சத்யா நிலையாக ஓரிடத்தில் இருக்க மாட்டான்.
ஓடுவான், குதிப்பான், சுற்றுவான், உருளுவான்…
... பிறகு விழுவான்!
"ஒரு நிமிடம் சும்மா உட்கார்!" என்கிறார் அப்பா.
"உனக்கு அடிபட்டால், என்னிடம் அழுதுகொண்டு வராதே," என்கிறார் அக்கா.
"ஏதாவது உடைந்தால் தெரியும் சேதி!" என்கிறார் தாத்தா.
"நீ வகுப்பைத் தொந்தரவு செய்கிறாய்" என்கிறார் அவனுடைய ஆசிரியர்.
ஆனால், அவன் கைகளும் கால்களும் எப்போதும்
நடனம் ஆடிக்கொண்டிருந்தால், சத்யா என்ன செய்வான்?
இன்று ஞாயிற்றுக்கிழமை.
ஒவ்வொரு வாரத்திலும் சத்யாவுக்கு மிகவும் பிடித்த நாள் இதுதான். ஏனென்றால், அன்றுதான் அவன் தன்னுடைய அம்மா வேலை செய்யும் பண்ணைக்குச் செல்வான்.
பண்ணைக்குச் செல்ல நீண்ட தூரம் நடக்கவேண்டும். மேலும் கீழும் செல்லும் ரகசிய வழிகள், அடர்ந்த காடுகள், நளினமாகச் செல்லும் ஓடைகள் இவற்றை எல்லாம் கடந்து செல்லவேண்டும்.
சத்யா முயலைப் போலத் துள்ளிக் குதிக்கிறான். மானைப்போல விரைந்தோடிச் செல்கிறான்.
"சேறு மிகவும் ஈரமாக இருக்கிறது, கவனமாக வா!" என்கிறார் அம்மா.
அவன் பூரானைப்போல ஊர்ந்தான், பாம்பைப்போல நெளிந்து சென்றான்.
"கவனம், முள் குத்திவிடப்போகிறது!" என்கிறாள் அம்மா.
அவன் சிலந்தியைப்போல ஊசலாடினான், குரங்கைப்போலத் தாவினான்.
"வீஈஈஈஈ!"
"பலமான கிளைகளாகப் பிடித்துக்கொள், என் செல்லக் குரங்கே" என்கிறார் அம்மா.
அவன் வாத்தைப் போலத் துடுப்பு போட்டான், தவளையைப் போல நீந்தினான்.
"ஆழமில்லாத இடத்திலேயே இரு, சரியா?" என்கிறார் அம்மா.
அவன் பல்லியைப் போல மேலே ஏறினான், ஆட்டைப் போலக் குதித்தான்.
"விழுந்துவிடாதே!" என்கிறார் அம்மா.
சத்யா, கைகளை இறகுகளைப் போல விரித்துப் பறக்க முயன்றான்.
தான் ஒரு வல்லூறைப்போல உயர்ந்து, காற்றில் மிதந்து செல்வதாகக் கற்பனை செய்தான்.
மாலை வேளையில் சூரியன் மறைந்து, வண்டுகள் ரீங்காரமிடத் தொடங்கின. வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது.
சோர்வடைந்திருந்த சத்யா அம்மாவின் முதுகில் ஏறிக்கொண்டான். மேலும் கீழும் செல்லும் வழிகளில் வயல்கள், காடுகள், ஓடைகள் எல்லாவற்றையும் கடந்து அவர்கள் வீட்டுக்குத் திரும்பினர்.
வீட்டில், சகதியும் சிராய்ப்புக்களுமாக இருந்த சத்யாவைப் பார்த்து, அப்பாவும் அக்காவும் தாத்தாவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
தாத்தா அவனைக் குளிப்பாட்டிவிட்டார்.
அப்பா அவனுக்கு உணவு சமைத்தார்.
அவன் கண்ணயர்வதற்காக அக்கா கதைகள் சொன்னார்.
தூக்கத்தில் சத்யா கனவு காண்கிறான். அந்தக் கனவுகளில் அவன் ஓடுகிறான், குதிக்கிறான், சுற்றுகிறான், உருளுகிறான்...
... பிறகு பறக்கிறான்!
அவை எப்படி நகர்கின்றன?
நம்மைப் போலவே, சுவையான உணவையும் வசதியான வீட்டையும் அன்பான தன் குடும்பத்தையும் கண்டறிவதற்காக அவை நகர்கின்றன. அவற்றில் சில, மற்ற விலங்குகளின் பிடியிலிருந்து தப்பவும் அவற்றால் உண்ணப்படாமல் இருக்கவும் நகர்கின்றன.
அடுத்து வரும் பக்கங்களில் உள்ள விலங்குகளும் பறவைகளும் எப்படி நகர்கின்றன என்பதைக் கண்டறிவோம்!
டால்ஃபின்கள் தண்ணீரிலிருந்து உயரமாகத் துள்ளிக் குதிக்கக் கூடியவை. உங்களால் துள்ளிக் குதிக்க முடியுமா?
நிலத்திலுள்ள விலங்குகளில் மிக வேகமானது சிறுத்தை. குறிப்பாக, வேட்டையாடும்போது அவற்றால் அதிவேகமாக ஓடமுடியும். உங்களால் அவ்வளவு வேகமாக ஓடமுடியுமா?
நண்டுகள் பக்கவாட்டில் நடந்து செல்லும். உங்களால் பக்கவாட்டில் நடந்து செல்ல முடியுமா?
வெட்டுக்கிளிகளால் அதிக உயரத்துக்குக் குதிக்க முடியும், குறிப்பாக, அவை வேட்டையாடப்படும்போது. உங்களால் அதிக உயரத்துக்குக் குதிக்க முடியுமா?
நத்தைகள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன, மிக மிக மெதுவாக. உங்களால் மெதுவாக ஊர்ந்து செல்ல முடியுமா?