Sayankala megankal

சாயங்கால மேகங்கள்

'சாயங்கால மேகங்கள்' என்ற இந்நாவலின் கதாபாத்திரங்கள் நம்மைச் சுற்றி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அங்கும் இங்குமாகக் காண்பவர்களே. சிலரை அடிக்கடி காண்பீர்கள். மற்றும் சிலரை எப்போதாகிலும் அபூர்வமாகக் காண்பீர்கள். பூமியைப் போன்ற ஒரு சமூகப் பொறுப்புள்ள ஆட்டோ ரிக்‌ஷா டிரைவரை உடனே உங்களருகே பார்த்து விட முடியாது தான்.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முன்னுரை

பிரியத்துக்குரிய வாசக நண்பர்களே!

'சாயங்கால மேகங்கள்' என்ற இந்நாவலின் கதா பாத்திரங்கள் நம்மைச் சுற்றி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அங்கும் இங்குமாகக் காண்பவர்களே. சிலரை அடிக்கடி காண்பீர்கள், மற்றும் சிலரை எப்போதாகிலும் அபூர்வமாகக் காண்பீர்கள். பூமியைப் போன்ற ஒரு சமூகப் பொறுப்புள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவரை உடனே உங்களருகே பார்த்துவிட முடியாதுதான்.

ஆனால் அப்படிக் குணமுள்ளவர்கள் நம்மோடு நம் பக்கத்திலேயே எப்போதாவது பார்க்க முடியவும் முடிகிறது. பயனடையவும் இயலுகிறது.

ஒரு கதை அல்லது நாவல் என்பதனை விட இதை ஒரு வகையில் நமது 'சமகாலத்து வாழ்க்கைச் சித்திரம்' என்றே உங்களுக்கு நான் அறிமுகப்படுத்திவிடலாம். தற்செயலாக ஒரு கதையாகவும் வாய்த்திருக்கிறது. அவ்வளவுதான்.

'நமது சமகாலத்து வாழ்க்கையின் அவலங்களை மிகவும் தத்ரூபமாகச் சித்தரித்திருக்கிறீர்கள்' என்றே ஏராளமான வாசகர்களும் இதைப் பத்திரிகையில் படித்தபோது சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.

அறியாமையும் சுயநலமும் பதவி - பணத்தாசைகளும் நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பேயாகப் பிடித்து ஆட்டுவதால் நாமும் அதனால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்ப முடியவில்லை.

'மன்னாரு' மாஃபியா போன்ற மாஃபியாக் கும்பலிலிருந்து சமூகத்தையும், தனி மனிதர்களையும் காப்பாற்றப் பூமியும் சித்ராவும் மட்டுமில்லாமல் நாமும் கூடச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. போராட வேண்டியிருக்கிறது.

கதையில் அவர்கள் போராடுகிறார்கள். வாழ்வில் நாம் போராடுகிறோம். வித்தியாசம் அதுவே.

சமூகத் தீமைகளைப் பொறுத்துக் கொண்டு பயந்து அடங்கி ஒடுங்கி வாழும் காலம் மலையேறிவிட்டது. இனி அவற்றைத் துணிந்து மனத்தாலும் உடலாலும் எதிர்த்துத்தான் ஆக வேண்டும். மனத்தாலும் முடியாத போது - உடலாலும் எதிர்ப்பதற்கான உருவகமாகவே 'பூமி' இந்தக் கதையில் வருகிறான். பூமியைப் போன்று உடல்வலிமை - மனவலிமை இரண்டும் உள்ள இளைஞர்கள் இன்றைய சமூகத்துக்குத் தேவை. ஏனெனில் இன்றைய சமூகத்தில் கோழைகள் வாழ முடியாது. தீரர்களே வாழமுடியும்.

நா. பார்த்தசாரதி

தீபம்

சென்னை.

27-8-1983

அத்தியாயம் - 1

"ஞானமில்லாத செருக்கும் செருக்கில்லாத
ஞானமும் சோபிப்பதில்லை."

சில விநாடிகளே நீடித்த அந்த மௌனத்தில் கவிதையின் அமைதி நிலவியது. அவள் அவனை நன்றியுணர்வு சுரக்கப் பார்த்தாள். அவனோ கடமையைச் செய்து முடித்து விட்ட சத்தியமான பெருமிதத்தோடு அவளைப் பார்த்தான். அருள் மேரி கான்வென்ட் பள்ளி முகப்பிலேயே அவளைச் சந்திக்க முடிந்திருந்தது.

"உங்கள் முகவரியைத் தெரிந்து கொள்வதற்காகப் பையைத் திறந்து பார்க்கும்படி ஆகிவிட்டது. அதற்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்..."

"பரவாயில்லை! செய்ய வேண்டியதைத்தானே செய்திருக்கிறீர்கள்! இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது?..."

"அப்படியில்லை... வந்து...?"

"எப்படியில்லை...?"

"ஒரு பெண்ணின் கைப்பை என்பது மற்றொருவர் பிரித்துப் பார்த்து விட முடியாத இங்கிதங்களும் அந்தரங்கங்களும் நிறைந்தது... அதை நான் பிரித்துவிட்ட தவற்றுக்காக..."

அவளிடம் மறுபடி அந்த அழகிய மௌனம். ஏதடா ஓர் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் என்னென்னவோ கதாநாயகன் மாதிரி வசனமெல்லாம் பேசுகிறானே என்று அவள் நினைத்திருக்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய்க் கொடுக்காமல் தன்னிடமே நேரில் தேடிக் கொண்டு வந்து கொடுத்தானே என்று முக மலர்ச்சியோடு கனிவாக இரண்டு வார்த்தை நின்று பேசினால், எல்லை மீறிப் போகிறதே என்று அவளுக்குச் சலிப்பு ஏற்பட்டு விட்டதோ என்னவோ? அதன் விளைவு அடுத்த கணமே தெரிந்தது.

விருட்டென்று பையைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள் அந்தப் பெண். பேச்சும் புன்னகையும் முறிந்து ரூபாயில் கணக்குத் தீர்க்கிற எல்லை வந்ததும் அவன் சுதாரித்துக் கொண்டான். அழகிய மௌனங்கள் உடைந்து இறுக்கமான புழுக்கம் சூழ்ந்தது.

"மன்னிக்க வேண்டும். பணத்துக்காக நான் இந்த உதவியைச் செய்யவில்லை. தயவு செய்து நான் யோக்கியனாயிருப்பதற்கு உதவி செய்யுங்கள், போதும். விலை நிர்ணயித்து விடாதீர்கள். நானும் உங்களைப் போல் படித்துப் பட்டம் பெற்றவன் தான். வேறு வேலை கிடைக்காததால் 'ஸெல்ஃப் எம்ப்ளாய்மெண்ட்' திட்டத்தின் கீழ் பாங்க் லோன் மூலம் இந்த ஆட்டோவை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறேன்."

இதைச் சொல்லியபடியே ஸீட்டைத் தூக்கி அதற்கு அடியிலிருந்து மகாகவி பாரதியார் கவிதைகள், ராஜாராவின் ஆங்கிலநாவல், ஸெர்ப்பெண்ட் அண்ட் தி ரோப், நிரத் சௌத்ரியின் அடோபயாகிராஃபி ஆஃப் ஆன் அன்னோன் இண்டியன்... என்ற சில புத்தகங்களை அடுக்கி எடுத்துக் காட்டினான் அவன். அவள் முகத்தில் வியப்பு மலர்ந்தது.

ஆட்டோவில் ஞாபகப் பிசகாகத் தான் மறந்து வைத்துவிட்டு வந்த பணமும் தங்க வளையளும் இருந்த பையை நாணயமாகத் திரும்பக் கொணர்ந்து சேர்த்த ஒரு டிரைவர் என்ற மதிப்பீட்டில் அதற்குப் பத்து ரூபாய் நன்றித் தொகை நிர்ணயித்த அவள் இப்போது தயங்கினாள்.

"உங்கள் பெயர்...?"

"பூமிநாதன்."

"படித்து பட்டம் பெற்றவராக இருந்தால் பணம் வாங்கிக் கொள்வது தப்பா? மீட்டரில் ஆன தொகையைக் கேட்டு வாங்கிக் கொண்டீர்களே, அது போல்தானே இதுவும்?"

"மீட்டர் ஆட்டோவுக்குத்தான்! உதவி, நன்றி, விசுவாசம் இதற்கெல்லாம் மீட்டாரும் ரேட்டும் கிடையாது, கூடாது..."

"நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள், சொல்கிறீர்கள். உங்கள் பண்பைப் பாராட்டுகிறேன். ஆனால் உண்மையில் இந்த நகரத்தில் நீங்கள் குறிப்பிட்ட நல்லுணர்வுகளுக்கும் கூட மீட்டர், ரேட் எல்லாம் ஏற்பட்டு விட்டன."

அவன் சிரித்தான். துணிந்து அவளைப் பேர் சொல்லி அழைத்துப் பேசினான்.

"மிஸ் சித்ரா! உங்கள் பேச்சு அழகாக இருக்கிறது! உங்கள் புன்னகையில் கவிதை இருக்கிறது. அவையே எனக்குப் போதும்."

இதற்கு மறுமொழி எதுவும் சொல்லாமல் அழகு காட்டுவது போல் முகத்தைக் கோணிக் கொண்டு அவனை உறுத்துப் பார்த்தாள் சித்ரா. சினிமாக் காதலன் போல் அவன் ரெடிமேடாகப் பேசுவதாய் அவளுக்குத் தோன்றியது.

"உங்கள் குரலையும் வார்த்தைகளையும் கேட்கக் கொடுத்து வைத்த இந்த கான்வென்ட் குழந்தைகள் பாக்கியசாலிகள்."

"உங்கள் உதவிக்கு நன்றி. 'பிரேயர் பெல்' அடித்து விட்டார்கள். நான் உள்ளே போக வேண்டும்."

சித்ரா அவனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அவனிடமிருந்து கத்தரித்தாற் போல் அவசர அவசரமாக விலக்கிக் கொண்டு பள்ளியின் உள்ளே சென்றாள்.

சுற்றிலும், எல்.கே.ஜி., யு.கே.ஜி., பட்டுப் பூச்சிகளாகக் குழந்தைகள் நிறைந்த மைதானத்தை நோக்கி அவள் செல்கிற வனப்பில் சிறிது நேரம் திளைத்து நின்றான் பூமிநாதன். காலை வேளையில் வாய்த்த அழகிய சவாரியும், அவள் மறந்து விட்டுச் சென்ற பையைத் திரும்பக் கொடுப்பதற்காகச் சென்று சந்தித்த சந்திப்பும் அவன் உள்ளத்தில் கிளர்ச்சியையும் மலர்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டாக்கியிருந்தன.

காலை வேளையில் மைலாப்பூர்க் குளக் கரையிலிருந்து பாண்டி பஜாரில் வந்திறங்கிய முதல் சவாரி இப்படிக் கைப்பையை ஆட்டோவில் விட்டு விட்டுப் போனதை, அவன் வடபழநி கோயில் வரை காலியாகச் சென்று அங்கே மற்றொரு சவாரியை ஏற்றிக் கொண்ட போதுதான் தெரிய வந்தது.

கோயிலிலிருந்து வெளியே வந்து "நுங்கம்பாக்கம் அவென்யூ ரோடு போகணும்..." என்று ஏறியவர், "இதென்னப்பா... லேடீஸ் ஹேண்ட் பாக் கிடக்குது... யாராவது மறந்து விட்டுட்டுப் போய்ட்டாங்களா?..." என்று அதை எடுத்து அவன் கையில் கொடுத்தார். அவள் கைப்பையை விட்டு விட்டுப் போயிருப்பது முதல் முதலாக அவன் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது அப்போதுதான்.

சவாரியை அவென்யூ ரோட்டில் இறக்கி விட்டு விட்டுத் திரும்பும் போது நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்தி விட்டுத் தயங்கினான். காலையில் மயிலாப்பூர் குளக்கரையில் ஏறிப் பாண்டி பஜாரில் இறங்கிவிட்ட அழகிய இளம்பெண்ணின் அடையாளங்களைச் சொல்லிப் பையைப் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடலாமா என்று ஒரு கணம் தோன்றியது.

அதன் சாதக பாதகங்களைச் சிந்தித்தான் அவன். பையை நாணயமாக ஒப்படைக்கும் தன் மேலேயே சந்தேகப்பட்டு ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள் என்பதும், பைக்கு உரியவர் தேடி வந்து கேட்டாலும் பல சிரமங்களுக்குப் பின்பே அது அவருக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதும் சுலபமாகவே அனுமானிக்கக் கூடியவையாயிருந்தன. இந்திய மக்களுக்கு வெள்ளைக்காரரிடமிருந்து சுதந்திரம் கிடைத்து விட்டாலும், போலீஸ்காரர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்க இன்னும் பல தலைமுறைகள் ஆகும் போல் தோன்றியது. அப்பாவியான நல்லவர்களுக்கும் - பாமரர்களுக்கும் சந்தேகத்தின் பேரில் தொந்தரவு கொடுப்பதும், சந்தேகத்துக்குரியவர்களையும், திருடர்களையும், அயோக்கியர்களையும் நல்லவர்களாக நினைத்து விட்டுவிடுவதும், நமது போலீஸின் அபூர்வ குணாதிசயங்களில் ஒன்று என்று நினைக்குமளவு போலீஸ் இலாகாவை அரசியல்வாதிகள் கெடுத்து வைத்திருந்தார்கள். சீரழியப் பண்ணியிருந்தார்கள்.

பூமிநாதனுக்கே சொந்த முறையில் போலீஸைப் பற்றி நிறைய அநுபவங்கள் இருந்தன. அதிகாலையில் விடிந்ததும் விடியாததுமாகச் சவாரியை எதிர்பார்த்து எழும்பூரிலோ சென்ட்ரலிலோ வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினால் 'மாமூல்' என்றும், 'நாஷ்டாவுக்கு எதினாச்சும் குடுப்பா' என்றும் வந்து நிற்கும் போலீஸ்காரர்களைப் பார்த்து அவன் அருவருப்பு அடைந்திருக்கிறான்.

வெறும் நாலணா எட்டணா லஞ்சத்துக்கே சலாம் போடு இந்தப் போலீஸ்காரர்கள் தான் லஞ்சம் வாங்கியவர்களையும் ஊழல் செய்தவர்களையும் திருடுபவர்களையும் கைது செய்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு முறையும் பூமிநாதனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வரும். நியாயங்கள் என்னவென்றே புரியாதவர்கள் எப்படி அவற்றைக் காக்க முடியும்? தர்மங்கள் எவை என்றே புரியாதவர்கள் எப்படி அதர்மங்களைத் தடுக்க முடியும்?

பையை போலீஸ் ஸ்டேஷனில் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தான் அவன். அதே சமயம் அந்தப் பெண் ஏறிய இடம், இறங்கிய இடத்தை வைத்து எந்த விலாசம் என்று கண்டு பிடிக்க முடியாமலுமிருந்தது. மைலாப்பூர்க் குளக்கரையிலோ, பாண்டி பஜாரிலோ அவளை எந்த விலாசத்தில் தேடுவது?

வள்ளுவர் கோட்டத்தின் அருகே ஆட்டோவை ஓரங்கட்டி ஸ்டாண்டில் நிறுத்தி விட்டுப் பையைப் பிரித்தான் அவன். அழகிய பெண்களின் கூந்தலுக்கு நறுமணம் உண்டா இல்லையா என்ற பழைய இலக்கியச் சர்ச்சையைக் கேலியாக நினைவு கூர்ந்தபடி நறுமணம் அழகிய பெண்களின் கைப்பைக்கு உண்டா இல்லையா என்ற கேள்வியுடன் பிரித்தால் வாசனை கமகமத்தது. அந்த நறுமணம் அதற்குரியவளையே அருகிற் கொண்டு வந்து விட்டாற் போன்ற நளினங்களை உணர்த்தியது.

பூப்போட்ட சிறிய கைக்குட்டை, வெங்காயச் சருகு போன்ற மெல்லிய ரோஸ் நிறத்தாளில் சுற்றிய இரண்டு ஜோடி தங்க வளையல்கள், ஒரு பத்து ரூபாய் நோட்டுக் கற்றை முப்பதோ நாற்பதோ இருக்கலாம். ரோஸ் காகிதச் சுற்றலில் மஞ்சள் மின்னலாய் மின்னும் நெளி நெளியான வளையல்களுக்கு அடியில் முன்புறம் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டிருப்பது மடிப்பில் பின்புறமே தெரிகிற அளவு ஒரு கடிதம். கடிதத்தை எடுத்துப் பிரித்தான்.

மிஸ் சித்ரா, எம்.ஏ., எம்.எட்., மாம்பலம், வெங்கடநாராயணா ரோடு வட்டாரத்திலுள்ள அருள்மேரி கான்வென்ட் பள்ளியில் சமீபத்தில் ஆசிரியையாக நியமிக்கப்பட்டதற்கான நியமனத் தாள் அது. அதை வைத்துத் தான் அவளைத் தேடி அந்த நர்ஸரிப் பள்ளிக்குச் சென்று அவளது கைப்பையைத் திருப்பிக் கொடுத்திருந்தான் பூமிநாதன்.

நினைவுகள் அருள்மேரி கான்வென்டிற்குள் அவளைப் பின் தொடர்ந்து போய் நுழைந்து கொள்ள ஆட்டோவை ஸ்டார்ட் செய்து பனகல் பார்க் முனையும் வெங்கடநாராயணா சாலையும் சந்திக்குமிடத்தில் மர நிழலில் வந்து காத்திருந்தான்.

காத்திருக்கும் நேரங்களில் படிப்பதற்காக ஆட்டோவில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எப்போதும் நாலைந்து புத்தகங்கள் வைத்திருப்பது பூமிநாதனின் வழக்கம்.

மகாகவி பாரதியார் கவிதைகளை எடுத்தான். புதுமைப் பெண் என்ற பெண் விடுதலைப் பாடல் அச்சாகி இருந்த பக்கம் தற்செயலாக விரிந்தது.

"நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திரும்புவது இல்லையாம்."

என்ற வரிகள் அவன் பார்வையில் பதிந்தன. நவீன உலகம் பேசுகிற பெண் விடுதலை இயக்கம் பற்றி அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்திருக்கும் தமிழ்நாட்டு மகா கவியின் தீர்க்கதரிசனம் அவனை மெய்சிலிர்க்கச் செய்தது.

'ஞானச் செருக்கு' என்ற அந்தக் கம்பீரமான பதச் சேர்க்கையின் அழகும் சற்று முன் சந்தித்த சித்ராவின் அழகும் உடன் நிகழ்ச்சியாகச் சேர்ந்தே அவன் நினைவில் மேலெழுந்தன.

நேரெதிர் எதிர்க்குணமுள்ள நெருப்பின் பிரகாசத்தையும், சந்தனத்தின் குளிர்ச்சியையும் அளவாய் இணைத்தாற் போல் ஞானம் என்கிற உடன்பாட்டுக் குணத்தையும், செருக்கு என்ற எதிர்மறைக் குணத்தையும் அளவாக, அழகாக இணைத்த பதச் சேர்க்கையில் மனம் நெகிழ்ந்து களித்தான் அவன். 'ஞானமில்லாத செருக்கும், செருக்கில்லாத ஞானமும் சோபிப்பதில்லை' என்பதை எவ்வளவு நாசூக்காக உணர்த்துகிறார் மகாகவி - என்று பூமிநாதன் அந்தப் பதப்பிரயோகம் என்கிற சொல் ராகமாலிகையிலும், அதே போல் அளவாய், அழகாய் இணைந்திருந்த சித்ரா என்கிற சௌந்தர்ய ராகமாலிகையின் தோற்ற மயக்கத்திலும் மூழ்கினான்.

அந்த இடத்தில் சவாரி எதுவும் சிக்கவில்லை. அவன் வந்து நிறுத்தியபின் அரை மணி நேரத்திற்குள் மேலும் இரண்டு மூன்று ஆட்டோக்கள் வேறு வந்து நின்றுவிட்டன.

மாம்பலத்தில் பஸ் ஸ்டாண்டு அருகேயும் சிவா விஷ்ணு கோவில் அருகேயும் சவாரிகள் கிடைக்கிற மாதிரி இந்த இடத்தில் கிடைக்காது. ஆட்டோ மினிமம் ஒரு ரூபாய் எழுபது காசுக்கு உயர்ந்த பின் பலர் ஆட்டோவில் போவதையும் விட்டுவிட்டார்கள். டாக்ஸிக்காரர்கள் சவாரி கிடைக்காமல் ஈயோட்டிக் கொண்டிருந்தார்கள் என்றால் ஆட்டோக்காரர் கொசு ஓட்ட வேண்டியிருந்தது.

அவனுக்குப் பின் வந்து நிறுத்திய மூவருமே பொறுமை இழந்து சவாரி தேடி வேறு இடத்துக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்கள்.

அவன் மட்டும்தான் அந்த இடத்தையும், அதன் இனிய நினைவுச் சார்புகளையும், நிழலையும் விட்டுப் போக மனமின்றி அங்கேயே காத்திருந்தான்.

பாரதியார் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்த போதே மனம் மீண்டும் சித்ராவின் திசையில் திரும்பியது.

சித்ரா தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள் என்று கற்பனை செய்ய முயன்றான் பூமிநாதன். தான் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது போல் அவளும் தன்னைப் பற்றி நினைப்பாள் என்றே அவனுக்குத் தோன்றியது.

நிரத் சௌத்ரியையும், மகாகவி பாரதியாரையும் இரசிக்கும் அளவு ஐ. க்யூ. உள்ள ஓர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறவனை அவளுடைய வாழ்நாளிலேயே முதல் தடவையாக இன்று காலையில் தான் அவள் பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

பத்து ரூபாயை எடுத்து இனாமாக நீட்டினால், அது போதாது என்ற கோபத்தில் எடுத்து நீட்டியவரை உதாசீனப்படுத்திச் சீண்டி விடும் கொச்சையான ராஜதந்திரத்தோடு, "வேணாம் நீயே வச்சிக்க..." என்று திருப்பித் தரும் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களே நிரம்பிய நாகரிக மயானமான சென்னை நகரத்தில், "தயவு செய்து நான் யோக்கியனாக இருப்பதற்கு விலை நிர்ணயித்து விடாதீர்கள்" - என்று புன்னகையோடு நாசூக்காகப் பணத்தை மறுத்த தன்னைப் பற்றி அவள் எப்படி உயர்வாக நினைப்பாள்?

இதைச் சிந்தித்த போது அவன் உள்ளம் காதல் மயமாகி நெகிழ்ந்து போயிருந்தது. கையிலிருந்த புத்தகத்தைத் தோன்றியபடி எல்லாம் புரட்டியபோது "சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள்" - என்றொரு தொடர் தென்பட்டது. அந்தத் தொடர் சித்ராவின் குரலை நினைவூட்டியது.

பகல் மணி பதினொன்று. இனி இங்கே சவாரி கிடைக்காது என்ற முடிவுடன் புறப்படுவதற்காகப் பூமிநாதன் வண்டியை உலுக்கி ஸ்டார்ட் செய்தபோது அவன் தெருவில் அவனுடைய வீட்டருகே குடி இருக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவர் கன்னையன் அங்கு வந்து சேர்ந்தான். கன்னையனிடம் ஒரே பரபரப்பு.

"பூமி! உன்னை எங்கேயெல்லாம்ப்பா தேடறது! உடனே ராயப்பேட்டா ஆஸ்பத்திரி 'அவுட்பேஷ்ண்ட்' வார்டாண்டே போ... உங்க அம்மா... குழாயடிலே மூர்ச்சையா விழுந்திடுச்சு. நம்ம குப்பன் பையன் தான் அவன் வண்டிலே போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கான். நீ உடனே போ... சொல்றேன்."

பூமி இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் பறந்தான். நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. உள்ளத்தில் ஒரே பதற்றம்.

அத்தியாயம் - 2

குலையில் வாழைக்காய் முற்றியவுடன் தானாகப் பழுப்பதில்லை; தாறு வெட்டிச் சூட்டில் மூடி வைத்துப் பழுக்கச் செய்வார்கள். அதைப் போல் சமூகத்தின் கொடுமைகளாகிய சூட்டில் வெந்து தான் சிலர் வாழ்வில் கனிகிறார்கள்.

அத்தனை அவசர அவசரமாகப் பறந்து போயும் அவன் செய்வதற்கு அங்கு எதுவும் மீதமிருக்கவில்லை. அம்மா போய் விட்டாள். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய் எல்லாமே அவளைத் தொல்லைப் படுத்தி வந்தன. அத்தனை தொல்லைகளிலிருந்தும் இனி அவளுக்கு நிரந்தர விடுதலை.

அங்கே ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்க்கிறவரை கூடத் தாங்கவில்லை. பாதி வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது. ஆஸ்பத்திரி வாசல் வரை கொண்டு போய் விட்டுத் திரும்பினதுதான் மிச்சம். ஸ்டிரெச்சரில் வைத்து வார்டுக்குள் கொண்டு போவதற்காகத் தூக்கும் போதே சொல்லிவிட்டார்கள். 'உள்ளே அட்மிட் செய்து வார்டில் சேர்த்து இவள் இறந்து போயிருப்பதை அவர்கள் கண்டு பிடித்து மார்ச்சுரிக்கு அனுப்பி உடலைத் திரும்பப் பெற அல்லாட வேண்டியிருக்கும்' - என்று மற்றவர்கள் முன் கூட்டி எச்சரிக்கவே செய்தார்கள். மரணம் உலகத் தொல்லைகளிலிருந்து விடுதலை என்றால் மார்ச்சுரி மீண்டும் ஒரு சிறைதான். அம்மாவின் உடலைக் குப்பன் பையன் வீட்டுக்குத் திருப்பிக் கொண்டு போக இருந்தபோது பூமிநாதன் அங்கே போய்ச் சேர்ந்திருந்தான். குப்பன் பையனோடு பேட்டையைச் சேர்ந்த வேறோர் ஆளும் இருந்தான். அவர்கள் இருவரும் மேலே செய்வதறியாது திகைத்துப் போயிருந்தனர். பூமியைப் பார்த்ததும் தான் அவர்களுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது.

"பாதி வழியிலேயே இட்டார்ரப்பவே மூச்சுப் பிரிஞ்சிடிச்சி."

துயரம் கொப்பளிக்கும் குரலில் அவர்கள் இருவரும் பூமியிடம் கூறினார்கள். பூமியின் இதயத்தை ஏதோ ஒரு தாங்க முடியாத இழப்பு உணர்ச்சி இறுக்கிப் பிழிந்தது. படிப்பும் வளர்ச்சியும் நாகரிகமும் அவனை வாய்விட்டு அழ முடியாதபடி தடுத்திருந்தாலும் நெஞ்சுக்குள் உள்ளுணர்வு கோவென்று கதறியழுதது. பாசப் பிணைப்புக்கள் குமுறித் தவித்தன. நினைவு தெரிந்து வயதும் பொறுப்பும் வந்த பின் அவன் காணும் முதல் மரணம் இது. சிங்கப்பூரில் தந்தை இறந்த போது அவன் நினைவு தெரியாத வயதுச் சிறு பையன். மரணம் என்பதின் இழப்பு உணர்ச்சியும் அதன் ஆழங்களும் புரியாததும் பதியாததுமான பருவம் அப்போது.

இப்போது அப்படி இல்லை. நெஞ்சில் ஏதோ இருளாகவும் கனமாகவும் வந்து சூழ்ந்து கொண்டு அழுத்துவது போல் உணர்ந்தான் பூமி. ஏதோ ஒரு வகைத் தனிமை சுற்றிலும் கவிவதாகத் தோன்றியது.

அவனுக்குத் தாயின் உடலை வீட்டிற்குக் கொண்டு போக வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. அங்கே பூமிக்குச் சுற்றம், உறவு என்றும் யாரும் கிடையாது. அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்றும் எவரும் இல்லை. குப்பன் பையனும், கன்னையனும் போய் அவர்கள் பேட்டையைச் சேர்ந்த கார்ப்பரேஷன் மரணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து 'டெத் சர்டிபிகேட்' வாங்கி வந்தார்கள்.

அவரவர்களுடைய ஆட்டோவை பக்கத்திலேயே ஒரு பெட்ரோல் பங்க்கில் சொல்லி 'பார்க்' செய்துவிட்டுத் தெரிந்த டிரைவர் ஒருவனுடைய டாக்ஸியில் பிரேதத்தை கிருஷ்ணாம் பேட்டைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் குடியிருந்த அந்தப் பேட்டையில் அம்மாவுடன் பழகிய நாலைந்து பெண்கள் அழுகையும் புலம்பலும் ஒப்பாரியுமாக மயானத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களில் தளர்ந்த மூதாட்டி ஒருத்தி,

"அம்மான்னு சொல்லி இந்தப் பிள்ளை
அழைக்க ஆளில்லாமல் போயிட்டியே"

என்று ஒப்பாரி இயற்றித் தன்னருகே இருந்த பூமியைச் சுட்டிக் காட்டி அழுதாள்.

கொள்ளி போடும்போது பூமிக்கும் கண்கலங்கிவிட்டது. தள்ளாடிய பூமியைக் கன்னையன் தாங்கிப் பிடித்துக் கொண்டான். கிருஷ்ணாம் பேட்டையிலிருந்து அவர்கள் வீடு திரும்பும் போது பிற்பகல் மூன்றரை மணிக்கு மேலாகியிருந்தது.

"நாலு நாளைக்கு நீ வண்டி ஓட்ட வேண்டாம். குமாரு வண்டி ரிப்பேருக்காக 'ஷெட்டு'லே நிக்கப் போவுது. உன் வண்டியை நாலு நாளைக்கு அவன் ஓட்டட்டும்" - என்று கன்னையன் யோசனை கூறினான். கன்னையனின் யோசனையைப் பூமி மறுக்கவில்லை.

மைலாப்பூர் வீரப்பெருமாள் முதலித் தெருவில் ஊடுருவும் ஒரு சிறிய சந்தில் பூமிநாதன் வசித்து வந்தான். சென்னை நகரத்தின் ஆயிரக்கணக்கான ஆட்டோ-டாக்ஸி டிரைவர்களில் படித்தவன் - பட்டம் பெற்றவன் என்பதாலும், சிங்கப்பூரில் இருந்த போதே கராத்தே - குங்ஃபூவில் நல்ல தேர்ச்சி பெற்றவன் என்பதாலும் பூமிக்கு நண்பர்களும் தோழர்களும் நிறையவே இருந்தனர். சிலர் அவனிடம் கராத்தே - குங்ஃபூ ஆகியவற்றைக் கற்றும் வந்தனர். தகவல் தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக அவனைத் தேடித் துக்கம் விசாரித்துவிட்டுப் போக வந்தனர். இரவு பதினோரு மணி பன்னிரண்டு மணி வரை கூட அந்தக் குறுகிய சந்தில் ஆட்கள் தேடி வந்து அவனது துயரத்தில் பங்கு கொண்டார்கள்.

அன்றிரவு அவனைத் தனியே விட்டுவிடக் கூடாதென்று கன்னையனும் குப்பன் பையனும் அங்கேயே படுத்திருந்தனர். அவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிய பின்னும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. முன்னும் பின்னுமாகத் தொடர்பின்றி மனம் நினைவுகளில் புரண்டது.

காலையில் காபி அருந்த, உணவு எல்லாவற்றிற்கும் - 'அடேய் பூமி', என்று அன்பொழுக அழைக்கும் அந்தப் பழகிய குரலை இனி அவன் கேட்க முடியாது. அந்தக் குரலையும் குரலுக்குரியவளையும் அவனும் உலகமும் இழந்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டன. 'அன்னம் ஊட்டிய தெய்வ மணிக்கரம்' என்ற பாரதியாரின் கவிதை வரி நினைவுக்கு வந்தது. கூடவே காலையில் அருள்மேரி கான்வென்ட் முகப்பில் சந்தித்த அந்தப் பெண் சித்ராவும் நினைவுக்கு வந்தாள். பாரதியின் நினைவும் கவிதையின் நினைவும் வரும்போதெல்லாம் அவளும் நினைவுக்கு வந்தாள். அவளது தலைகுனியாத நிமிர்ந்த நடையும், நேரான பார்வையும் படிப்பும் நினைவுக்கு வந்தன. சித்ரா என்கிற அந்த அழகிய பெண் அவனைப் பற்றி என்ன நினைத்தாளோ நினைக்கவில்லையோ, அவன் அவளைப் பற்றி எல்லாமே நினத்தான். இளம்பெண்கள் உடற்கட்டும் அழகும் உள்ளவர்கள் எத்தனையோ பேர் அவனுடைய ஆட்டோவில் ஏறி இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பற்றி அவன் இவ்வளவு தூரம் நினைத்ததில்லை. பொருட்படுத்தியதுமில்லை. இரவு மணி இரண்டு. இன்னும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்று ஒரு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்தான். பக்கங்கள் புரண்டன.

"குலையில் வாழைக்காய் முற்றியவுடன் தானாகப் பழுப்பதில்லை; தாறு வெட்டிச் சூட்டில் மூடி வைத்துப் பழுக்கச் செய்வார்கள். அதைப் போல் சமூகத்தின் கொடுமைகளாகிய சூட்டில் வெந்துதான் சிலர் வாழ்வில் கனிகிறார்கள்" - என்று ஓர் இடத்தைப் படித்ததும் மீண்டும் தாயின் நினைவு வரப்பெற்றுப் புத்தகத்தை மூடி வைத்தான் பூமி. சின்னஞ்சிறு வயதில் குனிந்த தலை நிமிராத பெண்ணாகத் தந்தையோடு சிங்கப்பூருக்குக் கப்பலேறிய நாள் முதல் தாயே தன்னிடம் கதை கதையாகச் சொல்லியிருந்த - அவள் வாழ்வை நினைவு கூர்ந்தான் பூமி. அந்த நாளில் அவள் எவ்வளவு சிரமப்பட்டிருக்கக் கூடும் என்பதை நினைக்கும் போதே மனத்தை நெகிழச் செய்தது.

தன் தந்தை காலமான பிறகும் சிங்கப்பூரில் தாயே சிரமப்பட்டு உழைத்துத் தன்னை வளர்த்து ஆளாக்கியதும், பின்பு அங்கு எல்லாவற்றையும் விற்று முடித்துப் பணமாக்கிக் கொண்டு சென்னை திரும்பியதும், கையிலிருந்ததைப் போட்டு இந்த வீரப்பெருமாள் முதலித் தெரு சந்தில் தீப்பெட்டியளவு சிறிய இந்த வீட்டை வாங்கியதும், வேலை தேடி அலைந்து அலைந்து சலித்த பின் ஒரு சலிப்பிலும் விரக்தியிலும் சொந்த ஆட்டோவை பாங்க் கடன் மூலம் பெற்று ஓட்டத் தொடங்கியதும், அடுக்கடுக்காக எண்ணத்தில் மலர்ந்தன. சிங்கப்பூரிலேயே 'த்ரீ வீலர்' ஓட்டப் பழகி லைசென்ஸ் எடுத்திருந்தது இங்கே பயன்பட்டது. ஒரு வீம்புடனும் வீறாப்புடனும் தான் அவன் ஆட்டோ ஓட்டத் தொடங்கியிருந்தான். படித்தவர்கள் உடல் உழைப்பை ஒதுக்குவதை இயல்பாகவே அவன் வெறுத்தான்.

ஏறக்குறைய விடியும் வேளை நெருங்கி விட்டது. மணி நாலரை. காற்று குளிர்ந்து வீசியது. இருள் பிரியத் தொடங்கி விட்டது. பூமி அந்த இரவைத் தூக்கம் இன்றியே கழித்து விட்டான். இரவும் முடியத் தொடங்கியிருந்தது.

தாய் காலமாகி ஓர் இரவு கழிந்து விட்டது. இந்நேரம் கிருஷ்ணாம் பேட்டையில் அவன் தாய் வெந்து தணிந்து சாம்பலாகி இருப்பாள்.

கன்னையனும் குப்பன் பையனும் எழுந்து சுறுசுறுப்பாகி விட்டார்கள். கன்னையன் பூமியைக் கூப்பிட வந்தான்.

"கிருஷ்ணாம் பேட்டைக்குப் போகணுமே? கிளம்பலாமா? ராப்பூராத் தூங்கலே போலிருக்கே - பட்டினியாத்தான் போவணும்... ரொம்ப பசியாயிருந்தா ஒரு டீ வேணாக் குடிச்சிக்க."

"வேண்டாம்! இதோ குளித்து முடித்துவிட்டு வந்து விடுகிறேன்."

தெரிந்த டிரைவர் ஒருவன் சென்ட்ரலுக்கு சவாரி தேடிப் போகிற வழியில் அவர்களைக் கிருஷ்ணாம் பேட்டையில் கொண்டு வந்து இறக்கி விட்டு விட்டுப் போனான். அஸ்தி சேகரித்த பின்னர் கிருஷ்ணாம் பேட்டையிலிருந்து திரும்ப வேறு ஒரு தெரிந்த டாக்ஸியைப் பிடித்துக் கொள்ளலாம் என்றான் கன்னையன். பூமிநாதனுக்கு மிகவும் தளர்ச்சியாகத்தான் இருந்தது. முதல் நாளிரவு தூங்காத அலுப்பு வேறு உடம்பில் அசதி சுமந்திருந்தது.

சடங்குகளில் அவனுக்குப் பெரிதாக நம்பிக்கை எதுவும் கிடையாது. சுற்றி இருப்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என்ற நாகரிகத் தயக்கம் மட்டும் உண்டு. கன்னையனும் குப்பன் பையனும் ஏதோ குடம் பாத்திரம் என்று தங்களோடு எடுத்து வந்திருந்தார்கள்.

பூமி தற்செயலாக மயானத்திற்குள் நுழையுமுன் வெளியே வந்து நின்ற ஒரு டாக்ஸியில் அவன் பார்வை சென்றது. அதுவரை அவன் அங்கே பார்க்கவில்லை.

டாக்ஸிக்குள் அவனுடைய பார்வையில் முதலில் பட்ட முகமே ஆச்சரியத்தை வளர்த்தது. சித்ராதான் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தாள். விரிந்த வீழ்ந்த கூந்தலின் நடுவே தெரிந்த அவள் முகம் கருமுகிற் காட்டில் பூத்த முழுமதி போல் தோன்றியது.

அந்த டாக்ஸி, அதில் வந்திறங்கிய ஆண்களின் தோற்றம் எல்லாம் சேர்த்து அவர்கள் வீட்டிலும் ஏதோ துக்கம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

பெரிய குடும்பப் பெண்கள் மயானத்திற்குள் இறங்கி வருகிற வழக்கம் இல்லை. அவள் டாக்ஸியிலேயே இருந்தாள். ஆண்கள் இறங்கி உள்ளே போனார்கள்.

கன்னையனோடும், குப்பன் பையனோடும் ஓர் ஓரமாகத் தயங்கி நின்ற பூமிநாதன் டாக்ஸியை அணுகிச் சென்றபோது அவளே அவனைப் பார்த்து விட்டாள்.

முகத்தில் உடனே மெல்லிய மலர்ச்சி பரவி மறைந்தது.

பூமி கேட்டான்: "என்ன...?"

"நேற்று நீங்க என்னைப் பார்த்து ஹேண்ட் பேக்கைக் குடுத்துட்டுப் போன கொஞ்ச நாழிக்கெல்லாம் வீட்டிலிருந்து ஸ்கூலுக்கு டெலிபோன் வந்தது. எங்கப்பா ஹார்ட் பேஷண்ட். நேற்று மத்தியானம் திடீர்னு மாரடைப்பால் போயிட்டார்."

"உங்களைப் பார்த்துப் பையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, இந்தப் பக்கம் திரும்பினதும் இதோ இவன் எங்கம்மா மூர்ச்சையா விழுந்து விட்டதாக வந்து சொன்னான். ஓடினேன் ஆஸ்பத்திரிக்குப் போறதுக்குள்ளேயே மூச்சுப் பிரிந்து விட்டது. நேற்று இங்கே தான் எரித்தோம்..." என்று அருகே நின்ற கன்னையனைச் சுட்டிக் காட்டினான் பூமிநாதன். அவள் அவனைக் கேட்டாள்.

"எங்கே குடியிருக்கிறீர்கள்?"

"மைலாப்பூர். நீங்கள்..."

"இங்கே தான் பாலாஜி நகர்."

அவர்கள் இருவரும் மறுபடி சந்தித்தபோது அவன் தாயை இழந்திருந்தான். அவள் தந்தையை இழந்திருந்தாள்.

அத்தியாயம் - 3

தமிழ்நாட்டு இளைய தலைமுறைக்குத் திரு.வி.க.வைத் தெரியவில்லை. சிவாஜிகணேசனைத் தெரிகிறது. திருவள்ளுவரைத் தெரியவில்லை ஜெயமாலினியைத் தெரிகிறது... உருப்படுமா இது?

தனி மனிதனின் சிறிய துயரங்கள் எந்த நகரத்தின் பெரிய வாழ்க்கை வேகத்தையும் எள்ளளவு கூடத் தடுத்து நிறுத்துவதில்லை. ஒரு நகரத்தின் அடையாளம் புரியாத பொது உல்லாசங்களை, அடையாளம் புரிந்த தனி மனிதர்களின் துயரங்கள் ஒரு விநாடி கூடத் தடுத்து நிறுத்த முடியாது. இயலாது, சௌகரியப்படாது.

மாபெரும் சென்னை என்கிற ஜன ஆரண்யத்திற்குள் பூமி தாயை இழந்ததும், சித்ரா தந்தையை இழந்ததும் நடந்து மறந்த நிகழ்ச்சிகளாக மறைந்து மங்கிவிட்டன. மறைந்தவர்களை மறப்பதும் மறந்தவர்களை மறைப்பதும், பெரிய நகரங்களின் கலாச்சார குணாதிசயங்களில் ஒன்று.

பூமி இரண்டு மூன்று நாட்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். பயம், சோர்வு இவற்றை என்னவென்றே அறியாத அவன், முதன் முதலாகப் பயத்தின் ஆரம்பங்களான வெறுமையையும் தனிமையையும் தன்னைச் சுற்றி உணரத் தலைப்பட்டான்.

எங்கும் ஓடியாடிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அவனுக்குப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படித்துக் கொண்டே வீட்டில் புதைந்து கிடப்பது அலுப்பூட்டுவதாயிருந்தது. தேங்குகிற தண்ணீர் மெல்ல மெல்ல நாற்றமெடுத்துக் கொசு மொய்ப்பதற்கு இலக்காகி விடுவதைப் போல இயக்கமற்றுப் போகிற மனிதனும் ஆகிவிடுகிறான். உடலால் இயக்கமற்று முடங்குவதைவிட மோசமானது மனத்தால் இயக்கமற்று முடங்குவது.

தன் தாயின் மரணம் பூமியின் உடல் இயக்கத்தை மட்டும் பாதிக்கவில்லை. மன இயக்கத்தையும் பாதித்திருந்தது. தாயைப் பிரிந்து வாழவே முடியாத அளவு செல்லப் பிள்ளையாக அவன் வளர்ந்து விடவில்லை. ஆனாலும் தாயின் பிரிவு அவனைப் பாதிக்கவே செய்திருந்தது. பாரதியாரின் கவிதைகள் அவனுக்குத் தெம்பும் நம்பிக்கையும் ஊட்டின. தமிழ்ப் பத்திரிகைகளின் நைந்து போன ஃபார்முலா எழுத்துக்கள் அவனுக்கு அவநம்பிக்கையும் சலிப்பும் ஊட்டின. வைக்கோலை தின்பது போல் சக்கை சக்கையாயிருந்தது. வாழ்க்கையின் ஆழத்தையும், அகலத்தையும் அவை சார்ந்திருக்கவில்லை. வீடுதோறும் விளங்கி அலங்கரிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் படுபிரபலமான குடும்பப் பத்திரிகை ஒன்று 'வெல்வெட் விநோதாவுக்கு தோளில் மச்சமிருக்கிறதா இடுப்பில் மச்சமிருக்கிறதா?' என்பதைக் கண்டு பிடிக்கும்படி தன் வாசகர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்ச் செலவில் ஒரு போட்டி வைத்திருந்தது. கொஞ்சம் சிரமமானாலும் வாசகர்கள் தலை எழுத்து, அதைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும்.

இயல்பாகப் பூமி, தமிழ் பத்திரிகைகளை அதிகம் படிப்பதில்லை. தமிழில் பாரதியார், புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றவர்களின் புத்தகங்களையும் ஆங்கிலத்தில் வீக்லி, இண்டியா டுடே முதல் பல பத்திரிகைகளையும் படிப்பது அவன் வழக்கம்.

இப்படி வீட்டிலே அடைந்து கிடக்கிறானே என்று அவன் மேல் இரக்கப்பட்டு கன்னையன் லஸ் கார்னரிலுள்ள ஒரு கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து தள்ளியிருந்த தமிழ்ப் பத்திரிகைகள் பல இரண்டு வாரக் காலம் வெந்நீர் அடுப்புக்கு உதவுகிற அளவு போதுமானவை.

தாயின் படம் ஒன்றை என்லார்ஜ் செய்து வீட்டு முகப்பில் மாட்ட வேண்டும் என்று பூமிக்குத் தோன்றியது. தனித்தனியான பாலிதின் உறைகளில் சேர்த்து வைத்துக் கொணர்ந்திருந்த சிங்கப்பூர் நெகடிவ்களைத் தேடிக் குடைந்து தாய் சிரித்த முகத்தோடு காட்சியளிக்கும் அருமையான படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தான் பூமி. சாயங்காலம் அதை இராயப்பேட்டை ஹைரோடிலுள்ள ஸ்டூடியோ ஒன்றில் கொடுத்துப் பிரிண்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டான்.

கிருஷ்ணாம்பேட்டை மயானத்து முகப்பில் தாயின் இரண்டாம் நாள் காரியத்துக்காகப் போயிருந்த காலை வேளையில் சித்ராவைச் சந்தித்த பின் மறுபடி பூமி இன்று வரை அவளைச் சந்திக்கவே நேரவே இல்லை.

அன்று இரண்டாம் நாள் காலையில் சந்தித்த போது தான் பாலாஜி நகரில் குடியிருப்பதாக அவள் கூறியிருந்தது பூமிக்கு நினைவு வந்தது. பாலாஜி நகரிலிருந்து மாம்பலத்தில் உள்ள பிரைவேட் நர்ஸரி ஸ்கூலுக்கு வேலை செய்யப் போகிறாள் என்பதை நினைத்தபோது கொஞ்சம் அநுதாபமாகக்கூட இருந்தது. தாம்பரம், பம்மல், குரோம்பேட்டை போன்ற இடங்களிலிருந்து வருகிறவர்களின் தொலைவை நினைத்தபோது இவள் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்றும் தோன்றியது. பாலாஜி நகரில் வசிப்பவள் முதல் முறையாகத் தன் ஆட்டோவில் ஏற நேர்ந்த போது எப்படி மயிலாப்பூரில் ஏறினாள் என்று சிந்தித்தான் அவன். ஏதாவது காரியமாக அவள் அங்கே வந்திருக்க வேண்டும் என்று அநுமானிக்க முடிந்தது.

வெளியே ஆட்டோவில் சவாரிக்காகவும், சவாரியோடும் சுற்றுகிற போது புத்தகம் படிக்க விரும்புகிற மாதிரி இப்போது வீட்டில் அடைந்து கிடக்கிற போது அதிகம் விரும்ப முடியவில்லை. திகட்டியது. எல்லாப் பத்திரிகைகளும் ஒரே மாதிரி இருந்தன. அப்பட்டமான வர்த்தக யந்திரத்தின் போட்டி, வெறி என்ற வக்கிரமான கலாசாரத்தில் இதழ்கள் சீரழிந்திருப்பதைத் தான் கன்னையன் வாங்கிக் குவித்திருந்த பத்திரிகைகள் நிரூபித்தன.

பத்திரிகைகளை விலக்கி விட்டுப் பார்த்தால் கையிலிருந்த புத்தகங்களை எல்லாம் ஏற்கெனவே படித்து முடித்தாயிற்று. அவனுக்கு வழக்கமாகப் புத்தகங்களை வாடகைக்குத் தரும் லெண்டிங் லைப்ரரி லாயிட்ஸ் சாலையும் இராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கிற முனையில் இருந்தது.

'திரு.வி.க. நூல் நிலையம்' என்ற பெயரில் அந்த லெண்டிங் லைப்ரரியை நடத்தி வந்த பரமசிவமும் பூமியைப் போலவே ஒரு படித்த வேலையில்லாப் பட்டதாரிதான்.

அவன் சுயமுயற்சியாக அந்த லெண்டிங் லைப்ரரியைத் தொடங்கியிருந்தான். மாதம் ஐந்து ரூபாய் சந்தாவில் முந்நூறு முந்நூற்றைம்பது பேர் சேர்ந்திருந்தார்கள். கிடைக்கிற மொத்த வருமானத்தில் இட வாடகை, தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் புதிய புத்தகங்கள் வாங்கி முதலீடு ஆகியவை போகப் பரமசிவத்துக்கு மாத ஊதியமாகக் கொஞ்சம் மிஞ்சியது. ஊதியம் கொஞ்சமென்று பாராமல் அயராமல் உழைத்தான் பரமசிவம்.

படித்து பட்டம் பெற்றுவிட்டுத் தேசிய குணசித்திரங்களில் ஒன்றான சோம்பலுடனும் கையாலாகாத்தனத்துடனும் பெற்றோர் செலவில் சாப்பிட்டுக் காலந்தள்ளும் பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவனாக இருந்து விடாமல் எதையாவது சுயமுயற்சியாகத் தொடங்க வேண்டுமென்று தொடங்கி நடத்தும் பரமசிவத்தைப் பூமி மிகவும் விரும்பினான். தானே முயன்று சொல்லியும் சிபாரிசு செய்தும் பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்கு நிறையச் சந்தாதாரர்களைச் சேர்த்து விட்டு உதவியிருந்தான் பூமி. பரமசிவம் அந்த லெண்டிங் லைப்ரரியையே ஓர் இலக்கிய இயக்கமாக நடத்தி வந்தான். பரமசிவத்தைச் சந்தித்துப் பேசினால் ஆறுதலாகவும் தெம்பாகவும் இருக்கும். பரமசிவம் தெளிவான திட்டவட்டமான மனிதன்.

பூமியின் தாய் இறந்த தினத்தன்று இரவு எல்லாரையும் போலப் பரமசிவமும் துக்கத்துக்கு வந்து விட்டுப் போயிருந்தான். அதற்குப் பின் பூமியும் பரமசிவமும் சந்தித்துக் கொள்ள நேரவில்லை. பரமசிவத்தின் மேல் பூமிக்கு ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்தது ஒரு சம்பவம். பரமசிவத்தின் கொள்கைப் பிடிப்பும் திட நம்பிக்கையும் பூமிக்கு அப்போது புரிந்தன.

முன்பு பூமி பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்குப் போயிருந்த ஒரு சமயம் ஒரு வாடிக்கைக்காரர் அவனோடு சத்தம் போட்டு இரைந்து கொண்டிருந்தார்.

"என்ன சார் லைப்ரரி இது? ரொம்ப ஸ்டாண்டர்டு புக்ஸா வெச்சிருக்கீங்க? எங்களுக்கு வேண்டியது செக்ஸ், கிரைம் இம்மாதிரிக் கதைப் பொஸ்தகங்கள் தான். படிச்சுட்டு உடனே மறக்கற மாதிரி லைட் புக்ஸ்தான் வேணும்."

"மறக்கறதுக்குத்தான் படிக்கணும்னா நீங்க ஏன் படிக்கணும் சார்? மாட்னி ஷோவிலே தமிழ் சினிமா பாருங்க... இல்லாட்டி இந்திப் படம் பாருங்கள்..."

"அந்த நாள்ளே வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு. கோதைநாயகி அம்மாள் எல்லாம் எழுதினாங்களே, அது மாதிரி விறுவிறுன்னு ஓடற நாவல்ஸ் வேணும் சார்."

"வடுவூர் அய்யங்கார் மாதிரி எழுதறவங்க யாராவது இந்தக் காலத்திலேயும் இருப்பாங்க! தமிழ் மாகஸீன்ஸிலே தேடிப் பாருங்க. இங்கே மாகஸீன்ஸ் லெண்ட் பண்றதில்லே. சமூக நலனுக்கும் இலக்கியத் தரத்துக்கும் எட்டுகிற மாதிரி உள்ள தமிழ், இங்கிலீஷ் புக்ஸ் மட்டும் தான் லெண்ட் பண்றோம்" என்று கூறியபடி அவருடைய சந்தா ஐந்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தான் பரமசிவம்.

"இவ்வளவு ரஃபா பிஹேவ் பண்ணினா உங்க பிசினஸ் என்ன ஆவும்? கொஞ்சம் கஸ்டமர்ஸைத் தட்டிக் குடுத்து அநுசரிச்சிப் போகணும் சார்?

"தட்டிக் குடுக்கறதுக்கு எங்கியாவது 'பார்க்' பக்கமா பாடி 'மஸாஜ்' பண்றவன் காத்துக்கிட்டு இருப்பான். அவங்ககிட்ட போய்க் கேளுங்க தட்டிக் குடுத்து மஸாஜ், மாலிஷ் எல்லாமே பண்ணுவான்; இதமாக இருக்கும்."

"ரொம்பத் திமிராப் பேசறீங்களே?"

"சுயமரியாதைக்கு முட்டாள்கள் தருகிற புதுப்பெயர் திமிர் என்பது."

இதைக் கேட்டுக் கொண்டு நின்ற பூமி 'சபாஷ்' என்று பரமசிவத்துக்கு ஆதரவாகக் கரகோஷமே செய்துவிட்டான். இந்தத் தலைமுறை இளைஞர்களில் கொள்கைத் தெளிவுள்ளவர்களுக்கே உரிய கம்பீரம் கோபம் எல்லாம் பரமசிவத்தினிடம் இருப்பதைப் பூமி இரசித்தான்.

இரண்டு மூன்று நாள் அஞ்ஞாத வாசத்துக்குப் பின் தாயின் நெகடிவ்வை ஸ்டூடியோவில் பிரிண்ட் போடக் கொடுத்து விட்டுப் பரமசிவத்தின் 'திரு.வி.க. லெண்டிங் லைப்ரரி'க்கும் போய்விட்டு வரலாம் என்று வெளியே கிளம்பினான் பூமி.

லெண்டிங் லைப்ரரி இராயப்பேட்டை வட்டாரத்தில் இருந்ததால் அதே வட்டாரத்தில் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிஞர் திரு.வி.க.வின் பெயரை அதற்குச் சூட்டியிருந்தான் பரமசிவம். இந்தத் தலைமுறைத் தமிழ் வாசகர்களில் சிலர் "திரு.வி.க. என்பது யாருடைய பெயர்?" என்று விசாரிக்கிற அளவு அறியாமை நிறைந்தவர்களாக இருப்பது பற்றியும் பரமசிவமே பூமியிடம் மனம் நொந்து வருந்தியிருந்தான்.

"பூமி! இந்தத் தலைமுறையைச் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் திரு.வி.க.வைத் தெரியவில்லை; சிவாஜி கணேசனைத் தெரிகிறது. திருவள்ளுவரைத் தெரியவில்லை; ஜெயமாலினியைத் தெரிகிறது. உருப்படுமா இது?"

கலாசாரச் சீரழிவு என்ற தொத்து நோயில் தமிழகம் திளைத்திருக்கிறது என்னும் பரமசிவத்தின் கருத்து பூமிக்கும் உடன்பாடுதான். நூற்றுக்கு நூறு சதவிகிதம் அதைப் பூமி ஒப்புக் கொண்டான்.

அன்று மாலை அவன் ஸ்டூடியோவுக்குப் போய்த் தாயின் 'நெகடிவ்'வைக் காபினட் சைஸ் பிரிண்ட் போடக் கொடுத்து விட்டு திரு.வி.க. லெண்டிங் லைப்ரரிக்கு வந்தான்.

அப்போது பரமசிவம் அங்கே இல்லை. பரமசிவத்தின் தம்பி முருகேசன் இருந்தான். விசாரித்த போது பரமசிவம் ஹோட்டல் 'ஸ்வாகத்' வரை காபி குடிக்கப் போயிருப்பதாகவும் பத்து நிமிஷத்தில் திரும்பி வந்துவிடுவான் என்றும் தெரிந்தது.

நடந்து வந்திருந்ததால் பூமிக்கு மிகவும் நா வறட்சியாயிருந்தது. எதிர்ப்பக்கம் பிளாட்பாரத்தில் கரும்பு ஜூஸ் பிழிந்து கொடுத்துக் கொண்டிருந்த ஒருவனிடம் போய் இஞ்சித் துண்டு எலுமிச்சம் பழச்சாறு கலந்து கரும்பு ஜூஸ் பிழிந்து வாங்கிக் குடித்தான் அவன். பரமசிவம் இன்னும் திரும்ப வரவில்லை.

தற்செயலாக அவன் மறுபடி நிமிர்ந்து லெண்டிங் லைப்ரரிப் பக்கம் பார்த்தபோது அங்கே சித்ரா ஓர் இளைஞனுடன் நின்று புத்தகம் தேடிக் கொண்டிருந்தாள். முருகேசன் அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

சித்ராவோடு நிற்கும் ஸஃபாரி சூட் அணிந்த அந்த இளைஞன் யாரென்று தான் பூமிக்குப் புரியவில்லை.

சித்ராவைப் போல் அந்த இளைஞனும் தனியாக லைப்ரரிக்கு வந்த வேறு ஒரு கஸ்டமராக இருக்கலாமோ என நினைக்கவும் முடியாமல் அவன் அவளோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

பூமிக்கு அத்தனை தாகத்திலும் கரும்பு ஜூஸ் இரசிக்கவில்லை. ஐஸ் கட்டிகளோடு பாதி கிளாஸ் ஜூஸை அப்படியே மீதி வைத்தான் அவன். இன்னும் பரமசிவம் ஸ்வாகத்திலிருந்து திரும்பவில்லை.

அத்தியாயம் - 4

ஒன்றை மறக்க முயன்றால் அது முன்னை விட அழுத்தமாக நினைவுக்கு வருவதும், ஒன்றை நினைக்க முயன்றால் அது முன்னை விட வேகமாக மறந்து போவதும் நம் மனத்தின் விசித்திரக் குணங்களில் ஒன்றாயிருக்கிறது.

சித்ராவுடன் கூட யார் பேசவேண்டும், யார் பேசக்கூடாது, யார் பழக வேண்டும், யார் பழகக் கூடாது, யார் உடன் நிற்கலாம், யார் உடன் நிற்கக் கூடாது என்பதை எல்லாம் பற்றித் திடீரென்று தனக்கு ஏன் இவ்வளவு அக்கறை உண்டாயிற்று என்று எண்ணிய போது பூமிநாதனுக்கே வியப்பு ஏற்பட்டது. தனக்குத் தானே அவளிடம் கொண்டாடிக் கொள்ளும் இந்த உரிமைக்கு என்ன காரணம் என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன்.

ஓர் அழகிய சுறுசுறுப்புள்ள நளினம் நிறைந்த இளம் பெண்ணின் மேல் அவளுடைய சம்மதமும் அங்கீகாரமும் இன்றியே ஓர் ஆணுக்கு இப்படி ஏற்படும் பற்றும் உரிமைகளும் மிகவும் இங்கிதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளவே வழி வகுக்கும். இந்த விதமாக ஓர் ஆணின் மேல் பெண்ணோ, பெண்ணின் மேல் ஆணோ எடுத்துக் கொள்ளும் அக்கறைகளும், உரிமைகளும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஒரே விதமாக அர்த்தப்படுவதுதான் இதுவரை உலக வழக்கமாக இருந்திருக்கிறது.

அங்கே திரு.வி.க. லெண்டிங் லைப்ரரி முகப்பில் சித்ராவையும் இன்னோர் இளைஞனையும் சேர்த்துப் பார்த்த திகைப்பில் திளைத்திருந்த பூமிநாதன் பின்புறமிருந்து நண்பன் பரமசிவத்தின் குரலைக் கேட்டுத் திரும்பினான்.

"என்ன பூமி! இங்கே இப்படி நடுத் தெருவிலே நின்று கொண்டு?"

"உன்னைத்தான் தேடி வந்தேன். நீ கடையில் இல்லை. காபி குடிக்கப் போனதாக உன் தம்பி முருகேசன் சொன்னான்."

"வா! கடைக்குப் போகலாம்" - பூமியையும் உடனழைத்துக் கொண்டு பரமசிவம் கடையை நோக்கி நடந்தான். தனது புத்தகம் வழங்கு நிலையத்தை அவன் கடை என்றே வழக்கமாகக் குறிப்பிட்டு வந்தான்.

அவர்கள் இருவரும் கடையை அடைவதற்குள் சித்ராவும் அவளோடு உடனிருந்த இளைஞனும் வேலை முடிந்து வடபுறமாகத் திரும்பி பாலாஜி நகருக்குள்ளே புகுந்திருந்தார்கள். பின்னால் தொடர்ந்து வேகமாக நடந்து சென்று அவளோடு பேசலாமா அல்லது கைதட்டிக் கூப்பிடலாமா என்கிற அளவு பூமியின் மனம் விரைந்தும், செயலளவில் இரண்டுமே சாத்தியமாக இருக்கவில்லை.

கொச்சையான பரபரப்புடன் பின் தொடர்ந்து ஓடிச்சென்று அவளைத் தடுத்து நிறுத்திப் பேசுவதும் நாகரிகமாகப் படவில்லை. கைத்தட்டித் திரும்பிப் பார்க்க வைப்பதும், நாகரிகமாகத் தோன்றவில்லை. அவ்வளவிற்கு அவசரமான காரியம் எதுவும் அவளிடம் தனக்கு இருப்பதாகவும் அவனுக்குத் தெரியவில்லை. ஒரு கணம் கட்டுப்பாட்டோடு சிந்தித்துப் பார்த்த போது பக்குவமிழந்து தவிக்கும் தம் மனத்தின் மேலேயே எரிச்சலாக வந்தது அவனுக்கு.

மனத்தை அவள் சென்ற திசையிலிருந்தும் அவளைப் பற்றிய நினைவிலிருந்தும் மீட்க முயன்றான் பூமிநாதன்.

படிப்பதற்காக எடுத்துக் கொண்டு போக வேண்டிய புதுப் புத்தகங்களை எடுத்த பின் பரமசிவத்தின் அருகே சென்று இரும்பு மடக்கு நாற்காலியைப் பிரித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்த பூமியிடம் பரமசிவம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.

"அம்மா இல்லாததாலே வீட்டிலே பல புதுப் பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இனிமேல் உனக்குச் சிரமம் தான்."

"நான் சின்ன வயதிலிருந்தே தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவன். திடீரென்று அந்த அரவணைப்பையும் இழந்திருப்பதால் பாதி படித்துக் கொண்டிருக்கும் போது இருட்டிவிட்ட மாதிரி சிரமமாயிருக்கிறது."

"அந்தச் சிரமத்தை நீ மெல்ல மெல்ல மறந்துவிடப் பழக வேண்டும் பூமி!"

"மறப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை பரமசிவம்! ஒன்றை மறக்க முயன்றால் அது முன்னை விட அழுத்தமாக நினைவுக்கு வருவதும், ஒன்றை நினைக்க முயன்றால் அது முன்னை விட வேகமாக மறந்து போவதும் நம் மனத்தின் விசித்திர குணங்களில் ஒன்றாயிருக்கிறது!"

பரமசிவத்திடம் தான் கூறிய இந்த வாக்கியங்கள், தாயின் ஞாபகம், சித்ராவின் ஞாபகம் இரண்டிற்குமே பொருத்தமாக அமைவதைத் தானே உணர்ந்தான் பூமி. பரமசிவன் கேட்டான், "நீ நடந்துதான் வந்தாயா? ஆட்டோ என்ன ஆயிற்று? ரிப்பேருக்கு நிற்கிறதா? அல்லது..."

"நாலைந்து நாளைக்கு நான் ஓட்ட வேண்டாம்னு பேட்டை நண்பர்களாகச் சேர்ந்து பேசி, வேறு ஆளை ஓட்டச் சொல்லி ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்."

"சில சமயங்களில் வேலை செய்யாமல் இருப்பதை விட வேலை செய்வது தான் நிம்மதியைக் கொடுக்கும்."

"நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை பரமசிவம்! துறுதுறுவென்று ஓடியாடி வேலை செய்கிறவனைச் சும்மா இருக்கச் சொல்வதுதான் சிரமமாயிருக்கிறது."

"உன்னைப் போல் சுபாவமுள்ளவனுக்கு அது நிச்சயம் சிரமமாகத்தான் இருக்கும் பூமி!"

"லெண்டிங் லைப்ரரி எப்படி இருக்கிறது? புதுப் புத்தகங்கள் வாங்கிச் சேர்க்க வேண்டும் என்றாயே? எப்போது செய்யப் போகிறாய்?" என்று பரமசிவத்தை விசாரித்தான் பூமி.

"டெலிவிஷனும், சினிமாவும் வந்த பின் 'டீப் ரீடிங்' என்பது போல ஆழ்ந்து ஈடுபட்டு படிக்கிற பழக்கமே போய்விட்டது. பத்திரிகைகளும் தங்கள் பங்குக்கு 'டீப் டீப்' ஹேபிட்டைக் கொன்றுவிட்டன. உணவோ வைட்டமின் சத்துள்ள ஆகாரங்களோ தேடாமல் சோர்வு வரும் போதெல்லாம் பீடியோ டீயோ குடித்தே காலந் தள்ளுகிற ஒரு விவரம் புரியாத கூலிக்காரனைப் போல் தமிழ் வாசகனும் வெறும் பக்கங்களைப் புரட்டுகிற பழக்கத்திலேயே படிப்பை முடித்துக் கொண்டு விடுகிறான். சிந்தித்துப் படிப்பதும் படித்துச் சிந்திப்பதும் போய்விட்டன. என்னைப் போல் நூல் வழங்கு நிலையம் நடத்துகிறவனுக்கு இது போதாத காலம் பூமி?"

"வெறும் ஜனநாயகம் மட்டும் வளர்ந்து, அறிவும் சிந்தனையும் வளராமல் போவது ஒரு தேசத்தின் துரதிர்ஷ்டங்களில் எல்லாம் பெரிய துரதிர்ஷ்டம். அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனை முன்னேற்றத்திற்கும் பயன்படாத ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விட அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனை முன்னேற்றத்திற்கும் பயன்படுகிற சர்வாதிகாரமும் அடக்கு முறையும் கூட நல்லது என்று நினைக்கத் தோன்றிவிட்டது" - என்று பூமிநாதன் கூறிய போது அவன் குரலில் கடுமை ஏறியிருந்தது. கலை - இலக்கிய விஷயங்களில் பூமிக்கும் பரமசிவத்துக்கும் நடுவே கருத்து ஒற்றுமை இருந்தது. ஆகவே அந்த உரையாடலில் சுவை இருந்தது.

பூமியும் பரமசிவமும் பேசிக் கொண்டிருந்தபோதே பரமசிவத்தின் தம்பி முருகேசன், "அண்ணே? அவங்க வந்திருந்தாங்க... இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க" என்று நான்காக மடிக்கப்பட்ட துண்டுக் கடிதம் ஒன்றைப் பரமசிவத்திடம் நீட்டினான்.

பரமசிவம் அதை வாங்கிப் பிரித்துப் படித்துவிட்டுப் பூமியின் பக்கமாகத் திரும்பி, "இன்றைக்கு எட்டு மணிக்கு டெலிவிஷன் பார்க்கணும்! இங்கே வழக்கமாகப் புஸ்தகம் எடுத்துப் படிக்கிற கஸ்டமர் ஒருத்தர் 'படிக்கும் பழக்கம்' என்கிற கலந்துரையாடல்லே பங்கு கொண்டு பேசறாங்களாம். முடியுமானால் நீயும் வரலாம்" என்றான்.

"எங்கே போய்ப் பார்க்கணும்?"

"இங்கே தான் பக்கத்துல - கருமாரி டி.வி. டீலர்ஸ்னு தெரிஞ்ச டெலிவிஷன் விற்பனைக் கடை ஒண்ணு இருக்கு. அங்கே போய்ப் பார்க்கலாம்."

பூமிக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் என்று பட்டதனால், பரமசிவத்தோடு சிறிது நேரம் செலவிடலாம் என்று தோன்றியது. தெருவில் வால்போஸ்டர் படிப்பது, தினசரியில் தலைப்புக்கள் படிப்பது தவிரப் பொறுமையாக எதையும் ஆர அமரப் படிக்கவே முடியாதபடி ஜனங்களின் இரசனையை எல்லாருமாகச் சேர்ந்து மந்தப்படுத்தி வைத்திருக்கிற காலத்தில் படிக்கும் பழக்கத்தைப் பற்றி டெலிவிஷனில் ஒரு கலந்துரையாடல் என்பதே புதுமையாயிருந்தது.

"நம்மூர் டெலிவிஷனில் அப்படியெல்லாம் உருப்படியான காரியங்களைக் கூட பண்ணுகிறார்களா என்ன? நம்பவே முடியவில்லையே? நான் சிறு வயதில் சிங்கப்பூர் டி.வி.யில் ஏராளமான பயனுள்ள நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் பரமசிவம்!"

"உன் சந்தேகம் நியாயமானதுதான் பூமி! டெலிவிஷன் என்றால் பிரபலஸ்தர்களின் மூஞ்சிகளைக் காண்பிக்க மட்டுமே அது ஏற்பட்டிருக்கிறது என்கிற ஓரம்சத் திட்டத்தில் செயல்படும் நமது டி.வி.யில் சமயா சமயங்களில் தவறிப் போய் இப்படிச் சில நல்ல நிகழ்ச்சிகளும் நேர்ந்து விடுகின்றன."

"இன்று நமது கலை இலக்கியத் துறைகளில் தவறுகள் தான் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. நல்லது தவறிப் போய் எங்காவது நேருகிறது. தவறுகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்படுவதில்லை. நல்லவைகள் முன்னேற்பாட்டோடு செய்யப்படுவதில்லை; தவிர்க்கப்படுகின்றன!"

"சத்ய விசுவாசமில்லாதவர்களின் எண்ணிக்கை கலை இலக்கியத் துறைகளில் அதிகமாயிருக்கிறது."

"அப்படிப்பட்டவர்களின் தொகை இன்று எதில்தான் அதிகமாக இல்லை."

"சத்ய விசுவாசம், கடின உழைப்பு, வாக்கு நாணயம், தொழில் நாணயம் எல்லாம் உள்ளவர்கள் இன்று இடையூறாகக் கருதப்படுகிறார்கள்."

இவ்வாறு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின், டெலிவிஷனில் 'படிக்கும் பழக்கம்' கலந்துரையாடல் பார்ப்பதற்காகப் பரமசிவமும், பூமியும் கிளம்பிச் சென்றார்கள். கடையை முருகேசன் கவனித்துக் கொண்டான்.

அவர்கள் கருமாரி டி.வி. டீலர்ஸ் கடையில் போய் அமர்ந்த போது, அங்கே ஏற்கெனவே ஷோ ரூம் விளம்பரத்துக்காக ஒரு டெலிவிஷன் இயங்கிக் கொண்டிருந்தது.

டி.வி. விற்பனையாளர் நெற்றியில் பத்துக் காசு அளவு பெரிய குங்குமப் பொட்டுடன் உற்சாகமாக்த் தோற்றமளித்தார். இவர்களை உற்சாகமாக வரவேற்றார்.

டி.வி.யில் யாரோ படு உற்சாகமாகக் கரும்பலகையில் அன்னா, ஆவன்னா எழுதி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

"அனா, ஆவன்னாவையே இரண்டு வருஷமா விடாம நடத்தறாங்க..."

"நியாயந்தான்! மிகப் பல விஷயங்களிலே நாம் இன்னும் அனா, ஆவன்னா நிலைமையைக் கடந்து முன்னேறவே இல்லையே?"

"முன்னேற்றம் முற்போக்குன்னெல்லாம் பேசறவங்கள்ளாம் இப்ப உங்க மாதிரி அரும்பு மீசையும் கருகரு தாடியும் வளர்க்கிறீங்க! இல்லியா பரமசிவம் சார்?" என்று டி.வி. விற்பனையாளர் பரமசிவத்தை மடக்கினார்.

"தாடி மீசை வைத்தவர்கள் எல்லாம் தீவிரவாதிகளோ என்று சாருக்கு நிரந்தரமாகவே ஒரு சந்தேகம் பூமி!" என்று டெலிவிஷன் விற்பனையாளரைச் சுட்டிக் காட்டிப் புன்னகை புரிந்தான் பரமசிவம்.

சரியாக இரவு எட்டு மணிக்கு டெலிவிஷனில் அந்த நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பூமிக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. படிக்கும் பழக்கம் கலந்துரையாடலைத் தொடங்கியவளே சித்ராதான்!

"அடடே! சித்ராவா?" என்று பூமி உற்சாகம் மேலிட்டுக் கூறவும், "சித்ராவை உனக்குத் தெரியுமா பூமி!" என்ற பரமசிவம் வியப்போடு வினவினான். சித்ராவும் தானும் சந்திக்க நேர்ந்ததைச் சுருக்கமாகப் பரமசிவத்துக்கு விளக்கினான் பூமி.

கடைப் பெயரும், நடத்துபவர் பெயரும் சொல்லாமல், "எனக்குப் புத்தகம் தரும் லெண்டிங் லைப்ரரி உரிமையாளர் நல்ல இலக்கிய இரசனை உள்ளவர். தரமான படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் இணையற்றது" என்று கலந்துரையாடலின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டாள் சித்ரா.

பூமி பரமசிவத்தைப் பெருமிதமாகப் பார்த்தான். கலந்துரையாடல் தொடர்ந்தது. சித்ராவே மேலும் விவரித்தாள்.

"சமயத்தில் ஓர் ஆட்டோரிக்ஷா டிரைவர் என்னை வியப்பிலேயே மூழ்க அடித்துவிட்டார். சவாரி கிடைக்காத நேரங்களிலும், காத்திருக்கும் நேரங்களிலும் தான் படிப்பதற்கு வைத்திருப்பதாக நிரத்சௌத்ரி, பாரதியார், ராஜாராவ் போன்றவர்களின் நூல்களை ஸீட்டுக்கு அடியிலிருந்து எடுத்துக் காண்பித்த அந்தப் பட்டதாரி ஆட்டோ ரிக்ஷா டிரைவரைச் சந்தித்த போது படிக்கும் பழக்கம் வளர்ந்து எல்லா மட்டங்களிலும் பரவியிருப்பதாக உணர்ந்து மகிழ்ந்தேன் நான்."

பரமசிவம் பூமியின் பக்கம் திரும்பி மகிழ்ச்சியோடும் புன்முறுவலோடும் பார்த்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் சிரிப்பதும் ஏனென்று புரியாமல் டி.வி. கடைக்காரர் குழம்பினார்.

அத்தியாயம் - 5

ஒவ்வொரு மனிதனும் ஓர் உயிருள்ள புத்தகம். ஒவ்வோர் அநுபவமும் வாழ்க்கைக் கணக்கின் அநுபவப் பேரேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டிய ஒரு புதிய பாடம்.

தற்செயலாகப் பார்க்க நேர்ந்த டெலிவிஷன் நிகழ்ச்சி பூமியின் மனத்தில் சற்றே மகிழ்ச்சியை அரும்பச் செய்திருந்தது. மகிழ்ச்சியிலிருந்து சிறிது நம்பிக்கையும் மலர்ந்தது.

டெலிவிஷன் நிகழ்ச்சியைப் பார்த்து முடித்ததும் அங்கிருந்தே பரமசிவத்துக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீட்டுக்குத் திரும்பியிருந்தான் பூமி. கையோடு எடுத்துக் கொண்டு வந்திருந்த புத்தகங்களைப் படிப்பதில் மனம் செல்லவில்லை. அதைக் கடந்து வேறு பக்கம் சென்றது மனம்.

அவன் நினைப்பு என்னவோ சித்ராவின் மேலும், அவள் அளித்த டெலிவிஷன் பேட்டியின் மேலுமே இலயித்திருந்தது. அந்தப் பேட்டியில் அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் மீண்டும் நினைவு கொள்ள முயன்றான் அவன். ஏதோ தவிர்க்க இயலாத ஒரு சூழ்நிலையில் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்துவிட்ட ஓர் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் என்பதைவிடத் தன்னைப் பற்றி அவளுக்கு அதிகமாக ஏதும் ஞாபகம் இருக்க முடியாது என்றுதான் அவன் முதலில் எண்ணிக் கொண்டிருந்தான். அவள் செயலளவில் தன்னை மறக்கக்கூட சாத்தியமிருப்பதாக அவன் எண்ணினான்.

ஆனால் அவளுக்கோ அவன் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறவன் என்பது நினைவில் இருந்ததைக் காட்டிலும், விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் தரமான புத்தகங்களைத் தேடிப் படிக்கிறவன் என்பதுதான் அதிகம் நினைவிருப்பதாகத் தெரிகிறது.

அவளுடைய நினைப்பில் தான் எப்படி அந்த ஆழத்தில் பதிந்து ஊன்றியிருக்கிறோம் என்பது புரிந்த போது பூமிக்குப் பெருமிதமாக இருந்தது. பூரிப்பாகவும் இருந்தது.

மாலையில் சித்ராவும் யாரென்று தெரியாத வேறு ஓர் இளைஞனும் பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரியிலிருந்து சேர்ந்து புறப்பட்டுத் திரும்பிச் சென்றதைக் கண்டு ஏற்பட்டிருந்த எரிச்சல் கூட இப்போது அவனுள் கொஞ்சம் தணிந்து போய் அடங்கியிருந்தது.

பூமி வீட்டுக்குத் திரும்பிச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் கன்னையன் அவனைத் தேடி வந்து சேர்ந்தான். குமாருடைய வண்டி ரிப்பேர் வேலைகள் முடிந்து ஒர்க் ஷாப்பிலிருந்து 'சுகமடைந்து' திரும்பிவிட்டதாம். அதனால் அவன் சொந்த வண்டியை ஓட்டப் போகவேண்டியிருக்கும் என்றும் பூமி தன் வண்டியை மறுநாள் முதல் தானே எடுக்க முடியுமா என்று கன்னையன் கேட்டான். பூமியும் அதற்கு இசைந்தான்.

வழக்கமான வேலைகளைச் செய்யாமலும், மனிதர்களைச் சந்திக்காமலும் ஓரிடத்தில் அடைந்து கிடப்பதன் மூலம் துயரத்தையோ சோகத்தையோ மறந்துவிட முடியுமென்பதில் அவனுக்கு நம்பிக்கையில்லை.

ஓர் இயந்திரம் துருப்பிடிப்பதற்கும் பழுதடைவதற்கும் எப்படி அதன் இயக்கமின்மையும், சும்மா கிடப்பதும் காரணமாகின்றனவோ, அதுபோல் மனம் துருப்பிடிப்பதற்கும் பழுதடைவதற்கும் கூட இயக்கமின்மையும் முடங்கிக் கிடப்பதும் காரணமாகலாம் என்ற கருத்துடையவன் பூமிநாதன்.

ஏற்கெனவே கன்னையனும் பேட்டை நண்பர்களும் வற்புறுத்தியதனால்தான் இந்தச் சில நாட்களாகத் தான் ஓட்டாமல் ஆட்டோவை வேறு ஒரு நண்பனிடம் விட்டிருந்தான் பூமி. வெறும் பணம் சம்பாதிக்கும் தொழில் என்பதற்காகவோ, வேறு வேலை எதுவும் கிடைக்காததாலோ மட்டும் அவன் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்கவில்லை. சிறுவயதிலிருந்தே மனிதர்களையும், அநுபவங்களையும் சந்திப்பதில் அவனுக்கு இருந்த ஆர்வமும் துறுதுறுப்பும் கூட ஒருவகையில் இதற்குக் காரணம்.

படித்துப் பட்டம் பெற்றும் ஆளை எதிரே பார்த்ததும் 'இந்தத் தொழிலில் இவனா?' என்று பார்க்கிறவனுக்கு எடுத்த எடுப்பில் ஒரு கணம் தோன்றக்கூடிய வித்தியாசமான உனர்வை உண்டாக்குகிற தோற்றமும் முகக் களையும் இருந்தும் கூட அந்தத் தொழிலை அவன் இரசித்துச் செய்து கொண்டிருந்தான். "ஒவ்வொரு மனிதனும் ஓர் உயிருள்ள புத்தகம். ஒவ்வோர் அனுபவமும் வாழ்க்கைக் கணக்கின் அநுபவப் பேரேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டிய ஒரு புதிய பாடம்" என்றே தன்னை அதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் பூமி. கன்னையன் மிகவும் தயக்கத்தோடு பூமியிடம் வந்து அதைத் தெரிவித்திருந்தான் என்றாலும், பூமி உடனே அதற்குச் சம்மதித்தான். ஒரு வார்த்தைக் கூட தட்டிச் சொல்லவில்லை.

"இரவே வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திவிடச் சொல்லு! என் வழக்கப்படி காலை முதல் இரயில் ஆன ஏற்காடு எக்ஸ்பிரசுக்குச் சவாரி தேடிக்கொண்டு போயாகணும்."

"அத்தினி அவசரம் என்னாத்துக்கப்ப? ஆறு மணிக்குப் போனாப் போதுமே..."

"தாமதம் என்னுடைய முதல் எதிரி என்று உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் கன்னையா? சுறுசுறுப்பில் மனிதன் சூரியனோடு போட்டி போட வேண்டும். பொழுது புலரத் தாமதமானாலும் ஆகலாம், ஆனால் இந்தப் பூமி எழுந்திருக்கத் தாமதமாகக் கூடாது!"

"அதுக்கில்லை! இது மாதக் கடைசியேன்னு கவலை வேணாம். சவாரி எப்பப் போனாலும் கிடைக்கும். அவசரம் தேவையில்லை."

"அவசரம் வேறு, சுறுசுறுப்பு வேறு. சுறுசுறுப்பை அவசரம் என்று புரிந்து கொள்வதும், அவசரத்தை சுறுசுறுப்பு என்று புரிந்து கொள்வதும் சரியில்லை."

"சரிதானப்பா... குமார் நைட் சவாரிக்காகப் புகாரியண்டே போயிருக்கான்... ஸெகண்ட் ஷோ சவாரி முடிஞ்சதும் வண்டியை இங்கே வூட்டாண்டே இட்டாந்து விட்டுடச் சொல்றேன்."

இதைச் சொல்லிவிட்டுக் கன்னையன் புறப்பட்டுப் போய்விட்டான். பூமி மறுநாள் சவாரிக்குப் போக வேண்டும் என்ற ஞாபகத்தோடு ஏற்கனவே சலவைக்குப் போட்டு வைத்திருந்த காக்கி யூனிஃபாரம் இருக்கிறதா என்று துணி அலமாரியில் தேடிப்பார்த்து அதை எடுத்து வைத்தான். படிக்கப் பயன்படும் புத்தகங்கள் சிலவற்றையும் அந்த உடைகளோடு அருகிலேயே எடுத்து வைத்த பின், லஸ் முனைக்குச் சென்று இரவு உணவை முடித்து வரப் புறப்பட்டான். வெளியே முகப்பில் போர்டு விளம்பரம் எதுவும் இல்லாமல் 'மெஸ்' மாதிரி நடத்தப்பட்டு வந்த அந்த உணவு விடுதியில் எப்போதும் அதிகம் கூட்டம் இராது. இருநூறு முந்நூறு வாடிக்கைக்காரர்களும், மிகச் சில புதியவர்களும் உண்ண வருகிற இடமாக இருந்தது அது.

கணவனை இழ்ந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஒருத்தி அதே போன்ற நிராதரவான பெண்கள் சிலரையும் வேறு உதவியாட்களையும் வைத்துக் கொண்டு அந்த மெஸ்ஸை நடத்தி வந்தாள். பூமியைப் போன்ற ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களும், வேறு பலரும் அந்த மெஸ்ஸை ஆதரித்து வந்தார்கள்.

மயிலாப்பூர் வட்டாரத்தில் சாதாரண டாக்ஸி டிரைவராக வாழ்வைத் தொடங்கிப் பின் உழைப்பால் முன்னேறிச் சொந்தத்தில் இரண்டு மூன்று டாக்ஸிகளை விட்டு வளர்க்கிற அளவுக்கு மேலே வந்து திடீரென்று ஒரு விபத்தில் இறந்து போன டிரைவர் ஒருத்தருடைய மனைவிதான் அந்த மெஸ் சொந்தக்காரி. 'முத்தக்காள்' என்று பெயர். ஆட்டோ டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் 'முத்தக்காள் மெஸ்' என்று சொன்னால் சகஜமாகப் புரியும்.

உணவை முடித்துக் கொண்டு பணம் கொடுக்கிற இடத்தில் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு, "என்ன முத்தக்கா! சௌக்கியமா?" என்று விசாரித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், "இங்கே அரசியல் பேசுவதோ விவாதங்கள் செய்வதோ கூடாது" என்று புதிதாக ஒரு போர்டு அங்கே தொங்கியது.

பூமி அந்தப் போர்டை நிமிர்ந்து பார்த்துப் படிப்பதைக் கவனித்து விட்ட முத்தக்காள், "ரெண்டு நாளைக்கு முன்னே, சாப்பிட்டு விட்டுப் போறப்போ யாரோ நாலுபேர் அரசியல் சர்ச்சையில் இறங்கி அது தீவிரமாகி இங்கேயே ஒருத்தரைக் கத்தியாலே குத்திப்பிட்டாங்க... போலீஸ் விசாரணை, சாட்சி, அது இதுன்னு எல்லாத் தலைவலியும் முடிஞ்சு இன்னிக்குத் தான் இங்கே நிம்மதியா உக்காந்திருக்கேன் தம்பீ!" என்று அந்தப் போர்டு அங்கே வந்த காரணத்தை அவனுக்கு விளக்கினாள் முத்தக்காள். நெற்றியில் வெளேரென்று திருநீற்றுப் பூச்சும், வெள்ளைப் புடவையுமாக முத்தக்காளைப் பார்த்ததும் ஒரு விநாடி காலஞ்சென்ற தன் தாயின் நினைவு வந்தது அவனுக்கு.

"ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் முத்தக்கா! பேச ஆரம்பித்தாலே அது கத்திக்குத்திலோ, கலகத்திலோ தான் போய் முடியும் என்கிற அளவு இந்நாட்டு அரசியல் இன்று மிகவும் கேவலமாக மாறிவிட்டது" என்று அவளிடம் கூறிக் கொண்டே அங்கிருந்து வெளியேறியிருந்தான் பூமி.

இரவு இரண்டு மணிக்குக் குமார் வந்து எழுப்பி வண்டியை வெளியே விட்டிருக்கிற விவரம் சொல்லிச் சாவியைக் கொடுத்து விட்டுப் போனான்.

"பகல்லே 'ஸ்லோஸ்பீட்' அட்ஜஸ்மெண்ட் சரியில்லே - சரி பார்த்தப்புறம் இப்ப தேவலாம்" என்று சொல்லி வசூல் கணக்கு பண விவகாரங்களை ஒப்படைத்த குமாரிடம் அந்த அகால வேளையில் பூமிக்குப் பேச ஏதுமிருக்கவில்லை.

பூமியைப் பொறுத்தவரை மறுநாள் என்பது அடுத்த ஒன்றரை மணி நேரத்திலேயே பிறந்துவிட்டது. மூன்றரை மணிக்கு எழுந்ததிலிருந்து வழக்கமான தேகப்பயிற்சி, யோகாசனம் எல்லாம் முடிந்து அவன் தன் ஆட்டோவை மயிலாப்பூரிலிருந்து கிளப்பிய போது மணி நாலரை கூட ஆகியிருக்கவில்லை.

சென்ட்ரலில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் லேட் ஆகாமல் சரியான நேரத்துக்கு வந்தால் 4-45க்கு வந்துவிடும்.

இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அஜந்தா ஹோட்டல் எதிரே அப்போதுதான் திறந்து ஐயப்பன் படத்துக்குச் சாம்பிராணிப் புகை காட்டிக் கொண்டிருந்த ஒரு மலையாளி டீக்கடையின் முன் ஆட்டோவை நிறுத்தி டீ குடித்தான் பூமி.

அப்புறம் சரியாக நாலு நாற்பதுக்கு அவன் சென்ட்ரலில் இருந்தான். ஏற்காடு எக்ஸ்பிரஸ் சரியான நேரத்துக்கு வந்தது. கணவனும் மனைவியுமாக ஒரு கைக்குழந்தையுடன் அதிகம் மூட்டை முடிச்சு இல்லாமல் ஒரு சவாரி கிடைத்தது.

"எங்கே சார் போக வேண்டும்."

பூமியின் பேச்சுத் தமிழ் காரணமாகச் சென்னை ஆட்டோ டிரைவர்கள் பேசும் கொச்சையிலிருந்து விடுபட்டுச் சற்றே மெருகேறியதாக இருப்பதை வியந்து கொண்டே, 'பாலாஜி நகர்' என்று பதில் சொன்னார், ஏற்காடு எக்ஸ்பிரஸில் வந்தவர். உடனே அவர் மனைவி குறுக்கிட்டு, "சித்ரா இத்தனை சீக்கிரம் எங்கே எழுந்திருக்கப் போறா? - முதல்லே மயிலாப்பூர் போயிட்டு அப்புறம் வேணாப்போயி அவளைப் பார்க்கலாமா?" என்றாள்.

"இல்லே! நாம ஏற்காட்டிலிருந்து வர்ரது சித்ராவுக்குத் தெரியும்..." என்று மனைவிக்குச் சொல்லிவிட்டுப் பூமியின் பக்கம் திரும்பி, "நீ பாலாஜி நகருக்கே விடுப்பா... பரவாயில்லை" என்றார் அவர்.

'எந்தச் சித்ரா?' பூமியின் மனத்தில் வியப்புடன் ஓர் இனிய சந்தேகம் எழுந்தது. ஆட்டோ கிளம்பியது.

சவாரியைப் பாலாஜி நகரில் இறக்கி விட்டபோது கூடப் பூமியினால் அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இறங்கியதுமே சவாரி வாடகையும் கொடுத்து அதற்கு மேலும் ஒரு ரூபாய் போட்டுத் தந்து கணக்குத் தீர்த்துவிட்டார். "பரவாயில்லை! இனாம் வேண்டாம்" என்று ஒரு ரூபாயைத் திருப்பிக் கொடுத்து விட்டான் பூமி. ஆனால் புறப்படுகிறவரை புதிர் விடுபடவில்லை.

பிறபகல் 3 மணிக்கு அவன் பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்குப் போனபோது பரமசிவமே சித்ராவைப் பார்க்கப் போக வேண்டும் என்று பூமியைக் கூப்பிட்டான். இருவரும் ஆட்டோவிலேயே அங்கு போன போது காலையில் தான் சவாரி இறக்கிவிட்ட அதே வீடுதான் சித்ராவின் வீடு என்று பூமிக்குத் தெரிந்தது.

அவனும் பரமசிவமும் உள்ளே போனபோது சித்ராவுடன் அவள் வயதை ஒத்த வேறு ஒரு பெண் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அவளோடு வேலை பார்க்கும் சக ஆசிரியையாக இருக்கலாமென்று அநுமானிக்க முடிந்தது.

முகமலர்ச்சியோடு வரவேற்று பரமசிவத்தையும், பூமியையும் உட்காரச் சொல்லி உபசரித்தாள் சித்ரா. சிநேகிதிக்கு இவர்களை அறிமுகப்படுத்தினாள்.

அவளே காபி கலந்து கொண்டு வந்து தந்தாள். தான் காக்கி யூனிஃபார்மில் இருந்ததால் பூமிக்கு என்னவோ போல் இருந்தது. சித்ரா வித்யாசமில்லாமல் பழகுவதாகத் தோன்றினாலும் அவனுள் மட்டும் ஏதோ ஒரு குறுகுறுப்பு நிலவியது.

அத்தியாயம் - 6

ஒரே விதமான சிரமங்கள் உள்ளவர்கள் அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒன்று சேர வேண்டும் அல்லது ஒரே விதமான சுகங்கள் உள்ளவர்கள் அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒன்று சேர வேண்டும்.

பூமி தானாக அப்படி நினைத்துக் கொண்டு பதறினானே ஒழிய சித்ராவோ, அவள் சிநேகிதியோ அப்போது அவனை ஒரு சாதாரண ஆட்டோ ரிக்ஷா டிரைவராக நடத்தவில்லை. நண்பனைப் போலவே நடத்தினார்கள். சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினார்கள். தங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு புத்தகங்கள் தருகிற லெண்டிங் லைப்ரரிக்காரன் தானே என்பது போல் பரமசிவத்திடம் கூட அவள் அலட்சியமாகப் பழகவில்லை என்பதைப் பூமியே கவனித்தான்.

அதிகாலையில் இருள் பிரிவதற்கு முன்பாக ஏற்காடு எக்ஸ்பிரசில் வந்த ஒரு சவாரியை அன்று காலையில் அந்த வீட்டில், தான் இறக்கி விட்டதைப் பற்றி அப்போது சித்ராவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தித்துத் தயங்கினான் பூமி.

அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த உரையாடலில் அதை வலிந்து கூறுவது இடைச் செருகலாகத்தான் இருக்கும் என்று அவனுக்கே தோன்றியது.

அப்போது சித்ராவின் தோழி நர்ஸரி பள்ளிகளில் மாணவர்களிடம் நடக்கும் வசூல் கொள்ளையையும், ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் தருவதில் உள்ள நடைமுறை ஊழல்களையும் விவரித்துக் கொண்டிருந்தாள்.

"படிக்கிற குழந்தைகளிடம் ரசீது தராமல் பணம் கறக்கப்படுகிறது. வேலை பார்க்கிற ஆசிரியைகளுக்குச் சம்பளம் பட்டியலில் கண்டதைவிடக் குறைவாகப் பணம் தரப்படுகிறது. இங்கேயும் கொள்ளை; அங்கேயும் கொள்ளை."

"மாதா மாதம் சம்பளத்தில் லஞ்சப் பணம் விட்டுக் கொடுத்தாவது வேலையில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ஆசிரியர்களாகிய நீங்களும் ஒத்துழைப்பதால் தானே லஞ்ச ஊழல் நடைபெறுகிறது?" என்று சற்று கடுமையாகவே எதிர்க் கேள்வி போட்டான் பரமசிவம்.

சித்ராவின் தோழியும் உடனே பதில் கூறினாள், "இதற்கு ஒத்துழைத்து அட்ஜெஸ்ட் பண்ணிக் கொள்ளாவிட்டால் யாரும் யாருக்கும் வேலையே தரமாட்டார்களே?"

"இந்த நாட்டில் இன்று வளரும் லஞ்ச ஊழல்கள் அனைத்தும் கொடுப்பவர், பெறுபவர் இருவரும் ஒத்துழைத்துத் தான் நடக்கின்றன. வாங்குபவர் மட்டுமே முழுக் குற்றவாளி என்று சொல்லி விடுவதற்கில்லை. கொடுப்பவரும் ஒத்துழைத்து ஆசீர்வதிக்கவே செய்கிறார் என்பதையும் கவனித்தாக வேண்டும்."

"என்ன செய்வது? நிர்ப்பந்தம் அப்படி இருக்கிறது. இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது" என்றாள் சித்ராவின் தோழி.

அந்தக் கூடத்தில் பளீரென்று மாட்டப்பட்டுச் சுவரில் பூச்சரம் அணியப்பெற்றுத் தொங்கிய ஒரு முதியவரின் படத்தில் லயித்தது பூமியின் பார்வை.

அவன் பார்வையைக் கவனித்த சித்ரா "எங்கப்பாவின் படம்" என்று அவனுக்கு விளக்கினாள். பரமசிவம் ஞாபகமாகப் பழைய பேச்சைத் தொடர்ந்தான்.

"லஞ்சம் கொடுப்பவர்களும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்துக்காகக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். வாங்குகிறவர்களும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்துக்காக வாங்கியதாகவே சொல்கிறார்கள்; தொடர்ந்து அது ஒரு விஷ வட்டமாகவே இருந்து வருகிறது."

"சம்பளப் பணத்தில் வற்புறுத்திப் பிடித்துக் கொள்ளுகிறார்கள். நாங்கள் விரும்பிக் கொடுப்பதாக அர்த்தம் இல்லை."

என்று தங்கள் அநாதரவான நிலையை விளக்கினாள் சித்ராவின் தோழி. பூமி அவர்களுக்கு ஒரு யோசனை சொன்னான்.

"ஆறு பேர் ஒன்று சேர்ந்தாலே ஒரு யூனியன் ஆரம்பிக்கலாம். நகரிலுள்ள எல்லா நர்ஸரி பள்ளிகளின் ஆசிரியர்களையும் இந்த மனக்குறைகளை அடிப்படையாக வைத்து ஒன்று திரட்டினால் சில காரியங்களைச் சாதிக்க முடியும்."

பூமியின் இந்த யோசனையைச் சித்ரா வரவேற்றுப் பாராட்டினாள். சித்ராவின் தோழி தயக்கம் காட்டினாள்.

"ரொம்பப் பேர் யூனியன்னு சொன்னாலே பயந்து ஒதுங்கிடுவாங்க."

"ஒதுங்கினால் பயனில்லை. ஒரே விதமான சிரமங்கள் உள்ளவர்கள் அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒன்று சேர வேண்டும். அல்லது ஒரே விதமான சுகங்கள் உள்ளவர்கள் அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒன்று சேர வேண்டும். இரண்டாவது வகையினரின் ஒற்றுமை இங்கே ஏற்கெனவே ஏற்பட்டு விட்டது. நர்சரி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் முன்பே பதிவாகி விட்டது."

பூமி அதைத் தெரிவித்த முறை சித்ராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. சிரமங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒற்றுமை, சுகங்களைக் காத்துக் கொள்ளுவதற்காக ஒற்றுமை என்று அவன் அதைப் பாகுபடுத்திய, பேசிய அழகை அவள் ரசித்தாள். நாட்டில் சுகங்களைக் காத்துக் கொள்ளுவதற்கான ஒற்றுமை முயற்சிகள் சீக்கிரம் ஏற்பட்டு விடுவதும், சிரமங்களைத் தீர்த்துக் கொள்ளுவதற்கான ஒற்றுமை முயற்சிகள் ஏற்படாமலே தட்டிப் போவதும் ஏனென்று விளங்காமல் சிந்தித்தாள் சித்ரா. படித்தவர்களையும், அரைகுறையாகப் படித்தவர்களையும் ஏதாவது ஓர் அமைப்பின் கீழ் ஒன்று சேர்ப்பது எவ்வளவு தூரம் சாத்தியமற்ற காரியமாக இருக்கிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

பேச்சு சித்ராவின் டெலிவிஷன் கலந்துரையாடலைப் பற்றித் திரும்பியது. பரமசிவம் அவளை நோக்கிக் கேட்டான்.

"டெலிவிஷன்லே உங்க கலந்துரையாடல் நல்லாத்தான் இருந்திச்சு. ஆனாலும் ஒரு கருத்தை நீங்க இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொல்லியிருக்கணும்! இரண்டு ரூபாய் கொடுத்து முதல் தரமான ஒரு புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தயங்குகிறவன் ஆறு ரூபாய் செலவழித்து மூன்றாந்தரமான ஒரு சினிமாவுக்குப் போகத் தயங்குவதில்லை. மரத்தின் தயவில் தான் வளரும் புல்லுருவியைப் போல வேறு பல கலைகளின் செலவில் வேறு பல தரமான கலைகளை நலியச் செய்துவிட்டுத் தான் மட்டுமே அடித்துப் பிடித்து அசுர வேகத்தில் வளரும் ஆதிக்கக் குணம் இங்கே சினிமாவுக்கு இருக்கிறதே...?"

"சொன்னேன். ஆனால் ரிஹர்ஸல்லே சொல்றப்பவே டெலிவிஷன் ப்ரொடியூஸர் அதைச் சொல்லக் கூடாதுன்னு தடுத்துவிட்டார்... 'நாங்க டி.வி.லே 'கான்ட்ரவர்ஸி' எதுவும் வராமப் பார்த்துக்கணும் அம்மா! வாரத்துக்கு ரெண்டு முறை சினிமா வேறே ஒளிபரப்பறோம். சினிமாக்காரங்கள்ளாம் சண்டைக்கு வந்திடுவாங்க' -ன்னு சொல்லிக் கெஞ்சினார்."

"சரிதான்! இப்படியே போனா, கள்ளக்கடத்தல்காரங்க சண்டைக்கு வந்திடுவாங்களோன்னு பயந்து கடத்தல்காரங்களை விமர்சனம் பண்ணி டி.வி.யிலே எதுவும் சொல்ல முடியாது. சமூக விரோதிகளான திருடர்கள், கொள்ளை லாபக்காரர்கள், கொலை, கற்பழித்தல் குற்றங்களைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஆகிய யாரையும் எதிர்த்து டி.வி.யில் எதுவுமே பண்ண முடியாது."

"என்ன சார் பண்றது! சர்க்கார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கலை, இலக்கியச் சாதனங்கள் எல்லாமே அப்படித்தான் இருக்கின்றன" என்று குறைபட்டுக் கொண்டாள் சித்ரா. தன் தோழியைப் பூமிக்கும் பரமசிவத்துக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

"இவள் என் சிநேகிதி; தேவகி. என்னுடன் சக ஆசிரியையாக அருள்மேரி 'கான்வென்டில்' இவளும் வேலை பார்க்கிறாள். திருவல்லிக்கேணியிலே இருக்கிறாள்."

பேச்சுவாக்கில் சித்ரா பரமசிவத்திடம் வேறு ஓர் உதவியை வேண்டினாள்.

"அப்பா இருக்கிறப்பவே இந்த வீட்டுக்காரர்கள் காலி பண்ணச் சொல்லித் தொந்தரவு பண்ணினாங்க. அப்பா போயாச்சு. என்னாலே தன்னந்தனியா இவங்களோட இங்கே சண்டை போட முடியாது. காலி பண்ணிடலாம்னு நினைக்கிறேன். மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் - எங்கேயாவது கொஞ்ச வாடகையிலே ஒரு போர்ஷன் அல்லது சின்ன அவுட் ஹவுஸாப் பார்த்தால் தேவலை."

"நீங்க சொல்ற ஏரியா எல்லாம் பூமிக்குத்தான் நல்லாப் பழக்கம். பூமியிடம் சொல்லுங்க. நாளைக்கே நல்ல இடமாப் பார்த்து முடிச்சுத் தந்துடலாம்" என்றான் பரமசிவம்.

"காலையில் எங்க நெருங்கின உறவுக்காரர் ஒருத்தர் சேலத்துலே இருந்து அப்பா போனதுக்காகத் துக்கம் கேக்க வந்திருந்தார். அவசர அவசரமாக துக்கம் கேட்டானதும் மத்தியானம் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸில் மறுபடி ஊர் திரும்பிப் போயிட்டார். அவரோட அபிப்பிராயம், நான் மாம்பலத்திலேயே ஸ்கூலுக்குப் பக்கத்திலே இடம் பார்த்து குடியேறிட்டாப் போக்குவரத்துச் செலவாவது மிச்சப்படும் என்கிறதுதான்."

"அதுவும் நல்ல யோசனை தான்!"

"ஆனால் எனக்கென்னவோ வேலை பார்க்கிற இடத்துக்குப் பக்கத்திலே குடியிருக்கப் போறது அவ்வளவாகப் பிடிக்கலே. அதே ஏரியாவிலே குடியிருந்தா, ஈவினிங் ஸ்கூல் விட்டதும் டியூஷன் எடுக்கணும்பாங்க. டியூஷனுக்காக வாங்கற பணத்திலே கால்பங்கு கூட நமக்குத் தரமாட்டாங்க. அதுக்கு பதிலா நாமே நாலு இடத்திலே தனியா டியூஷன் எடுத்தா வீட்டு வாடகையாவது தேறும்..."

"உங்களுக்கு மாம்பலம் போறதுக்குப் பிடிக்கலேன்னா வேண்டாம். நான் இங்கேயே பார்த்து ஏற்பாடு செய்கிறேன். நாளைக்குச் சாயங்காலம் ஸ்கூல் விட்டதும் நேரே புறப்பட்டு வந்து லஸ் முனையில் நாகேஸ்வரராவ் பார்க் முகப்பில் அஞ்சரை மணிக்கு நில்லுங்கள். நான் அங்கே வந்து என் ஆட்டோவிலேயே அழைத்துச் சென்று வீடு காண்பிக்கிறேன்."

"சரியாக அஞ்சரை என்ற உறுதி சொல்ல முடியாது. பஸ் கிடைக்கணும். அஞ்சரையிலிருந்து ஆறு மணிக்குள் என்று வைத்துக் கொள்ளலாம்" என்றாள் சித்ரா.

பூமியும் அதற்குச் சம்மதித்தான்.

"நல்ல வீடாகப் பார்த்துக் குடுப்பா" என்று பரமசிவம் மீண்டும் சிபாரிசு செய்தான். சிறிது நேரத்தில் இருவரும் சித்ராவிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.

மறுநாள் சொல்லியபடி ஐந்து மணிக்கெல்லாம் லஸ்ஸில் போய் நின்றுவிட்டான் பூமி. தெரிந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் சொல்லி ஆட்டோவை அங்கே நிறுத்திவிட்டு வீட்டிற்குப் போய் வழக்கமான காக்கி யூனிஃபார்மிலிருந்து விடுபட்டு மாறுதலான உடையுடன் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே போய்க் காத்திருந்தான், அவன். சித்ரா இன்னும் வரவில்லை.

சித்ரா ஐந்தே முக்காலுக்குத் தான் வந்தாள். முதலில் அவன் நின்று கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று - காக்கி யூனிஃபார்ம் இல்லாமல் அவன் சாதாரண உடையில் நின்றது. இன்னொன்று - ஆட்டோவை பங்கில் நிறுத்திவிட்டு அவன் மட்டும் தனியாக வந்து நின்றது. பூமிதான் முதலில் அவளருகே சென்று பேச்சுக் கொடுத்தான்.

"போகலாமா? ஆட்டோவை எதிர்ப்பக்கம் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தியிருக்கிறேன். எடுத்துக் கொண்டு வருகிறேன். அதுவரை இங்கேயே நில்லுங்கள்."

"ஓ? நீங்களா! அடையாளமே தெரியவில்லையே இந்த உடையில்? இப்போது உடனே புறப்பட வேண்டாம். ஆறரை மணிவரை நல்ல நேரம் இல்லை. இங்கேயே பார்க்கில் உட்கார்ந்து ஆறரை வரை நேரத்தைக் கடத்திவிட்டு அப்புறம் புறப்படலாம்" என்றாள் சித்ரா.

அவள் தனியாக இருக்க விரும்புகிறாளா, தன்னையும் உடன் கூப்பிடுகிறாளா என்று புரியாததால் பூமி தயங்கினான்.

"வாருங்கள்! உள்ளே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம்." அவளே அவனைக் கூப்பிட்டாள்.

பூங்காவில் அதிகக் கூட்டமில்லாத புல்வெளிப் பகுதியில் போய் உட்கார்ந்தார்கள் அவர்கள். நர்ஸரி பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க ஒரு சங்கம் அமைப்பது பற்றிய பேச்சை மீண்டும் அவளே ஆரம்பித்தாள். தொடர்ந்து பல விஷயங்களைப் பேசினார்கள். இருவரும் இடம் விட்டு விலகித்தான் அமர்ந்திருந்தார்கள். ஆனால் அப்போது பேசிய கருத்துக்களில் இருவருக்குமிடையே ஒரு நெருக்கம் இருந்தது. அந்த நெருக்கத்தை அவர்களே உணர்ந்திருந்தனர்.

அத்தியாயம் - 7

புரட்சியையும் சமூக மாறுதலையும் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவிப் பிற்போக்கு வாதியை விட அதைப் பற்றி அரைகுறையாகவும் மேலோட்டமாகவும் மட்டுமே தெரிந்த நடுத்தர வர்க்கத்து முற்போக்கு வாதியே மிகவும் அபாயகரமானவன்.

அளவுக்கு அதிகமான கருத்து ஒற்றுமையிலும் ஒரு சிநேகிதம் வளர முடியாது. அளவுக்கு அதிகமான கருத்து வேற்றுமையிலும் ஒரு சிநேகிதம் வளர முடியாது. அளவான கருத்து ஒற்றுமைகளும் அளவான கருத்து வேற்றுமைகளும் சேர்ந்து தான் ஒரு நல்ல சிநேகிதத்தை வளர்க்க முடியும் என்பது பூமியின் கருத்து.

அப்போது அவனுக்கும் சித்ராவுக்கும் இடையில் இருந்த நெருக்கம் இடை வெளியோடு கூடிய நெருக்கமாகத்தான் இருந்ததே ஒழிய இடைவெளியற்ற நெருக்கமாக இல்லை. இடைவெளியற்ற நெருக்கத்தில் எதுவுமே வளர முடியாதென்ற அநுபவ உண்மை பூமிக்கு வாழ்வில் பலமுறை புரிந்திருந்தது. இந்த நெருக்கம் வளர இடம் விட்டு ஏற்பட்டிருக்கிறது என்பதே ஒரு நல்ல முன்னடையாளமாக இருந்தது.

அப்பர் சாமி கோயில் தெருவில் நாலைந்து குடித்தனங்கள் இருக்கும் ஒரு பெரிய வீட்டில் ஒரு போர்ஷன் கிடைத்தது. ஒரு சமையலறை, அதற்குள் நுழைவதற்கு முன் பகுதியாக ஒரு சிறிய கூடம், இவ்வளவுதான் அந்த போர்ஷன். சமையலறையும், முன் பகுதியையும் இணைக்க நிலைப்படி இருந்தது. கதவு இல்லை. முன் பகுதியில் சுவர்களில் இரண்டு அலமாரி, மேலே ஒரு பரண் ஆகிய வசதிகள் இருந்தன. தண்ணீர், குளியலறை வசதிகள் எல்லாம் வீட்டில் கீழ்ப்பகுதியில் இருந்த அத்தனை போர்ஷன்காரர்களுக்கும் பொதுவாக அமைந்திருந்தன. வீட்டுக்காரர் மாத வாடகை ரூபாய் நூற்றைம்பது வீதம் ஆறு மாத முன் பணம் கேட்டார். அந்த இடம் ரூபாய் நூற்று இருபதுதான் பெறும் என்று பூமி அபிப்பிராயப்பட்டான்.

தனியாகக் குடி இருக்கப் போகிற தன்னைப் போன்ற ஒரு திருமணமாகாத பெண்ணுக்குப் பல குடும்பப் பெண்கள் சேர்ந்திருக்கும் அந்த வீடு மிகவும் ஒத்து வரும் என்பதால் சித்ராவுக்கு அதை விட்டுவிட விருப்பமில்லை. அட்வான்ஸ் மட்டும் மூன்று மாதமாகக் குறைத்தால் தேவலை என்று வீட்டுக்காரரிடம் பேசிப் பார்த்தாள் அவள். வீட்டுக்காரர் மிகவும் பிடிவாதமாக இருந்தார். கடைசியில் வேறு வழியில்லாமல் வீட்டுக்காரர் சொன்ன நிபந்தனைக்கெல்லாம் சம்மதித்து முன் பணம் எழுதிக் கொடுப்பதற்காகக் கைப்பையிலிருந்து அவள் செக் புத்தகத்தை எடுத்தாள்.

"செக் வாங்குகிற வழக்கமில்லை! ரொக்கம் தான் வேணும். பரவாயில்லே. நீங்க நாளைக் காலம்பரக் குடுத்தாக் கூடப் போதும்" என்று வீட்டுக்காரர் 'செக்' வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்.

அப்போது வேறு எதுவும் செய்ய முடியாததால் மறுநாள் காலை பாங்கு திறக்கிற நேரம் வரை காத்திருந்து பணம் எடுத்துக் கொண்டு போய் அட்வான்ஸ் கொடுக்க வேண்டியதாயிற்று. அட்வான்ஸ் கொடுக்கிற நேரத்துக்குப் பூமியும் உடன் இருக்க வேண்டும் என்று சித்ரா முதல் நாளே கூறியிருந்ததனால் கடற்கரை எஸ்டேட்டில் ஒரு சவாரியை இறக்கி விட்டுக் காலை பத்தேமுக்கால் மணி சுமாருக்கு அப்பர் சாமி கோயில் தெருவுக்குப் போனான் பூமி. கடற்கரை எஸ்டேட்டிலிருந்து லஸ்ஸுக்கோ, மயிலாப்பூருக்கோ சவாரி எதுவும் கிடைக்காததால் காலியாக ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வர வேண்டியிருந்தது.

பூமிதான் முதலில் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்திருந்தான். நிறையப் பேர் வந்து பார்த்துவிட்டுப் போய் இருப்பதாகவும், காலை பதினொரு மணிக்குள் யார் வந்து வாடகை முன் பணம் கொடுக்கிறார்களோ அவர்களிடம் வாங்கிவிடப் போவதாகவும் பூமியிடம் பயமுறுத்தினார் வீட்டுக்காரர்.

நல்லவேளையாகச் சித்ரா பத்தே முக்காலுக்குள்ளேயே வந்துவிட்டாள். அவள் தனியாகவே வருவாள் என்று பூமி எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அன்று பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரியிலிருந்து அவளோடு சிரித்துப் பேசிக் கொண்டு சென்ற அந்த சஃபாரி சூட் இளைஞனையும் உடன் அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.

சவாரி தேடுவதையும் விட்டுவிட்டு அத்தனை சிரத்தையோடு சரியான நேரத்துக்குத் தான் அங்கே வந்திருக்க வேண்டாமோ என்று இப்போது பூமிக்குத் தோன்றியது. அவளை அவனோடு சேர்த்துப் பார்க்க நேர்ந்தால் இப்படி ஒரு விரக்தி தனக்குள் ஏற்படுவதைத் தவிர்க்க முயன்றான் பூமி. தவிர்ப்பது சிரமமாயிருந்தது. காரண காரியவாதங்களையும் மீறி நின்றது அந்த விரக்தி.

முழுமையாகத் தொளாயிரம் ரூபாயை வாடகை முன் பணமாக வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டுக்களை ஒரு முறைக்கு இருமுறை கவனமாக எண்ணிப் பார்த்த பின், "என்னிக்கு வர்ரதா உத்தேசம்?" என்று சித்ராவை நோக்கி கேட்டார் அந்த வீட்டுக்காரர்.

"வர்ர முதல் தேதியிலிருந்து கணக்கு வச்சுக்கலாம்" என்றாள் சித்ரா. தயக்கத்தோடு அவள் மேலும் கேட்டாள்.

"ரசீது...?"

"வழக்கமில்லை..."

'எதுதான் வழக்கம்' என்று அவரிடம் திருப்பிக் கேட்டு விடலாமா என்பதாகப் பூமியின் நாக்குத் துடித்தது. கட்டுப்படுத்திக் கொண்டான்.

"இவன் என்னோடு கல்லூரியில் படித்த சிநேகிதன். புதுக்கவிதை எல்லாம் எழுதுவான். புனைப்பெயர் புரட்சிமித்திரன். சொந்தப் பெயர் நரசிம்மன். 'தீவிரம்' என்று ஒரு மாதப் பத்திரிகை நடத்துகிறான்" என்பதாகத் தன் சிநேகிதனைப் பூமிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் சித்ரா.

உடனே பூமிக்கு முன் பாய்ந்து 'நைஸ் டு மீட் யூ' - என்று சம்பிரதாயமாகக் கைகுலுக்கினான் புரட்சிமித்திரன். பூமிக்கு அவன் செயல்கள் எல்லாமே கொஞ்சம் மிகையாகப்பட்டன.

"என்ன செய்கிறீர்கள்..."

இதற்கு அவன் பதில் சொல்வதற்குள் சித்ராவே முந்திக் கொண்டு பூமிக்குப் பதில் சொல்லத் தொடங்கினாள். "இப்போதைக்குத் 'தீவிரம்' நடத்தறதும், புதுக்கவிதை எழுதறதும் இவனோட முழுநேர வேலைன்னு சொல்லணும். ஃபாதர் பெரிய பைனான்ஷியர். 'களக்காடு சிட்பண்ட்ஸ்'னு ஒரு சிட்பண்ட்ஸ் நடத்தறார். இவன் ரொம்பவும் புரொக்ரஸிவ் வியூ உள்ளவன்! சமூக அமைப்பையே தீவிரமாக மாற்றும் ஆசை உள்ளவன்."

உடனே கைப் பையைத் திறந்து நாலைந்து 'தீவிரம்' இதழ்களை எடுத்துப் பூமியிடம் அவசரமாக நீட்டினாள் புரட்சி மித்திரன். பூமி அவற்றை அமைதியாக வாங்கிக் கொண்டான்.

"புரட்சித் தீயை மூட்டினாலொழிய இந்தச் சமூகத்தின் தீமைகள் வெந்து தணிய வழி இல்லை."

இதற்குப் பதில் எதுவும் கூறாமல் அந்தப் பத்திரிகை இதழ்களை மெல்லப் புரட்டத் தொடங்கினான் பூமி.

அதில் உள்ள பதினாறு பக்கங்களிலும் புரட்சிமித்திரனின் புதுக் கவிதைகளே நிரப்பப்பட்டிருந்தன. எல்லாக் கவிதைகளிலும் சமையலுக்குத் தாளிதம் செய்தது போல அக்னி புஷ்பங்கள், ரத்த நாளங்கள், புரட்சிக் கனல் என்று நாலைந்து வார்த்தைச் சேர்க்கைகள் அங்கங்கே அள்ளி தெளித்துத் தாளிக்கப்பட்டிருந்தன. அதைத் தவிர ஆழமாக எதுவும் இல்லை.

மிகவும் அரை வேக்காட்டுத் தனமானதும் மேலோட்டமானதுமான வெற்று ஆர்வம் மட்டுமே அதில் தெரிந்தது. உண்மையான, ஆழமான அழுத்தமான புரட்சிக்காரனுக்குத் தன்னை ஒரு புரட்சிக்காரனாக முன் நிறுத்திக் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற சுய முனைப்பை விடப் புரட்சியைச் சாதிக்க வேண்டும் என்ற இலட்சிய முனைப்பே அதிகமாக இருக்க வேண்டும். புரட்சிக்காரனை விட புரட்சிதான் முக்கியமானது. பணக்காரக் குடும்பத்து இளைஞர்கள் சிலர் தாழ்வு மனப்பான்மையாலும், புதுப்புது ஃபேஷன்கள், வார்த்தைகளில் ஏற்படுகிற கற்றுக் குட்டித்தனமான காதலினாலும் சிலவற்றை ஆரம்ப சூரத்தனத்தோடு மோகிப்பது உண்டு. அது போலத்தான் புரட்சிமித்திரனின் தீவிர மோகமும் இருந்தது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது புரட்சியின் மேல் இவர்களுக்கு ஏற்படுகிற திடீர் மோகத்துக்கும் அவசர ஆசைக்கும் கூடப் பொருந்தும். புரட்சியையும் சமூக மாறுதல்களையும் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவிப் பிற்போக்குவாதியை விட அதைப்பற்றி அரை குறையாகவும், மேலோட்டமாகவும் மட்டும் தெரிந்த நடுத்தர வர்க்கத்து முற்போக்குவாதியே மிகவும் அபாயகரமானவன் என்பது பூமியின் கருத்து ஆக இருந்தது.

"வாங்க சார்; லெட் அஸ் ஹேவ் ஸம் டீ" என்று பூமியையும் சித்ராவையும் தன்னுடன் அழைத்தான் புரட்சிமித்திரன்.

அப்பர் சாமி கோயில் தெருவில் போதிய இடமில்லாததால் தன்னுடைய கப்பல் போன்ற சவர்லே இம்பாலா காரை இராயப்பேட்டை நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி விட்டு வந்திருந்தான் புரட்சிமித்திரன்.

"இன்னொரு நாள் பேசலாம்! நான் சவாரி தேடிப் போகணும்" என்று வெளியே நின்ற தன் ஆட்டோவைச் சுட்டிக் காட்டினான் பூமி. அதுவரை ஒன்றும் சொல்லாமல் இருந்த சித்ரா, "இவர் செல்ஃப் எம்ப்ளாய்மெண்ட் ஸ்கீம்லே தானே ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டறாரு. இந்த நகரிலுள்ள ஒரே பட்டதாரி ஆட்டோ டிரைவர்" - என்று பூமியைப் பற்றி விவரித்தாள்.

"பரவாயில்லை! ஆட்டோ இங்கேயே நிற்கட்டும். நாம் மூணு பேரும் என் காரிலேயே ஹோட்டல் சோழா வரை போய்விட்டு வந்துடலாம்" என்றான் புரட்சிமித்திரன்.

"மன்னிக்கணும்! இங்கே மெயின் ரோடிலேயே நிறைய ரெஸ்டாரெண்டெல்லாம் இருக்குதே?"

"ஐ ஹேட் தெம் லைக் எனிதிங்! தெருவோரத்து ஹோட்டல்களிலே ஒரே அழுக்குமயமா இருக்கும்! பரிமாறுகிறவங்களும் பக்கத்திலே உட்கார்ந்து சாப்பிடறவங்களும் டர்ட்டியா இருந்தா எனக்குக் குமட்டிக்கிட்டு வரும் சார்!"

அழுக்குகளையும் அழுக்கு நிறைந்தவர்களையுமே வெறுத்து ஒதுங்குகிற, ஒதுக்குகிற அந்த சவர்லே இம்பாலா புரட்சிக்காரனை விநோதமாகப் பார்த்தான் பூமி. அவனுக்கு ஏளனமாய் இருந்தது. "டீயோ காபியோ குடிக்கலாம்! ஆனால் ஒரு நிபந்தனை! நீங்களும், சித்ராவும் என் ஆட்டோவிலே உட்கார்ந்தால் நானே அழைத்துப் போய் டீ வாங்கிக் குடுத்து இங்கே திருப்பிக் கொண்டு வந்து விடுவேன்" என்றான் பூமி.

"எங்கே?" என்றான் புரட்சிமித்திரன்.

"எனக்குப் பிடித்த ஹோட்டலுக்கு" என்றான் பூமி. "வா நரேஷ்! போகலாம்" என்று அவனையும் வற்புறுத்தினாள் சித்ரா. அவனை அவள் புரட்சிமித்திரன் என அழைக்காமல் நரசிம்மன் என்ற பெயரைச் சுருக்கினாற் போல் நரேஷ் என்றே அழைத்தாள். சித்ரா தன் பக்கம் பேசியது பூமிக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது.

"ஒரு கண்டிஷன்! ஏ.ஸி. உள்ள ரெஸ்டாரெண்டா இருந்தா நல்லது."

பூமிக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. இவனுடைய நாட்டில் புரட்சி வருவதாயிருந்தால் கூட ஏ.ஸி. செய்த இடத்தில் தான் அது வரவேண்டும் என்பான் போலிருந்தது.

சித்ரா அவனை அதிகம் பொருட்படுத்தவில்லை. ஒரு கோமாளியிடம் பழகுகிற மாதிரியே அவனிடம் பழகுகிறாள் என்பதைச் சிறிது நேரத்திலேயே பூமி அறிந்து விட்டான்.

அவர்கள் இருவரையும் தன் ஆட்டோவிலேயே அழைத்துச் சென்று டீக்கடையில் டீ வாங்கிக் கொடுத்த பின் மீண்டும் இம்பாலா நின்ற இடத்தருகே கொண்டு வந்து டிராப் செய்தான் பூமி. "புது வீட்டுக்கு குடி வந்த பின் உங்களை அடிக்கடி பார்க்கலாம். பக்கத்துப் பேட்டையில் தானே இருக்கிறீர்கள்?" என்று புன்னகையோடு அவனை நோக்கிக் கை கூப்பினாள் சித்ரா.

அத்தியாயம் - 8

எந்த முதல் தரமான நல்ல கலையும் மூன்றாந்தரமான மனிதர்கள் கைக்குப் போய்ச் சேரும் போது அங்கே அது வெறும் பாசாங்காகவும் போலிப் பாவனையாகவும் ஆகி விடுவதைத் தவிர்க்க முடியாது.

சித்ராவுக்கும் புரட்சிமித்திரனுக்கும் இருக்கும் நட்பு இப்போது பூமிக்கு எந்த விதத்திலும் கவலையளிக்கவில்லை. கேலிக்குப் பாத்திரமான விதூஷகன் ஒருவனை நடத்துவதைப் போலவே அவனை அவள் நடத்தினாள். சிறிது கூட மரியாதை கலவாத ஒருமையில் 'நீ, வா, போ' என்றுதான் அவனைப் பேசினாள் அவள். அவனுடைய புதுக்கவிதை, புரட்சி, தீவிரம் எல்லாவற்றையும் கூட அவள் கேலிப் பொருள்களாகவே கருதினாள். சிநேகிதமும் நெருக்கமும் இருந்தாலும் அவனது அரைவேக்காட்டுத் தனங்களை அவள் ஏளனமாகப் பார்ப்பது தெளிவாகவே தெரிந்தது.

தன்னிடம் அவள் பழகும் விதத்திற்கும் அவனிடம் அவள் பழகும் விதத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பூமியே தரம் பிரித்து உணர முடிந்திருக்கிறது. இதை வேறொரு நிகழ்ச்சியின் மூலமும் பூமி நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த வாரக் கடைசியில் பாலாஜி நகரில் இருந்த ஓர் ஆங்கில மீடியம் நர்ஸரி பள்ளியின் திறப்பு விழா ஒன்றில் மாணவர்களுக்கும் விழாவுக்கு வந்திருந்தவர்கள் காணவும், ஒரு கராத்தே 'டெமான்ஸ்ட்ரேஷனுக்கு' ஏற்பாடாகியிருந்தது. அந்தப் பள்ளி நிர்வாகியின் மகன் ஒழிந்த நேரங்களில் பூமியிடம் கராத்தே கற்று வந்தான். இவன் மூலம் பூமி அந்த டெமான்ஸ்ட்ரேஷனை செய்ய ஏற்பாடாகி இருந்தது. பூமியை அதற்காக அழைத்திருந்தார்கள் பள்ளி நிர்வாகிகள். 'கராத்தே நிகழ்ச்சிகள்' - கராத்தே வீரர் பூமிநாதன் என்று விழா அழைப்பிதழிலும் அவன் பெயரை அச்சிட்டிருந்தார்கள்.

இதற்கு முன்பும் இத்தகைய கராத்தே நிகழ்ச்சிகளைப் பொது விழாக்கள் சிலவற்றில் செய்து காட்டியிருந்ததால் இதற்கும் பூமி இசைந்திருந்தான். கைவிரல்களால் செங்கல் உடைப்பது, தலையால் செங்கல் உடைப்பது, சண்டை ஆகிய காட்சிகளைக் காண்பதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டினர்.

வெளிநாட்டுப் போர்க் கலைகளாக இருந்தும் கராத்தே, குங்ஃபூ ஆகியவை மக்களை அதிகம் கவர்ந்திருப்பதற்குக் காரணம் அவற்றின் விரைவும் துரித கதியும் என்பதைப் பூமி நன்கு உணர்ந்திருந்தான். இந்தப் போர் முறைகளின் துரித கதி வேறு எந்தப் போர் முறைகளிலும் இல்லை என்பது அவனுக்குத் தோன்றியது. கராத்தே முறையின் கவர்ச்சிக்குக் காரணமே அதுதான் என்பதையும் அவன் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தான். ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களைத் தவிரவும் மாணவர்கள், அலுவலங்களில் பணிபுரியும் இளைஞர்கள் என்று கராத்தே பயில்வதில் ஆர்வமுள்ள ஒரு பெரிய குழுவே பூமியைச் சுற்றி இருந்தது. பூமி அந்தக் குழுவுக்குத் தலைவனாக இருந்தான்.

நடு இரவில் டாக்ஸி ஆட்டோக்களில் இருவர் மூவராக ஏறிக் கொண்டு எதாவதொரு தனி இடம் வந்ததும் டிரைவரை அடித்து உதைத்து அன்றைய சவாரி வசூல் முழுவதையும் பறித்துக் கொண்டு போகும் சம்பவங்கள் நகரில் அதிகரித்து வந்தன.

இச் சம்பவங்களால் இளைஞர்களாகிய டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களிடையே கராத்தே கற்பதில் மிக விரைந்த ஆர்வமும், எழுச்சியும் ஏற்பட்டிருந்தன. தற்காப்புக்கும் அவசர உபயோகத்துக்கும் அது பயன்படும் என்பது அக்கலை இளைஞர்களைக் கவர்வதற்குப் போதுமானதாக இருந்தது.

இந்த பாலாஜி நகர் நர்ஸரிப் பள்ளியின் விழா அழைப்பிதழ் சித்ரா வேலை பார்த்த அருள்மேரி கான்வென்டிற்கும் அனுப்பப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கராத்தே வீரர் பூமிநாதன் என்று பார்த்ததுமே அது தனக்கு அறிமுகமான பெயராயிருந்ததை ஒட்டிச் சித்ராவின் ஆர்வம் அதன்பால் ஈர்க்கப்பட்டது.

நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு "அது நம்ம பூமியா அல்லது வேறு யாராவதா?" - என்று லெண்டிங் லைப்ரரியில் பரமசிவத்திடம் விசாரித்தாள் சித்ரா.

"சந்தேகம் என்ன? நம்ம பூமியே தான். அவன் பெரிய கராத்தே நிபுணனாச்சே?" - என்று சித்ராவுக்குப் பரமசிவம் மறுமொழி கூறினான்.

இதனால் சித்ராவுக்கு அவன் தோழி தேவகியும் பூமியின் கராத்தே டெமான்ஸ்ட்ரேஷனைப் பார்ப்பதற்காக முன் வரிசையில் வந்து அமர்ந்து விட்டார்கள். பூமிக்கு முதலில் இது தெரியாது. தற்செயலாக வெளியே என்ன கூட்டம் கூடியிருக்கிறது என்று பார்ப்பதற்காக அரங்கின் திரையை விலக்கி விட்டுப் பார்த்தபோது முதல் வரிசையில் சித்ராவையும் அவள் தோழியையும் கண்டான். அந்த நிகழ்ச்சியைப் பற்றி இப்போது முன்னை விட அதிக மகிழ்ச்சியும் பெருமிதமும் பூமிக்கு ஏற்பட்டன. தன்னுடைய கராத்தே நிகழ்ச்சி அந்த விழாவில் இடம் பெற்றிருப்பது தெரிந்துதான் சித்ராவும் அவள் தோழியும் வந்திருக்கிறார்களா அல்லது தற்செயலாக வந்திருக்கிறார்களா என்பது பூமிக்குப் புரியவில்லை. கராத்தே உடையில் பூமியும் அவனுடைய உதவியாளனும் மேடையில் தோன்றி திரை விலகியபோது எல்லாரையும் போல் சித்ராவும் அவள் தோழியும் கூட உற்சாகமாகக் கை தட்டினார்கள். பூமி மேடையில் இருந்தபடியே அதைக் கவனிக்கத் தவறவில்லை. சித்ராவையும் அவள் தோழியையும் தவிர பூமியிடம் அந்தக் கலையைக் கற்கும் வேறு பலரும் அவையில் ஆர்வமாக அமர்ந்திருந்தார்கள். பள்ளி நிர்வாகி பூமியையும் அவனுடைய சீடனையும் வரவேற்றுக் கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

முதல் பத்து நிமிஷங்கள் ஜூடோ, கராத்தே, குங்ஃபூ ஆகியவற்றின் இடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகளையும் அவற்றில் உள்ள பல்வேறு ஸ்கூல்களையும் ஸ்டைல்களையும் சுருக்கமாக விளக்கினான் பூமி.

கைகள், கால்கள், விரல்கள், பாதங்கள் ஆகியவற்றையே சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் போலப் பயன்படுத்திக் காட்டும் கராத்தே தத்துவத்தைச் சொல்லிச் செய்து காட்ட முற்பட்டான்.

செங்கல் உடைத்தல், கட்டையை உடைத்தல் ஆகியவற்றை செய்து காட்டிய துரிதகதியைக் கண்டு கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. விரல்களிலும் மண்டையிலும் பாதங்களிலும் ஒருவன் அவ்வளவு வலிமையைக் குவிக்க முடியுமா என்பது அனைவரின் ஆச்சரியமாகவும் இருந்தது.

ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் அவையினரின் மகிழ்ச்சி ஆரவாரமும் கைத்தட்டல்களும், கட்டிடத்தையே அதிரச் செய்தன. பயிற்சியாலும் முயற்சியாலும் பூமி உடம்பையே தேனிரும்பாக இறுக்கியிருந்தான். அவன் பலத்தைக் குவித்துத் தாக்கும் போதில் விரல் நுனிகளும் கைவிளிம்புகளும் தீட்டிய கத்தியைப் போல் கூர்மையாக இயங்கின.

மேடையில் முத்து முத்தாக வியர்வை மின்னும் அவன் முகத்தையும் ஒளி நிறைந்த கண்களையும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா. அவனது துள்ளலில் இருந்த விரைவு, பாய்ச்சலில் இருந்த துரிதம் அனைத்துமே தேர்ச்சியையும், முதிர்ச்சியையும் காட்டின.

நிகழ்ச்சி முடிந்ததும் கிரீன் ரூமுக்குள்ளேயே சென்று பூமியைப் பாராட்ட எண்ணினாள் சித்ரா. அவள் உள்ளே சென்ற போது கராத்தே நிகழ்ச்சிக்காக அணிந்து வேர்வையால் நனையத் தொடங்கியிருந்த தொளதொளப்பான ஜிப்பாவைக் கழற்றிக் கொண்டிருந்தான் பூமி. கருங்கல் பாறை போல் இறுகிப் பரந்து பளபளவென்று வேர்வை மின்னிய அவனது பரந்த மார்பு மேற்புறம் அகன்று கீழ்ப்புறம் இடுப்பருகே சுருங்கியிருந்தது. சிக்கென்று இறுகித் திறண்டு செழித்த வளமான தோள்களும், உடம்பும் கராத்தே பயிற்சியால் தவம் பண்ணுவதுபோல் அந்த உடம்பை வசப்படுத்தியிருப்பதைக் காட்டின. பாராட்டுவதற்குச் சொற்களைத் தேடிச் சித்ரா தவித்தபோது, தேவகி பாராட்டியே விட்டாள். "ரொம்ப அற்புதமாயிருந்தது. ஒரு கராத்தே இன்ஸ்டிடியூட் ஏற்படுத்தி அதுக்கு உங்களை டைரக்டரா நியமிச்சு இந்த அபூர்வமான கலையைப் பரப்பணும்..."

"அப்படி ஒரு இன்ஸ்டிடியூட்டை யார் உதவியும் இல்லாமல் என் அளவில் நான் நடத்திக் கொண்டுதான் இருக்கிறேன்" என்றான் பூமி. சித்ராவின் பக்கமாகத் திரும்பிப் புன்னகையோடு அவனே மேலும் கூறினான்.

"நீங்கள் வந்ததில் நிரம்ப சந்தோஷம்! இன்றைக்கு இங்கே இந்த நிகழ்ச்சி இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"தெரியும்! எங்க ஸ்கூல் நோட்டீஸ் போர்டிலே இன்விடேஷன் பார்த்தேன். அப்புறம் லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணாச்சி கிட்டவும் விசாரிச்சேன்" என்று சித்ரா பூமிக்கு மறுமொழி கூறிக் கொண்டிருந்த போதே அவளுடைய தோழி தேவகி பூமியிடம் ஒரு கேள்வி கேட்டாள்:

"நீங்க நிஜமான கன அளவு உள்ள ஒரு பெரிய செங்கல்லையும் சில செங்கல்களின் அடுக்கையுமே உடைச்சிக் காட்டறீங்க. சில சினிமா நடிகர்கள் ரொட்டித்துண்டு அளவுக்கு லேசான சீமை ஓடுகளை உடைச்சிட்டு அதையே பெரிய செங்கல் உடைக்கிற சாகஸமாக விளம்பரப்படுத்திக்கிறாங்களே?"

"சினிமாவில் எந்த முதல் தரமான கலையைத்தான் அவர்கள் அப்படி மூன்றாந்தரமாகவும் நான்காந்தரமாகவும் கொச்சைப் படுத்தாமல் மீதம் விட்டு வைத்திருக்கிறார்கள்? முதல் தரமான சங்கீதம், சினிமாவில் ஏழாந்தரமான டப்பாங்குத்து சங்கீதமாகிறது. முதல் தரமான நடனம் அரை நிர்வாணக் கேலிக் கூத்தாகிறது. முதல் தரமான கதை மூன்றாந்தரமான குடுகுடுப்பைக்காரன் சட்டையாக ஒட்டுப் போடப்படுகிறது. அவையெல்லாவற்றையும் போல் இன்று ஜூடோ, கராத்தே, குங்ஃபூ ஆகியவைகளும் இங்கே ஆகிவிட்டன. 'எந்த முதல்தரமான நல்ல கலையும், மூன்றாந்தரமானவர்கள் கைக்குப் போகும்போது அங்கே அது வெறும் பாசாங்காகவும், போலிப் பாவனையாகவும் ஆகி விடுவதைத் தவிர்க்க முடியாது.' முதலாளித்துவ சமூக அமைப்பில் கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் மரியாதை கிடைப்பதை விட அவற்றுக்கு முதலீடு செய்யும் பணக்காரர்களுக்கே அதிக மரியாதை கிடைக்க முடியும். சினிமாவும் அப்படி ஒரு பணக்காரக் கலை."

"மிகவும் பொருத்தமான விளக்கம்."

"இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள்! ஒருவன் கையில் வாளோ கத்தியோ ஏந்திச் சாதிக்க முடியாததை வெறுங் கையாலும் காலாலுமே சாதிக்க முடிந்தவன் கராத்தே வீரன். மற்றவன் கத்தியைக் கூராக்கித் தீட்டுகிறான் என்றால், கராத்தே வீரன் தன் உடம்பையே பயிற்சியால் கூராக்கிக் கொள்கிறான். சினிமாவில் இரவல் குரல், இரவல் இசை, இரவல் கத்திச் சண்டை எல்லாவற்றையும் போலச் சமயா சமயங்களில் ஆண்மை, வீரம் எல்லாவற்றையும் கூட இரவல் வாங்கிக் கொள்கிறார்கள்" என்று கூறிவிட்டுச் செங்கல்லை உடைக்கு முன் கையை ஒருமைப்படுத்திக் கூராக்கிக் கைவிளிம்புக்கு முழு வலிமையையும் கொண்டு வருவது எப்படி என்பதை அங்கேயே அந்தக் கணமே நொடிப்பொழுதில் அவர்களுக்கு 'டெமான்ஸ்டிரேட்' செய்து காட்டினான் பூமி.

சித்ராவும், தேவகியும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட போது பூமி கேட்டான்:

"எப்பொழுது புது வீட்டிற்குக் குடி வரப்போகிறீர்கள்?"

"இன்னும் முடிவாகவில்லை! அந்த வீட்டுக்காரருக்கும் எனக்கும் ஒரு சின்னத் தகராறு. அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டு வம்பு பண்ணுகிறார் அவர்" - என்றாள் சித்ரா.

அத்தியாயம் - 9

விருப்பமும் வசதியும் இல்லாதவனை வழி மறித்துக் கொள்ளைக்காரர்கள் திருடினால் அது வழிப்பறி. விருப்பமும் வசதியுமில்லாதவனை இக்கால அரசியல்வாதி வற்புறுத்திப் பணம் பறித்தால் அதற்குப் பெயர் வசூல்.

சித்ராவும் அவளுடைய தோழி தேவகியும் புறப்பட்டுப் போன பின்பும் நெடுநேரம் வரை பூமி அவர்களைப் பற்றிய நினைவில் திளைத்திருந்தான்.

கிரீன் ரூமைத் தேடி வந்து ஆர்வம் குன்றாமல் வேறு பலரும் பூமியைப் பாராட்டினார்கள். சிங்கப்பூரில் புக்கிட்டிமா சாலையில் உள்ளே சென்யீ செல்ஃப் டிஃபன்ஸ் ஸ்கூலையும் அதன் மாஸ்டரான சென்யீயையும் நன்றியோடு நினைவு கூர்ந்தான் அவன். சீனரான சென்யீ கராத்தே, ஜூடோ, குங்ஃபூ மூன்றிலும் மகா நிபுணர். அவரது சைனீஸ் ஸ்டைலில் வேகமும் பாய்ச்சலும் அதிகம். துரித கதியான அந்த முறையில் பூமியை உருவாக்கியவர் சென்யீ மாஸ்டர்தான்.

வீட்டுச் சுவரிலே மாட்டித் தன் பெற்றோர் படங்களைப் பயபக்தியோடு வழிபட்டு வந்ததைப் போல சென்யீ மாஸ்டரின் படத்தையும் வழிபட்டு வந்தான் பூமி. உடம்பு நன்றாக வளைகிற இளமையிலேயே இந்த தற்காப்புக் கலைகளை அவனுக்கும் பல இளைஞர்களுக்கும் கற்றுக் கொடுத்த பெருமை சென்யீ மாஸ்டருடையது.

அன்று அவர் தனக்குக் கற்பித்த அதே ஆர்வம் குன்றாத உற்சாகத்தோடு இன்று வேறு பல இளைஞர்களுக்குப் பூமி அந்தக் கலையைக் கற்பித்து வளர்த்து வந்தான்.

அன்று பாலாஜி நகர் பள்ளி விழாவில் கராத்தே நிகழ்ச்சி நடந்த பின் மேலும் பல புதிய இளைஞர்கள் தங்களுக்கும் கற்றுக் கொடுக்குமாறு பூமியைத் தேடி வந்தார்கள். கராத்தே, குங்ஃபூ பற்றி வெளிவந்திருந்த இரண்டோர் ஆங்கிலத் திரைப்படங்கள் வேறு இளைஞர்களிடையே அவற்றைக் கற்கும் மோகத்தை அதிகமாக்கியிருந்தன.

நடுவில் ஒருநாள் காலை பள்ளிக்குப் போவதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்த போது சித்ராவை மீண்டும் சந்தித்தான் பூமி.

"சுளையாக ஆறு மாத அட்வான்ஸ் வாங்கிய பின்னும் வெள்ளையடித்து துப்புரவு செய்து, போனது வந்ததைச் சரிபார்த்து ஒழுங்கு பண்ணிக் குடுக்க முடியாதுங்கறார் வீட்டுச் சொந்தக்காரர்" - என்று அப்பர் சுவாமி கோயில் தெரு வீட்டு உரிமையாளரைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டாள் சித்ரா. தான் அவளுடைய சார்பில் அந்த வீட்டு உரிமையாளரைத் தேடிச் சந்தித்து வற்புறுத்துவதாக சித்ராவுக்கு வாக்களித்தான் பூமி. அடுத்த நாள் காலையிலேயே அப்பர் சுவாமி கோயில் வீட்டு உரிமையாளரைப் பார்த்து அதை வற்புறுத்திச் சொல்லியும் விட்டான். அவரும் ஏறக்குறைய அவனுடைய கோரிக்கைக்கு சம்மதித்த மாதிரியே பதில் சொல்லியிருந்தார். அடுத்த நாள் மாலை அருள்மேரி கான்வென்ட் பள்ளி விடுகிற நேரத்துக்குப் பூமியே ஆட்டோவில் அவளைத் தேடிச் சென்றான். வீட்டுக்காரர் வெள்ளையடிப்பதோடு போனது வந்ததைச் சரி செய்து கொடுப்பதற்கும் சம்மதித்து விட்டார் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான். அதைக் கேட்டு அவள் மகிழ்ச்சி அடையக் கூடும்.

அவள் பள்ளி முடிந்து வெளியே வர ஐந்து மணியாயிற்று. எதிர்பாராதவிதமாக பூமி தனக்காகக் காத்திருக்கக் கண்டதும் அவளுக்கு ஒரே ஆச்சரியம். பூமியின் அருகில் வந்ததும் "சவாரியை விட்டுவிட்டு எப்பொழுது பார்த்தாலும் இங்கே என்னைத் தேடிக் கொண்டு வந்தீர்களானால் தொழில் என்ன ஆவது?" என்று கடிந்து கொள்கிறாற் போன்ற செல்லமான தொனியில் விசாரித்தாள் சித்ரா. பூமி புன்னகையோடு அதற்கு மறுமொழி தயாராக வைத்திருந்தான்.

"இன்றைக்கு காலை ஒரு மணிக்குள்ளேயே நல்ல சவாரி! போதுமான வசூல் ஆகிவிட்டது. இப்பொழுதே வண்டியை மடக்கி நிறுத்தி விடலாம்."

"உங்கள் அதிர்ஷ்டம் அப்படி! என் துரதிர்ஷ்டம் முழுச் சம்பளத்துக்கு கையெழுத்துப் போட்டுவிட்டுப் பாதிச் சம்பளம் மட்டுமே கையில் வாங்குற சம்பள நாள் இன்றைக்கு."

"நான் தான் அன்றைக்கே சொன்னேனே, நர்சரி கான்வென்ட் பள்ளிகளில் வேலை பார்க்கும் அனைவரும் சேர்ந்து ஒரு வலுவான யூனியன் அமையுங்கள் என்று. இந்த காலத்தில் தீமைகளுக்கு எதிரான அணியமைத்து ஒன்றுபடுவதன் மூலம் தான் தீமைகளை ஒழிக்க முடியும்."

"அது அவ்வளவு சுலபமில்லை! எல்லாமே வேலைக்குப் பயந்தவர்கள். யூனியன் அது இது என்று இறங்கி - இருக்கிற வேலையும் போய் விட்டால் என்ன செய்வதென்று நழுவுகிற சுபாவம் தான் அதிகம். நாங்களாவது அரைச் சம்பளம் வாங்கிக் கொண்டு முழுச் சம்பளத்துக்குக் கையெழுத்துப் போடுகிறோம். வெளியே வேலைத் தேடித் தவித்துக் கொண்டிருக்கும் புதியவர்கள் 'கால் சம்பளம் தந்தாலே போதும்' முழுச் சம்பளத்துக்கும் கையெழுத்துப் போட்டுத் தருகிறோம் என்கிற அளவுக்கு மோசமாயிருக்கிறார்கள்."

"இங்கேயே நின்று பேசிக் கொண்டிருப்பானேன்? போகலாமே?"

"எங்கே போவ?"

"எங்கே வேண்டுமானாலும் போகலாம்" - என்று கையைக் காட்டி அவளை ஆட்டோவில் ஏறிக் கொள்ளச் சொன்னான் பூமி.

"மீட்டர் போட்ட சவாரியா? சும்மாவா? அது தெரிந்த பின்புதான் ஏற வேண்டும்."

இப்படிக் கேட்டுவிட்டுச் சிரித்தாள் சித்ரா.

"பழகியவர்களைப் பார்த்தால் இதில் மீட்டர் வேலை செய்யாது."

"கோளாறா? பழக்க தோஷமா?"

"பழக்க தோஷத்தினால் வந்த கோளாறு என்று தான் வைத்துக் கொள்ளுங்களேன்."

அவள் ஆட்டோவில் ஏறிக் கொண்டாள். ஆட்டோ கிளம்பியது. அடுத்த கால் மணி நேரத்தில் ஆட்டோ நாகேஸ்வரராவ் பூங்காவின் முன்னால் போய் நின்றது.

"என்னைப் பொறுத்தவரை இந்தப் 'பார்க்' இல்லை என்றால் மயிலாப்பூரே இல்லை" என்றான் பூமி.

"ஆமாம்! வெங்கட்நாராயணா ரோடில் உள்ள பார்க்கையும் இந்தப் பார்க்கையும் விட்டால் இந்த ஊரிலேயே வேறு நல்ல பார்க்குகள் கிடையாது."

அவளை இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோவை உரிய இடத்தில் கொண்டு போய் நிறுத்தி விட்டான் பூமி.

உள்ளே புல்வெளியில் அதிகக் கூட்டமில்லாத இடமாகப் பார்த்து அமர்ந்து நெடுநேரம் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். சித்ராவும் அவனும் இலட்சியம் முதல் அரசியல் வரை சகல எல்லைகளிலும் உரையாடினார்கள். சித்ரா ஒரு யோசனை சொன்னாள்.

"நேரமாகிவிட்டது. இனிமேல் நான் வீட்டில் போய்ச் சமைக்க முடியாது. நீங்களும் வாருங்கள்! இங்கேயே ஏதாவது நல்ல ஹோட்டலாகப் பார்த்து இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு போய்விடலாம்."

பூமி உடனே அவளுக்கு முத்தக்காள் மெஸ்ஸைப் பற்றியும் அதன் வீட்டுப்பாங்கான சமையல் தரத்தைப் பற்றியும் சொன்னான். அவளும் ஒப்புக் கொண்டாள். இரவு எட்டு அல்லது எட்டரை மணிக்கு மேல் போனால் முத்தக்காள் மெஸ்ஸில் கூட்டம் குறைந்துவிடும். அதுவரை பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் போகலாம் என்று தீர்மானித்துக் கொண்டார்கள் அவர்கள்.

முத்தக்காள் மெஸ்ஸில் முன்கூடத்தில் மேஜை நாற்காலி எல்லாம் உண்டு என்றாலும் உள்ளே ஓர் அறையில் பந்திப்பாய் விரித்து நாலைந்து பேர் தரையில் சம்பிரதாயமாக உட்கார்ந்து சாப்பிடவும் வசதி இருந்தது. இந்த உட்கார்ந்து சாப்பிடுகிற வசதி மூலம் வீட்டுப் பாங்கான மெஸ் சாப்பாட்டை மேலும் வீட்டுப் பாங்கானதாக்கிக் கொள்ள முடியும் என்பது பூமியின் கருத்து. அதனால் அவன் எப்போது மெஸ்ஸுக்கு வந்தாலும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிற அந்தரங்க அறையையே விரும்புவது வழக்கம்.

இந்த விவரங்களைப் பூமி சொல்லக் கேட்டபின் சித்ராவும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிற இடத்தையே விரும்பினாள். அவர்கள் அங்கே சாப்பிடப் போய்ச் சேர்ந்த போது கூட்டம் குறைந்து முத்தக்காள் சாவகாசமாக இருந்தாள். "வா தம்பி?" என்று பூமியை வாய் நிறைய வரவேற்றாள் முத்தக்காள். பூமி சித்ராவைப் பற்றி முத்தக்காளுக்கு எல்லா விவரமும் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தான். முத்தக்காள் அவர்களை மிகவும் பிரியமாக அமர வைத்துத் தானே உணவு பரிமாரினாள்.

"கலியாண விருந்துக்கு உக்கார வைக்கிற மாதிரி உங்களை உட்கார வச்சிருந்தாலும் இங்கே பரிமாறுகிற சாப்பாடு என்னவோ காய்ச்சல்காரனுக்குச் சமைச்ச மாதிரி பத்தியச் சாப்பாடுதான்" என்று நடுவே முத்தக்காளே பணிவாகச் சொல்லிக் கொண்டாள். ஆனால் பூமி அதை உடனே மறுத்து விட்டான்.

"மற்ற விதமான சாப்பாடுதான் இந்த ஊரில் எங்கே வேண்டுமானாலும் கிடைக்குமே முத்தக்கா! இந்த மாதிரிக் கமகமன்னு மணக்கிற மணத்தக்காளி வற்றல் குழம்புக்காகவும், ஜீரக ரசத்துக்காகவும் தானே இங்கே உன்னைத் தேடி வருகிறோம்?"

"அதெல்லாம் உனக்குத் தெரியும்ப்பா! நீ சொல்றே... இந்தத் தங்கச்சி மொதமொதலா வருது. தப்பா நினைச்சுக்கப் போகுது. அதுக்காவத்தான் நான் சொல்றேன்" என்று சித்ராவைப் பார்த்துச் சொன்னாள் முத்தக்காள்.

"எனக்கு இந்த மாதிரி ஹோம்லி மீல்ஸுன்னா ரொம்பப் பிடிக்கும்" என்றாள் சித்ரா.

அந்தச் சமயத்தில் வெளியே தேடிப் பார்த்துவிட்டு முத்தக்காளை காணாமல் ஏமாந்த இரண்டு மூன்று பேர் அவளைத் தேடி உட்பக்கமாக அந்த அறை வாயிலுக்கு வந்து நின்றார்கள். பீப்பாய் மாதிரி முன்னால் துருத்திய வயிறும் தோளிலிருந்து தரை வரை தொங்கும் துண்டுமாக ஒரு மீசைக்காரர் கையில் நோட்டுப் புத்தகம் பேனா சகிதம் மற்றவர்களுக்குத் தலைமை வகித்து வந்த மாதிரி அங்கே அட்டகாசமாக எதிரே வந்து நின்றார். அதிகார தோரணையில் வினவினார்.

"இந்த ஹோட்டல் ஓனரு யாரு?"

"ஏன்! நான் தான்? உங்களுக்கு என்ன வேணும்?"

"இந்தாம்மா! நம்ம தலைவருக்கு மணிவிழா வருது! அவருக்கு எடைக்கு எடை வெள்ளி குடுக்கிறதா முடிவு பண்ணியிருக்கிறோம். இந்த வார்டிலே வசூல் நடக்குது. வெத்திலை பாக்குக்கடை, பெட்டிக்கடை, பிளாட்பாரம் கடை எல்லாரும் வசூலுக்குக் குடுத்திருக்காங்க."

"இந்த மெஸ்ஸை வியாபாரத்துக்காகவோ லாபத்துக்காகவோ நான் நடத்தலீங்க. என் புருஷன் இந்தப் பேட்டையிலே டாக்ஸி ஓட்டிக்கிட்டிருந்திச்சு. என்னை நிராதரவா விட்டிட்டு அது போனப்புறம் இந்த வட்டாரத்து டாக்ஸி ஆட்டோ டிரைவருங்க யோசனைப்படி நான் இந்த மெஸ்ஸை நடத்திக்கிட்டிருக்கேன். வசூலுக்கெல்லாம் தர்ர மாதிரித் தொழிலா இதை நான் நடத்தலே."

"அப்படிச் சொல்லக் கூடாது, தந்தாகணும். தலைவர் மனம் வச்சா இந்த மெஸ்ஸையே நீங்க இங்கே நடத்த முடியாமல் பண்ணிடுவாரு! ஜாக்கிரதை."

இதுவரை பொறுமையாகவும் நிதானமாகவும் இலையைப் பார்த்துக் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த பூமி தலை நிமிர்ந்தான், வந்தவனைக் கேட்டான்.

"நீ யாருப்பா?"

"நான் தான் மணிவிழாச் செயலாளன் மறவை மதியழகன்."

"சொந்தக் கையாலே உழைச்சுப் பிழைக்கணும்னு இங்கே ஒரு விதவைக்கு இருக்கிற சுயமரியாதை கூட உனக்கு இல்லியே! வசூல்னு பிச்சைக்கு வர்ர மாதிரி வந்து நிக்கிறியே அப்பா!" என்று பூமி கூறியதும், "நீ யாரு அதைக் கேக்க? வெளியிலே வா உன்னைப் பேசிக்கிறேன்" என்பதாகச் சீறினான் மறவை மதியழகன். அவனும் பிறரும் வெளியேறிய பின்னர் பூமி சித்ராவை நோக்கிச் சொன்னான்:

"விருப்பமும் வசதியும் இல்லாதவனை வழிமறித்துக் கொள்ளைக்காரர்கள் திருடினால் அது வழிப்பறி. விருப்பமும் வசதியும் இல்லாதவனை இக்கால அரசியல்வாதி வற்புறுத்திப் பணம் பறித்தால் அதற்குப் பெயர் வசூல்."

"விளக்குமாற்றுக்குப் பெயர் பட்டுக்குஞ்சம் என்கிற மாதிரிதான்" - இது சித்ரா.

"நீ சும்மா இரு தம்பீ! உனக்கு எதுக்கு இந்த வம்பு?" என்று பூமியை அந்தச் சண்டையில் ஈடுபடவிடாமல் விலக்க முயன்றாள் முத்தக்காள்.

"எங்களைப் போன்ற டிரைவர்களுக்காகத்தானே நீங்கள் இந்த மெஸ்ஸையே நடத்துகிறீர்கள்? உங்களுக்கு வரும் பகை எங்கள் பகைதான்" என்று கூறியபடியே எழுந்து கைகழுவி விட்டு வெளியே அவர்களை தேடிச் சென்றான் பூமி.

வெளிப்புறம் மறவை மதியழகன் கும்பல் அவனைப் பந்தாடிவிடும் வெறியுடன் கொக்கரித்துக் காத்துக் கொண்டிருந்தது.

அத்தியாயம் - 10

எந்த ஒரு விதமான இலட்சியமும் பிரக்ஞையும் இல்லாமல் வெறும் செலூலாய்ட் பொம்மைகளைப் போல் தியேட்டர்களையும், ரெஸ்டாரெண்டுகளையும் சுற்றிச் சுற்றி வருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

முத்தக்காளும் சித்ராவும் சற்றுத் தயக்கத்தோடும், பயத்தோடும் பூமியைத் தடுக்க முயன்று தோற்றனர். பூமி அவர்கள் தடையைப் பொருட்படுத்தவில்லை.

"வாதங்களும், தர்க்க நியாயங்களும் காரணகாரிய விளக்கங்களும் கயவர்களுக்கு ஒரு போதும் புரியாது. அடி உதை மட்டும்தான் அவர்களுக்குப் புரியும். நான் தவறு எதுவும் செய்யப்போவதில்லை. அவர்களுக்குப் புரிகிற மொழியில் அவர்களிடம் பேசப் போகிறேன்."

"வேண்டாம் தம்பீ! சமாதானமாக ஏதாச்சும் சொல்லி அவங்களைத் திருப்பி அனுப்பிடுங்க. போதும்."

"சமாதானம் என்பது இரண்டு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கௌரவப்படுத்தப் பெற வேண்டிய ஒன்று. 'சமாதானம்' என்பதே கோழைத்தனம் என்று நினைக்கிற முரடர்களிடம் அதைப் பேசிப் பயனில்லை முத்தக்கா!"

"சண்டை கலவரம்னு கடைப்பேரு வீணாக் கெட்டுப் போகுமேன்னு நினைக்கிறேன்."

"பயத்தினாலும் தாழ்வு மனப்பான்மையாலும் இன்றைக்கு முதல் தவற்றைச் செய்யத் தொடங்கினால் பிறகு தொடர்ந்து தவறுகளாகவே செய்து கொண்டிருக்க வேண்டியதுதான். அதற்கு நான் உங்களை அனுமதிக்கப் போவதில்லை."

பூமி முத்தக்காளையும், சித்ராவையும் தடுத்து நிறுத்தி விட்டுச் சட்டைக் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு வாசல் பகுதிக்குப் பாய்ந்தான்.

அவனை வழிமறித்து அவசர அவசரமாகச் சித்ரா ஏதோ சொல்ல வந்தாள். அதைக் காதில் வாங்காமலே, "அன்றைக்குப் பாலாஜி நகர் ஸ்கூலில் பார்த்ததை விட உயிரோட்டமுள்ள நிஜமான கராத்தே டிமான்ஸ்ட்ரேஷனைப் பார்க்க ஆசையிருந்தால் வாசலுக்கு வரலாம்" என்று புன்னகையோடு திரும்பி அவளிடம் கூறி விட்டு விரைந்தான் பூமி.

அந்த மெஸ் முகப்பில் எப்போதும் ஆட்டோ டாக்ஸி டிரைவர்களின் கூட்டம் இருக்கும். அப்படித் தன் கூட்டம் என்று ஆதரவுக்கு யாருமே இல்லா விட்டாலும் அப்போது தனியாக அவர்களைச் சமாளிக்க முடியும் என்ற தைரியமும் நம்பிக்கையும் பூமிக்கு இருந்தது. யாரோ ஓர் அரசியல்வாதியின் ஆணவத்தைத் தூபதீபம் காட்டி ஆராதிப்பதற்காக ஏழை முத்தக்காள் போன்றவர்களைத் துன்புறுத்துவதைப் பூமி வெறுத்தான். அரசியல் வசூல்கள் என்பவை எல்லாமே அவனுக்கு அருவருப்பூட்டின.

அவன் வெளிப்பட்டு வாயிற்பக்கம் வந்த போது தொந்தியும், தொப்பையுமாக அந்த அரசியல் கட்சிக்காரர்கள் நாலைந்து பேர் கூடி நின்று அவனைக் கறுவிக் கொண்டிருந்தார்கள். பூமி எடுத்தவுடன் பேச்சில் தான் தொடங்கினான். "வசூல் என்கிற பேரில் ஏழை எளியவர்களையும், ஆதரவற்றவர்களையும் இப்படி வாட்டி வதைப்பது உங்களுக்கே நல்லாயிருக்கிறதா?"

"அதைக் கேக்க நீ யாருடா? பெரிய ஏழைப் பங்காளனோ?" என்று கூட்டமாக அவர்கள் அவன் மேல் பாயவே தன் கைவரிசையைக் காட்ட அவன் தயாரானான்.

இதில் எதிரிகள் முதலில் பயப்படவில்லை. தனி ஆளாக நின்று அவன் கராத்தே முறையிலும், குங்ஃபூ முறையிலுமாக மாற்றி மாற்றி அவர்களைப் பந்தாட ஆரம்பித்த பின்புதான் அவர்கள் மிரண்டு பதறிப் போய்ச் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். பக்கத்து வெற்றிலைப் பாக்குக் கடையில் நின்றிருந்த சில டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களும் பூமிக்கு ஆதரவாக வந்து சேர்ந்து கொள்ளவே எதிரிகள் ஓட்டமெடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.

பூமி இதைப் பற்றி ஏற்கெனவே நிறையக் கேள்விப்பட்டிருந்தான். அவ்வப்போது யார் ஆட்சியிலிருக்கிறார்களோ அந்தக் கட்சியைச் சேர்ந்த பேட்டை ரவுடிகள் ஒன்று சேர்ந்து கொண்டு, நடைபாதைக் கடைக்காரர்கள் காய்கறி கடை வைத்திருப்பவர்கள், பிளாட்பாரம் வெண்டர்கள் ஆகியோரை துன்புறுத்திப் பணம் கேட்பது ஒரு நிரந்தர வழக்கமாக இருக்கிறது. கொள்ளைக் கூட்டத்தை விட மோசமான ஒரு கும்பல் இதில் ஈடுபட்டிருப்பதைத் தடுக்க முடியவில்லை என்று எல்லோருமே வருந்திக் கொண்டிருந்தார்கள்.

மிகப் பல தவறுகளைப் பொறுத்துச் சிரமப்பட்டுக் கொண்டே அவற்றை எதிர்க்கும் துணிவின்றி வாழும் மக்களைப் பூமி இயல்பாகவே வெறுக்கும் சுபாவமுள்ளவன். ஒரு சாதாரண புழு பூச்சியைச் சீண்டினால் கூட அவற்றுக்கு உடனே கோபம் வரும். மனிதர்கள் புழுப் பூச்சிகளை விட கேவலமாக வாழக் கூடாதென்று எண்ணுகிறவன் அவன். ஆனால் பெரிய நகரங்களில் மனிதர்கள் புழுப் பூச்சிகளைப் போல அடங்கி வாழும் கேவலத்தைக் கண்டு பல முறை அவன் தனக்குள் உள்ளம் குமுறியிருக்கிறான். சகிப்புத்தன்மை என்ற போர்வையில் வரும் கையாலாகாத தனத்தையும் வெறுத்தான் அவன். இளைய தலைமுறையினரிடமாவது இந்த எதிர்மறைக் குணங்களை ஒழிக்க எண்ணினான்.

கோழைத்தனத்தை சகிப்புத் தன்மையாகப் பாசாங்கு செய்வதும் கையாலாகாத்தனத்தைப் பொறுமையைப் போலச் சித்திரிக்க முயல்வதும் அந்த உயர் குணங்களை அவமானப் படுத்துவதாகும் என்பது அவன் கருத்து.

வழக்கமாக இரவில் முத்தக்காள் மெஸ் முகப்பில் எப்போதும் நாலைந்து டாக்ஸி ஆட்டோக்கள் நிற்பதுண்டு. அவற்றின் டிரைவர்களும் அங்கேதான் படுத்திருப்பது வழக்கம்.

"மறுபடியும் அந்த நிதி வசூல்காரர்கள் வந்து ஏதாவது தொந்தரவு கொடுத்தாலும் கொடுப்பார்கள். கவனித்துக் கொள்ளுங்கள். பணிந்து போய்விடாதீர்கள்!" என்று அவர்களிடமும் முத்தக்காளிடமும் சொல்லி எச்சரித்துவிட்டுப் பூமி அங்கிருந்து சித்ராவுடன் புறப்பட்டான். சித்ராவை அவள் வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுவதாக அவன் ஆட்டோவில் புறப்பட்ட போது இரவு மணி ஒன்பதரைக்கு மேலே ஆகியிருந்தது.

"எல்லாக் கட்சிகளிலும் ரௌடிகளை வைத்து மக்களை மிரட்டுவது என்பது ஒர் புதிய அரசியல் கலாசாரமாகவே உருவாகிவிட்டது! முத்தக்காளைப் போல் சொந்த முயற்சியால் கைவருந்தி உழைத்துச் சிரம ஜீவனம் பண்ணுபவர்களை கூட அவர்கள் விட்டு வைக்கத் தயாராயில்லை" என்றாள் சித்ரா.

"சுரண்டல் என்பது நமது தேசிய கலாசாரங்களில் ஒன்றாகவே ஆகிவிட்டது."

"இளைஞர்கள் மட்டும் சினிமாப் பைத்தியங்களாகவும் பெண் பித்தர்களாகவும் இல்லாமல் சமூகப் பிரக்ஞையோடும் துடிப்போடும் இருந்தால் இந்த நாட்டில் எல்லாவகைச் சுரண்டல்களையும் உடனே ஒழித்து விட முடியும். சுமார் ரக சினிமாக்களும் மயக்க மருந்து போல் காமவெறியைப் பரப்பும் பத்திரிகைகளும் இந்நாட்டு இளைஞர்களை இன்னும் அரை விழிப்பு நிலையிலேயே வைத்துள்ளன. பிற்போக்குச் சக்திகளின் கையில் சிக்கியிருக்கும் இந்த இரண்டு சாதனங்களும் திருந்தாத வரை நாட்டுக்குள் சுரண்டலை ஒழிப்பது மிகவும் சிரமமான காரியமாகத்தான் இருக்கும்."

பூமியின் இந்தக் கருத்தில் இருந்த அடிப்படை உண்மை சித்ராவின் மனத்தைக் கவர்ந்தது. இளமை, புதுமை என்ற வார்த்தைகளையே கேவலப்படுத்திக் கொச்சையாக்குவது போல இளமைக் கதை, புதிய அலைக்கதை என்றெல்லாம் காமாந்தகார எழுத்துக்களுக்குப் பெயர் சூட்டுவதைக் கண்டு இந்நாட்டு இளைஞர்கள் எதிர்க்கவோ, எரிச்சலடையவோ செய்யாததிலிருந்து அவர்கள் இன்னும் அரைவிழிப்பு நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. இந்நாட்டு இளைஞர் சக்தி திட்டமிடப்பட்ட முறையில் இன்று வீரியமற்றதாக்கப்படுகிறது என்பது பற்றிப் பூமியின் கருத்து மிகவும் சரியான கணிப்பு என்றே சித்ராவுக்குத் தோன்றியது.

அவன் தன்னைப் பாலாஜி நகரில் இறக்கிவிட்டுப் போன பின்பு நெடுநேரம் வரை அவள் அவனைப் பற்றியும் முத்தக்காள் மெஸ் வாயிலில் சமூக விரோத சக்திகளை எதிர்த்து அவன் துணிந்து போராடிய தீரத்தைப் பற்றியுமே எண்ணிக் கொண்டிருந்தாள். பூமியின் மேல் அவளுக்கு அன்பும் பரிவும் பெருகின. அப்போது அவள் மனம் நிறைய அவன் ஒருவனே சிந்தனையானான்.

எந்த ஒருவிதமான இலட்சியமும், பிரக்ஞையும் பிடிப்பும் இல்லாமலே வெறும் செலூலாய்ட் பொம்மைகளைப் போல் தியேட்டர்களையும், ரெஸ்டாரெண்டுகளையும் சுற்றி வரும் இலக்கற்ற இளைஞர் கூட்டத்திலிருந்து பூமி தனியே விலகிக் கோபுரமாக உயர்ந்து காட்சியளித்தான். அவனுக்கு நல்லது கெட்டது தெரிந்தது. நல்லதை விரும்பினான். கெட்டதை வெறுத்தான்; எதிர்த்தான்.

நல்லதை விரும்பி ஆதரிக்கவும் துப்பில்லாமல் தீயதை எதிர்த்து வெறுக்கவும் துப்பில்லாமல் இன்றைய இளைஞர்களில் பலர் எதிலும் பிடிப்பின்றித் திரிசங்குகளாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். பூமி அப்படி இல்லை என்பதாலேயே அவளைக் கவர்ந்தான். அவனுடைய உடல் வலிமையும், அவளுக்குப் பிடித்திருந்தது. மனவலிமையும் அவளுக்குப் பிடித்தது. அன்றிரவு அவனைப் பற்றிய வியப்புக் கலந்த நினைவுகளுடனேயே உறங்கிப் போனாள் அவள்.

மறுநாள் அதிகாலையில் தினசரியைப் பார்த்தபோது அவளுக்குத் திகைப்பும் பதற்றமும் ஏற்பட்டன. முதல் நாளிரவு சண்டையெல்லாம் முடிந்து பூமி தன்னை ஆட்டோவில் பாலாஜி நகரில் திரும்பக் கொண்டு வந்து விட்டுவிட்டுப் பின் வீடு திரும்பியதும் அவளுக்கு நன்றாக நினைவிருந்தது.

ஆனால் அந்தக் காலை தினசரியில் வெளியாகியிருந்த செய்தியோ வேறுவிதமாகக் கூறியது. மைலாப்பூர் லஸ் பகுதியில் ஒரு ஹோட்டல் வாயிலில் ஆட்டோ - டாக்ஸி டிரைவர்களுக்கும் வசூலுக்காக வந்த ஓர் அரசியல் கட்சி ஆட்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் 'பூமிநாதன்' என்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டதாகச் செய்தி கூறியது.

ஒருவேளை பூமி தன்னை இறக்கி விட்டுவிட்டு வீடு திரும்பியதும் போலீஸார் தேடிச்சென்று அவனைக் கைது செய்து கொண்டு போயிருப்பார்களோ என்று எண்ணினாள் அவள். அரசியல் கட்சி ஆட்கள் வந்து புகார் செய்ததின் பேரில் போலீஸார் வீடு தேடிச் சென்று நள்ளிரவில் கதவைத் தட்டி எழுப்பிக் கூடப் பூமியைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போயிருக்க முடியும் என்று சித்ராவுக்குத் தோன்றியது.

அவளுக்குப் பதற்றமும் துயரமும் மனத்தில் ஏற்பட்டன வேதனை கவ்வியது. தனக்கு மிகவும் வேண்டிய மிகவும் நெருங்கிய ஒருவர் பாதிக்கப்பட்டது போன்ற உணர்வை அவள் அடைந்தாள். அப்போது உடனே ஓடிப்போய்ப் பூமியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

அத்தியாயம் - 11

சுயநலமும், சுரண்டலும், வெற்றுத் திமிரும் உள்ள தரங்கெட்ட அதிகார வர்க்கமே ஒரு தேசத்தின் ஆரோக்கியமான ஜனநாயகத்தை அழிக்கப் போதுமானவை.

பூமி கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியைப் பார்த்து அவள் பதறிப் போனாள். ஒரு வேளை இரவில் வீடு தேடிச் சென்று கதவைத் தட்டி எழுப்பிப் பூமியைப் போலீஸார் கூட்டிக் கொண்டு போயிருப்பார்களோ என்று சந்தேகப்பட்டாள் அவள். என்ன நடந்தது என்ற விவரங்களை யாரிடம் கேட்பது என்றே அவளுக்குப் புரியவில்லை. உடனே புறப்பட்டுப் போய் பூமியின் வீட்டருகே விசாரிக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு.

லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணாச்சி வீட்டிற்குத் தேடிப் போய் விசாரிக்கலாம் என்றால் முந்திய இரவு லஸ் கார்னரில் நடந்ததெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்குமோ, தெரியாதோ என்று சந்தேகமாகவும் இருந்தது. அரை நாள் லீவு எழுதி தேவகி மூலம் பள்ளிக்குக் கொடுத்தனுப்பிவிட்டுப் பூமியின் வீட்டருகே போய் விசாரித்தால் தான் ஏதாவது விவரம் தெரிய முடியும் என்று பட்டது.

உடனே லீவு லெட்டர் எழுதித் தேவகியின் வீட்டில் போய்க் கொடுத்து விட்டு அப்பர் சாமி கோயில் தெருப்பக்கம் விரைந்து வீரப் பெருமாள் முதலி தெரு சந்து பொந்துகளில் பூமியைத் தெரிந்த ஆட்டோ டிரைவர்கள் யாராவது எதிர்பட மாட்டார்களா என்று தேடி அலைந்தாள் அவள்.

அவள் எதிரே தற்செயலாகக் குப்பன் பையனும், கன்னையனும் எதிர்ப்பட்டார்கள். சித்ரா அவர்களிடமே விசாரித்தாள். நடு இரவில் வந்து போலீசார் கதவைத் தட்டி எழுப்பிப் பூமியைக் கைது செய்து கொண்டு போனார்கள் என்ற விவரம் அவர்களிடமிருந்து தெரிந்தது. டாக்ஸி ஆட்டோ டிரைவர்கள் யூனியனின் காரியதரிசியையும், ஓர் அரசியல் பிரமுகரையும் அழைத்துக் கொண்டு பூமியை ஜாமீனில் விடுவித்துக் கொண்டு வருவதற்காகத்தான் அவர்கள் அப்போது போய்க் கொண்டிருந்தார்கள்.

சிந்தித்த போது, சித்ராவுக்கு ஒரு கணம் தயக்கமாகவும், கூச்சமாகவும் கூட இருந்தது. தான் அப்படி நெருக்கமும், அடையாளமும் காட்டிப் பூமியோடு சம்பந்தப்படுத்திக் கொண்டு அவனைத் தேடிப் போலீஸ் நிலையத்துக்குப் போவது சரியா என்று யோசித்தாள் அவள். பேச்சுக்கும், கவனத்துக்கும், வதந்திகளுக்கும் இடமாகப் போகிற ஒரு காரியத்தைத் தன்னைப் போல் திருமணமாகாத ஓர் இளம் பெண் செய்யலாமா என்ற தயக்கம் மேலெழுந்தவாரியாகத் தோன்றி உடனே மறைந்து விட்டது.

பூமியைப் பார்ப்பதற்காகவே அரை நாள் லீவு போட்டு விட்டுப் புறப்பட்டு வந்து இப்போது திரும்பிப் போவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாததாக இருந்தது. அவள் அப்போது அவர்களோடு போலீஸ் நிலையத்திற்குச் சென்றாள். மெய்யான அன்பினால் தூண்டப் பெற்று எழும் உணர்ச்சியை எந்த மேலோட்டமன போலித் தயக்கமும் தடுத்துவிட முடியாது என்பதற்கு அவளே உதாரணமாகியிருந்தாள்.

போலீஸ் நிலைய வாயிலில் சாலையை மறித்துக் குறிக்கும் நெடுக்குமாக ஏராளமான ஆட்டோ, டாக்ஸிகள் நின்று கொண்டிருந்தன. போக்குவரத்து சாலையின் இரு முனைகளிலும் நெடுந்தூரத்துக்கு ஸ்தம்பித்துப் போயிருந்தது. பூமி என்ற வலிமை வாய்ந்த இளைஞனுக்குப் பின்பலமாயிருந்த மாபெரும் சக்தி தெரிந்தது. ஒற்றுமையும் நியாய உணர்ச்சியும் இருந்தால் சாதாரணமாக மக்களால் யாரையும் எந்த அநீதியையும் தட்டிக் கேட்க முடியும் என்பது கண் முன்னே நிதரிசனமாகத் தெரிந்தது.

உடன் வந்தவர்களோடு அவள் போலீஸ் நிலைய காம்பவுண்டுக்குள் நுழைந்த போது இரு போலீஸ்காரர்களுக்கு நடுவே பூமி உள்ளே கூட்டிக் கொண்டு போகப்படுவதைப் பார்த்தாள். அவள் உள்ளே வருவதைப் பூமியும் பார்த்து விட்டான். முக மலர்ச்சியோடு அவளை நோக்கிக் கையை அசைத்தான் அவன்.

தான் அங்கு வந்திருப்பதை அவன் பார்த்து விட்டதில் அவள் மனம் திருப்தியடைந்தது. தான் வராவிட்டாலும் அவனைக் கவனித்து அவனுக்காகக் கவலைப்பட்டு, அவனை விடுவித்து அழைத்துச் செல்வதற்காக ஒரு பெரிய தோழமையுள்ள கூட்டம் அங்கே காத்திருப்பதைக் கண்டு அவளுக்குப் பெருமையாயிருந்தது.

அந்தச் சமயத்தில் பூமியைப் பற்றியும், அவளைப் பற்றியும் ஒரு விவரமும் தெரியாத யாரோ ஓர் அப்பாவி அவளிடமே வந்து, "நீ அந்த ஆளோட வூட்டுக்காரியாம்மா?" என்று வேறு கேட்டு விட்டான்.

சித்ராவுக்கு குப்பென்று பதட்டமும், வெட்கமுமாக முகம் சிவந்துவிட்டது. இப்படிக் கேட்டுவிட்டு எதிரே நின்றவனிடம் ஆமாம் என்றும் சொல்ல முடியாமல் இல்லையென்றும் சொல்ல முடியாமல் திகைத்து மலைத்துப் போய் நின்றாள் அவள்.

"இந்தம்மாவைப் பார்க்கப் பாவமா இருக்குதுப்பா" என்று பக்கத்தில் நின்ற வேறொருவர் பக்கம் திரும்பிச் சொல்லி அனுதாபப்பட்டுக் கொண்டான் அந்த ஆள்.

அறியாமையாலும், அளவுக்கதிகமான கற்பனை உணர்ச்சியாலும் அந்த ஆள் அப்படிச் சொல்லியதில் கூட உள்ளத்தின் அடி மூலையில் அவளுக்கு மகிழ்ச்சியாகவும் குறுகுறுப்பாகவும் இருந்தது.

அங்கே போலீஸ் நிலையத்தில் கூடி நின்ற கூட்டத்திலிருந்து சித்ராவுக்கு மேலும் சில தகவல்கள் தானாகவே தெரிந்தன.

'இதையெல்லாம் போய் பெரிது படுத்துவானேன்' என்ற மெத்தனத்தில் முத்தக்காள் தன் மெஸ்ஸில் புகுந்து நிதி வசூல் என்ற பெயரில் கலாட்டா செய்ய முயன்றவர்களைப் பற்றிப் போலீஸில் புகார் எதுவும் கொடுக்காமல் மெத்தனமாக இருந்து விட்டாள்.

அதனால் தற்காப்புக்காக பூமி தன்னுடைய கராத்தே திறமையால் அவர்களைத் துரத்தி அடித்தவுடன் அவர்கள் முந்திக் கொண்டு போய்ப் போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள். தாங்கள் வசூலுக்குப் போய் முத்தக்காளை வற்புறுத்திப் பணம் கேட்டதையும், அதனால் தகராறு மூண்டதையும் அறவே மறைத்து விட்டுச் சாப்பிடுவதற்காகப் போன இடத்தில் பூமியை ஏவி விட்டுத் தங்களைத் தாக்கியதாகப் போலீஸில் புகார் கொடுத்து விட்டார்கள் அவர்கள்.

போலீஸார் அதன் விளைவாக இரவோடு இரவாகப் பூமியைத் தேடிச் சென்றதோடு முத்தக்காள் மெஸ்ஸையும் 'ரெய்டு' என்ற பேரில் பந்தாடியிருந்தார்கள். அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் தலையீட்டாலும், ஆலோசனையாலும் காரியங்கள் முத்தக்காளுக்கும் பூமிக்கும் எதிராகவே நடந்திருந்தன.

பொதுமக்களின் நண்பனாகவும் சட்ட நியாயங்களின் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டிய போலீஸ் அரசியல் செல்வாக்குள்ள சுரண்டல் பேர்வழிகளின் கையாள்களாகப் பயன்படும் நிலைமை வந்தால் அதைப் போல் மோசமானது வேறெதுவும் இல்லை. சுயநலமும், சுரண்டலும் வெற்றுத் திமிரும் உள்ள தரங்கெட்ட அதிகார வர்க்கமே ஒரு தேசத்தின் ஆரோக்கியமான ஜனநாயகத்தை அழிக்கப் போதுமானவை. தனிமனிதர்கள் நோய்வாய்ப்பட்டால் சிகிச்சையளிக்கலாம். ஒரு தேசத்தில் ஒழுங்கும் ஜனநாயகமுமே நோய்வாய்ப்பட்டு விட்டால் யாரால் திருத்த முடியும்?

நள்ளிரவில் கைது செய்யப்பட்ட பூமி ஜாமீனில் விடுதலையாகி வந்தான். அவனைச் சுற்றிலும் பெருங்கூட்டமாக டிரைவர்களும், நண்பர்களும், சூழ்ந்திருந்ததால், சித்ரா அருகில் நெருங்கிச் சென்று பேச முடியவில்லை.

அத்தனை கூட்டத்திலும் ஞாபகமாக அவனே அவள் பக்கம் தேடி வந்து, "நான் இப்போது இவர்களோடு கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கிறது. வக்கீலைப் பார்க்க வேண்டும். முத்தக்காள் மெஸ்ஸில் போய் இருந்தால், அங்கே வந்து பார்க்கிறேன்" என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டுப் போனான்.

சித்ரா தானாகவே மெஸ்ஸுக்குப் போக வேண்டுமென்று தான் இருந்தாள். போலீஸ் நிலைய வாயிலில் முத்தக்காள் மெஸ்ஸும் பழிவாங்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்ட போதே அவள் அங்கு போய்ப் பார்க்க வேண்டுமென்றுதான் நினைத்திருந்தாள்.

தங்கள் அளவில் ஒரு வம்புக்கும் போகாமல் ஒதுங்கி வாழ்பவர்களைக் கூட அரசியல்வாதிகள் சீண்டிவிட்டு வம்புக்கு இழுத்து நஷ்டப்படுத்துவதைப் பார்த்து மிகவும் வருத்தமாய் இருந்தது.

வாரிசு இல்லாத ஏழை நடுத்தர வயது விதவை ஒருத்தி காலஞ் சென்ற கணவனின் தொழிலில் அவனோடு அன்று தோழமை கொண்டு பழகியவர்களின் இன்றைய அநுதாபத்தோடு ஒரு மெஸ் நடத்திப் பிழைத்தால் அதற்கும் இடையூறு வருகிறது.

போலீஸ் நிலையத்திலிருந்து நேரே மெஸ்ஸுக்குத்தான் போனாள் சித்ரா. பூமி தன்னை அங்கே போகச் சொல்லியதில் ஏதோ குறிப்பு இருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

மெஸ் வாயிலில் இரும்புத் தொப்பிப் போலீஸ்காரர்கள் இருவர் தென்பட்டனர். சாவு வீடு போல அப்பகுதி களை இழந்து காணப்பட்டது. அருகே உள்ள வெற்றிலை பாக்குக் கடை கூட மூடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கல்லெறியும், சோடா பாட்டில் வீச்சும் நடந்திருப்பதற்கான அடையாளமாக தெருவிலும் பிளாட்பாரத்திலும் கற்கள், கண்ணாடி உடைசல்கள் நிரம்பிக் கிடந்தன. மெஸ் மட்டுமின்றி அக்கம் பக்கத்துக் கடைகள் உட்பட விளம்பரப் பலகைகளும், இரவில் அது தெரிவதற்காகப் போடப்பட்டிருந்த குழல் விளக்குகளும், பல்புகளும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

கலகலப்பாக இருக்க வேண்டிய பகுதி வெறிச்சோடிக் கிடந்தது. இரவு அரசியல் தூண்டுதலின் பேரில் நடந்த போலீஸ் ரெய்டுக்குப் பிறகு அதிகாலை மூன்று மணிக்கும் ஐந்து மணிக்கும் நடுவே இந்தத் தாக்குதல் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. மெஸ்ஸுக்குள் நுழையும் பிரதான வாயிற் கதவுகள் கூட உடைக்கப்பட்டிருந்தன.

உள்ளே நுழைய முயன்ற அவளைப் போலீஸ்காரர்கள் ஏதோ சொல்லித் தடுக்க முயன்றனர். 'மெஸ் நடத்துகிற அம்மாளுக்குத் தான் மிகவும் வேண்டியவள்' என்று அவள் பதில் சொல்லியவுடன் அவர்கள் வேண்டா வெறுப்பாக அவளைத் தடுப்பதை நிறுத்திக் கொண்டனர்.

உள்ளே நுழைந்தால் அங்கேயும் பயங்கரமான சேதங்கள் தென்பட்டன. பாத்திரம் பண்டங்கள், மேஜை, நாற்காலிகள், டவரா டம்ளர்கள் எல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு அங்கங்கே கிடந்தன. பால் தயிர் கொட்டப்பட்டிருந்தது. காய்கறிகள் முழுசாகவும் சமையலுக்கென்று நறுக்கப்பட்டவையுமாகச் சிதறிக் கிடந்தன. அடுப்பும், அடுப்பு மேடையும் இடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

அரசி, பருப்பு, புளி என்ற ஸ்டோர் ரூமில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த சாமான்கள் சூறையாடப்பட்டிருந்தன.

வசூலுக்குப் பணம் தர மறுத்ததோடு பூமியிடம் வாங்கி கட்டிக் கொண்ட கோபமும் சேரவே பெருங் கூட்டமாகக் கம்பு கடப்பாரையுடன் வந்து தாக்கியிருக்க வேண்டுமென்று தோன்றியது. இடம் குரூரமானதொரு போர் நடந்து முடிந்து விட்ட ரணகளமாகக் காட்சியளித்தது.

எல்லாவற்றையும் சரிபடுத்திப் போனது வந்ததை ஒழுங்கு செய்து மறுபடி மெஸ்ஸை நடத்த வேண்டுமானால் குறைந்தது ஒரு வார காலமாவது தேவைப்படும் போலத் தோன்றியது. முத்தக்காள் கூட உள்ளே இல்லை. முன் நெற்றியில் கட்டுடன் மாவரைக்கிற கிழவர் மட்டுமே ஒரு மூலையில் படுத்திருந்தவர் சித்ராவைப் பார்த்ததும் எழுந்திருந்து வந்தார்.

"அம்மா எங்கேப்பா?"

"ராயப்பேட்டா ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகியிருக்காங்க... அங்கே போய்ப் பாருங்க..."

"இதெல்லாம் எப்போது நடந்தது?"

"ராத்திரி ஒரு மணிக்குப் பூமி சாரைத் தேடி முதல்லே போலீஸ் இங்கே வந்து சோதனை பண்ணினாங்க - அப்புறம் மூணு மணி சுமாருக்கு ஒரு பெரிய ரவுடிக் கூட்டம் வந்து தான் இந்தக் கூத்தெல்லாம் பண்ணிச்சுது!... அம்மாவுக்குப் பலமான காயம்... பாவம்..."

எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டு அவள் வெளியே வரவும் பூமி அங்கே தேடிக் கொண்டு வரவும் சரியாயிருந்தது.

இருவருமாக உடனே இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்.

அத்தியாயம் - 12

இன்றைய கவிதைகள் வெறும் காகிதங்களில் எழுதப்படுவதில்லை. அவை வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களின் கண்ணீரிலும், வரதட்சணைக் கொடுமையால் மணமாகாது தவிக்கும் யுவதிகளின் தவிப்பிலும், உழைப்பவர்களின் வறுமையிலும் எழுதப்படுகின்றன.

முத்தக்காளுக்குத் தன் மேல் கோபமாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. சாதாரணமாகப் போயிருக்க வேண்டிய விஷயத்தைப் பெரிய சண்டையாக்கி மெஸ்ஸில் இவ்வளவு சேதமும் விளையத் தான் காரணமாக இருந்துவிட்டதாக அவளுக்குத் தோன்றுமோ என்று பூமிக்குத் தயக்கமாக இருந்தது. அதிகம் படிப்பறிவில்லாத ஒரு சிறு வயது விதவைக்கு அத்தகைய மனநிலைதான் இருக்குமென்று அவனால் மிகவும் சுலபமாகவே அநுமானிக்க முடிந்தது. அளவு கடந்த தைரியத்தாலும், தன்மானத்தாலும் வருகிற நிரந்தரப் பெருமையைவிடச் சுமாரான பணிவினாலும் பயத்தினாலும் கிடைக்கிற தற்காலிக லாபமே போதுமென்றுதான் சராசரியானவர்கள் நினைப்பார்கள். ஒருவேளை முத்தக்காளும் அப்படிச் சராசரியானவளாகவே இருக்கக்கூடும்.

அங்கே அநியாயமாக வசூலுக்கு வந்தவர்கள் மேல் தான் கொண்ட கோபம் எதிர்ப்பு, நியாயவாதப் பேச்சுக்கள், முடிவான அடிதடி சண்டை எல்லாமே இப்போது இவ்வளவு தூரம் நஷ்டப்பட்டுவிட்ட பின் முத்தக்காளுக்கு எரிச்சலூட்டியிருக்கலாம்.

ஓர் ஆறுதலுக்காகவாவது அவளை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துத்தான் ஆகவேண்டும். பார்க்காவிட்டால் அது இன்னும் தப்பாகப்படும். பார்க்கும்போது அவள் படலாம் என்று எதிர்பார்க்கப் பெறுகிற கோபத்தையும், எரிச்சலையும், வெறுப்பையும் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும். சித்ராவே அவனைக் கேட்டாள்:

"பாவம்! இது இத்தனை பெரிய கலவரத்திலும் நஷ்டத்திலும் கொண்டு போய்விடும் என்று அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க."

"பாவிகள்! ஒரு வாரத்துக்கு மெஸ் நடக்க முடியாதபடி பண்ணி விட்டார்கள்."

"நீங்கள் தலையிடாம விட்டிருந்தா வசூலுக்கு வந்தவங்களுக்கு ஏதாவது பணம் கொடுத்துச் சமாளிச்சிருப்பாங்களோ என்னவோ?"

தன் மனத்தில் ஓடுகிறாற் போன்ற அதே நினைவுகள் அவள் மனத்திலும் ஓடுவது பூமிக்கு அப்போது புரிந்தது. லாபம் தருகிற தோல்வியைக் கூடப் பாமர மனிதர்கள் வரவேற்று மகிழ்ந்து விடுவார்கள். நஷ்டம் தருகிற வெற்றியை வரவேற்க மாட்டார்கள் என்பதை அவன் அறிவான்.

நஷ்டம் தந்து விட்ட, நஷ்டம் தான் தரும் என்று நிரூபித்து விட்ட அந்த அநாவசியமான வெற்றி முத்தக்காளுக்குப் பெரும் அதிருப்தியைத்தான் அளித்திருக்க முடியும். அதில் சந்தேகமில்லை. ஆஸ்பத்திரி வார்டில் முத்தக்காள் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். மண்டையில் கட்டுப் போட்டிருந்தது. இரண்டு முழங்கைகளாலும் தலைக்கு முட்டுக் கொடுத்தபடி கவலையே வடிவமாக இருந்தாள். சித்ராவும், பூமியும் படுக்கை அருகே வந்து நின்றதைக் கண்ட பின்னும் ஓரிரு விநாடிகள் எதுவும் பேசத் தோன்றாமலோ அல்லது வேண்டுமென்றோ அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாற் போலிருந்தது.

பூமிக்கோ சித்ராவுக்கோ முத்தக்காளின் போக்கு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. ஏற்கெனவே அவர்கள் எதிர்பார்த்ததுதான். பாமரர்களும், பெரும்பாலான நடுத்தர மக்களும் தங்களைக் காட்டிலும் வலிமையுள்ள தீயவர்களை நேரடியாக எதிர்த்துக் கொள்வதை விட அவர்களுக்கு விட்டுக் கொடுத்துத் தன்னைக் கட்டிக் கொண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்வதையே விரும்புவார்கள் என்பது பூமி ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். பூமி தான் பேச்சைத் தொடங்கினான்.

"நடந்தது நடந்துவிட்டது. கவலைப்படாதீர்கள். உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்."

"பார்க்கிறதுக்கு இனிமே என்ன மிச்சமிருக்குத் தம்பீ? அதான் எல்லாம் போயாச்சே!"

முத்தக்காளின் குரலில் கோபமும் அதனோடு கலந்து விரக்தியும் இணைந்திருப்பது தெரிந்தது. ஏற்கெனவே கணவனை இழந்ததால் ஏற்பட்டிருந்த விரக்தி இப்போது இன்னும் அதிகரித்திருப்பதாகத் தெரிந்தது.

"பாத்திரம் பண்டம், அம்மி, உரல் எல்லாத்தையுமே அடிச்சு நொறுக்கிப் போட்டுட்டாங்களே! எப்படியப்பா இனிமே மெஸ்ஸை நடத்துவேன்? நான் தனிக்கட்டை, யார் உதவியோட எதை முதலாப் போட்டு இதை எல்லாம் சரிப்படுத்துவேன்?" என்று அழத் தொடங்கி விட்ட முத்தக்காளை எப்படி ஆறுதல் கூறி அமைதியடையச் செய்வதென்று புரியாமல் அவர்கள் தயங்கினார்கள்.

முத்தக்காள் மிகவும் அதிர்ச்சியடைந்துதான் போயிருந்தாள். அவளிடம் பேசி ஆறுதல் கூறிக் கொண்டிருப்பதை விடச் செயலில் காட்டுவதுதான் சரி என்று தோன்றியது பூமிக்கு. தன் மேல் அவளுக்கு நம்பிக்கையும் பற்றும் வருவதற்கு அது ஒன்றுதான் வழி என்பது தெரிந்தது.

சம்பிரதாயமாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு முத்தக்காளிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். சித்ரா பள்ளிக்குப் போக வேண்டிய நேரம் ஆகியிருந்தது. பஸ் பிடித்துப் போனால் சரியாயிருக்கும் என்றாள் அவள். அரைநாள் லீவுதான் போட்டிருக்கோம் என்பது வேறு நினைவுக்கு வந்தது அவளுக்கு.

"என் கூட வீடு வரை வந்தால் ஆட்டோவிலேயே கொண்டு போய் விட்டு விடலாம்" என்றான் பூமி. அவள் பஸ்ஸிலேயே போய்க் கொள்வதாகச் சொல்லிவிட்டாள். அவளை அனுப்பிவிட்டுப் பூமி மைலாப்பூர் சென்றான். ஆட்டோவைக் கன்னையன் மூலம் வேறு ஓர் ஆள் ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்து அனுப்பிவிட்டு வீட்டுக்குள் சென்று தன்னுடைய சேவிங்ஸ் பாஸ் புத்தகத்தை எடுத்துக் கொண்டு லஸ் முனையிலிருந்த பாங்கின் அந்தப் பகுதிக்குச் சென்றான்.

பாங்க் கிளையலுவலகத்தின் முகப்பில் புரட்சிமித்திரனின் படகுக் கார் நின்று கொண்டிருந்தது. கார் ஏ.ஸி. செய்யப்பட்டு மங்கலான குளிர்ச்சிக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.

பூமி காரைக் கடந்து மேலே பாங்கின் வாசலுக்காகப் படியேறியபோது கையில் ஒரு கற்றை புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுக்களுடன் புரட்சிமித்திரன் படியிறங்கி வந்து கொண்டிருந்தான்.

பூமியை எதிரே பார்த்ததும் அவன் பிடித்துக் கொண்டு விட்டான்.

"நான் கொடுத்த இதழ்களைப் படிச்சீங்களா? என் புதுக்கவிதைங்க எல்லாம் எப்படி? உங்களைப் பார்க்கவே முடியலியே? லெட்டராவது போடுவீங்கன்னு பார்த்தேன். அதுவும் போடலே..."

அதைக் கேட்டு பூமிக்கு எரிச்சலாயிருந்தது. நிஜமாகவே பிரச்னைகளை எதிர் கொண்டு சமாளித்துக் கொண்டு திணறும் தன் போன்ற கடின உழைப்பாளிகளிடம் பிரச்னைகளைப் பற்றிய பிரசங்கங்களிலும் கவிதைகளிலும் காலம் கடத்துகிற புரட்சிமித்திரனைப் போன்ற தளுக்குப் பேர்வழிகள் இப்படி விசாரிப்பது பற்றிய போலித்தனமே பூமிக்கு கோபமூட்டியது.

ஒரு தீவிரமான புரட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் முன்னால் அதற்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் புரட்சியைப் பற்றி வறட்டுப் பிரசங்கம் பண்ணிக் கொண்டு நிற்கிறவனை முதலில் ஒழிக்க வேண்டும். புரட்சிமித்திரனும் அப்படிப்பட்டவர்களில் ஒருவனாகவே பூமிக்குத் தோன்றினான்.

"இன்றைய கவிதைகளை வெறும் காகிதங்களில் எழுத முடியாது. வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞனின் கண்ணீரையும், வரதட்சிணைக் கொடுமையால் கன்னிகழியாமல் நிற்கும் பெண்ணின் துயரத்தையும், உழைப்பவர்களின் சிரமங்களையும் சேர்த்துப் பார்த்தாலே இன்றைய கவிதை எனக்குப் படிக்கக் கிடைத்துவிடும்! அதைவிட அதிகமாக எதை உமது இதழ்களில் நான் படிக்கப் போகிறேன்?"

"அப்படியில்லை! என் இதழ்களை நீங்கள் படித்தே ஆக வேண்டும். இதோ அடுத்த இதழுக்காகவே தயாரிப்புச் செலவுக்குப் பணம் எடுத்துக் கொண்டு போகிறேன்."

"எதற்குப் பணத்தை வீணாக்குகிறீர்கள்? பசித்தவர்களுக்கு ஏட்டுச் சுரைக்காயாக வழங்குவதை விடப் பணமாகவே கொடுத்து விடலாம்."

"சரி! அதிருக்கட்டும்! சித்ராவைச் சமீபத்தில் பார்த்தீர்களா?"

"ஏன்? சற்று முன்பு கூடப் பார்த்தேன். காலையிலிருந்து இதுவரை என்னோடு பேசிக் கொண்டிருந்து விட்டுச் சிறிது நேரத்துக்கு முன்புதான் பள்ளிக்குப் புறப்பட்டுப் போகிறாள்."

இதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் ஒரு தினுசாகப் பூமியை முறைத்துப் பார்த்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான் புரட்சிமித்திரன். பூமி பாங்குக்குள் சென்றான். தன் கணக்கிலிருந்து இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தான். மெஸ்ஸுக்குப் போனான். வேலையாட்களை ஒன்று சேர்த்து மறுநாள் காலையிலேயே மெஸ்ஸில் அடுப்புப் புகைய வேண்டும் என்ற பிடிவாதத்துடன் சீரமைப்புப் பணிகளில் இறங்கினான்.

முத்தக்காள் மேல் அநுதாபமுள்ள வேறு பல டிரைவர்களும் உடலுழைப்பை இலவசமாகத் தர முன் வந்தனர். புதிய சாமான்கள் வாங்கப்பட்டு ஸ்டோர் ரூம் நிறைக்கப்பட்டது. இடிந்த பகுதிகள் இரவோடிரவாகச் சரி செய்யப்பட்டன. வாசலில் 'மறுநாள் காலையிலிருந்து மெஸ் வழக்கம் போல் நடக்கும்' என்று பெரிதாக போர்டு எழுதி வைக்கப்பட்டது. புதுப் பானைகள், சட்டிகள், பாத்திரங்கள் வாங்கப்பட்டன.

பூமி அன்றிரவு வீட்டுக்குப் போகவே இல்லை. மாவரைப்பவரைத் தூண்டி வேலைகளைக் கவனிக்கச் செய்தான். உடைந்த மேஜை நாற்காலிகளில் செப்பஞ் செய்ய முடிந்தவற்றைச் செப்பஞ் செய்தும் அறவே உடைந்து போனவற்றிற்குப் பதிலாகப் புதிது வாங்கிப் போட்டும் ஏற்பாடுகள் செய்தான்.

அந்த மெஸ்ஸின் வாழ்க்கையோடு தங்களைப் பிணைத்துக் கொண்டிருந்த பலர் பூமியோடு தோளோடு தோள் நின்று ஒத்துழைத்தனர். முத்தக்காள் என்ற தனி ஒருத்திக்கு வந்த துயரமாக அதை அவர்கள் நினைக்கவில்லை. தங்களுக்கே வந்த துயரமாக எண்ணிச் சீர் செய்தனர். புதிய ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தினர்.

எல்லா வேலைகளும் முடிந்த போது அதிகாலை மூன்று மணி. ஒரு மணி நேரம் கண்ணயர முடிந்தது. ஆனால் அதிக உழைப்பின் காரணமாக உறக்க வேளை தப்பிய பின் அவர்களுக்கு உறக்கமே வரவில்லை. டாக்ஸி ஆட்டோ டிரைவர்களுக்குப் பயன்படுவதாக இருந்ததினால் காலை ஐந்து மணிக்கே மெஸ்ஸில் கலகலப்பு ஆரம்பமாகிவிட்டது.

பூமி கல்லாவில் உட்கார்ந்து வியாபாரம் செய்தான். மற்றவர்களோடு பரிமாறவும் செய்தான். பார்சல் கட்டினான். அன்று பிற்பகல் முத்தக்காள் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகித் திரும்பிய போது மெஸ் இருந்த நிலைமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள்.

ரிக்ஷாவிலிருந்து இறங்கித் தன் கண்களையே நம்ப முடியாமல் "என்ன தம்பி இதெல்லாம்? அதுக்குள்ளாற எப்படி இதெல்லாம் செய்ய முடிஞ்சுது?" என்று வியந்த முத்தக்காளை மலர்ந்த முகத்தோடு வரவேற்றுக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றான் பூமி.

முத்தக்காளுக்கு மெஸ்ஸிலேயே பின் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய அறைதான் இருப்பிடம். அங்கே அழைத்துச் சென்று கயிற்றுக் கட்டிலில் விரிப்பு விரித்துத் தலையணை போட்டு அவளைப் படுக்கச் செய்தான் பூமி.

"தம்பி!..." என்று எதையோ உணர்ச்சி வசப்பட்டுச் சொல்ல ஆரம்பித்த அவளை "ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்! அப்புறம் பேசலாம்" என்று கூறிவிட்டு வேலைகளைக் கவனிப்பதற்குச் சென்றான் பூமி.

அத்தியாயம் - 13

செயலுக்குச் சோம்புகிறவர்களை விட செய்ய நினைக்கவே சோம்பல்படுகிறவர்கள் ஒரு தேசத்தின் உடம்பில் ஊளைச் சதை போல வேண்டாதவர்களாகத் தங்கி இருப்பவர்கள்.

முத்தக்காளுக்கு ஒரு பிரமிப்பே ஏற்பட்டிருந்தது. எதிரிகள் துவம்சம் பண்ணிவிட்டுப் போயிருந்த நிலையில் நீண்ட காலத்துக்கு அந்த மெஸ்ஸை ஒழுங்கு செய்து நடத்தவே முடியாமற் போகுமோ என்று பயந்திருந்தாள். அப்புறம் அதை அங்கே நடத்த விடுவார்களோ என்று தயங்கும் அளவிற்கு அவளை அச்சுறுத்திவிட்டுப் போயிருந்தார்கள் கலகக்காரர்கள். அதனால்தான் அவளுடைய ஆற்றாமையும் கோபமும் கலந்த மனநிலையில் 'இவ்வளவிற்கும் காரணம் பூமிதானே?' என்று ஆத்திரம் ஏற்பட்டிருந்தது. பூமியும் சித்ராவும் தன்னைப் பார்க்க இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வந்த போது கூட அவள் ஆத்திரத்தோடும் மனத்தாங்கலோடும்தான் அவர்களை எதிர்க்கொண்டாள்.

இப்போது அப்படி முன்பு நடந்து கொண்டதற்காக முத்தக்காளே உள்ளூர வருந்தினாள். பூமி அசுர சாதனை செய்து மெஸ்ஸை மறுபடி உயிர்ப்பித்திருந்தான். உண்மையில் அது அசுர சாதனையாகத்தான் தோன்றியது முத்தக்காளுக்கு. தானோ வேறு யாராவது தனக்கு வேண்டியவர்களோ முயன்றிருந்தால் கூட இவ்வளவு விரைவில் மெஸ்ஸை நடத்த முடியுமா என்ற மலைப்பு இப்போதும் அவள் மனத்தில் ஏற்பட்டிருந்தது.

மாலை வேளை முடிந்து இருட்டுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புதான் சித்ரா தற்செயலாக மெஸ் பக்கம் வந்தாள். அவள் வந்த போது மெஸ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பின் பக்கத்து அறையில் முத்தக்காள் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து படுத்திருப்பதைச் சொல்லி அவளோடு சிறிது ஆறுதலாகப் பேசிக் கொண்டிருக்குமாறு சித்ராவை அனுப்பி வைத்தான் பூமி. சித்ரா அவன் சொன்னபடியே செய்தாள்.

நீண்ட நாள் பழக்கமுள்ள வாடிக்கையாளர்களான வேறு இரண்டொரு டாக்ஸி டிரைவர்களும் முத்தக்காளைப் பார்த்துப் பேச வேண்டுமென்று பூமியிடம் கேட்டுக் கொண்டு பின்பக்கத்து அறைக்குப் போய் விசாரித்துப் பேசிவிட்டு வந்தார்கள். மற்றபடி மெஸ் விஷயமாக அவளை யாரும் போய்த் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டான் பூமி. மனமும் உடலும் நொந்து போயிருக்கும் அவளுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று பூமி எல்லாவற்றையும் மற்றவர்களும் தானுமாகச் சமாளித்துக் கொண்டான்.

ஆட்டோ - டாக்ஸி டிரைவர்கள் யூனியன் பூமியின் மேல் கொடுக்கப்பட்டிருந்த புகாரையும் வழக்கையும் சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறச் செய்யும்படி முயன்று கொண்டிருந்தது. அந்தத் தகவலையும் சம்பந்தப்பட்ட ஓர் ஆள் வந்து தெரிவித்து விட்டுப் போனான். மெஸ் தாக்கப்பட்டது சம்பந்தமாக யூனியன் முயற்சியால் மயிலாப்பூர் தேரடியில் ஒரு கண்டனக் கூட்டத்துக்கு வேறு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

தாக்கப்பட்டு மறுபடி புதிதாக நடக்கத் தொடங்கிய பிறகு மெஸ்ஸில் கூட்டமும் வரவும் அதிகரித்திருந்தன. டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களின் ஒற்றுமை உணர்வு முன்னெப்போது இருந்ததையும் விட அதிக இறுக்கமாகி இருந்தது.

அந்த வார இறுதியில் சித்ரா அப்பர்சாமி கோயில் தெருவில் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த வீட்டிற்குக் குடியேறிவிட்டாள்.

பூமியின் வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டுக் காலையிலும் மாலையிலும் அவள் மெஸ்ஸுக்கு வந்து வரவு செலவு சரி பார்ப்பது, கணக்கு எழுதுவது, ஸ்டோர் ரூம் பொறுப்பு ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டாள்.

அதிகாலையில் கொத்தவால் சாவடியிலிருந்து மொத்தமாகக் காய்கறிகள் வாங்கிக் கொண்டு வந்து போடும் பொறுப்பைப் பூமியின் ஆட்டோ உட்பட நாலைந்து ஆட்டோக்கள் தங்களுக்குள் நாள்முறை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றிச் செய்தன.

ஒரு பழங்காலத்துத் தண்ணீர்ப் பந்தலைப் போல நடந்து வந்த பழைய மெஸ்ஸைப் புதிதாகவும், பெரிதாகவும், விரிவாகவும் ஆக்கியிருந்தான் பூமி.

அந்தச் சில நாட்களில் அவன் ஆட்டோ பக்கமே போகவில்லை. எடுத்துக் கொண்ட சவாலை ஏற்று வெற்றியாக்கிக் காண்பிக்க வேண்டும் என்ற ஆசையில் பூமி பம்பரமாகச் சுறுசுறுப்புடன் உழைத்தான். நடுவில் ஒருநாள் லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணாச்சி கூட வந்து பார்த்துவிட்டுப் போனார்.

"உண்மையான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எதையும் வெற்றிகரமாகச் செய்து காட்ட முடியும் பூமி! இன்று இந்த நாட்டில் உழைக்க முடியாத, உழைக்க நினைக்காதவர்களை விட, உழைக்கவேண்டும் என்று நினைக்கவே சோம்பல் படுகிறவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். செயலுக்குச் சோம்புகிறவர்களை விடச் செய்ய நினைக்கவே சோம்பல்படுகிறவர்கள் ஒரு தேசத்தின் உடம்பில் ஊளைச்சதை போல வேண்டாதவர்களாகத் தங்கி இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களை உன் அருகில் கூட அண்டவிடாதே" என்று பூமியை அக்கறையோடு எச்சரித்து விட்டுப் போயிருந்தான் பரமசிவம்.

பயிற்சி வகுப்புகள் அறவே நின்று போயிருந்ததால் பூமியின் கராத்தே மாணவர்கள் வேறு தேடி வரத் தொடங்கினார்கள். சிறிது காலம் பொறுத்துக் கொள்ளும்படி அவர்களுக்கு அவன் சொல்லி அனுப்ப வேண்டியிருந்தது.

முத்தக்காள் உடல்நிலை தேறி எழுந்து நடமாடுகிற அளவு அபிவிருத்தி அடைந்திருந்தாள். அவளுக்கு வேண்டியவர்களெல்லாம், "காலம் ரொம்பவும் கெட்டுக் கிடக்கு. இனிமே நீ தனி ஆளா மெஸ்ஸை நடத்தறது முடியாத காரியம். அந்தப் பையன் பூமியையும் கூட இருக்கச் சொல்லு, விட்டு விடாதே!" என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

முத்தக்காளுக்கும் அந்த யோசனை சரி என்றே பட்டது. ஹோட்டலோ, சினிமாக் கொட்டகையோ எதுவானாலும் அக்கம் பக்கத்தில் நாலு பேர் பரிந்து கொண்டு வருவதற்கு இல்லாவிட்டால் எந்த சமூக விரோதி வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து கலகம் பண்ணுகிற மாதிரித்தான் ஆகியிருந்தது.

எல்லாப் பகுதிகளிலும், எல்லாப் பேட்டைகளிலும் மிரட்டி ஏய்த்துப் பிழைக்கிற ரௌடிக் கூட்டம் ஒன்று இருந்தது. சில சமயங்களில் அப்படிக் கூட்டம் ஏதாவதோர் அரசியல் கட்சியின் சார்பையும் தோதாகத் தேடி வைத்துக் கொண்டிருந்தது. வசூல்களே சில கட்சிகளின் அன்றாடக் கொள்கையாக இருந்தன. பிளாட்பாரத்தில் கடை வைக்கிற பங்காரம்மாள் முதல் பளபளப்பான ஷோரூமுடைய கடை வரை எல்லாரையும் மிரட்டிப் பணம் பண்ண அவர்கள் கற்றிருந்தார்கள்!

முத்தக்காள் பூமியிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அந்தத் தம்பி தன்னோடு இருந்து, மெஸ்ஸை நிர்வாகம் செய்ய ஒப்புக் கொள்ளுமா கொள்ளாதா என்பது அவளுக்குப் புரியவில்லை. அநுமானிக்க முடியாமலும் இருந்தது அது.

ஒரு நாள் மாலை இதைப் பற்றி பேசுவதற்காக முத்தக்காள் பூமியை அழைத்துக் கொண்டு தன்னுடைய பின்பக்கத்து அறைக்குப் போனாள்.

அந்த நேரத்தில் சித்ரா கல்லாப் பெட்டிக்கு அருகே அமர்ந்து பில்களுக்கு பணம் வாங்கிப் போடும் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.

அப்போது, சில்க் சட்டை, முகத்தையே மறைக்கிற அளவு பெரிதாகக் கருப்புக் கண்ணாடி, வாயில் பைப் சகிதம், மினுமினுப்பான மேனியோடு ஓர் இரட்டை நாடி ஆள் பூமியைத் தேடி வந்தார்.

"இங்கே பூமிங்கறது யாரும்மா?"

"உள்ளே வேலையா இருக்காரு... உட்காருங்க... இதோ வந்துடுவாரு."

வந்த ஆள் ஒரு விஸிட்டிங் கார்டை எடுத்து நீட்டி, "எனக்கு உட்கார நேரமில்லை... அவசரம்! நான் பூமியை உடனே பார்த்தாகணும்" என்று பறந்தார்.

அத்தியாயம் - 14

இன்றைய சினிமா என்பது யதார்த்த உலகின் கஷ்ட நஷ்டங்களை உணரவிடாமல் அவற்றிலிருந்து இளைஞர்களைப் பொய்யாகவும் கற்பனையாகவும் உயர்த்தி வைத்து வெற்றுக் கனவு காணச் செய்வதாக இருக்கிறது.

வந்திருப்பவர் காட்டிய நாகரிகக் குறைவான அவசரம் சித்ராவுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. 'நானே தேடி வந்திருக்கிற போது அவன் எப்படி இல்லாமற் போகலாம்?' என்கிற அவரது தொனியில் ஆணவம் இருந்தது. பொறுமையில்லாத மனிதராகத் தென்பட்டார் அவர். எங்கும் எதிலும் உலகமே தனக்கென்று தயாராகக் காத்திருக்கக் கடமைப்பட்டிருப்பது போன்ற அகங்காரத்தோடு பேசினார். அவசரத்தோடு பறந்தார்.

சற்று முன் அவரே கொடுத்த விசிட்டிங் கார்டிலிருந்து அவர் ஒரு சினிமாத் தயாரிப்பாளர் என்று சித்ராவுக்குத் தெரிந்திருந்தது. அவசரமும் பொறுமையின்மையும் தரத்துக்காகச் சிறிது நேரம் காத்திருக்கக் கூட நிதானமின்மையும் சினிமாவோடு கூடப் பிறந்த குணங்கள் என்பதை அவள் அறிவாள். அவசரமும் பரபரப்பும் இந்த நூற்றாண்டின் பொதுக் குணங்களாக இருந்தாலும் அவை திரை உலகத்தோடு அதிக நெருக்கம் கொண்டிருந்தன. இணைப்பும் இசைவும் பெற்றிருந்தன.

பூமியோடு மனம்விட்டுப் பேச வேண்டும் என்று முத்தக்காளும், முத்தக்காளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும் என்று பூமியும் பல நாட்களுக்குப் பின் அன்று முதன் முதலாகச் சந்தித்துப் பேசுவதற்குப் போயிருந்தார்கள். தேடி வந்திருந்த ஆளோ தன்னைச் சந்திப்பதை விட உலகில் வேறெந்த வேலையுமே பூமிக்கு இருக்க முடியாது என்பது போல் அவசரப் படுத்திக் கொண்டிருந்தார். சித்ராவால் அவருக்கு உடனே எந்த உதவியும் செய்ய முடியவில்லை.

மெஸ்ஸில் அது மிகவும் சுறுசுறுப்பான நேரமாக இருந்ததனால் கல்லாவில் உட்கார்ந்திருந்த சித்ராவுக்கு இடைவெளியே இன்றி பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற வேலை இருந்தது. நிதானமாக மூச்சு விடக் கூட நேரமில்லை. கேஷ் டேபிளை வேறு யாரிடமும், விட்டு விட்டுப் போகவும் வழியில்லை.

"உங்களால் முடியுமானால் சிறிது நேரம் காத்திருங்கள் இல்லாவிட்டால் நீங்கள் போகலாம். நீங்கள் தேடி வந்ததாகச் சொல்லி இந்த 'விஸிட்டிங் கார்டை' நான் அவரிடம் கொடுத்து விடுகிறேன்" என்று கத்தரித்தாற் போல் வந்தவருக்குப் பதில் சொன்னாள் அவள்.

ஆனால் அந்த ஆள் பெரிய விடாக் கண்டனாக இருந்தார். பணத்துக்காக எதுவும் காத்திருக்கும். எதுவும் கிடைக்கும். எதுவும் காத்திருந்தே ஆகவேண்டும். எதுவும் கிடைத்தே ஆக வேண்டும் என்ற சினிமா உலக முதலாளித்துவ மனப்பான்மை பச்சையாகத் தெரிந்தது.

"நான் உடனே பார்த்தாகணும் அம்மா! அதிர்ஷ்டம் தேடி வர்ரப்ப இப்பிடிக் காக்கப் போட்ட எப்பிடி?"

அவர் எதை அதிர்ஷ்டம் என்று சொல்லுகிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை. அந்த இடம், அந்தச் சூழ்நிலை அங்கிருந்த மனிதர் கூட்டம், ஹோட்டல் வாசனைகள், சமையல் நெடி, பரபரப்பு இவற்றுக்கிடையே தன்னைப் போன்ற ஒரு தேவ புருஷன் காத்திருப்பதா என்று கருதியது போல் அந்த மனிதர் காட்டிய வறட்டு ஜம்பம் அவளுக்கு ஆத்திர மூட்டியது.

மெஸ்ஸை சேர்ந்த வேறு ஒரு வேலையாளிடம் அந்த விஸிட்டிங் கார்டை உள்ளே பூமிக்குக் கொடுத்து அனுப்பினாள் அவள். தான் பூமியைத் தேடி வந்திருப்பதே பூமிக்கு அதிர்ஷ்டம் என்பது போன்ற தொனியில் அந்த மனிதர் பேசியது வேறு அவளுக்குப் பிடிக்கவில்லை.

இன்றைய சினிமா, யதார்த்த உலகின் கஷ்ட நஷ்டங்களிலிருந்து இளைஞர்களைப் பொய்யாகவும் கற்பனையாகவும் உயர்த்தி வைத்துக் கனவு காணச் செய்வது என்பதாலேயே அத்துறையின் மேலும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் மேலும் ஏற்கெனவே சித்ராவுக்குப் போதுமான ஆத்திரம் இருந்தது. இப்போது அந்த ஆத்திரம் அதிகரித்திருந்தது. சிறிது நேரத்தில் பூமி வந்தான்.

"கனகசுந்தரம் என்பது நீங்கள் தானா?" விசிட்டிங் கார்டைக் கையில் வைத்துக் கொண்டு அந்தக் கருப்புக் கண்ணாடி மனிதரை வினவினான்.

"ஆமாம்! நான் தான்! கனகா பிக்சர்ஸ்னு ஒரு படத் தயாரிப்புக் கம்பெனி வச்சிருக்கேன். இதுவரை ஏழெட்டுப் படம் ரிலீஸ் பண்ணியிருக்கோம். எங்க லேட்டஸ்ட் படம் 'நடுக்காட்டில் நளினி' நூறு நாள் ஓடிச்சு. கேள்விப்பட்டிருப்பீர்களே?"

"அது சரி! இப்போது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?"

"நீங்கள் என்ன செய்யணும்னு சொல்றதுக்காகத் தானே இப்ப நானே இங்கே தேடி வந்திருக்கிறேன்."

உழைத்து வருந்தாதபடி மேனி மினுக்கியே வளர்ந்திருக்கும் அந்த உருவத்தை நிமிர்ந்து பார்த்தான் பூமி.

"நீங்கள் வீரப்பெருமாள் கோவில் தெரு சந்துலே இருக்கிறதாகச் சொன்னாங்க! முதல்லே அங்கே தேடிப் போனேன். அப்புறம் இங்கே பார்க்கச் சொன்னாங்க. இங்கே தேடி வந்தேன்."

"அதெல்லாம் சரிதான்! என்னிடம் என்ன வேலையாக வந்தீர்கள்."

"எங்க அடுத்த படத்திலே கராத்தே, குங்ஃபூ, ஜூடோ எல்லாத்தையும் கொண்டாரணும்னு ஆசை."

"செய்யுங்களேன்."

"அதாவது மெயின் சப்ஜெக்டே கராத்தேதான்! தீர்மானம் பண்ணியாச்சு."

"கதையை முடிவு பண்ணி விட்டீர்களா?"

"சப்ஜெக்டை முடிவு பண்ணிட்டா, அப்புறம் அதுக்குத் தகுந்த மாதிரி கதையை எழுதிக்கிடலாம்."

"அப்படியா?"

"ஆமாம். ஹீரோ நிறைய அடி, உதை எல்லாம் குடுக்கிற கதையா ஒண்ணை எழுதிக்கணும்! ஆனால் சிக்கல் அதிலே தான் இருக்கு."

"என்ன?"

பூமிக்கு வேலையின் அவசரமும் விரைவும் இருந்தாலும் அந்த வேடிக்கை மனிதரைக் கொஞ்சம் ஆழம் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. எதற்காக அந்த மனிதரை நிறுத்து வைத்து வீணுக்கு உரையாடி நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று சித்ராவுக்குத் தோன்றியது. ஆனால் பூமி அவரோடு தொடர்ந்து வேடிக்கை பண்ணிக் கொண்டிருந்தான். அவரே தொடர்ந்தார்.

"ஏரியா விற்பனை கணிசமாக ஆகிற மாதிரி டிஸ்ட்ரிபியூட்டர்ஸுக்குப் புடிச்ச ஹீரோவைப் போடாட்டியும் கஷ்டம். டிஸ்ட்ரிபியூட்டருக்குப் புடிச்ச ஹீரோவுக்கு கராத்தே தெரியாது... கராத்தே தெரியாத அந்த ஹீரோவை வச்சு இந்த சப்ஜெக்டை எடுக்கறது முடியாது... அதனால் ஹீரோவைக் காப்பாத்தி உதவி செய்யற அவனுடைய தோழனுக்குத் தான் கராத்தே, குங்ஃபூ எல்லாம் தெரியும்னு கதையையே மாத்திட்டா என்னன்னு பார்க்கிறோம்?"

"கதை இன்னும் எழுதப்படாத போது எப்படி மாற்றுவீர்கள்?"

"கதை என்ன பெரிய கதை? எழுதறதுக்கு முந்தியே மாத்திட்டாப் போச்சு!"

"அடடே! பரவாயில்லையே! எத்தனை முன்யோசனை உங்களுக்கு?"

"ஒண்ணா ரெண்டா, இந்த லயன்லே பத்து வருஷ செர்வீஸ் ஆச்சே?"

"பெரிய அனுபவம் தான்!"

"ஹீரோவோட தோழன் ரோலுக்கு உங்களை டிரை பண்ணினா என்னன்னு..."

"என்னையா! எனக்கு நடித்தே பழக்கமில்லையே."

"நடிப்பு என்ன, பெரிய நடிப்பு? ரெண்டு வாட்டி ஸ்டுடியோவுக்குள்ளார வந்து போனீங்கன்னா அதுவும் தானா வந்துட்டுப் போவுது..."

"அவ்வளவு சுலபமா."

"சுலபம் தான். இந்தக் கராத்தே சப்ஜெக்ட் விஷயமா இன்னிக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு ஹோட்டல் குபேராவில் ஸ்டோரி டிஸ்கஷன் வச்சுருக்கோம். ஒன்பதாம் நம்பர் ஏ.ஸி. சூட். நமக்கு ஒன்பதுதான் ராசியான நம்பருங்க. அதுக்கு நீங்களும் வந்தீங்கன்னா முடிவு பண்ண வசதியாயிருக்கும்."

"எதை முடிவு பண்ண?"

"எல்லாத்தையும் தான்! நீங்க கராத்தே பண்றது... நீங்க ஹீரோவா, தோழனாங்கறது... எல்லாமே முடிவு ஆயிடும்."

"நான் முடிவு பண்ணுவதற்குள் நீங்களே முடிவு பண்ணி விடுவீர்கள் போலிருக்கிறதே..."

"நீங்க மாட்டேன்னா சொல்லப் போறீங்க... வலிய வந்த சீதேவியை யாராவது காலாலே எட்டி உதைப்பாங்களா?"

இதைக் கேட்டு பூமிக்கு உள்ளூரச் சிரிப்பாயிருந்தது. ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. வருவதாக ஒப்புக் கொண்டு அந்த மனிதருக்கு விடை கொடுத்தான்.

"கண்டிப்பா வந்துடுங்க... நான் கார் அனுப்பட்டுமா?"

"வேண்டாம். பக்கத்தில் தானே? நானே வந்து விடுகிறேன்."

அவர் போய்ச் சேர்ந்தார். மெஸ் வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு போய்ப் பார்க்கலாம் என்று தான் அவன் நினைத்தான். சித்ரா அவனைக் கேலி பண்ணினாள்.

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் பக்கத்துச் சாலையிலேயே இருந்ததால் அவன் மிக எளிதாக நடந்தே போய்விட முடிந்தது.

கனகசுந்தரம் ஸ்டோரி டிஸ்கஷனுக்குச் சரியாக ஒன்பது பேரைத்தான் அழைத்திருந்தார். ஜிகினாவாக மின்னிய இரண்டு மூன்று இளம் பெண்கள், சில வேறு ஆட்கள் எல்லாரும் வந்து இருந்தார்கள்.

பூமி உள்ளே நுழைந்ததும் கனகசுந்தரம் அவனை உற்சாகமாக வரவேற்று எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். என்ன நிறம் என்று தெரியாமல் பூச்சு வேலையினால் மின்னிய இளம் எக்ஸ்ட்ரா ஒருத்தி திடீரென்று "உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? எங்கேன்னு நினைவு வரல்லே" என்று பூமியிடம் கேட்டாள்.

"அப்படியா? நினைவு வரட்டும், ஏன் அவசரப்படுகிறீர்கள்?"

"நீங்க தமிழ்ப் புலவருங்க மாதிரியே பேசறீங்க சார்..."

"நல்லாத் தமிழ் பேசினா உடனே புலவர் மாதிரிங்கறாங்க! வேற எப்படித்தான் பேசறதாம்?" என்று கனகசுந்தரம் பதிலுக்கு அவளை மடக்கினார். பூமி அங்கிருந்தவர்கள் எல்லாரையும் ஒரு நோட்டம் விட்டான். தலையை ஆட்டுவதைத் தவிர அவர்களால் எதையும் விவாதிக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.

அத்தியாயம் - 15

அழுக்குப்படாமல் ஏதாவதொரு நாற்காலியில் உட்காருவதுதான் அந்தஸ்து என்றும் கைவருந்த உழைப்பது கேவலம் என்றும் நினைத்து இளைஞர்கள் முடங்கிக் கிடக்கும் அளவு இன்றைய நமது கல்வி முறை அவர்களைப் பலவீனப்படுத்தி வைத்திருக்கிறது.

ஸ்டோரி டிஸ்கஷன் என்ற பெயரில் அங்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் யாருக்கும் தீவிரமான முனைப்புடன் எதைப்பற்றியும் விவாதிக்கிற அக்கறையோ, அறிவோ இருக்க முடியுமென்று தோன்றவில்லை. ஏ.ஸி. அறையின் இதமான சுகத்தில் வம்பளந்துவிட்டுக் கிடைத்ததைத் தின்று ஏப்பம் விட வந்த கூட்டமாக இருந்தது அது. தயாரிப்பாளருக்கும் பெரிய அக்கறை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

தான் செய்ய விரும்புகிற தவறுகளைத் தன்னோடு சேர்ந்து சுலபமாக இசைந்து இணங்கி அங்கீகரிக்கும் சிலரைச் சந்தித்துப் பேசும் ஏற்பாடாகவே அவர் அதைச் செய்திருந்தார். அங்கு யாரும் எதைப் பற்றியும் சீரியஸ்ஸாக இல்லை என்பது பூமிக்கு ஆச்சரியத்தை அளித்தது. சினிமா என்னும் கனவுலகத்தைச் சேர்ந்த அந்த மனிதர்கள் நேரத்தையும், பணத்தையும் தாராளமாக வீணாக்கினார்கள்.

அங்கே வந்திருந்த ஒரு துணை நடிகை எப்போதோ தன்னுடைய ஆட்டோவில் ஏறிப் பிரயாணம் செய்திருக்க வேண்டுமென்று பூமிக்குத் தோன்றியது. அதனால் தன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று அவள் வந்ததிலிருந்து புலம்பிக் கொண்டிருக்க வேண்டுமென்று அவன் அநுமானித்தான்.

"அப்ப நீங்க ஹீரோவுக்குத் தோழனாக வந்து கராத்தே திறமையைக் காட்டறதாகவே வச்சுக்கலாம்" என்று இரண்டு மணி நேரத்துக்குப் பின் மெல்ல ஆரம்பித்தார் கனகசுந்தரம். 'அதுதான் நம்பர் ஒன் ஐடியா' என்று எல்லாரும் உடனே ஒத்துப் பாடினார்கள். மறுபடி சாப்பிட்டார்கள். மறுபடி அரட்டையடித்தார்கள்.

பூமி தனக்கு வேலை இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். கலை, கத்திரிக்காய் என்ற பேரில் வீணில் உண்டு களித்திருப்போர் கூட்டமாக இருந்தது அது. அவர்களில் யாருக்கும் பணம் பண்ணுவதையும், செலவழிப்பதையும் தவிர வேறு வாழ்க்கை இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் சுலபமாக உழைக்காமல் பணம் பண்ண விரும்பினார்கள். சுலபமாக செலவழிக்க விரும்பினார்கள். நோக்கமோ கொள்கையோ இல்லாத சுயநல லாப வேட்டைக்காரர்களாக இருந்த அவர்களிடம் இருந்து விடுபட்டு விலகி வெளியேறினால் போதும் என்றிருந்தது அவனுக்கு.

"என்னங்க? அதுக்குள்ளார இப்பிடி அவசரப்படறீங்களே? இன்னும் டிஸ்கஷனே ஆரம்பிக்கலியே?" என்று அவனை மடக்கி நிறுத்தப் பார்த்தார் கனகசுந்தரம். பூமி மடங்கி நிற்கவில்லை. பிடிவாதமாக கிளம்பி விட்டான். சித்ரா வேறு இன்னும் வீட்டுக்குப் போகாமல் மெஸ்ஸில் அவனுக்காகக் காத்திருப்பாள். அன்றைய வரவு செலவுக் கணக்கு முடிக்க வேண்டும்.

பழைய பாலாஜி நகர் வீட்டில் இருந்திருந்தால் சித்ராவால் இவ்வளவு நேரங்கழித்துப் போக முடியாது. அவள் பக்கத்திலேயே அப்பர் சாமி கோயில் தெருவுக்கு வந்திருந்ததால் நேரத்தைப் பார்க்காமல் பூமிக்கும் முத்தக்காளுக்கும் உதவ முடிந்தது. சில நாட்களில் முத்தக்காளுக்குத் துணையாக அவள் மெஸ்ஸிலேயே தங்கும்படி கூட நேர்ந்திருக்கிறது. முத்தக்காளின் தனி அறையிலேயே அவளோடு தங்கிக் கொண்டிருந்திருக்கிறாள் சித்ரா. அப்படி ஓர் அந்யோந்யம் அவர்களுக்குள் உருவாகியிருந்தது.

ஆட்டோ - டாக்ஸி யூனியனின் பெரிய தலைவர்கள் சிலர் தலையிட்டதன் பேரில் பூமியின் பேரில் போடப்பட்டிருந்த பொய் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டிருந்தது. முத்தக்காளுக்கு உதவுவதற்காக நிரந்தரமாய் ஆட்டோவை ஓட்டுவதற்கு வேறு ஆள் அமர்த்தி விட்டு மெஸ்ஸில் இருந்தான் பூமி. மெஸ் முன்னைப் போல் பல மடங்கு வளர்ந்து பெருகி லாபகரமாக நடக்கத் தொடங்கியிருந்தது. பூமியும் சித்ராவும் உடனிருந்து உதவுவதால் தான் இந்த வளர்ச்சி என்பது முத்தக்காளுக்கும் புரிந்துதான் இருந்தது.

ஹோட்டல் குபேர இண்டர் நேஷனலில் 'ஸ்டோரி டிஸ்கஷன்' என்ற பெயரில் கனகசுந்தரம் நடத்திய அரட்டைக் கச்சேரியிலிருந்து தப்பி மெஸ்ஸுக்குத் திரும்பிய இரவு பூமிக்கு அங்கே வேறொரு சோதனை காத்திருந்தது.

மறுநாள் காலையில் பயன்படுத்துவதற்கு இட்லி மாவரைத்து முடித்ததும்... மாவரைக்கிறவர் உரலடியில் வழுக்கி விழுந்து இடுப்புப் பிடித்துக் கொண்டு விட்டது. அவரால் வேலை செய்ய முடியாதபடி ஆகிவிட்டது. காலை 4 மணிக்கு யாராவது எழுந்திருந்து வடைக்கு அரைத்தாக வேண்டும். அந்த அவசரத்தில் வேறு புது ஆள் யாரையும் தேட முடியாமலிருந்தது. சித்ரா அன்றிரவு அங்கேயே தங்கினாள். பூமி குபேராவிலிருந்து திரும்பியதும் அவனுக்கு இந்தத் தகவல் தெரிந்தது.

அந்த நேரத்துக்கு மேல் வேறு எங்கேயும் எடுத்துப் போய் அரைத்து வரவும் முடியாமல் இருந்தது. வடைக்கு அந்த மெஸ் பெயர் பெற்றது. மசால்வடையும், உளுந்து வடையும் இல்லாவிட்டால் பல டிரைவர்களுக்குக் காலைச் சுற்றுண்டியே உள்ளே இறங்காது. முத்தக்காள் மெஸ்வடை என்று நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்து உட்காருவார்கள். அரை டஜன் வடை, ஒரு டஜன் வடை என்று பார்ஸல்களே நிறையப் போகும். மெஸ்ஸில் வடை கிடைக்கவில்லை என்று கெட்ட பேர் ஆகிவிடக் கூடாது.

அதிகாலை நாலு மணிக்கு ஆட்டு உரலில் கடமுட ஓசை கேட்டுச் சித்ராவும் முத்தக்காளும் எழுந்து வந்து பார்த்தால் முண்டா பனியனும் வேஷ்டியுமாக பூமியே உட்கார்ந்து மாவாட்டிக் கொண்டிருந்தான்.

"என்ன தம்பீ இது! நீங்களே..."

"காரியம் நடந்தாகணும் முத்தக்கா! என்ன ஏதுன்னு பார்த்துத் தயங்கிக் கொண்டிருக்க இது நேரமில்லை."

"நானும் அக்காவும் மாத்தி மாத்தி அரைத்துக் கொடுத்திடலாம்னு திட்டம் போட்டிருந்தோம்" - சித்ரா.

"உங்களாலே இந்தக் குழவியை அசைக்கக் கூட முடியாது."

பூமி கூறியது உண்மைதான். பழங்காலத்து இராட்சத உரல் அது. தொழில் ரீதியாக மாவரைப்பவர்கள் தான் அதை அசைத்து வேலை செய்ய முடியும். அல்லது பூமியைப் போல் தசையை இறுக்கி வலிமையாக்கிக் கொண்டவர்களால்தான் முடியும்.

பூமி மிகவும் சுலபமாகவே அதை செய்து கொண்டிருந்தான். 'அழுக்கு படாமல் நாற்காலியில் உட்காருவது தான் அந்தஸ்து என்றும் கைவருந்த உழைப்பது கேவலம் என்றும் இளைஞர்கள் நினைத்து முடங்கிக் கிடக்கும் அளவு இன்றைய கல்வி அவர்களைப் பலவீனப் படுத்தியிருக்கிறது.' பூமி ஆரம்பத்திலிருந்தே இந்த பலவீனத்தில் சிக்கியதில்லை. சிங்கப்பூரில் சீனர்கள் ஆண்களும், பெண்களுமாகக் கடின உழைப்பு உழைப்பதைப் பார்த்து வாழ்வைக் கற்றுக் கொண்டவன் அவன். உழைப்பில் எதுவுமே கேவலமில்லை. உழைக்காமல் இருப்பதிலோ எல்லாமே கேவலம் தான்.

படித்துப் பட்டம் பெற்றிருந்தும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டத் துணிந்திருந்தான் அவன். இன்று ஒரு சவாலை நிறைவேற்றிக் காட்டுவதற்காக இந்த மெஸ்ஸை ஏற்று நடத்திக் கொண்டிருந்தான். வேர்வை மின்னிடத் தசைகள் ஏறி இறங்கிப் புடைத்துத் தணிய அவன் மாவாட்டிக் கொண்டிருந்த போது சித்ரா, பாத்திரத்தோடு ஆட்டிய மாவை அள்ளிக் கொண்டு போக அங்கே வந்தாள்.

"நேத்துப் போனீங்களே என்ன ஆச்சு? அந்தச் சினிமாக்காரர் எதுக்குக் கூப்பிட்டாராம்?"

"நான் கராத்தே சண்டை போடுவேன் என்று யாரோ சொன்னார்களாம். அதனாலே கராத்தே அடிபிடி சண்டை எல்லாம் வருகிற மாதிரி ஒரு சினிமாவிலே நடிக்க வர முடியுமா என்று கேட்டார். இப்பொழுது மாவாட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் மாவாட்டுகிற மாதிரி ஒரு சினிமாவிலே நடிக்க முடியுமா என்று கூட வந்து கேட்பார்."

சித்ரா இதைக் கேட்டு நகைத்தாள். வெளியே பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. முதல் வியாபாரத் தேவைக்காக இரண்டு வகை வடைக்குமாகக் கொஞ்சம் மாவை அரைத்துக் கொடுத்துவிட்டு மீதியை அரைத்துக் கொண்டிருந்தான் பூமி.

வழக்கமாக அந்த வேளையில் அவன் பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற வேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அன்று மாவரைக்கிற காரணத்தால் சித்ராவைக் கேஷில் உட்காரச் சொல்லியிருந்தான்.

அதிகாலை வியாபாரம் ஆரம்பமாகியிருந்தது. பெரும்பாலும் காலை வேளைகளில் டாக்ஸி ஆட்டோ டிரைவர்கள் - கார்ப்பொரேஷன் மேஸ்திரிகள் இந்த மாதிரி ஆட்கள் தான் அதிகம் சாப்பிட வருவார்கள். மற்றவர்கள் வர ஏழு மணிக்கு மேலே ஆகும். நேரம் ஆக ஆகப் பார்ஸல் கட்டிக் கொடுக்கிற வேலை அதிகமாகும். பார்ஸல் பில்களுக்கு வேறு சரி பார்த்துப் பணம் வாங்கிப் போட வேண்டியிருக்கும். வெளியே 'பிஸி' ஆவதற்குள் தானே மாவரைத்து முடித்துவிட்டுக் கேஷுக்குப் போய் விடலாம் என்ற நம்பிக்கையுடன் வேலையில் முனைந்திருந்தான் பூமி.

அவனுக்கு அந்த வேலை அதிகச் சிரமமாயில்லை. ஒரு புது விதமான உடற்பயிற்சி போலவே அமைந்திருந்தது. சிறிது நேரத்திற்குள்ளேயே பழகியும் விட்டது. அவன் மாவை அரைத்து முடித்து வழித்துப் போட இருந்த போது சித்ராவின் குரல் வெளியே யாருடனோ உரத்து வாதிடுவது கேட்டது. விநாடிக்கு விநாடி வாக்குவாதம் வலுப்பது குரல்கள் மூலம் உட்புறம் பூமிக்குக் காதில் விழுந்தது. அப்படியே மாவு வழித்த கையுடன் பூமி முன் பக்கம் விரைந்தான்.

கார்ப்பொரேஷனைச் சேர்ந்த அதிகாரிகள் என்று அநுமானிக்கத்தக்க ஓர் ஏழெட்டுப் பேர் கேஷ் டேபிள் முன்னால் நின்று கொண்டிருந்தனர். சித்ரா அவர்களிடம் ஏதோ இரைந்து கொண்டிருந்தாள்.

"ஒண்ணு ரெண்டுன்னா பரவாயில்லே சார்! சுளையா இருபது ரூபாய்க்கு மேலே பில் ஆகிறது! எப்படி சார் விட முடியும்?"

"கார்ப்பொரேஷன் ஆளுகளைப் பகைச்சுகிட்டீங்கன்னா இருபது ரூபாய்க்கு பதில் இருநூறு ரூபாய்க்குச் செலவு வச்சிடுவோம்! நாளைக்கே சானிடரி இன்ஸ்பெக்டரும் ஹெல்த் ஆபீஸரும் வருவாங்க. ஹோட்டல்லே சுகாதாரம், சானிடரி கண்டிஷன் எதுவுமே சரியில்லேன்னு ரிப்போர்ட் எழுதி உங்க ஹோட்டலை இழுத்து மூடும்படி பண்ணிடுவோம்."

காக்கி அணிந்த ஒரு தடித்த ஆள் சித்ராவிடம் மிரட்டிக் கொண்டிருந்தான்.

"முடிந்தால் நீங்கள் அதைச் செய்து கொள்ளலாம். உங்கள் பேரைக் கொஞ்சம் சொன்னால் விஜிலன்ஸ் அண்ட் ஆண்டி கரெப்ஷன்ஸ்லே ரிப்போர்ட் செய்ய எங்களுக்கும் வசதியாயிருக்கும்!" என்று பூமி முன்னால் போய் நின்றான்.

அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டுத் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அந்தக் கார்ப்பொரேஷன் அலுவலர்கள்.

அத்தியாயம் - 16

லஞ்சம் என்கிற ராட்சஸக் குழந்தை இரட்டை மடங்கு சத்துணவுடன் இங்கு வளர்க்கப்படுகிறது. மக்களும் அதிகாரிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அதை வளர்க்கிறார்கள். பாதித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இருதரப்பாலுமே பேணி வளர்க்கப்படும் அபூர்வக் குழந்தை அது.

லஞ்சம், பிடுங்கித் தின்னுதல் இவற்றைப் பிரிட்டிஷ் ஆட்சி முறை தனது பிதுரார்ஜிதங்களாக இந்நாட்டுக்கு விட்டுச் சென்றதா அல்லது இந்நாட்டு அதிகார வர்க்கமே அந்தக் கலையைக் கற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை. அரட்டி மிரட்டி எங்கெங்கே எதை லஞ்சமாக வாங்க முடியுமோ அங்கங்கே அதை லஞ்சமாக வாங்கி வயிறு வளர்க்கும் மனப்பான்மை மக்கள் சுதந்திரம் அடைந்து முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழித்தும் இங்கு நீடிக்கிறது.

தொகையும் அளவும் தான் வித்தியாசப் பட்டதே ஒழிய எல்லா மட்டங்களிலும் கொடுப்பவர், வாங்குபவர் தரத்த்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப நாட்டில் லஞ்சத் தொகை உயர்ந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து கொண்டேயும் இருந்தது. நகரின் உணவு விடுதிகள், கார்ப்பொரேஷன் அதிகாரிகள், அலுவலர்களின் பிடியில் சிக்கி அவதிப்படுவது பற்றிப் பூமி நிறையக் கேள்விப்பட்டிருந்தான்.

இன்று தானே அந்த அநுபவத்தை அடைந்த விட்ட போது அவனுக்கு எரிச்சலாயிருந்தது. முத்தக்காள் மெஸ்ஸைப் போல் ஒரு சிறிய உணவு விடுதியில் இருபது முப்பது ரூபாய்க்குச் சாப்பிட்டு விட்டுக் காசு தராமல் கையை விரிக்கிற கார்ப்பொரேஷன் அதிகாரி தன் அதிகாரத்தையும், பதவியையும் பயன்படுத்தி ஒரு தொழிலை எப்படி மிரட்ட முடியும் என்பது புரிந்தது. மிகவும் கசப்பாகவே நேருக்கு நேர் புரிந்தது.

பூமி குறுக்கிட்டுப் பேசியதும் அவர்கள் ஆளுக்குக் கொஞ்சமாகப் பணம் போட்டு பில்லைக் கட்டி முடித்தார்கள். போகும் போது பூமியைப் பார்த்து முறைத்துவிட்டுப் போனார்கள். அவர்களுடைய பார்வையிலிருந்த ஆத்திரம் பூமிக்குப் புரிந்தது. வயிறு புடைக்கத் தின்று விட்டுக் காசு கொடுக்காமல் ஏப்பம் விட்டபடி குஷாலாக நடந்து போகும் சுதந்திரத்தை இத்தனை நாளாக அநுபவித்து விட்டு இப்போது விட்டுக் கொடுப்பது சிரமமாகத் தான் இருந்தது.

கோயில் காளைகள் போல் எங்கு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் புகுந்து இஷ்டம் போல் மேயும் இப்படிப்பட்ட கூட்டம் சுதந்திர இந்தியாவில் இன்று எல்லாத் துறைகளிலுமே இருந்தது.

பூமி இந்தக் கோயில் காளை மனப்பான்மையை அறவே வெறுத்தான். சக இந்தியனைச் சக இந்தியனே சுரண்டும் இந்த மனப்பான்மை அவனுக்குப் பிடிக்கவில்லை. அதிகாரம் என்பதே மக்களைச் சுரண்டுவதற்காக என்ற எண்ணம் இந்திய அதிகார வர்க்கத்தினரிடம் ஒரு சித்தாந்தமாகவே வளர்ந்திருப்பதை அவன் கண்டான். நாட்பட்ட சித்தாந்தமாக அது வளர்ந்து காடு மண்டியிருந்தது.

கேஷ் டேபிள் அருகே நின்று அந்தக் கார்ப்பொரேஷன் ஆட்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த சித்ரா பூமியைக் கேட்டாள்.

"நீங்களோ நானோ இல்லாத சமயம் பார்த்து வந்து இவர்கள் அப்பாவி முத்தக்காளை மிரட்டப் போகிறார்கள்... அப்படி நடந்தால் என்ன செய்வது?"

"நடந்தால் அதை எதிர்கொண்டு சமாளிப்போம்! இந்தத் தேசத்தைப் பிடித்த துரதிர்ஷ்டம் அது. மக்களின் வரிப் பணத்தில் நடக்கும் மாநகராட்சி, மக்களை மிரட்டுவதற்காகவே தான் இருப்பதாகவே எண்ணுகிறது. மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள், மக்களை அரட்டி மிரட்டி தர்பார் செய்யவே தாங்கள் அதிகாரத்தில் இருப்பதாகக் கருதுகிறார்கள். மக்களைக் காப்பாற்றவும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் ஏற்பட்ட போலீஸார் சில சமயங்களில் வேலியே பயிரை மேய்வது போல் மக்களிடம் நடந்து கொள்கிறார்கள்."

"இந்நாட்டின் பெருவாரியான மக்களும் அவற்றுக்கெல்லாம் அடங்கித்தானே போகிறார்கள்?"

"உண்மைதான்! அடக்குகிறவனுக்கு மட்டுமே அடங்குவது, அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்கிறவனை உதாசீனம் செய்வது போன்ற குணக்கேடுகள் இந்நாட்டு மக்களிடமும் உண்டு. ஜனநாயகத்துக்கு ஆகாத குணக்கேடுகள் இவை."

அவனும் சித்ராவும் இவ்வாறு உரையாடிக் கொண்டிருக்கையில் முத்தக்காள் அங்கே வந்தாள்.

"என்ன சத்தமாயிருந்திச்சு இங்கே?"

"ஒண்ணுமில்லே! யாரோ கார்ப்பொரேஷன் ஆட்கள்னு இருபது ரூபாய்க்கு மேலே தின்னுப்புட்டு பில்கொடுக்காமல் போகப் பார்த்தாங்க. இவரு வந்து சத்தம் போட்டப்புறம் பில்லுக்குப் பணம் குடுத்திட்டு முறைச்சிட்டுப் போயிட்டாங்க."

"ஐயையோ, அவங்ககிட்டப் போய் ஏன் பில் கேட்டீங்க...? கார்ப்பொரேஷன் ஆட்கள், விற்பனை வரி ஆளுங்க இவங்ககிட்ட எல்லாம் நான் பில்லுக்குப் பணம் கேட்கிறதை விட்டு ரொம்ப நாளாச்சும்மா! அஞ்சு ரூபா பில்லைக் குடுத்திட்டு அதை குடுத்திட்டமே என்ற எரிச்சலில் அப்பாலே போயி ஐநூறு ரூபாய்க்குச் செலவு வச்சிடுவாங்க..."

"இங்கே இப்படிப் பரஸ்பரமான பயத்திலும், அட்ஜஸ்ட்மெண்டிலுமே நாம் லஞ்சத்தைப் பேணி வளர்த்து வருகிறோம்."

"என்னப்பா செய்யறது; அங்கே இங்கே அலையச் சொல்லி நோட்டீஸ் குடுத்திட்டாங்கன்னா நான் ஒருத்தி கடையைக் கவனிப்பேனா? கார்ப்பொரேஷன் ஆபீஸுக்கும் கமர்ஸியல் டாக்ஸ் ஆபீசுக்கும் அலைஞ்சிக்கிட்டிருப்பேனா?"

"லஞ்சம் என்கிற ராட்சஸக் குழந்தை இரட்டை மடங்கு சத்துணவுடன் இங்கு வளர்க்கப்படுகிறது. மக்களும் அதிகாரிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அதை வளர்க்கிறார்கள். பாதித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இருதரப்பாராலுமே வளர்க்கப்படும் அபூர்வக் குழந்தை அது."

இதைக் கேட்டுச் சித்ரா சிரித்தாள். முத்தக்காளுக்கு இது புரியாததனாலோ என்னவோ அவள் கவலையோடு நின்று கொண்டிருந்தாள். அவள் முகத்தில் பயத்தின் சாயல் தெரிந்தது. பயமும் சுயநலமும் உள்ள வரை லஞ்சமும், சுரண்டலும் போக முடியாதென்று பூமி எண்ணினான். இந்திய ஜனத்தொகையில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் பயமும் சுயநலமும் நிறைந்தது. அதனால் தான் அவர்கள் சுமாரானவர்களை ஆளத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மிகவும் சுமாரானவர்களாலேயே அதிகாரம் செய்யப்படுகிறார்கள். சுயமரியாதையும் தன்மானமும் இல்லாத மக்களுக்கு, சுயமரியாதையும் தன்மானமும் இல்லாத சுமாரான அரசாங்கம் தான் கிடைக்கும். சுயநலமும் பயமும் உள்ள மக்கள் தொகையைச் சகலவிதத்திலும் சுரண்டுவது மிக மிகச் சுலபம். தங்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டு என்றே புரியாத மக்களை யார் வேண்டுமானாலும் மிரட்டி அதிகாரம் செய்யலாம்; யார் வேண்டுமானாலும் மிரட்டிப் பணம் பறிக்கலாம். அதுதான் நடைமுறையில் இருந்தது.

முத்தக்காளே கார்ப்பொரேஷன் அதிகாரிகள் ஓசியில் சாப்பிட்டுவிட்டுப் போவது அநியாயம் என்று நினைக்கவில்லை. 'போனால் போகட்டும்! அவர்களால் வர முடிந்த கெடுதல் வராமல் இருந்தால் சரி' - என்றே நினைத்தாள். நியாயம் நேர்மைகளை விட அவ்வப்போது காரியம் நடக்க எது எது பயன்படுமோ அந்த முறைகளைக் கடைப்பிடித்துச் சமாளித்துக் கொண்டு எப்படியேனும் வாழ்வது என்ற நிர்க்கதியான நிராதரவான நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என்று தோன்றியது.

ஒரு கணம் எதையோ நினைத்து மறுபடியும் பூமி தயங்கினான். முத்தக்காளுக்கு தன்னால் நேர்ந்த சிரமத்தைச் சரி செய்வதற்கே இவ்வளவு பாடுபட வேண்டியதாயிற்று. இனியும் புதுப் புதுச் சிரமங்கள் ஏற்பட வழி வகுக்கலாமா, கூடாதா என்ற முன்னெச்சரிக்கையோடு சிந்தித்தான் பூமி.

பொதுவாழ்க்கை இன்றுள்ள குழப்பமான நிலையில் அளவற்ற நேர்மையும் ரோஷமும் தன்மானமும் குற்றங்கண்டு கூசும் மனநிலையும் உள்ள ஒருவன் ஒதுங்குதல், அல்லது ஒதுக்கப் படுதலுக்கே ஆளாகிறான். தானும் அப்படி ஆகிவிடுவோமே என்று பயமாகக் கூட இருந்தது அவனுக்கு. ஆனாலுமே அந்த நிராதரவான விதவையோடு அங்கே உடனிருந்து போராடி நியாயங்களைக் காத்தே ஆகவேண்டுமென்ற பிடிவாதத்தையும் அவனால் விட்டு விட முடியவில்லை.

அந்தப் பெரிய நகரில் அதிகாரத்திற்கும் மிரட்டலுக்கும் முன்னால் எல்லாருமே முத்தக்காளைப் போல அநாதரவான விதவைகள் ஆகி விடுவார்களோ என்று சந்தேகமாக இருந்தது அவனுக்கு. கணவனை இழக்கிறவள் போல் தன்மானத்தை இழக்கிறவனும் ஒரு விதத்தில் விதவை தானே என்று எண்ணினான் அவன்.

அத்தியாயம் - 17

இரத்தத் திமிரைக் காட்டுவதற்காக உடல் வலிமையைப் பயன்படுத்துவது வன்முறை. நியாயமான காரணத்துக்காகப் பயன்படுத்துவது தற்காப்பு.

சித்ரா அவனுடைய அந்தத் தன்மான உணர்வை மிகவும் இரசித்தாள். தீமைக்கும் அநீதிக்கும் அடங்காத மங்காத அந்தக் கம்பீரமான ஆண்மை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை அவள் விரும்பினாள்.

தான் எப்படி மற்றவர்களிடம் நியாயமாக நடந்து கொண்டானோ அப்படி மற்றவர்களும் தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தான் பூமி. ஆனால் பல சமயங்களில் பல நியாயங்கள் ஒரு வழிப் பாதையாகவே இருந்தன. உடல் வலிமையாலும், மன வலிமையாலும் சேர்ந்தே தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் எதிர்த்தான் பூமி.

அதனால் முத்தக்காள் மெஸ்ஸின் வளர்ச்சிக்கு ஏற்பட இருந்த பல இடையூறுகள் தவிர்க்கப்பட்டன. அந்த மெஸ்ஸுக்கு அவன் ஒரு பாதுகாப்பாக இருந்தான். அது பல படிகள் மேலே வளரக் காரணமாயிருந்தான்.

அந்த மெஸ்ஸுக்கு வாடிக்கையாளர்களான சில டாக்ஸி டிரைவர்கள் ஒரு புதிய பிரச்னையோடு பூமியை அணுகி அவன் உதவியை நாடினர். புதுவிதமான திருட்டுக்களும், கொள்ளைகளும் நகரில் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன.

ஓர் ஏழை டாக்ஸி டிரைவருக்கு நேர்ந்த அநுபவம் எல்லாருடைய கண்களையும் திறந்துவிடப் போதுமானதாயிருந்தது.

முத்துக்காளை என்று பெயருடைய அந்த டாக்ஸி டிரைவர் அன்று பகல் முழுவதும் பல சவாரிகளுக்கு அலைந்து சம்பாதித்த பணத்தோடு இரவு பத்து வரை ஓட்டலாம் என்றெண்ணி மவுண்ட் ரோடு புகாரி வாசலில் டாக்ஸியோடு காத்திருந்தார். காக்கி பேண்ட் பாக்கெட்டில் மீட்டர் வசூல் பணம் இரு நூறு ரூபாய்க்கு மேல் இருந்தது. அன்று நல்ல முகூர்த்த நாள். சரியான வசூல்.

இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு மூன்று இளைஞர்கள் வந்து பல்லாவரத்துக்கு அவசரமாகப் போய்த் திரும்ப வேண்டும் என்றும் மீட்டருக்கு மேல் என்ன ஆனாலும் தருகிறோம் என்றும் கூறி வற்புறுத்தினார்கள். சவாரிகள் முடிந்து டாக்ஸி உரிமையாளரான சேட்டிடம் போய் மீட்டர் கணக்குத் தீர்த்துப் பணம் கொடுத்துவிட்டுத் தனக்குச் சேர வேண்டிய தொகையை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப வேண்டிய நேரம் ஆகி விட்டது என்றாலும் குழந்தை குட்டிக்காரரான முத்துக்காளை கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பல்லாவரம் சவாரிக்கு இசைந்தார். அந்தச் சவாரியில் மோசடி எதுவும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.

அந்த இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் போல் தோன்றினர். அவர்கள் டிரஸ் செய்து கொண்டிருந்த விதம் எதுவுமே சந்தேகத்துக்கு உரியவையாகப் படவில்லை. அந்த அகாலத்தில் பல்லாவரம் ஜி.எஸ்.டி. மெயின் ரோடிலிருந்து ஆள் நடமாட்டமற்ற ஓர் ஒதுக்குப்புறமான பகுதிக்கு டாக்ஸியைச் செலுத்தச் சொல்லி அவர்கள் கூறிய போது கூட முத்துக்காளைக்குத் தவறாகப் படவில்லை.

டாக்ஸி மக்கள் புழக்கமில்லாத ஒரு மேட்டருகே சென்ற போது அவர்கள் அதை நிறுத்தச் சொன்னார்கள்.

மூவரில் ஒருவன் என்ஜினை ஆஃப் செய்து சாவியைப் பிடுங்கிக் கொண்டான். மற்றொருவன் பின்பக்கமிருந்து கழுத்தில் உரசுகிறாற்போல ஒரு கத்தியைக் காட்டினான். மூன்றாமவன் "ஒழுங்காக உயிர் தப்ப வேண்டுமானால் பணத்தை எடு" என்று மிரட்டினான்.

முத்துக்காளை தயங்கவே மிரட்டியவன் தானே சோதனை போட்டு எடுக்க முற்பட்டான். இதை அறவே எதிர்பாராத முத்துக்காளை துணுக்குற்று இடி விழுந்தது போல் இருந்தான். பணத்தை எடுத்துக் கொண்டு, முன்பக்க டயர்கள் இரண்டிலும் காற்றைப் பிடுங்கி விட்ட பின் அந்த இளைஞர்கள் ஓடி விட்டனர். முத்துக்காளை கூப்பாடு போடாமல் இருக்க வாயில் துணியைத் திணித்துப் பின் கைகளையும் கட்டிப் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள் அவர்கள். மறுநாள் செய்தி பத்திரிகைகளில் பெரியதாக வெளியாயிற்று.

டாக்ஸி - ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரிய பரபரப்பை உண்டு பண்ணியிருந்தது. இரவு நேரங்களில் இரண்டு மூன்று பேர்களாக வந்து சவாரி கூப்பிடுகிறவர்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று கண்டு பிடிப்பது சிரமமாயிருந்தது. நம்பிச் சவாரி போகவும் முடியவில்லை. சந்தேகப்பட்டே எல்லாச் சவாரிகளையும் விட முடியவும் இல்லை. இந்தப் புதுவிதமான தொல்லையைச் சமாளிப்பதற்காக டாக்ஸி - ஆட்டோ டிரைவர்களின் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.

பூமி தற்போது ஆட்டோ ஓட்டவில்லை என்றாலும் சாப்பிடுவதற்காக மெஸ்ஸுக்கு வந்த டிரைவர்கள் சிலர் பூமியை அந்தக் கூட்டத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்றுப் பூமியும் அங்கே போயிருந்தான். எல்லாரும் அவரவர்களுடைய யோசனைகளைச் சொன்னார்கள்.

பூமிக்கு மிகவும் வேண்டிய நண்பன் ஒருவன் நாலைந்து பேர்களை ஒருவனாக எதிர்த்து நின்று சமாளிக்கும் வகையில் ஒவ்வோர் ஆட்டோ டாக்ஸி டிரைவரும் கராத்தே, ஜூடோ, குங்ஃபூ ஆகிய நவீன தற்காப்புப் போர் முறைகளைக் கற்றாக வேண்டும் என்றும், அதற்குப் பூமி உதவி செய்ய வேண்டும் என்று கூறினான். அந்த யோசனை எல்லாராலும் கரகோஷம் செய்து வரவேற்கப்பட்டது. குறிப்பாக இளம் வயது டிரைவர்கள் அந்த யோசனையை உற்சாகமாக வரவேற்றார்கள்.

"இந்த யோசனையை ஏற்கெனவே என் நண்பர்களான டிரைவர்கள் சில பேருக்கு நானே தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறேன். டாக்ஸி - ஆட்டோ டிரைவர்கள் சவாரி செய்பவர்களிடம் பணம் பறிக்கிறார்கள் என்ற பழைய மாமூலான புகார் மறைந்து சவாரி செய்பவர்கள் தந்திரமாக டாக்ஸி ஆட்டோ டிரைவர்களை மறைவான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களைத் தட்டிப் பணம் பறிப்பது ஆரம்பமாகியிருக்கிறது. வலுச் சண்டைக்குப் போகக் கூடாது. வந்த சண்டையை விடவும் கூடாது. தற்காப்பு என்பது மிக மிக அவசியமானது. தற்காப்பு ஏற்பாடு செய்து கொள்ளாமல் இனிமேல் இந்தத் தொழிலில் காலந் தள்ள முடியாது" என்று பூமியும் அந்த யோசனையை ஆதரித்தான்.

அதன் விளைவாகக் காலையிலும் மாலையிலும் டாக்ஸி ஆட்டோ தொழிலாளர்கள் சிலருக்கு அந்த வட்டாரத்தில் அவர்களே தேர்ந்தெடுத்திருந்த ஒரு மெக்கானிக் ஷெட்டின் பின் புறமுள்ள பகுதியில் பூமி கராத்தே கற்றுத் தர வேண்டியதாயிற்று.

பூமியின் வேலைக்கு இடையூறு இல்லாமல் மெஸ்ஸிலேயே ஒரு மூலையில் கற்றுத் தருமாறு தான் அவர்கள் கூறினார்கள். மெஸ்ஸில் அவ்வளவு இடமில்லாததால் பூமி தான் அவர்களை வேறு இடம் பார்க்குமாறு சொல்லியிருந்தன். மெஸ் அதற்குச் சரியான இடமில்லை என்பது அவன் கருத்தாயிருந்தது. அவனிடம் கற்றுக் கொண்டவர்களுக்கு முதலில் வன்முறைக்கும், தற்காப்புக்கும் உள்ள வேறுபாட்டை அவன் விளக்கிக் கூற வேண்டியிருந்தது. இரண்டும் ஒன்று என்றே அவர்களில் பலர் எண்ணிக் கொண்டிருந்தனர்.

'இரத்தத் திமிரைக் காட்டுவதற்காக உடல் வலிமையைப் பயன்படுத்துவது வன்முறை. நியாயமான காரணத்துக்காக உடல் வலிமையைப் பயன்படுத்துவது தற்காப்பு.' தற்காப்பையும் வன்முறையையும் இனம் பிரித்துப் புரிந்து கொள்கிற அளவு கூட பலருக்குச் சிந்தனை வளர்ந்திருக்கவில்லை என்பது அவர்களிடம் பேசிய போது அவனுக்குப் புரிந்தது.

லெண்டிங் லைப்ரரி பரமசிவம் போலப் பாரதியாரையும் திரு.வி.க.வைப் பற்றியும் உரையாடி விவாதிக்க முடிந்த அறிவுத் தரமுள்ள நண்பர்களோடு பழகும் போதும், மற்றவர்களிடம் பழகும் போதும் தான் இரண்டு விதமான எல்லைகளில் நின்று பழக வேண்டியிருப்பதைப் பூமி உணர்ந்திருந்தான். வன்முறைக்கும், தற்காப்புக்கும் உள்ள வேறுபாட்டை சக டிரைவர்களுக்கு விளக்கும் போதும் அந்த நிலையைப் பூமி தெரிந்து கொண்டே அதற்கு ஏற்ப அவர்களிடம் பேச வேண்டியிருந்தது.

பசுமாட்டுக்குக் கொம்பு இருக்கிறது. அது பெரும்பாலும் அதைத் தற்காப்புக்குப் பயன்படுத்துகிறதே ஒழியத் தன் வலிமையை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதேயில்லை. தற்காப்புக்கும் வன்முறைக்கும் உள்ள வேறுபாடு பகுத்தறியும் திறனே இல்லாத மிருகங்களுக்குக் கூட புரிந்திருக்கிறார் போலத் தெரிகிறது. ஆனால் பகுத்தறிவுள்ளவர்களாகச் சொல்லிக் கொள்ளும் மனிதர்களுக்குத்தான் புரியவில்லை. உறைக்கவில்லை.

இங்கு வன்முறையை வலிமை என்று நினைக்கிறார்கள். தன்னடக்கத்தைக் கையாலாகாத்தனம் என்று நினைக்கிறார்கள். கையாலாகாத்தனத்தைத் தன்னடக்கம் என்று நினைக்கிறார்கள். ஆணவத்தைத் தன்மானம் என்றும் தன்மானத்தை ஆணவம் என்றும் மாற்றிப் புரிந்து கொள்கிறார்கள். புரிய வைக்கிறார்கள்.

தான் பழகுகிற சந்திக்கிற மனிதர்களிடையே கூட இந்த முரண்பாடுகளைப் பூமி அடிக்கடி கண்டான்.

அவன் டாக்ஸி - ஆட்டோ டிரைவர்களுக்குக் கராத்தே கற்பிக்கத் தொடங்கி ஒரு மாத காலம் ஓடி விட்டது. அவன் காலை மாலை வேளைகளில் எந்த நேரம் முதல் எந்த நேரம் முடிய அந்த வேலையில் ஈடுபட்டிருப்பான் என்பது கூட அவனுக்கு வேண்டியவர்களுக்கு அத்துபடியாகிவிட்டது.

ஒரு நாள் மாலை அவன் டிரைவர்களுக்குக் கராத்தே முறைகளையும் பாணிகளையும் கற்பித்துக் கொண்டிருந்தபோது சித்ராவும் அவள் தோழி தேவகியும் அவசரமாக அவனைத் தேடி அங்கே வந்தார்கள். பூமி அவர்களை அங்கே அந்த வேளையில் எதிர்பார்க்காததால் ஆச்சரியமடைந்தான்.

"அவசரமாக உங்கள் உதவி தேவை! ஓர் ஏழைக் குடும்பத்துப் பெண்ணின் மானத்தைக் காப்பதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்" என்று பதற்றமான குரலில் அவனிடம் வேண்டினாள் சித்ரா.

"இங்கே போலீஸ், நீதி, சட்டம் எதுவுமே ஏழைகளின் மானத்தைக் காப்பாற்றாது போலிருக்கிறது" என்று தேவகியும் அவனை நோக்கிக் கூறினாள்.

"சற்று விவரமாகத் தான் சொல்லுங்களேன்" என்றான் பூமி.

அத்தியாயம் - 18

விஷப்பாம்பின் பிளந்த நாக்கைப் போல அதிகார பலமும், பண பலமுமே இன்று இரண்டு கொடிய நச்சு முனைகளாகி எந்த நியாயத்தையும் தீண்டி அழித்து விட முடிகிறது.

"எல்லாம் விவரமாகச் சொல்லி உங்களை அழைத்துப் போக வேண்டும் என்று தான் வந்திருக்கிறோம். நீங்கள் வகுப்பை முடித்து விட்டு அவர்களை எல்லாம் அனுப்பிய பின் நான் விவரம் சொல்கிறேன்" என்றாள் தேவகி.

சித்ராவும் தேவகியும் அவன் முடித்துவிட்டு வருகிறவரை பொறுமையாகக் காத்திருந்தார்கள். ஏறக்குறைய அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தாக வேண்டியிருந்தது. கராத்தே உடையில் மின்னல் வீச்சாகப் பாய்ந்து பூமி அவர்களுக்குக் கற்பிப்பதைக் கண்கள் அகல வியப்போடு பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் சித்ரா. இரும்பாகவும், உருக்காகவும் இறுகியிருந்த அவன் உடல் திரும்பியும் பாய்ந்தும் நிமிர்ந்தும், வியர்வை மின்ன இயங்கிய துரிதகதி அற்புதமாயிருந்தது. மின்னலாகச் சுழன்றான் அவன்.

கற்றுக் கொண்டிருந்தவர்களில் இரண்டொருவர் மந்தபுத்தியினால் நுட்பமான அந்தத் துரிதகதியை மட்டும் உடனே கற்க முடியாமல் திணறினார்கள். உடல் வலிமையோடு மட்டுமே தொடர்புடைய கலை என்றாலும் கராத்தே, குங்ஃபூ, ஜூடோ ஆகிய கலைகளுக்கும் மதி நுட்பத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது. மதி நுட்பமும் விரைந்துணரும் தன்மையும் இல்லாமல் அந்தக் கலைகளில் தேறவே முடியாது என்று தோன்றியது. காந்தத்தைப் போல் எதிர்ப்பட்ட பொருளை விரைந்து உணர்ந்து பற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் இல்லாமல் இந்தக் கலைகளில் எதுவும் வெற்றி பெற முடியாது என்பது உறுதியாகத் தெரிந்தது அவர்களுக்கு.

உடனே உணர்தல், உடனே தீர்மானித்தல், உடனே செயல்படுதல் என்ற தன்மைகளே இந்தக் கலையில் திறமையை நிர்ணயிக்கின்றன என்பதையும் அறிய முடிந்தது. அறிவுடனும் மதிநுட்பத்துடனும் சம்பந்தப்படாது தோன்றியபடி வலிமையைப் பயன்படுத்தும் வேறு யுத்தக் கலைகள் பல இருக்கின்றன. கராத்தேயோ, குங்ஃபூவோ அப்படி இல்லை என்பதை அதன் துரித கதியே உணர்த்தியது. வலிமையும் மதிநுட்பமும் கலந்தால் தான் இதில் வெற்றி என்ற அளவில் இவை இருந்தன. மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த போது மிகவும் மந்த உணர்வுடன் இருந்த மாணவனிடம் பூமியே இப்படிச் சொல்லிக் கண்டித்ததை அவர்கள் கேட்டார்கள்.

உள்ளே போய்ப் பயிற்சி மாணவர்களை அனுப்பி விட்டுக் கராத்தே உடைகளை மாற்றி வழக்கமான உடைகளை அணிந்து வந்தான் பூமி. பேச வேண்டியதை வெளியே போய்ப் பேசலாம் என்பது போல் அவர்களையும் உடனழைத்துக் கொண்டு அங்கிருந்து பூமி வெளியேறினான்.

அந்த இடத்திற்கு மிக அருகிலிருந்த கார்ப்பரேஷன் பூங்கா ஒன்றில் போய் அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். முத்தக்காளை மட்டும் தனியே விட்டுவிட்டு வந்திருப்பதால் பூமி உடனே மெஸ் பக்கம் போயாக வேண்டுமென்று அவசரப்பட்டான். தேவகியை அவனுக்கு விவரங்களைச் சொல்லுமாறு அவசரப்படுத்தினாள் சித்ரா. தேவகி சொல்லத் தொடங்கினாள்.

"எங்க வீட்டுப் பக்கத்திலே ஒரு ஸ்டோர்லே எனக்கு ரொம்பவும் வேண்டிய ஏழைக் குடும்பம் ஒண்ணு ஒண்டுக் குடித்தனம் இருக்கு. வீட்டிலே ஆண்பிள்ளைத் துணை கிடையாது. விதவையான அம்மா வேலை பார்த்துப் பெண்ணைப் படிக்க வைக்கிறாள். நடுத்தர வயதிலே கணவனை இழந்து ஒரே ஒரு பெண்ணுடன் அநாதரவாக வாழும் அந்த அம்மாள், தன் சொந்த முயற்சியாலே டைப்ரைட்டிங் எல்லாம் படித்து ஒரு கம்பெனி வேலையைத் தேடிக் கொண்டு படிப்படியா முன்னேறி இன்று மானேஜருக்கு ஸ்டெனோவாக இருக்கிறாள்.

"மானமாகத் தன் வருமானத்திலேயே காலந் தள்ளிக் கொண்டிருக்கிற அந்தக் குடும்பத் தலைவிக்கு இப்போ ஒரு புதுச் சோதனை வந்திருக்கு. அவளோட பெண் காலேஜிலே பி.ஏ. முதல் வருஷம் படிக்கிறா. ஆளும் கட்சியில் செல்வாக்குள்ள ஒரு பார்லிமெண்ட் மெம்பரோட மகன் ஒருத்தன் இந்தக் குடும்பத்துக்குத் தாங்க முடியாத தொல்லை கொடுக்கிறான்.

"அந்தப் பெண் கொஞ்சம் அழகு. அவ வீட்டை விட்டுக் காலேஜுக்குக் கிளம்பறப்போ - காலேஜிலிருந்து வீடு திரும்புறப்போ விடாம அவளைத் துரத்துறான். இரட்டை அர்த்தமுள்ள சினிமாப் பாட்டை எல்லாம் பாடிக் கூப்பிடறான். தைரியமா வீட்டைத் தேடி வந்து 'உனக்குப் பூ வாங்கிட்டு வந்திருக்கேன்; புடவை வாங்கிட்டு வந்திருக்கேன்'னு நாலு பேர் முன்னாலேயே எடுத்து நீட்றான். போலீஸில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்துப் பார்த்தாங்க. போலீஸ் ஏன்னே கேட்கலே. 'பார்லிமெண்ட் மெம்பரோட மகன்'கிறதாலே மத்தவங்க தலையிடறதுக்கே பயப்படறாங்க. இந்தக் குடும்பத்துக்கு மானம் போகுது.

"அவன் பூவும், புடவையும் வாங்கிக் கொண்டு வந்து நீட்டற தைரியத்தையும், தோரணையையும் பார்த்தால் இவனை எங்களுக்குப் பிடிக்கலே. இவனோட எங்களுக்குச் சம்பந்தம் இல்லே. இவன் வர்றதைப் போறதை நாங்க வெறுக்கிறோம்னு அம்மாவும், பொண்ணும் சத்தியம் பண்ணினாக் கூட மத்தவங்க நம்ப மாட்டாங்க போலிருக்கு."

"மூஞ்சியிலே காரித் துப்பிச் சீ போடா நாயே என்று சொல்லித் துரத்துவதுதானே?"

"அந்தப் பையனுக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமே இல்லீங்க... நாம என்ன சொன்னாலும், எப்படித் திட்டினாலும், அவன் பழையபடி வந்து பல்லை இளிச்சிக்கிட்டுத் தான் நிக்கறான்."

"அந்தப் பையனின் தந்தையைச் சந்தித்து மகனைக் கண்டிக்கச் சொல்லிப் பேசிப் பார்ப்பது தானே? அப்போதாவது பையன் திருந்தலாமே."

"பெண்ணின் அம்மாவும், நானும் வெகு சிரமப்பட்டு முயன்று அவரைச் சந்தித்தோம். அவரு டெல்லியிலும், மெட்ராஸிலுமா மாறி மாறி இருக்கிறதால பார்க்க முடியாதுன்னு தட்டிக் கழிச்சாங்க. கடைசியா எப்படியோ பார்த்து பேச முடிஞ்சுது. விஷயத்தை நாகரிகமா எடுத்துச் சொன்னோம். அவர் எல்லாத்தையும் கேட்ட பின் 'கூலா' "என்ன செய்யறதும்மா; இந்தக் காலத்துப் பசங்க எல்லாருமே சின்ன வயசிலே இப்படித்தான் ஜாலியா அலையறாங்க... நாம் சொன்ன எங்க கேட்கப் போறாங்க... உங்களுக்கு நான் என்ன செய்யணுமோ கூசாம கேளுங்க. பணம் கஷ்டம்னாக் கூட நீங்க சொல்லலாம். என்னாலே முடிஞ்சதைச் செய்ய முடியும்" என்பதாக ரேட் பேச ஆரம்பிப்பது போல் அவர் சொல்லிவிட்டார்.

"எங்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கஷ்டப்படும் ஏழைப் பெண்கள் எந்த ரேட்டுக்கும் கிடைப்பார்கள் என்று பார்க்கிற அப்பனிடம் போய் மகனின் இழி செயலுக்கு நியாயம் தேட முயன்ற எங்கள் அறியாமைக்காக வருத்தப்பட்டுக் கொண்டே திரும்பி வந்து சேர்ந்தோம். உங்களிடம் சொல்லி அந்தப் பையனை எச்சரித்து வைக்கலாம் என்று சித்ரா யோசனை சொன்னாள். அந்தப் பையன் இப்படியே தொடர்ந்து தேடி வந்து கொண்டிருந்தால் பின்னால் தன் பெண்ணுக்கு எந்த நல்ல இடத்திலுமே கல்யாணம் ஆகாமற் போய்விடுமோ என்று அந்தம்மா பயப்படறாங்க! வேலையை விட்டுவிட்டு இந்த ஊரிலிருந்தே ஒழித்துக் கொண்டு போய்விடலாம்னு நினைக்கிற அளவுக்குக் கூட மனக்கஷ்டம் வந்தாச்சு அவங்களுக்கு" என்றாள் தேவகி.

இதைக் கேட்டு பூமி பெருமூச்சு விட்டான். பின்பு சொன்னான்:

"விஷப்பாம்பின் பிளந்த நாக்குப் போல அதிகார பலமும், பண பலமுமே இரண்டு கொடிய நச்சு முனைகளாகி எந்த நியாயத்தையும் தீண்டி அழிக்க முடிகிற காலம் இது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இனி நான் அந்தப் பையனின் தந்தையைப் பார்த்துப் பேசிப் பயனில்லை. சிறுவயதில் அவர் பையன் ஆசைப்படுகிற விளையாட்டுப் பொம்மையை ஆகிற விலைக்கு வாங்கித் தருவதைப் போல பெண்ணின் மனத்தையும் இன்று வாங்கித் தரலாம் என்று அவர் நினைக்கிறார் போலிருக்கிறது! நீங்கள் அந்தப் பையன் படிக்கிற கல்லூரி முகவரியைத் தாருங்கள்."

கல்லூரியின் பெயரைச் சொன்னாள் தேவகி.

"இவர்கள் எல்லாம் அவனைப் பற்றி வர்ணிப்பதிலிருந்து, எப்போதும் அவனைச் சுற்றி ஒரு ரவுடிக் கூட்டம் இருக்கும் போலத் தெரிகிறது" என்று அதுவரை பேசாமலிருந்த சித்ரா குறுக்கிட்டுச் சொன்னாள். அவள் குரலில் கவலை தொனித்தது.

"ரௌடிகளுக்காக நான் பயப்படவில்லை. பரிதாபப்பட மட்டுமே செய்கிறேன்" என்று உடனே வெட்டினாற் போலப் பூமியிடமிருந்து பதில் வந்தது.

அந்தப் பெண்ணின் பெயர் என்ன? அவள் தாயின் பெயர் என்ன? முதலிய விவரங்களையும் தேவகியிடம் கேட்டுக் குறித்துக் கொண்டான் பூமி. பையனைப் பற்றியும், அவன் தந்தையைப் பற்றியும் கூட மறுபடியும் விசாரித்த பின்,

"இதை நான் சரிபடுத்த முடியுமா என்று பார்க்கிறேன்" என்று பூமி திடமான குரலில் கூறினான். அவன் அந்த அளவு உறுதி கூறியதே தேவகிக்கு அப்போது மலையளவு ஆறுதலளிப்பதாய் இருந்தது.

அத்தியாயம் - 19

இன்றைய சமூகத்தின் எந்த மூலையிலும் ஒழுங்கற்று இருக்கிற ஒருவனைக் கண்டிக்க முன் வருகிறவர்களை விட அவனுக்குப் பயந்து பணிந்து ஒதுங்கி ஒடுங்கி விடுகிறவர்களே அதிகம்.

சித்ராவும் தேவகியும் வந்து கூறிய விவரங்களிலிருந்து பெரும்பாலான இந்நாட்டு இளைஞர்களைப் பற்றிக் கவலையும் பரிதாபமும் கொண்டான் பூமி. தங்களை விரும்பாத பெண்களைத் தாங்கள் விரும்புகிற கழிசடைகளாகக் காமுகர்களாய், முன்னேறுகிற ஒரு சமுதாயத்தில் வெறும் 'நியூஸென்ஸ் வால்யூ' மட்டுமே உள்ளவர்களாய், இன்றைய இளைஞர் சக்தி சிதறுண்டு போவதை அறிந்து வருந்தினான் பூமி.

படிக்கிற வயதில் அடுத்தவன் வீட்டுப் பெண் பிள்ளையைச் சுற்றுகிற இளைஞனைப் போல் சமூக விரோதி வேறொருவன் இருக்க முடியாது. ஆண் துணையில்லாத ஓர் அநாதைக் குடும்பத்துப் பெண்ணுக்கு இப்படித் தொல்லை கொடுத்தால் அந்தக் குடும்பம் என்ன தான் செய்யும்?

'இப்படி ஊர் வம்புக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு அலைய நாம்தானா அகப்பட்டோம்?' என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த எண்ணம் மாறியது. 'எல்லாருமே எல்லாவற்றிலும் சுயநலமாக மாறிவிட்டால் அப்புறம் மனிதனாக வாழ்வதில் தான் என்ன பெருமை இருக்கிறது?' - என்று எண்ணியபோது அவன் மனத்தில் பழைய கருணையும் இரக்கமும் மேல் எழுந்து மிகுந்து நின்றன.

சித்ராவும் தேவகியும் தேடி வந்து வேண்டியதற்காக இந்த வம்பிலும் தானே தலையிடுவது என்று துணிந்தான் அவன். பதவியும், அதிகாரமும், பணமும் உள்ளவர்களிடம் மோதுவது எவ்வளவு சிரமமான காரியம் என்று அவன் யோசிக்கவுமில்லை. தயங்கியபடி அதைத் தள்ளிப் போடவுமில்லை. உடனே துரிதமாக அந்த அநாதைக் குடும்பத்துக்காகப் பரிந்து கொண்டு போக வேண்டுமென்றுதான் முனைப்பாயிருந்தான்.

என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, பொதுக் காரியங்களில் இப்படி ஒரு முனைப்பையும் சுறுசுறுப்பையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. இந்த முனைப்பு அவனுடைய இரத்தத்தோடு கலந்து போயிருந்தது. இது அபாயம் தருவது, இது தனக்குக் கேடு சூழ்வது என்று பிறர் நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் பாடுபடும்போதும் எந்த விநாடியும் எதற்கும் தயங்கி ஒதுங்க முடியாதது தன் பலமா பலவீனமா என்று பலமுறை அவன் தனக்குத்தானே சிந்தித்திருக்கிறான்.

காலையில் கல்லூரி தொடங்குகிற நேரத்துக்குப் பூமி அங்கே போய்விட்டான். அந்தக் கல்லூரியின் முதல்வர் ஒரு நடுத்தர வயதைக் கடந்த முதியவர். கல்லூரி மாணவர்கள் படிப்பு, இளைஞர் மனப்போக்கு ஆகியவை பற்றி மிகவும் கசப்பான உணர்ச்சியோடு இருந்தார். எதிலும் நம்பிக்கையோடு பேசவில்லை அவர். 'ஏதோ காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்' - என்கிற தோரணையில் அலுத்துக் கொண்டார். விதியையும் தலை எழுத்தையுமே நிறைய நம்பினார்.

"உங்கள் கல்லூரியில் உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் படிக்கிற மாணவன் இப்படி ஒரு தவறு செய்தால் நீங்கள் கூப்பிட்டுக் கண்டிக்க வேண்டாமா? ஆண் துணையற்ற குடும்பத்து ஏழைப் பெண் ஒருத்தியைச் சுற்றிக் கொண்டு துரத்துவது என்பது படிக்கிற பையனுக்கு அழகில்லையே?" என்று பூமி பேச்சைத் தொடங்கினான்.

அவர் பதிலுக்குப் பூமியை நோக்கிச் சுரத்து இல்லாத குரலில் கூறலானார்.

"அவனைக் கண்டிக்க நான் கிளம்பினால் என் வேலைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அந்தப் பையனோட அப்பா ஆளும் கட்சியிலே செல்வாக்குள்ள பார்லிமெண்ட் மெம்பர். காலேஜ் போர்டு சேர்மன் அவர் சொல்றதைக் கேட்கக் கூடியவர். தவிர ஒரு பையன் காலேஜுக்குள்ளே தப்பாகவோ, தாறுமாறாகவோ நடந்தாலே எங்களாலே கண்டிக்க முடியலே. காலேஜுக்கு வெளியே அவன் எப்போ எந்தப் பெண்ணை துரத்திக் கொண்டிருக்கான்னு நாங்க வாட்ச் பண்றதோ கண்டிக்கிறதோ நடக்காத காரியம். இப்போ எல்லாம் நாங்க மாணவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முடியற காலமில்லே சார். அவங்க தான் எங்களுக்குக் கற்பிக்கிறாங்க. நாங்க படிக்கிறோம்" என்று கையை விரித்து விட்டார் பிரின்ஸிபால்.

இன்றைய சமூகத்தின் எந்த மூலையிலும் ஒழுங்கற்று இருக்கிற ஒருவனைக் கண்டிக்க முன்வருகிறவர்களை விட அவனுக்குப் பயந்து பணிந்து ஒதுங்குகிறவர்களும் ஒடுங்குகிறவர்களுமே அதிகம் தென்படுவது புரிந்தது.

தான் இனிமேல் அவரிடம் முறையிட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை என்றெண்ணி விளையாட்டு மைதானத்துக்கு வந்தான் பூமி. கல்லூரி விளையாட்டு மைதானம் கலகலப்பாக இருந்தது. வகுப்புகளில் இருந்ததை விட அதிக மாணவர்கள் மைதானத்தில் இருந்தார்கள். வகுப்புகள் அவர்களைக் கவரவில்லை. மைதானமே கவர்ந்திருந்தது. அங்கிருந்த கல்லூரி அலுவலக ஊழியன் ஒருவனை அணுகி,

"இங்கே பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்செல்வத்தின் மகன் படிக்கிறதாய்ச் சொன்னார்களே? அந்தப் பையனை எங்கே பார்க்கலாம்?" என்று பூமி கேட்டான்.

அந்த ஊழியன் 'கல்லூரி லேபரேட்டரி' என்று பெரிதாக எழுதிய ஒரு கட்டிடத்தின் முகப்பில் இருந்த மகிழ மரத்தடியைச் சுட்டிக் காட்டி, "பொம்புளைப் புள்ளைங்களுக்கான டேஸ்காலர்ஸ் லஞ்ச் ரூம் வாசல்லே பாருங்க. அங்கே தான் யாரு கிட்டவாவது வம்படிச்சுக்கிட்டிருப்பாரு. 'குமரகுரு'ன்னு சொல்லி விசாரியுங்க. அதுதான் அந்தப் பையனோட பேரு" என்றான்.

உடனே பூமி லேபரேட்டரி முகப்புக்கு விரைந்தான்.

நயமாக வாய் வார்த்தையாகப் பேசி எடுத்துச் சொல்லி அதற்குக் கட்டுப்படா விட்டால் தான் உடல் வலிமையைக் காட்ட வேண்டும் என்பது பூமியின் தீர்மானம். கல்லூரிக் காம்பவுண்டிற்குள் உலகத்தைப் பற்றியே நினைவு இல்லாமல் எதிர்காலச் சிந்தனைகளை அறவே தவிர்த்து விட்டு அரட்டையும் சிரிப்பும், கேலியும் கிண்டலும், கும்மாளமுமாக இந்நாட்டு இளைய தலைமுறை வளைய வளைய வந்து கொண்டிருந்தது. கவலை இல்லாத கோவில் காளைகள் போல் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் 'எடுப்பார் கைப்பிள்ளை'யாகி யாராலும் தட்டிக் கேட்கப்படாமல் எவராலும் கண்டிக்கப்படாமல், அங்கே மாணவர்கள் மதமதத்துக் கொண்டிருந்தனர்.

ஏதோ ஒரு விநோதமான புது ரக மிருகக் காட்சிச் சாலைக்குள் நடந்து போவது போல உணர்ந்தான் பூமி. ஜீன்ஸும் பெல் பாட்டமும் சஃபாரியும் டி ஷர்ட்டும் விதவிதமான நவநாகரிக உடைகளுமாக அணிந்து இளமையின் பலவிதமான பிம்பங்கள் மனிதத் தன்மையின் அடையாளங்களே அற்ற மிருகத்தனமான உற்சாகத்தில் திளைத்திருந்தன. அவர்களுக்கு மனிதத் தன்மையைக் கற்பிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த முதல்வரும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் டெமான்ஸ்டிரேட்டர்களும் அந்தப் புதிய நாகரிக விலங்குகளிடம் அகப்படாமலிருக்கவும், கடிபடாமலிருக்கவும், நடுங்கிப் பயந்து அந்த வளாகத்திற்குள் ஏதோ சிரம ஜீவிகளாய் நடமாடிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.

அந்த மாணவன் குமரகுருவைச் சுற்றி ஜீன்ஸும், பலவிதமான வக்கிரவாசகங்கள் அச்சிட்ட பனியன்களும் அணிந்த மாணவிகள் சிலர் நின்றிருந்தனர். வெடிச் சிரிப்பலைகள் கிளம்பி ஓய்ந்து கொண்டிருந்தன. ஒரே அரட்டைதான்.

பூமி அருகே தென்பட்டதும் அவனை யாரென்று அறியும் முன்னரே சைகையான கேலிகளை அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். பூமி தன் அனுமானத்தில் இவன் தான் குமரகுருவாயிருக்க வேண்டும் என்று எண்ணி அவனிடம், "நீங்க தானே மிஸ்டர் குமரகுரு? பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்செல்வத்தினுடைய சன்...?"

"ஆமாம்! சுருக்கமா இங்கே 'குரு'ன்னு சொன்னாலே எல்லாருக்கும் புரியும். இந்தக் 'காம்பஸ்'லே நான் தான் அத்தினி பேருக்கும் குரு."

பூமி இதைக் கேட்டுப் புன்னகை புரிந்தபடியே, "ஒண்ணும் புரியலியே? நீங்கள் இங்கே படிப்பதாக அல்லவா சொன்னார்கள்? உண்மையில் படிக்கிறீர்களா? அல்லது கற்பிக்கிறீர்களா?"

"அப்படிக் கேளு சொல்றேன்... படிக்கிறேன்னு தான் பேரு. ஆனா இங்கே சுத்திக்கிட்டிருக்கிற வாத்தியானுவ நிறைய எங்கக்கிட்டக் கத்துக்கிட்டுத்தான் பெறவு சும்மா கம்னு இருக்கப் பழகிக்கிட்டாங்க..."

கழுத்து முட்ட நிரம்பிய தடித்தனத்தில் வார்த்தைகள் வெளிவந்தன. பூமிக்குக் குமட்டியது.

"மிஸ்டர் குமரகுரு! உங்ககிட்டத் தனியாகக் கொஞ்சம் பேசணுமே?"

இப்படிப் பூமி கூறியதைக் கேட்டு அவன் இடி இடியென்று சிரித்தான்.

சிரிப்பு ஓய்ந்ததும் தன் அருகே நின்றிருந்த ஜீன்ஸ் மாணவிகளைச் சுட்டிக் காட்டியபடி, "நான் இவளுக மாதிரிப் பொம்பளைக் கிட்டத்தான் தனியாப் பேசற வழக்கம். நீங்க... என்னடான்னா..."

பூமிக்கு உணர்ச்சி நரம்புகள் புடைத்தன. அடக்கமாக இருக்க முயன்றான். கல்லூரி காம்பவுண்டிற்குள் கலகம் விளைவிக்கலாமா கூடாதா என்ற தயக்கம் வேறு தடுத்தது. தந்திரமாக நடந்து குமரகுருவை அடக்க விரும்பினான்.

"அப்போ உங்களிடத்தில் தனியாப் பேசணும்னாப் பொம்பளைங்க கூப்பிட்டாத்தான் வருவீங்களாக்கும்..."

"ஷ்யூர்! நிச்சயம் வருவேன்."

"அப்படியானால் முறைப்படி அழைப்பு வரும்! வாருங்கள், சந்திக்கலாம்" என்று பூமி கூறிவிட்டுப் புறப்பட்டான்.

"அது சரி! நீ யாரு என்னன்னு சொல்லாமலே போறியேப்பா?" என்று மீண்டும் உற்சாகமான ஏகவசனத்திலேயே பூமியை மடக்கினான் குமரகுரு.

"இப்போது வேண்டாம்! அப்புறம் நீயே தெரிந்து கொள்ளலாம் வாத்தியாரே" என்று அதே ஏக வசனத்தில் அவனுக்குப் பதில் கூறிவிட்டு அங்கிருந்து விரைந்தான் பூமி.

அத்தியாயம் - 20

தீமையைத் துணிந்து செய்கின்றவனை விட அதை எதிர்க்கத் துணியாது தயங்கி நிற்கிறவன் தான் இன்று மிகவும் மோசமானவன்.

அந்தக் கல்லூரியிலிருந்து திரும்பிச் சென்ற பூமி அன்று மாலையிலேயே சித்ராவையும் தேவகியையும் மீண்டும் சந்தித்தான். நடந்ததைச் சொன்னான். அதைக் கேட்ட சித்ராவுக்கும், தேவகிக்கும் ஓரளவு ஏமாற்றமாகக் கூட இருந்தது.

"நீங்கள் போய்ச் சந்தித்துப் பேசியதும், உங்களைப் பார்த்ததுமே அந்தப் பையன் திருந்தி வழிக்கு வந்துவிடுவான் என்று நினைத்தோம்."

"அது சாத்தியமில்லை! இந்தப் பையன் கொஞ்சம் முற்றிய கேஸ்! சாதுரியமாக வழிக்குக் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் காரியம் கெட்டுப் போகும். முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்."

"என்ன தான் செய்ய வேண்டும் என்கிறீர்கள் நீங்கள்?" என்று தேவகியும் சித்ராவும் பூமியைக் கேட்டார்கள்.

பூமி கல்லூரியில் தனக்கும் குமரகுருவுக்கும் நடந்த உரையாடலைச் சொல்லி விவரித்தான்.

"நீங்கள் இருவரும் அந்தப் பெண்ணைக் கொஞ்சம் தந்திரமாக நடந்து கொள்ளச் சொல்லி ஏற்பாடு செய்தால் அவனுக்குப் பாடம் கற்பித்து விடலாம்."

"தந்திரமாக நடந்து கொள்வது என்றால் என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?"

"அவனோடு பேசி அவனைத் தானே ஒரு பூங்காவுக்கு வரச் சொல்லி அவள் அழைக்க வேண்டும். அவனுக்குச் சந்தேகம் எதுவும் ஏற்படாதபடி மிகவும் கவனமாகக் கூப்பிட வேண்டும்."

"இது மிகவும் சிரமம். அந்தப் பெண்ணும் அவளுடைய அம்மாவும் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள். என்னவோ ஏதோ என்று சந்தேகப்படுவார்கள்."

"சந்தேகப்பட்டும் பயனில்லை! முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும்."

"அவங்க ரொம்ப கௌரவமான குடும்பம். மத்தவங்களை ஏறெடுத்துப் பார்க்கவே பயப்படுவாங்க. தப்பா ஒண்ணை நடிக்கிறதுக்குக் கூடக் கூச்சப்படுவாங்க."

"அநாவசியமான பயம், அநாவசியமான கூச்சம் எல்லாம் இந்தத் தலைமுறைக்கு ஒரு சிறிதும் ஆகாத குணங்க. அணுவளவு கூச்சமும் பயமும் கூட இல்லாமல் சமூக விரோதிகள் எல்லாக் கெடுதல்களையும் உடனே துணிந்து செய்கிறபோது அதை எதிர்க்கவும் தடுக்கவும் வேண்டிய நல்லவர்கள் எடுத்ததற்கெல்லாம் ஒவ்வொரு விநாடியும் கூச்சமும் பயமுமாகத் தயங்கிக் கொண்டு நின்றால் எப்படி? தீமை செய்கிறவன் நாணுவதற்குப் பதில் நன்மை செய்கிறவனே நாணியும் கூசியும் பயந்து நின்றால் அப்படிப் பயந்து சாகிற சமூகம் உருப்படாது. அதனால் தான் மகாகவி பாரதியார் புதிய தலைமுறை மனிதனுக்குச் சொல்லும் போது 'நாணமும் அச்சமும் மடநாய்களுக்கு அன்றோ வேண்டும்?' என்று மிகவும் கடுமையாகச் சாடினார்.

"தீயவற்றை எதிர்க்கக் கூசும் கூச்சமும், தயக்கமும் இந்திய சமூகத்தைப் பிடித்த புதிய தொத்து நோய்கள். நல்லவற்றை ஆதரிக்கவும் தயங்கித் தீயவற்றை எதிர்க்கவும் தயங்கி, எதற்கும் துணிய முடியாமல் நிற்கும் இரண்டும் கெட்டான் மனிதர்கள் தான் இன்று மிகப்பெரிய சமூக விரோதிகள். தீமையைத் துணிந்து செய்கிறவனை விட, அதை எதிர்க்கத் துணியாது தயங்கி நிற்கிறவன் மோசமானவன். இப்போது கேள்வி எல்லாம் நாம் இந்தப் பிரச்னையைத் துணிந்து எதிர்த்து வெற்றி கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதுதான்! இதற்கு எனக்குப் பதில் தெரிந்தாக வேண்டும்."

சித்ராவும் தேவகியும் பிரச்னைக்கு இலக்கான அந்தப் பெண்ணின் தாயிடம் எவ்வாறு இதைப் பற்றிக் கூறுவது என்று தயங்கினார்கள். அவர்களுக்குள் இப்படி வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த போது நல்லவேளையாக லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அங்கே தற்செயலாக வந்து சேர்ந்திருந்தார். அவரிடம் விவாதத்தைக் கூறி யோசனை கேட்டார்கள் சித்ராவும் தேவகியும். பூமி கூறியபடி பிரச்னையை மிகவும் சாதுரியமாகச் சமாளிக்க வேண்டும் என்பதை அவரும் ஒப்புக் கொண்டார். பெண்ணிடத்திலும் அவள் தாயிடத்திலும் தானே வந்து விஷயத்தை விளக்கி எடுத்துச் சொல்வதாகப் பரமசிவம் ஒப்புக் கொண்டார். சித்ராவுக்கும் தேவகிக்கும் அதைக்கேட்டுச் சற்றே தெம்பு வந்தது.

பூமியும் உடன் வரவேண்டும் என்று அழைத்தார்கள் அவர்கள். "பரமசிவம் அண்ணாச்சி வந்தாலே போதுமே? நான் வேறு எதற்கு?" என்று மறுத்துப் பார்த்தான் அவன். பரமசிவமே அவனும் உடன் வந்தாக வேண்டுமென்று வற்புறுத்தினார்.

அங்கே பாலாஜி நகருக்கும் லாயிட்ஸ் ரோடுக்கும் நடுவே ஓர் ஒடுக்கமான சந்தில் இரயில் கம்பார்ட்மெண்ட் போல இரு புறமும் நீண்ட குடியிருப்புக்கள் அடங்கிய அந்த ஒட்டுக் குடித்தன ஸ்டோர் அமைந்திருந்தது.

பூமி, பரமசிவம், தேவகி, சித்ரா எல்லாரையும் சேர்த்துப் பார்த்தபோது அந்த நடுத்தர வயதுத் தாய்க்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்தது.

"ஊர் ரொம்பக் கெட்டுப் போயிருக்கு. தடிமாடு மாதிரி எப்பவும் வயசுப் பெண்ணைச் சுற்றிச் சுற்றி வரான் ஒரு போக்கிரி. அதைப்பத்திப் போலீஸ்லேப் போய்க் கம்ப்ளெயிண்ட் குடுத்தா அங்க போலீஸ் அதிகாரிகளே 'நீங்க தான் கொஞ்சம் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். பெரிய எடத்துப்புள்ளை. நாங்க ஒண்ணும் 'டச்' பண்ணிக்க முடியாது. தண்ணியில்லா காட்டுக்கு மாத்திப்பிடுவாங்க'ன்னு, நம்மை எச்சரிச்சு அனுப்பறாங்க. என்னை மாதிரி ஏழை பாழைங்க என்னதான் பண்ண முடியும்னு தெரியலே. ஏதோ தெய்வமாகப் பார்த்து உங்களை எல்லாம் இங்கே அனுப்பி வைச்சிருக்கு... நீங்கள்ளாம் பார்த்துத்தான் ஒரு வழி பண்ணணும்" என்றாள் நிராதரவான அந்தத் தாய்.

"பயப்படாமல் என்னவோ ஏதோ என்று யோசிக்காமல் நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். அந்தத் தறுதலை உங்கள் பெண்ணைத் தேடி வரும்போது அவளே அவனிடம் நைச்சியமாகப் பேசி மயிலாப்பூரிலுள்ள நாகேஸ்வரராவ் பார்க்கில் வந்து தனியே தன்னைச் சந்திக்கும்படி கேட்கச் சொல்லுங்கள். அவன் வரச் சம்மதிப்பான். இரட்டை மகிழ்ச்சியோடு வருவான். என்றைக்கு எந்த நேரத்தில் வருகிறான் என்பதை மட்டும் முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவித்து விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றார் பரமசிவம்.

அந்தத் தாய் கொஞ்சம் தயங்கினாள்.

"ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் என்ன செய்வது?"

"கோளாறாக எதுவும் நடக்காது! பார்க்கிலே அந்த நேரத்துக்கு முந்தியிருந்தே நாங்க தயாரா காத்திருப்போம். இப்போ நாங்க அவனுக்குக் கற்பிக்கிற பாடத்துக்கு அப்புறம் உங்கள் பெண் இருக்கிற திசைப் பக்கம் அவன் தலைவைத்துக் கூட படுக்க மாட்டான்" என்றார்கள் அவர்கள்.

"சொல்றபடி கேளுங்கம்மா! வேற யாரும் இந்த விஷயத்திலே நமக்கு உதவி செய்ய மாட்டாங்க..." என்று சித்ராவும் தேவகியும் அந்த அம்மாளிடம் மன்றாடுவது போன்ற குரலில் கூறினார்கள்.

நீண்ட யோசனைக்குப் பிறகு அந்த அம்மாள் சம்மதித்தாள்.

இரண்டு தினங்களுக்குப் பின் மறுபடி சித்ராவும் தேவகியும் பூமியைத் தேடி மெஸ்ஸுக்கு வந்தார்கள்.

"நாம் விரித்த வலையில் அந்தக் கரடி விழப் போகிறது. நாளைக்கு மாலை ஏழு மணிக்கு அவனை நாகேஸ்வரராவ் பூங்காவில் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுச் சம்மதிக்கச் செய்து விட்டாள் அந்தப் பெண்" என்றாள் சித்ரா.

"அவன் நேரே பார்க்குக்கு வரட்டும். அவனைச் சந்திப்பதற்கு அரை மணிக்கு முன்னால் அவளை அழைத்துக் கொண்டு நீ மெஸ்ஸுக்கு வா; அவளுக்கு விவரங்கள் சொல்லிப் பூங்காவின் எந்த இடத்தில் சந்திப்பு நிகழ வேண்டுமென்றெல்லாம் காட்டி ஏற்பாடு செய்டுவிடலாம்" என்றான்.

சித்ராவும் தேவகியும் அதற்கு இணங்கினர்.

மறுநாள் மாலை ஐந்து மணிக்கே அந்தப் பெண்ணுடன் சித்ராவும் தேவகியும் மெஸ்ஸுக்கு வந்து விட்டார்கள். அவளுக்கு எல்லா ஏற்பாடுகளையும் விவரித்த பின், பூமி, சித்ரா, தேவகி ஆகிய மூவரும் அவளோடு கூடவே பூங்காவுக்குச் சென்றனர்.

பூமி ஏற்கெனவே சொல்லி ஏற்பாடு செய்திருந்தபடி பரமசிவமும் வேறு சில நண்பர்களும் பார்க்கில் பல இடங்களில் தனித்தனியே பரவலாகக் காத்திருந்தனர். புதரடர்ந்து மறைவாயிருந்த ஒரு பகுதியில் அந்தப் பெண் காமாட்சி - அதுதான் அவள் பெயர் - ரௌடி மாணவன் குமரகுருவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

ஆறே முக்கால் மணிக்குச் சரியாக ஒளி மங்கி இருள் கவியும் நேரத்துக்கு குமரகுரு அங்கே வந்தான். பூமியும் மற்றவர்களும் உஷாரானார்கள். ஏற்பாட்டின் படி அவன் சிறிதுநேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்த பின் திடீரென்று அவர்கள் திடும் பிரவேசமாக அங்கே எதிர்ப்பட்டு அவனை மடக்க வேண்டும். அவனும் அவளும் பேசத் தொடங்கியதும் அவர்கள் மறைந்து நின்றபடி கவனித்தனர்.

அத்தியாயம் - 21

சமூகத்தில் அந்தஸ்தினால் எவ்வளவு உயரத்திலுள்ள எந்த வசதி படைத்த அயோக்கியன் தவறு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்க முடியுமானால் தண்டிக்கிற உரிமை அதன் அடிமட்டத்திலுள்ள வசதியேயற்ற ஒவ்வொரு யோக்கியனுக்கும் வேண்டும்.

எல்லாமே ஏற்பாடு செய்திருந்தபடி நடந்தன. நாகேஸ்வரராவ் பூங்காவில் அந்தப் பெண் காமாட்சியை, ரௌடியும் கல்லூரி மாணவனுமான குமரகுரு சந்தித்த பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. குமரகுரு தாங்கிக் கொள்ள முடியாத உற்சாகத்தோடு இருந்தான். ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த காமாட்சியே வெறுப்பு மாறித் தன்னை வலிய அழைத்திருந்த பெருமையில் திளைத்து அவளிடம் காதல் கனிமொழிகளைப் பறிமாறத் தொடங்கியிருந்தான் குமரகுரு. நன்றாகவே உளறத் தொடங்கியிருந்தான்.

ஆனால் உள்ளூறப் பயத்தோடும் பதற்றத்தோடும் அருவருப்போடும் அவனருகே அமர்ந்திருந்தாள் அந்த இளம் பெண். மனத்திற்கு விருப்பமில்லாததை மேலுக்காக நடிப்பது சிரமமாயிருந்தது அவளுக்கு.

கயமை நிறைந்த விடலையும், காமுகனும், வசதியுள்ள குடும்பத்துப் பொறுக்கியுமான குமரகுருவோ தன் குலாவல் பேச்சின் மூலம் அவளிடம் எல்லை மீறி விரசத்துக்குப் போய்க் கொண்டிருந்தான்.

"கண்ணே! எந்த ஹோட்டலில் ரூம் புக் பண்ணலாம்? மெட்ராஸா? பெங்களூரா? என் உள்ளம் இப்பவே இன்பக் கனவுகளிலே திளைக்கிறது" என்று கூறிக் கொண்டே அவளைத் தோளிலும் இடுப்பிலும் தொட முயன்றான் அந்த விடலை. அவன் இஞ்சி தின்ற குரங்கு போல பரபரப்பாயிருந்தான்.

அவ்வளவில் அவள் நெளிந்து வளைந்து விலகி அவன் தன்னைத் தீண்டவிடாமல் பாதுகாத்துக் கொண்டாள். முள் மேல் அமர்ந்திருப்பது போல் சிரமமாயிருந்தது அவளுக்கு. பார்க்கில் கூட்டம் குறைந்து கொஞ்சம் அமைதி சூழட்டும் என்று பொறுத்திருந்தனர் மறைவில் இருந்த பூமி குழுவினர்.

தாங்கள் குமரகுருவுக்குப் பாடம் கற்பிப்பதற்கு முன்னர் காமாட்சியை எப்படியாவது அவனிடம் இருந்து விலகி விடைபெற்றுப் போகச் செய்துவிட வேண்டும் என்பது அவர்கள் திட்டமாயிருந்தது. அதை எப்படிச் செயற்படுத்துவது என்று தயங்கி யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

ஓர் ஆட்டோவை அனுப்பி வீரப்பெருமாள் முதலி தெருவில் வசிக்கும் தங்களுக்குத் தெரிந்த குடும்பத்துப் பெண் ஒருத்தியை வரவழைத்தார்கள். அவளிடம் சாதுரியமாக எல்லாம் சொல்லிக் காமாட்சி உட்கார்ந்திருந்த இடத்துக்கு அனுப்பினார்கள்.

அந்தப் பெண் நேரே போய் அந்தப் பூங்காவில் காமாட்சியும், குமரகுருவும் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கமாக நின்று, "வெளியிலே உங்கம்மா ஆட்டோவில் வந்து காத்திருக்காங்க... ஒரு நிமிஷம் இப்பிடி வந்திட்டுப் போ" என்று காமாட்சியை நோக்கிச் சத்தம் போட்டுச் சொன்னாள்:-

"நீங்க இருங்க... நான் என்னன்னு கேட்டிட்டு வந்துடறேன்" என்று குமரகுருவிடம் சொல்லிவிட்டு காமாட்சி அந்தப் பெண்ணை நோக்கி வந்தாள்.

அவள் அருகே வந்ததும், "பூமி அனுப்பிச்சாரு! நேரமாச்சு நீ அவங்கிட்டச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போய் மெஸ்ஸிலே இருக்கணுமாம். உன் கூடவே அவனும் கிளம்பிடாமே, 'நீங்க கொஞ்சம் இருந்து வாங்க. வெளியே எங்கம்மா காத்திருக்காங்காங்களாம். அவங்க நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க வேணாம்'னு அவனிடம் சொல்லி விட்டு வா, மத்தது தானே நடக்கும்" என்றாள் பூமியால் அனுப்பப்பட்ட பெண்.

குறிப்பறிந்து காமாட்சி அப்படியே செய்தாள். குருட்டு மோகத்திலிருந்த அந்தப் பையனும் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவே இல்லை. அவளை முதலில் போக அனுமதித்துவிட்டுத் தான் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அவன் மனத்தில் ஒரே குஷி.

அதுதான் சமயமென்று, தெரிந்த ஆளான அந்தப் பார்க் வாட்ச்மேனிடம் கூறி உள்ளே பூங்காப் பகுதிகளில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகளை அணைக்கச் செய்தான் பூமி. பார்க்கில் இருள் சூழ்ந்தது. வானில் மேகமூட்டம் வேறு. அவனும் குழுவினரும் இருளில் பாய்ந்தார்கள். ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியாத அளவு இருட்டு இருந்தது வசதியாக போயிற்று. ரௌடி குமரகுரு வசமாகச் சிக்கிக் கொண்டான்.

"ஏண்டா பொம்பளைப் பொறுக்கி! தெருவிலே போற பொம்பிளைங்களைச் சுத்திக்கிட்டு மிரட்டறதை இனி மேலாவது விடுவியா இல்லியா? உதை போதுமா? இன்னும் வேணுமா?"

"ஐயோ என்னை விட்டுடுங்க... கொன்னுப்புடாதீங்க..." என்ற குமரகுரு பரிதாபகரமாக அலறுவது இருளிலிருந்து கேட்டது.

"நீ இப்பிடி எத்தனை அநாதைப் பொண்ணுங்களை அலற அலறத் தொல்லைப் படுத்தியிருப்பே. இப்ப அதுக்கு வட்டியும் முதலுமாச் சேர்த்து அநுபவிடா அயோக்கிய நாயே."

அங்கே மறுபடி பார்க்கில் வெளிச்சம் வந்த போது மூர்ச்சையுற்றுக் கிடந்த குமரகுருவின் உடல் மேல் வால் போஸ்டர் போலப் பெரிய தாளில், 'அபலைப் பெண்களின் பின்னால் சுற்றித் திரியும் திமிர் பிடித்த காமுகர்களுக்கு இதுதான் நேரிடும்' என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்தது.

வாட்ச்மேன் ஓடிப்போய்ப் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தான்.

கீழே கிடந்த உடலில் மார்புப் பகுதியை மறைத்துக் கிடந்த போஸ்டர் பரபரப்பை உண்டு பண்ணவே அந்த நேரத்திலும் ஒரு கூட்டம் கூடி விட்டது. பல்லக்குமானியம் குடியிருப்புப் பகுதிக்குத் தகவல் எட்டி அங்கிருந்து வேறு நிறைய ஆட்கள் வேடிக்கை பார்க்க வந்தார்கள்.

"யாரோ பொம்பிளையை இட்டுக்கினு வந்து பேசிக்கிட்டிருந்தாரு. ஒரு அஞ்சு நிமிஷம் ஃப்யூஸ் போய் லைட்டு அணைஞ்சு போயிருந்துச்சு. அப்ப யாரோ அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டாங்க" என்று வாட்ச்மேன் பட்டுக் கொள்ளாமல் போலீஸாரிடம் சொன்னான்.

அன்று அங்கே பொது இடத்தில் அடிபட்டுக் கிடப்பது பார்லிமெண்ட் உறுப்பினர் பன்னீர்செல்வத்தின் மகன் என்று தெரிவதற்கு சிறிது நேரம் ஆயிற்று. உடனே பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு ஃபோன் மூலம் தொடர்பு கொண்டார்கள். அவர் ஊரில் இல்லை என்றாலும் வீட்டிலிருந்து கார் அனுப்பப்பட்டது. அதற்குள் குமரகுருவின் உடல் மேல் பரப்பப்பட்டிருந்த சுவரொட்டியுடன் சில பத்திரிகை நிருபர்கள் அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

பொது இடத்தில் அடிபட்டுக் கிடப்பது பார்லிமெண்ட் உறுப்பினரின் மகன் என்று தெரிந்த பின்பும் கூடியிருந்த பொதுமக்களின் கோபமும் ஆத்திரமும் மாறவில்லை. பார்க் வாட்ச்மேன் கூறியதிலிருந்தும் அங்கே மூர்ச்சையாகிக் கிடந்தவன் மேல் விரிக்கப்பட்டிருந்த போஸ்டரிலிருந்தும் நடந்ததைப் புரிந்து கொண்டிருந்த பொதுமக்கள் தங்களுக்குள் ஆத்திரமாகவும் கோபமாகவும் பேசிக் கொண்டார்கள்.

"பெண்களைத் துரத்துகிற காமவெறியன் ஒவ்வொருவனுக்கும் இப்படி உறைக்கிற விதத்தில் ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும். அப்பொழுதுதான் விடலைகளுக்குப் புத்தி வரும்" என்றார் ஒருவர்.

"நக்ஸலைட்டுகள் தான் இப்படி எல்லாம் தாக்கி விட்டுப் பக்கத்தில் எழுதியும் போடுவார்கள்."

"இதை அவர்கள் செய்திருந்தால் இதற்காக அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்த வேண்டும்."

"சமூகத்தின் அந்தஸ்தில் எவ்வளவு உயரத்தில் எவ்வளவு வசதியுள்ள அயோக்கியன் தவறு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்க முடியுமானால் தண்டிக்கிற உரிமை அதன் அடிமட்டத்தில் உள்ள வசதியற்ற ஒவ்வொரு யோக்கியனுக்கும் வேண்டும்."

"இன்றைய நிலையில் சட்டமும், நீதிமன்றங்களும், வக்கீல்களும், நீதிபதிகளும் தவறு செய்கிறவர்களை உடனே தண்டிக்கவோ, கண்டிக்கவோ விடாமல் தடுக்கும் அல்லது தள்ளிப் போட உதவும் சாதனங்களாகவே பயன்படுகிற நிலைமைதான் நீடிக்கிறது."

"பெயில், ஜாமீன், ரிட், ஸ்டே என்ற பெயரில் சமூக விரோதிகளும் சுரண்டல் பேர்வழிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் ஓட்டைகள் நமது சட்டங்களில் நிறையவே இருக்கின்றன."

என்றெல்லாம் கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டார்கள். யாரும் அடிபட்டு விழுந்தவனுக்காக இரக்கப்படவில்லை. பொது உணர்ச்சி அப்போது அவனுக்கு எதிராகவே இருந்தது.

பூமியும் நண்பர்களும் நாடகம் போல இதை நடத்தியிருந்தார்கள். தாங்கள் யாரும் நேரடியாக இதில் சம்பந்தப்பட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. காரியம் முடிந்ததும் மெஸ்ஸில் காத்திருந்த சித்ராவிடமும் தேவகியிடமும் அந்தப் பெண் காமாட்சியைப் பத்திரமாக ஒப்படைத்திருந்தான் பூமி. சித்ரா மட்டும் சிறிது சந்தேகத்துடன் பூமியை ஒரு கேள்வி கேட்டாள்.

"இவளோடு பேச இங்கே பார்க்குக்குத் தேடி வந்ததனால் தான் அப்படி எல்லாம் நடந்ததென்று வன்மம் வைத்துக் கொண்டு அந்தப் பையன் மறுபடி இவளைத் தேடிப் பழி வாங்கக் கிளம்பினால் என்ன செய்வது?"

"கனவில் கூட இனிமேல் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டான். ஒரு வேளை கொழுப்பு எடுத்துப் போய் மறுபடியும் வாலாட்டினால் மறுபடி பாடம் கற்பிப்போம்" என்று பூமி சிரித்துக் கொண்டே பதில் கூறினான்.

சித்ராவும் தேவகியும் அவனுக்கு நன்றி தெரிவிக்க முற்பட்டார்கள். அவன் குறிக்கிட்டுத் தடுத்தான்.

"நெருங்கிப் பழகறவங்க ஒருத்தருக்கொருத்தர் நன்றியே சொல்லக்கூடாது. நல்ல காரியத்தை யாராவது செய்தால் அவங்களை அளவு கடந்து பாராட்டறதும் கூடச் செயற்கையான எல்லை வரை போயிடுது. நல்லது செய்யறதே அபூர்வம்னு நினைக்கிற அளவுக்கு அது அதிகமாகப் பாராட்டப் படுகிறது இங்கே. நல்லதுதான் செய்யணும் - செய்ய முடியும் - செய்யப்பட வேணும்னு - இயல்பான நினைப்பே வர்றது இல்லை."

பூமி சொல்லியதில் இருந்த நியாயம் சித்ராவுக்குப் புரியச் சிறிது நேரம் பிடித்தது. புரிந்தவுடனே இதைச் சொல்லியதின் மூலம் அவன் எவ்வளவிற்கு உயர்ந்தவன் என்பதும் சேர்ந்தே புரிந்தது.

அத்தியாயம் - 22

இந்த நூற்றாண்டு யோக்கியனை விட யோக்கியனைப் போலப் பாசாங்கு செய்யும் சாமர்த்தியமுள்ளவனே எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்படுகிறான்.

இருளில் அடையாளம் தெரியாத யாரோ சிலரால் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்தின் மகன் குமரகுரு தாக்கப்பட்டதாக ஒரு பரபரப்பு பத்திரிகைகளில் கிளம்பி ஓய்ந்தது. பன்னீர்செல்வத்தின் அரசியல் சார்புக்கு எதிரான தரப்பைச் சேர்ந்த பத்திரிகைகள் இந்தத் தாக்குதலில் ஒரு பெண் விவகாரம் சம்பந்தப் பட்டிருப்பதாகப் பிரசுரிக்கவே பன்னீர்செல்வம் அதிகம் மிரண்டு போனார்.

போலீஸ் விசாரணை வழக்கு என்றெல்லாம் போனால் தன் மகனின் குட்டு உடைந்து போகும் என்று பயந்து அவரே இந்தச் செய்தியை அப்படியே பூசி மெழுகி அமுக்கி விட விரும்பினார். பெரிது படுத்த விரும்பவில்லை. இதைப் பெரிதுபடுத்தினால் தன்னுடைய மானம் தான் போகும் என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார். மற்றவர்களுக்கு முன் விட்டுக் கொடுக்க விரும்பாவிட்டாலும் தன் மகனின் வண்டவாளம் அவருக்கு நன்றாகத் தெரிந்தே இருந்தது.

அரசியல் பிரபலமாக இருந்து கொஞ்சம் பணம் காசு பண்ணிக் கொண்டிருக்கிற சமயம் பார்த்துப் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடாதே என்று அவரே தன் மகன் குமரகுருவைக் கண்டிக்கவும் தயங்கவில்லை.

முற்றிலும் கெட்டவனாக இருப்பதையோ, கெட்ட வழியில் பணம் பண்ணுவதையோ, கெடுதல்கள் செய்வதையோ பற்றி எந்த அரசியல்வாதியும் கூச்சப்படவில்லை. பன்னீர்செல்வமும் அப்படித்தான் இரட்டை வேஷம் போட்டார். மக்கள் தொண்டராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் தொண்டர், ஏழைப் பங்காளர் என்ற பாசாங்குகள் ஒவ்வொரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கும் இன்று தேவைப்பட்டன.

ரௌடி குமரகுருவின் தந்தை பன்னீர்செல்வத்திற்கும் அந்தப் பாசாங்குகள் தேவையாய் இருந்தன, பயன்பட்டன, பழகிப் போயிருந்தன. இந்த நூற்றாண்டு அரசியலுக்கு யோக்கியனைவிட யோக்கியனைப் போல் பாசாங்கு செய்யும் சாமர்த்தியமுள்ளவனே எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்பட்டான். யோக்கியனும், நல்லவனும் இடையூறாகவும், தொந்தரவாகவுமே கருதப்பட்டார்கள். யோக்கியதையும் ஒழுக்கமும், 'நியூசென்ஸாக'க் கருதப்பட்டன. ஆனாலும் அந்த நல்ல குணங்களை நடிப்பதும் பாவிப்பதும் மட்டும் ஒரு வழக்கமாக இருந்து வந்தன.

செல்வாக்குள்ள வலுவானவர்களின் தவறுகளை எதிர்க்க எல்லோரும் பின் வாங்கித் தயங்குகிற சமயத்தில் பாவனைகளோ பாசாங்குகளோ இல்லாமல் பூமி அதற்கு முன் வந்ததன் மூலம் சித்ராவின் மனத்தில் அவனைப் பற்றி இருந்த மதிப்பு அதிகமாகி இருந்தது.

சவாரி சென்றவர் மறந்து போய் விட்டுச் சென்ற பண்டங்களை நாணயமாக திரும்பத் தேடி வந்து ஒப்படைக்கும் ஒரு யோக்கியமான ஆட்டோ டிரைவராகத்தான் அவனை அவள் முதன் முதலாகச் சந்தித்திருந்தாள். பின்பு படிப்படியாகத் தன்னை அவளுக்கு நிரூபித்திருந்தான் பூமி. முத்தக்காள் மெஸ்ஸில் அதிகக் கூட்டமில்லாத ஒரு நண்பகல் நேரத்தில் அன்று அவளுக்கு பள்ளியும் விடுமுறை - அவனைக் கேட்காமலே அவனுக்கும் சேர்த்து ஒரு திரைப்படத்தின் மாட்னி ஷோவிற்கு ரிசர்வ் செய்து கொண்டு தேடிப் போய்ச் சேர்ந்திருந்தாள் சித்ரா.

அது ஒரு புகழ் பெற்ற புரூஸ்லீ படம். பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. பூமி படம் பார்ப்பது போன்ற பொழுது போக்கு அம்சங்களில் அளவு கடந்த விருப்பமோ வெறுப்போ காட்டுவதில்லை. சித்ராவுக்கும் அது தெரியும். தான் கூப்பிட்டு அவன் வருகிறானா, இல்லையா என்று சோதிக்க வேண்டும் என்றும் இல்லாவிடினும், அவன் உடன் வருவான் என்ற ஆசையோடும் அவள் டிக்கெட் வாங்கி ரிசர்வ் செய்திருந்தாள்.

"உங்களை நம்பி வாங்கிவிட்டேன். நீங்கள் என்னோடு வர வேண்டும்."

"இது சாதாரண வேண்டுகோள்தான்! பயப்பட வேண்டாம். இதை நான் மறுத்துவிட மாட்டேன். ஆனால் என்னை இதை விட உயர்ந்த காரியங்களுக்காகவும் நம்பலாம் - நம்ப வேண்டும்."

"சாதாரண நம்பிக்கைகளில் தொடங்கித்தான் உயர்ந்த நம்பிக்கைகள் பிறக்கின்றன."

"இருக்கலாம்! ஆனால் உயர்ந்த நம்பிக்கைகள் சாதாரண நம்பிக்கைகள் என்றெல்லாம் நம்பிக்கைகளில் வித்தியாசங்களோ பிரிவுகளோ இருப்பதாக நான் கருதவில்லை. நம்புகின்ற காரியங்களைப் பொறுத்துத்தான் உயர்வு தாழ்வெல்லாம் வருகின்றன. காரியங்களில்தான் நான் தராதரம் பார்க்கிறேன்." பேசிக் கொண்டே பூமி அவளோடு திரைப்படத்துக்குக் கிளம்பத் தயாரானான்.

போகும்போது வேலையில்லாத இளைஞர்களுக்காக அரசாங்கக் கடனுதவியில் வைத்துக் கொடுக்கப்பெற்ற ஒரு சாதாரணத் தெருமுனைத் தேநீர்க்கடையில் அவளுக்குத் தேநீர் வாங்கிக் கொடுத்தான் அவன்.

சேறும் சகதியுமாயிருந்த நடைபாதையில் எதிரும் புதிருமாக நின்று அவனோடு தேநீர் அருந்துவது ஒரு புது அநுபவமாக இருந்தது அவளுக்கு. அவள் அதில் அருவருப்போ கூச்சமோ அடைகிறாளா இல்லையா என்பதைப் பூமி கூர்ந்து கவனிப்பதாகத் தோன்றியது.

"சுற்றுப்புறத்தைப் பார்த்து அசிங்கப்படக்கூடாது. இந்தக் கடையில் தேநீர் மிகவும் நன்றாயிருக்கும். என்னைப் போல் இந்தக் கடைக்காரரும் ஒரு பட்டதாரி. 'ஸெல்ஃப் எம்ப்ளாய்மெண்ட்' திட்டத்தில் உதவி பெற்று இதனை நடத்துகிறார்."

"ஆமாம்! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி, தேநீர் இங்கு மிகவும் நன்றாயிருக்கிறது."

"முன்பு ஒருமுறை சந்தித்தோமே 'புரட்சிமித்திரனோ' என்னவோ - பேர் சொன்னதாக நினைவு. அவனைப் போன்ற போலிப் புரட்சிவாதிகள் டீ குடிப்பதற்குக் கூட ஹோட்டல் சோழாவுக்குப் போகவேண்டும் என்றல்லவா சொல்வார்கள்?"

"அவனுக்குத் தெரிந்த புரட்சி அவ்வளவுதான். அவன் பணக்காரன். அந்தக் காம்ப்ளெக்ஸில் ஒன்றும் புரியாமல் புரட்சி புரட்சி என்று பேசித் தீர்க்கிறான்."

"உண்மையான புரட்சி என்பது பேசப்படுவதில்லை. தீவிரமாகச் செய்யப்படுவது. பம்பரம் மிக வேகமாகச் சுழலும் போது சத்தமே கேட்காது. சுற்றுகிறதா நிற்கிறதா என்று கூடச் சந்தேகமாயிருக்கும். தீவிரப் புரட்சியும் அப்படித்தான்."

அவனுடைய விளக்கம் அவளுக்குப் பிடித்திருந்தது.

"உங்கள் உவமை அழகாயிருக்கிறது" என்று பாராட்டினாள் அவள்.

"ஓர் உவமை அழகாயிருக்கிறது என்று பாராட்டப்படுவதற்குப் பதில், ஆழமானதாயிருக்கிறதென்று பாராட்டப்படவும் - புரிந்து கொள்ளப்படவும் வேண்டுமென்று நினைக்கிறவன் நான்! சில சமயங்களில் தத்துவார்த்தத்தின் வறுமை அல்லது வெறுமையே சொற்களின் அழகிய கோவை போலத் தோன்றும். 'தி பாவர்டி ஆஃப் பிலாஸபி" - என்று மார்க்ஸ் ஒரு நூலையே இப்படிப் பேரில் எழுதியிருக்கிறார்."

இப்படி அவன் பேசும்போதெல்லாம் ஆச்சரியத்தில் திளைத்தாள் சித்ரா. திரைப்படம் முடிந்ததும் மெஸ்ஸுக்கு அவசரமாகப் போகவேண்டும் என்றான் அவன். அவள் போகும் போது அவனைக் கேட்டாள்: "நீங்கள் பெரும்பாலும் ஏன் படங்களுக்கு விரும்பிப் போவதில்லை?"

"அளவு மீறி மிகைப்படுத்தப்பட்ட நற்குணங்களுள்ளவர்களும் அதே போல மிகைப்படுத்தப்பட்ட தீய குணமுள்ளவர்களும் வருகிற மாதிரி நமது திரைக்கதைகள் அமைவதால் எனக்குப் பிடிப்பதில்லை. நன்மையும் நம்பும்படியாக இல்லை. தீமையும் நம்பும்படியாக இல்லை."

"இந்தப் படம் உங்களுக்குப் பிடித்திருந்ததா?..."

"இதில் இயல்பான கதையோட்டமும் விறுவிறுப்பும் இணைந்திருக்கும் விதம் குறை சொல்ல முடியாதபடி அமைந்திருக்கிறது."

"ஆட்டோவை யாரிடம் விட்டிருக்கிறீர்கள்? மெஸ்ஸை நிர்வாகம் செய்வது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேள்வியை வேறு திசையில் திருப்பினாள் சித்ரா.

"இது ஒரு சவாலாக வந்து வாய்த்தது. நம்மால் இந்த மெஸ்ஸே மூடப்பட்டு விடுமோ என்று இதன் உரிமையாளியான முத்தக்காள் பயந்தபோது இதை நாம் முன்னின்று முனைந்து நடத்தும் பொறுப்பு வந்து சேர்ந்தது. இப்போது இது அடைந்துள்ள வளர்ச்சியில் நம் துணையில்லாமல் தானே தனியாக இதை நடத்த முடியாது என்று முத்தக்காளே பயப்படுகிறாள்."

"தனியாக நடத்த முடியாது. உங்கள் துணை கண்டிப்பாக வேண்டுமென்று அவங்களே சொல்லி விட்டாங்களா?"

"ஒரு முறையில்லை, பலமுறை சொல்லியாயிற்று. ஒரு தாயிடம் மகன் கட்டுப்பட்டிருப்பது போல் நானும் இங்கே கட்டுப்பட்டுப் போயிருக்கிறேன்."

பேசிக் கொண்டே மெஸ்ஸுக்குப் போயிருந்தார்கள் அவர்கள். முத்தக்காள் சோர்வுடன் அவர்களை எதிர் கொண்டாள்.

"கார்ப்பொரேஷன் ஸானிட்டரி இன்ஸ்பெக்டர் ஆபீஸிலிருந்து ஸ்பெஷல் மெஸஞ்சர் வந்து இந்த நோட்டீஸைக் கொடுத்திட்டுப் போறான்" - என்று பூமியைப் பார்த்ததும் அவனிடம் அந்தக் கவரை எடுத்து நீட்டினாள் முத்தக்காள்.

'பிரச்னை எதுவும் இல்லையென்றாயே? இதோ வந்திருக்கிறது பார்' என்பது போல் சித்ராவைப் பார்த்துப் புன்னகை புரிந்தபடியே முத்தக்காளிடம் அதை வாங்கி உறையைப் பிரித்தான் பூமி.

அத்தியாயம் - 23

உரிமைகளைச் சலுகைகள் போல் பெறும் மௌட்டீகம் நிறைந்த மக்களும் கடமைகளை உதவிகள் போலச் செய்யும் திமிர் பிடித்த அதிகாரவர்க்கமும் உள்ள நாட்டில் சுதந்திரமாவது, ஜனநாயகமாவது?

எந்த ஒரு சமூக விரோத சக்தியும் உடனே ஓய்ந்து விடுவதில்லை என்று தெரிந்தது. 'என் விருப்பத்துக்கு அடி பணிந்து விடு! இல்லையானால் உன்னை ஒடுக்கிவிடுவேன்' என்பதுபோல மிரட்டும் சக்தி ஒவ்வோர் கெட்டவனுக்கும் இருந்தது. லஞ்சமும், கலப்படமும் இரட்டைக் குழந்தைகளாயிருந்தன!

வர்த்தகத்தில் இலஞ்சம் கொடுப்பதற்கும் சேர்த்து லாபம் சம்பாதிக்க வேண்டுமானால் கலப்படம் செய்தே ஆக வேண்டியிருந்தது. உணவு விடுதிகளும், உண்ணும் பொருள்களும் கூட இதற்கு விதிவிலக்காக இல்லை.

அதே மைலாப்பூரில் சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்யாத எத்தனையோ உணவு விடுதிகள் மாநகராட்சியின் சுகாதார இலாகாவுக்கு மனக்குறை ஏற்படாமல் அவர்களை அவ்வப்போது 'கவனித்து' விட்டுப் பிரமாதமாக நடந்தன. இதுவரை முத்தக்காளும் அப்படித்தான் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், பூமியைப் போல் வளைந்து கொடுக்க மறுத்த மனிதன் வந்த பிறகுதான் அங்கே சிக்கல்கள் உண்டாயின. சிரமங்கள் கண்ணுக்குத் தென்பட்டன.

ஒரு நாட்டின் சுதந்திரமும் ஜனநாயகமும் அதன் எல்லா மக்களுக்கும் நியாயமான சிவில் உரிமைகளைத் தரமுடியும் தரவேண்டும் என்ற பூமியின் வாதம் அங்கே செல்லுபடியாகவில்லை. பணமும் அதிகாரமும் உள்ளவர்களுக்குச் சிவில் உரிமைகள் மட்டுமல்லாமல் அதற்கும் அதிகமான உரிமைகள் காட்டப்பட்டன. பணமோ அதிகாரமோ இல்லாமல் நியாயமான பாத்தியதை மட்டும் உள்ளவர்களுக்கோ அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. சுதந்திர இந்தியா அப்படித்தான் இருந்தது. உரிமைகளுக்கும் மறைமுக விலை, வரி எல்லாம் இருந்தது.

உரிமைகள் மறுக்கப்பட்ட போது பணமும் அதிகாரமும் உள்ளவர்கள் அவற்றைச் சலுகைகள் போல் பெற முற்பட்டு பின் அதுவே வழக்கமாகி விட்டிருந்தது.

உரிமைகளைச் சலுகைகள் போல் பெறும் மௌட்டீகம் நிறைந்த மக்களும், கடமைகளை உதவிகள் போல் செய்யும் திமிர் பிடித்த அதிகார வர்க்கமும் ஏற்படுகிற நாட்டில் சுதந்திரமாவது, ஜனநாயகமாவது என்று தோன்றியது. கார்ப்பொரேஷன் உத்தரவு பூமிக்கு எரிச்சலூட்டியது. மாநகராட்சிச் சட்டப்படி என்னென்ன சுகாதார வசதிகள் தேவையோ அவை குறைவின்றிச் செய்யப்பட்டிருந்தும் காரணமே காட்டாமல் ஹோட்டலை உடனே மூட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டிருந்தது. அந்தச் சவாலை ஏற்று எதிர் நின்று சமாளித்தாக வேண்டும் என்று பூமி உறுதி செய்து கொண்டான்.

முத்தக்காளிடம் இந்த விவரத்தைச் சொல்லி யோசனை கேட்டால் அவள் தான் கடைப்பிடித்த பழைய வழியைத்தான் விரும்புவாள் என்று பூமி எண்ணினான். சித்ராவும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாள்.

பாவ புண்ணியங்களையும் கடவுளையும் நம்பும் பழைய தலைமுறை மனிதர்கள் அவற்றின் உடனிகழ்ச்சியாகச் சத்தியத்தையும் நேர்மையையும் நம்பிச் செயல்பட மட்டுமே துணிவதில்லை. அப்படி நேரங்களில் சமயோசிதத்தை மட்டுமே நம்பி வளைந்து கொடுத்து வாழ்கிறார்கள்.

அதனால்தான் இந்நூற்றாண்டில் ஆஸ்தீகனாக இருக்கும் ஓர் அயோக்கியனை விட நாஸ்தீகனாக இருக்கும் ஒரு யோக்கியனை அதிகம் மதிக்க வேண்டியிருக்கிறது. நேர்மையை நம்பாமல் கடவுளை மட்டுமே நம்புகிற ஒருவனை விடக் கடவுளை நம்பாமல் நேர்மையை நம்பும் ஒருவனைப் பல மடங்கு உயர்ந்தவனாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் பூமி கடவுளை விட உண்மையையும் நேர்மையையும் மதிக்கவும் செயலாற்றவும் கற்றிருந்தான். சித்ரா அவனிடம் சொன்னாள்:

"கார்ப்பொரேஷன் விவகாரமே இப்படித்தான். அந்தக் கட்டிடமே லஞ்ச மயமானது. சுவரோரமாக யாராவது சாய்ந்து நின்றால், அந்தக் கட்டிடத்துச் சுவர் கூடக் கை நீட்டி, 'ஏதாவது கொடு' என்று கேட்கும். ரிப்பன் கட்டிடத்தினது சுவருக்குக் கூட அந்த மகிமை உண்டு."

"இருக்கலாம்! அது எனக்குத் தெரியாது. ஆனால், நான் இதை இப்படியே விட்டுவிடப் போவதில்லை. மடியில் கனமில்லாத போது வழியில் யாருக்காகப் பயப்பட வேண்டும்? எதற்காகப் பயப்பட வேண்டும்? சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன். இந்த மாதிரி வழக்குகளில் பழக்கமுள்ள ஒரு வக்கீலைச் சந்திக்க வேண்டும்" என்றான் பூமி.

"திரு. வி.க. லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணனுடைய கடையில் இப்படி ஒரு வக்கீலை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். கன்ஸ்யூமர் மூவ்மெண்ட், சிவில் லிபர்ட்டீஸ் இயக்கம் ஆகியவற்றோடு நெருங்கின தொடர்பு உள்ளவர். புத்தகங்கள் எடுப்பதற்காக அடிக்கடி அண்ணனுடைய லைப்ரரிக்கு வருவார்" என்று சித்ரா கூறியவுடன் இருவருமாகப் பரமசிவத்தின் நூல் வழங்கும் நிலையத்திற்குச் சென்றார்கள். அங்கே மாலை நேரத்தில் அலுவலகம் விட்டு வீடு திரும்புகிற வழியில் புத்தகங்களையும் எடுத்துச் செல்வதற்காகப் பலர் கூடியிருந்தார்கள். அந்தப் பரபரப்பிலும் பரமசிவம் பூமியையும் சித்ராவையும் முகமலர்ச்சியோடு வரவேற்றார்.

எங்கிருந்தோ அப்போது புரட்சிமித்திரன் அங்கு வந்து சேர்ந்தான்.

"ஹாய் சித்ரா! உன்னிடம் நான் எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியிருந்தும் அந்தக் கவியரங்கத்துக்கு நீ ஏன் வரவில்லை? அடுத்த வாரம் எல்.எல்.ஏ. பில்டிங் ஹாலில் ஒரு பட்டிமன்றம் இருக்கிறது. அதற்காவது கட்டாயம் உன்னை எதிர்பார்க்கிறேன்" - என்று தயாராகச் சித்ராவிடம் இன்விடேஷன் கார்டை எடுத்து நீட்டினான் புரட்சிமித்திரன்.

சித்ரா புன்னகை புரிந்தாள். கார்டை வாங்கிக் கொண்டாள். "உங்கள் இன்விடேஷனுக்கு நன்றி! ஆனால் இதற்கெல்லாம் வரவும், பொழுதுபோக்கவும் எனக்கு நேரமில்லை. உங்களைப் போன்ற பிரபுத்துவக் குடும்ப இளைஞர்களுக்கு கவிதை, கலை, இலக்கியம், புரட்சி எல்லாமே இப்படிப் பொழுது போக்குகள்தான். பட்டிமன்றங்களும், கவியரங்கங்களும் நாட்டில் எதையுமே சாதிக்கப் போவதில்லை."

"நீ இப்படியெல்லாம் பேசுவதற்கு மிஸ்டர் பூமிநாதன் தான் காரணம் என்று நினைக்கிறேன் சித்ரா!"

"நீங்கள் சொல்கிறபடி இந்த மாறுதல்களுக்கு நான் தான் காரணம் என்றால், அதற்காக நான் வருந்தவில்லை, பெருமைப் படுகிறேன்" என்று உடனே புரட்சிமித்திரனுக்குச் சுடச்சுடப் பதில் கூறினான் பூமி.

நூல் வழங்கு நிலையத்தில் கூட்டம் குறைந்ததும் பரமசிவமே பூமியையும், சித்ராவையும் லாயிட்ஸ் ரோட்டில் இருந்த அந்த வழக்கறிஞர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அந்த வழக்கறிஞர் உற்சாகமாக அவர்களை வரவேற்றார். பூமி எல்லா விவரங்களையும் தெரிவித்து விட்டு, மாநகராட்சியின் சுகாதார இலாகாவிலிருந்து வந்திருந்த நோட்டீஸையும் அவரிடம் கொடுத்தான்.

அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவர் அவனிடம் கேட்டார்: "சட்டப்படி இருக்க வேண்டிய சுகாதார வசதிகள் உங்கள் ஹோட்டலில் குறைவின்றி இருக்கின்றன அல்லவா?"

"சொல்லப் போனால் சட்டத்தில் இருப்பதை விட அதிகமான சுகாதார வசதிகளை நாங்கள் எங்களுடைய ஹோட்டலில் செய்து கொடுத்திருக்கிறோம்."

"பின் எதற்காக இத்தனை கடுமையான நடவடிக்கை? ஏதோ ஹோட்டலை உடனே இழுத்து மூடி விட வேண்டும் என்பது போல் ஆத்திரமாக உத்தரவு போட்டிருக்கிறார்கள்?"

"நினைத்த போதெல்லாம் சானிடரி இன்ஸ்பெக்டரும், மேஸ்திரியும், பரிவாரங்களும் ஹோட்டலுக்குள் நுழைந்து நாற்பது ஐம்பது ரூபாய்க்குச் சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் போவதை நாங்கள் அனுமதிக்க மறுத்தோம். எண்ணெயும் பருப்பும் இப்போது விற்கிற விலையில் ஓசி கொடுத்துக் கட்டுப்படியாகுமா? நாங்கள் ஓசி டிபன் மறுத்ததற்குப் பழி வாங்கத்தான் இந்த நடவடிக்கை என்று நினைக்கிறேன்."

"ஹோட்டலை மூடிவிட முடியும் என்ற அவர்களுடைய திமிரை ஒடுக்க வழி இருக்கிறது. கவலைப்படாதீர்கள். ஒரு ரிட் போடலாம். மாநகராட்சி உத்தரவிற்கு ஸ்டே வாங்கிவிடலாம். அது என்னால் முடியும். மற்ற வர்த்தகர்கள் சுலபமாக எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொடுத்து பழக்கப்படுத்தி விடுவதினால் லஞ்சம் கொடுக்காதவன் மோசமானவன் என்று நினைத்துப் பழிவாங்க முற்பட்டு விடுகிறார்கள். அதிகார வர்க்கத்தையும் சர்க்கார் அலுவலகங்களையும் பிடித்திருக்கும் நீண்டகாலத் தொற்று நோய் அது. புதிய விழிப்புள்ள இளைஞர் சமூகம் தான் இனி அதைப் போக்க வேண்டும். இப்போது நீங்கள் முன் வந்திருக்கிற மாதிரிப் பலர் துணிந்து முன் வந்து நீதி கோரினால் தான் பரிகாரம் கிடைக்கும்! கோர்ட் வேண்டாம். வழக்கு வேண்டாம். வம்பு வேண்டாம். குறுக்கு வழியில் பணத்தைக் கொடுத்துத் தன்னைக் கட்டிக் கொள்ளலாம் என்று மக்களே குறுக்கு வழிகளை நாடுகிற வரை இந்த நோய் தீரப் போவதில்லை."

"எனக்குக் குறுக்கு வழியில் நம்பிக்கை இல்லை சார். வம்புக்கும் வழக்குக்கும் நான் தயார்?" என்றான் பூமி.

"கார்ப்பொரேஷனை ஒரு கை பார்க்கலாம். எல்லாம் செய்து டைப் பண்ணி வைக்கிறேன். நாளைக் காலையில் வாருங்கள்! வக்காலத்தில் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும்" என்றார் அந்த வழக்கறிஞர். பூமி அதற்கு முழு மனத்தோடு சம்மதித்தான்.

அத்தியாயம் - 24

ஒவ்வொரு பெண்ணின் திருமணமும் அவள் திருமணம் முடிந்தவுடன் அவளுடைய சொந்தத் தாய் தந்தையையும் மீதியுள்ள குடும்பத்தையும் நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிற அளவு வரதட்சிணைக் கொடுமையைக் கொண்டிருக்கிறது.

வாக்களித்தவாறே கார்ப்பொரேஷன்காரர்கள் ஹோட்டலை மூட முடியாதபடி அந்த வழக்கறிஞர் ஸ்டே வாங்கிக் கொடுத்து விட்டார். பின்பு தொடர்ந்து நடந்த வழக்கிலும் பூமிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். மாநகராட்சியின் ஹோட்டலை மூடும் உத்தரவு செல்லாது என்று தீர்ப்புக் கிடைத்தது. இந்த வழக்கின் மூலமும் இந்தத் தீர்ப்பின் மூலமும் அந்த வட்டாரத்தில் இருந்த எல்லா உணவு விடுதிகளுக்குமே விடிவு பிறந்தது. எல்லாருக்கும் ஓரளவு கண் திறந்தது. தைரியமும் வந்தது.

"ஒழுங்காக இல்லாதிருந்ததைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் லஞ்சம் கொடுக்க இணங்கிப் பிறகு 'லஞ்சம் கொடுத்துச் சமாளிப்பதற்கு வழி இருக்கிறது' என்ற நம்பிக்கையிலே தொடர்ந்து ஒழுங்காக இல்லாமல் வாழப் பழகி விடும் மனப்பான்மை பலருக்கு வந்து விடுகிறது" என பூமி சித்ராவிடம் சொன்னான்.

அவனுடைய கருத்து நூறு சதவிகிதம் சரியானது என்று பரமசிவம் ஒப்புக் கொண்டார். அதிகாரிகளின் பேராசையினாலும், பொது மக்களின் சோம்பலாலுமே லஞ்சம் அசுர வளர்ச்சி பெறுகிறது என்பதுதான் சரியான கணிப்பு என்பதற்குப் பல உதாரணங்களைப் பரமசிவம் எடுத்துக் கூறினார்.

பூமியின் மேல் சித்ராவின் மதிப்பும் பிரியமும் உயரக் காரணமான பல சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.

அவர்கள் வாழ்ந்த அதே மைலாப்பூர்ப் பகுதியில் வேறொரு மத்திய தர ஹோட்டல்காரரின் மகனுக்குத் திருமணம் வந்தது.

அந்த ஹோட்டல் உரிமையாளரே குடும்பத்தோடு நேரில் வந்து அழைத்துவிட்டுப் போனார். அவர் தேடி வந்த போது முத்தக்காள், சித்ரா, பூமி மூவரும் இருந்தார்கள். மூவருக்கும் தனித்தனியே பெயர் எழுதி அழைப்பிதழ்கள் எடுத்துக் கொடுத்திருந்தார். அவர் மூவருமே திருமணத்துக்குக் கண்டிப்பாக வரவேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போயிருந்தார். பூமியும், சித்ராவும் அந்தத் திருமணத்திற்குப் போய்விட்டு வரவேண்டும் என்றாள் முத்தக்காள்.

"நம்மைப் போலவே ஒரு வியாபாரி மெனக்கெட்டுத் தேடி வந்து நேரிலேயே அழைச்சிட்டுப் போறாரு. நான் மட்டும் போறது நல்லா இருக்காது. நான் கலியாணம் முடிஞ்சப்புறம் ஒரு நாள் வீட்டிலே போய் விசாரிச்சுட்டு வந்துடறேன். நீங்க ரெண்டு பேரும் முகூர்த்தம், ரிஸப்ஷன் எல்லாத்துக்குமே போய்த் தலையைக் காமிச்சிட்டு வந்துடுங்க."

"பார்ப்போம்! இன்னும் நிறைய நாள் இருக்கிறதே?" என்றான் பூமி. அப்படி அவன் கூறியதில் இயல்பான தொனி இருந்ததே ஒழிய சுவாரஸ்யமோ, அசுவாரஸ்யமோ தொனிக்கவில்லை.

அந்தத் திருமண நாள் வந்தது. மறுநாள் காலை ஏழு மணிக்கு முகூர்த்தம் என்று ஞாபகம் வரவே சித்ரா மறுபடியும் பூமியை விசாரித்தாள்.

"காலையில் வேண்டாம்; மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் பரமசிவம் அண்ணனுடைய புத்தகம் வழங்கும் கடைக்கு வந்துவிட்டால் நல்லது. தயாரா அங்கே நான் காத்திருக்கிறேன்" என்றான் பூமி. இப்படிக் கூறியதிலிருந்து அவன் முகூர்த்தத்திற்குப் போகாமல் மாலை வரவேற்புக்குப் போக விரும்புகிறான் என்று அவள் அநுமானம் செய்து கொண்டாள்.

ஆனல் மாலையில் அவள் பரமசிவம் அண்ணனுடைய நூல் வழங்கும் நிலையத்திற்குச் சென்ற போது அங்கே அவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பூமி அங்கே வரவே இல்லை. அப்போது மாலை மணி ஐந்தரை. ஆறு மணிக்குத் திருமண வரவேற்பு. அப்போது புறப்பட்டால் தான் சரியாயிருக்கும். பூமி ஏன் இன்னும் வரவில்லை என்பது அவளுக்குப் புரியவில்லை. பரமசிவம் அண்ணனிடம் கேட்டாள் அவள்.

"அநேகமாக அவன் இந்தத் திருமணத்திற்குப் போக மாட்டான் சித்ரா! காரணத்தை அவனே உன்னிடம் நேரில் சொல்வான். அவன் வருகிறவரை கொஞ்சம் பொறுமையாக இரு!" என்றார் அவர்.

ஆறு ஆறரை மணி சுமாருக்குப் பூமி வந்து சேர்ந்தான்.

"தாமதத்துக்கு மன்னிப்புக் கோருகிறேன். எப்படியும் சொன்னபடி வந்துவிட்டேன். ஆனால் நாம் திட்டமிட்டபடி திருமண வரவேற்புக்கு போகப் போவதில்லை. கடற்கரைக்கோ, பார்க்குக்கோ, வேறு எங்காவதோ போகலாம்."

"ஏன்? அவர் நேரில் வந்து பத்திரிகை கொடுத்து அழைத்தாரே?..."

"அழைத்தார்! ஆனால் கல்யாணத்தை ஒரு வியாபாரமாக நடத்துகிறார். பெண் வீட்டாரைக் கசக்கிப் பிழிந்து பத்தாயிர ரூபாய் ரொக்கம், ஒன்றரைக் கிலோ தங்கத்துக்கு நகைகள், வரவேற்பு முதலிய செலவுகள் என்று அடித்து வைத்துப் பேரம் பேசியிருக்கிறார். நானும் பரமசிவம் அண்ணனும் பெண் விடுதலையைப் பற்றிப் பாடிய முதல் தமிழ் மகாகவி பாரதியார் மேல் ஆணையிட்டுச் சபதமே செய்திருக்கிறோம். இப்படிப்பட்ட மாப்பிள்ளை வியாபாரத் திருமணங்களுக்குப் போவதில்லை என்பதுதான் எங்கள் சபதம். பெண் ஆணைக் கணவனாக அடைய அவள் தந்தை விலை கொடுக்கிற நிலையைச் சமூகமோ மக்களோ கூடி நின்று, ஆசீர்வதிப்பதோ வாழ்த்துவதோ பெரிய பாவம் என்று நாங்கள் நினைப்பதுதான் காரணம். இந்தப் பாவங்களைச் சாஸ்திர சம்மதமாக்கி, மேளம் கொட்டி விருந்து வைத்துத் தாம்பூலம் தந்து கொண்டாடுவதை வேறு நினைத்தால் உள்ளம் கொதிக்கிறது சித்ரா?"

"நம்மைப் போன்ற இளைய தலைமுறையினராவது இதற்கு முடிவு கண்டாக வேண்டும் சித்ரா! ஒவ்வொரு பெண்ணின் திருமணமும் அவள் திருமணம் முடிந்த பின் தாய் தந்தையையும் மீதியுள்ள குடும்பத்தையும் திவாலாக்கி நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். பெண்ணடிமைத்தனம் இப்படித் திருமணத்திலேயே ஆரம்பமாகிறது" என்றார் பரமசிவம்.

"சிறுமைகள் நிறைந்த திருமணத்தைப் பெரியோர்கள் நிச்சயிப்பதாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள்."

அவனுடைய கொள்கை உறுதியும் பிடிவாதமும் அவளுக்கு மிகவும் பிடித்தன. பூமி ஒப்புக்காகவோ, பிறர் மெச்சவோ எதையும் செய்ய மாட்டான் என்பது அவளுக்குப் புரிந்தது. முத்தக்காள் தங்கள் ஹோட்டலின் சார்பில் அவன் அந்த திருமணத்திற்குப் போய் வரவேண்டும் என்று விரும்பினாள். அவனோ அந்தத் திருமணத்திலிருந்த வரதட்சிணை பேரங்களின் கொடுமையைத் தெரிந்து கொண்டு தவிர்த்து விட்டான். இருவரும் பரமசிவம் அண்ணனின் கடையில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கடற்கரைக்குப் புறப்பட்டார்கள். எட்வர்ட் எலியட்ஸ் ரோடு திருப்பத்தில் குறுக்கே நடப்பதற்கான ஸிக்னல் கிடைத்துவிட்டதை நம்பி அவள் அவசரமாகக் கிராஸ் செய்ய முற்பட்ட போது ஸிக்னலையே லட்சியம் செய்யாமல் பாய்ந்து வந்த ஒரு பல்லவன் பஸ், அவளை மோதி வீழ்த்தி விட இருந்தது. மின் வெட்டும் நேரத்தில் பூமி அவளைப் பின்னுக்கு இழுத்துக் காப்பாற்றினான்.

அவனது அந்த வலிமை வாய்ந்த கரம் அவளைத் தீண்டிய போது அவளுக்கு மெய் சிலிர்த்தது. உள்ளே இனம் புரியாத மகிழ்ச்சிகள் அரும்பின.

"பெண் விடுதலைக்குப் பாடிய மகாகவியின் பேரில் பெண்களைக் காக்க சபதம் எடுத்திருப்பதாக கூறிய மறுகணமே, இப்படி என் அருகிலுள்ள ஒரு பெண்ணே அபயத்துக்கு ஆளாகலாமா?"

"நீங்கள் அருகிலிருந்தால் எந்த அபாயத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கைதான் காரணம்."

அவளும் புன்னகையோடு பதில் கூறினாள். பூமி அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவளது அந்தப் புன்னகை அவன் மனத்தின் ஆழத்தில் பதிந்தது.

அத்தியாயம் - 25

இரண்டு முரடர்களின் தாக்குதலுக்குப் பயந்து காதலியை விட்டுவிட்டு ஓடிவிடுகிற காதலனின் காலத்தில் இராமாயணம் நடந்திருந்தால் அதில் யுத்த காண்டமே இருக்காது.

பதற்றத்தோடு சித்ரா பூமியிடம் அப்போது கூறினாள்:

"நம்மை விட வேகமாகப் போகிறவர்கள் செய்கிற தவறுகளுக்கும் சேர்த்து நாம் தான் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும் போலிருக்கிறது."

"சாலைப் போக்குவரத்திற்கு மட்டுமில்லாமல் இன்றைய நமது வாழ்க்கைப் பிரச்னைகளுக்கும் கூட இதுதான் பொருந்தும். நம்மை விட வேகமாகப் போகிறவர்கள் நம்மேல் மோதி அழித்து விடாமல் நாம் தான் விழிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியிருக்கிறது."

"வழியில் தங்களுக்கு முன்னே போய்க் கொண்டிருப்பவர்களை மிதித்தோ மோதியோ கீழே தள்ளி விட்டாவது மேலே போய் லாபமும் பயனும் அடைய வேண்டுமென்ற அசாத்திய அவசரம் அதிகரித்திருக்கிற காலம் தான் இது!"

"சத்திய அவசரமோ, சத்திய அவசியமோ தான் - இன்று எங்குமே அதிகமாகத் தென்படுவதில்லை."

"உங்களைப் போன்ற சிலரிடமாவது அது இருக்கிறதே என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் மட்டுமாவது இப்படி விழிப்புடன் இருக்கிறீர்களே! உங்களுடைய ஜாக்கிரதை உணர்ச்சியால்தான் இன்று நான் உயிர் பிழைத்தேன்."

"சாலைகளையும் தாறுமாறாக விரையும் அபாயகரமான வாகனங்களையும் பார்க்கும் போது ஒவ்வொருவரும் வீட்டை விட்டுத் தெருவில் இறங்காதவரை பத்திரமாகத்தான் இருக்கிறார்கள். தெருக்களிலும் சாலைகளிலும் நேரக்கூடிய விபத்துக்களிலிருந்து விடுபட வைப்பதால் தான் வீடு என்று குடியிருக்கும் இடத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதாகவே புது விளக்கம் கூறி விடலாம்."

"நகரங்களில் நடக்கும் விபத்துக்களைப் பார்த்தால், நீங்கள் கூறுகிற விளக்கம் பொருத்தமாகத் தான் இருக்கிறது."

"நடக்கிறவர்களின் தவறுகளால் சில விபத்துக்களும், வாகனங்களின் தவறுகளால் சில விபத்துக்களும், சாலைகளின் நெருக்கடியால் சில விபத்துக்களும், மனிதர்களின் அசுர வேகத்தால் சில விபத்துக்களும் என்று நகரங்கள் விபத்து மயமாக மாறி விட்டன. முன்பெல்லாம் வாழ்க்கையின் இடையிடையே விபத்துக்களும் இருந்தன. ஆனால் இப்போதோ விபத்துக்களின் இடையேதான் வாழ்க்கையே இருக்கிறது. அதிக ஜாக்கிரதையும் தேவைப்படுகிறது."

அவர்கள் கடற்கரையில் போய் அமர்ந்தார்கள். கடற்கரைச் சாலையில் விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தன. கூட்டம் அதிகம் இல்லை. சுண்டல், முறுக்கு, மிளகுவடை விற்கும் பையன்கள் பம்பரமாகச் சுற்றி வியாபாரத்துக்கு முயன்று கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஒரு மூலையில் சற்றே இருட்டாக இருந்த ஓர் இடத்திலிருந்து பெண்ணின் அலறல் ஒன்று கிளம்பியது. நின்று நின்று ஒலித்த அலறல் வந்த மூலையைப் பார்த்த போது இரண்டு மூன்று ஆண்கள் கும்பலாக நிற்பது போலிருந்தது. அவர்கள் தங்களிடம் சிக்கிய பெண்ணின் வாயில் துணியைத் திணித்துக் குரலை அடக்க முயன்றதாலோ என்னவோ அவளுடைய அலறல் மெல்ல ஒடுங்குவதும் கிளம்புவதுமாக இருந்தது.

பூமி எதையோ தனக்குத் தானே அநுமானித்தவனாக அந்தத் திசையில் பாய்ந்தான். சித்ராவும் பின் தொடர்ந்தாள். கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை. மேற்குப் பக்கம் இருந்த மெரீனா சாலையிலோ, கீழேயே மணற் பரப்பில் பரவலாக அங்கங்கே அமர்ந்திருந்த ஒரு சிலருக்கோ அந்தப் பெண்ணின் குரல் கேட்கவில்லை என்று சொல்ல முடியாது. கேட்டிருக்கும் தான். அந்தக் குரலிலிருந்த அபயம் கேட்கும் தொனியும் கூட அவர்களில் ஓரிருவருக்குப் புரிந்துதான் இருக்கும்.

ஆனால் யாரும் துணிந்து எழுந்திருந்து குரலுக்குரியவளைக் காப்பாற்ற விரைந்து விடவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டு ஓடும் ஆவலைக் கூட யாரும் காண்பிக்கவில்லை. அளவு கடந்த ஆவலில் ஓடிப் போய்த் தங்களை அபாயத்தில் சிக்க வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சுயநலமான தற்காப்பு உணர்ச்சிதான் காரணமாயிருக்க வேண்டும். இப்படிப்பட்ட சுயநல தற்காப்பு உணர்ச்சியால் தான் பட்டினத்தில் பலர் மரத்துப் போயிருந்தார்கள். இப்படி மரத்துப் போவதைப் பூமி அறவே வெறுத்தான். இதற்கும் ஆண்மையற்ற பேடியாக மாறுவதற்கும் அதிக வித்தியாசமில்லை என்பது அவன் கருத்தாயிற்று.

கொடி போல் அவர்கள் கையில் சிக்கிக் கசங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை விடுவிக்க வந்த பூமியின் மேல் கத்தியோடு பாய்ந்தான் ஒரு முரடன். இன்னொருவன் கையில் பிளேடுடன் பூமியைக் கீறி விட முயன்றான்.

பூமி அவர்களை அருகில் நெருங்காமலே கால் பாதங்களால் தாக்கி நிராயுதபாணிகளாக்கினான். பிளேடும் கத்தியும் மணலில் போன மூலை தெரியவில்லை. முதலில் 'ஒல்லியாக யாரோ ஓர் ஆள்தானே?' - என்று பூமியை அலட்சியமாக நினைத்த அந்த முரடர்கள் கராத்தே அடி வாங்கியதும் திரும்பிப் பாராமலே ஓட்டம் பிடித்தனர். சிறிது தொலைவு பின் பற்றித் துரத்திக் கூடப் பூமி அவர்களைத் தாக்கினான்.

இதற்குள் அபாயத்துக்குள்ளான அந்த இளம் பெண்ணை ஆசுவாசப்படுத்திப் பக்கத்தில் இருந்த விளக்குக் கம்பத்தருகே வெளிச்சத்துக்கு அழைத்துச் சென்றாள் சித்ரா.

அந்தப் பெண் ஒன்றுமே பேசாமல் விசும்பி விசும்பி அழுதாள். பூமியும் திரும்ப வந்த பின் அவளை அழைத்துச் சென்று மணலில் உட்காரச் செய்து தாகத்துக்கு அவர்கள் ஒரு சோடாவும் வாங்கிக் கொடுத்தார்கள்.

பேச ஆரம்பித்தாலே அழுகை வந்தது அவளுக்கு. நீண்ட நேர முயற்சிக்குப் பின் பூமிக்கும் சித்ராவுக்கும் அவளிடமிருந்து பின் வரும் விவரங்கள் தெரிய வந்தன.

அந்தப் பெண் திருவல்லிக்கேணியில் ஒரு மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பெயர் சாவித்திரி. குயின் மேரீஸ் கல்லூரியில் படிக்கிறாள். தன்னைக் காதலிக்கிறான் என அவள் நம்பிய ஓர் இளைஞனோடு கடற்கரைக்கு வந்திருக்கிறாள். முரடர்கள் வந்து கத்தியைக் காட்டியதும் அந்த இளைஞன் பயந்து போய் அவளை விட்டு விட்டு ஓடி விட்டானாம்.

"காதற் பெண்கள் கடைக்கண் பணியில் காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்" என்று பாடினார் பாரதியார். "பயந்தாங் கொள்ளிகளைக் காதலிக்கக் கூடாது அம்மா" என்றான் பூமி.

"அச்சமில்லை, அச்சமில்லை என்று பாடிய மகாகவியும் கற்பின் கனலாக எழுந்து 'தேரா மன்னா' என்று பாண்டியனை நியாயம் கேட்ட கண்ணகியும் சிலைகளாக இதே கடற்கரையில் தானே நிற்கிறார்கள்?"

"வாழ்வில் யார் யாரைக் கடைப்பிடிப்பது சிரமமோ அவர்களை எல்லாம் நடுத் தெருவில் சிலைகளாக நிறுத்தி வைத்து விடுவதுதான் தமிழ்நாட்டு வழக்கம் சித்ரா?"

பூமியும் சித்ராவும் அந்தப் பெண்ணுக்கு நிறைய அறிவுரைகள் கூறினார்கள்.

"அரும்பு மீசையும் சுருட்டைத் தலைமுடியும் உள்ள ஆண்பிள்ளைகள் எல்லாருமே ஆண் தன்மை உள்ளவர்கள் என்று நம்பிவிடாதே! ஆண் தன்மையே அற்ற பேடிகள் பலர் இன்று ஆண்களின் தோற்றத்தோடு நடமாடுகிறார்கள். கண்ட வேளையில் தனியாகக் கடற்கரைக்கு வராதே! கண்ணகி சிலையின் நிழலடியில் கூடக் கற்புக்கு ஆபத்து வரலாம். ஆயிரக் கணக்கான சினிமாக்களும், பத்திரிகைத் தொடர் கதைகளும், நாடகங்களும் பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டுமே விளம்பரப்படுத்தி வைத்திருக்கின்றன. எப்படி எப்படி எங்கெங்கே 'ஈவ் டீஸிங்' சாத்தியம் என்பதைச் சினிமாக்கள் கற்றுக் கொடுத்திருக்கின்றன. இந்த வயதில் வீணே கெட்டுப் போகாதே. படிப்பில் கவனம் செலுத்து. பெற்றோர் அறிவுரைகளைக் கேள்."

வீடு திரும்புகிற போது அந்தப் பெண் சாவித்திரியை அவள் வீடு இருந்த தெரு முனை வரையில் கொண்டு போய் விட்டு விட்டுப் பூமியும் சித்ராவும் மறுபடி வந்து ஐஸ்ஹவுஸ் அருகே பஸ்ஸுக்காக நின்றபோது பிளாட்பாரத்தில் ஒரு பூக்காரி பூ விற்றுக் கொண்டிருந்தவள் பூமியிடம் வந்து பூ வாங்கச் சொல்லித் தொண தொணத்தாள்.

அப்போது தன் அருகே நிற்கும் சித்ராவைப் பார்த்துவிட்டுத்தான் அவள் அப்படி தொண தொணக்கிறாள் என்று புரிந்து கொண்ட பூமி சிரித்தபடியே அவளுக்குப் பூ வாங்கிக் கொடுத்தான்.

"கலியாணத்திற்குப் போவதென்றுப் புறப்பட்டு வந்தவள் வெறுந்தலையோடு வந்திருக்கிறாயே! இந்தா பூ வைத்துக் கொள்" என்று கூறிக்கொண்டே பூமி பூச்சரத்தை நீட்டிய போது சித்ராவுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

"கலியாணத்திற்குத்தான் போவதில்லை என்று முடிவு செய்து விட்டோமே!"

"போகாவிட்டால் என்ன? பூ வைத்துக் கொள்ளக் காரணமா வேண்டும்."

"இல்லை! வைத்துக் கொள்ளாமல் இருக்கத்தான் காரணங்கள் வேண்டும்."

"என்னோடு கூட வரும்போது நீ பூ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாயிருப்பதற்குத்தான் காரணம் இருக்கிறது."

"உண்மை! ஒப்புக் கொள்கிறேன்!" சித்ரா பூவைத் தலையில் சூடிக் கொண்டாள்.

"பார்த்தாயா சித்ரா! இன்றைய இளைஞனின் காதல் எப்படிப் பட்டதாயிருக்கிறது என்று? ஏதாவது மோதினால் உடனே உடைந்து சிதறி விடுகிற பிளாஸ்டிக் காதலாயிருக்கிறது. இரண்டு முரடர்களுக்குப் பயந்து காதலியை விட்டுவிட்டு ஓடி விடுகிற இந்தக் காதலனின் காலத்தில் இராமாயணம் நடந்தால் யுத்த காண்டமே அதில் இருக்காது! இராவணன் போரிடாமலே ஜெயித்து விட்டிருப்பான்."

"முரடர்கள் இராவணர்களோ இல்லையோ, சாவித்திரியின் காதலன் நிச்சயமாக இராமன் இல்லை."

"பெண்ணின் உடம்பை மட்டும் காதலிப்பவர்கள்தான் இன்று அதிகம்..."

"அதை இன்றைய கதைகளும் சினிமாவும் அப்படி அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. என்ன செய்யலாம்?"

இந்த உரையாடலால் சித்ரா மிகவும் பெருமிதப்பட முடிந்தது.

அத்தியாயம் - 26

அந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுபவர்களை விடப் பலர் கைதட்டி ஆரவாரிப்பதற்காக மட்டுமே உண்மை பேசுகிறவர்களுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது.

கடற்கரை சம்பவத்தன்று இரவு நெடு நேரம் தூக்கம் வராமல் படுக்கையில் சிந்தித்தபடி புறண்டு கொண்டிருந்தாள் சித்ரா. சராசரியாகப் பூமியின் வயதுள்ள மற்ற இளைஞர்களோடு அவனை ஒப்பிட்டுப் பார்த்தாள். அவர்களில் இருந்து பல விதத்தில் அவன் உயர்ந்து நின்றான். அவனுடைய சத்திய வேட்கை, சத்திய அவசரம், பிறருக்கு உதவும் பெருந்தன்மை ஆகிய சில குணங்களை வேறு இளைஞர்களிடம் இன்று அடையாளம் காணக் கூட வழியில்லாமல் இருந்தது.

பத்திரிகை நடத்திப் புதுக்கவிதை எழுதும் பணக்காரக் குடும்பத்துப் பிள்ளையான புரட்சிமித்திரன், முதலிய தான் பழகிய - பழகும் வேறு பல இளைஞர்கள் எல்லாரையும் நினைத்து விட்டுப் பூமியையும் நினைத்தபோது ஓர் அடிப்படை வித்தியாசத்தை அவளால் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

அவர்களெல்லாரும் அவளுக்கு முன் அல்லது அவளறிய எதைச் செய்தாலும் அவளைக் கவர்வதற்காகவே அதை நன்றாகச் செய்ய வேண்டுமென்று முயல்வது தெரிந்தது. இன்று உண்மை பேசுபவர்களில் கூட இரண்டு ரகம் உண்டு. அந்தரங்க சுத்தியோடு உண்மை பேசுபவர்களை விடப் பலர் கைதட்டி ஆரவாரிப்பதற்காக மட்டும் உண்மை பேசுபவர்களுக்கு இன்று அதிகக் கவர்ச்சி இருந்து தொலைக்கிறது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று எதையும் செய்ய முயன்றதில்லை என்பது நினைவு வந்தது. நல்லவனாக இருப்பது வேறு. அவ்வப்போது நல்லவனாக இருக்க முயன்று கைவிடுவது வேறு.

அவ்வப்போது நல்லவர்களாகவும், நல்லவர்களைப் போலவும், நல்லவர்களின் நினைப்போடும் இருப்பவர்கள் நிறைய இருந்தார்கள். ஆனால் பூமியைப் போல் முயலாமல் பராட்டையும் எதிர்பாராமல் நல்லவனாக இருப்பதைத் தன்னிச்சையாகச் செய்யும் யாரும் தென்படுவது அபூர்வமாக இருந்தது.

பூமி நல்லவனாகவும் இருந்தான். வல்லவனாகவும் இருந்தான். வல்லவன் நல்லவனாக இராததும் நல்லவன் வல்லவனாக இராததுமே இன்றைய சமூகத்தில் எங்கும் தூக்கலாகத் தெரியும் போது, ஒரு நல்லவன் வல்லவனாகவும் இருந்து இரண்டையும் பற்றிய கர்வமோ தலைககனமோ இன்றி எளிமையாக வாழ்ந்தது புதுமையாயிருந்தது. பூமி அவளைக் கவர வேண்டும் என்று ஒரு போதும் முயலவில்லை. யாரைக் கவரவும், அவன் முயலவில்லை என்பது அவளுக்கு நினைவு வந்தது.

அவனுடைய காது கேட்க அவனது நற்குணங்களைச் சிலாகிப்பதையும் அவன் விரும்புவதில்லை. தானே அவற்றை உணர்ந்து புரிந்து கொண்டது போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடப்பதும் இல்லை. சுபாவமாக இருந்தான். சுபாவமாக நல்லது செய்தான். சுபாவமாக உதவினான். சுபாவமாக நன்மையை நாடினான். தீமையை எதிர்த்தான். புரட்சிமித்திரன் போன்ற இரண்டும் கெட்டான் இளைஞர்கள் எதைச் செய்தாலும் பாராட்டுக்காகவும் கைதட்டலுக்காகவுமே செய்தார்கள்.

சித்ராவைக் கவர வேண்டும் என்பதற்காகவே அவன் கவிதை எழுதினான். சித்ரா சிரித்துக் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே அவன் ஜோக் அடித்தான். சித்ராவைப் போன்ற பெண்களின் ஞாபகத்தில் தான் ஆண் பிள்ளையாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே மட்டும் அவன் வீரதீரனாகப் பாசாங்குகள் செய்தான். இந்தக் கொச்சையான சிறுபிள்ளைத் தனமான முயற்சியை அவள் பூமியிடம் ஒரு போதும் கண்டதில்லை.

அடுத்த சில தினங்களில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்ச்சியும் அவள் பூமியை நன்றாகப் புரிந்து கொள்ள வாய்ப்பளித்தது. பாலாஜி நகரிலிருந்து சித்ரா அப்பர்சாமி கோவில் தெருப் பகுதிக்குக் குடிவந்த பிறகு காலையிலும் மாலையிலும் முத்தக்காள் மெஸ்ஸில் பூமிக்கும் முத்தக்காளுக்கும் உதவியாகச் சில மணி நேரங்கள் செலவழிக்க முடிந்தது. பெரும்பாலும் அவள் செய்கிற உதவி கேஷ் டேபிளில் அமர்ந்து பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற உதவியாகத்தான் இருக்கும். 'பீக் அவர்ஸ்' என்கிற கூட்ட நேரங்களில் பூமி எந்த வேலையையும் செய்து நிலைமையைச் சமாளிக்கத் தயாராயிருப்பான். அவனால் கேஷில் முளையடித்தது போல் உட்கார முடியாது.

டேபிளில் பரிமாறுவது, பார்ஸல் கட்டிக் கொடுப்பது, ஸ்டோர்ஸ், பர்ச்சேஸ் வேலைகளைக் கவனிப்பது, பாங்க் வேலைகளில் ஈடுபடுவது எதுவும் பூமிக்கு விதிவிலக்கு இல்லை என்றாலும் மெஸ்ஸில் சில வேலைகளை அவர்கள் மற்றவர்களை நம்பி விடுவதே இல்லை. 'கேஷ்' டேபிளில் உட்கார்ந்து பணம் வாங்கிப் போடும் வேலையை பூமி, முத்தக்காள், சித்ரா மூவர் மட்டுமே செய்வதென்று வைத்துக் கொண்டிருந்தார்கள். மெஸ்ஸில் பழகத் தொடங்கிய புதிதில் கேஷில் அமர்ந்து பணம் வாங்கிப் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் தற்செயலாக அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு கோளாறு சித்ராவின் கண்ணில் பட்டது.

கேஷ் டேபிளுக்கு எதிராக ஒரு மேஜையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஓர் ஆளைச் சித்ரா முதலிலிருந்தே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். இரண்டு ஸ்வீட், ஒரு மசாலா தோசை, வடை, காபி இவ்வளவும் சாப்பிட்ட அந்த நபரின் பில் வந்தபோது பில்லில் வெறும் அறுபது காசுதான் எழுதியிருந்தது. சித்ரா சந்தேகப்பட்டாள். அந்த வரிசையில் இரண்டு மூன்று டேபிளுக்குப் பொறுப்பாயிருந்த ஒரு சர்வர் மேல் அவளுக்குச் சந்தேகம் தட்டியிருந்தது.

தொடர்ந்து கவனித்த போது அந்தச் சந்தேகம் உறுதிப்பட்டது. சில வாடிக்கையாளர்களுக்கும் அந்த ஊழல் பேர்வழியான சர்வருக்கும் நடுவே ஒரு ரகசிய ஏற்பாடு இருப்பது புரிந்தது. பில்லில் எவ்வளவு குறைத்துப் போடப்படுகிறதோ அந்தத் தொகையைப் போகும்போது 'டிப்ஸ்' கொடுப்பது போல் சர்வரிடம் கொடுத்து விட்டுப் போய் விட வேண்டும். மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி இது நடந்து கொண்டிருந்தது. சித்ரா தான் இதை முதல் முதலாகக் கண்டுபிடித்துப் பூமியிடம் கூறினாள். பூமி மறுநாள் தானே கவனித்து இப்படி நடப்பதை உறுதி செய்து கொண்ட பின் பில் போடுற பொறுப்பை சர்வர்களிடமிருந்து பிரித்துத் தனி ஆளிடம் ஒப்படைத்தான்.

பில் தொகையை இரண்டு முனைகளில் 'டபிள் செக்' செய்ய ஏற்பாடு வந்தது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சர்வருக்கு இது சித்ராவால் நடந்த மாறுதல் என்பது தெரிந்துவிட்டது. சித்ராவின் மேல் கடுங்கோபமும், எரிச்சலும் அடைந்தான் அவன். எப்படியாவது அவளைப் பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தான். இந்தச் சர்வர் மாதிரி நடுவிலிருந்து லாபம் சம்பாதித்து வந்தவர்களுக்கு எல்லாம் பூமியும், சித்ராவும் கூட இருக்கிறவரை முத்தக்காளை ஏமாற்றவோ மோசடி செய்யவோ முடியாதென்று தோன்றியது. எப்பாடு பட்டாவது பூமியையும் சித்ராவையும் அங்கிருந்து கத்தரித்து விட முயன்று கொண்டிருந்தார்கள் சிலர்.

முத்தக்காள் தனியா இருக்கும்போது அவளிடம் பூமியையும் சித்ராவையும் பற்றிக் கோள் சொல்ல முயலும் வேலையை மேற்கொண்டார்கள் அவர்கள். பூமியைப் பற்றி முத்தக்காளிடம் தப்பபிப்ராயம் ஏற்படுத்த முடியும் போல் தோன்றவே அந்த முயற்சியைத் தொடர்ந்தார்கள் அவர்கள்.

அந்த மாதம் முதல் தேதி பள்ளியில் சம்பளம் வாங்கிய பணத்தோடு மாலையில் வீடு செல்கிற வழியில் மெஸ்ஸுக்கு வந்திருந்தாள் சித்ரா. மெஸ்ஸில் கூட்டம் அதிகமாயிருந்தது. வழக்கம் போல் சித்ராவைக் கேஷ் டேபிளில் அமர்த்தி விட்டுப் பூமி வேறு வேலைகளில் கவனம் செலுத்தினான்.

கேஷ் டேபிளில் அமர்ந்திருந்த போதே சித்ரா தற்செயலாகத் தன் கைப் பையைத் திறந்து பள்ளி அலுவலகத்தில் வாங்கிய சம்பளத் தொகையை எண்ணிப் பார்த்தாள். அவள் தன் பணத்தைப் பாதி எண்ணிக் கொண்டிருக்கும் போதே பில் கொடுக்க இருவர் வந்தனர். பில் தொகையை வாங்கிப் போடும் அவசரத்தில் தன் சொந்தப் பணத்தையும் ஹோட்டல் கேஷ் மேல் வைத்த அவள், பின்பு அதைத் தனியே பிரித்து எடுத்துக் கைப்பைக்குள் போட முயன்ற போது ஒரு சர்வர் முத்தக்காளுடன் அங்கே வந்தான். முத்தக்காள் ஆத்திரத்தோடு கேட்டாள்.

"எத்தனை நாளாக இது நடக்கிறது?"

"எது? நீங்கள் என்ன கேட்கிறீர்கள் அம்மா?"

"நாடகம் ஆடினது போதும்டீ? கேஷ் பணத்திலே கையாடி நூறு நூறாகப் பைக்குள்ளே வச்சு வீட்டுக்குக் கொண்டு போறதைத்தான் கேட்கிறேன்."

சித்ரா திகைத்துப் போனாள். ஊழல் பேர்வழியான அந்த சர்வர் மெல்ல நழுவினான். அன்று வாங்கிய சொந்தச் சம்பளத்தை எண்ணிக் கைப்பைக்குள் போட்டதை முத்தக்காளுக்கு விளக்கினாள் சித்ரா. முத்தக்காள் அதை நம்பவே தயாராயில்லை. ஏற்கவும் தயாராயில்லை. "உன் சம்பளப் பணத்தை இங்கே வந்து எண்ணிப் பைக்குள்ளே போடறதுக்கு என்னடீ அவசியம்? சும்மாப் புளுகாதே!... நான் கண்ணால் பார்க்கறப்பவே பொய் சொன்னா எப்பிடி?"

சித்ராவுக்கு ஆத்திரம் ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம் கண்களில் நீர் மல்கிவிட்டது. பனை மரத்தின் கீழ் நின்று பாலைக் குடிப்பது கூட ஆபத்தான அபவாதத்தை உண்டாக்கி விட முடியும் என்று இப்போது புரிந்திருந்தது அவளுக்கு. சத்தத்தையும், கூப்பாட்டையும் கேட்டுப் பூமி ஓடி வந்தான்.

"நீங்க முதல்லே உள்ள போங்கம்மா? சித்ரா விஷயம் என் பொறுப்பு. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கடுமையான குரலில் அதட்டி முத்தக்காளை அவன் உள்ளே அனுப்பினான். சித்ரா விஷயத்தை அவனிடம் விவரித்தாள். அந்த சர்வரைக் கூப்பிட்டு உடனே விசாரித்தான் பூமி. பூமிக்கு பயந்து சற்று முன் தான் முத்தக்காளிடம் சித்ராவைப் பற்றிக் கோள் சொல்லியதாக ஒப்புக் கொண்டான் அவன்.

"நீ மறுபடி கேஷ் டேபிளில் உட்கார்" என்று சித்ராவை அதட்டி உட்காரச் சொன்னான் பூமி. சித்ரா தயங்கினாள். உட்காரப் பயப்பட்டாள்.

"நம்மிடம் தவறில்லாதபோது நாம் கூசுவதும் தயங்குவதும் போல் கோழைத்தனம் வேறில்லை! நீ இப்போது கேஷ் டேபிளில் உட்காரப் போகிறாயா இல்லையா?" என்று பூமி சித்ராவை நோக்கி உரத்த குரலில் அதட்டினான்.

சித்ரா அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு மறுபடி கேஷ் டேபிளில் அமர்ந்து வழக்கம் போல் செயல்பட்டாள்.

அத்தியாயம் - 27

வாழ்வதற்குத்தான் பணம் வேண்டுமே ஒழியப் பணம் வேண்டும் என்பதற்காக மட்டுமே வாழ்ந்து விட முடியாது; கூடாது.

அன்று முத்தக்காளின் கோபத்துக்கு ஆளானதில் சித்ராவின் மனம் பெரிதும் புண்பட்டு விட்டது. பூமியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் அவள் மீண்டும் கேஷ் டேபிளில் அமர்ந்தாளே ஒழிய உண்மையில் அங்கே இருப்பது முள்ளின் மேல் உட்காருவது போல் இருந்தது அவளுக்கு.

பழி சுமத்தப்பட்டு விட்டோம் என்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி மனம் நைந்து போயிருந்தாள் அவள். இத்தனை நாள் பழகியும் தன்னைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் யாரோ ஒரு கைச் சுத்தமில்லாத சர்வர் கூறிய கோள் வார்த்தைகளை நம்பி முத்தக்காள் ஒரே நொடியில் பொரிந்து தள்ளி விட்டாளே என்று மனம் குமுறியது.

"இது நான் பள்ளியில் மாதம் பூராவும் உழைத்து வாங்கிய சம்பளப் பணம். என் மேல் நம்பிக்கை இல்லாமல் அப்படி உங்களுக்குச் சந்தேகமாயிருந்தால் இதையும் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்குப் பணம் பெரிதில்லை. மானம் தான் பெரிது" என்று உடனே முத்தக்காள் முன்னால் போய் ஆத்திரம் தீரக் கூறி அந்தப் பணத்தை வீசி எறிந்துவிட வேண்டும் போல் சித்ராவுக்குக் கை துறுதுறுத்தது. மத்திய தரக் குடும்பத்து மனப்பான்மையோடு கூடிய படிப்பறிவு இல்லாத ஒரு விதவை எப்படி நடந்து கொள்வாள் என்று எதிர்பார்க்க முடியுமோ அப்படித்தான் முத்தக்காள் நடந்து கொண்டிருந்தாள்.

அதற்குப் பின் உட்புறக் கூடத்தில் பூமி முத்தக்காளிடம் இந்த நிகழ்ச்சியைக் கூறி அவள் தன்னிடம் அப்படி நடந்து கொண்டது முறையில்லை என்று கண்டித்து இரைவதைச் சித்ராவே கேஷ் டேபிளில் அமர்ந்தபடி கேட்க முடிந்தது. அவன் தன் சார்பில் முத்தக்காளை கண்டித்துப் பேசியது அவளுக்கு ஆறுதலாயிருந்தது.

வாடிக்கையாளர்களுக்குப் பில்லை குறைத்துப் போட்டு அதற்குப் பதிலாக 'டிப்ஸ்' வாங்கிப் பணம் பண்ணிக் கொண்டிருந்த அந்த சர்வரின் ஊழலைத் தான் கண்டுபிடித்து அம்பலமாக்கியதற்குப் பழி தீர்த்துக் கொள்வதற்கான முயற்சி தான் இது என்பது சித்ராவுக்கு நன்றாகப் புரிந்திருந்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் முத்தக்காள் அதற்குப் பலியானது வருத்தத்தை அளித்தது. அவளால் அதை சிறிதும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. வழக்கமாக ஏழு ஏழரை மணிக்குக் கூட்டம் குறையத் தொடங்கியதும் கேஷ் டேபிளை பூமியிடமோ முத்தக்காளிடமோ ஒப்படைத்துவிட்டு அவள் வீடு திரும்புவாள்.

அன்று உள்ளே பூமிக்கும் முத்தக்காளுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்ததால் எட்டு - எட்டே கால் மணி வரை அவள் காத்திருக்க வேண்டியிருந்தது. மேஜையில் கம்பியில் வாங்கிக் குத்தியிருந்த பில் துணுக்குகளை எண்ணி அவற்றில் இருந்த தொகையை பொறுமையாக ஒரு தாளில் கூட்டிக் கணக்குப் பார்த்து அதே தொகை ரொக்கமாக கேஷ் டேபிளில் இருப்பதை உறுதி செய்து கொண்டாள் சித்ரா. அதைத் தாளில் எழுதி வைத்தாள். முதல் முறையாக இன்று அதெல்லாம் செய்தாள்.

எட்டரை மணிக்கு பூமி முத்தக்காளை அழைத்துக் கொண்டு கேஷ் டேபிளருகே வந்தான். மெஸ்ஸில் அப்போது வாடிக்கையாளர்களின் கூட்டம் குறைந்திருந்தது.

"என்னை மன்னிச்சிடும்மா! நான் ஆத்திரத்தில் யோசிக்காமல் பேசினது தப்புதான்! அந்தப்பாவி எங்கிட்ட வந்து அப்படி வத்தி வச்சு கோள் மூட்டியிருக்காட்டி இது நடந்தே இருக்காது" என்று குனிந்த தலை நிமிராமல் சித்ராவிடம் மன்னிப்புக் கேட்டாள் முத்தக்காள்.

"டேபிளில் குத்தியிருக்கிற பில்களோட மொத்தத் தொகையும் உள்ளே இருக்கிற ரொக்கமும் சரியாயிருக்கு! கணக்கு விவரம் எழுதி வச்சிருக்கேன். பார்த்துக் கொள்ளலாம்!" என்று பூமி, முத்தக்காள் இருவருக்கும் பொதுவாகக் கூறிவிட்டுக் கேஷ் டேபிளிலிருந்து ஒதுங்கிக் கீழே இறங்கினாள் சித்ரா.

"கொஞ்ச நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் அதற்குள் நான் இவளை வழியனுப்பிவிட்டு வந்து விடுகிறேன்" என்று கூறி முத்தக்காளை கேஷ் டேபிளில் அமரச் செய்து விட்டுச் சித்ராவோடு வெளியே புறப்பட்டான் பூமி.

மெஸ்ஸிலிருந்து வெளியேறித் தெருவைக் கடந்து எதிர் வரிசைப் பிளாட்பாரத்துக்கு வந்தவுடனே பூமி சித்ராவிடம் பேசினான்:

"ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம்! விவரம் புரியாமல் அவசரப்பட்டுவிட்டாள். நான் எடுத்துச் சொல்லி விளக்கியதும் வருத்தப்படுகிறாள்."

"உங்களுக்காகத்தான் நான் இங்கே இத்தனை உரிமை எடுத்துக் கொண்டு ஊடாடி வேலை செய்தேன். ஒரு தப்பும் செய்யாமலே இத்தனை பெரிய அபவாதத்துக்கு ஆளாக நேரும் என்று தெரிந்திருந்தால் இந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கக் கூடப் பயந்திருப்பேன்."

"அறியாமையின் அடையாளங்களில் முதன்மையானது சந்தேகம். அதை மறப்பதையும் மன்னிப்பதையும் தவிர வேறு வழியில்லை."

"நாணயத்தைச் சந்தேகப்படுகிற இடங்களில் பழகுவதற்கே பயமாயிருக்கிறது."

"பயப்படவோ ஒதுங்கி விடவோ கூடாது! எனக்காக எப்போதும் போல் வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும்."

"இதுவரை வந்து போய்க் கொண்டிருந்ததே உங்களுக்காகத்தானே ஒழிய முத்தக்காளுக்காக இல்லை."

"இனியும் அதில் மாறுதல் எதுவும் இருக்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை இந்த 'மெஸ்ஸை'த் தொடர்ந்து நடத்திக் காட்டுவதை வாழ்க்கையின் சவாலாக ஏற்றிருக்கிறேன். சமூக விரோத சக்திகள் 'இதை இனிமேல் நடத்தவே முடியாது' என்கிற அளவு பயமுறுத்தினதை நாம் ஒரு போதும் மறந்து விட முடியாது!"

"முத்தக்காளுக்காக நீங்கள் எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறீர்கள்! இதில் செலவிடும் நேரத்திற்குப் பதில் ஒரு கராத்தே பள்ளிக்கூடம் வைத்து நடத்தினால் கூட ஆயிரம் ஆயிரமாக நீங்கள் சம்பாதிக்கலாம்."

"அவசர அவசரமாகப் பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று நான் நினைக்கவில்லை. வாழ்வதற்குத்தான் பணம் வேண்டுமே ஒழியப் பணம் வேண்டுமென்பதற்காக வாழ்ந்து விட முடியாது."

"முத்தக்காளும், மற்றவர்களும் பணத்துக்காகத்தான் வாழ்க்கை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது."

ஆமாம் என்றோ இல்லை என்றோ பூமி இதற்குப் பதில் கூறவில்லை. அவளோடு மேலும் சிறிது தொலைவு உடன் நடந்து சென்று வழியனுப்பி விட்டுத் திரும்பினான். அவனுடைய பெருந்தன்மையும் நிதானமும் அவளை மேலும் கவர்ந்தன. அத்தனை வலிமை வாய்ந்த மனிதன் மிகமிகச் சிறிய காரணங்களுக்காகத் தன் வலிமையைச் சிதற விடாமல் இருக்கும் நிதானம் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அறியாமைகளை உணர்ந்து புரிந்து பிறரை மன்னிக்கும் அளவு அறிவு உயர்ந்திருக்க வேண்டும் என்று பூமியே அடிக்கடி சொல்வதுண்டு. அதற்கும் அவனே உதாரணமாயிருந்தான். அவனே அதைக் கடைப்பிடித்தான்.

இந்த மனஸ்தாபத்திற்குப் பின் சித்ரா இரண்டு மூன்று நாள் மெஸ் பக்கம் போகவே இல்லை. அவளுடன் பணிபுரியும் சக ஆசிரியைகளின் பிரச்னை ஒன்று வந்து சேர்ந்தது. பூமியோடு பழகத் தொடங்கிய பின் சித்ரா பள்ளியில் மாலை நேர 'டியூஷன்களை' விட்டு விட்டாள். தேவகி முதலிய மற்ற ஆசிரியைகள் பள்ளி விட்ட பின் ஒரு மணி நேரத்துக்கு மாலை நேர டியூஷன் எடுத்தார்கள். திடீரென்று அந்த மாத முதல் தேதியிலிருந்து அவர்கள் பணி புரிந்த பள்ளியில் மாலை நேர டியூஷன்களுக்கான கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டும் அந்த அதிகப்படி வேலைக்காக ஆசிரியைகளுக்குக் குறைந்த தொகையே ஊதியமாகத் தரப்பட்டு வந்தது.

"எங்களுக்கு அதிக டியூஷன் ஊதியம் தரா விட்டாலும் பரவாயில்லை. குழந்தைகளின் பெற்றோர்களிடம் கொள்ளையடிக்காமல் இருக்கட்டும். எங்களைச் சாக்குச் சொல்லி அவர்களிடம் கொள்ளையடிக்கக் கூடாது" என்று ஆசிரியைகள் அபிப்ராயப்பட்டார்கள்.

கல்வியின் பெயரைச் சொல்லிக் கற்பவர்களுக்குத் தொல்லை கொடுத்துக் கற்பிப்பவர்களுக்கும் பயன்படாமல் இடைத்தரகர்கள் கொள்ளையடிப்பதைத் தவிர்க்க வேண்டியிருந்தது. வேண்டி வருபவர்களுக்கு எல்லாம் 'வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது' என்று பெருமித உணர்வுடன் வித்யாதானமாகக் கல்வியை வாரி வழங்கிவிட்டு நிமிர்ந்து நின்ற ரிஷிகளின் காலமும் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்களின் காலமும் முடிந்து போய் சம்பளம், அலவன்ஸ், வீட்டு வாடகைத் தொகை என்று கற்பிப்பதற்கும் கற்பதற்கும் விலைகள் வந்து விட்ட காலத்தில் தான் அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

நகரங்களில் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிக்கும் ஒரு காய்கறிக்கடை, ஒரு சலூன், ஒரு லாண்டிரி எல்லாமும் போல ஒரு பள்ளிக்கூடமும் தேவைப்பட்டது. சலூனும், காய்கறிக்கடையும், லாண்டிரியும் திறந்து கட்டணத்துக்கு வேலை செய்து தருவது போல் நர்ஸரி கான்வென்ட் பள்ளிகளைத் திறந்து வித்யா வியாபாரம் நடத்தப்பட்டு வந்தது. கல்வியின் சூப்பர் மார்க்கெட்டுகளான நகரப் பள்ளிகளில் கல்வி வியாபாரமும் எல்லா வியாபாரங்களையும் போலத்தான் நடந்தது.

இதில் தாங்கள் பலி கடாக்களாகப் பயன்படுவதைத் தேவகியும் மற்ற ஆசிரியைகளும் விரும்பவில்லை. இதைப் பற்றி என்ன மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று யோசிப்பதற்காக அந்த ஆசிரியைகளையும் உடனழைத்துக் கொண்டு லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணனையும் பூமியையும் சந்திக்க வந்தாள் சித்ரா. பரமசிவத்தை அவருடைய கடையில் பார்த்துப் பேசிவிட்டுப் பூமியைப் பார்க்க லஸ்ஸுக்குப் போனார்கள் அவர்கள். வந்தவர்கள் கூட்டமாக இருக்கவே அவர்களிடம் பேசுவதற்காகத் தனிமையை நாடி நாகேஸ்வரராவ் பூங்காவுக்கு அவர்களை அழைத்துச் சென்றான் பூமி.

இரண்டு மூன்று நாட்களாக சித்ரா மெஸ்ஸுக்கு வராதது பற்றிப் பூமி அவளைக் கடிந்து கொண்டான். சின்ன மனஸ்தாபங்களைப் பெரிய விஷயமாக நீடிக்க விட்டுக் கொண்டு சிரமப்படக்கூடாது என்று அவளைக் கண்டித்தான். சித்ரா தான் வந்த காரியத்தைப் பற்றி அவனிடம் விவரித்துவிட்டு உடன் இருந்த ஆசிரியைகளை அறிமுகப்படுத்தி வைத்தாள். பிரச்னைகளை விவரித்துவிட்டு அவனுடைய யோசனையைக் கேட்டார்கள் அவர்கள்.

அவன் அவர்களைத் திருப்பிக் கேட்டான், "உங்களால் ஒரு தீமையை எதிர்த்துப் போரிட முடியுமா இல்லையா என்பதை முடிவு செய்யுமுன் நீங்கள் எவ்வளவிற்கு அதில் உறுதியும் தன்மானமும் உடையவர்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்ட உணர்வும் தன்மானமும் அற்றவர்களாகவே இருப்பது எனக்கு வேதனையளிக்கிறது."

"நீங்கள் முந்திய தலைமுறை ஆசிரியர்களைப் பற்றிச் சொல்கிறீர்கள். அவர்கள் அநாவசியமான தியாக உணர்வைச் சுமந்து கொண்டு சிரமப்பட்டார்கள்."

"உங்களிடம் அந்த அநாவசியமான தியாக உணர்வு இல்லை என்று நீங்கள் உறுதியாகச் சொல்ல முடியுமா?"

"தியாகத்துக்குப் பாத்திரமாக முடியாத பச்சை வியாபார நிறுவனங்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராயில்லை" என்றார்கள் அவர்கள்.

"அப்படியானால் உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன்" என்று தொடங்கி அவர்களுக்கு யோசனைகள் கூற முன் வந்தான் அவன்.

அத்தியாயம் - 28

விவரந்தெரிந்த கோழைகளுக்கும் விவரம் தெரியாத முரடர்களுக்கும் நடுவே சிக்கி நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் எல்லாமே திணறிக் கொண்டிருந்தன.

சித்ராவின் தோழிகளான அந்த ஆசிரியைகளின் பிரச்னைகளைப் பற்றி முதலில் லெண்டிங் லைப்ரரிப் பரமசிவமும் பூமியும் கலந்து ஆலோசித்தார்கள். பின்பு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற கல்வித்துறைப் பிரமுகர் ஒருவரைத் தேடிப் போய்ச் சந்தித்தார்கள். எல்லோரும் ஒரே குறையைத் தான் சொன்னார்கள்:

"படித்த வர்க்கத்தை ஒன்று சேர்ப்பது ரொம்பச் சிரமம். நெல்லிக்காய் மூட்டையைப் போலத்தான், சாக்கைக் கொஞ்சம் பிரித்துத் தளர்த்தினால் போதும், மூலைக்கொருவராகச் சிதறி ஓடி விடுவார்கள். துணிந்து தாங்களே முன் வந்து தீமையை எதிர்ப்பதற்குப் பயப்படுவார்கள். யாரோ ஒரு தைரியசாலி வெகுஜன விரோதியாகி அத்தனை விரோதத்தையும், அத்தனை கெட்ட பேரையும் சம்பாதித்துக் கொண்டு துணிந்து முன் நின்று தீமையை எதிர்த்து நல்லதைச் சாதித்த பின் முன்பு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த அத்தனை பேரும் அந்த நல்லதில் பங்கு கேட்டு வருவார்கள். இந்தியாவின் படித்த நடுத்தரவர்க்கம் அல்லது வெள்ளைக்காரர் வர்க்கத்தின் இலக்கணம் இதுதான்."

"அந்த இலக்கணத்தை இனிமேலாவது மாற்றியாக வேண்டும் அல்லது மீறியாவது தீரவேண்டும்."

"என்னுடைய முப்பத்தெட்டு வருட உத்தியோக அநுபவத்தில் இதை மாற்ற முயன்றவர்களையும் மீற எத்தனித்தவர்களையும் குறைந்த அளவில் கூட பார்த்ததில்லை."

"அது பழைய தலைமுறை! இனி இந்தத் தலைமுறையில் இது அப்படி இராது தீவிர மாறுதல் ஏற்படும்."

"நம் நாட்டைப் பொறுத்தவரையில் தலைமுறைகள் தான் மாறுகின்றனவே ஒழிய மனிதர்கள் ஒன்றும் மாறுவதில்லை."

அந்த ஓய்வு பெற்ற கல்வித்துறைப் பிரமுகர் நாட்டின் மந்த கதியைப் பற்றி மிகவும் கசப்புடனும் கோபத்துடனும் பேசினார்.

இன்று இருக்கும் இலட்சிய வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் சுயமரியாதை உணர்வுடனும்தான் தமது இளமையில் தாம் இருந்ததாகவும் அதற்கு இந்த நாடு தயாராகவோ பக்குவமாகவோ இல்லை என்பதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டார்.

"சில சமயங்களில் விளக்கின் அடியில் தான் இருட்டு அதிகமாக இருக்கும். அந்த மாதிரிக் கல்வித் துறையில் தான் ஊழல்களும், பொறாமையும் அதிகம் என்பது என் அநுபவம்."

அவரிடம் அதிக நேரம் பேசி யோசனை கேட்டுக் கொண்டு திரும்பினார்கள் பூமியும் பரமசிவமும். ஆசிரியைகளின் குறைகளையும் அவர்கள் சார்ந்திருந்த பள்ளியின் முறைகேடுகளையும், ஊழல்களையும் ஒரு மகஜராகத் தயாரித்து, அந்த மகஜரில் மனத்தாங்கல் உள்ள அத்தனை ஆசிரியர்களிடமும் கையெழுத்து வாங்கி டி.இ.ஓ. கல்வித்துறைச் செயலாளர், மத்திய கல்வி போர்டு, அமைச்சர்கள் ஆகியோருக்கு அனுப்பும்படி யோசனை கூறியிருந்தார் அந்த ஓய்வு பெற்ற அதிகாரி.

பூமியும் சித்ராவும் வேறு வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மகஜரைத் தயாரித்து அதை டைப் செய்வதற்கும், பிரதிகள் எடுப்பதற்குமாகப் பத்து ரூபாய் வரை கைப் பணத்தைச் செலவழித்தார்கள். மகஜரின் கீழே முதல் கையெழுத்தைச் சித்ராவே போட்டாள். மற்றவர்களின் கையொப்பங்களை வாங்க முயன்ற போது அவர்கள் ஒவ்வொருவராகச் சாக்குப் போக்குச் சொல்லி நழுவ முயன்றார்கள். ஒதுங்கினார்கள். தட்டிக் கழித்தார்கள்.

"கையெழுத்தெல்லாம் வேண்டாம்! நம்ம முயற்சி பலிக்காமப் போயி யார் யார் கையெழுத்துப் போட்டு மகஜர் அனுப்பினோம் என்கிற விவரம் எப்படியாவது மேனேஜ்மெண்டுக்குத் தெரிஞ்சு போச்சுன்னா நம்மைப் பழி வாங்கிடுவாங்க. அதனால் யார் பேரையும் கீழே போடாமல் மகஜரை டைப் செஞ்சு சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள்னு மட்டும் மொட்டையா எழுதி தபாலில் போட்டுவிடலாம்" என்று சித்ராவுக்கு அவர்களே மாற்று யோசனை வேறு கூற முன் வந்தார்கள்.

"கையெழுத்துப் போடப்படாத மொட்டைக் கடிதாசியை யாரும் மதிக்க மாட்டார்கள். அம்மாதிரிக் கடிதங்களை அடிப்படையாக வைத்து எந்த அதிகாரியும் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். கையெழுத்துப் போட்டு விலாசத்தோடு அனுப்புகிற முறையான கடிதங்களைக் கவனிக்கவே சர்க்கார் அலுவலகங்களில் மாதக் கணக்கில் ஆகும்போது மொட்டைக் கடிதாசியை யார் கவனிக்கப் போகிறார்கள்?" என்று சித்ரா சுடச் சுடக் கேட்டாள். அவர்கள் பதில் பேசாமல் விழித்தார்கள்.

அவளுடைய கேள்விக்குப் பின்பு மகஜரில் இன்னொரு கையெழுத்து வந்தது. அது அவளுடைய தோழியும் சிநேகிதியுமான தேவகியின் கையெழுத்து.

அதற்குப் பின் அந்த மகஜரில் மூன்றாவது கையெழுத்து எதுவும் வாங்கவே முடியவில்லை. தன்னிடம் வந்து குறை கூறிய ஆசிரியைகளை மீண்டும் பூமி சந்திக்க விரும்பினான். ஆனால் அவர்கள் அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தார்கள்.

பள்ளிக்கு வந்து சந்திப்பதற்கும் அவர்கள் தயாராயில்லை என்றும், பூமியைத் தேடி வந்து சந்திப்பதற்கும் அவர்கள் தயாராயில்லை என்றும் சித்ரா நிலைமையை விளக்கினாள். ஐலண்டு மைதானத்தில் நடக்கும் ஒரு எக்ஸிபிஷனுக்காக மாணவர்களை அழைத்துக் கொண்டு அன்று பிற்பகலில் ஆசிரியைகள் போக இருப்பதாக சித்ரா கூறினாள்.

முன் தகவல் எதுவும் தெரிவிக்காமலே திடீரென்று அவர்களை அங்கே வந்து தான் சந்தித்துக் கேட்கப் போவதாகப் பூமி கூறினான்.

"எங்கே வந்து கேட்டாலும் பயனில்லை. நீங்கள் சந்தித்த பழைய கல்வி அதிகாரி உங்களிடம் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. அவர் வாய்க்குச் சர்க்கரை தான் போட வேண்டும். இவர்கள் பயந்து சாகிறார்கள். இந்த தேசத்தில் மட்டும் அதிர்ஷ்டவசமாக படிப்பும் கோழைத்தனமும் இரட்டைப் பிறவிகளாக இருக்கின்றன" என்றாள் சித்ரா.

பூமி நம்பிக்கை இழக்கவில்லை. சித்ரா சொல்லியதிலுள்ள உண்மை அவனுக்குப் புரிந்தாலும் இன்னொரு தடவை அந்த ஆசிரியைகளிடம் பேசி முயன்று பார்க்கலாம் என்று இருந்தான் அவன். பயமும் கோழைத்தனமும் இந்நாட்டுக் கல்வியின் உடன் பிறந்தே கொல்லும் வியாதிகளாக இருந்து வருவது உண்மைதான். அறிவுள்ளவர்களின் பயமும் சரி, அறிவற்றவர்களின் துணிவும் சரி, இரண்டுமே இந்நாட்டில் தேவைக்கதிகமாக இருந்தன. அவர்கள் அஞ்ச வேண்டாததற்கெல்லாம் அஞ்சிச் செத்தார்கள். இவர்கள் அஞ்ச வேண்டியதற்குக் கூட அஞ்சாத அளவு முரடர்களாயிருந்தார்கள். விவரந்தெரிந்த கோழைகளுக்கும், விவரம் தெரியாத முரடர்களுக்கும் நடுவில் சிக்கி நாட்டின் சுதந்திரம் ஜனநாயகம் எல்லாமே திணறிக் கொண்டிருந்தன. விவரந்தெரிந்தவர்கள் அளவற்றுப் பயந்து தயங்கிக் கூசினார்கள். விவரந் தெரியாதவர்கள் அளவற்றுத் துணிந்து முந்திக் கொண்டு எல்லாவற்றையும் செய்ய முற்பட்டிருந்தார்கள்.

அன்று மாலை சித்ராவும், பூமியும் தீவுத்திடலில் அந்தப் பொருள் காட்சிக்குப் போனபோது வானம் மப்பும் மந்தாரமுமாக மூட்டம் போட்டிருந்தது. சூழ்நிலை சுற்றி பார்ப்பதற்கு ஏற்றதாகவும் இதமாகவும் இருந்தது.

சித்ராவின் தோழிகளான ஆசிரியைகள் மாணவர்களோடு பொருட்காட்சிக்குள் நுழைந்தார்கள். தேவகியையும் சித்ராவையும் தவிர மற்ற ஆசிரியைகள் பூமியைக் கண்டதுமே ஏதோ பேய் பிசாசைப் பார்த்து விட்டதைப் போலப் பயந்து செத்தார்கள்.

அவர்களுக்காக அக்கறை எடுத்துக் கொண்டு பலரைச் சந்தித்து அரும்பாடுபட்டுக் கைப் பணத்தைச் செலவழித்து தானும் சித்ராவுமாக அந்தப் பெட்டிஷனைத் தயாரித்ததை விவரித்தான் பூமி. அவர்கள் அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே தயாராயில்லை. அந்தப் பேச்சைத் தவிர்த்தார்கள்.

பூமி விடாமல் வற்புறுத்தவே "எங்க கரஸ்பான்டெண்டுக்கு எல்லா சர்க்கார் ஆபீஸ்லியும் நிறைய வேண்டியவங்க உள்கையா இருக்காங்க. பெட்டிஷன் அங்கே போனதுனா யார் யார் அதிலே கையெழுத்துப் போட்டிருக்கோம்னு அவருக்கு உடனே தெரிஞ்சுபோயிடும்" என்று ஒரு மூத்த ஆசிரியை பயத்துக்குக் காரணத்தை விளக்கினாள்.

அரை மணி நேரத்துக்கு மேல் பூமி மன்றாடியும் பயன் விளையவில்லை.

ஏமாற்றத்தோடு சித்ராவும், பூமியும் திரும்பிய போது, அருகே பொருட்காட்சியில் இயங்கிக் கொண்டிருந்த ராட்டினம் (ஜியண்ட் வீல்) ஒன்றைச் சுட்டிக் காட்டி, "எனக்கு அதிலே ஏறிச் சுத்திப் பார்க்கணும் போல ஆசையாயிருக்கு" என்றாள் சித்ரா.

பூமிக்கு அப்போது அதில் ஈடுபாடு இல்லை என்றாலும் சித்ராவுக்காக உடன் வர இசைந்தான். ஜியண்ட் வீலில் ஆசனங்கள் இரண்டிரண்டு பேருக்கு ஏற்ற வகையில் தனித்தனியாக இருந்தன. கட்டணம் கட்டி டிக்கட் வாங்கிய பின்னர் பூமியும் சித்ராவும் ஓர் இருக்கையில் அருகருகே அமர்ந்தனர்.

ராட்டினம் முதலில் மெதுவாக இயங்க ஆரம்பித்துப் பின் வேகமாகச் சுற்றத் தொடங்கியது. வேகம் அதிகரிக்க அதிகரிக்கச் சித்ரா பயப்பட ஆரம்பித்தாள். அவள் முகத்தில் வேர்த்தது. பயமும் பதற்றமும் தெரிந்தன.

"பழக்கமில்லாதவர்களுக்கு அதிக வேகம் ஒத்துக் கொள்ளாது" என்றான் பூமி.

"யாரைச் சொல்கிறீர்கள்?"

"தனியாக யாரையும் சொல்லவில்லை. எல்லா ஆசிரியைகளுக்குமே இது பொருந்தும்."

"இல்லை பொருந்தாது! நானும் தேவகியும் மகஜரில் கையெழுத்துப் போட்டிருக்கிறோம்" என்று அவனை நோக்கிப் புன்னகையோடு பதில் கூறினாள் சித்ரா.

அத்தியாயம் - 29

எட்டுத் திசைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடைந்தெடுத்த கோழைகளே தெரிகிற தேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகும் பச்சை அடிமைத்தனமே தொடரும்.

இராட்சத ராட்டினம் இரண்டாவது முறை நாலைந்து சுற்றுக்கள் வேகமாகச் சுற்றுவதற்குள்ளேயே சித்ராவுக்குத் தலைசுற்றத் தொடங்கிக் கண்களில் நீர் துளித்துவிட்டது. அவள் நழுவி விழுந்து விடாமல் பூமி தாங்கிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. மூன்றாவது முறை சுற்றத் தொடங்குவதற்கு முன்பே பூமி அவளோடு அவசரமாக கீழே இறங்கி விட்டான். சித்ரா குழந்தைத் தனமாக உடனே பூமியை ஒரு கேள்வி கேட்டாள்:

"தலை சுற்றாமல் மயக்கமோ வாந்தியோ வராமல் உங்களால் இந்த வேகத்தை எப்படித்தான் பொறுத்துக் கொள்ள முடிகிறதோ?"

"என்னைப் பொறுத்தவரை இந்த வேகம் என் இயல்பு. வேகமும் சுறுசுறுப்பும் இல்லாவிட்டால் குங்ஃபூ, கராத்தே, ஜூடோ எதிலுமே நான் தேர்ந்திருக்க முடியாது. என் போல் வேகமும் தீரமும் உள்ளவர்கள் குறைவாகவும் மந்த புத்தியும் பயமும் கோழைத்தனமும் உள்ளவர்கள் அதிகமாகவும் உள்ள தேசத்தில் அவர்களை விட இன்று என் போன்றவர்கள் தான் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கிறது."

பூமியின் கோபமும் குமுறலும் இன்னும் தணியவில்லை என்பதையே அவனுடைய சொற்கள் காட்டின. அவனே தொடர்ந்தான்:

"வெறும் நொண்டிகளை வைத்து ஓட்டப் பந்தயம் நடத்திக் காட்டி வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிய நான் தான் முட்டாள்தனம் பண்ணிவிட்டேன்."

"விட்டுத் தள்ளுங்கள். வேறு எதையாவது பேசலாம். திரும்பத் திரும்ப இப்படி நினைத்து வருந்துவதற்குக் கூட இவர்கள் தகுந்தவர்கள் இல்லை."

"எட்டுத் திசைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோழைகளே தெரிகிற தேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகும் பச்சை அடிமைத்தனமே தொடரும்."

"நீங்கள் ரொம்பவும் கோபமாயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது."

"நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டால் என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது! நான் என்னை நம்பியவர்களை ஒரு போதும் ஏமாற்றியதில்லை."

"இதில் உங்களுக்கு என்ன வந்தது? எங்கள் நன்மைக்காக நீங்கள் இதில் தலையிட்டீர்கள். அவர்கள் பெட்டிஷனில் கையெழுத்துப் போடவில்லை என்றால் நஷ்டம் அவர்களுக்குத் தானே?"

"அப்படியில்லை! மண் குதிரைகளை நம்பி நான் ஆற்றில் இறங்காமலாவது இருந்திருக்கலாமே?"

"உண்மைதான்! ஆனால் இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. நானும் தேவகியும் கையெழுத்துப் போட்டிருக்கிறோமே. அந்த இரண்டு கையெழுத்துக்களுடனே நீங்கள் பெட்டிஷனை அனுப்பலாம்."

"இந்த ஆட்டு மந்தைக் கூட்டம் நன்மையடைவதற்காக நீங்கள் இருவரும் பலியாகத்தான் வேண்டுமா?"

"பலருக்குக் கிடைக்கிற பெரும்பாலான நன்மைகள் சிலர் பலியாவதனால் தான் கிடைக்க முடிகிறது."

நீண்ட விவாதத்திற்குப் பின்னர் அவர்கள் இருவருடைய கையெழுத்தோடு மட்டும் அந்தக் கடிதத்தைச் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் தீவுத் திடலிலிருந்து லஸ் முனைக்குச் செல்வதற்காக பஸ் ஏறியபோது பஸ்ஸில் பொருட்காட்சிக்கு வந்து திரும்பும் கூட்டம் பயங்கரமாயிருந்தது. ஒரே நெரிசலும் நெருக்கடியுமாகப் பஸ் பிதுங்கி வழிந்தது.

கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தும் பயனில்லை. அலை ஓய்ந்து நீராட முடியாது. ஒவ்வொரு பஸ்ஸும் முந்தியதை விட அதிகக் கூட்டத்தோடு தான் சிரமப்படப் போகிறது. வந்த முதல் பஸ்ஸிலேயே அவர்களும் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். எப்படியோ பெண்கள் உட்காரும் பகுதியில் சித்ராவுக்கு மட்டும் ஒண்டிக் கொண்டு உட்கார இடம் கிடைத்து விட்டது. பூமி கூட்டத்தோடு கூட்டமாக நின்றபடி பயணம் செய்தான்.

பஸ் சிறிது தொலைவு நகர்ந்ததும் அவன் நின்ற இடத்திலிருந்து தெரிந்த முந்திய பகுதியிலே நடந்த ஒரு சம்பவத்தைக் கண்டு திடுக்கிட்டான் பூமி.

ஓரமாக உட்கார்ந்திருந்த பிரயாணியின் ஜிப்பாப் பையை அதற்கு நேர் பின்புறம் அமர்ந்திருந்த ஓர் ஆள் பிளேடால் மெல்ல அறுத்துக் கொண்டிருந்தான். கூட்டத்தில் யாரும் அதைக் கவனிக்கவில்லை. மணிபர்ஸை இழக்கப் போகிற அப்பாவியும் 'தான் எதையோ பறி கொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்' என்ற உணர்வே இன்றி முன் பக்கம் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாகப் பூமி நின்ற இடத்திலிருந்து அது தெரிந்தது.

பூமி உடனே பாய்ந்து அந்த ஆளைப் பிடித்து விட்டான். பிடிக்க முயல்கிறவனைப் பிளேடால் அகப்பட்ட இடத்தில் கீறிவிட்டு ஓடி விடுவதுதான் 'பிக்பாக்கெட்' ஆசாமிகளின் வழக்கம். ஆனால் பூமியின் பிடி இரும்புப் பிடியாக இருக்கவே அவனால் திமிறவே முடியவில்லை.

பிடியைத் தளர்த்தாமல் இன்னும் முன்புறமாகப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பிரயாணியைக் கூப்பிட்டு அவருடைய உடமைகள் சரியாயிருக்கிறதா என்று பார்க்கச் சொன்னான் பூமி. பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்தப் பிரயாணி மிக அலட்சியமாகவும், அசிரத்தையாகவும் நடந்து கொண்டது தான். பின்புறம் பார்த்துப் பூமிக்கு நன்றி சொல்லக் கூட அவர் தயாராயில்லை. திருடன் திமிறினான்.

"யோவ் நீ யாருய்யா என்னைப் பிடிச்சுக்கிட்டு..."

"பின்னென்ன? பிக்பாக்கெட் அடிக்கிறவனைப் பிடிக்காமே மாலை போட்டுக் கும்பிடவா செய்வாங்க?"

"சும்மாப் புளுகாதே! நான் யாரய்யா பிக்பாக்கெட் அடிச்சேன்?"

"அதோ உட்கார்ந்திருக்கிறாரே அவரைத்தான்! அவர் ஜிப்பாப் பையைக் காட்டினால் நீ பிளேடாலே அறுத்திருக்கிறது தானே தெரியும்."

"எங்கே அவரைச் சொல்ல சொல்லு பார்க்கலாம். நான் அவரு பையை அறுத்திருந்தா அவரு ஏன்யா சும்மா குந்திக்கினு இருக்கணும்?"

உடனே பூமி முன்புறமிருந்த அந்தப் பிரயாணியைக் கூப்பிட்டு, "சார் உங்களைத்தானே... கொஞ்சம் எழுந்திருந்து உங்க ஜிப்பாப் பையைக் காட்டுங்க..." என்றான்.

"ஜிப்பாப் பை எல்லாம் சரியாகத்தான் இருக்கு சார்! அதெல்லாம் ஒண்ணும் காணாமற் போகலே" என்று திரும்பிப் பாராமலே பதில் சொன்னார் அந்தப் பிரயாணி. பூமிக்குத் திருடன் மேல் வந்த ஆத்திரத்தை விட இரண்டு மடங்கு ஆத்திரம் திருட்டுக் கொடுக்க இருந்த அந்த அப்பாவி மேல் வந்தது.

'பிக்பாக்கெட்டை'ப் பிடித்திருந்த பிடியைக் கொஞ்சம் தளர்த்திவிட்டு அந்தப் பிரயாணியை எழுப்பி நிறுத்தி அவரது ஜிப்பாவில் வலது பக்கப் பை அறுத்து எடுக்கப்பட்டிருப்பதை அவருக்கும் மற்றப் பிரயாணிகளுக்கும் பூமி காட்டினான்.

அப்போது ஒரு ஸிக்னலுக்காக பஸ் நின்றிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு திருடன் கூட்டத்தில் புகுந்து பஸ்ஸின் பின்புற வழியாக இறங்கி ஓடி மறைந்து விட்டான்.

பர்ஸ் திருட்டுப் போயிருந்தும் அதைப் பறி கொடுத்தவர் சும்மா இருந்தது பூமிக்கு ஆச்சரியத்தை அளித்தது.

"அட ஏன்ய்யா நீ ஒண்ணு? அந்த ஆளே கண்டுக்காமே இருக்கறப்ப உனக்கென்னய்யா வந்திச்சு?" ஒரு பிரயாணி பூமியைக் கேட்டார்.

"உங்களுக்கென்ன வந்தது? நீங்க பேசாம இருங்க" என்று சித்ரா கூட அவனை உரிமையோடு கடிந்து கொண்டாள்.

பூமிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அந்த ஆளை நோக்கிக் கத்தினான்.

"என்னய்யா நீர் மனிதன் தானா? இல்லை மரமா? உம் மணிபர்ஸை எடுத்துக் கொண்டு ஒருவன் ஓடுவதைப் பார்த்த பிறகும் இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்?"

இதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. முன்பு போலவே பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். கையெழுத்துப் போடுவதாக வாக்களித்து விட்டு ஏமாற்றிய அந்த ஆசிரியைகளை விட இந்தப் பஸ் பிரயாணி தன்னை அதிகம் ஏமாற்றி விட்டதாகப் பூமி உணர்ந்தான்.

லஸ்ஸில்தான் அந்தப் பிரயாணியும் இறங்கினார். பூமியும் சித்ராவும் அவருக்குப் பின் இறங்கினார்கள்.

பஸ்ஸிலிருந்து கீழே இறங்கியதும் அக்கம்பக்கம் பார்த்துவிட்டுப் பூமியை நெருங்கி அந்த மனிதர், "தப்பா நினைச்சுக்காதீங்க சார்! அவன் என் சட்டைப் பையை பிளேடாலே அறுக்கிறது எனக்கே நல்லா தெரிஞ்சும் நான் வேணும்னு தான் சும்மா இருந்தான். இவங்கள்ளாம் பயங்கரமான ரௌடிங்க. கூப்பாடு போட்டு இவங்களை நாம காட்டிக் குடுத்தோம்னா நம்மை ஞாபகம் வச்சிருந்து நாளைக்கிக் கருக்கட்டிக்கிட்டு அலைவாங்க. என் பர்ஸிலே இருந்தது என்னமோ வெறும் அஞ்சு ரூபாய் தான். அவனை நான் கையும் களவுமாகப் பிடிச்சிருந்தேன்னா, அவன் என்னைப் பிளேடாலே கீறி, நான் டாக்டருக்கும் போலீஸுக்குமாகத் தொடர்ந்து செலவழிக்க வேண்டியிருக்கும். அதான் நான் கண்டுக்கவே இல்லே" - என்றார்.

கூறிவிட்டுப் பூமியின் பதிலை எதிர்பாராமலே புறப்பட்டுப் போய்விட்டார்.

"ஒரு பெரிய நகரம் படித்த நடுத்தர வர்க்கத்தை எவ்வளவிற்குப் படுகோழைகள் ஆக்கி வைத்திருக்கிறது பார்த்தாயா? பத்துப் பேர் வந்து கையில் பிளேடுகளுடன் மிரட்டினால் இங்கே பத்து லட்சம் பேர் பயந்து ஓடிவிடுவார்கள் போலிருக்கிறதே?" என்று சித்ராவின் பக்கம் திரும்பிக் கேட்டான் பூமி. சித்ரா அதற்கு மறுமொழி ஏதும் கூறவில்லை.

அத்தியாயம் - 30

ஆத்மத் துரோகம், மலிவான லாபங்களுக்காக அவ்வப்போது ஆத்மாவைப் பிறரிடம் அடகு வைப்பது ஆகிய காரியங்களை வாடிக்கையாகச் செய்யும் ஈனப் பிறவிகள் பல பட்டிணத்தில் நிறையவே இருந்தன.

பூமியே மேலும் தொடர்ந்து சொன்னான்:

"பயத்துக்கு அடிப்படை சுயநலம். சுயநலமுள்ள ஒவ்வொருவனும், எதற்கும் பயந்து தானாக வேண்டும்."

"அப்படியானால் இந்த நகரத்தினுள் முரடர்கள், ரௌடிகள், பயமே இல்லாத காலிகள் எல்லாருமே சுயநல மற்றவர்கள் என்று அர்த்தமா?"

"அவர்கள் முரடர்கள். முரடர்களைச் சுயநலமற்றவர்கள் என்று சொல்ல முடியாது. கையாலாகாதவர்கள் தங்களைப் பொறுமைசாலிகள் என்று சொல்லிக் கொள்ளும் நகரம் இது."

"இங்கே விரோதித்துக் கொள்ள வேண்டியவர்களைக் கூட விரோதித்துக் கொள்ள அஞ்சித் தயங்குகிறார்கள்."

"அப்படிப்பட்ட ஏனோதானோ மனப்பான்மைதான் அராஜகத்துக்கு இடப்படும் உரம் ஆகிறது."

"திருட்டு என்பதும் வன்முறை என்பதும் தேசியத் தொழில்களில் சில வகைகளாகவே ஆகிவிட்டன."

"பஸ்ஸில் பார்த்த அந்த அப்பாவி மனிதரைப் போலச் சிலர் அவற்றைத் தேசியத் தொழில்களாக மதித்து அவற்றுக்குத் தலை வணங்கிப் பணிந்து நடக்கவும் ஆரம்பித்து விடுகிறார்கள்."

"முதல் மனிதனைத் தொடர்ந்து பின்பு தற்செயலாகப் பலர் செய்யும் தவறுகள் எல்லாமே இங்கே ஏற்றுக் கொள்ளப்பட்ட வாடிக்கைகள் ஆகிவிட்டன. லஞ்சம் முதல் பதவி வெறி வரை அனைத்திற்கும் இது பொருந்தும். தீயதை அது நுழைய முயலும் முதல் எல்லையிலேயே எதிர்த்து நிற்கும் மூர்த்தண்யம் மறைந்து 'சரி தொலையட்டும்' என்று உள்ளே விட்டு விடுகிற மனப்பான்மை எங்கும் எதிலும் வந்துவிட்டது. இன்றைய சீரழிவுகள் எல்லாவற்றுக்குமே இதுதான் காரணம்."

அந்த வார இறுதியில் அவர்கள் கல்வி இலாகாவுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்த புகார் கடிதத்தின் விளைவு தெரிந்தது. அரசாங்க அலுவலகங்களில் சித்ராவும், தேவகியும் பணி புரிந்து வந்த பள்ளியின் நிர்வாகிக்கு உளவு சொல்லக் கூடியவர்கள் இருந்தார்கள். புகார் வந்திருப்பதையும், அதில் சித்ரா, தேவகி இருவரும் கையெழுத்து இட்டிருப்பதையும், பள்ளி நிர்வாகி தெரிந்து கொண்டார்.

உடனே அவருக்கு ஆத்திரம் மூண்டது. அவர்கள் இருவரையும் பழிவாங்கினார். 'நடத்தைக் கோளாறு' - 'சீரியஸ் மிஸ்காண்டெக்ட்' - என்று சித்ரா, தேவகி இருவர் மேலும் குற்றம் சாட்டி இருவரையும் வேலையிலிருந்து நீக்கினார் பள்ளியின் நிர்வாகி. எதிர்பார்த்ததுதான். ஆனால் 'நடத்தைக் கோளாறு' என்று குற்றம் சாட்டியது தான் எரிச்சலூட்டியது.

பூமி இதைப் பற்றிச் சித்ராவிடம் விசாரித்தான்.

"தனியார் நிர்வாகத்திலுள்ள இம்மாதிரிப் பள்ளிக் கூடங்களில் பிடிக்காதவர்களை வெளியே அனுப்புவதற்கு என்ன குற்றம் வேண்டுமானாலும் சாட்டுவார்கள். நிர்வாகத்தைப் பற்றிப் புகார் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி நாகேஸ்வரராவ் பார்க்கில் உங்களைச் சந்தித்த என் தோழிகளாயிருந்த ஆசிரியைகளில் யாராவது இப்போது எனக்கு எதிராகவும் நிர்வாகத்துக்கு ஆதரவாகவும், சாட்சி சொல்லும்படி வற்புறுத்துவார்கள்."

"பொய்ச் சாட்சி சொல்ல முன் வருகிறவர்கள் தங்கள் ஆத்மாவுக்கே துரோகம் செய்கிறார்கள்."

"ஆத்மத் துரோகம், மலிவான லாபங்களுக்காக அவ்வப்போது ஆத்மாவைப் பிறரிடம் அடகுவைப்பது ஆகிய காரியங்களை வாடிக்கையாகச் செய்யும் ஈனப் பிறவிகள் பட்டிணத்தில் நிறைய இருக்கின்றன."

"அங்கிருந்து வெளியேறி விட எனக்குச் சம்மதம் தான். ஆனால் நடத்தை கெட்டுப் போன அயோக்கியன் ஒருவன் கையால் நான் நடத்தை கெட்டவள் என்று பட்டம் வாங்கிக் கொண்டு வெளியேற விரும்பவில்லை."

"உன்னை நடத்தை கெட்டவள் என்று கூறியதற்காக ஒரு லட்ச ரூபாய் மான நஷ்டம் கோரி வழக்குத் தொடுக்கலாம்."

சித்ரா அப்படி ஒரு மானநஷ்ட வழக்குப் போடுவதற்குத் தான் தயாராயிருப்பதாகச் சொன்னாள். தேவகிக்கு வேறு ஓரிடத்தில் வேலை கிடைத்து விட்டது. சித்ரா வேலைக்கு முயற்சி செய்யவில்லை. பரமசிவத்தின் நூல் நிலையத்தில் அரை நாளும், மெஸ்ஸில் அரை நாளுமாகப் பகுதி நேர வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அவளும் தேவகியுமாகச் சேர்ந்து தங்கள் மேல் பொய்க் குற்றம் சாட்டி வெளியேற்றிய பள்ளி நிர்வாகி மேல் மான நஷ்ட வழக்கும் போட்டிருந்தார்கள்.

இப்போது மெஸ்ஸில் லாபம் கணிசமாக வந்தது. மெஸ் இருந்த பழைய கால ஓட்டடுக்கு வீட்டுக்காரர் ஆறு மாதத்துக்கு ஒரு தரம் வாடகையை ஏற்றிச் சொல்லித் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். அந்தப் பழைய காலத்து வீட்டையே விலைக்கு வாங்கி விட்டால் தான் வாடகைப் பிரச்னை தீருமென்று முத்தக்காள் அபிப்பிராயப்பட்டாள். பூமிக்கும் அது சரி என்றே தோன்றியது.

சென்னை நகரில் பரபரப்பான வியாபாரப் பகுதிகளில் கையகல இடமானாலும் நாலு லட்சம், ஐந்து லட்சம் என்று விலை கூசாமல் சொன்னார்கள். நெல் விளைகிற நன்செய்க்கு இருந்த விலை மதிப்பைப் போல் பத்து மடங்கு விலைமதிப்பு எதுவுமே விளைய முடியாத வீடு கட்ட முடிந்த களர்நிலத்துக்குக் கூட இருந்தது. விவசாய நிலத்துக்கு இல்லாத விலை மதிப்பு நகரங்களில் உள்ள வீடு கட்டும் மனைகளுக்கு ஏற்பட்டிருந்தது.

நகரங்களில் கால் மனையை விற்ற தொகையை வைத்து வேறு இடங்களில் ஐந்து ஏக்கர் பத்து ஏக்கர் விவசாய நிலம் வாங்கி விடலாம் போலிருந்தது. வீட்டை வாங்கி விட்டால் இடித்துக் கட்டி மாடியில் வரிசையாக நாலைந்து அறைகளைப் போடலாம் என்று முத்தக்காள் எண்ணினாள். அந்த அறைகளில் வேலை பார்க்கும் திருமணமாகாத இளைஞர்களை வாடகைக்கு வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது. ஓர் அறைக்கு மூன்று கட்டில்களைப் போட்டு விட்டால் மொத்தம் பத்துப் பதினைந்து பேர் தங்க முடியும். கணிசமான வாடகையும் வரும். இதற்காக வீட்டுக்காரருடன் பேரம் நடந்து கொண்டிருந்தது.

அந்த வாரம் பிரபலமான ஜப்பானியக் கராத்தே வீரர் ஒருவர் பம்பாய் செல்கிற வழியில் சென்னையில் இறங்கி இரண்டு நாள் தங்குவதாக இருந்தது. மாநில உடற்பயிற்சிக் கழகம் அவருக்குச் சென்னையில் வரவேற்பு அளிக்க முடிவு செய்திருந்தது. அந்த ஜப்பானியக் கராத்தே வீரர் சிங்கப்பூர் வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வழியாகப் பம்பாய் செல்ல இருந்தார்.

சிங்கப்பூரில் இருந்த பூமியின் நண்பர்கள் இது பற்றிப் பூமிக்கு எழுதியிருந்தார்கள். பூமி தானும் தன்னால் கராத்தே கற்பிக்கப்பட்ட சீடர்களுமாகச் சென்று அவரை விமான நிலையத்தில் வரவேற்க முடிவு செய்திருந்தான். மெஸ் இருந்த வீட்டை விலைக்கு வாங்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் நடுவில் இந்த வேலை வந்து சேர்ந்தது.

சென்னை விமான நிலையத்தில் கராத்தே வீரருக்கு வரவேற்பு அளிக்கும் ஏற்பாடுகளைக் கவனிப்பதில் சித்ரா அவனுக்கு உதவியாயிருந்தாள். வேறோர் ஆளிடம் ஓட்டுவதற்குக் கொடுத்திருந்த தன் ஆட்டோவையே கேட்டு வாங்கி மீட்டரைத் துணியினால் கட்டிவிட்டுத் தானே ஓட்டிச் சென்று நண்பர்களை எல்லாம் சந்தித்துக் கராத்தே உடையிலேயே அவர்கள் எல்லோரும் விமான நிலையம் வந்து சேருமாறு தெரிவித்தான் பூமி.

தான் செய்த இந்த ஏற்பாடு புதுமையாகத்தான் இருக்கும் என்பது அவன் கருத்து. உண்மையில் அது புதுமையாகத்தான் இருந்தது. ஒரே விதமான கராத்தே உடையில் இருபது முப்பது பேரை விமான நிலையத்தில் கூட்டமாகப் பார்த்ததும் வந்த விருந்தினருக்கே வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பூமி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவருக்கு மாலையணிவித்த போது அருகிலிருந்த சித்ராவைச் சுட்டிக் காட்டி 'உன் மனைவியா?' என்று அந்த ஜப்பானியக் கராத்தே வீரர் உற்சாகமாக விசாரித்தார்.

பூமி, "இல்லை" என்றான்.

"அப்படியானால் காதலியா?" என்று அவரே மீண்டும் கேட்ட போது, "இவள் என் சிநேகிதி" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் பூமி.

"ஆமாம்! சில சமயங்களில் காதலியை விடச் சிநேகிதிதான் உயர்ந்தவள்" என்று பூமிக்கு அவர் புன்னகையோடு மறுமொழி கூறினார். பூமியும் சித்ராவைப் பார்த்துப் பொருள் நயம் பொதிந்த புன்னகை புரிந்தான்.

அங்கே வந்திருந்த கராத்தே நண்பர்களை ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகப்படுத்தினான் பூமி. சிங்கப்பூரில் நண்பர்கள் பூமியைப் பற்றிச் சிறப்பாக கூறியதை எல்லாம் அவர் பூமியிடம் விவரித்தார். அவரை அவர் தங்க ஏற்பாடாகி இருந்த ஹோட்டலில் கொண்டு போய் விட்டு விட்டு மெஸ்ஸுக்குத் திரும்பினார்கள் பூமியும் சித்ராவும்.

அவன் மெஸ்ஸுக்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே முத்தக்காள் எதிர்பாராத விதமாக அவனிடம் வந்து சத்தம் போட்டுச் சண்டை பிடிக்கத் தொடங்கினாள்.

அத்தியாயம் - 31

வறுமை உள்ளவர்கள் செய்யும் திருட்டுக்களை விட வலிமையும், வசதியும் உள்ளவர்கள் செய்யும் திருட்டுக்களே இங்கு அதிகமாக நிகழுகின்றன.

ஜப்பானியக் கராத்தே வீரர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து பூமியும், சித்ராவும் மெஸ்ஸுக்குத் திரும்பிய போது இரவு அகாலமாயிருந்தது. முத்தக்காள் அவர்களை எதிர் கொண்டு கூப்பாடு போட்டதிலிருந்து அன்று முன்னிரவில் பூமி இல்லாத வேளையில் அங்கு ஓர் அசம்பாவிதம் நடந்திருப்பது புரிந்தது. பூமியும், சித்ராவும் அன்று இங்கே இருக்க மாட்டார்கள் என்று தெரிந்தே அது செய்யப்பட்டிருப்பது போலும் தோன்றியது.

அன்று முன்னிரவு எட்டு எட்டரை மணி சுமாருக்கு ஏற்பட்ட ஒரு மின்சாரத் தடங்கலினால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் லஸ் பகுதியில் இருள் சூழ்ந்திருந்த சமயத்தில் முத்தக்காள் கவனத்தையும் மீறி கேஷ் டேபிளில் இருந்து சுமார் இரண்டாயிரம் ரூபாயும் சில்லறையும் திருட்டுப் போயிருந்தது.

திடீரென்று இருண்டு போனதால், அம்மாதிரி நெருக்கடி வேளைகளில் பயன்படுத்துவதற்கென்று ஸ்டோர் ரூமில் வாங்கி அடுக்கியிருந்த மெழுகுவர்த்திக் கட்டுக்களை எடுத்து வருவதற்காக முத்தக்காள் உள்ளே போய்விட்டுத் திரும்புகிற சில நிமிஷங்களில் இது நடந்து விட்டது.

திருடியே பழகிய வெளி ஆள் வந்து நடத்திய திருட்டா அல்லது உள்ளேயே இருக்கிற ஆட்களில் யாராவது ஒருவரின் வேலையா என்பது புரியவில்லை. முத்தக்காள் ஒரேயடியாகக் கூப்பாடு போட்டு அதை இன்னும் குழப்பிக் கொண்டிருந்தாள்.

"நீ போனதால் தானே இத்தனை கந்தர கோளம் எல்லாம்? நீ பாட்டுக்கு அடிக்கடி கராத்தே, குஸ்தி, சண்டையின்னு போயிட்டா, நா ஒண்டிக் கட்டையா என்ன பண்ணுவேன் சொல்லு?" என்று பணத்தைப் பறி கொடுத்த ஆதங்கத்தில் பூமியிடம் எரிந்து விழுந்தாள் முத்தக்காள்.

"பதற்றப்படாமல் நடந்ததைச் சொல்லுங்கள்" என்று நிதானமாக விசாரித்தான் பூமி.

முத்தக்காளின் உணர்ச்சி வசப்பட்ட பதற்றம் அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பதற்றம் காரியத்தைக் கெடுத்துவிடும் என்று எண்ணினான் அவன். படிப்பில்லாத நாட்டுப்புறத்து மத்தியதர வயது விதவை எப்படிப் பரபரப்பாக நடந்து கொள்வாளோ அப்படித்தான் முத்தக்காளும் நடந்து கொண்டாள்.

தொடர்ந்து முன்னிரவு வேளையில் மின்சாரத் தடங்கல் வருவதைக் கவனித்துக் கொண்டிருந்து திட்டமிட்டு இந்தத் திருட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்று சித்ரா பூமியிடம் கூறினாள். பூமிக்கும் அவ்வாறே தோன்றியது. பழைய அநுபவம் காரணமாக முத்தக்காள் உள்ளே இருக்கிற ஆட்கள் மீது மட்டும் சந்தேகப்பட்டாள்.

அதே நேரத்திற்கு மின்சாரத் தடங்கல் சில நாட்கள் தொடர்ந்த போது லஸ் வட்டாரத்தில் வேறு பல கடைகளிலும் இப்படித் திருட்டுக்கள் நடந்தன. எல்லாக் கடைக்காரர்களும் போலீஸில் புகார் செய்தார்கள். அவர்கள் எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. தேசம் முழுவதும் திருடர்களை விடப் போலீஸ்காரர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பதற்குப் பதில் போலீஸ்காரர்களை விடத் திருடர்கள் கெட்டிக்காரர்களாகி விட்டார்கள் என்பது போல் தோன்றியது. பறி கொடுத்தவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். நாட்கள் ஓடின.

அந்தச் சமயத்தில் தான் பூமியே கேஷ் டேபிளில் அமர்ந்திருந்த ஓர் இரவில் இது நடந்தது. அன்றும் திடீரென்று மின்சாரத் தடங்கல் ஏற்பட்டிருந்தது. அருகில் டார்ச் இருந்தும் பயன்படுத்தாமல் வேண்டுமென்றே கேஷ் டேபிளில் இருந்து எழுந்திருந்து போவது போல் போக்குக் காட்டி விலகி நின்றான் பூமி.

அப்போது தான் அந்த ஆள் பிடிபட்டான். பூமி முத்தக்காளைப் போல் கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டவில்லை. விளக்கு அணைந்த சிறிது நேரத்தில் திருட முயன்ற ஆளைப் பிடித்த சுவட்டோடு உள்ளே அறைக்கு அழைத்துச் சென்று விட்டான். அறைக்குப் போய் அரிக்கேன் லாம்ப் வெளிச்சத்தில் பார்த்தால், திருடன் ஒரு சின்ன வயசுப் பையன். பூமி அறைவதற்காக கையை ஓங்கியதுமே பயந்து அலறத் தொடங்கிவிட்டான் அந்தப் பையன்.

இந்த அளவுக்கு பயந்து நடுங்குகிற அவன் இத்தனை திருட்டுக்களை எப்படி துணிந்து செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அவனை அடிக்காமல் உள்ளதைச் சொல்லும்படி பூமி விசாரித்தான். பையன் ஏறக்குறைய அழுதே விட்டான்.

அவன் கூறிய விவரங்களிலிருந்து அந்தப் பையன் ஒரு கல்லூரி மாணவன் என்றும் வசதியே அற்ற ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரிந்தது. தானும் தன்னைப் போன்ற பலரும் லஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு பேட்டை ரவுடியின் தூண்டுதலால் இதில் ஈடுபட்டதாகவும் திருடுவதை எல்லாம் அப்படியே அந்தப் பேட்டை ரவுடியிடம் கொண்டு போய்க் கொடுத்துவிட்டால் அவன் கொடுக்கிற பத்தோ இருபதோ கூலியாகக் கிடைக்கும் என்றும் தெரிவித்தான்.

லஸ் பகுதியில் நடந்த அத்தனை திருட்டுக்களையும் தான் செய்யவில்லையென்றாலும், மெஸ்ஸில் இதற்கு முன்பு திருடியது மட்டும் தானே என்றும் அந்தப் பையன் ஒப்புக் கொண்டான்.

"படிக்கிற பையன்களை இப்படிச் சின்ன வயசிலேயே கெடுத்து வைத்தால், நாடு எப்படி உருப்படும்" என்றாள் அருகில் இருந்த சித்ரா.

"மொளைச்சு மூணு இலை விடலே! அதற்குள்ளே இப்பிடியா தலை எடுக்கணும்?" என்று கைகளைச் சொடக்கினாள் முத்தக்காள். பூமி அதற்குப் பதில் சொன்னான்.

"என்ன செய்வது! இந்நாட்டில் ஏழைகளிலும் திருடுபவர்கள் இருக்கிறார்கள். வறுமையினால் நிகழும் திருட்டுக்களை விட வளமையினாலும் வசதியினாலும் அதிகத் திருட்டுக்கள் நிகழுகின்றன!"

பூமி இவ்வாறு பேசியது அதிகம் பயந்து போயிருந்த அந்த இளைஞனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவன் பூமியிடம் கெஞ்சும் குரலில் மன்றாடினான்.

"கல்லூரிக்குப் போகிற நேரம் தவிரக் காலை மாலை வேளைகளில் செய்வதற்குக் கௌரவமான வேலை ஏதாவது கிடைத்திருந்தால் இந்தப் பாவத்தில் நான் இறங்கியே இருக்க மாட்டேன் சார்! என்னை மன்னியுங்கள்."

"உன்னை இந்தப் பாவத்தில் ஈடுபடுத்தி இதைச் செய்யத் தூண்டியவன் யாரென்று சொல்ல முடியுமா? உனக்கு ஒரு கெடுதலும் வராமல் நானே பார்த்துக் கொள்கிறேன்."

"சொன்னாலோ யாரென்று காண்பித்துக் கொடுத்தாலோ நான் உயிருடன் நடமாட முடியாது சார்?"

"மிரட்டலுக்குப் பயப்படாதே! நாங்கள் எல்லாம் இருக்கும் போது உன்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது."

"இந்தக் கும்பலைப் பத்தி உங்களுக்குத் தெரியாததுனாலே அப்பிடிச் சொல்றீங்க சார்! இவங்க தங்களைக் காட்டிக் கொடுக்கிறவங்களைச் சும்மா விட மாட்டாங்க."

"சரி! தொலையட்டும். உனக்கு நல்ல வேலை கிடைத்தால் இதை எல்லாம் விட்டு விட்டு ஒழுங்காகப் படிக்க முடியுமா? அல்லது வேலை கிடைத்த பிறகும் பழக்க தோஷத்தால் திருட்டை விட மனசு வராதா?"

"என்ன வேலை சார்? எனக்கு யார் கொடுப்பாங்க? முதல்லே என்னை நம்பணுமே?"

"நான் நம்பிக் கொடுக்கிறேன். ஆனால் நீ என் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்கிறாயா இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் நான் உன்னை தொடர்ந்து நம்புவதோ - நம்பாததோ இருக்கிறது."

சித்ராவுக்கும் முத்தக்காளுக்கும் அந்தப் பையனை அவ்வளவு விரைந்து பூமி நம்பியது பிடிக்கவில்லை. பிடிபட்ட பையனை உடனே போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று சித்ராவும், முத்தக்காளும் அபிப்ராயப்பட்டார்கள். பூமி அதற்குச் சம்மதிக்கவில்லை.

"சூழ்நிலையாலும், வறுமையாலும் தவறு செய்யத் தொடங்கிவிட்ட ஒருவனைத் தொடர்ந்து தவறு செய்பவனாகவே மாற்றிவிட்டு விடுவதற்கு நாமும் உதவி செய்து விடக்கூடாது. அவன் திருந்த ஒரு வாய்ப்புத் தந்து பார்க்கிற அந்த அளவு பெருந்தன்மையாவது நமக்கு இருக்க வேண்டியது அவசியம்."

மற்றவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் பூமி அந்தக் கல்லூரி மாணவனை மன்னித்துப் படிப்பு நேரம் போக மீதி நேரங்களில் மெஸ் வேலைகளைச் செய்ய அநுமதித்தான். நாளடைவில் அவன் திருந்தியும் மாறியும் ஒழுங்காகி விட்டான். ஆனால் தன் பழைய குருவாக இருந்த ரௌடியை எண்ணி அடிக்கடி நடுங்கினான். அதைப் பற்றிப் பேச்சு எடுப்பதையும் அவன் விரும்புவதில்லை. அதை மறப்பதையே அவன் அதிகம் விரும்பினான்.

ஒருநாள் பிற்பகலில் அந்தப் பையன் மெஸ்ஸில் சர்வ் செய்து கொண்டிருந்த போது நாலைந்து பேர் சூழ உள்ளே சாப்பிட வந்த ஒரு முரட்டு ஆளைப் பார்த்ததும் பயந்து உள்ளே ஓடி விட்டதைப் பூமியே கண்டு விட்டான்.

உள்ளே பின் தொடர்ந்து போய், "ஏன் இப்படிப் பயந்து ஓடி ஒளிகிறாய்? யார் உன்னை என்ன செய்து விடுவார்கள்?" என்று பூமி அந்தப் பையனைக் கேட்டான்.

"ஹாலில் ஒரு கும்பல் டிபன் சாப்பிட வந்திருக்கிறது. அந்தக் கும்பல் எழுந்திருந்து வெளியேறும் வரை நான் அந்தப் பக்கம் வர முடியாது" என்று நடுங்கினான் பையன்.

பூமிக்கு ஆத்திரம் மூண்டது. பையன் வந்து அடையாளம் காட்டாவிட்டாலும் அந்த ரௌடிக் கும்பலையும் அதன் தலைவனையும் பூமி அடையாளம் புரிந்து கொண்டு விட்டான். கும்பலோடு வந்திருந்த ஓர் ஆளிடம் மிகவும் மரியாதையாக விசாரிப்பது போல் 'தலைவர் யாருங்க' என்று அந்த முரடனைப் பற்றிப் பூமியே விசாரித்தான். விவரம் தெரிந்தது. தெரிந்த விவரம் பூமியை ஆச்சரியப்பட வைத்ததை விட அதிகமாக அதிர்ச்சியடைய வைத்தது.

அத்தியாயம் - 32

இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய பலவீனம் என்ன வென்றால் நல்லவர்களை விரோதித்துக் கொள்ள எல்லாருமே தயாராயிருக்கிறார்கள். தீயவர்களை விரோதித்துக் கொள்ள யாருமே தயாராயில்லை. தீமை கிளை பரப்பி வளர்கிறது. நன்மை சிதைந்து நலிகிறது.

ஒவ்வொரு சமூக விரோதக் கூட்டத்திற்கும் பின்னணியில் ஒரு செல்வாக்குள்ள பண வசதி படைத்த தலைமை இருந்தது. ஒவ்வொரு பெரிய நகரத்திலும் 'மாஃபியா' கும்பலுக்கு இப்படி ஒரு சூத்திரதாரி இருந்தான்.

சாதாரணமான கொச்சை மனிதர்கள், அடியாட்கள் தான் முன்னால் தெரிந்தார்களே ஒழிய அவர்களுக்கு ஆணிவேராக இருந்த நாசூக்கான அயோக்கியர்கள் முன்னால் தெரியாமல் மறைந்து பின் நின்றார்கள்.

பூமி மெஸ்ஸில் பார்த்த மனிதனைப் போல் பல மனிதர்களைக் கட்டி ஆளும் வேறொரு பெரிய மனிதன் இருப்பது தெரிந்தது. அந்தப் பெரிய மனிதன் மாநிலத்தில் செல்வாக்கோடு இருந்த ஓர் அரசியல் கட்சியின் வட்டாரத் தலைமையையும் பெற்றிருந்தான். கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை, திருட்டு, எதில் கை வைத்தாலும் அது அவனில் போய் முடிந்தது. அவனே அனைத்துக்கும் மூலாதாரமாக இருந்தான்.

பூமி மெஸ்ஸில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டிருந்த பையன் யாரைப் பார்த்துப் பயந்தானோ அவனைப் போல் பல அடியாட்களுக்குத் தலைவனாக அந்த அரசியல் பிரமுகன் இருந்தான். முன்பு ஒரு தடவை மெஸ்ஸில் நன்கொடை வசூலுக்கு வந்து கலாட்டா செய்து சேதம் விளைவித்தது கூட இந்த ஆளின் ஏவலால் தான் என்பது தெரிய வந்தது.

கல்லூரிகள், பள்ளிகளில் படிக்கும் அப்பாவி மாணவர்களைத் திருடுவது, சாராயம் கடத்துவது ஆகியவற்றுக்குப் பழக்கப் படுத்திவிடுவது போன்ற செயல்களுக்கெல்லாம் தயாரித்திருந்தான் இந்த ஆள். ஆனால் இதற்கெல்லாம் பின்னால் இவன் தான் இருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. அந்த வட்டாரத்தில் இருந்த கள்ளச் சாராய இருட்டறைகள், விபசார விடுதிகள், சூதாட்ட கிளப்கள் எல்லாமே இந்தப் பிரமுகன் முதலீட்டில் தான் நடந்து கொண்டிருந்தன.

இந்த அயோக்கியனின் முகமூடியைக் கிழிக்க வேண்டுமென்று பூமி விரும்பினான். சித்ராவிடம் அவன் இதைப் பற்றிப் பிரஸ்தாபித்த போது அவள் தயங்கி அஞ்சினாள்.

"இப்படிக் கூட்டங்களை எதிர்த்துக் கொண்டு கிளம்பினோமானால் அது எங்கெங்கோ போய் முடியும்."

"மூலைக்கு மூலை வலுவான அடியாட்களை நிரப்பி வைத்திருக்கிறார்கள் இவர்கள். பாம்புப் புற்றில் கையை விடுவது போல் இதில் தலையிடத்தான் வேண்டுமா? என்பதை ஒரு முறைக்கு இரு முறையாக யோசித்துக் கொள்ளுங்கள்."

"இங்கு இவனைப் போன்ற சமூக விரோதிகளை யாராவது மட்டம் தட்டி அழித்துத்தான் ஆக வேண்டும். இல்லையானால் ஊரையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுவார்கள். இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய பலவீனம் என்னவென்றால் நல்லவர்களை விரோதித்துக் கொள்ள எல்லோருமே தயாராயிருக்கிறார்கள். தீயவர்களை விரோதித்துக் கொள்ள யாருமே தயாராய் இல்லை. இதனால் தீமை கிளை பரப்பி வளர்கிறது. நன்மை சிதைந்து நலிகிறது."

"இந்தப் பெரிய நகரத்தில் தீமையை அழித்தொழிப்பதற்கும் நன்மையைப் பாதுகாப்பதற்கும் நீங்கள் ஒருவரே பொறுப்பு என்று ஏன் நினைத்துக் கொள்கிறீர்கள்?"

"ஒவ்வொருவரும் அப்படி நினைக்காமல் விலகிச் சென்றால் அப்புறம் யார் தான் அதற்கு பொறுப்பு? யாராவது சிரமப்பட்டுத்தானே ஆக வேண்டும்? நானே துணிந்து சிரமப்பட்டு விடத் தயாராயிருக்கிறேன்."

"தொடர்ந்து எல்லாவற்றிற்குமே நாம் தான் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்! வேறு யாரும் முன் வரவில்லையே?"

சித்ராவின் வாதம் பூமியைத் தடுத்து நிறுத்திவிட முடியவில்லை. அவன் அந்தச் சோதனையில் இறங்குவதற்குத் தயாராகிவிட்டான். மெஸ்ஸில் திருடு போன தொகையை மீட்பதற்காக மட்டுமல்லாமல் பலருடைய பல நியாயங்கள் எங்கே பலியாகி இருந்தனவோ அங்கே அவற்றைத் தட்டிக் கேட்டுத் திரும்பப் பெறுவதற்கு முயல வேண்டும் என்ற முனைப்பு அப்போது அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

இந்த நாகரிகமான கொள்ளைக் கூட்டத்தைக் கண்டுபிடிக்கப் போலீஸார் எந்த அளவு ஒத்துழைப்பார்கள் என்று அறிய போலீஸ் கிரைம் பிராஞ்சில் பொறுப்புள்ள அதிகாரி ஒருவரை அணுகிப் பேசி பார்த்தான் பூமி. அவர்கள் சிரத்தைக் காட்டவில்லை. குறிப்பிட்ட ஆளின் அரசியல் செல்வாக்கை எண்ணிப் பயப்பட்டார்கள். பூசி மெழுகித் தட்டிக் கழித்தார்கள்.

"உங்களுக்கு ஏன் சார் வம்பு? தொல்லையை விலைக்கு வாங்காதீர்கள்" என்று பூமியை அந்தப் போலீஸ் அதிகாரி எச்சரித்தார்.

திருட்டுக் கும்பலிலிருந்து பிடிபட்டுத் திருந்தி வந்து பூமியால் வேலையளிக்கப்பட்ட பையனும் தன் முன்னாள் எஜமானனை காண்பித்துக் கொடுக்க அஞ்சினான். திருடர்களைப் பிடிப்பதற்காகவே உத்தியோகம் பார்க்கும் போலீஸ்காரர்களும் அஞ்சினார்கள். காரணம் அந்தத் தவறுகளின் மற்றொரு நுனி செல்வாக்குள்ள ஓர் அரசியல் கட்சியில் போய்ச் சேர்ந்திருந்தது. பின்னிப் பிணைந்திருந்தது.

இருண்ட தெரு முனைகளில் பெண்களின் கழுத்துச் சங்கிலிகள், நகைகளை அறுப்பது, கொள்ளையடிப்பது, வீடுகளில் புகுந்து திருடுவது, மோட்டார் சைக்கிளில் துரத்தித் திருடுவது என்று பல குழுக்கள் அந்தச் செல்வாக்கில் குளிர் காய்ந்து கொண்டிருந்தன. வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டுப் பில் பணத்தைக் கொடுக்காமலே சண்டைப் போட்டுவிட்டு வெளியேறிப் பல ஹோட்டல்களை ஏமாற்றும் ரவுடிகளும் அந்தக் குழுவில் இருந்தார்கள்.

ஹோட்டல்காரர்கள் தகராறு செய்தால் மறுநாள் கும்பலாக உள்ளே நுழைந்து சாப்பிட்டு விட்டுப் பிளேட்டுகள், பீங்கான் கிண்ணங்களை உடைத்துக் கலவரம் புரிந்து விட்டு வெளியேறினார்கள் ரவுடிகள். அந்த வட்டாரம் முழுவதுமே தொல்லையை அநுபவித்தது. ஆனால் யாருமே பூனைக்கு மணி கட்டத் தயாராயில்லை. தலைவிதியே என்று பொறுத்துக் கொண்டு சமாளித்தார்கள்.

சமூகத்தில் தீமைக்கு அடங்கிப் போவது, தீமையை ஏற்பது என்பது பூமியால் இயலாத காரியம். தீமைகளையும் அநீதிகளையும் ஏற்று அடங்கி நூறு வருஷம் வசதியாக வாழ்வதை விட அவற்றை எதிர்த்தழிக்கும் முனைப்புடன் நிமிர்ந்து நின்று போராடிப் பத்து நாட்களில் அழிந்தால் கூட அழியலாம் என்கிற அளவு சுய மரியாதையும், சுதந்திர உணர்வும் அவனுக்கு இயல்பாகவே உண்டு.

'மன்னாரு' - என்று அப்பகுதி மக்கள் பயத்துடனும் பதற்றத்துடனும் தணிந்த குரலில் சொல்லிய அந்தப் பேட்டை ரவுடியின் முழுப்பெயர் மன்னார்சாமி. ஒரு தடவை கார்ப்பொரேஷன் கவுன்ஸிலராகவும் இருந்த அவன் ஆளுங்கட்சிகள் எவையாக இருந்தாலும் அவற்றுக்கு உடனே வேண்டியவனாகிவிடுவது வழக்கம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அவனைச் சந்திக்கும் நோக்குடன் புறப்பட்டான் பூமி. எங்கே எதற்காகப் போகிறேன் என்று யாரிடமும் அவன் சொல்லவில்லை. இரகசியமாகவே கிளம்பியிருந்தான்.

முதலில் மகாபலிபுரம் போகிற வழியில் முந்திரி மரங்களும் பனை மரங்களுமாக இருந்த ஒரு வனாந்திரப் பகுதியில் இயங்கிய 'மன்னாரு' வின் கள்ளச் சாராய சாம்ராஜ்யத்தில் போய்த் தேடினான். இவன் உளவாளியோ என்ற சந்தேகத்தில் யாரும் அங்கு பிடி கொடுத்துப் பேசவே இல்லை. இவனைப் பின் தொடர்ந்தார்கள். ஜாடை மாடையாக மிரட்டவும் செய்தார்கள். சிரமப்பட்டுத் தப்பி வர வேண்டியிருந்தது.

அடுத்து மந்தைவெளியின் ஒரு மாடியில் இருந்த சூதாட்ட கிளப்பில் போய்த் தேடிய போதும் இதே அநுபவம் தான். கட்சி அலுவலகத்தில் போய்த் தேடிய போது, "அவர் இங்கே பொழுதன்னைக்கும் வர்ரதில்லை. தலைவருங்க, மந்திரிங்க வர்ரப்ப மட்டும் தான் வருவாரு" என்று மிகவும் மரியாதையாகப் பதில் சொன்னார்கள்.

தொடர்ந்து மன்னாருவின் பலசரக்குக் கடை, கமிஷன் மண்டி, வீடு, எங்கு விசாரித்தும் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரே மர்மமாக இருந்தது. ஜனாதிபதியைக் கூட சந்தித்து விடலாம். கடைசியில் பூமி தன்னுடைய தேடும் உத்தியை மாற்றினான்.

அடையாறு மெயின் ரோடில் "ப்யூட்டி பார்லர் - பாடி மசாஜ் செய்யப்பட்டும்" என்ற பெயர்ப் பலகையுடன் மன்னாரு நடத்தி வந்த ஒரு விபசார விடுதியில் போய்த் தேடும் போது மன்னாருவுக்கு மிகவும் வேண்டியவன் போலவும் அவனுடைய அந்தரங்கமான 'பிஸினஸ் பார்ட்னர்' போலவும் தானே நடித்து விசாரித்தான். காரியம் பலித்தது.

'ப்யூட்டி பார்லர்' என்றும் 'ஹெல்த் கிளினிக்' என்றும் தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் போர்டுகள் தொங்கிய அந்தப் பெரிய பங்களாவின் முகப்பில் நுழைந்தவுடனேயே ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ரிஸப்ஷன் பகுதி போல ஒரு வரவேற்பு அறை இருந்தது. தலையை 'பாப்' செய்து கொண்டிருந்த ஒரு கொழுத்த பெண் வரவேற்பு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

அவளுடைய உதடுகள் இரத்தச் சிவப்பில் சாயம் பூசப்பட்டு மின்னின. அவளுக்கு அங்கே பக்கத்துக்கு ஒருவராக இரண்டு பீமசேனர்கள் நின்றார்கள். உள்ளே நுழைகிற எவனுக்கும் உடனே பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டாக்குகிற முரட்டுத் தோற்றம் அவர்களுக்கு. பூமி நாசுக்காகத் தான் பேச்சை ஆரம்பித்தான்.

"மிஸ்டர் மன்னார்சாமியைப் பார்க்க வேண்டும்."

"நீங்கள்..." அவள் பதிலுக்குப் பூமியைக் கேட்டாள். 'மன்னாரு' உள்ளே இருக்கிறானா இல்லையா என்பதைச் சொல்லாமலே தந்திரமாக இவனைப் பற்றி விசாரித்தாள் அவள்.

"அவருடைய பழைய சிநேகிதன். அவர் பார்க்க வரச்சொல்லித்தான் வந்திருக்கிறேன்."

"இங்கே தான் வரச் சொன்னாரா?"

"ஆமாம்! இங்கே தான் வரச் சொன்னார்."

பின் விளைவு என்ன ஆகும், எது நடக்கும் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பூமி துணிந்து இப்படிச் சொன்னான். அவள் அவனைக் கூர்ந்து பார்த்தாள். தயங்கினாள். அப்புறம் பக்கத்திலிருந்த 'இண்டர்காம்' ஃபோனை எடுத்து பட்டனை அமுக்கி உள்ளே யாருடனோ பேசினாள். ஃபோனை வைத்து விட்டுப் பூமியை நிமிர்ந்து பார்த்து உட்காரச் சொன்னாள்.

அத்தியாயம் - 33

காந்தியடிகள் காலத்து அரசியலில் மக்களுக்காகத் தலைவர்கள் தியாகம் செய்தார்கள். இன்றைய அரசியலிலோ தலைவர்களுக்காக மக்கள் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.

அங்கு நிலவிய சூழ்நிலை மர்மமாகவும் புதிராகவும் இருந்தது. பூமியைப் பார்த்த கண்கள் அனைத்துமே சந்தேகத்தோடு பார்த்தன. அங்கிருந்தவர்கள் பயப்படுகிறார்களா பயப்படுத்தப்படுகிறார்களா என்பதைப் பிரித்துப் புரிந்து கொள்வதும் சிரமமாக இருந்தது. ஒரு சமயம் பார்த்தால் யாருக்கோ, எதற்கோ பயப்படுவது போலவும் இருந்தது. இன்னொரு சமயம் பார்த்தால் யாரையோ, எதையோ பயமுறுத்துவது போலவும் இருந்தது.

ஒரு பியூட்டி பார்லருக்குரிய அழகு உணர்ச்சியோ, அலங்கார உணர்ச்சியோ, இங்கித நளின இதங்களோ, மென்மைகளோ அங்கு யாரிடமும் தென்படவில்லை. பூமி மிக விழிப்பாகவும், சகல விதங்களிலும் சுதாரித்துக் கொண்ட மனநிலையுடனும் எச்சரிக்கையாகவே இருந்தான்.

வரவேற்புப் பகுதியிலிருந்த பெண்மணியினுடைய வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு அவன் இருக்கையில் உட்கார்ந்ததுமே குண்டர்கள் இருவரும் அவனருகே பக்கத்துக்கு ஒருவராக வந்து நின்று கொண்டனர். பூமி பொறுமை இழக்கிற அளவுக்குக் காத்திருக்க வேண்டியதாயிற்று.

யார் யாரோ வந்தார்கள், பார்த்தார்கள், போனார்கள். ஒரு தினுசான பெண்களின் நடமாட்டம் அதிகமாயிருந்தது. கூச்ச நாச்சமின்றி அவர்கள் அங்கு நடமாடினார்கள். உடலால் மட்டுமே தாங்கள் பெண்கள் என்பதை அவர்கள் நிரூபித்தார்களே ஒழிய, பெண்மையின் உயரிய உணர்வுகள் எவையும் மருந்துக்குக் கூட அவர்களிடம் தென்படவில்லை.

மறுபடியும் எழுந்திருந்து போய் வரவேற்புப் பெண்மணியிடம் தான் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று பூமி கேட்டான்.

"நீங்கள் விரும்புகிறவரை காத்திருக்கலாம்" என்றாள் அவள்.

"இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?"

"அர்த்தம் எல்லாம் நாங்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. இங்கே வருகிறவர்கள் எல்லா அர்த்தமும் புரிந்து தான் வருகிறார்கள். நாங்கள் சொல்லிக் கொடுத்து அவர்கள் எதையும் தெரிந்து கொள்வதில்லை. அதற்கு அவசியம் இல்லை. நீங்கள் தான் புரியாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்."

பூமி சிந்தித்தான். குழப்பமாயிருந்தது. அவள் தன்னையும் அங்கு வருகிற வாடிக்கைக்காரனாக நினைத்து நடத்துகிறாளோ என்று தோன்றியது. மறுபடியும் அவளிடம் நினைவூட்டினான் பூமி.

"நான் மன்னாருவைப் பார்க்க வந்தேன்."

மறுபடியும் அவள் முகம் வியப்பைப் பொழிந்தது. இண்டர்காமில் உள்ளே யாருடனோ தொடர்பு கொண்டாள். பின்பு அவனிடம் பேசாமல் அங்கே நின்ற அந்தப் புண்ணாக்குத் தடியர்களிடம் நேரே பேசினாள் அவள்:

"இந்த ஆளை உள்ளார இட்டுக்கினு போங்கப்பா! தலைவரு வரச் சொல்றாரு."

வார்த்தைகளில் மரியாதை விரைந்து தேய்மானம் பெற்றிருந்தது. பூமி அதைக் கவனித்துக் கொண்டான், ஆனால் பொருட்படுத்தவில்லை. பச்சை நிற விளக்குகள், மஞ்சள் விளக்குகள், சிவப்பு நிற விளக்குகள், ஏராளமான இண்டர்காம்கள், காலிங்பெல்கள் என்று ஒரு பெரிய கண்ட்ரோல் ரூம் போல் இயங்கியது அந்த வரவேற்பு அறை.

விளக்குகள் நிறம் நிறமாக எரிவதும் அணைவதுமாக இருந்தன. டெலிபோன் மணி உட்பட மணிகள் ஒலிப்பதும் ஓய்வதுமாக இருந்தன. நவீன உத்திகளுடனும் நவீன வசதிகளுடனும் அழகு சாதன நிலையம் என்ற அங்கீகரிக்கப்பட்ட போர்வையில் சதை வியாபாரம் நடந்து கொண்டிருந்தது, அதிகம் யோசிக்க அவசியமில்லாமலே புரிந்தது.

பங்களாவின் உட்பகுதியில் பூமியை நெடுந்தூரம் சுற்றி வளைத்து அழைத்துச் சென்றார்கள் அவர்கள். அந்த வீட்டுக்குள் அத்தனை சந்து பொந்துகளும் இடுக்குகளும் இருக்க முடியும் என்று வெளியே இருந்து பார்க்கும் போது கற்பனை கூடச் செய்ய முடியாது. கதவுகளும் வாசல்களும் எங்கெங்கோ எப்படி எப்படியோ அமைந்து இருந்தன. உள்ளே நன்றாகப் பழகியவன் வழிகாட்டி அழைத்துச் சென்றாலொழியப் போவதும் திரும்புவதும் கடினமாயிருக்கும் போலத் தெரிந்தது.

கடைசியாக ஏ.சி. செய்த ஓர் அறையில் அலங்கோலமான நிலையில் பல பெண்கள் புடைசூழ நல்ல குடி வெறியில் தன் நிலை தடுமாறிப் போயிருந்த மன்னாருவின் முன்னால் கொண்டு போய் விட்டார்கள். லிக்கர் நெடியும், சிகரெட் புகை நெடியுமாக அந்த அறையை நரகமாக்கி இருந்தன.

அங்கே மன்னாருவை நேரில் பார்த்த போது அவன் தான் கற்பனை செய்திருந்த மாதிரி இல்லை என்பதைப் பூமி புரிந்து கொண்டான். வெடவெட வென்று ஒடிந்து விழுகிற மாதிரி இருந்த அவன் முகத்தில் மீசை மட்டும் பெரிதாக இருந்தது. அம்மை வடுக்கள் மொய்த்த முகத்தில், தெறித்து விழுந்து விடும் போல விழிகள் பிதுங்கி நின்றன.

ஆடை நழுவிப் போனது தெரியாமல் வெறும் உள்ளாடையான அரை டிராயரோடு இருந்த அவன் திடீரென்று, "யார்ரா நீ? போலீஸ் ஆளா? போலீஸ்தானே உன்னை அனுப்பினாங்க?" என்று பூமியை நோக்கி முஷ்டியை ஓங்கிக் கொண்டு பாய்ந்தான்.

பூமி அவனைத் தடுக்க முயன்றதிலேயே நிலை தடுமாறித் திரும்பவும் போய்ச் சோபாவில் விழுந்தான் மன்னாரு. அதைப் பார்த்ததும் குண்டர்கள் பூமியின் மேல் பாய்ந்தார்கள்.

"தலைவர் மேலயா கையை வச்சே?" என்று அவர்கள் பூமி மேல் தாக்குதலுக்கு வந்ததும் பூமி தன் தொழிலைக் காட்டினான்.

மன்னாருவுக்கு முன் டீப்பாயில் இருந்த பாட்டில்கள் சிதறின. பெண்கள் கூச்சலிட்டு மூலைக்கொருவராகப் பதறி ஓடினார்கள். பூமி பாய்ந்து தாக்கிய வேகத்தைக் கண்டு குண்டர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஒற்றைக் கையால் தடுத்த வேகத்திலேயே மன்னாருவைச் சோபாவில் சுருட்டிப் போட்டிருந்தான் பூமி. வெறும் சோற்று மாடன்களான குண்டர்கள் இருவரும் அவனிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். பூமியின் சாகஸத்தைப் பார்த்து மலைத்துப் போயிருந்த மன்னாரு தன்னருகே இருந்த சுவிட்சை அமுக்கினான்.

"ஏய் மன்னாரு! இன்றைக்கு இது போதும். இன்னொரு நாள் மறுபடி உன்னை வந்து சந்திக்கிறேன். தயாராயிரு" என்று அவனிடம் கூறி விட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு வழி தப்பி விடாமல் ஞாபகம் வைத்திருந்தபடி வெளியேறி முகப்புக்கு வந்தான் பூமி.

முகப்பிலும் சில குண்டர்கள் அவனை வழிமறித்தனர். அவர்களைச் சமாளித்துத் தெருவில் நின்றிருந்த ஒரு டாக்ஸியில் பாய்ந்து ஏறி டிரைவரை விரைந்து ஓட்டச் சொல்லிப் பூமி அங்கிருந்து மீண்டான். பின்னால் யாரோ மோட்டார் சைக்கிளில் துரத்துவதாகத் தோன்றியது. திரும்பிப் பார்த்தான். மன்னாருவின் ஆட்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து துரத்தி வந்து கொண்டிருந்தார்கள்.

முந்தவோ ஓவர்டேக் செய்யவோ அவர்கள் முயலவில்லை. ஒரே சீராகப் பூமியின் டாக்ஸியைப் பின்பற்றினர். தான் எங்கே இறங்குகிறோம் என்பதைப் பார்க்கவே அவர்கள் பின் தொடர்வதாகப் பூமிக்குத் தோன்றியது. அவர்களை மேலும் குழப்பமடையச் செய்ய வேண்டுமென்ற திட்டத்துடன் லஸ்ஸில் இறங்காமல் கச்சேரி ரோடு போலீஸ் ஸ்டேஷன் முன்னால் போய் நிற்குமாறு டாக்ஸி டிரைவரிடம் சொன்னான் பூமி. போலீஸ் ஸ்டேஷன் என்றதும் டாக்ஸி டிரைவர் கொஞ்சம் பதற்றம் அடைவது புரிந்தது.

ஆள்கட்டும் பண வசதியும் இருந்தால் அரசியல் என்ற ஒரு போர்வையையும் போர்த்திக் கொண்டு எவ்வளவு அக்கிரமங்கள் செய்ய முடிகிறது. மன்னாரு இதற்குப் பிரத்தியட்சமான உதாரணமாயிருந்தான். முதல் இல்லாமல் முதலீடும் இல்லாமல் மன்னாரு கோடிக் கணக்கில் பணம் புரட்டினான்.

அவனுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் பயந்தன. அவன் ஆட்சிக்கு வருகிற கட்சிகளின் அடியாளாகவும், பண உதவியாளனாகவும் மாறினான். அவனைச் சீண்டுகிற யாரும் தப்ப முடியாத நிலைமையை அவனது அரசியல் செல்வாக்கு அவனுக்கு அளித்திருந்தது. அவனும் அவனுடைய 'அண்டர் வோர்ல்ட்' நடவடிக்கைகளும் ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் தேவைப்பட்டன.

பூமி மன்னாருவின் வலிமையைக் குறைத்து மதிப்பிடவில்லை. பழைய காந்திகால அரசியலில் மக்களுக்காகத் தியாகம் செய்பவர்கள்தான் தலைவர்களாக இருந்தார்கள். இன்றைய மன்னாருவின் அரசியலில் மக்களைத் தியாகம் செய்ய வைத்துத் தாங்கள் வசதிகளை அனுபவிக்கிறவர்கள் தான் தலைவர்களாகி இருந்தார்கள். இந்த வித்தியாசம் பூமிக்கு மிக நன்றாகப் புரிந்திருந்தது.

மன்னாருவை எதிர்க்கத் துணியும் போதே எதை எதை எதிர்க்க வேண்டியிருக்கும், எங்கெங்கிருந்து எல்லாம் சிரமங்கள் தன்னைத் தேடி வரும் என்பதை எல்லாம் அவன் அனுமானித்தே வைத்திருந்தான். சுயநலம் எதுவுமில்லாத அவன் அதன் காரணமாகவே நிர்ப்பயமாக இருந்தான். இழப்பதற்கு எதுவுமில்லாத துணிவில்தான் அவன் நிமிர்ந்து நின்றான்.

கச்சேரி ரோடு போலீஸ் நிலைய முகப்பில் டாக்ஸியை நிறுத்தி மீட்டரைப் பார்த்து அவன் கணக்குத் தீர்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அந்த மோட்டார் சைக்கிளிலே பின் தொடர்ந்தவர்கள் அதைப் பார்த்துக் கொண்டே நேர் கிழக்கே சாந்தோம் ஹைரோட்டை நோக்கி விரைந்தனர். பூமியும் அவர்களைக் கவனித்தான். அவர்களும் அவனைக் கவனித்தார்கள்.

தான் அபாயங்களில் வலுவிலே போய்ச் சிக்கிக் கொள்கிறோம் என்பது பூமிக்குப் புரிந்து தான் இருந்தது. அதற்காக அவன் கலங்கவோ, பயப்படவோ இல்லை. மற்றவர்கள் சேதப்படாமல் தடுக்க யாராவது ஒருவர் முதலில் தைரியமாக முன் சென்று சேதப்பட்டுத் தான் ஆகவேண்டும் என்று துணிந்திருந்தான் அவன்.

அத்தியாயம் - 34

எல்லோருமே திருடர்களாகப் பிறப்பதில்லை. சிலர் சமூக நிர்ப்பந்தங்களால் திருடர்கள் ஆக்கப்படுகிறார்கள். வேறு சிலர் சொந்த நிர்ப்பந்தங்களால் திருடர்களாகிறார்கள்.

மன்னாருவின் 'மாஃபியாவை' உடைக்கும் முயற்சி எதிர்பார்ப்பதை விடப் பயங்கரமாக இருந்தது. பூமியே இப்போது அதை உணர்ந்தான். மின்சாரத்தடை ஏற்பட்ட சமயத்தில் ஹோட்டல் கேஷில் பணம் திருடி விட்டு அகப்பட்ட மாணவன் ஒருவன் பூமியால் மன்னிக்கப்பட்டு வேலை பார்த்தானே, அவன் பூமியைத் தனியே சந்தித்துத் தன் பயத்தைத் தெரிவித்தான்.

"இப்போ என் மேலேதான் சார் அவங்க சந்தேகப்படறாங்க! நான் இங்கே வேலை பார்க்கிறதும், நீங்க இங்க இருக்கிறதும், அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இரண்டு மூணு நாளா நான் எங்கே போனாலும் நிழல் மாதிரி என்னைப் பின் தொடர்ராங்க..."

"நீ எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன்."

"எப்படி சார் பயப்படாமே இருக்க முடியும்? இந்த ஆளுங்க கொலை பாதகத்துக்கு அஞ்சாதவங்க... என்ன வேணாப் பண்ணுவாங்க."

"நான் இருக்கிறவரை உன்னை யாரும் தொடக்கூட முடியாது, கவலைப்படாதே!"

பூமியின் இந்த உறுதி மொழிகள் கூட அந்தப் பையனைத் திருப்திப்படுத்தவில்லை. அவன் நடுங்கினான்.

"உண்மையில் நான் உங்களுக்கு எதையும் சொல்லலே. நீங்களாகவே இந்தக் கும்பலைக் கண்டுபிடிச்சிட்டீங்க... ஆனா நான் சொல்லிக் குடுத்துத்தான் நீங்க அவங்களைத் துரத்தறீங்கன்னு அவங்க நினைக்கிறாப்பல இருக்கு."

"நீயாக அப்படி ஏன் கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டும் தம்பீ?"

"கற்பனை எதுவும் இல்லை சார்! இந்தப் பாவிகளைப் பற்றி உங்களுக்கு இப்போது தெரியாது. போகப் போகத் தெரிஞ்சுக்குவீங்க" என்று அந்தப் பையன் பதறி நடுங்கிச் சொல்லியபோது கூடப் பூமி அவ்வளவு பரபரப்படையவில்லை.

ஆனால் மறுநாள் நடந்த ஒரு நிகழ்ச்சி அவனைப் பரபரப்படையச் செய்தது. கல்லூரி நேரம் போக மீதி வேளைகளில் மெஸ் வேலைகளைக் கவனித்து வந்த அந்த மாணவன் மறுநாள் காலை லஸ்ஸிலிருந்து மெஸ்ஸுக்கு வரவே இல்லை.

காலை ஐந்து மணிக்கு வந்துவிட்டு ஒன்பதரை மணிக்குக் கல்லூரி செல்லும் அந்த மாணவன் மறுபடி மாலை ஐந்து மணிக்கு மெஸ்ஸில் வேலைக்கு வந்து விட்டு இரவு ஒன்பதரை மணிக்கு வீடு திரும்புவான். திருட்டுத் தொழிலிலிருந்து பூமி அவனை மன்னித்துத் திருத்திய பின் இதுதான் அந்த மாணவனின் நடைமுறை வாழ்க்கையாகி இருந்தது.

"எல்லாருமே திருடர்களாகப் பிறப்பதில்லை. சிலர் சமூக நிர்ப்பந்தங்களால் திருடர்கள் ஆக்கப்படுகிறார்கள். வேறு சிலர் சொந்த நிர்ப்பந்தங்களால் திருடர்களாகிறார்கள். சமூக நிர்ப்பந்தங்களால் வேறு வழியின்றித் திருடர்கள் ஆனவர்களை நாம் முயன்றால் திருத்தலாம். இந்தப் பையனை இன்று நான் மன்னித்து இங்கே வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறேன் என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இவனால் நமக்கு எந்தக் கெடுதலும் வராது. சமூக ஆதரவும் வேலை உத்தரவாதமும் இல்லாத காரணத்தால் தான் இதுவரை இவன் தவறு செய்திருக்கிறான். மிகுந்த ஏழைமையால் செய்யப்படும் தவறுகள், மிகுந்த வசதியால் செய்யப்படும் தவறுகள் என்று இன்றைய சமூக கோளாறுகள் இரண்டு வகையில் அடங்கும். அந்த இரண்டில் ஏழைமையால் செய்யப்படும் தவறுகளை நாம் மன்னித்துத் திருத்துவதற்குத் தயாராயிருக்க வேண்டும்" என்று பூமி அந்தப் பையனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் போது கூறியிருந்த விளக்கம் முத்தக்காளைத் திருப்திப்படுத்தவில்லை என்றாலும் அவள் அவனைத் தடுக்கவில்லை. பையன் வரவில்லை என்றவுடன் ஓடி விட்டான் என்று முடிவு கட்டிவிட்டாள் முத்தக்காள்.

பூமி அப்படி நினைக்கவில்லை. 'மன்னாரு' குழுவினரால் பையனுக்கு ஏதாவது நேர்ந்திருக்கக் கூடும் என்று பூமிக்குத் தோன்றியது. பையனின் வீட்டுக்கே தேடிப் போய் விசாரித்து விட எண்ணினான். அவனும் சித்ராவும், முத்தக்காளும் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது லெண்டிங் லைப்ரரி பரமசிவத்தின் தம்பி ஸ்கூட்டரில் அங்கு வந்தான்.

வீட்டுக்கு வீடு தேடிச் சென்று புத்தகங்கள் பத்திரிகைகள் வழங்கும் பிரிவு ஒன்றைப் புதிதாக ஏற்படுத்தி அதற்காகத் தன் தம்பிக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்திருந்தார் பரமசிவம். இந்த 'டோர் டு டோர் லெண்டிங் ஸ்கீமை'ப் பரமசிவம் தொடங்கிய போது பூமியும் சித்ராவும் தனித்தனியே அதில் சந்தா கட்டி அங்கத்தினராகி இருந்தார்கள்.

இப்போது பூமிக்குப் புத்தகங்கள், பத்திரிகைகள் கொடுப்பதற்காக வந்திருந்த பரமசிவத்தின் தம்பியை உள்ளே சிற்றுண்டி காபி சாப்பிடும்படி சொல்லி அனுப்பிவிட்டு அவனுடைய அநுமதியுடன் அதே ஸ்கூட்டரில் சித்ராவோடு புறப்பட்டான் பூமி. பத்து நிமிஷத்தில் காணாமல் போன அந்தப் பையனின் வீட்டில் போய் விசாரித்துவிட்டு திரும்பி வந்துவிடலாம் என்பது பூமியின் திட்டமாயிருந்தது. தன்னுடைய கற்பனைகள் எல்லாம் தப்பாயிருந்து அவன் உடல் நலக்குறைவினால் வீட்டிலேயே இருந்தாலும் இருக்கலாமே என்று பூமிக்கு உள்ளூர ஒரு சந்தேகம் இருந்தது.

போய்ப் பார்த்ததில் அந்தச் சந்தேகமும் தீர்ந்து விட்டது.

"அவன் நேத்து ராத்திரியே வீடு திரும்பலீங்க. ஹோட்டல்லியே வேலை அதிகமாயிருந்து தங்கியிருப்பானோன்னு நான் நெனைச்சுக்கிட்டிருக்கேன்" என்று அவன் தாய் பதில் சொன்னாள்.

அவன் மெஸ்ஸை விட்டு இரவு ஒன்பதரை மணிக்கே வீடு திரும்பிவிட்டான் என்ற தகவலை இவர்கள் தெரிவித்ததும், அந்தத் தாய் பதறி அழத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றிப் பையனை எப்படியும் தேடி அழைத்து வருவதாக உறுதி கூறிவிட்டுப் பூமியும் சித்ராவும் அங்கிருந்து புறப்பட்டார்கள். சித்ரா கூறினாள்:

"என்னமோ நடந்திருக்கிறது? எனக்குப் பயமாயிருக்கிறது."

"என்ன நடந்திருக்கும்? கைப்புண்ணுக்குக் கண்ணாடியா வேண்டும்? மன்னாரு கோஷ்டி அவனைக் கடத்திக் கொண்டு போயிருப்பார்கள். நான் பயப்படவில்லை. ஆனால் யோசிக்கிறேன். பயம் பிரச்னைகளைத் தீர்க்காது" என்றான் பூமி.

அன்றைக்கு முந்திய இரவு பையன் மெஸ்ஸிலிருந்தே வீடு திரும்பவில்லை என்பதால் இரவு வீடு திரும்புவதற்கு முன்பே அவன் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிந்தது.

"அவனாகவே பயந்து ஸரண்டர் ஆகி மறுபடி மன்னாருவிடம் போயிருப்பான் என்றும் அநுமானிக்க வழி இருக்கிறதே" என்றாள் சித்ரா.

பூமி தான் அப்படி நினைக்கவில்லை என்றான்.

அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்த அந்தப் பகுதி குறுகிய சந்து பொந்துகள் கொண்டதாயிருந்தது ஓரிடத்தில் ஒரு டீக்கடை வாசலில் நாலைந்து பேர் கும்பலாக நின்றிருந்தார்கள். ஸ்கூட்டர் அந்த டீக்கடையைக் கடப்பதற்கு முன் அந்தக் கும்பலிலிருந்து ஒருவன் குறுக்கே ஓடிவந்து சாலையை மறித்தான்.

உடனே ஸ்கூட்டரை வேகம் குறைத்து மெதுவாக்கிய பூமி, "பார்த்துப் போ அப்பா" என்று சாலையை மறித்தவனை நோக்கிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இன்னும் இருவர் அதே போல ஓடிவந்து சாலையில் மீதியிருந்த இடத்தையும் மறித்துத் தடுத்தனர்.

அடுத்து வந்தவனிடம் இரண்டு மூன்றடி நீளத்திற்கு ஓர் இரும்புக் குழாய் கையிலிருந்தது. பூமிக்கு ஒரு விநாடி கூடத் தாமதமின்றி விஷயம் புரிந்து விட்டது. தான் காணாமல் போன பையனின் வீட்டைத் தேடிக் காலையில் வரக்கூடும் என்பதை எதிர்பார்த்து மன்னாருவே ஒரு கும்பல் அடியாட்களை அங்கே நிறுத்தி வைத்திருப்பதை பூமி விரைந்து உணர்ந்தான்.

ஸ்கூட்டரை நிறுத்தி ஸ்டாண்டைப் போட்டுவிட்டு, "நீ ஸ்கூட்டர் பக்கத்திலே இங்கேயே நின்று கொள்!" என்று சித்ராவின் காதருகில் கூறிவிட்டு அவர்களை எதிர் கொள்ளத் தயாரானான் பூமி.

அவர்களுக்குத் தான் எப்படிப்பட்டவன் என்பதைப் புரிய வைக்கலாம் என்ற உற்சாகத்தில் திளைத்திருந்தது அவன் மனம்.

"மாட்டிக்கிட்டியா வாத்தியாரே?" என்று பல்லிளித்தபடி இரும்புக் குழாயை ஓங்கிக் வந்தவனிடமிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அதைப் பற்றிக் கொண்ட பூமி -

"யார் யாரிடம் மாட்டிக் கொண்டார்கள் என்பதைச் சீக்கிரமே புரியவைக்கிறேன் அப்பா!" என்று அட்டகாசமாகச் சிரித்தபடி அவர்களுக்கு மறுமொழி கூறினான்.

அத்தியாயம் - 35

அபாயங்களிலிருந்து பத்திரமாக விலகி ஒதுங்கிச் செல்லும் ஆண்மையை விட அபாயங்களை எதிர் கொண்டு அவற்றை ஒதுக்கி விலக்கிவிட்டுச் செல்லத் துணியும் ஆண்மை மிகவும் பெரியது.

சிறிது நேரத்திலேயே தான் யார் என்பதை அந்த முரட்டுக் கும்பலுக்கு நிரூபித்துக் காட்டினான் பூமி. யாரோ வெடவெட என்று ஒல்லியாக ஒரு பையன் ஸ்கூட்டரில் வருகிறான். அவனை நாலைந்து பேராகச் சேர்ந்து தாக்கிவிடுவது சுலபம் என்று நினைத்த முரடர்கள் மலைத்துப் போய் திணறும்படி காரியங்கள் நடந்தன.

பூமி அவர்களுக்குச் சரியான பாடம் புகட்டினான். அங்கே அதில் ஒருவன் பூமிக்குப் பழக்கமானவன் போல் தோன்றினான். அவன் பழைய நாட்களில் தன்னோடு பழகிய ஓர் ஆட்டோ டிரைவர் என்பது சில விநாடிகளில் பூமிக்கு நினைவு வந்தது. பூமியை அடையாளம் தெரிந்ததுமே அவன் ஓடி விட்டான். தன்னிடம் அந்த ஆள் சிறிது காலம் கராத்தே பழகியதும் பூமிக்கு ஞாபகம் இருந்தது.

எதிரே கும்பலாக வழி மறித்தவர்களைக் கண்டு சித்ரா முதலில் பயந்தாள். எவ்வளவுதான் பூமி கெட்டிக்காரனாக இருந்தாலும் இந்தக் குண்டர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறான் என்று தயக்கமாயிருந்தது அவளுக்கு. அவர்களிடம் இருந்து தப்பி மீண்டு போக வேண்டுமே என்று ஊரிலுள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டாள் அவள். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவருக்கு நன்மை செய்யப் போய் பூமி தான் அபாயத்தில் சிக்கிக் கொள்ளுகிறானே என்று கவலைப்பட்டாள் அவள்.

எந்த வேலின் நுனி மிகவும் கூராகத் தீட்டப்பட்டிருக்கிறதோ அதில் தான் மற்றப் பொருள்கள் குத்தப்பட்டுச் சிக்குகின்றன. மழுங்கிய வேலின் முனையில் எதுவுமே வந்து சிக்குவதில்லை. தீரர்களுக்குத்தான் எதிர்ப்புக்களும் அபாயங்களும் காத்திருக்கின்றன. மந்த புத்தியும் கோழைத்தனமும் உள்ளவர்களுக்கு எந்த முனையிலிருந்தும் யாதோர் எதிர்ப்பும் அபாயமும் வாழ்வில் வருவதில்லை. பூமியின் வாழ்விலுள்ள அத்தனை அபாயங்கள் புரட்சிமித்திரன் போன்ற சவர்லே இம்பாலா ஆட்களின் வாழ்வில் வருவதில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.

அவன் கூராயிருக்கிறான் என்பதையும் அவள் விரும்பினாள். ஒரு சிறிதும் பயப்படாமல் அபாயங்களில் சிக்கிக் கொள்ளத் துணியும் நெஞ்சுரம் அவனுக்கு இருக்கிறது என்பதும் அவளுக்குப் பிடித்திருந்தது. அபாயங்களிலிருந்து ஒதுங்கி விலகிச் செல்லும் ஆண்மையை விட அபாயங்களை எதிர்கொண்டு அவற்றை விலக்கிவிட்டு மேலே துணிந்து நடக்கும் ஆண்மையை அதிகம் ரசிக்க முடிந்தது.

சித்ரா தனக்குள் சிந்தித்தாள். திருட்டுத் தொழிலில் இன்னொருவருக்குக் கைவாணமாகப் பயன்பட்டு வந்த ஓர் இளைஞனை அதற்காகத் தண்டித்துச் சிறைக்கு அனுப்பிவிடாமல் திருத்தி வேலை கொடுத்த பூமியின் பெருந்தன்மையையும் இன்று அதே பையன் சந்தேகப்படத்தக்க ஒரு சூழ்நிலையில் காணாமல் போய்விட்ட போது நமக்கென்ன வந்தது என்று விட்டு விடாமல் பூமி அவனைத் தேடி அலைவதும் அவளைச் சிந்திக்கச் செய்தன.

உலகையே தன் சொந்தக் குடும்பமாக நினைத்து அதன் சிரம ஜீவிகளுக்காகவும், கஷ்ட நஷ்டங்களுக்காகவும் அலையும் அவன் மனவிலாசம் அவளுக்குள் பிரியத்தை வளர்த்தது. தன்னையே விரும்பிச் சுற்றுகிற ஆண்மகனைத்தான் சில பெண்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் சித்ராவோ பிறருடைய சிரமங்களைத் தீர்ப்பதற்காகச் சுற்றிக் கொண்டிருக்கிற அவனை விரும்பினாள்.

பூமி பயமே இல்லாதவனாயிருந்தான். அவனுக்காக அவள் பயப்பட்டாள். அவன் கவலைப்படத் தெரியாதவனாக இருந்தான். அவனுக்காக அவள் கவலைப்பட்டாள். அவன் சுயநலமே இல்லாதவனாக இருந்தான். அவனுக்காக அவள் சுயநலத்தோடு சிந்தித்தாள். இந்த அக்கறை தன்னையறியாமலே தன்னுள் எப்படி ஏற்பட்டு வளர்ந்ததென்று அவளுக்கே புரியவில்லை.

வெளியில் எதுவுமே நடக்காதது போல் ஸ்கூட்டரைக் கொண்டு வந்து லெண்டிங் லைப்ரரி பரமசிவத்தின் தம்பியிடம் கொடுத்து விட்டு மெஸ்ஸுக்குள் சென்றான் பூமி.

சித்ராவைக் கூப்பிட்டு அன்று முழுவதும் பொறுப்பாக கேஷ் டேபிளைக் கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வெளியே கிளம்பத் தயாரான பூமியைத் தடுத்து "நீங்கள் தனியாகத்தான் அலைய வேண்டுமா? யாரையாவது துணைக்குக் கூட அழைத்துக் கொள்ளுங்கள். அல்லது போலீஸில் ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்துவிட்டுப் புறப்படுங்களேன்" என்றாள் அவள்.

"முதலில் நாமே போலீஸில் புகார் செய்து விட்டால் அப்புறம் பையனை உயிரோடு பார்க்க முடியாமல் செய்து விடுவார்கள். மன்னாரு கும்பல் கொலை பாதகத்திற்கு அஞ்சாது."

"அதற்காக நீங்கள் தனியாகப் போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டுமா?"

"சிக்கிக் கொள்கிற ஆள் நான் இல்லை."

"உங்களிடம் வித்தை கற்கும் பையன்களில் யாராவது நாலு பேரை வரவழைத்து எல்லாருமாகச் சேர்ந்து தேடலாமே?"

சித்ராவும் பூமியும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது காணாமல் போன பையனின் தாயே அங்கு வந்து விட்டாள். சற்று முன் பூமியும் சித்ராவும் அவளை வீடு தேடிச் சென்று அவளுக்குத் தைரியம் கூறிவிட்டு வந்திருந்தும் அதில் அமைதியடையாமல் மனம் பதறி என்னவோ ஏதோ என்று மெஸ்ஸுக்குத் தேடி வந்திருந்தாள் அவள்.

"அவன் பாட்டுக்குப் பழையபடியே இருந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லாமே இருந்துக்கிட்டிருப்பான். திருத்தி வழிக்குக் கொண்டாரேன் பேர் வழியேன்னு இப்பிடி அவனை வம்பிலே மாட்டி வச்சிட்டீங்களே! நான் இப்ப எங்கே போவேன்? எப்பிடித் தேடுவேன்?" என்று அந்தத் தாய் உணர்ச்சி வசப்பட்டுப் புலம்பிய போது அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பூமி திகைத்தான்.

முன்பு ஒருமுறை குண்டர்கள் முத்தக்காளின் ஓட்டலைச் சூறையாடிய போது, அவளும் தன்னிடம் இதே மாதிரி அலுத்துக் கொண்டது பூமிக்கு நினைவு வந்தது.

தான் உதவி செய்ய முன்சென்று தன்னைச் சிரமப்படுத்திக் கொண்டு தலையிடுகிற இடங்களில் எல்லாம் இப்படி நேர்வது பூமிக்கு உள்ளூற உறுத்தியது.

லஞ்சத்தை எதிர்த்து ஒழிப்பதை விட லஞ்சம் கொடுத்து அட்ஜஸ்ட் செய்து கொண்டாவது தொடர்ந்து ஓட்டலை நடத்த வேண்டுமென்று முத்தக்காள் நினைப்பதும், திருடர்களை எதிர்த்து அவர்களிடமிருந்து விலக்கி மகனைத் திருத்துவதை விட அவன் திருடர்களோடாவது இருந்து உயிருக்கு அபாயமின்றி வாழ்ந்தால் போதும் என்று காணாமல் போன பையனின் தாய் நினைப்பதும் இப்போது அவனைச் சிந்திக்க வைத்தன.

உலகில் பெரும்பாலான சராசரி மக்கள் எப்படியாவது வாழ வேண்டுமென்று நினைக்கிறார்களே ஒழிய, இப்படித்தான் வாழ வேண்டும் என்று எந்த இலட்சியமும் அவர்களுக்கு இருப்பதில்லை.

இப்படி எந்த இலட்சியமும் இல்லாத பெரும்பாலானவர்களுக்கு, இலட்சியங்களும் இலட்சியவாதிகளும், அர்த்தமற்றவைகளாகவும் அர்த்தமற்றவர்களாகவும் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. சித்ரா அந்தத் தாயைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

"உங்க பையனை எப்படியும் கண்டுபிடிச்சிடலாம். அது வரை இங்கேயே இருங்க" என்று மெஸ்ஸின் பின் பக்கத்து அறையில் கொண்டு போய் அமர்த்தி தேறுதல் கூறி அவளைக் காப்பி சாப்பிட வைத்தாள் சித்ரா.

பின்பு அவளும் பூமியும் சேர்ந்தே அந்தத் தாயிடம் அவள் பையனைப் பற்றிய தேவையான பல விவரங்களை விசாரித்தறிந்தார்கள். அவன் எங்கெங்கே போவான், யார் யாரோடு பழகுவான், அவனுடைய கல்லூரி நண்பர்கள் யார் யார் என்ற விவரங்களிலிருந்து ஏதாவது தெரியலாம் என்பது அவர்கள் எண்ணமாயிருந்தது.

ஆனால் அந்தப் பையனின் பழக்கவழக்கங்கள், வெளி வட்டார நண்பர்கள் ஆகியவை பற்றி அவனுடைய தாய்க்கே மிகவும் குறைவான விவரங்கள் தான் தெரிந்திருந்தன.

"எப்படியாவது எம்மவனைத் தேடி உயிரோட எங்கிட்டே ஒப்படையுங்க ஐயா" என்று தான் அந்தத் தாய் திரும்பத் திரும்ப ஒரே வாக்கியத்தைச் சொல்லி ஒப்பாரி வைத்துப் புலம்பி அழுதாளே ஒழிய, அவர்களுக்குப் பையனைக் கண்டு பிடிப்பதில் பயன்படுகிற விவரம் எதையும் கூறத் தயாராயில்லை அவள்.

சித்ராவின் பொறுப்பில் பூமி அவளை ஒப்படைத்து விட்டுப் புறப்பட்டான். காலையில் தன்னை வழிமறித்துத் தாக்கிய குண்டர்களில் தன்னிடம் சிறிது காலம் கராத்தே படித்த ஓர் ஆட்டோ டிரைவர் இருந்ததை ஞாபகப்படுத்திக் கொண்ட பூமி அவனை எப்படியாவது முதலில் சந்திக்க வேண்டும் என்று முயன்றான். லஸ் முனையிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் டிரைவர்களை விசாரித்த போது அந்த ஆள் ராக்கியப்ப முதலி தெருவுக்குப் பக்கத்திலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் இருப்பதாகத் தெரிய வந்தது. பூமி அங்கே அவனைத் தேடிச் சென்றான்.

அவன் அந்தக் குடிசை வாசலுக்குப் போன போது உள்ளே அவனுக்குத் தேவையான அதே ஆளின் குரல் கேட்டது. பூமி கூப்பிட்டதும் ஒரு பெண் - அவன் மனைவியாக இருக்க வேண்டும் - வெளியே தலை நீட்டி "யாருங்க, இன்னா வேணும்?" என்று பூமியை விசாரித்தாள்.

"கராத்தே வாத்தியார் பூமிநாதன்னு சொல்லும்மா" என்று கூறியதைக் கேட்டுக் கொண்டு உள்ளே போய்ச் சில வினாடிகளில் மீண்டும் வெளியே வந்து "அவரு இல்லீங்களே" என்று அந்தப் பெண் துணிந்து பொய் சொன்னாள்.

அத்தியாயம் - 36

அறிவின்மையைச் சகித்துக் கொள்ளலாம். பாச உணர்வே அற்ற அதிக அறிவையும் சகித்துக் கொள்ளலாம். ஆனால் சொற்ப அறிவையும் அதை உடையவர்களையும் சகித்துக் கொண்டு சமாளிப்பது மிகவும் சிரமமான காரியம்.

குடிசை வாசியான அந்த ஆட்டோ டிரைவரின் மனைவி பொய் சொல்லுகிறாள் என்று பூமிக்குத் தெளிவாகப் புரிந்தது. உள்ளே ஒளிந்திருக்கும் அவளுடைய கணவனே அவளை பொய் சொல்லத் தூண்டியிருக்கிறான் என்பதும் அநுமானத்தில் புலப்படக் கூடிய எல்லையில் இருந்தது.

யாருக்கோ கூலிப்பட்டாளமாக மாறிக் குருவையே தாக்க முயன்றுவிட்டுக் கூசி ஓடிய வெட்கம் காரணமாகவே அவன் தன்னை இப்போது காண நாணுகிறான் என்று பூமிக்குத் தோன்றியது.

குடிசை வாசலில் அவனை வழிமறிப்பது போல் நின்ற அந்தப் பெண்ணே எதிர்பாராதபடி, "டேய் மணி! வாடா வெளியிலே" என்று அவன் பேரைச் சொல்லி இரைந்து கூப்பிட்டபடி உள்ளே நுழைய முயன்ற பூமியைத் தடுக்க முடியாமல் விலகி வழிவிட்டு விட்டாள் அவள்.

மணியோ பயந்து பதறிப் போய், "நான் சும்மா அந்தக் கும்பலோட வந்தேன். உங்களோட எனக்கு ஒண்ணும் விரோதமில்லே. என்னைத் தப்பா நெனைக்காதீங்க" என்று பூமியிடம் கெஞ்சாத குறையாக மன்னிப்புக் கேட்பது போன்ற தொனியில் புலம்ப ஆரம்பித்தான்.

"அதெல்லாம் இருக்கட்டும்! பயப்படாதே; உன்னை நான் ஒன்றும் செய்து விடமாட்டேன். இப்போது உன்னைப் பழி வாங்குவதற்கு நான் வரவில்லை" என்று பூமி கூறிய பதில் அவனைச் சிறிது ஆறுதல் அடையச் செய்தது.

ஆனால் பயமும் பதற்றமும் முழுதும் தணியாத நிலையிலேயே பூமியின் பிடியில் இருந்தான் மணி.

"உள்ளே இருந்தபடியே இல்லை என்று துணிந்து பொய் சொல்ற வேலையைப் பெரிய மனிதர்களும் வசதி உள்ளவர்களுமே செய்வார்கள். அல்லது திருடர்களும் சமூக விரோதிகளும் செய்வார்கள். இதில் நீ எந்த வகை மணி?" என்று சிரித்தபடியே பூமி கிண்டலாகக் கேட்ட போது கூட மணிக்கு உள்ளூற நடுக்கமாகத்தான் இருந்தது. அவனது பதில் குரலிலேயே அது தெரிந்தது.

"மன்னிச்சிடுங்க அண்ணே! உங்களுக்கு நான் தீங்கு நினைப்பேனா?"

அப்போது அவனிடமிருந்து தனக்குத் தெரிய வேண்டிய தகவல்களை அங்கேயே விசாரித்து விடாமல் மெல்லப் பேச்சுக் கொடுத்தபடியே அவனைக் கச்சேரி ரோடு வரை உடன் அழைத்துச் சென்றான் பூமி.

'வழிமறித்துத் தாக்க முயன்ற கூலிப் பட்டாளத்தின் எஜமானர்கள் யார்? அவர்கள் கடத்திச் சென்ற பையனை எங்கே வைத்திருக்கக் கூடும்' என்பதைப் பற்றிப் பூமிக்கு அநுமானங்களும் உத்தேசங்களும் இருந்தாலும் அதை வெளியே நிர்ணயமாகக் காட்டிக் கொள்ளாமல் மெதுவாக மணியிடம் தகவலறிய முயன்றான் அவன்.

அது அவ்வளவு சுலபமான வேலையாயில்லை. அன்று மாலை வரை ஆட்டோ டிரைவர் மணியுடன் பல இடங்களுக்கு அலைய வேண்டியிருந்தது. மெஸ்ஸில் சித்ராவை இருகக்ச் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் அவன் அலைந்து கொண்டிருந்தான்.

ஆனால் பூமி புறப்பட்டுச் சென்ற, சிறிது நேரத்தில் வெளியே எங்கோ சென்று விட்டுத் திரும்பி வந்த முத்தக்காள், மெஸ்ஸில் பின்பக்கத்து அறையில் உட்கார வைக்கப்பட்டிருந்த காணாமல் போன பையனின் தாயைப் பார்த்ததும் கூப்பாடு போட்டு இரைய ஆரம்பித்து விட்டாள்.

"வர வர இங்கே கேள்வி முறையே இல்லாமல் போச்சு? இதென்ன ஹோட்டலா சத்திரம் சாவடியான்னே தெரியலே? யாரப்பா இந்தப் பொம்பிளை" என்று முத்தக்காள் அங்கே இருந்தவளைச் சுட்டிக் காட்டி ஹோட்டல் சரக்கு மாஸ்டரை விசாரித்தாள். அவள் குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.

"எனக்குத் தெரியாது! பூமி அண்ணனும் சித்ராவும் கூட்டிக் கொண்டாந்து இங்கே உட்காரச் சொல்லியிருக்காங்க" என்று சரக்கு மாஸ்டர் சகஜமாக முத்தக்காளுக்குப் பதில் சொன்னான்.

உள்ளே நுழைகிற போதே காலை வேளையில் வழக்கத்துக்கு மாறாகக் கேஷ் டேபிளில் சித்ரா அமர்ந்திருப்பதைப் பார்த்துப் பூமி இல்லை என்பதைப் புரிந்து கொண்டிருந்த முத்தக்காள் இப்போது இன்னும் எரிச்சலடைந்தாள்.

பெண் என்பவள் முள்ளோடு கூடிய மலர். ஆனால் சில வேளைகளிலே மலரே அரும்பாது அந்த செடியில் முள் மட்டுமே தெரிகிற மாதிரி நேரும்.

முத்தக்காள் அப்போது முழு முட்செடியாகத் தெரிந்தாள். அவளால் பூமியைப் பொறுத்துக் கொள்ள முடிந்தது. சித்ராவைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூமியிடம் இருந்த பரிவு சித்ராவிடம் முத்தக்காளுக்கு அறவே இல்லை. பூமியைத் தேடி வருகிற, பூமியோடு பழகுகிற யாரையுமே அவளுக்கு அதிகம் பிடிக்காது.

சித்ரா, லெண்டிங் லைப்ரரி பரமசிவம், பூமியிடம் கராத்தே கற்பதற்காகத் தேடிவரும் இளைஞர்கள், யாரையுமே அவள் வெறுத்தாள். இவர்களால் தான் பூமி மெஸ்ஸையே கவனிக்காமல் அடிக்கடி பொது வேலைகளுக்காக ஊர் சுற்றப் போய்விடுகிறான் என்று அவள் எண்ணினாள். இவர்கள் பழக்கம் இல்லாமல், இவர்கள் தேடிவராமல் இருந்தால் - பூமி மெஸ்ஸே கதி என்று கிடப்பான் என்பது அவள் கற்பனையாக இருந்தது.

அவளுக்குள்ள சொற்ப அறிவு அந்த அளவுக்குத்தான் அவளை நினைக்கத் தூண்டியது. அறிவின்மையைச் சகித்துக் கொள்ளலாம். பாச உணர்வே அற்ற அதிக அறிவையும் சகித்துக் கொள்ளலாம். ஆனால் சொற்ப அறிவையும் அதை உடையவர்களையும் சகித்துக் கொண்டு சமாளிப்பது மிகவும் சிரமமான காரியம்.

முத்தக்காளைச் சகித்துக் கொண்டு சமாளிப்பதில் பூமி சித்ரா இருவருக்குமே இப்படிப் பிரச்னை இருந்தது. முத்தக்காள் கொஞ்ச நாள் சுமுகமாக இருக்கிறாளே என்று நினைத்துத் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மலரெல்லாம் உதிர்ந்து முள் செடியாக மாறி உறுத்துவாள் அவள். அடிக்கடி பூமியும் இதை உணர்ந்திருந்தான். சித்ராவும் உணர்ந்திருந்தாள்.

முதல் முறையாக கேஷ் டேபிளில் சித்ராவுக்கும் முத்தக்காளுக்கும் ஒரு சண்டை வந்த போதே இனி மெஸ் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்றுதான் சித்ரா பிடிவாதமாக இருந்தாள். பூமி அந்தப் பிடிவாதத்தைக் கண்டித்தான். அவனுக்காக அவன் வார்த்தையை மதித்துத்தான் சித்ரா அங்கு மீண்டும் போய்ப் பழகிக் கொண்டிருந்தாள். முத்தக்காளைச் சகித்துக் கொண்டிருந்தாள்.

இன்று மீண்டும் முத்தக்காள் சண்டையைக் கிளப்பினாள்.

"அது யாரு அந்தப் பொம்பளை? யாரோ ஒருத்தியைக் கொண்டாந்து உக்காத்தியிருக்கீங்களே? இப்பிடி ஒரு ஹோட்டல் நடத்தறதை விடச் சித்திரைத் திருவிழாவிலே ஓசித் தண்ணீர்பந்தல் வைச்சு நடத்தலாம். தர்மமாவது மிஞ்சும்" என்று எல்லாரையும் வைத்துக் கொண்டே எல்லார் முன்னிலையிலும் சித்ராவிடம் வந்து இரைந்தாள்.

இதற்கு உடனே பதில் சொல்லி முத்தக்காளிடம் சண்டையை வளர்ப்பதற்குச் சித்ரா விரும்பவில்லை. அதனால் மௌனம் சாதித்தாள். மறுபடியும் முத்தக்காள் அதே விஷயத்தை விசாரிக்கவே ஒரு சர்வரைக் கூப்பிட்டு அவனிடம் தணிந்த குரலில் விஷயத்தை விளக்கி அவனைக் கொண்டே முத்தக்காளுக்கும் பதில் சொல்ல வைத்தாள் சித்ரா.

சண்டையைத் தவிர்ப்பதற்காகவே சித்ரா இந்த உத்தியை மேற்கொண்டிருந்தாள். ஆனால் இதுவே சண்டையை வளர்க்கக் காரணமாகிவிட்டது.

"என்னன்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க? என் ஹோட்டல்லேயே வந்து கல்லாப் பெட்டியிலே கால் மேலே கால் போட்டு உட்கார்ந்துக்கிட்டு, என் வார்த்தையை மதிச்சுப் பதில் பேசறதில்லே... இதெல்லாம் பொறுத்துக்கணும்னு என் தலையிலே எழுதலே" என்று சித்ராவுக்கு முன்னால் வந்து இரையத் தொடங்கி விட்டாள் முத்தக்காள்.

சித்ரா அதற்கும் பதில் சொல்லவில்லை. உணர்ச்சி வசப்பட்டு விடாமல் பொறுமையாக இருந்தாள். அவள் பதில் பேசாமல் இருக்கும் நிலைமையையும் அப்படியே தொடர முடியாமல் முத்தக்காள் தொடர்ந்து இரைய ஆரம்பித்தாள். ஓரளவு சாதாரண எல்லையைக் கடந்து பூமி, சித்ரா இருவரும் தங்களுக்குள் பழகும் விதத்தையே ஏளனமாகக் குறிக்கும் எல்லை வரை நீண்டது முத்தக்காளின் பேச்சு.

பூமி விரைவில் திரும்பி வந்து விடுவான் என்று எதிர்பார்த்த சித்ராவுக்கு பெரிதும் ஏமாற்றமாக இருந்தது. அவன் பிற்பகல் வரை திரும்பவே இல்லை. முத்தக்காளின் ஏச்சுப் பேச்சுக்களுக்குப் பதில் சொல்லிவிடாமலே அவற்றை கேட்டுப் பொறுத்துக் கொண்டு அங்கே கழியும் ஒவ்வொரு வினாடியும் சித்ராவுக்கு நரகமாகத் தோன்றியது. ஏன் தான் இதில் வந்து சிக்கிக் கொண்டோம் என்றெண்ணித் தவித்தாள் அவள்.

பூமி திரும்புவதற்குத் தாமதமாவது வேறு அவளுடைய கவலையை வளர்த்தது. தேடிப்போன இடத்தில் அவனுக்கு என்ன என்ன தொல்லையோ என்று சந்தேகமாயிருந்தது.

தங்கள் ஹோட்டலில் வேலை பார்த்த ஒரு பையன் ஹோட்டல் எல்லைக்கு வெளியே எங்கோ காணாமல் போனதற்காகப் பூமியும், சித்ராவும் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டது முத்தக்காளுக்கு அறவே பிடிக்கவில்லை. இம்மாதிரிக் காரியங்களைப் பூமி செய்வது அவளுக்கு எரிச்சலூட்டியது.

கடைசியில் மாலை ஐந்தரை மணி சுமாருக்கு அலைந்து களைத்த சோர்வுடன் பூமி திரும்பி வந்தான். "போன காரியம் என்ன ஆயிற்று" என்று சித்ரா அவனைக் கவலையோடு கேட்டாள்.

"பையனைப் பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை! என்ன ஆயிற்றென்று கண்டு பிடிப்பதும் சிரமமாயிருக்கிறது?" என்று சிறிது தயக்கத்தோடு பதில் வந்தது பூமியிடமிருந்து.

அத்தியாயம் - 37

பணம் சேரத் தொடங்கியதும் சுயநலமும், மற்றவர்கள் மற்றவற்றைப் பற்றிய பொதுநல அக்கறையிற் குறைவும் அடைந்து பார்வையைக் குறுக்கிக் கொள்வது தான் சிலருடைய வழக்கம்.

தான் யாருக்கும் நன்மை செய்யப் புகுந்தாலும் அது இப்படி முடிகிறது என்பதில் பூமிக்கு வருத்தம் இருந்தது. தீயவர்களின் நட்பினாலும் தூண்டுதலாலும் திருடத் தொடங்கியிருந்த ஒரு பையனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வர முயன்ற தனக்கு இப்படி ஒரு சோதனையா என்பதை நினைக்கும் போது அவன் சிறிது கலங்கத்தான் செய்தான்.

சாதாரணமாக எதிலும் அதிகம் தளராத பூமியே இதில் தளர்ந்து போயிருந்தான். உடனடியாக வெற்றி கிடைக்கவில்லையே என்பதற்காக அவன் எதிலும் சோர்ந்து போவது வழக்கமில்லையானாலும் பையனின் தாய்க்கு என்ன பதில் சொல்லி எப்படி ஆறுதல் கூறுவதென்பது இப்போது அவனை மலைக்கச் செய்வதற்குப் போதுமானதாயிருந்தது.

பூமியின் சோர்வைப் புரிந்து கொண்ட சித்ரா, அவன் வெளியே போயிருந்தபோது அங்கே தனக்கும் முத்தக்காளுக்கும் நடந்த தகராறு எதையும் அப்போது அவனிடம் கூறவில்லை. அதை அவன் அநுமானிக்கும்படி கூட அவள் நடந்து கொள்ளவில்லை. ஆனால் முத்தக்காள் 'உம்'மென்று முகத்தைத் தூக்கிக் கொண்டு இருந்தாள். அதிலிருந்து பூமி அங்கே ஏதோ தகராறு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் எதற்காக யாருக்கும் யாருக்கும் தகராறு நடந்திருக்கிறது என்பதை அவனால் அறிய முடியவில்லை.

உள்ளே சரக்கு மாஸ்டரோ, வேறு வேலையாட்களோ பத்து ரூபாய் அட்வான்ஸ் கேட்டால் கூட அவள் முகத்தைத் தூக்கிக் கொள்வது வழக்கம். இன்றும் அதே போல் ஏதாவது நடந்திருக்கலாம் என்று கூட அவன் எண்ண இடமிருந்தது. ஆனால் நீண்ட நேரம் அந்த அநுமானம் அல்லது சந்தேகம் நீடிக்கவில்லை. முத்தக்காள் நேரேயே அவனிடம் சண்டைக்கு வந்து விட்டாள்.

"யாரோ காணாமப் போயிட்டாங்கன்னு நாம பொழுதன்னைக்கும் தேடி அலைஞ்சு கட்டுப்படியாகுமா?" என்று அவனையே குறை கூறினாள்.

அவனது வேதனை புரியாமல் அவள் அவனையே கண்டிக்க முற்பட்டு விட்டாள். பூமி அப்போதிருந்த மனநிலையில் அவளைப் பொருட்படுத்தியோ கடிந்து கொண்டோ அவளுக்கு மறுமொழி கூறவில்லை.

பணம் சேரத் தொடங்கியதும் சுயநலமும், மற்றவர்கள் மற்றவற்றைப் பற்றிய பொது நல அக்கறையிற் குறைவும் அடைந்து பார்வையைக் குறுக்கிக் கொள்வது சிலருடைய வழக்கம்.

முத்தக்காளும் மனிதாபிமானமற்ற அந்தச் சிலரில் ஒருத்தியாக மாறியிருந்தாள். காணாமற் போனவன் நேற்று வரை திருட்டுக் கூட்டத்தில் ஒருவனாயிருந்து மாறிச் சில நாட்களே தங்கள் மெஸ்ஸில் வேலை பார்த்தவனாக இருந்தும் அவனைப் பற்றிக் கவலைப்படுவதும், அக்கறை காட்டுவதும், அவனுடைய தாய்க்கு உதவுவதும், தன் கடமை என்று எண்ணினான் பூமி. அது அநாவசியம் என்று நினைத்தாள் முத்தக்காள்.

அதைச் சொல்லி பூமியைத் தான் கடிந்து கொண்டதற்கு அவன் எதுவும் பதில் சொல்லாமல் தன்னை ஒதுக்கியதிலிருந்தே மிகவும் கோபமாயிருக்கிறான் என்பது முத்தக்காளுக்குப் புரிந்து விட்டது. அதில் அவள் சிறிது அடங்கினாள்.

அதற்குள் பூமி திரும்பி வந்திருப்பதை அறிந்து மெஸ்ஸில் உட்புறம் இருந்த காணாமல் போன பையனின் தாய் அவனிடம் வந்து விசாரித்தாள்.

'சீக்கிரம் பையன் கிடைத்துவிடுவான் என்றும் அதுவரை அவள் கவலைப்படாமல் இருக்கவேண்டும்' என்றும் அவளுக்கு அவன் கூறிய ஆறுதலால் அப்போது ஒரு பயனும் விளையவில்லை.

அந்தத் தாய் அழுது கூக்குரலிட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். உடனே முத்தக்காளுக்கு மறுபடி ஆத்திரம் வந்துவிட்டது.

"இப்படி ஒவ்வொருத்தரா வந்து இங்கே நாலு பேர் சாப்பிட வர்ற எடத்திலே ஒப்பாரி வச்சுக்கிட்டு நின்னாங்கன்னா வியாபாரம் உருப்பட்டாப்லதான்."

அந்த நிலையில் சித்ரா பூமிக்கு உதவ முன்வந்தாள்.

"நான் இந்தம்மாவை என் கூட வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்விடுகிறேன். நீங்கள் பையனைத் தேடி அழைத்துக் கொண்டு வருகிற வரை இவங்க என் கூடவே இருக்கட்டும்."

பூமி அதற்கு உடனே சம்மதித்தான். சித்ரா அந்தத் தாயை ஆறுதல் கூறித் தேற்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். முத்தக்காள் வேறு வேலையாகச் சென்றாள்.

அப்போது அங்கே பணிபுரியும் சர்வர் ஒருத்தன் பூமியைத் தனியே அழைத்துச் சென்று அவன் அங்கே இல்லாது வெளியே போயிருந்த சமயத்தில் முத்தக்காள் சித்ராவிடம் இரைந்ததை எல்லாம் தெரிவித்தான். பதிலுக்கு முத்தக்காளிடம் சண்டை பிடிக்காமல் சித்ரா பொறுமையாயிருந்ததையும் தெரிவித்தான்.

பூமிக்கு நிலைமை புரிந்தது. சித்ராவின் பெருந்தன்மையையும், பரந்த மனப்பான்மையையும் அவன் வியந்தான். சாதாரணமாகத் தாங்கள் பாதிக்கப்பட்டதை பிறரிடம் கூறித் தூண்டிவிட்டுத் தங்களைப் பாதித்தவருக்கு எதிரியாக அந்தப் பிறரையும் மாற்றி விடுவது தான் பெண்களில் பலருக்கு இயல்பு. ஆனால் சித்ரா இதற்கு நேர் மாறாக அந்தச் சண்டையைத் தன் கவனத்துக்கே கொண்டு வராமலிருந்தது பூமிக்கு ஆச்சரியத்தை அளித்தது.

முன்பு ஏற்கனவே முத்தக்காள் தனது அறியாமையாலும், குறுகிய மனப்பான்மையினாலும் பண விஷயத்தில் சித்ராவின் மேல் சந்தேகப்பட்டு இரைந்திருந்தாள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மெஸ் பக்கம் வருவதையே தான் விரும்பவில்லை என்று சித்ரா கூறியிருந்தாள். பூமிதான் தனக்காக இனியும் எப்போதும் போல் அவள் அங்கே வந்து போக வேண்டுமென்று வற்புறுத்திச் சொல்லியிருந்தான். அவன் வார்த்தையை மதித்துத்தான் அவள் அங்கே போய்க் கொண்டிருந்தாள்.

பூமி ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தான். தன்னோடு அவள் பழகத் தொடங்கிய நாளிலிருந்து நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக அவன் நினைவுக்கு வந்தன. தனது ஆட்டோவில் அவள் மறதியாய் விட்டுச் சென்ற பண்டங்களை நாணயமாகத் திருப்பிக் கொண்டு போய்க் கொடுத்ததனால்தான் அவனுக்கு அவளுடைய பழக்கமும் நட்பும் கிடைத்தன. ஆனால், அவனுடன் பழகிய அவளுடைய நாணயத்தையே முத்தக்காள் சந்தேகப்படும்படி ஆகியும் சித்ரா அதில் உடனே மனங்குலைந்து அழிந்து போய்விடவில்லை.

தன்னால் அவள் முத்தக்காளைப் போன்ற ஒரு மத்திய தர வயதுப் பெண்ணிடம் அவமானப்படுமாறு நேரிட்டது. இதை எல்லாம் அவள் பொறுத்துக் கொள்வதும் சகித்துக் கொள்வதும் எல்லாம் கூடத் தனக்காகத்தான் என்பது அவனுக்குப் புரிந்தது. உடனே சித்ராவைச் சந்தித்து அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அது முடியவில்லை.

சிறிது நேரம் மெஸ்ஸில் கழித்த பின் காணாமல் போன பையனைத் தேடி அன்று இரவிலும் அவன் நண்பர்களோடு அலைய வேண்டியிருந்தது. இதில் முத்தக்காளின் விமர்சனத்தையோ, குறை கூறலையோ அவன் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை.

இரவெல்லாம் அலைந்து விட்டு மறுநாள் காலையில் அவன் சித்ராவைப் பார்ப்பதற்காக அவள் வீட்டுக்குப் போனான்.

அவன் போனபோது அவள் தரையில் அரும்புகளைக் குவித்துப் பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். பூமி சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டான்:

"நேற்று முத்தக்காள் சண்டை பிடித்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை?"

"ஏற்கெனவே கவலைப்பட உங்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும்போது நான் புதிதாக இதையும் சொல்லித்தான் ஆகணுமா?"

"என்னதான் சொல்லிச் சண்டை பிடித்தாள்?"

"நீங்கள் இப்படி எல்லாம் அலைவதால் கடை, வியாபாரம் எல்லாம் கெடுகிறதென்று வருத்தப்பட்டாள். அது கூடப் பரவாயில்லை... ஆனால்..." என்று சொல்லிக் கொண்டே வந்த சித்ராவின் வார்த்தைகள் உடைந்து சிதறி மெல்லிய துயர் விசும்பலாக மாறியது.

பூமி கேட்டான்:

"பெண்களின் மன உறுதி என்பது இவ்வளவு தான் போலிருக்கிறது."

"எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம். கண்டபடி பேசினால் பொறுத்துக் கொள்ள முடியாது."

"அப்படி என்னதான் பேசினாள்?"

"இன்னும் என்னதான் பேசணும்?"

"விஷயத்தைச் சொன்னால்தான் புரியும்?"

"நீங்களும் நானும் பழகறதைப் பத்தி ஊரே சிரிக்கிறதாம்."

"யார்? முத்தக்காளா அப்படிச் சொன்னாள்?"

"ஆமாம்! நேற்று இதை அவங்க என்கிட்டச் சொல்றதுக்கு அவசியம் இல்லே... ஆனாச் சொன்னாங்க..."

"நம்ம மனசிலே கல்மிஷம் இல்லாதப்ப யார் என்ன சொன்னாலும் வருத்தப்பட வேண்டியதில்லையே?"

அவனுடைய இந்தப் பதிலில் இருந்த பொதுத் தன்மையை அவள் இரசித்ததாகத் தோன்றவில்லை. அவள் மௌனமாகப் பூத்தொடுத்தபடி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்.

அத்தியாயம் - 38

அறியாமை, பணத்தாசை, பொறாமை மூன்றும் ஒன்று சேர்ந்துவிட்டால் அப்புறம் உண்மையைக் கண்களிலிருந்து மறைப்பதற்கு வேறு எதுவுமே தேவையில்லை.

பூத்தொடுப்பதை விட வேகமாக அவள் மனம் உள்ளே நினைவுகளைத் தொடுத்து அலங்கரித்துக் கொண்டிருக்கிறது என்பதை முகத்திலிருந்து கண்டறிய முடிந்தது. முத்தக்காள் தன் வார்த்தைகளின் மூலம் சித்ராவின் பூப்போன்ற இதயத்தை எவ்வளவு தூரம் குத்திக் கிழித்துக் குதறியிருக்கிறாள் என்பதைப் பூமியால் அப்போது உய்த்துணர முடிந்தது.

அந்த அநுமானமே அவன் மனத்தை என்னவோ செய்தது. தான் வெளியே சென்றிருந்த நேரத்தில் சொற்களாகிய கூரிய அம்புகளால் முத்தக்காள் சித்ராவைத் துளைத்தெடுத்து அவள் இதயத்தை ரணமாக்கியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு பூமி அவள் மீது பரிவு கொண்டிருந்தான். அவன் சிரித்துக் கொண்டே அப்போது அவளைக் கேட்டான்.

"உலகம் எதையுமே கவனிக்காமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பது போல் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அது உண்மையில்லை. நெருங்கிப் பழகுகிற அல்லது பழக முயல்கிற ஒவ்வோர் ஆணையும் பெண்ணையும் அது விஷமத்தனமான கண்களோடு கூர்ந்து கவனிக்கத் தவறுவதில்லை."

"உண்மைதான்! அசத்தியமாகப் பழகுகிறவர்களை மட்டுமின்றிச் சத்தியமாகவும் நியாயமாகவும் பழகுகிறவர்களையும் கூட அது விஷமத்தனமாகத்தான் பார்க்கிறது."

"வேறு விதமாகப் பார்ப்பதற்கு அது இன்னும் பழக்கப்படவில்லை. பக்குவமோ, நாகரிகமோ அடையவும் இல்லை."

"உலகம் காதலிப்பவர்களைப் பொறுத்துக் கொள்கிறது. நேரடியாக உடனே ஏற்றுக் கொண்டுவிடத் துணிவதில்லை."

"நாம் நெருங்கிப் பழகுகிறோம். காதலர்களின் சராசரி அசட்டுத்தனங்கள் அல்லது சேஷ்டைகளில் கூட நமக்கு அக்கறையில்லை. ஆனால் நம்மையும் பழகிய தராசில் அவர்கள் ஏற்கனவே நிறுத்திப் பழகிய விதத்தில் தான் நிறுத்துகிறார்கள். நாம் அப்படி இருக்கிறோமா இல்லையோ என்பது ஒரு புறமிருக்க அவர்கள் அப்படி நிறுத்தே பழகியிருக்கிறார்கள் என்பது தான் இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது."

இதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் சித்ரா மௌனமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் எவ்வளவோ அர்த்தங்களும், கேள்விகளும், பதில்களும், தகவல்களும் இருந்தன. பூமிக்கு அவை புரிந்தன. சில விநாடிகள் தயங்கிய பின் அவன் உறுதியாக அவளுக்குச் சொன்னான்.

"மற்றவர்கள் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்வதைப் பற்றியோ, புரிந்து கொள்ளாமலே இருப்பதைப் பற்றியோ நான் கவலைப் படவில்லை. ஆனால் நமக்குள் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகப் பெருமைபடுகிறேன்."

"அதனால்தான் முத்தக்காள் பேசிய எதனாலும் நான் கோபப்படவில்லை. எதிர்த்துப் பதில் பேசவும் இல்லை."

"அறியாமை, பணத்தாசை, பொறாமை மூன்றும் ஒன்று சேர்ந்து விட்டால் அப்புறம் உண்மையைக் கண்களிலிருந்து மறைப்பதற்கு வேறு எதுவுமே தேவையில்லை."

"இத்தனை பெரிய காரண காரியங்களும் விளக்கங்களும் கூடத் தேவை இல்லை. முத்தக்காளைப் போலக் கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண் அப்படித்தான் இருக்க வேண்டிய நிலைமை என்றாலே போதும்."

"உலகில் முதன் முதலில் ஆணும் பெண்ணும் கவலைப்படாமல் பழகியிருக்க வேண்டும். இப்படி வம்பும், கலகமும், வந்த பிறகே தற்காப்புக்காக திருமணம் என்ற ஏற்பாடு வந்திருக்க முடியும்."

"கதவுக்குப் பூட்டு, கடனுக்கு உத்திரவாதப் பத்திரம், நீதிக்கு மன்றம் என்றெல்லாம் ஏற்பட்டது போலத்தான் திருமணம் என்கிறீர்களா?"

"நான் சொல்லவில்லை. பழைய தமிழ்ப் புலவர்களே சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். பொய்யும், வழுவும், ஏமாற்றுதலும் தோன்றி நம்பிக்கையின்மை ஏற்பட்ட பின்னே கலியாணம் என்ற உத்திரவாதம் உலகில் ஏற்பட்டதாம்."

"நீங்களும் நானும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதான் நம்பினாலும் முத்தக்காள் நம் இருவரையுமே நம்பவில்லை."

"உண்மையில் அவள் தன்னையே நம்பவில்லை. நான் அப்படிப் பட்டவர்கள் மேல் கோபப்படுவதற்குப் பதில் பரிதாப்பபடவே செய்கிறேன்."

"அறிவுள்ள யாவரும் அறியாமை நிறைந்தவர்களுக்காக இரங்குவதும், பரிதாபப்படுவதும் ஒரு சமூக நாகரிகம்."

அவளுடைய இந்தப் பொறுமை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பெண்ணுடன் இன்னொரு பெண்ணுக்கு உள்ள சர்ச்சையில் இருவருமே சண்டை போடுகிறவர்களாக இருந்து விட்டால் அதை முடித்து வைப்பதும் தீர்த்து வைப்பதும் சிரமமான காரியங்கள். அந்த வரையில் முத்தக்காளிடம் இருந்த அநாகரிகம் சித்ராவிடம் இல்லை என்பது அவனுக்கு நிம்மதியளித்தது.

அன்று அவனும் சித்ராவும் வழக்கத்தை விட அதிகமாகப் பல விஷயங்களைப் பற்றி மனந்திறந்து பேசிக் கொண்டார்கள். சித்ரா முத்தக்காளைப் பற்றி தன் கணிப்புக்களையும் அநுமானங்களையும் தயங்காமல் அவனிடம் எடுத்துக் கூறினாள்.

"அந்த அம்மாளுக்குத் தன்னோடு பழகுகிறவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியவில்லை. நீங்களோ நானோ அவர்களுடைய வரவு செலவுகளையும் லாப நஷ்டங்களையும் மட்டுமே கவனித்துக் கொண்டு மற்றவை எதையும் கவனிக்காமல் இருக்க வேண்டும். மற்றவற்றையோ, மற்றவர்களையோ கவனித்தாலே அவர்கள் தன்னையும் தன்னுடைய நலன்களையும் கவனிக்காமல் இருக்கத் தொடங்கி விட்டார்களோ என்ற சந்தேகமும் பயமும் அந்த அம்மாளுக்கு வந்து விடுகிறது. இப்படிப்பட்டவர்களோடு தொடர்ந்து பழகுவதே சிரமமான காரியம்! நீங்கள் எப்படித்தான் தொடர்ந்து பழகுகிறீர்களோ? எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது."

இந்தக் கணிப்பைக் கேட்டுப் பூமி வியப்படைந்தான். அப்படியே முத்தக்காளின் குணச்சித்திரத்தைக் கச்சிதமாக வரைந்து காட்டியிருந்தாள் சித்ரா. அவள் முத்தக்காளைப் பற்றிக் கூறியதில் ஒரு வார்த்தை கூட மிகையில்லை என்பது அவனுக்கே நன்கு புரிந்தது. ஆனாலும் அப்போதும் கூட முத்தக்காளை விட்டுக் கொடுக்காமல் தான் சித்ராவுக்கு மறுமொழி கூறினான் அவன்.

"புரிகிறது! ஆனாலும் வேறு வழியில்லை. இந்த அம்மாளையும், இந்த உண்வு விடுதியையும் இலக்காக வைத்து நாம் விரோதித்துக் கொள்ள நேர்ந்துவிட்ட சமூக விரோதச் சக்திகளை இறுதிவரை எதிர்த்துப் போரிடுவதென்று நான் முடிவு செய்து விட்டேன்."

"நீங்கள் முடிவு செய்ததைப் பற்றி அவர்கள் கவலைப்படவோ பொருட்படுத்தவோ தயாராயில்லை. வியாபாரத்தில் லாபம் கிடைப்பதாயிருந்தால் சமூக விரோத சக்திகளோடு கூட அட்ஜஸ்ட் செய்து கொள்ள அவர்கள் தயாராயிருக்கிறார்கள். நமக்கும் முத்தக்காளுக்கும் இந்த அடிப்படை வித்தியாசம் இருக்கிறது."

"பணலாபத்தால் மனிதத் தன்மை இழப்பவர்களை நம்பி எந்தப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது!"

"சீக்கிரமே நம்முடைய முத்தக்காள் விஷயத்திலும் அது நிரூபணமாகப் போகிறது பாருங்கள்."

சித்ரா இவ்வாறு கூறியிருந்தாலும் பூமி முத்தக்காள் அவ்வளவு தூரம் துணிந்து தங்களை விரோதித்துக் கொள்வாள் என்பதை அப்போது நம்பவில்லை.

மெஸ்ஸில் வேலை பார்த்த ஒரு பையன் காணாமற் போனதற்காகத் தானே வேலை மெனக்கெட்டுத் தேடி அலைவது அவளுக்குப் பிடிக்காமலிருக்கலாம். தானும் சித்ராவும் மிகவும் நெருக்கமாகப் பழகுவது அவளுக்குப் பிடிக்காமலிருக்கலாம். அந்தப் பழக்கத்தை அவளால் பொறுத்துக் கொள்ள முடியாமலும் இருக்கலாம். ஆனால் அதற்காக அவள் தன்னுடைய விரோதத்தைத் தேடிக் கொள்ள முன்வருவாள் என்று அவனால் நம்ப முடியவில்லை. சித்ரா உறுதியாகக் கூறினாள்:

"நானும் நீங்களும் அவர்கள் கிழித்த கோட்டைத் தாண்டாமல் அவர்கள் இழுத்த இழுப்புக்கு வரமாட்டோமென்று புரிந்து விட்டால் ஹோட்டல் நிர்வாகத்துக்குக் கூட வேறு ஏற்பாடு செய்யத் தயங்க மாட்டார்கள்."

"இது அதிகப்படியான கற்பனை சித்ரா! கொஞ்சம் மிகைப்படுத்தி நினைப்பதன் விளைவு இது. முத்தக்காளுக்கு அத்தனை துணிவு கிடையாது என்பதை நான் அறிவேன்."

"போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்."

இந்த உரையாடல் முடிந்து அன்று காலை ஒன்பது மணியளவில் மறுபடி மெஸ்ஸுக்குத் திரும்பிய போதே பூமிக்குச் சித்ரா கூறியது பலித்திருப்பது புரிந்தது.

அவன் மெஸ்ஸில் நுழைந்த போது முகத்தில் பளீரென்று விபூதி குங்குமப் பொட்டுடன் காதில் பூ அணிந்த இளைஞன் ஒருவன் கல்லாப்பெட்டியில் அமர்ந்து கேஷ் டேபிள் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். முத்தக்காள் அவனருகே ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

பூமிக்கு மிகவும் வேண்டிய சர்வர் ஒருவன் பூமி கேட்காமலே அவனருகில் வந்து தணிந்த குரலில் விவரம் தெரிவித்தான். பூமி உள்ளே வந்ததைப் பார்த்தும் முத்தக்காள் பாராமுகமாக இருந்தது தெரிந்தது.

"அவன் அம்மாவுக்குத் தூரத்து உறவுக்காரப் பையனாம். ஒத்தாசையா இருந்து கவனிச்சிக்கணும்னு தந்தி குடுத்து வரவழைச்சிருக்காங்க. இன்னிக்கிக் காலம்பர ரயில்லே தான் இங்கே வந்து சேர்ந்தான்."

பூமி, சித்ராவின் கணிப்புப் பலித்து விட்டதை எண்ணி வியந்தான். பெண்களின் மனப்போக்கு ஆண்களுக்குப் புரிவதை விட வேகமாகப் பெண்களுக்குப் புரிந்து விடும் அதிசயத்தை உணர்ந்து திகைத்தான் அவன்.

தன்னை விட விரைந்து முத்தக்காளுடைய மனப்போக்கைச் சித்ரா புரிந்து கொண்டு விட்டதை அவனால் வியக்காமலிருக்க முடியவில்லை. 'சரி! இதை நாம் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை. போகப் போகப் பார்க்கலாம்' என்று ஸ்டோர் ரூம் பக்கம் போனான் பூமி. ஸ்டோர் ரூம் பூட்டியிருந்தது.

"ஸ்டோர் ரூம் சாவி கேஷ் டேபிளிலே இருக்குங்க" என்றான் சரக்கு மாஸ்டர்.

"போய் வாங்கி வா" என்று அங்கிருந்து ஒரு வேலையாளை அனுப்பிவிட்டு அறைவாசலில் காத்திருந்தான் பூமி.

சாவியை வாங்கச் சென்றவர் உடனே திரும்பி வரவில்லை. சிறிது நேரம் பிடித்தது. நேரம் ஆக ஆகப் பூமிக்குப் பொறுமை பறிபோய் எரிச்சல் மூண்டது.

அத்தியாயம் - 39

அறியாமையும், பணத்தின் மேலே பேராசையும் சேர்ந்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு கெட்டவர்களாக வேண்டுமானாலும் மாறி விடுவார்கள்.

ஸ்டோர் ரூம் சாவி வருவதற்குத் தாமதம் ஆகியது. சிரமப்படுகிற காலத்தில், சத்தியவான்களாகவும் நியாயவாதிகளாகவும் இருந்து பின்பு வசதிகள் வந்ததும் மாறி விடுகிற பலரைப் பூமி அறிந்திருந்தான். இப்போது முத்தக்காளும் அந்த வரிசையில் சேர்ந்திருப்பதை அவன் வருத்தத்தோடு உணரவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது.

அடிப்படை நன்றி, விசுவாசம் போன்ற உன்னத உணர்வுகளைக் கூடப் பணமும் வசதிகளும் மாற்றிக் கெடுத்து விடுவதை உணர முடிந்தது. படிப்பறிவும் விசாலமனமும் இல்லாத முத்தக்காள் போன்றவர்கள் அப்படித்தான் இருக்க முடியும் என்று அவன் தன்னைத்தானே தேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. சிலருக்கு அநுபவங்களாலாவது மனம் விசாலமடையும். முத்தக்காளை அநுபவங்கள் கூட மாற்ற முடியவில்லை என்று தெரிந்தது. எவ்வளவு நாள் ஊற்றினாலும் கருங்கல் தண்ணீரில் கரைந்து விடாது தானே?

சொந்தக்காரப் பையனை முத்தக்காள் அழைத்து வந்திருப்பது பற்றிக் கூடப் பூமி கவலைப்படவில்லை. அப்படிச் செய்யப் போவதாக அவள் தன்னிடம் சகஜமாக ஒரு வார்த்தை கூட முன் தகவல் சொல்லாததிலிருந்து தன் மேல் அநாவசியமாக அவள் எவ்வளவு அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

இதற்காக அவன் மனம் அதிர்ந்து போய் ஒடுங்கி விடவில்லை. என்றாலும் மனிதர்கள் எவ்வளவு சிறுமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள இந்தச் சந்தர்ப்பம் அவனுக்கு உதவியது. முத்தக்காள் போன்றவர்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்று சித்ராவைப் போன்ற மனம் விசாலமடைந்த பெண்ணைக் கூடத் தான் வற்புறுத்தியிருப்பது அவனுக்கு நினைவு வந்தது.

தன்னைப் போலன்றி ஒரு பெண்ணுக்குப் பெண் என்ற முறையில் சித்ரா முத்தக்காளை மிகவும் சரியாகவே எடை போட்டுப் புரிந்து கொண்டிருப்பது பூமிக்கு வியப்பளித்தது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் பெண்கள் ஏனைய பெண்களை மிகவும் சரியாகவே புரிந்து கொண்டு விடுகிறார்கள். ஆண்கள் தவறான கணிப்புக்களைக் கொடுத்துப் பெண்களைக் குழப்பினாலும் கூட அவர்கள் குழம்புவதில்லை.

பூமி விரும்புகிறான் என்பதற்காக சித்ரா முத்தக்காளுடைய மெஸ்ஸுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாளே ஒழியப் பல நாட்களுக்கு முன்பே முத்தக்காளைப் பற்றிய தன் அநுமானங்களையும் அதிருப்திகளையும் அவள் மறைக்காமல் பூமியிடம் வெளியிட்டு அவனையும் எச்சரித்திருந்தாள். அவன் தான் அந்த எச்சரிக்கையை எல்லாம் அப்போது ஏற்கவில்லை.

சொந்தச் சேமிப்பிலிருந்து கணக்குப் பாராமல் தன் பணத்தை எடுத்துப் போட்டுச் செலவழித்து விட்டு இப்படி ஓர் அநுபவத்தை அடைவது அவனுக்கு எரிச்சலூட்டியது. தன்னைப் போல் உடல் வலிமையும், மனவலிமையும், வாய்த்த ஒரு மனிதன் பக்கபலமாகநின்று தாங்கியிருக்கவில்லையென்றால் அந்த உணவு விடுதி நடைபெறாமலே நின்று போயிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தான் அதிகம் என்று அவனுக்குத் தெரியும். முத்தக்காளுக்கும் அது தெரிந்துதான் இருக்கவேண்டும். ஆனால் அவள் இன்று அதை வசதியாக மறந்திருந்தாள். நினைக்க நினைக்க அவனுக்கு மனம் வேதனைப் பட்டது. அங்கே இருப்பு கொள்ளவில்லை.

யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மெஸ்ஸிலிருந்து வெளியேறி நேரே பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்குச் சென்றான். பரமசிவம் எங்கோ வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தவர் பூமியைப் பார்த்ததும் மறுபடி உள்ளே வந்து உட்கார்ந்தார். பூமியின் முகத்தில் சிந்தனைத் தேக்கத்தைப் பார்த்துப் பரமசிவத்துக்கே அவன் மனநிலை புரிந்து விட்டதோ என்னவோ, அவரே விசாரித்தார். பூமி நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான். பரமசிவம் அதைக் கேட்டுப் புன்னகை புரிந்தார். பின்பு சொன்னார்:

"அறியாமையும் பேராசையும் சேர்ந்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு கெட்டவர்களாக வேண்டுமானாலும் மாறிவிடுவார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்."

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் புத்தகம் மாற்றுவதற்காகத் தற்செயலாகச் சித்ரா அங்கே வந்து சேர்ந்தாள். காணாமற் போன பையனின் தாய் தன்னிடம் பேச்சு வாக்கில் தெரிவித்ததாக அவள் ஒரு தகவலைப் பூமியிடம் சொன்னாள்.

அந்தப் பையன் 'மன்னாரு'வின் வேலையாக அடிக்கடி மாமல்லபுரம் போவது உண்டென்று தெரிந்தது. சித்ரா வற்புறுத்தியதின் பேரில் பையனின் தாய் தன் குடிசைக்குப் போய்ப் பையனுடைய புத்தகங்கள் நோட்டுக்களை குடைந்து மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோவிலுக்கு மிக அருகில் இருந்த ஒரு டீக்கடையின் விலாசத்தைக் கொடுத்திருப்பதாகக் கூறினாள்.

சித்ரா அதைப் பூமியிடம் கொடுத்தபோது பூமி உடனே மாமல்லபுரம் போக விரும்பினான். பரமசிவம் உடனே மறுக்காமல் லெண்டிங் லைப்ரரி ஸ்கூட்டரைக் கொடுத்து உதவ முன் வந்தார். அவன் தனியே போகக் கூடாதென்று வற்புறுத்திச் சித்ராவும் உடன் ஏறிக் கொள்வதை அப்போது அவனால் தடுக்க முடியவில்லை.

சென்னையில் ஒளித்து வைப்பதை விட மாமல்லபுரத்தில் ஒளித்து வைப்பது நல்லது என்று மன்னாரு வகையறா பையனை மாமல்லபுரத்தில் கடத்திக் கொண்டு போய் மறைத்து வைத்திருக்கலாமென்ற சந்தேகம் அவன் மனத்தில் வலுத்தது. தற்செயலாகத் தெரிய வந்த இந்தப் புதிய தகவலால் முத்தக்காளையும் அவளுடைய புதிய போக்கையும் கொஞ்சம் மறக்க முடிந்தது.

ஸ்கூட்டர் திருவான்மியூரைக் கடந்ததும் பின்னால் உட்கார்ந்திருந்த சித்ரா எதற்காகவோ முத்தக்காளைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அப்போது இவள் ஊரிலிருந்து தன்னிடம் சொல்லாமலே உறவுக்காரப் பையனை வரவழைத்திருக்கும் தகவலைப் பூமி சித்ராவுக்குத் தெரிவித்தான். அதைக் கேட்டுச் சித்ரா எள்ளளவும் திகைப்போ ஆச்சரியமோ அடையவில்லை.

"அவங்க, இப்படி ஏதாவது செய்வாங்கன்னு எனக்குத் தெரியும். வரவர அவங்களுக்கு நம்ம மேலே எல்லாம் நம்பிக்கை போயிடுச்சு..." என்றாள் சித்ரா.

"நம்பிக்கை இழக்கும்படியாக அப்படி நாம் என்ன மோசடி செய்தோம்?"

"அவங்களைப் போல ரெண்டுங் கெட்டான் ஆளுங்க அப்படி எல்லாம் நல்லது கெட்டது யோசிச்சு எதையும் பண்ண மாட்டாங்க. சொல்லப் போனா மெஸ்ஸிலே வேலை செஞ்ச ஒரு பையனைக் காணலைங்கிறதுக்காக நீங்க இவ்வளவு கவலைப்பட்டு அலையறதே அவங்களுக்குப் பிடிக்கலை. திருட்டுப் பையனைத் திருத்தணும்கிற நல்லெண்ணத்திலே நீங்க அங்கே வேலைக்குச் சேர்த்ததும் அவங்களுக்குப் பிடிக்கலை..."

"உலகமே ரூபாய் அணாப் பைசா வரவு செலவு மட்டும் தான் என்று மட்டும் நினைக்கிறவளுக்கு அது பிடிக்காது தான்."

"கொஞ்ச நாளாகவே மெஸ்ஸில் இப்படி ஏதாவது நடக்கும்னு நான் எதிர்பார்த்தேன். நீங்க என்னோட பழகறது என்னை நம்பிக்கையாக கேஷ் டேபிளில் உட்காரச் சொல்றது எதுவுமே அவங்களுக்குப் பிடிக்கல்லே. அதைக் காமிக்கச் சமயம் பார்த்துக்கிட்டிருந்தாங்க... இப்போ சமயம் வந்தாச்சு." சித்ரா கோபமாகவே கூறினாள்.

அன்று வாராந்தர நாளாகையினால் மாமல்லபுரத்திற்குப் போகிற சாலையிலோ மாமல்லபுரத்திலோ கூட்டம் அதிகமில்லை. விடுமுறை நாளாகவோ ஞாயிற்றுக்கிழமையாகவோ இருந்திருந்தால் கூட்டம் பொங்கி வழியும்.

கடற்கரைக் கோவிலுக்குள் போகிற சாலையில் அந்த டீக்கடையைக் கண்டுபிடிப்பது மிகவும் சுலபமாயிருந்தது. வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டுப் பூமியும், சித்ராவும் கீழே இறங்கிய போது கடையில் ஒரே ஒரு சிறுவன் மட்டும்தான் இருந்தான். ஓனர் ஊருக்குள் போயிருப்பதாகவும் பத்து நிமிஷத்தில் திரும்பி வந்துவிடக் கூடும் என்றும் பையன் சொன்னான்.

அவனிடம் கேட்டு இரண்டு இளநீர் வாங்கிக் குடித்த பின் காசு கொடுத்துவிட்டுப் பத்து நிமிஷம் கடற்கரைக் கோவிலைச் சுற்றிவிட்டு வரலாமென்ற கருத்துடன் பூமியும் சித்ராவும் நடந்தார்கள். ஸ்கூட்டர் கடை வாசலிலேயே இருந்தது. பூமி நடந்து கொண்டே அவளிடம் கூறினான்.

"சிலந்தி வலை பின்னியிருப்பது போல இந்த அயோக்கியன் மன்னாரு எங்கெங்கோ எது எதிலோ தொடர்பு வைத்திருக்கிறான். அரசியல், கள்ளச் சாராயம், அழகு விடுதி, டீக்கடை என்று எந்த மூலையில் தொட்டாலும் அது அவனுடைய சாம்ராஜ்யத்தில் போய் முடிகிறது."

"உண்மையிலேயே பார்க்கப் போனா இன்னிக்கி நேரடியா இல்லாவிட்டாலும் மறைமுகமாக இப்படித் தீயசக்திகள் தான் நம்மை ஆட்சி செய்யிறாங்க."

"இப்படித் தீய சக்திகளை ஒடுக்கணும்னு நம்மைப் போன்றவர்கள் நினைக்கிறோம். பணம் சேர்த்தால் மட்டுமே போதும் என்று முத்தக்காளைப் போன்றவர்கள் நினைக்கிறார்கள்."

"அவங்களைப் போல இருக்கிறவங்களோட வாழ்க்கை எல்லையின் உச்சபட்ச இலட்சியமே பணம் மட்டும் தான் போலிருக்கிறது."

"அதிகபட்சம் மட்டுமில்லை! குறைந்தபட்ச லட்சியம் கூடப் பணம் தான். வேறுவிதமாக நினைக்க அவங்களுக்குத் தெரியாது."

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பூமியும் சித்ராவும் மறுபடி அந்த டீக்கடைக்குப் போனார்கள். இன்னும் அந்த ஆள் வரவில்லை. மிகவும் அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றால் ஊருக்குள் 'பெட்ரோல் பங்க்' அருகே உள்ள வெற்றிலை பாக்குக் கடை வாசலில் ஒரு வேளை கிடைக்கலாம் என்று டீக்கடைப் பையன் சொன்னான்.

ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு ஊருக்குள் பெட்ரோல் பங்க் அருகே போய்ச் சேர்ந்தார்கள். 'மன்னாரு'வின் ஏற்பாடுகள், ஆட்கள், தயாரிப்புக்கள் எல்லாமே எங்கெங்கோ, எப்படி எப்படியோ சம்பந்தமின்றி மிகவும் மர்மமாகவே இருந்தன. அந்த மாமல்லபுரம் ஆள் சிக்குவதே சிரமமானதாயிருந்தது.

பெட்ரோல் பங்க் அருகே உள்ள வெற்றிலைப் பாக்குக் கடையில் கூட அவன் அகப்படவில்லை. அவன் ஏழு ரதங்களுக்கு அருகே உள்ள இளநீர் விற்கும் கடை ஒன்றைக் குறிப்பிட்டு அங்கே போகச் சொன்னான். பூமியும் சோர்ந்து விடவில்லை. கண்டுபிடித்து ஆளைச் சந்திக்காமல் போவதில்லை என்று பிடிவாதமாயிருந்தான். அன்று ஏழு ரதங்களுக்கு அருகே வெறிச்சென்று கூட்டமின்றி இருந்தது. தேடிப்போன ஆளைப் பார்த்ததுமே பூமிக்கு எங்கோ பார்த்த முகமாக இருப்பது போல் பட்டது.

"இவன் ஏற்கெனவே மைலாப்பூரில் ஸ்கூட்டரை வழிமறிச்சு நம்மைத் தாக்கின ஆளுங்களிலே ஒருத்தன் தான்" என்று பூமியின் காதருகே பயங்கலந்த குரலில் முணுமுணுத்தாள் சித்ரா.

பூமி அதைக் காதில் வாங்கியபடியே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டுச் சித்ராவை ஸ்கூட்டர் அருகிலேயே நின்று கொள்ளுமாறு கூறிய பின் இளநீர்க் கடையை நெருங்கினான்.

பூமியைப் பார்த்ததுமே இளநீர்க் கடையில் இருந்த டில்லிபாபு குபீரென்று இளநீர் வெட்டும் அரிவாளை உருவிக் கொண்டு பூமி மேல் பாய்ந்தான். பூமியே இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பாராததால் சமாளிக்கத் திணறிப் போனான்.

அத்தியாயம் - 40

எல்லாவற்றிலிருந்தும் விலகி எல்லாவற்றிலிருந்தும் தப்பித் தன்னை மட்டும் பத்திரப்படுத்திக் கொள்ளும் சுயநலமான ஓர் ஆண்மையாளனை விட எதிலிருந்தும் பயந்து விலகி ஓடாமல் எதிலிருந்தும் தன்னளவில் தப்பி நிற்க முயலாமல் எதிர்த்து நிற்கும் சுயநலமற்ற தீரனை அதிகம் விரும்பலாம்.

'டில்லி பாபு' குபீரென்று தன்மேல் அரிவாளை ஓங்கிக் கொண்டு பாய்வான் என்று பூமி எதிர்பார்க்கவில்லை. ஆனால் கத்தியும் கையுமாக பாய்கிற பழைய போர் முறைக்கும், வெறுங்கையோடு எதிர்த்து நிற்க முடிந்த கராத்தே ஜூடோ போர் முறைக்கும் உள்ள ஒரே வேறுபாடு துரிதகதியில் தான் இருந்தது. உடம்போடும், இரத்தத்தோடும் ஊறிப் போயிருந்த அந்த துரித கதிதான் அப்போது பூமிக்குக் கைகொடுத்திருந்தது.

அவசரமும் பதற்றமும் கொண்டு பாய்ந்த எதிரியின் அரிவாள் வீச்சுக்குத் தப்பிக் குனிந்து கொடுத்துப் போக்குக் காட்டி அவனை ஏமாற்றிக் காலை இடறிவிட்டுக் கீழே வீழ்த்தினான் பூமி. வெறும் முரட்டுத் தனமும், தடித்தனமும் மட்டுமே உள்ளவனாயிருந்த அந்த எதிரி நொடியில் வீழுந்து விட்டான். அவன் கையிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாள் எங்கோ எகிறிப் போய் விழுந்தது.

மலைத்துப் போய் நின்றிருந்த சித்ரா நிம்மதியாக மூச்சு விட்டாள். முற்றிலும் எதிர்பாராத சமயத்தில் அந்த முரடன் அரிவாளை ஓங்கிக் கொண்டு பாய்ந்ததைப் பார்த்த அவளுக்குச் சப்தநாடியும் ஒடுங்கிப் போயிருந்தது. இவ்வளவு ஆபத்துக்களையும், இவ்வளவு விரோதங்களையும் பூமி வலுவில் தேடிக் கொள்கிறானே என்று அவன் மேல் சலிப்பாயிருந்தது. அதே சமயம் அதற்காகவே அவனைத் தவிர்க்க முடியாமல் விரும்பவும் வேண்டியிருந்தது.

எல்லாவற்றிலிருந்தும் விலகி, எல்லாவற்றிலிருந்தும் தப்பித் தன்னைப் பத்திரப்படுத்திக் கொள்ளும் சுயநலமான ஓர் ஆண்மையாளனைவிட எதிலிருந்தும் பயந்து விலகி ஓடாமல் எதிலிருந்தும் தன்னளவில் தப்பி நிற்க முயலாமல் எதிர்த்து நிற்கும் சுயநலமற்ற தீரனை அதிகம் விரும்ப முடிந்தது. பூமி பயமே என்னவென்று தெரியாதவனாக இருந்தான். பயப்படுவது தான் பெரிய பாவம் என்று எண்ணினான் அவன். தீய சக்திகளிலிருந்து தன்னையும் தனக்கு வேண்டியவர்களையும் காத்துக் கொள்ள வேண்டும் என்று முன் நிற்பதைவிடத் தனக்கு வேண்டாதவர்களையும் தெரியாதவர்களையும் கூடக் காக்க வேண்டுமென்று அவன் முன் நின்றான்.

அவனுடைய இந்தக் குணம் அவளை உருக்கி நெகிழ வைத்தது. பொது வாழ்வில் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் மிகவும் அபூர்வமோ அந்த வகையைச் சேர்ந்தவன் அவன். அவனைத் தவிர்க்க முடியாது. விலக்க முடியாது. சித்ராவைப் பொறுத்தவரை அவள் ஆத்மார்த்தமாக இதை உணர்ந்தாள்.

சரணாகதி அடைந்து பிடிபடுவதை விட ஓடித் தப்பி விடுவது மேல் என்ற எண்ணத்தில் டில்லிபாபு பூமியிடமிருந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினான். அவனிடமிருந்து விவரம் அறிவதற்காக வந்திருந்த பூமியும் விடாமல் அவனைத் துரத்த வேண்டியிருந்தது. பூமி மேலும் தன்னை உதைப்பதற்காகத்தான் துரத்துகிறான் என்று நினைத்துக் கொண்டு டில்லிபாபு ஓட, அவனைப்பிடித்து அவனிடம் விவரம் சேகரிக்கா விட்டால் தேடி வந்ததே வீணாகிவிடும் என்ற எண்ணத்தில் பூமி துரத்த, ஓர் ஓட்டப்பந்தயமே நடந்தது. கடைசியாக பூமி டில்லியைப் பிடித்து விட்டான். டில்லியை நன்றாக உதைத்த பின் மெல்ல ஒரு நுனி பிடிபட்டது.

மோட்டார் சைக்கிளில் பெண்களைத் துரத்தி செயின், வளைகளைத் திருடிக் கொண்டு ஓடுவது, வீடுகளில் புகுந்து திருடுவது, பஸ்கள், ரயில்கள், சினிமாக் கூடங்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் பிக்பாக்கெட் அடிப்பது இந்த வேலைகளுக்கான இளைஞர்கள் கூட்டம் ஒன்றை மன்னாரு தயாரித்து வைத்திருக்கிறான் என்றும், அதன் தலைமை அலுவலகம் எண்ணூருக்கு அப்பால் கடலில் சிறிது தொலைவு உள்ளே போனால் ஏறக்குறைய தீவு போல அமைந்த குக்கிராமம் ஒன்றில் இருக்கிறது என்றும் டில்லிபாபு கூறினான்.

இந்த தகவல்களை தன்னிடமிருந்து தெரிந்து கொண்டதாக யாரிடமும் மூச்சு விடக் கூடாதென்று பூமியிடம் சத்தியம் பண்ணச் சொல்லி மன்றாடினான் டில்லி. இந்தத் திருடும் கூட்டத்தில் தானும் இருந்ததாகவும் இதற்காக பல ஆட்களைத் தானே மன்னாருவிடம் சேர்த்து விட்டிருப்பதாகவும், அப்படித் தன்னால் சேர்த்து விடப்பட்டுத்தான் இப்போது காணாமல் போயிருக்கும் மைலாப்பூர் பையனும் மன்னாருவிடம் இணைந்தான் என்றும் டில்லி மேலும் தகவல் தெரிவித்தான்.

பூமிக்கும் சித்ராவுக்கும் இளநீர் வெட்டிக் கொடுத்து உபசரித்தான் டில்லி. இரண்டு இளநீருக்கும் எவ்வளவு பணம் என்று கேட்டு டில்லி எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்காமல் உடனே பணம் கொடுத்து விட்டான் பூமி. டில்லிக்கு அவன் அப்படிச் செய்ததில் வருத்தம்தான். தான் பூமியின் மேல் அரிவாளை ஓங்கிக் கொண்டு பாய்ந்து அது பலிக்காமல் போய்த் தோற்று நின்ற வெட்கத்தில் கூசிக் குறுகிப் போயிருந்தான் டில்லி.

மன்னாரு எப்படி இவ்வளவு அக்கிரமங்களைச் செய்து கொண்டே இப்படிச் சர்வ வல்லமையோடு தப்பி வாழ முடிகிறதென்ற அதிசயத்தை அவன் டில்லியிடம் வினவிப்பார்த்த போது டில்லிக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை. காரணம் எது நியாயம், எது அநியாயம் என்றே அப்போது புரியாதவனாக இருந்தான் டில்லி.

பணம் சேர்ப்பதற்காக - வசதியாக வாழ்வதற்காக - சௌக்கியமாயிருப்பதற்காக எதையும் செய்யலாம் என்பது மட்டுமே டில்லிக்குத் தெரிந்திருந்தது. அதற்கு மேல் நியாய அநியாயங்களைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. புதிதாகத் தெரிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை. சுருக்கமாக ஒரு விஷயத்தை அவன் பூமியிடம் சொன்னான்.

"முன்னாடி ஆட்சியிலே இருந்தவங்களுக்கும் அவரு தோஸ்த். இப்ப ஆள்றவங்களுக்கும் தோஸ்த். மன்னாரு இல்லாட்டி இங்கு ஆட்சிங்களே இருக்காது. யார் ஆண்டாலும், அவங்கெல்லாம் மன்னாருவோட 'பினாமி'யாத்தான் பேருக்கு ஆள்றாங்க..."

"சட்டம், போலீஸ் இதெல்லாம் கூடவா?"

"அதெல்லாத்தையுங் காட்டிப் பணம், அடியாள், சாராயம்லாம் தான் முக்கியம். இன்னிக்கு ஒருத்தன் நாற்காலியிலே குந்திகினு கீறான்னா அதுக்கு மன்னாருதான் ஆணி வேரு மாதிரி! ஆணி வேரு பட்டுப்பூட்டா அல்லாமே பூடும்."

இந்திய ஜனநாயகத்துக்கே புதிய விளக்கம் கொடுத்தான் டில்லி. அரசியல் சட்ட வித்தகர்களின் விளக்கங்கள் வியாக்கியானங்களை விட டில்லி கொடுத்த விளக்கம் தான் நடைமுறை உண்மையாயிருக்குமோ என்று பூமிக்கே பிரமையாயிருந்தது. டில்லி கொடுக்கிற விளக்கப்படி பார்த்தால் அப்போது தான் ஓர் ஆட்சியையும், அரசாங்கத்தையுமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதாகப் பூமிக்குத் தோன்றியது.

இந்தப் போராட்டத்தில் எதிரியைக் கண்டு பிடிப்பதே சிரமமாயிருக்கும் என்று குழப்பம் உண்டாயிற்று. வில்லன்களின் அந்தரங்கமான இரகசியத் தயவினால் கதாநாயகனாக வாழும் ஒரு கதையில் முடிவு எப்படிக் கிடைக்கும்? வில்லன் ஜெயித்தாலும், கதாநாயகன் ஜெயித்தாலும் வெற்றி வில்லனுக்குத்தானே? வில்லன்களுக்குப் பினாமிகளாகத்தான் பல கதாநாயகர்களே இருக்கிறார்களோ என்று புதிய கவலை பிறந்தது அவனுக்கு.

நல்லவன் கெட்டவன் என்று பிரித்துப் பார்க்கும் பழைய பார்வையை விட உழைக்கிறவன், சுரண்டுகிறவன் என்று இப்படிப் பார்க்கிற புதிய பார்வையினால் உலகத்துக்கு நலம் கிடைக்கலாமே என்று எண்ணினான் அவன். உலகில் இப்படி இரண்டு வர்க்கங்கள் மோதினால் தான் நியாயம் பிறக்குமோ என்று சிந்திக்கத் தோன்றியது.

டில்லி பயத்தினாலும், வாங்கிய உதையாலுமே பூமிக்கு 'தோஸ்த்' ஆகி விட்டான். 'கரும்புப் போல் கொல்லப் பயன்படும் கீழ்' - என்ற திருவள்ளுவரின் கருத்து பூமிக்கு நினைவு வந்தது. சிலருக்கு வெறும் வார்த்தைகளாலேயே புரிகிற பொருள் வேறு சிலருக்கு அடி உதைகளால் தான் புரிகிற நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாதென்று பட்டது. சிலருக்கு வார்த்தைகள் புரிந்தன. வேறு சிலருக்கு அடி உதைகள் தான் புரிந்தன.

டில்லியிடம் விடைபெற்றுக் கொண்டு அவன் தெரிவித்த இரகசியங்களை யாரிடமும் தெரிவிப்பதில்லை என்ற உறுதிமொழியையும் கூறிவிட்டுப் பூமி சித்ராவுடன் சென்னை திரும்பினான்.

அவர்கள் மெஸ்ஸை அடைந்த போது இரவு ஏழு மணி ஆகியிருந்தது. வழக்கத்தை மீறி அவனும் சித்ராவும் உள்ளே நுழைகிற போதே முத்தக்காள் எதிர் கொண்டு வந்து சீறினாள்.

"இப்பிடியே சினிமாவில் வர்ற காதலன் காதலி மாதிரி ஊர் சுத்திக்கிட்டிருந்தா மெஸ் நிர்வாகத்தை யார் கவனிப்பாங்க?"

சுற்றிலும் வேலையாட்கள், சர்வர்கள், கஸ்டமர்கள் எல்லாரையும் வைத்துக் கொண்டு ஒரு சிறிதும் நாகரிகமே இல்லாமல் அவள் இப்படிப் பேசியது பூமிக்குப் பிடிக்கவில்லை. பத்திரமாக ஊரிலிருந்து வரவழைத்து உட்கார்த்திய சொந்தக்க்காரப் பையனை நம்பி அவள் தங்களிடம் தாறுமாறாகப் பேசுகிறாள் என்பதும் புரிந்தது. பதிலுக்கு அவனும் கடுமையாக அவளை எதிர்த்துக் கேட்டான்.

"நீங்கள் பேசுவதைப் பார்த்தால் நானும் இவளும் உங்களிடம் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் என்று நினைத்துக் கொண்டு பேசுவதாகப் படுகிறது. நாக்கைக் கட்டுப்படுத்திப் பேசப் படித்துக் கொள்ள வேண்டும் நீங்கள்."

"சம்பளம் வேணும்னா அதையும் எடுத்துக்கலாமே? யார் வேண்டாம்னாங்க?"

"உங்களிடம் கூலிக்கு வேலை பார்க்க நான் வரவில்லை. உங்கள் கஷ்ட காலங்களில் உதவ முன் வந்தேன்."

"இங்கே யாரும் அப்பிடிக் கஷ்டப்பட்டுத் தவிக்கலியே?"

"அப்படியா? இனி மறுபடி நீங்களே வந்து கூப்பிட்டாலொழிய இந்த வாயிற்படியை மிதிக்க நான் தயாராயில்லை" என்று அப்படியே சித்ராவுடன் படியிறங்கினான் பூமி.

முத்தக்காள் எடுத்தெறிந்து பேசியது அவனைப் பொறுமை இழக்கும்படி செய்திருந்தது.

அத்தியாயம் - 41

சாதாரணமானவர்களால் சந்தோஷமாக இருக்கும் போது மட்டுந்தான் நகைச்சுவையாயிருக்க முடியும். சிரமப்படும் போது கூட அசாதாரணமான நகைச்சுவை உணர்வோடு இருக்க முடிந்தவர்கள் யாரோ அவர்கள் நிச்சயம் சாதாரணமானவர்கள் இல்லை.

முத்தக்காளிடம் அவளுடைய போக்கைக் கடிந்து பேசி விட்டுத் தானும் சித்ராவும் படியிறங்கிய போது 'நீ போகக் கூடாது' என்றோ 'நீ போட்டிருக்கிற பணத்தைக் கணக்குப் பார்த்து எடுத்துக் கொண்டு போ' என்றோ உபசாரத்துக்காகவாவது முத்தக்காள் தடுத்துச் சொல்லுவாள் என்று பூமி எதிர்பார்த்தது வீணாயிற்று. அவன் அப்படி கோபித்துக் கொண்டு வெளியேற வேண்டுமென்றே அந்த ஏற்பாடுகளையெல்லாம் திட்டமிட்டுச் செய்தவள் போல் பேசாமல் இருந்து விட்டாள் அவள். ஸ்கூட்டருக்காகத் தேடி வந்திருந்த பரமசிவத்தின் தம்பி அதை எடுத்துக் கொண்டு போனான்.

மெஸ்ஸை விட்டுத் தெருவில் இறங்கிய போது மனம் ஏதோ ஓர் ஆதரவை நாடியதாலோ, ஏதாவது ஒரு பற்றுக்கோடு வேண்டும் என்று எண்ணியதாலோ, எதனாலென்று தெரியவில்லை, பூமியினுடைய வலக்கரம் சித்ராவின் இடக்கரத்தைப் பற்றியிருந்தது.

பரமசிவம் அண்ணாச்சியோடு நடந்து செல்லும் போது செய்வதைப் போலவோ, தன்னிடம் கராத்தே கற்கும் இளைஞர்கள் சிலரிடம் உற்சாகமாகப் பழகும் போது செய்வதைப் போலவோ சித்ராவிடமும் நடந்து கொண்டிருந்தான் அவன். அநிச்சையாகவும் திட்டமின்றியும் நினைப்பின்றியும் அது நடந்திருந்தது. சித்ராவும் அதை மறுக்கவோ தவிர்க்கவோ இல்லை.

கைப்பிடியில் வளைகள் இடறியதால் திடீரென்று சுதாரித்துக் கொண்ட பூமி, "ஐ யாம் ஸாரி சித்ரா! ஏதோ நினைப்பில்" என்று தன் கையை விடுவித்துக் கொண்ட போதுதான் சித்ராவுக்கு வருத்தமாக இருந்தது.

அவன் 'ஸாரி' சொன்னதும் கையை விடுவித்துக் கொண்டதும்தான் அவளுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு விநாடி திரும்பிப் பார்த்தபோது முத்தக்காள் மெஸ் முகப்பிலேயே நின்றபடி தாங்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர்கள் இருவருமே கவனித்தார்கள். சித்ரா சொன்னாள்:-

"ஒரு வலுவான பாதுகாப்பை இந்த மெஸ் இழக்குதுங்கிறதைப் பற்றிய ஞாபகமே இல்லாமே அவங்க உங்களைச் சுலபமா இழந்துட்டாங்க."

"பிறருக்காக கஷ்டப்படலாம், உழைக்கலாம், உதவலாம், அவமானப்பட முடியாது. அதுவும் அந்தப் பிறராலேயே தொடர்ந்து அவமானப்படுவது என்பது பொறுத்துக் கொள்ளக் கூடியதில்லை. எதற்கும் ஓர் எல்லை உண்டு சித்ரா."

"அவங்க உங்களை அவமானப்படுத்தலே. இப்படி நடந்துக்கிறதன் மூலம் தன்னைத் தானே அவமானப்படுத்திக்கிறாங்கன்னு தான் நான் சொல்லுவேன்."

"எப்படியானாலும் சரி, இனிமேல் நானாக அங்கே போகப் போறதில்லே?"

"இதை எல்லாம் பார்த்தா நாட்டிலே விதவை மறுமணத்தைத் தீவிரமாக ஆதரிக்கணும்னு தோன்றுகிறது. சின்ன வயசிலே வாழ்க்கையை இழக்கிற பல பெண்கள் இப்பிடித்தான் வக்கரித்துப் போயிடறாங்க."

"இந்த மாதிரிப் பெண்கள் கையில் ஏற்கனவே ஓர் ஆண்பிள்ளை கஷ்டப்பட்டது மட்டும் போதாது என்கிறாய்! புதிதாய் இன்னொருவனும் மாட்டிக் கொண்டு சிரமப்பட வேண்டுமா என்ன?"

இதைக் கேட்டு அவள் சிரித்தாள். பூமியின் நகைச்சுவையை அவள் இரசித்தாள். உல்லாசமாக இருக்கும் போது நகைச்சுவையாகப் பேசுவதை விடச் சிரமப்படும் போது நகைச்சுவையாகப் பேசும் பூமியின் இயல்பைப் பலமுறை தனக்குத்தானே கவனித்து வியந்திருக்கிறாள் அவள்.

சாதாரணமானவர்களால் சந்தோஷமாக இருக்கும் போது மட்டுந்தான் நகைச்சுவையாயிருக்க முடியும். சிரமப்படும் போது கூட அசாதாரணமான நகைச்சுவை உணர்வோடு இருக்க முடிந்தவர்கள் யாரோ அவர்கள் நிச்சயம் சாதாரணமானவர்கள் இல்லை என்று ஒரு மன இயல் விளக்க நூலில் எப்போதோ படித்திருந்தாள் சித்ரா.

அவன் முத்தக்காளின் மெஸ்ஸிலிருந்து ஒதுங்கி அல்லது ஒதுக்கப்பட்டு வெளியேறி விட்டான் என்பதில் சித்ராவுக்கு ஏற்பட்ட உள்ளார்ந்த மகிழ்ச்சி அளவிட முடியாததாயிருந்தது. யாரோ முன்னேறுவதற்காக அவன் சிரமப்படுவது இனி இல்லை என்ற உணர்வை இப்போது அவள் தீர்மானமாக அடைந்திருந்தாள்.

கட்டிப் போட்டிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு சுதந்திரமாக வெளியே வந்துவிட்ட உணர்வுதான் அவளுக்கு இப்போது இருந்தது. மெயின் ரோட்டில் ஆஞ்சநேயர் கோயிலருகே வந்ததும் பூமி அவளைக் கேட்டான்.

"நல்ல பசி! மகாபலிபுரத்திலே டில்லியிடம் இளநீர் சாப்பிட்டதுதான். மெஸ்ஸில் சிற்றுண்டி சாப்பிடலாம் என்று திரும்பினேன். முத்தக்காள் உள்ளே நுழையும் போதே அதில் மண்ணைப் போட்டு விட்டாள். வா! இங்கே பக்கத்தில் ஏதாவது ஹோட்டலில் சாப்பிடலாம்! உனக்கும் பசிக்கும் என்று நினைக்கிறேன்.

"ஹோட்டல் வேண்டாம்! பத்து நிமிஷம் பொறுத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்குப் போய் அருமையான வெங்காய உப்புமா கிளறிச் சுடச்சுடத் தருகிறேன்."

"உன்னைச் சிரமப்படுத்த வேண்டாம்னு பார்த்தேன்."

"இப்ப நீங்க என்னைச் சிரமப்படுத்தினால் தான் எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். என்னைச் சிரமப்படுத்த வேண்டாம்னு ஒதுங்கினாத் தான் உண்மையிலே வருத்தப்படுவேன்."

"ஒதுங்கலே... ஆனால்..."

"ஒண்ணும் தட்டிச் சொல்லாதீங்க... வீட்டுக்குப் போகலாம் வாங்க..."

இப்படிச் சொல்லிக் கொண்டே தன்னிச்சையாக அவள் அவன் வலக்கரத்தைப் பற்றி அவனை இழுத்தாள். அந்தப் பிடியிலிருந்து அவனும் தன்னை விடுவித்துக் கொள்ள முயலவில்லை.

"ஸாரி! அவசரத்தில்..." என்று அவள் தன் கையை விடுவித்துக் கொண்ட போது "ஸாரி எல்லாம் வேண்டாம் சித்ரா! நீ எந்தத் தப்பும் பண்ணிடலே. நான் உன்னோடு வீட்டுக்கு வருகிறேன். வா போகலாம்!" என்று பூமி சிரித்துக் கொண்டே சம்மதித்தான்.

"நான் வெங்காய உப்புமா ரொம்பப் பிரமாதமாக கிளறுவேன், தெரியுமோ உங்களுக்கு?"

"அதெல்லாம் ஒன்றும் தெரிய வேண்டாம் சித்ரா. நீ கிளறினாலே அது பிரமாதமாகத்தான் இருக்கும் எனக்கு."

அவள் மணக்க மணக்க உப்புமாக் கிளறிக் கொடுத்து அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே வெளியே போயிருந்த அந்தக் கிழவி திரும்பி வந்துவிட்டாள். சித்ரா அவளுக்கும் உப்புமாவை ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தாள்.

அவளோ, "என் பையனைக் கண்டு பிடிச்சுத் தேடிக்குடுங்க" என்று அழுது புலம்பத் தொடங்கினாள்.

முத்தக்காளை உதறியது போல் இந்தக் கிழவியை உதறப் பூமி துணியவில்லை. அவளே தேடிக் கண்டு பிடித்துக் கொடுத்த மகாபலிபுரம் டீக்கடை டில்லிபாபுவின் முகவரியிலிருந்து தெரிந்து கொண்ட புதிய விவரங்களை வைத்துக் காணாமல் போன பையனைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று பூமியே யோசித்திருந்தான்.

சொல்லப்போனால் இந்தப் பையனை வேலைக்குச் சேர்த்தது, இவன் காணாமல் போன பிறகு இவனைத் தேடி அலைந்தது, எல்லாமாகச் சேர்ந்துதான் முத்தக்காளுக்கு அவன் மேல் கோப மூட்டியிருந்தன. இப்போது முத்தக்காளிடமிருந்து விலகி வந்த பின்பும் இந்தக் கிழவிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பூமியின் மனத்தில் முன்னை விட வலுவாகி இருந்தது. பூமி அப்போது உடனே புறப்படத் தயாரானான். சித்ரா அவனைத் தடுத்தாள்.

"இப்போது வேண்டாமே! காலையில் விடிந்ததும் உங்களிடம் கராத்தே படிக்கும் பிள்ளைகள் சில பேரையும் உடனழைத்துக் கொண்டு போய் வாருங்கள்" என்றாள் சித்ரா.

தாமதம் காரியத்தை அழித்துவிடும் என்று கருதிய பூமி அவள் கூறியதை ஏற்கவில்லை. ஆனால் அவள் கூறியபடி தன்னிடம் கராத்தே கற்கும் சீடப் பிள்ளைகள் சிலரை உடனழைத்துக் கொள்ள மட்டும் சம்மதித்தான். மூன்று பேர் மட்டும் ஓர் ஆட்டோவிலேயே என்ணூர் வரை போவதென்று முடிவாயிற்று.

எண்ணூரில் ஆட்டோவை விட்டுவிட்டுப் படகோ, அல்லது கட்டுமரமோ பிடித்துக் கடலுக்குள்ளே போய் அந்தக் கிராமத்தை அடைவது என்றும் ஏற்பாடாகியிருந்தது. படகு கிடைக்கவில்லை என்றால் கரையோரப் பகுதி மீனவர்கள் யாரையாவது பிடித்து அவர்கள் உதவியோடு மீன் பிடிக்கும் கட்டுமரத்தில் கடலுக்குள் போவதற்கும் துணிந்திருந்தார்கள்.

பூமியும் மற்ற இருவரும் எண்ணூர் போய்ச் சேரும்போது இரவு மணி ஒன்பதரைக்கு மேலிருக்கும். ஒரு டீக்கடை அருகே ஆட்டோவை நிறுத்திப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுக் கடலுக்குள் போகப் படகு அல்லது கட்டுமரம் தேடிய போது அந்த நள்ளிரவில் இவர்கள் ஏன் கடலுக்குள் போக ஆசைப்படுகிறார்கள் என்பது அங்கிருப்பவர்களுக்குப் புரியவில்லை.

அவர்களிடமிருந்து ஏராளமான குறுக்குக் கேள்விகள் பிறந்தன. கடைசியில் கட்டுமரத்து ஆட்கள் இருவர் இவர்களை யாரோ கடத்தல்காரர்கள் என்று எண்ணிக் கொண்டு பண ஆசையுடன் வரச் சம்மதித்தனர். பூமிக்கு அவர்களது அந்த அநுமானம் அருவருப்பூட்டியது. ஆனால் அதை முதலிலேயே மறுத்தால் அவர்கள் கடலுக்கு வர மறுப்பார்களென்றும் தோன்றியது.

அத்தியாயம் - 42

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள், கறுப்புப் பண முதலைகள், கள்ள மார்க்கெட் பேர்வழிகள் எல்லோருமாகச் சேர்ந்து நாட்டில் நிரந்தரமாக ஓர் எதிர் அரசாங்கமே நடத்தி வருகிறார்கள்.

டில்லிபாபு கொடுத்திருந்த இரகசியத் தகவலின்படி மன்னாருவின் ஆள் கடத்தல் கும்பலைத் தேடித் தாங்கள் செல்வதைக் கட்டு மரத்து ஆட்களிடம் பூமி தெரிவிக்கவில்லை. காசிச் செட்டி சந்து ஆட்களுக்கு கடத்தல் பொருள்களை மொத்தமா எடுத்து விநியோகிக்கும் ஒரு புள்ளியும் அவருக்கு வேண்டியவர்களுமாகப் பூமியும் அவனுடன் இருந்தவர்களும் அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருந்தனர்.

கட்டு மரத்து ஆட்களோ மற்றவர்களோ எது கேட்டாலும் தன்னுடன் இருந்தவர்கள் எதுவும் பதில் பேசக் கூடாதென்றும் தானே எல்லோருக்கும் பதில் சொல்லியும், சொல்லாமலும் சமாளிக்க முடியுமென்றும் பூமி கூறியிருந்தான். இரவில் கட்டுமரத்தில் பயணம் செய்வது சிலிர்ப்பூட்டும் அநுபவமாயிருந்தது. அந்தப் பகுதி கடலும் மனிதர்களும் கடத்தல்காரர்களுடனும், கடத்தல் படகுகளுடனும், கடத்தல் பண்டங்களுடனும், கடத்தல் பணத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. மன்னாருவுக்கும் அதில் பங்கு இருக்குமோ என்று பூமி அப்போது எண்ணினான்.

கடற்சிலந்தி போல் மன்னாருவின் கைகள் எத்தனை திசைகளில் எத்தனை வகையாக நீண்டிருக்கும் என்பதை அநுமானிக்க முடியாமல் இருந்தது. உப்பங்கழியான காயல் பகுதியாக இருந்ததனால் அவர்கள் பயணம் செய்த கடற்பகுதியில் அதிகக் கொந்தளிப்போ அலைகளோ இல்லை. கட்டுமரங்களை விட்டு இறங்கியவுடன் டாக்ஸிக்கோ ஆட்டோவுக்கோ கணக்குத் தீர்க்கிற மாதிரித் தீர்த்து விட முடியாது. திரும்பும் பயணமும் முடிந்து கரை போய்ச் சேர்ந்த பின் கட்டு மரக்காரர்கள் ஒரு பெருந்தொகை எதிர் பார்க்கிறார்கள் என்பது அவர்களிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததிலிருந்து பூமிக்குப் புரிந்தது.

எண்ணிக்கையில் அவர்கள் இருவர், தாங்கள் மூவர் என்ற நம்பிக்கை தெம்பளித்தது. அவர்களால் கெடுதலோ வம்போ வருமானால் சமாளிக்க முடியுமென்றே பூமி நம்பினான். உடன் அழைத்து வந்திருந்த இருவரும் நன்கு உதவக் கூடியவர்கள் என்பது பூமியின் கணிப்பாக இருந்தது.

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள், கறுப்புப் பண முதலைகள், கள்ள மார்க்கெட் பேர்வழிகள் எல்லாருமாகச் சேர்ந்து நாட்டில் நிரந்தரமாக ஓர் எதிர் அரசாங்கம் நடத்திக் கொண்டிருப்பது தெரிந்தது.

இந்த எதிர் அரசாங்கத்தில் தேர்தல், ஜனநாயகம், மக்கள் நம்பிக்கை இவையெல்லாம் இல்லாமலே பலர் தொடர்ந்து வெற்றிகரமாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அசல் அரசாங்கமே சில இடங்களில் இந்த எதிர் அரசாங்கத்தின் தயவில் காலந்தள்ளிக் கொண்டிருந்தது. எதிர்ச் சக்திகள் அத்தனை வலுவாக இருந்தன.

மிகமிக மந்த கதியிலான ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சில குடிசைகள், தாழ்வான ஓட்டடுக்கு வீடுகள் தென்பட்ட ஒரு கரையில் அவர்களை இறக்கி விட்டார்கள் கட்டுமரக்காரர்கள். அவர்கள் கரையிலேயே தங்கிக் கொண்டார்கள். ஊருக்குள் வரவோ பூமிக்கும் அவனது நண்பர்களுக்கும் வழிகாட்டவோ அவர்கள் தயாராயில்லை. வெறிச்சோடிக் கிடந்த அந்தத் தீவில் வழிகாட்டுவதற்கு அதிக அவசியம் இருப்பதாகவும் தோன்றவில்லை.

மணலிலும் தாழம்புதர்கள் புன்னை மரங்களின் நடுவிலுமாகச் சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. திசை தடுமாறிவிடாமல் இருப்பதற்காகத் தங்கள் கைவசமிருக்கும் டார்ச் லைட்டைக் கால்மணி நேரத்துக்கு ஒரு முறை அடித்துக் காட்டுவதாகக் கட்டுமரக்காரர்கள் கூறியிருந்தார்கள். கடத்தல் நடைமுறைகள் கட்டுமரக்காரர்களுக்குக் கூட இந்த டார்ச்லைட் ஏற்பாட்டைக் கற்றுக் கொடுத்திருந்தன.

பூமி நண்பர்களிடம் சொன்னான்: "இங்கே ஈ காக்கை தென்படவில்லையே என்று மெத்தனமாக இருக்காதீர்கள்; நடக்கும் ஒவ்வோர் அடியையும் உஷாராக எடுத்து வையுங்கள். இது கடத்தல்காரர்களின் சொர்க்க பூமி. அதிக கவனமாயிருக்க வேண்டும்."

அங்கே முதலில் தென்பட்ட கீற்றுக் குடிசையினருகே ஒரு மீனவப் பெண் கூடையோடு நின்று கொண்டிருந்தாள். அந்த அகாலத்தில் அவள் யாரையோ எதிர்பார்த்து நிற்பது போல்தான் தோன்றியது. பூமியையும் நண்பர்களையும் பார்த்ததும் அவள் தெலுங்கில் ஏதோ கேட்டாள். இவர்களுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. தயங்கினார்கள். அவள் இவர்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஒரு விநாடி கூடத் தயங்காமல் உடனே குடிசைக்குள் ஓடிவிட்டாள்.

பூமி துணிந்து அவளைப் பின் தொடர்ந்து குடிசைக்குள் தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். உள்ளே ஏராளமான அட்டைப் பெட்டிகள், கட்டி முடிந்து வைக்கப்பட்ட பாலிதின் பைகள் என்று குவிந்திருந்தன. அவ்வளவும் கடத்தல் சாமான்களாக இருக்க வேண்டும். தடிமன் தடிமனாக நாலைந்து ஆட்களும் இருந்தார்கள். பதுங்கிக் கொண்டிருந்தார்கள். அவசர அவசரமாக உள்ளே எட்டிப் பார்த்த வேகத்தில் பூமி தலையை வெளியே இழுத்துக் கொண்டு விட்டான்.

ஒரு தாக்குதலைச் சமாளிக்க தயாராயிருக்குமாறு நண்பர்களுக்கு ஜாடை காட்டினான். ஆனால் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. குடிசைக்குள்ளிருந்து யாரும் இவர்கள் மேல் பாயவில்லை. கடத்தல் சரக்கை வாங்க வந்த மொத்த வியாபாரி என்று தங்களை அவர்கள் முதலில் நினைத்திருக்க வேண்டும் என்று பூமிக்குத் தோன்றியது.

அந்த மீனவப் பெண் கூறிய தெலுங்கு வார்த்தைக்கு ஏதோ ஒரு பொருத்தமான பதில் வார்த்தை இருக்க வேண்டும் என்றும் அது தங்களுக்குத் தெரியாமல் தாங்கள் விழித்துக் கொண்டு நின்றதனால் தான் தாங்கள் சரக்கு எடுக்க வந்த ஆட்கள் இல்லை என்று அவர்கள் சுலபமாகவே முடிவு செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அநுமானிக்க முடிந்தது. தாங்களாகவே உள்ளே புகுந்து சண்டைக்கு இழுக்காத பட்சத்தில் அவர்கள் சண்டைக்கு வரத் தயாராயில்லை என்று தெரிந்தது. அவர்களை வெளியே எதிர்பார்த்துச் சிறிது நேரம் தாமதித்த பின் ஏமாற்றத்தோடு மேலே நடந்தார்கள். சூழ்நிலை மர்மமாயிருந்தது.

சிறிது தொலைவில் கடல் ஓலமிடும் ஓசை வேறு அந்த மர்மமான சூழ்நிலைக்குச் சுருதி கூட்டியது. நெடுநேரம் அலைந்து திரிந்த பின் தணிவான பெரிய திண்ணையோடு கூடிய ஓர் ஓட்டடுக்கு வீடு தென்பட்டது. திறந்திருந்த ஒரே சன்னல் வழியாக மங்கிய அரிக்கேன் லாந்தர் வெளிச்சம் தெரிந்தது. உள்ளே பேச்சுக் குரலும் கேட்டது.

பூமியும் நண்பர்களும் அந்த வீட்டு வாசலில் சிறிது தயங்கி நின்றார்கள். அடுத்த கணமே உள்ளேயிருந்து "யாரது?" என்று கனமான குரலும் அதையொட்டிக் கதவு திறக்கப்படும் தாழ்ப்பாள் ஓசையும் கேட்டன. கையில் அரிக்கேன் லாந்தரைப் பிடித்தபடி தாடி மீசை நெற்றியில் காலணா அகலக் குங்குமப் பொட்டுடன் ஒரு முதியவர் வெளிப்பட்டார்.

"நீங்கள்ளாம் யாருங்க?"

பூமிக்கும் அவரிடம் உண்மை பேசவேண்டுமென்று தோன்றியது. தங்களைப் பற்றிய விவரங்களைக் கூறி, வந்த காரியத்தைச் சொன்னான்.

"அதானே பார்த்தேன்? கடத்தல்காரர்களைத் தவிர வேற யாரும் இங்கே இந்த நேரத்தில் தட்டுப்படறது வழக்கமில்லையே?" என்று முதியவர் வியந்தார்.

பூமி அவரிடம் அவருக்கு நம்பிக்கை ஏற்படுகிற விதத்தில் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

"எவ்வளவு நேரந்தான் நின்னுக்கிட்டுப் பேசறது? வாங்க... திண்ணையில் உட்காருவம்" என்று அவர்களை அழைத்தார் முதியவர்.

திண்ணையில் போய் உட்கார்ந்ததும் அவரே தொடர்ந்தார்.

"நீங்க கடத்தல் வேலையா வராம வேற வேலையா வந்த ஆளுங்கன்னு தெரிஞ்சிருந்தாக் கட்டுமரத்து ஆளுங்களே உங்களை இந்நேரத்துக்கு இங்கே இட்டாரச் சம்மதிச்சிருக்க மாட்டாங்க. நீங்களும் கடத்தல் வேலையா வந்திருக்கீங்கன்னு தான் இங்கே இட்டாந்தாங்க. இந்தத் தீவு இதுக்கு வர்ரதுக்கும் திரும்பறத்துக்குமான போக்குவரத்து வசதிங்க எல்லாமே கடத்தல்காரங்க கண்ட்ரோல்லே போயிடுச்சு. தீவுல காலடி வச்சதும் மீன் விக்கிறவ மாதிரி யாராவது ஒருத்தி வந்து 'மீன் வாங்க வந்தீங்களா'ன்னு தெலுங்கில் கேட்பா. பதில் சரியாக் கிடைச்சா உள்ளே இட்டுக்கினு போய்ச் சரக்கைக் காமிப்பாங்க... இல்லாட்டி... ஆளே தப்ப முடியாது! அநேகமாக எல்லாருமே ஊரைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க... நான் ஒருத்தன் தான் துணிந்து காலந்தள்ளிக்கிட்டிருக்கேன். என் சம்சாரம் பசங்களுக்கெல்லாம் கூடப் புடிக்கலே. இங்கேயிருந்து போயிடணும்னுதான் அவங்கள்ளாம் நெனைக்கிறாங்க. இங்கேயிருந்தா மன்னாரு வகையறா என்னிக்காவது கொலை கூட பண்ணிருவாங்கன்னு பயப்படறாங்க..."

"போலீஸ் கம்ப்ளெயிண்டு கொடுத்து இதை ஒழிக்க முடியாதா?"

"முடியாதுங்க! சில வேளைகளிலே 'பூனைக்கும் காவல் பாலுக்கும் தோழன்'கிற பழமொழி மாதிரி ஆயிடுது! நேத்துப் பாருங்க... இந்த மன்னாரு கோஷ்டிக்குத் துரோகம் பண்ணிட்டான்னு நல்ல வயசுப்புள்ளையாண்டான் ஒருத்தனை இங்கே கொண்டாந்து கொலை பண்ணி ஜுரத்தினாலே செத்தான்னு புளுகிப் புதைச்சிட்டாங்க?"

இதைக் கேட்டுப் பூமிக்குத் திக்கென்றது. உடனே உஷாராகி அவன் அவரைக் கேட்டான்.

"நிஜமாகவா? அது நேத்தா நடந்திச்சு?"

"ஆமாங்க! இந்தத் தீவாந்தரத்திலே கேள்வி கேப்பாரே இல்லே. யார் போய் இதைப் புகார் பண்ணப் போறாங்க?"

"எங்கே புதைச்சாங்க? ஏன் எரிக்கலே...?"

"அதென்னமோ தெரியலீங்க? ஒரு வேளை சட்டைக்காரப் பையனோ என்னமோ?"

"எங்கேன்னு காட்ட முடியுமா பெரியவரே?"

"வம்பு பிடிச்ச வேலை... போனவன் பிழைச்சு வரப் போறதில்லை... வேண்டாம் வுட்டுடுங்க... ஆபத்தாயிடும்" என்று பதறி மெல்ல நழுவினார் பெரியவர்.

அத்தியாயம் - 43

தவறான காரியங்களையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்களுக்கு நடுவே அவற்றைச் செய்யாமல் இருக்கிறவர்களும் நல்லது செய்ய முயல்பவர்களும் கூடக் கெட்டவர்கள்தான்.

அவ்வளவு கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பிறகும் தமது உரிமையை நிலைநாட்ட அங்கே துணிந்து குடியிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்ட அவரே இப்போது பயப்படுகிறார் என்பது பூமிக்குப் புரிந்தது. சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்டு மிகவும் தணிந்த பதற்றமான குரலில் அவரே சொன்னார்.

"நீங்கள் இந்தத் தீவிலே நுழைஞ்சது - இங்கே என்னைத் தேடிக்கிட்டு வந்தது - இப்ப இங்கே உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கிறது இதெல்லாத்தையும் யாரும் கவனிக்கலே - யாருக்குமே தெரியாதுன்னு நாம நினைச்சுக்கிட்டிருப்போம். ஆனா அது சரியில்லே... இது அத்தனையையும் எங்கேயிருந்தாவது யாராவது கவனிச்சிக்கிட்டிருப்பாங்க... நீங்க தனிப்பட்ட முறையிலே என்னைத் தேடி வந்தவங்களா இல்லியான்னு இன்னும் அவங்களாலே கண்டு பிடிச்சிருக்க முடியாது. அதனாலேதான் இதுவரை ஆபத்து எதுவும் வரலே."

"கண்டுபிடித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். அதுக்காக நாம் ஏன் பயப்பட வேண்டும்? நாம் எந்தத் தவறான காரியத்தையும் செய்து கொண்டிருக்கவில்லையே?"

"தவறான காரியங்களையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்களுக்கு நடுவே அவற்றைச் செய்யாமல் இருக்கிறவங்களும் நல்லது செய்ய முயல்கிறவர்களும் கூட ஆகாதவங்கதான்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும்."

இப்படி அவர் கூறியதும் பூமிக்கு மேலே என்ன செய்வதென்று சிறிது மலைப்பாயிருந்தது. கொன்று புதைக்கப்பட்டிருக்கும் பையனே தான் தேடி வந்திருக்கும் பையனாயிருக்கலாமோ என்று சந்தேகம் தீர்வதற்கு உதவ வேண்டும் என்று அவரிடம் மன்றாடினான் பூமி. அப்பெரியவர் மறுபடியும் தயங்கினார். பூமியின் வற்புறுத்தல் தொடர்ந்தது. அவர் சொன்னார்:

"இருங்க; இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிக்கிட்டிருப்போம்; நம்மை யாராவது கவனிச்சிக்கிட்டிருந்தாலும் சந்தேகம் தீர்ந்து அவங்க திரும்பிப் போகட்டும். யாரோ என் உறவுக்காரங்க வெளியூர்லேருந்து என்னைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்கன்னு நெனச்சுக்கட்டும்."

தொடர்ந்து மேலும் சிறிது நேரம் திண்ணையிலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். பெரியவர் பெயர் காளத்திநாதன் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கடத்தல்காரர்களின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன் அந்தத் தீவாந்திரமான கிராமத்தில் சிறந்த அந்தஸ்தோடு வாழ்ந்தவர் என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது.

இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் கடல் அலைகளின் தூரத்து ஒலியும் காற்று சுழற்றிச் சுழற்றி அடிக்கும் ஓசையுமாக இருந்த ஒரு சூழலில் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். அதிக ஸெல்கள் போட முடிந்த ஒரு நீளமான டார்ச்சுடன் காளத்திநாதன் வழிகாட்டிச் செல்லப் பூமியும் நண்பர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். கடற்கரை காயற்பகுதியாயிருந்ததனால் நிலம் சொத சொத என்று ஈரமாயிருந்தது. விரைந்து நடப்பதற்கு முடியவில்லை.

"சில சமயங்களில் பகலில் தரை தெரிகிறார் போலிருக்கும். அந்தப் பகுதி நிலப் பரப்பில் இரவில் முழங்கால் ஆழத்திற்கு உப்பு நீர் நிரம்பி மறுபடி விடிந்ததும் வடியும்" என்றார் காளத்திநாதன்.

இவர்கள் அதிர்ஷ்டமோ என்னவோ அன்று அவ்வாறு தண்ணீர் நிரம்பவில்லை. அடுத்த அடி எடுத்து வைப்பதற்காகக் காலைத் தூக்கினால் செருப்புத் தரையோடு பசை போட்டு ஒட்டின மாதிரிச் சிக்கிக் கொண்டு வர மறுத்தது.

தாழம்புதரும், புன்னை மரங்களுமாக அடர்ந்திருந்த ஒரு பகுதியைக் கடந்ததும் சில மேடுகள் சிலுவை, கோபுர அடையாளங்களோடு கட்டப்பட்டுக் கடற்காற்றில் உப்புப் பரிந்த சமாதிக் கட்டிடங்கள் தென்பட்டன.

"இங்கே எல்லா ஜாதி ஜனங்களுக்கும் ஒரே மயானம் தான்! வேறு இடம் கிடையாது."

"இங்கேயாவது அப்படி இருக்கிறதே?" என்று கேட்டுவிட்டுச் சிரித்தான் பூமி.

"இங்கே எரிக்கிறதுக்கு வசதி குறைவு. ராவுல தண்ணி ஏறிச் சிதையை அவிச்சிடும்கிற காரணம் வேற எரிக்கிறதுக்கு இடைஞ்சலா இருக்கு! விறகு கட்டைக் கடைன்னு எதுவும் இங்கே கிடையாது."

"இனிமேல் இந்தத் தீவுக்கு மயானம் கூடத் தேவை இல்லை பெரியவரே! இங்கேதான் யாருமே குடியிருக்கலியே? கடத்தல்காரங்க மட்டுந்தானே வந்து போறாங்க. அதுக்காக ஒரு தனி மயானம் எதுக்கு?"

"சொல்லப் போனாக் கடத்தல்காரங்க வந்தப்புறம் தான் இந்த மயானத்துக்கே உபயோகம் நிறைய ஆகியிருக்கு. இயற்கையாச் சாகிறவங்களை விட அவங்களாலே சாகடிக்கப்படறவங்கதான் இப்ப அதிகம்! கேள்வி முறையில்லாம அடிச்சுக் கொன்னு புதைச்சிட இந்தத் தீவு வசதியா இருக்கு."

கூறிக்கொண்டே ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் டார்ச் ஒலியைப் பாய்ச்சினார், காளத்திநாதன். புதிதாக மூடப்பட்ட ஈரமண் மேட்டில் புன்னை மரக் கொம்பினாலேயே சிலுவை மாதிரி ஒடித்துக் கட்டி வைத்திருந்தது. சிலுவை நுனியில் உட்கார்ந்திருந்த பெரிய ஆந்தை ஒன்று வெளிச்சத்தைப் பார்த்ததும் சிறகடித்து எழ முயன்றது. அதன் குரூரமான கண்கள் டார்ச் ஒளியில் பளீரென மின்னின.

"அவசரத்திலே சரியாகக் கூட மூடிட்டுப் போகலே" என்று கீழே குனிந்து இரத்தக் கறை படிந்த சட்டை ஒன்றை மண் குவியலிலிருந்து எடுத்தான் பூமியோடு இருந்த நண்பன் ஒருவன்.

சட்டையை வாங்கி அதன் தோள்பட்டைப் பகுதியைப் பார்த்த பூமிக்கு திக்கென்றது. அதில் முத்தக்காள் மெஸ் சர்வர்களும், வேலையாட்களும் பயன்படுத்துகிற 'யூனிஃபாரத்'தின் அடையாள எழுத்துக்களாகிய 'எம்.எம்.' என்ற ஆங்கில முதல் எழுத்துக்கள் இருந்தன.

தனது வியப்பையோ திகைப்பையோ வெளிக் காட்டிக் கொள்ளாமல் அந்தச் சட்டையை மடித்து வைத்துக் கொண்டான் பூமி. 'பையனை இங்கே கொண்டு வந்து காதும் காதும் வைத்தாற்போல் இரகசியமாகக் கொன்று புதைத்து விட்டார்கள்' என்று அவனுடைய உள் மனதுக்குத் தோன்றியது. அவன் காளத்திநாதனிடம் கூறினான்.

"சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனால் நாமே இப்போது இதைத் தோண்டிப் பார்ப்பதை விடத் தக்க போலீஸ் ஏற்பாட்டோடு வந்து முயற்சி செய்வதுதான் நல்லது" என்று அவன் கூறியதை அவரும் ஒப்புக் கொண்டார்.

"நாம தோண்டறது நல்லதில்லே. பாதி தோண்டிக்கிட்டிருக்கறப்பவே மன்னாரு ஆளுங்க கூட்டமா வந்து நம்மை உதைச்சாலும் உதைப்பாங்க. போலீஸ் வந்தாக் கூட மப்டிலே வந்தாத்தான் முடியும்! இல்லாட்டி முதல்லேயே உஷாராயிடுவாங்க" என்றார் அவர்.

தாங்கள் வந்தது போனது எல்லாவற்றையுமே இரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு காளத்திநாதனிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்கள் அவர்கள். காளத்திநாதனிடம் அவர்கள் விடை பெற்ற பின் மீனவப் பெண் இருந்த குடிசை வாசலில் குண்டர்கள் ஐந்து பேர் வந்து வளைத்துக் கொண்டார்கள். அவர்களது விசாரணையே தடித்தனமாய் இருந்தது.

"யாருடா நீங்கள்ளாம்? என்ன வேலையா இந்நேரத்துக்கு இங்கே வந்தீங்க...?"

பூமி இதைக் கேட்டதும் முதலில் குமுறினான். இவர்களை அடித்து உதைத்து விட்டுத் தப்ப முடியும் என்றாலும் அதனால் மறுகரையிலும் ஆபத்துக்கள் தொடருமே என்று பின்பு தந்திரமாக யோசித்தான் பூமி. இவர்களோடு சண்டையிடுவதைக் கட்டுமரக்காரர்கள் பார்த்து விட்டால் தங்களை மறுகரைக்குத் திரும்பக் கொண்டு போய்ச் சேர்க்க அவர்கள் மறுப்பார்களோ என்ற சந்தேகம் வேறு வந்துவிட்டது. எனவே தாங்களும் அவர்களுடைய நண்பர்களே என நிரூபிக்க ஏற்ற வகையில் நடித்துத் தப்புவதே சிறந்ததென்று தோன்றியது.

"என்னப்பா நம்ம ஆட்களே நம்ம ஆட்களை முறைக்கிறீங்க?" என்று தொடங்கி மன்னாரு ஒரு வேலையாகத் தங்களை அங்கே அனுப்பியதாகப் பொய் கூறினான் பூமி. குண்டர்கள் விடவில்லை.

"அது என்ன அப்பிடி எங்களுக்குக் கூடத் தெரியாத காரியம்?" என்று அவர்களில் ஒருவன் பூமியை மடக்கினான். பூமி அவனை மட்டும் தனியே அழைத்து அவன் காதருகே சொன்னான்.

"நேற்று புதைத்த பிணத்தருகே ஒரு தடயம் சிக்கிப் போச்சி. கொஞ்ச நேரத்திலே இங்கே போலீஸ் வந்தாலும் வரலாம். அதுக்குள்ளே தடயத்தை எடுத்துக்கிட்டு வந்துடணும்னு எங்களை மன்னாரு அனுப்பிச்சாரு. நீ வீணா நேரமாக்கினியோ எல்லாருமே மாட்டிக்குவோம். நாங்களும் உடனே போயாகணும்! நீங்களும் பதுங்கற இடத்துலே போய்ப் பதுங்கிக்கணும். ஒழுங்கா வழி விடு."

இந்தத் தந்திரம் உடனே பலித்தது. அவர்கள் பூமியை மன்னாருவினால் அனுப்பப்பட்ட ஆளென்று நம்பிவிட்டார்கள். மிகவும் வேண்டிய ஆளாயிருந்தாலொழிய இவ்வளவு பெரிய இரகசியத்தை மன்னாரு அவனிடம் சொல்லியிருக்க முடியாதென்றும் அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அதோடு போகாமல் கட்டுமரம் வரை உடன் வந்து "இவர்களைச் சீக்கிரமாகக் கரையில் கொண்டு போய்ச் சேர்க்கணும். பெரிய முதலாளி அனுப்பி வச்சிருக்காங்க... ஜல்தி" என்று அவர்களுக்கு உத்தரவும் போட்டுவிட்டுப் போனான் ஒரு குண்டன்.

கட்டு மரத்தில் ஏறி உட்கார்ந்த பின்பே பூமிக்கும் நண்பர்களுக்கும் நிம்மதியாக மூச்சு வந்தது.

கரையில் இறங்கியதும் கட்டுமரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப் பூமி மணிபர்ஸைத் திறந்ததும், "வேண்டாங்க, காசு வாங்கினதாகத் தெரிஞ்சாப் பெரிய முதலாளி தோலை உரிச்சிடுவாரு" என்று பயந்து ஒதுங்கினார்கள் அவர்கள்.

சிறிது காலமாக அந்தத் தீவே கடத்தல்காரர்களின் முழு ஆதிக்கத்துக்கு வந்துவிட்டது என்று பெரியவர் காளத்திநாதன் கூறியதன் அர்த்தம் பூமிக்கு இப்போது புரிந்தது.

கரையில் இறங்கியதும் வேறு சில தகவல்களை விசாரித்துத் தெரிந்து கொண்டு பூமியும் நண்பர்களும் ஆட்டோவில் மைலாப்பூர் திரும்பியபோது அதிகாலை மூன்று மணி ஆகியிருந்தது. அந்த இரவு சிவராத்திரி ஆகிய களைப்பில் நண்பர்கள் அயர்ந்து போயிருந்தார்கள். அந்த நண்பர்களைத் தன் வீட்டிலேயே உறங்கச் சொல்லிய பின் பூமி ஒரு வித வைராக்கியத்தோடு வீட்டிலிருந்து வெளியேறி ஹைரோடுக்கு வந்தான்.

அத்தியாயம் - 44

மனித உருவில்தான் இந்தக் காலத்து ராட்சஸர்கள் திரிகிறார்கள். அவர்களை அவர்களது செயலிலிருந்துதான் மனிதர்கள் இல்லை என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

இரண்டொரு டீக்கடைகளைத் தவிர ஹைரோடு அமைதியிலாழ்ந்திருந்தது. கிழக்கே இன்னும் சிறிது நேரத்தில் விடிவெள்ளி முளைத்துவிடும். காற்று வைகறையின் குளிர்ச்சியைச் சுமந்து வீசத் தொடங்கியது. தெருக்கள் சந்தடியற்று உறங்கிக் கொண்டிருந்தன. பூமி நடந்து கொண்டிருந்தான்.

அந்தப் பையனை 'மன்னாரு' வகையறாக்கள் கொன்று புதைத்து விட்டார்கள் என்ற உண்மை கசப்பாயிருந்தது. ஒரு புறம் தாங்க முடியாத சோகமும், மறுபுறம் தவிர்க்க முடியாத வைராக்கியமுமாகப் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்தான் அவன்.

பையனின் அநாதைத் தாய்க்கு இந்த உண்மை தெரிந்தால் அவள் எப்படிக் கதறி அழுது தவிப்பாள் என்று நினைத்துப் பார்த்தபோது இன்று தன் தாய் உயிரோடு இருந்து தான் இப்படி ஓர் அபாயத்துக்கு ஆளாகியிருந்தல் என்ன நேரும் என்று ஒப்பிட்டுப் பார்த்தது அவன் மனம்.

அத்தனை பெரிய நகரத்தைக் கோழையாக்கி, நாகரிகத்தை நொண்டியாக்கிக் காட்டு மிராண்டித்தனம் பண்ணிக் கொண்டிருந்த 'மன்னாரு' கும்பலைப் பூண்டோடு வேரறுக்க வேண்டும் என்று மனத்தில் உறுதி செய்து கொண்டான் பூமி.

ஏற்கெனவே மெஸ்ஸிலிருந்து இந்தப் பையன் திடீர் என்று காணாமல் போனது பற்றிப் போலீஸில் புகார் செய்திருந்ததை ஒட்டி, இப்போது மேல் விவரங்களைச் சொல்லி மன்னாருவின் அராஜகங்களுக்குக் கேந்திரமான அந்தத் தீவுக் கிராமத்தையே போலீஸாரோடு வளைக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

முன்னிரவில் தான் புறப்படும் போதே கவலையோடும் தயக்கத்தோடும் வழியனுப்பிய சித்ராவும், அந்தப் பையனின் தாயும் இப்போது உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது. போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்துவிட்டு அப்புறம் சித்ராவைப் பார்க்கப் போக வேண்டுமென்று எண்ணியிருந்தான் அவன்.

ஆனால் போலீஸ் நிலையத்திலேயே அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவன் போய்ச் சேர்ந்த போது போலீஸ் ஸ்டேஷனிலேயே சித்ரா இருந்தாள். பூமி புறப்பட்டுப் போய் வெகுநேரமாகியும் திரும்பாததால் பயந்து பதறிப் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க வந்திருந்தாள் அவள்.

"நான் என்ன காணாமல் போவதற்கோ, தொலைந்து போய் விடுவதற்கோ, பச்சைக் குழந்தை என்று நினைத்தாயா சித்ரா?"

"அதுக்கில்லை? நீங்க போய் ரொம்ப நேரமாச்சு? ஒரு தகவலும் தெரியலே. தூக்கமும் வரலே, ஒரே பயம். என்னென்னவோ பயங்கரமான கற்பனைகள் வேறே."

பூமிக்கு அவள் இதயம் புரிந்தது. அதிலிருந்த உரிமையின் ஆழமும் அன்பின் பரபரப்பும் புரிந்தன. ஒரு பேதைப் பெண் தன் மேலுள்ள பிரியத்தின் காரணமாக அந்த அகாலத்தையும் பொருட்படுத்தாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தேடி வந்திருப்பதை அவன் உணர்ந்தான்.

"என்னை யாரும் எதுவும் பண்ணிவிட முடியாது சித்ரா! உன் பயமும் கவலையும் அநாவசியமானவை."

"போன காரியம் என்னாச்சு?"

"எல்லாம் சொல்கிறேன். முதலில் இந்த இன்ஸ்பெக்டரிடம் சில விவரங்கள் சொல்லிவிட்டு வருகிறேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்."

பூமி இன்ஸ்பெக்டரிடம் எல்லா விவரங்களையும் சொன்னான். இன்ஸ்பெக்டர் காரியத்தின் அவசரத்தை உணர்ந்து கிரைம் பிராஞ்சுக்கும், கண்ட்ரோல் ரூமுக்கும் தொடர்பு கொண்டு மேலதிகாரிகளிடம் பேசினார். பூமியிடம் விவரங்களை எழுதி வாங்கிக் கொண்டார். காலை 6 மணிக்குப் பூமியை மறுபடி அங்கே வருமாறு கேட்டுக் கொண்டார்.

அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சித்ரா காணாமல் போன பையன் கொலை செய்யப்பட்டுவிட்டான் என்பதை அந்த உரையாடலிலிருந்து ஒருவாறு புரிந்து கொண்டு விட்டாள். அதனால் இருவருமாக ஸ்டேஷனிலிருந்து வெளியே வரும்போது அவள் பூமியைக் கேட்டாள்:

"இவ்வளவு அரும்பாடுபட்டு அலைந்தும் இப்படியா ஆச்சு? ரொம்பப் பரிதாபம். அந்த ஆயாகிட்டே இதை எப்படிப் போய்ச் சொல்றது?"

"அந்தப் பையனே அவர்கள் தன்னைக் கொன்று விடப் போவதாகப் பயந்து நடுங்கினான். அவன் பயந்தபடியே நடந்து விட்டது. நான் எவ்வளவோ முயன்றும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை சித்ரா."

"அந்த ஆட்கள் ராட்சஸர்களா, மனிதர்களா?"

"மனித உருவில் தான் இந்தக் காலத்து ராட்சஸர்கள் திரிகிறார்கள். அவர்களைச் செயலிலிருந்துதான் மனிதர்கள் இல்லை என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது..."

"இப்ப என்ன செய்யிறது? அந்தக் கிழவி கிட்ட உள்ளதைச் சொல்லிவிட வேண்டியதுதானே?"

"சொல்ல வேண்டியதுதான்! கொஞ்சம் பக்குவமாகப் பார்த்துச் சொல்ல வேண்டும். அல்லது சிறிது காலம் சொல்லாமல் பிறகு பொறுத்துச் சொல்ல வேண்டும்."

பூமி முதலில் சித்ராவை அவள் வீட்டில் கொண்டு போய்விட்டான். வீட்டுக்காரர் தூக்கக் கிறக்கத்தோடு வந்து கதவைத் திறந்தவர் பூமியையும் அந்நேரத்தில் அவளோடு சேர்த்துப் பார்த்ததும் ஒரு தினுசாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பு விஷமத்தனமாயிருந்தது.

"இப்போது அந்த அம்மாளிடம் பையன் கொலையுண்டதைச் சொல்லாதே! இங்கேயே அழுது புலம்பி மற்றவர்கள் முன்னால் கதறப் போகிறாள்! உன்னுடைய ஹவுஸ் ஓனர் அதைப் பார்த்துச் சத்தம் போட்டாலும் போடுவார். நான் பகலில் திரும்ப வருகிறேன். என் வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்று பக்குவமாக அதைச் சொல்லிக் கொள்ளலாம். அதோடு சிறிது காலம் அந்தம்மாள் நம்முடனேயே இருக்கட்டும்" என்று சித்ராவின் காதருகே கூறி அனுப்பினான் பூமி.

மப்டியில் அந்தத் தீவுக் கிராமத்துக்குப் போக இருந்த போலீஸ் பார்ட்டியோடு பூமியும் போக இருந்தான். முந்திய இரவு தன்னோடு வந்த நண்பர்களை அவன் இன்றும் தொந்திரவு செய்ய விரும்பவில்லை. ஆட்டோ ஓட்டுகிற வருமானத்தைக் கெடுத்துக் கொண்டு அவர்கள் தன்னோடு அலைய வேண்டாம் என்று கருதி வீட்டுக்குப் போய் அவர்களை எழுப்பிக் காபி சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விட்டுப் பூமி மீண்டும் ஸ்டேஷனுக்குப் போன போது காலை ஆறு மணியாகிவிட்டது.

போலீஸ் என்று அடையாளம் தெரியாத ஒரு லாரியில் அவர்கள் தீவுக் கிராமத்துக்குப் புறப்பட்டனர். எண்ணூரிலிருந்து தீவுக்குப் போவதற்கு வசதிகள் நிறைந்த சுங்க இலாகாவின் விசைப்படகு ஒன்றைப் போலீஸ்காரர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். போலீஸ் உயர் தர அதிகாரிகள் இந்தக் கேஸில் உண்மையாகவே ஆர்வம் காட்டியதாகத் தோன்றியது. போகும் போது அவர்களிடம் பேசிப் பார்த்ததிலிருந்து இதில் வெற்றியடைவதன் மூலம் சிலர் தங்களுக்குப் பிரமோஷனைக் கூட எதிர்பார்ப்பதாகத் தெரிய வந்தது.

முதலில் கிராமத்துப் பெரியவர் காளத்திநாதனைப் பார்த்து அவரை வழிகாட்டச் சொல்லி அழைத்துச் சென்று மயானத்தில் அந்தப் பையனின் பிணத்தைத் தோண்டி எடுத்துப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட வேண்டுமென்ற முடிவுடன் தீவில் போய் இறங்கினார்கள் அவர்கள். ஆனால் தீவு வெறிச்சோடிக் கிடந்தது.

முகப்புக் குடிசை அருகே ஆட்களைப் பார்த்ததும் "மீன் வாங்க வந்தீங்களா?" என்று தெலுங்கில் கேட்டுக் கொண்டு எதிர்ப்படும் வழக்கமான மீனவப் பெண்ணைக்கூட அன்று அங்கே காணவில்லை. குடிசையில் எட்டிப் பார்த்தால் அதுவும் காலி செய்யப்பட்டு மணல் தரை சுத்தமாகத் தெரிந்தது.

அதைக் கண்டு பூமிக்கு ஆச்சரியமாயிருந்தது. இரவு 2 மணிக்குப் பின் காலை ஏழரை மணிக்குள் அவசர அவசரமாக உஷாராகி அவர்கள் தப்பியிருக்க வேண்டும் என்று தோன்றியது. காளத்திநாதனுடைய ஓட்டடுக்கு வீடும் பூட்டியிருந்தது. அவர் எங்கே போயிருப்பார் என்பதுதான் பூமிக்குப் புரியாத புதிராயிருந்தது.

"என்ன மிஸ்டர் பூமிநாதன்! ராத்திரி ஏதாவது கனவு கினவு கண்டீர்களா? அல்லது இதெல்லாம் நிஜமாக நடந்ததா? நீங்கள் சொன்னபடி எதுவும் இங்கே இல்லியே?" என்று மப்டியிலிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும் கிரைம் பிரிவு அதிகாரியும் பூமியைக் குத்தலாக வினவினார்கள்.

"நான் சொன்னதெல்லாம் நிஜம் தான்! ஆனால் எப்படியோ போலீஸ் வரப்போகிறது என்று மோப்பம் பிடித்து ஆட்கள் தான் தப்பி விட்டார்கள். மயானத்திற்குப் போய் 'டெட் பாடியைத்' தோண்டி எடுத்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாயிடும்" என்று கூறித் தனக்கு நினைவில் இருந்த பாதையில் அவர்களைத் தீவின் மயானத்திற்கு அழைத்துச் சென்றான் பூமி.

அவசரம் அவசரமாக புன்னைமரப் புதரைக் கடந்து ஞாபகமாய் அடையாளத்தோடு நினைவு வைத்திருந்த சிலுவைக் குறியோடு கூடிய இடத்தைத் தரையில் தேடினால் அங்கே அப்படி எதுவுமே இல்லை.

அங்கே வரிசையாகச் சால் பிடித்துப் பாத்தி கட்டிப் பத்து பன்னிரண்டு வாழைக் கன்றுகளை நட்டுத் தண்ணீர் பாய்ச்சியிருந்தது. அந்தப் பழைய சமாதியையோ மண்மேட்டையோ சிலுவை அடையாளத்தையோ அங்கே அப்போது காணவில்லை!

உடனே பூமி பதற்றத்தோடு, "இதையும் மாத்திட்டாங்க சார்" என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்ல, இன்ஸ்பெக்டர், "எப்பிடி சார் மாத்த முடியும்? நீங்க இடத்தை மறந்துட்டீங்களோ, என்னவோ?" என்று பதிலுக்குக் கேட்டார்.

அவருக்குப் பதில் கூறாமல் பூமியே வாழைக் கன்றுகளைப் பிடுங்கி எறிந்து விட்டு அந்த இடத்தைத் தோண்டத் தொடங்கினான். தயாராக மண்வெட்டியுடன் வந்திருந்த போலீஸும் பிறரும் அவனோடு சேர்ந்து தோண்டினார்கள். நிறைய ஆழம் தோண்டியும் பயனில்லை.

அத்தியாயம் - 45

பொன்னிறமான அந்தி நேரத்து மேகங்கள் வானில் மிகவும் அழகாயிருக்கலாம். ஆனால் மண்ணில் இறங்கி மழையாகப் பெய்து மக்களுக்குப் பயன் தரும் ஆற்றல் என்னவோ மின்னி இடித்துப் பொழியும் கார்மேகங்களுக்கே இருக்கிறது.

அந்தத் தீவில் அன்று அதிகாலையில் ஆச்சரியங்களே காத்திருந்தன! ஏறக்குறைய அரைக்கிணறு ஆழத்துக்குத் தோண்டியும் பயனில்லை. போலீஸாருக்கு முன் பூமிக்கு அவமானமாகப் போயிற்று. அவன் முந்திய இரவு தன் கண்ணால் கண்டதை விளக்கி ஹோட்டல் அடையாள எழுத்துக்களுடன் கூடிய இரத்தக்கறை படிந்த சட்டையைக் கூடப் போலீஸ் அதிகாரிகளிடம் காண்பித்தான்.

அங்கேயே பையனின் பிரேதத்தை இடம் மாற்றிப் புதைத்திருக்கலாம் என்றும் வேறு சில இடங்களையும் அகழ்ந்து பார்க்க வேண்டுமென்றும் சொல்லி மன்றாடிப் பார்த்தான். ஆனால் அவர்கள் அவன் கூறியதை நம்பவில்லை. பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பினர்.

அங்கே முதற் கோணல் முற்றும் கோணல் என்பது போல ஆரம்பத்தில் ஏற்பட்ட அவநம்பிக்கையே தொடர்ந்தது. முதல் நாளிரவு பூமியும் நண்பர்களும் போய்விட்டுத் திரும்பியபின் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடத்தல்காரர்கள் உஷாராகிவிட்டிருக்க வேண்டும் என்று புரிந்தது.

காளத்திநாதனைப் பற்றியே இப்போது பூமிக்குச் சந்தேகமாயிருந்தது. கடத்தல்காரர்களையும் சமூக விரோதிகளான மன்னாரு கும்பலையும், ஒழிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாயிருந்த காளத்திநாதனையே இப்போது ஏன் அங்கே காணவில்லை என்பது புரியாத புதிராயிருந்தது. மர்மான முறையில் அவர் தலைமறைவாகியிருந்தார்.

அன்று காலை பூமியும், போலீஸ் குழுவினரும் எத்தனை வேகமாக அந்தத் தீவில் இறங்கிச் சோதனை செய்தார்களோ அத்தனை வேகமாக விசைப்படகில் கரைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. பூமிக்கு எல்லாமே ஒரு ஏமாற்று நாடகம் போலிருந்தது.

"மிஸ்டர் பூமிநாதன்! இனிமேலாவது இப்படிப் பொறுப்பற்ற முறையில் வந்து நம்பத்தகாத பெரிய புகார்களைச் செய்யாதீர்கள்! வீண் அலைச்சலும் காலவிரயமும் தான் கண்ட பலன்" என்று போலீஸ் மேலதிகாரி அவனை எச்சரித்து விட்டுப் போனார்.

பூமி லஸ் முனையில் போலீஸ் லாரியிலிருந்து இறங்கியதும் நேரே சித்ராவின் வீட்டுக்குச் சென்றான். அப்போது காலை பத்தரை மணிக்கு மேலாகியிருந்தது. முதல் நாள் இரவு முழுவதும் உறங்க முடியாமற் போனதும், சோர்வும், கடைசியாகக் காலையில் அடைந்த பெரிய ஏமாற்றமும் அவனைத் தளரச் செய்திருந்தன. உடல் தான் தளர்ந்திருந்தது. உண்மையைக் கண்டு பிடிக்கவும், நீதி நியாயங்களை நிலை நாட்டவும் தொடர்ந்து இப்படி இன்னும் பல இரவுகள் விழிக்க வேண்டி நேர்ந்தாலும் கவலைப்படக் கூடாது என்று மனம் என்னவோ உறுதியாகத்தான் எண்ணியது.

அவன் போனபோது வீட்டுச் சொந்தக்காரருக்கும் சித்ராவுக்கும் ஏதோ பலத்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. ஒரே கூப்பாடு மயம். அவர் இரைய அவள் பதிலுக்கு இரைய நடுவே சித்ராவுடன் தங்கியிருந்த அந்தப் பையனின் தாயும் இரைய அங்கு ஒரே கூச்சலாயிருந்தது.

பூமியைப் பார்த்ததும் ஒரு விநாடி பேசுவதை நிறுத்தி மௌனமடைந்த அவர், மறு விநாடி அவனிடமே, "இந்தாப்பா! இது கௌரவமானவங்க குடியிருக்கிற இடம்! கண்ட நேரத்துக்குக் கண்டவங்களோடு வந்து தங்கறது போறதுன்னு இருந்தா இந்த இடம் உங்களுக்கு லாய்க்குப்படாது" என்று கத்தினார்.

பூமி அவர் பக்கம் திரும்பிப் பதில் சொல்லவே இல்லை. அன்று அதிகாலையில் சித்ராவும் தானுமாக அங்கே வந்தபோது கதவைத் திறந்து விட்ட அவர் ஒரு தினுசாகத் தங்களை முறைத்து ஏளனமாகப் பார்த்ததை நினைவு கூர்ந்தான். கௌரவத்துக்கு மொத்தக் குத்தகை எடுத்திருப்பவர் போல் அவர் பேசிய விதம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அப்போது அவரைப் பொருட்படுத்திப் பதில் சொல்ல அவன் விரும்பவில்லை. காட்டுமிராண்டித்தனமாகக் கூச்சலிடுபவனுக்கு முன்னால் நாகரிகமானவன் பதில் பேசாமலிருப்பதன் மூலமே தன் கௌரவத்தை நிலை நாட்ட முடியும் என்பது பூமியின் கருத்தாயிருந்தது.

"போன காரியம் என்ன ஆயிற்று?" என்று ஆவலோடு கேட்டுக் கொண்டே அவனருகில் வந்தாள் சித்ரா.

"அதெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம்! நீயும் இந்தக் கிழவியுமாகச் சேர்ந்து சாமான்களை ஒழித்துக் கட்டி வையுங்கள். நான் போய் ஒரு கை வண்டி பார்த்துக் கொண்டு வருகிறேன். இந்த இடம் இனி நமக்கு வேண்டாம். காலி செய்து கொண்டு எல்லாரும் என் வீட்டுக்கே போய் விடலாம்."

இதைக் கேட்டு அவள் மறுத்துப் பேசாமல் சாமான்களை ஒழிக்கத் தொடங்கினாள். பூமி கைவண்டி கொண்டு வருவதற்காகத் தண்ணீர்த்துறை மார்க்கெட் பக்கம் போனான். ஏன் எதற்கு என்று கேட்டுக் கொண்டு தயங்கி நிற்காமல் சித்ரா உடனே தான் சொல்லியபடி கேட்டது அவனை மனம் பூரிக்கச் செய்திருந்தது. அத்தனை சோதனைக்கு நடுவிலும், தான் சொல்லியபடி கேட்க ஒருத்தி இருக்கிறாள் என்பது மனத்துக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. தீவில் அடைந்த ஏமாற்றத்தை அவனே சித்ராவுக்கு விவரித்துச் சொன்னான்.

அன்று பிற்பகல் இரண்டு மணிக்குள் சித்ராவும், பூமியும், அந்தக் கிழவியும் வீட்டை ஒழித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். பூமி அந்தக் கெட்ட எண்ணம் கொண்ட வீட்டுக்காரரிடம் கணக்குப் பார்த்து அட்வான்ஸில் தங்களுக்கு வரவேண்டிய மீதத்தை வாங்கினான்.

அன்று பகல் உணவை அவர்கள் பூமியின் வீட்டில்தான் சமைத்துச் சாப்பிட்டார்கள். பகல் மூன்று மணி ஆகிவிட்டது. இதற்கிடையே சித்ராவைத் தனியே அழைத்து மகன் இறந்தது பற்றி அந்தத் தாயிடம் இன்னும் சிறிது நாள் சொல்ல வேண்டாமென்று எச்சரித்து வைத்தான் பூமி. சித்ரா வேறு விதமாக அபிப்பிராயப்பட்டாள்.

"சொல்லாமல் அவளைச் சித்திரவதை செய்வதை விடச் சொல்லி விடுவதே மேல்."

"வேண்டாம் சித்ரா! அவசரமில்லை. இவளுக்கு முன்பே பல காலமாக இந்தப் பெரிய நகரில் நீதி, நியாயம், நேர்மை, ஒழுங்கு, சத்தியம் ஆகிய பல அநாதைத் தாய்மார்கள் தங்கள் வாரிசுகளைக் காணாமல், இழந்து தேடித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் முழு வெற்றி கிடைக்கவில்லை. அவர்களுக்கும் நாம் உதவ வேண்டும்."

அவனுடைய இந்தப் பதிலிலிருந்த நயம் அவளை மெய் சிலிர்க்கச் செய்தது. பூமியே அந்தத் தாயிடம் சென்று, "நான் தாயை இழந்தவன். நீங்கள் மகனை இழந்தவர். இனி எனக்கு நீங்கள் தாய். உங்களுக்கு நான் மகன். உங்கள் மகன் திரும்ப வந்தாலும் நீங்கள் தொடர்ந்து எனக்கும் தாயாக இருப்பீர்கள்" என்றான்.

"மகராசனா இரு தம்பி!" என்று அவனை ஆசீர்வதித்தாள் அந்தத் தாய். அவள் குரல் ஒடுங்கித் தளர்ந்திருந்தாலும் அதில் ஆசி இருந்தது.

அவளிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு வெளியே கடற்கரைக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். கடற்கரைக்குப் போகிற வழியில் சித்ரா தான் கேள்விப்பட்ட ஒரு தகவலை அவனுக்குத் தெரிவித்தாள். முத்தக்காள் மெஸ்ஸில் வரவு செலவைக் கவனித்துக் கொள்வதற்கு அவள் ஊரிலிருந்து வரவழைத்த பையன் நிறையப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டானாம். இதைச் சொல்லிவிட்டு சித்ரா அப்போது அவனைக் கேட்டாள்:

"எவ்வளவு வற்புறுத்தினாலும் அந்த முத்தக்காளுக்கு மட்டும் மறுபடி உதவி செய்யப் போகக் கூடாது..."

"சித்ரா! அந்த மனப்பான்மை சரியில்லை. அது எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. அதோ வானத்தின் மேற்கு மூலையில் பார்! பொன் நிறத்திலும், செந்நிறத்திலுமாகப் பல மேகக் குவியல்கள், திரள் திரளாக வேறு வேறு நிறம் காட்டி அழகு செய்கின்ற அந்தக் காட்சியை இரசிக்கலாம் ஆனால் அது தாற்காலிகமானது. எந்த வகையிலும், பூமியில் இறங்கி மழையாகப் பெய்ய முடியாதது! மின்னி இடித்துக் கறுத்து இறுதியில் பூமியில் மழையாக இறங்கி மக்களை மகிழ்விக்கும் மழைமேகமாக நான் வாழ விரும்புகிறேன். முத்தக்காள் மறுபடி என்னிடம் உதவி கேட்டு வந்தால் நான் மறுக்க மாட்டேன். அவள் என் உதவியை விரும்பவில்லை என்றால் தலையிடவும் மாட்டேன்."

"உங்களிடம் உள்ள பெரிய தொல்லை இது தான். உங்களால் ஒரு போதும் பிறருக்கு உதவாமல் இருக்க முடியாது."

"உலகில் முக்கால்வாசி மனிதர்கள் பிறர் பார்த்து இரசிக்கவும், வியக்கவும், மருளவும் மட்டுமே ஏற்ற சாயங்கால மேகங்களைப் போலத்தான் வாழ்கிறார்கள்! அவர்கள் பிறர் பயன் பெறப் பெய்யும் மழைக் காலத்துக் கார்மேகங்களாக வாழ விரும்புவதில்லை. நான் கார்மேகமாக இருக்கவே விரும்புகிறேன் சித்ரா! நீயும் அப்படி இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறேன்."

சித்ரா அவன் விருப்பத்தை மறுத்துச் சொல்லவில்லை. கடற்கரையிலிருந்து திரும்பு முன் பூமி தன் எதிர்காலத் திட்டங்களை அவளிடம் விவரித்தான். இன்னொருவனிடம் லீஸுக்கு விட்டிருந்த தன் ஆட்டோவை இனிமேல் தானே எடுத்து ஓட்டப் போவதாகவும், இரவு நேரங்களில் மாணவர்களுக்குக் கராத்தே கற்றுக் கொடுக்கும் பணியைத் தொடர்ந்து செய்யப் போவதாகவும் அவளிடம் விவரித்துக் கூறினான். அவளை ஒரு கேள்வியும் கேட்டான்:

"அபாயங்களும் போராட்டங்களும் சிக்கல்களும் நிறைந்த இந்த என் வாழ்வில் நீ தொடர்ந்து துணையாக வரச் சம்மதிக்கிறாயோ, இல்லையோ, ஆனால் அதற்காக உன்னை நான் வற்புறுத்த மாட்டேன்."

"ஏற்கெனவே உங்களோடு வந்து விட்டவளைப் புதிதாக வருகிறாயா என்று கேட்பது என்பது என்ன நியாயம்?"

"மகிழ்ச்சி! நன்றி" என்று பூமி புன்முறுவலோடு அவளுக்கு மறுமொழி கூறினான். மேலும் சொன்னான்:

"சுரண்டல் பேர்வழிகளும், ரௌடிகளும், அதிகார வெறியர்களும், பேராசைக்காரர்களும் இந்த நகரவாசிகளை ஒடுங்கியும், ஒதுங்கியும் வாழுகிற அளவு கோழைகளாக்கி விட்டார்கள்! இனி இவர்களை நிமிர்ந்து நிற்கச் செய்து தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கச் செய்ய வேண்டும்."

"தங்கள் உரிமைகள் என்னென்னவென்றே இன்னும் இவர்களில் பலருக்குத் தெரியாது."

"ஜலதோஷம் பிடித்தவனுக்கு வாசனைகள் புரியாத மாதிரி அடிமைகளுக்கு உரிமைகள் புரிவதில்லை சித்ரா..."

"உரிமை உணர்வும், சுதந்திர எண்ணமும் சொல்லிக் கொடுத்து வரக் கூடியவை இல்லையே? என்ன செய்ய முடியும்?"

"அவசியமும், அவசரமும் உண்டானால் அவை தாமே வர முடியும்."

கடற்கரை நன்றாக இருட்டியிருந்தது. அலைகளின் ஒளி அந்த இருளுக்குச் சுருதி கூட்டிக் கொண்டிருந்தது.

"புறப்படலாமா சித்ரா?"

அவள் எழுந்தாள். அவன் கையும் அவள் கையும் சுபாவமாக இணைந்தன. அவர்கள் கை கோர்த்து நடந்தனர். முன்பு ஒரு முறை நிகழ்ந்தது போல் கைப்பற்றியதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்கச் சொல்லிப் பரஸ்பரம் கேட்டுக் கொள்ளவில்லை இப்போது.

மணற்பரப்புக்கு அப்பால் மேற்கே நகரம் ஒளிமயமாக இயங்கிக் கொண்டிருந்தது. பூமியும் சித்ராவும் இருளிலிருந்து ஒளியை நோக்கிக் கை கோர்த்தபடி இணைந்து நடந்தார்கள்.

அப்போது கடற்கரை எவ்வளவிற்கு இருண்டிருந்ததோ அவ்வளவிற்கு அவர்கள் இருவர் மனமும் பிரகாசமாயிருந்தது, தெளிவாயிருந்தது.

இருளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒளியை நோக்கி, முன்னேறினார்கள் அவர்கள். சென்ற வழியின் இருட்டுக்களை கடந்து இனிமேல் செல்ல வேண்டிய வழியின் வெளிச்சத்தை எதிர்நோக்கி விரைவது ஓர் இனிய அனுபவமாக இருந்தது. பூமி அப்போது அவளைக் கேட்டான்:

"வீடு வரை நடக்கலாமா? அல்லது ஏதாவது டாக்ஸி, ஆட்டோ... பார்க்கணுமா?"

"நீங்கள் கூட வரும்போது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் துணிந்து நடக்கலாம்..."

இந்த அர்த்த நிறைவுள்ள வாக்கியத்தை ஒரு புன்முறுவலால் வரவேற்றான் பூமி. அவனது புன்னகை அவளது பதில் புன்னகையைச் சந்தித்தது.