடங்க வேண்டும். என்ன சொல்கிறாய்?"

"நிச்சயமாகச் செய்யலாம்! ஆனால் என்ன செய்யப் போகிறோம். எப்படிச் செய்யப் போகிறோம் என்பதையெல்லாம் இப்போதே அண்ணாச்சியிடம் சொல்லி விடாதே. அவர் வேண்டாம் என்று மறுத்தாலும் மறுத்து விடுவார். ஆனால் நாளைக் காலையில் பொழுது விடிவதற்குள் இங்கே இந்தக் கடை பழையபடி இருப்பதற்கான எல்லா உதவிகளையும் நாம் செய்ய வேண்டும்."

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டம் நடத்துவதற்காகப் போலீஸ் அநுமதி பெறச் சென்ற மாணவர்கள் திரும்பி வந்து "அனுமதி கிடைக்கவில்லை பாண்டியன்! தேர்தல் முடிவுகளையொட்டி ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பான நிலைகளையும், அண்ணாச்சி கடைவாசலில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையும் கருதி இன்னும் ஒரு வார காலத்துக்கு மல்லிகைப் பந்தல் நகர எல்லையில் கூட்டங்கள் ஊர்வலங்கள் நடைபெறத் தடை விதித்திருக்கிறார்களாம். அதனால் நம் வெற்றி விழாக் கூட்டத்துக்கும் அநுமதி தர மறுக்கிறார்கள்" என்றனர்.

"சும்மா நாடகம் ஆடுகிறார்கள் போலீஸ் அதிகாரிகள். ஏதோ சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு வட்டங்களையும், கோட்டங்களையும் பாதுகாப்பதற்காக - நம்முடைய விழாக்களையெல்லாம் நடக்க விடாமல் செய்கிறார்கள். கொந்தளிப்பான நிலைமைகளுக்குக் காரணமானவர்களைப் பிடித்துக் கைது செய்து அமைதியைப் பாதுகாக்கத் துப்பில்லாமல் அமைதியாயிருப்பவர்களைத் துன்புறுத்துகிறார்கள். இதற்கு நாம் அடங்கக் கூடாது. தடை இருந்தால் தடையை மீறிக் கூட்டம் நடக்கும்... ஒழுங்காகக் கூட்டத்துக்கு அனுமதி உண்டா அல்லது அனுமதி பெறாமலே கூட்டம் நடக்க வேண்டுமா என்பதைப் போய்க் கேட்டு வா!"

வந்த மாணவனும் அவனோடு திரும்பி வந்த மற்றவர்களும் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு விரைந்தனர். இதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. குளிரும், அதிகரித்திருந்தது. மேடை அலங்காரம் முடிந்து 'மைக்' கட்டிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான பாடல்களும் ஒலி பெருக்கிகளின் மூலம் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. சுமார் ஐயாயிரம், ஆறாயிரம் மாணவர்களும் கூடிவிட்டனர். மேலும், மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். அண்ணாச்சி கடை சூறையாடப்பட்ட செய்தி வேறு காட்டுத் தீயைப் போல் பரவியிருந்தது. மாணவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டார்கள். அந்த நிலையில் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்க வேண்டும் என்று பாண்டியனும், மற்ற மாணவர்களும் மணவாளனை வேண்டினார்கள். மணவாளன் மறுத்தார். "நான் எதற்கு? உங்களிலேயே யாராவது ஒருவர் தலைமை தாங்குவதுதான் நல்லது. இல்லாவிட்டால் ஓர் உண்மை சமூக ஊழியரும் தேசபக்தரும் இன்றைய தினம் வன்முறைக் கும்பலால் பாதிக்கப்பட்டவருமாகிய அண்ணாச்சியையே தலைவராக வைத்துக் கூட்டத்தை நடத்தலாமே?"

மணவாளன் கூறியது போலவே கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு அண்ணாச்சியும் மறுத்துவிட்டார். மீண்டும் மணவாளனிடம் போய் அவரையே தலைவராக இருக்கும்படி வற்புறுத்தினான் பாண்டியன்.

"நான் ஒரு காரணத்தோடு தான் சொல்கிறேன். இன்றைய கூட்டத்துக்கு நீங்கள் தான் தலைமை தாங்கணும். அதோடு ஒரு விஷயத்தையும் கூட்டத்துக்கு அறிவிக்கணும். அதை உங்க வார்த்தைகளாலே அறிவிச்சிங்கன்னா நல்லாயிருக்கும்" என்று கூறிக்கொண்டே மணவாளனின் அருகே சென்று காதோடு காதாக அந்த விஷயத்தையும் சொன்னான் பாண்டியன். அதைக் கேட்டதும் மணவாளன் மறுபேச்சுப் பேசாமல் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதற்கு ஒப்புக் கொண்டுவிட்டார்.

அவர்கள் கூட்டத்தைத் தொடங்குவதற்கு ஒரு விநாடிக்கு முன்பாகத் தொலைவில் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. டி.எஸ்.பி.யும், இன்ஸ்பெக்டரும், இரண்டு கான்ஸ்டேபிள்களும் இறங்கி வந்தனர். மாணவர்களின் பெருங்கூட்டம் போலீஸைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டது. ஒரு மாணவன் கூட்டத்தினிடையே நடந்து சென்ற கான்ஸ்டேபிளின் தொப்பியைக் கூடத் தட்டி விட்டு விட்டான். ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் திரும்பிப் பார்த்துத் தொப்பியைத் தட்டி விட்டது யாராக இருக்கும் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

"இப்போது ஜபர்தஸ்துடன் இவ்வளவு வேகமாக வருகிறீர்களே சார்! கடையைச் சூறையாடிய ரௌடிக் கும்பலைப் பிடிக்காமல் ஓடவிட்ட போது இந்த வேகமும், இந்த ஜபர்தஸ்தும் எங்கே போயிருந்தன?" என்று டி.எஸ்.பி. காதில் கேட்கும்படியாகவே இரைந்து கத்தினார்கள் சில மாணவர்கள். எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் மேடையை நோக்கி முன்னேறினார் டி.எஸ்.பி. அப்போது தான் கூட்டம் தடையை மீறி நடக்கும் என்று மணவாளனைத் தலைவராக அமர்த்தி 'மைக்'கில் அறிவித்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.

அந்த மேடைக்கு இருபது கஜ தூரத்துக்கும் முன்னதாகவே மாணவர்கள் நெருக்கமாகச் சூழ்ந்து அடைத்துக் கொண்டு வழியை மறித்து விடவே, டி.எஸ்.பி.யோ அவரோடு வந்தவர்களோ மேலே செல்ல முடியாமல் அப்படியே நிற்க வேண்டியதாயிற்று.

"கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தடையை மீறி நடத்துகிறீர்கள். இதை நான் அனுமதிக்க மாட்டேன்" என்று கத்தியபடி ஆத்திரத்தோடு கான்ஸ்டேபிள்களின் பக்கமாகத் திரும்பி, 'மைக்' ஒலி பெருக்கிகளைப் பறிக்குமாறு டி.எஸ்.பி. கடுகடுப்போடு உத்தரவிட்டார். மாணவர்களும் பதிலுக்குச் சத்தம் போட்டார்கள். கான்ஸ்டேபிள்கள் மைக் ஒலிபெருக்கிகளைக் கழற்றுவதற்காக நின்ற இடத்திலிருந்து ஓர் அங்குலம் கூட மேலே நகர முடியவில்லை. டி.எஸ்.பி.க்கு ஓரளவு அச்சமாகவும் இருந்தது. பல்லாயிரக் கணக்கான மாணவர்களைக் கொதித்து எழச் செய்து, அதன் காரணமாகப் பெரிதாக ஏதாவது ஆகிவிடக் கூடாதே என்று மனத்தில் நடுக்கமும் வந்திருந்த காரணத்தால் அவர் தம் கருத்தை மாற்றி மறு பரிசீலனை செய்தார். மிரட்டுவது போல் மிரட்டி ஒரு நாடகம் ஆடிவிட்டு டி.எஸ்.பி. மோகன்தாஸை அருகில் அழைத்து, "ஆல்ரைட், பத்தரை மணிவரை இங்கே இந்தக் கூட்டத்தை நடத்திக் கொள்ள உங்களுக்கு அனுமதி தருகிறேன். அமைதியாக நடத்திக் கொள்ளுங்கள். ஒரு சம்பிரதாயமான வெற்றி விழாவாக இதை அனுமதிக்கிறேனேயன்றி, என் அனுமதியைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மாணவர்களை வன்முறைக்குத் தூண்டி விடவோ, இங்கு ஒரு கடை சூறையாடப்பட்டது பற்றிப் பேசவோ கூடாது. உங்கள் பேச்சுக்களால் புதிய அசம்பாவிதங்கள் எதுவும் நேர்ந்து விட வழி கோலாதீர்கள் என்பதற்காகவே இவ்வளவும் சொல்கிறேன்" என்றார்.

"வன்முறைக்குத் தூபம் போட்டு வன்முறைகளை நடத்திவிட்டு ஓடிப்போனவர்களைச் சௌகரியமாக ஓடிப் போக விட்டுவிட்டு, இப்போது எங்களிடம் வந்து அமைதியைக் காக்கச் சொல்கிறீர்கள். அமைதியாக இருப்பவர்களிடம் தான் நீங்கள் அமைதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்" என்று அவருக்குச் சுடச்சுடப் பதில் சொன்னான் மோகன்தாஸ். தொடர்ந்து போலீஸையும் வன்முறையாளர்களையும் பற்றிக் கண்டனக் குரல்கள் விண்ணதிர ஒலித்தன. மாணவர் சக்தியின் ஒற்றுமை அக்குரல்களில் கேட்டது.

போலீஸார் ஒதுங்கி நின்று கொண்டார்கள். கூட்டம் நடந்தது. மணவாளன், பாண்டியன், மோகன்தாஸ், கண்ணுக்கினியாள், வெற்றி பெற்ற மற்ற மாணவர்கள் எல்லோரும் மேடையில் அமர்ந்திருந்தனர். எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் அண்ணாச்சி மேடைமேல் அமர மறுத்து மேடைக்கு அருகே பக்கவாட்டில் கீழ்ப் புறமாக ஒரு மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

"இதோ பாருங்க தம்பீ! நான் மேடைக்கெல்லாம் வந்து கண்ணைக் கூசற வெளிச்சத்தில் உட்கார மாட்டேன். ஒரு தேசத் தொண்டனாக என் அரசியல் வாழ்க்கை தொடங்கிச்சு. தொண்டனாகவே அது முடியும். தொண்டனாக வாழறதிலே உள்ள சுதந்திரமும், மானமும் தலைவனாகிறதிலே கிடையாது. என்னை வற்புறுத்தாதீங்க. நான் கீழேயே இருக்கேன். மேலே இருக்கிற பெருமையெல்லாம் எனக்கு வேண்டாம்" என்று அவர் கூறிய போது அந்த நெஞ்சுக்குள் உறைந்திருந்த கொள்கைக் கட்டிடத்துக்குத் தேக்கு உத்தரமிட்டது போன்ற தெளிவான எண்ணங்கள் தெரிந்தன. அந்தக் கொள்கைப் பிடிப்பு மிகவும் உறுதியாயிருந்ததைக் காண முடிந்தது.

பேரவைத் தேர்தல் வெற்றி விழா மாலை அணிவித்தல், பாராட்டுக்கள் எல்லாம் இருந்தாலும் மேடையில் பேசியவர்கள் எல்லாரும் அண்ணாச்சி கடை சூறையாடப் பட்ட கொடுமையையும், அதன் உள்நோக்கத்தையும் விவரித்தே பேசினார்கள். கூட்டத்தில் மாணவர்களும், பொதுமக்களும் பிறருமாகப் பதினையாயிரம் பேருக்கு மேல் திரண்டிருந்தார்கள். கண்ணுக்கினியாள் பேசும் போது அண்ணாச்சியை அந்தப் பல்கலைக் கழகத்தருகே குடிகொண்ட 'காவல் தெய்வம்' என்றும், 'படிக்காத மேதை' என்றும் வருணித்துவிட்டு, "நம்மையெல்லாம் காக்கிற காவல் தெய்வத்தின் கோயிலே இன்று இடிக்கப்பட்டு விட்டது. இது கொடுமையினும் கொடுமை. காவல் தெய்வத்தின் கோயிலை முதலில் கட்டியாக வேண்டும்" என்று பலமான கைத்தட்டல்களுக்கிடையே கூறினாள். பாண்டியன் பேசுகையில் தேர்தலுக்கு அபேட்சை மனுவை கொடுத்த நாளிலிருந்து தனக்கும், சக மாணவர்களுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளை ஒவ்வொன்றாக விவரித்து விட்டு, தான் கடத்தப்பட்டு, தன்னிடம் பலாத்கார முறையில் கையெழுத்து வாங்கியது, உட்பட எல்லாவற்றையும் விவரித்தான். அந்த எல்லாக் கொடுமைகளையும் விடப் பெரிய கொடுமையாக அண்ணாச்சி கடை சூறையாடப்பட்டு விட்டதைச் சொல்லிக் குமுறினான்.

"எனக்கு முன்பு பேசிய கண்ணுக்கினியாள் அண்ணாச்சியைத் தெய்வமாக வருணித்தாள். நான் அவரைத் தெய்வம் என்று சொல்ல மாட்டேன். தெய்வங்கள் சோதனை செய்த பின்பே உதவிக்கு வரும். நம் அண்ணாச்சியோ சோதனையின்றி உதவிக்கு வரும் தூய தொண்டர். தொண்டு செய்வதையே வாழ்வின் தவமாகக் கொண்டவர். அவர் நம்முடைய இணையற்ற நண்பர்" என்று புகழ்ந்தான் பாண்டியன். இறுதியாக மணவாளன் பேசினார்.

"நண்பர்களே! இறுதியாக நான் பேசும் முன் உங்களுக்கு ஓர் அறிவிப்பைக் கூற விரும்புகிறேன். நம்முடைய மாபெரும் நண்பரான அண்ணாச்சிக்கு ஏற்பட்ட நஷ்டங்களை ஈடு செய்ய மாணவருலகம் கடமைப்பட்டிருக்கிறது. அதற்காக இப்போது உங்களிடையே சகோதரி கண்ணுக்கினியாள், பாண்டியன், மோகன்தாஸ், பொன்னையா, மாரியப்பன் ஆகியவர்கள் துண்டு ஏந்தி வசூலுக்கு வருகிறார்கள், தாராளமாக உதவுங்கள்" என்று அவர் அறிவித்ததும் கண்ணுக்கினியாள் முதலிய ஐவரும் வசூலுக்காகத் துண்டு ஏந்தி விரித்தபடி கூட்டத்தில் இறங்கினார்கள்.

மணவாளன் மேலே தொடர்ந்தார்:

"இன்று நம்முடைய சமூக, அரசியல், பொருளாதார வானத்திலே கூடியுள்ள கருமேகங்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இந்த மேகங்களின் தற்காலிக இருட்டு நம்மைப் பயமுறுத்துகிறது. நாம் ஒரு மகத்தான மாறுதலுக்காகக் காத்து நிற்கிறோம். நமது நாடு லஞ்சமும், ஊழலும், பதவி ஆசையும், அதிகார வெறியும் இல்லாத ஒரு நற்காலத்தை எதிர்பார்த்துப் போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் முன் நிற்கிறார்கள். நம்மால் வருங்காலத்தை மாற்ற முடியும் என்பதனால் தான் நிகழ் காலத்தை ஆள்கிறவர்களுக்கு நம்மேல் கோபம் வருகிறது. நம்மை அடக்குகிறார்கள்; ஒடுக்குகிறார்கள். நமக்கு மேலேயும் சுற்றிலும் இருளைப் படைக்கும் இந்த அதிகார மேகங்களால் ஒரு பெரிய மழை வரும். அந்த மழையால் ஒரு வெள்ளம், ஏன், ஒரு யுகப் பிரளயமே கூட வரலாம். அந்த மழையின் பின் அந்த யுகப் பிரளயத்தின் பின் ஏற்படவிருக்கும் சத்தியப் பிரவாகத்தில் நீந்தக் காத்திருக்கிறோம் நாம். அசத்தியங்களும், கொடுமைகளும் அதிகாரங்களும், அடக்குமுறைகளும், அதிகமாகி, இருள் கனத்து மூடும் போதெல்லாம் இப்படித்தான் நாம் ஒரு சத்தியப் பெருக்கை அவாவி நிற்போம்..."

மணவாளனின் பேச்சு ஒரு கணம் தடைப்பட்டது. திடீரென்று மேடையை நோக்கிச் சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்தன. ஆனாலும் மணவாளன் மேடையிலேயே நின்று தீரனாகப் பேசிக் கொண்டிருந்தார். நெற்றிப் பொட்டில் ஒரு கல் விழுந்து குருதி சிந்தியது. அண்ணாச்சி மேடை மேல் தாவி ஏறி மணவாளனை மறைத்துக் கொண்டு முன் நின்றார். மாணவர்கள் கல்லெறிபவர்களைப் பிடிப்பதற்காக விரைந்தனர். போலீஸ் கைகட்டி நின்று கொண்டிருந்ததைக் கூட்டத்தினர் எல்லோருமே பார்த்தார்கள். ஒரே கூப்பாடும் குழப்பமுமாகி இருந்தாலும் அப்போது யாரும் அங்கிருந்து கலைந்து போகவில்லை.

பதின்மூன்றாவது அத்தியாயம்

பொதுக்கூட்டம் நடந்த இடத்தருகே மேட்டில் மரங்களின் மறைவிலிருந்து கல்லெறிந்தவர்களில் பெரும்பாலோர் தப்பி ஓடி விட்டனர். மாணவர்களால் துரத்திப் பிடிக்கப்பட்ட சிலர் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்க முயன்றவர்களின் சதி பலிக்கவில்லை. 'மணவாளனின் மேல் இனி ஒரு கல் கூட விழக் கூடாது' என்று தடுக்கும் ஆவலில் அவனைக் காக்கும் கவசம் போல் மேடையேறி மறைத்துக் கொண்டு நின்றார் அண்ணாச்சி. கல்லெறிய வந்தவர்கள் விரட்டப்பட்ட பின் மீண்டும் அமைதி நிலவியது.

அப்போது அண்ணாச்சி மேடையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டார். மணவாளன் மீண்டும் பேசத் தொடங்கினார். அவர் பேசி முடித்தவுடன் மேடையில் வந்து விழுந்த கற்களை ஒன்று திரட்டி ஏலம் விட்ட போது அந்தக் கற்கள் மட்டுமே முந்நூறு ரூபாய்க்கு ஏலம் போயின. கற்களை ஏலம் விட்டுக் கொண்டிருக்கும் போதே அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கும் கடைப் பையன்களைப் பார்ப்பதற்குப் புறப்பட்டுப் போய்விட்டார் அண்ணாச்சி. பேசி முடிந்ததும் மணவாளனை அழைத்துப் போய் எதிர்த்தாற் போல் மருந்துக் கடையை ஒட்டியிருந்த மலையாளி டாக்டர் ஒருவரிடம் காட்டி நெற்றிக் காயத்துக்கு மருந்து போட்டு 'டிரஸ்' செய்து கொண்டு வந்தார்கள் மாணவர்கள். மண்டையில் காயத்தின் மேல் துணிக்கட்டுடன் பத்திரிகை போட்டோவுக்காக நிருபர் ஒருவர் வந்து மணவாளனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு போனார்.

சூறையாடப்பட்ட அண்ணாச்சிக் கடையைப் புதுபித்துக் கொடுப்பதற்காக அங்கே கூடியிருந்தவர்களிடம் வசூலான தொகையை உடனே எண்ணிக் கூட்டத்திலேயே அறிவிக்க முடியாமல் இருந்தது. எறியப்பட்ட கற்களை ஏலம் விட்ட முந்நூறு ரூபாய் தவிர மூன்று துண்டுகள் நிறைய ரூபாய் நோட்டுக்களும், சில்லறைகளுமாக வேறு வசூலாகி நிரம்பியிருந்தன. கூட்டம் கலைந்த பின்னும் அதை எண்ணி முடிக்க வெகு நேரம் ஆயிற்று. பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக் கழக விடுதிகளுக்குத் திரும்பிவிட்டாலும் நூறு மாணவர்கள் எண்ணுகிறவர்களுக்குக் காவலாக மேடையைச் சூழ்ந்து கொண்டு இரவையும் குளிரையும் பொருட்படுத்தாமல் நின்றார்கள்.

இரவு பதினொன்றே கால் மணிக்கு மொத்த வசூல் 'ரூபாய் ஆறாயிரத்து எண்ணூற்று ஐம்பத்திரண்டு' என்று பாண்டியன் மணவாளனிடம் கணக்குச் சொன்னான். அப்போதுதான் அண்ணாச்சியும் அடிபட்ட கடைப் பையன்களைப் பார்த்துவிட்டு வந்தார். பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில் அந்த தொகையை மணவாளன் அண்ணாச்சியிடம் கொடுத்த போது முதலில் அவர் அதை ஏற்க மறுத்தார். அப்புறம் மாணவர்களும், மணவாளனும் வற்புறுத்தி அவர் அதை ஏற்கும்படி செய்தனர். மறுநாள் காலையிலேயே கடையைப் புதுப்பிக்கும் ஏற்பாடுகளில் முனைந்தார் அவர்.

வெற்றி விழாவுக்கு அடுத்த நாள் காலையிலேயே துணை வேந்தர் அவசரமாக ஓரியண்டேஷன் நாளைத் தொடங்கி வைத்துப் பேசினார். அன்று மாலை தான் மணவாளனும் மல்லிகைப் பந்தலிலிருந்து ஊர் திரும்பினார். காலையில் துணை வேந்தரின் ஓரியண்டேஷன் நாள் சொற்பொழிவு முடிந்ததுமே பாண்டியன் முதலிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் மணவாளனை வழியனுப்பி விடை கொடுக்க கூடி விட்டனர்.

மணவாளன் ஊர் திரும்பியதற்கு அடுத்த நாள் காலையிலிருந்து தேர்தல் புயல்களும் போட்டிகளும் மறைந்து, மறந்து தத்தம் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள் மாணவர்கள். மணவாளனே போகும் போது 'இனிமேல் படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்துங்கள்' என்று தான் அறிவுரை கூறிவிட்டுப் போயிருந்தார். நாட்கள் விரைந்தன. செப்டம்பரில் பாரதி விழா வந்து போயிற்று. பல்கலைக் கழக நாடகப் பிரிவு மாணவ மாணவிகள் பாரதியாரின் பாஞ்சாலி சபத நாடகத்தை நடித்தனர். கண்ணுக்கினியாள் பாஞ்சாலியாக நடித்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றாள். அக்டோபர் இரண்டாம் தேதியன்று காலை காந்தியடிகளின் ஜெயந்தி நாளன்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகப் பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் மாணவர்கள் கூடியிருந்தார்கள். பாதிக் கூட்டம் நடப்பதற்குள்ளேயே மருத்துவக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த மேரிதங்கம் என்ற மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்ட செய்தி பரவிக் கூட்டம் கலைந்தது. ஏற்கெனவே திருமணமான விரிவுரையாளர் ஒருவர் தான் இந்தத் தற்கொலைக்கு மூலகாரணம் என்று தெரிய வந்ததும் எல்லாப் பிரிவு மாணவர்களும் அந்த விரிவுரையாளரின் இராஜிநாமாவைக் கோரி ஒன்று திரண்டனர். தேர்வுகள் தள்ளிப் போடப்பட்டுக் காலாண்டு விடுமுறைக்காக முன்கூட்டியே பல்கலைக் கழகத்தை மூட்ச் செய்து உடனே விடுதிகளைக் காலி செய்யுமாறு மாணவர்களுக்கு உத்தரவு இட்டார் துணை வேந்தர். சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் ஒரு மந்திரிக்கு நெருங்கிய உறவினர் என்பதால் அவர் மேல் நடவடிக்கை எடுக்க அஞ்சிப் பல்கலைக் கழகத்தை மூடினார்களே தவிர அமைதிக்காக மூடவில்லை என்பது எல்லா மாணவர்களுக்கும் புரிந்துதான் இருந்தது. துணை வேந்தரும், டாக்டர்களும், அதிகாரிகளும், போலீஸும் மந்திரிக்காகப் பயந்து எவ்வளவுக்கு எவ்வளவு மூடி மறைக்க முயன்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு எல்லா உண்மைகளும் வெளியாகிப் பரவிவிட்டன. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பிரேதத்தைப் பரிசோதனை செய்த போது அவள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. நிச்சயமாக அதற்கு அந்த விரிவுரையாளரே காரணம் என்று அவளே எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் மாணவர்கள் கையில் சிக்கியிருந்தது. ஆளும் கட்சிக்கு வேண்டியவரான அந்த விரிவுரையாளர் மேல் நடவடிக்கை எடுக்கப் பயந்து எல்லாரும் ஒதுங்கி விட்டதாகத் தெரிந்தது. பல்கலைக் கழகத்தை மூடி விடுதிகளைக் காலி செய்யச் சொல்லிவிட்டால் மறுபடியும் திறந்து கொள்ளும் போது எல்லாரும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்று துணை வேந்தர் நினைப்பதாகத் தோன்றியது. உண்மையை மறைப்பதற்குத் துணை வேந்தரும் மற்றவர்களும் மேற்கொண்ட தீவிரம் தான் மாணவர்களின் சந்தேகத்தையும் கோபத்தையும் வளர்த்தன.

அக்டோபர் இரண்டாம் தேதியன்று காலையில் மருத்துவக் கல்லூரி விடுதியை ஒட்டியிருந்த ஏரியில் அந்தப் பெண்ணின் பிரேதம் மிதந்த போது அநேகமாக எல்லா மாணவர்களும் மாணவிகளும் ஆடிட்டோரியத்தில் காந்தி ஜெயந்திக்காகக் கூடியிருந்தார்கள். பயமும், பதற்றமும் அடைந்த பல்கலைக் கழக நிர்வாகமும், போலீஸும், ஆர்.டி.ஓ.வும் உடனே 'போஸ்ட்மார்ட்டம்' முதலிய கண் துடைப்புக்களைச் செய்து பெற்றோர்களுக்குத் தகவலும் அறிவிக்காமல் தாங்களே பிரேதத்தை அடக்கம் செய்தும் முடித்துவிட்டார்கள். பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் 'தண்ணீரில் தவறி விழுந்து நேர்ந்த மரணம்' என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையின் போது உடன் இருந்த இளம் டாக்டர் ஒருவர் மூலம் அவள் கருவுற்றிருந்தாள் என்பதையும் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதையும் மாணவர்கள் அறிய முடிந்தது. இந்தச் சம்பவம் மாணவர்களிடையே கொந்தளிப்பு ஊட்டியிருந்தது.

எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு மாணவியாகையினால் தனி அறையில் இருந்திருக்கிறார்கள். முந்திய தினம் மாலையில் அவளுடைய அறை பூட்டப்பட்டுப் பூட்டிலேயே சாவி தொங்கியதைக் காண நேர்ந்த பக்கத்து அறை மாணவி ஒருத்தி ஏதோ சந்தேகப்பட்டு அறையைத் திறந்து பார்த்த போது மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்ததாம். அதனடியில் இரு கடிதமும் அது பறந்து விடாமல் இருக்கவோ என்னவோ அதன் மேல் பேனாவும் வைக்கப்பட்டிருந்ததாம். அந்தக் கடிதத்தை இவள் படித்திருக்கிறாள். படித்தவள் தன் சிநேகிதியின் மானத்தைப் பறையறைய அந்தக் கடிதம் காரணமாயிருக்க வேண்டாம் என்று கருதியோ என்னவோ அந்தக் கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியேறித் தன்னால் முடிந்த வரை முடிந்த இடங்களில் அவளைத் தேடிப் பார்த்திருக்கிறாள். அவள் கிடைக்கவில்லை. பயத்தினால் யாரிடமும் இதை அந்தப் பக்கத்து அறை மாணவி வெளியிடவில்லை. ஆனால் அக்டோபர் இரண்டாம் தேதி பிற்பகலில் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவன் மோகன்தாஸை இரகசியமாகச் சந்தித்து நடந்ததைச் சொல்லி, சிநேகிதியின் அறையில் தான் எடுத்த கடிதத்தையும் கொடுத்துவிட்டாள் அந்த மாணவி. அந்தக் கடிதம் இறந்தவள் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தாள் என்பதையும், குற்றவாளியான விரிவுரையாளர் அவளிடம் எல்லை மீறி நடந்து கொண்டு அவள் வாழ்க்கையைப் பாழாக்கியதால் தான் அவள் தற்கொலைக்குத் துணியும்படி ஆயிற்று என்பதையும் தெளிவாக நிரூபிப்பதாக இருந்தது.

தனிமையில் குற்றம் செய்வதற்குக் கூசாத மனிதர்கள் தாங்கள் செய்த குற்றங்கள் பொதுவில் நிரூபணமாகி விடுமோ என்ற நிலை வரும்போது மட்டும் கூசிக் கூசித் தவிப்பது விந்தைதான். மந்திரி வரை செல்வாக்கு உள்ள அந்த விரிவுரையாளரின் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. மருத்துவக் கல்லூரிப் பெண்கள் விடுதியைச் சுற்றியும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு, யாருக்கும் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது. விடுதிகளிலிருந்தும், பல்கலைக் கழக எல்லையிலிருந்தும் மாணவர்களை வெளியேற்றிவிட்டுப் போலீசைக் கூப்பிட்டுக் குடியேற்றியிருந்தார் துணை வேந்தர். மந்திரிக்குச் சொந்தக்காரரான ஒழுக்கமற்ற ஒரு விரிவுரையாளரைக் காப்பாற்றுவதற்காக மேலும் பல ஒழுங்குகளைத் தவறவிட்டிருந்தார் துணை வேந்தர். போலீஸை வைத்து மிரட்டி நிர்ப்பந்தப்படுத்தி அக்டோபர் இரண்டாந் தேதி மாலை ஆறு மணிக்குள் எல்லா மாணவர்களையும், மாணவிகளையும் பல்கலைக் கழக எல்லையிலிருந்தும், விடுதிகளிலிருந்தும் வெளியேற்றிவிட்டார்கள்.

மலைக் குளிரில் தங்க இடமும் கிடைக்காமல் உடனே ஊர் திரும்ப அத்தனை ஆயிரம் பேர்களுக்குப் போக்கு வரவு வசதிகளும் இன்றி மாணவர்கள் தெருவில் நின்றார்கள். மல்லிகைப் பந்தல் நகரின் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ஒய்.எம்.ஸி.ஏ. கட்டிடம், ஒய்.எம்.ஐ.ஏ. கட்டிடம், தேசீய இளைஞர் சங்க அலுவலகம், எஸ்டேட் தொழிலாளர் யூனியன் அலுவலகம் ஆகியவற்றில் எல்லாம் மாணவ மாணவிகள் நிரம்பி வழிந்தனர். விடுதி வசதிகளைத் திடீரென்று ரத்துச் செய்து ஆயிரக்கணக்கில் மாணவர்களை வெளியில் துரத்தியதால் நகரின் நிலைமைகள் பாதிக்கப்பட்டன. உணவுக் கடைகள், சாப்பாட்டு ஓட்டல்கள் திணறின. யாத்திரிகர்கள், நிறைய வரக் கூடிய மாதங்களான ஏப்ரல், மே முதலிய கோடைக் கால மாதங்களில் அதிகமான ஓட்டல்களைத் திறந்திருப்பதும், மற்ற மாதங்களில் ஓட்டல்கள், சாப்பாட்டுக் கடைகளின் எண்ணிக்கை குறைந்து விடுவதும் மல்லிகைப் பந்தல் நகரின் நடைமுறை ஆகும். திடீர் என்று ஓர் அக்டோபர் மாத ஆரம்பத்தில் பல்கலைக் கழகத்தை மூடி, விடுதி வசதிகளையும் இல்லாமல் செய்து விட்ட கொடுமையால் குளிக்க வெந்நீர் வசதி இல்லாமல் தங்க இடம் இல்லாமல் உணவில்லாமல் எதிர்பாராத நிலையில் உடனுக்குடன் கைக்காசு கொடுத்துச் சாப்பிடப் பண வசதியும் இல்லாமல், மாணவர்கள் நடுத்தெருவில் நின்று தவித்தார்கள். பெற்றோர்களுக்குத் தந்திகள், கடிதங்கள், டிரங்க்கால்கள் பறந்தன.

இந்த நிலையில் அண்ணாச்சி மாணவர்களுக்கு உதவியாகத் தம் கடைக்குப் பின்புறம் இருந்த சிலம்பக் கூடத்தை மறைத்துக் கீற்றுக் கொட்டகை போட்டு ஒரு தற்காலிகமான 'மெஸ்'ஸையே நடத்த நேர்ந்தது. கல்யாணங்களுக்குப் பாத்திரம் வாடகைக்கு விடும் ஒரு கடையில் பாத்திரங்கள் எடுத்து இரண்டு சமையற்காரர்களையும் ஏற்பாடு செய்து மாணவர்களைச் சோற்றுக்கு அலையவிடாமல் காப்பாற்றினார் அண்ணாச்சி. கடையின் பின்புறம் மாணவர்களும், மாணவிகளும் ஐம்பது ஐம்பது பேராகச் சாப்பிட்டு விட்டு, வெளியேற இட வசதி செய்யப் பட்டிருந்தது. ஒரு பந்தி முடிந்து அடுத்த பந்தி வந்து அமர்வதற்குள் இலைகளைப் போட்டுப் பரிமாறி உபசரிக்கக் கண்ணுக்கினியாள் தலைமையில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் சுறுசுறுப்பாகப் பணியாற்றினர்.

அவர்கள் பரிமாறிய அன்பையும் மலர்ச்சியையும் பார்த்து, "நீங்கள் எல்லோருமே ஹோம் ஸயின்ஸ் மாணவிகளோ என்று சந்தேகமாக இருக்கிறது. உங்களுக்கு மிகவும் நன்றி கூற வேண்டும்" என்றான் ஒரு மாணவன். இதைக் கேட்டுக் கண்ணுக்கினியாள் சிரித்துவிட்டுச் சொன்னாள்: "இல்லை! இதில் ஒருவர் கூட ஹோம் ஸயின்ஸ் மாணவி கிடையாது. நான் 'தியேட்டர் ஸயின்ஸ்' படிக்கிறேன். மற்றவர்கள் எல்லோருமே 'ஆர்ட்ஸ்' பிரிவு மாணவிகள். ஒரு வேளை 'ஹோம் ஸயின்ஸ்' மாணவிகள் பரிமாற வந்திருந்தால் அவர்கள் அனைவருமே 'தியேட்டர் ஸயின்ஸ்' பிரிவோ என்று உங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம்! சந்தேகங்கள் எப்போதுமே இப்படித்தான். அவை முதலிலேயே சரியாயிருப்பதில்லை. அல்லது முடிவிலே சரியாயில்லை என்று நிரூபிக்கப்படுகின்றன."

அவள் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களிடம் இப்படி உரையாடியபடியே பரிமாறிக் கொண்டிருந்த வேளையில் பாண்டியனும், மோகன்தாஸும் வேறு சில மாணவர்களும் அண்ணாச்சிக் கடை முகப்புக்குக் கூட்டமாக வந்தார்கள். அவர்களில் பாண்டியன் மட்டும் முகப்பிலிருந்தபடியே கீற்றுப் படலை விலக்கி உள்ளே தலையை நீட்டி, "ஒரு நிமிஷம் இப்படி வந்துவிட்டுப் போயேன். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்று கண்ணுக்கினியாளை அருகிலே கூப்பிட்டான்.

"இதோ ஹோம் ஸயின்ஸ் முடிகிறது. தியேட்டர் ஸயின்ஸ் ஆரம்பமாகப் போகிறது" என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவன் மற்றொரு மாணவன் காதருகே குறும்பாக இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கண்ணுக்கினியாள் பரிமாறிக் கொண்டிருந்த தூக்கு வாளியை வேறொருத்தியிடம் கொடுத்து விட்டுப் பாண்டியனைப் பின் தொடர்ந்து கடை முகப்புக்கு வந்தாள். வருவதற்கு முன் தன்னையும், பாண்டியனையும் இணைத்து அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் குறும்பாகப் பேசிய சொற்கள் அவள் காதிலும் தான் கேட்டன. ஆனால் அந்தச் சொற்களை அவள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. 'குறும்பு என்பது இளமையின் செல்லப் பிள்ளை. எந்த நிலையிலும் அவர்களால் குறும்பை விட்டு விட முடியாது. அவர்கள் பிறரையும் குறும்பு செய்வார்கள். பிறர் குறும்புகளையும் ஏற்றுக் கொள்வார்கள்' என்றெண்ணியபடி அச்சொற்களைச் சுபாவமாக எடுத்துக் கொண்டு மேலே சென்றாள் அவள். ஏனெனில் தானே அப்படிக் குறும்புகளைச் செய்த வேளைகள் அப்போது அவளுக்கு நினைவு வந்தன. கண்ணுக்கினியாள் வெளியே வந்ததும் பாண்டியன் அவளிடம் கேட்டான்:

"உடனே பல்கலைக் கழகத்தைத் திறக்கக் கோரியும், தற்கொலை செய்து கொண்ட மாணவி மேரிதங்கம் விஷயமாகப் பகிரங்க விசாரணை செய்யக் கோரியும் நாளைக் காலையிலிருந்து பல்கலைக் கழக வாயிலில் உண்ணாவிரதம் தொடங்குகிறோம். உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள என் தலைமையில் என்னைத் தவிர இன்னும் ஐந்து மாணவர்கள் பேர் கொடுத்திருக்கிறார்கள். மாணவர்கள் சார்பில் நாங்கள் ஆறு பேர் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். மாணவிகள் சார்பில் நீயும் இன்னும் ஐந்து பேரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்து விட்டேன். உன்னைத் தவிர இன்னும் ஐந்து பேர்களை மட்டும் பத்து நிமிஷங்களுக்குள் நீ முடிவு செய்து என்னிடம் சொல்ல வேண்டும்."

"அது சரி! என் விஷயமாக என்னைக் கேட்காமல் நீங்களே எப்படி முடிவு எடுக்கலாம்? என்னைப் பட்டினி போட நீங்கள் யார்?"

"நான் யாரா? ஆளைப் பார். நான் தான் உன்னுடைய சர்வாதிகாரி. பட்டினி போட்டால் உனக்கும் நல்லது தான். பெண்கள் இளைத்து ஒல்லியாகப் பூங்கொடி போல் இருக்க வேண்டும் என்பார்கள்..."

"நான் பூங்கொடி போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கிறேனாம்?"

"கண்ணாடியில் போய்ப் பார்த்துக் கொள், தெரியும்."

"உங்களைப் பார்த்த பின்புதான் கண்ணாடியில் பார்ப்பதையே நான் விட்டு விட்டேனே...?"

"அப்படியானால் நான் சொல்வதை மறுபேச்சுப் பேசாமல் உடனே ஒப்புக் கொள்."

"உத்தரவு!"

தன் அரும்பு முல்லைப் பற்களில் அவன் உள்ளத்தைக் கிறங்க அடிக்கும் சிரிப்போடு ஒரு தாளும் பேனாவும் வாங்கிக் கொண்டு மாண்விகளைச் சந்தித்துப் பேர் கேட்க உள்ளே சென்றாள் அவள். ஐந்து பேர்கள்தான் அவளுக்கு வேண்டியிருந்தது. ஆனால் அவளுடைய முகராசியின் விளைவாகப் பதினொரு மாணவிகள் உண்ணாவிரதத்துக்குப் பேர் கொடுக்க முன் வந்தார்கள். அந்தப் பதினொரு பேரில் அவளே ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து உடனே முடிவு செய்து பாண்டியனிடம் அறிவித்தாள். பாண்டியன் அப்போதே அந்தப் பட்டியலையும் உண்ணாவிரத அறிவிப்பையும் எழுதி நோட்டீஸ் அச்சிடுவதற்கு அண்ணாச்சியிடம் கொடுத்து அனுப்பினான். காரியங்கள் மிகவும் வேகமாக நடந்தன.

பின்னால் ஒரு நீதி விசாரணை என்று வந்து விட்டால் அப்போது காண்பிப்பதற்குச் சரியான சாட்சியமாக இருக்கும் என்பதால் தன்னிடம் கிடைத்த மேரிதங்கத்தின் கடிதத்தை மிகமிக இரகசியமாகப் பாதுகாத்தான் மோகன்தாஸ். சோதனையிட்டுப் போலீஸார் அந்தக் கடிதத்தை தன்னிடமிருந்து பறித்து விட நேருமோ என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாக அந்தக் கடிதத்தை அண்ணாச்சியிடம் கொடுத்து வைத்திருந்தான் அவன். அந்தக் கடிதம் மோகன்தாஸுக்கும், அதை அவனிடம் கொடுத்த பக்கத்து அறை மாணவிக்கும், பாண்டியனுக்கும், அண்ணாச்சிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் நிலைக்கோட்டை என்ற ஊரில் இருந்தார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினராயிருந்து பின்பு கிறிஸ்தவ சமயத்துக்கு மாறியவர்கள். தந்தை தாய் இருவருமே பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளி ஒன்றிலே செகண்டரி கிரேடு ஆசிரியர்களாக இருந்தனர். அக்டோபர் மூன்றாம் தேதி காலை அவர்கள் இருவருமே மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்ததாகவும், குய்யோ முய்யோ என்று கதறி அழுது விட்டுப் போனதாகவும் தெரிய வந்தது. ஆனால் அந்தப் பெற்றோர்கள் பிறரையோ, பிறர் அந்தப் பெற்றோர்களையோ சந்திக்க முடியாமல் போலீஸ், ஆர்.டி.ஒ., துணை வேந்தர் எல்லாருமே கெடுபிடி பண்ணி எல்லாவற்றையும் மறைத்திருந்தார்கள். மேரிதங்கத்துக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு என்றும் தூக்கத்தில் நடக்கும் பழக்கத்தால் அவள் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாள் என்றும் அவள் பெற்றோரே ஒப்புக் கொண்டு விட்டதாகவும், "விசாரணை எதுவும் தேவையில்லை" என்றும் அவர்களே ஒப்புக் கொண்டு விட்டதாகவும், செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. மல்லிகைப்பந்தல் நகரே அந்தச் சம்பவத்தால் பரபரப்படைந்து வதந்திகள் மயமாக மாறியிருந்தது. எங்கும் இதே பேச்சாக இருந்தார்கள் மக்கள். நகரில் பீதியும் பதற்றமுமாக ஓர் இயல்பற்ற சூழ்நிலை நிலவியது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி மாணவர்களில் ஆறு பேரும் மாணவிகளில் ஆறு பேரும் பல்கலைக் கழக வாயிலில் கால வரையறையின்றி உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டார்கள்.

உண்ணாவிரதம் தொடங்கிய அதே சமயத்தில் மாணவர்களின் குழு ஒன்று மேரிதங்கத்தின் பெற்றோரைச் சந்திக்க இரகசியமாக நிலக்கோட்டைக்கு விரைந்தது. ஆனால் நிலக்கோட்டையில் அந்தப் பெற்றோரின் வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அவர்களைப் பற்றிக் கேட்டாலே ஊரில் யாரும் பதில் சொல்லப் பயந்தார்கள். அந்தத் தெரு நிறைய சி.ஐ.டி.கள் நிரப்பப்பட்டிருந்தார்கள்.

பதினான்காவது அத்தியாயம்

அந்தக் கிராமத்தில் மாணவர்களின் நடமாட்டம் இரகசிய போலீஸாரால் கூர்ந்து கவனிக்கப்பட்டது. வந்த முதல் நாள் மாணவர்களால் எதுவுமே தெரிந்து கொள்ள முடியவில்லை. மேரி தங்கத்தின் பெற்றோர்களைப் பற்றி முனைந்து விசாரித்த பின் அவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அந்த ஊர் எல்லையிலிருந்து ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போகப்பட்ட விவரத்தை மட்டுமே சிரமப்பட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. மேரி தங்கத்தின் பெற்றோர் வீட்டில் மட்டுமின்றி அவர்களுடைய நெருங்கிய உறவினர் வீடுகள் இருந்த தெருக்களிலும் இரகசிய போலீஸார் குவிக்கப்பட்டிருந்தார்கள். உண்மையின் சிறியதொரு கீற்றும் வெளியே தெரிந்து விடாமல் மறைக்கப்பட்டிருந்தது அங்கே. மாணவர்களும் நம்பிக்கை இழந்துவிடவில்லை. பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கு எதிர்த்த வீட்டுத் திண்ணையிலேயே கூட்டமாக அமர்ந்து கண்காணிக்கத் தொடங்கினார்கள் அவர்கள். எதற்கும் அஞ்சாதவர்களும், உடல் வலிமையும் மன வலிமையும் மிக்கவர்களுமாகிய பதினைந்து பேர் ஒரு குழுவாக வந்திருந்ததனால் அந்த மாணவர்கள் சிறிது கூட அயர்ந்து விடவில்லை. அந்தப் பதினைந்து மாணவர்களுக்கும் கதிரேசன் என்ற மாணவனைத் தலைவனாக நியமித்து அனுப்பியிருந்தார்கள் பாண்டியனும், மோகன்தாஸும். உணவு சிற்றுண்டி வேளைகளுக்கு ஆறு ஏழு பேர்களாகக் கடை வீதியிலுள்ள ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து அந்த எதிர்வீட்டுத் திண்ணையிலேயே முகாம் இட்டிருந்தார்கள் அவர்கள். இரவைக் கூட அந்தத் திண்ணையிலேதான் கழிக்க நேர்ந்தது. படுக்க விரிப்போ, தலையணையோ கிடையாது. வந்திருக்கும் காரியத்தைப் பெரிதாக நினைத்த காரணத்தால் மாணவர்களில் எவருமே வசதிக்குறைவுகளைப் பற்றிக் கவலைப்படவுமில்லை. பொருட்படுத்தவுமில்லை. விடிந்ததும் வயல் வரப்புகளில் நடந்து போய் இறவைக் கிணறுகளில் பல் விளக்கி, நீராடிப் பழைய உடைகளையே மீண்டும் உடுத்திக் கொண்டு ஊருக்குள் வந்து அங்கே தெரிய வேண்டிய உண்மைகளுக்காகத் தவம் கிடந்தார்கள் கதிரேசன் முதலிய மாணவர்கள்.

இரண்டாம் நாள் விடிந்ததும் அவர்கள் எந்த வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்தார்களோ அந்த வீட்டுக்காரர் கருப்பசாமி சேர்வை அவர்களைக் கூப்பிட்டு, "தம்பீ! என்னைத் தப்பா நினைக்கப் பிடாது. பஞ்சாயத்து பிரசிடெண்டும் போலீசும் என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணறாங்க. 'நீங்க பதினைஞ்சு பேரும் அத்துமீறி 'டிரஸ்பாஸா' என் வீட்டுத் திண்ணையை ஆக்கிரமிச்சுக்கிட்டிருக்கீங்க'ன்னு நான் போலீஸ்லே 'கம்ப்ளெயிண்டு' எழுதிக் குடுக்கணுமாம். குடுத்தா உடனே உங்களைப் பிடிச்சு உள்ளே தள்ளிடலாமாம். எனக்கு அவங்க சொல்றதொண்ணும் பிடிக்கலே. அதே சமயத்திலே அவங்களை விரோதிச்சுக்கவும் முடியலே. கொஞ்சம் தயவு செஞ்சி நீங்க ஒரு காரியம் பண்ணணும். ரெண்டு வீடு தள்ளி 'படேல் தேசிய வாசக சாலை'ன்னு ஒரு வாசக சாலை இருக்கு. அந்த இடத்திலே இருந்துக்கிட்டும் நீங்க கவனிக்க வேண்டியதைக் கவனிக்கலாம். நானே அங்கே சொல்லி ஏற்பாடு பண்ணிடறேன். நீங்க அங்கே தங்கிடலாம்" என்றார். கதிரேசன் அவர் கூறியதை அப்படியே ஒப்புக் கொண்டான். காதும் காதும் வைத்தாற் போல் போலீஸும், பஞ்சாயத்துத் தலைவரும் சொல்லிக் கொடுத்தபடி புகார் செய்து தங்களை மாட்டி வைக்காமல் அந்த வீட்டுக்காரர் நல்லபடியாக நடந்து கொண்டதால் கதிரேசனுக்கு அவர் மேல் ஓரளவு மதிப்பு உண்டாகியிருந்தது. அதிகாரிகளும் பதவிகளில் இருக்கும் படித்தவர்களும் எப்படி எப்படி எந்தெந்தத் தவறுகளை யார் யாருக்குத் திட்டமிட்டுச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் காலத்தில் ஒரு சாதாரணத் தவற்றைக் கூடச் செய்ய யோசித்துத் தயங்கும் கருப்பசாமி சேர்வை மிகவும் பெரிய மனிதராகத் தோன்றினார்.

கருப்பசாமி சேர்வை சொன்ன யோசனைப்படி அந்த வாசக சாலையில் போய்த் தங்கிக் கொண்டார்கள் மாணவர்கள். அந்த வாசகசாலை முகப்பிலிருந்தும் மேரி தங்கத்தின் பெற்றோர் வீட்டை நன்றாகக் கவனித்துக் கண்காணிக்க முடிந்தது. வாசக சாலைக்குச் சென்றதனால் சில புதிய நன்மைகளும் உண்டாயின. அங்கே படிக்க வருகிறவர்களிடம் பேச்சுக் கொடுத்துச் சில விபரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

மல்லிகைப் பந்தல் நிலவரத்தைப் பற்றியும் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டார்கள் அவர்கள். பல்கலைக் கழகத்தை உடனே திறக்கக் கோரியும், மேரி தங்கத்தின் மரணத்தைப் பற்றிய பொது விசாரணையை வேண்டியும் பாண்டியன் முதலியவர்கள் தொடங்கியிருக்கும் உண்ணாவிரதம் மல்லிகைப் பந்தல் நகர மக்களின் ஆதரவையும் கவனத்தையும் கவர்ந்திருப்பதாகவும், தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு மாலை சூட்டியதாகவும் ஆளும் கட்சியைத் தவிர நகரின் மற்ற எல்லாக் கட்சிப் பிரமுகர்களும் உண்ணாவிரதத்துக்கும், கோரிக்கைகளுக்கும் தங்கள் ஆதரவுகளைத் தெரிவித்து அறிக்கைகள் விட்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன. கதிரேசனும் மற்ற மாணவ நண்பர்களும் அவற்றையெல்லாம் படித்து மகிழ்ந்தார்கள். நியாயங்களுக்காகத் தாங்கள் போராடும் போராட்டம் வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டாயிற்று. அந்தக் கிராமத்துக்கு வந்த இரண்டாம் நாள் மாலையில் அவர்கள் முயற்சி பலனளித்தது. மேரி தங்கத்தின் பெற்றோர் வேலை பார்த்த அதே பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளியில் டிரில் மாஸ்டராக வேலை பார்க்கும் பிச்சை முத்து என்பவர் வாசக சாலைக்குப் படிக்க வந்தார். தற்செயலாகக் கதிரேசனும் மற்ற மாணவர்களும் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவராகவே அவர்களிடம் வந்து பேச்சுக் கொடுத்தார். எடுத்த எடுப்பிலேயே அவர் மேல் ஒரு நம்பிக்கை ஏற்பட்டு விட்ட காரணத்தால் மாணவர்கள் தாங்கள் வந்த காரியத்தை அவரிடம் சொன்னார்கள். அதற்கு அவர் உதவியையும் நாடினார்கள்.

"யாரு? மிஸ்டர் சற்குணத்தையும் அவருடைய மனைவியையுமா பார்க்க வந்தீர்கள்?... அவர்களிடமிருந்து நீங்கள் பெரிதாக எதைத் தெரிந்து கொண்டுவிடப் போகிறீர்கள்? எனக்குத் தெரிந்தவரை அவரும் அவர் மனைவியும் ரொம்பவும் பயந்த சுபாவம் உள்ளவர்கள்... இல்லாவிட்டால் வீட்டைப் பூட்டிப் போட்டுவிட்டுப் போலீசார் சொன்னார்கள் என்று வாழைத் தோட்டத்தில் போய் உட்காருவார்களா?"

"என்னது? வாழைத் தோட்டத்திலா?"

"ஆமாம்! பஞ்சாயத்து யூனியன் தலைவரின் வாழைத் தோட்டத்தில் கிணற்றிலிருந்து பம்ப் செட் மூலம் நீர் இறைப்பதற்காக 'மோட்டார் ரூம்' என்று கிணற்றை ஒட்டி ஒரு சிறிய அறை இருக்கிறது. இரண்டு மூன்று நாட்களாகச் சற்குணமும் அவர் மனைவியும் அங்கே தான் ஏறக்குறைய சிறையிடப்பட்டது போல் ஒளித்து வைக்கப் பட்டிருக்கிறார்கள். இது எனக்குத் தெரியும், மிஸ்டர் கதிரேசன்! எவ்வளவு கேவலமான நிலை பாருங்கள்! படித்தவர்களிடமும் அறிவாளிகளிடமும் பயமும் கோழைத்தனமும் இருக்கிறவரை இந்தச் சமூகத்தில் உண்மைகளையும், நியாயங்களையும் யாரும் கௌரவிக்க மாட்டார்கள். சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட அச்சமும், பொதுநலத்திலிருந்து விலகி நிற்கும் தன்மையுமே இன்றுள்ள சமூகத்தின் சாபக் கேடுகள். சொந்த மகளைப் பறிகொடுத்துவிட்டு அதற்காக வாய்விட்டு அழவும் முடியாமல் அடங்கிப் போய்விட்ட சற்குணம் தம்பதிகளிடம் போய் நீங்கள் என்ன தெரிந்து கொண்டு விட முடியும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை? உங்களைப் போன்ற மாணவர்களின் நியாய உணர்வையும், போராட்ட மனப்பான்மையையும் நான் வரவேற்கிறேன். ஆனால் இப்படி மனப்பான்மைகளில் கூட நமக்கும், முந்தைய தலைமுறைக்கும் நடுவே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. அவர்கள் 'சத்தியம் வெல்லும்' என்று சொல்லிவிட்டுச் சத்தியம் எப்படியும் தானாகவே வென்று கொள்ளும் என்ற நம்பிக்கையோடு திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார்கள். 'சத்தியம் தானாக வெல்லாது. அதற்காகப் போராட வேண்டும். அதற்காகத் தீவிரமாகப் பாடுபட வேண்டும்' என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் மட்டும் தான் இதைப் புரிந்து கொண்டிருக்கிறோம்."

இந்த டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து புரட்சிகரமான சிந்தனைகளை உடையவராக இருந்தார். அந்தக் கிராமத்தில் மற்றவர்களிடம் இருந்த பயம் அவரிடம் இல்லை. இளைஞராயிருந்தாலும் அவருடைய சிந்தனையில் முதிர்ச்சியும் வேகமும் இருந்தது. கதிரேசன் அவரைக் கேட்டான்!

"சார்! நீங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும். இந்தக் கிராமத்தில் யாரைக் கேட்டாலும் மிஸ்டர் சற்குணம் விஷயமாகப் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். நீங்கள் தயவு செய்து எங்களை அந்த வாழைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றால் மிகவும் உபயோகமாக இருக்கும்."

"வாழைத் தோட்டத்தைச் சுற்றிப் பலத்த காவல் இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் முயன்று பார்ப்போம். எல்லோரும் கூட்டமாக அங்கே போக முடியாது. உங்களை மட்டும் இன்றிரவு என்னோடு அங்கே அழைத்துப் போகிறேன். ஊரிலிருந்து நாலைந்து மைல் போக வேண்டும். உங்களுக்கு சைக்கிள் விடத் தெரியுமா?"

"ஓ தெரியும் சார்... எத்தனை மணிக்கு நாம் புறப்பட வேண்டியிருக்கும்?"

"இரவு பத்தரை மணிக்குப் புறப்படலாம். ஆனால், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இங்கிருந்து புறப்படக் கூடாது. ஊர்க் கோடியிலுள்ள ஆலமரத்தடியில் நான் இரண்டு சைக்கிள்களோடு காத்திருப்பேன். நீங்கள் யாரும் சந்தேகப்படாதபடி எங்கோ சுபாவமாகப் புறப்பட்டு வருவது போல் அந்த ஆலமரத்தடிக்கு வரவேண்டும். புறப்படு முன் யாரும் உங்களைப் பின் தொடரவில்லை என்பதையும் நீங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும்."

கதிரேசன், பிச்சைமுத்து சார் கூறிய யோசனைக்குச் சம்மதித்து அதன்படி செய்ய ஒப்புக் கொண்டான்.

"நீங்கள் வற்புறுத்துகிறீர்களே என்பதற்காகத்தான் உங்களை நான் மிஸ்டர் சற்குணத்திடம் அழைத்துக் கொண்டு போகிறேன். எனக்கு அவரைச் சந்திப்பதில் இனிமேல் நம்பிக்கை எதுவும் கிடையாது. நம் முயற்சி காலங்கடந்து விட்டது. மகளைக் கற்பழித்த இளம் விரிவுரையாளரின் உறவினரான மந்திரியின் சார்பில் எங்கள் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மூலம் ரூபாய் இருபத்தையாயிரம் சற்குணத்தின் கைக்கு மாறிவிட்டது. 'என் மகளுக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு. அவள் தவறித் தண்ணீரில் விழுந்து மரணமடைந்திருப்பதை ஒப்புக் கொள்கிறேன்' என்று சற்குணமே எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்கு விலையாக இந்தத் தொகையைப் பேரம் பேசி அவரிடம் கொடுத்து விட்டார்கள்."

"ஒரு தந்தை தன் மகளின் மேல் உள்ள பாசத்தை இருபத்தையாயிரம் ரூபாய்க்கு விற்று விட முடியுமா சார்?"

"முடியுமா, முடியாதா என்பது எனக்குத் தெரியாவிட்டாலும் மிஸ்டர் சற்குணத்தால் அது முடிந்திருக்கிறது என்பதை நான் பிரத்தியட்சமாகக் காண்கிறேன். மல்லிகைப் பந்தலுக்குப் போய்ப் பெண்ணை அடக்கம் செய்த இடத்தில் ஒரு தடவை குய்யோ முறையோ என்று கதறி அழுதுவிட்டு, அப்படி அழுத இடத்திலேயே பெற்ற பாசத்தையும் சேர்த்துப் புதைத்து விட்டு வந்திருக்கிறார் அவர்."

"மாணவர்களாகிய நாங்கள் உண்மையை எப்படியும் வெளிப்படுத்தியே தீருவோம். விசாரணை கோரியும், பல்கலைக் கழகத்தை உடனே திறக்க வேண்டியும், எங்கள் பிரதிநிதிகள் மல்லிகைப் பந்தலில் உண்ணாவிரதம் தொடங்கியிருக்கிறார்கள் சார்!"

"உண்ணாவிரதத்தை எல்லாம் மிகவும் சுலபமாகச் சமாளித்து விடுவார்கள் அவர்கள். ஒழுக்கமும், நேர்மையும், மற்றவர்கள் மனச்சாட்சியை மதிக்கும் நல்லெண்ணமும் உள்ளவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் தான் உண்ணாவிரதம் போன்ற சாத்வீகப் போர் முறைகள் பயன்படும். குறுகிய நோக்கம் உள்ளவர்கள் உண்ணாவிரதத்தைக் கூட அவமானப்படுத்தி விட முடியும். ஐ.பி.ஸி. செக்ஷன் த்ரீ நாட் நயன் (309) படி தற்கொலை முயற்சி என்று உண்ணாவிரதத்தைத் தடுத்து மாணவர்களை உள்ளே தள்ளப் போகிறார்கள் பாருங்கள். நான் சொல்கிறபடி நடக்காவிட்டால் அப்புறம் என்னை ஏனென்று கேளுங்கள்."

வாசக சாலையில் சந்தித்த சிறிது நேரத்திலேயே டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து கதிரேசனோடும் மற்ற மாணவர்களோடும் மனம் விட்டுப் பழகத் தொடங்கியிருந்தார். அவரிடமிருந்து பல செய்திகள் தெரிந்தன.

"நேற்றைக்கு முன் தினம் குளத்தில் விழுந்து இறந்த மேரி தங்கத்தின் புகைப்படம் ஏதாவது கிடைக்குமா என்று தேடி மதுரையிலிருந்து பத்திரிகைக்காரர்கள் ரெண்டு பேர் வந்திருக்கிறார்கள். எங்கே அவர்களுக்குப் படம் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் மிஸ்டர் சற்குணத்தின் வீட்டிலிருந்த அவர் மகள் சம்பந்தப்பட்ட எல்லாப் புகைப்படங்களையும் போலீஸார் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். சற்குணத்தின் சொந்தக்காரர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று 'உங்ககிட்டே மேரி தங்கத்தின் போட்டோ ஏதாவது இருந்தாலும் கூட அதை யாருக்கும் கொடுக்கக் கூடாது' என்று கண்டிப்பாக மிரட்டிப் பயமுறுத்தியிருக்கிறார்கள்."

"போட்டோ வேணும்னா நாங்க தர முடியும் சார்! எங்க யுனிவர்சிடி மெடிகல் காலேஜ் 'குரூப்' போட்டோ எதிலேயாவது மேரி தங்கத்தின் படம் கிடைக்கும்" என்றான் கதிரேசன்.

"போட்டோ ஒன்று உடனே எனக்கு வேண்டும் என்பதற்காக மட்டும் இதை நான் உங்களிடம் சொல்லவில்லை. அதிகாரத்தின் கிளைகளால் நிஜத்தின் எல்லா ஊற்றுக் கண்களையும் எப்படி உடனுக்குடன் அடைத்துவிட முடிகிறது பாருங்கள் என்பதற்காகவே இதைச் சொன்னேன்" என்றார் பிச்சை முத்து.

அன்றிரவு திட்டமிட்டபடி ஊர்க் கோடியிலிருந்த ஆலமரத்தடிக்குச் சென்று அங்கிருந்து நாலு மைல் தொலைவில் உள்ள பஞ்சாயத்துத் தலைவரின் வாழைத் தோட்டத்துக்குச் சைக்கிளில் போனார்கள் பிச்சைமுத்துவும் கதிரேசனும். வாழைத் தோட்டம் ஒரு சிறு குன்றின் சரிவில் இருந்தது. தோட்டத்தின் முகப்பில் ஆட்கள் காவல் இருந்தார்கள். சைக்கிள்களை ஒரு சோளக் காட்டில் கழுத்தளவு வளர்ந்து கதிர் வாங்கியிருந்த சோளப் பயிருக்கு நடுவே மறைத்து வைத்துவிட்டு முகப்பு வழியாக வாழைத் தோட்டத்தில் நுழையாமல் கதிரேசனும், பிச்சைமுத்துவும், ஒரு பர்லாங் தொலைவுக்கு மேல் சுற்றிப் போய்க் காடாரம்பமான ஒரு புதரிலிருந்து தோட்டத்துக்குள் பிரவேசித்தார்கள்.

அன்று மாலையில் தான் தண்ணீர் பாய்ச்சியிருந்ததால் வாழைத் தோட்டம் சேறும் சகதியுமாக வேகமாய் நடந்து போக முடியாதபடி இருந்தது. நரிகள் வேறு குறுக்கே ஓடின. ரேடியம் உருண்டைகள் போல் இருளில் மின்னும் நரிகளின் கண்கள் கதிரேசனுக்கு ஓரளவுக்குப் பய்ம் ஊட்டின.

"பயப்படாமல் வரலாம் மிஸ்டர் கதிரேசன்! காட்டு நரிகளையெல்லாம் விட தந்திரமான குள்ளநரிகள் - மிகவும் அபாயகரமான நரிகள் - இன்று நாட்டில் தான் இருக்கின்றன. அந்த நாட்டு நரிகளுக்குப் பயப்படுவதை விட அதிகமாக நீங்கள் இந்தக் காட்டு நரிகளுக்குப் பயப்பட வேண்டியதில்லை" என்று பிச்சைமுத்து நகைத்துக் கொண்டே சொன்னார்.

அவர்கள் இருவரும் வாழைத் தோட்டத்தின் கிணற்றடியை அடைந்த போது வானில் மேகங்களிலிருந்து விலகி விடுபட்ட நிலா உச்சிக்கு வந்திருந்தது. பிச்சைமுத்துதான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கிணற்றின் அருகே இருந்த 'மோட்டார் ரூம்' கதவை மெல்லத் தட்டினார். உள்ளேயிருந்து திருமதி சற்குணத்தின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அழுகுரலிலிருந்து அத்தனை அகாலத்திலும் சற்குணம் தம்பதிகள் தூங்கவில்லை என்று தெரிந்தது. கதவைத் திறந்த சற்குணம் பிச்சைமுத்துவை உடனே அடையாளம் புரிந்து கொண்டு,

"யாரு? பிச்சைமுத்துவா? எப்படி வந்தே இங்கே? என் மகளைக் கொன்னுட்டாங்கப்பா... பாவிப் பயல்கள்" என்று குரல் தழுதழுக்க ஆரம்பித்தவர் பக்கத்தில் இன்னும் யாரோ நிற்பதைப் பார்த்துப் பேச்சை உடனே நிறுத்திக் கொண்டுவிட்டார்.

"இது யாரு உன் கூட...?"

"எல்லாம் நமக்கு வேண்டியவர்கள் தான்... உள்ளே போய்ப் பேசலாம்" என்று கதிரேசனையும் உள்ளே அழைத்துக் கொண்டு தாமே கதவை உட்புறமாகத் தாழிட்டார் பிச்சை முத்து.

தண்ணீர் இறைக்கும் மின்சார மோட்டாரும், கிரீஸ், மண்ணெண்ணெய் வாடையுமாக அந்த அறை தூசி மயமாய் இருந்தது. அறையின் ஒரு மூலையில் திருமதி சற்குணம் தலைவிரி கோலமாக விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள். "டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து வந்திருக்காரு" என்று அவளருகே போய்க் குரல் கொடுத்தார் சற்குணம். ஒரு கணம் நிமிர்ந்து நோக்கிய அந்த அம்மாளின் முகத்தைப் பார்த்ததுமே மேரி தங்கத்தின் இலட்சணமான முகம் நினைவு வந்தது கதிரேசனுக்கு. "சர்ச்சுக்குப் போகக் கூட விட மாட்டேங்கிறாங்க... இங்கே கொண்டாந்து தள்ளிக் கழுத்தறுக்கிறாங்கப்பா..." என்று சற்குணம் தொடங்கியவுடனே,

"உங்க மேலேயும் தப்பிருக்கு மிஸ்டர் சற்குணம்!" என்று ஆரம்பித்தார் பிச்சைமுத்து. "நீங்க இவ்வளவு பயந்து போய்த் 'தூக்கத்திலே நடக்கறப்பத் தவறி விழுந்து மரணம்'னு எழுதிக் கொடுத்துப்பிட்டு வந்திருக்கக் கூடாது. இதோ இந்தத் தம்பி கதிரேசன் யுனிவர்ஸிடியிலே இருந்து தான் வந்திருக்காரு. இவரும் மற்ற மாணவர்களும் உங்க பொண்ணைப் பற்றி விசாரணை வேணும்னு அங்கே யுனிவர்ஸிடி வாசலிலே உண்ணாவிரதம் தொடங்கியிருக்காங்க... நீங்க என்னடான்னா...?" மேலே சொல்ல இருந்ததைச் சொல்லாமலே பாதியில் பேச்சை முடித்து விட்டார் பிச்சைமுத்து. கதிரேசன், தானும் மற்ற மாணவர்களும் அங்கே வந்த விவரத்தைச் சற்குணத்திடம் சொல்லி அவரிடம் சில கேள்விகள் கேட்டான். பிச்சைமுத்து புறப்படும் முன்பே சொல்லியது சரியாக இருந்தது. சற்குணம் எதற்கும் பிடி கொடுக்கவில்லை. எதைக் கேட்டாலும்,

"என்னை எதுவும் கேட்காதீங்கப்பா! நான் ஏற்கனவே ரொம்ப மனசு நொந்து போயிருக்கேன். மல்லிகைப் பந்தலுக்குக் கூட்டிக்கிட்டுப் போய்த் திரும்பிக் கொண்டாந்து என் வீட்டுக்குக் கூடப் போக விடாமே ஜெயில்லே வச்ச மாதிரி இங்ஙனே கொண்டாந்து வச்சுப்பிட்டாங்க... எனக்கு ஒரு மகளே பிறந்திருக்க வேண்டாம்... அதனாலே நான் இப்படிச் சீரழியவும் வேண்டாம்" என்று நழுவினாற் போலத்தான் பதில் சொன்னார். ஆனால் பிச்சைமுத்து அவரை விடவில்லை.

"நீங்க ஏன் சீரழியப் போறீங்க? மகள் போனதினாலே உங்களுக்கு வேறே புதிய சௌகரியங்கள் கூடக் கிடைச்சிருக்கலாம்... உங்க துக்கத்தைக் கூட பஞ்சாயத்து சேர்மன் விலை பேசி வாங்கியிருப்பாரு."

"நீ என்ன சொல்றே பிச்சைமுத்து?" என்று பதறினார் சற்குணம்.

"சொல்றேன் சோத்துக்கு உப்பில்லேன்னு... உங்க மனசைத் தொட்டுப் பார்த்துக்குங்க. என்னன்னு உங்களுக்கே புரியும்."

"மிஸ்டர் சற்குணம்! இப்போது கூட ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. 'மல்லிகைப் பந்தலிலே என்னைப் பயமுறுத்தி வற்புறுத்தல் செய்து எழுதி வாங்கினாங்க. நான் எழுதித் தந்தது உண்மையில்லேன்னு' நீங்க சாட்சி சொன்னால் போதும்... அதுக்கு நீங்க இணங்கினா மாணவர்கள் எல்லாரும் உங்களுக்கு நன்றியுடையவர்களாயிருப்போம்" என்று கதிரேசன் மீண்டும் வேண்டினான். சற்குணம் இதற்குப் பதிலே சொல்லவில்லை.

"உங்கள் முயற்சி பயனளிக்காது மிஸ்டர் கதிரேசன்! எனக்குத் தெரியும்! நான் அப்போதே உங்களிடம் சொன்னேனே... அப்படி நடந்திருந்தால் நீங்கள் இவரிடம் எவ்வளவு கெஞ்சினாலும் பயன்படாது" என்றார் பிச்சைமுத்து.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது 'மோட்டார் ரூமின்' கதவு வெளிப்புறம் பலமாகத் தட்டப்பட்டது. உடன் இங்கே உட்புறம் இவர்கள் பேச்சுக் குரல்கள் எல்லாம் அப்படி அப்படியே நின்றன.

பதினைந்தாவது அத்தியாயம்

வெளியே கதவு தட்டப்பட்டதும் சற்குணம் பதறிப் போனார். அவர் கண்களில் பயமும் பதற்றமும் தெரிந்தன. ஆனால் பிச்சைமுத்து பதறவில்லை. மோட்டார் ரூமிலிருந்து பின்புறம் கிணற்றுக்குள் குழாய் போவதற்கு ஜன்னல் அளவுக்கு துவாரம் இருந்தது. கதிரேசனுக்குத் தான் செய்யப் போவதைக் குறிப்புக்கள் மூலமே புலப்படுத்தி விட்டு அந்தத் துவாரத்தின் மூலம் உடலை வளைத்து வெளியேறிக் குழாயைப் பிடித்துக் கொண்டு ஓசைப் படாமல் கிணற்றுக்குள் கீழ் நோக்கி இறங்கினார் பிச்சைமுத்து. அவரைத் தொடர்ந்து கதிரேசனும் அப்படியே செய்தான். ஓசை கேட்கும்படி தண்ணீரில் குதித்தும் விடாமல், மிகமிக மேற்பக்கமே தங்கியும் இருக்காமல் நடு ஆழம் வரை குழாயைப் பிடித்துக் கொண்டு இறங்கிச் சென்று திரிசங்கு நிலையில் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். சற்குணம் எவ்வளவுதான் பலவீனமான மனம் உடையவராயிருந்தாலும் தங்கள் இருவரையும் காட்டிக் கொடுக்கும் மோசமான காரியத்தைச் செய்யத் துணிந்து விடமாட்டார் என்ற நம்பிக்கை பிச்சைமுத்துவுக்கு இருந்தது. அவரும் கதிரேசனும் தங்கள் உடம்புகள் ஒல்லியாயிருந்ததற்காக அன்று மகிழ்ச்சியடைந்தது போல் அதற்கு முன்பு என்றுமே மகிழ்ந்ததில்லை. அறையிலிருந்து கிணற்றுக்குள் குழாய் போவதற்காக விடப்பட்டிருந்த பெரிய திறந்த ஜன்னல் போன்ற சதுரத் துவாரம் கொள்ளுமளவு ஒல்லியாயிராவிட்டால் அன்று அந்தக் கணத்தில் அவர்கள் தப்பியிருக்கவே முடியாது. பஞ்சாயத்துத் தலைவரின் ஆட்கள் ஏதோ கேட்டதும், கத்தியதும் சற்குணம் பதில் கூறியதும் குழாயைப் பற்றித் தொங்கிக் கொண்டிருந்த பிச்சைமுத்துவுக்கும், கதிரேசனுக்கும் மங்கலாகக் கேட்டன. வந்து கதவைத் தட்டியவர்கள் அதிகமாகச் சந்தேகப்பட்டுக் கிணற்றுப் பக்கம் எல்லாம் புகுந்து தேடிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. சற்குணம் சொன்ன பதிலிலேயே திருப்தியடைந்து நம்பிக்கையோடு அவர்கள் திரும்பிச் சென்று விட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிந்த பின் மீண்டும் குழாய் வழியே மேலே ஏறிக் கிணற்றின் மேற் பகுதி விளிம்புச் சுவரில் தாவித் தொற்றி மீண்டார்கள், பிச்சைமுத்துவும் கதிரேசனும். "மறுபடியும் அறைக்குப் போய் சற்குணத்திடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாமா?" என்று கதிரேசன் கேட்டபோது பிச்சைமுத்து அதைச் செய்ய வேண்டாமென்று மறுத்துவிட்டார். "சந்தர்ப்பம் சரியில்லை. ஆட்கள் சந்தேகப்பட்டுச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது நாம் தெரிந்து கொண்டதை விட அதிகமாக எதையும் மிஸ்டர் சற்குணத்தினிடம் இனி நாம் தெரிந்து கொண்டு விட முடியாது. முதலில் நாம் இங்கிருந்து வெளியேறித் தப்பியாக வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து" என்றார் பிச்சைமுத்து. அந்த வேளையில் உள்ளூர்க்காரரும் அநுபவசாலியுமாகிய அவர் பேச்சைக் கேட்டு அதன்படி நடப்பது தான் நல்லதென்று கதிரேசனுக்கும் தோன்றியது. அவர்கள் இருவரும் வாழைத் தோட்டத்திலிருந்து காட்டு வழியாகச் சுற்றி நடந்து மறுபடியும் சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பவும் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்த பின்பே நிம்மதியாக மூச்சு விட்டார்கள். அப்போது ஏறக்குறைய இரவு ஒரு மணிக்கு மேலாகியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் டூரிங் தியேட்டரில் சினிமா விட்டுவிடுவார்கள். ஆதலால் அந்தக் கூட்டத்துக்கு முந்தியே ஊருக்குள் தனித்தனியே பிரிந்து சென்று விட எண்ணினார்கள் அவர்கள்.

டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து கூறினார்: "மிஸ்டர் கதிரேசன்! இனிமேல் நீங்களும் உங்களைச் சேர்ந்த மாணவர்களும் தொடர்ந்து இந்த ஊரில் தங்கிப் புதிதாக எதையும் தெரிந்து கொள்ள வழி இல்லை. உங்களையெல்லாம் எப்படி எதில் மாட்டி வைக்கலாம் என்று இங்குள்ள பஞ்சாயத்து தலைவரும், போலீஸும் சதி செய்யக் காத்திருக்கிறார்கள். மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பச் சென்று அங்கே உங்கள் போராட்டத்தைத் தீவிரமாக வலுப்படுத்துங்கள். நீங்கள் விரும்பினால் காலை மூன்று மணிக்கு இங்கிருந்து புறப்படும் லாரி ஒன்றில் நம்பிக்கையாக உங்களை ஏற்றி அனுப்புகிறேன்."

"ஒரு லாரியில் நாங்கள் அத்தனை பேரும் போக முடியாதே சார்?"

"மல்லிகைப் பந்தலிலிருந்து கறிகாய் ஏற்றி வந்த லாரி தான். இங்கிருந்து காலியாகத் திரும்பப் போகும். டிரைவர் சீட்பக்கம் இருவரும் மற்றவர்கள் பின்னாலுமாக ஏறிக் கொண்டு போய்விடலாம்!... அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்."

கதிரேசனும் அந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தான். பாண்டியன் முதலிய மாணவர் தலைவர்களால் தாங்கள் எதற்காக அனுப்பப்பட்டோமோ, அந்தக் காரியம் இந்தக் கிராமத்தில் முடிந்து விட்டதென்றே கதிரேசனுக்கும் தோன்றியது. பணத்துக்கும் அதிகாரத்துக்கும் பயந்துவிட்ட சற்குணத்திடம் இருந்து மேலே எதுவும் தெரிய வழி இருப்பதாகத் தோன்றாததால் தன் நண்பர்களிடம் கலந்து பேசிப் பயணத்துக்குத் தயாரானான் கதிரேசன்.

பிச்சைமுத்து மாணவர்களின் பிரயாணத்துக்குச் சிரத்தையோடு எல்லா உதவிகளையும் செய்தார். பணத்துக்கும், அதிகாரங்களுக்கும் பயப்படுகிற மனப்பான்மையுள்ள ஒவ்வோர் இந்திய கிராமத்திலும் பிச்சைமுத்துவைப் போல் யாராவது ஒரு தெளிவான - துணிவான மனிதர் மட்டும் இருக்க முடிவதைக் கதிரேசன் கண்டான். கிராமத்தில் அந்த ஒரு மனிதர் இருக்கிறார் என்பதை விட அந்த ஒரு மனிதரே கிராமமாக இருக்கிறார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் என்பதை நன்றியோடு நினைத்தான் கதிரேசன். லாரியில் புறப்படுவதற்கு முன் பிச்சைமுத்துவின் வீட்டில் அவர்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வேளையில் அவருடைய புத்தக அலமாரியில் சமூகப் புரட்சிக்கும், கலாசார புரட்சிக்கும் வித்திட்ட பல நூல்களை அவன் பார்த்தான். ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம், காந்தியடிகளின் சத்திய சோதனை, கார்ல் மார்க்ஸின் மூலதனம், சேகுவேராவின் வரலாறு முதலியவற்றை அங்கே காண முடிந்தது. பிச்சைமுத்துவின் அஞ்சாமைக்கும், தெளிவுக்கும் காரணமான நூல்களைக் கதிரேசன் அங்கே கண்டபோது அந்தக் கிராமத்தில் அவருடைய தனித்தன்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் காரணம் என்ன என்பது புரிந்தது. புறப்படுவதற்கு முன்னர், "உங்களைப் போன்ற இளைஞர்களிடம் இந்த மாதிரியான சில புதிய நூல்கள் இருக்க வேண்டும்! தயவு செய்து இப்போது இதைப் பிரித்துப் பார்க்காதீர்கள். ஊரில் போய்ப் பாருங்கள். நம் சந்திப்பின் நினைவாக இந்த நூல்களை உங்களுக்கு அளிக்கிறேன்" என்று நன்றாக உறையிட்டுக் கட்டிய ஒரு புத்தகக் கட்டை அவனிடம் அளித்தார் பிச்சைமுத்து. மாணவர்களும், கதிரேசனும் லாரியில் புறப்படுவதற்குச் சில விநாடிகளுக்கு முன்புதான் அவர் அந்தக் கட்டை அளித்ததால் அவனாலும் உடனே அதைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

"உபசார வார்த்தைகள் எனக்குப் பிடிக்காது மிஸ்டர் கதிரேசன்! ஓராயிரம் பொய்யான உபசார வார்த்தைகளை மதிப்பதை விட மெய்யான தூரத்தினால் அரும்பும் ஒரு துளி கண்ணீரை அதிகம் மதிக்க வேண்டும். மறுபடியும் நாம் அடிக்கடி சந்திக்கலாம். இப்போது போய் வாருங்கள்" என்று அந்தச் சம்பிரதாய நன்றியை ஏற்காமல் சிரித்துக் கொண்டே அவர்களிடம் விடை கொடுத்தார் பிச்சைமுத்து. புறப்படுமுன் அவரால் தான் மிக அதிகமாக வசீகரிக்கப்பட்டிருப்பதைத் தனக்குத்தானே உணர்ந்தான் கதிரேசன்.

மறுநாள் அதிகாலையில் அவர்கள் மல்லிகைப் பந்தலை அடைந்த போது மாணவர் பிரதிநிதிகளின் உண்ணாவிரதம் இன்னும் தொடர்கிறது என்பது தெரிந்தது. அண்ணாச்சிக் கடை வாசலில் லாரியை நிறுத்தி இறங்கியதும் அவர்கள் முதலில் தெரிந்து கொண்ட செய்தியே இதுதான். இரண்டு நாட்கள் சமவெளிப் பகுதி கிராமத்தில் கழித்துவிட்டு மீண்டும் மலைக்கு வந்திருந்ததால் குளிர் எப்போதையும் விட அதிகமாக உறைப்பது போலிருந்தது.

இந்த இரண்டு மூன்று தினங்களில் மல்லிகைப் பந்தல் நகருக்குள் சில மாறுதல்கள் தெரிந்தன. பல்கலைக் கழக விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களில் வெளியூரைச் சேர்ந்த பெருவாரியான மாணவர்கள் தங்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றுவிட்ட காரணத்தால் நகரில் மாணவர்களின் கூட்டம் குறைந்திருந்தது. உள்ளூர் மாணவர்களும், பாண்டியன் முதலிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியமானவ்ர்களுமே நகரில் மீதமிருந்தனர். பல்கலைக் கழக விடுதிகளுக்கும் 'ஸ்டாஃப் குவார்ட்டர்'ஸுக்கும் போலீஸ் காவல் இன்னும் நீடித்துக் கொண்டிருந்தது. மேரி தங்கத்தின் மரணத்துக்குக் காரணமான இளம் விரிவுரையாளர் குடும்பத்தோடு வெளியேறி, எங்கோ இரகசியமாக வெளியூர் போயிருந்தார். இரவோடு இரவாகப் போலீஸ் ஜீப்பிலேயே போலீஸார் உதவியுடன் அவர் தப்பி வெளியேறிச் சென்றதாகப் பேசிக் கொண்டார்கள். பூட்டப்பட்டிருந்த அவர் வீடு இன்னும் போலீஸ் காவலில் பாதுகாக்கப்பட்டது. துணைவேந்தர் கல்வி மந்திரியையும், கவர்னரையும் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். ஊர் நிலவரங்களைப் பற்றி அண்ணாச்சியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பாண்டியனும் மற்றவர்களும் உண்ணாவிரதம் இருக்கும் இடமாகிய பல்கலைக் கழக வாசலை ஒட்டிய பகுதிக்குப் புறப்பட்டுப் போனார்கள் கதிரேசன் முதலியவர்கள்.

அங்கே பல்கலைக் கழகத்தின் முக்கிய வாயிலின் நடுவே பொதுவில் மூங்கில் தட்டியிட்டு மறைக்கப்பட்ட இரண்டு கீற்றுக் கொட்டகைகள் போடப்பட்டிருந்தன. கொட்டைகைகளில் பெஞ்சுகள் போட்டு விரிப்புக்கள் விரித்து மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தார்கள். தலையணைகளும், கம்பளிப் போர்வைகளும் தென்படவே குளிர் என்றும், பனி என்றும் பாராமல் உண்ணாவிரதம் இருந்தவர்கள் அங்கேயே இரவிலும் இருப்பது தெரிய வந்தது. ஒரு கீற்றுக் கொட்டகையில் மாணிவிகள் ஆறு பேரும், மற்றொரு கீற்றுக் கொட்டகையில் மாணவர்கள் ஆறு பேரும் தளர்ந்து சோர்ந்து போய்க் காட்சி அளித்தனர். கீற்றுக் கொட்டகைகளின் இருபுறமும் போலீஸார் இருந்தார்கள். ஒரு கூட்டம் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தது. உண்ணாவிரதக் கொட்டகைகளின் முகப்புக்களிலும், மேற்புறமும் கோரிக்கை வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. உண்ணாவிரதம் இருக்கிறவர்களுக்குப் பார்க்க வந்தவர்கள் அணிவித்த மாலைகள் பக்கத்தில் குவிந்திருந்தன. சில மாணவ மாணவிகள் அருகே படிப்பதற்குப் புத்தகங்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் அந்த அதிகாலையிலேயே படித்துக் கொண்டும் இருந்தார்கள். சிலர் சோர்ந்து போய்ப் படுத்துக் கொண்டிருந்தார்கள்.

கதிரேசன் பார்க்கச் சென்ற போது பாண்டியன் படித்துக் கொண்டிருந்தான். மோகன்தாஸ் சோர்ந்து போய்த் தலையணையில் சாய்ந்திருந்தான். கிராமத்தில் தெரிந்து கொண்டு வந்த விவரங்களையும், மேரி தங்கத்தின் பெற்றோரைச் சந்தித்ததையும், டிரில் மாஸ்டர்பிச்சை முத்து மூலம் அறிந்த உண்மைகளையும் விளக்கமாகப் பாண்டியன், மோகன்தாஸ் இருவரிடமும் விவரித்தான் கதிரேசன்.

"மேரி தங்கத்தின் தந்தையான சற்குணம் நம்மோடு ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்காவிட்டாலும் நாம் உண்மைக்காகத் தொடர்ந்து போராட வேண்டும். இந்த விஷயத்தில் நியாயம் கிடைக்கிற வரை நமது போராட்டம் நிற்காது" என்றான் பாண்டியன்.

"நிறையப் பணத்தைக் கொடுத்து மிரட்டி மிஸ்டர் சற்குணத்தின் வாயை அடக்கி விட்டார்கள் என்றால் இனி அவரை நம்பிப் பயனில்லை" என்றான் மோகன்தாஸ்.

அப்போது மல்லிகைப் பந்தல் நகர மாதர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் மாலை சூட்டி ஆதரவு தெரிவிப்பதற்காக மாதர் சங்கத் தலைவியும், காரியதரிசியும், மற்றவர்களும் ஒரு காரில் வந்து இறங்கினார்கள். முதலில் கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகளுக்கு மாலை சூட்டிவிட்டு அப்புறம் மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தார்கள் அந்த மாதர் சங்கத் தலைவி முதலியவர்கள். அவர்களோடு கண்ணுக்கினியாளும் எழுந்திருந்து வந்தாள். களைப்பும், சோர்வும் மிகுந்த அந்த உண்ணாவிரத நிலையிலும் அவள் மான் குட்டி போல் துள்ளி நடந்து வந்து மாணவர்களை எல்லாம் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அந்த மாதர் சங்கத்தினருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தாள். காதோரங்களில் சுருண்டு சுழலும் கேசமும், ஒளி திகழும் கண்களும், இனிய நளினப் புன்னகையுமாக அவளைத் திடீரென்று மிக அருகில் பார்த்ததும் அப்போதுதான் முதன் முறையாகச் சந்திக்கும் ஒரு புதிய அழகியைப் போல் அவள் பாண்டியனின் பார்வையில் தோன்றினாள். வந்தவர்கள் மாலை சூட்டிவிட்டுச் சென்ற பின்பும் கூடக் கண்ணுக்கினியாள் மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதிகளில் தங்கிப் பாண்டியனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். பாண்டியன் அவளை வம்புக்கு இழுத்தான்:

"கண்ணே! உண்ணாவிரதம் தான் உன்னை இவ்வளவு கவர்ச்சியாகச் செய்ய முடியும் என்றால் நீ இன்னும் ஒரு வாரம் அதிகமாகக் கூட உண்ணாவிரதம் இருக்கலாம்..."

"யாராவது கேட்டால் சிரிக்கப் போகிறார்கள். 'கண்ணே, மூக்கே' என்றெல்லாம் கூப்பிட இதென்ன பழைய 'வள்ளி திருமண' நாடகமா, என்ன?"

"பின்னே வேறெப்படித்தான் கூப்பிடுவது உன்னை? சுருக்கியும் கூப்பிட முடியாமல் முழுசாகவும் கூப்பிட முடியாமல் உங்கப்பா இப்படி உனக்கொரு பெயர் வைத்துத் தொலைத்திருக்கிறாரே! இதற்கு நான் என்ன செய்வது? உன் பேரைச் சுருக்கிக் கூப்பிட்டா 'கண்ணே'ன்னு தான் வருது."

"அதற்காக இத்தனை பேர் முன்னிலையில் இப்படிக் 'கண்ணே' 'மூக்கே'ன்னு கொஞ்சத் தொடங்கிறதுதான் நியாயமா?"

"அதாவது இரகசியமாகக் கொஞ்ச வேண்டியதைப் பகிரங்கமாகக் கொஞ்சக் கூடாது என்கிறாயா? சபாஷ்! நீ கெட்டிக்காரி..."

"இப்படியெல்லாம் பேசினால் நான் உடனே திரும்பிப் போக வேண்டியதுதான். நிலக்கோட்டைக்குப் போன கதிரேசன் குழுவினர் திரும்பி வந்து பேசிக் கொண்டிருந்தார்கள்; என்ன சொன்னார்கள் என்று தெரிந்து கொள்ளலாமே என்று பார்த்தால் அதைச் சொல்லாமல் எதை எதையோ பேசி, நீங்கள் ரொம்பத்தான் விளையாடுகிறீர்கள்..."

"விளையாடுவதற்கு நாம் குழந்தைகள் அல்ல."

"இப்போதெல்லாம் குழந்தைகள் அதிகம் விளையாடுவதில்லை. நம்மைப் போன்றவர்கள் தான் அதிகமாக விளையாடிக் கொண்டிருக்கிறோம்."

"இதைத்தான் அப்பா அம்மா விளையாட்டு என்கிறார்கள்!... பிரதர்" என்று நடுவே குறுக்கிட்டான் மோகன்தாஸ். அதைக் கேட்டு, "நான் போகிறேன். இனி இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என்னால்" என்று பொய்க் கோபத்தோடு விருட்டென்று எழ முயன்ற கண்ணுக்கினியாளைக் கையைப் பிடித்து இழுத்து அருகே உட்கார வைத்தான் பாண்டியன். அவள் உட்கார்ந்ததும், "அவன் மேலென்ன தப்பு? நீ விளையாட்டைப் பற்றிச் சொன்னதனால் அந்த விளையாட்டின் பெயரைச் சொன்னான் அவன்" என்று மோகன்தாஸுக்குப் பரிந்து பேசிவிட்டுக் கதிரேசன் தெரிவித்த செய்திகளைப் பாண்டியன் அவளிடம் கூறினான்.

பாண்டியன் கூறியவற்றைக் கேட்டதும் அவள், "அந்தப் பெற்றோர் இப்படி நடந்து கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்றாள்.

உடனே பாண்டியன், "யார்தான் அப்படி எதிர்பார்த்தார்கள். நானும் கூடத்தான் அப்படி எதிர்பார்க்கவில்லை. நீயும் நானும் புத்திபூர்வமாக அளப்பதால் நம் கணக்குப் பிசகிப் போய்விடுகிறது. ஆனால் இப்போதெல்லாம் பணத்தை அளவு கோலாக வைத்து மனிதர்கள் நிறுக்கப் படுகிறார்கள். அந்த நிறுவையில் மிஸ்டர் சற்குணம் விலைக்குப் போய்விட்டார்..." என்றான்.

"அவர் எப்படியும் தொலையட்டும். உண்மை நமக்குத் தெரியும். இந்த அட்டூழியத்துக்குக் காரணமான விரிவுரையாளரை இந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து துரத்துகிற வரையில் நாம் விடக்கூடாது."

"அதுதான் உறுதியாயிற்றே!"

கண்ணுக்கினியாள் எழுந்து மாணவிகள் பகுதியில் திரும்பிப் போய் அமர்ந்து கொண்டாள். 'பல்கலைக் கழகத்தை உடனே திறக்க வேண்டும்', 'மேரி தங்கத்தின் தற்கொலையை மூடி மறைக்காதே', 'உடன் விசாரணைக்கு ஏற்பாடு செய்க', 'குற்றம் புரிந்தவர் யாராயிருந்தாலும் தண்டிக்கப்படுவதே நியாயம்', 'மந்திரிக்குச் சொந்தமானால் மனிதனுக்கு நியாயம் இல்லையா' என்பது போன்று அங்கே எழுதி வவக்கப்பட்டிருந்த வாசகங்களைப் படித்தபடி எதிரே வந்து நின்ற கூட்டத்தில் சிலர், மாணவ நலநிதிக்காக அங்கே வைக்கப்பட்டிருந்த டப்பா உண்டியலில் காசுகளையும் ரூபாய் நோட்டுக்களையும் போட்டு விட்டுப் போனார்கள். பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், டீன்கள், யாரும் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த பகுதியில் வந்து எட்டிப் பார்க்கவே இல்லை. பூதலிங்கம் மட்டும் யாருக்கும் அஞ்சாமல் யாரை நினைத்தும் கவலைப்படாமல் தொடர்ந்து இரண்டு மாலை வேளைகளில் அங்கு வந்து மாணவர்களைச் சந்தித்து அவர்களோடு அமர்ந்து கனிவாக உரையாடி விட்டுப் போனார். துணைவேந்தரும் ரிஜிஸ்திராரும் மாணவர்கள் உண்ணாவிரதத்தால் மிகவும் பயந்து போயிருப்பதாகவும், பயத்தோடுதான் வி.ஸி. சென்னைக்குப் புறப்பட்டுப் போயிருப்பதாகவும், பூதலிங்கத்திடம் பேசியதிலிருந்து பாண்டியனுக்குத் தெரிந்தது. மேரி தங்கத்திடம் தவறாக நடந்து கொண்டு அவள் தற்கொலைக்குக் காரணமாயிருந்த மதனகோபால் என்ற விரிவுரையாளரைப் போலீஸும் பல்கலைக் கழக நிர்வகமுமே, எச்சரித்து அங்கிருந்து வெளியேற்றி வேறு ஊரில் போய்த் தங்கும்படி அறிவுரை கூறித் தக்க பாதுகாப்போடு அனுப்பிவிட்டதாகவும் பூதலிங்கம் தெரிவித்தார். நகர மக்களிடையேயும், மல்லை இராவணசாமியின் கட்சியைத் தவிர உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடையேயும், மாணவர்களுக்குப் பேராதரவு இருந்தது. இராவணசாமியின் கட்சியினர் மட்டும், 'உண்ணாவிரதம் இருந்தால் உடம்பு இளளக்கும். உடம்பு இளைப்பது மாணவர்களுக்கு நல்லது - இப்படிக்கு உடல் நலம் நாடுவோர் சங்கம்' - என்று கற்பனையாக ஒரு பொய்ப் பெயரைக் கீழே போட்டுக் கிண்டலான சுவரொட்டி ஒன்றை அச்சிட்டு மல்லிகைப் பந்தல் நகரம் எங்கும் ஒட்டியிருந்தார்கள். இது மாணவர்களின் கொதிப்பையும் குமுறலையும் அதிகப்படுத்தி இருந்தது. கோழைத்தனத்தினாலும் பயத்தினாலும் மல்லை இராவணசாமியின் ஆட்கள் அந்தச் சுவரொட்டியிலும் தங்கள் கட்சிப் பெயரை அச்சிட அஞ்சிப் பொய்யாக, 'உடல் நலம் நாடுவோர் சங்கம்' என்று போட்டிருந்தாலும் எம்.எல்.ஏ. தான் அதை அச்சிட்டு ஒட்ட ஏற்பாடு செய்தார் என்பதை அண்ணாச்சி உளவறிந்து கொண்டு வந்து சொல்லிவிட்டார்.

கதிரேசன் போன்ற மாணவர்கள் நிலக் கோட்டையிலிருந்து திரும்பிய தினத்திற்கு மறுதினம் உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலை மிகவும் தளர்ந்து போய்விட்டது. அன்று பிற்பகலில் அநேகமாக ஆறு மாணவிகளும், ஆறு மாணவர்களும் தளர்ந்து படுத்துவிட்டார்கள். சிலர் நிலை கவலைக்கிடமாக ஆகியிருந்தது. மாணவர்களுக்கு ஆதரவாக தாங்களும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக மல்லிகைப் பந்தல் வட்டாரத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் வேறு அறிவித்திருந்தது. துணைவேந்தர் இன்னும் சென்னையிலிருந்து திரும்பவில்லை. பதிவாளர் பயந்து நடுங்கினார். உண்ணாவிரதம் இருக்கும் பன்னிரண்டு பேர்களில் ஒருவருக்கு ஏதாவது நேர்ந்து விட்டாலும் நகரில் உள்ள ஆயிரக் கணக்கிலான மாணவர்கள் கொதித்து எழுவார்களே என்பது தான் பதிவாளரின் பயமாக இருந்தது. அவர் போலீஸ் அதிகாரியைச் சந்தித்தார். போலீஸ் அதிகாரி சென்னை ஐ.ஜி.யோடு ஃபோனில் பேசினார். ஐ.ஜி. மந்திரியைப் போய்ப் பார்த்துக் கலந்து ஆலோசனை செய்தார். மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழக விவகாரம் மல்லிகைப் பந்தல் நகரத்தோடு போகாமல் மாநிலம் முழுவதும் உள்ள இளம் மாணவ சமூகத்தைக் குமுறி எழச் செய்து விடுமோ என்று மந்திரிக்கும் உள்ளூரப் பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஜம்பத்தையும் வறட்டுத் திமிரையும் விட்டுக் கொடுக்க அவர் தயாராயில்லை. அவருடைய கட்சியும் தயாராயில்லை. அதிகாரத்தை முழு மூச்சோடு பயன்படுத்த நினைத்தார் அவர். அதன் விளைவு அன்று மாலையே மல்லிகைப் பந்தலில் உண்ணாவிரதம் இருந்த மாணவ மாணவிகள் பன்னிரண்டு பேர்களும் ஐ.பி.சி. செக்ஷன் முந்நூற்று ஒன்பதின்படி 'தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக'க் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பெற்று ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார்கள். கதிரேசன், பிச்சைமுத்துவின் வார்த்தைகள் பலித்து விட்டதைக் கண்ணால் பார்த்தான்.

"நிச்சயமாகத் தற்கொலை செய்து கொண்டு விட்ட ஒரு மாணவியைப் பற்றி விசாரிக்காமல் மூடி மறைக்கிறார்கள். அதே சமயத்தில் சும்மா உட்கார்ந்திருப்பவர்கள் மேல் 'தற்கொலை முயற்சி' என்று குற்றம் சுமத்திக் கைது செய்கிறார்கள்" என்று ஊரார் தங்களுக்குள் பேசி அரசாங்கத்தை எள்ளி நகையாடும்படி காரியங்கள் நடந்தன. அமைதியாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்களின் முயற்சியைத் தந்திரமாக முறியடிக்க அரசாங்கம் மேற்கொண்ட நரித்தனமான காரியத்தால் மல்லிகைப் பந்தல் நகரப் பொதுமக்களும், பெற்றோர்களும், தொழிலாளர்களும் கொதித்தெழுந்தனர். மாணவர்களைக் கைது செய்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இரவிலேயே போலீஸார் நகர எல்லைக்குள் யாரும் எதற்காகவும் ஒன்று சேர முடியாதபடி உடனே தடை உத்தரவும் போட்டுத் தடுத்துவிட்டார்கள்.

பதினாறாவது அத்தியாயம்

மேரி தங்கத்தின் தற்கொலை பற்றியும், மாணவர்களின் உண்ணாவிரதம் பற்றியும், கோரிக்கைகள் பற்றியும் மதுரையிலிருந்தும், சென்னையிலிருந்தும் வெளி வருகிற எல்லாத் தினசரிகளிலுமே விரிவாகச் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு விட்டதால் பிரச்னை தமிழ் நாடளாவியதாக மாறிவிட்டது. மல்லிகைப் பந்தலைச் சேர்ந்த மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களின் மாணவர்களும், அநுதாப ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்தினார்கள். மிகவும் துணிவுள்ள சில பத்திரிகைகள், 'மேரி தங்கத்தின் தற்கொலைக்கு மந்திரியின் உறவினரான ஒரு விரிவுரையாளர்தான் காரணம் என்று மல்லிகைப் பந்தல் மக்களிடையே பரவலாக ஒரு பேச்சு இருப்பதை' மறைக்காமல் முன் வந்து பிரசுரித்திருந்தன. பல்கலைக் கழகத்தைக் காலாண்டுத் தேர்வுக்கும் முன்பே மூடி, விடுமுறையும் விட்டுவிட்டதால் பெரும்பாலான வெளியூர் மாணவர்கள் மூடிய ஐந்தாறு தினங்கள் வரை விடுதிகளுக்கு வெளியே அலைக்கழிக்கப்பட்டு ஊர் திரும்பி இருந்தனர். மாணவர்களின் உண்ணாவிரதம் மிகவும் தந்திரமாகவும் சமயம் பார்த்தும் ஒடுக்கப்பட்டதை எதிர்க்கப் போதுமான எண்ணிக்கை பலமுள்ள அளவு மாணவர்கள் அப்போது அங்கே அந்தப் பல்கலைக்கழக நகரத்துக்குள் இல்லை. ஐ.பி.ஸி. முந்நூற்றொன்பதாவது செக்ஷன் படி கைது செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு இன்ஜெக்ஷன் மூலம் உணவுச் சத்து அளித்து அவர்களுடைய உண்ணா நோன்பை அரசாங்கமே முறித்து விட்டது. ஐ.பி.ஸி. 309-ன் படி பல்கலைக் கழக வாயிலில் உண்ணா விரதம் இருந்தவர்கள் கைது செய்யப்பட்ட மாலை வேளையில் உடனே நகரப் பொதுமக்களிடமும், பெற்றோர்கள், தொழிலாளர்களிடமும் ஏற்பட்ட குமுறலையும் கொதிப்பையும் கூடப் போலீசார் தடையுத்தரவின் மூலம் ஒடுக்கிவிட்டார்கள். தடையை மீறியும் அவர்கள் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தத் துணிந்திருந்தார்கள். 'கட்சிச் சார்புள்ள அரசாங்கத்தினர் சட்டங்களையெல்லாம் தீயவர்களிடமிருந்து நல்லவர்களைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்துவதை விடத் தங்கள் கட்சியையும், ஆட்சியையும் எதிர்ப்பவர்களிடமிருந்து தங்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளப் பயன்படுத்தி விடுகிறார்கள். பெரும்பாலான சமயங்களில் சட்டங்களால் பொதுமக்கள் பாதுகாக்கப் படுவதில்லை. ஆட்சிகளும் ஆள்பவர்களுமே பாதுகாக்கப்படுகிறார்கள்' என்ற உணர்வு அப்போது மல்லிகைப் பந்தல் நகர் முழுவதும் பரவியிருந்தது. அந்த நகரத்தில் அப்போது ஏற்பட்டிருந்த குமுறலையும் கோபத்தையும் போலீசாரின் தடையுத்தரவு மட்டுமின்றி இயற்கையும் வேறு சேர்ந்து கொண்டு தடுத்து விட்டது. மாணவ மாணவிகள் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்ட தினத்தன்று இரவு மழை பிடித்துக் கொண்டு விட்டது. மற்ற நகரங்களில் வரும் மழைக் காலத்துக்கும், மல்லிகைப் பந்தலைப் போன்ற மலை நாட்டு நகரம் ஒன்றில் வரும் மழைக் காலத்துக்கும் மிகுந்த வேறுபாடு இருந்தது. மல்லிகைப் பந்தல் நகரில் வரும் மழைக்காலம் என்பது தொடர்ந்து சில மாதங்களுக்கு நகரின் பொது வாழ்க்கையையே அடங்கச் செய்துவிடக் கூடியது. புறாக்கூடுகளில் ஒடுங்கும் புறாக்களைப் போல் மக்கள் கம்பளிப் போர்வைகளிலும், உல்லன் கோட்டுகளிலும், நனையாத மழை அங்கிகளிலும், கணப்புகள் கதகதப்பாக எரியும் வீடுகளிலும், வெதுவெதுப்பான அறைகளிலுமே தங்கிவிடக்கூடிய காலம் அது. இந்த மாதங்களில் பல்கலைக் கழகத்திலிருந்து நகருக்குள் வருவதும், பல்கலைக் கழகத்துக்குள் போவதும் குறைந்து விடும். பல்கலைக் கழகம் மிகமிக அமைதியானதொரு தனி நகரம் போல் விலகித் தெரியும். போராட்டங்கள், பூசல்கள் அதிகம் நடத்த முடியாத மாதங்கள் இவை. பல்கலைக் கழக மைதானமும், பூங்காக்களும், ஏரியும், படகுத்துறையும், மரத்தடிகளும் ஆளரவமின்றி - மௌனமாக அடை மழையில் குளித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்தக் குளிர்ந்த மாதங்களில் வகுப்பறைகளில், பரிசோதனைக் கூடங்களில், நூல் நிலையங்களில் எங்கும் ஒருவித அமைதி தென்படும். இந்த மழைக் காலத்து மாதங்களில் பல்கலைக் கழகமும், நகரமும், ஆரவாரமோ, கலகலப்போ இன்றி மிகவும் 'ஸீரியஸ்ஸாக' இருப்பது போல் தோன்றுவதை முதற் பார்வையிலேயே யாரும் சுலபமாகப் புரிந்து கொண்டு விட முடியும். அங்கே மழைக்காலத்தின் அடையாளமே இதுதான்.

ஆனால் இந்த ஆண்டிலோ மழையே சில வாரங்கள் தாமதமாகத் தான் தொடங்கியிருந்தது. இதே மழை நான்கைந்து தினங்களுக்கு முன்னதாகவே தொடங்கியிருக்குமேயானால் பாண்டியனும் மற்ற மாணவ மாணவிகளும் உண்ணாவிரதத்துக்காக கொட்டகைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கவே முடியாமற் போயிருக்கும். போலீஸார் அவர்கள் மேல் 'தற்கொலை செய்து கொள்ள முயற்சி' என்று குற்றத்தைச் சுமத்திக் கைது செய்த இரவு மழை பிடித்துக் கொண்டதனால் அடுத்த இரண்டு தினங்களில் அதை எதிர்த்து யாரும் அங்கே எதுவும் செய்ய முடியவில்லை.

மூன்றாம் நாள் துணைவேந்தர் சென்னையிலிருந்து திரும்பி இருந்தார். பல்கலைக் கழக 'சிண்டிகேட்' அந்த வாரத்திற்குள் மிகவும் முக்கியமாகச் சந்திக்கப் போகிறது என்ற செய்தியும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. துணைவேந்தர் அவசர அவசரமாகப் பல்கலைக் கழகத்தை மூடியதும், விடுதிகளைக் காலி செய்து மாணவர்களை விரட்டியதும் உடனே மாநிலத் தலைநகருக்குச் சென்றதும், திரும்பிய உடன் வரப்போகிற பட்டமளிப்பு விழாவுக்கு முன்பாக நல்ல மழைக் காலத்தில் அங்கே சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டியிருப்பதும் சந்தேகத்துக்கு உரிய காரியங்களாக மற்றவர்களுக்குத் தோன்றின. பொது மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் பல வதந்திகள் உலாவின. அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.

உண்ணாவிரதப் பந்தலிலிருந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்ட பன்னிரண்டு பேரில் மாணவிகள் ஆறு பேரையும் இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ விடுவித்து விட்டார்கள். அதற்குள்ளேயே பத்திரிகைகளில் செய்திகளைப் பார்த்துவிட்டு உண்ணாவிரதம் இருக்கும் மகளின் நிலைமையை அறிவதற்காகக் கண்ணுக்கினியாளின் தந்தை கந்தசாமி நாயுடு மதுரையிலிருந்து புறப்பட்டு வந்திருந்தார்.

கந்தசாமி நாயுடு மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் வந்து இறங்கியவுடன் நேரே அங்கிருந்து அண்ணாச்சி கடைக்குத்தான் போய்ச் சேர்ந்தார். பழைய நாடகக் கம்பெனி முதலாளியைச் சந்தித்ததில் அண்ணாச்சிக்கு மகிழ்ச்சி தலைகால் புரியவில்லை.

"உங்கள் தள்ளாத வயசிலே குளிர் காலத்திலே இந்த மலைக்காட்டு ஊரைத் தேடி நீங்கள் ஏன் அலையணும் நாயினா? எனக்கு ஒரு வரி எழுதியிருந்தீங்கன்னா செய்ய வேண்டியதை நானே செஞ்சிருப்பேனே?" என்று அவரை வரவேற்றார் அண்ணாச்சி.

கந்தசாமி நாயுடு அதே சிவப்புக்கல் கடுக்கனும், கதர் மயில்கண் கதர் வேஷ்டியும், முக்கால் கைச்சட்டையும், ராஜபார்ட் முகக்களையும், முன் தலையில் வழுக்கையும், பிடரியில் சுருள் சுருளாக நரைத்த கிராப்புமாக முன்னை விடப் பத்து வயது முதுமையையும் ஏற்று, மாறாத புன்னகையோடு விளங்கினார். தன்னைக் கும்பிட்ட அண்ணாச்சியை வாழ்த்திவிட்டு, "ஏதோ உண்ணாவிரதம்னு பேப்பர்லே பார்த்தேன் தம்பீ! நவராத்திரி வேற வருது. 'கண்ணு'தான் வீட்டிலே கொலு வைக்கிறது வழக்கம். அதுக்கு நெனவு தெரிஞ்ச நாளிலேயிருந்து அதுதான் கொலு வைக்குது. இந்த வருஷம் இங்கே கொண்டாந்து சேர்த்துப் பிட்டோம்கிறதுக்காகக் கொலு இல்லாமல் போயிடக் கூடாது. லீவோ விட்டாச்சு. இனிமே இங்கே என்ன வேலை? அதனால நாமே கூட்டிக்கிட்டுப் போயிடலாம்னு புறப்பட்டு வந்தேன். அது என்ன பேப்பர்லே என்னென்னவோ போட்டிருந்தானே தம்பீ. அந்த நிலக்கோட்டைக்காரப் பொண்ணு ஏன் தண்ணீலே விழுந்து செத்துப் போச்சு...? அதுலே யாருமே சம்பந்தப்பட்டிருக்காங்க? என்ன சமாசாரம்? ஊர்லே பத்தும் பலதுமாப் பேசுகிறாங்களே?" என்று விசாரித்தார் நாயுடு. நடந்த விவரங்களை அண்ணாச்சி அவரிடம் தெரிவித்தார்.

"நீ சொல்றதைக் கேட்டாப் பயமாயில்ல இருக்கு! இந்த மாதிரி வாத்தியாருங்க இருக்கிற எடத்திலே வயசு வந்த பொண்ணுங்களைப் படிக்க விடறது கூடத் தப்புப் போலிருக்கே" என்று அலுத்துக் கொண்டார், அண்ணாச்சி கூறிய விவரங்களைக் கேட்ட நாயுடு.

"எல்லா வாத்தியாருங்களையும் அப்படிச் சொல்லிட முடியாது நாயினா! இந்த யுனிவர்ஸிடியிலே மொத்தம் எண்ணூறு வாத்தியாருங்க இருக்காங்க. 'டீச்சிங் ஸ்டாஃப்'ங்கிற இந்த எண்ணூறு பேரைத் தவிர 'நான் - டீச்சிங் ஸ்டாஃப்'னு மத்தவங்க ஒரு ஐநூறு பேர் தேறும். அப்பிடி இருக்கிற ஆயிரத்து முந்நூறு பேர்லே ஒரு பத்து இருபது பேர்தான் மோசமானவங்களா இருக்காங்க. மத்தவங்கள்ளாம் ரொம்பப் படிப்பு, மானம், மரியாதையோடு நல்லா இருக்கிறவங்கதான். மோசமாகவும், ஒழுக்கக் குறைவாகவும், அரசாங்கமும் தங்களுக்கு வேண்டியவங்க கையிலே இருக்குதுன்னுதான் எதுக்கும் துணிஞ்சிடறாங்க. எதையும் தங்களாலே மூடி மறைச்சிட முடியும்னுதான் தப்பாகப் போறாங்க... மத்தவங்க அத்தனை பேரும் தங்கள் படிப்பிலே மலையாக உயர்ந்தவங்கன்னா, இந்தப் பத்திருபது பேரும் அரசியல் சிபார்சிலே வேலைக்கு வந்தவங்களா இருப்பாங்க... இவர்களுக்குத் தொழில் திறமை குறைவாகவும், கட்சி அதிகார செல்வாக்கினாலே ஒரு மிருக பலம் அதிகமாகவும் வந்திடுது... இதுதான் நிலைமை" என்றார் அண்ணாச்சி.

நல்ல வேளையாக மதுரையிலிருந்து நாயுடு வந்த தினத்தன்று காலை மழை இல்லை. கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகள் அறுவரும் விடுதலையாகி இருந்தனர். கண்ணுக்கினியாள் மல்லிகைப் பந்தல் நகரிலேயே ஒரு கல்லூரித் தோழியோடு அவள் வீட்டில் தங்கியிருந்தாள். நாயுடு வந்திருக்கும் செய்தியைக் கடைப் பையன் ஒருவன் மூலம் கண்ணுக்கினியாளுக்கு அண்ணாச்சி சொல்லி அனுப்பினார். கண்ணுக்கினியாள் பத்தே நிமிஷயங்களில் வந்து சேர்ந்தாள். தன் கடையிலிருந்து அண்ணாச்சி அவளைத் தேடி அனுப்பிய பையனைப் பின்னால் நடந்து வரச் சொல்லிவிட்டு அவன் வந்த சைக்கிளில் தானே ஏறிக் கொண்டு நாயினவைப் பார்க்க விரைந்து வந்திருந்தாள் அவள்.

"அடடே! நீயே சைக்கிளில் ஏறிக்கிட்டு அவனை நடந்து வரச் சொல்லிட்டியா தங்கச்சி...? தங்கச்சிக்கு சைக்கிள் விடத் தெரியும்கிறதையே இன்னிக்குத்தான் பார்க்கிறேன் நான்..." என்று அவளை வரவேற்றார் அண்ணாச்சி. அவள் பதில் கூறினாள்: "இந்த ஊர்லே காலார நடக்கிறதைப் போல சுகமான காரியம் வேறே எதுவும் இல்லே அண்ணாச்சி! நாயினாவை உடனே பார்க்கணும்கிற அவசரத்துக்காக இன்னிக்குச் சைக்கிளிலே வந்தேன். எனக்குச் சைக்கிள் நல்லா விடத் தெரியும். ஸ்கூட்டர் கூடப் பழகியிருக்கேன். இங்கே வந்தப்புறம் அதுக்கெல்லாம் வாய்ப்பில்லே..." என்று அண்ணாச்சியிடம் கூறிவிட்டுத் தன் தந்தையின் பக்கம் திரும்பி, "வாங்க நாயினா" என்றாள் அவள்.

"என்னம்மா? உன்னை ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போகலாம்னு தான் வந்தேன். நவராத்திரிக் கொலு வருது. நீ என்னவோ உண்ணாவிரதம் கிண்ணாவிரதம்னு இங்கே ஊரையே கலங்கப் பண்ணிக்கிட்டிருக்கிறதா பேப்பர்லே பார்த்தேன். பயமாயிருந்தது. அதுதான் நானே புறப்பட்டு வந்திருக்கேன். இன்னிக்கே கடைசிப் பஸ்ஸிலே புறப்படலாமா? உன் சௌகரியம் எப்படி? எனக்கு இந்த ஊர் குளிரு தாங்க முடியலே" என்று அவள் தந்தை உடனே பிரயாணத்தைப் பற்றி கூறினார்.

"நாயனா! இப்பிடி அவசரப்பட்டீங்கன்னா எப்படி முடியும்? தங்கச்சி, சிநேகிதிங்க கிட்டச் சொல்லிட்டுப் புறப்படணுமில்லே? கொஞ்சம் டயம் கொடுங்க..." என்று அவள் கவலையை அந்தரங்கமாகப் புரிந்து கொண்டு அவள் சார்பாகத் தாமே நாயுடுவிடம் வேண்டினார் அண்ணாச்சி. அவரும் அவருக்கு இணங்கினார். தந்தையும் மகளும் அண்ணாச்சி கடையின் பின்புறம் இருந்த அறையில் அரை மணி நேரம் குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். அண்ணாச்சி அங்கேயே நாயுடுவின் பகல் உணவிற்கு ஏற்பாடு செய்தார்.

"நாயினா! நீங்க சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ளே நான் சொல்ல வேண்டியவங்களைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு வந்திடலாம்னு பார்க்கிறேன். நான் சாப்பிட்டாச்சு. நீங்க சாப்பிட்டதும் பகல் மூணரை மணிக்கு நேரா மதுரைக்கு ஒரு எக்ஸ்பிரஸ் பஸ் இருக்கு. அதிலே போயிடுவோம்" என்று தந்தையிடம் கூறிவிட்டு, அண்ணாச்சியைத் தன்னோடு ஒரு நிமிஷம் வெளியில் வந்து போகுமாறு குறிப்புக் காட்டினாள் கண்ணுக்கினியாள். அண்ணாச்சியும் அதைப் புரிந்து கொண்டு நாயுடுவை உள் அறையிலேயே விட்டுவிட்டு அவளோடு கடை முகப்புக்கு வந்தார்.

இன்னும் விடுவிக்கப் படாமல் ஆஸ்பத்திரியில் போலீஸ் காவலிலேயே இருந்த பாண்டியனையும் மோகன்தாஸையும் மற்ற மாணவர்களையும் சந்திப்பது எப்படி என்று அண்ணாச்சியிடம் கவலை தெரிவித்தாள் அவள். ஆஸ்பத்திரியில் இருந்த போதும் கூட மாணவர்களும் மாணவிகளும் தனித்தனி வார்டுகளில் இருந்ததனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. போலீஸ் காவலும் கடுமையாக இருந்தது. மாணவிகளை மட்டும் விடுவித்த பின்பும் கூட பாண்டியன் முதலியவர்களை மற்ற மாணவர்களோ, அரசியல் தொடர்புடையவர்களோ வந்து சந்திக்க முடியாமல் போலீஸார் தடுத்திருந்தனர்.

"அங்கே ஆஸ்பத்திரியிலே வார்டில் காவலுக்கு இருக்கிற போலீஸ்காரங்க அவ்வளவாகக் கெடுபிடிக்காரங்க இல்லே. நான் போனப்ப அத்தனை தடையிருந்தும் என்னைப் பார்க்க விட்டாங்க. நீயும் போயிப் பாரு, தங்கச்சீ! முடியலேன்னா எங்கிட்ட வந்து நீ சொல்ல வேண்டியதை ஒரு லெட்டரா எழுதிக் குடுத்திட்டா நான் அதைத் தம்பிக்கிட்டச் சேர்த்திட முடியும்" என்றார் அண்ணாச்சி. அவளுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. தோழியின் வீட்டுக்குச் சென்று அவளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மழைக்குப் பாதுகாப்பாகக் குடைகளோடு பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டுக்கு முதலில் போனாள் அவள். அவர் உதவி செய்தாலோ, உடன் வந்தாலோ ஆஸ்பத்திரியில் பாண்டியனைச் சந்திப்பது சுலபமாயிருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. அவளும் அவள் தோழியும் பல்கலைக் கழக ஆசிரியர் வீடுகள் இருந்த பகுதிக்குள் சென்று பேராசிரியர் பூதலிங்கத்தின் இல்லத்தை அடைந்த போது அவருடைய மகள் கோமதிதான் ஹாலில் அமர்ந்து வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். அந்த மனத்துயரம் நிறைந்த வேளையில் வீணை வாசிப்பதைக் கேட்பது இதமாக இருந்தது. "அப்பா இல்லையா கோமதி? எனக்கு ஒரு முக்கியமான காரியமாக உடனே அவரைப் பார்த்தாக வேண்டும். சாயங்காலம் நான் ஊருக்குப் போகணும்கிறதாலே இப்பவே வந்தேன்" என்று கண்ணுக்கினியாள் வினவியதும் "வி.ஸி. திடீர்னு ஸ்டாஃப் கவுன்ஸில் எமர்ஜென்ஸி மீட்டிங்குக்குக் கூப்பிட்டனுப்பி அப்பா போயிருக்கார். வர எவ்வளவு நேரமாகுமோ தெரியலையே?" என்று பதில் சொன்னாள் கோமதி.

இதைக் கேட்டதும் வெளியே யாருக்கும் தெரியாமல் பல்கலைக் கழக எல்லைக்குள் மாணவர்களின் இயக்கத்துக்கு எதிராக என்னென்னவோ நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. துணைவேந்தர் மிகவும் தந்திரமாகத் தம்மைக் காத்துக் கொள்ளும் காரியங்களில் முனைந்திருக்கிறார் என்பது புரிந்தது. இந்த வேளையில் பாண்டியன் முதலியவர்களோடு அங்கே தங்காமல் தான் மட்டும் ஊருக்குப் போகலாமா என்று அவள் மனம் மெல்லத் தயங்கியது. கோமதி மேலும் சில விவரங்களைக் கூறினாள்.

"உனக்குத் தெரியுமா கண்ணுக்கினியாள்? அந்த லெக்சரர் மதனகோபால் இங்கிருந்து பத்திரமாகத் தப்பிப் போவதற்கும் நம் வி.ஸி. சொல்லித்தான் போலீஸும் வேண்டிய உதவிகளைச் செய்ததாம். காலையில அப்பாவைத் தேடி ஜுவாலஜி டிபார்ட்மெண்ட் தங்கராஜ் சார் வந்திருந்தார். தங்கராஜிடம் அப்பா சொல்லிக் கொண்டிருந்த போது நான் கேட்டேன். 'ஒழுக்கமில்லாதவர்களைப் பாதுகாத்துத் தப்பச் செய்து கொண்டே மற்றவர்களுக்கு அமைதியையும் ஒழுக்கத்தையும் உபதேசித்தால் யார் தான் நம்புவார்கள்? இந்த வி.ஸி. இரகசியமாக மதுரைக்குப் போய் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்குப் பறந்து அமைச்சரின் பிறந்த தின நாளில் அவருக்கு மாலை சூட்டி மலர்க் கிரீடம் வைத்து விட்டுத் திரும்புகிறார். பல்கலைக் கழகம் என்ற சுதந்திர அமைப்பின் தலைவராக நடந்து கொள்ளாமல், மந்திரிகளின் ஏஜெண்டு போல் செயல்படுகிறார். தேர்தலில் வென்ற மாணவர்கள் அதைக் கொண்டாட அனுமதி கேட்டதற்குப் 'பல்கலைக் கழக எல்லைக்குள் கொண்டாடக் கூடாது' என்று மறுத்து விட்டார். இப்போது வென்ற மாணவர்கள் தோற்று, மந்திரிகளின் கட்சிக்கு வேண்டிய மாணவர்கள் வென்றிருந்தால் இவர் நிச்சயமாக இப்படி இடம் தர மறுத்திருக்க மாட்டார். இவரே இரகசியமாக ஒரு தரப்புக்கு ஆதரவாக இருந்து கொண்டு அப்புறம் எல்லாத் தரப்பு மாணவர்களின் தலைவராகவும் எப்படி விளங்க முடியும்? மேரி தங்கத்தின் தற்கொலைக்கு மதனகோபால்தான் காரணம் என்று தெரிந்த பின்பும் அவரை இவர் ஏன் பதவியிலிருந்து வெளியேற்றத் தயங்குகிறார்? தவறு செய்த ஒருவர் மந்திரிக்கு உறவினர் என்பதற்காக இவர் ஏன் தாட்சண்யப் படவேண்டும்? தவறு செய்தவர்களிடம் தாட்சண்யப்படுவது என்பது தவறுகளிடமே தாட்சண்யம் காட்டுவதற்குச் சமமானதுதான் என்பது இவருக்கு ஏன் புரியவில்லை? இவ்வாறு தவறுகளுக்கு நடுவே 'ஸ்டாஃப் கவுன்ஸிலை'க் கூட்டி மற்றவர்களிடம் பூசி மெழுக என்ன தான் இருக்கிறதோ தெரியவில்லை' என்று அப்பா தங்கராஜ் சாரிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். அப்பாவுக்கு 'ஸ்டாஃப் கவுன்ஸில்' மீட்டிங்குக்குப் போகவும் வி.ஸி.யைப் பார்க்கவுமே பிடிக்கவில்லை. தங்கராஜ் சார்தான், 'நாம் நாலு பேர் போகாமல் விட்டால் எதிர்க் குரல் கூட இருக்காது. அவர்கள் விருப்பம் போல் எல்லாவற்றையும் முடிவு செய்து விடுவார்கள். அது நடக்காமல் இருக்கவாவது நாம் போக வேண்டும்' என்று வற்புறுத்தி அப்பாவைக் கூப்பிட்டுக் கொண்டு போயிருக்கிறார். அநேகமாகத் திரும்பி வருகிற நேரம் தான். நீ இன்னும் அரை மணி நேரம் காத்திருந்தால் அப்பாவைச் சந்தித்து விடலாம்" என்றாள் கோமதி.

கண்ணுக்கினியாளும் அவளுடைய தோழியும் காத்திருந்தார்கள். பகல் இரண்டரை மணிக்குப் பேராசிரியர் பூதலிங்கமும் தங்கராஜ் சாரும் திரும்பி வந்தார்கள். வரும் போதே அவர்கள் இருவரும் எதற்காகவோ துணைவேந்தரைக் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் உள்ளே நுழையவும் காலையிலிருந்து சற்று வெளிவாங்கியிருந்த வானம், மூடிக் கொண்டு மழை மீண்டும் கொட்டத் தொடங்கவும் சரியாக இருந்தது. கண்ணுக்கினியாளும், அவளுடைய தோழியும் பேராசிரியர்களுக்கு எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்கள்.

"வா அம்மா! நீ இன்னும் ஊருக்குப் போகவில்லையா? மாணவிகளைத்தான் விடுதலை செய்து விட்டார்களே? நீ அன்றைக்கே ஊருக்குப் போயிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்?" என்று கண்ணுக்கினியாளைக் கேட்டார் பூதலிங்கம். தந்தை ஊரிலிருந்து வந்திருப்பதையும் மாலையில் தான் அவரோடு ஊர் திரும்ப இருப்பதையும் கண்ணுக்கினியாள் அவரிடம் கூறினாள். போலீஸ் காவலில் இருக்கும் மாணவர்கள் ஆறு பேரையும் எப்படி விடுவித்து வெளியே கொண்டு வருவது என்பது பற்றியும் ஆஸ்பத்திரிக்குப் போய் அவர்களைச் சந்திப்பது பற்றியும் யோசனை கேட்டாள்.

"பெய்லில் வருவதோ மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வருவதோ மாணவர்களுக்குப் பிடிக்காது அம்மா! பாண்டியனே அப்படி எல்லாம் செய்ய விரும்ப மாட்டான்... இப்போதிருக்கிற நிலைமையைப் பார்த்தால் அவர்களைச் சீக்கிரம் விடுதலை செய்யவும் மாட்டார்கள் போலிருக்கிறது. ஏதேதோ பொய்க் குற்றச் சாட்டுக்களை மாணவர்கள் மேல் சுமத்தவும் இரகசிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. என்ன செய்யலாம்? தேவதைகள் நிதானமாக நுழைய அஞ்சும் இடங்களில் முட்டாள்கள் சரேலென்று அவசரமாகவே நுழைந்து விடுகிறார்கள். அதிகாரச் செல்வாக்கு உள்ளவர்களின் தலையீடு இந்த நாட்டின் பல்கலைக் கழகங்களை எப்படி எப்படியோ ஆக்கிவிட்டது. சர்க்கார் அதிகாரிகளை நண்பர்களாகவும் மாணவர்களை விரோதிகளாகவும் நினைக்கும் மனப்பான்மை உள்ள வரை, நம் வி.ஸி.யை யாரும் திருத்த முடியாது அம்மா! இன்னிக்கு 'ஸ்டாஃப் கவுன்ஸிலி'லேயும் ஒரே தகராறு தான். எங்களைப் போன்ற ஆசிரியர்கள் எல்லாரும் மாணவர்களுக்காக அனுதாபப் படுகிறோம். ஆனால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. இப்போது நான் உன்னோடு ஆஸ்பத்திரிக்கு வந்தால் கூட என்னைக் கூப்பிட்டு, 'நீ ஏன் ஆஸ்பத்திரிக்குப் போய் மாணவர்களைப் பார்த்தாய்?' என்று கேட்பார்கள் போலிருக்கிறது. நீங்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்த போது நான் வந்து பார்த்தேன் இல்லையா? அதுவே வி.ஸி.க்குப் பிடிக்கவில்லை. இன்றைக்கு ஸ்டாஃப் கவுன்ஸில் மீட்டிங்கில், 'நம்மில் சில ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களைத் தூண்டிவிடுவது போல் அடிக்கடி போய்ப் பார்க்கிறார்கள். அது எனக்குத் தெரியும்' என்று என்னை மறைமுகமாகக் குத்திக் காட்டிப் பேசினார் வி.ஸி. டாக்டர் பொழில்வளவனாரும், பண்புச் செழியனும் நாள் தவறாமல் வி.ஸி.யிடம் என்னைப் பற்றி கோள் சொல்லுகிறார்களாம். இதற்கெல்லாம் நான் பயப்படவில்லை என்றாலும், நிலைமையை உணர்ந்து எச்சரிக்கையாயிருக்கிறேன்" என்றார் பேராசிரியர் பூதலிங்கம். பேராசிரியர் தங்கராஜும் கூட இருந்ததால் பூதலிங்கத்திடம் மேலும் அதிகமாக எதையும் பேச முடியாமல் போகவே சொல்லி விடை பெற்ற பின் மழையோடு மழையாய்த் தன் தோழியோடு ஆஸ்பத்திரிக்குச் சென்றாள் கண்ணுக்கினியாள். ஆஸ்பத்திரியில் பாண்டியனை அவளால் சந்திக்க முடியவில்லை. வேறு எந்த வெளி மாணவர்களும் உள்ளே காவலில் இருக்கும் அந்த ஆறு மாணவர்களைச் சந்திக்க முடியாமல் போலீஸ் காவல் விதிகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. உடனே அவசரமாக அண்ணாச்சி கடைக்குத் திரும்பிப் பாண்டியனுக்கு ஒரு சுருக்கமான கடிதத்தை எழுதிக் கொடுத்து விட்டு அண்ணாச்சியையும் பஸ் ஸ்டாண்டு வரை உடனழைத்துக் கொண்டு நாயினாவோடும், வழியனுப்ப வந்த தோழியோடும் ஊர் புறப்பட பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றாள் அவள். மழை கடுமையாயிருந்ததால் பஸ் ஸ்டாண்டுக்குப் போய்ச் சேருவது சிரமமாயிருந்தது. எப்படியோ குடைகளைக் கொண்டு சமாளித்து பஸ் ஸ்டாண்டை அடைந்து விட்டார்கள். நாயினாவையும், கண்ணுக்கினியாளையும், அவள் தோழியையும், மழைக்கு நனையாமல் நிற்க வைத்து விட்டு டிக்கட் வாங்கச் சென்ற அண்ணாச்சி கால் மணி நேரம் கழித்து வெறுங் கையோடு திரும்பி வந்து, "இருபத்தேழாவது மைலில் ஆடுகாத்தான் பாறைக்குப் பக்கத்திலே மலை சரிந்து பதினைந்து இருபது கெஜ தூரத்துக்கு ரோடு மண் மூடிப் போச்சாம்! நாளைச் சாயங்காலம் வரை பஸ் போகவோ வரவோ முடியாதாம் தங்கச்சீ! நாளன்னிக்குத்தான் பார்க்கணும். நாயினாவுக்கு இந்த ஊர்க் குளிரை இன்னும் கொஞ்சம் அனுபவிக்கணும்னு தலையிலே எழுதியிருக்கிறப்ப என்ன பண்ணலாம்?" என்றார்.

பதினேழாவது அத்தியாயம்

மல்லிகைப் பந்தலிலிருந்து மதுரைக்குச் செல்லும் மலைப் பகுதிச் சாலையின் மண் சரிந்து மூடியதன் காரணமாகப் பிரயாணம் தடைப்பட்டதில் நயினாவுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருந்ததோ அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது கண்ணுக்கினியாளுக்கு. எப்படியாவது அந்தப் பிரயாணம் நின்று போய்விட வேண்டும் என்று தான் அவள் தவித்தாள். அவளுடைய தவிப்பும், ஏக்கமும் வீணாகவில்லை. பாண்டியனைப் பார்த்துச் சொல்லி விடைபெற்றுக் கொள்ள முடியாமல் அவன் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது, தான் மட்டும் நவராத்திரி மகிழ்ச்சியை நாடித் தந்தையோடு ஊருக்குப் போவதில் அவளுக்கு மனமேயில்லை. பிரயாணம் நின்று போகும்படி இருபத்தேழாவது மைலில் ஆடுகாத்தான் பாறைக்குப் பக்கத்தில் சரிந்த மலையை வாழ்த்தியது அவள் உள்ளம். அவர்கள் பஸ் நிலையத்துக்குச் செல்லும் போது இருந்ததை விட இப்போது மழை மேலும் அதிகமாயிருந்தது. காற்று வேறு சுழித்துச் சுழித்து வீசவே குடை பிடித்துக் கொண்டு நடந்தாலும் நனைந்துவிடும் போலிருந்தது! பிரயாணம் இல்லை என்று ஆனாலும் கூட மழை ஓரளவு குறைந்த பின்பே பஸ் நிலையத்திலிருந்து திரும்ப முடியும் என்று ஆகிவிட்டது. காற்றும் மழையும் அவ்வளவு கடுமையாயிருந்தன.

பஸ் நிலையத்தில் பிரயாணிகள் தங்குவதற்காகப் போடப்பட்டிருந்த நீண்ட தகரக் கொட்டகையில் கூட ஓரங்களில் மழைச்சாரல் அடித்து நனைந்துக் கொண்டிருந்தது. கலைந்து போக முடியாமல் மழையினால் அங்கே தங்க நேர்ந்து விட்டவர்கள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றார்கள். அண்ணாச்சி அங்கே தென்பட்ட தமக்குத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் நாயினாவை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசிக் கொண்டிருந்தார். கண்ணுக்கினியாளோ தம் மனத்தின் அந்தரங்கமான மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ளவும் முடியாமல் உடன் இருந்த வகுப்புத் தோழியோடு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.

"இந்த ஊரில் பலர் மழைக் காலத்தை வெறுக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ இந்த ஊரின் கோடைக் காலத்தை விட மழைக்காலம் தான் பிடித்திருக்கிறது. அறையிலேயே அடைத்துக் கொண்டு நமக்கு விருப்பமான ஆசிரியர்களின் நாவல்களை ஒவ்வொன்றாகப் படித்துத் தீர்க்க ஏற்ற காலம் இதுதான்!"

"அது மட்டுமில்லை, கண்ணுக்கினியாள்! மழைக் காலத்துக்கும் காதலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம் இலக்கியங்கள் எல்லாம் சொல்லுகின்றன!" என்று அவள் மனநிலையைப் புரிந்து கொண்டு கண்ணைச் சிமிட்டியபடி குறும்பாகப் பதில் சொன்னாள் வகுப்புத் தோழி. அவள் தன்னைச் சரியாகக் கண்டு பிடித்துவிட்டாள் என்பது கண்ணுக்கினியாளுக்குப் புரியவும் நாணம் வந்து அவளைக் கவ்விக் கொண்டது.

"சிவகாமீ! காதலைப் பற்றி நீ ஏதாவது 'தீஸிஸ்' எழுதப் போகிறாயா என்ன? ரொம்பத்தான் அதைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்து வைத்திருக்கிறாய் போலிருக்கிறதே..."

"அப்படி ஏதாவது எழுதினால் அதில் அநுபவம் உள்ளவளான உன்னைக் கேட்காமலா செய்வேன்?"

"ஏதேது வாய்க் கொழுப்பு அதிகமாகிறாற் போலிருக்கிறதே? விவரம் தெரியாமல் 'நம்ம சிவா' ரொம்ப சாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே உன் சிநேகிதகள்?"

"அண்ணாச்சி கடையில் கைவளைகளைக் கழற்றி எறிந்து, 'தேர்தல் மனுவில் கையெழுத்துப் போடத் துணிவு இல்லாவிட்டால் இந்த வளைகளை அணிந்து கொண்டு ஓடுங்கள்' என்று யாரிடம் அன்றைக்குச் சவால் விட்டாயோ அவரையே நினைத்து உருகும் பரம சாதுவாக நீதான் இன்று மாறிவிட்டாய்."

கண்ணுக்கினியாள் தன் தோழியின் இந்த நளினமான அன்புக் குற்றச்சாட்டுக்கு மறுமொழி ஏதும் சொல்ல முடியாமல் நாணித் தலைகுனிந்தாள். மழை நீரின் கனத்தால் தலை கவிழும் ஒரு மெல்லிய பூவின் நிலையில் அப்போது அவள் இருந்தாள்.

அவளே சில விநாடி மௌனத்துக்குப் பின் தோழி சிவகாமியிடம், "ஊருக்குப் புறப்பட்டுப் போவதற்குள் எப்படியாவது அவரை ஒருமுறை பார்த்துப் பேசிவிட வேண்டும் சிவகாமி! 'தற்கொலை முயற்சி' என்று உண்ணாவிரதம் இருந்த எல்லாரையும் கைது செய்தது தான் செய்தார்கள். மாணவிகளாகிய நம்மை மட்டும் ஏன் உடனே விடுதலை செய்து தொலைத்தார்கள்? கைதாகி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாவிட்டாலும் ஒரே இடத்தில் இருக்கிறோம் என்ற திருப்தி மட்டுமாவது இருந்தது... இப்போது அந்த நிம்மதியும் இல்லாமல் நான் தவிக்கிறேன்..." என்றாள்.

"பின்னென்ன? காதல் என்பதே பரஸ்பரம் தவிப்பது தானே? மனமும் உணர்வுகளும் தவிப்பதை விடப் பெரிய காதல் இந்த உலகில் வேறு எங்கே இருக்கப் போகிறது..."

"நீ சொல்வதைப் பார்த்தால் அவரும் அங்கே ஆஸ்பத்திரிக் கட்டிலில் என்னை நினைத்துத் தவித்துக் கொண்டிருப்பார் என்று ஆகிறது. எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை சிவகாமி? ஆண்கள் எல்லோருமே கல் நெஞ்சுக்காரர்கள்! பல வேளைகளில் தங்களுக்காகத் தவித்து உருகும் பேதைகளை அவர்கள் சுலபமாகவும், வசதியாகவும் மறந்து விடுகிறார்கள்."

"ஆனாலும் அந்தக் கல் நெஞ்சுக்காரர்களை நாம் மறக்க முடியவில்லை. நம்மை மறந்து விடுபவர்களையும் நாம் மறக்காமல் எண்ணி உருகும் கலப்பில்லாத அன்பைச் சகுந்தலை காலத்திலிருந்தே நாம் போற்றி வருகிறோம்."

"அப்படிப் போற்றி வருவதனால்தான் தலைமுறை தலைமுறையாகப் பல துஷ்யந்தர்கள் ஆணினத்தில் உருவாகி வருகிறார்கள். பெண்ணினத்தின் பேதமைக்குச் சகுந்தலையும் ஆணினத்தின் சோர்வுக்கு துஷ்யந்தனும் நிலையான உருவங்கள்."

"பயப்படாதே கண்ணுக்கினியாள்! பாண்டியன் அப்பழுக்கில்லாதவர். அவர் ஒரு நாளும் துஷ்யந்தன் ஆகி விடமாட்டார். நீ பாக்கியசாலி. இந்தப் பல்கலைக் கழகத்தில் காதலிக்கிற எத்தனையோ மாணவிகளுக்கு எத்தனையோ அழகான மாணவர்கள் கிடைப்பார்கள். காதலும் நிகழும். அது பெரிய காரியமில்லை. ஆனால் நீயோ மாணவர்கள் பல்லாயிரம் பல்லாயிரம் பேருக்குத் தலைவராகிற ஒரு தன்மானம் மிக்க மாணவரை உன் தலைவனாக்கிக் கொண்டிருக்கிறாய். நீ ஒரு மாணவரின் அன்புச் சிநேகிதி மட்டும் இல்லை. ஒரு தலைவனின் அன்புத் தோழி என்பது பெருமைக்குரியது."

வகுப்புத் தோழி சிவகாமி இப்படிக் கூறிக் கொண்டிருந்த போது வெளியே பெய்து கொண்டிருந்த மழை தனியத் தொடங்கியிருந்தது. அதற்குப் பதில் கண்ணுக்கினியாளின் உள்ளத்தில் ஆனந்தமழை பெய்யத் தொடங்கியிருந்தது. அவள் இதயம் உடனே ஓடிச் சென்று பாண்டியனைக் காணத் துடித்தது. ஏற்கெனவே அண்ணாச்சியிடம் எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை திருப்பி வாங்கி இன்னும் விரிவாக எழுதிக் கொடுத்து விட விரும்பினாள் அவள். அவர்கள் பஸ் ஸ்டாண்டிலிருந்து திரும்பும் போது நன்றாக இருட்டி விட்டது. மஞ்சு மூட்டத்தில் தெரு விளக்குகள் மங்களாக மினுக்கத் தொடங்கியிருந்தன. 'பிளவர்ஸ் கார்னரிலு'ம் ஏரியை ஒட்டிய சாலைகளிலும் இருளோடு இருளாகக் குடைகள் நகர்ந்து கொண்டிருந்தன. மஞ்சு மூட்டத்தில் ஆட்கள் தெரியாமல் குடைகளே நடப்பது போல் தோன்றிய காட்சி வேடிக்கையாக இருந்தது. ஏரியிலே 'போட்' கிளப் கட்டிடமும் படகுத் துறைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. பல்கலைக் கழக காம்பஸுக்குள் இருந்த ஏரியை விட நாலைந்து மடங்கு பெரிய இந்த ஏரி நகரத்தின் நடு மையமாகக் கண்ணாடி பதித்தது போல் அமைந்திருந்தது. கடைத் தெருக்கள், தியேட்டர்கள், பெரிய பூங்காக்கள், நகரசபை அலுவலகம், டவுன் ஹால் முதலிய எல்லாம் இந்த ஏரியின் நான்கு புறத்து வீதிகளிலுமே அமைந்திருந்தன. ஏரியைச் சுற்றி நான்கு புறமும் மரங்களடர்ந்த பகுதியில் மேட்டிலும் சரிவுகளிலுமாக அமைந்திருந்த குடியிருப்பு வீடுகளின் விளக்கு ஒளிகள் ஏரி நீர்ப்பரப்பில் பிரதிபலித்த காட்சி மிக மிக அழகாயிருந்தது.

பஸ் நிலையத்திலிருந்து திரும்பும் போது கண்ணுக்கினியாளின் தந்தை நாயுடுவையும் தங்கள் வீட்டிலேயே வந்து தங்குமாறு அன்புடன் வேண்டினாள் சிவகாமி. நாயுடு அதற்கு இணங்காமல் அண்ணாச்சியோடு தங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்.

"நீ உன் சிநேகிதியோடு போய்த் தங்கிக்க தங்கச்சீ! நாயினாவை நான் பார்த்துக்கிறேன். உல்லன் கோட் கம்பளி எல்லாம் குடுத்து இந்தக் குளிரை அவரே மறக்கும் படி செஞ்சிடறேன்" என்று தந்தையைப் பற்றி மகளிடம் உறுதிமொழி கொடுத்து அனுப்பினார் அண்ணாச்சி. புறப்படுமுன் அண்ணாச்சியிடம் அந்தக் கடிதத்தை நினைவாகக் கேட்டுத் திருப்பி வாங்கிக் கொண்டாள் அவள். வேறொரு விரிவான கடிதம் எழுதி மறுநாள் அவரிடம் கொடுப்பதாகவும் அதை அவர் எப்படியும் பாண்டியனிடம் சேர்த்து விட வேண்டும் என்றும் குறிப்பாகப் புலப்படுத்தியிருந்தாள். ஏரிக்கரைப் பூங்கா அருகிலேயே அவர்கள் பிரிந்து விட்டார்கள். அப்போதே மழை மீண்டும் மெல்ல மெல்லத் தொடங்கியிருந்தது.

கடைக்குத் திரும்பியதும் பையனை அனுப்பிச் சூடாக இட்டிலி வாங்கி வரச் செய்து நாயுடுவும் அண்ணாச்சியும் இரவு உணவை முடித்துக் கொண்டார்கள். கடை முகப்பை ஒட்டிப் பின்புறம் இருந்த அறையில் ஒரு கட்டிலில் மெத்தை கம்பளி விரிப்புக்களோடு நாயுடுவைக் குளிருக்கு அடக்கமாகப் படுக்க வைத்து விட்டுப் பையன்களோடு உட்கார்ந்து கடை வரவு செலவைக் கவனிக்கத் தொடங்கினார் அண்ணாச்சி. கடைப் பையன்களில் ஒருவன் நாயுடுவின் கட்டிலருகே அங்கிருந்த பெஞ்சுகளில் இரண்டை இணைத்துப் போட்டு விரிப்பு கம்பளியெல்லாம் போர்த்தி அண்ணாச்சிக்காக ஒரு படுக்கை ஆயத்தம் செய்து கொண்டிருந்தான். வெளியே மழை வலுத்து இருந்தது. அலுப்பு அதிகமாக இருந்ததாலோ அல்லது தள்ளாமை காரணமாகவோ நாயுடு படுத்த உடனேயே இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி விட்டார். மழை நிற்கும் என்று அதிக நேரம் எதிர்பார்த்தும் நிற்காத காரணத்தால் கடைப் பையன்கள் மழைக் கோட்டுகளை அணிந்து கொண்டு குடையோடு புறப்பட்டுப் போய்விட்டார்கள். பையன்கள் போனதும் உள்ளே இருந்தபடியே கடை முகப்பை அடைக்கும் இரும்பு ஷட்டரை இறக்கி விட்டு விட்டு விளக்கை அணைப்பதற்காகச் சென்ற அண்ணாச்சி வெளிப்புறம் இரும்பு அடைப்பு தட்டப்படுவதைக் கேட்டு ஸ்விட்சை 'ஆஃப்' செய்யாமலேயே மறுபடி ஷட்டரைத் தூக்கினார். வெளியே மழைக் கோட்டும் குடையுமாக அண்ணாச்சிக்கு மிகவும் வேண்டியவரான போலீஸ் கான்ஸ்டேபிள் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அப்போது போலீஸ் உடையில் இல்லை. ஆனால் அவசரமாகவும், பரபரப்பாகவும் காணப்பட்டார். "வாங்க தம்பீ! ஏது இந்த அடை மழையிலே? இந்நேரத்துக்கு இந்தப் பக்கமா வந்தீங்க..." என்று அண்ணாச்சி அவரை வரவேற்றார். அவர் உள்ளே வந்து கொண்டு, "முதல்லே ஷட்டரைப் போடுங்க... அப்புறம் பேசலாம். ரொம்ப முக்கியமான காரியமாகத்தான் வந்தேன்... உங்க காதிலே போட ஒரு விஷயம் இருக்கு... அவங்க பண்ற அக்கிரமம் என் மனசு பொறுக்கலே... நான் வந்து சொன்னேனின்னு மட்டும் வெளியிலே வரப்படாது. ஆனா விஷயம் உடனே உங்களுக்குத் தெரியணும்..."

"என்ன விஷயம் சொல்லுங்க தம்பீ! பையங்க சமாசாரம் தானே?"

"ஆமாங்க அண்ணாச்சி! செக்ஷன் திரீ நாட் நயன்லே பிடிச்ச ஆறு பையன்களிலே ரெண்டு பேரைக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே விடுதலை பண்ணிட்டாங்க. ஆனா மாணவர் யூனியன் தலைவன், காரியதரிசி, உப தலைவன், உப காரியதரிசின்னு முக்கியமான போஸ்ட்களிலே இருக்கிற பையங்க நாலு பேர் மேலேயும் 'கிரிமினல் கான்ஸ்பியரஸி'ன்னு சார்ஜ் பிரேம் பண்ணி ஆஸ்பத்திரியிலேருந்து ஜெயிலுக்கு மாத்திட்டாங்க. அந்தப் பையன் பாண்டியனோட ஹாஸ்டல் அறையிலே வெடி மருந்துச் சாதனங்களும், நாட்டு வெடிகுண்டு தயார் செய்யற திட்டமும் இருந்ததைக் கண்டுபிடிச்சாங்களாம். மோகன்தாஸ் ரூமிலே வைஸ்சான்ஸலரையும் ரிஜிஸ்திராரையும் கொலை செய்ய வேண்டுமென்று பல மாணவர்கள் கூடி இரத்தத்திலே கையெழுத்திட்ட கடிதாசு போலீஸ் 'செர்ச்'சிலே கிடைச்சுதாம். மத்த ரெண்டு பேர் அறையிலே யுனிவர்ஸிடி 'டவர் கிளாக்'கை வெடி வைத்துத் தகர்க்கிறது சம்பந்தமாகக் கடிதாசு கிடைச்சிருக்காம்..."

"இதெல்லாம் என்ன கதை தம்பீ! யாரைக் கவிழ்த்து விட இந்த மோசடி வேலை எல்லாம் பண்றாங்க...?"

"கதைதான் அண்ணே! யுனிவர்ஸிடி யூனியன் எலெக்ஷன்லேயே இந்தப் பையங்க ஜெயிச்சது அவங்களுக்குப் பிடிக்கலே. ஜெயிச்சவங்களை எதிலியாவது மாட்டி வைக்கணும். இவங்க ரூம்களிலே அவங்களா எதை எதையோ கொண்டு போய்ப் போட்டு வேணும்னே வம்புலே மாட்டி வைக்கிறாங்க. இதுக்கு வி.ஸி. ரிஜிஸ்திரார், ஆர்.டி.ஓ., போலீஸ் எல்லாம் உடந்தை... எனக்கு மனசு கேட்கலை... உங்க காதிலே போட்டுட்டுப் போகலாம்னுதான் மழையோட மழையா ஓடியாந்தேன்..."

"வேண்டியவங்க செய்கிற தீமைகளைப் பாதுகாக்கவும், வேண்டாதவங்க செய்கிற நன்மைகளை ஒடுக்கவுமே அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகிற வரையில் அதிகாரங்களை எதிர்க்கிற மனப்பான்மை தவிர்க்க முடியாத ஒரு பொதுச் சக்தியாக இங்கே இருந்தே தீரும்... நீ வந்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி தம்பீ!... மேலே ஆக வேண்டியதை நாங்க கவனிக்கிறோம்... உன்னை நான் காமிச்சுக் கொடுக்க மாட்டேன். அந்தப் பதினெட்டாம் படிக் கருப்பன் மேல் சத்தியம். இனிமேல் கிளம்பிப் போகலாம்... யாராவது பார்த்திடாமே புறப்படு" என்று அந்தக் கான்ஸ்டேபிளுக்கு விடை கொடுத்தார் அண்ணாச்சி.

கான்ஸ்டேபிள் புறப்பட்டுப் போனபின் தூங்கிக் கொண்டிருந்த நாயுடுவை எழுப்பி, "நாயினா! நான் வெளியிலே பூட்டிக்கிட்டு ஒரு முக்கிய வேலையாப் போறேன். நீங்க நிம்மதியாகத் தூங்குங்க. நான் திரும்பி வர்றத்துக்கு நடு ராத்திரி ஆவும். கதவைத் தட்டி உங்க தூக்கத்தைக் கெடுக்காம இருக்கணும்னுதான் வெளியிலே பூட்டிக்கிறேன்னு சொல்றேன். பிளாஸ்கிலே வெந்நீர் இருக்கு. பாத் ரூம் லைட் ஸ்விட்சு உங்க கட்டிலுக்கு மேலே சுவர்லே இருக்கு" என்று அவருக்கு விவரம் கூறிய பின் வெளியேறி ஷட்டரைத் தள்ளிப் பூட்டிக் கொண்டு புறப்பட்டார் அண்ணாச்சி. மழைக்குப் பாதுகாப்பாக ரெயின் கோட், குடை, டார்ச் லைட், ஆளுயரக் கிளுவைக் கம்பு சகிதம் புறப்பட்டிருந்தார் அவர். லேக் ரோடு சந்திப்பில் போய் அங்கிருந்த பெரிய தபால் தந்தி ஆபீஸ் பொது டெலிபோன் பூத்திலிருந்து வீட்டில் ஃபோன் வசதி உள்ள உள்ளூர் மாணவர்கள் சிலருக்கு ஃபோன் செய்து உடனே தேசிய இளைஞர் சங்கக் கட்டிடத்துக்கு அவர்களை வரச் சொன்னார். ஆளும் கட்சியைத் தவிர மற்ற எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர்த் தலைவர்களுக்கும் ஃபோன் செய்தார். தொழிற் சங்கப் பிரமுகர்களையும் வரச் சொன்னார். அண்ணாச்சியின் பெருமுயற்சியால் அந்த அடைமழையில் நள்ளிரவில் பல்கலைக் கழக மாணவர்களின் பிரச்னை சம்பந்தமாகத் தேசிய இளைஞர் சங்க மாடியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுக்களையும், பொய் வழக்குகளையும் எதிர்த்துப் போராடவும், நடவடிக்கை எடுக்கவும் சர்வ கட்சியினரும் அடங்கிய 'செயற்குழு' ஒன்று அமைக்கப்பட்டது. அந்தச் செயற்குழு மறுநாள் காலையிலேயே துணை வேந்தரையும், ஆர்.டி.ஓ.வையும் தனித் தனியே சந்தித்துப் பேசுவதென்றும் முடிவாயிற்று.

எல்லா முடிவுகளையும் செய்துவிட்டு அவர்கள் கலையும் போது இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. தக்க சமயத்தில் எல்லாருக்கும் தகவல் தெரிவித்து ஒன்று சேர்த்து பேச வைத்ததற்காக அண்ணாச்சியை அனைவரும் பாராட்டினார்கள்.

மறுநாள் காலையில் முதல் நாளிரவு கான்ஸ்டேபிள் மூலம் இரகசியமாகத் தெரிந்த எல்லாக் குற்றச்சாட்டுகளுமே பத்திரிகையில் வந்துவிட்டன. மாணவர்கள் அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை யாருமே நம்பத் தயாராக இல்லை. அந்தக் குற்றச்சாட்டுக்களும், நடவடிக்கைகளும், திட்டமிட்ட பழிவாங்கல் வேலை என்பது எல்லாருக்கும் புரிந்தது.

காலையில் செய்தியைப் பத்திரிகைகளில் படித்துவிட்டுக் கண்ணுக்கினியாளும், சிவகாமியும் அண்ணாச்சியின் கடைக்கு ஓடி வந்தார்கள். அண்ணாச்சி அவர்களுக்குத் தைரியம் கூறினார். விஷயத்தைக் கேள்விப்பட்டுப் பத்திரிகையிலும் படித்துவிட்டு, "இதென்னப்பா? இரணியன் ராஜ்யத்திலே கூட இப்பிடி எல்லாம் நடந்திருக்காதே? மகா கொடுமையாயில்ல இருக்கு?" என்று வருத்தப்பட்டார் நாயுடு.

"நாயினா! இதைவிட இரணியன் ராஜ்யம் ஒருவிதத்திலே நல்லாக் கூட இருந்திருக்கும்! ஏன்னா இரணியன் ராஜ்யத்திலே இரணியன் ஒருத்தன் தான் இரணியனா இருந்திருப்பான். மத்தவங்க அத்தினி பேரும் நல்லவங்களா இருந்திருப்பாங்க. இப்ப, அதிகாரிகள், சர்க்கார், போலீஸ், நிர்வாகம், கட்சியாட்கள்னு நூற்றுக்கணக்கான இரணியனுகளை ஒரே சமயத்திலே எதிர்கொள்ள வேண்டியிருக்கு. அது தான் வித்தியாசம்" என்றார் அண்ணாச்சி.

சிறைக்குப் போய்க் காலையில் பாண்டியனையும் மற்ற மூன்று மாணவர்களையும் சந்திப்பதற்காக அண்ணாச்சியும் கண்ணுக்கினியாளும் சிவகாமியும் சென்றார்கள். நாயினாவும் வருவதாகச் சொன்னார்.

"மழையா இருக்கு! நீங்க ஏன் சிரமப்படணும்? நீங்க இங்கேயே இருங்க" என்று அவரைத் தடுத்துவிட்டார் அண்ணாச்சி. மழையோடு மழையாக மாணவர்களைச் சந்திக்கச் சிறைச்சாலைக்குச் சென்றார்கள் அவர்கள். மாணவர்களுக்குக் கொடுப்பதற்காகப் பிஸ்கெட் பொட்டலங்கள், ஆப்பிள், ஹார்லிக்ஸ் என்று ஏதேதோ வாங்கிக் கொண்டாள் கண்ணுக்கினியாள். இரவெல்லாம் கண்விழித்துப் பாண்டியனிடம் சேர்ப்பதற்காக அவள் எழுதிய கடிதம் வேறு இருந்தது. அந்தக் கடிதத்தை எழுதிய போது இருந்த உற்சாகம் இப்போது அவளிடம் இல்லை. ஆஸ்பத்திரியில் கொடுக்கலாம் என்று எழுதிய கடிதத்தைச் சிறைச்சாலையில் கொடுக்க நேரிடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அப்போது அவள் ஒரு நிலைக்குமேல் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதே விட்டாள். சிவகாமிக்கும் அண்ணாச்சிக்கும் அவளை அழுகையிலிருந்து தவிர்த்துச் சகஜ நிலைக்குக் கொண்டு வருவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

"நேற்றே பூதலிங்கம் சார் ஜாடையாகச் சொல்லியது பலித்து விட்டது அண்ணாச்சி! 'ஜெயித்த மாணவர்கள் மேல் என்னென்னவோ பொய்க் குற்றச்சாட்டுக்களை யெல்லாம் சுமத்துவதற்கு ஏற்பாடு நடக்கிறது. இதெல்லாம் எங்கே போய் நிற்கும் என்றே தெரியவில்லையம்மா' என்று அவர் நேற்றுச் சொன்னது இன்று நடந்து விட்டதே?" என்று புலம்பிக் கண்ணீர் உகுத்தாள் கண்ணுக்கினியாள்.

சிறைச்சாலையில் அவர்கள் மாணவர்களைச் சந்திக்கக் கால் மணி நேரம் அனுமதி தரப்பட்டிருந்தது. பாண்டியனைப் பார்த்ததும் கண்ணுக்கினியாள் மறுபடியும் கண்கலங்கி அழத் தொடங்கிவிட்டாள்.

சிறைக்கம்பிகளுக்கு வெளியே கையை நீட்டி அவள் கண்ணீரைத் துடைத்தபடி பாண்டியன் சொன்னான்.

"அசடே! இதற்காகவே அழுதுவிட்டால் இதைவிடப் பெரிய கொடுமைகளைத் தாங்கும் சக்தியை நீ பெற முடியாது. நியாயமான கோபத்தோடு வருகிறவர்களிடம் அமைதியையும் சாந்தத்தையும் பற்றிப் பேசுவதும், சாந்தமாகவும், அமைதியாகவும் வருகிறவர்களிடம் அதிகார மிடுக்கோடு கோபப்படுவதுமாக ஓர் ஆட்சி இங்கே நடக்கிறது. கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது, பணிந்தால் அதிகாரம் செய்வது, அதிகாரத்தை மதிக்காவிட்டால் பணிவது இதுதான் இன்றைய நடைமுறை. இதில் பயப்படுகிறவர்களும், அழுகிறவர்களும் ஜெயிக்க முடியாது. மன உறுதியோடு போராட வேண்டும். அந்த மன உறுதி எங்களுக்கு இருக்கிறது. உனக்கும் அது இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்."

இதைக் கேட்டு அவன் மனம் தேறியது. பிஸ்கட் பொட்டலங்களையும், பழங்களையும் கொடுத்துவிட்டு, "இந்த விவரமெல்லாம் தெரியுமுன் நான் உங்களுக்கு நேற்றிரவு எழுதிய கடிதம் இது. ஆஸ்பத்திரியில் இருப்பீர்கள் என்றெண்ணி எழுதினது. முடிந்தால் படியுங்கள். என்னென்னவோ மன வேதனைகளை எழுதியிருக்கிறேன். ஒருவேளை கிறுக்குத் தனமாகக் கூட உங்களுக்குத் தோன்றலாம்" என்று அந்தக் கடிதத்தையும் அவனிடம் எடுத்துக் கொடுத்தாள். அந்தச் சமயத்தில் உடன் வந்திருந்த சிவகாமியும் அண்ணாச்சியும் மற்ற மாணவர்களைப் பார்க்கப் போயிருந்தார்கள். ஏதோ மாபெரும் கிரிமினல் குற்றவாளிகளை அடைப்பது போல் அங்கே மாணவர்களைத் தனித்தனியே அடைத்திருந்தார்கள். அண்ணாச்சியும் சிவகாமியும் பாண்டியன் இருந்த சிறைக்கு வந்த பின் கண்ணுக்கினியாள் போய் மற்ற மூன்று மாணவர்களையும் தனித்தனியே பார்த்து அவர்களுக்காக வாங்கி வந்த பொருள்களைக் கொடுத்து ஆறுதலாகப் பேசிவிட்டு வந்தாள்.

அவள் எவ்வளவோ மறைக்க முயன்றும் மோகன்தாஸ், "உங்களுக்கு ரொம்ப மனக்கஷ்டமாக இருக்கும். அதிகம் அழுதிருக்கிறீர்கள். முகம் வாடியிருக்கிறது. கண்கள் சிவந்திருக்கின்றன. இத்தகைய கோலத்தில் உங்களை நான் சந்தித்ததே இல்லையே?" என்று கேட்டுவிட்டான். இந்தக் கேள்வி மறுபடியும் அவளை அழச் செய்துவிடும் போல் இருந்தது.

"குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கப் போகிற நாங்களே குற்றவாளிகளாக்கப்பட்டுப் பொய்க் குற்றங்களால் ஜோடிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நிஜக் குற்றவாளிகள் முகமூடி விரைவில் கிழிக்கப்படும். அப்போது வெற்றி மாலைகளோடு நாங்கள் வெளிவருவோம்" என்றான் மற்றொரு சிறைப்பட்ட மாணவன்.

அதற்குள் சிறையில் காவலிருந்த போலீஸ் ஆள் வந்து 'நேரமாகிவிட்டது' என்று விரட்டவே மீண்டும் பாண்டியன் அருகே வந்து கண்களில் நீர் மல்க அவனைப் பார்த்தாள் கண்ணுக்கினியாள். அவள் பார்த்தபோது அவன் அவளுடைய கடிதத்தைப் படித்து முகம் மலர்ந்து கொண்டிருந்தான். எதிரே நிழல் படர்ந்தாற் போல் தெரியவே நிமிர்ந்து பார்த்து, "அழாதே. ஒரு புன்னகையோடு போய் வா... உன் கண்ணீர் எனக்கு நினைவிருப்பதை விடப் புன்னகை நினைவிருப்பது தான் தெம்பூட்டும்" என்றான் அவன். அவன் விருப்பப்படி புன்னகை செய்ய முயன்றாள் அவள். அவன் வலது கையை அந்தக் கடிதத்தோடு உயர்த்தி ஆட்டி அவளுக்கு விடை கொடுத்தான். அண்ணாச்சி முதல் நாளிரவு தாம் ஏற்பாடு செய்த செயற்குழு பற்றிய விவரங்களைப் பாண்டியனிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு விடைபெற்றார்.

சிறைவாசலுக்கு வந்தவுடன் கண்ணுக்கினியாளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. சிவகாமி அவளை ஆதரவாகத் தாங்கிக் கொண்டாள். "வெளியே மாணவ மாணவிகளை ஒன்று திரட்டிப் போராட வேண்டிய சமயத்தில் நாம் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது கண்ணுக்கினியாள்! இனிமேல் தான் நமக்கு அதிகமான பொறுப்பும் கடமைகளும் காத்திருக்கின்றன" என்று அவள் காதருகே சொன்னாள் சிவகாமி. தோழி கூறியதைக் கேட்டதும் தன் செயலால் தானே கூச்சப்பட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் உணர்வுகளைக் கட்டுபடச் செய்தவளாய் அவர்களோடு நிமிர்ந்து நடந்தாள் கண்ணுக்கினியாள். சாலைகளில் உள்ளூர் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக எதிர்ப்பட்டார்கள். இவர்கள் மூவரும் அப்படி எதிர்ப்பட்டவர்களிடம் எல்லாம் நின்று பேசி எல்லா விவரங்களையும் தெரிவித்துக் கொண்டு போனார்கள்.

பதினெட்டாம் அத்தியாயம்

கண்ணுக்கினியாள் வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போன பின் அவள் கொடுத்து விட்டுச் சென்ற அந்தக் கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தான் பாண்டியன். மாணவர் பேரவைத் தேர்தலுக்காக அலைந்து கொண்டிருந்த போது, 'இந்தப் பேரவைத் தேர்தல் முடிகிற வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்' என்று தன்னிடம் தனிப்பட்ட அக்கறையோடும் கவலையோடும் அவள் வேண்டிக் கொண்ட தினத்தன்று அந்த வேண்டுதலாலும், அவளாலும் அவன் மனத்தில் என்ன கர்வம் ஏற்பட்டதோ அதே கர்வம் இன்றும் ஏற்பட்டது. 'புன்னகையும் நாணமும் இங்கிதப் பேச்சுக்களுமாக எங்கெல்லாம் ஓர் அந்நியமான இளம் பெண் உன்னோடு நடந்து வருகிறாளோ அங்கெல்லாம் உனது உடனடியான சொர்க்கங்கள் படைக்கப்படுகின்றன' - என்ற அந்தப் பழைய வாக்கியத்தையும் இப்போது நினைவு கூர்ந்தான் அவன். முன்னைப் போல் இப்போது அவள் அவனுக்கு அந்நியமில்லை. ஆனால் எவ்வளவு நெருக்கமாயிருந்தாலும் கூடத் தன்னை நினைத்துத் தவிக்க விடுகிற வேளையில் ஒவ்வொரு பெண்ணும் ஓர் ஆணுக்கு மிகவும் அந்நியமாகி விடுகிறாள் என்றே தோன்றியது.

போராட்டங்களிலும், மாணவர் இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திய முதற்பெருமை அவளுடையது என்பது அவன் அந்தரங்கம் அறிந்த செய்தி. அந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் பெண்கள் அனைவரிலும் பேரழகியும், வசீகரமானவளும் ஆகிய அவள் மட்டும் அன்று தான் தேர்தல் மனுவில் கையெழுத்திடத் தயங்கிய வேளையில் வளைகளைக் கழற்றி வீசித் தன்னுடைய ரோஷத்தைக் கிளறச் செய்திருக்கவில்லையானால் இதில் தான் துணிந்திருக்க முடியாது என்பதை அவன் உள் மனம் நன்கு உணர்ந்திருந்தது. அவள் மேல் நன்றியும் காதலும் ஒன்றோடொன்று போட்டி போடுகிற அளவு அவன் மனநிலை நெகிழ்ந்திருந்தது அப்போது. சிறைவாசம், பல்கலைக் கழக நிர்வாகமும், அதிகாரிகளும் சதி செய்து சுமத்தியுள்ள பயங்கரக் குற்றச்சாட்டுக்கள் எல்லாமே தூசுக்குச் சமமாகத் தோன்றும் துணிவை அவள் கடைக் கண் பார்வை அவனுக்கு அளித்திருந்தது. 'காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம்' என்று மகாகவி பாரதியார் பாடியிருந்தது சற்று மிகையான வர்ணனையோ என்று தான் முன்பெல்லாம் அவன் நினைத்திருந்தான். இப்போது அந்த நினைப்பு மெல்ல மெல்ல அவன் மனத்துக்குள் மாறிக் கொண்டு வந்தது. ஒரு விஷயம் மிகையா, உண்மையா என்று கண்டுணரும் அனுபவம் வாழ்வில் எதிர்ப்படாத வரையில் அதை மிகை என்றோ, உண்மை என்றோ தவறாக முடிவு செய்து விடுகிறோமே தவிர, நம்முடைய முடிவு அதன் நியாயமாகி விடுவதில்லை. கண்ணுக்கினியாளைச் சந்திக்கிற வரை அடைய முடியாமல் இருந்த ஒரு நளினமான அனுபவத்தை அடைந்த பின் பாரதியாரின் அந்தக் கருத்திலிருந்த உண்மையை அவன் உணர முடிந்தது.

இங்கே சிறையில் அவனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் 'பி' வகுப்புக் கொடுத்திருந்தார்கள் என்றாலும் நடைமுறையில் 'சி' வகுப்பை விடக் கடுமையாக எல்லாம் நடந்தன. அவர்களுக்குப் படிக்கக் கொடுக்கப்பட்ட செய்தித் தாள்களில் மாணவர் இயக்கம், மாணவர் போராட்டம், மல்லிகைப் பந்தல் நிகழ்ச்சிகளுக்கு எதிரொலியாக நாடெங்கும் நடந்த ஊர்வலங்கள், கண்டனங்கள் பற்றிய பகுதியை 'சென்ஸார்' செய்து தாரினால் பூசி அடித்துப் படிக்க முடியாமல் செய்து மறைத்தே கொடுத்திருந்தார்கள். ஆகவே செய்தித் தாள்களில் மூன்று நிமிஷங்களுக்கு மேல் படிக்க எதுவுமே இல்லை. உணவோ படுமோசமாயிருந்தது.

காலையில் அவள் கொடுத்த அந்தக் கடிதத்தைத்தான் அவன் திரும்பவும் படித்தான். அருகே இல்லாத பெண்ணின் ஞாபகம் எப்படி ஒவ்வொரு முறை நினைக்கும் போது அந்நியமாகிறதோ அப்படியே அந்தக் கடிதமும் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அந்நியமாகவும் புதுமையாகவும் இருந்தது பாண்டியனுக்கு.

'...முதன் முதலாக உங்களுக்கு எழுதும் இந்தக் கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரியமான வார்த்தையினால் உங்களை அழைப்பது என்றும் புரியவில்லை. எந்த வார்த்தையினால் நான் உங்களை அழைத்தாலும் அந்த வார்த்தையை எந்த ஒரு காதலியாவது எனக்கு முன்னும் தன் காதலனுக்கு எழுதும் முதற் கடிதத்திலோ, அடுத்தடுத்த பல கடிதங்களிலோ உபயோகப்படுத்தித்தான் இருப்பாள். நான் உங்களுக்கு மட்டுமே தேடி உபயோகப்படுத்த ஒரு தனி வார்த்தை கிடைக்கப் போவதில்லை. வார்த்தைகள் எல்லாமே இப்படிப் பலர் சொல்லிப் பயன்படுத்திப் பயன்படுத்தித் தேய்ந்து போனவைதாம். தேயக் கூடாத நம் பிரியத்தைத் தேய்ந்த வார்த்தைகளால் அழைக்க விரும்பவில்லை நான். வார்த்தைகளால் விவரிக்க முடியாத பிரியத்தோடும் தவிப்போடும், வேதனையோடும், இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதத் தொடங்குகிறேன். நேற்றிரவு நவநீத கவியின் 'வருங்காலக் காதலர்களுக்கு' என்ற கவிதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருந்தேன். 1967க்குப் பிறகு நவநீத கவி எழுதிய முதல் வசன கவிதைத் தொகுதி அது. அதில் ஒரு கவிதையைப் படிக்கும் போது நான் மனம் நெகிழ்ந்து போய் உங்களையும் என்னையும் பற்றியே நினைத்துக் கொண்டேன். அந்தக் கவிதையில் 'காதலின் எல்லைகளைக் காணும் வருங்காலக் காதலர்களாக' அவர் நினைக்கும் இருவராய் நாம் இருக்கப் போகிறோம் என்று என் மனம் எண்ணிப் பூரித்தது. நீங்களும் அதைப் படிக்க வேண்டும் என்பதற்காகக் கீழே அந்தப் புதிய கவிதையை அப்படியே எழுதியிருக்கிறேன்.

நட்சத்திரங்களும் முழுநிலாவும் எங்களுக்காகவே என்று
நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் இங்கே
எங்கள் காதலின் வசந்த காலங்கள் கழிந்த பின்னும்
அவை எப்போதும் போல வானில் இருந்தன.
நீல முகில்களும் மாரிக் காலத்துச் சிதநல் இரவுகளும்
எங்களுக்காகவே என்று நாங்கள் நினைத்திருந்தோம் - ஆனால்
எங்கள் காதலின் மோகங்கள் தணிந்த பின்னும்
அவை எப்போதும் போல இங்கிருந்தன.
ரோஜா மலர்களும் சந்தனக் கலவையும் தனியறைகளின் பஞ்சணைகளும்,
எங்களுக்காகவே என்று நாங்கள் நினைத்திருந்தோம் - ஆனால்
அவை எங்கள் தாகங்கள் தணிந்த பின்னும் எப்போதும் போலப்
பூத்தன, மணந்தன, பொலிந்தன, இவ்வுலகில்!
எதுவுமே எங்களோடு எங்களால் முடிந்துவிடவில்லை
நாங்கள் கழிவிரக்கமும் துயரமுமாய் மலைத்து நிற்கிறோம்
காதல் தேவதைகளே! பிரியத்தின் காவற் கடவுளர்களே!
வரப்போகிற சந்ததியிலேனும் யாராவது ஓராணும் பெண்ணும்
இந்த சுகங்களின் எல்லைகளைக் காண அநுமதியுங்கள்
தத்துவங்கள் நிலைப்பதற்காக மனிதர்களை ஏமாற்றாதீர்கள்
மனிதர்கள் நிலைப்பதற்கான சுகங்களைத் தாருங்கள்!

இந்தக் கவிதையை மட்டும் அல்லாமல் நவநீத கவியின் எல்லாக் கவிதைகளையுமே நீங்கள் படிக்க வேண்டும். என் தவிப்புக்களை நான் சொல்வதை விட நவநீத கவியின் கவிதை மூலம் அதை நான் சுலபமாக உங்களுக்குச் சொல்லி விட முடிகிறது. நாமெல்லாரும் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தோம். எங்களை மட்டும் ஆஸ்பத்திரியிலிருந்து விடுவித்து விட்டார்கள். அப்பா நவராத்திரிக்காக என்னை ஊருக்கு அழைத்துப் போக வந்திருக்கிறார்கள். நல்லவேளையாக மலைச் சரிவால் பஸ் போக்குவரத்து நின்று பிரயாணம் தடைப்பட்டு விட்டது. எங்கே உங்களைப் பார்த்துச் சொல்லி விடைபெற முடியாமல் போக நேரிட்டு விடுமோ என்று பயந்தேன். என் விருப்பப்படியே பிரயாணம் தடைப்பட்டுவிட்டது.

இன்று விடிந்ததும் தான் வேறு குற்றச்சாட்டுக்களை ஜோடித்து உங்களையும் மற்ற மூன்று மாணவர்களையும் ஆஸ்பத்திரியிலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றியது எனக்குத் தெரியும். அந்த விவரம் தெரிந்த பின்பே இந்தப் பகுதியை மறுபடி எழுதுகிறேன். பதறிப் போனேன். என் வேதனையை உங்களுக்கு நான் எப்படி உணர்த்துவது என்றே தெரியவில்லை. இந்த நிலையில் சாலைப் போக்குவரத்து ஒழுங்காகி மதுரைக்குப் பஸ் போகும் என்கிற நிலை வந்தாலும் உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு மனம் இல்லை. என் மனத் தவிப்பு நாயினாவுக்குப் புரியாது. அண்ணாச்சிக்கு ஓரளவு புரியும். அவர்தான் நேற்று இரவோடு இரவாக நகரின் சர்வ கட்சிப் பிரமுகர்களையும் சந்திக்க வைத்து இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்களை எதிர்த்துப் போரிட ஏதோ ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். நானும் மாணவ - மாணவிகளைச் சந்தித்து உண்மையை விளக்கி அவர்களை ஒன்றுபட்டு இணைந்து போராடச் செய்யப் போகிறேன். மாணவர்கள் மேல் உள்ள பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படுகிறவரை எங்கள் போராட்டம் ஓயாது. எங்கள் போராட்டம் வெற்றி பெற்று நீங்கள் வெற்றி மாலைகளுடன் சிறையிலிருந்து விடுதலை பெற்று வரப்போகிறீர்கள். உங்களை நேரில் பார்க்க முடியுமோ, முடியாதோ. எப்படியும் அண்ணாச்சி மூலம் இந்தக் கடிதத்தை உங்களுக்குக் கிடைக்கச் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மறுபடியும் உங்களைச் சந்திக்கிற வரை உங்கள் ஞாபகமாகவே இருப்பேன் என்பதை நீங்களே அறிவீர்கள். தயவு செய்து மீண்டும் ஒரு முறை வருங்காலக் காதலர்களுக்குக் கவிதையின் கடைசி ஆறுவரிகளைப் படியுங்கள்.

என்றும் உங்கள், கண்ணுக்கினியாள்

இந்தக் கடிதத்தின் கீழே 'என்றும் உங்கள்' என்பதையும் 'கண்ணுக்கினியாள்' என்பதையும் சேர்த்துப் படித்த போது ஒரு புதிய நயமான அர்த்தம் கிடைப்பது போலிருந்தது பாண்டியனுக்கு. சிறையில் மோசமான உணவு, ஆரோக்கியமற்ற சூழ்நிலை, உடற்சோர்வு இத்தனையையும் தாங்கிக் கொண்டு அன்று அவன் தெம்பாக இருந்தான். காலையில் குளிப்பதற்காக என்று அவர்களை வெளியே அனுமதித்திருந்தார்கள். அப்போது பாண்டியனும், மோகன்தாஸும் மற்ற மாணவர்களும் சந்தித்துக் கொள்ள முடிந்தது. ஓர் அண்டா வெந்நீரில் நாலு பேர் குளிக்க வேண்டியிருந்தது. சிறை அதிகாரிகள் எல்லாரும் ஏதோ பழிவாங்குவது போல் நடந்து கொண்டார்களே ஒழிய முறையாக நடந்து கொள்ளவில்லை. இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் சிறையில் நரக வேதனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. அதற்குள் நகரிலும், வெளியூர்களிலும் மாணவர் போராட்டம் வலுத்திருந்தது. மல்லிகைப் பந்தல் நகரில் ஒரு நாள் பரிபூரண ஹர்த்தால் அநுஷ்டிக்கப்பட்டது. ஹர்த்தால் தினத்தன்று மல்லை இராவணசாமியின் ஆட்கள் தெருத் தெருவாக வந்து அடைக்கப்பட்ட கடையின் கதவுகளைத் திறக்கச் செய்ய முயன்று தோற்றார்கள். ஹர்த்தாலை எப்படியாவது தோற்கச் செய்து விட வேண்டும் என்று இராவணசாமியும் அவர் ஆட்களும் செய்த சதிகள் பலிக்கவில்லை. விரக்தியில் அடைக்கப்பட்டிருந்த சில கடைகளின் முகப்பு விளக்குகளையும் போர்டுகளையும் உடைத்துவிட்டுத் திருப்தி அடைந்து போய்ச் சேர்ந்தார்கள் இராவணசாமியின் ஆட்கள். அண்ணாச்சி, கண்ணுக்கினியாள், மல்லிகைப் பந்தல் நகரப் பிரமுகர்கள் எல்லாரும் முனைந்து நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. போராட்டக் குழுவினரும் மாணவர் பிரதிநிதிகளும் முதலில் துணைவேந்தரையும், ஆர்.டி.ஓ.வையும் சந்தித்தனர். அதற்குள் எல்லா ஊர்களிலும் பரவிய போராட்டத்தினால் அங்கங்கே அரசு பஸ்கள் சில எரிக்கப்பட்டன. இரயில்கள் நிறுத்தப் பட்டன. மதுரை, கோவை, திருச்சி, நகரங்களில் மாணவர் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகை வீச்சு நடந்து போலீஸ் தடியடியில் சில மாணவர்கள் காயமுற்றனர். சென்னையிலும் போராட்டம் வளர்ந்தது. அரசாங்கம் ஸ்தம்பிக்கும் நிலை வந்தது. மேரிதங்கத்தின் தற்கொலைக்குக் காரணமான விரிவுரையாளர் மதனகோபாலை உடனே பல்கலைக் கழகத்திலிருந்து நடவடிக்கை எடுத்து வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பாண்டியன் முதலிய மாணவர்கள் மேல் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை நிபந்தனையின்றி உடனே வாபஸ் வாங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்த இரண்டு கோரிக்கைகளை ஏற்றால் ஒழியப் போராட்டம் நிற்காது என்றும் மாணவர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. மணவாளன் மதுரையிலிருந்து எல்லா ஊர்களோடும் தொடர்பு கொண்டு போராட்டத்தை முழு மூச்சுடன் நடத்த உதவி செய்தார். மல்லிகைப் பந்தலின் துணைவேந்தர் நாலைந்து நாட்களாக வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சும்படி ஆகியிருந்தது நிலைமை. அண்ணாச்சியின் உதவியால் நாயினாவை மேலும் சில தினங்கள் மல்லிகைப் பந்தலிலேயே தங்கச் செய்து விட்டாள் கண்ணுக்கினியாள். கல்வி மந்திரி மல்லிகைப் பந்தலுக்கு அவசரம் அவசரமாகப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். நகர எல்லையிலேயே அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்புக் குரல்களை முழங்கினார்கள் மாணவர்கள். துணைவேந்தர் கல்வி மந்திரி ஆகியவர்கள் கலந்து பேசி மாணவர்களின் இரு கோரிக்கைகளையும் ஏற்றனர். மேரிதங்கத்தின் தற்கொலைக்குக் காரணமான விரிவுரையாளர் மேல் நடவடிக்கை எடுத்து அவரை நீக்கினார்கள். சிறைப்பட்டிருந்த பாண்டியன் முதலிய மாணவர்கள் விடுதலை பெற்றனர். அண்ணாச்சியிடம் இருந்த மேரிதங்கத்தின் கடிதம் இரகசியமாக மணவாளனுக்கு அனுப்பப்பட்டு மணவாளன் அதைப் புகைப்படப் பிரதி செய்து சில பத்திரிகைகளில் பிரசுரம் செய்யக் கொடுத்திருந்ததனால் அந்த விவரம் பகிரங்கமாகித்தான் போராட்டமே நாடளாவியதாக வளர்ந்திருந்தது. ஆகவே அமைச்சர் முயன்றும் அதை மூடி மறைக்க முடியாமல் போய்விட்டது.

விடுதலையான தினத்தன்று பாண்டியன் முதலிய மாணவர்களை வரவேற்கச் சிறை வாயிலில் ஏராளமான மாணவர்கள் கூடியிருந்தனர். கழுத்துத் தாங்க முடியாத அளவு மாலைகள் குவிந்தன. அவனும் சகமாணவர்களும் விடுதலையான தினத்துக்கு மறுநாள் காலை கண்ணுக்கினியாளும் அவள் தந்தையும் ஊருக்குப் புறப்பட்டார்கள். விடுமுறையே இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. ஆனாலும் தேடி வந்த தந்தையை ஏமாற்றாமல் ஊர் சென்று திரும்புவதற்காகவே அவள் புறப்பட்டிருந்தாள். பாண்டியன் விடுதலையான தினத்தன்று மாலை அண்ணாச்சி கடையில் கண்ணுக்கினியாளையும் அவள் தந்தையையும் தனியே சந்திக்க நேர்ந்தது. கண்ணுக்கினியாளும், அண்ணாச்சியும் அவனைப் பற்றி நாயினாவிடம் பெருமையாகச் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார்கள். நாயினா அவனைக் கேட்டார்.

"தம்பீ! லீவுக்கு ஊருக்குப் போகலியா?"

"போகணும்! லீவே ஏறக்குறைய முடிஞ்சு போச்சு. இருந்தாலும் நாளைக்குப் புறப்படலாம்னு இருக்கேன். நானும் மதுரை வந்துதான் போகணும்."

"அப்பிடியானா வீட்டுக்கு வந்துட்டுப்போ தம்பீ! சித்திரக்காரத் தெருவிலே நம்ம வீடு இருக்கு. டிராமாக்கார நாயுடு வீடுன்னா யாரும் சுலபமா அடையாளம் காட்டுவாங்க."

"மதுரையிலே இறங்கி எங்க ஊருக்குப் பஸ் மாற நேரமும் கிடைச்சு பஸ் ஸ்டாண்டிலே இருந்து ஊருக்குள்ளே வந்தா கண்டிப்பா வரேன். 'மணவாளன்'னு எங்க மாணவர் தலைவர் ஒருத்தர் மதுரையிலே இருக்காரு. அவரையும் பார்க்க வேண்டிய வேலை இருக்கு" என்றான் பாண்டியன்.

"நீங்க மணவாளனைப் பார்க்க மட்டும் நேரம் இருக்கும். என்னைப் பார்க்க நேரம் இராது? அப்படித்தானே?" என்று கண்ணுக்கினியாள் செல்லமாகக் கோபித்துக் கொள்ளத் தொடங்கினாள். பாண்டியன் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தான். அப்புறம் சொன்னான்:

"நீயா ஏன் நான் வரமாட்டேன்னு கற்பனை பண்ணிக்கணும்? நான் அப்படிச் சொல்லலியே? வேணும்னா மணவாளனையும் கூட அழைத்துக் கொண்டு உங்க வீட்டுக்கு வருகிறேனே?... போதுமா?"

மதுரைக்காக பஸ்ஸுக்குப் புறப்படுவதற்குள் நாயினா தனியே மகளை எங்கும் போகவிட மாட்டார் போலிருந்தது. பாண்டியன் அவளையும், அவள் பாண்டியனையும் தனியே கண்டு பேசத் தவிப்பது அண்ணாச்சிக்குப் புரிந்தது. ஊருக்குப் புறப்பட பஸ்ஸுக்கு இன்னும் நான்கு மணி நேரத்துக்கு மேல் இருந்தது. இந்த நிலையில் கண்ணுக்கினியாளுக்கும், பாண்டியனுக்கும் அண்ணாச்சி ஒரு பெரிய உதவியைச் செய்தார். நாயினாவுக்கு ஆஞ்சநேயர் பக்தி அதிகம் என்பது அண்ணாச்சிக்குத் தெரியும். அந்த நாளில் எந்த ஊரில் நாடகத்துக்குப் போனாலும் அந்த ஊரிலிருந்து ஆறு மைல் தள்ளி அனுமார் கோயில் ஒன்று இருந்தாலும் தேடிப் போய்க் கும்பிட்டு விட்டு வருவார் கந்தசாமி நாயுடு.

"நாயினா! பக்கத்தில் யுனிவர்ஸிடி வடக்கு வாசலுக்குச் சமீபமா ஒரு அனுமார் கோயில் இருக்கு. இன்னிக்காவது மலைகிலை சரியாமப் பிரயாணம் சுகமாயிருக்கணும்னு போய் வேண்டிக்கிட்டு வரலாம் வாங்க..." என்று நாயுடுவைக் கூப்பிட்டுக் கொண்டு அனுமார் கோயிலுக்குப் புறப்பட்டார் அண்ணாச்சி.

"அப்படியா நேத்தே ஏன் சொல்லல்லே அதை?" என்று அனுமார் கோயில் ஒன்று மல்லிகைப் பந்தலில் இருப்பதை இவ்வளவு தாமதமாகத் தெரிவித்ததற்காக அண்ணாச்சியைக் கண்டித்தபடியே உடன் புறப்பட்டு விட்டார் நாயுடு. அவர்கள் இருவரும் அனுமார் கோயிலுக்குப் புறப்பட்டுப் போன பின் கண்ணுக்கினியாளும், பாண்டியனும் கடையிலிருந்து ஏரிக்கரைப் பூங்காவுக்குப் புறப்பட்டார்கள். மேகம் இருண்டு கொண்டு மூட்டம் போட்டிருந்தது என்றாலும் மழை இல்லை. இப்போதோ இன்னும் சிறிது நேரத்திலோ வந்து விடுவேன் என்பது போல் மழை வானிலே மிரட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் ஏரிக் கரையில் நடந்தார்கள். பாண்டியன் சொன்னான்: "என்ன இருந்தாலும் அண்ணாச்சி மிகவும் பரோபகாரி! நாம் கூட ஒரு நாள் அந்த அனுமாரைப் போய்ப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு வரவேண்டும்... அவர் தயவில் தான் நமக்கு இன்று இந்தச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது."

"அனுமாரை நீங்க கும்பிட்டு என்ன ஆகப் போகிறது? பெண்கள் கும்பிட்டாலாவது நல்ல இடத்தில் கல்யாணம் ஆகும் என்பார்கள்" என்று சொல்லத் தொடங்கிவிட்ட கண்ணுக்கினியாள் பாதியிலே எதையோ நினைத்துக் கலீரென்று சிரித்து விட்டாள்.

"உன் கேஸ் அனுமாரிடம் எடுபடாது. நீதான் காதல் கடிதம் எழுதுகிற எல்லை வரையில் வந்தாயிற்றே?" என்று கேட்டுக் கொண்டே, "இந்தக் கைதானே அதை எழுதியது?" என்று சொல்லியபடி அவள் வலது கையைப் பற்றி அழுத்தினான் பாண்டியன். அவள் செல்லமாகத் திமிறினாள்.

"ஏதேது? கேள்வி முறை இல்லை போலிருக்கிறதே? கையை விடுங்கள் முதலில்..."

"பிரியமுள்ளவளின் பூங்கையை அவள் பிரியத்துக்குரியவன் பற்றக் கூடாது என்று தான் நவநீதக் கவி 'வருங்காலக் காதலர்களுக்கு' எழுதியிருக்கிறாரோ?"

"அந்தக் கவிதை உங்களுக்குப் பிடித்திருந்ததா?" தன்னைப் பற்றிய அவன் கையை விலக்கிவிடாமலே கேட்டாள் அவள். அவன் பதில் சொன்னான்:

"அந்தக் கவிதையை விட அதை மீண்டும் பிரதி எடுத்து எழுதியவளை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது..."

ஏரிக்கரைப் பூங்காவில் இருந்த ஒரு பட்டு ரோஜாவைப் பறித்து அவள் கையில் வைத்தான் பாண்டியன்.

"ஜாக்கிரதை! என் கைக்கும் ரோஜாப் பூவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்று நீங்களே ஒரு தடவை சொல்லியிருக்கிறீர்கள்."

"உனக்கு ரொம்பப் பொல்லாத ஞாபக சக்திதான்."

"நீங்கள் சொன்னதெல்லாம் மட்டும் மறப்பதில்லை." பூங்காவின் மரங்கள் அடர்ந்த பகுதிக்கு அவர்கள் வந்திருந்தார்கள். பாண்டியனின் கரம் இப்போது அவள் தோள் மேல் இருந்தது. "உஷ்! அதோ..." என்று அவன் தழுவலிலிருந்து விலகிய அவள் சுட்டிக் காட்டிய திசையில் மாணவர் கூட்டம் ஒன்று போய்க் கொண்டிருந்தது. பூங்காவில் இவர்களைப் போலவே சில இளம் இணைகள் அங்கங்கே அமர்ந்தும் நின்றும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"உன் கையில் போடுவதற்கு என்னிடம் நீயே கொடுத்திருக்கும் இரண்டு வளைகள் இன்னும் பத்திரமாக இருக்கின்றன என்பது உனக்குத் தெரியுமா?"

"காணாமற் போன பொருள்கள் யாரிடமாவது இருந்தால் பல்கலைக் கழக விதிப்படி அவற்றை ரிஜிஸ்திரார் ஆபீஸில் ஒப்படைத்து விட வேண்டும்..."

"அப்படியானால் என் வசம் இருக்கும் வளைகளை விடப் பெரிய பொருளான உன் இதயத்தையும் அங்கே ஒப்படைத்து விட வேண்டியதுதான்."

"தப்பு! தப்பு! மன்னித்து விடுங்கள். தெரியாமல் சொல்லி விட்டேன்."

"நாம் இருவரும் துணிந்து இப்படிச் சுற்றுவதைப் பற்றி உனக்கு பயமாயில்லையா?"

"இப்படிக் கேட்பதன் மூலம் தான் நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்கள்."

"முதல் முதலாக என்னை அண்ணாச்சி கடையில் சந்தித்த அன்று நீதான் என்னைப் பயமுறுத்தினாய்..."

"இப்போது ரெண்டு பேருமாகச் சேர்ந்து வி.சி.யைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறோம்..."

"இந்த வி.சி. பயப்படுவதற்குக் கூடத் துணிவு இல்லாதவர்..."

"பயப்படுவதற்குக் கூடத் துணிவு வேண்டுமா, என்ன? வேடிக்கையாகத்தான் இருக்கிறது, நீங்கள் சொல்வது?"

"ஆமாம்! பயப்படவும் ஒரு துணிவு வேண்டும். 'தீமையை அநீதியை ஒழுக்கக் குறைவைக் கண்டு பயப்படவும் ஒரு நெஞ்சுரம் வேண்டும். அது வி.சி.யிடம் இல்லை. நியாயங்களைப் போற்ற இருக்கும் துணிவை விட அநியாயங்களை விலக்கி அவற்றுக்கு அஞ்சும் துணிவுதான் பெரியது என்று நினைக்கிறேன் நான்..."

பல்கலைக் கழகம் திறந்ததும் நவம்பரில் நேரு தினத்தை மாணவர் பேரவையின் சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள் அவர்கள். பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பும் போது சிரித்துக் கொண்டே அவன் அவளைக் கேட்டான்:

"நீ என்ன 'ஸெண்ட்' உபயோகிக்கிறாய்? உன் அருகே நடந்து வர முடியாமல் வாசனை ஆளைத் தூக்குகிறதே?"

"நான் சோப்பு, பவுடர் தவிர வாசனை ஹேர் ஆயில் கூட உபயோகிப்பதில்லை. வெறும் தேங்காய் எண்ணெய்தான்."

"பொய் சொல்லக் கூடாது?"

"நிஜமாத்தான் சொல்றேன்..."

"அப்படியானால் நீயே கமகமவென்று மணக்கிறாய் என்று அர்த்தமா?"

"சீ! ரொம்ப மோசம்! ஒரே நாளில் படு குறும்புக்காரராகி விட்டீர்கள் நீங்கள்..."

"எல்லாம் சகவாச தோஷம்..."

அன்று மாலை அவள் ஊருக்குப் புறப்பட்டாள். அவளையும் அவள் தந்தையையும் வழியனுப்புவதற்குப் பாண்டியனும் அண்ணாச்சியும் பஸ் நிலையத்துக்குப் போயிருந்தார்கள். பஸ் புறப்படு முன், "மறந்துவிடாமல் அந்த நவநீதக் கவியின் கவிதையை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்" என்று சூசனையாக அவனிடம் தன் இதய தாபத்தைச் சொல்லி விடைபெற்றாள் அவள். அதைப் புரிந்து கொண்டு அவனும் யாருமறியாமல் புன்னகை செய்தான். பஸ் புறப்பட்டதும் அண்ணாச்சியோடு திரும்புகையில் ஒரு கணம் அந்த அழகான மலை நகரமே யாருமில்லாமல் சூனியமாகி விட்டது போல் ஒரு பிரிவு பாண்டியனின் மனத்தைக் கவ்வியது. இப்படி ஒரு தவிப்பை வாழ்வில் இதற்கு முன் அவன் என்றுமே அடைந்ததில்லை.

பஸ் நிலையத்திலிருந்து அவனும் அண்ணாச்சியும் பேசிக் கொண்டே திரும்பினர். அவனும் அண்ணாச்சியும் கடைக்குத் திரும்பியதும் பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டம் பற்றித் தெரிய வந்த ஓர் உண்மை அவன் கவலை தவிப்பு எல்லாவற்றையுமே வேறு பக்கம் திசை திருப்பக் கூடியதாயிருந்தது.

பத்தொன்பதாம் அத்தியாயம்

பஸ் நிலையத்தில் கண்ணுக்கினியாளையும், அவள் தந்தையையும் மதுரைக்கு வழியனுப்பிவிட்டுத் திரும்பிய பாண்டியனை எதிர்பார்த்து அண்ணாச்சிக் கடையில் கதிரேசன் காத்திருந்தான். அண்ணாச்சியையும், பாண்டியனையும் ஒரு முக்கியமான செய்தியோடு எதிர் கொண்டான் கதிரேசன். மறுநாள் காலையில் பல்கலைக் கழக 'சிண்டிகேட்' சந்திக்கப் போவதாகவும் அந்த சிண்டிகேட் கூட்டத்தில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக் கூட ஒழுங்காக முடிக்காத அமைச்சர் ஒருவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட இருக்கிறது என்பதாகவும் கதிரேசன் தெரிவித்த போது அண்ணாச்சியும் பாண்டியனும் முதலில் அதை நம்புவதற்கு முடியாமல் தவித்தார்கள். பாண்டியன் கதிரேசனோடு பந்தயம் கூடக் கட்டினான்.

"நீ சொல்வது உண்மையாயிராது கதிரேசன்! யாராவது புரளியைக் கிளப்பிவிட்டிருப்பார்கள். நம்முடைய மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகச் சட்டங்களின் படியும், விதிகளின் படியும் பதினெட்டு சிண்டிகேட் உறுப்பினர்களும் ஒரு மனமாக முடிவு செய்தாலொழிய ஒருவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் தர முடியாது. சிண்டிகேட்டில் அவ்வளவு உறுப்பினர்களுமே 'ஆமாம் சாமி'களாக இருக்க மாட்டார்கள்..."

"இருப்பார்களோ, இருக்க மாட்டார்களோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது! எந்த மந்திரியை லெக்சரர் மதனகோபாலின் அயோக்கியத்தனங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு அளிக்கிறார் என்பதற்காக நாம் எதிர்த்தோமோ, எந்த மந்திரி காலமெல்லாம் மாணவ சமூகத்தைப் போலீஸ் அடக்கு முறையில் சிக்க வைத்துத் துன்புறுத்தியிருக்கிறாரோ அதே மந்திரிக்கு - ஏதோ சில சுயநல வசதிகளுக்கான ஒரு லஞ்சம் போல் இதைத் தரப் போகிறார்கள். நடக்கிறதா இல்லையா பார்க்கலாம்? எனக்கு மிகவும் நம்பிக்கையான இடத்திலிருந்து இந்தத் தகவல் கிடைத்திருக்கிறது! பிச்சைமுத்து சார் சொல்லியிருப்பது போல் அறிவாளிகளும், சிந்தனையாளர்களும் சுயநலமிகளாக இருக்கிற சமூகத்தில் எந்தக் கேடும் நடக்க முடியும்..."

"ஒரே நாள் பழக்கத்தில் நிலக்கோட்டை டிரில் மாஸ்டர் உன்னை மயக்கிவிட்டார்! கதிரேசனுக்கே ஒருவரைப் பிடிக்க வேண்டுமானால் அவர் பெரிய ஆளாகத் தான் இருக்க வேண்டும்! இந்தத் 'தகவல்' கூட அவர் மூலம் தான் உனக்குத் தெரிந்ததா, கதிரேசா?"

"இல்லை பாண்டியன்! இது ரிஜிஸ்திரார் ஆபீஸ் மூலம் நான் கேள்விப்பட்டது. இதற்கு பிச்சைமுத்து சாருக்கும் சம்பந்தமில்லை."

"நீ சொல்கிறபடியே நடப்பதாக இருந்தாலும் நாளை மாலைக்குள் அது தெரிந்துவிடுமே. நாளைக்கும் இங்கே தங்கியிருந்து விட்டுத்தான் அப்புறம் நான் ஊர் போகலாம் என்றிருக்கிறேன்! எதற்கும் நாளை மாலையில் மறுபடியும் சந்தித்துப் பேசலாம். மறந்துவிடாமல் நாளை மாலை இங்கே வா..." என்று சொல்லிக் கதிரேசனுக்கு விடை கொடுத்து அனுப்பினான் பாண்டியன்.

அன்றிரவே அவனும் வேறு சில மாணவர்களும் பூதலிங்கத்தைச் சந்தித்த போது கதிரேசன் கூறியது போல் நடப்பதற்குச் சாத்தியம் உண்டு என்றே அவரும் கூறினார். மாணவர்கள் இது பற்றித் தாங்கள் என்ன செய்யலாம் என்று கூடிப் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். பாண்டியன் மறுநாள் இரவுக்குள் மதுரையில் வந்து சந்திப்பதாக ஒரே தந்தியின் பிரதிகளை மணவாளனுக்கும், கண்ணுக்கினியாளுக்கும் அனுப்பினான். அன்றிரவு சக மாணவன் ஒருவனுடைய வீட்டில் அவனும் நண்பர்களும் கலந்து பேசினார்கள். மறுநாள் தெரிய வேண்டிய விவரங்கள் தெரிந்த பின் மேற்கொண்டு செயற்பட முடிவு செய்தார்கள். பாண்டியன் அன்றிரவு அந்த நண்பனின் வீட்டில் தங்கினான்.

முதல் நாள் இரவிலிருந்தே பல்கலைக் கழக விருந்தினர் மாளிகையில் பல அறைகள் நிரம்பிவிட்டன. வெளியூர்களிலிருந்து வரவேண்டிய சிண்டிகேட் உறுப்பினர்கள் எல்லாரும் வந்துவிட்டார்கள். துணைவேந்தரும், சிண்டிகேட்டில் முக்கிய உறுப்பினரான ஓர் எஸ்டேட் அதிபரும் மற்ற உறுப்பினர்களை வசப்படுத்த தீவிரமாக முயன்று கொண்டிருந்தார்கள். அந்த எஸ்டேட் அதிபருக்குத் தம்முடைய தேயிலைத் தோட்டத்தை ஒட்டி இருந்த ஒரு முந்நூறு ஏக்கர் மலைப்பகுதி சர்க்காரிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு ஜாரி செய்து தரப்பட இருந்ததாகவும், அது அவ்வாறு செய்து தரப்பட வேண்டுமானால் இந்த டாக்டர் பட்டத்தை அளிக்க அவர் முயல வேண்டும் என்று அமைச்சரே பேரம் பேசியதாகவும் தெரிந்தது. எவ்வளவுதான் காதும் காதும் வைத்தாற் போல் காரியங்கள் நடந்தாலும் அவை வெளியே பரவிக் கொண்டுதான் இருந்தன. இரகசியங்கள் வெளியே பரவுவதற்கு வேறு தனிக் காரணங்கள் வேண்டியதில்லை. அவை இரகசியங்களாயிருப்பதே போதுமானது என்பது போல் அவை வெளிப்பட்டுவிட்டன. ஆளுங்கட்சிக்கு மிக மிக வேண்டிய அந்த எஸ்டேட் அதிபர் மக்களிடையே நல்ல பேர் இல்லாமல் வெறுக்கப்பட்டவர். பண பலத்தையும் செல்வாக்கையும் வைத்துத் தமக்கு நன்மை செய்யும் ஒரு மந்திரியை 'டாக்டர்' ஆக்கிவிட முயன்று கொண்டிருந்தார் அவர். பணமாகவும் பொருளாகவும், லஞ்சம் வாங்கி வாங்கி அலுத்து விட்ட மந்திரிக்கு 'டாக்டர்' பட்டமே லஞ்சமாகக் கிடைக்கும் என்றதும், அதில் ஒரு நைப்பாசை ஏற்பட்டு வளர்ந்திருந்தது.

மறுநாள் காலை நல்ல மழையாக இருந்ததனால் பழகலைக் கழக செனட் ஹாலில் பத்து மணிக்குக் கூட வேண்டிய 'சிண்டிகேட்' கூட்டம் சிறிது தாமதமாகப் பதினொரு மணிக்குக் கூடியது. துணைவேந்தர் உட்படப் பதினெட்டு உறுப்பினர்களும் வந்திருந்தார்கள். பதினெட்டுப் பேரில் பதினாறு பேர் துணைவேந்தருக்கும், எஸ்டேட் அதிபருக்கும் இசைந்து விட்டார்கள். டாக்டர் ஹரிகோபால் என்ற பிரபல வைத்திய மேதை ஒருவரும், மிஸஸ் செரியன் என்ற பெண்மணி ஒருத்தியும் துணைவேந்தரையோ, எஸ்டேட் அதிபரையோ இலட்சியம் செய்ததாகவே தெரியவில்லை. மிகவும் சுதந்திரமாகவும், தன்மானம் உள்ளவர்களாகவும் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள். துணைவேந்தருக்கு அந்த இருவரையும் பார்க்கும் போதே நடுக்கமாக இருந்தது. அவர்கள் தாம் எதிர்பார்க்கிறபடி இசையமாட்டார்கள் என்பது அவருக்குப் புரிந்தது.

துணைப் பதிவாளர், கூட்டத்துக்கான அஜெண்டா டைப் செய்த பிரதிகளை ஒவ்வொருவர் முன்னும் வைத்தார். விஷயங்கள் எதுவும் வெளியே பரவி விடக்கூடாது என்பதற்காக 'மினிஸ்ட்ஸு'க்குக் குறிப்பு எடுக்கும் ஸ்டெனோ தவிர வேறு அலுவலக ஆட்கள் யாரும் அங்கே அனுமதிக்கப்படவில்லை. கூட்டத் தொடக்கத்தில் துணைவேந்தர் எழுந்து பேசும் போது, பல்கலைக் கழக வளர்ச்சிக்கு அப்போது பதவியிலுள்ள அரசு முந்திய அரசுகளை விட என்னென்ன உதவியிருக்கிறது என்பதையும், பல்கலைக் கழகத்தில் பல புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் மற்றவற்றுக்கும் வணக்கத்துக்குரிய அந்த அமைச்சர் என்னென்ன உதவிகள் செய்துள்ளார் என்பது பற்றியும் பச்சையாகப் புளுகத் தொடங்கினார். 'அஜெண்டா'வில் முதலில் இருந்த விஷயமோ காலியாயிருந்த இரண்டு ரீடர் பதவிக்குத் தகுந்தவர்களை நியமிப்பது பற்றியது. அதைப் பற்றிக் குறிப்பிடவே மறந்து துணைவேந்தர் மந்திரியின் துதிபாடத் தொடங்கியதால் டாக்டர் ஹரிகோபால் ஆத்திரம் அடைந்தார்.

"மிஸ்டர் வி.சி.! ஆன் ஏ பாயிண்ட் ஆஃப் ஆர்டர் ஐ விஷ் டு ஸே, யூ ஆர் கோயிங் அவுட் ஆஃப் தி அஜெண்டா ஆன் தி டேபிள் ஹியர்!" டாக்டர் ஹரிகோபால் இரைந்ததும் மற்ற உறுப்பினர்கள் நாலைந்து பேர் அவரை உறுத்துப் பார்த்தார்கள். ஹரிகோபால் அதற்கு அஞ்சவில்லை. மிஸஸ் செரியனும் அவரை ஆதரித்தாள். துணைவேந்தர் வழிக்கு வந்தார். ரீடர் நியமனம் பற்றிய விவரங்களை எடுத்து வாசித்தார். அதிலும் வழக்கம் போல மழுப்பல்கள் இருந்தன.

செர்வீஸ், தகுதி, திறமை எல்லாம் இருந்த இரண்டு பேர்களைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு அவை எல்லாவற்றிலும் குறைவான ஆனால் அரசாங்க மேலிடம் விரும்புகிற வேறு இருவரை நியமிக்க வேண்டும் என்று துணைவேந்தர் கூறிய போது, ஹரிகோபால் மீண்டும் குறுக்கிட்டார். காரசாரமான விவாதம் எழுந்தது. எஸ்டேட் அதிபரும் சிண்டிகேட் உறுப்பினருமான ஆனந்தவேலு குறுக்கிட்டுத் தந்திரமாக ஹரிகோபாலை ஆதரிப்பது போல் கூறினார். இதில் ஹரிகோபாலை ஆதரித்தால் மந்திரிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் பிரச்னையில் ஹரிகோபால் தம்மை ஆதரிப்பார் என்று எண்ணியே அப்படிச் செய்திருந்தார் அவர். ரீடர் நியமனம் தகுதி உள்ளவர்களுக்குக் கிடைக்க வழி பிறந்தது. அடுத்தபடி தபால் மூலம் பட்டப்படிப்புக்கான 'கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸ்' தொடங்குவது பற்றிய பிரச்னை விவாதிக்கப்பட்டது. ஒரு முடிவுக்கு வர இயலாததால் அந்த யோசனை அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுப்பது என்று ஒத்திப்போடப் பட்டது. மூன்றாவதாகப் புதிய கட்டிடங்கள் பற்றியும் வேறு சில முக்கிய நிர்வாக அம்சங்கள் பற்றியும் பேசப்பட்டது.

நான்காவதாகவும், இறுதியானதாகவும் அஜெண்டாவில் இருந்த 'கான்வகேஷனும் கௌரவப் பட்டங்களும்' என்ற அயிட்டத்தைப் பகல் உணவுக்குப் பின் பிற்பகல் கூட்டத்தில் பேசலாம் என்று அறிவித்தார் துணைவேந்தர். பிற்பகலில் நிறையச் சாதகமாக எடுத்துச் சொல்லி அந்தத் தீர்மானத்தை ஒருமித்து நிறைவேற்றி விடலாம் என்பது அவரது எண்ணமாயிருந்தது. எல்லாரும் பகல் உணவுக்காகக் கலைந்து போகும் போது, "எல்லா வருஷத்தையும் விட இந்த வருஷம் கான்வகேஷன் தள்ளிப் போவதைப் பார்த்தால் ஏதோ விசேஷம் இருக்கும் போலிருக்கிறது" என்று மிஸஸ் செரியன் உடன் வந்த மற்றோர் உறுப்பினரிடம் வாயளப்பாகப் பேசிப் பார்த்தாள். "நீங்கள் எல்லாரும் ஒத்துழைத்தால் எல்லாம் விசேஷமாக முடிய வழி உண்டு" என்று சிரித்துக் கொண்டே மிஸஸ் செரியனுக்கு மறுமொழி கூறினார் அந்த உறுப்பினர். மிஸஸ் செரியன் பிடிகொடுத்துப் பேசாமல் நழுவியதும் அந்த உறுப்பினர் விழித்துக் கொண்டார். மேலே பேசுவதையும் நிறுத்திக் கொண்டார்.

பகல் உணவுக்குப் பின் சிறிது ஓய்வு நேரம் விட்டு மாலை மூன்று மணிக்கு மீண்டும் சிண்டிகேட் கூடியது. தேநீருடன் கூட்டத்தைத் தொடங்கினார் துணைவேந்தர். டாக்டர் ஹரிகோபால், மிஸஸ் செரியன் இருவரைப் பற்றிய பயம் இருந்தாலும் துணைவேந்தர் மீண்டும் ஒரு நீண்ட புகழுரைச் சொற்பொழிவில் இறங்கினார்.

"எல்லா வருஷங்களையும் விட இந்த வருஷம் தம்முடைய பட்டமளிப்பு விழா மிகவும் தாமதமாவதில் ஒரு விசேஷம் இருக்கிறது. நம்முடைய பல்கலைக் கழகம் இலக்கிய மேதையாக விளங்கும் அமைச்சர் கரியமாணிக்கம் அவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்பதை ஆனந்தவேலு முதலிய பதினைந்து சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆதரித்து யோசனை தெரிவித்திருக்கிறார்கள். அமைச்சரே வந்து மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்றும் நாம் அவரை வேண்டப் போகிறோம்..." உடனே ஹரிகோபால் குறுக்கிட்டார்.

"கல்லூரிப் பட்டமே பெறாத ஒருவர் பட்டமளிப்பு விழா 'கவுனை' அணிவதும் மாணவர்களுக்குப் பட்டங்களை அளிக்க அழைக்கப்படுவதும் எப்படி சாத்தியம்?"

"அதனால் தான் பட்டமளிப்பு விழாவில் முதலிலேயே நாம் அமைச்சருக்கு டி.லிட். பட்டம் வழங்கி, அவரை மாணவர்களுக்குப் பட்டமளிக்கத் தகுந்தவர் ஆக்கிவிடப் போகிறோம்."

"ஓகோ! 'கவுனு'க்காகவே ஒரு பட்டமா? பட்டமளிப்பு விழாவுக்காகப் பல மாணவர்கள் 'கவுன்' தைக்கிற போது தைத்த 'கவுனு'க்காகவும் ஒரு பட்டத்தைக் கொடுக்கப் போகிறீர்களா?"

'மிஸ்டர் ஹரிகோபால்!... பீ ஸீரியஸ்..." என்று துணைவேந்தர் ஏதோ உரத்த குரலில் தொடங்கவே டாக்டர் ஹரிகோபாலுக்கும் கோபம் வந்துவிட்டது. அவர் கத்தினார்.

"தி ஹானரரி டிகிரீஸ் வீ கன்ஃபெர் ஷுட் பி ஸ்டிரிக்ட்லி பேஸ்ட் ஆன் மெரிட். அதர் கன்ஸிடரேஷன்ஸ் ஷுட் நாட் கம் இன்."

"நீங்கள் அமைச்சரை எதிர்க்கிறீர்கள் போலிருக்கிறது, மிஸ்டர் ஹரிகோபால்!"

"நோ... ஐயாம் நாட் எகெய்ன்ஸ்ட் எனி ஒன். பட் ஐயாம் கன்ஸர்ன்ட் ஒன்லி வித் தி டிக்னிட்டி ஆஃப் தி யுனிவர்ஸிடி... கமான் டெல் மீ ஒன் குட் ரீஸன்... ஒரு 'டி.லிட்.' தரவேண்டிய அளவு அவர் என்ன சாதித்திருக்கிறார்?'

"இருபது ஆண்டுகளாக மேடையில் பேசி வருகிறார்."

"எனக்குத் தெரிந்த பலர் நாற்பது ஆண்டுகளாக மேடைகளில் பேசி வருகிறார்கள்."

"ஓடிப்போன வனிதை, தேடி வந்த செல்வி, பன்னீர்க் குளத்தில் பருவப் பாவை போன்ற கதைகளை எழுதித் தமிழ் எழுத்துலகுக்குத் தளராத தொண்டு புரிந்திருக்கிறார்..."

"அவற்றை விட அருமையான தமிழ்ப் படைப்பிலக்கியங்களைப் படைத்துவிட்டு வறுமையில் வாடும் ஒரு டஜன் உயர்ந்த இலக்கிய கர்த்தாக்களாவது தமிழில் இருப்பார்கள்! ஆனால் பாவம், அவர்களில் யாரும் அமைச்சர்களாக முடியவில்லை."

"இதைத் தடுப்பதன் மூலம் இந்த யுனிவர்ஸிடிக்கு ஏற்பட இருக்கும் பல நன்மைகளையே நீங்கள் தடுக்கிறீர்கள்" என்றார் ஆனந்தவேலு. ஹரிகோபாலின் கோபம் மேலும் அதிகமாயிற்றே ஒழியத் தணியவில்லை. அவர் மேலும் மேலும் ஆத்திரமடைந்து கத்தினார்.

"ஐ திங்க் வீ டோண்ட் கன்ஃபெர் ஸச் டிகிரீஸ் ஃபார் இன்டலக்சுவல் பேங்கரப்ட்ஸி. அவர் ஹையஸ்ட் ஹானர்ஸ் ஷுட் நாட் கோ சீப்..."

தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது.

"ஐ ஃபுல்லி எண்டார்ஸ் தி வியூ ஆஃப் டாக்டர் ஹரிகோபால்" என்று மிஸஸ் செரியனும் உறுதியாகக் கூறினாள். தீர்மானம் ஒருமனமாக இல்லாமல் போனாலும் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்தால் அந்தத் தீர்மானத்தை சான்ஸலருக்கோ இணை வேந்தருக்கோ அனுப்பி அவர் சம்மதத்தோடு பட்டமளிக்கலாம் என்று பல்கலைக் கழக விதிகளில் ஒரு மூலையில் இருந்த விதிவிலக்கைப் படித்தார் துணைவேந்தர். டாக்டர் ஹரிகோபால், மிஸஸ் செரியன் இருவரைத் தவிர மற்றவர்களின் ஆதரவோடு அமைச்சர் கரியமாணிக்கத்துக்குக் கௌரவப் பட்டம் வழங்க முடிவாயிற்று. டாக்டர் ஹரிகோபால் பேசிய சில கடுமையான வாக்கியங்கள் 'மினிட்ஸில்' இடம் பெறலாமா கூடாதா என்று ஒரு சர்ச்சை எழுந்தது. எது விடப்பட்டாலும் தாங்கள் இருவரும் அந்தக் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதை எதிர்த்தது கண்டிப்பாக 'மினிட்ஸில்' இடம் பெற வேண்டும் என்று டாக்டர் ஹரிகோபாலும், மிஸஸ் செரியனும் வற்புறுத்திவிட்டு வெளியேறினார்கள்.

எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு உடனே அமைச்சரை டெலிபோனில் கூப்பிட்டு அந்த நற்செய்தியைத் தெரிவிக்க விரைந்தார். இந்த நற்செய்தியைச் சொல்லித் தமக்கு வேண்டிய காரியத்தை அமைச்சரிடம் முடித்துக் கொள்ள முந்தியது அவர் ஆவல். துணைவேந்தரோ, இன்னும் ஒரு மூன்றாண்டோ, ஐந்தாண்டோ, பதவி உறுதிக்கு வழி பிறந்தது என்ற நம்பிக்கையை அடைந்திருந்தார். செய்தி மெல்ல மெல்லப் பல்கலைக் கழக வட்டாரத்தில் பரவத் தொடங்கியது.

சிண்டிகேட் கூட்டத்தில் 'மினிட்ஸு'க்காகக் குறிப்பெடுக்கிற சுருக்கெழுத்தாளர் கதிரேசனின் உறவினர். அவர் பல்கலைக் கழக நிர்வாக ஊழல்களில் மனம் வெறுத்துப் போனார். மாலை ஐந்து மணி சுமாருக்கு அந்தச் சுருக்கெழுத்தாளரைச் சந்தித்து எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்ட பின் பாண்டியனைக் காண்பதற்காகக் கதிரேசன், அண்ணாச்சி கடைக்கு விரைந்தான். பாண்டியன் அப்போது அண்ணாச்சி கடையில் இல்லை. ஆனால் வேறு சில மாணவர்கள் இருந்தார்கள். பாண்டியன் போயிருக்கும் நண்பன் வீட்டை அண்ணாச்சியிடம் விசாரித்துக் கொண்டு கடையிலிருந்த மற்ற மாணவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு அங்கே தேடிப் போனான் கதிரேசன். நல்ல வேளையாகத் தேடிச் சென்ற இடத்தில் பாண்டியன் இருந்தான்.

"நேற்று ஏதோ பந்தயம் போட்டாயே, பாண்டியன்? முதலில் அந்தப் பந்தயப் பணத்தை எடு. அப்புறம் மற்ற விவரம் எல்லாம் சொல்கிறேன்" என்று தொடங்கினான் கதிரேசன்.

"பந்தயம் எங்கே ஓடிப் போகிறது? விஷயத்தை முதலில் சொல்லு" என்றான் பாண்டியன். கதிரேசன் சிண்டிகேட் கூட்ட முடிவை விவரித்தான். பாண்டியனும் மற்ற மாணவர்களும் அந்த விவரங்களைக் கேட்டுக் கொதிப்படைந்தனர். பாண்டியன் உடனே சொன்னான்:

"ஆண்டுக் கணக்கில் படித்துப் பட்டம் பெற்ற பலர் வேலை கிடைக்காமலும், வாழ வழியின்றியும் தெருவில் திண்டாடுகிறார்கள். படித்தவர்களின் வாழ்வுக்கு வழி சொல்ல முடியாத பல்கலைக் கழகம் சொகுசுக்காகச் சிலருக்குப் பட்டம் வழங்கிக் கொண்டிருக்கிறது. வேடிக்கைத்தான். எப்படியாவது இதை நாம் எதிர்த்தாக வேண்டும்."

"எப்படியாவது அல்ல! மிகவும் கடுமையாகவே எதிர்க்க வேண்டும். தகுதி உள்ள ஒருவருக்குத் தகுந்த காரணங்களோடு இந்த யுனிவர்ஸிடி கௌரவ டாக்டர் பட்டம் தந்தால் அதை நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் யாருக்கோ, எந்த காரியமோ ஆகவேண்டும் என்பதற்காக இந்த டாக்டர் பட்டம் விலையாக்கப்படுவது தான் எனக்குப் பிடிக்கவில்லை" என்றான் கதிரேசன்.

"எப்படியும் நான் இன்று மதுரைக்குப் புறப்படவிருக்கிறேன். மணவாளனையும் கலந்து பேசி இதற்கு ஏதாவது மறுப்புத் தெரிவிக்க ஏற்பாடு செய்யலாம்" என்று பாண்டியன் கூறியதும், "நாலைந்து பேராக இப்போதே ஒரு வாடகைக் காரில் மதுரைக்குப் புறப்படலாம். போகும் போது நிலக்கோட்டையில் பிச்சைமுத்து சாரையும் பார்ப்போம்" என்று கதிரேசன் குறுக்கிட்டான். பாண்டியனுக்கும் பிச்சைமுத்துவைப் பார்க்கும் ஆவல் இருக்கவே அதற்கு இணங்கினான். அவர்கள் உடனே அண்ணாச்சி கடைக்குப் போய்ச் சொல்லிக் கொண்டு, கதிரேசன் ஏற்பாடு செய்த டாக்சியில் மதுரைக்குப் புறப்பட்டார்கள். ஐந்து மாணவர்கள் சேர்ந்து சென்றதனால் இரவு நேரப் பயணத்தில் அலுப்புத் தெரியவில்லை. அவர்கள் நிலக்கோட்டையை அடையும் போது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது. கதிரேசன் பிச்சைமுத்துவின் வீட்டுக்கு வழி சொல்லி அழைத்துக் கொண்டு போனான். இந்தப் பயணத்தில் மோகன்தாஸ் தங்களுடன் வரமுடியாமல் விடுதலையான தினத்தன்றே ஊருக்குப் போயிருந்தது பாண்டியனுக்குக் கை ஒடிந்த மாதிரி இருந்தது.

அவர்கள் சென்ற போது பிச்சைமுத்து வீட்டில்தான் இருந்தார். மாணவர்களை அன்போடு வரவேற்றார். பாண்டியன் முதலிய மற்ற நான்கு மாணவர்களையும் அவருக்கு அறிமுகப்படுத்தினான் கதிரேசன். அந்த நேரத்துக்கு மேல் அவர்களுடைய இரவு உணவுக்கு ஏற்பாடு செய்து, மேலும் அவர்கள் தொடர்ந்து மதுரைக்குப் பயணம் செய்ய விரும்பிய போது, "தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு இந்த அகாலத்தில் பயணம் செய்ய வேண்டாமே? இப்போது அவசரம் என்ன? காலையில் ஐந்து மணிக்கு எழுந்து புறப்படலாம்" என்று பிச்சைமுத்து யோசனை கூறினார். அவர்களுக்கும் அது சரி என்று தோன்றியது. அமைச்சர் கரியமாணிக்கத்துக்கு வரப்போகிற பட்டமளிப்பு விழாவின் போது கௌரவ டி.லிட். தர சிண்டிகேட் முடிவு செய்திருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது பிச்சைமுத்து சிரித்தார். மேலும் அவர் கூறினார்: "எதை எதிர்த்துத்தான் நீங்கள் போராடப் போகிறீர்கள்? போன இரண்டு மூன்று வாரங்களாக மேரி தங்கத்தின் தற்கொலை விவகாரத்துக்காக அதற்குக் காரணமான விரிவுரையாளரை நீக்கச் சொல்லிப் போராடினீர்கள்! உங்கள் மேல் நம்ப முடியாத பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி உள்ளே தள்ளினார்கள். அதை எதிர்த்தும் போராடி வென்றாயிற்று. இப்போது பட்டமளிப்பு விழா வருகிறது. அதிலும் நீங்கள் தான் போர்க்கொடி உயர்த்த வேண்டும். தொழிலாளிகளையும், மாணவ சமூகத்தையும் தவிர மேல் மட்டத்திலும், நடுத்தரத்திலுமான வெள்ளைக் காலர் சட்டைக்குரிய மக்கள் எப்போதும் எதிலும் கலந்து கொள்ளாத, ஸைலண்ட் மெஜாரிட்டியாகவே ஒதுங்கியிருக்கும் வரை நம் நாட்டுக்கு விடிவு இல்லை. அது வரை நீங்கள் தான் எதற்கும் களப்பலியாகித் தீரவேண்டும் போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் மக்கள் பலியாவதை நான் வெறுக்கிறேன். தீமைகளுக்குக் காரணமானவர்களையே தேடிப் பகிரங்கமாகப் பலியிடும் துணிவு நமக்கு வராதவரை நாம் உருப்படப் போவதில்லை."

"நீங்கள் சென்ற முறை சந்தித்த போது எங்களுக்கு மிகமிக உதவியாயிருந்தீர்கள். ஆசிரிய வர்க்கத்தில் கூடச் சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ரொம்பவும் பயந்து சாகிறார்கள். நீங்கள் தான் இந்தத் தலைமுறை ஆசிரியரைப் பிரதிபலிக்கிறீர்கள், சார்! நீங்கள் எனக்குக் கொடுத்த புத்தகங்கள் மிக மிகப் பயனுள்ளவை. அவை என் சிந்தனையைச் சூடேற்றி விட்டன. உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். வெறும் உபசார வார்த்தைகளால் நன்றி சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது என்பதால் தான் தயங்கித் தயங்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது" என்று கதிரேசன் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான். பிச்சைமுத்து அவர்களுக்குத் திட்டவட்டமான சில யோசனைகளைக் கூறினார். முடிவில் ஓர் எச்சரிக்கையும் செய்தார்.

"இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை நீங்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மாணவர் போராட்டம் என்பது படிப்பைத் தட்டிக் கழிக்கும் ஒரு சாதனம் என்றோ, வேறு எதற்கும் லாயக்கில்லாத கழிசடை மாணவர்களின் வேலை என்றோ வெளியே உள்ள தந்தக் கோபுரவாசிகள் சிலர் பேசுகிறாற் போல் உங்களில் யாவரும் ஆகிவிடக் கூடாது. தீவிரவாதிகளாயிருப்பதோடு நீங்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் போராட்டங்களை நியாயப்படுத்த முடியாமல் போய்விடும். இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்."

"இந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன். போராட்டங்களின் அடிப்படை நியாயங்கள் சரியாகவும் திடமாகவும் இருந்தால் அவற்றின் தொடக்கமே வெற்றித்தான். முடிந்த பின் வரும் வெற்றியை விடத் தொடங்கியதுமே கிடைக்கும் தார்மீக வெற்றி பெரிது சார்!" என்றான் பாண்டியன்.

காலை ஐந்து மணிக்கு அவர்கள் நிலக்கோட்டையிலிருந்து புறப்படும் போது, பல்கலைக் கழகம் திறந்ததும் தாமே ஒரு விடுமுறை நாளில் மல்லிகைப் பந்தலுக்கு வந்து மாணவர்களைச் சந்திப்பதாகச் சொல்லி விடை கொடுத்தார் பிச்சைமுத்து. பாண்டியன் அண்ணாச்சியின் கடை முகவரியை எழுதி அவரிடம் கொடுத்தான். பிச்சைமுத்துவுக்கே அண்ணாச்சியைப் பற்றி எல்லா விவரங்களும் நன்கு தெரிந்திருந்தது. "தெரியுமே, இந்த அண்ணாச்சியைப் பற்றி நான் ரொம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுள்ள சூழ்நிலையில் பல பெரிய வசதியுள்ள மனிதர்கள் முன் வந்து செய்ய அஞ்சும் பொதுக் காரியங்களை ஒவ்வோர் ஊரிலும் இப்படி யாராவது ஓர் ஏழை அண்ணாச்சிதான் செய்து கட்டிக் காக்க வேண்டியிருக்கிறது" என்றார் அவர்.

விடியற்காலை, ஆறு ஆறரை மணிக்கே அவர்கள் மதுரையை அடைந்து விட்டார்கள். உடனே வாடகைக் காருக்குக் கணக்குத் தீர்த்துப் பணம் கொடுத்துத் திருப்பி அனுப்பினான் கதிரேசன். அவர்கள் ஐவரும் மணவாளன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது மணவாளன் காலைத் தினசரியைப் படித்துக் கொண்டிருந்தார். மாணவர்களைப் பார்த்ததுமே, "வாருங்கள்! இப்போதுதான் அமைச்சர் கரியமாணிக்கத்துக்குக் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க யுனிவர்ஸிடி சிண்டிகேட் முடிவு செய்திருக்கும் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தேன். உடனே நீங்களும் வந்து விட்டீர்கள்... பெறுகிறவருக்கு இது கௌரவமாயிருக்கலாம். ஆனால் டாக்டர் பட்டத்துக்கு இது பெரிய அகௌரவம்..." என்று குமுறலோடு வரவேற்றார் மணவாளன். எல்லோருக்கும் காப்பி வரவழைத்தார் அவர். பிரச்னையை எல்லோரும் கலந்து பேசி விவாதித்தார்கள். நீராடி உடைமாற்றிக் கொண்ட பின் பகலுணவுக்கு அவர்கள் வெளியே புறப்பட்ட போது மணவாளன் தடுத்து வீட்டிலேயே சாப்பிடச் செய்தார். பிற்பகலிலும் அவர்கள் தொடர்ந்து விவாதித்தார்கள்.

மாலை ஐந்து மணிக்கு மணவாளனையும் தன்னோடு கண்ணுக்கினியாளின் வீட்டுக்கு அழைத்தான் பாண்டியன். தன்னைச் சுற்றி நிறைய மாணவர்கள் இருந்ததனால், "நீ மட்டும் போய்விட்டு வந்துவிடு, பாண்டியன்! நான் இவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்" என்றார் மணவாளன். மணவாளனின் வீடு இருந்த மேலச் சந்தைப்பேட்டைத் தெருவிலிருந்து நடந்தே சித்திரக்காரத் தெருவுக்குப் போய்ச் சேர்ந்தான் பாண்டியன். நாயுடுவின் வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது. அவன் அந்த வீட்டில் நுழைந்து முன் வராந்தாவில் செருப்பைக் கழற்றி விட்டுக் கூடத்தில் அடி எடுத்து வைத்த போது பல்கலைக் கழகத் தோற்றத்திலிருந்து மாறிய புது அழகோடு கொலுப் பொம்மை வரிசைகளுக்கு முன் அமர்ந்திருந்தாள் கண்ணுக்கினியாள். கருநாகமாய்ச் சரியும் கூந்தற் பின்னலும் அதன் மேல் சரிந்த மல்லிகைக் கொத்துமாக அவள் முதுகுப்புறமும் இடையின் பொன் வண்ணமும் தெரிந்து அவனை முதற் பார்வையிலேயே மயக்கின. கொலுவின் கீழே இருந்த சிறிய செயற்கைக் குளத்தில் சின்னஞ்சிறு பிளாஸ்டிக் கப்பலை மிதக்க விட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

"கப்பல் கவிழ்ந்து விடப் போகிறது... கவனம்..." - குரலைக் கேட்டுத் திரும்பியவள் அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.

"வாருங்கள்! புயல் உள்ளே வந்தால் கப்பல் கவிழாமல் பின்னென்ன பிழைக்கவா செய்யும்? நேற்றே வருவதாகச் சொல்லியிருந்தீர்களே? நாலைந்து நாட்கள் கழிந்துவிட்டது என்றாலும் இங்கே வந்ததும் கொலுவை அவசரம் அவசரமாக வைத்துவிட்டேன். எப்படி இருக்கிறது கொலு?"

"உண்மையைச் சொல்லட்டுமா?"

"ம்ம்... சொல்லுங்களேன்" - இந்த 'ம்ம்' ஒரு சங்கீதமாகவே பாண்டியனின் காதில் ஒலித்தது.

"இந்தக் கொலுவிலேயே மிகவும் அழகான பொம்மை - பெரிய பொம்மை, உயிருள்ள பொம்மை - கொலுவுக்கு வெளியே தரையில் நின்று கொண்டிருக்கிறது."

அவள் முகம் சிவந்தது. அவனை அப்போதுதான் முதல் முறை சந்திப்பது போல் மிகவும் புதிதாக ஓரக் கண்களால் பார்க்கத் தொடங்கினாள் அவள்.

இருபதாவது அத்தியாயம்

கொலுப் பொம்மைகளுக்கு முன்னால் உயிருள்ள இரண்டு பதுமைகள் போல் பாண்டியனும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்ற அந்த மௌனத்தை வாசலில் வந்து குரல் கொடுத்த தந்தி போஸ்ட்மேன் தான் கலைத்தான். தந்தியை வாங்கச் சென்ற கண்ணுக்கினியாள் சிரித்துக் கொண்டே திரும்பி வந்தாள்.

"இப்போதெல்லாம் தந்திகள் கடிதங்களை விடத் தாமதமாகவும், அவசரத் தந்திகள் புக்-போஸ்ட்களை விடத் தாமதமாகவும் கிடைக்கின்றன."

"ஏன்? நான் நேற்றுக் கொடுத்த தந்தியே இப்போது தான் வருகிறதா?"

"இப்போதாவது வந்திருக்கிறதே?"

"புறப்பட்டு வருவதாகச் செய்தி அறிவித்துக் கொடுக்கப்படும் பெரும்பாலான தந்திகள் அவற்றைக் கொடுத்தவர்களே புறப்பட்டு வந்து சேர்ந்த பின் தங்கள் கைகளாலேயே தான் வாங்க வேண்டும் போலிருக்கிறது."

தபால் தந்தி இலாகாவின் 'திறமை'களைப் பத்து நிமிஷம் விமர்சனம் செய்து இருவரும் இரசிக்க முடிந்தது. நாயுடு எங்கேயோ வெளியில் போயிருந்தார். உள்ளே இருந்து தன் தாயைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து அந்த அம்மாளையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் கண்ணுக்கினியாள். அறிமுகம் என்ற நாகரிகச் சடங்கிற்கே கூசினாற் போல் சிறிது வெட்கமும் கூச்சமும் கலந்த மலர்ச்சியையும், வரவேற்பையுமே அந்தப் பழுத்த சுமங்கலியின் முகத்தில் காண முடிந்தது. இன்னொருவர் எடுத்துச் சொல்லும் முகமன் வார்த்தைகள், அறிமுகங்கள் எல்லாம் பழைய தலைமுறை மனிதர்களுக்குத் தேவையே இல்லை. அறிமுகமும் பரிச்சயமும் இல்லாமலேயே மனிதர்களிடம் பழகவும் பேசவும் அவர்களால் மறைக்க முடியாது. கண்ணுக்கினியாளின் தாய் நாச்சியாரம்மாள், மகள் பாதி அறிமுகத்தைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, முதலில் இருந்த வெட்கமும் கூச்சமும் நீங்கி,

"இவளோட நாயினா சொல்லியிருக்காரு... தம்பியை உட்காரச் சொல்லும்மா... காப்பி எதினாச்சும் கொடு! உங்க நாயினாவும் இப்ப வந்திடுவாங்க" என்று சுபாவமாக ஏற்கெனவே அறிமுகமான ஒருத்தரிடம் பேசுவது போல் பாண்டியனிடம் பேசத் தொடங்கிவிட்டாள்.

பாண்டியனுக்குக் கொடுப்பதற்காகச் சிற்றுண்டியை எடுத்து வர உள்ளே சென்றாள் கண்ணுக்கினியாள். நாற்காலியில் உட்கார்ந்துவிட்ட பாண்டியனைப் பார்த்து, நிலைப்படி ஓரமாக எதிரே நின்றவாறே பேசிக் கொண்டிருந்தாள் கண்ணுக்கினியாளின் தாய்.

"அந்த நாளிலே பாரு... அறை ரூபாய்க்கு கொத்துக் கடலை வாங்கி வேக வச்சா... கொலுவுக்கு வாரவங்க போறவங்களுக்குக் கொடுத்தது போக அதுக்குப் பெறகும் பத்துப் பேர் சாப்பிடறாப்பில மீந்து கிடக்கும். இப்ப என்னடான்னா எத்தினி ரூபாய் கொடுத்து எது வாங்கினாலும் காணாமப் போகுது. பத்தமாட்டேங்குது... பண்டமும் காணலே, ரூவாயும் காணலே... எல்லாமே ஆனைவெலை குதிரை வெலை விக்கிது... ஒத்த ரூவாயைக் கொடுத்துப் பதினாறுபடி அரிசி வாங்கின கையாலே இப்பப் பதினாறு ரூவாயைக் கொடுத்து ஆறுபடி அரிசி வாங்க வேண்டியிருக்கு... விலைவாசி ரொம்பக் கொடுமையா ஏறிப்போச்சு தம்பீ!"

"அதான் ரூபாய்க்கு மூணுபடி அரிசி தரோம்னு தெருவெல்லாம் கத்தினாங்க, சுவரெல்லாம் எழுதினாங்க... அதைப் பார்த்துத்தானே நீங்க ஓட்டெல்லாம் போட்டீங்க..." தட்டில் சிற்றுண்டியோடு வந்த கண்ணுக்கினியாள், "வீட்டுக்குள்ளே வந்ததும் வராததுமா இவரிடம் விலைவாசி ஏற்றத்தைப் பற்றிப் பேசாதே அம்மா! உடனே ஓடிப் போயிடப் போறாரு. நாலஞ்சு வருஷமா நீ எல்லாரிட்டவும் பேசிட்டிருக்கிற ஒரே விஷயம் இதுதான்னு இவருக்குத் தெரியாது. இவருக்காகவே பேசறயோன்னு தோணும். தப்பா நினைக்கப் போறாரு..." என்று தாயிடம் சொல்லிவிட்டுப் பாண்டியன் பக்கம் திரும்பி,

"உங்களுக்குத் தெரியுமோ?... விலைவாசிகள் ஏறியிருப்பதைப் பற்றி எங்க அம்மாவிடம் இருக்கிற புள்ளி விவரங்களைப் பயன்படுத்தினால் அப்படிப் பயன்படுத்துகிற கட்சி வருகிற தேர்தலிலே நிச்சயமா ஜெயிச்சிடும்..." என்று சொல்லிச் சிரித்தாள். அதைக் கேட்டுப் பாண்டியனும் முகம் மலர்ந்தான்.

"கொஞ்சம் தைரியமாகச் சொல்லலாம் என்றால் இன்றைக்குப் பல எதிர்க்கட்சிகளிடம் இருக்கிற புள்ளி விவரங்களை விட உன் அம்மாவின் புள்ளி விவரங்கள் தெளிவாகவும் புரியும்படியாகவும் இருக்கு. நாளாக நாளாக எதிர்க்கட்சிகளுக்கு எதை எதிர்க்க வேண்டும் என்பது கூட மறந்து போயிடுது. தீப்பற்றி எரியறாப்பலே விலைவாசிகளின் கொடுமை பத்தி எரியுது... அதை யாரும் கவனிக்க மாட்டேங்கறாங்க."

"அதில்லே, தம்பீ! ஒவ்வொரு கட்சித் தலைவருங்களும் ஒரு மாசமாவது மளிகைக் கடைக்குப் போயி அவங்கவங்க வீட்டுப் பாட்டுக்குப் பலசரக்குச் சாமான் வாங்கிப் போடறதுன்னு வச்சிக்கிட்டா எதை எதிர்க்கணும்குற ஞானம் அவங்களுக்கு அந்தக் கடை வாசல்லியே கிடைச்சிடும்..."

"தப்பா நினைச்சுக்காதீங்க... அம்மாவுக்கு எல்லாரிடமும் பேச முடிந்த 'காமன் ஸப்ஜெக்டே' இதுதான்! இதைக் கேட்கப் பயந்துகிட்டுத்தான் நாயினா முக்கால்வாசி நேரம் வெளியிலே போயிடறாரு... பக்கத்திலே கோயிலுக்குள்ளே தெற்கு ஆடிவீதியிலே 'திருப்புகழ்ச் சங்கம்'னு ஒண்ணே இருக்கு. அதிலே நாயினாவோட பழைய நாடகக் கம்பெனிக் காலத்து சிநேகிதர் ஒருத்தரு இருக்காரு. நாயினா அங்கே போயிடுவாரு..."

"அதாவது உங்க வீட்டிலேயே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ரெண்டும் இருக்குன்னு சொல்லு! இதிலே நீ எந்தப் பக்கம்? எது பவர்ஃபுல்?"

"நான் எப்பவுமே அம்மா கட்சிதான். அதுதான் எதிர்க்கட்சி. அதுதான் பவர்ஃபுல்! அப்பா கட்சி ஆளும் கட்சி. குற்றச்சாட்டுக்களைக் காதில் போட்டுக் கொள்ளாமலே மெல்ல நழுவித் திருப்புகழ் சங்கத்துக்குத் தப்பி ஓடி விடுவார் நாயினா..."

"பாவம்! அருணகிரிநாதர் திருப்புகழை இதற்காக எழுதியிருக்க மாட்டார்..."

இந்த சமயத்தில் கையில் ஒரு குடையும் மற்றொரு கையில் தடிமனான திருப்புகழ்ப் புத்தகமுமாகக் கந்தசாமி நாயுடு உள்ளே நுழைந்தார். பாண்டியனைப் பார்த்ததும், "அடடே, வா தம்பீ! எப்போது வந்தே?" என்று வரவேற்று விட்டு, "என்ன வந்ததும் வராததுமா தம்பிகிட்டே அருணகிரிநாதரு தலையை உருட்டறீங்க?" என்று மனைவியையும் மகளையும் பார்த்துக் கேட்டார் நாயுடு. பேசிக் கொண்டே சிற்றுண்டியை முடித்திருந்த பாண்டியனுக்குக் காப்பி கொண்டு வந்து கொடுப்பதற்காக உள்ளே சென்ற கண்ணுக்கினியாள் திரும்பி, "நாயினா! உங்களுக்குக் காப்பி கொண்டாரட்டுமா?" என்று தந்தையைக் கேட்டாள். 'கொண்டு வா' என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்து விட்டுப் பாண்டியனுக்கு அருகே மற்றொரு நாற்காலியில் அமர்ந்தார் நாயுடு.

"என்ன தம்பீ, உங்க யுனிவர்ஸிடியிலே மந்திரி கரியமாணிக்கத்துக்கு டாக்டர் பட்டமில்லை தர்ராங்களாம்? இதென்னப்பா கயவாளித்தனம்? எனக்கு தெரிஞ்சு உ.வே.சாமிநாத ஐயருக்குத்தான் அந்த நாளிலே மொதமொதலா இப்பிடி ஒரு ஹானரரி டிகிரியைக் கொடுத்தாங்க... அவரு பட்டிதொட்டி எல்லாம் அலைஞ்சு கார் போகாத ஊரு, ரயில் போகாத ஊருக்கெல்லாம் கட்டை வண்டியிலும், நடந்தும் போயி ஏட்டையும், சுவடியையும் தேடிக் கொண்டாந்து இப்படி இவனுக 'வால்க' போடற தமிழை எல்லாம் அச்சுப் போட்டுக் கொடுத்தாரு, பதிப்பிச்சாரு. ஐயமாருலே வேற யாரும் தமிழுக்கு இவ்வளவு பாடுபடலே... முக்கால்வாசி ஐயமாருங்க டாக்டரு, வக்கீல், சர்க்கார் உத்தியோகம்னு, போய்க்கிட்டிருந்த காலத்திலே அவரு தமிழைக் கட்டிக்கிட்டு உசிரை விட்டாரு. அது ரொம்ப ரொம்ப பெரிய காரியம். அப்பிடி இந்த மாதிரி பெரிசா என்ன செய்துபிட்டாரு தமிழுக்கு? இவருக்கு எதுக்கு டாக்டரு?"

"இப்போதெல்லாம் சாதனைகளுக்காகக் கௌரவங்கள் வழங்குவதும் பெறுவதுமே சாதனைகளாகக் கருதப்பட்டுப் பெரிய மனிதர்கள் அவற்றுக்காகத் தவித்துப் பறக்கிற காலம் இது."

காப்பி வந்தது. பாண்டியனும், நாயினாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கண்ணுக்கினியாள் காலையில் செய்தித் தாளில் படித்த டாக்டர் பட்ட விவகாரம் நினைவுக்கு வந்து அதைப் பற்றி பாண்டியனிடம் விசாரித்தாள். மணவாளனையும், வேறு மாணவர் தலைவர்களையும் கலந்து பேசி எப்படிப் போராடுவது என்று யோசித்துக் கொண்டிருப்பதாகப் பாண்டியன் அவளுக்கு மறுமொழி கூறினான். அப்போது கொலுவுக்காக நாலைந்து பெண்கள் அடங்கிய ஒரு கூட்டம் வீட்டுக்குள் நுழையவே கண்ணுக்கினியாளும் அவள் தாயும் அவர்களை வரவேற்றுக் கொலுவுக்கு முன் அழைத்துச் சென்றார்கள்.

"நீ மாடிக்கு வா, தம்பீ! நாம் அங்கே போயிப் பேசலாம். இனிமே இங்கே பொம்பிளை ராஜ்யம் ஆரம்பமாயிடும்..." என்று பாண்டியனை மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார் நாயுடு.

"ராத்திரி இங்கேயே சாப்பிடலாம்... உனக்கு அவசரம் ஒண்ணுமில்லியே தம்பி?" என்று நாயுடு கேட்ட போது பாண்டியன் சற்றே தயங்கினான்.

"கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டிருக்கலாம். சாப்பாடு இன்னொரு நாளைக்கி வைச்சுக்கலாம்... இன்னிக்கி வேண்டாம். எட்டரை மணிக்குள்ளே நான் மறுபடியும் மணவாளன் வீட்டுக்குப் போகணும்... அங்கே நெறைய 'ஸ்டூடன்ஸ்' வந்து காத்திருப்பாங்க..."

"எல்லாம் போகலாம், தம்பீ! சாப்பிட்டுவிட்டு அப்புறம் போயேன். நான் விட்டாலும் கண்ணுவிடாது... சாப்பிடாமே நீ இங்கிருந்து போக முடியாது..."

சம்மதிப்பதைத் தவிர வேறு வழியின்றி அவன் மௌனம் சாதித்தான்.

அந்த மாடிப் பகுதி ஓர் அறையாக இல்லை. நீண்ட கூடமாக இருந்தது. நடுவே மேஜை நாற்காலிகள் இருந்தாலும் கூடத்தின் நான்கு சுவரோரங்களிலும், மர அலமாரிகளிலும் பலவிதமான நாடகப் பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன.

சுருட்டி வைக்கப்பட்ட ஸீன்கள், ஜிகினா, கண்ணாடிக்கல் பதித்த கீரிடங்கள், தங்க நிறத் தாள் ஒட்டிய கதாயுதம், திரிசூலம், வேல், வாள், பிளைவுட் பலகையில் வண்ணம் எழுதிய கதவு - பிளைவுட்டில் ஜன்னல் போல் வரைந்த நாடக மேடை வீட்டின் பகுதிகள், பூங்காக் காட்சி எல்லாம் தூசி படிந்திருந்தன. பச்சை, சிவப்பு, நீலம் என்று கண்ணாடித்தாள் ஒட்டிய டிராமா லைட்டுகள், மைக், ஒலி பெருக்கி, நாடக உடைகள் எல்லாம் கதவில்லாத மர அலமாரிகளில் காட்சி அளித்தன. "அதோ, அந்த அலமாரியிலே கிடக்குதே அந்தக் கதாயுதத்தைத் தூக்கிக்கிட்டுத் தான் உங்க 'அண்ணாச்சி' பீமசேனன் வேசத்திலே மேடையேறி அட்டகாசம் பண்ணிக்கிட்டிருந்தாரு... இப்ப கோபால்னு சினிமாவிலே ஹீராவா ஜொலிக்கிறானே, அவன் நம்ம கம்பெனியிலே, 'ஸ்திரீபார்ட்' கட்டிக்கிட்டு இருந்தவன் தான். 'முத்துக்குமார்'னு வசன கர்த்தாவா போடுபோடுன்னு வெளுத்து வாங்கிக்கிட்டிருக்கானே அவனும் இங்கே இருந்தவன் தான்..."

"இவ்வளவு சாதனங்களையும் வச்சிக்கிட்டு ஏன் கம்பெனியை மூடிட்டீங்க?"

பாண்டியனின் இந்தக் கேள்விக்கு உடனே மறுமொழி கூறாமல் தயங்கினார் நாயுடு. அவர் முகம் இருண்டது. சுற்றி இருந்த எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நெஞ்சு விம்மித் தணியப் பெருமூச்சுவிட்டார். அப்புறம் சொன்னார்:

"இந்தக் கலை இன்னிக்கி வாழைமரம் போல ஆயிடிச்சு. குலை தள்ளி அந்தக் குலையிலே தார் முற்றிக் காய்கள் பக்குவப்பட்டதும் தாரை வெட்டி நல்ல விலைக்கு வித்துப்பிட்டு, அப்பாலே தாய் வாழையை அழிச்சிடுவாங்க. 'சினிமா'ங்கற குலை தள்ளித் தார் முற்றியதும் அது நல்ல விலையாகி விற்குது. ஆனால் அந்தத் தாரை ஈன்ற தாய் வாழையாட்டம் நாடகக் கலை அழியுது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக் காலம் நாடகத்தாலே வாழ்ந்த நான் இப்ப சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி நாடகங்களுக்கும், ஸ்கூல்கள், ரெக்ரியேஷன் கிளப்புகளின் நாடகங்களுக்கும் இந்த சீன், ஸெட், கிரீடம், டிரஸ், லைட்டு, மைக் இதையெல்லாம் அப்பப்போ வாடகைக்கு விட்டுக்கிட்டிருக்கேன், தம்பீ! இதைத் தவிர மேலூர் ரோட்டிலே 'ஒத்தக் கடை'யிலே முல்லைக்கால் பாசனத்திலே கொஞ்சம் நிலபுலன் இருக்கு. தெற்கு மாசி வீதியிலே ஒரு சின்ன வீடும் உண்டு. அதைப் பொடவைங்களுக்குச் சாயம் காய்ச்சற பட்டு நூல்காரரு ஒருத்தருக்கு வாடகைக்கு விட்டிருக்கேன். இதெல்லாம் இல்லாட்டி, கம்பெனி நடக்கிற காலத்திலே சிக்கனமாக இருந்து இப்பிடிக் கொஞ்சம் சேர்த்திருக்காம விட்டிருந்தேனின்னா, இன்னிக்கு நானே தெருவில் தான் நிக்கணும். ஏதோ அந்த அனுமாரு கிருபையிலே நான் தெருவிலே நிக்கலே, என்னை நம்பினவங்களையும் தெருவிலே நிக்கறாப்பல யாரையும் விடலே..."

"உங்க பொண்ணுக்கு உங்க கம்பெனி நாடகங்களிலே நடிச்சுப் பழக்கம் உண்டா? சமீபத்தில் யுனிவர்ஸிடியிலே பாஞ்சாலி சபதத்துலே பிரமாதமா நடிச்சுது."

"சின்னப் பொண்ணா இருந்தப்ப பால மீனாட்சி, பால லோகிதாசன், பாலகிருஷ்ணன், பாலமுருகன்னு அந்த வயசுக்கு ஏத்தாப்ல ஏதோ சிலதுலே நடிச்சிருக்கு. பத்து வயசுக்கப்புறம் நானே அதை நடிக்க விடலே. படிப்பிலே கவனம் கெட்டுப் போயிடுமோன்னு எனக்கே ஒரு பயம் வந்திடிச்சு. தவிர இந்த 'லயன்லே' வந்தாலே நடத்தை பிசகிப் போயிடும்மோன்னு ஒரு பயமும் அப்ப எனக்கு இருந்திச்சு. கடைசியிலே இத்தனை கவனத்தையும் மீறி இதிலேயே 'டிப்ளமா' வாங்கணும்னு கல்கத்தா போயி ரவீந்திர பாரதி யூனிவர்ஸிடியிலே சேரக் கிளம்பிடிச்சு அது. நல்லவேளையா மல்லிகைப் பந்தல்லேயும் அந்த 'டிப்ளமா' இருந்ததாலே அங்கேயே கொண்டாந்து சேர்த்தாச்சு..."

"இது பரவாயில்லை... ஒண்ணைத் தொழிலா நடத்தறதுக்கும் ஒரு 'சயின்ஸா' படிக்கிறதுக்கும் நல்ல வித்தியாசங்கள் இருக்கும். உங்கள் பெண்ணுக்கும் இதிலே நல்ல டேஸ்ட் இருக்கிறதாகத் தெரியுது."

"டேஸ்ட் இருந்து என்ன தம்பீ பண்ணப் போறோம் இனிமே? அவ என்ன தன்னந்தனியா 'ட்ரூப்' வச்சு நாடகமா நடத்தப் போறா?"

"நடத்த முடியாதுன்னு இப்பவே நீங்க எப்படிச் சொல்லிவிட முடியும்? மலையாளத்திலேயும், வங்காளத்திலேயும் கதை, நாவல், கவிதை, இலக்கியம் எல்லாம் இந்தக் காலத்தினாலே பாதிக்கப்பட்டு இக்கால நவீன மாறுதல்களையும், யதார்த்தத் தன்மைகளையும் அடைந்திருக்கிற மாதிரி நாடகமும் மாறுதல் அடைந்து வளர்ந்திருக்கு. தமிழ் நாடகமும் அப்படி ஆகணும்னா இந்த 'டிப்ளமா' வாங்கறவங்க அதற்கு முன் முயற்சி செய்துதான் ஆகணும்..."

"எனக்கு இதிலே அவ்வளவு நம்பிக்கை எல்லாம் இல்லே, தம்பீ! 'அது'னோட முகம் கோணறாப்பல மறுத்துப் பேசிப் பழக்கப்படாதவன் நான். ஒத்தைக்கு ஒரே பொண்ணு. இதைத்தான் படிப்பேனின்னு ஒத்தக் கால்லே நின்னுது. சரிதான்னிட்டேன். 'டிப்ளமா' வாங்கி அதை வச்சு நாடகக் கலையை பெரட்டிப்பிடலாம்னு நான் நம்பலை..."

கடந்தகால அனுபவங்களால் அவருக்கு இருந்த கசப்பே இந்த மறுமொழியில் தெரிந்தது. சில விநாடிகளில் அவரே பேச்சை வேறு திசைக்கு மாற்றினார்.

"உங்க ஊருக்கும் மதுரை வந்துதான் போவணும்னு அன்னைக்கு மல்லிகைப் பந்தல்லே அண்ணாச்சி கடையிலே பேசிக்கிட்டிருந்தப்ப நீ சொன்னியே தம்பீ! உங்க ஊரு எந்த ஊருன்னே இன்னும் சொல்லலியே...?"

"பாலவந்தம். அருப்புக்கோட்டைக்குப் பக்கத்திலே இருக்கு."

"தெரியும், தம்பீ! பாண்டித்துரைத் தேவரு ஊராச்சே அது...! எங்க மதுரையிலே நாலாவது தமிழ்ச் சங்கத்தை வச்ச புண்ணியவானோட ஊர்க்காரன் நீ... இல்லியா"

அப்புறம் சிறிது நேரம் அவனுடைய பெற்றோர், தொழில், சொத்து, சுகம் பற்றிச் சுற்றி வளைத்து பழைய தலைமுறை மனிதருக்குரிய சிரத்தையுடன் ஒவ்வொன்றாக விசாரித்தார் நாயுடு. அவனும் சலிக்காமல் எல்லாவற்றுக்கும் பதில்கள் சொன்னான். பேசிக் கொண்டிருக்கும் போதே கீழே கொலுவில் கண்ணுக்கினியாளின் இனிய குரல் அசாவேரி ராக கீர்த்தனை 'ரா ராம இண்டி தாக' ஒலிக்கத் தொடங்கியது. 'ராமா நீ வீட்டுக்கு வரவேண்டும்' என்று அர்த்தமுள்ள அந்தக் கீர்த்தனையை ஏன் அப்போது அவள் தேர்ந்தெடுத்துப் பாடினாள் என்று நினைத்துச் சிரித்த போது அந்த நினைப்புக்கும் சிந்தனைக்கும் உல்லாசமான அநுமானம் ஒன்று பதிலாகக் கிடைத்துப் பாண்டியனைப் பூரிக்கச் செய்தது. தான் அன்று மாலையில் அந்த வீட்டுக்கு வந்திருப்பதைக் கொலுவில் பாடி சங்கீதத்தின் மூலமாகவும் அவள் வரவேற்பது அவனுக்குப் புரிந்தது.

"எல்லா வீட்டிலேயும் கொலுவுக்கு வர்றவங்க பாடுவாங்க. கொலு வச்சிருக்கிறவங்க வர்றவங்களைப் பாடச் சொல்லிக் கேட்டுத் தொந்தரவு பண்ணுவாங்க... நம்ம கண்ணுவுக்கு நல்லாப் பாட வருமுங்கிறதுனாலே எல்லாமே இங்கே நேர்மாறா நடக்குது. வர்றவங்க நச்சரிச்சு இதைப் பாடவச்சுக் கேடுகிட்டுப் போறாங்க" என்றார் நாயுடு. பாடி முடித்த பின்னும் வெகு நேரம் வரை அந்த இனிய குரலும் அதைவிட இனிய அர்த்தமும் பாண்டியன் செவிகளிலும் உள்ளத்திலும் ஒலித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றியது.

கீழ் வீட்டில் கொலுவுக்கு வந்து போகிறவர்களின் நடமாட்டம் குறைந்ததும் கண்ணுக்கினியாள் மாடிக்கு வந்து அவர்களைச் சாப்பிட அழைத்தாள். சாப்பாடு முடிந்து சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பின் அவன் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

"லீவு முடிஞ்சு மறுபடியும் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படறப்ப வந்திட்டுப் போ தம்பீ..." என்றார் நாயுடு. வாயில் வரை அவள் மட்டும் வழியனுப்ப வந்தாள். அவன் மெல்லிய குரலில் அவளைக் கேட்டான்:

"அது ஏன் அந்தக் கீர்த்தனையைத் தேர்ந்தெடுத்துப் பாடினே? வேணும்னே குறும்புதானே?"

"அதுதான் குறும்புன்னு புரிஞ்சிருக்கே? அப்புறம் ஏன் கேட்கிறீங்க?"

சிரித்தபடி விடை கொடுத்தாள் அவள். மனம் கொள்ளாமல் குறுகுறுக்கும் மகிழ்ச்சியோடு பெருமிதமாகத் துள்ளிப் பாய்ந்து நடந்து சென்றான் பாண்டியன். மேலக் கோபுர வாசல் வழியே போகும்போது கல்விக் கூடங்களுக்கான ஸ்போர்ட்ஸ் சாமான்கள் விற்கும் ஒரு பெரிய கடை அருகே கதிரேசன் யாருடனோ நின்று பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்ததும் பாண்டியனின் நடை தயங்கியது. "வா பாண்டியன்! உலகம் ரொம்ப சிறியதுங்கறதை நம்ம பிச்சைமுத்து சார் நிரூபிக்கிறார். காலையிலே தான் நிலக்கோட்டையிலே இவர்கிட்ட சொல்லிக்கிட்டுப் புறப்பட்டோம். மறுபடியும் இன்னிக்குச் சாயங்காலமே இவரை இங்கே எதிர்பாராமல் சந்திக்கும்படி ஆயிடிச்சு... மாணவர்கள் எல்லோரும் வந்து அங்கே மணவாளன் வீட்டிலே காத்துக்கிட்டிருக்காங்க... உன்னைக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லி மணவாளன் என்னை அனுப்பிச்சாரு. நடுவழியிலே சாரைப் பார்த்தேன். பேசிக்கிட்டிருந்தோம். நல்ல வேளையா நீயே வந்திட்டே..." என்றான் கதிரேசன். தாம் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்துக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கத் திடீரென்று தலைமை ஆசிரியரோடு புறப்பட்டு வர நேர்ந்ததாகப் பிச்சைமுத்து கூறினார். அத்தோடு அமைச்சர் கரியமாணிக்கத்துக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிற செய்தியை முதல் நாளிரவு அவர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தது தவிர காலையில் பத்திரிகையில் பார்த்ததாகவும் கூறி வருத்தப்பட்டார்.

"நாங்கள் அதைச் சும்மா விடப் போவதில்லை. எப்படியும் எதிர்த்துப் போராடப் போகிறோம். அதற்காகத்தான் இன்று இங்கே உள்ள வேறு கல்லூரி மாணவர்கள் தலைவர்களையும் சந்திக்கிறோம். இந்தச் சந்திப்பில் ஒரு போராட்டத் திட்டம் உருவாகும்" என்றான் பாண்டியன்.

"ஒரு குறையா, இரண்டு குறையா? ஆயிரம் குறைகளும் ஊழல்களும் அவற்றை எதிர்த்துப் போராட யாருமின்றி இங்கே இன்று இந்த நாட்டில் கொழுத்துப் போயிருக்கின்றன. உங்கள் போராட்டம் எப்போதும் ஓயவே வழியில்லை. ஓயவும் கூடாது."

பிச்சைமுத்து அமைதியான சுபாவமுள்ளவரைப் போலத் தோன்றினாலும் அவருடைய உள்ளார்ந்த சிந்தனைகள் மிகவும் தீவிரமாயிருந்தன. மாணவர்களின் படிப்பைப் பற்றி அக்கறை காட்டிப் பேசும்போது அவர் ஆசிரியர் பிச்சைமுத்துவாகத் தோன்றினார். சமூகப் புரட்சிகளையும், போராட்டங்களையும் பற்றிப் பேசும் போது அவர் தீவிரவாதி பிச்சைமுத்துவாகத் தோன்றினார். மாணவர்கள் முதல் முதலாக நிலக்கோட்டையில் அவரைச் சந்தித்த போது புரிந்து கொண்டதை விட இப்போது அதிகமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. 'மாற்றங்களை எல்லாம் சாத்வீக முறையில் கொண்டுவர ஆசைப்படுகிறவர்' - என்று தான் முதற் பார்வையில் கதிரேசன் அவரைப் பற்றி நினைத்திருந்தான். உண்மையில் அப்படியில்லை. அவர் தீவிரவாதி என்பது போகப்போக விளங்கிற்று. பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் உத்தியோகத்திற்காகத் தம்மோடு பழகுகிறவர்களிடம் தம்மைத் தெளிவாக இனங்காட்டிக் கொள்ளாமல் பழகும் திறனை ஓரளவு பிச்சைமுத்துவே கடைப்பிடித்து நடிக்கிறாரோ என்று கூடத் தோன்றியது. ஆனாலும் கதிரேசனுக்கு அவர் மேல் ஏற்பட்டிருந்த மதிப்பு ஒரு சிறிதும் குறையவில்லை. 'நான் ஒரு தீவிரவாதி. புரட்சியில் விருப்பமுள்ளவர்கள் என் பின்னால் வாருங்கள்' என்று தன்னை ஒருவர் வெளிப்படையாக இனங்காட்டிக் கொண்டு வந்து முன்னால் நிற்பதற்கு இன்று இந்தச் சமூகம் ஏற்றதாக இல்லை. அப்படி ஒரு பக்குவமும் தெளிவும் சமூகத்திற்கு வருகிற வரை இலட்சியவாதிகளும் கூடத் தந்திரமாகத்தான் இருக்க வேண்டும். வேறு வழி இல்லை - என்று கதிரேசனே எண்ணியதனால் அவன் பிச்சைமுத்துவின் நிலையைத் தவறாக எண்ணவில்லை. அவர் கொடுத்திருந்த புத்தகங்கள் வேறு அவனுக்கு அவரை ஓரளவு அடையாளம் காட்டியிருந்தன. இளமைத் துடிப்பும், சுறுசுறுப்பும் அந்த நூல்களின் மேல் ஒரு பற்றையும் கவர்ச்சியையும் ஊட்டி அவனைக் காந்தம் போல் இழுத்தன. அவன் அதை இன்னும் பலருக்குப் படிக்கக் கொடுத்து அவர்கள் மனத்தையும் அந்த நூல்கள் கவர்ந்து வசீகரிக்கப்படுவதை ஆவலோடு எதிர்பார்க்கும் அளவு அவற்றில் ஒரு மயக்கமே அடையத் தொடங்கியிருந்தான்.

இருபத்தோராவது அத்தியாயம்

மாணவ சமுதாயத்தின் மேல் தாம் கொண்டிருக்கும் மனப்பூர்வமான அன்புடனும் அக்கறையுடனும் அப்போது அவர்களிடத்தில் பிச்சைமுத்து பேசினார்.

கதிரேசனும் பாண்டியனும் அப்போது பிச்சைமுத்துவையும் தங்களோடு மணவாளனின் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்கள். தம்முடைய பள்ளித் தலைமையாசிரியரோடு வந்திருப்பதாலும் அவர் கடைக்குள்ளே தமக்காகக் காத்திருப்பதாலும் தாம் அப்போது அவர்களோடு மணவாளனின் வீட்டுக்கு வரமுடியாமலிருப்பதற்கு வருந்தினார் பிச்சைமுத்து. மாணவர்கள் இருவரும் அவரை அதற்கு மேல் வற்புறுத்த விரும்பவில்லை.

மேலக்கோபுர வாசலில் பிச்சைமுத்துவிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரும் மணவாளனின் வீட்டை அடைந்த போது இரவு ஒன்பது மணிக்கு மேலாகி விட்டது. மணவாளன் வீட்டு மொட்டை மாடியில் நூறு மாணவர்களுக்கு மேல் வந்து கூடியிருந்தனர். பாண்டியன் தாமதமாக வந்ததற்கு மணவாளன் அவனைக் கோபித்துக் கொண்டார். கதிரேசன் வழியில் எதிர்பாராத விதமாகப் பிச்சைமுத்துவைச் சந்திக்க நேர்ந்ததை மணவாளனிடம் கூறினான்.

"அவரையும் இங்கே கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்கலாமே?" என்று மணவாளன் பிச்சைமுத்து அவர்களோடு வராததற்காக வருத்தப்பட்டார். தலைமை ஆசிரியருடன் வந்திருக்கும் அவருடைய வேலை நிர்ப்பந்தங்களைக் கதிரேசன் மணவாளனிடம் சொன்னான். பட்டமளிப்பு விழாவின் போது மந்திரிக்கு டாக்டர் பட்டம் அளிப்பதை எப்படி எதிர்ப்பது - எந்தெந்த முறைகளில் மறுப்புத் தெரிவிப்பது போன்ற முடிவுகள் அப்போது அங்கு கூடியிருந்த மாணவர்களிடையே எடுக்கப்பட்டன. போராட்ட அறிவிப்புக்காக எழுதப்பட்ட, எடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை நகல் எழுதிப் படித்து யாவரும் அங்கீகரித்து அச்சிடக் கூட முடிவு செய்தாயிற்று. இரவு பதினோரு மணி சுமாருக்கு கதிரேசனும் மல்லிகைப் பந்தலிலிருந்து வந்திருந்த மற்ற மாணவர்களும் இரவில் மணவாளனோடு அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டார்கள். இரவு நெடுநேரம் அவர்கள் படுத்தபடியே மாணவர்கள் தொடர்புடைய பல பிரச்னைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு ஓய்ந்து அவர்கள் தூங்கத் தொடங்கிய போது இரண்டாவது காட்சி சினிமா விடுகிற நேரம் ஆகிவிட்டது. அதற்கு மேலும் பேசிக் கொண்டே இருந்தால் அந்தப் பேச்சுக்கு ஒரு முடிவே இல்லை என்று தங்களைத் தாங்களே கட்டுப் படுத்திக் கொண்டு தான் தூங்கினார்கள் அவர்கள்.

மறுநாள் அதிகாலை நாலு மணிக்கு மணவாளனை எழுப்பிச் சொல்லிக் கொண்டு பாண்டியனும் கதிரேசனும் மற்ற மாணவர்களும் பஸ் நிலையத்துக்கு வந்தார்கள். கதிரேசன் முதலியவர்கள் மல்லிகைப் பந்தலுக்கும் பாண்டியன் பாலவநத்தத்துக்கும் பஸ் ஏறினார்கள்.

மல்லிகைப் பந்தலில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை அண்ணாச்சியையும், மற்ற மாணவர்களையும் கலந்து பேசிச் செய்யும்படி கதிரேசனிடமும் பிறரிடமும் கூறி அனுப்பினான். மல்லிகைப் பந்தலுக்குப் போகிற பஸ்தான் முதலில் புறப்பட்டுப் போயிற்று. தான் ஊருக்கு விருதுநகர் பஸ்ஸில் போகலாமா, அருப்புக்கோட்டை பஸ்ஸில் போகலாமா என்று யோசித்தான் பாண்டியன். முதலில் அருப்புக்கோட்டை பஸ்ஸே இருந்தது. அந்த அருப்புக்கோட்டை பஸ் காலை நாலே முக்காலுக்குத்தான் புறப்பட்டது. மதுரை நகர எல்லையைக் கடந்து பஸ் அவனியாபுரம் போகும் போது, கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது. மேற்குப்பக்கம் அவனியாபுரம் கண்மாய்க்கு அப்பால் இருள் புலர்ந்தும் புலராமலிருந்த வைகறைக்கு ஏற்ப மங்கலாகத் திருப்பரங்குன்றும், பசுமலையும் தென்பட்டன. விமான நிலையத்துக்கு வழி பிரிகிற இடம் வந்ததும் கட்டிடங்களே அதிகமில்லாத அந்த மேட்டு வெளியிலிருந்து பார்க்கும் போது சூரியோதத்துக்கு வரவு கூறிக் குங்குமத்தால் அவசரம் அவசரமாக இட்ட கோலம் போல் கீழ்வானம் மெல்ல மெல்லச் சிவக்கத் தொடங்கியிருந்தது. ஓடுகிற பஸ்ஸில் முகத்தில் சில்லென்று வந்து உராயும் குளிர்ந்த காற்றையும் பொருட்படுத்தாமல் இந்தக் காட்சியை இரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் பாண்டியன். மல்லிகைப் பந்தலில் சூரியோதத்தை இவ்வளவு அதிகாலையில் பார்க்க முடியாது. காலை எட்டு மணிக்கு மேலானாலும் விடிந்து விட்ட உணர்வு கூட ஏற்படாத ஊர் மல்லிகைப் பந்தல். மல்லிகைப் பந்தலின் நினைவும், பல்கலைக் கழக நினைவுகளும், அந்த ஆண்டின் புதிய அநுபவங்களான மாணவர் இயக்க எண்ணங்களும் ஞாபகம் வந்தவுடன் கண்ணுக்கினியாளும் ஞாபகத்தில் வந்து தங்கினாள். அவளைச் சந்திக்க நேர்ந்த முதல் சந்திப்பிலிருந்து முந்திய நாள் மதுரையில் சித்திரக்காரத் தெருவில் அவள் வீட்டில் விருந்து உண்டது வரை ஒவ்வோர் அணுவையும் நினைவில் அசை போட்டு மகிழ்ந்தான் அவன். பஸ் அருப்புக்கோட்டையை நெருங்குமுன் ஓரிடம் வந்ததும் அவன் நினைவு ஒரு பழைய நிகழ்ச்சியைத் திரும்ப எண்ணியது. சாலையில் அப்போது போய்க் கொண்டிருந்த இடத்தில் தான் 1965-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது மேல் வகுப்பு மாணவர்களும் தானும் சேர்ந்து ஒரு பஸ்ஸுக்கு நெருப்பு வைத்தது ஞாபகம் வந்தது. மாணவ சமூகத்தின் அன்றைய மன நிலைக்கும் இன்றைய மன நிலைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மாறுதல்களும், வளர்ச்சியும் அவனுக்கு உடன் நிகழ்ச்சியாக மீண்டும் நினைவு வந்தது. பஸ் சாலையில் அந்த இடத்தைக் கடந்ததும் மறுபடியும் அவன் நினைவில் சித்திரக்காரத் தெருவும், நாடகங்களின் ஜிகினா கிரீடங்கள், உடைகள், ஸீன்கள் அடங்கிய அந்த மாடிக் கூடமும், அந்த மாடியிலிருந்து செவிமடுத்த 'ரா ராம இண்டி தாக' கீதத்தின் குரல் இனிமையும், பொருள் இனிமையும் அதை அவள் அப்போது தேர்ந்தெடுத்துப் பாடியதனால் தனக்குப் புரியவைத்த குறிப்பின் இனிமையும் தோன்றி இணையற்ற இன்ப அலைகளாய்ச் சிலிர்த்துக் கொண்டிருந்தன.

மாடியில் கண்ணுக்கினியாளின் தந்தையோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அவர் பழைய காலத்து மனிதர்களுக்கே உரிய முறையில் ஒளிவு மறைவு கூச்சம் எதுவும் இல்லாமல் தனது சாதி, குலம், கோத்திரம் எல்லாவற்றையும் சுற்றி வளைத்துத் தொடங்கி விசாரித்து முடித்ததை நினைத்ததும் இப்போது கூட அவனுக்குச் சிரிப்பு வந்தது.

"எனக்கு தெரிஞ்சு நம்ப ஆளுங்க 'பாண்டியன்'னு பேர் வைக்கிற வளமுறை இல்லியே தம்பீ?" என்று மிகவும் தந்திரமாக விசாரித்தார் நாயுடு. அப்போதுதான் தன் குடும்பம் பற்றிய ஓர் உண்மையைத் துணிவாகவும், திடமாகவும் அவரிடம் தெரிவித்தான் பாண்டியன்.

"எங்க அப்பா தேவரு. அம்மா நாயுடு. அந்த நாளிலே எங்க ஊரே அதிசயிக்கிறாப்பிலே நடந்த கலப்பு மணம்னு எங்க அப்பாவே அதைப் பற்றி அடிக்கடி பேசுவாரு. இந்தக் கலப்பு மணத்தாலே ரொம்ப நாள் எங்க குடும்பத்து நல்லது கெட்டதுகளுக்குத் தேவமாருங்களும் வரலே, அம்மா சாதி ஆட்களும் வரலேம்பாங்க... அப்பாதான் மறவர் சீமை வழக்கப்படி 'பாண்டித் தேவர்'னு எங்க தாத்தா பேரைச் சுருக்கமாக 'பாண்டியன்'னு எனக்கு வச்சாராம்..." என்று கந்தசாமி நாயுடுவுக்கு தான் கூறிய மறுமொழியையும் நினைத்துக் கொண்டான் அவன். இந்த உண்மை ஒருவேளை கந்தசாமி நாயுடுவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடுமோ என்ற கூச்சம் அவனுக்கு அப்போது இருந்தது. ஆனால் அடுத்த கணமே, "கலப்பு மணத்துலே தப்பு ஒண்ணும் இல்லே. ஒரு வகையிலே பார்க்கப் போனா நானும் என் சம்சாரமும் கூடக் கலப்பு மணம்னுதான் சொல்லணும். நாங்க 'கவரை' நாயுடு. அவள் கம்மவாரு. தெரிஞ்சிதான் கட்டிக்கிட்டோம்" என்று சுபாவமாக மறுமொழி கூறியிருந்தார் நாயுடு. அதோடு விடாமல் மேலும் அவரே கேட்டார்: "உன்னோட முழுப் பேரு 'சுபாஷ் சந்திர பாண்டியன்'னுல்ல கண்ணு சொல்லிச்சு...?"

"அதுவா? எங்கப்பா நேதாஜி பக்தர். முத்துராமலிங்கத் தேவர் மேலே ரொம்பப் பிரியம். அந்தப் பிரியத்திலே வெறும் 'பாண்டியன்'னு கூப்பிடாமே பிரியமா சுபாஷ் சந்திர பாண்டியன்னு கூப்பிடுவாரு" என்று விளக்கியிருந்தான் அவன். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் இன்னும் ஆயிரம் சீர்திருத்தத் தலைவர்கள் தோன்றினாலும் தமிழ்நாட்டில் சாதிகளைப் பற்றியும், குலமுறைகள் பற்றியும் அறிகிற ஆவல் போகாது போல் தோன்றியது பாண்டியனுக்கு. அருப்புக்கோட்டையில் இறங்கிப் பாலவநத்தத்துக்கு வேறு பஸ் மாறி ஏறிக் கொண்ட பின்னும் அவன் சிந்தனைகள் தொடர்ந்தன. மனம் முந்திய தினத்து நினைவுகளால் நிரம்பி வழிந்தது.

முதல் நாள் நடந்த இந்த நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் நினைத்து அவன் சிந்தித்துக் கொண்டிருந்த போதே பஸ் பாலவநத்தத்தில் போய் இறங்க வேண்டிய நேரம் வந்திருந்தது.

"யாருப்பா சுப்பையாத் தேவரு மகன் தானே? இதென்னப்பா புது நாகரிகம்? நெத்தியே தெரியாம கிராப் வாரியிருக்கே...?" என்று மேலே சட்டை போடாமல் திறந்த மார்புடன் கூடிய முதியவர் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறங்கும் போதே அவனை விசாரித்தார். அவர் தோளில் மண்வெட்டி இருந்தது. நின்று அவருக்குப் பதில் சொல்லிவிட்டு அப்புறம் வீட்டுக்கு நடந்தான் அவன். தெருவிலும் பலருக்கு நின்று நின்று பதில் சொல்ல வேண்டியிருந்தது. நடுவழியில் உயர்நிலைப் பள்ளியில் அவனோடு சேர்ந்து படித்த மாணவ நண்பன் ஒருவன் எதிர்ப்பட்டான். இப்போது அவன் விருதுநகர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் பழைய 'திராவிட நாடு' இதழ்கள் அடங்கிய பழுப்பேறின 'பைண்டு' வால்யூம் ஒன்று இருந்தது. அந்தத் தடித்த வால்யூமின் மேலட்டையில் கறுப்பு சிவப்பு நிறம் மேலும் கீழுமாகக் கலந்தாட எழுத்துக்களில் 'திராவிட நாடு தொகுப்பு ஒன்று' என்றும் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. பாண்டியன் அவனை விசாரித்தான். குரலில் கேலி இருந்தது. "என்ன அழகுமுத்து? பழசெல்லாம் ஒண்ணுவிடாமத் தேடித் தேடிப் படிக்கிறாப்பிலே இருக்கு?"

"ஆமாம் இல்லாட்டி உன்னைப் போலத் தமிழ் எதிர்ப்பு அணியிலே சேர்ந்திடுவேனா என்ன? வடவர் ஆதிக்க வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிடச் செங்குருதி பெருக்கும் பைந்தமிழர் படையின் முதல் போர் முரசு இது! மறந்து விடாதே..." என்று அழகுமுத்து பதிலை ஆரம்பிக்கவே பாண்டியன் அடக்கமுடியாமல் சிரித்து விட்டான். அழகுமுத்து இன்னும் கடந்த காலத்திலேயே இருப்பது புரிந்தது. "இந்தா பாரு... பஸ்லேருந்து இறங்கினதும் இறங்காததுமா, ஒரு பிரசங்கம் கேட்க எனக்கு நேரமில்லே அழகுமுத்து! அர்த்தமுள்ளதாக ஏதாவது இருந்தால் சொல்லு" என்று கூறி அழகுமுத்துவிடம் இருந்து தப்பினான் பாண்டியன். அமைச்சர் கரியமாணிக்கத்துக்குக் கௌரவ டாக்டர் பட்டம் தருவது பற்றிய செய்தியைத் தினசரிகளில் படித்ததாகவும், அதைத் தானும் தன்னைச் சேர்ந்த மாணவர்களும் வரவேற்பதாகவும் அழகுமுத்து போகிற போக்கில் பாண்டியனின் காதில் விழும்படி உரத்துக் கூறினான். அவன் தன்னை வம்புக்கு இழுப்பது பாண்டியனுக்குப் புரிந்தது.

பாண்டியன் போய்ச் சேர்ந்த போது வீட்டில் யாருமில்லை. பின்னால் மாட்டுக் கொட்டகத்தில் வீட்டு வேலையாள் அய்யாவு பருத்தி விதை ஆட்டிக் கொண்டிருந்தான்.

"வா தம்பி! ஐயா, அம்மா, தங்கச்சி எல்லாரும் வெள்ளெனவே எந்திரிச்சி மொளவாத் தோட்டத்துக்குப் போயிட்டாங்க. இன்னிக்கி மொளவா பறிக்கிறாங்க... பொழுது சாயறதுக்கு முன்னே தான் வருவாங்க. நீ வர்றதா கடிதாசி கிடிதாசி எதுவும் போடலியா?" என்று வரவேற்றான் அய்யாவு.

பையைக் கூடத்துத் திண்ணையில் வைத்துவிட்டு கிணற்றடிக்குப் போய்த் தண்ணீர் இறைத்து முகம் கழுவிய பின் பல் விளக்குவதற்காக வேப்பங் குச்சி ஒடித்துக் கொண்டு வந்த பாண்டியன், தலையில் முண்டாசும், முழங்காலுக்கு மேலே தூக்கிக் கட்டிய வேட்டியுமாகக் கிழக்கு பக்கத்து வீட்டுக்காரரான சன்னாசித் தேவரை எதிர் கொள்ள நேர்ந்தது. அந்தக் கிணறு கிழக்கு வீட்டுக்கும் பாண்டியனின் வீட்டுக்கும் பொதுக் கிணறு. சன்னாசித் தேவர் கிணற்றடிக்குக் குளிக்க வந்திருந்தார். அவரை அன்போடு நலம் விசாரித்தான் பாண்டியன்.

"ஏன் தம்பீ! அங்கே யுனிவர்ஸிடியிலே அத்தினி கலாட்டாவுக்கும் நீதான் காரணம்னு பேசிக்கிறாங்களே...? ஒழுங்கா லட்சணமாப் படிப்பைக் கவனிப்பிங்களா, அதை விட்டுப்பிட்டு விடிஞ்சு எந்திரிச்சா போராட்டம் கீராட்டம்னு ஏன் அலையணும்? தேவமாருலே இப்பத்தான் ஏதோ நாலு பேரு வக்கீல், டாக்டரு, அது, இதுன்னு படிச்சு முன்னுக்கு வந்துக்கிட்டிருக்கோம்... அது பொறுக்கலியா உனக்கு?" என்று ஆரம்பித்தார் சன்னாசித் தேவர். சன்னாசித் தேவர் ஃபார்வர்ட் பிளாக் பிரமுகர். அப்பாவுக்கு நண்பர். அவருடைய மனநிலையைப் பாண்டியன் அறிவான். பக்கத்து வீட்டுக்காரரை விரோதித்துக் கொண்டு விவாதிப்பதிலிருந்து விலகி பல் துலக்குகிற காரியம் முடித்த போது சன்னாசித் தேவர் குளிக்கத் தொடங்கியிருந்தார். அவரிடம் கையசைத்துக் குறிப்பினாலேயே சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் வந்தான் பாண்டியன். சமையல் அறையில் கம்பங்களி இருந்தது. மடக்கில் தயிரை ஊற்றிக் கம்பங்களியை ஒரு கை பார்த்ததும் சுகமாகத் தூக்கம் வந்தது. அய்யாவுவிடம் சொல்லிவிட்டுத் திண்ணையில் போய்ப் படுத்த பாண்டியன் மறுபடியும் கண்விழித்த போது பகல் இரண்டு மணிக்கு மேலாகியிருந்தது. முதல் நாள் இரவு மணவாளனின் வீட்டில் பேசியே கழித்து விட்டதால் நல்ல உறக்கமில்லாமல் சோர்ந்திருந்த அவனை பஸ் பயணம் வேறு களைப்படையச் செய்திருந்ததால் அடித்துப் போட்ட மாதிரித் தூங்கினான். அவன் விழித்த போது கோணிப் பைகளோடு மிளகாய்த் தோட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான் அய்யாவு. குளித்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு தானும் அங்கே வருவதாக அவனிடம் சொல்லி அனுப்பிவிட்டுக் கிணற்றடிக்குச் சென்றான் பாண்டியன்.

சில மாதங்களாக ஹாஸ்டல் பாத்ரூமில் ஒரு வாளி வெந்நீரில் குளித்துப் பழகிவிட்டுத் திடீரென்று வாளியால் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் குளிப்பது சிரமமாகவும் அசௌகரியமாகவும் இருப்பது போல் பட்டது. இறவைக் கயிறு கைகளில் அறுப்பது போல் உறுத்தியது. அரையில் சின்னஞ்சிறு துண்டுடன் அவன் குளித்துக் கொண்டிருக்கும் போது சன்னாசித் தேவர் மகள் கருப்பாயி குடத்தோடு தண்ணீருக்கு வந்தாள். ஊரிலிருந்து இரண்டரை மைல் தள்ளி இருக்கிற பருத்திக் காட்டுக்குத் தனியே போய்ப் பருத்தி எடுத்துக் கொண்டு இருட்டியபின் வீடு திரும்புகிற அளவு தைரியமுள்ள அவள் தான் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கூச்சத்தோடு பயந்து தயங்கித் திரும்ப முயலுவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

"ஏ, கருப்பாயி... ஏன் திரும்பறே? வந்து தண்ணி எடுத்துக்கிட்டுப் போ..."

அவள் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, "குளியுங்க... பொறவு வந்து தண்ணி எடுத்துக்கிடுதேன்" என்று கூறிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக விரைந்த போது அவளை அவனால் புரிந்து கொள்ள முடியாமலிருந்தது. சாதாரணமாக நீ, நான் என்று ஒருமையில் பேசுகிறவள் திடீரென்று மரியாதைப் பன்மையில் 'குளியுங்க' என்றதும், இயல்பை மீறி வெட்கப்பட்டதும் அவனுக்குப் புதுமையாயிருந்தன.

சின்ன வயதில் ஒரு சமயம் இந்தக் கருப்பாயி வாய்த் துடுக்கோடு 'நீள மூக்குப் பாண்டி' என்று தன் மூக்கு நீளமாயிருப்பதை நையாண்டியாக நாலைந்து வேறு தெருச் சிறுமிகளையும் உடன் வைத்துக் கொண்டு கேலி செய்த போது, அவளைத் தான் ஓட ஓட விரட்டிக் கன்னத்தைத் திருகியிருப்பதை நினைத்துக் கொண்டான் பாண்டியன். இப்போது அவள் மிகவும் அந்நியமாக நடந்து கொண்ட விதம் அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.

குளித்து விட்டு உள்ளே சென்று கைக்குக் கிடைத்த ஒரு கைலியைக் கட்டிக் கொண்டு, கை வைத்த கலர் பனியன் ஒன்றையும் போட்டுக் கொண்ட பின் வேண்டும் என்றே அவன் மீண்டும் கிணற்றடிக்குப் போனான். கருப்பாயி குடத்தின் கழுத்தில் கயிற்றைச் சுருக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். "என்னது... கருப்பாயி...? நீ அப்பிடிப் பயந்துக்கிட்டு ஓடினதை நினைச்சா சிரிப்பு வருது எனக்கு! ரொம்ப நாளைக்கு முன்னே 'நீளமூக்குப் பாண்டி'ன்னு சொல்லிப்பிட்டு நான் துரத்தறப்ப ஓடன மாதிரியில்லே ஓடினே?" என்று பேச்சுக் கொடுத்தான். அவள் சிரித்தாள். அவனை நேருக்கு நேர் ஏறிட்டுப் பார்க்கப் பயந்தாற் போல் கிணற்றில் இறங்கும் குடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

"வீட்டிலே எல்லாரும் மொளவா எடுக்கப் போயிட்டாங்க போலிருக்கே? எங்ஙனே மதியத்துக்குச் சாப்பிடப் போறீங்க...? எங்க வீட்டுக்கு வாரீங்களா?" என்று அவன் முகத்தைப் பாராமலே கேட்டாள் அவள்.

"நீ கேட்டதிலேயே பசி ஆறிப் போச்சு தாயே! அருமையான கம்பங்களியும் தயிரும்... வயித்திலேயே அப்படியே இருக்கு... முக்குக் கடையிலே ஒரு டீ குடிச்சிப் போட்டு நானும் மொளகாத் தோட்டத்துக்குப் போறேன் ஆத்தா" வேண்டுமென்று அவளைச் சண்டைக்கு இழுப்பதற்காக உள்ளூர் வழக்கமான ஆத்தா, தாயே போன்ற மரியாதைச் சொற்களைப் போட்டுப் பேசினான் அவன். அவள் சகஜமாகத் தன்னை நீ, உன்னை என்று ஒருமையில் பேசாமல் திடீர் மரியாதை கொடுத்ததற்குப் பழி வாங்குவது போலவே அவன் பேசியது அமைந்திருந்தது. ஆனால் அந்தக் கிண்டலையெல்லாம் அவள் புரிந்து கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை.

"காலேசிலே படிக்கிறவுகளுக்கு, மொளவாத் தோட்டத்துலே என்ன வேலை...?" என்று திரும்பிப் பார்த்துக் கேட்டு விட்டு வெளேரென்று அழகான பல்வரிசை தெரியச் சிரித்தாள் கருப்பாயி.

"ஆமா... நீ இப்பல்லாம் பருத்தி எடுக்கப் போறதில்லையா?"

"வயசுக்கு வந்தப்புறம் ஐயா போவக்கூடாதின்னிட்டாக..." இதையும் எங்கோ பார்த்தபடிதான் சொன்னாள் அவள். சொல்லிவிட்டுச் சிறிது தயங்கி நின்ற பின், "நான் வாரேன்" என்று போய்ச் சேர்ந்தாள். அவளுடைய மாறுதல்களும், புதிய மரியாதைகளையும், புதிய வெட்கங்களையும் அடைந்திருந்த பருவம் இரசிக்கத் தக்கவையாக இருந்தன. தெரு முக்குக் கடையில் டீ குடித்துவிட்டு மிளகாய்த் தோட்டத்துக்குப் புறப்பட்டான் பாண்டியன். இருபுறமும் இடையிடையே கொத்துமல்லி பயிரிட்டு வளர்ந்திருந்த சின்னப் பருத்திச் செடிகளின் நடுவே ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லும் அனுபவம் சுகமானதாக இருந்தது. பருத்தி பூத்திருந்த அழகும் கம்மென்ற பச்சைக் கொத்துமல்லி மணந்த மணமும் இதமான உணர்வைத் தந்தன. பருத்திக் காட்டில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டொரு கிராமத்துப் பெண்கள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் தங்கள் வேலைகளில் ஈடுபட்டார்கள். மல்லிகைப் பந்தலின் மலைவளமும், ஈரமும், குளிர்ச்சியும் அளித்த மந்தமான சுகத்தை விட இந்தக் கரிசல் காட்டு வெப்பமும், செவற்காட்டுச் செம்மையும், மண்வாசனைகளும் அவனை இயல்பான அறிமுகமான இடத்தில் இருக்கும் சுபாவமான உணர்வுகளைக் கொள்ளச் செய்தன. உலகின் நாகரிக வேகங்களையும் ஃபாஷன்களையும் பற்றிய கவலையோ, அக்கறையோ இல்லாமல் மண்ணை நம்பி உழுது பயிரிட்டுக் களை எடுத்து அமைதியாகவும், பேராசைப்படாமலும் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தைப் பார்ப்பது மனத்துக்குத் தெம்பளித்தது. மூவாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத் துணைவேந்தரை விட அரைப்படி கேழ்வரகுக்காகவோ, முக்கால்படி சோளத்துக்காகவோ காட்டில் வெயிலில் வேலை செய்யும் இந்த விவசாயக் குடிமக்கள் நாணயமானவர்களாக இருக்க முடியும் என்று தெரிந்தது. ஒழுக்கமும், நேர்மையும், நாணயமும் இல்லாத படித்தவர்களை விடப் படிப்பில்லாமல் ஒழுக்கமும், நேர்மையும், நாணயமும் உள்ள பாமரர்களே சமூகத்தைப் பலப்படுத்துகிறவர்களாக இருப்பார்கள் போலிருந்தது. மல்லை இராவணசாமியைப் போல் உழைக்காமல் பிறரைச் சுரண்டிக் கொழுக்கிறவர்கள் இந்தக் கரிசல் காட்டில் இல்லை. பண்புச் செழியனையும், பொழில் வளவனாரையும் போல் மற்றவர்களுக்கு வெறும் மொழி, இன வெறிகளை ஏற்றி அதில் தாங்கள் குளிர் காய வசதி செய்து கொள்ளும் தளுக்குப் பேர் வழிகளும் இந்தக் கரிசல் காட்டு உழைப்பாளிகளில் இருக்க வழியில்லை. விரிவுரையாளர் மதனகோபாலைப் போல் பிற பெண்களைக் கழுகுக் கண்களோடு வட்டமிடும் சமூகக் கயவர்களை இங்கே காண முடியாது. இது கிராமம். எல்லாரும், எல்லாரையும் அறிந்து கொண்டு எல்லாருக்கும் உதவும் நெருக்கமானதோர் எல்லையில் யாரும் யாரையும் ஏமாற்றி வளர வாய்ப்பில்லை என்பது போல் கண்ணுக்கெட்டிய தூரம் பரவிக் கிடந்த அந்தக் கரிசல் காட்டில் ஆட்கள் நெருங்கி நின்று உழைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் தங்களுக்குச் சொந்தமான மிளகாய்த் தோட்டத்துக் கிணற்றடிக்குப் போய்ச் சேர்ந்த போது பகல் கழிந்து மாலை நேரம் வந்து வெயில் தணிந்திருந்தது. ஊரிலிருந்து அந்த இடம் சில மைல்கள் தள்ளியிருந்தது. கிணற்றடி மேட்டில் செக்கச் செவேலென்று மிளகாய்ப் பழ அம்பாரம் குவிந்திருந்தது. தங்கை மாரியம்மாள் தொலைவில் அவனைப் பார்த்ததுமே எதிர்கொண்டு ஓடிவந்தாள். முகம் மலர அவனை வரவேற்றாள்.

"ஏண்டா இப்பிடி இளைச்சுப் போயிச் சோகை தட்டின மாதிரி வெளுத்திருக்கே?..." என்று தாய் அவன் உடம்பைச் சுட்டிக்காட்டி விசாரித்தாள். எவ்வளவு செழிப்பாக இருந்தாலும் ஒவ்வொரு தாய்க்கும் தன் மகனைத் தான் அல்லாத பிறர் பேணிய வேளைகளில் எல்லாமே அவனை இளைக்கச் செய்துவிட்டது போல் தோன்றுவது தவிர்க்க முடியாதது போலிருந்தது. அவனுடைய மதியச் சாப்பாட்டைப் பற்றி உடனே விசாரித்தாள் தாய். வீட்டில் அவளே வைத்து விட்டு வந்திருந்த கம்பங்களியையும் தயிரையும் பிசைந்து சாப்பிட்டதைச் சொன்னான் அவன். சன்னாசித்தேவர் மகள் தன்னைச் சாப்பிடக் கூப்பிட்டதையும் தன்னிடம் அளவு கடந்து வெட்கப்பட்டதையும் கூட அவன் தாயிடம் சிரித்துக் கொண்டே தெரிவித்தான்.

"வயசு வந்த பொண்ணு வெட்கப்படாம என்ன செய்யும்? நீ மட்டும் என்னவாம்? இன்னும் சின்னப் பையனின்னா நினைச்சுக்கிட்டிருக்கே? உனக்கு என்ன வயசு இப்ப?... கல்யாணங் கட்டிக்கிட்டிருந்தா இதுக்குள்ளாரா...?''

"அவன் தாய் இப்படி எல்லாம் தாராளமாக அவனிடம் பேசுவது உண்டு. நல்ல வேளையாக அப்போது சற்றே விலகித் தொலைவில் மிளகாய் பறித்துக் கொண்டிருந்த அவன் தந்தை சுப்பையாத்தேவர் ஒரு கோணிப் பையோடு அவனருகே வந்து, "இந்தா நீயும் ஒரு சால் பிரித்துக் கொண்டு மொளகா எடு. நேரமாகுது... பொழுது சாயறதுக்குள்ளே முடியணும்..." என்று கோணிப்பையை அவன் கையில் கொடுத்தார்.

"ஊரிலே இருந்து இப்பத்தான் வந்திருக்கான். உடனே அவனெ உங்க வெள்ளாமைக் காரியத்துக்கு வேலை ஏவுறீங்களே...?" என்று தேவரைக் கண்டித்தாள் பாண்டியனின் தாய்.

தேவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அவர் சுபாவமே அப்படித்தான். வியக்கவும், உபசரிக்கவும், சம்பிரதாயமாக வரவேற்கவும் தெரியாத முரட்டு உழைப்பாளி அவர். உரமேறிய சரியான கரிசற்காட்டு விவசாயியான அவர் காலேஜில் படிக்கிற மகனை, 'வந்தியா? சௌக்கியமா?' என்று கூட விசாரிக்காமல் உடனே சால் பிரித்துக் கொடுத்து மிளகாய் எடுக்கச் சொல்லியது அவர் மனைவிக்குக் கோபமூட்டியது. பாண்டியனோ ஆத்தாளின் கோபத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே தந்தை சொல்லியபடி சால் பிரித்துக் கொண்டு மிளகாய் எடுக்கத் தொடங்கினான்.

இருபத்திரண்டாவது அத்தியாயம்

கிராமத்தில் நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன. ஒவ்வொரு நாளும் ஒரு வாரத்தின் சுமையோடும், கனத்தோடும் முக்கி முனகிக் கொண்டு மெதுவாக ஊர்வது போல் இருந்தது. வேறுவேறு கல்லூரிகளிலிருந்து விடுமுறைக்காக ஊர் வந்திருந்த மாணவர்களோடு சேர்ந்து ஒரு நாள் இரவு சைக்கிள் சவாரி செய்து விருதுநகருக்குப் போய் இரவு இரண்டாவது காட்சி திரைப்படம் பார்த்து விட்டு வந்தான் பாண்டியன். வாடகை சைக்கிள்களை எடுத்துக் கொண்டு ஏழெட்டுப் பேர் சேர்ந்து போய்விட்டுச் சிரித்துப் பேசிக் கொண்டே இரவில் சேர்ந்து திரும்பியது உற்சாகமான அநுபவமாக இருந்தது. பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலை ஒட்டி நடந்திருந்த நிகழ்ச்சிகளும், சிறை சென்று மீண்டதும் பல பத்திரிகைகளில் பேர் குறிப்பிட்டு வந்திருந்த காரணத்தால் எங்கே படிக்கிற மாணவர்களாயிருந்தாலும் மாணவர்களிடையே அவனுக்கு ஒரு மதிப்பையும், புகழையும் உண்டாக்கியிருந்தன. பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் அவன் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிச் சார்புடைய மாணவர்களை எதிர்த்து வென்றிருந்தானோ, அந்தக் கட்சிச் சார்புடையவர்களாக இருந்த ஓரிருவர் அவனை வெறுக்கவும் செய்தனர். ஆனால், அந்த வெறுப்பு மிக மிகச் சிறுபான்மையாகவே இருந்தது. அழகுமுத்துவைப் போல் இன்னும் அடுக்கு மொழிப் பேச்சு யுகத்திலேயே பின் தங்கி இருந்த ஓரிருவர் அப்படி வெறுத்தாலும் ஒரு பெரிய பல்கலைக் கழக பேரவையின் செயலாளனாயிற்றே என்று அவனை நோக்கி வியக்கும் வியப்பையும் அந்த ஓரிருவரால் கூடத் தவிர்க்க முடியவில்லை. மல்லிகைப் பந்தலில் இருந்தாலும், மதுரைக்கு வந்தாலும், பாலவநத்தத்துக்குள் நுழைந்தாலும் மாணவர் இயக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாகத் தனக்கு ஏற்பட்டிருக்கும் புதிய மதிப்பையும், பெருமையையும் பாண்டியனே உணர முடிந்தது; புரிந்து கொள்ள முடிந்தது. அவன் கிராமத்துக்கு வந்த இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ அருப்புக் கோட்டையிலிருந்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஒருவர் பள்ளி இலக்கிய மன்ற விழாவுக்காக அவனைப் பேச வருமாறு கூறிவிட்டார்.

"வேறே யாராவது பெரிய தலைவராகப் பார்த்துக் கூப்பிடுங்க. நான் எதுக்கு?" என்று பாண்டியன் பணிவாக மறுத்தான்.

"உபசார வார்த்தையா நீ இப்படிப் பேசக்கூடாது தம்பீ! இனிமே உன்னைப் போல இருக்கிற இளைஞர்கள் தான் தலைவர்களாக வரணும். வயசானவங்க எல்லாம் போரடிக்கிறாங்க. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்காங்க. என்ன பேசறோம்னு தங்களுக்கும் புரியாமே கேட்கிறவங்களுக்கும் புரியாமே மணிக்கணக்காப் பேசறாங்க..." என்று பதில் சொல்லிச் சிரித்தார் அந்த தலைமை ஆசிரியர். பாண்டியன் அவர் கூறியதை அப்படியே ஒப்புக் கொள்ள வில்லை.

"நீங்க சொல்றதை அப்படியே ஒப்புக் கொண்டுவிட முடியாது! தங்களுக்கு வயதாகி மூப்பு வந்து விட்டாலும் நாட்டையும், நாட்டின் எதிர்காலத்தையும் நினைத்துக் கவலைப்படுகிற தங்களது பொறுப்புணர்ச்சியை இன்னும் இளமையாகவே வைத்துக் கொண்டிருக்கிற பெரியவர்கள் சிலரும் நம்மிடையே இருக்கிறார்கள். தாங்கள் இளமையாகவே இருந்தாலும் நாட்டைப் பற்றிக் கவலையே இல்லாமல் வெறும் ஃபாஷன்களின் காட்சிப் பொம்மைகள் போல் திரியும் இளைஞர்களும் இருக்கிறார்கள். 'டிஸ்கொதே' ரெஸ்டாரண்டுகளின் பொய் இருளைத் தேடி அலையும் பல இந்திய இளைஞர்களை எனக்குத் தெரியும். மூத்துத் தளர்ந்த பின்னும் இளமையாகச் சிந்திக்கும் சில வயதானவர்களும், இளமையாக இருக்கிறபோதே மூத்துத் தளர்ந்து விட்டாற் போல கிழட்டுத்தனமாகச் சிந்திக்கும் இளைஞர்கள் சிலருமாக இங்கே கலந்திருக்கிறார்கள். இந்தக் கலைப்பை நீங்கள் அருப்புக்கோட்டையிலோ, பாலவநத்தத்திலோ இருந்து புரிந்து கொள்ள முடியாது. இன்னும் பரபரப்பான நகரங்களில் வந்து பார்த்தால் தான் இது புரியும்..."

அவன் எவ்வளவோ மறுத்தும் கேளாமல் இலக்கிய மன்றத்துக்குப் பேச வருமாறு வற்புறுத்தினார் அந்தத் தலைமை ஆசிரியர். அவனும் போய்ப் பேசிவிட்டு வந்தான். அன்றைய தினம் அவன் செய்த சொற்பொழிவை எல்லாருமே பாராட்டினார்கள். அவன் கிராமத்துக்கு வந்திருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவது போல் அவன் தாய் இன்று கேழ்வரகு அடை, நாளை காராச்சேவு, நாளன்றைக்கு முறுக்கு என்று வாய்க்கு ருசியாக அவனுக்குச் செய்து கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள். அவன் வந்து சேர்ந்த முதல் நாளுக்குப் பின் அவன் தாயும் தங்கையும் வயல்காட்டு வேலைகளுக்குப் போவதை நிறுத்திவிட்டார்கள். தந்தை தாம் எப்போதும் போல் காலையில் போய் சூரியன் மலை வாயில் விழுகிற நேரத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். நடுவில் ஒரு நாள் இரவு அவனோடு பேச நேரம் வாய்த்த போது கிழக்கு வீட்டுச் சன்னாசித் தேவரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு, "படிக்கிறதைவிட முக்காவாசி நாளு நீங்கள்ளாம் ஜெயிலிலே இருக்கீங்கன்னு தேவரு பேப்பரைப் படிச்சிட்டுச் சொல்றாரே; அது மெய்தானா?" என்று அவனைக் கேட்டார் தந்தை.

"நாங்க எந்தத் தப்பும் பண்ணி, அதுக்காக ஜெயிலுக்குப் போகலை. பண்ணாத தப்புக்காக அவங்களா எங்களை ஜெயில்லே அநியாயமா அடைச்சாங்க" என்றான் பாண்டியன். அரசியல் ரீதியாக அவன் போக்குப் பிடிக்காத காரணத்தால் சன்னாசித் தேவர் தந்தையிடம் இல்லாததும் பொல்லாததுமாகக் கொள் சொல்லி வைத்திருப்பார் போலிருந்தது. அது புரிந்ததும் பாண்டியன் சன்னாசித் தேவரோடு அதிகமாக விவாதிக்க விரும்பவில்லை. ஊரில் இருந்த போது மதுரையிலிருந்தும், மல்லிகைப் பந்தலிலிருந்தும் அவனுக்குச் சில கடிதங்கள் வந்திருந்தன. பல்கலைக் கழகத்தைத் திறக்கும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே புறப்பட்டு வரச் சொல்லிக் கதிரேசன் எழுதியிருந்தான். தான் கொடுத்திருந்த நவநீத கவியின் வசன கவிதைகளை அவன் படித்தாயிற்றா இல்லையா என்று விசாரித்துக் கண்ணுக்கினியாள் எழுதியிருந்தாள். திரும்பவும் மல்லிகைப் பந்தல் போவதற்கு முன் மதுரையில் இறங்கித் தம்மைப் பார்த்துவிட்டுப் போகுமாறு மணவாளன் எழுதிய கடிதத்தில் அவனை வேண்டியிருந்தார். அண்ணாச்சி சுகம் விசாரித்து ஒரு கார்டு போட்டிருந்தார்.

விடுமுறை அநேகமாக முடிந்து விட்டது. சில நாட்கள் தங்கியதிலேயே சில மாதங்கள் கழிந்து விட்டாற் போன்ற மனநிலையை அடைந்திருந்தான் அவன். புறப்படுவதற்கு முந்திய தினம் மாலையில் உலாவச் செல்லும் போது நவநீத கவியின் அந்த வசன கவிதைத் தொகுதியைக் கையில் எடுத்துக் கொண்டு சென்றிருந்த அவன் மிளகாய்த் தோட்டத்துக் கிணற்றடி வேப்ப மரத்தின் கீழே அமர்ந்து அதைப் படிக்கத் தொடங்கினான். கிராமத்துக்கு வருகிற சமயங்களில் எப்போதுமே வீட்டில் அமர்ந்து படிப்பது அவன் பழக்கமில்லை. அந்தக் கிணற்றடிதான் படிப்பதற்கு எப்போதுமே அவன் தேர்ந்தெடுக்கும் இடம். படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையும் அமைதியுமுள்ள இடமாக அந்தக் கிணற்றடி அவனுக்குப் பழக்கமாயிருந்தது.

'வருங்காலக் காதலர்களுக்கு' என்ற அந்தக் கவிதைத் தொகுதியில் எல்லாமே காதல் கவிதைகளாக இருக்கும் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அப்படி இல்லை. 'வருங்காலத்தைக் காதலிப்பவர்களுக்கு' - என்ற அர்த்தமும் தொனிக்கும்படி அந்தத் தலைப்பைச் சூட்டியிருப்பதாக நவநீத கவியே தமது முன்னுரையில் எழுதியிருந்தார். தொகுதியில் சேர்ந்திருந்த 'இளம் நம்பிக்கைகள்' என்ற கவிதை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

"இந்த நூற்றாண்டின் இந்திய இளைஞனே!
இப்போது நீ எந்த இடத்தில் நிற்கிறாய்?
ஆன்மீகத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் நடுவிலா?
அறியாமைக்கும் அறிவுக்கும் நடுவிலா?
நேற்றைய அவநம்பிக்கைகளுக்கும்
இன்றைய சிரமங்களுக்கும் நடுவிலா?
நீ நிற்கும் இடம் உனக்குப் புரிகிறதா?
அவநம்பிக்கைகள் தான் உன் முன்னோர்
உனக்கு அளித்த பிதுரார்ஜிதங்களா?
சிரமங்கள் தான் நீ உனக்கென்றே
தேடிக் கொண்ட புதுச் சொத்துக்களா?
நீ நிற்கும் இடம் உனக்குப் புரிகிறதா?
சாலை விதிகளைச் சரியாகப் புரிந்து கொள்.
சாலைகளின் நடுவே நிற்கக் கூடாது.
நடுவே நிற்பவர்கள் எப்போதுமே விபத்துக்குள்ளாகிறார்கள்
நடுவில் நிற்காதே; பின்னாலும் போகாதே
முன்னேறி விடு! முன்னால் வழிகள் தெளிவாயுள்ளன
நடுவில் நிற்காதே பின்னாலும் போகாதே
நீ நிற்குமிடம் உனக்குப் புரிகிறதா
நடுவில் நிற்பவர்கள் எப்போதுமே விபத்துக்குள்ளாகிறார்கள்
முன்னேறி விடு! முன்னால் வழிகள் தெளிவாயுள்ளன..."

இந்தக் கவிதையை இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தான் பாண்டியன். அவனுடைய இதயத்தின் குரல்களையெல்லாம் எதிரொலிப்பது போலிருந்தது இது. பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் பிறகு இந்த நவநீத கவி தமிழ்நாட்டில் ஒரு பெரிய உணர்ச்சி வாயிலைத் திறந்து விட்டிருப்பது போல் தோன்றியது அவனுக்கு. அந்தக் கரிசல் காடு முழுவதும் எதிரொலிக்கும்படி இந்தச் சொற்களை உரத்த குரலில் கூவ வேண்டும் போலிருந்தது. 'சாலை விதிகளைச் சரியாகச் புரிந்து கொள் - சாலைகளில் நடுவே நிற்கக்கூடாது' என்று கூறியுள்ள வரிகளின் மூலம் 'மிடில் ஆஃப் தி ரோட்' என்னும் வழவழ மனப்பான்மை மிக மிக நாசூக்காகக் கிண்டல் செய்யப்பட்டிருக்கும் நயத்தை அவன் எண்ணி எண்ணி இரசித்தான்.

அன்றிரவு ஊர்ச் சாவடியில் வேறு சில மாணவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பாண்டியன் இந்த வசன கவிதையை அவர்களிடம் எடுத்துச் சொல்லிப் புகழ்ந்தான். எல்லாரும் அவனைப் போலவே அதை இரசித்தாலும் விருதுநகரில் படிக்கும் அழகுமுத்து மட்டும் அதைக் கிண்டல் செய்து விமர்சித்தன்.

"எதுகை இல்லை. மோனை இல்லை. அடி வரம்பு, சீர் வரம்பு எதுவுமே இல்லாமல் இது எப்படி கவிதையாகும்?"

"எதுகை, மோனை, சீரு, தளை, அடி எல்லாம் சரியாயிருந்து உள்ளே சரக்கு எதுவுமில்லாமே நடைப்பிணம் போல் வர்ர கவிதைகளை என்னான்னு சொல்றது? எங்கே நீதான் ஒரு நல்ல கவிதையைச் சொல்லேன் அழகுமுத்து?" என்று அவனோடு விவாதிக்கத் தொடங்கினான் மற்றொரு மாணவன்.

"சொல்றேன் கேளு. சென்ற ஆண்டு எங்க கல்லூரி மேகஸீன்லே எழுதிய கவிதையைக் கேட்டால் நீங்க அத்தினி பேரும் அசந்து போயிடுவீங்க" என்று தொடங்கினான் அழகுமுத்து.

"நாங்க அசந்து போறோமோ இல்லியோ நீ அசராமச் சொல்லிப் பாரு. அப்புறம் தெரியும்?" என்றான் பாண்டியன். அழகுமுத்து தன் கவிதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

"பருவப் பாவைதான்
உருவக் கோவையில்
திருகித் திருகிச்
செருகினாள் மனதைச்
செருகிய மனத்தை
தருவதோ தவிர்வதோ
அறிகிலன் யானுமே
உருகினன் பருகினன்."

ஒரு தமிழ் எம்.ஏ. மாணவன் இதைச் செவிமடுத்த உடனே ஆத்திரமாகக் கேட்டான்:

"சும்மா அளக்காதே அப்பனே? 'முருகிற் சிவந்த கழுநீரு'னு ஆரம்பமாகிற பழைய கலிங்கத்துப் பரணிப் பாட்டை இமிடேட் பண்ணி அதிலே 'பருவப் பாவை' 'உருவக் கோவை' என்று உன் கண்டுபிடிப்பையும் நுழைச்சு எழுதியிருக்கே? இதிலே என்ன புதுசா இருக்கு?"

"புதுசா என்ன இருக்கணும்? அதான் வரிக்கு வரி எதுகை மோனை எல்லாம் இருக்கே...?"

"அதெல்லாம் இருந்து என்ன பிரயோசனம்? கவிதையல்லவா முக்கியமா அதுக்குள்ளார இருக்கணும்? அது இல்லியே?"

"நம்ம அழகுமுத்துவுக்கும் வேறு சில ஆட்களுக்கும் இந்தப் 'பருவப் பாவை'ங்கிற தொடரையே 'டெலிகிராபிக் அட்ரஸா' - (தந்தி விலாசம்) கொடுத்திடலாம். சில பேருங்க கையிலே ரொம்ப வருசமா இந்தப் 'பருவப் பாவை' சிக்கிக்கிட்டுப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்கா..."

"இத்தினி வருசத்துக்குப் பிறகும் அந்தப் பருவப் பாவை கிழவியாகாமே எப்பிடி ஒரே மாதிரி இன்னும் 'பருவப் பாவையா'கவே இருந்துக்கிட்டிருக்கான்னுதான் புரியலே..."

"அதைப் பேசினவங்க, எழுதினவங்க எல்லாம் வயசாகிக் கிழவனாகி மூத்துப் போனப்புறமும் அந்த வார்த்தை இன்னும் அப்படியேதான் இருக்கு! வேடிக்கைதான்..."

இதைக் கேட்டு அழகுமுத்து கோபித்துக் கொண்டு எழுந்திருந்து போய்விட்டான். எல்லா மாணவர்களும் சேர்ந்து கொண்டு தன்னைக் கிண்டல் செய்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விவாதம் நடந்த மறுநாள் காலை பாண்டியன் கிராமத்திலிருந்து பல்கலைக் கழகத்துக்குப் புறப்பட வேண்டியிருந்தது. இம்முறை அருப்புக்கோட்டை பஸ்ஸில் போய் மாறிப் போகாமல், விருதுநகர் சென்று மதுரைக்கு இரயில் மூலம் போக நினைத்தான் அவன். அடுத்த விடுமுறைக்கு இவ்வளவு நாட்களை வீணாக்காமல் முன்கூட்டியே புறப்பட்டு வந்து விட வேண்டும் என்று அவன் தாயும் தங்கையும் வற்புறுத்திச் செல்லி அனுப்பினார்கள். அவன் புறப்படும் போது தந்தை எங்கோ காட்டுக்குப் போயிருந்தார். அவருக்கு எப்போதும் வெள்ளாமை வேலைதான். பாசம், பிரியம் எல்லாமே இல்லாத முரட்டு மனிதர் போலத் தோன்றினாலும் பாண்டியனிடம் அந்தரங்கமான பாசமும் பிரியமும் அவருக்கு உண்டு. மேற்படிப்புக்கு வெளியூர் போன பின் எந்த விடுமுறைக்கு ஊர் வந்து திரும்பும் எந்தத் தடவையிலும் அவன் புறப்படுகிற தினத்தன்று அவர் வீட்டில் இருந்து வழியனுப்ப நேர்ந்ததே இல்லை. "ஐயா கிட்டச் சொல்லிடு ஆத்தா" என்று அவருக்குமாகச் சேர்த்துத் தாயிடம் சொல்லிக் கொண்டு புறப்படுவது தான் எப்போதும் அவன் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

அன்று பிற்பகல் விருதுநகருக்குப் பஸ்ஸில் போகும் போது அதே பஸ்ஸில் அழகுமுத்துவும் வருவதைப் பாதி தூரம் சென்ற பின்பே பாண்டியன் பார்த்தான். அழகுமுத்து முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டு பேசாமல் இருந்தான். அபிப்பிராய பேதத்தைக் கோபமாக மாற்றி விரோதமாக ஆக்கிக் கொள்கிற அளவு அவன் இன்னும் சிறுபிள்ளைத் தனமாகவே இருந்தது பாண்டியனுக்குப் புரிந்தது. மாலையில் விருதுநகர் போய்த் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் மெயிலில் மதுரை போய்ச் சேர்ந்தான் அவன். முதலில் மணவாளன் வீட்டுக்குச் சென்று பார்த்த போது அவர் வீட்டில் இல்லை. இரவு ஒன்பது மணிக்குத்தான் அவரைப் பார்க்க முடியும் என்று தெரிந்தது. அதற்குள் சித்திரக்காரத் தெருவுக்குப் போய்க் கண்ணுக்கினியாளைச் சந்தித்துவிட்டுத் திரும்ப எண்ணி டவுன் ஹால் ரோடு வழியே போய்க் கொண்டிருக்கும் போது ஒரு படக்கடை வாயிலிலே எதிர்பாராத விதமாகத் தமிழ்த் துறைத்தலைவர் டாக்டர் பொழில் வளவனாரையும், வார்டன் பண்புச் செழியனையும் பாண்டியன் சந்திக்க நேர்ந்தது. அப்போதுதான் ஃபிரேம் செய்யப்பட்ட அமைச்சர் கரியமாணிக்கத்தின் மிகப் பெரிய படம் ஒன்றை இருவரும் சுமக்க முடியாமல் தூக்கிச் சுமந்து ஒரு டாக்ஸியில் வைத்துக் கொண்டிருந்தார்கள். மிக அருகே பார்த்துவிட்டதனால், "ஐயா, வணக்கம். எப்ப வந்தீங்க?" என்று தமிழ்த்துறைத் தலைவரை வணங்கினான் பாண்டியன். திடீரென்று பாண்டியனை அங்கே சந்திக்க நேர்ந்ததை எதிர்பார்க்காத அவர்கள் முகத்தில் அசடு வழியச் சிரித்தார்கள்.

"அமைச்சரின் உருவப் படத்தைப் பட்டமளிப்பு விழா முடிந்த மறுநாளே தமிழ் டிபார்ட்மெண்ட் அறையிலே திறந்து வைக்கப் போகிறோம். இந்தப் படத்துக்காகத் தான் வந்தோம்" என்று அவன் கேட்காமலே வந்த காரியத்தையும் சொன்னார் பொழில் வளவனார்.

அதற்கு எந்த மறுமொழியும் கூறாமல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் பாண்டியன். பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையைச் சேர்ந்த கூடத்தில் திரு.வி.க., மறைமலையடிகள், தமிழ்த் தாத்தா உ.வே.சா., பரிதிமாற் கலைஞர் போன்றவர்களின் படங்களும், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களின் படங்களுமே இதுவரை இருந்தன. இப்போது புது வழக்கமாக ஓர் அமைச்சரின் படத்தைத் திறப்பதற்காக இவர்கள் ஏன் இப்படி அலைகிறார்கள் என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன். பொழில் வளவனாரின் காக்கை பிடிக்கும் குணமும், வாழ்ந்தாருக்கு மாரடிக்கும் தன்மையும் பல்கலைக் கழக எல்லையில் எல்லாருக்கும் தெரியும் என்றாலும் இப்போது அவர் செய்யத் துணிந்திருந்த காரியம் வெறுப்பூட்டக் கூடியதாக இருந்தது. இதைச் செய்வதற்காக மல்லிகைப் பந்தலிலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்திருப்பது சற்றே மிகையாகப் பட்டது. பொழில் வளவனார் அவனிடம் பேசினார்.

"என்ன தம்பி சிந்தனை? நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் தலைமை ஏற்றபின் பல்கலைக் கழக மாணவர்களிடையே தமிழுணர்வு குன்றிவிட்டதே என்பதுதான் என் வருத்தம். சொல்லப் போனால் இது போல படம் சட்டம் போட்டு எடுத்துவர முன்பெல்லாம் நாங்கள் வரமாட்டோம். எங்கள் கட்டளையை ஏற்று உங்களைப் போல் மாணவர்கள் வருவார்கள். என்ன செய்வது? இப்போது காலம் மாறிவிட்டது. இதற்கெல்லாம் நாங்களே வருவது தவிர வேறு வழி இல்லையே?"

"நீங்களாக அப்படியெல்லாம் சொல்லக் கூடாது ஐயா! தமிழ் உணர்வு மட்டும் போதும் என்பது உங்கள் கட்சி. தமிழுணர்வோடு நியாய உணர்வும் வேண்டும் என்பது மாணவர்களாகிய எங்கள் கட்சி. அது தவறா ஐயா?"

"தவறொன்றும் இல்லை! ஆனால் விரிவுரையாளர் மதனகோபாலை வெளியேற்ற நீங்கள் மேற்கொண்ட போராட்டம் எங்களுக்கு உடன்பாடில்லை. பிழை புரிவது மனித இயல்பு. அதைப் பெரிதுபடுத்தி ஒருவர் வாழ்வைக் கெடுத்து விடக் கூடாது! வேலையிலிருந்து துரத்தும்படி அவர் என்ன பெரிய தவறு செய்து விட்டார்?"

"அதுதான் நீங்களே சொல்கிறீர்களே ஐயா! 'ஒருவர் வாழ்வைக் கெடுத்துவிடக் கூடாது' என்று. பிழை புரிவது மனித இயல்பானால் அதைக் கண்டிப்பதும் மனித இயல்புதானே?"

"என்னவோ தம்பி, எனக்கு உங்கள் போக்கெல்லாம் பிடிக்கவில்லை. முன்பெல்லாம் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தருக்குக் கட்டுப்படாத மாணவர்கள் கூடத் தமிழ்த்துறைத் தலைவருக்குக் கட்டுப்படுவார்கள். இப்போது அந்தக் காலம் மாறிவிட்டது..."

"நாங்களாக மாறவில்லை. நீங்கள் தான் எங்களை அப்படி மாற்றியிருக்கிறீர்கள் ஐயா!" - அவன் இவ்வாறு சுடச்சுட மறுமொழி கூறியதும் அவர் மேலே பேசுவதை நிறுத்திக் கொண்டுவிட்டார். பெரிய வணக்கமாகப் போட்டுவிட்டு அவர்களைக் கடந்து மேலே நடந்தான் பாண்டியன்.

அவன் போய்ச் சேர்ந்த போது வீட்டு வாயிலில் பூக்காரியிடம் பூ வாங்கிக் கொண்டிருந்தாள் கண்ணுக்கினியாள். பிச்சிப்பூ வாசனை கம்மென்று வந்து நாசியை நிறைத்தது. அவனைப் பார்த்ததும் அவள் வியப்போடு கேட்டாள்:

"அடடே... ஏது இப்படித் திடீர்னு...? ஒரு நாள் முன்னாடியே வந்திருக்கீங்க?... நாளன்னிக்குக் காலையிலே தானே யுனிவர்ஸிடி திறக்கறாங்க?"

"ஒருநாள் முன்னாலேயே வரச் சொல்லிக் கதிரேசன் எழுதியிருக்கிறான். நான் நாளைக்குக் காலையிலேயே போகிறேன்..."

"வாங்க... உட்காருங்க... அம்மா, நாயினா ரெண்டு பேருமே இல்லே. வெளியிலே போயிருக்காங்க... ஆடி வீதியிலே வாரியாரு கதை கேட்கப் போறோம்னு போனாங்க..."

"வாரியாருக்கு ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கேன்."

"அப்படியானா உங்களை உள்ளார விடக் கூடாது."

"பின்னே எப்படியானா உள்ளே விடச் சம்மதிப்பேன்னு தெரிஞ்சா நல்லது."

"வர்ரீங்களா, நாமும் வாரியார் கதைக்குப் போகலாம்?"

"நான் வரலை. எட்டரை மணிக்கு நான் மணவாளன் வீட்டுக்குப் புறப்பட்டாகணும். ஒன்பது மணிக்கு அவரை வீட்டில் வந்து பார்க்கறதாச் சொல்லியிருக்கேன். காத்திருப்பாரு."

"சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன். நான் ஒண்ணும் கதைக்குப் போகப் போறதில்லே..."

அவளையே இமையாமல் பார்த்தான் பாண்டியன். வாயிற்புறம் திரும்பிப் பார்த்து யாரும் வரவில்லை என்று உறுதியாகத் தெரிந்த பின் அவள் கையிலிருந்த பூவைப் பறித்துத் தானே அவள் கூந்தலில் சூட்ட முயன்றான் அவன். பூவை அவன் கைகளில் பறிகொடுத்து விட்டாலும் தான் அவன் பிடியில் சிக்காமல் சிரித்துக் கொண்டே உட்புறம் ஓடினாள் அவள். அவனும் விடவில்லை. அவன் துரத்த, அவள் ஓட, அந்த வீட்டின் உட்கூடத்தில் ஒரு சரஸமான ஓட்டப் பந்தயமே நடந்தது. முடிவில் கதவோரமாக அவளைப் பிடித்து நிறுத்திக் கதம்பமான இங்கித நறுமணங்கள் நிறைந்த அவள் கூந்தலை நாசியில் நுகர்ந்தபடி அந்தப் பூவைச் சூட்டினான் பாண்டியன்.

"திருப்திதானே! அகநானூற்றுக் காலத்துக் காதலன் போல் பூச்சூட்டியாச்சு இல்லையா?..."

"இந்தக் காலத்துக் காதலன் மாதிரீன்னா எப்படி நடந்துக்கணும்? எனக்குத் தெரியாது... அதை நீதான் கொஞ்சம் சொல்லேன்."

"தமிழ் வாரப் பத்திரிகைகளிலே தொடர் கதை படியுங்க, புரியும். இல்லாட்டி ரெண்டு தமிழ் சினிமாவாது பார்த்திட்டு வாங்க..." அவள் சிரித்தாள். குரலில் கேலி நிறைந்திருந்தது.

"அப்பிடியா சேதி? புரியுது" என்று அவளைத் தாவிப் பிடிக்க முயன்றான் அவன்.

"இதிலேருந்து தமிழ்த் தொடர்கதைகளிலேயும் சினிமாவிலேயும் தாவறதும், பாயறதும் தான் இருக்குன்னு நிரூபிக்கிறீங்களாக்கும்."

"மன்னிக்கணும்! நான் 'நியூவேவ்' கதைகள் படிக்கிறதில்லை..."

"அப்படின்னா உட்காருங்க! ஒரு கதையும் படிக்க வேணாம்! அந்த நவநீத கவியின் கவிதைத் தொகுதி படிச்சீங்களா, இல்லையா?"

அவன் அந்தத் தொகுதியைப் படித்ததையும், அதிலிருந்த 'இளம் நம்பிக்கைகள்' என்ற கவிதையைப் புகழ்ந்து வியந்ததனால் கிராமத்தில் ஒரு மாணவனுக்கும் தனக்கும் வந்த விரோதத்தையும் அவளிடம் விவரித்தான்.

"அந்தக் கவிதையில் உள்ள 'தொனி நயமும்' காலத் தன்மையும் இணையற்றவை. அவரைத் தவிர வேறு யாருக்கும் அப்படி எழுத வராது" என்றாள் அவள்.

"'நட்சத்திரங்களும் முழு நிலாவும்' தான் அந்தத் தொகுதியிலேயே உனக்குப் பிடிச்சக் கவிதையின்னு நீ எனக்கு எழுதின கடிதத்திலே சொல்லியிருந்தே, இல்லியா?"

"அதுக்குக் காரணம் உங்களுக்கும் அது பிடிக்கணும்கிறதுதான்! 'நட்சத்திரமும் முழு நிலாவும்' எனக்குப் பிடிச்சா உங்களுக்குப் பிடிக்காமப் போயிடுமா என்ன?"

"இப்பக்கூட வானத்திலே நட்சத்திரங்களும் சின்னப் பிறை நிலாவும் இருக்கு... வா மாடிக்குப் போகலாம்."

"நீங்க ரொம்பத் தைரியக்காரர்தான்..."

"யுனிவர்ஸிடி எலெக்ஷன் அப்ப ஒத்துக்காததை இப்பவாவது ஒத்துக்கிறியே? அப்பிடி வா வழிக்கு."

வாயிற்புறம் யாரோ நடந்து வருகிற செருப்புச் சத்தம் கேட்டது. கண்ணுக்கினியாள்தான் முதலில் எழுந்து போய்ப் பார்த்தாள். "வாங்க... வாங்க" என்று வருகிற யாரையோ வரவேற்றுவிட்டு உட்புறமாகத் திரும்பி, "மணவாளன் அண்ணன் வராரு..." என்றாள் அவள். பாண்டியன் எழுந்து வந்து மணவாளனை எதிர் கொண்டான்; முகம் மலரக் கை கூப்பி வரவேற்றான்.

இருபத்து மூன்றாவது அத்தியாயம்

"நீ தேடி வந்தேன்னு எங்க வீட்டிலே சொன்னாங்க. நான் எதிர்பார்த்ததை விடச் சீக்கிரமாகவே திரும்பிட்டேன். நீ மறுபடியும் ஒன்பது மணிக்கு வருவேன்னும் வீட்டிலே தெரிஞ்சுக்கிட்டேன். உடனே நீ இங்கேதான் வந்திருக்கணும்னு புறப்பட்டு வந்தேன்" என்றார் மணவாளன். பாண்டியனுக்கு அவருடைய எதிர்பாராத வரவு கனவிலிருந்து அடித்து எழுப்பியது போல் இருந்தது.

"என்ன உங்க ஊர்ப் பக்கம் எல்லாம் ஸ்டூடண்ட்ஸ் எப்படி இருக்காங்க?" என்று பாண்டியனைக் கேட்டார் மணவாளன். "எல்லா ஊர்லியும் 'மல்லிகைப் பந்தல் ஸ்பிரிட்' தான் இருக்கு. சுயநலமும் எதேச்சாதிகாரமும், பதவி வெறியும் எங்கும் எதிர்ப்பு உணர்ச்சியைத்தான் உண்டாக்கியிருக்கின்றன. மனமும் சிந்தனையும் வளராத சிலர் மட்டுமே இன்னும் துதி பாடிகளாக இருக்கிறார்கள். மேரி தங்கத்தின் தற்கொலை விஷயம் வெளியே பரவிப் பத்திரிகைகளில் சிரிப்பாய்ச் சிரித்த பிறகு எல்லா இடங்களிலும் எதிர்ப்பு உணர்ச்சிதான் வலுவாயிருக்கிறது" என்றான் பாண்டியன்.

"உனக்குத் தெரியுமோ பாண்டியன்? நேற்றுத்தான் நிலக்கோட்டையிலிருந்து வந்த ஒருத்தர் சொன்னார். மேரிதங்கத்தின் பெற்றோர்கள் வாழைத்தோட்டத்துச் சிறையிலிருந்து வெளிவந்து இப்போதுதான் சில நாட்களாக ஊரில் சகஜமாக நடமாடுகிறார்களாம். மிஸ்டர் சற்குணம் இன்னும் கூட மற்றவர்களிடம் எதைப் பற்றியும் பேசப் பயந்து நடுங்குகிறாராம்."

"அவரைப் போல் பயந்து நடுங்குகிறவர்கள் இருக்கிற வரையில் இந்த நாட்டில் சுயநலமிகள் பாடு கொண்டாட்டம் தான்."

இதற்குள் கண்ணுக்கினியாள் உள்ளே போய் அவர்கள் இருவருக்கும் காப்பி கலந்து கொண்டு வந்திருந்தாள்.

"எங்கேம்மா நாயினா இல்லியா?" என்று அவளிடமிருந்து காப்பியை வாங்கிக் கொண்டே விசாரித்தார் மணவாளன். நாயினாவும் அம்மாவும் ஆடி வீதிக்குக் கதை கேட்கப் போயிருப்பதாகச் சொன்னாள் அவள்.

"நீ தனியாகத்தான் இருக்கியா? அதான்..." என்று ஏதோ சொல்லத் தொடங்கிய மணவாளன், பாண்டியனைப் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டே மேலே பேசாமல் அப்படியே நிறுத்திவிட்டார்.

"பட்டமளிப்பு விழாவப்ப ஒரு பெரிய போராட்டம் நடத்தப் போகிறோம். யுனிவர்ஸிடியிலே படிக்கிற எல்லாப் பிரிவு மாணவர்களோட ஆதரவும் வேணும். உன்னாலே நிறையக் காரியம் ஆகவேண்டியிருக்கும்மா. நீ மனசு வைத்தால் முடியும்" என்றார் மணவாளன்.

"அண்ணனைப் போல் மாணவர் தலைவர்கள் இப்படி வேண்டக் கூடாது! உரிமையோடு எங்களுக்குக் கட்டளை இட வேண்டும்" என்றாள் அவள். மிகவும் தன்னடக்கமாக அவள் இப்படிப் பதில் பேசியது மணவாளனுக்கும் பாண்டியனுக்கும் பிடித்திருந்தது.

"இந்தப் பட்டமளிப்பு விழா போராட்டம் முடிந்ததும் அதில் இந்தியத் தேசிய மாணவர் சம்மேளனத்தின் சார்பில் பல்கலைக்கழக மாணவர்களின் மகாநாடு ஒன்றையும் மல்லிகைப் பந்தலில் நடத்தப் போகிறோம்."

"பிரமாதமா நடத்தலாம். மாணவிகளின் ஒத்துழைப்பு முழு அளவில் இருக்கும்."

"நிதி வசூலுக்கு இரண்டு நாடகங்களாவது போட வேண்டியிருக்கும். செலவு நிறைய ஆகும்."

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பாண்டியனையும் உடனழைத்துக் கொண்டு மணவாளன் புறப்பட்டார். இருவரையும் இரவு ஒன்பது ஒன்பதரை மணிக்குள் அங்கே சாப்பிட வருமாறு அழைத்தாள் அவள்.

"நாங்கள் நாலைந்து கல்லூரி விடுதிகளுக்குப் போய் மாணவர்களைச் சந்தித்துப் பேச வேண்டியிருக்கிறது அம்மா! போகிற இடங்களில் எங்கே எத்தனை மணிக்கு நாங்கள் சாப்பிட நேரிடும் என்பதைச் சொல்ல முடியாது. நீ வேறு எங்களுக்காக இங்கே சாப்பாட்டை வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டாம்" என்று மணவாளன் மறுத்துவிட்டார்.

"காலையில் முதல் பஸ்ஸில் புறப்பட்டு நான் மல்லிகைப் பந்தலுக்குப் போய் விடுவேன். நீ நாளன்றைக்குப் புறப்பட்டு வருகிறாயாக்கும்?" என்று அவளிடம் விசாரிப்பது போல் தனக்கு ஏற்கனவே தெரிந்ததையே மறுபடியும் கேட்டுவிட்டு அவளிடம் விடைபெற்றான் பாண்டியன்.

"நாயினா வந்தா விசாரிப்பாங்க. மறுபடியும் வந்து அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போங்களேன்" என்றாள் அவள். பாண்டியன் சிரித்தான். தன்னை அவள் மறுபடியும் அங்கே வரவழைக்க முயல்வது அவனுக்குப் புரிந்தது.

முதலில் நகரை விட்டுச் சற்றே ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு கல்லூரி விடுதிக்குச் சென்றார்கள் அவர்கள். விடுதியின் மாணவர்களைச் சந்தித்துப் பேசிய போது அந்த மாணவர்கள் மணவாளனிடமும் பாண்டியனிடமும் ஒரு குறையை முறையிட்டார்கள். அந்தக் கல்லூரியில் குறுகிய நோக்கமுள்ள ஒரு பேராசிரியர் வகுப்புக்கு வராமல் பாடத்தை விட்டுவிட்டுத் 'தமிழ்நாடு தனியே பிரிய வேண்டும்' என்று பிரச்சாரம் செய்வதாகவும், அவரே கல்லூரித் தமிழ் மன்ற விழாக்களிலோ, பேரவைக் கூட்டங்களிலோ முடிவில் தேசிய கீதம் பாடப்படுவதைத் தடுக்கிறார் என்பதாகவும், ஒருமுறை மாணவர் விழாவில் அந்தப் பேராசிரியரே ஆத்திரமாக எழுந்து ஓடி வந்து, ஒலி பெருக்கிக்காரன் கையிலிருந்த தேசிய கீத 'ரிக்கார்டை' வலியப் பிடுங்கி உடைத்து விட்டதாகவும் மாணவர்கள் வருத்தப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே மணவாளனுக்குத் தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது.

"தெய்வ பக்தி இல்லாதவர்களையாவது நாத்திகர்கள் என்று ஒதுக்கி விட முடியும். தேசபக்தி இல்லாதவர்களை மனிதர்களாகவே கருதக் கூடாது. அவர்களை மனித இனத்திலிருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும். தெய்வ பக்தியற்றவர்களை நாம் மன்னிக்க முடியும். ஆனால் தேச பக்தியற்றவர்களை ஒரு போதும் மன்னிக்க முடியாது; மன்னிக்கவும் கூடாது. இனிமேல் என்றைக்காவது வகுப்புக்குள்ளோ கல்லூரி எல்லையிலோ அந்தப் பேராசிரியர் தேசிய கீதத்தை எதிர்த்தோ, தேச ஒற்றுமையை எதிர்த்தோ பிரசாரம் செய்தால் அவரை வளைத்து மடக்கி 'கெரோ' செய்யுங்கள். மன்னிப்புக் கேட்கிறவரை விடாதீர்கள். அப்புறம் தான் அவருக்குப் புத்தி வரும்."

கல்லூரி 'க்விஸ் புரோகிரா'மில் ஒரு விரிவுரையாளர், 'இன்ன அமைச்சரின் மனைவி பெயர் என்ன?' என்பது போல் ஒரு கேள்வி கேட்டதாகவும், 'அந்த அமைச்சரின் எத்தனையாவது மனைவியைப் பற்றிக் கேட்கிறீர்கள்?' என்று பதில் கூறிய மாணவன் திகைத்துப் போய் எதிர்க் கேள்வி போட்டதாகவும் ஒரு சம்பவத்தை மற்றொரு மாணவன் விவரித்தான். சிறிது நேரத்துக்குப் பின் தாங்கள் கொண்டு வந்திருந்த துண்டுப் பிரசுரங்களையும், நிதி வசூலுக்கான இரசீதுப் புத்தகங்களையும் அந்த விடுதி மாணவர்களில் சிலரிடம் ஒப்படைத்து விட்டுப் புறப்பட்டார்கள், மணவாளனும் பாண்டியனும். இரவு பத்து மணிக்குள் இப்படியே இன்னும் இரண்டு மூன்று கல்லூரிகளைப் பார்த்து முடித்த பின் அவர்கள் வீடு திரும்பினார்கள். நடுவில் ஒரு கல்லூரி விடுதியில் அவர்களுடைய இரவு உணவு முடிந்திருந்தது. சில இடங்களில் போலீஸ் சி.ஐ.டி. ஆட்கள் தங்களைப் பின் தொடர்வதை அவர்களே உணர முடிந்தது. அங்கங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு மணவாளனின் வீட்டுக்குத் திரும்பியதும் பட்டமளிப்பு விழாவுக்கு ஒருவாரம் முன்னதாகவே அவர் மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று அவரிடம் வற்புறுத்தினான் பாண்டியன். "ஒரு இண்டர்வ்யூவுக்குப் பம்பாய் போய் வரணும். போகலாமா விட்டு விடலாமா என்று யோசிச்சுக்கிட்டிருக்கேன். 'எங்கேயும் போய் நிற்க வேண்டாம். நீயே ஒரு 'கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி'ன்னு போர்டு மாட்டிக்கிட்டு இங்கேயே உட்காரு'ங்கிறாங்க வீட்டிலே. பம்பாய் போகலேன்னா ஒரு வாரத்துக்கு முனனடியே அங்க வந்திடலாம். எதுக்கும் நான் உனக்குக் கடிதம் எழுதறேன் பாண்டியன்!" என்றார் மணவாளன். பொழில் வளவனாரையும் பண்புச் செழியனையும் படக்கடை வாசலில் பார்த்ததைப் பற்றி மணவாளனிடம் சொன்னான் பாண்டியன்.

"அவங்க ரெண்டு பேருமாச் சேர்ந்து மல்லிகைப் பந்தலிலேயே ஒரு பெரிய படக் கடையாக வச்சு நடத்தலாம். ஏன்னா வருசம் முந்நூத்தி அறுபது நாளும் அவங்க எந்த மந்திரி படத்துக்காவது 'பிரேம்' போட்டுத் திறப்பு விழா நடத்திக்கிட்டுத்தான் இருக்காங்க. சொந்தப் படக்கடைதான் அதுக்குத் தோதாக இருக்கும்!"

"அண்ணனை ஒரு சந்தேகம் கேட்கணும்! அது என்ன பொழில் வளவனாருன்னு கூட ஒரு பேர் இருக்க முடியுமா? அவரு சொந்தப் பேரு என்னண்ணே?"

"சோலைராஜான்னு பேரு. அதைப் பொழில் வளவன்னு தமிழாக்கி வச்சுக்கிட்டிருக்காரு. பண்புச் செழியனோட பேரு இராஜகோபால்ங்கிறது. அவரும் 'கெஸட் நோட்டிஃபிகேஷ'னோட பேரை மாத்திக்கிட்டாரு..."

"ஏன் இப்படியெல்லாம் மாத்திக்கிறாங்க, அண்ணே? இதுலே என்ன ஒரு 'மேனியா'வோ தெரியலியே...?"

"இந்த மாதிரி 'மேனியா'வுக்கு எல்லாம் இங்கே ஒரு பெரிய சரித்திரமே இருக்குப் பாண்டியன்! பிரிட்டிஷ்காரனுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் பிறந்த திருட்டுக் குழந்தைகள் நம்மிடையே பல இயக்கங்களாக உருவாயின. அதில் ஒன்று தான் காரணமில்லாத பிறமொழி வெறுப்பு. தாய்மொழி மேல் பற்றோ ஞானமோ சிறிதும் இல்லாதவர்கள் கூட இந்தப் பிறமொழி வெறுப்பை வளர்த்துக் கொண்டாட முற்பட்ட காலம் ஒன்று இருந்தது. அதே காலத்தில் சமூகத்தில் உயர் வகுப்பார் என்று கருதப்பட்ட சிலர் தாய்மொழியை ஓரளவு கூட லட்சியம் செய்யாதிருக்கவே இந்தக் குறுகிய உணர்வு வளரவும் விளம்பரம் பெறவும் முடிந்தது. அந்தக் காலத்தின் பிரதிநிதிகள் தான் பொழில் வளவனாரும், பண்புச் செழியனும். இவர்களுக்கும் உண்மையான மொழிப்பற்று இல்லை. தமிழ் மட்டுமே தெரிந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி மிரட்டுவதும், ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களிடம் கடுந்தமிழ் பேசி மிரட்டுவதுமாக இவர்களிடம் ஒரு தந்திரம் நிரந்தரமாக உண்டு. அதனால் தமிழறியாதவர்களும் இவர்களைக் கண்டு பயந்து ஒதுங்குவார்கள். ஆங்கிலம் அறியாதவர்களும் மிரண்டு ஒதுங்கி விடுவார்கள்." தொடர்ந்து மணவாளன் பாண்டியனுக்கு வரலாற்று ரீதியாகத் தமிழ்நாட்டு அரசியல் இயக்கங்களைப் பற்றிய சில உண்மைகளை விளக்கினார். அந்த இயக்கங்களின் கடைசி வெற்றி 1967-இல் அவர்களால் அறுவடை செய்யப்பட்டதை காரண காரியங்களோடு விவரித்தார் அவர். இன்னோர் உண்மையையும் அவர் கூறத் தயங்கவில்லை. "நாடளாவிய பெருங் குறைகளையும், தேச விடுதலையையும், பற்றியே கவலைப்பட்ட மாபெரும் தேசபக்தர்கள் மொழி இலக்கியத் துறைகளைப் பற்றிய பிரதேச உணர்வுகளை மறந்ததால் அந்த மறதிக்கு ஒரு சிறிது இடைக்காலத் தோல்வியையே தண்டனையாகப் பெற நேர்ந்துவிட்டது! அந்தக் கொடுமையைத் தான் இப்போது நீயும் நானும் அனுபவிக்கிறோம். கிணற்றுத் தவளை மனப்பான்மை குறையக் குறையத்தான் இதிலிருந்து இனிமேல் நாம் விடுபட முடியும்."

"கிணற்றுத் தவளை மனப்பான்மைகளே சில தத்துவங்களாகி, அந்தந்த தத்துவங்களே இங்கே சில கட்சிகளாகவும் வளர்ந்து விட்ட பின் இனி அது எப்படி உடனே சத்தியமாகும் அண்ணே?"

"சாத்தியமாகிறாற் போல் நாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது பாண்டியன்! அதற்குத்தான் நாம் இடைவிடாமல் போராடி வருகிறோம். இனி அடுத்த தலைமுறை தெளிவாக இருக்கும். நிஜம் வெள்ளமாகப் பெருக்கு எடுக்கும் போது எல்லாப் பொய்களையும் அது இருந்த இடம் தெரியாமல் அடித்துக் கொண்டு போய் அழித்துவிடும். பல ஆண்டுகளுக்கு முன் இங்கே பெருகிய முதற் சத்தியப் பெருக்கைக் காந்தியடிகள் ஊற்றுக் கண்ணாயிருந்து பெருகச் செய்தார். அதில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய குறுகிய மாநில உணர்வுகள் கரைந்து, ஹரிஜன், மேலோன் என்ற பேதங்கள் தவிர்த்து, ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் தகர்ந்து, ஏக இந்தியாவும் விடுதலை பெற வேண்டும் என்ற வேகம் மட்டுமே நீரோட்டத்தின் இயக்கமாயிருந்தது. அது போல் மீண்டும் ஒரே திசையில் முனைந்து ஓடும் உண்மைப் பெருக்கு ஒன்றில் தான் இப்போதுள்ள பொய்களைக் கரைக்க முடியும்."

மணவாளனின் தெளிவான கருத்து பாண்டியனை மெய் சிலிர்க்க வைத்தது, மறுநாள் அதிகாலையில் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்ட போது மணவாளனே வந்து அவனை வழியனுப்பினார். பதினொன்றரை மணிக்கு அவன் மல்லிகைப் பந்தலை அடைந்த போது பகலே இருட்டி மூட்டம் போட்டாற் போல் கவிழ்ந்திருந்தது. அவன் அந்தப் பஸ்ஸில் தான் வர முடியும் என்று எதிர்பார்த்துக் கதிரேசனும் பத்திருபது மாணவ நண்பர்களும் அவனை வரவேற்கப் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தனர். மல்லிகைப் பந்தல் மண்ணில் இறங்கியதும் இறங்காததுமாக ஒரு போராட்டப் பிரச்னையோடு பாண்டியனை எதிர் கொண்டார்கள் அவர்கள். தங்களோடு பாலேஸ்வரி என்ற யாழ்பாணத்து மாணவியையும் அவர்கள் பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்திருந்தார்கள். பல்கலைக் கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவிகளில் அவள் குறிப்பிடத் தக்கவள் என்ற முறையில் அவளை இரண்டொருமுறை கண்ணுக்கினியாளுடன் பார்த்திருக்கிறான் பாண்டியன். அவள் சம்பந்தமாக ஏதோ பிரச்னை அன்று அங்கே காத்திருக்கிறது என்பது மட்டும் பாண்டியனுக்கு அப்போது உடனே புரிந்தது.

கதிரேசன் பஸ் நிலையத்திலேயே அந்தப் பிரச்னையைச் சொல்லத் தொடங்கியதும், "இங்கே பேச வேண்டாம். அண்ணாச்சி கடையிலே போய்ப் பேசுவோம்" என்று பாண்டியன் அவர்களையும் உடனழைத்துக் கொண்டு அண்ணாச்சி கடைக்குப் போனான். அவன் போனபோது கடையில் அண்ணாச்சி இல்லை. எங்கோ வெளியே போயிருந்தார். கடையின் பின் அறையில் போய் அமர்ந்தார்கள் அவர்கள். கதிரேசனும், பிறரும் இடையிடையே அந்த யாழ்ப்பாணத்துப் பெண்ணும் சொல்லியதிலிருந்து பாண்டியனுக்கு என்ன நடந்திருக்க வேண்டும் என்று புரிந்தது. "இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஒரு மாலை வேளையில் மல்லிகைப் பந்தல் ஏரியின் கரையில் பூங்காவில் இருந்த பெஞ்சு ஒன்றில் அந்தப் பெண் பாலேஸ்வரி அமர்ந்திருந்த போது மல்லை இராவணசாமியின் மூத்த மகனும் கோட்டச் செயலாளர் குருசாமியின் மூத்த மகனும் அந்தப் பக்கமாக வந்து அவளை வம்புக்கு இழுத்துக் கேலி செய்திருக்கிறார்கள். இருவருமே பல்கலைக் கழகத்தில் படிப்பவர்கள்தான் என்றாலும் திமிர் பிடித்தவர்கள். அவர்கள் பாலேஸ்வரியிடம் முறைகேடாக நடந்து கொள்ள முயலவே, அவள் கால் செருப்பைக் கழற்றி அடிக்க ஓங்கி கூப்பாடு போட்டுக் கூட்டம் சேர்த்துவிட்டாள். மல்லை இராவணசாமியின் மகனும், குருசாமியின் மகனும் கூட்டத்தைக் கண்டதும் பயந்து ஓடிவிட்டார்கள். ஆனால் வீட்டில் போய் இருவரும் தங்கள் தங்கள் தந்தையிடம், பார்க்கில் தனியாக அமர்ந்திருந்த அவள் தங்களைத் தவறான வழியில் அழைத்ததாக மாற்றிச் சொல்லி அதன் விளைவாக மல்லை இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி இன்ஸ்பெக்டரிடம் வத்தி வைத்துவிட்டார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டரும் உடனே இந்தப் பெண்ணைக் கூப்பிட்டு அவராகப் பொய்க்குற்றம் சாட்டி எழுதிய எஃப்.ஐ.ஆரில் இவளைக் கையெழுத்துப் போடும்படி வற்புறுத்தியிருக்கிறார். இவள் பிடிவாதமாக மறுத்திருக்கிறாள். இவளைப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துப் போனதைப் பார்த்த கெமிஸ்ட்ரி புரொபஸர் ஸ்ரீராமன் பின் தொடர்ந்து ஸ்டேஷனுக்குப் போய் என்னவென்று விசாரித்திருக்கிறார். 'விபச்சாரக் குற்ற வழக்கு' என்றவுடன் ஸ்ரீராமன் கடுங்கோபங் கொண்டு, 'நோ... நோ... யாரோ உங்களுக்குத் தப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். இவள் என் மாணவி. இவளை நான் நன்றாக அறிவேன். இது அபாண்டம் அடுக்காது' என்று கூறியிருக்கிறார். ஸ்ரீராமன் நரைத்த தலையும், முடிந்த குடுமியும், பழுப்பேறிய வேஷ்டியுமாக ஒரு பழைய காலத்துத் தோற்றம் உடையவராக இருக்கவே, போலீஸ் இன்ஸ்பெக்டர், 'பஞ்சாங்கக்காரப் பயலே! வெளியிலே போடா! நீ யாரடா இதை வந்து இங்கே சொல்றதுக்கு' என்று திடீரென்று அவர் மேல் பாய்ந்து அவரது கழுத்தின் பின்புறம் பிடரியில் கைகொடுத்து அழுத்தி நெட்டித் தள்ளியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் தள்ளியதும் தள்ளாடித் தலைகுப்புற விழுந்த ஸ்ரீராமன் முன் நெற்றியில் காயத்தோடு அவமானப்பட்டு வீட்டுக்குத் திரும்பி, அப்புறம் அது ஊர் முழுவதும் பரவி நானும் முந்நூறு நானூறு மாணவர்களும் ஸ்டேஷனுக்கு ஊர்வலமாகப் போன பிறகுதான் இந்தச் சகோதரியை மீட்க முடிஞ்சுது. ஒரு மாணவியின் மேல் அபாண்டமாக விபச்சாரக் குற்றச்சாட்டு வருகிறது. அதைக் கேட்கப் போன ஒரு புரொபஸரைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். இது நாடா அல்லது காடான்னு தான் புரியலே. மல்லை இராவணசாமிக்கும், கோட்டச் செயலாளர் குருசாமிக்கும் மட்டும் தானா போலீஸ்? நமக்கெல்லாம் இல்லியா அந்தப் போலீஸ்? இவ்வளவு பெரிய அக்கிரமம் நடந்தும் வி.ஸி. இன்னும் இதைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசலே. பேருக்குக் கூட வருத்தப்படலே. போலீஸ், வி.சி., ஆர்.டி.ஓ. எல்லாருமாகச் சேர்ந்து பேப்பர்லே இந்தச் செய்தி வரவிடாமல் பண்ணிப்பிட்டாங்க பாண்டியன்! நான் உனக்கு இதைப் பற்றி ஒரு தந்தி கூடக் கொடுக்கலாம்னு நினைச்சேன். ரொம்பக் கொடுமை இது. இதை இப்பிடியே விட்டுவிடக் கூடாது" என்று குமுறினான் கதிரேசன்.

"புரொபஸர் ஸ்ரீராமன் இப்ப வீட்டிலே இருக்காரா, ஆஸ்பத்திரியிலே இருக்காரா? அவரை முதல்லே போய்ப் பார்ப்போம். அப்புறம் மற்றவற்றை யோசிக்கலாம்" என்றான் பாண்டியன். கெமிஸ்ட்ரி புரொபஸர் வீட்டில் தான் இருக்கிறார் என்று கதிரேசன் கூறியதும் அவர்கள் உடனே அவரைப் பார்க்கப் புறப்பட்டார்கள். பேராசிரியர் ஸ்ரீராமன் பழைய காலத்து மனிதர். ஆனால் நல்ல படிப்பாளி. மாணவர்கள் மேல் கருணையும் அன்பும் உடையவர். அவருக்கு இப்படி ஒரு கொடிய அவமானம் இழைக்கப்பட்டு விட்டது என்பதை இப்போது மறுபடி நினைத்துப் பார்க்கவும் கூட வருத்தமாக இருந்தது பாண்டியனுக்கு.

ஸ்ரீராமன் அவர்களைப் பார்த்ததும் அழாத குறையாக எல்லாவற்றையும் விவரித்தார். "நான் பண்ணின பாவம் அப்பா! ஒரு வெளிநாட்டு மாணவி - நம்ம தேசத்தை நம்பிப் படிக்க வந்தவளைப் பத்தி இப்படி ஒரு அபாண்டமான்னு கேட்கப் போனேன். இன்ஸ்பெக்டர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. போட்ட தூபத்திலே அவனுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறார். அந்தச் சமயம் பார்த்து நான் நியாயம் கேட்கப் போய்ச் சேர்ந்தேன். அதுக்குத்தான் இந்தத் தண்டனை. ரெண்டு எம்.எல்.ஏ.யும் பவர்லே இருக்கிற மினிஸ்டிரிக்கு வேண்டியவனும் எது சொன்னாலும் அதைத்தான் கேக்கறதுன்னு வந்துட்டா அப்புறம் போலீஸ் எதுக்கு? நியாயம், சட்டம்லாம் எதுக்கு?" என்று கொதித்துக் கேட்டார் அவர். பாண்டியனுக்கு உள்ளம் குமுறியது. பாலேஸ்வரி மீண்டும் புரொபஸருக்கு முன் கண் கலங்கி அழுதே விட்டாள். உடனடியாக ஒரு கண்டன ஊர்வலத்தை நடத்தி அந்த வெளிநாட்டு மாணவியையும், புரொபஸரையும் ஆதரித்ததற்காகக் கதிரேசனைப் பாராட்டினான் பாண்டியன். உடனே பத்திரிகைகளுக்கு அதைப் பற்றிச் செய்திகள் அனுப்ப ஏற்பாடு செய்தான். பிற்பகலில் அவனும் அந்த மாணவியும் வேறு சில மாணவர்களும் துணைவேந்தரை அவர் வீட்டில் போய்ப் பார்த்தார்கள். துணைவேந்தர் அழுத்தலாக இருந்தார். பாண்டியன் அந்தப் பேச்சை ஆரம்பித்ததுமே, "பாண்டியன், லெட் அஸ் ஃபர்கெட் வாட் ஹாப்பன்ட் இன் தி பாஸ்ட்..." என்று மெல்ல நழுவ முயன்றார் துணைவேந்தர்.

"புரொபஸர் ஸ்ரீராமனைத் தாக்கியதை நீங்கள் ஏன் இன்னும் கண்டித்து அறிக்கை விடவில்லை?"

"அவரை யாரும் தாக்கியதாக எனக்குத் தகவல் இல்லையே?..."

"ஓகோ! தாக்கியவர்களோ தக்கப்பட்டவர்களோ உங்களிடம் வந்து சொன்னாலொழிய நீங்கள் அதற்காகக் கவலைப்படவோ, வருந்தவோ மாட்டீர்கள் இல்லையா?"

"ஆல்ரைட்! யூ ஸீம்ஸ் டு பீ ஆங்ரீ. எனிதிங் மோர் டு ஸே?..."

"நத்திங் சார்! சொல்ல ஒன்றுமில்லை. செய்வதற்குத் தான் நிறைய இருக்கிறது" என்று பதில் சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்தான் பாண்டியன்.

"ஆர் யூ நாட் அஷேம்ட்..." என்று கோபமாகத் துணைவேந்தரை நோக்கி ஏதோ ஆரம்பித்த கதிரேசனின் வாயைப் பொத்தி அவனையும் வெளியே இழுத்துக் கொண்டு வந்தான் பாண்டியன். மாலையில் மாணவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று மோகன்தாஸ் தலைமையில் அண்ணாச்சியுடைய கடையின் பின்புறம் நடந்தது. அதைத் தொடர்ந்து இரவில் அந்த நகரின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலரை மாணவர்கள் சந்தித்தார்கள். கலந்து பேசினார்கள். யாழ்ப்பாணத்து மாணவியிடம் மல்லை இராவணசாமியின் மகனும், கோட்டம் குருசாமியின் மகனும் தவறாக நடந்து கொண்டதையும், புரொபஸர் ஸ்ரீராமன் போலீஸாரால் அவமானப் படுத்தப்பட்டதையும் கண்டித்து ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. வெளியூர் மாணவர்களோடும், மணவாளனோடும் ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினான் பாண்டியன். எதிர்ப்புக் கனல் எல்லா இடங்களிலும் பரவியது. பட்டமளிப்பு விழாவின் போது நடத்த வேண்டிய பெரிய போராட்டத்துக்கு முன் சக மாணவி ஒருத்திக்கும், வயது மூத்த பேராசிரியர் ஒருவருக்கும் இழைக்கப்பட்ட தீமைகளை எதிர்த்து முதலில் இந்தப் போராட்டத்தை அவர்கள் உடனே மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இருபத்து நான்காவது அத்தியாயம்

யாழ்ப்பாணத்து மாணவி பாலேஸ்வரிக்கும், இரசாயனப் பேராசிரியர் ஸ்ரீராமனுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்துப் போராட முடிவு செய்த தினத்தன்று இரவு பாண்டியன் அண்ணாச்சியை சந்திக்க பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது. வெளியே சென்றிருந்த அண்ணாச்சி அப்போதுதான் திரும்பி வந்திருந்தார். தேயிலைத் தோட்டங்கள் அதிகமாயிருந்த பக்கத்து மலைப்பகுதி ஒன்றிற்கு அன்று அதிகாலையிலேயே புறப்பட்டுப் போயிருந்த அவர் இரவு திரும்பி வந்து கூறிய செய்திகளும் நிகழ்ச்சிகளும் கவலை அளிக்கக் கூடியவையாக இருந்தன. அங்கே நடைபெற்ற தொழிற்சங்கத் தேர்தல் ஒன்றில் போலீஸார் பாராமுகமாக நடந்து கொண்ட விதமும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களின் வன்முறைகளும் பற்றி அண்ணாச்சி கதை கதையாகச் சொன்னார். தேசியத் தொழிற் சங்கத்தின் சார்பாகத் தொழிற்சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவரை ஒடுக்க நடந்த முயற்சிகளையும் மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்புள்ள தொழிற்சங்கம் மேற்கொண்ட கொலை கொள்ளை முயற்சிகளையும் அவ்வளவுக்கும் பின்னாலும் தேசிய தொழிற் சங்கத்தார் வெற்றி பெற்றதையும் அவர் விவரித்தார். பாண்டியன் அவரைக் கேட்டான்:

"நாட்டில் உள்ள தொழிலாளிகள், விவசாயிகள், மாணவர்கள் எல்லாரையும் பகைத்துக் கொண்டு, எல்லாருக்கும் கெடுதல்களைச் செய்து கொண்டு எப்படித்தான் இந்த ஆட்சி இன்னும் நீடிக்கிறதோ?"

"உன்னைப் போலொத்தவங்க இப்பிடிக் கேட்கிறப்ப எல்லாம் 'இது சாமான்யர்களின் ஆட்சி, மேட்டுக்குடி மக்கள் இதைக் கவிழ்க்கப் பார்க்கிறாங்க'ன்னு அமைச்சர் கரியமாணிக்கம் குய்யோ முறையோன்னு அலறி ஒரு ஒப்பாரி வைப்பாரு. இப்படி ஒப்பாரி வச்சே அவராலே எதிலேருந்தும் தப்பிட முடியுது பாண்டியன்!"

"நீங்க சொல்வது சரிதான் அண்ணாச்சி! 'மாணவர்கள் அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்து படிப்பைக் கவனிக்க வேண்டும். கலவரங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது' என்று இப்போது அமைச்சர் கரியமாணிக்கம் எங்களுக்கு அறிக்கைகள் விட்டு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் இதே அமைச்சர், 'செம்டம்பர் போனால் மார்ச், மார்ச் போனால் செப்டம்பர். பரீட்சையும் படிப்புமா முக்கியம்? முதலில் தமிழ்த் துரோகிகளை எதிர்த்துப் போரிடுங்கள்' என்று அறிக்கைவிட்டு இரயில் பெட்டிகளை எரிக்கவும், பஸ்களைக் கொளுத்தவும் தூண்டினார்."

"அன்னைக்கு அவர் ஆட்சியிலே இல்லே. இன்னைக்கு அவரே ஆட்சியிலே இருக்காரு. ஆட்சியைப் பிடிக்கிறவரை போராடச் சொன்னாரு. ஆட்சியைப் பிடிச்சப்புறம் உங்களையெல்லாம் அமைதியாயிருந்து தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாத்தச் சொல்றாரு."

"போராட வேண்டிய காலங்களில் அமைதியைப் பற்றி உபதேசிக்கிறவர்களும், அமைதியாயிருக்க வேண்டிய காலங்களில் போராட்டங்களைப் பற்றி உபதேசிக்கிறவர்களுமாக இங்கே சில சுயநலத் தலைவர்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்கிறார்கள். இது எல்லாரையுமே குழப்பிவிடுகிறது, அண்ணாச்சி!"

"எஸ்டேட் தொழிலாளர் யூனியன் தேர்தலிலே மல்லை இராவணசாமியின் கட்சிக்கு எதிராக வேலை செய்த ஆட்கள் எல்லாம் சைக்கிள் செயினால் மூக்கு முகரை தெரியாமல் அடிக்கப்பட்டு ஆஸ்பத்திரியிலே கிடக்கிறாங்க. தொழிலாளர் குடியிருப்புக்களிலே ஆம்பிளை ஆளுங்க வெளியிலே போயிருக்கிற நேரத்திலே வீட்டுக்குள் புகுந்து பொம்பிளைகளை மிரட்டறாங்க. கன்னாபின்னான்னு பேசறாங்க. கீழ் மட்டத்திலே தங்கள் கட்சி ரௌடிகளைத் தூண்டிவிட்டு இவ்வளவு காலித்தனங்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு மேல் மட்டத்திலே இருக்கிற அமைச்சருங்க, 'அமைதி பேணுவீர், தமிழ்ப் பண்பாடு காப்பீர்' அப்பிடின்னு அடிக்கொரு தரம் அறிக்கை வேற விட்டுக்கிட்டிருக்காங்க... கையைப் பிடிச்சு இழுக்க வந்தவங்களோட சண்டை போட்ட பொண்ணு மேலே விபச்சார வழக்குப் போடுறதும், நியாயம் கேட்கப் போன புரொபஸரைப் போலீஸ்காரர் அடிக்கிறதும் நடக்கிற ஊர்லே இனிமே எந்த அக்கிரமும் நடக்க முடியும் தம்பீ!"

"கொஞ்ச நாளைக்கு முன்னே திடீர் திடீர்னு ஸ்லம் ஏரியாவிலே நூறு குடிசை, இருநூறு குடிசைன்னு தீப்பிடிச்சதாகவும், அப்படித் தீப்பிடிச்ச குடிசைகளுக்குத் தீவச்சவங்க தேர்தலிலே தோற்றுப் போன கட்சியைச் சேர்ந்தவங்கதான்னு சொன்னாங்க பாருங்க, அதனோட இரகசியத்தை இப்பத்தான் மணவாளன் சொல்லித் தெரிஞ்சிக்கிட்டேன். குடிசைவாசிகளுக்குத் தேர்தலில் தோற்றுப் போன கட்சிகள் மீது வெறுப்பு உண்டாக்கவும், தங்கள் மேல் விருப்பு உண்டாக்கவும் என்று சிலர் திட்டமிட்டுச் செய்த அரசியல் சதி அது. 'அவர்கள் உங்கள் குடிசைகளை எரித்தார்கள், நாங்கள் கட்டித் தருகிறோம், பாருங்கள்' - என்பது போல் பிரசாரம் செய்ய வசதி பண்ணிக் கொண்டே இவை அனைத்தும் செய்யப்பட்டதாக மணவாளன் சொல்றாரு. முதல் தரமான மனிதர்கள் தங்கள் புகழைக் கூட விரும்புவதில்லை. இரண்டாம் தரமான மனிதர்கள் தங்கள் புகழை மட்டுமே விரும்புகிறார்கள். மூன்றாம் தரமான மனிதர்கள் தங்கள் புகழ் என்பது அடுத்தவர்களை அவமானப்படுத்துவதன் மூலமாகவே வரவேண்டும் என்று கருதுகிறார்கள். குடிசைகளுக்கு நெருப்பு வைத்தவர்கள் இந்த மூன்றாவது வகைப் புகழைப் விரும்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இட்லர் தோற்றுப் போகணும் இவங்ககிட்டே."

"அது மட்டுமில்லே தம்பீ? தொழிலாளிங்க போராடினா உடனே 'ஐயோ! இது தொழிலாளியின் அரசு. இதை எதிர்த்தா போர்க்கொடி பிடிக்கிறீங்க'ன்னு கேட்பாங்க. மாணவர்கள் போராடினா, 'அந்தகோ! இது மாணவர்களின் அரசு. இதை எதிர்த்தா போர்?'ன்னு கேட்பாங்க. விவசாயிங்க போராடினா, 'இது விவசாயிகளோட சொந்த அரசு. இதை எதிர்த்தா போராடறீங்க'ன்னு நீலிக்கண்ணீர் வடிப்பாங்க. நரிக்குறவர்கள் போராடினாலும், 'அந்தகோ! இது நரிக்குறவர்களின் சொந்த அரசு. இதை எதிர்த்து நீங்களே போரிடலாமா?' என்று தயாராக ரெடிமேட் ஒப்பாரி வைப்பாங்க. இட்லர் இத்தினி கெட்டிக்காரனா இருந்திருப்பானான்னு எனக்குச் சந்தேகம்தான் பாண்டியன்."

"நாளைக்கு காலையில் யுனிவர்ஸிடி திறந்ததும் நாங்கள் வகுப்புக்களுக்குச் செல்லப் போவதில்லை. பாலேஸ்வரிக்கும் இரசாயன பேராசிரியர் ஸ்ரீராமனுக்கும் போலீஸ் இழைத்த அநீதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறோம். மல்லிகைப் பந்தல் சரித்திரத்திலேயே முதல் முறையாக துணைவேந்தரைத் தவிர மற்றெல்லா ஆசிரியர்களும் எங்களுடைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறார்கள். துணைவேந்தரும், டாக்டர் பொழில் வளவனாரும், பண்புச் செழியனும், வேறு சிலரும் மாணவர்களின் ஊர்வலத்திலோ ஆர்ப்பாட்டத்திலோ கலந்து கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்களாம். மற்ற எல்லா ஆசிரியர்களும் பேராசிரியர் ஸ்ரீராமன் போலீஸ் இன்ஸ்பெக்டரால் தாக்கப்பட்டது பற்றி ரொம்பவும் ஆத்திரமா இருக்கிறார்கள், அண்ணாச்சி!"

"பொழில் வளவனாருக்கு எப்பிடித் தம்பி ஆத்திரம் வரும்? அவருதான் 'அமைச்சர் கரியமாணிக்கம் பிள்ளைத் தமிழ்'னு அமைச்சர் மேலே பிள்ளைத் தமிழே பாடியிருக்கிறாரே? அது போதாது? உனக்கு எந்த அளவு இங்கே நடந்ததை அப்ப்டியே சொன்னாங்களோ சொல்லலியோ எனக்குத் தெரியாது. கதிரேசனோ புரொபஸரோ, உங்க கிட்ட நடந்ததையெல்லாம் சொல்லியிருக்க மாட்டாங்க. வெளியிலே நாம் கேள்விப் படறதை விட அதிகக் கொடுமைகள் போலீஸ் ஸ்டேஷனில் நடந்திருக்குது.

"'யாரிடமும் சொல்லிடாதீங்க அண்ணாச்சி! உங்க மனசோட இருக்கட்டும்'னு ஸ்டேஷன் ரைட்டர் எங்கிட்டச் சொன்னான். இராவணசாமியோட தூண்டுதலாலே தான் இன்ஸ்பெக்டரு பொய்யா அந்தப் பொண்ணு மேலே 'விபச்சாரத்துக்கு அழைத்ததாக'க் குற்றம் சாட்டி எஃப்.ஐ.ஆர். எழுதச் சொன்னாராம். வாத்தியாரு ஸ்ரீராமன் இதைப் பற்றி விசாரிக்கப் போன போது இன்ஸ்பெக்டரு அவரைக் கழுத்தை பிடிச்சு வெளியிலே தள்ளினதாக மட்டும்தான் நீ கேள்விப்பட்டிருப்பே. ஆனால் அதை விட மோசமானதெல்லாம் நடந்திருக்கு. சாதிப் பேரைச் சொல்லித் திட்டிக்கிட்டே பெல்ட்டைக் கழட்டி வாத்தியாரை அடிச்சிருக்காங்க. அவரை ரொம்ப அவமானப் படுத்தியிருக்காங்க..."

"இனிமே இன்னின்ன சாதிக்காரங்க நியாய அநியாயங்களைப் பற்றிப் பேசக்கூடாதுன்னு நம்ம அரசியல் சட்டத்தையே மாத்திக்க வேண்டியதுதான் போலிருக்கு."

"அப்படியில்லே தம்பீ! இன்னிக்கு நாட்டிலே இருக்கிறதே ரெண்டு சாதிதான். கொடுமைப்படுத்தறவங்க, கொடுமைப்படறவங்கன்னு ரெண்டே ரெண்டு சாதிதான் கண்ணுக்குத் தெரியுது. வேறு சாதிகள் எதுவுமே இருக்கிறதாத் தெரியிலே."

இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் அண்ணாச்சியும் கதிரேசனும் போய் ஏரிக்கரைச் சாலையிலிருந்த அச்சகம் ஒன்றிலிருந்து மறுநாள் கடையடைப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் பற்றிய துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளை எடுத்து வந்தார்கள். அண்ணாச்சி, பாண்டியன், கதிரேசன் ஆகியவர்களும் மற்றும் நூறு மாணவர்களும் குளிரைப் பொருட்படுத்தாமல் இரவோடு இரவாகச் சுவரொட்டிகளை ஒட்டுவதற்குப் புறப்பட்டார்கள். நகரை நான்கு பிரிவாகப் பிரித்துக் கொண்டு இருபத்தைந்து இருபத்தைந்து பேர்களாக அவர்கள் சுவரொட்டி ஒட்டுவதற்குச் சென்றிருந்தார்கள். கடை வீதியில் ஒவ்வொரு கடைக் கதவின் மீதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது. காலையில் கடையைத் திறக்க வருகிற போது கடையடைப்பை நினைவூட்டுவது போல் அங்கங்கே சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள். கடை வீதியில் கம்பளிக் கோட்டும் பனிக்குல்லாயுமாகக் கரும் பூதங்கள் நடப்பது போல் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் சுவரொட்டி ஒட்டும் மாணவர்களைப் பார்த்தார்கள். சுவரொட்டிகளை அவர்களும் நின்று படித்தார்கள். ஆனால் மாணவர்கள் செயலில் அவர்கள் குறுக்கிடவில்லை.

நகரத் தெருக்களிலும், பல்கலைக்கழக விடுதிச் சுவர்களிலும் போஸ்டர்களை ஒட்டி முடித்து அவர்கள் திரும்பும் போது இரவு மணி மூன்று. ஆசிரியர்கள், பல்கலைக் கழக ஊழியர்களும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள இருந்ததனால் ஊர்வலத்தைக் காலை பத்தரை மணிக்குப் பல்கலைக் கழக வாயிலிலிருந்து தொடங்க வேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டார்கள் அவர்கள்.

மறுநாள் பொழுது விடிந்ததுமே கடைவீதி வெறிச்சோடிக் கிடந்தது. எப்படிப்பட்ட அசாதாரணமான நிலைகளிலும் கூடத் திறந்திருக்கும் பல டீக்கடைகளே மூடப்பட்டிருந்தன. மாணவர்களும், மாணவிகளும் அன்று காலையில் தான் ஊரிலிருந்து திரும்பி வரத் தொடங்கியிருந்தனர். விடுதி அறைகளில் போய்ப் பெட்டிப் படுக்கைகளை வைத்துவிட்டு உடனே பல்கலைக் கழக வாயிலில் கூடினார்கள் மாணவர்கள். பத்தேகால் மணிக்குக் கண்ணுக்கினியாள் மதுரையிலிருந்து வந்து மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் இறங்கிய போது அங்கே நின்று துண்டுப் பிரசுரம் வழங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் அவளை உடனே ஊர்வலத்துக்குப் போய் மாணவிகள் பிரிவுக்குத் தலைமை ஏற்கும்படி தெரிவித்தார்கள்.

அவள் அவசர அவசரமாக அண்ணாச்சி கடையில் கொண்டு போய்ப் பெட்டியை வைத்துவிட்டுப் பல்கலைக் கழக வாயிலுக்கு விரைந்தாள். காலை எட்டரை மணிக்கே துணைவேந்தர் தாயுமானவனார் பொருளாதாரப் பேராசிரியரையும் வேறு சில ஆசிரியர்களையும் கூப்பிட்டு, 'மாணவர்கள் நடத்தும் கண்டன ஊர்வலத்தில் ஆசிரியர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது' என்று கல்வி மந்திரி விரும்புவதாகத் தெரிவித்தார்.

"போலீஸார் ஓர் ஆசிரியரிடம் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டிருப்பதால் அதைக் கண்டித்து தாங்களும் கண்டன ஊர்வலத்தில் கலந்து கொள்ளப் போவது உறுதி" என்று ஆசிரியர் சார்பில் துணைவேந்தரிடம் தெரிவிக்கப்பட்டது. துணைவேந்தர் தாம் முதலில் கூறியதையே மீண்டும் வற்புறுத்திக் கூறினார்.

'துணைவேந்தர் அரசாங்கத்திற்கும், ஆளும் கட்சிக்கும் ஏஜெண்டு போல் செயல்படுவதைத் தாங்கள் வெறுப்பதாகவும், ஓர் ஆசிரியர் தாக்கப்பட்டதைப் பற்றி அவர் வருத்தம் தெரிவிக்காமல் இருப்பதைக் கண்டிப்பதாகவும்' அவர்கள் பதில் கூறினார்கள். பத்தரை மணிக்கு ஆசிரியர்களும் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பல ஊழியர்களும் ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து மாணவர்களோடு சேர்ந்து கொண்ட போது பேராசிரியர் பூதலிங்கம் இதைப் பாண்டியனிடம் தெரிவித்திருந்தார். மாணவர்களையும் ஆசிரியர்களையும் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களையும் தவிர நகரின் பொதுமக்களும், தொழிலாளிகளும், மல்லை இராவணசாமியின் கட்சி தவிர ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும், ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காகப் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். போலீஸுக்கு எதிராகவும், எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராகவும் கொந்தளித்துக் குமுறும் மனநிலையோடு கூடியிருந்தது அந்தப் பெருங் கூட்டம். நகரைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள் கூட அன்று நடைபெறவில்லை. உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், எல்லாப் பள்ளிகளின் ஆசிரியர்களும் கூட ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்து விட்டார்கள். ஒரு பாவமும் அறியாத ஒரு வெளிநாட்டு மாணவியிடம் அநீதியாக நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை உடனே நீக்கக் கோரும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளும், மேரிதங்கத்தின் தற்கொலைப் பற்றிய வாசகங்களும், பேராசிரியரிடம் முறைகேடாக நடந்து கொண்டதைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பானர்களும் ஊர்வலத்தில் நிறைய இருந்தன. தடை உத்தரவு அமுலில் இருப்பதால் ஊர்வலம் நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தெரிவித்துவிட்டு அதற்கு மாணவர்கள் என்ன பதில் கூறுகிறார்கள் என்று அறியும் முன்னேயே போலீஸ்காரர்கள் கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு வேண்டத் தொடங்கிவிடவே மாணவர்கள் ஆத்திரம் அடைந்துவிட்டனர்.

"ஆயிரம் தடைகள் இருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடந்தே தீரும்" என்று உரத்த குரலில் கூறினான் பாண்டியன். எல்லா மாணவர்களும், மாணவிகள் மக்களும் அதே குரலைத் திருப்பி முழக்கினார்கள். எல்லாவற்றையும் விடக் கொடுமை போலீஸ் ஜீப்பிலேயே குருசாமியும் அங்கே ஏறிக்கொண்டு வந்திருந்ததுதான்.

"இவர்கள் எப்போது சார், போலீஸ் அதிகாரிகளாகச் சேர்ந்தார்கள்" என்று மாணவர்களில் சிலர் போலீஸ் அதிகாரிகளை நோக்கிக் கேட்டனர். போலீஸ் ஜீப்பருகே அலைமோதும் மாணவர் கூட்டத்தைப் பார்த்து இராவணசாமியும் குருசாமியும் மிரண்டனர். தோளில் ஆறு கெஜம் புடவை போல் புரண்டு கொண்திருந்த இரட்டைக் கரைத் துண்டுகளை மெல்லக் கீழே நழுவவிட்டு மறைத்துக் கொள்ள முயன்றார்கள். மாணவர்களோ அவர்கள் காது கேட்கும்படியே அவர்களை ஏளனம் செய்து பேசத் தொடங்கினர்.

'விலைவாசி நிலவரம் - இந்த ஆட்சியில் கீழ்க்கண்டவற்றின் விலைகள் ஏறியுள்ளன' - என்று எழுதிய ஓர் அட்டையில் :

1. மெடிகல் காலேஜ் ஸீட் - ரூபாய் பதினையாயிரம்
2. குமாஸ்தா வேலை - ரூபாய் மூவாயிரம் + சிபாரிசு
3. ஆசிரியர் வேலை - ரூபாய் இரண்டாயிரம்
4. துணைவேந்தர் பதவி நீடிப்புக்கு - மந்திரிக்கு டாக்டர் பட்டம்

என்று வரிசையாக எழுதப்பட்டிருந்தது. அந்த அட்டையை ஜீப்பின் அருகே கொண்டு வந்து, 'உங்களால் ஏறியிருக்கும் விலைவாசி உயர்வைப் பாருங்கள்' என்று சொல்லிக் கொண்டே இராவணசாமிக்கும், குருசாமிக்கும் காட்டினான் ஒரு மாணவன்.

'விலைவாசிகள் இறக்கம்' - இந்த ஆட்சியில் கீழ்க்கண்டவற்றின் விலைகள் படு மலிவாகியுள்ளன.

1. நீதி
2. நேர்மை
3. பெண்களின் கற்பு
4. மக்களின் உரிமைகள்

என்று வரிசையாக எழுதப்பட்டிருந்தது. இந்த வாசக அட்டைகளைப் போலீஸ் ஜீப் அருகே மாற்றி மாற்றிக் காட்டி விசிலடித்துக் கேலி செய்து இராவணசாமியையும் கோட்டம் குருசாமியையும் மடக்கி வளைத்துக் கொண்டார்கள் மாணவர்கள்.

'தோளில் பரிவட்டம்-
தொங்கும் தரை மட்டும்-
இதுதான் மாவட்டம்'

என்று அங்கேயே இயற்றிய ஒரு கவிதையை கோட்டம் குருசாமியை நோக்கி அப்போதே உரத்த குரலில் மற்ற மாணவர்களின் சிரிப்பொலிகளுக்கு இடையே அரங்கேற்றினான் ஒரு மாணவன்.

அங்கிருந்த போலீஸ் வேனில் போய் வயர்லெஸ் மூலம் யாரையோ கலந்து பேசிவிட்டுத் திரும்பி வந்து ஊர்வலத்துக்கு அனுமதி தர முடியும் என்றும் செல்லும் வழியை விளக்கி அனுமதி கேட்டு எழுதித் தர வேண்டும் என்றும் மாணவர்களிடம் தெரிவித்தார் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி. பாண்டியன் அப்படியே எழுதிக் கொடுத்தான். மல்லை இராவணசாமியும், கோட்டச் செயலாளர் குருசாமியும் போலீஸ் ஜீப்பில் ஏறி வந்து நோட்டம் பார்த்தது மாணவர்களைக் குமுறச் செய்திருந்தது. போலீஸ் அதிகாரிகள் கட்சிச் செயலாளர், கட்சி எம்.எல்.ஏ. ஆகியோரின் எடுபிடிகள் போல் நடப்பதைக் கண்கூடாகக் கண்டார்கள் மாணவர்கள். போலீஸ் ஜீப்பில் வந்திருந்த காரணத்தால் இராவணசாமியும், குருசாமியும் மாணவர் கூட்டத்திலிருந்து தப்ப முடிந்தது. "ஊர்வலத்துக்கு அனுமதி பெறுகிறீர்கள்! வன்முறைகள் எதுவும் இன்றி அமைதியாக ஊர்வலம் நடக்க வேண்டும்" என்று தெரிவித்துவிட்டு உடனிருந்த கட்சிப் பிரமுகர்களோடு புறப்பட்டுப் போய்விட்டார் போலீஸ் அதிகாரி.

ஊர்வலத்தினர் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் செல்லுமாறு பாண்டியனும் மற்றவர்களும் ஒழுங்கு செய்தார்கள். முதலில் கண்ணுக்கினியாள் தலைமையில் மாணவிகள் அணிவகுத்து நின்றனர்.

'பாலேசுவரியைப் பழி வாங்கிய போலீஸ் ஒழிக' 'பொய்வழக்குப் போடும் போலீஸ் ஒழிக' 'மேரிதங்கத்தைக் கொன்ற நிர்வாகம் திருந்தட்டும்' 'பேராசிரியரை அவமானப்படுத்திய போலீஸ் ஒழிக' என்றெல்லாம் வாசகங்கள் எழுதிய அட்டைகள், பானர்கள், மாணவிகளிடம் இருந்தன. மாணவிகளை அடுத்து மாணவர்கள் அணிவகுத்து நின்றனர். மாணவர்களைத் தொடர்ந்து பல்கலைக் கழக ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களும், ஊழியர்களும் நின்றனர். பொதுமக்களும் தோட்டத் தொழிலாளர்களும் பின் வரிசையில் நின்றனர். பல்கலைக் கழகம் திறக்கின்ற தினத்தன்று மல்லிகைப் பந்தலுக்கு வந்து இறங்கியதும் இறங்காததுமாக ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்திருந்த மாணவிகளுக்குக் கூட அவர்களிடம் அளிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தின் மூலம் எல்லா விவரங்களும் தெரிவிக்கப்பட்டிருந்ததன் காரணமாக உணர்ச்சிக் குமுறல் அதிகமாக இருந்தது. துணைவேந்தர் பல்கலைக் கழகத்தை திடீரென்று மூடி விடுதிகளைக் காலி செய்ய உத்தரவிட்ட போது மேரிதங்கத்தின் தற்கொலை நிகழ்ச்சியால் மாணவர்களிடையே எவ்வளவு உணர்ச்சிக் குமுறல் இருந்ததோ அதே உணர்ச்சிக் குமுறல் மாணவி பாலேஸ்வரி மீது பொய் வழக்குப் போட முயன்ற போலீஸாரின் கொடுமையாலும் பேராசிரியர் ஸ்ரீராமன் தாக்கப்பட்ட அக்கிரமத்தாலும் பல்கலைக் கழகம் திறக்கிற தினமாகிய அன்றைக்கும் ஏற்பட்டிருந்தது. இரு பக்கங்களிலும் ஊர்வலத்தின் முன்னும் பின்னும் போலீஸ் வந்து கொண்டிருந்தது. கடை வீதிகளில் எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பாதை ஓரங்களில் தென்படும் பூக்கடை, பழம், காய்கறி விற்கும் தள்ளுவண்டிகள் கூடக் காணப்படவில்லை. விண்ணதிர முழங்கும் கோஷங்களுடன் அந்த மிகப்பெரிய ஐந்தாறு மைல் நீள ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. ஊர்வலத்தின் முடிவில் பாலேஸ்வரியிடமும், பேராசிரியரிடமும் காட்டு மிராண்டித்தனமாக நடந்த கொண்ட இன்ஸ்பெக்டரை உடனே நீக்குமாறு கோரி ஆர்.டி.ஓ.விடம் ஒரு மனுவைக் கொடுப்பதாக இருந்தார்கள் அவர்கள். ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு முன்பாகவே நூறு கெஜம் இப்பால் தலைமைப் போலீஸ் அலுவலகம் இருந்தது. ஊர்வலத்தைப் போலீஸ் அலுவலக வாயிலிலேயே தடுத்து நிறுத்தி விடுவதாகவும் அதற்கு மேல் மாணவர்களின் பிரதிநிதிகள் ஐவர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குச் சென்று சந்தித்து மனுவைக் கொடுக்கலாம் என்றும் போலீஸ் தரப்பிலிருந்து முதலிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களும் அதற்கு இணங்கியிருந்தார்கள். 'ஊர்வலமே நடக்க விடாமல் செய்துவிட வேண்டும்' என்று தான் மேலேயிருந்து போலீஸ், ஆர்.டி.ஓ., துணைவேந்தர் எல்லாருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஊர்வலத்தையும், கடையடைப்பையும் ஒடுக்க மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்குமே ஆளும் கட்சியின் பிரமுகர்களும், கோட்டச் செயலாளர்களும், கட்சிச் செயல்வீரர்களும் ஒத்துழைப்புத் தருவார்கள் என்றும் அமைச்சர்களே பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தார்கள். இருந்தும் பொதுமக்கள், மாணவர்களின் எழுச்சியையும் கூட்டத்தையும் பார்த்துத் தயங்கி மறுபடியும் மேலிடத்தை வற்புறுத்தி வேண்டிய பின்பே போலீஸ் அதிகாரிகள் ஊர்வலத்தை அனுமதித்திருந்தார்கள்.

மிகப்பெரிய அந்த ஊர்வலம் பஜார் ரோட்டில் போய்க் கொண்டிருந்தது. பஜார் ரோடு மல்லிகைப் பந்தல் நகரின் வீதிகளிலேயே மிகவும் நீளமானதாகும். வில்லின் முதுகு போல் தெருவின் நடுப்பகுதி மேடாகவும் மற்ற இரு முனைகள் தாழ்வாகவும் அமைந்த வீதி அது. நகரின் முதுகெலும்பு போல் இலங்கிய அந்தத் தெருவில் தான் குண்டூசி முதல் மோட்டார் சைக்கிள் வரை எல்லா வியாபாரங்களும் இருந்தன. மாணவர்களின் கோரிக்கையைச் சாக்கிட்டு ஆட்சியின் மேல் தங்களுக்கு இருக்கும் வர்த்தகர்களின் கடும் எதிர்ப்பும் சேரவே பஜார் ரோடு அன்று கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடிக் கிடந்தது. பஜார் ரோட்டில் நடுப்பகுதிக்குச் செல்லுகிற வரை கோஷங்களின் முழக்கம் தவிர வேறு எதுவும் சலசலப்போ பரபரப்போ இல்லை. பஜார் ரோடின் நடுப்பகுதியில் கோட்டச் செயலாளர் குருசாமிக்கு சொந்தமான 'அறிஞர் கலைஞர் சுவை நீர் அங்காடி' (டீ ஸ்டால்) என்ற ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டு நடந்து கொண்டிருந்தது. மாணவிகள் அந்த வாயிலைக் கடந்த போது கண்ணுக்கினியாள் ஒரு துண்டுப் பிரசுரத்தை எடுத்து நீட்டி, "தயவு செய்து கடையை மூடிவிடுங்கள். எங்களுக்காகச் செய்யாவிட்டாலும் எங்களுடைய கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை மதித்து மற்றெல்லாக் கடைக்காரர்களும் மூடியிருக்கும் போது நீங்கள் மட்டும் திறந்திருப்பது சரியில்லை" என்று அமைதியாகவே கோரினாள். கடையிலிருந்த ஆட்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

"அந்தப் பருப்பெல்லாம் இங்கே வேகாதும்மா! இது யார் கடை தெரியுமில்லே...? கொள்கைக்காகவாவது வியாபாரமே இல்லாவிட்டாலும் நாங்கள் திறந்து வைத்திருப்போம்" என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள் அவர்கள். அதைக் கேட்ட மாணவிகள் 'அந்த முரடர்களோடு வம்பு வேண்டாம்' என்று அமைதியாகத் தலைமைப் போலீஸ் அலுவலகத்தை நோக்கி முன்னேறினர்.

இருபத்து ஐந்தாவது அத்தியாயம்

பின்னால் தங்களை அடுத்து வருகிற மாணவர்கள் அந்தக் கடை திறந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று புரிந்து கொண்டு அதை அடைக்கச் செய்யும் பணியை மாணவிகள் தாங்களே செய்யாமல் மாணவர்களுக்கு மீதம் விட்டுச் சென்றனர். அவ்வளவு பெரிய கடைவீதியில் அந்த 'அறிஞர் கலைஞர் சுவை நீர் அங்காடி'க்காரர் மட்டும் திமிராகவும் அலட்சியமாகவும் கடையைத் திறந்து வைத்து நடத்திக் கொண்டிருந்தது உள்ளம் குமுறச் செய்வதாக இருந்தது. முதலில் அணி வகுத்து வந்த மாணவிகளை அடுத்த மாணவர்கள் அந்த இடத்துக்கு வந்த போது கதிரேசனும் நாலைந்து நண்பர்களும் போய்க் கடையை அடைக்கும்படி மிகவும் மரியாதையான வார்த்தைகளாலேயே வேண்டினார்கள். கதிரேசனுடைய வேண்டுகோளுக்கு நேரடியாக மறுமொழி சொல்லாமல், "டேய்! டோப்பாத் தலையா! இந்தத் தலை மயிரையும் கிருதாவையும் காமிச்சு எங்களை மிரட்டலாம்னா பார்க்கிறே? மரியாதையா வெளியே போறியா, இல்லே...? வாலை ஒட்ட நறுக்கி அனுப்பி வைக்கட்டுமா?" என்று சண்டைக்கு இழுத்தான் கடையிலிருந்த முரடன் ஒருவன். அவ்வளவுதான்! ஏற்கனவே சூடு ஏறியிருந்த கதிரேசனுக்கு அதைக் கேட்டு இரத்தம் கொதித்தது. 'இன்று கடையை அடைப்பவர்கள் என்றுமே திறக்க முடியாமற் போகும்! ஜாக்கிரதை!' என்று மல்லை இராவணசாமி கட்சியினர் போட்டியாக அச்சிட்டு ஒட்டிய விஷமத்தனமான சுவரொட்டி ஒன்றும் அந்தக் கடை முகப்பில் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்ததும் மாணவர்களின் கோபம் இன்னும் அடக்க முடியாததாகி விட்டது. அதே நேரத்துக்கு ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்து தயாராகக் காத்திருந்து தாக்குவது போல் அந்த ஹோட்டல் மாடியிலிருந்து கீழே நின்ற மாணவர்கள் மேல் சோடாப்புட்டிகளும், கற்களும், திராவகப் பல்புகளும் வீசப்பட்டன. ஹோட்டல் மாடியிலிருந்து சோடாப் புட்டிகளும், திராவகப் பல்புகளும் வீசப்படுவதையும், மாணவர்களும் சிலர் அலறியபடி குருதி ஒழுக நிற்பதையும் பாண்டியன் போலீஸாருக்குச் சுட்டிக் காட்டியும் பயனில்லை. அந்த ஹோட்டல் எல்லைக்குள் நுழைந்து அங்கே மறைந்திருந்து வன்முறைகள் புரியும் சமூக விரோதிகளை விரட்டிப் பிடிக்காமல் போலீஸார் மரங்களாக நிற்பதைப் பார்த்து மாணவர்களுக்கு மேலும் ஆத்திரம் மூண்டது. தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாத மாணவர்கள் பெருங்கூட்டமாக உடனே அந்த ஹோட்டலில் புகுந்து விட்டனர். உடனே பெருங் கலவரம் மூண்டது. ஹோட்டல் முகப்புக் கண்ணாடிகள், கிளாஸ்கள், மேஜை நாற்காலிகள் எல்லாம் தவிடு பொடியாயின. அப்போதும் டீக்கடை பாய்லர் கொதி நீரை டம்ளர்களில் வாரி மாணவர்கள் மேல் வீசினார்கள் கடையினுள்ளே இருந்த முரடர்கள். மாணவர்களும் விடவில்லை. மாடியில் ஏறி அங்கே ஒளிந்திருந்து சோடா பாட்டில்களையும் கற்களையும் திராவகப் பல்புகளையும் வீசிக் கொண்டிருந்தவர்களை மாணவர்கள் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்கள். ஏராளமான சோடா பாட்டில்களையும், கற்குவியலையும், திராவகப் புட்டிகளையும் அங்கே பதுக்கி வைத்திருந்ததையும் மாணவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.

ஹோட்டல் மாடியில் தங்களிடம் பிடிபட்ட குண்டர்களைத் தரதரவென்று நடு வீதி வரை இழுத்து வந்து போலீஸாரைக் கூப்பிட்டு அவர்களிடம் ஒப்படைத்தார்கள் மாணவர்கள். ஹோட்டல் முள்கரண்டி(ஃபோர்க்)யால் முரடன் ஒருவன் கதிரேசனின் விலாவில் குத்தியிருந்தான். திராவகப் பல்பு, சோடாப்புட்டி வீச்சில் சில மாணவர்கள் காயமடைந்திருந்தார்கள். இரண்டொரு ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் கூடக் காயமுற்றிருந்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொதிப்படைந்த பொதுமக்களும், தொழிலாளிகளும் அந்தக் கடையைத் தரைமட்டமாக்கும் வெறியோடு உள்ளே புகுந்து தாக்கத் தொடங்கினார்கள். அதுவரை சும்மா இருந்த போலீஸ் அப்போது வந்து கலைத்திராவிட்டால் அந்தக் கடை பிழைத்திருக்க முடியாது. இதற்குள் ஊர்வலத்தின் முன் பகுதியில் இருந்த மாணவிகளும் இரண்டு மூன்று வரிசை மாணவர்களும், போலீஸ் அலுவலக வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு நின்றார்கள். ஊர்வலத்தின் பிற்பகுதியில் ஹோட்டல் வாயிலில் மூண்ட கலவரம் இன்னும் இங்கே இவர்களுக்குத் தெரியாமலே இருந்தது. ஆகவே இவர்கள் அமைதியாக அட்டைகளைப் பிடித்தபடி எதிர்ப்புக் கோஷங்களை முழக்கிக் கொண்டு நின்றார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு மகஜரை எடுத்துக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டிய பாண்டியன், மோகன்தாஸ், கதிரேசன் முதலியவர்கள் இன்னும் ஊர்வலத்தின் முன் பகுதிக்கு வந்து சேராததனால் காலங்கடந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் ஹோட்டல் வாயிலில் நடந்த கலவரமும், அதனால் காயமும், அடி உதைகளும் பட்ட மாணவர்கள் ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பது ஊர்வலத்தின் முன் பகுதிக்கும் பரவியது. ஊர்வலத்தின் பிற்பகுதி இன்னும் வந்து சேராததன் காரணம் அப்போது இவர்களுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. டீக்கடை பாய்லர் கொதி நீரை டம்ளர்களில் வாரி மாணவர்கள் மேலே வீசி ஊற்றிய போதும், கடை முரடன் ஒருவன் முள் கரண்டியால் கதிரேசனை விலாவில் குத்தியபோதும், சோடாப்புட்டி ஆஸிட் பல்பு வீச்சின் போதும், போலீஸ் சும்மா பார்த்துக் கொண்டு நின்றது என்ற செய்தி பரவியதும் மாணவிகளை அடுத்து நின்ற மாணவர்களில் சிலர் "மேரிதங்கம் மாண்டது போதாதா? இன்னும் எத்தனை பேரைக் கொல்லப் போகிறீர்கள்?" என்று கூப்பாடு போட்டபடி போலீஸ் அலுவலகத்தை நோக்கி முன்னேற முயன்றார்கள். அப்போது சாலையில் ஓரமாகக் குவித்திருந்த சரளைக் கற்கள் மாணவர்களின் பார்வையில் பட்டது. தங்களுக்குப் பாதுகாப்புத் தராத போலீஸின் மேல் ஆத்திரம் அடைந்த அவர்கள் கல் வீச்சில் இறங்கினார்கள். போலீஸ் அலுவலகத்தை நோக்கிச் சரமாரியாகக் கற்கள் பறந்தன. பஜார் ரோட்டில் ஹோட்டல் வாயிலில் நடந்த சோடாப் புட்டி வீச்சில் யாரோ ஒரு மாணவன் இறந்து போனதாகவும் அப்போது ஒரு செய்தி வந்து பரவவே முன் வரிசை மாணவர்கள் வெறி கொண்டனர். கால்மணி நேரத்துக்குப் பின் ஊர்வலத்தின் பின்பகுதியினர் வந்த பின்பு தான் கல்வீச்சு நின்றது. மாணவர்கள் யாரும் இறக்கவில்லை என்ற உண்மையைப் பாண்டியனே வந்து தெரிவித்த பின்பு தான் இவர்கள் நம்பினார்கள். எனினும் ஹோட்டல் முரடன் கதிரேசனைக் குத்திவிட்டான் என்பது அவர்கள் கோபத்தை கிளறுவதற்குப் போதுமானதாயிருந்தது.

பாண்டியன் முதலிய மாணவர்கள் மகஜரை எடுத்துக் கொண்டு அதைக் கொடுப்பதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குள் சென்றிருந்த பொழுது போலீஸ் நிலையத்துக்குள்ளிருந்து அதே பழைய ஜீப்பில் மல்லை இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் வெளிவரவே வெளியே நின்றிருந்தவர்களிடம் தாங்க முடியாத ஆத்திரம் மூண்டது. ஜீப் மறிக்கப்பட்டது. கூட்டத்திலிருந்து யாரோ கழற்றி எறிந்த செருப்புக்களும், சரமாரியாகக் கற்களும் ஜீப்பின் மேல் விழவே நிலைமை தீவிரமாகியது. ஜீப்பில் இருந்த கட்சி ஆட்கள் இருவருடைய தலையீட்டால் தான் போலீஸே தவறாக நடக்கிறது என்ற எண்ணம் எல்லாருக்கும் இருந்ததனால் ஒரு தவிர்க்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஜீப்பும் அதிலிருந்த ஆட்களும் கூட்டத்தின் நடுவே சிக்கிக் கொண்டதை அடுத்து முன் எச்சரிக்கையில்லாமல் யாரும் எதிர்பாராத விதமாகப் போலீஸார் கூட்டத்தில் தடியடிப் பிரயோகம் செய்யத் தொடங்கினர். ஆத்திரம் அடைந்த மாணவர்களில் சிலர் போலீஸார் மேலேயே கல்லெறியத் தொடங்கினார்கள். போலீஸாரின் திடீர்த் தாக்குதலால் மாணவிகள் நிலைகுலைந்து ஓடத் தொடங்கியதால் அவர்களிலும் சிலர் காயமடைய நேரிட்டது. தடியடிப் பிரயோகமும் வரம்பு மீறி நடந்தது. மூக்கு முகம் பாராமல் மாணவர்களை அடித்துத் தள்ளினார்கள் போலீஸார். தன்னுடைய ஹோட்டலுக்குப் பெருஞ்சேதம் விளைந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்ட சினத்தாலும், தானும் இராவணசாமியும் அமர்ந்திருந்த ஜீப்பின் மேல் செருப்பு வீச்சு, கல்வீச்சு நடைபெற்ற அவமானத்தினாலும் கோட்டச் செயலாளர் அருகே இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டுத் தூண்டியதால் தான் தடியடிப் பிரயோகமே நடந்ததாக மாணவர்களிடையே செய்தி பரவிவிட்டது. ஹோட்டல் வாசலில் காயமுற்றிருந்த மாணவர்கள் ஏற்கெனவே ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டிருந்தது தவிர இப்போது தடியடிப் பிரயோகத்தினால் வேறு நாற்பது நாற்பத்தைந்து மாணவர்களுக்கு மேல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டிய நிலையில் இருந்தனர். ஆனால் ஆம்புலன்ஸோ, போலீஸ் வேனோ உடன் கிடைக்கவில்லை. கண்ணுக்கினியாளும், மருத்துவக் கல்லூரி மாணவிகளும் எதிரே இருந்த தொழிற்சாலை ஒன்றிலிருந்து முதலுதவிப் பெட்டிகளை வரவழைத்துக் காயம்பட்ட மாணவர்களுக்குச் சிகிச்சை செய்யத் தொடங்கிவிட்டார்கள். மரத்தடிகளிலும், பிளாட்பாரத்து ஓரங்களிலும், அடிபட்ட மாணவர்களுக்குச் சிகிச்சை செய்து காயங்களுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்த போது மகஜர் கொடுப்பதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகம் சென்றிருந்த பாண்டியன் முதலியவர்கள் திரும்பி வந்தார்கள். நடந்தவற்றை அறிந்து சினத்தோடு போலீஸ் தலைமை அலுவலகத்தில் புகுந்த அவர்களைச் சந்திக்கவோ, பேசவோ மறுத்தார் அங்கிருந்த போலீஸ் அதிகாரி. மனிதாபிமான நோக்கமோ, கருணையோ, அன்புள்ளமோ இல்லாத அந்த வறட்டு அதிகார வர்க்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இளம் உள்ளங்கள் குமுறின. அவர்கள் கண்முன்பாகவே அப்போது அங்கு இன்னொரு நாடகமும் நடந்தது. போலீஸ் அலுவலக காம்பவுண்டுக்குள் நின்று கொண்டிருந்த ஒரு ஜீப்பில் பெட்ரோல் ஊற்றி அங்கிருந்த போலீஸ்காரர்கள் சிலரே அதற்கு நெருப்பு வைத்தனர்.

"அவர்களே நெருப்பு வைத்துவிட்டு நம் தலையில் பழியைப் போடப் போகிறார்கள். 'நாங்களாக மாணவர்கள் மேல் தடியடிப் பிரயோகம் செய்யவில்லை. அவ்ர்கள் ஸ்டேஷனுக்குள் அத்துமீறிப் புகுந்து ஜீப்புக்கு நெருப்பு வைத்ததால் தான் நாங்கள் தடியடிப் பிரயோகம் செய்ய நேரிட்டது' என்று போலீஸ் தரப்பிலிருந்து வெளியிடப்படும் செய்தி நாளைக் காலைப் பத்திரிகைகளில் வரும். அதிகாரிகள் என்பவர்கள் இப்போதெல்லாம் தவறுகளைச் செய்யாமலிருக்க முயலுவதில்லை. பல சமயங்களில் செய்துவிட்ட தவறுகளை நியாயப்படுத்தவே அதிகமாக முயலுகிறார்கள் அவர்கள். பதவியில் உள்ளவர்களின் போக்கு அவர்களை அப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட்டது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய போலீஸார் ஆளும் கட்சிப் பிரமுகர்களின் கைக்கூலிகள் ஆகிவிட்டிருக்கிறார்கள்" என்று மோகன்தாஸ் அதைச் சுட்டிக்காட்டிப் பாண்டியனிடமும் மற்ற மாணவர்களிடமும் சொன்னான். கையில் காமிராவோடு வந்திருந்த ஒரு மாணவன் போலீஸாரே ஜீப்புக்குத் தீ வைக்கும் காட்சியைப் படம் எடுக்க முற்பட்ட போது அந்தக் காமிரா போலீஸாரால் தட்டிப் பறிக்கப் பட்டது. அதிலிருந்து பிலிம் சுருளை எடுத்த பின்புதான் காமிராவையே திரும்பக் கொடுத்தார்கள். தடியடிப் பிரயோகம், காயமடைந்த மாணவர்களின் நிலை, ஆம்புலன்ஸோ, போலீஸ் வேனோ கிடைக்காததால் நடுத்தெருவிலேயே அவர்களுக்குச் சிகிச்சை செய்ய முயன்ற மாணவிகளின் சிரமம் எல்லாவற்றையும் பார்த்து ஊர்வலத்தில் வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், ஆசிரியர்களும், தொழிலாளிகளும் உணர்ச்சி வசப்பட்டார்கள். அந்த மக்கள் வெள்ளம் அப்போது ஒன்றாயிருந்தால் என்னென்ன நேருமோ என்று பயந்து மெல்ல மெல்லக் கூட்டத்தைக் கலைத்தார்கள் போலீஸார்.

நெடு நேரத்துக்குப் பின்பே காயமுற்ற மாணவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக ஆம்புலன்ஸ், வேன் எல்லாம் வந்தன. ஆஸ்பத்திரியிலும் ஒரு தந்திரம் கையாளப் பட்டது. நாற்பத்தைந்து மாணவர்களில் முப்பது பேருக்கு மேல் வார்டில் அனுமதித்துச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தும் கூட அப்படிச் செய்யாமல் எல்லோரையும் உடனே, எதையோ சிகிச்சை என்ற பேரில் முடித்து வெளியே அனுப்பிவிட முயன்றார்கள். பத்திரிகை நிருபர்களோ, பொதுமக்களோ வந்து பார்க்கும்படியும், பிற மாணவர்கள் காணும்படியும், வார்டில் மாணவர்கள் யாருமே தங்கிச் சிகிச்சை பெறாமல் பார்த்துக் கொண்டார்கள். யாருக்கும் எதுவும் அதிகச் சேதமில்லை என்று சொல்லவும் இது பயன்படும் என்று நினைத்தார் ஆர்.டி.ஓ. ஆஸ்பத்திரி வார்டில் இருந்த டாக்டர்களுக்கும் கூடப் போலீஸாரும் ஆர்.டி.ஓ.வும் இப்படிக் கூத்தடித்தது பிடிக்கவில்லை. அவர்களுடைய அநுதாபமும் இரக்கமும் மாணவர்கள் மேலும் பேராசிரியர்கள் மேலுமே இருந்தன. இன்னும் பத்து நாட்கள் தங்கிச் சிகிச்சை பெற வேண்டிய அளவு ஸீரியஸான நிலையிலிருந்த மாணவன் கூடச் சிகிச்சைக்குப் பின் உடனே விடுதிக்குத் திருப்பி அனுப்பப் பட்டான். 'தடியடிப் பிரயோகத்தில் காயமுற்ற இத்தனை மாணவர்கள், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என்பதாக எந்தப் பத்திரிகையிலும் செய்தி வந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் இது நடந்தது என்பதை எல்லாருமே புரிந்து கொண்டனர். எதிர்க்கட்சி பத்திரிகைகளில் இப்படி மாணவர்கள் ஆஸ்பத்திரியில் தங்கிச் சிகிச்சை பெறாமல் துரத்தப்பட்டது பற்றியும் செய்தி வெளிவர ஏற்பாடு செய்தான் பாண்டியன். திராவக வீச்சிலும், பஜார் ரோடு ஹோட்டல் கலவரத்தின் போதும் காயமுற்ற கதிரேசன் முதலியவர்களுக்குத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அண்ணாச்சி அருகேயிருந்து கதிரேசனையும் மற்ற மாணவர்களையும் கவனித்துக் கொண்டார். பாண்டியனும் அவ்வப்போது போய்க் கவனித்தான். காலாண்டு விடுமுறைக்குப் பின் பல்கலைக் கழகம் திறந்த முதல் தினத்தன்று அவர்கள் நடத்திய இந்த ஊர்வலமும் போராட்டமும் வெற்றி பெற்றன. மறுநாள் காலைப் பத்திரிகையிலேயே அவர்கள் எதிர்பார்த்தபடி நடந்திருந்தது. பாலேஸ்வரியிடமும் பேராசிரியர் ஸ்ரீராமனிடமும் முறை தவறி நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. பல்கலைக் கழகம் திறந்தவுடனே முதல் வாரத்துக்குள் இருக்கும் என்று எதிர்பார்த்த பட்டமளிப்பு விழாவை இன்னும் பதினைந்து நாட்களுக்குத் தள்ளிப் போட்டிருந்தார் துணைவேந்தர். கரியமாணிக்கம் டாக்டர் பட்டம் பெற இருப்பதனாலும், பட்டமளிப்பு விழாப் பேரை நிகழ்த்த இருப்பதாலும் மாணவர்கள் அதை எதிர்த்து ஏதாவது செய்யக் கூடும் என்ற சந்தேகம் துணைவேந்தருக்கு இருந்தது. சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலுவோ துணைவேந்தரை நெருக்கு நெருக்கென்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். பட்டமளிப்பு விழா தாமதமாகத் தாமதமாக அமைச்சரிடம் தமக்கு ஆகவேண்டிய காரியமும் தாமதமாகுமே என்று பயந்து பதறினார் எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு.

மாணவர்களின் கண்டன ஊர்வலமும், கடையடைப்பும் நடந்த தினத்துக்கு மறுநாள் பல்கலைக் கழக வகுப்புக்கள் எப்போதும் போல் நடைபெற்றன. மாணவர்கள் வகுப்புக்களுக்குச் சென்றனர். பல பத்திரிகைகள் தங்கள் கோரிக்கைகளின் நியாயங்களை எடுத்து எழுதியிருந்ததாலும், அரசாங்கம் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்ததாலும், மாணவியிடமும் பேராசிரியரிடமும் தவறாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்ததாலும் இரண்டாம் நாள் வகுப்புக்களைப் புறக்கணிக்க விரும்பவில்லை அவர்கள். எனவே, அன்று பல்கலைக் கழகம் அமைதியாக நடந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு மோகன்தாஸையும், பாண்டியனையும் துணைவேந்தர் எதற்கோ கூப்பிட்டு அனுப்பினார். அவர்கள் இருவரும் அவரைக் காணச் சென்ற போது அவர் காப்பி பருகிக் கொண்டிருந்தார். பியூனைக் கூப்பிட்டு அவர்களுக்கும் பிளாஸ்கிலிருந்து காப்பி ஊற்றிக் கொடுக்கச் சொல்லி உபசரித்தார் அவர். அந்த உபசாரம் வழக்கமில்லாத புதுமையாக இருந்தது.

"பட்டமளிப்பு விழா எல்லாம் வருகிறது. மாணவர்கள் எல்லாரும் ஒற்றுமையாயிருந்து யுனிவர்ஸிடியின் நற்பெயரைக் காப்பாற்றணும். பரஸ்பரம் நாம் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளணும். மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் எதுவும் கூடாது" என்று துணைவேந்தர் தொடங்கிய போது அதற்கு என்ன மறுமொழி கூறுவது என்பது புரியாமல் பாண்டியனும், மோகன்தாஸும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் போராடுவார்களா இல்லையா என்பதை மிகவும் தந்திரமாகத் தங்களிடமிருந்து அவர் அறிந்து கொள்ள முயல்வது அவர்களுக்குப் புரிந்தது. 'எதையும் சொல்லி விடாதே' என்பது குறித்துப் பாண்டியன் மோகன்தாஸின் காலை மிதித்து நினைவூட்டினான். மோகன்தாஸ் உஷாரானான். அவர்களிடமிருந்து எதையும் அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. பேச்சை வேறு திசைக்கு மாற்றி ஹாஸ்டல் வசதிகள், உணவு விடுதிகள் பற்றி அவர்களை மிகவும் அக்கறையாகக் கேட்டார் துணைவேந்தர்.

"ஏதாவது குறைகள் இருந்தால் என்னிடம் நீங்கள் உடனே தயங்காமல் சொல்ல வேண்டும்" என்றார். வழக்கத்தை மீறிய சுபாவத்தோடு அவர் பேசியது அவர்களுக்குப் புதுமையாயிருந்தது. ஜாடைமாடையாக எதை அவர் தங்களிடமிருந்து தெரிந்து கொள்ள முயன்றாரோ, அதைத் தவிர மற்ற எல்லாப் பதில்களையும் அவருக்குச் சொன்னார்கள் பாண்டியனும், மோகன்தாஸும்.

"முன் வருடங்களில் செய்தது போல் பட்டம் பெறும் மாணவர்களைத் தவிர நம் யுனிவர்ஸிடியில் இப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழாப் பேருரையைக் கேட்பதற்குப் பாஸ்கள் தருவதை நிறுத்திவிட நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன? பட்டம் பெற வருகிற மாணவர்களின் கூட்டமே அதிகம். ஹாலில் இடமோ ரொம்பக் குறைவு. பட்டம் பெறாமல் இப்போது இங்கே படிக்கிற நீங்களெல்லாம் போய் அங்கே அடைத்துக் கொள்ளாது இருந்தால் பட்டம் பெற வருகிறவர்களாவது தாராளமாக உட்கார முடியும் அல்லவா?"

"சௌகரியம் போல் செய்யுங்கள், சார்! இட வசதி எப்படியோ அப்படித்தானே நீங்கள் ஏற்பாடு செய்யலாம்?" என்று இதற்கு மறுமொழி கூறும் போதும் பட்டுக் கொள்ளாமல் மறுமொழி கூறினார்கள் அவர்கள். பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் பட்டமளிப்பு விழா மண்டபத்துக்குள் வருவதற்குப் பாஸ் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்களானால் அந்தப் பிடிவாதத்தை வைத்தே அவர்களுடைய உள்நோக்கத்தைக் கண்டு பிடித்து விடலாம் என்று முயன்ற போதும் துணைவேந்தர் தோற்றார். அதன் மூலமும் தங்கள் நோக்கம் அவருக்குத் தெரிய விடாமல் காத்துக் கொண்டு விட்டார்கள் மாணவர்கள். சி.ஐ.டி. ரிப்போர்ட் மூலம் மந்திரிக்குத் தெரிந்து, மந்திரி துணைவேந்தரைக் குடைந்தும் துணைவேந்தரால் மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின் போது தகராறு செய்வார்களா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. அரை மணி நேரம் அவர் முன்னிலையில் நடித்துவிட்டுப் பின்பு மெல்ல விடை பெற்று எழுந்து வந்தார்கள் பாண்டியனும் மோகன்தாஸும். இது நடந்த மறுநாள் காலை பத்தரை மணிக்கு வகுப்புக்காகப் போய்க் கொண்டிருந்த பாண்டியனைப் பல்கலைக் கழக மைதானத்தில் உள்ளூர் மாணவி ஒருத்தியையும் உடன் அழைத்துக் கொண்டு வந்து பாதி வழியில் சந்தித்தாள் கண்ணுக்கினியாள். எதிரே அவர்களைக் கண்டதும் பாண்டியன் தயங்கி நின்றான்.

கண்ணுக்கினியாள் சொன்னாள்: "இவள் பி.எஸ்.ஸி. முதல் வருடம் படிக்கிறாள். பெயர் பத்மா. ஊருக்குள்ளிருந்து தினம் டவுன் பஸ்ஸில் இங்கே வருகிறாள். ஊருக்குள்ளிருந்து யுனிவர்ஸிடிக்கு வரும் டவுன் பஸ்களின் ரூட் உரிமையாளர் இராவணசாமி என்பது உங்களுக்குத் தெரியும். பத்து நாட்களாக இவள் வருகிற காலை 9.45 பஸ்ஸில் யாரோ ஒரு புதுக் கண்டக்டர் இவளோடு தகராறு செய்கிறானாம். தோள்பட்டையில் இடிப்பது, டிக்கட் கொடுக்கும் போது கையில் தொட்டு அழுத்திக் கொடுப்பது, மேலே இடிப்பது, சாய்வது போல் என்னென்னமோ வம்பெல்லாம் பண்ணுகிறானாம். இவள் பயத்தினாலும் கூச்சத்தினாலும் பொறுத்துக் கொண்டிருக்கிறாள். இன்றைக்குத்தான் என்னிடம் சொன்னாள். அந்தக் கண்டக்டருக்கு நாம் எப்படிப் புத்தி புகட்டுவது?"

"ஒரு காரியம் செய்யேன்! நாளைக் காலையில் எட்டரை மணிக்கு வார்டனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு நீ இவள் புறப்படுகிற இடத்துக்குப் போய் இவளுடனேயே பஸ்ஸில் அங்கிருந்து புறப்பட்டு வா. பத்து மணிக்கு அந்த பஸ் இங்கே யுனிவர்ஸிடி டெர்மினஸ்ஸில் வந்து நிற்கிற இடத்திலே நானும் நாலைந்து மாணவர்களும் தயாராகக் காத்திருக்கிறோம். கோளாறாக ஏதாவது நடந்திருந்தால் எங்ககிட்டச் சொல்லு. அப்பவே அங்கேயே அந்தக் கண்டக்டரிடம் விசாரிக்கிறோம். அவன் தன்னோட தப்பை ஒப்புக் கொண்டு 'இனிமே அப்பிடி நடக்கலே'ன்னு மன்னிப்புக் கேட்டா விட்டுவிடலாம். இல்லேன்னா அவனைக் கவனிக்கிற விதமாகக் கவனிப்போம். நாளைக் காலையிலே நீ அங்கே போகணும். போறியா?" என்றான் பாண்டியன்.

கண்ணுக்கினியாளும் அவன் கூறியபடியே செய்ய இணங்கினாள். கண்ணுக்கினியாளை நோக்கிக் கூச்சத்தோடும் பயத்தோடும், "இதெல்லாம் வேண்டாம். என்னாலே உனக்கெதுக்கு வீண் சிரமம்?" என்று ஒதுங்க முயன்றாள் அந்தப் பெண் பத்மா.

"இப்பிடிக் கூசி ஒதுங்கினால் பயனில்லை. ஒதுங்குகிறவர்கள் எதிலும் ஒதுக்கப்படும் காலம் இது. பொறுத்துக் கொள்கிறவர்களின் பொறுமையே மேலும் மேலும் சோதிக்கப்படுகிற காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது தவிரப் பொறுமையைக் கைவிடவும் நமக்குத் தெரிய வேண்டும்" என்று உடனே பாண்டியன் முன்னிலையில் அவளைக் கண்டித்தாள் கண்ணுக்கினியாள்.

இருபத்து ஆறாவது அத்தியாயம்

நகரில் பல பகுதிகளிலிருந்தும் பல்கலைக் கழக எல்லைக்குள் வரும் டவுன் பஸ் ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் பலமுறை மோதல்கள் வந்திருக்கின்றன. எல்லா மோதல்களுக்கும் ஒரு சிறிய பூசலே காரணமாயிருக்கும். முடிவில் எப்படியோ அது வளர்ந்து பெரிய அடிதடியாகிவிடும். பல்கலைக் கழகத்துக்கு வரும் பஸ் போக்குவரத்து மல்லை இராவணசாமிக்கு உரியதாகிய பின் இந்த மோதல்கள் மிகவும் அதிகமாயிருந்தன. முன்பு ஒருமுறை இப்படி ஒரு பூசல் நடந்த போது மாணவர்களுக்கும், பஸ் ஊழியர்களுக்கும் மூண்ட போரில் மாணவர்கள் மேல் மட்டும் தடியடிப் பிரயோகம் நடந்தது. அந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்குப் பின் அமைச்சர் கரியமாணிக்கம், மல்லை இராவணசாமியின் பஸ்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தொழிலாளர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் பேசும் போது "இந்த அரசு உங்கள் அரசு! ஒரு வாரத்துக்கு முன் உங்களிடம் வம்பு செய்த மாணவர்களுக்குத் தடியடி கிடைத்தது. உங்களுக்கோ அதனால் நியாயம் கிடைத்தது" என்று ஏதோ தத்துப் பித்தென்று உளறிப் பேசி அது எதிர்க்கட்சிப் பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்து விட்டது. அந்தப் பேச்சிலிருந்த மாணவர் விரோதப் போக்கை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள மாணவ சமூகம் கொதித்து எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த மந்திரி எந்த ஊருக்குப் போனாலும் மாணவர்கள் 'ஒழிக' கோஷத்துடனும், கறுப்புக் கொடிகளுடனும் அவரை எதிர்த்தார்கள். சில மாதங்கள் வரை எங்கும் மாணவர்களுக்கு முன் அந்த அமைச்சர் தலை காட்ட முடியாமலே இருந்தது. அப்போது மணவாளன் தான் மாணவர் தலைவராயிருந்தார். அந்தப் போரை அவர் முன்னின்று நடத்தியிருந்தார்.

இப்போது மாணவி பத்மாவுக்கு பஸ்சில் ஏற்பட்ட அநுபவத்திலிருந்தும் ஒரு பெரிய போராட்டம் விளைந்து அதனாலேயே பட்டமளிப்பு விழா நாலைந்து மாதங்களுக்குத் தள்ளிப் போய்விடுமோ என்று நினைத்தான் பாண்டியன். ஆனால் இரு பக்கத்து உண்மையும் தெரியாமல் அதை அவன் பெரிதாக்க விரும்பவில்லை. பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அறியவும், தடுக்கவும் துணைவேந்தர் தவிப்பதையும் கூட அவன் புரிந்து கொண்டிருந்தான். அரசாங்கமோ எப்படியாவது மாணவர்களை அமைதியடையச் செய்ய முயல்வதாகத் தெரிந்தது. ஊர்வலத்தன்று பஜார் ரோடு ஹோட்டலில், முரட்டுத்தனமாக நடந்து கொண்டவர்களில் சிலரைக் கைது செய்து போலீஸார் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். மாணவர்கள் மேல் தடியடிப் பிரயோகம் நடந்ததைப் பற்றி நீலிக் கண்ணீர் வடித்து விட்டு ஒரு நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தது அரசாங்கம். மாணவர்கள் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. வரப்போகிற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கரியமாணிக்கம் டாக்டர் பட்டம் பெறும் போது மாணவர்களால் எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்பதையும் மனத்தில் வைத்துக் கொண்டு அரசாங்கமும் பல்கலைக் கழக நிர்வாகமும் காரியங்களைச் செய்வது புரிந்தது. ஆனாலும் துணைவேந்தர் ஊர்வலத்தில் ஹோட்டல் முன் சோடாப்புட்டி வீச்சினால் காயமடைந்த மாணவர்களையோ, தடியடிப் பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களையோ சந்தித்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூடச் சொல்லவில்லை. மாணவர்கள் காரணமின்றித் தாக்கப்பட்டது பற்றி வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. தன்னையும், மோகன்தாஸையும் கூப்பிட்டுப் பேசிய போது கூட அவர் அனுதாப வார்த்தைகள் எதையும் தங்களிடம் கூறவில்லை என்பதை நினைத்த போது பாண்டியனுக்கு வருத்தமாக இருந்தது. இந்த நிலையில் 'பல்கலைக் கழக எல்லைக்குள் வரும் டவுன் பஸ் ஊழியர்களில் சிலர் மாணவ மாணவிகளிடம் முறையின்றி நடந்து கொள்கிறார்கள்' என்பதைத் துணைவேந்தரிடம் புகார் செய்து அதன் மூலம் பரிகாரம் தேட முடியாது என்பது அவனுக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. இதைப் பற்றிச் சிந்தித்தபடியே வகுப்புக்குப் போனான் அவன். முதற் பாடவேளை ஆங்கில வகுப்பு விரிவுரையாளர் காமாட்சிநாதன். ஷேக்ஸ்பியரைக் கரைத்துக் குடித்தவர். சாவி கொடுத்த யந்திரம் போல் நாற்பத்தைந்து நிமிஷம் சொற்பொழிவு செய்வார். கடைசிப் பதினைந்து நிமிஷங்களில் பத்து நிமிஷம் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் அவரைக் கேள்வி கேட்கலாம். ஆனால் கேள்விகள் கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் கேட்கப்படுகிற கேள்வியின் வாக்கிய அமைப்புப் பிழையாக இருந்தாலோ அதையே பிடித்துக் கொண்டு அந்தப் பையனை வம்பு செய்வார் என்பதனால் அவரிடம் கேள்வி கேட்க முக்கால்வாசி மாணவர்களுக்குப் பயம். கடைசி ஐந்து நிமிஷம் அட்டெண்டன்ஸ் எடுப்பார். அதோடு வகுப்பு முடிந்து விடும். கடுமையான லத்தீன் வார்த்தைகளைக் கலந்து சீஸர் காலத்து ஆங்கிலம் போல் மாணவர்கள் மிரளும் ஆங்கிலத்தில் அவர் 'லெக்சரை' நடத்தும் போது சில மாணவர்களுக்குத் தூக்கம் கூட வரும். தூங்குகிற ஒரு மாணவனை அவர் பார்த்துவிட்டாலோ வகுப்பில் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு விரிவுரையின் நடுவே, "லுக் அட் மீ அண்ட் ஹியர் வாட் ஐ ஸே... அதர்வைஸ் யூ வில் பி தி லூஸர்" என்று இரைந்து கத்துவார் அவர். அதற்குப் பயந்து புத்தகத்தைக் கோட்டைச் சுவர் போல் டெஸ்க்கில் நிறுத்தி வைத்து அந்த மறைவில் முகம் புதைத்துத் தூங்குபவர்களும் உண்டு. சில சமயங்களில் அவரே விரிவுரை முடிந்ததும் தமக்குத் தாமே சிரித்தபடி, "கும்பகர்ணங்க இனிமே முழிச்சுக்கலாம். லெக்சர் இஸ் ஃபினிஷ்ட். நௌ யூ மே ஆஸ்க் க்வஸ்ச்சின்ஸ்" என்று கூறுவதும் உண்டு.

அன்றைய வகுப்பில் 'நவீன ஆங்கில இலக்கியம்' பற்றி ஒரு சொற்பொழிவு செய்தார் காமாட்சிநாதன். முக்கால் மணி நேரம் ஓடியது தெரியவில்லை. வகுப்பு முடிந்ததும் அடுத்த வகுப்புக்குப் போவதற்கு முன் காப்பி குடிப்பதற்காகப் பாண்டியனும் வேறு நாலைந்து மாணவர்களும் காண்டீன் பக்கம் போய் வந்தார்கள். அப்போது காண்டீனில் வேறு நாலைந்து மாணவிகளோடு மீண்டும் அந்த பி.எஸ்.ஸி. மாணவி பத்மாவைச் சந்தித்தான் அவன். அவளிடம் வம்பு செய்யும் பஸ் கண்டக்டர் பற்றிச் சக மாணவர்களிடம் அவன் தெரிவித்த போது அந்த மாணவர்களில் உள்ளூர்வாசிகள் சிலரும் பஸ் ஊழியர்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பாண்டியனிடம் சொல்லத் தொடங்கினார்கள். குறிப்பாக மல்லை இராவணசாமியின் பஸ்களில் அவர் தம் கட்சி ஆட்களாகவே வேலைக்கு வைத்திருந்ததால் இப்படி அடிக்கடி தகராறுகள் வருவதாக மாணவர்கள் தெரிவித்தார்கள்.

இப்பேச்சு சுவாரஸ்யத்தில் அவர்கள் காண்டீனில் சிறிது நேரம் அதிகமாகத் தாமதித்துவிடவே அடுத்த வகுப்பு காலந்தாழ்த்திப் போக நேர்ந்தது. அது பேராசிரியர் பூதலிங்கத்தின் பொருளாதார வகுப்பு. அவருடைய வகுப்புக்குத் தாமதமாகப் போய் நுழைவது மாணவர்களுக்கே பிடிக்காத காரியம். பாண்டியனும் மற்ற மாணவர்களும் பேராசிரியரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்தார்கள். 'கரன்ஸி அண்ட் பேங்கிங்' பற்றி விரிவுரை நடந்து கொண்டிருந்தது. வகுப்பு முடிந்து வெளியேறும் போது, "பாண்டியன்! முடிந்தால் மூன்று மணிக்கு என்னை டிபார்ட்மெண்ட் அறையில் வந்து பார்" என்று சொல்லிவிட்டுப் போனார் பேராசிரியர் பூதலிங்கம். பகல் உணவுக்குப் பின் அறைக்குப் போய்ச் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பிற்பகலில் முதல் வகுப்பாகிய தமிழ் வகுப்புக்குப் போனான் பாண்டியன். அன்று முத்து மாணிக்கம் என்ற புது விரிவுரையாளர் வந்தார். வகுப்பை முப்பதாவது நிமிஷத்திலே முடித்து மாணவர்களைப் போகச் சொல்லிவிட்டார் அவர். இரண்டே முக்கால் மணிக்கே 'எகனாமிக்ஸ் டிபார்ட்மெண்ட்' மாடிக்குப் போய் பூதலிங்கம் சாரைப் பார்க்க வசதியாயிருந்தது பாண்டியனுக்கு. பேராசிரியர் அவனை அன்போடு வரவேற்று உட்காரச் சொன்னார். பியூனைக் கூப்பிட்டு இரண்டு டீ வாங்கி வரச் செய்து அவனுக்கும் கொடுத்துத் தாமும் குடித்த பின் மெல்லப் பேச்சைத் தொடங்கினார். "பாண்டியன்! இது நமக்குள்ளே இருக்கட்டும்! என் காதிலே விழுந்ததை உன்னிடம் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. பட்டமளிப்பு விழாவுக்குள்ளே மாணவர்களில் யார் யார் இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் காரணமான 'ரிங் - லீடர்ஸோ' அவங்களை எல்லாம் ஏதாவது குற்றம் சாட்டி 'சஸ்பெண்ட்' செய்வது, அல்லது போலீஸ் கேஸில் மாட்டிவிட்டுப் பட்டமளிப்பு விழா முடிகிற வரை உள்ளே தள்ளிவிடுவது என்ற ஏற்பாட்டில் இங்கே காரியங்கள் இரகசியமாக நடக்கின்றன. நீயும், உன் சகாக்களும் கவனமாக இருக்க வேண்டும். இதைச் சொல்வதற்காகத்தான் வரச் சொன்னேன். நீங்கள் நடத்திய கண்டன ஊர்வலங்களில் பெருவாரியான ஆசிரியர்களைக் கலந்து கொள்ளச் செய்தேன் என்பதனால் என் மேலேயே வி.ஸி.க்கு ரொம்பக் கோபம். எனக்கும் ஏதேதோ இடைஞ்சல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான் எதற்கும் பயப்படவில்லை. என்னால் அவரைப் போல் கண்ணெதிரே நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு மரக்கட்டையாகச் சும்மா இருக்க முடியாது."

பாண்டியன் அவருடைய அன்பான எச்சரிக்கைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தான். மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அடுத்த வகுப்புக்குப் புறப்பட்டான் அவன். பிற்பகலில் மாணவ நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு அண்ணாச்சி கடைக்குச் சென்று பேராசிரியர் பூதலிங்கம் கூறிய எச்சரிக்கையைத் தெரிவித்துக் கலந்தாலோசித்தான் அவன். நண்பர்கள், "எது வந்தாலும் கவலை இல்லை. அநீதிகளை எதிர்த்தே ஆக வேண்டும்" என்றார்கள். அன்று விடுதியில் மாணவர்களுக்கு வாராந்தர 'ஃப்ரீ நைட்' ஆகையால் முக்கால்வாசி மாணவர்கள் வெளியே திரைப்படம் பார்க்க வந்திருந்தார்கள். பேச்சுப் போக்கில் நேரம் அதிகம் ஆகிவிட்டதனால் பாண்டியன், அன்றிரவு அண்ணாச்சி கடையிலேயே தங்கிவிட்டான். மறுநாள் காலை ஆறு மணிக்கே எழுந்து அவன் விடுதி அறைக்கு வந்த போது லேடீஸ் ஹாஸ்டலிலிருந்து ஃபோன் வந்ததாக அறை நண்பன் பொன்னையா கூறினான்.

கண்ணுக்கினியாள் தான் ஃபோனில் கூப்பிட்டிருக்க முடியும் என்ற அநுமானத்தோடு பாண்டியன் வராந்தாவுக்குச் சென்று லேடீஸ் ஹாஸ்டலுக்குப் ஃபோன் செய்தான். நல்ல வேளையாக அவன் கூப்பிடுவதை எதிர்பார்த்து அவள் ஃபோன் அருகிலேயே இருந்தது வசதியாகப் போயிற்று. தான் மாணவி பத்மாவின் வீட்டுக்குப் போய் அவளோடு சேர்ந்து பஸ்ஸில் புறப்பட்டு வருவதாகவும், பஸ் டெர்மினஸ் அருகே காத்திருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தவே அவனுக்கு ஃபோன் செய்ததாகவும் அவள் கூறினாள். அதோடு அன்றிரவு ஃபைன் ஆர்ட்ஸ் ஃபேகுல்டியில் உள்ள லிட்டில் தியேட்டரில் 'டிப்ளமா இன் டிராமா' பிரிவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குச் சில விளக்கங்கள் தருவதற்காக ஒரு கதகளி நாடகமும், ஒரு குறவஞ்சி நாடகமும் நடக்க இருப்பதாகவும், குறவஞ்சி நாடகத்தில் தான் குறத்தியாக நடிக்க இருப்பதாகவும் சொல்லி அவன் அதற்கு வர வேண்டும் என்றாள் அவள். அவன் மகிழ்ச்சியோடு அதற்கு இசைந்தான். காலை ஒன்பதே முக்கால் மணிக்கு பஸ் டெர்மினஸ் அருகே மாணவர்களோடு காத்திருப்பதாகவும் கூறினான். அவள் ஃபோனை வைத்தாள். அவன் அவளோடு பேசி முடித்த மன நிறைவுடன் குளிப்பதற்காகப் போனான். ஏழரை மணிக்கு அவனும் பொன்னையாவும் அறைக்குத் திரும்பி அவரவர் பாடங்களை ஒரு மணி நேரம் படித்தார்கள். திடீரென்று தான் பல்கலைக் கழக நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த 'ஆங்ரி யங் மென்' என்ற புத்தகத்தைப் பிரித்து அதன் முன்னுரையில், 'எதிலும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகமாயிருக்கும் முதியவர்கள் நிறைந்த சமூகத்தில் எதிலும் பிடிவாதம் அதிகமாயிருக்கும் இளைஞர்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பிடிவாதமே இந்த நூற்றாண்டின் வரப்பிரசாதம்" என்ற பொருள்படும் ஆங்கில வாக்கியங்களைப் பாண்டியனிடம் சுட்டிக் காட்டினான் பொன்னையா.

"இந்தப் புத்தகம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு பாண்டியன்! நீயும் படி... அப்புறம் திருப்பிக் கொடுக்கலாம்" என்றான் அவன்.

"இதை இந்தப் புத்தகத்திலிருந்து தான் தெரிஞ்சிக்கணுமா பொன்னு? ரொம்ப நாளா மணவாளன் இதை என்னைப் பார்க்கறப்ப எல்லாம் சொல்லிக்கிட்டிருக்காரு. நிதானம் அளவு மீறினால் அதுவே மந்தம். வீரம் அளவு மீறினால் அதுவே முரட்டுத்தனம். இலட்சியம் அளவு மீறினால் அதுவே அலட்சியம். பிரியம் அளவு மீறினால் அதுவே பேராசை என்று தான் சில தொடக்கங்களுக்கு முடிவுகளே ஏற்பட முடியும்" என்று ஆரம்பித்துப் பேசத் தொடங்கிய பாண்டியன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "நேரமாச்சு! புறப்படு, போகலாம்" என்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பத் தயாரானான். அவனும் பொன்னையாவும் மற்றும் சில மாணவர்களும் பஸ் டெர்மினஸுக்குப் போய்ச் சேர்ந்த போது ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தபடி நிறைய மாணவர்கள் அங்கே கூடியிருந்தார்கள். ஒன்பது ஐம்பத்தைந்துக்கு வரவேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷம் முன்னதாகவே அந்தப் பஸ் வந்தது. எல்லாக் கூட்டமும் பஸ்ஸைச் சூழ்ந்து கொண்டது. கண்ணுக்கினியாளும் அந்த மாணவி பத்மாவும் இறங்கினார்கள். நடந்ததைப் பாண்டியனிடம் கண்ணுக்கினியாள் சுருக்கமாகச் சொல்லி இரண்டொரு சக பிரயாணிகளையும் கூப்பிட்டுச் சாட்சியத்தோடு அதை நிரூபித்தாள். உடனே மாணவர்கள் அந்தப் பஸ்ஸின் கண்டக்டர் டிரைவரை வளைத்துக் கொண்டு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கேட்கும்படி அவர்களைக் கோரினார்கள். டிரைவர் கொஞ்சம் நல்ல விதமாகப் பேசினான். கண்டக்டரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி அவனே வற்புறுத்தினான்.

"நானே அடிக்கடி சொன்னப்பல்லாம் நீ கேட்கலே! பாஸஞ்சர் கிட்டே துடுக்காப் பேசாதே! அடக்கமா வேலையைப் பாருன்னாக் கேட்கமாட்டே..." என்று கண்டக்டரைக் கண்டித்தான் அவன். டிரைவர் இப்படிக் கண்டித்ததும் கண்டக்டர் அவனையும் திட்டத் தொடங்கினான். தூரத்தில் நின்றிருந்த வேறு பஸ்களின் கண்டக்டர்கள் சிலரும் கூடி ஒன்று சேர்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில் பாண்டியன் சமயோசிதமான ஒரு காரியம் செய்தான். "இனிமேல் இது எங்கள் பிரச்னை! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எல்லாரும் வகுப்புக்களுக்குப் போகலாம். தயவு செய்து இங்கே நிற்க வேண்டாம்" என்று கூறிக் கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகளை மட்டும் அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தான். ஒரு கலகம் மூளுவதைத் தவிர்க்க முடியாது போலிருந்தது. "சாயங்காலம் நாடகம் ஞாபகமிருக்கட்டும்" என்று போகும் போது அந்த அவசரத்திலும் கூடக் கண்ணுக்கினியாள் சொல்லிவிட்டுப் போனாள். பாண்டியன் மாணவிகளை அனுப்பிவிட்டுத் திரும்பி வருவதற்குள்ளே மற்ற மாணவர்களுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் பேச்சுவார்த்தை தடித்து விட்டது. "நீங்கள்ளாம் அக்கா தங்கச்சிகளோட தானே பொறந்திருக்கீங்க?..." என்று சூடாகக் கேட்டான் ஒரு மாணவன். மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட கண்டக்டர் அதற்குத் துடுக்காக ஏதோ பதில் சொன்னான். அதற்குள் பாண்டியன் நடுவில் பாய்ந்து இரு சாராரையும் தடுத்து, எல்லா மாணவர்களையும் அந்த பஸ்ஸில் ஏறச் சொன்னான். மாணவர்கள் ஏறிக் கொண்டார்கள். "இந்தாப்பா! நாங்கள் ஓசிப் பயணம் செய்கிறோம்னு நினைக்காதே. எல்லாருக்கும் டிக்கெட் கொடு. நேரே உங்கள் முதலாளி வீட்டுக்குப் பஸ்ஸை விடு! நாங்களே அவரிடம் மானம், மரியாதை, மதிப்பைப் பற்றிப் பேசிக்கிறோம். உங்ககிட்டப் பேசிப் பிரயோசனம் இல்லை" என்று இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை நீட்டினான். கண்டக்டர் அதை வாங்காமல் காறித் துப்பிவிட்டு நடந்தான். ஆனால் டிரைவர் கொஞ்சம் நிதானமாகவே நடந்து கொண்டு பஸ்ஸூக்குச் சேதமில்லாமல் காக்க விரும்பினான். கண்டக்டர் இல்லாமலே பஸ்ஸை எடுத்தான் அவன். வாக்குவாதம் நீடித்ததனால் டிரைவர் பஸ்ஸை எடுக்கும் போதே பத்தே முக்கால் மணி ஆகிவிட்டது. பஸ் நிறைய எண்பது மாணவர்களுக்கு மேல் திணித்துக் கொண்டு நின்றார்கள். மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட பஸ் ஊழியர்களுக்கு எதிராகக் கோஷங்கள் முழங்கப்பட்டன. ஆத்திரம் அடைந்த சில மாணவர்கள் டிரைவர் ஸீட்டின் மேலே வைக்கப்பட்டிருந்த மல்லை இராவணசாமியின் படத்தை உடைக்க முயன்ற போது பாண்டியன் தடுத்தான். மாணவர்கள் கட்டுப்பட்டனர். "இதுவே நம் நோக்கமல்ல! நியாயம் கேட்கப் போகிற போது நாமே அநியாயங்களைச் செய்து கொண்டு போனால் நம் தரப்பில்தான் பலவீனங்கள் அதிகமாக இருக்கும்" என்று அவன் கூறிய போது மாணவர்கள் சிலருக்கு அவனது நிதானம் எரிச்சலூட்டினாலும் அவன் வார்த்தையை அவர்களால் மீற முடியவில்லை. அவனுக்காக அவர்கள் சிரமப்பட்டுப் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள்.

பஸ் மல்லை இராவணசாமியின் பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்து நிற்கிற போது மணி பதினொன்றே கால். டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிக் கூர்க்காவிடம் ஏதோ சொல்லி உள்ளே அனுப்பினான். கூர்க்கா உள்ளே போய்விட்டுத் திரும்பி வந்து டிரைவரிடம் சொன்ன பதிலைக் கேட்டு அவன் முகம் சுருங்கியது. "கொஞ்சம் பொறுத்துக்குங்க! நானே போய் ஐயாவைப் பார்த்துக் கேட்கிறேன்" என்று டிரைவரே உள்ளே போனான். அதையடுத்து உள்ளே மல்லை இராவணசாமியின் குரல் இரைந்து கூப்பாடு போடுவது வெளியேயும் கேட்டது. டிரைவர் திரும்பி வந்து, "அவரு உங்களைப் பார்க்க முடியாதாம்!" என்று எரிச்சலோடு பாண்டியனிடம் சொன்னான். உடனே பாண்டியன் மற்ற மாணவர்களைப் பார்த்து, "மாணவர்களே அவர் நம்மை மதித்துப் பார்த்து நாம் சொல்வதைக் கேட்கிறவரை எவ்வளவு நேரமானாலும் இங்கிருந்து நாம் நகரக் கூடாது" என்று இரைந்து சொன்னான்.. மணி பன்னிரண்டாயிற்று. ஒன்று, இரண்டு என்று பகல் நேரமாகியும் மாணவர்களும் நகரவில்லை. எம்.எல்.ஏ.யும் வெளியே வரவில்லை. மூன்று மணிக்குக் கூர்க்கா வந்து மாணவர்களை வெளியேறச் சொல்லிக் கத்திக் கூப்பாடு போட்டான். மாணவர்கள் அசையவில்லை. கோஷங்களை முழக்கினார்கள். பசி, தாகத்தைப் பொருட்படுத்தாமல் எண்பது மாணவர்கள் அங்கே மறியல் செய்து கொண்டிருந்த செய்தி பல்கலைக் கழகத்துக்கு எட்டியதால் மேலும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியிருந்தார்கள்.

"உங்கள் பஸ் ஊழியர்களைத் தயவு செய்து மாணவர்களிடமும் பொது மக்களிடமும் மரியாதையாக நடந்து கொள்ளச் சொல்லுங்கள். அது போதும்" என்று தாங்கள் வேண்டப் போகிற ஒரு வேண்டுதலைக் கேட்கக் கூட மறுக்கும் அளவு மல்லை இராவணசாமி முரண்டு பிடிப்பதை மாணவர்கள் வெறுத்தனர். இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று அந்தப் பங்களாக் காம்பவுண்டிலேயே உட்கார்ந்துவிட்ட மாணவர்களை என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளேயிருந்த மல்லை இராவணசாமி திகைத்தார். மாணவர்களைச் சந்தித்துப் பேசி சமரசமாகப் போக முடியாமல் வறட்டு ஜம்பம் அவரைத் தடுத்தது. போலீஸுக்குப் ஃபோன் செய்து மாணவர்கள் தம் வீட்டில் 'டிரஸ் பாஸ்' செய்திருப்பதாகப் புகார் கொடுக்கவும் தயக்கமாக இருந்தது. அதனால் மாணவர்களை மேலும் விரோதித்துக் கொள்ள நேருமோ என்று பயமாகவும் இருந்தது. துணைவேந்தருக்குப் போன் செய்தார் இராவணசாமி. துணைவேந்தர் ஃபோனில் கிடைக்கவில்லை. பல்கலைக் கழகத்தில் பதிவாளர் மட்டுமே இருந்தார். அவரிடம் துணைவேந்தர் வந்ததும் தமக்குப் ஃபோன் செய்யச் சொல்லும்படி தகவல் தெரிவித்த இராவணசாமி பேசாமல் கொல்லைப்புற வழியாக வெளியேறலாமா என்று கூட நினைத்தார். இருட்டிய பின்னும் மாணவர்கள் விடவில்லை. மாலையில் மேலும் மாணவர்கள் அதிகமான அளவு வந்து சேர்ந்து கொண்டதால் பங்களா காம்பவுண்டில் கூட்டம் முன்னைவிட உணர்ச்சிவசப்பட்டு பஸ்ஸுக்கு நெருப்பு வைத்து விடுமோ என்று கூடத் தாமாகவே கற்பனை செய்து பயந்து நடுங்கினார் அவர்.

மாலை ஆறரை மணிக்கு நுண்கலைப் பிரிவின் அரங்கில் குறவஞ்சி நாடகத்துக்காக மேக்அப் போட்டுக் கொள்ளப் போகிறவரை பாண்டியனை எதிர்பார்த்துக் காத்திருந்த கண்ணுக்கினியாளுக்கு அவன் வராதது ஏமாற்றத்தையும், கவலையையும் அளித்தது. அவள் கிரீன் ரூமில் இருந்த போது சக மாணவி ஒருத்தி வந்து நிலையைத் தெரிவித்தாள். பக்கத்தில் கதகளி ஆட்கள் வேறு நின்று கொண்டிருந்தார்கள். அவள் மனம் நாடகத்தில் லயிக்கவே இல்லை. முதலில் அவளது குறவஞ்சி நாடகம் தான் நடக்க வேண்டியிருந்தது. மாணவர்களும், பாண்டியனும், மல்லை இராவணசாமி வீட்டில் மறியலில் இருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்ததும் அவள் மனம் நிம்மதி இழந்திருந்தது. அவளால் நிறைவாக நடிக்க முடியவில்லை. பத்து நிமிஷம் மேடையில் தோன்றி ஆடிப்பாடிக் குறி சொல்லிக் குறத்தியாக நடித்தாள். அப்புறமும் உடனே அங்கிருந்து கத்திரித்துக் கொண்டு புறப்பட முடியவில்லை. அவளுடைய நாடகக் கலைப்பிரிவுப் பேராசிரியர் கருணாகர மேனன் தான் இதற்கு ஏற்பாடு செய்தவர். அவர் முன்னிலையில் குறவஞ்சி நாடகம் முடிந்ததும், கதகளியைப் பார்க்காமல் அவள் வெளியேறுவது என்பது முடியாமல் இருந்தது. மேக்அப்பைக் கலைத்துவிட்டு வழக்கமான கோலத்தோடு முன் வரிசையில் அமர்ந்து கதகளி முடிகிறவரை அங்கே இருந்து பார்த்தாள் அவள். வகுப்பின் பாடங்களில் 'தென்னிந்திய நாடகங்கள் - தொடக்க நிலை' என்ற பிரிவின் கீழ் நடைமுறைப் பாடமாக இந்தக் குறவஞ்சியும், கதகளியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன் காரணத்தால் இறுதி வரை இருந்துவிட்டுப் போக வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து அவள் மீள முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் ஃபைன் ஆர்ட்ஸ் டிபார்ட்மெண்ட் புரொபஸர் அறையிலிருந்தே அண்ணாச்சி கடைக்குப் போன் செய்தாள் அவள். கடை மூடியிருப்பதாகச் சொல்லி மருந்துக் கடையில் ஃபோனை வைத்துவிட்டார்கள். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது அவளுக்கு. உடனிருந்த மற்றவர்கள் தனது பரபரப்பைப் புரிந்து கொள்ளாமல் அதை இரகசியமாகக் காப்பது கூட அப்போது அவளாலேயே முடியாததாயிருந்தது.

இருபத்து ஏழாவது அத்தியாயம்

குறவஞ்சி, கதகளி நிகழ்ச்சிகள் முடிந்த பின்பும் கூட, கண்ணுக்கினியாள் அங்கிருந்து உடனே வெளியேறிச் செல்ல முடியாமல் இருந்தது. அவளுடைய உணர்வுகள் மற்றவர்களுக்குப் புரியவில்லை. மற்றவர்களுடைய உணர்வுகளோடு அவளால் இரண்டறக் கலக்க முடியவில்லை. மனம் போயிருக்கிற இடத்துக்கு உடம்பு போக முடியாமலும் உடம்பு தங்கியிருக்கிற இடத்தில் மனம் இல்லாமலும் அவள் அங்கே அப்போது தவித்துக் கொண்டு இருந்தாள். பாண்டியன் போயிருக்கிற இடத்தில் என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ என்ற எண்ணங்களிலேயே இருந்ததால் மற்றவர்கள் தன்னிடம் எதைக் கேட்கிறார்கள், அதற்குத் தான் என்ன பதில் சொல்கிறோம் என்ற பிரக்ஞையே அவளுக்கு இல்லை. ஆனாலும் மற்றவர்கள் தன்னை நோக்கி முகம் மலர்ந்த போது அவளும் பதிலுக்கு முகம் மலர்ந்தாள். மற்றவர்கள் தன்னிடம் எதையாவது பேசிய போது அவளும் அதற்குப் பதிலாக எதையோ சொன்னாள். நிகழ்ச்சிகள் நிறைவேறிய பின்பும், கதகளி குழுவினருக்கும், பிற முக்கியமானவர்களுக்கும் ஒரு விருந்து கொடுக்க ஏற்பாடாகியிருந்தது. அவளைப் போலவே காலையிலிருந்து அங்கேயே இருக்கும் மாணவ மாணவிகளால் வெளியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி அதிகமாக எதையும் தெரிந்து சொல்ல முடியாமல் இருந்தது. அவள் 'க்ரீன் ரூமு'க்குள் இருந்த போது வந்து தகவல் சொல்லிய சக மாணவி கூட மாணவர்களும் பாண்டியனும் மல்லை இராவணசாமி வீட்டுத் தோட்டத்தில் மறியல் செய்தபடி அமர்ந்திருப்பதாக மட்டுமே தெரிவித்திருந்தாள். மாலை ஆறு ஆறரை மணிக்கு இருந்த நிலவரத்தைத்தான் அவள் தெரிவித்திருந்தாள். அதற்கு மேல் அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அண்ணாச்சி கடையும் பூட்டப்பட்டு இருந்ததாக ஃபோனில் தகவல் தெரிந்ததனால் சந்தேகமும், பரபரப்பும் மேலும் மேலும் பெருகும் மனநிலையோடு இருந்தாள் அவள்.

விருந்து முடிந்ததும் டாக்டர் கருணாகர மேனோன் விருந்தினர்களையும் கதகளி கலைஞர்களையும் பாராட்டிப் பேசினார். கேரள கதகளியோடு தமிழ்நாட்டுக் குறவஞ்சியை ஒப்பிட்டுப் பேசிக் கண்ணுக்கினியாளின் நடிப்பையும் பாராட்டினார். தென்னிந்தியாவிலேயே மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகம் ஒன்றில்தான் 'நாடகத் துறைப் பட்டப் படிப்பு' இருக்கிறது என்பதைப் பற்றியும் மேனோன் பெருமையாகச் சொல்லிக் கொண்டார். எல்லாம் முடிந்து கண்ணுக்கினியாளும் சக மாணவிகளும், விடுதி அறைக்குத் திரும்பிய போது இரவு பத்தேமுக்கால் மணிக்கு மேல் ஆகிவிட்டது. விடுதியிலே வார்டன் அறை முகப்பிலிருந்த டெலிபோன் பூத் பூட்டப்பட்டு விட்டது. மற்ற அறைகளிலும் அநேகமாக விளக்குகள் அணைக்கப் பெற்று உறங்கத் தொடங்கியிருந்தார்கள். அறையில் உடனிருக்கும் மாணவி விஜயலட்சுமி தூக்கக் கிறக்கத்தோடு எழுந்து வந்து கண்ணுக்கினியாளுக்குக் கதவைத் திறந்து விட்டுவிட்டு உடனே போய்ப் படுக்கையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள். வார்டனை எழுப்பி டெலிபோன் பூத் அறையைத் திறக்கச் சொல்லிப் பேசலாமா என்கிற தயக்கத்தோடு சிந்தித்தாள் அவள். யாரோடு பேசி விவரங்களை அறிவது என்று திகைப்பு ஏற்படவே, அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டியதாயிற்று. உடைமாற்றிக் கொண்டு ஒரு கிளாஸ் தண்ணீர் பருகியபின் விளக்கை அணைத்து விட்டு அவளும் படுத்தாள். உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு கரையில் இழுத்தெறிந்த மீனாகப் படுக்கையில் தவித்தாள் அவள். எப்போது விடியும் என்று மனம் பதறியபடியே படுத்திருந்தவள் தன்னையும் மீறிய அயர்ச்சியில் சிறிது கண்ணயர்ந்தாள். விடிந்ததும் உடனே தினசரிப் பத்திரிகைகள் கிடைக்காத ஊர் மல்லிகைப் பந்தல். மதுரையிலிருந்து வெளிவருகிற தினசரிகளும் சரி, சென்னையிலிருந்து வெளிவருகிற தினசரிகளும் சரி காலை ஒன்பது மணிக்கு மேல் தான் மல்லிகைப் பந்தல் நகர எல்லைக்குள்ளேயே வந்து சேரும். அதனால் செய்தித் தாளிலிருந்து தகவல் தெரிந்து கொள்வதற்குள் யாரிடமாவது விசாரித்தே தெரிந்து கொண்டு விடலாம் என்று விடிந்ததும் பல் விளக்கிவிட்டு அறைத் தோழியோடு வெளியேறினாள் கண்ணுக்கினியாள். காப்பிக்காக மெஸ்ஸுக்குள் நுழைந்த போதே அவள் எதிர்பார்த்த தகவல் தெரிந்துவிட்டது. முந்திய இரவு ஏழு - ஏழரை மணிக்கு மல்லை இராவணசாமியே வழிக்கு வந்து மாணவி பத்மாவிடம் தவறாக நடந்து கொண்ட கண்டக்டரைக் கொல்லைப்புறம் வழியாகத் தமது பங்களாவுக்கு வரவழைத்து மாணவர்களுக்கு முன்னால் நிறுத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டாராம். ஆனால் மன்னிப்புக் கேட்டு முடிந்து மாணவர்கள் கோபம் தணியும் வரையில் தந்திரமாக இருந்த இராவணசாமி இருளில் தம் பங்களாவிலிருந்து வெளியேறிய மாணவர்களைப் பாதி வழியில் ஆட்களை அனுப்பித் தாக்குவதற்கு ஏற்பாடு செய்தாராம். மாணவர்கள் சேர்ந்து கூட்டமாகத் திரும்பி வந்து கொண்டிருந்ததாலும், அண்ணாச்சி முதலியவர்கள் துணைக்கு இருந்ததாலும் இராவணசாமி அனுப்பிய முரடர்களைச் சமாளித்து விரட்டியிருக்கிறார்கள். கண்ணுக்கினியாளும் அவளுடைய அறைத் தோழியும் மெஸ்ஸிலே அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்த போது சக மாணவிகள் சுற்றிலும் சூழ்ந்து கொண்டு இந்த விவரங்களையெல்லாம் சொன்னார்கள். பாண்டியனுக்கும் மாணவர்களுக்கும் எந்த அபாயமும் நேரவில்லை என்று அறிந்த பின்பே அவள் நிம்மதி அடைந்தாள்.

"இவ்வளவு நடந்திருக்கிறதே, வி.சி. ஏன் வாயை மூடிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறார்? மாணவர்கள், பஸ் ஊழியர்கள் தங்களிடம் மன்னிப்புக் கோர வேண்டி இராவணசாமியின் பங்களா வாசலில் மறியல் செய்த போது வி.சி. ஏன் போய் தலையிடவில்லை? நமக்காக இல்லாவிட்டாலும் ஆளும் கட்சிப் பிரமுகர் இராவணசாமிக்காகக் கூட அவர் பரிந்து கொண்டு வரவில்லையே, ஏன்?"

"நேற்று முழுவதும் வி.சி. யுனிவர்ஸிடி பக்கமே வரவில்லை. லேக்வியூ ஹோட்டலில் ஏதோ செமினாராம். அங்கேயே இருந்து விட்டார்..."

"இந்த மாதிரி நேரங்களில் தப்பி நழுவுவதற்கு அவருக்கு எப்போதுமே இப்படி ஏதாவது ஒரு செமினார் இருக்கும்" என்றாள் ஒரு மாணவி. அவள் குரலில் கேலி நிரம்பியிருந்தது.

காப்பியை முடித்துக் கொண்டு காலை எட்டு மணிக்கு மெஸ்ஸிலிருந்து திரும்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டியனிடமிருந்து அவளுக்கு ஃபோன் வந்தது.

"நம்முடைய போராட்டம் வெற்றியாக முடிந்து விட்டது. ரொம்ப நேரம் மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த இராவணசாமி கடைசியில் விட்டுக் கொடுத்து இறங்கி வர வேண்டியதாகிவிட்டது. அந்தக் கண்டக்டரையே வரவழைத்து எங்களிடம் மன்னிப்புக் கேட்க வைத்து நாங்கள் கோபப்படாமல் வெளியேறச் செய்த பின், பின்னாலேயே லாரிகளில் குண்டர்களை அனுப்பி எங்களைத் தாக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். நாங்கள் கூட்டமாகச் சேர்ந்திருந்து தாக்க வந்தவர்களை விரட்டியடித்தோம். அப்புறம் இங்கே ஹாஸ்டலுக்குத் திரும்ப இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. மன்னித்துக் கொள்! நீ திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தும் இந்தக் கலவரங்களினால் உன் நாடகத்துக்கும், கதகளிக்கும் வரமுடியாமல் போய்விட்டது. அந்தப் பெண் - அதுதான் உன் சிநேகிதி பத்மாவிடம் இனிமேல் பயப்படாமல் தினமும் பஸ்ஸில் வரலாம் என்று சொல்லு" என்றான்.

"எங்க நாடகமும் முடிந்து நான் அறைக்கு வரப் பதினொரு மணிக்கு மேல் ஆயிடிச்சு. எனக்கு உங்களைப் பத்தி ஒரே கவலை. விசாரிச்சுத் தெரிஞ்சுக்கவும் முடியலே. இராத்திரி எல்லாம் தூக்கமில்லாமல் தவிச்சுப் போனேன்."

"நீ கவலைப்பட்டுத் தவிச்சிக்கிட்டிருப்பேன்னுதான் ராத்திரியே உனக்கு ஃபோன் பண்ணிச் சொல்ல நினைச்சோம். ஃபோன் பண்ண முடியாமப் போச்சு. அண்ணாச்சியும் கடையைப் பூட்டிக்கிட்டு எங்களைப் பார்க்க அங்கே வந்திட்டாரு. அவரும், வேற சில ஆட்களும் எங்களைத் தேடிக்கிட்டு அங்கே வந்திருக்காட்டித் துரத்தி அடித்து வந்து விரட்டின குண்டர்ங்ககிட்டேயிருந்து நாங்கத் தப்பியிருக்க முடியாது. அண்ணாச்சியும் அவரோட ஆட்களும் வந்து நின்னது எங்களுக்குப் பெரிய பாதுகாப்பா இருந்திச்சு" என்றான் பாண்டியன். கண்ணுக்கினியாள் தன் பதிலில் ஒரு விஷயத்தை அவனுக்கு நினைவூட்டினாள்.

"சரி! அது போகட்டும். எடுத்த காரியத்தை வெற்றியா முடிச்சாச்சு. பேரவைத் தேர்தல் முடிஞ்சு தலைவர், செயலாளர் எல்லாரும் வந்தப்புறமும் கூட மாணவர் பேரவைத் தொடக்க விழாவையோ மாணவர்களின் விவாத அரங்கையோ நாம் இன்னும் நடத்தவில்லை. இங்கே பல மாணவ மாணவிகளுக்கு இது ஒரு பெரிய குறையாக இருக்கும் என்று தெரிகிறது..."

"அடுத்த வாரம் நேரு விழாவைக் கொண்டாடுகிறோம். சோஷியாலஜி பேராசிரியர் வீரராகவன் தலைமை வகிக்கிறார். நேருவின் சோஷலிச சமுதாயத்தை அமைக்கும் ஆசை அவர் காலத்திலேயே வெற்றி பெற்றது என்றும், வெற்றி பெறவில்லை என்றும் இரு அணிகளாகப் பிரிந்து நாம் அந்த விழாவில் ஒரு விவாதப் பட்டிமன்றம் நடத்துகிறோம். அதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யுனிவர்ஸிடி ஆடிட்டோரியத்தில் இந்த விழாவை நடத்தப் போகிறோம்."

"ரொம்பச் சரி! அதில் நீங்கள் எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டு விவாதிக்கப் போகிறீர்கள்?"

"நீ எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டு விவாதிக்கப் போகிறாயோ, அதற்கு நேர் எதிர்க்கட்சியை எடுத்துக் கொண்டு தான் நான் விவாதிப்பேன்..."

"அப்படியானால் உங்கள் கட்சி நிச்சயமாகத் தோற்றுத்தான் போகப் போகிறது..."

"போதும்! ஃபோனை வை. இங்கே 'பூத்'துக்கு வெளியே ஃபோனுக்காக நிறைய மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றதை நேரில் பேசிக் கொள்ளலாம்" என்று சொல்லி அந்த நீண்ட டெலிபோன் உரையாடலை முடித்தான் பாண்டியன். பேசிவிட்டு என்.சி.சி.க்காக அவன் ஓடவேண்டியிருந்தது.

அன்று காலை வகுப்புக்களுக்கு முன் மாணவர்களை மைதானத்தில் கூடச் செய்து துணைவேந்தர் தாயுமானவனார் இருபத்தைந்து நிமிடங்கள் அறிவுரை வழங்கினார். "மாணவர்கள் கலகக்காரர்கள் என்றே தொடர்ந்து பெயரெடுத்துவிடக் கூடாது. ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களுமே நமது கல்வியாகிவிடாது. பஸ் ஊழியர்களோடு மோதல்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் கோரிக்கைகளை நீங்கள் என்னிடம் முறையாகத் தெரிவித்தால் நான் உடனே அவற்றைக் கவனிப்பேன்" என்று அவர் பேசிய போது அதை எதிர்த்தும், நகையாடியும், கூட்டத்திலிருந்து மாணவ மாணவிகள் குரல் எழுப்பினார்கள். எதிர்ப்பைக் கண்டு பேச்சைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு தம் அறைக்குப் போய்விட்டார் துணைவேந்தர். முதல் பாட வேளை இதில் போய்விட்டது. துணைவேந்தரின் மைதானக் கூட்டம் முடிந்து கலையும் போது பாண்டியனை மீண்டும் சந்தித்து, "இன்று பகல் காட்சிக்கு, 'ஹில்வியூ' தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்க்கப் போக வேண்டும்! இரண்டரை மணிக்கு உங்களை யுனிவர்ஸிடி லைப்ரரி வாசலில் சந்திக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் மற்ற மாணவிகளோடு போய்விட்டாள் கண்ணுக்கினியாள். இரண்டாவது பாட வேளையில் அவளுக்குத் 'தோற்பாவைக் கூத்து', 'குறவஞ்சி நாடகங்கள்' போன்ற ஆரம்ப கால நாடகங்களினது நிலை குறித்து விரிவுரை நடந்தது. அதே வேளையில் பாண்டியனுக்கு வரலாற்றுப் பாடம். வரலாற்று விரிவுரையாளர் சபாபதி கால்மணி நேரம் பேசினாலும் அதில் 'இந்தக் காலகட்டத்திலே' என்ற தொடர் பதினைந்து முறையாவது திரும்பத் திரும்ப வரும். அன்று அவர் வகுப்புக்குள் நுழையுமுன்னேயே போர்டில் சாக்பீஸால், 'இந்தக் காலகட்டம் நீங்கள் வரலாற்று விரிவுரையாளரால் அறுக்கப்படுவதற்குரியது. உங்களுக்கு மனமார்ந்த அனுதாபங்கள்' - என்று பெரிதாக எழுதிப் போட்டிருந்தான் யாரோ ஒரு குறும்புக்கார மாணவன். உள்ளே நுழைந்து பொறுமையாகப் 'பிளாக் போர்டில்' இருந்த அந்த வாக்கியத்தை அழித்து விட்டு விரிவுரையைத் தொடங்கினார் அவர். வகுப்பு, பாட வேளைக்கான முழு நேரத்துக்கு முன்பே முடிந்துவிட்டது. மூன்றாவது பாடவேளைக்கான பேராசிரியர் அன்று வரவில்லை. மாணவர்கள் எல்லோரும் நேரே பகல் உணவுக்காக மெஸ்ஸுக்குப் போய்விட்டார்கள். மெஸ்ஸில் உள்ளே வந்திருந்த சில மாணவர்கள் இன்னும் உள்ளே வராத தங்கள் நண்பர்களுக்காகச் சாவிக் கொத்து, கைக்குட்டை, புத்தகங்களை வைத்து உட்காரும் இடங்களை ரிசர்வ் செய்திருந்தார்கள். திடீரென்று நுழைந்த ஒரு மாணவன் ஏற்கெனவே ஒரு நாற்காலியில் மற்றவன் போட்டிருந்த கைக்குட்டையை எடுத்தெறிந்து விட்டுத் தான் முந்திக் கொண்டு சாப்பிட உட்காரவே, வாஷ்பேசினில் கைகழுவப் போயிருந்த கைக்குட்டையின் உரிமையாளன் திரும்பி வந்து இரைந்து கத்தி, சண்டை போடத் தொடங்கி அதுவே கைகலப்பாக முற்றிவிடும் போலிருந்தது. பாண்டியன் இருவருக்கும் நடுவே குறுக்கிட்டுச் சமாதானப்படுத்தி வைத்தான்.

பிற்பகல் வகுப்புக்கு அவன் போகவில்லை. இரண்டே கால் மணிக்கு நூல் நிலைய வாயிலில் கண்ணுக்கினியாளை எதிர்பார்த்து அவன் காத்திருந்தான். இரண்டரை மணிக்கு அவள் வந்தாள். வெளிர் நீல வாயில் புடவையோடு அப்போது அவள் தன்னைத் திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் கவர்ச்சி நிறைந்து அவன் எதிரே வந்து நின்றாள். அவளது மை தீட்டிய வசீகர விழிகளும், சிவந்த மாதுளை இதழ்களும் அவன் மனத்தைச் சூறையாடின. அவன் சொன்னான்: "சினிமாப் பார்க்கப் போக வேண்டாம்! உன்னையே பார்த்துக் கொண்டு நிற்கலாம் போல் தோன்றுகிறது! ரொம்ப நாளைக்கு முன் லைப்ரரியில் 'தீபன்' எழுதிய 'அரும்பிய முல்லை' என்ற புத்தகத்தில் ஒரு கவிதை படித்தேன். உன்னைப் பார்த்ததும் இப்போது மீண்டும் அந்தக் கவிதைதான் நினைவுக்கு வருகிறது..."

"எங்கே? அந்தக் கவிதையைத்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்... நானும் தெரிந்து கொள்கிறேன்..."

"மங்கைப் பருவம் உன் மேனி முழுவதும்
பொங்கி வழியுதடி!
செங்கையின் வீச்சினிலும் - உன் தன்
செந்தமிழ்ப் பேச்சினிலும் - இள
அன்னநடை தன்னிலும் - நீ
அங்குமிங்கும் ஓடிஆடித் திரியும்
மின்னல் நடைதன்னிலும் - அந்த
மெட்டி குலுங்கும் இசை தன்னிலும் - இள
மங்கைப் பருவம் பொங்கி வழியுதடீ!"

"தப்பு! நான் இன்னும் மெட்டி அணியவில்லை..."

"அதனாலென்ன? சீக்கிரம் அணியச் செய்து விட்டால் போகிறது."

அந்தக் கவிதையைப் பாண்டியன் தன்னிடம் கூறியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது என்பது அவள் முகத்தின் இங்கித நளின உணர்வுகளிலிருந்து புரிந்தது. ஹில்வியூ தியேட்டர் வாசலுக்கு அவர்கள் போகும்போது படம் தொடங்க இன்னும் அரை மணி நேரம் இருந்தது. நேரம் போக வேண்டுமே என்பதற்காக எதிரே இருந்த காப்பி ஹவுஸில் நுழைந்து அவன் தனக்குத் தேநீரும் அவளுக்கு அவள் கேட்டபடி காப்பியும் ஆர்டர் செய்தான். கொண்டு வந்து வைத்த சர்வர் தேநீரை அவள் முன்பும் காப்பியை அவன் முன்பும் மாற்றி வைத்துவிட்டான். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருமே அதைக் குடிக்கத் தொடங்கி ஒரு மடங்கு உள்ளே போனதும் தான் இந்த மாற்றம் தெரிந்தது.

"அடடா இது காப்பி!... நான் டீ தான் கேட்டேன்" என்று மீதிக் காப்பியை அப்படியே கோப்பையோடு மேஜையில் வைத்தான் பாண்டியன். தேநீரை ஒரு மடக்குப் பருகியிருந்த அவளும் மீதித் தேநீரோடு கோப்பையை அவனருகே நகர்த்தினாள். இருவரும் ஒருவரையொருவர் குறும்புத்தனமாகப் பார்த்தபடி கோப்பைகளை மாற்றிக் கொண்டு அப்புறம் பருகினார்கள். பாண்டியன் குறும்பாக அவளிடம், "இனி நாம் ஒவ்வொரு தடவை இங்கே வரும் போதும் இந்த சர்வர் இப்படியே மாற்றிக் கொடுத்தால் அவனுக்கு நிறைய 'டிப்ஸ்' தரலாம்" என்றான். அவள் சிரித்தாள். அந்த வேளையில் அவர்களுக்கு உள்ளே இனிய உணர்வுகள் நிறைந்திருந்தன. மனம் இரண்டுமே ஒன்றாகி ஒரே விதமான உணர்வுகளால் இணைக்கப்பட்டது போல் இருந்தது. 'உள்ளூறக் கனிந்து ததும்பும் அளவற்ற பிரியத்தை எப்போதும் வார்த்தைகளால் சொல்லிக் கொள்வதற்கு முயல்கிறோமோ அப்படிச் சொல்லிக் கொள்வதற்கு முயலும் முதல் விநாடியிலேயே அதன் மேல் செயற்கை நிழல் வந்து படர்ந்து விடுகிறது' என்பதை உணர்ந்தவர்கள் போல் அவர்கள் அப்போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலே பரஸ்பரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்றே கால் மணிக்குத் தியேட்டரில் நுழைந்த போது படம் தொடங்க இன்னும் கால்மணி நேரமே இருந்தது.

அந்தப் படமும் உருக்கமான காதல் கதையை மையமாகக் கொண்டது. ஆங்கிலப் படமாதலால் பட்டுக் கத்தரித்தது போல் சுருக்கமாக எடுத்திருந்தார்கள். மூன்றரை மணிக்குத் தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடிந்து விட்டது. வெளியேறும் போது தான் தங்களைப் போலவே பல மாணவ மாணவிகளின் இணைகள் அங்கு படத்துக்கு வந்து திரும்புவதை அவர்கள் காண முடிந்தது.

படம் விட்டதும் சிறிது தொலைவு பேசிக் கொண்டே மலைச் சாலையில் உலாவச் சென்றார்கள் அவர்கள். இரவு உணவும் வெளியில் ஒரு ஹோட்டலிலேயே முடிந்தது. இரவு பத்து மணிக்குள் இருவருமே பல்கலைக் கழகத்துக்குத் திரும்பி அவரவர் விடுதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.

மறுநாள் காலையில் தினசரிகளில் மாநில அமைச்சர்களில் ஒருவர் மாணவர்களைப் பற்றிப் பேசிய பேச்சு ஒன்று வெளிவந்திருப்பதைப் பாண்டியன் படித்த போது அவனுக்கும் ஆத்திரம் மூண்டது. "மாணவர்கள் தாங்கள் மாணவர்களாக இருப்பதனாலேயே எதை எதிர்த்தும் எப்படியும் போராட முன் வருவார்களேயானால் அதன் பயனை நிச்சயம் அனுபவிப்பார்கள். படிப்பைத் தவிர அவர்கள் வேறு வழிக்கு வரக்கூடாது. விஷயங்களின் நியாயம் அநியாயங்கள் புரியக் கூடிய பக்குவம் வரும் முன்னால் அரை வேக்காடுகளாக நம் நாட்டு மாணவர்கள் நடந்து கொள்வதாகவே நான் நினைக்கிறேன். பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் உருப்பட வேண்டுமானால் அங்கே முதலில் மாணவர்கள் யூனியன்களைக் கலைக்க வேண்டும். மாணவர் தலைவர்கள், செயலாளர்களைத் தேர்ந்தெடுப்பது நிற்க வேண்டும்" என்று பேசியிருந்தார் அந்த அமைச்சர். கை சுத்தமில்லாமல் 'லஞ்ச பூஷணம்' பட்டம் பெறத்தக்க அளவு மோசமான நடத்தை உள்ள அந்த அமைச்சர் மாணவர்களைப் பற்றி அப்படிப் பேசியிருந்தது மாணவர்கள் எல்லோரையும் அவமானப்படுத்துவது போலிருந்தது. நல்ல வேளையாக அதே மந்திரி இரண்டு மூன்று தினங்களில் மல்லிகைப் பந்தலுக்கு வந்து பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கி வைக்க இருப்பதாகவும் பத்திரிகைகளில் அன்றே வேறொரு பத்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

உடனே நண்பர்களைக் கலந்து பேசிக் கரியமாணிக்கத்தின் அமைச்சரவையைச் சேர்ந்த அந்த மந்திரிக்குக் கறுப்புக் கொடி காட்டித் 'திரும்பிப் போ' என்ற முழக்கங்களோடு எதிர்கொள்ள ஏற்பாடு செய்தான் பாண்டியன். ஆனால் போலீஸார் அதை எப்படியோ அறிந்து பல்கலைக் கழகப் பகுதியை விட்டு மாணவர்களே வெளியேற முடியாதபடி மந்திரி வருகிற தினத்தன்று தடை உத்தரவுகள், ஐந்து பேருக்கு மேல் கூடி நிற்க முடியாதபடி ஆணைகள் எல்லாம் பிறப்பித்து விட்டார்கள். எப்படியும் அந்த மந்திரிக்குத் தங்கள் அதிருப்தியைக் காட்ட விரும்பிய பாண்டியன், கண்ணுக்கினியாள் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகளை இரகசியமாகத் தயார் செய்து கைக்குட்டைகள் போல் சிறிய சிறிய கறுப்புத் துணிகளை மறைத்து வைத்திருக்கச் சொல்லி, பெண்கள் விடுதியையொட்டிய சாலையை மந்திரி கடக்கும் போது கறுப்புக் கொடி பிடிக்கவும், 'திரும்பிப் போ' என்ற வாசகம் அடங்கிய அட்டைகளைக் காண்பிக்க வைப்பதற்கும் திட்டமிட்டிருந்தான். தடையை மீறுவதற்காகவோ, கறுப்புக்கொடி காட்டுவதற்காகவோ மாணவர்களைத் துன்புறுத்துவது போல் மாணவிகளைப் போலீஸார் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்தே மாணவிகளிடம் அந்தப் பொறுப்பை விட்டிருந்தான் பாண்டியன். இடுப்பிலே மறைத்த கறுப்புக் கைக்குட்டையும் அரை அடி ஸ்கேலுமாக எதேச்சையாக நிற்பது போல் நின்ற பல மாணவிகளும், கண்ணுக்கினியாளும், மந்திரியின் ஜீப் அருகே நெருங்கியதும் இடுப்பில் மறைத்திருந்த கறுப்புத் துணிகளை எடுத்து ஸ்கேல் நுனியில் செருகி நீட்டி எதிர்ப்புக் குரல்களை முழங்கினார்கள். 'மாணவர்களை அவமதிக்கும் மந்திரியே திரும்பிப் போ', 'மாணவர்கள் உரிமைகளைப் பறிக்க முயலும் எதேச்சாதிகாரியே! திரும்பிப் போ' - என்று குரல்கள் எழுந்த சுவட்டோடு கறுப்புக் கொடிகள் திடீரென்று முளைத்ததும் பெரிய போலீஸ் அதிகாரி ஒருவர் ஓடி வந்து கைகளை உயர்த்திக் கூப்பாடு போட்டு மாணவிகளை மிரட்டி அனுப்ப முயன்றார். கண்ணுக்கினியாள் அவரிடம் கூறினாள்: "எங்களை நீங்கள் தடுக்க முடியாது! ஜனநாயக நாட்டில் இந்த உரிமை எங்களுக்கு உண்டு. இப்போது ஜீப்பில் போகிற இதே மந்திரி முன்பு பதவிக்கு வராத காலத்தில் மனித குல மாணிக்கம் நேருவுக்கே, அவர் சென்னை வந்த போது கறுப்புக் கொடி காட்டியிருக்கிறார். இப்போது தமக்குக் கறுப்புக் கொடி காட்டுகிறவர்கள் மேல் இவர் கோபப்படுவானேன்? சரித்திரம் திரும்புகிறது."

ஒன்றும் செய்யத் தோன்றாத போலீஸ் அதிகாரி மாணவிகளை அமைதியாகக் கலைந்து போகுமாறு நயமாக வேண்டினார். "மாணவிகளாகிய நீங்கள் மாணவர்களைப் போல் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. உங்களிடம் இப்படிப்பட்ட அநாகரிகமான காரியங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்றார்.

"அதனால் தான் நாங்கள் இதைச் செய்கிறோம். நீங்கள் எதிர்பார்ப்பதை மட்டுமே நாங்கள் எப்படிச் செய்ய முடியும்?" என்று அவரிடம் பதிலுக்குக் கேட்டாள் கண்ணுக்கினியாள். போலீஸ் அதிகாரி பேசாமல் விலகி நின்று விட்டார். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது. ஆனால் அந்தப் போலீஸ் அதிகாரி கோபத்தோடு கண்ணுக்கினியாளின் பெயரை விசாரித்துக் குறித்துக் கொண்டார். அதைப் பற்றி அவள் கவலையோ பதற்றமோ அடையவில்லை. கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் முடிந்து மாணவிகளோடு அவள் விடுதிக்குத் திரும்பி ஒரு மணி நேரம் கழித்துப் பெண்கள் விடுதியின் பிரதம வார்டன் அம்மையார் உடனே வருமாறு அவளைத் தன் அறைக்குக் கூப்பிட்டு அனுப்பினாள். வார்டனின் அறைக்குள் கண்ணுக்கினியாள் நுழைந்த போது அந்த அம்மையார் மிகவும் கோபமாக முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவளை எதிர்கொண்டாள். "நீ படிக்கத்தானே இங்கே வந்திருக்கே?" என்ற வார்டனின் முதல் கேள்வியே கடுமையாக அவள் முகத்தில் வந்து அறைவது போல் இருந்தது.

இருபத்தெட்டாவது அத்தியாயம்

வார்டனின் வழக்கத்தை மீறிய கடுமை கண்ணுக்கினியாளுக்குப் புதுமையாக இருந்தது. மாணவிகள் விடுதியான ஔவை மனை, ஆண்டாள் மனை, இரண்டிற்கும் பொதுவான பிரதம வார்டன் அம்மையார், அந்தக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் அவள் கலந்து கொண்டதற்காகவும், தலைமை தாங்கி மாணவிகளை அழைத்துச் சென்றதற்காகவும், அவளைக் கோபமாகக் கண்டித்தாள். எப்போதும் தன்னிடம் ஓரளவு பிரியமாயிருக்கும் வார்டனின் கண்டிப்பு அன்று அதிகமாயிருந்தது போல் தோன்றியது அவளுக்கு.

"தடை உத்தரவு அமுலில் இருக்கிற போது நீ நூறு மாணவிகளுக்கு மேல் அழைத்துக் கொண்டு போய் மந்திரிக்குக் கறுப்புக் கொடி காட்டியிருக்கிறாய்! நீங்கள் எல்லாருமே பெண்கள் என்பதால் போலீஸ் தயக்கத்தோடு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது. ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் பதில் சொல்ல வி.சி.க்கு முன்னால் நான் போய்க் கைகட்டி நிற்க நேர்ந்திருக்கும். உன்னால் இந்த ஹாஸ்டல் பேரே கெட்டுப் போய் விடாமல் பார்த்துக் கொள்! ஐயாம் ஏ லிட்டில் அஃப்ரைட் ஆஃப் யூ! பீ கேர் ஃபுல்! எனி ஹௌ..."

கண்ணுக்கினியாள் இதற்குப் பதிலே சொல்லவில்லை. பெண்கள் விடுதிகளிலிருந்து எந்த மாணவி வகுப்புக்களுக்குத் தவிர வேறு காரியங்களுக்காக வெளியே செல்வதானாலும், புறப்பட்டுச் செல்கிற நேரம், செல்லும் இடம், மறுபடியும் திரும்பும் நேரம் உட்பட எழுதி வைத்துவிட்டுப் போக வேண்டிய 'அவுட் ரிஜிஸ்தர்' நோட்டுப் புத்தகம் அப்போது வார்டனின் மேஜை மேல் விரித்து வைக்கப் பட்டிருந்தது. பல்கலைக் கழக விதிமுறைகள் கண்டிப்பாக இருந்தாலும் பெரும்பாலான சமயங்களில் இந்த 'அவுட் ரிஜிஸ்தரை' யாருமே பொருட்படுத்துவதில்லை. வார்டனும் இதை அதிகம் வற்புறுத்துவதில்லை.

இன்று வார்டன் அதை விரித்து வைத்துக் கொண்டு அவளிடம், "நீங்கள் நூறு பேருக்கு மேல் வெளியே போயிருக்கிறீர்கள்! நீங்கள் போன நேரம், போன இடம், திரும்பின நேரம் எதைப் பற்றியும் இந்த ரிஜிஸ்தரில் எழுதவே இல்லை. 'எப்படி யாரைக் கேட்டுக் கொண்டு காம்பஸுக்கு வெளியிலே போய் அவங்க மந்திரிக்குக் கறுப்புக் கொடி காட்டினாங்க? விமன்ஸ் ஹாஸ்டல் அவுட் ரிஜிஸ்டரோட உடனே என்னை வந்து பாருங்க'ன்னு வி.சி. கூப்பிடறாரு. இப்ப நான் என்ன செய்யட்டும்?" என்றாள்.

தன்னுடைய மௌனமும், பணிவும் வார்டனின் கோபத்தைத் தணிக்கும் என்று கண்ணுக்கினியாள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. தன்னையும் மாணவிகளையும் காப்பாற்றிக் கொள்ள வார்டனே அப்போது சாதுரியமாக ஒரு காரியம் செய்தாள். 'மாணவிகள் ஐந்து பேர் அடங்கிய குழுவாக ஷாப்பிங், திரைப்படம், சொற்பொழிவு ஆகியவற்றுக்காக விடுதியிலிருந்து வெளியே சென்று திரும்பலாம்' என்று மற்றொரு விடுதி விதியின்படி அவர்கள் 'ஷாப்பிங்'குக்காக வெளியே சென்றதாக ரிஜிஸ்தரில் பதிவு செய்து கொண்டாள் வார்டன். வெளியே சென்றவர்களில் யார் யார் மந்திரிக்குக் கறுப்புக் கொடி காட்டினார்கள் என்பது பற்றித் தனக்குத் தெரியாது என்றும், தனக்குத் தெரிந்த விவரங்களின்படி பல்கலைக் கழக மாணவிகள் அல்லாத வேறு சில பெண்கள் கறுப்புக் கொடி பிடித்ததாகவும், அப்போது சில மாணவிகளும் அருகே நின்று வேடிக்கை பார்த்ததைத் தவிர வேறு குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் பொய்யாக ஒரு விளக்கத்தையும் தயாரித்து எழுதி, "உன்னையும் உன் தோழிகளையும் காப்பாற்றுவதற்காக நான் இப்படி எல்லாம் புளுகித் தொலைக்க வேண்டியிருக்கிறது...! இந்தத் தடவை சரி. இனிமேல் இப்படி அடிக்கடி ஏதாவது நடந்தால் அப்புறம் நான் எதுவுமே உதவி செய்ய முடியாது" என்று சொல்லியபடியே அவளிடம் ரிஜிஸ்தரையும் துணைவேந்தருக்கு எழுதப்பட்ட தன்னுடைய விளக்கப் பதிலையும் காண்பித்தாள் வார்டன் அம்மாள். அந்த அம்மாளின் கண்டிப்பும் அதை ஒட்டிய வாஞ்சையும் கண்ணுக்கினியாளின் மனத்தில் நன்றி சுரக்கச் செய்தன. அவள் மனம் நெகிழ்ந்த வார்த்தைகளால் தன் நன்றியைத் தெரிவித்தாள். 'அவுட் ரிஜிஸ்தர்' விஷயத்தில் வார்டன் அப்படிப் புளுகி உதவி செய்திராவிட்டால் துணைவேந்தர் தன்னையும் வேறு சில மாணவிகளையும் அப்போதிருந்த ஆத்திரத்தில் பல்கலைக் கழகத்திலிருந்தே சஸ்பெண்டு செய்கிற அளவு போயிருப்பார் என்பதைக் கண்ணுக்கினியாளால் உணர முடிந்தது. கோபத்திலும் கண்டிப்பிலும் கூட இப்படி அழகான கோபங்களையும், அன்பான கண்டிப்புகளையும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. எதையும் வெறுப்பதனால் சிலர் கோபப்படுகிறார்கள். எல்லாவற்றையும் நேசிப்பதனாலும் சிலர் கோபப்படுகிறார்கள். வளைவான வாத்தியத்தில் நேரான இசையைக் கிளரச் செய்கிறவர்களைப் போன்று பக்குவமானவர்களாக இருப்பதையும் அவள் பலமுறை பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறாள். துணைவேந்தர், பதிவாளர் போன்றவர்கள் வெறுப்புக்களால் கோபம் கொள்வதையும், பேராசிரியர் பூதலிங்கம், பெண்கள் விடுதி வார்டன் போன்றவர்கள் பிரியங்களால் கோபப்படுவதையும் அவள் தரம் பிரித்து உணர்ந்ததுண்டு. கையை ஓங்கி அறைய வருவது போல் ஆத்திரமாகத் தொடங்கிய வார்டன் அம்மாள், அரவணைத்துத் தழுவிக் கொண்டது போன்ற நேசத்துடன் அந்த விசாரணையை முடித்திருந்தாள்.

மல்லிகைப் பந்தலுக்கு வந்த மந்திரிக்கு மாணவிகள் கறுப்புக் கொடி காட்டிய மறுதினம் காலைப் பத்திரிகைகளில் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி மாணவி 'மேரிதங்கத்தின் தற்கொலை' பற்றி விசாரிக்க நியமிக்கப் பட்டிருந்த நீதி விசாரணை முடிவு வெளியாகியிருந்தது. எதிர்பார்த்தது போலவே விசாரணை முடிவு கண் துடைப்பாக இருந்தது. மணவாளனும், பாண்டியனும் தயாரித்து அனுப்பியிருந்த மாணவர்களின் சாட்சியங்கள், தஸ்தாவேஜுகள், மேரிதங்கத்தின் கடிதம் எல்லாமே பயனற்றுப் போயிருந்தன. அமைச்சர் கரியமாணிக்கத்தின் நாற்பத்தொன்பதாவது பிறந்த நாளன்று - நாற்பத்தொன்பது ஆப்பிள்களைக் கொண்டு போய்க் கொடுத்து மாலை போடுவது, அவரைப் புகழ் பாடுவது போன்ற காரியங்களால் நீதிபதியாக உயர் பதவி பெற்ற ஒருவரைத்தான் அந்த விசாரணைக்கு நியமித்திருந்தது அரசாங்கம். அதனால் தீர்ப்பும் பாரபட்சமாகவே இருந்தது. பதவியில் இருப்பவர்களைப் புகழ்ந்து துதி பாடுவதன் மூலமே நீதிபதிகளாக உயர்வு பெறும் மனிதர்களிடமிருந்து நீதியும் ஒழுங்காகக் கிடைக்க முடியாது என்று நிரூபிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை அந்த ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் கண்ணாரக் கண்டிருந்தார்கள். 'தூக்கத்தில் நடக்கும் வியாதியால் தவறிக் குளத்தில் விழுந்து மரணம் நேர்ந்தது' என்றே மேரிதங்கம் பற்றிய விசாரணையில், தீர்ப்பு வந்திருந்தது. தற்கொலை செய்து கொள்வதாக அவளே எழுதி வைத்திருந்த கடிதம் - அவள் எழுதியது தான் என நிரூபிக்க முடியாமல் அவள் கையெழுத்தை ஒத்த எழுத்துக்களில் வேறு யாரோ எழுதியது போல் தோன்றுகிறது என்று அந்த வலுவான சாட்சியம் நிராகரிக்கப்பட்டிருந்தது. மந்திரிகளின் வீடு தேடிப் போய் அவர்களுக்கு மாலையிட்டு வணங்கக்கூடிய நீதிபதிகளும், ஏதாவது வழக்குக்காக மந்திரிகள் நீதிமன்றம் வந்தாலும் பயந்து எழுந்து நிற்கக் கூடிய நீதிபதிகளும் நிறைந்துவிட்ட நீதிமன்றத்திலிருந்து நீதியும் முறையாகக் கிடைக்காது என்பதை அந்தச் சம்பவம் விளக்கிவிட்டது. சட்டங்கள் உருவாகும் இடங்களும் ஒழுங்கற்றுப் போய்விட்ட சமூகத்தில் மக்கள் கொந்தளித்து எழுவது ஒன்றே நியாய மார்க்கமாக மீதம் இருக்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர்கிற காலமாக அது இருந்தது. இந்த விசாரணைக்காக அரசாங்கமே தனக்குச் சாதகமான தன்னால் பதவி உயர்வு பெற்ற ஒரு நீதிபதியைத் தேடி நியமித்திருந்தது தான் இதற்குக் காரணம்.

அந்த நீதிபதி சட்ட மந்திரி வெளியூர் போகும் போதெல்லாம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்குப் போய் எல்லாரையும் போல் கைகூப்பி நின்று அவரை வழியனுப்புகிற அளவு தரம் இறங்கிவிட்டவர். சட்ட மந்திரி வீட்டுத் திருமணத்துக்கு இரண்டு பவுனில் இரண்டு தனித்தனி மோதிரங்கள் செய்து கொண்டு போய் மணமக்களுக்கு அவற்றைப் பரிசு தந்தவர். சட்ட மந்திரி கூப்பிட்டு வந்து பார்க்கச் சொன்னால் இரகசியமாக வீடு தேடிப் போய் அவரைப் பார்க்கிறவர். இவை ஊரறிந்த விஷயங்களாகியிருந்தன. நீதிமன்றங்களிலிருந்து நீதி கிடைக்காத அல்லது காலதாமதமாகக் கிடைக்கிற காலங்களில் மக்கள் அவற்றை விரைவான வேறு மார்க்கங்களில் தேட முயலுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு விடுவார்கள். அந்த நிர்ப்பந்தமே பிறகு ஒரு நியாயமாகிவிடுவதும் உண்டு. 'எல்லா நீதி நியாயங்களும் பொய்த்துப் போகிற போது நீதி நியாயங்களே பொய் என்று பிரகடனப் படுத்திய ஓர் அநீதி மூலம் தான் நீதி நியாயங்களைத் தேட நேரிட்டு விடும்' என்று தீவிரமான கோபம் கொண்ட மாணவர்கள் ஒருவருக்கொருவர் கொதிப்போடு பேசிக் கொண்டார்கள். அந்த விசாரணை முடிவை எதிர்த்து மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழக மாணவர்கள் ஒருநாள் முழுவதும் கறுப்புச் சின்னமணிந்து வகுப்புக்களைப் புறக்கணித்தார்கள். பல்கலைக் கழக சின்னத்தைப் போல் கரிக்கட்டியால் சுவரில் வரைந்து அதில் 'வித் ட்ரூத் அண்ட் விஸ்டம்' என்ற கொள்கை வாசகம் இருக்க வேண்டிய இடத்தில் 'வித் கரப்ஷன் அண்ட் ஃப்ராட்' என்று ஆங்கிலத்தில் மாற்றி எழுதினான் ஒரு தீவிரவாதியான கோபக்கார மாணவன்! 'நீதிக்கு நமது அனுதாபங்கள்! அது இன்றைய தினம் செத்துவிட்டது' என்று துணைவேந்தர் அலுவலகத்தின் பிரதான சாலையில் வெள்ளை சாக்பீஸால் பெரிதாக எழுதி வைத்தான் மற்றொரு மாணவன். பல்கலைக் கழக உட்புறச் சாலைகளும், சுவர்களும் அன்று வாசகங்கள் மயமாக மாறின. நிலைமை மறுபடியும் சரியாக நாலைந்து நாட்கள் ஆயின.

இதை ஒட்டிப் பட்டமளிப்பு விழா நாள் மறுபடியும் சில வாரங்கள் தள்ளிப் போடப்பட்டது.

நீதி விசாரணை முடிவு பற்றிய பரபரப்புத் தணிந்ததும் மாணவர்கள் பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் நேரு விழாக் கொண்டாடினார்கள். சோஷியாலஜி பேராசிரியர் வீரராகவன் தலைமையில் ஒரு விவாத அரங்கம் நடைபெற்றது. மாணவர் பேரவையின் சார்பில் மோகன்தாஸ் தொடக்க உரை நிகழ்த்திய பின் பாண்டியன் தலைமையில் ஆறு மாணவர்கள் 'நேருவின் சமதர்ம சமுதாயத்தை அமைக்கும் ஆசை அவர் காலத்திலேயே வெற்றி பெற்றது' என்றும் கண்ணுக்கினியாள் தலைமையில் ஆறு மாணவிகள் 'அது அவர் கால்த்தில் வெற்றி பெறவில்லை' என்றும் கட்சி பிரித்துக் கொண்டு விவாதித்தார்கள்.

"இந்தியா தனது வறுமையையும் ஏற்றத் தாழ்வுகளையும் ஒழிக்க விரும்பினால் சமதர்ம வழியிலேதான் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் அது அந்த இலட்சியத்தைத் தன் மேதைத் தன்மைக்குரிய முறையில் அமைத்துக் கொண்டு தன் சொந்த வழிகளையும் வகுத்துக் கொள்ளும். நமது பொருளாதாரத் திட்டம் மானிட நலனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்" என்று 1929-இல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை உரையிலேயே நேரு கூறியதைச் சுட்டிக்காட்டி விவாதித்தான் பாண்டியன். உடனே கண்ணுக்கினியாள் அதை எதிர்த்து விவாதித்தாள். "நேரு எதைச் சுட்டிக் காட்டினார் என்பதல்ல விவாதம். அதை அவர் காலத்தில் நிறைவேற்ற முடிந்ததா இல்லையா என்பதுதான் கேள்வி. அதை நண்பர் பாண்டியன் விளக்கவே இல்லை..." என்று அவள் பாண்டியனை மறுத்துப் பேசிக் கொண்டிருந்த போது 'ஈவ் டீஸிங்கில்' ஆசையுள்ள யாரோ ஒரு குறும்புக்கார மாணவன் ஒரு சரம் பட்டாசைக் கொளுத்தி மேடையில் மைக்கைக் குறிவைத்து வீசினான். அது டபடபவென்று வெடித்தபடி தலைமை வகித்த பேராசிரியரின் மேஜை மேல் போய் விழுந்தது. மேலும் அந்தப் பட்டாஸ் சரம் வெடிப்பதற்குள் மாணவர்களின் கை தட்டல் சிரிப்பொலிகளிடையே அதை மேஜை விரிப்புத் துணியால் அமுக்கி மூடி விரைந்து அணைத்துவிட்டார் தலைமை வகித்த பேராசிரியர்.

"நாம் வார்த்தைகளால் விவாதிக்கவே இங்கு கூடியிருக்கிறோம். வெடிகளால் அல்ல" என்று கண்ணுக்கினியாள் மேலே பேச்சைத் தொடர்ந்த போது மாணவிகள் கைதட்டி, 'ஹியர்', 'ஹியர்' என்று உற்சாகக் குரலெழுப்பினார்கள். "அடிப்படையிலேயே மாற்றம் பெறுவது சமதர்மத்தில் அடங்கியுள்ள முக்கியமான கருத்து. அது உடனே முடியக் கூடியதன்று. இதற்குப் போதிய காலம் தேவை" என்று நேருவே லோதியன் பிரபுவுக்கு எழுதிய கடித வாசகம் ஒன்றைக் கண்ணுக்கினியாள் சான்றாகக் காட்டி, "இப்படி எழுதியிருப்பதன் மூலம் தம் காலத்துக்குள் அந்தச் சாதனை நிறைவாக முடியாது என நேருவே கருதியிருக்கிறார். 1936-இல் இப்படி அவர் எழுதினாலும் அவர் ஆண்ட கால நிலைமையும் அதுவாகவே இருந்தது" என்று விளக்கிப் பாண்டியனை மறுத்தாள். கைதட்டல் மாணவிகள் பக்கம் மீண்டும் பலமாயிருந்தது.

அடுத்துப் பாண்டியன் கட்சியில் தொடர்ந்து விவாதிக்க வந்த மாணவன், "எனக்கு முன் பேசிய எதிர்க்கட்சித் தலைவி கண்ணுக்குத்தான் இனியவரே ஒழியக் கருத்துக்கு இனியவரல்ல என்பதை அவரது பேச்சின் மூலமே நிரூபித்துக் காட்டிவிட்டார்" - என்று தொடங்கிய போது மாணவர்கள் தரப்பின் கைத்தட்டல்கள் அரங்கத்தை அதிர வைத்தது. அடுத்து கண்ணுக்கினியாளின் கட்சியில் தொடர்ந்து விவாதித்த மாணவி, "எதிர்க்கட்சித் தலைவரின் பெயரோ பாண்டியன். மன்னர் பரம்பரையின் ஒரு பெயர் அது. மன்னர் பரம்பரையினரின் பெயரையுடைய ஒருவர் சமதர்மத்தைப் பற்றி வாதிட வருவதே ஏமாற்று வேலை அல்லவா?" - என்று சாடியதும் மாணவிகள் ஆவேசமாகக் கைதட்டினார்கள். கைதட்டல் ஓய இரண்டு நிமிஷங்கள் ஆயின. இதற்கு நடுவில் பொறுமை இழந்த தலைவர் மெல்ல எழுந்து, "விவாதத்துக்குக் கொடுத்திருக்கும் தலைப்பை எல்லோருமே மறந்து விட்டு வேறு எவற்றையோ பேசுவதாகத் தெரிகிறது. தலைப்பை மீண்டும் எல்லோருக்கும் நினைவூட்டுகிறேன்" என்று தொடங்கி விவாதத் தலைப்பை நினைவூட்டிக் குறுக்கிட்டுப் பேசினார்.

இரண்டு மணி நேரம் விவாதம் தொடர்ந்தது. முடிவில் பாண்டியனும் கண்ணுக்கினியாளும் தங்கள் தங்கள் கட்சி விவாதங்களைத் தொகுத்துரைத்தார்கள். தலைவர் இருதரப்பு விவாதங்களையும் அலசி ஆராய்ந்து அரைமணி நேரம் பேசிய பின், "நேரு விரும்பும் சமதர்ம இந்தியா அவர் காலத்திலேயே முழுமையாக உருவாகவில்லை" என்று கண்ணுக்கினியாள் கட்சிக்கு வெற்றியாகத் தீர்ப்பளித்தார். மறுபடியும் தலைவரின் மேஜை மீது ஒரு பட்டாஸ் கட்டு வந்து விழுந்து வெடிக்கத் தொடங்கியது. மாணவிகள் டெஸ்க்கில் கை ஓய்கிறவரை உற்சாகமாகத் தட்டினார்கள். காலை பத்து மணிக்குத் தொடங்கிய விவாதம் பகல் ஒரு மணியளவிலேயே முடிந்தது. இந்த விழாவுக்காக அன்று பல்கலைக் கழகத்தில் விடுமுறையைக் கோரி வாங்கியிருந்தார்கள் பல்கலைக் கழக மாணவர்கள்.

அன்று பிற்பகல் அண்ணாச்சி தம் கடை வாசலில் நேரு விழாவுக்காக ஒரு பொதுக் கூட்டமும் ஏற்பாடு செய்திருந்தார். அதற்கும் பாண்டியன் பேசப் போக வேண்டியிருந்தது. அண்ணாச்சி ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்திலோ, கூட்டம் நடப்பதற்கு முன்போ மல்லை இராவணசாமியின் ஆட்கள் ஏதாவது கலகம் செய்வார்களோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. அர்த்தால் ஊர்வலத்தன்று கோட்டம் குருசாமியின் கடை தாக்கப்பட்டது, இராவணசாமியின் வீட்டு முன் மாணவர்கள் மறியல் செய்தது, அதற்கும் முன்னால் அவருக்குச் சொந்தமான லாரிகளை மடக்கிப் பல்கலைக் கழக எல்லைக்குள் நிறுத்திக் கொண்டது, இதனால் எல்லாம் ஆத்திரம் அடைந்திருந்த அந்தக் கட்சியினர் பாண்டியனையும் அவனோடு முக்கியமாயிருந்த மாணவப் பிரமுகர்களையும், அவர்களுக்குப் பாதுகாவலாயிருக்கும் அண்ணாச்சியையும், முரடர்களைக் கொண்டு தாக்கிவிடத் துடிதுடித்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. இராவணசாமி முதலியவர்களுக்குப் பாண்டியன் மேலும் அண்ணாச்சி மேலும் இருந்த கோபம் முற்றி வெறியாக வளர்ந்திருந்தது. அடிதடிகளில் இறங்கக் கூட அவர்கள் தயாராக இருந்தார்கள். அண்ணாச்சியே இதுபற்றிப் பாண்டியனிடம் பலமுறை சொல்லி எச்சரித்திருந்தார். பாண்டியன் அவர் எச்சரித்த போதெல்லாம் அந்த எச்சரிக்கையைக் கேட்டுக் கொண்டானே ஒழிய அப்படி எதுவும் தனக்கு ஏற்பட்டு விட முடியும் என்று நினைத்து அஞ்சவில்லை.

பல்கலைக் கழக நேரு விழாப் பட்டிமன்றம் முடிந்து மெஸ்ஸுக்குப் போய்ப் பகல் உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்து ஒரு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்ட பின் மூன்று மணிக்கு அண்ணாச்சிக் கடைக்குப் புறப்பட்டான் பாண்டியன். வேறு சில மாணவர்களும் உடன் வந்தனர். அவன் புறப்படும் போது கண்ணுக்கினியாளின் ஃபோன் வந்தது. 'பெண்கள் விடுதியில் வெளியே போவது வருவதில் கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால் தான் அப்போதே அண்ணாச்சிக் கடைக்கு வரமுடியாமல் இருப்பதாகவும் மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை வெளியே வருவதற்கு மட்டும் சிரமப்பட்டு அனுமதி பெற்றிருப்பதாகவும்' கூறினாள் அவள்.

"நீ ஏன் வீணாகச் சிரமப்படணும்? நீ வர வேண்டாமே! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றான் அவன். அவளுக்கு அவன் சொல்லியதைக் கேட்டுக் கோபமே வந்துவிட்டது.

"நான் உங்கள் பேச்சைக் கேட்க வருவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்களேன். சிரமம் கிரமம் என்று இதெல்லாம் என்ன வார்த்தையென்று பேசுகிறீர்கள்?"

"அதுதான் எனக்குப் பேசத் தெரியவில்லை என்பதைக் காலையில் நேரு விழாப் பட்டிமன்றத்தில் வெற்றி பெற்றதன் மூலமே நீ நிரூபித்து விட்டாயே?"

"பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நீங்கள் இப்படியெல்லாம் சொல்லிக் காட்டுவீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் அந்தப் பட்டிமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உங்களை எதிர்த்துப் பேசியே இருக்க மாட்டேன். நம்மில் யார் ஜெயித்தல் என்ன? நான் ஜெயித்தாலும் நீங்கள் தான் ஜெயிக்கிறீர்கள். நீங்கள் ஜெயித்தாலும் அதனால் நான் தான் ஜெயிக்கிறேன். நமக்குள் வெற்றி தோல்வி ஏது? நீங்கள் இப்படிப் பிரித்துப் பேசலாமா?" என்று அவள் அவனைப் பதிலுக்குக் கேட்கவே அவன் மனம் இளகினான். அவளைச் சமாதானப்படுத்தவும் முயன்றான். மாலையில் நடைபெறுகிற நேரு விழாப் பொதுக் கூட்டத்துக்குக் கண்டிப்பாக அவளை வரச் சொன்னான். அவளும் சிறிது நேரம் சொற்பொழிவாற்றிவிட்டு அப்புறம் திரும்ப வேண்டிய நேரத்துக்குள் விடுதிக்குத் திரும்பி விடலாம் என்றும் கூறினான். அப்புறம் தான் அவள் மகிழ்ச்சியோடு அவனிடம் பேசி ஃபோனை வைத்தாள்.

அண்ணாச்சிக் கடைக்குப் புறப்படுவதற்கு முன் கதிரேசன் அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போயிருக்க வேண்டும் என்று நினைவு வந்தது. அவனைப் போய்ப் பார்த்துவிட்டு அப்புறம் அண்ணாச்சியின் கடைக்குப் போகலாம் என்று சொன்னார்கள் உடனிருந்த மாணவர்கள்.

பாண்டியன் முதலிய மாணவர்கள் கதிரேசனின் வீட்டுக்குச் செல்லும் போது மல்லை இராவணசாமியின் கட்சி அலுவலகம் இருந்த பாதையாகப் போக வேண்டியிருந்தது. அந்தக் கட்சி அலுவலக வாயிலில் இராவணசாமியின் ஆட்கள் பத்து பதினைந்து பேர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். மாணவர்களைப் பார்த்ததும் அவர்கள் முறைத்தார்கள். சிலர் சில வகை மொழிகளையும் மாணவர்கள் காது கேட்கும்படியே வேண்டுமென்று இரைந்து சொன்னார்கள். பாண்டியனோ மற்ற மாணவர்களோ அதைப் பொருட்படுத்தாமலே அந்த இடத்தைக் கடந்து போய்விட்டார்கள். கதிரேசன் நன்றாகக் குணமடைந்து வீட்டு வாசலில் தோட்டத்திலேயே உலாவிக் கொண்டிருந்தான். மாணவ நண்பர்களை அன்போடு வரவேற்று அமரச் செய்து பருகுவதற்குத் தேநீர் கொடுத்துப் பேசிக் கொண்டிருந்தான் அவன்.

"நான் ஓடியாடித் திரியறவன். பத்து நாளைக்கு மேலே படுத்த படுக்கையா இருந்தது போரடிச்சு போச்சு. நாளைக்கே யுனிவர்ஸிடிக்கு வந்திடலாம் போலத் துடிப்பா இருக்கு" என்றான் கதிரேசன். அப்போது ஒரு மாணவன் குறுக்கிட்டான்:

"நீ வந்து 'நேருவின் சமதர்ம சமுதாயத்தை அமைக்கு ஆசை அவர் காலத்திலேயே வெற்றி பெற்றது'ங்கிற கட்சியிலே அண்ணனோட அணியிலே பேசியிருந்தியின்னா இன்று அண்ணன் கட்சி தோற்காமல் பிழைத்திருக்கும்..."

"கேள்விப்பட்டேன்! அண்ணனுக்கு இது தோல்வியே இல்லை. எந்த எதிர்க்கட்சி ஜெயிச்சிருக்கோ அந்த எதிர்க் கட்சித் தலைவியே அவர் கட்சிங்கிற இரகசியம் உனக்குத் தெரிஞ்சிருந்தா இப்படிச் சொல்லமாட்டே நீ! என்ன நான் சொல்றது சரிதானே பாண்டியன்?" என்று கதிரேசன் குறும்புத்தனமாகக் கண்களைச் சிமிட்டியபடி பாண்டியனைப் பார்த்துச் சொன்னான். மற்ற மாணவர்கள் ஓர் உற்சாகத்தில் கை தட்டினார்கள்.

பதினைந்து நிமிஷங்களுக்கு மேல் கதிரேசனோடு பேசிவிட்டு அவர்கள் அண்ணாச்சிக் கடைக்குச் செல்வதற்காக அதே பாதை வழியாகத் திரும்பிய போது இராவணசாமியின் கட்சி அலுவலக வாசலில் நின்ற அந்தக் கூட்டத்தைக் காணவில்லை. ஆனால் இரண்டு தெருக்களைக் கடந்து அண்ணாச்சிக் கடைக்கு நேரே சாலை திரும்புகிற இடம் வந்ததும் இந்த மாணவர்களில் யாருமே எதிர்பாராத விதமாகக் கத்தி, கம்பு, சைக்கிள் செயின், அரிவாள்களோடு ஒரு கூட்டம் இவர்களை எதிர்த்துத் தாக்குவதற்குப் பாய்ந்தது. அந்த முரட்டுக் கூட்டத்தில் சற்று முன் இராவணசாமி கட்சி அலுவலக வாசலில் இவர்கள் பார்த்த ஆட்களும் இருப்பதை அடையாளம் காண முடிந்தது. தாக்க வந்த கூட்டத்தைக் கண்டதுமே இந்த மாணவர்கள் போட்ட கூப்பாட்டில் அண்ணாச்சிக் கடை முன்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தவர்களும் அங்கே கூடியிருந்த மற்ற மாணவர்களும் அண்ணாச்சியும் ஓடி வரவே தாக்க வந்தவர்கள் நழுவி மறைந்து விட்டார்கள். இல்லையானால் இரத்தக் கலகம் ஒன்று அன்று அங்கே நடந்திருக்கும். அண்ணாச்சி பாண்டியனைக் கண்டித்து எச்சரித்தார். மாலை ஐந்தே கால் மணிக்குக் கண்ணுக்கினியாளும், சில மாணவிகளும் கூட்டத்துக்கு வந்தார்கள். கூட்டம் தொடங்கியதுமே கண்ணுக்கினியாள் முதலிய பெண்கள் முதலில் சொற்பொழிவு செய்துவிட்டார்கள். அவர்கள் விடுதிக்குத் திரும்ப இருந்த போது, கண்ணுக்கினியாளையும் பாண்டியனையும் மட்டும் கடையின் முன் பகுதிக்குத் தனியே கூப்பிட்டுக் கொண்டு போனார் அண்ணாச்சி. கடை முகப்புக்கு அழைத்துச் சென்று, "சாயங்காலம் இங்ஙனே கடைக்கு எதிரே என்ன நடந்திச்சு தெரியுமில்லே...? தம்பியை நீதான் எச்சரிக்கணும், தங்கச்சீ" என்று தொடங்கி இராவணசாமியின் கட்சி ஆட்கள் மாணவர்களைத் துரத்தித் தாக்க வந்ததை அவளிடம் விவரித்தார். அதைக் கேட்டு அவள் பதறினாள். 'நீங்கள் இப்படிச் செய்யலாமா?' என்று கேட்பது போல் பாண்டியனை அன்பு கலந்த கோபத்தோடு கண்டிக்கும் பாவனையில் ஏறிட்டுப் பார்த்தாள் அவள்.

"தங்கச்சியை நினைச்சாவது இனிமே நீ அபாயங்களைப் பற்றிக் கவலைப்பட்டு எச்சரிக்கையா இருக்கணும் தம்பி! தங்கச்சி உன்மேலே உசிரையே வச்சிருக்கறப்ப அது பதறிப் போற மாதிரி நீ நடந்துக்கிடக் கூடாது... நம்மைப் பற்றிக் கவலைப்படறவங்க கவலைப்படுவது அதிகமாகிறதுக்கு நாமே காரணமாக இருந்திட்டா எப்படி? நீ பாதுகாப்பு இல்லாமே தனியா எங்கேயும் சுற்றக் கூடாது. கொலை வெறியோட எதிரிங்க அலையறாங்க. உன்னைச் சுற்றிலும் உனக்கு எத்தினி பகைமை, விரோதம், குரோதம் எல்லாம் இருக்குன்னு உனக்கே தெரியாது தம்பீ! வேணும்னே தான் தங்கச்சியைப் பக்கத்திலே வைச்சுக்கிட்டு இதையெல்லாம் உங்கிட்டச் சொல்றேன். உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படற அதிகப் பொறுப்பு உன்னைவிட அதுங்கிட்டத் தானே இருக்க முடியும்?" என்று அவளையும் அருகே வைத்து கொண்டே பாண்டியனை எச்சரித்தார் அண்ணாச்சி.

இருபத்தொன்பதாவது அத்தியாயம்

நேரு விழாக் கூட்டத்தன்று மாலை தன்னையும் அருகில் வைத்துக் கொண்டு அண்ணாச்சி பாண்டியனைக் கண்டித்த போது, 'உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படும் பொறுப்பு உன்னைவிட இந்தத் தங்கச்சிக்குத்தான் அதிகம்' என்று தன்னைச் சுட்டிக்காட்டிப் பேசியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தங்களுடைய அன்பும் நேசமும் தங்களோடு பழகும் பிறரால் புரிந்து கொள்ளப்பட்டுச் சரியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டு விட நேரும் போதெல்லாம் இப்படித்தான் மனம் பூரித்தாள் அவள். விடுதி விதிகள் கடுமையாக்கப்பட்டிருந்தும் கூட அன்று முன்னிரவில் அண்ணாச்சியின் கடை முன்பாக நடந்த நேரு விழாக் கூட்டத்தில் பாண்டியன் பேசுகிற வரை இருந்து கேட்ட பின்பே அவளும் மற்ற மாணவிகளும் விடுதிக்குத் திரும்பினர்.

மறுதினம் காலை வகுப்புக்கள் தொடங்குவதற்கு முன் பல்கலைக் கழக மைதானத்தில் அவளைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த போது "உனக்காகவாவது நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உன்னையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே அண்ணாச்சி சொல்லிவிட்டார். அதனால் இப்போதெல்லாம் உன்னைப் பார்க்கும் போதே எதிரே 'எச்சரிக்கை'யைப் பார்க்கிற பயம் வந்து விடுகிறது" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் பாண்டியன். அவள் அருகே நின்ற தோழிகளும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

"நல்லவேளை! அபாயம் என்று சொல்லாமல் 'எச்சரிக்கை' என்று சொன்னீர்களே?"

"எச்சரிக்கை என்று சொல்லிவிட்டதனால் அபாயம் இல்லை என்று ஆகிவிடாது. ஒவ்வொரு பெண்ணும் ஓர் அபாயம் என்பதனால் தான் ஆண்கள் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது..."

"ஆண்கள் மட்டும் அபாயமே இல்லாத பரம சாதுக்களோ?"

"ஒரு பட்டிமன்றம் நடத்தி முடிவு செய்ய வேண்டிய விவாதம் இது. இப்போது எனக்கு அதற்காக நேரமில்லை."

"ஏன்? நேரு விழாப் பட்டிமன்றத்தில் தோற்றது போதாதா? மறுபடியும் தோற்க ஆசையா?"

கண்ணுக்கினியாள் சார்பாக அவளுக்குப் பரிந்து கொண்டு வந்து பேசிய எல்லாப் பெண்களும் கேள்விக் கணைகளைத் தொடுத்த போது முதற் பாட வேளைக்கான மணி அடித்து அவனைக் காப்பாற்றியது. எல்லோருமே அவரவர்களுடைய வகுப்புக்களுக்காக விரைந்தார்கள். மைதானத்தில் வகுப்புக்காக விரைந்து கொண்டிருந்த பாண்டியனை நடன சுந்தரம் என்ற பெயரையுடைய கீழ்த்திசைப் பட்டப் பிரிவு மாணவர் அவசரமாகத் தேடி வந்து எதிர் கொண்டார்.

"அண்ணனைப் பார்க்கத்தான் வந்தேன்? ஒரு ஐந்து நிமிஷம் நின்னு நான் சொல்றதைக் கேட்டப்புறம் தான் போகணும். இரண்டு வாரங்களாக ஒரு பெரிய தகராறு. வகுப்பிலே உரைநடைப் பகுதி நடத்த வருகிற போதெல்லாம் பண்புச் செழியனார் ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரையும் தலைவரின் பெயரையும் சொல்லி, 'மேடைத் தமிழ், ஏட்டுத் தமிழ் எல்லாமே அவரால் தான் உயிர் பெற்றது. அவரே தமிழுக்கு உயிர் கொடுத்தார். அவரை வீர வணக்கம் செய்தே தமிழை வளர்க்க முடியும்' என்று வெளிப்படையாகக் கட்சிப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நானும் வேறு சில தேசிய மாணவர்களும் வகுப்பிலேயே குறுக்கிட்டு, 'வீர வணக்கத்தைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி மோசம் போன காரணத்தால் தான் ஒரு தலைமுறையைச் சேர்ந்த பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் யாரோ ஒருவர் மேடையில் பேசியது போலவே மூக்கால் பேசவும், யாரோ ஒருவர் எழுதியது போலவே 'பருவப் பாவை உரைநடை' எழுதவும் பழகிச் சீரழிந்தனர். தமிழ்ப் பேச்சிலும் எழுத்திலும் ஒரிஜினாலிடியும், இண்டுவீஜுவாலிடியும் வளராமல் வெறும் இமிடேஷன் மட்டுமே நோயாக வளர்ந்து பயங்கரமான தொத்து நோயான காலத்தைத் தான் நீங்கள் பொற்காலம் என்று பொய்யாகப் புனைந்து இங்கே சொல்கிறீர்கள் சார்!" என்று மறுத்தோம். உடனே பண்புச் செழியனாருக்கு ஆதரவான மாணவர்கள் வகுப்பிலேயே எங்கள் மேல் பாய்ந்து விட்டார்கள். கூப்பாடு போட்டார்கள். வகுப்பில் நடக்கும் பச்சையான இந்தக் கட்சிப் பிரசாரத்தை எப்படியாவது தடுக்க வேண்டும்" என்றார் நடன சுந்தரம்.

மாலையில் தன்னை விடுதி அறையில் வந்து பார்த்தால் இதைப் பற்றிக் கலந்து பேசிச் செய்ய வேண்டியதைச் செய்யலாம் என்று கூறி அந்த மாணவ நண்பருக்கு விடையளித்தான் பாண்டியன். நடன சுந்தரமும் மாலையில் மற்ற நண்பர்களோடு வந்து சந்திப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார். பகல் நேரம் முழுதும் சுறுசுறுப்பாக வகுப்புக்களில் கழிந்தது. நண்பகலில் மாணவ மாணவிகளுக்காக அறிவிக்கப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் மறுநாள் மாலை எல்லா விடுதிகளுக்குமான விடுதி நாள் விழாவும் தேநீர் விருந்தும் நடைபெறும் என்றும் அதில் கல்ந்து கொண்டு பேச ஒரு பெரிய நடிகரும், வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்புக்காக அவரோடு மல்லிகைப் பந்தலுக்கு வந்திருக்கும் ஒரு நடிகையும் வரப் போவதாகச் சுற்றறிக்கை கூறியது. பல்கலைக் கழகப் பாட ஆண்டின் மூன்று பகுதிகளும் இப்படி விடுதிகளுக்கான விழா அல்லது 'ஷோஷல் பிரேக் அப்' - ஒன்றைக் கொண்டதாக இருக்கும். மாணவர் பேரவைத் தேர்தல், வேறு பல பரபரப்பான நிகழ்ச்சிகள் எல்லாம் இருந்ததனால் முதற் பகுதியில் விடுதி விழா அவ்வளவு நன்றாக அமையவில்லை. எனவே இந்த இரண்டாவது பகுதியில் அதை ஏற்பாடு செய்து அந்தச் சமயத்தில் அங்கே படப்பிடிப்புக்காக வந்திருந்த இரு கலைஞர்களையும் அதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க அழைத்திருந்தார்கள். விடுதி சம்பந்தமான குழுக்களில் மட்டும் எப்படியோ மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்புள்ள மாணவர்களே அதிகமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்று வந்திருந்தார்கள். அதனால் இந்த விடுதி விழாவில் அவர்கள் ஏதாவது வம்பு செய்யக்கூடும் என்று பாண்டியனும் நண்பர்களும் எதிர்பார்த்தார்கள். அன்று மாலை நடன சுந்தரமும் அவரோடு சில ஓரியண்டல் பட்டப்படிப்பு மாணவர்களும் தன் அறைக்குத் தேடி வந்த போது அவர்கள் பிரச்னை பற்றிச் சிறிது நேரம் பேசிப் பாண்டியன் வழிவகைகளைக் கூறிய பின் மறுநாள் மாலை நடைபெற இருக்கும் விடுதி நாள் விழாவைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

"விழாத் தேநீர் விருந்துக்கான உண்டி வகைகள் பற்றிய அட்டை (மெனு) புதுமையான முறையில் அச்சிடப் பட்டிருக்குமாம்! சிறப்பு விருந்தினர்களான நடிகமணி தங்கராஜுக்கும், நடிகை ஜெயபாலாவுக்கும் விடுதிகளின் சார்பில் வரவேற்பிதழ்கள் அச்சிடப்பட்டுப் படித்துக் கொடுக்கப்படுமாம்! இதுதான் நான் கேள்விப்பட்டது" என்றான் ஒரு மாணவன்.

"இதன் அமைப்பாளர்கள் அத்தனை பேருமே சரியான பஃபூன்கள்! நாளைக்குப் போய் பார்ப்போம். இன்னும் நிறையக் கேலிக் கூத்துக்கள் இருக்கும்" என்று பாண்டியன் சொன்ன போது உடன் இருந்த மாணவர்கள் சிலர் அதை ஆமோதித்தனர். வேறு சிலர், "இதெல்லாம் உன் கற்பனை! ஒன்றுமே நடக்காது! எப்போதும் நடக்கிற சடங்கு இது. இப்போதும் அப்படி ஒரு சடங்காகவே இது நடந்து முடிந்து விடும். அவ்வளவு தான்" என்று அவன் கூறியதை மறுத்தார்கள்.

"நாளை மாலை வரை பொறுத்திருங்கள்! யார் சொல்வது சரி என்பது தானே தெரிகிறது" என்று குறும்புத்தனமாக நகைத்தபடி சவால் விட்டான் பாண்டியன். அவன் கூறியது மறுநாள் மாலை பலித்தது. விடுதி நாள் விழாவின் தேநீர் விருந்தில் வருத்தப்படத் தக்க பல கேலிக் கூத்துக்கள் இருந்தன. விருந்து மேஜைகளில் உண்டிப் பட்டியல் (மெனு) 'தமிழ் வாழ்க!' என்ற தொடக்கத்துடன் இருந்தது. உணவு வகைகளில் 'தமிழ் வாழ்க' என்பதும் ஒன்றோ என்று அதைத் தவறாகப் புரிந்து கொண்டு எண்ணிய சில மாணவர்கள் பரிமாறத் தொடங்கிய சர்வர்களிடம், "இந்தாப்பா! முதலில் ஒரு 'தமிழ் வாழ்க' கொண்டு வா. வரிசைப்படி அதுதான் முதல் அயிட்டம் மறந்து விடாதே!" என்று வம்பு செய்தார்கள்.

தீஞ்சுவைத் துண்டம் (கேக்)
வருவள் (சிப்ஸ்)
உருள் மோதகம் (போண்டா)
கலவை (மிக்ஸ்சர்)
தேநீர் (டீ)
தாம்பூல நறுஞ் சுருட்டு (பீடா)

என்று உணவுப் பட்டியல் (மெனு) அச்சிடப்பட்டுத் தரப்பட்டிருந்தது. அதில் 'வறுவல்' என்பதை 'வருவள்' என்று பிழையாக அச்சிட்டு விட்டதால், "வருபவள் யார்? அவள் யாரானாலும் வரட்டும், வரவேற்போம்" என்று 'மெனுகார்டை'க் கையில் தூக்கிக் கொண்டு கூப்பாடு போட்டார்கள் பல மாணவர்கள். விருந்தில் வழங்கப்பட்ட கேக்கின் மேல்புறம் ஒரு கட்சியின் சின்னத்தைப் போல் ஒரு பாதி ஒரு நிறமும் மறு பாதி வேறொரு நிறமுமாக இரு வண்ணத்தில் கருமையும் செம்மையுமாக இருக்கவே மாணவர்களிடையே சலசலப்பு மூண்டது. சாக்லேட் கருப்பும் மறுபாதி 'செர்ரி' நிறத்திலும் அந்தக் கேக்குகள் இருந்தன. கோபத்தில் சில கேக்குகள் வழங்குவது நிறுத்தப்பட்டு மற்றவைகளை வழங்கத் தொடங்கியதன் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டது.

"இந்தாப்பா! 'தீஞ்சுவைத் துண்டத்'துக்குப் பதில் இன்னொரு 'கலவை' கொடு!" என்று சர்வரிடம் மேலும் ஒரு மிக்ஸ்சர் பொட்டலத்தைக் கேட்டு ஒரு மாணவன் எழுப்பிய குரலைத் தொடர்ந்து சிரிப்பொலிகள் வெடித்தன. மேடையில் வந்து அமர்ந்திருந்த நடிகர் மணியும், நடிகையும் பயத்தோடு உட்கார்ந்திருப்பது போலத் தோன்றியது. அவர்கள் நிலை பார்க்கப் பரிதாபகரமாக இருந்தது.

நடிகரை வரவேற்று முடிந்த பின், நடிகையை வரவேற்று வரவேற்புரை படித்த மாணவன் வரவேற்பிதழில் அச்சிட்டிருந்தபடியே "நீங்கள் படத்துக்குப் படம் நன்கு தடித்து வளர்ச்சி பெற்று வருகிறீர்கள்" என்று படித்தவுடன் சிரிப்பொலிகள் அடங்க நெடுநேரமாயிற்று. படுபாவி அச்சகத்தில் வறுவலை வருவளாக்கியது போல் 'நன்கு நடித்து' என்பதை 'நன்கு தடித்து' என்று அச்சிட்டுத் தொலைத்திருந்தான். 'தடித்து' என்று பிழையாகப் படித்ததை ஒட்டி எழுந்த சிர்ப்போடு சிரிப்பாக, 'கரெக்ட்' என்றும், 'வெல் ஸெட்' என்றும் கூட்டத்திலிருந்து குரல்கள் ஒலித்தன. சிறைப்பட்டு விட்டது போல் கூனிக் குறுகித் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் அந்த நடிகை. வரவேற்புரை முடிந்ததும் நடிகர் பத்து நிமிஷங்கள் சுருக்கமாகப் பட்டும் படாமலும் பேசி முடித்து விட்டார். நடிகை மழலைத் தமிழில் பயந்து கொண்டே எண்ணி மூன்று வாக்கியங்களைப் பேசியதும் விழா முடிந்தது.

"இது போல் அருமையான 'வெறைட்டி எண்டர்டெயின்மெண்ட்' நம்ம யுனிவர்ஸிடியில் சமீப காலத்திலே நடந்தது கிடையாது! என்ன நகைச்சுவை! எத்தனை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகள்?" என்று விடுதி விழா முடிந்து போகும் போது சக மாணவர்கள் பாண்டியனிடம் அந்த விழாவைப் பற்றிப் பேசிக் கொண்டு போனார்கள். அப்போது ஒரு மாணவன் கேட்டான்: "இவர்கள் எதைச் செய்தாலும் ஏன் இப்படிக் கேலிக் கூத்தாக முடிகிறது? எதனால் இவர்கள் இப்படிக் கோட்டை விடுகிறார்கள்?"

"சிரத்தை இல்லாமல் வெறும் போட்டி மனப்பான்மையும் வெறியும் மட்டுமே இருந்தால் இப்படித்தான் ஆகும்! சிரத்தைதான் செயலுக்கு மூலவித்து."

"நல்ல நகைச்சுவைதான் இது."

"தவறு! இது நகைச்சுவையும் இல்லை. கேலிக் கூத்துக்கும் நகைச்சுவைக்கும் எங்கோ ஒரு மயிரிழை வேறுபாடு எல்லைக் கோடாக இருக்கிறது. நம்மைச் சிரிக்க வைப்பதெல்லாம் நகைச்சுவை அல்ல. நல்ல நகைச்சுவை என்பது சிரிப்பில் தொடங்குகிறது. ஆனால் அது சிரிப்போடு முடிந்து விடுவதில்லை. ஆழமான ஒரு சிந்தனையில் போய் முடிகிறது. முடியவேண்டும். தடுமாற்றங்கள் எல்லாமே நகைச்சுவை ஆகிவிடுமானால் அப்புறம் நகைச்சுவைக்கு ஒரு மரியாதை இருக்காது" என்று பாண்டியன் தன் கருத்தை வெளியிட்ட பின்புதான் உள்ளூற எவ்வளவு வருந்திப் பேசுகிறான் என்பது சக மாணவர்களுக்குப் புரிந்தது.

அதற்குப் பின் ஒரு வாரம் வரை மாணவர்களுக்கு நடுவே இந்த விடுதி விழா நிகழ்ச்சிகள் சிரிக்கச் சிரிக்க விமர்சனம் ஆகிக் கொண்டிருந்தன. அந்த வார இறுதியில் சனிக்கிழமை பிற்பகல் அண்ணாச்சிக் கடையில் அமர்ந்து தற்செயலாகப் பேசிக் கொண்டிருந்த போது,

"மழைக் காலம் ஏறக்குறைய முடிஞ்சு போச்சு. மலைகளில் எல்லாம் பசுமை கொஞ்சுகிறது. அருவிகளில் தெளிவாகவும் ஒரு சீராகவும் தண்ணீர் விழுகிறது. ஓடைகள் கலகலவென்று சிரிக்கின்றன. கரடியாற்று நீர்த்தேக்கம் வரை ஒரு 'பிக்னிக்' போய் வரலாமா?" என்று பாண்டியனிடம் கேட்டான் பொன்னையா.

"போவதானால் நாளைக்கே போகலாம். அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்னால் முடியாது. சைக்கிள் விடத் தெரிந்தவர்களாக நாற்பது ஐம்பது பேர் மட்டும் போவோம். அதிகக் கூட்டம் வேண்டாம். காலையில் எட்டு மணிக்குப் புறப்படுவோம். இங்கேயே நம்ம 'சங்கர் பவனில்' சொல்லி நல்ல இட்டிலி, டிபன் எல்லாம் வாங்கிக் கட்டிக் கொண்டு போயிடலாம். மாலையில் அஞ்சு அஞ்சரைக்குள் திரும்பிடறதாயிருந்தாத்தான் மாணவிகளும் வருவாங்க..." என்றான் பாண்டியன். தம் கடையில் பத்து சைக்கிள்கள் மட்டுமே இருப்பதால் அதிகப்படி சைக்கிள்களுக்கு வேறு கடைகளில் சொல்லி ஏற்பாடு செய்து தருவதாக அண்ணாச்சி கூறினார். உடனே கண்ணுக்கினியாளுக்கு ஃபோன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சைக்கிள் விடத் தெரிந்த மாணவிகள் மட்டுமே வரலாம் என்ற நிபந்தனையையும் கூறினான் பாண்டியன். சைக்கிள் வாடகை உட்படத் தலைக்கு ஐந்து ரூபாய் செலவாகும் என்ற விவரத்தை அவன் கூறிய போது, "தலைக்கு மட்டும் அஞ்சு ரூபாயின்னா கை கால் உடம்புக்கு எவ்வளவு ஆகுமோ? நீங்க சொல்றதைக் கேட்டா பயமாயிருக்கே?" என்று கேலியில் இறங்கினாள் அவள்.

"உன்னோட கேலி பேச இப்போ எனக்கு நேரமில்லே. வர்ரதாயிருந்தால் உடனே சொல்லு..."

"அது சரி! நான் தான் தீரப்படாதேன்னு நீங்க கூப்பிடற இடத்துக்கெல்லாம் வந்தாகணும். மத்தவங்களைக் கேட்காம எப்படிச் சொல்ல முடியும்?" என்றாள் கண்ணுக்கினியாள்.

"ஏன் முடியாது? அந்த மத்தவங்களுக்கும் ஒவ்வொருத்திக்கு ஒரு தீரப்படாதவன் இருப்பான். உனக்கு வேணும்னா அது தெரியாம இருக்கும்!"

"ஏதேது? ரொம்பக் குஷியாப் பேசறாப்லே இருக்கே?"

"ஆமாம்! அது யாரோடப் பேசறேன் என்பதைப் பொறுத்து வருகிற குஷி."

"அப்பிடியா?... நான் விசாரிக்கிறேன். மறுபடியும் ஃபோன் பண்ணிச் சொல்லிடறேன். வார்டனையும் கேட்டுக்கணும்."

"கேட்டு முடிவு பண்ணினதும் மறுபடியும் என்னைக் கூப்பிட்டுச் சொல்லு. அதுவரை இங்கே ஃபோனடியிலேயே இருக்கேன்" என்று ஃபோனை வைத்து விட்டு அண்ணாச்சி கடைக்கு எதிர்ப்புறமிருந்த மருந்துக்கடையில் காத்திருந்தான் பாண்டியன்.

இருபது நிமிஷங்களுக்குப் பிறகு மறுபடியும் அவள் ஃபோன் வந்தது. தானும் வேறு சில மாணவிகளும் வருவதாகத் தெரிவித்தாள் அவள். காலை ஏழு மணிக்கே அண்ணாச்சி கடை வாசலுக்கு வந்து விட வேண்டும் என்று நிபந்தனை போட்டான் அவன். அவள் ஒப்புக்கொண்டு ஃபோனை வைத்தாள். அவளோடு பேசி விட்டு அவன் அண்ணாச்சி கடைக்குப் போவதற்குள் கலைப் பிரிவில் இருபது பேர் கீழ்த்திசைப் பட்டப் பிரிவில் பத்துப் பேர், பொறியியலிலிருந்து மூவர், வேளாண்மைக் கல்லூரியிலிருந்து ஐந்து பேர், மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு பேர் என்பதாக ஓர் பட்டியலோடு தயாராக இருந்தான் பொன்னையா. நாலைந்து கடைகளில் சொல்லி எல்லாருக்குமாகச் சைக்கிள் ஏற்பாடு செய்யப் போனார் அண்ணாச்சி.

அடுத்த நாள் காலை ஏழரை மணிக்குப் பனி விலகுவதற்குள்ளேயே அண்ணாச்சிக் கடை முகப்புக் கோலாகலமாக இருந்தது. பல நிறங்களில் ஸ்வெட்டர்களும் கம்பளிச் சட்டைகளும் அணிந்து, காமராக்கள், டிரான்ஸிஸ்டர்கள், பைனாகுலர்கள், மௌத் ஆர்கன், கிட்டார், தபேலா என்று பல பொருள்கள் சகிதமாகப் பட்டுப் பூச்சிகள் மொய்த்தாற் போல் மாணவ மாணவிகள் கூட்டம் கூடியிருந்தது. புஸு புஸுவென்று முகத்திலும் காதோரங்களிலும் கலைந்த கூந்தலோடு தூங்கி எழுந்த அழகுடனும் மாணவிகள் மிக வனப்பாகக் காட்சியளித்தனர். கண்ணுக்கினியாள் கிளிப்பச்சை நிறத்தில் ஒரு முழுக்கை ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். பாண்டியன் அவளைக் கேலி செய்தான்.

"ஏதேது! இன்று பசுமைப் புரட்சி செய்கிறாற் போலிருக்கிறதே?"

"நாம் திடீரென்று 'பிக்னிக்' கிளம்புவதே ஒரு புரட்சிதான்."

சரியாக எட்டு மணிக்கு அவர்கள் புறப்பட்டார்கள். சங்கர் பவனில் வாங்கிய டிபன் பொட்டலங்களை ஈவு வைத்து அவரவர் பொட்டலங்களை அவரவரே சுமந்து கொண்டு வரச் செய்து விட்டார்கள். மலைச்சாலையின் பசுமை மணத்தை நுகர்ந்தபடியே பச்சை நிறத்திலும் பொன்னிறத்திலும் தாமிர நிறத்திலுமாகத் தளிர்த்திருந்த வர்ணக் கலவையான மலைகளின் பசுமை அடர்த்தியினிடையே சைக்கிள்களில் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறினார்கள்.

'ஹேண்ட் பார்' இரண்டையும் விட்டுவிட்டு மௌத் ஆர்கனை எடுத்து வாசிக்கத் தொடங்கிய ஒரு மாணவனைச் சுட்டிக் காட்டி, "அடேடே! நம் பழநி எப்போது இவ்வளவு தைரியமாகச் சைக்கிள் விடக் கற்றுக் கொண்டான்?" என்று பாண்டியன் கேட்ட போது,

"பழநியின் தைரியம் அதோ அவனது பக்கத்தில் மற்றொரு சைக்கிளில் கூடவே வருகிறது பார்" என்று பழநியின் அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு மாணவியைச் சுட்டிக் காட்டிப் பொன்னையா கூறியவுடன் சிரிப்பொலிகள் மலைச்சாரலில் ஒரு சேர ஒலித்தன. திடீரென்று கண்ணுக்கினியாளும், பாண்டியனும் சேர்ந்து கீழ்த்திசைப் பட்டப் பிரிவு மாணவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார்கள்.

"மிஸ்டர் நடன சுந்தரம்! புலவர் வகுப்புத் தேர்வில் உங்களுக்கு 'வெர்ஸிஃபிகேஷன்' (செய்யுளியற்றல்) என்று ஒரு தேர்வு உண்டு. இப்போது எங்களுக்காக நீங்கள் உடனே ஒரு செய்யுள் இயற்ற வேண்டும். கடைசி வரியை இப்போது நான் சொல்லி விடுவேன். இதோ நமக்கு எதிரே, 'கரடியாறு நீர்த்தேக்கம் ஆறு கிலோமீட்டர்' என்ற கல் தெரிகிறது. அடுத்த கல்லாகிய ஐந்தாவதற்குரிய கிலோமீட்டர் கல் வருவதற்குள், 'இட்டிலிக்(கு) உண்டோ இணை' என்ற கடைசி வரியைப் பூர்த்தி செய்து யார் முதலில் வெண்பா இயற்றிச் சொல்கிறார்களோ அவர்களுக்குப் பத்து ரூபாய் பந்தயம். யாருமே இயற்ற முடியாமற் போய் விட்டால் - புலவர் வகுப்பு மாணவர்களாகிய நீங்கள் பத்து பேரும் ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு என்னிடம் தந்து விட வேண்டும். ஒருவரோ இருவரோ இயற்றிவிட்டால் நாங்கள் தருகிற பத்து ரூபாயை வாங்கி நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். போட்டிக்கு தயாரா நீங்கள்... ஒன்... டூ... த்ரீ..." என்றான் பாண்டியன். அடுத்த மூன்றாவது நிமிஷமே 'கோதை மார்பன்' என்ற புலவர் முதுநிலை வகுப்பு மாணவர்,

"மங்காப் புகழ்படைத்த மல்லிகைப் பந்தலினிற்
சங்கர் பவன் தரும் சாம்பாரும் - வெங்காயச்
சட்டினியும் இங்கிருக்க ஏழுலகில் தேடிடினும்
இட்டிலிக் குண்டோ இணை."

என்று விரைந்து பாடிவிட்டார். அவர் பாடி நான்கு நிமிஷங்களுக்குப் பின்,

"வட்ட நிலாப் போல் வாகான இட்டிலியும்
தொட்டுக்கொள் தொட்டுக்கொள் என்றழைக்கும் - இட்டமுள்ள
சட்டினியும் சேர்ந்திருக்கும் இந்நிலையில் இவ்வுலகில்
இட்டிலிக் குண்டோ இணை."

என்று நடன சுந்தரமும் மெல்ல மெல்ல வெண்பாவைப் பாடினார். அடுத்த எட்டுப் புலவர் மாணவர்களும் பாடுவதற்குள் ஐந்தாவது கிலோமீட்டர் மைல் கல் வந்து விட்டது. அந்த எட்டுப் பேரிடமும் தலைக்கு ஒரு ரூபாய் வசூல் செய்து தானும் கண்ணுக்கினியாளும் மற்றவர்களும் சில்லறையாக இரண்டு ரூபாய் சேர்த்துப் பத்து ரூபாயை இரண்டு ஐந்தாகப் பிரித்துக் கோதை மார்பனிடமும், நடன சுந்தரத்திடமும் கொடுத்தான் பாண்டியன். "ஜாக்கிரதை! பிக்னிக் முடிந்து திரும்புவதற்குள் வேறு ஏதாவது ஒரு பந்தயத்தில் இதை உங்களிடமிருந்து பறித்து விடுவோம். அதுவரை இந்த ரூபாய் நோட்டுக்களைப் பத்திரமாக வைத்திருக்கிற சந்தோஷம் மட்டுமாவது உங்களுக்குக் கிடைக்கட்டும்" என்றாள் கண்ணுக்கினியாள்.

"சரியாகச் சொல்கிறாய்! ரூபாயைச் செலவழிப்பது சந்தோஷமா? கன்னிப்பெண் கன்னியாகவே மூப்பது போல் வைத்திருப்பது சந்தோஷமா? என்பது புரியாமல் தான் பலர் இந்த நாட்டில் இன்று திகைக்கிறார்கள்" என்றான் பாண்டியன்.

அவன் கூறிய கன்னிப் பெண் உவமைக்காக அவனைப் பொய்க் கோபத்தோடு முறைப்பது போல் பார்த்தாள் அவள்.

"பிக்னிக் என்பது கோபங்களை விலக்கிவிட வேண்டிய காரியம்."

"குறும்புகளையும் சேர்த்துக் கொள்ளுங்களேன். அதற்கு மட்டும் விதிவிலக்கா, என்ன?"

"பிக்னிக்கின் விதியே குறும்புதானே? அதை விலக்கி விட்டால் அப்புறம் எதற்கு 'பிக்னிக்'?" என்று பாண்டியன் பதிலுக்குக் கேட்டதும், "ஆம்! ஆம்! குறும்பு வாழ்க! நீடுழி வாழ்க!" என்று மாணவர்களின் ஒன்றாக இணைந்த குரல்கள் முழங்கின.

முப்பதாவது அத்தியாயம்

அன்று அவர்கள் 'பிக்னிக்'குக்காகப் புறப்பட்டு வந்திருந்த இடம் மல்லிகைப் பந்தலைச் சுற்றி இருந்த மலைப் பகுதிகளிலேயே மிகவும் அழகான இடம். சுற்றிலும் மலைச் சிகரங்களின் பசுமைச் செழிப்புக்கு நடுவே தற்செயலாக உதறிப் போட்ட பச்சை வெல்வெட் துணியில் நடுவே இரசம் பூசிய கண்ணாடி பதித்தது போல் கரடியாறு நீர்த் தேக்கம் அமைந்திருந்தது. மல்லிகைப் பந்தல் நகரிலிருந்து அரை மணி நேரப் பயணத்தில் போய்ச் சேர முடிந்த தொலைவிலேயே அந்த நீர்த்தேக்கப் பகுதி இருந்தாலும் அவர்கள் நடுநடுவே நின்றும், சிரித்தும், பேசியும், உல்லாசமாகவும், மெதுவாகவும் சென்றதால் நீர்த் தேக்கத்தை அடைய ஒரு மணி நேரம் ஆயிற்று. புறப்படும் முன்பாக எல்லாரும் வெறும் காப்பி மட்டுமே பருகியிருந்ததால் போய்ச் சேர்ந்ததுமே பசி தீரச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டார்கள். அப்புறம் மாணவர்களும் மாணவிகளும் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து பேச்சு, விளையாட்டு, பாட்டு, இசைக்கருவிகள், சீட்டாட்டம் என்று அவரவர்களுக்குப் பிடித்த காரியங்களில் ஈடுபடத் தொடங்கினர். அங்கே பக்கத்தில் ஓர் அருவியில் நிறையத் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. அதன் வெண்மை பச்சை நிற மலைமகள் வெளேர் என்று முத்து மாலை சூட்டிக் கொண்டிருப்பது போல் பார்ப்பவர் கண்களைக் கவர்ந்தது.

கண்ணுக்கினியாளுக்கும் அவளோடு வந்திருந்த தோழிகள் இரண்டொருவருக்கும் அருவியில் குளிக்க வேண்டும் என்ற ஆசை வரவே இட்டிலிக்காகக் கொண்டு வந்த மீதமிருந்த நல்லெண்ணெயைத் தலையில் வைத்துக் கொண்டு நீராடப் புறப்பட்டு விட்டார்கள். அந்தப் பக்கத்தில் புல்வெளி நிறையப் புள்ளிமான்கள் உலாவிக் கொண்டிருந்தன. அவற்றில் ஈன்று சில நாட்களே ஆன மிகச் சிறிய புள்ளிமான் ஒன்று தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்தது. அருவியில் நீராடப் புறப்பட்ட பாண்டியன் அந்த இளம் மான் கன்றை இரு கைகளாலும் தூக்கி மார்போடு அணைத்தவாறே கண்ணுக்கினியாளின் முன்பு வந்தான். அவள் அவன் தன் எதிரே வந்த கோலத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவனைக் கேட்டாள்:

"ஏது மான்களைப் பிடிக்கத் தொடங்கி விட்டாற் போல் இருக்கிறதே!..."

"என்ன செய்வது? இது சாது மான்! உடனே பிடிபட்டு விட்டது! வேறு சில மான்கள் இருக்கின்றன. அவை எவ்வளவு முயன்றாலும் பிடிபடுவதில்லை!"

"இது சிலேடையாக்கும்...?"

"நீ எப்படி எடுத்துக் கொள்கிறாயோ அப்படி..."

"மாணவிகள் நீராடிப் போகும் இடத்துக்கு மாணவர்கள் வரக்கூடாது. ஞாபகமிருக்கட்டும்..."

"இங்கு இருப்பது ஓர் அருவி தான்! அதில் தான் மாணவர்கள் மாணவிகள் எல்லாருமே நீராடியாக வேண்டும்..."

"மாணவிகள் நீராடி முடிகிற வரையில் நீங்கள் இந்தப் பக்கமே வரக்கூடாது..."

"நான் மானைத் தேடிக் கொண்டு வந்தேன்."

"இது ரொம்பவும் பழைய 'வள்ளி திருமண டெக்னிக்'. வேறு ஏதாவது புதிதாகப் பேசுங்கள். காப்பியடிக்காதீர்கள்..."

"நான் ஒன்றும் 'காயாத கானகத்தே' பாடவில்லையே?"

"நீங்கள் அதையும் பாடினால் நான் இங்கே நிற்க முடியாது."

சொல்லிவிட்டு அவள் சிரித்தாள். அவன் மானைக் கீழே புல்தரையில் விட்டு விட்டு அவளிடம் வலது உள்ளங்கையைக் குழிவாக நீட்டித் தலைக்கு வைத்துக் கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் வாங்கிக் கொண்டான்.

அருவி நீராடலுக்குப் பின் உடம்பு சலவைக்குப் போட்டு எடுத்தது போல் இலேசாகிப் பசி வயிற்றைக் கிள்ளியது. காலையில் கொண்டு வந்திருந்த சிற்றுண்டிப் பொட்டலங்கள் எல்லாம் தீர்ந்திருந்தன. அணைக்கட்டு ஊழியர் குடியிருப்பையும் இன்ஸ்பெக்ஷன் பங்களாவையும் ஒட்டியிருந்த காண்டீனில் பகல் உணவுக்காக ஏற்பாடு செய்யலாமா அல்லது மல்லிகைப் பந்தலுக்கே திரும்பி விடலாமா என்று பாண்டியன் முதலிய மாணவர்கள் சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போது அண்ணாச்சி எதிர்பாராத விதமாக அங்கே ஒரு ஜீப்பில் வந்து இறங்கினார்.

"சைக்கிள்களை எல்லாம் நீங்க இங்கே எடுத்துக்கிட்டு வந்துட்டதாலே கடையிலேயும் வேலை எதுவும் இல்லே. நீங்க கொண்டாந்த டிபன் பொட்டலம் போதாதுன்னு தோணிச்சு. மறுபடியும் சங்கர் பவன் அய்யருகிட்டச் சொல்லிப் புளியோதரை, தேங்காய்ச் சாதம் மசால் வடை எல்லாம் போடச் சொல்லிச் சுடச்சுட வாங்கியாந்திருக்கேன். நியூஸ் பேப்பர் பார்ஸலுக வந்து வாடிக்கைக்காரங்களுக்குப் பேப்பர் கொண்டு போய்ப் போட்டானதும், நேரே சங்கர் பவனுக்கு வந்து இதெல்லாம் ஏற்பாடு பண்ணி ஒரு தெரிஞ்ச பார்ட்டி கிட்டே ஜீப்புக்கு வழி செஞ்சப்புறம் பொறப்பிட்டு வந்தேன்" என்றார் அண்ணாச்சி.

"நீங்கள் ஏன் இவ்வளவு சிரமப்படணும் அண்ணாச்சி?" என்று பாண்டியன் அவரைக் கடிந்து கொள்ளத் தொடங்கிய போதே அவருக்கு அவன் மேல் கோபமே வந்து விட்டது.

"நீ சும்மா இரு தம்பீ! சிரமம் என்ன பெரிய சிரமம்? என்னோட வாழ்க்கையிலே சந்தோஷமே இதுதான். மல்லிகைப் பந்தல்லே கடையின்னு ஒண்ணைத் திறந்த நாளிலே இருந்து அங்கே படிக்க வார புள்ளைங்களுக்கு உபகாரம் பண்றதுதான் எனக்குச் சந்தோஷமாயிருந்திருக்கும். பணம் இல்லாமே ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட முடியாமத் திண்டாடியிருக்கிற எத்தினி பசங்களுக்கு என் கையிலேருந்து பணம் கட்டியிருப்பேன் தெரியுமா? அதை எல்லாம் சிரமம்னு நினைச்சா நான் செஞ்சிருக்க முடியுமா?"

அப்போது அண்ணாச்சியை எதிர்த்துப் பேச முடியாமல் அவருடைய அன்புக்குக் கட்டுப்பட்டு நின்றான் பாண்டியன். பிறருக்காகச் சிரமப்படுவதிலேயே தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொள்ளும் சிலரும், பிறரைச் சிரமப்படுத்துவதிலேயே தங்கள் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையும் அழியும்படி செய்கிற சிலரும் நிறைந்த உலகில் அண்ணாச்சி முதல் வகைக்கு முதல் உதாரணமாயிருந்தார். தொண்டு செய்வதையே ஒரு தவம் போல் பழகியிருந்த அவரால் சும்மா இருக்க முடியாதென்று அவனுக்குப் புரிந்தது. வைரம் பாய்ந்த அந்த முரட்டு உடம்புக்குள் இருக்கும் மலர் போன்ற இதயத்தை அவன் வியந்தான். மாணவர்களை உட்கார வைத்து அண்ணாச்சியும் அவரோடு வந்திருந்த ஜீப் டிரைவரும் உபசரித்து உணவு பரிமாறினார்கள். அது முடிந்ததும் அண்ணாச்சியையும் டிரைவரையும் உட்கார வைத்து மாணவர்கள் உணவு பரிமாறினார்கள். போட்டி போட்டுக் கொண்டு அன்பாக அண்ணாச்சியை உபசரித்தாள் கண்ணுக்கினியாள்.

சிறிது நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்து விட்டு ஜீப்பில் திரும்பினார் அண்ணாச்சி. புறப்படுவதற்கு முன்னால், "ரொம்ப நேரம் தங்க வேணாம்; பொழுது சாயறப்ப அணை ஓரமாத் தண்ணி குடிக்க யானைக் கூட்டம் இறங்கும். அதுக்குள்ளே திரும்பிடுங்க" என்று பாண்டியனிடம் எச்சரித்து விட்டுப் போனார் அவர்.

மாலை மூன்று மணி வரை கரடியாறு நீர்த்தேக்கத்தில் பொழுது போக்கிவிட்டுத் திரும்பினார்கள் அவர்கள். திரும்பும் போது இறங்கு முகமாகையினால் போகும் போதில் ஆன நேரத்தில் சரிபாதி நேரத்துக்குள்ளேயே வேகமாகத் திரும்பி விட்டாற் போலிருந்தது.

அந்தப் 'பிக்னிக்'கில் கதிரேசன் கலந்து கொள்ளவில்லை. 'பிக்னிக்' முடிந்த தினத்துக்கு மறுநாள் மாலை நிலக்கோட்டை டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்தார். அவர் கதிரேசனுடன் தங்கினார். அன்றிரவு கதிரேசன், அவரைச் சந்திப்பதற்காகச் சில முக்கிய மாணவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தான். பாண்டியன், மோகன்தாஸ், பொன்னையா, நடன சுந்தரம் - எல்லாரும் போயிருந்தார்கள். பிச்சைமுத்து கூறினார்: "நம்மிடையே வர்க்க பேதத்தை ஒழித்துச் சுரண்டல் அற்ற சமுதாயத்தை அமைக்கிற வரை ஏகாதி பத்தியம் எந்த உருவிலாவது இருந்தே தீரும். இரத்த வெள்ளத்தில் தான் புரட்சிப் பூக்கள் மலர வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இன்னும் தீவிரமாக மாறித்தான் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். எந்த வகையிலாவது நமது இலட்சியத்தை அடைந்தே ஆக வேண்டும்! முடிவே முக்கியம். வழிகள் அல்ல! வழிகளை முடிவு நியாயப்படுத்தி விடும்..."

"இலட்சியம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமாகவும், நியாயமாகவும் அதை அடையும் மார்க்கமும் இருக்க வேண்டும் அல்லவா?" என்று பாண்டியன் அவரைக் கேட்டான். அவர் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்தார். ஓரிரு நிமிஷங்களுக்குப் பின், "மணவாளனைப் போன்றவர்கள் உங்களுக்கு அப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். அந்தக் கருத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளப் பழக வேண்டும். முடிவுகள் மார்க்கங்களை நியாயப்படுத்தி விடும்" என்றார் பிச்சைமுத்து. மணவாளனை விடத் தம்மை முற்போக்கானவர் என்று காட்டிக் கொள்ள அவர் முயல்வது பாண்டியனுக்குப் புரிந்தது. அதை ஒட்டி அவருக்கும் பாண்டியனுக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. அவர் தர்க்க ரீதியாகப் பதில் சொன்னாலும் அதிலிருந்த அளவு மீறிய வேகம் அவனுக்குப் புரியவில்லை. கதிரேசனும், வேறு சில மாணவர்களுமோ பிச்சைமுத்து சொல்வதுதான் சரி என்றார்கள். பாண்டியன் அதில் கருத்து வேறுபட்டுத் தயங்கினான். பிச்சைமுத்து தங்கியிருந்த இரு நாட்களும் கதிரேசன் தனித்தனியே பல விடுதி அறைகளுக்கு அவரை நடு இரவிலும், அதிகாலையிலும் அழைத்துச் சென்று ஒற்றையாகவும், குழுக்களாகவும் மாணவர்களைச் சந்திக்க வைத்தான். வேளாண்மைப் பட்டப் பிரிவிலும், பொறியியல் பட்டப் பிரிவிலும் நிறைய மாணவர்களைச் சந்தித்தார் அவர். அவர் மல்லிகைப் பந்தலுக்கு வந்து விட்டு ஊர் திரும்பிய தினத்திலிருந்து கதிரேசன் பாண்டியனைப் பார்ப்பதை நிறுத்திவிட்டான். தனக்கும் கதிரேசனுக்கும் நடுவே இடைவெளி வளர்வது பாண்டியனுக்குப் புரிந்தது. பிச்சைமுத்து வந்து போன பின் கதிரேசனும் வேறு சில மாணவர்களும் இரவு பதினோரு மணி, ஒரு மணி என்று வேளை கெட்ட வேளைகளில் தனித்தனியே இரகசியமாக சந்திப்பதாகவும், பேசுவதாகவும் பாண்டியன் கேள்விப்பட்டான். கதிரேசன் தலைமையில் ஒரு குழு தங்களிடமிருந்து பிரிந்திருப்பது பாண்டியனுக்குப் புரிந்தது. கதிரேசனும் அவன் நண்பர்களும் இப்போதெல்லாம் அண்ணாச்சிக் கடைப் பக்கம் வருவதை நிறுத்திவிட்டார்கள் என்பதும் தெரிந்தது.

"ஒட்ட வெட்டிய கிராப்பும், மீசையுமா அடையாளம் தெரியாத மாற்றத்துடன், முதல் நாள் அந்தத் தம்பி கதிரேசன் இந்தப் பாதையா சிகரெட் பிடிச்சுக்கிட்டே நடந்து போனப்போ நானே கைதட்டிக் கூப்பிட்டேன். காது கேக்காதது போலப் போயிடிச்சு அது" என்று அண்ணாச்சியே பாண்டியனிடம் ஒருநாள் கூறிய போது அதை எப்படி அவருக்குச் சொல்லி விளக்குவது என்று பாண்டியனுக்குப் புரியவில்லை.

"சொந்தப் பகை எதுவும் இல்லை அண்ணாச்சி! வெறும் சித்தாந்தப் பகை தான். தீமைகளை எதிர்த்துவிட்டுத் தீயவர்களை நம் வழிக்கு மாற்ற நினைக்கிறோம் நாம். அவர்களோ தீமைகளையும் தீயவர்களையும் சேர்ந்தே அழித்து விட நினைக்கிறார்கள்..." என்று மெல்ல அந்த மாறுதலைப் பாண்டியன் அண்ணாச்சிக்கு விளக்கினான். உடனே மணவாளனுக்குத் தந்தி கொடுத்து அவரை வரவழைக்கச் சொன்னார் அண்ணாச்சி. பாண்டியன் தந்தி கொடுத்தான். மறுநாள் பகலில் மணவாளன் மதுரையிலிருந்து வந்து சேர்ந்தார். மணவாளன் தலைமையில் தேசியத் தொழிலாளர் யூனியன் ஹாலில் பல்கலைக் கழக மாணவர் கூட்டம் நடந்தது. அப்போது தெரிந்த ஒரு கணக்கின் படி ஐந்து சதவிகிதம் மாணவர்கள் கதிரேசன் தலைமையில் தீவிரவாதிகளாக அணிவகுத்திருப்பதையும், பதினைந்து சதவிகிதம் மாணவர்கள் மல்லை இராவணசாமி கட்சியின் சார்பாக இருப்பதையும், எந்தச் சார்பும் இல்லாத உதிரிகளாகப் பத்து சதவிகித மாணவர்கள் இருப்பதையும், மீதியுள்ள எழுபது சதவிகிதம் தங்கள் பக்கம் இருப்பதையும் பாண்டியன் அறிந்தான்.

மணவாளன் பாண்டியனுக்கு ஆறுதல் கூறினார்: "கவலைப்படாதே! பிச்சைமுத்துவும் நீண்ட நாள் தேசியவாதியாக இருந்து தான் சலிப்புற்றுத் தீவிரவாதியாகி விட்டார். அவரை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல படிப்பாளி. சமூகக் கொடுமைகள் அவரைக் கோபக்காரராக்கி விட்டன. கதிரேசன் அவரால் கவரப்பட்டு விடுவான் என்பதை 'அவன் அவரை நிலக்கோட்டையில் சந்தித்தான்' என்று முதல் முதலாக அறிந்த போதே நான் எதிர்பார்த்தேன்."

"அடைகிற மார்க்கம் முக்கியமில்லை. எய்துகிற இலட்சியமே முக்கியம் என்கிறார் அவர்."

"நமக்கு மார்க்கத்திலும் நம்பிக்கை இருக்கிறது. பொய்கள் கரைய வேண்டும் என்பதோடு சத்தியம் பெருக வேண்டும் என்றும் சேர்ந்தே ஆசைப்படுகிறோம் நாம். சத்தியம் பெருகுவதாலேயே பொய்கள் கரைய வேண்டும் என்பது நம் ஆசையாக இருக்கிறது."

"பிச்சைமுத்து உங்களை அப்பட்டமான பிற்போக்குவாதி என்கிறார்."

"சொல்லட்டுமே! நான் அவரை அப்படிச் சொல்ல மாட்டேன். அவர் பிற்போக்குவாதியில்லை என்று புரிந்து கொள்கிற அளவு நான் முற்போக்குவாதி என்பதையாவது அவர் அறிந்து கொண்டால் நல்லது. நிதானத்தையே அவர் பழிப்பதற்கு தயாராக இருந்தால் என்னை மட்டும் அவர் எப்படிப் பழிக்காமல் விட்டு வைக்க முடியும்?" என்று பொறுமையாகப் பாண்டியனுக்குப் பதில் சொன்னார் மணவாளன்.

நாலைந்து நாட்கள் மல்லிகைப் பந்தலில் தங்கியிருந்த பின் மறுபடியும் பட்டமளிப்பு விழாவுக்கு முன்னர் வருவதாகக் கூறிவிட்டு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் மணவாளன். அவர் திரும்புவதற்குள் பலமுறை கதிரேசனைச் சந்திக்க முயன்றும் முடியவில்லை. அவன் அவர் பார்வையில் சிக்கவேயில்லை. அவர் ஊருக்குப் போன மறுநாள் பகலில் பல்கலைக் கழக காண்டீனில் தேநீர் அருந்துவதற்காகப் பாண்டியனும் கண்ணுக்கினியாளும் நுழைந்த போது, உள்ளேயிருந்த கதிரேசன் நாலைந்து மாணவர்களோடு தேநீர் அருந்திவிட்டு எதிரே திரும்பி வந்து கொண்டிருந்தான். குறுகிய வாயிலருகே ஒருவரையொருவர் தவிர்க்க முடியாமல் பாண்டியனும் கதிரேசனும் சந்தித்துக் கொள்ள நேர்ந்து விட்டது. "ஹலோ கதிரேசன்!" என்று பாண்டியன் எதிரே வழி மறித்ததும் கதிரேசன் நின்றான். "என்னப்பா உன்னைக் காணவே முடியறதில்லை! மணவாளன் அண்ணன் வந்து நாலைந்து நாள் தங்கியிருந்தாரு. உன்னைப் பார்க்கணும்னு தவியாய்த் தவிச்சாரு. முடியலை..." என்று பாண்டியன் தொடங்கியது, "நான் நிலக்கோட்டைக்குப் போயிருந்தேன்" என்றான் கதிரேசன். முகமலர்ச்சியே இல்லாமல் மணவாளனைப் பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல் அவன் அசட்டையாகப் பதில் கூறிய விதம் பாண்டியனுக்கு என்னவோ போலிருந்தது.

அந்தக் கடுமையைத் தவிர்க்க விரும்பி, "நான் கூட 'சாரை'ப் பார்த்து ரொம்ப நாளாச்சு" என்று கண்ணுக்கினியாள் சிரித்துக் கொண்டே தொடங்கியதும், "நான் இப்பல்லாம் யாரையுமே பார்க்க விரும்பறதில்லை" என்று கத்தரித்தாற் போல் பதில் சொல்லிவிட்டு உடனிருந்தவர்களோடு மேலே நடந்து விட்டான் கதிரேசன். பாண்டியனுக்கும், கண்ணுக்கினியாளுக்கும் அந்தப் பதில் முகத்தில் அறைந்தாற் போல் ஆகிவிட்டது.

"ரொம்ப மாறிவிட்டான்" என்று கண்ணுக்கினியாளிடம் கூறினான் பாண்டியன்.

"மாற்றம் அப்படி இப்படி இல்லை. அபாயகரமான அளவு மாறியிருக்கிறார். நான் இன்னும் என்னென்னவோ கேள்விப்படுகிறேன்" என்றாள் அவள். கதிரேசன் நடந்து கொண்ட விதம் அவர்களுக்குக் கவலை அளித்தது.

"லேக் அவென்யூவில் ராயல் பேக்கரி 'பில்டிங்'கில் குமரப்பன்னு ஒரு ஆர்ட்டிஸ்ட் இருக்காரு. அவர் தான் உள்ளூரில் கதிரேசனுக்குக் குரு" என்றாள் கண்ணுக்கினியாள்.

"உனக்கெப்படி தெரியும் அது?"

"எங்க விமன்ஸ் ஹாஸ்டல்லே இருந்து கூட ஒரு மலையாளிப் பெண் அவங்க ஸெல் மீட்டிங்குகளுக்குப் போக வர இருக்கா... வார்டன் அம்மாள் அவளைப் பற்றி ரொம்பவும் பயப்படுகிறாள்."

"அந்தக் குமரப்பன் பெரிய ஜீனியஸ்! அவரைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா அவர் இவ்வளவு தீவிரமானவர்னு இன்னிக்கு நீ சொல்லித்தான் தெரியும்..."

"அறிவாளிகள் ஒடுக்கப்பட ஒடுக்கப்பட, அப்படி ஒடுக்கப்படும் சமூகத்தில் இப்படியெல்லாம் தான் நடக்கும் போலிருக்கிறது."

"ஒரேயடியா நீ அப்படிச் சொல்லிவிட முடியாது. உன் வாதம் தவறானது. அறிவாளிகளிலும் நம் பூதலிங்கம் சார் இருக்கிறார். அவர் இன்னும் சமூக நியாயங்களுக்காகப் போராடுகிற குணமுடையவர் தான். ஆனால் போராடும் மார்க்கத்தையும் நியாயமானதாக எதிர்பார்க்கிறார். படிக்காதவர்களில் நம் அண்ணாச்சி இருக்கிறார். அவரும் சமூக நியாயங்களுக்காகப் போராடுகிற குணம் உடையவர் தான். ஆனால் போராட்ட மார்க்கத்தையும் நியாயமானதாகத்தான் எதிர்பார்த்துப் போராடுகிறவர். இளைஞர்களில் நம் மணவாளன் அண்ணன் இருக்கிறார். அவரும் இலட்சியத்தை அடையத் துடிப்பதோடு அடையும் மார்க்கத்திலும் ஒரு நியாயத்தை எதிர் பார்க்கிறார்."

"இந்தக் குமரப்பனே ரொம்ப நாளைக்கு முன்னே இந்த ஊர்லே யுனிவர்ஸிடி வர்றதுக்கு முந்தி இங்கே காலேஜில் தமிழ் லெக்சரராக இருந்த சத்தியமூர்த்திங்கிற அவரோட சிநேகிதருடன் தான் இங்கே வந்தாராம். அப்ப இவர் அவ்வளவு தீவிரம் இல்லியாமே?"

"காலங்களுக்கும் சித்தாந்த மாறுதல்களுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. பழம் கனிவதற்கும் அழுகுவதற்கும், வற்றுவதற்கும் காலமே காரணம். அளவோடு நின்றால் கனிவு, அளவு மீறினால் அழிவு. அழிவு எல்லை மீறினால் வற்றுதல் என்று பல நிலைகள் இருக்கும் போது யார் தான் அந்த நிலையிலிருந்து தப்ப முடியும்?"

"அதாவது பழம் கனிவதற்குத் தேவையான காலம் கடந்து மேலும் விடப்படுகிற காலம் அழுகவும் அதற்கு மேலும் விடப்படுகிற காலம் வற்றவும் செய்யும் என்கிறீர்கள் இல்லையா?"

"ஆம்! வற்றிய கனியில் மீண்டும் கனிவைக் கொண்டு வர முடியுமா?"

"கதிரேசன் மாறமாட்டான் என்கிறீர்கள் இல்லையா?"

"அவன் ரொம்ப அவசரப்படுகிறான். இன்னும் அவன் மேலுள்ள அன்பையும் பிரியத்தையும் விட முடியாமல் நான் தவிக்கிறேன். அவனோ எல்லா அன்பையும், எல்லாப் பிரியத்தையும் வற்றச் செய்து கொண்டு விட்டான்..."

"எங்கே அன்பு வற்றுகிறதோ, அங்கே வெறுப்பும் விரக்தியும் உடன் நிகழ்ச்சியாக உற்பத்தியாகின்றன. வெறுப்பில் அழிவுகள் கிளைக்கின்றன. அழிவுகளால் எதைத்தான் வளர்க்க முடியும்?" அவள் கேட்டாள்.

"நீ நினைப்பது போல் எதையும் செய்ய முடியாதவன் என்று அவனைப் பற்றியோ அவன் சார்பைப் பற்றியோ நான் நினைக்கவில்லை. அவன் இனி எதைச் செய்ய முடியுமோ அதைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன்."

"அந்தக் கவலை அவருக்கு இல்லையே என்ன செய்யலாம்?"

இப்படிப் பாண்டியனும், கண்ணுக்கினியாளும் கவலைப்பட்டுப் பயப்பட்டதும், பதறியதும் எதற்காகவோ அது அடுத்த நாலைந்து தினங்களிலேயே அங்கே நடந்துவிட்டது.

முப்பத்து ஒன்றாவது அத்தியாயம்

வழக்கமாகப் பல்கலைக் கழக விடுதிகளுக்குத் தினசரிப் பத்திரிகைகளும், பிற சஞ்சிகைகளும் போட வரும் சைக்கிள் கடைப் பையனுக்குப் பதில் அன்று காலை அண்ணாச்சியே பத்திரிகை விநியோகிக்க வந்தவுடன் பாண்டியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏதாவது தலை போகிற காரியம் இருந்தாலொழிய அண்ணாச்சி பல்கலைக் கழக எல்லைக்குள் தாமே புறப்பட்டு வரமாட்டார் என்பது பாண்டியனுக்குத் தெரியும். கையில் பிரித்த பத்திரிகையோடும் "கதிரேசன் மோசம் போய்விட்டான் தம்பீ!" என்ற சொற்களோடும் பாண்டியனின் அறைக்குள் நுழைந்தார் அண்ணாச்சி. தன் முன் பிரித்து நீட்டிய செய்தித்தாளில் அவர் சுட்டிக் காட்டிய பகுதியைப் படித்ததுமே பாண்டியனுக்குப் பகீர் என்றது. அவன் அதிர்ச்சி அடைந்தான். திகைத்தான்.

பத்திரிகைகளில், 'எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டார். தீவிரவாதிகளைப் போலீஸார் தேடுகின்றனர். இரத்த வெள்ளத்தில் தீவிரவாதிகளின் பிரசுரங்கள் சிதறப் பட்டிருந்தன' - என்று நாலு பத்திக்குத் தலைப்பு இட்டச் செய்தியைப் பிரசுரித்திருந்தார்கள். மல்லிகைப் பந்தலிலிருந்து பத்தாவது மைலில் இருந்த அந்த எஸ்டேட் அதிபரை அவருடைய எஸ்டேட் விருந்தினர் விடுதியில் வைத்துக் கொலை செய்த தீவிரவாதிகள் - 'புரட்சிப் பூக்கள் இரத்த வெள்ளத்தில் தான் பூக்க முடியும்' - என்ற தங்கள் பிரசுரத்தைக் கொலையுண்டவரின் உடலைச் சுற்றிலும் தூவிவிட்டுத் தப்பி ஓடித் தலைமறைவாகி விட்டார்கள் என்றும் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கருதப்படும் கதிரேசன், வடிவேல், மலையாண்டி ஆகிய பல்கலைக் கழக மாணவர்களையும், பிச்சைமுத்து என்கிற டிரில் மாஸ்டரையும் போலீஸார் தேடி வருகிறார்கள் என்றும் செய்தி கூறியது.

"இன்னிக்கி விடியக் காலம்பற ராயல் பேக்கரி மாடிக்குத் தேடி வந்து அந்த ஆர்டிஸ்ட் குமரப்பன் அறையைச் சோதனை போட்டுப் போலீஸ்காரங்க அவரைப் பிடிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க..."

"கதிரேசனும், பிச்சைமுத்துவும், மத்தவங்களும் யூ.ஜி. (அண்டர் கிரௌண்ட்) ஆயிட்டாங்க போலே இருக்கு..."

"தப்பிக்கிறது கஷ்டம்! எப்பிடியும் பிடிச்சுடுவாங்க... போலீஸ்காரங்க மலையை வலை போட்டுத் தேடிக்கிட்டுருக்காங்க..."

"கொலை செய்யப்பட்ட எஸ்டேட் அதிபர் ஆளும் கட்சிக்கு ரொம்பவும் வேண்டியவர். பெரிய லட்சாதிபதி. மல்லை இராவணசாமிக்குச் சொந்தக்காரர்..."

"ஆனா அவர் ரொம்ப மோசமான ஆளுதான். யூனியன் கீனியன்னு புறப்பட்டு வேலை செஞ்ச தொழிலாளிகளையெல்லாம் காதும் காதும் வெச்சாப்பிலே ஆள ஏவித் தீர்த்துக் கட்டியிருக்காரு. தேயிலைக் கொழுந்து பறிக்க வார பொம்பிளைகளிலே சின்னஞ்சிறுசுகளைப் படாத பாடு படுத்தியிருக்காரு... ஆனாலும்...?"

"நியாயமும், தீர்ப்பளிக்கும் பொறுப்பும், தங்கள் கைகளில் இருப்பதாகக் கதிரேசன் குழுவினர் தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது..."

இதற்குள் செய்தி விடுதியில் மற்ற அறைகளுக்கும் பரவி விடவே அண்ணாச்சி, பாண்டியன், பொன்னையா ஆகியவர்களை மற்ற அறைகளின் மாணவர்கள் வந்து சூழ்ந்து மொய்த்துக் கொண்டு விட்டார்கள்.

"கதிரேசன் முதலியவர்கள் செய்ததில் தவறு என்ன? தீயவாள் அழியவேண்டியதுதானே நியாயம்?" என்று கேட்டான் ஒரு மாணவன்.

"நம்முடைய சமூக நியாயங்களைக் காப்பாற்றும் முறைகளும் நியாயமானவையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். முறைகேடான வழியில் போய் முறைகளைக் காப்பாற்ற முடியாது. ஒரு சத்தியாக்கிரகிக்குத் தன்னைக் கொன்று போட்டாலும் பொறுத்துக் கொள்ளும் மனோதிடமும் பொறுமையும் வேண்டும் என்கிறார் காந்தி" என்று பாண்டியன் அவனுக்கு மறுமொழி கூறினான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் மற்ற விடுதி அறைகளுக்கும், வாடிக்கைகாரர்களான விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் வீடுகளுக்கும் தினசரிகள், சஞ்சிகைகளைப் போட்டுவிட்டுக் கடைக்குத் திரும்பினார் அண்ணாச்சி. மனம் கவலையில் ஆழ்ந்து எந்த வேலையிலும் லயிக்காமல் இருந்தார் அவர். கதிரேசன் இப்படி வேகமாக மாறுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய வாலிபத்தில் காந்தி என்ற பேரொளி தன்னை மாற்றிப் பண்படுத்தியது போல் அல்லாமல், அடுத்த தலைமுறையாகிய இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களை வேறு கடுமையான வழிகளே கவர்ந்து மாற்றுவதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி அவர் மனம் விரைந்து சிந்தித்தது. இளைஞர்களில் ஒரு சாரார் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது போல் ஹிப்பிகளாக மாறுவதையும், மற்றொரு சாரார் இரத்த வெள்ளத்தை ஓடச் செய்துதான் சமூகத்தைத் திருத்த முடியும் என்கிற அளவு கடும் புரட்சிக்காரர்களாக மாறுவதையும், இரண்டு எல்லைக்கும் நடுவே ஸைலண்ட் மெஜாரிட்டியாகப் பல இளைஞர்கள் நிதானமாக இருப்பதையும் அவர் கண்ணாரக் கண்டார். அவருக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது. கதிரேசனின் குடும்பமும் ஒரு பரம்பரைப் பணக்காரக் குடும்பந்தான். ஊரிலேயே பெரிய ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையும் வேறு இரண்டொரு ஏஜென்ஸி வியாபாரங்களும் கதிரேசனின் தந்தை அர்த்தநாரிக் கவுண்டருக்குச் சொந்தமாக இருந்தது. அர்த்தநாரிக் கவுண்டர் மல்லிகைப் பந்தல் நகரின் பரம்பரைப் பணக்காரராகவும், பெரிய மனிதராகவும் விளங்குகிறவர். அவருடைய மகனை அவருக்கே பிடிக்காத தீவிர சித்தாந்தங்கள் வசியப்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதை நினைத்தாலே புதுமையாகவும், வியப்பாகவும் இருந்தது. வங்காளத்திலும், ஆந்திராவிலும், கேரளத்திலும் கூடப் பல பெரிய குடும்பத்துப் பிள்ளைகள் தான் சமூகத்தின் மேல் உள்ள கோபங்களால் இப்படி மாறியிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்தார் அண்ணாச்சி. தமக்குத் தெரிந்து அந்தப் பல்கலைக் கழக மாணவர்களிடையே திறக்கப்படாமல் இருந்த ஒரு புதிய வாயில் இப்போது திறக்கப்படுவதை வருத்தத்தோடும், கழிவிரக்கத்தோடும் புரிந்து கொண்டு கண்கலங்கிய அண்ணாச்சி, கடை முகப்பில் யாரோ வந்து நிற்கவே கவனம் கலைந்து திரும்பினார்.

எதிரே இரண்டு சி.ஐ.டி.க்கள் வந்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் அண்ணாச்சிக்கு அவர்களைத் தெரிந்திருந்தது. கதிரேசன் அவருடைய கடைக்கு வருவது உண்டா என்றும், அவன் என்னென்னப் பத்திரிகைகள் வாசிப்பது வழக்கம் என்றும், எங்கெங்கே அவனுடைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் அந்த இரகசியப் போலீஸார் விசாரித்தார்கள். அண்ணாச்சியிடம் அனுமதி பெற்ற பின் அவருடைய கடையின் உட்பகுதியிலும் புகுந்து சோதனையிட்டார்கள். கதிரேசன் சம்பந்தமான தடயம் எதுவும் அவர்களுக்கு அங்கே கிடைக்கவில்லை. சோதனைகளை முடித்துக் கொண்டு போவதற்கு முன் கதிரேசனும், பிச்சைமுத்துவும் மற்ற மாணவர்களும் தலைமறைவாகி இருக்கும் இடம் தெரிந்தால் சொல்லிவிடும்படி அண்ணாச்சியிடம் வற்புறுத்தினார்கள் அவர்கள்.

"எனக்குத் தெரியாதுங்க! நான் காந்தி பக்தன். அந்தத் தம்பி என் கடைக்கு வாரது போறதை நிறுத்தி ரொம்ப நாளாகுதுங்க. நான் சாமி சத்தியமா நெஜத்தைச் சொல்றேன்" என்றார் அண்ணாச்சி. அவர் சொல்லியதை நம்பி ஏற்றுக் கொண்டது போன்ற பாவனையில் போகத் தொடங்கியவர்கள் மறுபடியும் ஏதோ சந்தேகம் கொண்டாற் போல் திரும்பியும் வந்தார்கள். கேட்டார்கள்.

"பல்கலைக் கழக மாணவர்களுக்கு நீர் சிலம்பம் சுற்றச் சொல்லிக் கொடுக்கிற வழக்கம் உண்டா இல்லையா?"

"உண்டுங்க! ஆனா எல்லா மாதத்திலேயும் இங்கே சிலம்பப் பள்ளிக்கூடம் நடக்காது. யுனிவர்ஸிடி திறந்ததும் ஒரு மாசம் ரெண்டு மாசம் நடக்கும். இப்ப பரீட்சை சமயம் ஆனதுனாலே பையன்க அதிகமா வரமாட்டாங்க. இந்தச் சிலம்பப் பள்ளிக்கூடத்தை நாங்க ஒரு 'ஜிம்னாஸியம்' மாதிரிதான் நடத்தறோமே தவிர, வேறொண்ணுமில்லே..."

"பல்கலைக் கழக மாணவர் யூனியன் காரியதரிசிக்கும் கதிரேசனுக்கும் சிநேகிதம் எப்படி?"

"யாரைக் கேட்கிறீங்க..."

"அதான் அந்தப் பையன் பாண்டியனுக்கும் கதிரேசனுக்கும் நெருங்கிய பழக்கம் இருக்குமே?"

"இருக்காதுங்க. பாண்டியனுக்கும் கதிரேசனுக்கும் மனசு பிடிக்காமே சிநேகிதம் விட்டுப் போயி ரொம்ப நாளாச்சு. ஒருத்தருக்கொருத்தர் பேச்சு வார்த்தை கூடக் கிடையாது. எனக்கு நல்லா தெரியும்..."

"அதெப்படி? பாண்டியன் தானே மொதல் மொதல்லே பிச்சைமுத்துவைப் பார்க்கச் சொல்லி நிலக்கோட்டைக்கு கதிரேசனை அனுப்பிச்சான்? இல்லியா?"

"எனக்கு அது தெரியாதுங்க... ஆனா சமீப காலமாகக் கதிரேசனுக்கும் பாண்டியனுக்கும் மனசு பிடிக்கலேன்னு மட்டும் தெரியுங்க..."

அவர்கள் கேட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். அண்ணாச்சி இப்போது பாண்டியனை நினைத்துக் கலங்கினார். பாண்டியன், கண்ணுக்கினியாள் ஆகியோர் மேல் மாணவர் இயக்கங்களின் தலைவர்கள் என்ற காரணத்தால் போலீஸ், இராவணசாமி, துணைவேந்தர் ஆகியோருக்கு இருக்கும் மனத்தாங்கல்களால் அவனுக்கு ஒரு சிறிதும் சம்பந்தமே இல்லாத இந்தக் கொலை வழக்கில் அவனை மாட்டி வைத்து விடுவார்களோ என்று அஞ்சினார் அண்ணாச்சி. பாண்டியனை உடனே எச்சரிக்க வேண்டியது அவசியம் என்று அவருக்குத் தோன்றியது. கதிரேசன் தீவிரவாதியாக மாறிப் பாண்டியன் முதலியவர்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிய பின்னரும் கூடப் பாண்டியனுக்குக் கதிரேசன் மேலிருந்த பழைய நட்பும் பிரியமும் விடவில்லை என்பது அண்ணாச்சிக்குத் தெரியும். பாண்டியனைக் காப்பாற்றவே அவர் போலீஸிடம் பொய் சொல்லியிருந்தார். இதே போலீஸார் பாண்டியனிடம் நேரில் போய் விசாரிக்கும் போது அவன் விவரம் தெரியாமல், "நானும் கதிரேசனும் கொள்கைகளில் வேறுபட்டாலும் இன்று கூட அவன் என் பிரியத்துக்குரிய நண்பன் தான்" என்பதாக ஏதாவது உளறி வைக்கப் போகிறானே என்றெண்ணிப் பயந்தார் அண்ணாச்சி. ஒரு தந்தையின் பாசத்தோடும் அக்கறையோடும் பாண்டியனைப் பற்றிக் கவலைப்பட்டார் அவர். கதிரேசன் பல நாட்களுக்கு முன் ஒரு மாலை வேளையில் பிச்சைமுத்து தனக்குக் கொடுத்திருந்த சேகுவேராவின் வரலாறு, கொரில்லா இயக்கம் பற்றிய சில புத்தகங்கள் ஆகியவற்றைத் தன் கடையில் வைத்துப் பாண்டியனிடம் கொடுத்து, "பாண்டியன்! இந்தப் புத்தகங்களை நீ அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்" என்று சொல்லியதை இப்போது நினைத்தார் அண்ணாச்சி. அப்படிக் கதிரேசன் கொடுத்த புத்தகங்களில் எதையாவது பாண்டியன் தன் அறையில் இன்னும் வைத்திருந்து அதன் காரணமாகப் போலீஸாரிடம் மாட்டிக் கொள்ள நேர்ந்து விடப் போகிறதோ என்று அண்ணாச்சியின் மனம் பதறியது. கடைப்பையன் மூலமாக முக்கியமான மாணவர்களையும் பாண்டியனையும் கண்ணுக்கினியாளையும் கடைக்கு வரவழைத்து எச்சரிப்பதற்காகச் சொல்லி அனுப்பினார் அவர். கதிரேசன் பாண்டியனிடம் பிச்சைமுத்துவின் புத்தகங்களைக் கொடுத்த தினத்தன்று அவனுக்கும் பாண்டியனுக்கும் நிகழ்ந்த உரையாடலைக் கூட மீண்டும் நினைவு கூர்ந்தார் அண்ணாச்சி. பாண்டியன் கதிரேசனிடம் புத்தகங்களை வாங்கிக் கொள்ளும் போது சொன்னான்: "எனக்கு உடன்பாடில்லாத நூல்களையும் நான் படிக்க முடியும். படிப்பதனாலேயே அவற்றை நான் ஏற்றுக் கொண்டு விடுவேன் என்று நீ நினைத்துக் கொண்டு விடாதே கதிரேசன்."

"அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை பாண்டியன்! சாத்வீகமும், காந்தியமும் இனி இந்த நாடுக்குப் பயன்படாத அளவு மூத்துத் தளர்ந்து விட்டன..."

"அது உன் கருத்து. நான் அதை ஏற்கமாட்டேன். உண்மைக்கு என்றுமே மூப்பு இல்லை. உண்மை மூப்படைவதோ தளர்வதோ அழிவதோ கிடையாது. பொய்தான் மூப்படையும், தளரும், அழியும். உண்மையோ மூப்படைய மூப்படைய இளமை பெறும். அதனால் தான் பாரதியார் கூட 'மூத்த பொய்கள்' என்று பாடினார். நீ மனத்தினால் மூப்படைந்து விட்டாய். நீ மனத்தினால் தளர்ந்து விட்டாய்! அதனால் தான் காந்தியமே மூத்துவிட்டதாகவும், தளர்ந்து விட்டதாகவும் உனக்குப் படுகிறது கதிரேசன்!" என்று அப்போது பாண்டியன் கதிரேசனை மறுத்திருந்ததை நினைத்த போது அண்ணாச்சிக்குத் திருப்தியாக இருந்தது. கடைப்பையனை அனுப்பி விட்டுப் பழைய நிகழ்ச்சிகளை நினைத்தபடி பாண்டியனை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அண்ணாச்சி. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பாண்டியன் இன்னும் வரவில்லை.

பல்கலைக் கழக எல்லையில் அன்று காலையிலிருந்தே கெடுபிடிகள் அதிகமாயிருந்தன. மைதானத்தில், வகுப்பறைகளில், நூல் நிலையத்தில், ஆசிரியர்களின் இலாகா அறைகளில், மெஸ்ஸில், காண்டீனில் எங்கும் சந்தித்துக் கொள்ளும் இருவரோ அல்லது பலரோ அந்த எஸ்டேட் அதிபரின் கொலையைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். அதில் சம்பந்தப்பட்டுத் தலைமறைவாகிவிட்ட கதிரேசன் முதலிய மாணவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பெண்கள் விடுதியில் கண்ணுக்கினியாள் உட்படச் சில மாணவிகளின் அறைகள் கூடச் சோதனைக்கு ஆளாயின. மாணவர்கள் விடுதியில் பாண்டியன், மோகன்தாஸ் முதலிய பலருடைய அறைகள் போலீஸாரின் சோதனைக்கு உட்பட்டன. பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கத்தின் வீடும் சோதனை செய்யப்பட்டது. துணைவேந்தர் இந்த நிகழ்ச்சியைச் சாக்காக வைத்துத் தமக்கு வேண்டாத ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரையும் கதிரேசனுக்கு வேண்டியவர்கள் என்று இரகசியமாகப் பட்டியல் போட்டுப் போலீஸாரிடம் கொடுத்திருந்தார். பல்கலைக் கழக காம்பஸுக்குள் வரவும் சோதனையிடவும் விசாரிக்கவும் போலீஸுக்கு அனுமதியும் வழங்கியிருந்தார். பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டில் சோதனை நடந்த போது அவர் வீட்டில் இல்லை. பல்கலைக் கழகத்துக்குப் போயிருந்தார். 'ஆண்கள் யாரும் வீட்டில் இல்லை! அப்புறம் வாருங்கள்' என்று பூதலிங்கத்தின் மனைவி எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல் போலீஸார் உள்ளே நுழைந்து துணிமணிகள் வைத்திருந்த பீரோ உட்படக் கலைத்தெறிந்து விட்டுப் போயிருந்தார்கள். பூஜை அறையைக் கூட விடவில்லை. குடைந்து தள்ளித் தாறுமாறாக்கி இருந்தார்கள். மாணவர்களோடு கனிவாகப் பழகுகிறவர்கள் என்று பெயர் பெற்ற வேறு நாலைந்து பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் வீடுகளும் இதே கதிக்கு ஆளாயின. பகலுக்கு மேல் அன்று வகுப்புக்கள் நடக்கவில்லை. பிற்பகலில் துணைவேந்தர் செனட் ஹாலில் அவசர அவசரமாக எல்லாப் பிரிவு டீன்களும், பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் அடங்கிய ஸ்டாஃப் கவுன்சிலைக் கூட்டியிருந்தார். பகலில் வீட்டுக்குச் சென்றிருந்த பேராசிரியர் பூதலிங்கத்துக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் தங்கள் தங்கள் வீடுகளில் புகுந்த போலீஸார் செய்த அட்டூழியம் தெரிய வந்தது. அடக்க முடியாத ஆத்திரத்தோடு ஸ்டாஃப் கவுன்ஸில் கூட்டத்துக்குப் போயிருந்தார்கள் அவர்கள்.

"நண்பர்களே! இந்தக் கூட்டத்தை மிகவும் அவசரமாக உங்கள் ஒத்துழைப்பை நாடிக் கூட்டியிருக்கிறேன். நம் பல்கலைக் கழகத்துக்கே ஓர் அபவாதத்தையும் கெட்ட பெயரையும் உண்டாக்கிவிட்டார்கள் சில தீவிர வெறி பிடித்த மாணவர்கள். இனியும் அப்படி நேரக்கூடாது. நீங்கள் பார்க்கும், பழகும் மாணவர்களில் இப்படிப்பட்ட தன்மைகள் யாரிடம் தெரிந்தாலும் நீங்கள் உடனே ரிஜிஸ்திராரிடமோ என்னிடமோ அந்த மாணவனைப் பற்றி இரகசியமாக ரிப்போர்ட் செய்ய வேண்டியது அவசியம். இன்று கூட நமது மாணவர்களில் இந்தக் கொலையோடு சம்பந்தப்பட்ட மாணவர்களைப் பற்றிய விவரங்களை அறிவதற்காகப் போலீஸார் சில ஸ்டாஃப் மெம்பர்களின் குவார்ட்டர்ஸிலும் சோதனை செய்திருக்கக் கூடும். அதற்காக நான் வருந்துகிறேன். இனி அப்படி நேராது என்றும் உறுதியளிக்கிறேன்" என்று துணைவேந்தர் பேசிக் கொண்டிருக்கும் போது பேராசிரியர் பூதலிங்கம் ஆத்திரத்தோடு எழுந்து குறுக்கிட்டார்.

"இது அக்கிரமம்! வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என்று சொல்லியும் கேளாமல் போலீஸார் என் வீட்டிலும் வேறு சில நண்பர்கள் வீட்டிலும் அத்துமீறி நுழைந்து சோதனை என்ற பேரில் எல்லா இடங்களையும் குடைந்திருக்கிறார்கள். உங்கள் அநுமதியின்றி இது நடந்திருக்க முடியாது. வரவர இந்த யுனிவர்ஸிடியில் வேலை பார்க்கிறோம் என்கிற ஒரே காரணத்திற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது..."

"கோபித்துக் கொள்ளாதீர்கள் மிஸ்டர் பூதலிங்கம்! மாணவர்களோடு நெருங்கிப் பழகும் சில ஆசிரியர்கள் வீடுகளைப் போலீஸார் சோதனை செய்திருப்பார்கள்..."

"மாணவர்களோடு சேர்ந்து பழகுவது அவ்வளவு பெரிய குற்றமென்று இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது சார்!" என்று உடனே குத்தலாகப் பதில் சொல்லிவிட்டு உட்கார்ந்தார் பூதலிங்கம். ஆசிரியர்கள் வீடுகளைக் காட்டுமிராண்டித் தனமாகச் சோதனையிட அனுமதி கொடுத்ததற்காகத் துணைவேந்தரைக் கடுமையாகக் கண்டித்து வேறு சில விரிவுரையாளர்களும் பேசினார்கள்.

"பல்கலைக் கழக மாணவர்களைக் கூர்ந்து கவனித்துத் தீவிரவாதிகள் பற்றி உங்களிடமோ ரிஜிஸ்தாரிடமோ இரகசியமாக ரிப்போர்ட் செய்யச் சொல்லி எங்களுக்கு யோசனை கூறுவதற்காகவே இன்று ஸ்டாஃப் கவுன்ஸிலை அவசரமாகக் கூட்டியிருக்கிறீர்கள்! அதே சமயம் மாணவர்களை ஏற்கனவே கூர்ந்து கவனித்து அவர்களோடு நெருங்கிப் பழகுகிற ஆசிரியர்கள் வீட்டில் போலீஸார் 'ரெய்ட்' நடத்த அனுமதித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தால் எல்லா ஆசிரியர்கள் வீட்டிலும் அப்புறம் போலீஸ் 'ரெய்ட்' நடந்தாலும் நடக்கும்..."

"ஐ யாம் ஸாரி... நீங்கள் இதற்கு இப்படி வியாக்கியானம் செய்ய ஆரம்பித்தால் நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டுவிட்டு மழுப்பலாக நாலு வார்த்தைகள் சொல்லி ஸ்டாஃப் கவுன்சில் கூட்டத்தையே முடித்துவிட்டார் துணைவேந்தர். பகல் மூன்றரை மணிக்கு ஸ்டாஃப் கவுன்சில் கூட்டம் முடிந்ததும், மாணவர் பிரதிநிதிகள், மாணவர் பேரவைத் தலைவன் மோகன்தாஸ், செயலாளன் பாண்டியன் முதலியவர்களைத் தம் அறைக்குக் கூப்பிட்டனுப்பினார் துணைவேந்தர். அப்போது துணைவேந்தரோடு மதுரையிலிருந்து வந்திருந்த டி.ஐ.ஜி., இரண்டு ரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரும் உடனிருந்தார்கள். பாண்டியன், மோகன்தாஸ் மற்ற மாணவர்கள் பிரதிநிதிகள் எல்லோரும் உள்ளே வந்தவுடன் துணைவேந்தரே பாண்டியனையும் மோகன்தாஸையும் கேள்விகள் கேட்டார்.

"போலீஸ் கதிரேசன் வீட்டில் கைப்பற்றிய அவனுடைய டைரியில் பல இடங்களில் உன் பெயரும், மோகன்தாஸ் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். உங்களைக் கதிரேசன் அடிக்கடி சந்திப்பது உண்டென்றும் அந்த டைரியிலிருந்து தெரிகிறது என்கிறார்கள். அந்தத் தீவிரவாதிகளின் தலைவர் பிச்சைமுத்துவைக் கதிரேசன் முதலில் சந்திக்கும்படி செய்தது நீங்கள் தானே?" என்று துணைவேந்தர் கேட்டார்.

"இன்று இரவு டைரி எழுதும் போது நான் கூட என் டைரியில் உங்களைச் சந்தித்ததாக எழுதுவேன் சார்! அதற்கு அர்த்தம் நீங்கள் செய்கிற காரியங்களுக்கெல்லாம் நான் பொறுப்பு என்றோ, நான் செய்கிற காரியங்களுக்கு எல்லாம் நீங்கள் பொறுப்பு என்றோ ஆகி விடாதே? நிலக்கோட்டைக்கு நாங்கள் கதிரேசனை அனுப்பும் போது பிச்சைமுத்துவைச் சந்திக்க என்று அனுப்பவில்லை. தற்கொலை செய்து கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி மேரிதங்கத்தின் பெற்றோரைச் சந்திக்கத்தான் அனுப்பினோம். அங்கே தற்செயலாக அவன் பிச்சைமுத்துவைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது..."

"அந்த பிச்சைமுத்து கனு சான்யால், சாரு மஜும்தார் போன்றவர்களோடு தொடர்பு உடையவர். சென்ற கோடை விடுமுறையில் அவர் மேற்கு வங்காளத்தில் நடந்த ஒரு தீவிரவாதிகளின் முகாமுக்கு இரகசியமாகப் போய் வந்தவர் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா?"

"எனக்குப் பிச்சைமுத்துவையே அப்போது தெரியாதே. அவரைத் தெரிந்தால் அல்லவா இதெல்லாம் தெரியும். நிலக்கோட்டைக்குப் போயிருந்த போது கதிரேசன் தான் அவரைத் தற்செயலாகச் சந்தித்து விட்டு வந்தான். அப்புறம் கடை வீதியில் ஒருமுறை தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த போது அவரைக் கதிரேசன் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அப்படி அறிமுகப்படுத்திய போது அவர் நிலக்கோட்டையில் உடற்பயிற்சி ஆசிரியராக இருப்பதை மட்டுமே நான் அறிந்து கொண்டேன். வேறு எதுவும் அப்போது எனக்குத் தெரியாது..."

"சமீபத்தில் அவர் இங்கே வந்து கதிரேசன் வீட்டிலும் யுனிவர்ஸிடி விடுதி அறைகளிலும் நடத்திய இரகசியக் கூட்டங்களுக்கு நீங்கள் போனதுண்டா?" - டி.ஐ.ஜி.யே இதைக் கேட்டார்.

"கதிரேசன் வீட்டில் அவரைச் சந்திக்க நானும் நண்பர்களும் போயிருந்தோம். அவர் கூறிய சில கருத்துக்கள் எங்களுக்கு உடன்பாடாக இல்லாததால் திரும்பிவிட்டோம். அதன்பின் அவர் இங்கே எப்போது எந்த விடுதியில் யாரை எதற்காகப் பார்த்தார் பேசினார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது" என்று பாண்டியன் பதில் சொன்னான்.

"இனி இவர்கள் போகலாம்! இவர்களிடம் கேட்க ஒன்றுமில்லை..." என்று டி.ஐ.ஜி. குறிப்புக் காட்டிய பின்பே மாணவர்களைப் போகச் சொன்னார் துணைவேந்தர். மாணவர்கள் துணைவேந்தர் அறையை விட்டு வெளியேறு முன் பாண்டியனே அவர்கள் சார்பில் டி.ஐ.ஜி.யிடம் காலையில் விடுதி அறைகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது போலீஸார் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், அதற்கு மிகவும் வருந்துவதாகவும் கூறினான்.

"என்ன செய்யலாம்? எங்களுக்குச் சில கடமைகள் இருக்கின்றன. அவற்றைச் செய்ய வேண்டிய அவசரத்திலும் அவசியத்திலும் எங்களால் கூடச் சில தவறுகள் நேர்ந்து விடலாம். பெரிய தவறுகளைப் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்கும் அவசரத்தில் நாங்களும் சில சிறிய தவறுகளைச் செய்ய நேரிட்டு விடும். அவற்றை மறந்து விடுங்கள்" என்று அன்பாகவும் கனிவாகவும் அந்த டி.ஐ.ஜி. மறுமொழி கூறிய போது பாண்டியன் ஆச்சரியம் அடைந்தான். அவன் அவ்வளவு கனிவை அவரிடம் எதிர்பார்க்கவில்லை. நாலரை மணிக்கு அவர்கள் துணைவேந்தர் அறையை விட்டு வெளியேறினார்கள். பகலுக்குள் மூன்று முறை அண்ணாச்சிக் கடையிலிருந்து பையன் தேடி வந்தும் பாண்டியன் போக முடியவில்லை. மெஸ்ஸில் மாலைச் சிற்றுண்டி காபியை முடித்துக் கொண்டு அவனும் நண்பர்களும் அண்ணாச்சிக் கடைக்குப் போய்ச் சேர்ந்த போது மாலை ஐந்தேகால் மணி ஆகியிருந்தது. அங்கே அவனை எதிர்பார்த்துக் கண்ணுக்கினியாள் காத்திருந்தாள். பாண்டியனைப் பார்த்ததும் அண்ணாச்சி பதற்றத்தோடு கேட்டார்:

"தம்பீ! கவனம். அந்தக் கதிரேசன் எழுதின லெட்டர், கொடுத்த பொஸ்தகங்கள் எதினாச்சும் உன் அறையிலே இருந்து நீ போலீஸ்லே மாட்டிக்கப் போறே!"

"கவலைப்படாதீங்க! கதிரேசன் கொடுத்த புத்தகங்களை எல்லாம் அவன் கொடுத்த மறு வாரமே படிச்சிட்டுத் திரும்பக் கொடுத்தாச்சு. காலையிலேயே நீங்க அங்கே வந்திட்டுப் போனப்புறம் போலீஸ்காரங்க வந்து அறையைத் துருவிட்டாங்க. ஒண்ணும் கிடைக்கலே..."

"என் அறையிலே கூட வந்து பார்த்தாங்க" என்றாள் கண்ணுக்கினியாள். அப்போது ஓர் ஆள் பரபரப்பாக ஓடி வந்து, "அண்ணாச்சி! கதிரேசனையும் மற்ற ரெண்டு பையன்களையும் கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணிட்டாங்க. பிச்சைமுத்து வாத்தியார் மட்டும் அகப்படலியாம். இந்தத் தெருக் கோடியிலே இருந்த மரக் கடையிலேயே தான் ஒளிஞ்சிக்கிட்டிருந்திருக்காங்க" என்றான்.

இப்படி அவன் கூறிய சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸார் துப்பாக்கி ஏந்தி இருமருங்கும் வர விலங்கு பூட்டியக் கரங்களுடன் கதிரேசன் முதலிய மாணவர்கள் மூவரையும் அதே பாதை வழியாக ஸ்டேஷனுக்கு நடத்திச் சென்றார்கள். கதிரேசனை அந்தக் கோலத்தில் பார்த்ததும் பாண்டியனுக்குக் கண் கலங்கியது. 'வீணாகச் சீரழிந்து விட்டான்' என்று பாண்டியன் அனுதாபத்தோடு கூறிய வாக்கியம் கண்ணுக்கினியாளுக்குக் கேட்டது.

முப்பத்து இரண்டாவது அத்தியாயம்

அப்போது ஆண்டு கொண்டிருந்த மல்லை இராவணசாமியின் கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை ஒடுக்கவும் மிரட்டவுமே போலீஸைப் பயன்படுத்தி வந்தார்கள் என்பது ஊரறிந்த பகிரங்க உண்மையாகியிருந்தது. எஸ்டேட் அதிபரைத் தீவிரவாதிகள் கொலை செய்ததை ஒட்டி மதுரையில் மணவாளனின் வீடு, கண்ணுக்கினியாளின் தந்தை குடியிருந்த சித்திரக்காரத் தெரு விடு, பாண்டியனின் பாலவநத்தம் கிராமத்து வீடு எல்லாவற்றையுமே சோதனை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்தி அலைக்கழித்தார்கள். கதிரேசன் முதலிய மாணவர்களுக்கும், அவர்களுடைய தலைவர் பிச்சைமுத்துவுக்கும், இந்த வீடுகளுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனையினால் ஏற்பட்ட தொல்லைகள் பற்றிப் பாண்டியனின் தந்தையிடமிருந்து அவனுக்கும், கண்ணுக்கினியாளின் தந்தையிடமிருந்து அவளுக்கும், மணவாளனிடமிருந்து அண்ணாச்சிக்கும் கடிதங்கள் வந்திருந்தன. கதிரேசன் முதலிய மாணவர்கள் போலீஸாரிடம் பிடிபட்ட பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பின் மல்லிகைப் பந்தலுக்கும் நிலக்கோட்டைக்கும் நடுவே உள்ள மலை சார்ந்த காடுகளின் அடர்ந்த பகுதி ஒன்றில் பிச்சைமுத்துவையும் தேடிப் பிடித்துக் கைது செய்து விட்டார்கள். போலீஸார் சோதனையிட்டுக் கைப்பற்றிய பிச்சைமுத்து கதிரேசன் ஆகியோரின் டைரிகளிலிருந்தும், வேறு ரகசியக் குறிப்புகளிலிருந்தும் அவர்கள் அந்த எஸ்டேட் அதிபரைக் கொலை செய்வதற்குப் பல நாட்களாகத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. நல்ல வேளையாகக் கதிரேசனும் பிச்சைமுத்துவும் தங்கள் கையெழுத்துக்களாலேயே தத்தம் டைரிகளில் மணவாளன், பாண்டியன் முதலியவர்களைப் பற்றி இந்தக் கொலைக்குத் திட்டமிடுவதற்கு முன்பே 'மனசாட்சிக்குத் துரோகம் செய்பவர்கள்' (கான்ஷியன்ஸ் பெட்ரேயர்ஸ்) என்று குறை சொல்லி வருணித்திருந்ததால் இவர்கள் தப்ப முடிந்தது. பாண்டியன், மணவாளன் முதலியவர்களும், கதிரேசன், பிச்சைமுத்து முதலியவர்களும், கருத்து வேறுபட்டவர்கள் என்பதை இந்த டைரிக் குறிப்பு நிரூபித்து விட்டது. இல்லை என்றால் போலீஸார் மணவாளன், பாண்டியன் முதலியவர்களுக்கு மேலும் தொல்லை கொடுத்திருக்கக் கூடும் என்று தெரிந்தது. பாண்டியன் முதலியவர்கள் தப்பிவிட்டாலும் கதிரேசன், பிச்சைமுத்து ஆகியவர்களோடு நள்ளிரவுக் கூட்டங்களில் கலந்து கொண்ட சில பொறியியல் மாணவர்களையும், சில வேளாண்மைப் பட்டப்பிரிவு மாணவர்களையும் போலீஸார் பிடித்து விட்டனர். வார்டன்கள், விடுதிக் காவலர்கள், டீன்கள் எல்லாருக்கும் மாணவர்களை அதிகமாகக் கண்காணிக்கக் கோரும் இரகசியச் சுற்றறிக்கைகள் துணைவேந்தரால் அனுப்பப்பட்டிருந்தன. மாணவர்களின் விழாக்கள், கூட்டங்கள், யூனியன் நடவடிக்கைகள் எல்லாம், அவை பல்கலைக் கழக எல்லைக்குள் நடந்தாலும், வெளியே நடந்தாலும் அளவுக்கு அதிகமாகக் கண்காணிக்கப்பட்டன. அண்ணாச்சிக் கடையைக் கண்காணிப்பதற்காக அதற்கு எதிர்ப்புறம் இருந்த மருந்துக் கடை வராந்தாவில் 'மப்டி'யில் ஒரு கான்ஸ்டபிள் இருக்கத் தொடங்கினார். பல்கலைக் கழகத்துக்குள்ளும், வெளியேயும் மாணவர்கள் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது என்ற சூழ்நிலையைத் துணைவேந்தரும் போலீஸும், ஆர்.டி.ஓ.வும் உருவாக்கியிருந்தார்கள். எங்கும் ஒரு பரபரப்பு இருந்தது.

கதிரேசன் கைது செய்யப்பட்டதற்குப் பின் பல நாட்கள் பாண்டியன் கண்ணுக்கினியாளையும், கண்ணுக்கினியாள் பாண்டியனையும் சந்திக்க முடியாமல் போயிற்று. யாழ்ப்பாணத்து மாணவி பாலேஸ்வரியிடம் முறை தவறி நடந்து கொண்ட போலீஸை கண்டிக்கச் சென்ற இரசாயனப் பேராசிரியர் ஸ்ரீராமன் தாக்கப்பட்டது சம்பந்தமான நீதி விசாரணை தொடங்கும் தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த நீதி விசாரணைக்கான சாட்சிகளை மறுபடியும் சந்தித்து உறுதிப்படுத்துவதற்காக ஒரு நாள் காலையில் பாண்டியன் நண்பர்களோடு விடுதிகளுக்குச் சென்றான். சில சாட்சிகளை மிரட்டியும், குழப்பப்படுத்தியும், ஆளும் கட்சியினரும், துணைவேந்தரும், போலீஸாருமே கலைத்துவிட முயன்று கொண்டிருப்பதாகப் பாண்டியனுக்குத் தகவல் எட்டியிருந்தது. அவன் அப்படிப் புறப்பட்ட தினத்தன்று பல்கலைக் கழகப் பெண்கள் விடுதியை ஒட்டியிருந்த விளையாட்டு மைதானத்தின் 'பாட்மிண்டன் கோர்ட்'டில் கண்ணுக்கினியாளைச் சந்தித்தான். அவளோடும் தோழிகளோடும் விளையாட இருந்த எதிர்த்தரப்புக் குழுவைச் சேர்ந்த பெண்கள் இன்னும் வராததால் உடனடியாக உண்டாகிய உற்சாகத்தை விடாமல், சிறிது நேரம் அவளோடு பூப்பந்து விளையாடினான் அவன். விளையாட்டில் அவள் திறமைதான் வெளிப்பட்டது. அவன் நிறையக் கோட்டைவிட்டான். அதற்குள் அவளோடு விளையாட வேண்டிய தோழிகள் வந்துவிடவே விளையாட்டை நிறுத்திக் கொண்டு அவளைத் தனியே அழைத்துச் சென்று நீதி விசாரணைச் சாட்சிகள் பற்றி நினைவூட்டினான் அவன். அந்த விசாரணைத் தொடர்பாகப் பெண்கள் விடுதியிலிருந்து மூன்று சாட்சிகளும் உறுதியாயிருப்பதாக அவள் தெரிவித்தாள். "எதற்கும் அவர்களை இன்னொரு முறை பார்த்துப் பேசி வை! கதிரேசன் செய்த காரியத்தால் வந்த பரபரப்பைப் பயன்படுத்தி இங்கே எல்லா மாணவர்களையும் அரட்டி மிரட்டி ஒடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்றான் பாண்டியன்.

"எங்களைப் பொறுத்தவரை அதற்கு அவசியமில்லை! மாணவர்களில் இருக்கும் சாட்சிகள் கைவிட்டாலும் விடலாமே ஒழிய மாணவிகள் நிச்சயமாகக் கைவிட மாட்டார்கள். நான் உங்களிடம் சத்தியம் செய்து கொடுக்கத் தயார்" என்றாள் அவள்.

"கதிரேசனை 'பெயிலில்' வெளியே கொண்டு வர அவன் தந்தை எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியவில்லையாம். கேள்விப்பட்டேன்."

"என்ன ஆகுமாம்?"

"செஷன்ஸ் முடிந்த பின்னால் தான் தெரியும்! அநேகமாகப் பிச்சைமுத்துவுக்குத் தூக்குத் தண்டனையும், மாணவர்களாக இருப்பதால் கதிரேசன் முதலிய மற்ற மூவருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப் படலாம் என்று பேசிக் கொல்கிறார்கள். இதில் அவர்கள் தப்பவே வழியில்லாதபடி மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்..."

"ரொம்பப் பாவமாயிருக்கிறது."

"பாவம் ஏது? புண்ணியம் ஏது? நவநீத கவி சொல்லியிருப்பது போல,

இருபதாம் நூற்றாண்டின்
பாவ புண்ணியங்களைப்
பெரும்பான்மை சிறுபான்மையால்
மனிதர்களே நிர்ணயிக்கிறார்கள்
குற்றம் நிரூபிக்கப்பட்ட நிரபராதிகள்
விசாரணைக்குப் போகிறார்கள்
நிரூபிக்கப்படாத குற்றவாளிகள்
தொடமுடியாத உயரத்தின் மேல்
பதவிகளிலே இருக்கிறார்கள்
சாட்சியில்லாத உண்மைகளைப்
பொய்களாகச் சித்தரிக்கிறார்கள்
சாட்சியுள்ள பொய்களையே
உண்மைகளாகக் காட்டுகிறார்கள்
ஆம். இருபதாம் நூற்றாண்டின் பாவ புண்ணியங்களைப்
பெரும்பான்மை சிறுபாண்மையால்
மனிதர்களே நிர்ணயித்து விடுகிறார்கள்!

என்று சொல்லி வேதனைப்பட வேண்டியதுதான். கொலையுண்ட எஸ்டேட் அதிபர் உயிரோடிருந்த போது தாம் சிக்காதபடி தந்திரமாக எத்தனையோ கொலை, கொள்ளை, கற்பழிப்புக்களை செய்திருக்கிறார். ஆனால் அவர் சட்டத்தின் பார்வையில் படவில்லை. இன்று அவரைக் கொன்றிருப்பவர்களோ சட்டத்தின் பார்வையில் வசமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் அவர்களை விடாது."

"கதிரேசனை நினைத்தால் தான் மனத்துக்கு மிகவும் வேதனையாயிருக்கிறது."

"கதிரேசன் மட்டுமில்லை, வடிவேல், மலையாண்டி, பிச்சைமுத்து சார், எல்லாருமே கோபக்காரர்களான நல்லவர்கள் தாம். ஆனால் நல்லவர்களின் ஆத்திரம் கூடச் சட்டத்தால் மன்னிக்கப்படுவதில்லையே? இங்கேதான் இலட்சியத்தை அடையும் மார்க்கத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது! கதிரேசன் முதலியவர்கள் அதைப் பற்றி நினைக்கவே இல்லை." இப்படிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் அவளிடம் விடை பெற்றான் பாண்டியன். மற்ற மாணவர்களும் அவனும் வேறு வேறு விடுதிகளுக்குப் போய் ஏற்கெனவே உறுதி கூறியிருந்த சாட்சிகளைச் சந்தித்துச் சொல்லிவிட்டு வந்தனர். சில சாட்சிகள் தளர்ந்திருப்பது அவர்களுக்கே புரிந்தது. வேறு சில சாட்சிகள் அவர்கள் தேடிப் போன போது கிடைக்கவில்லை. அவர்களைப் பற்றிச் சந்தேகமாயிருந்தது.

போராட்டங்களும், விடுமுறைகளும், அதிகமாகி வேலை நாட்களைக் கணிசமாகக் குறைத்திருந்ததனால் பல்கலைக் கழகத்தின் 'ஸெகண்ட் டேர்ம்' - இரண்டாவது பகுதி டிசம்பரில் முடிந்து கிறிஸ்துமஸ் பொங்கல் விடுமுறை வந்த போது பத்துப் பன்னிரண்டு நாட்களே பல்கலைக் கழகம் மூடப்பட்டது. அந்த விடுமுறையில் தான் அகில இந்தியப் பல்கலைக் கழகத் தேசிய மாணவர் சம்மேளன மகாநாட்டை மல்லிகைப் பந்தலில் நடத்தத் திட்டமிட்டிருந்தார் மணவாளன். முதலில் பட்டமளிப்பு விழா முடிந்ததும் இந்த மகாநாட்டை நடத்தத் திட்டமிட்டிருந்த அவர் பட்டமளிப்பு விழா இரண்டு மூன்று முறை ஒத்திப் போடப்பட்டதனால் இப்போது மகாநாட்டை முதலில் நடத்திவிட முடிவு செய்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்பாகவே மல்லிகைப் பந்தலில் வந்து தங்கிவிட்டார். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ரெஸிடென்ஷியல் பல்கலைக் கழகத்தை யொட்டி நடந்த அந்த மகாநாடு முந்திய ஆண்டின் இறுதியில் மணவாளனின் கடைசி வருடப் படிப்பின் போதே, அவர் மல்லிகைப் பந்தலில் நடத்தியிருக்க வேண்டியது. படிப்பின் இறுதி ஆண்டில் ஏற்பாடுகளையும், வசூலையும் கவனிக்க முடியாமல் தட்டிப் போயிருந்ததை இப்போது பாண்டியன் முதலிய மாணவர்களின் துணையோடும் ஒத்துழைப்போடும் சிறப்பாக நடத்திவிட விரும்பினார் மணவாளன். கதிரேசன் முதலியவர்களின் செயலால் தேசிய மாணவர்களின் எதிரிகளும், மல்லை இராவணசாமியின் கட்சிக்காரர்களும் மாணவர்களையும் அவர்கள் இயக்கங்களையும் பற்றிக் 'கொலை வெறி இயக்கம்' என்பது போல் வெளியே பொய்ப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார்கள். இந்தப் பொய்ப் பிரசாரத்தை முறியடித்து மீண்டும் இயக்கத்தை உடனே வலுப்படுத்தவும் இப்போது உடனே அந்த மாநாட்டை அவசரமாக நடத்த நினைத்தார் மணவாளன். பாண்டியன் முதலிய மாணவர்களுக்கும் அவர் நினைப்பது சரி என்றே பட்டது. நாடகப் பட்டப்பிரிவு மாணவ மாணவிகள், நகரத் தியேட்டர் ஒன்றில் நடத்திய இரண்டு நிதி வசூல் நாடகங்களின் மூலம் பதினையாயிரம் ரூபாய் மீந்தது. நன்கொடைகள் மூலமும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வசூலித்து அனுப்பிய தொகைகள் மூலமும் இன்னொரு பதினையாயிரம் தேறியது. வேறு நிதி வசூல்களும் நடந்தன.

தமிழகத்திலும் அகில இந்தியாவிலும் இருந்து சுமார் நானூறு சிறப்புப் பிரதிநிதிகளும், இருபத்தையாயிரம் மாணவர்களும் மகாநாட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்து ஏற்பாடுகள் நடைபெற்றன. பிரதிநிதிகளாக வரும் நானூறு பேருக்கு மட்டுமாவது தங்க இடம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பல்கலைக் கழக விடுதி அறைகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டுத் துணைவேந்தரைச் சந்திப்பதற்காக மணவாளனும், பாண்டியனும், கண்ணுக்கினியாளும் போயிருந்தார்கள். துணைவேந்தர் அவர்கள் கூறியதை எல்லாம் கேட்ட பின், சிரித்துக் கொண்டே, "அரசியல் மகாநாடுகளுக்குப் பல்கலைக் கழக விடுதிகளைத் தரமுடியாது. மன்னியுங்கள்" என்று மறுத்து விட்டார். அவர் தெரிந்து கொண்டே வேஷம் போடுவதைக் கண்டு மணவாளன் கோபமுற்றார். சொல்லிக் காட்டினார்: "அரசியல் மகாநாடுகளுக்குக் கூட நீங்கள் இந்தப் பல்கலைக் கழக மேஜை நாற்காலிகளையும், ஹாஸ்டல் பாத்திரங்களையுமே முன்வந்து வலுவில் கொடுத்து உதவியிருக்கிறீர்கள் ஸார்! போன வருடம் இங்கே மே மாதம் இறுதியில் மல்லை இராவணசாமியின் கட்சி நடத்திய வட்டார மகாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் பல்கலைக் கழக விடுதி அறைகளில் தங்கியதும், பொதுக்குழுக் கூட்டமே செனட் ஹால் பகுதியில் இரகசியமாக நடந்ததும் பொய்யில்லையே?"

"கல்வி அமைச்சரின் சிபாரிசால் அப்போது அப்படிச் செய்ய நேர்ந்தது."

"ஓகோ! கல்வி அமைச்சரே சிபாரிசு செய்தால் தான் அப்படித் தவறுகளை நீங்கள் செய்வீர்கள் போலிருக்கிறது" என்று காரசாரமாக எதிர்த்துக் கேட்டுவிட்டே வெளியேறினார் மணவாளன். துணைவேந்தரின் ஆஷாட பூதித்தனம் வெறுப்பூட்டுவதாயிருந்தது.

அதன் பின் நகரத்திலுள்ள ஹோட்டல்களிலும், தேசியத் தொழிலாளர் யூனியன் கட்டிடங்களிலும், மற்ற இடங்களிலுமாகப் பிரதிநிதிகள் தங்க ஏற்பாடு செய்து நகரெல்லையில் ஒரு பெரிய பந்தலில் மகாநாடு நடத்துவதற்குத் திட்டமிட்டுக் காரியங்களைத் தொடங்கினார் மணவாளன்.

வரவேற்பு ஏற்பாடுகள் கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகளிடமும், உணவு ஏற்பாடுகள் அண்ணாச்சியிடமும், மகாநாட்டு விளம்பரப் பொறுப்பு பாண்டியனிடமும் விடப்பட்டிருந்தன. இராப் பகலாக ஓடியாடி அலைந்து பணிபுரிந்தார்கள் அவர்கள். மல்லிகைப் பந்தலைப் போன்றதொரு மலைப்பாங்கான நகரத்தில் கடுங்குளிர் காலமான அந்தக் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஒரு பெரிய மகாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிப்பது மிகவும் சிரமமான காரியமாயிருந்தது.

திடீரென்று மகாநாட்டுக்கு முதல் நாள் இரவு முனிசிபல் கமிஷனர் போலீஸாரோடு வந்து, "இந்த இடத்தில் யார் அனுமதியின் பேரில் பந்தல் போட்டீர்கள்? பந்தலை உடனே பிரித்தாக வேண்டும்" என்று கூப்பாடு போட்டார்.

"நாங்கள் முறைப்படி பதினைந்து நாட்களுக்கு முன்பே பணம் கட்டி இங்கே பந்தல் போட அனுமதி கேட்டு எழுதியிருக்கிறோம். பணத்துக்கு முனிசிபல் ஆபீசு ரசீது இதோ இருக்கிறது" என்று ரசீதை எடுத்துக் காட்டினான் பாண்டியன். அதைக் காண்பித்த பின்னும் நகரசபை அதிகாரி விடவில்லை.

"பணம் கட்டியிருக்கலாம். ஆனால் முறைப்படி அனுமதி வழங்கப்படவில்லை."

"அனுமதி இல்லையானால் அதையும் உடனே தெரிவித்துப் பணத்தை திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். பந்தல் போடுகிற வரை விட்டுவிட்டுக் கடைசி விநாடியில் இப்படி வம்பு செய்வது நியாயமில்லை."

அந்த முனிசிபல் கமிஷனர் மல்லை இராவணசாமி சொல்லியபடி போலீசாருடன் வந்து நின்று கத்தியதைக் கேட்டு மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டார்கள். நிலைமை வேறு மாதிரி ஆகிவிடும் என்று பயந்த கமிஷனர் அனுமதியை எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார். அந்த முனிசிபல் கமிஷனரின் நிலைமையைப் பார்த்துப் பாண்டியன் பரிதாபம் கொண்டான். அவர் முதலில் வீராப்பாக வந்ததையும், அப்புறம் பெருங் கூட்டமாக மாணவர்கள் கூடியதைக் கண்டு மிரண்டு அனுமதி வழங்கிவிட்டுப் போனதையும் கண்டு சிரித்துக் கொண்டே, "மூன்றாந்தரமான அரசாங்கத்தில் அதிகாரியாக இருப்பதை விட முதல் தரமான அரசாங்கத்தில் சேவகனாக இருப்பது எவ்வளவோ மேல். பாருங்கள் இந்தக் கமிஷனர் எவ்வளவு தலைக்குனிவோடு திரும்பிப் போக நேரிட்டிருக்கிறது!" என்றான் பாண்டியன். மற்ற மாணவர்கள் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

இந்தக் கமிஷனர் நடந்து கொண்டதைப் போலவே மல்லிகைப் பந்தல் ஆர்.டி.ஓ.வும் அதற்கு முந்திய தினம் பாண்டியனைக் கூப்பிட்டு அனுப்பி அசடு வழிந்திருந்தார்!

"மிஸ்டர் பாண்டியன்! ஒரு யோசனை. நீங்கள் விரும்பினால் ஏற்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். உங்கள் மகாநாட்டுப் பிரதிநிதிகள் தங்க யுனிவர்ஸிடி ஹாஸ்டல் அறைகள் கிடைக்கவும், மகாநாடு நடைபெற முனிசிபாலிடி ஒத்துழைக்கவும், சுலபமாக ஒரு வழி இருக்கிறது. உங்கள் மகாநாட்டில் அதைத் தொடங்கி வைக்கக் காந்தீயப் பெருந்தலைவர் ராமராஜ் அவர்களை நீங்கள் அழைக்கிறீர்கள். அதற்குப் பதில் நம்முடைய கல்வி அமைச்சரையே தொடங்கி வைக்க அழைத்தீர்களானால் உங்களுக்கு ஓர் இடையூறும் இராது. வேண்டிய உதவிகள் ஜாம் ஜாம் என்று உங்களைத் தேடி வரும்."

"உங்கள் யோசனைக்கு ரொம்ப நன்றி! ஆனால் அதை நாங்கள் ஏற்பதற்கு இல்லை என்பதை வருத்தத்தோடு அமைச்சருக்குத் தெரிவித்து விடுங்கள்! இடையூறுகளை சமாளித்து மகாநாட்டை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்பது எங்களுக்குத் தெரியும் சார்!" என்று ஆர்.டி.ஓ.விடம் முகத்தில் அறைந்தாற் போல் மறுத்துவிட்டு வந்தான் பாண்டியன். இதை மணவாளனிடம் போய் பாண்டியன் கூறிய போது, "ஓகோ! அதிகாரிகள் மந்திரிகளின் இரகசிய ஏஜெண்டுகளாக வேறு செயல்படுகிறார்கள் போலிருக்கிறது" என்று சொல்லிச் சொல்லிச் சிரித்தார் அவர். துணைவேந்தரையும், ஆர்.டி.ஓ.வையும் தூது விட்டுக் கல்வி மந்திரியே அந்த மகாநாட்டில் தாம் இடம் பெற நப்பாசைப்படுவது மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர்கள் துணிந்து கல்வி மந்திரியைப் புறக்கணித்தார்கள். தொண்டின் சிகரமாகவும் எளிமையின் உருவமாகவும் கல்விக் கண் திறந்த வள்ளலாகவும் இருக்கும் காந்தீயப் பெருந்தலைவர் ராமராஜ் அவர்களே தங்கள் மகாநாட்டைத் திறந்து வைக்க வேண்டும் என்பதில் மாணவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.

இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பிருந்தே மல்லிகைப் பந்தல் நகரம் திருவிழாக் கோலம் பூண்டு விட்டது. வீதிகள், தோரணங்களாலும், வரவேற்பு வாசகங்கள் அடங்கிய வளைவுகளாலும் அலங்கரிக்கப் பட்டன. எதற்கெடுத்தாலும் உடனே போஸ்டர் அச்சிட்டு ஒட்டும் இராவணசாமி கட்சியைச் சேர்ந்தவர்கள், 'மாணவர் என்ற போர்வையில் உயிரைப் பறிக்கும் உலுத்தர் கூட்டத்தின் விழா - பதவி பறிபோன ராமராஜ் தொடங்கி வைக்கிறார். பெருமை பறிபோன பிறகும் கலந்து கொள்கிறார்கள் பாரீர்! பாரீர்!' என்று சுவரொட்டி அச்சிட்டு ஒட்டியிருந்தார்கள். கீழே இப்படிக்குத் தமிழின மாணவர் முன்னேற்றக் கழகம் என்றும் அந்தச் சுவரொட்டியில் அச்சிட்டிருந்தது. இப்படி ஒவ்வொரு செயல் மூலமும் தங்களுடைய கீழ்த்தரமான போக்கை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள் மல்லை இராவணசாமியின் கட்சி ஆட்கள். 'பாண்டியனோ மற்றவர்களோ அத்தகைய கீழ்த்தரமான எதிர்ப்புக்களை மதித்து அதைப் பெரிதாக்கிப் போரிடாமல் தங்கள் காரியத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும்' என்று சொல்லி எச்சரித்திருந்தார் மணவாளன். மாணவர்கள் அந்த அறிவுரைக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றினார்கள். மகாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. கடல் போல் மாணவர் பரந்த கூட்டத்தில் மணவாளன் வரவேற்புரை கூறியதைத் தொடர்ந்து காந்தீயப் பெருந்தலைவர் ராமராஜ், "நமது பல்கலைக் கழகக் கல்வியில் இன்னும் இந்திய தேசியத் தன்மையின் சாயல்கள் கூட விழவில்லை. நமது பல்கலைக் கழகங்கள் விஞ்ஞானிகளைவிட அதிகமான குமாஸ்தாக்களையும், நிபுணர்களை விட அதிகமான உத்தியோகஸ்தர்களையுமே தயாரித்து அனுப்புகின்றன. இந்த நிலைமை மாற வேண்டும். பல்கலைக் கழகங்களில் சுதந்திரமாகச் செயலாற்றும் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் பணி புரிய வேண்டும். அரசாங்கத்துக்குத் தலையாட்டுகிற அறிவாளிகளால் பல்கலைக் கழகத்தின் தனித்தன்மை கெட்டுவிடும். மாணவர்களை அரவணைத்துக் கொண்டு வளர்க்கும் அன்பு மயமான நிர்வாகம் தான் ஒரு பல்கலைக் கழகக் கல்விக்குத் தேவை. தனிச் சட்டாம்பிள்ளைத் தனத்தினால் மட்டும் இருபதாம் நூற்றாண்டில் எதையும் கற்பிக்க முடியாது. இன்றைய சமூகத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் பெரும் பங்கு ஏற்கும் இளைஞர்களுக்கு 18 வயதிலேயே ஓட்டுரிமை தரப்பட வேண்டும். படித்தவர்கள் வேலையின்றித் தவிப்பது போன்ற நிலை நாட்டுக்கு நல்லதல்ல. வேலையை அடிப்படையாகக் கொண்ட கல்வி அவரவர் விருப்பத்துக்கேற்ப அமைய வேண்டும்" என்பது போலப் பல சீரிய கருத்துக்களைக் கூறி மகாநாட்டைத் தொடக்கி வைத்தார். அவர் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது.

அதையடுத்துப் பேசிய வட இந்தியப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஒருவர், "மாணவர் - பல்கலைக் கழக உறவு சீராக இருக்க வேண்டுமானால் பல்கலைக் கழக நிர்வாகக் குழுவில் சில மாணவர்களும் அங்கம் வகிப்பது அவசியம். மாணவர்களோடு நல்லுறவை வளர்க்காமல் வியாபாரத் தயாரிப்புப் போல் அவர்களைப் பரீட்சைகளுக்குத் தயாரிப்பது தான் இப்போது கல்வியின் குறை. வெறும் பரீட்சைகளுக்குத் தயாரிப்பதை விட அவர்களை எல்லாம் வாழ்க்கைப் பரீட்சைக்கே தயாரிக்கும் திறமை ஒரு பல்கலைக் கழகத்துக்கு வேண்டும்" என்றார். அவருடைய ஆங்கிலச் சொற்பொழிவின் போது மாணவர்கள் பலமுறை கரகோஷம் செய்து வரவேற்றனர்.

அழைப்பிதழ் கொடுத்திருந்தும், மல்லிகைப் பந்தல் துணைவேந்தர் அரசாங்கத்துக்குப் பயந்து அந்த மகாநாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. "வேர் இஸ் யுவர் வொண்டர் ஃபுல் வி.ஸி...?" என்று அந்த மாநாட்டுக்கு வந்திருந்த ஒரு வட இந்தியப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுமை இழந்து மணவாளனிடம் கேட்டார். மணவாளன் சிரித்துக் கொண்டே தாயுமானவனாரைப் பற்றி அவருக்கு விளக்கினார். பிற்பகல் மகாநாட்டில் மாணவர் பிரதிநிதிகள் பேசினார்கள். பாண்டியன் அந்த ஓராண்டில் மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் நடந்த நீதி விசாரணைகள், மாணவர் போராட்டங்கள் அதன் காரணங்கள் பற்றி விவரித்தான். மேரிதங்கம் தற்கொலை, பேராசிரியர் ஸ்ரீராமன், இலங்கை மாணவி பாலேஸ்வரி பிரச்சினைகள் விவரிக்கப்பட்டன. மாணவர்களின் அழைப்பை ஏற்றுப் பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கம், ஸ்ரீராமன், வேறு சில ஆசிரியர்கள் மட்டுமே அந்த மகாநாட்டுக்கு வந்திருந்தனர். மணவாளன் விரும்பியதற்கு இணங்கப் பிரதிநிதிகள் பேசிய பின் பூதலிங்கம் 'சூழ்நிலைக்கேற்ற கல்வி' என்ற தலைப்பில் ஓர் அரிய ஆங்கிலச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் பின் மகாநாட்டில் பல்கலைக் கழக மாணவர் நலன்களை அடிப்படையாகக் கொண்ட பல தீர்மானங்கள் முன்மொழியப் பட்டு வழி மொழிதலுடன் கரவொலியால் நிறைவேற்றப் பட்டன. பதினெட்டு வயது நிறைந்த அனைவருக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்ற தீர்மானம் முதலில் நிறைவேறியது. அடுத்துப் பல தீர்மானங்கள் நிறைவேறின. மகாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது.

இரவு ஒன்பது மணிக்குக் கண்ணுக்கினியாளும், மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழக நாடகப் பிரிவு மாணவர்களும் பிறரும் நடிக்கும் ஒரு நாடகம் அதே மகாநாட்டுப் பந்தலில் நடக்க இருந்தது. இரவு உணவு முடிந்ததும் நாடகம் தொடங்கிப் பதினொரு மணிக்குள் அதை முடிப்பதாக ஏற்பாடு. பிரதிநிதிகளும் பிற மாணவர்களும் சாப்பிட்டு விட்டுக் கூட்டம் கூட்டமாகப் பந்தலுக்குள் வந்து அமர்ந்து கொண்டிருந்தனர். மணவாளனும், பாண்டியனும் மற்றும் சில முக்கிய மாணவர்களும் ஊர் திரும்ப இருந்த தலைவர் ராமராஜ் அவர்களை வழியனுப்பப் போயிருந்தனர். 'கிரீன் ரூம்' என்ற தட்டி மறைப்பில் கண்ணுக்கினியாளும் மற்ற நடிகர்களும் நாடகத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். வெளியே குளிர் நடுங்கிக் கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மகாநாட்டுக்கே திருஷ்டி கழித்தது போல ஓர் அசம்பாவிதம் அங்கு நடந்தது.

முப்பத்து மூன்றாவது அத்தியாயம்

இரவு மணி ஒன்பதே கால் ஆகியிருந்தது. மகாநாட்டுப் பந்தலில் நாடகம் தொடங்கியிருந்தது. கண்ணுக்கினியாளைத் தவிரப் பொன்னையா, மோகன்தாஸ், நடன சுந்தரம் முதலிய ஒவ்வொருவருக்கும் அந்த நாடகத்தில் பங்கிருந்ததால் அவர்கள் எல்லோருமே உள்ளே இருந்தார்கள். பந்தல் நிறைந்துவிட்டது. பக்கத்தில் மற்றொரு பந்தலில் கடைசிப் பந்தியாகச் சாப்பிட உட்கார்ந்திருந்த ஊழியர்களையும், மகாநாட்டுக்கு உதவி புரிந்த சாரணர்களையும் கவனித்துப் பரிமாறி உபசரித்துக் கொண்டிருந்தார்கள் அண்ணாச்சி முதலியவர்கள். பந்தலுக்கு வெளியே ஏறக்குறைய ஆள் நடமாட்டமே இல்லை. குளிர் அதிகமாயிருந்ததனால் எல்லாக் கூட்டமும் மாணவர் மகாநாட்டுப் பந்தலுக்குள் இருந்தது. நாடகத்தில் முதல் காட்சி தொடங்கி முடிவதற்குள் மேடைக்குப் பின்புறம் இருந்து, "ஐயோ தீ! தீ!... எந்தப் பாவியோ பந்தலுக்கு நெருப்பு வைத்துவிட்டானே!" என்ற கூக்குரலும் அதையடுத்துக் கனன்று மேற்பாயும் தீ நாக்குகளும் எழுந்தன. பந்தலில் உடனே கூப்பாடும் குழப்பமும் பரவிக் கூட்டம் தறிகெட்டுக் கலைந்து ஓடத் தொடங்கியது. உடனே மகாநாட்டுப் பந்தலிலிருந்து பின்புறமாக விரைந்து மாணவர்கள் மேடையின் பக்கவாட்டில் தீப்பிடித்த இடத்திலிருந்து அவசரமாகத் திரும்பும் ஒரு ஜீப்பைப் பார்த்தனர். தீ வைக்க வந்தவர்கள் அந்த ஜீப்பில்தான் வந்திருக்க வேண்டும் என்று புரிந்தது. சிரமப்பட்டு மோட்டார் சைக்கிளில் துரத்தி அந்த ஜீப் நம்பரைக் கூடக் குறித்துக் கொண்டு வந்துவிட்டான் ஒரு மாணவன். அது மல்லை இராவணசாமியின் ஜீப் என்பதும் புரிந்தது. தீயணைக்கும் அலுவலகத்துக்குத் தகவல் தெரிந்து அவர்கள் வருவதற்கு நேரமாகிவிட்டது. தீ பரவுவதற்குள் கண்ணுக்கினியாள் முதலிய பெண்களையும் நாடகத்துக்காக இசைக் கருவிகளோடு வந்திருந்த பல்கலைக் கழக இசைக் கல்லூரி மாணவிகளையும் பத்திரமாக வெளியே கொண்டு வந்து சேர்த்தார்கள் மானவர்கள். மகாநாட்டுக்கு உபயோகத்துக்காக டிரம்களில் நிரப்பியிருந்த தண்ணீரைக் கொண்டு அண்ணாச்சியும், பிறரும் தீயை அணைக்க முயன்றது பலிக்கவில்லை. பந்தலிலிருந்த மைக், ஒலி பெருக்கிகள், நாற்காலிகள் முதலியவற்றை முடிந்த மட்டும் வெளியேற்றி மின்சார இணைப்பைத் துண்டிப்பதற்கே படாதபாடு பட வேண்டியிருந்தது.

"பாவிக... நல்லாயிருக்க மாட்டாங்க... இப்பிடிப் போயிடு வாங்க..." என்று கோபம் பொறுக்க முடியாமல் கையைச் சொடுக்கினார் அண்ணாச்சி.

"எப்படியாவது நடக்க விடாமே மகாநாட்டை நிறுத்திப் பிடணும்னு ஒரு வாரமாகவே கருக்கட்டிக்கிட்டிருந்தாங்க... மகாநாடு பிரமாதமா நடந்திடிச்சு... வயிற்றெரிச்சல்காரங்க இருட்டினதும் இதைப் பண்ணிட்டாங்க..." என்று மனம் நொந்து போய்ச் சொன்னார் மணவாளன்.

கையில் வீணையோடு பேராசிரியர் பூதலிங்கத்தின் மகள் கோமதியும், மேக்-அப் கலைக்காத கோலத்தில் கண்ணுக்கினியாளும், பாண்டியனும், அண்ணாச்சியும் விலகி நின்று தீப்பற்றி எரியும் பந்தலைக் கண்கலங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தீ அணைக்கும் படை வந்து நீண்ட நீண்ட குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீச்சியடித்துப் போராடியது. சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ் வேன் வந்தது. அந்த வேனில் வந்த எஸ்.ஐ.யிடம் தீ வைத்தவர்கள் தப்பிய ஜீப் எண்ணைக் கூறிப் பாண்டியன் முதலியவர்கள் புகார் சொல்லியபோது, "நீங்கள் கூறுவது சாத்தியமே இல்லை! போலீஸ் கிளப் லானில் அதே ஜீப்பிலே வந்து மாலையிலிருந்து இராவணசாமி சர்க்கிள் இன்ஸ்பெக்டருடன் அங்கே ஏதோ முக்கிய விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரே ஜீப் எப்படி இரண்டு இடங்களில் இருக்க முடியும்?" என்று மறுத்தார் அவர்.

"போலீஸ் கிளப் லானில் இந்த ஜீப் நிற்பதோ நிற்காததோ எங்களுக்குத் தெரியாது சார்! ஆனால் இங்கே அந்த ஜீப் வந்ததும் அவசரமாகத் திரும்பியதும் உண்மை" என்றான் பாண்டியன்.

"அது வீண் பிரமை! அப்படி நடந்திருக்கவே முடியாது" என்றார் எஸ்.ஐ. அதைக் கேட்டு ஏற்கெனவே ஆத்திரமாக இருந்த மாணவர்களுக்கு மேலும் கோபம் வந்துவிட்டது. மணவாளனும் அண்ணாச்சியும் தான் மாணவர்களை அமைதியடையச் செய்தனர்.

"கருத்து மாறுபாடு கொள்கிறவர்களையும், விமரிசிப்பவர்களையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் அதிகாரத்தில் இருந்தால் அந்த அதிகாரத்தில் ஜனநாயகத்துக்கு இப்படிப்பட்ட அவமரியாதைகள் தான் நடக்கும். சகிப்புத்தன்மையை ஒரு விரதமாகவும் நோன்பாகவும் கடைப்பிடித்த காந்திஜீயின் சிறப்பு சகிப்புத் தன்மையே இல்லாத ஓர் ஆட்சி நடக்கிறது இப்போதுதான் மிக நன்றாகப் புரிகிறது. ஆனால் இவர்களும் கூட காந்தியை வாய்க்கு வாய் போற்றுகிறார்கள்; விழாக் கொண்டாடுகிறார்கள். காந்தீயத்தைக் கொன்று கொண்டே காந்திக்கும் விழா எடுப்பது எத்தனை சாதுரியம்!" என்று அண்ணாச்சியை நோக்கி வினவினார் மணவாளன். அண்ணாச்சி இதற்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை.

"இந்தக் கொடுமை பொறுக்க முடியாமல் தான் கதிரேசன் போன்றவர்கள் வன்முறையில் நம்பிக்கை வைத்து அந்த வழிக்குப் போனார்கள். கெஞ்சிப் பல்லைக் காட்டி வேண்டுகிறவர்களைக் கயவர்கள் சிறிதும் மதிப்பதில்லை. அவர்கள் பல்லை உடைப்பவர்களிடம் தான் பயந்து வழிக்கு வருகிறார்கள்" என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான் பாண்டியன் அறை நண்பன் பொன்னையா. ஆத்திரத்தில் அவன் வெறிகொண்டு கூப்பாடு போட்டான்.

இரவு ஒன்பது மணி வரையில் ஜெகஜ்ஜோதியாக இருந்த மகாநாட்டுப் பந்தல் புகையுடனும், தீ நெடியுடனும், பத்தரை மணிக்குத் தரை மட்டமாகியிருந்தது. மாணவர் கூட்டம் கட்டுக்கடங்காத கோபத்தோடு எரிந்த பந்தலுக்கு வெளியே வெறியேறி நின்றது. ஏதோ பெரிய கலவரத்தை எதிர்பார்ப்பது போல் போலீஸ் லாரிகள் நான்கு பக்கமும் வந்து வளைத்துக் கொண்டு நின்றிருந்தன. மகாநாட்டுத் தினத்தன்று அதைத் தவிர்க்க விரும்பியவர் போல் துணைவேந்தர் வெளியூருக்கு நழுவியிருந்தார். ஆர்.டி.ஓ.வும் பக்கத்து ஊரில் முகாம் செய்திருந்தார்.

நடந்ததை உள்ளது உள்ளபடியே பத்திரிகைகளுக்குத் தந்தி மூலமும், தொலைபேசி மூலமும் தெரிவித்தார்கள் மாணவர்கள். எவ்வளவோ முயன்றும் மகாநாட்டு வசூல் பணத்தில் ஒரு பகுதியும், வாடகைக்கு வாங்கிப் போட்டிருந்த நாற்காலிகள் ஜமுக்காளங்களும் மின்சாரச் சாதனங்கள் சிலவும் தீயில் போய்விட்டன. உடனே பழிக்குப் பழி வாங்க சினத்தோடு இருந்த மாணவர்களை அமைதியடையச் செய்து கலைத்து அவரவர் தங்கியிருந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குப் பாண்டியனும், மணவாளனும், அண்ணாச்சியும் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். முதலில் மாணவிகளை விடுதிக்கு அனுப்பி வைத்தார்கள். பின்பு மாணவர்களை அனுப்பி மற்ற வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுப் பாண்டியன் அண்ணாச்சி முதலியவர்கள் படுக்கச் சொல்லும் போது பின்னிரவில் நான்கு மணி ஆகிவிட்டது. தீப்பிடித்த கொடுமையால் பாதிச் சாப்பாட்டில் எழுந்து வந்த சாரணர்களும், ஊழியர்களும் மேலே சாப்பிடாததால் அரை வயிற்றுப் பட்டினியோடு போய்ப் படுக்க நேர்ந்தது. மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக மகாநாட்டுக்குக்கென்று அகில இந்தியாவிலிருந்தும் வந்திருந்த வெளியூர்ப் பிரதிநிதிகளை வழியனுப்பி வைக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். விருந்தினர்களுக்கு முன் தங்களின் மனத் தாங்கல்களைப் பெரிதுபடுத்த விரும்பாமல் அடக்கமாகவும், அமைதியாகவும் நடந்து கொண்டார்கள் அவர்கள். எரிகிற தீயில் எண்ணெயை வார்ப்பது போல் மறுநாள் காலை வெளியான ஆளும் கட்சிப் பத்திரிகைகளில் எல்லாம், 'மகாநாட்டுப் பந்தலுக்குத் தாங்களே தீ வைத்து விட்டுப் பிறர் தலையில் பழிபோட முயற்சி! நக்ஸலைட்டுகளின் நாச வேலை' என்பது போல் திரித்து வெளியிடப்பட்ட செய்திகள் பிரசுரமாகி மாணவர்களைக் கோப மூட்டின. தேசீயப் பத்திரிகைகளிலும், மற்ற நடுநிலைத் தினசரிகளிலுமே உண்மைச் செய்திகள் வெளிவந்திருந்தன. பொய்ச் செய்தியை ஒட்டி, "கொலை, கொள்ளை, தீவைப்பு போன்ற செயல்களில் மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதை இனியும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்பது போல் அமைச்சர் கரியமாணிக்கம் ஓர் அறிக்கை வேறு விட்டிருந்தார். தமக்கு டாக்டர் பட்டம் அளிக்கப் போகிற விழாவுக்கு முன் எதையாவது சொல்லி மிரட்டி முக்கியமான மாணவர்களின் இயக்க இளைஞர்களைப் பிடித்து உள்ளே தள்ளி விட இந்த அறிக்கையின் மூலம் அமைச்சர் முயல்வது தெரிந்தது. சில பத்திரிகைகளில் 'மல்லை இராவணசாமியின் ஜீப்பில் வந்த ஆட்களே நெருப்பு வைத்து விட்டு ஓடினர்' என்ற மாணவர்கள் அறிக்கையையும் பிரசுரித்து விட்டு, அடுத்த பத்தியிலேயே அதை மறுக்கும் போலீஸ் தரப்பு அறிக்கையையும் முதலமைச்சர் அறிக்கையையும் சேர்த்தே பிரசுரித்திருந்தார்கள். மகாநாடு முடிந்ததுமே பொங்கலுக்கு ஊர் திரும்பலாம் என்று எண்ணியிருந்த பாண்டியன், மணவாளன், கண்ணுக்கினியாள் முதலிய எல்லோருடைய பயணமும் தடைப்பட்டன. மூங்கில் தட்டி, பந்தல் சாதனங்கள் முதலிய எல்லாமே எரிந்து சாம்பலாகி இருந்ததனால் பந்தல் காண்ட்ராக்ட் எடுத்திருந்தவருக்கு நிறைய நஷ்ட ஈடு தரவேண்டியதாகிவிட்டது. வயரிங், டியூப் லைட்டுகள், ஒளி விளக்கு, அலங்காரம் எல்லாம் அழிந்து போன நிலையில் எலெக்ட்ரீஷியனின் சேதமும் அதிகமாகிவிட்டது. மகாநாட்டு வசூல் பணத்திலும் பெரும் பகுதி தீயில் போய்விட்டதனால் வெற்றிகரமான ஒரு மகாநாட்டு முடிவில் மாபெரும் பொருளாதாரப் பிரச்சினை அவர்கள் முன் பூதாகாரமாக உருவெடுத்து நின்றது. மணவாளன் மலைத்தார். பிரதிநிதிகள், பேச வந்த பிரமுகர்கள் தங்கிய ஹோட்டல் பில் எல்லாம் பாக்கி நின்றது. மாணவர்களிடம் தலைக்கு ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ வசூலித்தால் கூட அது போதாது. விடுமுறை தொடங்கியதுமே ஒரு பகுதி மாணவர்களும், மகாநாடு முடிந்தவுடன் எஞ்சியவர்களும் ஊர் திரும்பி விட்டதால் அப்போது நகரில் உள்ளூர் மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலைகளில் மணவாளனின் இயல்பு தனியானது. நழுவி ஓடவோ, தப்பித்துக் கொள்ளவோ, பொறுப்பைத் தட்டிக் கழிக்கவோ அவருக்குத் தெரியாது. மதுரையில் வீட்டுக்குத் தந்தி கொடுத்தார் அவர். மணவாளனின் தந்தை மறுநாளே மகன் பெயருக்கு மூவாயிரம் ரூபாய்க்கு ஒரு பேங்க் டிராஃப்ட் அனுப்பி வைத்தார். மகாநாட்டுச் செயற்குழு அன்று மாலையிலேயே அவசரமாகக் கூட்டப்பட்டது. அண்ணாச்சிக் கடையின் பின்புறம் செயற்குழு சந்தித்தது. மணவாளன் நிலைமையை விவரித்தவுடன் தயாராகக் காத்திருந்தவர் போல் மடியிலிருந்து இரண்டாயிரம் ரூபாயை நோட்டுக் கற்றைகளாக எடுத்துக் கொடுத்தார் அண்ணாச்சி. "நீங்களே தொடர்ந்து சிரமப்படறீங்க...? இதெப்படி நீங்க...? எதை விற்றீங்க? என்ன பண்ணினீங்க? உங்க உழைப்புக்கு நாங்க எவ்வளவோ கடமைப் பட்டிருக்கோம். நீங்க பணம் எதுவும் தரணும்கிறது இல்லே அண்ணாச்சி!" என்றார் மணவாளன். அண்ணாச்சி இதைக் கேட்டுச் சிரித்தார்.

"சும்மா எடுத்து வையுங்க... நிலைமை என்னன்னு உங்களை விட எனக்கு நல்லாத் தெரியும்... உபசாரமெல்லாம் நமக்குள்ளே எதுக்கு? பாக்கி எல்லாம் சீக்கிரமாக கொடுத்து முடிக்கலியின்னா ஒவ்வொருத்தனா மகாநாட்டுக் கமிட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவான்..."

"எப்பிடி இது?... உங்களாலே இவ்வளவு பெரிய தொகை...?"

"நீங்க கோபப்படலையின்னா நான் சொல்றேன்..."

"சொல்லுங்க... கோபம் என்ன இதிலே?"

"கடை உபயோகத்துக்குப் பேப்பர் போட்டுக் கொள்ள ரெண்டே ரெண்டு சைக்கிள் மட்டும் மீதம் வைச்சுக்கிட்டு மத்ததையெல்லாம் வித்துப்புட்டேன். அந்தப் பணம் தான் இது..."

"ஏன் அப்பிடிச் செஞ்சீங்க?... நீங்க செஞ்சது கொஞ்சங் கூட நல்லாயில்லே, அண்ணாச்சி."

"இந்தச் சைக்கிள் எல்லாமே நீங்களும் மத்த மாணவர்களும் வசூல் பண்ணி வாங்கிக் கொடுத்ததுதானே? உங்களுக்கு இல்லாமே எனக்கு எதுக்குங்க? நான் என்ன இதைத் தலையிலியா கட்டிக்கிட்டுப் போகப் போறேன்?"

"கடை நடக்கணுமே...? அதுக்கு இனிமே என்ன செய்வீங்க...?"

"பேப்பர் ஏஜன்ஸி, பெட்டிக்கடை வியாபாரம் போதுங்க... சைக்கிள் வாடகை விட்டுக் காசு வாங்கறது ரொம்பத் தொல்லையாயிருக்கு. அதை இதோட நிறுத்திடலாம்னே முடிவு பண்ணிட்டேன்..."

"மாணவர்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்யறீங்க. உங்களுக்கு நாங்க என்ன நன்றி சொல்றதுன்னே தெரியலே அண்ணாச்சி."

"போதும்! மேலே நடக்க வேண்டியதைக் கவனியுங்கள்... நன்றி, கைம்மாறுன்னெல்லாம் உபசார வார்த்தைகளைச் சொல்லி என்னைப் போல ஒரு தொண்டனை அவமானப் படுத்தாதீங்க... நான் அதை எல்லாம் எதிர்பார்க்கிறவன் இல்லே."

நன்றியின் முழுக் கனிவும் தெரிய அங்கே கூடியிருந்த மாணவர்களும், மணவாளனும், அண்ணாச்சியை ஏறிட்டுப் பார்த்தார்கள். வாசலில் 'சார் தந்தி!' என்று தந்திச் சேவகனின் குரல் கேட்டது. அண்ணாச்சி முன் பக்கம் போய்த் தந்தியை வாங்கிக் கொண்டு வந்து பாண்டியனிடம் கொடுத்தார். தேசிய மனப்பான்மையுள்ள நடிகர் திலகம் ஒருவர் சென்னையிலிருந்து மாணவர் மகாநாட்டுச் செலவுகளுக்காகவும் தீப்பற்றி நேர்ந்த இழப்புகளுக்காகவும் வருந்தித் தம்முடைய நன்கொடையாக ஐயாயிரம் ரூபாய்க்குச் செக் அனுப்பியிருப்பதாகத் தந்தி மூலம் குறிப்பிட்டிருந்தார். அந்த நடிகருடைய பெயரில் இயங்கி வந்த மல்லிகைப் பந்தல் இரசிகர் மன்றம் மகாநாட்டு ஏற்பாடுகளில் பெரிதும் ஒத்துழைத்திருந்தது. அந்த இரசிகர் மன்றத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் ஃபோன் செய்து தகவல் தெரிவித்திருந்ததால் இந்த நன்கொடையை நடிகர் திலகம் அனுப்பியிருக்க வேண்டும் என்று புரிந்தது. என்ன நன்கொடைகள் வந்தாலும் அப்போது அவர்கள் சேர்த்தாக வேண்டிய தொகை இன்னும் எட்டா உயரத்திலேயே இருந்தது.

இப்படி மாணவ்ர்களின் செயற்குழுக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே, யாரும் எதிர்பாராத விதமாகப் பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கம் திடீரென்று அண்ணாச்சிக் கடையைத் தேடிக் கொண்டு வந்தார். மாணவர்கள் வியப்புடன் எழுந்து நின்று அவரை மிகவும் மரியாதையாக வரவேற்றார்கள்.

அங்கே சிறிது நேரம் அமைதியாக உடனமர்ந்து அவர்கள் செயற்குழுவின் நடவடிக்கைகளைக் கவனித்த பூதலிங்கம் இருந்தாற் போலிருந்து, "பாண்டியன்! ஐ நோ யுவர் டிஃபிகல்டிஸ். பிஸீஸ் அக்ஸெப்ட் மை ஹம்பிள் டொனேஷன்" என்று மிகவும் அடக்கமாய்ப் பையில் தயாராக எழுதி வைத்திருந்த ஐந்நூறு ரூபாய்க்கான 'செக்' ஒன்றை எடுத்து நீட்டினார். பாண்டியன் அதை வாங்கத் தயங்கினான். அவன் கையில் அதை வற்புறுத்தித் திணித்தார் பேராசிரியர். மணவாளன் உடனே அவரைக் கேட்டார்: "புரொபஸர் சார், இது எங்கள் கஷ்டம்! இதில் நீங்களும் கலந்து கொண்டு சிரமப்படுவது அவசியம் தானா?"

"உங்கள் கஷ்டத்தில் எனக்கும் பங்கு உண்டென்று நான் நினைப்பது தவறில்லையே மிஸ்டர் மணவாளன்?"

"நீங்கள் எல்லாம் மாணவர்கள் மேல் இப்படி உயிரை வைத்திருக்கிறீர்கள் சார்! உங்களைப் பார்க்கும் போதெல்லாம் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. ஆனால் நம்ம வி.சி. மாணவர்களை எல்லாமே தம் எதிரிகளாக நினைக்கிறார்..."

"விட்டுத் தள்ளுங்கள்! இந்த நல்ல வேளையில் அவரைப் பற்றிப் பேசாதீர்கள். என்னைப் பொறுத்த வரையில் அவரை நான் மதிப்பதே இல்லை. அவரை விட இந்த அண்ணாச்சியை நான் அதிகம் மதிக்கிறேன். டு பீ வெரி பிராங்க் வித்யூ... இங்கே படிக்கும் மாணவர்களின் நலன்களை கவனித்து உதவுதற்காக நியமிக்கப்பட்டு அதற்காக மூவாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் வி.சி.யை விட எந்தச் சம்பளமும் வாங்காமல் இந்த அண்ணாச்சி நெடு நாட்களாகக் கவனித்து உதவுகிறார். இவரைப் போல் சுயநலமில்லாத தொண்டர்களின் முன் நான் வி.சி.யை என் கால் தூசுக்குக் கூட மதிப்பதில்லை. இங்கே வந்து இந்தக் கடையை வைத்த நாளிலிருந்து மாணவர்களுக்கு இவர் பிரதி பலன் எதிர்பாராமல் செய்திருக்கும் உதவிகளை யாரையும் விட நான் மிக நன்றாக அறிவேன். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் உதவிகள் செய்யும் இவர் அன்றிலிருந்து இன்று வரை கிழிந்த நாலு முழம் கதர் வேட்டியும் அரைக் கைக் கதர் சட்டையுமாக ஒரே மாதிரி எளிமையாக இருக்கிறார். வியாபாரத்தில் சம்பாதித்த லாபத்தில் வீடு கட்டிக் கொண்டு வாழ இவருக்குத் தெரியவில்லை. இவருடைய கட்சி பதவியில் இருந்த போது தம் தியாகங்களை எடுத்துச் சொல்லி இரண்டு பஸ் ரூட்டுக்குப் பெரிமிட் வாங்கிக் கொள்ள இவர் ஆசைப்பட்டுப் பறந்ததில்லை. இவரைப் பார்க்கும் போதெல்லாம் என் சொந்த ஊரான சுசீந்தரம் கோயிலில் இருக்கும் அனுமார் சிலை எனக்கு ஞாபகம் வருவதுண்டு. இவரை அருகில் வைத்துக் கொண்டே இப்படிப் புகழ்வதற்கு எனக்குக் கூச்சமாக இருக்கிறது. மிஸ்டர் மணவாளன்! உபதேசம் செய்பவர்களை விடத் தொண்டு செய்பவர்களே உயர்ந்தவர்கள். உபதேசம் செய்கிறவர்கள் வெறும் ஞானங்களைச் சுமக்கிறார்கள். தொண்டு செய்கிறவர்கள் அந்த ஞானங்களைக் கடைப்பிடித்தே விடுகிறார்கள்! உபதேசிப்பவர்களை விடக் கடைப்பிடிப்பவர்கள் மேலானவர்கள் என்பதற்கு இவர் ஓர் உயர்ந்த அடையாளம்..."

"சார்! சார்! போதும்... இந்த ஏழையை ரொம்பப் புகழாதீங்க... இந்தத் தேசத்தின் முதல் பெரும் தொண்டரும் கடைசிப் பெரும் தொண்டருமான காந்தி மகான் எனக்கு இட்டப் பிச்சை இது. இதில் எதுவுமே என் சொந்தப் பெருமை இல்லீங்க... எல்லாமே அந்த மகான் அளித்த பெருமை" என்று பொருளாதாரப் பேராசிரியரை நோக்கி அடக்கமாகக் கைகூப்பினார் அண்ணாச்சி. புகழுக்குக் கூசுகிற - புகழிலிருந்து விலகி நிற்கிற இந்தப் பண்பை மணவாளனும், பாண்டியனும் அண்ணாச்சியிடம் நெடுநாட்களாகக் கவனித்து வைத்திருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டு மனிதர்களில் பேதைகளைப் போல் தோன்றும் இப்படிப்பட்ட மேதைகளைக் காண்பது மிகமிக அதிசயமாயிருந்தது. மகாநாட்டுப் பந்தல் தீப்பற்றியதால் வந்த புதிய நஷ்டங்களும், பழைய செலவுகளில் கொடுக்கப்பட வேண்டிய பாக்கிகளும் நிறைய இருந்தன. அண்ணாச்சி, மணவாளன், பூதலிங்கம் ஆகியோர் அளித்தவை, சென்னையிலிருந்து நடிகர் திலகம் அளித்தவை ஆகிய அனைத்தும் போதுமானவையாக இல்லை. ஹாஸ்டல் ஃபீஸுக்காகவும், இதர செலவுகளுக்காகவும் ஒரு வாரத்துக்கு முன் தன் தந்தை கிராம விவசாயக் கூட்டுறவு பாங்கில் எடுத்து அனுப்பியிருந்த டிராஃப்டை மாற்றி, மகாநாட்டுச் செலவுகளில் கரைய விட்டிருந்தான் பாண்டியன். கண்ணுக்கினியாள் 'பாக்கெட் மணி'யாகத் தன் தந்தை அனுப்பிய தொகைகளிலிருந்து மீதம் பிடித்து இருநூறு ரூபாய் நன்கொடை கொடுத்திருந்தாள். வேறு சில மாணவ மாணவிகளும் இப்படியே உதவியிருந்தார்கள்.

கெடுக்க வேண்டும் என்றே சதி செய்து மாணவர் மகாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்த மல்லை இராவணசாமியின் வீட்டுக்கோ, அவரது கட்சி அலுவலகத்துக்கோ கண்டன ஊர்வலம் போய்ப் பெருந்திரளாகக் கூடி மறியல் செய்ய வேண்டும் என்று செயற்குழுவில் சில மாணவர்கள் கூறிய யோசனையை மணவாளன் ஏற்கவில்லை.

"மகாநாட்டுக்குத் தங்கள் கட்சி மந்திரிகள் யாரையும் கூப்பிடவில்லை என்ற கோபத்தினாலும் தங்கள் எதிர் முகாமைச் சேர்ந்தவரும் பதவியில் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான மக்களால் தொழப்படுகிறவருமாகிய பெருந்தலைவர் ராமராஜ் அவர்களைத் தொடக்க உரை ஆற்றக் கூப்பிட்டு விட்டோமே என்ற பொறாமையினாலும் அவர்கள் இதைச் செய்து விட்டார்கள். அவர்கள் எவ்வளவு கெட்ட எண்ணம் உள்ளவர்கள் என்பது அனைவருக்கும் இப்போது தெரிந்து விட்டது. அது போதும். நாம் வேறு இதை எதிர்த்து வன்முறைகளில் இறங்க வேண்டாம். ஜீப்பில் சௌகரியமாக ஏறி வந்து அடுத்தவர்கள் நடத்தும் மகாநாட்டுப் பந்தலுக்கு நெருப்பு வைக்கிற அளவுக்கும், லாரிகளில் குண்டர்களை ஏற்றி வந்து மற்றவர்களைத் துன்புறுத்தும் அளவுக்கும் வசதிகள் உள்ளவர்களால் நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது மக்களுக்குப் புரிந்திருக்கிறது. அவர்களை எதிர்ப்பதை விட ஆக்கப் பூர்வமான வேறு வேலைகள் நமக்கு இருக்கின்றன. இந்த அகில இந்திய மாணவர் மகாநாடு நம்மைப் பெரும் கடனாளி ஆக்கிவிட்டது. அந்தக் கடன்களைத் தீர்க்கும் வேலையே நமக்கும் இன்னும் சில வாரங்கள் வரையில் இருக்கும்..."

செயற்குழுக் கூட்டம் முடிந்து எல்லோரும் கலையும் போது, பாண்டியன் கண்ணுக்கினியாளிடம் பேசத் தனிமை வாய்க்காததால் ஒரு துண்டுத் தாளில், 'நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்தரை மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஹாஸ்டல் மைதானத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் காத்திருப்பேன். சந்திக்கவும். உன்னிடம் ஒரு முக்கியமான காரியம் இருக்கிறது' என்று எழுதி மடித்துக் கொடுத்தான். அதைப் படித்துவிட்டு அங்கிருந்து போவதற்கு முன் 'வருவதாக' சைகை மூலம் தெரிவித்து விட்டுப் போனாள் அவள். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பொங்கல் பண்டிகைக்காக அவள், பாண்டியன், மணவாளன் எல்லோருமே ஊர் திரும்ப இருந்தார்கள். அதற்குள் மகாநாட்டுப் பாக்கிகளையும் கடன்களையும் கொடுத்துவிட்டுப் போகவேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள் அவர்கள்.

முப்பத்து நான்காவது அத்தியாயம்

செயற்குழு முடிந்த தினத்தன்று இரவு பதினொரு மணிவரை அவர்களுக்கு வெளியே அலைச்சல் இருந்தது. மகாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்ததை இராவணசாமியின் கட்சியைத் தவிர வேறு எல்லாக் கட்சித் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்துப் பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருந்தார்கள். அதனால் நகரில் மாணவர்கள் மேல் அனுதாபம் ஏற்பட்டுப் பலர் தாங்களே தேடி வந்து நிதி உதவி செய்தார்கள். அன்றிரவு பாண்டியன் படுக்கச் செல்லும் போது ஒரு மணி. ஞாபகமாகக் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்துவிட்டுப் படுத்தான் அவன்.

நாலே முக்காலுக்கே தூக்கம் விழித்து விட்டது. குளியலறையில் போய் ஹீட்டரைப் போட்டு வெந்நீர் தயாரானதும் நீராடி உடை மாற்றிக் கொண்டு பிள்ளையார் கோயிலுக்குப் புறப்பட்டான் அவன். புறப்படு முன் அறையில் படுக்கைக் கட்டிலுக்குக் கீழே இருந்த தனது பெட்டியைத் திறந்து அவன் எதையோ ஞாபகமாக எடுத்துக் கொண்டான். வெளியே குளிர் நடுங்கியது. மஞ்சு மூடிக் கட்டிடங்களும், மரம் செடி கொடிகளும் நீலப் பசுங் கனவுகள் போல் மலைகளும் வெள்ளை மஸ்லீன் துணியால் மூடி வைத்த ஓவியங்கள் போன்று இயக்கமற்று இருந்தன. விடுதிகளும், பல்கலைக் கழகமும் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. எங்கோ தொலைவில் ஒரு கோழி கூவும் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. பாண்டியன் விடுதிகளின் நடுவே மைதானத்தில் இருந்த 'வரந்தரு விநாயகர் கோயிலை' நோக்கி நடந்தான். மாணவர்கள் இந்தப் பிள்ளையாருக்குச் சூட்டிய குறும்புப் பெயர் 'பரீட்சை விநாயகர்'. கண்ணுக்கினியாள் தூக்கம் விழித்து எழுந்து வந்திருப்பாளோ அல்லது மறந்திருப்பாளோ என்று சிந்தித்தபடியே அவன் கோவிலை நோக்கிச் சென்ற போது அவள் முன்னதாகவே எழுந்து வந்து அங்கே காத்திருப்பதைத் தொலைவிலிருந்தே காண முடிந்தது. அந்த அதிகாலையில் வைகறைக் கன்னியாகிய உஷையே எழுந்து வந்து காத்திருப்பது போல் அவள் மிக மிக வனப்புடன் தோன்றினாள் அப்போது.

"எதற்காக இவ்வளவு அதிகாலையில் இங்கே வரச் சொன்னீர்கள்?"

அவளுக்கு மறுமொழி கூறாமல் முதலில் பிள்ளையாரைக் கும்பிட்டு வலம் வந்தான் அவன். அவளும் அவனோடு சேர்ந்து இணையாகப் பிள்ளையாரை வணங்கி வலம் வந்தாள். இருள் பிரியாத பணி விலகாத அந்த வைகறையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேறு நடமாட்டமே இல்லை. வலம் வந்து முடிந்ததும் தனது அதே கேள்வியை மீண்டும் அவள் அவனிடம் கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தான்; சிரித்தான். அவன் பார்வை அவள் மேல் நிலைத்திருந்தது. அப்படியே வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் போன்ற சுகமான கோலத்தில் அப்போது அவள் இருந்தாள். இடைவெளியின் பொன் நிறம், தங்க வாய்க்காலாய் மின்னும் முதுகின் கீழ்ப்பகுதி, செழுமையான தோள்கள், குறுகுறுப்பான பார்வை எல்லாமாக அவள் அவனருகே நின்றாள்.

"என்ன காரியமாக இந்தக் குளிரில் வரச் சொன்னீர்கள்?"

"காரியத்தை நான் முன்கூட்டியே சொல்லியிருந்தால் ஒரு வேளை நீ இங்கே வந்திருக்க மாட்டாய்...!"

"நீங்கள் கூப்பிட்டீர்கள் என்பதே போதுமானது. நீங்களே கூப்பிட்ட பிறகும் என்ன காரியம் என்று தெரிந்து கொண்டு வர வேண்டிய அளவு நான் உங்களுக்கு அந்நியமில்லை. என்றாலும்..."

"காரியத்தைச் சொல்லட்டுமா?"

கண்களில் ஒளி மின்ன, முகமலர்ச்சியோடும் ஒரு புன்முறுவலோடும் அவன் சொல்வதை வரவேற்கக் காத்திருப்பது போல் கைகட்டி நின்றாள் அவள். கைகளைக் கட்டிக் கொண்டு சிரித்தபடி நிமிர்ந்து நின்ற அந்தக் கோலத்தில் அவள் உடல் அழகின் செழுமையும், வளப்பமும் கோடிட்டுக் காட்டினாற் போல் நன்கு தெரிந்து அவனை மயக்கின.

"இந்த அதிகாலையில் நீ மிகவும் அழகாயிருக்கிறாய். யூ ஆர் லுக்கிங் ஸோ நைஸ்!"

"போதும். இதைச் சொல்வதற்குத்தான் இந்தப் பனியிலும் குளிரிலும் வரச் சொன்னீர்களா?"

"இல்லை, வேறு காரியமும் இருக்கிறது! இந்த அதிகாலையில் பிள்ளையார் சாட்சியாக நான் உன்னைக் கொள்ளையிடப் போகிறேன்..."

"நீங்கள் சொல்வது பிழை! விரும்பாதவர்களிடமிருந்து ஒருவன் தான் விரும்பியதை அடைய முயல்வதுதான் கொள்ளை. நானே ஏற்கனவே உங்களிடம் தான் இருக்கிறேன். என்னிடம் நீங்கள் எதையும் கொள்ளையிட முடியாது! ஞாபகம் இருக்கட்டும்..."

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளது சந்தன நிறக் கைகளைப் பற்றி அதிலிருந்த இரண்டு ஜதைப் பொன் வளையல்களையும், வலது கை மோதிர விரலிலிருந்த வைர மோதிரத்தையும் சிரித்தபடியே, மெல்லக் கழற்றினான் பாண்டியன். அவள் அதைத் தடுக்கவில்லை. சிரித்த முகத்தோடு அவனை அதைச் செய்ய அனுமதித்திருந்தாள்.

"ஒரு நிமிஷம்... இதோ இன்னும் ஒன்று மீதம் இருக்கிறது..." என்று கூறியப்டியே தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் கழற்றி அவன் கைகளில் வைத்தாள் அவள்.

"இந்தச் சங்கிலியும் வளைகளும் ஏன் இவ்வளவு பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது தெரியுமா?"

"ஏனாம்?"

"தன்னைவிடப் பிரகாசமான ஒரு மேனியில் இவை இதுவரை பிணைத்திருந்தது தான் காரணம்."

அவள் முகம் சிவந்தது. புன்முறுவலுடன் அவனைத் தலையைச் சாய்த்து ஒயிலாகப் பார்த்தபடி, "வர்ணனை எல்லாம் போதும்! என்ன செய்யப் போகிறீர்கள் இதை?" என்று கேட்டாள் அவள்.

"உனக்கே இதற்குள் புரிந்திருக்க வேண்டும்! மகாநாட்டைப் பிரமாதமாக நடத்திவிட்டு பாக்கி நிற்கிறவர்களுக்குப் பணம் தர முடியாமல் மணவாளன் மிகவும் சிரமப்படுகிறார். பந்தல் எரிந்து போனதால் பந்தல்காரருக்கும், மின்சார காண்ட்ராக்ட் ஆளுக்கும், பரினிச்சர் விநியோகம் செய்தவர்களுக்கும் நிறையப் பணம் நஷ்ட ஈடு தரவேண்டியதாகிவிட்டது. அண்ணாச்சி சைக்கிள்களை விற்றுப் பணம் கொடுத்திருக்கிறார். பூதலிங்கம் பணம் கொடுத்திருக்கிறார். நான் கூட என் கடிகாரம், மோதிரம் எல்லாவற்றையும் லேக் அவென்யூவிலுள்ள அடகுக் கடையில் வைத்துப் பணம் வாங்கியிருக்கிறேன். நீ இருநூறு ரூபாய் ஏற்கெனவே நன்கொடை கொடுத்திருக்கிறாய். இப்போது இவற்றையும் அடகு வைக்கப் போகிறேன்..."

"நீங்கள் இதை எல்லாம் விற்று மணவாளனிடம் கொடுத்தாலும் எனக்குச் சம்மதம்தான்... நான் நாயினாவிடமும் அம்மாவிடமும் ஏதாவது பொய் சொல்லிக் கொள்வேன்..."

"நான் அப்படிச் செய்ய மாட்டேன். அடகுதான் வைக்கப் போகிறேன். நானே இதை விரைவில் உன்னிடம் மீட்டுத் தருவேன். அதுவரையில் நீ என்னை மன்னிக்க வேண்டும்... நான் இப்படிச் செய்வது சரிதானா என்று எனக்கே தயக்கமாகவும் பயமாகவும் கூட இருக்கிறது..."

"போதும்! வாயை மூடிக் கொள்ளுங்கள். இந்த மன்னிப்பும் புலம்பலும் தான் எனக்குப் பிடிக்கவில்லை. யாரிடம் யார் மன்னிப்புக் கேட்பது? யார் யாரிடம் தயங்குவது?"

"இன்று வெள்ளிக்கிழமை! உன் கைகளில் உள்ள வளைகளைப் பறித்துக் கொண்டு உன்னை வெறும் கைகளோடு அனுப்ப எனக்கு விருப்பமில்லை" என்று கூறிக் கொண்டே தன் 'பேண்ட்' பாக்கெட்டில் கையை விட்டு எதையோ எடுத்தான் பாண்டியன்.

"உனக்கு மறந்திருக்காது என்று நினைக்கிறேன்! நான் மாணவர் பேரவைத் தேர்தலுக்கு நிற்கத் தயங்கிய போது அண்ணாச்சி கடையில் நீ என் முன் கழற்றி வீசிய வளையல்கள் இவை. எப்போது திருப்பித் தர வேண்டுமோ அப்போது திருப்பித் தருவதாக அன்று நானே உன்னிடம் வாக்களித்திருந்தேன்..."

"ஆமாம்! ஆமாம்! நீங்கள் வாக்குறுதி வீரர் தான்... தெரியும்" என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு முன் கைகளை நீட்டினாள் அவள். அவனே அந்த வளையல்களை அவள் கைகளில் அணிவித்தான். அவள் அவனைக் கிண்டல் செய்தாள்.

"நன்றாக வளையல் அணிவிக்கிறீர்கள். ஒரு வளையல் கூட உடையவில்லையே? நீங்கள் வளையல் வியாபாரத்துக்குப் போகலாம் போலிருக்கிறது..."

"இவ்வளவு அழகான கைகள் கிடைத்தால், அதையும் கூடச் செய்யலாம். உன் கைகளுக்கு வளையல்கள் அழகைத் தரவில்லை. எந்த வளையல்களுக்கும் உன் கைகளே அழகைத் தரும்..."

"போதும்! போதும்! பெண்களைப் புகழ்கிற போது அசடு வழியாத ஆண்களே இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறது?"

"அது எப்படி முடியும்? ஆண்களை அசடு வழியச் செய்வதே உன் போன்ற பெண்கள் தானே?"

உடன் இருவருடைய சிரிப்பொலிகளும் இணைந்து ஒலித்தன. பொங்கலுக்கு ஊர் புறப்படுவதைப் பற்றி அவள் கேட்டாள். போகும் போது சேர்ந்து போகலாம் என்று சொன்னான். பனியும் இருளும் விலகி மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்தது. அவள் விளையாட்டாகக் கேட்டாள்:

"புறப்படலாமா? அல்லது இன்னும் என்னிடம் நீங்கள் கொள்ளையிட ஏதாவது மீதம் இருக்கிறதா?"

"இருக்கிறது. ஆனால் பெரியவர்கள் நாளும் கிழமையும் பார்த்துக் கொடுத்த பின்பு தான் சிலவற்றை ஒரு பெண்ணிடமிருந்து ஓர் ஆண் கொள்ளையிட முடிகிறது... என்ன? நான் சொல்வது உண்மைதானே?"

"ஆகா! ஒரு நோபல் பரிசே கொடுக்க வேண்டிய அளவுக்குப் பேருண்மைதான்! போய் வாருங்கள். ஒரு விஷயம் ஞாபகம் இருக்கட்டும். அடகுக் கடைக்குத் தனியே போகாதீர்கள். போன மாதம் இங்கே ஆண்டாள் விடுதியில் தங்கியிருக்கும் என் சிநேகிதி ஒருத்தி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தன் காதலன் ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட நகைகளை உதவியிருக்கிறாள். அவன் தனியாக அடகுக் கடைக்குப் போக, 'ஒரு மாணவனுக்குப் பெண்களின் நகை ஏது?' என்ற சந்தேகத்தோடு அடகுக் கடை சேட் போலீஸுக்குப் ஃபோன் செய்து கேலிக் கூத்தாகி அப்புறம் அவளே நேரில் போய் உதவ வேண்டியதாகி விட்டது. போகும் போது சொல்லுங்கள் நானும் கூட வருகிறேன்" என்றாள் கண்ணுக்கினியாள். காலை பதினொரு மணிக்கு அண்ணாச்சி கடைக்கு அவளை வரச் சொன்னான் பாண்டியன். அவள் விடைபெற்றுக் கொண்டு சென்றாள். அவள் நடந்து செல்லும் அழகைச் சிறிது நேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அவன். பின்னால் யாரோ வருகிற காலடி ஓசை கேட்கவே திரும்பியவன் பூதலிங்கம் சார் பனியனும் துண்டுமாகக் கோயிலுக்கு வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கையிலிருந்த வளையல்களையும் செயினையும், மோதிரத்தையும் 'பேண்ட்' பாக்கெட்டில் அவசரம் அவசரமாகத் திணித்துக் கொண்டு நிமிர்ந்து அவரை வணங்கினான்.

"பாண்டியன்! அப்புறம் மறந்து விடாமல் என்னை வீட்டில் வந்து பார்! ஜுவாலஜி புரொபஸர் தங்கராஜு உங்கள் மகாநாட்டு நிதிக்காக என்னிடம் நூறு ரூபாய்க்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார். சோஷியாலஜி வீரராகவன் ஒரு ஐம்பது ரூபாய் தந்திருக்கிறார். அதையெல்லாம் வாங்கிக் கொண்டு போ. இன்னும் சிலரிடம் சொல்லியிருக்கிறேன். ஏதாவது கிடைக்கலாம்... பாவம்... உங்களுக்கு எல்லாம் ரொம்பச் சிரமமாயிருக்கும். பந்தல் தீப்பிடித்திராவிட்டால் இத்தனை பணத்தட்டுப்பாடு வந்திருக்காது..." என்றார் அவர். தங்களுக்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையைப் பாராட்டி நன்றி சொன்னான் பாண்டியன்.

அவர்கள் கோயிலிலிருந்து திரும்பும் போது விடுதிக்கும் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸுக்கும் வழி பிரிகிற இடத்தில் அவன் விடைபெறும் போது, "பாண்டியன்! நான் சொல்வது நமக்குள் இருக்கட்டும். கீப் இட் இன் யுவர் மைண்ட் அண்ட் பீ கேர் ஃபுல்! வி.சி. பொங்கல் முடிந்து பல்கலைக் கழகம் திறந்ததுமே ஒரு வாரத்துக்குள் அநேகமாகக் கான்வகேஷனை நடத்தி விடுவார் என்று தெரிகிறது. கான்வகேஷனுக்குள் எதையாவது குற்றம்சாட்டி உன்னையும் வேறு சில 'ஆக்டிங்' ஸ்டூடன்ஸையும், பல்கலைக் கழகத்திலிருந்து சஸ்பெண்ட் செய்துவிடக் கூட வி.சி. தயாராயிருப்பார். இது யுனிவர்ஸிடிக்குள்ளே உள்ள விரோதம். யுனிவர்ஸிடிக்கு வெளியிலேயோ இராவணசாமியின் ஆட்கள் அண்ணாச்சியின் மேல் கடுங்கோபத்தோடு கறுவிக் கொண்டிருக்கிறார்கள். ஜாக்கிரதை. டோண்ட் அண்டர் எஸ்டிமேட் எனிதிங்..." என்று பாசத்தோடு எச்சரித்தார். தம்மைப் பற்றியும் அவர் பாண்டியனிடம் கூறினார்.

"என் மேல் கூட வி.சி.க்கு ஒரு கண் இருக்கிறது அப்பா! நான் மாணவர்களுக்கு வேண்டியவனாக இருப்பதும் தன்மான உணர்வுள்ள பல லெக்சரர்களையும், பேராசிரியர்களையும் வி.சி.க்கு எதிரான அணியில் திரட்டியிருப்பதும் அவருக்குப் பிடிக்கவில்லை. கதிரேசன் விவகாரத்தில் அநாவசியமாக என் வீட்டில் 'போலீஸ் ரெய்ட்' நடத்தத் தூண்டியது வி.சி.தான். இதற்கெல்லாம் நான் பயந்து ஒடுங்கி விட மாட்டேன். மிகப் பெரிய பாவம் படித்தவர்களின் அடிமைப் புத்திதான். படித்தவர்களே அடிமைப்படுகிற தேசத்தின் தலைவிதியைக் கடவுள் கூட நேராக்க முடியாது. இந்த வேலையை உதறிவிட்டு லேக் அவின்யூவில் 'பூதலிங்கம் டுட்டோரியல் காலேஜ்' என்ற ஒரு போர்டு மாட்டிக் கொண்டு உட்கார்ந்தேன் என்றால் என் குடும்பத்தை நான் காப்பாற்றிக் கொள்ள முடியும். அப்படி ஒரு நாள் வரத்தான் போகிறது. அறிவுள்ளவர்களிடம் பணிவாக நடப்பது வேறு. புத்தியில்லாதவர்களிடம் அடிமைகளாக இருப்பது வேறு. இந்தப் பல்கலைக் கழக நிர்வாகத்தை இன்று வி.சி. நடத்தவில்லை. மறைமுகமாக இராவணசாமியும், கோட்டச் செயலாளர் குருசாமியும், அமைச்சருக்கு டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுக்கத் தரகு வேலை பார்க்கும் எஸ்டேட் அதிபர் ஆனந்த வேலுவும் தான் வி.சி.யை ஆட்டிப் படைக்கிறார்கள். ஸீ! வீ காண்ட் பௌ அவர் ஹெட்ஸ் பிஃபோர் அப்ஸ்ஸர்ட்ஸ்... அண்ட் பிம்ப்ஸ்..."

"எங்களுக்காகவாவது நீங்கள் பல்கலைக் கழகத்தில் இருக்க வேண்டும் சார்! பல நூறு ஆசிரியர்கள் வேலை பார்க்கும் ஒரு பெரிய பல்கலைக் கழகத்தைப் பெருமைப் படுத்தும் உண்மை ஒளி உங்களைப் போல் யாராவது ஒருவர் இருவரிடம் தான் இருக்க முடியும் சார்" என்றான் பாண்டியன்.

"இங்கே பயிலும் உன் போன்ற மாணவர்களை எண்ணித்தான் ராஜிநாமாச் செய்யும் எண்ணத்தை ஒவ்வொரு தடவையும் நான் ஒத்திப் போடுகிறேன் பாண்டியன்..." என்று கூறிவிட்டு ஸ்டாஃப் குவார்ட்டர்ஸை நோக்கி நடந்தார் அவர். பாண்டியன் விடுதி அறைக்குத் திரும்பினான். ஒரு மோசமான அரசாங்கத்தை கல்விக் கூடங்களிலிருந்து களத்து மேடு வரையில் எல்லா இடங்களிலும் அதிகாரத்தில் உட்கார்த்தி வைத்து விட்ட கொடுமையைச் சிந்தித்த போது மணவாளன் அடிக்கடி சொல்லும் அந்த வாக்கியங்களைப் பாண்டியன் நினைவு கூர்ந்தான். 'ஒரு பெரிய சத்தியப் பெருக்கில் இந்தப் பொய்கள் எல்லாம் கரைந்து விடும். கரைந்தாக வேண்டும்! அது வரையில் பொறுமையாக இருப்போம்.'

இரண்டாம் தடவையாக எண்ணிய போது மணவாளனின் இந்தப் பொறுமையை விடக் கதிரேசனின் அந்த அவசரம் தான் சரியோ என்று கூட பிரமை உண்டாயிற்று அவனுள்.

அதிகாலையில் கண்ணுக்கினியாளிடம் பேசி அனுப்பிய பின்னர் பிள்ளையார் கோயிலில் பேராசிரியர் பூதலிங்கத்தையும் சந்தித்துப் பேசி விட்டுப் பாண்டியன் அறைக்குத் திரும்பிய போது நன்றாக விடிந்து விட்டிருந்தது. அறையில் அவன் இல்லாதபோது கதவு இடுக்கு வழியாக மல்லை இராவணசாமியின் கட்சியினர் போட்டிருந்த ஒரு துண்டுப் பிரசுரம் கிடந்தது. அதில் பாண்டியனையும், அண்ணாச்சியையும் 'சாதிப்பித்துப் பிடித்தவர்கள்' என்று வர்ணித்திருந்தார்கள் அவர்கள். சாதிகளை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டே மல்லை இராவணசாமியின் கட்சியினர் புதிய புதிய சாதிகளை உண்டாக்கியிருக்கிறார்கள். 'இந்த நாட்டில் சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மேற்போக்காகப் போராடும் ஒவ்வொருவரும் தங்கள் சாதிகளைத் தவிர மற்ற எல்லாச் சாதிகளையும் ஒழிக்கவே அப்படிப் போராடுவது போல் தெரிகிறது. சாதி பேதங்களை ஒழிப்பது வேறு. சாதிகளை ஒழிப்பது வேறு. இங்கே பேதங்களை அழிப்பதற்குப் பதில் மனிதர்களையே அழிக்க முயல்கிறார்கள்' என்று மணவாளன் ஒரு முறை சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்தான் பாண்டியன். சாதி பேதங்களை ஒழிக்கும் இயக்கங்கள் சிலவற்றின் பக்குவமில்லாத பிரசாரகர்கள் அவற்றை ஒழிக்கும் முயற்சிகளின் மூலமாகவே அவற்றை நன்றாக ஞாபகப்படுத்தியும், வற்புறுத்தியும் வளர்த்தும் விடுகிறார்கள். பிரசாரங்கள் என்பவை இருமுனையும் கூரான அரிவாள் போன்றவை. அவற்றை அளவாகப் பயன்படுத்தாவிட்டால் அவை அழிக்க வேண்டியவற்றை விட்டுவிட்டு வளர்க்க வேண்டியதை அழித்து விடவும் கூடும். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளை அவருடைய சாதியை இணைத்துப் புகழவும் பழிக்கவும் தொடங்குவது கூட ஒரு வகையில் பேதங்களை வளர்க்கவே உதவும் என்பது புரியாமல் தன்னையும் அண்ணாச்சியையும் மணவாளனையும் தாங்கள் ஒரு மாணவர் மகாநாட்டை வெற்றிகரமாக நடத்திவிட்டதைப் பார்த்து அடைந்த வயிற்றெரிச்சலுடன் இராவணசாமி கட்சியினர் பழி கூற முற்படுவது பாண்டியன் மனத்தை மிகவும் வருத்தியது. ஆனால் அந்தப் பொய்ப் பிரசாரத்தில் அவன் அயர்ந்து விடவோ, தளர்ந்து விடவோ இல்லை. நவீன காலத்தில் சாதிபேதங்கள் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் தான் வருகின்றன என்பதை அவன் உணர்ந்திருந்தான். சிறுபான்மை வகுப்பார் எதைப் பற்றிப் பேச எழுந்தாலும் உடனே அவர்களைச் சாதிப்பேரைச் சொல்லித் திட்டி விடுவதன் மூலம் சாதி பேதம் தான் வளருமே ஒழிய சமத்துவம் வளராது. எல்லாச் சாதி பேதமும் ஒழிய வேண்டும் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு சிலரைச் சாதிப் பேர் சொல்லி ஞாபகமாக வசைபாடும் நாகரிகமான தந்திரம் மல்லை இராவணசாமி கட்சிக்குக் கை வந்த கலையாகி இருந்தது. கீழ் சாதிக்காரர்களை உயர்த்துவதாக மேல் சாதிக்காரர்களையும் மேல் சாதிக்காரர்களை உயர்த்துவதாகக் கீழ்ச் சாதிக்காரர்களையும் ஏமாற்றி மிரட்டி நடுவே பிழைப்பு நடத்தினார்கள் அவர்கள். பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லாமல், 'இது சாமான்யர்களின் ஆட்சி! இதை கவிழ்க்க முயல்வோர் எல்லாம் மேட்டுக் குடியினர்' - என்று ஒப்பாரி வைத்தார்கள். அன்று பகலில் கண்ணுக்கினியாளுடன் சென்று லேக் அவென்யூவில் உள்ள சேட் கடையில் அவளது வளைகளையும், மோதிரத்தையும், தங்கச் சங்கிலியையும் அடகு வைத்துப் பாண்டியன் பணம் வாங்கிக் கொண்டு வந்தான். பணத்துடன் அவனும் கண்ணுக்கினியாளும் மணவாளனைப் போய்ப் பார்த்த போது அவரிடம் காலையில் தன் அறையில் மல்லை இராவணசாமி கட்சியினர் போட்டிருந்த துண்டுப் பிரசுரத்தைப் பற்றிச் சொல்லி வருத்தப்பட்டான் பாண்டியன்.

"இது மாதிரி விஷயங்களை 'இக்னோர்' செய்யப் பழகிக் கொள் பாண்டியன்! சாதிகளின் உயிர் போய் விட்டது. சாதிகள் என்றோ செத்து விட்டன... அவற்றின் பிரேதங்களை வைத்து இங்கே சிலர் பணம் பண்ணுகிறார்கள்! தெருவில் அநாதைப் பிணங்களைக் காட்டி உயிருள்ள பிணங்கள் பணம் சேர்ப்பதை நீ பார்த்ததில்லையா? அப்படித்தான் இதுவும்" என்று ஆறுதல் கூறினார் மணவாளன்.

"சான்றோர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்ளும் பொழில் வளவனார், பண்புச் செழியனார் போன்ற தமிழாசிரியர்களே மாணவர்களிடையே சுயநலத்துக்காக இந்தச் சாதி பேதங்களைப் பரப்புகிறார்கள்."

"இங்கே வேறு வழியில்லாத காரணங்களால் சிலர் சான்றோர்கள் போல் இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உண்மையில் சான்றோர்களாகி விட மாட்டார்கள். சான்றோர்களாகச் சபிக்கப் பட்டவர்கள் எல்லாம் சான்றோர்கள் ஆக முடியாது பாண்டியன்!"

ஏற்கெனவே திட்டமிட்டபடி அன்று மாலை அவர்கள் மகாநாட்டுப் பந்தலுக்கு எதிரிகள் தீ வைத்த வன்முறையைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டம் நடத்தினார்கள். பாதிக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே சரியாகப் பத்து மணியளவில் கூட்டத்துக்கு லைசென்ஸ் கொடுத்த நேரம் முடிந்து விட்டதாகப் போலீஸார் 'மைக்'கை நிறுத்திக் கூட்டத்தை முடிக்கச் சொல்லிவிட்டார்கள். மறுநாள் அதே இடத்தில் மல்லை இராவணசாமி தலைமையில் நடந்த ஒரு கூட்டம் பதினொரு மணி வரை நடந்த போது மாணவர்கள் போய்க் கூப்பாடு போட்டு எதிர்த்தார்கள். போலீஸார் தர்ம சங்கடமான நிலையில் அந்தக் கூட்டத்தை முடிக்கச் சொல்லியும் இராவணசாமி மறுத்தார். மாணவர்கள் கூப்பாடு போட்டு கூட்டத்தை முடிக்கச் செய்துவிட்டார்கள். "ஆளும் கட்சிக் கூட்டமானால் விடிகிற வரை மைக் லைசென்ஸ் உண்டா? எங்கள் கூட்டமானால் மட்டும் பத்து மணி தான் அதற்கு எல்லையா? இது என்ன நியாயம்?" என்று பாண்டியனே அந்த எஸ்.ஐ.யிடம் கேட்டான். அந்த எஸ்.ஐ. அதற்குப் பதில் சொல்ல முடியாமல் சிரித்து மழுப்பினார்.

"என் கூட்டம் விடிய விடியக் கூட நடக்கும்! நீ யார் அதைக் கேட்க?" என்று சவால் விட்ட மல்லை இராவணசாமியைப் பேச விடாமல் கூப்பாடு போட்டு மாணவர்கள் அந்தக் கூட்டத்தைப் பாதியிலேயே முடித்து விடச் செய்ததும் அவர் கடுங் கோபத்தோடு கறுவிக் கொண்டு போனார். கூட்டம் நடந்த இடம் அண்ணாச்சிக் கடை வாயிலாக இருந்ததால் அவர் தான் மாணவர்களைத் தூண்டியிருப்பதாகப் புரிந்து கொண்ட இராவணசாமியின் ஆட்கள் தங்கள் கூட்டத்தை முடிக்கு முன், "இங்கே சில சைக்கிள் கடை பயில்வான்கள் மாணவர்களை இப்படித் தூண்டி விடுவது எங்களுக்குத் தெரியும். நாங்கள் நினைத்தால் அவர்களைப் பூண்டோடு அழித்து நசுக்கி விட முடியும்" என்று பேசியிருந்தார்கள். அண்ணாச்சி அதைக் கேட்டுப் புன்னகை புரிந்தார்.

'நான் ஒரு சத்தியாக்கிரகி! வன்முறைகள் புரிவதைக் கோழையின் செயல்களாக நினைக்கிறவன். என்னைப் பற்றி இப்படிப் பேசறதாலே இவங்கதான் தரக் குறைவாக நடந்துக்கிறாங்க. இதுனாலே நான் கெட்டவனாகி விட மாட்டேன். என்னைக் கெட்டவனாகக் காண்பிக்க இவங்க முயற்சி பண்ணிட்டதாலே நான் கெட்டவனாகி விடவில்லை' என்று அவர் மனம் நினைப்பதைக் காட்டுவது போல் இருந்தது அந்தத் தூய முகத்தின் புன்னகை.

முப்பத்து ஐந்தாவது அத்தியாயம்

மறுநாள் காலையில் கண்ணுக்கினியாள் மதுரைக்குப் புறப்பட்டாள். முன்பு அவர்கள் பேசி வைத்துக் கொண்ட மாதிரி அவள், பாண்டியன், மணவாளன் எல்லாரும் சேர்ந்தே ஊருக்குப் புறப்பட முடியாமற் போய்விட்டது. பாண்டியனுக்கும், மணவாளனுக்கும் அங்கே செய்து முடிக்க வேண்டிய வேலைகள் இன்னும் மீதம் இருந்தன. அதனால் அவர்களே அவளை முதலில் புறப்பட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் அதிகாலை முதல் பஸ்ஸில் குளிரோடு குளிராக அவளை வழியனுப்பும் போது, "வளைகள், செயின், மோதிரம் எல்லாம் எங்கே என்று உங்க நாயினாவும், அம்மாவும் உன்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறாய்?" என்று வினவினான் பாண்டியன். இதைக் கேட்டு ஒரு பதிலும் சொல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்தாள் அவள். அப்புறம் பஸ் புறப்படுவதற்குச் சில விநாடிகளுக்கு முன், "அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நிம்மதியாக மற்ற வேலைகளைக் கவனியுங்கள்" என்று முகத்தில் மலர்ச்சியுடனும், புன்னகையுடனும் அவன் முன்பு கேட்ட அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாள் அவள். அவளை வழியனுப்பிவிட்டு மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்திலிருந்து அப்படியே மணவாளன் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போனான் பாண்டியன். மணவாளன் அறையில் இருந்தார். அவன் போன போது தான் யாருடனோ ஃபோனில் பேசி முடித்து விட்டுத் தலை நிமிர்ந்த மணவாளன் பாண்டியனைப் பார்த்ததும், "ரொம்பச் சரியான நேரத்தில் தான் நீயும் இங்கே வந்திருக்கிறாய்! இன்னும் சிறிது நேரத்தில் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினரும், எஸ்டேட் அதிபரும் ஆகிய ஆனந்தவேலு இங்கே என்னைப் பார்க்க வரப் போவதாக ஃபோன் செய்திருக்கிறார்" என்று கூறியபடி வரவேற்கவே, பாண்டியனுக்கு அந்தச் செய்தி வியப்பை அளித்தது. "ஆனந்தவேலு எதற்காக இங்கே வருகிறார்? அவருக்கு இப்போது இங்கே உங்களிடம் என்ன வேலை?" என்று கேட்டான் பாண்டியன்.

"நீயும் இருந்து வேடிக்கை பார்! அப்போதுதான் உனக்கு எல்லாம் புரியும்! இங்கே மனிதர்கள் எப்படி எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள உனக்கு இது ஒரு வாய்ப்பு" என்று சொல்லிச் சிரித்தார் மணவாளன். பாண்டியன் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அது நிர்மலமாக எப்போதும் போல் தெளிவாக மலர்ந்திருந்தது. அவரே அவனிடம் பேசலானார்:

"இந்த ஆட்சி வந்த பின் பல்கலைக் கழக 'சிண்டிகேட்'டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார் ஆனந்தவேலு. இந்தப் பல்கலைக் கழக செனட், சிண்டிகேட் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், வோட்டும் தங்களுக்கு உண்டு என்பதை அறியாத காரணத்தால் இந்தப் பல்கலைக் கழகத்தில் படித்து வெளியேறிய பட்டதாரிகள் பலர் தங்கள் பெயரை செனட் வோட்டராகப் பதிவு செய்து கொள்ளவில்லை. தமக்கு வேண்டியவர்களைத் தாமே பணம் கட்டி வோட்டராகப் பதிவு செய்து தம்முடைய கைப்பாவைகளே செனட் உறுப்பினர்களாக வருவதற்கான எல்லாத் தந்திரங்களையும் செய்கிறவர் இந்த ஆனந்தவேலு. இவருடைய சூழ்ச்சியாலும், தந்திரங்களாலும் சுமாரான தகுதியுள்ள பலர் அகடமிக் கவுன்ஸில் உறுப்பினராக நேர்ந்திருக்கிறது. அகடமிக் கவுன்சிலும், செனட்டும் மோசமான தரத்துக்கு இருந்தால் சிண்டிகேட்டின் தரமும் மோசமாகவே இருக்கும். 'சிண்டிகேட்' தரம் குறைந்தாலோ பல்கலைக் கழகத்தின் தரமும் தானாகவே குறையும்" என்று மணவாளன் கூறிய போது ஆனந்தவேலுவைப் பற்றி இவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருப்பவர் இந்த அதிகாலையில் அவரைச் சந்திப்பதற்கு ஏன் சம்மதித்தார் என்று புரியாமல் மருண்டான் பாண்டியன்.

"அது மட்டுமில்லை! அண்ணனுக்கு இன்னொரு விவரமும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தங்களுக்கு வேண்டாத பட்டதாரிகள் அல்லது தங்களுக்கு வோட்டு போட மாட்டார்கள் என்று இவர்கள் நினைக்கும் பட்டதாரிகள் 'செனட்' வோட்டராகப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பம் அனுப்பினால் அந்த விண்ணப்பங்களை எந்தத் தேதிக்குள் வரவு வைத்தால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்குமோ, அந்தத் தேதி வரை அவற்றை வரவு வைக்காமல் காலந்தாழ்த்தி வரவு வைத்து அந்த ஆண்டிலேயே அவர்கள் வோட்டளிக்க முடியாமல் யுனிவர்ஸிடி நிர்வாகத்தையும் வி.ஸி.யையும் கைக்குள் போட்டுக் கொண்டு இவர்கள் செய்து விடுவார்கள். வருகிற வோட்டுக்களிலும் வோட்டர் 1 என்ற எண்ணுள்ள வேட்பாளருக்கு வோட் செய்திருந்தால் அதற்குப் பக்கத்தில் அதே மையில் ஒரு 2ஐயும் சேர்த்து '12' என்ற எண்ணுள்ள வேட்பாளருக்கு அந்த வோட்டை மாற்றி விடுகிற காரியத்தைக் கூடச் செய்து விடுகிறார்கள்."

"மெத்தப் படித்தவர்கள் நடத்தும் பல்கலைக் கழகத் தேர்தல்களின் லட்சணமே இதுதான் என்றால் அப்புறம் இந்த நாட்டின் பொதுத் தேர்தல்கள் மோசமாக நடப்பதைப் பற்றிக் கேட்பானேன்?"

"தலைமுறை தலைமுறையாகப் பல்கலைக் கழக 'செனட்', 'சிண்டிகேட்' உறுப்பினர் ஆவதற்கென்றே விரல் விட்டு எண்ணக் கூடிய சில குடும்பங்கள் இங்கே இருக்கின்றன. புதிய சக்திகள் - நல்ல சக்திகள் பல்கலைக் கழகங்களில் நுழைந்து விடாமல் கவனித்துக் கொள்கிறார்கள் இவர்கள்! ஆனந்தவேலுவை மதித்து வரச் சொல்லி அண்ணன் இங்கே கூப்பிட்டிருப்பதே எனக்குப் பிடிக்கவில்லை..."

"நீ கூறும் குறைபாடுகள் ஜனநாயகத்தைப் போற்றவும், நேசிக்கவும், தெரியாதவர்களிடம் ஜனநாயகம் சிக்கிக் கொண்டால் அது என்னென்ன புண்களையும், காயங்களையும் பட வேண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது பாண்டியன்! அதே தவற்றை நானும் நீயும் செய்யக் கூடாது. ஆனந்தவேலு என்னை எதற்காகப் பார்க்க வரப்போகிறார் என்று தெரியாமலே நான் அவரைக் காண மறுப்பது சரியில்லை. அவரைப் பார்க்க வரச் சொல்வதனாலேயே நான் கெட்டு விட முடியுமானால் என் கொள்கைகளின் உறுதியையே நீ சந்தேகிக்கிறாய் என்று ஆகிறது" என்று மணவாளன் பதில் கூறிய பின்பே பாண்டியன் அமைதி அடைந்தான். அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹோட்டல் மாடி வராந்தாவிலிருந்து ஆனந்தவேலுவின் 'சவர்லே - இம்பாலா' கீழே பிரதான வாயிற் காம்பவுண்டுக்குள் நுழைந்து வருவது தெரிந்தது அவர்களுக்கு.

வழக்கத்தை விட மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் ஒரு பணிவான பெரிய மனிதரைப் போல் முகம் மலரக் கை கூப்பிக் கொண்டே வந்தார் ஆனந்தவேலு. பாண்டியனை அவர் கண்டு கொள்ளாதது போல் இருக்கவே மணவாளன் அவனை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பாண்டியன் அங்கிருந்து வெளியேறினாலொழியத் தாம் பேச வந்த விஷயத்தைப் பேச முடியாது என்பது போல் ஆனந்தவேலு குளிரின் கடுமை, வியாட்நாம் யுத்தம் என்று ஏதேதோ விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தார்.

அங்கிருந்து தானாகவே எழுந்து இரண்டு முறை வெளியே வராந்தாவின் பக்கமாகப் போய் நிற்க முயன்ற பாண்டியனை, "இரு! பாண்டியன்... அப்புறம் போகலாம். இப்போதென்ன அவசரம்?" என்று மணவாளனே தடுத்து விட்டார். பாண்டியனும் அவர் குறிப்பை ஏற்று அங்கேயே இருந்து விட்டான். "பாவம்! அவரை ஏன் தடுக்கிறீர்கள்? இந்தக் காலத்தில் படிக்கிற பிள்ளைகளை ஓர் இடத்தில் கால் தரித்து உட்கார வைப்பது முடிகிற காரியம் இல்லை" என்று அங்கிருந்து பாண்டியனைப் போகச் செய்ய முயல்கிற தொனியில் குறுக்கிட்டுப் பேசினார் ஆனந்தவேலு. பாண்டியன், மணவாளன் இருவருமே விழிப்பாயிருந்து அவர் வார்த்தைகளைக் கவனித்தார்கள். சுற்றி வளைத்து வந்த காரியத்தை ஆரம்பித்தார் ஆனந்தவேலு. பசுத்தோல் விலகிப் புலி தெரியத் தொடங்கியது.

அங்கே மாணவர் மகாநாட்டுப் பந்தலுக்கு நெருப்பூட்டப் பட்டதனால் விளைந்த நஷ்டங்களுக்காக ஆனந்தவேலு வருத்தப்பட்டார். தம்முடைய நன்கொடையாக ஒரு பெருந்தொகையைக் குறிப்பிட்டு அதைத் தருவதாக வாக்களித்தார்.

உடனே மணவாளன் குறுக்கிட்டு, "உங்களுக்கு எதற்கு வீண் சிரமம். எங்களுக்குப் பணக் கஷ்டம் ஏற்பட்டது உண்மை. ஆனால் அதிலிருந்து நாங்கள் மீண்டுவிட்டோம். இப்போது எங்களுக்கு எதுவும் தேவையில்லை. உங்கள் அன்புக்கு நன்றி" என்று நாசூக்காக அவர் உதவியை மறுத்துவிட்டார். மாணவர்களுக்கு எப்போது எதற்காகப் பணமுடை வந்தாலும் தாம் உதவுவதற்குத் தயாராக இருப்பதாக மீண்டும் ஆனந்தவேலு கூறியபோது, "உங்களிடம் வந்து உங்களை சிரமப்படுத்துகிற அளவு பெரிய பணக் கஷ்டம் எங்களுக்கு எதுவும் வராது சார்!" என்றார் மணவாளன்.

"யுனிவர்ஸிடி திறந்ததும் கான்வகேஷன் வருகிறது. அதில் அமைச்சர் கரிய மாணிக்கம் பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார்... மாணவர்கள் கட்டுப்பாடாக நடந்து கொண்டு நம்முடைய யுனிவர்ஸிடியின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும். மிஸ்டர் மணவாளன்! நீங்கள் தான் இதைச் செய்ய முடியும்..."

"அமைச்சர் கரியமாணிக்கத்துக்கு டாக்டர் பட்டம் தரவேண்டும் என்று கூட 'சிண்டிகேட்'டில் முடிவு செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது..."

"ஆமாம்! அதனால் தான் உங்களைச் சந்தித்து இதை வேண்டிக் கொள்ளலாம் என்று வந்தேன். வி.ஸி. பயப்படுகிறார். நீங்கள் மனம் வைத்தால் வி.ஸி. பயப்படுகிறாற் போல் எதுவும் நடக்காமல் தடுக்க முடியும், மிஸ்டர் மணவாளன்!"

"மன்னிக்க வேண்டும் சார்! இதில் எதையும் நான் தடுக்க முடியாது. மாணவர்களுடைய முடிவுகள் 'ஸ்டூடண்ட் கவுன்ஸிலால்' செய்யப்படும். அதன்படி அவர்கள் பிரச்னையின் நியாய அநியாய அடிப்படையில் செயலாற்றுவார்கள். நன்கொடைகளின் மூலம் அவர்களை விலைக்கு வாங்கி விட முடியாது."

"நோ... நோ... நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். மிஸ்டர் மணவாளன்! அதனால் தான் இப்படிக் கோபமாகப் பதில் சொல்லுகிறீர்கள்... நான் சொல்ல வந்தது என்னவென்றால்..."

"என்னவா இருந்தாலும் பரவாயில்லை! நீங்கள் நினைப்பது நடக்காது! தயவு செய்து உடனே இந்த முயற்சியைக் கைவிடுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை" என்று அழுத்தமாக மறுமொழி கூறினார் அவர். பாண்டியன் எதுவும் பேசவே இல்லை. வந்த காரியம் நடக்காது என்று தெரிந்த பின்னும் உடனே எழுந்து போய் விடாமல் சிறிது நேரம் எதையெதையோ பேசிக் கொண்டிருந்தார் ஆனந்தவேலு. அவர் உடனே பேச்சை முறித்துக் கொண்டு புறப்படவில்லை. மேலும் பேசினார்:

"டாக்டர் பட்டம் பெற அமைச்சர் வரும்போது மாணவர்கள் எதிர்த்தால் அவர்களைப் பதிலுக்குத் தாக்குவது என்று கடுங்கோபத்தோடு இருக்கிறார் மல்லை இராவணசாமி. மாணவர்களுக்கு எதுவும் துன்பம் வரக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் தான் இங்கு வந்தேன் நான்."

"உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி! நீங்கள் சாம, தான, பேத, தண்ட முறைகளால் எங்களை மிரட்டுகிறீர்கள். இந்த நூற்றாண்டில் மிரட்டல்கள் கூட மிகவும் நாசூக்காக நடக்கின்றன. இனிய வார்த்தைகளைப் பயங்கரமான அர்த்தத்தில் குறும் மிரட்டல்களை விடப் பயங்கரமான வார்த்தைகளைப் பயங்கரமாகவே கூறிக் கொண்டு கழியும் கையுமாக எதிரே வருகிற மிரட்டலே பரவாயில்லை. ஏனெனில் அதில் ஒளிவு மறைவில்லை" என்று அவரைச் சாடினார் மணவாளன்.

"எனி ஹௌ... ப்ளீஸ் திங்க் இட் எகெய்ன்... அண்ட் டெல் மீ... ஃபார்சுனேட்லி யூ ஹாவ் எனஃப் டைம் டு திங்க்..." என்று கூறிக் கொண்டே போவதற்கு எழுந்து நின்ற ஆனந்தவேலுவை நோக்கிப் பெரிய கும்பிடாகப் போட்டு அனுப்பி வைத்தார்கள். மணவாளனும், பாண்டியனும், அவர் எதற்காகத் தேடி வந்து விட்டுப் போனார் என்பது இவ் இருவருக்கும் தெளிவாகப் புரிந்து விட்டது. மணவாளன் கேலியாகச் சிரித்தபடியே பாண்டியனிடம் கூறினார்:

"ஸோ-பட்டமளிப்பு விழாவைப் பொங்கல் விடுமுறை முடிந்து பல்கலைக் கழகம் திறந்ததுமே நடத்தப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது..."

"ஆமாம்! இனிமேல் தள்ளிப் போடமாட்டார்கள். நமது மகாநாட்டில் பேச வந்தால் அரசாங்கத்தில் கெட்ட பேர் வாங்க நேரிடுமோ என்று பயப்பட வி.சி. நேற்று மாலை மல்லை இராவணசாமியைப் பதிப்பாளராகவும் கோட்டம் குருசாமியை ஆசிரியராகவும் கொண்ட 'தீவட்டி' என்ற வார இதழை வெளியிட்டுப் புகழ்ந்து பேசியிருக்கிறார். 'தீவட்டி'யால் தான் தமிழகம் ஒளிபெற முடியும் என்று கூடத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்."

"அதுமட்டுமில்லை பாண்டியன்! இலக்கிய விழாக்களுக்கு அழைத்தால் கூட 'எனக்கு ஓய்வில்லை, என் அமைதியில் குறுக்கிடாதீர். மன்னிக்கவும்' என்று இரண்டே வாக்கியங்களைப் பதிலாக எழுதி வர மறுக்கும் நம் வீ.சி. ஆளும் கட்சியினர் நடத்தும் மூன்றாந்தரக் கூட்டங்களில் கூடப் போய் நாலாந்தரமாகப் பேசுகிறார்."

பகல் வரை அங்கேயே மணவாளனோடு இருந்தான் பாண்டியன். இரண்டே கால் மணிக்கு அண்ணாச்சி வந்தார். காலையில் எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு தன்னையும் தேடி வந்ததாக அண்ணாச்சி கூறினார். "மந்திரி வரப்ப மாணவர்கள் கலாட்டாப் பண்ணாமல் இருக்கும்படி செய்தீருன்னா உமக்கு என்ன வேணுமின்னாலும் செய்து தரேன்னு ஆசை காட்டினாரு."

"ஆண்டவன் புண்ணியத்திலே நான் நல்லாவே இருக்கேன். எனக்கு நீங்கள் எதுவுமே செய்து தர வேணாம்னு சொல்லி அனுப்பிச்சேன். 'மாணவர்களுக்கு நிறையப் பணம் தர்றேன் கான்வொகேஷன் நடக்கிறப்ப முக்கியமான மாணவர்களையெல்லாம் பிளேன் டிக்கட் வாங்கிக் கொடுத்துக் காஷ்மீருக்கு உல்லாசப் பயணம் போகச் சொல்லி அனுப்பிடலாம். நீங்களே கூட்டிக்கிட்டுப் போறதுன்னலும் போங்க'ன்னு கெஞ்சினாரு... முகத்திலே காரித் துப்பாத குறையாப் பதில் சொல்லித் தட்டி அனுப்பினேன். மனுசன் இதே வேலையா அலையறாரு" என்றார் அண்ணாச்சி. அதே தினம் மாலையில் மகாநாட்டுப் பாக்கிகளைக் கணக்குத் தீர்க்க ஆட்களை வரச்சொல்லியிருந்தார்கள் அவர்கள். மாலை ஏழு மணி வரையில் அந்த வேலை சரியாக இருந்தது. பாண்டியனையும், மணவாளனையும், அண்ணாச்சியையும் அன்று மாலையில் தம் வீட்டில் இரவு உணவுக்கு வருமாறு ஃபோன் மூலம் அழைத்திருந்தார் பேராசிரியர் பூதலிங்கம். அவர்கள் எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்கவில்லை. கண்டிப்பாக வரவேண்டும் என்றார் அவர்.

இரவு எட்டு மணி அளவில் அவர்கள் பூதலிங்கத்தின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது அவர் இவர்களை எதிர்பார்த்து காத்திருந்தார். அரை மணி நேரம் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பின் சாப்பிட உட்கார்ந்தார்கள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே பூதலிங்கம் மணவாளனை ஒரு கேள்வி கேட்டார்:

"உங்களையெலலம் இன்று எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு வந்து சந்தித்திருப்பாரே?"

"ஆமாம்! அது எப்படி உங்களுக்குத் தெரியும்?"

"அமைச்சர் வி.ஸி.க்குப் ஃபோன் பண்ணி வி.ஸி. தூது அனுப்பித்தானே ஆனந்தவேலு உங்களிடம் வந்தார்! எனக்கு நேற்றே தெரியும். நேற்றிரவு அகாலத்தில் ஆனந்தவேலு என்னைத் தேடி வந்து, 'உங்களை எல்லாம் நான் பார்த்துப் பேசிச் சரிக்கட்ட முடியுமா?' என்று கேட்டார். 'அது என் வேலையல்ல. என்னால் முடியவும் முடியாது' என்று நான் கடுமையாக மறுத்த பின்பே, அவர் புறப்பட்டுப் போனார்" என்றார் பூதலிங்கம். மணவாளனும், அண்ணாச்சியும் ஆனந்தவேலு தங்களைச் சந்திக்க வந்த அனுபவங்களைத் தனித்தனியே விவரித்தார்கள். பூதலிங்கம் அதைக் கேட்டு நகைத்தபடியே, "நன்றாக அரசாங்கத்துக்குத் தரகு வேலை பார்க்கிறார் அவர்! இவ்வளவு திறமையான வேறு தரகர் அவர்களுக்குக் கிடைக்க முடியாது" என்றார். சாப்பிட்டு முடித்த பின்பும் நீண்ட நேரம் அமர்ந்து, அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அண்ணாச்சி, ஆனந்தவேலு தன்னிடம் வந்து 'முக்கியமான மாணவர்கள் தலைவர்களை விமானத்தில் காஷ்மீருக்கு உல்லாசப் பயணம் அழைத்துக் கொண்டு போக முடியுமா?' என்று கேட்டதைச் சொல்லியபோது பூதலிங்கத்தின் சிரிப்பு அடங்க நெடு நேரமாயிற்று.

"காஷ்மீரானால் முடியாது! நூறு மாணவர்களை ஸ்விட்ஜர்லாந்துக்கு அழைத்துப் போவதானால் தான் முடியும் என்று சொல்லிப் பார்ப்பது தானே?" என்று கேலியாக வினவினார் பூதலிங்கம். மறுநாள் மாலைக்குள் அவர்கள் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதனால் பிற்பகல் பஸ்ஸில் மணவாளனும் பாண்டியனும் மதுரைக்குப் புறப்பட்டார்கள். வழியனுப்ப நிறைய மாணவர்கள் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். எல்லா மாணவர்களும் பட்டமளிப்பு விழாப் போராட்டத்தைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். பொங்கல் விடுமுறை முடிந்து பல்கலைக் கழகம் திறந்ததும் தானே மீண்டும் வருவதாகக் கூறி விடைபெற்றார் மணவாளன். பாண்டியனும் நண்பர்களிடம் அதையே கூறினான்.

அன்றிரவு மதுரையில் மணவாளனோடு தங்கிவிட்டு மறுநாள் பகலில் பாலவநத்தம் போக முடிவு செய்திருந்தான் பாண்டியன். மறுநாள் காலை அவன் சித்திரக்காரத் தெருவுக்குப் போய்க் கண்ணுக்கினியாளைச் சந்தித்தான். அவன் போன போது கந்தசாமி நாயுடு, அவர் மனைவி, மகள் கண்ணுக்கினியாள் எல்லோருமாகச் செவ்விள நீர்க் கொத்து, பூக்குடலை, தேங்காய் பழம் சகிதம் வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வாசலில் ஒரு டாக்ஸி தயாராக நின்று கொண்டிருந்தது.

"நீயும் வாயேன் தம்பீ! வண்டியூர்த் தெப்பக்குளம் வரையில் போயிட்டு வரலாம். ஒரு பிரார்த்தனை இருக்கு. பகல் சாப்பாட்டுக்கு இங்கே திரும்பிடலாம்..." என்றார் நாயுடு. 'மறுத்துவிடாமல் வாருங்கள்' என்று கண் பார்வையாலேயே அவனைக் கெஞ்சினாள் கண்ணுக்கினியாள். அவன் பகல் உணவுக்குள் மணவாளன் வீட்டுக்குத் திரும்பி வருவதாகச் சொல்லியிருந்தான். ஆனாலும் நாயுடுவின் வேண்டுகோளையும், கண்ணுக்கினியாளின் ஆசையையும் தட்ட முடியாமல் அவன் அவர்களோடு செல்லும்படி ஆகிவிட்டது. போகும் போது அவன் கண்ணுக்கினியாளிடம் தனியாக எதுவும் பேச முடியவில்லை. நாயுடுதான் அண்ணாச்சியின் சௌக்கியம் பற்றியும் மகாநாட்டுப் பந்தலில் தீப்பிடித்தது பற்றியும் இரண்டொரு கேள்விகளைக் கேட்டார். மாரியம்மன் தெப்பக்குளம் போய்ச் சேர்ந்ததும் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாயுடுவிடம் சொல்லிக் கொண்டு படகில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள் அவர்கள். அவள் கைகளை இன்னும் அதே சாதாரண வளைகள் மட்டும் அலங்கரிப்பதைப் பார்த்த அவன், "நாயினாவோ, அம்மாவோ ஒண்ணும் கேட்கலியா?" என்றான். படகில் பலரும் இருந்ததால் அவர்கள் தங்களையே கூர்ந்து கவனித்து விடாத வகையில் பொதுவாகப் பேசிக் கொண்டர்கள் அவர்கள். அவள் பதில் சொன்னாள்: "கேட்டாங்க. திருடு போயிடிச்சுன்னு பொய் சொன்னேன். பொய் என்ன? நெஜமும் அதுதானே? வளை, மோதிரம், செயின் எல்லாத்தையும் திருடி, மனசையும் திருடி...?"

அவன் அவளை முறைத்துப் பார்த்தான்.

"வளை, மோதிரம், செயின் எல்லாத்தையும் வேணாத் திருப்பித் தந்திடலாம். ஆனால் நீ கடைசியாகச் சொன்னதை மட்டும் திருப்பித் தர முடியாது."

"பட்டமளிப்பு விழா என்ன ஆச்சு? எப்ப நடக்கும்? மாணவர்கள் என்ன செய்யிறதா முடிவு பண்ணினீங்க?..." என்று மெல்லப் பேச்சை மாற்றினாள் அவள். அந்த விவரங்களையெல்லாம் அவளிடம் சொன்னான் அவன்.

மைய மண்டபத்தின் நடுவில் இருந்த கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார்கள் அவர்கள். ஓரிடத்தில் படியில் விழுந்து விடுவது போல் தள்ளாடிய அவளைத் தன் கைகளால் தழுவினாற் போல் தாங்கிக் கொண்டான் அவன். "விடுங்க... இதென்ன... விளையாட்டு...?" என்று செல்லமாகச் சிணுங்கிய அவளை, "அது என்ன விளையாட்டு என்று பரீட்சைக் கேள்வி மாதிரிக் கேட்டால் எப்படிப் பதில் சொல்ல முடியும்? இதுதான் விளையாட்டு! விளையாட வேண்டிய விளையாட்டு" என்று பதில் சொல்லியபடியே அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் அவன். கீழேயிருந்த படிகளில் மேலும் சிலர் ஏறி வரும் ஓசை கேட்கவே அவள் அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு, "வருபவர்கள் வாழ்க!" என்றாள் "அவர்கள் வீழ்க!" என்றான் அவன். தங்கள் தனிமையைக் கெடுத்த அவர்கள் மேல் கோபம் வந்தது அவனுக்கு. மைய மண்டபக் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்த போது மேற்கே கோபுரங்களும், மதுரை நகரமும், திருப்பரங்குன்றமும் மிக மிக அழகாகத் தெரிந்தன.

"உயரத்திலிருந்து பார்த்தால் எதுவுமே அழகாகத் தெரிகிறது."

"ஆனால் சிலரால் உயரத்தில் வந்தும் அழகைப் பார்க்கவே முடியவில்லை. உயரத்தில் வந்ததும் அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்கிறார்கள் சிலர்" என்று அருகே ஏறி வந்து கொண்டிருந்த நாலைந்து பேரை அவளிடம் சுட்டிக்காட்டி குறும்பு நகை புரிந்தான் அவன்.

முப்பத்து ஆறாவது அத்தியாயம்

அவர்கள் எல்லாரும் வண்டியூர் மாரியம்மன் கோவிலிலிருந்து திரும்பும் போது பகல் ஒன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. மணவாளன் வீட்டில் பகல் உணவுக்குத் திரும்பி வருவதாகச் சொல்லியிருந்தும் பாண்டியனால் அங்கே போக முடியவில்லை. நாயுடுவும் கண்ணுக்கினியாளும் அவள் தாயும் வற்புறுத்தி அவனைத் தங்கள் வீட்டிலேயே சாப்பிடச் செய்து விட்டார்கள். சாப்பிட்டு முடிந்தவுடன் கூட நாயுடு அவனை உடனே போக விடவில்லை. சிறிது நேரம் இருக்கச் சொன்னார்.

"இப்போ என்ன அவசரம் அப்படி? உண்ட வீட்டில் இரண்டு நிமிஷம் உட்காராமல் போகக் கூடாதும்பாங்க... இரு... போகலாம்" என்றார் அவர். அவனாலும் மறுக்க முடியவில்லை.

பகல் இரண்டரை மணி பஸ்ஸில் ஊருக்குப் புறப்பட எண்ணியிருந்த அவன் சித்திரக்காரத் தெருவில் கண்ணுக்கினியாளின் வீட்டிலிருந்து புறப்படும் போதே இரண்டரை மணி ஆகிவிட்டது. அவன் மணவாளனின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது அங்கே மணவாளனின் உறவினரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும் ஆகிய ஒருவர் வந்திருந்தார். அந்த முதியவருக்குப் பாண்டியனை அறிமுகம் செய்து வைத்தார் மணவாளன். இளைஞர் இயக்கங்கள், மாணவர்கள் போராட்டங்கள் பற்றித் தம்முடைய கருத்தை அந்த முதியவர் மனம் திறந்து கூறினார். முதியவரானாலும் அவர் மனம் இளமையாக இருந்தது.

"இட்ஸ் ஆல் தட் தி யூத் கேன் டூ ஃபோர் தி ஓல்ட் - ட்டு ஷாக் தெம் அண்ட் கீப் தெம் அப் டு டேட்" என்று பெர்னார்ட் ஷா கூறியிருப்பதைச் சிரித்துக் கொண்டே சொன்னார் அவர். அதைக் கேட்ட அவர்களும் சிரித்தனர்.

"முதியவர்களுக்கு அதிர்ச்சியளிக்கவும், அவர்களை அப்-டு-டேட்டாக இருக்கச் செய்யவுமாவது எங்களால் முடியும் என்று நீங்கள் கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று மணவாளன் அவர்களுக்கு மறுமொழி கூறினார். பிற்பகல் நான்கு மணி வரை அவர்கள் எல்லாருமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மாணவர்கள் - கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பற்றிய பிரச்சினைகளே பெரும்பாலும் பேச்சில் இடம் பெற்றன. துணைவேந்தர்களாக வருகிறவர்கள் பதவி நீடிப்பை எண்ணி அரசாங்கத்தின் தாசானுதாசர்களாகி விடுவதைக் கண்டித்தார் அந்த முதியவர்.

நாலரை மணிக்கு மணவாளனின் குடும்பத்தினரிடம் விடை பெற்றுக் கொண்டு அந்த முதியவர் புறப்பட்டுப் போன பின் பாண்டியனும் பஸ் நிலையத்துக்குப் புறப்பட்டான். மணவாளனும் அவரைப் பார்க்க அப்போது தான் வந்த உள்ளூர் மாணவர்கள் சிலரும் இரயில்வே மேம்பாலத்து வழியே 'வாக்கிங்' போக இருந்தார்கள். போகிற வழியில் பஸ் நிலையத்தில் பாண்டியனை வழி அனுப்பி விட்டுப் போனார்கள் அவர்கள். போனதும் ஏறிப் புறப்படுகிறாற் போல் விருதுநகர் பஸ் தான் தயாராயிருந்தது. அசதி காரணமாக பஸ்ஸில் அவன் நன்றாகத் தூங்கி விட்டான். விருதுநகர் வந்ததும் யாரோ எழுப்பினார்கள். இறங்கி பஸ் மாறிக் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்த போது அப்படியும், இப்படியுமாக இரவு எட்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது. பாலவநத்தம் கிராமம் எட்டு மணி அளவிலேயே உறங்கியிருந்தது. இரவிலும் காலதாமதமாக உறங்கி விடியலிலும் காலதாமதமாக எழும் நகரங்களை விட இரவில் விரைவாக அடங்கி அதிகாலையிலும் விரைவாக எழும் இந்தியாவின் கிராமங்கள் பரவாயில்லை என்று பெருமைப்படலாம் போலிருந்தது. அவன் போன போது வீட்டில் எல்லோரும் உறங்கியிருந்தார்கள். ஆத்தாளை எழுப்பி ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி முடித்து விட்டு அவனும் படுக்கச் சென்றான். காலையில் அவன் எழுந்திருந்து திண்ணைப் பக்கம் வந்த போது அவனுடைய தந்தையும் பக்கத்து வீட்டுச் சன்னாசித் தேவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். "ஏண்டா பொங்கலுக்கு வந்ததுதான் வந்தே. லீவு விட்டதுமே புறப்பட்டு வரப்படாது? கூட ஒரு வாரம் இருக்கலாமே? வேலை மெனக்கெட்டுப் போயி மூணு நாளைக்காகப் பஸ்காரனுக்குப் பணம் செலவழிச்சிருக்கிறாயே?" என்றார் தந்தை. "இந்தக் காலத்துப் புள்ளைங்க அப்பிடியெல்லாம் யோசிக்கிற வழக்கமே கிடையாது சுப்பையாத் தேவரே! ஆயிரம் பத்தாயிரம்னு செலவழிச்சு மகாநாடு அது இதுன்னு போட்டுக்கிட்டிருக்கான் உம்ம பையன்! அவங்கிட்டப் போயிப் பதினைஞ்சு ரூபாய் செலவைப் பெரிசாச் சொல்லி வருத்தப்படறீரே நீரு?" என்று குறுக்கிட்டு வம்பு மூட்டினார் சன்னாசித் தேவர். அங்கே மேலும் நின்றால் சன்னாசித் தேவர் ஏதாவது வாயைக் கிண்டுவார் என்று தயங்கிய பாண்டியன் வாயிற் புறத்து வேப்ப மரத்தில் ஒரு குச்சி ஒடித்துக் கொண்டு பல்விளக்கக் கிணற்றடிக்குப் போனான்.

மறுநாள் போகி, அடுத்த நாள் பொங்கல், அதற்கடுத்த நாள் மாட்டுப் பொங்கல், மூன்று நாட்களையும் கழித்துவிட்டு எப்போது மறுபடி மதுரை போய்ச் சேருவோம் என்று தவிப்பாயிருந்தது அவனுக்கு. அவன் கொல்லைப்புறம் கிணற்றடிக்குச் சென்ற போது அய்யாவு மாட்டுக் கொட்டத்துக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்தான். பத்து நிமிஷங்களுக்குப் பின் அவன் கிணற்றடியிலிருந்து மீண்டும் வாயிற்புறம் வந்த போது கிராமத்து இளைஞர்கள் பத்துப் பன்னிரண்டு பேர் அவனைப் பார்ப்பதற்காக வந்து காத்திருந்தார்கள். பாண்டியன் அவர்களை வரவேற்றான். "பாலவநத்தம் இளைஞர் தமிழ் மன்றத்தின் சார்பாகப் பொங்கல் விழா நடத்தவும், ஒரு கவியரங்கம் அமைக்கவும் ஏற்பாடு செய்துகிட்டிருக்கோம்! அண்ணனும் அதில் கலந்துக்கிடணும்" என்று வேண்டினார் அவர்களில் ஓர் இளைஞர். "'தமிழ் வளர்த்த வள்ளல்கள்' என்பது கவியரங்கத்தின் தலைப்பு. நீங்க யாரைப் பற்றிப் பாடப் போறீங்க?" என்று அவர்கள் கேட்ட போது "நான் பாண்டித்துரைத் தேவரைப் பற்றிப் பாடறேன்" என்றான் பாண்டியன்.

"இல்லே! நாங்க எல்லோரும் இந்தக் காலத்துப் பிரமுகர்களைப் பற்றித்தான் பாடப்போறோம். நீங்களும் இந்தக் காலத்துப் பிரமுகர் யாரையாவது பற்றிப் பாடுங்களேன்" என்று கேட்டார் அந்த இளைஞர்களில் ஒருவர்.

"நீங்க தமிழை வளர்த்தவர்களைப் பற்றித்தான் கவியரங்கம்னு சொன்னீங்க. அதனாலே தான் நான் பாண்டித்துரைத் தேவரைப் பற்றிப் பாடறேன்னு சொன்னேன். நீங்கள் 'தமிழாலே வளர்ந்த'வங்கன்னு தலைப்பை மாற்றிக் கொண்டால் நான் இந்தக் காலத்திலே இருக்கிற யாரைப் பற்றியும் பாடலாம்" என்று உடனே அந்த இளைஞருக்கு மறுமொழி கூறினான் பாண்டியன். இதைக் கேட்டு அந்த இளைஞர்களில் பலர் சிரித்து விட்டார்கள். அவர்கள் பேசிவிட்டுப் போன பின் பக்கத்து வீட்டுச் சன்னாசித் தேவர் அவனைக் கூப்பிட்டுத் தம் அருகே உட்காரச் சொன்னார். அப்படி அவர் கூப்பிட்ட போது பாண்டியனின் தந்தை திண்ணையிலிருந்து உள்வீட்டுப் பக்கமாக எழுந்து போயிருந்தார். "தம்பீ! நாளன்னைக்கு நம்ம தலைவரு ஒருத்தர் இங்கே வரப் போறாரு. அவர் உன்னையும் சந்திச்சுப் பேசணும். பகல்லே எங்கேயும் போயிட மாட்டியில்ல...? வீட்டிலே தானே இருப்பே?" என்று கேட்டார் சன்னாசித் தேவர். பாண்டியன் பதில் சொல்லத் தயங்கினான். சன்னாசித் தேவரின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை அவனால் உடனடியாக அநுமானம் பண்ணிவிட முடியாமலிருந்தது. சிறிது விழிப்பு உணர்ச்சியடைந்த மனநிலையுடன், "யாரு வாராங்க? நான் ஏன் அவரைப் பார்க்கணும்னு முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா நல்லது" என்று சன்னாசித் தேவரைக் கேட்டான் பாண்டியன். "அதையெல்லாம் பத்தி இப்ப என்ன தம்பீ? நீ அவரைச் சந்திச்சுப் பேசணும்னு நான் ஆசைப்படறேன் அவ்வளவுதான்."

"சந்திக்கிறதைப் பற்றி ஒண்ணுமில்லே... ஆனா அது எதுக்குன்னு தெரியணும்."

"அதெல்லாம் இப்பக் கேட்காதே தம்பீ! அவரு நாளன்னைக்குப் பகல்லே இங்கே வாராரு. நீ அவரைப் பார்க்கிறே" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் சன்னாசித் தேவர். பாண்டியனுக்கு அந்த விஷயம் பெரும் புதிராயிருந்தது. சந்தேகமாகவும் இருந்தது. சன்னாசித் தேவரின் சார்புகளும் விருப்பு வெறுப்புக்களும் அவனுக்கு நன்கு தெரியுமாகையால் தான் அவன் அதைப் பற்றிச் சந்தேகப்பட்டான். அடுத்த நாள் காலையிலே மறுபடியும் இதை நினைவூட்டினார் சன்னாசித் தேவர். மறுநாள் காலையில் பொங்கல் விழாக் கவியரங்கம் முடிந்து அவன் வீடு திரும்பியதும் தந்தையோடு சேர்ந்து உட்கார்ந்து வீட்டில் பண்டிகைச் சாப்பாடு சாப்பிட்டான். சாப்பிட்டு முடிந்ததும் தந்தையும், வேலையாள் அய்யாவுவும் மாட்டுப் பொங்கலுக்காகக் கொட்டத்தில் உள்ள மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசப் போய்விட்டார்கள்.

"ஐயா வந்திட்டுப் போகச் சொன்னாங்க" என்று அப்போது சன்னாசித் தேவர் மகள் கருப்பாயி வந்து கதவோரமாக நின்று அவனைக் கூப்பிட்டாள்.

"ஏ கருப்பாயி! அதென்ன வாசப் புறமா நின்னே சொல்லிப்பிட்டு ஓடப் பார்க்கிறே? உங்க வீட்டுக்கு வழி அண்ணனுக்குத் தெரியும். நீ உள்ளார வந்திட்டுப் போ!" என்று பாண்டியனின் தங்கை மாரியம்மாள் அவளை உள்ளே கூப்பிட்டாள். தானும் தந்தையும் சாப்பிட்டு முடித்த பின் தாயும் தங்கையும் சாப்பிடும் போது அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பாண்டியன் தன்னைத் தான் கருப்பாயி கூப்பிடுகிறாள் என்று தெரிந்ததும், "உண்ட கிறக்கம். கொஞ்சம் தூங்க விடாம நீ கூப்பிட வந்திட்டியாக்கும்?" என்று கேட்டுக் கொண்டே புறப்பட்டான். சன்னாசித் தேவர் வீட்டுக் கூடத்தில் ஆளும் கட்சியின் மாணவர் இயக்கப் பிரமுகர் ஒருவர், உள்ளூர் நண்பர்கள் சூழ அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததுமே, பாண்டியனுக்கு அங்கே என்ன நடக்கும் என்பதை அனுமானித்துக் கொள்ள முடிந்தது. எல்லாருமே மிகவும் பிரியமாகவும், அன்பாகவும் பாண்டியனை வரவேற்றார்கள். பிரமுகர் அவனோடு பேசலானார்.

"இன்று காலையில் இங்கே நடந்த கவியரங்கத்தில் நீங்கள் பாடிய கவிதை ரொம்ப நன்றாயிருந்ததாக எல்லாருமே இவ்வளவு நேரம் பாராட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கும் மகிழ்ச்சியாயிருந்தது."

இதைக் கேட்டுப் பாண்டியன் சிரித்துக் கொண்டே வேறெதுவும் பேசாமல் இருந்து விட்டான்.

"பல்கலைக் கழகம் என்றைக்குத் திறக்கிறது? எப்போது நீங்கள் ஊர் திரும்பப் போகிறீர்கள்?"

"நான் நாளை மாலைக்குள் இங்கிருந்து மதுரை புறப்பட்டு விடுவேன். அங்கே ஒருநாள் தங்கிவிட்டு அப்புறம் நேரே மல்லிகைப் பந்தலுக்குப் போவேன். இந்தத் தடவை விடுமுறை நாட்களே குறைந்துவிட்டன. அநேகமாக நான் போன மறுநாளே பல்கலைக் கழகம் திறக்கிற தினமாக இருக்கும்."

"உங்கள் நண்பர் மாணவர்களின் தலைவர் - மணவாளன் எப்படி இருக்கிறார்?"

"அடேடே! மணவாளனை உங்களுக்குத் தெரியுமா?"

"எதிரெதிர் முகாம்களில் இருந்தாலும் அவரை நான் மதிக்கிறேன். அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன்."

பாண்டியன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அந்தப் பிரமுகர் மெல்ல மெல்லத் தாம் வந்த காரியத்தை நினைவு கூர்ந்தவராய் மீண்டும் அவனிடம் பேசத் தொடங்கினார்.

"நேற்றுத் தான் சன்னாசித்தேவர் 'டிரங்கால்' போட்டுச் சொன்னார். உங்களைப் பற்றி ரொம்ப நம்பிக்கையோடு புறப்பட்டு வந்திருக்கிறேன்."

"... தேவர் உங்களிடம் 'டிரங்காலில்' என்ன சொன்னாரென்று எனக்குத் தெரியாது. நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அவரும் உங்களோடு ஃபோனில் பேசியதை என்னிடம் சொல்லவில்லை. நீங்கள் வரப் போகிறீர்கள், சந்திக்க வேண்டும் என்று மட்டும் தான் என்னிடம் சொன்னார்."

"பரவாயில்லை! மற்றதை நேரில் சொல்லத்தான் இப்போது நானே வந்துவிட்டேனே. தேவர் எங்கள் அணியில் இருக்கிறார். அவர் எங்கள் அன்புக்குரியவர். அவருக்குப் பக்கத்து வீட்டுக்காரரின் புதல்வராகிய நீங்களும் எங்கள் அன்புக்குரியவர்... உங்களை மிகவும் நம்பிக்கைக்குரியவராக நாங்கள் கருதுகிறோம்."

"அப்படிக் கருதாவிட்டாலும் நான் அதற்காக வருந்த மாட்டேன்..."

"அவசரப்படாதே தம்பீ! ஐயா சொல்றதைப் பொறுமையாகக் கேட்டுக்க" என்று சன்னாசித் தேவர் குறுக்கிட்டார். அவன் அந்தப் பிரமுகரது முகத்தை முறித்தாற் போலப் பேசத் தொடங்கியது தேவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

"மாணவர் போராட்டம் அது இதுன்னு நீங்க தீவிரமாயிருக்கிறதனாலே உங்க எதிர்காலம் பாதிக்கப் படுகிறது, உங்களுக்குத் தெரியுமா? நீங்க கொஞ்சம் நடுநிலையா விலகி இருக்கணும். அதனாலே உங்களுக்கு அதிக நன்மை உண்டு."

"எது நடுநிலை? நன்மைக்கும் தீமைக்கும் நடக்கிற போரில் இரண்டிற்கும் நடுவே நிற்பது நடுநிலைமை இல்லை. அது கையாலாகாத்தனம். தீமையைச் சாராமல் நன்மையின் பக்கம் சார்ந்து நிற்பதே நடுநிலை. இன்று இந்த நாட்டில் நடுநிலை என்ற பதமே பிழையான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. போர்க்களங்களில் நடுநிலைக்கு இடமே இல்லை. தீயவர்களை எதிர்க்கும் போரில் நல்லவர்கள் பக்கம் நிற்பதுதான் நடுநிலை."

"தம்பி பொருளாதார மாணவராயிருந்தும் உங்களுக்கு இவ்வளவு நல்ல தமிழறிவு இருப்பதை நான் பாராட்டுகிறேன். மிக அருமையாக விவாதிக்கிறீர்கள்..."

"அதெல்லாம் இருக்கட்டும்! என்னைக் கூப்பிட்டனுப்பிய காரியத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். எனக்கு வேறு வேலை இருக்கிறது. நான் போக வேண்டும்..."

"பொங்கல் விடுமுறை முடிந்ததும் ஒரு நாள் பல்கலைக் கழகத்துக்குப் போய் அட்டெண்டண்ஸ் கொடுத்துவிட்டு அப்புறம் லீவு எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள். நீங்கள், நான், தேவர் எல்லாருமாகக் காஷ்மீர் வரை ஓர் உல்லாசப் பயணம் போய் வரலாம்."

"உங்களை எனக்குப் புரிகிறது. ஆனால்...?"

"என்ன புரிகிறது அப்படி?"

"எல்லாமே நன்றாகப் புரிகிறது! நீங்கள் யாரால் எதற்காக அனுப்பப்பட்டு இங்கே வந்திருக்கிறீர்கள் என்றெல்லாம் புரிகிறது. ஏற்கெனவே பலர் எங்களிடம் இப்படி முயற்சிகளைச் செய்து பார்த்த பின்பு தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் முயற்சி பலிக்காது. பட்டமளிப்பு விழாவன்று எல்லா மாணவர்களும் மல்லிகைப் பந்தலில் தான் இருப்போம். எங்களுடைய எதிர்ப்பையும் அமைச்சருக்குத் தெரிவிப்போம்."

"வீண் முரண்டு பிடித்துப் போலீஸ்காரர்களிடமும் எங்கள் கட்சி ஆட்களிடமும் சிக்கித் துன்புறப் போகிறீர்கள்! சுருக்கமாக இவ்வளவு தான் உங்களை எச்சரிக்க முடியும்."

"சுருக்கமாக எச்சரித்தாலும், விரிவாக எச்சரித்தாலும் உங்களுக்கு என் பதில் இதுதான். நீங்கள் எங்களை விலைக்கு வாங்கிவிட நாங்கள் கோழைகள் அல்ல."

"நீங்கள் என்னோடு இன்றே புறப்பட்டு வந்தால் சென்னையில் அமைச்சர் கரியமாணிக்கத்தையே சந்தித்து இது விஷயமாகப் பேசலாம். அவர் மாணவர்களை உயிரினும் உயிராக மதிக்கிறவர்."

"அவர் மற்றவர்களை எப்படி மதிக்கிறவர் என்பது எங்களுக்குப் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எங்களில் பலர் அவரால் நிறையத் துன்பங்களை அனுபவித்து விட்டோம்."

"உங்கள் முடிவான பதில் இதுதானா? இதற்குத்தானா நான் முந்நூற்றைம்பது மைல் பயணம் செய்து ஆவலாக இங்கே ஓடிவந்தேன்?"

"தெரிந்திருந்தால் நானே உங்களை வரவேண்டாம் என்று சொல்லியிருப்பேன். நீங்கள் என்னைப் பார்ப்பதற்காகவே வருவதாகத் தேவரும் என்னிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் தடுத்திருக்கலாம்."

அவன் எழுந்திருந்து வெளியே வந்துவிட்டான். சன்னாசித் தேவர் கூடவே வாயில் வரை ஓடி வந்து, "இத்தினி பெரிய மனுசன் காரிலே மெட்ராசிலேயிருந்து புறப்பட்டு வந்திருக்கான். கொஞ்சம் இரக்கம் வேணும் தம்பீ!" என்று கெஞ்சினார். பாண்டியன் நிற்கவில்லை. அவன் தன் வீட்டுக்குள் போய் நுழைந்ததும், "பக்கத்து வீட்டு தேவரு ஏன் கூப்பிட்டாராம்?" என்று கேட்டாள் தாய்.

"அது வேறு விஷயம். உனக்குப் புரியாதும்மா!" என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டுக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் அவன். சிறிது நேரம் கழித்து அவனுடைய தந்தையும், சன்னாசித் தேவருமாகச் சேர்ந்து அந்த ஆளும் கட்சிப் பிரமுகருடன் வந்து அவனை மீண்டும் நிர்பந்தப் படுத்தினார்கள். அவன் மசியவில்லை. பொங்கலுக்கு அங்கே வந்திருக்கவே வேண்டாம் என்று அப்போது தோன்றியது அவனுக்கு. மாலையில் விருதுநகருக்குப் போய் அங்கே ஒரு தேசிய நண்பரின் வீட்டிலிருந்து மதுரைக்கு ஃபோன் செய்து மணவாளனிடம் பேசினான் பாண்டியன். மணவாளன் சொன்னார்: "எப்படியாவது பட்டமளிப்பு விழா அமைதியாக நடந்து டாக்டர் பட்டத்தைக் கரகோஷங்களுக்கிடையே வாங்கிவிட வேண்டும் என்ற தவிப்பில் அமைச்சர் கரியமாணிக்கம் நாலா புறமும் ஆட்களை ஏவியிருக்கிறார். எந்த எல்லை வரை முயல முடியுமோ அந்த எல்லை வரை முயன்று பார்க்கிறார்கள். நீ சீக்கிரம் புறப்பட்டு இங்கே வந்து விடு! கிராமத்தில் இன்னும் யாராவது தேடி வந்து உன்னை வற்புறுத்தவோ, பயமுறுத்தவோ செய்தால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். இனி இங்கே எதுவும் நடக்கும்."

உடனே அவனும் மறுநாள் மாட்டுப் பொங்கலன்று பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்டு வந்து விடுவதாக அவரிடம் தெரிவித்து விட்டு ஃபோனை வைத்தான். ஆனால் மாட்டுப் பொங்கலாகிய மறுநாள் காலையே அவனுக்கு மல்லிகைப் பந்தலிலிருந்து எதிர்பாராத விதமாக ஒரு தந்தி கிடைத்தது. அந்தத் தந்தி மல்லிகைப் பந்தலில் முதல் நாள் இரவு பதினொரு மணிக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. 'அண்ணாச்சியைப் போலீஸார் கைது செய்திருப்பதாகவும் - அவன் உடனே புறப்பட்டு வர வேண்டும்' என்றும் தந்தி வாசகம் இருந்தது. அவன் அந்தத் தந்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தான். அவனால் அதை நம்ப முடியாமல் இருந்தது. மாணவர்களிடையே சில வேளைகளில் குறும்புக்காகவும், வம்புக்காகவும் பொய்த் தந்திகள் கொடுத்து அலைக்கழிக்கும் பழக்கம் உண்டு. தமிழ் மன்றத்தின் சார்பில் பேச அழைக்கப்படும் ஒரு பேச்சாளரை - அந்தப் பேச்சாளரைப் பிடிக்காத வேறு சில மாணவர்கள், 'ஃபங்ஷன் போஸ்ட்ஃபோண்டு' என்று பொய்த் தந்தி கொடுத்து வரவிடாமல் செய்துவிடுவது போன்ற காரியங்கள் சகஜமாக நடப்பது உண்டு. ஆனால் அண்ணாச்சி விஷயத்தில் அப்படி யாரும் பொய்த் தந்தி கொடுத்திருக்க முடியாது என்பதிலும் பாண்டியன் நம்பிக்கை கொள்ள வேண்டியிருந்தது. தந்தியில் அதைக் கொடுத்தவர் பெயரும் இருந்தது. தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியனின் செயலாளர் ஒருவர் தந்தியைக் கொடுத்திருந்ததால் அதை அவ்வளவு சுலபமாக புறக்கணித்து விடவும் முடியவில்லை. ஒரு வேளை தோட்டத் தொழிலாளர் யூனியனின் செயலாளருடைய பெயரை வைத்துத் தந்தி கொடுத்தால் தான் நம்பிக்கை இருக்கும் என்று அவர் பெயரைப் பயன்படுத்தி விஷமிகள் யாராவது பொய்த் தந்தியை கொடுத்திருக்கக் கூடுமோ என்றும் சந்தேகமாயிருந்தது.

"என்னடா அது! என்ன தந்தி?" என்று தந்தியைப் பற்றி விசாரித்தார் அவன் தந்தை. தாயும் அதே கேள்வியோடு நிலைப்படியருகே வந்து தயங்கி நின்றாள். அவர்களிடம் தந்தியிலிருப்பதை அப்படியே கூறாமல், "ஒண்ணுமில்லை. ஒரு நெருங்கிய சிநேகிதனுக்கு உடம்பு சொகமில்லே. அதைப் பற்றி வந்திருக்கு. ரொம்ப வேண்டியவன். நல்லவன். உடனே புறப்பட்டுப் போகணும்" என்று மாற்றிச் சொல்லிவிட்டுப் போகப் புறப்பட்டான் அவன். நல்லவேளையாக அவனுடைய அவசரத்துக்கு ஏற்றாற் போல் விருதுநகரிலிருந்து எக்ஸ்பிரஸ் பஸ்ஸே கிடைத்ததனால் விரைவாக மதுரைக்குப் போய்ச் சேர்ந்து விட முடிந்தது. மதுரையை அடைந்ததும் நேரே மணவாளனின் வீட்டுக்குத் தான் போனான் அவன். மணவாளனின் தந்தைதான் வீட்டு முகப்பில் அவன் போன போது வரவேற்பறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அவனை வரவேற்று முகமலர்ந்த அவரிடம், தந்தியைக் குறிப்பிட்டு அவன் சொல்லியவுடன்,

"ஆமாம்! அதே தந்தி இங்கேயும் இராத்திரி மூன்று மணிக்கே கிடைச்சு உடனே ஒரு டாக்சி ஏற்பாடு பண்ணிக் கொண்டு மணவாளன் புறப்பட்டுப் போயாச்சே" என்றார் அவர். அவரிடம் சொல்லிக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்குப் போவதற்காக மீண்டும் பஸ் நிலையத்துக்கே திரும்பினான் பாண்டியன். அப்போதிருந்த கவலையிலும், அவசரத்திலும், பரபரப்பிலும் சித்திரக்காரத் தெருவுக்குச் சென்று கண்ணுக்கினியாளிடம் அந்தத் தகவலைக் கூற வேண்டும் என்று கூட அவனுக்குத் தோன்றவில்லை. எப்படியும் இயல்பாகவே அவள் இன்னும் இரண்டு நாட்களில் யுனிவர்ஸிடி திறக்கிற தினத்தன்று மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிடுவாள் என்பதனால் அவன் மட்டும் அன்றைக்கு அவசரமாகப் புறப்பட்டான்.

முப்பத்து ஏழாவது அத்தியாயம்

பல்கலைக் கழக விடுமுறையில் மாணவர்கள் மகாநாடு நடந்து முடிந்த போதே பொறாமையும் கடுங் கோபமும் அடைந்திருந்த மல்லை இராவணசாமியின் கட்சியினர், பழிவாங்கிடத் துடித்துக் கொண்டிருந்தனர். மகாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்த பின்பும் அவர்கள் சினம் ஆறவில்லை. மகாநாடு பிரமாதமாக நடந்து முடிந்த பின்பு தானே பந்தலுக்குத் தீ வைக்க முடிந்தது என்ற மனத்தாங்கலுடனும் அதைவிட அதிகமாகப் பழிவாங்கும் சினத்துடனும் காத்திருந்தார்கள் அவர்கள். மல்லை இராவணசாமி கட்சியினரின் எல்லாக் கோபமும், ஆத்திரமும் அண்ணாச்சியின் மேல் திரும்பியிருந்தன. எப்படியாவது அண்ணாச்சியைப் போலீஸ் கேஸ் எதிலாவது மாட்டி வைத்து உள்ளே தள்ளிவிடத் துடித்தார்கள் அவர்கள். மகாநாடு முடிந்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் மணவாளனும், பாண்டியனும் கூட மதுரை சென்று விட்டவுடன் இராவணசாமியின் ஆட்கள் அண்ணாச்சியைப் பழிவாங்கச் சமயம் வாய்த்தது. மேலிடத்திலிருந்து ஏற்பாடு செய்து கதிரேசன் குழுவினரோடு தொடர்பு படுத்திப் பொய்யாக ஏதோ குற்றம் சாட்டிப் பொங்கல் பண்டிகை தினத்தன்று மாலை அண்ணாச்சியைக் கைது செய்து ரிமாண்டில் வைத்திருந்தார்கள் போலீஸார். அமைச்சர் கரியமாணிக்கம் டாக்டர் விருது பெறுகிற பட்டமளிப்பு விழா வருவதற்கு முன்னரே முக்கியமானவர்களை யெல்லாம் இப்படிக் கைது செய்து உள்ளே தள்ளிவிட ஏற்பாட்டின் முதற்படியாக அண்ணாச்சியை உள்ளே தள்ளியிருந்தார்கள். முதலில் பூதலிங்கத்துக்குத்தான் அண்ணாச்சி கைதான செய்தி தெரிந்தது. அவரே தந்தி கொடுத்து மணவாளனையும் பாண்டியனையும் வரவழைப்பதற்காக மல்லிகைப் பந்தல் தந்தி அலுவலகத்துக்குப் போன போது அங்கே தமக்கு முன்பாகவே தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் செயலாளர் தந்தி கொடுக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து யாராவது ஒருவர் தந்தி கொடுத்தால் போதும் என்ற எண்ணத்தில் தாம் தந்தி கொடுப்பதை நிறுத்திக் கொண்டார். பூதலிங்கமும், தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் செயலாளரும் தந்தி அலுவலகத்திலிருந்து திரும்பும் போது காரணமில்லாமல் சும்மா மிரட்டுவதையே நோக்கமாகக் கொண்டு அண்ணாச்சியைக் கைது செய்திருப்பது பற்றி வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டே ஒரு வக்கீல் வீட்டுக்குப் போய் அண்ணாச்சியை ஜாமீனில் விடுவிப்பது பற்றிக் கலந்தாலோசித்தார்கள். வக்கீல் விடிந்ததும் அந்த முயற்சியைச் செய்து பார்க்கலாம் என்றார்.

மறுநாள் காலையில் விடிந்ததும் எட்டு எட்டரை மணிக்கு மணவாளன் மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்து விட்டார். அண்ணாச்சி கைதானது பற்றிய விவரத்தைத் தமக்குத் தந்தி மூலம் அறிவித்திருந்த தொழிலாளர் யூனியன் செயலாளரையே முதலில் தேடிச் சென்றார் மணவாளன். அவர் தேடிச் சென்ற போது யூனியன் செயலாளர் வக்கீல் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மணவாளனும் அவரோடு சேர்ந்து பேசிக் கொண்டே போக வேண்டியதாயிற்று. இவர்கள் இருவரும் வக்கீல் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது அங்கே ஏற்கனவே பூதலிங்கம் வந்து காத்துக் கொண்டிருந்தார். மணவாளனைச் சந்தித்ததும் பூதலிங்கம் நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டார். "என்ன காரணத்துக்காக அரெஸ்ட் பண்ணினாங்க? 'கிரவுண்ட்ஸ்' என்னென்னே தெரிஞ்சிக்க முடியலே. சும்மா மிரட்டி வைக்கணும், அலைக்கழிக்கணும் என்கிறதுக்காகவே கூட அரெஸ்ட் பண்ணியிருப்பாங்க போல இருக்கு" என்றார் வக்கீல். போலீஸாரின் போக்கைப் பார்த்தால் 'பெயில்' கிடைக்குமா கிடைக்காதா என்பதே சந்தேகமாக இருந்தது. ரிமாண்டில் இருப்பவரைக் காணவும் பேசவும் கூட அனுமதி பெற முடியவில்லை. இதற்குள் அண்ணாச்சி கைதான செய்தி மெல்ல மெல்லப் பரவி உள்ளூர் மாணவர்களும், அக்கம் பக்கத்து ஊர் மாணவர்களும், விடுமுறைக்கு எங்கும் போகாமல் தங்கிவிட்ட மாணவர்களுமாக நானூறு, ஐந்நூறு பேர் கடை வாசலில் கூடிவிட்டார்கள். மாணவர்களைத் தவிர தேசியத் தொண்டர்களும் ஊழியர்களும் வேறு கூடியிருந்தார்கள். அண்ணாச்சி கைதான செய்தி அவர்கள் அனைவரையும் கொதிப்படையச் செய்திருந்தது. இப்படிக் கூட்டம் கூடும் என்பதை எதிர்பார்த்தே வந்து நிற்பது போல் அண்ணாச்சி கடை வாசலில் இரண்டு லாரி போலீஸும் வந்து நின்றது. கடைப் பையன்கள் கடையைத் திறந்து வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். காலை பதினொரு மணியளவில் சுமார் மூவாயிரம் பேருக்கு மேல் கூடி விடவே, போலீஸார் லாரிகளிலிருந்து இறங்கி வந்து கூட்டத்தைக் கலைந்து போகுமாறு வேண்டினார்கள். கூட்டம் அந்த வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் மேலும் மேலும் அதிகமாகி அங்கேயே நின்று கொண்டிருந்தது. பதினொன்றே முக்கால் மணிக்கு மணவாளனும், தொழிலாளர் யூனியன் செயலாளரும் அங்கே வந்த போது அண்ணாச்சியை ஜாமீனில் விடப் போலீஸார் மறுத்து விட்டதாகவும் ரிமாண்டில் இருப்பவரைக் காணவும் அனுமதி கிடைக்கவில்லை என்பதாகவும் தெரிவித்த போது, கூட்டம் கட்டுக்கடங்காமல் கொதிப்படைந்து போலீஸாரின் அடக்குமுறையை எதிர்த்துக் கோஷங்களை முழங்க ஆரம்பித்தது. போலீஸார் தடியடிப் பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் இறங்கினார்கள். முன்னறிவிப்பின்றி இது நடக்கவே கூட்டத்தின் கோபம் அதிகமாகியது. அப்போது அந்தப் பாதையாகச் சென்ற மல்லை இராவணசாமியின் பஸ் ஒன்றைக் கல் எறிந்து நிறுத்தினார்கள் அவர்கள்.

யூனியன் செயலாளரும் மணவாளனும் கூட்டத்தினரை அமைதியாகக் கலைந்து போகச் சொல்லி வேண்டிக் கொண்டிருந்த போதே போலீஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தில் இறங்கினார்கள். மூன்று ரவுண்டுகள் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் முடிந்து கூட்டம் தறிகெட்டு ஓடத் தொடங்கியிருந்த போது கூட்டத்தின் நடுவே சிக்கியிருந்த மல்லை இராவணசாமியின் அந்த பஸ் தீப்பற்றி எரிவதைப் பார்த்தார் மணவாளன். ஆத்திரம் அடைந்த கூட்டத்தினரில் யார் அதைச் செய்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. கூட்டத்தை அப்படி வன்முறையில் ஈடுபடத் தூண்டும் அளவுக்குப் போலீஸார் எல்லை மீறிக் கொடுமை செய்து விட்டார்கள் என்பதுதான் காரணம் என்றாலும் அந்த பஸ் தீப்பிடித்து எரிவதைக் கண்டு மணவாளன் மனப்பூர்வமாக வருந்தினார். ஒரு வேளை அநாவசியமான தங்கள் தடியடிப் பிரயோகத்தையும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் நியாயப்படுத்துவதற்காகப் போலீஸாரே பஸ்ஸுக்கு நெருப்பு மூட்டியிருக்கலாமோ என்று கூட அவருக்குத் தோன்றியது அப்போது.

இப்படி மணவாளனும், தொழிலாளர் யூனியன் செயலாளரும் நடந்துவிட்ட நிகழ்ச்சிகளுக்காக வருந்தியபடி அண்ணாச்சிக் கடை முகப்பில் நின்று கொண்டிருந்த போது முற்றிலும் எதிர்பாராத விதமாக ஓர் இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டேபிளுமாக வந்து பஸ்ஸுக்கு நெருப்பு மூட்ட தூண்டிய குற்றத்துக்காக அவர்கள் இருவரையும் அரெஸ்ட் செய்வதாகச் சொல்லி கைது செய்தார்கள். 'மக்களை அமைதியாகக் கலைந்து போகுமாறு வேண்டிக் கொண்டதைத் தவிரக் கடை வாயிலிலிருந்து தாங்கள் நகரக் கூட இல்லை' என்று அவர்கள் கூறிய விளக்கத்தைப் போலீஸார் கேட்டுக் கொள்ளக்கூடத் தயாராக இல்லை. கைதாகிப் போலீஸ் வேனில் ஏறுமுன், "பட்டமளிப்பு விழா வருவதற்குள் அநேகமாக எல்லாரையுமே இப்படி உள்ளே தள்ளி விடுவதுதான் அவர்கள் நோக்கம்! பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இவ்வளவு எதேச்சதிகாரம் இருந்திராது" என்றார் யூனியன் செயலாளர். "மக்களின் உரிமைகளை மதிக்கத் தெரிந்தவர்கள் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். பரிந்துணர்வும், புரிந்துணர்வும் உள்ளவர்களின் சர்வாதிகாரத்தையாவது எதிர்த்துப் போரிடலாம். முரட்டுச் சர்வாதிகாரத்தில் எதிர்ப்பதற்கும் போரிடுவதற்கும் கூட முடியாமற் போய்விடும். அப்படி ஒரு சர்வாதிகாரத்தின் கீழே தான் நாம் இன்று இருக்கிறோம்" என்றார் மணவாளன். பகல் உணவு நேரத்துக்குள் அவர்கள் இருவரும் சிறைச்சாலைக்குக் கொண்டு போகப்பட்டு விட்டார்கள்.

பாலவநத்தத்தில் தந்தி கிடைத்து அவசரம் அவசரமாக மதுரை வந்து மணவாளனின் வீட்டில் போய் விசாரித்து அவர் இரவே வாடகைக் காரில் மல்லிகைப் பந்தலுக்கு விரைந்திருப்பதை அறிந்து கொண்டு கண்ணுக்கினியாளுக்குத் தகவல் தெரியுமோ தெரியாதோ என்ற சந்தேகத்துடனேயே பஸ் நிலையத்துக்கு வந்த பாண்டியன், அங்கு கண்ணுக்கினியாளே வழியனுப்ப தந்தை சகிதம் மல்லிகைப் பந்தல் பஸ் அருகே தயாராக நின்று கொண்டிருப்பதைக் கண்டு அவன் ஆச்சரியம் அடைந்தான். அவளும் எதிர்பாராத விதமாக அவனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தாள். "தெரியுமா? அண்ணாச்சியை..." என்று அவள் தொடங்கிய வாக்கியத்தை, "தெரியும், தந்தி வந்து தான் நான் உடனே புறப்பட்டேன்... உனக்கு எப்படித் தெரியும்?" என்று பதில் கேள்வியால் அவளை எதிர் கொண்டான் பாண்டியன்.

"எனக்கும் தந்தி வந்தது! உடனே மணவாளன் அண்ணன் வீட்டுக்கு நாயினா ஆள் அனுப்பி விசாரிச்சுக்கிட்டு வரச் சொன்னாரு. அவரு ராத்திரியே புறப்பட்டுப் போயிட்டாருன்னு தெரிஞ்சுது" என்றாள் அவள்.

"ஒரு தப்புத் தண்டாவுக்கும் போகமாட்டானே. அவனைப் போலீஸ் பிடிச்சிருக்குன்னா ஆச்சரியம்னு சொல்றதா, அக்கிரமம்னு சொல்றதா?" என்பதாகப் பாண்டியனிடம் அண்ணாச்சி கைதானது பற்றி வருத்தப்பட்டார் கந்தசாமி நாயுடு.

"நானே கூடப் புறப்பட்டுப் போகலாம்னு இருந்தேன். நல்ல வேளையா நீ வந்திட்டே தம்பீ..." என்று கூறிக் கண்ணுக்கினியாளையும் அவனோடு பஸ் ஏற்றி அனுப்பினார் நாயுடு. அவர்கள் பஸ் மதுரையிலிருந்து புறப்படும் போதே பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. பஸ்ஸில் போகும் போது, தன்னை வழிப்படுத்தி மயக்க, ஊருக்கு வந்த மல்லை இராவணசாமி கட்சியைச் சேர்ந்த சென்னைப் பிரமுகர் பற்றி அவளிடம் கூறினான் பாண்டியன். "ஏன் இப்பிடி நாயா அலையிறாங்க...?" என்று கேட்டாள் அவள். "அதுதான் அவங்க குணம்! மலிவான விலைக்குத் தங்களை விற்று விற்றுப் பழகியவர்கள் பல வேளைகளில் பிறரையும் அப்படி மலிவான விலைகளில் வாங்க முயல்வது தான் இயல்பு. உன்னதமான மனித குணங்களையும் ரூபாய் அணாக் கணக்கில் பேச அவர்கள் கூசமாட்டார்கள். அவர்கள் அறிந்த கணக்கு அது ஒன்று மட்டும்தான்."

"அவர்களுக்கு இல்லாமற் போய்விட்ட கூச்சம் மற்றவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதாக அவர்கள் எப்படி நினைக்க முடியும்? வெட்கமாக இராதோ?"

"வெட்கமின்றி நினைத்துத்தானே இவ்வளவும் செய்கிறார்கள்? கூச்சம் இருந்தால் இதெல்லாம் செய்வார்களா?"

நடுவில் நின்ற ஒரு பெரிய ஊரின் பஸ் நிலையத்தில் அவர்கள் கீழே இறங்கிச் சிற்றுண்டி காப்பி அருந்தினார்கள். பஸ் நிலக்கோட்டையைக் கடந்த போது கதிரேசன், பிச்சைமுத்துவைப் பற்றி அவனிடம் நினைவூட்டிப் பேசினாள் அவள்.

"இதே கொடுமை நீடித்தாள் நான் கூட ஒருநாள் கதிரேசன் ஆக வேண்டியிருக்கலாம். ஒரு படுமோசமான சர்வாதிகாரம் அதைவிடப் படுமோசமான பல விளைவுகளை உண்டாக்கிவிடும். அன்பினாலே காரியங்களைச் சாதிக்க முயல்கிறவர்கள் தோற்கத் தோற்க ஆத்திரத்தோடு காரியங்களைச் சாதிக்கிற வீரர்கள் தான் உருவாக முடியும். நமது நியாயங்களும், நீதிகளும் அறவே புறக்கணிக்கப்படும் போது நாம் பலாத்காரங்களுக்கு நிர்பந்திக்கப்பட்டு விடுகிறோம்."

"போதும்! விளையாட்டுக்காகக் கூட இப்படிப் பேசாதீர்கள்" என்று தன் பூப்போன்ற வலது கரத்தினால் அவன் வாயைப் பொத்தினாள் அவள். அண்ணாச்சியைக் கைது செய்திருப்பதால் பாண்டியனின் உள்ளம் எவ்வளவுக்குக் குமுறிப் போயிருக்கிறது என்பதை அவள், அவன் பேச்சுக்களிலிருந்து அப்போது புரிந்து கொள்ள முடிந்தது.

அவர்களுடைய பஸ் மல்லிகைப் பந்தலை அடையும் போது பிற்பகல் ஐந்தரை மணியாகிவிட்டது. பஸ் நிலையத்தில் இறங்கியதுமே காலையில் அண்ணாச்சிக் கடை முன்பு நடந்த நிகழ்ச்சிகளும், அவை தொடர்பாக மணவாளனும், தொழிலாளர் யூனியன் காரியதரிசியும் பஸ்ஸுக்கு நெருப்பு வைக்கக் கூட்டத்தினரைத் தூண்டியதாகப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கைதான விவரமும் அவர்களுக்குத் தெரிந்தன. பஸ் நிலையத்திலிருந்து வெளியேறும் முன்பே நிறைய மாணவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். "நீ உன் தோழி சிவகாமியின் வீட்டிலாவது பத்மாவின் வீட்டிலாவது போய்த் தங்கிக் கொள்! நேரே ஹாஸ்டலுக்குப் போக வேண்டாம். நான் நாளைக் காலையில் உன்னைச் சந்திக்கிறேன்" என்று சொல்லிக் கண்ணுக்கினியாளை ஒரு ரிக்ஷாவில் அனுப்பி விட்டு மாணவ நண்பர்களோடு தோட்டத் தொழிலாளர் யூனியன் மாடிக்குப் போய்க் கலந்தாலோசித்தான் பாண்டியன். யூனியன் கட்டிட வாயிலில் நாலைந்து சி.ஐ.டி.க்கள் இருந்தார்கள். "பஸ் ஸ்டாண்டிலிருந்தே உன்னை சி.ஐ.டி.க்கள் பின் தொடருகிறார்கள்" என்றான் ஒரு மாணவன். "நானோ நீங்களோ கொலை செய்து விட்டோ, அல்லது கொள்ளை அடித்துவிட்டோ இங்கே வந்து கூடிப் பேசவில்லையே? நமக்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?"

"கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்களுக்குக் கூட அவர்கள் பயப்படவில்லை. நல்லவர்களுக்குத் தான் அவர்கள் பயப்படுகிறார்கள். ஒரு மந்தையை ஆள்வது போல் மக்களை ஆள நினைக்கிறார்கள் அவர்கள். மந்தையில் சேராதவர்களைத் துன்புறுத்த அவர்கள் தயங்கமாட்டார்கள்!"

"அண்ணாச்சியும், மணவாளனும், யூனியன் செயலாளரும் என்ன பாவம் செய்தார்கள்?"

"மந்தையில் சேர மறுத்தார்கள். மந்தைக்கு எதிராகச் செயல்பட்டார்கள். அதுவே போதுமானது."

"மனிதர்கள் எப்படி வெறும் மந்தையைப் போல் இருக்க முடியும்?"

"இருக்க முடியுமோ முடியாதோ. அவர்களுக்கு ஒரு மந்தை வேண்டும். மக்களை மக்களாக நடத்தி ஆள்வதை விட மந்தையாக நடத்தி ஆள்வது ஒருவேளை அவர்களுக்குச் சுலபமாக இருக்கும் போலிருக்கிறது..."

கலந்து பேசிய போது எல்லா மாணவர்களுமே மிகவும் ஆத்திரமாக இருந்தார்கள். அன்றிரவு பாண்டியனும் வேறு நாலைந்து மாணவர்களும் பேராசிரியர் பூதலிங்கத்தைச் சந்திக்கச் சென்றார்கள். அவர் வீட்டு வாசலிலும் கூட சி.ஐ.டி. நடமாட்டம் இருந்தது. "நான் முன்பே உன்னிடம் எச்சரித்தது நினைவிருக்கிறதா பாண்டியன்? இப்படி எல்லாம் கொடுமைகள் நடக்கும் என்பதை முன்பே நான் அனுமானித்திருந்தேன். பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்க இது அதிகமாகுமே ஒழியக் குறையாது. உணர்ச்சி வசப்பட்டு நீயும் உள்ளே போய் மாட்டிக் கொள்ளாதே! கொஞ்சம் சாதுரியமாக நடந்து கொண்டு அண்ணாச்சியையும், மணவாளனையும், தொழிலாளர் யூனியன் காரியதரிசியையும் முதலில் விடுதலை செய்யப் பாடுபடலாம். அப்புறம் மற்றதைக் கவனிக்கலாம்" என்றார் அவர். பாண்டியனுக்கும் அவர் சொல்வது தான் சரி என்று பட்டது. அவரே, "வி.ஸி.யைப் போய்ச் சந்தித்துப் பேசு! ஆத்திரப்படாமல் நடந்து கொள். அவரைப் பார்க்காமல் புறக்கணித்தீர்களாயின் அவரது கோபம் இன்னும் அதிகமாகும். கைது செய்திருப்பவர்களைப் போலீஸார் விடுதலை செய்யாவிட்டால் பட்டமளிப்பு விழாவின் போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்து பெரிய அளவில் போராட நேரிடலாம் என்று அவரிடம் சொல்லிப் பார். வி.சி.யிடமிருந்து அந்த விஷயம் உடனே அமைச்சர் காது வரையில் போகும். 'இவர்களை வெளியே விட்டுவிட்டால் பெரிய போராட்டம் இராது' என்பது போல் நீ சாதுரியமாகப் பேசினால் மறுநாளே விட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன். 'சார்ஜ் ஷீட்' கொடுக்கவோ ருசுப்பிக்கவோ ஒரு குற்றமும் இல்லாமல் இவர்களை அதிக நாட்கள் லாக்கப்பில் வைத்திருக்க முடியாது. தானாக விட்டு விடுவார்கள் என்று தான் நாங்கள் கலந்து பேசிய வக்கீல் எங்களிடம் கூறினார். சும்மா மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டலை மிகவும் கிளெவராகச் சமாளிக்க வேண்டும்" என்று மேலும் கூறினார் பூதலிங்கம். மாணவர்களுக்கு வெளிப்படையாக எந்த உதவியும் செய்ய முடியாமல் இரகசியப் போலீஸார் மூலம் தம்மைக் கண்காணிக்க ஏற்பாடு செய்து விட்ட வி.ஸி.யின் கொடுமை பற்றியும் அவர் மாணவர்களிடம் வருத்தப்பட்டார். மாணவர்களுக்கு அவர் நிலைமை புரிந்தது. 'பட்டமளிப்பு விழா நாளன்று எந்தப் போராட்டமும் நடக்காது' என்பதுபோல் துணைவேந்தரே நம்பும்படி ஒரு நாடகம் நடிக்க மனத்துக்குள்ளே ஒத்திகை பார்த்துக் கொண்டு பாண்டியன் நண்பர்களோடு அன்றிரவே துணைவேந்தர் மாளிகையில் போய் அவரைச் சந்தித்தான்.

"பீஸ்ஃபுல்லா இருந்து பட்டமளிப்பு விழா நல்லா நடக்க ஒத்துழைக்கணும்னு நீங்களே பல தடவை சொல்லியிருக்கீங்க சார்! இப்ப அதை மறந்து செயல்பட நாங்களும் தயாராயில்லை. நீங்களும் தயாராயிருக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். அண்ணாச்சியைக் கைது செய்தது, மணவாளனையும், தொழிலாளர் யூனியன் காரியதரிசியையும் சிறை வைத்திருப்பது எல்லாமாகச் சேர்ந்து மாணவர்கள் மனத்திலே கொதிப்பை உண்டாக்கியிருக்கிறது சார்! அவங்களையெல்லாம் நிபந்தனையின்றி ரிலீஸ் பண்ணாட்டி என்னாலே கூட நிலைமையைக் கண்ட்ரோல் பண்ண முடியாது."

துணைவேந்தர் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அப்புறம் கேட்டார்: "ரிலீஸ் பண்ணினால் மட்டும் என்ன ஆகிவிடப் போகுது? மறுபடியும் 'போராட்டம்'னு எல்லாருமாகச் சேர்ந்து என் பேரைச் சொல்லி ஒழிக கோஷம் போட்டுக்கிட்டு நடுரோட்டிலே ஊர்வலம் போவீங்க? அப்படித்தானே?"

"அப்படியில்லே சார்! அவங்களை ரிலீஸ் பண்ணாட்டி இது நாடு தழுவிய பெரிய போராட்டமாகி விடுமோ என்று தான் நான் பயப்படுகிறேன்."

"நான் எப்பிடி இதிலே தலையிட முடியும்ப்பா? போலீஸ், ஆர்.டி.ஓ. எல்லோருமே பையங்க மேலே ரொம்பக் கோபமாயிருக்காங்க. சும்மா இருக்காமே பசங்க அந்த இராவணசாமியோட பஸ்ஸுக்கு வேறே நெருப்பு வைச்சிருக்காங்களே, அதென்ன நியாயம்?"

"பையன்கள் பேரைக் கெடுக்க விஷமிகள் யாராவது அப்படிச் செய்திருக்கலாம் சார்! உங்க ஸ்டூடண்ட் ஆன மிஸ்டர் மணவாளன் எப்படிப்பட்டவர்னு எங்களை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும் சார்! அவர் அப்படி வன்முறைகளைச் சகித்துக் கொள்கிறவர் இல்லை என்பதை நீங்களே மனசாரத் தெரிஞ்சுக்கிட்டிருந்தும் எங்களை கேட்கிறீங்களே சார்..."

"இப்ப நான் என்ன பண்ணனும்கிறே நீ? அதைச் சொல்லு."

அவன் மீண்டும் தன் வேண்டுகோளைச் சொன்னான். வி.சி. வேண்டா வெறுப்பாய் ஆர்.டி.ஓ.வுக்கு ஃபோன் செய்வதற்காக டெலிபோனை எடுத்தார்.

"...பட்டமளிப்பு விழாச் சமயத்திலே பீஸ்ஃபுல்லா இருக்கிறதா அஷ்யூர் பண்றாங்க..." என்றும், "கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்" என்றும் துணைவேந்தர் ஆர்.டி.ஓ.விடம் பேசிய தொனியைக் கேட்ட பின் அவரும் இதில் சர்க்காரின் ஏஜெண்டாக இருப்பது அவர்களுக்குப் பச்சையாகப் புரிந்தது. தங்கள் முன்பு வெளிப்படையாக அவர் ஆர்.டி.ஓ.வுடன் பேசிய பேச்சின் தொனி பாண்டியனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவனும் உடனிருந்த மற்ற மாணவர்களும் துணைவேந்தரின் சுயரூபத்தை அப்போது நன்றாகப் புரிந்து கொண்டார்கள். பூதலிங்கம் சார் செய்து வைத்திருந்த கணிப்பும் அனுமானமும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியாயிருந்தது. ஆர்.டி.ஓ.விடம் வி.சி. குழைந்த குழைவைப் பார்த்தால் இருவருக்கும் உள்ள நெருக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. பல்கலைக் கழகம் சம்பந்தமாகப் போலீஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையும், துணைவேந்தர் கூறும் இரகசிய யோசனையின் பேரில்தான் நடக்கிறது என்பது அப்போது அவர்கள் கண் முன்பே நிரூபணமாகியிருந்தது. பஸ் நிலையத்திலிருந்து தன்னைப் பின் தொடரும் சி.ஐ.டி.க்கள், பூதலிங்கம் சார் வீட்டு முன் உள்ள இரகசியப் போலீஸ் எல்லாமே துணைவேந்தர் யோசனையின் பேரில்தான் என்பது பாண்டியனுக்குப் புரிந்த போது அவன் கோபம் அதிகமாயிற்று.

முப்பத்து எட்டாவது அத்தியாயம்

பாண்டியன் முதலியவர்கள் துணைவேந்தரைச் சந்தித்துப் பேசிய இரவுக்குப் பின் எதிர்பார்த்த மாறுதல் ஏற்பட்டது. ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்த அண்ணாச்சி, மணவாளன், தேசியத் தோட்டத் தொழிற் சங்கத்தின் செயலாளர் ஆகிய மூவரையும் போலீஸ் நிபந்தனையின்றி விடுதலை செய்துவிட்டது. அவர்களை விடுவிப்பார்களோ மாட்டார்களோ என்று சந்தேகத்தோடு, பார்த்துப் பேசவாவது அனுமதி பெறலாம் என்று சிறைச்சாலைக்குச் சென்ற பாண்டியன், கண்ணுக்கினியாள், மாணவ நண்பர்கள் எல்லாருக்கும் இந்த நற்செய்தி எதிர்பாராத வியப்பை அளித்தது. உடனே ஒரு மாணவன் சைக்கிளில் விரைந்து பூக்கடைக்குச் சென்று மாலைகள் வாங்கிக் கொண்டு வந்தான். சிறை வாயிலில் விடுதலையான மூவருக்கும் பாண்டியனும், கண்ணுக்கினியாளும், கூடியிருந்த மற்ற மாணவர்களும் மாலையிட்டு வரவேற்றார்கள்.

"அண்ணன் நேற்றுத்தானே ஊரிலிருந்து வந்தீர்கள்? உங்களை ஏன் கைது செய்தார்கள்?" என்று மணவாளனைப் பாண்டியன் கேட்ட போது, "இந்த ஆட்சியில் காரணம் பார்த்தா மனிதர்களைக் கைது செய்கிறார்கள்? வேண்டாதவர்களுக்கும், அரசியல் எதிரிகளுக்கும் எப்படியாவது தொல்லை கொடுத்து அவர்களை அலைக்கழிக்க வேண்டும். அதற்காகவே பலரைக் கைது செய்கிறார்கள். கதிரேசன் முதலியவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு செஷன்ஸ் கோர்ட்டில் வரப்போகிறது. எப்படியாவது அண்ணாச்சியையும் அதில் மாட்டி வைக்கலாம் என்று பார்த்தார்கள். அண்ணாச்சியைக் கைது செய்தது கொடுமையிலும் கொடுமை என்று குமுறிய காரணத்திற்காக 'இராவணசாமியின் பஸ்ஸை எரிக்கத் தூண்டினோம்' என்று பொய்க் குற்றம் சாட்டி என்னையும், தொழிற்சங்கச் செயலாளராகிய இந்த நண்பரையும் கைது செய்து உள்ளே வைத்தார்கள். பேயரசு செய்யும் போதில் பிணம் தின்னுவது கூடச் சட்டமாகிவிடும். அப்படித்தான் இப்போதெல்லாம் நடக்கிறது" என்று மறுமொழி கூறினார் மணவாளன். அப்போது வேறு ஒரு மாணவன், "நேற்று இரவு இராவணசாமியின் ஆட்கள் உங்க கடைக் கதவை உடைச்சு எல்லாத்தையும் சூறையாட மூணு தடவை திரும்பத் திரும்பக் கடப்பாரையும் கம்புமாகத் தேடி வந்தாங்க. அவங்க அப்பிடி வருவாங்கன்னு எதிர்பார்த்தே நம்ப ஊழியர்கள் கடை வாசல்லே கூட்டமா இருந்ததாலேதான் கடை பிழைத்தது" என்று அண்ணாச்சியிடம் கூறினான். அதைக் கேட்டுச் சிரித்தார் அவர்.

"சத்தியம், நியாயம், தர்மம், நீதி, ஜனநாயகம் எல்லாத்தையுமே சூறையாடறவங்க என் கடையைச் சூறையாடறதுக்கா தயங்கப் போறாங்க? இப்படி எல்லாம் நடக்கும்கிறது நான் எதிர்பார்த்ததுதான் தம்பி..." என்றார் அண்ணாச்சி. எந்த இழப்புக்காகவும் கவலைப்படாத ஒரு தியாகியின் குரலாக ஒலித்தன அவர் சொற்கள்.

"சுதந்திரத்தின் அருமை பெருமை தெரியாத ஒரு மந்தையிடம் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் இப்படி எல்லாம் தான் நடக்கும். சுதந்திரம் என்பது பொறுப்புக்களிலிருந்து விடுபடுவது என்று புரிந்து கொண்டு விட்டவர்கள் நிறையவுள்ள நாடு இது. பொறுப்புக்களோடு அதிகம் இணைவதே உண்மையான சுதந்திரம் என்று எல்லோருக்கும் புரியவைக்கிற வரை இந்த நாடு சீர்படாது. அடிமைத்தனத்திலிருந்து விடுபடலாம். ஆனால் அதே சமயம் பொறுப்புக்களோடு நம்மை அதிகமாகப் பிணைத்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பிணைத்துக் கொள்ளாததால் தான் இவ்வளவு வினையும் வந்திருக்கிறது என்றார் தொழிற்சங்கச் செயலாளர்.

"எல்லா வகையிலும் பொறுப்பில்லாத மக்களுக்குப் பொறுப்பில்லாத ஆள்பவர்கள் தான் கிடைப்பார்கள். விசுவாசமில்லாத பலர் கூடி விசுவாசமுள்ள ஆட்சியை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. 'ஏனோ தானோ' மனப்பான்மை என்பதே சராசரி இந்தியனின் பொதுக் குணமாக இருக்கிற வரை எப்படிப்பட்ட மோசமான ஆட்சியையும் அவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்" என்றார். விடுதலையானவர்களைப் பார்க்க வந்திருந்த மற்றொரு தொழிற்சங்கவாதி.

சிறை வாசலில் கூடிவிட்ட மாணவர்களும் கூட்டத்தினரும் விடுதலையானவர்களை அண்ணாச்சி கடை வாசல் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். செல்லும் வழியிலும் அங்கங்கே கூட்டமாக மக்கள் சேர்ந்து கொண்டதால் ஊர்வலம் பெரிதாகி வளர்ந்திருந்தது. அண்ணாச்சி என்கிற மனிதரை மல்லிகைப் பந்தலில் சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். மாணவர்களில் எல்லாப் பிரிவுப் படிப்பில் படிக்கும் சகல மாணவர்களும் அவர் மேல் ஒரு மூத்த தமையனின் மரியாதையைச் செலுத்தி வந்தார்கள். அவருடைய பொது நலப் பணிகளும், பரோபகார சிந்தையும் ஊரறிந்தவை. தோட்டத் தொழிலாளர்களும், ஏழை எளியவர்களும் அண்ணாச்சியின் சைக்கிள் கடையைக் 'காந்திக்காரர் கடை' என்று தான் குறிப்பிட்டுப் பேசுவார்கள். அந்த அளவுக்கு அண்ணாச்சியின் மேல் மதிப்பு வைத்திருந்தார்கள் நகர மக்கள். ஒழுக்கமும், வாக்கு நாணயமும், எங்கே யாருக்குச் சிரமம் என்றாலும் தானே உடன் ஓடிச் சென்று உதவுகிற குணமும், எந்த நிலையிலும் பொறுமை இழக்காத மனோதிடமும் அண்ணாச்சியை எல்லோருமே மரியாதை செய்யும் தகுதிக்கு உரியவராக்கி இருந்தன. மேடைகளில் ஏறிக் கண் கூசும் வெளிச்சத்தில் பேச ஆசைப்படாமல் தொண்டு செய்யவும், உழைக்கவுமே ஆசைப்படும் அண்ணாச்சியின் தனித்தன்மை காரணமாகவே அவர் பிறரால் தொழத் தக்கவர் ஆகியிருந்தார். அப்படிப் பட்டவரைப் போலீஸார் கைது செய்ததே நகரில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருந்தது. அன்று அவர் விடுதலை ஆகிவிட்டார் என்பதும் அவருக்குப் பின் கைது செய்யப்பட்டவர்களும் விடுதலையாகிச் சிறை வாசலிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்கள் என்பதும் வீதியில் பெருங்கூட்டத்தைக் கூட்டிவிட்டது. ஒவ்வொரு வார்டிலும் அங்கங்கே அமைந்திருந்த ஒவ்வொரு தேசியப் படிப்பகத்திலும் ஊர்வலத்தை நிறுத்தி அண்ணாச்சிக்கும், மணவாளனுக்கும், தொழிற் சங்கச் செயலாளருக்கும் மாலைகள் சூட்டி வரவேற்றார்கள். ஊர்வலம் கடையை அடைய வெகுநேரம் ஆயிற்று. ஊர்வலம் கடை வாயிலை அடைந்ததும் கூட்டத்தினரை அமைதியாகக் கலைந்து செல்லுமாறு அன்போடு வேண்டினார்கள் மணவாளனும், பாண்டியனும். அண்ணாச்சி எல்லோரையும் நோக்கி மலர்ந்த முகத்தில் புன்முறுவலோடு கைகூப்பினார். எந்தக் களங்கமும் இல்லாத அவருடைய அந்த முகமலர்ச்சியும், புன்முறுவலும் ஒரு குழந்தை சிரிப்பதைப் போலிருந்தன. சிறையிலிருந்து விடுதலையாகி வந்த அலுப்போ, களைப்போ, சோர்வோ சிறிதும் இன்றிக் கடை முகப்பில் வரிசையாக அடுக்கியிருந்த சாக்லேட் பாட்டில்களில் இருந்து இரு கையும் நிறைய மிட்டாய்களை அள்ளிக் கூட்டத்திலும் கடை முன் புறமும் இருந்தவர்களில் சிறுவர், சிறுமிகளைத் தேடிச் சென்று, "இந்தா, மிட்டாய்ச் சாப்பிடு" என்று அவர்களுக்கு மிட்டாய் வழங்கத் தொடங்கிவிட்டார் அண்ணாச்சி. மணவாளனும், பாண்டியனும், கண்ணுக்கினியாளும், தொழிற் சங்கச் செயலாளரும் மற்றுமுள்ள மாணவர் பிரதிநிதிகளும் கடையின் பின்புறமுள்ள அறைக்குச் சென்றனர். பாண்டியன், தான் மல்லிகைப் பந்தலுக்கு வந்தவுடன் பூதலிங்கத்தைச் சந்தித்ததையும், அவர் யோசனையின் படியே துணைவேந்தர் தாயுமானவனாரைச் சந்தித்ததையும், தாயுமானவனார் தன்னையும் எதிரே வைத்துக் கொண்டே ஆர்.டி.ஓ.வுக்கு ஃபோன் செய்ததையும் மணவாளனிடம் விவரித்தான்.

"அண்ணன் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அண்ணாச்சியும், நீங்களும், நம்ம தொழிற் சங்கச் செயலாளர் அண்ணனும் விடுதலையாகணும்கிற ஒரே ஆசைக்காக நான் வி.சி.யிடம் பொய் கூடச் சொல்லி நடிக்கும்படி நேர்ந்து விட்டது."

"நடந்ததைப் பற்றி என்ன? இனி நடக்க வேண்டியதைப் பற்றிக் கவனிப்போம். இங்கே நியாயங்களை நிலைநாட்ட இன்று தந்திரமும் வேண்டியதாகத்தான் இருக்கிறது. சிங்க வேட்டைக்குத் துணிவு மட்டுமே போதும். நரி வேட்டைக்குத் தந்திரமும் வேண்டும். இன்றுள்ள ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து நாம் போராடுவது நரி வேட்டையைப் போன்றது பாண்டியன்! இந்த ஆட்சியில் துணைவேந்தர்கள் பல்கலைக் கழகத்தில் ஆளும் கட்சியின் பல்கலைக் கழக கிளைக்குத் தலைவர்கள் போல் செயல்படுகிறார்கள். நீதிபதிகள் ஆளும் கட்சியின் நீதிமன்றக் கிளைத் தலைவர்கள் போல் செயல்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். பட்டமளிப்பு விழாவின் போது நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது இரகசியமாகவே இருக்க வேண்டியது அவசியம். யாரும் அப்பழுக்குச் சொல்ல முடியாத வெள்ளை வேட்டிகட்டிய துறவியாகிய அண்ணாச்சியையே அவர்கள் கைது செய்து விட்டார்கள். அதை ஏனென்று கேட்க வந்த என்னையும் இதோ இந்தத் தொழிற் சங்கச் செயலாளரையும் கூட உள்ளே தள்ளி விட்டுப் பட்டமளிப்பு விழாவைக் காதும் காதும் வைத்தாற் போல் நடத்தி விட நினைக்கிறார்கள். நாமும் தந்திரமாகவே நடப்போம். எந்தப் போராட்டத்துக்கும் நாம் முயல மாட்டோம் என வி.சி. நினைக்கும்படி நீ சொல்லிவிட்டு வந்திருப்பது அப்படியே இருக்கட்டும் பாண்டியன்! ஆனால் உண்மையில் முன்பு திட்டமிட்டதை விடப் பெரிதாக நாம் இந்தப் போராட்டத்தை நடத்தப் போகிறோம். இப்போதே அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும். இந்தப் பல்கலைக் கழக மாணவர்களைத் தவிர மாநிலம் முழுவதும் பிரதிநிதிகளை அனுப்பி ஒரு கல்லூரிக்கு நூறு பேர் வீதம் திரட்டி மல்லிகைப் பந்தலுக்குப் படை திரண்டு வரச் செய்ய வேண்டும். எல்லோருமே போராட்டத்துக்கு வருவது போல் வரக் கூடாது. தனி பஸ் ஏற்பாடு செய்து கொண்டு மல்லிகைப் பந்தலுக்கு உல்லாசப் பயணம் வருவது போல் தற்செயலாகத் தோன்றும்படி வெளியூர் மாணவர்களை வரச் செய்ய வேண்டும். நமது பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக் கழகக் காம்பஸிற்கு உள்ளேயும், மற்ற மாணவர்கள், நகரின் தொழிலாளர்கள், பொதுமக்கள், பிறர் எல்லாம் பல்கலைக் கழக எல்லைக்கு வெளியேயும் போராட வேண்டும். ஆனால் எந்தப் போராட்டமுமே நடைபெறாது என்பது போல், வி.சி.யும், ஆர்.டி.ஓ.வும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நம்பி ஏமாறும்படி பட்டமளிப்பு விழாத் தினத்துக்கு முதல் நாள் இரவு வரையில் நாம் தந்திரமாக நடந்து கொள்ள வேண்டும். அது முக்கியம்!" என்று மணவாளன் கூறியதும் ஒரு மாணவன் கேட்டான்:

"அவர்களாகவே நம்மேல் சந்தேகப்பட்டு கட்சி ஆட்களாகிய குண்டர்களையும், போலீஸ்காரர்களையும் இங்கே ஏராளமாகக் கொண்டு வந்து குவித்தால் என்ன செய்வது? அண்ணன் நினைப்பது போல் அவர்கள் ஏமாறவோ, சும்மா இருக்கவோ மாட்டார்கள். மல்லை இராவணசாமி கொள்கைகளை நம்பி அரசியல் நடத்திப் பழகாதவர். அடியாட்களை நம்பியே அரசியல் நடத்துகிறவர். மானம், மரியாதை, மதிப்பு என்று அவருடைய கட்சி அடிக்கடி கூறும் வார்த்தைகளை அவர்களே காப்பாற்றியதும் கிடையாது. பிறருக்கு அளித்ததும் இல்லை! குண்டர்களை நாம் எப்படி எதிர்ப்பது?"

"எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய கூட்டம் ஒரு வெள்ளமாகப் பெருகினால், நமது சத்திய ஆவேசமும், தார்மீகக் கோபமும், ஒரு பிரளயமாகத் திரண்டால் அதில் எல்லா எதிரிகளுமே தாமாக மூழ்கிப் போய் விடுவார்கள்" என்று கூறிய மணவாளன், கண்ணுக்கினியாள் பக்கம் திரும்பினார். "சகோதரி! பெண்கள் படையைத் திரட்டும் பொறுப்பு உன்னுடையது. ஆண்கள் படையைத் திரட்டும் எங்கள் பாண்டியனைக் கவனித்துக் கொள்ள வேண்டியதும் உன் பொறுப்புத்தான்; லஞ்சமும், ஊழலும், எதேச்சாதிகாரமும் சுயநலமும் கொடுமைகளும் மலிந்து விட்ட ஓர் ஆட்சியை எதிர்த்துத் தொடங்கும் இளைய தலைமுறையின் இணையற்ற பெரும் போர் இது. இன்று இந்தப் போரின் தலைவனாகிய பாண்டியன் நாளை உன் சொந்த வாழ்வுக்கும் தலைவனாக வேண்டியவன் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆகவே அவனையும் நீ பாதுகாக்கக் கடன்பட்டிருக்கிறாய்" என்று மேலும் சொல்லிவிட்டுப் பாண்டியனையும் அவளையும் மாறி மாறி நோக்கிப் புன்னகைப் பூத்தார் மணவாளன். இதைக் கேட்டு அங்கு கூடியிருந்த எல்லோருமே சிரித்து விட்டார்கள். வெளியூர் மாணவர்களைக் கண்டு பேசி விளக்க உடனே பிரதிநிதிகள் பெயர்களைக் குறித்து அவர்கள் அங்கே போய் என்னென்ன செய்ய வேண்டும் என்பதும் விளக்கப்பட்டது. இதற்குள் அண்ணாச்சி நீராடி உடை மாற்றிக் கொண்டு திருநீறு குங்குமம் பளிச்சிடும் நெற்றியுடனும், தும்பைப் பூப்போல் வெளேறென்ற கதர் ஆடையுடனும் வந்து தோன்றினார். கூட்டத்தில் மின்னல் வந்து நிற்பது போல் நின்றார் அவர்.

"ரெண்டு நாளா அண்ணாச்சியை உள்ளே தள்ளி கடை வியாபாரம் எல்லாத்தையும் கெடுத்துப்பிட்டாங்க, பாவம்" என்றார் ஓர் ஊழியர்.

"அப்படிச் சொல்லாதீங்க தம்பீ! இந்தக் கடை, வியாபாரம் இதெல்லாமே எனக்குப் பெரிசு இல்லே. நான் செய்ய ஆசைப்படற தொண்டுக்கு இது ஒரு விலாசம். இது ஒரு சாக்கு. இதைச் சாக்காக வைச்சுக்கிட்டு நான் பொதுக் காரியத்துக்கு அலையிறேன். இதுக்கு முதலாளியாகவோ, உரிமைக்காரனாகவோ நான் என்னை நெனைச்சுப் பார்த்ததே இல்லை. நான் இதுக்குத் தர்மகர்த்தா. அவ்வளவுதான். எத்தினியோ மாணவர்கள் இங்கே என் கையாலே சிலம்பம் பழகினாங்க. ஆனா நான் சிலம்பம் ஆடி ஒரு நல்லவனைக் கெடுத்தது கிடையாது. நான் ஒரு தொண்டன். தொண்டு செய்யறதற்குத் தடையாகிற அளவுக்குப் பெருமையும் உயரமும் எனக்கு வந்துவிடக் கூடாதே என்பது மட்டும் தான் நான் படுகிற ஒரே கவலை. வாழ்கிற வரை தொண்டனாக வாழ உறுதி பூண்டவன் நான். என்னைக்காவது நான் போயிட்டாலும் தொண்டனாகத்தான் போய்ச் சேருவேன். 'அண்ணாச்சி தொண்டனாகத் தொடங்கி தொண்டனாகவே இறந்தான்'னு ஜனங்க பேசிக்கிடணுமே தவிரத் தொண்டனாக ஆரம்பிச்சு அதிலே லாபமாச் சம்பாதிச்சு புகழை முதலீடு பண்ணித் தலைவனாக இறந்தான்னு என்னைப் பத்தி நான் போனப்புறம் பேச்சு வரப்பிடாது. அதுதான் இந்த ஏழையோட ஒரே ஆசை தம்பீ!"

"அண்ணாச்சி! போகிறதையும் சாகறதையும் பத்தி இப்ப என்ன பேச்சு? நீங்க ஒண்ணும் போகமாட்டீங்க. நூறு வயசு இருப்பீங்க. பாண்டியனும் கண்ணுக்கினியாளும் பேரன் பேத்தி எடுக்கறதைக் கூட இருந்து பார்க்கப் போறீங்க. போனாத் தொண்டு எதுவும் செய்ய முடியாது. இருந்தாத்தான் தொண்டு எல்லாம் செய்யலாம், பாடுபடலாம்" என்றார் மணவாளன்.

"எனக்கு மட்டும் போக ஆசையா என்ன? போகணும்னு வந்தாப் பத்து நலவங்களைக் காப்பாத்தறதுக்காகத் தான் நான் போவேன்! எதிரிங்க என் உயிருக்குக் கருக்கட்டிக்கிட்டு அலையறாங்க. ஆனா என்னைக் காப்பாத்திக்கணும்னு போராடி அதுக்காக நான் சாக மாட்டேன். என்னைத் தவிர மத்தவங்களைக் காப்பாத்த நான் சாகவும் தயாராயிருப்பேன். அப்படிப் பட்ட நெஞ்சுறுதியை அந்தக் காந்தி மகான் எனக்குத் தந்திருக்காரு..."

"அந்தக் காந்தி மேலே ஆணையாக இனிமே நீங்க இப்படியெல்லாம் பேசமாட்டேன்னு முதல்லே சொல்லுங்க. இல்லாட்டி எங்களுக்கெல்லாம் கோபம் வரும். நாங்களெல்லாம் இருக்கறப்ப உங்களை எவன் நெருங்க முடியும்? நீங்க வெறும் அண்ணாச்சி மட்டும் இல்லை! இங்கே நீங்க ஒரு தத்துவம். யூ ஆர் த ஒன்லி பெர்ஃபெக்ட் எம்பாடிமெண்ட் ஆஃப் சோஷல் செர்வீஸ். இங்கே பெருக்கெடுத்திருக்கும் சத்திய வெள்ளத்தின் ஊற்றுக்கண் நீங்கள் தான் என்பதும் உங்களுக்கே நன்றாகத் தெரியும். நீங்கள் இல்லாத மல்லிகைப் பந்தலை நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இதோ இந்தக் கடைக்குப் பக்கத்தில் பல ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்களில் இருக்கிறதே அது அல்ல எங்கள் பல்கலைக் கழகம். அந்தக் கட்டிடங்களும், புத்தகங்களும், ஆசிரியர்களும் படித்த கோழைகளிடம் உள்ளன. ஆனால் இந்தக் கையகலக் கடையோ படிக்காத மேதையிடம் இருக்கிறது. இங்கே இருக்கிற மன விலாசம் அங்கேயுள்ள பெரிய ஹால்களில் கூட இல்லை. படித்த கோழைகள் சிலர் ஆண்டுதோறும் மேலும் பல படித்த கோழைகளை உருவாக்கி அனுப்பும் அந்தக் கூடங்களை மதிப்பதை விட இந்தக் குடிசையை நாங்கள் அதிகம் மதிக்கிறோம். அந்தக் கூடங்களில் கற்பதை விட இங்கே நாங்கள் கற்பதும் உணர்வதும் அதிகமானவை என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கண்ணுக்கினியாள் சற்றே கோபமான குரலில் அவரை மடக்கிக் கேட்ட போது, "என்னை அதிகமாகப் புகழாதே. நான் எதுவும் அறியாதவன்; பாமரன்" என்று தலை குனிந்தார் அண்ணாச்சி.

மணவாளன் நாத் தழுதழுக்கச் சொன்னார்:

"இங்கே உள்ள ஐந்தரை கோடி மக்களுமே உங்களைப் போன்ற அறியாதவர்களாகப் பாமரர்களாக இருந்தால் இந்த நாடு இவ்வளவு சீரழிந்திருக்காது. இங்கே ஞானவான்களை விடப் பட்டதாரிகளை மதிக்கிறார்கள். புத்திமான்களை விட அதிகாரிகளைத் தொழுகிறார்கள். தொண்டனை இருளடைய விட்டுவிட்டுத் தலைவனுக்குக் கோயில் கட்டுகிறார்கள். கொள்கைகளைத் துருப்பிடிக்க விட்டு விட்டுக் கொடி மரங்களுக்குப் புது வர்ணம் பூசுகிறார்கள். அடிப்படைகளை இற்றுப் போக விட்டு விட்டு மாடங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றினிடையே நீங்கள் ஓர் ஆச்சரியம் தான்! உங்களைப் போல் ஊருக்கு ஓர் அண்ணாச்சியை மீதம் விட்டு விட்டு வரவில்லையே என்பதற்காக காந்தி மகானே இப்போது அங்கே சுவர்க்கத்தில் கழிவிரக்கப்பட்டு அழுது கொண்டிருப்பார்."

மகாத்மா காதியின் பெயரை மீண்டும் கேட்டவுடன் அண்ணாச்சிக்குக் கண்கள் கலங்கி நீர் மல்கிவிட்டன. ஒன்றும் பேசத் தோன்றாமல் அப்படியே உட்கார்ந்து விட்டார் அவர். அப்போது உள்ளே வந்த மாணவர் ஒருவர், "பூதலிங்கம் சார் கொடுத்து அனுப்பினாரு" என்று ஒரு கடிதத்தைப் பாண்டியனிடம் கொடுத்தார். பாண்டியன் கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டு அதை அப்படியே மணவாளனிடம் கொடுத்தான். மணவாளன் படித்து முடித்ததும் அதை அண்ணாச்சியிடம் கொடுத்தார். அண்ணாச்சி படிக்கும் போதே அவர் அருகே அமர்ந்திருந்த கண்ணுக்கினியாளும் அந்தக் கடிதத்தைப் படித்து விட்டாள்.

'மாணவர் போராட்டம், கிளர்ச்சிகளில் சம்பந்தப்பட்டுத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டியும், எச்சரித்தும் தமக்குப் பல்கலைக் கழக நிர்வாகம் 'மெமோ' அனுப்பியிருப்பதாகவும், அதனால் தாம் ஓரளவு கவனமாக ஒதுங்கி இருக்க வேண்டியிருப்பதாகவும் அதற்காகத் தம்மைத் தவறாக எண்ணக் கூடாது' என்றும் பொருளாதாரப் பேராசிரியர் அக்கடிதத்தில் வேண்டியிருந்தார். பட்டமளிப்பு விழாவை முன்பு தீர்மானித்திருந்த நாளுக்கும் முன்னதாகவே நடத்தி விடுவதற்கு அமைச்சரும், பல்கலைக் கழக நிர்வாகமும் ஏற்பாடு செய்து வருவதாகவும் மாணவர்கள் ஏதாவது கிளர்ச்சி செய்தால் ஒடுக்குவதற்கு மல்லிகைப் பந்தலில், பல ஊர்களிலிருந்தும் போலீஸ்காரர்களை வரவழைத்துக் குவிப்பதற்கு அரசாங்கமும், லாரி லாரியாகக் கட்சி அடியாட்களை வரவழைத்துக் குவிப்பதற்கு மல்லை இராவணசாமியும் முயன்று வருவதாகவும் பூதலிங்கம் அந்தக் கடிதத்தில் மேலும் விவரித்திருந்தார். பல்கலைக் கழக எல்லையிலும் நகரிலும் ஏராளமான இரகசியப் போலீஸார் அலைந்து திரிந்து கொண்டிருப்பதையும் கூறி எச்சரித்திருந்தது பேராசிரியரின் கடிதம்.

பட்டமளிப்பு விழாவுக்கு நாட்கள் மிகவும் குறைவாகவே இருப்பதை உணர்ந்த மணவாளன் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை எல்லாரிடமும் வற்புறுத்தினர். அங்கே நீராடி உணவருந்த எல்லோருக்கும் முடிந்த வரை வசதி செய்து கொடுத்தார் அண்ணாச்சி. வெளியூர் மாணவர்களை ஒன்று திரட்டுவதற்கு அனுப்ப வேண்டிய மாணவர் பிரதிநிதிகளுக்குத் தொழிலாளர் யூனியன் செயலாளர் மூலம் ஒரு ஜீப் ஏற்பாடு செய்து கொடுத்து அன்று மாலையிலேயே அனுப்பி வைத்தார் மணவாளன். வேறு ஏற்பாடுகளும் அடுத்தடுத்துச் செய்யப்பட்டன. இரகசியங்கள் எதுவும் வெளிப்பட்டு விடாமல் பாதுகாக்கும்படி மாணவர்கள் கண்டிப்பாகவும் வற்புறுத்தியும் எச்சரிக்கப் பட்டிருந்தனர். எல்லா வேலைகளும் இரகசியமாகவே நடைபெறலாயின.

அடுத்த நாள் பல்கலைக் கழகம் திறந்தது. வகுப்புக்கள் அமைதியாக நடந்தன. எல்லா மாணவர்களும் பாண்டியன், கண்ணுக்கினியாள் உட்படத் தங்கள் தங்கள் வகுப்புக்களுக்குப் போனார்கள். துணைவேந்தரே நிலைமையை நோட்டம் விட்டு அறிகிறவர் போல் எல்லாப் பிரிவுகளையும் சுற்றிப் பார்த்தார். அப்படி அவர் சுற்றிப் பார்க்கும் போது அவரோடு பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலுவும், பதிவாளரும், இராவணசாமியும், தமிழ்த்துறைத் தலைவர் பொழில் வளவனாரும் உடன் வந்தனர். எல்லாப் பிரிவிலும் வகுப்புக்கள் பரீட்சை நெருங்குகிறதே என்ற கவலையுடனும், படிப்பில் உள்ள அக்கறையுடனும் மிகவும் 'ஸீரியஸ்ஸாக' நடப்பது போல் தோன்றின. அன்று பிற்பகலில் பாண்டியனையும் மோகன்தாஸையும் ஏனைய மாணவர் பிரதிநிதிகளையும் துணைவேந்தரே தமது அறைக்குக் கூப்பிட்டுப் பாராட்டி நன்றி தெரிவித்தார். பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னார்.

"பட்டமளிப்பு விழாவுக்கு இன்னும் மூன்றே நாட்கள் தான் இருக்கின்றன. கவர்னரும் அமைச்சர் கரியமாணிக்கமும் வருகிறார்கள். கல்வி அமைச்சருடனேயே வேறு சில அமைச்சர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்தாலும் வரலாம். முதலில் பட்டம் பெறுகிற மாணவர்களுக்கும், பி.ஜி. மாணவர்களுக்கும் மட்டுமே கான்வகேஷன் ஹாலில் உட்கார அனுமதியளிப்பது என்று முடிவு செய்திருந்தேன். நீங்கள் எல்லோரும் அமைதியாக இருந்து, ஒத்துழைப்பீர்கள் என்று தோன்றுவதால் இப்போது இங்கே படிக்கிற எல்லாப் பிரிவு மாணவ மாணவிகளுக்குமே கான்வகேஷன் ஹாலுக்குள் வருவதற்கு பாஸ் தரலாம் என்று ரிஜிஸ்திராரிடம் சொல்லி விட்டேன். காலை பத்து மணிக்குத் தொடங்குகிற பட்டமளிப்பு விழா அநேகமாக ஒரு மணிக்குள் முடிந்து விடும். பிற்பகலில் இந்தப் பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர் சங்கமும், யுனிவர்ஸிடி ஸ்டாஃப் கவுன்சிலும் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள விருந்தில் அமைச்சரும் கவர்னரும் கலந்து கொள்ளப் போகிறார்கள். அமைச்சர் சிறப்புரை. பெருந்திரளாக வரவேண்டும். நாளை காலைப் பத்திரிகைகளிலேயே பட்டமளிப்பு விழா அறிவிப்பும் விளம்பரமும் வந்துவிடும்."

"எங்கள் மேல் நீங்கள் காட்டுகிற அன்புக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை சார்" என்று பாண்டியனை ஓரக் கண்ணால் பார்த்தபடி சிரித்துக் கொண்டே துணைவேந்தருக்கு நன்றி சொன்னான் மோகன்தாஸ்.

"பை நேச்சர் நீங்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்பது எனக்குத் தெரியும் பாண்டியன்! அந்தச் சைக்கிள் கடைக்காரனும் உள்ளூர் பாலிடீஷியன்களும் தான் அடிக்கடி உங்களைத் தூண்டிவிட்டுக் கெடுத்துடறாங்க... இல்லியா?"

துணைவேந்தரின் இந்தக் கேள்விக்கு மாணவர்கள் ஒரு பதிலும் சொல்லவில்லை. மௌனமாகத் தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"மாணவர்களாகிய உங்கள் வார்த்தைக்காகத்தான் நான் அந்தச் சைக்கிள் கடை ஆளையும், மற்றவர்களையும் வெளியே விடச் சொல்லி ஆர்.டி.ஓ.வுக்கு ஃபோன் பண்ணினேன். இல்லையானால் பட்டமளிப்பு விழா முடியற வரை விட்டிருக்க மாட்டாங்க. ஐ ஹேட் ஹிம் லைக் எனிதிங். இராவணசாமிக்கு இந்த ஆளையும், உங்கள் மணவாளனையும், இன்னொரு டிரேட் யூனியன் காரியதரிசி இருக்கானே - அவன் பெயரென்ன? - அவனையும் அறவே பிடிக்கலை" - என்று துணைவேந்தர் பேசப் பேச அவருடைய சுயரூபம் தெரியத் தொடங்கியது. தங்கள் தந்திரத்தை அவர் புரிந்து கொள்ளாமல் முழுமையாக நம்பிவிட்டதைப் பார்த்து அவர் மேல் உள்ளூறப் பரிதாபப்பட்டார்கள் அவர்கள்.

"எங்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள் சார்! நாங்கள் நியாயமாக நடந்து கொள்வோம். நியாயமும் நேர்மையும் தான் எங்களுக்குப் பெரிது. நீங்களே விரும்பாவிட்டால் கூட நம்முடைய யுனிவர்ஸிடியின் நற்பெயரைக் காப்பாற்ற எதைச் செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்" என்று கூறிவிட்டு மேலும் அவரோடு பேசிக் கொண்டிருக்க விருப்பமின்றி விடை பெற்றான் பாண்டியன். மற்ற மாணவர்களும் அவனோடு துணைவேந்தர் அறையிலிருந்து வெளியேறினார்கள்.

வெளியே வந்ததும் ஒரு மாணவன் பாண்டியனின் காதருகே, "அதென்னப்பா வி.சி.யிடம் அப்படி உறுதி மொழி கொடுத்தே? 'நீங்களே விரும்பாவிட்டாலும் நியாயத்தைக் காப்பாத்துவோம். யுனிவர்ஸிடியின் நற்பெயரைக் காப்பாற்றுவோம்'னா என்ன அர்த்தம்?" என்று கேட்டான். அதற்குப் பாண்டியன்,

"அர்த்தம் எல்லாம் சரியாத்தான் இருக்கு பிரதர்! வி.சி. ஏமாந்த மாதிரி நீயும் ஏமாறதே! என் வார்த்தைகளை நமது நோக்கில் சிந்தித்துப் பார்! அர்த்தம் புரியும். நான் எதிலும் 'காம்ப்ரமைஸ்' செய்து கொள்ளவில்லை என்பது புரியும்" என்று சிரித்தபடி பதில் கூறிய பின்பே அந்த மாணவனின் சந்தேகம் தீர்ந்தது.

முப்பத்து ஒன்பதாவது அத்தியாயம்

மாணவர்களைத் துணைவேந்தர் முழுமையாக நம்பி விட்டாற் போல் நடந்து கொண்டார் என்றாலும், அமைச்சர் கரியமாணிக்கமும், சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலுவும் மாணவர்களை நம்பவில்லை. எஸ்டேட் அதிபரும் பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட்டில் முக்கிய உறுப்பினருமான ஆனந்தவேலு மாணவர்களின் எதிர்ப்பை அடக்கி ஒடுக்குவதற்கு என்றே நிறைய பணம் செலவழிக்கவும் தயாராயிருந்தார். மல்லை இராவணசாமி வெளியூர்களிலிருந்தும் தம் கட்சியின் அடியாட்களை மல்லிகைப் பந்தலில் குவித்து வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். மணவாளன் செய்திருந்த ஏற்பாடுகளின்படி வெளியூர்களிலிருந்தும் மாணவர்கள் பெருந்தொகையாக மல்லிகைப் பந்தலில் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மதுரையிலிருந்தும் லாரி லாரியாகப் போலீஸ்காரர்கள் மல்லிகைப் பந்தலில் கொண்டு வந்து குவிக்கப்பட்டார்கள். 'உடன்பிறப்பே, உயிரே, தேனே! மல்லிகைப் பந்தலுக்கு அமைச்சரை வரவேற்கக் கொடியுடன் வா! முடிந்தால் அது தடியாகவும் இருக்கட்டும்! எதிரிகளின் தலைகளுக்கு இடியாகவும் இருக்கட்டும்!' என்பது போல் இராவணசாமி கையொப்பமிட்டு அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள தமது கட்சி ஆட்களை வரச்சொல்லி சுற்றறிக்கையே அனுப்பியிருந்தார். அந்தச் சுற்றறிக்கையில் ஒன்று எப்படியோ தேசிய மாணவர்கள் வசம் சிக்கியிருந்தது. பல்கலைக் கழக மாணவர்களில் மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்பு உள்ளவர்கள் வர வரக் குறைந்து நூற்றுக்கணக்கில் கூட இல்லாமற் போயிருந்தார்கள். பேரவைத் தேர்தலில் தோற்று விட்ட எரிச்சலில் அன்பரசன், வெற்றிச் செல்வன் போன்ற ஒரு சில மாணவர்களும், மிகச் சில மாணவிகளும் அங்கே பாண்டியன், மோகன்தாஸ், கண்ணுக்கினியாள் ஆகியவர்களைக் கொண்ட தேசிய மாணவர்களின் பெரும்பான்மை அணிக்கு எதிரிகளாக இருந்தார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைந்து போயிருந்தாலும் போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கு எப்போதும் கிடைக்க அவர்கள் என்ன கலவரம் செய்தாலும் போலீஸார் அவர்களை நெருங்காதபடியும், அவர்கள் சுட்டிக் காட்டுகிறவர்களை உடனே எதுவும் செய்யும்படியும் ஆளும் கட்சி அவர்களுக்கு வசதி செய்து கொடுத்திருந்தது. பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்கத் தேசிய மாணவர்களுக்கு எதிரான இவர்கள் ஒடுங்கினாற் போலவும், ஒதுங்கினாற் போலவும் இருந்தாலும், போலீஸுக்கும், பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும், ஆளும் கட்சிக்கும் உளவாளிகளைப் போல் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சட்டத்தை மீறிக் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் வேறு இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் ஈடுபட்டிருந்தார்கள். "எங்க கட்சிக்கு மது விலக்கிலே நம்பிக்கை கிடையாது! எங்க சர்க்கார் சீக்கிரமா அதை எடுத்துப்பிட்டுக் கள்ளுக்கடை, சாராயக் கடைகளைத் திறந்தாலும் திறந்திடுவாங்க. அதுக்குள்ளே இதிலே நாங்க பணம் பண்ணியாகணும். ஆனா அதுக்குப் பிறகும் அந்தக் கடைக்காரனை விட அஞ்சு பைசா மலிவுன்னு நாங்க சொல்லிட்டா எங்க சரக்குத்தான் நிறைய விற்கும்... எங்களை யாரும் அசைக்க முடியாது" என்று இராவணசாமியே அடிக்கடி மார் தட்டிப் பேசிக் கொள்வது உண்டு. தம் சார்புள்ள மாணவர்களில் பலரைக் குடிக்கவும் பழக்கியிருந்தார் அவர்.

"நான் உள்ளே தண்ணியை ஊத்திக் கையிலே தடியைக் கொடுத்துப் பத்துப் பேரை அனுப்பிச்சா உன் ஆளுங்க ஆயிரம் பேர் கூட எதிரே நிற்க முடியாது தெரியுமா?" என்று முன்பு ஒரு சமயம் மணவாளனை எதிர்த்துச் சவால் விட்டிருந்தார் இராவணசாமி. இப்போது பாண்டியன் இருப்பது போல் அப்போது மணவாளன் மாணவர்களின் அணியைப் பொறுப்பேற்று நடத்துகிறவராக இருந்தார். அதே போன்ற காரியங்களை இப்போதும் இராவணசாமி செய்யக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையைப் பாண்டியனிடமும் மற்ற மாணவர்களிடமும் செய்திருந்தார் மணவாளன். எதற்கும் மாணவர்கள் விழிப்பாகவே இருந்தனர்.

பட்டமளிப்பு விழாவுக்கு முந்திய நாள் மாலை தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் கட்டிட மாடியில் மாணவர்கள் கூடிப் பேசினார்கள். கூட்டம் இரகசியமாகவே நடந்தது. இராவணசாமி கட்சியினரைத் தவிர மற்ற எல்லாப் பிரிவு மாணவர்களும் அங்கே வந்திருந்தார்கள். ஆளும் கட்சியின் குமாஸ்தாவைப் போல் செயல்படும் துணைவேந்தர் மேலும், பல்கலைக் கழக நிர்வாகத்தின் மீதும் மாணவர்கள் கடுங்கோபத்தோடு இருந்தார்கள். போதாக் குறைக்குப் பேராசிரியர் ஸ்ரீராமன் தாக்கப்பட்டது தொடர்பாகவும் வேறு சில போராட்டங்கள் தொடர்பாகவும் நடந்த நீதி விசாரணையில் பேராசிரியருக்கும் மாணவர்களுக்கும் பாதகமாகவும், அரசாங்கத்துக்குச் சாதகமாகவும் கூறப்பட்ட தீர்ப்பு வேறு அன்றைய காலைத் தினசரிகளில் வெளியாகி மாணவர்களின் கொதிப்பை இன்னும் அதிகமாக்கியிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு திருமாநல்லூர் என்கிற கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், வேறு இடங்களில் சில மாணவர்கள் போலீஸ் அடக்கு முறைக்குப் பலியானதற்கும் காரணமான அமைச்சர் கரியமாணிக்கத்தை அவருக்கு டாக்டர் பட்டமளிக்கும் போது கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்கள் மாணவர்கள். அதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயமே இல்லை.

"இதில் நாம் பலாத்காரத்தைக் கடைப்பிடித்து அவர்களும் பலாத்காரத்தைக் கடைப்பிடித்தால் அப்புறம் அவர்களிலிருந்து நம்மைத் தனியே உயர்த்திக் கொள்ளவோ, பெருமைப்பட்டுக் கொள்ளவோ எதுவுமில்லை. நமது எதிர்ப்பு அமைதியாக இருக்கவேண்டும். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா மண்டப முகப்பிலோ, நிர்வாகக் கட்டிடமாகிய பூபதி ஹால் முகப்பிலோ வழியில் குறுக்கே படுத்துக் கூட நாம் மறியல் செய்யலாம். யுனிவர்ஸிடி காம்பஸுக்குள் அவர்கள் போலீஸைக் கொண்டு வரமாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்" என்று மணவாளன் கூறிய போது பல மாணவர்கள், "அதெல்லாம் பழைய காலம்! இப்போதெல்லாம் வி.சி.க்குப் பதில் போலீஸார் தான் யுனிவர்ஸிடியையே நடத்துகிறார்கள். மேரிதங்கம் தற்கொலையின் போது ஒரு வார காலம் வரை காம்பஸுக்குள் போலீஸ்தானே குடியிருந்தது?" என்று பதிலுக்கு வினவினார்கள்.

"அண்ணன் நினைப்பது போல் இவர்களுக்குச் சத்தியாக்கிரஹம் எல்லாம் புரியாது! சத்தியாக்கிரஹத்தைக் கௌரவிக்கத் தெரியாத முரடர்களுக்கு முன்னால் சத்தியாக்கிரஹம் நடத்திக் கூடப் பயனில்லை" என்றான் பாண்டியன். பாண்டியனே அப்படிக் கூறியது மணவாளனுக்கு வியப்பு அளித்தது.

"நான் இன்னும் சத்தியாக்கிரஹிதான்! துன்பங்களைத் தாங்கிக் கொண்டு எதிர்பபவனின் மன வலிமை, எதிரிகளைத் தாக்கிவிட்டு எதிர்ப்பவனுக்கு இருக்க முடியாது. என்னால் ஒரு சிலம்பக் கழியைச் சுற்றி நூறு பேரை தாக்கி விட முடியும் தம்பீ! ஆனால் அதை நான் தவறான முறையில் செய்ய மாட்டேன்" என்றார் அண்ணாச்சி.

"அண்ணாச்சியை நாங்க மதிக்கிறோம். ஆனால் தாங்கிக் கொள்ள முடிந்த எல்லையை மீறி நமக்குத் துன்பங்கள் வந்து விட்டன. இனிமேல் தாங்க முடியாது. பொறுமைக்கும் எல்லை உண்டு. இங்கே 'காஸ்ட்ரோக்'கள் தோன்ற வேண்டும். புரட்சியைத் தவிர வேறு வழியே இல்லை. காலம் மாறிவிட்டது. மோசமானவர்களை எதிர்த்துக் கௌரவமான முறையில் போராட முடியாது. தீவிரம் தேவை" என்றார் லெனின் தங்கத்துரை என்ற இடதுசாரி மாணவர்.

"கதிரேசன் தொடங்கியதுதான் சரியான தொடக்கம். நீங்களெல்லாம் அப்போது அதை ஆதரிக்கத் தவறிவிட்டு இப்போது கதறுகிறீர்கள்" என்றார் மேலும் தீவிரமான ஒரு மாணவர். லெனின் தங்கத்துரை பிரிவில் ஒரு குழுவும், இரகசியமாக கதிரேசனை ஆதரிக்கும் மற்றொரு குழுவும் இருப்பதைப் பாண்டியன், மணவாளன் எல்லாருமே அறிந்திருந்தார்கள். இந்த எல்லாப் பிரிவினருமே அண்ணாச்சியை மதித்தனர். அவர் ஒரு தூய காந்தீயவாதி என்பதைப் புரிந்து கொண்டிருந்தார்கள். லெனின் தங்கதுரை பாண்டியனை எத்தனையோ முறை 'ரீயாக்ஷனரி' என்றும் 'பூர்ஷ்வா' என்றும் திட்டியிருக்கிறார். ஆனால் அதே தங்கதுரை அண்ணாச்சியிடம் அடங்கிவிடுவார். பேதா பேதம் பாராமல் எல்லா நல்ல மாணவர்களுக்கும் அண்ணாச்சி செய்திருக்கும் உதவிகள் தொண்டுகள் அனைத்தும் அவரை எல்லாப் பிரிவு மாணவர்களும் மதிக்கச் செய்திருந்தன. தொழுகிற அளவு உயர்த்தியிருந்தன.

"மாணவிகளில் சரி பாதிக்கு மேல் பயந்து கொண்டு பட்டமளிப்பு விழாப் போராட்டங்களுக்கு வரத் தயங்குகிறார்கள். 'சஸ்பெண்ட்' ஆகிவிடுவோமோ என்று கூடப் பயப்படுகிறார்கள் என்றாலும் என்னால் முடிந்தவரை நிறையப் பேர்களை சேர்த்திருக்கிறேன். அண்ணாச்சி சொல்வதுபோல் அமைதியான எதிர்ப்பு என்றால் தான் மாணவிகள் வருவார்கள். வன்முறை என்றால் ஒதுங்கி விடுவார்கள்" என்றாள் கண்ணுக்கினியாள். எதிர்ப்பது எப்படி என்பதில் சாத்வீகம், தீவிரம், அதிதீவிரம், என்றெல்லாம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தகுதியற்றதும், முறையற்றதுமாகிய அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி எல்லோருக்கும் இருந்தது. நீண்ட நேரத் தர்க்க விவாதங்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு பொது முடிவுக்கு வந்து சேர்ந்தார்கள். நாட்டுக்கும் குறிப்பாக மாணவ சமூகத்துக்கும் பல கெடுதல்களைச் செய்துவிட்டவரும் எதற்கோ லஞ்சமாக யாரோ திட்டமிட்டுக் கொடுக்கும் டாக்டர் பட்டத்தைப் பெற வருகிறவருமான அமைச்சர் கரியமாணிக்கத்துக்கும் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் புலப்படுத்துவது என்ற ஓர் அடிப்படையில் எல்லாப் பிரிவு மாணவர்களும் இணங்கி வந்தார்கள். இரவு எட்டு மணிக்கு அவர்கள் கூட்டம் கலைந்தது. மாணவர்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களும் வெளியூர் மாணவர்களும் நகர எல்லையிலேயே அமைச்சருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர். கூட்டம் முடிந்த பின், அண்ணாச்சி, மணவாளன், பாண்டியன், கண்ணுக்கினியாள், மோகன்தாஸ், பொன்னையா ஆகிய ஆறு பேரும் யூனியன் கட்டிட மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அண்ணாச்சி, "தம்பீ? இப்பிடியே எல்லாருமாகக் கோயிலுக்குப் போயிட்டு வரலாம். ஒரு நல்ல காரியத்தைச் செய்யப் பேசி முடிச்சிருக்கோம். சாமிக்கு வேண்டிக்கிட்டுப் போகலாம்" என்றார். மற்ற எல்லாரும் உடனே மோகன்தாஸ் முகத்தைப் பார்த்தார்கள். அவன் அவசரமாகப் பல்கலைக் கழகத்துக்குப் போய்ச் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. என்றாலும் அண்ணாச்சி சொல்லைத் தட்ட முடியாமல் அவனும் இணங்கினான். அந்தத் தெருக் கோடியில் ஒரு சிறு குன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிதாகக் கட்டப்பட்டிருந்த முருகன் கோயிலுக்குப் போவதற்காகப் பேசிக் கொண்டே நடந்தார்கள் அவர்கள். அப்போது பாண்டியன் அண்ணாச்சியிடம் சொன்னான்: "பொழில் வளவனாரும், பண்புச் செழியனாரும் வகுப்புகளிலேயே விபூதி குங்குமம் வச்சிக்கிட்டு வர்ற பையன்களைக் கேலி பண்றாங்க. கோயிலுக்குப் போறதைக் கிண்டல் செய்யிறாங்க..."

"பழைய சின்னங்களைக் கேலி பண்றவங்க எல்லாம் தாங்களே புதிய புதிய சின்னங்களை இப்போ அணியிறாங்களே, தம்பீ! கட்சிக் கொடியிலே கரை போட்ட மேல் துண்டு, கட்சித் தலைவரோட படம் பதித்த மோதிரம், பேட்ஜ்னு அணியிறதெல்லாம் எதிலே சேரும்?" என்று அண்ணாச்சி கோபமாகப் பதிலுக்கு வினவியதும் மணவாளன், "அண்ணாச்சி! இங்கே இன்னிக்கு நம்ம நாட்டிலே உள்ள குறையே அது தான்! காந்தியும், திலகரும் சுதந்திரப் போராட்டத்திலே இறங்கின காலத்திலே இருந்த தேசபக்தி 'ஸ்பிரிச்சுவல் நேஷனலிஸம்'. இப்ப இருக்கிற தேச பக்தியோ வெறும் 'மெட்டீரியலிஸ்டிக் நேஷனலிஸம்' தான். இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி எல்லாருமே கோயிலுக்குள்ளே போக முடியாம இருக்கேன்னு குமுறி எல்லாரும் போய்க் கும்பிட உரிமை கோரி ஆலயப் பிரவேசம் வேண்டினோம். இப்போது என்னடான்னா யாருமே கோயிலுக்குப் போகாதீங்கன்னு சிலர் போராடறாங்க. நாட்டின் கலாசாரங்களை அழிய விட்டு விட்டு வெறும் மண்ணை நேசிப்பது மட்டுமே தேசபக்தின்னு தவறாப் புரிஞ்சிக் கிட்டிருக்காங்க... தேசம் என்பது வெறும் மண்ணல்ல, மண்ணும் அதன் கலாசாரங்களும் சேர்ந்தது தான் தேசம்... மண் மட்டுமே தேசம் என்றால் பாலை வனம் கூடத் தேசமாகி விட முடியும்" என்றார் மணவாளன்.

"நல்லாச் சொல்றீங்க தம்பீ! எங்க நாளிலே தேச பக்தியும் தெய்வ பக்தியும் உள்ளங்கையும் புறங்கையும் மாதிரி பிரிக்க முடியாம இருந்திச்சு. ஒரு கையிலே தெய்வ பக்தியும், மறு கையிலே 'வெள்ளையனே வெளியேறு' என்ற கோரிக்கையுமாக நின்னாங்க... இப்ப இருக்கிற அரசியல்லேயும், பொது வாழ்விலேயும் அந்தரங்க சுத்தி இல்லாமற் போனதுக்குக் காரணமே இந்தத் தலை முறை அரசியல்வாதிகளிடம் இந்தியாவின் அடிப்படையான ஆன்மீகக் குணங்கள் ஒரு சிறிதும் இல்லாததுதான்னு எனக்குத் தோணுது" என்று கண்களில் ஒளி மின்ன மீசை துடிதுடிக்கப் பதில் சொன்னார் அண்ணாச்சி.

"ஏசுநாதரின் சகிப்புத் தன்மையும், கண்ணனின் கீதைத் தத்துவமும் அல்லாவின் அருளுரைகளும் அடங்கிய ஆன்மீகத் தன்மையோடு கூடி வருங்காலச் சுதந்திர இந்தியா இருக்கணும்னு நெனைச்சார் காந்தி. எல்லா ஜனங்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேணும்னு கனவு கண்டார் நேரு. இன்னும் அவை இங்கே கனவுகளாகத்தான் இருக்கு" என்றாள் கண்ணுக்கினியாள்.

"பூதலிங்கம் சார் கூட ஒவ்வொரு பொருளாதார லெக்சரப்பவும் நேருஜியைப் பத்தி நீங்க இப்ப சொல்லற இந்தக் கருத்தைத் தவறாமல் சொல்லுவாரு" என்றான் பொன்னையா. அவர்கள் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்த போது அர்ச்சகர் முருகனுக்குக் கற்பூரம் காட்டிக் கொண்டிருந்தார்.

எல்லாருக்கும் திருநீரு கொடுத்த பின் உள்ளே அதிகமாக இருந்த மாலைகளில் நாலைந்தை எடுத்து வந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாலை போட்டு வாழ்த்தினார் அந்த அர்ச்சகர். அவர்கள் மாலைகளைக் கழற்றும் போது தற்செயலாக அருகருகே நின்று கொண்டிருந்த பாண்டியனையும், கண்ணுக்கினியாளையும் மட்டும், "தம்பீ! நீங்க ரெண்டு பேரும் மட்டும் கொஞ்சம் அப்பிடியே நில்லுங்கள்... மாலையைக் கழட்டாதீங்க. உங்களைக் கண்குளிரப் பார்க்கணும் போல் இருக்கு. உங்க கல்யாணம் பாலவநத்தத்திலே நடக்குமோ, மதுரையிலே நடக்குமோ தெரியாது. அப்ப இந்த ஏழைத் தொண்டன் அங்கெல்லாம் வர முடியாட்டியும் இப்பவே கண் நெறையப் பார்த்துக் கிடுதேன்" என்று அண்ணாச்சி பிரியமாகச் சிரித்தபடி அவர்களை வேண்டிக் கொண்டார்.

"காமிரா இருந்தால் இப்படியே ஒரு 'போட்டோ'க்கூட எடுத்து விடலாம்" என்றார் மணவாளன்.

"போங்க அண்ணாச்சி! எங்க ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்த்துப்பிட்டால் உங்களுக்கு எப்பப் பார்த்தாலும் இதே கேலிதான்" என்று முகம் சிவக்க வெட்கப் பட்டுக் கொண்டே இங்கிதமான குரலில் அவரைக் கடிந்து கொண்டாள் கண்ணுக்கினியாள்.

"நான் கேலி செய்யாம வேற யாரும்மா செய்வாங்க? என் கடையிலேதான் இந்த 'யாவாரமே' ஆரம்பமாச்சு?"

"அண்ணாச்சி சொல்றதை நான் மறுக்கலே..." என்று சொல்லிக் கொண்டே அவளை ஓரக் கண்ணாலே பார்த்தபடி மாலையைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டான் பாண்டியன். அவளும் தன் மாலையைக் கழற்றிக் கொண்டாள்.

"ஒண்ணும் கவலைப்படாதீங்க!... முருகன் காப்பாத்துவான்!... முருகனும் வள்ளியும் மாதிரி இருக்கப் போறீங்க..." என்று கண்களில் குறும்பு மின்ன அவர்களை வாழ்த்தினார் அண்ணாச்சி.

"உனக்குக் கிடைத்த யோகம் மணவாளனுக்குக் கூடக் கிடைக்கலே, தம்பீ! அவரு இங்கே படிச்சப்ப இப்படி ஒரு பொருத்தமான ஜோடி அகப்படலே... பாவம்! இங்கே அவரு காதலிச்சதெல்லாம் மாணவர் இயக்கத்தை மட்டும் தான் தம்பீ! என்னைப் போல அவரும் ஒரு அப்பாவி!"

"உங்க ரெண்டு பேரையும் போல அப்பாவிகள் இந்த நாட்டுக்கு இன்றைய நிலையில் இன்னும் எவ்வளவோ பேர் தேவை! எங்களைப் போன்றவர்கள் வீதிக்கு வீதி கல்லூரிக்குக் கல்லூரி வகுப்புக்கு வகுப்பு யாராவது இருப்பார்கள். ஆனால் ரெண்டு பேரையும் போல் ஊருக்கு ஒருத்தராவது வேணும் அண்ணாச்சி!..."

"தம்பீ! ஏதேது... ஒரேயடியாய்ப் புகழ்ந்து தள்ளிடாதே... நான் ஒரு அசடன். புகழ்கிறவர்களுக்கு முன்னாடி நிற்கவே கால் கூசும் எனக்கு... வேறே ஏதாவது பேசு..."

அன்றிரவு ஒன்பதரை மணிக்குள்ளேயே எல்லா மாணவ மாணவிகளும் விடுதிக்குத் திரும்பி வந்து விட வேண்டும் என்று பல்கலைக் கழகப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மறுநாள் காலை பட்டமளிப்பு விழா ஆகையினால் மாணவர்கள் வெளியே தங்கி ஏதாவது கூடிப் பேசித் திட்டமிடக் கூடாதே என்ற எண்ணத்தில் தான் துணைவேந்தர் இந்த ஏற்பாட்டைக் கண்டிப்பாகச் செய்திருந்தார். ஒன்பதே முக்கால் மணிக்கு ஒவ்வொரு விடுதி வார்டனும் அறை அறையாகப் போய் அட்டெண்டன்ஸ் பார்த்து அறையில் இல்லாத மாணவர்களின் பட்டியலைத் தமக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கடுமையாகக் கட்டளை இட்டிருந்தார். மாணவர்கள் தம்மிடம் கூறியிருந்தபடி அமைதியாக இருக்கமாட்டார்களோ என்று திடீரென்று அவருக்கே ஒரு சந்தேகம் முதல் நாளிரவு வந்திருந்தது. ஆர்.டி.ஓ. மூலம் கிடைத்த சி.ஐ.டி. ரிப்போர்ட் வேறு சரியாக இல்லை. மேலேயிருந்து அமைச்சரோட பி.ஏ. வேறு, "கவனித்துச் செயல் புரியுங்கள்" என்று ஃபோன் மூலம் எச்சரித்த வண்ணமாய் இருந்தார். சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலு தந்திரமாகத் துணைவேந்தருக்கு ஒரு யோசனை சொல்லியிருந்தார். புதிதாக அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருந்த போஸ்ட் கிராஜுவேட் ஹாஸ்டல் 'நியூ பிளாக்'கின் மூன்று மாடிக் கட்டிடத்தில் மொத்தம் நூற்றைம்பது அறைகள் இருந்தன. அந்த நூற்றைம்பது அறைகளுமே 'பட்டமளிப்பு விழாவுக்கு வரும் விருந்தினர்கள் தங்க ஒதுக்கப்படுகிறது' என்று ஒரு குறிப்பை யுனிவர்ஸிடி ரிஜிஸ்தரில் எழுதிக் கொண்டு அவைகளில் மல்லை இராவணசாமியும் தானும் தயார் செய்திருந்த கட்சி அடியாட்களைச் சவுக்குக் கட்டை, சோடா புட்டிகள், கற்கள் சகிதம் குடியேற்றி வைக்குமாறு ஆனந்த வேலு கூறிய யோசனையைத் துணைவேந்தர் ஏற்றுக் கொண்டு விட்டார். இரவு பதினொரு மணிக்கு மேல் இந்த அடியாட்களைக் குடியேற்றும் காரியம் பரம ரகசியமாக நடந்தது. குடித்துவிட்டு வெளியேறிய கட்சி ஆட்கள் 'புது பிளாக்' கட்டடத்தில் குடியேறுவதை முதலில் பார்த்த லெனின் தங்கத்துரை உடனே பாண்டியனின் அறைக்குத் தேடி வந்து இதைச் சொன்ன போது பாண்டியன் அதிர்ச்சி அடைந்தான். பூபதி ஹாலைச் சுற்றியும், வேறு இடங்களிலும் போலீஸ் வேறு நிரப்பப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிந்தது. தகவலைத் தெரிவித்துவிட்டு, "நாம் என்ன செய்யலாம்?" என்று லெனின் தங்கதுரை கேட்டார். "கொஞ்சம் பொறுங்கள் பிரதர்! நாம் யாரும் இப்போது வெளியே போய்த் திரும்ப முடியாது. ஹாஸ்டல் 'வாட்டர் பாய்' ஒருவன் இங்கே கீழே, 'செர்வண்ட்ஸ் ரூமி'ல் தூங்கிக் கொண்டிருப்பான். அவனை எழுப்பி மெல்லத் தகவலைச் சொல்லி அண்ணாச்சி கடைக்கு அனுப்புவோம். மணவாளன் அண்ணன் அங்கேதான் அண்ணாச்சி கடையிலே இருப்பாரு. இதைப் பற்றி அவரு அபிப்பிராயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு மேலே யோசிப்போம்..." என்று சொல்லி விட்டுப் பாண்டியன் கீழே போய் அந்தப் பையனை எழுப்பி ஒரு சிறு தாளில் லெனின் தங்கத்துரை கூறிய விவரத்தை எழுதிக் கொடுத்து அவனை அண்ணாச்சிக் கடைக்கு அனுப்பி வைத்தான். பையன் திரும்பி வருவதை எதிர்பார்த்து அறையில் காத்திருந்த போது உடனிருந்த மற்ற மாணவர்களுக்கும், லெனின் தங்கத்துரைக்கும் பாண்டியனுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. "மயிலே மயிலேன்னா இவங்க இறகு போட மாட்டாங்க பாண்டியன்! நாம அமைதியா எதிர்த்தாலும் அவங்க போலீஸையும் குண்டர்களையும் விட்டு நம்மையெல்லாம் உதைச்சு அவமானப்படுத்தப் போறாங்க... நாமும் இப்பவே அவங்களைப் பதிலுக்கு அவமானப் படுத்தத் தயாராக வேண்டியதுதான்... இதோ பாரு? கீழே ஹாஸ்டல் மெஸ் கிச்சனுக்குப் பக்கத்திலே அடுப்பெரிக்க ஸ்டாக் பண்ணியிருக்கிற சவுக்குக் கட்டை மலை மலையாகக் குவிஞ்சிருக்கு. நாமும் அறைக்கு அறை இப்பவே நாலு கட்டைகளை எடுத்துத் தயாராக ஒளித்து வைச்சுக்க வேண்டியது தான். இல்லாட்டி நாளைக்கி நம்மைச் சட்டினியாக்கி விடுவாங்க" என்றார் தங்கத்துரை. பாண்டியன் தயங்கினான்.

"மாணவர்களுக்காக நாம் நடத்தற போராட்டத்திலே பத்து மாணவர்கள் அடிபட்டு இரத்தம் சிந்தற மாதிரி நாமே தூண்டி விடப்பிடாது! கூடியவரை அமைதியாகப் போறதுதான் நல்லது. இன்டிஸிப்ளினா இருக்கிற ஒரு சர்க்காரை எதிர்க்க நமக்கு வேண்டிய தார்மீக பலம் நாமாவது டிஸிப்பிளினா இருந்து போராட்டம் நடத்தறோம்கிறதுதான். அது மிக மிக முக்கியம்" என்று பாண்டியன் கூறியதைக் கேட்டு தங்கத்துரை முகத்தைச் சுளித்தார்.

"நீ அமைதியா இருந்தாலும் அவங்க உதைக்கத்தானே போறாங்கன்னு இவர் சொல்றதிலே இருக்கிற பாயிண்டைக் கவனி பாண்டியன்?" என்று அறை நண்பன் பொன்னையாவே தங்கத்துரைக்குப் பரிந்து பேசினான். வேறொரு மாணவனும் அதே கருத்தைச் சொன்னான். தங்களோடு சேர்ந்திருந்தாலும் லெனின் தங்கத்துரை பிரிவினரும், கதிரேசனால் உருவாக்கி விடப்பட்ட ஒரு பிரிவினரும், பல தீவிர எதிர்ப்புக்களுக்குத் தனியே திட்டமிடுவதாகப் பாண்டியன் ரகசியமாகக் கேள்விப்பட்டிருந்தான். என்ன செய்வதென்று பாண்டியன் யோசித்துக் கொண்டிருந்த போது அண்ணாச்சி கடைக்குக் கடிதம் எடுத்துச் சென்ற பையன் திரும்பி வந்தான். பாண்டியன் அனுப்பிய கடிதத்திலே பின் பக்கம் மணவாளன் இரண்டே வாக்கியங்களைச் சுருக்கமான பதிலாக எழுதியிருந்தார்.

"உணர்ச்சி வசப்பட்டு அவசரமாக எதுவும் செய்ய வேண்டாம். பொறுமையாக இரு. விடியட்டும்." இந்தப் பதிலைத் தங்கத்துரையிடம் பாண்டியன் காண்பித்ததும், அவர் "பொறுமையைக் கொண்டு போய் உடைப்பிலே போடுங்கள்! பொறுமையாக இருந்தால் விடியவே விடியாது" என்று கோபமாகக் கூறிவிட்டுத் தம் நண்பர்களுடன் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

நாற்பதாவது அத்தியாயம்

பட்டமளிப்பு விழா தினத்தன்று அங்கே நடக்க இருப்பதைக் காணச் சூரியனுக்கும் அதிக ஆவலோ என்னவோ, அன்று மல்லிகைப் பந்தலில் மிகவும் விரைவாகவே பொழுது விடிந்து விட்டாற் போலிருந்தது. நகர் எங்கும் மந்திரியை வரவேற்கும் வளைவுகளை நிரப்பியிருந்தார் இராவணசாமி. 'இதயத்தின் இமயமே வருக, தமிழர் தானைத் தலைவனே வருக' என்றெல்லாம் அர்த்தமில்லாத வாசகங்கள் வளைவுகளை அலங்கரித்து எழுதப்பட்டிருந்தன. காலையில் வருவதாகப் பத்திரிகைகளில் செய்தி பிரசுரிக்கச் செய்துவிட்டுக் கறுப்புக் கொடி காட்டுகிறவர்களுக்குப் பயந்து முதல் நாள் இரவு ஒரு மணிக்கே இரகசியமாகப் பல்கலைக் கழக விருந்தினர் மாளிகையில் வந்து காதும் காதும் வைத்தாற் போல் தங்கிவிட்டார் அமைச்சர் கரியமாணிக்கம். ஊர் எல்லையில் காலையில் கறுப்புக்கொடி காட்டத் திரண்டு போய் நின்ற தொழிலாளர் கூட்டமும் மாணவர் கூட்டமும் மந்திரி தங்களை ஏமாற்றிவிட்டு இரவோடு இரவாகவே வந்து சேர்ந்திருக்கிறார் என்று அறிந்ததும் கோபம் அடைந்து வரவேற்பு வளைவுகளைச் சாய்த்துக் கொண்டும், மந்திரிக்கு எதிரான கோஷங்களை முழக்கிக் கொண்டும் பல்கலைக் கழக வாயிலை நோக்கிப் படையெடுத்தது. அந்தச் சமயம் பார்த்து அங்கே காரில் வந்த கவர்னரும், கல்வி அமைச்சரும், வேறு சில அமைச்சர்களும், துணைவேந்தரும் அந்தக் கூட்டத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. போலீஸார் அவர்களைச் சிரமப்பட்டுக் கூட்டத்திலிருந்து விலக்கி பல்கலைக் கழகத்துக்கு உள்ளே அனுப்ப வேண்டியதாயிற்று. முதல் நாள் இரவு வரை எதுவுமே நடக்காது என்று நினைத்ததற்கு நேர்மாறாகப் பல்கலைக் கழக எல்லை முழுவதும் பயங்கரமாக மாறி இருந்தது. 'தகுதியற்றவர்களுக்கு டாக்டர் பட்டம் ஒரு கேடா' என்று சுவர்களிலும் தார் ரோட்டிலும் எழுதியிருந்தது. ஓர் இடத்தில் இப்படிக் கூடப் பெரிதாக எழுதியிருந்தார்கள்: 'கீழ்க்கண்ட முகவரியில் ஞானசூன்யங்களுக்கும், கொடுங்கோன்மையாளர்களுக்கும் டாக்டர் பட்டம் மிக மிக மலிவாகக் கிடைக்கும். விவரங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி பின்வருமாறு' என்று எழுதிக் கீழே துணைவேந்தரின் விலாசம் வரையப்பட்டிருந்தது. 'படித்தவர்களுக்கு வேலையில்லை! வேலையற்றவர்களுக்கு எதற்குப் பட்டம்?" என்று ஓரிடத்தில் தார் ரோட்டில் பூதாகாரமான எழுத்துக்களில் எழுதியிருந்தது. பட்டமளிப்பு விழா மண்டபத்துக்குள் போக வேண்டுமானால் அந்தத் தார் ரோடு வழியாகத்தான் கடந்து போயாக வேண்டும். காலை ஏழு மணி முதலே அங்கே படித்துக் கொண்டிருந்த சகல பிரிவு மாணவர்களும் மாணவிகளும் எங்கிருந்தெல்லாமோ பல ஊர்களிலிருந்து பட்டம் பெற வந்திருந்த எல்லா வகை மாணவ, மாணவிகளும் கட்டுப்பாடாகப் பட்டமளிப்பு விழாக் கூடத்தைச் சுற்றி யாரும் உள்ளே நுழையாதபடி கோட்டைச் சுவர் எடுத்தது போல் அணிவகுத்துக் கை கோர்த்தபடி நின்றுவிட்டார்கள். மணவாளனும், பாண்டியனும், மோகன்தாஸும் பட்டமளிப்பு விழாக் கூடத்தின் பிரதான வாயிலருகே நின்று கொண்டிருந்தார்கள். லெனின் தங்கத்துரை குழுவினர் பல புது முறை எதிர்ப்புக்களைச் செய்திருந்தனர். பல்கலைக் கழக மைதானத்தில் இருந்த ஒவ்வொரு மரத்தடியிலும் ஒரு பிராணி தன் கழுத்தில் டாக்டர் என்று எழுதப்பட்ட அட்டையைத் தொங்கவிட்டுக் கொண்டு நிற்கும்படி கட்டப்பட்டிருந்தது. ஒரு மரத்தடியில் எருமை ஒன்று கழுத்தில் 'நான் ஒரு டாக்டர் பட்டம் பெறுகிறேன்' என்ற வாசக அட்டை கட்டப்பட்டு நின்றது. இன்னொரு மரத்தடியில் ஐந்தாறு சொறி நாய்கள் கழுத்தில் இதே வாசகத்துடன் குரைத்துக் கொண்டு நின்றன. வேறொரு மரத்தடியில் ஒரு கழுதை இதே கோலத்தில் நின்றது. அதற்குப் பட்டமளிப்பு விழா உடை கூடப் போர்த்தப்பட்டிருந்தது. எட்டேகால் மணிக்கு முன்பிருந்ததை விட மேலும் லாரி லாரியாக உள்ளே வந்த போலீஸார் இந்த நாய்களையும், கழுதைகளையும் அப்புறப்படுத்தவே அரை மணி நேரம் சிரமப்பட்டு முயல வேண்டியிருந்தது. ஒரு போலீஸ் அதிகாரி வந்து சாமர்த்தியமாக, "இவற்றை எல்லம் செய்தது யார்?" என்று எல்லா மாணவர்களிடமும் கேட்டுப் பார்த்தார். 'தெரியாது' என்று ஒரே பதில் தான் சொல்லி வைத்தாற் போல் எல்லோரிடமிருந்தும் அவருக்குக் கிடைத்தது. சில போலீஸ்காரர்கள் வாளி வாளியாகத் தண்ணீரும் துடைப்பமும் கொண்டு வந்து சுவர்களிலும், தரைகளிலும், மந்திரியைப் பற்றி எழுதியிருந்தவற்றை அழிக்க முயன்று பார்த்தார்கள். சிறிது நேரம் முயன்ற பின் ஒரு வாரம் அழித்தாலும் அழித்து முடிக்க இயலாத அத்தனை இடங்களில் அவை எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அந்த முயற்சியையும் அவர்கள் கை விட வேண்டியதாயிற்று. மாணவர்கள் பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சரியாக ஒன்பது மணிக்கு ஒரு ஜீப்பில் துணைவேந்தர், ஆனந்தவேலு, இராவணசாமி, ஒரு போலீஸ் அதிகாரி ஆகிய நால்வரும் வந்து பட்டமளிப்பு விழா மண்டப முகப்பை அடையும் சாலையிலே நிறுத்திக் கொண்டு மாணவர்களைக் கலைந்து போகுமாறு வேண்டினர். துணைவேந்தர் 'மெகாபோனை'க் கையில் வைத்துக் கொண்டு, "விரும்புகிறவர்கள் பட்டமளிப்பு விழா மண்டபத்துக்குள் போய் அமருங்கள். விரும்பாதவர்கள் ஹாஸ்டல் அறைகளிலேயே போய் அமைதியாக இருக்கலாம்! இது சந்தைக் கடை அல்ல. பல்கலைக் கழகம் என்பது ஞாபகம் இருக்கட்டும்" என்று கூப்பாடு போட்டவுடன், "இப்படி நீங்கள் கூறும் உவமை எங்களைவிட உங்களுக்குத்தான் நன்றாக ஞாபகம் இருக்க வேண்டும். நீங்கள் தான் இந்தப் பல்கலைக் கழகத்தைச் சந்தைக் கடை ஆக்கியிருக்கிறீர்கள். முதலில் காம்பஸில் குவித்திருக்கும் போலீஸை வெளியேற்றிவிட்டு அப்புறம் பேச வாருங்கள்" என்று மாணவர்கள் பதிலுக்குத் துணைவேந்தரை நோக்கிக் கூப்பாடு போட்டார்கள்.

"நீங்கள் இப்படி முரண்டு பிடித்தால் விளைவுகள் பயங்கரமாகி விடும்" என்று இராவணசாமி 'மெகாபோனை' வாங்கிப் பேச முற்பட்ட போது நாலைந்து அழுகின தக்காளிகளும், முட்டைகளும் ஜீப்பை நோக்கிப் பறந்ததோடு, "பேசாதே! இது உன் கட்சி அலுவலகமில்லை! பல்கலைக் கழகம். இங்கே வந்து பேச நீ யார்?" என்று கத்தினார்கள் மாணவர்கள். அதைப் பார்த்துத் தாமும் மெகாபோனில் ஏதாவது பேச எண்ணியிருந்த ஆனந்தவேலு பயந்து சும்மா இருந்து விட்டார். ஜீப் உடனே திரும்பி விட்டது.

அந்த ஜீப் திரும்பிய பத்து நிமிஷங்களுக்கெல்லாம் நேர் எதிரே இருந்த போஸ்ட் கிராஜுவேட் ஹாஸ்டல் 'புது பிளாக்' மாடியிலிருந்து மாணவர்களை நோக்கிச் சோடா புட்டிகளும், கற்களும் பறந்து வந்தன. சிலருக்கு அடி பட்டது. சிலருக்கு மண்டை உடைந்தது. மணவாளன் போலீஸாரிடம் போய், "அந்த மாடியில் யாரோ கட்சி ஆட்கள் ஒளிந்திருந்து மாணவர்கள் மேல் சோடா பாட்டில்களையும், கற்களையும் எறிகிறார்கள். நீங்கள் உடனே போய் அவர்களைத் தடுக்காவிட்டால் மாணவர்கள் அங்கே பதிலுக்கு ஓடிப் போய்த் தாக்குவதை நான் கட்டுப்படுத்த முடியாமற் போய்விடும் தயவு செய்து..." என்று கெஞ்சினார்.

"நோ நோ... ஹௌ இஸ் இட் பாஸிபிள்...? அந்தப் 'பிளாக்'கில் கான்வகேஷனுக்கு வந்திருக்கிற வி.ஐ.பி.ஸ்லாம் 'கெஸ்டா' தங்கியிருக்காங்க. அங்கே நாங்க போக முடியாது" என்று போலீஸ் அதிகாரி மறுத்துவிட்டார். மணவாளனால் மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாத அளவு பலர் சோடா பாட்டில் வீச்சிலும், கல்வீச்சிலும் காயமடைந்து விழவே, லெனின் தங்கத்துரை ஒரு நானூறு ஐந்நூறு மாணவர்களோடு அங்கே விரைய முற்பட்டார். உடனே போலீஸார் ஓடி வந்து அந்த 'ஹாஸ்டல் பிளாக்கில்' மாணவர்கள் நுழைய முடியாதபடி வியூகம் வகுத்துத் தடுத்துக் கொண்டு நின்றனர். மாணவர்களுக்கு ஆத்திரம் மூண்டது. கல்லையும் சோடா பாட்டில்களையும் எறிபவர்களைத் தாங்களே பிடிக்கவும் முயலாமல் மாணவர்களே தற்காப்புக்காக அவர்களை எதிர்த்துப் போரிட்டுப் பிடிக்கவும் விடாமல் போலீஸார் ரவுடிகளைப் பாதுகாக்கிறார்களோ என்று தோன்றியதும் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் போர் மூண்டது. எச்சரிக்கை கூட இல்லாமல் உடனே லத்தி சார்ஜுக்கு ஆர்டர் கொடுத்தார் ஒரு போலீஸ் அதிகாரி. முழங்காலுக்குக் கீழே அடிக்க வேண்டும் என்ற வரையறை கூட இல்லாமல் காட்டு மிராண்டித் தனமாக மூக்கு முகம் பாராமல் அடிகள் விழவே மாணவர்கள் பொறுமை இழந்தனர். போலீஸாரோடு ஹாஸ்டல் புதுக் கட்டிடத்தில் வரவழைத்து வைக்கப்பட்டிருந்த கட்சி முரடர்களும் சேர்ந்து கொள்ளவே மாணவர்கள் விடுதி அறைகளை நோக்கி ஓடினர். போலீஸாரும் விடவில்லை. கட்சி முரடர்களும் விடவில்லை. விடுதி அறைகளிலும் நுழைந்து மாணவர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கத் தொடங்கினார்கள். சில அறைகளில் புகுந்த கட்சி முரடர்கள் மாணவர்களின் கடிகாரங்கள், ரேடியோக்கள், விலை உயர்ந்த உடைகள் துணிமணிகளைக் கூடச் சூறையாட ஆரம்பிக்கவே மாணவர்களும் பதிலுக்குத் தாக்க வேண்டியதாயிற்று. மாணவிகளைப் பத்திரமாகப் பட்டமளிப்பு விழா மண்டபத்தருகே சேர்ந்து இருக்கச் செய்து விட்டு மணவாளன், பாண்டியன் முதலியவர்கள் துணைவேந்தர் அறையை நோக்கி விரைந்தார்கள். அங்கே துணைவேந்தர், ஆர்.டி.ஓ., இராவணசாமி, ஆனந்தவேலு எல்லாரும் உட்கார்ந்து எந்தக் கவலையும் இல்லாதவர்கள் போல் பேசிக் கொண்டிருந்தார்கள். சோடா பாட்டில் வீச்சில் மண்டை உடைந்த ஒரு மாணவனைக் கூப்பிட்டுக் காட்டி, "நாங்கள் அமைதியாகத்தான் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பினோம்! ஆனால் நீங்கள் போலீஸையும், கட்சி ஆட்களையும் விட்டு எங்களைக் கொடுமைப் படுத்துகிறீர்கள். எங்கள் மாணவத் தோழர்கள் இரத்தம் சிந்துவதை நாங்கள் இனியும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. போலீஸையும், கட்சிக் குண்டர்களையும் உடனே இங்கிருந்து வெளியே அனுப்புகிறீர்களா, இல்லையா?" என்று பாண்டியனும், மணவாளனும் கேட்டதற்குத் தான் உடனே பதில் சொல்லாமல் அருகருகே அமர்ந்திருந்த ஆர்.டி.ஓ.வையும், ஆனந்தவேலுவையும் மாறி மாறிப் பார்த்தார் துணைவேந்தர்.

"இந்த யுனிவர்ஸிடிக்கு நீங்க தானே சார் துணைவேந்தராயிருக்கீங்க? அவங்களை ஏன் பார்க்கிறீங்க? பதில் சொல்றீங்களா? அல்லது டாக்டர் பட்டத்துக்குக் காத்திருக்கும் மினிஸ்ட்ரையே இப்போது நாங்கள் போய்ச் சந்திக்கவா?"

"நீங்கள் அங்கே போக முடியாது. போகக் கூடாது..."

"போகிறோமா இல்லையா என்று தான் பாருங்களேன்..." என்று இரைந்து விட்டுத் திரும்பினார்கள் மாணவர்கள். உடனே ஆர்.டி.ஓ. ஃபோனைக் கையில் எடுப்பதைத் திரும்பும் போது மாணவர்கள் பார்த்தார்கள். அதிகார துஷ்பிரயோகம் கண் முன்னாலேயே தெரிந்தது.

ஹாஸ்டல் அறைகளில் அடிபட்டுக் கொண்டிருந்த மாணவர்களின் அலறலும், கதறலும், ஓலங்களும் பல்கலைக் கழக எல்லை முழுவதும் எதிரொலித்தன. ஒரு போர்க்களம் போல் ஆகியிருந்தது பல்கலைக் கழகம். மைதானத்தில் இருந்த மாணவர்களும் துணைவேந்தர் அறைக்குப் போய்க் கேட்டு விட்டுத் திரும்பிய மாணவர்களும் சேர்ந்து நேரே பல்கலைக் கழக விருந்தினர் விடுதியை நோக்கிப் படையெடுத்தார்கள். விருந்தினர் விடுதி வாசலில் அடிக்கொரு போலீஸ்காரர் வீதம் துப்பாக்கி ஏந்தி நின்றார்கள். முன்னால் நின்ற ஒரு போலீஸ் அதிகாரி எச்சரித்தார்:- "நீங்கள் உள்ளே புக முயன்றால் சுடச்சொல்லி ஆர்.டி.ஓ.வின் உத்தரவு." மாணவர்களில் சிலர் ஆத்திரத்தோடு, 'என்னைச் சுடு' என்று சட்டையைக் கிழித்து நெஞ்சைத் திறந்து காட்டிக் கொண்டு முன்னேறிய போது மணவாளனும் பாண்டியனும் ஓடி வந்து தடுத்தனர். இல்லாவிட்டால் சில உயிர்கள் அப்போது அங்கே பறியோயிருக்கும். மாணவர்கள் உரத்த குரலில், "ஒரு பட்டத்துக்காக ஊரையே கொல்லும் மந்திரியே வெளியே வா" என்று கூப்பாடு போடவே - கூப்பாடு பொறுக்காமல் என்னவென்று பார்ப்பதற்காக அதே விருந்தினர் மாளிகையின் மற்றோர் அறையில் தங்கியிருந்த கவர்னர் வெளியே வந்தார். மாணவர்களை நோக்கி நடக்கத் தொடங்கிய அவரைப் போலீஸ் அதிகாரி தடுத்தும் கேளாமல் மாணவர்களை நெருங்கி வந்தார் அவர். மாணவர்களை அவருடைய அன்பான முகம் வசீகரித்தது. அருகே வ்ந்து மணவாளனோடு கைகுலுக்கிவிட்டு, "கேன் ஐ டூ எனிதிங் ஃபார் யூ? ஐ யாம் யுவர் ஃபிரண்ட்... பிலீவ் மீ... அண்ட் டெல் மி யுவர் க்ரீவன்ஸஸ்" என்று அவர் வினவிய அன்பான தோறணை மணவாளனுக்கு மிகவும் ஆறுதலளித்தது. மணவாளன் தங்கள் குறைகளையும், அமைச்சர் கரியமாணிக்கத்துக்கு டாக்டர் பட்டம் அளிப்பதில் உள்ள சூழ்ச்சிகளையும் அப்போது அங்கு மாணவர்கள் தாக்கப்படுவதையும் ஆங்கிலத்தில் விவரித்தார். கவர்னர் சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "ஹௌ கேன் ஐ ப்ரிவெண்ட் திஸ்... ஐயாம் ஆல்ஸோ ஹெல்ப் லெஸ்... லைக் யூ... ஐயாம் ஒன்லி எ கவர்னர் ஆஃப் தி ஸ்டேட்" என்றார்.

"நாட் ஒன்லி தட்.. யூ ஆர் ஆல்ஸோ தி சான்ஸலர் ஆஃப் திஸ் யுனிவர்ஸிடி... சார்!"

"யெஸ் பட்...!" என்று கூறியபடியே ஏதோ சிந்தித்துக் கொண்டே அவர்களிடம் விடைபெற்று உள்ளே சென்றார் கவர்னர்.

அவர் ஏதாவது செய்யக்கூடும் என்று மணவாளனுக்கு நம்பிக்கை இருந்தது. மாணவர்களை உடன் அழைத்துக் கொண்டு மீண்டும் பட்டமளிப்பு விழா மண்டபத்தின் அருகே வந்து மண்டபத்தை மறித்துக் கொண்டு நின்றார்கள் அவர்கள்.

அதற்குள் ஒரு மாணவன் ஓடி வந்து, "யுனிவர்ஸிடி மெடிகல் ஆபீஸர் டாக்டர் பிரசாத் வி.சி.யின் கையாளாக மாறிச் சதி செய்கிறார். இங்கே மைதானத்தில் சோடா புட்டி வீச்சிலும், அறைகளில் போலீஸாரிடமும் அடிபட்ட மாணவர்கள் எப்படி எப்போது எங்கே அடிபட்டு வந்தார்கள் என்று ஆஸ்பத்திரி ரிஜிஸ்தரில் பதிவு செய்யாமலே அவுட் பேஷண்டாகச் சிகிச்சை செய்து உடனுக்கு உடனே வெளியே துரத்துகிறார். பின்னால் நமக்குத்தான் அது கெடுதல். அண்ணன் வந்து உடனே அதைக் கவனிக்கணும்" என்றான்.

உடனே மணவாளனும் அவரோடு மோகன்தாஸும் அங்கே ஓடினார்கள். ஆஸ்பத்திரி ரிஜிஸ்தரில் சரியாகப் பதிவாகவில்லையானால் நாளைக்குக் கேஸ், நீதி விசாரணை என்று வரும் போது தங்கள் பக்கம் பலமில்லாமல் போகும் என்பதை அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் உடன் அதைக் கவனிக்க வேண்டியிருந்தது. யுனிவர்ஸிடி மெடிகல் ஆபீஸர் 'பிரசாத்' எப்போதுமே இப்படித்தான். துணைவேந்தருக்கு அடுத்தபடி அங்கே கெட்ட பெயர் எடுத்திருந்தார் அவர்.

பல சமயங்களில் மாணவர்கள் சிறிது தொலைவு தள்ளி இருந்த மருத்துவக் கல்லூரியோடு சேர்ந்த ஆஸ்பத்திரியை நம்பிப் போவார்களே ஒழியப் பிரசாத்தை நம்பி இங்கே போகமாட்டார்கள். இன்று அவசரத்தில் இங்கே தான் போயாக வேண்டியிருந்தது. பிரசாத் ஒரு முசுடு பிடித்த மனிதர்.

டாக்டர் பிரசாத்திடம் விவாதம் செய்து அவரை எச்சரித்து அதன் பின் அடிபட்ட மாணவர்களைக் கவனித்து ஆறுதல் கூறிவிட்டு மணவாளனும், மோகன்தாஸும் திரும்பிய போது பகல் பன்னிரண்டு மணி. அதுவரையில் பட்டமளிப்பு விழாவே தொடங்கவில்லை. பட்டமளிப்பு விழா உடையோடும், சாதாரண உடையிலுமாகச் சரிபாதி மாணவர்கள் மைதானத்தில் இருந்தார்கள். மற்றவர்கள் 'புது பிளாக்' ஹாஸ்டல் அறைகளில் வந்து தங்கி மாணவர்களைத் தாக்க முயன்ற கட்சி முரடர்களைத் துரத்திக் கொண்டிருந்தார்கள்.

'கவர்னரின் ஆலோசனைப்படி விழாவுக்கு வந்திருந்த சிண்டிகேட் உறுப்பினர்களைக் கூட்டி அவசர முடிவெடுத்து அந்தப் பட்டமளிப்பு விழாவையே இரத்துச் செய்துவிட்டதாகவும் அந்தந்த மாணவர்களுக்குப் பதிவுத் தபால் மூலம் பட்டங்கள் அனுப்பப்படும்' என்றும் பகல் ஒரு மணிக்கு 'மெகாபோனில்' அறிவிக்கப்பட்ட போது மாணவர்கள் ஒரு தீமையைத் தடுத்துவிட்ட திருப்தியோடு கலைந்தனர். கவர்னரைச் சந்தித்து மணவாளன் நன்றி தெரிவிக்கப் போனார். கவர்னர் மறுக்காமல் மணவாளனை அறைக்கு வரச்சொல்லிச் சந்தித்தார்.

"உங்கள் கையால் பட்டம் பெறுவதையோ உங்கள் உரையைக் கேட்பதிலோ நான் மகிழ்வேன். என் சகாக்களும் மகிழ்வார்கள்! ஆனால் அமைச்சர் கையால் பட்டம் பெறுவதையோ, அவருக்கு டாக்டர் பட்டம் தருவதையோ அவர்கள் எங்களுக்குப் பட்டமளிப்பு உரையாற்றுவதையோ நாங்கள் விரும்பவில்லை" என்று தங்கள் கருத்தை மணவாளன் ஆங்கிலத்தில் கூறிய போது சிரித்துக் கொண்டே பதில் சொல்லாமல் கேட்டார் அவர்.

மந்திரி கரியமாணிக்கத்தையும் மற்ற அமைச்சர்களையும் கலந்து பேசி இந்தக் கொந்தளிப்பான நிலையில் பட்டமளிப்பு விழா வேண்டாம் என்று தானே அவர்களுக்குச் சொல்லிய பின்பே அதை இரத்துச் செய்ததாக கவர்னர் விவரம் தெரிவித்தார்.

மாலை மூன்று மணிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் கரியமாணிக்கமும், கல்வி அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் மல்லிகைப் பந்தல் நகரை விட்டே வெளியேறிப் போய் விட்டார்கள். புறப்படு முன் ஆர்.டி.ஓ.வையும், இராவணசாமியையும், துணைவேந்தரையும் கூப்பிட்டு ஏதோ கோபமாய் இரைந்து இரகசியமாகச் சொல்லிவிட்டுப் போனாராம் கரியமாணிக்கம். மாலை நான்கு மணிக்கு கவர்னர் புறப்பட்டுப் போனார். நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை பல்கலைக் கழகம் ஓரளவு அமைதியாயிருந்தது.

அண்ணாச்சி வந்து மருத்துவமனையில் அடிபட்டுக் கிடந்த மாணவர்களின் தேவைகளைக் கவனித்தார். மணவாளன் பத்திரிகை நிருபர்களுக்கு ஹாஸ்டல் அறைகளைக் காண்பித்து மாணவர்கள் தாக்கப்பட்டதை விவரித்து ரத்தக் கறைகளையும் பார்க்கச் செய்து புகைப்படம் எடுக்க உதவிக் கொண்டிருந்தார்.

மாணவர்கள் மேல் அதிக அனுதாபமுள்ள ஒரு நிருபர் மட்டும் மணவாளனைத் தனியே அழைத்து, "எல்லாம் இதோடு முடிந்து விட்டது என்று நினைக்காதீர்கள்! பட்டமளிப்பு விழாவைத் தடுத்து தன்னை அவமானப்படுத்தி விட்ட கோபத்தில் மந்திரி போலீஸையும் கட்சி ஆட்களையும் ஆத்திரமூட்டித் தூண்டிவிட்டுப் போயிருக்கிறார். மறுபடியும் அவர்கள் எந்த நிமிஷமும் உங்களைத் தாக்கக்கூடும். ஜாக்கிரதையாக இருங்கள்..." என்று எச்சரித்தார்.

"யுவசக்தியை வெள்ளமாகப் பெருக்கி நினைத்ததைச் சாதித்துவிட்டீர்கள்! அமைச்சர் கரியமாணிக்கம், இராவணசாமி, ஆனந்தவேலு, வி.சி. எல்லாத் தீயவர்கள் முகத்திலும் கரியைப் பூசி விட்டீர்கள். இதற்கெல்லாம் காரணமான உங்களைப் போன்ற நாலைந்து பேரை எப்படியும் பழிவாங்கத் துடிதுடித்துக் கொண்டிருப்பார்கள்" என்று அந்த நிருபரே மேலும் கூறிவிட்டுப் போனார்.

பஸ்களிலும், லாரிகளிலும் வந்திருந்த வெளியூர் மாணவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு ஹாஸ்டலில் இருந்த மாணவர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லிவிட்டு ஆறு ஆறரை மணி சுமாருக்கு மணவாளன், பாண்டியன், கண்ணுக்கினியாள், லெனின் தங்கத்துரை, மோகன்தாஸ் ஆகிய ஐந்து பேர்களும் அண்ணாச்சி கடைக்குப் போனார்கள். அண்ணாச்சி உடனே எல்லாருக்கும் காப்பி சிற்றுண்டி வரவழைத்துக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.

"கடவுள் புண்ணியத்திலே யாருக்கும் உயிர்ச் சேதமில்லே... மாணவர்களைத் தான் கண் மூக்குத் தெரியாமல் அடிச்சுத் தள்ளியிருக்காங்க... அதைவிடக் கொடுமை ஆஸ்பத்திரியிலே டாக்டர் பிரசாத் - சரியாக் கவனிக்காம ஏமாத்தறான்... போய்ப் பார்த்தப்ப எனக்கே கண்ணிலே தண்ணி வந்திடிச்சு..." என்று வருத்தப்பட்டார் அண்ணாச்சி. அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு முடித்துக் காப்பி அருந்திக் கொண்டிருக்கும் போது மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கக் கத்திக் கொண்டே ஹாஸ்டலிலிருந்து பொன்னையா ஓடி வந்தான்.

"அண்ணே! ஆபத்து... யுனிவர்ஸிடியிலே போலீஸும் கட்சி ஆட்களும் புகுந்து மாணவர்களை உதைக்கிறாங்க... மெயினை ஆஃப் பண்ணிக் காம்பஸ் பூரா லைட் இல்லாமச் செஞ்சிட்டாங்க... இருட்டிலே ஒண்ணுமே தெரியலே... போலீஸ் லாரி லாரியாப் பையன்களை ஏத்திக் கிட்டுப் போறாங்க... ரூம் கதவை உடைச்சுப் பாண்டியன் அண்ணனோட பெட்டிகிட்டி எல்லாம் தவிடு பொடி ஆக்கிட்டாங்க... நான் தப்பிச்சதே பெரும் பாடு..." என்று கிழிந்த சட்டையும் முழங்கை முழங்கால்களில் சிராய்ந்த இரத்தக் காயமுமாகப் பொன்னையா வந்து நின்ற காட்சியே பார்க்க வருத்தமூட்டுவதாக இருந்தது.

பல்கலைக் கழக எல்லைக்குள் விடுதி அறைகளில் நடப்பதைப் பொன்னையா வந்து முறையிட்டதைக் கேட்டவுடன் மாலையில் தம்மிடம் அந்த நிருபர் எச்சரித்ததை நினைத்தார் மணவாளன். உடனே மணவாளனும், லெனின் தங்கத்துரையும், மோகன்தாஸும், பாண்டியனும் துள்ளி எழுந்தார்கள்.

"நீ எங்கே புறப்படுகிற தம்பீ! நீ உட்காரு... உன் உயிருக்கு உலை வைக்கத்தான் அவங்க ஹாஸ்டல் அறைக் கதவை உடைச்சிருக்காங்க. நீயும், தங்கச்சியும், இங்கேயிருந்து மறுபடியும் நான் சொல்கிறவரை நகரக் கூடாது. ரெண்டு பேரும் உட்காருங்க சொல்றேன்" என்று பாண்டியனையும், கண்ணுக்கினியாளையும் அண்ணாச்சி கண்டித்து உட்கார வைத்துவிட்டார்.

ஏதோ கூற வாயெடுத்த பாண்டியனை மணவாளனே, "அண்ணாச்சி சொல்றபடி கேளு! நீயும் தங்கச்சியும் வெளியே எங்கேயும் வரவேண்டாம் பாண்டியன்!" என்று தடுத்துவிட்டார்.

"மணவாளன்! நீங்க சும்மா போகறதுலே பிரயோசனமில்லே. யூனியன் வாசல்லே போயி கொஞ்சம் ஆளுங்களோட போங்க... இங்கேயும் கொஞ்சம் பேரை அனுப்பிட்டுப் போங்க..." என்றார் அண்ணாச்சி.

"நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க பாண்டியனையும் தங்கச்சியையும் கவனிச்சுக்குங்க" என்று கூறிவிட்டு உடன் இருந்தவர்களுடன் விரைந்தார் மணவாளன்.

"ஹாஸ்டல் மாணவர்கள் உடனே விடுதி அறைகளைக் காலி செய்யணும்'னு போலீஸ் வானிலிருந்து 'மெகாபோன்' மூலமா அறிவிச்சிக்கிட்டிருக்கறப்பவே லைட் எல்லாம் போயிடிச்சு. உடனே புகுந்து உதைக்க ஆரம்பிச்சிட்டாங்க. வந்த ஆட்கள் குடிவெறியிலே இருக்காங்க. அகப்பட்ட மாணவர்களை எல்லாம் போலீஸ் வேற அடிச்சு உதைச்சு லாரியிலே ஏத்திக்கிட்டிருக்காங்க...! யாரிட்டவாவது புகார் செய்யலாம்னா வி.சி.யை வீட்டிலேயும் காணலே, ஆபீஸிலேயும் காணலே. சீஃப் வார்டனை ஆளையே காணோம்" என்று போகும் போது மேலும் நண்பர்களிடம் விவரித்தான் பொன்னையா.

அவர்கள் நால்வரும் நேரே பல்கலைக் கழகத்துக்குப் போகவில்லை. ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குப் போனார்கள். ஆர்.டி.ஓ. அங்கே இல்லை. வீட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். வீட்டுக்குப் போனார்கள். ஆர்.டி.ஓ. இருந்தார்.

"பிரார்ப்பர்ட்டிக்குச் சேதம் வருமோ, நெருப்புக் கிருப்பு வைச்சிடுவாங்களோன்னு மாணவர்களை நினைச்சுப் பயந்து யுனிவர்ஸிடி காம்பஸை உடனே காலி பண்ணி மாணவர்களை வெளியேற்றும்படி மேலிடத்திலிருந்து ஆர்டர்ஸ் வந்திருக்கு. அதனாலே எங்க டூட்டியை நாங்க செய்றோம்..." என்றார் அவர்.

"அரிவால், கடப்பாரை, கம்புகளோட இராவணசாமி அனுப்பின முரடங்க புகுந்து பையன்களை மிரட்டிக்கிட்டிருக்காங்க சார்! நீங்களா அதை அடக்குங்க. இல்லாட்டி நாங்களாவது அடக்கணும்" என்று லெனின் தங்கத்துரை இரைந்த போது,

"அப்படி எங்களுக்குத் தகவல் எதுவுமே இல்லியே!" என்றார் ஆர்.டி.ஓ.

"இதோ சட்டை கிழிஞ்ச, கை கால்களிலே இரத்த காயத்தோடு வந்திருக்கிற இந்தப் பையனைப் பார்த்தாவது அந்தத் தகவலை தெரிஞ்சுக்குங்க..." என்று உடனிருந்த பொன்னையாவை இழுத்து அவர் முன் நிறுத்தினார் மணவாளன்.

"நான் கவனிக்கிறேன். நீங்க சொல்றதை அப்படியே நம்பிட முடியுமா?" என்று அவர்களைப் போகச் சொல்லாத குறையாக எழுந்து கை கூப்பிக் கொண்டே உள்ளே போய்விட்டார் ஆர்.டி.ஓ. நியாய உணர்ச்சியற்றவர்களின் கையில் அதிகாரம் இருப்பது என்பது மக்களுக்கு வழிப்பறிக் கொள்ளையை விடவும் கொடுமையான துயரங்களைத் தரக்கூடியதாக முடிந்து விடும் என்பதற்கு அந்த ஆர்.டி.ஓ. நிதர்சனமாயிருந்தார். அவரை நம்பிப் பயனில்லை என்பது புரிந்ததும் தொழிலாளர் யூனியன் அலுவலக வாயிலுக்குப் போனார்கள் அவர்கள்.

போலீஸ் லாரிகளிலும், வேன்களிலும் ஏற்றி மாணவர்களைத் தோன்றிய திசையில் வேறு வேறு பகுதிகளிலும் ஐந்து மைல் பத்து மைல் தள்ளிக் கொண்டு போய் இறக்கி விட்டு விட்டு வருவதாக அங்கே சொன்னார்கள். மாணவர்கள் ஒன்று சேர முடியாமல் செய்ய இந்த முறையைப் போலீஸார் கடைப்பிடிப்பதாகத் தெரிந்தது.

தோட்டத் தொழிலாளர் யூனியனிலிருந்தும், விடுதியில் வசிக்காமல் நகரில் வசிக்கும் உள்ளூர் மாணவர்களிலிருந்தும் பலரைத் திரட்டி கொண்டு மணவாளனும் மற்றவர்களும் போன போது பல்கலைக் கழகம் இருண்டு கிடந்தது. ஸ்டாஃப் குவார்ட்டர்ஸ் பகுதியில் மட்டும் மெழுகு வர்த்திகள் 'மினுக் மினுக்' என்று எரிந்து கொண்டிருந்தன. அங்கே விசாரித்ததில் சுமார் நானூறு ஐந்நூறு பேர்கள் அடங்கிய ஒரு பெரிய முரட்டுக் கூட்டம் பயங்கர ஆயுதங்களோடு உள்ளே நுழைந்து மாணவர்களைத் தாக்க முயன்றதாகச் சொன்னார்கள். போலீஸார் வந்த பின்னும் அந்தக் கூட்டத்தை அவர்கள் தடுக்கவில்லை என்று சில மாணவர்கள் அறிவித்த தகவல்களிலிருந்து தெரிந்தது.

காடு மேடுகளிலும், இருட்டிலும் இறக்கிவிடப்பட்ட மாணவர்களை மீட்டு அழைத்து வர யூனியன் அலுவலகம் மூலம் ஒரு லாரி பேசி ஏற்பாடு செய்து கொண்டு உடனிருந்தவர்களோடு புறப்பட்டார் மணவாளன். நல்ல வேளையாக மல்லிகைப் பந்தல் நகரிலிருந்து வெளியேறும் சாலைகள் இரண்டைத் தவிர வேறு இல்லை. அந்த இரண்டு சாலைகளிலும் தான் பல இடங்களில் மாணவர்கள் மாற்றி மாற்றி இறக்கி விடப்பட்டிருப்பார்கள் என்று அனுமானித்துக் கொண்டு அவர்களைத் தேடிக் கொண்டு சென்றார்கள் மணவாளன் முதலியவர்கள்.

நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம்

இரவு எட்டு மணி சுமாருக்குப் பாண்டியனுக்கு வேண்டியவனான 'யுனிவர்ஸிடி ஹாஸ்டல் வாட்டர் பாய்' ஒருவன் வந்து அண்ணாச்சிக் கடையில் முன்னெச்சரிக்கை செய்துவிட்டுப் போனான்.

தமக்கு அங்கே டாக்டர் விருது தரப்படுவதற்கு இருந்த பட்டமளிப்பு விழா, மாணவர்கள் கலவரம் காரணமாக நடைபெற முடியாமற் போனதால் ஏமாற்ற மடைந்த அமைச்சர் கரியமாணிக்கம் போகிற போக்கில் தம்மைச் சந்திக்க வந்த பத்திரிகை நிருபர்களிடம், "மல்லிகைப் பந்தலில் என் உயிரைப் பறிக்கச் சதி நடந்தது. மயிரிழையில் உயிர் தப்பினேன்" என்பது போல் நாடகமாடிக் கதை கட்டி விட்டுப் போயிருந்தார்.

மல்லை இராவணசாமி, கோட்டம் குருசாமி போன்ற கட்சி ஆட்களிடம் ஆத்திரத்தோடு, "இந்தச் சுணைக்காய்ப் பசங்களை அடக்கி ஒடுக்கி வைக்க நாலு ஆட்களைத் தயார் பண்ணி உதைக்க முடியாத நீங்கள்ளாம் என்னய்யா மனுஷன்?" என்றும் அமைச்சர் கோபமாகக் கேட்டு விட்டுப் போனாராம். அதில் ரோஷம் பொத்துக் கொண்டு வந்த காரணத்தால் சாயங்காலத்துக்கு மேலே மீண்டும் நானூறு ஐந்நூறு முரடர்களை வாடகைக்குப் பிடித்துக் கள்ளச்சாராயமும் ஊற்றி வெறி ஏற்றி, "பட்டமளிப்பு விழா நடக்க விடாமல் கலவரம் செய்த மாணவர்களை எங்கே கண்டாலும் விடாதீர்கள். புகுந்து உதையுங்கள். போலீஸ் உங்களை ஒன்றும் செய்யாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று அரிவாளும், சூரிக் கத்தியும், கம்பும், கடப்பாறையும், சைக்கிள் செயினும், சவுக்குக் கட்டையுமாக அந்தத் தடியர் கூட்டத்தை விரட்டியிருந்தார் இராவணசாமி.

"பாண்டியன் அண்ணனை அறையிலே காணாததால் ஏமாற்றம் அடைந்திருக்கும் அந்தக் கூட்டம் நேரே இங்கே உங்க கடைக்குத்தான் தேடி வரும். கவனமாக இருங்க அண்ணாச்சி! பாண்டியன் அண்ணனையும் கண்ணுக்கினியாளையும் வெளியே எங்கேயும் போக விட்டுடாதீங்க. முரடங்க வெறி பிடிச்சுத் தேடிக்கிட்டு அலையறாங்க..." என்று சொல்லி அந்த யுனிவர்ஸிடி வாட்டர்பாய் எச்சரித்துவிட்டுப் போயிருந்ததை நினைவு கூர்ந்தார் அண்ணாச்சி. எதற்கும் இருக்கட்டும் என்று எதிர் வரிசையிலிருந்த மருந்துக் கடைக்குப் போய், போலீசுக்கும் அண்ணாச்சி ஃபோன் செய்துவிட்டு வந்தார். ஃபோனில் எதிர்ப்புறம் கிடைத்த பதிலிலிருந்து போலீஸ் உதவி கிடைக்கும் என்று தோன்றவில்லை.

அண்ணாச்சி அவசரம் அவசரமாக ஹோட்டலுக்குப் பையனை அனுப்பி இரவு உணவுக்கு இட்டிலி வாங்கி வரச் சொல்லி வைத்துக் கொண்டார். அப்புறம் முடியுமோ முடியாதோ என்னும் எண்ணத்தில் பாண்டியனுக்கும் கண்ணுக்கினியாளுக்கும் தமக்கும் பயன்படும் என்ற நோக்கத்தோடு முன் ஜாக்கிரதையாக இதைச் செய்திருந்தார் அவர். கடையடைக்கும் முன் சாமி படங்களுக்குச் சூட்டியது போக மீதமிருக்கும் மல்லிகைப் பூவை உட்புறமாக நீட்டி, "இந்தா தங்கச்சீ! தலைக்கு வைச்சுக்க" என்று கண்ணுக்கினியாளிடம் கொடுத்தார் அண்ணாச்சி.

மெல்ல மெல்லக் கடை வீதி ஆளரவம் அடங்கி மேலும் இருளத் தொடங்கியது. பதற்றத்தினாலும், பயத்தினாலும் ஊர் இருந்த நிலைமைக்கு நடுங்கியும் கடை வீதியில் பலர் முன்னதாகவே கூடக் கடைகளை அடைத்துக் கொண்டு போயிருந்தார்கள். மணவாளனிடம் சொல்லி அனுப்பியிருந்ததனால் தொழிலாளர் யூனியனிலிருந்து ஐம்பது அறுபது பேரை அவர் அனுப்பிவிட்டுப் போவார் என்று எதிர்பார்த்தார் அண்ணாச்சி. ஆனால் அப்படி யாரும் உதவிக்கு வரவில்லை.

லாரிகளிலும் வேன்களிலும் ஏற்றி மாணவர்களை ஊர் எல்லையில் ஐந்து மைல் தள்ளி இறக்கி விட்டு விட்டு வந்த போலீஸ் கொடுமையினால் மாணவர்கள் கடைப்பக்கம் வரவில்லை. அவசர அவசரமாகப் பாண்டியனையும் கண்ணுக்கினியாளையும் ஏதாவது ஒரு நண்பர் வீட்டுக்கு அனுப்பி அங்கே இரகசியமாக இருக்கும்படி செய்து பாதுகாக்கலாமோ என்று அண்ணாச்சிக்குத் தோன்றியது. ஆனால் அப்படிச் செய்வதிலும் ஓர் அபாயம் இருப்பது புரிந்தது. 'கடையிலிருந்து வெளியேறிப் போகும் போது நடுவழியில் அவர்கள் இருவரும் எதிரிகளால் தாக்கப்பட்டால் என்ன செய்வது?' என்ற தயக்கம் வந்த போது எங்கும் போவதை விட அவர்கள் தம் கடையிலிருப்பதே பாதுகாப்பானது என்று முடிவாகத் தோன்றியது அண்ணாச்சிக்கு. கடைப்பையன்களை அனுப்பிய பின் உட்புறமாகத் தாழிட்டு விட்டுக் கண்ணுக்கினியாளும் பாண்டியனும் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்து அவர்களோடு உடன் அமர்ந்து இட்டிலிப் பொட்டலங்களைப் பிரித்தார் அவர். எந்தப் பதற்றமும் இன்றி அவர் நிதானமாயிருந்தது பாண்டியனுக்கு வியப்பளித்தது.

"மணவாளன் அண்ணன் ஏன் இன்னும் திரும்பலே? எல்லோரும் வந்தப்புறம் சேர்ந்து சாப்பிடலாமே?" என்றான் பாண்டியன். அவன் குரலில் பதற்றம் மிகுந்திருந்தது.

"நாம சாப்பிடலாம்! அண்ணன் வர நேரமாகும்னு தோணுது! தங்கச்சீ! அந்தப் பானையிலேருந்து மூணு கிளாஸ்லே தண்ணி எடுத்து வை..." என்று அண்ணாச்சி சொல்லிக் கொண்டிருக்கும் போதே திடுதிப்பென்று மின்சாரம் போய் விளக்கு அணைந்துவிட்டது.

இருட்டிலேயே துழாவி மெழுகு வத்தியும் தீப்பெட்டியும் எடுத்துப் பொருத்தி வைத்தார் அவர். மின்சாரம் தானாகப் போயிருக்காது என்று அண்ணாச்சி சந்தேகப்பட்டார். தெருக்கோடியில் அந்த வீதிக்கான ஃப்யூஸ் கேரியர்கள் அடங்கிய தகரப் பெட்டி இருக்கிறது. அதில் யாராவது விஷமிகள் ஃப்யூஸை எடுத்து விட்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது அண்ணாச்சியால். அப்போதும் அவர் பரபரப்படையவில்லை.

இன்னும் அவர் இட்டிலி சாப்பிட்டு முடிக்கவில்லை. கண்ணுக்கினியாள், பாண்டியன் இருவரும் சாப்பிட்டுக் கைகழுவியிருந்தார்கள். அவ்வளவில் கடை முகப்பில் திமுதிமு வென்று கூச்சலும் வெறிக் கூப்பாடுமாக ஆட்கள் ஓடிவரும் ஓசைகள் கேட்டன. "அந்தப் பயல் பாண்டியன் வேறெங்கேயும் போயிருக்க மாட்டான்! இங்கே தான் ஒளிஞ்சிக்கிட்டிருப்பான். தெருவிலே இழுத்தெரிஞ்சு நாயை அடிக்கிற மாதிரி அடிக்கணும்" என்று ஒரு முரட்டுக் குரல் வெளிப்புறம் கத்துவது உள்ளே நன்றாகக் கேட்டது. சில வசைச் சொற்கள் காது கொடுத்துக் கேட்க முடியாதவையாக இருந்தன.

"முதல்லே இந்தச் சைக்கிள் கடைக்காரனை உதைக்கணும்! இவன் தான் எல்லாத்துக்கும் காரணம்" என்றொரு வெறிப் பேச்சும் காதில் விழுந்தது. அதையடுத்துக் கடையின் மரக் கதவு உடைபடும் ஓசை கேட்கத் தொடங்கியது.

அண்ணாச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இட்லிப் பொட்டலத்தை மீதத்தோடு அப்படியே ஒரு மூலையில் வைத்தார். உறுதியான குரலில் பாண்டியனை வேண்டினார்.

"தம்பீ! எது நடந்தாலும் நீயும் தங்கச்சியும் இந்த இடத்தை விட்டு வெளியே வரப்பிடாது. மத்ததை நான் பார்த்துக்கிறேன்" என்று கூறிவிட்டு இன்னொரு காரியமும் செய்தார்.

"வாங்க ரெண்டு பேரும். இப்படிச் சேர்ந்தே உட்காருங்க" என்று அவங்களை உட்கார வைத்து ஒரு மிகப்பெரிய காலி சாதிக்காய்ப் பெட்டியை எடுத்து அவர்கள் நன்றாக மறையும்படி மூடிக் கவிழ்த்தார். ஒருவர் மூச்சுக் காற்று இன்னொருவர் முகத்தில் உராயும்படி நெருக்கமாக அந்தப் பெட்டியின் உள்ளே கண்ணுக்கினியாளும் பாண்டியனும் அமர்ந்திருந்தனர்.

அண்ணாச்சி சற்று முன் அவளுக்குக் கொடுத்திருந்த கப்பலூர் மல்லிகைப் பூவின் வாசனை உள்ளே கமகமத்தது. ஆனால் அந்த வாசனையை உணரும் மனநிலையில் அவர்கள் அப்போது இல்லை. பெட்டியிலிருந்த இடுக்கு வழியே பார்த்த போது மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு அண்ணாச்சி கடை முகப்புக்குப் போவது தெரிந்தது.

"அண்ணாச்சி! வெறுங்கையோடு போகாதீர்கள். ஒரு சிலம்புக் கழியையும் எடுத்துக்கிட்டுப் போங்க" என்று பாண்டியன் உள்ளேயிருந்து போட்ட கூப்பாடு அவருக்குக் கேட்கவில்லை.

இருளிலும் பயத்திலும் பெட்டிக்குள் கண்ணுக்கினியாள் அவனை ஒட்டினாற் போல் தழுவி உட்கார்ந்திருந்தாள். "பாவம்! நம்மாலே அண்ணாச்சிக்கு ரொம்பச் சிரமம். அவர் சங்கடப்படுகிறார்" என்று அவன் காதருகே கூறினாள் அவள்.

"நமக்குத்தான் வேதனையாயிருக்கிறது. அவருடைய சுபாவப்படி பிறருக்கு உதவுவதை ஒரு போதும் அவர் சங்கடமாக நினைப்பதில்லை" என்றான் பாண்டியன்.

"ரொம்பப் பாவமாயிருக்கு! பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எழுந்திருந்து போயிட்டாரு!" என்று கண்ணுக்கினியாள் துயரம் தோய்ந்த குரலில் அவன் காதருகே கூறினாள்.

சாதிக்காய்ப் பெட்டியிலிருந்த சிறு துளை வழியே இருளாயிருந்ததனால் அப்போது வெளியே நடப்பதைப் பார்க்கவும் முடியவில்லை. ஒரே கூச்சலும், குழப்பமும், பொருள்கள் உடைபடும் ஓசைகளுமாகக் கிணற்றுக்குள்ளிருந்து கேட்க முடிந்தது போல் கேட்டன. அங்கே முகப்பிலிருந்த மகாத்மா காந்தி படத்தை யாரோ உடைக்க முயல்வதும், "இந்தப் படம் உனக்கென்ன பாவம் செய்தது? இதை நீ உடைக்க விடமாட்டேன்!... என் பிணத்து மேலே ஏறித்தான் இதை நீ உடைக்க முடியும்" என்று அண்ணாச்சி இரைவதும் மெல்லிய குரல்களாக மழுங்கிக் கேட்டன.

அப்போது பொறுமை இழந்த நிலையில் "அவரைத் தனியே விட்டு விட்டு நான் இங்கே ஒளிந்திருப்பது கோழைத்தனம். என்னை விடு... நான் போக வேண்டும்" என்று அவள் பிடியிலிருந்து திமிறினான்.

"கூடாது! கூடவே கூடாது. நீங்கள் போவது அவருக்கு மேலும் இடைஞ்சலாக முடியும். உங்களைப் பார்த்து விட்டால் வந்திருக்கிற குண்டர்களின் கோபம் இன்னும் அதிகமாகும். 'பாண்டியன் இங்கே இல்லை' என்று சத்திய சந்தரான அண்ணாச்சியே உங்களுக்காக உங்களைக் காப்பாற்ற ஒரு பொய் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் நீங்கள் அங்கே போய் நிற்பது, அவரையே அவமானப் படுத்துவதற்குச் சமமானது" என்று கூறி அவனைப் போகவிடாமல் இறுகத் தழுவிக் கொண்டாள் கண்ணுக்கினியாள். அவளை மீற முடியாமல் அப்போது அவன் கட்டுப்பட்டான்.

வெளியே வெறிக் கூச்சல்களும், உடைபடும் ஓசைகளும், வசை மொழிகளும் விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தன. உள்ளே இருக்கிற சிலம்பக் கழிகளில் ஒன்றை உருவிக் கொண்டு கதவைத் திறந்து வெளியேறி எதிரிகளைச் சூறையாட விரும்பிய பாண்டியனின் கைகளை செயற்பட முடியாமல் கண்ணுக்கினியாள் கட்டிப் போட்டிருந்தாள்.

ஒரு நிலைமைக்கு மேல் பொறுமை இழந்த பாண்டியன், "போர்க்களங்களில் வீரர்களின் அருகே அவர்கள் மேல் பேரன்பு கொண்ட பெண்கள் இருக்கக் கூடாது என்று முன்னோர்கள் சொல்லியதன் உண்மை அர்த்தம் இப்போது தான் எனக்குப் புரிகிறது" என்று அவளிடம் எரிச்சலுடன் சொன்னான். இங்கே அவன் இப்படிக் கூறிய சில விநாடிகளில் உட் கதவையும் உடைத்துக் கொண்டு குண்டர்கள் புகுந்து விட்டார்கள். அவர்கள் மறைந்திருந்த சாதிக்காய் பெட்டியைச் சுற்றிலும் நடக்கும் காலடி ஓசைகளும், குரல்களும் கேட்டன.

சாதிக்காய் பெட்டியின் மேல் கடப்பாறையினால் ஓங்கி ஓர் அடி விழுந்தது. நல்ல வேளையாக அதை வந்தவர்கள் தூக்கிப் பார்க்கவில்லை. யார் செய்த புண்ணியமோ அவர்கள் பிழைத்தார்கள். காலடி ஓசைகள் திரும்பின. உட்புறமிருந்து அவர்கள் போய்விட்டார்கள்.

சில விநாடிகளுக்குப் பின் கடை முகப்பிலிருந்து, "முருகா! கடவுளே!" என்று அண்ணாச்சியின் குரல் பரிதாபமாக அலறி ஓய்ந்தது. அதையடுத்து ஆட்கள் கலைந்து ஓடுவதும் கூச்சலும் குழப்பமுமாகச் சிறிது நேரம் கழிந்தது. அண்ணாச்சியின் குரல் மறுபடியும் கேட்கவில்லை. அவரை அவர்கள் தங்களோடு இழுத்துக் கொண்டு போயிருப்பார்களோ என்று தோன்றியது பாண்டியனுக்கு.

"எனக்குப் பயமாயிருக்கு! 'முருகா கடவுளே' என்று அண்ணாச்சி கதறிய போது என் ரத்தமே உறைஞ்சு போச்சு" என்றாள் கண்ணுக்கினியாள்.

"அண்ணாச்சி வெளியே போற போது கையிலே ஒரு சிலம்பக் கம்பு கூட எடுத்துக்கிட்டுப் போகலே. கம்பெல்லாம் இங்கே நம்ம சாதிக்காய்ப் பெட்டி ஓரமாத்தான் அடுக்கியிருக்கு. மறுபடியும் வந்து எடுத்தா நம்மைக் காட்டிக் கொடுத்த மாதிரி ஆகுமோன்னு நினைச்சோ என்னமோ அவர் அப்புறம் கூட வந்து இங்கேயிருந்து கம்பை எடுத்ததாகத் தெரியலே. கம்பு கையிலே இருந்தா எத்தினி நூறு பேரானாலும் அவர் பக்கத்திலே நெருங்க முடியாது. இப்ப என்ன ஆச்சுங்கிறதே தெரியலே. 'முருகா'ன்னு கத்தினப்புறம் அவர் குரலே கேட்கலைங்கிறது ஏன்னும் தெரியலே... என்ன ஆனாலும் ஆகட்டும், போய்ப் பார்ப்போம்" என்று சாதிக்காய்ப் பெட்டியைத் தூக்கித் தள்ளி விட்டு அவள் பின் தொடர இருளில் வெளியே விரைந்தான் பாண்டியன்.

வெளியே ஆளரவமே இல்லை. கடைக் கதவுகள் உடைக்கப்பட்டுச் சூறையாடப்பட்டுப் பண்டங்களும் பாட்டில்களும் தெருவில் சிதறிக் கிடந்தன. கடைக்குள்ளும் வெளியேயும் ஒரே இருளாயிருந்தது.

பாண்டியன் மறுபடியும் தட்டுத் தடுமாறு உள்ளே ஓடி அண்ணாச்சியின் படுக்கையான கயிற்றுக் கட்டில் அருகே எப்போதும் ஒரு 'டார்ச்' இருப்பதை நினைவு கூர்ந்து அதைத் தேடித் துழாவி எடுத்து வந்தான்.

கடை முகப்பில் இருந்த காந்தி படத்தைக் காணவில்லை. மற்றப் படங்களில் சில உடைந்திருந்தன. கீழே அங்கங்கே குருதி சிந்தியிருந்தது. கடையில் ஒரு பொருள் விடாமல் சர்வ நாசமாக்கப்பட்டிருந்தது. அண்ணாச்சியை எங்குமே காணவில்லை. உட்புறமும், முகப்பிலும் 'டார்ச்' ஒளியில் நன்றாகத் தேடிய பின் தெருவுக்கு வந்தார்கள் அவர்கள்.

கண்ணுக்கினியாள் வாய்விட்டு அழத் தொடங்கியிருந்தாள். பாண்டியனின் விழிகளிலும் நீர் மல்கிவிட்டது. அவர்கள் இருவருக்கும் உடல் காரணம் தெரியாமலே பதறி நடுங்கியது. நெஞ்சு விரைந்து அடித்துக் கொண்டது. டார்ச் ஒளியைப் பாய்ச்சியபடி அவர்கள் தெருவின் நடுப்பகுதிக்குப் போன போது அங்கே கண்ட காட்சி பொறுத்துக் கொள்ள முடியாதபடி கோரமாக இருந்தது.

"அண்ணாச்சி!" என்ற கதறல் ஒரே சமயத்தில் அவர்கள் இருவர் தொண்டையிலிருந்தும் எழுந்து வீதியில் எதிரொலித்தது. குருதி உறைந்து ஸ்தம்பித்துப் போய் நின்றார்கள் அவர்கள்.

அங்கே மகாத்மா காந்தியின் படத்தை நெஞ்சோடு இறுக அணைத்தபடி இரத்த வெள்ளத்தில் கிடந்தார் அண்ணாச்சி. கழுத்தின் முன்புறமும், பிடரியில், தோள்பட்டையில், அடிவயிற்றில், விலாவில் என்று அவர் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்திருந்தது. வெறியேறிய முரடர்கள் அவர் உடலைக் கத்தியால் சல்லடைக் கண்களாகத் துளைத்திருந்தார்கள்.

கடையை அடைக்குமுன் சாமி படங்களுக்கு மாலை போட்டுக் கும்பிட்டு, திருநீறு பூசிக் குங்குமம் இட்டுக் கொண்ட அண்ணாச்சியின் முகம் அப்போதிருந்தது போலவே பளிச்சென்று இருந்தது. மரண வேதனையை அனுபவித்த ஒரு முகமாக அது தெரியவில்லை. பிறரைக் காப்பதற்காகத் தன்னை அழித்துக் கொண்டுவிட்ட ஒரு யோகி குருதி வெள்ளத்தில் காந்தியடிகளின் படத்தைத் தழுவியபடி படுத்து உறங்குவது போலிருந்தது அந்தக் காட்சி.

பாண்டியனின் கையிலிருந்து நடுக்கத்தில் டார்ச் நழுவியது. அப்படியே அந்தப் புனித உடலின் தலைப் பக்கம் அமர்ந்து கைகூப்பிய வண்ணம் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தான் அவன். கண்ணுக்கினியாள் கதறி அழத் தொடங்கிவிட்டாள்.

"ரெண்டு நாட்களுக்கு முன்னே தானே, 'என்னிக்காவது நான் போயிட்டாலும் தொண்டனாகத்தான் போய்ச் சேருவேன். 'தொண்டனாக ஆரம்பிச்சு அதிலே சம்பாதிச்ச புகழை முதலீடு பண்ணித் தலைவனா இறந்தான்னு' என்னைப் பத்தி நான் போனப்புறம் பேச்சு வரப்படாது. என் உயிரைக் காப்பாத்திக்கணும்னு போராடி அதுக்காக நான் சாகமாட்டேன். என்னைத் தவிர மத்தவங்களைக் காப்பாத்த நான் சாகவும் தயாராயிருப்பேன்'னு அச்சானியம் போலப் பேசினாரு. சொன்னபடியே ஆயிடிச்சே" என்று அழுகைக் கிடையே உடைந்த குரலில் கண்ணுக்கினியாள் புலம்பினாள்.

"அண்ணாச்சி சாகறப்பக் கூட 'ஐயோ! கொல்றானே'ன்னு கதறலே. காந்தி 'ஹே ராம்...' என்று சொல்லிவிட்டுப் போன மாதிரி 'முருகா! கடவுளே'ன்னு சொல்லிவிட்டு உயிரை விட்டிருக்காரு" என்றான் பாண்டியன்.

கண்ணுக்கினியாள் அவருடைய சாவைப் பொறுக்க முடியாமல் சொன்னாள்: "எங்க நாயினா அடிக்கடி சொல்வாரு, 'பெரிய முனிவர்கள், யோகிகள் எல்லாம் சாகறப்போ சாதாரண ஜனங்களைப் போல் 'ஐயோ அப்பா'ன்னெல்லாம் கதறி வேதனைப்பட்டுச் சாக மாட்டாங்களாம். எப்பவாவது ரொம்ப வேர்க்கறப்போ சட்டையைக் கழற்றிப் போடற மாதிரி உடம்பை விட்டு விட்டு நீங்கிப் போய் விடுவாங்களாம். நம்ம அண்ணாச்சியும் அப்படித் தான் நம்மை விட்டுப் போயிட்டாரு."

இரவு பதினோரு மணிக்குப் போலீஸ் வந்தது. நடந்ததை அப்படியே சொல்லும்படி செய்து பாண்டியனிடமும் கண்ணுக்கினியாளிடமும் ஸ்டேட்மெண்ட் கேட்டு எழுதிக் கொண்டார்கள்.

"எல்லாமே இருட்டில் நடந்திருக்கிறது. யார் கொன்னாங்கன்னு கண்டுபிடிக்கிறது சிரமம்" என்று போலீஸ் அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் கேட்டு, "ஒரு கெட்டவரைக் கொன்ற கதிரேசனையும் பிச்சைமுத்துவையும் சுலபமாக இந்தப் போலீஸால் கண்டு பிடித்து விட முடிகிறது. ஆனால் ஒரு நல்லவரைக் கொன்றுவிட்ட பத்துக் கெட்டவர்களை மட்டும் இந்தப் போலீஸால் கண்டுபிடிக்க முடியாமற் போய்விடும்" என்று கண்ணுக்கினியாள் காதருகே கோபமாகச் சொன்னான் பாண்டியன்.

ஆம்புலன்ஸில் பிரேதத்தைப் பரிசோதனைக்குக் கொண்டு போய்விட்டு வந்தார்கள்.

பின்னிரவு இரண்டு மணிக்கு மேல் மணவாளனும், மோகன்தாஸும், லெனின் தங்கத்துரையும் மற்ற மாணவர்களும் எங்கிருந்தோ கூட்டமாகத் திரும்பி வந்தார்கள்.

மணவாளனால் அங்கே கால் தரித்து நிற்கவும் முடியாமல் அவர் உடம்பு நடுங்கியது. பேயறைந்தது போல் நின்றார் அவர். மாணவர்களில் பலர் கண்கலங்கி நின்றார்கள். நேரம் ஆக ஆகச் செய்தி தெரிந்து மாணவர்களும், தொழிலாளர்களும், நகரப் பொதுமக்களும் வரத் தொடங்கினார்கள்.

கடை வாசலில் ஒரு மேடை போட்டு அண்ணாச்சி உபயோகித்த கயிற்றுக் கட்டிலில் அவர் சடலத்தைக் கிடத்தினார்கள். எந்த நிலையில் காந்தி படத்தை அணைத்தவாறே அவர் இறந்தாரோ, அந்த நிலையிலேயே கட்டிலில் அவரைப் படுக்க வைத்திருந்தார்கள்.

நடுங்கும் கைகளால் ஒரு மூவர்ணக் கதர் நூல் மாலையை முதலில் அவர் கழுத்தில் சூட்டினார் மணவாளன்.

அடுத்துப் பாண்டியன், கண்ணுக்கினியாள், லெனின் தங்கத்துரை, பொன்னையா, மோகன்தாஸ் ஒவ்வொருவரும் மாலை சூட்டினார்கள்.

தோட்டத் தொழிலாளர் யூனியன் காரியதரிசி ஒரு பெரிய ரோஜாப் பூ மாலையைச் சூட்டினார்.

பேராசிரியர் பூதலிங்கம் ஒரு சந்தன மாலையை அணிவித்து விட்டு, "பாண்டியன்! அழாதே! நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்" என்று கூறிவிட்டு நீர் மல்கும் தம்முடைய கண்களைத் துடைத்துக் கொண்டார்.

"இதற்கெல்லாம் இந்தக் கையாலாகாத வி.ஸி. தான் காரணம்! ஹியர் ஆஃப்டர் ஹி ஹாஸ் நோ ரைட் டு கன்டினியு அஸ் வி.ஸி. இமிடியட்லி ஹி ஷுட் ரிஸைன் அண்ட் கெட் எவே" என்று ஆத்திரமாக இரைந்தார் ஜுவாலஜி பேராசிரியர் தங்கராஜ். அப்போது அருங்காலை மூன்றரை மணி இருக்கும்.

குளிரைப் பொருட்படுத்தாமல் பெருங்கூட்டம் அங்கே காத்திருந்தது. விடிந்ததும் கூட்டம் இன்னும் அதிகமாகியது.

"இந்தப் பல்கலைக் கழகத்தின் காவல் தெய்வம் போய்விட்டது. கோவில் தான் மீதம் இருக்கிறது" என்றார் உள்ளூர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர்.

பல்கலைக் கழகத்தின் எல்லாப் பிரிவு மாணவர்களும் பிறருமாக அங்கே கூடியிருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொதிப்படையாமல் அமைதியோடு இருக்கச் செய்ய மணவாளனும் பாண்டியனும் பெருமுயற்சி செய்ய வேண்டியிருந்தது.

"சத்திய அவதாரமான மகாத்மா காந்தியின் படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இறந்து போன ஒருவருக்கு நாம் மரியாதை செய்வதில் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பழி வாங்குவதோ, வன்மம் தீர்ப்பதோ இறந்தவருக்கு நன்றி செலுத்துவதாகாது" என்று துடிதுடிப்போடு ஆத்திரம் அடைந்திருந்த ஒவ்வொரு மாணவனையும் கைகளைப் பற்றிக் கொண்டு உருக்கமாக வேண்டிக் கெஞ்சினார் மணவாளன்.

இரவே கொடுத்திருந்த தந்தி கிடைத்து மணவாளனின் தந்தை, கண்ணுக்கினியாளின் தந்தை, வேறு சில தேசியத் தலைவர்கள் எல்லோருமாக ஒரு கார் ஏற்பாடு செய்து கொண்டு மதுரையிலிருந்து காலை எட்டு மணி சுமாருக்கு மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.

பத்து மணிக்கு அண்ணாச்சியின் அந்திம யாத்திரை தொடங்கியது. கறுப்புச் சின்னமணிந்த மாணவர்களும், ஆசிரியர்களும், தலைவர்களும், தொழிலாளர்களும், நகர மக்களும் பின் தொடர்ந்தனர். ஆறு பர்லாங் நீளம் சென்ற அமைதியான ஊர்வலம் மயானத்தை அடையப் பகல் ஒரு மணி ஆயிற்று.

"அண்ணாச்சிக்குப் பிள்ளை குட்டிகள் இல்லை! நாங்கள் தான் அவருடைய சொந்தப் பிள்ளைகள்" என்று மணவாளன், பாண்டியன், லெனின் தங்கத்துரை, மோகன்தாஸ் பொன்னையா ஆகிய ஐவரும் அண்ணாச்சியின் சடலத்துக்குத் தீ மூட்டினார்கள். அப்போது கண்ணுக்கினியாள் மூர்ச்சையாகி விழுந்துவிட்டாள். தண்ணீரை முகத்தில் தெளித்து அவளை நினைவுக்குக் கொண்டு வந்தார்கள்.

சடலத்துக்கு எரியூட்டியதும் அங்கேயே கந்தசாமி நாயுடு தலைமையில் ஓர் அனுதாபக் கூட்டம் நடந்தது. முதலில் மணவாளன் பேசினார்:

"மாணவ நண்பர்களே! இன்றோடு இங்கே ஒரு புனிதமான சகாப்தம் முடிந்து போய்விட்டது. தமது தொண்டின் ஆழமும் தியாகத்தின் பரப்பும் தமக்கே தெரியாமல் வாழ்ந்த ஓர் உத்தமத் தொண்டரை நாம் இழந்து விட்டோம். இனி இந்த நாட்டின் எல்லாவிதமான அழுக்குகளையும் கரைத்து அரித்துக் கொண்டு போகும் பரிசுத்தமான சத்திய வெள்ளமாக இளைஞர்கள் பெருக வேண்டும். அந்தச் சத்தியப் பிரவாகத்தில் தான் இங்குள்ள எல்லாக் குறைகளும் தீரும். மாணவ வாழ்க்கை உல்லாசத்துக்காக அல்ல. அண்ணாச்சியின் இலட்சியம் தொண்டு செய்வது. இனி உங்கள் இலட்சியமும் அதுவாக இருக்க வேண்டும். தொண்டனாகவே இறக்க ஆசைப்பட்டார் அவர். அவருடைய ஆசை நிறைவேறிவிட்டது. எதிர்காலத்தில் உங்களுக்கு ஆயிரம் பெரிய தலைவர்கள் கிடைக்கலாம். ஆனால் அண்ணாச்சியைப் போல் இப்படி ஒரு நல்ல தொண்டர் கிடைப்பாரா என்பது சந்தேகம் தான். என்னை மன்னியுங்கள். துயரம் தொண்டையை அடைக்கிறது. இதற்கு மேல் என்னால் எதுவும் இப்போது பேச முடியவில்லை."

அடுத்துப் பாண்டியன் பேச எழுந்தான்:

"மகாத்மா காந்தி சுடப்பட்டு இறந்த போது 'புதியவன் திரும்பிப் போய் விட்டான்' என்ற தலைப்பில் அன்று நவநீதக் கவி பாடிய கவிதையை இப்போது உங்களுக்குச் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். அது இன்று நம்மிடையே இருந்து பிரிந்து விட்ட அண்ணாச்சிக்கும் பொருந்தும்.

காதுகள் இருந்தும் கேளாமல்
கண்கள் இருந்தும் பாராமல்
வீதிகள் இருந்தும் நடவாமல்
விவேகம் இருந்தும் புரியாமல்
பேதைகள் நிறைந்த பொதுவினிலே
புதியவன் ஒருவன் வந்து நின்றான்
சாதிகள் மறைந்த சமதர்மம்
சத்தியம் மிகுந்த பொதுத் தொண்டு
நீதிகள் அறிந்த பெரு நெஞ்சம்
நேர்மைகள் தெரிந்த மரியாதை
வேதியர் அறியா மெய்ஞ்ஞானம்
மிகவும் மலர்ந்து சிரித்த முகம்
யாவையும் இருந்தும் கொன்று விட்டார்
யாதும் அறியா மந்தையிலே
பூமியிலே வந்தது பிழை என்றே
புதியவன் திரும்பிப் போய்விட்டான்."

இந்தக் கவிதை மாணவர்களைக் கண்கலங்க வைத்து விட்டது. அடுத்துப் பேச வந்த கண்ணுக்கினியாள் பேச வார்த்தைகள் வராமல் கதறி அழுதபடி "நோ... ஐ காண்ட்..." என்று அப்படியே உட்கார்ந்து விட்டாள்.

"வீ ஹாவ் லாஸ்ட் ஏ கிரேட்மேன்" என்று தொடங்கிப் பூதலிங்கம் ஆங்கிலத்தில் ஐந்து நிமிஷம் பேசினார்.

"ஏசு பெருமானைப் பாவிகள் சிலுவையில் அறைந்தது போல் இந்தப் புண்ணிய புருஷனையும் பாவிகள் கொன்று விட்டார்கள்" என்றார் பேராசிரியர் தங்கராஜ். மேலும் பலர் அண்ணாச்சியைப் புகழ்ந்து பேசினார்கள்.

கடைசியாகப் பேராசிரியர் ஸ்ரீராமன் "கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே என்னும் கீதாசாரியனின் தத்துவப்படி வாழ்ந்தவர் அண்ணாச்சி" என்று பேசினார்.

மயானத்திலிருந்து எல்லாரும் திரும்பப் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது.

மறுநாள் முதல் மாணவர்கள் பல்கலைக் கழக வகுப்புக்களைப் புறக்கணித்து துணைவேந்தர் பதவி விலகுகிறவரை வேலை நிறுத்தம் என்று அறிவித்தனர். மூன்றாம் நாள் துணைவேந்தர் ராஜிநாமாச் செய்தார்.

மாணவர்கள் சத்திய வெள்ளமாய்ப் பெருகவே அதற்கு அஞ்சிய அரசாங்கம் ஆர்.டி.ஓ.வையும் சஸ்பெண்ட் செய்தது. இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் ஊரிலேயே தென்படவில்லை. எங்கோ தலைமறைவாகி ஓடியிருந்தனர். மந்திரிகள் மல்லிகைப் பந்தலுக்கு வரவே பயப்பட்டார்கள்.

இரண்டு மாதங்கள் கழிந்து நடந்த மல்லிகைப் பந்தல் நகர சபைத் தேர்தலில் இராவணசாமியின் கட்சி ஆட்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சியினர் சார்பில் நின்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். அந்த ஆண்டு பரீட்சைகள் முடிந்து பல்கலைக் கழக விடுமுறைக்காக மூடுவதற்கு முன்பே புதிய துணைவேந்தர் பதவிக்கு வந்தார்.

விடுமுறை முடிந்து பல்கலைக் கழகம் திறந்த முதல் நாளன்று பழைய அண்ணாச்சி கடை இருந்த இடத்தில் 'அமரர் அண்ணாச்சி தேசீய வாசக சாலை' என்ற பெயரில் ஒரு புதிய நூல் நிலையம் திறக்கப் பட்டது.

புதிய துணைவேந்தர் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று அந்தத் திறப்பு விழாவுக்குத் தலைமை வகித்தார். புதிய நகரசபைத் தலைவர் அதைத் திறந்து வைத்தார். மணவாளன் நூல் நிலையத்தின் உள்ளே அண்ணாச்சி உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

விழா முடிந்ததும் பாண்டியன், மணவாளன், கண்ணுக்கினியாள் மூவரும் முருகன் கோவிலுக்குப் போனார்கள். குருக்கள் தீபாராதனை செய்து மூவருக்கும் மாலை சூட்டினார். உடனே மணவாளன், "பாண்டியன்! உனக்கு நினைவிருக்கிறதா? பட்டமளிப்பு விழாப் போராட்டத்துக்கு முந்திய தினம் இரவு நீ, நான், தங்கச்சி, அண்ணாச்சி எல்லோருமாக இங்கே சாமி கும்பிட வந்த போது, 'மாலையைக் கழட்டாதீங்க! கொஞ்சம் அப்படியே நில்லுங்க! உங்களைக் கண்குளிர பார்க்கணும் போல் இருக்கு. உங்க கல்யாணத்துக்கு நான் வர முடியாட்டியும் இப்பவே கண் நிறையப் பார்த்துக்கிடுதேன்' என்று பழைய சம்பவத்தை நினைவுபடுத்திய போது பாண்டியனும், கண்ணுக்கினியாளும் கண் கலங்கினார்கள்.

அப்போது மணவாளன் சொன்னார்: "இங்கே இன்றும் நாளையும் இந்தப் பல்கலைக் கழகம் இருக்கும் நிறைய மாணவர்களும், மாணவிகளும் படிக்க வருவார்கள். ஆனால் நம் தலைமுறையில் நாம் படித்த போது நமக்கு இங்கே ஓர் அண்ணாச்சி கிடைத்தது போல் நாளைப் படிக்க வரப் போகிறவர்களுக்கு இங்கே ஒரு சத்தியமான காவல் தெய்வம் இருக்காது! அந்த வகையில் நாம் தான் பாக்கியசாலிகள் பாண்டியன்!"

"அண்ணன் சொல்வது சரிதான்! ஆனால் அண்ணாச்சி ஒரு மனிதர் மட்டுமில்லை. அவர் ஒரு தத்துவம். அந்தத் தத்துவம் என்றும் இங்கே அழியாது. இந்த மலைகளும் அருவிகளும் வானமும் பூமியும் உள்ள வரை இங்கே அதுவும் இருக்கும்" என்று பாண்டியன் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் கண்களிலும் கண்ணுக்கினியாள் விழிகளிலும் ஈரம் பளபளத்தது. பேசிக் கொண்டே அவர்கள் கோவிலிலிருந்து திரும்பும் போது மல்லிகைப் பந்தலில் மெல்ல மெல்ல அஸ்தமித்து இரவு தொடங்கியிருந்தது.

"இருட்டி விட்டது" என்றாள் கண்ணுக்கினியாள்.

"மறுபடியும் விடியும்! கவலைப்படாதே!" என்றான் பாண்டியன்.

சாலையில் அவர்கள் மூவரும் சேர்ந்து நடந்த போது சுகமான குளிர்க் காற்று வீசியது. மரங்கள் அசைந்தாடின. முருகன் கோயில் மணி கணீர் கணீர் என்று கம்பீரமாக ஒலித்தது. வீதி விளக்குகள் தவம் செய்தது போல் பனி மூட்டத்தில் மங்கலாக நின்றன. மலைக் குளிர் மெல்ல மெல்ல உறைக்கத் தொடங்கியது.

மணவாளன் முன்னே வேகமாக நடந்து போய் விட்டதால் கண்ணுக்கினியாளும் பாண்டியனும் சற்றே பின் தங்கி நடந்தனர்.

"ரொம்பக் குளிராயிருக்கு!"

"இந்தா இதை அணிந்து கொள்!" என்று தனது உல்லன் கோட்டைக் கழற்றிப் பரிவோடு அவளுக்கு அணிவித்தான் பாண்டியன். அவர்கள் தொடர்ந்து இணையாகப் பாதையில் முன் நோக்கி மேலே நடந்தார்கள்.

நிறைவுரை

படித்தவர்களும், படிக்கிறவர்களும், படிப்பிக்கிறவர்களும் நிறைந்த ஒரு பல்கலைக் கழகத்தைப் படிக்காத தொண்டன் ஒருவன் அர்த்தமுள்ளதாகச் செய்ததைப் பற்றிய கதை இது.

இளைஞர்களைச் சத்திய வெள்ளமாகப் பெருகச் செய்த ஊற்றுக்கண் மல்லிகைப் பந்தலில் அண்ணாச்சியாக இருந்தார். அது வேறோர் ஊரில் வேறொரு பெயரில் இருக்கலாம். ஊரும் பெயரும் வேறுபடலாம். ஆனால் விளைவுகள் தான் முக்கியம். கல்லாதவர்களின் அறியாமையை விடக் கற்றவர்களின் அறியாமைகளே அதிகமாக உள்ள நாடு இது. இல்லாதவர்களின் வறுமைகளும் - ஏன்? இருப்பவர்களின் வறுமைகளுமே இந்நாட்டில் சேர்ந்து தெரிகின்றன. இல்லாதவர்களின் வறுமையை உணரத் தெரிந்த இருப்பவர்களும், இருப்பவர்களின் வறுமைகளை மன்னிக்கத் தெரிந்த சமூகமும் வருகிற வரை இங்கே போராட்டம் தான். இல்லாதவர்களிடம் பொருளால் வறுமை என்றால் இருப்பவர்களிடம் அதை உணர்வதிலும் புரிந்து கொள்வதிலுமே வறுமை இருக்கிறது. இளைஞர்களிடையே அமைதியின்மையும், கொந்தளிப்பும், போராடும் குணமும் இருப்பதற்கான காரணங்கள் முதியவர்களால் உண்டாக்கப்பட்டவை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சந்தர்ப்பவாதமும், அதிகார துஷ்பிரயோகமும் கற்றவர்களின் அறியாமைகளும் உள்ள வரையில் இளைஞர்கள் இங்கே வெள்ளமாகப் பொங்கிப் பெருகிக் கொண்டு தான் இருப்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது.

இந்த நாவல் அப்படி இளைஞர்கள் பெருகுவதையும், பொங்குவதையும் தவிர்க்க முடியாத ஒரு காலப் பின்னணியைக் கொண்ட கதையில் யதார்த்தமாகச் சித்தரிக்கிறது. வருங்காலத்தில் பல சூழ்ச்சிகளெல்லாம் மாறிய பிறகு திரும்பப் படித்துப் பார்த்தாலும் கூட ஒரு காலத்தின் நிலைமைகளைத் துல்லியமாகவும், துணிவாகவும், ஒன்று விடாமல் வரைந்து வைத்த ஓர் ஓவியமாக இது தெரிய முடியும். எதையும் அப்படியே பிரதிபலிக்கும் இரசம் மழுங்காத புதுக் கண்ணாடியைப் போல் எந்தச் சமூகத்திலும் அந்தச் சமூகத்தின் இளைஞர்கள் தான் மீதமிருக்கிறார்கள். அதனால் தான் இந்தக் காலப் பின்னணியைக் காட்டுகிற கருவியாக - ஆடியாக இந்நாவலில் அவர்களே வருகிறார்கள்.

இதில் வருகிற அண்ணாச்சியும், பாண்டியனும், கண்ணுக்கினியாளும், மணவாளனும், பிச்சைமுத்துவும், கதிரேசனும், துணைவேந்தரும், பேராசிரியர் பூதலிங்கமும், பொழில் வளவனாரும், ஸ்ரீராமனும், இராவணசாமியும், அமைச்சர் கரியமாணிக்கமும் வெறும் கதாபாத்திரங்கள் மட்டுமில்லை. 1966-1971க்கு இடையில் ஏதோ சில ஆண்டுகளை - (அவை எந்த ஆண்டுகளாக இருந்தால் தான் என்ன?) அப்படி அப்படியே சித்தரித்துக் காட்டும் பிரதிநிதிகளாகவே அவர்கள் இந்தக் கதையில் வருகிறார்கள், வந்தார்கள். அண்ணாச்சியைப் போல் விளம்பரத்தையும், புகழையும் விரும்பாமல், பொதுக் காரியங்களுக்காக ஓடாய் உழைத்துத் தேய்ந்து மாயும் தொண்டன் ஒருவன் ஒவ்வோர் இடத்திலும் ஏதாவது ஒரு பெயரில் தெய்வத்தின் காரியங்களைச் செய்தபடி பாமர மனிதனாக நடமாடி கொண்டிருப்பான். அவனைத் தேடி அடையாளம் கண்டு மரியாதை செய்கிற போது தான் சமூகமும் மரியாதைக்கு உரியதாகிறது. சமூகத்தின் மரியாதையை நாம் கணிப்பதற்கு அது யார் யாரை மரியாதை செய்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி மரியாதைகளைத் தெரிந்து கொண்டவர்களுக்கு இந்த நாவலின் அர்த்தங்கள் - உள்ளர்த்தங்கள் எல்லாமே மிகவும் நன்றாகவே புரிந்திருக்கும் என்பது என் நம்பிக்கை.

நா. பார்த்தசாரதி